
அம்மா தூர தேசத்தில் இருக்கும் ஏதோ ஒரு நகரத்தில் பலவிதப்பட்ட துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய மகனுக்கு இதய வேதனையுடன் கடிதம் எழுதுகிறாள்.
‘மகனே, நாங்க உன்னைக் கொஞ்சம் பார்க்கணும்’
இது மட்டுமே அல்ல. நிறைய நிறைய வாக்கியங்கள். இலக்கண முறையோ எழுத்து அழகோ அதில் இல்லை. எனினும் அம்மாவின் மனக்கவலை முழுவதும் அந்தக் கடிதத்தில் வெளிப்பட்டது. அவர்களுக்கிடையே சந்திப்பு நடந்து நீண்ட காலமாகிவிட்டது.
அம்மா தினந்தோறும் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ற விஷயம் மகனுக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? போய் பார்க்கப் பணம் இல்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே சிரமமாக இருக்கிறது. ‘எப்படியாவது நாளைக்கு பயணத்தை ஆரம்பத்துவிட வேண்டும், அம்மாவைப் போய் பார்க்க வேண்டும்’ என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொள்வான். இதற்கிடையில் நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் அப்படியே கடந்து போய்க் கொண்டிருக்கும்.
அம்மா தினந்தோறும் தன் மகனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நான் இதுவரை கூறியதும், இனிமேல் கூறப்போவதும் என்னுடைய அம்மாவைப் பற்றித்தான். இப்படிப்பட்ட சம்பவங்கள் பாரதத்தில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு அம்மாக்களைப் பற்றியும் கூறுவதற்கு இருக்கும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றித்தான் நான் கூறப் போகிறேன். நினைத்துப் பார்க்கும்போது கவலை அளிக்கக்கூடிய விஷயம். அதற்கும் அம்மாவிற்கும் இடையே பெரிய தொடர்பு எதுவும் இல்லை. நான் அம்மாவின் மகன் என்ற உறவு மட்டுமே.. என்னைப் போன்ற பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்கள் பாரதமெங்கும் இருக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய குற்றத்திற்காக சிறைகளில் அடைக்கப்பட்ட காலத்தில் அந்த அம்மாக்கள் என்ன செய்தார்கள்? பாரதத்தைச் சேர்ந்த இளைஞர்களையும் இளம்பெண்களையும்... எங்கிருந்தோ இங்கு வந்த வெள்ளைக்காரர்களுடைய அரசாங்கத்தின் அரக்கத்தனமான இந்தியர்களே அடித்தும் உதைத்தும் எலும்புகளை நொறுக்கிச் சிறைகளில் அடைத்திருந்த காலத்தில், அவர்களுடைய அம்மாக்கள் வெளியில் இருந்த லட்சக்கணக்கான வீடுகளில் இருந்து கொண்டு என்ன செய்தார்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா? எதையும் என்னுடைய தாய் என்ன செய்தாள் என்று எனக்கு நன்றாக தெரியும்.
அந்தப் பழைய கதையை நான் இங்கு எழுதப்போவது வேறு எந்தவொரு நோக்கத்தினாலும் அல்ல. அம்மாவின் கடிதத்தை வாசித்தபோது பழைய பழைய நினைவுகள் எனக்குள் வந்து அலைமோதுகின்றன. நான் வைக்கம் தலையோலப் பறம்பில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மைல்கள் தூரத்தில் இருக்கும் கோழிக்கோட்டிற்கு உப்பு சத்தியாகிரகத்திற்குச் சென்ற கதை...
உப்புச் சத்தியாக்கிரகம்! நினைத்துப் பார்க்க முடியுமா?
அதை இங்கு எழுதுவதற்கு முன்னால் சில விஷயங்களக் கூற வேண்டியதிருக்கிறது. நான் இதை எழுதுவது ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தெட்டாம் ஆண்டில் என்பதைப் பற்றியோ, இந்தியா இப்போதும் சுதந்திரம் இல்லாமல்தான் இருக்கிறது என்பதைப் பற்றியோ உள்ள ரகசியத்தை அல்ல. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதரால் தான் நான் முதல் தடவையாக அடியும் உதையும் வாங்கினேன் என்ற ரகசியத்தைத்தான் நான் இங்கு எழுதப் போகிறேன். எது எப்படியோ, அம்மா என்னைப் பெற்றெடுக்காமல் இருந்திருந்தால் என் விஷயத்தில் எந்தவொரு பிரச்சினையும் உண்டாகி இருக்காது. என்னால் அம்மாவிற்கு இந்த மனவேதனையும் உண்டாகி இருக்காது. அடிமைத்தனமும் வறுமையும் இதைப் போன்ற வேறு நிறைய கொடுமையான நோய்களும் நிறைந்த ஆதரவற்ற இந்த நாட்டில் அம்மா என்னை எதற்காகப் பெற்றெடுத்தாள்? இந்தக் கேள்வியை இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு அம்மாக்களிடமும் அவர்களுடைய ஆண்களும் பெண்களுமாகிய பிள்ளைகள் ஒவ்வொருவரும் கேட்பார்களா? எது எப்படி இருந்தாலும், இந்திய நாடு எப்படி இந்த அளவிற்கு வறுமை நிறைந்த நாடாக ஆனது? நான் ஒரு இந்தியன் - அப்படி என்றால் பெருமையுடன் கூற முடியவில்லை. நான் வெறும் ஒரு அடிமை. அடிமை நாடான இந்தியாவை நான் வெறுக்கிறேன். ஆனால்... இந்தியா... என் தாய் அல்லவா? என்னைப் பெற்றெடுத்த என்னுடைய அம்மா என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல பாரதமும் என்னை எதிர்பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது? பாரத மண் இறந்த என்னையும்; என்னைப் பெற்றெடுத்த என்னுடைய அம்மா வாழ்ந்து கொண்டிருக்கும் என்னையும்.
