Logo

அழிந்து போகும் காலடிச் சுவடுகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6509
azhindhu pogum kaaladi chuvadugal

டற்கரையில் வெளிநாட்டு மனிதனின் காலடிச் சுவடுகள் விலகி விலகிப் போயிருப்பதை அவள் கவலையுடன் பார்த்தாள். அவள் அந்தக் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்ந்து சென்றாள். நிலவு உள்ள இரவு நேரமாக இருந்ததால் காலடிச் சுவடுகள் தெளிவாகத் தெரிந்தன. காற்று மெதுவாக வீசிக் கொண்டிருந்தது. இல்லாவிட்டால் காற்றில் பறக்கும் மணல் துகள்கள் காலடிச் சுவடுகளை அழித்துவிடுமே என்று அவள் நினைத்தாள்.

காலடிச் சுவடுகளை ஒட்டி, அவற்றுக்கு அருகில் நடந்தபோது தன்னுடைய காலடிச் சுவடுகளும் வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகளுக்கு அடுத்தாற்போல் பதிகின்றன என்பதை அவள் நினைக்கவில்லை. அந்த விஷயத்தை நினைத்திருந்தால், ஒரு வேளை அவள் தன்னுடைய காலடிச் சுவடுகளைச் சரிபண்ணி, அழித்துவிட்டு மட்டுமே நடப்பாள் என்பதை ஒரு மனிதனால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா? கற்பனை பண்ணலாம். ஆனால், கற்பனை பண்ண மட்டுமே முடியும். உண்மை அவளுக்குத்தானே தெரியும்? அவளைப் பின் தொடர்ந்து பின்னால் வரும் யாராவது ஒரு ஆள் அவளும் வெளிநாட்டுக்காரனும் கைகளைக் கோர்த்துக் கொண்டு கடற்கரையில் நடந்து செல்வதைப் பார்த்ததாக ஒரு பொய்யான கதையை உருவாக்கிக் கூறினால், அந்தக் கதை பொதுவாக உண்மையான ஒன்றுதான் என்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி ஆழமாக சிந்திப்பதற்கோ கவலைப்படுவதற்கோ அவள் தயாராக இல்லை. இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி யாராலும் உறுதியாகக் கூற முடியாதே! அதேநேரத்தில் கடற்கரையில் வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகள் விலகி விலகிப் போயிருப்பதை அவள் கவலையுடன் பார்த்தாள் என்பதும், அந்தக் காலடிச் சுவடுகளை அவள் பின் தொடர்ந்தாள் என்பதும் உண்மை. நிலவு இருக்கும், பெரிய அளவில் காற்று இல்லாத இரவு நேரமாக இருந்ததால் காலடிச் சுவடுகள் மிகவும் தெளிவாகத் தெரிந்தன. அந்தச் சுவடுகளுக்கு அருகிலேயே மிகவும் வேகமாக அவள் நடந்தாள்.

அவளுடைய நடை அவளை ஒரு அலையின் பக்கம் கொண்டுபோய்ச் சேர்த்தது. அமைதியான ஒரு அலை வந்து அவளுடைய பாதங்களைப் பாசத்துடன் தொட்டபோது அவள் நடப்பதை நிறுத்தினாள். வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகளும் அங்கு நின்றிருந்தன. அப்படியென்றால்...? அவளுக்கு ஆழமான கவலை உண்டானது.

