Logo

ஒரு கெட்ட கனவு

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7352
Oru Ketta Kanavu

ஒரு கெட்ட கனவு (ரஷ்ய கதை)

ஆன்டன் செக்காவ்

தமிழில் : சுரா

விவசாயம் சம்பந்தப்பட்ட மாநில அமைப்பின் நிரந்தர உறுப்பினரான குனின் என்ற முப்பது வயது இளைஞன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து போரிஸோவோவில் இருக்கும் விவசாயம் நடைபெறும் இடத்திற்கு திரும்பி வந்தவுடன், ஒரு ஆளை அனுப்பி விட்டு, ஸிங்கோவோவின் பாதிரியார் ஃபாதர் யாக்கோவ் ஸ்மிர்னோவை அழைத்து வரச் செய்தான். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் கடந்த பிறகு, பாதிரியார் வந்து சேர்ந்தார்.

'பார்த்தது குறித்து மிகவும் சந்தோஷம்'- அவரை வரவேற்றவாறு குனின் கூறினான்: 'நான் இங்குள்ள பணிகளுக்கான பொறுப்பை ஏற்று, இங்கே தங்க வந்து, ஒரு வருடமாகி விட்டது. நாம் சற்று முன்பே சந்தித்திருக்க வேண்டும்.... சரி... நீங்க ரொம்பவும் இளமையா இருக்கீங்களே!' -குனின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

'உங்களுக்கு என்ன வயது?'

'இருபத்தெட்டு, சார்...'- மென்மையாக கையைப் பிடித்து குலுக்கியவாறு அவர் சொன்னார். காரணமே இல்லாமல் அவருடைய முகம் சிவந்தது.

குனின் அவரை உள்ளேயிருந்த அறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றான். 'ஒரு தொழிலாளி பெண்ணின் அவலட்சணமான முகம்...'- அவன் மனதிற்குள் நினைத்தான். சப்பையான மூக்கும், சிவந்த கன்னங்களும், பெரிய சாம்பல் நிறம் கலந்த நீல கண்களும், மெல்லிய புருவமும் சேர்ந்து பாதிரியாரைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது. எண்ணெய் தேய்க்காத மெல்லிய தலை முடிகள் குச்சிகளைப் போல பின் கழுத்தின் வழியாக இறங்கிக் கிடந்தன. மீசை, மீசை என்று கூறக் கூடிய பருவத்தில் இப்போதுதான் வந்து கொண்டிருந்தது. தாடியோ காய்ந்த வைக்கோலைப் போல அங்குமிங்குமாக ஒவ்வொன்று... சிக்கரி சேர்க்கப்பட்ட காபியின் நிறத்தைக் கொண்டிருந்த அங்கியின் முழங்கை பகுதிகள் இரண்டும் துண்டுத் துணிகளைக் கொண்டு சேர்க்கப்பட்டிருந்தன.

'என்ன ஒரு வினோதமான பிறவி!' -அவரின் தோற்றத்தைப் பார்த்து குனின் மனதிற்குள் நினைத்தான். முதல் தடவையாக ஒரு வீட்டிற்கு வருகிறார். நல்ல முறையில் ஆடைகளை அணியவாவது செய்திருக்கக் கூடாதா?

'ஃபாதர், உட்காருங்க'- உற்சாகமான வரவேற்பு என்று கூற முடியாத வகையில் இருந்த ஒரு அலட்சியத்துடன் குனின் சொன்னான்:

'தயவு செய்து உட்காருங்க.'

பாதிரியார் யாக்கோவ் கையால் முகத்தை மூடிக் கொண்டு இருமியவாறு, கைகளை முழங்காலில் ஊன்றிக் கொண்டு, நாற்காலியின் நுனியில் உட்கார்ந்திருந்தார். குள்ளமான சரீரத்தையும், வியர்வை வழிந்து கொண்டிருந்த சிவந்த முகத்தையும் கொண்டிருந்த அவரை ஆரம்பத்திலேயே குனினுக்கு அந்த அளவிற்குப் பிடிக்கவில்லை. இந்த அளவிற்கு அவலட்சணமான, வறுமையில் உழன்று கொண்டிருக்கும் பாதிரியார்கள் ரஷ்யாவில் இருப்பார்கள் என்பதை அவன் மனதில் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. முழங்காலில் கையை ஊன்றிக் கொண்டு நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்த அந்தச் செயலில் சகித்துக் கொள்ள முடியாத மதிப்பின்மையும் பரிதாபத் தன்மையும் வெளிப்பட்டன.

'ஃபாதர், நான் பணி நிமித்தமாகத்தான் உங்களை அழைத்தேன்' - நாற்காலியில் சாய்ந்து படுத்துக் கொண்டே குனின் கூற ஆரம்பித்தான்: 'பயனுள்ள ஒரு முயற்சியில் உங்களுக்கு உதவ வேண்டும் என்ற சந்தோஷமான கடமை எனக்கு இருக்கிறது. பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து திரும்பி வந்தபோது, எனக்கு இங்கு பொறுப்பேற்றிருக்கும் மார்ஷலின் கடிதம் வந்திருந்தது. நீங்கள் ஸிங்கோவோவில் ஆரம்பிக்கும் தேவாலயத்தின் கீழுள்ள பள்ளிக் கூடத்தின் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இகோர்த்மித்ரியெவிச் கூறியிருந்தார்.  ஃபாதர், நான் அதை ஏற்றுக் கொள்ள தயார்தான். நான் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன்.'

குனின் எழுந்து அறைக்குள் அங்குமிங்குமாக நடந்தான்.

'என் கையில் நிறைய பணமெதுவும் இல்லை என்ற விஷயத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை நானும் த்மித்ரியெவிச்சும் விரும்புகிறோம். வசிக்கும் இடம் பணயத்தில் இருக்கிறது. போர்டின் உறுப்பினர் என்ற நிலையில் கிடைக்கக் கூடிய சம்பளம் மட்டுமே என்னுடைய வருமானமாக இருக்கிறது. அதனால், பெரிய உதவிகள் எதையும் எதிர்பார்க்காதீர்கள். செய்ய முடியக் கூடியதை, நான் செய்வேன்... ஃபாதர், பள்ளிக் கூடத்தை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்கள்?'

'தேவைப்படும் பணம் கிடைக்கும்போது...'- பாதிரியார் யாக்கோவ் கூறினார் : 'ஒண்ணுமில்லை, சார். ஒரு வருடத்திற்கு முப்பது கோபெக் வீதம் தருவதாக ஒருவர் விவசாயிகளின் கூட்டத்தில் வைத்து கூறினார். ஆனால், அது ஒரு வாக்குறுதி மட்டுமே. ஆரம்பிக்க வேண்டுமென்றால், இருநூறு ரூபிளாவது தேவைப்படும்.'

'கஷ்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும். என் கையிலும் எதுவுமில்லை. பயணத்திலேயே அனைத்தும் தீர்ந்து போய் விட்டது. இறுதியில் கடன் கூட வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. எது எப்படி இருந்தாலும், நாம் ஒன்று சேர்ந்து ஏதாவதொரு பரிகாரம் காண முயற்சிப்போம்.'

குனின் சிந்தனைகள் பலமானவையாக இருந்தன. ஒவ்வொரு மன விருப்பத்தையும் கூறும்போதெல்லாம், கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக அவன்  பாதிரியார் யாக்கோவைப் பார்த்தான். வெறுமை படர்ந்திருந்த அந்த முகத்தில் அச்சமும், பதைபதைப்பும் மட்டுமே நிழலாடிக் கொண்டிருந்தன. சிறிதும் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை, தன்னுடைய அறிவற்ற தன்மை வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக மட்டுமே காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைப் போல அவருடைய செயலைப் பார்க்கும்போது தோன்றும்.

