Logo

அன்பு முகங்கள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6949
anbu mugangal

தவு திறந்தது. மங்கலான வெளிச்சத்தில் அவனுக்கு உடனடியாக ஆளை அடையாளம் தெரியவில்லை. வெள்ளைக்காரர்களின் பங்களாவில் இருந்து வந்த யாராவது இருக்கலாம் என்றுதான் அவன் நினைத்தான்.

“யாரு?”

“நான்தான்...”

வெளிச்சம் அப்போதுதான் அந்த முகத்தில் விழுந்தது. ஒரு நிமிடம் அவன் பதைபதைத்துப் போய் விட்டான். யார் அது? ஒரு நிமிடம்தான். அடுத்த நிமிடம் அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்: “யார் அனியனா?”

அனியன் மிகவும் சிரமப்பட்டு சிரித்தான்.

தொடர்ந்து தடுமாறும் குரலில் சொன்னான்: “ராஜ் அண்ணா, உங்களுக்கு என்னைத் தெரியலையே!”

மேற்கு திசையிலிருந்து வந்த ஒரு குளிர்ந்த காற்று போர்ட்டிக்கோவின் வழியாக வேகமாக வீசிக் கொண்டிருந்தது. பால் நிறத்தில் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்த மின்சார விளக்கு காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. அதோடு சேர்ந்து வாசலிலும் சுற்றுப் புறங்களிலும் நிழல்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. அவனிடம் அப்போதும் பதைபதைப்பு மாறவில்லை. தாழ்வான குரலில் அவன் சொன்னான். “வாங்க... உள்ளே உட்காரலாம்.”

திறந்து கிடக்கும் சாளரத்தின் வழியாக குளிர்ந்த காற்று வரவேற்பறைக்குள்ளும் நுழைந்து கொண்டிருந்தது. சாயம் பூசப்பட்ட இரும்புக் கம்பியின் வழியாகக் கையை விட்டு ஜன்னலை மூடுவதற்கு மத்தியில் அவன் மீண்டும் சொன்னான்:

“உட்காருங்க.”

அப்போது வரவேற்பறையின் மத்தியில் அனியன் திகைத்துப் போய் நின்றிருந்தான். தரையில் விரிக்கப்பட்டிருந்த நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் கோடுகள் போடப்பட்டிருந்த தரை விரிப்பிலும், கவருடன் சேர்த்து வரிசையாகப் போடப்பட்டிருந்த சோஃபாக்களிலும், கண்ணாடிக் கூட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த ராதாகிருஷ்ணரின் பளிங்குக் கல் சிலையிலும் அனியனின் கண்கள் பயணம் செய்வதை ராஜ் அண்ணன் பார்த்தான். மேஜைக்குப் பின்னால் இருந்த பிரம்பு நாற்காலியை முன்னோக்கி இழுத்துப் போட்டு, ராஜ் அண்ணன் அமர்ந்தான். அந்தச் சமயத்திலும் அனியன் வரவேற்பறையில் இருந்த ஆர்வத்தைத் தூண்டும் பொருட்களை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மூன்றாவது தடவையாக அவன் திரும்பவும் சொன்னான்:“அனியன் உட்காரு.”

அது அனியனின் காதில் விழுந்ததைப்போல இருந்தது. கண்ணாடி பதிக்கப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு அருகில் இந்த ஸ்டூலில் அவன் ஓரத்தில் உட்கார்ந்தான். ராஜ் அண்ணன் என்னவோ கூற நினைத்தான். திடீரென்று எதையோ நினைத்து நிறுத்திக் கொண்டான்.

அனியனிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

“ஊர்ல இருந்தா வர்ற?”

“இல்ல... இருந்து...”

“இப்போ அங்கேயா இருக்கே?”

“ஆமாம்...”

என்ன வேலை என்று கேட்க நினைத்தான். ஆனால் இனம் தெரியாத ஒரு பயம் அவனைத் தடுத்து நிறுத்தியது. முகத்தைக் குனிந்து கொண்டு, தரை விரிப்பில் இருந்த வண்ண வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த அனியனையே அவன் வெறித்துப் பார்த்தான். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அவன் அனியனைப் பார்க்கிறான்.

ஒன்பது வருடங்கள் மனித உடலில் எந்த மாதிரியான மாற்றங்களையெல்லாம் உண்டாக்குகின்றன என்பதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான். உடல் தளர்ந்து சுருங்கிப் போயிருக்கிறது. கழுத்திற்குக் கீழே இரண்டு உருண்டை எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கின்றன. மஞ்சள் விழுந்த ஒரு வெள்ளைநிறச் சட்டையை அவன் அணிந்திருந்தான். ரோமங்கள் நிறைந்த அந்த முரட்டுத்தனமான முகத்தைப் பார்த்தால், முப்பத்தியிரண்டு வயதான ஒரு இளைஞனுக்குச் சொந்தமானதா அது என்பதை நம்புவதற்கு சிரமமாக இருக்கும். காலம் உண்டாக்கிய கை வேலைகள் அந்த அளவிற்கு அதிகமாக அங்கு மறையாமல் இருக்கின்றன.

கடவுளே, அனியன் எந்த அளவிற்கு மாறிப்போய் இருக்கிறான்! ஒன்பது வருடங்கள் மட்டுமே. அவனுடைய மனதில் பிரகாசமான ஒரு இளைஞனின் உருவம்தான் இருந்தது. ரத்தம் துடித்துக் கொண்டிருக்கும் முகம். பிரகாசமான கண்கள்... கண்களில் இருந்த கறுப்பு மணிகளுக்கு ஒரு அழகு இருந்தது. மீசை அப்போதுதான் முளைக்க ஆரம்பித்திருந்தது. பிறகு... உயரமாக இருக்கும் வண்ணம் பின்னோக்கி வாரிவிட்ட அழகான தலைமுடி... இளம் வயதில் அந்த முடியைப் பார்த்து அவன் பொறாமைப்பட்டிருக்கிறான்.

