Logo

பேருந்து பயணம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6772
perunthu payanam

றுவடை முடிந்து தரிசாகக் கிடந்த வயல்களுக்கு நடுவிலிருந்து வரப்பின் வழியாக அவருடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். கோட்டை மடித்து தோளில் இட்டுக்கொண்டு, மேற்துண்டைக் கொண்டு தலையில் ஒரு கட்டு கட்டிக்கொண்டு, அரை வயதுகூட ஆகாத குழந்தையை மார்புடன் சேர்த்து வைத்துக்கொண்டு திரு. பத்மநாபன் வேகமாக நடந்தார். அவர் இடையில் அவ்வப்போது திரும்பிப் பார்த்தார்.

தந்தையுடன் சேர்ந்து கொள்வதற்காக ஓடி வந்து கொண்டிருந்த மகள் லீலாவதியிடம் “விழுந்துடாதே!'' என்று எச்சரித்துக் கொண்டும், கணவர் அவ்வளவு வேகமாக நடந்துசெல்வதைப் பற்றிய கவலையை முகத்தில் வெளிப்படையாகக் காட்டியவாறு அன்ன நடை நடந்து வந்து கொண்டிருந்த மனைவி கமலாக்ஷியிடம், “கொஞ்சம் இங்கே சீக்கிரமா நடந்து வா'' என்று பொறுமையில்லாமல் கட்டளை பிறப்பித்துக்கொண்டும், கிழக்கு திசையின் வான விளம்பில் உதித்து வந்து கொண்டிருந்த சூரியனின் அழகில் ஒன்றிப் போய் ஆரவாரம் உண்டாக்கி உற்சாகத்தில் திளைத்திருந்த செல்லக் குழந்தைக்கு முழுமையான பாசத்துடன் முத்தம் கொடுத்துக் கொண்டும்... இவ்வாறு நடையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

“என்னால முடியாது... இப்படி ஓடுறதுக்கு.'' கமலாக்ஷி மேலும் கீழும் மூச்சு விட்டுக்கொண்டே உரத்த குரலில் சொன்னாள்.

“நெருங்கி வந்து விட்டோமே! அதோ சாலை தெரிகிறது...'' பத்பநாபன் வயலின் இன்னொரு கரையைச் சுட்டிக்காட்டினார்.

“அப்படின்னா எதற்கு இப்படி ஓடணும்? கொஞ்சம் மெதுவா நடங்க...''

பத்மநாபன் நடையை சாதாரணமாக ஆக்கிக் கொண்டே சொன்னார்: “ஆலப்புழையில் இருந்து வர்ற முதல் பேருந்தில் போகணும்.''

கமலாக்ஷி நடந்து அருகில் வந்து கொண்டே சொன்னாள்: “இரண்டாவது பேருந்தில் போனா என்ன? நீதிமன்றத்துக்கு பதினொரு மணிக்கு போனா போதாதா?''

பத்மநாபனுக்கு சற்று கோபம் வந்துவிட்டது. “அப்படியென்றால் நான் சொன்னது எதுவும் உனக்குப் புரியவில்லை. அப்படித்தானே? காலையில்  நான் முன்சீப்பின் வீட்டிற்குப் போகணும். அதற்குப் பிறகு வேறு ஒன்றிரண்டு பேர் சீக்கிரமே நீதிமன்றத்துக்கு வர்றதா சொல்லி இருக்காங்க. ஏதாவது பணம் கிடைக்கக் கூடிய விஷயம்...''

“யாரைப் பார்த்தாலும் பரவாயில்லை. எங்கு போனாலும் பரவாயில்லை. இப்போ என்னால் ஓடி  வர முடியாது. அவசரப் படுறவங்க போகலாம்.'' கமலாக்ஷி தன்னுடைய நடையை முன்பு இருந்ததைவிட தாமதமாக்கினாள். வேறு வழி இல்லாததால், பத்மநாபனும் தன்னுடைய நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார்.

