
திருமணத்திற்கு முன்னால் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் எந்தவொரு மறைவும் இல்லாமல் அவர்கள் காதலித்தார்கள். கடற்கரையில் தான் அவர்களுடைய முதல் சந்திப்பு நடந்தது. கடலின் பின்புலத்தில் அழகான குடையுடனும் கண்ணைக் கவரும் ஆடைகளுடனும் கடந்து சென்ற அந்த நல்ல நிறம் கொண்ட இளம் பெண்ணை அவனுக்கு மிகவும் பிடித்தது.
பரந்து கிடக்கும் வானமும், நீல சுருக்கங்களைக் கொண்ட அலைகளும் சாட்சிகளாக இருக்க, அந்த இளமைத் தவழும் அழகான பெண்ணை அவன் காதலித்தான். சிரமப்பட்டு பறந்து கொண்டிருந்த அந்தப் பெண் கொடி கையில் கிடைத்தவுடன் அவனுடைய மனதில் உற்சாகம் உண்டானது. சூரியனும் அலைகளும் உப்பு மணம் வரும் காற்றும் அவனுடைய இதயத்திலும் நரம்புகளிலும் உணர்ச்சி அலைகளை எழச் செய்தன.
அவன் அவளை மிகவும் அதிகமாக கவனிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டதும், அவள் அவனை மேலும் அதிகமாக காதலித்தாள். அவன் இளைஞனாக இருந்தான். நல்ல வசதி படைத்தவனாக இருந்தான். அழகிய தோற்றத்தைக் கொண்டவனும், நல்ல மரியாதை தெரிந்தவனாகவும் இருந்தான். அதனால் அவள் அவனை மிகவும் விரும்பினாள்.
மூன்று மாத காலம் கையோடு கையும் மெய்யோடு மெய்யும் கண்ணோடு கண்ணும் சேர்ந்து அவர்கள் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு நாள் காலையில் குளிப்பதற்கு முன்பு அவர்கள் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டதற்கும், மாலை நேரங்களில் நட்சத்திரங்களை சாட்சியாக வைத்துக் கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு அவர்கள் கூறிக்கொண்ட பிரியாவிடைபெறும் வார்த்தைகளுக்கும், இரவின் புத்துணர்ச்சிக்கும், ஒன்றோடொன்று எந்தச் சமயத்திலும் ஒன்று சேர்ந்திராத அவர்களுடைய உதடுகளில் முத்தத்தின் ருசி இருந்தது.
தூக்கத்திற்குள் நுழைவதுடன் தங்களைப்பற்றி அவர்கள் ஒருவரையொரவர் கனவுகள் கண்டார்கள். கண் விழித்தவுடன் அவர்கள் ஒருவரைப்பற்றி இன்னொருவர் நினைத்தார்கள். ஒருவரோடொருவர் எதுவுமே கூறாமல், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒன்று சேர அவர்கள் ஏங்கினார்கள். திருமணத்திற்குப் பிறகு பூமியில் இருக்கும் எந்தவொரு பொருளையும்விட அவர்கள் ஒருவரையொருவர் வழிபட்டுக் கொண்டாடினார்கள். முதலில் அது காமத்தின் உற்சாகமான ஆக்கிரமிப்பாக இருந்தது. பிறகு வெளிப்படையான கவிதையும், புனிதமான உறவாகவும் ஆனது. கொஞ்சல்கள் மேலும் புனிதமாக்கப்பட்டது. சந்திப்புகள் குறைந்து கொண்டே வந்தன. அதற்குப் பிறகு அந்தச் சந்திப்புகளே இல்லாமல் போயின. புனிதமற்ற ஏதோ ஒன்று அவர்களின் பார்வைகளில் தங்கி நின்றது. அவர்களுடைய நடவடிக்கைகளில் இரவுகளின் தீவிரமான உறவின் எச்சம் தெரிந்தது.