அம்மா கூறுவாள்:

“அனியனுக்கு என்னுடைய தலை கிடைச்சிருக்குடா. ராஜன், உனக்குக் கிடைக்கல. அப்பாவுக்கு உண்டானது மாதிரி சீக்கிரமே வழுக்கை விழுந்திடும்.”

கறுத்து மின்னிக் கொண்டிருந்த தலைமுடி பெரும்பாலும் கொட்டி விட்டிருக்கிறது.

அலைபாயும் மனதுடன் அவன் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தான். காலம் எவ்வளவு வேகமாக மனிதர்களை மாற்றி விடுகிறது!

எதிர்பக்கத்தில் இருந்த கண்ணாடியில் ராஜ் அண்ணன் தன்னுடைய உருவத்தைப் பார்த்தான். இளம் வயதில் எலும்பும் தோலுமாக இருந்த உடல் இப்போது தடித்து கொழுத்து இருக்கிறது. அதிகமான சதையைத் தாங்குவதற்கு பல இடங்களிலும் எலும்புகள் சிரமப்படுகின்றன என்று தோன்றும். தாடை எலும்புகளுக்கு நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் சதை மடிப்புகள் கழுத்தின் பாதியை மறைத்துக் கொண்டிருந்தது. அவனுடைய முகத்தில் இப்போது ரத்தத் துடிப்பு இருக்கிறது. நெற்றியின் இரு பக்கங்களிலும் நீலநிற நரம்புகள் தெளிவாகத் தெரியும். தடிமனாக இருந்தாலும், உண்மையான வயதைக்கூட நம்ப முடியாது.

அனியன் அவனைவிட ஐந்து வயது இளையவன். அனியனுக்கு ஐந்து வயது நடக்கும்போது, அம்மா மூன்றாவது பிரசவம் ஆனாள்.

கடந்துபோனவற்றைப் பற்றிக் கூறும்போதெல்லாம் அம்மா கூறுவாள்:

“அப்போ அனியனுக்கு ஐந்து வயது.”

அவன் மீண்டும் அனியனை கவனித்தான். தான் நுழைவதற்கு உரிமை இல்லாத ஒரு இடத்தில் வந்து சிக்கிக்கொண்ட குழப்பமான மனநிலையுடன் அவன் நெற்றியில் விரல்களை வருடியவாறு வியர்த்துக் கொண்டிருந்தான்.

வேறுபடுத்திப் பார்க்க முடியாத சிந்தனைகளுடன் கவலையின் நிழல் படிந்த ஒரு கறுப்பு அடையாளம் இதயத்தை நோக்கி நீண்டு வருவதைப்போல அவன் உணர்ந்தான். அப்போதுதான் திடீரென்று அவன் எதையோ நினைத்தான். அனியனுக்கு தேநீர் கொடுக்கவில்லை. உள்ளேயிருந்த வாசலை நோக்கி அவன் அழைத்தான்: “பாகீ!” அனியன் மெதுவாக முகத்தை உயர்த்தி வாசலைப் பார்த்தான். மீண்டும் தரையில் இருந்த பல வண்ணங்களையும் கொண்டிருந்த விரிப்பின்மீது கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.

ராஜ் அண்ணன் மீண்டும் அதே குரலில் அழைத்தான்:

“பாகீ!”

வாசலில் வந்து நின்றவன் - சாயம்போன ட்ரவுசர் அணிந்த, கன்னங்களில் கரியால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வேலைக்காரன்.

“அம்மா உடல்நிலை சரியில்லைன்னு சொல்லி முன்னாடியே படுத்திட்டாங்க.”

“உணவை எடுத்து வை- இரண்டு ஆட்களுக்கு.”

அப்போது அனியன் வேகமாகச் சொன்னான்:

“எனக்கு உணவு வேண்டாம்.”

“இங்கு எல்லாம் தயாராக இருக்கு.”

“வேண்டாம். கொஞ்ச நாட்களாகவே இரவு வேளையில் சாப்பிட முடியல. கேஸ் ட்ரபுள்!”

அப்போதும் ராஜ் அண்ணன் நினைத்துப் பார்த்தான். இளம் வயதில் தின்னும் விஷயத்தில் அனியனைத் தோற்கடிப்பதற்கு யாருமே இல்லை. ஒரு ஓணத்தின்போது விருந்து வைத்தபோது ஒரே இடத்தில் உட்கார்ந்து இருபத்தேழு பழங்களை அனியன் சாப்பிட்டான்.


“அப்படியென்றால் காப்பியும் ரொட்டியும் சாப்பிடுவோம்.”

அனியன் அமைதியாக இருந்ததன் மூலம், அதற்குச் சம்மதித்தான்.

வேலைக்காரன் உள்ளே சென்றபோது, அவன் யாரிடம் என்றில்லாமல் சொன்னான்:

“பாகி படுத்துவிட்டாள் என்று நினைக்கிறேன்.”

அந்த கட்டிடத்திற்கு மேலே எங்கிருந்தோ ஒரு மெல்லிய வானொலியில் பாட்டு மிதந்து வந்து கொண்டிருந்தது.

அனியன் ஆறுதலான குரலில் சொன்னான்:

“அழைத்து சிரமப்படுத்த வேண்டாம். நான்...” - பிறகு எதையோ நினைத்துக் கொண்டு கேட்டான்: “குழந்தைகள் எத்தனை?”

“இரண்டு. இரண்டுமே பெண் குழந்தைகள்தான். அவர்கள் சாயங்காலத்திற்கு முன்பே தூங்கிடுவாங்க.”

