
கிறிஸ்துவுக்குப் பிறகு இரண்டாயிரம் வருடங்கள் ஆகவில்லை. அதற்கு இன்னும் ஐம்பது வருடங்கள் இருந்தன.
அன்றொரு நாள் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரனான மாத்து மாப்பிள தன்னுடைய ரொட்டிக் கப்பைகளை முழுவதுமாக மண்ணிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தான்.
அதில் கொஞ்சம் வாங்கி வேக வைத்துத் தின்பதற்கு என்ன வழி என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மாத்து மாப்பிளயிடம் என்ன பொய் சொல்வது? கிறிஸ்துவனாக நான் ஆகத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லலாமா? ஆனால், அவன் நம்ப மாட்டான். நான் நினைத்தேன்... தன்னைப்போலவே தன் பக்கத்துவீட்டுக்காரனையும் நினைக்க வேண்டும் என்று எத்தனையோ வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து சொல்லி இருக்கிறார் அல்லவா? அதை மாத்து மாப்பிளயிடம் ஞாபகப்படுத்தினால் என்ன? நான் வேலிக்கு அருகில் சென்றேன்.
"இது நல்லா வேகக்கூடிய ஜாதிதானா?'' நான் கேட்டேன். அவன் பெரிதாக எதுவும் என்னிடம் பேசவில்லை. மாறாக, பன்னிரண்டு ராத்தல் வருகிற மாதிரி ரொட்டி கப்பையை ஒரு கட்டாகக் கட்டி வேலிக்கருகில் நின்றிருந்த என்னிடம் தந்தான். பிறகு சொன்னான்:
"சாப்பிட்டுப் பாருங்க...''
நான் அவனுக்கு நன்றி சொன்னேன்.
"கிறிஸ்துவனாக இருந்தாலும் மாத்துமாப்பிள, நீ மிகவும் நல்லவன்...''
நான் இப்படி சொன்னதற்கு அவன் "வழுக்கைத் தலை...'' என்று கிண்டல் பண்ணினான்.
நான் பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. பதிலுக்கு ஏதாவது கூறுவது என்றால் அது நல்ல பண்பாடான ஒரு செயலாக இருக்காதே! நான் வந்து ஆறு ராத்தல் கிழங்கை எடுத்து நான்கு அங்குலம் வருவது மாதிரி துண்டு துண்டாக நறுக்கி தோலை நீக்கிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய இன்னொரு பக்கத்து வீட்டுக்காரனான சங்கரன் நாயர் என் வீட்டுப் படியேறி வந்து, "இது நல்லா வேகுற ஜாதிதானா?'' என்று கேட்டான். அதற்கு ஏதாவது பதில் பேசினால் தேவையில்லாத குழப்பங்கள் வரும். மீதி இருக்கும் ஆறு ராத்தல் நல்ல மாணிக்காத்த ரொட்டிக் கப்பையை சங்கரன் நாயருக்குக் கொடுக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி தீவிரமாக நான் சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். என்னால் எந்த முடிவுக்குமே வர முடியவில்லை. சங்கரன் நாயரின் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் கத்தரிக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய், கருவேப்பிலை முதலியவற்றை கேட்டும் கேட்காமலும்... சுருக்கமாகச் சொல்லப்போனால் எல்லாரும் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலமுறை மேலே கண்ட காரியத்தை நானே செய்திருக்கிறேன். "உன்னுடைய பக்கத்துவீட்டுக்காரன் சாப்பிட ஒன்றுமே இல்லாமல் பட்டினி கிடக்கிறபோது, நீ வயிறு முழுக்க சாப்பிடுவது என்பது ஒரு மனிதத்தன்மை உள்ள காரியமா என்ன? " என்று