Logo

சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்...

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5993
Sadhaiyin Namaichalkalukku Naduvil...

சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்...

தகழி சிவசங்கரப் பிள்ளை

தமிழில் : சுரா

திருமணம் முடிந்து மனைவியை சுரேந்திரன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான். மறுநாள் வடக்குப் பக்க வீட்டிலிருக்கும் இளைஞனைப் பற்றி மாலதி ஒரு புகார் கூறினாள். அவன் தன்னுடைய தெற்குப் பக்கத்திலிருக்கும் பலா மரத்தின் கிளையிலிருந்து கீழே இறங்கவேயில்லை. அங்கிருந்தவாறு அவன் உரத்த குரலில் பாடினான். சுரேந்திரன் அந்த விஷயத்தை அந்த அளவிற்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

'அவன் அவனுடைய வீட்டின் பலா கிளையில் இருந்து கொண்டுதானே பாடுகிறான்! நமக்கு என்ன?'

தொடர்ந்து சுரேந்திரன் சொன்னான்:

'அந்த இளைஞனை, அந்த பலா மரத்தின் கிளையில் எப்போதும் பார்க்கலாம். அது ஒரு வழக்கமான விஷயம். பிறகு... இன்றைக்கு பாடியிருக்கிறான். அதற்குக் காரணம்- ஒரு புதிய பெண் தெற்குப் பக்க வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்பதாக இருக்கலாம்.'

அதற்குப் பிறகு கூறப்பட்ட புகார் தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் குடும்ப நாயகனைப் பற்றி. அவன் தன்னுடைய வீட்டின் கிழக்குப் பக்கத்திலிருந்த நிலத்தில் நின்று கொண்டு அதை கிளறிக் கொண்டும், கடப்பாறையை வைத்து குழி தோண்டிக் கொண்டும் இருந்திருக்கிறான். மணிக்கு நாற்பது தடவைகள் தான் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்து கட்டியிருக்கிறான். அதை அவன் வேண்டுமென்றே செய்தான் என்று மாலதி கூறினாள்.

சுரேந்திரன் கேட்டான்:

'நீ எதற்கு அதை நின்று பார்த்துக் கொண்டிருந்தாய்?'

மாலதியால் பதில் கூற முடியவில்லை. எனினும் அவள் சொன்னாள் : 'அந்த மனிதனிடம் பக்கத்தில் பெண்கள் வசிக்கிறார்கள் என்ற ஞாபகம் இருக்கணும்னு சொல்றதுல தப்பு இல்லை.'

அதற்குப் பிறகு சுரேந்திரனின் ஒரு நண்பனைப் பற்றி புகார். அவன் ஒரு முறை வீட்டிற்கு வந்திருக்கிறான். சாலையில் கடந்து சென்றபோது அவன் அவளை அப்படியே வெறித்து பார்த்திருக்கிறான். அவள் கேட்டாள்:

'அவன் மிகவும் மோசமான ஆள். அப்படித்தானே?'

சுரேந்திரனால் அவளுடைய கூற்றை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

'உனக்கு எப்போதும் ஒரு ஆணைப் பற்றியாவது புகார் இருந்து கொண்டேயிருக்கும். இது ஒரு வகையான பைத்தியக்காரத்தனம்'- தொடர்ந்து அவன் கேட்டான்:

'பக்கத்து வீடுகளில் உள்ள எல்லோருடனும், இப்போது நண்பர்களாக இருப்பவர்களுடனும் என் மனைவியைப் பார்த்து, என் மனைவிக்கு முன்னால் வேட்டியை அவிழ்த்து கட்டினாய் என்றெல்லாம் கூறி நான் அடிதடி சண்டை போடணுமா?'

மாலதி கவலையுடன் காணப்பட்டாள்.

'நான் இப்படிப்பட்ட விஷயங்களைப் பார்த்து பழகியவள் இல்லை. என்னால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் அப்படி வளர்ந்தவள் இல்லை'- பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்:

'இனிமேல் நான் எதுவும் கூறப் போவதில்லை. என்னை யார் வேண்டுமானாலும் வீட்டிற்குள் நுழைந்து பலாத்காரம் செய்து கொள்ளட்டும்..'

சுரேந்திரனுக்கு சிரிப்பு வந்தது.

மாலதியைப் பற்றி சுரேந்திரனிடமும் சில புகார்கள் இருந்தன. ஒரு வகையில் பார்க்கப் போனால்- அவை அனைத்தும் படுக்கையறை சம்பந்தப்பட்ட புகார்கள். அவள் மெல்லிய ஒற்றைத் துணியை அணிந்தே நடக்கிறாள். அவள் அப்படி திரும்பி நடந்து செல்வதைப் பார்ப்பது என்பது அவனுக்கு மிகவும் சுவாரசியம் அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. எனினும், அவன் கேட்பான்:

'நீ ஏன் அப்படி நடக்கிறாய்? இது ஆபாசமில்லையா?'

மனம் விட்டு சிரித்துக் கொண்டே அவள் கேட்டாள்:

'ஏன்? அதைப் பார்த்து மனம் சபலமாயிடுச்சா? அப்படித்தான்னா, அதுக்குத்தான்...'

தொடர்ந்து அவள் கூறுவாள் : 'என்னால் அப்படி இறுக கட்டிக் கொண்டு நடக்க முடியாது. மூச்சை அடைக்கும்...'

மீண்டும் அசைந்து அசைந்து பின்பாகத்தைக் காட்டியவாறு அவள் நடந்து செல்வாள்.

அதற்குப் பிறகும் சுரேந்திரனிடம் புகார்கள் இருந்தன. அவன் ஏதாவது முக்கிய விஷயமாக நடந்து போய்க் கொண்டிருக்கும்போது- கட்டியிருக்கும் அவனுடைய வேட்டியை அவள் அவிழ்த்தெறிவாள். அது திடீரென்று நடக்கும். வேட்டி அவிழ்ந்து பறக்க, நின்று கொண்டிருக்க யாருக்கும் தோன்றாது அல்லவா? முன்னால் நின்று கொண்டிருப்பது மனைவியாகவே இருந்தாலும். அதற்குப் பிறகு அங்கு வேட்டிக்காக நடக்கும் ஒரே போராட்டம்தான். சில நேரங்களில் அவனுக்கு கோபம் வந்து விடும். அப்போது அவள் இவ்வாறு கூறுவாள்:

'என் துணியை அதே மாதிரி பிடிச்சு அவிழ்த்துப் போடுங்க.'

இறுதியில் அந்த காட்சிகள் அதே போல ஒவ்வொருவரின் வேட்டியின் நுனியையும் பிடித்து இழுத்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி சிரிப்பதில்தான் முடியும்.

எனினும் அந்த இல்லற வாழ்க்கையின் படுக்கையறை விஷயத்தில் சிறிது கருத்து வேறுபாடுகள் இருந்தன.

தினமும் அவன் அவளிடம் படுக்கையறையில் இருக்கும்போது கேட்பதைக் கேட்கலாம்:

'உனக்கு வேறு எந்தவொரு சிந்தனையும் இல்லையா?'

அவ்வாறு நடந்து கொண்டிருந்த அந்த வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு சம்பவம் நடைபெற்றது. நல்ல உடல் நலத்துடன் இருந்த கூலி வேலை செய்யும் ஒரு மனிதன் சுரேந்திரனின் நிலத்தில் நின்று கொண்டு ஓங்கி மண் வெட்டியால் வெட்டிக் கொண்டிருந்தான். அவன் முழங்கால் வரை வரக் கூடிய ஒரு துண்டை அணிந்திருந்தான். வேலை செய்து சுருங்கிப் போன அந்த சரீரத்தின் சதைகள் மிகவும் சிரமப்பட்டு வெட்டிக் கொண்டிருந்தபோது உருண்டு திரண்டு கொண்டிருந்தன. அவனுடைய உடலமைப்பு ஆணின் அழகை வெளிப்படுத்தக் கூடிய ஒரு மாதிரியாக இருந்தது. ஒரு ஓவியனுக்கு ஏற்ற மாதிரி...

