Logo

அன்னக்குட்டி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7621
annakutti

வர்கள் இருவரும் ஒருவரையொருவர் பிரிய முடியாத அளவுக்கு நெருங்கிய நண்பர்கள். அரண்மனையிலும்- குடிசையிலும், சொர்க்கத்திலும்- நரகத்திலும்  பிறந்த வேற்றுமை என்றால் என்னவென்று அறியாத இரு உள்ளங்களின் சங்கமம். அதிகபட்சம் போனால் அன்னக்குட்டிக்கு பத்து வயது இருக்கும். ஜானுக்கு வேண்டுமானால் அவளை விட இரண்டு வயது அதிகமாக இருக்கும்.

அன்னக்குட்டியின் தந்தை அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரர். பெரிய எண்ணெய் ஆலையொன்றின் சொந்தக்காரர். பல நூறு ஏக்கர் தென்னந்தோப்புகளுக்கு உடைமையாளர்.

ஜானின் தந்தையோ அந்தப் பெரிய பணக்காரரின் எண்ணெய் ஆலையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளி. தென்னந்தோப்பைப் பராமரிக்கும் வேலையும் அவனுக்குத்தான். தோட்டத்தின் ஒரு மூலையிலேயே அவர்களின் குடிசையும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. முதலாளி-வேலைக்காரன் என்ற பாகுபாடெல்லாம் தந்தைமார்களுக்கிடையில்தான். குழந்தைகளோ அதுபற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. எந்தவிதமான வேற்றுமை பற்றிய அறிவும் இல்லாத அவ்விருவரும் வெள்ளை மனதுடன் தோட்டத்தில் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்.

நாலாபக்கமும் வியாபித்துக் கிடக்கும் பூந்தோட்டத்தின் ஒரு மூலையில் அடர்ந்து காற்றில் ஆடும் பூச்செடிகளின் மறைவில், இலவ மரத்தின், மாமரத்தின் நிழலில்தான் அவர்கள் தினமும் சந்திப்பார்கள். ஜான் பற்றிய நினைவோடு மனதிற்குள் ட்யூஷன் மாஸ்டரை வைத்தவாறு தினமும் மெத்தையிலிருந்து துயில் எழுவாள் அன்னக்குட்டி ட்யூஷன் மாஸ்டர் வருவது பற்றிக்கூட கொஞ்சமும் கவலைப்படாமல் முதன் முதலில் மாமரத்தின் நிழலைத் தேடித்தான் அவள் ஓடுவாள்.

ஜான், அன்னக்குட்டியின் வரவை எதிர்பார்த்து மதில் மேல் அமர்ந்து காத்திருப்பான். அன்னக்குட்டியின் காற்றில் பறக்கும் கூந்தலையும், காற்றோடு காற்றாய் கலந்து படபடக்கும் சில்க் பாவாடையையும் கண்டவுடன் மதிலிலிருந்து குதித்து அவளை நோக்கி ஓடிவருவான். அவனிடம் புதிது  புதிதாகச் சொல்ல நிச்சயமாக ஏதாவது இருக்கும் அன்னக்குட்டியிடம் "ஜான், யுத்தம் வந்திருச்சின்னா ஆகாயத்தில இருந்து குண்டு போடுவாங்களாம், அப்பா சொன்னாரு..."

"போடி, போடி! ஆகாயத்துல இருந்து குண்டு போடுவாங்களாம்-குண்டு. ஒங்க அப்பாவுக்கு என்ன தெரியும்? அவரு சொன்னார்னு நீ நம்பிட்டியாக்கும்!" - அவன் அவளைக் கேலி செய்வான்.

தன் தந்தையை அவன் கேலி செய்கிறான் என்பதற்காக அன்னக்குட்டி கோபித்துக் கொண்டு விடமாட்டாள். அதற்குப் பதிலாக வேறு ஏதாவதொன்றைப் பற்றி பேச்சை ஆரம்பிப்பாள். "ஜான், நான் நேத்து தூங்குறப்போ ஒரு கனவு கண்டேன். அதில ஒரு ஆளு வந்தான். பெரிய ஆளு. அவனுக்கு எத்தன தலை இருந்துச்சு தெரியுமா? ரெண்டு தலை."

அதையும் ஜான் ஒப்புக்கொள்ளமாட்டான். அன்னக்குட்டி எது கூறினாலும் அதற்கு நேர் எதிராக ஏதாவது கூறுவது தான் அவன் சுபாவம். "உங்க அப்பாவும், நீயும்... ரெண்டு தலையோட இந்த உலகத்துல யாராவது இருப்பாங்களா?"

"அதுதான் நான் சொன்னேனே கனவுலன்னு!"

"ஆமா பெரிய கனவு கண்டுட்ட ஆகாயத்துல இருந்து என்ன போடுவாங்க? குண்டாம் குண்டு. நினைச்சா சிரிப்புத்தான் வருது. நீயும்... உன் அப்பாவும்..."

