Logo

ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ!

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6154
Hundhraappipussaatto!

ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ!

வைக்கம் முஹம்மது பஷீர்

தமிழில் : சுரா

'கவலைகளும், மோகங்களும் நிறைந்த இனிய காவியம்' என்ற பெயரில் என்னுடைய உயிர்த் தோழியைப் பற்றி ஒரு பெரிய புதினத்தை நான் எழுத வேண்டுமென்று மேற் சொன்ன என்னுடைய உயிர்த் தோழி கூற ஆரம்பித்து எவ்வளவு காலமாகி விட்டது, தெரியுமா? வெறுமனே கூறவில்லை. அழவும் செய்வாள். வெறும் அழுகையா? என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, தேம்பித் தேம்பி அழுவாள். பிறகு கண்ணீர் முழுவதையும் அவள் என்னுடைய நெஞ்சுப் பகுதியில் தொட்டு தேய்ப்பாள். அத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. அழகான புன்னகையுடன் 'எழுதுவீங்கள்ல?' என்று அவள் கேட்கவும் செய்வாள். அப்போது நான்-

'ஹாவ்... ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு மறந்து விட்டேன். 'ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ' என்ற அருமையான இந்தக் கதையைப் பெண்களும் வழுக்கை விழாத ஆண்களும் வாசிக்கக் கூடாது.

வாசித்தால் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டால்... கூறுகிறேன். அடித்து நான் உங்களுடைய எலும்பை நொறுக்குவேன் என்று கூறலாம். ஆனால், கூறினால், அப்படிச் செய்ய வேண்டாமா? ஆனால் அதற்கு முன்பு மாதிரி எனக்கு நேரமில்லை. உங்களுக்கு என்ன வேலை... என்று கேட்டால்- கூறுகிறேன்... காதல்!

அவளை நான் இப்போதும் காதலிக்கிறேன். இப்போதும் என்று கூறுவதில் அர்த்தம் இருக்கிறது. தெரியுதா? ஆனால், வெறும் காதலா? அழகானதும், இனிமையானதும், நிரந்தரமானதும், வர்ணமயமானதுமான காதல்!

'வழுக்கைத் தலையர்களின் அரசரே!' என்றுதான் அவள் என்னை அழைப்பாள். 'நாதா' என்றும் சில நேரங்களில் அழைப்பாள். அவள் செய்த ஒரு... ஆ! ஒன்றா... அவள் செய்த நூறாயிரம் துரோகங்களைப் பற்றி கூறுகிறேன். ஓ... அப்படியே இல்லையென்றாலும் - எந்த பெண்தான் ஆணுக்குத் துரோகம் செய்யாமல் இருக்கிறாள்? நான் இங்கு ஆண் என்று குறிப்பிடுவது வழுக்கைத் தலை உள்ளவர்களை மட்டும் மனதில் வைத்துத்தான். ஆமாம்... நான் என்ன கூற வருகிறேன் என்று கேட்கிறீர்களா? - என்னுடைய வழுக்கைத் தலையைப் பற்றிய கதை.

இதன் ஆரம்பம் கீழே கூறப்படும் விதத்தில்தான் நடந்தது.

இன்னொரு உண்மையையும் கூறட்டுமா? இந்த உலகத்திலிருக்கும் எல்லா வழுக்கைத் தலையர்களின் கதை இது.

கதையை ஆரம்பிப்பதற்கு முன்னால், இன்னொரு சிறிய விஷயத்தையும் கூறி விடுகிறேன். இனிமேல் நீங்கள் வழுக்கைத் தலை மனிதர்களைப் பார்த்தால், அவர்களை வணங்குங்கள். அவர்கள் மிகப் பெரிய மனிதர்கள். தியாகிகள். எந்த விஷயத்தில் தியாகிகள் என்று கேட்டால் - ஆமாம்... அதைத்தான் கூறப் போகிறேன். பிறகு... ஒரு கேள்வி மீதமிருக்கிறது.

நீங்கள் எந்தப் பக்கம்?

அதாவது - இந்த கெட்டு நாறிப் போயிருக்கும் சமுதாய அமைப்பில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றனவே! அதில் வழுக்கைத் தலையர்களின் பக்கம் நல்ல விஷயங்கள் இருக்கின்றன, அன்பு இருக்கிறது, நம்பிக்கை இருக்கிறது, இதயமும் மூளையும் இருக்கின்றன. சுருக்கமாக கூறுவதாக இருந்தால்- மனிதத் தன்மை இருக்கிறது என்பது சாரம். பொதுவாக கூறுவதாக இருந்தால்- நாங்கள் நல்லவர்கள். சாக்ரட்டீஸ், உமர்கய்யாம், ஷேக்ஸ்பியர், லெனின், தர்யது குஞ்ஞித்தொம்மன், நான் - ஆ! அது இருக்கட்டும். என்னுடைய வழுக்கைத் தலையைப் பற்றிய வீர கதையைத் தொடர்கிறேன்.