சிறிது நேரம் அவர்கள் மிகவும் அமைதியாக நடந்தார்கள். பத்மநாபன் கொல்லம் முன்சீப் நீதிமன்றத்தில் தலைமை க்ளார்க்காக  பணியாற்றுகிறார். மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்ததால், தன் மனைவியின் வற்புறுத்தலின் காரணமாக அவர்களுடைய வீட்டிற்கு வந்து விட்டு, திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அன்று அதிகாலை நேரத்தில் கொல்லத்தில் போய் சேர்ந்ததும், பல வேலைகள் இருக்கின்றன. முந்தைய நாள் சாயங்காலம் போவதாகக் கூறியபோது, மாமியார் தடுத்துவிட்டாள். மனைவி மவுனமாக இருந்தவாறு அதற்கு ஆதரவாக இருந்தாள். எது எப்படி இருந்தாலும், காலையில் முதல் பேருந்தில் போய் விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் பத்மநாபன் இரவில் அங்கேயே இருந்துவிட்டார். வீட்டிலிருந்து மூன்று மைல் தூரம் நடந்தால்தான் பேருந்து செல்லக் கூடிய சாலையை அடைய முடியும். பொழுது புலரும் நேரத்தில் எழுந்து, காப்பி குடித்துவிட்டு புறப்பட்டால் போதும் என்ற மனைவி, மாமியார் ஆகியோரின் வற்புறுத்தலைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் பத்மநாபன் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.

பத்மநாபன் பல விஷயங்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டே நடந்து நடந்து வயலைத் தாண்டியவுடன், திரும்பிப் பார்த்தார். கமலாக்ஷி மிகவும் தொலைவில் மெதுவாக... மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். லீலாவதி ஓடி ஓடி களைத்துப் போய்விட்டாள். பத்மநாபனுக்கு கோபம் வந்துவிட்டது. “இதனால்தான் பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு எந்தவொரு இடத்திற்கும் போவதில்லை என்று முடிவு செய்ததே.''

கமலாக்ஷிக்கும் கோபம் வந்தது: “அழைத்துக் கொண்டு போகும்படி யாராவது சொன்னார்களா? நீங்கள் மட்டும் நடந்து போனால் போதுமே! வருடத்திற்கு ஒரு முறையாவது பெற்ற தாயைக் கொஞ்சம் போய் பார்க்க வேண்டாமா?''

“எனக்கும் ஒரு தாய் இருக்காங்க.''

“அதனால் என்ன? போய் பார்த்தால் என்ன? அம்மாவுக்கும் தம்பிமார்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பி வைக்கிறீர்கள் அல்லவா? உங்களைப் பெற்றது மாதிரிதான் என் தாய் என்னையும் பெற்றிருக்காங்க.''

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நீயும் பணம் அனுப்பி வை.''

“ஓ... எல்லாரைப் பற்றியும் எனக்குத் தெரியும். அம்மாவுக்கு ஏதாவது பணம் அனுப்பி வைக்கணும்னு நான் சொன்னால், அப்போ சொல்லுவீங்க- சீட்டுக்கு கட்டணும், முண்டு வாங்கணும், அதை வாங்கணும், இதை வாங்கணும் என்றெல்லாம்..''

“நீங்க ஒரு நன்றி இல்லாத கூட்டம். இப்போது பத்து ரூபாயும் முண்டும் மேற்துண்டும் உன்னுடைய தாய்க்குத் தந்தேன் அல்லவா?''

“ஒவ்வொரு வருடமும் ஒரு முறை பத்து ரூபாய் அனுப்பி வைத்தால் போதுமானது. உங்களுடைய அம்மாவுக்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய் அனுப்பி வைக்கிறீங்களே! அது...?''

“ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைத்தாலும், வருடத்திற்கு ஒருமுறை கொடுக்கும் அதே அளவு பணம்தானே வருது?''

“ஆமாம்... ஆமாம்... எனக்குத் தெரியும்... எல்லோரைப் பற்றியும்...''

அவர்கள் வயலைக் கடந்து சாலையில் கால் வைத்தார்கள். சாலையில் கால் வைத்த இடத்திலேயே ஒரு பெரிய மாமரமும் சற்று தூரத்தில் ஒரு சிறிய பாலமும் இருந்தன.

