Logo

ரேடியோக்ராம் என்ற தேர்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6385
radiogram endra ther

ரு நாள் என் மனைவியை அழைத்து நான் சொன்னேன்: “அடியே, நான் திடீர்னு செத்துப் போறேன்னு வச்சுக்கோ. உனக்கும் உன்னோட சினேகிதிகளுக்கும் ஏதாவது பாட்டு கேட்டா நல்லா இருக்கும்னு மாதிரிபடுது. அப்ப நீ என்ன செய்வே? அதனால நீ இப்ப என்ன பண்றன்னா... இந்த ரேடியோக்ராம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நல்லா தெரிஞ்சிக்கோ. ஒரே நிமிஷத்துல எல்லாத்தையும் நான் சொல்லித் தர்றேன்!''

“எனக்கு எவ்வளவோ வேலை இருக்கு.'' மனைவி சொன்னாள்: “பசுக்களுக்கு தண்ணி வைக்கல. கோழிகளுக்கு இரை போடல. அரிசி அடுப்புல கொதிச்சிக்கிட்டு இருக்கு. பக்கத்துல இருந்து தீயை எரிய வைக்கணும்!''

“அப்படியா, சரி'' என்றுதான் நான் சொல்லியாக வேண்டும். இங்கே பெரும்பாலான நாட்களில் பெண்மணிகளான இளம் பெண்கள் பலரும் வருவார்கள். நான் வீட்டுக்கு வெளியே வெளிவாசலுக்குப் பக்கத்தில் வராந்தாவில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கிறேன். நான்தான் இந்த வீட்டுக்கு உரிமையாளர். இருந்தாலும், வரும் பெண் பிள்ளைகள் என்னைப் பார்த்துக் கேட்பார்கள்.

“இங்கே இல்லியா?''

யாரை அவர்கள் கேட்கிறார்கள் என்பதை நான் கேட்கவும் வேண்டுமா? என் மனைவியைத்தான்! நான் சொல்வேன்: “உள்ளே உக்காருங்க, கூப்பிடுறேன்...''

நான் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து உட்காரச் சொல்வேன். ரேடியோக்ரமுக்குப் பக்கத்தில் விருந்தினர்கள் அறையில். இவர்களை நேராக உள்ளே விட முடியாது. புடவைக்குப் பொருத்தமாக இருக்கிற மாதிரியான ப்ளவுஸும், ப்ளவுஸுக்குப் பொருத்தமாக இருக்கிற மாதிரியான வண்ணத்தில் கண்மையும் இட்டு வந்திருப்பார்கள் இவர்கள். என் மனைவி சமையலறையில் மேட்ச் ஆகாத விதத்தில் ஏதாவது அணிந்து நின்றிருப்பாள். அதனால் ஒரு மணியடித்து சில சைகைகள் மூலம் என் மனைவிக்கு விஷயத்தைத் தெரியப்படுத்த வேண்டும். ஜாக்கிரதை! மேட்ச்! மேட்ச்!

அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் மேட்ச் ஆகிற மாதிரியான ஆடைகளுடன் ஆஜர் ஆவாள் என் மனைவி. சிறிது நேரம் "குசுகுசு’’வென தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்ட பிறகு, பாட்டு ஏதாவது கேட்கலாமா என்பாள் என் மனைவி. அவள் சொன்னதைக் கேட்டதும், நான் உடனே எழுந்து வரவேண்டும். பாட்டு கேட்க வேண்டிய அவசியம் இப்போது என்ன? ஏனென்றால் அவர்கள் எதற்கு இங்கு வந்திருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் நான் எழுந்து செல்கிறேன். எப்படி? எந்தவித மேட்சும் இல்லாமல் என் ஆடைகள் இருந்தன. ஒரு வேஷ்டி மட்டும் நான் கட்டியிருந்தேன். முட்களுக்கு மத்தியில் நடந்துபோவது மாதிரி, மிகவும் கவனமாக புடவைகள் எதிலும் படாமல் நான் நடந்து சென்று அரைமணி நேரத்தில் ரேடியோக்ராமில் எதையெல்லாம் சரி பண்ணி வைக்க வேண்டுமோ, எல்லாவற்றையும் பொருத்தி முடித்தேன். என் மனைவியையும் சேர்த்து அறையில் மொத்தம் பத்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். எல்லாரும் படு அமைதியுடன் உட்கார்ந்திருந்தனர். நான் ரேடியோக்ராமை "ஆன்’’ செய்தேன். இசை பீறிட்டுக் கிளம்பியது. பெண்கள் பல விஷயங்களையும் பேசத் தொடங்கினார்கள். வானத்தில் இடி இடித்து பயங்கரமான காற்றுடன்  சேர்ந்து மழை பெய்வது மாதிரியான தொடர் பேச்சு. எனக்கு அதைப் பார்த்தபோது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எத்தனையோ நாடுகளில் இருந்து பல முறைகளும் போய் மிகவும் கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து வாங்கிக்கொண்டு வந்த இசைத்தட்டுகள் அவை. கடவுளே! பெண் பிள்ளைகள் நான் முழங்க வைத்த இசையைச் சிறிது கூட கேட்கவில்லை. அரைமணி நேரம் சென்றது. பாட்டு தானாகவே நின்றது. பேச்சுகள் சடன் ஸ்டாப்!

