Logo

விலைமகளின் கடிதம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6754
vilaimagalin kaditham

பாலு அண்ணா,

நான் உங்களை இப்போதும் இந்த மாதிரி அழைப்பதற்கான தைரியத்துடன் இருப்பதற்குக் காரணம்- ஒரு விலைமகளாக வீழ்ச்சியைத் தேடிக்கொண்டவள், தன்னுடைய மதிப்பிற்குரிய சகோதரனை எப்படி அழைக்கவேண்டும் என்று சமுதாயம் இன்றுவரை ஒரு பெயரைப் படைக்காமல் விட்டிருப்பதால் மட்டுமே. மன்னிக்கவேண்டும்.

நேற்றிரவு நடைபெற்ற அந்தச் சம்பவம்- அதுதான் என்னை இந்த கடிதத்தை எழுதுவதற்குத் தூண்டியது. எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல்தான் அந்த சந்தர்ப்பத்தையே சந்தித்தேன். ஆனால் அது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட என் இதயத்திற்கு ஒரு ஊசியைப் போட்டது. அப்போதைக்கு எந்தவொரு உணர்ச்சியாலும் உந்தப்படாமல் இருந்தாலும், சிறிது நேரம் சென்றதும் என் இதயத்தில் ஒரு அசைவு உண்டானது. நரம்பு மண்டலத்தில் ஒரு அதிர்ச்சி உண்டானது. குளிர்ந்து, மரத்துப்போய்க் கிடக்கும் என்னுடைய மூளையின் வழியாக ஒரு வெப்பம் நிறைந்த காற்று கடந்துசென்றது. என்னால் தூங்குவதற்கு முடியவில்லை. நான் சிந்தனையில் மூழ்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். அழுக்கடைந்து காணப்பட்ட மெத்தையில் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு விலைமகள் சிந்தித்தாள்.

இப்போது என்னுடைய தோழிகள் களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருக்கும் இந்த புலர்காலைப் பொழுதில், ஒரு புழுதிபடிந்த எழுதுகோலையும் ஏதோ ஒரு காமவெறி பிடித்தவன் அவசரத்தில் மறந்துவிட்டுப்போன ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்த கொஞ்சம் தாள்களையும் கையில் எடுத்துக்கொண்டு, இதோ என்னுடைய சிந்தனைகளை எழுதப் போகிறேன்.

அண்ணா, நான் ஒரு விலைமகள். சமுதாயத்தில் விஷப் பொருளாகக் கருதப்பட்டுக் கொண்டிருப்பவள். சந்தோஷம் என்றால் என்ன- கவலை என்றால் என்ன என்பதைப் பிரித்துப் பார்க்க இயலாத அளவிற்கு, வாழ்வின் மோசமான பக்கங்களோடு நான் இறுக ஒட்டிக் கிடந்துவிட்டேன். பிரகாசம் பரவிக் கிடக்கும், நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சமுதாயத்தின் மலைச் சரிவை விட்டு, கீழே ஆழத்தையே பார்க்க முடியாத புதைசேற்றுக்குள் நான் உருண்டு விழுந்துவிட்டேன். அல்ல- சமுதாயச் சட்டத்தின் கண்களுக்குத் தெரியாத கைகள் என்னைத் தள்ளிவிட்டன. என்னுடைய மனிதத்தன்மை மரத்துப் போய்விட்டதால், இந்த கேடுகெட்ட இடத்தின் கெட்டுப்போன நீரின் நாற்றத்தையோ, சேறு ஒட்டிக்கொண்டிருப்பதையோ என்னால் உணரமுடியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உணர முடிகிறது. இந்த சேறு நிறைந்த நிலத்தில் என்னுடைய சொந்த எடையைக் கொண்டு நான் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறேன்... கீழே இறங்கிக்கொண்டிருக்கிறேன்... கீழே இறங்கிக்கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு நன்கு தெரிந்தவைதான் என்றாலும், என்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப அத்தியாயங்களை நோக்கி மீண்டுமொருமுறை கண்களைப் பதிக்கவேண்டும் என்றொரு எண்ணம் என்ன காரணத்தாலோ... இந்த வேளையில் எனக்குள் உண்டாகிறது. அந்த மிகவும் புனிதமான வாழ்க்கைச் சூழலுடனேயே நான் என்னுடைய கதையைக் கூறுகிறேன்.

