Logo

மாத்தனின் கதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6499
maathanin kathai

“அம்மா, அப்பா இன்னைக்கும் வர மாட்டாரா?”

பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதற்கு மத்தியில் திரேஸ்யா தன் தாயைப் பார்த்துக் கேட்டாள்.

பிரார்த்தனைக்கு மத்தியிலும் படகுத் துறையில் நீர் மோதும் சத்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தாள் மரியா. அவள் சொன்னாள்: “வருவாரு மகளே! இன்னைக்கு எப்படியாவது வருவாரு.”

மரியா மீண்டும் அன்றைய உணவிற்காக கடவுளிடம் பிரார்த்தித்தாள். கிடைத்த உணவிற்காகக் கடவுளுக்கு அவள் நன்றி சொன்னாள். திரேஸ்யா அவள் சொன்னதைத் திரும்பச் சொன்னாள். கைகளை நீட்டி தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து வைத்துக்கொண்டு, அணிந்திருந்த ஆடைகள் அவிழ, ஒட்டிய வயிறுடன், பாதி திறந்த உதடுகளுடன், பாதியாக மூடிய விழிகளுடன் மேல்நோக்கிப் பார்த்தவாறு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த உருவத்தை திரேஸ்யா கூர்ந்து பார்த்தாள். திரி கரிந்து எரிந்து கொண்டிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் அந்த உதடுகள் அசைவதைப் போல் அவளுக்குத் தோன்றியது. கடவுள் என்னவோ கூற நினைக்கிறார்.

“கருணை மனம் கொண்டு காப்பாற்றணும்” என்று அவளுடைய தாய் மீண்டும் பிரார்த்தித்தாள். அதை திரேஸ்யா திரும்பச் சொல்லவில்லை.

பக்கத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ரோஸா முனக ஆரம்பித்தாள். திரேஸ்யா மீண்டும் கேட்டாள்: “அப்பா வரலைன்னா நாம எப்படிம்மா சாப்பிட முடியும்?”

அதற்கு அந்த குடும்பத் தலைவி சொன்னாள்: “வருவாரு மகளே.”

“விளக்கு அணையப் போகுது அம்மா.”

மரியா விளக்கை எடுத்துத் திரும்பவும் குலுக்கினாள்.

மாலை மயங்கியது. மழைச்சாரல் விழ ஆரம்பித்தது. அதோடு சேர்ந்து காற்றும் பலமாக வீச ஆரம்பித்தது.

அவர்கள் அமைதியாகக் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பிரார்த்தனை இன்று வரை எழுதப்படவில்லை. ஆள் உயரத்திற்கு அலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் ஏரிகளைக் கடந்து நதியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நீரோட்டத்திற்கு எதிரில் பயணம் செய்து மலையின் அடிவாரத்திற்கு அவளுடைய கணவன் போயிருக்கிறான். ஏரியின் கரையைப் பார்க்க முடியாது. மானும் மனிதனும் இல்லை. ஆற்றில் சுழல்களும், அலைகளும் இருக்கின்றன. கையிலிருக்கும் மரத்துண்டு சிறிது ஒடிந்தால்... மரியா கர்த்தரின் பாதத்தை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

திரேஸ்யா கேட்டாள்:

“அப்பா இந்த நேரம் மழையிலும் காற்றுலயும் சிக்கி அவதிப்பட்டுக்கிட்டு இருப்பாரு. காய்ச்சல் வந்திடாதா, அம்மா?”

மரியா கண்களைத் திறந்தாள். அதைத்தான் அவளும் இப்போது நினைத்துக் கொண்டிருந்தாள்.

விளக்கு இப்போது அணைந்துவிடும். படகுத் துறையில் நீர் மோதும் சத்தம் கேட்பதைப்போல் இருந்தது. தாயும், மகளும் வெளியே பார்த்தார்கள். கடுமையான இருட்டு! எதையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் சத்தம்.

“அப்பாதான் அம்மா...”

“மகளே! திரேஸ்யாம்மா”

வெளியே யாரோ அழைத்தார்கள்.

“அந்த விளக்கைக் கொஞ்சம் காட்டு, மகளே!”

“அந்த விளக்குல ஒண்ணும் இல்லப்பா.”

எனினும் திரேஸ்யா விளக்கை எடுத்து திண்ணைக்குக் கொண்டு வந்தாள். அப்போது அது அணைந்துவிட்டது.

மாத்தன் திண்ணையை நோக்கி வந்தான். கையில் ஒரு தட்டும் ஒரு பெரிய பொட்டலமும் இருந்தன.

“விளக்கைக் கொஞ்சம் கொளுத்து மகளே!”

“நெருப்பு இல்லைப்பா.”

திரேஸ்யா தன் தந்தையைக் கட்டிப் பிடிப்பதற்காகத் தன்னுடைய இரண்டு கைகளையும் நீட்டி காற்றில் தேடினாள். ஆனால், அவளுடைய தந்தை எங்கு இருக்கிறான் என்பதுதான் தெரியவில்லை. ரோஸாவும் கண்விழித்து விட்டாள். அவள் தன் தந்தையை அழைத்தாள். தந்தை மகளின் அழைப்பைக் கேட்டான். தந்தையைக் கட்டிப் பிடிக்கும் முயற்சியில் ரோஸாவின் தலை திரேஸ்யாவின் உதட்டில் மோதியது.