எதிர்பார்ப்பு!
நான் நினைத்துப் பார்க்கிறேன்.
அம்மா என்னைப் பெற்றெடுத்தாள். மார்பிலிருந்து பாலையும் பிறவற்றையும் தந்து என்னை வளர்த்தாள். அந்த வகையில் என்னை ஒரு மனிதனாக ஆக்கினாள். ஏங்தி, ஆசைப்பட்டு உண்டான பிள்ளை நான் என்பது அம்மாவின் வாதம்! ‘நீ ஏங்கி ஆசைப்பட்டு உண்டான பிள்ளை!’ இப்படி ஒவ்வொரு பிள்ளையையும் பார்த்து ஒவ்வொரு அம்மாவும் கூறுவாளா? என் இதயத்தில் உண்டாகும் உணர்வுகளை இங்கு அப்படியே வெளிப்படுத்த முடியாது. எதிர்ப்பின் கை விலங்கு இருப்பதைப்போல போலீஸ் லாக்-அப்கள், சிறை, தூக்கு மரம்... நினைத்துப் பார்க்கிறீர்களா?
‘மனதையும் உடலையும் மூச்சடைக்கச் செய்யும் உன்னதமான பிராகாரங்கள் கொண்ட ஒரு பயங்கரமான இருட்டறைதான் இந்தியா!’- காந்திஜி கூறிய வார்த்தைகள் இவை என்பதற்கு உத்தரவாதம் இல்லை. காந்திஜி காரணமாக அடியும் உதையும் வாங்கியது எனக்கு நன்கு ஞாபகத்தில் இருக்கிறது. அடித்தவர் ஒரு பிராமணர். பெயர்- வெங்கிடேஸ்வரய்யர். வைக்கம் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். பிரம்பால் முழு பலத்தையும் பயன்படுத்தி ஏழு அடிகள். அது வைக்கம் சத்தியாகிரக காலத்தில் நடந்த விஷயம். எல்லா தாழ்த்தப்பட்ட இந்துக்களையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். சத்தியா கிரகத்தில் ஈடுபட்டவர்களின் கண்களில் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த இந்துக்கள் பச்சை சுண்ணாம்பை தடவுகிறார்கள். அடித்து, உதைக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு உண்டாக வேண்டும். வருகிறார் காந்திஜி! ஞாபகம் இருப்பவர்கள் இருக்கிறார்களா?
வைக்கம் படகுத் துறையிலும் ஏரிக்கரையிலும் நல்ல கூட்டம். எங்கும் ஆரவாரம். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து நானும் இப்படியும் அப்படியுமாக நெளிந்து தள்ளி, மக்கள் கூட்டத்திற்கு முன்னால் சென்றுவிட்டேன். படகில் காந்திஜியை தூரத்திலேயே பார்த்துவிட்டேன். படகுத் துறையை படகு நெருங்கியது. ஆயிரமாயிரம் தொண்டைகளுக்குள்ளிருந்து சத்தம் உயர்ந்தது. இந்தியாவில் நடக்கும் எல்லா அநீதிகளுக்கும் எதிராக ஒலித்த போர் முழக்கத்தைப் போல-ஆவேசமான ஒரு சவாலைப்போல- ஆயிரமாயிரம் தொண்டைகளில் இருந்து கடலின் சீற்றத்தைப்போல- ‘மகாத்மா...காந்தி...கீ... ஜே!’
அந்த அரை நிர்வாணத் துறவி இரண்டு பற்கள் இல்லாத ஈறைக் காட்டிச் சிரித்துக்கொண்டே கைகளால் தொழுதவாறு கரையில் இறங்கினார். மிகப்பெரிய ஆரவாரம். திறந்திருந்த காரில் அவர் மெதுவாக ஏறி உட்கார்ந்தார்.
திரண்டு நின்றிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவில் கார், சத்தியாகிரகம் நடைபெறும் ஆசிரமத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தது. மாணவர்களில் பலரும் காரின் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டு நின்றிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். அந்த ஆரவாரத்திற்கு மத்தியில் எனக்கு ஒரு ஆசை! உலகமே வணங்கும் அந்த மகாத்மாவை ஒரு தடவை தொடவேண்டும்! ஒரு தடவையாவது தொடாவிட்டால் நான் இறந்து விழுந்துவிடுவேன் என்பதைப்போல் நான் உணர்ந்தேன். லட்சக்கணக்கான மக்களுக்கு நடுவில் யாராவது பார்த்துவிட்டால்..? எனக்கு பயமும் பதைபதைப்பும் உண்டாயின. எல்லாவற்றையும் மறந்துவிட்டு நான் காந்திஜியின் வலது தோளை மெதுவாக ஒரு முறை தொட்டேன்! விழப் போனதால் கையைப் பிடித்தேன். தோலுக்கு பலமே இல்லை. மென்மையாக இருந்தது. காந்திஜி என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
அன்று சாயங்காலம் வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் பெருமையுடன் நான் சொன்னேன்:
“அம்மா, நான் காந்திஜியைத் தொட்டேன்!”
காந்திஜி என்றால் என்ன பொருள் என்று தெரியாத என்னுடைய தாய் பயந்து பதைபதைத்துப் போனாள். “ஹோ...என் மகனே!”- அம்மா திறந்த வாயுடன் என்னைப் பார்த்தாள்.
நான் நினைத்துப் பார்த்தேன்...
