Logo

சலாம் அமெரிக்கா!

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7845
salam america

மெரிக்காவில் நான் இருந்த காலம் வரையிலும் நான் நல்ல மகிழ்ச்சியுடனே இருந்தேன். கைப்பிடியோடு கூடிய ஒரு பெரிய குப்பியில்தான் இங்கு ஜானிவாக்கர் கிடைக்கிறது. ராயல் சல்யூட் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும். அது விற்றால் கொள்ளை லாபம்தான். மரவள்ளிக்கிழங்கு என்றால் மரவள்ளிக்கிழங்குதான். நல்ல தரமான மரவள்ளிக்கிழங்கை அதிகம் தீயில் கருகி விடாமல் ப்ளாஸ்டிக் பைகளில் போட்டு அங்கு விற்பனை செய்கிறார்கள். ரொட்டிக் கப்பையால் கூட அதன் பக்கத்தில் வந்து நிற்க முடியாது.

மாமிச விஷயம்கூட இப்படித்தான்.என்ன மாமிசம் நமக்கு வேண்டும் என்பதுதான் முக்கியம். கொஞ்ஞிமீனுக்கும் செம்மீனுக்கும் விலை சற்று அதிகம்தான். இவை அல்லாத மற்ற மீன்களுக்கும்கூட கிராக்கி இருக்கத்தான் செய்கிறது. நான் காலையில் தூக்கம் கலைந்த பிறகும்கூட சில நிமிடங்கள் கட்டிலிலேயே படுத்துக் கிடப்பேன். உண்மையிலேயே நான் எங்கிருக்கிறேன் என்று அந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்பேன். எனக்கு படுக்கையை விட்டு எழுந்திருக்கவே தோன்றாது.

அய்யோ... மச்சநாட்டு ஆற்றங்கரையில் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் அந்த ஜோஸியா இது? படகுத் துறையில் சாதாரணமாகக் கேட்கும் சத்தங்கள் எதுவும் கேட்கவில்லையே! நான் காதுகளைத் தீட்டிக்கொண்டு மீண்டும் கவனிப்பேன். ஆற்றின் அக்கரையில் இருந்து வெட்டுக்காரன் பாக்கிரி கூவும் சத்தம் எதுவும் காதில் விழவில்லையே! பெரிய பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்கு அடிக்கப்படும் மணியோசைகூட கேட்கவில்லை! பாத்திரம் தேய்க்க வரும் ரோஸிலி பாட்டுப் பாடும் சத்தம்கூட காதில் ரீங்காரமிடவில்லையே! அம்மா கிணற்றில் நீர் இறைக்கும் சத்தம் கூட கேட்கவில்லையே! காரணம்- நான் இருப்பது அமெரிக்காவில். அதாவது- நியூயார்க்கில், ஒரு மிகப்பெரிய கட்டடத்தின் உச்சியில், என்னைப் படைத்த கடவுளே! நான் இங்கே இருந்து கொண்டு என்ன செய்வது? இங்கே ஒரு ஓசையும் இல்லை... ஃப்ரிட்ஜின் சிறு சத்தம் காதில் விழுகிறது. ஏர்கண்டிஷன் மெஷினில் காற்று வரும் ஒரு சிறு ஓசை. பெரிய படுக்கையறையில் இருக்கும் டெலிவிஷனில் இருந்து வரும் சத்தம் வேறு... டி.வி.யை யாரும் இன்னும் நிறுத்தவில்லையா என்ன? நான்தான் நிறுத்தாமல் விட்டிருக்கிறேன். நேற்று கால்பந்து விளையாட்டை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்த நான் அப்படியே உறங்கிவிட்டேன். பிறகு... எழுந்து குழந்தையின் படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் கட்டிலில் வந்து படுத்தேன். கால்பந்து விளையாட்டை நான் பார்க்கவில்லை என்றால், யாராவது கேட்பார்கள்-பார்த்தாயா என்று. அதற்காகவே நான் அதைப் பார்த்தேன். ஆனால், அந்த விளையாட்டே எனக்கு சரியாகப் புரியவில்லை. மம்மூட்டி, நெடுமுடிவேணு, மோகன்லால் ஆகியோரின் முகங்கள் கொஞ்ச நேரமாவது தோன்றி மறையாதா என்று அப்போது நினைப்பேன். இப்படியே என்னென்னவோ நினைத்தவாறு கட்டிலில் இருக்கும் நான் மெதுவாக எழுந்து காப்பி போடுவேன். அதைக் கொஞ்சம் பருகியவாறு, கழிவறைக்குள் நுழைவேன். பல் துலக்கிவிட்டு நான் வரும்போது, சில நேரங்களில் குழந்தை தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்.அவனைத் தூக்கியெடுத்து, நாப்கினை மாற்றித் துடைத்து, சீரியலை பாலில் கலந்து குழைத்துக் கொடுப்பேன். அதற்குப்பிறகு அவனை ப்ளே பென்னில் கொண்டு போய் விடுவேன். அவனை அங்கே விட்டு விட்டு, ஃப்ரிட்ஜைத் தேடி வருவேன். கொஞ்சம் மரவள்ளிக் கிழங்கை நன்றாக வேகவைத்து, வெங்காயமும், மிளகாயும், தேங்காய் எண்ணெய்யும், கருவேப்பிலையும் கலந்து கொஞ்ச நேரம் இப்படியும் அப்படியுமாய் நடப்பேன். இரண்டு முட்டைகளைப் பொரிப்பேன். ஃப்ரிட்ஜில் இருந்த மாமிசத்தை எடுத்து சூடு படுத்துவேன். வறுத்த மீன் ஏதாவது மீதி இருந்தால் அதோடு சிறிது ரொட்டியையும் எடுப்பேன். எல்லாவற்றையும் மேஜைமேல் வைத்துவிட்டு, ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய ஒரு டபுள் ஜானிவாக்கரை ஊற்றிக் குடிப்பேன். காலை நேரத்தில் பொதுவாக சோடா கலக்காமல் மது அருந்துவதுதான் எனக்குப் பிடிக்கும். வாய்க்குள் ஜானிவாக்கர் சென்றதும் அப்படியொரு சுகம்... உடலில் அப்படியொரு கிறக்கம்... இரண்டு பெக் உள்ளே சென்றதும் மனமே குளிர்ந்து போனதுபோல் இருந்தது. வெறும் வயிற்றுக்குள் அவன் போகும் போக்கு இருக்கிறதே, அடடா...! நம்மிடம் அப்படிப்பட்ட ஒரு விஸ்கி இருக்கிறதா? எது எப்படியோ... வெள்ளைக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான். மது அருந்திவிட்டு நான் குளிக்கப் போவேன். அப்போது டெஸ்ஸி வருவது என் காதில் விழும். அவள் வெளியே இருந்தவாறு கதவைத் திறக்கும் சத்தம் எனக்குக் கேட்கும். குழந்தை அவளை அழைப்பதுகூட என் காதுகளில் விழும். டெஸ்ஸி குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுத்தவாறு படுக்கையறைக்குள் நுழையும் சத்தம் கேட்கும். குழந்தை அழும் குரலைக் கேட்கும்போது, எனக்கு என்னவோபோல் இருக்கும்.நான் வேகவேகமாகக் குளித்து முடித்து, டவலால் உடம்பைத் துடைத்துவிட்டு, அதை இடுப்பில் கட்டியவாறு வெளியே வருவேன். அப்போது டெஸ்ஸி உடம்பில் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு, வெறும் ஜட்டி மாத்திரம் அணிந்து நின்றிருப்பாள். முகத்தில் ஏதோ ஒரு க்ரீமை அவள் கைகள் அப்போது தடவிக்கொண்டிருக்கும். குழந்தையைத் தூக்குவதற்கு முன்பு சில நேரங்களில் கொஞ்சமும் எதிர்பாராமல் அவளை இறுகக் கட்டிப்பிடிப்பேன். அவள் அப்போது என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் ஏதாவது கூறுவாள். "யூ லுக் நைஸ்" என்றோ, வேறு ஏதாவதோ கூறுவாள்.தொடர்ந்து என் முகத்தில் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, அடுத்த நிமிடமே போர்வைக்குள் போய் தன்னை அடக்கிக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிடுவாள். இதில் என்ன பெரிய சிக்கல் தெரியுமா?