அனியனைப் பற்றி அவன் பலவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான். என்ன வேலை? திருமணம் ஆகிவிட்டதா? குழந்தைகள் இருக்கின்றனவா? ஒன்பது வருடங்களுக்கு முன்னால் கிளம்பிச் சென்றவன். அதற்குப் பிறகு, அவனைப் பற்றி எதுவும் தெரியவில்லை. கெட்ட செய்திகள் சில அவ்வப்போது எப்படியோ காதுகளில் வந்து சேர்ந்துகெண்டிருந்தன. வேகமாக பயணிக்க அவற்றால்தானே முடியும்!

அம்மா மரணமடைந்த செய்தி கேள்விப்பட்டு ஊருக்குச் சென்றபோது, அனியனைப் பார்ப்போம் என்று அவன் நினைத்திருந்தான். நினைத்திருந்தான் என்று கூறுவது சரியாக இருக்காது. பயந்திருந்தான். ஆனால் அனியன் வரவில்லை.

“எந்த ஊரில் இருக்கிறானோ? தாயைச் சுடுகாட்டுக்கு எடுக்குறதுக்குக்கூட வரலையே! பாவிப் பய...”

இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த ஒரு பெரியவர் சொன்னார்.

அவன் அதைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தான். அப்போது மனதிற்குள் அவன் முணுமுணுத்தான்: ‘இனிமேல் அவன் வர மாட்டான்’.

வேண்டாம். நினைவுகளின் இருண்ட அறைகளில் அந்த நாட்கள் உறங்கிக் கொண்டிருக்கட்டும்.

அவன் தன்னுடைய கொள்கையை நினைத்துப் பார்த்தான். ‘எந்தச் சமயத்திலும் திரும்பிப் பார்க்காமல் இருக்க வேண்டும். காரணம் - கடந்து வந்த காலடிச் சுவடுகளில் ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் இருக்கும்.’

அவன் பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்தான். மேஜைமீது இருந்த டின்னில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

“அனியன், குளிக்கணுமா?”

“இல்ல..”

மீண்டும் நிமிடங்கள் குளிர்ந்து உறைந்து போய்க் கொண்டிருந்தன. மேல்நோக்கி நெளிந்து நெளிந்து போய்க் கொண்டிருந்த நீலநிறப் புகைச் சுருள்களையே பார்த்துக் கொண்டு அவன் சொன்னான்:

“உன்னைப் பற்றிய ஒரு தகவலும் எனக்குக் கிடைக்கல.”

“ம்...”

உணர்ச்சியற்ற குரலில் அனியன் முனகினான்.

அவன் மீண்டும் ஆச்சரியப்பட்டான். எவ்வளவு வேகமாக அவை கடந்து போய்விட்டன!

சிறு வயதில், அனியன் ஒரு தம்பியாக இருந்ததைவிட அதிகமாக ஒரு நண்பனாகத்தான் இருந்தான். மூசாரியின் ஆலையைத்தாண்டி காலியாகக் கிடந்த நிலத்தில் அவர்கள் கண்ணாமூச்சி விளையாடினார்கள்; கல் விளையாட்டு விளையாடினார்கள். அம்மாவிற்குத் தெரியாமல் காசைத் திருடி எடுத்து தித்தாச்சும்மாவின் கடையில் அரிசி முறுக்கு வாங்கித் தின்றார்கள். பிடிபட்டபோது ஒன்றாகவே அடி வாங்கினார்கள். யானைப்பாறையின் மீது நின்று கொண்டு வானத்தை நோக்கி கற்களை எறிந்தார்கள். பாதையின் ஓரத்தில் இருந்த மாந்தோப்புகள் முழுவதிலும் சுற்றித் திரிந்தார்கள். ஒன்றாகப் படிக்கச் சென்றார்கள்.

ஐந்து வயது இளையவன் என்றாலும், அனியன் பல விஷயங்களையும் கற்றுத் தருவான். இவன்,அவன் சொன்னதைக் கேட்பான். அவன்தான் பலம். விளையாட உட்கார்ந்தால், அவன்தான் வெற்றி பெறுவான்.

இரண்டில் இரண்டு வருடங்களும் நான்கில் நான்கு வருடங்களும் அவன் இருந்தபோது, அனியன் அவனுடன் வந்து சேர்ந்து கொண்டான். அம்மா அவ்வப்போது கூறுவாள்:

“எருமை! அனியனைப் பாருடா. அவனுடைய அறிவு கிடைக்கலையே!”

அனியன் தன்னுடன் வந்து சேர்ந்து கொண்டது குறித்து பொறாமை உண்டாகவில்லை. காணரம்- மாமரத் தோப்புக்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் மாங்காய் எறிந்து விழச் செய்வதற்கும், நண்பர்களுடன் சண்டை போடுவதற்கும் அனியன் இருந்ததால் தைரியம் வந்தது.

உயர்நிலைப் பள்ளிக்கூடத்திலும் ஒன்று சேர்ந்தே படித்தார்கள். படிப்பில் திறமைசாலி அனியன்தான். அதுதான் காரணமாக இருக்க வேண்டும் - எல்லோருக்கும் அனியனைத்தான் அதிகமாகப் பிடித்திருந்தது. என்ன செய்தாலும் அவர்கள் கூறுவது இப்படித்தான்:

“உனக்குக் கீழே இருப்பவன்தானே? அவனிடம் இருக்கும் தைரியம் உனக்கு இருக்கிறதா?”

பெரிய மாமாவுக்கும் அனியனைத்தான் மிகவும் பிடிக்கும்.

