Logo

சிறையிலிருந்து...

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5965
siraiyilirundhu...

சிறை

ஜூன் 23

ண்பரே,

இருள் படர்ந்த சிறை அறைக்குள், இரும்புக் கம்பிகள் வழியாக கிடைக்கக்கூடிய மங்கலான வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

மிகவும் தூரத்தில் உயர்ந்து நின்றிருக்கும் ஒரு அரசமரத்தின் மேற்பகுதியையும், ஆனந்த நடனமாடிக் கொண்டிருக்கும் அந்த அரசமரத்தின் இலைகளுக்கு மத்தியில் தெரியும் வானவெளியையும், மனிதத் தன்மையை கூட்டுக்குள் போட்டு அடைத்து வைத்துவிட்டு காவல் காத்துக்கொண்டிருக்கும் சிறை அதிகாரிகளின் அரக்கத்தனமான பார்வைகளையும், விடுதலைக்காக ஏங்கியபடி மனதிற்குள் வேண்டிக்கொண்டு, நிமிடங்களை எண்ணி எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும்- சம அளவில் கவலையில் மூழ்கியிருக்கும் சிறைக் கைதிகளின் வெளிறிப் போன முகங்களையும் மட்டுமே, இந்த இரும்புக் கம்பிகளின் வழியாக நான் காண்கிறேன்.

என்னை நீங்கள் இப்போது ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா என்பதைப் பற்றி என்னால் உறுதியாக நினைக்க முடியவில்லை. அன்றொரு நாள்- நான்கு வருடங்களுக்கு முன்பு- ஒரு பி.ஏ. மாணவன் என்ற முறையில் நான் முதல்முறையாக உங்களைப் பார்த்தேன். அன்று புகை வண்டியில் உங்களுடைய சக பயணியாக பயணம் செய்த நான் உங்களின் கையில் இருந்த ஆங்கிலப் பத்திரிகையைக் கேட்டதையும், அதைத் தொடர்ந்து நமக்கிடையே அறிமுகம் உண்டானதையும் அனேகமாக நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். அதற்குப் பிறகு நீதிபதி திரு. கெ.......யின் வீட்டு வாசலை விட்டு அங்கிருந்த பணியாள் என்னை விரட்டிவிடும் காட்சியை நீங்கள் பார்த்தீர்கள். அப்போது அந்த வழியாக வேகமாகப் போய்க்கொண்டிருந்த நீங்கள் என்னையும், நான் உங்களையும் பார்த்தாலும், இருவரும் முகத்தை குனிந்துகொண்டு இதற்கு முன்பு தெரிந்தவர்கள் என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமலே போய்விட்டோம். அதற்குப் பிறகு நீங்கள் என்னுடைய நினைவு மண்டலத்திலிருந்து மறையாமல் இருந்தாலும், உங்களைப் பார்ப்பதற்கு என்னால் முடியவில்லை. அன்று வண்டியில் இருந்தபோது வாசித்து முடித்த பத்திரிகையை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் சாளரத்தின் வழியாக எங்கோ தூரத்தில் இருந்த மலைச்சரிவைப் பார்த்தவாறு சிந்தனையில் மூழ்கி உட்கார்ந்திருந்ததையும், நமக்கிடையே அறிமுகம் உண்டான பிறகு ஆர்வத்துடன் என்னுடன் புரிந்த அந்த அனல் தெறிக்கும் சொற்பொழிவையும் இப்போதுகூட நான் காணவும் கேட்கவும் செய்கிறேன். சமுதாயத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் உள்ள உங்களுடைய முதிர்ச்சி நிறைந்த கண்டுபிடிப்பு களை அன்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போதோ... இந்த இருள் நிறைந்த சிறைக்கூடத்திற்குள் இருக்கும்போது, பல சம்பவங்களும் துயரங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கைக்குப் பிறகு, உங்களுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த காரணத்தால்தான் நான் கடிதம் எழுதுகிறேன்.

நான் இங்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இதே சிறையில் அரசியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். நான் அந்த வகையைச் சேர்ந்த ஒரு கைதி இல்லை. அரசியலைப் பற்றிய கருத்துகள் எனக்கு இருக்கின்றன என்றாலும், நான் இது வரை எந்தவொரு அரசியல் கட்சியிலும் பங்கு பெற்றதில்லை. திருடு, கொலை, ஏமாற்றுதல், வன்முறை ஆகிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பலரும் இங்கு இருக்கிறார்கள். நான் அப்படிப்பட்ட கைதிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவனும் இல்லை. வாழ்க்கையின் கலையை கற்றிராத எனக்கு அப்படிப்பட்ட அக்கிரமச் செயல்களைச் செய்வதற்கான தைரியமும் இல்லை. பிறருக்குத் தெரியாத வகையில் அக்கிரமங்கள் செய்வதுதான் வாழ்க்கைக் கலை என்பதையும், வாழ்க்கை கலையைக் கற்றவர்கள் மட்டுமே இன்றைய உலகில் வாழ முடியும் என்பதையும் படிக்காத காரணத்தால் தான் நான் இந்த இருண்ட அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறேன். இன்றைய சமூக அமைப்பில், நீங்கள் கூறுவதைப்போல வாழவேண்டுமென்றால், வஞ்சனை நிறைந்த வாழ்க்கைக் கலையைக் கற்றே தீரவேண்டும். இந்தச் சமூக அமைப்பு நிலை பெற்றிருக்கும் காலம் வரை, இப்படிப்பட்ட வாழ்க்கைக் கலையும் நீடித்து இருக்கத்தான் செய்யும். அந்த இரண்டையும் மாற்றவேண்டும் என்ற உங்களுடைய முயற்சிக்கு  நான் வாழ்த்து கூறுகிறேன்.

இனி நான் இந்தச் சிறைக்குள் வர நேர்ந்த காரணம் என்ன என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நமக்கிடையே முதலில் அறிமுகம் உண்டான  சமயத்தில், நான் பி.ஏ. படிக்கும் மாணவனாக இருந்தேன் என்பதை உங்களிடம் கூறியிருந்தேன் அல்லவா? அந்த வருடமே எனக்கு பி.ஏ. பட்டம் கிடைக்கவும் செய்தது. ஆனால், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை ஆதரவற்றதாக ஆக்கினேன் என்பதுதான் அதன்மூலம் நான் சம்பாதித்தது. நானும் என்னுடைய அண்ணனும் இளைய சகோதரியும் அம்மாவும் அடங்கியதுதான் என்னுடைய குடும்பம். மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒரு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு தென்னந்தோப்பு, அதில் ஒரு வீடு - இவை மட்டுமே எங்களுடைய தந்தை எங்களுக்குத் தந்த சொத்துகளாக இருந்தன. எங்களுடைய கல்விக்கும் நல்ல முறையில் வாழ்வதற்கும் தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக கடின முயற்சிகளைச் செய்து கொண்டிருப்பதற்கு மத்தியில், திடீரென உண்டான ஒரு நோயின் பாதிப்பில் அவர் அகால மரணத்தைத் தழுவிவிட்டார்.

அன்று அண்ணணும் நானும் பள்ளிக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருந்தோம். எங்கள் இருவரின் கல்விச் செலவையும் குடும்பத்திற்கான செலவுகளையும் அந்த தென்னந்தோப்பிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்த சுமாரான வருமானத்தில் நிறைவேற்ற முடியாத காரணத்தால், ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அண்ணன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப விஷயங்களைப் பார்த்துக்கொள்வது என்றும், என்னை மட்டும் தொடர்ந்து படிக்கச் செய்வது என்றும் தீர்மானித்தனர்.

நான் எந்தவொரு வகுப்பிலும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்பது மட்டுமல்ல- எனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்கள் அனைவரும் என்னுடைய படிப்புத் திறமையைப் பற்றி பாராட்டிப் பேசவும் செய்தார்கள்.

என்னுடைய தேவைகளை ஏதோவொரு வகையில் முழுமையாக நிறைவேற்றித் தருவதில் என் தாயும் அண்ணனும் எப்போதும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். "குடும்பத்தின் இல்லாமையையும் பிரச்சினைகளையும்' எனக்குத் தெரியும்படி அவர்கள் காட்டிக் கொண்டதில்லை. குடும்பத்தின் ஆசை முழுவதையும் என்மீது வைத்திருந்தார்கள். நான் ஒரு வேலையில் அமர்ந்து, குடும்பத்தின் நிலையை உயர்த்தக்கூடிய அந்த சந்தோஷமான காலத்தை என் தாயும் அண்ணனும் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து வீடுகளில் இருக்கும் பிள்ளைகள் நகைகள் அணிவதைப் பார்த்து என்னுடைய தங்கை நகை வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கும்போது என் தாய் அவளிடம், "சின்ன அண்ணனுக்கு வேலை கிடைக்கட்டும். அதற்குப் பிறகு உனக்கு நகைகள் வாங்கலாம்' என்று கூறுவாள். தென்னை மரம் விழுந்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து போக, அதைச் சீர் செய்வதையும், என் அன்னையின் வாத நோய்க்கு சிகிச்சை செய்வதையும், எனக்கு வேலை கிடைக்கும் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்ததுதான் பொதுவாக நடந்தது.


