Logo

பால் குவளையில் ஒரு ஈ

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6557
paal kuvalaiyil oru e

பேன்டாங்கிற்கு அது ஒரு ஆச்சரியத்திற்குரிய விஷயமாக இருந்தது.

ஒரு நாள் காலையில் இரண்டு லாரிகளும், ஒரு புல் டோஸர் இயந்திரமும் இடி இடிப்பதைப் போல பயங்கரமான ஓசைகளை உண்டாக்கிக் கொண்டு அவருடைய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தன. முதல் லாரியில் கூட்டமாக தொழிலாளர்கள் வந்திருந்தார்கள். இரண்டாவது லாரியில் அவர்கள் பயன்படுத்தக் கூடிய கருவிகளும், பிற பொருட்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. ஃபோர்மேன் ஒரு ப்ளூ-ப்ரிண்ட்டில் தன் விரலை வைத்துக் கொண்டு, மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தார்.

மதிய நேரம் ஆவதற்கு முன்பே, மரத்தால் ஆன பலகைகளையும், இரும்பையும் கொண்டு ஒரு அறையை தொழிலாளர்கள் உருவாக்கி முடித்தார்கள். அங்கு அவர்கள் தங்களின் கருவிகளையும், மற்ற பொருட்களையும் கொண்டு போய் வைத்தார்கள்.

மறுநாள் பொழுது விடிந்தபோது, அங்கு காட்டுத்தனமாக புற்கள் வளர்ந்திருந்த இடத்தை தொழிலாளர்கள் சீர் செய்ய ஆரம்பித்தார்கள். அங்கு பரவிக் கிடந்த முப்பது ஹெக்டர் விவசாய நிலத்தில் நெருப்பு மிகவும் வேகமாக பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

தன்னுடைய வீட்டின் பின் பகுதியில் நின்று கொண்டு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மிகவும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் பேன்டாங்க். மண்ணைக் கிளறுவதற்காக அந்த விவசாயி காலையிலேயே கண் விழித்து எழுந்திருந்தார். பேன்டாங்க் நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொண்ட, உறுதியான உடலைக் கொண்ட ஒரு மனிதர். வயல்களை உழுவது, பாத்திகள் கட்டுவது, விறகு உடைப்பது, தாவரங்களை நடுவது, நீர் கொண்டு வருவது - இவைதாம் அவர் செய்யும் அன்றாட வேலைகள். அவருக்கு ஐம்பது வயது ஆகி விட்டிருந்தாலும், உணர்வில் வசந்த காலத்தில் இருக்கும் ஒரு இளைஞனாகவே அவர் காட்சியளித்துக் கொண்டிருந்தார். நெல்கதிர்களுக்கு மத்தியில் பாத்திகளில் வளர்ந்திருக்கும் களைகளை இல்லாமற் செய்வதற்கு அவர் எந்தச் சமயத்திலும் நெருப்பை பயன்படுத்தியதில்லை. அதற்கு பதிலாக அவர் புற்களையும், அடர்த்தியாக வளர்ந்திருக்கும் புதர்களையும் வேருடன் பிடுங்குவார். அவற்றை ஒவ்வொன்றாக அவர் வெட்டுவார். ஆனால், அங்கு சீர் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் முன்பு செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்த அந்த இடத்தை நெருப்புக் கொழுந்துகளுக்கு இரையாக்கி விட்டிருந்தனர். அதன் மூலம் மண்ணுக்கு இருக்கக் கூடிய உர சக்தியை அழித்துக் கொண்டிருந்தனர். அந்த மண் இனிமேல் தானியங்கள் வளர்வதற்கு எந்தக் காலத்திலும் உதவப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

மூன்றாவது நாள்- புல்டோஸர் நகர ஆரம்பித்ததை பேன்டாங்க் பார்த்தார். அது வேகமாக சமன் செய்து, போடப்பட்டிருந்த மண்ணை அழுத்தியது. அன்று மதிய வேளையில் லாரிகள் நொறுக்கப்பட்ட கற்களுடன் வந்து சேர்ந்தன. அந்தக் கற்கள் சமன் செய்யப்பட்ட தரையின் மீது கொட்டப்பட்டன. நீளமாக இருந்த தரையின் மீது புல்டோஸர் மீண்டும் உருண்டது.

தங்களுக்குத் தேவையான சாலைகளை வெகு சீக்கிரமே தொழிலாளர்கள் செய்து முடித்தார்கள். தொடர்ந்து நீர் வருவதற்கான குழாய்களை அவர்கள் பதித்தார்கள். சாலையின் ஓரத்தின் அவர்கள் ஒரு ஆழமான சிமெண்டால் ஆன வாய்க்காலை அமைத்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்திருக்கும். தரை தோண்டப்பட்டு, வீடுகளுக்கான தூண்கள் அமைக்கப்பட்டிருப்பதை பேன்டாங்க் பார்த்தார். அந்த தூண்களைத் தொடர்ந்து, ஒவ்வொரு மூலையிலும் அவர்கள் மின் தூண்களை எழுப்பினார்கள். ஒரு கையளவு உயரத்தில் சவுக்கு, வாழை ஆகிய கன்றுகளைக் கொண்டு வந்து சாலையில் ஓரங்களில் அவர்கள் நட்டார்கள்.

பங்களாக்களைப் போல தோன்றும் இரண்டு டஜன் வீடுகள் முதலில் கட்டப்பட்டன. நாட்கள் ஆக... ஆக முன்பு வெற்றிடமாகக் கிடந்த அந்த வயல், தனியாக உண்டாக்கப்பட்ட வேலிக்குள் அடங்கிய இடமாக உருமாற்றம் பெற்றது. அந்த வேலிக்குள் இரண்டாயிரம் சதுர மீட்டர்களோ அல்லது அதற்கும் அதிகமாகவோ இருக்கக் கூடிய இடம் இருந்தது. அதில் மலர்களைக் கொண்ட பூச்செடிகள் வளர்ந்திருக்கும் ஒரு பெரிய தோட்டம், வண்டி நிறுத்துவதற்கான இடம், பணியாட்கள் தங்கியிருக்கக் கூடிய இருப்பிடங்கள், அவற்றுடன் நடுத்தர அளவைக் கொண்ட நீச்சல் குளம்... இவை அனைத்தும்...

இருபத்து நான்கு வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டவுடன், மீதி வீடுகள் அதைத் தொடர்ந்து கட்டப்படும் என்ற தகவலை எப்படியோ பேன்டாங்க் தெரிந்து கொண்டு விட்டிருந்தார்.

வீடுகளே முழுமையாக முடிக்கப்படவில்லை. அதற்குள் ஒவ்வொரு வீட்டிற்கு முன்னாலும் மென்மையான தோட்ட மண் கொண்டு வந்து கொட்டப்பட்டது. அதில் நிழல் தரக் கூடிய சில மரங்கள் கொண்டு வந்து நடப்பட்டன. ரோஜா செடிகளும், பிற அடர்த்தியான செடிகளும் அங்கு கொண்டு வந்து நடப்பட்டன. அவற்றில் மலர்கள் மலரும். அவை நறுமணத்தைப் பரவச் செய்து, அந்த சுற்றுப் புறத்தையே அழகாக்கிக் கொண்டிருக்கும்.

