Logo

மணப்பெண்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 11451
mana-penn

சுராவின் முன்னுரை

ரத்சந்திரர் (Saratchandra Chattopadhyay)  எழுதிய புகழ் பற்ற ''பரினீதா'' (Parineeta)  நாவலை ''மணப்பெண்'' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

இந்நாவல் 1953இல் பிமல்ராய் இயக்கத்தில் அசோக் குமார், மீனாகுமாரி நடிக்க திரைப்படமாக வந்து வெற்றி பெற்றது. 2005இல் வித்யாபாலன், சஞ்சய்தத், சைஃப் அலிகான் நடிக்க மீண்டும் திரைப்படமாக வந்து வித்யாபாலனின் திரையுலக பயணத்தில் அவருக்கு ஒரு மிக உயர்ந்த இடத்தை பெற்றுத் தந்தது.

லலிதா இந்த கதையின் நாயகி. அவளை சிறுவயதிலிருந்தே நன்கு தெரிந்த சேகர் உயிருக்குயிராக காதலிக்கிறான். அவளுடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்த கிரின்பாபு திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். ஆனால் லலிதாவின் இதயத்தில் இடம்பெற்றிருக்கும் நாயகன் யார்?

இந்த காதல் காவியத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)


டி மேலே விழுந்து அவரைக் கீழே சாய்த்திருந்தால், சந்தேகமே இல்லாமல் அவர் பலமான வேதனையை அனுபவித்திருப்பார். ஆனால், குருச்சரணின் இதயத்தில் காலையிலேயே உண்டான வேதனை அதைவிட அதிகமானதாக இருந்தது. அவருடைய மனைவி அவர்களுடைய ஐந்தாவது பெண் குழந்தையை பத்திரமாகப் பெற்றெடுத்திருக்கிறாள் என்ற செய்திதான் அதற்குக் காரணம்.

குருச்சரண் ஒரு சாதாரண வங்கி க்ளார்க். அவருடைய சம்பளம் அறுபது ரூபாய். எல்லாமே தளர்ந்துபோன ஒரு மனிதரைப் போல தோற்றமளிக்கும் அவருடைய மனம் வாடி வதங்கிவிட்டிருந்தது. எந்த விஷயத்திலும் அவருடைய மனதில் ஒரு ஆர்வமோ, ஒரு ஈடுபாடோ இல்லாமலிருந்தது. அதற்குப் பிறகும், அந்த நல்ல செய்தி அவரின் கையில் இருந்த ஹூக்காவைப் புகைக்கவிடாமல் செய்தது. அவர் அந்த பழமையடைந்து போயிருந்த தலையணையின்மீது மிகவும் பலவீனமாக சாய்ந்துபடுத்தார். உள்ளே நுழைந்த மூச்சுக்காற்றை வெளியே விடுவதற்குக்கூட அவருக்கு பலம் இல்லாமலிருந்தது.

அந்த சந்தோஷம் தரக்கூடிய செய்தியைத் தலையில் வைத்துக் கொண்டு அவருடைய பத்து வயது மகள் அன்னக்காளி ஆடிக் கொண்டிருந்தாள். அவள் கேட்டாள்: “அப்பா, நீங்க வந்து ஒரு முறை பார்க்கக் கூடாதா?''

தன் மகளைப் பார்த்துக்கொண்டே குருச்சரண் சொன்னார்: “எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து தா, மகளே!''

தண்ணீர் கொண்டு வருவதற்காக அன்னக்காளி சென்றாள். அவள் அங்கிருந்து போனவுடன், குருச்சரணின் மனம் பிரசவத்தைத் தொடர்ந்து வரப்போகும் செலவினங்களைப் பற்றி சுழன்று கொண்டிருந்தது. புகை வண்டியில் பயணம் செய்யும் மூன்றாவது வகுப்பைச் சேர்ந்த பயணிகள், பல வடிவங்களிலும் அளவுகளிலும் இருக்கும் தங்களின் பொருட்களை கதவிற்குள் நுழைத்துக் கொண்டு போவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல, எண்ணற்ற கவலைகளும் பிரச்சினைகளும் அவருடைய மனதை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தன. கடந்த வருடம் அவருடைய இரண்டாவது மகளின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றபோது, பவ்பஜாரில் இருக்கும் இந்த இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு அடமானமாக வைக்கப்பட்டதையும், கடந்த ஆறு மாதங்களாக அதற்கு வட்டிகூட கட்டப்படாமல் இருப்பதையும் அவர் நினைத்துப் பார்த்தார். இன்னொரு மகளின் மாமனாருக்கும் மாமியாருக்கும் திருவிழா காலம் தொடங்குவதற்கு முன்னால் பரிசுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு இன்னும் ஒரு மாதமே மீதமிருக்கிறது. நேற்று அலுவலகத்தில் இரவு எட்டு மணிவரை வேலை செய்தும், அவரால் பற்று, வரவு கணக்குகளை நோட்டுப் புத்தகத்தில் முழுமையாக முடிக்க முடியவில்லை. மதியத்திற்குள் இங்கிலாந்திற்கு அந்தக் கணக்குகள் அனுப்பி வைக்கப் படவேண்டும் என்ற கட்டாயம் வேறு இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, அலுவலகத்திற்கு வரும்போது அழுக்கடைந்த, கசங்கிப்போன ஆடைகளை அணிந்து கொண்டு வந்தால், இனிமேல் அபராதம் போடுவேன் என்று வேறு அவருடைய மேலதிகாரி வேறு உத்தரவு போட்டுவிட்டார். ஆனால், போன வாரத்திலிருந்தே ஆடைகளைச் சலவை செய்பவன் வீட்டில் இருந்த பாதி ஆடைகளுடன் காணாமல் போய்விட்டான்.

தலையணை மீது சாய்ந்து படுப்பதற்குக் கூட தன்னிடம் பலம் இல்லாமல் இருப்பதைப் போல இப்போது குருச்சரண் உணர்ந்தார். கையிலிருந்த ஹூக்காவைச் சற்று தள்ளி உயர்த்தியவாறு, அவர் படுக்கையில் சாய்ந்தார். அவர் மனதிற்குள் கூறிக் கொண்டார்: "அன்பான கடவுளே! தினந்தோறும் கல்கத்தாவின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி எத்தனையோ மனிதர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய கண்களில் என்னைவிட அவர்கள் அதிக பாவம் செய்தவர்களாகத் தெரிகிறார்களா? கடவுளே, என்னிடம் சிறிது கருணையைக் காட்டு. என்மீதும் ஏதாவது வாகனத்தை ஓடும்படிச் செய்யக் கூடாதா?”

புறக்கணிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, சுமைகள் சுமத்தப்பட்ட, தன்னுடைய வயதுகளையும் தாண்டி வயதான மனிதராகத் தோற்றம் தந்த அந்த மனிதரின் ஆழத்தில் வேரோடி விட்டிருந்த மன வேதனைகளை குடும்பத்தில் இருந்த வேறு யாரும் உணரவில்லை.

நீரைக் கொண்டு வந்த அன்னக்காளி சொன்னாள்: “அப்பா, எழுந்திருங்க. இந்தாங்க தண்ணி...''

எழுந்து உட்கார்ந்தவாறு, குருச்சரண் ஒரே மூச்சில் நீரைக் குடித்துக்கொண்டே சொன்னார்: “ஆ... டம்ளரை எடுத்துக்கொண்டு போ மகளே!''

அவள் போனவுடன், குருச்சரண் தலையணைமீது மீண்டும் சாய்ந்து கொண்டார்.

அறைக்குள் நுழைந்த லலிதா சொன்னாள்: “மாமா, உங்களுக்காக தேநீர் கொண்டு வந்திருக்கேன். எழுந்திருங்க.''

தேநீர் கொண்டு வந்திருக்கும் தகவலைக் கேட்டவுடன், குருச்சரண் மீண்டும் எழுந்து உட்கார்ந்தார். லலிதாவைப் பார்த்ததும், அவருக்கு ஆறுதலாக இருந்தது. அத்துடன் தன்னுடைய பாதி பிரச்சினைகள் தன்னை விட்டுப் போய் விட்டதைப் போல அவர் உணர்ந்தார். பாசம் பொங்க அவர் சொன்னார்: “இரவு முழுக்க நீ கவனத்துடன் இருந்து பார்த்திருக்கிறாய். வா... வந்து என் அருகில் உட்காரு.''

லலிதா மெல்லிய ஒரு புன்னகையுடன் சொன்னாள்: “நான் இரவு முழுவதும் கண் விழித்துக்கொண்டு இருக்கவில்லை, மாமா.''

அதற்கு குருச்சரண் சொன்னார்: “அது ஒரு பிரச்சினை இல்லை. வா... எனக்கு அருகில் வா.''

லலிதா அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள். குருச்சரண் தன்னுடைய கையை அவருடைய தலையில் வைத்த அடுத்த நிமிடம் உரத்த குரலில் சொன்னார்: “இந்த ஆசீர்வதிக்கப்பட்ட என் குழந்தையை, நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த யாருக்காவது நான் திருமணம் செய்து கொடுத்தால்தான், அது உண்மையான சாதனையாக இருக்கும்.''

தலையைக் குனிந்து கொண்டே லலிதா தேநீரை ஊற்றிக்கொண்டிருந்தபோது, குருச்சரண் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்: “என் கண்ணு... நீ இந்த ஏழை மாமாவின் வீட்டில் எல்லா நேரங்களிலும் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. அப்படித்தானே?''

லலிதா தலையை ஆட்டியவாறு சொன்னாள்: “நான் ஒருத்திதான் எல்லா நேரங்களிலும் கஷ்டப்பட்டு வேலை செய்றேன்னு ஏன் சொல்றீங்க மாமா? எல்லாரும்தான் வேலை செய்றாங்க. அவங்க மாதிரிதான் நானும்.''

இப்போது குருச்சரண் புன்னகைத்தவாறு சொன்னார்: “சரி, லலிதா... இன்னைக்கு சமையல் பொறுப்பு யாரைச் சேர்ந்தது? சொல்லு...''

மேலே பார்த்துக்கொண்டே லலிதா சொன்னாள்: “ஏன் மாமா? நான் பார்த்துக் கொள்வேன்.''

ஆச்சரியப்பட்ட குரலில் அடுத்த நிமிடம் குருச்சரண் சொன்னார்: “எப்படி பார்த்துக் கொள்வாய், என் கண்ணே? எப்படி சமையல் பண்றதுன்னு உனக்குத் தெரியுமா?''

“எனக்குத் தெரியும் மாமா. அத்தையிடமிருந்து நான் பல விஷயங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறேன்.''

தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்த குருச்சரண் கேட்டார்: “உண்மையாகவா?''

“உண்மையாகத்தான். எதையெதைச் செய்ய வேண்டுமென்று அத்தை பல நேரங்களிலும் எனக்கு சொல்லித் தந்திருக்காங்க. அவங்ககிட்ட இருந்து நான் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.


பல சந்தர்ப்பங்களிலும் நானே சமையலையும் செய்திருக்கிறேன்.'' -இதைக் கூறியவாறு லலிதா மீண்டும் தன் தலையைக் குனிந்து கொண்டாள். அவளுடைய தலைமீது தன் கையை வைத்த குருச்சரண் அமைதியாக அவளை ஆசீர்வதித்தார். வீட்டை எப்படி வழி நடத்திச் செல்வது என்ற மிகப் பெரிய சுமை அவருடைய மனதை விட்டு நீங்கியது.

குருச்சரணின் அறை தெருவைப் பார்த்தவாறு திறந்து கிடந்தது. தேநீரைப் பருகிக்கொண்டே அவர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த நிமிடம் அவர் உரத்த குரலில் கூறினார்: “சேகர், நீயா? ஒரு நிமிடம் நில்லு.''

ஒரு உயரமான, அழகான, நல்ல உடலமைப்பைக் கொண்ட இளைஞன் உள்ளே வந்தான்.

குருச்சரண் சொன்னார்: “உன் சித்தி இன்றைக்குக் காலையில் என்ன செய்திருக்கிறாள் தெரியுமா?''

மெதுவாக சிரித்துக்கொண்டே சேகர் பதில் சொன்னான்: “அவங்க என்ன பண்ணியிருப்பாங்க? உங்க மகள் பிறந்திருக்கும் விஷயத்தைச் சொல்றீங்க. அப்படித்தானே?''

ஒரு பெருமூச்சை விட்டவாறு குருச்சரண் சொன்னார்: “நீயும் இந்த விஷயத்தை மிகவும் சாதாரணமா நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறாய். சேகர், எனக்குத்தான் இதில் இருக்கும் கஷ்டம் தெரியும்.''

“அப்படியெல்லாம் பேசாதீங்க சித்தப்பா. சித்தி ரொம்பவும் கவலைப்படுவாங்க. இன்னும் சொல்லப் போனால் கடவுள் யாரை அனுப்பினாலும், நாம அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்க வேண்டும்.''

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, குருச்சரண் சொன்னார்: “இந்த மாதிரி விஷயத்தைக் கொண்டாட வேண்டும் என்று எனக்கும் தெரியும். ஆனால், இளைஞனே! கடவுளும் ஒழுங்காக நடந்து கொள்வது இல்லை. நான் மிகவும் ஏழை. என் வீட்டில் எதற்கு இவ்வளவு சுமை? இந்த வீடே உன் அப்பாவிடம் அடமானத்தில் இருக்கு. அது ஒரு பிரச்சினை இல்லை. அதற்காக நான் கொஞ்சம்கூட கவலைப்படவும் இல்லை. ஆனால், இதை சிந்தித்துப் பார். இந்த அனாதைப் பெண், இந்த என் லலிதா- இந்த பொன்னான குழந்தை பெரிய இடத்தில் இருக்க வேண்டியவள். நான் அவளை எப்படி யாராவது ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணித் தர முடியும்? எண்ணற்ற நகைகளை... ஏன், கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் வைரத்தையே கொண்டு வந்து கொட்டினாலும், என் குழந்தைக்கு முன்னால் அது எதுவுமே ஈடாகாது. ஆனால், இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? பாடாய்ப்படுத்தும் வறுமை, இந்த அரிய வைரத்தை அவளுக்குக் கொஞ்சம்கூட தகுதியே இல்லாத ஒருவனிடம் தள்ளி விடும்படி என்னைச் செய்யும். என்னைப் பார்த்துச் சொல்லு... அப்படிப்பட்ட சூழ்நிலைகளை நினைக்கிறப்போ ஒருத்தனோட இதயமே கிழிந்துபோய் விடாதா? அவளுக்கு பதிமூணு வயது நடக்குது. அவளுக்குப் பொருத்தமான ஒருத்தனைத் தேடிப் பார்ப்பதற்கு என்னிடம் பதிமூணு அணாக்கள் கூட இல்லை.''

குருச்சரணின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.

சேகர் மிகவும் அமைதியாக நின்றிருந்தான். குருச்சரண் மீண்டும் சொன்னார்: “சேகர்நாத், உன் நண்பர்கள் வட்டாரத்தில் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார். இந்தப் பெண்ணுக்கு ஏதாவது செய்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். நிறைய பணமோ வரதட்சணையோ வேண்டும் என்று நினைக்காத சில இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் பெண் எப்படிப்பட்டவள் என்பதை மட்டுமே பார்ப்பார்கள். அந்த மாதிரியான இளைஞர்கள் யாரையாவது நீ பார்த்தால்... சேகர், நான் சொல்கிறேன்... என்னுடைய ஆசீர்வாதங்கள் உன்னை அரசர்களுக்கெல்லாம் அரசராக ஆக்கும். நான் வேறு என்ன சொல்ல முடியும்? உன் குடும்பத்தின் கருணையால்தான் நான் அருகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உன் அப்பா என்னைத் தன்னுடைய தம்பியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்.''

சேகர் அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் தலையை ஆட்டினான்.

குருச்சரண் தொடர்ந்து சொன்னார்: “மறந்து விடாதே என் பையனே... மனதில் இதை வைத்துக்கொள். தனக்கு எட்டு வயது ஆனதிலிருந்தே, லலிதா உன் வழிகாட்டுதலின்படிதான் படித்திருக்கிறாள், வளர்ந்திருக்கிறாள். அவள் அந்த அளவிற்கு அறிவாளி, கூர்மையான புத்தி கொண்டவள், ஒழுக்கமானவள் என்பதை நீயே பார்த்துக்கொண்டு வந்திருக்கிறாய். ஒரு குழந்தை என்பதையும் மறந்து இன்றிலிருந்து வீட்டில் எல்லா சமையல் வேலைகளையும் அவளே செய்கிறாள், பரிமாறுகிறாள். எல்லாமே அவளுடைய கையில்தான் இருக்கின்றன.''

இந்த நேரத்தில் லலிதா ஒருமுறை தலையை உயர்த்திவிட்டு, அடுத்த நிமிடமே கண்களைக் கீழே தாழ்த்திக் கொண்டாள். அவளுடைய உதடுகள் சற்று துடித்தன. குருச்சரண் கவலை நிறைந்த குரலில் தொடர்ந்து சொன்னார்: “இவளோட அப்பா கொஞ்சமாகவா சம்பாதித்தார்? ஆனால், அவர் தன்னுடைய சொத்துகள் முழுவதையும் கொடுத்து விட்டு, கடைசியில் எதுவுமே மீதமில்லை என்னும் நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார். சொல்லப் போனால், இந்த ஒரே ஒரு குழந்தைக்குக்கூட எதுவுமே இல்லைன்னு ஆயிடுச்சு.''

சேகர் எதுவுமே கூறவில்லை. மீண்டும் குருச்சரணே உரத்த குரலில் சொன்னார்: “இவளுக்காக அவர் எதையும் விட்டுவிட்டுப் போகவில்லை என்று நான் எப்படிக் கூற முடியும்? இவளுக்குள் இருக்கும் கவலைகளை- கஷ்டப்படும் மக்களுக்கு இவளோட அப்பா உதவிகள் செய்தாரே, அவர்களின் ஆசீர்வாதங்களே ஒண்ணுமில்லாமல் செய்துவிடும். பிறகு எப்படி இந்த அளவிற்கு சிறிய குழந்தையாக இருப்பவள் அன்பு நிறைந்த ஒரு அன்னையாக வடிவம் எடுக்க முடியும்? இது உண்மையா இல்லையா சேகர்?''

சிரித்த சேகர் பதிலெதுவும் கூறவில்லை.

அவன் புறப்படுவதற்குத் தயாராக இருப்பதைப் பார்த்த குருச்சரண் கேட்டார்: “இவ்வளவு சீக்கிரமா நீ எங்கே கிளம்பிட்டே?''

சேகர் சொன்னான்: “வக்கீலைப் பார்ப்பதற்காகப் போகிறேன். ஒரு வழக்கு இருக்கு!''

அவன் எழுந்தபோது, குருச்சரண் மீண்டும் அவனுக்கு ஞாபகப்படுத்தினார்: “நான் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக்கொள். இவள் கொஞ்சம் கறுப்பு நிறம்தான். ஆனால், இப்படிப்பட்ட ஒரு அழகான முகத்தையும் அளவற்ற அன்பையும் அக்கறையையும் இந்த உலகத்தில் இருக்கும் யாரிடமும் பார்க்க முடியாது.''

அதற்குத் தலையை ஆட்டிய சேகர் புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். தன்னுடைய முதுகலைப் பட்டத்தை முடித்துவிட்டு, அவன் ஆசிரியராகப் பணியாற்றினான். சென்ற வருடம்தான் அவன் வக்கீலாகத் தகுதி பெற்றான். அவனுடைய தந்தை, நபின்ராய் கருப்பட்டி வியாபாரத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்தார். பிறகு சுறுசுறுப்பான வியாபாரத்தை விட்டுவிட்டு, இப்போது வீட்டில் இருந்துகொண்டே வட்டிக்குப் பணம் தந்து கொண்டிருக்கிறார். அவருடைய மூத்த மகன் அபிநாஷ் வக்கீலாக இருக்கிறான். சேகர்நாத் இளையவன். அவர்களுடைய பிரம்மாண்டமான மூன்று மாடிகளைக் கொண்ட வீடு தெருவின் ஆரம்பத்திலேயே இருக்கிறது.


மிகப் பெரிய மொட்டை மாடி அவருடைய வீட்டிற்கும் குருச்சரணின் வீட்டிற்கும் தொடர்பு கொள்வதற்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதன்மூலம் அந்த இரண்டு குடும்பங்களுக்குமிடையே ஒரு நெருக்கம் மிகவும் வேகமாக வளர்ந்துவிட்டிருந்தது. வீட்டிலிருக்கும் பெண்கள் தாங்கள் உரையாடிக் கொள்வதற்கும், ஒருவரோடொருவர் தொடர்பு கொள்வதற்கும் அந்த வழியையே பெரும்பாலும் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

2

ஷ்யாம் பஜாரில் இருக்கும் ஒரு வசதியான குடும்பத்திலிருந்து சேகருக்கு ஒரு திருமண ஆலோசனை வந்தது. சமீப நாட்களாகவே இந்த விஷயம் அவர்களுக்குள் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. ஒருநாள் மணமகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வீட்டிற்கு ஒரு முறை வந்து போனார்கள். வரும் குளிர் காலத்தில் ஒரு நல்ல நாளைத் திருமணத்திற்காகத் தேர்வு செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். சொல்லப் போனால்- சேகரின் பெற்றோர்தான் தங்களின் விருப்பம் என்னவென்பதைக் கூற வேண்டும். சேகரின் தாய் புவனேஸ்வரி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவள் வேலைக்காரியிடம், “பையன் தனக்கு வேண்டிய பெண்ணைத் தானே தேர்வு செய்துகொள்ளும்போதுதான், என் மகனுக்குத் திருமணம் நடக்கும். வேறு மாதிரி நடக்காது'' என்ற தகவலைக் கூறி அனுப்பினாள்.

தன்னுடைய மனைவியின் குழப்பம் நிறைந்த நிபந்தனையைப் பார்த்து நபின் ராய் மிகவும் கவலைக்குள்ளானார். இந்த திருமண ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார ஆதாயத்தின் மீது மட்டுமே அவர் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய மனைவியின் மேலோட்டமான கண்ணோட்டத்தைப் பார்த்து அவர் மனதில் வெறுப்படைந்தார். “இதற்கு என்ன அர்த்தம்?'' அவர் எரிச்சலுடன் சொன்னார்: “நாம ஏற்கெனவே அந்தப் பெண்ணைப் பார்த்தாகி விட்டது. நாம முதல்ல நிச்சயத்தை வைப்போம். ஒரு நல்ல நாளன்று மீதி நடைமுறை விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொள்வோம்.''

தன் கணவருக்குத் தான் கூறியது பிடிக்கவில்லை என்ற விஷயம் அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அதற்குப் பிறகும் அவள் முன்கூட்டியே ஒரு நிச்சயம் செய்வதற்கு சம்மதிக்க மறுத்தாள். தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டும் விதத்தில், நபின்ராய் அன்றைய உணவை மிகவும் தாமதமாகவே சாப்பிட்டார். சொல்லப்போனால், அவர் தன்னுடைய மதிய தூக்கத்தை வெளி அறையிலேயே வைத்துக்கொண்டார்.

ஒரு சாயங்கால நேரத்தில், சுமார் ஐந்து அல்லது ஆறு நாட்கள் கழித்து, லலிதா மிக அருமையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் சேகரின் அறைக்குள் வந்தாள். அவன் அங்கிருந்த பெரிய கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டு, வரப்போகும் மணமகளைப் போய் பார்ப்பதற்காகத் தன்னை தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அமைதியாக அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவள் கேட்டாள்: “நீங்க பெண் பார்ப்பதற்காக வெளியே போகிறீர்களா?''

திரும்பிப் பார்த்துக் கொண்டே சேகர் சொன்னான்: “ஓ... நீயா? என் மணமகள் என்னைத் தேர்வு செய்கிற மாதிரி எனக்கு உதவி செய்யேன்!''

லலிதா சிரித்துக்கொண்டே சொன்னாள்: “எனக்கு இன்றைக்கு நேரம் இல்லை, சேகர் அண்ணா. நான் கொஞ்சம் பணம் வாங்கிட்டுப் போகலாம் என்று வந்தேன்'' -தொடர்ந்து அவள் தலையணைக்கு அடியில் இருந்த அவனுடைய அலமாரியின் சாவிகளை எடுப்பதற்காக நடந்தாள். அலமாரியைத் திறந்து, கொஞ்சம் பண நோட்டுகளை எடுத்து, தன்னுடைய புடவைத் தலைப்பில் அவற்றை வைத்துக்கொண்டு, தனக்குத் தானே கூறிக்கொண்டாள்: “எனக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் வந்து எடுத்துக் கொள்கிறேன். ஆனால், இதை எப்படித் திருப்பித் தருவது?''

தன்னுடைய தலைமுடியை மிகவும் கவனமாக ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் வாரிக் கொண்டிருந்த சேகர் அதற்கு பதில் சொன்னான்: “அது திருப்பித் தரப்படாது, லலிதா. அதற்கு மாறாக, அது திருப்பி தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.''

புரிந்துகொள்ள முடியாமல், லலிதா அவனையே வெறித்துப் பார்த்தாள்.

“உனக்குப் புரியலையா?''

லலிதா தலையை ஆட்டினாள்: “இல்லை''.

“இன்னும் கொஞ்சம் பெரியவளா ஆகு. அப்போ உனக்குப் புரியும்'' -சொல்லிக் கொண்டே சேகர் தன்னுடைய ஷூக்களை எடுத்து அணிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அன்று இரவு சேகரின் தாய் அறைக்குள் நுழைந்தபோது, அவன் கட்டிலில் கால்களை நீட்டிக் கொண்டு படுத்திருந்தான். அவன் வேகமாக எழுந்து உட்கார்ந்தான். கட்டிலின் ஒரு நுனியில் அமர்ந்து கொண்டு அவள் கேட்டாள்: “பெண் எப்படி இருக்கிறாள்?''

தன் தாயைப் பாசத்துடன் பார்த்துக்கொண்டே அவன் சொன்னான்: “அழகாக இருக்கிறாள்!''.

புவனேஸ்வரிக்கு ஐம்பதை நெருங்கிய வயது இருக்கும். ஆனால், முப்பத்தைந்து வயதிற்கு மேல் ஒரு நாள்கூட அவளுக்கு அதிகமான வயது இருக்கும் என்று கூற முடியாத அளவிற்கு அவள் தன் உடலை வைத்திருந்தாள். இன்னும் சொல்லப் போனால், அவளுடைய நெஞ்சுக்குள் துடித்துக்கொண்டிருந்த தாய்மை நிறைந்த இதயம் எப்போதும் உற்சாகத்துடனும் மென்மைத்தனத்துடனும் இருந்தது. அவள் மிகவும் பின்தங்கிய பின்புலத்திலிருந்து வந்தவள். அவள் பிறந்து, வளர்ந்தது எல்லாமே ஒரு சிறிய கிராமத்தில்தான். ஆனால், நகர வாழ்க்கையில் ஒரு நாள்கூட அவள் வேறுபட்டவளாகத் தோன்றவில்லை. நகரத்தின் சுறுசுறுப்பான, துடிப்பு நிறைந்த வாழ்க்கையை மிகவும் எளிதாக அவள் ஏற்றுக்கொண்டாள். அதே நேரத்தில் தன்னுடைய பிறந்த இடத்தின் அமைதியையும் இனிமையையும் அவள் தன்னிடம் காப்பாற்றிக் கொள்ளவும் செய்தாள். தனக்கு அப்படிப்பட்ட மிகச் சிறந்த அன்னை கிடைத்ததற்காக சேகர் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டான். ஆனால், தன்னைப் பற்றி அந்த அளவிற்கு பெருமையாக புவனேஸ்வரியே நினைத்துக் கொண்டதில்லை. கடவுள் சேகருக்கு நிறைய சிறப்புகளை வாரி வழங்கி விட்டிருந்தார்- நல்ல உடல் நலம், அழகான தோற்றம், இளமை, அறிவாற்றல். ஆனால், அவை எல்லாவற்றையும்விட தன்னுடைய தாயின் மகன் என்று முழுமனதுடன் கூறிக் கொள்வதைத்தான் அவன் மிகச் சிறந்த விஷயமாக நினைத்தான்.

இப்போது அவனுடைய தாய் சொன்னாள்: “இப்படிக் கூறிவிட்டு நீ அமைதியாக இருக்கிறாய். ஆச்சரியமாகத்தான் இருக்கு!''

மீண்டும் ஒரு முறை புன்னகைத்துக் கொண்டே சேகர் சொன்னான்: “சரிதான்... நான் உங்களுடைய கேள்விக்கு பதிலைச் சொன்னேன்.''

புவனேஸ்வரியும் சிரித்துக்கொண்டே சொன்னாள்: “அது என்ன பதில்? அவள் கறுப்பாக இருக்கிறாளா? நல்ல நிறத்துடன் இருக்கிறாளா? யாரை மாதிரி இருக்கிறாள்? நம்ம லலிதா மாதிரியா?''

தலையை உயர்த்திப் பார்த்துக்கொண்டே சேகர் பதில் சொன்னான்: “லலிதா கறுப்பு. அந்தப் பொண்ணு நல்ல நிறம்.''

“அவளின் பிற விஷயங்கள்?''

“மோசமில்லை.''

“அப்படியென்றால், நான் உன் அப்பாவிடம் பேசட்டுமா?''

சேகர் அமைதியாக இருந்தான்.


தன் மகனையே இரண்டு நிமிடங்கள் வெறித்துப் பார்த்துவிட்டு இறுதியாக புவனேஸ்வரி கேட்டாள்: “அவள் படிப்பு எப்படி? அவள் எதுவரை படிச்சிருக்கா?''

“நான் அதைக் கேட்கணும்னு நினைக்கல'' - சேகர் பதில் சொன்னான்.

அவனுடைய தாய் ஆச்சரியப்பட்டாள். “நீ அதைக் கேட்கணும்னு நினைக்கலையா? இந்த நாட்களில் மிகவும் முக்கியமாக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி நீ கேட்கவே இல்லையா?''

சேகர் சிரித்துக் கொண்டே சொன்னான்: “இல்லை அம்மா. என் மனதில் அப்படியொரு நினைப்பு தோன்றவே இல்லை!''

தன் மகனின் பதிலைக் கேட்டு வியப்படைந்த புவனேஸ்வரி அவனையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். பிறகு வாய்விட்டுச் சிரித்தவாறு ஆச்சரியத்துடன் சொன்னாள்: “அப்படியென்றால் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று அர்த்தம்!''

சேகர் என்னவோ கூறுவதற்கு முற்பட்டான். ஆனால், லலிதா அறைக்குள் நுழைவதைப் பார்த்ததும், அவன் அமைதியாக இருந்துவிட்டான். லலிதா நேராக அறைக்குள் நுழைந்து புவனேஸ்வரி யின் நாற்காலிக்கு பின்னால் வந்து நின்றாள். தன்னுடைய இடக் கையை நீட்டிய புவனேஸ்வரி அவளை முன்னால் கொண்டு வந்து கேட்டாள்: “என்னடா கண்ணு?''