தலைமை ஆசிரியர் ஆலய நுழைவு சத்தியாகிரகத்திற்கு எதிரானவர். காந்திஜிக்கும் எதிரானவர். அதனால் மாணவர்கள் யாரும் கதர் ஆடை அணியக்கூடாது என்று அவர் தடை போட்டிருந்தார். சத்தியாக்கிரக ஆசிரமத்திற்குப் போகக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
நான் அன்று கதராடைதான் அணிந்திருந்தேன். ஆசிரமத்திற்கும் போய்க் கொண்டிருந்தேன். ஒருநாள் நான் வகுப்பறைக்குச் சென்றபோது தலைமை ஆசிரியர் என்னை அழைத்து, கோபம் கலந்த கிண்டலுடன் சொன்னார்:
“அடடா! அவனுடைய ஆடைகளைப் பார்த்தீங்களா?”
நான் எதுவும் பேசவில்லை. மீண்டும் அவர் கேட்டார்:
“உன்னோட வாப்பா இதை அணிஞ்சிருக்காராடா?”
நான் சொன்னேன்: “இல்ல”
இதற்கிடையில் ஒருநாள் நான் மணியடித்து இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்த பிறகு, வகுப்பறைக்குச் சென்றேன். அவர் பிரம்பு சகிதமாக வாசலில் நின்றிருந்தார். என்னை அழைத்துக் கேட்டதற்கு நான் சொன்னேன் “ஆசிரமத்திற்குப் போயிருந்தேன்” என்று.
“அங்கு உன்னுடைய யார் இருக்கிறார்கள்?” - அவர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ‘படபடோ’ என்று ஆறு அடிகளை என் உள்ளங்கையில் தந்தார். “இனிமேல் போகக் கூடாது, புரியுதாடா?”
என் பின் பாகத்தில் மேலும் ஒரு அடி விழுந்தது.
“இனிமேல் போனால் உன்னை ‘டிஸ்மிஸ்’ பண்ணிடுவேன்.”
ஆனால், நான் அதற்குப் பிறகும் சென்றேன்.
நான் நினைத்துப் பார்க்கிறேன்...
அந்தக் காலத்தில் என்னிடம் ஒரு கதர் சட்டையும் ஒரு கதர் வேட்டியும் இருந்தன. ஒரு சட்டையும் ஒரு வேட்டியும் மட்டும் அன்று கதர் விடுதலையின்-எதிர்ப்பின் அடையாளமாக இருந்தது. வெளிநாட்டு ஆடைகளை அணியக்கூடாது என்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன்.
இதற்கிடையில் எப்போதாவது நான் இறந்துவிட்டால் என்னை அந்தக் கதர் ஆடையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன்.
அம்மா கேட்பாள்:
“காந்திக்கு எங்கே இருந்துடா இந்த சாக்கு மாதிரி இருக்குற வேட்டி கிடைச்சது?”- கதர் உடலில் பட்டால் அரிப்பு எடுக்கும் என்பது அம்மாவின் நம்பிக்கை!
நான் கூறுவேன்:
“இது நம்மோட இந்திய நாடு உண்டாக்கியது”
அந்த வகையில் காந்திஜி, அலி சகோதரர்கள், மவுலானா அபுல்கலாம் ஆஸாத், ஜவஹர்லால் நேரு, சுய ஆட்சி, பிரிட்டீஷ் ஆக்கிரமிப்பு-இவைதான் பேசப்பட்ட விஷயங்களாக இருந்தன. அந்த ஊரில் இருந்த வயதான மனிதர்களுக்கு சீனாவைப் பற்றியோ, இங்கிலாந்தைப் பற்றியோ சந்தேகங்கள் கேட்பதற்கு இரண்டே இளைஞர்கள்தான் இருந்தார்கள். ஒருவர்-திரு.கெ.ஆர்.நாராயணன். எல்லோருக்கும் நன்கு தெரிந்த திரு.நாராயணன், அப்போது வந்து கொண்டிருந்த பெரும்பாலான பத்திரிகைகளின் கட்டுரையாளராக இருந்தார். யாராவது எதைப் பற்றியாவது என்னிடம் சந்தேகம் கேட்டால், ‘எனக்குத் தெரியாது’ என்று நான் அப்போது சொன்னதில்லை. ஆனால், ஒருமுறை எனக்கு பதில் கூற முடியவில்லை.
அம்மா கேட்டாள்:
“டேய் இந்த காந்தி நம்முடைய பட்டினியை இல்லாமல் செய்வாரா?”
ஒரு பெரிய பிரச்சினை.. பாரதத்தை ஒட்டுமொத்தமாக பாதித்துக் கொண்டிருக்கிறது. அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனினும் நான் சொன்னேன்:
“பாரதம் விடுதலை அடைந்தால் நம்முடைய பட்டினி இல்லாமல் போய்விடும்.”
இது நடந்தது ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதாவது வருடத்தில். அந்த காலகட்டத்தில் என்றுதான் நினைக்கிறேன்- காந்திஜி அவருடைய புகழ்பெற்ற பதினொரு விஷயங்கள் கொண்ட கடிதத்தை அப்போதைய வைஸ்ராய் இர்வின் பிரபுவிற்கு சபர்மதி ஆசிரமத்திலிருந்து அனுப்பினார். ரெனால்ட் என்ற ஒரு ஆங்கிலேய இளைஞர்தான் கடிதத்தைக் கொண்டு சென்றார் என்று நினைக்கிறேன். ஆனால், திருப்தியான பதில் கிடைக்கவில்லை. கடிதத்தில் கூறியிருந்ததைப்போல காந்திஜி சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார். உப்புச் சட்டத்தை மீறுவதற்கு எழுபது தொண்டர்களுடன் காந்திஜி தண்டி கடற்கரைக்குச் சென்றார். இந்தியாவின் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் ஏழைகள் கஞ்சிக்கும் குழம்புக்கும் பயன்படுத்தும் உப்புமீதுகூட வெளிநாட்டிலிருந்து நுழைந்து கொண்டு ஆக்கிரமிப்பு நடத்திக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் தன் கையை வைத்தது இந்தியாவைக் குலுக்கிய காந்திஜியின் அந்த தண்டி யாத்திரைக்கு முன்னால் அவர் சொன்னார்:
“ஒன்று-நான் விருப்பப்படும் விஷயங்களைச் சாதித்து முடித்து ஆசிரமத்திற்குத் திரும்பி வருவேன். இல்லாவிட்டால் என்னுடைய உயிரற்ற உடல் அரபிக் கடலில் கிடப்பதைப் பார்க்கலாம்!”