அவர்களுக்கு ஒருவரோடொருவர் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தாலும், அவர்கள் அதை வெளிப்படையாகக் கூறுவதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தார்கள் என்பதென்னவோ உண்மை. ஆனால், அதில் கூடுதலாக எதையும் வெளிப்படுத்தவோ, கூடுதலாக எதையும் செய்யவோ அவர்களால் முடியவில்லை. அதற்குமேல் வெளிப்படையான வார்த்தைகளோ நடவடிக்கைகளோ அவர்களிடமிருந்து உண்டாகவில்லை.
முதல் அணைப்புகளுக்குப் பின்னால் பலவீனமாகிக் கொண்டிருந்த அந்த நெருப்பை எரியச் செய்ய அவர்கள் ஒருவரோடொருவர் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் காதலைப் பற்றிய புதிய வழிமுறைகளைச் சோதித்துப் பார்த்தும், எளிமையும் சிக்கலும் நிறைந்த தந்திரங்களைப் பயன்படுத்தியும் இதயத்திற்குள்ளும் உடலுக்குள்ளும், திருமண நாட்களின் தீவிரமான உற்சாகத்தையும் ஆவேசத்தையும் நிலை நாட்டுவதற்காக அவர்கள் ஏராளமான முயற்சிகளைச் செய்தார்கள்.
ஒழுங்கில்லாமல் வடிவமைக்கப்பட்ட, பல நேரங்களில் எல்லை கடந்த காமத்தின் ஆவேசத்தை அவர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் கசங்கி தளர்வில் விழுந்தார்கள்.
இரவின் அழகில், நிலவில், பனியில் மூடி நின்று கொண்டிருக்கும் மலை உச்சி வழியாக, காவியச் சிற்பங்கள் வழியாக, பள்ளத்தாக்குகள் வழியாக, கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்களின் உற்சாகப் பெருக்குக்கு மத்தியில் அவர்கள் பயணம் செய்தார்கள்.
ஒருநாள் காலையில் ஹென்ரீத்தா போளிடம் கேட்டாள்:
“உணவு சாப்பிடுவதற்காக நீங்கள் என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போக முடியுமா?”
“அதற்கென்ன கண்ணே?”
“எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு ஹோட்டலுக்கு...”
“சரி...” - தன்னிடம் கூறாத ஏதோ வொன்று அவளுடைய மனதில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, ஏதோ கேட்க நினைப்பதைப்போல அவன் அவளைப் பார்த்தான்.
அவள் தொடர்ந்து சொன்னாள்: “எப்படி அதை விளக்கிச் சொல்வது என்றே எனக்குத் தெரியல. என்ன சொல்றது...? ஆணும் பெண்ணும் ஒண்ணு சேர்றதுக்காக போற ஹோட்டல் இருக்குல்ல... அப்படி ஒண்ணு...”
அவன் புன்னகைத்தான். “எனக்குப் புரிஞ்சிடுச்சு. நமக்காக தனிப்பட்ட முறையில் ஒரு அறை... அப்படித்தானே?”
“அங்கேதான்... ஆனால், முன்பு பல முறை போயிருக்கும், சாயங்காலங்களில் இரவு உணவு சாப்பிடும்... அதாவது... நான் என்ன சொல்றேன்னா... என்னால் அதைச் சொல்ல முடியல...”
“சொல்லு பெண்ணே. நமக்கு இடையில் மறைக்கிறதுக்கு என்ன இருக்கு? நமக்கு இடையில் சிறிது கூட ரகசியத்துக்கான தேவையே இல்லையே!”
“இல்ல... என்னால் சொல்ல முடியாது...”
“ஏய்... சொல்லுடி பெண்ணே... உனக்கு எதற்கு இந்த அளவிற்கு அதிகமான வெட்கம்? நீ மனதைத் திறந்து சொல்லு..”
