Logo

வளையல் அணிந்த கை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7271
valayal anintha kai

“வளையல் அணிந்த கைகளைப் பார்த்தாலே என்னையும் அறியாமல் நான் சிரிச்சிடுவேன்'' என்று கூறிச் சிரித்தவாறு அந்த திருமணமாகாத நண்பர் தொடர்ந்தார்: “என் மனசு வெளுப்பான நீண்ட விரல்களை உடைய ஒரு வளையல் அணிஞ்ச கையையே நினைச்சுக்கிட்டு இருக்கு. அதை நினைக்கிறப்போ மனசுல இனம் புரியாத ஒரு உணர்வு உண்டாகுது. பாயில் படுத்துத் தூங்குறப்போ கூட அதை நினைச்சா சிரிப்புத்தான் வருது.

நான் சிரிக்கிறதைப் பாத்துவிட்டு ஒருநாள் அம்மாவும் மத்தவங்களும், "ஏன்டா சிரிக்கிறே”ன்னு கேட்டதுக்குக் கனவு கண்டதா சொன்னேன் நான். காரணம் இல்லாமலே நான் சிரிக்கிறேன்னு நண்பர்களே பல முறை கேலி செஞ்சிருக்காங்க. என்னோட ஸ்க்ரூ, லூஸ் ஆகிப் போச்சுன்னு அவங்க சொல்றாங்க. என்னைப் பார்த்து அவங்க எல்லாரும் கேட்டாங்க- "எதை நினைச்சுடா இப்படிச் சிரிக்கிறே?”ன்னு. நான் ஒருத்தர்கிட்டகூட உண்மையைச் சொல்லல. ஏன்னா, இந்தச் சம்பவத்தில வர்ற கதாபாத்திரங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சவங்க. பிரபலமான அந்த நகைச்சுவை எழுத்தாளரைத் தெரியாதவங்க இங்கே யார் இருக்காங்க? அந்த ஆளோட முன்னாள் மனைவி யையும் அந்த அம்மாவோட இப்போதைய கணவனான பேங்க ரோட மகனையும் அறியாதவங்க யார்? போதாக் குறைக்கு, நகைச் சுவை எழுத்தாளர் என்னோட உயிர் நண்பன் வேற. அதாவது... நானும் அவனும் சேர்ந்து செய்யக்கூடாத பல செயல்களைக்கூட செஞ்சிருக்கோம். பார்க்கிறதுக்கு அழகா இருக்கிற பெண்கள் இருக்கிற வீடா பார்த்து உள்ளே போவோம். பொண்ணு பார்க்கு றதுக்காக வந்திருக்கோம்னு சொல்லுவோம். காப்பி குடிச்சிட்டுப் பொண்ணைப் பற்றி ஏதாவது ஒரு குறையைச் சொல்லிட்டுத் திரும்பி வந்திடுவோம்.

இதெல்லாம் பழைய கதை. நான் இப்போ சொல்லப் போறது அவனோட திருமணத்துக்குப் பிறகு நடந்த ஒரு விஷயத்தை. அவனோட பொண்டாட்டிய நான் பார்த்ததே இல்லை. ஊர்ல இருந்த எல்லாப் பெண்களையும் குறை சொல்லிக்கிட்டுத் திரிஞ்ச அவனுக்கு எப்படிப்பட்ட பெண் மனைவியா வந்திருக்கான்னு நானும் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். அவனை நான் நேரில் பார்த்தே ஏகப்பட்ட நாட்களாயிடுச்சு. ஒருநாள் மதிய நேரத்துல பஸ்ல ஏறி அவனைத் தேடிக் கிளம்பிட்டேன். நான் கறுத்த கோட் போட்டிருந்தேன். பாக்கெட்ல அஞ்சு ரூபா வச்சிருந்தேன்.

