Logo

வரப்போகும் மாப்பிள்ளை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7532
varapogum mapillai

மிகப் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும்; மிகுந்த அழகு படைத்தவனாக இருக்க வேண்டும்; நிறைய அதிகாரங்கள் படைத்தவனாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையிடம் இருக்க வேண்டும் என்பது சரோஜினியின் விருப்பமாக இருந்தது. திருமணத்தைப் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து- அதைப் பற்றி நினைக்கத் தொடங்கிய நாளிலிருந்து அவள் தன்னுடைய எதிர்கால கணவனைப் பற்றி கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தாள்.

தோழிகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் தங்களுடைய வரப்போகும் மணமகன்களைப் பற்றிதான் அவர்களுடைய பேச்சு இருக்கும். பத்மாக்ஷிக்கு ஒரு வக்கீல் கணவனாக வர வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. நான்கு கைகளைக் கொண்ட ஆடையை அணிந்து வண்டியில் ஏறி நீதிமன்றத்திற்குச் செல்லும் வக்கீல்களின் உயர்ந்த தன்மைகளைப் பற்றிக் கூறுவதற்கு அவனிடம் எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. நளினி தன்னுடைய மனதில் வைத்து வழிபட்டவன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தான். எல்லாருடைய அச்சத்திற்கும் மரியாதைக்கும் உரிய போலீஸ் இன்ஸ்பெக்டரின் அதிகாரங்களையும், பெருமைகளையும் பற்றிப் புகழ்ந்து பேசும்போது, நளினி உணர்ச்சி வசப்பட்டுவிடுவாள். லீலாவதிக்கோ நீதிபதி அவளுடைய கணவனாக வரவேண்டும். நீதிபதியின் அதிகாரங்களையும் அவருடைய மனைவிக்குக் கிடைக்கக் கூடிய கௌரவத்தையும் பற்றிப் பேசும்போது, அவள் ஒரு எஜமானியாகவே மாறிவிடுவாள். இப்படி தங்களுடைய எதிர்கால கணவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவர்களுக்கு  இடையே இருக்கும் ரசனை வேறுபாடுகள், சில நேரங்களில் சிறுசிறு சண்டைகள் உண்டாகக்கூட காரணங்களாக இருந்திருக்கின்றன.

நளினி கூறுவாள்: "போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்தால் எல்லாரும் கிடுகிடு என்று நடுங்குவார்கள்.''

உடனடியாக லீலாவதி பதில் கூறுவாள்: "நீதிபதிக்கு தூக்கில் போட்டு கொல்வதற்குக்கூட அதிகாரம் இருக்கிறது என்ற விஷயம் தெரியுமா?''

இடையில் பத்மாக்ஷி வேகமாகப் பாய்ந்து கூறுவாள்: "வக்கீல் இல்லையென்றால் இன்ஸ்பெக்டரும் நீதிபதியும் சும்மாதான் உட்கார்ந்திருக்க வேண்டும்.''

இறுதியில் சரோஜினி கூறுவாள்: "என் கணவருக்கு முன்னால் வக்கீலும் இன்ஸ்பெக்டரும் நீதிபதியும் மிகவும் சாதாரணமானவர்கள். வெறும் புழுக்கள்! அவர் மிகப்பெரிய பணவசதி கொண்டவராக இருப்பார். மிகவும் அழகானவராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். எல்லாவித திறமைகளையும் கொண்டவராக இருப்பார்.''

ஒரு விஷயத்தில் மட்டும் சரோஜினிக்கும் அவளுடைய தோழிகளுக்குமிடையே ஒற்றுமை நிலவியது. அவர்களுடைய எதிர்கால கணவர்கள் மிகவும் அழகானவர்களாக இருக்க வேண்டும் என்பதே அது.

நளினிக்குத்தான் முதலில் திருமண ஆலோசனை வந்தது. ஆனால், அவள் அந்த விஷயத்தை மற்றவர்களிடம் தெரிவிக்கவில்லை. திருமண நிச்சயதார்த்தமும் முடிவடைந்தது. அவள் படிப்பையும் நிறுத்திவிட்டாள். அப்போதுதான் சரோஜினிக்கும் மற்றவர்களுக்கும் விஷயமே தெரியவந்தது. மணமகன் ஒரு நிறுவனத்தில் க்ளார்க்காக வேலை செய்து கொண்டிருந்தான். சம்பளமாக முப்பது ரூபாய் கிடைத்துக் கொண்டிருந்தது. அழகானவனாக இல்லையென்றாலும், அவலட்சணமானவனாக இல்லை. திருமணத்திற்கு சரோஜினியையும் பத்மாக்ஷியையும் லீலாவதியையும் அழைத்திருந்தாள். அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்தே சென்றார்கள். நளினியின் விருப்பத்திற்கு

நேர்மாறாக நடைபெற்ற திருமணமாக இருந்ததால், அவள் கவலையில் இருப்பாள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவளுக்கு எந்தவொரு ஏமாற்றமும் இல்லை. ஒரு மனக்குறைவும் இல்லை.

லீலாவதி கேட்டாள்: "நளினி, இந்த அப்பிராணி க்ளார்க்குடன் செல்வதற்கு உனக்குச் சம்மதம்தானா?''

நளினி எந்தவொரு தயக்கமும் இல்லாமல் கூறினாள்: "விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும், நான் போய்த்தான் ஆக வேண்டும். பிறகு... விருப்பப்பட்டு போவதுதானே நல்லது?''

பத்மாக்ஷி சொன்னாள்: "நளினி, உனக்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிடைப்பதொன்றும் சிரமமான ஒரு விஷயமில்லை. பிறகு எதற்கு ஒரு க்ளார்க்கின் மனைவியாக நீ ஆனாய்?''

அலட்சியமான குரலில் நளினி சொன்னாள்: "இதெல்லாம் தலைவிதி, பத்மாக்ஷி. நாம நினைப்பதைப்போல எதுவும் எப்போதும் நடப்பதில்லை.''

