Logo

பத்திரிகை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6305
pathirikai

பாலாவுக்கு அடுத்துள்ள சேர்ப்புங்கல் என்ற இடத்தில் ஒருநாள் காலையில் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்ற ஒரு கடையின் திண்ணையில் அமர்ந்து பதினான்கு பிச்சைக்காரர்கள் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் வயதானவர்களும், நடுத்தர வயது உள்ளவர்களும், இளம் வாலிபர்களும்கூட இருந்தார்கள். தடிமனானவர்களும், உடல் மெலிந்தவர்களும், கறுப்பானவர்களும், மாநிறம் உள்ளவர்களும், வெளுத்த தேகத்தைக் கொண்டவர்களும் என்று பலவகைப்பட்டவர்களும் இருந்தனர்.

குள்ளமானவர்களும், சராசரி உயரத்தைக் கொண்டவர்களும், உயரமானவர்களும் அதில் இருந்தார்கள். ஒரு கை இல்லாதவரும், ஒரு கண் இல்லாதவரும், ஒரு காலை இழந்தவரும்கூட அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். கசங்கிப்போன பழைய ஆடைகளைத் தான் அவர்கள் அணிந்திருந்தார்களே தவிர, கிழிந்து நார்நாராகத் தொங்கும் ஆடைகளை அவர்களில் யாரும் அணியவில்லை. சிலர் வேஷ்டியும், துண்டும் அணிந்திருந்தார்கள். சிலர் சட்டை போட்டிருந்தார்கள். செருப்பணிந்தவர்கள் பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். நான்கைந்து பேர் பீடி புகைக்கும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள். பெண்கள் யாரும் அந்தக் கூட்டத்தில் இல்லை. எல்லாருடைய முகத்திலும் மருந்துக்கூட மகிழ்ச்சி என்பது இல்லை. வாழ்க்கைக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அவர்கள் முகத்தில் தெரிந்தது.

அந்தப் பிச்சைக்காரர்கள் கூட்டம் உண்மையில் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கவில்லை. பத்திரிகை படிப்பதை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை. ஒருவர் பத்திரிகையைப் படிக்க, மற்றவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்- அதாவது எஞ்சி இருந்த பதின்மூன்று பேரும். பத்திரிகையைப் படித்துக் காட்டும் ஆள் உண்மையாகச் சொல்லப்போனால்- அவர் ஒரு பிச்சைக்காரரே அல்ல. தன்னுடைய மனைவிக்கு இன்னொரு மனிதருடன் தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்ததும், முப்பத்தைந்து வயதுடைய மனைவியையும், பதினான்கும், பன்னிரண்டும் வயதுகளையுடைய குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து, விரக்தியடைந்து வீட்டை விட்டு இங்கு வந்த ஒரு நடுத்தர வயது மனிதரே அவர். அவர் இத்தகைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தே சில வாரங்கள்தான் ஆகியிருக்கின்றன.

ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்த அந்த மனிதர் தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாத தூரத்தில் இருக்கும் ஒரு இடத்திற்குப் போய்விட வேண்டும் என்று பயணம் செய்தார். அவர் அப்படி வந்து சேர்ந்த இடம்தான் சேர்ப்புங்கல். அங்கே வழியில் இருந்த குழந்தை இயேசுவின் சிலையைச் சுற்றி ஒளி வீசிக்கொண்டிருந்த மின் விளக்குகள் அலங்காரத்தில் தன்னை மறந்து நின்றிருந்த அவர், இயேசுவின் உருவத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்துக்கொண்டிருந்தார். தன் மகனின் முகமும் இயேசுவின் முகமும் ஒரே மாதிரி இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அந்த மகிழ்ச்சியுடன், அங்கிருந்த கடைத் திண்ணையிலேயே அவர் படுத்துறங்கினார். அதற்குப்பிறகு அவரின் வாழ்க்கை அங்கேயே தொடரத் தொடங்கியது. ஆனால், அதற்குப் பிறகு ஒருமுறைகூட அவர் குழந்தை இயேசுவின் முகத்தை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. தன் மகனின் ஞாபகம் எங்கே மனதில் வந்து தன்னை ஒரு வழி பண்ணிவிடுமோ என்று அவர் பயந்ததே அதற்குக் காரணம்.