காந்திஜி இறப்பதா? இமயம் முதல் கன்னியாகுமாரி வரை அதிர்ந்தது. ஒட்டுமொத்த பாரதமும் திகைத்து நின்றது. பரிட்டிஷ் அரசாங்கமும் இந்தியர்களான நாட்டு ராஜாக்களும் தங்களுடைய அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி ஆயுதங்கள் ஏந்தாத இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, பார்சி, சிக்கிய மதங்களைச் சேர்ந்த சத்தியாகிரகப் போராளிகளை எதிர்த்தார்கள். ராணுவம், போலீஸ் சிறை, தூக்குமரம்-இவைதான் ஆட்சி என்று ஆனது. காந்திஜியையும் மற்றவர்களையும் தண்டி கடற்கரையில் கைது பண்ணினார்கள்.
வேறு எல்லா இடங்களிலும் போல கேரளத்திலும் நிலைமை அமைதியாக இல்லை. கோழிக்கோட்டில் கடல்பகுதியில் உப்புச் சட்டத்தை மீறி நடந்தவர்களை, இந்தியர்களான போலீஸ் சூப்பிரெண்டின் கட்டளைப்படி கடுமையாக தண்டித்தார்கள். பூட்ஸ் கால்களால் மிதிப்பது, லத்தியால் அடிப்பது-இதைத்தான் அவர்கள் செய்தார்கள். அதுவும் இந்தியர்களான போலீஸும் ராணுவமும்!
கேளப்பன், முஹம்மது அப்துல் ரஹ்மான் ஆகியோரைக் கைது பண்ணினார்கள். தொடர்ந்து சட்ட மீறுதல்களும் கைதும் போலீஸின் ஆக்கிரமிப்பும். அப்போது கோழிக்கோட்டில் கடல் பகுதியில் மாணவர்களிடம் நடந்து கொண்ட முறைதான் மிகவும் கொடுமையானது. பிஞ்சு மாணவர்கள்! கேரளத்தின் எதிர்காலப் பிரஜைகள். அவர்களைக் கேரளத்தைச் சேர்ந்த போலீஸ் அடித்து தரையில் வீழ்த்தியது.
தலை உடைந்தும் குருதி சிந்தியும் அவர்கள் கோழிக்கோட்டின் கடல் பகுதியில் கிடந்தார்கள். நூற்றுக்கணக்கான மாணவர்கள்! ‘மாத்ருபூமி’ பத்திரிகையில் ஒரு தலைவர் வெளியிட்ட கவலை கலந்த அறிக்கைகளில் ஒன்று:
‘தாய்நாடு மீது கொண்டிருக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காக கோழிக்கோட்டின் கடற்கரையில் ஒன்று சேர்ந்த அப்பாவிகளான மானவர்களை- ஆயுதம் ஏந்தாதவர்களும்,எந்தத் தவறும் செய்யாதவர்களுமான சிறுவர்களை-இரக்கமே இல்லாமலும் கொ*ரமாகவும் லத்திகளால் அடித்து தலையை உடைப்பதற்கும்,கைகளையும் கால்களையும் அடித்து ஒடிப்பதற்கும்,மலையாளம் பேசும் பெண்கள் பெற்றெடுத்தவர்கள் என்று கூறப்படும் போலீஸ்காரர்களுக்குக் கை உயர்ந்தது அல்லவா?. இந்த நகரத்தின் நல்ல மனிதர்கள் என்றும்; வசதி படைத்தவர்கள் என்றும்; பெரிய மனிதர்கள் என்றும் கூறிக் கொள்பவர்கள் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் அடங்கி இருப்பதைப் பார்க்கும்போது, உயர் அதிகாரிகளின் கட்டளைகளைக் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றுகிற அறிவில்லாத போலீஸ்காரர்களை நான் எதற்காகக் குறைகூற வேண்டும்?’
அந்த வகையில் கேட்போரும் கேள்வியும் இல்லாத காலம். எனினும் பொதுமக்கள் அடங்கவில்லை. ஒன்றாகச் சேர்ந்து படையின் பாடல்!
‘வருக வருக தோழர்களே! நமது போராட்டத்திற்கு நேரம் வந்து விட்டது!’
அந்த வகையில் நானும் சென்றேன். யாரிடமும் எதுவும் கேட்காமல் படிப்பைத் துறந்துவிட்டு கோழிக்கோட்டிற்குச் சென்றேன். அன்று மாலையில் என் அம்மா சமையலறையில் சமையல் செய்தாள் . அவளுக்கு எதுவும் தெரியாது. நான் அம்மாவிடம் இறுதியாக ஒரு டம்ளர் நீர் வாங்கிக் குடித்துவிட்டு, அவளை ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
யாராவது பின் தொடர்ந்து வருவார்களோ என்று பயந்தேன். மறுநாள் படகுத் துறையிலிருந்து எர்ணாகுளத்தில் இறங்கி, இடப்பள்ளிக்கு நடந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தேன். மாலை நேரம் கடந்து விட்டிருந்தது. வண்டி வருவதற்கு மிகவும் தாமதமானது. அப்போது நான்கைந்து போலீஸ்காரர்கள் விளக்குடன் அங்கு வந்தார்கள். நான் பயம் கொண்டு நடுங்கினேன். ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் கேட்டார்கள். நான் உறங்கிக் கொண்டிருப்பதைப்போல படுத்துவிட்டேன். ஒருவன் லத்தியால் என்னுடைய வயிற்றில் தட்டி அழைத்தான். விளக்கை என்னுடைய முகத்திற்கு அருகில் வைத்துக்கொண்டு அவன் கேட்டான் ,
“நீ எங்கேடா போறே?”
