Logo

லில்லி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6440
lilly

மாமன்னூர் நகரத்தைத் தாண்டியதும் கார் பிரதான சாலையை விட்டு மண்ணால் ஆன கரடு முரடான பாதையில் திரும்பியது. அதோடு காரில் வேகம் குறைந்தது. ஒரு மாட்டு வண்டியைப் போல அது குலுங்குவதும் திணறுவதுமாய் இருந்தது. காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த லில்லி சிரித்த முகத்துடன் இருந்தாள்.

கசப்பான கஷாயத்தைக் குடித்த முகத்துடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார் அச்சுதன் நாயர். புதிய மார்க் ஃபோர்கார். இரண்டாயிரம் கிலோ மீட்டர் கூட இன்னும் சரியாக ஓடவில்லை. பால்குடி மறக்காத ஒரு பச்சைக் குழந்தையைப் பிரம்பால் அடித்துக் கீழே தள்ளினால் எப்படி இருக்கும், அப்படியொரு அனுபவத்தைத்தான் அப்போது பெற்றார் அச்சுதன் நாயர்.

முன் இடது பக்க சக்கரம் ஒரு மேட்டின் மேல் ஏற வண்டியே குலுங்கியது. வளைவு திரும்பிய போது வண்டி மேலும் குலுங்கியது. வளைவு திரும்பியபோது வண்டி மேலும் குலுங்கியது. இந்தத் தடவை முன் சக்கரங்களில் ஒன்று பாதையின் நடுவில் இருந்த ஒரு கருங்கல் மேல் தட்டியதால் வந்த விளைவு இது.

‘‘மகளே, நீ சொல்லித்தான் நான் இந்த வழியிலேயே வந்தேன். நூறு கிலோ மீட்டர் வேகத்துல பறக்கக்கூடிய ஹைவேயை விட்டுட்டு, இந்தக் காட்டுப் பாதை தேவையா மகளே?’’

அச்சுதன் நாயருக்கு உண்மையிலேயே மனதில் மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த காட்டுப் பாதையில் இன்னும் சில கிலோ மீட்டர்கள் வண்டியை ஓட்டினால் வண்டியின் நிலை அவ்வளவுதான். திரும்பவும் தலச்சேரிக்கு வரும்போது புத்தம் புது மார்க் ஃபோர், ஜட்கா வண்டியாக மாறியிருக்கும். அதற்குப் பிறகு பானட்டிற்கு முன்னால் ஒரு குதிரையை பூட்டி ஒட்ட வேண்டியதுதான்.

சி.கெ.யைப் பொறுத்தவரை கார் என்பது ஒரு பெரிய விஷயமில்லை. அணியும் வேட்டியை அவ்வப்போது மாற்றுவது மாதிரி அவருக்கு கார்கள் விஷயம். இருந்தாலும்... அச்சுதன் நாயருக்கு கார்கள் என்பது சொந்தக் குழந்தைகளைப் போல. அவர் ஸ்டியரிங்கை கையில் பிடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. மாமன்னூரைத் தாண்டி ஒரு பொடிப்பயல் எறிந்த கல் டிக்கியின் மேல் பட்டபோது, தன்னுடைய சொந்த நெஞ்சில் கல் வந்து மோதியதைப் போல் துடித்துப் போனார் அச்சுதன் நாயர். தான் ஓட்டும் வண்டி மேல் அப்படியொரு பிரியம் அவருக்கு.

பாதையில் மணல் இருந்தால் பரவாயில்லை. குண்டும் குழியும் மட்டுமே இருந்தன. வேட்டைக்காரர்களின் ஜீப்புகளைத் தவிர பொதுவாக இந்தப் பாதையில் வேறு எந்த வாகனமும் போவதில்லை. சில கிலோ மீட்டர்கள் தாண்டிய உடனே, அச்சுதன் நாயருக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. பேசாமல் வண்டியை நிறுத்தி விடலாமா என்று அவர் நினைத்தார்.

‘‘மகளே, பிடிவாதம், பிடிக்காதே. நாம திரும்பி நல்ல ரோடு வழியா போவோம்.’’

‘‘மெதுவா ஓட்டுங்க. ஒரு பிரச்சினையும் இருக்காது.’’

‘‘மகளே, இப்படி பிடிவாதமா இருந்தா எப்படி? இந்த வழியில போணோம்னா நாம இன்னைக்குப் போய் சேர முடியாது.

இரவு பத்து மணிக்கு முன்பே லில்லியை ஹாஸ்டலில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று கறாராகச் சொல்லியிருந்தார் சி.கெ.

அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

‘‘முதலாளிக்கு இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா, என்னைக் கொன்னு போட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். மகளே, உனக்கு பரீட்சை நடக்குற நேரம்தானே?’’

‘‘அப்பாக்கிட்ட நான் ஃபோன்ல சொல்லிக்கிறேன். அச்சுதன் நாயர், நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.’’

அதற்குப் பிறகும் அச்சுதன் நாயருக்கு மனம் சமாதானமாகவில்லை. வண்டியின் அச்சு முறிந்தால், ஒரு வேளை சி.கெ. ஒரு வார்த்தை கூட கூற மாட்டார். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு லில்லியை ஹாஸ்டலில் கொண்டு போய்விடவில்லை என்பது தெரிய வந்தால்...

சி.கெ.விற்கு கை நிறைய செல்வத்தை மட்டும் கடவுள் தரவில்லை; கை நிறைய முன் கோபத்தையும் அது தந்திருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அச்சுதன் நாயர் சி.கெ.விடம் பணி செய்கிறார் அல்லவா? முதலாளியின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

கடந்து வந்த வழியில் மாமன்னூரை அடைந்தபோது, லில்லி அவரைப் பார்த்துக் கேட்டாள்.

‘‘மாமன்னூரைத் தாண்டிட்டா, காட்டுக்கு மத்தியிலேயே ஒரு வழி இருக்குல்ல?’’

‘‘அது வேட்டைக்குப் போறவங்க போற பாதை.’’

‘‘அது வழியா கார் போகும்ல?’’

‘‘வேட்டைக்காரங்க ஜீப்புலதான் அந்த வழியா போவாங்க...’’

‘‘இன்னைக்கு நாம அந்த வழியாகத்தான் போகப் போறோம்.’’

அவர் தலையைத் திருப்பி பின்னிருக்கையில் அமர்ந்திருந்த லில்லியைப் பார்த்தார். கன்னத்திலும் தாடியிலும் இருந்த ரோமக்காடு நன்றாக நரைத்து விட்டிருந்தது. இலேசாக சிரிப்பை வரவழைத்தவாறு அவர் சொன்னார்.

‘‘இனி வர்றப்போ நாம ஜீப்ல வருவோம்.’’

அச்சுதன் நாயர் சிரித்தார். அவள் பிடிவாதம் பிடித்தாள்.

‘‘நாம இன்னைக்கு காட்டு வழியேதான் போகணும்.’’

 ‘‘அவ்வளவுதான்- வண்டியைப் பார்க்கவே முடியாது. பாதை முழுவதும் குண்டும் குழியுமா இருக்கு.’’

‘‘புது கார்தானே? ஒண்ணும் ஆகாது.’’

அவள் பிடிவாதத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை.

‘‘மகளே, தேவையில்லாம என்னை பிரச்சனையில் மாட்டி விட்டுராதே...’’

அச்சுதன் நாயரின் முகத்தில் இருந்த கிழட்டுச் சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்தது.

சின்னப் பிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே லில்லி ஒரு பிடிவாதக்காரிதான். வளர்ந்து பெரிய பெரிய தேர்வுகளில் எல்லாம் தேர்ச்சி பெற்றாள். (நேற்றுக்கு முந்தின நாள் காலையில் ஹாஸ்டலில் பார்க்கும்போது புடவைக்கு மேலே வெள்ளை வண்ணத்தில் கோட்டும் கையில் சுருட்டிப் பிடித்திருந்த ஸ்டெதஸ்கோப்பும் இருந்தன). இருந்தாலும், அந்தப் பழைய பிடிவாத குணம் அவளை விட்டு நீங்கவே இல்லை.

மாமன்னூர் தாண்டியதும், அவள் நினைவுப்படுத்தினாள்.

‘‘அச்சுதன்நாயர், காட்டுப் பாதை...’’

அவள் சொன்னபடி, அவர் காட்டுப் பாதை வழியே வண்டியைத் திருப்பினார்.

இதுவரையில் தார் போட்டு மினுமினுப்பான சாலையின் இரு பக்கங்களிலும் உயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள் கம்பீரமாக நின்றிருந்தன. அவ்வப்போது பனை மரங்களுக்கு மத்தியில் தலையில் பித்தளைக் குடத்தை வைத்தவாறு செட்டிச்சிப் பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். சாலையின் ஓரத்தில் கோவணம் மட்டுமே அணிந்திருக்கும் செட்டிக்குழந்தைகள் வேறு.

இப்போது அது எதுவுமே இல்லை. பாதையின் இரு பக்கங்களிலும் ஒரே பச்சை மயம். காடு மிகவும் பக்கத்தில் இருக்கிறது என்பது அவளுக்குத் தெரிகிறது. வாட்டிக் கொண்டிருக்கும் உச்சிப் பொழுது வெயில்.


கதவு கண்ணாடியை இலேசாக இறக்கி விட்டவுடன், உள்ளே நுழைந்து வந்த வெப்பக் காற்றில் காட்டின் அழகு தூரக் காட்சியாக அவளுக்குத் தெரிந்தது.

‘‘காட்டு வழியே போறதுல மகளே, உனக்கு என்ன கிடைக்கப் போகுது?’’

இதுவரை பேசாமல் இருந்த அச்சுதன் நாயர் வாயைத் திறந்து பேசினார்.

‘‘நான் இதுவரை காட்டைப் பார்த்ததே இல்ல...’’

‘‘காட்டுல என்ன இருக்கு மகளே, பார்க்குறதுக்கு?’’

காட்டில் மரங்கள் இருக்கின்றன. செடிகள் இருக்கின்றன. அதற்கு மத்தியில் பாய்ந்து கொண்டிருக்கும் அருவிகள், மொத்தத்தில் இதுதானே காடு!

கட்டாயம் பார்க்க வேண்டும் என்பது லில்லியின் மருத்துவக் கல்லூரி இருக்கும் நகரத்தைத்தான். என்ன அழகான சாலைகள்! எவ்வளவு பெரிது பெரிதான கட்டிடங்கள்! ஆட்கள் என்ன நவநாகரிக உடைகளணிந்து காணப்படுகிறார்கள்! அச்சுதன் நாயருக்கு அந்த நகரத்திலேயே பிடித்தது அகலமான அந்த சாலைகள்தான். அந்தச் சாலையில் வண்டியை ஓட்டுகிறபோது ஒரு விமானத்தை ஓட்டுகிற சுகம் கிடைப்பதென்னவோ உண்மை. ஒரு விமானத்தை ஓட்டுகிற சுகம் கிடைப்பதென்னவோ உண்மை. அங்கு வண்டி ஓட்டும் டிரைவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தாம். அச்சுதன் நாயருக்கு அவர்கள் மீது பொறாமை கூட தோன்றியது. தலச்சேரியில் கைவண்டிகளுக்கு மத்தியிலும், மாட்டு வண்டிகளுக்கு மத்தியிலும் தெருக்களில் காரோட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய மோசமான நிலையை அவர்கள் அறிவார்களா என்ன?

‘‘என் கடவுளே...’’

கார் மீண்டும் ஒரு கல்லில் தட்டிக் குலுங்கியது. இன்று தனக்கு நெஞ்சு வலி மீண்டும் வரப்போவது உறுதி என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அச்சுதன் நாயர். அதனால்தான் இந்த காட்டு வழியில் வண்டியை ஓட்ட வேண்டிய நிலை தனக்கு வந்ருக்கிறது என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

கார் ஒரு வளைவு திரும்பி சின்னச் சின்ன உருண்டையான கற்களுக்கு மேல் ஏறி போய்க் கொண்டிருந்தது.

பாதையின் இரண்டு பக்கங்களிலும் இடைவிடாது வளர்ந்திருந்த பச்சைப் பசேலென மரங்கள். காற்று வீசும்போது பச்சை இலைகள் உதிர்ந்து ‘‘பொல பொல’’வென கீழே விழுந்து கொண்டிருந்தன. பாதையில் காட்டு மரங்களின் நிழல்கள் நன்றாக விழுந்திருந்தன. வின்ட் ஸ்க்ரீன் வழியாக பார்க்கும்போது முன்னால் வழியே இல்லை என்பது மாதிரி தோன்றும். சுற்றிலும் கண்ணில் தெரிந்து கொண்டிருப்பது பச்சை நிறம் மட்டுமே.

லில்லி அவளின் சூட்கேஸைத் திறந்து ஒரு கேசட்டை வெளியே எடுத்தாள். காட்டில் வைத்து கேட்பதற்காக அவள் சில பிரத்யேக கேசட்டுகளை எடுத்து வைத்திருந்தாள். அவற்றில் ஒரு சீக்கோ ஃப்ரீமேன் சீனிபரின் ஒரு லைவ் ஷோ ஒலிப்பதிவு. இந்தக் காட்டுப் பாதையில் பயணம் செய்கிறபோது ஜாஸ் இசையைக் கேட்கவே அவள் பிரியப்பட்டாள்.

அமைதியான கடலினருகில் தனியாகப் போய் அமர்ந்திருக்கும் நிமிடத்தில் ரவெலின் பொல்லேரோவைத்தான் அவள் விரும்பிக் கேட்பாள்.

அவளின் கையில் ஒரு போர்ட்டபிள் கேசட் ப்ளேயரர் எப்போதும் இருக்கும். பயணம் செய்யும்போது மட்டுமல்ல உண்ணும்போதும் உறங்குகிறபோதும் கூட அவள் அதைக் கையில்  வைத்துக் கொண்டே திரிவாள். பெல்ட்டில் ஆம்ளிஃபயர் இருக்கின்றது அதனால் ஏ.ஸி.யில் நாற்பது வால்ட் ஸ்டீரியோ இசை தர முடியும்.

‘‘நாற்பது வால்ட் ஸ்டீரியோ இசை தெரியுதா அச்சுதன் நாயர்? நான் வச்சிருக்கிற கேசட் ப்ளேயர் ஜப்பான்ல செஞ்சது.’’

அவள் எல்லோரிடமும் கூறுவாள்.

சீக்கோ ஃப்ரீமேன் சீஹீபர் தன்னுடைய சாக்ஸை உதட்டில் வைத்தபோது, காட்டுக்குள் ஒரு பச்சைத் தீயே படர்ந்ததைப் போல் அவள் உணர்ந்தாள். அருமையான ஜாஸ் இசை ஸ்டீரியோ மூலம் மழை எனப் பொழிந்தது.

ஃப்ரீமேன் சீனியருக்குப் பின்னால் அதன் தொடர்ச்சி என்பது மாதிரி லூயிஸ் ஆம்ஸ்ட்ராகின் ஜாஸ்.

‘‘காது வலிக்கு மகளே...’’

அச்சுதன் நாயர் சொன்னார்.

அவள் பதிலெதுவும் கூறாமல் பெரிய காட்டுக் கொடிகளின் பிரிண்ட் போட்ட பச்சை நிறத்தைக் கொண்ட ஷிஃபான் புடவையை இழுத்து தோளில் போட்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். அவளின் வெளுத்து உருண்ட கைகள் இரண்டிலும் பச்சை வண்ணத்தில் கண்ணாடி வளையங்கள் இருந்தன.

ஸ்டீரியோ மழை தொடர்ந்து கொண்டிருந்தது. கார் குலுங்குவதும் திணறுவதுமாய் வளைந்து திரும்பி முன்னோக்கி ஓடி அடர்ந்த காட்டின் நடுப்பகுதியை அடைந்தது. பாதை உண்மையிலேயே மிகவும் கரடு முரடானதுதான். அச்சுதன்நாயருக்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு இடத்தில் காரை விட்டிறங்கி பாதையில் விழுந்து கிடந்த ஒரு பெரிய மரக் கிளையைக் கையால் எடுத்து ஒரு ஒரத்தில் தூக்கிப் போட்டார். இதற்கு மேல் வழி இருக்கிறதா என்று அவருக்கே சந்தேகம் வந்தது.

ஆட்டோ ஸ்டாப்பில் ஸ்டீரியோ இசை நின்றது.

‘‘மகளே!’’

அச்சுதன் நாயர் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தார்.

‘‘நாம திரும்பிப் போகலாம்.’’

‘‘எதற்கு?’’

‘‘இல்லைன்னா நாம இந்தக் காட்டுல மாட்டிக்குவோம். இந்த அடர்ந்த காட்டுல என்னவெல்லாம் மிருகங்கள் இருக்கும்னு கடவுளுக்குத்தான் தெரியும்.’’

‘‘எனக்கு காட்டு மிருகங்களைப் பற்றி பயமே கிடையாது. காடுன்னா எனக்கு ரொம்பவும் பிடிக்கம்....’’

‘‘நரியோ, புலியோ வரணும். அப்ப சொல்வ...’’

‘‘என்னை கொன்னு தின்னட்டும். எனக்கு பயமே இல்ல.’’

தைரியசாலி பெண்தான்! அவர் மனதிற்குள் கூறிக்கொண்டார். கோடீஸ்வரனின் ஒரே மகள். அதனால் இப்படியொரு குணம் இவளுக்கு வாய்திருக்கிறதோ?

காட்டில் நரியும், புலியும் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். அதற்கான மற்ற மிருகங்கள் இல்லாமல் போய் விடுமா என்ன? தூரத்தில் மறைந்து நின்று கொண்டு அம்பை எய்து விடும் முள்ளம் பன்றிகள், குள்ள நரிகள்...

காட்டு மிருகங்களை விட பயங்கரமானவர்கள் சில மனிதர்கள். வயதுக்கு வந்த ஒரு இளம் பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு இந்த அடர்ந்த காட்டுக்குள் காரில் வருவது என்றால்... அசம்பாவிதமாக ஏதாவது நடந்து விட்டால்...?

அச்சுதன் நாயர் மீண்டும் வியர்வையில் குளித்தார். மாமன்னூரிலிருக்கும் மாரியம்மனுக்கு நேர்ந்தார். திரும்பிப் போகும்போது உண்டியலில் ஒரு ரூபாய் போடுவதாகச் சொன்னார். ஊரில் இருக்கும் பகவதிக்கும் நேர்ந்தார்.

எந்தவித ஆபத்தும் இல்லாமல் லில்லியை ஹாஸ்டலில் கொண்டு போய்ச் சேர்த்தால் பேபதும்.