மாலதி சாளரத்தின் அருகில் அவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். அதிகபட்சம் பத்து பதினைந்து அடிகள் தூரத்தில்தான் அவன் நின்றிருந்தான். அந்த உடலமைப்பைப் பார்த்து அவள் ஒன்றிப் போய் விட்டாள். சுரேந்திரன் வந்ததை அவள் பார்க்கவில்லை. அவன் வேட்டியை மாற்றினான். ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து புகைத்தான். அதற்குப் பிறகும் அவள் கவனிக்கவேயில்லை.

சுரேந்திரன் அழைத்தான்:

'மாலதீ...'

மாலதி அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தாள். அவளை கையும் களவுமாக பிடித்திருக்கிறான். எந்தவொரு சமாதானமும் கூற முடியாது. அவள் வெளிறிப் போய் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தாள்.

சுரேந்திரன் கேட்டான்:

'அப்படியென்றால் வடக்குப் பக்க வீட்டைச் சேர்ந்த கோபியுடனும், மேற்குப் பக்க வீட்டிலிருக்கும் கோவிந்தன் அண்ணனுடனும் நான் சண்டை போட்டிருந்தால், எந்த அளவிற்கு மோசமான ஒரு விஷயமாக அது இருந்திருக்கும்!'

உடனடியாக மாலதியால் சமாதானம் கூற முடியவில்லை. எனினும், அவள் அப்படி பெரிய குற்றம் எதையும் செய்து விடவில்லை.

* * *


ல்லா பெண்களும், எல்லா மனைவிமார்களும் இப்படித்தான் இருப்பார்களா? அல்லது... தனக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்புத் தன்மையா இது? உள்ளுக்குள் தோன்றிய உணர்ச்சிகளுக்கு சில நிமிடங்கள் அடி பணிந்து, சரீரமும் மனமும் சோர்வடைந்தபோது மாலதி தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்விகள் அவை. எல்லா பெண்களையும்போல ஒரு பெண்தான் அவளும். எந்தவொரு வேறுபாடும் இல்லை. உண்மையிலேயே அவளைப் போலவே இப்படிப்பட்ட உணர்ச்சிகள் நிரந்தரமாக எல்லா பெண்களையும் சிரமப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். அவர்களும் தங்களின் கண்களில் படக் கூடிய ஒவ்வொரு ஆணையும் பிடித்து இழுப்பதைப் போல பார்க்கத்தான் செய்வார்கள். பிறகு கண்களை மூடிக் கொண்டு ஒரே சிந்தனையுடன் அந்த ஆணுடன் உடலுறவு கொள்வது... இப்படி ஒரு நிமிட நேரத்திற்காவது மனதில் நினைத்துப் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் வேறொரு ஆண் கண்களில் படுவான். அந்த வகையில் அந்தச் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். அப்படி இல்லாமலிருக்க எந்தவொரு காரணத்தையும் மாலதி பார்க்கவில்லை. ஆனால், அனைத்தும் ரகசியங்கள்... சிறிய ரகசியங்கள்!

மாலதிக்கு மிகவும் நெருக்கமான ஒன்றிரண்டு சினேகிதிகள் இருந்தார்கள். அவர்களிடம் ஒவ்வொரு நிமிடமும் செய்யக் கூடிய அவர்களுடைய மோசமான செயலைப் பற்றி கேட்க வேண்டும் என்று மாலதி பல நேரங்களிலும் ஆசைப்பட்டிருக்கிறாள். வேறு எதற்காகவும் இல்லை. தன்னை மாதிரிதான் அவர்களும் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே. ஆனால், கேட்பதற்கு அவளால் முடியவில்லை. அவர்கள் நல்ல தோழிகள். சந்தேகமில்லை. எனினும், அவர்கள் கூற மாட்டார்கள் என்றுதான் மாலதிக்குத் தோன்றியது. இன்று வரை தன்னுடைய விஷயங்களை மாலதி அவர்களிடம் கூறியதேயில்லை. அந்த பெண்கள் அனைவரும் யாருக்கும் தெரியாமல் இப்படித்தான் தங்களுக்குள்ளேயே வெந்து புகைந்து கொண்டிருப்பார்கள். ஓ...! என்ன ஒரு வாழ்க்கை பெண்களுடையது!

ஆண் இல்லாத ஒரு உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை பண்ணிப் பார்க்க மாலதி முயற்சித்தது உண்டு. அந்த உலகத்தில் இந்த அமைதியற்ற தன்மையும் ஏக்கமும் எதுவும் இருக்காது. அங்கு பெண்கள் மோசமானவர்களாக ஆக மாட்டார்கள். பெண்களுக்கு மத்தியில் இருக்கக் கூடிய குறும்புத்தனமும் குறைபாடும் அந்த உலகத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. எல்லா அவன்களும் ஒதுங்கியிருந்திருந்தால், இந்த கண்களுக்கு வேலை குறைந்திருக்கும். நரம்புத் துடிப்பு உண்டாகியிருக்காது. வேறு எதைப் பற்றியாவது சிந்தித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். பெண்ணுக்கு மனதில் அமைதி கிடைத்திருக்கும்.

அதோ... ஒருவன் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கிறான். நல்ல உடல் நிலையைக் கொண்டவன். அவனுடைய முகம் அந்த அளவிற்கு நீளமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு பெரிய மூக்கு அவனுடைய முகத்திற்கு அழகு இல்லாமற் செய்கிறது. அந்த அளவிற்கு வெள்ளை நிறமும் இல்லை. அவனுக்கு மீசை சிறியதாக இருக்கிறதோ என்று மாலதிக்குத் தோன்றியது. எனினும், ஆள் பரவாயில்லை. அவனுக்கு ஒரு மனைவி இருப்பாளோ? இருந்தால், அவளுடைய அனுபவங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்? முகம் முகத்துடன் ஒட்டிச் சேர்வதற்கு அந்த பெரிய மூக்கு தடையாக இருக்குமோ? உரசி உரசி முகம் வேதனை கொள்வதற்கு அவனுடைய மனைவியான அந்தப் பெண் விருப்பப்படவே வேண்டாம் என்று மாலதிக்குத் தோன்றியது. ஏனென்றால், அவனுடைய முகம் மொழு மொழு என்று இருக்கக் கூடிய முகம். அவனுடைய மார்புப் பகுதியில் அப்படியொன்றும் உரோமங்கள் இல்லை. யாரென்று தெரியாத அந்த மனிதனின் படுக்கையறையை மாலதி பார்த்துக் கொண்டிருக்கிறாள். மாலதி கண்களை மூடிக் கொண்டாள். அவனுடைய சரீரத்திலிருந்த எல்லா ஆடைகளும் இல்லாமற் போயின. மாலதி சற்று அதிர்ச்சியடைந்து விட்டாள். உரத்த குரலில் தான் கூப்பாடு போட்டு விட்டோமோ என்று அடுத்த நிமிடம் மாலதி சந்தேகப் பட்டாள்.

கண்களைத் திறந்தபோது, கேட்டைத் திறந்து ஒரு இளைஞன் உள்ளே நுழைந்து வருவதை அவள் பார்த்தாள். நல்ல தடிமனும் மிடுக்குத் தனமும் கொண்ட ஒருவன். அவனுக்கு ஒரு பெரிய மீசை இருந்தது. தலை முடியை அழகாக வாரி விட்டிருந்தான். மாலதி சிறிது நேரமே அவனைப் பார்த்திருப்பாள். பதைபதைப்புடன் அவள் வேகமாக எழுந்து உள்ளே ஓடினாள். நுழைந்து அறையின் கதவை உடனடியாக அடைத்து அவள் தாழ்ப்பாள் போட்டாள்.

