
சுராவின் முன்னுரை
கலீல் ஜிப்ரான் (Khalil Gibran) 1926 ஆம் ஆண்டில் எழுதிய ‘Sand and Foam’ என்ற அருமையான நூலை ‘மணலும் நுரையும்’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
கலீல் ஜிப்ரானின் பல நூல்களை நான் படித்திருக்கிறேன். கதை, கவிதை, தத்துவம், வரலாறு, ஆன்மிகம் எல்லாம் கலந்த கலவையாக இருக்கும். அவருடைய படைப்புகள். ஐந்து வரிகள் எழுதினாலும் அதில் பல விஷயங்களை அவர் பூடகமாக உள்ளடக்கியிருப்பார். அதுதான் ஜிப்ரானின் தத்துவம்.
அவருடைய எழுத்துகளைப் படிக்கும் போது நமக்கு உண்டாகும் புதுமையான அனுபவத்தையும் புத்துணர்ச்சியையும் வார்த்தைகளால் கூறுவது என்பது முடியாத ஒரு விஷயம். மிகப்பெரிய தத்துவங்களை இரண்டு அல்லது மூன்று வரிகளுக்குள் எழுதப்பட்டிருக்கும் ஒரு படைப்புக்குள் அவர் சொல்லாமல் சொல்லியிருப்பார். அதை ஆழ்ந்து படித்தால்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும். கலீல் ஜிப்ரானின் படைப்புகள் மேலோட்டமாகப் படித்துச் செல்லக் கூடியவை அல்ல. அவற்றை மிகவும் ஆழ்ந்த நுண்ணறிவுடன் படித்தால் மட்டுமே உள்ளே மறைந்திருக்கும் பல மறைபொருட்களையும், வாழ்க்கையின் தத்துவங்களையும் புதிர்களையும் உணர்ச்சிகளையும் வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் ஜிப்ரானின் படைப்புகளைப் படிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம் என்பதுதான் உண்மை.
அந்தச் சுகமான அனுபவத்துடன் நான் இந்த ‘மணலும் நுரையும்’ என்ற நூலை மொழிபெயர்த்திருக்கிறேன். அவர் எழுயிருப்பவை கவிதையா, கட்டுரையா, தத்துவமா என்று பிரித்துக் கூறுவது உண்மையிலேயே சிரமமான விஷயம்தான். இலக்கியத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்ததாகவும் அது இருந்து விட்டுப் போகட்டும். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதுதானே நமக்கு முக்கியம். அந்த வகையில் பார்த்தால் இது ஒரு அருமையான நூல். மிகப்பெரிய பல விஷயங்களைச் சில வரிகளில் சர்வ சாதாரணமாகப் போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்லும் ஜிப்ரானின் திறமை நம்மை அதிசயிக்க வைக்கும். இது மேம்போக்காகப் படிக்கக்கூடிய நூல் அல்ல. சற்று ஆழ்ந்து படிக்க வேண்டிய நூல். அப்படிப் படித்தால், பல புதிய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம் - பல புதிர்கள் நம்முன் அவிழும். நான் பெற்ற அனுபவம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
இந்த சிறந்த நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடிதளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
மறுப்பு
ஏழு முறை நான் என்னுடைய ஆன்மாவைக்
கடுமையான வார்த்தைகளால் திட்டினேன்.
முதல் முறை : அவள் உயரத்தை அடைய,
அளவுக்கு மீறி பணிவு காட்டியதற்காக.
இரண்டாவது முறை : அவள் கால்
ஊனமுற்றவர்களுடன் நொண்டிக்கொண்டு
நடப்பதைப் பார்த்து.
மூன்றாவது முறை : அவள் கடுமையானதற்கும்
நயவஞ்சகத்திற்கும் மத்தியில் நின்றுகொண்டு,
நயவஞ்சகத்தைத் தேர்வு செய்ததற்காக.
நான்காவது முறை : அவள் தானே தவறுகள்
செய்துவிட்டு, மற்றவர்கள் செய்த தவறுகளை
நினைத்துப் பார்த்துக் கூறியபோது.