அந்த கிளைப் பிரிவில் பணியாற்றும் சில தொழிலாளர்களுடன் பேன்டாங்க் பழகி நட்பை உண்டாக்கிக் கொண்டார். நீர் வரக் கூடிய குழாய்கள் பதிக்கப்படுவதற்கு முன்னால், அவரை வந்து பார்த்தவர்கள் அவர்கள்தான். தாங்கள் எங்கிருந்து நீர் கொண்டு வருவது என்ற விஷயத்தை அவர்கள் கேட்டார்கள். பேன்டாங்க் தன்னால் ஆன உதவியை அவர்களுக்கு செய்தார்.

அடுத்து வந்த நாட்களில் பேன்டாங்கின் சமையல் விஷயத்தில் தங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி அந்தத் தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டார்கள். தங்களுக்கு சாப்பாடு தயாரிப்பதற்காக ஆகும் செலவு எது வந்தாலும், அதை செலுத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். அதனால், அன்றிலிருந்து காலை நேரம் இன்னும் வெளுக்காமல் இருப்பதற்கு முன்பே, பேன்டாங்கின்  மனைவி அனா அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பக்கத்து நகரில் உள்ள மார்க்கெட்டிற்குச் செல்லும் பாதையில் போய்க் கொண்டிருப்பாள். அவள் சாப்பிடும் உணவிற்குத் தேவையான காய்கறிகளையும், பிற பொருட்களையும் இருபதிலிருந்து இருபத்தைந்து பேர் வரை சாப்பிடுகிற மாதிரி வாங்குவாள். அந்தச் சமயத்தில் அந்த கிளைப் பிரிவில் வீடு கட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த மனிதர்களின் எண்ணிக்கை அறுபது அளவில் எட்டியிருந்தது. அவர்களில் பாதிப் பேர். தங்களுடைய சொந்த சாப்பாட்டை கையோடு எடுத்துக் கொண்டு வந்தனர்.  மீதிப் பேர் தங்களுடைய சாப்பாட்டை தாங்களே சமைத்துக் கொண்டார்கள். ஆரம்பத்தில் புல்டோஸருடன் வந்து இறங்கினார்களே, அவர்கள்தான் பேன்டாங்க் மற்றும் அவரின் மனைவியின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள்.


அதனால் டான் ஃபிலிப் என்பவருக்குச் சொந்தமாக முன்பு இருந்த அந்த புற்கள் வளர்ந்த நிலப் பகுதிக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதை பேன்டாங்க்கால் ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. வர்த்தகர்களும், அரசாங்க அலுவலகர்களும் அடங்கிய ஒரு நிறுவனம் அந்த நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும். நல்ல வசதி படைத்த அந்த மனிதர்கள் அங்கு கட்டப்பட்டிருக்கும் வீடுகளில் குடி புகுவார்கள்.

‘அன்று இங்கு நான் பார்த்த மனிதர் ஒரு சீனாக்காரர்’- தான் உரையாடிக் கொண்டிருந்த தொழிலாளியிடம் பேன்டாங்க் கூறினார்.

‘தாங்கள் ஒரு சிறிய ஐக்கிய நாடுகளின் சபையை... பலவகைப்பட்டவர்களையும் கலந்து இருக்கச் செய்து உருவாக்கப் போவதாக அவர்கள் கூறுகிறார்கள்’ - அந்த தொழிலாளி கூறினான்: ‘ஒரு அமெரிக்கன்... ஒரு சீனாக்காரன்... ஒரு யூதன்... ஒரு மெஸ்ட்டிஸோக்காரன்... ஒரு ஃபிலிப்பினோ...’

‘அப்படியா? நான் ஒரு பம்பாய்க்காரரைக் கூட பார்த்தேனே!’

‘ஆமாம்... ஒருவர் இருந்தார். ஒரே ஒரு நிபந்தனைதான். பணம்! வருடத்திற்கு கட்டாயம் முப்பதாயிரம் பெஸாக்கள் சம்பாதிப்பவராகவும், வங்கிக் கணக்கில் அரை மில்லியன் பெஸாக்கள் உள்ளவராகவும் இருப்பவர் கணக்கில்  எடுத்துக் கொள்ளப்படுவார்.’

‘அதாவது- ‘பிக் ஸாட்ஸ்’ என்று யார் அழைக்கப்படுகிறார்களோ, அவர்கள்... அப்படித்தானே?’- பேன்டாங்க் உடனடியாக கேட்டார்.

‘சரியாக சொன்னீர்கள். அவர்களின் தலைவர் கோடீஸ்வரரான டான் லேம்பர்ட்டோ லேட்ரன். அவர் நீண்ட காலம் அமெரிக்காவில் வாழ்ந்தவர். தடை இருந்த காலத்தில் அவர் மிகப் பெரிய பணக்காரராக வளர்ந்திருக்கிறார். சட்டத்திற்குப் புறம்பான விஸ்க்கியை திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வருவதில் அவர் மிகப் பெரிய கில்லாடி. ஏற்கெனவே அமெரிக்க பிரஜையாக இருக்கும் அவர் போர் முடிந்ததும், திரும்பி வந்து விட்டார். கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கள்ளக் கடத்தலின் மூலம் சம்பாதித்த மிகப் பெரிய தொகை அவரிடம் இப்போது இருக்கிறது.’

‘அதை வாயால் சொல்ல வேண்டியதே இல்லை.’

‘இப்போது அவரிடம் ஏராளமான பணம் இருக்கிறது. ரசனைகளிலும் அவர் பணக்காரராகத்தான் இருக்க முடியும். அவர் நண்பர்களையும் நெருக்கமானவர்களையும் விலைக்கு வாங்க முடியும். அதனால்தான்... கையில் எதுவுமே இல்லாதவர்கள்... சிறிய மனிதர்கள் இந்த கிளைட் பகுதியில் வாழவே முடியாது...’

‘இந்த லேம்பர்ட்டோ என்ற மனிதர் ஒரு நல்ல மனிதராக இருக்க முடியாது என்று தோன்றுகிறது’ - அந்த விவசாயி துணிச்சலுடன் கூறினார்.

‘நீங்க என்ன சொல்றீங்க?’ - அந்த தொழிலாளி பதிலுக்கு கேட்டான்.

‘அவரிடம் ஏராளமான பணம் இருக்கிறது என்று நீ சொல்வது உண்மையாக இருந்தால், அந்த மனிதரின் வாழ்க்கை தவறுகள் இல்லாத ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.’

‘இந்த பூமியில் வாழ்பவர்களில் யாருடைய வாழ்க்கைதான் ஒரு  கறை கூட இல்லாமல் இருக்கிறது! ஹா...?’- அந்த தொழிலாளி தொடர்ந்து சொன்னான்: ‘அவர் ஒரு கோடீஸ்வரர். அது போதாதா? நம்முடைய அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை ஆயிரம் பேர் வெட்கப்படக் கூடிய பயங்கரமான குற்றச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்!’

