
எவ்வளவோ விஷயங்களைக் கூற வேண்டியதிருக்கிறது. எவ்வளவோ... எவ்வளவோ... அந்த அவஸ்தையில்தான் ஆழமான – சூனியமான இருள் மூடிய மவுனத்திற்குள் அவன் விழுந்து கிடந்தான்.
மலையின் அடிவாரத்தில் அவன் மட்டும் தனியாக இருக்கவில்லை. அவனுடன் மமதாவும் இருந்தாள். பிரம்பால் செய்யப்பட்டு சாயம் அடிக்கப்பட்ட அவளுடைய கூடையில் முந்திரிப் பருப்பும், பேரீச்சம்பழமும், கொதிக்க வைத்து ஆற வைத்த நீரும் இருந்தன. அவளுடைய கூடைக்கு வெளியே அடிவாரத்தில் இருக்கும் பூக்களும் புல் மேடும் வண்ணத்துப் பூச்சிகளும் இருந்தன.
சிறு செடிகளும் பெரிய மரங்களும் இருந்தன. மரக்கிளைகளில் கிளிகள். அவை கூட்டுக்குச் சென்று அடைக்கலம் அடையும் வேகத்தில் இருந்தன. அடிவாரத்தின் கிழக்கு மூலையில் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆழம் குறைவான, அகலமும் குறைந்த ஒரு ஆறு. ஆற்றின் அக்கரையில் அடிவாரம் மேல்நோக்கி ஏற ஆரம்பித்தது. மேலே ஏறி ஏறி, அடிவாரம் குன்றானது; மலை ஆனது. மலைத் தொடரானது... மலைத் தொடர்கள் மவுனமானது.
மலைத் தொடர்களுக்கும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் கூறுவதற்கு இருக்க வேண்டும். அப்போதுதானே மவுனம் வந்து ஆக்கிரமிக்கும்.
மவுனம் வந்து மூடுகிறதா? மவுனத்திற்கு மத்தியில் ஒரு மனிதன் சென்று விழுகின்றானா? இல்லாவிட்டால் ஒருவன் மவுனத்தைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வருகிறானா? ஒரு சுயம்வரமே அல்லவா அங்கு நடக்கிறது ? மவுனத்தை மணந்து வார்த்தைகளை அடக்குவது... வேறொரு மாதிரி கூறுவதாக இருந்தால், மவுனம் என்ற வாளைப் பயன்படுத்தி வார்த்தைகளைத் துண்டிப்பது... சிந்தனையில் மூழ்கினால் ஆபத்து. ஆபத்து வானம் வரையில் வளரும். வானத்தைக் கடந்தும் வளரும். உணர்வற்ற நிலையின் எல்லையை அடைந்து நிற்கும். அப்படியென்றால் பைத்தியக்காரத்தனத்தின் அருகில்... இல்லை... சுத்தமான பைத்தியக்காரத்தனத்தில்தான்.
மமதா முந்திரிப்பருப்பைக் கொறித்தாள். பேரீச்சம்பழத்தைத் தின்றாள். கொதிக்க வைத்து ஆற வைத்த நீரைப் பருகினாள். அவளுடைய கையிலிருந்து புட்டியை வாங்கி அந்த மனிதனும் ஒரு மடக்கு நீரைக் குடித்தான். பிறகு ஒரு சிகரெட்டைக் கொளுத்தினான்.
கிளிகளின் சத்தம் குறைந்திருந்தது. அவை பெரும்பாலும் கூட்டுக்குள் போய்விட்டன. எனினும், அடிவாரத்தில் வெளிச்சம் இருந்தது.
‘‘நாம திரும்பிப் போகலாமா?” - மமதா சொன்னாள். ‘‘இல்லாவிட்டால்...” அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘‘நாம இநத் இரவு இங்கேயே தங்கிடுவோமா?” பூகம்பங்களின் காலம் அது. கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் அறையைவிட மிகவும் பாதுகாப்பானது திறந்து கிடக்கும் அந்த இடமல்லவா ? இருட்டின் அந்த வெளிச்சத்தில் ஒரு இரவு. வேறு யாரும் இல்லாத, பறவைகள் கூட தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு இரவு... கனவைவிட அழகான இரு இரவு... எந்தச் சமயத்திலும் நினைவிலிருந்து மறையாத ஒரு இரவு...