எனக்கு வேலை கிடைத்த பிறகு, என் தங்கையை ஒரு வேலையில் இருக்கும் மனிதனுக்குத் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று என் தாய் ஆசைப்பட்டாள். அந்த வகையில் எல்லா ஆசைகளையும் என்மீது போட்டிருந்தார்கள் என்ற விஷயம் எனக்கு பெருமைக்குரிய ஒன்றாகத் தோன்றியது.

பள்ளி இறுதி வகுப்பில் வெற்றி பெற்ற பிறகு, என்னை கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் விஷயத்தைப் பற்றி என் தாயும் அண்ணனும் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார்கள். கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற அளவற்ற விருப்பம் எனக்கு இருந்தாலும், நான் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. பள்ளி இறுதித் தேர்விற்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக வீட்டிலிருந்த பொருட்களில் பலவற்றையும் எடுத்து விற்றதையும், கடன் கொடுத்தவர்கள் பலரும் வீட்டிற்கு வந்து என் தாயையும் அண்ணனையும் கறாராகக் கேட்டுக் கொண்டிருந்ததையும் நான் நன்கு தெரிந்து கொண்டிருந்தேன். குடும்பத்தின் பொருளாதார நிலை இந்த வகையில் இருக்க, என்னை கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூறுவதற்கான தைரியம் எனக்கு இல்லாமலிருந்தது.  இறுதியில் என் தாயும் அண்ணனும் சேர்ந்து தீவிரமாக ஆலோசனை செய்துவிட்டு, என்னை மேற்படிப்பு படிப்பதற்கு அனுப்புவது என்று தீர்மானித்தார்கள். குடும்பத்திற்குச் சொந்தமான சொத்தை பணயம் வைத்து 1,500 ரூபாய் வாங்குவது என்றும், அதிலிருந்து ஒரு தொகையை எடுத்து சில்லறைக் கடன்களை அடைப்பது என்றும், 400 ரூபாயை வைத்து அண்ணன் ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பது என்றும், மீதமிருக்கும் தொகையை என்னுடைய படிப்பிற்காக வங்கியில் செலுத்துவது என்றும் முடிவு செய்தார்கள்.

நான் சந்தோஷமாக பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். புதிய ஆடைகளைத் தைக்கச் செய்தேன். படுக்கை, போர்வை ஆகியவற்றை தயார் பண்ணினேன். நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டேன். பயணத்திற்கு தயாரானபோது, ஒரு நூறுரூபாய் நோட்டை எடுத்து என் கையில் தந்துவிட்டு என் அம்மா, "மகனே! சிக்கனமாக செலவழிக்கணும். அதற்காக தேவையான பொருட்களை வாங்குவதற்கு சிக்கனத்தைக் காட்ட வேண்டாம். அடிக்கடி கடிதம் எழுதணும். விடுமுறை விடுறப்போ இங்கு வரவேண்டும்' என்று கூறினாள்.

நான் என் அன்னையையும் அண்ணனையும் வணங்கினேன். என் தங்கையின் கன்னத்தை மெதுவாகத் தடவிவிட்டு, கிளம்பினேன். நான் நடந்து மறையும் வரை என் தாயும் அண்ணனும் தங்கையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

கல்லூரியில் சேர்ந்த வருடத்திலேயே வங்கியில் போடப்பட்டிருந்த பணத்தின் பெரும்பகுதியை நான் செலவழித்து விட்டேன். அதை அப்படியொன்றும் தாறுமாறாக நான் செலவழிக்கவில்லை. சுமாரான நிலையில் இருந்த ஒரு வீட்டில்தான் நான் தங்க ஆரம்பித்தேன். ஒருநாள் அதிகாலை நேரத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் யாரோ தேம்பித் தேம்பி அழுவது காதில் விழுந்தது. அது- அந்த வீட்டிலிருந்த ஒரு சிறுமி. அவளுடைய தாய் அவளிடம் "குழந்தை... கஞ்சிக்கே வழியில்லாதவர்கள் பணம் கட்டி படிக்கிறார்களா? படிப்பு என்பது பண வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்குத்தானே? யாராவது வந்து அழைத்துக் கொண்டு செல்வதுவரை, இங்கே இருந்துகொண்டு எதையாவது பார்த்து படித்துக் கொண்டிருந்தால் போதும்' என்று கூறிக்கொண்டிருந்தான்.

நான் எழுந்து அந்த வீட்டிற்குச் சென்றேன். மண்ணைக் கொண்டு  சுவர் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய வீடு அது. என்னைப் பார்த்தவுடன், வாசல் திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த அந்தச் சிறுமி எழுந்து உள்ளே ஓடி விட்டாள். அவளுடைய அன்னை நடுத்தர வயதைக் கொண்ட ஒரு ஏழைப் பெண். அழுக்கு படிந்த ஒரு ஒலைப் பாயை விரித்துவிட்டு, என்னை மரியாதையுடன் பார்த்தாள். சாரதாவிற்கு (அது தான் அந்த சிறுமியின் பெயர்.) படிப்பு விஷயத்தில் அதிகமான ஆர்வம் என்றும், அவளுக்கு கல்விக் கட்டணத்திற்கும் புத்தகத்திற்கும் பணமில்லாத காரணத்தால் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்றும் அந்தப் பெண் என்னிடம் கூறினாள். சாரதாவின் தந்தை ஒரு நிறுவனத்தில் காவலாளி யாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் அவருக்குக் கிடைக்கும் பத்து ரூபாயை வைத்துதான் அந்தக் குடும்பத்தில் எல்லா செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தப் பெண் என்னிடம் கூறினாள்:

 “குழந்தை, நான் மூணு பிள்ளைகளைப் பெற்றேன். இப்போ இது ஒண்ணுதான் இருக்கு. இவளுக்கு இப்போ பதிமூணு வயசு முடிஞ்சிருச்சு. இவள் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் படிக்க வைக்கணும் என்ற பெரிய ஆசை இவளு டைய அப்பாவுக்கு இருக்கு. இரண்டு வேளை கஞ்சியாவது குடிக்கலாம் என்றால், அதைக் குடிச்சு படுத்துக் கிடக்குறதுக்குக்கூட வழியில்லை. பிறகு எப்படி ஃபீஸ் கட்டி படிக்க முடியும்? புத்தகங்கள் வாங்குறதுக்கும் பணம் வேண்டாமா?''
நான் எல்லாவற்றையும் மிகவும் கவனமாகக் கேட்டேன். சாரதாவிற்கு கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்தையும், புத்தகம் வாங்குவதற்கான செலவையும் நான் கொடுப்பதாகவும், அவளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் கூறிவிட்டு நான் திரும்பி வந்துவிட்டேன். அன்று சாயங்காலமே அவளுடைய கல்விக்கட்டணத்திற்கும், புத்தகங்களுக்கும் தேவைப்பட்ட பணத்தை அவளுடைய தாயின் கையில் கொண்டுபோய் கொடுத்தேன். அது மட்டுமல்ல- அவளுக்குத் தேவைப்பட்ட ஆடைகளையும் நானே வாங்கித் தருவதாகவும் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

சாரதா ஒரு கூச்ச குணம் கொண்ட பெண்ணாக இருந்தாள். பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் உரையாடுவதற்குக்கூட அவள் வெட்கப்பட்டாள். அவள்மீது ஈடுபாடும் அன்பும் யாருக்கும் உண்டாகும். ஒன்றோ இரண்டோ வார்த்தைகளைக் கூறிவிட்டு, முகத்தை மூடிக்கொண்டு ஓடி விடுவது என்பது அவளுடைய ஒரு வழக்கமான செயலாக இருந்தது. நான் ஒவ்வொரு நாளும் சாயங்காலம் அவளுடைய வீட்டிற்குச் செல்வேன். அவளிடம் ஏதாவது கேட்டால், அவள் அங்கிருந்து ஓடி விடுவாள். படிப்பு விஷயத்தில் அவள் மிகவும் திறமை வாய்ந்தவளாக இருந்தாள். சில நேரங்களில் நான் அவளுடைய நோட்டுப் புத்தகத்தில் கேள்விகளை எழுதி வைத்து விட்டுச்செல்வேன். மறுநாள் வரும்போது, அவள் அந்தக் கேள்விகள் அனைத்திற்கும் சரியான பதில்களை எழுதி என்னை நோக்கி வீசிவிட்டு ஓடி விடுவாள். நான் என்னுடைய படிக்கும் அறையில் உட்கார்ந்திருக்கும்போது, அவளுடைய மிகவும் இனிமையான பாடல்களைக் கேட்பதுண்டு. நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றால், அவளுடைய தந்தையும் தாயும் எவ்வளவு வற்புறுத்தினாலும், அவள் பாடவே மாட்டாள்.