'கூச்ச சுபாவம் உள்ள மனிதன்... மடையன்...' - குனினுக்கு வெறுப்பு உண்டானது.


ஒரு பாத்திரத்தில் பிஸ்கட்களுடனும், இரண்டு குவளையில் தேநீருடனும் பணியாள் வந்தபோதுதான் பாதிரியார் யாக்கோவ் சற்று அசைந்தார். உடனடியாக அவர் தேநீரை எடுத்து பருகினார்.

'நாம் பிஷப்பிற்கு கடிதம் எழுதினால் என்ன?'- குனினின் சிந்தனைகள் உச்ச நிலையில் தொடர்ந்து கொண்டிருந்தன. 'தேவாலயங்களுக்குக் கீழே உள்ள பள்ளிக் கூடங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி ஆணை பிறப்பித்தது. 'ஸெம்ஸ்த்வோ' (மாவட்டத்தின் ஆட்சியமைப்பு) அல்ல. அவற்றைப் பிறப்பித்தது சபையின் அதிகாரிகள். அப்படியென்றால், அவர்கள்தான் பணத்தையும் தர வேண்டும். இந்த பிரிவில் பணம் ஒதுக்கி வைத்திருப்பதாக வாசித்திருப்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். உங்களுக்கு அதைப் பற்றி ஏதாவது தெரியுமா?'

தேநீரில் மூழ்கியிருந்த பாதிரியார் உடனடியாக பதிலெதுவும் கூறவில்லை. சாம்பல் நிறத்திலிருந்த கண்களை மெதுவாக உயர்த்தி குனினைப் பார்த்தார். கேள்வியை நினைவிற்குக் கொண்டு வந்து, அவர் 'இல்லை' என்பதைப் போல தலையை ஆட்டினார். அந்த முகத்தில் இனம் புரியாத ஒரு பிரகாசத்துடன் கடுமையான பசியும் வெளிப்பட்டது. ஒவ்வொரு மடக்கையும் மிகவும் ரசித்து பருகி, இறுதி துளியும் தீர்ந்தவுடன் தேநீர் குவளையைக் கீழே வைத்தார். மீண்டுமொரு முறை எடுத்து உட்பக்கம் கூர்ந்து பார்த்து விட்டு திரும்பவும் அதை வைத்தார். முகத்திலிருந்த பிரகாசம் மறைந்தது. பிறகு... பாத்திரத்திலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து, ஒரு முறை கடித்து விட்டு, இப்படியும் அப்படியுமாக அதை புரட்டிப் பார்த்தார். பின்னர் வேகமாக அதை பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார்.

'ஒரு பாதிரியார் செய்யக் கூடிய செயல் இல்லை இது...'- குனின் மனதிற்குள் நினைத்தான். என்ன இது? வெறியா அல்லது சிறு பிள்ளைத்தனமான ஆசையா?

மேலும் ஒரு குவளை தேநீரைக் கொடுத்து, பாதிரியார் யாக்கோவை விடை கொடுத்து அனுப்பி வைத்து விட்டு, குனின் வரவேற்பறைக்கு திரும்பி வந்தான். ஸோஃபாவில் படுத்து, அந்தச் சந்திப்பு உண்டாக்கிய அமைதியற்ற சிந்தனைகளில் மூழ்கினான்.

'என்ன ஒரு நாகரீகமற்ற பிறவி! சுத்தமும் சுறுசுறுப்பும் இல்லவே இல்லை. அறிவும் இல்லை. குடிகாரனைப் போல இருக்கிறான்... பாதிரியாராம் பாதிரியார்! ஆடுகளுக்கு நல்ல இடையன். ஒவ்வொரு 'குர்பானா' (பாவ மன்னிப்பு கேட்டும் செயல்)விற்கு முன்பும், 'பரிசுத்த பிதாவே, ஆசீர்வதியும்!' என்ற வாசகத்தை உச்சரிக்கும்போது, மனதிற்குள் இருக்கக் கூடிய எண்ணங்கள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நல்ல... முதல் தரமான... 'பரிசுத்த பிதா!' மதிப்பு, மரியாதை ஆகியவற்றின் ஒரு சிறிய அடையாளமாவது... பள்ளிக் குழந்தையைப் போல பிஸ்கட்டை எடுத்து பாக்கெட்டிற்குள் போட்டுக் கொள்வது... பிஷப் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இப்படிப்பட்ட ஒரு ஆளுக்கு பாதிரியார் பட்டத்தை அளித்திருப்பார்! குருமார்கள் இப்படியென்றால், சாதாரண மனிதர்களைப் பற்றி இவர்களெல்லாம் மனதில் என்ன நினைத்திருப்பார்கள்? அவர்களுக்கு தேவை...'

ஒரு ரஷ்யன் பாதிரியார் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனை அதற்குப் பிறகு...

'நான் ஒரு பாதிரியாராக இருந்திருந்தால்... தொழிலின் மீது விருப்பம் கொண்டிருக்கும், நன்கு படித்த ஒரு பாதிரியாரால் எவ்வளவோ காரியங்களைச் செய்ய முடியும். எவ்வளவோ காலத்திற்கு முன்பே நான் ஒரு பள்ளியைத் தொடங்கியிருப்பேன். தேவாலயத்தில் ஆற்றக் கூடிய சொற்பொழிவுகளோ? தன்னுடைய சொந்த செயல்களை விரும்பக் கூடிய பாதிரியாரின் சொற்பொழிவுகள் எந்த அளவிற்கு கம்பீரத்தன்மை கொண்டவையாகவும், ஈர்க்கக் கூடியவையாக இருக்கும்!'

கண்களை மூடிக் கொண்டு, குனின் தன் மனதிற்குள் ஒரு சொற்பொழிவிற்கு வடிவம் கொடுத்தான். சிறிது நேரம் கழித்து அதை தாளில் எழுத ஆரம்பித்தான். 'அவர் இதை தேவாலயத்தில் சத்தம் போட்டு வாசிக்கட்டும்' - அவன் மனதிற்குள் நினைத்தான்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை குனின் ஸிங்கோவோவிற்குப் புறப்பட்டான். பள்ளிக்கூட பிரச்சினைக்கு ஒரு பரிகாரம் கண்டு பிடிக்க வேண்டும். தன்னுடைய தேவாலயத்தைச் சற்று காணவும் செய்யலாமே! சிறிது பனி மூட்டம் இருந்தாலும், நல்ல புலர் காலைப் பொழுதாக இருந்தது. சூரியனின் கதிர்கள் முந்தைய நாள் விழுந்திருந்த பனித் துளிகளைத் துளைத்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. உருகிக் கொண்டிருந்த பனிக்குக் கீழே பச்சை இலைகள் முகத்தைக் காட்டின. பறந்து திரிந்து கொண்டிருந்த காகங்கள் தரையில் இறங்கி, தத்தித் தத்தி நடந்து, கால்களை நிலத்தில் உறுதியாக ஊன்றி, நின்றன.