சரோஜினிக்கு கோபம் வந்தது: "எதற்கு விதியைக் குறை கூறுகிறாய்? நாம் முயற்சி செய்தால் விருப்பப்படுவதுதான் நடக்கும். அதற்காக காத்திருப்பதற்குப் பொறுமை வேணும். எங்களுடைய திருமணங்களை நாங்கள் மனதில் நினைப்பதைப் போலவே நடப்பதை, நாங்கள் காட்டுகிறோம்.''

நளினி உறுதியான குரலில் கூறினாள்: "இதை வைத்து நான் திருப்திப்பட்டுக் கொள்கிறேன் சரோஜம். இந்த அளவிற்குத்தான் என்னுடைய நிலையே இருக்கு.''

அதற்குப் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. திருமணம் நடைபெற்றது. சரோஜினியும்

பத்மாக்ஷியும் லீலாவதியும் நளினிக்கு வாழ்த்துகள் கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்கள்.

அதற்குப் பிறகும் அவர்கள் மூவரும்- சரோஜினியும் பத்மாக்ஷியும் லீலாவதியும் ஒன்றாகச் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்குச் செல்வார்கள். போகும்போதும் வரும்போதும் அவர்கள் தங்களின் எதிர்கால மணமகன்களைப் பற்றி ஒருவரோடொருவர் விவாதித்துக் கொள்வார்கள். நளினிக்கு நடந்ததைப்போல அவர்களுக்கும் முட்டாள்தனமாக ஏதாவது நடைபெற்றுவிடக்கூடாது என்று அவர்கள் சபதம் எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நளினியைப்போல பொறுமையற்ற தன்மை வந்துவிடக்கூடாது என்று முடிவு செய்தார்கள். பத்மாக்ஷி மட்டும் அந்த அளவிற்கு கடுமையான உறுதிமொழி எதையும் எடுத்துக்கொள்ளவில்லை.

சில நேரங்களில் அவள் கூறுவாள்: "நளினி புத்திசாலிப் பெண். அவளுடைய நிலைக்கு ஏற்ற ஒரு கணவன் அவளுக்குக் கிடைத்திருக்கிறான். அவள் அதை ஏற்றுக்கொண்டாள். பெரிய அளவில் யாராவது வருவான் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தால், சில நேரங்களில் எதுவுமே நடக்காமல் போனாலும் போய்விடும்.''

சரோஜினிக்கு கோபம் வரும். "பத்மாக்ஷி, நீ என்ன முட்டாள்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறாய்? நமக்கென்ன நிலைமைக் குறைவு இருக்கிறது? படிப்பு இல்லையா? அழகு இல்லையா?''

லீலாவதியும் சரோஜினியைப் பின்பற்றிக் கூறுவாள்: "அதைத்தான் நானும் கூறுகிறேன். நமக்கு என்ன நிலைமைக் குறைச்சல் இருக்கு? நம்முடைய அழகையும் படிப்பையும் பார்க்கும்போது, நம்முடைய விருப்பம் மிகவும் சாதாரணமானது.''

பத்மாக்ஷி கிண்டலுடன் புன்னகைப்பாள். "இப்போ படிப்பையும் அழகையும் பார்ப்பதில்லையே! பணம் இருக்கிறதா பணம்? அதுதான்

பார்க்கப்படுவதே! நம்மைவிட அதிக அழகைக் கொண்டவர்களும் படிப்பைக் கொண்டவர்களும் வயதாகி நரைத்துப் போய்விட்டிருக்கிறார்கள்.''

சரோஜினிக்கு கோபம் வந்தது: "பத்மாக்ஷி, நீ பெரிய பணக்காரியாக இருப்பதால் அப்படிக் கூறுகிறாய். உங்களிடம் பணம் இருந்தால், கையிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.''

"நாங்கள் ஏழையாக இருந்தாலும், நாங்கள் விருப்பப்படுவதைப் போன்ற கணவர்கள் எங்களுக்குக் கிடைக்காமல் இருக்கமாட்டார்கள். வராவிட்டால், நாங்கள் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்துவிடுவோம்.''

அதற்குப் பிறகு பத்மாக்ஷி எதுவும் சொல்ல மாட்டாள்.

மிகப் பெரிய பணக்காரனும் அழகு படைத்தவனும் நிறைய படித்தவனும் எல்லாவித அதிகாரங்களையும் கொண்டவனுமான ஒரு இளைஞன்- அவனைத் தவிர வேறு எந்த ஆளும் சரோஜினியின் கழுத்தில் மணமாலையை அணிவிப்பதற்கு முடியாது என்று அவள் அழுத்தமாக முடிவு செய்தாள்.


சில நேரங்களில் தனியாக உட்கார்ந்து அவள் தன்னுடைய எதிர்கால கணவனைப் பற்றி மனதில் கனவு கண்டுகொண்டு இருப்பாள். அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அந்த பணவசதி படைத்த மனிதனுடன் அவள் அந்த வகையில் பல ஊர்களுக்கும் செல்வாள். மக்கள் அவர்களை மிகவும் ஆடம்பரமான முறையில் வரவேற்பார்கள். பல்வேறு விஷயங்களைப் பற்றியும் அறிவுரைகள் பெறுவதற்காக பலரும் அவர்களைத் தேடி வருவார்கள். சில நேரங்களில் மிகவும் முக்கியமான விஷயங்களைப் பற்றி முடிவு எடுப்பது அவளாகக்கூட இருக்கும். போலீஸ் இன்ஸ்பெக்டரும் நீதிபதியும் வக்கீல்களும் அவளுடைய கணவனுக்கு முன்னால் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்றிருப்பார்கள். பெண்கள் அந்த மிகவும்

அழகான மனிதனைச் சற்று பார்ப்பதற்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் யாராலும் அவனை நெருங்கக் கூட முடியாது. அவனுடைய ஒரே உரிமை படைத்தவள் அவள் மட்டுமே. அவள் இப்படி கனவு கண்டு கண்டு மனதில் சந்தோஷமடைந்து கொண்டிருப்பாள்.

அவளுக்கு விருப்பமில்லாத மாதிரி யாராவது எதையாவது கூறவோ செயல்படவோ செய்தால்,  அவள் மனதிற்குள் நினைப்பாள்: "இருக்கட்டும்... என் திருமணம் நடக்கட்டும். அப்போது இவர்கள் எல்லாரும் எனக்கு முன்னால் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று கொண்டிருப்பதைப் பார்க்கத்தானே போகிறேன்!"