காற்று மிகவும் மெதுவாக வீசிக் கொண்டிருந்தது. நிலவொளியில் கடல் எதையோ விழுங்கி வயிறு வீங்கிப்போன ஒரு பெரிய பாம்பைப்போல மெதுவாக முணகிக் கொண்டிருந்தது. கடலின் ஆரவாரம்கூட மிகவும் மெதுவாகவே இருந்தது. கடித்து அழுத்தப்படும் ஒரு வேதனையின் மெல்லிய ஓசையைப் போல அது இருந்தது. மரணப் பாட்டுக்களின் ஓசை எப்போதும் தாழ்வாகவும் சரளமாகவும் இருக்கும் என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். அலையின் அன்பான தொடலுக்கு திடீரென்று ஒரு குளிர்ச்சி வந்து சேர்ந்தது. நிலவு உள்ள இரவு வேளையில் கடல் நீருக்கு உப்பும் உஷ்ணமும் அதிகமாககும் என்று அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், இப்போது அப்படியல்ல. கடுமையான குளிர்ச்சி விரல் நுனிகளிலிருந்து கால் நரம்புகள் வழியாக மேலே மேலே ஏறிக் கொண்டிருந்தது.

அவள் எதிர்பார்த்த வெப்பம் அலை கொண்டுவந்த நீருக்கு இல்லாமலிருந்தது. கடல்கூட தன்கைக் கைவிட்டு விட்டதோ என்று அவள் கவலைப்பட்டாள். கனிவு, கருணை ஆகியவற்றின் கொடுமையான குளிர்ச்சிதான். அந்த நேரத்தில் வேறொரு அறிவும் அவளைக் கவலைப்படச் செய்வதற்காக வந்து சேர்ந்தது. அலைகள், கடல்நீர் ஆகியவற்றின் நிறம் சிவப்பாக இருந்ததை அவள் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.  சிவப்பு! ரத்தச் சிவப்பு! ஆனால், ரத்தத்தின் சூடு சிறிது கூட இல்லை. ரத்தத்தின் குளிர்ந்த, இரக்கமற்ற சிவப்பு!  யாருடைய ரத்தம் நீருக்கு சிவப்பு நிறத்தைத் தந்தது? யாருடைய ரத்தத்திற்கு இந்த அளவிற்குக் கடுமையான குளிர்ச்சி இருக்கிறது?

அப்படியென்றால்...?

வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகள் ரத்தக் கடலின் கரையில் வந்து முடிவதை அவள் மீண்டும் ஒருமுறை பார்த்தாள். அவளுடைய காலடிச் சுவடுகளும் அங்கு முடிகின்றன. இனி முன்னோக்கிக் காலை வைத்தால் அங்கு சுவடுகள் உண்டாகாது. காலை எடுக்கும்போது கடலலை மட்டுமே எஞ்சியிருக்கும்.

கடலின் அமைதியான அலைகளில் இப்படியும் அப்படியுமாக ஆடிய சந்திரனின் நிறம் சிவப்பாக இருந்ததா என்ன? அவள் தன் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தாள். ஆகாயத்திலிருந்த சந்திரனிலும் கடலின் சிவப்பு நிறம் படர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். ஆகாயத்தின் இயல்பான நீல நிறத்தின்மீது ஒரு சிவப்பு நிறப் பறவை பறந்து கொண்டிருக்கிறதோ என்று அவள் சந்தேகப்பட்டாள். ஒருவேளை வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகளுக்கும் சிவப்பு நிறம் இருந்திருக்குமோ? வெளிறிப் போன ஒரு உயிரற்ற பொருளாக இருந்தது இரவு. மிகவும் பலவீனமான அழுகையாக இருந்தது கடலின் இரைச்சல்.

அப்போது யாரெல்லாமோ சேர்ந்து வேறொரு ஆளைத் தாக்குவதை அவள் பார்த்தாள். தாக்கப்பட்ட ஆள் தன்னால் முடிந்த வரைக்கும் போராடிப் பார்த்தான். ஆனால், தாக்கியவர்கள் அவனை இரும்புக் குழாய்களைக் கொண்டு தாக்கினார்கள். பெரிய கற்களைக் கொண்டு இடித்தார்கள். அவனுடைய உடல் உறுப்புகளிலிருந்து சூடான ரத்தம் சீறிப் பாய்ந்தது. அந்த ரத்தம் வெட்டவெளிக்கு சிவப்பு நிறத்தைத் தந்தது. அந்த ரத்தத்தின் வீரியத்துடன் அவன் தன்னைக் காப்பாற்றிக்