‘ஆனால், நான் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரனாக இருக்கிறேன். அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம்...’ - பேன்டாங்க் அவனுக்கு ஞாபகப்படுத்தினார்.

‘இருக்கலாம்... ஆனால், நீங்கள் சுவருக்கு வெளியே இருக்கிறீர்கள்’- அந்த தொழிலாளி தொடர்ந்து சொன்னான்:  ‘இந்த இடம் முழுவதும் உங்களுக்குச் சொந்தமானதா?’

‘நிச்சயமா...’- பேன்டாங்கின் குரல் மிகவும் அழுத்தம் நிறைந்ததாகவும், கர்வம் கொண்டதாகவும் இருந்தது. அவர் தொடர்ந்து கூறினார்: ‘நான் இங்கேதான் பிறந்தேன். என் தந்தை இந்தச் சொத்தை என்னுடைய முன்னோர்களிடமிருந்து பெற்றார். நான் என்னுடைய தந்தையிடமிருந்து இதைப் பெற்றேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் இது அடர்த்தியான ஒரு காடாக இருந்தது. அவர்கள் இதை சீர் செய்து, சரிப்படுத்தி, மண்ணுக்கு உரமிட்டு அதில் நாற்றைக் கொண்டு வந்து நட்டார்கள். என்னுடைய முன்னோர்கள் ‘காட்டிப்புனேரோஸ்’  இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ‘ஆன்ட்ரே பெனிஃபேஸியோ’யுடன் நட்பு கொண்டிருந்தவர்கள்.

அந்த கிளைப் பகுதி அங்கு வருவதற்காக தான் சிறிதும் மனதில் வருத்தப்படவில்லை என்ற உண்மையை பேன்டாங்க் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இன்னும் சொல்லப் போனால் - அந்த நிலப் பகுதி இனி வரும் நாட்களில் ஆக்கப்பூர்வமான பல திட்டங்களுடன் முன்னேற்றத்தைக் காணும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார். எது எப்படி இருந்தாலும் தானும் தன்னுடைய குடும்பமும் விளையாட்டுத்தனமான விஷயங்களுக்கு இரையாக்கப்பட்டு விடக் கூடாது என்ற விஷயத்தில் தான் மிகவும் கவனமாக இருப்பதாக கூறினார் பேன்டாங்க்.

அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் நகரத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். இன்னொரு மகன் தன் தந்தைக்கு உதவியாக இருக்கிறான். எல்லோருக்கும் இளையவள் மகள். அவள் அன்றாட வேலைகளில் தன் தாய்க்கு உதவியாக இருக்கிறாள். ஒரு அமைதியான, எந்தவித தொந்தரவுகளும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே அவர்களுடைய சந்தோஷத்திற்குரிய ஒரே விஷயமாக இருந்தது. படித்து மகிழ வேண்டும் என்பதற்காக தனக்கென்று சில நூல்களை வைத்திருந்தார் பேன்டாங்க். ஃப்ளாரன்டே, தி ட்வெல் பியர்ஸ் அன்ட் அதர் ரொமான்சஸ், நோலி மீ டேன்ஜர், எல் ஃபிலிபஸ்ட்டெரிஸ்மோ ஆகியவற்றின் பழைய பிரதிகள் ஆகியவையே அவை. அவருக்கு மிகவும் பிடித்தது - கபிஸேங்க் கதைகள்.

‘நாங்கள் திரைப்படங்கள் பார்ப்பதற்குக் கூட செல்வதில்லை’- தன்னுடைய வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவிக் கொண்டிருப்பதற்கான காரணத்திற்கு சான்று கூறுவதைப் போல பேன்டாங்க் கூறினார்: ‘நான் மனிலாவுக்குப் போகும் நாளன்று, மருந்து கொடுத்து குணப்படுத்தும் அளவிற்கு நோய் சூழ்நிலை உண்டாகிவிட்டிருக்கும்.’


பேன்டாங்கிற்குச் சொந்தமான அந்தத் தனியார் நிலத்தின் அளவு ஒரு ஹெக்டார் வரும். அந்த நிலத்தின் முன் பகுதியில் மூங்கிலாலும் புற்களாலும் அமைக்கப்பட்ட ஒரு பழைய குடில் இருந்தது. மழை பெய்யலாம்... எத்தனையோ வருடங்களாக சூரியனின் வெப்பம் கூரைகளை தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனினும், அந்த வீடு எப்போதும் போல உறுதியாக நின்று கொண்டுதான் இருக்கிறது. ஒரு புதிய பங்களாவில் போய் வாழ்வதை விட, அந்த வீட்டில் வாழ்வதைத்தான் பேன்டாங்க் பொதுவாகவே விரும்புகிறார். தங்களுடைய வறுமையான நிலைக்கு மத்தியில் அவருடைய குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.

வீட்டிற்கு பின்னால்... மிகவும் தூரத்து எல்லையில் ஆறு மாமரங்கள் இருந்தன. ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் அவற்றில் சதைப் பிடிப்பான பழங்கள் பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கும். சில கொய்யா மரங்களும் இருந்தன. சில ‘சிக்கோஸ்’ மரங்களும், சில ‘ஆட்டிஸ்’ மரங்களும்... அவற்றுக்கு அருகில் பேன்டாங்க் காய்கறிகளையும் பயிரிட்டிருந்தார். தன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியில் கொஞ்சம் பன்றிகளையும்’ கொஞ்சம் கோழிகளையும் அவர் வளர்த்துக் கொண்டிருந்தார். அந்த தம்பதிகளும், அவர்களுடைய பிள்ளைகளும் வாழ்வதற்கு தேவையானவை அவற்றிலிருந்து அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன.

ஒரே நேரத்தில் அந்த கிளைப் பகுதியில் கட்டப்பட்ட பங்களாக்கள் அனைத்தும் முடிக்கப்பட்டன. உடனடியாக அந்தந்த வீடுகளின் உரிமையாளர்களின் விருப்பப்படி, அனைத்து வீடுகளும் வெவ்வேறு வர்ணங்களைக் கொண்டு பூசப்பட்டன. ஒவ்வொரு வீடும் ஒரு ஸ்டீல் வேலியால் மறைக்கப்பட்டது. கம்பி வலைகளைக் கொண்டு ஒரு வேலி அமைக்கப்பட்டது. மிகவும் விரைவாகவே ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைபேசி இணைப்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் டெலிவிஷன் ஆன்டெனாக்கள் முளைத்திருந்தன.