"இந்தப் பிணம்தான் என்னோட மனைவி. இனி சாகுறது வரை இந்தப் பூச்சிகூடத்தான் வாழ்ந்து ஆகணும். டேய் தம்பி... நீயாவது இந்த மாதிரி தற்கொலையில் மாட்டிக்கிடாம தப்பிச்சிடு. தெரியுதா? என் விஷயத்துலதான் தப்பு நடந்திருச்சு. நீயாவது கவனமா இருந் துக்கோ. இங்க பார்... சவம் எப்படி நிக்கிறாள்”னு! போடி அந்தப் பக்கம்...”என்று என் நண்பன் தன் மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிற காட்சியை இப்போதே கற்பனை பண்ணிப் பார்த் தேன். ஆனால், என்னை வரவேற்றபோது என் நண்பனின் முகத்தில் முழு விரக்திதான் தெரிந்தது. முன்பு பல வருடங்களாக அவனிடம் நான் கண்ட சிரிப்பும் தமாஷும் அவனை விட்டு முழுமையாக நீங்கி இருந்தன. மொத்தத்தில் துக்கத்தில் மூழ்கிப்போன ஒரு கவிஞன் மாதிரி இருந்தான் அவன். நகைச்சுவை ஊற்றே அவனிடம் வற்றிப் போயிருந்தது. அவன் வார்த்தைகளில் கண்ணீர் இருப்பதைத் தான் என்னால் காண முடிந்தது. இருந்தாலும், நான் சிரித்தவாறு அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டாவது அவன் மனைவி இந்தப் பக்கம் வருவாள் என்று எதிர்பார்த்தேன். அடிக்கொருதரம் அவள் வருகிறாளா என்றுகூடப் பார்த்தேன். ஆனால், என் நண்பனின் மனைவி வருவ தாகத் தெரியவில்லை. அடுக்களையில் சில உத்தரவுகள் பிறப்பிக்கும் சத்தம் மட்டும் கேட்டது. ஆனால், எங்களுக்கு சோறு பரிமாறியது வேலைக்காரன்தான். நண்பனின் மனைவி எங்கிருக்கிறாள் என்பதே தெரியவில்லை. ஒருவேளை உடல்நலம் எதுவும் சரியில்லாமல் இருக்குமோ? அப்படி என்றால் அந்த விஷயத்தை என் நண்பனே என்னிடம் கூறலாமே! இந்த மனிதன் இந்த அளவுக்கு எப்படி மாறிப் போனான்? இருந்தாலும் நான் ஒன்றுமே பேசவில்லை.

சாப்பிட்டு முடிந்ததும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கச் சொல்லி பாயும் தலையணையும் கொண்டு வந்து கொடுத்தான் என் நண்பன். தெற்குப் பக்கம் இருந்த கதவுக்குப் பக்கத்தில் தலையை வைத்து நான் படுத்தேன். என் நண்பன் வெற்றிலை, பாக்கு போட்டு முடித்து வராந்தாவில் சாய்வு நாற்காலியைப் போட்டுச் சாய்ந்தான். நான் படுத்திருந்த அறைக்குக் கிழக்குப் பக்கத்தில் இருந்த அறையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அந்த அறையின் ஒரு பக்க ஜன்னல் பலகை யில்தான் என் கோட் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஜன்னல் கம்பிகள் வழியாக அடுத்த அறையில் தொங்கிக் கொண்டிருந்த புடவைகள் தெரிந்தன. அந்த அறையில்தான் என் நண்பனின் மனைவி இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். அரை மணி நேரம் இப்படி அந்த அறையையே நோக்கியவாறு படுத்திருந்தேன். எனக்குச் சொல்லப் போனால் ஒருவித எரிச்சலே வந்துவிட்டது. அந்த அறையிலாவது அவள் வந்து நிற்கக் கூடாதா? நானே அவள் இருப்பதைப் பார்த்து விட்டால் என்ன? சே... என்ன இருந்தாலும் அவன் என் நண்பனாயிற்றே! அவன் எந்தவிதக் கவலையும் இல்லா மல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனால் நிம்மதியாக உறங்க முடிகிறது! திருமணம் முடிந்து விட்டால் மனிதர்கள் யாருமே இந்த அளவுக்கு தளர்ந்து போவதற்குக் காரணம் என்ன? நான் யோசித்துப் பார்த்தேன். திருமணம் செய்துகொண்ட என் நண்பர்கள் எல்லாரைப் பற்றியும் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன். அப்பாவிகள்! அவர்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். கணவர்கள் என்று சொல்லப்படும் பரிதாப உயிர்களைப் பற்றி இப்போது நினைத்துப் பார்த்து என்ன பிரயோஜனம்? நான் கண்களை மூடிக்கொண்டேன். பயணம் செய்த களைப்பாலும் வயிறு நிறையச் சாப்பிட்டதாலும் சுகமான ஒரு நித்திரை என்னை வா வா என்று அழைத்தது. நான் என்னை மறந்து சில நிமிடங்கள் கண்களை மூடியிருப்பேன். திடீரென்று திடுக்கிட்டு எழுந்தேன். காரணம்- காதில் விழுந்த வளையல் ஓசை! அவளாகத் தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பாதிக் கண்களைத் திறந்து பார்த்தேன். எனக்கு வாய் வறண்டு போனது மாதிரி இருந்தது. மூச்சு விடக்கூட முடியாமல் நான் படுத்துக் கிடந்தேன்.