குனின் பார்த்த தேவாலயம், மிகவும் பழையதாகவும், சிதிலமடைய ஆரம்பித்ததாகவும், மரத்தால் ஆன ஒன்றாகவும் இருந்தது. எப்போதோ பூசப்பட்ட வெள்ளை நிற வர்ணம் உதிர்ந்து, பாசி பிடித்த இரண்டு பெரிய தூண்கள்.... வாசலுக்கு மேலே இருந்த புனித உருவம் ஒரு நிழலைப் போல மட்டும்... அந்த தரித்திர நிலை குனினின் மனதைத் தொட்டது. கண்களை தாழ்த்தி வைத்துக் கொண்டு, தலையைக் குனிய வைத்துக் கொண்டு அவன் தேவாலயத்தின் வாசற்படியில் நின்றிருந்தான். பிரார்த்தனை ஆரம்பித்திருந்தது. கூன் விழுந்த, மணி அடிக்கும் மனிதன் பலவீனமான குரலில், யாருக்கும் காதில் விழ முடியாத அளவிற்கு இறங்கிப் போய், பிரார்த்தனைகளை உச்சரித்துக் கொண்டிருந்தான். வசனங்கள் இல்லாததால், பாதிரியார் யாக்கோவே தேவாலயத்தைச் சுற்றி வந்து தூபார்ப்பணம் செய்து கொண்டிருந்தார். தேவாலயத்தின் நிலைமையைப் பார்த்து மனதில் பதைபதைப்பு உண்டாகாமல் இருந்திருந்தால், பாதிரியார் யாக்கோவின் தோற்றத்தைப் பார்த்து குனின் சிரித்திருப்பான். கிழிய ஆரம்பித்திருந்த மஞ்சள் நிற துணியால் ஆன, சுருக்கங்கள் விழுந்த அங்கியை அணிந்திருந்த, மெலிந்து போய் காணப்பட்ட அந்த குள்ள மனிதரின் தோற்றம் அந்த வகையில் இருந்தது. அங்கியின் மடித்து தைக்கப்பட்ட ஓரப் பகுதி தரையில் விழுந்து கிடந்தது.


தேவாலயத்தில் ஆட்கள் குறைவாகவே இருந்தார்கள் அவனுக்கு ஆச்சரியம் உண்டானது. வயதானவர்களும் குழந்தைகளும் மட்டுமே தேவாலயத்தில் இருந்தார்கள். அங்குள்ள இளைஞர்களெல்லாம் எங்கு போனார்கள்? மேலும் சிறிது நேரம் அந்த வயதான முகங்களைக் கூர்ந்து பார்த்தபோது புரிந்து விட்டது- அவர்கள் யாருமே வயதானவர்கள் அல்ல. இளைஞர்கள்தான்... அந்த காட்சி பிழைக்கு அவன் பெரிய முக்கியத்துவம் எதுவும் தரவில்லை.

தேவாலயத்தின் உட்பகுதியும் வெளிப் பகுதியைப் போலத்தான்... கலை வேலைப்பாடுகள் எதுவுமில்லை. சிதிலமடைந்து, விரிசல் உண்டான நிலையில் இருந்தது. உருவக் கூடுகளிலும், புகையின் நிறம் படர்ந்திருந்த சுவற்றிலும் காலத்தின் முத்திரை அடையாளங்கள் இல்லாத ஒரு அங்குல இடம் கூட இல்லை. நிறைய சாளரங்கள் இருந்தாலும், தேவாலயத்தின் உட்பகுதி மொத்தத்தில் இருண்டு போய் காணப்பட்டது. 'இதய சுத்தம் உள்ளவர்கள்  இங்கு பிரார்த்தனை செய்யட்டும்...'- குனினின் மனம் கூறியது. 'ரோமில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ் பஸிலிக்காவின் கம்பீரமும் அழகும் ஆச்சரியப்பட வைக்கிற அளவிற்கு, இங்குள்ள எளிமையும் வறுமையும் ஒருவனை ஈடுபாடு கொள்ளச் செய்கின்றன.'

ஆனால், அவனுடைய வழிபாட்டு எண்ணம், பாதிரியார் யாக்கோவ் பிரார்த்தனை செய்யக் கூடிய இடத்தை அடைந்து, 'பாவ மன்னிப்பு' கேட்க ஆரம்பித்தவுடன், மறைய ஆரம்பித்தது. ஸெமினாரியிலிருந்து நேராக தேவாலயத்தின் பொறுப்பு கிடைத்து, அங்கே வந்து சேர்ந்ததாலும் வயது மிகவும் குறைவாக இருந்ததாலும் இருக்க வேண்டும்- அவருடைய பிரார்த்தனைக்கு ஒரு தாள லயமோ, பக்தியின் பாதிப்போ இருக்கவில்லை. குரலில் வேறுபட்ட தன்மைகள் காணப்பட்டன. கை குவித்து வணங்குவது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மிகவும் வேகமாக இருந்த நடையும், பைத்தியக்காரத்தனமான வேகத்தில் கூண்டை திறந்து மூடுவதும் எரிச்சலை உண்டாக்கக் கூடிய வகையில் இருந்தன.  வயதானவனும், காது கேட்காதவனுமான மணி அடிக்கக் கூடிய மனிதன் பிரார்த்தனைகளில் பாதியைக் கேட்கக்கூட இல்லை. சில நேரங்களில் பாதிரியார் பிரார்த்தனை செய்து முடித்த பிறகும், அவன் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த இடத்தையே பார்த்தவாறு காதுகளை தீட்டி வைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருப்பான். பிறகு யாராவது ஆடையைப் பிடித்து இழுக்கும்போதுதான், பிரார்த்தனையையே சொல்ல ஆரம்பிப்பான். குழைந்து, மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டு, வேதனையை வெளிப்படுத்தும் சோர்வடைந்த குரலில். இவையெல்லாவற்றையும் விட பாடல் நன்றாக இருந்தது. பாடகர்களின் கூட்டம் இருந்த பகுதியின் கைப்பிடியின் அளவிற்குக் கூட உயரமில்லை பாடலைப் பாடிய இளைஞனுக்கு. வெட்டுக் கிளியைப் போல தொண்டை உடைந்து பாடுவதைக் கேட்டால், வேண்டுமென்றே குரலை மாற்றி பாடுகிறான் என்றே தோன்றும். சிறிது நேரம் கேட்டு நின்று கொண்டிருந்து விட்டு, குனின் வெளியே சென்று புகை பிடித்தான். மனதில் சோர்வு உண்டாக, அவன் அந்த வெளிறிப் போன தேவாலயத்தையே வெறுப்புடன் பார்த்தான்.

'ஆட்களுக்கு பக்தியுணர்வு குறைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு இவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. இப்படிப்பட்ட பாதிரியார்களைத்தான் மக்களுக்கு மத்தியில் அனுப்பி வைக்கிறார்கள் என்றால், ஒரு ஆச்சரியமும் இல்லை.

குனின் மேலும் இரண்டு மூன்று முறைகள் தேவாலயத்திற்குள் சென்றான். ஆனால், ஒவ்வொரு தடவையும் நீண்ட நேரம் ஆவதற்கு முன்பே, தன்னையே அறியாமல் அவன் வெளியே வந்து விடுவான்.