அல்லாவே கூறியிருக்கிறார் என்றும்; அதையே முஹம்மது நபியும் சொல்லியிருக்கிறார் என்றும் சங்கரன் நாயர் என்னிடம் கூறியிருக்கிறான். சங்கரன் நாயர் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு சாப்பாடு பிரச்சினையே இல்லை. இருந்தாலும், அவனிடம் ரொட்டிக் கப்பை கிடையாது. "உன்னுடைய பக்கத்து வீட்டுக்காரன் ரொட்டிக் கப்பை தின்னாமல் இருக்கும்போது, நீ மட்டும் எப்படி வயிறு நிறைய அதைத் தின்னலாம்? அப்படித் தின்றால், அது மனிதத்தன்மை உள்ள ஒரு செயல் இல்லையே!" என்று மாற்றி என்னிடம் சங்கரன் நாயர் பேசினால் நான் என்ன பதில் சொல்வது? என்னிடம் மனிதத்தன்மை கிடையாது என்று கூறுவதற்குக்கூட என்னால் முடியும். ஆறு ராத்தல் ரொட்டிக் கப்பை பெரிதா? மனிதத் தன்மை பெரிதா? ஆறு ராத்தல் ரொட்டிக் கப்பைக்காக மனிதத் தன்மையை யாராவது தூக்கியெறிந்துவிட முடியுமா? சங்கரன் நாயர் தோட்டத்தின் மாமரத்தில் பழுத்துத் தொங்கிக்கொண்டிருக்கும் மாம்பழங்கள் அந்த நேரத்தில் ஞாபத்தில் வந்ததால் நான் சொன்னேன்:
"நீயே எப்படி இருக்குன்னு பாரு...''
"முஸ்லிமாக இருந்தாலும் நீங்கள் நல்லவர்தான்" என்று சங்கரன் நாயர் பேச இடம் தராமல் நான் சொன்னேன்:
"முஸ்லிம்கள் பொதுவாகவே நல்லவங்க!''
சங்கரன் நாயர் அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. ரொட்டிக் கப்பையை எடுத்துக்கொண்டு போவதற்கு முன்பு என்னைப் பார்த்து சொன்னான்:
"மிளகாய், உப்பு எல்லாம் சேர்த்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு வதக்கி... அதுல நல்லா ரொட்டி கப்பையை போட்டு முக்கி சாப்பிடணும்!''
நான் சொன்னேன்:
"இங்கே மிளகாய் இல்ல... உப்பு இல்ல... தேங்காய் எண்ணெய்யும் இல்ல!''
"கவலைப்படாதீங்க.'' அவன் சொன்னான்: "நான் எல்லாத்தையும் கொண்டு வர்றேன்.''
அவன் அடுத்த நிமிடம் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
நான் கப்பையை வேக வைத்தேன். ஐந்தாறு கப் பால் போடாத தேநீர் தயாரித்தேன். அப்போது சங்கரன் நாயர் கொடுத்தனுப்பியிருந்த சட்னி வந்து சேர்ந்தது. நான் கப்பையை அதில் தொட்டு நாக்கில் வைத்தேன். உப்பும் காரமும்... ஆஹா... என்ன சுவை!
நான் ஒரு துண்டு கிழங்கை எடுத்து சட்னியில் முக்கி வாயில் வைத்தேன். அதை பற்களால் மெல்ல வேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. வாயில் வைத்தவுடன் வெண்ணெய் போல... அதுவாகவே கரைந்தது. அடடா... என்ன சுவை! சாப்பிடுவதற்கு எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா?
மாத்து மாப்பிள, சங்கரன் நாயர்- இருவர்மீதும் எனக்கு விருப்பம் அதிகமானது. எல்லா கிறிஸ்துவர்களையும் எல்லா நாயர்களையும் நான் அப்போது மனப்பூர்வமாக விரும்பினேன். "லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து" என்ற சுலோகத்தை மனதிற்குள் சொல்லியவாறு கப்பையைத் தின்று முடித்து, தேநீரைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்தச் சம்பவம் நடக்கிறது!