என்னைப் பெற்றெடுத்து சில நாட்கள் கடப்பதற்கு முன்பே என்னுடைய தாய் மரணத்தைத் தழுவிவிட்டாள். நம்முடைய குடும்பத்தின் ஒரு தூரத்து சொந்தக்காரியான மாதவியம்மா என்னை மிகவும் கவனம்செலுத்தி வளர்த்த ஒரு மெல்லிய நினைவு இப்போதும் எனக்குள் இருக்கிறது. ஆனால், எனக்கு நல்ல நினைவு தெரிந்தபோது, முதன்முதலாக கண்களால் பார்த்தது... பாலு அண்ணா, உங்களுடைய அன்பு நிறைந்த முகத்தைத்தான். பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய அந்தக் காலத்தை நான் இப்போதும் நினைத்துப் பார்ப்பதுண்டு. நான் அப்போது ஆறு வயது கொண்ட சிறுமியாக இருந்தேன். பாலு அண்ணா, நீங்கள் பதினொரு வயது கொண்ட குறும்புத்தனம் நிறைந்த சிறுவனாக இருந்தீர்கள். இருபக்கங்களிலும் ஒடிச்சுகுத்திப்பூக்கள் இடைவிடாமல் மலர்ந்து காட்சியளிக்கும் வேலிகளைக் கொண்ட ஒற்றையடிப் பாதை வழியாக நாம் பள்ளிக்கூடத்திற்குச் செல்வோம். வழியில் காணும் மரங்களை நோக்கி வெறுமனே கல் எறிந்துகொண்டும், பந்தைத் தட்டிக்கொண்டும் ஆரவாரம் உண்டாக்கியவாறு நடந்துசெல்லும் உங்களுக்குப் பின்னால் நான் ஒரு பச்சை நிற ஃப்ராக் அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறிய குடையை வைத்தவாறு, மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டபடி நடந்துசெல்லும் அந்தக் காட்சி இப்போதுகூட எனக்கு முன்னால் பிரகாசமாகத் தெரிகிறது. நீங்கள் சிலேட்டையும் புத்தகத்தையும் வேலியில் மறைத்து வைத்துவிட்டு வழியிலிருக்கும் மாமரத்தில் ஏறி மாங்காயைத் திருடும்போது, அதன் உரிமையாளர் வருகிறாரா என்று பார்த்தபடி நான் கீழே காவல் காத்து நின்றுகொண்டிருப்பதும், அதற்குப் பரிசாக நீங்கள் எனக்கு நெல்லிக்காய் பறித்துத் தரவோ காட்டுச் செண்பக மரத்தின்மீது ஏறி பூக்களைப் பறித்துத் தரவோ செய்வதும் நேற்று நடந்ததைப்போல தோன்றுகிறது. ஒருநாள் நான் பொறுக்கிச் சேர்ந்த முந்திரிக் கொட்டைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது, நீங்கள் ஒரு பெரிய கத்தியை எடுத்துவந்து, ஒரு முந்திரிக் கொட்டையை ஒரே வெட்டில் இரண்டாகப் பிளக்க முயற்சித்ததையும், தவறுதலாக அந்த வெட்டு என்னுடைய வலது கையின் சுண்டு விரலில் விழ, அதைத் தொடர்ந்து விரலின் ஒரு துண்டு தனியாக வந்ததையும், நான் உரத்த குரலில் சத்தம் போட்டு அழுததையும் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். அடுத்த வருடம் நான் பள்ளிக் கூடத்திற்குச் சென்றபோது, ஆசிரியர் என்னுடைய கை விரலைக் கூர்ந்து பார்த்துவிட்டு, அது எப்படி நடந்தது என்று என்னிடம் கேட்டபோது, பாலு அண்ணன்தான் அதைத் துண்டாக்கி விட்டார் என்று கூறினால், உங்களுக்கு ஆசிரியரிடமிருந்து அடி கிடைக்குமே என்று பயந்து, நான் அதை வெயிலில் வைத்ததால் கரிந்து போய்விட்டது என்று ஒரு பொய்யைக் கண்டுபிடித்து கூறியதையும், ஆசிரியர் அந்தத் தகவலை என் தந்தையிடம் கூறியபோது, அவர்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்து என்னை அருகில் வரவழைத்து, மீண்டும் விசாரணை நடத்தியதையும் நான் நன்கு நினைத்துப் பார்க்கிறேன். நீங்கள் என்னை அடிக்கவோ அல்லது வேறு வகையில் குறும்புத் தனங்களை வெளிப்படுத்தவோ செய்யும்போது, நான் கண்களில் நீர் நிறைய தேம்பித்தேம்பி அழுவதும், நீங்கள் என்னையே வெறித்துப் பார்த்துவிட்டு என்மீது இரக்கம் உண்டாகி என் அருகில் வந்து, கண்ணீரைத் துடைத்து கன்னத்தில் முத்தமிட்டு, என்னை முதுகில் சுமந்து நீண்ட தூரம் குதிரைச் சவாரி செய்யவைத்து, என்னை மீண்டும் சிரிக்கச் செய்ததும், வேறு நினைவுகளும், இளமைக்கால கொண்டாட்டத்தின் கொடிகளைப்போல எனக்கு முன்னால் பறந்துகொண்டிருக்கின்றன. ஹா! அந்த சிறுபிள்ளைப் பிராயம் எவ்வளவு புனிதமானதாக இருந்தது! எந்த அளவிற்கு அன்பு நிறைந்ததாக இருந்தது! அது ஒரு கனவைப்போல அப்படியே கடந்து போய்விட்டது. நீண்ட காலம் செல்லம் கொடுத்து கொஞ்சி வளர்த்த ஒரு பஞ்சவர்ணக்கிளிபோல அது கைகளை விட்டு பறந்து போய்விட்டது.


அதைத் தொட்டுக் கொஞ்சுவதற்கு இனிமேல் முடியாது. வெட்டவெளியின் தூரத்திலிருந்து கேட்கும் அந்த இனிய இசையின் மெல்லிய எதிரொலிப்பை மட்டுமே கேட்டு நாம் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

கிழக்கு திசையிலிருக்கும் குளத்தில், உங்களுடைய கைகளில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நீச்சல் கற்றுக்கொண்ட அந்த மழைக் கால நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். நீங்கள் முதல் முறையாக என்னை திரைப்படம் பார்ப்பதற்காக அழைத்துச் சென்ற அந்த இனிய நாளையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அடடா! அன்று திரைப்பட அரங்கில் என்ன கூட்டம்! மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் கிட்டத்தட்ட தூக்கி எடுத்துதான் நீங்கள் என்னை உள்ளேயே கொண்டுபோனீர்கள். அதற்குள்ளிருந்த இருட்டைப் பார்த்து நான் பதைபதைத்துப்போய் உங்களோடு சேர்ந்து அமர்ந்திருந்ததையும், திரைச்சீலையில் ஒளிக்கீற்றுகள் பட்டு படங்கள் அசையத் தொடங்கியபோது ஆச்சரியத்தால் என்னுடைய கண்கள் பிரகாசமடைந்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அப்போது பார்த்த திரைப்படத்தின் கதை என்ன என்பது இப்போது முழுமையாக ஞாபகத்தில் இல்லையென்றாலும், தாய் இல்லாத ஒரு பெண் குழந்தையை அவருடைய சித்தப்பா கடுமையாக தண்டிப்பதைப் பார்த்து நான் தேம்பித் தேம்பி அழுததையும், ‘நம்மையும் இப்படி தண்டிப்பதற்கு ஒரு மனைவியை அப்பா திருமணம் செய்யாமல் விட்டது எவ்வளவு நல்ல விஷயம்!' என்று நான் கூறியதையும், நீங்கள் பாசத்துடன் சற்று புன்சிரித்ததையும் நான் மறக்கவில்லை.

அந்தக் காலத்தில் அப்பாவைவிட நான் அன்பு வைத்திருந்தது- பாலு அண்ணா, உங்கள்மீதுதான். என்னுடைய பாலு அண்ணாவால் முடியாதது எதுவுமே இல்லை என்பதுதான் என்னுடைய நம்பிக்கையாக இருந்தது. என் தோழிகளின் கையில் ஒரு புதிய ரிப்பனையோ, அட்டைப் பெட்டியையோ, தலையில் வைக்கும் குப்பியையோ, வேறு ஏதாவது புதுமையான பொருட்களையோ பார்த்தால் நான் கூறுவேன்: ‘என் பாலு அண்ணனிடம் சொன்னால், எனக்கும் இது கிடைக்கும்' என்று. அதேமாதிரி என்னுடைய வேண்டுகோளை நீங்கள் நிராகரிக்கவே மாட்டீர்கள். உங்களுடைய சிறிய தங்கையின் ஆசைகள் எதுவாக இருந்தாலும், உடனே அவற்றை நிறைவேற்றி வைப்பீர்கள்.