“சரி... ம்... ஆனால், ஒருநாள் உங்களுடைய வைப்பாட்டியா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். நீங்கள் திருமணமானவர் என்ற விஷயத்தை அறியாத வெயிட்டர்கள் நான் ஒரு வைப்பாட்டி என்று நினைக்கணும். அந்த ஒரு மணி நேரத்துக்கு நீங்களும் நான் ஒரு வைப்பாட்டி என்றே நினைக்கணும். அப்போ உங்களுக்குள் அந்தப் பழைய நினைவுகள் கடந்து வரணும். உங்க முன்னாடி உங்களோடு சேர்ந்து ஒரு பெரிய பாவத்தைச் செய்ய நான் விரும்புறேன். என்னை வெட்கப்பட வைக்காதீங்க... எனக்கு நாணம் வருது. இங்கே பாருங்க. வெறுமனே உணவு சாப்பிடுறதுக்காக இல்ல. இளம் வயதைக் கொண்ட ஆணும் பெண்ணும் இரவு நேரத்தில் ஒரு அறையின் தனிமையில்... ச்சே... வேண்டாம்... என் முகம் மலரைப் போல சிவக்குது... என்னை அப்படிப் பார்க்காமல் இருங்க!”
அவன் ஆச்சரியத்துடன், சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்துப் சொன்னான்: “சரி... இன்னைக்கு சாயங்காலம் எனக்கு நல்லா தெரிஞ்ச ஒரு பெரிய ஹோட்டலுக்கு நாம போறோம்.”
ஏழுமணி ஆனபோது அவர்கள் நகரத்திலேயே மிகவும் பெரியதாக இருக்கும் ஹோட்டலின் படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்கள். எதையோ அடிமைப்படுத்துகிறோம் என்ற எண்ணம் அவனிடம் இருந்தது என்றால், அவளுக்கு வெட்கமும் உள்ளுக்குள் சந்தோஷமுமாக இருந்தது. நான்கு நாற்காலிகளும், வெல்வெட் விரிக்கப்பட்டிருந்த ஒரு சோஃபாவும் போடப்பட்டிருந்த ஒரு சிறிய அறைக்குள் அவர்கள் நுழைந்தவுடன் வெயிட்டர் மெனுவுடன் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றான். அவன் மெனு அட்டையை அவளிடம் தந்தான்.
“உனக்கு சாப்பிடுறதுக்கு என்ன வேணும்?” அவன் கேட்டான்.
“எனக்குத் தெரியாது. இங்கே எது நல்லா இருக்குமோ அதைக் கொண்டு வந்து வைத்தால் போதும்.”
பிறகு அவன் உணவுப் பொருட்களின் பட்டியலை வாசிப்பதற்கு மத்தியில் தன்னுடைய ஓவர் கோட்டை ஒரு வெயிட்டரிடம் கொடுத்துவிட்டுச் சொன்னான்:
“இதைப் பரிமாறு. பிஸ்க் சூப்... சிக்கன்... முயல் மாமிசம்... அமெரிக்க முறையில் பொரிக்கப்பட்ட வாத்து... வெஜிட்டபிள் சாலட்... பிறகு... டஸர்ட்...”
வெயிட்டர் சிரித்துக்கொண்டே அந்த இளம் பெண்ணைப் பார்த்தான். அவன் மெனு அட்டையை எடுத்துக்கொண்டு மெதுவான குரலில் கேட்டான்:
“மேடம் போள், உங்களுக்கு குடிக்க என்ன வேணும்? கார்டியலா ஷாம்பெய்னா?”
“பயங்கரமான வெப்பம்... ஷாம்பெய்ன் போதும்.”
வெயிட்டருக்குத் தன்னுடைய கணவனின் பெயரைத் தெரிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவுடன் ஹென்ரீத்தாவிற்கு சந்தோஷமாகிவிட்டது. சோஃபாவில் அருகருகில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் உணவு சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அந்த அறையில் பத்து மெழுகு வர்த்திகள் எரிந்துகொண்டிருந்தன. கண்ணாடித் துண்டுகளால் யாரோ எழுதி வைத்த ஏராளமான பெயர்கள் சிலந்தி வலையைப்போல மேலும் கீழுமாய் இருந்த அந்தப் பெரிய கண்ணாடியில், எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் தெரிந்தன.