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அன்னக்குட்டியால் என்ன செய்வது என்றே தெரியாமல் போய்விடும். தன்னை அவன் முட்டாள் என்று கூறினால் அவளால் சகித்துக் கொள்ள முடியும். தன் தந்தையை அவன் முட்டாள் என்று கூறும்போது அவளால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? இருந்தாலும், ஜானுக்கெதிராக ஏதாவது கூறும் துணிவு அவளுக்கு இல்லை. மீண்டும் வேறு ஏதாவது விஷயம் குறித்துப் பேச்சை மாற்றுவாள். "ஜான், அந்த ரோஜாப் பூவை எனக்குப் பறிச்சுத் தர்றியா? எங்க சாருக்கு கொடுக்கணும்!"

அப்போதும் ஜான் அவளுக்கெதிராகத்தான் நிற்பான். "போடி நீயும் உன் சாரும்... உன் அப்பா, உன் சார் எல்லாருமே சரியான முட்டாளுங்க. பூமி உருண்டையின்னு சொல்லிக் கொடுத்த ஆளுல்ல உன் சாரு? பூமி பரந்ததுன்றது கூடவா அவருக்குத் தெரியல?"

அதற்கு மேல் அன்னக்குட்டியால் பொறுக்க முடியாது. தன் ஆசிரியர் முட்டாளா அல்லது அறிவாளியா என்பதல்ல அவளுடைய தற்போதைய  பிரச்சினை. அவரை தனிப்பட்ட முறையில் அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்காது என்பது வேறு விஷயம். அதற்காக தன் ஆசிரியரை மூன்றாவது ஒரு மனிதன் கேலி செய்யும் போது, அவளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? காரணம்- அவர் அவளுடைய சார். அவளுக்கு மட்டுமே சொந்தமானவர் அவர். தன் ஆசிரியரை கேலி செய்வது தன்னையே கேலி செய்வது மாதிரி உணர்ந்தாள் அவள்.

ஜானைப் பொறுத்தவரை அன்னக்குட்டியையும், அவள் தந்தையையும், அவள் ஆசிரியரையும் கேலி செய்ய வேண்டும் என்பதொன்றும் அவன் உத்தேசமல்ல. அவர்களை கேலி செய்தால் அன்னக்குட்டிக்குப் பிடிக்காது என்பதும் அவளுக்கு அதனால் கோபம் உண்டாகும் என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்துதான் அப்படிச் செய்கிறான். அவளை எப்போதும் கிண்டல் செய்ய வேண்டும். இதன்மூலம் அவளை அழவைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் அவன் உத்தேசம். அவன் கூறுவான், "நீங்க எல்லாருமே முட்டாளுங்க! முட்டாளுங்க! முட்டாளுங்க!"

அதற்குமேல் அன்னக்குட்டியால் தாங்க முடியாது. "நீதான் முட்டாள்."

ஜான் எதிர்பார்த்ததும் அதுதான். அன்னக்குட்டி தன்னை எதிர்த்துப் பேச ஆரம்பித்தவுடன் அவனுடைய எதிர்ப்பு மேலும் வலுப்பெறும். "என்னையா முட்டாளுங்கிறே. இப்ப தெரியும் யாரு முட்டாளுன்னு. உன் சட்டித்தலை வாத்தியாரின் கதையை ஒவ்வொண்ணா வெளியே விட்றேன் பாரு."

அன்னக்குட்டிக்கு அழுகையே வந்துவிடும். தன் ஆசிரியரை 'சட்டித்தலையன்' என்று கேலி செய்யும் பொழுது அவளால் எப்படி அழாமல் இருக்க முடியும்? அடுத்த நிமிஷம் அவளுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விடும். தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விடுவாள். அப்போதுதான் ஜானுக்கே திருப்தி ஏற்படும். ஆர்வம் மேலோங்க அவளைக் கட்டிப் பிடித்துக்கொள்வான். அவளின் கண்ணீரை சட்டைத் துணியால் துடைப்பான். அவளுக்கு ஆறுதல் கூறுவான். ரோஜா மலரைப் பறித்து அவளின் கூந்தலில் ஆசையுடன் சூட்டுவான். விளையாட்டுக் காட்டி அவளைச் சிரிக்க வைக்க முயல்வான். மீண்டும் அவ்விரு இளம் இதயங்களும் சங்கமமாகி மலரும்.

சில நேரங்களில் அன்னக்குட்டியின் பெற்றோர் அவளிடம் கூறுவதுண்டு- ஜானுடன் அவள் விளையாடப் போகக் கூடாதென்று. "மகளே- அந்த ஊர்சுத்திப் பய கூட இனி நீ விளையாடப் போகக்கூடாது தெரியுதா? அவன் அப்பன் யாரு? நம்ம வேலைக்காரன். அவன் கூடப் போயி விளையாண்டா நம்ப அந்தஸ்து என்ன ஆகிறது?"

அவளின் தம்பி அவளை கேலி செய்வான்.

"ஊர்சுத்திப் பயகூட விளையாடுறியா? சே... அசிங்கம். என்னைத் தொடாத."

"இனிமேல் அந்தப் பயகூட விளையாடி பார்த்தேன் அவ்வளவுதான்"- அவளின் தந்தை உறுமுவார்.