அந்த ஆண் திகைப்படைந்து நின்று விட்டான். ஒரு வீட்டிற்குள் செல்வது, வீட்டின் நாயகி ஓடி உள்ளே நுழைந்து தாழ்ப்பாள் போடுவது- இது ஒரு அசாதாரண சம்பவமாயிற்றே! அவனுக்கு எதுவுமே புரியவில்லை.

ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்குத்தான் அந்த மனிதன் அங்கு வந்தான். மாலதியின் கணவனுக்குச் சொந்தமான ஒரு கட்டிடம் காலியாகக் கிடந்தது. அந்த கட்டிடம் வாடகைக்குக் கிடைக்குமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவன் அங்கு வந்தான். அந்த வீட்டின் நாயகனுடனோ அந்த பெண்ணுடனோ அவனுக்கு எந்தவொரு முன் அறிமுகமும் இல்லை.

சிறிது நேரம் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். பிறகு அவன் சொன்னான்:

'நான் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காக வந்தேன்.'

பதில் இல்லை.

மீண்டும் அந்த மனிதன் தான் வந்திருப்பதன் நோக்கத்தைத் திரும்ப கூறினான். அதற்கும் பதில் இல்லை. மேலும் சிறிது நேரம் நின்று விட்டு, அவன் அங்கிருந்து கிளம்பினான்.

அறைக்குள் நுழைந்த மாலதி தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நரம்புத் துடிப்புடன் ஒரு கட்டிலில் போய் விழுந்தாள்.

சிறிது நேரம் கழித்து நரம்பின் அந்த துடிப்பு சற்று அடங்கியவுடன், அவன் எதற்காக வந்திருப்பான் என்று மாலதி நினைத்துப் பார்த்தாள். திடீரென்று அவளுடைய மனக் கண்களுக்கு முன்னால் நிர்வாணமான அவளுடைய சரீரம், சிறிது கூட நூலிழை வித்தியாசமில்லாமல் பல தடவைகள் நிலைக் கண்ணாடிக்கு முன்னால் பார்த்திருப்பதைப் போல தோன்றியது. அடுத்த நிமிடம் தன்னுடைய ஆடையை யாரோ பலவந்தமாக பிடித்து அவிழ்ப்பதைப் போல மாலதி 'அய்யோ' என்று உரத்து கத்தி விட்டாள்.

சுரேந்திரன் வந்து அவளுடைய பின் பகுதியில் தட்டி அழைத்தபோதுதான் அவள் சுய உணர்விற்கு வந்தாள். தான் கட்டியிருந்த புடவையை வாரி இழுத்து எடுத்து சுற்றிக் கொண்டு அவள் எழுந்தாள். மாலதி தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஆணையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பார்வையும் நடந்து கொண்ட முறையும் சுரேந்திரனை பதைபதைப்பு அடையச் செய்தன. சிறிது நேரம் கழித்து, சுரேந்திரன் கேட்டான்:


'உனக்கு என்ன ஆச்சு?'

மாலதி அப்போதுதான் முழுமையான சுய உணர்வு நிலைக்கு வந்தாள். அவளுடைய கணவன்தான் முன்னால் நின்று கொண்டிருந்தான். அவள் அவனுடைய கழுத்தில் தன் கைகளைச் சுற்றி, அழுத்தமாக அவனை முத்தமிட்டாள். ஆனால், அவன் ஒரு மரத்தால் ஆன பொம்மையைப் போல அந்த முத்தத்தை வாங்கினான். அவள் அவனுடைய இடது கன்னத்தைக் கடித்தாள். கன்னத்தில் நீல நிறம் படர்ந்ததும், அவன் அவளுடைய பிடியிலிருந்து சற்று பலத்தை பயன்படுத்தி விலகி நின்றான்.

திட்டுகிற குரலில் சுரேந்திரன் கேட்டான்:

'இது என்ன? உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? நீ கனவு கண்டு கொண்டிருக்கிறாயா?'

மாலதி மிகவும் அழகாக, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சற்று புன்னகைத்தாள். மீண்டும் அவள் அவனைத் தன்னுடைய சரீரத்தோடு சேர்த்து பிடித்தவாறு, அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே கூறினாள்:

'ஆமாம்... நான் நல்ல பகல் வேளையில் ஒரு கனவு கண்டேன்.'

சுரேந்திரன் தன்னைச் சுற்றி வளைத்திருந்த அவளுடைய கையை மெதுவாக விலக்கி விட்டவாறு கேட்டான்:

'ம்... அது உனக்கு ஞாபகத்தில் இருக்குதா? சரி... இங்கே ஒரு ஆள் வந்தானா?'

பயங்கரமான ஒரு சம்பவத்தைப் பற்றி நினைக்கும்போது இருக்கக் கூடிய பல உணர்வுகளுடன் மாலதி பதில் சொன்னாள்:

'ம்... ம்... பெரிய மீசையையும் சிவந்த கண்களையும் கொண்டிருந்த தடிமாடு மாதிரி இருந்த ஒரு மனிதன் வந்தான். ஆக்கிரமிக்கும் ஏதோ எண்ணத்துடன்தான் அவன் வந்தான். பயந்து போயிட்டேன். உண்மையாகவே அந்த ஆளுக்கு என் மீது கெட்ட எண்ணம்தான். அந்த ஆளோட பார்வையை நினைக்கிறப்போ இப்போது கூட எனக்கு பயம் தோணுது. நான் பயந்து போய் உள்ளே வந்து கதவை அடைத்துக் கொண்டேன்.'

தொடர்ந்து அவள் கேட்டாள்:

'அந்த ஆள் யார்?'

'அவன் எதுவும் சொல்லலையா? நீ எதுவும் கேட்கவுமில்லையா?'

'இல்லை.'

'நல்லதாப் போச்சு... ஒரு ஆள் வீட்டிற்கு வந்தால், எதற்காக வந்தாய் என்று கேட்க வேண்டாமா? அப்படி யாராவது வந்து உன்னை பலாத்காரம் செஞ்சிடுவாங்களா?'

ஒரு தவறு நடந்து விட்டது என்ற நினைப்புடன் அவள் கேட்டாள்:

'அந்த ஆள் யார்? எதற்காக வந்தான்?'

'நம்முடைய கீழே இருக்கும் வீட்டை வாடகைக்கு எடுப்பதற்காக வந்திருக்கிறான். அப்படி ஒரு ஆள் வந்திருக்கிறான் என்ற தகவல் தெரிந்து, நான் உடனடியாக திரும்பி வந்தேன். நீண்ட நாட்களாகவே அது சும்மாதானே கிடக்குது!'

குற்றம் சுமத்தியவாறு சுரேந்திரன் தொடர்ந்து சொன்னான்: 'நான் இல்லாதபோது யாராவது வந்தால், நீ ஓடி உள்ளே போய் விடுகிறாய். ஏன் அது?'

குற்றத்தை ஏற்றுக் கொண்டு ஒரு குழந்தையைப் போல அவள் சொன்னாள்:

'எனக்கு பயம்...'

கணவனின் வெறுப்புடன் மாலதியை காலிலிருந்து தலை வரை பார்த்துக் கொண்டே சுரேந்திரன் திட்டினான்:

'பயம்...! நல்லதுதான்...'

மாலதி தவறு செய்து விட்டவளாக நின்று கொண்டிருந்தாள். சுரேந்திரனின் அப்போதைய கவலை- இனி எங்கு சென்று அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பதற்காக வந்திருந்த மனிதனைக் கண்டு பிடிப்பது என்பதுதான். நீண்ட நாட்களாகவே அந்த கட்டிடம் காலியாகத்தான் கிடக்கிறது.