ஒளிர்ந்து கொண்டிருந்த தட்டில் காப்பி பாத்திரங்களுடன் பணியாள் உள்ளே வந்தான். தட்டை சாளரத்தின் திண்டில் வைத்துவிட்டு, மேஜைமீது இருந்த செய்தித்தாள்களை நீக்கி வைத்தான். அப்போது அவன் பார்த்தான். மேஜைமீது இருந்த கண்ணாடிக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த படத்தையே அனியனின் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. வெண்ணெய் தேய்க்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் இருந்த வெள்ளிக் கிண்ணத்தை மேஜையில் வைத்தபோது படம் மறைந்துவிட்டது.

“காப்பி பருகுவோம். நான் சாப்பிட நேரம் இருக்கு.”

பணியாள் மேஜையை அனியனின் முழுங்கால்களுக்கு அருகில் நகர்த்திப் போட்டான். வெள்ளிக் கிண்ணத்தை முதலில் இருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி வைத்தான். அவன் மீண்டும் அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ராஜேந்திரன் அதைப் பார்க்கவில்லை என்பது மாதிரி, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பொய்கையில் நீர் குடிக்கும் நரியின் படத்தையும், மூலையில் இருந்த கடிகாரத்திற்குள் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் அழகியின் உருவத்தையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

திரும்பிப் பார்க்காமல் இருக்க வேண்டும்...!

தன்னுடைய உணர்ச்சி மாறுதல்களை அனியன் கவனிப்பானோ என்று பயந்து அவன் மேற்குப் பக்கம் இருந்த சாளரத்திற்கு அருகில் போய் நின்றான். சற்று நேரத்திற்கு முன்னால் அடைக்கப்பட்ட அந்த சாளரத்தை அவன் திறந்தான். உள்ளே நுழைந்து வந்த குளிர்ந்த காற்று முகத்தில் அடித்துக் கொண்டு அறைக்குள் வேகமாகப் பரவியது. சாளரத்திற்குக் கீழே முற்றத்தில் இருந்த மந்தாரப் படர்ப்பில் மின்மினிப் பூச்சிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தன. தூரத்தில் பாதைக்கு அப்பால் இருந்த வெற்றிடத்தில் பனி மூடி இருந்தது. அதற்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கேக்கின் வடிவத்தில் இருந்த ஒரு பெரிய மாளிகையின் தோற்றம் தெளிவில்லாமல் தெரிந்தது. மிகவும் தூரத்தில் மேற்கு திசையில் இருந்த மலைச் சிகரங்களின் உச்சிகளில் வெண்மேகங்களும் ஒளியும் இறுகப் பிணைந்திருந்தன.

மாடியில் இருந்த படுக்கையறையிலிருந்து வானொலி வழியாக மெல்லிய இனிய பாடல் ஒன்று அப்போதைய குளிர்ச்சியான சூழ்நிலைக்குள் மிதந்து வந்துகொண்டிருந்தது. அவன் அதைக் கேட்டான். பாகி தூங்கியிருக்கவில்லை. அழைக்க வேண்டுமா?

அவன் முகத்தைத் திருப்பி அனியனைப் பார்த்தான். உதடுவரை சென்ற காப்பி பாத்திரம் அசையாமல் நின்றிருந்தது. கண்ணாடித் துண்டிற்குள் கண்கள் ஆழமாக இறங்கி இருப்பதைப்போலத் தோன்றியது.

பாகி இப்போது அனியனைப் பார்த்தால்....


திருமணத்திற்குப் பிறகு அவர்கள் எப்போதும் முன் எச்சரிக்கையுடன்தான் பேசுவார்கள். எந்தச் சமயத்திலும் விஷயம் அனியனிடம் போய் முடியாமல் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.

இளம் வயதில் பாகிக்கு அனியன் மீதுதான் விருப்பம் அதிகம்.

அவனைப் பார்த்து கிண்டல் பண்ணுவாள். அவள் அவனை கேலி செய்து அழைப்பதற்கு ஒரு பெயரையும் கண்டுபிடித்திருந்தாள்.

“எருமை!”

கோடை காலத்தில் பெரிய மாமாவின் வீட்டில் ஒரு மாதம் தங்குவார்கள். மிகவும் அருகிலேயே அந்த வீடு இருந்தது. அங்கு மிகவும் சுகமாகப் பொழுது போனது. பெரிய மாமாவிடம் ஏராளமான பணம் இருந்தது.

அவர் பம்பாயில் இருக்கும் ஒரு பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருந்தார். வயலின் கரையில் அந்த பிரம்மாண்டமான மாளிகையை அவர்தான் கட்டினார்.

அப்போதெல்லாம் பெரிய அத்தைக்கும் பாகிக்கும் அனியனைத்தான் மிகவும் பிடிக்கும். அதனால் அவனுக்கு என்ன? முதலில் அவன் அப்படித்தான் நினைத்தான்.

இரவு வேளையில் நிலவு வெளிச்சம் விழுந்து கொண்டிருக்கும் மேற்குப் பக்கத்தின் திண்ணையில் உட்கார்ந்து அனியன் கதை கூறுவான். அனியனுக்கு நிறைய கதைகள் தெரியும். ராஜகுமாரியை கிளியாக மாற்றிய கதை. தொட்டது எதுவும் தங்கமாக மாறும் வரம் கிடைத்த கதை. பாகிக்கும் அந்தக் கதைகள் அனைத்தும் மிகவும் பிடித்திருந்தன. அவளுக்குப் பாடத் தெரியும். அவர்களுக்குச் சொந்தமான வாடகை வீட்டில் வசிக்கும் அம்மிணி டீச்சர் அவளுக்குப் பாட்டு கற்றுத் தந்துகொண்டிருந்தாள்.