முதல் குவளை மது அருந்தும்போது அவளுக்குத் தலை சுற்றுவதைப்போல் இருந்தாலும், தன்னைத்தானே வெப்பப்படுத்திக் கொள்வதற்காக அவள் மீண்டும் மீண்டும் ஷாம்பெய்ன் குடித்தாள். தன்னுடைய பழைய நினைவுகளை ஞாபகத்திற்குக் கொண்டு வந்த போள் அவளுடைய கைகளில் விடாமல் தொடர்ந்து முத்தங்களைப் பதித்தான். அவளுடைய கண்கள் ஒளிர்ந்தன.
அந்த நினைக்க முடியாத சூழ்நிலையைப் பற்றி நினைத்தபோது அவளுக்குப் புத்துணர்ச்சி உண்டானது. தனக்கு ஆவேசமும் மகிழ்ச்சியும் உண்டாவதை அவள் உணர்ந்தாள். எனினும், அவளுக்கு தான் கொஞ்சம் களங்கப்பட்டு விட்டோமோ என்ற உணர்வு உண்டானது. திடகாத்திரமான இரண்டு வெயிட்டர்களும் அங்கு காணும் சம்பவங்களை எல்லாம் மறப்பதற்கான அனுபவம் கொண்டவர்களாக இருந்தார்கள். தேவையான நேரத்திற்கு மட்டும் அவர்கள் அறைக்குள் வந்தார்கள். உணர்ச்சிவசப்பட்ட நேரம் வந்தவுடன், அவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விடுவார்கள்.
இரவு உணவின் பாதி வழியை அடைந்த நேரத்தில் ஹென்ரீத்தாவிற்கு சரியான போதை உண்டாகி விட்டிருந்தது. ஆவேசம் உண்டாகி போள் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி அவளுடைய முழங்காலை அழுத்தினான். அவள் கன்னா பின்னாலொன்று பேச ஆரம்பித்தாள். அவளுடைய பார்வை மோகத்தைத் தூண்டக்கூடியதாகவும் உஷ்ணம் கொண்டதாகவும் இருந்தது.
“ஓ... என் போள்...”- அவள் சொன்னாள்: “எல்லாவற்றையும் சொல்லணும். எனக்கு எல்லா விஷயங்களும் தெரியணும்.”
“என் பெண்ணே, உனக்கு என்ன வேணும்?”
“எனக்குச் சொல்றதுக்கு தைரியம் இல்ல.”
“ஆனால், நீ எப்போதும்...”
“எனக்கு முன்னால் உங்களுக்கு நிறைய காதலிகள், வைப்பாட்டிகள் இருந்தார்களா?”
தன்னுடைய கடந்தகால அதிர்ஷ்டங்களை மூடி வைக்கலாமா? இல்லாவிட்டால் அதைப்பற்றி ஆணவத்துடன் பெருமையாகக் கூறி விடலாமா என்று தெரியாமல் அவன் சிறிது நேரம் தயங்கி நின்றான்.
அவள் சொன்னாள் : “தயவு செய்து சொல்லுங்க போள். உங்களுக்கு நிறைய காதலிகள் இருந்தார்களா?”
“கொஞ்சம் பேர்தான்.”
“எத்தனைப் பேர்?”
“எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஒரு ஆண் அப்படிப்பட்ட விஷயங்களை எப்படி ஞாபகத்தில் வைத்திருக்க முடியும்?”
“உங்களால் எண்ண முடியலையா?”
“எதற்கு? இல்ல...”
“எவ்வளவு பேர் இருப்பாங்க? குத்துமதிப்பா...?”
“எனக்குத் தெரியாது பெண்ணே. சில வருடங்கள் நிறைய பெண்கள் வந்து போவார்கள். சில நேரங்களில் குறைவா இருப்பாங்க.”
“ஒரு வருடத்துக்கு எத்தனைப் பேர் இருப்பாங்கன்றது உங்களோட கணக்கு?”
“சில நேரங்கள்ல இருபதோ முப்பதோ பேர் இருப்பாங்க. சில வேளைகளில் நான்கோ ஐந்தோ...”
“ஓ... எனக்கு அருவருப்பா இருக்கு...”
“எதற்கு அருவருப்பு தோணணும்?”