சாரதாவின் தந்தைக்கும் அன்னைக்கும் என்மீது அளவற்ற அன்பு இருந்தது. தங்களுக்கு உதவி செய்வதற்காக வந்திருக்கும் கடவுளின் தூதன் நான் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் கூறுவார்கள். நான் அவர்களுடன் தங்கியிருக்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருந்தது.


ஆனால், எனக்கு ஏற்ற உணவைத் தருவதற்கு வறுமையில் சிக்கிக் கிடக்கும் தங்களால் முடியாமல் போய்விடுமோ என்ற தயக்கம் காரணமாக தங்களுடைய விருப்பத்தை என்னிடம் அவர்கள் மனம் திறந்து கூறவில்லை. நான் அங்கு செல்லும்போதெல்லாம், அவர்கள் எனக்கு தேநீர் உண்டாக்கித் தருவார்கள். நான் ஒருநாள் அங்கு போகாமல் இருந்துவிட்டால், சாரதாவின் தந்தையோ தாயோ என்னைத் தேடி வந்துவிடுவார்கள்.

இப்படியே மாதங்கள் சில ஓடின. ஒவ்வொரு நாளும் சாரதாவின் வீட்டில் குறைந்தபட்சம் ஒரு அரை மணி நேரமாவது போய் இருப்பது என்பது என்னுடைய அன்றாடச் செயல்களில் ஒன்றாக ஆனது. தினமும் அவளைப் பார்க்கவில்லையென்றால்- அவளுடைய வெட்கப்பட்டுக் கொண்டு ஓடும் ஓட்டத்தைப் பார்க்கவில்லையென்றால் எனக்கு ஒரு மாதிரி இருக்கும்! ஒரு அமைதியற்ற நிலை! சில நேரங்களில் நான் அவளை அருகில் வரும்படி அழைப்பேன். எவ்வளவுதான் யாரெல்லாம் வற்புறுத்திக் கூறினாலும், அவள் எனக்கு அருகில் வரவே மாட்டாள். சில வேளைகளில் அவளுடைய அன்னை கூறுவாள்: “அடியே! உன் அண்ணன்தானே அது? பக்கத்துல போ.'' அவள் கைக்கு எட்டாத தூரத்தில் வந்து நிற்பாள். அவ்வளவுதான். ஏதாவது கேட்டால், உடனடியாக பதில் கூறுவாள். நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருப்பதற்கு அவள் அனுமதிக்கவே மாட்டாள். அதிகமாக கேள்விகள் உண்டாகாத வகையில் அவள் பதில் கூறிவிட்டு, காத்துக் கொண்டு நின்றிருக்காமல் அங்கிலுந்து ஓடி விடுவாள். ஆனால், நான் அங்கு சென்ற பிறகு அவள் என்னுடைய பார்வையிலிருந்து மறையவே மாட்டாள்.

இப்படியே அந்த வருட பள்ளிக்கூட வாழ்க்கை முடிவுக்கு வந்தது. சாரதா ஏழாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். விடுமுறை ஆரம்பமாகி விட்டதால், நான் வீட்டிற்குச் செல்ல தயாரானேன். சாரதாவைப் பிரிவதற்கு எனக்கு சற்று கவலையாகவே இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கே சரியாகத் தெரியாமலிருந்தது. விடுமுறையின்போது வீட்டிற்குச் செல்லவில்லையென்றால் என் தாய் வருத்தப்படுவாள். எது எப்படி இருந்தாலும் நான் பயணத்திற்குத் தயாராகிவிட்டு, சாரதாவைப் பார்ப்பதற்காகச் சென்றேன். வீட்டிற்குச் செல்கிறேன் என்று நான் அவளிடம் கூறினேன். அவள் எதுவும் கூறவில்லை. ஆனால், இது வரை பார்த்திராத ஒரு முக வெளிப்பாட்டை நான் அவளிடம் பார்த்தேன். அது என்னவென்று கூறுவதற்கு என்னால் முடியவில்லை. “இதோ நான் வருகிறேன்.'' என்று கூறிவிட்டு அவள் அங்கிருந்து ஓடிச் சென்று விட்டாள். நான் அங்கேயே அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரம் தாண்டியவுடன் பின்னால் எதையோ மறைத்துப் பிடித்துக்கொண்டு அவள் வந்து நின்றாள். அவள் கேட்டாள். “அண்ணா! இன்றைக்கே நீங்க போறீங்களா?'''

“ஆமா... நான் இப்போதே புறப்படுகிறேன். விடுமுறைக் காலம் முடிந்ததும், நான் திரும்பி வருவேன்.'' நான் தொடர்ந்து கேட்டேன். “சாரதா நீ எனக்கு கடிதம் எழுதுவாயா?''

“நான் பதில் கடிதம் போடுவேன்.'' அவள் மென்மையாக புன்னகைத்தாள்.

“நான் கேட்டேன். “அப்படியென்றால் நான் முதலில் கடிதம் எழுதணும்.. அப்படித்தானே?''

“ம்....'' அவள் ஒரு சிறிய முல்லைப்பூ மாலையை என்னுடைய மடியில் போட்டுவிட்டு ஓடி விட்டாள்.

என் அன்னையும் அண்ணனும் தங்கையும் நான் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவர்கள் என்னை ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றார்கள். கல்லூரியில் படிப்பதற்காகச் சென்றிருந்த மகன்- வேலையில் அமரப் போகிற மகன் வந்திருக்கும் தகவலை என் தாய் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாருக்கும் தெரிவித்தாள். என் தங்கைக்கு ஒரு சிறிய முண்டும், இரவிக்கையும் நான் கொண்டு வந்திருந்தேன். அவள் அதை அணிந்து "ஓண விளையாட்டு' விளையாடி சந்தோஷப்பட்டாள். படிப்பைப் பற்றியும் தங்கியிருந்த இடத்தைப் பற்றியும் நான் என் அண்ணனுக்கும் தாய்க்கும் விளக்கிக் கூறினேன். சாரதாவைப் பற்றி எதுவும் கூறவில்லை. எதிர்பார்த்ததைவிட அதிகமான பணம் செலவாகி விட்டது என்றும், வங்கியில் போடப்பட்டிருந்த பணம் பெரும்பாலும் தீர்ந்துவிட்டது என்றும் நான் கூறியபோது, என் தாய்க்கும் அண்ணனுக்கும் அதிர்ச்சி உண்டாகிவிட்டது. எது எப்படி இருந்தாலும், வியாபாரத்தில் போடப்பட்டிருந்த பணத்தையும் கல்விக்குச் செலவிடலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

என்னுடைய கடிதத்திற்கு சாரதா பதில் கடிதம் போட்டிருந்தாள். விடுமுறைக் காலத்திலும் அவள் படிப்பு விஷயத்தில் அக்கறை செலுத்திக் கொண்டிருப்பதாகவும், அவளுடைய தந்தையும் தாயும் தினமும் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும், அவள் சில புதிய பாடல்களைக் கற்றுக் கொண்டிருப்பதாகவும் தன்னுடைய பதில் கடிதத்தில் அவள் எழுதியிருந்தாள். விடுமுறைக் காலம் முடிவுக்கு வந்தபோது, என்னுடைய மனதில் பல சிந்தனைகளும் உண்டாயின. அடுத்த வருடம் சாரதாவிற்கு கல்விக் கட்டணத்திற்காகவும், புத்தகங்கள் வாங்குவதற்காகவும் நான் மிகவும் அதிகமாக சிரமப்பட வேண்டியதிருக்கும். வியாபாரத்தில் போடப்பட்டிருக்கும் பணத்தையும் வங்கியில் மீதமிருக்கும் பணத்தையும் வைத்து அதிகபட்சம் ஒரு வருடம் சமாளிக்கலாம். அதற்குப் பிறகு என்ன செய்வது? சாரதாவை பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறுவது வரையாவது படிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். எது எப்படி இருந்தாலும்- அந்த வாக்குறுதியை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.