“அடுப்புல நெருப்பு இல்லையா மகளே?” - மாத்தச்சன் கேட்டான்.

“இன்னைக்கு நெருப்பு பற்ற வைக்கவே இல்லப்பா.”

மாத்தச்சனின் உடல் முழுக்க ஒரு வெப்பம் பரவியது. இன்று அடுப்பில் நெருப்பு எரியவில்லை!

“என் பிள்ளைங்க எதுவும் சாப்பிடலையா? இவங்களுக்கு எதுவும் தரலையாடீ?”

“அப்பா. நீங்க நனைஞ்சிருக்கீங்க.”

முதலில் தன் தந்தையைத் தொட்டுவிட்ட ரோஸா சொன்னாள். மாத்தச்சன் ரோஸாவைக் கைகளில் தூக்கினான்.

“இவங்களுக்கு காலையிலயும் மத்தியானமும் கொடுத்தேன். சாயங்காலம் கொடுக்குறதுக்கு எதுவும் இல்ல...” -மரியா சொன்னாள்.

பக்கத்து வீடுகளிலிருந்து இரண்டு வேளைகளுக்கும் குழந்தைகளுக்குத் தேவையான உணவு கிடைத்தது. அன்று அவளால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. பலத்த மழையும் காற்றுமாக இருந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை.

“அப்படின்னா நீ எதுவும் சாப்பிடலையா?”

மாத்தச்சன் தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

அவள் அதன் கதையைக் கூற ஆரம்பித்தாள்: “சுருக்கமாகச் சொல்றதா இருந்தா... இல்ல...”

தன் மகளைக் கீழே இறக்கிவிட்ட மாத்தச்சன் நெருப்பு வாங்குவதற்காகச் சென்றான்.

அன்று நள்ளிரவு நேரத்திற்குப் பிறகுதான் அந்த வீட்டில் வெளிச்சம் அணைந்தது. அதற்குப் பிறகு அங்கு உறக்கமேயில்லை. மனைவியும் கணவனும் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.

கணவன் சொன்னான்: “மூணு ரூபாய் தந்தாரு. கொடுத்திட்டு அவர் கார்ல ஏறி எர்ணாகுளத்திற்குப் போயிட்டாரு.”

“பிறகு அந்த நாலு சக்கரம்?” (சக்கரம் என்பது பழைய திருவிதாங்கூர் நாணயத்தைக் குறிப்பது.)”

“அது முந்தா நாளு பாலாவுல இருக்குறப்போ காலையில காப்பி குடிக்கிறதுக்காகத் தந்தது. பழைய கஞ்சி இல்ல. நான் காப்பி குடிக்கல.

“அரிசி எங்கே வாங்கினது?”

“அது வழிச் செலவுக்குத் தந்ததுல மிச்சம் பிடிச்சு வாங்கினது. எவ்வளவு இருந்தது?”

“இரண்டு கால் படி.”

மாத்தச்சன் போன பிறகு வீட்டை நடத்திய விதம் குறித்து மரியா சொன்னாள். மற்றைக்காட்டிற்கு ஓலை பின்னுவதற்காக அவள் இரண்டு நாட்கள் வேலைக்குச் சென்றதாகவும், அதில் ஒன்பது சக்கரங்கள் கிடைத்ததாகவும் அவள் சொன்னாள். ஒரு நாள் ஆலைக்கு நெல் குத்துவதற்காகப் போனாள். ஒரு நாள் நான்கு தேங்காய்களை நார் பிரித்தாள். இன்று மழை காரணமாக எதுவும் செய்ய முடியவில்லை.

“நான் பிள்ளைகளைப் பட்டினி போடல.”

“நீ பட்டினி கிடந்தே.”

மீண்டும் சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது. ஆனால், அந்த அமைதி விரும்பக் கூடியதாக இல்லை. சிந்தனைகளால் அது நிரம்பியிருந்தது. எந்த நிமிடத்திலும் அந்த அமைதியிலிருந்து சத்தம் உயர வாய்ப்பு இருந்தது.

“இப்போ எவ்வளவு சேர்ந்திருக்கும்?”

“இதையும் சேர்த்தா? பதினாலு ஆகும்.”

“இதை முழுசா கொடுக்கப் போறீங்களா?”

“பிறகு என்னடீ, ஒரு வருடம் முழுக்கச் சேர்த்தே இவ்வளவுதான் நம்மால முடிஞ்சது. அவளுக்கு வயசு எட்டு ஆயிடுச்சே! இனி ஐந்து அல்லது ஆறு வருடங்கள்தான் இருக்கு.”

“இல்ல... முழுசையும் கொடுத்துட்டா, நாளைக்கு என்ன செய்யறது?”


“அது எப்படியோ நடக்கும்.”

சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு மாத்தச்சன் சொன்னான்: “பத்து சக்கரம் அதிகமா கொடுத்தா, அந்த அளவுக்கு நல்ல தகுதி படைத்த பையன் கிடைப்பான். நாம கஷ்டப்படணும்...”