அவன் அங்கு வந்து அமர்வதை அவர்கள் விரும்பவில்லை. அனியன் கூறமாட்டான். ஆனால் பாகி கூறுவாள்:

“இந்த ராஜ் அத்தான் கொஞ்ச நேரம் வீட்டில் இருக்கக் கூடாதா?” அவளை வெறுக்க முயற்சித்தான்.

ஒருநாள் பெரிய அத்தை கூறுவதைக் கேட்க நேர்ந்தது. “அனியன் படிப்பு நல்ல முறையில் நடக்கும். என் பாகீரதிக்குன்னு இருக்குறவன் அவன்.”

அப்போது மேலும் அதிகமாக வெறுக்க முயற்சித்தான். ஆனால் அவளுடைய பட்டு நாடாவால் கட்டப்பட்ட தலை முடியின் அருமையான வாசனையும், சிவந்த கன்னத்தில் இருந்த வெள்ளைநிற ‘பாலுண்ணி’யும் அவனுக்குப் பிடித்திருந்தன. வளர வளர அவளுடைய அழகும் கூடிக்கொண்டிருந்தது.

அவள் அனியினுக்குச் சொந்தமானவளாம்! அதை நினைத்தபோது யாரிடம் என்றில்லாமல், அடக்க முடியாத அளவிற்குக் கோபம் உண்டானது.

ஒரு சம்பவம் ஞாபகத்தில் வருகிறது. யாருக்கும் தெரியாமல் ஒருநாள் ஒரு ஆபத்தான காரியத்தை அவன் செய்தான். அப்போது அவன் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். மாடியில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து, வீட்டின் கூடத்தில் இரும்புக் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த பாகியின் புள்ளிகள் போட்ட பாவாடையை எடுத்து ட்ரவுசருக்கு மேலே அணிந்து பார்த்தான். ஹாய்! சிலிர்த்துப் போய்விட்டான்! அந்தப் பாவாடை முழுக்க சோப்பின் வாசனை இருந்தது. அருமையான மணம்! ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகு, தலையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. பாகிக்கு முன்னால் நடந்து செல்லக்கூட அவன் தயங்கினான். பலரும் கிண்டல் பண்ணினார்கள். “பெண்ணாக மாறியவன்!”

இதயத்தில் ஒரு நெருப்புப் பொறி எரிந்து கொண்டிருந்தது!

உயர்நிலைப் பள்ளியில் படிப்பு முடிந்தது. அனியன் பள்ளிக் கூடத்தில் முதல் ரேங்க்கில் தேர்ச்சி பெற்றான். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அவனும் எப்படியோ தேர்ச்சி பெற்றுவிட்டான். தொடர்ந்து படிக்க வைக்க அம்மாவால் முடியவில்லை. அம்மா ‘பெரிய அண்ணுக்கு’ கடிதம் எழுதினாள்.

பெரிய மாமா ஒருவனைப் படிக்க வைப்பதாக ஏற்றுக் கொண்டார்.

அனியன் படிக்கட்டும். அவனுக்குத்தான் நல்ல மதிப்பெண்கள் இருக்கு - அம்மா சொன்னாள். பெரிய அத்தையும் அதையே சொன்னாள்.

ஆனால் அதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. படித்துப் பெரிய ஆளாக அனியன் வருவதைப் பார்க்க வேண்டியதிருக்கும். அனியன் அதிகாரியாக வருவான். பாகி அனியனுக்குச் சொந்தமாக ஆவாள். வெள்ளரித் தோட்டத்திலும் வெளிச்சம் குறைவாக இருக்கும் மேற்கு திசையின் பாறைகள் மீதும்தான் வருடங்களைக் கழிக்க வேண்டியதிருக்கும்.

“படிக்க அனுப்பவில்லையென்றால், நான் வேறு எங்காவது ஓடிவிடுவேன்.”

அம்மா திட்டினாள். “நீயே கொஞ்சம் சிந்தித்துப் பார்.”

“அம்மா, என்னை இந்தப் பிறவியில் நீங்க பார்க்க முடியாது.”

அவன் பிடிவாதம் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். அனியனும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

அவன் அனியனிடம் கேட்டான்: “டேய், நான் உன்னுடைய அண்ணன்தானே?”

அனியன் பேசவில்லை.

“நீ இனிமேலும் படிக்கலாம். வயசு குறைவுதானே?”

ஒரு இரவும் பகலும் அவன் சாப்பிடவில்லை. பவள மல்லிகைக்குக் கீழே கல் தரையில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதான்.

அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல் அனியன் சொன்னான்: “ராஜ் அண்ணன், நீங்க படிங்க.” அதைச் சொன்னபோது அனியனின் கண்கள் பனிப்பதை அவன் பார்த்தான்.

அது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

வேலைக்காரனின் சத்தம் கேட்டதும் அவன் திடுக்கிட்டுத் திரும்பினான். “குளியலறையில் நீர் ஊற்றி வைத்திருக்கிறேன்.”

“ம்...”

அவன் முனகினான்.

ஒருவரையொருவர் பார்க்காமலே, அவர்கள் எதிரெதிரில் உட்கார்ந்திருந்தார்கள். வெளியே காற்றின் இரைச்சல் சத்தம் கேட்டது.

தரையிலும் சுவர்களிலும் சோஃபாக்களின் தையல் வேலைகளிலும் பயணித்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில், அனியனின் கண்கள் மீண்டும் மேஜைமீது இருந்த கண்ணாடித் துண்டில் போய் பதிந்தன. குற்ற உணர்வுடன் ராஜ் அண்ணனைப் பார்த்து விட்டு, அனியன் எதிர்ப்பக்கம் இருந்த கண்ணாடியில் கண்களைப் பதித்தான். தன்னுடைய உருவத்தை அவன் மின்விளக்கொளியில் தெளிவாகப் பார்த்தான். வரவேற்பு அறையின் அழகான பின்புலத்தில் தன்னுடைய அவலட்சணமான தோற்றம் ஒரு குறையாக அவனுக்குத் தெரிந்தது.