மிகவும் அமைதியாக லலிதா பதில் சொன்னாள்: “ஒண்ணுமில்லைம்மா!''

ஆரம்பத்தில் லலிதா புவனேஸ்வரியை "அத்தை” என்று அழைத்தாள். ஆனால் ஒருநாள் அவளை அப்படி அழைக்கக்கூடாது என்று தடுத்த புவனேஸ்வரி சொன்னாள்: “நான் உன்னுடைய அத்தை இல்லை, லலிதா. நான் உன்னுடைய அம்மா.'' அதற்குப் பிறகு, லலிதா அவளை "அம்மா” என்றே அழைத்தாள்.

அவளை மேலும் அருகில் இழுத்தவாறு புவனேஸ்வரி பாசத்துடன் கேட்டாள்: “எதுவும் இல்லையா? அப்படியென்றால் நீ என்னை சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறாய்?''

சேகர் கேட்டான்: “உங்களைப் பார்க்க வந்திருக்கிறாளா? தன்னுடைய மாமாவின் வீட்டில் அவள் சமையல் பண்ண வேண்டியதிருக்குமே?''

“ஆனால் இவள் ஏன் சமையல் பண்ணணும்?'' -அவனுடைய தாய் கேட்டாள்.

ஆச்சரியத்துடன் சேகர் பதில் சொன்னான்: “அந்த வீட்டில் பிறகு யார் சமையல் பண்ணுவார்கள்? இவள்தான் சமையல் வேலைகளையும், வீடு சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் இப்போது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இவளுடைய மாமா அன்றைக்கே சொன்னாரே!''

புவனேஸ்வரி உரத்த குரலில் சிரித்துக் கொண்டே சொன்னாள்: “இவளோட மாமா சொன்னாரா? அவர் சொன்னது கொஞ்சங்கூட பொருத்தமாக இல்லை. இவளுக்கு இன்னமும் கல்யாணமே ஆகவில்லை. இவள் சமையல் பண்ணினதை யார் சாப்பிடுவாங்க? இவள் அதற்காகக் கஷ்டப்படக்கூடாது. நம்முடைய பிராமண சமையல்காரியை நான் அங்கே அனுப்பியிருக்கிறேன். அவள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள். உன் அண்ணி நம்முடைய சமையலைப் பார்த்துக்கொள்கிறாள். அதனால் சாப்பாட்டைப் பற்றியோ வேறு விஷயங்களைப் பற்றியோ கொஞ்சம்கூட கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.''

தன்னுடைய தாய் பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு வறுமையில் உழன்று கொண்டிருப்பவர்களின் கனமான சுமைகளைக் குறைக்கும் பொறுப்பைத் தானாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதை சேகர் தெளிவாகப் புரிந்து கொண்டான். அதைத் தொடர்ந்து அவன் ஒரு நிம்மதி கலந்த பெருமூச்சு விட்டான்.

ஒரு மாதம் கடந்தோடியது. ஒருநாள் சேகர் தன்னுடைய கட்டிலிலில் கால்களை நீட்டிப் படுத்திருந்தபோது, லலிதா அவனுடைய அறைக்குள் வந்தாள். சாவிக் கொத்தை எடுத்து, ஓசை கேட்கும் வண்ணம் அலமாரியின் டிராயரைத் திறந்தாள். புத்தகத்திலிருந்து தன்னுடைய கண்களை உயர்த்தாமலே சேகர் கேட்டான்: “என்ன?''

லலிதா சொன்னாள்: “நான் பணம் எடுக்கிறேன்.''

“ம்...'' - சேகர் தான் வாசித்துக் கொண்டிருப்பதைத் தொடர்ந்தான். தன் புடவையின் ஒரு நுனியில் பணத்தை வைத்து முடிச்சு போட்ட லலிதா எழுந்தாள். அன்று அவள் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தியிருந்தாள். சேகர் அதைப் பார்க்க வேண்டும் என்றும் நினைத்தாள். அவள் சொன்னாள்: “நான் பத்து ரூபாய்கள் எடுத்திருக்கிறேன் சேகர் அண்ணா?''

“நல்லது''- தன்னுடைய புத்தகத்திலிருந்து தலையை உயர்த்தாமல் சேகர் சொன்னான். அவனுடைய கவனத்தைத் தன்னை நோக்கி இழுப்பதில் தோல்வியடைந்த லலிதா, இதையும் அதையும் தொட்டுக் கொண்டு காரணமே இல்லாமல் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந் தாள். அதற்குப் பிறகும் எந்தவொரு பயனும் உண்டாகாமல் போகவே, அவள் அங்கிருந்து கிளம்பியே ஆகவேண்டும். ஆனால், சேகரிடம் பேசாமல் அவள் இப்போது கிளம்ப முடியாது. இன்னும் சிறிது நேரத்தில் அவள் வேறு சிலருடன் திரை அரங்கத்திற்குச் செல்ல வேண்டும். அவள் சேகரின் அனுமதியை எதிர்பார்த்து அங்கேயே நின்றிருந்தாள்.

சேகரின் அனுமதி இல்லாமல் லலிதா எந்தவொரு சிறிய செயலையும் செய்யமாட்டாள். அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்கு யாரும் உத்தரவு போடவில்லை. அப்படி நடந்து கொள்வதற்கு எந்தவொரு காரணமும்கூட கிடையாது. அவள் எப்போதும் அவனுடைய சம்மதத்துடன்தான் எதையும் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். நீண்ட நாட்களாகவே ஒவ்வொரு விஷயங்களும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தன. தன் மனதில் இருக்கும் இந்த பேசப்படாத சட்டத்தைப் பற்றி அவள் எந்தச் சமயத்திலும் கேள்வி கேட்கவோ விவாதித்துப் பார்க்கவோ இல்லை. இயற்கையாகவே எந்த உயிரினத்திற்கும் இருக்கக்கூடிய அறிவை வைத்துக் கொண்டு பார்க்கும்போது, மற்றவர்கள் தாங்கள் நினைக்கிறபடி செயல்பட்டுக் கொண்டும், விரும்புகிற இடங்களுக்குப் போய்க்கொண்டும் இருப்பதைப்போல தன்னால் போகமுடியாது என்பதை லலிதா புரிந்து கொண்டிருந்தாள். லலிதா முழு சுதந்திரம் கொண்டவளாக இல்லை. அதே நேரத்தில் அவளுடைய மாமா, அத்தை ஆகியோரின் சம்மதம் மட்டுமே போதும் என்று அவள் நினைக்கவில்லை. கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “நாங்க திரை அரங்கத்திற்குப் போகிறோம்.''

அவளுடைய மென்மையான குரல் சேகருக்கு சரியாகக் கேட்கவில்லை. அதனால் அவனிடமிருந்து அவளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அதனால் லலிதா தன் குரலைச் சற்று உயர்த்திக் கொண்டு சொன்னாள்: “அவர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.''

அவளுடைய குரலை அவன் இந்த முறை காதில் வாங்கியிருக்க வேண்டும். சேகர் தன் கையில் இருந்த புத்தகத்தை அருகில் வைத்துவிட்டுக் கேட்டான்: “என்ன விஷயம்?''

சற்று நெளிந்து கொண்டே லலிதா சொன்னாள்: “கடைசியில் நான் சொன்னதைக் கேட்டுட்டீங்க. நாங்க திரை அரங்கத்திற்கு போகிறோம்.''

சேகர் கேட்டான்: “நாங்கன்னா யார் யார்?''

“அன்னக்காளி, சாருபாலா, மாமா, நான்!''

“இந்த மாமா யார்?''


லலிதா சொன்னாள்: “அவர் பெயர் கிரின்பாபு. அவர் ஐந்து நாட்களுக்கு முன்னால் இங்கே வந்தார். இங்கே இருந்து கொண்டே தன்னுடைய பட்டப்படிப்பை படிப்பதற்காக அவர் முங்கரில் இருந்து வந்திருக்கிறார். நல்ல மனிதர்!''

“அப்படியா? அந்த மனிதனை நீ ஏற்கெனவே நன்கு தெரிந்து வைத்திருக்கிறாய். அவனுடைய பெயர், வந்திருக்கும் நோக்கம் எல்லாவற்றையும் பற்றித் தெளிவாகக் கூறுகிறாயே! கடந்த நான்கைந்து நாட்களாக நீ ஏன் கண்ணில் படவில்லை, உன் குரலே கேட்கவில்லை என்பதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது. சீட்டு விளையாடுவதில் மிகவும் தீவிரமாக இருந்திருப்பாய் என்று நினைக்கிறேன்.''

லலிதா அதைக்கேட்டு சற்று அதிர்ச்சியடைந்தாள். சேகர் பேசும் முறையைக் கேட்டு அவளுக்கு பயம் உண்டானது. தன்னிடம் அவன் இந்தமாதிரி ஒரு கேள்வியைக் கேட்பான் என்று அவள் மனதில் சிறிதுகூட நினைத்திருக்கவில்லை. அவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.

சேகர் தொடர்ந்து கேட்டான்: “நீ சமீப காலமாக நிறைய சீட்டு விளையாடுகிறாய். உண்மைதானே?''

எச்சிலை நடுங்கிக் கொண்டே விழுங்கியவாறு லலிதா மெதுவான குரலில் சொன்னாள்: “ஆனால், சாரு சொன்னாள்...''

“சாரு சொன்னாளா? அவள் என்ன சொன்னாள்?'' - அவள் நல்ல ஆடைகள் அணிந்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு நிற்பதை அப்போதுதான் கவனித்த சேகர் சொன்னான்: “நீ எல்லாவற்றையும் தயார் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறாயா? ம்... சரி... போ.''

ஆனால், அங்கிருந்து கிளம்புவதற்கு சிரமமாக இருப்பதைப் போல உணர்ந்த லலிதா அங்கேயே அமைதியாக நின்றிருந்தாள்.

அவளுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்தான் சாருபாலா. அவள் அவளுடைய நெருங்கிய தோழியும்கூட. அவர்களுடைய குடும்பம் பிரம்மோ வகுப்பைச் சேர்ந்தது. கிரினைத் தவிர, சேகருக்கு அவர்கள் எல்லாரையும் நன்கு தெரியும். கடைசி முறையாக பக்கத்து வீட்டிற்கு கிரின் வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. பாங்கிப்பூரின் உட்பகுதியில் அவன் படித்துக் கொண்டிருந்தான். கல்கத்தாவிற்கு வரவேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. அதனால், அவனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை சேகருக்கு வரவில்லை.

லலிதா இன்னும் அங்கேயே நின்று கொண்டிருப்பதைக் கவனித்த அவன் சொன்னான்: “ காரணமே இல்லாமல் நீ ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்? நீ போகலாம்.'' இதைக் கூறிவிட்டு உடனடியாக அவன் புத்தகத்தால் தன் முகத்தை மறைத்துக் கொண்டான்.

மேலும் ஐந்து நிமிடங்கள் அங்கேயே அமைதியாக நின்றிருந்த லலிதா மீண்டும் மெதுவான குரலில் கேட்டாள்: “நான் போகட்டுமா?''

“நான்தான் போகச் சொல்லிவிட்டேனே லலிதா!''

சேகரின் நடந்து கொள்ளும் முறையை பார்த்த லலிதாவுக்கு அதற்கு மேலும் திரை அரங்கத்திற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே உண்டாகவில்லை. அதே நேரத்தில், போட்டிருந்த திட்டங்களை மாற்றுவது என்பதும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. செலவாகும் பணத்தில் பாதியை அவள் ஏற்றுக் கொள்வது என்றும், மீதியை சாருவின் மாமா ஏற்றுக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அவர்கள் எல்லாரும் பொறுமையை இழந்து அவளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்ற விஷயம் அவளுக்கு நன்கு தெரியும். அவர்கள் எதிர்பார்ப்பில் தள்ளப்பட்டிருக்கும் நேரம் கடக்க கடக்க, அவர்களுடைய பொறுமையின்மை நிச்சயமாக அதிகரிக்கும் என்பதையும் அவள் அறிவாள். அவள் இதைக் கண்களுக்கு முன்னால் கற்பனை பண்ணி பார்க்க முடிந்தது. எனினும் என்ன செய்வது என்பதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவனுடைய அனுமதி இல்லாமல் போவது என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்: “இந்த ஒரே ஒருமுறை மட்டும் நான் போய்விட்டு வரட்டுமா சேகர் அண்ணா?''

புத்தகத்தை அருகில் வைத்துவிட்டு, சேகர் கடுமையான குரலில் சொன்னான்: “லலிதா, நீ போகணும்னு ஆசைப்பட்டால், தயவுசெய்து போ. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிற அளவுக்கு உனக்கு வயசு வந்திடுச்சு. இதையெல்லாம் என்னிடம் ஏன் கேட்கிறாய்?''

லலிதா தடுமாறிப் போய்விட்டாள். சேகரிடம் திட்டு வாங்குவது என்பது அப்படியொன்றும் புதிய விஷயமல்ல. சொல்லப் போனால், அவள் அதற்குப் பழகிப் போய்விட்டாள். ஆனால், கடந்த இரண்டு மூன்று வருடங்களில் அவள் இந்த அளவிற்கு அவன் திட்டி கேட்டதில்லை. வெளிப்படையாகக் கூறுவதாக இருந்தால், இப்படி வெளியே செல்வதை அவள் விரும்பவில்லை. ஆனால், அவளுடைய நண்பர்கள் இப்போதும் அவளுக்காக எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அவளும் தன்னை நன்கு அழகுப்படுத்திக் கொண்டு வந்துவிட்டாள். பணத்தை வாங்குவதற்காக வந்த இந்த வேளையில்தான், பிரச்சினை உண்டாகியிருக்கிறது. ஆனால், அவள் அவர்களிடம் என்ன கூறுவாள்?

இதுவரை லலிதாவை எங்கும் போகக்கூடாது என்று சேகர் எந்தச் சமயத்திலும் தடுத்ததே இல்லை. திரை அரங்கத்திற்குச் செல்வதற்காக இன்று நன்கு ஆடைகள் அணிந்து அழகுப்படுத்திக் கொண்டு அவனுடைய சம்மதத்தைப் பெறுவதற்காக அவள் வந்தாள். ஆனால் இப்போது அவளுடைய சுதந்திரம் முழுமையாக தடை செய்யப்பட்டது மட்டுமல்ல; அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் வெட்கப் படக்கூடியதாகவும் தன்னுடைய பதின்மூன்று வயதில், லலிதா எந்தச் சமயத்திலும் அனுபவித்திராத ஒரு விஷயமாகவும் அது இருந்தது. அவள் அதை முழு பரிமாணத்துடன் உணர்ந்தாள். அங்கேயே மேலும் சில நிமிடங்கள் வேதனை நிறைந்த அமைதியுடன் நின்றிருந்த அவள், கண்ணீர் திரண்டு நின்றிருந்த கண்களைத் துடைத்தபடியே வெளியேறினாள். வீட்டை அடைந்தவுடன், ஒரு வேலைக்காரப் பெண்ணை அனுப்பி அன்னக்காளியை அழைத்து வரச் சொன்ன அவள், அவளிடம் தன்னுடைய பணத்தைக் கொடுத்துவிட்டு சொன்னாள்: “காளி, எனக்கு உடல் நலம் சரியில்லை. உன்னுடன் என்னால் வரமுடியவில்லை என்பதை தோழியிடம் கூறிவிடு.''

அன்னக்காளி கேட்டாள்: “என்ன விஷயம், லலிதா அக்கா?''

“எனக்கு தலை வலிக்குது. களைப்பா இருக்கு. நிலைமை மிகவும் மோசமா இருக்கு!'' இதைக் கூறிவிட்டு, லலிதா தன் முகத்தை சுவரின் பக்கம் திருப்பிக் கொண்டாள். அதற்குப் பிறகு அங்கு வந்த சாரு அவளை என்னவெல்லாமோ கூறி கிளம்பும்படி சொல்லியும், அதனால் எந்த பலனும் உண்டாகவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவள் அவளுடைய அத்தையிடம் கூறிக்கூட ஒரு வார்த்தை சொல்ல வைத்தாள். ஆனால், எந்தவொரு பலனும் அதனால் உண்டாகவில்லை. தன் கையில் இருந்த பத்து ரூபாய் அன்னக்காளியை நிலையாக ஒரு இடத்தில் இருக்கவிடாமல், அவளை அங்கிருந்து போகச் சொல்லி கட்டாயப்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எங்கே திட்டமே நிறைவேறாமல் போய்விடுமோ என்று பயந்த சாருவை அழைத்து கையில் இருந்த பணத்தைக் காட்டிக் கொண்டே சொன்னாள்:


“லலிதா அக்கா உடல் நலத்துடன் இல்லையென்றால், அவங்க வராமல் இருக்கட்டும். சாரு அக்கா! அவங்க என்னிடம் பணத்தைத் தந்துட்டாங்க. நாம எல்லாரும் போவோம்.'' எல்லாரையும்விட வயதில் மிகவும் இளையவளாக இருந்தாலும் அன்னக்காளி எந்த விதத்திலும் அறிவு விஷயத்தில் குறைந்தவளாக இல்லை என்பதை சாரு தெளிவாகத் தெரிந்து கொண்டாள். அவள் உடனடியாக அதற்கு ஒப்புக் கொள்ளவே, அவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கிளம்பினார்கள்- லலிதா இல்லாமல்.

3

சாருபாலாவின் தாய் மனோரமாவிற்கு சீட்டு விளையாடுவதை விட வேறு எதிலும் குறிப்பிடும் வண்ணம் விருப்பம் கிடையாது. ஆனால், அவள் கொண்டிருக்கும் தீவிர ஈடுபாடு அளவிற்கு விளையாட்டில் அவள் திறமைசாலியாக இருக்கவில்லை. இந்தக் குறைபாடு லலிதா அவளுடைய பார்ட்னராக சேர்ந்தவுடன், சரி செய்யப் பட்டுவிட்டது. அதற்குக் காரணம் - லலிதா சீட்டு விளையாட்டில் அபார திறமைசாலியாக இருந்ததே. மனோரமாவின் தம்பி கிரின் வந்ததிலிருந்து, மனோரமாவின் அறையில் பிற்பகல் முழுவதும் தொடர்ந்து சீட்டு விளையாட்டு நடந்து கொண்டேயிருந்தது. கிரின் மிகவும் சிறப்பாக விளையாடினான். அதனால், மனோரமா அவனுக்கு சரி நிகராக விளையாட வேண்டுமென்றால், லலிதா அங்கு கட்டாயம் இருந்தாக வேண்டும்.

திரை அரங்கத்திற்குப் போன நாளுக்கு மறுநாள் சீட்டு விளையாடும் அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் போகவே, மனோரமா வேலைக்காரியை லலிதாவின் வீட்டிற்கு அனுப்பினாள்.

லலிதா ஒரு ஆங்கில நூலை வங்க மொழிக்கு மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தாள். அவள் தன்னுடைய புத்தகங்களை விட்டு, வர மறுத்துவிட்டாள்.

லலிதாவின் சினேகிதியும் அவளை அழைத்துக் கொண்டு வருவதில் தோல்வியைச் சந்திக்கவே மனோரமாவே அங்கு வந்துவிட்டாள். லலிதாவின் புத்தகங்களை சற்று நகர்த்தி வைத்துவிட்டு, அவள் சொன்னாள்: “நீ உன் முதுகுத் தண்டை இந்த நூல்களுக்காக ஒடித்துக் கொள்ள வேண்டிய தேவையே இல்லை, லலிதா. நீ வளர்ந்து வர்றப்போ நீதிபதியாக ஆகப் போவதில்லை. இதற்கு பதிலாக சீட்டு விளையாட்டை நன்கு விளையாடலாம். எழுந்து வா!''

லலிதா இக்கட்டான நிலையில் தான் இருப்பதை உணர்ந்தாள். இப்போது தான் வருவதற்கில்லை என்றும், மறுநாள் கட்டாயம் வருவதாகவும் கண்ணீர் வழிய கூறினாள். அவள் கூறியதைக் காதிலியே வாங்கிக் கொள்ள மறுத்த மனோரமா, லலிதாவின் அத்தையிடம் விஷயத்தைக் கூறி, வலுக்கட்டாயமாக லலிதாவுடன் அங்கிருந்து கிளம்பினாள். அதனால், அன்றும் கிரினுக்கு நேர் எதிரில் உட்கார்ந்து கொண்டு, அவள் சீட்டு விளையாட வேண்டியிருந்தது. ஆனால், விளையாட்டு அன்று அந்த அளவிற்கு சுவராசியமாக இருக்கவில்லை. லலிதா எந்த வகையில் பார்த்தாலும், விளையாட்டில் முழுமையாக கவனம் செலுத்தவில்லை. அவள் முழு நேரமும் ஒரே பதைபதைப்பிலேயே இருந்தாள். பொழுது இருட்டியவுடன், அவள் கிளம்பிவிட்டாள். கிரின் அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சொன்னான்: “நேற்று நீ பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாய். ஆனால், எங்களுடன் வரவில்லை. நாம ஏன் மீண்டும் நாளைக்குப் போகக்கூடாது?''

தன் தலையை ஆட்டிக் கொண்டே லலிதா மெதுவான குரலில் சொன்னாள்: “இல்லை... நான் மிகவும் உடல் நலமில்லாமல் இருந்தேன்!''

சிரித்துக் கொண்டே கிரின் சொன்னான்: “நீ இப்போ தேறிவிட்டாய். நாளைக்கு கட்டாயம் போக வேண்டும்.''

“இல்லை... இல்லை... நாளைக்கு எனக்கு நேரமே இல்லை'' - லலிதா அந்தக் கணமே அங்கிருந்து வெளியேறிவிட்டாள். அன்று சேகரின் கோபம் மட்டுமல்ல அவளை அப்படிப் போகும்படி செய்தது. சேகர் கடுமையாக கூறியதற்குப் பின்னால், அவளே ஒருவித குழப்பமான மன நிலையுடன் இருந்தாள் என்றும் சொல்லலாம்.

சேகரின் வீட்டில் நடமாடுவதைப் போலவே, அவள் சாருவின் வீட்டிற்குள்ளும் சர்வ சாதாரணமாக நுழைவதையும் வெளியேறுவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அந்த வீட்டில் தானும் ஒரு உறுப்பினர் என்பதைப் போல அவள் எல்லாரிடமும் எளிமையாகக் கலந்து பழகினாள். அதனால் சாருவின் மாமா கிரின் பாபுவுவைச் சந்திப்பதிலோ, அவனுடன் உரையாடுவதிலோ அவளுக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. எனினும், அன்று சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் முழு நேரமும் சேகர் கூறிய வார்த்தைகளை அவளால் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதே நேரத்தில் மிகவும் குறுகிய காலம் மட்டுமே அவரைத் தெரிந்திருந்ததால், கிரின் அவளை சாதாரணமாக இருப்பதைவிட அதிக ஆர்வத்துடன் பார்ப்பதையும் அவள் தெரிந்து கொண்டிருந்தாள். ஒரு மனிதன் புகழ்கிற மாதிரி முறைத்துப் பார்ப்பது என்பது மிகவும் வெட்கப்படக்கூடிய ஒரு செயலாக அவளுக்குத் தோன்றியது. அப்படிப்பட்ட ஒன்றை அவள் மனதில் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை.

அவள் சிறிது நேரம் தன் வீட்டின் முன் நின்றாள். பிறகு நேராக சேகரின் வீட்டிற்குச் சென்று எப்போதும் போல வேலை செய்ய ஆரம்பித்தாள். அவனுடைய அறையின் சிறுசிறு விஷயங்களைக்கூட சிறு வயதிலிருந்து அவள்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். குவிந்து கிடக்கும் புத்தகங்களை எடுத்து வைப்பது, மேஜையைச் சுத்தமாக வைத்திருப்பது, பேனாக்களை சரி பண்ணி வைப்பது, மையை பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் எடுத்து வைத்திருப்பது... வேறு யாரும் இந்த வேலைகளைச் செய்யமாட்டார்கள். லலிதாவின் உரிமையும் பொறுப்பும் அவற்றில் இருந்தன. அவள் உடனடியாக பெருக்கி சுத்தம் பண்ண ஆரம்பித்தாள். அப்படியென்றால்தான் சேகர் வருவதற்கு முன்பே முடிக்க முடியும்.

எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும், அவள் வீட்டை பற்றித்தான் நினைப்பாள். ஏனென்றால், அவள் யாரைப் பார்த்தாலும் அவர்களை தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நினைத்தாள். மற்றவர்களும் அவளை அப்படித்தான் நடத்தினார்கள். தன்னுடைய எட்டாவது வயதில் பெற்றோர்களை இழந்த லலிதா தன்னுடைய மாமாவின் வீட்டில் உள்ளவர்களில் ஒருத்தியாக ஆகிவிட்டாள். அதற்குப் பிறகு சிறு குழந்தையைப் போல அவள் சேகரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பாள். அவனுடைய மேற்பார்வையில் அவள் தன் படிப்பில் வளர்ந்தாள்.

சேகரின் பாசத்தில் அவளுக்கு மிகவும் சிறப்பான இடம் கிடைத்திருக்கிறது என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்தப் பாசம் எந்த அளவிற்கு ஆழங்களுக்குள் போய்விட்டிருக்கிறது என்ற உண்மை யாருக்கும் தெரியாது. லலிதாவிற்கேகூட அது தெரியாது. அவளின் சிறு வயதிலிருந்தே சேகர் அளவற்ற அன்பை அவள் மீது பொழிவதை எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். யாருக்கும் தெரியாத ஒரு விஷயமல்ல அது. ஒருநாள் ஒரு புலர்காலைப் பொழுதில் அவள் அந்த வீட்டின் இளம் மணமகளாக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதைக்கூட யாரும் உணர்ந்திருக்கவில்லை. லலிதாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அதைப்பற்றி எண்ணிப் பார்த்ததுகூட இல்லை. புவனேஸ்வரிக்குகூட அப்படியொரு எண்ணம் தோன்றியது இல்லை.


லலிதா தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு, சேகர் வருவதற்கு முன்பே அங்கிருந்து போய்விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். ஆனால், அவள் அவனுடைய அறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தியதால், நேரம் போனதை கவனிக்காமல் இருந்துவிட்டாள். திடீரென்று ஒலித்த காலடிச் சத்தம் அவளின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து அவள் அப்படியே நின்றுவிட்டாள்.

அவளைப் பார்த்ததும் சேகர் சொன்னான்: “நீயா? நேற்று இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாய்?''

லலிதா பதில் கூறவில்லை.

கை வைத்த நாற்காலியில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு சேகர் தொடர்ந்து சொன்னான்: “ நீ எத்தனை மணிக்கு திரும்பி வந்தாய்? இரண்டு? மூன்று? நீ ஏன் பதில் கூறாமல் இருக்கிறாய்?''

லலிதா அமைதியாய் இருந்தாள்.

எரிச்சலடைந்த சேகர் அவளை விரட்டினான்: “கீழே போ. அம்மா உன்னை வரச் சொன்னாங்க.''

புவனேஸ்வரி ஒரு சிற்றுண்டியைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தாள். லலிதா அவளிடம் சென்று கேட்டாள்: “அம்மா என்னை நீங்க வரச் சொன்னீர்களா?''

“இல்லை. ஏன்?'' - லலிதாவைப் பார்த்துக் கொண்டே அவள் கேட்டாள்: “நீ ஏன் இப்படி வெளிறி, சோர்வடைந்து இருக்கிறாய்? நீ இன்னும் சாப்பிடலையா?''

லலிதா தன் தலையை ஆட்டினாள்.

புவனேஸ்வரி சொன்னாள்: “சரி... நீ இதைக் கொண்டுபோய் உன் அண்ணனிடம் கொடுத்துவிட்டு, கீழே இறங்கி என்னிடம் வா.''

சிறிது நேரத்திற்குப் பிறகு, லலிதா மாடிக்கு சேகருக்கான உணவை எடுத்துச் சென்றாள். அப்போதும் அவன் கைப்பிடிகள் கொண்ட நாற்காலியில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பதை அவள் பார்த்தாள். அவள் தன்னுடைய அலுவலகத்திலிருந்து வரும்போது அணிந்திருந்த ஆடைகளையே மாற்றியிருக்கவில்லை. சொல்லப் போனால், முகத்தைக்கூட கழுவாமல் இருந்தான். அருகில் வந்து, அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “நான் உங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன்.''

சேகர் அவளை தலையை உயர்த்திக்கூட பார்க்கவில்லை. அவன் சர்வசாதாரணமாக சொன்னான்: “அதை எங்காவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு, நீ போ.''

அப்படிச் செய்வதற்கு பதிலாக, லலிதா அங்கேயே கையில் ட்ரேயை வைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.

கண்களைச் சிறிதும் திறக்காமலே, லலிதா அங்கிருந்து போகவில்லை என்பதையும் அவள் இன்னும் அங்குதான் நின்று கொண்டிருக்கிறாள் என்பதையும் சேகர் தெரிந்து கொண்டான். இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, அவன் சொன்னான்: “நீ எவ்வளவு நேரம் நின்று கொண்டே இருப்பாய்? எனக்கு கொஞ்சம் நேரம் ஆகும். அதைக் கீழே வைத்துவிட்டு, நீ போ.''

அமைதியாக நின்று கொண்டிருந்த லலிதா தான் தொடர்ந்து குத்திக் காட்டப்படுவதைப் போல உணர்ந்தாள். மெதுவான குரலில் அவள் சொன்னாள்: “தாமதமாக ஆனாலும், பரவாயில்லை. எனக்கு கீழே எந்த வேலையும் இல்லை.''

அவளை தலையை உயர்த்திப் பார்த்த சேகர் சிரித்துக் கொண்டே சொன்னான்: “ இறுதியாக சில வார்த்தைகள்! கீழே வேண்டுமானால் வேலை எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பக்கத்து வீட்டில் கட்டாயம் இருக்குமே! உன் வீட்டில் எதுவுமே இல்லையென்றாலும், பக்கத்து வீடுகளில் உனக்கு கட்டாயம் ஏதாவது வேலை இருக்கும்ல? உனக்கு மனதில் நினைப்பதற்கு ஒரே ஒரு வீடுதான் இருக்கிறதா என்ன, லலிதா?''

“நிச்சயமா இல்லை!'' - அவள் பதில் கூறிவிட்டு கோபத்துடன் ட்ரேயை கீழே வைத்துவிட்டு வேகமாக அறையைவிட்டு வெளியேறினாள்.

சேகர் அவளுக்குப் பின்னால் குரல் கொடுத்தான்: “சாயங்காலம் என்னை வந்து பார்.''