அதற்கு மனைவி சம்மதித்தாள்.

எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்களில் மூழ்கிய அந்த மனங்கள் தூக்கத்தில் ஆழ்ந்தன. அப்போதும் அந்த மனைவியும், கணவனும் கனவுகள் கண்டிருப்பார்கள்! மகளுடைய திருமணம். அவளுடைய வீடு... இப்படி பல கனவுகள்!

பொழுது புலர்வதற்கு முன்பே மாத்தச்சன் மர ஆலைக்கு வந்துவிட்டான். அப்போது அங்கு சாக்கோவைப் பார்ப்பதற்காக நான்கைந்து ஆட்கள் வந்திருந்தார்கள்.

சாக்கோ அந்த ஊரின் மிகப் பெரிய பணக்காரர். அவருக்கு ஏராளமான நிலங்களும் வீடுகளும் சொந்தத்தில் இருந்தன. அவரிடம் இருக்கும் செல்வத்தைப் பற்றி ஊரில் பலப்பல கதைகள் உலாவிக் கொண்டிருந்தன. அவரிடம் சிறிதுகூட ஆணவ குணம் இல்லை. பெண்கள் சம்பந்தமாக எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எப்போதும் நல்ல வார்த்தைகளும் பேச்சும்தான். கோபப்படுகிற மாதிரி முகம் கறுத்தோ வருத்தப்படுவது மாதிரியோ ஒரு வார்த்தைகூட அவர் யாரிடமும் கூறியதில்லை. கடவுள் பக்தி என்று எடுத்துச் கொண்டால்- ஒரு ஞாயிற்றுக்கிழமைகூட தேவாலயத்திற்குச் செல்லாமல் அவர் இருந்ததில்லை. எந்த விஷயத்தைச் சொன்னாலும், கடவுள் பெயரைக் கூறித்தான் அவர் அதைக் கூறவே செய்வார். சமீபத்தில்தான் ஒரு தேவாலயத்திற்கு அவர் நன்கொடையாக ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

சாக்கோ தூக்கத்திலிருந்து எழுந்து வெளியே வந்தவுடன், அவர் மாத்தச்சனைத்தான் பார்த்தார். மாத்தச்சனும் சாக்கோவைப் பார்த்தான்.

“எப்போ வந்தே மாத்தச்சன்?”

“நேற்று இரவு.”

மாத்தச்சனுக்கு சாக்கோச்சனை ரகசியமாகப் பார்க்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் ஒவ்வொரு விஷயங்களுக்காக அங்கு நான்கு பேர் இருந்தார்கள். அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். குழப்பமான மன நிலையுடன் மாத்தச்சன் நேரத்தைச் செலவிட்டான்.

சாக்கோச்சனின் மகள் வந்து காப்பி தயாராக இருப்பதாகச் சொன்னாள். அப்போது அங்கிருந்தவர்களை நிற்கச் சொல்லி விட்டு சாக்கோச்சன் உள்ளே சென்றார். அவருடன் சேர்ந்து மாத்தச்சனும் உள்ளே சென்றான். சிறிது நேரம் கழித்து மாத்தச்சான் திரும்பி வந்தான். அவனுடைய முகத்தில்தான் என்ன பிரகாசம்! ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட சந்தோஷம் அவனுடைய முகத்தில் தெரிந்தது. அந்த மூன்று ரூபாய்களையும் மிகவும் பத்திரமாக அவன் சாக்கோச்சனிடம் தந்தான். அந்த வகையில் அவனுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய சொத்தான திரேஸ்யாவின் வரதட்சனைப் பணத்தில் பதினான்கு ரூபாய் சேர்ந்து விட்டிருந்தது!

கொஞ்சம் விறகு பிளந்து தரும்படி சொல்லி சாக்கோச்சனின் மனைவி மாத்தச்சனை வடக்குப் பக்கம் அழைத்தாள். விறகு பிளந்து முடித்ததும், மாத்தச்சனை வேறொரு வேலை செய்வதற்காக சாக்கோச்சன் அழைத்தார். வயலை உழ வேண்டும். சாக்கோச்சன் மறு கரைக்குச் செல்ல வேண்டும். படகைச் செலுத்த வேண்டியது மாத்தச்சன்தான்.

படகில் இருக்கும்போது மாத்தச்சன் சாக்கோச்சனின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். பாலாவில் இருப்பவர்கள் எல்லாருக்கும் சாக்கோச்சனை நன்கு தெரியும். இந்த ஊர்க்காரன் என்று கூறினாலே, சாக்கோச்சனுக்குப் பக்கத்திலா என்ற கேள்வி உடனே வரும். மாத்தச்சன் சாக்கோச்சனின் மகளுக்கு ஒரு இளைஞனைப் பார்த்து வைத்திருந்தான். ஒரு தந்தைக்கு ஒரே மகன். கோடீஸ்வரன். ஏராளமான நிலங்கள் சொந்தத்தில் இருந்தன. யோசித்துக் கூறுவதாக சாக்கோச்சன் சொன்னார்.