என்னுடைய மூன்றாம் ஃபாரத்தின் தேர்வுக் காலத்தில், பாலு அண்ணா... நீங்கள் தூக்கத்தை விலக்கி வைத்துவிட்டு, எனக்கு பாடங்கள் சொல்லித் தந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த மங்கலான லாந்தர் வெளிச்சத்தில் மிடுக்கான உங்களின் முகத்தின் தோற்றம்- எனக்குள் காரணமே இல்லாமல் மறையாமல் பசுமையாக நின்றுகொண்டிருக்கிறது. அவையனைத்தும் ஏதோ நமக்குத் தெரியாத பிறப்பில் நடைபெற்ற சம்பவங்களைப்போல தோன்றுகின்றன. சுயநலமற்ற, புனிதமான சகோதர உணர்வும், சுதந்திரமும், எந்தவித சிந்தனையுமில்லாத இளம்பருவமும் ஒன்றோடொன்று பிணைந்து ஓடிக்கொண்டிருந்த அந்த இனிமையான காலம் திரும்பவும் வரவா போகிறது?

நான் மூன்றாவது ஃபாரத்தில் தேர்ச்சிபெற்றேன். நீங்கள் பள்ளி இறுதி வகுப்பிற்குச் சென்றீர்கள். நாம் ஒவ்வொரு அங்குலம் வளர வளர, கடுமையான வாழ்வின் உண்மைத்தன்மைகளுக்குள் ஒவ்வொரு அடியாக விழுந்து கொண்டிருந்தோம்.

நம்முடைய தந்தைக்குக் கிடைத்த மிகக் குறைவான சம்பளத்தைக் கொண்டு நம் இருவரின் படிப்பையும் தொடரச் செய்வதற்கு இயலாத சூழ்நிலை உண்டானது. அதனால்.. பாலு அண்ணா... உங்களின் படிப்பு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தொடரட்டும் என்பதற்காக நான் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டேன். குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்பு வரையாவது படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தாலும், பாலு அண்ணா... உங்களுக்காக நான் அப்படிப்பட்ட ஒரு தியாகத்தைச் செய்து, எனக்கு நானே நன்றி தேடிக்கொண்டேன்.

அதற்குப் பிறகு நான்கு வருடங்கள் கடந்தோடின. நீங்கள் இரண்டு முறை தேர்வில் தோல்வி அடைந்தீர்கள். மூன்றாவது முறை தேர்வை முழுமை செய்துவிட்டு, வேலை தேடுவதில் இறங்கினீர்கள்.

நீங்கள் இரண்டு வருடங்கள் அலைந்து திரிந்தீர்கள். எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை. இறுதியில் வெறுப்படைந்து, நீங்கள் மாநிலத்தைவிட்டே வெளியேறுவதற்குத் தயாராகி விட்டீர்கள். நீங்கள் அந்த மாதிரியான ஒரு தீர்மானத்திற்கு வந்தபிறகு, உங்களிடம் உண்டான குணமாறுதல்களையும், நடவடிக்கைகளில் பொருத்தமற்ற தன்மைகள் வந்துசேர்ந்ததையும் மிகவும் தாமதமாகத்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்கள் எப்போதும் எனக்கு அருகில் சிந்தனைவயப்பட்ட நிலையில் வந்துநிற்பீர்கள். வாழ்க்கையை நடத்துவதற்கான சிரமங்கள் ஒருபக்கமும், குடும்பத்தைவிட்டுப் பிரிகிறோமே என்ற வேதனை இன்னொரு பக்கமும்... நீங்கள் மிகவும் ஆடிப்போய் விட்டிருக்க வேண்டும். இறுதியில் ஒருநாள்... என்னுடைய தங்கச்சங்கிலியை வாங்கிக்கொண்டு நீங்கள் கிளம்பிவிட்டீர்கள்.

உங்களின் பிரிவு என்னை மிகவும் கவலைப்படச் செய்தது. என்னுடைய வாழ்வின் ஒரு பகுதியே இடிந்து விட்டதைப்போல நான் உணர்ந்தேன். வயதாகிவிட்ட அப்பாவும் மிகவும் கவலைப்பட்டார்.
குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்ட ஒரு பெண் திருமணம் செய்யாமல் வீட்டில் இருக்கிறாள் என்னும் விஷயம், ஒரு தந்தையின் மனரீதியான கவலைக்கு காரணமாக அமைகிறது. யாரோ கூறியதைப்போல, இந்தக் காலத்தில் ஒரு திருமணமாகாத கன்னிப்பெண் ஒரு ‘ஃபயர் எஞ்ஜின்' மாதிரிதான். அவள் எந்தவொரு நிமிடத்திலும் தயார் நிலையிலேயே இருக்கிறாள். ஆனால், மிகவும் அரிதாகவே, அவள் தேவைப்படுகின்ற அழைப்பு வரும்.

புனிதம் நிறைந்த என்னுடைய வாழ்க்கையை நல்லதொரு அழகான தோற்றத்தைக் கொண்ட கணவனுக்கு அர்ப்பணம் செய்ய நான் ஆசைப்பட்டேன். ஆனால், என்னுடைய காதலை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் வரவில்லை. சமுதாயத்தின் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு அழகு என்பது ஒரு அகங்காரமான விஷயம். நடுத்தர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அது ஒரு அலங்காரம். ஆனால், ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் அது ஆபத்தான விஷயம். எனக்கு ஏராளமான அழைப்புகள் வந்துகொண்டிருந்தன- என்னுடைய அழகை ஆணின் கேவலமான சுயநலம் கொண்ட காமவெறிக்கு விளையாட்டுப் பொருளாக இருக்கும் படி! நான் வெறுப்புடன் அதிலிருந்து விலகிச் செல்லச் செல்ல... ஏராளமான வெளி எதிரிகளை சம்பாதிக்க வேண்டியதாகிவிட்டது.

கம்பெனி காவலாளியான அப்பாவை வேலையிலிருந்து போகச்சொல்லிவிட்டார்கள். உணவுக்கு வழியில்லாமல் ஆகிவிட்டது. உங்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆறு மாதங்கள் கடந்தோடின. வாழ்க்கையில் சிரமங்கள் மேலும் அதிகரித்துக்கொண்டே வந்தன. அதன் உச்சநிலையில் அப்பாவிற்கு நோய் உண்டாக ஆரம்பித்தது- பக்கவாதம்.

நோய்க்கு சிகிச்சை செய்ய கையிலிருந்த பணம் முழுவதும் தீர்ந்தது. அதற்குப் பிறகு எஞ்சியிருந்த என்னுடைய நகைகளிலும் அப்பா கை வைத்தார். போதாது என்ற நிலை வந்தபோது, வீட்டிலிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தார்.