இந்த அளவிற்கு அழகான ஒரு வீட்டை அவன் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. ஒரு சிறிய வீட்டிற்குள் அவனுடைய ஆசைகள் அடங்கி விட்டிருந்தன. அங்கு தரையில் வண்ண வேலைப்பாடுகள் செய்யப்பட்ட விரிப்புகள் இல்லை. வண்ண ஓவியங்களும், கண்ணாடித் துண்டு பதிக்கப்பட்ட மேஜைகளும், ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் அழகி இருக்கும் கடிகாரமும் இல்லை. ஆனால் சிவப்பு நிற சிமெண்ட் பூசப்பட்ட தரையில் சிவந்த காலடிகளைப் பதியச் செய்தவாறு வேகமாக அங்குமிங்குமாக நடந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்ணை அவன் பார்த்திருக்கிறான். அவளுடைய சிவந்த கன்னத்தில் ஒரு வெளுத்த ‘பாலுண்ணி’ இருக்கிறது!

ராஜ் அண்ணன் படிக்கச் சென்றான். அவன் அதற்குச் சம்மதித்தான். அது ஒரு தியாகம் என்று அவன் நினைக்கவில்லை. அப்படி நினைக்காததால்தானே பலவும் நடந்து விட்டன! காலம் ஏற்கனவே இருந்தவற்றைத் திருத்தி எழுதுகிறது!


கல்லூரி விடுமுறையில் வந்தபோது, ராஜ் அண்ணன் முற்றிலும் மாறிப் போயிருந்தான். மேலும் சற்று வளர்ந்திருந்தான். அழகான ஆடைகள் இருந்தன. அருகில் கடந்து போகும்போது பவுடர் வாசனை வந்தது. இப்போது தடுமாற்றம் சிறிதும் இன்றி எதையும் பேசத் தெரிந்திருந்தது. ஏராளமான விஷயங்கள் கூறுவதற்கும் இருந்தன. நகரத்தின் கதைகள், கல்லூரியின் கதைகள், ஹாஸ்டலின் கதைகள்... அப்போது, சாளரத்தின் வழியாக சிறிது மட்டுமே வெளிச்சம் விழுந்து கொண்டிருந்த அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அனியன் தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

தன்னுடைய, கிளியாக மாறிய ராஜகுமாரியின் கதையை இப்போது பாகிக்குத் தேவையில்லை. அவள் வளர்ந்திருக்கிறாள். அவளுக்கு நகரத்தைப் பற்றிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

“பார்.... ராஜ் அத்தான் தந்தது...”

அவன் பார்த்தான். அழகான கூந்தலில் வைக்கக்கூடிய மலர்கள், செயற்கை முத்துக்களாலான மாலைகள். பெரிய அத்தைக்கு இப்போது ராஜைப் பற்றிக் கூறுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன.

கல்லூரி திறக்கப்பட்டு, ராஜ் அண்ணன் போனான். அனியன் வெள்ளரித் தோட்டத்தைத் தேடிப் போனான்.

எப்படியாவது ஊரைவிட்டுக் கிளம்ப வேண்டும். ஒரு சிறிய வேலை வேண்டும். மூன்று மைல்கள் நடந்து சென்று தினமும் பத்திரிகைகளை வாங்கிப் பார்த்தான். யாருக்கும் தெரியாமல் விளம்பரங்களைக் குறித்து வைத்தான். மனுக்கள் அனுப்பி வைத்தான்.

வேதனையுடன்- கோபத்துடன் அவன் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டான். பாகி விலகிச் செல்கிறாள்.

ராஜ் அண்ணன் அம்மாவிற்கு எப்போதாவது ஒரு கடிதம் எழுதுவான். பெரிய அத்தைக்கும் பாகிக்கும் தொடர்ந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. சில நேரங்களில் அம்மா கூறுவாள்:

“டேய், நீ கொஞ்சம் புதிய வீட்டுக்குப் போய் விவரத்தைத் தெரிஞ்சிட்டு வா.”

அவன் முணுமுணுப்பான்.

“கொஞ்சம் போயிட்டு வாடா. வெளியூர்ல இல்ல அவன் இருக்கிறான்?”

புகைந்து புகைந்து இறுதியில் அது வெடித்துச் சிதறியது.

அப்போது ராஜ் அண்ணன் கிண்டல் கலந்த ஒரு சிரிப்புடன் கேட்டான்: “நான் என்ன செய்தேன்?”

“ஒண்ணும் செய்யலையா? இதை என்கிட்ட செய்திருக்க வேண்டாம்.”

அப்போது முகத்தில் அடித்ததைப்போல ராஜ் அண்ணன் சொன்னான். “ம்... போ. பெரிய மாமாவின் மகளை உனக்கு தானமாகத் தர வச்சிருக்காங்கள்ல!”

அன்று கேட்ட, கூறிய வார்த்தைகள் முழுவதும் மறதி என்ற ஒன்றுக்குள் மூழ்கிக் கிடக்கட்டும்...