இப்படியே ஒரு வருடம் கடந்தோடிவிட்டது சரோஜினியும் பத்மாக்ஷியும் லீலாவதியும் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள். கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்ற ஆர்வம் மூவருக்கும் இருந்தது. ஆனால், சரோஜினிக்கும் லீலாவதிக்கும் படிப்பைத் தொடரக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை இல்லை. சரோஜினியின் தந்தை ஒரு நடுத்தர விவசாயி. கடுமையாக உழைத்தால்  பெரிய அளவிற்கு சிரமம் இல்லாமல் வாழ்க்கையை நடத்தலாம். அவ்வளவுதான். பள்ளி இறுதி வெற்றி பெறுவது வரை அவளைப் படிக்க வைத்ததே வீட்டிற்கான செலவுகளில் பலவற்றைக் குறைத்துக்கொண்டதால்தான். இது ஒரு பக்கம் இருக்க, அவளுடைய தம்பிகள் இருவர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படிப்பை ஆரம்பித்திருந்தார்கள். அவளைக் கல்லூரியிலும், தம்பிகளை ஆங்கிலப் பள்ளிக்கூடத்திலும் படிப்பதற்கு அனுப்பினால், குடும்பம் முழுமையான பட்டினியில் கிடக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

"மெட்ரிக்குலேஷனில் தேர்ச்சி பெற்றுவிட்டாய் அல்லவா? இனி எதற்குப் படிக்க வேண்டும்?" -இதுதான் சரோஜினியின் அன்னையின் கருத்தாக இருந்தது. பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டாள்.

பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறாள். இனி பொருத்தமான ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது என்பது சிரமமான ஒரு விஷயமாக இருக்காது- இதுதான் அவளுடைய தாய்- தந்தையரின் விருப்பமாக இருந்தது. அவளுடைய தந்தைக்கு தாயைவிட பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. "என் மகளுக்கு நல்ல ஒரு மாப்பிள்ளை கிடைப்பான். நான் அவளை மிகவும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வேன்.'' -இவ்வாறு  அவன் எப்போதும் கூறிக்கொண்டிருப்பான். தாய்க்கு அந்த அளவிற்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. அது மட்டுமல்ல; தன் மகளுடைய திருமணத்தை எவ்வளவு சீக்கிரம் நடத்த வேண்டுமோ, அந்த அளவிற்கு சீக்கிரம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருந்தது. அவள் கூறுவாள்: "அந்த அளவிற்கு மிகப்பெரிய மனிதனைப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டாம். நம்முடைய நிலைக்கு ஏற்ற ஒருவன் வந்து சேர்ந்தால், அவனுடன் அனுப்பி வைத்துவிட வேண்டியதுதான்.'' அதைக் கேட்கும்போது, சரோஜினிக்கு கோபம் வந்துவிடும். அவள் தன் தாய்க்குத் தெரியாமல் மறைந்து நின்று கொண்டு வக்கனை காட்டுவாள். அவள் மெதுவான குரலில் முணுமுணுப்பாள்: "ஓ... அனுப்பி வைக்கும்போது, போகத் தயாராக யார் இருக்காங்க?''

பத்மாக்ஷியின் தந்தை மிகவும் வசதி படைத்த மனிதர். அவளை எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும் படிக்க வைப்பதற்கு அவரால் முடியும். ஆனால் இதற்கிடையில் அவருக்கு சில திருமண ஆலோசனைகள் வந்தன. அவற்றில் ஒன்றை தீர்மானிக்கவும் செய்தார். ஒரு எஞ்ஜினியர்- மிகவும் திறமைசாலியான ஒரு இளைஞன்- அவன்தான் அவளுடைய கணவனாக ஆகப் போகிறவன். அவன் பெண் பார்ப்பதற்காக வந்த நாளன்று சரோஜினியும் லீலாவதியும் பத்மாக்ஷியின் வீட்டிற்குச் சென்றிருந்தார்கள். பொதுவாக பெண்ணைப் பார்ப்பதற்காக வரக்கூடிய இளைஞர்களைப்போல அவன்

நடந்துகொள்ளவில்லை. நல்ல சுறுசுறுப்புடன் அங்குமிங்கும் நடந்துகொண்டும், வந்திருந்தவர்கள் எல்லோருடனும் நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தான். நல்ல உயரம், அதற்கேற்ற எடை, நல்ல பொன் நிறம்- மொத்தத்தில் அழகான தோற்றத்தைக் கொண்ட இளைஞன்! மிகவும் நல்லவன்! எல்லாரும் சொன்னார்கள்: "பத்மாக்ஷிக்கு மிகவும் பொருத்தமான ஆள்!'' லீலாவதியின் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது. அவள் சொன்னாள்: "நல்லவன்! மிகவும் நல்லவன்! இல்லையா, சரோஜம்!''

"ம்...'' சரோஜினி மெதுவான குரலில் முனக மட்டும் செய்தாள்.

லீலாவதி தொடர்ந்து சொன்னாள்: "ஒரு வக்கீல் மணமகன் வரவேண்டும் என்பதுதானே பத்மாக்ஷியின் விருப்பமாக இருந்தது? அதைவிட எந்த அளவிற்கு நல்ல ஒரு மனிதன் அவளுக்குக் கிடைத்திருக்கிறான்! அவள் கொடுத்து வைத்தவள்தான்.''

சரோஜினிக்கு அந்த விஷயம் அந்த அளவிற்குப் பிடிக்கவில்லை. "இதென்ன பெரிய அதிர்ஷ்டமா? இதைவிட மிகச் சிறந்த மணமகன்கள் நமக்குக் கிடைப்பார்கள்!'' பத்மாக்ஷியிடம் விடை பெற்றுக்கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள்.