அதுவும் போதவில்லை என்ற நிலை உண்டானபோது, வீட்டை அடமானம் வைத்தார். அதற்குப் பிறகும் நோய் குணமாகவில்லை. அது மட்டுமல்ல; நோயின் இன்னொரு பக்கமோ என்று தோன்றுவதைப்போல தந்தையின் பசியின் வேகமும் பயங்கரமாக அதிகமானது. அப்பா வெறிபிடித்ததைப்போல உணவை அள்ளிச் சாப்பிடும் அந்தக் காட்சியை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. என்ன சாப்பிட்டாலும், ஜீரணமாகிவிடும். எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்கவே அடங்காது. ‘அய்யோ... பசிக்குது. ஜானு, சோறு... சோறு...' என்ற அந்த வார்த்தைகள் ஒவ்வொரு நாளும் பத்து முறையாவது அறையில் ஒலிப்பதைக் கேட்கலாம். உணவு எங்கிருந்து கிடைக்கும் என்ற சிந்தனை அவருக்கு இல்லை. வாழ்க்கையில் மீதமிருந்த ஆசைகளும் சந்தோஷங்களும் அப்பாவின் ரத்தத்திற்குள் போய் குடியிருக்க ஆரம்பித்து விட்டன என்று தோன்றியது. ஊரில் கிடைக்கும் தின்பண்டங்கள் எதைப் பார்த்தாலும் அப்பா ஏங்குவார். வீட்டிலோ ஒரு வேளை கஞ்சிக்குக்கூட வழியில்லை. நான் எங்கு போவேன்?

நம்முடைய வீட்டிற்கு அருகில் நல்ல வசதி படைத்த ஒரு பள்ளிக்கூட மேனேஜர் இருந்தார். ஒருநாள் நான் அவரை அணுகி சூழ்நிலைகள் அனைத்தையும் வேதனையுடன் கூறினேன். ‘எனக்கு உங்களின் பள்ளிக் கூடத்தில் ஒரு வேலை போட்டுத் தந்தால், மிகவும் உதவியாக இருக்கும்' என்று நான் அவரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்.

அவர் என்னையே கூர்ந்து பார்த்தார் ‘செகன்டரியில் பயிற்சி இருக்கிறதா?' அவர் கேட்டார்.

‘இல்லை...' நான் பணிவுடன் பதில் கூறினேன்: ‘பயிற்சி பெறவில்லை. மூன்றாவது ஃபாரத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.'

‘எங்களுக்கு பயிற்சி பெறாதவர்கள் தேவையில்லை.' அவர் எந்தவொரு இரக்க உணர்வும் இல்லாத குரலில் சொன்னார்.

ஏமாற்றத்தால் என்னுடைய முகம் வெளிறியது. அவர் மீண்டும் என்னையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு மெல்லிய புன்சிரிப்பு அந்த உதடுகளுக்கிடையே தவழ்ந்துகொண்டிருந்தது. அது அந்த முகத்தை மேலும் அவலட்சணமாகத் தோன்றும்படி செய்தது. ‘எது எப்படி இருந்தாலும்... யோசனை செய்வோம்.

பிறகு வாங்க' அவர் அமைதியான குரலில் கூறினார். மீண்டும் உண்டான ஆசையுடன் நான் நடந்தேன். அதற்குப் பிறகும் நான்குமுறை நான் அந்த மேனேஜரைப் போய்ப் பார்த்தேன். அவருடைய முகத்தைப் பார்க்கும்போது உண்டாகக்கூடிய வெறுப்பை மனதிற்குள் மறைத்துக்கொண்டு, முடிந்தவரைக்கும் பணிவை வரவழைத்தேன். என்னிடம் தைரியம் உண்டாக, நான் முயற்சித்தேன். அம்மை நோயால் ஏற்பட்ட புள்ளிகள் நிறைந்து, கரடுமுரடாகவும், எந்தவொரு முறையான வடிவமும் இல்லாததுமான அந்த முகமும், வளைந்து நெளிந்து இருந்த மூக்கும், முழுமையாக வெளியே தெரிந்த கேவலமான குணமும் அவருக்குள் இருந்த மிருகத்தனத்தை வெளிப்படையாகக் காட்டின.

சுருக்கமாகக் கூறுகிறேன். அவர் எனக்கு வேலை தந்தார். ஆனால், அதனால் எங்களுடைய பட்டினி நிலை சரியாகி விடவில்லை. பணம் ஏதாவது கிடைப்பதற்கு, ‘க்ராண்ட் காலம்' வரவேண்டும்.

ஒருநாள் நான் மேனேஜரை வீட்டில் போய் பார்த்து ஏதாவது தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

‘தற்போதைக்கு என் கையில் எதுவுமில்லை.' முதலில் அவர் மிடுக்கான குரலில் கூறினார். நான் மிகுந்த கவலையுடன் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரம் சென்றதும் அவர், முன்பு என்னிடம் வெளிப்படுத்திய அந்த புன்சிரிப்பை மீண்டும் வெளிப்படுத்தினார்.

‘இரவு நேரத்தில், ஏதாவது திசையிலிருந்து ஏற்பாடு செய்துவிட்டு நான் அங்கே வர்றேன்' என்றார் அவர்.

இறுதியில் கூறிய வார்த்தைகள் தாழ்ந்த குரலில் வந்தன. அவர் கூறிய வார்த்தைகளுக்குள் மறைந்திருந்த உள்ளர்த்தம் எனக்கு உடனடியாகப் புரிந்தது. அவருடைய அந்தப் பார்வையும் வார்த்தைகளும் நடவடிக்கைகளும் மொத்தத்தில் எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதைக்கு எதுவும் பேசாமல் நான் திரும்பி வந்துவிட்டேன்.

அன்று இரவு எனக்கு சிறிதுகூட தூக்கம் வரவில்லை. என்னுடைய மூளையில் ஆழமான சிந்தனைகள் எழுந்துகொண்டே இருந்தன. வாழ்க்கையை நான் ஒரு பயங்கரமான இருட்டைப்போல முன்னால் பார்த்தேன்.

நள்ளிரவு தாண்டியது. என்னுடைய அறையின் சாளர ஓட்டையின் வழியாக, ஒரு டார்ச் விளக்கின் வெளிச்சம் படுக்கையில் விழுந்தது. தொடர்ந்து ‘ஜானு... ஜானு...' என்று தாழ்ந்த குரலில் ஒரு அழைப்பும்...

சம்பவத்தின் உண்மை நிலை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் படுக்கையில் அசையாமல் கவிழ்ந்து படுத்திருந்தேன்.

அந்த காமவெறி பிடித்த பிசாசின் பயங்கரமான முகம் சாளரத்தின் கம்பிகளோடு சேர்ந்து தோன்றுவதை நான் சற்று பார்த்தேன்.

‘என்ன வேணும்?' ஒரு நூறு முறை அதே கேள்வியை நான் எனக்குள்ளேயே கேட்டிருப்பேன்.