என்ன கூறுவது காங்கிரஸில் சேர்வதற்காகத் திருவிதாங்கூரிலிருந்து கோழிகோட்டிற்குச் செல்கிறேன் என்று கூறுவதற்கு நான் பயந்தேன்.
நான் பொய் சொன்னேன்: “ஷொர்னூருக்குப் போறேன்.”
“எதற்கு?”
மீண்டும் ஒரு பொய்: “அங்கே என்னோட மாமா தேநீர்க்கடை வச்சிருக்கார்.”
என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு எதுவும் கேட்கவில்லை. அவர்கள் ஒரு திருடனைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். ஷொர்னூருக்கு டிக்கெட் வாங்கினேன். அங்கு இறங்கி பட்டாம்பி வரை நடந்தேன். மீண்டும் புகைவண்டியில் பயணம் செய்து, கோழிக்கோட்டை அடைந்தேன். முஹமது அப்துல் ரஹ்மானின் அல்-அமீன் பத்திரிகையின், அல்-அமீன் லாட்ஜில் தங்கினேன். நான் முதலில் செய்தது -என்னுடைய ஊரைச் சேர்ந்த ஸைத் முஹம்மதுவிற்கு பெல்லாரி சிறைக்கு யாருக்கும் தெரியாமல் ஒரு கடிதம் எழுதியதுதான். ‘என்னுடைய எல்லாவற்றையும் பாரத மாதாவின் பாதங்களில் அர்ப்பணம் செய்யத் தீர்மானித்து விட்டேன். அடிமைச் சங்கிலியை உடைப்பதற்கு என்னுடைய அனைத்து சக்தியையும் நான் அளிக்கிறேன். வெகு சீக்கிரமே நான் கைது செய்யப்படுவேன்!’
அதற்கு அவர் கடிதம் எழுதினார்: ‘எனக்கு இனியும் சில நாட்களே இருக்கின்றன. வெகு சீக்கிரமே நான் விடுதலை ஆகிவிடுவேன். நாம் இருவரும் கலந்து பேசிய பிறகு, காங்கிரஸில் சேர்ந்தால் போதும்.’ அவர் அல்-அமீன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் அப்போதிருந்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். ஒற்றைப்பாலத்தில் இ.மொய்து மவ்லவியுடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து அங்கிருந்த சூப்பிரெண்டின் கடுமையான தண்டனைகளை அனுபவித்த மனிதர் அவர். அவர் வரும் வரையில் தங்கியிருக்க எனக்குப் பொறுமை இல்லாமல் இருந்தது. பாரதம் வெகு சீக்கிரமே விடுதலை பெற்றுவிடும்! விடுதலைப் போராட்டத்தில் எனக்கும் பங்கு இருக்க வேண்டும்! என்னுடைய ஊரிலிருந்து என்னுடைய ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வந்து சேரவில்லை. அந்தக் குறையை நான் சரி செய்ய வேண்டும். அந்த நேரத்தில் என்னுடைய தந்தையும் வந்துவிட்டார். ஸைத் முஹம்மதுவின் கடிதத்தைக் காண்பித்துவிட்டு, வாப்பாவிடம் நான் சொன்னேன்: “நான் காங்கிரஸில் சேர மாட்டேன். பள்ளிக்கூடத்திற்கும் போகப் போவதில்லை. ஒரு வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமே கிடைக்கும்.” அந்த வகையில் எப்படியோ என் வாப்பாவைச் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டேன்.
தொடர்ந்து நான் நேராக காங்கிரஸ் அலுவலகத்திற்குத் தான் சென்றேன். அங்கேயும் எனக்கு விரக்தி அடையும் சூழ்நிலை உண்டானது. நான் ஒரு சி.ஐ.டி. என்று அவர்கள் தவ*க நினைத்தார்கள். என் டைரி அந்த எண்ணத்திற்கு பலம் சேர்த்தது. அதில் ஆங்கிலம், தமிழ், இந்தி, அரபி, மலையாளம்- இப்படிப் பல மொழிகளிலும் நான் எழுதியிருந்தேன். அதை பெஞ்சின்மீது வைத்து விட்டு நான் சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டேன். திரும்பி வந்தபோது, செயலாளர் அதைத் திறந்து வாசித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்துவிட்டேன். அவருக்கு அப்படி எதுவும் பெரிதாகப் புரியவில்லை என்றாலும், என்மீது சந்தேகப்படுவதற்கு அது காரணமாக அமைந்து விட்டது. நான் ஸைத் முஹம்மதுவின் கடிதத்தைக் காட்டினேன். அப்படியும் சந்தேகம் தீரவில்லை. என்னுடைய நடவடிக்கைகளையும் என்னுடைய பார்வைகளையும் அவர் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அலுவலகத்தில் அரசியல் தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. ஃபெல்ட் தொப்பியைச் சாய்வாக வைத்துக் கொண்டு, பெரிய காலர்களைக் கொண்ட வெள்ளைநிற சட்டையை அணிந்து, மேலுதடு முழுக்க மெல்லிய மீசையை வைத்துக்கொண்டு, சோகம் நிறைந்த கம்பீரமான முக பாவனையுடன் காட்சியளித்த படத்தில் இருப்பது யார் என்று நான் கேட்டேன். அதற்குக் காரணம்- வெள்ளைக் காரர்களின் தோற்றத்தில் இருந்த அந்த தலைவர்மீது எனக்கு வெறுப்பு உண்டானது. செயலாளர் சொன்னார்:
“பகத்சிங்“
அதைக் கேட்டவுடன் எனக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டானது. வீரத்தின் உறைவிடமான பகத்சிங்! அப்போது அவரைத் தூக்கில் போடவில்லை! பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ்-பஞ்சாப்பைச் சேர்ந்த அந்த மூன்று புரட்சியாளர்களைப் பற்றி நான் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அசெம்ப்ளி ஹாலில் குண்டு எறிந்ததையும் வைஸ்ராய் வந்த புகை வண்டியைத் தகர்க்க முயற்சித்ததையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். அந்தப் புகைப்படத்தையே நீண்ட நேரம் பார்த்து செயலாளர் சொன்னார்:
“பகத்சிங்கின் முகச் சாயல் உங்களுக்கு இருக்கு. மீசையும் காலரும் அதே மாதிரி இருக்கு. அந்த ஃபெல்ட் தொப்பியை வைத்துவிட்டால் போதும்”
நான் எதுவும் கூறவில்லை. எனக்கு பகத்சிங்கின் சாயல் இருக்கிறது என்பதைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது செயலாளர் மீண்டும் என்னிடம் கேட்டார்:
“உண்மையிலேயே நீங்க முஸ்லிம்தானா?”