இந்த அனைத்து வேலைகளும் ஐந்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டன. முன்பு புற்களும் செடிகளும் அடர்த்தியாக வளர்ந்து பயனற்ற நிலமாக இருந்த, ஏராளமான மண் குவியல் குவியலாக காட்சியளித்த, மழைக் காலத்தில் சேறு நிறைந்த இடமாக இருந்த, சுற்றிலும் தவளைகள் கத்திக் கொண்டிருந்த அந்த பகுதி விளக்குகளையும் மலர்களையும் கொண்ட அழகான வீடுகள் நிறைந்த ஒரு சிறிய நகரமாக மாறியது. உண்மையான வளர்ச்சியும் வசதியும் அங்கு தென்பட்டன. இவை அனைத்துமே பணம் என்ற ஒன்றின் மந்திர சக்தியால் உண்டானவையே. ஆச்சரியப்படும் அளவிற்கு மனிதர்கள் செயல் வடிவில் செய்து காட்டிய அந்த அதிசயம் ஒரு பிரமையாக இருக்குமோ என்று நினைத்த பேன்டாங்க் பல நேரங்களிலும் தன்னுடைய கண்களை தானே கசக்கி பார்த்துக் கொண்டார்.

வீடுகளில் மனிதர்கள் குடியிருக்கும் அந்த நாள் வந்தது. அங்கு வந்து கொண்டிருந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல லாரிகளில் ஏற்றப்பட்ட சொத்துக்கள் இருந்தன. பியானோ, குளிர் சாதனப் பெட்டி, பனிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, ஷை-ஃபை வானொலி இணைப்பு, சமையலறையிலும் சாப்பிடும் அறையிலும் இருக்கக் கூடிய பொருட்கள், படுக்கைகள், ஸோஃபாக்கள், சாய்ந்து உட்காரும் மெத்தைகள், வீடு முழுவதும் போடக் கூடிய ஃபர்னிச்சர்கள், மொட்டை மாடியிலும் தோட்டத்திலும் போடக் கூடிய ஃபர்னிச்சர்கள், ஏராளமான நிலைக் கண்ணாடிகள், விலை உயர்ந்த விளக்குகள், மின் கருவிகள், ஆடம்பரமான சாப்பிடும் மேஜைகள், டெஸ்க்குகள், புகழ் பெற்ற ஓவியர்கள் வரைந்த விலை அதிகமான ஓவியங்கள், பீங்கான் பாத்திரங்கள், புத்தகங்கள், கனமான தலையணைகள், கண்ணாடி கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் ஞானிகள், ரப்பரால் ஆன தெளிப்பான்கள், தரையைத் துடைக்க பயன்படும் துடைப்பான், குழந்தைகளின்  பொம்மைகள், இவை போக... ஓராயிரம் சிறிய பொருட்கள்... அவற்றை பேன்டாங்கும் அவருடைய குடும்பமும் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக அப்போதுதான் பார்க்கிறார்கள். ஆடம்பர முறையில் புதிதாக கட்டப்பட்டிருந்த பங்களாக்களுக்குள் நுழையும் ஒவ்வொரு  குடும்பத்தையும் அவர்கள் வெறித்துப் பார்த்தார்கள்.

‘ஒரு வசதி படைத்த வியாபாரி சமீபத்தில் திறந்த கடையைக் கூட இவர்கள் சாதாரணமாக்கி விட்டார்கள்’ -பேன்டாங்க் கூறினார். ‘இவ்வளவு பொருட்களையும் இவர்கள் எங்கே கொண்டு போய் வைப்பார்கள்?’- அவர் தனக்குத் தானே மெதுவான குரலில் கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில் அவர் வேறொரு உண்மையையும் நினைத்துப் பார்த்தார். கடந்த இருபது வருடங்களில் தங்களுடைய சொத்துக்கள் என்று இருக்கும் கொஞ்சம் தட்டுகள், ஒரு துணி துவைக்கும் தொட்டி, தண்ணீர் எடுத்து வைப்பதற்காக இருக்கும் இரண்டு பாத்திரங்கள், ஒரு தட்டையான இரும்புத் துண்டு, ஒரு வெட்டும் இரும்பு, ஒரு மண் வெட்டி, ஒரு மண்ணை கிளற பயன்படும் கருவி, ஒரு ரம்பம், ஒரு கோடாரி, இரண்டு கத்திகள்- இவைதான் அவர்களின் சொத்துக்கள்.

அந்த கிளைப் பகுதிகளுக்குள் நுழைவதற்கான சாலையின் முன் பகுதியில் ஒரு கல்லால் ஆன வளைவு உண்டாக்கப்பட்டிருந்ததை பேன்டாங்க் பார்த்தார். அதில் ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்)’ என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அர்த்தம் பேன்டாங்கிற்குப் புரியவில்லை. பள்ளிக் கூடத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் அவருடைய மகன் அதற்கான அர்த்தத்தை அவருக்கு விளக்கிச் சொன்னான்:

‘அந்த இடம் அதற்குள் வசிப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. வெளி ஆட்கள் யாரும் அதற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை.’

தன் பையனின் விளக்கத்தை வெகு வேகமாக அந்த தந்தை புரிந்து கொண்டார்.

அந்த சாலையின்  ஆரம்பத்தில் காவலாளிகளும், சிறப்பு போலீஸ்காரர்களும் இருப்பதற்கான ஸ்டேஷன் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. தங்களின் மார்புகளில் அடையாள அட்டைகள் அணிந்திருந்த, இடுப்பில் ரிவால்வர்களைச் சொருகியிருந்த மூன்று காவலாளிகள் இரவும் பகலும் மாறி மாறி காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே வசிக்காமல் அங்கு நுழைய முயன்ற ஒவ்வொருவரும் அங்கு விசாரிக்கப்பட்டார்கள். குறிப்பாக- அவர்கள் கால் நடையாக நடந்து வந்தாலோ அல்லது ஜீப்களில் வந்தாலோ...

சிறப்பு போலீஸ்காரரை முதல் தடவையாக பார்த்தபோது, அவர் மிகவும் அரக்கத்தனம் கொண்ட மனிதராக இருப்பாரென்றும் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பாரென்றும் பேன்டாங்க் நினைத்தார்.

‘இன்னும் சொல்லப் போனால்- அந்த மனிதரைத்தான் கூர்ந்து கவனிக்க வேண்டும்’- பேன்டாங்க் தனக்குள் கூறிக் கொண்டார்.

இதற்கிடையில் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டார்கள். ஒரு நாள் தங்களுக்குத் தேவைப்பட்ட உணவைச் சமைத்த பேன்டாங்கிடமும் அவருடைய மனைவியிடமும் அவர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். அவர்கள் தாங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை முறைப்படி கொடுத்தார்கள். அவர்களுடைய முழு ஒப்பந்தமும்  முடிவுக்கு வந்தது. அந்த இடத்திற்கு அவர்கள் இனிமேல் எந்தச் சமயத்திலும் வர மாட்டார்கள். ‘நன்றி, மேங்க் பேன்டாங்க்... நன்றி, ஆலிங்க் அனா...’- அவர்கள் கூறினார்கள்.