விடுமுறைக் காலம் முடிந்ததும், நான் வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டில் எனக்கு கிடைத்த வரவேற்பைவிட, அதிகமான சந்தோஷம் நிறைந்த வரவேற்பை சாரதாவின் தாயும் தந்தையும் எனக்கு அளித்தார்கள். வீட்டின் விசேஷங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக அவர்கள் எல்லாரும் எனக்கு அருகில் வந்து நின்றார்கள். சாரதா தன் அன்னைக்குப் பின்னால் சற்று மறைந்து நின்று கொண்டிருந்தாள். வீட்டில் நிலவிக் கொண்டிருந்த வறுமைச் சூழலை மறைத்துக்கொண்டு நான் சில பொய்களைக் கூறினேன். கூறி முடித்தவுடன், சாரதாவின் தந்தையும் தாயும் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்கள். சாரதா அங்கேயே எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். நான் அவளிடம் கேட்டேன். “என்ன... சாரதா! விடுமுறைக் காலம் சந்தோஷமாக முடிந்ததா?'''

“ம்...'' அவள் தன்னுடைய காலின் பெருவிரலை தரையில் வரைந்துகொண்டே கேட்டாள்: “நான் கொடுத்த மாலை எங்கே?''

நான் பாக்கெட்டிற்குள்ளிருந்து காய்ந்து சுருங்கிப் போய் இருந்த  அந்த மாலையை எடுத்து அவளிடம் காட்டினேன். அவள் நன்றிப் பெருக்குடன் என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு ஓடிச் சென்றாள்.

விடுமுறைக் காலம் முடிவடைந்து, கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. சென்ற வருடத்தைப் போலவே சாரதாவிற்கு தேவைப்பட்ட புத்தகங்களையும் ஆடைகளையும் நான் வாங்கிக் கொடுத்தேன். கல்விக் கட்டணத்தையும் முறையாகக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.


கடந்த வருடத்தைப்போல எளிதில் செலவழிப்பதற்காக பணம் இல்லாமலிருந்ததால், என்னுடைய செலவுகள் சிலவற்றைக் குறைக்க வேண்டியதிருந்தது. சாரதாவின் விஷயங்களில் எந்தவொரு குறைபாடும் உண்டாகவில்லை.

தேர்வு நெருங்கிய நேரத்தில் என் அண்ணனின் ஒரு கடிதம் வந்தது. வியாபாரத்தில் போடப்பட்டிருந்த பணம் தீரும் நிலைக்கு வந்துவிட்டது என்றும், வீட்டில் செலவுக்குக்கூட மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும், சொத்தில் வரும் லாபத்தைக் கொண்டு வட்டி கட்ட முடியாததால், கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. எதிர்காலத்தைப் பற்றி தீவிரமாக சிந்திக்கக்கூடிய கட்டாயத்திற்கு  நான் ஆளாக்கப்பட்டிருந்தேன். எனக்கு மட்டுமல்ல- சாரதாவிற்கும் சேர்த்து நான் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. அதற்கான பல வழிகளையும் நான் சிந்தித்துப் பார்த்தேன். விரக்தி அடையாமல் தேர்வை எழுதி முடித்தேன். அந்த வருடமும் நானும் சாரதாவும் தேர்ச்சி பெற்றோம்.

விடுமுறைக்கு நான் வீட்டிற்குச் செல்லவில்லை. கல்லூரியில் இருந்துகொண்டு, ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருப்பதாகவும், பி.ஏ.வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைத்தபிறகுதான் வீட்டிற்கு வருவேன் என்றும் நான் என்னுடைய அண்ணனுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினேன்.

ஏதாவது கடையில் கணக்கு எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று நான் முதலில் முயற்சி செய்து பார்த்தேன். அது நடக்கவில்லை. தொடர்ந்து என்னுடைய ஒரு நண்பரின் முயற்சியில் ஒரு வக்கீலின் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுப்பதற்கான வேலை கிடைத்தது. நான் ஒரு மாணவன் என்பதையும், படிப்பைத் தொடர்வதற்கு வழியில்லாமல் இருக்கிறேன் என்பதையும் அறிய நேர்ந்த காரணத்தால், அந்த வக்கீல் இரக்கப்பட்டு என்னை ட்யூஷன் மாஸ்டராக அமர்த்தினார். அதற்கு சம்பளமாக ஒவ்வொரு மாதமும் பத்து ரூபாய் வீதம் தருவதாக அவர் கூறினார்.

அடுத்த பள்ளிக் கல்வியாண்டின் ஆரம்பத்தில் என் அண்ணனின் வியாபாரத்தில் எஞ்சியிருந்த கொஞ்சப் பணத்தை அவர் அனுப்பி வைத்ததால், எனக்கும் சாரதாவிற்கும் தேவையான புத்தகங்களையும் பிற பொருட்களையும் வாங்க முடிந்தது. அதற்குப் பிறகு வீட்டிலிருந்து எதுவும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வக்கீல் தந்துகொண்டிருந்த பத்து ரூபாயை வைத்து எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உண்டானது. இந்த கஷ்டங்கள் எதையும் நான் சாரதாவின் வீட்டைச் சேர்ந்தவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை. இன்னொரு ட்யூஷன் வேலை வேறு எங்காவது கிடைக்குமா என்று நான் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். வக்கீலிடம் என்னுடைய நிலைமை முழுவதையும் விளக்கிக் கூறினேன். பத்து ரூபாயை வைத்து படிப்புச் செலவையும் தங்கியிருக்கும் செலவையும் பார்த்துக்கொள்ள முடியாது என்றும் பி.ஏ.வில் தேர்ச்சி பெறுவது வரை எனக்கு உதவி செய்யவேண்டும் என்றும் நான் அவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். இரக்க குணம் கொண்ட வக்கீல், ஒரு தொழிற்சாலை உரிமையாளருக்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதி என் கையில் தந்தார். கடிதத்தைப் படித்த அந்த முதலாளி அவருடைய பிள்ளைகளுக்கு ட்யூஷன் மாஸ்டராக மாதமொன்றுக்கு பன்னிரண்டு ரூபாய் சம்பளத்தில் என்னை அமர்த்தினார். அந்த வகையில் இரண்டு ட்யூஷன்கள் கிடைத்ததும், என்னால் ஒரு விதத்தில் வாழமுடியும் என்ற நிலை உண்டானது.

காலை ஆறரை மணியிலிருந்து எட்டு மணி வரை வக்கீலின் வீட்டிற்கும், சாயங்காலம் ஐந்து மணியிலிருந்து ஆறரை மணிவரை முதலாளியின் வீட்டிற்கும் ட்யூஷன் சொல்லிக்கொடுக்க போக வேண்டியதிருந்தது. அது முடிந்தவுடன், அன்றாடச் செயல்களை மிகவும் சிரமப்பட்டு செய்யும் அளவிற்கு நேரம் இருந்தது. இரவு வேளையில் படிப்பதில் ஈடுபடுவேன். அந்தக் காலங்களில் இரவு இரண்டு மணிக்கு முன்னால் நான் தூங்கியதே இல்லை. பகல் முழுவதும் கல்லூரியிலும், ட்யூஷன் வேலையிலும் என்று இருந்துகொண்டும், இரவில் தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு படிப்பதில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்ததால் என்னுடைய உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்க ஆரம்பித்தது. சாரதாவை தினந்தோறும் பார்க்க வேண்டும் என்ற மிகப்பெரிய விருப்பம் மனதில் இருந்தது. எனினும், அதற்கு நேரம் கிடைக்கவில்லை. சாரதாவின் தாய், நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து பல நேரங்களில் விசாரித்திருக்கிறாள். நான் அதிகாலையிலேயே அங்கிருந்து கிளம்பிப் போய் விடுகிறேன் என்றும், எங்கு செல்கிறேன் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் அந்த வீட்டில் இருப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். ஐந்தோ- ஆறோ நாட்களுக்கு ஒருமுறைதான் என்னால் சாரதாவைப் பார்க்க முடிந்தது.