நான் கேட்டேன்: “உங்களுக்கு என்ன சந்தேகம்?” தொடர்ந்து அப்போது வரையிலான என்னுடைய வாழ்க்கை வரலாற்றை நான் அவரிடம் கூறினேன். இறுதியில் அவர் கேட்டார்:
“நாளை கடற்கரையில் உப்பு காய்ச்ச போகத் தயாரா?”
“தயார்!” - நான் சொன்னேன்.
அந்த வகையில் மறுநாள் பொழுது விடியும் நேரத்தில் எழுந்தேன். சட்டி, கொடி ஆகியவற்றுடன் நாங்கள் போவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் படிகளில் ‘சடபட’ ஒலிப்பதைக் கேட்டு, திடுக்கிட்டு நாங்கள் பார்த்தோம். ஆறேழு போலீஸ்காரர்களுடன் இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். எங்களை- பதினொரு பேரையும் கைது செய்து கொண்டு போனார்கள்.
அது ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலை நேரம். நாங்கள் யாரும் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. எனக்கு உறக்கமும் களைப்புமாக இருந்தது. எங்களுக்குப் பின்னால் ஒரு மக்கள் கூட்டமும் வந்து சேர்ந்தது. காவல் நிலையத்தை நெருங்கியபோது, என்னுடைய தைரியம் அனைத்தும் எங்கு போனதோ தெரியவில்லை. முதல் தடவையாக நான் காவல் நிலையத்திற்குச் செல்கிறேன் .வாளும் துப்பாக்கியும் கை விலங்குகளும் சுவரில் மிகவும் பயங்கரமாக மினுமினுத்துக் கொண்டிருந்தன. அவற்றின் கொடூரமான பிரகாசமும், ஸ்டேஷனில் நின்றிருந்த போலீஸ்காரர்களின் குரூரமான முக வெளிப்பாடும் என்னை மிகவும் பயப்பட வைத்தன. நரகத்தைப் பற்றிய ஒரு நினைப்பு எனக்கு வந்தது.
எங்களை வரிசையாக வாசலில் நிற்க வைத்தார்கள்.சிறிய பூனைக்கண்களைக் கொண்ட இன்ஸ்பெக்டர் உள்ளே போனார். எங்களுக்கு முன்னால் ஆஜானுபாகுவான ஒரு போலீஸ்காரர் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார். சிவந்து கூர்மையாக இருந்த கண்கள் எங்கள் ஒவ்வொருவரையும் பார்த்தன. அவருடைய எண் 270. முதலாவதாக நின்றிருந்த கேப்டனின் பின் கழுத்தைப் பிடித்து அவர் உள்ளே தள்ளி விட்டார். உள்ளேயிருந்து அடியும் உதையும் அழுகைச் சத்தமும் கேட்டன. என்னுடைய இதயம் பதறியது. நான் நான்காவதாக நின்றிருந்தேன்.பத்து நிமிடங்கள் கழித்து இரண்டாவது ஆளையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
அவருடைய இதயம் நொறுங்கிப் போகும் அளவிற்கு ஒலித்த அழுகைச் சத்தத்தை கேட்டபோது, நான் நடுங்கிவிட்டேன். மன்னிப்பு கேட்டு விடலாம் என்று நான் முடிவெடுத்தேன். ஒரு நிமிடத்திற்கு மட்டுமே... உடனடியாக எனக்குத் தோன்றியது. எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? தவறு எதுவும் செய்து விடவில்லையெ! சுதந்திரம்- அதற்காக எத்தனையெத்தனை இளம்பெண்களும் வாலிபர்களும் மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள்! நான் பகத்சிங்கையும் தோழர்களையும் நினைத்துக் கொண்டே மரணத்தைத் தழுவிவிடலாம். அதுதான் என்னுடைய கடமை!
முன்னால் நடந்து கொண்டிருந் 270 ஒவ்வொருவரிடமும் கேட்டார்-ஒவ்வொருவரின் நாடும் என்ன என்று. ஒவ்வொருவரும் சொன்னார்கள்:
“கண்ணூர்,தலைச்சேரி, பொன்னானி.”
அவர் என்னிடம் கேட்டார்:
“உன்னுடைய?”
நான் சொன்னேன்: “வைக்கம்...”
“வைக்கம்!”- அவர் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார். திருவிதாங்கூர்காரன்!
“பெயர்?”
நான் என்னுடைய பெயரைச் சொன்னேன்.தலையை நிமிர்த்திக்கொண்டு 270 என்னிடம் கேட்டார்:
“திருவிதாங்கூரில் சுய ஆட்சி கிடைத்துவிட்டதா?”