ஆமாம்... முன்பு ஒரு காலத்தில் என்னுடைய தலையில் சுத்தமற்றவையும், கருப்பு நிறம் கொண்டவையுமான ஏராளமான முடிகள் இருந்தன. மினுமினுப்பு கொண்டவையாகவும் சுருளானவையாகவும் அவை இருந்தன. அன்று நான் மிகப் பெரிய முட்டாளாக இருந்தேன். எனக்குத் தெரிந்தது என்று கூறுவது மாதிரி ஒரு விஷயம் கூட இல்லை. நான் நின்று, குடித்து, தலை முடியை நன்கு வாரி, பவுடர் பூசி... அப்படியே நடந்து திரிந்து கொண்டிருந்தேன். ஹோ... முடி இருந்த அந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது - நான் முழுமையாக வெட்கப்பட்டு பதுங்கிக் போகிறேன். அந்த சுருள் முடியைக் கொண்டிருந்த மனிதன் நான்தானே!'

ஆனால், இப்படி வழுக்கைத் தலை உண்டாகக் கூடிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் எப்படி வாய்த்தது என்று கேட்டால், கூறுகிறேன்:

நான் முன்பு கூறிய சுத்தமற்ற தலைமுடி இருந்த காலம். ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் பதினொரு மணி. மடியில் ஒரு புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு நான் தோட்டத்தில் வெறுமனே அமர்ந்திருந்து, கனவு கண்டு கொண்டிருந்தேன். அப்போது நான் முன்பு கூறிய உயிர்த் தோழி எனக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறாள். முதல் பார்வையிலேயே அவள் என்னால் ஈர்க்கப்பட்டு விட்டாள். எனக்கும் அவள் மீது கிட்டத்தட்ட அப்படித்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவளைப் பார்த்ததும் 'டேய், இது ஒரு கவலைகளும், மோகங்களும் நிறைந்த ஒரு இனிய காவியமாச்சே!' என்று என்னுடைய மனதிற்குள் தோன்றியது. சில நாட்கள் கடந்து சென்ற பிறகு, என் மனதில் தோன்றியதை நான் அவளிடம் வெளிப்படையாக கூறவும் செய்தேன். அதை அவள் மறக்கவில்லை என்பதைத்தானே இந்தக் கதை தெளிவாக கூறுகிறது! அன்று அவள் என்னிடம் ஏராளமான விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு நினைத்திருந்தாள். (இப்போதும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள்). நான் அவை ஒவ்வொன்றையும் மிகவும் கவனம் செலுத்தி கேட்டேன். 'மிகவும்' என்று கூறுவது நல்ல அர்த்தம் உள்ள சொல்... தெரியுதா? நான்தான் கூறினேனே- அவள் கூறியவை ஒவ்வொன்றையும் மிகவும் கவனம் செலுத்தி, காதலுடன், ஒரே சிந்தனைப் போக்குடன் கேட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? இன்னொரு ரகசியத்தைக் கூறுகிறேன். அதுதான் சம்பவத்திற்குக் காரணம். வேறொன்றுமில்லை. சாக்ரட்டீஸ் முதலான என்னுடைய முன்னோடிகள் செய்ததுதான். சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - நான் பெண்ணைப் புரிந்து கொள்வதற்கு முயற்சித்தேன். ஒரு பழமொழி இருக்கிறதே! பெண்ணைப் புரிந்து கொண்டவன், எல்லாவற்றையும் புரிந்து கொண்டவன்!

அப்போது ஒரு கேள்வி வருகிறது. பெண்ணை எப்படி புரிந்து கொள்வது?

அந்த ரகசியத்தையும் கூறுகிறேன். பைபிளின்படி வானம், பூமி, கடல் என்று வேண்டாம்- இந்த மிகப் பெரிய பிரபஞ்சத்தையும், இதிலிருக்கும் மற்ற அனைத்தையும் படைப்பதற்கு தெய்வம் எவ்வளவு நாட்கள் செலவிட்டது? நமக்குத் தெரியும். ஆறு நாட்கள். இதே போல ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைப் புரிந்து கொள்வதற்கு எத்தனை நாள் வேண்டும்?

சாக்ரட்டீஸ் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டார்? நமக்குத் தெரியாது. ஆனால், நான் எத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டேன் என்பதைக் கூறுகிறேன்: வெறும் ஆறே ஆறு நாட்கள்.


அது எப்படி என்பதையும், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமா? கூறுகிறேன். ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு பன்னிரெண்டு மணி வரை என்னுடைய உயிர்த்தோழி கூறியதும் செய்ததும் மறக்காமல், திங்கட்கிழமை காலையிலிருந்து பன்னிரெண்டு மணி வரை கூறியதும் செய்ததும் மறக்காமல்,

புதன் கிழமை காலையிலிருந்து - அப்படியே வியாழன், வெள்ளி, சனி - அன்று இரவு பன்னிரெண்டு மணிக்கு - அதாவது, ஆறு நாட்கள் அவள் கூறியதும் செய்தும் ஒன்றாகச் சேர்ந்து என்னுடைய தலைக்குள் - சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - சனிக்கிழமை இரவு சரியாக பன்னிரெண்டு மணிக்கு என்னுடைய தலைக்குள் ஒரு பூகம்பமும், இடி முழக்கமும், மின்னல் வெட்டும் உண்டாயின. நான் மயக்கமடைந்து அவளுடைய மடியில் விழுந்தேன்... மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, என்னுடைய தலையின் மேற்கூரையில் எதுவுமில்லை. முழுமையான, அழகான வழுக்கை!