“நான் மேலுக்கும் கீழுக்கும் நடந்து கொண்டு திரியமுடியாது'' - அவள் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் புவனேஸ்வரியின் அறைக்குப் போனபோது, அவளிடம் சொல்லப்பட்டது : “நீ உன் அண்ணாவுக்கு சாப்பாடு கொண்டு போனால், பீடாவை யார் கொண்டு போவது?''

“நான் மிகவும் பசியாக இருக்கிறேன் அம்மா. நான் எதுவுமே பண்ண முடியாது. தயவு செய்து யாராவது அதை மேலே கொண்டு போகட்டுமே?'' - சொல்லிவிட்டு லலிதா கீழே உடனடியாக உட்கார்ந்துவிட்டாள்.

அவளுடைய பதைபதைப்படைந்த முகத்தைப் பார்த்த புவனேஸ்வரி சற்று புன்னகைத்துக் கொண்டே சொன்னாள்: “அப்படின்னா நீ கீழே உட்கார்ந்து சாப்பிடு. நான் வேலைக்காரியை மேலே அனுப்புறேன்.''

மறுவார்த்தை கூறாமல், லலிதா அதை ஏற்றுக் கொண்டாள்.

அதற்கு முந்தைய நாள் அவள் திரை அரங்கத்திற்குச் செல்லவில்லை. எனினும், சேகர் அவளைக் கடுமையாகத் திட்டிவிட்டான். மனதில் காயம்பட்ட அவள் தன்னுடைய முகத்தை சேகரிடம் ஐந்து நாட்களாகக் காட்டவே இல்லை. ஆனால், பிற்பகல் வேலைகளில் அவனுடைய அறைக்குச் செல்வாள். அப்போது அவன் அலுவலகத்திற்குச் சென்றிருப்பான். அங்குள்ள எல்லா வேலைகளையும் அவள் பார்ப்பாள். சேகர் தன்னுடைய தவறை உணர்ந்து, இரண்டுமுறை அவளை வரும்படி கூறி அனுப்பினான். ஆனால், அதற்குப் பிறகும் அவள் வரவில்லை.

4

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு காலை வேளையில், லலிதா மிகுந்த குழப்பத்துடன் இருந்தாள். அந்தப் பகுதிக்கு அடிக்கடி தொடர்ந்து வந்து கொண்டிருக்கக்கூடிய பிச்சைக்காரன் ஒருவன் எப்போது வந்தாலும், லலிதாவைப் பார்த்தவுடன் "அம்மா' என்று கூறி அழைப்பான். அவனைப் பொறுத்தவரையில் முந்தைய ஒரு பிறவியில் லலிதா அவனுடைய தாயாக இருந்திருக்கிறாள். அவளைப் பார்த்தவுடன் அவன் அடையாளம் தெரிந்து கொண்டான். லலிதா அவன்மீது நிறைய அன்பு வைத்திருந்தாள். அவன் அவனுக்கு எப்போதும் ஒரு ரூபாய் கொடுப்பாள். நடக்க முடியாத ஆசீர்வாதங்களை அவன் அவள் மீது சொறிவான். கணக்கிலடங்காத நல்ல அதிர்ஷ்டங்களை அவன் அவளுக்கு வரும் என்று கூறுவான். இவை அனைத்தும் அவளை எல்லையில்லாத இன்ப அதிர்ச்சிக்குக் கொண்டு செல்லும். அன்று காலையில் அங்கு தோன்றிய பிச்சைக்காரன் உரத்த குரலில் அழைத்தான்: “அம்மா, நீ எங்கே?''

அவனுடைய அழைப்பைக் கேட்டு பதைபதைப்பு அடைந்து விட்டாள் லலிதா. அப்போது சேகர் அவளுடைய மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தான். பிறகு எப்படி அவள் பணத்தை எடுப்பதற்காக அறைக்குச் செல்ல முடியும்?

இங்குமங்குமாகப் பார்த்துவிட்டு, இறுதியாக அவள் தன்னுடைய அத்தையை அணுகினாள். அப்போதுதான் வேலைக்காரியுடன் வார்த்தைகளால் சண்டை போட்டு முடித்திருந்த லலிதாவின் அத்தை முனகிக்கொண்டே சமையல் செய்ய ஆரம்பித்திருந்தாள். அந்த நேரத்தில் அவளை அணுகுவது என்பது பொருத்தமாக இருக்காது என்று லலிதா தீர்மானித்தாள். அவள் வெளியே எட்டிப் பார்த்தபோது, அந்த பிச்சைக்காரன் கதவுக்கு அருகில் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.


அவனுக்கு எதுவுமே கொடுக்காமல் வெறுங் கையுடன் போகச் சொல்வது என்பதன் மூலம் அவள் தன்னை ஒரு புதிய ஆரம்பத்திற்கு தயார் பண்ணிக் கொள்வது என்பதை அவள் சிறிதும் விரும்பவில்லை.

அந்த மனிதன் மீண்டும் அழைத்தான்.

அன்னக்காளி வேகமாக ஓடிவந்து சொன்னாள்: “லலிதா அக்கா, அந்த உங்களுடைய "மகன்' இங்கே வந்திருக்கிறார்!''

லலிதா சொன்னாள்: “காளி, எனக்காக தயவுசெய்து சிரமப்படு. இப்போது என்னால் ஒரு நிமிடம்கூட செலவழிக்க முடியாது. தயவுசெய்து உன்னுடைய சேகர் அண்ணாவிடம் ஓடிச் சென்று ஒரு ரூபாய் கேள்!''

அன்னக்காளி ஓடிச் சென்று, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து லலிதாவிடம் ஒரு நாணயத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னாள்: “இந்தா!''

லலிதா கேட்டாள்: “சேகர் அண்ணா என்ன சொன்னார்?''

“எதுவும் சொல்லவில்லை. அவர் தன்னுடைய கோட்பைக்குள் இருந்து காசை எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான் எடுத்தேன்!''

“அவர் எதுவுமே சொல்லவில்லையா?''

“இல்லை... எதுவும் சொல்லவில்லை'' - அன்னக்காளி தன் தலையை ஆட்டி கூறிக் கொண்டே, விளையாடுவதற்காக அங்கிருந்து நகர்ந்தாள்.

லலிதா தன்னுடைய கொடைத் தன்மை நிறைந்த செயலைச் செய்தாள். ஆனால், அவளுக்காக பிச்சைக்காரன் குவித்து வைத்திருக்கும் உயர்ந்த ஆசீர்வாதங்களைக் கேட்பதற்காக அவள் காத்திருக்க விரும்பவில்லை. சொல்லப் போனால் அன்றைய தினம் அவள் அதை விரும்பவில்லை.

பிற்பகலில் சீட்டு விளையாடும் செயல் கடந்த இரண்டு நாட்களாக முழு வீச்சுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த பிற்பகல் வேளையில் தனக்கு தலைவலி இருப்பதாக பொய்யாக நடித்த லலிதா அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். அது முழுமையான பொய் என்று கூறுவதற்கில்லை. அவள் உண்மையாகவே கவலையில் இருந்தாள். சாயங்காலம் அன்னக்காளியை வரவழைத்து அவள் கேட்டாள்: “சமீப நாட்களாக சேகர் அண்ணாவிடம் போய் உன்னுடைய பாடங்களை விளக்கிக் கூறும்படி நீ கேட்கவில்லையா?''

அன்னக்காளி தலையை ஆட்டினாள்: “ஏன், கேட்டேனே!''

“சேகர் அண்ணா என்னைப் பற்றி விசாரிக்கவே இல்லையா?''

“இல்லை... ஓ... ஆமாம்... ஆமாம்... நேற்றைக்கு முந்தைய நாள் அவர் விசாரிச்சார்... பிற்பகல் வேளையில் நீங்க சீட்டு விளையாடினீங்களா இல்லையா என்று கேட்டார்.''

ஆர்வத்துடன் லலிதா கேட்டாள்: “நீ என்ன சொன்னாய்?''

அன்னக்காளி சொன்னாள்: “ சாரு அக்காவின் வீட்டில் பிற்பகல் வேளையில் நீங்க சீட்டு விளையாடினீங்க என்று நான் சொன்னேன். அதற்குப் பிறகு சேகர் அண்ணா கேட்டார் "வேறு யாரெல்லாம் விளையாடினார்கள்?' என்று. நான் சொன்னேன்- மனோரமா அத்தை, சாரு அக்கா, அவங்களோட மாமா கிரின் பாபு, அதற்குப் பிறகு நீங்க... எல்லாரும் சேர்ந்து விளையாடினீர்கள் என்று. எனக்குச் சொல்லுங்க... லலிதா அக்கா... யார் நன்றாக விளையாடியது? நீங்களா, சாரு அக்காவின் மாமாவா? நீங்கதான் மிகவும் சிறப்பாக விளையாடுவீர்கள் என்று அத்தை எப்போதும் சொல்லுவாங்க. அது உண்மையா?''

ஆனால், லலிதா மிகவும் எரிச்சலடைந்துவிட்டாள். அன்னக்காளியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் கடுமையான குரலில் சொன்னாள்: “நீ ஏன் அந்த அளவிற்கு அதிகமாகப் பேசுகிறாய்? நீ ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் தலையிடணும்... இனிமேல் நான் உன்னிடம் எந்தச் சமயத்திலும் எதையும் தர மாட்டேன்!'' அதைக் கூறிவிட்டு அவள் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினாள்.

அன்னக்காளி அதிர்ச்சியடைந்து விட்டாள். லலிதாவின் திடீர் மனமாற்றத்திற்கான காரணத்தை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அடுத்த இரண்டு நாட்களாக மனோரமாவின் சீட்டு விளையாட்டு முற்றிலுமாக நின்றுவிட்டது. ஆரம்பத்திலிருந்தே கிரின் லலிதா மீது மிகவும் ஈர்க்கப்பட்டு இருப்பதாக மனோரமா சந்தேகப்பட்டாள்.

லலிதா இல்லாமல் இருக்கும் வேளைகளில் அவளுடைய சந்தேகங்கள் உண்மைதான் என்பதைத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.

கடந்த இரண்டு நாட்களாகவே கிரின் மிகவும் நிலையற்ற மனம் கொண்டவனாகவும், ஞாபக சக்தி இல்லாதவனாகவும் இருந்தான். சாயங்கால வேளைகளில் அவன் எப்போதும் போவதைப்போல, நடப்பதற்குக்கூட அவன் வெளியே செல்வதில்லை. வேகமாக வீட்டிற்குள் நுழையும் அவன் ஒரு அறைக்கும் இன்னொரு அறைக்கும் காரணமே இல்லாமல் அலைந்து கொண்டிருந்தான். அன்று பிற்பகல் நேரத்தில் திரும்பி வந்த அவன் சொன்னான்: “அக்கா இன்றைக்கும் சீட்டு விளையாட்டே இல்லையா?''

மனோரமா சொன்னாள்: “அது எப்படி முடியும், கிரின்? விளையாடுவதற்கு யார் இருக்கிறார்கள்? ம்... சரி... நாம மூணுபேரும் சேர்ந்து விளையாட வேண்டியதுதான்.''

சிறிதுகூட உற்சாகமே இல்லாமல் கிரின் பதில் சொன்னான்: “மூன்று பேர்களை வைத்து ஒரு விளையாட்டை எப்படி விளையாட முடியும், அக்கா? நீங்க ஏன் லலிதாவை வரவழைக்கக்கூடாது?''

“அவள் வர மாட்டாள்!''

யோசனையில் ஆழ்ந்து கொண்டே கிரின் கேட்டான்: “அவள் ஏன் வரமாட்டாள்? அவள் இங்கே வரக்கூடாது என்று அவளைத் தடை செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.''

மனோரமா தலையை ஆட்டினாள்: “இல்லை. அவளோட மாமாவும் அத்தையும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. இங்கே வரக்கூடாது என்பது அவளுடைய சொந்த முடிவுதான்.''

திடீரென்று உண்டான உற்சாகத்தில் கிரின் சொன்னான்: “அப்படியென்றால் கட்டாயம் நீங்க இன்னொருமுறை தனிப்பட்ட முறையில் போனால், அவள் நிச்சயமாக வருவாள்.'' தொடர்ந்து

லலிதா அங்கு வரவேண்டும் என்பதில் திடீரென்று அவன் அதிகமான ஆர்வத்தைக் கொண்டிருந்ததால் அவன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தான்.

மனோரமா சிரித்தாள் : “நல்லது... அப்படியென்றால் நான் அதைச் செய்றேன்.'' அவள் அங்கிருந்து கிளம்பிச் சென்று சிறிது நேரத்திற்குப் பிறகு லலிதாவுடன் திரும்பி வந்தாள். அவர்கள் சீட்டு விளையாடு வதற்காக உட்கார்ந்தார்கள்.

இரண்டு நாட்களாக சீட்டு விளையாடாமல் இருந்ததால் விளையாட்டு வெகு சீக்கிரமே சூடு பிடித்தது. லலிதாவும் அவளுடைய பார்ட்னரும் வெற்றி பெற்றார்கள்.

ஒன்றோ இரண்டோ மணி நேரங்களுக்குப் பிறகு அன்னக்காளி திடீரென்று அங்கு வந்து லலிதாவை அழைத்தாள்: “லலிதா அக்கா... சேகர் அண்ணா கூப்பிடுகிறார். சீக்கிரம்!''

லலிதாவின் முகம் வெளிறியது. அவள் சீட்டு விளையாடுவதை நிறுத்திவிட்டுக் கேட்டாள் : “சேகர் அண்ணா அலுவலகத்திற்குப் போகவில்லையா?''

“எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர் திரும்பி வந்திருக்கலாம்''- அன்னக்காளி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

லலிதா சீட்டுக்களை அருகில் வைத்துவிட்டு, மன்னிப்பு கேட்கிற மாதிரி மனோரமாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: “நான் போக வேண்டும்.''

அவளுடைய கைகளைப் பிடித்தவாறு மனோரமா சொன்னாள்: “என்ன இது? இன்னும் இரண்டு விளையாட்டுகளை நீ ஏன் விளையாடக்கூடாது?''


பரபரப்புடன் லலிதா சொன்னாள்: “அது முடியாத விஷயம்... அது அவரை மிகவும் கோபம் கொள்ளச் செய்யும்.'' இதைச் சொல்லிவிட்டு அவள் வேகமாக வெளியேறினாள்.

கிரின் கேட்டான் : “யார் இந்த சேகர் அண்ணா, அக்கா?''

மனோரமா அதற்குப் பதில் சொன்னாள்: “அவன் அந்த பெரிய கேட்டுகளை கொண்ட பெரிய வீட்டில் இருக்கிறான். தெருவின் ஆரம்பத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த வீடு.''

தலையை ஆட்டிக்கொண்டே கிரின் சொன்னான்: “ஓ... அந்த வீடா? அப்படியென்றால் நபின்பாபு இவர்களுக்குச் சொந்தமா?''

மனோரமா தன் மகளை ஒருமுறை பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்: “ஏதோ உறவு! அந்த பேராசை பிடித்த கிழவர் லலிதாவின் குடும்பத்திற்குச் சொந்தமாக இருக்கும் அந்தச் சிறிய நிலத்தையும் அபகரித்துக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்.''

கிரின் அவள் கூறுவதை வியப்புடன் பார்த்தான்.

மனோரமா தொடர்ந்து அவனிடம் கடந்த வருடம் குருச்சரணின் இரண்டாவது மகளின் திருமணம் பொருளாதார பிரச்சினைகளால் எப்படி தடைப்பட்டு நின்றது என்பதையும், நபின் ராய் மிக அதிக வட்டிக்கு எப்படி பணத்தைக் கடனாகத் தந்தார் என்பதையும், அதற்கு ஈடாக அந்த வீட்டை எப்படி தனக்கு அடமானமாகப் பெற்றுக் கொண்டார் என்பதையும் கூறினாள். லலிதாவின் மாமாவால் அந்தப் பணத்தைத் திரும்ப தருவது என்பது இயலாத விஷயம். இறுதியாக நபின் ராய் அந்த வீட்டைத் தனக்கு சொந்தமாக ஆக்கிக் கொள்வார்.

இந்த உண்மைகள் அனைத்தையும் கூறிய மனோரமா, அந்த கிழவர் குருச்சரணின் சிதிலமடைந்த வீட்டைத் தரைமட்டமாக ஆக்கி அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய வீட்டை தன்னுடைய இளைய மகன் சேகருக்கு கட்டித்தரவேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டிருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு மகனுக்கும் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்க அவர் எண்ணியிருக்கிறார் என்பதையும், அதை ஒரு கெட்ட எண்ணம் என்று கூறுவதற்கில்லை என்றும் கூறினாள்.

அளவுக்கு மீறிய வருத்தம் கிரினை வந்து ஆக்கிரமித்தது. அவன் கேட்டான் : “சரி... அக்கா குருச்சரண் பாபுவிற்கு வேறு மகள்களும் இருக்கிறார்களே! அவர்களை அவர் எப்படித் திருமணம் செய்து கொடுப்பார்?''

மனோரமா அதற்கு இப்படித்தான் பதில் கூறினாள்: “அவருடைய சொந்த மகள்கள் மட்டுமல்ல - லலிதாவும் இருக்கிறாள். அவளுக்கு பெற்றோர் இல்லை. அவளுடைய திருமண விஷயத்திற்கும் முழு பொறுப்பாளியாக இருப்பவர் அந்த ஏழை மனிதர்தான். அவள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறாள். இந்த வருடம் அவளுக்கு எப்படியும் திருமணம் நடந்தாக வேண்டும். அவர்கள் இருக்கும் பிராமண வகுப்பில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை. ஜாதி விஷயத்தில் எல்லாரும் மிகவும் பிடிவாதமாக இருப்பவர்கள். நம்ம பிராமோக்கள் எவ்வளவோ மேல், கிரின்...''

கிரின் கூறுவதற்கு எதுவுமில்லை. அவளே தொடர்ந்து சொன்னாள்: “ஒரு நாள் அவளுடைய அத்தை எனக்கு முன்னால் இருந்து கொண்டு லலிதாவைப் பற்றிப் பேசும்போது அழ ஆரம்பித்து விட்டாள். அவளின் திருமணத்திற்காக என்ன ஏற்பாடு செய்ய வேண்டும், எப்படிச் செய்வது என்பதைப் பற்றியெல்லாம் அவளுக்கு எந்த திட்டமும் இல்லை. அவளைப் பற்றிய கவலைகளால், குருச்சரண் பாபு தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறார். கிரின் முங்கரில் இருக்கும் உன்னுடைய நண்பர்களின் கூட்டத்தில் அந்தப் பெண்ணை வேறு எதுவும் கேட்காமல் செய்து கொள்வதற்கு யாராவது தயாராக இருப்பார்களா? லலிதாவைப் போன்ற வைரத்திற்கு நிகரான ஒரு பெண்ணைக் கண்டு பிடிப்பது என்பது உண்மையிலேயே மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.''

குழப்பம் நிறைந்த மனநிலைக்கு ஆளான கிரின் உயிரற்ற ஒரு புன்சிரிப்புடன் சொன்னான்: “நான் நண்பர்களில் யாரைத் தேடுவது, அக்கா? ஆனால், நான் பணத்தால் உதவ முடியும்.''

ஒரு டாக்டர் என்ற வகையில், கிரினின் தந்தையிடம் ஏராளமான பணமும், சொத்துகளும் இருந்தன. கிரின் ஒருவன்தான் அவற்றுக்கு வாரிசாக இருப்பவன்.

மனோரமா கேட்டாள்: “நீ அவர்களுக்கு பணம் கடனாகத் தருவியா?''

“அது கடனாகத்தான் இருக்க வேண்டுமா? அவர் அப்படி நினைத்தால், குருச்சரண் பாபு பணத்தைத் திருப்பித் தரட்டும். அப்படி இல்லையென்றாலும் சரிதான்.''

அது மனோரமாவை ஆச்சரியம் கொள்ளச் செய்தது. அவள் கேட்டாள்: “ஆனால், கிரின்... அவர்களுக்கு அந்த அளவிற்கு பணத்தைக் கொடுப்பதால் உனக்கு என்ன லாபம்? அவர்கள் நம்முடைய சொந்தக்காரர்களும் இல்லை. நம்முடைய ஜாதியைச் சேர்ந்தவர்களும் இல்லை. காரணமே இல்லாமல் இந்தக் காலத்தில் யார் உதவி செய்கிறார்கள்?''

கிரின் தன்னுடைய அக்காவைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னான்: “ அவர்கள் நம் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் வங்காளிகள். இல்லையா? அவர் கடுமையான தேவையில் இருக்கிறார். என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. நீங்க ஏன் விஷயத்தை குழப்புறீங்க, அக்கா? அவர் வாங்கிக் கொள்வதற்குத் தயாராக இருந்தால், நான் பணம் தருவதற்குத் தயாராக இருக்கிறேன். லலிதா அவர்களுக்கு யாரும் இல்லை. நமக்கும் யாரும் இல்லை. அவளுடைய திருமணத்திற்கு ஆகக்கூடிய முழுச் செலவையும் நான் ஏற்றுக் கொண்டு விட்டால்தான் என்ன?''

மனோரமா - குறிப்பாக அவனுடைய அந்த பதிலைக் கேட்டு சந்தோஷப்படவில்லை. உண்மையாகச் சொல்வதாக இருந்தால், அந்த பண விவகாரத்தில் அவள் லாபமோ நஷ்டமோ அடையப் போவதில்லை. ஆனால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு திரும்ப என்ன கிடைக்கும் என்பதை விசாரிக்காமலே மிகப்பெரிய தொகையைத் தருவது என்னும் செயல் பெரும்பாலான பெண்களை மிகவும் ஆழமாக பாதிக்கவே செய்யும்.

அவர்களுக்கிடையே நடைபெற்ற அந்த உரையாடலை மிகவும் அமைதியாக இருந்து கொண்டு கவனித்துக் கொண்டிருந்த சாரு உற்சாகமடைந்து, எழுச்சி நிறைந்த குரலில் கூறினாள்: “தயவுசெய்து அதை செய்யுங்க மாமா. நான் போய் லலிதாவின் அத்தையிடம் இந்தச் செய்தியைக் கூறுகிறேன்.''

அவள் உடனடியாக தன் தாயிடமிருந்து அவளுடைய தலையீட்டிற்காக பலமான திட்டுதலை வாங்கினாள்: “சாரு, அமைதியாக இரு. இந்த மாதிரி உரையாடல்களில் சிறு பிள்ளைகளுக்கு எந்தவொரு வேலையும் இருக்கக்கூடாது. அப்படி எதுவும் கூறுவதாக இருந்தால், நான் அதை கூறிக் கொள்கிறேன்.''

கிரின் சொன்னான்: “நீங்க அதைச் செய்யுங்க அக்கா. நேற்றைக்கு முந்தைய நாள் நான் குரச்சரண் பாபுவை சாலையோரத்தில் பார்த்து, கொஞ்ச நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மிகவும் எளிதான மனிதராக இருந்தார். நீங்க என்ன சொல்றீங்க?''


மனோரமா அதற்கு பதில் சொன்னாள்: “நான் அதை ஒப்புக் கொள்கிறேன். கணவன், மனைவி இருவருமே மிகவும் எளிமையானவர்கள்தான். அதுதான் மிகவும் வருத்தம் தரக்கூடியது, கிரின். அப்படிப்பட்ட ஒரு மனிதர் வீடு இல்லாமல், தங்குவதற்கு இடம் இல்லாமல் இருப்பது என்றால்...? நீயே அதை உன் கண்களால் பார்க்கவில்லையா கிரின்! சேகர்பாபு அழைத்தவுடன் லலிதா எப்படி ஓடினாள் என்பதை நீயே பார்க்கவில்லையா? அதைப் பார்க்குறப்போ, முழு வீடும் அவர்களுக்கு கட்டுப்பட்டிருப்பதைப் போல தோன்றுகிறதே! ஆனால், என்னதான் அவர்களுக்கு சேவைகள் செய்யட்டும். நபின் ராயின் பிடிகளுக்குள் ஒருமுறை மாட்டிக்கொண்டால், அதற்குப் பிறகு அந்த சூழ்நிலையில் இருந்து தப்பி வருவது என்பதை எதிர்பார்க்கவே கூடாது!''

கிரின் கேட்டான்: “அப்படின்னா இந்த விஷயத்தை நீங்க பார்த்துக் கொள்கிறீர்களா, அக்கா?''

“சரி... நான் பார்த்துக் கொள்கிறேன். நீ இரக்கப்பட்டு உதவுவதாக இருந்தால் அப்படியே நடக்கட்டும். “சற்று சிரித்துக் கொண்டே மனோரமா கேட்டாள் : “அது இருக்கட்டும்... நீ ஏன் இந்த அளவிற்கு அக்கறை எடுக்கிறாய் கிரின்?''

“எனக்கு வேறு என்ன ஆர்வம் இருக்கிறது அக்கா? துன்பத்தில் இருக்கும் யாருக்காவது கருணை கொண்டு உதவுகிற செயல்தான் இது'' - கிரின் தடுமாற்றமான மனநிலையுடன் அங்கிருந்து புறப்பட்டான். புறப்பட்ட சிறிது நேரத்தில் அவன் மீண்டும் திரும்பி வந்தான்.

அவனுடைய தங்கை கேட்டாள்: “ இப்போ என்ன?''

புன்னகைத்துக் கொண்டே கிரின் சொன்னான்: “இந்த கஷ்டங்கள் நிறைந்த கதைகள்... சொல்லப் போனால், அவை ஒவ்வொன்றும் உண்மையானவை அல்ல...''

ஆச்சரியத்துடன் மனோரமா கேட்டாள்: “நீ ஏன் இதைச் சொல்கிறாய்?''

கிரின் விளக்கிச் சொன்னான்: “வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கும் ஒரு பெண் செலவழிப்பதைப் போல, லலிதா பணத்தைச் செலவழிக்கும் முறை இல்லை. அன்றொரு நாள் நாங்க திரை அரங்கத்திற்கு சென்றோம். லலிதா எங்களுடன் வரவில்லை. ஆனால், தன் தங்கையின் மூலமாக பத்து ரூபாயைக் கொடுத்து அனுப்பினாள். அவள் பணத்தைத் தாராளமாக செலவழிக்கும் முறையைப் பற்றி நீங்க ஏன் சாருவிடம் கேட்கக்கூடாது? அவளுடைய தனிப்பட்ட செலவுகள் ஒரு மாதத்திற்கு இருபத்தைந்து ரூபாய்களுக்குக் கீழே இருக்காது.''

மனோரமாவிற்கு அதை நம்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

சாரு சொன்னாள்: “உண்மைதான், அம்மா. ஆனால், அது எல்லாமே சேகர் பாபுவின் பணம். இது இப்போது மட்டும் நடக்கவில்லை. அவள் சின்ன பிள்ளையாக இருந்த காலத்திலிருந்தே, அவள் எப்போதும் சேகர் அண்ணாவின் அலமாரியைத் திறந்து பணத்தை எடுப்பாள். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.''

தன் மகளைப் பார்த்துக் கொண்டே மனோரமா சந்தேகத்துடன் கேட்டாள்: “அவள் பணத்தை எடுக்கும் விஷயம் சேகர் பாபுவிற்குத் தெரியுமா?''

சாரு பலமாகத் தலையை ஆட்டினாள் . “அவர் இருக்கும் போதுதான் அவள் அலமாரியைத் திறந்து பணத்தை எடுப்பாள். போன மாதம் அன்னக்காளியின் பொம்மை திருமணத்தின்போது அவ்வளவு பணம் தந்தது யாரென்று நினைக்கிறீர்கள்? லலிதாதான் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொண்டாள்.''

அதைக் கூர்ந்து கவனித்துக் கேட்ட மனோரமா சொன்னாள்: “என்ன நினைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. பையன்கள் அவர்களுடைய தந்தையைப் போல இறுக மூடப்பட்ட கைகளுடன் இருப்பதில்லை. அவர்கள் தாயாரின் கவனத்தில் வளர்க்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மென்மையான மனம் இருக்கும். அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவை ஒருபுறம் இருக்க, லலிதா உண்மையிலேயே மிகவும் நல்ல பெண். சிறு குழந்தையாக இருந்ததிலிருந்தே அவர்களுக்கு மிகவும் அருகில் வளர்க்கப்பட்டவள் அவள். அவள் கிட்டத்தட்ட தன்னுடைய சொந்த சகோதரனைப் போலவே சேகரைப் பார்க்கிறாள். அதனால்தான் அவர்கள் எல்லாரும் அவள்மீது அன்புடன் இருக்கின்றனர். சாரு, நீ அவர்களுடன் எப்போதும் பழகிக் கொண்டிருப்பவள். இந்த குளிர் காலத்தின்போது சேகருக்கு திருமணம் நடக்கப்போகிறது அல்லவா? அந்த கிழவர் மிகப்பெரிய தொகையை வரதட்சணையாக வாங்கி விடுவார் என்று நினைக்கிறேன்.''

அதற்கு சாரு சொன்னாள்: “ஆமாம், அம்மா... இந்த குளிர் காலத்தின்போது... எல்லா விஷயங்களும் பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்று நான் கேள்விப்பட்டேன்.''

5

ல்லா வயதைச் சேர்ந்தவர்களும் மிகவும் எளிதில் பழகக்கூடிய ஒரு மனிதராக குருச்சரண் பாபு இருந்தார். இரண்டு அல்லது மூன்று நாட்கள் பழக்கத்திலேயே, அவருக்கும் கிரினுக்கும் இடையே ஒரு நெருங்கிய நட்பு உண்டாகிவிட்டது. தனக்கென்று நிலையான சொந்தக் கருத்துகள் எதுவும் இல்லையென்றாலும், அவர் விவாதம் செய்வதில் விருப்பம் கொண்டிருந்தார். அதே நேரத்தில், விவாதத்தில் தோல்வியைத் தழுவினாலும், அதை அவர் ஒரு காயமாகவே எடுத்துக் கொள்வதில்லை.

மாலை வேளைகளில் அவர் கிரினை ஒரு கப் தேநீர் அருந்துவதற்காக அழைப்பார். குருச்சரண் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் இது நடக்கும். முகத்தையும் கை- கால்களையும் கழுவும்போதே அவர் கூறுவார் : “ லலிதா, எனக்கு ஒரு கப் தேநீர் தர முடியுமா கண்ணு? காளி, போய் உன் கிரின் மாமாவை இங்கே வரச் சொல்லு!'' பிறகு, முடிவற்ற விவாதங்கள் பல கோப்பை தேநீருக்கு மத்தியில் நடந்து கொண்டிருக்கும்.