பாகியிடம் கூறுவதற்கு பல விஷயங்கள் மனதில் நிறைந்து நின்றிருந்தன. ஒருநாள் மதிய நேரத்தில் அவளுடைய அறையைத் தேடி அவன் சென்றான். அப்போது பாகி சாய்வு நாற்காலியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். வாசலில் நின்று கொண்டு அவன் ஒரு நிமிடம் அவளையே பார்த்தான். அவள் இப்போது பழைய கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தை அல்ல. வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்த நெற்றியிலும், முடி இழைகள் பறந்து விளையாடிக் கொண்டிருந்த மார்பிலும், பட்டு ரவிக்கைக்குக் கீழே தெரிந்த திறந்த வயிற்றுப் பகுதியிலும் கண்கள் பயணித்தன. கட்டுப்பாடு என்ற சங்கிலி நொறுங்கிக் கொண்டிருந்தது. தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை வாரி எடுத்து இறுக இறுக கைகளுக்குள் வைத்து அணைக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால் பலவற்றையும் நினைத்துப் பார்த்தான். ராஜ் அண்ணன், அம்மா பெரிய அத்தை... தைரியமின்மையில் ஆவேசம் உருகிப் போய்விட்டது.

கன்னத்தில் மெதுவாக உதடுகளை வைத்தால் விழித்துவிடுவாளா?

வேண்டாம்... வியர்வை வழிய, அவன் திரும்பி நடந்தான்.

ராஜ் அண்ணன் எல்லாவற்றையும் அடைந்து விட்டான். பாகியின் கழுத்தில் ராஜ் அண்ணன் மாலை அணிவிப்பதை அவன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நகரத்தில் பெரிய வேலையையும், பெரிய மாமா ஏற்பாடு பண்ணி வைத்திருந்தார்.

திருமணப் பந்தலில் ஆட்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த போது, அவன் எழுந்து நடந்தான். யாரிடமும் கூறவில்லை. எங்கு போகிறோம் என்பதையும் அவன் சிந்தித்திருக்கவில்லை. அதற்குப் பிறகு ஒன்பது வருடங்கள் வாழ்க்கையின் கரைகளில் வந்து மோதிச் சிதறி விழுந்தன.

இதற்கிடையில்.... வேண்டாம்... அதை நினைக்கும்போது, கண்கள் ஈரமாகி விடும். பசியையும் வேதனைகளையும் விழுங்கிக்கொண்டு, தூங்காமல் சிமெண்ட் திண்ணைகளில் கழித்த இரவுகள்... சிதிலமடைந்த சுவரும், கரி பிடித்த தரையும் கொண்ட தரம் தாழ்ந்த ஹோட்டல் அறைகள்... சில நிமிடங்கள் மட்டுமே நீடித்திருக்கும் காதலைப் பரிமாறும் சிறிய வீடுகள். அந்தக் காலத்தை நினைத்து அவன் பயந்தான்.

இறுதியில்-

அப்போது, தூரத்தில் துணி மில்கள் நிறைந்த அந்த நகரத்தின் எல்லைக்கு அருகில் இருந்த, புல் வேய்ந்த ஒரு வீட்டின் பிரம்புக் கட்டிலில் கறுப்புநிற கம்பளிக்குக் கீழே படுத்து முனகிக் கொண்டிருந்த ஒரு உருவத்தை அவன் பார்த்தான்.

அவள் பால்காரனின் மகளாக இருந்தாள். பக்கத்து வீடுகளில் வேலை செய்பவளாக இருந்தாள். பெரிய வட்ட முகத்தில் நிறைய அம்மைத் தழும்புகளைக் கொண்ட ஒரு பெண்! அவளுக்கு அவனை விட அதிக வயது இருக்கும். எனினும் அவளை அவன் திருமணம் செய்து கொண்டான்.

அந்த இரவுப் பொழுதை அவன் நினைத்துப் பார்க்கிறான். மில்லில் இருந்து ஒரு மாதத்திற்கான சம்பளப் பணம் முன்பணமாக கிடைத்திருந்தது. நாற்பது ரூபாய். மாலையில் தங்கியிருந்த இடத்திற்குச் செல்லும் பாதைகளில் நடந்தபோது, கால்கள் தரையில் நிற்க மறுத்தன. சுய உணர்வு குறைந்து கொண்டே இருந்தது. வராந்தாவை அடைந்தபோது, தூணைப் பிடித்துக் கொண்டே நின்று கொண்டு வாந்தி எடுத்தான்.

தளர்ந்துபோய் தரையில் உட்கார்ந்தான். மீண்டும் வாந்தி. அப்போது கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்த ஒரு கை அவனுடைய முதுகைத் தடவி விட்டுக் கொண்டிருந்தது. மீண்டும் கண்களைத் திறந்தபோது அறைக்குள் படுத்திருந்தான். வீசிக்கொண்டு அவனுக்கு அருகில் அவள் இருந்தாள்.

அவள் வாயைத் திறக்குமாறு அவனிடம் சொன்னான். அவன் வாயைத் திறந்தான். அவள் அடர்த்தியான மோரை வாய்க்குள் ஊற்றினாள்.

“எழுந்திருங்க.”

அவன் சிரமப்பட்டு எழுந்தான். அவள் அவனை முதுகைப் பிடித்துத் தாங்கியவாறு குளிலறைக்கு நடத்திக் கொண்டு சென்றாள்.

“சட்டையைக் கழற்றுங்க...”

அவன் சட்டையைக் கழற்றினான்.

மேல்துண்டைக் கையில் தந்துவிட்டு சொன்னாள்:

“இதைக் கட்டுங்க...”

அவள் சொன்னபடி கேட்டான்.

சிமெண்ட் தொட்டியில் இருந்து ஒரு பாத்திரத்தின் மூலம் அவள் தொடர்ந்து நீரை எடுத்து அவன்மீது ஊற்றினாள்.

குளித்து முடித்தவுடன், தலைக்குள் பிரகாசம் பரவியதைப்போல அவனுக்கு தோன்றியது.

“இதற்கெல்லாம் ஒரு எல்லை இருக்கணும்.”

அவள் திட்டினாள். அவன் மன்னிப்பு கேட்பதைப்போல அவளுடைய முகத்தைப் பார்த்தான்.