கொள்வதற்காகப் போராடினான். தாக்கியவர்களில் சிலர் அடிவாங்கிக் கீழே விழுந்தார்கள். எனினும் அவர்கள் எழுந்து மீண்டும் அவனைத் தாக்கினார்கள். இறுதியில் தன்னுடைய ரத்தம் ஒடிக் கொண்டிருந்த ஆற்றோரத்தில் தன்னுடைய ரத்தம் விழுந்திருந்த மணல் மெத்தையின் மீது அவன் துடிதுடித்து விழுந்தான். அவனுடைய மூச்சும் முணகலும் காற்றில் முழுமையாக நிறைந்திருந்தது. படிப்படியாக அவை பலவீனமாயின. இறுதியில் அவை நின்றன. பாறைகளுக்குக் கீழே கடல் பரப்பில் அவன் தனியே கிடந்தான். ரத்தம் அருவியென ஓடிக் கொண்டிருந்த கரையில் ரத்தத்தில் மூழ்கிய மணல் படுக்கையில் அவன் அசைவே இல்லாமல் கிடந்தான்.

சாட்சி உரத்த குரலில் அழைத்தது. உரத்த குரலில் கத்திய சாட்சி அவள்தான். அவளுடைய அலறல் சத்தம் காற்று, ஆகாயம், நிலவு, கடல் ஆகியவற்றையும் தாண்டி வேறு சாட்சிகளை நோக்கி ஒரு தொற்றுநோயைப் போல பரவியது. அலறல் சத்தம் இருட்டில் வளர்ந்தது. நிலவை மறைத்தது. ஆகாயத்தையும் கடலையும் கரையையும் மூடியது. அவள் அலறிக் கொண்டே இருந்தாள். அலறிக் கொண்டிருந்த அந்த இரவு நேரத்தில் ஒரு தீப்பந்தத்துடன் அங்கு வந்தது யார்? அவளைத் தொட்டு அழைத்தது யார்? அந்தத் தொடலின் மூலம் அவளுக்குள் கருணையின் வெப்பத்தைப் பரவவிட்டது யார்? வெளிநாட்டுக்காரனா?


அப்படியென்றால்...?

அவள் பதைபதைப்புடன் சுற்றிலும் பார்த்தாள். ஆகாயத்தைக் காணோம். நிலவைக் காணோம். கடலைக் காணோம். மொத்தத்தில் ஒரு சிவப்பு நிறம் மட்டும் தெரிந்தது. சிவப்பு நிறத்தின் அந்தப் பாதி மூடலிலும் அவளுக்கு எங்கிருக்கிறோம் என்பது மட்டும் தெரிந்தது. அவள் தன்னுடைய சிறிய வீட்டில் இருந்தாள். வீட்டில் பெஞ்சுகள், கயிற்றுக் கட்டில், பாத்திரங்கள்... பக்கத்து அறைக்குப் போகக் கூடிய கதவு. கதவுக்கு மேலே அரக்கனைக் கொல்லும் புனித கீவர்கீஸ். சுவரின் இன்னொரு பகுதியில் திரு இதயம். இயேசுவின் இனிய திரு இதயம். வேறொரு பகுதியில் அவளுக்குப் பிரியமான திரைப்பட நடிகனின் படம் போட்ட பழைய காலண்டர். காலண்டரில் வருடம் கடந்து போயிருக்கிறது. அதைப்பற்றி அவளுக்கு வருத்தம் ஏதுமில்லை. ஆண்டு, மாதம், தேதிகள் அவளுக்கு முக்கியமானவை அல்லவே! அவளுக்கு முக்கியமே அந்தப் படம்தான். அவளுக்கு விருப்பமான அந்தப் புகழ்பெற்ற கதாநாயகனின் படம்... இன்னொரு படமும் அவளுக்கு விருப்பமானதாக இருந்தது. பனி விழுந்து கொண்டிருக்கும் ஒரு மலைச்சரிவின் படம். அதிலிருந்த நிறங்களும், கோடுகளும், பனியும், மலையும், மரங்களும் அவளுடன் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கும் அவற்றின் மொழியை அவளுக்குக் கற்றுத் தந்தது அந்தப் படத்தைப் பரிசாகத் தந்த வெளிநாட்டுக்காரன்தான்.