அப்போது அச்சுதன் நாயருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்போல் இருந்தது.

‘‘என்ன அச்சுதன் நாயரே?’’

கார் நிற்பதைப் பார்த்து அவள் கேட்டாள்.

‘‘ஓண்ணுமில்ல. நான் இதோ வந்திர்றேன்.’’

அவர் கார் கதவைத் திறந்து கீழே இறங்கி இரண்டு பக்கங்களிலும் பார்வையை ஓட்டினார். எங்கு பார்த்தாலும் மரங்களைத் தவிர, வேறு எதுவுமே இல்லை.


‘‘அச்சுதன் நாயர்... எங்கே போறீங்க?’’

‘‘பயப்பட வேண்டாம். நான் இதோ வந்திர்றேன்.’’

அவர் வேட்டியை மடித்துக் கட்டியவாறு பாதையில் வளைவைத் தாண்டிச் சென்று கீழே உட்கார்ந்தார்.

காரில் இருந்தவாறு லில்லி வெளியே பார்த்தாள். வெயிலில் மூழ்கி நின்றிருந்த அந்த அடர்ந்த காட்டையே வெறித்து நோக்கினாள். பச்சைப் பசேல் என இருந்த அந்தக் காட்டைப் பார்த்தபோது அவள் இதயமெங்கும் ஒரு குளிர்ச்சி உண்டானது. காட்டுக்கே உரிய குளிர்ச்சியும், இனிய ஒரு வாசனையும் தன்னை முழுமையாக ஆக்கிரமிப்பதைப் போல் அவள் உணர்ந்தாள்.

காட்டுக்குள்ளிருந்து ஒரு சிறு கிளி பறந்து வந்து காரின் பானட்டில் உட்கார்ந்தது. அதன் சிறகுகளில் மூக்குத்திப் பூக்கள் மலர்ந்திருப்பதைப் போல் மஞ்சள் மஞ்சளாக புள்ளிகள் இருந்தன. வின்ட் ஸ்க்ரீன் வழியாக கிளி அவளைப் பார்த்தது. அலகுகளை விரித்து அவளைப் பார்த்து என்னவோ சொன்னது.

அவள் கதவைத் திறந்து காரை விட்டு கீழே இறங்கினாள். கிளி அதன் சிறகுகளை விரித்து அவளுக்கு வழி காட்டிச் செல்வதைப் போல காட்டுக்குள் மீண்டும் சென்றது. காட்டுப் பூக்களில் இருந்து வந்த  நறுமணம் அவளின் உடம்பெங்கும் ஒருவித சிறீர்ப்பை உண்டாக்கியது. ஒரு கதக் நடனம் ஆடும் பெண்ணைப் போல அவள் ஒரு சுற்று சுற்றினாள்.

அச்சுதன் நாயர் இப்போது தூரத்தில் வளைவைத் தாண்டி உட்கார்ந்திருந்தார்.

ஒரு கையில் கேசட் ப்ளேயரையும் இன்னொரு கையில் சிவப்ப வண்ண ப்ரீஃப் கேஸையும் வைத்தவாறு அவள் கிளி போன வழியே நடந்தாள். கிருஷ்ணமணிப் பூக்கள் மலர்ந்து தொங்கிக் கொண்டிருந்த கொடிகளைக் கடந்து அவள் காட்டுக்குள் நுழைந்தாள்.

வேகமாக நடந்தும், ஓடியும் - சொல்லப் போனல்- இன்னொரு காட்டு கிஷீயாக, மற்றொரு காட்டுப் பூவாக அவள் மாறி காட்டிற்குள் மறைந்தாள்.

2

ச்சுதன் நாயர் வேட்டியை சரி பண்ணி கட்டியவாறு வளைவைத் தாண்டி காரை நோக்கி வேகமாக அவர் நடந்து வந்தார். வாயில் பீடி கனன்று கொண்டிருந்தது.

‘‘இன்னும் நூறு... நூற்றைம்பது மைல் நம்ம போக வேண்டியதிருக்கு. இன்னைக்க நாம அங்கே போய் சேர முடியாது மகளே...’’

அவர் யாரிடம் என்றில்லாமல் தனக்குத் தானே சொல்லியவாறு காரின் கதவைத் திறந்தார். கடைசி கடைசியாக பீடியை இரண்டு இழுப்பு இழுத்து விட்டு கீழே பாதையில் தூக்கி எறிந்தார். பொதுவாக காட்டுக்குள் இருக்கும்போது அவர் புகை பிடிப்பதில்லை. சி.கெ.விற்கு அப்படி காட்டுக்குள் புகை பிடிப்பது பிடிக்காது. சி.கெ.யின் விருப்பு வெறுப்பிற்கேற்றபடி தன்னுடைய எல்லாச் செயல்களையும் அமைத்துக் கொண்டார் அச்சுதன் நாயர். கடந்த முப்பது வருட காலமாக சி.கெ. போட்ட உப்பையும், சோற்றையும் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

அச்சுதன் நாயர் வண்டிக்குள் ஏறி ஸ்டிரியங்கின் முன்னால் அமர்ந்தார். அப்போதுதான் பின்னிருக்கையில் லில்லி இல்லை என்ற விஷயமே அவருக்குத் தெரிய வந்தது.

ஒரு நிமிடம் அவர் அப்படியே திகைத்து உட்கார்ந்து விட்டார். அவர் இரண்டு பக்கங்களிலும் பார்த்தார். மீண்டும் கார் கதவைத் திறந்து கீழேயிறங்கி நாலா பக்கங்களிலும் கண்களை ஓட்டினார். இது நல்ல கதைதான்! லில்லி எங்கே போயிருப்பாள்?

அடுத்த நிமிடம் அவரிடமிருந்த பதைபதைப்பு குறைந்தது. மாறாக, முகத்தில் புன்சிரிப்பு உண்டானது.

அவர் திரும்பவும் காருக்குள் ஏறி உட்கார்ந்து லில்லிக்காக காத்திருந்தார். காட்டைப் பார்க்காமல் இருக்க அவர் முயற்சித்தார். என்ன இருந்தாலும் கல்யாண வயதில் இருக்கிற பெண்ணாயிற்றே அவள்!

ஒரு செங்கீரி காட்டுப் பாதையில் ஓடி வந்தது. காரைப் பார்த்ததும், அது பாதையின் நடுவில் அப்படியே நின்றது. ஒரு காரை முதல் தடவையாக அது பார்க்கிறது போலிருக்கிறது! காட்டுக்கு வெளியில் புதிய நெடுஞ்சாலை வந்த பிறகு இந்தக் காட்டுப் பாதையில் வாகனங்கள் செல்வது முற்றிலுமாக நின்றுவிட்டது. அப்படி இருக்கும்போது கீரி எப்படி ஒரு காரைப் பார்க்க முடியும்? இன்னும் சொல்லப் போனால் இதைப்போல ஒரு புத்தகம் புதிய காரை? பார்த்துக் கொள்... பார்த்துக் கொள்... உன்னுடைய விருப்பம் போல. அச்சுதன் நாயர் கீரியைப் பார்த்து சிரித்தார்.

லில்லியின் ஞாபகம் வந்ததும் அவர் கீரியிடமிருந்து இருந்து கண்களை நீக்கினார். அவள் போய் எவ்வளவு நேரமாகிவிட்டது? தன்னைப் போலவே அவளும் ஏதாவது காட்டில் வாழும் பிராணியைப் பார்த்து நின்று கொண்டிருக்கிறாளோ?

அவர் மீண்டும் காரை விட்டு வெளியே வந்தார்.

அப்போது பாதையில் நின்றிருந்த கீரி காட்டை நோக்கி திரும்பவும் ஓடியது. தான் காரைப் பார்த்த விஷயத்தை மற்ற கீரிகளிடம் அது கூறினாலும் கூறும்.

அச்சுதன் நாயரற் லில்லியின் பெயரைச் சொல்லி அழைத்தார். பதில் குரல் எதுவும் வரவில்லை. ஒரு நிமிடம் அவர் தலையைச் சொறிந்தவாறு நின்றார். அவர் இடது பக்கம் மரங்களுக்கு இடையே பார்த்தார். அடுத்த நிமிடம் அவர் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். தான் செய்தது எவ்வளவு முட்டாள்தனமான காரியம் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தார். லில்லியை அவர் கையில் தூக்கி நடந்திருக்கிறார். அது அந்தக் காலம். இன்று அவள் திருமண வயதை அடைந்திருக்கும் ஒரு இளம் பெண் ஆயிற்றே!

அச்சுதன் நாயரற் ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்து புகைத்தவாறு காரின் பானட்டின்மேல் கையை ஊன்றியவாறு நின்றார். அவர் மனதில் கவலை தோன்ற ஆரம்பித்தது. பத்து நிமிடங்கள் ஒடியிருக்கும். அவள் போய், திரும்பி வர இவ்வளவு நேரமா ஆகும்?

அவர் மீண்டும் உரத்த குரலில் அவளின் பெயரைச் சொல்லி கூப்பிட்டார். மரங்களுக்கு மத்தியில் ஒரு அசைவு தெரிந்தது. அவரின் சத்தத்தைக் கேட்டு அங்கிருக்கம் பிராணிகள் காட்டுக்குள் பாய்ந்தோடின.

அச்சுதன் நாயர் காட்டுப் பாதையில் சிறிது தூரம் அங்குமிங்குமாய் நடந்தார்.

பெரிய கவலைகளைத் தாங்கக் கூடிய அளவிற்கு அச்சுதன் நாயருக்கு இப்போது சக்தி இல்லை. அவருக்கு இப்போது நடப்பது அறுபத்தைந்து வயது. இரத்த அழுத்தம் இருக்கவே இருக்கிறது. கொஞ்ச நாட்களாகவே தூர இடங்களுக்கு அவர் வண்டியை எடுத்துக் கொண்டு போவதேயில்லை. இப்போது அவர் வண்டியை ஓட்டியதற்குக் காரணமே மிகவும் முக்கியமான விஷயம் என்பதற்காகத்தான். இரவு பத்து மணிக்கு முன்பு லில்லியை ஹாஸ்டலில் கொண்டு போய் விட வேண்டும். தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


 (டாக்டர்களுக்கு தேர்வு என்ற ஒன்று இருக்கிறது என்பதே அச்சுதன் நாயருக்கு இப்போதுதான் தெரியும்.)

‘‘மகளே, மகளே லில்லி...’’

அவர் காரின் இரு பக்கங்களிலும் பார்த்தவாறு சத்தம் போட்டு அழைத்தார். அவரால் நிற்க முடியவில்லை. மீண்டும் சிறிது நேரம் நடந்து பார்த்தார். காருக்குள் போய் உட்கார்ந்தார். அடுத்த நிமிடம் கார் கதவைத் திறந்து வெளியே வந்தார். இரண்டு மூன்று பீடிகளைப் புகைத்துத் தீர்த்தார்.

கடைசியில் அவர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மரங்களுக்கிடையே போய் பார்த்தார். இடைவிடாது வளர்ந்திருந்த மரங்களையும் கொடிகளையும் தவிர அங்கு வேறு எதுவுமே இல்லை. திரும்பவும் வந்து பாதையைத் தாண்டி மறுபக்கம் போய் பார்த்தார். அங்கும் மரங்களும் செடிகளும் தவிர வேறு எதுவும் இல்லை.

‘‘என் பகவதியே!’’

அவரின் நெற்றியில் இருந்த வியர்வை அருவியென வழிந்து கொண்டிருந்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்ததைப் போல் இருந்தது. திடீரென்று ஒரு குளிர்காற்று வீசி வருவதைப் போல ஒரு பழைய நிகழ்ச்சி அவரின் ஞாபகத்தில் அப்போது வந்தது.

அச்சுதன் நாயர் கான்வென்ட்டின் அருகில் காரை நிறுத்தி விட்டு லில்லிக்காக காத்து நின்றிருந்தார். மணியடித்ததும் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கார்களிலும் ரிக்ஷாக்களிலும் ஏறி போன வண்ணம் இருந்தனர். லில்லியை மட்டும் காணவில்லை.

பார்த்துப் பார்த்து அச்சுதன் நாயருக்கு கண்களுக்கு வலியே வந்துவிட்டது. கான்வென்ட்டின் கேட்டைத் திறந்து அவள் உள்ளே நடக்கும்போது, சுவரின் அருகில் பெரிய ஒரு மரத்திற்குக் கீழே லில்லி ஒளிந்திருப்பதைப் பார்த்து விட்டார். அவள் ‘‘கலகல’’வென சிளீத்தவாறு புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு அவரை நோக்கி ஓடிவந்தாள்.

‘‘அச்சுதன்நாயர், என்ன பயந்துட்டீங்களா?’’

அவர் அவளைத் தூக்கிப் பூவைப் போல மென்மையாகச் சிளீத்த கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

காட்டுப் பாதையில் நின்றிருந்த அச்சுதன் நாயர் அந்தப் பழைய சம்பவத்தை நினைத்துப் பார்த்து தன்னை மீறி சிரித்தார்.

நேரம் கடந்து போய்க் கொண்டே இருந்தது. சிறிய ஃப்ராக் அணிந்திருந்த லில்லி இப்போது மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். இருந்தாலும் அவள் தன்னுடைய பழைய குறும்புத் தனத்தை இன்னும் மறக்கவில்லைதான்.

அச்சுதன் நாயர் இரு பக்கங்களிலும் இருந்த பெரிய மரங்களைப் பார்த்தார். அந்தப் பெரிய மரங்களில் ஏதாவதொன்றுக்குப் பின்னால் அவள் நிச்சயம் மறைந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் அவர். ‘‘இந்த அச்சுதன் நாயர்கிட்ட விளையாட வேண்டாம். குறும்புக்காரப் பொண்ணு. இங்கே வா. உன்னை நான் அடிச்சாத்தான் நீ சரியா வருவே. இந்த அச்சுதன் நாயர்...’’

அச்சுதன் நாயருக்கு வயதாகிவிட்டது. அவர் தனக்கத் தானே சொல்லிக் கொண்டார். விளையாடுவதற்கும் சிரிப்பதற்கும் உள்ள வயதல்ல இது. போதாதற்கு இரத்த அழுத்தம் வேறு அவ்வப்போது அவரை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது.

அவர் நடக்க முடியாமல் நடந்து ஒவ்வொரு பெரிய மரத்திற்குப் பின்னாலும் போய் அவள் ஒளிந்திருக்கிறாளா என்று பார்த்தார். ஒவ்வொரு மரத்திற்கு அருகில் போகும்போதும் அவள் குலுங்கிக் குலுங்கி சிளீத்தவாறு அதற்குப் பின்னால் இருந்து ஓடி வருவாள் என்று எதிர்பார்த்தார்.

நடந்து நடந்து அவருக்கு கால்கள் வலித்தன. அச்சுதன் நாயர் மிகவும் களைப்படைந்து போனார்.

‘‘என் பகவதி... சேவலோட இரத்தத்தை உனக்கு நான் தர்றேன். என்னை இப்படி சோதனை பண்ணலாமா?’’

அவர் முடியாமல் காரின் பானட்டின் மேல் சாய்ந்து நின்றார். அப்போதுதான் பின்னிருக்கையில் இருந்த சூட்கேஸும் கேஸ்ட் ப்ளேயரும் அங்கே இல்லை என்பதையே அவர் பார்த்தார். அவ்வளவுதான் அவருக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. அப்படியே நிலை சாய்ந்து காரின் மேல் விழுந்து விட்டார்.

சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்து பார்த்தார். வாயில் ஒரு துளி நீர் கூட இல்லை. அவர் மெதுவாக எழுந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தார். லில்லி போய் ஒரு மணி நேரம் கழிந்து விட்டது.

 அச்சுதன் நாயர் வண்டியில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தார். மிகவும் கஷ்டப்பட்டு காரை ரிவர்ஸ் எடுத்து அவர் வந்த பாதையிலேயே காரை ஓட்டினார். உடம்பு பயங்கரமாக நடுங்கியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.

மாலை வெயில் விழுந்து கொண்டிருந்த காட்டுப் பாதையை விட்டு கார் ஹைவேக்குள் பிரவேசித்தது. அப்போதும் அவரின் உடல் நடுங்கிக் கொண்டுதானிந்தது.

ஐந்தரை மணி ஆனபோது அவர் மாமன்னூரை அடைந்தார். ஏற்கனவே நன்கு பழக்கமான  பெட்ரோல் பங்க்கைத் தேடி வந்தார். ஊருக்கு ஒர கால் புக் பண்ணினார். காத்திருந்தார். அவரின் மனம் எதையெதையோ நினைத்தது. ‘‘முதலாளியிடம் என்ன பதில் சொல்வது? என் பகவதிலேய... இதைவிட பேசாம என் உயிரையே நீ எடுத்திருக்கலாமே...!’’

அவர் என்னென்னவோ சொல்லி தனக்குத் தானே முனகிக் கொண்டிருந்தார். அவரின் உதடுகள் வறண்டு போயிருந்தன.

‘‘என்ன பெரியவரே, உடம்புக்குச் சரியில்லையா?’’

அச்சுதன் நாயரின் தர்மசங்கடமான நிலையைப் பார்த்து பெட்ரோல் பங்க் மேனேஜர் சுவாமி கேட்டான்.

‘‘தண்ணீ...’’

மரணமடைவதற்கு முன்பு நீர் கொடுப்பதைப் போல அச்சுதன் நாயர் தன் உதடுகளை விழித்தார். சுவாமி ஒரு பையனை அனுப்பி சூடான தேநீர் வாங்கி வரச் செய்தார். தேநீர் உள்ளே சென்றதும் அச்சுதன் நாயருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.

‘‘நீங்க எங்கே இருந்து வர்றீங்க பெரியவரே?’’

‘‘காட்டுல இருந்து...’’

சுவாமியும் பையனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. அச்சுதன் நாயரை பார்க்கும்போது ஒரு வேட்டைக்குப் போகும் மனிதரை மாதிரி தெரியவில்லையே!

‘‘சரி... இங்கே படுத்துக்கங்க...’’

சுவாமி அங்கே இருந்த ஒரு பெஞ்சை சுட்டிக் காட்டினான்.

அச்சுதன் நாயர் பெஞ்சில் காலை நீட்டி படுத்துக் கொண்டு, துண்டால் தன் மீது விசிறிக் கொண்டார். அடுத்த நிமிடம் என்ன நினைத்தாரோ, மறுபடியும் எழுந்து உட்கார்ந்தார். தொலைபேசியில் மணியடிக்கிறபோது, முதலாளியிடம் என்ன சொல்வது? இதை நினைக்க நினைக்க அவருக்குத் தொண்டையே வற்றிப்போய்விட்டது மாதிரி இருந்தது.