வயலிலிருந்து திரும்பி வந்த பிறகு மாடு, கன்றுகளுக்கு வைக்கோல் போடும் வேலை மாத்தச்சனுக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு ஓலை கீறும் வேலையில் அவன் இறங்கினான். பிறகு ஐம்பது மரக்கால் நெல் அளக்க வேண்டும். எல்லாம் முடிந்தபோது நேரம் அதிகமாகிவிட்டது.

மாத்தச்சனால் நிற்க முடியவில்லை. கால்களும், கைகளும் மரத்துப் போய்விட்டிருந்தன. வடக்குப் பக்கம் போய் சமையல்காரியிடம் ஒரு சொம்பு வெந்நீர் தரும்படி கேட்டான். நீராக இல்லை. அரிசி அடுப்பில் இருந்தது.

அந்த உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது சாக்கோச்சன் அங்கே வந்தார்.

“என்ன மாத்தா- இப்போ வெந்நீர் குடிக்கிற?

சிறிது வெட்கத்துடன் மாத்தச்சன் சொன்னான்: “ஒண்ணுமில்லை... கொஞ்சம் சோர்வா இருக்கு.”

“மத்தியானம் ஏதாவது சாப்பிட்டிருப்பே!”

“எதுவும் சாப்பிடல.”

“ஏன்?”

“அங்கே ஒண்ணும் இல்ல.”

அப்போது வேலைக்காரன் கூலிக்காக அங்கு வந்தான். சாக்கோச்சன் சொன்னார்: “இங்கே வா. இந்தக் கூலியை அளந்து கொடு.”

கூலி அளந்து முடிந்தபோது நேரம் சாயங்காலமாகிவிட்டது. பிரார்த்தனைக்கு சாக்கோச்சன் செல்ல வேண்டும். மாத்தச்சனின் மனம் நிலையாக இல்லை. தலையைச் சொறிந்து கொண்டு அவன் சாக்கோச்சனின் பின்னால் ஓடினான்.

சாக்கோச்சன் கேட்டார்: “என்ன மாத்தா, போகாம இருக்கே?”

“நாலு படி நெல்லு...”

“நெல்லா? எதுக்கு?”

“பிள்ளைகளுக்கு எதுவும் இல்ல...”

“நான் பிரார்த்தனை முடிஞ்சு வர்றேன்...”

கூலியாக நான்க படிகளும் மதிய சாப்பாட்டுக்கு இரண்டு படிகளுமாக மொத்தம் ஆறு படிகள் கேட்டிருக்க வேண்டுமென்று மாத்தன் நினைத்தான்.

அந்த ஏழையின் வாழ்க்கையிலும் சம்பவங்களை உண்டாக்கிக் கொண்டு காலம் போய்க்கொண்டிருந்தது. இப்போதும் சில வேளைகளில் பாலாவிற்கு யாருடனாவது சேர்ந்து படகைச் செலுத்திக்கொண்டு மாத்தச்சன் போவதுண்டு. ஆனால், உடலில் பலம் குறைந்துவிட்டது. அவனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று எல்லாருமே கூறுவார்கள். “என்னையும் கூப்பிடுங்க” என்று மாத்தச்சன் கேட்டுக் கொள்வான். ஏதாவது கொடுத்தால் போதும். எனினும், அவன் பெரிய கணக்கு கூறுவான்.

சாக்கோச்சனின் வீட்டில் மாத்தச்சனுக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. சிறுசிறு வேலைகள். எங்கும் வேலை இல்லாதபோது அவன் அங்கு செல்வான். அந்த வேலைகளைச் செய்வான். சாயங்காலம் கூலி அளக்கும் போது நான்கோ ஐந்தோ கூலி நெல் கேட்டு வாங்குவான். மரியாவிற்கும் அங்கு வேலை இருக்கும். இப்படியே நாட்கள் கடந்து கொண்டிருந்தன.

ஆனால், இப்படியே நாட்கள் நீங்கிக் கொண்டிருந்தால் போதுமா? ஆடை அணிய வேண்டாமா? வீடு கட்ட வேண்டாமா? தேவாலயத்தில் வழிபாடுகள் செய்ய வேண்டாமா? பிள்ளைகளின் படிப்புச் செலவுகள் நடக்க வேண்டாமா? எல்லாவற்றையும் சாக்கோச்சனின் உதவியுடன் நிறைவேற்ற முடிந்தது. இதற்கிடையில் யாருக்காவது ஏதாவது நோய் என்று வந்துவிட்டால், அதற்கான சிகிச்சை செலவுகளையும் சாக்கோச்சனின் உதவியால்தான் நிறைவேற்றி ஆக வேண்டும்.

“அவர் இல்லைன்னா நாம என்னடி செய்வோம்!”

“நானும் அதைத்தான் நினைத்தேன்.”

உண்மைதான். என்ன செய்வார்கள்? சாக்கோச்சன் அவர்களைக் காப்பாற்றும் அவதார புருஷராக இருந்தார். முகம் கறுத்து ஒரு வார்த்தை கூட அவர் கூறமாட்டார்.