நான் சொன்னேன்:
“இல்லை... உள் மாநிலங்களில் போராட்டம் வேண்டாம்னு காந்திஜி சொல்லியிருக்கார்.”
“அப்படியா?” -அவர் பயங்கரமாக உறுமினார். மிகுந்த கோபத்துடன் எனக்கு அருகில் வந்தார். என்னுடயை இரண்டு கன்னங்களிலும் ‘படபடே’ என்று இரண்டு அடிகள்! தொடர்ந்து பின்கழுத்தைப் பிடித்து குனியும்படி நிற்க வைத்து அடிக்க ஆரம்பத்தார். செம்பு பானையின்மீது அடிப்பதைப்போல சத்தம் கேட்டது. பதினேழு வரையோ... இல்லாவிட்டால் இருபத்தி ஏழு வரையோ... நான் எண்ணினேன். அதற்குப் பிறகு நான் எண்ணவில்லை. எதற்காக எண்ண வேண்டும்?
இறுதியில் இரண்டு போலீஸ்காரர்களின் உதவியுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்த என்னை உள்ளே கொண்டு போனார்கள். இன்ஸ்பெக்டர் என்னுடைய நிலையைப் பார்த்துக் கேட்டார்:
“என்ன?”
ஒரு போலீஸ்காரர் சொன்னார்:
“நம்பியார் உடம்பை ஒரு வழி பண்ணிட்டார்.”
எந்தவித உணர்ச்சி மாறுபாடும் இல்லாதது மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முனகினார்:
“ம்...”
வேறொரு போலீஸ்காரர் என்னுடைய சட்டைய அவிழ்த்து என் உயரம், உடல் அளவு, அடையாளம் ஆகியவற்றைப் பார்த்தார்.
சிமென்ட் போடப்பட்டிருந்த ஒரு சிறிய அறை அது. இரும்புக் கம்பிகள் போடப்பட்டிருந்த கதவுக்கு மேலே ஒளியுடன் எரிந்து கொண்டிருந்த பல்பு... லாக்-அப் அறையின் மூலையில் ஒரு குடத்தில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுநீர் பயங்கரமான வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தது. அன்று எங்களுக்கு உணவு கொடுக்கப்படவில்லை.இரவில் கடுமையான குளிர் இருந்தது. படுப்பதற்குப் பாய் இல்லை. மறுநாள் காலையில் எழுந்தபோது ஒவ்வொருவருடைய முகமும் நீர் கட்டி வீங்கிப் போயிருந்தன. எங்களால் சிறிதளவில்கூட நடக்க முடியவில்லை. கை விலங்குகள் போட்டு எங்களைக் கோழிகோட்டின் கடைவீதி வழியாக, துப்பாக்கிகள், வாள் ஆகியவற்றைத் தாங்கியிருந்த போலீஸ்காரர்கள் சூழ்ந்திருக்க நீதி மன்றத்திற்குச் கொண்டு சென்றார்கள்.
பதினான்கு நாட்கள் ரிமாண்டில் வைக்கச் சொல்லி கோழிக்கோடு சப்-ஜெயிலுக்கு அனுப்பப்பட்டோம். அங்கு இருக்கும்போது நண்பர்கள், 270 என்னுடைய உடலை கையைச் சுருட்டி வைத்துக் கொண்டு உதைத்துவிட்டு, இறுதியாக முழங்கைகளைக் கொண்டு தாக்கினார் என்றார்கள். ஒரு இரக்க மனம் கொண்ட கைதி எண்ணெய் தேய்த்துத் தடவி விட்டார். ஆனால் ஒன்பது இடங்களில் ரூபாய் அளவில் வட்டமாக கறுத்துப்போய் காணப்படுவதாக அவர் சொன்னார்.
எனக்கு இரண்டு மாதங்கள் கடும் தண்டனை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து என்னை கண்ணூர் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றினார்கள். டி.பிரகாசம், பாட்லிவாலா, இ.மொய்து மவ்லவி ஆகியோருடன் அங்கு 600 அரசியல் கைதிகள் இருந்தார்கள். சிறையில் உணவு மிகவும் மோசமாக இருந்தது. கஞ்சியில் புழு மிதந்து கிடக்கும். எடுத்து எறிந்துவிட்டுத்தான் நாங்கள் கஞ்சியைக் குடிப்போம். புதிதாக தண்டனை பெற்று வருபவர்களிடமிருந்து வெளியே உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வோம். அவர்களிடமிருந்தது பகத்சிங்கும் மற்றவர்களும் தூக்கில் போட்டுக் கொல்லப்பட்ட செய்தியைத் தெரிந்து, மூன்று நாட்கள் நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம். என்னுடைய முதல் உண்ணாவிரதம் அதுதான். மூன்றாவது நாள் நீர் குடித்தபோது தொண்டையே வெடித்துவிட்டதைப் போல நான் உணர்ந்தேன்.
இந்தியாவின் பல பகுதிகளையும் சேர்ந்த கைதிகள் அங்கே இருந்தார்கள். போராளிகள், அராஜக கட்சியைச் சேர்ந்தவர்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்காரர்கள் - இப்படிப் பல கொள்கைகளையும் கொண்டவர்கள் - எல்லோருடைய இலக்கும் இந்தியா விடுதலை பெறவேண்டும் என்பதுதான்.
மாதங்கள் சில கடந்தபோது காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை அனுசரித்து எங்களை விடுதலை செய்தார்கள். வெளியே வந்தபோது எங்கே போவது என்று முடிவெடுக்க முடியாத நிலையில் நான் இருந்தேன். என்னைப்போல சிரமங்களை அனுபவித்த போராளிகள் நிறைய இருந்தார்கள். பெரும்பாலானவர்களுக்கு ரயில்வே பாஸ்கூட கிடைக்கவில்லை.