அதற்குப் பிறகு வருவது யார் தெரியுமா? ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ!

அந்தக் கதையைத்தான் இனி கூறப் போகிறேன். எங்கு ஆரம்பிக்க வேண்டும், எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று எதுவும் தெரியவில்லை என்று சிலர் புலம்புவது உண்டு அல்லவா? அப்படிப்பட்ட சிரமங்களெதுவும் இங்கு இல்லை. நேராக கதையை நோக்கித்தான் பயணமே. அப்போது... ஆமாம். அந்த வகையில் எனக்கு முழுமையான, அழகான வழுக்கைத் தலை கிடைத்தது. மொத்தத்தில் எனக்கு ஒரு மென்மைத்தனம் உண்டானது. ஒரு இமயமலைக்கு நிகரான சுமை தலையை விட்டு இறங்கியதைப் போல இருந்தது. திடீரென்று எனக்கு அறிவு அதிகமாகி விட்டதைப் போன்ற உணர்வு உண்டானது. தெரிந்து கொள்ள இல்லாதவை என்று எதுவுமில்லை. சுருக்கமாக கூறுவதாக இருந்தால்- நான் ஒரு தத்துவவாதி... ஞானி... ஆராய்ச்சியாளன். இது இப்போது எனக்கு மட்டுமே தோன்றக் கூடிய ஒரு விஷயமா? எந்த வழுக்கைத் தலையனுக்கும் இந்த மாதிரிதான் தோன்றும். முன்பு எங்குமே இல்லாத ஒரு ஆனந்தம். எப்போதும் புன்னகைதான். ஆனால், என்னுடைய உயர்த்தோழிக்கு கவலை!

அவள் என்னுடைய தலையில் முடியை வரவழைப்பதற்காக தான் கற்ற அனைத்து விஷயங்களையும் பயன்படுத்திப் பார்த்தாள். என்னென்னவோ மூலிகை மருந்துகளை என் தலையில் அரைத்துத் தேய்த்தாள். முடியை வரவழைக்கச் செய்வதற்கான அனைத்து விதமான களிம்புகளையும், எண்ணெய்களையும் சோதித்துப் பார்த்தாள். என்னைத் தலை கீழாக நிற்க வைத்து ஆசனம் செய்ய வைத்தாள். அதில் தோல்வி கிடைத்தவுடன், அதற்குப் பிறகு நேர்த்திக் கடன்கள்... வழிபாடுகள்... வைக்கத்தப்பன், இளங்காவிலம்மா, வடக்கு நாதன், கொடுங்கல்லூர் பகவதி, குருவாயூரப்பன், ஶ்ரீபத்மநாபன், பருமல தேவாலயம், திருவங்கோட்டு தேவாலயம், புதுப்பள்ளி தேவாலயம், உதயம்பேரூர் தேவாலயம், நிரணத்து தேவாலயம், சிஸ்டர் அல்ஃபோன்ஸா, நாகூர் வீராசாயு, காஞ்ஞிரமற்றத்து பரீதவ்லியா, மம்புரத்தவ்லியா, பீமா பள்ளி வாசல், அஜ்மீர் - இப்படி ஏராளமான நேர்த்திக் கடன்களையும், வழிபாடுகளையும் செய்தாள். அவற்றாலும் எதுவும் நடக்காமற் போகவே, சாட்சாத் தெய்வத்தை நோக்கி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள்:

'என் தெய்வமே, என் நாதரின் தலையில் ஐந்தாறு முடிகளையாவது, வளரும்படி செய்.'

அந்த வகையில் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. எதுவுமே நடக்கவில்லை. ஒரு சிறிய உரோமம் கூட முளைக்கவில்லை. முன்பு இருந்த மாதிரியே தலையின் மேற்கூரை பரந்து விரிந்து கிடக்கும் சஹாராவைப் போல அழகாகவே இருந்தது.

இங்கு இரண்டு கேள்விகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.

1. என் உயிர்த் தோழி ஒரு தனிப்பட்ட மதத்தைச் சேர்ந்த தெய்வத்திடமும், ஞானிகளிடமும் வேண்டிக் கொள்ளாமல், எல்லா மதங்களைச் சேர்ந்த தெய்வங்களிடமும், ஆண் துறவிகளிடமும், பெண் துறவிகளிடமும் ஏன் வேண்டிக் கொண்டாள்?

2. பிரார்த்தனையின் மூலம் பயன் எதுவும் உண்டாகாதா?

பதில் :

1. என்னை என்னுடைய உயிர்த்தோழியால் சரியாக புரிந்து கொள்ள முடியாமற் போயிருக்கலாம். அதாவது - என்னுடைய நம்பிக்கை வார்த்தைகள் எந்த தேவாலயத்திற்கு முன்னால் கிடக்கின்றன என்ற விஷயம் ஒரு வேளை அவளுக்குத் தெரியாமல் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், அவளிடம் அதைப் பற்றி கேட்பதற்கு எனக்கு துணிச்சல் இல்லை. அவள் அழுவாள். பெண்ணைப் போல அந்த அளவிற்கு அதிகமான கண்ணீரைக் கொண்ட ஒரு படைப்பு! ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? உலகத்திலுள்ள எல்லா பெண்களும் ஒன்று சேர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமை காலையில் வெறுமனே சற்று அழுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், எட்டரை மணிக்குப் பிறகு பூமி இருக்காது. பயங்கரமான கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிப் போய் விடும். அப்படியென்றால், முதல் கேள்விக்கு என் பக்கம் பதில் இல்லை என்பதுதான் விஷயமே. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் - புதிய தந்திரங்களுடன் வார்த்தைகள் எதையும் வெளியிடுவதில்லை என்பதுதான்...