அன்னக்குட்டி அவர்களின் வார்த்தைகளைப் பொருட்படுத்துவதேயில்லை. அவள் வழக்கம் போல ஜானுடன் சேர்ந்து விளையாடுவாள். அது கேவலமென்று ஒருபோதும் அவள் நினைத்ததில்லை. அவன் ஊர்சுற்றி, வேலைக்காரன் மகன் என்பது பற்றியெல்லாம் அவள் மனம் கொஞ்சமும் எண்ணியதில்லை. தன்னை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், தன் கூந்தலில் மலர் சூடும் ஜானில்லாமல் அவளுக்கு விளையாட்டில்லை. மகிழ்ச்சியில்லை. சிரிப்பில்லை.

ஸ்கூல் விட்டவுடன் அன்னக்குட்டி நேராக தோட்டத்தை நோக்கி ஓடிவருவாள். அவளுக்கு முன்பே அவளின் வருகையை எதிர்பார்த்து அங்கு காத்து நிற்பான் ஜான். அன்னக்குட்டி வருவதைப் பார்த்ததும் பூச்செடிக்குப் பின் தன்னை முற்றிலும் மறைத்துக் கொள்வான். அவள் அருகில் வந்ததும் "ப்பூ" என்று கூறி தாவி பூச்சாண்டி காட்டுவான். தொடர்ந்து அந்த இரண்டு இளம் உள்ளங்களும் விழுந்து விழுந்து சிரிக்கும்.

மாமரத்திலிருந்து கீழே குதிப்பான் ஜான். அவன் செயல் கண்டு அவள் குலுங்கிக் குலுங்கி சிரிப்பாள். மாமரத்தின் கிளையொன்றில் அவளை உட்கார வைத்துவிட்டு, அவளையே பார்த்தவாறு கீழே நின்றிருப்பான் அவன். மரத்தின் கிளையைப் பிடித்து ஆட்ட, பயத்தால் அவள் "அய்யோ அம்மா" என்று சப்தமிடுவாள். அவளைப்  பிடித்துக் கீழே இறக்கிவிட்ட மறுகணம் கைகொட்டிச் சிரிப்பான் அவன்.

ஜானும் அன்னக்குட்டியும் சில நேரங்களில் ஆசிரியர்களாக மாறிவிடுவார்கள். தண்டனை கொடுக்கிறேன் என்று பூச்செடிகளையெல்லாம் துவம்சம் செய்துவிடுவார்கள். ஒருநாள் ஜான் ஆசிரியராகவும், அன்னக்குட்டி மாணவியாகவும் நடித்தார்கள். கம்பு ஒன்றை ஓங்கியவாறு கேட்டான் ஜான். "பூமி தட்டையா இருக்குமா? உருண்டையா இருக்குமா?"

"உருண்டையா!"

ஜானுக்கு கோபம் வந்துவிட்டது. கம்பால் ஓங்கி ஒரு அடி கொடுத்தான். "அய்யோ அம்மா" என்று அலற ஆரம்பித்து விட்டாள் அன்னக்குட்டி.

திடீரென்று யாரோ ஓடிவரும் சப்தம். அன்னக்குட்டியின் தாயும் தம்பியும் கூர்க்காவும்தான் அவளின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.

கம்பை ஓங்கியவாறு நின்றிருக்கும் ஜான் மீது ஒரு பாய்ச்சல் பாய்ந்தாள் அன்னக்குட்டியின் அன்னை. "ம்... அந்த அளவுக்கு வந்துட்டியா?"

இப்போது ஜானின் கையிலிருந்த கம்பு அன்னக்குட்டியின் தாய் கைக்கு மாறியது. ஜானின் முதுகை ஓங்கி, ஓங்கி பலமுறை பதம் பார்த்தது அது. ஜான் இப்படியும் அப்படியும் புழு மாதிரி நெளிந்தானே தவிர ஒரு முறையேனும் "ஐயோ" என்று கூக்குரலிட வேண்டுமே!

கடைசியில் அவளுக்கே கை வலித்து விட்டது. கம்பை தூரத்தில் எறிந்துவிட்டு எச்சரிக்கும் பாவனையில் கூறினாள். "இனி இந்தப் பக்கம் உன் தலை தெரிஞ்சுது...  அவ்வளவுதான்.."

"ஓடுறா... நாயே... ஓடுறா..." ஜானை விரட்டினான் அன்னக்குட்டியின் தம்பி.

ஜான் இருந்த இடத்தை விட்டு ஒரு அடி நகரவில்லை. கடைசியில் கூர்க்காதான் கையைப் பிடித்து அவனை இழுத்துக் கொண்டு போனான்.

அன்னக்குட்டியை அவள் தாய் எச்சரித்தாள். "இனி அந்தப் பரதேசி நாய் கூட விளையாடு சொல்றேன்."