கடைத் திண்ணையில் உறங்குவதையும், ஏற்கெனவே கையில் வைத்திருந்த பணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உணவுக்காகச் செலவழிப்பதையும், மீனச்சில் ஆற்றில் குளித்து முடித்து துணிகளைத் துவைத்துக் காயப்போடுவதையும் வாடிக்கையாகக் கொண்டு தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார் சந்திரன் என்ற இந்த மனிதர். இந்தச் சூழ்நிலையில்தான் பிச்சைக்காரர்களுடன் இவர் அறிமுகமானதும், அவர்களுக்குப் பத்திரிகை படித்துக்காட்டும் நபராக அவர் ஆனதும் நடந்தது. இந்தப் பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் படிக்கத் தெரிந்த பலரும் இருந்தாலும், செய்தித்தாளில் பக்கத்துக்குப் பக்கம் அடைக்கப்பட்டிருக்கும் எல்லாச் செய்திகளையும் பார்த்துப் படிப்பதற்கும், அதில் இருந்து தங்களுக்குத் தேவையான செய்தியைக் கண்டுபிடித்துப் படிப்பதற்கும் தேவையான ஆற்றல் தங்களுக்கு இல்லை என்பதை மனப்பூர்வமாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அது குறித்து சொல்லப்போனால் ஒரு குற்ற உணர்வே அவர்களுக்கு இருந்தது. வாழ்க்கையை விட்டு அவர்கள் மிகவும் விலகிப் போயிருந்ததே இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். கடைத் திண்ணையில் இருந்தவாறு ஒரு பழைய பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த சந்திரனைப் பார்க்க நேர்ந்த அவர்கள், தங்களின் விருப்பத்தை அவரிடம் சொல்ல, இதன்மூலம்தான் அவர்களுக்குப் பத்திரிகையைப் படித்துக்காட்டும் மனிதராக வடிவமெடுக்க நேர்ந்தது சந்திரனுக்கு. அவர்களைப் பொறுத்துவரை, சந்திரனையும் ஒரு பிச்சைக்காரனாகவே அவர்கள் எண்ணியிருந்தார்கள். தங்களில் இருந்து அடிப்படையில் அவர் ஒரு விஷயத்தில் மாறுபட்ட மனிதராக இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அது - சந்திரனின் மடிக்கட்டில் ஒரு பர்ஸும் அதில் கொஞ்சம் பணமும் இருந்தது.

பத்திரிகை வாங்குவதற்கான பணத்தை அவர்கள் எல்லாரும் பங்கு போட்டுக் கொடுப்பார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் சந்திரனின் வேலை அன்றைய நாளிதழில் பிரசுரமாகியிருக்கும் மரணமடைந்தோரைப் பற்றிய செய்திகளையும், விளம்பரங்களையும், அடக்கம் செய்யப்படுபவர்களின் செய்திகளையும், விளம்பரங்களையும், திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளையும், விளம்பரங்களையும் பிச்சைக்காரர்களுக்குப் படித்துக் காட்டுவதே. இதன்மூலம் தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து, முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும் அல்லது விருந்துகள் நடக்கும் வீடுகள், கோவில்கள், பள்ளிகள், அரங்கங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வார்கள். படிப்பு வாசனை இருந்த சந்திரன் தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு வழிகளையும், அந்தந்த இடங்களுக்குப் போக வேண்டிய பஸ் எண்களையும் முகவரியையும் கொடுத்து உதவுவார். அதோடு மட்டுமல்ல; எந்த இடத்திற்குப் போனால் பிச்சைக்காரர்களுக்கு அதிக பணம் கிடைக்கும் போன்ற விவரங்களைத் தெரிந்து சில நேரங்களில் அவர்களுக்கு அவர் சொல்வதுண்டு. இந்த வகையில் சந்திரன் அவர்களுக்கு மிகவும் பயனுள்ள மனிதராக இருந்தார் என்பது உண்மை.