* * *

2

ந்த திருமண உறவில் அந்த அளவிற்கு அசாதாரணமாக எதுவுமில்லை. ஊரில் எல்லா இடங்களிலும் நடப்பதைப் போன்ற ஒரு திருமணம்தான் சுரேந்திரனையும் மாலதியையும் இணைத்து வைத்தது. பிறகு... ஏதாவது விசேஷமோ, தனித் தன்மையோ- ஏதாவது இருந்திருந்தால், அது அவர்களுடைய உடலுறவு வாழ்க்கையில்தான். அந்த மாதிரி ஆண், பெண் இரு பாலரின் விருப்பம், விருப்பமின்மைக்கும் ஏற்ற நடவடிக்கைகளும், அசாதாரணத் தன்மையும் உண்டாக்கிய ரசனைகளும் இல்லாத படுக்கையறை உண்டோ? மிருகங்களுக்குக் கூட ஈர்ப்பு... ஒன்றோடொன்றுக்கு ஈர்ப்பு... வேறுபாடு இல்லையா?

சாதாரண முறையில்தான் மாலதியின் திருமணமும் நடந்தது ஒரு பெண் பிறக்கும்போதே தாய், தந்தையின் தலையில் ஒரு பொறுப்பு வந்து விழுகிறது. பிரசவம் நடைபெற்ற இடத்தில் 'குழந்தை... பெண்' என்று பணிப்பெண்களில் யாராவது உரத்த குரலில் கூறும்போதிலிருந்தே தாயும் தந்தையும் ஒரு தேடலுக்கு தயாராகி விடுகின்றனர். எங்கேயோ, சாதாரண முறையில் ஒரு ஆண் குழந்தை பிறந்திருப்பான். அவனைக் கண்டு பிடிக்க வேண்டும். 'ஆண் குழந்தை' என்று சத்தம் போட்டு கூறினால், உண்மையிலேயே வெளியே நின்று கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மன சந்தோஷமல்லவா உண்டாகிறது? பெண் என்று கூறும்போது, தாயும் பிள்ளையும் இரண்டாக பிரிந்து விட்டார்களே என்று பிரசவம் நடைபெறும் வீட்டிற்கு வெளியே இருப்பவர்கள் நிம்மதி அடையும் அதே நேரத்தில், குழந்தை ஆணாக இருந்தால், மேலும் சிறிது சந்தோஷம் அதிகரிக்கும். பெண் பிறந்த இடத்தில் குரவைச் சத்தம் கேட்காது. அங்கு சிரட்டையை உரலில் போட்டு இடிப்பார்கள்.

அப்படி சிரட்டையை உரலில் போட்டு இடித்துத்தான் மாலதியின் உலகத்திற்குள் வந்த வருகையும் அறிவிக்கப்பட்டது. குழந்தையைப் பார்த்து தந்தையும் தாயும் சந்தோஷத்தில் மூழ்கியிருக்கும்போது, யாருடன் சேர்த்து வைத்து அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துத் தருவது என்ற சிந்தனை அவர்களுடைய மனதின் அடித்தட்டில் நுழைந்து விட்டிருக்கும்.

பெண் குழந்தையின் கூந்தலில் நிறங்களைக் கொண்ட ரிப்பனையும் மலர்களையும் ஏன் கட்டி வைக்கிறார்கள்? பெண்ணின் கண்களில் மை இடுவார்கள். பெண்ணுக்கு பொட்டு வைத்து, அழகை அதிகரிப்பார்கள். எதற்கு? தங்கத்தையும் ஆடையையும் அணிவிப்பதில் நோக்கம் இருக்கிறதா? அந்த வகையில் வளர்ந்து வரும் பெண்ணின் கண்களில் அசைவு உண்டாகிறது. அவளால் அந்த வகையில் கண்களால் எறிய முடிகிறது. அதை அவள் செய்கிறாள். அவள் ஏன் வெட்கப்படுகிறாள்? அந்த நாணம், அடக்கம், பணிவு என்று கூறப்படும் கட்டுப்பாடு, இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன? மார்புப் பகுதியில் முலை முளைக்க தொடங்குவதிலிருந்து அவளுடைய மனதில், அல்லது சுய உணர்வு தளத்தில் ஏதோ நுழைந்து பாடாய்படுத்திக் கொண்டிருக்கும். அந்தத் தருணத்திலிருந்து அவள் தன் தந்தை கேட்டால் கூட, ஒரு முத்தம் கொடுப்பதில்லை. அதற்குப் பிறகு அவளுக்கு பயம் தோன்றுகிறது. அவை அனைத்தும் படிக்கப்படுபவைதானே? படிப்பிக்கப்படுபவைதானே?


பெண் பிள்ளைகளின் மீது பெற்றோருக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. ஆண் பிள்ளைகளின் விஷயத்தில் அப்படியில்லை. அவனுடைய குறும்புத்தனங்களுக்கு கடிவாளம் போடுவார்கள். பெண் பிள்ளைகளின் விஷயத்தில் அவளுடைய நடவடிக்கைகள் கவனிக்கப்படும். பார்வை, நடந்து கொள்ளும் முறை... அனைத்தும். வயது கூட... கூட... பெண்ணைப் பற்றி ஒரு பயம். அவளைத் தனியாக வெளியே விட மாட்டார்கள். தனியாக படுத்து தூங்க விட மாட்டார்கள். அவள் படுத்திருக்கும் அறையின் தாழ்ப்பாள் பத்திரமாக பூட்டப்பட்டிருக்கிறதா என்று தாய் பார்ப்பாள். அவள்தான் கைப்பிடியை விட்டு சாதாரணமாக விலகிச் செல்லக் கூடியவள். பெண்ணின் சதையைப் பற்றி தந்தைக்கும் தாய்க்கும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். அதன் மடிப்புகளுக்கு மத்தியில் ஏதோ நமைச்சல்கள் உண்டாகி இருக்கலாம்.

அப்படித்தான் மாலதியும் வளர்ந்தாள். மற்றவர்களைவிட அந்த நாணமும், கண்களின் சுறுசுறுப்பும், அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னைத் தானே அடக்கிக் கொள்ள வேண்டும் என்ற ரசனையும் சற்று அதிகமாகவே இருந்திருக்கலாம். பரவாயில்லை... அவளும் ஒரு சாதாரண பெண்ணாகவே இருந்தாள். ஆனால், எங்கோ எப்படியோ உடலுறவு கொள்வதைப் பற்றி அவள் சற்று முன்கூட்டியே தெரிந்து கொண்டு விட்டாள் என்று தோன்றுகிறது. எப்படி அது நடக்கும் என்பதைப் பற்றி அவள் சிந்தனையில் மூழ்கியிருக்கிறாள். அது எல்லா பெண் பிள்ளைகளிடமும் இருக்கக் கூடியதாக இருந்திருக்கலாம். முளைத்து வரும் மார்பகத்தை அவள் தன்னிடமே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னுடைய சரீரத்தை நிர்வாணமாக பார்ப்பதற்கு அவள் சூழ்நிலையை உண்டாக்குவாள்.