அன்று இரவு கடந்த சில மாதங்களாக தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்ததன் மூலம் கிடைத்த பணத்தை அனா குவியலாக வைத்தாள். அவள் அதில் ஐநூறு பெஸாக்கள் சம்பாதித்திருந்தாள். பேன்டாங்கின் முன்னிலையில் அவள் பணத்தை எண்ணினாள்.


‘நாம் இப்போதுதான் இவ்வளவு பணத்தையே சம்பாதிச்சிருக்கோம், பேன்டாங்க்...’- அனா மகிழ்ச்சியுடன் கூறினாள்: ‘பள்ளிக்கூடம் திறக்கப்படும் நாள் வர்றப்போ, டோனியிங்கிற்கு அவ்வளவு பணம் தேவைப்படாது.’ அவர்களுடைய மகன்களில் டோனியிங் ஒருவன்தான் அந்த ஊரிலிருக்கும் பள்ளிக் கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தான்.

‘நம்மிடம் இப்போது இந்தச் சிறிய சேமிப்பு இருக்கிறது. இதை வைத்து நாம் என்ன செய்வது என்று பார்ப்போம்...’ -அனா மிகவும் அமைதியாக தன்னுடைய மனதில் இருக்கும் திட்டங்களைக் கூறினாள்: ‘நம்மால் ஒரு தண்ணீர் வரக் கூடிய குழாய் அமைக்க முடியும். அதை அந்த கிளை பகுதியுடன் நிச்சயம் இணைக்கலாம். அதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டியதுதான்...’
பேன்டாங்கிற்கு ஆச்சரியம் உண்டானது. ஆனால், தன்னுடைய மனைவியின் பேச்சுக்கு மத்தியில் அவர் எதுவும் தலையிட்டுக் கூறவில்லை.

‘அதனால்... இதை கொஞ்சம் யோசியுங்க.’- அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘பக்கத்திலிருக்கும் வாய்க்காலிலிருந்து எப்போதும் தண்ணீர் கொண்டு வருவது என்பது மிகவும் சிரமமான விஷயம்...’

‘தண்ணீர் கிடைப்பதைப் பற்றி நான் குறைப்பட்டுக் கொண்டதே இல்லையே!’ -பேன்டாங்க் கூறினார்.

‘சரி... நான் ஆடைகளை எங்கே சலவை செய்கிறேன்? அந்த வாய்க்காலில்தானே?’- அனா அவருக்கு ஞாபகப்படுத்தினாள். ‘என்ன இருந்தாலும்... அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது! மழைக் காலம் வந்து விட்டால், நீங்கள் நீரை எந்தச் சமயத்திலும் குடிக்க முடியாது...’

‘அது இருக்கட்டும்... இப்போ நீ என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாய்?’ - பேன்டாங்க் வெளிப்படையாக கேட்டார்.

‘உள்ளே இருக்கும் குழாய்களுடன், குழாய்களை இணைக்க முடியும்...’ - வசதி படைத்த பணக்காரர்களின் வீடுகளைக் குறிப்பாக உணர்த்திய அவள் சிரித்துக் கொண்டே கூறினாள்: ‘இந்த ஐநூறு பெஸாக்களும் நிச்சயம் அதற்காக மட்டுமே செலவிடப்படாது.’

‘நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்தப் பணம் முழுவதும் அதற்காகத்தான் விரயம் செய்யப்படுகிறது என்றால், நமக்கு அப்படிப்பட்ட குழாய் என்ற ஒன்றே தேவையில்லை’- பேன்டாங்க் தன் உதடுகளுக்கிடையே மிகவும் சிரமப்பட்டு புன்னகையை வெளிப்படுத்தினார்.

‘ஓ... நீங்கள்...’- அனா அங்கலாய்த்துக் கொண்டாள்.

பேன்டாங்க் ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்)’நிர்வாகத்தின் அதிகாரியிடம் செல்ல தீர்மானித்தார். காவலாளிகளின் கட்டிடத்தைக் கடந்து செல்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயமாக அவருக்கு இல்லை. எரிச்சலடையும் அளவிற்கு அவர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டார்கள். இறுதியாக அங்கிருந்த காவலாளி, நிர்வாக அதிகாரியின் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ‘ஓகே...’ என்ற சிக்னல் காதில் விழுந்த பிறகுதான் காவலாளி, அந்த விவசாயியை அந்த இடத்திற்குள் நுழைவதற்கே அனுமதித்தார்.

பேன்டாங்கிற்கு முன்னால் அந்த நிர்வாக அதிகாரி மிகுந்த சந்தோஷத்துடன் இருப்பதைப் போல தன்னைக் காட்டிக் கொண்டார்.

‘நானே உங்களுடைய வீட்டிற்கு வர வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தேன்’- தான் வந்திருப்பதற்கான காரணத்தை பேன்டாங்க் கூறுவதற்கு முன்பு நிர்வாக அதிகாரி கூறினார். தன்னுடைய பெயர் ‘பெனா’ என்று கூறினார் அதிகாரி.

‘நான் உங்களுடன் முன்பே பேச வேண்டும் என்று நினைத்தேன்’- பெனா கூறினார்.

‘என்னுடைய புற்களாலும், கூரையாலும் ஆன குடிலின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்’ -பேன்டாங்க் கூறினார். ஆனால், பெனா என்ன காரணத்திற்காக தன்னுடன் பேச நினைத்தார் என்பதைக் கூற கேட்டபோது தன்னுடைய அழைப்பைப் பின் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது.

‘நீங்கள் நீண்ட காலமாக இங்கே இருக்கிறீர்களா?’- அந்த மனிதர் விசாரித்தார்.

‘என்னுடைய முன்னோர்கள் இந்த இடத்தில் வந்து வசிக்க ஆரம்பித்து ஒரு ஆயிரம் வருடங்கள் இருக்கும். அதிலிருந்து....’.பேன்டாங்க் கூறினார்.

‘நீங்கள் இப்போது இருக்கும் நிலம் உங்களுககுச் சொந்தமானதா என்று நான் கேட்கலாமா?’

‘நிச்சயமாக... அதில் எந்தவித சந்தேகமும் இல்லை’- உறுதியான குரலில் பதில் சொன்னார் அந்த விவசாயி.

‘அதாவது... நீங்கள் அதில் வாடகைக்கு குடியிருப்பவர்... அப்படித்தானே?’

அதைக் கேட்டு பேன்டாங்க் அதிர்ச்சியடைந்து விட்டார். எனினும், சாந்தமான குரலிலேயே அவர் பேசினார்.

‘நீங்கள் ஏன் அப்படி கேட்கிறீர்கள்?’- அவர் கேட்டார்.

‘மேங்க் பேன்டாங்க்...’- பெனா தெளிவான குரலில் கூறினார்: ‘இந்த நிறுவனம் உங்களுடைய நிலத்தை விலைக்கு வாங்க நினைக்கிறது.’