தங்களுக்குக் கிடைக்கின்றதில் ஒரு பகுதியை சந்திரனுக்குக் கூலியாகத் தருவதற்கு எல்லாரும் தயாராக இருந்தார்கள். ஆனால், சந்திரன் அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். பலவித பொருட்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துவிட்டு, அந்த வாழ்க்கையே வேண்டாம் என்று உதறிவிட்டு சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மனிதனுக்கு இப்போது அந்தப் பொருட்கள்மீது ஆசையே இல்லாமல் போகுமா! அந்த அர்த்தத்தில் அவர் வேண்டாம் என்று கூறவில்லை. தினந்தோறும் கையிலிருந்து பணம் செலவழிக்காமலே பத்திரிகை படிக்க முடிகிறதே, அதையே தனக்கு அவர்கள் தரும் கூலியாக அவர் நினைத்ததுதான் உண்மையான காரணம்.


வீட்டைவிட்டு வெளியேறியபோது கையில் எடுத்து வைத்திருந்த பணமும், அண்டர்வேர் பையில் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வைத்திருக்கும் தங்கச்சங்கிலியும் எத்தனை நாட்களுக்கு தனக்கு பயன்படப்போகிறது என்ற உள்மனபயம் அவ்வப்போது தலையை நீட்டி பயமுறுத்தியதாலும், ஒரு சாதாரண பிச்சைக்காரனாக மாறுவது குறித்து எண்ணும்போது மனதில் உண்டாகும் தளர்ச்சியாலும், அவர் தன் கையில் இருந்த பணத்தை மிகவும் கணக்குப் போட்டு எண்ணி எண்ணியே செலவழித்தார். ஒரு நாளைக்கு ஒரு முறைதான் அவர் சாப்பிடுவார். மற்ற நேரங்களில் பொதுவாக அவருக்குப் பசி எடுப்பதில்லை.

அவர் வீட்டை விட்டு வெளியே வந்து நான்கு வாரங்கள் கழித்து, பிச்சைக்காரர்களுக்காகப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் கண்கள் பத்திரிகையில் இருந்த ஒரு விளம்பரத்தின்மீது நிலை குத்தி நின்றது. அது - அவரின் மனைவி கொடுத்திருந்த விளம்பரம். "சந்திரன்  அத்தான்... என்னை மன்னியுங்கள். உடனே திரும்பி வரவும். நானும் ரமேஷும் மல்லிகாவும் உங்களுக்காகக் காத்திருக்கிறோம்." உயரமான ஒரு இடத்தில் இருந்து கீழ்நோக்கி பள்ளத்தில் விழுவதைப் போன்ற ஒரு உணர்வு அவருக்கு அப்போது உண்டானது. அவரால் சீராக மூச்சுவிட முடியவில்லை. அவர் அந்த விளம்பரத்தையே பல நிமிடங்கள்- ஒரு அதிசய உலகத்தைப் பார்ப்பது மாதிரி வைத்த கண் எடுக்காது பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் கண்களில் இருந்து நீர் பொல பொல வென்று வழிந்தது. வழிந்த கண்ணீரை விரலால் துடைத்த அவர், பத்திரிகை படிப்பதைத் தொடர்ந்தார்: "இன்று திருமணம். பாலா பத்ராஸனப் பள்ளியில் 11 மணிக்கு... பேசிச்சனுக்கும் மேரியம்மாவுக்கும்.'' மீதி இருந்த விளம்பரங்களையும், செய்திகளையும் படித்து முடித்து, ஒவ்வொரு பிச்சைக்காரனும் எந்தெந்த பகுதிக்குப் போக வேண்டும், எப்படிப் போக வேண்டும் என்பதையெல்லாம் சொல்லி முடித்தபிறகு, என்றைக்கும் இல்லாமல் கையிலிருந்த அந்த நாளிதழைச் சுருட்டி தூரத்தில் அவர் விட்டெறிந்தார். ஒன்றிரண்டு பிச்சைக்காரர்கள் அவரின் அந்தச் செயலை வினோதமாகப் பார்த்தார்கள். அவர் விட்டெறிந்த பத்திரிகை காற்றில் உருண்டு போய் குழந்தை இயேசுவின் முன்னால் அனாதையாக நின்றது. அந்தப் பத்திரிகையை மீண்டும் எடுக்க வேண்டும் என்றும், தன் மனைவி தன்னை அழைத்திருப்பதை மீண்டும் வாசிக்க வேண்டும் என்றும் தணியாத ஆவல் அவர் மனதில் உண்டானது. ஆனால், எழுந்த அந்த ஆவலை அடுத்த கணமே அவர் அடக்கிக் கொண்டார். ஒரு காற்று "சில்"லென்று வீசியது. அந்தப் பத்திரிகை காற்றோடு கலந்து ஓடி பக்கத்திலிருந்த ஓடையில் போய் விழுந்தது. கடை திறக்க வந்த கடை உரிமையாளரின் காலடிச் சத்தம் கேட்டுத்தான் மீண்டும் சுய உணர்விற்கே சந்திரன் வந்தார்.