அவள் கிட்டத்தட்ட மலையாளத்தை மறந்தே போய்விட்டாள். மருத்துவமனையில் அவளுடன் பணியாற்றும் இன்னும் சில மலையாள நர்சுகள் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் மலையாளம் பேசினால் நன்றாகவா இருக்கும்? அதன் விளைவு- வீட்டுக்கு வந்தால்கூட அவள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவாள். நான் குழந்தையைத் தூக்கி, அவன் அழுகையை நிறுத்தும்வரை அவனுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருப்பேன். அவன் தன் தாயைப் பார்க்க வேண்டுமென்று சொல்லும்போது, அவனை எடுத்துக்கொண்டு படுக்கையறையைத் தேடிப் போவேன். அங்கே ஒரு துணிமூட்டையைப்போல டெஸ்ஸி தன்னையே மறந்து தூங்கிக் கொண்டிருப்பாள். அவளை குழந்தை தொட்டுப் பார்ப்பான். மீண்டும் அவனை ப்ளே பென்னில் விட்டுவிட்டு, சோடாவைக் கலந்து ராயல் சல்யூட்டைக் கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக் குடிப்பேன். பிறகு... மெதுவாக மொட்டை மாடியில் போய் நிற்பேன். அடேயப்பா...! பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்கா! ஆனைமுடியின் உச்சியில் நின்று பார்ப்பதைப்போல நான் பார்ப்பேன். என் காலுக்குக் கீழே நியூயார்க் நகரம்! நியூயார்க் நகரம்! "டேய் ஜோஸி... இப்ப நீ பார்க்குறே இல்ல...


இதுதான் நியூயார்க்! நீ அதோட தலையில் இப்போ நின்னுக்கிட்டு இருக்கே- பத்திரிகைகள்ல பல வருடங்களா படிச்சிக்கிட்டு இருக்குற, வெள்ளைக்காரங்க வசிக்கிற நியூயார்க்!" எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன். இதைச் சொல்லி முடிக்கிறபோது, கால் முதல் தலை வரை "ஜிவ்" என்று எனக்கு ஏறும். ராயலை இன்னொரு மடக்கு விழுங்கியவாறு, கீழே தெரிகிற சாலைகளையும் கார்களையும் மக்கள் கூட்டத்தையும் சிறிதுநேரம் பார்த்தவாறு நின்றிருப்பேன். கீழே இருந்து வருகிற ஓசைகள் என் காதில் விழும். இதோ தெரிகிறது லாங்ஐலண்ட். டெஸ்ஸியின் சொந்தக்காரரான மாத்தச்சனும், அவரின் மனைவியும் அங்கு இருக்கிறார்கள். ப்ராங்க்ஸ் எங்கே இருக்கிறது? என் நண்பன் கொச்சப்பனும், அவன் தம்பியும் அங்குதான் இருக்கிறார்கள். நான் பீட்ரெயினில் ஏறி எவ்வளவோ நாட்களாகிவிட்டன! ப்ராங்க்ஸிஸ் சீட்டு விளையாடப்போன நாட்கள்கூட மறந்துபோய்விட்டன! மவுண்ட் வெர்ணோனில் இப்போது கோபியும் குட்டப்பனும், இருக்கிறார்களா தெரியவில்லை. போன வருடம் அவர்களுடன் மேரிலேண்டிற்கு மான்வேட்டைக்குப் போனேன். குட்டப்பன் துப்பாக்கியால்சுட, அது காட்டுக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெல்ட் கட்டிய பசு மேல் போய் பாய்ந்தது. அவன் அதிகமாக மது அருந்தி, கண் மண் தெரியாமல் நின்று கொண்டிருக்கிறான். நாங்கள் இரவோடு இரவாக அந்த இடத்தைவிட்டு அகன்றோம். இரண்டு நாட்கள் நாங்கள் அவன் வீட்டைவிட்டு வெளியே முகத்தைக்கூடக் காட்டவில்லை. வெள்ளைக்காரர்கள் கையில் நாங்கள் சிக்கினால் என்ன ஆவது?