தன்னுடைய நிலம் விற்பனைக்காக இருப்பது அல்ல என்று உடனடியாக அந்த விவசாயி பதில் கூறினார். ஆனால், தன் காதில் எதுவுமே விழவில்லை என்பதைப் போல பெனா தொடர்ந்து சொன்னார்-

‘உங்களிடம் தகுந்த ஆதாரம் இருந்தால், அவர்கள் அந்த நிலத்தை விலைக்கு வாங்குவார்கள்’ - அந்த அதிகாரி தான் கூறிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்: ‘அப்படி ஆதாரம் எதுவும் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தை, அத்து மீறி ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர் என்றுதான் அர்த்தம்.’

‘அத்து மீறி ஆக்கிரமித்திருப்பவர்....!’ - பேன்டாங்க் அளவற்ற கோபத்தில் வெறி பிடித்தவரைப் போல கத்தினார். அவர் அப்படி கத்தியதற்குக் காரணம்- ‘அத்து மீறி ஆக்கிரமித்திருப்பவர்’ என்ற வார்த்தையை பெனா மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறியதே. பெனா, பேன்டாங்கின் வேகமாக ஆடிக் கொண்டிருந்த கைகளையே வெறித்துப் பார்த்தார்.

‘கோபப்படாதீங்க, மேங்க் பேன்டாங்க்...’- அந்த அதிகாரி மெதுவான குரலில் கூறினார்: ‘நான் அப்படி தப்பாக எதுவும் கூறிவிடவில்லை. சட்டத்தில் இருக்கும் விஷயத்தை நான் விளக்கிக் கூறுவதற்கு முயன்றேன். அவ்வளவுதான்...’

‘சட்டம்! என்ன சட்டம்!’- அந்த விவசாயி வெடித்தார். அப்போது அவருடைய நெற்றியில் கோபம் இருண்ட சுருக்கங்கள் மூலம் வெளிப்பட்டது.

‘சட்டம் என்று நான் எதைச் சொல்கிறேன் என்றால்... நீங்கள் அத்து மீறி நிலத்தை ஆக்கிரமித்திருப்பவராக இருக்கும் பட்சம், அந்த இடத்தை விட்டு வெளியேறிச் செல்லும்படி நீங்கள் பலவந்தப்படுத்தப்படுவீர்கள்...’- பெனா விளக்கிக் கூறினார்.

அவர் தொடர்ந்து சொன்னார்:

‘அந்த காரியம் நடப்பதற்கு முன்னால்... ஆரம்பத்தில் நீரும் ஆயிலும் ஒன்றாகக் கலந்து விடப்படும்...’

பேன்டாங்க் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அவருடைய பணிவு எல்லை கடந்து விட்டது.


‘ஆனால், இதே விஷயம் முறைப்படி முடிக்கப்படுவதாக இருந்தால்...’- அந்த அதிகாரி தொடர்ந்து சொன்னார்: ‘இங்கிருந்து இன்னொரு இடத்தில் போய் இருப்பதற்கு, அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.’

பேன்டாங்க் தன்னைத் தானே அமைதியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய மனைவியின் விருப்பத்தை முன்னிட்டே தான் இங்கு வந்திருப்பதால் அப்படி இருப்பதே சரி என்று அவர் தன் மனதிற்குள் நினைத்தார். தவிர, மண்டை ஓட்டை உடைத்துக் கொள்ளும் அளவிற்கு கோபப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்று அவர் நினைத்தார்.

தன்னுடைய மூச்சைச் சற்று தளர்த்தி விட்டுக் கொண்ட பிறகு, தனக்குள் அளவற்ற கோபம் இருந்தாலும், அதையெல்லாம் மீறி அவரால் கேள்வி கேட்க முடிந்தது:

‘எந்த இடத்தில் நான் ஒரு மனிதனாக ஆனேனோ, அந்த இடத்தை விட்டு நான் வெளியேற வேண்டும் என்று அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்?’

‘ஏனென்றால்... ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலேயே வேறு எந்தவொரு நிறுவனத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் ஒரு கனவுத் திட்டத்தை இங்கே ஆரம்பித்திருக்கிறார்கள். சுவர்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ‘ராயல் லேன்ஸ்’ உண்மையாகவே மிகவும் அழகு நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். உங்களின் குடில் இந்த இடத்திற்கு வெளியே இருக்கிறது. அது இந்த இடத்தின் அழகையே கெடுக்கிறது.’

தான் அமர்ந்திருந்த இடத்தில் அதற்கு மேல் பேன்டாங்கால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. தன்னுடைய வீட்டைப் பற்றி கேவலமாக பேசியதைக் கேட்டு அவர் வெகுண்டெழுந்தார்.

‘சார்...’ - அவர் கோபத்துடன் கூறினார். அவருடைய தொண்டை எலும்புகள் வீங்கி காணப்பட்டன: ‘நான் இப்போது புறப்படுகிறேன்....’

‘மேங்க் பேன்டாங்க்...’- பெனா அவரைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தார்.

‘மிஸ்டர். பெனா, நான் இங்கு எதற்காக வந்தேன் தெரியுமா’- அந்த கிளை பகுதிக்குள் தான் எதற்காக வந்தோம் என்ற விஷயத்தையே இன்னும் கூறாமல் இருக்கிறோமே என்பதை நினைத்த பேன்டாங்க் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார் : ‘நான் இங்கே வந்ததற்கான காரணமே- எங்களுடைய இடத்தை இன்னும் சற்று மெருகேற்றுவது எப்படி என்பதைப் பற்றி பேசுவதற்குத்தான். ஒரு தண்ணீர் குழாய் அமைத்து, எங்களுடைய வீட்டிற்கு மின்சார இணைப்பு கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நாங்கள் சிந்தித்தோம்...’

‘நடக்காத விஷயம்!’- பேன்டாங்க் கூறிக் கொண்டிருந்த வார்த்தைகளை உடனடியாக குறுக்கிட்டு நிறுத்தினார் பெனா.

‘நிலைமை அதுதான் என்றால், நான் எதுவுமே கூறவில்லை என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்’ - அந்த விவசாயி கதவை நோக்கி நடந்தார்.

‘இருங்க...’- பெனா உரத்த குரலில் கத்தினார்: ‘இன்னும் சொல்லப் போனால்- இங்குமங்குமாக சுற்றிக் கொண்டிருக்கும் உங்களின் பன்றிகளிடமிருந்து வெளிப்படும் தாங்க முடியாத நாற்றத்தையும், உங்களுடைய கோழிகள் உண்டாக்கும் சத்தத்தையும் பற்றிக் கூட அவர்கள் புகார் செய்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.’

‘அந்த அளவிற்கு கூர்மை சக்தி படைத்தவர்களா அவர்கள்!’- பேன்டாங்க் கூறினார்.

‘இங்கே..... ‘ராயல் லேன்’ ஸில் அப்படிப்பட்ட உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன’- பெனா கூறினார். ‘பூனைகள், விலை மதிப்புள்ள நாய்கள், கூண்டில் வளர்க்கப்படும் பாடும் பறவைகள், தங்க மீன்கள்- இவற்றைத் தவிர, வேறு எந்த பிராணிகளுக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை.’