‘மமதா, நீ ரொம்பவும் அதிகமா பேசுறே’... அவன் தனக்குள் சொன்னான். அது சரியானதா? வார்த்தைகளைக் குறைத்துக் கொண்டு, மவுனத்தை ஏற்றுக் கொள்வதுதானே நாம் செய்ய வேண்டியது !
‘‘பிறகு சாப்பாட்டுப் பிரச்சினை...” -மமதா அதற்குப் பிறகும் தன் பேச்சைத் தொடர்ந்தாள்: ‘‘முந்திரிப் பருப்பும் பேரீச்சம் பழமும் சாப்பிட்டு ஒரு இரவை நாம் செலவிட முடியாதா? உனக்கு உன் சிகரெட்டுகள் போதாதா?”- அவிழ்ந்த கூந்தலை பின்னோக்கி எறிந்தவாறு மமதா சிரித்தாள்.
அவளுடைய உருவ அழகு அவனை ஆசைகொள்ளச் செய்தது. அவளுடைய சிறிதும் நிறுத்தாத வார்த்தைகள் அவனை வெறுப்படையச் செய்தன.
இருட்டிக் கொண்டிருக்கும் வானத்தைப் பார்த்தான். அவன் மிகவும் அமைதியாக இருந்தான்.
மமதாவின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. அந்தக் குரலை அவன் மிகவும் விரும்பினான். இப்போதும் விரும்புகிறான்.
அவள் ‘உம்’ கொட்டும்போது... மெதுவாக முனகும்போது... மெல்லிய குரலில் சிணுங்கும்போது...
அந்தக் குரலின் இனிமையில் அவன் தன்னை முழுமையாக மறந்து காணாமல் போய்விடுகிறான்.
அவள் பாடும்போதும்தான்...
ஆனால், இப்போது அவள் இடைவிடாமல் பேசும்போது அவனுக்கு வெறுப்பு உண்டாகிறது. அவன் பைத்தியம் பிடித்தவனைப் போல ஆகிவிடுகிறான். அந்த நிலை கோபமாகவோ விலகலாகவோ மாறுகிறதா என்ன ?
வானத்தில் அலைந்து கொண்டிருந்த கண்கள் அவளுடைய கண்களை நோக்கித் திரும்பியபோது, வானத்தை வென்றெடுக்கக்கூடிய அழகு இருப்பதை அவன் பார்த்தான். அவளைப் பிடித்து நெருக்கமாக ஆக்கி தன் மார்பின்மீது சாய வைக்கலாம் என்று அவன் நினைத்தான். ஆள் அரவமற்ற அடிவாரம்... புல் மெத்தை... மாலை நேரம்... ஆற்றின் சத்தம் மட்டும்...
மமதா ஒரு புதிய பெண்ணாக இருப்பாளோ ?
வாழ்க்கையில் அவளை முதல் தடவையாகப் பார்க்கிறோம் என்று அப்போது அவன் நினைத்தான்.
புதிய பெண்... புதிய சூழ்நிலைகள்... காற்றில் இதற்கு முன்னால் அனுபவித்திராக ஏதோ ஒரு இனிய மணம் பரவியிருக்கிறது. எங்கிருந்தோ காதுகளில் கனவுகளை உண்டாக்கும் ஒரு பாடல் மிதந்து வருகிறது. அந்தப் பாடல் எங்கிருந்து வருகிறது ? அந்த இனிய வாசனை எங்கிருந்து ?
புல் மெத்தையின் சுகம்... ஆற்றின் அழகு... புதுப் பெண்ணின் புத்துணர்ச்சி...
உடலெங்கும் மோகம் அரும்புகிறது.
தன்னைப் போன்ற ஒருவனுக்குத் தேவையில்லாதது இந்த மோகம்... மோகத்தின் காலம்தான் முடிந்துவிட்டதே! மோகத்திற்கான வயதுதான் கடந்துபோய்விட்டதே!
இல்லை என்று உடல் கூறுகிறது. சூடான ரத்தக் குழாய்கள் கூறுகின்றன.