'பாவ மன்னிப்பு' நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, பாதிரியார் யாக்கோவ் அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றார். அங்கிருக்கும் விவசாயிகளின் வீட்டைப் போலவே பாதிரியாரின் வீடும் இருந்தது. மேற்கூரை கொஞ்சம் நன்றாகவே இருந்தது. சாளரங்களில் வெள்ளை நிற திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டிருந்தன. இவைதான் மொத்தத்தில் இருந்த வேறுபாடு. பாதிரியார் குனினை ஒரு சிறிய அறைக்குள் அழைத்துச் சென்றார். மண்ணால் ஆன தரை, சுவற்றில் விலை குறைவான வால் பேப்பர். ஃப்ரேம் போடப்பட்ட சில புகைப்படங்களும் ஒரு க்ளாக்கும் மட்டுமே அந்த அறையில் இருந்த ஆடம்பர பொருட்கள். ஃபர்னிச்சரைப் பார்க்கும்போதே தோன்றும்- பாதிரியார் பக்கத்து வீடுகளில் சுற்றி அலைந்து சம்பாதித்தது அது என்ற விஷயம். மூன்று கால்களைக் கொண்ட ஒரு வட்ட வடிவமான மேஜை, ஒரு ஸ்டூல், இரண்டு நாற்காலிகள்- அவற்றில் ஒன்று நன்கு சாய்ந்து அமரக் கூடியது. ஒன்று சரிந்து சாய்ந்த நிலையில் இருந்தது. நிறைய இரக்கம் தோன்றிய யாரோ 'திவான்' என்று தோன்றக் கூடிய ஒரு பொருளை கொடுத்திருக்கிறார்கள். கலை வேலைப்பாடுகள் எதுவுமே இல்லாத சாய்மானமும், வலைகளால் கட்டப்பட்ட அமரும் இடமும்... அடர்த்தியான சிவப்பு நிறம் பூசப்பட்டிருந்த அதற்கு பெயின்டின் தாங்க முடியாத வாசனை இருந்தது. ஒரு நாற்காலியில் உட்காரலாம் என்று நினைத்த குனின், மனதை மாற்றிக் கொண்டு, ஸ்டூலின் மீது போய் உட்கார்ந்தான்.

'நீங்கள் முதல் தடவையாக நம்முடைய தேவாலயத்திற்கு வருகிறீர்களா?'- தொப்பியைக் கழற்றி, பெரிய ஒரு ஆணியில் தொங்க விட்டுக் கொண்டே பாதிரியார் யாக்கோவ் கேட்டார்.

'ம்... ஆமாம் ஃபாதர். விஷயங்களுக்குள் நுழைவதற்கு முன்பு, ஒரு கோப்பை தேநீர் கிடைத்தால் நன்றாக இருக்கும். என் மனம் மிகவும் வறண்டு காய்ந்து போன நிலையில் இருக்கிறது.'

பாதிரியார் யாக்கோவ் கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டு பார்த்தார். சற்று இருமி விட்டு, பக்கத்திலிருந்த அறைக்குள் சென்றார். தொடர்ந்து 'குசு குசு' வென்ற சத்தங்கள் கேட்டன.


'மனைவியாக இருக்கும். அவள் எப்படிப்பட்டவளாக இருப்பாளோ? - குனின் மனதிற்குள் நினைத்தான்.

சிறிது நேரம் சென்றதும், வியர்வையில் குளித்த நிலையில் பாதிரியார் யாக்கோவ் வந்து, சிரிக்க முயற்சித்துக் கொண்டே குனினுக்கு எதிரே இருந்த திவானின் நுனியில் அமர்ந்தார்.

'அடுப்பு பற்ற வைக்கணும். அவ்வளவுதான்...' - விருந்தாளியின் முகத்தைப் பார்க்காமலே அவர் கூறினார்.

'கடவுளே! அடுப்பைக் கூட பற்ற வைக்கவில்லை. இனி எவ்வளவு நேரம் ஆவது?' என்று மனதிற்குள் நினைத்த குனின் கூறினான்: 'பிஷப்பிற்கு அனுப்புவதற்காக தயார் பண்ணி வைத்திருக்கும் கடிதத்தை, தேநீர் பருகிய பிறகு படிச்சு காட்டுறேன். ஏதாவது சேர்க்க வேண்டுமென்று உங்களுக்கு தோன்றினால்...'

'மிகவும் நல்லது, சார்.'

நீண்ட நேர அமைதி. பாதிரியார் யாக்கோவ் அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தார். தலை முடியில் விரல்களை ஓட்டினார். மூக்கைச் சிந்தினார்.

'நமக்கு இங்கே நல்ல தட்ப வெப்ப நிலை, சார்'- பாதிரியார் சொன்னார்.

'ம்... நான் நேற்று எங்கேயோ வாசித்தேன். வோல்ஸ்காவில் இருக்கும் எல்லா பாடசாலைகளையும் 'ஸெம்ஸ்த்வோ' அமைப்பு, சபைக்கு விட்டுக் கொடுக்க தீர்மானிச்சிருக்குதாம்.'

குனின் எழுந்து மண் தரையில் அங்குமிங்குமாக நடந்து, தன்னுடைய கருத்துக்களை உரத்த குரலில் வெளிப்படுத்தினான்.

'என்ன வேண்டும் என்பதை அறிந்திருக்கும், பொறுப்புணர்வு கொண்ட பாதிரியார் இருக்கும் பட்சம், எல்லா விஷயங்களும் நன்றாகவே நடக்கும். கல்வியறிவிலோ, தார்மீக விஷயங்களிலோ ராணுவத்தில் க்ளார்க்காக இருப்பதற்குக் கூட தகுதியில்லாத எவ்வளவோ பாதிரியார்களை எனக்கு தெரியும். மோசமான ஆசிரியரைவிட கெட்ட விஷயங்களை ஒரு பள்ளிக் கூடத்திற்கு மோசமான பாதிரியார் உண்டாக்கி வைத்து விடுகிறார் என்ற கருத்துடன் நீங்களும் உடன்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.'

குனின் பாதிரியார் யாக்கோவைப் பார்த்தான். பாதிரியார் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். கூறியது எதையும் கேட்கவே இல்லை என்று தோன்றியது.

'யாஷா, இங்கே... இங்கே வாங்க'- திரைச் சீலைக்குப் பின்னாலிருந்து ஒரு பெண்ணின் குரல். பாதிரியார் யாக்கோவ் எழுந்து அந்தப் பக்கம் சென்றார். மீண்டும் 'குசு குசு' சத்தம்.

இப்போதே தேநீர் குடித்தாக வேண்டும் என்று குனினுக்குத் தோன்றியது. தேநீர் கிடைப்பதற்கான ஒரு அடையாளம் கூட தெரியவில்லை. அவன் சுவர் கடிகாரத்தைப் பார்த்தான். 'என் வருகையை அந்த அளவிற்கு விரும்பவில்லை என்று தோன்றுகிறது. குடும்பத் தலைவர் வெறுமனே பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைத் தவிர, ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு மனதைத் திறக்கவில்லையே!'- அவன் மனதிற்குள் நினைத்தான்.

குனின் தொப்பியை எடுத்து, பாதிரியார் வருவதற்காக காத்திருந்தான்... பிறகு விடை பெற்றுக் கொண்டு வெளியேறினான்.

'நல்ல ஒரு புலர்காலைப் பொழுது வீணாகி விட்டது'- அவனுக்கு கோபம் வந்தது. 'மரத் தலையன்... முட்டாள்... போன வருடம் பனி உருகிய விஷயத்தைக் காது கொடுத்துக் கேட்கக் கூடிய ஆர்வம் கூட அந்த மனிதருக்கு இந்த பள்ளிக்கூட விஷயத்தில் இல்லை. அவருடன் சேர்ந்து ஒரு காரியத்தைக் கூட நல்ல முறையில் செய்து முடிக்க முடியாது. இந்த பாதிரியார் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இருப்பார் என்ற விஷயம் தெரிந்திருந்தால், பள்ளிக் கூட விஷயத்தில் மார்ஷல் இந்த அளவிற்கு ஆர்வம் கொண்டிருக்க மாட்டார். பள்ளிக் கூடத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, நல்ல ஒரு பாதிரியார் கிடைப்பாரா என்று பார்க்க வேண்டும்.'