அதோ தெரிகிறது பெரிய பாலத்தைக் கடந்து நியூஜெர்ஸிக்கும், பிறகு ஃபிலடெல்ஃபியாவுக்கும், வாஷிங்டனுக்கும் போகிற சாலை. இந்த சாலைகளையெல்லாம் பார்க்கிறபோது என் மனதில் என்ன தோன்றுகிறது தெரியுமா? இவ்வளவு சாலைகளும் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கின்றன. நான் இந்தக் கட்டடத்தின் மேற்பகுதியில் ஒரு காரியமும் செய்யாமல், வெறுமனே குழந்தையைப் பார்த்துக்கொண்டு சோம்பேறித்தனமாக இருக்கிறேன். கென்னடி விமான நிலையத்திற்கு யாரையாவது வழியனுப்பப் போகும்போதுகூட, என் மனதில் இனம்புரியாத ஒருவித கவலை உண்டாகும். அவர்கள் இப்போது ஆகாயத்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சியுடன் கொச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த நடுங்க வைக்கும் குளிரில் நின்று கொண்டிருக்கிறேன். இந்தக் குளிரில் நின்றுகொண்டிருந்து என்ன பிரயோஜனம்? "கிடுகிடு"வென்று நடுங்கிக்கொண்டு, வெள்ளைக்காரர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டுக்கொண்டு, லிஃப்ட்டில் ஏறியும் இறங்கியும் ஏறியும் இறங்கியும், சாமான்கள் வாங்கப்போவதும் வருவதுமாய் இருந்து கொண்டு, துணி துவைப்பதையும், பாத்திரம் தேய்ப்பதையும் காதில் கேட்டுக் கொண்டு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு... இப்படி ஒரு வாழ்க்கை! விளையாடவும், சிரிக்கவும் முடியவில்லை என்றால் இது என்ன வாழ்க்கை? சொர்க்கத்திற்குப் போகிறபோது, நாம் என்ன சம்பாதித்த பணத்தையா கொண்டு போகிறோம்! நான் வேகமாக உள்ளேபோய் முதல்நாள் பயன்படுத்திய பாத்திரங்களை எடுத்து வாஷ்பேசினில் போடுவேன். சனிக்கிழமையாக இருந்தால், துணி துவைக்கும் இயந்திரத்தை "ஆன்" செய்வேன். ஒவ்வொரு துணியையும் எடுத்துப் போட்டு, தனித்தனியாகப் பிரிப்பேன். டெஸ்ஸியின் துணியை எடுக்கிறபோது, அதனுடன் மருத்துவமனை வாசனை "குப்"பென்று வரும். அவளுடைய உடல் முழுக்க அந்த வாசனை கலந்திருந்தது என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஃப்ரீஸரில் இருந்து இரண்டு கேன் பீரை எடுப்பேன். இரண்டு கேனிலிருந்த பீரையும் ஒரு பெரிய மக்கில் ஊற்றி வாஷிங் இயந்திரத்துக்கு அருகில் போய் உட்காருவேன்.  என்னதான் சொல்லுங்கள்- இப்படி ஒரு சுவையான பீர் உலகத்தில் வேறு எங்கு கிடைக்கும்? சொல்லப்போனால், விலைகூட அவ்வளவு அதிகம் இல்லை. இதைக் குடிக்கும்போது உடலுக்குத்தான் எத்தனை குளிர்ச்சி! ராயல் உள்ளே போய் முடிந்து, அதைத் தொடர்ந்து பீரும் உள்ளே போகும்போது உண்டாகும் ஆனந்தம் இருக்கிறதே... அடடா...! அப்போது குழந்தை நன்றாக உறங்கிக்கொண்டிருப்பான். நான் போய் கொஞ்சம் அரிசியை எடுத்துக் கழுவி அடுப்பில் வேக வைப்பேன். என் அருமைப்பெண்ணே... ஃப்ரிட்ஜில் எல்லாம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக பழைய சாதத்தை மட்டும் என்னைச் சாப்பிடச் சொல்லாதே. எனக்கு எப்போதும் சாதம் மட்டும் சூடாக இருக்க வேண்டும். சோறு வெந்து கொண்டிருக்கும்போதே, நான் மோர் தயார் பண்ணி, பருப்பு சாம்பார் வைத்து, அப்பளம் பொரித்து, பாவைக்காய் வறுவல் செய்து, ஃப்ரிட்ஜில் இருந்த மாமிசத்தையும், மீனையும் எடுத்து சூடு பண்ணி... இத்தனை வேலைகளையும் மளமளவென்று முடித்துவிடுவேன். இதற்கிடையில் இரண்டு பீரை உள்ளே போகவிட்டு, அதன் குளிர்ச்சியில் என்னையே மறந்து ஆனந்தம் அனுபவித்துக் கொண்டிருப்பேன். பிறகு... டெஸ்ஸியை எழுப்பி, சோறு உண்ண அழைப்பேன். அவள் ஜட்டியை அணிந்து எழுந்து வருவதை இங்கிருந்தே பார்த்துக்கொண்டிருப்பேன்.