மாலை நேரம் ஆனபோது தொலைபேசி அடித்தது. தூரத்தில் இருந்த சி.கெ.யின் கம்பீரமான ‘‘ஹலோ ஹலோ’’ சத்தம்.

‘‘நான்தான்... அச்சுதன் நாயர் பேசுறேன்...’’

‘‘என்ன நாயர்? கொஞ்சம் சத்தமா பேசுங்க...’’

‘‘டிரைவர் அச்சுதன் நாயர்...’’

‘‘ம்... என்ன அச்சுதன் நாயர்? எங்கேயிருந்து பேசுறீங்க?’’


‘‘மாமன்னூர்ல இருந்து...’’

அதற்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் ஒரு சிலையைப் போல நின்றிருந்தார்.

‘‘அச்சுதன் நாயர்... அச்சுதன் நாயர்...’’

‘‘மகளைக் காணோம்...’’

அச்சுதன் நாயர் அழுதார். அதற்கு மேல் அவரால் ஒன்றுமே பேச முடியவில்லை.

‘‘என்ன?’’

டெலிஃபோனில் சி.கெ. உரத்த குரலில் என்னவோ கேட்டார். அவ்வளவுதான்... அடுத்த நிமிடம் அச்சுதன் நாயரின் கையில் இருந்து ரிஸீவர் கீழே விழுந்தது. தரையில் விழுந்த ரிஸீவரில் தொடர்ந்து ‘‘ஹலோ’’ ‘‘ஹலோ’’ என்று கேட்டுக் கொண்டே இருந்தது.

சுவாமியும் பையனும் என்னவென்று புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சிறிது நேரம் சென்றதும் தரையில் கிடந்த ஃபோன் நிசப்தமானது. அச்சுதன்நாயர் ரிஸீவரையே பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தார். அவர் தன்னுடைய உயிரை எடுத்துக் கொள்ளும்படி பகவதியிடம் அமைதியாக கேட்டுக் கொண்டார். இனி எந்தக் காலத்திலும் இப்படியொரு மனித வாழ்க்கை தனக்குத் தேவையே இல்லை என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.

சி.கெ. சிறிது நேரம் தொலைபேசியில் ‘‘ஹலோ’’ ‘‘ஹலோ’’ என்று அழைத்துக் கொண்டே இருந்தார். கடைசியில் மீண்டும் டயல்டோன் கேட்டுக் கொண்டே இருந்ததால், அவர் ரிஸீவரைக் கீழே வைத்தார்.

லில்லி எங்கே போயிருப்பாள்? அவள் காணாமல் போவதற்கு, அவளொன்றும் சின்னக் குழந்தை இல்லையே! அவரால் நம்ப முடியவில்லை. யாராவது வேண்டுமென்றே தன்னிடம் விளையாடிக் பார்க்கிறார்களோ? இப்படியெல்லாம் நினைத்தார். சி.கெ. லட்சாதிபதியான சி.கெ.விற்கு ஏகப்பட்ட விரோதிகள் இருக்கிறார்கள். செல்வமும் சொத்தும் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கு எதிரிகளும் பொறாமைக்காரர்களும் கூடிக்கொண்டே இருந்தார்கள். அவர்களில் யாராவது வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது காரிங்கள் செய்திருப்பார்களோ?

ஆனால், அச்சுதன் நாயரின் குரல்...

முப்பது வருடங்களாக அவர் தினமும் கேட்டுக் கொண்டிருக்கும் குரலாயிற்றே அது! அந்தக் குரலை அவருக்கு அடையாளம் தெரியாதா என்ன? சி.கெ.விற்கு இந்த விஷயத்தில் சந்தேகமே வரவில்லை.

சி.கெ. நெற்றியில் கோடுகள் விழும் அளவிற்கு உட்கார்ந்து சிந்தித்துப் பார்த்தார். நிச்சயம் அது அச்சுதன் நாயரின் குரலேதான் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.

‘‘யார் கூப்பிட்டது?’’

‘‘மேஜர் நம்பியார்.’’

அவருக்கு அந்த நேரத்தில் அப்படித்தான் சொல்லத் தோன்றியது. அவர் தன்னுடைய மனைவியின் முகத்தைப் பார்க்கவில்லை. மறையப் போகும் சூரியனைப் போல இருந்தது அந்தப் பெரிய முகம்.

‘‘ரேவதி, காரோட சாவி...’’

அவர் சட்டையை எடுத்துக் கொண்டு தன் மனைவியின் கையில் இருந்து காரின் சாவியை வாங்கியவாறு வேகமாக வெளியே இறங்கினார். அவரின் மனைவி என்னவோ கேட்டவாறு அவரின் பின்னால் வந்தாள். அவர் போய்க் கொண்டிருந்த அவசரத்தில் என்னவோ சொன்னார். அவர் சொன்னது அவள் காதில் சரியாக விழக்கூட இல்லை. கேட்டைக் கடந்து கார் தெருவில் இறங்கியது. இடது பக்கம் திரும்பி படுவேகமாக அது பாய்ந்தோ£யது. கடற்கரையின் அருகில் இருக்கும் க்ளப்பிற்கு முன்னால் சி.கே.வின் கார் இரைந்து நின்றது. க்ளப்பின் வெளிச்சுவருக்கு வெளியே வரிசையாக நிறைய கார்கள் நின்றிருந்தன. அந்தக் கார்களுக்கு மத்தியில் மேஜர் நம்பியாரின் ஃபியட்டும் இருந்தது.

ஒரு கையில் நீளமான பீர் ஊற்றப்பட்ட கண்ணாடி டம்ளரும், இன்னொரு கையில் சீட்டுகளுமாக மேஜர் நம்பியார் சி.கெ.யை வரவேற்றார்.

வட்ட மேஜைகளைச் சுற்றி பலரும் அமர்ந்து ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆஷ்ட்ரேக்களில் பென்சன் அன்ட் ஹெட்ஜஸின் துண்டுகள் நிறைந்து கிடந்தன.

‘‘ஜஸ்ட் எ மொமென்ட் ப்ளீஸ்’’

சி.கெ. மேஜர் நம்பியாரை தன் அருகில் வரும்படி அழைத்தார். சீட்டுகளையும் பீர் க்ளாஸையும் மேஜையின் மேல் வைத்து விட்டு நாற்காலியைப்  பின்பக்கமாய் தள்ளி மேஜர் எழுந்தார். கிட்டத்தட்ட ஆறடியைத் தாண்டிய உயரத்தைக் கொண்ட மனிதர். இலேசாக வெட்டப்பட்ட தலைமுடியும் அடர்த்தியான மீசையும் அவருக்கு இருந்தன. அவற்றை டை போட்டு கறுப்பாக்கியிருந்தார்.

‘‘எக்ஸ்க்யூஸ் மி ஜென்டில்மேன்.’’

மேஜர் நம்பியார் சி.கெ.யுடன் வராந்தாவை நோக்கி வந்தார். முதலில் நம்பியாரும் அதை நம்பவில்லை. யாராவது ஒரு விரோதி அச்சுதன் நாயரின் குரலில் பேசியிருக்கலாம் என்ற தன்னு¬யை கருத்தைச் சொன்னார் மேஜர்.

‘‘ஜஸ்ட் ஃபர்கெட் இட்...’’

நம்பியார் சொன்னார்.

பத்து நிமிட விவாதத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள்.

‘‘லெட் அஸ் வெயிட் அன்ட் ஸி...’’ - நம்பியார் சொன்னார்.

‘இனியொரு தடவை ஃபோன் வந்தா, வி வில் கோ தேர்....’’

மேஜர் விளையாட்டை நிறுத்திவிட்டு சி.கெ.யுடன் போனார். புல்வெளியில் உட்கார்ந்து அவர்கள் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஸ்காட்ச் அருந்தினார்கள். பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் புகைத்தார்கள். குளிர்ச்சியாக இருந்த வெண்ணெய்க் கட்டிகளைத் தின்றார்கள். மொத்தத்தில் அவர்கள் லில்லியின் கதையை மறந்தே போனார்கள். உரத்த குரலில் பேசினார்கள். சிரித்தார்கள். தலச்சேரிக்கு மேலே நட்சத்திரங்கள் உறக்கத்துடன் நின்று கொண்டிருந்தன. கடல் பாலத்துக்கு மேல் உப்பு கலந்த காற்று வீசியது.

நேரம் கடந்து கொண்டிருக்க, இரவு நீண்டு கொண்டிருக்க தொலைபேசி ஒலித்தது. முள்ளில் எதையோ குத்தித் தின்பதற்காக வாயில் அருகில் கொண்டு சென்ற சி.கெ. அதைத் தட்டிலேயே வைத்துவிட்டு தொலைபேசியின் அருகில் வந்தார். மேஜர் நம்பியார் சி.கெ. என்ன பேசுகிறார் என்பதைக் கேட்பதற்காக காதைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

சி.கெ.கேட்டார்.

‘‘திஸ் ஈஸ் ஆர்.பெரியசுவாமி ஃப்ரம் மாமன்னூர் ஸ்பீக்கிங்...’’

3

லில்லி காட்டில் காணாமல் போனதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு-

எமர்ஜென்ஸி வார்டில் இரவு ட்யூட்டி முடிந்து தூக்கக் கலக்கத்துடன் அவள் ஹாஸ்டலை நோக்கி திரும்பி வந்தபோது, அங்கே எதிரில் வந்து கொண்டிருந்தார் அச்சுதன் நாயர். முதலில் அது யார் என்று அவளுக்கு சரியாக அடையாளம் தெரியவில்லை. அது அச்சுதன் நாயர் என்ற விஷயம் தெரிய வந்தபோது உண்மையிலேயே அவள் பரபரப்படைந்து விட்டாள்.

‘‘அச்சுதன் நாயர்... நீங்க எப்போ வந்தீங்க?’’

‘‘இப்பத்தான்...’’

அவர் தலையையும் காதுகளையும் சேர்த்து கட்டியிருந்த மஃப்ளரை அவிழ்த்தார். அதைச் சுருட்டிகையில் வைத்துக் கொண்டார். பனிப்படலம் மூடியிருந்த வெளிச்சம் குறைவாக இருந்த ஒரு அதிகாலை நேரம் அது. அவர்கள் நின்றிருந்த இடத்தில் பூஞ்செடிகள் பனியில் நனைந்து காணப்பட்டன.

கேட்டிற்கு வெளியே புதிய மாரற்க் ஃபோர் கார் நின்றிருந்தது.

‘‘அச்சுதன் நாயர்... நீங்க மட்டும் தனியா வந்தீங்களா?’’

அவள் காரைப் பார்த்தவாறு கேட்டாள். அச்சுதன் நாயர் ஆமாம் என்று தலையை ஆட்டினார். அவர் சொன்னார்.


‘‘மகளே, உன்னைஅழைச்சிட்டுப் போகத்தான் நான் வந்தேன்.’’

அவள் வியப்புடன் அச்சுதன் நாயரின் முகத்தைப் பார்த்தாள்.

 ‘‘உடனே உன்னை கூப்பிட்டு வரச்சொன்னாரு முதலாளி.’’

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘‘என்ன விசேஷம்? அப்பாவுக்கு ஏதாவது...’’

அதற்குப் பதில் சொல்லும் விதமாக அவர் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை வெளியில் எடுத்தார்.

அவள் அந்தக் கடிதத்தை வாங்கி பிரித்து வாசித்தபோது அவளின் முகத்தின் பலவித உணர்வுகளும் தோன்றின.

முதல் நாள் மாலை நேரத்தில் சி.கெ. அவரை அழைத்துச் சொன்னார்.

‘‘அச்சுதன் நாயர்... நீங்க போயி லில்லியைக் கூப்பிட்டு வரணும். உடனே கிளம்புங்க. இதைக் கையில் வச்சுக்கங்க...’’

பெட்ரோல் போடுவதற்கான பணத்தைத் தந்தார். எண்ணாமலே நூறு ரூபாய் நோட்டுகளை அவர் கையில் தந்தார். சி.கெ.விற்கு அச்சுதன் நாயர் மேல் ரொம்பவும் நம்பிக்கை உண்டு. அவர் வெறும் டிரைவர் மட்டுமல்ல. அந்தக் குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி.

‘‘வீட்ல போய் விஷயத்தைச் சொல்லிட்டு சாயங்காலத்துக்கு முன்னாடியே புறப்பட்டுடணும் என்ன?’’

அதற்கு மேல் ஏதோ கேட்க நினைத்தார் அச்சுதன் நாயர். அதற்குள் சி.கெ. தொலைபேசிக்குப் பக்கத்தில் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு யாரிடமோ பேசுவதற்காக டயல் பண்ண ஆரம்பித்துவிட்டார். அவர் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை இப்படி தொலைபேசியிலேயே செலவழித்துக் கொண்டிருப்பார்.

சி.கெ. அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. அச்சுதன் நாயர் பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

எதற்காக தன் மகளை சி.கெ. இவ்வளவு அவசரமாக அழைத்துக் கொண்டு வரச் சொல்ல வேண்டும்?

பல்புகளின் மங்கலான வெளிச்சம் விழுந்து கொண்டிருந்த மெயின் ரோட்டில் காரை ஓட்டிச் செல்லும்போது அச்சுதன் நாயர் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். வீட்டில் அப்படியொன்றும் விசேஷம் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அச்சுதன் நாயர் காரணம் தெரியாமல் தவித்தார்.

சி.கெ.வின் வீட்டிலுள்ள யாருடைய முகமாவது சற்று வாடிப் போயிருந்தால், அச்சுதன் நாயரின் மனமும் வாடத் தொடங்கிவிடும். அந்த வீட்டின் துக்கங்களும், சந்தோஷங்களும் அவர் தன்னுடைய துக்கங்களும், சந்தோஷங்களும் என ஆக்கிக் கொண்டிருந்தார்.

‘‘அச்சுதன் நாயர், உங்களுக்கு தாகமா இருக்கா? வாங்க... ஏதாவது குடிக்கலாம்.’’

அவள் அவரை அருகில் இருந்த கேன்டீனுக்கு அழைத்துச் சென்றாள்.

‘‘வேண்டாம் மகளே, ஒண்ணும் வேண்டாம். மகளே, வேகமா புறப்படு. இன்னைக்கே நாம தலச்சேரியில் இருக்கணும்’’- அவர் சொன்னார்.

கேன்டீன் முற்றத்தில் இருந்த வண்ண குடைக்குக் கீழே உட்கார்ந்திருந்தபோது, அவள் மீண்டும் தன் தந்தையின் கடிதத்தைப் படித்துப் பார்த்தாள். ஆங்கிலத்தில் அவசர அவசரமாக இரண்டே இரண்டு வரிகள் எழுதியிருந்தார். ‘‘உடனே புறப்படவும். நாளையே திரும்பிப் போகலாம். உன்னுடைய தேர்வுக்கு இடைஞ்சல் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். மற்றவை நேரில்.’’

லில்லி மீண்டும் அந்தக் கடிதத்தைப் படிப்பதை அச்சுதன் நாயர் பார்த்தார். அவரின் ஆர்வம் அதிகரித்தது.

‘‘வீட்டுல ஏதாவது விசேஷமா அச்சுதன் நாயர்?’’

‘‘அப்பாவும் அம்மாவும் சுகமாக இருக்காங்க.’’

‘‘அங்கே யாராவது வந்திருக்காங்களா?’’

‘‘இல்ல...’’

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கடிதத்தில் எதுவும் தெளிவாக எழுதப்படவில்லை. அச்சுதன் நாயருக்கோ ஒன்றுமே தெரியவில்லை.

அவள் எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள். மருத்துவக் கல்லூரி கட்டிடத்தைத் தாண்டி தூரத்தில் மலையின் மேல் இப்போதும் பனிப்படலத்தைப் பார்க்கலாம். சூரியன் மேலே வர வர பனி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருந்தது. மலை மேல் இருந்த மூடு பனி அவளின் இதயத்திற்குள் இறங்கி வந்தது. அவளுக்கு குளிர்வதை போல் இருந்தது. அவள் தான் அணிந்திருந்த வெள்ளைக் கோட்டின் மேல் பொத்தானை இட்டாள்.

எல்லோரும் பீட்டர் ஸெல்லர்ஸ் என்றழைக்கும் பீட்டர் ஆவி பறக்கும் இரண்டு கப் காப்பியுடன் வந்தான்.

‘‘டாக்டர்... நீங்க உள்ளே இருக்கலாமே! இங்கே குளிர் அதிகமாச்சே!’’

கேன்டீனுக்கு முன்னால் இருந்த வண்ணக்குடைகளுக்குக் கீழே போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன.

லில்லி பதில் எதுவும் சொல்லாமல் ஒரு கப்பை கையில் எடுத்தாள். காப்பியைப் பருகுவதற்கு முன்பு அச்சுதன் நாயர் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்தார். அது அவரின் பழக்கம்.

‘‘மகளே, காப்பி குடிக்கலியா?’’

அவள் பாதி காபியைக் குடித்து விட்டு கப்பைக் கீழே வைத்து விட்டு எழுந்தாள். அச்சுதன் நாயரும் எழுந்தார். அவர்கள் ஹாஸ்டலை நோக்கி நடந்தார்கள்.

மூன்றாவது மாடியில் அவளின் அறை இருந்தது. அவள் கதவைத் திறந்தபோது, சுவரில் ஒட்டப்பட்டிரந்த ஃப்ராங்க் ஸாப்பாவின் ஒரு பெரிய வண்ண போஸ்டர் அச்சுதன் நாயரை வரவேற்றது.

‘‘அச்சுதன் நாயர், இங்கே இருங்க. நான் இதோ வந்திர்றேன்.’’

அவள் கோட்டைக் கழற்றி படுக்கையில் போட்டு விட்டு கீழே இறங்கிப் போனாள்.

அந்தக் கேம்பஸுக்குள்ளேயேதான் மெடிசின் பேராசிரியர் ஜார்ஜ் தாமஸின் ஃப்ளாட் இருக்கிறது. பேராசிரியரின் மகன் ஷைனி தாமஸும் லில்லியும் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். பேராசிரியர் அதிகமாக பேச மாட்டார். ஆனால், மகள் அப்படி அல்ல. எப்போதும் ‘‘கலகல’’ வென பேசக் கூடியவள்.