குனின், பாதிரியார் யாக்கோவை கிட்டத்தட்ட முழுமையாக வெறுத்து விட்டிருந்தான். அவலட்சணமான பரிதாப உருவம், நொறுங்கி தாறுமாறான தோற்றம், தொழிலாளி பெண்களின் முகம், பிரார்த்திக்கும்போது கூட பக்தி வெளிப்பபடாத தோற்றமும் நடையும், நடந்து கொண்ட முறைகளும், தன் மீது கொண்டிருந்த உயர்வான எண்ணமும் எல்லாம் சேர்ந்து... அவனிடம் எஞ்சியிருந்த மத ஈடுபாட்டிற்கு அவை எதிரானவையாக தோன்றின. அவருக்கே நன்மை கிடைக்கக் கூடிய இந்த விஷயத்தில் அவனுடைய உண்மையான முயற்சிகள் நிறைந்த அமைதியான செயல்களைக் கூட பொறுத்துக் கொள்ள அவரால் முடியவில்லை.

அன்று இரவு குனின் சிந்தனையில் மூழ்கியவாறு நீண்ட நேரம் அறையில் நடந்து கொண்டிருந்தான். இறுதியில் ஏதோ தீர்மானம் எடுத்து, பிஷப்பிற்கு ஒரு கடிதம் எழுதினான். பள்ளிக் கூடத்திற்கு பணமும், அவருடைய ஆசீர்வாதங்களும் வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு விட்டு, ஒரு மகனுடைய ஆத்மார்த்த நிலையையும், சுதந்திரத்தையும் எடுத்துக் கொண்டு அவன் ஸிங்கோவோவிலிருக்கும் பாதிரியாரைப் பற்றி இவ்வாறு எழுதினான். 'அவர் வயதில் இளையவர். கல்வியறிவு குறைவு. பார்க்கும்போது மது அருந்தக் கூடியவர் என்று தோன்றும். பாதிரியார்களைப் பற்றி பல நூற்றாண்டுகளாக ரஷ்ய மக்களின் மனங்களில் வடிவம் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்த சிறிதும் இயலாத ஒரு ஆள்.'

கடிதத்தை எழுதி முடித்து, நீண்ட பெருமூச்சை விட்டு, முழுமையான திருப்தியுடன் அவன் படுக்கையில் சாய்ந்தான்.

திங்கட்கிழமை அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் முன்பே, தன்னை பாதிரியார் யாக்கோவ் பார்ப்பதற்காக வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. எழுந்திருப்பதற்கு தோன்றாததால், வீட்டில் இல்லை என்று கூறும்படி சொல்லி விட்டு, தப்பித்துக் கொண்டான்.

செவ்வாய்க் கிழமை ஒரு கூட்டத்திற்குச் சென்று விட்டு, திரும்பி வந்தது சனிக் கிழமை. இதற்கிடையில் எல்லா நாட்களிலும் பாதிரியார் யாக்கோவ் பார்ப்பதற்காக வந்திருந்தார் என்ற தகவலை அங்கு வேலை பார்க்கும் ஊழியர் கூறினார்.


'இங்கே இருக்கும் பிஸ்கட்டின் ருசி நன்றாக பிடித்ததுதான் காரணமாக இருக்கும்.' -குனின் மனதிற்குள் நினைத்தான். ஞாயிற்றுக் கிழமை மதிய நேரம் தாண்டிய வேளையில், பாதிரியார் யாக்கோவ் மீண்டும் வந்தார். இந்த முறை அங்கியின் அடிப்பகுதி மட்டுமல்ல- தொப்பி வரை அழுக்கு படிந்திருந்தது. முதல் தடவையில் இருந்ததைப் போலவே, வியர்வையில் குளித்து, நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தார். பள்ளிக் கூடத்தைப் பற்றி எதுவுமே பேசக் கூடாது என்று குனின் தீர்மானித்தான். வெறுமனே எதற்கு முத்துக்கள்...

'பாவல் மிகாய்லோவிச், நான் பள்ளிக்கூட புத்தகங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு வந்திருக்கிறேன்.'

பாதிரியாரின் வருகைக்குப் பின்னாலிருப்பது இந்த பட்டியல் அல்ல என்பது மிகவும் தெளிவாக தெரிந்தது. அந்த தோற்றமே இனம் புரியாத ஒரு போலித்தனத்தை வெளிக் காட்டியது. ஆனால், புதிய சில எண்ணங்கள் தலைக்குள் தோன்றிய மனிதனின் தன்னம்பிக்கையும் அந்த முகத்தில் தெரிந்தது. மிகவும் முக்கியமான ஏதோ சிலவற்றைக் கூறக் கூடிய விருப்பமும், கூற ஆரம்பிக்க இருந்த வெட்கமும் ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

'இவர் ஏதாவது ஒன்றைக் கூறினால் என்ன? இங்கே வந்து வெறுமனே உட்கார்ந்து கொண்டிருப்பது... இந்த ஆளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து வீணாக்க எனக்கு நேரமில்லை.'

உள்ளே நடந்து கொண்டிருந்த போராட்டத்தை மறைத்து வைக்கக் கூடிய முயற்சியில் பாதிரியார் ஈடுபட்டு, புன்னகைத்தார். வியர்வை அரும்பி சிவந்த முகத்தில் வெளிப்பட்ட அந்தச் சிரிப்பிற்கும், சாம்பல் நிறம் கலந்த நீல நிற கண்களின் அகலமான பார்வைக்கும் இடையே இருந்த பொருத்தமற்ற தன்மையில் மனம் வெறுத்து, குனின் கண்களை தூரத்தில் செலுத்தினான். அவன் கூறினான்: 'ஃபாதர், மன்னிக்கணும். நான் கொஞ்சம் வெளியே போகணும்.'

உறக்கத்திற்கு மத்தியில் தலையில் அடி வாங்கிய மனிதரைப் போல பாதிரியார் யாக்கோவ் வேகமாக எழுந்தார். பதைபதைப்பை விலக்காமல், அங்கியை இறுக பற்றியவாறு, சிரித்துக் கொண்டே நின்றார். கடுமையான வெறுப்பிற்கு மத்தியில் அவர் அப்படி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாலும், குனினுக்கு இரக்கம் உண்டானது.

'ஃபாதர், நாம் பின்னர் ஒருமுறை பேசுவோம். பிறகு... ஆட்சேபணை இல்லையென்றால், என்னுடைய ஒரு வேண்டுகோள்... நேற்று நான் இரண்டு சொற்பொழிவுகள் எழுதினேன். நீங்கள் அவற்றைச் சற்று பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். பரவாயில்லை என்று தோன்றினால், தேவாலயத்தில் வாசிக்கலாம்.'

'சரி சார்... நான் படிக்கிறேன்'- பதைபதைப்பு விலகாமல் மேலும் சிறிது நேரம் அங்கியின் ஓரத்தை இறுக பற்றியவாறு நின்று கொண்டிருந்து விட்டு, உறுதியான முடிவுடன் அவர் தலையை உயர்த்தினார்.

சத்தமாகவும் தெளிவாகவும் பேசுவதற்கு முயற்சித்தவாறு அவர் கூறினார்: 'பாவல் மிகாய்லோவிச், நீங்கள் காரியதரிசியைப் போகுமாறு கூறி விட்டீர்கள் என்றும், வேறு ஆளை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன்.'

'உண்மைதான். யாரையாவது சிபாரிசு செய்கிறீர்களா?'

'நான்... உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால்... அந்த வேலையை.. எனக்கு தருவீர்களா?'

'நீங்கள் பாதிரியார் பணியை விடப் போகிறீர்களா?' - ஆச்சரியத்துடன் குனின் கேட்டான்.