அப்போது-
‘‘நீ இபப்டி எதை சிந்திச்சிக்கிட்டு இருக்கே?” - மமதாவின் குரல். ‘‘அறைக்குப் போறோமா?- இல்லாவிட்டால் இந்த இரவு வேளையில் இங்கேயே... இந்த அடிவாரத்திலேயே படுக்கையறை உண்டாக்குகிறோமா? உனக்குத் தேவைப்படும் மாலை நேர மருந்து காரில் இருக்குல்ல? உனக்கு அது போதாதா? இல்லாவிட்டால், நல்ல உணவு சாப்பிடணும்னு எண்ணம் இருக்குதா? போறதா இருந்தால் போகலாம். இல்லை... இங்கேயே இருப்போம்னா இருப்போம். நான் எதற்கும் தயார். நேரத்தை வீணாக்க வேண்டாம். ஒரு முடிவை எடு...”
அவனுக்கு அதைக் கேட்டு கோபம் உண்டானது.
‘மமதா... நீ நிறைய பேசுறே...’ அவன் தனக்குள் கூறினான். முக்கியமில்லாத விஷயங்கள்... அர்த்தமற்ற வார்த்தைகள்...
அவளுக்குள் அறிவாற்றல் இருக்கிறதா? அவளுடைய கண்களிலும் உதடுகளிலும் காம நெருப்பு பற்றி எறிகிறதா? அவளுக்குள் உண்டான அறிவாற்றல் தன் மீதும் படர்ந்து விட்டதா?
அவனுக்கு ஒரு ஆசை தோன்றியது.
கூடாது... கூடாது...
காமத்தை அடிமைப்படுத்தும்... இல்லாவிட்டால்... அப்படி அடிமைப்படுத்த நினைக்கவாவது செய்யும் ஒரு மனிதன், ஆசைகளை வழிபடக்கூடாது.
‘‘நீ கருஞ்சாத்தி என்ற விஷப் பாம்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா?”... மமதா மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்:
‘‘அந்தப் பாம்பின் பெயர் கருஞ்சாத்திதானே? காட்டில் மரங்களின் உச்சியில் வாலைச் சுற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கிக் கொண்டுதானே அவை உடலுறவு கொள்கின்றன? அந்தச் சமயத்தில் அந்தப் பாம்புகளின் விஷம் அதன் உச்சத்தை அடைகின்றன என்று அந்தக் கால மனிதர்கள் சொல்றாங்க. கேக்குறதுக்கு சுவாரசியமா இருக்குல்ல? அப்படின்னா, அந்த விஷத்திற்கும் அறிவாற்றலுக்கும் சம்பந்தம் இருக்குதா?”
அவனுக்கு வெறுப்பு தோன்றியது.
‘‘நீ என்ன எதுவுமே சொல்லாம இருக்கே?”... அவள் ஒரு கையை நீட்டி அவனுடைய தோள்மீது வைத்தாள். அவளுடைய கையை விலக்கிவிட்டு, அவன் எழுந்தான். அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு, ஆற்றை நோக்கி நடந்தான்.
யார் இவள்? இந்த மமதா?
சினேகிதியா? காதலியா? காசு கொடுத்து உடன் படுப்பதற்காக வந்த ஒரு விலைமாதுவா?
பல வருடங்களுக்கு முன்பிருந்தே தனக்கு அவள் நன்கு பழக்கமானவள் என்பதாக அவனுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அந்தக் காலத்தில் இருந்து உள்ள விஷயங்களைத் தீர்மானிப்பதற்கு தான் யார்? யாரும் அல்ல.
யாரும் அல்ல.
ஆனால், முதல் அமிர்தப் பால் நாக்கு நுனியில் படும்போது அவளுடைய ருசி.
தங்கையின் முடிக்கு அவளுடைய அழகு. காதலியின் முதல் முத்தத்திற்கு அவளுடைய ருசி. மனைவியின் உடலுக்கும் மெத்தைக்கும் அவளுடைய நெருப்பு. கூலி வாங்கிக் கொண்டு வரும் இரவு ராணிகளின் ஒரே இரவுக்கு அவளுடைய இன்பம்.
அப்படியென்றால் அவள் ?
தாயா? சகோதரியா? காதலியா? மனைவியா? விலைமாதுவா? பிள்ளையா? இல்லாவிட்டால் எல்லாம் சேர்ந்ததா?
அப்போது பாடல் ஆரம்பமானது. பாடுவது யார்? பறவைகள் அல்ல. அவை கூட்டுக்குள் அடங்கிவிட்டன. மமதா அல்ல. அவள் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு ஒரு கற்சிலையைப்போல அங்கு உட்கார்ந்திருக்கிறாள்.