‘‘என் ஊரில் இருக்கும் மலைச்சரிவு இது”... அவன் அன்று சொன்னான்: ‘‘அங்கே ஓடி நடந்துதான் நான் வளர்ந்தேன். இது நானே வரைந்த படம். இங்கு வந்த பிறகு, இங்கே... உன் ஊரில் இருந்து கொண்டு ஞாபகத்திலிருந்து நான் வரைந்த படம். இது என்னுடைய இதயத்தின் ஒரு பகுதி. இதன் மொழி எனக்குத் தெரியும். நான் அதை உனக்குக் கற்றுத் தருகிறேன்.”

அவள் அவனுக்காக இளநீர் வெட்டிக் கொடுத்தாள்.

இளநீர் குடித்து, சிகரெட் புகைத்து, அவளுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில் வெளிநாட்டுக்காரன் கதை சொன்னான். மலையாளத்திலும் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலும் அவள் ‘உம்’ கொட்டிக் கேட்டாள். அது நடந்தது எப்போதோ.

அலறிய ரத்த இருட்டில், தன்னுடைய வசிப்பிடமான அவளுடைய வீட்டில், கருணைமயமான கைபட்டுப் படுத்திருந்த போது அந்தப் பழைய சம்பவம் அவளுடைய ஞாபகத் தளத்திற்கு அழைக்காமலே வந்து சேர்ந்தது. எதற்கு என்று அவளுக்குத் தெரியவில்லை. தான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவள் நினைக்கவில்லை. ஆனால், அந்தச் சம்பவம் ஞாபகத்தில் வரத்தான் செய்தது. வெளிநாட்டுக்காரனின் கிராமம் சிவப்புப் பின்னணியில் கோடுகளாக, வண்ணங்களாகப் பரந்து கிடந்தது. அந்த கிராமம் திடீரென்று உண்மையாகவே வந்து விட்டதா என்ன? கிராமம் துடிப்புடன் இருந்தது. ஆற்று நீர் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. மரக்கிளைகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. மரங்களுக்கு நடுவில் சிறு சிறு செடிகளுக்கு மத்தியில் மலர் பறித்துக் கொண்டு நடக்கும் சிறுவனை அவள் பார்த்தாள். வெளிநாட்டுக்காரனின் இளமைப் பருவம். பனிக்கட்டிகளை அள்ளி வீசி எறிந்து விளையாடும் சிறுவன். அவனுக்குப் பின்னால் பனி மலைகள்.

ரத்த ஆற்றின் கரையில், ரத்த மணல் மெத்தையில் அசைவே இல்லாமல் கிடக்கும் ஒரு உருவம். அவளுடைய கவலை மிகவும் அதிகமானது. அவள் அழுதாள். ஆனால் கண்ணீர்கூட வற்றிப் போய்விட்டதோ? தொண்டை அடைத்தது. தான் ஏன் இன்னும் சாகவில்லை என்று அவள் ஆச்சரியப்பட்டாள்.

அப்போது ஆறுதல்படுத்தும் ஒரு சிவப்புக் குரல்! ‘நீ கவலைப்படக்கூடாது. இங்கு எதுவும் நடக்கல. நடக்கப் போறதும் இல்ல. நான் உன் பக்கத்துல இருப்பேன்.’

அவளால் அநத் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. நம்ப அவள் விரும்பினாள். அந்த வார்த்தைகள் உண்மையாக இருக்க வேண்டுமே என்று அவள் பிரார்த்தித்தாள். ஆனால்...?

