Logo

வெளுத்த குழந்தை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6630
velutha kulanthai

ச்சிப் பொழுது. கோடை வெயில் பயங்கரமாகத் தகித்துக் கொண்டிருந்தது. பூமியிலிருந்து நெருப்பு ஜூவாலைகள் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றவோ என்பது மாதிரி இருந்தது. அந்த மணல் மீது கால் வைத்தால் நெய்யப்பம்போல கால்கள் வெந்துவிடும். ஒரு மனிதனால்கூட அந்தச் சமயத்தில் அதில் நடக்க முடியாது. எனினும், குஞ்ஞிமோன் நடந்தான். குழந்தைகளை அடையும்போது வெயில் குளிர்ந்துவிடும் அல்லவா? ஆனால், எவ்வளவு நேரம் வெயில் அப்படி குளிர்ச்சியாக இருக்க முடியும்? குஞ்ஞிமோன் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.

வயலுக்கு மத்தியில் இப்படியும் அப்படியுமாக வளைந்து போகின்ற ஒரு வாய்க்கால் இருந்தது. அதை அவன் பார்த்தான். மழைக்காலத்தில் காளைகள் கூட்டம் கூட்டமாக அந்த நீருக்குள் இறங்கிய வண்ணம் இருக்கும். அவற்றின் முதுகில் நீர் திவளை திவளையாகக் காட்சியளிக்கும். கிழக்குப் பக்கம் இருக்கும் ஏதோ மலைக் காடுகளிலிருந்து அவை ஓடி வருகின்றன. இடி முழக்கம் கேட்டு பயந்துபோய் அவை ஓடி வந்திருக்க வேண்டும். இடது பக்கமோ வலது பக்கமோ எதையும் பார்க்காமலே அவை படுவேகமாக ஓடி வரும். அந்தக் காளைகளில் ஏதாவ தொன்றின்மீது ஏறி உட்கார பலமுறை அவன் ஆசைப்பட்டிருக்கிறான். ஆனால், அவை ஒரு நிமிடமாவது ஒரே இடத்தில் நின்றால்தானே! இரண்டு பக்கங்களிலும் வளைந்து நிற்கும் முட்புதர்களில் தாடைகளை உரசியவாறு அவை போய்க் கொண்டிருக்கும். அருகிலுள்ள புதருக்குள் இருந்தவாறு ஒரு பொன்மான் அவற்றை அழைத்து என்னவோ கேட்கும். எங்கே போறீங்க அண்ணன்மார்களே?'' என்று அது கேட்டிருக்க வேண்டும். அதைக் கேட்டவுடன் களகளா'' என்று அந்தக் காளைகள் உரத்த குரலில் சத்தம் உண்டாக்கும். தொடர்ந்து, ஒரே ஓட்டம். இப்போது அந்த வாய்க்காலில் ஒரு காளைகூட இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்புகூட ஒரு காளையைக் குஞ்ஞிமோன் பார்த்தான். வண்ணாத்திப் பாறைக்குக் கீழேயிருந்த ஆழமான குழியின் ஒரு ஓரத்தில் பதுங்கிக் கொண்டிருந்தது அது. அதை முழுமையாகப் பார்க்க அவனால் முடியவில்லை. அதற்குள் அவனுடைய தாய் அவனைப் பார்த்து சத்தம் போட்டாள். சாயங்காலம் ஆயிடுச்சு. இங்கே வா பையா'' என்று. இன்று அந்த வாய்க்கால் வழியாகக் காளைகள் போனால்...! பார்க்கலாம். யாரும் அவனைத் தடுக்கப் போவதில்லை.

இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகளுடன்தான் அவன் வாய்க்கால் வழியே நடந்தான். மனதில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு புதிய போர்வையை விரித்திருப்பதைப்போல வாய்க்கால் கிடந்தது. குஞ்ஞிமோன் அந்த வாய்க்காலைப் பார்த்தான். ஒரு மெல்லிய காற்று அங்கிருந்து, தாயின் பெருமூச்சைப்போல கிளம்பி வந்தது. அதில் அவனுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. முழுவதுமாகக் காய்ந்து போயிராத வாய்க்காலோரத்தில் வளர்ந்திருந்த புல் பரப்பு வழியாக நடந்தும் போகலாம். சிறிது வளைந்தால்கூட எந்த பாதிப்பும் உண்டாகாது. நேரம் கடந்தால் முதலாளி மிகப்பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணிவிடுவார் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். மனதில் இனம் புரியாத ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது. எனினும், அந்த வாய்க்கால் கரையை விடத் தோன்றவில்லை. போகும்போது அவன் சிந்தித்துப் பார்த்தான். எதற்காக முதலாளி இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறார்? முதலாளி அவனுடனும் முதலாளியம்மா அவனுடைய தாயுடனும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டுதான் பேசுவார்கள். அது தேவையா? "நாங்க அவங்களுக்கு எதிரின்னு அவங்களுக்கு தோணும்போல இருக்கு.” குஞ்ஞிமோன் தனக்குள் கூறிக்கொண்டான். அவனுடைய தாய் அந்த வீட்டிலுள்ளவர்களுக்காக எதையெல்லாம் செய்து கொடுக்கிறாள்! ஆகாயம் அளவிற்குப் பெரிதாக இருக்கும் செப்புக் குடத்தை நிறைத்து இடுப்பில் வைத்துக்கொண்டு கிணற்றுப் பக்கத்திலிருந்து சமையலறைக்கும் குளியலறைக்கும் எத்தனை முறைகள் அவனுடைய தாய் நடக்கிறாள். ஒவ்வொரு குடம் நீரையும் ஊற்றிவிட்டுத் தன் தாய் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டு நிற்பதை அவன் பார்த்திருக்கிறான்.

இது போதும், அம்மா.'' குஞ்ஞிமோன் கூறுவான்.

பெரியவர் குளிக்க வேண்டாமா?'' என்று அவனுடைய தாய் கேட்பாள். மழை பெய்து கொண்டிருக்கும்போதும் அவள் நீர் மொண்டு கொண்டு இருப்பாள். அந்த அளவிற்கு நிறைய நீர் வேண்டுமென்றால் பெரியவர் அந்த மழையில் இறங்கி நிற்கலாமே! அதையும் செய்வதில்லை. எவ்வளவு விறகுகளை வெட்டுவது! எவ்வளவு வேட்டிகளைத் துவைப்பது! முற்றத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்... சாணம் மெழுக வேண்டும்... எல்லாவற்றுக்கும் அவனுடைய தாய் இருந்தாக வேண்டும். எனினும், அவனுடைய தாயிடம் எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டும்? எல்லா வேலைகளும் முடிந்த பிறகு அவனுடைய தாய் தளர்ந்து போய் நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு விடுவாள். இடுப்பில் கையை வைத்து சமையலறைச் சுவர்மீது சாய்ந்து நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது மனதில் வருத்தமாக இருக்கும். அவள் மூச்சு விடும்போது வாழைக்காய் தோல்களைப்போல வாடித் தொங்கிக் கொண்டிருக்கும் மார்பகங்கள் மேலும் கீழுமாய் அசைந்து கொண்டிருக்கும். அப்போது என் அம்மா...'' என்று கூறியவாறு அவளின் இடுப்பை இறுகப் பற்றிக்கொண்டு நிற்க வேண்டும்போல் அவனுக்கு இருக்கும். எனினும், குஞ்ஞிமோன் அதைச் செய்த தில்லை. முதலாளியம்மா அதைப் பார்த்துவிட்டால் ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணி விடுவாள். இந்த கொஞ்சுற வேலைகளெல்லாம் இங்கே இருக்கக்கூடாது... தெரியுதா?'' என்று சத்தம் போடுவாள். பிறகு அந்தச் செய்தி முதலாளியிடம் போகும். தன் தாயைக் கட்டிப் பிடித்தது ஒரு குற்றமான செயலாக நினைக்கப்படும். அதைப் பற்றி விசாரணை நடக்கும். அதனால் குஞ்ஞிமோன் தன் தாய் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே நின்றிருப்பான். இன்று அப்படிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது கட்டளைக் குரல் காற்றில் மிதந்து வந்தது. ஓடு.. சலவை செய்கிறவன்கிட்ட போய் எல்லா துணிகளையும் கொண்டு வரச் சொல்லு!'' முதலாளியம்மாவின் பார்வையிலிருந்து விலகும் வரை அவன் ஓடிக்கொண்டேயிருந்தான். அதற்குமேல் அவனால் ஓட முடியவில்லை.