சரோஜினி வீட்டிற்குச் சென்று, உட்கார்ந்து மனதில் நினைத்தாள். ஆமாம்... அவன் அழகானவன்தான். மிக உயர்ந்த பதவியில் இருப்பவன். நல்ல திறமைசாலி. பத்மாக்ஷிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் கணவன். ஆனால் வெளிப்படையாக அதை ஒத்துக்கொள்வதற்கும் அவள் தயாராக இல்லை. அவள் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்: "அவனைவிட எனக்கு கணவனாக வரப்போகும் மனிதன் மிகவும் உயர்ந்தவனாக இருப்பான். அவனுக்கு முன்னால் இவர்கள் எல்லாரும் வெறும் புழுக்களே."

அவள் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருப்பதைப் போல உட்கார்ந்திருந்தாள். அவளுடைய எதிர்கால கணவன்- அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் பல திறமைகளைக் கொண்டவனாகவும் இருப்பவன்- எங்கோ மிகவும் தூரத்தில் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவள் புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான். அவள் மெதுவாக... மெதுவாக.... அவனை நோக்கி நடந்தாள். அவனோ விலகி விலகிப் போய்க் கொண்டிருந்தான். திடீரென்று அவன் மறைந்துவிட்டான். அவள் "அய்யோ..." என்று உரத்த குரலில் கத்தினாள். அவள் கண்களைத் திறந்தாள். வாழ்க்கையின் மிகப் பெரிய உண்மைகள்... அவள் ஏமாற்றமடையவில்லை. அவள் மீண்டும் கண்களை மூடினாள். ஆமாம்... அவளுடைய வழிபாட்டு விக்கிரகம் தூரத்தில் தெரிந்தது. அவள் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

பத்மாக்ஷியின் திருமணம் மிகவும் ஆடம்பரமான முறையில் நடைபெற்றது. அடுத்த நாளே அவள் தன்னுடைய கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.


கார் நின்று கொண்டிருக்கும் சாலைக்குச் செல்ல வேண்டுமென்றால், சரோஜினியின் வீட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். சரோஜினி வாசலின் அருகில் போய் நின்றாள். அவளுடைய சினேகிதி செல்வதைப் பார்ப்பதற்காக. ஒரு தேவ கன்னியைப் போல பத்மாக்ஷி அப்படியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் அழகான கணவனும். பத்மாக்ஷி சரோஜினியின் அருகில் வந்து நின்றாள். "நான் வரட்டுமா சரோஜம். உன்னுடைய திருமணத்தைப் பற்றி எனக்கு தகவல் தர வேண்டும். எனக்கு கடிதம் எழுத வேண்டும்.''

"ம்...'' சரோஜினி முனக மட்டும் செய்தாள். பத்மாக்ஷி தன் கணவனுடன் சேர்ந்து சென்றாள்.

சரோஜினியின் கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர் கீழே விழுந்தது. அதற்கான அர்த்தம் என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.

சரோஜினிக்கு ஒரே ஒரு வேலைதான் இருந்தது- சந்தோஷமான திருமண வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பது. சமையலறைக்குள் அவள் எட்டிப் பார்ப்பதுகூட கிடையாது. படிப்பும் அழகும் உள்ள இளம் பெண்கள் சமையலறைக்குள் வேலை பார்ப்பதா? அதை அவளால் மனதில் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. குளித்து முடித்து, நெற்றியில் திலகம் வைத்து, நல்ல ஆடைகள் அணிந்து, ஏதாவது ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு அவள் அங்கு உட்கார்ந்திருப்பாள். அப்படியே உட்கார்ந்து, அவள் தன்னுடைய எதிர்கால மணமகனைக் கனவு கண்டுகொண்டிருப்பாள்.

பக்கத்து வீட்டைச் சேர்ந்த சில பெண்கள் அவளுடைய அன்னையிடம் பெண்ணை எந்த வேலையும் செய்யச் சொல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்பார்கள். "ஒருத்தனுடன் போய்ச் சேர்ந்த பிறகு அரிசியும் குழம்பும் வைப்பதற்குத் தெரிந்திருக்க வேண்டாமா?'' -இதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்கும். அவளுடைய தாய் கூறுவாள்:

"அவளுக்கு அது எதுவும் தெரியாது. படித்துத் திரிந்து கொண்டிருந்த பெண் அல்லவா? ஒருத்தனுடன் போகும்போது எல்லாவற்றையும் அவளே தெரிந்துகொள்வாள். பிறகு... ஏதாவது வேலை செய்யும்படி அவளைச் சொன்னால், அவளுடைய அப்பா என்னைக் கொன்று விடுவார்.''

அது உண்மைதான். சரோஜினியை எந்த வேலையையும் செய்யச் சொல்லக் கூடாது என்பது அவளுடைய தந்தையின் கட்டளையாக இருந்தது.

இப்படியே நாட்களும் மாதங்களும் பாய்ந்தோடிக் கொண்டிருந்தன. இதற்கிடையில் சில திருமண ஆலோசனைகளும் தேடி வந்தன. ஒன்று- ஒரு இன்ஸுரன்ஸ் ஏஜென்ட், பிறகு... மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குமாஸ்தா, இன்னொன்னு ஒரு மர வியாபாரியின் ஒரே மகன். அவர்கள் ஒவ்வொருவரும் நேராக வந்தும் அவ்வாறு இல்லாமலும் திருமண ஆலோசனை நடத்தினர். "பெண் பார்ப்பதற்கும்" வந்தார்கள். அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் சரோஜினியின் தந்தைக்கு சிறிது பணச் செலவும் உண்டானது. அவற்றில் ஏதாவதொன்றை முடிவு செய்ய வேண்டுமென்று அவளுடைய தாய், அவளின் தந்தையிடம் கண்டிப்பான குரலில் கூறிவிட்டாள். "அவளுக்குச் சம்மதம் என்றால், நான் சம்மதிக்கிறேன்.'' இதுதான் அவளுடைய தந்தையின் பதிலாக இருந்தது.

சரோஜினிக்கு அருகில் அந்த விஷயம் தொடர்பாக ஏதாவது பேசினால், அவள் காறித் துப்பிவிடுவாள். "இவன்களுடன் போவதற்கு ஏதாவது எலும்பும் தோலுமாக இருக்கக்கூடிய பெண்கள் இருப்பார்கள். என்னிடம் இப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் பேசக்கூடாது தெரியுதா?'' இவ்வாறு கோபத்துடன் சீறிக்கொண்டே அவள் எங்கோ தூரத்தில் போய் உட்கார்ந்து கொள்வாள்.

