
ஒரு அதிகாலை வேளையில் நான் அங்கு வசிக்க ஆரம்பித்தேன். பலகையால் மறைக்கப்பட்டிருக்கும் ஒரு வீடு. அந்த வகையில் அமைந்த ஐந்து வீடுகள் அந்த இடத்தில் இருந்தன. எல்லா வீடுகளிலும் ஆட்கள் இருந்தார்கள்.
நான் சென்றபோது, பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எல்லாரும் கண் விழித்து விட்டிருந்தார்கள்.
பெண்களும் குழந்தைகளும் புதிதாகத் தங்க வந்திருக்கும் மனிதனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். ஆண்கள் வேலைகள் செய்வதற்காகப் போய் விட்டிருந்தார்கள். குழந்தைகள் மெது... மெதுவாக என்னிடம் நெருங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் அவரவர்களுடைய வீட்டின் வாசல்களில் நின்று கொண்டிருந்தார்கள். புதிதாக வசிக்க வந்திருக்கும் மனிதனின் இல்லத்தரசியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அங்கு நின்று கொண்டிருக்க வேண்டும். அதற்குப் பிறகு அவளுடைய அழகைப் பற்றியும் குணத்தைப் பற்றியும் அவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். கணவர்களையும் குழந்தைகளையும் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கூறும்போது, பொறுமையுடனும் பரிதாபத்துடனும் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இந்த வீட்டில் இருப்பவர்களிடமும் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூற வேண்டும். தட்டுப்பாடு வரும்போது, கடனாகப் பணம் கிடைக்க வேண்டும். இவைதான் ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணிடம் கிடைக்கக் கூடிய பயன்கள்.
நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தும் புதிதாக வசிக்க வந்திருக்கும் மனிதனின் இல்லத்தரசியைப் பார்க்க முடியவில்லை. வயதான பெண்கள் எல்லாரும் வெறுத்துப்போய் திரும்பிப் போய் விட்டார்கள். இரண்டு மூன்று இளம் பெண்கள் மட்டும் இங்குமங்குமாக நின்று கொண்டு மறைந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெட்கப்பட்டுக் கொண்டும் தயங்கிக் கொண்டும் நெருங்கி... நெருங்கி வந்து கொண்டிருந்த குழந்தைகளிடம் நான் எதுவும் பேசவில்லை. வரவேற்பு கிடைக்காததால், அவர்கள் ஒவ்வொருவராகப் போய் விட்டார்கள்.
புத்தகங்களையும் தாள்களையும் ஒரு பெஞ்சில் அடுக்கி வைத்துவிட்டு, நான் கேன்வாஸ் நாற்காலியை விரித்துப் போட்டேன். கேன்வாஸின் நடுப்பகுதியில் ஒரு கிழிசல். அதைச் சற்று தைப்பதற்கு நூலும் ஊசியும் வேண்டும். யாரிடம் போய் கேட்பது? குழந்தைகளுடன் சற்று பேசாமல் இருந்தது தவறாகப் போய்விட்டது என்று அப்போது தோன்றியது.
மிகவும் அருகில் இருந்த வீடு தெற்குப் பக்கத்தில் இருந்தது. நான் வேலியின் அருகில் போய் நின்றேன். சிறிது நேரம் நின்ற பிறகும், அங்கு யாரையும் பார்க்க முடியவில்லை. ஒரு வேளை அங்கு ஆட்கள் யாரும் வசிக்கவில்லையோ? வெளியே கயிறு கொண்டு கட்டப்பட்டிருந்த கொடியில் ஒரு மேற்துண்டும் ஒரு கிழிந்த ரவிக்கையும் தொங்கிக் கொண்டிருந்தன. முந்தைய நாள் வாசலைப் பெருக்கியதன் தெளிவற்ற அடையாளங்கள் தெரிந்தன. வடக்குப் பகுதியில் சட்டியால் மூடப்பட்ட ஒரு குடமும், பலகையால் மூடப்பட்ட ஒரு அம்மியும் இருந்தன. கதவும் ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன. அழைப்பதற்கு என் மனம் அனுமதிக்கவில்லை.
கிழக்குப் பக்க வீட்டிலிருந்த நடுத்தர வயதைக் கொண்ட ஒரு பெண் என்னைக் கையால் சுட்டிக் காட்டியவாறு அருகில் நின்று கொண்டிருந்த வயதான பெண்ணிடம் என்னவோ கூறிக் கொண்டிருந்தாள். இருவரும் சிரித்துக் கொள்ளவும் செய்தார்கள். எனக்கு அது என்னவோபோல இருந்தது. நான் திரும்பி வந்துவிட்டேன். மேற்குப் பக்க வீட்டில் உள்ளவர்களும் என்னைப் பார்த்து என்னவோ கூறி, சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் என்னைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும்? என்னைப் பற்றி பேசிக் கொள்வதற்கு அவர்களிடம் என்ன இருக்கிறது?
அன்று நான் ஒரு வசதியானவனாக இருந்தேன். பன்னிரண்டு ரூபாய்களும் கொஞ்சம் சில்லரைக் காசுகளும் என்னிடம் இருந்தன. அதை வைத்துக் கொண்டு நான் கடைக்குச் சென்று தேநீர் பருகினேன். வெற்றிலையும் ஊசியும் நூலும் வாங்கினேன். திரும்பி வந்து கேன்வாஸைத் தைத்தேன். ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, படுத்தேன். அன்று எதையும் எழுத வேண்டுமென்று தோன்றவில்லை. வாசிப்பதற்கும் மனநிலை இல்லாமலிருந்தது. தெற்குப் பக்கத்தில் இருந்த ஜன்னலின் வழியாகப் பார்த்துக் கொண்டே நான் அதே இடத்தில் படுத்திருந்தேன். சிந்தனை இல்லை; செயல் இல்லை; சந்தோஷம் இல்லை; கவலை இல்லை. இப்படி ஒரு நிலை.
பதினொரு மணி கடந்திருக்கும். தெற்கு வீட்டின் கிழக்குப் பக்க கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ஒரு பெண்- அவள் நல்ல ஆடைகள் அணிந்திருந்தாள். சிதறிக் கிடந்த தலை முடியை ஒதுக்கிவிட்டவாறு, திண்ணையிலிருந்து வாசலுக்கு இறங்கி வந்தாள். சூரியனைச் சிறிது நேரம் பார்த்து விட்டு அந்தப் பக்கமாகச் சென்றாள். அவள் அதுவரை உறங்கிக் கொண்டு இருந்திருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. சிறிது வெளிறிப் போய் வீங்கிய முகம், கலைந்து போய் சிதறிக் கிடக்கும் தலைமுடி. அந்த நிலையில் அவள் அழகியா இல்லையா என்று ஒரு கருத்தைக் கூறுவது சரியாக இருக்காது. எது எப்படியோ, ஒரு விஷயத்தை நான் முடிவாகத் தீர்மானித்தேன். அவள் அழகற்றவள் இல்லை என்பதை. இருபதிலிருந்து இருபத்தைந்திற்குள் அவளுடைய வயது இருக்கும் என்பதையும் தீர்மானித்தேன்.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்த பிறகு அவள் உள்ளே சென்றாள். எனக்கு ஒரு கற்பனை. ஒருவேளை- அப்படி இருக்கலாம். அதனால்தான் அவள் இவ்வளவு நேரம் உறங்கியிருக்கிறாள். அதனால்தான் அவர்கள் எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரித்திருக்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் சிரிக்க வேண்டும்போல தோன்றியது. ஆனால் நான் சிரிக்கவில்லை.