ஜானுக்கு அழுகை அழுகையாய் வந்தது. தன்னை அவர்கள் எல்லோரும் சேர்ந்து அவமானப்படுத்தி விட்டதுபோல் உணர்ந்தான். தன் அன்னக்குட்டியின் முன், தன்னை அவளுடைய தாய் அடித்ததைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் வீட்டு கூர்க்கா அவனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டான். அதை நினைக்க நினைக்க அவனுக்கு அவமானமும், கோபமும், வெறுப்பும் மாறி மாறி உண்டாயின. அடித்த கையை முறித்தெறிய வேண்டுமென்ற ஒரு வெறியே அவனுள் பிரவாகமெடுத்தது. தன்னை மனிதன் என்று கூட பாராமல் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று கொடுக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. பற்களை நறநறவென்று கடித்தான். கைகளை ஒன்றோடொன்று சேர்த்துக் திருகினான். அந்த இளம் இதயத்தில் வேதனை பிரவாகமெடுத்துத் ததும்பியது. தலையில் இனம் புரியாத ஒரு புகைச்சல் ஏற்பட்டு அவனை என்னவோ செய்தது.

பின்னால் திரும்பிப் பார்த்தான். அந்த மாளிகை கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அந்த மாளிகைக்குத் தீ வைக்க வேண்டும்- அது நெருப்பில் மடிவதைத் தன் கண் குளிர காணவேண்டும் என்று விரும்பியது அந்த இளம் மனது. என்ன நினைத்தானோ, மாளிகையை நோக்கி 'விறுவிறு'வென்று நடந்தான்.

மாளிகையின் படியில் கால் வைத்ததுதான் வைத்தான்- அவனைப் பிடித்து ஒரு கரம் ஓங்கித் தரையை நோக்கித் தள்ளியது. தள்ளியது வேறு யாருமல்ல- கூர்க்காதான்.

"எங்கேடா போறே, பரதேசி நாயே!"

"தாயோளி, ஒழுங்கா நகரு. இல்லாட்டி கொன்னுருவேன்"- ஜான் சப்தமிட்டான்.

"பால்குடி சரியா மாறல. அதுக்குள்ள தாயோளியாம் தாயோளி."

கூர்க்காவின் கையை ஜான் பலமாகக் கடிக்க, மற்றொரு கையால் அவன் ஜானை தள்ள, ஒரு மூலையில் போய் விழுந்தான் ஜான். ஜான் விழுந்ததைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் கூர்க்கா. அடுத்த கணம் அவனைக் கழுத்தைப் பிடித்துக் கொண்டுபோய் தள்ளி கேட்டை பூட்டினான்.

அடுத்தநாள் காலை- எங்கே யாரும் பார்த்துவிடப் போகிறார்களோ என்று பயந்து பயந்து தோட்டத்தை நோக்கிப் போனாள் அன்னக்குட்டி. வழக்கமாக அவளுக்கு முன்பு அங்கே வந்து காத்துக்கிடக்கும் ஜானை அன்று என்னவோ காணவேயில்லை. பூச்செடிகளை விலக்கிப் பார்த்தாள். அப்போதும் அவன் முகம் தெரிவதாயில்லை. மெல்ல அழைத்துப் பார்த்தாள், "ஜான்"- ஆள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

அன்னக்குட்டிக்கு இப்போது சந்தேகம் உண்டாகிவிட்டது. ஜான் வராமல் போனதற்கு ஒருவேளை நேற்று நடந்த சம்பவம்தான் காரணமாக இருக்குமோ? பாவம்... அதற்கு அவள் என்ன செய்வாள்? அவளுடைய தாயல்லவா அவனை அடித்தது? மீண்டும் ஒரு நப்பாசை. அன்னக்குட்டி தேடிப்பார்த்தாள். ஊஹும்... இப்போது உறுதியாகிவிட்டது. ஜான் அன்று வரவேயில்லை.

அவ்வளவுதான். மாமரத்தின் மீது சிலையென சாய்ந்து நின்றுவிட்டாள் அன்னக்குட்டி. மலர்கள் இனிமையான நறுமணத்தை விரவவிட்டு அவளின் மனதை ஆகர்ஷித்துக் கொண்டிருந்தன. வண்டுகள் "ஙொய்" என்று கீதம் இசைத்து அவளைச் சுற்றிலும் இங்குமங்குமாய் பறந்து கொண்டிருந்தன. ஜான் அவளை அடித்த, அவளின் தாய் அவனை அடித்த அந்தக் கம்பு அவளுக்கு வெகு அண்மையிலேயே கிடந்தது. அதை ஏதோவொரு ஆவேசத்துடன் ஒடித்தெறிந்தாள் அன்னக்குட்டி. நேற்று நடந்த சம்பவத்திற்கு யார் உண்மையில் மூலகாரணம் என்று அசை போட்டுக் கொண்டிருந்தது அந்த இளம் மனது. அவள் உரக்க சப்தமிட்டதால்தானே அவளுடைய தாய் ஓடி வந்து ஜானை அடித்தாள். தான் செய்த தவறுக்குத் தன்னையே நொந்து கொண்டாள் அன்னக்குட்டி. ஆனால் ஜான் தன்னை ஓங்கி அடித்ததால்தானே அவள் உரக்க சப்தமிட்டாள்.