ஒருநாள் மாலைப் பொழுது முடிந்த நேரத்தில் நான் சாரதாவின் வீட்டிற்குச் சென்றேன். அப்போது அவள் விளக்கிற்கு அருகில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். முற்றத்தில் நின்றவாறு நான் அவளைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். அவள் ஒரு இளம் தேவதையைப்போல தோன்றினாள். அவள் எனக்குச் சொந்தமானவள் என்பதைப்போலவும், அவள்மீது எனக்கு உரிமை இருக்கிறது என்பதைப்போலவும் எனக்கு தோன்றியது. பின்வழியாக ஓசை எதுவும் உண்டாக்காமல் சென்று அவளுடைய கண்களை மூடவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது. அந்த விருப்பத்தை அடக்கி வைத்துவிட்டு, நான் மெதுவாக இருமிக்கொண்டே அவளின் அருகில் சென்றேன். அவள் தான் படித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு எழுந்து நின்றாள். அங்கிருந்து ஓடிச் செல்லாமல், அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள். நான் அவளின் கையிலிருந்த புத்தகத்தைப் பற்றினேன். அவள் தன்னுடைய கையை பின்னோக்கி இழுக்காமல், புத்தகத்தை என் கையில் தந்தாள். வாசலில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். அவள் என்னை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் என்னுடைய கையை அவளை நோக்கி நீட்டினேன். அவள் நடுங்கிக் கொண்டே அந்தக் கையைப் பற்றினாள். என்னுடைய கை அவளுடைய கையில் இருந்தவாறு நடுங்கிக் கொண்டிருந்தது. நான் மேலும் சற்று நெருங்கிச் சென்றேன். அவளுடைய தாய் வாசலின் அருகில் வந்து நின்றாள். நாங்கள் இருவரும் விலகி நின்றோம்.

நான் வழக்கம்போல அங்கு வராததற்குக் காரணம் என்ன என்பதைக் கூற வேண்டும் என்று சாரதாவின் தாய் வற்புறுத்த ஆரம்பித்தாள். பல பொய்களை நான் கூறிப்பார்த்தும், அவள் அவற்றை நம்புவதற்குத் தயாராக இல்லை. இறுதியில் பொருளாதாரரீதியாக எனக்கு இருக்கும் சிரமங்களைப் பற்றியும், நான் புதிதாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைப் பற்றியும் அவளிடம் கூறினேன். கடைசியில் நான் அவளுக்கு தைரியம் கொடுத்தேன். “எது எப்படி ஆனாலும், சாரதாவின் படிப்பை நிறுத்த வேண்டாம். அவளுக்கு மீண்டும் புத்தகங்களையும் மற்ற பொருட்களையும் நான் வாங்கித் தருகிறேன்'' என்று நான் கூறினேன்.


சாரதாவின் தாய் கூறினாள்: “சரி.... குழந்தை... உன்னுடைய படிப்பும் தொடர வேண்டாமா?''

“என்னுடைய படிப்பும் நடக்கும்....'' நான் உறுதியான குரலில் பதில் கூறினேன்.

அந்த வருடமும் நாங்கள் இருவரும் தேர்ச்சி பெற்றோம். சாரதா பள்ளி இறுதி வகுப்பிலும், நான் சீனியர் பி.ஏ. விலும். இரண்டு ட்யூஷன்கள் இருந்தது இல்லாமல், என் அண்ணன் ஏதாவது அனுப்பிக்  கொண்டிருந்தார். அதை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியுமாக நாங்கள் சமாளித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தோம்.

என் அண்ணன், இறுதியில் மீதமிருந்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு ஒரு காப்பி வியாபாரத்தை ஆரம்பித்தார். அதிலிருந்து கிடைத்த சுமாரான லாபத்தை வைத்து வீட்டுச் செலவுகளை ஒரு வகையில் பார்த்துக் கொண்டிருந்தார். கடன் வாங்கிய பணத்திற்கு ஒழுங்காக வட்டி கொடுக்காத காரணத்தால், அந்தத் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தது. கடன் கொடுத்த மனிதர் வழக்கு தொடுத்திருப்பதாக என் அண்ணன் ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார். இந்த விஷயங்கள் அனைத்தையும் அறிந்தும், நான் அதைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை. எப்படியாவது பி.ஏ.வில் தேர்ச்சி பெற்று, ஒரு வேலையை வாங்கிவிட வேண்டும் என்பது என்னுடைய முயற்சியாக இருந்தது. வேலையில் அமர்ந்த பிறகு, சாரதாவையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு... ஹா... என்னுடைய ஆசை முழுவதும் அதில்தான் மையம் கொண்டிருந்தது.

தேர்வு முடிந்தது. முடிவை எதிர்பார்த்துக் கொண்டு நான் சில நாட்கள் வெறுமனே இருந்தேன். ஒரு சாயங்கால வேளையில் நான் வழக்கம்போல சாரதாவின் வீட்டிற்குச் சென்றேன். அவள் தெற்கு பக்க வாசலில், மறைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்த்த வண்ணம் சிந்தனையில் மூழ்கியவாறு நின்றுகொண்டிருந்தாள். இப்போது அவள் படிப்பதற்கு பணம் இல்லாமல் அழுது கொண்டிருந்த அந்தச் சிறுமி அல்ல. அவள் ஒரு இளம்பெண்ணாக ஆகிவிட்டிருந்தாள். அழகான அந்த மொட்டு விரிந்திருக்கிறது. அதைச் சற்று முத்தமிட... அதன் நறுமணத்தை முகர்ந்து சந்தோஷப்பட எனக்கு அளவற்ற ஆசை உண்டானது. நான் ஓசை எதுவும் உண்டாக்காமல் அவளுக்குப் பின்னால்... அவளின் அருகில் போய் நின்றேன். என்னுடைய இதயம் துடித்துக் கொண்டிருந்தது. என்னுடைய நடுங்கிக் கொண்டிருந்த கைகள் மேலே உயர்ந்தன. மறைந்து கொண்டிருந்த சூரியனின் செங்கதிரின் பிரகாசத்தை வாங்கி, முன்பு இருந்ததைவிட அதிகமான ஒளியுடன் காட்சி யளித்த அவளுடைய முகம் கோபம் கலந்த ஒரு பார்வையுடன் என்னை நோக்கித் திரும்பியது. எனக்கே தெரியாமல் நெருப்பை மிதித்து விட்டதைப் போல, நான் இரண்டு அடிகள் பின்னோக்கி விலகி நின்றேன்... அவள் மென்மையாக சிறிது புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டே அங்கிருந்து ஓடிச் சென்றுவிட்டாள். சிறிது நேரம் கடந்ததும், அவள் அழகாக சிரித்துக்கொண்டே எனக்கு அருகில் வந்து கேட்டாள்: “ஏன் என்னை பயமுறுத்துறீங்க?''

நான் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டேன்.

தேர்வின் முடிவு வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் நானும் இருந்தேன். சாரதாவும் பெயர் கிடைக்கிற அளவில் வெற்றியைப் பெற்றாள்.

என்னுடைய வாழ்வின் அனைத்து பிரகாசங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடியது என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்த பி.ஏ. பட்டம் எனக்குக் கிடைத்தது. என்னுடைய மனம் லட்சிய வேட்கையுடன் இருந்தது. என்னுடைய எதிர்காலத் திட்டங்களைப் பற்றி சாரதாவிடம் கூறுவதற்காக நான் அவளின் வீட்டைத் தேடிச் சென்றேன். அவள் மிகுந்த சந்தோஷத்துடன் என்னை வர வேற்றாள். நான் அவளிடம் கூறினேன். “சாரதா, உன்னுடன் நான் சிறிது நேரம் உரையாட விரும்புகிறேன்.''

“ஏன் சிறிது நேரம்?'' அவள் சொன்னாள்: “என் நேரம் வேறு யாருக்காவும் இல்லையே!'' அவள் எனக்கு முன்னால் சற்று தூரத்தில் உட்கார்ந்தாள். அவளுடைய முகத்தையே நான் கூர்ந்து பார்த்தேன். இளமை கொப்பளித்துக் கொண்டிருந்த அழகான அந்த முகத்தில், பிடித்து இழுக்கக்கூடிய ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தாலும், அந்த புன்னகையில் கலந்திருந்த உணர்ச்சி என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் கேட்டேன்: “சாரதா, இனி என்ன செய்யவேண்டும் என்று நீ நினைக்கிறாய்?''

உடனடியாக அவள் பதில் கூறினாள்: “இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டால் நீங்கள் அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?''

“நான் இனி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.''

அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்: “அதையேதான் நானும் நினைக்கிறேன்.''

“எப்படி?''

“எப்படி?'' அவள் திரும்பக்கேட்டாள்.

“இனி ஒரு வேலையைத் தேடிப்பெறவேண்டும்.''

“அதற்குப் பிறகு?'' அவள் அர்த்தம் பொதிய கேட்டாள்.

“அதற்குப் பிறகு என் சாரதாவை...''

“முழுசா சொல்லுங்க...'' அவள் அமைதியாக இருந்தாள்.

“என் சாரதாவை திருமணம் செய்வேன்.'' என் தொண்டை இடறியது.

“அப்படியே நடக்கட்டும்.'' அவள் மிடுக்கான குரலில் கூறினாள்.