இன்று, அவர் வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய மனைவி, மக்கள் எல்லாரையும் பிரிந்து வந்து நூற்று ஐம்பதாவது நாள்.

சந்திரன் நாளிதழை விரித்துப் பிடித்துப் படித்தார்: "ஈராற்றுப் பேட்டை அரிக்குன்னு வீட்டில் அன்னக்குட்டி மேத்யூ மரணமடைந்தார். இறுதி அடக்கம் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு அருவித்துறை பள்ளியில்.'' சவ அடக்கத்தில் யார் போய் கலந்து கொள்வது என்பது பற்றி அவர்கள் மத்தியில் நீண்ட நேரம் ஒரு சர்ச்சை நடந்து, இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். கடை உரிமையாளரின் உருவம் தூரத்தில் தெரிகிறதா என்று தலையை உயர்த்திப் பார்த்த சந்திரன், அடுத்த விளம்பரத்தைப் படிக்க ஆரம்பித்தார். பல நேரங்களில் கடை உரிமையாளர் வரும் நேரத்தில்தான் பத்திரிகை படிப்பதே முடிவுக்கு வரும். காரணம்- சில செய்திகளிலும் விளம்பரங்களிலும் தங்களின்  அன்றாட சாப்பாட்டுப் பிரச்சினையைத் தாண்டி பிச்சைக்காரர்கள் ஆர்வம் செலுத்தியதே. உதாரணத்திற்கு- ஒரு குழந்தையின் அகால மரணத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்திருந்தால், அதைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துகொள்வதில் அவர்கள் மிகவும் ஆவலாக இருப்பார்கள். முழு விவரத்தையும் தெரிந்ததும் அவர்கள் மூக்கில் விரல் வைத்து வருத்தப்பட்டு நிற்பார்கள். இல்லாவிட்டால் கவலை தோய்ந்த குரலில் ஏதாவது சொல்வார்கள். அந்தக் குழந்தையின் படத்தைப் பார்க்க வேண்டும் என்று எல்லாரும் ஒருமித்த குரலில் சொல்ல, எல்லாருக்கும் தெரியும்படி சந்திரன் பத்திரிகையைத் தலைக்குமேல் உயர்த்திப்பிடித்துக் காட்டுவார். சில நேரங்களில் அவர்களில் யாராவது ஒரு ஆள் அந்தப் பத்திரிகையை வாங்கி கண்களுக்குப் பக்கத்தில் வைத்து, படத்தில் இருக்கும் குழந்தையையே உற்றுப் பார்ப்பதும் உண்டு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தற்கொலை செய்வது, வாகன விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் மரணம் அடைவது போன்ற செய்திகள் பத்திரிகையில் வந்தால், அவ்வகைச் செய்திகளை அறிந்து கொள்வதில் அவர்கள் எல்லாருமே மிகவும் ஆவலாக இருப்பார்கள். செய்தியைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சில நேரங்களில் யாராவதொரு ஆள் சொல்வான்: "பணமும் காரும் இருந்து என்ன பிரயோஜனம்? ஒரே நிமிஷத்துல உலகத்தைவிட்டே போயிட்டாங்களே!'' ஒருமுறை ஒரு திருமண விளம்பரத்தைப் பார்ப்பதில் ஒரு பிச்சைக்காரன் மிகவும் ஈடுபாடு காட்டினான். அதையே சிறிது நேரம் உற்றுப்பார்த்த அந்த ஆள் தாழ்ந்த குரலில் சொன்னான்: "இது என்னோட மகள்.''