என்ன இரக்க குணம்; என்ன கடவுள் நம்பிக்கை! சாக்கோச்சனிடம் செல்வம் சேர்ந்து கொண்டே இருப்பதில் ஆச்சிரியப்பட என்ன இருக்கிறது?

அந்த ஏழையின் கனவுகள் தன்னுடைய மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இருந்தன. அவர்களின் வாழ்க்கையில் உள்ள முயற்சிகள் ஒவ்வொன்றையும் கணக்குப் போட்டுக் கூறிவிட முடியும். அந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. அந்த ரத்தக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் கைகளையும், கால்களையும் அசைத்தார்கள். கவிழ்ந்து விழுந்தார்கள். உட்கார்ந்து நான்கு கால்களில் தவழ்ந்தார்கள். இப்படியே வளர்ந்து வயதானவர்களாக மாறினார்கள். தாய் - தந்தை மீது அன்பு செலுத்தினார்கள். இப்படியே குழந்தைகள் வளர்ந்தார்கள். அந்த இரத்தக் குழந்தைகள் சிறிய வேட்டியை அணிந்து சிலேட், புத்தகங்களுடன் பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்கள்.

அது மட்டுமல்ல வாழ்க்கையில் நடந்தது. மேலும் கொஞ்சம் அந்தக் குழந்தைகள் வளர்ந்ததோடு சேர்ந்து சிறிதும் மறைந்து போகாத அளவிற்கு ஒரு கணக்கு அவர்களின் மனதில் பதிந்து கொண்டிருந்தது. தேதிப்படி அந்தக் கணக்கு வளர்ந்தது. சாக்கோச்சனிடம் என்றும் ஏதாவது ஒரு தொகையை அவன் கொண்டு போய் கொடுப்பான். அந்த வகையில் அந்தத் தொகையும் வளர்ந்து தொண்ணூறு ரூபாயாக ஆனது.

அந்த வாழ்க்கையின் அடிப்படை கடமை உணர்வாக இருந்தது. தங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு அவர்களின் உயிர் மூச்சாக இருந்தது. அந்தப் பிள்ளைகளுக்காகத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்குகாக மட்டுமே! தினமும் இரவில் தூங்குவதற்காகப் படுக்கும் போது மனைவியும் கணவனும் சேர்ந்து கணக்குப் போடுவார்கள். இப்படியே தொகை வளர்ந்து கொண்டு போவதைப் பற்றி அவர்கள் மனதில் மகிழ்ச்சியடைவார்கள். ஆமாம்... அது கூடிக்கொண்டே இருந்தது. இப்படியே கூடி.... கூடி...

மனைவி தன்னுடைய கணவனிடம் கேட்பாள்: “எவ்வளவு பணம் இருந்தா, நல்ல ஒரு பையன் கிடைப்பான்?”

“பத்தாயிரம் சக்கரங்கள் இருந்தா, நல்ல ஒரு பையன் கிடைப்பான்.”

அந்தப் பெண் மீண்டும் கணக்குக் கூட்டுவாள். அந்தத் தொகையைச் சேமிக்க இன்னும் எவ்வளவு வருடங்கள் ஆகும்!

இப்படி தங்களின் மகளுக்காகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அந்த வாழ்க்கையில் சந்தோஷத்தை உண்டாக்கியது. பட்டினிக்கு மத்தியில்கூட அவர்களிடம் எந்தவித முணுமுணுப்பும் இல்லை. எப்போதும் அவர்கள் மகிழச்சியாக இருந்தார்கள். காரணம் - மகளுக்குத் திருமணம் செய்து வைக்க அவர்களிடம் பணம் இருந்தது.

மாத்தச்சனின் சந்தோஷமான போக்கு ஊர் முழுக்க நன்கு தெரிந்த ஒரு விஷயமாக இருந்தது.

திரேஸ்யா தினமும் இரவு வேளையில் தன்னுடைய தந்தைக்கும் தாய்க்குமிடையில் நடக்கும் அந்த உரையாடலை கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஒவ்வொரு நாளும் அவர்களின் சேமிப்புத் தொகை கூடிக்கொண்டு வரும் விஷயம் அவளுக்கு நன்கு தெரியும். சில வேளைகளில் அவர்களின் கணக்கு தப்பாக இருக்கும். நான்கும் மூன்றும் சேர்ந்தால் எட்டாகும். அது தப்பு என்று அவளுக்குத் தெரியும். அதைச் சொல்வதற்காக அவளுடைய நாக்குத் துடிக்கும். ஆனால், குரல் வெளியே வராது! வயதில் சின்னவள் என்றாலும், அவள் ஒரு பெண்ணாயிற்றே!

எனினும், திரேஸ்யாவிற்கு ஒரு சந்தோஷம் இருந்தது. திருப்தி இருந்தது. அவளுடைய நிலைமை அந்த அளவிற்குப் பாதுகாப்பு இல்லாமல் இல்லை.

மீன்காரன் தோம்மாவின் மகள் ஒரு நாள் சொன்னாள்: “நாங்க ஏழைங்க...”

அதற்கு திரேஸ்யா சொன்னாள் : “நாங்க ஏழைங்கன்னாலும் இல்ல...”