ஏனென்றால், கிழக்குப் பக்கம் இருந்த அறையில் இருந்து ஜன்னல் கம்பிகளுக்கு மத்தியில் இருந்த இடைவெளியில் பாம்பு தலையை நீட்டுவதுபோல வளையல் அணிந்த ஒரு கை என் கோட் பாக்கெட்டைத் தேடிக் கொண்டிருந்தது.


வீட்டுக்கு வந்த விருந்தினர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுச் சொந்தக்காரி அவரின் கோட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டிருக்கிறாள். அதுவும் யாருக்குமே தெரியாமல் ஒளிந்து நின்று கொண்டு. இடுப்புப் பகுதியின் வெண்மையையும், விசாலமான மார்புப் பகுதியையும், கூந்தலின் ஒரு பகுதியையும், இங்கிருந்தே என் கண்களால் பார்க்க முடிந்தது. அப்படியே எழுந்து சென்று அந்தக் கையைப் பிடித்தால் என்ன? ஆனால், நான் எழவில்லை. படுத்தவாறே பார்த்துக் கொண்டிருந்தேன். கண் சிமிட்டுகிற நேரத்தில் அந்த வளையல் அணிந்திருந்த கை என் பர்ஸை எடுத்துக் கொண்டு மறைந்து விட்டது. அடடா... என்ன காட்சி! என் நண்பனின் தர்ம பத்தினி என் பர்ஸைப் பிக்பாக்கெட் அடிக்கிறாள்! இப்போது நான் என்ன செய்வது? நான் நினைத்தேன்- ஒருவேளை என் நண்பனே இப்படி ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லி இருப்பானோ? வேண்டு மென்றே விளையாட்டுக்காக இப்படிச் செய்து பார்க்கலாம் என்பது அவன் திட்டமாக இருக்குமோ?

"டேய்... பயலே! என் பொண்டாட்டியைப் பற்றி நீ என்ன நினைக்கிறே? நேர்ல நீயே பார்த்துட்ட இல்ல? இப்ப நீ என்ன சொல்றே?' என்று என் நண்பன் கேட்டால், "டேய், நீ ஒரு கவிதையே எழுதலாம். "பாக்கெட் அடித்தாயே' என்று'- இப்படி நான் பதில் சொல்லலாம். நான் இந்த மாதிரிச் சொன்னால் என் நண்பன் விழுந்து விழுந்து சிரிப்பான் என்பது எனக்குத் தெரியும். ஆனால்... காப்பி குடித்துக் கொண்டிருந்தபோதும், உலக அரசியல் நிலவரங்களை அலசி ஆராய்ந்து பேசிக் கொண்டிருந்தபோதும், என் பாக்கெட்டில் பணம் திருடுபோன விஷயத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. சாயங்காலம் ஊருக்குப் புறப்படுவதற்காக நான் தயாரானபோதுகூட ஒன்றுமே நடக்காத மாதிரி அவன் என்னிடம் நடந்து கொண்டான். நான் உண்மையிலேயே குழம்பிப் போனேன். வேறு வழியில்லாமல் கையில் இருந்த குடையை அடமானம் வைத் துக் கிடைத்த ரூபாயை வைத்து பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்.