2. பிரார்த்தனைகளால் பலன் உண்டாகும். பலன் கிடைத்திருக்கிறது. இனியும் கிடைக்கும். பிறகு... என் தலையில் ஏன் முடி முளைக்கவில்லை? அந்த ரகசியத்தையும் கூறுகிறேன். ஒவ்வொரு இடத்திற்கும் என் உயிர்த் தோழியின் பிரார்த்தனையும், மற்ற விஷயங்களும் சென்றன அல்லவா? அவற்றுடன் சேர்ந்து என் பக்கத்திலிருந்து அவற்றுக்கு எதிரான பிரார்த்தனையும் போயிருக்கின்றன. வடக்கு நாதா... இல்லாவிட்டால் நிரணத்து தேவாலயம்... இல்லாவிட்டால் வைக்கத்தப்பா பாருங்கள், நாம் அருகருகே இருப்பவர்கள். என்னை ஏமாற்றி விடாதீர்கள். எனக்கு முடி வேண்டாம். ஏனென்றால், என்னால் முன்பைப் போல முட்டாளாக ஆக முடியவில்லை. என்னைக் காப்பாற்றுங்கள். இந்த விதத்தில் என்னுடைய பிரார்த்தனையும் சென்றிருக்கிறது. பிறகு... முடி வளர வேண்டியது என் தலையில்தானே? நான் தான் தேவைப்படுபவன். எனக்கு வேண்டாம் என்று கூறினால்...? சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - பிரார்த்தனைக்கு பலன் இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்து விட்டதல்லவா? ஆனால், நான் பிரார்த்தனை செய்த தகவல் எதையும் அவளிடம் கூறவில்லை. நான் அதை மனதில் நினைத்தவாறு ஏதாவது பீடியையோ சிகரெட்டையோ பற்ற வைத்து, புகைத்து, காதுகளின் வழியாக புகையை விட்டுக் கொண்டே அங்கே உட்கார்ந்து ரசிக்கலாம்.

அவள் கூறுவாள்:

'நீங்கள் ஏன் தனியாக உட்கார்ந்து, சிரித்துக் கொண்டு இருக்கீங்க? அய்யோ... அந்த காதுகளின் வழியாக இப்படி புகையை விடாதீங்க. யாராவது பார்த்தால், நிலைமை மோசமாயிடும். தேவைப்பட்டால், நீங்கள் மூக்கின் வழியாக புகையை விட்டுக்கோங்க.'


உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- என்னுடைய விருப்பம் மூக்கின் வழியாக புகையை விடுவதுதான். ஆனால், என்ன செய்வது? நான் புகையை இழுத்து நிறுத்தி, மூக்கின் வழியாக விட ஆரம்பிக்கும்போது, அது காதுகளின் வழியாக செல்கிறது. பெண்ணைப் புரிந்து கொள்வதற்கு முயற்சித்ததால் உண்டான பலன் இது.  சில நேரங்களில் எனக்குத் தோன்றும் - என்னுடைய தலைக்குள் எதுவுமே இல்லை. அதே நேரத்தில் - அறிவு விஷயத்தில் ஏதாவது குறை இருக்கிறதா? அதுவும் இல்லை. ஆனால், அவள் கூறுவாள்:

'உங்களுடைய தலைக்குள் ஏதாவது இருந்திருந்தால், காதுகளின் வழியாக இப்படி புகை வருமா?'

நான் எதுவும் கூற மாட்டேன்.

அவள் எதையோ நினைத்துக் கொண்டு கூறுவாள்:

'ம்... வழுக்கையிலும் ஒரு அழகு இருக்கு!'

நான் எதுவுமே கூற மாட்டேன். அவள் கேட்பாள்:

'அந்த நாவலை எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?'

நான் கேட்பேன்: 'எந்த நாவல்?'

'ஓ... அதை நீங்கள் மறந்து விட்டீர்கள்... கவலைகளும், மோகங்களும் நிறைந்த இனிய காவியம்?'

'ஆ... ஆரம்பிக்கணும்.'

கவலைகளும், மோகங்களும் நிறைந்த இனிய காவியம்... ம்ஹு... அவளுடைய கண்ணோட்டத்தில் உலகத்தில் இருந்த, இப்போது இருக்கின்ற, இனி இருக்கப் போகிற ஒவ்வொரு பெண்ணுமே, ஒவ்வொரு கவலைகளும் மோகங்களும் நிறைந்த இனிய காவியம்தான்.

இனி உங்களிடம் கதையை ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். கதையின் மீதிப் பகுதி மிகவும் கனம் நிறைந்தது. பெண்ணைப் பற்றிய முழு உண்மையும் வருகிறது. அதனால் என்னுடைய கட்டளையை மீறி இதுவரை வாசித்த பெண் ரத்தினமே - ஸ்டாப்! பெண்ணே, இனி அதை வாசிக்க வேண்டாம். வேண்டாம் என்றால் வேண்டாம். எதற்கு வாதம் செய்ய வேண்டும்? ஹாவ்! இனி மன அமைதியுடன் கதையைத் தொடரலாம்.