அடுத்த நிமிடம் மற்ற பிச்சைக்காரர்கள் அப்படிச் சொன்ன பிச்சைக்காரனைப் பார்த்துக் கிண்டல் பண்ணினார்கள். இன்னும் சிலர் அவன் சொன்னதை நம்பாமல் பச்சைப்பொய் சொன்னதற்காக அந்த ஆளை பரிதாபத்துடன் பார்த்தார்கள். ஆனால், அந்த ஆள் பொய் சொன்னதாக சந்திரன் மனதில் படவில்லை. திருமண விளம்பரத்தைப் பார்த்த பிச்சைக்காரனைப் பார்த்து இன்னொரு பிச்சைக்காரன் சொன்னான்: "அப்படின்னா நீ கல்யாணத்துக்குப் போயிட்டு வரவேண்டியது தானே?'' அதற்கு அந்த முதல் பிச்சைக்காரன் சொன்னான்: "என்னோட மகள் கல்யாணத்திற்கு நான் எப்படிப் போவேன்?'' மற்றவர்கள் அந்த ஆள் சொன்னதை ஒரு தமாஷாக நினைத்து சிரித்தார்கள். அவனுடன் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள். தன் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும்போது, அவர்களை மறைந்து நின்று தான் பார்த்த நாட்களை அப்போது சந்திரன் நினைவு கூர்ந்தார். அவர் பரிதாபம் மேலோங்க, கவலைப்பட்டு நிற்கும் அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்தார். அந்த ஆள் என்னவோ சிந்தித்தவாறு தூரத்தில் தன் கண்களைப் பதித்து மவுனமாக நின்றிருந்தான்.

இன்றைய நாளிதழில் பிரசுரமாகியிருந்த மரண, திருமண விளம்பரங்களையும் செய்திகளையும் முழுமையாகப் படித்து முடித்தார் சந்திரன். கடைசியாக ஒருமுறை படிப்போமே என்று ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார். அப்போது, மரணச் செய்திகள் சாதாரணமாகப் பிரசுரம் செய்யப்படாத ஒரு பக்கத்தில் இருந்த ஒரு செய்தியின்மீது அவர் கண்கள் நிலைகுத்தி நின்றன.


ஒருவித பதைபதைப்புடன் அந்தச் செய்தியையே உற்றுப் படித்தார். மேலும் சந்தேகம் வரவே, பத்திரிகையைச் சற்று உயரப்பிடித்து முகத்துக்கு நேராக வைத்துப் படித்தார். சந்திரனின் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அவரின் முகத்திலும் கண்களிலும் இதற்குமுன் இல்லாத ஒரு வித மாற்றம்... அவர் நிசப்தமாக நின்றவாறு படித்தார் : "நீலேஸ்வரம். பிரபல சொற்பொழிவாளரும் சமூக சேவகருமான கிருஷ்ணதாஸ் (வயது 38) காலமானார். இவர் இதுவரை திருமணமாகாதவர்." நம்பிக்கை வராமல் மீண்டும் அந்தச் செய்தியையே படித்தார் சந்திரன். அவர் கண்கள் அந்தச் செய்தியையே உற்று நோக்கின. மீண்டும் மீண்டும் அவை அந்தச் செய்தியின் ஒவ்வொரு வார்த்தையாக மேய்ந்து பார்த்தன. அவர் நெஞ்சு "டிக் டிக்" என்று வேகமாக அடித்தது. இதயம் அடிப்பதை தன் காதால் அவரே கேட்டான். அப்போது அவரைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் கேட்டார்: "என்ன பாக்குறீங்க? நமக்குத் தேவையான செய்தி ஏதாவது வந்திருக்கா என்ன?'' "இல்ல....'' சந்திரன் சொன்னார்: "இன்னைக்கு உள்ள செய்திகள் முழுசா முடிஞ்சிடுச்சா?''  பிச்சைக்காரன் கேட்டான். "ஆமா...''  சந்திரன் சொன்னார். சொல்லிவிட்டு பத்திரிகையை அவர் கீழே வைத்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு பிச்சைக்காரர்கள் எல்லாரையும் பார்த்துச் சொன்னார்: "நான் ஒரு விஷயம் சொல்லணும்.'' அவர்கள் அவரை ஆவலுடன் பார்த்தார்கள். இப்படியொரு உரையாடல் அவர்களுக்குள் இப்போதுதான் முதல் முறையாக நடக்கிறது. சந்திரன் சொன்னார்: "நாளை முதல் நான் இங்கு இருப்பதாக இல்ல... நான் என் வீட்டுக்குத் திரும்பிப் போறதா இருக்கேன்.'' சந்திரன் சொன்னதும் பிச்சைக்காரர்கள் எல்லாரும் அதிர்ந்து போனார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களின் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. அவர் சொன்னார்: "என்னோட மனைவியின் காதலன் செத்துப்போயிட்டான். இனி நான் திரும்ப வீட்டுக்குப் போகலாம்.''