"இந்த விஷயத்தை இதுவரை வேறு யார்கிட்டயும் நான் சொல்லல. மகாத்மாவே... உன்னோட மனைவி என்னோட பாக் கெட்ல கை விட்டுப் பணத்தை எடுத்த விஷயம் உனக்குத் தெரியுமா?” என்று ஒரு கடிதம் எழுதினால் என்ன என்று நினைத்தேன். பின் என்ன நினைத்தேனோ வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன். ஏனென்றால் அவனுக்குத் தெரிந்தே இந்தக் காரியம் நடந்திருந்தால்...? நகைச்சுவைக் கதைகள் எழுதிக் கிடைக்கிற பணத்தைவிட பிக் பாக்கெட் அடிப்பதில் கிடைக்கும் காசு அதிகமாயிற்றே! இதற்குப் பெரிய மூலதனம் எதுவும் தேவையில்லை. ஒரு மனைவி இருந்தால் போதும். ஆனால், அவளுக்கு விரல்கள் மிகவும் நீளமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மனைவி மட்டும் எனக்குக் கிடைத்திருந்தால்...? ஆனால், கிடைக்கவில்லையே! என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக வந்த இரண்டு பெண்களின் விரல்களை நான் பார்த்தேன். மனதிற்கு அவ்வளவாகத் திருப்தி ஏற்படவில்லை. ஒரு விரல்கூட சரியான நீளத்தில் இல்லை. வளையல் அணிந்த அந்தக் கையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, அதன் பக்கத்திலேயே இந்தப் பெண்களின் கைகள் நிற்க முடியாது. அந்தக் கையை என்னால் அவ்வளவு எளிதில் ஏனோ மறக்கவே முடியவில்லை.

சாப்பிடும்போதும் உறங்கும்போதும்கூட நான் அந்தக் கையை நினைத்துப் பார்ப்பேன். பாம்பு பொந்துக்குள் நுழைவதுபோல என் கோட் பாக்கெட்டுக்குள் அவளின் கை விரல்கள்...! இருபத்து நான்கு மணி நேரமும் அந்தக் கைதான் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பசுமையாக மனதில் இருந்தது. அந்தக் கையை ஒருமுறை தொட்டுப் பார்க்க, அதை ஒரு நிமிடம் முத்தமிட நான் ஏங்கினேன். இந்த பிக்பாக்கெட் சம்பவம் நடந்து ஐந்து மாதம் சென்றிருக்கும்... நாளிதழில் நான் ஒரு செய்தியை வாசித்தேன். "பிரபல நகைச்சுவை எழுத்தாளரான திரு...க்கும் திருமதி...க்கும் இடையே உண்டான திருமண உறவு இருவரின் விருப்பத்திற்கேற்ப முறிவுக்கு வருகிறது.” என்ன காரணமாக இருக்கும்? தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் என் நண்பனின் வீட்டுக்கே சென்றுவிட்டேன்.

"கார்மேகத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட முழு நிலவைப் போல” என்று சொல்வது மாதிரி மிகவும் மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றான் என் நண்பன். "டேய்... என்னை ஏன்டா அடிக்கடி வந்து பார்க்கல? போக்கிரி...” என்று செல்லமாகக் கோபிக்கவும் செய்தான். முன்பு பல வருடங்களாக எங்களிடம் இருந்த நட்பும் நெருக்கமும் மகிழ்ச்சியும் மீண்டும் அரும்பிப் பூத்துக் குலுங்கியது. பல மணி நேரங்கள் உட்கார்ந்து எத்தனையோ விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் பேச்சு விவாகரத்தைப் பற்றி வந்தது. அவன் சொன்னான்:

"நான் அவளை இலக்கியவாதியா மாத்தினேன். அவளைப் பிரபலமானவளா ஆக்கினேன். ஆனா, என்ன நடந்திருக்கு பாரு... என்னோட ரசிகரான அந்தப் பேங்க்காரரோட மகன்கூட அவள் ஓடிட்டா. ஒரு எழுத்தாளனான என்னைப் பாராட்டுறதுக்காக அவன் வர்றான்னு நினைச்சேன். ராஸ்கல்! அவன் வந்தது அவளைப் பாக்குறதுக்குன்னு இப்போதுதான் தெரியுது. கடைசியில அவங்க ரெண்டு பேரும் கல்யாணமே பண்ணிக்கிட்டாங்க...”

"அதுக்குப் பிறகுதானே விவாகரத்தே நடந்திருக்கு...”

"இல்ல... அதுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி”

"காரணம் வேற ஏதாவது இருக்கா என்ன?”