குஞ்ஞிமோன் வாய்க்கால் கரை வழியே மெதுவாக நடந்தான். வெயில் "சுள்'ளென்று அடித்துக் கொண்டிருந்தது. காற்றும் படு வெப்பமாக இருந்தது. எனினும் அவன் அவசரமில்லாமல் சாதாரணமாகவே நடந்தான். அவனுக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது. பசி எடுத்தது. கொஞ்சம் கஞ்சி வாங்கிக் குடிக்கலாம் என்று போன சமயத்தில்தான் சலவைக்காரனிடம் போகும்படி அவனுக்கு உத்தரவு போடப்பட்டுவிட்டது. கஞ்சியைப் பற்றி நினைத்தபோது அவனுக்கு பசி அதிகமாகியது. எனினும், அவனால் நடக்காமல் இருக்க முடியவில்லை.

வாய்க்கால் கரையில் அப்போதும் வாடாமல் நின்றிருந்த அப்பச் செடிகள் புதரென வளர்ந்திருந்தன. இலைகள் மிகவும் தளர்ந்துபோய் காணப்பட்டன.


என்னால முடியாது'' என்று கூறிக் கொண்டு அவை  நின்றிருந்தன. குஞ்ஞிமோன் ஒரு செடியின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, சிறிது நேரம் அதையே பார்த்தவாறு நின்றிருந்தான். பிறகு மெதுவான குரலில் அவன் பாடினான்:

அப்பச் செடிக்கொரு அப்பன் இருந்தான்.

பாவைக்காயைப்போல வளைந்த ஓர் அப்பன்

ஓணப்பூ சூடி வருமோரப்பன்

ஓலக் குடை இல்லாமல் வரும் நேரம்

சூடுள்ள தேவி பிடித்ததில்

உடலெங்கும் கொப்புளம் உண்டாகி செத்துப் போனான்.''

அந்தப் பாட்டைக் கேட்டபோது, அப்பச் செடிகள் வெட்கத்தால் ஒரு மாதிரி ஆகிப் போய் ஆடின. குஞ்ஞிமோன் சிரித்துக் கொண்டே முன்னோக்கி ஓடினான்.

வாய்க்கால் இரண்டு இடங்களில் வளைந்து, மூன்றாவது வளைவில் ஒரு ஆலமரம் இருந்தது. அது எப்போதும் சலசலத்துக் கொண்டே இருக்கும். சிறுவன் இன்னும் விளையாட்டு எண்ணத்திலேயே இருந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது. எதிரில் இருந்த கோவில் திருவிழா முடிந்து மூடப்பட்டிருந்தது. திருவிழா முடிந்துவிட்டால் ஏழு நாட்களுக்கு கோவிலைத் திறக்க மாட்டார்கள். இன்றுடன் மூன்று நாட்களே ஆகியிருக்கின்றன. தேவி சைத்தான்களை அவிழ்த்துவிடும் நேரமிது. அதை நினைத்தபோது அவனுக்கு பயமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தான். யாருமில்லை. இந்த வெயில் நேரத்தில் சைத்தானால் நடக்க முடியுமா? சைத்தான்கள் எப்போது நடப்பார்கள்? அது அவனுக்குத் தெரியாது. இப்போது சைத்தான்கள் ஓடித் திரியக் கூடிய நேரமாக இருந்தால்?

முன்னோக்கி நடக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வரவில்லை. திரும்பிப் போகலாம் என்றால்...? பெரிய அளவில் கலவரம் உண்டாகும். முதலாளியம்மா  அவனை அடித்து முதுகைப்பதம் பார்த்து விடுவாள். யாராவது இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடன் சேர்ந்து அவன் போய்விடுவான். அவன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தான். ஒரு உயிர்கூட கண்ணில் தெரியவில்லை. போகலாமா? திரும்பி விடுவதா? கடைசியில் இரண்டுமே வேண்டாம் என்ற முடிவுக்கு அவன் வந்தான். இந்த ஆலமரத்திற்கு அடியிலேயே  இருப்போம். அப்போது யாராவது வருவார்கள் என்று அவன் தீர்மானித்தான்.

இடிந்து சிதிலமடைந்து காணப்பட்ட அந்த ஆலமரத்திற்குக் கீழே இருந்த பீடத்தின்மீது அவன் ஏறினான். ஆலமரத்திற்குக் கீழே தங்க நிறத்தில் புள்ளிகளைக் கொண்ட ஒரு நீல நிற விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. முதலாளியம்மாவின் படுக்கையறையில்கூட அந்த அளவிற்கு அழகான விரிப்பு இல்லையென்பதை சிறுவன் நினைத்துப் பார்த்தான். தன்னால் அதில் உட்கார முடியுமா என்றும் அவன் அப்போது சிந்தித்தான். எனினும், உட்கார்ந்தான். என்ன சுகம்! யாரோ வந்து தன் உடம்பைத் தடவி விடுவதைப்போல் அவனுக்குத் தோன்றியது. தன்னுடைய தாய் கைகளால் தடவுவதைப்போல அவன் உணர்ந்தான்.

அவன் மரத்தின் கீழ்ப்பகுதிமீது சாய்ந்து உட்கார்ந்தான். அடடா! அவனுடைய கண்கள் தாமே மூடின. தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் இருந்த பொன் நிறப் புள்ளிகள் எழுந்து நடக்க ஆரம்பித்தன. நடக்கவில்லை... நீந்தின. வரிசையாகப் பொன் நிறத்தில் படகுகள் முன்னோக்கிப்  போய்க் கொண்டிருந்தன. படகுகள் வருகின்றன; போகின்றன. முடிவே இல்லாத ஒரு ஊர்வலம்! அவை பறக்கும் படகுகளா? மேல்நோக்கி உயர்ந்து போய்க் கொண்டே இருந்தன. மேகங்களுக்குள் நுழைந்து மறைந்து கொண்டிருந்தன. சிறுவன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று தான் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஆலமரம் மெத்மெத்தென்று இருப்பதைப்போல் அவன் உணர்ந்தான். அவன் மேலும் சாய்ந்து உட்கார்ந்தான். சதைப்பிடிப்பான உடம்பின்மீது சாய்ந்து உட்கார்ந்திருப்பதைப்போல இருந்தது. அவன் தலையையும் மரத்தின்மீது வைத்தான். நல்ல சுகம்!