பத்மநாபன் சொன்னார்: “குழந்தையைக் கொஞ்சம் தூக்கு. நான் கோட்டை அணிந்து கொள்கிறேன்.''

கமலாக்ஷி அலட்சியமாக குழந்தையை வாங்கி தன் இடுப்பில் வைத்தாள். பத்மநாபன் கோட்டை அணிந்து கொண்டார். மேற்துண்டை தலையிலிருந்து எடுத்து கழுத்தில் சுற்றி அணிந்தார். தொடர்ந்து லீலாவதியின் கையைப் பிடித்துக் கொண்டு பாலத்தின் மீது போய் அமர்ந்தார். கமலாக்ஷியும் அருகில் வந்து முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு நின்றாள். லீலாவதி தன் தந்தையின் முழங்கால்களைப் பிடித்துக்கொண்டே கேட்டாள்: “இனி எப்போ அப்பா காப்பி குடிக்குறது?''

“நாம இப்போ அங்கே போயிடுவோமே! பிறகு காப்பி குடிப்போம்.'' அவர் தன் மகளை வருடிக் கொண்டே தேற்றினார்.

கமலாக்ஷியின் இடுப்பிலிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. பத்மநாபன் திட்டினார்: “குழந்தைக்கு ஏன் பால் கொடுக்கல?''

“வழியில வந்து கொண்டிருக்கிறப்போ பால் தர்றதுக்கு இப்போ என்னால முடியாது.''

லீலாவதி பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்: “அப்பா, எனக்கு காப்பி...''

“அங்கே போன பிறகு குடிப்போம், மகளே.''


வடக்கு திசையிலிருந்து ஒரு ஹாரன் சத்தம் கேட்டது. “அதோ பேருந்து வருது...'' என்று கூறிக்கொண்டே பத்மநாபன் எழுந்தார். ஒரு வண்ணமயமான பேருந்து ஃபுல் லோடுடனும் ஃபுல் ஸ்பீடுடனும் வளைவைத் தாண்டி வந்து கொண்டிருந்தது. “இங்கே... பக்கத்தில் வந்து நில்லு.'' பத்மநாபன் தன் மனைவியிடம் கூறினார். கமலாக்ஷி புடவை தலைப்பைப் பிடித்து சரி பண்ணியவாறு அழுது கொண்டிருக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சாலைக்கு வந்தாள்.

பேருந்து நெருங்கிக் கொண்டிருந்தது. நிறுத்தப் போவதற்கான அறிகுறி தெரியாததால், பத்மநாபன் வேகமாக ஒன்றிரண்டு அடிகள் முன்னோக்கி எடுத்து வைத்து, தன் கையை பேருந்திற்கு நேராக நீட்டினார். பேருந்து தன்னுடைய வேகத்தை சிறிதுகூட குறைக்காமல், பத்மநாபனை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. பத்மநாபன் திடீரென்று பின்னோக்கி விலகினார். எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பேருந்து மிகவும் வேகமாகப் போய் மறைந்தது.

பத்மநாபன் "கொட்டையை இழந்த அணிலைப்போல' வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தையே செயலற்ற நிலையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். கமலாக்ஷி பத்மநாபனைப் பார்த்து சற்று புன்னகைத்து விட்டு, எதுவுமே பேசாமல் தான் முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் போய் உட்கார்ந்தாள்.

லீலாவதி தன் தந்தையின் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டே பிடிவாதம் பிடித்தாள்: "அப்பா, காப்பி...''

பத்மநாபன் எதுவும் கூறாமல் வெறுமனே நின்றிருந்தார். ஏமாற்றத்தாலும் கோபத்தாலும் அவரால் எதுவும் கூற முடியவில்லை. கமலாக்ஷி மீண்டும் அவரைப் பார்த்து புன்னகைத்தாள். காலையில் வயலின் வழியாக இரண்டு மூன்று மைல்கள் காப்பிகூட பருகாமல் நடக்கச் செய்து அழைத்து வந்ததற்கான எதிர்ப்பை அவள் அந்த வகையில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். தன் மனைவியின் புன்னகைக்கான அர்த்தத்தை பத்மநாபன் முழுமையாகப் புரிந்து கொண்டார். அவருடைய கோபம் எல்லை இல்லாமல் இருந்தது. ஆனால் என்ன கூறுவது? என்ன செய்வது?