"நான் ஒருநாள் அவளை சரியா அடிச்சுட்டேன். சொல்லப் போனால், என் கோபத்தை என்னாலேயே கட்டுப்படுத்த முடியல. அவளால் எனக்கு ஒண்ணும் பெரிசா நஷ்டம் கிடையாது. மணிபர்ஸ்கள், கடிகாரம், பவுண்டன் பேனாக்கள்னு நிறைய பொருட்களை எனக்குக் கொண்டு வந்து கொடுத்திருக்கா. வெளியே கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வந்தா போதும். ஏதாவது பொருளோடதான் வருவா. ஒரு நாள்ல யாராவது ஒருத்தரோட பர்ஸை பிக்பாக்கெட் அடிக்கலைன்னா அவளுக்குத் தூக்கமே வராது. சின்ன வயசுல- படிக்கிற காலத்திலேயே அவளுக்கு இந்தப் பழக்கம் ஆரம்பமாயிடுச்சு. அவள் முதல்ல செஞ்சது என் இதயத்தைத் திருடியதுதான். அதுக்குப் பிறகு என் பாக்கெட்ல இருந்த பணத்தையும் பிக்பாக்கெட் அடிச்சுட்டா.

அவளோட சகோதரன் என் நெருங்கிய நண்பன்றதுனால நான் ஒருநாள் அவங்க வீட்டுக்குப் போனேன். சட்டையையும் வேஷ்டியையும் குளியலறையோட தகரக்கதவுல தொங்க விட்டுட்டு உள்ளே நான் குளிச்சிக்கிட்டு இருந்தேன். சாயங்காலம் முடிஞ்சு ராத்திரி வரப் போற நேரம். நான் தலையைத் துவட்டிக்கிட்டு இருந்தேன். அப்போ யாரோ வெளியே கதவைத் தட்டினாங்க. யார்னு கேட்டுக்கிட்டே நான் கதவைத் திறந்தேன். அவள்தான். கையில என் பாக்கெட்ல இருந்த பணக்கத்தையை வச்சிருக்கா...


ஏதோ விளையாட்டுக்காகச் செஞ்சிருக்கான்னு நினைச்சு நான் ஒண்ணும் பேசல. அவள் சிரிச்சிக்கிட்டே சொல்றா, "நான் உங்களோட பாக்கெட்ல திருடிட்டேனே!” "நீ என்னோட இதயத்தைத் திருடினே! திருடி... இப்போ என் பாக்கெட்ல இருந்தும் திருடி இருக்கே!” என்று கூறியவாறு நானும் சிரிச்சேன். அடுத்த நாள் நான் அங்கே இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி அதைக் கொண்டு வந்து என்கிட்டே கொடுத்தா. "வழிச் செலவுக்கு வச்சுக்கோங்க”ன்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டா. நான் பர்ஸைத் திறந்து பார்த்தப்போ, நான் வச்சிருந்த ரூபாய்க்குமேல ரெண்டு ரூபா அதிகம் இருந்துச்சு. அந்த ரெண்டு ரூபா அவளுக்கு எங்கே இருந்து கிடைச்சதுன்னு நான் நெனைச்சிட்டு இருக்க முடியுமா என்ன? இருந்தாலும் எங்களுக்கு கல்யாணம் நடந்த பிறகு நடந்த சில சம்பவங்களை வச்சுச் சிந்திக்க ஆரம்பிச்சேன். ஒரு நிகழ்ச்சியைச் சொல்றேனே! பஸ்ல போய்க் கிட்டிருக்கோம். என் பாக்கெட்ல இருந்த பவுண்டன் பேனாவைப் பார்த்துட்டு இதை என்ன விலைக்கு வாங்கினீங்கன்னு பக்கத்துல உட்கார்ந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்டாரு. ஒரு நண்பன் பரிசாத் தந்ததுன்னு நான் சொன்னேன். "யார் அந்த நண்பர்?”னு  அந்த ஆள் கேட்டாரு. ஏன் அவர் அப்படித் துருவித் துருவிக் கேட்டார்னா, அந்தப் பேனா அவரோட பேனாதான்! பேனாவோட மூடியில ரெண்டு எழுத்துகள் பொறிச்சிருக்கு. பேனா காணாமப் போயி பல நாட்கள் ஆயிருச்சு. எனக்கு அதைப் பரிசாகத் தந்த நண்பனோட பேரைச் சொல்லல. அதுக்குப் பதிலா பேனாவையே அவர் கையில கொடுத்திட்டேன். அவர் எனக்கு நல்லா தெரிஞ்ச ஆளுன்றதுனால, பெரிசா பிரச்சினை எதுவும் வரல. இது விஷயமா வீட்டுக்கு வந்ததும் அவள்கிட்ட கேட்டேன். அவள் அதைப் பெரிசா எடுத்ததாகவே தெரியல. தன் தப்பை விட்டுட்டு, எனக்கு புத்திசாலித்தனமே இல்லைன்னு சத்தம் போட்டா. பேனாவோட மூடியில இருந்த ரெண்டு இங்கிலீஷ் எழுத்துகள் என் பேருக்கும் சரியா இருக்கும். என்னோட பேனாதான் அதுன்னு சொல்லியிருந்தா போதும். ஒரு பிரச்சினையும் உண்டாகி இருக்காதுன்னு சொன்னாள் அவள். ஒரு விதத்தில் பார்த்தால் அது நியாயமாகவே பட்டது. ஆனால், அவள் சொன்னபோதுதான் என் பேரே எனக்கு ஞாபகத்துல வந்திச்சு. இருந்தாலும் எனக்குக் கோபம் வந்திடுச்சு. ஜன்னல் கம்பியில் கட்டி வச்சுப் புளியங்கொம்பால அவளை அடிச்சேன். அதுக்குப் பிறகு எங்களுக்குள்ளே ஒட்டோ உறவோ இல்லாமப் போச்சு. அந்தச் சமயத்துலதான் நீ வந்தது.”