மற்ற பெண் பிள்ளைகளைப் போல அவளைப் பற்றி படிக்கும் காலத்தில் அடிப்படை இல்லாத நில கதைகளை சினேகிதிகள் கூறிக் கொண்டிருப்பார்கள். அந்த சினேகிதிகளைப் பற்றியும் கதைகள் பரவி விட்டிருந்தாலும்... அறிவியல் ஆசிரியர் புதிதாக வேலை கிடைத்திருக்கும், பார்த்தால் பரவாயில்லை என்று சொல்லிக் கொள்ளக் கூடிய அளவில் இருந்த ஒரு இளைஞன். அவனுடைய வகுப்பில், அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டு, எல்லாவற்றையும் மறந்து விட்டு அவள் அமர்ந்திருப்பாள். ஒரு விஷயம் உண்மை. அவள் பாடத்தை கவனிப்பதில்லை என்பதென்னவோ உண்மை. அவன் தான் கூறி நிறுத்திய பாடத்தை அடுத்த நிமிடம் கேள்வியாக கேட்டால், அவள் பதில் கூற மாட்டாள். கணக்கு ஆசிரியர் அவளிடம் கேள்வி கேட்பார். தேர்வில் அவர் அவளுக்கு மதிப்பெண்களை அள்ளி வழங்குவார். ஆங்கிலப் பாட ஆசிரியர் அவளுக்கு அருகில் நின்று கொண்டுதான் பாடத்தையே நடத்துவார். அது அவருடைய ஒரு வழக்கமான செயலாக இருந்தது. அவ்வாறு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய முழங்கைகளை டெஸ்க்கின் மீது ஊன்றிய நிலையில், சற்று முன்னோக்கி நகர்ந்து அமர்ந்திருக்கும் மாலதியின் ரவிக்கைக்குள் அவருடைய கண்கள் பாய்ந்து இறங்குவதைப் பார்த்திருப்பதாக ஆண் பிள்ளைகள் கதை பரப்பினார்கள். ஒரு விஷயம் உண்மை. வயதைத் தாண்டி அந்த இடம் சற்று பெரிதாக இருந்தது. பக்கத்து வீட்டிலிருக்கும் கருணாகரன் அண்ணன் மீது அவளுக்குக் காதல் என்று ருக்மிணி கூறிக் கொண்டிருந்தாள். ருக்மினி கருணாகரனின் முறைப் பெண். இப்படிப்பட்ட கதைகள் அவளுடைய வயதைக் கொண்ட எல்லா பெண் பிள்ளைகளைப் பற்றியும் இருந்தன. ஒரே ஒரு வித்தியாசம்தான். மாலதியைப் பற்றி உருவாக்கப்பட்ட கதைகளில் சற்று அதிகமாகவே சதைகள் இருந்தன. அதற்கும் காரணம் இருக்கிறது. மற்ற பெண் பிள்ளைகளை விட மாலதிக்கு வளர்ச்சி இருந்தது. சொல்லப் போனால்- தானே பிடியை விட்டு விலகிச் செல்லக் கூடிய குணத்தைக் கொண்டவள்.

மாலதியின் தனித்துவ ரசனைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் அவளுடைய தாயின் கவனத்தில் பட்டதைப்போல தோன்றியது. எல்லா பெண்களின் ரசனைகளும் பழக்க வழக்கங்களும் அவளுடைய தாயின் கவனத்தில் விழுவதைப் போலத்தான். தாய்தானே அதை கவனிப்பாள்! தாய்க்குத்தானே அது தெரியும்? தந்தை மகனுடைய பழக்க வழக்கங்களைப் பற்றி....

ஒரு நாள் மாலதியின் தாய், மாலதியின் தந்தையிடம் சொன்னாள்:

'பொண்ணுக்கு யாரையாவது பார்க்க வேண்டாமா?'- அது ஒரு அவசரச் செயலாக மாலதியின் தந்தைக்குத் தோன்றவில்லை. தாய் கோபத்துடன் சொன்னாள்:

'என்ன... அவள் அப்படியே எவனையாவது... நான் ஒண்ணும் சொல்லல...'

தந்தை சற்று பதைபதைப்பு அடைந்தார்.

'என்ன... என்ன விஷயம்? அவளுக்கு பதினான்கு வயதுதானே நடக்குது?'

தாய் பதில் சொன்னாள்:

'வயது அவ்வளவுதான். ஆனால்...'

'என்ன ஆனால்?'

'அவளுடைய வளர்ச்சியையும் நடவடிக்கைகளையும் பார்த்தீர்கள் அல்லவா? அவள் ஒரு பெண் பிள்ளையாச்சே!'

அதற்குப் பிறகும் தாயின் வற்புறுத்தல் தொடர்ந்தது. மீண்டும் படுக்கையறையில் இருக்கும்போது, அந்த விஷயத்தைக் கூறினாள். ரகசியம்... மாலதியின் தாய் மாலதியின் தந்தையிடம் கூற நினைத்தது- அவள் ஏதாவது ஆணை கை காட்டி அழைத்தாள் என்பதோ, யாருடனாவது காதலில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதோ, குளிக்கும் முறை தவறி விட்டது என்பதோ அல்ல. தான் கண்டு பிடித்த அவளுடைய சில பழக்க வழக்கங்களைக் கூற நினைத்திருக்கலாம். ரகசியமாக அவள் தன் கணவனின் காதுக்குள் சொன்னாள். அனைத்தையும் அவர் கேட்டார். அவையெல்லாம் ஒரு ஆணுக்கு புதிய விஷயங்களாக இருந்தன. அவர் கேட்டார்:

'இந்த வயதில், எல்லா பெண் பிள்ளைகளும் அப்படித்தானா?'

தாய் கேட்டாள்:

'அவையெல்லாம் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது? அவளுக்கு ஒரு புருஷன் வேணும் என்ற விஷயத்தை மட்டும் புரிந்து கொண்டால் போதும்.'

மனைவியைச் சற்று கிண்டல் பண்ணிக் கொண்டே அவர் இன்னொரு கேள்வியைக் கேட்டார்:

'நீயும் இந்த வயதில் இப்படித்தான் இருந்தாயா?'

ஒரு எதிர் கேள்விதான் அதற்கான பதிலாக இருந்தது.

'மகனுடைய சரீரம் மெலிந்து கொண்டு வருவதற்கும், அவனுக்கு தன் மீதே ஒரு வெறுப்பும் நம்பிக்கையற்ற நிலையும் வருவதற்கான காரணம் என்ன என்று நீங்கதானே சொன்னீங்க! அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று. அந்த வயதில் நீங்களும் அப்படித்தான் இருந்தீங்களா?'

தந்தை அதற்கு கூச்சமே இல்லாமல் பதில் கூறினார்:

'ஆண்கள் எல்லோருமே அப்படித்தான் இருப்பாங்க.'


அப்படியென்றால் பெண்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று தாய் இறுதியாக பதில் கூறவில்லை. அதே நேரத்தில் - அப்படி இல்லை என்றும் கூறவில்லை. முக்கி முனகிக் கொண்டு பாதி ஒத்துக் கொண்டும் பாதி ஒத்துக் கொள்ளாமலும் தாய் பதில் கூறினாள். அந்த இடத்திலும் பெண் தன்னுடைய ரகசியத்தை மறைக்கிறாள். தந்தை தொடர்ந்தார். தாயும் இளம் வயதில் அப்படித்தான் இருந்தாளோ என்று பிடியை விடாமல் கேட்டார்.

'ஓ... என்ன இது? இது என்ன கேள்வி? சரிதான்... இவ்வளவு வயதுகள் தாண்டிய பிறகு, இளம் பெண்ணாக இருக்குறப்போ கல்யாணம் ஆகி, மறுநாள் கேட்கும் கேள்விகளைக் கேக்குறதுக்கு வெட்கமாக இல்லையா?'

தந்தையும் விடுவதாக இல்லை.

'என்னிடம் கூற முடியாத அளவிற்கு உன்னிடம் ஏதாவது விஷயங்கள் இருக்குதா? ஏதாவது ரகசியங்கள் இருக்கின்றனவா?'

'ஓ...! மகளுக்கு எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக நல்ல ஒரு பையனைக் கண்டு பிடிங்க.'