அந்த வகையில் திருமண ஆலோசனைகள் அனைத்தும் வீணாகிக் கொண்டிருந்தன. "இனிமேல் இந்த மாதிரியான ஆட்கள் யாராவது இந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டு இங்கே வந்தால், நான் தூக்குல தொங்கி இறந்து விடுவேன்'' என்றொரு மிரட்டலை சரோஜினி தன்னுடைய தாயிடம் வெளிப்படுத்தவும் செய்தாள்.

அவளுடைய வீட்டிற்கு அருகில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு புதிதாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அவர் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். அழகான தோற்றத்தைக் கொண்டவர். பத்திரிகைகளில் சில கவிதைகளையும் எழுதுவதுண்டு. எம்.ஆர்.முட்டம்- இதுதான் அவருடைய பெயர். சரோஜினியின் வீட்டின் தெற்குப் பகுதியில் அவர் வசிக்க ஆரம்பித்தார். சரோஜினி தெற்குப் பக்கத்திலிருந்த குளத்தில் குளிப்பதற்காகச் செல்லும்போது, அவர் தெற்கு திசை வீட்டின் கிழக்குப் பக்க வாசலில் நின்றுகொண்டு பார்ப்பது உண்டு. சில நேரங்களில் அவளும் அலட்சியமாக ஒரு பார்வை பார்ப்பாள்.

ஒரு நாள் சாயங்கால வேளையில் அவர் சரோஜினியின் வீட்டிற்கு வந்தார். அவளுடைய அன்னையிடம் சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தபோது அவளும் வந்தாள். பல விஷயங்களைப் பற்றியும்  பேசிக்கொண்டிருந்தபோது, தன்னுடைய  கவிதைகளைப் பற்றியும் கூறினார். ஞாபகத்திலிருந்து சில கவிதைகளைக் கூறவும் செய்தார். அனைத்து கவிதைகளும் காதலைப் பற்றியனவாகவே இருந்தன. ஆழமான அர்த்தங்களைக் கொண்டவையாக இருந்தன. அவளிடம் அவற்றைப் பற்றிய கருத்தைக் கேட்டார். மிகவும் நன்றாக இருக்கின்றன என்று அவள் பதிலும் கூறினாள்.

அதற்குப் பிறகு அவர் தினமும் சாயங்கால நேரத்தில் அங்கு வருவார். தன்னுடைய கவிதைகளில் இருக்கும் காதலை விளக்கிக் கூற ஆரம்பிப்பார். அது அவளுக்கும் சுவாரசியமான விஷயமாகவே இருந்தது. "காதல்... அது சந்தோஷத்தின் ஊற்று. சொர்க்கத்தின் வாசல். அமைதியின்  அழைப்பு. பிரம்மத்தின் அம்சம்.'' இவ்வாறு அவர் விளக்கிக் கூறிக்கொண்டிருப்பார். அவை எதுவும் அவளுக்குப் புரியவே புரியாது. ஆனால், அவளுக்கு அதில் ஒரு ஈடுபாடு இருந்தது.

ஒரு நாள் அவள் கேட்டாள்: "எந்தச் சமயத்திலும் பார்த்திராதவர்கள் மீது காதல் உண்டாகுமா?''

"வரலாம்...'' அவர் ஆழமான பார்வைகளுடன் தொடர்ந்து சொன்னார். "உண்மையான காதலில் எதுதான் நடக்கக் கூடாது?''

"கேள்விகூடபடாதவர்கள்மீது காதல் உண்டாகுமா?'' அவள் கேட்டாள்.

அந்த ஆளுக்கு உற்சாகம் வந்துவிட்டது. "அப்படியும் நடக்கலாம். மனிதர்களான நாம் நினைப்பதைப்போல காதல் செல்லும் திசை இருக்காது. அது கடவுளின் லீலை.''

அவள் ஆர்வத்துடன் கேட்டாள்: "பார்க்கவோ கேள்விப்படவோ செய்திராத ஒருவர்மீது காதல் உண்டானால், அது வெற்றி பெறுமா?''

அவர் உறுதியான குரலில் கூறினார்: "நிச்சயமாக வெற்றி பெறும். அதற்கு உதாரணம் நான்.''

அவள் புன்னகைத்தாள்: "என்ன அது? நீங்கள் பார்க்கவோ கேள்விப்படவோ செய்யாத ஒருவர்மீது உங்களுக்கு காதல் உண்டானதா? அது நிறைவேறியதா?''

அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்: "ஆமாம்... அது இப்போது நிறைவேறி இருக்கிறது. பார்க்கவோ கேள்விப்படவோ செய்வதற்கு முன்பே எனக்கு உங்களின் மீது காதல் பிறந்தவிட்டது. இதோ... இப்போது... அது நிறைவேறி இருக்கிறது. கடவுளின் லீலைதான்...''

சரோஜினிக்கு கோபம் வந்துவிட்டது. "முட்டாள்தனமாக பேசாதீங்க... தெரியுதா?  எனக்கு உங்களின்மீது எந்தவொரு காதலும் இல்லை.''


அவர் ஆச்சரியம் கலந்த குரலில் கூறினார்: "என்ன? புனிதமானதாகவும் உயர்வானதாகவும் உள்ள காதலை கேவலப்படுத்துகிறீர்களா?''

"நான் காதலை கேவலப்படுத்தவில்லை. கேவலப்படுத்தவும் மாட்டேன். என் ஆழமான காதலை இன்னொரு மனிதரிடம் செலுத்திவிட்டேன்.''

"அந்த அதிர்ஷ்டசாலி யார்?''

அவள் ஆர்வத்துடன் பதில் கூறினாள்: "ஆமாம்... அவர் அதிர்ஷ்டசாலிதான் அவர் மிகப்பெரிய வசதி படைத்தவர். மிகவும்

அழகானவர். நிறைய படித்திருப்பவர். சக்தி படைத்தவர். அவர் எங்கே? அப்பிராணியான நீங்கள் எங்கே?''