தலைக்கு மேலேயிருந்து புல்லாங்குழலின் இனிய இசை கேட்டது. அவன் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு அதைக் கேட்டான். ஓ... காற்று பாட்டு பாடிக்கொண்டிருந்தது. அந்த இசை உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. அது தன்னுடைய நரம்புகள் வழியாகப் போய்க் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். கம்பி வழியாகப் பரவுவதைப்போல அந்த ஓசை பயணம் செய்தது. ணிம்... ணிம்... ணிம்... இப்படிக் கேட்டது அது. இனிமையான அனுபவம்தான்!

அதே நேரத்தில் தலைக்கு மேல் ஒரு ஆர்ப்பரிப்பு! சிறுவன் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டான். தலையை உயர்த்திப் பார்த்தான். பயங்கரம்! யானைத் தந்தம்போல வெள்ளை நிறத்தில் அரிவாளைப்போல வளைந்த இரண்டு பற்கள். அவை இரண்டும் வாயின் இரண்டு பக்கங்களிலும் நீட்டிக் கொண்டிருந்தன. நெற்கதிரைப்போல தொங்கிக் கொண்டிருந்த முரட்டு மீசை... பந்தத்தைப்போல சிவந்த கண்கள்... தலை முடிக்கு பதிலாக நெருப்பு ஜுவாலைகள்... சிறுவன் ஒருமுறைதான் பார்த்தான். கண்களைச் சிமிட்டியது மாதிரி இருந்தது. அது ஒரு... சைத்தான்! தான் சாய்ந்து உட்கார்ந்திருந்தது ஒரு சைத்தானின் கால் மீதுதான் என்பதைச் சிறுவன் புரிந்துகொண்டான். அவனால் அந்த இடத்தை விட்டு உடலை அசைக்க முடியவில்லை. ஒட்டி இருக்கவும் முடியவில்லை. மொத்தத்தில் உறைந்து போனது மாதிரி ஆகிவிட்டான் அவன். எதுவும் புரியாமல் விழித்தவாறு உட்கார்ந்திருந்தான்.

மீண்டும் மீண்டும் உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் உடலை என்னவோ செய்தது. கூர்மையான ஊசி குத்துவதைப்போல் அவன் உணர்ந்தான். ஒவ்வொரு சிரிப்பும் முட்களாலான ஏதோவொன்றை உடம்பிற்குள் நுழைத்துக் கொண்டிருந்தது.

திடீரென்று சைத்தான் தன் கால்களை நீட்டினான். அடுத்த நிமிடம் சிறுவன் மல்லாக்கப் போய் விழுந்தான். எழுந்து மேலே அவன் வந்தான். சைத்தான் அவனை பந்தைத் தட்டுவதைப்போல ஒரு தட்டு தட்டினான். சிறுவன் மேலே போய்க் கொண்டே இருந்தான். வெப்பமும் குளிர்ச்சியும் வேகவேகமாக மாறி மாறித் தோன்றிக் கொண்டேயிருந்தன. மேகங்களிலிருந்த நீர்த் துளிகள் உடம்பில் பட்டன. அதே நேரத்தில் சூரியனின் வெப்பம் நிறைந்த கதிர்கள் அவற்றின்மீது விழுந்து அவற்றை ஒன்றுமில்லாமற் செய்தன. பறந்து போய்க் கொண்டிருந்த வெள்ளை நிறப் பறவை களின் சிறகுகள் அவனுடைய மூக்கில் பட்டன. ஒரு இடத்திலும் நிற்காமல் அவன் மேல்நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தான். மீண்டும் ஒரு பரபரப்பு. சிறுவன் திடீரென்று கீழே விழுந்தான். ஒரு பச்சை மாங்காயைப்போல அந்தக் கறுப்புச் சிறுவன் கீழே விழுந்தான். அப்போது நெஞ்சிலிருந்து ஒரு நெருப்பு ஜுவாலை மேல்நோக்கிச் செல்வதைப்போல அவன் உணர்ந்தான்.

உயிர் போய்விட்டது என்றுதான் அவன் நினைத்தான். ஆனால், அவன் விழவில்லை. பஞ்சு போன்ற ஏதோவொன்றின்மீது தான் இருப்பதை அவனால் உணர முடிந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு அவன் சுற்றிலும் பார்த்தான். சைத்தானின் உள்ளங்கையில் தான் இருப்பதை அவனால் தெரிந்துகொள்ள முடிந்தது.


ஒரு கல் விளக்கில் புகைத்து கொண்டிருக்கும் திரிதான் தான் என்பதை அவனால் உணர முடிந்தது. சைத்தானின் பந்தத்தைப் போன்ற கண்கள் அவனுக்கு நேராகத் திரும்பின. ஜுவாலைகள் அவனுடைய முகத்தின் மீது பட்டன. சைத்தான் மீண்டும் உரத்த குரலில் சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்துக் கேட்டான்: யார் நீ?''

நான்...'' சிறுவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. அவன் தன் கைகளால் என்னவோ சைகை செய்தான். அதைப் பார்த்து சைத்தான் தன்னால் முடிந்த அளவிற்கு சாந்தமான குரலை வரவழைத்துக் கொண்டு கேட்டான்: குழந்தை... நீ யார்?''

குஞ்ஞிமோன்.''

குஞ்ஞிமோன், நீ எதற்கு இங்கே வந்தே?''

சலவை செய்யும் ஆளைத் தேடிப் போய்க்கிட்டு இருந்தேன்.''

இது நாங்க இருக்குற இடம்னு தெரியாதா?''

தெரியும்...''

அப்படியா? தெரிஞ்சே வந்திருக்குற உன்னை நான் வரவேற்கிறேன்.'' ஒரு கறுத்த பெட்டியைக் கீழே வைப்பதைப்போல அவனைக் கீழே வைத்த சைத்தான் தொடர்ந்து சொன்னான்:

நீ என் கூட வந்திடு.''

அய்யோ... நான் வரல.''

எதுனால வரல?''

எனக்கு...''

உனக்கு...? முழுசா சொல்லு.''

பயமாயிருக்கு...'' குஞ்ஞிமோன் அழுவதைப்போல சொன்னான்.

என்னைப் பார்த்து பயம் தோணுதா? ஆனா, உன்னை சிறிதுகூட தொந்தரவு செய்ய மாட்டேன். உன்னை என்கூட வசிக்க வைக்கிறேன். உனக்கு தேவைப்படுறதையெல்லாம் நான் தர்றேன்.''

எனக்கு எதுவுமே வேண்டாம்.''

முட்டாள்! சொல்றதை முழுசா கேளு. உனக்கு குடிக்கிறதுக்கு உலகத்திலுள்ள எல்லா மலர்கள்ல இருந்தும் தேன் எடுத்துக் கொண்டு வந்து தர்றேன். ரத்தினம் பதிக்கப்பட்ட ஆடைகள் தர்றேன். பூமிக்கு அடியில நாகங்கள் ஏராளமா பாதுகாத்து வச்சிருக்குற நட்சத்திரங்களைப் போன்ற ரத்தினங்களை உனக்கு விளையாடுறதுக்காக கொண்டு வந்து தர்றேன். சரிதானா?''

வேண்டாம். நான் என் அம்மாக்கிட்ட போகணும். அம்மா எனக்காகக் காத்திருப்பாங்க.''

நினைக்கிறதைவிட மனிதர்கள் சீக்கிரமா மறந்துடுவாங்க. பத்து நாள் கழிஞ்சா, உன் தாய் உன்னை மறந்துடுவா.''