ஜான் அடித்தான் என்பதற்காக தான் அழலாமா? கூடாது. தான் சப்தமிட்டதற்காக, தன் தாய் வந்து ஏன் ஜானை அடிக்க வேண்டும்? அதற்காக தன் தாயை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள் அவள். இன்று இரவு சாப்பிடக்கூடாது. இதுதான் அவளுக்குக் கொடுக்கும் சரியான தண்டனை. அவள் அடித்தாள் என்பதற்காக ஜான் வராமல் இருந்துவிடுவதா?

அந்த இளம் இதயத்துக்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்தது. அவளையும் மீறி கண்களில் பெருக்கெடுத்த நீர் கன்னத்தின் வழியே ஒழுகியது.

"மாட்டேன். இனி நான் வரமாட்டேன்"- அன்னக்குட்டி திரும்பிப் பார்த்தாள். மதில்மேல் அமர்ந்திருந்தான் ஜான். அன்னக்குட்டியின் முகத்தில் ஒரு இனம்புரியாத பிரகாசம் சுடர்விட்டது. "ஜான் வா வா...." இரண்டு கைகளையும் நீட்டியவாறு அவனை  அழைத்தாள்.

"போ, போ உன் கூட விளையாட நான் இனிமேல் வரவே மாட்டேன்"- அலட்சிய பாவனையில் கூறினான் அவன்-.

"ஏன் அப்பிடிச் சொல்றே? நான் என்ன தப்பு செஞ்சேன்?"

"யாரும் ஒண்ணும் செய்யல. நான் உன்கூட விளையாட வரமாட்டேன். அவ்வளவுதான் சொல்வேன். நான் ஊர் சுத்தி, பரதேசி. உன் கூட விளையாட எனக்கு என்ன தகுதி இருக்கு?"

"அப்பிடி உன்னை யாரு சொன்னா?"

"நீ சொல்லாட்டியும் உங்கம்மா சொல்லல?"

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? நானா அப்பிடி எங்கம்மாவை சொல்லச் சொன்னேன்?"

"பாவம் நாங்க ஏழைங்க. நீங்க பணக்காரங்க. அதனால் தான் உங்கம்மா என்னை அடிச்சாங்க. எனக்கு எல்லார் மேலயும் கோபம் கோபமா வருது!"

"என் மேலயுமா?"

"ம்...!"

"இனி நீ வரமாட்டியா?"

"மாட்டேன்."

"என்னைக் கண்டாக்கூட பேசமாட்டியா?"

"மாட்டேன்."

"என்னைக் கண்டா என்ன செய்வே?"

"ஓடிடுவேன்."

"ஐயே, உனக்கு என்னைக் கண்டா பயம். அதனாலதான ஓடிடுவேன்ற..."- கைகொட்டிச் சிரித்தாள் அன்னக்குட்டி.

"போடீ, எனக்குப் பயமும் இல்ல ஒண்ணுமில்ல"- ஜானுக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது.

அன்னக்குட்டி அப்போதும் அவனை கேலி செய்வதை நிறுத்தவில்லை... "ம்... யாருகிட்ட காது குத்துறே..."

"என்கிட்ட உனக்கு பயம்."

"இப்ப பாப்பமா யாருக்கு உண்மையிலேயே பயம்னு?"

"எங்கே பார்ப்போம்"- இரண்டடி முன்னால் வந்து நின்றாள் அன்னக்குட்டி. அவளின் முன் அவன் மதிலிலிருந்து ஒரு குதிகுதிக்க, பயந்து போய் அவள் ஒரு அடி பின்னால் தள்ளி நின்றாள்.

"இப்ப பாத்தியா, யாருக்கு யார் மேல் பயம்னு?"

"எங்கே ஜான் பயப்படறதைப் பார்க்கலாம்!"

"எங்கே பார்ப்போம். ஒனக்கு ஒரு வெள்ளைக் காக்கா பிடிச்சுத் தர்றேன்."

நேற்று மாதிரி உரக்க சப்தமிடுவதுபோல் நடித்தாள் அன்னக்குட்டி. “அழு... உங்கம்மா வந்து என்னை மட்டும் அடிக்கட்டும். பிறகு நானும் அடிப்பேன்?”

“பார்க்கலாமா?” - அவனை மிரட்டுகிற பாணியில் கேட்டாள் அன்னக்குட்டி.

“ம்... பார்ப்போம்” -தைரியமாகக் கூறினான் ஜான்.

“என்னை நீ அடிச்சா, நான் கத்துவேன்.”

“எங்கே கத்து பார்க்கலாம்” -அருகில் கிடந்த ஒரு கம்பை எடுத்து அவளின் கையில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான்.

அவளுக்கு உண்மையிலேயே வலி எடுத்தது. “நான் கத்துவேன்” - அவள் மீண்டும் கூறினாள்.

“கத்து யாரு வேண்டாம்னா...” -அவன் மேலும் அடித்தான்.