குழந்தை முன்பைவிட உரத்த குரலில் அழ ஆரம்பித்தது. தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு பத்மநாபனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. “குழந்தைக்கு பால் கொடுக்கும்படி சொல்லி...'' அவர் கோபமான குரலில் திட்டினார்.

“யாரைப் பார்த்து இந்த அளவிற்கு கோபப்படுறீங்க?'' கமலாக்ஷிக்கு கோபம் உண்டானது:

“பேருந்தை நிறுத்தாதற்கு நானா குற்றக்காரி?''

பத்மநாபன் சிரமப்பட்டு தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டார். “யாரும் எந்தத் தப்பையும் செய்யல. வர்றது வரட்டும். நேற்று சாயங்காலமே போகலாம் என்று நான் சொன்னேன்.''

“அப்படின்னா ஏன் போகல! போக வேண்டாம்னு நானா சொன்னேன்?''

அதற்குப் பிறகும் பத்மநாபனின் கோபம் கட்டுப்பாட்டை மீறியது. “எனக்கு கோபம் வந்தால்... அதற்குப் பிறகு நடக்குறதே வேறு... வழி என்றுகூட நான் பார்க்க மாட்டேன்.''

“வழி என்று நினைக்கலைன்னா எனக்கு என்ன? சாயங்காலம் போக வேண்டாம் என்று நான் சொல்லல. அம்மாதான் சொன்னாங்க.''

“அம்மா சொன்னப்போ, போய் காரியங்களைப் பார்க்க வேண்டியதிருக்குன்னு நீதானே சொல்லணும்? நீ சொல்லக் கூடாதா?''

பத்மநாபனின் கோபம் ஏமாற்றமாக வடிவமெடுத்தது. “ஏன் அதையெல்லாம் சொல்லணும்? எனக்கு அது ஒரு பாடம்- அவனவனுடைய விஷயத்தை அவனவனே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது...''

“பிறகு... வேறு யாராவது பார்ப்பாங்களா?''

“போதும்டீ... நிறுத்து'' பத்மநாபன் கடுமையான குரலில் கட்டளையிட்டார்.

கமலாக்ஷி சற்று தாழ்ந்த குரலில் சொன்னாள்:

“ஓ! நான் நிறுத்திக்கொள்கிறேன்.'' அவள் இரவிக்கையைச் சற்று உயர்த்தி, பாடியின் முடிச்சை அவிழ்த்துவிட்டு, குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக மாமரத்திற்குப் பின்னால் சென்றாள்.

தந்தை, தாய் இருவரின் சண்டைச் சத்தத்தையும் கேட்டு பசியை மறந்துவிட்டு லீலாவதி பாலத்தின்மீது எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். பாதையின் வழியாக இடையில் அவ்வப்போது ஒவ்வொருவரும் போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் பத்மநாபனையும் மனைவியையும் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் போய்க் கொண்டிருந்தனர். ஒரு வயதான கிழவன் பத்மநாபனின் அருகில் வந்து நின்றுகொண்டு கேட்டான்: "என்ன இங்கே இப்படி நின்னுட்டு  இருக்கீங்க?''

“நாங்கள் கொல்லத்துக்கு போகணும்.'' பத்மநாபன் மிடுக்கான குரலில் கூறினார்.

“பேருந்துக்காக காத்திருக்கீங்க... அப்படித்தானே?''

“ம்...''

“என்ன வேலை?''

கிழவனின் அந்த அடுக்கடுக்கான கேள்விகள் அந்த வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதும், இறுதியில் தன்னுடைய ஒரு வாழ்க்கை வரலாற்றை அந்த கிழவனிடம் கூற வேண்டியதிருக்கும் என்பதும் பத்மநாபனுக்குப் புரிந்தது. அதனால் முன்கூட்டியே அந்த கேள்விகளுக்கு ஒரு தடை இட வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்து கொண்டே இவ்வாறு கேட்டான்: "இனி பேருந்து எப்போ வரும்?''