என்னுடைய புனிதத் தன்மையையும், நல்ல பெயரையும் எந்தக் காலத்திலும் பலிகடாவாக்கி விடக்கூடாது என்று ஒரு நிமிடம் மனதிற்குள் நினைப்பேன். மறு நிமிடம்

‘ஜானு... சோறு... சோறு...' என்ற தந்தையின் அந்த பசி நிறைந்த வார்த்தைகளை நான் நினைத்துப் பார்ப்பேன். மறுநாள் கஞ்சி உண்டாக்குவதற்கு வீட்டில் ஒரு பொட்டு அரிசிகூட இல்லை. எங்களுக்கு உதவுவதற்கு யாருமில்லை. ‘நான் வேலை செய்கிறேன். எங்களுக்கு கஞ்சி தரணும்' என்று போய்க் கூறினால், என்னுடைய உடலின் அழகை ஆராய்ச்சி செய்யாமல் எனக்கு வேலை தரக்கூடிய ஒரு நிறுவனத்தையும் அரசாங்கமோ சமுதாயமோ படைத்திருக்கவில்லை. ‘நான் பட்டினியையும் சிரமங்களையும் தாங்கிக்கொண்டு இதுவரை பத்திரப்படுத்தி காப்பாற்றிய புனிதத் தன்மை என்னிடம் இருக்கிறது. இல்லையா சுவாமி, எனக்கு உணவு தா...' என்று நான் கூறும்போது, பசியைப் போக்குவதற்கு எனக்கு ஏதாவது தரக்கூடிய எந்தவொரு மத அமைப்பையும் எனக்குத் தெரியாது!

அந்த டார்ச் வெளிச்சம் மீண்டுமொருமுறை பிரகாசித்தது. என்னுடைய முகத்தில்தான்... நடுங்கிக்கொண்டிருக்கும் குரலில் காமத்தின் சத்தம் மீண்டும் மீண்டும் கேட்டது.

நான் படுக்கையில் அதே நிலையில் சிறிதும் அசையாமல் மல்லாந்து படுத்திருந்தேன். என்னுடைய கண்களிலிருந்த கண்ணீர் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது. இதயத்தில் உண்டான கவலை தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்தது. வாய்விட்டு அழாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நான் தலையணையைக் கடித்தேன்.

மேலும் சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்துவிட்டு, அதற்குப் பிறகு... அந்தப் பிசாசு போய் விட்டது என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஆனால், சகோதரா... சமுதாயத்தில் கெட்ட பெயர் வாங்குவதைவிட, அதனால் உண்டாகக்கூடிய கேவலமான ஒதுக்கி வைத்தலைவிட... இன்னும் சொல்லப்போனால்- கடவுளைவிட பயப்படக்கூடிய ஒரு விஷயம் இருக்கிறது- பசி! அதன் பலமான எல்லைக்கு கீழ்ப்படியாத உணர்ச்சிகள் இல்லை. ஒருநாள் நான் அந்த மேனேஜருக்கு கீழ்ப்படிந்தேன்.


ஒரு பெண் ஒரு முறை, ஒரு ஆணுக்கு காமவிஷயத்தில் கீழ்ப்படிந்துவிட்டால், அவள் நிரந்தரமாக அவனுக்கு அடிமையாகி விட்டாள் என்றுதான் அர்த்தம். ஏதோ ஒரு எழுதப்படாத சட்டத்தை அவன் எடுத்துப் பயன்படுத்துவான். மிகச் சில நாட்களிலேயே நான் கிட்டத்தட்ட அந்தக் கிழவனின் வைப்பாட்டி என்ற நிலைக்கு ஆளாகிவிட்டேன்.

ஒரு நன்றியுணர்வு மட்டும் எனக்கு இருந்தது. அப்பாவுக்கு சிறிதும் தடை இல்லாமல் சாப்பாடு கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதே அது...

அதற்குப் பிறகும் ஆறு மாதங்கள் கடந்தோடின. தந்தைக்கு மன நலம் பாதிக்கப்பட்டது. நாடி நரம்புகள் செயல்படாமல் போயின. சரீரம் ஒரு பழைய துணியைப் போல ஆனது. ஆனால், வயிறு மட்டும் ஒரு நெருப்பு மலையைப்போல எரிந்துகொண்டேயிருந்தது. அதே நிலையில் ஒரு மாதம் நரக வேதனையை அனுபவித்த பிறகு, அப்பா இந்த உலகத்தின் சிரமங்களிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல், மிகவும் அமைதியாக விடை பெற்றுப் பிரிந்து சென்றுவிட்டார்.

அப்போதுதான் என்னுடைய தனிமைச் சூழலின் பயங்கரத்தன்மையை நான் முழுமையாக உணர்ந்தேன். இன்னொரு உண்மையும் என்னுடைய இதயத்தை சுட்டெரித்துக் கொண்டிருந்தது- நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதே அது.

அப்பா இறப்பதற்கு முன்பே வீட்டை, கடன் தந்த ஆள் தன்வசம் எடுத்துக் கொண்டார். தந்தை மிகவும் இயலாத நிலையில் இருந்த காரணத்தால், அவரை அங்கிருந்து வெளியேற்றக்கூடிய மன வருத்தம் இருந்ததால், கடன் கொடுத்தவர் இதுவரை அதற்காகக் காத்திருந்தார். அப்பா இறந்தவுடன், வீட்டைக் காலி செய்து தந்துவிடவேண்டும் என்று உரிமையாளர் கேட்டுக் கொண்டார்.

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற உண்மையை ஆட்கள் தெரிந்து கொள்வதைவிட எனக்கு அவமானகரமான விஷயமாகத் தோன்றியது- அதற்குக் காரணகர்த்தா அந்த மேனேஜர்தான் என்பதைத் தெரிந்து கொள்வது. அவரும் வெளிப்படையாக அதை மறுப்பார் என்று எனக்குத் தெரியும். அதனால் நாங்கள் அந்த விஷயத்தை சமாதானமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தோம். அவர் எனக்கு கொஞ்சம் பணம் தந்தார். நான் பள்ளிக்கூடத்திலிருந்து விலகி, இன்னொரு ஊருக்குச் சென்று ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து வசிக்க ஆரம்பித்தேன்.

என்னுடைய கர்ப்பம் முழுமையான சமயத்தில் கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. இறுதியில் பிரசவத்திற்கு மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தேன்.

எனக்குத் தேவைப்படாமல் பிறந்த அந்தக் குழந்தை பிரசவத்திலேயே இறந்துவிட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டிய அந்த நாள் வந்தது. இரவு வேளையில் எங்கே இருப்பது என்பதைப் பற்றி எந்தவொரு நிச்சயமும் இல்லாத ஒரு பெண்ணாக நான் இருந்தேன். அவளுடைய எரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களை வேறு யாராலும் மனதில் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. எந்தவொரு இலக்கும் இல்லாமல் நான் மருத்துவமனையைவிட்டு வெளியேறி சாலையில் சிறிது தூரம் நடந்தபோது யாரோ பின்னாலிருந்து என்னை அழைத்ததைப் போல எனக்குத் தோன்றியது. நான் திரும்பிப் பார்த்தேன். ஒரு இளைஞன் தன்னுடன் வரும்படி என்னைப் பார்த்து சைகை செய்தான்.