"அவருக்கு உங்கள் மீது காதல் இருக்கிறதா?'' -அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டார்.

"அதைத் தெரிந்து கொள்வதற்குத்தான் நான் உங்களிடம் கேட்டேன். நான் அவரைப் பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை.''

அவர் விழுந்து விழுந்து சிரித்தார். "சரிதான்... உங்களுடைய காதல் நிறைவேறும்.''

அதற்குப் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி அவர் பேசவில்லை. சில நேரங்களில் அவர் அங்கு வருவார். சில நாட்கள் கடந்த பிறகு, அங்கு வருவதையே நிறுத்திக் கொண்டார்.

வருடங்கள் நான்கைந்து கடந்தோடிவிட்டன. மிகப்பெரிய செல்வந்தரும் அழகு படைத்தவரும் நிறைய அதிகாரங்கள் படைத்தவருமான எதிர்கால மணமகனை மனதில் வழிபட்டுக் கொண்டு, அவள் நாட்களை எண்ணி எண்ணி கடத்திக் கொண்டிருந்தாள். சில நேரங்களில் தியானத்தில் இருப்பதைப்போல இருக்கும் அவளைப் பார்த்து, அந்த அழகான சிலை புன்னகைக்கும். அவளைப் பெயர் சொல்லி அழைக்கும். அவள் வெட்கத்துடன் அப்படியே நின்று கொண்டிருப்பாள். அந்த மனிதன் அவளின் அருகில் செல்வான். உணர்ச்சிவசப்பட்டு அவளை இறுகக் கட்டிப்பிடிப்பான். அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு அங்கு நடப்பார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் பெருமையாக நினைக்கும்; வாழ்த்தும். அவர்கள் அந்த பிரம்மாண்டமான இல்லத்திற்குள் நுழைவார்கள். தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து காதல் ரசம் கொண்ட பாடல்களைப் பாடி அங்கு ஆடிக்கொண்டிருப்பார்கள். அந்த மனிதன் அவளைத் தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருப்பான்.

அவள் அவனுடைய மார்பில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டு ஆனந்தம் அடைந்து கொண்டிருப்பாள். திடீரென்று அவள் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் இருந்து கீழே விழுவாள். மாளிகை இடிந்து தூள்தூளாகி தரையில் விழும். அவளுடைய கணவன் கண்களுக்கு முன்னாலிருந்து மறைந்து போவான். பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் கைகளைத் தட்டிச் சிரிக்கும். அவள் வாழ்வின் கொடூரமான உண்மைகளை நோக்கி கண்களைத் திறப்பாள். மீண்டும் கண்களை மூடிக்கொள்வாள். மிகப் பெரிய செல்வந்தனும் அழகான தோற்றத்தைக் கொண்டவனும் சகல சக்திகள் படைத்தவனுமான அந்த இளைஞன் அவளுக்கு முன்னால் வந்த நிற்பான்.

கற்பனை! வெறும் கற்பனை!

அவளுடைய அன்னைக்கும் தந்தைக்கும் அவள்மீது வெறுப்பு உண்டாக ஆரம்பித்தது. அவள் அவர்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சுமையாக தோன்ற ஆரம்பித்தாள். வீட்டில் எந்தவொரு வேலையையும் செய்யாமல் குளியலும் உணவும் முடிந்து அங்கேயே உட்கார்த்திருப்பது- அதற்கேற்ற நிலைமை எதுவும் அந்த குடும்பத்திற்கு இல்லை. அவளுடைய தாய் மெதுவாக முணுமுணுக்க ஆரம்பித்தாள்: "பெண்ணை யாருடனாவது அனுப்பி வைக்காமல், இப்படி வைத்துக் கொண்டிருந்தால் எப்படி? பெண் நன்கு அலங்கரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால், சாப்பிடுவதற்கு இங்கு ஏதாவது இருக்குதா? கஞ்சிக்கு வழியில்லை. நீதிபதி வருவார் என்று தந்தையும் மகளும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியே உட்கார்ந்து வயதாகி நரை விழட்டும். யாருக்கு பாதிப்பு?''

காலப்போக்கில் தந்தையும் தாயின் கருத்தை ஒத்துக்கொள்ள ஆரம்பித்தார். "அந்த ஏஜென்டை கல்யாணம் பண்ணி வைத்திருக்கலாம். அவனிடம் தேவையான அளவிற்கு பணம் இருக்கு.  நல்ல திறமையானவன். பார்ப்பதற்கும் லட்சணமா இருக்கிறான். அந்த

குமாஸ்தாவும் அப்படியொன்றும் மோசமில்லை. அரசாங்க வேலை. வெளியேயும் வருமானம் இருக்கு. அப்போ பெரிய கொம்பைப் பிடிக்க வேண்டும் என்று பார்த்தோம். இப்போது யாருமே வருவது இல்லை.''

அவள் அவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பாள். அவளுடைய இதயம் வேதனையால் துடித்தது. அவளுடைய மனம் ஏமாற்றத்தை நோக்கி நீங்கிக் கொண்டிருந்தது. வாசனை நிறைந்த சோப் வேண்டும். இரவிக்கைக்கு புதிய வகையான துணிகள் வேண்டும். புதிய புடவைகள் வேண்டும். அவை எதுவுமே அவளுக்குக் கிடைக்கவில்லை. தந்தையிடம் கூறினால் அவர் மவுனமாக உட்கார்ந்திருப்பார். தாயிடம் கூறினால் திட்டுவாள். அவள் கலங்கிப்போய்விட்டாள். சோப்பே இல்லாமல் குளிப்பதற்கு அவள் தள்ளப்பட்டாள். பவுடரை முழுமையாக நீக்கியே விட்டாள். கிழிந்துபோன இரவிக்கைகளை தைத்து அணிய ஆரம்பித்தாள். அதுதான் சங்கடமான விஷயமே. "அடியே... இந்த நெருப்பைக் கொஞ்சம் எரிய வை. சிறிது நீர் கொண்டு வா. இந்த தேங்காயை அரை...'' இப்படி ஒவ்வொரு வேலைகளையும் அவளுக்குக் கொடுக்கத் தொடங்கினார்கள். ஒரு முண்டு அணிந்தால் அதில் கரி ஆகிவிடும். உடம்பெங்கும் புகையின் வாசனை இருந்தது.