கோட்டயத்தில் இருந்து வருகிற "டொமாக்ரேட்" வார இதழின் மூன்றாவது இதழ் எனக்கு வருகிறது. அதில் "டொமாக்ரேட்"டின் முதல் இதழைப் பற்றி "தீபிக"வின் கருத்து பிரசுரமாகி இருந்தது. நான் அதை உன்னிப்பாகப் பார்த்தேன். "தீபிக" எனக்கு எதிராக சில வார்த்தைகளை எழுதியிருந்தது. அதில் இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது: "டொமாக்ரேட் அலுவலகத்தில் கம்யூனிஸம் என்று சொல்லப்படுகிற ஒரு கறுப்புப் பூனையை ஒரு கோணிக்குள் ஒளித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், குட்டி கிருஷ்ண மாராரும், ஏ. பாலகிருஷ்ண பிள்ளையும், ஜி. சங்கரக்குருப்பும், பஷீரும், வர்கீஸும், களத்திலும், மற்றவர்களும் இது தெரியாமல் இருக்கிறார்கள். எல்லாரையும் பார்த்தால் பாவமாக இருக்கிறது!"
இதைப் படித்தவுடன் கிறிஸ்துவர்கள்மேல் எனக்கு வெறுப்பு தோன்றியது. நாயர்களையும் வெறுத்தேன். "நாயர்களை ஏன் நீங்க வெறுக்கணும்? அவங்க உங்களை பாவம்னு ஒண்ணும் சொல்லலியே!" என்று நீங்கள் என்னைப் பார்த்து கேட்க வேண்டிய அவசியமில்லை. என்னை "பாவம்" என்று குறிப்பிட்டதற்குப் பின்னால் ஒரு கிறிஸ்துவ- நாயர் கூட்டுறவை என்னால் பார்க்க முடிகிறது.
இந்த "டொமாக்ரேட்" பத்திரிகை முதலாளிகளில் ஒருவர் நாயர். நான் அவரின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. இதோ பாருங்கள்- ஸி.ஜெ. தாமஸ், பி.ஸி. செரியன், காரூர் நீலகண்ட பிள்ளை, டி.ஸி. கிழக்கே முரி, பி.வி. தம்பி, ஸி.கெ. மாணி- இவர்களில் ஒரு நாயர் இருப்பது உங்களுக்குத் தெரிகிறதா?
இந்த நாயரும், சில கிறிஸ்துவர்களும் இணைந்து "டொமாக்ரேட்" பத்திரிகையை ஆரம்பிக்க, நான் அதில் ஒரு கதையை எழுத... சுருக்கமாகச் சொல்லப்போனால், "தீபிக" என்னை "பாவம்" என்று அழைப்பதற்குக் காரணம் யார்?
நான் உலகத்திலுள்ள நாயர்களையும் கிறிஸ்துவர்களையும் கண்டபடி திட்டியவாறு ரொட்டிக் கப்பையைச் சட்னியில் தொட்டு தின்று கொண்டிருக்கும்போது, யார் வருகிறார்கள் தெரியுமா?
மன்னா அண்ட் சங்கா!
உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு சமாச்சாரம்தான். வாயில் இருக்கும் பற்கள் எல்லாம் முழுமையாகப் போன பிறகு, வறுத்த கறி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்ற ஆசை நம் மனதில் உண்டாகும் அல்லவா? அந்தக் கறியை மென்று தின்ன முடியாது. அப்படியென்றால் ஒரேயடியாக விழுங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது, எங்கிருந்தோ வில்லன் மாதிரி ஒரு டாக்டர் வந்து நின்று, "அப்படி விழுங்கக்கூடாது" என்று தடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியென்றால் மன்னா அண்ட் சங்கா என்ற வறுத்த கறியை தின்னக் கூடாது என்று தடுக்கக் கூடிய வில்லன் டாக்டர் யார் என்று நீங்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பது தெரிகிறது. இதைப் பற்றி அதிகமாக சிந்தித்து தலையைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். ஒரு வில்லனா? பத்திரிகை முதலாளிகளான ஒரு பெரிய கூட்டமே... அவர்கள் சொல்கிறார்கள்: கிறிஸ்துவர்கள், நாயர்கள், ஈழவர்கள்- குறிப்பாக "தீபிக" சம்பந்தப்பட்டவர்கள். இவ்வளவு மகா ஜனங்களும் கட்டுரையின் சாரத்தைக்கூட பார்க்கக்கூடாது. இது முஸ்லிம் சமுதாயத்திற்கென்றே எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை. அதற்கான காரணம் என்ன என்பதைத்தான் நான் இப்போது கூறப் போகிறேன்.