சில நாட்களுக்கு முன்பு நான் பெண்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத நினைத்தேன். ஆனால், பெண்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? மொத்தத்தில் - தெரிந்திருப்பதே ஒரே ஒரு பெண்ணைத்தான். அந்த வகையில் என்னுடைய உயிர்த் தோழியை உதாரணமாக வைத்துக் கொண்டு 'பெண்ணுலகம்' என்ற பெயரில் நான் ஒரு சிறிய கட்டுரையை எழுதினேன். நான் எழுதுவது எதுவாக இருந்தாலும், அதை வாசித்துப் பார்த்து இறுதி தீர்ப்பு கூறுவது அவள்தான்.  நான் எழுதிய கட்டுரை என்ன என்பதைப் பற்றியும், அதைப் பற்றி அவள் என்ன கூறினாள் என்பதைப் பற்றியும் கூறுவதற்கு முன்னால், இன்னொரு விஷயத்தைக் கூற வேண்டியதிருக்கிறது. அந்த 'கவலைகளும் மோகங்களும் நிறைந்த இனிய காவியம்' என்ற நான் எழுதாத நாவலைப் பற்றித்தான். நான் அதை என்ன காரணத்திற்காக இதுவரை எழுதவில்லை?

அந்த காரணத்தையும் கூறுகிறேன். ஒரு சிறிய சுயநலம். பொதுவாகவே சமத்துவத்தைப் பற்றி நாம் சொற்பொழிவு ஆற்றுவதுண்டு. எழுதுவதுமுண்டு. அதே போல பணக்காரனும் பிச்சைக்காரனும் இல்லாத - விஷயம் புரிந்து விட்டதல்லவா? அப்படிப்பட்ட சமத்துவம் உள்ள இனிய ஒரு உலகம் உண்டாக வேண்டுமென்று வெறுமனே ஒரு கோஷத்தை எல்லோரும் போடுவதுண்டு. ஆனால், அது நடக்க வேண்டுமென்று எவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்பது தெரியுமா? எது எப்படி இருந்தாலும்- பணம் இருப்பவனுக்கு அப்படி ஒரு ஆசை இல்லை. அதனால் அது பணக்காரனின் குற்றமா? 'டேய்... இங்கே வா' என்று கூறும்போது, பத்து பேர் நெளிந்தவாறு நமக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது ஒரு சுவாரசியமான விஷயம்தான். மதிப்பு உள்ளதும் கூட. கிட்டத்தட்ட இந்த மனநிலைதான் எனக்கு இப்போது இருக்கிறது. அதாவது- நான் பணக்காரனின் பக்கம் இருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால், என்னிடம் பணமில்லை. வழுக்கைத் தலை இருக்கிறது என்று கூறினால், என்னிடம் ஏராளமான அறிவு இருக்கிறது என்று அர்த்தம். உலகத்திலிருக்கும் எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரி அறிவு இருப்பது நல்லதும். அதற்கு சமத்துவம் நிறைந்த அழகான வழுக்கைத் தலை எல்லா இடங்களிலும் உண்டாக வேண்டும். ஆனால், இந்த நிலை உண்டாக நான் விரும்புகிறேனா? இல்லை என்பதுதான் சத்தியமான உண்மை. தலையில் முடி இருக்கும் ஏராளமான முட்டாள்கள் உலகத்தில் இருப்பது ஒரு சுவாரசியமான விஷயம். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- உலகத்தில் இப்போது இருக்கும் முடியைக் கொண்ட தலை உள்ள கழுதைகளை வழுக்கைத் தலை உள்ள அறிவாளிகளாக ஆக்க என்னால் முடியும் அதற்கான ஒரே வழி என்ன தெரியுமா? கவலைகளும் மோகங்களும் நிறைந்த இனிய காவியம் என்ற நாவல். அதில் அனைத்தும் இருக்கின்றனவே! அவளை நான் முதல் தடவையாக சந்தித்த அந்த இனிய நிமிடத்திலிருந்து... இந்த இனிய நிமிடம் வரை - அதாவது, நீண்ட இந்த காலகட்டத்திற்கிடையில் அவள் கூறியது, செய்தது... அனைத்தும் ஒரு எழுத்து கூட விடாமல் நாவலில் இருக்கும்.

அந்த நாவலை ஒரு முறை வாசித்து விட்டால், எப்படிப்பட்ட முடியைக் கொண்ட மனிதனும் வழுக்கைத் தலை உள்ளவனாக ஆகி விடுவான். ஒரு விஷயம் இருக்கிறது - பெண்களுக்கு எதுவுமே நடக்காது என்பதுதான் அது.