அதன் அர்த்தம் புரியாமல் சாக்கோச்சனின் மகள் விழுந்து விழுந்து சிரித்தாள். மிடுக்கான குரலில் திரேஸ்யா திரும்பவும் அதைச் சொன்னாள்.

ஆமாம்? திரேஸ்யாவிற்கு மட்டும் அதன் அர்த்தம் தெரியும். வேற யாருக்கும் அது புரியாது.

ஒரு நாள் மதிய வேளையில் பள்ளிக்கூடத்தின் வாசலில் இருந்த மாமரத்திற்குக் கீழே திரேஸ்யாவும் அவளுடைய தோழிகளும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பேண்ட் வாத்தியத்தின் ஓசையைக் கேட்டு அவர்கள் படகுத் துறையை நோக்கி ஓடினார்கள். அது ஒரு திருமண ஊர்வலமாக இருந்தது.

திருமணம் முடிந்து தேவாலயத்தை விட்டு அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். மரியாவிற்கு அவர்களைப் பற்றித் தெரியும். அவள் சொன்னாள்:

“அது எங்களின் கிழக்குப் பக்கம் இருக்குற அன்னம் அக்கா. பையன். அமிச்சேரியைச் சேர்ந்தவன்.”

மணப் பெண் அவளைப் பார்த்தாள். மரியா சிரித்தாள்.

திரேஸ்யா கேட்டாள் : “வரதட்சணை எத்தனை சக்கரம்?”

“அதுவா? அது எவ்வளவுன்னு எனக்குத் தெரியாது” மரியா சொன்னாள்.

“வரதட்சணை எத்தனை சக்கரம்?”

திரேஸ்யா அந்தத் திருமண ஊர்வலத்தைப் பார்த்தவாறு என்னவோ நினைத்துக்கொண்டு ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள். அவள் இந்த உலகத்தில் இல்லை. அருகில் நடந்துகொண்டிருப்பது எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. அந்த பேண்ட் வாத்திய சத்தத்துடன் அவளுடைய மனம் இரண்டறக் கலந்துவிட்டிருந்தது.

சினேகிதிகள் எல்லாரும் போய்விட்டார்கள். சிறிது தூரம் போன மரியா பின்னால் திரும்பி நின்று திரேஸ்யாவை அழைத்தாள். திரேஸ்யா சுய உணர்விற்கு வந்தாள். அவள் தன் தோழிகளை நோக்கி ஓடினாள்.

ஒரு சினேகிதி சொன்னாள்: “அவ அங்கே கல்யாணத்தை நினைச்சு நின்னுக்கிட்டு இருந்தா.”

அப்போது வேறொருத்தி கேட்டாள்: “பையன் எந்த ஊரு?”

வேறொருத்தி கேட்டாள்: “வரதட்சணை எவ்வளவு?”

அதைக் கேட்டு திரேஸ்யாவிற்குப் பிடிவாதமும் கோபமும் உண்டாயின. அவள் அவர்களைப் பார்த்து வக்கனை காட்டினாள். அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

திரேஸ்யா சொன்னாள்: “எதுக்குச் சிரிக்கிறீங்க? எனக்கு வரதட்சணை இருக்கு. என் அப்பாவும், அம்மாவும் அதைத் தயார் பண்ணுறாங்க.”

திரேஸ்யா அங்கிருந்து நடந்தாள்.

வருடங்கள் சில கடந்தன. மாத்தச்சனின் தினசரி வரவு-செலவு கணக்கு கூடிக்கொண்டிருந்தது. அத்துடன் திரேஸ்யாவின் உடம்பும் மனமும் வளர்ந்தன. அவள் ஒரு இளம்பெண்ணாக ஆனாள். அந்தச் சேமிப்புப் பணத்தைத் திரும்ப வாங்குவதற்கான நேரம் நெருங்கியது. அவர்களைப் போன்ற ஏழைகளான பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் தன்னுடைய பிள்ளைகளைப் பற்றி அக்கறையுடன் இருந்ததைப் பார்த்து மாத்தச்சன் மிகவும் சந்தோஷப்பட்டான். தன்னுடைய மகளுக்கு ஒரு நல்ல கணவன் கிடைப்பான் என்பதில் அவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தான்.

மனைவியும், கணவனும் சேர்ந்து கணக்குக் கூட்டும் போது தூங்குவதற்காகப் படுத்திருந்த திரேஸ்யாவின் மனம் விசாலமான உலகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும். எங்கேயோ ஒரு ஆண் அவளுக்காக இருக்கிறான். அவன் எப்படி இருப்பான்? இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான்? நல்ல ஆடைகள் அணிந்து தலையில் தொப்பி வைத்து கழுத்தில் தாலி கட்டுவதற்காகத் தேவாலயத்திற்கு அவன் வரும் காட்சியை அவள் கற்பனை பண்ணிப் பார்ப்பாள்.