எது எப்படியோ - பாடல் இருக்கிறது. பாடலுக்கு இசை இருக்கிறது. இசைக்கருவிகள் இல்லை. வார்த்தைகள் இல்லை. எழுத்துகள் இல்லை. ஆனால் அர்த்தம் இருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. அர்த்தம் மட்டுமல்ல - இனிய சுகமும்.
பாடுவது நதியா? காற்றா? சிறிய செடிகளா? யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். யார் பாடினாலும் பாட்டு பாட்டுதான். அபூர்வ ராகங்களின் அருமையான இசையில் அவன் தன்னையே இழந்துவிட்டான்.
இசைதான் உண்மையானது. நாதம், ஆதிநாதம், ஓங்காரப் பொருள்... அதை வெல்லும் உண்மை எங்கே இருக்கிறது?
நாதத்திற்கு மணமும் இருக்கிறதா? ஏதோ ஒரு மணம் அவனை வேட்டையாட ஆரம்பித்தது. அது அவளுடைய வாசனை அல்ல! பிறகு? இசையின் வாசனை அது. அந்த வாசனை அவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்தது. தன்னுடைய காலடிக்குக் கீழே மண் நீங்குகிறதா? மனதின் கால் சுவடுகள் மண்ணில் பதிவதில்லையே!
ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தான். காலமெல்லாம் அலைந்து திரிந்தான்.
எவ்வளவு நாட்கள்?
எவ்வளவோ ஆட்களுடன் அறிமுகமானான். எத்தனையோ ஊர்கள். எவ்வளவோ மனிதர்கள். எத்தனையோ சூழ்நிலைகள். எவ்வளவோ பெண்கள். இறுதியில் இவள். இந்த மமதா ஒரு சந்தேகம். இவள் கடைசியா? இல்லாவிட்டால் ஆரம்பமே இவளிலிருந்தா?
முதல் பாவத்திற்கான அடிப்படை இவளா?
அவன் மிகப் பெரிய தார்மீக பிரச்சினையின், ஒரு சித்தாந்த ரீதியான குழப்பத்தின் சுழிகளுக்குள் மாட்டிக் கொண்டான். ஒரு முடிவையும்
எடுக்க அவனால் முடியவில்லை. எல்லாம் எங்கேயோ அதிர்ந்து நின்று விடுகின்றன.
தவறுகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன ?
ஏதன் தோட்டத்தில் இருந்த அறிவின் கனியிலா? இல்லாவிட்டால் பாஞ்சாலி துகில் இழந்ததிலா?
ஒரு யுகப் பிறவி.
ஒரு பாரதப் போர்.
எல்லாவற்றின் ஆரம்பமும் தவறுகள்தான்.
அவள்தான் ஆரம்பமா?- அவள் ஆரம்பமும் மட்டுமா?
அவள் தொடர்ச்சியாகவும் இருந்தாளே!
மூன்று காலங்களிலும் அவள் நிறைந்து நின்றிருக்கிறாள்.
பெயரை மாற்றி மாற்றிக் கூறுகிற எல்லா பெண்களும் மமதாவாக இருந்தார்களா?
சொந்தம் என்று நினைத்தவையெல்லாம் மமதாவாக இருந்தனவா? இந்த அடிவாரத்தின் இசைகூட மமதாதானா?
அவள் சற்றுத் தள்ளி இருக்கிறாள். முந்திரிப் பருப்பைக் கொறித்துக் கொண்டிருக்கிறாள். பேரீச்சம்பழத்தைத் தின்று கொண்டிருக்கிறாள். கடுமையான முகத்துடன், கறுத்த முடியுடன் மாலை நேரத்தில் அமர்ந்திருக்கிறாள் மமதா.
அவள் கோபப்படும்போது அனைத்தும் தளர்ந்து போகின்றன; தகர்ந்து விடுகின்றன.