இல்ல... என் தாய் வாழ்றதே என்னை நினைச்சுத்தான்.''

அதெல்லாம் மனிதர்கள் சும்மா சொல்றது. உனக்கு தந்தை இருக்கானா?''

இல்ல...''

உன் தந்தை இறந்தபிறகும் உன் தாய் வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்கா?''

நான் என் அப்பா மாதிரியே நகலெடுத்த மாதிரி இருக்கேன்னு அம்மா சொல்லுவாங்க. அப்பா இல்லாத கவலை தீர்றதே என்னைப் பார்த்துத்தான்.''

நீ இல்லைன்னா வேற ஒரு குழந்தையை எடுத்து வளர்த்து அவன்கிட்ட உன்னைப் பார்த்துக்குவா உன் தாய்.''

அது நடக்காது.''

எதை வச்சு சொல்ற?''

நான்தான் அம்மாவோட பாலைக் குடிச்சு வளர்ந்திருக்கேன்.''

அதுல சிறப்பா சொல்றதுக்கு என்ன இருக்கு? அங்கே பாரு...''

குஞ்ஞிமோன் சைத்தான் சுட்டிக் காட்டிய பக்கம் பார்த்தான். அங்கே காட்டிலிருந்த ஒரு மரத்திற்கடியில் ஒரு பெண் சிங்கம் தன்னுடைய குட்டியுடன் படுத்திருந்தது. சைத்தான் கேட்டான்: அந்த பூனைக்கண்ணி எப்பவும் இந்த குட்டிகூட இருக்குமா என்ன? குட்டி வளர்ந்தபிறகு தன் விருப்பப்படி போயிடும். இந்தப் பெண் சிங்கத்தின் தாயை எனக்குத் தெரியும். அது இப்போ எங்கே இருக்குன்னு இதுக்குத் தெரியவே தெரியாது. மறந்துடுச்சு. உன் தாயும் உன்னை மறந்துடுவா.''

என் தாய் சிங்கம் மாதிரி இல்ல. என் தாயால என்னை மறக்க முடியாது.''

இந்த நம்பிக்கைதான் மனிதர்களை பலமில்லாதவர்களா ஆக்குறதே...''

தாயைப் பற்றி நினைக்கிறப்போதான் எனக்கு பலமே உண்டாகுது.''

அதைக் கேட்டு சைத்தான் சிரித்தான். ஆழமான குகைக்குள்ளிருந்து கிளம்பி வரும் ஒரு முழக்கமாக இருந்தது அது.

என்னை விட்டுடு...'' குஞ்ஞிமோன் மீண்டும் கெஞ்சினான்.

நீதான் பலமுள்ளவனாச்சே! உன் தாயை மனசுல நினைச்சுக்கோ. அப்படின்னா உனக்கு அதிக பலம் கிடைக்குமே! அதுக்குப் பிறகு என்னைத் தோற்கடிச்சிட்டு, நீ உன் விருப்பப்படி போ!''

என்னை எதுக்காக இப்படி பிடிச்சு வைக்கணும்?'' குஞ்ஞிமோன் கவலையுடன் கேட்டான்.

பிடிச்சதுனால.. குஞ்ஞிமோன், உன்னை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. என்கூட வா.''

மாட்டேன். உன் அளவுக்கு பலமில்லைன்னு நினைச்சு என்னை தூக்கிட்டுப் போறது நல்லதா?''

சைத்தான் சிறிது நேரம் சிந்தித்தான். அந்தச் சிறுவனின் முகத்தை மீண்டும் அவன் உற்றுப் பார்த்தான். அந்த பந்தங்களிலிருந்து கிளம்பிய ஜுவாலைகளுக்கு முன்பு இருந்ததைப்போல உஷ்ணம் இல்லை.

நான் பலத்தைக் கொண்டு உன்னை தோற்கடிக்கணும்னு நினைக்கல. என்கிட்ட இருக்குற அளவுக்கு பலத்தை நான் உனக்கு உண்டாக்கித் தர்றேன். சரிசமமான பலத்தை வச்சிக்கிட்டு நீ என்னைத் தோல்வியடையச் செய்யணும். அதுக்குப் பிறகு நீ என்னை விட்டுப் போகலாம்.''

என்னால ஒரு சைத்தானைத் தோற்கடிக்க முடியுமா?''

முயற்சி பண்ணிப் பாரு. நீ வெற்றி பெற்றால், நான் உன்னோட அடிமையாகத் தயார். நான் வெற்றி பெற்றால், நீ என்னோட அடிமையாக வேண்டாம். என்கூட இருந்தா மட்டும் போதும். என்ன சொல்ற?''

வேண்டாம்...''

நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன். இனி உன் விருப்பம்...'' சைத்தான் அருகிலிருந்த மரங்களடர்ந்த காட்டைக் கையால் தடவினான். அது அடுத்த நிமிடம் சிவந்த புள்ளிகளைக் கொண்ட ஒரு கரும் பாறையாக மாறியது. சைத்தான் அதன்மீது அமர்ந்து கொண்டு சொன்னான். நீ முடிவெடு.''

சைத்தான் மேல்நோக்கித் தன் கைகளைத் தூக்கியவாறு உரத்த குரலில் கத்தினான். வா...!'' எங்கிருந்து என்று தெரியவில்லை. ஏராளமான சுவையான பழங்கள் கீழே விழுந்தன. அதற்குப் பிறகு காட்டெருமையின் தோல் உரிக்கப்பட்ட தொடைகள் வந்து விழுந்தன. இனிப்பான பழங்களை அவன் குஞ்ஞிமோனிடம் எடுத்துக் கொடுத்தான். இந்தா, சாப்பிடு.'' பிறகு, காட்டெருமையின் தொடைகளைத் தன்னுடைய நீளமான பற்களுக்கிடையில் திணித்து இழுத்தான்.

குஞ்ஞிமோன் அந்தப் பழங்களைக் கையால்கூட தொடவில்லை. அவன் உட்கார்ந்து கொண்டு சிந்தித்தான். சைத்தான் எலும்புகளை சதுப்பு நிலத்தை நோக்கி விட்டெறிந்து கொண்டிருந்தான். அவை மண்ணில் குவிந்து கிடந்தன. ஒரு நிமிடம் கழிந்தவுடன், அந்த எலும்புத் துண்டுகள் பூக்க ஆரம்பித்தன. ரத்தத் துளிகளைப்போல இருந்தன பூக்கள்! எல்லாம் முடிந்தவுடன், சைத்தான் கேட்டான்: நீ ஏன் எதையும் சாப்பிடல?''

நான் என் தாய்கிட்ட போன பிறகுதான் சாப்பிடுவேன்.'' குஞ்ஞிமோன் உறுதியான குரலில் சொன்னான். அதைக் கேட்டு சைத்தானுக்குச் சிரிப்பு வந்தது. அந்தப் பாறை போன்றிருந்த வயிறு அப்போது ஆடியது.

அப்படின்னா என்னைத் தோல்வியடையச் செய்திட்டு நீ உன் தாயைத் தேடிப் போ. நான் முதல்ல உனக்கு எல்லா விஷயங்களையும் சொல்லித் தர்றேன். சம்மதம்தானா?''