சிறிது நேரம் கடந்ததும் சமையலறையின் கதவு திறக்கப்பட்டது. இரண்டு மூன்று கிண்ணங்களை அடுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் வெளியே வந்தாள். ஒரு ஏப்பம்! பழைய சாதத்தின் ஒரு வெளிப்பாடு! குடத்திலிருந்து நீரை எடுத்து வாயையும் கிண்ணங்களையும் கழுவிவிட்டு, அவள் நிமிர்ந்து நின்றாள். அவள் என் முகத்தைப் பார்த்தாள், ஒரு ஆச்சரியம்... பிறகு... ஒரு ஆர்வம். பிறகு... ஒரு புன்னகை. அவள் அமைதியான முகத்துடன் சமையலறைக்குள் சென்றாள். கதவு அடைக்கப்பட்டது. ஓலையின் இடைவெளிகள் வழியாக ஒரு மெல்லிய இசை வெளியே பரவியது.
எனக்கு அவை எதுவும் புதுமையாகத் தோன்றவில்லை. நான் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்தபோது, அவளுடைய சமையலறைக்குள்ளிருந்து நெருப்புப் புகை வந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கடந்ததும், அவள் அம்மியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். இடையில் அவ்வப்போது ஓரக் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அரைப்பதற்கு மத்தியில் அவளுடைய அடர்த்தியான கூந்தல் கட்டு அவிழ்ந்துவிட்டது. "அதன் நுனிப்பகுதி சிதறித் தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவள் வாஞ்சையுடன் பின்னோக்கி சற்றுத் திரும்பிப் பார்த்துவிட்டு, வேகமாக அரைத்துக் கொண்டிருந்தாள்.
அப்படிப் படுத்துக் கொண்டே நான் தூங்கிவிட்டேன். மாலை நேரம் நெருங்கியபோதுதான் கண் விழித்தேன். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவள் கிழக்குப் பக்கத் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். அப்போது அவள் மிகவும் அழகானவளாக இருந்தாள். குளித்து முடித்து, புதிய ஆடைகள் அணிந்து, தலை முடியைச் சீவி முடித்து, அதில் ஒரு பூ மாலையையும் அணிந்திருந்தாள். அவளுடைய முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த ஒரு புன்னகை உதடுகளில் களிநடனம் புரிந்தது. அகலமான அந்த அழகுக் கண்களால் அவள் தனக்கு முன்னால் ஒரு சிலந்தி வலையைக் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. எத்தனை எத்தனை ஈக்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டு விட்டிருக்கின்றன. அடர்த்தியான ஒரு குவளை தேநீரை எடுத்து அலட்சியமாகக் குடித்துவிட்டு அவள் வெளியே சென்றாள்.
தூக்கம் முடிந்தவுடன் என்னுடைய அறிவு தெளிவாக ஆனது. மனதில் உற்சாகம் உண்டானது. தூரத்தில், ஏரியின் பரப்பில் இருந்து வெளியேறி வந்த குளிர்ந்த காற்றை அனுபவிப்பதற்காக நான் நாற்காலியை எடுத்து வாசலில் போட்டு உட்கார்ந்து வெற்றிலை போட்டேன். தென்னை மரங்களுக்கு நடுவில் தெரிந்த மேற்கு திசையில் வானத்தில் விளிம்புப் பகுதியைப் பார்த்தவாறு நான் கற்பனையில் மூழ்கினேன். நேற்று எழுதி முழுமை செய்யாமல் வைத்திருந்த ஒரு கதையின் நாயகன், மிகவும் சிரமங்கள் நிறைந்த ஒரு நிலைமையில் நின்று கொண்டிருந்தான். சமுதாயம் அவனுடைய சுதந்திரத் தன்மையில் நூற்றுக்கணக்கான கட்டுகளைக் கட்டிவிட்டிருந்தது. அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, அவனைச் சுதந்திரமான மனிதனாக ஆக்குவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்பதுதான் என்னுடைய சிந்தனையாக இருந்தது. வேண்டாம்... அவன் அப்படிச் சுதந்திரமானவனாக ஆக வேண்டாம். அவன் அங்கேயே நின்று சிரமப்படட்டும். அங்கேயே மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கட்டும். அதைப் பார்த்து கண்களும் இதயமும் உள்ளவர்கள் கோபம் கொள்ளட்டும்.
ஒரு இறுமல் சத்தத்தைக் கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன். "தெற்குப் பக்கத்திலிருந்த வேலியின் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு கேள்வி: "கொஞ்சம் பவுடர் தர முடியுமா?''
"பவுடரா? என்ன பவுடர்?'' என் குரலில் வெறுப்பு வெளிப்பட்டது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. "முகத்தில் இடக் கூடிய பவுடர். என் பவுடர் தீர்ந்திடுச்சு. இன்னைக்கு இனிமேல் வாங்க முடியாது.''
"என்கிட்ட பவுடர் இல்லை. நான் பவுடர் போடுவதும் இல்லை.''
சிறிது நேரம் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்து விட்டு, அவள் திரும்பிப் போனாள்.
ஒருநாள் முழுமையான ஓய்வு எடுத்து முடித்து, அன்று இரவு நான் எழுதத் தொடங்கினேன். இரண்டாவது சாமம் முடிந்த பிறகும் என் பேனா இயங்கிக் கொண்டேயிருந்தது. தெற்குப் பகுதியிலிருந்த வீட்டுக்குள்ளிருந்து மெதுவான குரலில் உள்ள உரையாடலும், குலுங்கல் சிரிப்புகளும், சில நேரங்களில் மெல்லிய இசையும் கேட்டுக் கொண்டிருந்தன. கதவு, ஜன்னல் ஆகியவற்றின் இடைவெளிகள் வழியாக வெளிச்சமும் தெரிந்தது. பிற வீடுகளில் இருந்தவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.
மூன்றாவது சாமம் முடிவடையும் நிலையில் இருந்தது. தேய்பிறை பட்சத்து நிலவு உதித்து மேலே வந்து கொண்டிருந்தது. நல்ல நிலவு வெளிச்சம். நான் பேனாவையும் தாளையும் பெஞ்சில் வைத்துவிட்டு, நாற்காலியில் சாய்ந்தேன். தெற்கு வீட்டின் கதவு திறக்கப்பட்டது. அவள் வாசலுக்கு வந்தாள். அவளுக்குப் பின்னால் ஒரு ஆணும். அவன் அவளுடைய கையைப் பிடித்தான். அவர்கள் அதே இடத்தில் நிலவு வெளிச்சத்தில் உலவிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அவள் கையை விடுவித்துக் கொண்டு, விலகினாள். என் ஜன்னலுக்கு நேராகப் பார்த்துக் கொண்டு, அவள் அந்த மனிதனிடம் என்னவோ சொன்னாள். அவன் வேகமாகப் படிகளை நோக்கி நடந்தான். அவள் வீட்டுக்குள் சென்றாள்.