‘சாப்பிட முடியாத உயிரினங்கள்...’- பேன்டாங்க் ஆச்சரியம் கலந்த குரலில் கூறினார்: ‘ஆனால், இங்கே இருக்கும் மக்கள் கோழியையும் பன்றியையும் சாப்பிடுவார்கள். இல்லையா?’

‘ஆமாம்... அவர்கள் சாப்பிடுவார்கள். ஆனால், அவற்றை வளர்க்க மாட்டார்கள்’- பெனா சொன்னார்: ‘மாம்பழம் போன்ற பழங்களைக் கொண்டிருக்கும் மரங்களையும் வளர்க்கக் கூடாது.’

‘ஏன்?’- தன்னுடைய ஆறு மாமரங்களையும் மனதில் நினைத்துக் கொண்டே பேன்டாங்க் கேட்டார்.

‘ஏனென்றால்... அந்த மரங்களில் பூ பூத்து... அவை பழங்களாக மாறும்போது... பகல் நேரங்களில் ஈக்களும், இரவு நேரங்களில் கொசுக்களும் அவற்றை நோக்கி வர ஆரம்பிக்கின்றன...’

‘அவர்கள் மாம்பழங்களைச் சாப்பிடுவார்கள் அல்லவா?’

‘அவர்களுடைய குளிர்சாதனப் பெட்டிகளில் மாம்பழங்கள் இல்லாமல் இருக்காது.’

பேன்டாங்கின் கண்கள் மூடின. அவருடைய சிந்தனை விழிக்க ஆரம்பித்தது. நினைத்துப் பார்க்க முடியாத மனிதர்கள் கற்பனை பண்ணி உருவாக்கிய அந்த ‘கனவு திட்டத்தின் நிர்வாக அதிகாரியுடன் உரையாடிக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்களில், இதற்கு முன்பு தான் எந்தச் சமயத்திலும் கனவு கூட கண்டிராத பல விஷயங்களை பேன்டாங்க் தெரிந்து கொண்டார். அவருடைய கள்ளங்கபடமற்ற மூளையிலும், அவருடைய இயற்கையுடன் ஒன்றிச் செல்லும் இயல்பான குணத்திலும் அந்த மாதிரியான விஷயங்கள் எந்தச் சமயத்திலும் உருவாகவே உருவாகாது.

கசப்பான ஏமாற்றத்துடன் இறுதியில் தன்னுடைய உரையாடலை முடிவுக்குக் கொண்டு வந்தார் பேன்டாங்க். முழுமையாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர் பெனாவிடம் கேட்டார் : ‘நான் இந்த இடத்தை விட்டு வெளியேறினால், என்னுடைய நிலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள்?’

‘அவர்கள் உங்களுடைய குடிலை அழித்து விடுவார்கள்.மாமரங்களை வெட்டி வீழ்த்தி விடுவார்கள். இந்த நிறுவனத்தின் பார்வையில் கூறுவதாக இருந்தால்- ராயல் லேன்ஸுக்கு வெளியே இருக்கும் உங்களின் இடம் ஒரு குவளையில் இருக்கும் பாலில் ஒரு ஈ விழுந்ததைப் போல இருக்கிறது.’

விடை பெறுவதற்கான ஒரு வார்த்தையைக் கூட கூறாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் பேன்டாங்க். தன்னுடைய வீட்டிற்குச் சென்று, அனாவிடம் தான் போய் வந்ததன் விளைவைப் பற்றி கூறியபோது, ஒரு மீனின் முள் சிக்கிக் கொண்டு தன் தொண்டையைக் குத்திக் கொண்டிருப்பதைப் போல அவர் உணர்ந்தார். அந்த மனிதர் கூறிய வார்த்தைகளை அந்தப் பெண் மிகவும் கூர்ந்து கேட்டாள். ஆனால், பதிலெதுவும் கூறவில்லை. அவ்வப்போது அவள் மெதுவான குரலில் என்னவோ முனகினாள். அதே நேரத்தில், அவளுடைய உள் மனம் கையில் வைத்திருந்த துணியை முறைப்படி ஊசி சரியாக குத்தி தைக்கிறதா என்பதில் மிகவும் கவனமாக இருந்தது.

‘நம் பக்கத்தில் இருப்பவர்கள் மீது நாம் எந்தச் சமயத்திலும் வெறுப்புடன் இருந்தது கிடையாது’- அனா மெதுவான குரலில் முணுமுணுத்தாள். அப்போது அவளுடைய வார்த்தைகள் கண்ணீரில் நனைந்திருப்பவை போல தோன்றின: ‘கடவுள் நம்முடைய நிலைமையைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டார்.’

ஒரு நல்ல சந்தோஷமான நாளன்று ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்)’ உற்சாகத்துடன் கண் விழித்தது. நுழைவு வாசலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வளைவு, ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சாளரங்களிலும், பங்களாக்களின் வாசல்களிலும்  விளக்குகள் தொங்கி இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தன. இந்த சுண்டி இழுக்கும் அலங்காரங்களுக்குக் காரணம்- ஆடம்பரமான தேவாலயம் அங்கு திறக்கப்பட இருப்பதே. அந்த குடியரசு மற்றும் ‘பாப்பல் நன்சியோ’வின் தலைவர்தான் அந்த நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தாளி.

‘ராயல் லேன்’ஸின் வேலிக்கு வெளியே இருக்கும் பேன்டாங்கின் வீடு மட்டும்தான் எந்தவித விருந்தின் அறிகுறியும் இல்லாமல் இருந்தது. எந்த விருந்தாளியையும் அந்த விவசாயி எதிர்பார்க்காமல் இருந்தாலும், திடீரென்று யாரோ வெளியிலிருந்து அவரை அழைத்தார்கள். அந்த பகுதியின் பொருளாளரின் பிரதிநிதி என்று தன்னை அந்த மனிதர் அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலே கூறப்பட்ட அதிகாரிக்கு முன்னால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பேன்டாங்க் வந்து நிற்க வேண்டும் என்றொரு ஆணையுடன் அவர் வந்திருந்தார்

‘என்ன காரணமாக இருக்கும், சார்?’ - அவர் ஒருவித ஆச்சரியத்துடன் கேட்டார். கடந்து சென்ற இந்த நூற்றாண்டின் பாதியில் அந்தப் பகுதியின் பொருளாளரால் அவர் அழைக்கப்படுவது இதுவே முதல் முறை.

‘இந்த நிலத்தில் குடியிருப்பதற்கான அத்தாட்சி உங்களிடம் இருக்கிறதா?’- அந்த பிரதிநிதி கேட்டார்.

தன்னுடைய ஆதாரம் எங்கே இருக்கிறது என்ற விஷயமே பேன்டாங்கிற்கு ஞாபகத்தில் இல்லை. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- அப்படிப்பட்ட ஒரு அத்தாட்சி தன்னிடம் இருக்கிறதா, இல்லையா என்றே அவருக்கு தெரியாது. ஒரே ஒரு விஷயம் மட்டுமே அவருக்கு தெரியும். அந்த நிலம் அவருடைய தாத்தாவிற்குச் சொந்தமானது என்பதே அது. அவருடைய தாத்தா மரணத்தைத் தழுவியபோது, நிலம் அவருடைய தந்தைக்குக் கை மாறியது. அவர் அதை அவருக்கு கை மாற்றி விட்டார்.