சில நேரங்களில் லலிதா தன் மாமாவிற்கு அருகில் அமைதியாக உட்கார்ந்து உரையாடலை கவனித்துக் கொண்டிருப்பாள். அந்த நாட்களில் கிரின் வாதங்களையும் எதிர் வாதங்களையும் ஆதாரங்களுடன் கூறிக் கொண்டிருப்பான். பெரும்பாலும் விவாதம் நவீன சமூகத்தின் மோசமான விஷயங்களுக்கு எதிராக இருக்கும். சமூகத்தின் இதயமற்ற தன்மை, அறிவுப்பூர்வமாக இல்லாத செயல்கள், கொடுமைகள் - இவைதான் காரசாரமாக அந்த இரண்டு மனிதர்களும் விவாதிக்கக்கூடிய விஷயங்களாக இருக்கும்.

அவர்களின் கருத்துகளுக்கு ஆதரவாக - வெளிப்படையாக எதுவும் இல்லையென்றாலும், கிரினின் கருத்துகள் குருச்சரணின் குழப்பங்களும், கவலைகளும் நிறைந்த மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இறுதியாக அவர் தலையை ஆட்டிக் கொண்டே கூறுவார் : “நீ சொல்றது சரி, கிரின். உரிய நேரத்தில் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து, அதைப் பார்க்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்? ஆனால், அதை எப்படி ஒரு மனிதன் செய்ய முடியும்? சமூகத்தின் கொள்கைகளின்படி ஒரு பெண் வளர்ந்தால், அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் திருமண ஏற்பாடுகளுக்கு உதவி செய்வார்களா? உதாரணத்திற்கு - என்னையே எடுத்துக் கொள், கிரின்.


என்னுடைய ஒரு மகளின் திருமணத்திற்காக இந்த வீடு அடமானமாக வைக்கப்பட்டது. இன்னும் சில நாட்கள் கழித்து என்னுடைய குடும்பத்துடன் நான் தெருக்களில் போய் நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்போது சமூகம், "வாங்க... என் வீட்டில் வந்து தங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறாது. நீ என்ன சொல்கிறாய்?''

கிரின் இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதாக இருந்தால், அந்த வாய்ப்பு அவனுக்கு கிடைக்காது. குருச்சரணே எல்லா பதில்களையும் கூறிவிடுவார். “மிகவும் உண்மை!'' - அவர் கூறுவார்: “ஜாதி என்ற ஒன்று சமூகத்திலிருந்து ஒழிந்தால் நன்றாக இருக்கும். அதற்குப் பிறகு நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ - குறைந்த பட்சம் நாம் அமைதியாக வாழலாம். ஏழையைப் பார்த்து பரிதாபப்படாத சமூகம், பிரச்சினைகள் இருக்கக்கூடிய தருணங்களில் சிறிதும் உதவியாக இருக்காது. அது பயமுறுத்தவும் தண்டிக்கவும் மட்டுமே செய்யும். அப்படிப்பட்ட சமூகம் எனக்காக இருப்பது அல்ல - அல்லது என்னைப் போன்ற ஏழைகளுக்காக இருப்பதும் அல்ல. சரி... பணக்காரர்கள் இருந்து விட்டுப் போகட்டும். அப்படிப்பட்ட சமூகத்தில் எங்களுக்கென்று எதுவும் இல்லை''- தன் மனதில் இருந்ததை மிகவும் தைரியமாக வெளியே சொன்ன குருச்சரண் அடுத்து அமைதியாக இருந்தார்.

லலிதா அந்த உரையாடல்கள் முழுவதையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டு மட்டும் இருக்கவில்லை. இரவு நேரத்தில் அவள் பேசப்பட்ட அத்தனை விஷயங்களையும் அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்ள முயற்சி செய்தாள். தனக்கு தூக்கம் வரும் வரை அவள் அவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டேயிருந்தாள். லலிதாவிற்கு தன்னுடைய மாமாவை மிகவும் பிடித்திருந்தது. தன் மாமாவின் பார்வையை ஒட்டி அதை ஆதரித்து கிரின் சொன்ன விஷயங்கள் மறுக்கமுடியாத உண்மையாக அவளுக்குத் தோன்றியது. அவளுடைய மாமா மிகவும் கலங்கிப் போய் காணப்பட்டார் - குறிப்பாக அவள் விஷயத்தில். அவர் கிட்டத்தட்ட சாப்பிடுவதையும் நீர் பருகுவதையும் கூட மறந்துவிட்டார். அந்த அளவிற்கு அவரின் மனதில் சுமையை ஏற்றி வைத்திருந்தார். அவளுடைய அன்பிற்குரிய மாமா அந்த அளவிற்கு மன வேதனையுடன் இருந்ததற்குக் காரணம் - அவர் அவளை தன்னுடைய சிறகுக்குள் கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்ற ஒன்றே ஒன்றுதான். அவளுக்கு அவர் சீக்கிரம் திருமணம் செய்து வைக்காமல் போனால் குறிப்பிட்ட வயதைத் தாண்டியும் திருமணமாகாத பெண்ணை வைத்திருப்பதற்காக சமூகம் அவரை ஒதுக்கிவிடும். "அதே நேரத்தில் நான் திருமணம் செய்து கொண்டு, ஒரு விதவையாக வீட்டிற்குத் திரும்பி வந்தால், அதனால் எந்த அவமானமும் இல்லை' - லலிதா நினைத்தாள். ஆனால், ஒரு விதவைக்கும் ஒரு கன்னிப் பெண்ணுக்குமிடையே எங்கே வேறுபாடு இருக்கிறது? ஒருத்திக்கு அடைக்கலம் தருவது அவமானம் என்று நினைக்கப்படும்போது, இன்னொருத்திக்கு அடைக்கலம் தருவது மட்டும் ஏன் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது?

தினந்தோறும் அவள் கேட்ட உரையாடல்கள் லலிதாவின் மனதில் ஒரு ஆழமான பதிவை தெளிவாக உண்டாக்கிக் கொண்டிருந்தன. அவள் தனியாக இருக்கும் வேளைகளில், கிரின் பாபுவின் கருத்துகள் அவளுடைய மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அவற்றைத் திரும்பவும் மனதில் சிந்தித்துப் பார்த்த லலிதா தனக்குள் கூறிக் கொள்வாள்: "உண்மையாகவே கிரின்பாபு கூறிய எல்லா விஷயங்களும் அறிவுப்பூர்வமாக சிந்திக்கக்கூடியவையே' - இப்படி நினைத்துக் கொண்டே அவள் தூக்கத்தில் மூழ்கிவிடுவாள்.

தன் மாமாவின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவரை நெருங்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைப் பற்றி உயர்வாக நினைத்து, அவள் மிகுந்த மரியாதையை வைத்திருப்பாள் என்பது மட்டும் உண்மை. தற்போது அப்படிப்பட்ட மனிதனாக இருப்பவன் கிரின். அவனை அவள் மிகவும் உயர்வான இடத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தாள்.

படிப்படியாக குருச்சரணைப் போலவே, அவளும் தேநீர் பருகும் மாலை நேரங்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் கிரின் லலிதாவை மிகவும் மரியாதையுடன் அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால், குருச்சரண் அவளை அப்படி நடத்தக்கூடாது என்று கூறிவிட்டார். அவளை சாதாரணமாக நடத்தினால் போதும் என்று அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார். அதற்குப் பிறகு கிரின் சர்வ சாதாரணமாக அவளுடன் நெருங்கிப் பழகினான்.

ஒருநாள் கிரின் கேட்டான் : “நீ தேநீர் பருகவில்லையா, லலிதா?''

கண்களை கீழ்நோக்கி வைத்துக் கொண்டு, லலிதா தலையை ஆட்டினாள். குருச்சரண் பதில் சொன்னார்: “அவளுடைய சேகர் அண்ணா அவளை அதிலிருந்து விலக்கி வைத்திருக்கிறார். பெண்கள் தேநீர் பருகுவது அவருக்குப் பிடிக்காது.''

அந்த பதில் கிரினுக்கு பிடிக்காது என்பதை லலிதா நன்கு அறிவாள்.

சனிக்கிழமைகளில், தேநீர் பருகும் நேரம் வழக்கத்தைவிட அதிக நேரம் நீடித்துக் கொண்டிருக்கும். அன்று சொல்லப்போனால் சனிக்கிழமை. அவர்கள் பருகிக் கொண்டிருந்த தேநீரைப் பருகி முடித்துவிட்டார்கள். கிரின் ஆரம்பித்து வைத்த விவாதங்களில் முழு மனதுடன் அன்று குருச்சரணால் பங்கு கொள்ள முடியவில்லை. எப்போதாவது ஒருமுறை அவர் தன்னுடைய கவனத்தை இழந்து ஞாபக மறதி கொண்ட மனிதராக மாறிக் கொண்டிருந்தார்.

கிரின் அதை கவனித்துக் கேட்டான்: “அனேகமாக இன்னைக்கு உங்கள் உடல் நலம் சரியில்லை என்று நினைக்கிறேன்!''

வாயில் இருந்த ஹூக்காவை வெளியே எடுத்த குருச்சரண் சொன்னார் :“நான் நன்றாகவே இருக்கிறேன்.''

தயங்கியவாறு அதே நேரத்தில் நாகரீகமே இல்லாமல் கிரின் மெதுவான குரலில் சொன்னான்: “அப்படியென்றால் அலுவலகத்தில் ஏதாவது...''

“இல்லை... அப்படி எதுவும் இல்லை... '' - குருச்சரண் கிரினை சற்று ஆச்சரியம் கலக்க பார்த்தார். அவருடைய மனதிற்குள் இருக்கும் குழப்பங்கள் வெளியே அவருடைய நடவடிக்கைகளில் ஒரு பதிவை உண்டாக்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர் மிகவும் நல்ல மனம் கொண்டவராக இருந்தார்.

ஆரம்பத்தில் லலிதா எந்த விஷயங்களிலும் தலையிடுவதில்லை. ஆனால், சமீப காலமாக எப்போதாவது ஒரு முறை அவள் விவாதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அவள் சொன்னாள் : “சரி... மாமா, நீங்க இன்றைக்கு நல்ல உடல் நலத்துடன் இல்லை என்று நினைக்கிறேன்.''

குருச்சரண் உரத்த குரலில் சிரித்தார் : “ஆமாம். அப்படித்தான் இருக்கு. இல்லையா? ம்... நீ சொன்னா சரிதான். என் மனநிலை இன்றைக்கு சரியாக இல்லை!''

கிரின், லலிதா இருவரும் அவரையே பார்த்தார்கள். குருச்சரண் தொடர்ந்து சொன்னார்: “என்னுடைய நிலைமைகளை நன்கு தெரிந்து கொண்ட நபீன் அய்யா இன்றைக்கு என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டார்.


அதுவும் பொது மக்கள் எல்லாரும் பார்க்கிற மாதிரி... ஆனால், அதற்காக அவரை ஒரு மனிதன் குற்றம் சுமத்திடக்கூடாது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக என்னால் ஒரு சிறிய அளவில்கூட வட்டியைக் கட்ட முடியவில்லை. வாங்கிய முதல் அப்படியே இருக்கு!''

அந்த விஷயத்தின் கடுமையை நன்கு தெரிந்திருந்ததாலும், தன் மாமா யாருடைய உதவியும் இல்லாததால் எந்த அளவிற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டிருப்பதாலும் லலிதா அந்த விஷயத்தை எப்படியாவது மாற்றி வேறு பக்கம் கொண்டு போய் விடவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள். எங்கே ஒரு வேற்று மனிதனின் முன்னால் தன் மாமா வீட்டிலுள்ள அனைத்து அழுக்குத் துணிகளையும் சலவை செய்ய ஆரம்பித்துவிடுவாரோ என்று பயந்து விட்ட அவள் வேகமாக சொன்னாள்: “கவலைப்படாதீங்க மாமா. எல்லாம் பின்னர் வரப்போகும் விஷயங்கள்.''

லலிதா பயந்ததைப் போல குருச்சரண் அப்படி எதையும் வெளியே தெரியும்படி கூறவில்லை. அதற்குப் பதிலாக அவர் மெதுவாக சிரித்துக் கொண்டே சொன்னார்: “எது பின்னால் நடக்கும், கண்ணு? கிரின், இங்கே பாருங்க. இந்த என்னுடைய மகள் எனக்கு தாய் மாதிரி. இவள் தன்னுடைய வயதான மகன் எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது என்று நினைக்கிறாள். லலிதா, பிரச்சனையே இதுதான்... வெளியில் இருப்பவர்கள் உன் மாமாவிற்கு ஏதோ பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்..''

கிரின் கேட்டான் : “இன்றைக்கு நபின் பாபு என்ன சொன்னார்?''

கிரினுக்கு ஏற்கெனவே எல்லா விஷயங்களும் தெரியும் என்பதைத் தெரியாமல் இருந்த லலிதா, விருந்தாளியின் இந்த தாங்கிக் கொள்ள முடியாத ஆர்வத்தைப் பார்த்து மேலும் மேலும் கோபப்பட்டாள்.

குருச்சரண் எல்லாவற்றையும் கூறினார். நபின்ராயின் மனைவி நீண்ட காலமாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். சமீபத்தில் டாக்டர்கள் அவளை வேறு சூழ்நிலைக்குக் கொண்டு போனால்தான் நிலைமை சரியாகும் என்று கூறிவிட்டார்கள். பணம் தேவைப்படுகிறது. அதனால் நபின் பாபு தனக்கு வரவேண்டிய வட்டித்தொகை முழுவதையும், சொல்லப்போனால் வாங்கிய பணத்தில் ஒரு பகுதியையும் சேர்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

கிரின் சிறிது நேரத்திற்கு அமைதியாக இருந்தான். அதற்குப் பிறகு மெதுவான குரலில் அவன் சொன்னான் : “நான் சில விஷயங்களை உங்களிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கூறுவதற்கு தயக்கமாக இருந்தது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், இன்றைக்கே என்னை அதைச் செய்ய அனுமதியுங்கள்.''

குருச்சரண் உரத்த குரலில் சிரித்துக் கொண்டே சொன்னார்: “என்னிடம் எதையும் கூறுவதற்கு யாரும் எந்தச் சமயத்திலும் தயங்க மாட்டார்கள். அப்படி என்ன விஷயம், கிரின்?''

கிரின் மெதுவாக பதில் சொன்னான் : “நபின் பாபு மிகவும் அதிகமாக வட்டித் தொகை வாங்குவதாக அக்கா என்னிடம் சொன்னாங்க. என்னிடம் ஏராளமான பணம் வெறுமனே கிடக்கு. கடனை அடைப்பதற்கு நான் ஏன் அதை பயன்படுத்தக்கூடாது?''

குருச்சரண், லலிதா இருவரும் அதைக் கேட்டு திகைத்துப் போய்விட்டார்கள். கிரின் தொடர்ந்து சொன்னான்: “இந்த நிமிடத்தில் எனக்கு அதிக பணத் தேவை இல்லை. உங்களுக்கு அது பயன்படும் பட்சம், நீங்க அதை இப்போ எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்றேன். எதிர்காலத்தில் உங்களால் எப்போது முடிகிறதோ, அப்போ அதைத் திருப்பி தாங்க. நான் நினைக்கிறது அதுதான்...''

குருச்சரண் மெதுவான குரலில் கேட்டார் : “நீ எனக்கு முழுப் பணத்தையும் தர்றியா?''

கிரின் மிகவும் உறுதியான குரலில் சொன்னான்: “ஆமாம்... அது உங்களுடைய சுமைகளை கொஞ்சம் அது குறைக்கும் என்றால்...''

குருச்சரண் அதற்குப் பிறகு என்னவோ சொல்ல முயன்றார். அப்போது அன்னக்காளி வேகமாக வந்து சொன்னாள்: “லலிதா அக்கா... சீக்கிரம்... சேகர் அண்ணா நம்மை ரெடியாகச் சொன்னார். நாம எல்லாரும் திரை அரங்கத்திற்கு செல்கிறோம். '' அவள் வேகமாக உள்ளே நுழைந்ததைப் போலவே, வேகமாக வெளியேறவும் செய்தாள். அவளுடைய பெருகி வந்த உற்சாகம் குருச்சரணை வாய்விட்டு சிரிக்கச் செய்தது. லலிதா அசையாமல் நின்றிருந்தாள்.

அன்னக்காளி சிறிது நேரத்தில் திரும்பி வந்து பொறுமையை இழந்து கேட்டாள்: “நீங்க இன்னும் உள்ளே போகலையா, லலிதா அக்கா? நாங்க எல்லாரும் காத்திருக்கிறோம்.''

திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டும், லலிதா அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தன் மாமாவின் இறுதி முடிவை அவள் தெரிந்து கொள்ள விரும்பினாள். ஆனால், குருச்சரண் அன்னக்காளியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே லலிதாவைப் பார்த்து மெதுவான குரலில் சொன்னார்: “கண்ணு... அப்படியென்றால் போ. தாமதம் செய்யாதே... அவர்கள் எல்லாரும் உனக்காக காத்திருக்கிறார்கள்.''

லலிதா அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. அங்கிருந்து புறப்படத் தயாராகும்போது, அவள் மிகுந்த நன்றிப் பெருக்குடன் கிரினைப் பார்த்தாள். அவளைப் புரிந்து கொள்வதற்கு அவனுக்கு அதிக சிரமம் உண்டாகவில்லை.

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, முழுமையாகத் தயார் ஆனவுடன், லலிதா மீண்டும் அறைக்குள் ஏதோ பொருளை வைக்க வருவதைப் போல திரும்பவும் வந்தாள்.

கிரின் அதற்குள் போய்விட்டிருந்தான். குருச்சரண் தன் தலையை கனமான தலையணை தாங்கிக் கொள்ள, முகத்தில் கண்ணீர் வழிந்த கோலத்தில் படுத்திருந்தார். அந்தக் கண்ணீர் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஆனந்தக் கண்ணீர் என்பதை லலிதா தெளிவாக உணர்ந்தாள். தொடர்ந்து காலடிச் சத்தமே கேட்காமல் உள்ளே வந்ததைப் போலவே, அறையைவிட்டு அவள் வெளியேறவும் செய்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் சேகரின் அறையில் வந்து நின்றபோது, லலிதாவின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தன. அன்னக்காளி அங்கு இல்லை. அவள்தான் காரில் முதலாவதாக போய் உட்காருவாள். சேகர் மட்டும் தனியாக தன்னுடைய அறையில் காத்திருந்தான். (அனேகமாக லலிதாவை எதிர்பார்த்து). மேலே அவளைப் பார்த்த அவன், அவளுடைய கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்தான்.

கடந்த பத்து நாட்களாக லலிதாவைப் பார்க்காத அவன் அவள்மீது அதிகமான எரிச்சலில் இருந்தான். ஆனால், தற்போது அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மிகுந்த ஈடுபாட்டுடன், அன்பு கலந்த குரலில் கேட்டான்: “ என்ன விஷயம்? நீ ஏன் அழுகிறாய்?''

லலிதா தலையைக் குனிந்து கொண்டு, அதை வேகமாக ஆட்டினாள்.

அவளைப் பார்க்காமல் பல நாட்கள் இருந்த விஷயம் சேகரிடம் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை உண்டாக்கி விட்டிருந்தது.


அவன் உடனடியாக அருகில் வந்து அவளுடைய தோள்களைத் தொட்டவாறு, லலிதாவை மேலே பார்க்கும்படி கட்டாயப்படுத்திக் கேட்டான்: “என்ன! நீ உண்மையாகவே அழறியா? என்ன நடந்தது?''

லலிதாவால் அதற்கு மேல் தன்னை அடக்க முடியவில்லை. எங்கே நின்றிருந்தாளோ, அதே இடத்தில் அவள் கீழே உட்கார்ந்து, தன் முகத்தை புடவையின் முந்தானையில் புதைத்துக் கொண்டு, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

6

ன்னிடம் அசலும் வட்டியும் அடங்கிய முழுத் தொகை என்று கூறி கொடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு, நபின்ராய் அடமான பத்திரங்களைத் திருப்பித் தந்தவாறு கேட்டார்: “சரி... உங்களுக்கு யார் பணம் தந்தாங்க?''

மெதுவான குரலில் குருச்சரண் சொன்னார்: “என்னிடம் அதைக் கேட்காதீங்க. அது ரகசியம்.''

அந்தப் பணத்தைத் திரும்ப பெற்றதில் நபின் ராய்க்கு சிறிதுகூட சந்தோஷம் இல்லை. அவர் கடனாகப் பெறப்படும் பணம் திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்பதை எந்தச் சமயத்திலும் விரும்பு வதில்லை. அதை அவர் எதிர்பார்ப்பதும் இல்லை. அதற்கு பதிலாக, குருச்சரணை துன்பப்படுத்துவதன் மூலமும், அவரைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருப்பதன் மூலமும், அந்த அப்பாவி ஏழையை அடமானம் வைக்கப்பட்ட வீட்டிலிருந்து வெளியேற்றி விடலாம் என்று அவர் மனதிற்குள் திட்டம் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து நபின் ராய் இப்போது இருக்கும் அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையை எழுப்பலாம் என்று நினைத்திருந்தார். குத்துவதைப் போன்ற வார்த்தைகளுடன் அவர் சொன்னார் : “ஆனால்... இப்போது இது ரகசியமாகிவிட்டது! தப்பு உங்கள் மீது இல்லை. என்னுடையதுதான். உங்களிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டது என் தவறு. இல்லையா? நாம பழகி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன?''

காயம் பட்ட குருச்சரண் சொன்னார்: “ இது என்ன பேச்சு, அய்யா? நீங்க எனக்கு பணம் கடனாகத் தந்தீங்க. நான் அதை திருப்பி கொடுத்துவிட்டேன். நான் இப்போதும் உங்களுடைய அளவற்ற அன்பிற்குக் கடன்பட்டுத்தான் இருக்கிறேன்.''

அதைக் கேட்டு நபின் பாபு சிரித்தார். அவர் நல்ல உலக அறிவைக் கொண்டவர். இல்லாவிட்டால், இந்த அளவிற்கு செல்வத்தை அவரால் சம்பாதித்திருக்க முடியாது. அவர் தொடர்ந்து சொன்னார் : “நீங்க அந்த அளவிற்கு அதை உண்மையாகவே நம்பியிருக்கும் பட்சம், இப்படிப்பட்ட சிரமமான - நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலையில் அவசர அவசரமாக பணத்தைத் திருப்பித் தந்திருக்க வேண்டியதில்லை. நான் உங்களிடம் பணத்தைப் பற்றி ஞாபகப் படுத்தினேன் என்றால், அதற்குக் காரணம்கூட நோய்வாய்ப்பட்டிருக்கும் என்னுடை மனைவிதான். நான் அல்ல. ஆனால்... சொல்லுங்க. இந்த முழு வீட்டையும் எவ்வளவு பணத்திற்கு நீங்க அடமானம் வைத்தீர்கள்?''

குருச்சரண் தலையை ஆட்டிக் கொண்டே சொன்னார்: “இந்த வீடு அடமானமாக வைக்கப்படவில்லை. அதேபோல வட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.''

நபின் பாபுவிற்கு அதை ஏற்றுக் கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது. அவர் சொன்னார்: “என்ன? இவ்வளவு பெரிய தொகை வெறும் நம்பிக்கையின் பெயரில் தரப்பட்டதா?''

“ஆமாம்... உண்மைதான். அதே போன்ற ஒரு முறையில்... அந்த பையன் மிகவும் நல்லவனாகவும், நிறைய இரக்க குணம் கொண்டவனாகவும் இருக்கிறான்.''

“பையனா? யார் அந்த பையன்?''

குருச்சரண் மிகவும் அமைதியாக இருந்தார். தனக்கு சிறிதளவே தெரிந்திருந்தாலும், அவர் அதை வெளியே சொல்லி இருக்கக்கூடாது.

அவருடைய பேசும் விதத்தைப் பார்த்த நபின் பாபு புன்னகைத்துக் கொண்டே சொன்னார் : “ உங்களுக்கு உதவி செய்த மனிதரின் பெயரை வெளியே கூறக்கூடாது என்ற நிலைமை இருக்கலாம். இதற்கு மேல் உங்களை நான் சிரமப்படுத்தப் போவதில்லை. நான் இந்த உலகத்தின் பெரும் பகுதியைப் பார்த்திருக்கிறேன். அதனால் நான் உங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையைத் தருகிறேன். இந்த நல்லது செய்யும் நபர், தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உங்களுக்கு மிகப் பெரிய துன்பங்களைத் தராமல் இருக்க வேண்டும்!''

அந்த பேச்சுக்கு எந்த பதிலும் கூறாமல், குருச்சரண் மிகவும் பணிவாக விடைபெற்றுக் கொண்டு, பத்திரங்களுடன் அங்கிருந்து கிளம்பினார்.

ஒவ்வொரு வருடமும் இதே காலத்தில் புவனேஸ்வரி சில நாட்களை மேற்குப் பகுதியில் செலவிடுவாள். அவளுடைய வயிற்று வலி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று கூற முடியாது. ஆனாலும் அந்த பயணம் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அன்றொரு நாள் நபின்பாபு குருச்சரணிடம் பேசியபோது, நிலைமைகளை மிகவும் அளவிற்கும் அதிகமாக தான் நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்திக் கூறிவிட்டார். எது எப்படி இருந்தாலும், பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஒருநாள் காலை நேரத்தில், சேகர் தன்னுடைய அவசிய பொருட்களை சூட்கேஸிற்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். அன்னக்காளி அறைக்குள் நுழைந்து கேட்டாள்: “ சேகர் அண்ணா, நீங்கள் எல்லாரும் நாளைக்குக் கிளம்புகிறீர்கள், இல்லையா?''

மேலே தலையை உயர்த்திப் பார்த்த சேகர் சொன்னான்: “ காளி, நீ கொஞ்சம் உன்னுடைய லலிதா அக்காவைக் கூப்பிடு. அவள் எதையெல்லாம் எடுத்துக் கொண்டு போக விரும்புகிறாளோ, அவற்றை அவள் உள்ளே வைக்கட்டும்.'' ஒவ்வொரு வருடமும் லலிதா அவர்களுடன் செல்வாள். புவனேஸ்வரியின் தேவைகள், வசதிகள் எல்லாவற்றையும் அவள் கவனித்துக் கொள்வாள். அதனால், அவள் இந்த முறையும் தங்களுடன் பயணிக்கிறாள் என்று சேகர் நினைத்தது இயல்பான ஒரு விஷயமே.

தலையை ஆட்டிக் கொண்டே அன்னக்காளி சொன்னாள்: “இந்த வருடம் லலிதா அக்கா வர முடியாத நிலையில் இருக்காங்க.''

“ஏன்?''

அன்னக்காளி சொன்னாள்: “அவங்க எப்படி வரமுடியும்? இந்த குளிர் காலத்தில் அவங்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அப்பா மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருக்கிறார்.''

சேகர் வெட்ட வெளியையே கண்களை இமைக்காமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்னக்காளி அவனுடைய இப்போதைய சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல், வீட்டில் பேசப்படும் விஷயங்களில் தான் கேள்விப் பட்டவையை உற்சாகத்துடன் அவனிடம் முணுமுணுக்கும் குரலில் கூறினாள்: “எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. ஒரு நல்ல மாப்பிள்ளையை லலிதா அக்காவிற்குப் பார்த்தாக வேண்டும் என்று கிரின் பாபு சொல்லிவிட்டார். அப்பா இன்னைக்கு அலுவலகத்திற்குப் போகவில்லை. லலிதா அக்காவிற்காக யாரோ ஒரு பையனை இன்றைக்கு பார்க்கப் போகிறார். கிரின் பாபு அவருடன் போகிறார்.''


சேகர் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டான். இந்த காரணத்தால்தான் கடந்த சில நாட்களாகவே லலிதா தனக்கு முன்னால் வந்து நிற்பதற்குத் தயக்கம் காட்டியிருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

அன்னக்காளி தொடர்ந்து சொன்னாள்: “கிரின் பாபு மிகவும் நல்ல மனிதர்தானே, சேகர் அண்ணா? மேஜ் அக்காவின் திருமணத்தின் போது, எங்க வீடு மாமாவிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தெருக்களில் பிச்சை எடுப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியே இல்லை என்று அப்பா உறுதியாக நினைத்திருந்தார். அதனால், கிரின் பாபு பணம் தந்தார். நேற்று அப்பா எல்லா பணத்தையும் மாமாவிடம் திரும்பத் தந்து விட்டார். இனிமேல் நாம பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று லலிதா அக்கா சொன்னாங்க. அதுதான் உண்மை. இல்லையா சேகர் அண்ணா?''

அவளுக்கு பதிலாக சேகர் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. ஆனால், வெட்டவெளியையே அவன் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்னக்காளி கேட்டாள்: “நீங்க எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கீங்க, சேகர் அண்ணா?''

சுய நினைவிற்கு வந்த சேகர் உடனடியாக பதில் சொன்னான்: “இல்லை... எதைப் பற்றியும் இல்லை. காளி, வேகமாகப் போய் உன்னுடைய லலிதா அக்காவை வரச் சொல்லு. நான் அவளைப் பார்க்கணும்னு சொல்லு. ஓடிப்போய் அவளை அழைச்சிட்டு வா!''

அன்னக்காளி செய்தியைக் கூறுவதற்காக வேகமாக ஓடினாள்.

சேகர் அங்கு உட்கார்ந்து கொண்டு திறந்து கிடந்த சூட்கேஸையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எவையெல்லாம் தேவையோ, எவையெல்லாம் வேண்டும் என்று நினைக்கிறானோ- அவை அனைத்தும் அவனுக்கு மறுக்கப்பட்டு விட்டதைப் போல தோன்றியது.

தான் அழைக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிந்தவுடன் லலிதா மாடிக்கு வந்தாள். ஆனால், உள்ளே வருவதற்கு முன்னால், அவள் சாளரத்தின் வழியாகப் பார்த்தாள். சேகர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு கதவின் ஒரு புள்ளியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு முன்னால் அவன் இப்படி இருந்து அவள் பார்த்ததில்லை. லலிதா சற்று அதிர்ச்சி அடைந்ததுடன், பயப்படவும் செய்தாள். அவள் அறைக்குள் நுழைந்ததுதான் தாமதம், அவளை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சேகர் மிகவும் வேகமாக எழுந்து நின்றான்.

மெதுவான குரலில் லலிதா கேட்டாள் : “நீங்க என்னை வரச் சொன்னீங்களா?''

“ஆமாம்...'' - சேகர் அதே இடத்தில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்துவிட்டுச் சொன்னான்: “ நாளைக்கு காலையில் புறப்படும் புகைவண்டியில் நான் அம்மாவுடன் புறப்படுகிறேன். நாங்க திரும்பி வருவதற்கு சில நாட்கள் ஆகும். சாவிகளை எடுத்துக்கொள். உன் செலவுகளுக்கு தேவையான பணம் அலமாரி டிராயரில் இருக்கு.''