என்னுடைய கவனத்தைத் திருப்புவதற்காக ஒரு பெண்மணி சொன்னாள்:

“முடிஞ்சிடுச்சு!''

நான் எழுந்து சென்று மீண்டும் அரை மணி நேரம் அவர்கள் சர்வதேச விஷயங்கள் பலவற்றையும் சர்ச்சை செய்யட்டுமே என்று அதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்தேன். எல்லாவற்றையும் தயார் பண்ணி ஆரம்பித்துவிட்டு, மீண்டும் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். அரைமணி நேரம் "சலசல’’வென்று பல விஷயங்களையும் பேசிய அந்தப் பெண்மணிகள் என் மனைவியின் தலைமையில் வீட்டுக்குள் சென்றார்கள். பயங்கர சலசலப்புடன் அங்கே தேநீர் தயாரித்தார்கள். சில "கடுமுடு’’ பொரிக்கும் சத்தம் எனக்குக் கேட்டது. ஆர்ப்பாட்டமும், பேச்சும், சிரிப்பும்!

நான் எழுந்து சென்று இசைத் தட்டுகளைப் பெட்டியில் போட்டு மூடினேன். ரேடியோக்ராமை "ஆஃப்’’ பண்ணினேன். (முதலிலேயே அதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும், சொல்கிறபோது, இப்படி வந்துவிட்டது). நான் மீண்டும் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்தில் வந்து அமர்ந்தேன். சிறிது நேரம் சென்றதும் பெண் பிள்ளைகள் சிறிய சிறிய தட்டுகளில் "கடுமுடு’’வை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். என் மனைவி தேநீரையும் கடுமுடுவையும் எனக்குத் தந்தாள். கடுமுடுவைப் பற்றி என்ன சொல்வேன் என்ற எதிர்பார்ப்புடன்  அவள் இருப்பது தெரிகிறது.

அங்கு இருக்கும் ஒரே ஆண் நான்தான். அதனால் மிகவும் கவனமாகப் பார்த்துதான் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். நான் கேட்டேன்.

“இந்த கலைப் படைப்பை உண்டாக்கியது யார்?''

“நான்தான்.'' மரியாதை கலந்த குரலில் குமாரி ருக்மிணிதேவி கூறினாள்: “இது நல்லா இருக்காதுன்னு நினைக்கிறேன். பஷீர்... நீங்க பிரமாதமாக சமையல் பண்ணுவீங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். ஹாங்காங்ல இருந்து வந்த என்னோட அக்கா இதை எனக்குச் சொல்லிக் கொடுத்தா. எப்படி... நல்லா இருக்கா?''

“ரொம்பவும் அருமையா இருக்கு!'' நான் அந்த ஹாங்காங் மணலை தைரியத்துடன் "கருமுரா' என்று சத்தம் கேட்கிற மாதிரி தின்றேன். சில நிமிடங்களில் பெண் பிள்ளைகள் கையில் ஏகப்பட்ட புத்தகங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். என்னைச் சுற்றிலும் இப்போது ஒரே அமைதி. இதுவரை நடந்த சம்பவத்தின் மூலம் நாம் படித்துக்கொண்ட பாடம் என்ன?