பேராசிரியரும் அவரின் மனைவியும் இன்னும் படுக்கையறையை விட்டு வெளியே வரவில்லை. வேலைக்காரன் குட்டியிடம் சொல்லிவிட்டு அவள் தன்னுடைய வீட்டிற்கு ஒரு ட்ரங்கால் புக் செய்தாள்.

பேராசிரியர் தெலைபேசி எண் என்பதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லாமல் போய்விட்டது.

‘‘வாட் ஈஸ் தி மேட்டர் லில்லி?’’

சி.கெ. கம்பீரமான குரலில் கேட்டார்.

‘‘அச்சுதன் நாயர் கடிதத்தைக் கொடுத்தார்ல?’’

‘‘அப்பா.... அதுல நீங்க விவரம் ஒண்ணும் எழுதலையே?’’

‘‘தற்போதைக்கு நீ அவ்வளவு தெரிஞ்சுக்கிட்டா போதும். உடனே புறப்படு. வீ.ஆர். வெயிட்டிங் ஃபார் யூ...’’

‘‘எனக்கு தேர்வு இருக்கே அப்பா’’

‘‘அதெல்லாம் சொல்லக் கூடாது. அச்சுதன் நாயர்கூட உடனடியா புறப்படு. ஸி யூ ஸுன்...’’

அவளின் தந்தை ரிஸீவரைக் கீழே வைக்கும் சத்தம் கேட்டது. அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

அவளின் தந்தை இருப்பதோ எத்தனையோ கிலோ மீட்டர்களுக்கு அப்பால். நாளை அவள் தந்தையின் அருகில் நிற்கும் நிமிடத்திலும் அவர்களுக்கிடையே இந்த இடைவெளி இருக்கவே செய்யும். அவளுக்கு இது நன்றாகவே தெரியும்.

தொலைபேசியைக் கீழே வைத்து விட்டு வாடிய முகத்துடன் வெளியே வரும்போது, எதிரில் பேராசிரியரின் மனைவிவந்து கொண்டிருந்தாள்.

‘‘என்ன லில்லி?’’

‘‘நான் வீட்டுக்குப் போறேன். திரும்பி வர்றதுக்கு ரெண்டு நாட்கள் ஆகும்.’’


‘‘என்ன விசேஷம்?’’

‘‘எனக்கே தெரியல...’’

அவள் கவலை மேலோங்க புன்னகைத்தாள். பேராசிரியரின் மனைவியும் பதிலுக்கு புன்னகைத்தாள். லில்லி சொன்ன விஷயங்கள் அனைத்தையும் கேட்ட அவள் சொன்னாள்.

‘‘வெல்... லெட் அஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்.’’

வேலைக்காரன் குட்டி கொண்டு வந்து கொடுத்த குளிர்பானத்தில் கொஞ்சம் மட்டும் அருந்திய லில்லி மெடிக்கல் சூப்பிரெண்டின் அலுவலகத்தை நோக்கி போனாள். அங்கேயிருந்து திரும்பவும் ஹாஸ்டலுக்கு வந்தாள்.

மாலையில் புறப்படத் தீர்மானித்தாள்.

அவளின் கோட்டின் பாக்கெட்டில் இருந்து படுக்கையில் விழுந்து கிடந்த ஸ்டெதாஸ்கோப்பையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார் அச்சுதன் நாயர்.

லில்லி சூட்கேஸை எடுத்துத் திறந்து இரண்டு மூன்று புடவைகளையும், ப்ளவுஸ்களையும் எடுத்து வைத்தாள். நேரம் கிடைத்தால் தேர்வுக்காகப் படிப்பதற்காக சில புத்தகக்களையும் அதோடு சேர்த்து எடுத்து வைத்தாள். பிறகு... அவளுக்கு மிகவும் விருப்பமான போர்ட்டபிள் கேஸட் ப்ளேயரையும்.

எதற்காக இந்தப் பயணம் என்பதுகறித்து அவளால் எந்த ஒரு முடிவுக்குமே வர முடியவில்லை. நல்லதற்காக இருந்தால் சரி என்ற முடிவுக்கு கடைசியில் வந்தாள். அதே நேரத்தில் அவள் மனதில் பயத்தின் தீ ஜுவாலைகளும் எழும்பாமல் இல்லை. மலையின் அடிவாரத்தில் அந்த நேரத்திலும் பனிப்படலம் இருக்கவே செய்தது.

அச்சுதன் நாயர் சிவப்பு வர்ண சூட்கேஸுடன் நடந்தார். கேஸட் ப்ளேயரை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் நடந்தாள். ப்ளேயரை ஆன் செய்திருந்தாள். அவளுக்கு மட்டும் கேட்கக் கூடிய மாதிரி அவளின் சொந்த இதயத் துடிப்பைப் போல பாப் மார்லேயின் ‘‘தி வெயிலேர்ஸ்’’ என்ற கேஸட்டை மெதுவான குரலில் கேட்டாள். ‘‘வெய்லிங்கின் வெயின்... வெய்லிங்கின் வெயின்...’’

 ஆன் செய்த கேஸட் ப்ளேயரை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டபோது பாட்டும், பாட்டு பாடுபவர்களும் அவளின் இதயத்திற்குள்ளேயே நுழைந்து விட்டதைப் போல் அவளுக்கு இருந்தது.

‘‘நீயும் உன்னோட பாட்டும்...’’

தூரத்தில் இருக்கும் சி.கெ. என்றோ ஒரு நாள் அவளைப் பார்த்துச் சொன்னார்.

‘‘தேர்வுல மட்டும் உனக்கு முதல் வகுப்பு கிடைக்கலைன்னா உன்னோட கேஸட்டுகள்ல ஒன்னைக் கூட இங்கே வைக்க விட மாட்டேன். எல்லாத்தையும் நானே நெருப்புல போட்டு எரிச்சிடுவேன்.’’

அந்த லட்சாதிபதிக்கென்று இருக்கிற ஒரே ஒரு மகள். அவளை எப்படியும் டாக்டராக்கி விட வேண்டும் என்பது அவரின் விருப்பம்.

கேட்டைக் கடக்கும்போது அவள் வெறுமனே திரும்பிப் பார்த்தாள். இனி ஒருவேளை தான் திரும்பி வரவே முடியாத ஒரு சூழ்நிலை உண்டானால்...?

மலையின் அடிவாரத்தில் இருந்த பனிப்படலம் சிவப்பு வண்ணத்தில் இருந்தது. யூக்கலிப்டஸ் மரங்கள் மீது மாலை நேர வெயில் பட்டு ஜொலிப்பதை அவள் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

‘‘போகலாமா மகளே’’

அச்சுதன் நாயர் ஸ்டியரிங்கில் கையை வைத்தவாறு அவளிடம் கேட்டார். அவள் ‘‘சரி’’ என்று சொன்னாள். கார் கிளம்பி முன்னோக்கி ஓட ஆரம்பித்தது.

‘‘நான் திரும்பி வருவேனா அச்சுதன் நாயர்?’’

‘‘ரெண்டு நாட்கள்ல திரும்பி வந்திடலாம்.’’

‘‘நிச்சயமா?’’

‘‘நிச்சயமா?’’

எதைப் பற்றியும் சிந்திக்காமல் அச்சுதன் நாயர் சொன்னார்.

லில்லி தன் தந்தையைப் போல் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவளின் குடும்பத்திலுள்ள யாரைப் போலவும் அவள் இல்லை. மனம் முழுக்க கனிவையும், கருணையையும் கொண்டிருக்கும் ஒரு நல்ல பெண் அவள். அவள் விருப்பப்படுவதைப் போல வாழ்க்கையில் எல்லாமே நடக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசைப்பட்டார் அச்சுதன் நாயர்.

மாலை நேரம் முடிந்து இரவு வர ஆரம்பித்தது. மலையும், பனிப்படலமும் கண்ணை விட்டு மறைந்தன. காட்டுக்குள் இருந்தவாறு கறுப்பு ஆறு போல நீளமாகத் தெரிந்த ரோட்டையே பார்த்தாள் லில்லி. சாலையோர விளக்குகளில் பெரும்பாலானவை எரியவேயில்லை. பாதையில் பல இடங்கள் நன்றாக நனைந்திருந்தன. இதற்கு முன்னால் மழை பெய்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் லில்லி.

இரவு வெகு நேரம் ஆகும் வரை அவளின் கேஸட் ப்ளேயர் இயங்கிக் கொண்டே இருந்தது.

வழியில் இரண்டு மூன்று விளக்குகள் எரிந்த கடைகளைப் பார்த்ததும் அவள் காரை நிறுத்தச் சொன்னாள். அங்கு இரண்டு பேரும் சூடான தேநீர் வாங்கிக் குடித்தார்கள்.

‘‘இனி நான் காரை ஓட்டுறேன். அச்சுதன் நாயர், உங்களுக்கு தூக்கம் வரும்ல?

மணி மூன்றானது. இரு பக்கங்களிலும் இருந்த வயல்களில் மழை நீர் நிரம்பியிருந்தது. அதோடு நிலவொளியும், குளிரில் கார் அமைதியாக நின்று கொண்டிருந்தது.

பின்னிருக்கையில் சாய்ந்து உட்கார்ந்த லில்லி மெதுவாக உறக்கத்தில் ஆழ்ந்தாள். அவளின் மனதில் அடித்தளத்தில் எங்கோயிருந்து டயானா ரோஸ் பாடிக் கொண்டிருந்தாள். ‘‘ஐ ஆம் கமிங் அவுட்... ஐ ஆம் கமிங் அவுட்... ஐ ஆம் கமிங் அவுட்...’’ தொடர்ந்து கோரஸ் ஒலித்தது. ‘‘ஐ ஆம் ஸ்ப்ரெடிங் லவ்... தேரீஸ் நோ நீட் டூ ஃபியர்.’’

அவளின் கண்கள் முழுமையாக மூடின.

‘‘மகளுக்கு நல்ல உறக்கம்...’’ அச்சுதன் நாயர் சொன்னார்.

அவள் கண்களைத் திறந்து பார்க்கும்போது, வண்டி பெரிய கேட்டைக் கடந்து போர்ட்டிக்கோவின் முன்னால் மெதுவாக வந்து நின்றது. பூக்களும், மரங்களும், வீடும் ஒன்றாக எல்லாம் ஒன்றாக வெளுத்திருந்தன. அவளின் மனமும் வெளுத்துக் கொண்டிருந்தது.

புடவையின் ஓரத்தை தோளில் இட்டவாறு, அவள் கார் கதவைத் திறந்து கீழே இறங்கினாள்.

அதே நேரத்தில் ட்ரஸ்ஸிங் கவுனின் நாடாவைக் கட்டியவாறு சி.கெ. வாசலில் வந்து நின்றார்.

4

ன்னல் வழியாக பார்க்கும்போது வெளியே இளம் வெயில் தன்னுடைய பொன் கிரணங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. குளித்து முடித்து ஈரமான கூந்தலை உலர வைத்தவாறு வாயில் புடவையொன்றைக் கட்டியிருந்த லில்லி கீழே இறங்கி வந்தாள். காலைச் சிற்றுண்டி உண்பதற்காக ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் அவளின் தந்தையும் தாயும் அவளை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். வெள்ளியினால் ஆன கரண்டியால் ரொட்டி மீது வெண்ணெயை அவளின் தாய் புரட்டிக் கொண்டிருந்தாள். அவளின் தந்தையின் கையில் காலையில் வந்திருந்த ஆங்கில பத்திரிகை இருந்தது.

லில்லி எதிர்பார்த்திருந்த நிமிடம் இப்போது எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். எல்லா விஷயங்களையும்...

அவள் எதிரில் மேஜைக்கருகில் வந்து அமர்ந்தபோது அவளையே, அவளின் தாய் உற்றுப் பார்த்தாள்.

‘‘நீ ஏன் ஒரு மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு இருக்கே நாளைக்கே நீ திரும்பிப் போகலாம்.’’


யார் முகத்தை ஒரு மாதிரி வைத்திருப்பது? அவளின் தாய்க்கு ஏனோ அப்படித் தோன்றுகிறது. அவள் அமைதியாக கப்பில் தேநீரை ஊற்றினாள். அவளின் மனம் கண்ணாடியைப் போல் அமைதியாக இருந்தது இப்போது.

‘‘புத்தி இருந்தா நீயே இப்போ புரிஞ்சிருப்பே... நான் ஏன் உன்னைக் கூப்பிட்டிருக்கேன்னு.’’

அவள் நீட்டிய தேநீர் கப்பை வாங்கியவாறு சி.கெ. சொன்னார். அவர் மகளின் முகத்தையே பார்த்தார்.

‘‘என்னைப் பார்க்குறதுக்காக யாராவத வர்றாங்களா?’’

‘‘சரியா சொன்னே.’’

சி.கெ. மகிழ்ச்சியான குரலில் சொன்னார்.

‘‘என் மகள் என்னைப் போலவே அறிவாளி...’’

அடுத்த நிமிடம் அவர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியானார்.

‘‘டாக்டர் கிருஷ்ணசந்திரன். ஹீ ஈஸ் ஸெட்டில்ட் இன் தி ஸ்டேட்ஸ்.’’

தான் சொல்ல வந்ததை நிறுத்திய சி.கெ. மகள் என்ன நினைக்கிறாள் என்பதைத் தெரிந்துக் கொள்வதற்காக அவளின் முகத்தையே உற்று நோக்கினார். லில்லியின் கண்களில் கவலையின் ரேகைகள் தெரிந்தன.

‘‘உனக்கு ஆச்சரியமா இருக்கா?’’

‘‘இல்ல அப்பா...’’

‘‘எங்க மேல உனக்கு கோபமா?’’

தாய் மகளைப் பார்த்து புன்னகையைத் தவழ விட்டாள். அவள் பதில் எதுவும் சொல்லாமல் மேலும் கொஞ்சம் தேநீரை ஊற்றினாள். கப்பில் இருந்து நறுமணம் கொண்ட ஆவி மேலெழுந்தது. அவள் தேநீர் குடிக்கவில்லை. அவளின் கண்களில் இனம் புரியாத கோபத்தின் அலைகள் உண்டானதென்னவோ உண்மை.

‘‘என்ன ஒண்ணும் பேசாமலே இருக்கே?’’

‘‘என்கிட்ட கேட்டுட்டா நீங்க எந்த ஒரு விஷயத்தையும் தீர்மானிக்கிறீங்க, அப்பா?’’

‘‘பொண்ணு ஆரம்பிச்சிட்டா...’’ - அவளின் தாய்க்கு கோபம் வந்தது. ‘‘ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைத் தொடங்குறப்போ சண்டை போட வந்திடுவா...’’

‘‘யாரும் சண்டை போடவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’’ - சி.கெ. சொன்னார். ‘‘சாயங்காலம் டாக்டர் கிருஷ்ணசந்திரன் தலச்சேரிக்கு வர்றான். நீ அவனைப் போய் பார்க்கணும். அவன்கிட்ட பேசணும். அதற்குப் பிறகு நீயே தீர்மானம் பண்ணிக்கோ....’’

எல்லாம் அவள் கையிலேயே விடப்பட்டிருக்கிறது என்பது மாதிரி இருந்தது சி.கெ.யின் பேச்சு. ஆனால், அவளின் தந்தை முன்கூட்டியே எல்லா விஷயங்களையும் தீர்மானித்து வைத்திருப்பார் என்பது அவளுக்கு தெரியாதா என்ன?

தன் தந்தையின் நிறுவனங்களில் வேலை காலியாக இருக்கும் சூழ்நிலை வருகிறபோது இளைஞர்களை நேர்முகத் தேர்வுக்கு வரச் செய்வது மாதிரிதான் இது. ஏற்கனவே வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். இருப்பினும், தேவையில்லாமல் ஆட்களை வரவழைத்து நேர்முகத் தேர்வு நடத்தி அவர்களுக்கு எதிர்பார்ப்பு உண்டாக்கும் ஒரு வேலையை வீணாகச் செய்து கொண்டிருப்பார்.

தன்னுடைய சொந்த மகள் விஷயத்திலும் அவளின் தந்தை அதே வியாபார புத்தியைத்தான் பயன்படுத்துகிறார்.

அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் டாக்டரின் உறவினர்களுடன் ஏற்கனவே எல்லாவற்றையும் பேசி முடித்திருப்பார். கொடுப்பதாக வாக்களித்திருக்கும் புதிய ஃபியட் காரும் ஏற்கனவே வந்து சேர்ந்திருக்கும். சாயங்காலம் அந்த ஆளை தான் சந்திக்கும் நிகழ்ச்சி வெறுமனே ஒரு சடங்கு என்பதை லில்லி நன்றாகவே அறிவாள்.

அதற்கு மேல் அவள் சொல்ல என்ன இருக்கிறது?

அவள் இருந்த இடத்தை விட்டு எழுந்தாள். மெதுவாக மேலே ஏறிச் சென்றாள். அவளின் அறையில் நாற்பது வாட் ஸ்டீரியோ இசை முழங்கிக் கொண்டிருந்தது. அவள் தலை முடியை வாரி கட்டி கண்ணாடியின் முன்னால் போய் நின்று தன்னைப் பார்த்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ அதை மீண்டும் அவிழ்த்து தோளில் சுதந்திரமாக விரித்துப் போட்டவாறு ஜன்னலின் அருகில் போய் நின்றாள்.  பிறகு படுக்கையில் வந்து உட்கார்ந்தாள். தலை முடியை மார்பின் மீது இருக்கும்படி செய்து அதைப் பின்னத் தொடங்கினாள். பின்னர் பின்னிய தலை முடியை மீண்டும் அவிழ்த்து விட்டு மின் விசிறியை முழு வேகத்தில் வைத்து அதற்குக் கீழே போய் உட்கார்ந்தாள். அவளின் பட்டு இழை போன்ற முடி மின் விசிறிக் காற்றில் பறந்து அவளின் முகத்தை முழுமையாக மூடியது.

அன்று பகல் முழுவதும் அவளின் அறையில் இருந்து ஸ்டீரியோ இசை முழங்கிக் கொண்டே இருந்தது. பூகிவூகியும், ராக்கும், கும்போவும், டாங்கோவும், சாம்போவும், போஸ்ஸோநோவோவும்- மொத்தத்தில் ஒரு ஸ்டீரியோ இசையின் கோலாகலமே அங்கு இருந்தது.

மாலையில் லில்லி கிருஷ்ணசந்திரனைச் சந்தித்தாள். சி.கெ.தான் அவளைக் காரில் ஏற்றிக் கொண்டு அங்கு அழைத்துச் சென்றார். போகும் வழியெங்குமு அவர் கிருஷ்ணசந்திரனின் குடும்பப் பெருமையைப் புகழ்ந்து கொண்டே வந்தார். தந்தையின் அருகில் அமர்ந்து அவள் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘‘ஐ ஆம் ஷ்யூர் யூ வில் பி ஹாப்பி வித் ஹிம்.’’