பிச்சைக்காரர்களில் ஒருசிலருக்கு சந்திரன் என்ன சொன்னார் என்பதே புரியவில்லை. புரிந்துகொண்டவர்கள் கண்களை விரித்து அவரையே பார்த்தார்கள். தன் வாழ்க்கையின் ரகசியப் பக்கங்களுக்கு திடீரென்று அவர்களைத் தள்ளிவிட்டு, அடுத்த நிமிடமே தங்களிடமிருந்து அவர் ஓடிப்போவதாக அவர்கள் எண்ணினார்கள். அவர் தங்களிடமிருந்து இல்லாமல் போவதை அவர்களால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. "அப்ப நாங்க என்ன செய்றது?'' ஒரு பிச்சைக்காரன் அவரைப் பார்த்துக் கேட்டான். அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். கடை உரிமையாளர் ஒரு கையில் டார்ச் விளக்கையும், இன்னொரு கையில் மதிய உணவுப் பொட்டலமும் சாவிக்கொத்தும் அடங்கிய ப்ளாஸ்டிக் பையையும் தூக்கிக்கொண்டு வரும் நேரம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. "என்னால போகாம இருக்க முடியாது. என் மனைவி ஏற்கெனவே என்கிட்ட மன்னிப்பு கேட்டு விளம்பரம் கொடுத்திருந்தா.'' சந்திரன் சொன்னார்: "எங்களுக்கு எல்லா காரியங்களும் ஒழுங்கா நடந்துக்கிட்டு இருந்துச்சு.'' ஒரு பிச்சைக்காரன் ஏக்கத்துடன் சொன்னான். "என்னால போகாம இருக்க முடியாது...'' சந்திரன் மீண்டும் சொன்னார். "எங்களோட பத்திரிகையை மட்டும் இவர் படிக்கலைன்னா, இவருக்கு எப்படி இந்த விஷயங்கள் தெரிஞ்சிருக்கும்?'' ஒரு பிச்சைக்காரன் மெதுவான குரலில் முணுமுணுத்தான். சந்திரன் பத்திரிகையைக் கையில் எடுத்து மீண்டும் தன் மனைவியின் காதலனின் மரணம் பற்றிய செய்தி பிரசுரமாகியிருந்த பக்கத்தையே உற்றுப் பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ, ஒருவித தீர்மானத்துடன் எழுந்து நின்றார். சந்திரன் கீழே வைத்த பத்திரிகையை, ஒரு பிச்சைக்காரன் எடுத்துப் பார்த்தான். எதுவுமே புரியாமல், அவன் அந்த நாளிதழைத் தன் கையிலேயே வைத்திருந்தான். "அப்ப நாளைக்கு பத்திரிகை வாங்க வேண்டாமா?'' ஒரு பிச்சைக்காரன் கேட்டான். "வாங்கு. நான் பத்திரிகையைப் படிக்கிறேன்.'' இன்னொரு பிச்சைக்காரன் சொன்னான். மற்ற பிச்சைக்காரர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவன் எதுவுமே தெரியாத ஒரு முட்டாள் என்பது அவர்கள் எல்லாருக்குமே தெரியும். "நாங்க சொல்றதை கொஞ்சம் கேளுங்க.'' இரண்டு பிச்சைக்காரர்கள் ஒரே நேரத்தில் சந்திரனிடம் சொன்னார்கள்: "எங்களுக்குக் கிடைக்கிற வருமானத்துல நால்ல ஒரு பங்கை உங்களுக்கு நாங்க தர்றோம். நீங்க இங்க இருந்தா, எங்களுக்கு மிகவும் உதவியா இருக்கும்.'' ஒரு பிச்சைக்காரன் அவரை விரலால் நோண்டியவாறு கேட்டான்: "எல்லாருக்கும்தான் பொண்டாட்டியும் பிள்ளைங்களும் இருக்காங்க. உங்களுக்கு மட்டும் என்ன தனி விசேஷம்? நீங்க வீட்டுக்குப் போயி என்ன பண்ணப் போறீங்க?'' சந்திரன் தன் தோள் பையுடன் கடைத் திண்ணையை