எனக்கு இரண்டு ஆசைகள் இருந்தன. இரண்டாவது ஆசை ஒரு சால்வை வேண்டும். ஓரத்தில் முந்திரிக் கொடி போட்டிருக்கும் கதர் சால்வையை எனக்கு திரு.அச்சுதன் வாங்கி தந்தார். முதல் விருப்பம் -270-ஐக் கொல்ல வேண்டும்! ஆனால் என்னிடம் எந்தவித ஆயுதமும் இல்லை. ஒரு ரிவால்வர் கிடைத்தால்...! நான் மிகுந்த வெறியுடன் இருந்தேன். அவர் பாளையத்தில் ட்ராஃபிக் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்தேன். ஆறடி உயரத்தைக் கொண்ட ஒரு அரக்கன். நான் அடித்தால் அவருக்கு பாதிப்பே உண்டாகாது.பேனாக் கத்தியால் மார்பல் குத்த வேண்டும்! ‘அல்- அமீன்’ லாட்ஜிலிருந்து நான் ஒரு பேனாக் கத்தியைத் திருடினேன்.அதை வைத்துக் கொண்டு போகும் போது நான் திரு அச்சுதனைப் பார்த்தேன். அவர் ஆச்சரியப்பட்டார்.
“போகலையா?”
நான் சொன்னேன்: “இல்ல...”
அவர் கேட்டார்:
“வீட்டுக்குப் போய் வாப்பாவையும் உம்மாவையும் பார்க்க வேண்டாமா?”
நான் சொன்னேன்:
“அதற்கு முன்னால் நான் ஒரு வேலையைச் செய்ய வேண்டியது இருக்கு.”
நான் விஷயங்களைச் சொன்னேன்.அவர் என்னை மானாஞ்சிறைக்கு (குளத்திற்கு அருகில்) அழைத்துக் கொண்டு சென்றார். மிகவும் சாந்தமான குரலில் கேட்டார்:
“நீங்களா சத்தியாகிரகப் போராளி?”
தொடர்ந்து காந்திஜியின் பல்போன கதையை அவர் என்னிடம் சொன்னார்:
“பிறகு -அப்படி கொல்வதாக இருந்தால், வாழத் தகுதி உள்ள ஒரு போலீஸ்காரன்கூட இப்போ இல்லை. இன்றைய அரசியல் அமைப்பில் தவிர்க்க முடியாத ஒரு இனம் போலீஸ்காரர்கள். அந்த அப்பிராணிகள் அரசாங்கத்தின் கருவிகள்... அவ்வளவுதான்... அவர்களைப் பழி வாங்குவதால் என்ன பிரயோஜனம்? மன்னிச்சிடுங்க! வீட்டிற்குப் போங்க...”
திரு.அச்சுதனே என்னை வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார். எர்ணாகுளத்திற்கு வந்து முஸ்லிம் ஹாஸ்டலில் ஒரு மாதம் தங்கினேன். வீட்டிற்குச் செல்வதற்கு கூச்சமாக இருந்தது. ஏமாற்றமும் கவலையும் தயக்கமும்! இறுதியில் ஒரு இரவு நேரத்தில் படகு வழியாக நான் வைக்கத்தை அடைந்தேன். அங்கேயிருந்து தலையோலப் பறம்பிற்கு நடந்தேன். நான்கைந்து மைல்கள் நடக்க வேண்டும். நல்ல இருட்டு... பாம்பும் மற்ற உயிரினங்களும் இருக்கும் பாதை... ஸ்ருவேலிக் குன்னுக்கு அருகில் இருந்த ஒரு மாமரத்தின் கிளையில் ஒரு மனிதன் தூக்கில் தொங்கி இறந்திருந்தான். இரவு மூன்று மணி தாண்டியிருந்தது. நான் வீட்டு வாசலை அடைந்த போது, ‘யார் அது?’ என்று என்னுடைய தாய் கேட்டாள். நான் வராந்தாவில் கால் வைத்தேன். அம்மா விளக்கைப் பற்ற வைத்தாள். எதுவுமே நடக்காதது மாதிரி என்னிடம் கேட்டாள்:
“நீ ஏதாவது சாப்பட்டியா மகனே?”
நான் எதவும் கூறவில்லை. நான் தேம்பித் தேம்பி அழுதேன். உலகமே உறங்கிக் கொண்டிருக்கிறது. என்னுடைய தாய் மட்டும் உறங்காமல் விழித்திருக்கிறாள். நீரையும் பாத்திரத்தையும் கொண்டு போய் வைத்துவிட்டு, என் அன்னை என்னிடம் கைகளையும் கால்களையும் கழுவும்படிக் கூறினாள். தொடர்ந்து சாதம் இருந்த பாத்திரத்தை எனக்கு முன்னால் வைத்தாள்.
வேறு எதுவும் கேட்கவில்லை.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “உம்மா, நான் இன்னைக்கு வருவேன்னு எப்படி உங்களுக்கு தெரிஞ்சது?”
அம்மா சொன்னாள்: “ஓ...சாதமும் குழம்பும் வச்ச எல்லா இரவுகளிலும் நான் உனக்காகக் காத்திருப்பேன்.”
மிகவும் சாதாரணமாக அதைக் கூறிவிட்டாள். நான் வராமல் இருந்த ஒவ்வொரு இரவு நேரத்திலும் அம்மா தூங்காமல் என்னுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாள்.
அதற்குப் பின்னால் பல வருடங்கள் கடந்தோடிவிட்டன. வாழ்க்கையில் பல விஷயங்களும் நடந்து விட்டன.
அம்மா இப்போதும் மகனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
“மகனே, நாங்க உன்னைக் கொஞ்சம் பார்க்கணும்.”