அவர் சொன்னார். கார் கேட்டைக் கடந்து மேஜர் நம்பியாரின் பங்களாவுக்குள் நுழைந்தது. இடி முழக்கத்தைப் போல குரைத்தவாறு உயர்ந்த இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் அவர்களை வரவேற்றது. அவர் காரை விட்டு இறங்கியபோது அது அமைதியாக வாலாட்டியவாறு சி.கெ.யின் காலுக்கருகில் வந்து நின்றது.

‘‘ஹௌ டூ யூ டூ தண்டர்?’’

‘‘நன்றாக இருக்கிறேன்’’ என்பது மாதிரி தண்டர் சி.கெ.யின் காலைத் தொட்டுக் கொண்டு நின்றது.

மேஜர் நம்பியார் வெளியே வந்து அவர்களை வரவேற்றார்.

‘‘வெல்கம் யங் லேடி’’

அவர் லில்லியை தன்னுடன் சேர்த்து அணைத்தார். அவரிடமிருந்து சென்ட், புகையிலை ஆகியவற்றின் நறுமணம் கிளம்பி வந்தது.

‘‘டாக்டர் வந்தாச்சா? நாங்கள் தாமதம் இல்லையே?’’

‘‘ஹீ ஈஸ் இன் அப்ஸ்டேர்ஸ். இப்போத்தான் அவன் வந்தான்.’’

சி.கெ. மேலே மாடிக்குச் சென்று கிருஷ்ணசந்திரனிடம் குசலம் விசாரித்தார். சிறிது நேரத்தில் கீழே இறங்கி வந்தார். அவர் அதிக நேரம் அங்கு இருக்கவில்லை.

‘‘எக்ஸ்க்யூஸ் மீ... எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.’’

மேஜர் பீர் சாப்பிட அழைத்தார். ஆனால் சி.கெ. நிற்கவில்லை. அவர் காரின் சாவியை சுட்டு விரலில் மாட்டிக் கொண்டு ஆட்டியவாறு காரை நோக்கி நடந்தார்.

‘‘லில்லியை நான் வீட்டுல விட்டுர்றேன்.’’

மேஜர் சொன்னார்.

காரை ‘‘ஸ்டார்ட்’’ செய்கிறபோது சி.கெ. லில்லியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் எல்லாமே இருந்தது. எல்லாம்... எல்லாம். அந்தப் பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டாள்.

சி.கெ. காரை ஓட்டியவாறு கேட்டைக் கடந்து மறைந்தார்.

‘‘யங் லேடியே வா...’’

மேஜர் லில்லியின் கையைப் பற்றினார். அவள் புடவையை இழுத்து தோளில் இட்டவாறு மேஜருடன் சேர்ந்து வரவேற்பறைக்கு வந்தாள்.


‘‘ஹலோ டியர்?’’

மாடியில் இருந்து மேஜரின் மனைவி இறங்கி வந்தாள். அவள் லில்லியின் முகத்தைக் கைகளால் பற்றியவாறு அவளின் இரு கன்னங்களிலும் தலா ஒரு முத்தம் தந்தாள்.

இரண்டு நிமிடங்கள் கழிந்திருக்கும். மேலே இருந்து யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. டாக்டர் கிருஷ்ணசந்திரன் நடந்து வரும் ஓசை கேட்டது. டாக்டர் கிருஷ்ணசந்திரன் கீழே வந்து கொண்டிருந்தான்.

அவள் அவனை தலையை உயர்த்திப் பார்த்தாள். கண்களே கூசியது. வெள்ளைக்காரனின் நிறம். நல்ல உயரம். அழகாக வாரி விடப்பட்டிருந்த கறுகறுப்பான தலைமுடி. இளம் வண்ணத்தில் இருக்கும் ஸஃபாரி ஸுட் ஒரே பார்வையில் பார்த்தவுடன் கூறி விடலாம். இங்லாண்டில் இருந்தோ அமெரிக்காவில் இருந்தோ வந்திருக்கும் ஆள் என்று மொத்தத்தில் - ஒரு துரை மாதிரி இருந்தான்.

மேஜர் நம்பியார் அறிமுகப்படுத்தி வைத்தார்.

‘‘மீட் அவர் பட்டிங் டாக்டர் லில்லி.’’

‘‘ஹாய் பேபி...’’

டாக்டர் கிருஷ்ணசந்திரன் அவருக்கு நேர் எதிரில் இருந்த ஸோஃபாவில் வந்து அமர்ந்தான். அவன் சிரித்தபோது வெண்மையாக பிரகாசித்த பற்களை அவள் பார்த்தாள். பற்கள் மிகவும் அழகாக இருந்தன. ஒரு பற்பசை விளம்பரத்திற்கு மாடலாக இருப்பதற்கு மிகவும் பொருத்தமாக அவன் இருப்பான் என்று அப்போது அவள் நினைத்தாள். அவனின் வெளுத்து உருண்ட கை விரல்களுக்கு இடையில் கறுப்பான சிறு ரோமங்கள் இருந்தன.

மேஜர் நம்பியார் மனைவியிடம் சொன்னார்.

‘‘பிள்ளைங்க உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கட்டும். நாம போகலாம்.’’

அவர்கள் இரண்டு பேரும் எழுந்து தங்களுக்குள் என்னவோ மெதுவாக பேசியவாறு சிரித்துக்கொண்டே உள்ளே போனார்கள்.

கிருஷ்ண சந்திரன் எழுந்து அவள் அருகில் வந்து நின்றான்.

‘‘மே ஐ...?’’

அவள் தலையை அசைத்து சம்மதம் தந்தவுடன், அவன் தொட்டும் தொடாமலும் அவள் அருகில் அமர்ந்தான். கொலோனின் நறுமணம் எல்லா இடங்களிலும் பரவியது.

ஆள் பயங்கரமான ஆள்தான். அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். பெண்களை வசீகரிக்கக் கூடிய எல்லாமே அவனிடமிருந்தது.

‘‘நீ எவ்வளவு எளிமையா இருக்கே! இந்த மாதிரி எளிமையா ட்ரெஸ் பண்ணுற பெண்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.’’

அவள் ஒரு கைத்தறி புடவையை அணிந்திருந்தாள். நகைகள் எதுவும் உடம்பில் அணியவில்லை. கை நகங்களுக்கு சாயம் கூட பூசவில்லை. நெற்றியில் பொட்டு கூட வைக்கவில்லை.

‘‘நீ எப்போ அமெரிக்காவுக்கு வரப்போற?’’

அவன் அவளின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தான். அவனின் மூச்சு அவளின் தலைமுடியின் மேல் விழுந்தது.

‘‘உன்னோட கன்னங்கள் எவ்வளவு அழகா இருக்கு! நான் அதைத் தொட்டுப் பார்க்கட்டுமா?’

அவளையுமறியாமல் அவள் தலையைக் குனிந்து விட்டாள். அவன் தொடவில்லை. சொல்லப்போகிற ஏதோ ஒரு தமாஷான விஷயத்தை மனதிற்குள் நினைத்துப் பார்த்து அவன் அமைதியாகச் சிரித்தான்.

‘‘நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே! அமெரிக்காவுக்கு நீ வர்றயில்ல? அமெரிக்கா மேல விருப்பமிருக்குல்ல?’’

‘‘எனக்கு விருப்பம் இந்த ஊருதான்.’’

‘‘சரி... அப்படின்னா நான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு இங்க வந்துடட்டுமா?’’

அவன் உரத்த குரலில் சிரித்தான். அப்போது அவனின் முகம் சிவந்தது. அவனின் உதடுகள் சிவந்து காணப்பட்டன. அதனால் அவனுக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

எப்போதும் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்ட சத்யனை அவள் நினைத்துப் பார்த்தாள். அவன் பக்கத்தில் வரும்போது சார்மினார் சிகரெட்டின் வாடை குப்பென்று அடிக்கும்.

சிரித்து முடித்து விட்டு கிருஷ்ணசந்திரன் சொன்னான்.

‘‘எனக்கும் அமெரிக்கா பிடிக்காது. தெரியுதா? எல்லாரையும் போல நானும் பணம் சம்பாதிக்குறதுக்குத்தான் அமெரிக்காவுல போய் வேலை பார்க்கறேன். இங்கே தலை நரைக்குற வரைக்கும் வேலை பார்த்தால் கூட நம்பால என்ன சம்பாதிக்க முடியும்?’’

‘‘எதற்கு சம்பாதிக்கணும்?’’ திடீரென்று அவள் கேட்டாள். அப்படியொரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவேயில்லை.

‘‘வெல்...’’ - அவன் சிறிது தயங்கியபடி சொன்னான்.

‘‘எல்லோருடைய இலட்சியமுமே பணம்தானே!’’

‘‘பணத்தை விரும்பாதவர்களும் இந்த உலகத்துல இருக்காங்களே!’’

‘‘இல்ல. நிச்சயமா இல்ல. என்னால நூறு சதவிகிதம் உறுதியா சொல்ல முடியும்’’

‘‘கொஞ்சம் கூட பணத்தை விரும்பாத ஒரு ஆளை எனக்குத் தெரியும்!’’

‘‘ஹு ஈஸ் தட் ஃபூல்?’’

‘‘நான் தான்...’’

‘‘நீயா?’’

அவன் மீண்டும் உரத்த குரலில் சிரித்தான். அடுத்த நிமிடம் சிரிப்பை நிறுத்தி விட்டு அவன் சொன்னான்.

‘‘நீ ஒரு லட்சாதிபதியோட மகள். அதுனாலதான் உனக்கு பணத்து மேல விருப்பமில்ல...’’

‘‘இங்க பாரு, கிருஷ்ணசந்திரன். என் அப்பாவோட இலட்சக்கணக்கான பணத்தையும் வேவ்டாம்னு உதறிட்டு வர்றதுக்கு எனக்கு எந்தவொரு பிரச்சனை யுமில்ல. சொத்தோ பணமோ எனக்கு எதுவும் தேவை யில்ல. திரும்பத் திரும்ப ஒரு நிறம் போன காட்டன் புடவை யைக் கட்டிக்கிட்டு ஒரு சின்னக் குடிசையில் ஆயுள் காலம் முழுவதும் வாழறதுக்கு நான் தயாரா இருக்கேன்.’’

அப்போது கதவை யாரோ தட்டினார்கள். கதவு திரைச் சீலையின் இடைவெளி வழியாக மேஜர் நம்பியாரின் பைப்பில் இருந்த புகை உள்ளே நுழைந்து வந்தது.

‘‘மே ஐ கம் இன்?’’

மேஜர் உள்ளே வந்தார். அவர் இரண்டு பேரின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தார்.

‘‘கொஞ்சம் தேநீர். அதற்குப் பிறகு நீங்கள் தொடர்ந்து பேசலாம்...’’

அவர் அவர்களை சாப்பிடும் அறைக்கு அழைத்துக் கொண்டு போனார். நம்பியாரின் மனைவி வெள்ளி பூசப் பட்ட கூஜாவில் இருந்து தேநீரை கப்புகளில் ஊற்றினாள்.

தேநீர் குடிப்பதற்கிடையில் லில்லியைத் தவிர, மற்ற எல்லோரும் உரத்த குரலில் சிரித்த வண்ணம் இருந்தனர். ஏதாவது தமாஷாகப் பேசி தன்னுடைய விருந்தினர்களைச் சிரிக்க செய்ய ஓய்வு பெற்ற மேஜர் கனோத்நாராயணன் நம்பியாருக்கு நன்றாகவே தெரியும்.

‘‘சியர் அப், பேபி...’’

எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்த லில்லியைப் பார்த்து நம்பியாரின் மனைவி சொன்னாள்.

லில்லி ஒரு நாற்பது வால்ட் ஸ்டீரியோ கனவில் மூழ்கிப் போயிருந்தாள்.

தேதீர் பருகி முடித்த பிறகு, அவர்கள் மீண்டும் வரவேற்பறைக்குப் போகவில்லை.

கிருஷ்ண சந்திரன் சொன்னான்.

‘‘நாங்கள் ஒரு ட்ரைவிங் போயிட்டு வர்றோம். லில்லியை நான் திரும்ப வீட்ல கொண்டு போய் விட்டுர்றேன்.’’

‘‘ஷ்யூர்?’’ - மேஜர் கேட்டார். ‘‘அமெரிக்காவுக்கே கொண்டு போயிட மாட்டேல்ல? சி.கெ.யோட ஒரே மகளாச்சே!’’


மீண்டும் சிரிப்பு சத்தம். மிகையாக ஒலித்த அந்தச் சிரிப்பு சத்தத்தைக் கேட்டு தளர்ந்து போய் நின்றாள் லில்லி.

காரை நெருங்கி நடக்கும்போது கிருஷ்ணசந்திரன் அவளின் தோளைச் சுற்றி கையைப் போட்டு பிடித்தான். அவன் கைகள் மிகவும் மென்மையாக இருந்தன. கைவிரல்கள் குளிர்ந்தன.

‘‘ஹேவ் எ நைஸ் டைம்.’’

மேஜரும், அவரின் மனைவியும் கார் வரை அவர்களுடன் வந்தார்கள்.

அது ஒரு வெள்ளை நிற ப்ரிமியர் பத்மினி கார். லில்லியை அருகில் அமரச் செய்து, கிருஷ்ணசந்திரன் காரை ‘‘ஸ்டார்ட்’’ பண்ணினான்.

‘‘சரியான ஜோடி...’’

கார் கிளம்பியபோது மேஜரும் அவரின் மனைவியும் ஒரே குரலில் சொன்னார்கள்.

கார் வளைவு திரும்பி மாலை நேர வெயிலில் மறைந்தது.

5

மாஷாக பல விஷயங்களையும் பேசிக்கொண்டே - அதே நேரத்தில் படு வேகமாக கிருஷ்ணசந்திரன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். நகரத்தை நோக்கி கார் போய்க் கொண்டிருந்தது. ‘‘இந்தப் புதிய காரில் ஒரு ஸ்டீரியோ ப்ளேயர் இருந்திருந்தால்’’ மிகவும் நன்றாக இருந்திருக்கும்... லில்லி நினைத்தாள்.

‘‘நாம இப்போ ஸீ வ்யூவிற்கு போறோம். எனக்கு ஏதாவது குடிக்கணும் போல இருக்கு. நீயும் என் கூட சேர்ந்து சாப்பிட்டா நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன். இல்லாட்டி உனக்கு நான் கூல்ட்ரிங் வாங்கித் தர்றேன். அதுக்குப் பிறகு நாம ஒரு இடத்துக்குப் போறோம்.’’

அவள் வின்ட் ஸ்க்ரீன் வழியாக வெளியே தெரியும் கறுப்பு வண்ண சாலையைப் பார்த்தாள்.

‘‘எங்கேன்னு நீ கேட்லியே!’’

‘‘எங்கே?’’

‘‘இப்போ நான் சொல்ல மாட்டேன். லெட் பீ ஏ சர்ப்ரைஸ்...’’

அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமொன்றும் அவளுக்கு இல்லை.

எதிர்பார்த்ததற்கும் முன்பே அவர்கள் நகரத்திற்கு வந்து விட்டார்கள். கடற்கரையில் இருந்த அந்த ஹோட்டலின் முன் பக்கத்தில் மாலை நேர வெயில் விழுந்திருந்தது. மடிப்பு நாற்காலிகளில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தவாறு உட்கார்ந்தார்கள். அந்தப் பெரிய நாற்காலி அவளுக்கக் கொஞ்சம் கூட இணங்கியதாக இல்லை. தன்னுடைய நாற்காலியில் முழுமையாக அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த கிருஷ்ணசந்திரன் அவளைப் பார்த்து வெறுமனே புன்சிரிப்பை தவழவிட்டான்.

‘‘மாலை நேர சூரியனை உன்னோட கண்கள்ல நான் பார்க்கறேன்’’ என்றவன் இரண்டு ஸ்காட்ச் கொண்டு வரச் சொன்னான். கண்ணாடி டம்ளர்களையும், பனிக்கட்டிகளையும் அங்கு வேலை பார்க்கும் பணியாளர் கொண்டு வருவதற்கு முன்பு, அவன் அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மருத்துவமமனையைப் பற்றியும், அங்குள்ள தன்னுடைய ஃப்ளாட்டைப் பற்றியும், காரைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டு அவள் வெறுமனே சிரிக்க மட்டம் செய்தாள்.

பணியாளர் கிருஷ்ணசந்திரனின் டம்ளரில் விஸ்கியைப் பரிமாறினான். அதற்குப் பிறகு லில்லியின் டம்ளரில் பாட்டிலை சாய்க்கும்போது அவன் தடுத்தான்.

‘‘என்னோட வருங்கால மனைவிக்கு ஊற்றிக் கொடுக்க வேண்டியது நான்தான்...’’

அவன் டம்ளரில் ஸ்காட்சை ஊற்றி, பனிக்கட்டிகளைப் போட்டு அவள் கையில் தந்தான். அவன் தன்னுடைய டம்ளரை எடுத்து உயர்த்தினான்.

‘‘ஃபார் எ லாங் ஹோப்பி மேரிட் லைஃப் வித் மெனி சில்ரன்...’’

அவன் உரத்த குரலில் சிரித்தான்.

அவள் ஒரு மடக்கு விஸ்கி குடித்தாள்.

அவன் பீங்கான் தட்டில் இருந்த வறுத்த முந்திரிப் பருப்பை எடுத்து கொறித்தான்.

‘‘நீ அதிகமாக பேசற பொண்ணுல்ல... இல்லையா? பரவாயில்ல. நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து நான் ஒருவனே பேசிடுவேன்.

அவன் தன்னுடைய அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி மீண்டும் விலாவரியாக சொல்லிக் கொண்டிருந்தான். தன்னுடைய நீல நிற டொயோட்டா கார், நான்காவது தெருவில் இருக்கும் மூன்று அறைகளைக் கொண்ட அப்பார்ட்மெண்ட், வளர்ச்சியடையாத நாடுகளில் இருக்கும் மூன்றாவது தலைமுறை, கம்ப்யூட்டர்களை விற்று கோடீஸ்வரர்கள் ஆன உன்னுடைய தந்தை சி.கெ.யைப் போல சார்லஸ் டெரி என்ற நீளமான தலைமுடியைக் கொண்ட தன்னுடைய நண்பன்...