ஐந்தாவது முறை : அவள் பலவீனமாக
இருந்துகொண்டு தன்னுடைய பொறுமை குணத்தைத்
தன்னுடைய பலம் என்று விவரித்த போது.
ஆறாவது முறை : அவள் மற்றவர்களின்
முகங்களில் இருக்கும் அவலட்சணத் தன்மைகளைப்
பார்த்து, அவற்றைப் பற்றி வெறுப்புடன் பேசும் அதே
நேரத்தில் தன்னுடைய முகமூடிகள்தான் அவை என்ற
விஷயத்தை அவள் அறியாமல் இருந்தபோது.
ஏழாவது முறை : அவள் பாராட்டுகள் நிறைந்த
பாடல்களைப் பாடி, அதுதான் புண்ணியம் என்று
நினைத்தபோது.
*****
அடிமை
பகலவனுக்குக் கீழே நீங்கள் எவ்வளவோ
சுதந்திரத்தன்மை கொண்டவர்.
இரவு நேர நட்சத்திரங்களுக்குக் கீழேயும் நீங்கள்
எவ்வளவோ சுதந்திரம் உள்ளவர்தான்.
சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் ஒளி
இல்லாத வேளைகளிலும் நீங்கள் சுதந்திரமானவரே.
இருப்பவர்கள் எல்லோருக்கும் எதிராக நீங்கள்
கண்களை மூடிக்கொள்ளும்போதும்
சுதந்திரமானவர்தான். அதிகமான சுதந்திரத்தைக்
கொண்டவர்தான். அதே நேரத்தில் நீங்கள் ஒருவர்
மீது அன்பு செலுத்தும்போது அவருக்கு நீங்கள்
அடிமையே! நீங்கள் அவரை விரும்புவதால்.
உங்கள் மீது அன்பு செலுத்தும் அவர் உங்களின்
அடிமை! அவர் உங்களை விரும்புவதால்.
படைப்பு
எகிப்தின் மணல்வெளியில் அமைதியாக
கால நிலைகளைப் பற்றி கவலைப்படாமல்
நான் படுத்திருந்தேன், நீண்ட காலமாக.
பிறகு, சிறிதும் எதிர்பாராத ஒரு தருணத்தில்
சூரியன் எனக்குப் பிறவி தந்தது.
நான் கிடந்த இடத்தை விட்டு எழுந்தேன்.
நைல் நதியின் கரைகளில் அலைந்து
பகல்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடினேன்.
இரவுகளுடன் சேர்ந்து கனவு கண்டேன்.
இப்போது
எகிப்தின் மணல் வெளியில் மீண்டும் நான் அமர
சூரியன் ஆயிரம் கால்களால் என்னை மிதிக்கிறது.
ஆனால்...
இதோ ஒரு அதிசயம்
இதோ ஒரு விடுகதை
என்னைக் கிடப்பிலிருந்து எழுப்பிய இந்தச்
சூரியனுக்கு
என்னை வீழ்த்த முடியவில்லை.
நான் இப்போதுகூட நிமிர்ந்து
நின்றுகொண்டிருக்கிறேன்.
உரத்த குரலில் பாடுகிறேன்.
கனவுகள் காண்கிறேன்.
நைல் நதியின் கரைகளில் அலைந்து திரிகிறேன்.
உறுதியான கால்களால்
பலமான எட்டுகளுடன்...
*****
நெருக்கம்
உங்களுடைய குற்றங்களில் பாதி தவறுகளைச் செய்தவன்
தான்தான் என்ற குற்ற உணர்வு தோன்றுபவன்தான்
உண்மையிலேயே ஒரு நீதிபதி.
ஒரு தெருச் சுற்றியோ அல்லது
ஒரு அதிகப் புகழ்பெற்றவனோ மட்டும்தான்
மனிதர்கள் உண்டாக்கிய சட்டங்களை மீறுவான்.
அவர்களைத்தான் கடவுளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவை
தன்னுடைய கைவிரல் அழுக்கை
உங்களுடைய வேட்டியில் துடைப்பவனுக்கு
உங்களின் வேட்டியை அவிழ்த்துக் கொடுங்கள்.
அது அவனுக்குத் திரும்பவும் தேவைப்படலாம்.