நெருப்பிற்கு அருகில் உட்கார்ந்து ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. முடியவில்லை... வசதி படைத்த பணக்காரனாகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் எல்லாவித அதிகாரங்களையும் கொண்டவனாகவும் இருக்கக்கூடிய எதிர்கால மணமகனைக் கனவு காணக்கூடிய விளையாட்டு வீராங்கனையான சரோஜினி- அவளால் இவை எதையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

வாழ்க்கை என்றால் என்ன என்பதை அவள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். அது மிகப் பெரிய கனவு அல்ல என்பதையும் கற்பனை அல்ல என்பதையும் அவள் உணர ஆரம்பித்தாள். கருங்கல்லைப் போல

கடுமையான ஒரு உண்மை- அதுதான் வாழ்க்கை என்பதை அவள் புரிந்துகொண்டாள். அவளுடைய தோழிகள் அந்த உண்மையை நேரடியாக சந்தித்தார்கள். நளினி அவளுக்குக் கிடைத்த குமாஸ்தாவுடன் அந்த வகையில் வாழ்ந்து கொண்டிருந்தாள். பத்மாக்ஷி- அவளுக்கு நல்ல ஒரு மணமகன் கிடைத்தான். லீலாவதி -அவளுடைய நிலை என்ன? சரோஜினி நினைத்தாள். அந்த ஏஜென்டே போதும்தான்... மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் குமாஸ்தா... அந்த ஆள் என்னை பொன்னைப் போல கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பார். மர வியாபாரியின் மகன்... அவன் என்னை வழிபட்டுக் கொண்டு இருந்திருப்பான். அந்த ஆசிரியர்... கஷ்டம்! அந்த மனிதரையும் நான் வேண்டாம் என்று ஒதுக்கினேன். தனியாக உட்கார்ந்து அவள் அழுவாள்.

அவளுடைய தாய், கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக திங்கட்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று அவளிடம் சொன்னாள்.

அவளுக்கும் அது நல்ல விஷயம் என்று தோன்றியது. ஒரு திங்கட்கிழமை அவள் கோவிலைச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். அப்போது லீலாவதியும் முன்பு பார்த்த அந்த ஆசிரியரும் சேர்ந்து தொழுவதற்காக வந்து கொண்டிருந்தார்கள். சரோஜினியின் இதயத்தில் ஒரு வேதனை உண்டானது.


லீலாவதி ஓடி வந்து அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்: "மன்னிக்கணும், சரோஜம். மிகவும் குறுகிய காலத்தில் எங்களுடைய திருமணம் நடந்துவிட்டது. யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை. யாரையும் அழைக்கவும் இல்லை.''

அதற்கு சரோஜினி எந்த பதிலும் கூறவில்லை. அவள் வேறு சில விஷயங்களைக் கூறி, அந்த விஷயத்தை மறைத்துக் கொண்டாள். இவ்வாறு நலம் விசாரிப்புகள் முடிந்து, அவர்கள் அங்கிருந்து பிரிந்து

சென்றனர். ஆசிரியர் லீலாவதியின் கையைப் பிடித்துக்கொண்டே சென்றார். போய்க் கொண்டிருக்கும்போதே அவர் சரோஜினியைத் திரும்பி ஒரு முறை பார்த்து, சற்று புன்னகைத்தார். வெற்றி பெற்றுவிட்டதைப் போல திரும்பிச் செல்லவும் செய்தார்.

அந்த வகையில் அதுவும் போய்விட்டது.

மனிதர்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் நசுக்கி மிதித்துக் கொண்டு, எல்லையற்ற காலம் வாழ்க்கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தது. சரோஜினிக்கு முப்பத்தியிரண்டு வயது கடந்துவிட்டன. ஒரு நாள் குளித்து முடித்து, திலகம் வைப்பதற்காக அவள் கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றாள். அவளுடைய முகம்! கடவுளே! அங்குமிங்குமாக சில சுருக்கங்கள்... ஏமாற்றம், நிறைவற்ற தன்மை ஆகியவற்றைக் காட்டும் சுருக்கங்கள்! முகம் முழுவதிலும் ஒரு வெளிறிப் போன தன்மை! ஒரு துளி அளவுகூட அன்பு கிடைக்காமல் திரி எரிந்துபோய் அணையப்போகும் தீபம்...

ஒரு இரவு உணவு முடிந்து, அவள் திண்ணையில் குத்து விளக்கிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய அன்னையும் தந்தையும் தம்பிகளும் படுத்துவிட்டார்கள். அவள் கவலை நிறைந்த சிந்தனைகளில் மூழ்கிப்போய் உட்கார்ந்திருந்தாள்.

தேநீர் கடைக்காரன் கோந்தியண்ணன் தன்னுடைய பெரிய வெற்றிலை, பாக்கு பொட்டலத்துடன் அங்கு வந்தார். கடையை மூடிவிட்டால், அதற்குப்பிறகு தூக்கம் வருவது வரை தமாஷாகப் பேசிக்கொண்டிருப்பதற்காக அவர் ஏதாவது வீட்டிற்குச் சென்று உட்காருவார். அவர் எந்த வீட்டிற்குள்ளும் எந்த நேரத்திலும் நுழையலாம். யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் உண்டாகாது. யாருக்கும் எந்தவொரு புகாரும் இல்லை.

கோந்தியண்ணனுக்கு சொந்தம் என்று கூறுவதற்கு கோந்தியண்ணன் மட்டுமே இருக்கிறார். ஐம்பது... ஐம்பத்தைந்து வயது இருக்கும். சரோஜினிக்கு ஞாபகத்தில் இருக்கிற காலத்தில் கோந்தியண்ணனின் தேநீர் கடை எல்லாருக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக இருந்தது. அப்போதும் எச்சில் துப்பும் பாத்திரத்தைப்போல இருக்கும் வாயுடனும் பெரிய வெற்றிலை, பாக்கு பொட்டலத்துடனும் கோந்தியண்ணன் அங்கு வருவதுண்டு. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. திருமணத்தைப் பற்றி யாராவது கேட்டால், அவர் கூறுவார்: "நீங்கள் எல்லாரும் திருமணம் செய்து சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தாலே போதும். அதுதான் எனக்கும் சந்தோஷம்.''