அவளுக்குத் தாங்க முடியாத அளவுக்கு வேதனை எடுத்தது. கண்களில் கண்ணீர்கூட அரும்பிவிட்டது. “ஜான் போதும், இனி அடிக்காதே!”

கம்பை ஓங்கியவாறு அவன் கூறினான். “இனியும் அடிப்பேன். நீ வேணும்னா கத்து. உன் அம்மா, கூர்க்கா -யார் வேணும்னாலும் வரட்டும்.”

“ஜான், இனி கத்தமாட்டேன். நான் நேத்து அழுததுனாலதான் உனக்கு அடி கெடச்சுது. இனி ஒருநாளும் அப்படி கத்தமாட்டேன்.”

ஜானுக்கும் மனம் இளகிவிட்டது. அவளை ஓடிச்சென்று கட்டிப் பிடித்துக்கொண்ட அவன், அவளின் கண்ணீரை இரண்டு கைகளாலும் துடைத்தான். அவளின் கையைப் பிடித்து ‘விர் விர்’ரென்று சுற்றினான். அழுத முகம் சிரித்தது. கோழியைப் போல, நாயைப் போல அவன் சப்தம் எழுப்பினான். அவளுக்குச் சிரித்துச் சிரித்து வயிறே புண்ணாகி விட்டது. ஜான் செடிகளுக்குப் பின்னே மறைந்து கொள்ள, அவனை அவள் கண்டுபிடித்தாள். இருவரும் குலுங்கிச் குலுங்கி சிரித்தார்கள். அவ்விரு இதயங்களும் ஆனந்த கீதம் இசைத்து மகிழ்ந்தன.

அன்னக்குட்டி கூறினாள், “ஜான் இன்னைக்கு நானும், அப்பாவும் கார்ல சவாரி போறோம். நீ வர்றியா?”

பாவம், அவளுக்கெங்கே தெரியப்போகிறது அவளுடைய தந்தை காரில் அவனைப் போன்ற ஏழைக்கு இடமில்லையென்று? ஜான் கூறினான். “நான் வரல...”

“அப்பிடின்னா உன் அப்பா கார்ல நீ வர்றியா?”

“எங்க அப்பாக்கிட்ட கார் இல்ல.”

“என் அப்பாக்கிட்ட இருக்குறப்போ உன் அப்பாகிட்ட மட்டும் ஏன் கார் இல்ல? சீக்கிரம் உன் அப்பாகிட்ட ஒரு காரு வாங்கச் சொல்லு.”

“அவ்வளவுதான். உதைக்க வந்துடுவாரு. சோத்துக்கு அரிசி வாங்கவே கையில காசு இல்ல. ஒரு சட்டை வாங்கணும்னு சொன்னதுக்கே, எத்தினி அடி கெடைச்சது தெரியுமா?”

“உனக்கு நான் சட்டை தர்றேன். என் ட்ரங்க் பெட்டி நிறைய எனக்கு ட்ரெஸ் இருக்கு. நான் எடுத்துட்டு வரட்டா?”

“எனக்கு வேண்டாம். பொம்பள போடற ட்ரஸ்ஸ ஆம்பள யாராவது போடுவாங்களா?”

“அது என்ன அப்பிடி சொல்றே? எங்க வீட்டை சுத்தம் செய்றவளோட மகன் என் சட்டையைப் போட்டிருக்கான்.’

ஜானுக்கு கோபம் வந்துவிட்டது. “நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரி மகனா? உன்னை சட்டையைப் போயி தீயிலே போடு.” ஜான் சிலையாக நின்றுவிட்டான். தனக்கும் அன்னக்குட்டிக்குமிடையே உள்ள பொருளாதார இடைவெளி குறித்து அந்த இளம் இதயம் சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்தது. அன்னக்குட்டியிடம் இருக்கும் ட்ரங்க் பெட்டியுமில்லை, ஆடையுமில்லை அவனிடம்.

காலை முதல் மாலை வரை உழைத்து அழுக்குப் புரண்ட- எண்ணெய் படிந்த ஆடைகளோடு வீடு திரும்பும் தன் தந்தையையும் அன்னக்குட்டியை அருகில் உட்கார வைத்து காரில் சவாரி போகும் அவள் தந்தையையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தான் ஜான். மாளிகையின் மொட்டை மாடியில் ஊஞ்சலில் ஆடியவாறு “பைங்கிளியே...” என்று அம்முக்குட்டி பாடுவதை அவன் பலமுறை கண்டிருக்கிறான். அவனுக்கு அந்தச் சிறுகுடிலில் படுக்க ஒரு கிழிந்து போன ஓலையால் ஆன பாய் மட்டுமே இருக்கிறது. தன் வீட்டு பலகாரங்கள் குறித்து ஆர்வம் பொங்க அவள் பலமுறை கூறியிருக்கிறாள். அவற்றில் ஒன்றைக்கூட அவன் இதுவரை கண்ணால் கண்டது இல்லை.