அவள் முகம் கழுவி, தலைமுடியை வாரி, பேன்ட்டை மேலே இழுத்துப்போடுவதையும் இங்கிருந்தே நான் பார்ப்பேன். நடக்கட்டும்... நடக்கட்டும்... நான் சில நேரங்களில் அவளை பேன்ட் அணிவதற்கு முன்பு, அருகில் சென்று கட்டிப்பிடிப்பேன். அப்போது அவள் சொல்வாள்: "ஜோஸி... நம்ம ரெண்டு பேருக்குமிடையே ஏடாகூடமா ஏதாவது நடந்து, பிரசவ விடுப்பு எடுக்கிறேன்னு ஓவர்டைம் வேலை செய்யிற காசும் வராமப் போனா, கான்டோமினியத்தில் வீட்டுக்கு வாங்கின கடனை யார் அடைப்பது? ஜோஸி... நீங்க குடிச்சிருக்கீங்கள்ல...?'' அதற்கு நான் சொல்வேன்: "நீதான் மாத்திரை சாப்பிட்டு சரி பண்ணிடலாமே! அப்படியே நடந்தாலும் ஒண்ணும் வராத அளவுக்கு நான் பாத்துக்குறேன்.'' ஆனால் நான் சொல்வதை அவள் காதிலேயே வாங்கிக்கொள்ள மாட்டாள். தேவையில்லாமல் வாயில் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். "வேண்டாம்னா போ... எனக்கும் வேற வேலை இருக்கு. இந்த விஷயத்துக்காக ஒரு ஆண் தேவையில்லாம கெஞ்சிக்கிட்டு இருக்க முடியுமா?'' என்பேன் நான். அடுத்த நிமிஷம்- டெஸ்ஸி வந்து உட்கார்ந்து சாப்பிடுவாள். குழந்தைக்கு ஊட்டுவாள். குழந்தையுடன் போய் டி.வி.க்கு முன்னால் இருக்கிற பெரிய ஸோஃபாவில் உட்கார்ந்து டி.வி.பார்க்க ஆரம்பித்துவிடுவாள். நான் சிறிது நேரம் அவளுக்கு அருகிலேயே நின்றிருப்பேன். ஸோஃபாவில் உட்கார்ந்து மருத்துவமனையில் ஏதாவது விசேஷங்கள் உண்டா என்று கேட்பேன். சாப்பிட்டு முடித்து ஒரு பிராந்தியை உள்ளே தள்ளினால் நல்லது என்று நினைத்த நான், நெப்போலியன் வி.எஸ்.ஓ.பியை எடுத்து ஒரு லார்ஜ் ஊற்றிக் குடிப்பேன். இரவு நேரத்தில் பிராந்தி குடிப்பதுதான் நல்லது என்பாள் டெஸ்ஸி. ஓ... இரவிலும் பகலிலும் இருப்பது ஒரே ஆள்தானே! இவை எல்லாம் உள்ளே நுழைவது ஒரே வயிற்றுக்குள்தானே! எனக்கு நெப்போலியன் என்றால் அப்படி ஒரு பிரியம்.


அதன் அருமையான சுவையும், மணமும்... அடடா! நான் அதை வாயில் விட்டு, சில நொடிகள் அப்படியே வைத்திருப்பேன். அதன் மணத்தை மூக்கிற்குள்விட்டு, உலகையை மறந்திருப்பேன். அப்போது... டெஸ்ஸிக்கு உறக்கம் வர ஆரம்பிக்கும். குழந்தை ஏற்கெனவே உறங்கத்தொடங்கி இருப்பான். அடுத்த வேலை எனக்குத்தான். நான் குழந்தையை எடுத்துக்கொண்டுபோய் அவன் படுக்கும் இடத்தில் அவனைப் படுக்க வைத்துவிட்டு, டெஸ்ஸியிடம் வந்து அவளைப் போர்வையால் மூடுவேன். அவளின் அருகில் நின்றவாறே மெதுவாகச் சொல்வேன்: "டெஸ்ஸி... காரோட சாவியைக் கொஞ்சம் தா. நான் ஒரு சுத்துசுத்திட்டு வர்றேன்.'' அப்போது அவள் என்னை பாதி உறங்கிக் கொண்டிருக்கின்ற கண்களுடன் பார்ப்பாள். என்னை மட்டும் தனியே வெளியே அனுப்புவதில் அவளுக்கு எப்போதுமே விருப்பம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை நம்பி காரைத் தர அவள் தயாராக இல்லை என்பதே உண்மை. எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், பாவம் அவள் என்ன செய்வாள்? குழந்தையை யார் பார்ப்பது? என்னைவிட்டால் வீட்டில் ஆண் என்று கூற வேறு யாரும் இல்லையே! என்னை ஒரு குற்றவாளியைப் பார்ப்பது மாதிரி மேலும் கீழும் பார்த்தவாறே அடுத்தநிமிடம் கார் சாவியை எடுத்து என் கையில் தருவாள். நாள் அதைக் கையில் வாங்கிக் கொண்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு சிறு பீர்கேனை எடுத்துத் திறந்து வாய்க்குள் ஊற்றியவாறு கதவை அடைத்துவிட்டு வெளியேறுவேன். டெஸ்ஸியும் குழந்தையும் தூக்கம் கலைந்து எழுவதற்கு இன்னும் மூன்று மணி நேரங்கள் இருக்கின்றன. ஹா... ஹா... மூன்று மணி நேரங்கள்! நான் லிஃப்டில் ஏறாமல், மெதுவாக படியைவிட்டு இறங்கி, கீழே இருக்கிற தளத்திற்கு வந்து வாசல் கதவைத் தட்டினேன். பெல்லை அடிக்கக்கூடாது என்று ஜோஸஃபீனா ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருக்கிறாள். அதாவது- அவள் என்னிடம் சைகை காட்டி சொன்ன விஷயம் இது. அவள் பேசுவது ஆங்கிலத்தில்கூட இல்லை. ஸ்பானிஷ் மொழியில். நான் லிஃப்டில் வைத்துத்தான் அவளை முதல் முறையாகப் பார்த்தேன். அவளைப் பார்த்ததும், என்ன காரணத்தாலோ உதடுகள் விரிய சிரித்தேன். அவளைப் பார்த்ததும், என் மனதில் மகிழ்ச்சி உண்டாகி இருக்க வேண்டும். அதனால்தான் அந்தச் சிரிப்பு. அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