“பிறகு... அது அருவருப்பு உண்டாக்குற விஷயம்தானே! இந்தப் பெண்கள் எல்லாரும் துணி இல்லாமல்... எல்லாரும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரிதான்... ஓ... நுறு பெண்களுக்கும் மேலே... ஓ.... அருவருப்பான ஒரு விஷயம்தான்...”
அவளுக்கு அருவருப்பு உண்டானது என்று தெரிந்தவுடன் அவன் அதிர்ச்சியடைந்துவிட்டான். பெண்கள் முட்டாள்தனமாக ஏதாவது பேசும்போது, அவர்கள் கூறியது முட்டாள்தனமானது என்பதை அவர்களிடம் கூறிப் புரிய வைப்பதற்கு ஆண்கள் எப்போதும் காட்டக் கூடிய வழக்கமான உணர்ச்சியை அவன் தன் முகத்தில் வெளிப்படுத்தினான்.
“ஹ! அது சுவாரசியமான விஷயம்தான். நூறு பெண்கள் அருவருப்பை உண்டாக்குவதற்கு நிகரானதுதான் ஒரு பெண் உண்டாக்கக்கூடிய அருவருப்பும்.”
“ஓ... இல்ல... நிச்சயமா அப்படிச் சொல்ல முடியாது...”
“எப்படி இல்லைன்னு சொல்ற?”
“காரணம் - ஒரு பெண் என்றால் ஒரு உறவு. அவளுடன் உங்களை உறவு கொள்ளச் செய்வது காதல். ஆனால், நூறு பெண்கள் என்று ஆகும்போது அது மோசமாயிடுது. கெட்ட விஷயமாக அது மாறுது. அசிங்கமான அந்தப் பெண்களுடன் ஒரு ஆண் எப்படிப் பழக முடியுதுன்னு என்னால் புரிஞ்சிக்க முடியல.”
“அப்படிச் சொல்ல முடியாது. அவங்க ரொம்பவும் சுத்தமானவங்க... நல்ல மனம் படைச்சவங்க...”
“இந்த வியாபாரம் பண்றவங்க சுத்தமானவர்களா இருக்க முடியாது.”
“இல்ல... அதற்கு நேர்மாறாக இந்த வியாபாரத்துல ஈடுபடுறதுனாலதான் அவங்களுக்கு மரியாதையே கிடைக்குது.”
“ஃபூ! மற்றவர்களுடன் அவர்கள் பங்கு போடும் இரவுகளை நினைச்சுப்ப பார்த்தால்... அவ்வளவுதான்... வெட்கக்கேடு!”
“வேறொரு ஆள் குடிச்ச டம்ளரிலிருந்து குடிப்பதைவிட- அதுவும் சரியாக சுத்தம் செய்த டம்ளரிலிருந்து அது எவ்வளவோ மேல்.”
“சரிதான்... நீங்கள் நல்லா எதிர்பபைக் காட்ட ஆரம்பிச்சிட்டீங்க...”
“பிறகு எதற்கு எனக்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததான்னு நீ கேட்டே?”
“அப்படின்னா சொல்லுங்க... நீங்கள் அனுபவிச்ச பெண்கள்- அந்த நூறு பேரும் இளம்பெண்களாக இருந்தாங்களா? விபச்சாரிகள்...?”
“இல்லை... இல்லை... சிலர் நடிகைகளாக இருந்தாங்க. சிலர் வேலை செய்யிற இளம் பெண்களாக இருந்தாங்க... பிறகு குடும்பப் பெண்கள்...”
“அவர்களில் எத்தனைப் பேர் குடும்பப் பெண்களாக இருந்தாங்க?”
“ஆறு பேர்”
“வெறும் ஆறு பேர்தானா?”
“ஆமாம்...”
“அவர்கள் மிகவும் அழகானவர்களா இருந்தாங்களா?”
“ஆமா... நிச்சயமா...”
“இளம் பெண்களைவிட அழகானவர்கள்...?”
“இல்லை...”
“நீங்க யாரை மிகவும் விரும்புனீங்க? இளம் பெண்களையா? குடும்பப் பெண்களையா?”
“குடும்பப் பெண்களை”
“ஓ கேட்கவே கேவலமா இருக்கு! அதற்கு என்ன காரணம்?”