கிட்டத்தட்ட பத்து மணி ஆனபோது நான் நாற்காலியிலிருந்து கண்விழித்து எழுந்தேன். தினச் செயல்களைச் செய்து முடித்து நான் வெளியே சென்றேன். திரும்பிவந்தபோது, அவள் வீட்டின் உரிமையாளரிடம் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அன்று அதற்குப் பிறகு அவளைப் பற்றி கவனம் செலுத்துவதற்கு என்னால் முடியவில்லை.
மாணவர்கள் கல்விக் கூடங்களில் இருந்து வீடுகளை நோக்கிப் போக ஆரம்பித்திருந்தார்கள். நான் எழுதி முடித்த ஒரு நாடகத்தை மெருகேற்றிக் கொண்டிருந்தேன். யதேச்சையாக நான் தெற்கு திசையை நோக்கிப் பார்த்தேன். அவள் தெற்குப் பக்க வேலியின் அருகில் நின்று கொண்டிருந்தாள்.
ஒரு பத்து ரூபாய் நோட்டை வேலிக்குமேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டே அவள் கேட்டாள்:
"இதற்கு சில்லரை தர முடியுமா?''
"இல்லையே! என் கையில் எட்டு ரூபாய்கள்தான் இருக்கு.''
"அப்படின்னா...'' அவள் யோசனையில் மூழ்கி விட்டுச் சொன்னாள்.
"இதை அங்கே வச்சிக்கிட்டு, இங்கே மூணு ரூபாய் தாங்க. மீதியைப் பிறகு தந்தால் போதும்.''
நான் மூன்று ரூபாய்களை எடுத்துக் கொண்டு வேலியின் அருகில் சென்றேன். ரூபாயை அவளுடைய கையில் கொடுத்தேன்.
"இதைப் பிறகு தந்தால் போதும்.''
அவள் என்னவோ கூறுவதற்கு முயற்சித்தாள். கூறவில்லை. நான் திரும்பி நடந்தேன். அவளும் போய்விட்டாள்.
சிறிது நேரம் கடந்தவுடன் கிழக்குப் பக்க வீட்டைச் சேர்ந்த கிழவி என்னுடைய வாசலுக்கு வந்தாள்.
"என்ன?'' நான் கேட்டேன்.
"குழந்தை, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல வேண்டியதிருக்கு.'' அவள் உள்ளே வந்தாள்.
"சொல்லலாமே! இங்கே உட்காருங்க.'' நான் பெஞ்சில் இருந்த தாளையும் புத்தகங்களையும் நகர்த்தி வைத்தேன்.
கிழவி சற்று தயங்கிக் கொண்டே பெஞ்சில் உட்கார்ந்தாள். திறந்து வைக்கப்பட்டிருந்த வெற்றிலைப் பொட்டலத்தைப் பார்த்துக் கொண்டே அவள் சொன்னாள்: "குழந்தை, நீ ஒரு மரியாதையானவன். உன்னைப் பார்த்தபோதே தோணுச்சு. இவ்வளவு அதிகமாக வெற்றிலையை எதுக்கு வாங்கி வச்சிருக்கே? எப்போதும் வெற்றிலை போட்டுக்கிட்டே இருக்கணும். அப்படித்தானே?''
"ம்... பாட்டி... நீங்க வெற்றிலை போட வேண்டாமா?''
"பாக்கை மெல்ல முடியாது குழந்தை. வயசு அறுபத்தெட்டாயிடுச்சு. மூத்த மகன் குட்டனை தெரியும்ல? அவனுக்கு இந்த வர்ற மேட மாதத்துல நாற்பது வயது முடியுது. அவனுக்கு நான்கு பிள்ளைகள் இருக்காங்க. குழந்தை, அவனோட தம்பிகள் இரண்டு பேரும் உருப்படாதவங்களா ஆயிட்டாங்க. ஒருத்தன் பட்டாளத்துக்குப் போயிட்டான். இன்னொருத்தன் அஸ்ஸாம்ல இருக்கான்.''
"பாட்டி, அவங்க பணம் அனுப்புறாங்கள்ல?''
"என் குட்டன்மீது ஆணையா சொல்றேன். ஒரு காசுகூட இதுவரை அனுப்பியது இல்லை. ஒருத்தன் போயி இப்போ இரண்டு வருடங்கள் ஆச்சு. இன்னொருத்தன் அஸ்ஸாமுக்குப் போயி மூணு மாதமாச்சு.
பிள்ளைகள் நல்லவர்களா இருக்கணும் குழந்தை, நல்லவர்களா இருக்கணும். என்னைப்போல இருக்குற அம்மாக்களுக்கு பத்து, ஐம்பதுன்னு ஒவ்வொரு மாசமும் வந்துக்கிட்டு இருக்கு. அதைப் பார்க்குறப்போ என் தொண்டை ஈரமாயிடும்.'' இவ்வளவையும் கூறுவதற்கு மத்தியில் இரண்டு வெற்றிலைகளும் ஒரு பாக்கும் கொஞ்சம் புகையிலையும் கிழவியின் உள்ளங்கையில் வந்து சேர்ந்து விட்டிருந்தன. தொடர்ந்து அவள் கேட்டாள்: "குழந்தை, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?''
"இல்லை.''
"உரிய வயசு வந்திடுச்சுன்னா, கல்யாணம் பண்ணிடணும் குழந்தை. இல்லாவிட்டால் நிலைமை மோசமாயிடும். நீ கல்யாணம் பண்ணாததுனாலதானே, தெற்குப் பக்கத்து வீட்டுல இருக்குற அவளுக்கு...'' அவள் அர்த்தம் நிறைந்த சிரிப்பைச் சிரித்தாள்.
‘‘என்ன?'' எனக்கும் சிரிப்பு வந்தது.
‘‘எனக்கு எல்லா விஷயங்களும் புரியுது குழந்தை. அவள் ஒரு மோசமான பெண். அவளுடன் பேசுறவங்களும் கெட்டவங்களா ஆயிடுவாங்க.''
நான் ஒன்றுமே தெரியாததைப்போல சொன்னேன்: ‘‘எனக்கு எதுவுமே புரியல...''
‘‘இரவு நேரம் வந்துட்டா, கண்ட ஆளுங்களெல்லாம் உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருக்கக் கூடிய வீடு அது. நாங்க யாரும் அங்கே போவது இல்லை. எங்களுடைய வீட்டுக்குள்ளே அவளை நுழைய விடுறதும் இல்லை. அவள் ஒரு தேவடியா குழந்தை, முழு தேவடியா. குழந்தை, நீ அவளிடம் பேசாதே. அவளைப் பார்க்கக்கூட செய்யாதே.''
‘‘அவள் என் பக்கத்து வீட்டுப் பெண் ஆச்சே! அவளைப் பார்க்காமலும் பேசாமலும் இங்கே வசிக்க முடியுமா?''