தாய் கூறவில்லை. எந்தவொரு பெண்ணும் அதைக் கூற மாட்டாள். ஏனென்றால், ஒருத்தியின் உணர்ச்சிகள் நிறைந்த ஆவேசத்தை தன்னுடைய வார்த்தைகளால் சம்மதிப்பாள். அம்மா அப்படிப்பட்ட ஒருத்திதான்' என்று தன் கணவனுக்கு தோன்றுவதற்குக் கூட அவள் இடம் கொடுக்க மாட்டாள்.

தந்தை அவளுக்குப் பொருத்தமான ஒருவனைத் தேட ஆரம்பித்தார். ஒருவன் கிடைத்தான். ஆனால், அவன் மிகவும் மெலிந்து போய் காணப்பட்டான். அவன் சரியாக வர மாட்டான். அதற்குப் பிறகு கிடைத்த ஒருவனுக்கு சற்று வயது அதிகமாக இருந்தது. மூன்றாவதாக பார்த்த ஆள் பரவாயில்லை... ஆனால், பொருளாதார விஷயத்தில் மோசமான நிலையில் இருந்தான்.

எல்லா விஷயங்களும் மாலதிக்குத் தெரியும். ரகசியம் நிறைந்த அந்த அறை திறக்கப்படப் போகிறது. அவள் பலவற்றையும் தெரிந்து கொள்ள போகிறாள். அதனால் உண்டாகக் கூடிய சந்தோஷம் பெரிதாயிற்றே! அவள் பகல் கனவு கண்டு கொண்டிருப்பாள். ஒரு மனைவியாக ஆன பிறகு எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்ப்பாள். திருமண முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் பெண் பிள்ளைகள் தங்களுக்குள் சில சபதங்கள் செய்து கொள்வார்கள். கணவன் மீது அன்பு செலுத்த வேண்டும், அவனை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்... இப்படிப்பட்ட சில சபதங்களை எடுப்பார்கள். வேறு சிலர், வேறு வகையில் சபதம் செய்வார்கள். என் மீது அன்பு செலுத்தினால், நானும் அன்பு வைப்பேன் என்பதைப் போல, மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் கணவனுக்குப் பிடிக்கிற மாதிரி சாதமும் குழம்பும் வைத்து அன்பைச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்குப் பிறகும் சில பெண் பிள்ளைகள் சந்தோஷம் நிறைந்த, மயக்கக் கூடிய ஒரு உலகத்தை கனவு காணக் கூடியவர்களாக இருப்பார்கள். மாலதி இப்படி எதையும் கனவு காணவில்லை. படுக்கையறையைத்தான்... அங்கு தன் கணவனை அவள் நிர்வாண கோலத்தில் பார்க்க வேண்டும். இவ்வாறு... இவ்வாறு... பலவற்றையும். முன்பு கூறிய பெண் பிள்ளைகள் எல்லோருமே இடையில் அவ்வப்போது படுக்கையறையையும் கனவு கண்டிருப்பார்கள். ஏனென்றால், படுக்கையறை இல்லாமல் திருமண உறவு இருக்கிறதா?

அந்தச் சமயத்தில் அவளின் அன்னை அவளை எப்போதும் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் கவிழ்ந்து படுத்து தூங்கக் கூடாது... அவளின் தாய் வந்து தட்டி எழுப்புவாள். சில நேரங்களில் எழுப்புவதற்கு ஒரு பலமான தட்டு தேவைப்படும். பிறகு... திட்ட ஆரம்பிப்பாள். அப்படி படுத்து தூங்கித்தான் அவள் பழக்கப்பட்டிருக்கிறாள். தன் தாய் எதற்காக அப்படி திட்டுகிறாள் என்று தெரியாமல் அவள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்தாலும், விஷயம் என்னவென்று அவளுக்குத் தெரியும். அவள் மல்லாக்க படுக்கக் கூடாது. அதற்கு என்ன காரணம் என்று அவளுடைய அன்னை கூறுவாள். பெண்கள் அந்த மாதிரி மல்லாக்க படுத்து உறங்கக் கூடாது என்பது சாஸ்திரம். சாய்ந்து படுத்து தூங்கலாம் என்றால், அப்படியே பழகிப் போய் விட்டிருந்தாலும், கால்களுக்கிடையே கையை  வைத்து தூங்கக் கூடாது. ஆனால், அப்படி இல்லாமல் தூங்கவும் முடியாது. அதற்குப் பிறகும் இருக்கின்றன தொல்லைகள்... குளியலறைக்குள் நுழைந்து சிறிது நேரம் ஆகியிருந்தால், அவளுடைய தாய் கூப்பிட ஆரம்பித்து விடுவாள். என்ன ஆயிற்றோ என்று! அவளுடைய புத்தகப் பெட்டியில் அவளுடைய அன்னை எதையோ தேடிக் கொண்டிருப்பாள். எப்போதும் அவளுடைய தாய்க்கு அவள் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். அவள் எதை எடுத்தாலும் பார்ப்பாள்.

அவளைப் பற்றி ஒரு விஷயம் தனிப்பட்ட முறையில் கூறி ஆக வேண்டும். இந்த ஆள் போதும் என்று அவள் நாக்கைத் திறந்து வளைத்து கூறியதில்லை. அவளுடைய அன்னை கேட்காமல் இல்லை. அந்த மெலிந்து போய் காணப்படும் மனிதனைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டாள். அவள் வாய் திறக்கவில்லை. நாணம் காரணமாக இருக்க வேண்டும் என்று தாய் நினைத்தாள். சினேகிதிகளைக் கொண்டு கேட்க வைத்தாள். நாணத்தால் அல்ல. அவளுக்கென்று கருத்து இல்லை. ஒரு சினேகிதி அவளைக் கேட்டு விட்டு வந்து, கூறியது இது:

'யாராக இருந்தாலும், சரிதான் என்று அவள் சொன்னாள்.'

அந்த சினேகிதி மாலதியின் வார்த்தைகளைத்தான் கூறினாள். அதே வார்த்தைகள்தாம் மாலதியின் நாவிருந்தும் வெளியே வந்தது. அதன் அர்த்தம் அன்னைக்குப் புரிந்ததோ என்னவோ! ஒரு புன்சிரிப்புடன் அன்னை, மாலதியின் தந்தையிடம் சொன்னாள்:

'அவளுக்கு யாராக இருந்தாலும் சரிதானாம்...'

அர்த்தத்தை முழுமையாக தெரிந்து கொண்டு விட்டதைப்போல தந்தை கேட்டார்:

'அப்படின்னா... யாராக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு ஆணாக இருந்தால் போதுமா?'

தாயும் விடவில்லை.

'அப்படின்னா அப்படித்தான்.'

தந்தை ஆச்சரியத்துடனும், சிறிது ஆர்வத்துடனும் கேட்டார்:

'அப்படியா?'

தாய் அந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாமல் விடவில்லை.

'அதனால்தான் நான் சொன்னேன்- வயசு பார்க்க வேண்டாம். மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இருந்தாலும், பிரச்னை இருக்குதே!'

அதற்குப் பிறகும் மாலதியின் அன்னை தொடர்ந்து சொன்னாள்:

'ஒவ்வொரு நாளும் கடக்க... கடக்க அவளுடைய இளமை அழிந்து கொண்டே இருக்குது. ஆறு மாதங்களுக்குள் அவள் கிழவியைப் போல ஆயிடுவாள்.'

தந்தை தனக்குத் தானே கூறிக் கொண்டார்:

'குறைச்சலை அவளே உண்டாக்கி வைக்கப் போகிறாள்.'

தாய் அதை எதிர்த்தாள்.

'அப்படி நடக்காது. அதற்கான அடக்கமும் பணிவும் அவளிடம் இருக்கு.'


 

அந்த வகையில் சுரேந்திரனுடன் நடக்கப் போகும் திருமணம் உறுதியானது. சுரேந்திரனுக்கு பிழைப்பதற்கான வழி இருந்தது. நல்ல பருமனான உடலையும், நல்ல குடும்பப் பின்னணியையும் கொண்டிருந்தான். ஆரோக்கியமாக இருந்தான். எப்படிப் பார்த்தாலும், பரவாயில்லை என்ற நிலையில் இருந்தான்.