எது எப்படி இருந்தாலும்- அந்த நாவலை நான் சமீப காலத்தில் எழுத நினைக்கவில்லை. சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - சமத்துவம் நிறைந்த அழகான வழுக்கை சமீப நாட்களில் உலகத்தில் உண்டாகப் போவதில்லை.  முடி வைத்திருக்கும் முட்டாள்கள் இன்னும் சிறிது காலம் இப்படியே வாழ்ந்து கொண்டு இருக்கட்டும். இந்த தீர்மானம் சற்று கடுமையான ஒன்றாக இருக்கிறது என்று அரசாங்கம் நினைத்தால், இப்போது அமைச்சர்களாக இருக்கும் பத்து முட்டாள்களை ஒரு சாதாரண கட்டணத்தை வாங்கிக் கொண்டு நான் வழுக்கைத் தலையர்களாக ஆக்குகிறேன் என்று இதன் காரணமாக உறுதி கூறுகிறேன். பணக்காரர்களோ, முன்பு மன்னர்களாக இருந்தவர்களோ மனு போட வேண்டிய அவசியமில்லை. அமைச்சர்களைச் சரி செய்யலாம் என்று கூறுவது கூட ஒரு தியாகம் என்ற நிலையில்தான். இனி இது சம்பந்தமாக வாதமோ, எதிர்வாதமோ செய்வதற்கு நான் தயாராக இல்லை என்ற முன்னறிவிப்புடன் மெதுவாக கதைக்குள் நுழைகிறேன்.


அந்த வகையில் நான் 'பெண்ணுலகம்' என்ற பெயரில் ஒரு அருமையான கட்டுரையை எழுதினேன் என்று கூறினேன் அல்லவா? எழுதிக் கொண்டிருந்தபோது அவள் எனக்கு அருகில் மல்லாக்க படுத்துக் கொண்டு என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தாள். என்னவோ என்று கூறுவது - ஆமாம்... பெண்களின் சிந்தனைகளைப் பற்றி என்ன கூற முடியும்? எனினும், நான் கட்டுரையை எழுதினேன். பெண்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் நான் அதில் சேர்த்திருந்தேன் என்று கூறினால், எதையும் மீதம் வைக்கவில்லை என்று அர்த்தம். நான் அவளிடம் கூறினேன்:

'கேட்டுக்கோ. 'பெண்ணுலகம்' என்றொரு கட்டுரை. இது மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. அதனால், மிகவும் கவனமாக கேள்.'

நான் இப்படி வாசித்தேன்.

'பெண்ணுலகம்... பெண், ஒரு ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ. நல்லவை - கெட்டவை, நறுமணம் - நாற்றம், அழகு- அவலட்சணம் ஆகியவற்றின் நிழல்தான் பெண். ஆனால், அவள் நிழல் அல்ல. எதுவுமல்ல. அவள் அனைத்தும். அவள் அமிர்தம். அவள் விஷம். அவள் கடுமையும் மென்மையும். அவள் இசை. அவள் சூறாவளி. ஓ... அவள் இந்த மிகப் பெரிய பிரபஞ்சம். பெண் ஒரு குழந்தையைக் கொண்ட பெட்டகம். உயிரின் மூல காரணம். எல்லையற்ற வாழ்வின் வாசல்.

பெண், இனிமையான, ஒரு குழைவான பிரச்சினை, அவளுக்கு சொந்த கதை இல்லை. வாழ்க்கை வரலாறும் இல்லை. அழகான பொய் அவள். அவள் கூறுவதை கவனிக்காதீர்கள். அவள் இன்று கூறுவதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாம். நாளை இதை அவள் மறந்திருப்பாள். ஆனால், பத்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை நினைவுபடுத்திப் பார்க்க அவளால் முடியும். படித்த திருடி அவள். அறிவு இல்லாத மிருகமும்... எவ்வளவு வயது ஆனாலும், அவள் சிறிய குழந்தைதான். எவ்வளவு சிறிய குழந்தையாக இருந்தாலும், அவள் வயதான பெண்தான்.

வழுக்கைத் தலைக்கு முதல் காரணமே பெண்தான். கோஷங்களின் ஒரு பைத்தியக்கார ஆலயம் அவள். அவளைப் பற்றி கூறுவதெல்லாம் தவறானவை. கூறியது அனைத்தும் தவறானவை. கூற இருப்பவையும் தவறானவை. கூறக் கூடியவை அனைத்தும் சரியானவை. அருகில் இருப்பவள் பயங்கரமானவள், பொய்யானவள்,  திருடி, கள்ளங்கபடமற்றவள், ஆடம்பரப் பிரியை, பொறாமையின் மய்யம், பகை, நாணம், வைராக்கியம் - அனைத்தும் அவளுடைய சொந்தச் சொத்துக்கள், அன்பு நிறைந்தவள், தேவி, ஈஸ்வரி, அரக்கி... ஓ! அவள் வாழ்வின் அனைத்தும்.

பெண், வெறும் ஒரு வயிறு. அவளுக்கு இதயம் இல்லை. மூலை இல்லை. அவள் எல்லாவற்றையும் கூறுவாள். எதையும் செய்வாள். அவள் புரட்சியைப் பற்றி பேசுவாள். மதத்தைப் பற்றி பேசுவாள். பண்பாட்டைப் பற்றி உரையாற்றுவாள். ஆனால், தனிப்பட்ட முறையில் அவளுக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. அவள்தான் சட்டத்தைப் படைக்கிறாள். அவள்தான் முதலில் அதை மீறுவதும். அவளிடம் எந்தச் சமயத்திலும் அறிவுரை கேட்காதீர்கள்.