நான் அமைதியாக உட்கார்ந்து ரொட்டிக் கப்பையைத் தின்று கொண்டிருக்கும்போது, என் முன்னால் வந்து நிற்கிறார் ஒரு காமா பயில்வான். அதாவது காமாவைவிட உயரமானவர். வந்து நின்றவுடன் என்னைப் பார்த்துக் கேட்டார்:
"என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா?''
"எனக்கு நீங்க யார்னு சரியா தெரியல...'' நான் சொன்னேன்: "உட்காருங்க. கொஞ்சம் ரொட்டிக் கப்பை சாப்பிடலாம்!''
"மிளகாய், உப்பு போட்டு தேங்காய் எண்ணெய் கலந்து உண்டாக்கின சட்னி இருக்கா?''
நான் சொன்னேன்:
"இருக்கு...''
அந்த ஆள் அமர்ந்தார். அவரின் கண்கள் பைத்தியக்காரனின் கண்களைப்போல இருந்தது. அதாவது- கவிஞன், அமைச்சர், பத்திரிகை முதலாளி, பதிப்பாளர், வாசகர், விமர்சகர், கஞ்சா குடிக்கும் நபர்- இவர்களில் யாரோ ஒருவராக இந்த ஆள் இருக்க வாய்ப்பு உண்டு என்ற முடிவுக்கு நான் வந்தேன். அவர் மீண்டும் கேட்டார்:
"என்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?''
நான் சொன்னேன்:
"எனக்குச் சரியாக ஞாபகம் இல்ல...''
அவர் சொன்னார்:
"நான் உங்களைக் கொல்றதுக்காக வந்திருக்கேன்!''
நான் ஒன்றும் பதில் கூறவில்லை. அவர் பாக்கெட்டில் கையை விட்டு இரண்டு பெரிய கத்திகளை எடுத்தார். ஒரு கத்தி மிகவும் புதியதாக இருந்தது. வெள்ளியைப் போல அது மினுமினுத்துக் கொண்டிருந்தது. மற்றொரு கத்தி ரொம்பவும் பழையதாக இருந்தது. புதிய கத்தியை என் முன்னால் காட்டியவாறு அவர் சொன்னார்:
"இந்தக் கத்தி உங்களைக் கொலை செய்றதுக்குன்னே ஸ்பெஷலா தயார் பண்ணினது. மத்தவங்களைக் கொல்றதுக்கு பயன்படுத்தின கத்தியையே உங்களுக்கும் பயன்படுத்தினா நல்லா இருக்காது இல்ல...''
"நீங்க சொல்றது நியாயம்தான்!'' நான் சொன்னேன்: "என்னைக் கொல்லாம இருக்க முடியாதா?''
"ஓஹோ... தாராளமா இருக்கலாம். அப்படின்னா... நீங்க இஸ்லாமுக்காக என்ன செஞ்சீங்க?''
"நான் இதுவரை யாரையும் மதத்தை மாத்த முயற்சி பண்ணினது இல்ல...''
"நீங்க இஸ்லாமுக்கு ஆதரவா உடனடியா ரெண்டு கட்டுரைகள் எழுதணும். 1. ஷேக்ஸ்பியர் முதல் முண்டசேரி வரை. 2. மன்னா அண்ட் சங்கா.''
நான் சொன்னேன்:
"தாராளமா எழுதலாம். உங்களை எனக்கு சரியா தெரியலியே!''
"இப்ராஹிம் மவ்லவின்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?''
"இல்ல...''
"கிறுக்கன் இப்ராஹிம்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?''
"இல்ல...''
"பிறகு யாரைப் பற்றித்தான் நீங்க கேள்விப்பட்டிருக்கீங்க?''