திறந்து கிடந்த சூட்கேஸைப் பார்த்த லலிதா, சென்ற வருடம் தான் அதில் பொருட்களை அடுக்கிய சம்பவத்தை சந்தோஷம் கலந்த எதிர்பார்ப்புடன் நினைத்துப் பார்த்தாள். ஆனால், இப்போது அவளுடைய சேகர் அண்ணா எல்லா பொருட்களையும் தானே அடுக்கிக் கொண்டான்.

இருவரும் அமைதியாக இருந்தார்கள். தங்களுடன் இந்தமுறை

லலிதா வரவில்லை என்ற விஷயத்தை சேகர் தெரிந்து கொண்டுவிட்டான் என்பதை லலிதா புரிந்து கொண்டாள். சொல்லப் போனால் - அதற்கான காரணத்தைக்கூட அவன் தெரிந்து கொண்டிருப்பான். அதை நினைத்தபோது, தனக்குள் பதைபதைப்புடன் சுருங்கிக் கொண்டு விட்டதைப் போல லலிதா உணர்ந்தாள். அவளிடமிருந்து திரும்பிய சேகர் ஒருமுறை இருமிவிட்டு, தொண்டையைச் சரி பண்ணிக் கொண்டு சொன்னான் : “ கவனமாக இரு. குறிப்பாக ஏதாவது தேவைப்பட்டால், என்னுடைய முகவரியை அப்பாவிடம் வாங்கி எனக்கு ஒரு கடிதம் எழுது!'' பிறகு உடனடியாக அவன் சொன்னான்: “சரி... நீ போகலாம். நான் இவற்றையெல்லாம் சரி பண்ணி வைக்கணும். இப்பவே நேரம் அதிகமாயிடுச்சு. என் அலுவலகத்தில் வேறு கொஞ்சம் நிறுத்தணும்.''

லலிதா சூட்கேஸுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு சொன்னாள்: “போய் குளிங்க சேகர் அண்ணா. நான் பொருட்களை உள்ளே வைக்கிறேன்.''

“அதுதான் சரியாக இருக்கும்'' என்று கூறிவிட்டு சாவிகளை

லலிதாவிடம் தந்த சேகர் அறையை விட்டு கிளம்புவதற்கு முன்னால், திடீரென்று நின்றான். அவன் கேட்டான்: “எனக்கு எவையெல்லாம் வைக்கப்படணும்னு நீ மறந்திருக்க மாட்டாய்... இல்லையா?''

சூட்கேஸிற்குள் இருந்த பொருட்களை மிகவும் கூர்ந்து ஆராய ஆரம்பித்த லலிதா ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

சேகர் கீழே சென்று தன் அன்னையிடமிருந்து அன்னக்காளி கூறியவை அனைத்தும் உண்மைதான் என்பதைத் தெரிந்து கொண்டான். குருச்சரண் தான் கடனாக வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தி விட்டார் என்பது உண்மைதான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு மணமகனை லலிதாவிற்காக தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குமேல் எந்த கேள்விகளையும் கேட்க சேகர் விரும்பவில்லை. அவன் குளிப்பதற்காக அங்கிருந்து நகர்ந்தான்.

ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு குளியல், சாப்பாடு எல்லாம் முடிந்து சேகர் திரும்பவும் தன்னுடைய அறைக்குள் நுழைந்தபோது அவன் திகைத்துப் போய்விட்டான்.

இந்த இரண்டு மணி நேரங்களில் லலிதா எதுவும் செய்யவில்லை. திறந்திருந்த சூட்கேஸின் மூடியின் மீது சாய்ந்து அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். சேகரின் காலடிச் சத்தங்களைக் கேட்டு பரபரப்படைந்து, அவள் மேலே பார்த்து அடுத்த நிமிடமே தன் கண்களை மீண்டும் கீழே தாழ்த்திக் கொண்டாள். அவளுடைய கண்கள் இரத்தச் சிவப்பில் இருந்தன.

ஆனால், சேகர் எதையும் பார்த்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் அணியக்கூடிய ஆடைகளை அணிந்து கொண்டு அவன் சாதாரணமாக சொன்னான்: “ நீ இப்போ இதை செய்ய முடியாது. பிற்பகலில் வந்து பொருட்களை வைத்து முடி.'' அவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டான். லலிதாவின் மனக் குழப்பத்திற்கான காரணம் என்ன என்பதை அவன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். ஆனால், எல்லா விஷயங்களிலும் கூர்மையான கவனத்தைச் செலுத்தாமல், அந்த விஷயத்தைப் பற்றி அவளுடனோ அல்லது வேறு யாருடனோ பேசுவதற்கு அவன் விரும்பவில்லை.

அன்று சாயங்காலம் அவளுடைய வீட்டில், அவள் தேநீரைக் கொண்டு வந்தபோது லலிதா பரபரப்பு நிறைந்த அலைகளில் மாட்டிக் கொண்டிருந்தாள். அங்கு சேகர் கிரினுடன் உட்கார்ந்திருந்தான். அவன் குருச்சரணிடம் விடைபெறுவதற்காக வந்திருந்தான்.

தலையைக் குனிந்து கொண்டு, லலிதா இரண்டு கோப்பைகளில் தேநீரை ஊற்றி அவற்றை கிரினுக்கும் அவளுடைய மாமாவிற்கும் முன்னால் வைத்தாள். உடனடியாக கிரின் கேட்டான்: “சேகர் பாபுவிற்கு தேநீர் எங்கே லலிதா?''

மேலே பார்க்காமல் லலிதா மெதுவான குரலில் சொன்னாள்: “சேகர் அண்ணா தேநீர் அருந்த மாட்டார்!''


கிரின் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. தான் கேள்விப்பட்டதை அவன் நினைத்துப் பார்த்தான். சேகர் தேநீர் அருந்தமாட்டான். மற்றவர்கள் தேநீர் அருந்துவதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

தன்னுடைய கோப்பையை எடுத்துக் கொண்டே குருச்சரண் கிரினும் தானும் லலிதாவிற்காக பார்த்துக்கொண்டிருக்கும் மணமகனைப் பற்றிக் கூறினார். பையன் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனை அளவுக்கு மேலே புகழ்ந்து கூறினார் குருச்சரண் : “ஆனால், இவ்வளவு விஷயங்களுக்குப் பிறகும், நம்ம கிரினுக்கு அவனைப் பிடிக்கவில்லை. சொல்லப் போனால், பையன் பார்க்குறதுக்கு அழகு என்று கூறுவதற்கில்லை. ஆனால், ஒரு மனிதனுக்கு தோற்றங்கள் என்ன வித்தியாசத்தைக் கொண்டு வந்து விடப் போகிறது? அது அவனை தேர்ச்சி பெற்றவனாகக் காட்டி விடுகிறது.'' லலிதாவிற்கு எப்படியாவது வெகு சீக்கிரமே திருமணமாகிவிட வேண்டும் என்பதில் குருச்சரண் மிகவும் ஆர்வமாக இருந்தார். அது அவரை மிகப் பெரிய பொறுப்பிலிருந்து விடுதலை செய்யும்.

அவரை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே சேகர் கேட்டான்: “ கிரின் பாபுவிற்கு அவனை ஏன் பிடிக்கவில்லை? பையன் படித்தவனாக இருக்கிறான். பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருக்கிறான். மொத்தத்தில் - ஒரு நல்ல மணமகன்!''

கிரினுக்கு மணமகனை ஏன் பிடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை மனதிற்குள் தெரிந்து வைத்திருந்தாலும், அதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே சேகர் கேட்டான். அவனைப் பொறுத்தவரையில் எந்த மாப்பிள்ளையையும் பொருத்தமானவன் என்று கிரின் ஏற்றுக் கொள்ள போவதில்லை என்பதையும் அவன் நன்கு அறிவான். எப்படியோ மாட்டிக் கொண்ட கிரின் உடனடியாக ஒரு பதிலைக் கூறிவிட்டு வெளியே வரமுடியவில்லை. அவன் முகம் சிவந்து, பதைபதைப்புடன் இருந்தான். அதைக் கவனித்த சேகர் எழுந்து சொன்னான்: “சித்தப்பா, நாளைக்கு நான் அம்மாவுடன் கிளம்புகிறேன்... உரிய நேரத்தில் எங்களுக்கு தகவலைச் சொல்ல மறந்துவிடாதீர்கள்!''

குருச்சரண் சொன்னார்: “அது எப்படி முடியும்? நீங்க எல்லாரும் எனக்காக இருப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால், உன் தாய் இல்லாமல் எதுவும் நடக்காது. எல்லாவற்றையும் தாண்டி, உன் அம்மாவை லலிதாவிற்கு தாய் என்றுகூட கூறலாம். நீ என்ன சொல்றே, லலிதா?'' - புன்னகைத்தவாறு, அவர் திரும்பி கேட்டார் : “ அவள் எப்போது போனாள்?''

சேகர் சொன்னான்: “இந்த விஷயத்தைப் பேச ஆரம்பித்தவுடனே, அவள் தப்பித்துப் போய்விட்டாள்.''

குருச்சரண் சொன்னார்: “ அவள் அப்படி நடந்து கொள்வதுதான் சரி. இன்னும் சொல்லப் போனால், லலிதா இப்போது உலக அறிவு கொண்டவளாக ஆகிவிட்டாள்!'' ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட அவர் தொடர்ந்து சொன்னார் : “என் பொண்ணு குடும்பத்தனமும் அறிவுத்தன்மையும் அருமையாகக் கலந்துவிட்டிருக்கும் ஒரு கலவை. அப்படிப்பட்ட ஒரு பெண்ணைச் சாதாரணமாக பார்க்க முடியாது, சேகர்நாத்! '' இந்த வார்த்தைகளைக் கூறியபோது, ஆழமாக வேரோடி விட்டிருக்கும் பாசம் அவரின் குரலிலும் முகத்திலும் இனிமையாக நிழல் பரப்பியது. கிரினும் சேகரும் அந்த வயதான மனிதருக்கு மனதிற்குள் மரியாதை செலுத்தியவாறு அமைதியாக இருந்தார்கள்.

7

தேநீர் அமர்வில் இருந்து பலவந்தமாக தப்பித்து ஓடிய லலிதா நேராக அறைக்குச் சென்றாள். சக்தி வாய்ந்த கேஸ் விளக்குகளுக்கு கீழே இருந்த அவனுடைய சூட்கேஸை மேலே எடுத்து, சேகரின் கம்பளியால் ஆன போர்வையை மடித்து அழகாக உள்ளே வைத்தாள். அப்போது சேகர் அறைக்குள் வருவதை அவள் பார்த்தாள். அவள் தலையை உயர்த்திப் பார்த்து, பயத்தாலும் திகைப்பாலும் எதுவும் பேசாமல், பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

ஒரு சட்டப் போராட்டத்தில் தன்னுடைய அனைத்தையும் இழந்து, நீதி மன்றத்திலிருந்து மனம் உடைந்து, தோல்வியைச் சந்தித்து வெளியே வரும் ஒரு மனிதனுக்கும் தீர்ப்பிற்கு முன்னால் இருந்த நம்பிக்கை நிறைந்த - எதையும் வெற்றியாகப் பார்க்கும் மனநிலை கொண்ட மனிதனுக்குமிடையே எந்தவொரு சம்பந்தமும் இருக்காது என்பதைப் போல சேகரும் லலிதாவிற்கு யாரென்று தெரியாத ஒரு அன்னியனாக மாறிவிட்டிருந்தான். பலவித சிந்தனைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அடையாளம் அவனுடைய முகத்தில் தெரிந்தது. தடுமாறிய குரலில் அவன் கேட்டான் : “நீ என்ன செய்கிறாய், லலிதா?''

பதிலெதுவும் சொல்லாமல் லலிதா அருகில் வந்து அவனுடைய கைகளைப் பற்றியவாறு கண்ணீருடன் கேட்டாள்: “என்ன விஷயம் சேகர் அண்ணா?''

“என்ன? எதுவும் இல்லை...'' - சேகர் செயற்கையான ஒரு சிரிப்பை வெளியிட்டான். லலிதா தொட்டது, அவனுக்கு சற்று உயிர் வந்ததைப்போல இருந்தது. அருகில் இருந்த கட்டிலில் போய் உட்கார்ந்த அவன் தன் கேள்வியைத் திரும்பவும் கேட்டான்: “ நீ என்ன செய்கிறாய்?''

லலிதா பதில் சொன்னாள்: “இந்த அடர்த்தியான மேல் கோட்டை வைப்பதற்கு நான் மறந்துவிட்டேன். அதை வைப்பதற்காக வந்தேன்.'' சேகர் அவளையே அமைதியாகப் பார்த்தான். லலிதா மேலும் சற்று மென்மையான குரலில் தொடர்ந்து சொன்னாள்: “சென்றமுறை புகை வண்டி பயணம் உங்களுக்கு மிகவும் வசதிக்குறைவுகளுடன் இருந்தது. உங்களிடம் பெரிய அளவைக் கொண்ட கோட்டுகள் நிறைய இருந்தன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட கனமாக இல்லை. அதனால், நாம் திரும்பி வந்த உடனே, நான் உங்களுடைய அளவிற்கு ஒரு கோட்டை தைக்கச் சொன்னேன்.'' லலிதா ஒரு கனமான ஓவர் கோட்டை எடுத்து சேகரிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை மிகவும் கவனித்துப் பார்த்த சேகர் சொன்னான்: “ஆனால், ஒரு விஷயத்தை என்னிடம் நீ கூறுவதே இல்லை. ஏன்?''

லலிதா சிரித்தாள் : “நீங்க எல்லாரும் நாகரீக மோகம் கொண்ட மிடுக்கான மனிதர்கள். இப்படிப்பட்ட ஒரு கனமான கோட்டை தயாரிப்பதற்கு என்னை நீங்க அனுமதிப்பீங்களா? அதனால், உங்களிடம் கூறுவதற்கு பதிலாக நான் தைக்கச் சொல்லி தயார் பண்ணி வைத்துவிட்டேன்!'' அதை சூட்கேஸில் வைத்தவாறு அவள் சொன்னாள்: “ இது மேலாக இருக்கு. சூட்கேஸைத் திறந்தவுடன், நீங்க இதைப் பார்த்துவிடலாம். உங்களுக்கு குளிர் இருந்தால், இதைப் போட்டுக் கொள்ள மறந்துடாதீங்க.''

“சரி...'' - சேகர் முணுமுணுத்துக் கொண்டே தூரத்தில் கண்களை இமைக்காமல் பார்த்தான். திடீரென்று அவன் உரத்த குரலில் சொன்னான்: “இல்லை... இது நடக்காத விஷயம். இது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை!''

“எது நடக்காது? நீங்க இதை அணிய மாட்டீர்களா?''


வேகமாக அவன் சொன்னான் : “இல்லை... இல்லை... அது இல்லை... நான் இதை அணிந்து கொள்வேன். இது முற்றிலும் வேறொரு விஷயம். என்னிடம் சொல்லு, லலிதா. எல்லாவற்றையும் வைத்தாகிவிட்டது என்று உனக்குத் தெரியுமா?''

லலிதா சொன்னாள்: “ஆமா... எல்லாம் வைக்கப்பட்டுவிட்டன. நான் எல்லாவற்றையும் பிற்பகலில் வைத்துவிட்டேன்.'' எல்லாப் பொருட்களையும் மீண்டும் ஒருமுறை ஆராய்ந்த லலிதா சூட்கேஸை மூடினாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்து கொண்டு, அவள் இருக்கும் பக்கத்தையே பார்த்த சேகர் மெதுவான குரலில் கேட்டான் : “ அடுத்த வருடம் என் நிலைமை எப்படி இருக்கும் என்பதை உன்னால் சொல்ல முடியுமா, லலிதா?''

தலையை உயர்த்திப் பார்த்த லலிதா கேட்டாள்: “ஏன்?''

“உனக்கு மட்டுமே ஏன் என்பதற்கான காரணம் தெரியும்'' - இந்த வார்த்தைகளைக் கூறிய அடுத்த நிமிடமே, அதை மறைப்பதற்காக அவன் முயன்றான். அதனால், செயற்கையாக சிரித்துக் கொண்டே அவன் சொன்னான் : “ எது எப்படியோ... இன்னொருவரின் வீட்டிற்குப் போவதற்கு முன்னால், பொருட்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை எனக்கு விளக்கிச் சொல்லிவிடு. இல்லாவிட்டால், எனக்கு தேவைப்படும்போது நான் அதை என்னால் கண்டு பிடிக்கவே முடியாமல் போய்விடும்.''

கோபத்துடன் லலிதா உரத்த குரலில் சொன்னாள்: “போங்க!''

சேகர் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டே சொன்னான்: “போங்க!'' மேலும் அவன் தொடர்ந்து சொன்னான்: “உன் திருமண விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசுவது உனக்கு ஒரு தர்மசங்கடமான விஷயமாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உண்மையைச் சொல்லு. என்னுடைய நிலைமை என்னவாக இருக்கும்? நான் நல்ல முறையில் வாழ விரும்புகிறேன். ஆனால், அதைச் செயல் படுத்துவதற்கு என்னால் முடியவில்லை. இந்த விஷயங்கள் ஒரு வேலைக்கார பெண் செய்யக்கூடியது அல்ல. அதனால், நான் உன் மாமாவைப்போல மாற வேண்டியதுதான். ஒரு ஆடையையே மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். வேறு என்ன செய்வது?''

சாவிக் கொத்தை தரையில் வைத்துவிட்டு, லலிதா அங்கிருந்து ஓடினாள்.

சேகர் அவளுக்குப் பின்னால் அழைத்தான் : “நீ நாளைக்கு காலையில் கட்டாயம் வந்திடு!''

தன் பெயரைக் கூறி அவன் அழைப்பதை அவள் கேட்டாள். ஆனால், அதற்குமேல் அங்கு அவளால் இருக்க முடியவில்லை. வெட்கமாக இருந்தது. வேகமாக அவள் கீழே ஓடினாள்.

அவர்கள் வீட்டு மாடியின் ஒரு மூலையில் அன்னக்காளி நிலவு வெளிச்சத்தில் உட்கார்ந்திருப்பதை அவள் பார்த்தாள். அவளுக்கு முன்னால் ஒரு குவியல் சாமந்திப் பூக்கள் இருந்தன. அவளுக்கு அருகில் வந்த லலிதா கேட்டாள் : “குளிரில் வெளியே உட்கார்ந்து கொண்டு என்ன செய்றே, காளி?''

அவளை தலையை உயர்த்திப் பார்க்காமலே அன்னக்காளி சொன்னாள் : “என் மகளுக்கு மாலைகள் தொடுத்துக் கொண்டிருக்கிறேன், லலிதா அக்கா. இன்றைக்கு இரவு அவளுக்கு திருமணம்.''

“என்னிடம் நீ முன்கூட்டியே சொல்லவில்லையே!''

“எதுவுமே முடிவு செய்யப்படாமல் இருந்தது, லலிதா அக்கா. ஆனால், பஞ்சாங்கத்தைப் பார்த்த அப்பா இன்று இரவை விட்டால் இந்த மாதம் முழுவதும் வேறு நாள் இல்லை என்று கூறிவிட்டார். என் மகள் வளர்ந்து கொண்டிருக்கிறாள். இதற்கு மேல் அவளை வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. எப்படியும் இன்று இரவு அவளுக்கு திருமணம் செய்து வைத்தே ஆகவேண்டும். லலிதா அக்கா, ஒரு விருந்து ஏற்பாடு பண்ணுவதற்கு கொஞ்சம் பணம் தாங்க.''

லலிதா சிரித்தாள். அவள் சொன்னாள் : “ உனக்கு எப்போ பணம் தேவைப்படுதோ, அப்ப மட்டும்தான் நீ என்னை நினைக்கிறாய். போய் என் தலையணைக்கு அடியில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொள். ஆனால், காளி... சாமந்திப்பூ மாலைகளை திருமணத்திற்குப் பயன்படுத்தலாமா?''

அன்னக்காளி அதற்கு உடனடியாக பதில் சொன்னாள்: “ஆமாம்! வேறு எதுவுமே கிடைக்கவில்லையென்றால்! நான் எவ்வளவோ பெண்களைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன், லலிதா அக்கா! எனக்கு எல்லாம் தெரியும்.'' அவள் உணவைத் தயார் பண்ணுவதற்காக அங்கிருந்து கிளம்பினாள்.

லலிதா அங்கு உட்கார்ந்து அன்னக்காளியின் பொம்மை திருமணத்திற்காக மாலைகள் தயார் பண்ண ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்த அன்னக்காளி சொன்னாள்: “எல்லாரையும் அழைத்தாகிவிட்டது. சேகர் அண்ணா மட்டும்தான் எஞ்சியிருக்கிறார். நான் போய் அவரிடம் சொல்வதுதான் சரி. இல்லாவிட்டால், அவர் வருத்தப்படுவார்.''

அன்னக்காளி பேசுவதைக் கேட்டால், யாரும் அவளை வயது குறைவான பெண், திருமணமாகாதவள் என்று நினைக்கவே மாட்டார்கள். எல்லாம் தெரிந்த ஒரு குடும்பத்தலைவியைப் போலவும், தான் செய்யக்கூடிய எந்த செயலிலும் ஒரு முதிர்ச்சி இருக்கும்படியும் அவள் நடந்து கொள்வாள். சேகரிடம் தகவலைக் கூறிவிட்டு, அவள் கீழே வந்து சொன்னாள்: “அவர் ஒரு மாலை வேணும்னு சொன்னார், லலிதா அக்கா. நீங்க தயவு செய்து போய் அவருடைய கையில் கொடுக்கிறீர்களா? நான் இங்கே எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியதிருக்கு. நிறைய வேலைகள் செய்யவேண்டியதிருக்கு. திருமணம் நடப்பதற்கு இன்னும் அதிக நேரம் மீதமில்லை.''

தலையை ஆட்டிக் கொண்டே லலிதா சொன்னாள் : “என்னால முடியாது காளி. நீயே போ.''

“சரி... நானே போகிறேன். பெரிய மாலையை என்னிடம் கொடுங்க.''

மாலையைக் கொடுக்கும்போது, லலிதா தன் மனதை மாற்றிக் கொண்டு அந்த நிமிடமே சொன்னாள் : “பரவாயில்லை. நானே கொண்டு போகிறேன்.''

நிலைமையைப் புரிந்து கொண்ட அன்னக்காளி சொன்னாள்: “அதுதான் நல்லது, லலிதா அக்கா. நான் மிகவும் பிஸியாக இருக்கேன். ஒரு நிமிடத்தைக்கூட என்னால் செலவழிக்க முடியவில்லை.''

அவளுடைய பேசும் முறையும் முகபாவனையும் லலிதாவை வாய்விட்டு சிரிக்கச் செய்தன. அவள் மாலையுடன் அங்கிருந்து கிளம்பினாள். அறைக்குள் நுழையும்போது, சேகர் தீவிரமாக கடிதமொன்றை எழுதிக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அவள் அவனுக்குப் பின்னால் போய் நின்றாள். ஆனால், அவன் இன்னும் அவளைப் பார்க்காமல் இருந்தான். சிறிது நேரத்திற்கு அமைதியாக நின்றிருந்த அவள் அவனை அதிர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, அவள் வேகமாக மாலையை அவனுடைய கழுத்தில் போட்டுவிட்டு, உடனடியாக கட்டிலுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.


ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த சேகர் அழைத்தான் : “ நீ... காளி!'' அடுத்த நிமிடம் லலிதாவைப் பார்த்ததும் அவன் மிகவும் வெளிறிப் போய் வியப்புடன் கேட்டான் : “நீ என்ன காரியம் செய்திருக்கிறாய் லலிதா?''

அவள் எழுந்து அவனை பயத்துடன் பார்த்துக் கொண்டே சொன்னாள் : “ஏன்? என்ன விஷயம்?''

அதே தீவிரத் தன்மையைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டு சேகர் சொன்னான் : “ஏன்? உனக்குத் தெரியாதா? இந்த கொண்டாட்ட சம்பவம் நடைபெறும் இன்றைய இரவு நேரத்தில் மாலைகள் மாற்றப்படுகின்றன என்றால் அதற்கு அர்த்தம் என்ன என்று காளியிடம் போய் கேள்.''

லலிதா உடனடியாகப் புரிந்து கொண்டாள். முகம் சிவக்க அவள் அறையைவிட்டு வேகமாக வெளியேறியவாறு வியப்புடன் சொன்னாள்: “இல்லை... இல்லை... நிச்சயமா இல்லை.''

சேகர் அவளை அழைத்தான் : “இல்லை, லலிதா நீ போகாதே. நான் ஒரு முக்கியமான விஷயத்தை உன்னிடம் சொல்ல வேண்டியதிருக்கு!''

சேகர் சொன்னதை லலிதா காதில் வாங்கவில்லை. அதற்கு மேலும் கேட்பதற்காக நிற்க வேண்டும் என்பதைக்கூட அவள் நினைக்கவில்லை. அவளால் எந்த இடத்திலும் நிற்க முடியவில்லை. அவள் நேராக தன்னுடைய அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்து, கண்களை இறுக மூடிக் கொண்டு அப்படியே படுத்திருந்தாள்.

கடந்த ஐந்து ஆறு வருடங்களாக அவள் சேகருக்கு மிகவும் அருகிலேயே வளர்ந்திருக்கிறாள். ஆனால், இதற்கு முன்னால் அவனிடமிருந்து இப்படிப்பட்ட எதையும் அவள் கேட்டதேயில்லை. இந்த நிமிடம் வரை, எப்போதும் தீவிரமாகவும் அமைதியாகவும் இருக்கும் சேகர் எந்தச் சமயத்திலும் அவளுடன் நகைச்சுவையாகப் பேசியதே இல்லை. அதுவும் இப்படிப்பட்ட தர்மசங்கடமான விஷயத்தைப் பற்றி... அப்படிப்பட்ட வார்த்தைகள் அவனிடமிருந்து வரும் என்பதை அவளால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. குழப்பத்திற்குள் சிக்கிக் கொண்ட லலிதா அங்கேயே சுமார் இருபது நிமிடங்கள் படுத்துக் கிடந்துவிட்டு, பின்னர் எழுந்து உட்கார்ந்தாள். அவள் மனதில் சேகரை நினைத்து பயந்தாள். அவன் அவளை ஏதோ முக்கியமான வேலைக்காக நிற்கும்படி சொன்னான். அவள் அவனுக்கு கீழ்ப்படியாமல் நடந்தால் அவன் கோபப்படலாம். அவள் எழுந்து உட்கார்ந்து, தான் அங்கு போகலாமா அல்லது வேண்டாமா என்று சிந்தித்தாள். பக்கத்து வீட்டைச் சேர்ந்த வேலைக்காரி உரத்த குரலில் அழைப்பது கேட்டது : “லலிதா அக்கா... நீங்க எங்கே இருக்கீங்க? சின்ன அய்யா உங்களை வரச் சொன்னார்.''

லலிதா வெளியே வந்து மெதுவான குரலில் பதில் சொன்னாள்: “நான் வர்றேன்...''

மாடிக்குச் சென்று கதவைத் திறந்தபோது, சேகர் இன்னும் தன்னுடைய கடிதத்தில் மூழ்கியிருந்ததை அவள் பார்த்தாள். நீண்ட நேரம் அமைதியாக நின்றிருந்த அவள் இறுதியாகக் கேட்டாள்: “நீங்க எதற்கு என்னை வரச் சொன்னீங்க?''

எழுதுவதைத் தொடர்ந்து கொண்டே சேகர் பதில் சொன்னான்: “பக்கத்துல வா. நான் உனக்குச் சொல்றேன்.''

“வேண்டாம்... இங்கேயே இருக்கேன். எனக்குச் சொல்லுங்க.''

தனக்குள் சிரித்துக் கொண்டே சேகர் திரும்பவும் சொன்னான்: “இங்கே பாரு... உணர்ச்சிவசப்பட்டு நீ என்ன காரியம் செஞ்சிட்டே!''

கலக்கத்துடன், லலிதா உடனடியாகச் சொன்னாள்: “ திரும்பவும் நீங்க...''

திரும்பியவாறு சேகர் சொன்னான்: “அது என் தவறா? நீதான் ஆரம்பிச்சு வச்சே...''

“நான் எதுவும் செய்யவில்லை. நீங்க இப்போ அந்த மாலையைத் திருப்பித் தாங்க!''

சேகர் சொன்னான் : “அதற்குத்தான் உன்னை நான் அழைத்து வரச் சொன்னேன், லலிதா. பக்கத்துல வா. நான் மாலையைத் திருப்பித் தர்றேன். நீ பாதி காரியத்தை செய்துவிட்டு பாதியிலேயே ஓடிட்டே. அருகில் வா. நான் அதை முடித்து வைக்கிறேன்.''

கதவில் சாய்ந்தவாறு அமைதியாக சிறிது நேரம் நின்று கொண்டிருந்த லலிதா சொன்னாள்: “நான் சீரியஸாக உங்களிடம் கூறுகிறேன். இப்படியே நீங்கள் நகைச்சுவை பண்ணிக் கொண்டு இருந்தால், நான் மீண்டும் எந்தச் சமயத்திலும் உங்கள் முன்னால் வர மாட்டேன். தயவு செய்து அதை என்னிடம் திருப்பித் தாங்க.''சேகர் மாலையை எடுத்துக் கொண்டே சொன்னான்: “வந்து எடுத்துக் கொள்.''

“அங்கிருந்தே என்னிடம் எறிங்க.''

தலையை ஆட்டிய சேகர் மீண்டும் சொன்னான்: “நீ பக்கத்துல வரவில்லையென்றால், உனக்கு இது கிடைக்கவே கிடைக்காது.''

“அப்படியென்றால் எனக்கு அது வேண்டவே வேண்டாம்'' - கோபத்துடன் சொன்ன லலிதா அங்கிருந்து கிளம்பினாள்.

சேகர் சத்தம் போட்டு சொன்னான்: “ஆனால், பாதி நிகழ்ச்சி நிறைவேற்றப்படாமல் இருக்கு!''

“நல்லது... அப்படியே இருக்கட்டும்'' - உண்மையிலேயே தான் கூறியதைப் போலவே லலிதா திரும்பவும் வரவில்லை.