“என்ன? அதில் பிரச்சினை இருக்கிறதா?'' நான் பதைபதைப்புடன் கேட்டேன்.

அவள் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை.

நான் ஆர்வத்துடன் கூறினேன்: “சாரதா, நான் உன்னை அளவுக்கும் அதிகமாக காதலிக்கிறேன்...''

“நானும்...'' அவள் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.

“நான் எதிர்பார்த்து இருக்கலாமா?''

அவள் தன் தலையை உயர்த்தி என்னைப் பார்த்துக்கொண்டே கூறினாள்: “ஏமாற்றமடைய வேண்டாம்.. ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்...''

ஒரு நல்ல வேலை- என் சாரதாவிற்கு நல்லது என்று தோன்றக்கூடிய ஒரு வேலை- அதை அடைவதுதான் என்னுடைய அடுத்த முயற்சியாக இருந்தது. எல்லா பிரிவின் உயரதிகாரிகளுக்கும் நான் மனு அனுப்பினேன். தகுதியுள்ள வேலை களுக்கு மட்டுமே நான் விண்ணப்பித்தேன். இரண்டு வாரங்கள் கடந்த பிறகும், யாருடைய பதிலும் எனக்கு வரவில்லை.

நான் பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றுவிட்டதால், வக்கீலின் உதவி முடிவுக்கு வந்தது. அதுவரை எனக்கு உதவி செய்வதாக மட்டுமே அவர் ஏற்றுக் கொண்டிருந்தார். என்னை வேலையிலிருந்து போகச் சொன்னபோது, அவர் எனக்கு இனாமாக பத்து ரூபாய் கொடுத்தார். நேரம் இருக்கும்போது தன்னை வந்து பார்க்குமாறு கூறினார். முதலாளியும் என்னை வேலையிலிருந்து போகச் சொல்லிவிட்டார். வக்கீல் தந்த பத்து ரூபாயை வைத்து என்னுடைய சில்லறைக் கடன்கள் சிலவற்றை அடைத்தேன். அதற்குப் பிறகு இருபது ரூபாய் வரை கடன் இருந்தது. தங்கிக் கொண்டிருந்த வீட்டிற்கு சுமார் 15 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்ததால், சாப்பிடுவதற்கு அங்கு செல்வதற்கு சற்று தயக்கமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்கள் நண்பர்களின் விருந்தாளியாக இருந்தேன்.


இந்த சிரமங்கள் எதையும் நான் சாரதாவிடம் கூறவில்லை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் வெகுசீக்கிரமே வேலை கிடைத்துவிடும் என்று மட்டும் கூறிக் கொண்டிருந்தேன். ஆனால், நான் உணவிற்கும், தங்குவதற்கும் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை அவள் புரிந்து கொண்டாள். ஒருநாள் அவள் அந்த விஷயத்தை என்னிடம் வெளிப்படையாக கேட்கவும் செய்தாள். நான் என்னுடைய நண்பனுடன் சேர்ந்து தங்கிக் கொண்டிருக்கிறேன் என்றும், அங்கு நான் நல்ல முறையில் இருக்கிறேன் என்றும் அவளிடம் கூறினேன். அதற்குப் பிறகு அவள் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

என்னுடைய வேலை சம்பந்தமாக அனுப்பிய விண்ணப்பங்களுக்கு பதில் கடிதம் எதுவும் வராததால், அவை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை நேரில் போய் பார்த்துவிடுவது என்று நான் முடிவெடுத்தேன். முதலில் கல்வித் துறையின் அதிகாரியைப் பார்ப்பதற்காக நான் சென்றேன். தன்னை நேரில் பார்ப்பதற்கு அவர் அன்புகூர்ந்து அனுமதி அளித்திருந்தார். அலுவலகத்திற்கு வந்து சேர்ந்திருக்கும் ஏராளமான விண்ணப்பங்களின் கூட்டத்தில் என்னுடைய விண்ணப்பமும் இருக்கலாம் என்றும், வேலை எதுவும் தற்போது காலியாக இல்லை என்று மனு அனுப்பியவர்களுக்கு பதில் எழுதும்படி க்ளார்க்கிடம் தான் கூறியிருப்பதாகவும், அப்போது எனக்கும் தகவல் வந்துசேரும் என்றும் அவர் என்னிடம் கூறினார். அதற்குப் பிறகு நான் தலைமைப் பொறியாளரைச் சென்று பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இரண்டு மூன்று நாட்கள் அலுவலகத்தின் வாசலுக்குச் சென்று காத்துக் கொண்டு நின்ற பிறகுதான் அவரைச் சந்திக்கவே முடிந்தது. துறை சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் தேவைப்படும் வேலைகளில் என்னை அமர்த்துவதற்கான வாய்ப்பில்லை என்றும், க்ளார்க் வேலை எதுவும் காலியாக இல்லை என்றும், காலியாக இருக்கும் மூன்று மேஸ்திரி இடங்களுக்கு இருநூறுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்து சேர்ந்திருக்கின்றன என்றும், அந்த வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது முன்வேலை அனுபவம் உள்ளவர்களின் உரிமையை பரிசீலித்தேயாக வேண்டும் என்றும் அவர் மிடுக்கான குரலில் கூறினார். அதற்குப் பிறகு தலைமை நீதிபதியைப் போய் பார்ப்பது என்று முடிவெடுத்தேன். நான் மிகவும் முயற்சி செய்தும், அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. ஏதாவது கூற விரும்பினால் எழுதி அனுப்பவேண்டும் என்றும், வேலை கேட்டு வருபவர்களை உள்ளே விடக்கூடாது என்பது உத்தரவு என்றும் வாசலில் இருந்த காவலாளி, நீதிபதிக்கு பதிலாக இருக்கும் ஆள் என்ற முறையில் என்னிடம் கூறினான். அதற்குப் பிறகும் நான் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான், நீங்கள் அன்று பார்த்ததைப்போல, என்னை விரட்டிவிடும் சம்பவம் நடந்தது.

நான் நம்பிக்கையின் எல்லையிலிருந்து விரக்தியின் ஆழத்திற்குள் இறங்க ஆரம்பித்தேன். என்னை விரட்டி விடுவதை வேற்று மனிதர்கள் பலரும்- குறிப்பாக நீங்கள் பார்த்திருக்கிறார்கள் என்ற விஷயம் என்னுடைய சுயமரியாதையை மிகவும் காயப்படுத்தியது, அன்று முழுவதும் நான் உணவே சாப்பிடவில்லை. கடுமையான களைப்புடனும், அவமானத்துடனும், ஏமாற்றத்துடனும் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தேன். என் அண்ணன் அனுப்பியிருந்த ஒரு கடிதம் என்னை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு கிடந்தது. அதன் ஒரு பகுதி இப்படி இருந்தது. "நம்முடைய சொத்தை கடன் கொடுத்தவர்கள் ஏலத்தில் விற்று விட்டார்கள். வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு பத்து நாள் தவணை தந்திருக்கிறார்கள். எங்கு போவது என்பதைப் பற்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை. வயதான அம்மாவும், சிறிய தங்கையும்- நான் என்ன செய்வது? எங்களுக்கு அபயம் என்று இருப்பது நீ மட்டுமே.'

எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் நெய்யை ஊற்றியதைப்போல இருந்தது. என்னுடைய படிப்பிற்காக எனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு குடும்பம் அனாதையாகி விட்டது! வேலைக்கான தகுதிகளை வைத்துக் கொண்டு, வேலை கேட்டு கெஞ்சி நிற்கும்போது விரட்டியடிக்கிறார்கள்... காறித்துப்புகிறார்கள்! என்னுடைய... என்னுடைய குடும்பத்தின்... கடுமையான முயற்சிகளின், தியாகங்களின் விளைவாக கிடைத்த பி.ஏ. பட்டம், என்னுடைய சுயமரியாதையை காயப்படுத்தவும், என்னை ஏமாற்றத்திற்குள்ளாக்குவதற்காகவும் மட்டுமே பயன்படும் என்ற சூழ்நிலை வந்துவிடுமோ? என் காரணமாக கீழே விழுந்து கிடக்கும் என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு என்னால் இயலாமல் போய் விடுமோ? என் வாழ்க்கையை மட்டுமே ஓட்டுவதற்காக தேவைப்படும் பணத்தை சம்பாதிக்கக்கூட என்னால் முடியாமல் போய் விடுமோ? இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றையும் நான் திரும்பத் திரும்ப என்னையே பார்த்துக் கேட்டுக் கொண்டேன். என் மனதிற்குள் இருள் வந்து நிறைய ஆரம்பித்தது. என்னுடைய எதிர்காலம் பதைபதைப்புகள் நிறைந்ததாய் ஆனது. நான் மன அமைதியே இல்லாமல் அங்கிருந்து வெளியேறினேன்.