இப்படிப் பல கதைகளை அவன் சொன்னான். நான் ஊரை விட்டுப் புறப்படுவதற்கு முன்னால் அவளையும் போய் பார்த்தேன். என்னைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததோடு நிற்காமல், வயிறு நிறைய தேநீர் கொடுத்து உபசரித்தாள். என்னை ஒரு கைரேகை பார்க்கும் ஆள் என்று அவள் நினைத்திருந்ததே காரணம்.

நான் போனது ஒரு மாலை நேரத்தில். அவளின் தற்போதைய கணவன் வீட்டில் இல்லை என்ற விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் வீட்டுக்கே போனேன். நான் போனபோது அவள் பிரமாதமாக ட்ரஸ் பண்ணி முகத்துக்குப் பவுடர் போட்டு, கூந்தலில் பூ செருகி கையில் பந்தாவாக ஒரு பேகைத் தூக்கிக் கொண்டு பஜாருக்குப் போவதற்காகத் தயாராக இருந்தாள். நான் சொன்னேன்:

"பார்க்கலாம்னு வந்தேன்.”

"அவரைத்தானே? வெளியே போயிருக்கார். உள்ளே வாங்க. எங்கே இருந்து வர்றீங்க? சரியா தெரியலியே!”

"நான் வந்தது... உங்க கையைப் பார்க்கலாம்னுதான். ரொம்ப தூரத்துல இருந்து வர்றேன். உங்க முகத்தைப் பார்த்தவுடனே தோணிச்சு, கை அதிர்ஷ்டமுள்ள கையின்னு....”

"அப்படியா?” சிவந்த வாயை ஒய்யாரமாகப் பிளந்து கூறினாள். மெல்லிய புன்னகையுடன் என் பாக்கெட்டை கண்களால் அளந்தவாறு கூறினாள்: "கைரேகையில எனக்கு அவ்வளவா நம்பிக்கை கிடையாது. இருந்தாலும்...” வரவேற்பறையில் போடப்பட்டிருந்த சிறிய வட்ட மேஜைமுன் இருந்த நாற்காலியில் அவள் அமர்ந்தாள். எதிரில் இருந்த நாற்காலியில் நான். வலது கையை அவள் நீட்டினாள். இடது கையும் வேண்டும் என்றேன் நான். "இப்போ என்ன வயசு நடக்குது?” -நான் கேட்டேன்.

"எவ்வளவு இருக்கும்னு நீங்களே சொல்லுங்க.” நான் யோசித்தேன். சுமார் இருபத்து ஏழு வயது இருக்கும். இருந்தாலும் நான் சொன்னேன்:

"பத்தொன்பது வயசு இருக்கும்.”