ஜோஸஃபீனாவைப் பார்த்தால், திருச்சூரோ அல்லது தெற்கில் இருக்கிற ஏதோ ஒரு ஊரைச்சேர்ந்த- நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்த அழகான ஒரு பெண் என்பது மாதிரி தோன்றும். சிவந்த நிறம். வெள்ளைக்காரப் பெண்களுக்கு இருப்பது மாதிரி பல நிறங்களில் அவளின் தலைமுடி இருக்கவில்லை. மாறாக, நல்ல கருப்பு நிறம். சுருள்முடி. அழகான உடல்வாகு. லிஃப்டில் நாங்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தோம். நான் "ஹலோ" என்று சிரித்தவாறு சொன்னேன். என்னையும் மீறி அவளைப் பார்த்துச் சொன்னேன்: "ப்யூட்டிஃபுல்''. அடுத்த நிமிடம்- அவள் என் கொம்பு மீசையைச் சுட்டிக் காட்டியவாறு சிரித்தாள். நான் சொன்னேன்: "நீ வேணும்னா இந்த மீசையைப் பக்கத்துல வந்து தொட்டுப் பாரு.'' அவளுக்கு நான் சொன்னது புரிந்திருக்குமா என்ன? நான் என் நெஞ்சைக் கையால் தட்டியவாறு சொன்னேன்: "ஐ... மலையாளம்!'' அவள் சிரித்தாள். கண்களைச் சிமிட்டியவாறு சொன்னாள்: "எஸ்பானா!'' அவளின் கையில் நிறைய பொட்டலங்கள் இருந்தன. அவளுக்குப் பக்கத்தில் கீழேயும் நிறைய இருந்தன. அறுபத்தெட்டாம் தளத்தில் லிஃப்ட் நின்றபோது, அவள் வெளியே செல்வதற்காக என்னைப் பார்த்தாள். என் வீடு இருப்பது அறுபத்தொன்பதாவது தளத்தில். நான் சொன்னேன்: "ஐ...ஐ...சிக்ஸ்டி நைன்! ஐ ஹெல்ப்...'' அவள் என்னைப்பார்த்து கண்களைச் சிமிட்டியவாறு முப்பத்திரண்டு பற்களும் தெரிகிற மாதிரி காட்டி சிரித்தவாறு சொன்னாள்: "சிக்ஸ்டி நைன்! சிக்ஸ்டி நைன்! கம்!'' நான் அன்று ஜோஸஃபீனாவின் பொட்டலங்களைத் தூக்கிக் கொண்டு அவளுக்கு உதவி செய்வதற்காகப் போனேன். அவள் "சிக்ஸ்டி நைன்" என்று சொல்லியவாறு என்னைப் பார்த்து ஏன் கண்களைச்      சிமிட்டினாள் என்பதன் அர்த்தமே எனக்கு பின்னால்தான் தெரிந்தது. பெண் என்றால் அவள்தான் பெண்! அவளின் எஜமானி டெஸ்ஸியின் தோழியான ஒரு மலையாள டாக்டர்.

அதாவது- மனோதத்துவ டாக்டர். அவளின் கணவர் ஒரு வெள்ளைக்காரர். அந்த ஆள் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு பெரிய பதவியில் இருக்கிறார். அந்த மனிதருக்கு சிகிச்சை செய்கிறேன் என்று படிப்படியாக அவரையே கைக்குள் போட்டுக் கொண்டாள் அந்த மலையாள டாக்டர் என்று டெஸ்ஸி என்னிடம் கூறியிருக்கிறாள். அப்படியே இல்லை என்றால்கூட மனோதத்துவ டாக்டருக்கு கிடைக்கக்கூடிய பணம் என்ன சாதாரண பணமா? அதன் வாசலில் கட்ட முடியுமா ஒரு நர்ஸ் ஓவர்டைம் எல்லாம் சேர்த்து வாங்கக்கூடிய சம்பளத்தை? இன்னொரு விஷயம்... இந்த வெள்ளைக்காரர்கள் மனது எப்போதும் சமநிலையில் இருக்காது. அவர்களுக்கு எப்போதுமே பயமும், விரக்தியும்தான்... எப்படி அவர்களுக்கு அவை உண்டாகாமல் இருக்கும்- இந்த லிஃப்டுக்குள் ஏறுவதும், இறங்குவதும், ஓடுவதும், பாய்வதும், காரை ஓட்டுவதும்... இதுவே வேலையாக இருந்தால்?

ஒரு நிமிடம் காலை நீட்டி ஒரு இடத்தில் அமர்ந்து ஓய்வு எடுக்க முடிகிறதா? ஜோஸஃபீனா வேலை செய்யும் வீட்டுக்காரர்கள் காலையில் வீட்டை விட்டுப் புறப்பட்டால் இரவு எட்டு மணிக்கு முன்னால் நிச்சயம் வீட்டுக்கு வரமாட்டார்கள். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மட்டும் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவள் தான் யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கக் கூடிய இடத்தைக்கூடச் சொல்லி வைத்திருக்கிறாள் என்பதிலிருந்தே அவளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? மனோதத்துவத்தின் மதிப்பு எனக்கு எப்போது தெரிந்தது என்றால்- முதல்நாள் ஜோஸஃபீனாவைக் கட்டிப் பிடித்தவாறு டாக்டரின் பெரிய படுக்கையறையில் இருந்த வட்ட வடிவமான வாட்டர் பெட்டின் நடுவில் மேலே தெரிந்த கண்ணாடியைப் பார்த்தவாறு படுத்துக்கிடந்த போதுதான். அப்போது ஜோஸஃபீனா கையை நீட்டி ஒரு பொத்தானை அழுத்தினாள். அடுத்த நிமிடம்- படுக்கை அறைக்குள் சுற்றத் தொடங்கிவிட்டது. மனம் எப்படி பல விஷயங்களையும், அசை போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறதோ, அப்படித்தான் படுக்கையும் சுழன்றது. நான் அந்த நிமிடத்தில் என்னவெல்லாமோ நினைக்க ஆரம்பித்துவிட்டேன். நான் ஜோஸஃபீனாவைப் பார்த்துச் சொன்னேன்: "அடியே பெண்ணே... உன்னை எங்கே இருந்து கொண்டு வந்தாங்க?'' அவள் ஸ்பானிஷ் மொழியில் என்னவோ கூறியவாறு என்னைக் கடிக்க ஆரம்பித்தாள். அவள் இப்போது மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்று நான் எண்ணிப் பார்த்தேன்.