அழுகிப்போன மீன், சீனி, நாற்றமெடுத்த அரிசி- இவைதான் அவனின் நித்திய உணவு. ஸோஃபாவில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருக்கும் அன்னக்குட்டியின் தாயை அவன் பலமுறை கண்டிருக்கிறான். அவனின் அன்னையோ கிழிந்துபோன ஜாக்கெட்டும், நார் நாராகிப்போன ஒரு துண்டுத் துணியையும் இடுப்பில் சுற்றியவாறு வேலையிலிருந்து திரும்பி வரும் கணவனை எதிர்பார்த்து நித்தமும் குடிசை வாசலில் காத்திருக்கிறாள். நினைத்துப் பார்க்கப் பார்க்க இந்த வித்தியாசங்கள் பூதாகரமாய் நின்று அந்தப் பிஞ்சு இதயத்தை அலைக்கழித்தன. என்ன காரணத்தாலோ, அன்னக்குட்டி மேல் அவனுக்கு வெறுப்பும், பொறாமையும் உண்டாயின. இலவ மரத்தின் மேல் சாய்ந்து தரையை பார்த்தவாறு மௌனமாக நின்றான் அவன்.

அன்னக்குட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. அருகில் சென்று அவனை உலுக்கினாள். “என்கிட்ட கோபமா ஜான்?”

“ம்.” -முகம் உயர்த்தாமல் கூறினான் ஜான்.

“எதுக்கு? நான் ட்ரஸ் தர்றேன்னு சொன்னதுக்கா?”

“உன்மேல மட்டுமல்ல... எல்லார் மேலயும் எனக்குக் கோபம் கோபமா வருது...” கூறிவிட்டு ஓடிவிட்டான் அவன்.

அன்று மாலை தன் தந்தையுடன் காரில் சவாரி போனாள் அன்னக்குட்டி. தெருவின் ஒரு மூலையில் சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஜான் அவள் கண்ணில் பட்டான். சினிமா நோட்டீஸ் ஒன்றை கையில் ஏந்தியவாறு, மற்ற குழந்தைகளிடம் அவன் என்னவோ கூறிக்கொண்டிருந்தான். அவன் பேசுவதைக்கேட்டு மற்ற குழந்தைகள் சிரித்தன. சிறுமி ஒருத்தி அவனின் தோளைப் பற்றி நின்று கொண்டிருக்கிறாள். மற்றொரு சிறுமி அவனை உரசியவாறு நின்றுகொண்டு சினிமா நோட்டீஸிலிருந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அன்னக்குட்டிக்கு அந்தக் காட்சி என்னமோ போலிருந்தது. கார் அதற்குள் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டது.

அடுத்த நாள் காலை ஜான் மதில் மேல் அமர்ந்து தோட்டத்தைப் பார்த்தபோது அன்னக்குட்டி மாமரத்தின் மீது சாய்ந்தவாறு எதையோ பறிகொடுத்த மாதிரி நின்றுகொண்டிருந்தாள். தன்னை அவள் இன்னும் கவனிக்கவில்லை என்று நினைத்த அவன் நாய் மாதிரி குரைத்தான். அவள் அப்போதும் பார்க்கவில்லை. அவளுக்கு மிகவும் அருகில் சென்று ஒரு குதி குதித்தான். அப்போதும் அவள் அசைவதாகத் தெரியவில்லை. கோமாளி மாதிரி இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டிப் பார்த்தான். அவள் சிரிக்கவில்லை. அவளின் கையைப் பிடித்துச் செல்லமாக இழுத்தான். ‘வெடுக்’கென்று பிடுங்கிக் கொண்டாள் அவள். ஜானுக்கு கோபம் வந்துவிட்டது. “அப்படின்னா நான் போறேன்.”

“போ. அவுங்க கூட போய் விளையாடு” முகம் உயர்த்தாமல் தாழ்ந்த குரலில் கூறினாள் அன்னக்குட்டி.

“யாரு கூட?”

“நேத்து சாயங்காலம் பார்த்தேனே... அவங்ககூட...”

ஜானுக்கு இதனால் மகிழ்ச்சியே உண்டானது. பொதுவாக தெருவில் உள்ள மற்ற குழந்தைகளுடன் ஜான் விளையாடப் போவதில்லை. ஆனால் தன்னைத் தவிர அவனுக்கு வேறு பல நண்பர்களும் உண்டு என்று அன்னக்குட்டி நினைப்பது தனக்கு நல்லதுதான் என்று நினைத்தான் அவன். “நான் தினமும் அவுங்ககூட விளையாடுவேன். அதனால் உனக்கென்ன?”

அதற்குமேல் அன்னக்குட்டிக்குப் பொறுமையில்லை. “நேத்து உன் தோளைப் பிடிச்சு நின்ன பொண்ணு யாரு?”

ஜான் கேலிச் சிரிப்புடன் கூறினான். “யார், ரோஸை சொல்றியா? அவள் எவ்வளவு கெட்டிக்காரி தெரியுமா?”

அன்னக்குட்டிக்கு அழுகையே வந்துவிட்டது. “போயி அவ கூட விளையாடு என் கூட வரவேண்டாம்.”

“நான்னா அவளுக்கு ரொம்பவும் இஷ்டம். எனக்கும்தான்.”