அவனை மருத்துவமனையில் இருந்தபோது ஓரிருமுறை பார்த்திருக்கிறேன் என்பது மட்டுமே பழக்கம் என்றிருந்தாலும், மூழ்கி சாக இருக்கும்போது, சிறிய வைக்கோல் கூட பெரியதுதான் என்ற உண்மையுடன், நான் அவனைப் பின்பற்றிச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தேன்.

நாங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தை அடைந்தவுடன், அவன் என்னிடம் கேட்டான்: ‘நீ எங்கே போகிறாய்?'

என்னுடைய நிலையை முழுமையாக உணர்ந்து கொண்டிருந்ததைப் போல இருந்தது அந்தக் கேள்வி. நான் பதில் எதுவும் கூறாமல் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

‘என்னுடன் வந்தால் நான் ஒரு பனியன் கம்பெனியில் வேலை வாங்கித் தருகிறேன். சம்மதமா?' நான் சந்தோஷத்துடனும் நன்றியுடனும் சம்மதித் தேன்.

அந்த மனிதனுடன் சேர்ந்து நான் இந்த நகரத்திற்கு வந்தேன். அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னைக் காப்பாற்றுவதற்காக வந்த ஒரு கடவுளின் தூதுவனைப் போலவே அவன் நடந்துகொண்டான்.

‘ஜானு... நீ பிரசவமாகி அதிக நாட்கள் ஆகவில்லையே! உன்னுடைய உடல் நலம் சரியாகும்வரை, ஒரு பதினைந்து நாட்கள் நீ ஓய்வு எடுக்கணும்.'

அவன் எனக்கு அன்புடன் அறிவுரை கூறினான். தொடர்ந்து அன்று இரவு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அங்கு சற்று வயதான ஒரு பெண் இருந்தாள். அவளிடம் என் நண்பன், ‘கல்யாணியம்மா, இவள் இங்கே பதினைந்து நாட்கள் தங்கி இருக்கட்டும். நீங்கள் இவளுக்குத் தேவைப்படுபவற்றைக் கொடுத்து, கவனமாகப் பார்த்துக்கொள்ளணும். இந்த அறையை விட்டு வெளியே எங்கேயும் விடக்கூடாது' என்றான்.

இரண்டு நாட்கள் கழித்து திரும்பி வருவதாகக் கூறிவிட்டு அவன் போய்விட்டான்.

கல்யாணியம்மா எனக்கு பளபளப்பான ஆடை களைத் தந்தாள். நல்ல உணவு, உடல் தேறக்கூடிய மருந்து ஆகியவற்றை அன்புடன் கொடுத்து அவள் என்னை மகளைப்போல கவனித்துக்கொண்டாள்.

ஆனால், பதினைந்து நாட்கள் தாண்டிய பிறகும் நான் உயர்வாக நினைத்த இளைஞன் திரும்பிவரவில்லை. பதினாறாவது நாள் கல்யாணியம்மா என்னிடம் சொன்னாள். ‘பதினைந்து நாட்களுக்கான செலவு 35 ரூபாய். ஆடைகளுக்கு 12 ரூபாய். மொத்தம் 47 ரூபாய். பணம் எங்கே?'

‘அவர் வரட்டும்...' நான் முகத்தை குனிந்துகொண்டு பதில் கூறினேன்.

‘எந்த அவர்?' கல்யாணியம்மா மிடுக்கான குரலில் சொன்னாள்: ‘அவன் இனிமேல் வரமாட்டான்...'
அந்த அம்மா என்னிடம் அனைத்து உண்மைகளையும் மனம்திறந்து கூறினாள். அது ஒரு பெரிய விபச்சாரிகள் விடுதி என்பதையும், கல்யாணியம்மாதான் அதன் தலைவி என்பதையும், என்னுடைய செலவிற்கு தேவைப்படும் பணத்தை நானேதான் உழைத்து சம்பாதித்துக் கொடுக்க வேண்டுமென்பதையும் நான் தெரிந்துகொண்டேன். எந்தவொரு வருத்தமும் இல்லாமல் நான் எல்லாவற்றையும் காதில் வாங்கிக்கொண்டேன்.

‘பிறந்துவிட்டேன் அல்லவா? இனி எப்படியாவது வாழ வேண்டியதுதான்...' என்று நான் முடிவு எடுத்துக் கொண்டேன்.

விலைமகளாக இருப்பதற்கான ஆரம்பப் பாடங்களை கல்யாணியம்மா எனக்கு கற்றுத் தந்தாள்.

ஒரு விலைமகளாக வாழ்க்கையை நடத்துவதற்கு முதலில் எந்தவொரு பெண்ணும் விரும்பமாட்டாள். தன்னுடைய பெண்மைத்தன்மையிடம் இறுதியாக விடைபெற்றுக்கொண்ட பிறகுதான் அந்த கேவல மான வேலையைச் செய்வதற்கு ஒரு பெண் சம்மதிக் கவே செய்வாள். விலைமகளின் புன்னகைக்கும் வெளித் தோற்றத்திற்கும் பின்னாலிருக்கும் அந்த வாழ்க்கை யைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.



மறைத்து வைத்த பயங்கரமான நோய்களைக்கொண்ட பெரிய மனிதர்கள், அரக்கத்தனமான காமவெறி படைத்த அவலட்சணமான தோற்றத்தைக் கொண்டவர்கள், மது அருந்தி சுய உணர்வே இல்லாமல் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ஊர் சுற்றிகள், பார்க்கும்போது சாதுவான முக வெளிப்பாட்டுடனும் மனதிற்குள் பயங்கரமான சிற்றின்பச் சிந்தனைகளுடனும் இருக்கக்கூடிய காமப்பிசாசுகள், சிற்றின்ப பட்டினியைச் சரிபண்ணுவதற்கு மிகுந்த வெறியுடன் தொந்தரவு செய்யும் மனித ஓநாய்கள்- இவர்களுக்கு முன்னால் நிர்வாணமாக இருக்கவேண்டும். அதுதான் எங்களுடைய தொழில். ஆரம்பத்தில் எங்களுக்கு எரிச்சலும் வெறுப்பும் பயமும் கவலையும் உண்டாகும். ஆனால், காலப்போக்கில் அவற்றில் ஈடுபட ஈடுபட எங்களுடைய மூளையின் சிந்தனை சக்தி இல்லாமல் போகிறது. இதயத்தின் உணர்ச்சிகள் அழிகின்றன. இறுதியில் வயிற்றின் அழைப்பு மட்டுமே எஞ்சி நிற்கிறது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் ஒரு சர்க்கஸ் கம்பெனியின் காட்டு மிருகங்களைப் போன்றவர்கள் நாங்கள். பகல் முழுவதும் தின்றுவிட்டு படுத்து உறங்கவேண்டும். இரவு நேரம் வந்துவிட்டால் எங்களை அரங்கத்திற்கு அழைத்துக்கொண்டு வருவார்கள். அங்கு எங்களை வைத்து, எங்கள் விருப்பத்திற்கு எதிராக பல விளையாட்டுகளையும் விளையாடுவார்கள்.