திருமணம் முடிந்ததும், தந்தைக்கும் தாய்க்கும் பெரிய நிம்மதி உண்டானது. இருக்க வேண்டியதுதானே!

* * *

3

கீழே இருந்த வீட்டில் ஒரு பெரிய மீசையைக் கொண்டிருந்த இளைஞன் வந்து தங்கினான். அவனுடைய பெயர் பிரபாகரன். அவனுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் இருந்தார்கள். இந்த முறை மாலதி குற்றம் சுமத்தியது- பிரபாகரனின் மனைவியை. அந்தப் பெண்ணுக்கு ஒரு நாகரீகமும் இல்லை என்றாள்! பிறகு ஒரு நாள் அவள் சொன்னாள்- அந்தப் பெண்ணின் நாக்கு நீளமாக இருக்கிறது என்று. அதற்குப் பிறகும் குற்றச்சாட்டுகள் இருந்தன. அவள் ஆணவம் பிடித்தவள்!

மாலதி பிரபாகரனைப் பற்றி இரக்கம் நிறைந்த குரலில் சொன்னாள்!

'பாவம்... அந்த மனிதனுக்கு இப்படிப்பட்ட ஒருத்தி கிடைச்சிருக்காளே!'

சுரேந்திரன் கேட்டான்:

'அப்படியா? இப்போது அந்த மனிதன் பாவமா ஆயிட்டானா? அவன் முதலில் இங்கே வந்தப்போ, நீ என்ன சொன்னே?'

அவள் கொஞ்சலான குரலில் சொன்னாள்:

'அன்னைக்கு நான் பயந்து போயிட்டேன். அந்த மீசையுடனும் தாடியுடனும் பார்த்தப்போ... அதற்குப் பிறகுதானே தெரிஞ்சது?'

வசிக்க ஆரம்பித்து சில நாட்கள் கழித்து, அங்கு வந்தான். அப்போது சுரேந்திரனும் இருந்தான். தான் முதல் முறையாக அங்கு வந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை உரையாடலுக்கு மத்தியில் பிரபாகரன் வெளியிட்டான். அப்போது சுரேந்திரன் தமாஷாக சொன்னான்:

'இப்போது அவளுடைய பயம் போய் விட்டது. உங்களுடைய மீசைதான் அவளை பயமுறுத்தியிருக்கு!'

பிரபாகரன் சிரித்து விட்டான். அவன் சொன்னான்:

'இது கெடுதல் இல்லாத மீசை. வெறுமனே வச்சேன். அப்படியே காடு மாதிரி வளர்ந்திடுச்சு.' தொடர்ந்து அவன் கேட்டான்:

'உங்க மனைவி இங்கேதானே இருக்காங்க? நானே சொல்லிடுறேன்...'

இருக்கிறாள் என்று சொல்வதா, இல்லை என்று சொல்வதா என்று ஒரு நிமிடம் சுரேந்திரன் யோசித்தான். அவன் சொன்னான்:

'இருக்கா... ஆனால், அவள் சமையலறையில் எங்கோ இருப்பாள்...'

உண்மையிலேயே மாலதி பக்கத்திலிருந்த அறையின் கதவுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த ஒற்றை மடிப்பு துணியின் நுனிப் பகுதி வெளியே தெரிந்தது. மேலும் சற்று உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு அவளால் நிற்க முடியவில்லையா என்று சுரேந்திரன் சிந்தித்தான். அந்தத் துணியின் நுனிப் பகுதியை பிரபாகரன் பார்த்தால், பெரிய குறைச்சல்! மனைவியை மறைத்து வைத்திருக்கிறான் என்ற பேச்சு வந்து விடும்.

உண்மையிலேயே சொல்வதாக இருந்தால்- சட்டத்திற்கும் கதவிற்குமிடையே இருந்த இடைவெளி வழியாக பிரபாகரனைப் பார்த்து, தன்னையே மறந்து மாலதி நின்று கொண்டிருந்தாள். அங்கு நடைபெற்ற உரையாடலை அவள் கேட்டிருப்பாளா என்பதே சந்தேகம்.

ஆனால், அந்த துணியின் நுனி மட்டுமல்ல- அந்த இடைவெளியின் வழியாக பிரகாசித்துக் கொண்டிருந்த, தன்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கண்களும் பிரபாகரனின் பார்வையில் பட்டது. அவளுடைய கண்கள் என்னவோ கூறுவதைப் போல சந்தேகம்... ஆனால், அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, கூர்ந்து பார்க்க முடியாது. சுரேந்திரன் அவனுடைய கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பிரபாகரனும் எப்படியோ தன்னை புரிந்து கொண்டிருப்பான் என்பது மாலதிக்கும் புரிந்து விட்டது.

அதற்குப் பிறகு அந்த அளவிற்கு நீளமான உரையாடல் இல்லை. பிரபாகரன் கிளம்பினால் போதும் என்று சுரேந்திரன் ஆசைப்பட்டான். மேலும் சிறிது நேரம் அமர்ந்திருந்தால், அந்தக் கண்களுக்குள் மறைந்திருக்கும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியுமே என்று பிரபாகரனின் உள் மனம் கூறிக் கொண்டிருந்தது. அப்போதும் அந்த துணியின் நுனிப் பகுதி தெரிந்து கொண்டுதான் இருந்தது.

'அப்படின்னா, கிளம்பட்டுமா?' என்று விடைபெற்றுக் கொண்டு பிரபாகரன் வெளியேறினான்.

மாலதி அதே இடத்தில் நின்றிருந்தாள். இடைவெளியின் வழியாக அவளுடைய பார்வைகள் அவனைப் பின் தொடர்ந்து சென்றன. எது எப்படி இருந்தாலும், ஒரு விஷயம் நல்லதாகப் போய் விட்டது. சுரேந்திரன் நுழைந்து வந்ததை அவள் தெரிந்து கொண்டாள்.

'நீ சமையலறையிலோ வேறு எங்கோ இருக்கேன்னு நான் சொன்ன பிறகும், நீ இங்கேயே ஏன் நின்று கொண்டு இருக்கிறாய்? நீ அந்தப் பக்கம் போகக் கூடாதா?'

அவ்வாறு அவன் சொன்னது மாலதியின் மூளையில் பதியவில்லை. எனினும், முன்பு உண்டான அனுபவத்தைக் கொண்டு அவள் சிறிது பாடம் கற்றிருக்கிறாள்.

'நான் மறைந்து நின்று கொண்டிருந்தேன்.'

'உன்னுடைய துணியின் நுனிப் பகுதி நல்லா தெரிஞ்சது.'

'நான் அந்த அளவுக்கு கவனிக்கல...'

மாலதியை பதைபதைக்கச் செய்த ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் பிரபாகரனின் வருகையில் இருந்தது. மிகவும் அருகில் பிரபாகரனைக் காண்பது அல்லது கவனித்தது அன்றுதான். அதற்கு முன்பே ஒரு முறை சற்று பார்த்திருக்கிறாள். தூரத்தில் அவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறாள். அந்த மீசையும் முகமும் கண்களை விட்டு மறையவே இல்லை. கண்களை இறுக அடைத்துக் கொண்ட பிறகும், அவை தெரியவே செய்கின்றன. அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள். மறையவில்லை. மாலதிக்கு பதைபதைப்பு உண்டாகி விட்டது. அன்று இரவு தன் கணவனுடன் சேர்ந்து படுத்திருந்தபோதும், பிரபாகரனின் முகத்தைத்தான் அவள் பார்த்தாள். ஒரு முறை பயந்து போய் பிரபாகரனின் சரீரத்தைத்தான் தன்னுடைய கை சுற்றியிருக்கிறது என்ற நினைப்பு உண்டாகி, அவள் கையை எடுத்துக் கொண்டாள். சுரேந்திரன் கேட்டான்:

'நீ ஏன் பயந்து விட்டாய்?'