என்னைப்போல அவளும் எங்கோ இருந்து வந்து இந்த பெரிய கட்டடத்திற்குள் அடைபட்டுக் கிடக்கிறாள். அவள் இதைவிட்டு வேறு எங்காவது போக முடியுமா? என் கையிலாவது காரின் சாவி இருக்கிறது. நான் கடிகாரத்தைப் பார்ப்பது அவளுக்குப் பிடிக்காது. என் கடிகாரம் கட்டப்பட்டிருக்கும் கையை மேலே தூக்கி வேண்டுமென்றே அவள் அடிப்பாள். பிறகு என்மேல் ஏறி அமர்ந்து கொள்வாள். என்னை அவள் விடவே மாட்டாள்.

ஆனால் என்னால் அங்கேயே இருக்கமுடியுமா? நான் அவளிடம் சொல்வேன்: "ஜோஸஃபீனா, என் செல்லத் தங்கமே! நான் உடனே போகணும். இனியும் எனக்கு இருப்பது ரெண்டுமணி நேரம்தான். நான் கொஞ்சம் வெளியே போய் காத்து வாங்கிட்டு வர்றேன். நான்தான் நாளைக்கு வருவேன்ல? நான் எப்பவாவது வராம இருந்திருக்கேனா?'' அவளுக்கு மலையாளத்தில் உள்ள ஒரே ஒரு வார்த்தை மட்டும் தெரியும். அது. "நாளை". அவள் என்மேல் ஏறி என் முகத்தையே உற்றுப்பார்த்தவாறு ஒரு விரலால் என் நெற்றியைக் குத்திக் கொண்டு கூறுவாள்: "நாளை... நாளை... யெஸ்...'' அதற்குப் பிறகு அவளே என்னைப் போகவும் விடுவாள்.

மேலே இருக்கின்ற ஜானிவாக்கரை மனதில் அப்போது நினைத்து கொஞ்சம் தடுமாறுவேன். "வேண்டாம்... வந்து பார்த்துக் கொள்ளலாம். ஏதாவது போலீஸ் வந்து விட்டால், பிரச்சினை ஆகிவிடும்..." நானே மனதிற்குள் கூறிக்கொள்வேன். இப்படித்தான் ஒருமுறை நான் போலீஸ்காரர்களிடம் சிக்கிக்கொண்டேன். மதிய நேரத்திற்குப் பிறகு காரை எடுத்துக் கொண்டு பெல்ஹாம் எக்ஸ்பிரஸ்வே வழியாக படுவேகமாக நான் போய்க்கொண்டிருந்தேன். அப்போது டெஸ்ஸியிடம் ஒரு பழைய ஃபோர்ட் கார் இருந்தது. பழைய காராக இருந்தால் என்ன... வெள்ளைக்காரர்களின் காராயிற்றே அது! நீளமான மொசைக் போட்டதுபோல் காட்சியளிக்கும் சாலையைப் பார்த்ததும், அதன் எல்லை வரை நாம் போய்விட்டு வந்தால் என்ன என்ற ஆர்வம் என் மனதில் உண்டானது. சரி... எங்கே போவது? இருப்பதே இரண்டு மணி நேரங்கள்தாம். இருந்தாலும் நான் வேகமாகக் காரைச் செலுத்தினேன். நான் அன்றுதான் அமெரிக்காவில் கால் வைத்திருந்தேன். எனக்குப் பின்னால் சைரனை முழக்கியவாறு ஒரு போலீஸ்காரன் என்னைப் பின்தொடர்ந்து வேகமாக வந்தான். அடுத்த நிமிடம் என்னை அவன் வளைத்தான். அவனை இடிப்பதுபோல நான் காரை நிறுத்தினேன். தொப்பியும் கூலிங்கிளாஸும் அணிந்து இடுப்பில் துப்பாக்கியும் ரப்பர் பிரம்பும் வைத்திருந்தான் போலீஸ்காரன். நான் வேகமாகக் கதவைத் திறந்து, இறங்கினேன். தலையைக் குனிந்தவாறு அவனைப் பார்த்து ஒரு வணக்கம் சொன்னேன். வேறு என்ன செய்வது? அந்த வெள்ளைக்கார போலீஸ் ரப்பர் பிரம்பால் என் பின்பக்கம் ஒரு அடி அடித்தான். அடுத்த நிமிடம்- என் வயிற்றில் இருந்த ஜானி, ஆவியாக மாறினான். அதற்குள் இன்னும் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு வந்துவிட்டார்கள். எல்லாரும் சுற்றி நின்று என்னை பிசாசைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். ஒருவன் துப்பாக்கியை நீட்டியவாறு அருகில் வந்து என் பாக்கெட்டையும் உடம்பையும் சோதனை செய்து பார்த்தான். பிறகு, ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். நான் சொன்னேன்: "சார்... எனக்கு ஆங்கிலம் தெரியாது. வீட்ல இருக்க வெறுப்பா இருந்துச்சு. அதுனால நான் காரை எடுத்துக்கிட்டு இங்கே வந்தேன். நான் என்ன தப்பு செய்துட்டேன். சொல்லுங்க சார்... என்னை ஒண்ணும் செஞ்சிடாதீங்க... டெஸ்ஸி மட்டும் தனியா வீட்ல இருக்கா.'' அவர்கள் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் என்று என்னவெல்லாமோ என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன்: "சார்... எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாமே டெஸ்ஸிக்குத்தான் தெரியும்!'' இதைச் சொல்லிய நான் அடுத்து என்ன செய்தேன் தெரியுமா? அடி வாங்காமல் இருப்பதற்காக சின்னப் பையனாக இருந்தபோது என் தாயிடம் என்ன பண்ணினேனோ, அதைச் செய்தேன். அதாவது- எல்லாரும் கேட்கும்படி உரத்த குரலில் அழ ஆரம்பித்தேன். வெள்ளைக்காரர்கள் அத்தனைப் பேரும் அணிந்திருக்கும் கூலிங்கிளாஸ் வழியாக மிரண்டு போய் பேந்தப் பேந்த விழித்தவாறு என்னை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை. அவர்கள் நான் அழுவதைப் பார்த்து வாய்பிளக்கச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அன்பு மேலோங்க எனக்கு முன்னாலும் பின்னாலும் கார்களை ஒட்டியாவாறு- ஒரு ஊர்வலம் போவது மாதிரி என்னை வீட்டுக்குக் கொண்டு போனார்கள். போலீஸ் காரர்களுடன் நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, டெஸ்ஸியின் முகம் என்னவோபோல் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அவள் என்னுடன் பேசவில்லை. நாளடைவில் போகப் போக சாலைகளில் இருந்த போர்டுகளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். வெள்ளைக்காரர்களை அப்போதுதான் என்னால் முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது.