‘‘குழந்தை, நீ சொல்றது சரிதான். ஆண்கள்தானே? பார்க்கத்தான் செய்வாங்க. அவள் இங்கே வந்துட்டா, பிறகு... இங்கே முடிஞ்சு போயிடும் குழந்தை. எங்க எல்லாரின் வீடுகளில் இருக்கும் ஆண்களையும் அவள் வசீகரிக்கப் பார்த்தாள். இப்போ அவங்க எல்லாருக்கும் விஷயம் புரிந்துவிட்டது. இனிமேல் அவளை இங்கேயிருந்து விரட்டி விடணும்னு நாங்கள் முடிவு செய்திருக்கோம். எல்லா வீடுகளைச் சேர்ந்தவர்களும் ஒண்ணு சேர்ந்து முதலாளியிடம் சொல்லியிருக்கோம். அவளை அனுப்பலைன்னா, நாங்கள் போய் விடுவோம் என்று சொல்லியிருக்கோம்.''
‘‘அது கஷ்டமான விஷயமாச்சே! அவள் அங்கேயே வசித்துவிட்டுப் போகட்டுமே!''
‘‘எங்க ஆம்பளைகளைத் தட்டிக் கொண்டு போய்விட்டால் நாங்க பட்டினி கிடக்க வேண்டியதாகிவிடாதா குழந்தை? அவளுக்கு வசீகரிக்கத் தெரியும்.''
எனக்கு சிரிப்பு வந்தது. ‘‘இருந்தாலும் என்னை வசீகரிக்கவில்லையே?''
‘‘குழந்தை, வசீகரிக்காமலா நீ அவளுக்கு ரூபாய் கொடுத்தே?''
‘‘அது கடனாகக் கொடுத்தது.''
ஒரு சிறுமி கதவிற்கு அருகில் வந்து நின்றாள்.
‘‘ஏன்டி வந்தே?'' கிழவி கோபம் இருப்பதைப்போல காட்டிக் கொண்டு கேட்டாள்.
‘‘அம்மா சொன்னாங்க...'' அவள் பாதியுடன் நிறுத்திக் கொண்டாள்.
‘‘என்னால் முடியாது... எந்தவொரு அறிமுகமும் இல்லாதவங்களிடம் கடன் கேட்பதற்கு...''
‘‘நாளைக்கு அப்பாவுக்கு சம்பளம் கிடைத்தவுடன் கொடுத்து விடலாம் என்று அம்மா சொன்னாங்க.''
விஷயம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. எனினும், புரியவில்லை என்பதைப்போல காட்டிக் கொண்டு நான் கேட்டேன்:
‘‘பாட்டி, அவள் என்ன சொல்கிறாள்?''
‘‘இவள் குட்டனின் மூத்த மகள். குழந்தை, உன்கிட்ட இருந்து இரண்டு ரூபாய் கடனாக வாங்கிட்டு வரச் சொல்லி இவளோட அம்மா அனுப்பி வைச்சிருக்கா. தெற்குப் பக்க வீட்டில் இருப்பவளைப்போல அறிமுகமே இல்லாதவங்கக்கிட்ட ரூபாய் வாங்குவதற்கு என்னால் முடியாது. குழந்தை, நீ நேற்றுத்தான் வந்திருக்கிறாய். அதற்குள் வந்து கடன் கேட்பது மரியாதையான செயலா?''
அவள் சிறுமி இருந்த பக்கம் திரும்பினாள்:
‘‘மகளே, என்னால கேட்க முடியாதுன்னு நீ போய் அம்மாக்கிட்ட சொல்லு.''
சிரிப்பை அடக்குவதற்கு நான் மிகவும் படாதபாடு பட வேண்டியதிருந்தது. ஒரு முட்டாளைப்போல காட்டிக் கொண்டு நான் சொன்னேன்:
‘‘பரவாயில்ல, பாட்டி... இரண்டு ரூபாய்கள்தானே வேண்டும்? நான் தர்றேன். கிடைக்கிறப்போ திருப்பித் தந்தால் போதும்.''
நான் இரண்டு ரூபாயை எடுத்துக் கிழவியிடம் கொடுத்தேன். தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் பெண் மிகவும் மோசமானவள் என்றும், அவளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நானும் உதவியாக இருக்க வேண்டும் என்றும் கூறிவிட்டுக் கிழவி கிளம்பினாள்.
கபடத்தனங்கள் கபடத்தனங்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்டே அவற்றுக்கு பலிகடாவாக ஆவது எனக்கு ஒரு சந்தோஷமான அனுபவமாக இருந்தது.
மறுநாள் மதிய நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரனான ஒரு வாத நோயாளி குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு நொண்டி நொண்டி என்னைத் தேடி வந்தான். தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் பெண்ணின் நடத்தையைப் பற்றியும், பொது நன்மையை மனதில் கொண்டு அவளை அங்கிருந்து வெளியேற்றுவதன் அவசியத்தைப் பற்றியும் நீண்ட நேரம் சொற்பொழிவு ஆற்றிவிட்டு என்னிடம் மருந்து வாங்குவதற்காக ஒரு ரூபாய் கொடுக்கும்படி கேட்டான். நான் அதையும் கொடுத்தேன்.
அன்று சாயங்காலம் தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் பெண் வேலியின் அருகில் வந்து நின்று சிரித்துக் கொண்டே என்னிடம் கேட்டாள்: ‘‘மேலும் இரண்டு ரூபாய் தர முடியுமா?''
‘‘இல்லை... இன்னும் கொஞ்சம் சில்லறைகள் மட்டுமே என்னிடம் இருக்கின்றன.''
அவள் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியவாறு நின்றுவிட்டு, திரும்பிச் சென்றாள். அன்று சாயங்காலம் ஒரு சிற்றுண்டியை மட்டுமே நான் சாப்பிட்டேன். மறுநாள் தேநீர் குடித்துவிட்டு, வெற்றிலை வாங்கி முடித்தபோது நான் கையில் காசு எதுவுமே இல்லாத மனிதனாகிவிட்டேன். மதிய உணவு சாப்பிடுவதற்குக்கூட வழியில்லை. உணவு வேண்டாம் என்று தீர்மானித்தேன். அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுப்பது என்பது எனக்கு அந்த அளவிற்கு சிரமமான ஒரு விஷயம் அல்ல.
அன்று மாலை நேரத்தில் அவள் என்னை வேலியின் அருகில் வரும்படி அழைத்தாள். ஒரு பத்து ரூபாய் நோட்டை என்னை நோக்கி நீட்டிக் கொண்டே அவள் சொன்னாள்: ‘‘இதுலயிருந்து தேவையானதை எடுத்துக்கோங்க.''
அதை வாங்குவதற்கு எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. எனினும், அதை வாங்கிக் கொண்டு நான் வெளியே சென்றேன். அப்போதே ஒரு ரூபாய் செலவாகிவிட்டது. இரண்டு ரூபாயை பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டேன். திரும்பி வந்து அவளிடம் ஏழு ரூபாய்களைத் திருப்பித் தந்தேன்.