'இல்லை... இல்லை...' - வெளிறிப் போய், விறைத்த நிலையில் பாதிரியார் யாக்கோவ் உடனடியாக கூறினார்: 'கடவுள் மேல சத்தியம் பண்ணி சொல்றேன். உங்களுக்கு ஏதாவது நம்பிக்கைக் குறைவு இருந்தால், எனக்கு வேலையைத் தர வேண்டாம். நான் இடையில் கிடைக்கக் கூடிய நேரத்தில்... கொஞ்சம் வருமானம் கிடைக்கும். அந்த அளவிற்கு தேவை எதுவுமில்லை... ஆ... பரவாயில்லை.'

'ம்... வருமானம்... ஆனால், நான் இருபது ரூபிள்தான் சம்பளம் தருவேன்.'

'கடவுளே! பத்துக்குக் கூட நான் வேலை செய்வேன்'- சுற்றிலும் பார்த்தவாறு பாதிரியார் யாக்கோவ் மெதுவான குரலில் கூறினார்: 'பத்து ரூபிள் என்றால் கூட போதும். கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறதா? எல்லோருக்கும் அப்படித்தான் தோன்றும். பணத்தின் மீது ஆசை வைத்திருக்கும் பாதிரியார்! 'இந்த பணத்தையெல்லாம் இந்த ஆள் என்ன செய்கிறார்?' என்று நினைப்பார்கள். எனக்கே கூட தோன்றுவது உண்டு. நான் ஒரு பேராசை பிடித்தவன். நான் என்னையே தண்டித்துக் கொள்வேன். என்னை நானே மதிப்பீடு செய்து கொள்வேன். மனிதர்களின் கண்களைப் பார்ப்பதற்கு எனக்கே கூச்சமாக இருக்கும். அதுதான் உண்மை. பாவல் மிகாய்லோவிச், உண்மை கடவுள் எனக்கு சாட்சியாக இருக்கும்...'

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு, பாதிரியார் தொடர்ந்து சொன்னார்:

'உங்களிடம் கூறுவதற்கு பெரிய ஒரு சொற்பொழிவையே தயாராக்கிக் கொண்டுதான் நான் வந்தேன், நண்பரே! ஆனால், எல்லாவற்றையும் மறந்து விட்டேன். கூறுவதற்கு இப்போது வார்த்தைகள் கிடைக்கவில்லை. தேவாலயத்திலிருந்து எனக்கு வருடமொன்றிற்கு நூற்று ஐம்பது ரூபிள்கள் கிடைக்கின்றன. நான் அதை வைத்து என்ன செய்கிறேன் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது... உங்களிடம் நான் எல்லாவற்றையும் மனம் திறந்து கூறுகிறேன். என் சகோதரன் பேத்யாவிற்கு மருத்துவ அறிவியல் கல்விக் கூடத்திற்கு நாற்பது ரூபிள்கள் தர வேண்டும். அவனுடைய தங்குமிடத்திற்கான செலவு, உணவிற்கான கட்டணம்.... இவை அனைத்தும் அதற்குள் அடங்கி விடுகிறது. ஆனால், புத்தகம், பேனா... இவற்றுக்கு தனியாக பணம் தர வேண்டும்...'

'ம்... சரி. எனக்கு உங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஏன் இப்படி?'

அவருடைய கண்களில் வழிந்த நீர்த் துளிகளை நிறுத்துவது எப்படி என்று தெரியாமல், அவர் வெளிப்படுத்திய ரகசியங்களின் தாங்க முடியாத சுமையைச் சுமந்தவாறு குனின் 'பரவாயில்லை... எல்லாம் சரியாகும்' என்பதைப்போல சைகை செய்தான்.


'பிறகு... என்னுடைய நியமனத்திற்கு சபை அமைப்பிற்குத் தர வேண்டிய பணத்தையும் கொடுத்து முடிக்கவில்லை. மாதம் பத்து ரூபிள் வீதம் இருநூறு ரூபிள்கள் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். மீதி என்ன இருக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? அது மட்டுமல்ல. பாதிரியார் ஆவ்ராமிக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று ரூபிள்களாவது தர வேண்டும்.'

'யார் பாதிரியார் ஆவ்ராமி?'

'எனக்கு முன்பு ஸிங்கோவோவில் பாதிரியாராக இருந்தவர். அவரை விலக்கி விட்டார்கள். அவர் இப்போதும் ஸிங்கோவோவில்தான் தங்கியிருக்கிறார். வேறு எங்கு போவது? அவருக்கு யார் உணவு தருவார்கள்? அவர் வயதானவராக இருக்கலாம். ஆனால், உணவும் ஆடையும் நிலக்கரியும் இல்லாமல் வாழ முடியாதே! அவர்- அதுவும் ஒரு பாதிரியார் பிச்சை கேட்டு யாசிப்பதைப் பார்க்க என்னால் இயலாது. அது பெரிய பாவமாக இருக்கும். நான் செய்யக் கூடிய பெரிய பாவம். எல்லோரின் கையிலிருந்தும் அவர் கடன் வாங்கியிருக்கிறார். எனினும், அவருக்கும் தேவைப்படுவதைக் கொடுக்காமலிருந்தால், நான் பாவம் செய்தவன் ஆவேன்.'

பாதிரியார் யாக்கோவ் வேகமாக எழுந்து, தரையையே வெறித்துப் பார்த்தவாறு அறையின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நடந்து கொண்டிருந்தார்.  'என் தெய்வமே! என் தெய்வமே!' என்று தாழ்ந்து குரலில் கூறியவாறு அவர் முழு நேரமும் கைகளை உயர்த்திக் கொண்டும், இறக்கிக் கொண்டும் இருந்தார். 'எங்களின் மீது கருணை வைக்க வேண்டும், தெய்வமே! எங்களைக் காப்பாற்றணும். சிறிதளவு நம்பிக்கையும், பலவீனனுமான இவன் எதற்கு இந்த புனித பதவியை ஏற்றெடுத்தான்? என் நிராசையின் ஆழத்தை என்னாலேயே அளக்க முடியவில்லை. பரிசுத்த தெய்வ மாதாவே, எங்களைக் காப்பாற்று!'

'நீங்கள் சமாதானமாக இருங்கள்...'- குனின் கூறினான்.

'இது பசியின் காரணமாக உண்டான வேதனை, பாவல் மிகாய்லோவிச். என்னை மன்னித்து விடுங்கள். என்னால் இதை கூறாமல் இருக்க முடியவில்லை. கெஞ்சினால் யார் வேண்டுமானாலும் உதவி செய்வார்கள் என்ற விஷயம் எனக்கு தெரியும். ஆனால், என்னால் அது முடியாது. இந்த ஏழை விவசாயிகளிடம் பிச்சை வாங்குவதற்கு என்னால் எப்படி முடியும்? நீங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்தானே! உங்களுக்குத் தெரியுமே! அவரவர்களுடைய தேவைக்கே இல்லாதவர்களிடம் எப்படி தானம் கேட்க முடியும்? நல்ல வசதி படைத்த நிலச்சுவாந்தார்களிடம் கேட்பதற்கும் என்னால் இயலவில்லை. என் மதிப்பு... எனக்கு அது வெட்கக்கேடான விஷயம்!'- பாதிரியார் யாக்கோவ் அமைதியற்ற மன நிலையுடன் இரண்டு கைகளைக் கொண்டும் தலையைச் சொறிந்து கொண்டார்.