வேறு வழியில்லை என்பதை குஞ்ஞிமோன் புரிந்து கொண்டான். அவன் சிறிது நேரம் நீளமான பற்களுடன் திறந்த நிலையில் காட்சியளிக்கும் அந்த அவலட்சணமான வாயையே பார்த்தான். பிறகு சொன்னான்: சரி... என்னை பலசாலியா ஆக்கு.''

இப்போ சொன்னதுதான் புத்திசாலித்தனமானது.'' சைத்தான் பாறையை விட்டு எழுந்து நின்றான். பாறை மீண்டும் காடாக மாறி காற்றில் அசைந்து விளையாடியது. சைத்தான் குஞ்ஞிமோனை அருகில் நிற்க வைத்து பல விஷயங்களையும் கற்றுத் தந்தான். பூமியிலும் ஆகாயத்திலும் சுதந்திரமாகப் பயணம் செய்ய அவனால் முடிந்தது. விருப்பம்போல வடிவத்தை மாற்றிக்கொள்ள சொல்லித் தந்தான். இடம், காலம் எதுவும் அவனுக்குப் பிரச்சினையே இல்லை என்றானது. எல்லாவற்றையும் கற்றுத் தந்த பிறகு சைத்தான் சொன்னான். இப்போ நாம இருவரும் சமபலம் கொண்டவர்களா ஆயிட்டோம். இனி நாம போட்டி போட்டுப் பார்க்கலாம். உன்னால தப்பிக்க முடியுமான்னு பாரு. நான் அதைத் தடுக்க முயற்சிப்பேன்.''

சரி...''

குஞ்ஞிமோன் அடுத்த நிமிடம் புகையாக மாறி மேல் நோக்கி உயர்ந்து போனான். ஆகாயத்திற்குச் சென்று ஒரு மேகக் கூட்டமாக மிதந்து செல்ல ஆரம்பித்தான். சைத்தான் அதைப் பார்த்துச் சிரித்தான். பிறகு பலமாக அவன் ஊதினான். அந்தக் கடுமையான காற்று அந்த மேகக் கூட்டத்தை பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்தது. பூமியைத் தொட்டதும் குஞ்ஞிமோன் தன்னுடைய சொந்த உருவத்தை அடைந்தான். உடனே குஞ்ஞிமோன் ஒரு நெருப்புத் துண்டமாக மாறி சைத்தானின் சிவப்பு நிற மீசையில் போய் விழுந்தான். சைத்தான் அழ ஆரம்பித்தான். அடுத்த நிமிடம் மிகப் பெரிய அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழையில் நெருப்புத் துண்டம் அணைந்தது. குஞ்ஞிமோன் பலமான காற்றாக மாறி வேகமாக வீசினான். சைத்தான் மிகப் பெரிய மலையாக மாறி அந்தக் காற்றைத் தடுத்தான். இப்படி குஞ்ஞிமோன் பல வடிவங்கள் எடுத்து ஓடி ஒளிய முயற்சி செய்தான். எல்லா இடங்களிலும் சைத்தான் எதிர்த்து நின்றான். கடைசியில் இரண்டு பேரும் போர் புரிய நின்றார்கள். இருவரும் பெரிய மலைகளாக மாறிப் போரிட்டார்கள். அதில் குஞ்ஞிமோன் தோல்வியைத் தழுவினான். அவனுடைய தலையிலிருந்து ரத்தம் அருவியென வழிந்து மைதானத்தில் விழுந்து ஓடிக்கொண்டிருந்தது. இறுதியில் குஞ்ஞிமோன் சைத்தானைப் பார்த்துச் சொன்னான்: நான் உன்கூட வர்றேன்.''

சைத்தான் மகிழ்ச்சியடைந்து ஆர்ப்பரித்தான். பிறகு சிறுவனைத் தூக்கித் தன்னுடைய தோளில் வைத்துக்கொண்டு வானத்தின் வழியாகப் பயணம் செய்தான். அப்போது பாசம் பொங்கிய குரலில் சைத்தான் சொன்னான்: நீ நல்லவன். புத்திசாலி. இப்போ பலசாலியும்கூட. உனக்கு எப்படியெல்லாம் வெற்றி பெறணுமோ, அப்படியெல்லாம் வெற்றி பெற்றுக்கொள். நான் உனக்கு உதவுறேன்.''

ம்...'' குஞ்ஞிமோன் சைத்தானின் காதைப் பிடித்தவாறு உட்கார்ந்து கொண்டு மெதுவான குரலில் சொன்னான்.

உன்னால என்னை எப்போ தோல்வியடையச் செய்ய முடியுதோ, அப்போ நீ உன் தாயைத் தேடிப் போகலாம்.''

இது உண்மையா?''

சத்தியமா.''

அதற்குப் பிறகு குஞ்ஞிமோன் எதுவும் பேசவில்லை. அவன் காதைப் பற்றிக் கொண்டு சைத்தானின் தோளில் உட்கார்ந்திருந்தான். கீழே குன்றுகளும் மலைகளும் மைதானங்களும் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. நீர்யானைகள் நிறைந்திருக்கும் பெரிய நதிகள் கண்ணில் தெரிந்தன. தொடர்ந்து திமிங்கிலங்கள் காட்சியளிக்கும் அலை கடல்கள், சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்த கோவில் கோபுரங்கள், விஷக்காற்று பட்டு நீல நிறம் பாய்ந்த மிகப் பழமையான பாம்புப் புற்றுகள்... இப்படி ஒவ்வொன்றும் கடந்து போய்க் கொண்டேயிருந்தன. அந்தப் பயணம் சுவாரசியமற்றது என்று கூறுவதற்கில்லை. எனினும், தன் தாயைப் பற்றி எண்ணியபோது குஞ்ஞிமோன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். புருவத்தின்மீது கையை வைத்து தன்னுடைய  மகனை எதிர்பார்த்துக் காத்தவாறு தூரத்தில் தெரியும் நெல் வயல்களைப் பார்த்து நின்றிருக்கும் தன் அன்னையின் முகம் அவனுடைய மனதில் தோன்றியது. அந்த நிமிடமே கீழே குதிக்க வேண்டும்போல் அவனுக்கு இருந்தது. ஆனால், அவனை சைத்தான் விட்டால்தானே? முடியாத விஷயம் அது. அவன் தன்னை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அடுத்த நிமிடம் மூடு பனிக்குள் ஓசையெழுப்பியவாறு அவர்கள் பயணித்தார்கள்.

சைத்தானே!'' குஞ்ஞிமோன் அழைத்தான்.

என்ன குஞ்ஞிமோன்?''

நாம எங்கே போறோம்?''

பிரபஞ்சத்தின் நடுப்பகுதிக்கு.''

நாம ஏன் அங்கே போறோம், சைத்தானே?''

அங்கேதான் நான் வசிக்கிறேன்.''

ஏன் இப்படியொரு மூடுபனி?''

இந்த மூடுபனிதான் எல்லாரையும் இயக்கிக்கிட்டு இருக்கு.'' அதைச் சொன்ன சைத்தான் தன் கையைச் சுழற்றி வீசினான். அங்கிருந்த மூடுபனி சற்று விலகியது. அப்போது மூடுபனியாலான ஒரு புல்லாங்குழல் வழியாக அவர்களின் பயணம் தொடர்ந்தது.

இந்த மூடுபனி எதுக்கு இருக்கு தெரியுமா, குஞ்ஞிமோன்?''

எனக்கு எப்படித் தெரியும்?''

குஞ்ஞிமோன், உனக்கு மன்னனாகணும்ன்ற ஆசை இருக்கா?''