கணவனின் வீடு எப்படிப்பட்டதாக இருக்கும்? ஒன்று மட்டும் உண்மை. அந்த வீடும் நிலமும் அவர்களுக்குச் சொந்தமானவை. அவள் அவன் மீது அன்பு செலுத்துவாள். அவனைக் கவனத்துடன் பார்த்துக்கொள்வாள். அதற்குப் பதிலாக அவன் அவள்மீது அன்பு செலுத்துவானா? ம்... அவள் தாயாக ஆவாள். இப்படிப் பலவிதப்பட்ட சிந்தனைகளில் மூழ்கியிருந்தாள் திரேஸ்யா. சிந்தித்தவாறு உறங்கும்போது உறக்கத்தில் யாரென்று தெரியாத அந்த ஆண் அவளை எழுப்புவான். திரேஸ்யா வெட்கப்பட ஆரம்பிப்பாள்.

திருமணம் ஆவதற்கு என்ன வயது வேண்டும்? பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்ட பலரையும் அவள் நினைத்துப் பார்த்தாள். அவளுக்குப் பதினேழு வயது ஆகிவிட்டது. ஒருவேளை அவளுக்குத் தற்போது என்ன வயது நடக்கிறது என்ற விஷயம் அவளுடைய தந்தைக்குத் தெரியாமல் இருக்கலாம். எனினும், அவளுடைய தாய்க்கு அது தெரியுமே!

ஒரு நாள் மரியா மாத்தச்சனிடம்சொன்னாள்: “இப்படியே இருந்தால் நல்லதா? அவளுக்குப் பதினேழு வயது ஆகிவிட்டது!”

அப்பாடா! அதைக் கேட்டு திரேஸ்யாவிற்கு நிம்மதி வந்தது.

மாத்தச்சன் அதற்குப் பதில் சொன்னான்: “என் மனசுல இருக்குடீ... நான் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். நல்ல வசதி படைச்சவனா இருக்க வேண்டாமா? இன்னும் நாலு சக்கரங்கள் அதிகமா இருந்தா நல்லதுதானே!”

அதற்குப் பிறகும் சில நாட்கள் கடந்தன. மாத்தச்சன் பாலாவிற்குச் சென்றான். திரும்பி வந்தபோது அவனிடம் கூறுவதற்கு ஒரு செய்தி இருந்தது. ஆள் கிடைத்தாகிவிட்டது. நல்ல பையன். வயது இருபது இருக்கும். ஒரு பீடி கூட புகைப்பதில்லை. தந்தைக்கும், தாய்க்கும் ஒரே மகன். ஐந்து ஏக்கர் நிலம் சொந்தத்தில் இருக்கிறது. எல்லாவற்றையும் பேசி முடித்தாகிவிட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணைப் பார்ப்பதற்காக அவர்கள் வருவார்கள்.

தாய் கேட்டாள்: “தொகை எவ்வளவு?”

“அய்யாயிரம் ச்ககரம்.”

திரேஸ்யா அந்த நிலத்தையும் வீட்டையும் மனதில் நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு மேலும் ஒரு தந்தையும், தாயும் வந்து சேர்கிறார்கள். அவர்களுடன் அந்த வீட்டில் போய் அவள் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணைப் பார்ப்பதற்காக ஆட்கள் வந்தார்கள். அந்த வகையில் அவளுடைய ஒரு கனவு செயல் வடிவத்திற்கு வந்தது. அவன் தன்னுடைய வரப்போகும் கணவனைப் பார்த்தாள். அவன் அவளையும், திரேஸ்யாவின் மனதில் சந்தோஷம் உண்டானது அவன் வந்துவிட்டானே!

எல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டது. வரதட்சணை ஐய்யாயிரம் சக்கரம். அதைக் கொண்டுபோய் கொடுப்பதற்கான நாளும் தீர்மானிக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் எல்லாருக்கும் தகவல் சொல்ல வேண்டும். அடுத்த ஞாயிற்றுக்கிழமை பணம் கொண்டுவந்து தருவதாக முடிவு செய்யப்பட்டது.

திரேஸ்யாவிற்கு முன்பு இல்லாத ஒரு பிரகாசம் முகத்தில் தோன்றியது. அவளுடைய தோழிகள் எல்லாரும் அவளைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவளுடைய சம வயதில் திருமணமானவர்கள் அவளுக்குச் சில பாடங்களைச் சொல்லித் தந்தார்கள். அவள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

மனைவியும், கணவனும் கணக்குக் கூட்டிக் கொண்டிருந்தார்கள். வரதட்சணை, திருமணச் செலவு, உடனடியாகச் செய்ய வேண்டிய செலவு எல்லாம் போக ஒரு தொகை மீதமிருக்கும். அதைப் பிடித்து வைத்துக்கொண்டு ரோஸாவிற்குச் சேமிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

பாலாவிற்குப் பணம் கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆலைப் பக்கம் போயிருந்த மரியா வந்து தன் கணவனிடம் சொன்னாள்:

“சாக்கோச்சன் வந்துட்டாரு. நாளைக்குக் காலையில அவர் சந்தைக்குப் போறாரு. அப்படியே அவர் கோட்டயத்துக்குப் போறாரு. அதுனால இன்னைக்கே போயி பணத்தை வாங்கிடணும்.”

“என்னடி சொல்ற? அவருக்கு ஞாற்றுக்கிழமை பெரு நாளாச்சே!”