“இப்போ வரும்... வீடு எங்கே இருக்கு?''

“சற்று தூரத்தில்... இங்கே பக்கத்துல எங்கேயாவது காப்பி கிடைக்குமா?''

“கிடைக்காமல் என்ன? அதோ இருக்கே! அந்த சுமை தாங்கியைத் தாண்டி, குட்டன் பிள்ளையோட தேநீர் கடை... உட்காருவதற்கும் சவுகரியமான இடம்... பெஞ்ச், நாற்காலி எல்லாம் இருக்கு... பேருந்து வர்றப்போ நீங்க ஏறிப்போகலாம். அய்யோ... பிள்ளை பசியால வாடிப்போயிருக்கே! நான் அங்கே போறேன். வரட்டுமா?''

“நல்ல காப்பி கிடைக்குமா?''

"பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்குற ஆசிரியர்கள் எல்லாரும் அங்கேதான் தேநீர் குடிக்கிறாங்க. முதல் தர தேநீர்...''

“ஏங்க கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்க.'' மாமரத்திற்குப் பின்னாலிருந்து ஒரு அழைப்பு. பத்மநாபன் மாமரத்திற்குப் பின்னால் சென்றார். கமலாக்ஷி கோபத்துடன் நின்றிருந்தாள்: “கண்டவனோட தேநீர் கடையில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பதற்கும் தேநீர் பருகுவதற்கும் நான் தயாரில்லை. தெரியுதா? நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடுறேன்.''

"தேநீர் கடையில் போய் உட்காரு, தேநீர் பருகுன்னு உன்னிடம் யாராவது சொன்னாங்களா?''

“பிறகு அந்தக் கிழவனிடம் என்ன கேட்டீங்க?''

“குழந்தைக்கு காப்பி வாங்கிக் கொடுப்பதற்காக கேட்டேன்.''

“குழந்தைக்கு இப்போ தேநீர் கடையில் இருந்து எதுவும் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.''

“அப்படின்னா, நீ காப்பி தயார் பண்ணிக் கொடு.''

"காப்பி குடிச்சிட்டு புறப்பட்டால் போதும்னு நான் சொன்னேன்ல?''

“நீ சொல்றதையெல்லாம் கேட்கக்கூடியவனா நான்?''

“நான் சொல்றதைக் கேட்கறது ஒரு குறைச்சலான விஷயமா தெரிந்தால், கேட்கவே வேண்டாம். ஆனால், குழந்தைக்கு தேநீர் கடையில் இருந்து எதையும் வாங்கிக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்.''

வடக்கு திசையிலிருந்து ஹாரன் ஒலி கேட்டது. பத்மநாபன் சாலையை நோக்கி ஒடினார். அவர் சாலைக்கு வந்து கையைக் காட்டிகொண்டு நின்றார். பேருந்து நெருங்கி வர வர வேகம் குறைய ஆரம்பித்தது. “சீக்கிரமா வா...'' அவர் மாமரத்திற்குப் பின்னால் பார்த்து உரத்த குரலில் சொன்னார்.


லீலாவதியின் கையைப் பிடித்துக் கொண்டு அவர் பேருந்தில் ஏறுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். கமலாக்ஷி வேகமாக பாடியில் முடிச்சு போட்டு, இரவிக்கையையும் புடவையையும் சரி பண்ணி விட்டு, குழந்தை யைத் தூக்கிக் கொண்டு சாலைக்கு வந்தாள். இந்த முறை பேருந்தில் ஏறி விடலாம் என்று எல்லாரும் முடிவு செய்தார்கள். பேருந்து நெருங்கி வந்தது. பேருந்திற்குள் ஏறுவதற்கு கமலாக்ஷி அவசரப்பட்டாள்.

“நின்றவுடன் ஏறினால் போதும்'' என்று பத்மநாபன் தடுத்தார்.