பெண் பிள்ளைகள் தங்கள் விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க  இசை என்பது பக்க மேளமாக பயன்படுகிறது. நடக்கட்டும். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ரேடியோ க்ராமை "ஆன்' பண்ணி வைத்துக்கொண்டு, விருப்பப்படி எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கட்டும். அதற்கு சாட்சியாக நம்மைக் கூப்பிட வேண்டாம் என்பதுதான் நான் சொல்ல வருவது. பால் ராப்ஸன், யஹுதிமனுஹின், பிங்க்ரோஸ்பி, உம்முல் குல்ஸு, படே குலாமலிகான், பங்கஜ் மல்லிக், சைகல், எம்.எஸ். சுப்புலட்சமி, பண்டிட் ரவிசங்கர், பிஸ்மில்லாகான் ஆகியோரை அவமானப்படுத்துவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனஉறுதி நிச்சயமாக எனக்குக் கிடையாது. மன்னிக்க வேண்டும். அதனால் என் மனைவிக்கு இதைப் பற்றி சொல்லிக்கொடுத்து- ஸாரி... நான் ஒன்றுமே கூறவில்லை. கட்டாயப்படுத்தி அவளுக்கு ரேடியோக்ராம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நான் சொல்லித் தந்தேன்.


(அந்தச் சமயத்தில் என் மனைவியின் மனதில் ஃபாத்தி மத்துன்ஸுஹுறா அணிந்து கொண்டு வந்த புடவை ஓடிக் கொண்டிருந்தது என்பது என் கருத்து). என்னிடம் அதற்காக காரணத்தை அவள் கேட்டபோது நான், “எனக்கு வெள்ளெ ழுத்து, சரியா எதையும் பார்க்க முடியல'' என்று பதில் சொன்னேன். வெள்ளெழுத்து வாழ்க! என் மனைவி நான் சொன்னபடி  கற்றுக்கொள்ள முன்வந்தபோது நான் சொன்னேன்:

“அடியே... இந்த ரேடியோக்ராம்னு சொல்லப்படுற இந்தப் பொருள் அருவாமனை இல்ல.... ரொம்பவும் மென்மையான ஒரு இயந்திரம் இது. இதோட விலை அந்தக் காலத்துல நாலாயிரம் ரூபாய்... இசைத் தட்டுகளையும் சேர்த்து. அதனால ரொம்பவும் ஜாக்கிரதையா இதைக் கையாளணும்...''

அவள் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல்  முகத்தை "உம்’’மென்று வைத்துக்கொண்டு என்னையே உற்றுப்பார்த்தாள். காரணம்- உலகத்திலுள்ள மற்ற எல்லா பெண்மணிகளையும் போல, இவளும் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டவள் ஆகப் போகிறாள். சர்வகலாவல்லபி. நம்முடைய அதிர்ஷ்டம்!

நான் சொன்னேன்:

“அடியே... இதுதான் "நாப்”. இதையே பாரு. என்ன எழுதி இருக்கு?''

“78, 45, 33, 16.''

“ரொம்ப சரி... இந்த நம்பர்களைக் கொண்ட இசைத் தட்டுகள் நம்மக்கிட்ட இருக்கு. பாரு...''

இசைத்தட்டுகளை நான் எடுத்து வைத்தேன்.

“சாதாரண கிராமஃபோனோட நம்பர் 78. இதை இங்கே வைக்கிறப்போ நாபுக்குக் கீழே இருக்குற குழிக்கு நேரா 78-ஐ வைக்கணும். பொத்தானை அழுத்தணும். கிராம் பாட ஆரம்பிக்கும். சம்பவம் க்ளீன்! இப்படியே... ரெக்கார்டோட கவர்லயோ, ரெக்கார்டுலயோ நம்பர் 45-ஐப் பார்த்தால்...''

“நாபுக்குக் கீழே இருக்கிற குழிக்கு நேரா 45-ஐ வைக்கணும்...''

“பரவாயில்லையே... பிறகு இந்தக் கைக்குக் கீழே இருக்குற இந்தப் பகுதியை இந்தப் பக்கம் திருப்பி வைக்கணும்...''

அவள் ஒவ்வொன்றையும் வைத்துப் பார்த்துவிட்டுக் கேட்டாள்:

“நம்பர் 16 ரெக்கார்டைக் காணோமே!''

“ஸாரி... நம்மக்கிட்ட அது இல்ல. மீதி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டியா?''