வெளிநாட்டுக்காரன் வானத்திலிருந்து திடீரென்று குதித்து வந்துவிடவில்லை. கடலுக்குள்ளிருந்து மேலே எழுந்து வந்தவனோ, கடற்கரை மணலில் இருந்து முளைத்து வந்தவனோ அல்ல. அவளுடைய அண்ணன்தான் வெளிநாட்டுக்காரனை ஒரு நாள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அவளுடைய தாய் இல்லாத நேரம் அது. அண்ணன் நிறைய குடித்து, போதையில் இருந்தான். தங்கையை வெளிநாட்டுக்காரனுக்குக் கூட்டிக் கொடுப்பதற்குக்கூட அண்ணன் என்ற அவன் தயாராக இருந்தான். முன்பும் அவன் இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்திருக்கிறான். அப்போதெல்லாம் அவள் அதற்காகத் தீவரமாகப் போராடுவாள். அவளுடைய அண்ணனின் முக்கிய தொழில் கள்ளச் சாராயம் விற்பதுதான். அவனுக்கு விருப்பமான பொழுதுபோக்குகள் மது அருந்துவதும் சீட்டு விளையாடுவதும்தான். அவ்வப்போது அவன் வீட்டுச் செலவிற்கு கொஞ்சம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தான் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அது செலவுக்கே போதாது. பாவம்... அவளுடைய தாய் பல வேலைகளுக்கும் போனாள். அவளும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் கயிறு பிரிப்பதற்குச் செல்வாள். அண்ணன் அழைத்துக் கொண்டு வரும் மோசமான ஆட்களிடம் போராடித்தான் அவள் தப்பித்து வந்தாள்.

ஆனால், வெளிநாட்டுக்காரனிடம் அந்த மாதிரி அவள் போராட வேண்டிய சூழ்நிலை வரவில்லை. அவளுடைய அண்ணன் குடித்து நிதானம் இழந்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு, சுய உணர்வை இழந்து விழுந்து கிடந்து, குறட்டை விட்ட நேரத்தில் அவளை வேறொரு ரீதியாக நெருங்க வெளிநாட்டுக்காரன் முயற்சிக்கவில்லை. சிகரெட்டுகளைப் புகைத்துக் கொண்டு கருணையும் பயமும் நிறைந்த கண்களுடன் அவன் அங்கு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவளுடைய நீர் அரும்பிய கண்களை அவன் பார்த்தான். அவன் சொன்னான் :‘‘பயப்படாதே... பயப்படாதே... நான் எதுவும் செய்யமாட்டேன்.” அப்போது அவளுக்கு மேலும் அழவேண்டும் போல இருந்தது. அந்த அழுகை - நம்ப முடியாத ஒரு சூழ்நிலையையும், நம்ப முடியாத சில வார்த்தைகளையும், அவளிடம் உண்டாகிய எல்லையற்ற நன்றியையும், அளவற்ற மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தக்கூடியது என்பதை அவள் உணர்ந்திருந்தாள். ஆனால், வெளிநாட்டுக்காரன் முழுமையான பதைபதைப்பிற்கு ஆளாகிவிட்டான்.

‘‘அழக்கூடாது... அழக்கூடாது...” அவன் சொன்னான்: ‘‘நான் எதுவும் செய்யமாட்டேன். சிரி...”

அவனுடைய கள்ளங்கபடமற்ற தன்மையும், அரைகுறை மலையாளமும், அதை உச்சரித்த விதமும் அவளை விழுந்து விழுந்து சிரிக்கச் செய்தன. அவன் இப்போது திருப்தியடைந்தான். அரைகுறையான மொழிகளில் நடந்த உரையாடல் மூலம் அவர்கள் ஒருவரோடொருவர் அறிமுகமாகிக் கொண்டார்கள். கடலும் காற்றும் மணல் துகள்களும் இரவும் நிலவும் அவர்களுக்கிடையே வளர்ந்த நட்பிற்கு சாட்சிகளாக இருந்தன. படிப்படியாக வெளிநாட்டுக்காரன் அந்தக் குடும்பத்தின் உறுப்பினரைப் போல ஆகிவிட்டான். அவளுடைய அன்னைக்கும் வெளிநாட்டுக்காரனை மிகவும் பிடித்திருந்தது.