அந்த வகையில் நான் மீண்டும் இரண்டு ரூபாய்கள் வைத்திருக்கும் பணக்காரனாக ஆனேன். சிறிது நேரம் சென்றதும் மேற்குப் பக்க வீட்டிலிருக்கும் மனிதன் என்னைத் தேடி வந்து தன்னுடைய மனைவியும் பிள்ளைகளும் இரவில் பட்டினியாகக் கிடக்கிறார்கள் என்று சொன்னான். என் சொத்தில் பாதியை நான் அவனிடம் கொடுத்தேன். அவனும் தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் பெண்ணைச் சிறிது திட்டிவிட்டு, அவளை அங்கிருந்து அடித்து விரட்ட வேண்டிய தேவையைப் பற்றி என்னிடம் கூறி முடித்த பிறகே அங்கிருந்து கிளம்பினான்.
அதற்குப் பிறகும் மூன்று நாட்கள் கடந்தன. அதில் நான் ஒன்றரை நாட்கள் பட்டினியாக இருந்தேன். தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் பெண் என் ஜன்னலையே பார்த்துக் கொண்டு நின்றிருப்பதை நான் பல நேரங்களிலும் பார்ப்பேன். நான் அவளைக் கண்டு கொண்டதைக் காட்டிக் கொள்வதில்லை.
மாலை நேரம் நெருங்கியபோது நான் வாசலுக்குச் சென்று, வெண் மணலில் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன். காற்று தென்னை ஓலைகளில் மோதி விளையாடிக் கொண்டிருந்தது. நகரத்தின் முக்கிய தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கும் கார்களின் "ஹார்ன்" ஒலிகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. பக்கத்து வீடுகளில் இருக்கும் பிள்ளைகள் பெயர் சொல்லிக் கூப்பிடுவதும் பெண்கள் புகார்கள் சொல்லிப் பேசுவதும் இல்லத் தலைவர்கள் வசை மாரி பொழிவதும்- எல்லாம் சேர்ந்து ஒரு கோலாகல சூழ்நிலையை உண்டாக்கி விட்டிருந்தன. பகல் நேர கடுமையான உழைப்பிற்குப் பிறகு ஓய்வு எடுப்பதற்கான ஒரு அவசரம்...
தனிமை வயப்பட்டவனாகவும் உணவு எதுவும் சாப்பிடாத மனிதனுமாக நான் அந்த இடத்தில் உட்கார்ந்திருந்தேன். அதற்கு முன்பு நான் எந்தச் சமயத்திலும் உணர்ந்திராத வகையில் இருந்த ஒரு அமைதியான சூழ்நிலையாக அது இருந்தது. சுற்றியிருக்கும் உலகம் வெறும் மாயை என்றும், அத்துடன் எனக்கு எந்தவொரு ஒட்டோ உறவோ இல்லை என்றும் ஒரு தோணல் எனக்கு உண்டானது. என் மனம் மாலை நேரத்தின் மயக்கத்தில் எங்கோ மறைந்து போய்விட்டதைப்போல நான் உணர்ந்தேன். அந்த வகையில் நான் ஒரு வெறுமை கொண்ட மனிதனாக ஆனேன். வெறுமை, வெறுமையில் கலந்தது.
நான் கண்களைத் திறந்தபோது, அவள் எனக்கு முன்னாள் நின்றிருந்தாள்.
‘‘என்ன விஷயமாக வந்திருக்கீங்க?'' நான் மிடுக்கு கலந்த குரலில் கேட்டேன்.
அதே மிடுக்குடன் அவள் பதில் சொன்னாள்: ‘‘பக்கத்து வீடுகளில் இரவில் சாப்பிடாமல் யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்ற கட்டாயத்தை நான் உணர்ந்ததால் வந்தேன்.''
‘‘அதற்கு இங்கே வர வேண்டிய அவசியம் என்ன?''
‘‘இங்கே பட்டினி இருப்பதால்...''
‘‘ஓ! பக்கத்து வீடுகளில் உள்ள பட்டினியை உங்களால் போக்க முடியுமா?''
‘‘இயன்றவரையில் முயற்சிக்கலாமே!''
‘‘முந்தாநாள் மேற்குப் பக்க வீட்டில் இரவு உணவுக்கு வழி இல்லாமல் இருந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?''
‘‘அங்கே இரவு உணவுக்கு வழி இருந்தது என்ற விஷயம் எனக்குத் தெரியும். அது மட்டுமல்ல. நீங்கள் அந்த ஆளுக்குக் கொடுத்த ஒரு ரூபாய் கள்ளுக் கடையைப்போய் அடைந்த விஷயமும் எனக்குத் தெரியும்.''
அதற்குப் பிறகும் அவள் என்னவோ கூறுவதற்கு முயற்சித்து விட்டு, அதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அந்த இருட்டு வேளையில்கூட அவளுடைய அகலமான விழிகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன. அதுவரை நான் அவளிடம் பார்த்திராத ஒரு உணர்ச்சியை- வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சியை நான் அந்தப் பார்வையில் கண்டேன். சற்று சோகத்தின் சாயல் படர்ந்த குரலில் அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘‘சில நாட்களுக்குள்ளேயே நீங்கள் பலமுறை ஏமாற்றப்பட்டு விட்டிருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் ஏமாற்றப்படப் போகிறவர்தான். உங்களுடைய வாழ்க்கையே ஒரு தோல்விதான்.''
என்னை அவள் தெரிந்துகொண்டு விட்டாள். நான் கண்டுபிடிக்கப்பட்டு விட்டேன். நான் எழுந்தேன். ‘‘என் வாழ்க்கை தோல்வியானது அல்ல. என் வாழ்க்கை முழுமையான வெற்றியைப் பெற்றது'' என்றேன்.
அவள் ஏற்றுக் கொண்டதைப்போல மலர்ந்த முகத்துடன் சொன்னாள்: ‘‘அவரும் இப்படித்தான் கூறுவார்.''
நான் கூறுவதைப்போலவேதான் இன்னொரு ஆளும் அவளிடம் கூறியிருக்கிறார் என்று...
அது யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டானது. நான் கேட்டேன்: ‘‘அப்படிச் சொன்னது யார்?''
‘‘உங்களைப்போலவே எப்போதும் எழுதிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்த ஒரு மனிதர்... உங்களைப்போலவே ஏமாற்றக்கூடிய முயற்சிகளில் சிக்கிக்கொள்கிற ஒரு மனிதர்... உங்களைப்போலவே பட்டினியுடன் பழகிப்போன ஒரு மனிதர்...''
‘‘அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?''
‘‘அவரைப் பற்றி இதற்குமேல் கூற முடியாது.'' கொஞ்சம் ஒரு ரூபாய் நோட்டுக்களை எடுத்து என்னை நோக்கி நீட்டிக் கொண்டே அவள் சொன்னாள்: ‘‘இதை வாங்கிக் கொள்ளணும்...''
நான் அழுத்தமான குரலில் சொன்னேன்: ‘‘நான் பிச்சை வாங்குவதில்லை.''
‘‘இது பிச்சை இல்லை. உங்களைப்போல வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு இதயத்தின் பரிசு இது.''