"ஓ...” அவளின் இதயம் குளிர்ந்து போனது தெரிந்தது. கிளியின் குரலில் கொஞ்சியவாறு அவள் சொன்னாள்: "சரியா சொன்னீங்க. இருபதாவது வயது பிறக்கப் போவுது.”

கோடி ரூபாய்க்கு இன்சூர் செய்யப்பட வேண்டிய அந்த இரண்டு கைகளும் என் கைக்குள் இருந்தன. அழகான நீளமான விரல்கள்... பிக்பாக்கெட் அடிப்பதற்கென்றே கடவுள் படைத்திருப்பார் போலிருக்கிறது. அதோடு நிற்குமா அந்த விரல்களின் வேலைகள்? பீரோக்களை உடைப்பதற்கும் வங்கிகளைத் தகர்ப்பதற்கும்... இப்படி இன்னும் எத்தனையோ சாகசச் செயல்களுக்கும்கூட அந்த விரல்கள் படைக்கப்பட்டிருக்கலாம்! நான் சொன்னேன்:

"இவ்வளவு அழகான கைகளை நான் இதுவரை வாழ்க்கையில பார்த்தே இல்ல. இந்தக் கைகளை ரொம்பக் கவனமாப் பாதுகாக்க ணும். செங்கோல் பிடிக்கக் கூடிய பாக்கியம்கூட உங்களுக்கு இருக்கு. உங்களோட முதல் கல்யாணம் அவ்வளவு சரியா அமையல!”

"அது முடிஞ்சு போன விஷயம்.' அவளுக்குப் புளியங்கொம்பின் ஞாபகம் வந்திருக்கலாம். "அந்த ஆள் மிகமிக மோசமானவன். எனக்குச் சின்ன பூச்சிக்கு இருக்கிற மூளைகூடக் கிடையாதுன்னு அந்த ஆளு சொல்லிட்டான்.”

"அவர் ஒரு இலக்கியவாதியா இருக்கணும்.”

"ஆமா... நகைச்சுவை எழுத்தாளர். தப்பு இல்லாம ஒரு வார்த்தை கூட எழுதத் தெரியாத ஆளு...”

"அது எனக்குத் தெரியும். இலக்கியவாதிகளான பெண்களோட கணவன்களும் நாளடைவில் இலக்கியவாதிகளா மாறிடுறாங்க. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு எழுத்துகூட எழுதத் தெரியாத ஆளுகூட கல்யாணம் ஆயிட்டா, பெரிய எழுத்தாளனா வடிவமெடுக்கிற சமாச்சாரம் நாம் சர்வ சாதாரணமாப் பார்க்கக் கூடிய ஒண்ணுதான். ஆனா, மனைவிகள்தான் எழுதித் தர்றாங் கன்றதை எந்தக் கணவனும் ஒத்துக்கிறதே இல்ல...”

"நீங்க சொல்றது சரி. என்னோட வாழ்க்கையே இதற்கு உதாரணம்.”

"உங்களோட ரெண்டாவது திருமண வாழ்க்கை ரொம்பவும் நல்லாவே இருக்கும். உங்களோட இப்போதைய வாழ்க்கைக்குப் பின்னாடி பணப் பெட்டி இருக்கு...”

"அவர் பேங்க்ல இருக்காரு.”

"அதைச் சொல்லத்தான் நான் வந்தேன்.” இப்படிப் பல விஷயங்களை அவளிடம் நான் சொன்னேன். எல்லாமே சரியாகவே இருந்தன. "இனி வரக்கூடிய நாட்களும் நன்றாகவே இருக்கும்” என்று கூறியவாறு அவளின் இரண்டு கைகளையும் எடுத்து என் முகத்துக்குப் பக்கத்தில் வைத்து ஆசையோடு முத்தமிட்டேன். அவளின் கையில் குட்டிக்குரோ பவுடரின் மணம் கமழ்ந்தது. எனக்கு அந்த வாசனையை மிகவும் பிடித்தது.

"கை "கமகம”ன்னு மணக்குதே!”

அவள் வளையல் அணிந்த கைகளைப் பார்த்தவாறு சொன்னாள்:

"என் கையில இயற்கையாகவே அந்த மணம் இருக்கு.”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.