உங்களுக்கு நிச்சயமாக அதன் தேவை இருக்கப் போவதில்லை.
*****
உண்மையானது
பின்னிரவு நேரத்தில் வந்து
நீங்கள் இரவை விட மிகவும் கருப்பாக இருக்கும்போது
தைரியத்துடன் இருட்டானவனாகவே
தொடர்ந்து கொண்டு நீங்கள் படுத்திருங்கள்.
அதற்குப் பிறகு பொழுது புலர்ந்து
அப்போதும் நீங்கள் இருட்டாகவே இருக்கும்போது
நிமிர்ந்து நின்று பகலிடம் கூறுங்கள்.
நான் இப்போதும் கருத்து இருண்டு போயிருப்பவனே.
இரவுடனும் பகலுடனும் நாடகம் ஆடுவது
முட்டாள்தனமான விஷயம்.
அவர்கள் இருவரும் உங்களைப் பார்த்து
குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்கள்.
*****
பக்தி
ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து
பாதை வழியாகக் கடந்து செல்பவர்களை
நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது
நீங்கள் பார்ப்பீர்கள் -
உங்களின் வலது பக்கத்தில் ஒரு கன்னியாஸ்திரீ
நடந்து போவதையும்
உங்களின் இடது பக்கத்தில் ஒரு விலைமாது
நடந்து செல்வதையும்.
அபபாதும் உங்களின் கள்ளங்கபடமற்ற மனதில்
நீங்கள் முணுமுணுப்பீர்கள்.
ஒருத்தி எவ்வளவோ நல்லவள்.
இன்னொருத்தி எவ்வளவோ கெட்டவள்.
தொடர்ந்து நீங்கள் கண்களை மூடி கவனித்தால்
காற்றில் கலந்து ஒரு மெல்லிய குரல் ஒலிக்கும்.
நல்லவள் பிரார்த்தனை மூலமாகவும்
கெட்டவள் வேதனைகள் மூலமாகவும்
கடவுளைத் தேடுகிறார்கள்.
இரண்டுபேர்களின் மனதிலும்
தெய்வத்திற்கு ஒரு இடம் இருக்கவே செய்கிறது.
வாழ்க்கை
அவர்கள் என்னுடன் சேர்ந்து பாடுகிறார்கள்.
கையிலிருக்கும் ஒரு கிளி
காட்டிலிருக்கும் பத்து கிளிகளைவிட
மதிப்புள்ளது என்று
ஆனால், நான் கூறுகிறேன் :
காட்டிலிருக்கும் ஒரு கிளிக்கோ, ஒரு இறகுக்கோ
கையிலிருக்கும் பத்து கிளிகளைவிட
மதிப்பு இருக்கிறதே என்று.
நீங்கள் அந்த இறகுக்காகத் தேடி அலைந்து
திரிவதுதான் வாழ்க்கை.
இறகுகள் முளைத்த கால்களைக் கொண்ட
வாழ்க்கை என்றல்ல-
அந்த இறகுதான் வாழ்க்கையே.
*****
மாறுபாடு
நம்முள் சிலர் மையைப் போல.
நம்முள் சிலர் தாளைப் போல.
நம்முள் சிலர் அவர்களின் கருப்பின்
ஆதிக்கம்கொண்டு
ஊமையாக்கப் படுகிறார்கள்.
நம்முள் சிலர் அவர்களின் வெளுப்பின் ஆதிக்கம் கொண்டு
குருடர்கள் ஆக்கப்படுகிறார்கள்.
*****
புரிதல்
நேற்றுவரை நான் என்னைப் பற்றி நினைத்திருந்தது
வாழ்க்கை என்ற கிரகத்தில்
ஓசையின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு
துண்டு என்றுதான்.
இப்போது எனக்குத் தெரியும்
நான்தான் அந்தக் கிரகம் என்பதும்
வாழ்க்கை முழுவதும் எனக்குள்... எனக்குள்
ஓசையுடன் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு துண்டு என்பதும்.
ஊர்வலம்
வாழ்க்கை என்பது ஒரு ஊர்வலம்.
காலுக்கு வேகம் கூடியவர்கள்
அதற்கு வேகம் குறைவு என்று குறைபட்டுக்கொண்டு
ஊர்வலத்தை விட்டு வெளியேறுவார்கள்.