‘‘என் இதயம் வேதனையில் இருக்கிறது என்று யார் சொன்னது? துன்பங்கள் என்னை வேதனையடையச் செய்வதில்லை. அவை என்னை கோபமடைய வைக்கின்றன என்பதுதான் உண்மை.''
‘‘எது வேண்டுமானாலும் இருக்கட்டும். இதை வாங்கிக்கோங்க. நீங்கள் உணவு சாப்பிடணும்.''
‘‘வேண்டாம்... தேவை வருகிறபோது நானே கேட்கிறேன்.''
அவள் சிறிது நேரம் அமைதியான முகத்துடன் நின்று கொண்டிருந்து விட்டு, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு பின்னால் திரும்பி நடந்தாள். அதற்குப் பிறகு அவள் பெரும்பாலும் என்னுடைய ஜன்னலையே பார்த்துக் கொண்டு நின்றிருப்பாள். அந்தப் பார்வையில் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் பரிதாப உணர்ச்சி என்னை சந்தோஷம் கொள்ளச் செய்தது. ஆனால், அவளுடைய பெண்மையை விற்றுக் கிடைக்கக் கூடிய பணத்தை வாங்குவதற்கு எனக்கு மனம் வரவில்லை.
இப்படியே நாட்கள் சில கடந்தன. வெளியே இலக்கிய உலகில் என்னுடைய புகழ் உயர்ந்து... உயர்ந்து போய்க் கொண்டிருந்தது. இங்கு... இந்த குடிசையில் என் உடலை கஷ்டம் என்ற நெருப்பு அரித்து அரித்து தின்று கொண்டிருந்தது. என் மனம் எரிந்து எரிந்து அழிந்து கொண்டிருந்தது.
தெற்குப் பக்க வீட்டிலிருந்த பெண்ணை வெளியேற்றுவதற்கு வீட்டுச் சொந்தக்காரர் வந்து நின்றிருந்தார். அவரும் அவருடைய ஆட்களும் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுடைய பொருட்கள் எல்லாவற்றையும் நெருப்பை வைத்து அழிக்கப் போவதாகவும், அவளைப் பிடித்து வெளியே இழுத்துப் போடப் போவதாகவும் அவர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். அவள் எந்தவொரு பயமும் இல்லாமல் வீட்டின் சொந்தக்காரரிடம் சொன்னாள்: ‘‘நீங்கள் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், நான் இங்கேயிருந்து வெளியேறுவதாக இல்லை. வெயிலும் மழையும் படாமல் படுப்பதற்கு எனக்கும் உரிமை இருக்கிறது. அதற்காக உங்களுக்கு நான் வாடகையும் தந்து கொண்டிருக்கிறேன்.''
வீட்டின் உரிமையாளரும் வேலையாட்களும் வாய்க்கு வந்ததைப் பேச ஆரம்பித்தார்கள். சுற்றிலும் நின்று கொண்டிருந்த- அங்கிருந்த வீடுகளில் வசிப்பவர்கள் கைகளைத் தட்டி சிரித்து அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நான் வாசலில் நின்று கொண்டிருந்தேன்.
வேலியைத் தாண்டி அந்தப் பக்கம் செல்ல வேண்டுமென்றும், வீட்டின் உரிமையாளரின் கன்னத்தில் ஓங்கி அடிக்க வேண்டுமென்றும், அருகிலிருக்கும் வீடுகளில் வசித்துக் கொண்டிருப்பவர்களைக் கற்களால் எறிந்து விரட்டியடிக்க வேண்டுமென்றும் எனக்கு விருப்பம் உண்டானது. என்ன செய்வது? பலமே இல்லாத மனிதனின் புரட்சி நெருப்பு எரிந்து எரிந்து அடங்கிப் போவதுதான் நடக்கக்கூடியது. அவள் என்னையே பார்த்தாள். என்ன ஒரு பயமே இல்லாத தன்மை! கோபம் பொங்கி எழும்போது, ஆணவம் அட்டகாசம் புரியும்போது, அதற்கு நடுவில் பயமே இல்லாமல் நின்று கொண்டிருக்கும் அந்தப் போக்கு!
நான் எதுவுமே பேசாமல் வெளியே சென்றேன். எதற்கு என்றும் எங்கே என்றும் இல்லாமல் நான் தெருக்கள் எல்லாவற்றிலும் அலைந்து திரிந்தேன். இல்லை... சுட்டெரித்துக் கொண்டிருந்த வெயிலில் நான் நகர்ந்து... நகர்ந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியேயும் உள்ளேயும் ஒரே மாதிரி எரிந்து கொண்டிருந்தது. குருதியும் சதையும் எலும்பும் வியர்வையாகி வழிந்து கொண்டிருந்தன. மாலை மயங்கும் வரை நான் அப்படியே நடந்து திரிந்தேன். தலையில் ஒரு பெரிய பாறையை வைத்துக் கொண்டிருப்பதைப்போல ஒரு பாரம். உடலெங்கும் ஒரு வேதனை. எனக்கு படுக்க வேண்டும்போல இருந்தது. நான் என்னுடைய வீட்டை நோக்கி மெதுவாக நடந்தேன். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தது எனக்கு சிரமப்பட்டு ஞாபகத்தில் இருந்தது.
நான் கண்களைத் திறந்தேன். தரையில் அப்படியே படுத்திருந்தேன். கதவிற்கு வெளியே யாரோ என்னை அழைத்தார்கள். சிரமப்பட்டு முகத்தைத் திருப்பிப் பார்த்தேன். கிழக்குப் பக்க வீட்டிலிருக்கும் கிழவிதான் அது. பரிதாபப்பட்ட குரலில் அவள் சொன்னாள்: ‘‘அய்யோ குழந்தை, நீ தரையிலா படுத்திருக்கே? ஒரு பாயாவது வாங்கணும்.''
அவள் மெதுவாக உள்ளே நுழைந்து பெஞ்சில் வெற்றிலை வைத்திருக்கக் கூடிய இடத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே கேட்டாள்: ‘‘குழந்தை, உன் வெற்றிலைகள் தீர்ந்திடுச்சா?''
நான் சிரமப்பட்டு மெதுவாக முனகினேன்.
‘‘என் குட்டனுக்கு சம்பளம் கிடைக்கவில்லை, குழந்தை. இன்னும் இரண்டு மூணு நாட்கள் கடந்த பிறகுதான் கிடைக்குமாம். இன்னும் இரண்டு ரூபாய் தந்தால் உதவியா இருக்கும். ஒண்ணா சேர்த்து உனக்கு கொடுத்துடுறேன்.''
நான் எதுவும் பேசவில்லை. எதையும் பேசுவதற்கு எனக்கு சக்தி இல்லாமலிருந்தது. அவள் மெதுவாக எனக்கு அருகில் வந்து முகத்தையே பார்த்தாள்: ‘‘அய்யோ!'' அவள் பின்னோக்கி ஒரு ஓட்டம் ஓடினாள்.