என்னுடைய சாரதா- அவள் மட்டுமே அப்போது எனக்கென்று இருந்த லட்சியமாகவும் நிம்மதியாகவும் இருந்தாள். நான் ஆர்வத்துடன் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். கோட்டும், டையும், ஷூவும் அணிந்திருந்த- கர்வம் நிறைந்த  தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதன் வாசலில் உட்கார்ந்து சாரதாவின் தாயிடம் பேசிக் கொண்டிருந்தான். வெளுத்து, தடித்து, நல்ல உயரத்துடன் இருந்த அந்த மனிதன் சிகரெட்டை இழுத்து புகையை விட்டுக்கொண்டும், கதவின் மறைவில் சற்று மறைந்தவாறு நின்று கொண்டிருந்த சாரதாவை அவ்வப்போது பார்த்துக் கொண்டும், ஏதோ வெளிநாட்டின் காட்சிகளை வர்ணித்து கூறிக்கொண்டும் இருந்தான். சுவரில் சாய்ந்து நின்றிருந்த சாரதாவின் தாய், ஆச்சரியமும் மரியாதையும் கலந்த உணர்வுகளுடன், வந்திருந்த மனிதனின் பேச்சை கூர்ந்து கவனித்து கேட்டுக் கொண்டிருந்தாள். சாரதாவோ வந்திருந்த மனிதனின் தோற்றத்தையும் குணத்தையும் ஆராய்ச்சி கலந்த பார்வைகளுடன் பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.

அருகில் சென்றபோது, மிடுக்காக என்னை ஒரு முறை பார்த்துவிட்டு, உரையாடலை அவன் தொடர்வதற்கு முயற்சி செய்தான். ஆனால், சாரதாவின் அன்னை என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்: “சுப்ரமணியன்... பக்கத்து வீட்டில் இருக்கிறார்... இந்த வருடம் பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.''

நான் நட்புணர்வுடன் அவனுக்கு வணக்கம் கூறினேன். அவன் தன் தலையைச் சற்று சாய்வாக வைத்துக்கொண்டு, பதிலுக்கு எனக்கு வணக்கம் சொன்னான்.

“உட்காருங்க...'' அவன் அலட்சியமான குரலில் கூறினான்.

சாரதாவின் தாய் ஒரு ஓலையாலான பாயைக் கொண்டு வந்து போட்டுவிட்டு, எனக்கு அறிமுகப்படுத்தினாள். “இவரைத் தெரியுமா? நாங்கள் பழைய உறவினர்கள். படித்துக் கொண்டிருந்தபோது இவர் இந்த ஊரை விட்டுப் போய்விட்டார். அதற்குப் பிறகு இப்போதுதான் இங்கே இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் என்ற கருணையே தோன்றியிருக்கிறது. சிங்கப்பூரில் வேலை... சம்பளம் அறுநூறு ரூபாய்...''

சிங்கப்பூரின் ஆச்சரியப்பட வைக்கும் காட்சிகளைப் பற்றியும், தன்னுடைய நண்பர்களான பெரிய வெள்ளைக்காரர்களைப் பற்றியும், கணக்கு பார்க்காமல் இருக்கும் தன்னுடைய செலவுகளைப் பற்றியும் அவன் நீண்ட நேரம் விளக்கிக் கூறிக்கொண்டிருந்தான்.


தன்னுடைய வீட்டிற்கு அனுப்பும் கடிதங்களில் சாரதாவைப் பற்றி விசாரிப்பது உண்டு என்றும், சாரதா படிப்பு விஷயத்தில் மிகவும் புத்திசாலி என்ற தகவல் தனக்கு ஏற்கெனவே கிடைத்து விட்டிருந்தது என்றும் அவன் சாரதாவை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டே கூறினான்.

சாரதாவின் தாய் சந்தோஷக் கடலில் மூழ்கிக் காணப்பட்டாள். அவள் கூறினாள்: “நீங்கள் அன்று ஊரைவிட்டுப் போகும்போது, சாரதாவுக்கு ஆறுவயது முடிந்திருந்தது. அவள் ஒவ்வொரு நாளும் "அம்மா, என் திவி அண்ணன் எங்கே?' என்று கேட்டுக்கொண்டே இருப்பாள். திவாகரன், உங்கள் மீது அவளுக்கு அந்த அளவிற்கு பிரியம்...''

சாரதா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். நான் வந்தபிறகு அவள் முகத்தை உயர்த்தவே இல்லை. அவளுடைய தாயும், அவளுடைய விருந்தாளியும் என்னிடம் எதுவும் பேசாமல், நான் அங்கு இருப்பதைக்கூட ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருந்தார்கள். நான் மீண்டும் மீண்டும் என் சாரதாவையே பார்த்தேன். அவள் எதுவும் பேசாமல், எந்தவித அசைவும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய தாய் அவ்வப்போது அவளையும் என்னையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் அடக்கப்பட்டிருந்த விருப்பமின்மை யின் நிழல் வெளிப்பட்டது. நான் அங்கு இருந்தது அப்போது தேவையில்லாத ஒன்று என்பதைப் போலவும், நான் அங்கிருந்து செல்வது நல்ல விஷயமாக இருக்கும் என்பதைப்போலவும் அந்தப் பார்வைகள் எனக்கு உணர்த்தின. நான் மெதுவாக எழுந்து, வந்திருந்த விருந்தாளியிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

அதற்குப் பிறகு நான்கு நாட்கள் கடந்து சென்றன. இதற்கிடையில் நான் வேலைக்காக பல மனுக்களையும் எழுதி அனுப்பினேன். துறை அதிகாரிகள் பலரின் அலுவலக வாசல் கதவுகளைத் தட்டி ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன். பல நிறுவனங்களின் நிர்வாகிகளின் இரக்கம் நிறைந்த எதிர்மறையான பதில்களைக் கேட்டு மிகவும் கவலையில் மூழ்கினேன். நான் ஆகாயத்தில் கட்டிவைத்த அழகான மணிமேடைகள் அனைத்தும் வெறும் கார்மேகங்களாக மாறிவிட்டிருந்தன. அந்த கார்மேகங்களுக்கு மத்தியில் தெரிந்து கொண்டிருந்த ஒரு மங்கலான வெளிச்சம்- என் சாரதாவிடம் நான் வைத்திருந்த காதல்- அது மட்டும்தான் என்னை நம்பிக்கையுடன் இருக்க வைத்துக்கொண்டிருந்தது. எல்லையற்ற இருட்டில் மின்மினிப் பூச்சிகளைப் பின்பற்றி சென்று கொண்டிருக்கும் ஒரு வழிப்போக்கனைப்போல நான் சுற்றித்திரிந்து விட்டு, சாரதாவின் வீட்டிற்குச் சென்றேன்.

அந்த வீட்டிற்கு ஒரு மாற்றம் உண்டாகியிருந்தது. மண்ணாலான சுவர் அழகாக வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அழகான ஓவியங்களைக் கொண்டு அந்த வீடு அலங்கரிக்கப்ப்டடிருந்தது. அறையில் சிறப்பாக உண்டாக்கப்பட்ட ஆடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. மொத்தத்தில் செழிப்பும், ஒரு புதுமையும் அங்கு தென்பட்டன.

சமையலறைக்குள்ளிருந்து சாரதாவின் அன்னையின் குரல் கேட்டது: “சாரதா, வெளியே யார் வந்திருக்காங்க?''

என் சாரதாவின் முகம் உள்ளே தொங்க விடப்பட்டிருந்த ஆடைகளுக்கு நடுவில் எட்டிப் பார்த்தது. உடனடியாக அது மறைந்தும் போனது, காதலுக்காக ஏங்கிக்கொண்டிருந்த நான் என்னுடைய இதயம் என்ற பிச்சைப் பாத்திரத்தைத் தடவியவாறு வாசலிலேயே நின்றிருந்தேன். அன்றொரு நாள் அதிகாலை வேளையில், அந்த பிச்சையெடுக்கும் நிலையில் இருந்த ஏழைக் குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக வந்து நுழைந்த நான் இன்று இதோ ஒரு பிச்சைக்காரனாக நின்று கொண்டிருக்கிறேன்.