அவர் என்னையே உற்றுப் பார்த்தார். பிறகு சொன்னார்: "முதல்ல மன்னா அண்ட் சங்காவைப் பற்றி எழுதுங்க. நாயர்கள்ல பெரிய மனிதர்களான திரு. மன்னத்து பத்மநாபபிள்ளை, ஆர். சங்கரோடு சேர்ந்து பிள்ளை, நாயர், மேனன், பணிக்கர், குருப்பு முதலிய ஜாதிப் பெயர்களுக்கு எதிராகப் போராடினது தெரியுமா?''
"தெரியாது...''
"அப்படின்னா தெரிஞ்சுக்கங்க. முஸ்லிம் சமுதாயத்திற்கு நல்ல வாய்ப்பு வந்து சேர்ந்திருக்கு. இந்த விஷயத்தை முஸ்லிம் உலகத்துக்குத் தெரியப்படுத்தணும்!''
நான் சொன்னேன்:
"தெரியப்படுத்திட்டாப் போச்சு''
"கிறிஸ்துவங்க இதுல கை வைக்குறதுக்கு முன்னாடி நாம எல்லாத்தையும் சரிப்படுத்தணும்!''
இப்படியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள்முன் இருந்த கப்பை முற்றிலுமாக தீர்ந்து போயிருந்தது. இருந்த தேநீர் முழுவதையும் குடித்தோம். பிறகு ஆளுக்கொரு பீடியை உதட்டில் வைத்து பிடித்தோம். நான் கேட்டேன்:
"கிறிஸ்துவர்களும் நாயர்களும் ஒண்ணு சேர்ந்து எனக்கு எதிரா எழுதியிருக்காங்க. பார்த்தீங்களா?''
அவர் பார்த்தார். படித்ததும், அவர் முகத்தில் ஒரு வருத்தம் தெரிந்தது. அவர் சொன்னார்:
"ஒரு முஸ்லிம் "பாவம்"னு சொல்லி இருக்காங்க! அடடா...! முஸ்லிம்கள் ரோட்ல நடக்கணுமா இல்லியா? இப்படி எழுதினதுக்கு இவங்களுக்குச் சரியான தண்டனை தரணும்...''
நான் கேட்டேன்:
"காரூர் நீலகண்ட பிள்ளைக்கு என்ன தண்டனை?''
அவர் சொன்னார்:
"ஆறு மாசம் கடுங்காவல் தண்டனை.''
"டி.ஸி. கிழக்கே முரிக்கு?''
"ஒன்பது மாசம்''
"பி.ஸி. செரியனுக்கு?''
"அம்பது ரூபா அபராதம்!''
"ஸி. ஜெ. தாமஸுக்கு?''
"பத்து மாசம்!''
"பி.வி. தம்பிக்கும் ஸி. கெ. மாணிக்கும்?''
"ஏழேழு மாசம்!''
"தீபிக'க்கு?''
"பத்திரிகையை நடத்துறவங்களுக்கும் ப்ரூஃப் ரீடர்களுக்கும் கம்போசிட்டர்களுக்கும் ஆஃபிஸ் ப்யூனுக்கும் ஒண்ணரை வருடம் வீதம் கடுங்காவல் தண்டனையும் ஆளுக்கு அஞ்சு ரூபா அபராதமும்!''
நான் கேட்டேன்:
"வேற நாயர்களையோ, கிறிஸ்துவர்களையோ தண்டிக்க வேண்டியதிருக்கா?''
"தண்டிக்கணும். அவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். முஸ்லிம்மேல தேவையில்லாம குற்றம் சுமத்தி, "பாவம்'னு இனிமேல் சொல்லக்கூடாது. சரி... சொல்லுங்க!''
"தகழி சிவசங்கரப் பிள்ளை, பொன்குன்னம் வர்க்கி, தர்யது குஞ்ஞித்தொம்மன், மாம்மன் மாப்பிள, ஜோஸஃப் முண்டசேரி, பி. கேசவதேவ், எம்.பி. போள், லலிதாம்பிக அந்தர்ஜனம், கெ. சரஸ்வதி அம்மா, போஞ்ஞிக்கரை ராஃபி, ஜி. சங்கரக்குறுப்பு, குட்டிகிருஷ்ணமாரார், வர்கீஸ் களத்தில், பி.ஸி. குட்டிகிருஷ்ணன், பி. பாஸ்கரன்- இவங்க எல்லாருக்கும்?''