எனக்கு என் தாய்க்கிட்ட போகணும்ன்றதுதான் ஆசை.''

தாயையும் பக்கத்துல வச்சிக்கிட்டு மன்னனாகறதா இருந்தா?''

ஆசை இருக்கு.''

அந்த ஆசையை உண்டாக்கியதே இந்த மூடுபனிதான். சொர்க்கத்து கன்னிப் பெண்களை அழைத்து இதுமேல நிற்க வைத்து அழச் செய்யும். அவங்களோட கண்ணீர்த் துளிகள் பொலபொலவென விழும். அந்தக் கண்ணீர்ல இந்த மூடுபனியை மிதிச்சு குழைச்சுத்தான் ஆசை உண்டாக்கப்படுது. இல்லாட்டி ஒரு உயிருக்குக்கூட ஆசை என்பதே உண்டாகாது.''

அப்படியா?'' குஞ்ஞிமோன் ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்து உட்கார்ந்திருந்தான். அப்போது வேகமாக வீசிய காற்று வந்து மோதிதான் அவன் தன் வாயையே மூடினான்.

அவன் தூரத்தில் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். திடீரென்று தூரத்தில் ஆகாயத்தில் ஒரு பொன் வளையம் தெரிந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதானது. வளையம் ஒரு மிகப் பெரிய  வட்டமானது... கோவில் கோபுரத்தைப் போலானது... குளம் அளவிற்குப் பெரிதானது... அது இந்த பூமிக்கு நடுவில் கட்டப்பட்ட ஒரு பட்டு நூலைப் போலானது.

அது என்ன, சைத்தானே?''

நெருப்பு வளையம்.''

அது வழியாவா நாம போகணும்?''

ஆமா...''

அய்யோ... சுட்டுடாதா?''

பயப்படாதே. இது எதுக்கு தெரியுமா? இதை வச்சுத்தான் நரியோட கண்களும் ஓநாயோட பல்லும் உண்டாக்கப்படுது. காண்டாமிருகத்தோட கொம்புகூட இதுதான்.''

இவ்வளவையும் சொல்லி முடித்தபோது அவர்கள் அந்த வளையத்தை விட்டு வெளியே வந்திருந்தார்கள். குஞ்ஞிமோன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அது ஒரு மிகப் பெரிய வளையமாகத் தோன்றி எரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து இறக்கையை விரித்து நடனமாடும் மலை தெரிந்தது. அந்த மலையிலிருந்து பல அருவிகள் பாய்ந்தோடுவது தெரிந்தது.


பார்த்தியா? அந்த அருவிகள்ல வர்ற நீர் தலையில விழுந்துதான் யானைக்கு மதம் பிடிக்கிறது...''

அப்படியா?''

அலகுகள் இணைக்கப்பட்டு கோட்டைக் கதவுகளைப்போல நின்றிருந்த பிரம்மாண்டமான இரண்டு கோழிகளின் கழுத்திற்கு அடியில் அவர்கள் பயணம் செய்தார்கள். அவற்றின் பாதங்கள் பட்டு பூமியில் சிறுசிறு கிணறுகள் உண்டாயின.

அந்தக் கோழிகள் எப்பவும் கொத்திக் கொண்டே இருக்கும்...''

முழுவதையும் கேட்பதற்கு முன்பே அவர்கள் கோழிகளைத் தாண்டி நீண்ட தூரம் போய் விட்டிருந்தார்கள். எங்கும் இருட்டு பரவியது.

சைத்தானே!'' குஞ்ஞிமோன் அழைத்துச் சொன்னான். கண் கொஞ்சம்கூட தெரியல...''

மன்னிச்சிக்கோ.''

அவன் மன்னித்தான். அவர்கள் கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் அவர்கள் இருட்டினூடே கீழ் நோக்கிப் போன பிறகு, அவர்கள் வெளிச்சம் நிறைந்த ஒரு பூந்தோட்டத்தை அடைந்தார்கள்.

இனி இறங்கிக்கோ.''

குஞ்ஞிமோன் கீழே இறங்கினான். சுற்றிலும் பார்த்தான். மிக அழகான பூந்தோட்டம். ஏராளமான பூக்கள்... ஏராளமான பழங்கள்...

நீ இங்கே எங்கே வேணும்னாலும் நடக்கலாம். இதுதான் என் இடம்.''

குஞ்ஞிமோன் அருகில் நிறைய பூக்களுடன் நின்று கொண்டிருந்த ஒரு மரத்தை நோக்கி நடந்தான். அப்போது திடீரென்று ஒரு உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்த மரம் நடந்து வந்து கொண்டிருந்தது. அது ஒரு எலும்புக்கூடு! அதன் தலையில் ஒரு ரத்தின கிரீடம் இருந்தது. அய்யோ!'' குஞ்ஞிமோன் திரும்பி ஓடினான். சைத்தான் அவனைத் தடுத்து நிறுத்தி அமைதிப் படுத்தினான். அது நம்மோட சக்கரவர்த்தி! அவர் ரொம்ப காலமா என் பிரியத்துக்குரிய ஆளா இருந்தாரு. அவருக்கு நான் ஒரு பெரிய கரை முழுவதையும் சொந்தமாக்கிக் கொடுத்தேன். கடைசியில் அவர் என் கூடவே இருந்துட்டாரு.'' எலும்புக் கூட்டை நோக்கித் திரும்பிய சைத்தான் கேட்டான்: என்ன, தலைவரே!'' அந்த எலும்புக்கூடு உரத்த குரலில் இடைவிடாது சிரித்துவிட்டு, தான் இருந்த இடத்திற்குப் போய் மரமாக நின்றது.

சைத்தான் நடந்தான். அவனுக்குப் பின்னால் குஞ்ஞிமோனும். வழியில் ஒரு உயரமான குன்று இருந்தது. அதன் சரிவில் அவர்கள் நடக்க வேண்டும்.

இது என்னன்னு தெரியுமா?''

தெரியாது.''

சைத்தான் தன் கையை அந்தக் குன்றை நோக்கி நீட்டினான். அது மனிதர்களின் மண்டையோடுகளாலானது. சைத்தான் சொன்னான்: பல போர்களில் ஈடுபட்ட வீரர்களின் மண்டை யோடுகள்...''

குஞ்ஞிமோன் இமைகளை மூடாமல் நின்றிருந்தான்.

வா...'' சைத்தான் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு முல்லைத் தோட்டத்தில் தன் கையை வைத்தான். அதோ, பூச் சூடியவாறு ஒரு எலும்புக்கூடு!

இவள் அரசாங்க நடன மங்கையாக இருந்தாள். ஒன்பது மன்னர்களைப் பதவியிலிருந்து இல்லாமற் செய்ய இவளால முடிஞ்சிருக்கு.''

இப்படி பலவற்றையும் பார்த்துக்கொண்டே அவர்கள் ஒரு பெரிய பாறைக்கு அருகில் வந்தார்கள். திடீரென்று கதவு திறந்தது. சைத்தானும் குஞ்ஞிமோனும் உள்ளே நடந்தார்கள். அங்கு சாப்பாடு, குடி, நடனம் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. எல்லாரும் முழு நிர்வாணமாக இருந்தார்கள்.

இதுதான் இடம்...''

பிரகாசமாக இருந்த அந்த இடத்தில் புத்துணர்ச்சி ஊட்டக் கூடிய ஒரு வாசனை பரவியிருந்தது. அருமையான வாசனை! குஞ்ஞிமோன் தன் மூக்கு துவாரத்தால் அந்த வாசனையை முகர்ந்தான்.