“இதென்ன பெரிய விஷயமா?'' என் மனைவி என்னைப் பார்த்துச் சொன்னாள். இவளென்ன... எல்லா பெண்மணிகளுமே இப்படி கேட்கத்தான் செய்வார்கள். ஆணான நாம் உண்மையிலேயே தோற்றுப் போய் உட்கார வேண்டியதுதான். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் என் மனைவி ரேடியோக்ராம் வைப்பதை நான் பார்த்தேன். கடவுளே! பார்ப்பதோடு நிற்காமல் "மைவிழி மங்கையும் இயந்திர விசேஷங்களும்' என்றொரு பரபரப்பான நூல் எழுதினால்கூட நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். காரணம் மைவிழி மங்கைகளுக்கும் இயந்திரங்களுக்கும் எந்த காலத்திலும் ஒரு பொருத்தமே இருக்காது. அந்த விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் இப்படிச் சொல்வதற்காக பெண்மணிகளான சௌபாக்கியவதிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எனக்கு எதிராகக் குரல் எழுப்பினாலும் எழுப்பலாம். "தொட்டிலை ஆட்டுகின்ற கைகளை எதிர்த்துப் பேசுவதா? பேனை நசுக்கிக் கொல்கின்ற கைகளை கிண்டல் பண்ணுவதா? இந்தக் கைகளைப் பற்றி இவருக்கு என்ன தெரியும்? இந்தக் கைகளில் ஆயுதத்தை நாங்கள் தூக்கவில்லையா? பண்டைக் காலத்தில் சுபத்ரா தேர் ஓட்டவில்லையா?' என்று ஏகப்பட்ட கேள்விக் கணைகளை வீசி என்னை வீழ்த்த நினைக்கலாம்.

இருந்தாலும்... நான் சொல்கிறேன். கேளுங்கள். என்னுடைய மனைவி இருக்கிறாளே! இந்த முஸ்லிம் சுபத்ரா...! இவளின் பெயர் ரகசியமாக ஃபாபி. இவள் ரேடியோக்ராம் என்ற தேரை எப்படி இயக்கினாள் என்பதை நான் சொல்கிறேன்.

ரேடியோக்ராம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இவள் கற்றுக்கொண்டுவிட்டாள். என்னுடைய உதவியே இல்லாமல் இந்த வீட்டையும் இந்தத் தோட்டத்தையும் இசை வெள்ளத்தில் மூழ்கடிக்கப் போகிறாள். அவளின் சினேகிதிகளான ஒரு டஜன் அழகிகள் பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருக்க தயார் நிலையில் இருக்கிறார்கள். எல்லாரும் உட்கார்ந்து ஆயத்த நிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம் சுபத்ரா ரேடியோக்ராமை "ஆன்' செய்தாள். நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இசைத் தட்டை வைத்தாள். பொத்தானைத் திருப்பினாள். இதெல்லாம் நானே ஒரு கற்பனையில் கூறுகிறேன். நான் இவர்களின் எந்த விஷயத்திலும் சிக்கிக் கொள்ளாமல் ஆன்மிகம் சம்பந்தமான விஷயங்களைச் சிந்தித்தவாறு வராந்தாவில், இவர்களிடமிருந்து தூரத்தில் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டிருக்கிறேன். அப்போது என் காதுகளில் வந்து மோதுகின்றன என்னென்னவோ சத்தங்கள்! கர்ஜனைகள்! தும்மல்! சீறல்! யானை, புலி, நல்ல பாம்பு, காட்டு எருமை, பூனை, எலி, நாய்கள், நரி, கரடி, திமிங்கலம், காட்டுப்பன்றி, நீர்க்குதிரை, வாத்து, ஆந்தை போன்றவற்றின் பிரமாதமான பாட்டுக் கச்சேரி.

சில நிமிடங்களுக்கு எனக்கு ஒன்றுமே புரியவில்லை. புரிகிறதா? இப்படிப்பட்ட ஒரு இசைத்தட்டு என்னிடம் இல்லவே இல்லை. ஒரு வேளை ஹாங்காங்கில் இருந்து பெண்மணிகள் புதிய இசைத்தட்டு எதையாவது கொண்டு வந்திருக்கிறார்களா? இருக்கலாம். எதுவுமே பேசாமல் மவுனமாக நான் அமர்ந்திருக்க, நம்முடைய முஸ்லிம் சுபத்ரா என்னைப் பார்த்து கூப்பிட்டாள்:

“கொஞ்சம் இங்கே வாங்க...''

நான் முட்களுக்கு மத்தியில் நடப்பது மாதிரி பல வயிறுகளையும் தாண்டி மெதுவாக நடந்து சென்றேன்.

முஸ்லிம் சுபத்ரா என்னிடம் சொன்னாள்:

“பால் ராப்ஸனோடது.''

இப்படி உறுமுவதும், முணுமுணுப்பதும், சீறுவதும், கர்ஜிப்பதும் பால் ராப்ஸனின் இசைத்தட்டா? கடவுளே!

(பெண் பிள்ளைகள் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்). மகிழ்ச்சி!

இதோ... பால் ராப்ஸன். இந்த உலகம் உண்டான பிறகு தோன்றிய நல்ல பாடகர்களில் ஒருவன் பால் ராப்ஸன். அமெரிக்க நீக்ரோ.