‘‘முகம் முழுவதும் எழுந்து நிற்கிற கோபத்தைப் பார்க்கலையா? என் மண்டைக்காட்டு அம்மா!'' அவள் கதவை அடைத்து விட்டிருந்தாள். ‘‘முழுமையா மூடிக் கொண்டு படு, குழந்தை...'' அவள் வாசலில் நின்று கொண்டு உரத்த குரலில் சொன்னாள்.
அந்தக் கிழவியின் குரல் அதற்குப் பிறகும் படிகளுக்கு அருகில் கேட்டது: ‘‘அங்கே யாரும் போகாதீங்க. அங்கு அம்மை... அம்மை வந்திருக்கு.''
என் உடல் முழுவதையும் நான் ஒருமுறை தடவிப் பார்த்தேன். கொப்புளம்! கொப்புளம்! உடம்பெங்கும் கொப்புளங்கள் எழுந்து காட்சியளித்தன. கடுமையான காய்ச்சலும். அந்தத் தரையிலிருந்து எழுந்திருக்க வேண்டும்போல எனக்கு இருந்தது. தாள்களை விரித்துப் போட்டுப் படுக்க வேண்டும். நன்கு போர்த்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிறிது நீர் அருந்த வேண்டும். பேசுவதற்கு நாக்கு வரவில்லை. நாக்கு அசைந்தால்கூட யாரிடம் கூறுவது? கிழவி எல்லாருக்கும் இங்கு அம்மை கண்டிருக்கிறது என்பதை விளம்பரம் பண்ணி பரப்பிவிட்டாள்.
இப்படி பாதி சுய உணர்வுடன் நான் படுத்திருந்தேன். யாரோ என்னைக் கையைப் பிடித்து எழச் செய்தார்கள். மீண்டும் நான் படுத்தேன். அப்படிப் படுத்திருப்பது எனக்கு சுகமாக இருப்பதைப்போல தோன்றியது. என் வறண்டு போயிருந்த உதடுகளில் நீர் பட்டதைப்போல இருந்தது. நான் கண்களைத் திறந்தேன். அவள் எனக்கு அருகில் உட்கார்ந்து நீர் தந்து கொண்டிருந்தாள். நல்ல பாயில் விரிப்புகளை விரித்து என்னைப் படுக்கச் செய்திருந்தாள். அதே நிலையில் நான் சுகமாகப் படுத்திருந்தேன்.
இடையில் அவ்வப்போது எனக்கு சுய உணர்வு உண்டாகும். அவள் பல முறை அங்கிருந்து போவதும் திரும்பி வருவதுமாக இருந்தாள். சாயங்காலம் ஆனவுடன் அவள் ஒரு குத்து விளக்கை எரியச் செய்து கொண்டு வந்து வைத்தாள். நறுமணம் கொண்ட ஒரு புகையை எழச் செய்தாள். ஏதோ ஒரு மருந்தையும் என் வாய்க்குள் ஊற்றினாள். பிறகு... குத்து விளக்கிற்கு முன்னால் அவள் தியானத்தில் இருப்பதைப் போல அமர்ந்தாள்.
யாரோ வாசல் பக்கம் வந்தார்கள். அவள் வாசலுக்குச் சென்றாள். அவர்களுக்கிடையே சிறிது நேரம் என்னவோ உரையாடல் நடப்பது காதில் விழுந்தது. என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
‘‘அது என்னுடைய கடமை. நீங்க போயிடுங்க.'' இவ்வாறு மிடுக்குடன் கூறிவிட்டு, அவள் திரும்பி வந்தாள்.
இரவில் எனக்கு அவ்வப்போது சுய உணர்வு வந்தது. அப்போதெல்லாம் அவள் எனக்கு அருகில்தான் இருந்தாள். அவள் என்னிடம் எதுவும் பேசவில்லை. அவளிடம் எதையாவது பேசுவதற்கு எனக்கு சக்தி இல்லாமலிருந்தது.
நாட்கள் சில அந்த வகையில் கடந்தன. தினந்தோறும் அதிகரித்துக் கொண்டிருந்த நோயின் நிலை குணமாகும் கட்டத்தை அடைந்திருந்தது. கடுமையான வேதனைக்கு மத்தியில், ‘‘இப்படி தனி ஒருத்தியாக எனக்கு அருகில் உட்கார வேண்டாம்'' என்று நான் அவளிடம் சொன்னேன். அதற்கு பதிலாக அவள் சிரிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது.
இருபத்தொன்றாவது நாளன்று என்னைக் குளிப்பாட்டப் போவதாக அவள் என்னிடம் சொன்னாள். குளித்து முடித்து வேப்பம் பொடியைப் பூசிக் கொண்டு நான் நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். அவள் எனக்கு அருகில் பெஞ்சில் வந்து உட்கார்ந்தாள். என்னவோ கூற நினைப்பதைப்போல அவள் என்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் எதுவும் கூறவில்லை.
அதே நிலையை நான் பல நேரங்களிலும் பார்த்திருக்கிறேன்- கூற நினைப்பதையும் கூறாமல் இருப்பதையும். நான் சொன்னேன்: ‘‘நீங்க என்னிடம் என்னவோ சொல்ல நினைக்கிறீங்க. சொல்லுங்க.''
அதற்குப் பிறகும் அவள் மவுனமாகவே இருந்தாள். நான் தொடர்ந்து சொன்னேன்: ‘‘நீங்கள் முதலில் தருவதாகச் சொன்ன உதவியை நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்று இப்போ நீங்க எனக்கு என்னோட உயிரைக் கொடுத்திருக்கீங்க.''
அவள் மிடுக்கான குரலில் சொன்னாள்: ‘‘நன்றி சொல்றதுதான் உங்களோட எண்ணம் என்றால், அதை நான் விரும்பவில்லை. சேவை செய்வது என்பது நான் சந்தோஷப்படக் கூடிய ஒரு விஷயம். அந்த காரணத்திற்காகத்தான் நான் அதைச் செய்தேன். ஆனால், ஒரு விஷயத்தைச் சொல்லணும்.
என்னைப்போல இருக்கும் பலரையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களை மற்றவர்கள் பார்ப்பதைப் போலத்தான் நீங்களும் வெறுப்புடன் பார்த்திருப்பீர்கள். எனினும், அவர்களுக்குள்ளும் மனிதத் தன்மை இருக்கத்தான் செய்கிறது. அவர்களிடமும் இதயம் இருக்கிறது.'' அவள் ஒரு துறவியைப்போல ஜன்னலின் வழியாக தூரத்தில் பார்த்தாள். அவமானத்திற்கு அடியில் கிடந்து கொண்டு மூச்சுவிட முடியாமல் இருக்கும் மனிதத்தன்மை தரும் செய்தியைக் கேட்பதற்காக நான் அக்கறையுடன் காத்திருந்தேன். ஆனால், ஆமை தன்னுடைய தலையையும் கால்களையும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்வதைப்போல அவள் தன்னுடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு, என்னை நோக்கித் திரும்பினாள். ‘‘இரண்டு மூன்று நாட்களுக்குள் நான் இந்த ஊரை விட்டுப் போய் விடுவேன். வீட்டுச் சொந்தக்காரரிடம் தினமும் இப்படிப் போராடுவது முடியாத காரியம்.''