“இடம் இருக்கிறதா?'' ஓட்டுநர் பின்னால் அழைத்துக் கேட்டார். “இல்லை... போகட்டும்...'' நடத்துனர் பின்னிருக்கையில் இருந்து கொண்டே பதில் சொன்னார். பேருந்தின் வேகம் அதிகமானது. அது இரைச்சல் எழுப்பிக் கொண்டே வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.

இந்த முறை பத்மநாபன் மட்டுமல்ல- கமலாக்ஷியும் லீலாவதியும் ஏமாற்றத்திற்குள்ளாகி விட்டார்கள். அருகில் நின்று கொண்டிருந்த கிழவன் பத்மநாபனுக்கு ஆறுதல் கூறினான்: “பரவாயில்ல... ஒரு மணி நேரத்திற்குள் இன்னும் பேருந்து வரும். அதற்குள் குழந்தைக்கு ஏதாவது வாங்கி கொடுங்க. இல்லாவிட்டால் அது மிகவும் களைத்துப் போய்விடும். வாங்க... நாம தேநீர் கடைக்குப் போகலாம்.''

“வேண்டாம்... நீங்க போங்க..'' பத்மநாபன் வெறுப்புடன் சொன்னார். கிழவன் என்ன சொல்வது என்று தெரியாமல் மெல்லிய ஒரு இளிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். பத்மநாபன் எதுவும் பேசாமல் கவலையுடன் நின்று கொண்டிருந்தார்.

அவளுடைய இதயம் லேசாகிவிட்டது. அவளுக்கும் பசி எடுக்க ஆரம்பித்தது. தன் கணவர்மீது இருந்த எதிர்ப்புகள் எல்லாவற்றையும் அவள் மறந்துவிட்டாள். அவள் அருகில் வந்து கணவருக்கு ஆறுதல் சொல்ல முயற்சித்தாள்: “இதற்காக ஏன் இப்படி கவலைப்பட வேண்டும்? இனியும் பேருந்து இருக்குல்ல?''

கமலாக்ஷி அமைதியான மனநிலைக்கு வந்தவுடன், பத்ம நாபனுக்கு அவள்மீது இருந்த கோபமும் பேருந்து கிடைக்காததால் உண்டான ஏமாற்றமும் அதிகமாயின. “ஹோ... அங்கேயே இரு. உனக்கு என்ன தெரியும்!'' அவர் நிலை குலைந்த நிலையில் கைகளைக் கோர்த்து பிசைந்து கொண்டே திரும்பி நின்றார். “நேற்று போயிருந்தால், இந்த சிரமங்களெல்லாம் உண்டாகி இருக்குமா?'' அவர் தன் பற்களைக் கடித்துக்கொண்டே முணுமுணுத்தார்.

நேற்றே புறப்படாமல் போய்விட்டது தவறாகிவிட்டது என்பதை கமலாக்ஷியும் உணர்ந்தாள். அவள் ஒரு தவறு செய்துவிட்டவளைப் போல கூறினாள். “அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்னை அழைத்திருந்தால், நான் உங்க கூடவே வந்திருப்பேன். வற்புறுத் தாமல் இருந்ததால், அந்த அளவிற்கு முக்கியமில்லைன்னு நான் நினைச்சிட்டேன்.''

பத்மநாபன் திரும்பி நின்றார்: “என் பக்கத்துல இருந்து போடீ... முக்கியமில்லைன்னு இவள் நினைச்சாளாம்! நீதிமன்றத்துக்குப் போவது முக்கியமான விஷயமில்லையா!''

கமலாக்ஷி சுற்றிலும் பார்த்துக்கொண்டே கெஞ்சுகிற குரலில் சொன்னாள்: “அய்யோ! மெதுவா சொல்லுங்க... இது வழிதானே?''

“வழியாக அமைந்து போனது உன்னுடைய அதிர்ஷ்டம்.'' அவர் திரும்பி நடந்து சென்று சிறிது தூரத்தில் போய் நின்றார். நேரம் ஒன்பது மணியைத் தாண்டி விட்டிருந்தது. கமலாக்ஷியின் கவலையும் பதைபதைப்பும் அதிகமாக ஆரம்பித்திருந்தன. தன் கணவர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்- அது மிகவும் முக்கியமான விஷயம். அதன் முக்கியத்துவத்தை அவள் அப்போதுதான் முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தாள்.