அதே நிலையில் ஒன்றரை வருடகாலமாக நான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நேற்று மாலையில் வழக்கம்போல நான் யாரென்று தெரியாத அந்த காமதூதுவனின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த மாளிகையில் அலங்கரித்துக்கொண்டு நின்றிருந்தேன். எட்டுமணி வரை எதிர்பார்த்தும், யாரும் வரவில்லை. அவ்வப்போது நான் முகத்திற்கு பவுடர் பூசினேன். உதடுகளில் சிவப்புச் சாயத்தைப் பூசினேன். கூந்தலில் முல்லை மலரைச் சூடினேன். முகத்தை மட்டும் சாளரத்தின் வழியாக வெளியே தெரியும்படி வைத்துக்கொண்டு ஸோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

அதற்குப் பிறகும் சில மணி நேரம் கடந்தன. கீழே சாலையில் கார்கள் வந்துபோய்க்கொண்டிருக்கும் சத்தம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டிலிருந்த என்னுடைய தோழிகளில் சிலர் பாடிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று தலைவி அறைக்குள் வந்து என்னிடம் அறிவித்தாள்: ‘ஆள் வந்திருக்கு'. ஒரு புதிய நோயாளி வந்திருக்கும் செய்தியைக் கேட்டவுடன், ஒரு டாக்டருக்கு உண்டாகக்கூடிய பரபரப்புடன் நான் காத்திருந்தேன்.

தலைவி உங்களை என்னுடைய அறைக்குள் அனுப்பி வைத்தாள். நான் புதிய மணப்பெண்ணைப் போல நடித்துக்கொண்டு, முகத்தை குனிந்தபடி உட்கார்ந்திருந்தேன்.

நீங்கள் எனக்கு அருகில் வந்து, ஒரு கையால் என் வலது கையைப் பற்றி, இன்னொரு கையால் என்
தாடைப் பகுதியைப் பிடித்து உயர்த்தினீர்கள். நான் ஒரு கவர்ச்சியை வரவழைத்துக்கொண்டு உங்களுடைய முகத்தைப் பார்த்தேன். உடனே எனக்கு நீங்கள் யாரென்று தெரிந்துவிட்டது. ஆனால், என்னுடைய முகத்தில் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் உண்டாகவில்லை. மரத்துப்போய் துரும்பு பிடித்த இதய நரம்புகளில், உணர்ச்சிகளின் மின் அணுக்களால் பயணிக்க முடியுமா என்ன? ஆனால், நீங்கள் என்னையே வெறித்துப் பார்த்ததையும், உங்களுடைய முகம் வெளிறிப்போனதையும், கண்கள் சுருங்கியதையும், தொண்டையில் ஒரு கடுமையான சத்தம் உண்டானதையும் நான் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். உங்களுடைய பிடி தளர்ந்தது. என்னுடைய கை மடியின்மீது சோர்ந்து விழுந்தது. சுட்டுவிரல் பாதி அறுபட்ட நிலையில் இருந்த அந்தக் கையிலேயே அதற்குப் பிறகு இருந்த பார்வை பதிந்திருந்தது. மிச்சம் மீதியிருந்த சந்தேகம் அந்த அறுபட்ட விரலில் முடிவடைந்துவிட்டது. என்னுடைய பார்வை உங்களையே பின்தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போதும் என்னுடைய முகத்தில் அந்த வெறுப்பு கலந்த கவர்ச்சிச் சிரிப்பு தவழ்ந்துகொண்டுதான் இருந்தது.

ஆறு வருடங்களுக்குப் பிறகு, விதி... அதாவது சம்பவங்களின் எதிர்பாராத விளையாட்டு ஒரு சகோதரனையும் ஒரு சகோதரியையும் மீண்டும் இப்படிப் பட்ட நிலையில்தான் சந்திக்க வைத்தது. சமுதாயத்தின் கேவலமான மூலையில், ஒழுக்கத்தின் கசாப்புக்கடையில், பசியைப் போக்குவதற்காக தன்னுடைய தோலையும் சதையையும் விற்பனை செய்யும் சகோதரியை நீங்கள் தெளிவாகப் பார்த்தீர்கள் அல்லவா?

ஒரு விபச்சாரி! அவள் தேவைப்படுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அன்பு வைத்திருப்பவர்கள் யாருமில்லை. சகோதரா, வெறுப்பவர்களை வசீகரிப்பது... வசீகரித்தவர்களை ஏமாற்று வது... அதுதானே ஒரு விலைமகளின் ‘தர்மம்'?

வக்ரத்தன்மை நிறைந்த ஒரு பார்வை, வஞ்சனை நிறைந்த ஒரு புன்சிரிப்பு- இவை இரண்டும்தான் விலைமகளின் சொத்தே. பசி ஒன்றுதான் அவளை உலகத்துடன் இணைக்கிறது. வாழவோ, இறக்கவோ முடியாத ஒரு நிலை... சகோதரா, அப்படியொன்றை கற்பனை செய்ய முடிகிறதென்றால், அதற்குப் பெயர்தான் விபச்சாரம்.

பல நேரங்களிலும் நான் சற்று வாய்விட்டு அழவேண்டுமென்று ஏங்கியிருக்கிறேன். ஹா... காட்டாற்றைப்போல இதயம் வெடித்து தேம்பித் தேம்பி அழுவது... அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், என்னுடைய இதயத்தில் அழுகை வரக்கூடிய மெல்லிய ஊற்றுகூட மூடப்பட்டிருக்கிறது. கொல்லனின் கடையும் சக்கரத்தில் கத்திபடும்போது, சிதறித் தெறிக்கும் நெருப்புப் பொறிகளைப்போல, சம்பவங்களின் மோதல் உங்களுடைய இதய நரம்புகளில் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்திருக்குமோ? உடலுக்கு அப்பாற்பட்ட ஒரு சந்தோஷ நிலைக்கு மனித வாழ்க்கையை அழைத்துச் செல்லும் இனிய உணர்வுகள் ஒரு பக்கம் இருக்கட்டும்... வாழ்க்கையின் சந்தோஷ மையங்களை நோக்கி தப்பி ஓடுவதற்காக நம்மைச் சிந்திக்கச் செய்யும் கடினமான வேதனைகள்கூட என்னைத் தொடுவதில்லை. பல வகைப்பட்ட காமலீலைகள் என்னிடம் காட்டப் படுகின்றன. ஆனால் நானோ, அந்த அசையும் படங்களுக்கெல்லாம் ஒரு நிர்வாண திரைச்சீலை மட்டுமே. என்னுடைய வாழ்க்கை வெறும் ஒரு பழைய துணி...