விட்டுக் கீழே இறங்கினார். பிச்சைக்காரர்கள் எல்லாரும் பொம்மைகளைப்போல அவரையே பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தனர். சந்திரன் சற்று முன்னால் நடந்தார். பின்பக்கம் பார்த்து கையை ஆட்டியவாறு அவர் சொன்னார்: "பிறகு பார்க்கலாம்.'' ஏற்கெனவே முணுமுணுத்துக் கொண்டிருந்த அந்தப் பிச்சைக்காரன் அவரை நோக்கி மெதுவான குரலில் சொன்னான்: "பிறகு பார்க்கலாமாம், பிறகு! வெட்கமில்லாதவன்! திருட்டுப் பய! என்னைக்குமே எங்களை நீ பார்க்க வேண்டாம்...!'' மற்றொரு பிச்சைக்காரன் சொன்னான்: "காதலன் செத்துப் போயிட்டான்றதுக்காக, இவரோட பொண்டாட்டி இவரை மறுபடியும் ஏத்துக்குவான்னு என்ன நிச்சயம்? எல்லாம் இந்த ஆளோட நினைப்பு....'' சந்திரன் போவதை அவர்கள் கவலையுடனும், கோபத்துடனும் பார்த்தவாறு நின்றிருந்தனர். "இந்த ஆளு வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே இவரோட பொண்டாட்டி தற்கொலை செய்திருப்பா. இவர் அங்கே போறதே வீண்வேலை....'' ஒரு பிச்சைக்காரன் சொன்னான். அதைக் கேட்டு, ஒன்றிரண்டு பேர் அதை ஆமோதித்தார்கள். "ஒருவேளை அவளை இவர் கொலை செய்யணும்னு நினைச்சுப் போகலாம். அவளோட காதலன்தான் ஏற்கெனவே செத்துப்போயிட்டான்ல?'' இன்னொரு பிச்சைக்காரன் சொன்னான். "அங்கே போயி எதுவுமே சரியா இல்லைன்னா, இந்த ஆளு திரும்பவும் இங்கேதான் வரப்போறாரு.'' வேறொரு பிச்சைக்காரன் சொன்னான். அதற்குள் கடை உரிமையாளர் அங்கு வந்து விட்டிருந்தார். அவர் கையில் இருந்த சாவிக்கொத்து குலுங்கியது. பிச்சைக்காரர்கள் எழுந்து முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்கள் முன்னால் நடந்து சந்திரன் போன பாதையையே ஒருவித எதிர்பார்ப்புடன் எட்டி எட்டிப் பார்த்தார்கள். அவர் பஸ் நிறுத்தத்தில் காத்து நிற்பதை அவர்கள் பார்த்தார்கள். தங்களுக்குள் எதுவுமே பேசிக் கொள்ளாமல், உலகத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் எல்லாருக்குமே ஒரே மாதிரியாக இருக்கும் மெதுவான காலடிச் சத்தத்துடன் அவர்கள் எல்லோரும் பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள்மேல் கரும்புகையைக் கக்கியவாறு புஞ்ஞார்- கோட்டயம் ஃபாஸ்ட் பாசஞ்சர் அவர்களைக் கடந்து போனது.

அவர்கள் தங்கள் பாதங்களுக்குச் சற்று வேகத்தைக் கூட்டினாலும், சந்திரன் பஸ்ஸுக்குள் ஏறுவதையும், பஸ் அவரையும் ஏற்றிக்கொண்டு பாய்ந்து போவதையும்தான் அவர்களால் பார்க்க முடிந்தது. அந்தப் பிச்சைக்காரர்கள் கூட்டத்திற்குப் பின்னால் இருந்த குழந்தை இயேசுவின் சிலையைச் சுற்றி மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பிச்சைக்காரர்களில் ஒருவன் சங்கடம் கலந்த குரலில் தலையை ஆட்டியவாறு சொன்னான்: "எல்லாமே வெறும் ஆசை!''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.