லீலாவதிக்கு அவளுடைய பசியைப் பற்றி புகார் செய்வதற்கு ஆள் இல்லை. தந்தை கோபத்தில் இருக்கிறார். தாய் கவலையில் இருக்கிறாள். யாரிடம் கூறுவது? அவள் கடவுளிடம் கூறுவதைப் போல உரத்த குரலில் கூறினாள்: "எனக்கு பசிக்குதே!''

“இங்கே வா மகளே.'' கமலாக்ஷி தன் மகளை அருகில் வரும்படி அழைத்தாள்.

“வா மகளே... காப்பி வாங்கித் தர்றேன்.'' பத்மநாபனும் மகளை அழைத்தார்.

லீலாவதி தன் தந்தையின் அருகில் ஓடிச் சென்றாள். அவர் தன் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.

“எங்கே போறீங்க?'' கமலாக்ஷி உரத்த குரலில் அழைத்துக் கேட்டாள். பத்மநாபன் திரும்பிப் பார்த்தார். தன் மனைவி மிகுந்த கவலையுடன் நின்று கொண்டிருக்கிறாள் என்பதை அவர் புரிந்துகொண்டார். கணவன் என்பவனுக்கு இருக்கக் கூடிய அவருடைய இதயம் இளகியது. அவர் அமைதியான குரலில் கூறினார்: “தேநீர் கடையில் குழந்தைக்கு சிறிது காப்பி வாங்கித் தரணும்.''

“நான் இங்கேயே நிற்கணுமா?''

“அப்படின்னா வா... நாமும் கொஞ்சம் காப்பி குடிப்போம். நீ எதுவுமே சாப்பிடலையே! அங்கே உட்காருவதற்கு வசதி இருக்கிறது.''

மனமில்லா மனதுடன் கமலாக்ஷி மெதுவாக நடந்தாள். அருகில் சென்றதும் அவள் சொன்னாள்: “அங்கே எப்படி போய் உட்காருவது?''

“பிறகு என்ன செய்வது? இப்படியே எவ்வளவு நேரம் தண்ணிகூட குடிக்காமல் நின்று கொண்டிருப்பாய்?''

“அவர்கள் மெதுவாக நடந்தார்கள். வடக்கு திசையிலிருந்து ஒரு சத்தம்- ஹாரன் ஒலி! பதமநாபன் திரும்பி நின்றார்: “பேருந்து வந்துகொண்டிருக்கிறது. நாம இங்கேயே நிற்போம்.''

பேருந்து வளைவைத்  தாண்டி வந்து கொண்டிருந்தது. பத்மநாபன் கையைக் காட்டினார். பேருந்து ஓடி வந்து அவர்களுக்கு முன்னால் நின்றது. நடத்துநர் கீழே இறங்கினார். தெரிந்த ஆளைப்போல காட்டிக் கொண்டு மரியாதையான குரலில் சொன்னார்: “இரண்டாவது இருக்கையில் போய் உட்காருங்க.''

பத்மநாபன் லீலாவதியைத் தூக்கி பேருந்திற்குள் ஏற்றினார். தொடர்ந்து அவரும் ஏறினார். தன் மனைவியின் கையிலிருந்து குழந்தையை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, வலது கையை நீட்டினார். கமலாக்ஷி தன் கணவரின் கையைப் பற்றி பேருந்திற்குள் ஏறினாள். எல்லாரும் உட்கார்ந்தார்கள். கமலாக்ஷி தன் கணவரைப் பார்த்து வெற்றி பெற்றுவிட்டதைப்போல புன்னகைத்தாள். பத்மநாபன் நிம்மதியாக ஒருமுறை மூச்சுவிட்டார்.

“ம்... போகலாம்.'' நடத்துனர் அனுமதி கொடுத்தார்.

பேருந்து முன்னோக்கி நகர்ந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.