காலுக்கு வேகம் குறைவாக உள்ளவர்களோ
அதற்கு வேகம் கூடுதல் என்று குறைபட்டு
ஊர்வலத்தை விட்டு வெளியேறுவார்கள்.
*****
மூன்று உண்மைகள்
நம்முடைய சகோதரர் இயேசு செய்ததும்
பைபிளில் குறிக்கப்பட்டதுமான
மூன்று அற்புதங்கள் இருக்கின்றனவே!
ஒன்று : என்னைப் போலவும் உன்னைப் போலவும்
அவர் ஒரு மனிதராக இருந்தார் என்பது.
இரண்டு : அவர் நகைச்சவை உணர்வு கொண்டவராக
இருந்தார் என்பது
மூன்று : அவர் தோல்வியடைந்தவராக இருந்தாலும்,
வெற்றி என்று மனதில்
புரிந்துகொண்டிருந்தார் என்பது.
*****
சாமர்த்தியம்
ஒருநாள் நான் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தேன்.
அவளுடைய பிறக்க இருக்கும்
எல்லா குழந்தைகளையும் நான் அந்த முகத்தில் பார்த்தேன்.
ஒருநாள் ஒரு பெண் என் முகத்தைப் பார்த்தாள்.
அவள் பிறப்பதற்கு முன்பே
இறந்து போயிருந்த என்னுடைய முன்னோர்களை முழுமையாக
அவள் தெரிந்து கொண்டாள்.
*****
ஒரு முறை மட்டும்
ஒருமுறை மட்டுமே நான்
ஊமையாக்கப்பட்டிருக்கிறேன்.
அது- ஒரு மனிதர் நீங்கள் யார்
என்று கேட்டபோது.
*****
மறதி
சொர்க்கம் அங்கே, அந்தக் கதவுக்குப் பின்னால்
உள்ள அடுத்த அறையில்.
ஆனால், சாவிகள் என்னிடம் இல்லை.
ஒருவேளை, நான் அவை இருக்கும்
இடத்தை மறந்திருக்கலாம்.
கவலை
நீங்கள் ஒரு மேகத்தின் மீது இருந்தால்
ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும்
இடையில் இருக்கும் எல்லைக்கோட்டையும்
ஒரு வயலுக்கும் இன்னொரு வயலுக்கும்
இடையில் இருக்கும் எல்லைக் கல்லையும்
நீங்கள் பார்க்க முடியாது.
ஆனால், நீங்கள் ஒரு மேகத்தின் மீது
இருக்க முடியாதென்பது கஷ்டமான ஒரு
விஷயம்தான்.
இவைதான் நம்முடைய கவலையும்.
*****
அதற்கென்ன?
தேய்ந்துபோன தராசுகளும்
கூர்மை இல்லாத கத்திகளும் உள்ள
ஒரு மாமிசம் வெட்டும் மனிதன்தான்
உணர்ச்சிகளே இல்லாத ஒரு விஞ்ஞானி.
அதனால் உங்களுக்கு என்ன?
நாம் எல்லோரும் சைவம் சாப்பிடுபவர்கள்
இல்லையே!
*****
வெட்கம்
தன் மனதை என்னிடம் திறந்து காட்டுபவனை
நான் அன்புடன் பார்க்கிறேன்.
தன்னுடைய கனவுகளைத் திறந்து காட்டுபவனை
நான் மதிப்புடன் பார்க்கிறேன்.
அதே நேரத்தில் என்னைக் கவனிப்பவன் முன்னால்
நான் எதற்கு வெட்கப்படுகிறேன்!
*****
வெறுமனே இல்லை
நாம் வாழ்ந்தது வெறுமனே இல்லை.
நம்முடைய எலும்புகளைச் சேர்த்து வைத்துத்தானே
அவர்கள் கோபுரங்கள் கட்டினார்கள்!
*****
இலட்சியம்
நான் இனி என்னை முழுமையாகத்
திருப்திப்படுத்துவேன்.
அதற்கு முதலில் அபார அறிவு உள்ள உயிரினங்கள்
வாழும் ஒரு கிரகமாக நான் மாறவேண்டும்.