'எனக்கு வெட்கக் கேடான விஷயம், தெய்வமே! என்ன ஒரு வெட்கக் கேடு! என்னுடைய இந்த வறுமை நிலை ஆட்களுக்குத் தெரிய வேண்டாம். நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தபோது, அங்கு ஒரு அவுன்ஸ் தேநீர் தூள் கூட இல்லாமலிருந்தது. பாவல் மிகாய்லோவிச், ஒரு மணி தானியம் கூட இல்லை. வெளிப்படையாக கூறுவதற்கு, கவுரவம் என்னை அனுமதிக்கவில்லை. என் ஆடைகள் எனக்கு வெட்கக் கேடான விஷயங்களாக இருக்கின்றன. இந்த புள்ளிகள்... என் ஆடை... என் பசி... ஒரு பாதிரியாருக்கு கவுரவம் என்ற ஒன்று இருக்க வேண்டுமோ என்னவோ?

பாதிரியார் அறைக்கு மத்தியில் நடந்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, குனின் அங்கு இருக்கிறான் என்பதைக் கூட மறந்து விட்டு, தனக்குள் நியாய விசாரணை செய்ய ஆரம்பித்தார்:'

'பசியையும், வெட்கக் கேட்டையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் என்று கூட வைத்துக் கொள்வோம். என் மனைவி? நல்ல ஒரு வீட்டிலிருந்தல்லவா அவளை நான் அழைத்துக் கொண்டு வந்தேன்? அவளுக்கு வெண்மையான, சதைப் பிடிப்பான கைகள் இருக்கின்றன. மரியாதையுடன் வாழ்ந்தவள். தேநீரும், வெள்ளை நிற ரொட்டியும், கம்பளியும்... இவை எல்லாவற்றையும் அடைந்திருந்தவள். தன்னுடைய வீட்டில் இருந்தபோது, பியானோ வாசித்துக் கொண்டிருந்தவள். அவள் வயதில் மிகவும் இளையவள். இருபது வயது கூட ஆகவில்லை. நல்ல ஆடைகள் அணிவதற்கும், சந்தோஷமாக இருப்பதற்கும், உறவினர்களைப் பார்ப்பதற்கும் அவளுக்கு ஆசை இருக்கும்... என்னுடன் சேர்ந்து... ஒரு சமையல்காரியை விட கஷ்டமானது அவளுடைய விஷயம். வெளியே செல்வதற்கே அவளுக்கு வெட்கக் கேடாக இருக்கிறது. தெய்வமே! என் தெய்வமே! எப்போதாவது ஒரு முறை எங்கிருந்தாவது நான் கொண்டு வரும் ஒரு ஆப்பிளோ பிஸ்கட்டோதான் அவளுக்கு மொத்தத்தில் கிடைக்கக் கூடிய சந்தோஷமே...

'எங்களை இணைப்பது அன்பு அல்ல... இரக்கம்தான்... சங்கடம் இல்லாமல் என்னால் அவளைப் பார்க்கவே முடியவில்லை. இந்த நாட்களில் என்னதான் நடக்கிறது? பத்திரிகைகளில் அவற்றைப் பற்றி எழுதினால், ஆட்கள் நம்பக் கூட மாட்டார்கள். இவையெல்லாம் எப்போது முடிவுக்கு வரப் போகின்றனவோ, தெரியவில்லை.'

'போதும், ஃபாதர். நிறுத்துங்க.'- அந்த பேச்சைக் கேட்டு வேதனையும் கோபமும் ஏற்பட்டு, குனின் சத்தம் போட்டு கத்தினான். வாழ்க்கையைப் பற்றி ஏன் இந்த அளவிற்கு நிராசையுடன் சிந்திக்க வேண்டும்?

'மன்னிக்க வேண்டும். பாவல் மிகாய்லோவிச்...'- பைத்தியம் பிடித்த மனிதரைப் போல பாதிரியார் யாக்கோவ் புலம்பினார்: 'என்னை மன்னிச்சிடுங்க. இது எதுவும்... பெரிய விஷமில்லை. இதற்கெல்லாம் பெரிய மதிப்பு தர வேண்டாம். நான் என்னை நானே குற்றம் சாட்டிக் கொள்கிறேன். அப்படித்தான் காரியங்கள் நடக்கின்றன...'- சுற்றிலும் பார்த்து விட்டு அவர் தாழ்ந்த குரலில் கூறினார்:


'ஒரு புலர் காலைப் பொழுதில் ஸிங்கோவோவிலிருந்து லுச்கோவோவிற்கு நடந்து செல்லும்போது, ஆற்றின் கரையில் ஒரு பெண் என்னவோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அருகில் சென்றபோது, என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை. கடவுளே! டாக்டர் இவான் ஸெர்ஜியேவிச்சின் மனைவி ஆடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள். டாக்டரின் மனைவி கல்லூரியில் படித்தவள்! யாரும் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே கண் விழித்து, ஒரு மைல் தூரம் நடந்து சென்று... எல்லையற்ற தன்னம்பிக்கை... நான் தெரிந்து கொண்டேன் என்பதை அறிந்ததும், அவள் முழுமையான அவமானச் சுமையால் சிவந்து போய் விட்டாள். நான் மொத்தத்தில் அதிர்ச்சியடைந்து நின்று விட்டேன். உதவி செய்வதற்காக நான் ஓடிச் சென்றேன். ஆனால், அவளுடைய கிழிந்த துணிகளை நான் எங்கே பார்த்து விடப் போகிறேனோ என்று பயந்து, அவள் அவற்றை ஒரு ஓரத்தில் விலக்கி வைத்தாள்.'

'நம்ப முடியவில்லை...'- மனதிற்குள் ஒரு அதிர்ச்சி உண்டாக, குனின் பாதிரியார் யாக்கோவின் முகத்தையே பார்த்தான்.

'நம்ப முடியாதுதான். உலகின் எந்த இடத்திலும் ஏதாவது டாக்டரின் மனைவி ஆற்றுக்குச் சென்று தானே துணிகளைச் சலவை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்காது பாவல் மிகாய்லோவிச். உலகத்தின் எந்த இடத்திலும்! அவளுடைய பாவ மன்னிப்புகளைக் கேட்பவன் என்ற முறையில் அதில் எதுவும் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆனால், என்ன செய்ய முடியும்? அவளுடைய கணவரிடமிருந்து சிகிச்சை இலவசமாக கிடைப்பதற்கு முயற்சிக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இவை எதையும் நம்ப முடியவில்லை என்று நீங்கள் கூறியது சரிதான். என்னால் என்னுடைய கண்களையே சில நேரங்களில் நம்ப முடியவில்லை. பாவ மன்னிப்பு காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, சில நேரங்களில் மக்களின் பரிதாப நிலை கண்களில் படும். பசியின் கொடுமையில் சிக்கிய பாதிரியார் ஆவ்ராமியும், மனைவியும், டாக்டரின் மனைவியும், நீரின் குளிர்ச்சியால் நீல நிறம் படர்ந்திருக்கும் அவளுடைய கைகளும் ஞாபகத்தில் வரும். என்னையே மறந்து அங்கேயே நின்று விடுவேன். முட்டாளைப் போல... மணி அடிக்கும் ஆள் தட்டி எழுப்பும் வரை... கட்டுப்பாடே இல்லாமல்! பயங்கரமான விஷயமது!'