எனக்கு எங்கேயாவது போக வேண்டுமென்று ஒரே மன உந்துதல். இந்த சாலைகள் எல்லாம் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கின்றன- நான் மட்டும் இப்படியே உன்மத்தம் பிடித்தவன் மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி என்று சதா நேரமும் சிந்திக்கத் தொடங்கினேன். ஆனால் குழந்தை உண்டான பிறகு நான் வெளியே போவது கிட்டத்தட்ட குறைந்துவிட்டது. கொஞ்ச நாட்களில் டெஸ்ஸி அந்த ஃபோர்டை விற்று விட்டு, டொயாட்டா வாங்கினாள். அவள் அந்தக் காருடன் வந்து அதை வண்டிகள் நிறுத்துமிடத்தில் நிறுத்தியபோது, என் மனதில் இனம்புரியாத ஒரு துள்ளல். ஜோஸஃபீனாவைப்போல இருந்தது அந்தக் கார். ஜோஸஃபீனாமேல் எப்படி நான் ஒரு காதலை வைத்திருக்கிறேனோ, அதே காதல் அந்த டொயாட்டா மீதும் எனக்கு உண்டானது. நான் அதில் உட்கார்ந்து பெல்ட்டை மாட்டிக்கொண்டு புறப்படுகிறபோது நான் எப்படியெல்லாம் போகவேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்படியெல்லாம் போகும் கார். ஓ... அந்தக் காரில் எங்கெங்கெல்லாம் போயிருக்கிறேன். நியூயார்க்கிற்கு வெளியே இருக்கிற பல இடங்களுக்கும் நான் அதில் போயிருக்கிறேன். நான் உரத்த குரலில் சொல்வேன். "அமெரிக்கா, இதோ வர்றான் ஜோஸி. கடுத்துருத்திக்காரன். மச்சநாடு ஜோஸி. வெள்ளைக்காரர்களே... வெள்ளைக்காரிகளே... இதோ ஜோஸி வந்து கொண்டிருக்கிறான். உங்களிடம் அருமையான சாலைகள் இருக்கின்றன. என் மனைவியிடம் இந்த டொயாட்டா கார் இருக்கிறது. வேறு என்ன வேண்டும்?'' நான் காரின் இரண்டு பக்கங்களிலும், காற்று "படபட"வென்று அடிப்பதைக் கேட்டவாறு, ப்ளேயரில் "பெரியாறே பெரியாறே" என்ற பாடலைப் பாடச் செய்தவாறு என் டொயாட்டாவின் ஸ்டியரிங்கை இறுகக் கையில் பிடித்தவாறு உட்கார்ந்திருப்பேன். "டேய் ஜோஸி... எங்கடா போற?" என் மனம் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கும்.


"அமெரிக்காவைத் தாண்டி... பூமியோட இன்னொரு பக்கத்திற்கு... கடுத்துருத்திக்கு! மச்ச நாடு ஆற்றின் கரைக்கு!" ஆனால், நான் அந்த டொயாட்டாவை ஓட்டுகிறேன் என்று பல இடங்களிலும் இடித்து, வண்டியை ஒரு மாதிரி ஆக்கிவிட்டேன். என் முகத்தில் எட்டு இடங்களில் தையல் போடப்பட்டது. ஒரு கால் ஒடிந்துவிட்டது. நான் ஒரு காரில் போய் இடிக்க, காரில் இருந்த வெள்ளைக்காரப் பெண்மணிக்கு பற்கள் கீழே விழுந்துவிட்டன. எல்லாமே ராயல் கொஞ்சம் அதிகமாக உள்ளே போனதன் விளைவு. போலீஸ் என்னிடம் இருந்த வாசனையை வைத்து அதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். என் லைசன்ஸைப் பிடுங்கிக் கொண்டார்கள். நான் அதற்குப்பிறகு பல நாட்கள் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தேன். அப்போதுதான் மகன் பிறந்தான். டெஸ்ஸி என்மீது பயங்கர கோபத்தில் இருந்தாள். அவளை அந்த அளவுக்குக் கொண்டு வந்தது நான்தான். அதற்காக இப்படியா சதா நேரமும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது! பிறகு நான் எதற்கு அமெரிக்காவில் இருக்க வேண்டும்? கொஞ்ச நாட்களில் டெஸ்ஸி இன்னொரு புதிய காரை விலைக்கு வாங்கினாள். காரின் பெயர்- லிங்கன் ஃபேமிலி. எனக்கு அதைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. அதன் அருகில் போகவே எனக்கு விருப்பமில்லை. என் உள்ளத்தைப் புரிந்துகொண்ட மாதிரி அது இல்லை. நான் அதை பல இடங்களுக்கும் இப்படியும் அப்படியுமாய் வளைத்து ஓட்டிச் சென்றிருக்கிறேன். ஒருநாள் அந்தக் கார் நியூ ஜெர்ஸியில் ஒரு எக்ஸ்பிரஸ் வேயில் செத்துப்போன பிணம் மாதிரி நின்றுவிட்டது. என்ன செய்து பார்த்தும், கார் அசையக் காணோம். நான் அதற்கு இரண்டு அடிகள் கொடுத்தேன். இரண்டு கற்களை எடுத்து அதன்மேல் எறிந்தவாறு சொன்னேன்: "போடி நாயே... நீ இல்லாம இந்த அமெரிக்காவுல நான் வாழ்ந்துகாட்டுறேன் பாரு.'' வீட்டை நான் அடைந்தபோது, குழந்தையை ஜோஸஃபீனாவிடம் கொடுத்து விட்டு டெஸ்ஸி வேலைக்குச் சென்றிருந்தாள். நானும் ஜோஸஃபீனாவும் சேர்ந்து சிறிது நேரம் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்தோம். அப்போது மருத்துவமனையில் இருக்கும் டெஸ்ஸி என்னை பிடி பிடி என்று பிடித்துவிட்டாள். நான் சொன்னேன்: "என் தங்கமே... டெஸ்ஸி... அந்த கார் ஒரு பிசாசு. அது மனசுல என்னவோ இருக்கு. இல்லாட்டி தேவையில்லாம நான் வீட்டுக்கு ஏன் தாமதமா வரப்போறேன்?