அப்படி இல்லாமல் முடியாதே!
அதுதானே ஒவ்வொருவரின் இலட்சியமும்!
*****
தனித்துவம்
அன்னியன் ஒருவன் உங்களைக் கிண்டல் செய்தால்
நீங்கள் அவன் மீது பரிதாபப்படலாம்.
ஆனால், நீங்கள் அவனைக் கிண்டல் பண்ணினால்
உங்களால் சிறிதும் அதைப் பொறுத்துக்கொள்ள
முடியாது.
அன்னியன் உங்களைக் காயப்படுத்தினால்
உங்களால் அந்தக் காயத்தை மறக்க முடியும்.
ஆனால், நீங்கள் அவனைக் காயப்படுத்தினால்
உங்களால் அதைச் சிறிதும் மறக்க முடியாது.
உண்மையாகச் சொல்லப்போனால்
அன்னியன் என்பவன் உங்களை மிகவும் எளிதாகக்
காயப்படுத்தும் மனிதன்...
வேறொரு உடலை எடுத்து அணிந்திருக்கும்
உங்களின் சொந்த அடையாளம்.
வேகம்
நாம் எல்லோரும் நம்முடைய இதய ஆசைகளின்
உச்சியில் ஏறுகின்றவர்கள் ஆயிற்றே!
உடன் வரும் பயணி உங்களின் கோணியையும்
பணப்பையையும் திருடியதால்
முதலில் சொன்னது அவனை மேலும் அதிகமாகப்
பருமனாக்க.
இரண்டாவது சொன்னது அவனுக்கு மேலும் மேலும்
அதிகச் சுமையாக மாறும்.
அந்தச் சமயத்தில்
நீங்கள் அவன் மீது பரிவு கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகு உள்ள அவனுடைய மலைப்பயணம்
அவனுடைய உடலுக்கு மிகவும் துன்பம்
தரக்கூடியதாக இருக்கும்.
சுமை அவனுடைய பாதையை நீளமாக்கும்.
அவன் நடுங்கிக்கொண்டே அழுவதைப் பார்க்கும்போது
நீங்கள் அவன் ஒரு அடி ஏற உதவ வேண்டும்.
அது உங்களுடைய கால்களின் வேகத்தை அதிகரிக்கும்.
*****
தேர்தல்
ஒரு கவிதை எழுதக்கூடிய ஆற்றலும்
ஒரு எழுதப்படாத கவிதையில் இருக்கும் ஆனந்தமும்
இவற்றில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற
பிரச்சினை உண்டாகும்போது
நான் ஆனந்தத்தையே தேர்ந்தெடுப்பேன்.
காரணம்- எழுதப்படாத கவிதைதானே அழகு!
ஆனால், நீங்களும் என் பக்கத்து வீட்டினரும்
எப்போதும் சொல்வதுண்டே!
நான் தேர்ந்தெடுக்கும் திறமையே இல்லாதவன் என்று.
அதனால்தான் நான் கவிதைகளை அதிகமாக
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
*****
கனிவு
இருப்பதைக் கொண்டு திருப்திப்படுவதைப் பற்றி
நாம் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
எனினும் இதையெல்லாம் இயற்கை
பின்பற்றியிருந்தால்
ஒரு நதிகூட கடலில் போய்ச் சேராது.
ஒரு பனிக்காலமும் வசந்த காலமாக மாறி
நறுமணத்தைப் பரவவிட்டுக் கொண்டிருக்காது.
செலவைக் குறைப்பது குறித்து
நாம் எப்போதும் புலம்பிக்கொண்டேயிருக்கிறோம்.
எனினும் இதையெல்லாம் இயற்கை
பின்பற்றியிருந்தால்
நம்முள் எத்தனைபேர் காற்றைச் சுவாசிக்க முடியும்?
*****
மணலும் நுரையும்
மணலுக்கும் நுரைக்கும் நடுவில்
நான் எப்போதும் இந்தக் கரையில் உலாவுவேன்.
என் கால் சுவடுகள்
அலைகள் பட்டு அழிந்துபோகும்.