“அதற்கு ஏற்பாடு செய்திட்டுத்தான் அவர் போறாரு.”

மாத்தச்சன் நேராக மர ஆலைக்குச் சென்றான். சாக்கோச்சன் பெருநாள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். எனினும் மாத்தச்சனைப் பார்த்ததும் சாக்கோச்சன் சிரித்தார்.

“என்ன மாத்தா, எல்லாம் முடிவாயிடுச்சா?”

மாத்தச்சன் தலையைச் சொறிந்தான்.

“ஆமா... நீங்க வந்த பிறகு நிச்சயம் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன்.”

“அப்படியா? நினைச்சதுக்கு மேல பத்து நாட்கள் அதிகமாக அங்கே தங்கும்படி ஆயிடுச்சு. அதுனால என்ன? சரி... வரதட்சணை எவ்வளவு?”

“அய்யாயிரம் சக்கரம்.”

“அப்படின்னா திருமணச் செலவு எல்லாம் சேர்த்து ஏழாயிரம் வந்திடுமேடா!”

மாத்தச்சன் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினான். சாக்கோச்சன் பையனின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டார்.

மாத்தச்சன் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னான்.

“அப்படின்னா பணம் எங்கேயிருந்து வந்ததுடா மாத்தா? எல்லாத்தையும் யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருந்தே?”

அதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டான் மாத்தச்சன். மகிழ்ச்சியுடன் நின்றிருந்த அவனுக்குப் பேரிடி வந்து விழுந்ததைப் போல் இருந்தது. என்ன சொல்ல வேண்டும் என்றே அவனுக்குத் தெரியவில்லை. வாய்க்குள்ளிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.

“இங்கே... அப்பப்போ... தந்த சக்கரம்...”

தன்னையும் மீறித்தான் அவனிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்தன.

“அப்பப்போ தந்த சக்கரமா?” - சாக்கோச்சன் கேட்டார். இடி முழங்கியதைப் போல அந்தச் சத்தம் மாத்தச்சனின் காதுகளில் வந்து மோதியது. சாக்கோச்சன் தொடர்ந்து சொன்னார். “எல்லாத்துக்கும் கணக்கு இருக்குடா, மாத்தா. உனக்குத் தெரியும்ல! நீ வாங்கினது போக உன் கணக்குல ரெண்டு ரூபாய் பதினேழு சக்கரம் இருக்கு.”

“வாங்கினதா?”

“ஆமா....”

“நான்... நான்.. வேலை செஞ்சது...”

“நீ இங்கே வேலை செஞ்சியா? கடவுள் மேல பிரியம் வச்சிருக்கிறவங்க யாராவது உன்னை வச்சு வேலை செய்ய முடியுமா? நீ ஒரு அற்ப பிராணி...”

“நான்... ஓலை கீறி... நார் பிரிச்சு...”

அதைக் கேட்டு சாக்கோச்சன் சிரித்தார்: “அதுக்குக் கூலியா மாத்தா?”

மாத்தச்சன் அவர் சொன்னதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான்.

சாக்கோச்சன் தொடர்ந்தார். “பொண்ணுக்கு நேரம் நல்லா இருந்தா எல்லாம் ஒழுங்காக நடக்கும் மாத்தா. நான் பதினஞ்சு ரூபா தர்றேன். சரியா? எல்லாம் கடவுள் கையில் இருக்குடா மாத்தா.”

யாரோ மூன்று பெரிய மனிதர்களும் தேவாலயத்திலிருக்கும் பாதிரியாரும் படகுத் துறையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை வரவேற்பதற்காக சாக்கோச்சன் போனார்.

பொழுது நன்றாக இருட்டியது. மாத்தச்சனின் வீட்டில் விளக்கின் திரி எரிந்து கரிந்த பிறகும், மாத்தச்சன் வந்து சேரவில்லை. அந்த விளக்கு அணைந்த பிறகு தாயும் பிள்ளைகளும் அவனை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். உணவு குளிர்ந்து போய் விட்டிருந்தது.

மறுநாள் காலையில் மரியா மர ஆலைக்குச் சென்றாள். தெற்குப் பக்கமிருந்த திண்ணையில் மாத்தச்சன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பலரும் பார்த்தார்கள்.

அதற்கு மறுநாளும் மாத்தச்சன் வந்து சேரவில்லை. மர ஆலையில் பெருநாள் சம்பந்தமான வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. சாக்கோச்சன் நடத்தும் பெருநாள் கொண்டாட்டம் அன்றுதான். ஒரு பிணம் மாத்தச்சனின் படகுத் துறைக்கு அருகில் கிடந்தது. கால்களும் இரண்டு கைகளும் கயிறால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. அது மாத்தச்சன்தான்.

பெருநாள் கொண்டாட்டத்திற்கு அறிகுறியாகப் போடப்பட்ட வெடிகள் சாக்கோச்சனின் பெருமைகளையும் கடவுள் பக்தியையும் பறைசாற்றிக் கொண்டிருந்தபோது, தாயும், பிள்ளைகளும் அந்தப் பிணத்தைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.