"மூணு மூணு மாசம் சாதாரண தண்டனை!''
"பொன்குன்னம் வர்க்கிக்கு இது போதுமா? எனக்கு அந்த ஆளோட வரைஞ்சு வச்சிருக்கிற மீசையை அவ்வளவா பிடிக்கல!''
"அப்படின்னா, பொன்குன்னம் வர்க்கிக்கு அம்பது ரூபா அபராதமும் போட்டுக்குங்க...''
"அபராதத்தை ஒழுங்கா கட்டலைன்னா...?''
"கட்டி ஆகணும். காசு கட்டாயம் இருக்கும். என்ன இருந்தாலும் கிறிஸ்துவராச்சே!''
அவர் சொன்னார்: "வேற யாரையாவது தண்டிக்க வேண்டியதிருக்கா?''
நான் சொன்னேன்:
"இல்ல. சங்கரன் நாயரையே இன்னும் நாம தண்டிக்கல. அந்த ஆளுக்கு ஒரு மாசம் வீட்ல சிறை வைப்பு. அது போதும். அப்புறம்...?''
"அப்படின்னா, நான் சொன்னது மாதிரி செய்யணும். நான் நாளைக்கு வந்து அந்த "ஷேக்ஸ்பியர் முதல் முண்டசேரி வரையை" (ஷேக்ஸ்பியர், மாக்ஸிம் கார்க்கி, டால்ஸ்டாய், ஜி. சங்கரக்குறுப்பு, சங்ஙம்புழ, கேசவதேவ், எ.டி.ஹரிசர்மா, முண்டசேரி- எல்லாரும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும் வரலாறு) பற்றிச் சொல்றேன்!''
நான் சொன்னேன்:
"மன்னா அண்ட் சங்கான்னா என்னன்னு சொல்லலியே?''
"சரிதான்... எதிர்காலத்துல நம்ம கேரளத்துல நாலே நாலு சமுதாயங்கள்தான் இருக்கும். நாயர்கள் இருக்கமாட்டாங்க. நம்பூதிரி, மாரார், பிஷாரடி, பணிக்கர், வார்யர், நம்பியார், பிள்ளை, திய்யர், ஈழவர், தண்டான், புலையன், குறவன், பறையன், கணகன், சோகோன், பொதுவாள்- இவங்களும் இருக்க மாட்டாங்க. கிறிஸ்துவர்கள் இருப்பாங்க. முஸ்லிம்கள் இருப்பாங்க. மீதி இருக்குறவங்க இந்துக்கள். இவங்கள்ல ரெண்டு பிரிவும் இருக்கும்.''
"அதாவது...?''
"மன்னா அண்ட் சங்கா. இப்போ நான் என்ன சொல்றேன்னு புரியுதா? எதிர்காலத்துல நாயரையும் ஈழவனையும் எப்படி கண்டுபிடிக்கிறது தெரியுமா? ஏ. பாலகிருஷ்ண பிள்ளை எதிர்காலத்துல ஏ. பாலகிருஷ்ண மன்னா. ஸி. கேசவன்- ஸி. கேசவ சங்கா. காரூர் நீலகண்டப் பிள்ளை- காரூர் நீலகண்ட மன்னா.
கெ. அய்யப்பன்- கெ. அய்யப்ப சங்கா. ஜி. சங்கரக்குறுப்பு- ஜி. சங்கர மன்னா. ஆர். சங்கர்- ஆர். சங்கர சங்கா. ஈ. எம். சங்கரன் நம்பூதிரிப் பாடு - ஈ.எம். சங்கரன் மன்னா.''
நான் கேட்டேன்:
"இதுனால முஸ்லிம்களுக்கோ, இஸ்லாமுக்கோ என்ன லாபம்?''
"நாம நம்பூதிரி, தண்டான் நாயர், பொதுவாள், மாரார்... போன்ற ஜாதிப் பெயர்களை நம்ம பேரோட சேர்ந்துக்கணும். உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?''