“என் சொந்தத் திறமைமீது எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லை.”
“ஓ... கேட்கவே பயங்கரமா இருக்கு! உங்களுக்குத் தெரியுமா நீங்க ஒரு கேவலமான, பயங்கரமான ஆளுன்னு? ஆனால், இன்னொரு விஷயத்தையும் கட்டாயம் நீங்க சொல்லியே ஆகணும். ஒருத்தியை விட்டுட்டு இன்னொருத்தியை உடலுறவு கொள்றதுன்றது சுவாரசியமான விஷயமா?”
“பெரும்பாலும்... ஆமாம்...”
“ரொம்பவும்?”
“ரொம்பவும்.”
“அதில் என்ன பெரிய சுவாரசியம் இருக்கப் போகுது? அவர்கள் ஒரே மாதிரி இல்லாமல் இருக்குறதுனாலா?”
“ஆமா... அவங்க ஒரே மாதிரி இல்ல...”
“ஹ! பெண்கள் ஒரே மாதிரி இல்ல...!”
“நிச்சயமா இல்ல.”
“ஒரு விஷயத்தில்கூட...?”
“அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். சரி... எந்த விஷயத்துல அவங்களுக்கிடையே வேறுபாடு?”
“எல்லா விஷயங்களிலும்...”
“உடல் விஷயத்தில்..?”
“ஆமா... உடல் விஷயத்தில்...”
“பிறகு... வேறு எந்த விஷயத்தில்?”
“ம்... கட்டிப் பிடிக்குறதுல, பேச்சுல... அதிகமா இதைப் பற்றி விளக்கிக்கொண்டு இருக்குறதைவிட, சுருக்கமா சொல்றேன். எல்லா விஷயங்களிலும்...”
“ஹ! அப்படின்னா இப்படி மாறுவது சுவாரசியமானது அப்படித்தானே?”
“ஆமா...”
“ஆண்கள் விஷயத்திலும் இந்த வேறுபாடு இருக்கா?”
“அது எனக்குத் தெரியாது”
“உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியாது.”
“அவர்கள் வேறுபட்டுத்தான் இருப்பாங்க.”
“ஆமா... சந்தேகமே வேண்டாம்...”
ஷாம்பெய்ன் நிறைக்கப்பட்ட கண்ணாடிக் குவளையைக் கையில் பிடித்துக்கொண்டு அவள் ஏதோ சிந்தனை வயப்பட்டு உட்கார்ந்திருந்தாள். அந்தக் குவளை முழுவதும் நிறைந்திருந்தது. ஒரே மூச்சில் அது முழுவதையும் அவள் குடித்தாள். தொடர்ந்து அந்தக் குவளையை மேஜைமீது வைத்துவிட்டுத் தன் கணவனின் கழுத்தில் கையைச் சுற்றிக் கொண்டு மெதுவான குரலில் சொன்னாள்:
“ஓ... என் தங்கமே! உங்களை எனக்கு மேலும் அதிகமா காதலிக்கணும்போல இருக்கு.”
அவன் அவளை உணர்ச்சிவசப்படும் அளவிற்கு ஒருமுறை இறுக அணைத்தான்.
உள்ளே வர முடியாமல் ஒரு வெயிட்டர் பின்வாங்கித் திரும்பிச் சென்றான். அவன் அந்தக் கதவை அடைத்தான். சுமார் ஐந்து நிமிடங்களுக்கு அறை சேவை தடைப்பட்டது.
டெஸர்ட்டிலிருக்கும் பழங்களுடன் வெயிட்டர் மீண்டும் வந்தபோது ஷாம்பெய்ன் நிறைக்கப்பட்ட வேறொரு கண்ணாடிக் குவளை அவளின் கையில் இருந்தது. அந்த போதை தரும் மஞ்சள் நிறத்தைக் கொண்ட திரவத்தின் அடிப்பகுதியைப் பார்த்துக் கொண்டே, எதையோ யோசித்தவாறு அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
“ஓ... சரிதான்... இதைப்போல அதுவும் மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம்தான்...”