“பரவாயில்ல.... தூங்குங்க.”

கண்களை மூடியபோது, கண்ணாடி வளையல்களின் சத்தம் கேட்டது. சொரசொரப்பான விரல்கள் நெஞ்சிலும் தலைமுடியிலும் பயணித்துக் கொண்டிருந்தன.

ஒரு நடுக்கத்துடன் அவன் சிந்தித்தான். கறுப்பு நிறக் கம்பளிக்குக் கீழே பிரம்புக் கட்டிலில் கண்ணம்மா படுத்திருக்கிறாள்!

நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைக் கையால் வழித்துவிட்ட அவன் தூக்கத்திலிருந்து எழுந்ததைப்போல அழைத்தான்:

“ராஜ் அண்ணே!”

ராஜ் அண்ணனும் திடுக்கிட்டு சுய உணர்விற்கு வந்தான். விரல்களைத் தடவியவாறு அவன் பதைபதைப்புடன் இங்குங்குமாக நடந்தான்.

“நான் ஒரு விஷயத்திற்காக வந்திருக்கேன்.”

“நீ... உனக்கு எதுவும் கேட்கலாம்.”

ராஜ் அண்ணன் சாந்தமாக இருப்பதைப்போல காட்டிக் கொண்டு சொன்னான்.

“என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. வெல்லூருக்குக் கொண்டு போனால்தான் குணமாகும்னு சொன்னாங்க. அதற்காக...” - அவன் தான் கூறிக் கொண்டிருந்ததை நிறுத்தினான். ராஜ் அண்ணன் என்னவோ கூற முயற்சிப்பதைப் பார்த்து அவன் வேகமாகத் தொடர்ந்தான்: “ஊரில் இருக்கும் அந்த வீடும் தோட்டமும் நம் இருவருக்கும் சேர்ந்தவைதானே! என்னுடைய பாதியை விற்கணும். அப்படின்னாத்தான் அவள் பிழைக்க முடியும்.”

“பணம்தான் தேவை என்றால்...”

“வேண்டாம். அது அங்கே வெறுமனே கிடந்து எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல... அதை விற்க வேண்டுமென்றால், ராஜ் அண்ணே... உங்ளோட சம்மதம் வேணும். அதற்குப் பிறகுதான் பத்திரத்தை எழுத முடியும்.”

ராஜ் அண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். பலவற்றையும் கூற வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால் எதுவும் கூற முடியாமல் ஒரு அறிவு சூனியம் ஆகி விட்டவனைப்போல அவன் நின்றிருந்தான்.

“பத்திரம் எழுதினால் உங்களுக்குச் சொல்றேன். வருத்தம் இல்லையே?”

அவன் சிரமப்பட்டு சொன்னான்: “இல்ல....”

அப்போது கண்கள் ஈரமாயின. அவன் அடுத்த நிமிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மாளிகையின் மாடியிலிருந்து வானொலி முனகிக் கொண்டிருந்தது. மூலையில் அழகி ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த கடிகாரம் ஒலித்தது.

“நேரம் பத்தரை ஆயிடுச்சு...” - அனியன் எழுந்தான். “நான் பன்னிரண்டு மணி ஜனதாவில் திரும்பிப் போகணும்.”

“இன்னைக்கு இங்கே தங்கிட்டு...”

“வேண்டாம். அங்கே அவளுக்கு யாரும் துணை இல்லை.”

பிரம்புக் கட்டிலில் கருப்பு நிற கம்பளிக்குக் கீழே முனகிக் கொண்டிருக்கும் ஒரு உருவம்.

ராஜ் அண்ணன் வற்புறுத்தவில்லை. அனியன் சுவரோடு சேர்த்து வைத்திருந்த கைப்பிடி இல்லாத குடையை எடுத்துக் கொண்டு போர்ட்டிக்கோவை நோக்கி நடந்தான்.

ராஜ் அண்ணன் கதவைத் திறந்தான். அனியன் படிகளில் இறங்கினான்.

“என்னுடைய வக்கீல் எழுதுவார். சம்மதம்னு எழுதித் தந்தால் போதும்.”

“ம்...”

“நான் புறப்படட்டுமா?”

அவன் நடந்தான். வெளியே பனி படர்ந்த இருட்டில் ஒரு நிழலைப்போல அவன் வேகமாகக் கரைந்து போனான்.

வறண்ட உதடுகளை ஈரமாக்கிக் கொண்டு ராஜ் அண்ணன் உள்ளே நடந்தான். வரவேற்பறையின் நடுப்பகுதியை அடைந்த போது, படிகள் ஒலிப்பது காதில் விழுந்தது. பாகியாக இருக்கும்.

“இன்னைக்கு சாப்பிடணும், குளிக்கணும்னு ஒண்ணும் இல்லையா?”

பாகியின் குரலைக் கேட்டு, அவன் திரும்பிப் பார்க்கவில்லை. கண்ணாடித் துண்டு பதிக்கப்பட்டிருந்த மேஜைமீது சாளரத்தின் அருகில் இருந்து பத்திரிகைகளை எடுத்து வைத்த அவன் சொன்னான்:

“ம்... செய்யணும்...”

“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி யார் வந்திருந்தது?”

“யாரு?”

“உனக்குத் தெரியாது.”

அவள் படிகளில் அழுத்தமாக மிதித்து ஏறிச் சென்றாள். துளைத்துக் கொண்டு உள்ளே நுழையும் குளிர்ந்த காற்றை அனுபவித்தவாறு, அவன் மீண்டும் சாளரத்தின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.

முற்றத்தில் இருந்த மந்தாரைப் படர்ப்புகளில் மின்மினிப் பூச்சிகள் இருட்டில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.