ஆனால், அவள் கீழே போகவில்லை. அதற்கு பதிலாக அவள் கிழக்குப் பக்க மொட்டை மாடியின் மூலைக்குச் சென்று சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றவாறு மேலே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நிலவு வானத்தில் மேலே எழுந்து விட்டிருந்தது. மெல்லிய குளிர்கால நிலவு வெளிச்சம் சுற்றிலும் நிறைந்திருந்தது. மேலே இருந்த வானம் மிகவும் தெளிவாக இருந்தது. சேகரின் அறை இருந்த திசையை நோக்கி ஒருமுறை பார்த்துவிட்டு, லலிதா மேலே பார்த்தாள். அவளுடைய கண்கள் வேதனை, அவமானம், பதைபதைப்பு ஆகியவற்றால் உண்டான கண்ணீருடன் பிரகாசித்தன. நடந்த செயல்களைப் பற்றி இனிமேலும் எதுவும் தெரியாமலிருக்கும் ஒரு குழந்தை அல்ல அவள். பிறகு எதற்கு சேகர் அந்த அளவிற்கு இரக்கமே இல்லாமல் கேலி செய்து அவளிடம் அப்படி நடந்து கொண்டான்? எந்த அளவிற்கு தான் தாழ்ந்து போனவளாகவும் முக்கியத்துவம் அற்றவளாகவும் ஆகிவிட்டோம் என்பதைப் புரிந்து கொள்கிற அளவிற்கு அவள் முதிர்ச்சி உள்ளவளாகத்தான் இருந்தாள். தன்னிடம் எல்லாரும் மென்மையாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம்- தான் ஒரு அனாதை என்பதுதான் என்ற விஷயத்தை அவள் முழுமையாக உணர்ந்திருந்தாள். தனக்குச் சொந்தம் என்று கூறிக்கொள்வதற்கு லலிதாவிற்கு யாருமில்லை. உண்மையாக சொல்லப்போனால் - அவளுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதற்கு என்று யாருமே இல்லை. அதனால்தான் அவளுடன் எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத கிரின் அவளைக் காப்பாற்றுவதற்காக முன் வந்தான்.

கண்களை மூடிக் கொண்டே, சேகரின் குடும்பத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தன் மாமா சமூகத்தில் எவ்வளவு கீழான அடித்தட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை லலிதா நினைத்துப் பார்த்தாள். அவளேகூட அவளுடைய மாமாவிற்கு ஒரு சுமைதான். இதே நேரத்தில் ஒரு தூர இடத்தில் சேகருக்கு பொருத்தமான மணமகனைத் தேடி கண்டுபிடிப்பதற்காக தீவிர பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.


வெகு சீக்கிரமே அந்தத் திருமணம் நடக்கவும் செய்யும். இந்தத் திருமணத்தின் மூலம் நபின் ராய் எவ்வளவு பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் சேகரின் தாய் மூலம் லலிதா தெரிந்து கொண்டிருந்தாள்.

நிலைமை அப்படி இருக்கும்போது, சேகர் திடீரென்று இந்த மாதிரி அவளை அவமானப்படுத்தினால்? வெறுமனே வெட்ட வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது லலிதா இந்த சிந்தனைகளில் மூழ்கிப் போய்விட்டாள். திரும்பியபோது, திடீரென்று சேகர் அங்கு நின்று கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அவன் அமைதியாக நின்று சிரித்துக் கொண்டிருந்தான். சேகருக்கு அவள் போட்ட சாமந்திப்பூ மாலை ஆச்சரியப்படும் வகையில் இப்போது அவளுடைய கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவளுடைய குரல் கண்ணீரால் கம்மி, தடுமாறியது. அவள் சொன்னாள்: “நீங்க ஏன் இதைச் செய்தீங்க?''

“நீ ஏன் அதைச் செய்தாய்?''

“நான் எதுவும் செய்யல'' - இதைச் சொன்ன லலிதா தன் கழுத்தில் இருந்த மாலையை சேகரை தலையை உயர்த்தி பார்த்துக் கொண்டே கழற்றுவதற்கு முயற்சித்தாள். அதற்குமேல் எதையும் கூறுவதற்கு அவளுக்கு தைரியமே இல்லை. ஆனால், கண்ணீருடன் முணுமுணுத்தாள் : “ எனக்கு சொந்தம் என்று கூறுவதற்கு யாருமில்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்க என்னை இப்படி அவமானப் படுத்துகிறீர்களா?''

இதுவரை சேகர் புன்னகைத்துக் கொண்டே இருந்தான். ஆனால், லலிதாவின் வார்த்தைகள் அவனை அதிர்ச்சியடையச் செய்தன. இவை குழந்தைத்தனமான வார்த்தைகள் இல்லை! அவன் சொன்னான் : “நீ என்னை அவமானப்படுத்தவில்லையா?''

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, சற்று மென்மையான குரலில் லலிதா கேட்டாள் : “நான் எப்ப அதைச் செய்தேன்?''

சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த சேகர் சாதாரணமாக சொன்னான்: “இப்போ... நீ கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், உன்னிடம் பதில் இருக்கும். சமீப நாட்களாகவே நீ மிகவும் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறாய், லலிதா. நான் என் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.'' இதைக் கூறிவிட்டு அவன் அமைதியாக இருந்தான்.

அதற்கு மேல் கூறுவதற்கு லலிதாவிடம் வேறு எதுவும் இல்லை. அவள் தலையைக் குனிந்து கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். பிரகாசித்துக் கொண்டிருக்கும் நிலவு வெளிச்சத்தில், அவர்கள் இருவருமே எந்த வார்த்தைகளும் கிடைக்காமல் நின்றிருந்தார்கள். அன்னக்காளியின் மகளுடைய திருமணத்தில் மாலையில் இருந்த சிப்பிகளின் ஓசை மட்டுமே சுற்றிலும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.

சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்த சேகர் சொன்னான்: “இனிமேலும் குளிரில் நின்று கொண்டிருக்காதே. உள்ளே போ.''

“நான் போகிறேன்'' - லலிதா தான் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு தன்னுடைய இறுதி மரியாதைகளைச் செலுத்துகிற விதத்தில் சேகரின் பாதங்களில் விழுந்தாள்.

அதைப் பார்த்து சேகர் புன்னகைத்தான். அவன் சிறிது நேரம் தயங்கியவாறு இரண்டு கைகளையும் நீட்டி, அவளை அருகில் கொண்டு வந்து, சற்று குனிந்து, தன் உதடுகளால் மெதுவாக அவளுடைய உதடுகளைத் தொட்டான். “இன்று இரவிற்குப் பிறகு நீ யாருக்கும் பதில் கூற தேவையில்லை. உனக்கு என்ன பண்ண வேண்டும் என்று தெரியும் லலிதா.''

ஏதோ இனம்புரியாத உணர்ச்சி உண்டாக்கிய நடுக்கம் லலிதாவின் உடல் முழுக்க ஓடியது. நகர்ந்து கொண்டே அவள் கேட்டாள்: “நான் மாலை போட்டேன் என்பதற்காக நீங்க இப்படி நடந்தீங்களா?''

புன்னகைத்துக் கொண்டே, சேகர் அதை மறுத்தான்: “இல்லை. நான் இதைப்பற்றி எத்தனையோ நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், எந்த விதமான முடிவுக்கும் வர முடியவில்லை. இன்று நான் துணிச்சலான முடிவை எடுத்திருந்தேன் என்றால் அதற்குக் காரணம் - நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதை நான் உணர்ந்ததுதான்.''

லலிதா சொன்னாள்: “ஆனால் உங்க அப்பா கேள்விப்பட்டால், மிகவும் கோபப்படுவார். அம்மா மிகவும் வேதனைப்படுவாங்க. இல்லை, இது நடக்காத விஷயம், சேகர்....''

“உண்மைதான். அப்பா கோபப்படுவார். ஆனால், அம்மா சந்தோஷப்படுவாங்க. பரவாயில்லை... எதைத் தவிர்க்க முடியாதோ, அது நடந்திருக்கிறது. நீயும் அதை ஒதுக்க முடியாது. நானும்தான். இப்போ கீழே போய், அம்மாவின் ஆசீர்வாதங்களை வாங்கிக்கோ.''

8

ருநாள், சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு வாடிப்போன முகத்துடன் குருச்சரண் நபின்ராயின் அறைக்குள் நுழைந்து அவருக்கு அருகில் இருந்த மெத்தையில் உட்கார இருந்தார். அப்போது நபின் ராய் உரத்த குரலில் அதில் உட்காரக்கூடாது என்று கத்தினார். “இல்லை... இல்லை... அங்கே இல்லை... அந்த ஸ்டூலை எடுங்க. நான் இந்த நேரத்தில் இன்னொரு முறை குளிக்க முடியாது. நீங்க உங்களின் மதத்தை விட்டு விலகிட்டீங்க. அப்படித்தானே?''

சற்று தூரத்தில் இருந்த ஸ்டூலில் தன் தலையை மிகவும் குனிந்து கொண்டு குருச்சரண் உட்கார்ந்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்னால், எல்லா வகையான சடங்குகளையும் செய்து, அவர் பிராமோ இனத்திற்கு மாறிவிட்டார். இன்று அதிகாலையில், அந்தச் செய்தி வர்ணமயமான வதந்திகளுடன் கலந்து ஒரு தீவிரமான இந்து மத வெறியரான நபின் ராயின் காதுகளை அடைந்தது. நபின் ராயின் கண்களில் இருந்து தீப்பொறிகள் பறந்து கொண்டிருந்தன. ஆனால், குருச்சரண் எப்போதும்போல மிகவும் மென்மையானவராக இருந்தவாறு அங்கு அமைதியாக உட்கார்ந்திருந்தார். யாரிடமும் கலந்தாலோசிக்காமல் அவர் அந்த தீர்மானத்தை எடுத்ததிலிருந்து வீட்டில் உண்டான கண்ணீருக்கும் சந்தோஷமற்ற தன்மைக்கும் ஒரு முடிவே இல்லாமல் போய்விட்டது.

நபின்ராய் வெடித்தார் : “சொல்லுங்க... இது உண்மையா இல்லையா?''

குருச்சரண் கண்ணீர் நிறைந்திருந்த கண்களை உயர்த்தியவாறு சொன்னார்: “ஆமாம்... உண்மைதான்.''

“நீங்கள் ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? உங்களுடைய சம்பளமே அறுபது ரூபாய்தான். நீங்க...''

ஒரு வெறுப்பு கலந்த எரிச்சல் நபின்ராயின் குரலை பேசவிடாமல் தடுத்தது.

கண்களைத் துடைத்தவாறு தொண்டையைச் சரிபண்ணிக் கொண்டு குருச்சரண் சொன்னார்: “நான் என் சுய உணர்வில் இல்லை... என்னுடைய பிரச்சினைகள் என் கழுத்தில் ஒரு கயிறை மாட்டிக் கொள்ளச் செய்வதில் கொண்டுபோய் விட்டு விடுமா, இல்லாவிட்டால் கடவுளிடம் கொண்டு போய் சேர்க்குமா என்று எனக்கே தெரியாது. எந்த வழியில் போவது என்று எனக்கே புரியவில்லை. இறுதியாக, தற்கொலை செய்து கொள்வதற்கு பதிலாக, கடவுளிடம் அடைக்கல மாகிவிடத் தீர்மானித்தேன்... அதனால் மாறினேன்.

குருச்சரண் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.


நபின்ராய் அவருக்குப் பின்னால் இடியென முழங்கினார்: “என்ன அருமையான முடிவு! நீங்கள் தற்கொலை பண்ணிக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக உங்களுடைய மதத்தை தற்கொலை பண்ணிக் கொள்ளும்படி செய்து விட்டீர்கள். வெளியே போங்க. மீண்டும் உங்களுடைய முகத்தை எந்தச் சமயத்திலும் எங்களுக்குக் காட்டாதீங்க! உங்களைப் போன்று இருப்பவர்களை நண்பர்களாக தேடிக் கொள்ளுங்கள். உங்களுடைய மகள்களுக்கு ஏதாவது பேய் பிடித்த வீட்டில் திருமணம் செய்து கொடுங்கள்.'' அவர் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

கடுமையான கோபத்தில், தன்னுடைய கௌரவம் பாதிக்கப்பட்ட உணர்வுடன், நபின்ராய் குருச்சரண் மீது ஏதோ ஒரு வகையில் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிதான் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. குருச்சரண் தன்னுடைய பிடிகளில் இருந்து முழுமையாகத் தப்பித்துவிட்டார் என்ற நினைப்பும், அவரை சமீப எதிர்காலத்திற்குள் மீண்டும் மாட்டச் செய்வது என்பது நடக்காத விஷயம் என்ற எண்ணமும் அவரை மிகவும் கோபம் கொள்ளச் செய்தன. இறுதியாக, வேறு எந்த முடிவுக்கும் வர முடியாததால், சில பணியாட்களை அழைத்து அடுத்தடுத்த இரண்டு வீடுகளுக்கும் நடுவில் ஒரு பெரிய சுவரை எழுப்பும்படி சொன்னார். அதே நேரத்தில் மொட்டை மாடியிலிருந்து பார்க்க முடியாத அளவிற்கு அது இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

இதற்கிடையில் இப்போதும் கல்கத்தாவை விட்டு தூரத்தில் இருந்த புவனேஸ்வரிக்கு குருச்சரண் மதம் மாறிவிட்ட செய்தி சேகர் மூலம் தெரிய வந்து, அவள் கண்ணீர்விட்டு அழுதாள். “சேகர், இந்த எண்ணத்தை அவரிடம் யார் உருவாக்கி விட்டிருப்பார்கள்?'' என்று கேட்டாள் அவள்.

இந்த எண்ணங்களுக்குப் பின்னால் யார் இருந்திருப்பார்கள் என்பதைப் பற்றி சேகருக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. எனினும், அதற்குள் போகாமல் அவன் சொன்னான்: “ஆனால்... அம்மா, நீங்கள் எல்லாரும் வெகு சீக்கிரமே அவரை சமூகத்தில் எப்படியிருந்தாலும் ஒதுக்கி வைக்கத்தான் செய்வீர்கள். எல்லா பெண்களுக்கும் அவர் எப்படித் திருமணம் செய்து வைப்பார்? பிரம்மோவாக ஆனால், அதிகபட்சம் அவர் அவர்களுக்கான வரதட்சணையைத் தர வேண்டியது இருக்காது!''

தலையை ஆட்டிக் கொண்டே, புவனேஸ்வரி கறாரான குரலில் சொன்னாள்: “எல்லாம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது சேகர். மகள்களுக்கு வரதட்சணை கொடுக்கும் விஷயம் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதற்காக ஒருவர் தன்னுடைய மதத்தையே விட்டுக் கொடுக்கிறார் என்றால், மேலும் எத்தனையோ பேர் அதே காரியத்தைச் செய்திருப்பார்கள். கடவுள் பூமிக்கு தான் அனுப்பி வைத்திருக்கும் எல்லாரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.''

சேகர் அமைதியாக இருந்தான். தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே புவனேஸ்வரி தொடர்ந்து சொன்னாள்: “ நான் என் மகள் லலிதாவை என்னுடன் அழைத்து வந்திருந்தால், இந்த விஷயத்தில் வேறு ஏதாவது முடிவை எடுத்திருப்பேன். நிச்சயமாக ஏதாவது செய்தாக வேண்டும். இப்படியொரு காரியத்தைச் செய்யப் போவதை மனதில் வைத்துக் கொண்டிருந்ததால்தான், குருச்சரண் அவளை நம்முடன் வருவதற்கு அனுமதிக்கவில்லை என்ற விஷயம் அப்போது எனக்கு தெரியாமல் போய்விட்டது. அவர் உண்மையாகவே அவளுக்குப் பொருத்தமான ஒரு மணமகனைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.''

தன் அன்னையைப் பார்த்துக் கொண்டே, சேகர் ஆவேசமான குரலில் சொன்னான்: “அது சரி, அம்மா. நீங்கள் திரும்பிப் போன பிறகுகூட நீங்கள் ஏதாவது செய்ய முடியும். சொல்லப் போனால் - பிரம்மோயிசத்திற்கு மாறியிருப்பது லலிதா அல்ல. அவளுடைய மாமாதான் மாறியிருக்கிறார். உண்மையாகச் சொல்வதாக இருந்தால் அவள் அந்தக் குடும்பத்தில் ஒருத்திகூட இல்லை. லலிதா அனாதையாக இருந்த ஒரே காரணத்தால்தான் அந்தக் குடும்பத்திலேயே அவள் வளர்ந்தாள்.''

சிந்தனையில் மூழ்கிய புவனேஸ்வரி சொன்னாள் : “ஆமாம், உண்மைதான். ஆனால், உன் அப்பா அதையெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார். இன்னும் சொல்லப் போனால் - இனிமேல் அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்வதையே அவர் அனுமதிக்கமாட்டார்.''

சேகர் தனிப்பட்ட முறையில் அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஆனால், அவன் அந்த உரையாடலைத் தொடர விரும்பாததால் அறையை விட்டு வெளியேறினான்.

அதற்குமேல் ஒரு நிமிடம்கூட கல்கத்தாவை விட்டு விலகி இருப்பதில் அவனுக்கு சிறிதளவும் விருப்பம் இல்லாமலிருந்தது. அதற்கடுத்த இரண்டு நாட்களும் மனச்சுமையுடன் இருண்டுபோன முகத்துடனும் அமைதியற்ற தன்மையுடனும் அலைந்து திரிந்த அவன், இறுதியாக ஒரு மாலை நேரத்தில் தன் தாயிடம் வந்து சொன்னான் : “அம்மா, இந்தப் பயணம் சந்தோஷம் நிறைந்ததாகவே இல்லை. நாம திரும்பி விடுவோம்.''

புவனேஸ்வரி இதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டாள். “நானும் இங்கு இருக்க விரும்பவில்லை, சேகர்!''

அவர்கள் திரும்பி வந்தபோது, தாயும் மகனும் இரண்டு வீடுகளுக்கும் நடுவில் இருந்த பொதுப் பாதையை மறித்து ஒரு சுவர் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒரு வார்த்தைகூட கூறாமலே, ராய் குடும்பத்தின் தலைவர் குருச்சரணின் குடும்பத்துடன் பெயரளவிற்குகூட தொடர்பு வைத்திருப்பதையோ அவர்களுடன் எந்தவிதமான உறவையும் கொண்டிருப்பதையோ சிறிதும் விரும்பவில்லை என்பதை அவர்கள் இருவரும் புரிந்து கொண்டார்கள்.

அன்று இரவு சேகர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அவனுடைய தாய் சொன்னாள்: “லலிதாவை கிரினுக்கு திருமணம் செய்து கொடுப்பதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கெனவே இதை எதிர்பார்த்தேன்.''

தலையை உயர்த்தாமலேயே சேகர் கேட்டான்: “அப்படி யார் சொன்னார்கள்?''

“அவளுடைய அத்தை! உன் அப்பா பிற்பகல் வேளையில் கண் அயர்ந்து கொண்டிருக்கும்போது, நான் அவளைப் பார்ப்பதற்காக போனேன். லலிதாவின் மாமா வேறு மதத்திற்கு மாறியதிலிருந்து அவள் அழுது கொண்டே இருந்திருக்கிறாள். அவளுடைய கண்கள் மிகவும் வீங்கிப் போய் சிவந்திருந்தன.'' சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, தன் கண்களில் வழிந்த கண்ணீரை தன்னுடைய புடவைத் தலைப்பைக் கொண்டு துடைத்த புவனேஸ்வரி சொன்னாள்: “இது எல்லாமே விதி, சேகர்... விதி... விதியின் விளையாட்டை யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் யாரைக் குற்றம் சொல்வது? சொல்லப் போனால்... கிரின் ஒரு நல்ல பையன்... நல்ல வசதி படைத்தவன். லலிதா கஷ்டப்பட மாட்டாள்.''

சேகர் எந்த பதிலும் கூறவில்லை. ஆனால், தட்டில் இருந்த உணவுடன் அவன் விளையாடிக் கொண்டிருந்தான். தன் தாய் அங்கிருந்து கிளம்பியவுடன், அவன் சாப்பிடாமல் உணவை அப்படியே வைத்துவிட்டு, கைகளைக் கழுவிவிட்டு, இரவைக் கழிப்பதற்காகத் திரும்பினான்.


மறுநாள் சாயங்காலம், அவன் ஒரு நடை நடந்து வரலாம் என்று வெளியே கிளம்பினான். அதே நேரத்தில் மாலை நேர தேநீர் நிகழ்ச்சி குருச்சரணின் வெளி அறையில் அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. ஏராளமான சிரிப்பு, உரையாடல் ஆகியவற்றுடன் அது தொடர்ந்து கொண்டிருந்தது. குதூகலம் நிறைந்த சத்தம் தன் காதுகளில் கேட்க, ஒரு நிமிடம் தயங்கிய சேகர், பிறகு வீட்டிற்குள் நுழைந்து, சத்தத்தைக் கிழித்துக் கொண்டு குருச்சரணின் அறைக்குள் நுழைந்தான். உடனடியாக அந்த ஆரவாரம் நின்றது. அவனுடைய முகத்தைப் பார்த்ததும், அங்கு இருந்த எல்லாரின் முக வெளிப்பாடுகளும் மாற ஆரம்பித்தன.

சேகர் திரும்ப வந்துவிட்டான் என்ற விஷயம் அங்கிருந்தவர்களில் லலிதாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அன்று கிரினும் வேறொரு இளைஞனும் அங்கு இருந்தார்கள். புதிதாக தென்பட்ட அந்த மனிதன் சேகரையே ஆச்சரியத்துடன் பார்த்தான். அப்போது கிரின் உயிர்ப்பே இல்லாமல் எதிரில் இருந்த சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். குருச்சரண்தான் சத்தம் போட்டு பேசிக் கொண்டிந்தார். ஆனால், இப்போது அவருடைய முகம் முற்றிலும் வெளிறிப்போய் காணப்பட்டது. அவருக்கு அருகில் அமர்ந்திருந்த

லலிதா தேநீரைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவள் ஒருமுறை மேலே பார்த்துவிட்டு, பிறகு தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

சேகர் அருகில் வந்து குருச்சரணை மரியாதையுடன் வணங்கியவாறு புன்னகையுடன் சொன்னான்: “ஏன் எல்லா விளக்குகளும் மங்கலாக இருக்கின்றன?''

குருச்சரண் மென்மையான குரலில் அவனை ஆசீர்வதித்தார். ஆனால், அவருடைய குரல் சரியாகவே கேட்கவில்லை. சேகர் மற்றவர்களின் இக்கட்டான நிலையை அந்த நேரத்தில் மனதிற்குள் ரசித்துக் கொண்டே, அவருக்கு சிறிது நேரம் தரவேண்டும் என்பதற்காக அவன் தன்னைப் பற்றி பேச ஆரம்பித்தான். முந்தைய நாள் காலை நேர புகைவண்டியில் தாங்கள் திரும்பி வந்ததையும், தன் தாய் நோயிலிருந்து எப்படி தப்பித்தாள் என்பதையும் அவன் கூறினான். தாங்கள் சென்று பார்த்த எல்லா இடங்களைப் பற்றியும் அவன் விளக்கிச் சொன்னான். மூச்சு விடாமல் எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு, இதற்குமேல் கூறுவதற்கு வேறு எதுவுமில்லை என்று தோன்றியவுடன், இறுதியாக சேகர் யாரென்று தெரியாத அந்த இளைஞனின் முகத்தையே பார்த்தான்.

அதற்குள் குருச்சரண் தன் இயல்பு நிலையை அடைந்திருந்தார். அவர் அந்த இளைஞனை அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னார் : “இவர் நம் கிரினின் நண்பர். இவர்கள் ஒரே இடத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து படித்திருக்கிறார்கள். இவர் ஒரு நல்ல பையன். நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமான சமயத்திலிருந்தே இவர் ஷ்யாம் பஜாரில் வாழ்ந்தாலும், என்னைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருகிறார்.''

தலையை ஆட்டிக் கொண்டே சேகர் தனக்குத்தானே கூறிக் கொண்டான் : "ஒரு நல்ல பையன்!' சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அவன் கேட்டான் : “சித்தப்பா... எல்லாம் நல்ல முறையில் நடக்கின்றனவா?''

குருச்சரண் பதில் எதுவும் கூறவில்லை. அவர் தன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். சேகர் அங்கிருந்து புறப்படுவதற்காக எழுந்திருப்பதைப் பார்த்தவுடன், அவர் கண்ணீர் மல்க வேகமாகக் கூறினார் : “தயவு செய்து தோணுறப்போ வா. எங்களை முழுமையாக மறந்துவிட வேண்டாம். நீ எல்லா செய்திகளையும் கேள்விப்பட்டாயா?''

“நிச்சயமா நான் வருவேன்'' - இதைச் சொல்லியவாறு சேகர் வீட்டின் உள்ளறையை நோக்கி நடந்தான்.

சிறிது நேரத்தில் குருச்சரணின் மனைவியின் விசும்பல் சத்தம் கேட்டது. வெளியே உட்கார்ந்தவாறு குருச்சரண் தன்னுடைய கண்ணீரை தன் வேட்டி நுனியால் துடைத்துக் கொண்டார். கிரின் ஒரு குற்றவாளியைப் போன்ற உணர்வுடன் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். லலிதா ஏற்கெனவே அங்கிருந்து போய்விட்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சமையலறையைவிட்டு வெளியே வந்து வராந்தாவைத் தாண்டி வெளி வாசலில் கால் வைத்தபோது, இருட்டில் மூழ்கியிருந்த கதவுகளுக்குப் பின்னால் லலிதா காத்துக் கொண்டிருப்பதை சேகர் பார்த்தான்.

மரியாதையுடன் அவனுடைய பாதங்களைத் தொட்ட அவள் அவனுக்கு மிகவும் அருகில் இருந்தாள். அமைதியாக தன் தலையை உயர்த்திய அவள் சிறிது நேரம் காத்திருந்தாள். பிறகு, சற்று பின்னால் நகர்ந்தவாறு அமைதியாகக் கேட்டாள் : “நீங்க ஏன் என் கடிதத்திற்கு பதில் போடவில்லை?''

“என்ன கடிதம்? நான் கடிதம் எதுவும் பெறவில்லையே! நீ என்ன எழுதினாய்?''

லலிதா சொன்னாள் : “ எவ்வளவோ... அதனால் பிரச்சினையில்லை. நீங்க எல்லாவற்றையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போ என்னிடம் சொல்லுங்க. என்னை நீங்க என்ன செய்யச் சொல்றீங்க?''

வியப்பு கலந்த குரலில் சேகர் கேட்டான் : “நான் கூறுவதால் என்ன மாறுதல் உண்டாகிவிடப் போகிறது?''

அவனையே அதிர்ச்சியுடன் பார்த்த லலிதா கேட்டாள் : “நீங்க ஏன் அப்படி சொல்றீங்க?''

“சரி லலிதா... நான் யாருக்கு கட்டளை இடுவது?''

“ஏன்... எனக்குத்தான். வேறு யாருக்கு?''

“ஏன் குறிப்பா உனக்கு? அப்படியே நான் சொன்னாலும், நீ ஏன் அதைக் கேட்கப் போகிறாய்?'' - சேகரின் குரல் உயிரற்றதாகவும் சற்று கவலை நிறைந்ததாகவும் இருந்தது.

இப்போது லலிதா மிகவும் குழப்பத்திற்குள்ளானவளாக ஆகிவிட்டாள். அவள் மேலும் சற்று அருகில் வந்து, கண்ணீருடன் கூறினாள்: “நீங்க பேசுங்க. என்னைக் குத்தி காட்டுறதுக்கு இது நேரம் இல்லை. நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... என்ன நடக்கும் என்று எனக்குச் சொல்லுங்க. இரவு நேரங்களில் உண்டாகும் கவலைகளாலும் பயத்தாலும் என்னால் தூங்கவே முடியவில்லை.''

“எதற்கு பயம்?''

“உண்மையாகத்தான் கூறுகிறேன். பயம் இருக்காதா? நீங்களும் இங்கே இல்லை. அம்மாவும் இல்லை. சில நேரங்களில் மாமா செய்யும் முட்டாள்தனமான காரியங்களைப் பார்க்க வேண்டுமே! இப்போ அம்மா என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எப்படி இருக்கும்?''

சிறிது நேரத்திற்கு சேகர் மிகவும் அமைதியாக இருந்தான். பிறகு அவன் சொன்னான்: “ஆமாம்... உண்மைதான். அம்மா உன்னை ஏற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லாமல்தான் இருப்பாங்க. உன் மாமா வேறொரு ஆளிடமிருந்து நிறைய பணத்தை வாங்கியிருக்கிறார் என்ற விஷயத்தை அவங்க கேள்விப்பட்டிருக்காங்க. போதாக்குறைக்கு, நீங்க எல்லாரும் இப்போ பிரம்மோக்களாக வேறு இருக்கிறீர்கள். நாங்கள் இந்துக்கள்.''

அந்த நேரத்தில் அன்னக்காளி சமையலறைக்குள் இருந்தவாறு அழைத்தாள் : “லலிதா அக்கா... அம்மா கூப்பிடுறாங்க.''


லலிதா உரத்த குரலில் சொன்னாள்: “இதோ வர்றேன்.'' தொடர்ந்து தன்னுடைய குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்: “மாமா எந்த மதத்தில் இருக்கிறார் என்பது பிரச்சினையே இல்லை. நீங்க என்ன மதமோ, நான் அந்த மதம்தான். உங்களை அம்மாவால் தூக்கி எறிய முடியலைன்னா, அவங்களால என்னையும் விட்டெறிய முடியாது. கிரின் பாபுவிடமிருந்து கடனாக வாங்கிய பணத்தைப் பற்றியா நீங்கள் குறிப்பிடுறீங்க? நான் அந்தப் பணம் முழுவதையும் திருப்பிக் கொடுத்துவிடுவேன். அவருக்கு திரும்ப கொடுக்கப்பட வேண்டிய பணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்கியாகணும்!''

சேகர் கேட்டான் : “அவ்வளவு பணத்தை நீ எங்கேயிருந்து வாங்குவாய்?''

சேகரை ஒருமுறை தலையை உயர்த்தி பார்த்துவிட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு லலிதா சொன்னாள்: “ஒரு பெண் எங்கேயிருந்து பணம் வாங்குவாள் என்று உங்களுக்குத் தெரியாதா? நான் அங்கேயிருந்துதான் அந்தப் பணத்தை வாங்குவேன்!''

இதுவரை தன்னை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருத்திக் கொண்டு சேகர் பேசிக் கொண்டிருந்தாலும், அவனுக்குள் ஒரு தாங்க முடியாத வெப்பம் சுட்டெரித்துக் கொண்டிருந்ததென்னவோ உண்மை. அவன் கவலை நிறைந்த குரலில் சொன்னாள் : “ஆனால் உன் மாமா உன்னை விற்றுவிட்டார் போலிருக்கிறதே!''