அவன் சொல்லிக் கொண்டிருந்த விஷயங்களில் பாதியைக் கூட அவள் கேட்கவில்லை. அவளின் காதுகளில் சவுக்கு மரங்களில் இருந்து கிளம்பிய காற்றின் இரைச்சல் மட்டுமே இருந்தது. சவுக்கு மரங்களுக்கு அப்பால் கடல் சிவந்து கலங்கிப் போயிருந்தது. கடலுக்கு மேலே சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது.

அவன் தன்னுடைய டம்ளரில் பாட்டிலைக் கவிழ்த்தான்.

‘‘நான் ஒரு குடிகாரன்னு நீ இப்போ நினைச்சிருக்கலாம். அமெரிக்காவுல இருக்கிற சீதோஷ்ண நிலையில் இருந்தும், டென்ஷன்ல இருந்தும் விடுபடுறதுக்கு கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறதைத் தவிர வேற வழியே இல்ல. அப்படித்தான் எனக்கு இந்தப் பழக்கம் உண்டாச்சு. அமெரிக்காவுக்குப் போறதுக்கு முன்னாடி நான்  இதைத் தொட்டது கூட இல்ல. என்னை நம்பு...’’

அவன் கையில் டம்ளரை வைத்தவாறு சற்று முன்னோக்கி சாய்ந்து உட்கார்ந்தான். கடலில் உருகிக் கொண்டிருந்த சிவப்பு சூரியன் அவன் கண்களுக்குள் தெரிந்தது. பனிக்கட்டிகள் விஸ்கியில் சங்கமமாகி கரைந்து கொண்டிருந்தன. தன்னுடைய கண்ணாடி டம்ளரில் இருந்த பொன்னிற திரவத்தில் ஆகாயத்தின் கடுமையான நிறங்கள் தெரிகின்றவா என்று அவள் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அவன் வறுத்த முந்திரிப் பருப்பை எடுத்து வாய்க்குள் போட்டவாறு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தான். தான் சொல்லப் போகிற ஏதோ ஒரு தமாஷான விஷயத்தை நினைத்துப் பார்த்து தனக்குத்தானே அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

‘‘இப்போ பி.ஜி. தானே படிக்கிறே! அது முடிஞ்சதும் என்ன பண்றதா திட்டம்?’’

‘‘நான் இதுவரை எதுவும் திட்டம் போடல...’’

அவள் டம்ளரையே பார்த்தாள். அதில் இருந்த விஸ்கி முழுவதையும் ஒரே மடக்கில் குடித்து விட வேண்டும்போல இருந்தது அவளுக்கு.

‘‘அமெரிக்காவுக்கு வா. அன்றாட வாழ்க்கையில் டென்ஷனும் பிரச்சனைகளும் இருந்தாலும், அமெரிக்க வாழ்க்கை ரொம்பவும் சுவாரசியமானது. கொஞ்ச காலம் நாம அங்கேயே இருப்போம்.’’

அவள் டம்ளரை உயர்த்தி அதில் இருந்த விஸ்கியை ஒரே மடக்கில் குடித்து தீர்த்தாள்.

‘‘எனக்கு ஏதாவது ஒரு குக்கிராமத்திற்குப் போய் ஆதிவாசிகளுக்கு மத்தியில் இருந்து அவர்களுக்காகச் சேவை செய்யணும் போல இருக்கு...’’

அவன் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான். உரத்த குரலில் அவன் குலுங்கி குலுங்கி சிளீத்தான்.

‘‘காட்டுல போய் வாழ்றதுக்காக நாம தலையைப் புண்ணாக்கிட்டுப் படிச்சு பட்டம் வாங்கினோம்? ஆதிவாசிகளுக்கு சிகிச்சை செய்றதுக்கு நாட்டு வைத்தியர்களும் மந்திரவாதிகளும் இருக்காங்க. நம்மோட தேவையே அவங்களுக்கு அவசியமில்ல. நீ கட்டாயம் அமெரிக்காவுக்கு வரணும். நமக்கு ஏற்ற இடம் அதுதான்...’’


அவன் இரண்டு டம்ளர்களிலும் மீண்டும் விஸ்கியை ஊற்றினான். இந்த முறை அவளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. அவன் டம்ளரை காலி செய்வதற்கு முன்பே, அவள் காலி செய்துவிட்டாள். அதைப் பார்த்து அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

‘‘யு ர் ரியலி வெரி ஸ்மார்ட்.’’

அவன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தவாறு ஸஃபாரி ஸுட்டின் மேல் பொத்தான்களைத் திறந்து விட்டான். அவனின் வெண்மையான நெஞ்சுப் பகுதியில் ஸ்பிரிங் சுருளைப் போல ரோமங்கள் கறுப்பாக சுருண்டு கிடந்தன. ‘‘என் நெஞ்சைப் பார்’’ என்று அவன் சொல்லாமல் சொல்வது மாதிரி இருந்தது.

அவன் மீண்டும் தன்னுடைய டம்ளரில் விஸ்கியை ஊற்றுவதற்காக அவள் காத்திருந்தாள். ஆனால், அவன் ஊற்றாமல் நிறுத்திக் கொண்டான். அவள் விஸ்கி பாட்டிலை கையில் எடுத்தபோது, அவன் தடுத்தான்.

‘‘இங்க பார் டியர், இதுக்கு மேல வேணாம். இன்னைக்கு இது போதும். நாம போகலாம்.’’

அவன் அவளின் கையை பாட்டிலை விட்டு அகற்றினான்.

அவன் பில்லுக்குப் பணம் கொடுத்தனுப்பிய பிறகு, அவளின் கையைப் பற்றி எழ வைத்தான். அவளின் கண்களுக்கு முன்னால், சிவந்த, குளிர்ச்சியான பனி படர்ந்து கொண்டிருந்தது.

மங்கலான மின்சார ஒளியினூடே அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு அவன் காருக்கு நேராக நடந்தான். அப்போது அவன் அவளின் காதில் சொன்னான்.

‘‘நான் உன்னை ரொம்பவும் காதலிக்கிறேன். ரொம்பவும்...’’

‘‘அதைக் கேட்டு அவளுக்கு கண்களை அடைத்துக் கொண்டு வந்தது. தலை மிகவும் கனத்துப் போயிருந்த மாதிரி இருந்தது. புரள்வதைப் போல் அவள் உணர்ந்தாள்.

அவளுக்குத் தெரியாத பாதைகளில் கார் போய்க் கொண்டிருந்தது. தலச்சேரிக்கப் போகும் வழியல்ல அது. அவளின் மனதைப் புரிந்துக் கொண்ட மாதிரி அவன் சொன்னான்.

‘‘நான் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன். எங்கேன்னு இப்போ சொல்ல மாட்டேன். அது ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே!’’

‘‘என்னைக் கடலுக்குப் பக்கத்துல கூட்டிட்டுப் போங்க.’’

‘‘இன்னைக்கு அதுக்கு நேரம் எங்கே இருக்கு?’’

‘‘எனக்கு கடலோரத்துல போய் இருக்கணும் போல இருக்கு.’’

‘‘இங்க பாரு லில்லி... இப்பவே மணி எட்டு தாண்டிடுச்சு...’’

அவன் வண்டியை புதிய ஒரு பாதையை நோக்கி திருப்பி கியரை மாற்றி வேகத்தைக் கூட்டினான். அது கடற்கரைக்குப் போகும் வழியல்ல. அவளுக்கு இதுவரை பழக்கமில்லாத பாதைகள்.

மீணடும் வண்டியின் வேகம் குறைந்தது. சரளைக் கற்கள் ஏராளமாக இருந்த பாதை வழியே வண்டி குலுங்கிக் குலங்கி போய்க் கொண்டிருந்தது. கடைசியில் வயலோரத்தில் இருந்த ஒரு சிறு பங்களாவின் முன்னால் போய் கார் நின்றது.

இருண்டு போய்க் கிடந்த கிராமப் புறம். வயலில் ஆங்காங்கே தேங்கி நின்றிருந்த நீருக்குள் வெடிப்புகள் தெரிந்தன. மேலே எங்கிருந்தோ வந்த மேகங்கள் சூழ்ந்து நின்றிருந்தன.

முன்பு ஸீ வ்யூவின் முன்னால் உட்கார்ந்திருந்தபோது, ஆகாயம் அடர்த்தியான நீல நிறத்தில் இருந்தது.

பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு சாவியை எடுத்து கிருஷ்ணசந்திரன் கேட்டின் பூட்டைத் திறந்தான். கேட்டின் ஒரு பக்கம் இருந்த பெயர் பலகையில் வெளிச்சம் இருந்தது. அவள் வாசித்தாள்.

‘டாக்டர் கெ.ஸி. மஜீத் பி.எஸ்.ஸி. எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.’

வராந்தாவிலும் உள்ளேயும் நல்ல வெளிச்சம் இருந்தது. இருப்பினும் கேட்டின் வெளிப்பகுதி பூட்டுப்போட்டு பூட்டப்பட்டிருக்கிறது.

‘‘வா...’’

அவன் அவளின் கையைப் பற்றியவாறு உள்ளே நுழைந்து கேட்டைத் தாழ்போட்டான்.

‘‘டாக்டர் மஜீத்தைத் தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் ஒரே வகுப்புல படிச்சவங்க.’’

‘‘எனக்குத் தெரியாது.’’

‘‘அவன் இங்கே இல்ல. கொடுங்கல்லூருக்கு மனைவியோட வீட்டுக்குப் போயிருக்கான்.’’

‘‘பிறகு நாம எதுக்கு இங்கே வந்தோம்?’’

‘‘ஓ... லில்லி லில்லி...’’

அவன் வராந்தாவில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தான். முற்றத்தில் இருந்த பூச்செடிகளிலும் பூக்களிலும் இருள் விழுந்தது. மற்றொரு பொத்தானை அழுத்தினான். அவன் கேட்டின் பெயர் பலகையில் இருந்த வெளிச்சத்தையும் இல்லாமல் ஆக்கினான். மொத்தத்தில் இந்த வீடு அவனுக்கு நன்கு அறிமுகமான ஒன்று என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

‘‘எதுக்கு விளக்குகளை அணைச்சீங்க?’’

‘‘நீ பக்கத்துல இருக்குறப்போ எனக்கு எதற்கு வேற வெளிச்சம்?’’

அவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான். கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வந்த அந்தச் சிரிப்பு அவளை நடுங்கச் செய்தது.

சிரித்துக் கொண்டே ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த இளம் மஞ்சள் நிறத்திரைச் சீலைகளை அவன் இழுத்துவிட்டான்.

‘‘யாரும் நம்மளைத் தொந்தரவு செய்யக்கூடாது - காற்று கூட’’

அவள் தன்னைச் சுற்றிலும் ஒரு முறை நோட்டமிட்டாள். திரைச்சீலைகள் மஸ்லின் துணிகளால் ஆனவை. மேலே தொங்கிக் கொண்டிருந்த சர விளக்குகள் மட்டுமல்ல, வாசல் கதவுகளில் இருந்த கைப்பிடிகள் கூட பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. மொத்தத்தில் - எல்லா விஷயங்களிலுமே பயங்கரமான ஆடம்பரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த வீடாக அது இருந்தது.

‘‘பசிக்கலையா?’’

அவன் அவளை சாப்பிடும் அறைக்கு அழைத்துக் கொண்டு போனான். மேஜையின் மேல் கிண்ணங்களும், கோப்பைகளும், மற்ற பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன. சில பீங்கான் பாத்திரங்கள் மூடி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பெரிய பீங்கான் பாத்திரம் நிறைய பழங்கள் இருந்தன.

‘‘உட்காரு...’’ - அவன் சொன்னான். ‘‘நீ இன்னைக்கு என்னோட விருந்தாளி...’’

அவன் அவளின் கையைப் பற்றினான். நாற்காலியில் உட்கார வைத்தான். மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் இருந்து ஆவி கிளம்பி வெளியே வந்து கொண்டிருந்தது. அவன் ஒரு பாத்திரத்தின் மூடியைத் திறந்தபோது, அதற்குள்ளிருந்து ஆவி பறக்கும் கோழிக் கறியின் வாசனை மூக்கைத் துளைத்தது.

‘‘ஆளே இல்லாத வீட்டில இதையெல்லாம் யார் செஞ்சது?’’

‘‘மஜீத் ஒரு அருமையான சமையல்காரனை வச்சிருக்கான்.’’

மற்றவர்களைப் பற்றி அவன் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பதில் ஆர்வம் அதிகம் கொண்டவன் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘‘அவன் இங்கே இல்ல...’’ - என்ற அவன் நாப்கினை எடுத்து விரித்து கால்கள் மேல் இட்டான். ‘‘அவன் பேரு அப்துல்லா. ஆனா, நாங்க அவனை அல்லான்னுதான் கூப்பிடுவோம். அன்னம் தருகின்றவன் அல்லாதானே?’’

டாக்டர் கிருஷ்ணசந்திரன் எல்லாவற்றையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கான். மஜீத்தை கொடுங்கல்லூருக்குப் போகச் சொல்லி அவன்தான் அனுப்பியிருக்கிறான். சமையல் வேலைகளை முழுமையாக முடித்து விட்டு சாப்பாட்டு விஷயங்களை மேஜை மேல் வைத்துவிட்டு அப்துல்லாவையும் இடத்தை காலி பண்ண வைத்திருக்கிறான். இப்போது அங்கு இருப்பது அவர்கள் இரண்டு பேர் மட்டுமே.


‘‘இந்த பங்களாவுல இருக்குறது நாம ரெண்டு பேர் மட்டும்தான்’’ - அவன் அவளை நோக்கி புன்னகைத்தான். ‘‘நான் ஒரு நல்ல டாக்டர் மட்டுமல்ல. ஒரு நல்ல ஆர்கனை சரும் கூட என்னோட ஏற்பாடுகளைப் பற்றி என்னுடைய வருங்கால மனைவிக்கு ஒரு மதிப்பு வரணும்ல.’’

அவள் புன்னகைக்க முயற்சி செய்தாள். ஆனால், முடியவில்லை.

‘‘உனக்கு என்ன வேணும்... ஆப்பமும் கோழிக்கறியும்? இல்லாட்டி சப்பாத்தி சாப்பிடுறியா?’’

அவன் கோழிக்கறி இருந்த பீங்கான் பாத்திரத்தை அவளுக்கு நேராக நீட்டினான். அதைப் பரிமாற அவன் முயன்றபோது, அவள் தடுத்தாள்.

‘‘நான்தானே பரிமாறணும்?’’

‘‘அது கல்யாணம் முடிஞ்ச பிறகு...’’

‘‘யாரோட கல்யாணம்?’’ - அவள் கேட்டாள். ஆனால், சத்தம்தான் வெளியே சரியாகக் கேட்கவில்லை.

‘‘என்ன.. என்னை உனக்குப் பிடிக்கலையா?’’ - அவன் அவளின் முகத்தைப் பார்த்தான். ‘‘நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன், பார்ப்பதற்கு அழகா இருப்பவன், நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டவன், அமெரிக்காவுல செட்டில் ஆன டாக்டர்... இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்?’’

அவளின் ஈரம் படிந்திருந்த கறுப்பான விழிகளில் இரவு நேரத்தின் வெண்மையான பனி தெரிந்தது.

‘‘சொல்லு... இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்?’’

‘‘எனக்கு இது எதுவுமே தேவையில்ல...’’ அவள் மனதிற்குள் கூறினாள். ‘‘நான் விரும்புறது எதுவுமே உங்கக்கிட்ட இல்ல...’’

‘‘லில்லி... என்ன ஒண்ணுமே பேசாம இருக்கே? ஏதாவது பேச வேண்டியதுதானே?’’

‘‘எனக்கு விஸ்கி வேணும்...’’

‘‘அவன் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் சிரிக்கச் சிரிக்க அவள் மிகவும் களைப்படைந்ததாள்.’’

‘‘கல்யாணப் பரிசா நான் உனக்கு ஒரு கேஸ் நிறைய ஸ்காட்ச் வாங்கித் தர்றேன். போதுமா? இப்போ நீ இதைச் சாப்பிடு.’’

அவன் வாசனை பரப்பிக் கொண்டிருந்த கோழிக்கறியை அவளின் தட்டில் பரிமாறினான்.

‘‘ஹா... என்ன வாசனை!’’

அவன் தன்னுடைய தட்டிலும் கோழிக்கறியைப் பரிமாறினான்.

‘‘சொல்லப் போனால் நான் ஒரு சாப்பாட்டு ராமன். லில்லி... தெரியுதா? அதைப் பற்றி நீ ஒண்ணும் வித்தியாசமா நினைக்காதே. அளவுக்கும் அதிகமான ஆர்வத்துடன் அவன் சாப்பிட ஆரம்பித்தான். அவளைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களிலுமே அவன் அளவுக்கு அதிகம்தான். அளவுக்கும் அதிகமான ஆரோக்கியமும், அழகும், படிப்பும், பணமும். அளவுக்கும் அதிகமான பசியும், தாகமும்...’’

‘‘நீ  ஒண்ணும் சாப்பிடலைன்னா, அல்லாவால அதைத் தாங்கிக்கவே முடியாது.’’

அவன் ஒரு ஆப்பத்தை எடுத்து இரண்டாகப் பிய்த்து ஒரு பகுதியை கோழிக்கறியில் தொட்டு அவளின் வாயில் வைத்தான்.

கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் அது. தன்னையே அறியாமல் அவள் தன்னுடைய வாயைத் திறந்தாள்.

‘‘இப்படித்தான் சொன்னபடி நடக்கணும்.’’

அவன் மகிழ்ச்சியுடன் அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘‘நீ சாப்பிடுறதைப் பார்க்குறப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?’’

மீண்டும் வரவேற்பறைக்குச் சென்று அமர்ந்த லில்லி சுவரில் தொங்கிக் கொண்டிருந்த க்வார்ட்ஸ் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து ஆகியிருந்தது.

இவ்வளவு தாமதம் ஆகியிருக்கக் கூடாது. வீடு இங்கிருந்து கிட்டத்தட்ட இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. தன் தந்தையும், தாயும் தனக்காகக் காத்திருப்பார்கள் என்று நினைத்தாள் அவள்.

‘‘இப்போதே புறப்பட்டால் பதினொரு மணிக்குள் வீட்டை அடைந்து விடலாம். நான் உடனே புறப்படணும்.’’

‘‘அவனிடம் சொல்வதற்காக அவள் மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள். தொடர்ந்து தன்னுடைய கைக்கடிகாரத்தையும்.’’