‘‘நல்ல பையன்...”- அன்னை சொன்னாள்: ‘‘எந்த ஊர்ல பிறந்திருந்தாலும், நல்ல அறிவு உள்ளவன். மனிதன்னா அப்படி இருக்கணும்.”

அவளுடைய அண்ணன் மட்டும் அவ்வப்போது பணத்தைக் கறக்கும் ஒரு இயந்திரமாகத்தான் வெளிநாட்டுக் காரனை நினைத்துக் கொண்டிருந்தான்.

வெளிநாட்டுக்காரன் வீட்டில் உட்கார்ந்து மரவள்ளிக் கிழங்கும் மீன் குழம்பும் சாப்பிட்டான். எப்போதாவது தான் அவன் மது அருந்துவான். ஆனால், எந்தச் சமயத்திலும் அவன் ஒரு குடிகாரனைப் போல நடந்து கொண்டதே இல்லை. கடலோரத்தில் இருக்கும் பாறைகளின் நிழலில் போய் உட்கார்ந்து அவன் புத்தகங்கள் படிப்பான். சில நேரங்களில் படம் வரைவான். படம் வரைவதும் புத்தகம் படிப்பதும்தான் அவனுக்கு விருப்பமான பொழுதுபோக்கு விஷயங்களாக இருந்தன. சில நேரங்களில் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவன் செஸ் விளையாடுவதை அவள் பார்த்திருக்கிறாள். அவர்களுக்கிடையே நெருக்கம் வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் அவள் கேட்டாள்: ‘‘என்னை உங்க ஊரைக் காட்ட அழைச்சிட்டுப் போவீங்களா?”

‘‘நீ வர்றியா-?”... அவன் வேறொரு கேள்வியைக் கேட்டான்.

‘‘வர்றேன்”... அவள் சொன்னாள்.

‘‘அப்படின்னா ஒருமுறை அழைச்சிட்டுப் போறேன்”- அவன் சொன்னான்.

பிறகு...?

ரத்த அலையின் ஈரம் பட்டு, ஆகாயத்திலிருந்த சிவப்பு நிறம் ஏறிய சந்திரனைப் பார்த்தவாறு அவள் நின்றிருந்தாள்.

‘எல்லாம் எனக்காகத்தானே?’ அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

ஒருநாள் அவளுடைய தாயும் அண்ணனும் வீட்டில் இல்லாத நேரத்தில் இரண்டு ரவுடிகள் குடித்துவிட்டு போதையுடன் வந்து அவளை அடைய முயற்சித்தார்கள். அவளுடைய கூச்சலைக் கேட்டு வெளிநாட்டுக்காரன் ஓடிவந்தான். அவன் ரவுடிகளுக்கு நிறைய அடிகள் கொடுத்தான். அவர்கள் இருவரும் அடிகளைத் தாங்க முடியாது என்ற நிலை வந்ததும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி, பயமுறுத்தும் வார்த்தைகளை வெளியிட்டவாறு ஓடித் தப்பித்தார்கள். கையிலிருந்த தூசியைத் தட்டியவாறு வெளிநாட்டுக்காரன் சிரித்தான். அப்போது அவள் சொன்னாள்:

‘‘அவங்க இங்க இருக்குற போக்கிரிகள். ரொம்பவும் கவனமா இருக்கணும். எப்படியாவது அவங்க பழிக்குப் பழி வாங்கப் பார்ப்பாங்க. அடி வாங்கிய பாம்புகள் மாதிரி அவங்க...”

‘‘பரவாயில்ல...” வெளிநாட்டுக்காரன் அப்போதும் சிரித்தான்.