அனைத்து கோல்மால்களின் உறைவிடமே பெண்தான். எல்லா கனவுகளையும் படைத்திருப்பதே அவளுக்காகத்தான். உலக வரலாறு முழுவதும் அவளுடைய கதைகள்தாம். எல்லா இரத்தம் சிந்துதலுக்கும் காரணம் அவள்தான். எல்லா கலைகளுக்கும் மூல காரணம் அவள்தான். அவள் இல்லையென்றால் ஆண் இல்லை. முட்டாளும் மடையனுமான ஆணை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கு ஆழமான சிந்தனைக்குப் பிறகு கடவுள் படைத்த அற்புத ஜோதி பெண். குடும்ப நாயகி!

நறுமணம் நிறைந்த நிலவு வெளிச்சம் படர்ந்த அடர்த்தியான காடு அவள். ஆண் பகலும், பெண் இரவுமாக ஆகிறார்கள். ஆண் பாலை வனமும், பெண் கானலுமாக ஆகிறார்கள். சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - வெறும் ஒரு ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ பெண்!'

இவ்வாறு நான் வாசித்து நிறுத்தினேன்.அரங்கம் பேரமைதியுடன் இருந்தது... நான் அவளிடம் கேட்டேன்:

'எப்படி இருக்கு?'

'மிகவும் பிரச்னைக்குரியதாக இருக்கு!'- அவள் சொன்னாள்: ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோவும்... குழந்தை இருக்கும் பெட்டகமும்... வழுக்கைக்கான முதல் காரணமும்...'- சிறிது நேர ஆழமான மவுனத்திற்குப் பிறகு கேட்டாள்: 'பெண் இப்படித்தான் என்று உங்களிடம் சொன்னது யார்?'

நான் சொன்னேன்:

'யாரும் கூறவில்லை. நீ கற்றுத் தந்தாய், உன்னைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக முயற்சி செய்ததால் உண்டான அற்புதம்தானே என்னுடைய இந்த வழுக்கைத் தலை!'

அவள் கர்ஜனை செய்யவில்லை. என்னுடைய உயிர்த் தோழி சத்தம் போட்டு கத்தவில்லை. என் வழுக்கைத் தலையை அடித்து உடைக்கவில்லை. அவள் குலுங்கிக் குலுங்கி சிரிக்கவில்லை. நினைத்து புன்னகைத்தான்.

'வழுக்கைத் தலையர்களின் என் தங்க தம்புரானே!'- அவள் கூறினாள்: 'நான் உங்களைப் பார்த்தபோது, உங்களுக்கு இப்போது இருப்பதைவிட பெரிய வழுக்கை இருந்தது. அதில் இங்குமங்குமாக காணப்படும் முடிகள் என்னுடைய நேர்த்திக் கடன்களலும், வழிபாடுகளாலும் முளைத்தவை. நீங்கள் வழுக்கைத் தலையைப் பற்றி என்னிடம் கூறியது என்ன என்பது ஞாபகத்தில் இருக்கிறதா?'

நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். தெரியுமா? அவள் என்னைப் பார்த்தபோது, எனக்கு வழுக்கை இருந்ததாம். நான் அதைப் பற்றி அவளிடம் என்னவோ கூறியிருக்கிறேன் என்று அவள் கூறுகிறாள்!

நான் கேட்டேன் :

'வழுக்கைத் தலையைப் பற்றி நான் என்ன சொன்னேன்?'

'அதுவா?'- அவள் கூறினாள் : 'கேளுங்க... உங்களுடைய முன்னோர்களான சக்கரவர்த்திகள் கிரீடம் வைத்திருந்தார்கள். அதற்கு ஜன்னல்களோ, கதவுகளோ கிடையாது. அதனால் உள்ளே காற்று செல்ல முடியவில்லை. அதன் காரணமாக உரோமங்கள் உதிர்ந்து விட்டன. நீங்கள் சக்கரவர்த்தியாக இல்லையென்றாலும், பரம்பரையின் வழியாக உங்களுக்குக் கிடைத்தது வழுக்கை மட்டும்தான்!. ராஜ வழுக்கை!'

நான் எதுவும் கூறவில்லை. கூற முடியுமா? நான் பயங்கரமான பொய்யனாக, தாழ்ந்த நிலையில் உள்ளவனாக அங்கு அமர்ந்திருந்தேன்.

அவள் தொடர்ந்து சொன்னாள்:

'அந்தப் பழைய கிரீடத்தைப் பற்றிய விஷயங்களை நினைத்துத்தான் நான் உங்களை வழுக்கைகளின் ராஜா என்றும், தங்க தம்புரான் என்றும் அழைத்தேன். இப்போது விஷயம் புரியுதா?'

நான் சொன்னேன்:

'புரியுது.'

நான் அந்த வகையில் தனித்து அமர்ந்திருந்தேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நான் கட்டி உயர்த்திய கோட்டைகள் அனைத்தையும் அவள் இதோ... ஒரு சிறிய புன்னகையால் தகர்த்தெறிந்திருக்கிறாள். வழுக்கைக்கான காரணம் பெண் இல்லையாம்.