பாதிரியார் யாக்கோவ் அறையில் அங்குமிங்குமாக நடக்க ஆரம்பித்தார். 'ஜீஸஸ்'- அவர் கைகளை விரித்தார். 'கர்த்தரின் பரிசுத்தர்களே! என்னுடைய பொறுப்புகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே! நீங்கள் பள்ளிக் கூடத்தைப் பற்றிப் பேசும்போது, நான் ஒரு மரத்தின் தடியைப் போல இருக்கிறேன். எனக்கு ஒரு வார்த்தை கூட புரியவில்லை. என்னுடைய மனதில் எப்போதும் உணவைப் பற்றிய சிந்தனைகள்தாம்... பிரார்த்தனை நடக்கும் இடத்தில் கூட... இல்லை... நான் இவற்றையெல்லாம் எதற்கு இப்படி கூறுகிறேன்?'- சற்று நிறுத்தி விட்டு, அவர் கேட்டார் : 'நீங்கள் வெளியே செல்ல வேண்டாமா? என்னை மன்னிச்சிடுங்க. இப்படியெல்லாம்... என்னை மன்னிக்கணும்.' பாதிரியார் யாக்கோவின் கைகளைப் பிடித்து மெதுவாக குலுக்கியவாறு குனின் அவரைக் கூடத்திலிருந்து வெளியே செல்வதற்கு வழியைக் காட்டினான். திரும்பவும் அறைக்குள் வந்து சாளரத்திற்கு அருகில் நின்றான்.

நீளமான ஓரங்களைக் கொண்ட கிழிந்த தொப்பியைத் தலையில் அழுத்தி வைத்து, கூறிய விஷயங்கள் உண்டாக்கிய வெட்கக் கேட்டால் ஏற்பட்ட சுமை என்பதைப் போல தலையை உயர்த்தி வைத்துக் கொண்டு, பாதிரியார் யாக்கோவ் மெதுவாக நடந்து தூரத்தில் செல்வதை அவன் பார்த்தான்.

'அவருடைய குதிரையை இங்கு எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லையே!'- இந்த எல்லா நாட்களிலும் பாதிரியார் யாக்கோவ் தன்னை பார்க்க வந்து கால் நடையாக நடந்துதானோ என்ற சிந்தனை ஒரு பயமாக அவனை பாடாய் படுத்தியது. ஸிங்கோவோவிற்கு ஏழு மைல்கள் தூரமாவது இருக்கும். வழி நிறைய சேறுகள் நிறைந்த குழிகள்...

வண்டிக்காரன் ஆந்த்ரேயும், பாரமன் என்ற இளைஞனும் பாதிரியார் யாக்கோவின் ஆசீர்வாதத்தை வாங்குவதற்காக ஓடி வருவதை குனின் பார்த்தான். சேற்றில் குதித்து ஓடி, அவர் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டு அவர்களுடைய வருகை... தொப்பியைக் கழற்றி விட்டு, பாதிரியார் யாக்கோவ் முதலில் ஆந்த்ரேயையும், பிறகு இளைஞனையும் ஆசீர்வதித்தார். அவனுடைய தலையை வருடினார்.

குனின் கண்களுக்கு மேலே கையை ஓட்டினான். அங்கு ஈரம். அவன் சாளரத்திலிருந்து விலகி, நாணம் கலந்த அந்த பரிதாபக் குரல் இப்போதும் நிறைந்து நின்று கொண்டிருந்த அறை முழுவதையும், தளர்ந்து போன கண்களால் பார்த்தான். பாக்யம் என்றுதான் சொல்ல வேண்டும்! அவசரத்தில் பாதிரியார்  யாக்கோவ் சொற்பொழிவு குறிப்புகளை எடுப்பதற்கு மறந்து விட்டிருந்தார். குனின் ஒரே ஓட்டத்தில் அதை எடுத்து, சிறு சிறு துண்டுகளாக கிழித்து, மேஜைக்கு அடியில் ஏறிந்தான்.

ஸோஃபாவில் தளர்ந்து விழுந்து கொண்டே அவன் தனக்குள் கூறினான்: 'எனக்கு இது எதுவுமே தெரியலையே! குழுவில் நிரந்தர உறுப்பினர், மிகவும் மதிக்கப்படும் நீதிபதி, பள்ளிக்கூட கவுன்சிலின் உறுப்பினர்...' இப்படி ஒரு வருட காலம் மிகப் பெரிய பணிகளில் இருந்தும்... ! கண் பார்வை தெரியாத பொம்மை! அழகாக வெளியே தோன்றும் மோசமானவன்! இனி சிறிதும் தாமதிக்காமல் அவர்களுக்கு உதவ வேண்டும். இப்போதே!'

வேதனைகளால் மனதில் துயரத்திற்கு ஆளாகி, கழுத்தைத் தடவியவாறு, அவன் ஆழமான சிந்தனையில் மூழ்கினான்.


'இருபதாம் தேதி இருநூறு ரூபிள் சம்பளமாக கிடைக்கும். அவருக்கும் டாக்டருடைய மனைவிக்கும், ஏதாவது காரணத்தை வைத்து, ஏதாவது கொடுக்க வேண்டும். பாதிரியாரை ஒரு பிரார்த்தனைக்கு அழைக்கலாம். நோய் இருப்பதாக காட்டிக் கொண்டு டாக்டரிடம் போகலாம். அவர்களுடைய மதிப்பு, காயப்பட்டு விடக் கூடாதல்லவா? பாதிரியார் ஆவ்ராமிக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும்...'

விரல்களை மடக்கி, என்னவோ கணக்குகளைப் போட்டுப் பார்த்த அவன், காரியதரிசிக்கும் வேலைக்காரர்களுக்கும் மாமிசம் தருபவனுக்கும் கொடுப்பதற்கே இருநூறு ரூபிள்கள் மிகவும் சிரமப்பட்டே சரியாக வரும் என்ற உண்மையை அதிர்ச்சியுடன் புரிந்து கொண்டான். சிந்தனைகள் கடந்த காலத்தை நோக்கி பயணித்தன. தன் தந்தையின் சொத்துக்கள் முழுவதையும் வீணடித்து வாழ்ந்திருந்த காலம்... விலைமாதர்களுக்கு விலை மதிப்புள்ள விசிறிகளையும், நடிகைகளுக்கு விலை அதிகான பொருட்களையும் கொடுத்திருந்த இருபத்து இரண்டு வயது கொண்டவனின் சபலங்கள் நிறைந்த காலம்... ஓட்டுநர் குஸ்மாவிற்கு தினமும் பத்து ரூபிள்கள் கொடுத்துக் கொண்டிருந்த காலம்... 'வெட்டி பந்தா' என்ற பெயரில் வீணாக்கிய அந்த ரூபிள்கள் இப்போது எந்த அளவிற்கு பயன்பட்டிருக்கும்!

'பாதிரியார் ஆவ்ராமி மூன்று ரூபிள்களை வைத்துக் கொண்டு ஒரு மாதம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு ரூபிளை வைத்து பாதிரியாரின் மனைவிக்கு ஒரு பாவாடை உண்டாக்கலாம். டாக்டரின் மனைவிக்கு துணிளைச் சலவை செய்வதற்கு ஒரு ஆளை வைக்கலாம். எப்படியாவது அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்...!'

திடீரென்று பிஷப்பிற்கு எழுதிய கடிதத்தைப் பற்றி நினைத்து, குனின் குளிர் காற்றில் சிக்கிக் கொண்டதைப் போல நடுங்கினான்.

பலமான சத்தியத்திற்கு முன்னால் நின்றபோது உண்டான அடங்காத வெட்கக் கேடு, அவனுக்குள் கீழ்ப்படியக் கூடிய சுமையை நிறைத்தது.

இப்படிப்பட்டதாக இருந்தது- நல்ல இதயத்தைக் கொண்டவனாக இருந்தாலும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில் போதுமான சிந்தனை இல்லாமற் போன ஒருவனின் 'பயனுள்ள முயற்சி'களில், ஒன்றின் ஆரம்பமும் முடிவும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.