காற்று வந்து நுரையை அடித்து இல்லாமல் செய்யும்.
எனினும் எப்போதும்
கடலும் கரையும் இருக்கும்
என்றென்றைக்கும்.
*****
கவனம்
அந்த மனிதரின் உண்மைத்தன்மை உங்களுக்கு
அவர் எதைத் திறந்து காட்டுகிறார் என்பதில் அல்ல.
அதற்கு மாறாக அவர் உங்களுக்கு
எதைத் திறந்து காட்டாமல் இருக்கிறார்
என்பதில்தான்.
அதனால்
நீங்கள் அந்த மனிதரைப் புரிந்துகொள்ள
வேண்டுமென்றால்
அவர் என்ன கூறுகிறார் என்பதில் அல்ல
எதைக் கூறாமல் இருக்கிறார் என்பதில் கவனத்தைச் செலுத்துங்கள்.
ஒன்று மட்டும்
அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள் :
நீ இந்த உலகத்தின் சுகங்களுக்கும்
மறு உலகத்தின் துக்க- சமாதானங்களுக்கும்
நடுவில் இருந்துகொண்டு ஏதாவதொன்றைத்
தேர்வு செய்ய வேண்டும்.
நான் அவர்களிடம் கூறுகிறேன் :
நான் இரண்டையும் தேர்வு செய்திருக்கிறேனே!
இந்த உலகத்தில் சுகங்களையும்
மறு உலகத்தில் துக்க- சமாதானங்களையும்.
காரணம்-
எனக்கு என் இதயத்திற்குள் இருப்பது தெரியும்.
பிரபஞ்ச கவிஞர் ஒரு கவிதையை மட்டுமே
எழுதியிருக்கிறார் என்பது.
அந்தக் கவிதையோ
முழுமையான ஒத்திசைவைக் கொண்டிருக்கிறது.
முழுமையான வார்த்தை அலங்காரத்தைக்
கொண்டிருக்கிறது.
*****
கபடம்
மிடுக்கான செந்நாய் அப்பிராணி செம்மறி ஆட்டிடம்
கேட்டது :
என் வீடு உன்னுடைய வருகையால் செழிக்குமா?
செம்மறி ஆடு சொன்னது :
நான் உங்களுடைய வீட்டிற்கு
அடிக்கடி வருவேன்.
ஆனால், அது உன்னுடைய வயிற்றுக்குள்
போய்விட்டதே.
*****
மாற்றம்
இந்த வீடு என்னிடம் கூறுகிறது :
என்னை விட்டுப் போகக்கூடாது.
இங்கு உன்னுடைய கடந்த காலம் இருக்கிறது.
இந்தப் பாதை என்னிடம் கூறுகிறது :
வா... என்னைப் பின்பற்று.
நான் உன்னுடைய எதிர்காலம்.
ஆனால், நான் இந்த வீட்டிடமும்
இந்தப் பாதையிடமும் கூறுகிறேன் :
எனக்குக் கடந்தகாலம் இல்லை.
எனக்கு எதிர்காலமும் இல்லை.
நான் இங்கு இருந்தால்
என் பற்றில் பயணம் இருக்கும்.
நான் சென்றுவிட்டால்
என் பயணத்தில் பற்று இருக்கும்.
அன்பும் மரணமும் மட்டும்
எல்லாவற்றையும் மாற்றுகின்றன.
*****
நேரம்
உங்களுக்கு இளமையும் அதைப்பற்றிய அறிவும்
ஒரே நேரத்தில் உண்டாகாது.
காரணம் இதுதான்:
இளமை வாழ்க்கையின் மிகுந்த பரபரப்பிற்கு நடுவில்
வருகிறது.
அதனால் அதற்குத் தன்னைப் புரிந்துகொள்ள
நேரமில்லை.
அறிவு, தன்னைத்தானே தேடும்
பரபரப்பில் இருக்கிறது எப்போதும்.
அதனால் அதற்கு வாழ நேரமில்லை.
*****
ஆணவம்
தனிமை!
மழையுடன் சேர்ந்து வரும்
அமைதியான
ஒரு புயலைப்போல
நம்முடைய இறந்து காய்ந்த
கிளைகளை ஒடித்து
தூரத்தில் தூரத்தில் எறிகிறது.