அந்தச் சிரிப்பைப் பார்த்தபோது அவளுக்கு பயம்தான் உண்டானது. வந்த ரவுடிகளை அவளுக்கு நன்றாகத் தெரியும். எதைச் செய்யவும் தயங்காதவர்கள் அவர்கள். நேரடியாக சந்திக்க முடியவில்லையென்றால், எப்படிப்பட்ட சதிவேலைகளையும் செய்ய அவர்கள் தயாராக இருப்பார்கள் என்பதும் அவளுக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய பாதுகாப்பைவிட வெளிநாட்டுக்காரனின் நிலைமையை நினைத்து அவள் அமைதியற்றவளாக ஆனாள். அன்றிலிருந்து அவள் அவ்வப்போது கெட்ட கனவுகளைக் கண்டு கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட கனவுகளைப் பற்றிக் கூறியபோது, வெளிநாட்டுக்காரன் சிரிப்பான். அந்தச் சிரிப்பு எப்படிப்பட்ட ஆபத்துகளையெல்லாம் அழைத்துக் கொண்டு வரப்போகிறதோ என்று எண்ணி அவள் அச்சத்துடன் இருந்தாள். அவளுடைய நிமிடங்களில் பயம் நிறைந்திருந்தது. அவளுடைய இரவுகள் பயம் நிறைந்த கனவுகளின் கூத்து அரங்குகளாக இருந்தன. வெளிநாட்டுக்காரனின் ஊரைக் கனவு கண்டு கடற்கரையில் அமர்ந்திருந்த மாலை வேளைகளில் அவள் திடீரென்று பயம் நிறைந்த கனவுகளில் மூழ்கிவிடுவாள். பயம் நிறைந்த கனவுகளில் இருந்து தனக்கு விடுதலையே இல்லை என்று அவள் நினைத்தாள். அவள் அதைப்பற்றி நினைத்துக் கவலைப்பட்டு நடுங்கினாள். வெளிநாட்டுக்காரனிடம் எந்தவொரு பதற்றமும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால்...

அவளுடைய நினைவுகளில் வியர்வைத் துளிகள் அரும்பின. அவளுடைய நாக்கில் ரத்தத்தின் உப்பு ருசி. அவளுடைய நாசித் துவாரங்களில் ரத்தத்தின் வாசனை. நினைவுகள் வியர்த்த போதும், மரணத்தைப் போல குளிர்ச்சியான நீரின் தொடல் அவளுடைய பாதங்கள் வழியாகக் கடுமையான ஒரு பயத்தைப் போல நரம்புகளில் படர்ந்து ஏறிக் கொண்டிருந்தது.

அத்துடன் பனி மலைகளும் சிறிய அருவியும் அருவிக்கரையில் சிறு சிறு செடிகளும் இருக்கும் தொலைதூர கிராமம், அதன் அறிமுகமறற்ற நிலையை ஒதுக்கி வைத்துவிட்டு நட்புடன் அவளை ‘வா வா’ என்று அழைத்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் வெட்ட வெளியில் எங்கோ ஒரு சிறகடிக்கும் சத்தம் கேட்டது. அவள் தன் முகத்தைச் சாய்த்துப் பார்த்தாள். எதுவும் கண்ணில் தெரியவில்லை. ஆனால், தன்னுடைய கால்களுக்குக் கீழே ஈரமான, குளிர்ந்த மணல் விலகுவதை அவள் உணர்ந்தாள்.

படிப்படியாக அவள் ஆகாயத்தை நோக்கி உயர ஆரம்பித்தாள். அவளுக்குச் சிறகுகள் உண்டாயின. அடுத்த நிமிடங்களில் அவள் அடித்துக் கொண்டிருந்த கடல் அலைகளுக்கு மேலே சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தாள். அப்போது கீழே மணல் பரப்பில் பலமாக வீச ஆரம்பித்த காற்றில் வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகள் அழிந்து போய்க் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.