என்ன வேணுமனாலும், உன் கையை நீட்டு. கிடைக்கும்.''

இதைச் சொன்ன சைத்தான் பூக்கள் பரவிக் கிடந்த ஒரு பாறைமீது போய் மல்லாக்க விழுந்தான். கண்களை மூடி அவன் படுத்தான். அவலட்சணமான வாய்க்கு வெளியே பற்கள் துருத்திக்கொண்டு மின்னின. குஞ்ஞிமோன் அதையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான்.

மிகவும் களைப்பாக இருந்தது. அவன் தரையில் சாயலாம் என்று நினைத்தான். அப்போது உடலுக்குக் கீழே ஒரு பூ விரிப்பு மேல் நோக்கி வந்து கொண்டிருந்தது. குஞ்ஞிமோன் அந்த பூ மெத்தையில் படுத்தான். வெளிச்சம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. சிறிது நேரத்தில் இருட்டு மட்டுமே இருந்தது.

குஞ்ஞிமோன் கண்களை மூடியவாறு படுத்திருந்தான். ஆனால், தூக்கம் வரவில்லை. மனதில் பலவகைப்பட்ட சிந்தனைகளும் ஆக்கிரமித்திருந்தன. தன் தாய் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? தன்னைத் தேடி நெல் வயல்களில் அலைந்து கொண்டிருப்பாளோ? மிகவும் அமைதியாக இருக்கும் அந்த வயல் வெளிகளில் இருட்டைக் கிழித்துக்கொண்டு ஒரு குரல் கேட்டுக் கொண்டிருக்கும்: குஞ்ஞிமோனே! குஞ்ஞிமோனே!''

தன் தாயின் அழைப்பு காதுகளில் வந்து மோதுவதைப்போல் அவன் உணர்ந்தான். அவன் எழுந்து உட்கார்ந்தான். காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டான். இல்லை. மீண்டும் படுத்தான். வீடும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் முதலாளியும் முதலாளியம்மாவும் வரிசையாக மனதில் வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். மனதில் ஒரு போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

குஞ்ஞிமோன் கண் விழித்தவாறு படுத்துக்கொண்டு சிந்தித்தான். இங்கிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? அவன் இரவு முழுவதும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். ஒரு வழியும் தெரியவில்லை.

அதிகாலைக் கதிர்கள் மெதுவாக அந்தக் குகைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. குஞ்ஞிமோன் தலையை உயர்த்திப் பார்த்தான். கிழக்குப் பக்கத்திலிருந்து ஒரு படியின் வழியாக அந்த வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் ஒரு நேர்கோட்டைப் போல தெரிந்தது. குஞ்ஞிமோன் தட்டுத் தடுமாறி எழுந்து அந்த வெளிச்சத்தின் வழியாக நடந்தான். அவன் அந்தப் படிகள் வழியாக மேல் நோக்கி ஏற ஆரம்பித்தான். தாமரைப் பூவின் மணம் கலந்த இளம் காற்று அந்தப் படிகள் வழியாக உள்ளே வந்து கொண்டிருந்தது. ஒரு மகிழ்ச்சி, ஒரு உற்சாகம்... அவன் வேகமாகப் படிகளில் ஏறினான்.

அந்தப் படிகள் விசாலமான ஒரு தளத்தில் போய் முடிந்தது. அங்கு நடுவில் ஒரு தாமரைப் பொய்கை இருந்தது. பாதி மலர்ந்த தாமரை மலர்கள் நிறைய அங்கு காட்சிளியத்தன. அந்தத் தளத்திற்கு மேற்கூரையில்லை. திறந்த இடம். அங்கிருந்து பார்த்தால் சூரியக் கதிர்கள் முத்தமிடும் உயர்ந்த குன்றுகள் தூரத்தில் தெரிந்தன.

பிரகாசம் திரைச்சீலையை நீக்கிவிட்டுப் புறப்படுகிறது. குஞ்ஞிமோன் பொய்கையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். இந்த அளவிற்கு அருமையான ஒரு அதிகாலைப் பொழுதை அவன் பார்த்ததேயில்லை. இதயம் உற்சாகத்தில் துடித்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். பிரபஞ்சம் அவனுக்கு நேராகப் புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தது.

திடீரென்று அவனுடைய தலைக்குள் சிறிது வெளிச்சம் நுழைந்ததைப்போல அவன் உணர்ந்தான். குஞ்ஞிமோன் சிரித்துக் கொண்டே வேகமாக எழுந்தான். அவன் உரத்த குரலில் சொன்னான்: ஒரு வழி பண்ணுறேன்.''


என்ன?'' உடனே பின்னாலிருந்து ஒருகேள்வி வந்தது. குஞ்ஞிமோன் திரும்பிப் பார்த்தான். யானைத் தந்தம்போல வெண்மை நிறத்திலும் அரிவாளைப் போன்று வளைந்தும் இருந்த அந்தப் பற்கள் சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

சைத்தானே! நீ சொன்ன வாக்கை மீறுவியா?'' குஞ்ஞிமோன் கேட்டான்.

நிச்சயமா இல்ல. இன்னொரு முறை பலத்தைச் சோதனை செய்து பார்க்கணும்னு நீ நினைக்கிறியா?''

ஆமா...''

சைத்தான் அதற்கு விழுந்து விழுந்து சிரித்தான்.

சரி... ஆரம்பிக்கலாம்.''

இங்கே பாரு...''

சைத்தான் பார்த்தான்.

நான் புன்னகை செய்வேன். அதே மாதிரி நீ புன்னகை புரிந்தால், நான் தோத்துட்டேன்னு அர்த்தம். இல்லாட்டி உனக்குத் தெரியும்ல!''

அதைச் சொன்ன குஞ்ஞிமோன் புன்னகைக்க ஆரம்பித்தான்.

பந்தம் போன்ற கண்கள் ஜுவாலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

சைத்தானே! நீ இப்போ புன்னகை செய்...''

சைத்தான் முயற்சித்துப் பார்த்தான். அது ஒரு ஆர்ப்பரிப்பாக இருந்தது.

இது புன்சிரிப்பா?'' என்றான் குஞ்ஞிமோன்.

சைத்தான் மீண்டும் முயற்சித்து, அதில் தோல்வியடைந்தான். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவாறு தாமரைப் பொய்கையில் தெரிந்த தன்னுடைய உருவத்தைப் பார்த்தான். இல்லை... அது புன்சிரிப்பாக இல்லை.

வளர்ந்து நீண்டிருந்த பற்கள் அவனைப் புன்னகை செய்ய விடவில்லை. நீண்ட நேர கடுமையான முயற்சிக்குப் பிறகும் சைத்தானால் அதைச் செய்ய முடியவில்லை. தோல்வி அடைந்து விட்டோம் என்ற எண்ணம் அவனுடைய நெஞ்சில் ஒரு பதட்டத்தை உண்டாக்கியது. அந்த நீண்ட பற்களை இழுத்துப் பறிக்க வேண்டும் போல் அவனுக்கு இருந்தது. ஆனால், அப்படிச் செய்தால் அவன் மரணமடைந்து விடுவான். சைத்தான் தன்னை ஒடுக்கிக் கொண்டான். அவன் அங்குமிங்குமாக நடந்தான். அவனுக்கு வியர்த்தது.