அவளை நிராகரிக்க வேண்டும் என்று தோன்றியபோது அவன் பதைபதைப்பு அடைந்துவிட்டான். தனக்குத்தானே அவன் கேட்டுக் கொண்டான். அவளையா? நிராகரிக்க வேண்டுமா? உன்னால் அது முடியுமா மனிதா? அவள் உன்னுடைய தாய் அல்லவா? உன்னைப் பத்து மாதங்கள் சுமந்து பெற்ற, உனக்கு அமிர்தப் பால் புகட்டி வளர்த்த தாய்... அவள் உன் சினேகிதி அல்லவா? தங்கை அல்லவா? மனைவி அல்லவா? காதலி அல்லவா? படுக்கையறையில் எரியும் போதைப் பொருள் அல்லவா? சிறப்புத் தகுதிகள் கொண்ட விலைமாது அல்லவா? அவளுடைய வடிவங்கள் பல. முகங்கள் பல. குணங்கள் பல.
அவளை நிராகரிக்க உன்னால் முடியுமா? அதற்கான தைரியம் உனக்கு இருக்கிறதா? அதற்கான மனவலிமை உனக்கு இருக்கிறதா?
மொத்தத்தில் அவன் பதறிப்போய் விட்டான்.
அவளை இல்லாமற் செய்யும் ஆற்றல் தனக்கு இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.
ஆனால்-
‘மமதா ஏமாற்றுவாள்’ என்று குரு வசனம் கூறுகிறது. குரு வசனம் தொடர்கிறது.
‘ஞானத்தில் இருந்தும் நன்மையில் இருந்தும் அகற்றுவாள். அஞ்ஞானத்தின், கெட்டதின் படுகுழிக்குள் வீசி எறிவாள். மிகப் பெரிய அழிவுக்கு அழைத்துச் செல்வாள்.’
அவன் ஏதோ தெளிவற்ற யோசனைகளில் மூழ்கித் தன்னை இழந்து கொண்டிருந்தான்.
அவன் அப்படியாக சப்பணமிட்டு உட்கார்ந்தான். சரளமான - எளிமையான மொழியில் ஞானக்கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருந்த குருவின் அழகான முகமும் அழகான புன்னகையும் அவனுடைய மனதிற்குள் தோன்றின.
மானிட சமுதாயத்தின் வரலாற்றிலிருந்தும் மனிதனின் வாழ்க்கை அனுபவங்களிலில் இருந்தும் மமதாவின் வஞ்சனைச் செயல்களை உதாரணங்களுடன் குரு காட்டினார். ஞானோதயத்தின், நன்மையின் பாதையை நோக்கி குரு வெளிச்சத்தைக் காட்டினார்.
‘அது மிகவும் மோசமான பாதை’- அவர் கூறினார்.
அவன் வெள்ளை நிறத்தில் இருந்த உருண்டையான கற்களை ஆற்று நீருக்குள் எறிந்து கொண்டிருந்தான்.
இறுதியில் அவன் திரும்பி அவளை நோக்கி நடந்தான்.
‘‘நாம போவோம்” - அவன் சொன்னான்.
அவள் அதைக் கேட்டு உற்சாகமானாள். அவளுக்குள் காம எண்ணங்கள் அலைமோதுவதை அவனால் உணர முடிந்தது. அவளுடைய கண்களிலும் உதடுகளிலும் காம நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.
எல்லாவற்றையும் வாரி எடுத்துக் கொண்டு அவள் எழுந்தபோது அவன் சொன்னான்: ‘‘நீல வெளிச்சம் உள்ள படுக்கையறைதான் மிகவும் வசதியானது.”
அவள் சிரிக்கவில்லை. இப்படியும் அப்படியுமாக நெளிந்தாள். நெருப்பின் நிறமும் வெப்பமும் அப்போது அவளுக்கு இருந்தன.
மறுநாள் காலையில் ‘ஹேர்பின்’ திருப்பங்கள் வழியாக மலையை விட்டுக் கீழே இறங்கியபோது காரில் அவள் இல்லை. என்ன நடந்தது என்பதை நினைக்கக்கூட அவன் முயற்சிக்கவில்லை.
மமதாவிடமிருந்து தான் தப்பித்து விட்டோம் என்பதை மட்டும் அவன் புரிந்து கொண்டான். அந்தப் புரிதல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு புத்துணர்வு நிலைக்கு அவனைக் கொண்டு சென்றது.
பின்னால் தூரத்தில் எங்கோ ஒரு பறவையின் அலறல் சத்தம் கேட்டது. அவன் காரின் ஆக்ஸிலேட்டரில் தன் பாதத்தை அழுத்தினான்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.