‘இந்த நிலத்திற்கு நீங்கள் வரிகள் கட்டுகிறீர்களா?’- அந்த பிரதிநிதி திரும்பவும் கேட்டார். அந்த பிரதிநிதிக்கு பேன்டாங்கின் மகனின் வயதுதான் இருக்கும். ஆனால், ‘நீங்கள்’ என்று அந்த விவசாயியை கூறும்போது, அந்த அழைப்பில் பணிவு கலந்திருக்கவில்லை.

கடந்த இரண்டு வருடங்களில் தன்னுடைய மனைவியும் பிள்ளைகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதும், சூறாவளி மாமரங்களின் மலர்களைப் பாதிப்பிற்குள்ளாக்கியபோதும், கோழிகளுக்கு பயங்கரமான நோய் உண்டானபோதும் தவிர, அதற்கு முன்பு வரை வரிகள் கட்டுவதில் தான் சிறிதும் தவறியதில்லை என்று பேன்டாங்க் விளக்கி கூறினார்.

‘அப்படியென்றால்... இந்த நிலத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டியதுதான்...’- பேன்டாங்கின் மீது அந்த பிரதிநிதி இந்தக் கேள்வியை எறிந்தார்.

அந்த பிரதிநிதி மிரட்டல் தொனியில் கூறிய வார்த்தைகள் பேன்டாங்கின் செவிகளில் ஒரு ரிவால்வரின் முழக்கத்தைப் போல ஒலித்தன. சமீப காலமாக தனக்கு நேர்ந்து வரக் கூடிய ஒவ்வொரு சம்பவத்தையும் அவர் இணைத்துப் பார்க்க முயற்சித்தார். அந்த பிரதேசத்தின் பொருளாளர் உடனடியாக வரச் சொல்லி அழைத்திருப்பதற்கும், ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்)’ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அதற்கு முன்பு தன்னிடம் கூறியதற்கும் இடையே ஏதோ சம்பந்தம் இருக்கிறதோ என்றொரு சந்தேகம் அந்த விவசாயியின் இதயத்திலும் மூளையிலும் உண்டானது.

‘கனவு திட்ட’த்தில் குடியிருப்பவர்கள் சந்தோஷத்துடன் கொண்டாட்டங்களில் மிதந்து கொண்டிருந்தபோது, ரிஸால் எழுதிய ‘எல் ஃபிலிபஸ்ட்க்ரிஸ்மோ’ என்ற நூலின் பக்கங்களில் மெதுவாக மேய்ந்து கொண்டிருந்தார் பேன்டாங்க். அதன் ஒரு அத்தியாயத்தில் கேப்சாங்க் டேல்ஸ் எப்படி தீவிரவாதியாக ஆனான் என்பதைப் பற்றி கூறப்பட்டிருந்தது. கேப்சாங்க் டேல்ஸ் அவருக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம். அடுத்த பத்தியைப் படித்தபோது, பேன்டாங்கின் குரல் தொடர்ந்து உரத்து ஒலித்துக் கொண்டிருந்தது.

‘நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் பாதிரியார் ஏதோ தமாஷ் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்றுதான் கேப்சாங்க் டேல்ஸ் நினைத்தான். ஆனால், நிலம் யாருக்கு கிடைக்கும் என்பதை பணியாட்களில் ஒருவனிடம் கூறியபோது, அவன் மிகவும் வெளிறிப் போய் விட்டான். அவனுடைய காதுகளில் இரைச்சல் உண்டானது. அவனுடைய கண் பார்வையை ஒரு

சிவப்பு நிற மேகம் வந்து மறைத்தது. தன்னுடைய மனைவியையும், எலும்புக் கூட்டைப் போல மிகவும் மெலிந்து போய் காணப்பட்ட தன் மகளையும், வெளிறிப் போன நிலையிலும், தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தன்மையிலும் பார்த்தான்.

ஒரு காலத்தில் அடர்த்தியான காடாக இருந்து, அதற்குப் பிறகு வளம் கொழிக்கும் நெல் வயலாக மாறிய இடத்தை விட்டு அவன் வெளியேறி ஆக வேண்டும். சூரியன் தன்னுடைய தோலைச் சுட்டு எரித்துக் கொண்டிருக்க, அவன் உழுது கொண்டிருந்தான். அப்போது பாதிரியார் தன்னுடைய சாரட் வண்டியில் ஓய்வாக பயணித்துப் போய்க் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். எந்த பணியாளுக்கு நிலத்தைத் தரப் போகிறாரோ, அவன் தன்னுடைய எஜமானனுக்குப் பின்னால் ஒரு கேவலமான அடிமையைப் போல ஓடிக் கொண்டிருந்தான். நிலத்தை தரவே கூடாது என்று டேல்ஸ் முடிவு செய்தான்.’

கேப்சாங்க் டேல்ஸ் சிமோனின் ரிவால்வரை வாங்கும் காட்சி வரும் வரை பேன்டாங்க் தொடர்ந்து அந்த நூலை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த காட்சியில் மரியா க்ளாராவின் விலை மதிப்பற்ற அரும்பொருள் ஒன்றைக் கொடுத்து, அதற்கு பதிலாக அந்த ரிவால்வரை கேப்சாங்க் டேல்ஸ் வாங்குகிறான். அப்போது அவன் கூறுகிறான்: ‘நான் கொள்ளைக்காரர்களுடன் சேரப் போவதால், எனக்கு இந்த ஆயுதம் வேண்டும்.’

புத்தகத்தை மூடிவிட்டு, பேன்டாங்க் அனாவின் அருகில் வந்தார். அப்போது அவள் வீட்டிற்கு முன்னால் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தாள். அவளிடம் அவர் கேட்டார்:

‘என்னுடைய வெட்டுக்கத்திகளை எங்கே வைத்திருக்கிறாய்?’

‘எதற்கு?’- அந்தப் பெண் தன் பார்வையை உயர்த்தி, கணவனின் செயல்களை ஆழமாக பார்த்தாள்.

‘நான் அவற்றைக் கூர்மைப்படுத்த வேண்டும்.’

வீட்டிற்குப் பின்னாலிருந்த ஒரு பெட்டியில் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த இரண்டு வெட்டுக் கத்திகளையும் கூர்மைப்படுத்துவதற்கான கல்லை பேன்டாங்க் தேடிக் கொண்டிருந்தபோது, ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்’) நிறுவனத்திற்குச் சொந்தமான தேவாலயம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கொண்டாட்டத்தின் இறுதியை அறிவிப்பதைப்போல, தூரத்தில் மணியின் ஓசைகள் தொடர்ந்து ஒலித்து, எதிரொலித்துக் கொண்டிருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.