‘‘உடனே போகணுமா என்ன?’’ - அவன் கேட்டான். ‘‘என்னுடைய இரவு தினமுமம் தாமதமாகத்தான் ஆரம்பிக்கும். ரெண்டு மணிக்கு முன்னாடி படுத்தா எனக்கு தூக்கமே வராது.’’

‘‘எனக்கும் சீக்கிரம் தூக்கம் வராது.’’

‘‘பிறகு வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போற? இன்னைக்கு இதுவ நம்மோட வீடா இருக்கட்டுமே! இது நம்மோட படுக்கையறை...’’

அவன் முத்துச்சரங்கள் திரைச்சீலையாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு அறையைச் சுட்டிக் காட்டினான். அங்கே நீல வெளிச்சம் தெரிந்தது. முத்துக்கள் வழியாக அவள் வெண்மை நிறத்தில் இருந்த படுக்கையைப் பார்த்தாள்.

‘‘கமான் லில்லி... வா... நாம படுக்கையறையைப் பார்க்கலாம்.’’

டாக்டர் மஜீத்தின் படுக்கையறையை நான் ஏன் பார்க்க வேண்டும்? - அவள் மனதிற்குள் கூறினாள்.

அவன் அவளைப் பிடித்து எழுந்திருக்கச் செய்தான். முத்துக்களை நீக்கி படுக்கையறைக்குள் நுழைந்தார்கள். அங்கும் பட்டும், முத்தும், கண்ணாடிகளும்தான்... ஆடம்பரத்தின் வெளிப்பாடு அந்த அறையெங்கும் காணப்பட்டது.

வெள்ளியால் ஆன ஒரு ஃப்ரேமில் வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படம் -

‘‘அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லையே?’’ -அவன் புகைப்படத்தின் முன்னால் போய் நின்றான். புகைப்படத்தில் டாக்டர் மஜீத்தும் அவன் மனைவி ஜமீலா பீவியும் இருந்தார்கள்.

அவள் மிகவும் அழகாக இருந்தாள். மஜீத் நீண்ட மூக்கையும் பிரகாசமான முகத்தையும் கொண்டிருந்தான்.

பொத்தான்களைக் கழற்றி சட்டையை உடம்பிலிருந்து நீக்கியவாறு டாக்டர் கிருஷ்ணசந்திரன் அந்தப் புகைப்படத்தைக் கையிலெடுத்தான்.

‘‘டேய் டாக்டர் மஜீத்... நீயும் உன் மனைவியும் கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் திரும்பி இருங்க. இந்தப் பக்கம் நடக்குற எதையும் பார்க்கக்கூடாது.’’

அவன் புகைப்படத்தைச் சுவரில் திருப்பி வைத்துவிட்டு, அவளை நோக்கி சிரித்தான்.

‘‘இனி நம்மை யாரும் தொந்தரவு செய்யப் போறதில்ல...’’

யாராவது வந்து உண்மையிலேயே தொந்தரவு செய்தால்... அவள் அப்படித்தான் நடக்க வேண்டும் என்று விரும்பினாள். கதவை யாராவது தட்டமாட்டார்களா என்ற ஆர்வத்துடன் அவள் எதிர்பார்த்தாள்.

‘‘சரி... புடவையை மாற்ற வேண்டாமா -?’’

அவள் கடிகாரத்தைப் பார்த்தாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் மெதுவாக அவளின் அருகில் சென்று அவளின் இடது கையைப் பிடித்துத் தூக்கி, கடிகாரத்தைக் கழற்றினான்.

‘‘இனி எப்படி நமக்கு நேரம் தெரியும்?’’ - அவன் விழுந்து விழுந்து சிரித்தான். ‘உலகத்தின் எல்லா கடிகாரங்களும் நின்னிடுச்சு. இனி யாருக்குமே நேரம்ன்றது தெரியாது.’’

அவன் தன்னுடைய உள்ளங்கையில் இருந்த லில்லியின் கடிகாரத்தைப் பார்த்தான். அது ஒரு சாதாரண கடிகாரம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு அது வாங்கப்பட்டிருக்க வேண்டும். ‘‘உன் அப்பா எவ்வளவு பெரிய பணக்காரர்! இருந்தும், இந்தக் கடிகாரத்தையா உனக்கு வாங்கித் தந்திருக்கிறார்?’’

அவன் அவளின் மென்மையான கையை, தன்னுடைய கையிலெடுத்து அதை மெதுவாகத் தடவினான்.

‘‘உன் கைக்குப் பொருத்தமாக இருக்குற கடிகாரம் என் மனசுல இருக்கு. தங்க வார் உள்ள ஒரு பெரிய முத்து போல இருக்குற ஒரு கடிகாரம்...’’


அவன் கடிகாரத்தை ட்ரஸ்ஸிங் டேபிளின் மேல் வைத்தான். பிறகு ஒரு பக்கம் இருந்த கபோர்டைத் திறந்து அதிலிருந்து ஒரு படடு நைட்டியை வெளியே எடுத்தான். நல்ல வெண்மை நிறத்தில் இருந்தது அது. கைகளிலும் கழுத்துப் பகுதியிலும் லேஸ் வைத்து அது தைக்கப்பட்டிருந்தது.

‘‘இதைப் போட்டிக்கோ...’’

‘‘வேண்டாம்.’’

அவள் தலையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டினாள்.

‘‘இதை போட்டின்னா, குழந்தைகள் கதைகள்ல வர்ற இளவரசியைப் போல நீ இருப்பே...’’ அவன் அந்த பட்டுத் துணியை அவளுக்கு நேராக நீட்டினான்.

அவள் அதை வாங்கவில்லை.

‘‘நீ இதை போடலைன்னா, நான் போட்டுக்கிறேன்...’’

அவன் அந்த நைட்டியை ஹேங்களில் இருந்து எடுத்து, தன்னுடைய பேன்ட்டுக்கு மேலே அணிந்தான். அவனுடைய முழுங்கால் வரையே அது இருந்தது.

‘‘எப்படி இருக்கு?’’

வெளிச்சத்தில் நகர்ந்து நின்றவாறு அவன் கேட்டான்.

அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். கையால் வாயை மூடியபிறகும், அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துச் சிரித்து கண்ணில் நீரே வந்துவிட்டது.

அவன் விளக்கை அணைத்தான். இப்போது அறையில் மழைக்காலத்தின் நிலவொளியைப் போல, ஒரு மங்கலான வெளிச்சம் மட்டும் இருந்தது.

அவளின் சிரிப்பு முழுமையாக நின்றது.

‘‘என்ன... சிரிப்பை நிறுத்திட்டே?’’

அவன் அவளின் அருகில் வந்தமர்ந்தான்.

‘‘நீ சிரிக்குறப்போ ஒரு ஓவியம் மாதிரியே இருக்கே. இன்னொரு தடவை சிரி... பார்ப்போம்.’’

லேஸ் வைத்து தைக்கப்பட்டிருந்த தூய வெண்மை நிற நைட்டியை அணிந்து தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டரின் முகத்தைப் பார்த்தபோது, அவளுக்கு உண்மையாகவே மீண்டும் சிரிப்பு வந்தது.

‘‘அவன் தன்னுடைய முகத்தை முன்னால் கொண்டு வந்து அவளின் கண்களில் முத்தம் தந்தான். அவன் கைகளில் கிடந்தவாறு அவள் மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டே இருந்தாள். கோலோன் தடவப்பட்ட அவனின் முகம் அவளின் தலை முடியில் உரசியது. அவன் மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் பட்டது.’’

‘‘உன் தலை என்னைப் பார்த்து என்னென்னவோ சொல்லுது.’’

அவளுடைய தன்னுடைய காதை அவளின் தலையோடு சேர்த்து வைத்தான்.

‘‘என் தலை என்ன சொல்லுது?’’

‘‘என்னை ரொம்பவும் பிடிக்குதுன்னு...’’

அவள் மவுனமாக இருந்தாள்.

‘‘என்னைப் பிடிக்கலையா?’’

அவள் மவுனத்தில் கூட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டாள். அவன் அவளின் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. அவன் தன்னுடைய மூக்கால் அவளின் மிருதுவான வயிற்றில் உரசி விளையாடினான். தொடர்ந்து அவளின் பாதங்களில் தன்னுடைய உதடுகளால் தடவினான். அவள் கூச்சத்தால் தன்னுடைய கால்களை இழுக்கப் பார்த்தபோது அவன் இரு கால்ல்ளையும் இறுகப் பற்றிக் கொண்டான். பாதங்களில் பட்ட அவனின் சூடான மூச்சுக்காற்று அவளை மேலும் கூச்சமடையச் செய்தது. தன்னையும் மீறி அவள் சிரித்தாள்.

வெளியே மழைத் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச் சீலைகளில் மின்னல் தெரிவதும் மறைவதுமாய் இருந்தது.

படுக்கையில் தளர்ந்து படுத்திருந்த அவளின் கன்னத்திலும் தாடையிலும் விரல்களை ஒட்டியவாறு அவன் ஞாபகப்படுத்தினான்.

‘‘நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையே!’’

என்ன கேள்வி என்று கேட்பது மாதிரி அவள் செருகிக் கொண்டிருந்த தன்னுடைய கண்களளல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘‘என்னை உனக்குப் பிடிக்குதா?’’

எந்தவித பதிலும் சொல்லாமல் அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள். அவன் அவளின் மூடியிருந்த கண்களின் வெளிப்பகுதியை சுட்டு விரலால் தடவினான்.

‘‘சொல்றதா இல்லைன்னா வேண்டாம். உன்னை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. போதுமா?’’

அவன் எழுந்தான். விளக்கைப் போட்டான். கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று வியர்¬¬ வழிந்து கொண்டிருந்த தன்னுடைய மார்புப் பகுதியில் கோலோனை ஸ்ப்ரே செய்தான். சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு, தலையை வாரினான்.

‘‘சரி... எழுந்திரு. போக வேண்டாமா?’’

அவருக்கு எங்கு போகவும் தோன்றவில்லை. வெயில் வந்து கன்னத்தில் படும்வரை போர்வையை மூடி நன்றாகத் தூங்க வேண்டும் போல் இருந்தது. தன் தலையிலும் மனதிலும் ஒன்றுறும இல்லை போல் உணர்ந்தாள் அவள். மூளையும் இதயமும் எங்கோ இருக்கும் இடத்தை விட்டு பறந்து போய்விட்டது போல் அவளுக்குத் தோன்றியது.

அவன் அவளைப் பிடித்து எழ வைத்தான்.

‘‘இங்க பாரு... சீக்கிரம்... இப்பவே நேரமாயிடுச்சு.’’

இப்போது அவனுக்குத்தான் அவசரம். அவன் அவளைக் கண்ணாடியின் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். ஹேர் ப்ரஷ்ஷை எடுத்து அவள் கையில் தந்தான்.

‘‘தலை முடியை வாரு...’’

அவன் தன் கை விரல்களால் விளையாடி அவளின் தலை முடியை இப்படியும் அப்படியுமாய் கலைத்துவிட்டிருந்தான். அவள் அவனிடமிருந்து ப்ரஷ்ஷை வாங்கி இயந்திரத்தனமா£ முடியை வாரினாள். கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய சொந்த முகத்தைப் பார்க்கவே அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

‘‘இந்தா கடிகாரம்.’’

அவள் புடவையை அணிந்தபோது தன்னுடைய பாக்கெட்டில் கையை விட்டு அவன் கடிககரத்தை எடுத்து அவள் கையில் கட்டினான்.

காரில் அமர்ந்திருந்தபோதுதான் அவளே கவனித்தாள்.

அது அவள் இதற்கு முன்பு கட்டியிருந்த அவளின் பழைய கைக்கடிகாரம் அல்ல. பொன் நிற வாரைக் கொண்ட ஒரு பெரிய முத்தைப் போன்ற ஒரு புதிய கடிகாரம்.

‘‘பிடிச்சிருக்கா?’’

அவள் எந்தவித பதிலும் சொல்லாமல் இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது வின்ட் ஸ்க்ரீனின் மேல் மழைத் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. நனைந்து போயிருந்த பாதையில் கார் படுவேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

வீட்டிற்கு முன்னால் கார் வந்து நிற்கும்போது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. பங்களாவில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தவாறு நின்றிருந்த தன் தந்தையை அவள் தூரத்தில் வரும்போதே பாரத்துவிட்டாள்.

‘‘குட் நைட், டியர்...’’ - டாக்டர் கிருஷ்ணசந்திரன் அவளின் கையை மெதுவாக அழுத்தினான்ன் ‘‘நாளைக்கு ஃபோன் பண்றேன்.’’

அவன் காரை பின்னோக்கி எடுத்து வேகமாக ஓட்டிக்கொண்டு போனான்.

புடவைத் தலைப்பை தோள் மேல் தூக்கி போட்ட லில்லி குனிந்த தலையுடன் கேட்டைக் கடந்தாள். முற்றத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. மலர்ந்திருந்த காகிதப் பூக்களில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த மழைத் துளிகள் அவள் மேல் விழுந்தன.

தன் தந்தையின் முன்னால் போய் நின்றபோது, அவள் தலை மேலும் குனிந்தது.

சி.கெ.மகளின் முகத்தையே பார்த்தார். அவரின் தடித்துப் போயிருந்த உதடுகளில் புன்னகை நெளிந்தது.

‘‘குட் நைட் லில்லி.’’


வேவ எதுவுமே சொல்லாமல் அவர் தன்னுடைய படுக்கையறையை நோக்கி ஏறிப்போனார்.

அவள் தன்னுடைய அறைக்குள் நுழைந்து விளக்கைப் போடாமல் ஸ்டீரியோ சிஸ்டத்திற்கு முன்னால் போய் உட்கார்ந்தாள். அடுத்த நிமிடம் இருட்டைக் கிழித்துக் கொண்டு டெனர்சாக்ஸில் இருந்த இசை கிளம்பி வந்து அறையை நிறைத்தது. புடவையைக் கூட மாற்றாமல் அவள் படுக்கையில் கவிழ்ந்தாள். டேர்ன் டேபில் டிங்க்... திரும்ப, ஸாடாவோ வட்டனாபேயம் கிறிஸ்உட்டும் மாறி மாறி வந்தார்கள். பாதி இரவின் இருட்டினூடே... ஜாஸ் அறை முழுக்க பரவிக்கொண்டிருந்தது.

6

காலையில் சி.கெ.யும் மேஜர் நம்பியாரும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, லில்லி காலைச் சிற்றுண்டிக்காக ப்ரேக்ஃபாஸ்ட் மேஜைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். பேசுவதற்கிடையில் சி.கெ. உரத்த குரலில் சிரிக்கவும், அவ்வப்போது ‘‘தாங்க்யூ’’ ‘‘தாங்க்யூ’’ என்று கூறிக் கொண்டிருந்தார்.

ரிஸீவரை கீழே வைத்து விட்டு தன்னுடைய மனைவியின் பக்கம் திரும்பிய அவர் சொன்னார்.

‘‘எல்லாம் நான் நினைச்சதைப் போலவே நடக்கும், மடப்புரமுத்தப்பனோட உதவியுடன்.’’

அடுத்த நிமிடம் லில்லியின் தாய் மகளின் முகத்தைப் பார்த்து இதயபூர்வமாகப் புன்னகைத்தாள்.

‘‘தேர்வு முடிஞ்ச பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு அவங்க சொல்றாங்க. டாக்டருக்கு ரெண்டு மாசம் விடுமுறை இருக்கு.’’

சி.கெ. மகளின் முகத்தைப் பார்த்தார். அவளின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளின் வெளிப்பாடும் இல்லை. பால் கலக்காத காபியை கப்பில் ஊற்றி எந்தவித ஓசையும் எழுப்பாமல் அமைதியாக அவள் குடித்துக் கொண்டிருந்தாள்.

‘‘அச்சுதன் நாயர் பத்து மணிக்கு வருவார். அப்போ புறப்படத் தயாரா இருக்கணும். படிப்பு பாதிச்சிடக் கூடாது.’’

‘‘இனி என் மகளுக்கு படிப்பு தலையில ஏறுமா என்ன?’’

தாய் மகளைச் சீண்டினாள். அவள் சிவந்து போயிருந்த மாம்பழத்தை கத்தியால் அறுத்து ஒரு துண்டை எடுத்து வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தாள்.

‘‘என் மகள் அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படக் கூடிய ரகம் இல்ல. அவளோட முகத்தைப் பாரு... நாம எவ்வளவு பேசிக்கிட்டு இருந்தாலும், மகளோட முகத்துல ஏதாவது வித்தியாசம் தெரியுதா?’’

தந்தை சொன்னதைக் கேட்டு அவள் சிரிக்க முயற்சி செய்தும், அவளுக்குச் சிரிப்பு வரவில்லை. அவள் எல்லாவற்றையும் மனதிற்குள் பூட்டிக்கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். வெளியே வாயைத் திறந்து ஏதாவது சொன்னால் அதை நிச்சயம் தன் தந்தையும், தாயும் புரிந்து கொள்ளப் போவதில்லை என்பதை அவள் நன்றாகவே அறிவாள். இவ்வளவு பெரிய பங்களாவில் தங்கக்கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் கிளியைப் போலஅவள் என்றும் தனித்தே இருந்தாள்.

‘‘மணி ஒன்பது...’’

சி.கெ. வேகமாக நாற்காலியைப் பின்னோக்கி தள்ளியவாறு எழுந்தார். அவர் யாரையோ மீண்டும் தொலைபேசியில் அழைத்து பேசத் தொடங்கினார்.

‘‘நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரணும்.’’

லில்லி எழுந்தாள்.

‘‘நீ இப்போ எங்கே போற?’’ - சி.கெ. தொலைபேசியை கீழே வைத்தார். மற்றொரு எண்ணை விரல்களால் சுழற்றியவாறு அவர் சொன்னார்.

‘‘அச்சுதன் நாயர் இப்போ இங்கே வருவார். உடனே புறப்பட்டால்தான் இருட்டுறதுக்குள்ளே காலேஜில் போய் சேர முடியும்.

‘‘நான் இதோ வந்திர்றேன்.’’

அவள் தலை முடியை வாரி கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டாள்.

எங்கே இப்போது அவள் செல்கிறாள் என்பதை அவளின் தந்தையோ, தாயோ கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரியும்.

அவள் காரை ஸ்டார்ட் செய்து கேட் வழியாக வெளியே ஓட்டினாள். பாதையில் நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்த வானம் அடர்த்தியான நீல நிறத்தில் இருந்தது. ஆற்றின் மேல் இருந்த பாலத்தின் வழியாக அவள் கார் நீந்தியது.