அவள் சொன்னாள்:

'ஒண்ணுமில்ல... ஒரு கனவு கண்டேன்.'

* * *


 

சுரேந்திரன் ஒரு மருந்தை பயன்படுத்த ஆரம்பிக்கிறான். கடுமையாக இரண்டு மாதங்களுக்கு பத்தியம் இருக்க வேண்டும். அந்த விஷயம் மாலதிக்கு அந்த அளவிற்குப் பிடிக்கவில்லை. ஆனால், உடல் நலத்தைச் சீராக வைத்திருப்பதற்கு அது அவசியமான விஷயம். மருந்து பயன்படுத்துவதற்கு முந்தைய நாள் இரவு வேளையில் அவனுடைய மார்பில் தலையை வைத்து கொண்டு அவள் விரக வேதனையில் இருப்பதைப்போல சொன்னாள்:

'இரண்டு மாதங்கள்! என்னால முடியாது.'

அவனுக்கும் கூறுவதற்கு விஷயம் இருந்தது:

'நான் எந்த ஒரு மருந்தையும் பயன்படுத்தியவன் அல்ல. நான் மருந்து பயன்படுத்துவதற்குக் காரணமே நீதான்.'

'பிறகு எதற்காக என்னைக் கல்யாணம் பண்ணினீங்க?'

அதற்கு பதில் கூறுவது என்பது அவ்வளவு நல்லதாக இருக்காது. அவன் அவளை வருடிக் கொண்டே சொன்னான்:

'நீ என்னுடைய பொக்கிஷமாச்சே! ஆனால்... இருந்தாலும்... இரண்டு மாதங்களுக்காவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியுமா என்று பார்க்க வேண்டாமா?'

'என்னால முடியாது. எனக்குச் சரியா வராது' என்று கையற்ற நிலையில் அவள் சொன்னாள்.

சுரேந்திரன் கேட்டான்:

'பிறகு நீ என்ன செய்வே? வேற யாராவது...'

அவன் அவ்வளவுதான் கூறியிருப்பான். அவள் வேகமாக எழுந்து கோபத்துடன் கேட்டாள்:

'என்ன சொன்னீங்க?'

அவனுடைய கை அவளுடைய கையில் சிக்கி படாத பாடு பட்டது. அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்:

'என் கையை நசுக்காதே. நான் சும்மா சொன்னேன்.'

'சும்மா இதைச் சொல்லலாமா?'

தொடர்ந்து அவள் கூற ஆரம்பித்தாள்:

'நான் மோசமானவள். என்னைக் கல்யாணம் பண்ணினதுனால, உடல் நலம் போயிடுச்சு. நான் அடக்க முடியாதவள். எல்லாம் சரி... அதற்காக என்னை அப்படியா நினைக்கிறது?'

சுரேந்திரன் சற்று வருத்தப்பட்டான்.

'அப்படி நான் சொன்னேனா? உனக்கு தமாஷ் என்றால் என்னன்னு தெரியாதா?'

அவள் ஒரு தீர்மானம் எடுத்தாள்.

'எனக்கு முடியவே முடியாமப் போச்சுன்னா, நான் பத்தியத்தை முடக்கிடுவேன்.'

சுரேந்திரன் அதற்கு சம்மதித்தான்.

* * *

பிரபாகரனின் மனைவி எங்கோ விருந்திற்காகச் சென்றிருந்தாள். அவனுக்கு அங்கிருந்து உயரத்தில் வடக்குப் பக்க வீட்டைப் பார்ப்பதற்கு சம்மதமும் சுதந்திரமும் கிடைத்தன. அப்படி பார்த்துப் பார்த்து அவன் மாலதியை அவளுடைய வீட்டின் தெற்குப் பக்கத்திலிருந்த சுவருக்குக் கொண்டு வந்து விட்டான். அவன் சுவருக்கு அருகில் சென்றான். தலையை உயர்த்தி அவன் கேட்டான்:

'இப்போ பயம் இருக்குதா?'

பதில் இல்லை. மாலதி மறைந்து போய் விட்டாள். மேலும் சிறிது நேரம் அதே இடத்தில் நின்றிருந்து விட்டு, பிரபாகரன் திரும்பி நடந்தான். சிறிது தூரம் போய் விட்டு அவன் திரும்பிப் பார்த்தான். பழைய இடத்தில் மாலதி நின்று கொண்டிருந்தாள். அவள் கையால் அசைத்து அவனை அழைத்தாள். தொடர்ந்து சுவரின் மறைவில் அமர்ந்து கொண்டாள்.

பிரபாகரனால் அதை நம்ப முடியவில்லை. அது ஒரு தோணலாக இருக்குமோ? அவன் மேலும் சிறிது தூரம் மீண்டும் நடந்தான். அதற்குப் பிறகு திரும்பிப் பார்த்தான்.

அவள் அங்கு நின்றிருந்தாள். அவள் அப்போதும் கையால் அசைத்து அழைத்தாள். இந்த முறை தன் கண்கள் தன்னை ஏமாற்றவில்லை என்பது அவனுக்கு உறுதியாக தெரிந்து விட்டது. அவன் கேட்டான்:

'நான் வரட்டுமா?'

அவள் சம்மதிப்பதைப் போல தலையை ஆட்டினாள்.

* * *

சாளரத்தின் அருகில் பிரபாகரனின் வீட்டையே பார்த்துக் கொண்டு மாலதி நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் திறந்து கிடந்த கதவிற்கு அருகில் பிரபாகரன் சற்று தயங்கிக் கொண்டே நின்றிருந்தான். அவள் மெல்லிய ஒற்றை மடிப்பு துணியொன்றை அணிந்திருந்தாள். அவள் கையால் அசைத்து அழைத்தது மட்டும் ஞாபகத்தில் இருந்தது. அவள் நின்று கொண்டிருந்த விதம் அவனை பைத்தியம் பிடிக்கச் செய்தது.

பிரபாகரன் தன்னையே மறந்து விட்டவனைப் போல கையை நீட்டியவாறு அவளை நோக்கி பாய்ந்து வந்தான். அவன் சுய உணர்வு இல்லாதவனைப் போல அவளைக் கட்டிப் பிடித்தான்.

'அய்யோ!'

அவளுடைய அதிகபட்ச உரத்த குரலில் கூச்சல்...

பிரபாகரனை அவள் பலத்தை பயன்படுத்தி தள்ளி விட்டாள். அவன் எதிர் திசையிலிருந்த சுவரில் மோதி நின்றான்.

உரத்த குரலில் கத்தியவாறு அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஒரே நிமிடத்தில் பிரபாகரன் சுய உணர்வு நிலைக்கு வந்து விட்டான். இனிமேலும் அங்கு நின்று கொண்டிருப்பது சரியல்ல என்று அவன் நினைத்தான். ஒருவேளை அப்படிச் சென்று கட்டிப் பிடித்தது தவறாக இருந்திருக்கலாம். அவன் அங்கிருந்து வெளியேறி தப்பித்தான்.

சுரேந்திரன் வந்தபோது, கோபத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு நின்று கொண்டிருந்த மாலதி சொன்னாள்:

'கீழே வசிக்கிறவனை இன்னைக்கு... இப்போதே அங்கிருந்து வெளியேற்றணும்...'

சுரேந்திரனுக்கு என்ன விஷயம் என்று புரியவில்லை.

அவள் சொன்னாள்:

'அவன் வந்து என்னை கட்டிப் பிடிச்சான். கற்பழிக்க முயற்சி பண்ணினான்.'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.