இனிமேலும் அன்னக்குட்டியால் சகித்துக்கொண்டிருக்க முடியாது. அவள் தேம்பித் தேம்பி அழுதாள். அவளைக் கட்டிப் பிடித்துக் கூறினான் ஜான். “நான் இனிமேல் போகமாட்டேன் அன்னக்குட்டி. அழாதே... போகமாட்டேன்.”

அவளின் முகத்தை ஏறிட்டு நோக்கினாள் அன்னக்குட்டி. அவளைத் தொட்டு சத்தியம் செய்தான். இனி ஒருபோதும் அவளையல்லாமல் வேறு யாருடனும் விளையாடப் போக மாட்டேனென்று அன்னக்குட்டிக்கு திருப்தி உண்டாகிவிட்டது. மேலும் நெருக்கமாயின அவ்விரு இதயங்களும்.

பதினான்கு வருடங்கள் படுவேகமாக ஓடி மறைந்தன. நதிகள் பல இந்த இடைப்பட்ட காலத்தில் முற்றிலுமாக வற்றிப்போயின. சில நதி மலைச்சரிவுகளில் சோககான மிசைத்தவாறு எந்தவிதமான லட்சியமுமின்றி பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றன. வேறு சில நதிகள் ஆழத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. வேறு சில கட்டுக்களை மீறி உடைத்து கம்பீரமாக ஓடிக்கொண்டிருந்தன. மிக சொற்பமானவைதான் எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி சாதாரணமாக சமவெளியில் கீதம் இசைத்து ஓடிக் கொண்டிருந்தன. சில நதிகள் ஒன்றாய் இணைந்து ஓடின. வேறு சில பிரிந்து வெவ்வேறு திரை நோக்கி ஓடின. வாழ்க்கையும் அதுபோலத்தான்.

ஜான். இப்போது ரெயில்வே ஸ்டேஷன் ஒன்றில் போர்ட்டராக இருக்கிறான். அவனுடைய தந்தை இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. தாய், மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள் எல்லோரையும் காப்பாற்ற வேண்டியது அவன்தான். பொழுது புலர்வதற்கு முன்பே ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடுவான். அவன் மாலை வீடு திரும்பிய பிறகுதான் வீட்டில் அடுப்பே புகையும்.

மாலை நேரம் - மெயில் வண்டி ப்ளாட்ஃபாரத்தில் வந்து நின்றது. “கூலி கூலி” என்று சப்தமிட்டவாறு ஜன சமுத்திரத்திற்குள் ஓடினான் ஜான். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ‘டிப்-டாப்’பாக உடையணிந்த இளைஞன் ஒருவன் ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினான். “சார், கூலி வேணுமா சார்?” ஜான் அந்த இளைஞனை நோக்கி நடந்தான்.

அவனுக்குப் பின்னால் நவநாகரீக உடையணிந்த பெண்ணொருத்தி அந்த இளைஞனின் கையைப் பிடித்தவாறு ஒயிலாக பெட்டியிலிருந்து இறங்கினாள். ஜான் இரண்டடி தள்ளி நின்று, அவளையே வைத்த கண் எடுக்காத பார்த்தான். எதையும் கண்டு கொள்ளாத பாவனையில் அவன் மேல் மேலும் ஒட்டியவாறு நின்றாள் அவள்.

இரண்டு மூன்று போர்ட்டர்கள் பெட்டிகளையும் படுக்கைகளையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்கள். “வெளியே கார் நிக்குது” என்று சொன்ன அந்த இளைஞன் தன்மேல் சாய்ந்திருக்கும் பெண்ணை அர்த்தபுஷ்டியுடன் பார்த்துச் சிரித்தான். ஜனக்கூட்டத்துக்கு மத்தியில் அவ்விளம் தம்பதி- ஆம், அவர்கள் தம்பதிதாம்- நடந்து போனார்கள். செயலற்று நின்றிருந்தான் ஜான்.

முகம் குனிந்து, சேலைத்தலைப்பை வலது கையில் பிடித்தவாறு, பின்பக்கம் சேர்த்துக் கட்டிய கூந்தலை இடது கையால் தடவிக்கொண்டு, தன் கணவன் மீது உரசியவாறு அவள் நடந்து போனாள். திடீரென்று- எதையோ மறந்தது போல பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவளின் விழிகள் ஜானின் பார்வையோடு மோதின. இனம் புரியாத ஒரு உணர்வு அப்போது அவள் முகத்தில் தோன்றியது. அடுத்த நிமிஷமே ஒன்றும் நடக்காத மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஜனக்கூட்டத்துக்கு மத்தியில் இருவரும் சிறிது நேரத்தில் மறைந்து போனார்கள்.

“அன்னக்குட்டி... அன்னக்குட்டி...” ஜானின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

பிரயாணிகள் போய் ப்ளாட்ஃபாரம் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஜான் அப்போதும் அசையவில்லை. அவன் வாய் மட்டும் மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

“அன்னக்குட்டி... அன்னக்குட்டி...”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.