எனினும் அது
நம்முடைய உயிர் துடிக்கும்
வேர்களை
உயிருள்ள பூமியின் சக்தி
பிரகாசித்துக் கொண்டிருக்கும்
இதயத்தை நோக்கி மேலும் மேலும்
ஆழத்திற்குள் அடித்துக்கொண்டு போகிறது.
பொறுமை
ஒருமுறை கூட குருதி சிந்தாத
கொலைகாரர்களிடமும்
ஒருமுறை கூட திருடாத
திருடர்களிடமும்
ஒருமுறை கூட பொய் கூறாத
பொய்யர்களிடமும்
நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள் என்றால்
நீங்கள்தான் உண்மையான பொறுமைசாலி.
*****
வேட்டை
இருபது குதிரைகள் மீது ஏறி
இருபது வேட்டை நாய்களும்
இருபது வேட்டைக்காரர்களும்
பின் தொடர,
வேட்டையாடப்பட்ட நரி சிந்தித்தது!
என்னை அவர்கள் கட்டாயம் கொன்றுவிடுவார்கள்.
ஆனால், அவர்கள் எந்த அளவிற்கு
முட்டாள்களாகவும் அப்பிராணிகளாகவும்
இருக்கிறார்கள்.
இருபது கழுதைகள் மீது ஏறி
இருபது நரிகள்
இருபது செந்நாய்களுடன்
ஒரே ஒரு மனிதனை வேட்டையாடிப் பிடிப்பதென்பது
உண்மையாகவே முட்டாள்தனமானது.
*****
மதிப்பு
உன்னால் பேர் சொல்ல முடியாத வரங்களுக்காக
நீ காத்திருக்கும்போதும்
உனக்குக் காரணம் தெரியாமல்
நீ கவலையில் இருக்கும்போதும்
உண்மையாகவே நீ வளர்பவையுடன்
சேர்ந்து வளர்கிறாய்.
உயர்பவையுடன் சேர்ந்து
உன் மதிப்பு மிக்க தனித்துவத்தை
நோக்கி உயர்கிறாய்.
*****
யாரென்று தெரியாதவன்
சிலுவையில் அறையப்பட்டவனே,
நீ என் இதயத்தில் அல்லவா அறையப்பட்டிருக்கிறாய்?
உன்னுடைய உள்ளங்கைகளைத் துளைத்து நுழைந்த ஆணிகள்
என் இதயத்தின் சுவர்களையும் துளைத்து இறங்கின.
நாளை-
ஒரு யாரென்று தெரியாத மனிதன் இந்தக்
காகுல்த்தாவிற்கு
அருகில் கடந்து போகும்போது
இரண்டுபேர் இங்கு இரத்தம் சிந்தியது தெரியாது
அவன் அது ஒரு ஆளின் இரத்தம் மட்டுமே என்று
எண்ணியவாறு நடந்து செல்வான்.
*****
மூடர்கள்
என்னுடைய வினோதமான ஆத்மதிருப்தி இதுதான்:
சில சூழ்நிலைகளில்
துரோகம் செய்யப்படவும்
அநியாயங்களுக்கு இரையாகவும்
நாம் சம்மதிப்பது உண்டு.
எதற்குத் தெரியுமா?
நான் துரோகம் செய்யப்படுவதையும்
என்னிடம் அநியாயம் செய்வதையும்
நான் தெரியாமல் இருக்கிறேன் என்று
எண்ணுபவர்களின் செலவில்
நான்சிரித்து மகிழ நினைக்கிறேன்.
*****
மரணத்தின் குரல்
நான் வாழ்க்கையிடம் கேட்டுக் கொண்டேன்.
நான் மரணம் பேசுவதைக் கேட்க வேண்டும்.
அப்போது வாழ்க்கை, அவளுடைய குரலை
மேலும் சற்று உயர்த்தினாள்.
தொடர்ந்து சொன்னாள்:
நீ இப்போது கேட்கிறாய்.
வாழ்க்கை
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்
பக்கத்து வீட்டுக்காரன் என்னிடம் சொன்னான்:
நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்.