அன்றும் கோந்தியண்ணன் எப்போதும்போல எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சரோஜினிக்கு நேர் எதிரில் ஒரு தடுக்கை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். அவளும் அங்கேயே தான் உட்கார்ந்திருந்தாள். வெற்றிலை, பாக்கு பொட்டலத்தை எடுத்து முன்னால் வைத்துவிட்டு அவர் கேட்டார்: "என்ன... விளக்குக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு கனவு கண்டு கொண்டிருக்கிறாய்?''

"தூக்கம் வரவில்லை, கோந்தியண்ணா. அதனால இப்படி உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நான் அப்பாவை அழைக்கட்டுமா?''

"வேண்டாம்... நான் புறப்படுறேன்.'' அவர் பொட்டலத்தை அவிழ்த்து, வெற்றிலையைப் போட ஆரம்பித்தார். வாசலை நோக்கி தலையை நீட்டி துப்பிவிட்டு அவர் கேட்டார்: "சரி... இப்படியே எவ்வளவு நாட்கள் இருப்பே?''

கேள்விக்கான அர்த்தம் புரியாததைப்போல அவள் சொன்னாள்: "இப்படியே இருக்க மாட்டேன். படுக்கப் போறேன்.''

அவர் சிரித்தார்: "நான் அதைக் கேட்கவில்லை. இப்படி தனியாகவே இருந்தால் போதுமா?''

"கோந்தியண்ணா, நீங்களும் தனியாத்தானே இருக்கீங்க?'' அவருடைய முகத்தில் திடீரென்று ஒரு கவலையின் சாயல் தோன்றியது.

சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டு அவர் சொன்னார். "என் விஷயத்தைக் கணக்கிலேயே எடுக்க வேண்டாம்.''

"என் விஷயத்தையும் கணக்கில் எடுக்க வேண்டாம். கோந்தியண்ணா, சிலருடைய தலைவிதி இப்படித்தான்.'' அவளுடைய தொண்டை இடறியது.

அவர் எதுவும் கூறவில்லை. இருவரும் எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

சில நிமிடங்கள் அப்படியே கடந்து சென்றன. சரோஜினியின் ஆசைகள், அவளுடைய எதிர்பார்ப்புகள்- இவை அனைத்தும் நொடி நேரம் அவளுடைய மனதிற்குள் கடந்து சென்றன. அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டன. ஆடையின் நுனியால் கண்களைத் துடைத்துக்கொண்டே அவள் சொன்னாள்: "இது என்னுடைய தலைவிதி, கோந்தியண்ணா...''

அவர் அதை ஏற்றுக்கொண்டு சொன்னார்: "ஆமாம்... தலைவிதிதான்... அழாதே!''

ஒரு பேரமைதி... கோந்தியண்ணன் என்னவோ கூற முயற்சித்தார். ஆனால், அவர் எதுவும் கூறவில்லை.

கிழக்கு திசை வானத்தின் விளிம்பில் நிலவு உதயமாகி மேலே வந்தது. அவர்கள் இருவரும் நிலவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகும் கோந்தியண்ணன் என்னவோ கூற முயன்றார். ஆனால், அவரிடமிருந்து ஒரு நடுக்கம் நிறைந்த ஓசை மட்டுமே வெளியே வந்தது.

அவள் கேட்டாள்: "என்ன சொல்ல நினைக்கிறீங்க?''

"ஒண்ணுமில்ல...''

அதற்குப் பிறகும் நிமிடங்கள் கடந்தோடிக் கொண்டிருந்தன. அவர் கேட்டார்: "இருட்டு எத்தனை நாழிகை?''

"பதினான்கு.''

"பாதி ராத்திரி ஆயிடுச்சு.''

"ம்...''

"நான் கிளம்பட்டுமா?''

"ம்...''

அவர் எழுந்தார். நீண்ட ஒரு பெருமூச்சை விட்டார்.

என்னவோ கூற நினைத்தார். ஒரு தடுமாறிய சத்தம் மட்டும் வெளியே வந்தது.

அவள் கேட்டாள். "என்ன?''

"ஒண்ணுமில்ல... போய் படு...''

"நான் படுத்துக்கிறேன்... நீங்க போங்க.''

"நீ படுத்த பிறகுதான் நான் போவேன். இரவு நேரத்துல நீ இப்படி தனியா உட்கார்ந்திருக்கக் கூடாது!''

அவள் விளக்கை எடுத்துக்கொண்டு எழுந்தாள். கோந்தியண்ணன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார். அவள் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தாள்.

விளக்கைப் பிடித்துக் கொண்டே அவள் அடைத்த கதவிற்கு அருகிலேயே நின்றிருந்தாள். ஒரு தாங்க முடியாத பேரமைதி... ஒரு சகித்துக்கொள்ள முடியாத தனிமை... ஒரு நீண்ட பெருமூச்சு... விளக்கு அணைந்துவிட்டது. அவள் கதவைத் திறந்தாள்.

கோந்தியண்ணன் அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

அவள் மெதுவான குரலில் கேட்டாள்: "போகலையா?''

அவர் நடுங்கும் குரலில் கேட்டார்: "படுக்கலையா?''

தாங்க முடியாத பேரமைதி!

அவள் கேட்டாள்: "ஏன் போகல?''

"ஏன் படுக்கல?''

அதற்குப் பிறகும் அந்த தாங்க முடியாத பேரமைதி. அவர் இரண்டு அடிகள் முன்னால் எடுத்து வைத்தார். திடீரென்று அதே இடத்தில் நின்றுவிட்டார். அவள் தன் வலது காலைச் சற்று தூக்கி மீண்டும் அழுத்தமாக வைத்தாள்.

"போகலையா?'' அவள் கேட்டாள்.

"படுக்கலையா?'' அவர் கேட்டார்.

"ம்...'' அவள் முனகினாள்.

"ம்...'' அவரும் முனகினார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.