‘‘அப்படின்னா...?'' நான் பாதியில் நிறுத்தி விட்டு அர்த்தத்துடன் அவளைப் பார்த்தேன்.
சோகம் கலந்த ஒரு புன்னகையுடன் அவள் சொன்னாள்: ‘‘நானும்கூட இங்கே இருக்கலாம் என்று... அப்படித்தானே?''
‘‘ஆமாம்...''
‘‘அதற்குப் பிறகு என்னுடைய அவமானத்தை உங்களுக்கும் பிரிச்சுத் தரணும். நீங்களும் நானும் இங்கேயிருந்து ஒண்ணாச் சேர்ந்து வெளியே போகணும். அப்படித்தானே? நான் உங்களுக்கு ஒரு சுமையாக ஆகணும். இல்லையா? வேண்டாம்... வேண்டாம்... நான் யாருக்கும் ஒரு சுமையாக இருக்கக் கூடாது. எனக்கு உண்டாகக் கூடிய அவமானத்தை நானே சுமந்து கொள்கிறேன்.'' அவள் சிந்தனையில் மூழ்கினாள்.
கடந்து சென்ற ஏதோ சம்பவங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு வந்ததைப் போல அவள் சொன்னாள்: ‘‘கஷ்டம்! அந்த காரணத்தால்தான் அவர் என்னை விட்டு நீங்கியே போனார்.''
என் ஆர்வம் மீண்டும் மேலே எழுந்தது. ‘‘அவரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள நான் விருப்பமாக இருக்கிறேன்.''
‘‘நான் என்ன சொல்வது? இதயத்தைப் பிழியக் கூடிய சம்பவங்களைக் கூறியோ எழுதியோ வெளிப்படுத்துவது என்பது இயலாத ஒன்று என்று அவர் கூறுவதுண்டு. உணர்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளுக்கு இடமில்லை.''
‘‘ஆமாம்... ஆமாம்...'' நான் தலையை ஆட்டி ஒத்துக் கொண்டேன்.
‘‘எனினும், ஒரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும். சமுதாயத்தின் உரத்த கூச்சல்களைப் பொருட்படுத்தாமல் அவமானத்தின் ஆழத்தைக் கூர்ந்து பார்த்து மனிதத் தன்மையைக் கண்டு பிடிப்பதற்கு தைரியத்தைக் கொண்ட ஒரே ஒரு மனிதருடன் மட்டுமே என்னால் அறிமுகமாகிக் கொள்ள முடிந்தது. அது அவர்தான்.'' சிறிது நேர அமைதிக்குப் பிறகு அவள் சொன்னாள்: ‘‘விலை மாது- அப்படிப்பட்ட தலைப்பில் ஒரு கவிதையை எழுதிவிட்டு அவர் காணாமல் போய்விட்டார். அதற்குப் பிறகு நான் அவரைப் பார்க்கவில்லை. எதுவும் கேள்விப்படவும் இல்லை.'' தெற்குப் பக்கம் இருந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே அவள் சொன்னாள்: ‘‘ஆமாம்... வீட்டின் உரிமையாளர் அங்கே வந்து நின்று கொண்டிருக்கிறார். நான் அங்கே போகட்டுமா?''
ஒரு மணி நேரம் ஆன பிறகு, அவள் திரும்பி வந்து சொன்னாள்: ‘‘என்னை வீட்டை விட்டு வெளியேற்ற அவர் ஒரு புதிய வழியைக் கண்டு பிடித்திருக்கிறார். வீட்டின் ஓலைகள் அனைத்தையும் அகற்றிவிட்டுப் போயிருக்கிறார். நான் அங்கு வசித்தால், பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் புனிதத்தன்மை கெட்டுப் போய் விடுமாம். வேண்டாம்... இனிமேல் நான் அங்கு வசிக்க வேண்டாம். பாறையில் தலை மோதினால், பாறை அல்ல... தலைதான் உடையும். நான் நாளைக்கே போகப் போகிறேன்.''
‘‘எங்கே?''
‘‘எனக்கு எல்லா இடமும் ஒரே மாதிரிதான். எங்கே போனால் என்ன?''
பிறகு நான் எதுவும் கேட்கவில்லை. அன்றும் அவள் அங்கேயேதான் தங்கினாள். மறுநாள் பொழுது புலர்வதற்கு முன்னால், அவள் தெற்குப் பக்க வீட்டை நோக்கிச் சென்றாள். சிறிது நேரம் கடந்தவுடன், பயணதிற்கான ஏற்பாடுகளுடன் அவள் என்னைத் தேடி வந்தாள்.
‘‘நான் புறப்படுகிறேன்.'' அப்போது மட்டும்தான் அவளுடைய தொண்டை இடறியது.
‘‘இனிமேல் நாம பார்ப்போமா?'' என் தொண்டையும் இடறியது.
‘‘பார்ப்போம். நீங்க கற்பனை பண்ணக்கூடியவர்தானே? நானும் அப்படிக் கண்டுகொள்வேன்.'' சிறிது நேரம் சிந்தனை செய்தவாறு நின்றுவிட்டு அவள் கேட்டாள்: ‘‘நீங்களும் அவரைப்போல கவிதை எழுதுவீர்கள், இல்லையா?''
‘‘இல்லை... நான் ஒரு கதாசிரியர்.''
‘‘நடக்காத கதையா, நடக்கும் கதைகளையா? இவற்றில் எதை எழுதுவீங்க?''
‘‘நடந்ததையும் நடப்பதையும் நடக்கப் போவதையும் எழுதுவேன்.''
‘‘அப்படின்னா... என்னைப் பற்றியும் எழுதுவீங்களா?'' அவள் புன்னகைத்தாள்.
‘‘எப்படி எழுதணும்?'' நானும் புன்னகைத்தேன்.
‘‘உங்களுக்குத் தோணுவதைப் போல...''
‘‘ம்...''
ஒரு தாள் பொட்டலத்தை பெஞ்சின் ஓரத்தில் வைத்து விட்டு, அவள் வெளியேறி நடந்தாள். நான் ஜன்னலின் வழியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். படிகளைக் கடந்துவிட்டு, அவள் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய முகத்தில் விரக்தியின் சிறு அடையாளம்கூட தெரியவில்லை. இந்த உலகம் அவளுக்கு மிகவும் சாதாரணமானது.
பக்கத்து வீடுகளில் இருப்பவர்களின் ஏளனம் கலந்த பார்வைகளால் ஆசீர்வதிக்கப்பட்டு அவள் நடந்து செல்கிறாள். அந்த கூர்மையான பார்வைகள் எதுவும் அவளுடைய மனதைத் தொடவே இல்லை. என் பார்வையிலிருந்து மறையத் தொடங்கியபோது, அவள் மேலும் ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். என்ன ஒரு கூச்சமின்மை.
இதை எழுதும்போது கற்பனையில் நான் அவளைப் பார்க்கிறேன். அவளுடைய உடலை அல்ல- அவளுடைய மனதை!
இப்போது அவள் எங்கே இருப்பாள்? இந்தக் கதையை அவள் பார்ப்பாளோ என்னவோ?