அந்த இருட்டில் லலிதாவால் சேகரின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அவனுடைய குரலில் உண்டான மாறுதலை அவளால் உணர முடிந்தது. உறுதியான குரலில் அவள் சொன்னாள்: “அது எல்லாமே பொய். என் மாமாவைப் போன்ற ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. அவரைக் கிண்டல் பண்ணாதீங்க. அவருடைய கஷ்டங்களும் பிரச்சினைகளும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த முழு உலகத்திற்கும் தெரியும்.'' பிறகு வார்த்தைகளை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டே தயக்கத்துடன் அவள் தொடர்ந்து சொன்னாள்: “சொல்லப்போனால், எனக்குத் திருமணம் ஆனபிறகுதான் அவர் பணத்தை வாங்கியிருக்கிறார். அதனால், என்னை விற்பதற்கு அவருக்கு உரிமையே இல்லை. அவரால் விற்கவும் முடியாது. உங்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. இன்னும் சொல்வதாக இருந்தால், எனக்கு பணம் தர வேண்டும் என்பதிலிருந்து தப்பிப்பதற்காக, என்னை நீங்கள் விற்றுவிடுவதில் மிகவும் திறமை கொண்டவராகக்கூட இருப்பீர்கள் - அப்படிச் செய்ய நீங்கள் விருப்பப்பட்டால்!''

சேகரின் பதிலுக்காக காத்திருக்காமல், லலிதா வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

10

லிதாவைத் தான் திருமணம் செய்வது என்பது நடக்காத ஒரு விஷயம் என்ற முடிவுக்கு வந்த சேகர் அவளைப் பற்றிய எல்லா கனவுகளையும் காற்றில் பறக்க விட்டான். அவன் முதல் இரண்டு நாட்களையும் மிகவும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்க கடத்தினான். அவள் திடீரென்று தோன்றுவாள், எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறுவாள், அப்போது எழுப்பப்படும் எல்லா கேள்விகளுக்கும் தான் பதில் கூறியாக வேண்டும் என்றெல்லாம் அவனின் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், யாரும் எந்தக் கேள்விகளையும் எழுப்பவில்லை. விஷயங்கள் ஏதாவது சொல்லப்பட்டு விட்டனவா என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை. ஆனால், குருச்சரணின் வீட்டிலிருந்து அவனுடைய வீட்டிற்கு யாரும் வரவில்லை. சேகரின் அறைக்கு வெளியே இருந்த மொட்டை மாடியிலிருந்து பார்க்கும்போது குருச்சரணின் இல்லத்து மொட்டை மாடி முழுவதும் தெரிந்தது. எங்கே யாராவது கண்களில் பட்டுவிடுவார்களோ என்று பயந்து, சேகர் மொட்டை மாடிக்குச் செல்வதையே முற்றிலும் விட்டுவிட்டான்.

எனினும், ஒரு மாதம் ஓடியபிறகு எந்தவித பிரச்சினைகளையும் சந்திக்காமல், அவன் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டுக் கொண்டே தனக்குத்தானே கூறிக்கொண்டான். "என்ன இருந்தாலும், எந்தப் பெண்ணும் அப்படிப்பட்ட விஷயங்களை வெளியே கூறும்போது, இயற்கையாகவே தர்மசங்கடமாக உணரத்தான் செய்வாள்! அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுவதைவிட பெண்கள் இறந்துவிடுவதுமேல் என்று நினைப்பார்கள் என்று அவன் கேள்விப்பட்டிக்கிறான். அவன் அதை நம்பினான். தன் இதயத்திற்குள் அவர்களின் இந்த பலவீனத்திற்காக அவன் அவர்களுக்குப் பெரிய அளவில் நன்றி கூறிக் கொள்ளவும் செய்தான்.

ஆனால், அமைதியின்மை அவனை ஏன் விரட்டிக் கொண்டே இருக்கவேண்டும்? ரகசியம் தொடர்ந்து ரகசியமாகவே காப்பாற்றப்பட்டு வருகிறது என்பது உறுதியாகத் தெரிந்திருந்தும், அவனுடைய மனம் ஏன் வார்த்தைகளால் கூறமுடியாத அளவிற்கு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்? இனம்புரியாத பயத்திற்கும் குழப்பத்திற்கும் அவன் ஏன் எப்போதும் ஆளாகிக் கொண்டிருக்க வேண்டும்? ஒருவேளை லலிதா எப்போதாவது எதையாவது கூறுவாளா என்றுகூட அவன் சில நேரங்களில் ஆச்சரியத்துடன் நினைக்க ஆரம்பித்தான். சொல்லப்போனால் அவள் வேறொரு நபரின் பாதுகாப்பின் கீழ் ஒப்படைக்கப்படும்போது, அவள் அமைதியாகவேகூட இருந்து விடலாம். அவளுக்குத் திருமணம் நடக்கப்போகிறது என்ற சிந்தனையும், அவள் தன் கணவனின் வீட்டிற்கு புறப்பட்டுச் செல்லப் போகிறாள் என்பதும் அவனை உள்ளுக்குள் ஏன் கோபமடையச் செய்ய வேண்டும்? அதே நேரத்தில் வெளியே ஏன் பதைபதைப்பு கொள்ளச் செய்ய வேண்டும்?

முன்பு, சாயங்கால நேரங்களில் வெளியே செல்வதற்கு பதிலாக, சேகர் தன்னுடைய அறைக்கு வெளியே இருக்கும் மொட்டை மாடியில் இருந்து கொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருப்பான். அவன் இப்போது தன்னுடைய வழக்கமான செயலைத் திரும்பவும் ஆரம்பித்தான். ஆனால், ஒருநாள்கூட அந்த இன்னொரு மொட்டை மாடியில் அவன் யாரையும் பார்க்கவில்லை. ஒரே ஒருமுறை ஏதோ ஒரு விஷயத்திற்காக அங்கே வந்த அன்னக்காளியை மட்டும் அவன் பார்த்தான். அவனுடைய கண்கள் அவள் மீது விழுந்ததுதான் தாமதம், அவள் கீழே பார்க்கத் தொடங்கிவிட்டாள். அவளை அழைக்கலாமா வேண்டாமா என்று சேகர் மனதில் தீர்மானிப்பதற்குள், அவள் அங்கிருந்து மறைந்துவிட்டாள். அந்தச் சிறு குழந்தையான காளிக்குக்கூட அந்த இரண்டு மொட்டைமாடிகளுக்கு நடுவில் எழுந்த சுவருக்கான அர்த்தம் தெரிந்திருக்கிறது என்பதை அதற்குப் பிறகுதான் சேகரே உணர்ந்தான்.

மேலும் ஒரு மாதம் ஓடியது.

ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில், புவனேஸ்வரி கேட்டாள் : “நீ சமீப நாட்களில் லலிதாவைப் பார்த்தாயா?''

தலையை ஆட்டியவாறு சேகர் கேட்டான் : “இல்லை. ஏன்?''

அவனுடைய அன்னை சொன்னாள்: “இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் அவளை மொட்டை மாடியில் பார்த்தேன். நான் அவளை அழைத்தேன். என் மகள் மொத்தத்தில் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தாள். மிகவும் மெலிந்துபோய் வெளிறி, தன் வயதைவிட அதிக வயதை அடைந்துவிட்டவளைப் போல இருந்தாள். அந்த அளவிற்கு மாற்றம். அந்தக் குழந்தைக்கு பதினான்கு வயதுதான் என்பதை யாருமே நம்ம மாட்டார்கள். “புவனேஸ்வரியின் கண்கள் கண்ணீரால் நிறைந்து விட்டன. அவற்றைத் துடைத்துக் கொண்டு அவள் சொன்னாள்: “அவள் அணிந்திருந்த ஆடைகள் அழுக்கடைந்து, கிழிந்து போய் காணப்பட்டன. நான் அவளிடம், "உன்னிடம் வேறு ஆடைகள் இல்லையாடா கண்ணு?' என்று கேட்டேன். தன்னிடம் இருப்பதாக அவள் சொன்னாள். ஆனால், நான் அவளை நம்பவில்லை. அவள் எந்தச் சமயத்திலும் அவளுடைய மாமா தந்த ஆடைகளை அணிந்ததே இல்லை. அவளுக்கு நான்தான் ஆடைகள் வாங்குவேன். கடந்த ஆறேழு மாதங்களில் நான் அவளுக்கு எதுவும் வாங்கித் தரவில்லை.'' அதற்குமேல் புவனேஸ்வரியால் தொடர்ந்து பேச முடியவில்லை. தன் புடவைத் தலைப்பால் தன்னுடைய கண்களைத் துடைத்துக் கொண்ட அவள் லலிதாவை உண்மையாகவே தன் மகளைப் போலவே நினைத்து அன்பு செலுத்தினாள்.

சேகர் வேறு பக்கம் வெறித்துப் பார்த்தவாறு அமைதியாக நின்றிருந்தான்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு புவனேஸ்வரி தொடர்ந்து சொன்னாள்: “என்னைவிட்டால் அவள் எதற்காகவும் யாரிடமும் கேட்கக்கூடாது. இக்கட்டான நேரத்தில் பசியுடன் இருந்தால், திரும்பவும் அவள் என்னைத்தான் தேடி வருவாள். அவள் என்னையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பாள். அவளைப் பார்த்த நிமிடத்திலேயே, அவளுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரிந்துவிடும். என் தலைக்குள் அந்த சிந்தனைதான் ஓடிக்கொண்டே இருக்கிறது, சேகர். லலிதா என்ன செய்வது என்றே தெரியாமல் எல்லா நேரங்களிலும் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். அவளை யாருமே புரிந்து கொள்ளவில்லை. யாரும் அவளைப் பற்றி கவலைப்படவும் இல்லை. அவளுடைய தேவைகளைப் பற்றி அக்கறை செலுத்துவதற்கு நான் மட்டுமே இருக்கிறேன். அவள் என்னை "அம்மா' என்று அழைக்க மட்டும் இல்லை... என்னை அப்படியேதான் அவள் பார்க்கவும் செய்கிறாள்.''

சேகருக்கு தன்னுடைய கண்களைக் கொண்டு தன் தாயைப் பார்ப்பதற்கான தைரியம் இல்லாமலிருந்தது. அவன் ஏற்கெனவே தான் பார்த்துக் கொண்டிருந்த திசையிலேயே தொடர்ந்து பார்த்துக் கொண்டவாறு சொன்னான்: “அதுசரி அம்மா... நீங்கள் ஏன் அவளை அழைத்து வரும்படி கூறக்கூடாது?


அவளுக்கு என்னென்ன தேவைப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அவளை ஏன் கவனமாகப் பார்த்துக் கொள்ளக்கூடாது?''

“இப்போ என்னிடமிருந்து அவள் எதையும் ஏற்றுக் கொள்வாளா? உன் அப்பா பொது பாதையைக்கூட அடைத்துவிட்டார். எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் அவளுக்கு எதையாவது தருவது? குருச்சரண் பாபு கவலைகளால் பாதிக்கப்பட்டு மோசமாக நடந்துகொண்டார். அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் என்ற முறையில் அவரை மன்னித்து, அவருக்கு உதவி செய்திருக்க வேண்டும். மாறாக, நாம் அவரைத் தனியாகப் பிரித்து, முழுமையாக ஓரம்கட்டி விட்டோம். இன்னும்கூட நான் சொல்வேன் - உன் அப்பாவால்தான் லலிதாவின் மாமா தன் மதத்தையே தூக்கியெறியும் நிலைக்குத் தள்ளப்பட்டார். உன் அப்பா பணத்திற்காக அவரை விடாமல் துரத்திக் கொண்டிருந்தார். வெறுப்பின் காரணமாக எந்த மனிதனாக இருந்தாலும் அந்த அளவிற்கு நடக்கத்தான் செய்வான். குருச்சரண் பாபு சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறார் என்று நான் கூறுகிறேன். அந்தப் பையன் கிரின் நம்மைவிட அவருக்கு மிகவும் நெருக்கமானவன் என்பதைச் செயல் வடிவில் காட்டிவிட்டான். நான் உன்னிடம் கூறுகிறேன் - லலிதா அவனைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சந்தோஷத்துடன் இருப்பாள். அடுத்த மாதம் திருமணம் என்று நான் நினைக்கிறேன்.''

அடுத்த நிமிடம் சேகர் திரும்பிக் கொண்டு கேட்டான்: “அடுத்த மாதம் திருமணம் நடக்கப் போகிறதா?''

“நான் கேள்விப்பட்டது அதுதான்!''

சேகரிடம் அதற்குப் பிறகு கேட்பதற்கு எந்தக் கேள்விகளும் இல்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அவனுடைய அன்னை சொன்னாள்: “லலிதாவிடமிருந்து அவளுடைய மாமாவின் இப்போதைய நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர் எப்படி இருக்க முடியும்? அவருடைய மனதில் அமைதி இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, வீட்டில் தொடர்ந்து கண்ணீர்த் துளிகள். ஒரு நிமிடம்கூட அங்கு அமைதி இல்லையாம்.''

சேகர் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சந்து மிகவும் குறுகியதாக இருந்தது. இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் போக முடியாத அளவிற்கு அது சிறியது. சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, தன் வேலையிலிருந்து சேகர் திரும்பி வந்து கொண்டிருந்தான். குருச்சரணின் வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த காரால், அவனுடைய அலுவலக கார் நிற்க வேண்டியதாகிவிட்டது. சேகர் கீழே இறங்கினான். கேட்டதற்கு, அந்த கார் ஒரு டாக்டருக்கு சொந்தமானது என்ற பதில் கிடைத்தது. ஒரு டாக்டர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவனுடைய தாய் ஏற்கெனவே குருச்சரணின் மோசமான உடல்நிலையைப் பற்றி கூறியிருந்ததால், சேகர் வீட்டிற்குத் திரும்புவதற்கு பதிலாக நேராக குருச்சரணின் படுக்கையறையை நோக்கி சென்றான். அவன் என்ன சந்தேகப்பட்டானோ, அதுதான் உண்மையாக இருந்தது. குருச்சரண் உயிரற்ற மனிதரைப் போல படுக்கையில் படுத்திருந்தார். படுக்கையின் ஒரு பக்கத்தில் கிரினும் லலிதாவும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர். படுக்கையின் இன்னொரு பக்கத்தில், டாக்டர் தன்னுடைய சோதனைகளைச் செய்து கொண்டிருந்தார்.

குருச்சரண் சேகரை வரவேற்கும் விதத்தில் சில வார்த்தைகளை தெளிவில்லாமல் முணுமுணுத்தார். லலிதா புடவையின் ஒரு நுனியை மேலும் அருகில் இழுத்துக் கொண்டு வேறு பக்கம் பார்த்தாள்.

டாக்டர் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான். அவருக்கு சேகரை நன்றாகத் தெரியும். அவர் தன்னுடைய சோதனைகளை முடித்துவிட்டு, மருந்துகளுக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவரை சேகர் பின் தொடர்ந்தான். கிரின் அவர்களைத் தொடர்ந்து வெளியே வந்து, கொடுக்க வேண்டிய பணத்தை தந்தான். நோய் அந்த அளவிற்கு கடுமையாக ஆகவில்லை என்று கூறிவிட்டு, காற்றில் உண்டாகக்கூடிய ஒரு சிறிய மாற்றம்கூட ஆச்சரியப்படும் விதத்தில் நல்ல விளைவை உண்டாக்கலாம் என்றார் அவர். டாக்டர் அங்கிருந்து கிளம்பியவுடன், இருவரும் குருச்சரணின் அறைக்குத் திரும்பினார்கள்.

லலிதா கிரினை சைகை காட்டி அழைத்து, அவனுடன் மிகவும் மெதுவான குரலில் அறையின் ஒரு மூலையில் நின்று கொண்டு உரையாடினாள். சேகர் குருச்சரணுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு, அவரையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். குருச்சரண் இப்போது கதவுப் பக்கம் தன்னுடைய முதுகை காட்டிக்கொண்டு படுத்திருந்தார். சேகர் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் விஷயம் அவருக்குத் தெரியாது.

சிறிது நேரம் கழித்து சேகர் எழுந்து அங்கிருந்து கிளம்பினான். அதற்குப் பிறகும், கிரினும் லலிதாவும் மிகவும் நெருக்கமான உரையாடலில் இருந்தார்கள். யாரும் அவனை உட்காரும்படி கூறவும் இல்லை. யாரும் அவன் வெளியே செல்வதைப் பார்க்கவும் இல்லை. மரியாதைக்குக்கூட அவனிடம் யாரும் பேசவில்லை. அவனிடம் ஒரு கேள்வியைக்கூட கேட்கவில்லை.

அதற்குப் பிறகுதான் லலிதா தன்னுடைய மிகப்பெரிய பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாள் என்பதை சேகர் உண்மையாகவே உணர்ந்தான். இனிமேல் அவன் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்! இனிமேல் எதை நினைத்தும் பயப்பட வேண்டியதில்லை. லலிதா அவனை எந்த இக்கட்டிலும் மாட்டிவிட மாட்டாள். தன்னுடைய இயல்பு உடைகளை தன் அறையில் அணியும்போது, சேகர் எண்ணற்ற தடவை தனக்குத்தானே கூறிக்கொண்டான்- இப்போது அந்தக் குடும்பத்திற்கு கிரின்தான் உண்மையான நண்பனாக இருக்கிறான்! எல்லாரின் நம்பிக்கைக்கும் உரியவனாகவும், லலிதாவின் எதிர்கால பாதுகாப்பைத் தருபவனாகவும் அவன்தான் இருக்கிறான்! இந்த சிரமமான சூழ்நிலையில் சேகர் ஒன்றுமேயில்லை. வெறும் வார்த்தைகளால் ஆன உறுதிகளைக்கூட அவனிடமிருந்து இப்போது தேவை என்று லலிதா நினைக்கவில்லை!

ஆச்சரியத்துடன் உரத்த குரலில் "ஓ” என்று கத்தியவாறு சேகர் நிலை குலைந்து கட்டிலில் சாய்ந்தான். லலிதா மனதில் திட்டமிட்டே அவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டிருக்கிறாள். அவன் முற்றிலும் ஒரு வேற்று மனிதன், வெறும் அறிமுக மனிதன் என்பதை அவளின் செயல் மிகவும் தெளிவாக காட்டிவிட்டது. மேலும், அவன் இருக்கும் போதே, லலிதா கிரினை வற்புறுத்தி ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, அவனுடன் மிகவும் தாழ்ந்த- நெருக்கமான குரலில் விவாதித்தாள். மிகவும் தூரத்தில் அல்லாத ஒரு நாளன்று, இதே மனிதனுடன் திரை அரங்கத்திற்குச் செல்லக் கூடாது என்று சேகர் லலிதாவைத் தடுத்தான்.

ஒரு நேரம், லலிதா சமீப காலமாக சேகருடன் உண்டான விரிசல் காரணமாக உண்டான பதைபதைப்பால் கிரினுடன் இப்படி நடந்திருக்கிறாள் என்றுகூட சேகர் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள முற்பட்டான். ஆனால், எப்படி அப்படி நடக்க முடியும்? உண்மை அதுவாக இருக்கும் பட்சம், ஏதாவதொரு வகையில் இப்போது வந்து சேர்ந்திருக்கும் குழப்பமான விஷயங்களைப் பற்றி அவனுடன் பேசுவதற்கு அவள் முயற்சி செய்திருக்க மாட்டாளா?

அப்போது அவனுடைய அன்னையின் குரல் வெளியிலிருந்து கேட்டது: “என்ன விஷயம்? இன்னும் நீ குளிக்கலையா? சாயங்காலம் ஆயிடுச்சு.''

சேகர் குழப்பமான மன நிலையுடன் தன் முகத்தைத் தன்னுடைய தாயின் பார்வையில் படாதபடி ஒரு கோணத்தில் வைத்தவாறு உட்கார்ந்திருந்தான். பிறகு வேகமாகத் தன்னுடைய மாலை நேர காரியங்களில் ஈடுபட்டான்.

கடந்த சில நாட்களாகவே அவனுடைய மனம் தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி சேகரால் தெளிவான முடிவுக்கு வரவே முடியவில்லை. அது உண்மையாகவே யாருடைய தவறு? லலிதாவிற்கு நடைபெறும் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் நன்கு தெரிந்திருந்த பிறகும், அவன் அவளுக்கு உறுதியளிக்கும் வண்ணம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.


சொல்லப்போனால் அவள் தன் மனதில் இருப்பதை வெளியே கூறுவதற்கான ஒரு வாய்ப்பைக்கூட அவளுக்கு அவன் தரவில்லை. அதற்கு மாறாக, அவள் எதிர்பாராத உரிமைகள் எதையாவது கேட்டுவிடப் போகிறாளோ அல்லது ஏதாவது உண்மைகளை வெளியே கூறிவிடப் போகிறாளோ என்றெல்லாம் நினைத்து ஆயிரக்கணக்கான முறை தனக்குத்தானே செத்துக் கொண்டிருந்தான் அவன். லலிதாவை எல்லா குற்றங்களுக்கும் மூல காரணமாக இருப்பவள் என்று அவன் மனதில் கணக்குப் போட்டான். அவளைப் பற்றி மிகவும் கடுமையான கருத்தை அவன் கொண்டிருந்தான். அதே நேரத்தில் பொறாமை, கோபம், வேதனை, வெறுப்பு எல்லாம் சேர்ந்து அவனை எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தன. சொல்லப் போனால் எல்லா ஆண்களுமே இதே மாதிரிதான் தீர்மானம் எடுக்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் தங்களுக்குள் எரியும் நெருப்பு ஜுவாலைகளால் விழுங்கப்படுகிறார்கள்.

தனக்கென்று உள்ளே உண்டாக்கிக் கொண்ட நரகத்தில் எரிய ஆரம்பித்து ஏழு நாட்களை சேகர் கடத்திவிட்டான். கதவில் கேட்ட ஒரு தட்டும் ஓசை அவனுடைய இதயத்தை பலமாக துடிக்கச் செய்தது. லலிதா, அன்னக்காளியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டே அவனுடைய அறைக்குள் நுழைந்து கீழே விரிப்பின் மீது உட்கார்ந்தாள். அன்னக்காளி சொன்னாள்: “சேகர் அண்ணா... உங்களிடம் விடை கூறிக் கொள்வதற்காக நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம். நாளைக்கு நாங்க கிளம்பிப் போகிறோம்.''

சேகர் எதை என்று குறிப்பிட்டுக் கூற முடியாத மாதிரி வெறித்துப் பார்த்தான். அந்த திடீர் செய்தியால் அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான்.

அன்னக்காளி தொடர்ந்து சொன்னாள்: “நாங்க உங்களுக்கு எவ்வளவோ தவறுகளை இழைத்திருக்கிறோம். எவ்வளவோ பாவங்களைச் செய்திருக்கிறோம். அவற்றை தயவு செய்து மன்னித்துவிடுங்கள்.''

அவை அவளுடைய வார்த்தைகள் அல்ல என்பதை சேகர் நன்கு அறிவான். அவளுக்கு என்ன கூறப்பட்டதோ அதை அவள் திரும்பக் கூறுகிறாள். அவ்வளவுதான். அவன் கேட்டான்: “நாளைக்கு நீங்க எங்கே போகிறீர்கள்?''

“மேற்குப் பக்கம் போகிறோம். நாங்கள் எல்லாரும் முங்கருக்கு அப்பாவுடன் போகிறோம். கிரின் பாபுவிற்கு அங்கே ஒரு வீடு இருக்கிறது. அப்பா குணமான பிறகுகூட நாங்க திரும்பி வர்றதா திட்டம் இல்லை. இங்கே இருக்குற பருவ நிலைகள் அப்பாவின் உடல் நிலைக்கு ஏற்றதாக இல்லை என்று டாக்டரே சொல்லிவிட்டார்.''

சேகர் கேட்டான்: “அவர் இப்போ எப்படி இருக்கிறார்?''

“கொஞ்சம் பரவாயில்லை'' -அன்னக்காளி சில புடவைகளை வெளியே எடுத்து அவற்றை சேகரிடம் காட்டினாள். அவற்றை புவனேஸ்வரி தங்களுக்காக வாங்கியிருப்பதாகக் கூறினாள்.

இவ்வளவு நேரமும் லலிதா அமைதியாகவே இருந்தாள். உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து, மேஜையில் ஒரு சாவியை வைத்துவிட்டு, அவள் சொன்னாள்: “இவ்வளவு நாட்களாக அலமாரியின் சாவி என்னிடம்தான் இருந்தது.'' சற்று புன்னகைத்து விட்டு, அவள் தொடர்ந்து சொன்னாள்: “ஆனால், உள்ளே பணம் எதுவும் இல்லை. எல்லா பணமும் செலவிடப்பட்டு விட்டன.''

சேகர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

அன்னக்காளி சொன்னாள்: “வாங்க லலிதா அக்கா. கிட்டத்தட்ட இரவு ஆயிடுச்சு.

லலிதா எதையும் செய்வதற்கு முன்னால், சேகர் வேகமாக சொன்னான்: “காளி, கீழே வேகமா ஓடிப்போய் எனக்கு கொஞ்சம் பீடாவை வாங்கிக் கொண்டு வா. சரியா?''

லலிதா அன்னக்காளியின் கையைப் பற்றியவாறு கூறினாள்: “நீ இங்கேயே இரு, காளி. நான் வாங்கிட்டு வர்றேன்.'' அவள் கீழே போய் பீடாவுடன் திரும்பி வந்தாள். அதை அன்னக்காளியிடம் தர, அவள் அதை சேகரிடம் தந்தாள்.

சேகர் முழுமையான அமைதியில் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கையில் பீடா இருந்தது.

“நாங்க இப்போ புறப்படணும், சேகர் அண்ணா'' -அன்னக்காளி அவனின் பாதத்தை நோக்கி மரியாதையுடன் குனிந்தவாறு சொன்னாள். லலிதா தான் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தவாறு அமைதியாக தரையை நோக்கி குனிந்தாள். தொடர்ந்து இருவரும் மெதுவாக அறையை விட்டு வெளியேறினார்கள்.

சேகர் தனக்குச் சொந்தம் என்ற உணர்வுடனும் பெருமையுடனும் அங்கு உட்கார்ந்திருந்தான். அவன் ஏதோ கல்லாக மாறிவிட்டதைப் போல, புரிந்து கொள்ள முடியாத அமைதியில் உட்கார்ந்திருந்தான். அவள் வந்தாள். எதைக் கூற வேண்டுமோ அதைக் கூறினாள். பிறகு நிரந்தரமாக வெளியேறி விட்டாள். ஆனால், சேகரால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியவில்லை. அவன் பேசுவதற்கு ஒரு வரிகூட இல்லை என்பதைப் போல அந்தத் தருணம் கடந்து சென்றுவிட்டது. அவனுடன் நேரடியான எந்த உரையாடலும் இருப்பதைத் தவிர்ப்பதற்காக வேண்டும் என்றே லலிதா தன்னுடன் அன்னக்காளியை அழைத்து வந்திருக்கிறாள். சேகரால் அதை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுடைய முழு உடலும் உணர்வும் வேதனையுடன் இயல்பு வாழ்வை நோக்கி இப்போது வந்தன. தலை சுற்றியது. சேகர் கண்களை இறுக மூடியவாறு படுக்கையில் விழுந்தான்.

11

குருச்சரணின் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த உடல் நலம் முங்கருக்குப் போன பிறகுகூட சரியாகவில்லை. ஒரு வருடத்திற்குள் பூமியில் இருக்கும் அனைத்து பற்றுக்களையும் உதறி எறிந்துவிட்டு, தன்னுடைய சொர்க்க இருப்பிடத்தைத் தேடி அவர் சென்றுவிட்டார். கிரின் அவர் மீது உண்மையான பாசத்தை வைத்திருந்தான். இறுதி நிமிடம் வரை, தன்னால் முடிந்த அளவிற்கு அவரை அவன் நன்கு கவனித்துக் கொண்டான்.

தன்னுடைய இறுதி மூச்சை விடுவதற்கு முன்னால், குருச்சரண் கிரினின் இரு கைகளையும் தன் கையில் வைத்துக்கொண்டு, தன் குடும்பத்துடன் கொண்டிருக்கும் உறவைச் சற்றும் உதறியெறியக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். தங்களுக்கிடையே இருந்த ஆழமான நட்பு மேலும் முன்னேறி, ஒரு நெருக்கமான குடும்பப் பிணைப்பாக வளர வேண்டும் என்று அவனிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதும், வேகமாக காலம் ஓடிக்கொண்டிருந்ததும் அந்த இனிய சம்பவத்தை அவரைப் பார்க்கும்படி செய்யவில்லை. ஆனால், மேலே இருந்து கொண்டுகூட, அவர் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்ப்பதற்கே விரும்புவார். கிரின், முழுமையான மகிழ்ச்சியுடனும் தன்னுடைய முழு மனதுடனும் குருச்சரணுக்கு தன் வாக்குறுதியை அளித்தான்.

குருச்சரணின் இல்லத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தவர்கள், அவ்வப்போது அவர்களுக்குத் தெரிந்திருந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் புவனேஸ்வரியிடம் கூறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் குருச்சரணின் மரணம் பற்றிய செய்தியையும் அவளிடம் தெரியப்படுத்தினார்கள்.

மிகவும் குறுகிய காலத்திற்குள், அவளுடைய வீட்டிலேயே கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பேரழிவு உண்டானது. திடீரென்று நபின் ராய் மரணத்தைத் தழுவிவிட்டார். வருத்தம், கவலை ஆகியவற்றால் கிட்டத்தட்ட கையற்ற நிலையில் விடப்பட்டதைப் போல உணர்ந்த புவனேஸ்வரி, வீட்டிற்கான முழு பொறுப்பையும் தன் மருமகளிடம் ஒப்படைத்துவிட்டு, பனாரஸுக்குக் கிளம்பிவிட்டாள். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சேகரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தான் திரும்பி வருவதாக அவள் வாக்குறுதி அளித்தாள்.

இந்த திருமண ஏற்பாடு ரபின் ராயே முடிவு செய்தது. இது முன் கூட்டியே நடந்து முடிந்திருக்க வேண்டும். ஆனால், அவருடைய மரணம் எல்லா விஷயங்களையும் ஒரு வருடத்திற்கு ஒத்திப்போடச் செய்துவிட்டது.


ஆனால், இப்போது மணமகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரியங்களை இதற்கு மேலும் தாமதப்படுத்த விரும்பவில்லை. அவர்கள் முந்தைய நாள் வந்து நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டார்கள். திருமணமும் இந்த மாதத்திலேயே நடக்கிறது. சேகர், போய் தன் தாயை அழைத்துக் கொண்டு வருவதற்காகத் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அலமாரியில் இருந்த தன் பொருட்களை எடுத்து வைப்பதற்காகக் கொண்டு வந்தபோது, நீண்ட நாட்களுக்குப் பிறகு லலிதா அவனுடைய மனதில் தோன்றினாள். முன்பு இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் அவள்தான் அக்கறையுடன் கவனிப்பாள்.