என்ன, சைத்தானே?'' குஞ்ஞிமோன் கேட்டான்: தோத்துட்டயா?''

வருத்தத்துடன் சைத்தான் ஒப்புக்கொண்டான்.

நான் உன்னோட அடிமை.''

அப்படின்னா என்னைத் தோள்மீது ஏற்றி, என்னை என் தாய்க்கிட்ட அழைச்சிட்டுப் போ...''

குஞ்ஞிமோன் சைத்தானின் காதுகளைப் பற்றியவாறு தோள்மீது ஏறி உட்கார்ந்தான். பாறையின் கோபுர துவாரம் திறந்தது. பூந்தோட்டம், கோழிக் கழுத்து, நெருப்பு வளையம், மூடுபனி எல்லாவற்றையும் கடந்து அவர்கள் ஆகாயத்தில் பயணித்தார்கள்.

சைத்தானே!'' குஞ்ஞிமோன் அழைத்தான்.

என்ன?''

வருத்தமா?''

இல்ல...''

அடுத்த சில நொடிகளில் அவர்கள் வாய்க்கால் அருகிலிருந்த ஆலமரத்தடியை அடைந்தார்கள்.

சைத்தானே! நானும் என் தாயும் தவிர வேற யாரும் உன்னைப் பார்க்கக் கூடாது.''

சரி...''

அவர்கள் நடந்தார்கள். வீட்டை அடைந்தபோது அவனுடைய தாய் அழுதுகொண்டே படுத்திருந்தாள். குஞ்ஞிமோன் தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

எங்கே போனடா, மகனே?''

அம்மா, நான் உங்களுக்கு ஒரு பொருள் கொண்டு வந்திருக்கேன்.''

அவன் சைத்தானைக் கையால் சுட்டிக் காட்டினான். அன்னை அதிர்ச்சியடைந்து விட்டாள்.

பயப்பட வேண்டாம். அவன் என் அடிமை. இல்லையா சைத்தானே?''

ஆமா...'' சைத்தான் சம்மதித்தான்.

அன்று முதல் தாயையும் மகனையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சைத்தான்மீது வந்து விழுந்தது. உணவு தேட வேண்டும், உணவு சமைக்க வேண்டும், துணிகளைச் சலவை செய்ய வேண்டும், படுக்கை விரிக்க வேண்டும்- இவை எல்லாவற்றையும் சைத்தான் எந்தவித பிரச்சினையுமில்லாமல் செய்தான். இரவில் காவல் இருப்பதுதான் மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. சைத்தான் ஒரு நாயாக மாறி குரைக்க வேண்டும் என்பது கட்டளை.

அவன் நாயாக மாறி நின்று குரைத்தான். அதைக் கேட்டு மற்ற சைத்தான்கள் உரத்த குரலில் அவனைக் கேலி செய்தார்கள். அவர்கள் அவனுடைய முகத்தைப் பார்த்து அழைத்தார்கள்.

மனிதனின் நாயே?''

அதைக் கேட்டு சைத்தானின் தலை கவிழ்ந்தது. அவன் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதான்.

கோவிலிலிருந்து வந்த குஞ்ஞிமோனின் தாய் அதைப் பார்த்து பதைபதைத்து விட்டாள். அவன் அருகில் சென்று கேட்டாள்: ஏன் அழற?''

ஒண்ணுமில்ல.''

சைத்தானே! மகனே! நீ ஏன் அழணும்?''

மற்ற சைத்தான்கள் தன்னைக் கிண்டல் பண்ணிய விஷயத்தைச் சொல்லிய அவன் தேம்பித் தேம்பி அழுதான். அன்னை சைத்தானின் பெரிய முதுகைத் தடவியவாறு அவனைத் தேற்றினாள்: வருத்தப்படாதே... நான் குஞ்ஞிமோன்கிட்ட சொல்றேன்.''

தாய் மகனிடம் சொன்னாள். மகன் ஒரே பதில்தான் சொன்னான்: அவனால் புன்னகை செய்ய முடிஞ்சா, தாராளமா போகலாம்.''

இப்படியே நாட்கள் கடந்தோடின. ஒருநாள் மிகவும் கவலையுடன் இருந்த சைத்தானைப் பார்த்து அன்னை கேட்டாள்: சைத்தானே! மகனே! நீ ஏன் புன்னகை புரியாமல் இருக்கே?''

எனக்கு நீளமான பற்கள் இருக்கே!''

அதைப் பிடுங்கினா என்ன?''

அதைப் பிடுங்கிட்டா, நான் இருக்க மாட்டேன்.''

அது தானாகவே கீழே விழுந்திருச்சுன்னா...?''

எப்படி?''

அன்னை சிறிது நேரம் சிந்தனை செய்துவிட்டு சைத்தானிடம் சொன்னாள்: மகனே! ஆட்சேபனை இல்லைன்னா ஒரு வழி இருக்கு...''

என்ன சொல்றீங்க?''

மகனே! நீ ஒரு மனிதக் குழந்தையின் வடிவம் எடுக்கணும். பிறகு கொஞ்ச நாட்கள் என் பாலைக் குடிக்கணும். உனக்கு இதுல ஆட்சேபனை இருக்கா?''

சைத்தான் வேகமாக எழுந்து சொன்னான்: சந்தோஷம்!''

சைத்தான் ஒரு பச்சிளம் குழந்தையாக மாறினான். வெளுத்து, துறுதுறுப்புடன் இருந்த ஒரு அழகான குழந்தை! அன்னை தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனைத் தூக்கித் தன் மடியில் வைத்தாள். மார்புக் காம்பை அவனுடைய வாய்க்குள் திணித்தாள். சைத்தான் பாலை உறிஞ்சிக் குடித்தான்.

முதல் நாள் மார்பு சரியாக சுரக்கவில்லை. மறுநாள் நன்றாகச் சுரந்தது. நான்கு நாட்கள் கழிந்தபிறகு, நீண்ட பற்கள் ஆட ஆரம்பித்தன. ஐந்தாவது நாள் ஒரு பல் கீழே விழுந்தது. ஏழாவது நாள் இன்னொரு பல்லும் கீழே விழுந்தது. அந்த வெளுத்த குழந்தை எழுந்து நின்று புன்னகைத்தது.

குஞ்ஞிமோன் அவனைப் பார்த்துச் சொன்னான்: இனி நீ சுதந்திரமானவன்.''

மகனே... நீ போகலாம்.'' தாயும் சைத்தானிடம் சொன்னாள்: நல்ல வழியில் நடக்கணும். எதற்கும் பயப்பட வேண்டாம். நான் அந்த ஆலமரத்திற்கு அடியில் நின்னு பார்க்குறேன்.''

வெளுத்த குழந்தை அன்னையையே பார்த்துக் கொண்டிருந்தது. அவனுடைய கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது. அவன் தழுதழுத்த குரலில் சொன்னான்: அம்மா, என்னை போகச் சொல்லாதீங்க. நான் இந்த அண்ணன் கூடவே இருந்துர்றேன். அம்மா, நீங்க எனக்கு ஒரு பேர் வைக்கணும்...''

அன்னை இரண்டு குழந்தைகளின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளின் மார்பு சுரந்தது. அவள் வெளுத்த குழந்தையையும் கறுத்த குழந்தையையும் மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டாள். அந்த இரண்டு குழந்தைகளும் புன்னகை செய்தன. தாய் ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறு அழைத்தாள்: என் வெளுத்த மகனே...!''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.