சாரதாவின் தாய் சமையலறைக்குள்ளிருந்து எனக்கு முன்னால் வந்து நின்றாள். அவள் சிறிது மிடுக்கு கலந்த குரலில் என்னிடம் சொன்னாள்: “நீங்கள் இனிமேல் இங்கு தொடர்ந்து வர வேண்டாம். பொண்ணுக்கு வயசு வந்திருச்சுல்ல? யாராவது பார்த்தால் ஏதாவது சொல்லுவாங்க...'' என்னிடமிருந்து பதில் எதையும் எதிர் பார்க்காமலே, அந்தப் பெண் உள்ளே போய்விட்டாள். ஹா! எல்லையற்ற இருட்டுக்குள் என்னை அழைத்துக் கொண்டு சென்ற மின்மினிப் பூச்சி மறைந்துவிட்டது! ஏமாற்றத்திற்குள்ளான- கார்மேகங்களுக்கு மத்தியில் தோன்றிக் கொண்டிருந்த மங்கலான வானத்தின் வெளிச்சம் மறைந்து போய்விட்டிருக்கிறது!

நண்பரே, இந்த உலகத்தில் எவ்வளவோ இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். ஓவியர்கள் இருக்கிறார்கள். பாடகர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையை சரியாக எழுதிக்காட்டுவதற்கோ, வரைந்து காட்டுவதற்கோ, பாடி கேட்கச் செய்வதற்கோ இதுவரை யாராலும் முடியவில்லை; முடியவும் முடியாது. வாழ்க்கை அந்த அளவிற்கு ஆழமானதாகவும் புதிர் நிறைந்ததாகவும் இருக்கிறது.

நான் ஒரு இயந்திரத்தைப்போல வாசலை விட்டு வெளியேறி நடந்தேன். உள்ளேயிருந்து சாரதாவின் பதற்றம் நிறைந்த குரல் கேட்டது: “நான் தந்த மாலை... அதை விட்டெறிந்து விடாதீர்கள்!''

மறைந்துகொண்டிருந்த சூரியன் பறந்து கிடந்த கடலின் அலைகளில் ஊஞ்சல் ஆடுவதைப்போல தோன்றியது. நகரத்தில் உள்ள வசதி படைத்த மனிதர்களும், அதிகாரிகளாக இருப்பவர்களும் மாலைநேரக் காற்றை வாங்கிக்கொண்டே கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்கள். கடலை நோக்கி நீளமாகக் கட்டப்பட்டிருந்த பாலத்தின் நுனியில், பைத்தியக்காரனைப் போல நான் அமைதியற்ற மனதுடன் இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டிருந்தேன். என்னுடைய மூளையில் ஒரே குழப்பாக இருந்தது. இதயம் வெந்து கொண்டிருந்தது. அன்பு செலுத்துவதற்கு யாருமில்லை. ஆசைப்படுவதற்கு எதுவுமில்லை. வாழ்வதற்கு காரணம் எதுவுமில்லை. எல்லாமே இருட்டாக இருந்தன!

உள்ளேயிருந்து வந்த ஏதோ தூண்டுதல் என்பதைப்போல நான் பாக்கெட்டிற்குள்ளிருந்த என் அண்ணனின் கடிதத்தை வெளியே எடுத்து வாசித்தேன். ஒரு முழு குடும்பமே வீழ்ச்சியின் அடித்தட்டில் கிடந்து, மூச்சுவிட முடியாத நிலையில் இருக்கிறது. அவர்களை கைகொடுத்து கரையில் ஏற்ற வேண்டிய நான் இதோ... விரக்தியின் ஆழத்தில்... இருட்டுக்கு மத்தியில்!

சாரதாவின் வார்த்தைகள் என்னுடைய காதுகளுக்குள் மீண்டும் ஒளித்துக் கொண்டிருந்தன: “நான் தந்த மாலை... அதை விட்டெறிந்து விடாதீர்கள்!'' பாக்கெட்டிற்குள்ளிருந்த மாலையை நான் எடுத்துப் பார்த்தேன். காய்ந்து போய் காணப்பட்ட அந்த மாலை என்னைப் பார்த்து "வக்கணை' காட்டுவதைப்போல தோன்றியது. நான் அந்த மாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். படிப்படியாக அது ஒரு விஷத்தன்மை கொண்ட பாம்பாக வடிவமெடுப்பதைப்போல எனக்குத் தோன்றியது. நான் அதை அந்த அலைகளுக்குள் வீசி எறிந்தேன்.

அதோ... அந்த மாலைக்குச் சொந்தக்காரி தன்னுடைய கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் நடந்து வந்துகொண்டிருக்கிறாள். ஆமாம்... சாரதாவும் திவாகரனும் கைகளைக் கோர்த்து இறுகப் பற்றிக்கொண்டு, பலவித சல்லாபங்களுடன் நடந்து கொண்டிருக் கிறார்கள். அவள் அருகில் நெருங்கி வர வர, ஒரு பயங்கரமான பிசாசாக மாறுவதைப்போல எனக்குத் தோன்றியது. வாயை அகல திறந்து வைத்துக்கொண்டு, நீளமான பற்களை வெளியே நீட்டிக்கொண்டு, அந்தப் பிசாசு என்னை விழுங்க வந்துகொண்டிருக்கிறது என்று நான் நினைத்தேன். எங்கேயாவது ஓடி தப்பித்துக்கொள்வதற்காக நான் நாலா பக்கங்களிலும் பார்த்தேன்.


பரந்து கிடக்கும் கடல்! அதில் நான் வீசியெறிந்த விஷப் பாம்பு! நான் பாலத்தின் வழியாக கரைக்கு ஓட முயற்சித்தேன். அதோ, அந்த பயங்கரமான பிசாசு பாலத்தை நெருங்கி விட்டிருக்கிறது! அந்த பிசாசை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்று நொடி நேரத்திற்கு எனக்குத் தோன்றியது. வாயின் வழியாகவும், கண்கள் வழியாகவும் நெருப்பை உமிழ்ந்து கொண்டு அந்த பயங்கரமான பிசாசு அதோ... பாலத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. நான் எங்கு செல்வேன்? எங்கு போய் தப்பிப்பேன்? அரக்கத்தனமான உரத்த குரலில் சிரித்துக் கொண்டே அந்த பிசாசு என்னை நெருங்கிவிட்டிருந்தது. ஒரு நிமிடம்... நான் பரந்து கிடந்த கடலின் அலைகளுக்குள் மறைந்துவிட்டேன்.

நண்பரே, நான் கண்களைத் திறந்தபோது ஒரு டாக்டர் எனக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு எனக்கு முழுமையான ஞாபக சக்தி வந்துசேர்ந்தது. எனக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் என்னுடைய தற்கொலை முயற்சிக்கான காரணம் என்னவென்று கேட்டார். அவர் எவ்வளவு முயற்சி செய்தும், என்னிடமிருந்து எதையும் அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தது குற்றச் செயல் என்றும், அதனால் அவருடன் நான் சிறைக்கு வர வேண்டும் என்றும் அவர் இறுதியில் கூறினார்.

மரணத்தின் பிடிக்குள்ளிருந்து இருண்ட சிறைச்சாலைக்குள்! சட்டத்தின் நீதி அது! இரண்டு நாட்கள் கடந்ததும், என்னை நீதிபதிக்கு முன்னால் அழைத்துக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். வாழ்வதற்கும், இறப்பதற்குமான என்னுடைய உரிமையைப் பற்றி நான் நீதிமன்றத்தில் வாதம் செய்தேன். அது மட்டுமல்ல- இனிமேல் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பதாகவும் நான் நீதிமன்றத்தில் கூறினேன். ஆனால், நீதிபதி "இரக்கப்பட்டு' எனக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனை அளித்தார்.

நண்பரே, இனிமேல் வாழவேண்டும் என்று நான் தீர்மானித்திருக்கிறேன். மரணத்தின் வாசற்படியிலிருந்து நான் வாழும் கலையைக் கற்றிருக்கிறேன். என்னுடைய தாய், அண்ணன், சகோதரி ஆகியோரைப் பற்றிய சிந்தனை மட்டுமே, இந்த இருண்ட சிறையின் அறைக்குள் இருக்கும்போது, என் மனதில் வலம் வந்து என்னை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய நிலைமை என்ன என்பதை விசாரித்துப் பார்த்தால்... ஒரு வேளை... உங்களுக்கு இதைப்போன்ற இன்னொரு கதை கிடைக்கலாம்.

சாரதா இப்போது தன்னுடைய கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பாள். நீங்கள் எப்போதாவது அவளைச் சந்திக்க நேர்ந்தால், அவளிடம் கூறுங்கள்- நான் கடலில் வீசியெறிருந்த மாலைக்கு பதிலாக, அவள் ரகசியமாக கொடுத்தனுப்பிய மாலையை இங்கே இருக்கும் குப்பைக் குழிக்குள் போட்டு வைத்திருக்கிறேன் என்று.

உங்களுடைய நண்பன்,

சுப்ரமணியன்

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.