நீ என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. ஆனா, அந்தக் கார் நல்லது இல்ல.'' மனதில் கோபமும், வருத்தமும் நிறைய உண்டானது. அதனால், வேகமாக மேலே போனேன்.

ஜோஸஃபீனாவிற்கு ஒரு குப்பி பீரும், எனக்கு ஒரு குப்பி ஜானிவாக்கரும் எடுத்துக்கொண்டு கீழே வந்தேன். குழந்தை சில நிமிடங்களில் உறங்கத் தொடங்கிவிட்டான். நானும் ஜோஸஃபீனாவும் வாட்டர் பெட்மேல் ஏறி சுழலத் தொடங்கினோம். தெய்வகோபம் என்றுதான் சொல்லவேண்டும்- இதற்கு வேறு என்ன சொல்வது? நாங்கள் இருவரும் அப்படியே உறங்கி விட்டோம். உண்மையாகச் சொல்லப்போனால்- நாங்கள் இருவரும் எங்களையே மறந்துவிட்டோம். இதற்கு முன்பு எப்போதுமே இப்படி நடந்ததில்லை. நான் ஏதோ அரவம் கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தபோது, குழந்தை அழுது கொண்டிருந்தது. டாக்டரும், அவளின் கணவரும் எங்களையே பார்த்தவாறு அறையில் நின்று கொண்டிருந்தார்கள்.

ஜோஸஃபீனா- பீரையும், ஜானிவாக்கரையும் கலந்து குடித்ததன் விளைவு- அப்போதுகூட கல்லைப்போல அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். இதற்கு முன்பு டாக்டருக்கும் எனக்கும் அறிமுகமே இல்லை. எனினும், அந்தப் பெண்மணியைப் பார்த்து, நான் லேசாகச் சிரித்தேன். வெள்ளைக்காரனின் கையைப்பிடித்துக் குலுக்கினேன். அடுத்த நிமிடம்- குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வேகமாக ஓடினேன்.

எல்லாம் அந்த நாசமாய்ப்போன விங்கன் ஃபேமிலியால் வந்த வினை! லிங்கன் என்ற பெயரில் அமெரிக்காவில் முன்பு ஒரு

ஜனாதிபதி இருந்தார். அவரின் பெயரை இந்தப் பிசாசுக்கு வைத்தவர்களை என்னவென்று அழைப்பது? பேமிலி! என் ஃபேமிலியை அந்தக் கார் நாய் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. என்னை கென்னடி விமான நிலையத்தில் கொண்டுவந்து விட்டபோது, டெஸ்ஸி ஆயிரம் டாலர்களை என் கையில் தந்தாள். இப்போதுகூட அவ்வப்போது அவள் ஏதாவது அனுப்பி வைத்துக்கொண்டுதான் இருக்கிறாள். குழந்தையை முழுக்க முழுக்க இப்போது அவள்தான் பார்த்துக்கொள்கிறாள். சில நேரங்களில் அவனை, வேலைக்குச் செல்கிறபோது தன்னுடன் அழைத்துப் போகிறாள். இல்லாவிட்டால், குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டும் போகிறாள். உண்மையிலேயே அவள் பாவம்... என் பையன் அவளைவிட பாவம்... அவன் அந்த வெள்ளைக்காரர்களுடனும், வெள்ளைக்காரிகளுடனும் படுத்துக் கிடந்து ஆங்கிலம் பேசவும், லிஃப்டில் ஏறவும், இறங்கவும், ஓடவும், நடக்கவும் படிப்பான். அதைவிட்டால் அவன் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? மேன்மையான விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன- அவன் அதைத் தெரிந்துகொள்ளப் போகிறானா என்ன? பல கார்களுக்கு மத்தியில் அவனும் ஒரு ஒழுங்கே இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் ஒரு காரை ஓட்டுவான். யாராவது பல வண்ணங்களைக் கொண்ட ஒரு வெள்ளைக்காரப் பெண் அவனைக் கொண்டு போகத்தான் போகிறாள். என்னை இனி டெஸ்ஸி அமெரிக்காவிற்கு அழைப்பாளா? நிச்சயம் சந்தேகம்தான். அவளுக்கு இப்போது வேறு யாராவது ஆள் கிடைத்திருக்கும். அவள் எழுதும் கடிதங்களைப் படிக்கிறபோது, அப்படி எண்ணத் தோன்றவில்லை. என்றாலும், அவள் இருப்பது அமெரிக்கா ஆயிற்றே! பிறகு... நான் ஏற்கெனவே கையும் களவுமாகப் பிடிப்பட்ட ஒரு மனிதனாயிற்றே! என்னைப்பார்த்து அவள் உரத்த குரலில் சத்தம் போட்டதையும், திட்டியதையும் மறந்தால்கூட, நடந்த அந்த நிகழ்ச்சியை அவளால் அவ்வளவு எளிதில் மறக்கத்தான் முடியுமா?

சில நேரங்களில் சாயங்கால நேரங்களில் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கும்போது, அங்கு வளர்ந்திருக்கும் செடிகளில் இருந்து நல்ல வாசனை வரும். ஜோஸஃபீனாவின் கையில் இதே வாசனையை நான் முகர்ந்திருக்கிறேன். அப்போது என்மனதில் இனம்புரியாத ஒரு கவலை உண்டாகும். நான் அக்கரையைப் பார்த்தவாறு கூறுவேன்: "ஜோஸஃபீனா... என் தங்க ஜோஸஃபீனா... நாளை... நாளை... நோ! அமெரிக்கா, சலாம்!"

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.