லலிதாவும் அவளுடைய குடும்பமும் அங்கிருந்து சென்று மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. நீண்ட காலமாக அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லாமலிருந்தது. அவர்களைப் பற்றி விசாரிப்பதற்காக அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சொல்லப் போனால், அதற்கான ஆர்வமும் அவனிடம் இல்லை. காலப்போக்கில், லலிதா மீது ஒரு விதமான வெறுப்பு அவனுடைய மனதில் வளர்ந்து விட்டிருந்தது. இன்று திடீரென்று அவர்கள் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு உண்டானது. இன்னும் சொல்வதாக இருந்தாலும், அவர்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. கிரின் நல்ல வசதி படைத்தவன் என்ற விஷயம் சேகருக்கு நன்றாகத் தெரியும். எனினும், எல்லா விஷயங்களையும் அவன் தெரிந்துகொள்ள விரும்பினான். திருமணம் எப்போது நடந்தது- அவர்கள் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்- எல்லா விஷயங்களையும்தான்.

குருச்சரணின் வீட்டில் குத்தகைக்கு இருந்தவர்கள் இப்போது அங்கு இல்லை. அவர்கள் வேறு எங்கோ மாறிவிட்டிருந்தார்கள். ஒரு முறை சாருவின் தந்தையைப் போய் பார்த்தால் என்ன என்றுகூட சேகர் நினைத்தான். கிரின் எங்கு இருக்கிறான் என்பதைப் பற்றிய தகவல் கட்டாயம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். சில நிமிடங்களுக்கு பொருட்களை எடுத்து அடுக்கி வைப்பதை நிறுத்தி வைத்து விட்டு, அவன் வெட்ட வெளியையே சாளரத்தின் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டே, அந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவர்களுடைய வயதான வேலைக்காரப் பெண் உரத்த குரலில் கதவிற்கு வெளியிலிருந்து அழைத்தாள். “சின்ன அய்யா, காளியின் அம்மா உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க.''

ஆச்சரியத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்த சேகர் கேட்டான்: “எந்த காளியின் அம்மா?''

வேலைக்காரி குருச்சரணின் வீட்டைச் சுட்டிக்காட்டியவாறு சொன்னாள்: “நம்ம காளியின் அம்மா, சின்ன அய்யா. அவங்க நேற்று இரவு வந்திருக்காங்க.''

“நான் வர்றேன்'' -சேகர் உடனடியாக கிளம்பினான்.

அந்த நாள் முடிவடையும் நிலையில் இருந்தது. அவன் வீட்டிற்குள் காலடியை வைத்ததுதான் தாமதம், சுற்றிலும் உரத்த ஓசை எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒரு விதவை அணிய வேண்டிய ஆடையை அணிந்திருந்த குருச்சரணின் மனைவிக்கு அருகில் போன சேகர், அவளுக்கு முன்னால் தரையில் உட்கார்ந்து, அமைதியாக தன்னுடைய கண்ணீர்த் துளிகளை விழுங்கிக் கொண்டிருந்தான். குருச்சரண் என்ற மனிதர் மீது அல்ல- தன்னுடைய சொந்த தந்தை மீது உண்டான துயரம் மீண்டும் சேகரை முழுமையாக வந்து மூடிக் கொண்டது.

சுற்றிலும் இருள் வந்து மூடியவுடன், லலிதா அறைக்குள் விளக்குகளுடன் வந்தாள். அவள் சற்று தூரத்தில் இருந்தவாறு சேகரைப் பார்த்து வணக்கம் சொன்னாள். சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த அவள், அமைதியாக அங்கிருந்து வெளியேறினாள். இப்போது ஒரு பதினேழு வயது பெண்ணாக இருக்கும் அந்த இன்னொரு மனிதரின் மனைவியைப் பார்க்கவோ, அவளுடன் பேசவோ சேகரால் முடியவில்லை. எனினும், ஓரக் கண்களால் பார்த்த பார்வையில் சிறிதளவு தெரிந்துகொள்ள முடிந்தது. லலிதா சற்று வளர்ந்து மட்டும் இல்லை. அதற்கும் மாறாக, அவள் நிறைய மெலிந்து போயும் காணப்பட்டாள்.

போதும் என்ற அளவிற்கு அழுதுவிட்டு, குருச்சரணின் விதவை மனைவி கூற இருந்தது இதுதான். அந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு, முங்கரில் இருக்கும் தன்னுடைய மருமகனின் வீட்டில் போய் வாழ வேண்டும் என்பதைத்தான் இப்போது தான் செய்ய விரும்புவதாக அவள் சொன்னாள். அந்த வீட்டை விலைக்கு வாங்க வேண்டும் என்று சேகரின் தந்தை ஏங்கினார். இப்போது அவளுடைய குடும்பம் அந்த வீட்டை சேகரின் குடும்பத்திற்கு, உரிய விலைக்கு விற்க விரும்புகிறது. இதன் மூலம் ஏதோ ஒரு வகையில் அந்த வீட்டின் ஒரு பகுதியாக இருப்பதைப் போலவே அவர்களால் உணர முடியும். வீட்டை விற்று விட்டோமே என்ற கவலை அவர்களுக்கு உண்டாகாது. எதிர்காலத்தில் எப்போதாவது அவர்கள் அந்த வீட்டிற்கு வந்தால், சில நாட்கள் தான் அங்கு தங்கிச் செல்வதற்கான அனுமதி தனக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று உறுதியாக நம்பினாள் அவள். தன் தாயிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதாகவும், தன்னால் முடிந்ததை தான் செய்வதாகவும் சேகர் கூறியவுடன், அவள் தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு கேட்டாள்: “எப்படியாவது அம்மா எங்களை இப்போ வந்து பார்க்க மாட்டார்களா?''

தன் தாயை அழைத்து வருவதற்காக அன்று இரவே தான் புறப்பட இருப்பதாக சேகர் சொன்னான். அதற்குப் பிறகு குருச்சரணின் விதவை மனைவி பிற தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். சேகரின் திருமணத் தேதி, மணமகளின் குடும்பத்தார் எவ்வளவு வரதட்சணை தருகிறார்கள், என்னவெல்லாம் நகைகள் வாங்கப்பட்டிருக்கின்றன, நபின்ராய் எப்படி மரணமடைந்தார், அவரின் மரணத்தை புவனேஸ்வரி எப்படி தாங்கிக் கொண்டாள்... இப்படி பல விஷயங்கள்.

சேகர் இறுதியாக அங்கிருந்து கிளம்ப அனுமதிக்கப்பட்டபோது, நிலவு மேலே எழுந்திருந்தது. அந்த நேரத்தில், கிரின் கீழே வந்து கொண்டிருந்தான். அவன் தன் சகோதரியான சாருவின் தாயைப் பார்ப்பதற்காக போய்க் கொண்டிருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு குருச்சரணின் மனைவி கேட்டாள்: “சேகர்நாத், உனக்கு என் மருமகனுடன் பழக்கம் உண்டா? உலகத்தின் எந்த இடத்திலும் அவருடன் ஒப்பிடுவதற்கு வேறொரு ஆள் இல்லை.''

அதைப் பற்றி எந்தவித சந்தேகங்களும் சேகருக்கு இல்லை. அதைக் கூறிய அவன் தனக்கு ஏற்கெனவே கிரினுடன் அறிமுகம் இருக்கிறது என்பதை அவளுக்குத் தெரியும்படி கூறிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறினான். ஆனால், வெளி அறையை அடையும்போது, அவன் தானாகவே நிற்கும்படி தள்ளப்பட்டான்.

இருட்டில், கதவுக்குப் பின்னால் லலிதா காத்திருந்தாள். அவள் கேட்டாள்: “நீங்க இன்னைக்கு இரவு அம்மாவை அழைப்பதற்காக போகிறீர்களா?''

சேகர் சொன்னான்: “ஆமாம்''.

“அவங்க மிகுந்த துயரத்தில் இருக்காங்களா?''


“ஆமாம்... அவங்களுக்கு எல்லாரும் இருக்கோம். இருந்தும், துயரத்தால் அனாதையாக ஆகிவிட்டதைப் போல உணருகிறார்கள்.''

“உங்க உடல் நிலை எப்படி இருக்கு?''

“நான் நல்லா இருக்கேன்'' -கூறிவிட்டு அவன் வேகமாக வெளியேறினான். வெளியே கால் வைத்தவுடன், அவமானத்தாலும் வெறுப்பாலும் தான் எரிந்து கொண்டிருப்பதைப் போல சேகர் உணர்ந்தான். லலிதாவுடன் நிற்க வைத்துப் பார்க்கும்போது, தானே மிகவும் சிறிய மனிதனாக இருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன், அவன் சூட்கேஸை இழுத்து மூடினான். புகைவண்டி புறப்படுவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியுமாதலால், அவன் படுக்கையில் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டான். லலிதாவைப் பற்றிய ஆபத்தான நினைவுகளைச் சுட்டெரித்து சாம்பலாக ஆக்க வேண்டும் என்பதுதான் அதன் ஒரே நோக்கமாக இருந்தது. தன் இதயத்தில் இருந்த வெறுப்பு ஜுவாலைகளை அதன்மீது செலுத்தினான். தொடர்ந்து தான் அவமானப்பட்டு வருவதால் உண்டான கோபத்தில் அவன் அவளை கடுமையான வார்த்தைகளால் திட்டினான். உண்மையாகக் கூறுவதாக இருந்தால், அவளை தரம் தாழ்ந்த பெண் என்று கூறுவதற்குக்கூட அவன் தயங்கவில்லை. பிறகு அவன் குருச்சரணின் மனைவி கூறியதை ஞாபகப்படுத்திப் பார்த்தான். “வசதிக்காக பண்ணிக் கொண்ட திருமணம் அது. சந்தோஷத்திற்காக அல்ல. அதனால், யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை; அழைக்கப்படவும் இல்லை. இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால், உங்க குடும்பத்திற்கு கட்டாயம் சொல்லப்பட வேண்டும்னு லலிதா சொன்னாள்.'' லலிதாவின் அந்த வெறும் வார்த்தைகளே சேகரின் கோப ஜுவாலைகளை மேலும் அதிகமாக எரிய வைத்தன.

12

சேகர் தன்னுடைய தாயுடன் திரும்பி வந்தபோது, அவனுடைய திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு காலை நேரத்தில், லலிதா புவனேஸ்வரியுடன் உட்கார்ந்து, சில பொருட்களைப் பிரித்து தனியாக வைத்துக் கொண்டிருந்தாள். இந்த விஷயம் சேகருக்குத் தெரியாது. தன் தாயின் அறைக்குள் நுழைந்த அவன் அங்கு லலிதாவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டான். அவன் அதே இடத்தில் அப்படியே நின்றுவிட்டான். லலிதா தன் தலையைக் குனிந்து கொண்டே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவனுடைய அன்னை கேட்டாள்: “என்ன விஷயம், கண்ணு?''

அவளை எதற்காக சந்திக்க விரும்பினோம் என்ற விஷயத்தையே மறந்துவிட்ட சேகர், “இல்லை சும்மாத்தான் வந்தேன்'' என்று தடுமாறிய குரலில் முணுமுணுத்துவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான். அவன் லலிதாவின் முகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அவனுடைய கண்கள் அவளுடைய கைகள் மீது பதிந்திருந்தன. அவை அணிகலன்களே இல்லாமல் இல்லை என்றாலும், ஒரு ஜோடி கண்ணாடி வளையல்களுக்கு மேல் வேறு எதுவும் அந்த ஒவ்வொரு கையையும் அலங்கரிக்கவில்லை. பரிகாசமாக தனக்குள் சிரித்துக் கொண்ட சேகர் அந்த வஞ்சகச் செயலைப் பற்றி நினைத்துப் பார்த்தான். கிரின் நல்ல வசதி படைத்தவன் என்ற விஷயம் சேகருக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய மனைவிக்கு அவன் ஏன் நகைகளே வாங்கிப் போடாமல் இருக்கிறான் என்பதற்கான உண்மையான காரணத்தை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

அன்று மாலை நேரத்தில் சேகர் வெளியே போவதற்காக கீழ் நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தபோது, லலிதா மேல் நோக்கி படிகளில் வந்து கொண்டிருந்தாள். அவள் உடனடியாக ஒரு ஓரத்தில் நின்றாள். ஆனால், அவன் கடந்து செல்ல இருந்தபோது, அவள் உரத்த குரலில் சொன்னாள்: “நான் சில விஷயங்கள் பேசணும்.''

அந்த நிமிடமே நின்ற சேகர் ஆச்சரியமான குரலில் கேட்டான்: “யாருடன்? என்னுடனா?''

சற்று மென்மையான குரலில் லலிதா தொடர்ந்து சொன்னாள்: “ஆமாம்... உங்களுடன்தான்.''

“என்னிடம் சொல்றதுக்கு என்ன இருக்கு?'' -சேகர் மிகவும் வேகமாக வெளியேறினான்.

லலிதா சிறிது நேரம் மிகவும் அமைதியாக அதே இடத்தில் நின்றுவிட்டு, பிறகு ஒரு சிறு பெருமூச்சை விட்டவாறு தன் வழியைத் தொடர்ந்தாள்.

மறுநாள் காலையில் சேகர் வெளியில் இருந்த அறையில் உட்கார்ந்து கொண்டு செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் மேலே தலையை உயர்த்திப் பார்த்தபோது, அவனே ஆச்சரியப்படுகிற விதத்தில், கிரின் வந்து கொண்டிருந்தான். வணக்கம் கூறிவிட்டு, கிரின் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் அவனே உட்கார்ந்தான். பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு, சேகர் செய்தித்தாளை ஒரு பக்கம் வைத்துவிட்டு, அவனையே வெறித்துப் பார்த்தான். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு எதுவும் தெரியாது. அப்படித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலும் அவர்களுக்கு இருந்ததில்லை.

கிரின் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். அவன் சொன்னான்: “சில அவசர விஷயங்களுக்காக உங்களுக்கு நான் தொந்தரவு கொடுக்க வந்திருக்கிறேன். என் மாமியார் என்ன விரும்புறாங்க என்று உங்களுக்குத் தெரியும்- தன்னுடைய வீட்டை உங்களுடைய குடும்பத்திற்கு விற்றுவிட அவங்க நினைக்கிறாங்க. வீட்டை வாங்குவதற்கான ஏற்பாடுகள் சீக்கிரம் நடந்தால், அவங்க இந்த மாதமே முங்கருக்கு திரும்பிப் போய்விடலாம் என்ற விஷயத்தை இன்றைக்கு உங்களிடம் கூறும்படி என்னிடம் சொல்லி விட்டிருக்காங்க.''

தன்னுடைய கண்களை கிரின் மீது பதிய வைத்த நிமிடத்திலிருந்தே சேகரின் மனம் மிகுந்த குழப்பத்திலேயே இருந்தது.

அவன் உரையாடிய விதத்தைப் பற்றி சேகர் சிறிதும் பொருட்படுத்தவேயில்லை. மிகுந்த கவனத்துடன் சொன்னான்: “அது எல்லாம் உண்மைதான். ஆனால், என் அப்பா இல்லாத இந்த நேரத்தில் நீங்க இந்த விஷயத்தை என் அண்ணனிடம்தான் பேச வேண்டும்.''

ஒரு அழகான புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்ட கிரின் சொன்னான்: “ஆமாம்... அந்த விஷயமும் எங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்களே அவரிடம் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்.''

சேகர் அதே விதத்தில் தொடர்ந்து சொன்னான்: “நீங்கள் அவருடன் பேசினால்கூட, அந்த விஷயம் நடக்கும். அவர்களுக்கு இப்போ நீங்கள் தான் காப்பாளர்.''

கிரின் சொன்னான்: “தேவைப்பட்டால், நான் அப்படியே செய்கிறேன். ஆனால், நீங்கள் சிறிய தொல்லைகளை ஏற்றுக் கொண்டால், காரியங்கள் மிகவும் எளிதில் நடந்து முடியும் என்று நேற்று லலிதா தங்கச்சி சொன்னாங்க.''

இவ்வளவு நேரமும், ஒரு பெரிய தலையணையைத் தாங்குதலாக வைத்துக்கொண்டு அதன் மீது சேகர் சாய்ந்திருந்தான். அவன் உடனடியாக எழுந்து நேராக உட்கார்ந்து கொண்டு கேட்டான்: “யார் சொன்னாங்க?''

“லலிதா தங்கச்சி சொன்னங்க.''

சேகர் முற்றிலும் பேச முடியாதவனாக ஆகி, ஆச்சரியத்தில் மூழ்கிப் போய்விட்டான். அதற்குப் பிறகு கிரின் சொன்ன ஒரு வார்த்தைகூட அவனுடைய செவிகளுக்குள் நுழையவில்லை. குழப்பத்துடன் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவன் திடீரென்று உரத்த குரலில் பேசினான்: “தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், கிரின்பாபு. ஆனால்... நீங்க லலிதாவைத் திருமணம் செய்யலையா?''

மிகுந்த தர்மசங்கடத்துடன் கிரின் சொன்னான்: “இல்லை... அவங்க எல்லாருக்கும் தெரியும்... நீங்க... காளியும் நானும்...''

“ஆனால், எது நடக்க வேண்டுமோ அது அல்லவே அது.''

லலிதாவிடமிருந்து எல்லாவற்றையும் கிரின் தெரிந்துகொண்டான். அவன் சொன்னான்: “எது திட்டமிடப்பட்டதோ, அதுவல்ல அது என்பதென்னவோ உண்மைதான். நான் வேறு எங்கும் திருமணம் செய்யக்கூடாது என்று குருச்சரண்பாபு என்னிடம் உறுதி வாங்கிக் கொண்டார். நானும் என்னுடைய உறுதியை அவரிடம் கூறிவிட்டேன். அவருடைய மரணத்திற்குப் பிறகு, லலிதா தங்கச்சி என்னிடம் சொன்னாங்க... சொல்லப் போனால், இந்த விஷயங்கள் அனைத்தும் யாருக்கும் தெரியாது.


அதாவது- அவங்களுக்கு ஏற்கெனவே திருமணமாயிடுச்சுன்றதும் அவங்களோட கணவர் உயிருடன் இருக்கிறார் என்பதும். ஒருவேளை என்னுடைய இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், அவர்கள் லலிதா சொன்னதை நம்பியே இருக்க மாட்டங்க. ஆனால், நான் ஒரு வார்த்தையைக்கூட நம்பாமல் இல்லை. இன்னும் சொல்லப் போனால், ஒரு பெண் ஒரு தடவைக்கு மேல் திருமணம் செய்து கொள்ள முடியாது. விஷயம் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்- அவங்களாலதான் முடியுமா?''

சேகரின் கண்கள் பனிப்படலம் போர்த்திவிட்டதைப் போல ஆகிவிட்டன. இப்போது கண்ணீர் அவனுடைய கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. ஆனால் அதைப் பற்றிய உணர்வே அவனுக்கு இல்லாமல் போயிருந்தது. இன்னொரு மனிதனுக்கு முன்னால் இப்படியொரு பலவீனத்தை வெளிப்படுத்துவது ஒரு மனிதனுக்கு சரியாக இருக்குமா என்பதைப் பற்றிக் கூட அவன் கவலைப்படவில்லை. சம்பவங்கள் ஒவ்வொன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுகூட அல்ல.

கிரின் அமைதியாக அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உள்ளுக்குள் சந்தேகங்கள் இருந்தன. இப்போது லலிதாவின் கணவன் என்பது நிரூபனமாகிவிட்டது! தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, சேகர் உரத்த குரலில் கேட்டான்: “ஆனால், நீங்க லலிதா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தீர்கள் அல்லவா?''

உள்ளுக்குள் புதைத்து வைக்கப்பட்ட துயரத்தின் நிழல் ஒரு நிமிட நேரத்திற்கு கிரினின் முகத்தில் தெரிந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். மென்மையான குரலில் அவன் சொன்னான்: “இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது என்பதே தேவையில்லாதது. சொல்லப்போனால், எப்படிப்பட்ட உணர்வுகள் உண்டாகும் என்பது முக்கியமே அல்ல. தெரிந்து கொண்டே யாரும் இன்னொரு மனிதனின் மனைவியைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். தயவு செய்து அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். என்னை விட மூத்தவர்களிடம் இந்த மாதிரி விவாதிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை.'' மீண்டும் ஒரு முறை புன்னகைத்த கிரின் எழுந்தான். “இப்போதைக்கு நான் விடை பெற்றுக் கொள்கிறேன். நாம் மீண்டும் சந்திப்போம்.''

இதயத்தின் அடித்தளத்தில் கிரினைப் பற்றி ஒரு விருப்பமின்மை சேகரிடம் இருந்து கொண்டே இருந்தது. அது காலப்போக்கில் வளர்ந்து ஒரு பலமான வெறுப்பாகவே ஆகிவிட்டிருந்தது. ஆனால், அன்று அந்த இளம் பிரம்மோ இளைஞன் அங்கிருந்து கிளம்பியபோது, சேகர் தன்னுடைய இதயபூர்வமான மரியாதையை அவனுக்கு செலுத்தினான். ஒரு மனிதன் எப்படி தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் எஞ்சிய மீதியையும் தியாகம் செய்வது, மிகவும் கடுமையான - இக்கட்டான சூழ்நிலையிலும்கூட ஒரு மனிதன் எப்படி தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது போன்ற விஷயங்களை முதல் தடவையாக சேகர் தெரிந்துகொண்டான்.

அன்று சாயங்காலம், புவனேஸ்வரி தரையில் உட்கார்ந்து கொண்டு, லலிதாவின் உதவியுடன் சுற்றிலும் குவியலாக இருந்த புதிய ஆடைகளைப் பிரித்து வைத்துக்கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்த சேகர் புவனேஸ்வரியின் படுக்கையில் போய் உட்கார்ந்தான். இன்று, லலிதாவைப் பார்த்தவுடன், அவன் வேகமாக அங்கிருந்து கிளம்பவில்லை. அவனைப் பார்த்த அவனுடைய தாய் கேட்டாள்: “என்ன விஷயம்?''

சேகர் பதிலெதுவும் கூறாமல், அவர்களையே அமைதியாகப் பார்ப்பதை தொடர்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் கேட்டான்: “நீங்க என்ன செய்றீங்க, அம்மா?''

“புதிய ஆடைகளை யார் யாருக்குத் தரணும்னு எண்ணிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சொல்லப்போனால், இன்னும் கொஞ்சம் துணிகள் வாங்கணும். அப்படித்தானே கண்ணு?''

லலிதா அதற்கு “ஆமாம்'' என்று தலையை ஆட்டினாள்.

புன்னகைத்துக் கொண்டே, சேகர் கேட்டான்: “நான் திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால், என்ன செய்வீங்க?''

புவனேஸ்வரி சிரித்தாள். “அதை உன்னால் செய்ய முடியும். நீ அதைவிட அதிகமாகவே செய்யக்கூடியவன்தான்.''

சேகரும் சிரித்தான்: “அதுதான் நடக்கப் போகிறது அம்மா''.

அவனுடைய தாயின் முகம் வெளிறியது. “இது என்ன பேச்சு? இப்படியெல்லாம் மோசமாக பேசாதே.''

“நான் இவ்வளவு நாட்களாக பேசாமல்தான் இருந்தேன், அம்மா. நான் தொடர்ந்து அமைதியாகவே இருந்தால், எல்லாம் சுடுகாடாகவே ஆகிவிடும்.''

அவனைப் புரிந்துகொள்ள முடியாமல், புவனேஸ்வரி அவனையே வெறித்துப் பார்த்தாள்.

சேகர் சொன்னான்: “நீங்கள் உங்க மகனை எவ்வளவோ தடவை மன்னிச்சிருக்கீங்க, அம்மா. இந்த தடவையும் என்னை மன்னிச்சிடுங்க. உண்மையாகவே, நான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது.''

அவளுடைய மகனின் வார்த்தைகள் புவனேஸ்வரியை உண்மையிலேயே கோபம் கொள்ளச் செய்தன. ஆனால், அதை மறைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “சரி... நீ விருப்பப்படுவது மாதிரியே நடக்கட்டும். இப்போ நீ போ சேகர். என்னை கஷ்டப்படுத்தாதே. எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு.''

மீண்டும் ஒரு முறை சிரிக்க முயன்று தோல்வியைத் தழுவிய சேகர் மெதுவான குரலில் சொன்னான்: “இல்லை, அம்மா, உண்மையாகவே இந்தத் திருமணம் நடக்கக்கூடாது.''

“திடீர்னு இது என்ன குழந்தைத்தனமான விளையாட்டு?''

“இது குழந்தையின் விளையாட்டு அல்ல. அதனால்தான் நான் இதையெல்லாம் கூறுகிறேன், அம்மா.''

இப்போது உண்மையாகவே பயந்துவிட்ட புவனேஸ்வரி கோபத்துடன் சொன்னாள்: “சேகர், இதெல்லாம் என்ன என்று எனக்கு விளக்கிச் சொல்லு. இப்படிப்பட்ட குழப்பங்கள் எனக்குப் பிடிக்காது.''

மெதுவாக சேகர் சொன்னான்: “நான் இன்னொரு நாள் கூறுகிறேன், அம்மா... இன்னொரு நேரம்...''

“இன்னொரு நாள் நீ சொல்வியா?'' -துணிகளின் குவியலை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்ட புவனேஸ்வரி சொன்னாள்: “அப்படின்னா, என்னை இன்னைக்கே பனாரஸுக்குத் திரும்ப அனுப்பி வச்சிடு. இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் ஒரு நிமிடம்கூட நான் இருக்க விரும்பவில்லை.''

சேகர் தலையைக் குனிந்து கொண்டு அமைதியாக உட்கார்ந்தி ருந்தான். “லலிதாவும் நாளைக்கு என்னுடன் வர விரும்புகிறாள்'' -புவனேஸ்வரி மேலும் அதிகமான பொறுமையை இழந்து சொன்னாள்: “அவள் வருவதற்கு சம்மதம் கிடைக்குமா என்று நான் பார்க்கிறேன்.''

இப்போது சேகர் புன்னகையுடன் தலையை உயர்த்தினான்: “நீங்க அவளை உங்களுடன் அழைச்சிட்டுப் போறீங்க. மற்றவர்களிடம் அதற்காக நீங்க ஏன் அனுமதி கேட்கணும்? உங்களைவிட அவள் மீது யாருக்கு அதிக அதிகாரம் இருக்கு?''

தன் மகனின் முகத்தில் புன்னகை தவழ்வதைப் பார்த்த புவனேஸ்வரிக்கு எப்படியோ மீண்டும் நம்பிக்கை வந்தது. லலிதாவைப் பார்த்துக்கொண்டே அவள் சொன்னாள்: “இவன் என்ன சொல்கிறான் என்று கேட்டாயா? நான் விரும்புகிற இடங்களுக்கெல்லாம் உன்னை அழைச்சிட்டுப் போகலாம் என்று இவன் நினைக்கிறான். நான் உன் அத்தையிடம் அனுமதி கேட்க வேண்டாமா? ''லலிதா பதிலெதுவும் கூறவில்லை. அந்த உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்த முறை அவளை முழுமையான பதைபதைப்பிலும், தர்மசங்கடமான சூழ்நிலையிலும் நிறுத்திவிட்டிருந்தது.

சேகர் வெடித்தான்: “நீங்க இவளோட அத்தையிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால், தாராளமா அதை செய்யிங்க. அது உங்களின் விருப்பம். ஆனால், நீங்க எது சொன்னாலும், அது நடக்கும் அம்மா. இப்படி நினைக்கிறது நான் மட்டும் அல்ல; யாரை அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ... இவளும் இப்படித்தான் நினைக்கிறாள். ஏன்னா, இவள் உங்களுடைய மருமகள்!''

புவனேஸ்வரி அதிர்ச்சியடைந்து விட்டாள். தன் தாயிடம் ஒரு மகன் இப்படியா தமாஷாக விளையாடுவது! அவனையே வெறித்துப் பார்த்தவாறு அவள் சொன்னாள்:

“நீ என்ன சொன்னே? இவள் எனக்கு என்ன?''


அதற்கு மேல் தலையை உயர்த்த சேகரால் முடியவில்லை எனினும், அவன் சொன்னான்: “நான் என்ன சொன்னேனோ, அதுதான் அம்மா. இது இன்னைக்கு நடந்தது இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்னால்... நீங்க உண்மையிலேயே இவளுடைய அம்மாதான். நான் இதற்கு மேல் எதுவும் கூறக்கூடாது. இவளையே கேட்டுக்கொள்ளுங்கள், அம்மா. இவள் எல்லாவற்றையும் உங்களிடம் கூறுவாள்.'' லலிதா எழுந்து, அவனுடைய அன்னையின் பாதத்தைத் தொடுவதற்காக மரியாதையுடன் கீழே குனிந்து கொண்டிருப்பதை சேகர் பார்த்தான். எழுந்து, அவன் அவளுக்கு அருகில் போய் நின்றான். இருவரும் சேர்ந்து அந்தச் செயலைச் செய்து முடித்தார்கள். அதற்குப் பிறகு சேகர் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான்.

புவனேஸ்வரியின் முகத்தில் சந்தோஷத்தால் உண்டான கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. அவள் மிகவும் பிரியத்துடனும் உண்மை யாகவும் லலிதா மீது அன்பு வைத்திருந்தாள். அலமாரியைத் திறந்து, தன்னுடைய அனைத்து நகைகளையும் வெளியே எடுத்து, அவள் அவற்றைக் கொண்டு தன் கைகளாலேயே லலிதாவை அலங்கரித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் லலிதாவிடமிருந்து எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டாள். என்னவெல்லாம் நடந்தன என்பதைப் பற்றிய தகவலையும் தெரிந்துகொண்ட பிறகு, அவள் கேட்டாள்: “அதனால்தான் கிரின் காளியைத் திருமணம் செய்து கொண்டானா?''

லலிதா சொன்னாள். “ஆமாம், அம்மா. அதுதான் காரணம். கிரின் பாபுவைப் போன்று வேறு யாரும் இந்த உலகத்தில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. என் சூழ்நிலையை அவரிடம் நான் சொன்னவுடன் நான் ஏற்கெனவே வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டவள் என்பதை அந்த நிமிடத்திலேயே அவர் ஏற்றுக் கொண்டார். என் கணவர் என்னை ஏற்றுக் கொள்வாரா, மாட்டாரா என்பது என் கணவர் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார். என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் தன் மனதை மாற்றிக் கொள்வதற்கு கிரின் பாபுவிற்கு அதுவே போதுமானதாக இருந்தது.''

புவனேஸ்வரி பாசத்துடன் அவளைத் தடவிக் கொடுத்தவாறு சொன்னாள்: “கடைசியில் உன் கணவன் உன்னை ஏற்றுக்கொண்டு விட்டான், கண்ணு! நீங்க இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து பல பல வருடங்கள் சந்தோஷமா இருக்கணும். ஒரு நிமிடம் இரு... நான் போய் அபினாஷிடம் மணமகள் மாறிவிட்டாள் என்ற விஷயத்தைச்

சொல்லிட்டு வந்திடுறேன்.'' புன்னகைத்தவாறு, புவனேஸ்வரி தன் மூத்த மகனின் அறை இருக்கும் திசையை நோக்கி நடந்து சென்றாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.