காரணம்- அது வேதனையைத் தவிர
வேறொன்றுமில்லை.
நேற்று-
நான் சுடுகாட்டு வழியாக நடந்து செல்லும்போது
அவனுடைய கல்லறைக்கு மேலே
வாழ்க்கையின் நடனத்தைப் பார்த்தேன்.
அந்தக் கல்லறைக்கு மேலே புற்களும் செடிகளும்
வளர்ந்து ஆடிக்கொண்டிருந்தன.
*****
இரண்டு பக்கங்கள்
உங்களுக்குக் கொடுக்க வேண்டியதை விட
அதிகமாகக்
கொடுப்பது இரக்க குணம்.
நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதைவிட
அதிகமாக
எடுப்பது மரியாதைக் குறைவான செயல்.
*****
எல்லை
ஒரு வித்துவானுக்கும் ஒரு கவிஞருக்குமிடையில்
ஒரு பச்சைப்புல் வயலின் எல்லை இருக்கிறது.
வித்துவான் அதைக் கடந்துவிட்டால்
அவர் விஞ்ஞானி ஆகிவிடுவார்.
கவிஞர் அதைக் கடந்துவிட்டால்
அவர் போதகர் ஆகிவிடுவார்.
*****
இரண்டு வகை
ஒவ்வொரு மனிதரிலும் இரண்டுபேர் வீதம்
இருக்கிறார்கள் அல்லவா?
ஒருவர் இருட்டில் விழித்திருக்கிறார்.
இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக் கிடக்கிறார்.
*****
கவிதை
ஒருநாள் நான் என்னுடைய கைகள் நிறைய
மூடுபனியை அள்ளி எடுத்தேன்.
பிறகு-
கைகளைத் திறந்து பார்த்தபோது ஒரே ஆச்சரியம்...
அந்த மூடுபனி ஒரு புழுவாய் மாறியிருந்தது.
மீண்டும் நான் என் கைகளை மூடித்திறந்தேன்.
அப்போது ஒரு பறவை!
அதற்குப் பிறகும் நான் என் கைகளை மூடித்திறந்தேன்.
அப்போது வானத்தை நோக்கி கண்களை
உயர்த்தினேன்.
கவலையில் ஆழ்ந்திருந்த மனிதன்
என் கைக்குமுன்னால் நின்றிருக்கிறான்.
மீண்டும் நான் என் கைகளை மூடித்திறந்தேன்.
இப்போது வெறும் மூடுபனியைத் தவிர வேறொன்றும்
அங்கு இல்லை.
ஆனால்-
நான் மிகவும் இனிமையான ஒரு பாடலைக்
கேட்டேன்.
*****
புனிதப் பயணி
புனிதநகரத்திற்குச் செல்லும் வழி நடுவில்
நான் இன்னொரு புனிதப் பயணியைச் சந்தித்தேன்.
நான் அவனிடம் கேட்டேன்:
புனித நகரத்திற்குச் செல்லும் வழி இதுதானே?
அவன் சொன்னான்:
என்னைப் பின்தொடர்ந்து வா.
அப்படி வந்தால்
ஒரு பகலிலும்
ஒரு இரவிலும்
பயணம் செய்து
புனித நகரத்தை அடையலாம்.
நான் அவனைப் பின்தொடர்ந்தேன்.
பல பகல்கள், இரவுகள் நாங்கள் நடந்தோம்.
எனினும்-
புனித நகரத்தை அடையவில்லை.
ஆனால்-
என்னை ஆச்சரியப்பட வைத்தது அது அல்ல.
தவறான வழியைக் காட்டியதற்கு
என்மீது அவன் கோபப்பட்டான்.
அவன் என்னை அடித்தான்.
புனிதப் பயணியான நான் என்ன செய்வேன்?
*****
வேறுபாடுகள்
நாங்கள் எண்ணற்ற சூரியன்மார்களின் அசைவுகளில்
நேரத்தைக் கணக்கிடுகிறோம்.
அவர்களோ, சிறிய பைகளில் இருக்கும்
சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்தி
நேரத்தைக் கணக்கிடுகிறார்கள்.
கூறு:
நாங்கள் எப்படி ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்
சந்திக்க முடியும்?