நான் சொன்னேன் :

'அப்படியென்றால்... 'பெண்ணுலகம்' என்ற இந்தக் கட்டுரையைக் கிழித்து பத்தாயிரம் துண்டுகளாக்கி வீசி எறிவேன்..'


நான் கிழிப்பதைப் போல நடித்தேன். அவள் அதை என்னுடைய கையிலிருந்து தட்டிப் பறித்து எடுத்தவாறு கூறுகிறாள்:

'கிழிக்க வேண்டாம். நல்லா இருக்கு. 'சில பெண்கள்' என்று பெயரை மாற்றணும்.'

நான் எதுவும் பேசவில்லை. அவள் காதலுடன், கவலையுடன் என்னிடம் கெஞ்சினாள்:

'சில பெண்கள் இப்படித்தான் என்று எழுதினால் போதும். நீங்கள் என்னை அதில் சேர்க்கக் கூடாது. சேர்ப்பீர்களா?'

அழப் போவதைப் போல பார்த்ததால், நான் சொன்னேன்:

'இல்லை... இல்லை...'

அத்துடன் பிரச்சினை முடியவில்லை. தொடர்ந்து வந்தவை- அவளுடைய உடனடி தேவைகள். அவள் சொன்னாள்:

'உங்களுக்கு நான் ஒரு செல்லப் பெயர் கண்டு பிடித்து வைத்திருக்கிறேன். இன்றிலிருந்து நான் உங்களை புஸ்ஸாட்டோ' என்று அழைப்பேன், என் நாதனான புஸ்ஸாட்டோ... தங்க புஸ்ஸாட்டோ....'

நான் அமர்ந்து மனதிற்குள் வெந்து கொண்டிருந்தேன்.

அவள் சொன்னாள்:

'இன்றிலிருந்து நீங்கள் என்னை ஹுந்த்ராப்பி என்று அழையுங்கள். எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு முறை கூப்பிடுங்க!'

நான் அழைத்தேன். என் குடல் நடுங்கியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் அழைத்தேன்:

'பிரிய ஹுந்த்ராப்பி என் இதயம் ஹுந்த்ராப்பி... என் தங்க ஹுந்த்ராப்பீ!'

'என் உயிரின் நாயகனான புஸ்ஸாட்டோ!'

என்னை அவள் ஓரக் கண்ணால் பார்த்தாள். நான் வெளிறிப் போகவில்லை. எந்தவொரு கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை. மூச்சே விடாமல் நான் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன். அவள் சொன்னாள்:

'அந்த கட்டுரையில் நல்ல விஷயங்களில் மட்டுமே நீங்கள் என்னைப் பற்றி நினைக்க வேண்டும்:  பெண் இனிமையான ஒரு பிரச்னை. நன்மைகளின் உறைவிடம். அற்புத ஜோதி. அவள் குழந்தை இருக்கும் பெட்டகம் எதுவுமல்ல. குழந்தை இருக்கும் பெட்டகமாம்!' . பிறகு என்னை ஆழமாக பார்த்தாள். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் வெளிறிப் போய் விட்டேன். நான் நினைத்தேன். இனி... இப்போது அவள் எனக்கும் அஅவளுக்கும் புதிய பெயர்கள் வைக்கப் போகிறாள். அவளுடைய பெயர் பெட்டகம் என்றும், என் பெயர் குழந்தையை ஆள்பவன் என்றும் (தங்க பெட்டகமே! நாதனான குழந்தையை ஆள்பவனே! சொல்ல பெட்டகமே!) ஆனால், அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். அவள் அந்தச் செயலில்  இறங்காமல் கூற ஆரம்பித்தாள்:

'நான் சொன்னேன் அல்லவா? பெண்ணைப் பற்றி நல்ல விஷயங்களையே நினைக்க வேண்டும். பெண்... இசை... நறுமணம்... தேன் அடை...  அமிர்தம்... கள்ளங்கபடமற்றவள்... அன்பின் உறைவிடம்... தேவி, ஈஸ்வரி, ஹூரி- இவை அனைத்தும் பெண்களின் பன்முகத் தன்மைகள். எல்லா நல்ல கனவுகளின் உறைவிடம் அவள்... அவள்... நறுமணத்தில் மூழ்கிய நிலவைப் போன்ற ஒரு சிறிய பூங்காவனம். அவள்தான் பெண்!'

நான் அவை அனைத்தையும் கேட்டவாறு அதிர்ச்சியடைந்து போய் அமர்ந்திருந்தேன். அந்த உறைந்து போய் அமர்ந்திருந்ததில் என் தலையில் முடி முளைத்து விடுமோ என்று நான் பயப்படுகிறேன்! நான் அதே இடத்தில் அமர்ந்து ஒரு பீடியைப் பற்ற வைத்து இழுத்து, காதுகளின் வழியாக புகையை விட்டேன். அவள் கேட்டாள் :

'நீங்கள் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?'

'எதை?'

'ஓ... மறுத்துட்டீங்க. தொடர்ந்து அவள் கண்களை நீரால் நிறைத்தாள். பிறகு மெதுவான குரலில் சொன்னாள்:

'ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ... அய்யோ அதுவல்ல...' - அவள் புன்னகைத்தாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் கவலை நிறைந்த குரலில் கூறினாள்:

'கவலைகளும், மோகங்களும் நிறைந்த இனிய காவியம்!'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.