"வைக்கம் முஹம்மது பஷீர் நம்பூதிரி!''
"நான் மாரார் ஆக நினைக்கிறேன். மவ்லவி இப்ராஹிம் மாரார்.'' அவர் தொடர்ந்தார்: "நாம இந்த விஷயத்துல ஏதாவது கட்டணம் வைக்கணும். ஒரு ரூபா போதும். கேரளத்துல இருக்குற ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு ரூபா நமக்கு அனுப்பி வைக்கணும். இப்பவேகூட நாம சிலருக்கு பேர் வச்சிடலாம். வைக்கம் அப்துல் காதர் தண்டான், பி. கெ. குஞ்ஞு பணிக்கர், கெ. எம். ஸீதி மேனன், அப்துல் அஸீஸு நம்பியார், அப்துல்லா கணகன், மஜீத் மரைக்காயர் பிஷாரடி, தங்ஙள் குஞ்ஞு முஸல்யார் பட்டத்திரிப்பாடு, மக்கார் பிள்ளை வார்யர்... அதுக்குப் பிறகு பெண்கள் வேற இருக்காங்களே! அவங்க பேர்களோட அந்தர்ஜனம், அம்மா, தங்கச்சி, நங்க, தம்புராட்டி, வாரஸ்யார்- இதெல்லாத்தையும் சேர்த்துக்கணும். ஆயிஷா தங்கச்சி, லைலச்சோத்தி, நபீஸா வாரஸ்யார், ஸைனபா அந்தர்ஜனம்... இப்படிப் பெயர்களைச் சேர்த்துக்குறதுனால என்ன லாபம் வருதுன்னு இப்போ தெரியுதா? கேரளத்துல இருந்த நாயர்களும் நம்பூதிரிகளும் மத்தவங்களும் முஸ்லிம்கள்தாம்னு எதிர்காலத்துல சரித்திர எழுத்தாளர்கள் உலகத்துக்குத் தெரிய வைப்பாங்க...'' எல்லாம் முடிந்த பிறகு, மாத்து மாப்பிள அழைத்து கேட்டார்:
"கப்பை நல்லா வெந்துச்சா?''
நான் பதில் சொல்வதற்கு முன்பு கிறுக்கன் இப்ராஹிம் கேட்டார்:
"யார் அது?''
நான் சொன்னேன்:
"மாத்து மாப்பிள!''
"ஒரு கிறிஸ்துவர்தானே? அப்ப தண்டனை கொடுக்கணும்!''
அந்த ஆள் தந்த கப்பையை நன்றாகத் தின்றுவிட்டு, அதே ஆளுக்கு தண்டனை வேறு தருவது என்றால்... இதை எந்த இனத்தில் சேர்ப்பது?
நான் சொன்னேன்:
"நாம தின்ன கப்பை அந்த ஆளு தந்ததுதான்!''
"அப்படின்னா லஞ்சம் வாங்கிக்கிட்டு, ஒரு கிறிஸ்துவனை நாம சும்மா விட்டுட்டோம்னு எதிர்கால வரலாற்றாசிரியர்கள் நம்மமேல குற்றம் சொல்லிடக் கூடாதே! அதற்கு நாம வழி வைக்கக் கூடாது. கட்டாயம் தண்டனை தந்தே ஆகணும்...''
நான் உரத்த குரலில் அழைத்துச் சொன்னேன்:
"டேய், மாத்து மாப்பிள... கப்பை நல்லா வெந்துச்சு. உனக்கு ஆறு மாசம் கடுங்காவல் தண்டனை... சரி... நீ போகலாம்!''
பின்குறிப்பு: இந்தக் கதையில் சொல்லப்படுகிற பலரும் இந்த உலகை விட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில்தான் "மன்னா அண்ட் சங்கா" நடைபெற்றது. மரணத்தைத் தழுவிய எல்லா ஆத்மாக்களுக்கும் கடவுள் நிரந்தர அமைதியைத் தரட்டும்.
- பஷீர்