சமுதாயம் வெறுக்கக்கூடிய உயிருள்ள ஒரு பொருள் நான் என்ற முழுமையான புரிதல் எனக்கு இருக்கிறது. என்னைப் போன்ற விலைமகளிரைத் தவிர, தோழிகள் என்று எனக்கு யாருமில்லை. அவர்களும் என்னை பொறாமையுடன் நினைத்துக்கொண்டிருப்பவர்களே என்ற விஷயம் எனக்குத் தெரியும். எனினும், நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எதற்காக வாழ்கிறேன்? அந்தக் கேள்வியை இதுவரை நான் என்னிடம் கேட்டதில்லை.

என்னை வெறுப்பவர்களின்மீது எனக்குச் சிறிதுகூட கோபம் இல்லை. அதே நேரத்தில்- யாராவது என்மீது பரிதாப உணர்வுடன் வந்தால், பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு கோபம் உண்டாகும். அதனால்தான் நான் தனிமையில் இருந்துகொண்டிருக்கிறேன். சமீபத்தில் ஒருநாள் கதராடை அணிந்த சுறுசுறுப்பான ஒரு இளைஞன் என்னைச் சுட்டிக்காட்டி தன்னுடைய நண்பனிடம், ‘அதோ... அழகாக ஆடை அணிந்திருக்கும் சமுதாயத்தின் புண்' என்று கூறுவதை நான் கேட்டேன்.


என்னைப் பற்றிய அந்த வர்ணனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் தனியாக உட்கார்ந்து சிரித்துக்கொண்டே அந்த வார்த்தைகளை நான்கைந்து முறை திரும்பத் திரும்ப உச்சரித்துப் பார்த்தேன். இன்னொரு நாள் நடுத்தர வயதைக் கொண்டவரும், பார்வைக்கு கடவுள் பக்தி நிறைந்தவர் என்று தோன்றக் கூடிய உடலமைப்பைக் கொண்டவருமான ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனிதர்- அவர் ஒரு பண்டிதர் என்று தோன்றுகிறது- தன்னுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டு திரும்பிச் செல்லும்போது என்னை நோக்கி கூறினார்: ‘கஷ்டம்! நீ இப்படி கேவலமான நிலைக்குள் விழாமல் போயிருந்தால், எந்தளவிற்கு நல்ல ஒரு மாணிக்கக் கல்லாக இருந்திருப்பாய் தெரியுமா?' என்று. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு வெறியே வந்துவிட்டது. நான் அவரை வாயில் வந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் கூறி விரட்டியடித்தேன்.

இவையெல்லாம் ஒரு சகோதரனிடம் கூறக்கூடிய வார்த்தைகளாக இல்லாமலிருக்கலாம். ஆனால், பாலு அண்ணா... ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரிகளுக்கு தந்தை இல்லை. தாய் இல்லை... சகோதரர்கள் இல்லை... வயது வேறுபாடு இல்லை... ஜாதி இல்லை. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால்- அவள் ஒரு துறவி. அவளுடைய புடவை ஒரு காவித்துணி. நகை- ருத்ராட்ச மாலை. எல்லா உலக உறவுகளையும் துறந்துவிட்டு, எல்லாவற்றிலும் சமத்துவத்தைக் கண்டு, தன்னுடைய சரீரத்தையே எப்போதும் கேவலமாக நினைக்கவும் வெறுக்கவும் செய்யக்கூடிய ஒரு உண்மையான துறவியை வேறு எங்கு பார்க்கமுடியும்?

நான் நிறுத்திக் கொள்ளட்டுமா?

நேரம் ஐந்து மணி கடந்துவிட்டது. தலைவி என்னை குளிப்பதற்காக அழைக்கிறாள். குளித்து முடித்து, கண்மை பூசி, உதடுகளுக்கு சாயம் தேய்த்து, ஆடைகளும் அலங்காரங்களும் செய்து, சாளரத்திற்கு அருகிலிருக்கும் திண்ணையில் ஏறி உட்கார்ந்துகொண்டு, யாரென்று தெரியாத விருந்தினரை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு நேரமாகிவிட்டது.

காலையிலிருந்து இதுவரை ஒரே இடத்தில் அமர்ந்து நான் இந்தக் கடிதத்தை எழுதி முடித்திருக்கிறேன். பாலு அண்ணா! உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதி முடித்தவுடன், அடுத்து எதையும் அனுபவிக்க முடியாத அளவிற்கு ஒரு நிம்மதி எனக்குள் உண்டாகிவிட்டிருக்கிறது. ஆனால், அது எந்தவொரு வகையிலும் எனக்கு மாறுதலை அளித்துவிடவில்லை. ஏதாவதொரு விதத்தில் எனக்கு உதவுவதற்கோ, என்னை இந்த கேவலமான தொழிலிலிருந்து விடுதலை பெறச் செய்வதற்கோ உள்ள ஒரு வேண்டுகோளாக இந்தக் கடிதத்தை நீங்கள் கருதிக்கொள்ளக்கூடாது. அது இயலாத விஷயம். எனக்கு உதவுவதற்கோ, என்னைக் காப்பாற்றுவதற்கோ, நீங்கள் இந்த ஆழமான கடலுக்குள் இறங்கிவந்தால், நீங்கள் என்னுடன் சேர்ந்து வீழ்ச்சியைச் சந்திப்பீர்கள். அந்த வகையில்தான் நம்முடைய சமுதாய அமைப்பு இருக்கிறது. என் தொழில் எனக்கு தற்போதைக்குத் தேவையான அளவிற்கு பணத்தைத் தருகிறது. ஆனால், சிறிது காலம் கழித்து, என்னுடைய முகத்தோலில் சுருக்கங்கள் விழுந்து, சரீரம் நோயால் பாதிக்கப்பட்டு மெலிய ஆரம்பிக்கும்போது,

எனக்கு என் தலைவி நோட்டீஸ் தருவாள். அப்போது இந்த மாளிகையின் மாடியிலிருந்து, கீழே பொருட்கள் வைக்கப்படும் அறைக்கு நான் இடம்மாறிச் செல்ல வேண்டியதிருக்கும். சில நாட்களில் என்னுடைய மெலிந்து போன சரீரம் மேலும் மெலிய ஆரம்பிக்கும். பொருட்கள் போடப்பட்டிருக்கும் அறைக்குள்ளிருந்து தெருவை நோக்கி மீண்டுமொரு இட மாறுதல் உண்டாகும். சமுதாயப் புரட்சி சூழ்நிலைக்கு மாற்றங்கள் உண்டாகாமல் இருக்கும் பட்சம், கண்ட மனிதர்களின் காரித் துப்பலையும், அடி உதைகளையும் வாங்கிக்கொண்டு, ஒரு தகர டப்பாவுடன் மெதுவாக நடந்து போகும்போது, சிறிதும் எதிர்பாராமல் உங்களை நோக்கியும் என்னுடைய தகர டப்பா நீட்டப்படலாம். பாலு அண்ணா! ஒருவேளை... இனி... நாம் அன்று மீண்டும் சந்திக்கலாம்.

இப்படிக்கு
உங்களின் சகோதரி
ஜானகி.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.