பல நூற்றுக்கணக்கான வருடங்களாக அடிமைகளாக அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் வேதனையையும்,  கவலையையும், கோபத்தையும் பால் ராப்ஸனின் குரலில் நான் கேட்டிருக்கிறேன்- உணர்ந்திருக்கிறேன். கடவுளின் அருள் பெற்ற பாடகனே! உனக்கு என்னுடைய எளிமையான வாழ்த்துகள்- பாராட்டுகள்! அந்த பால் ராப்ஸனா இது?

என்னிடம் இருக்கும் பால் ராப்ஸனின் இசைத்தட்டு சற்று விலை கூடியது. ஒரு இசைத்தட்டின் ஒரு பக்கம் அரை மணி நேரம் பாடும். இது எப்போது இப்படி முரண்டு பிடிக்கத் தொடங்கியது?

நான் பார்த்தேன். ரேடியோக்ராமை நிறுத்தினேன். பிறகு சொன்னேன்:

“அடியே... நான் இதோட நட்டை எடுத்து வச்சிருந்தேன்.''

சரிதான்... அப்படியென்றால் இதை முன்பே சொல்ல வேண்டியதுதானே! நம்முடைய முஸ்லிம் சுபத்ராவின் தலைமையில் தமயந்தி, வத்சலா, ருக்மினிதேவி, ஃபாத்திமத்துஸ்ஸுஹுறா, ராஜலா, ஆயிஷாபீபி, தாட்சாயிணி, ரமா, சீதாதேவி- எல்லாரும் ஒரே நேரத்தில் இந்த அப்பாவி மனிதனை எரித்து விடுவதுபோல் பார்த்தார்கள்.


பதிவிரதைகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எங்கே என்னை எரித்து சாம்பலாக்கி விடுவார்களோ என்று நான் பயந்தேன். நான் இங்குமங்குமாய் தொட்டுப் பார்த்துவிட்டு இசைத் தட்டை சரியான இடத்தில் வைத்தேன். பால் ராப்ஸன் இனிய குரலில் பாடினான். பெண் பிள்ளைகள் தங்களின் பேச்சுக்களை ஆரம்பித்தார்கள். தொடர்ந்து தேநீர், கடுமுடு எல்லாம் நடந்தன. போகிறபோது எதையோ ஞாபகப்படுத்திப் பார்த்து, என்மேல் பொசுக்கி விடுவது மாதிரி பார்வையை வீசிவிட்டுப் போனார்கள்.

பெண்மணிகளே! நான் எந்த நட்டையும் எடுத்து வைக்கவில்லை. சௌபாக்கியவதிகளான மைவிழி மங்கைகள் மத்தியில் நம்முடைய முஸ்லிம் சுபத்ராவைத் தேவையில்லாமல் அவமானப்படுத்த வேண்டாம் என்பதற்காக நான் அப்படிக் கூறினேன். நான் முஸ்லிம் சுபத்ராவிடம் கேட்டேன்.

“என்னடி.. பால் ராப்ஸன் ஒரேயடியா முரண்டுபிடிச்சு, சீறி, கர்ஜிக்கிறான்?''

“எனக்கு புரிஞ்சு போச்சு.'' முஸ்லிம் சுபத்ரா சொன்னாள்: “45-க்கு பதிலா 76-ஐ வச்சிட்டேன்...''

“நட்டை நான் எடுத்து வச்சிருந்தேனா?''

“இல்ல...''

“அப்படின்னா... ரேடியோக்ராம் என்ற தேரை இனிமேல் நான்தான் இயக்குவேன்... அதைத் தொட்டா, உன் கையை நான் ஒடிப்பேன். நான் செத்துப்போயி என்னைக் குழிக்குள்ள போட்டு மூடியாச்சுன்னு வச்சுக்கோ... இது நடந்து கொஞ்ச நாள் ஆன பிறகு, உனக்கும் உன்னோட சினேகிதிகளான மைவிழி மங்கைகளுக்கும் பாட்டு கேட்கணும்போல இருக்குன்னு வச்சுக்கோ... அப்போ என்னோட கல்லறைக்குப் பக்கத்துல வந்து நின்னு என்னைக் கூப்பிட்டா போதும். "ஏய் பஷீர்... கொஞ்சம் வந்து ரேடியோக்ராம்ன்ற தேரை இயக்கிட்டுப் போங்க'ன்னு சொல்லு... அப்போ வசதிப்பட்டா நான் வருவேன். இப்போ நீ ஓடிடு!''

மங்களம். சுபம்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.