நகரத்தின் ஆரவாரம் நிறைந்த சாலையை விட்டு ஆற்றங்கரையில் இருந்த செம்மண் பாதையின் வழியாக கார் ஓடியது. பாதையின் ஒரு பக்கத்தில் ஒரு சிறு வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு சில பெண்கள் நார் உரித்துக் கொண்டிருந்தார்கள். நார் உரிக்கும் வாசனை அந்தப் பகுதி முழுவதும் பரவியிருந்தது. வாய்க்காலில் ஒரு இடத்தில் சேற்றில் வெள்ளைத் தாமரை மலர்கள் விரிந்து அழகு காட்டிக் கொண்டிருந்தன.

வாய்க்காலின் மேல் தென்மையால் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் அருகில் அவள் காரை நிறுத்தினாள். அதற்கு மேல் கார் போகாது.

நார் உரித்துக் கொண்டிருந்த பெண்கள் ஆச்சரியம் மேலோங்க அவளையும் காரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். குடிசைகளில் இருந்த குழந்தைகள் ஓடி வந்து காரைச் சுற்றிலும் நின்றன.

அவள் காரை விட்டு கீழே இறங்கினாள். புடவையைத் தோள் மேல் இழுத்து விட்டவாறு வாய்க்காலை அவள் கடந்தாள். தென்னை மரத்தால் ஆன பாலத்தின் மேல் பேலன்ஸ்செய்து அவள் நடக்கும்போது, அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்த நார் உரித்துக் கொண்டிருந்த ஒரு வயதான பாட்டி சொன்னாள்.

‘‘பார்த்து மகளே...’’

அவள் புன்னகைத்தாள்.

வாய்க்காலின் கரையில் பயங்கர சேறு இருந்தது. அதில் நடக்கும்போது அவளின் செருப்பு அதில் ஆழமாகப் பதிந்தது.

வாய்க்காலைக் கடந்து நடந்து சென்றபோது, தென்னை மரங்களுக்கு மத்தியில் இருந்த சத்யனின் வீட்டை அவள் பார்த்தாள். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் அவள் மனம் துடித்தது. முற்றத்தில் வழக்கம்போல பூச்செடிகள் நிறைய வளர்ந்திருந்தன. நீல சங்கு புஷ்பங்களும், சிவப்பு வண்ண பகோடா மலர்களும் அதிகமாக இருந்தன.

அவள் அங்கு வந்து கிட்டத்தட்டட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அவள் நினைத்துப் பார்த்தாள். போனமுறை விடுமுறையில், அவள் வந்தபோது, சத்யன் அங்கு இல்லை. அவன் வெளியூருக்குப் பயணம் போயிருந்தான். இடுக்கி மாவட்டத்தின் காட்டுப் பகுதிகளில் ஆதிவாசிகளடன் தான் செலவழித்த அந்த நாட்களைப் பற்றி அவன் அவளுக்கு கடிதம் எழுதியிருந்தான். ‘‘பறவைகளின் மாமிசத்தைத் தின்பதற்கும் காட்டுத் தேனைக் குடிப்பதற்கும்தான் பொதுவாக நான் இங்கு வந்தேன். ஆனால்... நான் இங்கு பார்த்ததென்னவோ பட்டினியையும், நோயையும் மட்டும்தான். இங்கிருக்கும் பறவைகளுக்கும் கூட பசி...’’

சத்யனின் வீடு ஓடு வேய்ந்த ஒரு சிறு வீடு அவளைப் பார்த்ததும் அவன் தாய் வெளியே வந்தாள். 

‘‘யாரு? லில்லியா?’’ - அவள் ஆச்சரியம் மேலோங்கக் கேட்டாள். ‘‘மகளே, நீ எப்போ வந்தே?’’

‘‘நேற்று...’’

சத்யனின் தாய் ஒரு முண்டைக் கொண்டு வந்து தூசியைத் தட்டி விட்டு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டாள்.

‘‘மகளே, உட்காரு.’’

‘‘நான் சீக்கிரம் போகணும். அம்மா... சத்யன் வீட்ல இல்லையா?


அச்சுதன் நாயர் மார்க்ஃபோர் காரைத் துடைத்து தயார் பண்ணி அனேகமாக இப்போது காத்திருப்பார் என்று அவள் மனம் அப்போது நினைத்தது.

‘‘அவன் குளிச்சிட்டு இருக்கான் மகளே, உட்காரு. என்ன குடிக்கிற?’’

‘‘ஒண்ணும் வேண்டாம்...’’

குடிப்பதற்கு ஏதாவது எடுத்து வருவதற்காக சத்யனின் தாய் உள்ளே சென்றாள். லில்லியை அவள் எப்போது பார்த்தாலும், அவளையும் மீறி ஒருவித பதைபதைப்பு வந்து ஒட்டிக் கொள்ளும்.

அவளுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் சத்யன். இரண்டாவது விலீனன்.

லில்லிக்கு எவ்வளவோ விருப்பமான வீடு அது. அவர்களுடன் அவளுக்கு எந்தவித இரத்த உறவும் கிடையாது. இருந்தாலும், அந்த வீட்டுடங்ன அவளுக்குப் புரிந்து கொள்ள முடியாத ஒரு உறவு உண்டாகி விட்டிருக்கிறது என்பதென்னவோ உண்மை.

‘‘விபனன் எங்கே?’’

வாசற்படியில் நின்றிருந்த அந்த வயதான தாயின் முகம் வாடுவதை லில்லி கவனித்தாள். அந்தத் தாய் வார்த்தைகளுக்காக தடுமாறிக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.

‘‘என்ன ஆச்சு அம்மா!’’

‘‘ஊரை விட்டுப் போயி அஞ்சு மாசமாச்சு. அவனைப் பற்றிய எந்தத் தகவலும் இந்த நிமிஷம் வரை இல்ல. ஒரு கடிதம் கூட அவன் போடல...’’

அந்தத் தாயின் கண்கள் நனைந்தன. அவளின் முகத்தைப் பார்த்தபோது அதற்கு மேல் அவளிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்ற எண்ணமே லில்லிக்கு தோன்றவில்லை.

விபினனுக்கு வயது பதினெட்டு இருக்கும். லில்லியை அவன் எப்போதும் பயங்கர மரியாதையுடன் பார்ப்பான். மிகவும் மெலிந்து போய், கிறங்கிப்போன கண்களுடன் எப்போதும் காட்சியளிப்பான்.

‘‘அவன் கஞ்சா குடிக்கிறான்.’’

ஒரு நாள் சத்யன் சொன்னான்.

விலீனனுக்கு என்னவோ நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு கடிதம் கூடவா போடாமல் இருப்பான்? அவன் தாய் எல்லா கோவல்களுக்கும் போய் அர்ச்சனைகள் செய்தாள். இரவு முழுக்க தூக்கமில்லாமல் அவனைப் பற்றிய நினைவுகளுடனே படுக்கையில் படுத்துக் கிடந்தாள்.

விபினனின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். அவனுக்கு அப்படி ஏதாவது நடந்து விட்டால்...

லில்லி முற்றத்தில் இருந்த பூச்செடிகளைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். வேலியில் படர்ந்து கிடந்த சங்கு புஷ்பங்களையும் அடர்த்தியாக வளர்ந்து நின்ற சிவப்பு வண்ண பகோடாக்களையும், கனமான மஞ்சள் நிற செட்டிப் பூக்களையும் அவள் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன.

இந்த முற்றத்தில் எப்போதும் மலர்கள்தான் -

பி.யு.சி. படிக்கு சமயத்தில்தான் அவள் முதல் தடவையாக சத்யனுடன் இந்த வீட்டிற்கு வந்தாள். அப்போதும் இதேபோல இதே பூக்கள் முற்றத்தில் நிறைந்திருந்தன.

‘‘இந்தப் பொண்ணு யாருடா?’’

முகத்தில் சிறு ரோமங்கள். லேசாக வெட்டப்பட்ட நரைத்த தலைமுடி.

‘‘என் கூட படிக்கிற பொண்ணுப்பா. பேரு - லில்லி’’

சத்யனின் தந்தை அவளையே உற்றுப் பார்த்தார்.

‘‘இது என்ன பாரீஸ்னு உனக்கு நினைப்பா? பொண்ணுகளைக் கூட கூட்டிட்டு நடந்து திரியிறதுக்கு...’’

தந்தையும் மகனும் ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டார்கள்.

அவள் பதைபதைப்புடன் நின்றிருந்தாள். சத்யன் சொன்னான்.

‘‘லில்லி, உள்ளே வா. அம்மாவைப் பார்க்க வேண்டாமா?’’

அவனின் தாய் கேட்டாள்.

‘‘யாருடா இந்தப் பொண்ணு?’’

‘‘சி.கெ.வோட மகள்.’’

‘‘என்ன?’’

திண்ணையில் உட்கார்ந்திருந்த அவனின் தந்தை எழுந்தார். அவனின் தாய் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றாள். வீட்டிற்கு வந்த பெண்ணை உட்காரச் சொல்லக்கூட அவர்கள் மறந்து போனார்கள்.

‘‘அம்மா, லில்லி உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கா.’’

மகன் சொல்வதில் நம்பிக்கை வராமல் அவன் தாய் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தாள்.

‘‘அம்மா... லில்லியை உட்காரச் சொல்லுங்க.’’

‘‘உட்காரு மகளே.’’

அவள் அடுத்த நிமிடம் பதைபதைப்பு மேலோங்க ஒரு நாற்காலியை தூசு தட்டி அவளுக்கு நேராகக் கொண்டு வந்து போட்டாள். லில்லி புத்தகங்களை மடியில் வைத்தவாறு அதில் உட்கார்ந்தாள்.

அவள் இப்போது அமர்ந்திருக்கும் அதே நாற்காலிதான்.

சத்யனின் தந்தையை அதற்குப் பிறகு அவள் பார்த்ததேயில்லை. சாராயக் க¬¬யில் அவர் இறந்து கிடந்தார் என்று பின்னர் ஒரு நாள் அவள் அறிந்தாள்.

அதற்குப் பிறகு பல முறை அவள் இந்த வீட்டிற்கு வந்து விட்டாள். பி.எஸ்.ஸி. முடித்து நகரத்தில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த பிறகும், இங்கு வருவதை அவள் நிறுத்தவில்லை. விடுமுறைக்கு வரும்போதெல்லாம் கட்டாயம் இந்த வீட்டிற்கு அவள் வரத் தவறுவதில்லை.

பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் தெரிந்த மாதிரியும், தெரியாத மாதிரியும் பலவற்றையும் பேசினார்கள். சத்யனின் தாய் மனதில் ஒரு நெருப்பே எரிந்து கொண்டிருந்தது.

‘‘நானும் லில்லியும் நண்பர்கள் அவ்வளவுதான். அதற்கு மேல ஒண்ணுமில்ல... அம்மா, நீங்க நம்புங்கள்.’’

முதலில் அவன் தாய் நம்பவில்லை. இப்போது நம்புகிறாள். ஆனால், ஊரில் உள்ளவர்களை நினைக்கிறபோது.... குறிப்பாக சி.கெ.யைப் பற்றி நினைத்துப் பார்க்கிறபோது...

‘‘லில்லி, நீ வந்திருக்கும் விஷயம் எனக்குத் தெயும்’’

‘‘யார்சொன்னது?’’

‘‘ஒரு கிளி’’

அவன் சிரித்தான். நனைந்த சோப்பின் மணம் ‘‘கமகம’’ என்று அந்த இடம் முழுக்கப் பரவியது.

அவன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சிஜீய கண்ணாடியை எடுத்து வாசற் கதவின் அருகில் போய் நின்று தலைமுடியை வாரினான். அவன் முன்பு இருந்ததை விட இப்போது கொஞ்சம் தடித்திருப்பதைப் போல் அவளுக்குத் தோன்றியது. தோள்களில் இலேசாக சதை கூடியிருந்தது. முதுகிலும் கழுத்திலும் கூட சதை போட்டிருந்தது.

முடியை வாரிய பிறகு உள்ளே போன சத்யன் கை இல்லாத ஒரு பனியனை அணிந்தவாறு திரும்பி வந்தான்.

‘‘தேர்வு முடிஞ்சிருச்சா?’’

‘‘இல்ல...’’

‘‘பிறகு... இப்போ?’’

‘‘அப்பா என்னை அழைச்சிட்டு வரச்சொல்லி ஆள் அனுப்பியிருந்தாரு. இன்னைக்கே நான் திரும்பிப் போகணும்...’’

அதைப் பற்றி அவன் அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை.

‘‘வா... நாம திண்ணையில் உட்கார்ந்து பேசுவோம். உஸ்ஸ்... என்ன வெப்பம்!’’

குளித்துவிட்டு வந்த அவனுக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது. இரவு மழை பெய்தது காரணமாக இருக்கலாம்.

அவள் அறையை விட்டு திண்ணைக்கு வந்தாள். காலை நேர வெயில் சிவந்து காணப்பட்ட பகோடாக்கள் நெருப்பு பிடித்து எரிவதைப் போல் பிரகாசமாக இருந்தது. செட்டிப் பூக்கள் உருகி அவற்றின் மஞ்சள் நிறம் வெயிலில் படர்வதைப் போல் இருந்தது...

‘‘விபினனைப் பற்றி அம்மா சொன்னாங்க.’’

‘‘அவன் எங்கேயும் போயிருக்க மாட்டான். ஊர் சுற்றிவிட்டு திரும்பி வருவான். அவனைப் பற்றி அம்மாவுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும்.’’


அவன் தாய் வாசலில் முகத்தைக் காட்டியவாறு சொன்னாள். ‘‘கஞ்சி வேண்டாமா? ரெண்டு பேரும் வாங்க.’’

இப்போ வேண்டாம்மா. நானும் சத்யனும் கொஞ்சம் நடந்துட்டு வர்றோம்.

அவள் அருகில் வைத்திருந்த காரின் சாவியைக் கையில் எடுத்தாள். அவன் மீண்டும் உள்ளே போய் ஒரு சட்டையை எடுத்துப்போட்டுக் கொண்டு வெளியே வந்தான். அது இஸ்திரி போடாமல் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போதும் அவன் பொதுவாக ஆடைகளுக்கு இஸ்திரி போடுவதில்லை.

‘‘அம்மா, நாங்க போயிட்டு வர்றோம்.’’

‘‘இது நல்ல கதைதான். லில்லி இதுவரை வந்திட்டு ஒரு டம்ளர் சாயா கூட குடிக்காம போறதா?’’

‘‘அடுத்த முறை வர்றப்போ ரெண்டு டம்ளர் சாயாவை ஒண்ணா வாங்கிக் குடிச்சிட்டாப்போகுது. சரியா?’’

அவள் சொன்னதைக் கேட்டு, சத்யனின் தாய்க்கு சிரிப்பு வந்தது.

சத்யன் ஜன்னலின் அருகில் நின்றவாறு பீடியையும், துப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு லில்லியுடன் சேர்ந்து வெளியே புறப்பட்டான். அவன் சார்மினார் புகைப்பதை நிறுத்திவிட்டிருந்தான்.

‘‘நான் இப்போ ஒரு வேலை பார்க்கிறேன்.’’

‘‘அதை ஏன் என்கிட்ட சொல்லல?’’

அவன் சொன்னதைக் கேட்டு, அவள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தாள்.

சத்யன் எம்.எம்.ஸி. கணக்கு படித்தவன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதோடு நிற்காமல், நல்ல ரேங்க்கையும் கைவசம் வைத்திருந்தான். ஐ.ஐ.டி.யில் சேர வேண்டும் என்பது அவன் விருப்பம். ஆனால், அட்மிஷன் முழுமையாக முடிவடைந்து விட்டது. பொருளாதார வசதி இல்லாததால்,அவன் மனதில் ஆசைப்பட்டபடி அதில் சேர முடியாமற்போய்விட்டது.

அதற்குப் பிறகு கல்லூரியில் விரிவுரையாளர் வேலைக்கு அவன் முயற்சி செய்துபார்த்தான். அதுவும் கிடைக்காமற் போனபோது, பள்ளியில் முயற்சி செய்தான். எல்லாவற்றுக்குமே பணம் தேவைப்பட்டது. அது அவன் கையில் இல்லாததால், அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.

‘‘பணம் வேணும்னா கொஞ்சமும் தயங்காம என்கிட்ட சொல்லணும்’’ - சென்ன் முறை பார்க்கும்போது வேலை எதுவும் இல்லாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்த அவனைப் பார்த்த அவள் சொன்னாள். ‘‘நான் தர்றேன்...’’

‘‘பணத்தைக் கொடுத்து வாங்குற வேலை எனக்கு வேண்டாம். கஷ்டப்பட்டு படிச்சு ரேங்க் வாங்கியது போதாதா? பணமும் கொடுக்கணுமா என்ன?’’

பிறகு எப்படி அவனுக்கு இப்போது வேலை கிடைத்தது?

‘‘எந்தக் காலேஜ்ல?’’

அவள் மகிழ்ச்சியுடன் கேட்டாள்.

அதைக்கேட்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.

‘‘காலேஜ்ல வேலைன்னு யார் சொன்னது?’’

‘‘அப்ப எந்த பள்ளிக்கூடத்துல?’’

‘‘சொல்றேன்...’’

சத்யனும் லில்லியும் ஆற்றங்கரையோரமாக நடந்தார்கள். வீடுகளில் இருந்தவாறு பலரும் அவர்களைப் பார்த்தார்கள். நார் உரித்துக் கொண்டிருந்த இளம் பெண்கள் வியப்புடன் அவர்கள் நோட்டமிட்டார்கள்.

‘‘சீக்கிரம் போகணுமா?’’

காரின் அருகே போனபோது அவன் கேட்டான்.

‘‘இல்ல...’’

‘‘சரி... அப்படின்னா நாம ஒண்ணா உட்கார்ந்து சாயா குடிக்கலாம். பிறகு... நான் வேலை செய்ற இடத்தை உனக்கு காட்டுறேன்.’’

‘‘கார்ல போவோம்.’’

அவன் நேராக நடந்து செல்வதைப் பார்த்து அவள் சொன்னான்.

‘‘அச்சுதன் நாயர் அனேகமாக காத்திருப்பார்.’’

அவன் கார் கதவைத் திறந்து அவள் அருகில் அமர்ந்தான். ஆற்றங்கரையில் கார் ஓடிக்கொண்டிருந்தது. நார் உரித்துக் கொண்டிருந்த பெண்கள் அவர்களை மறைந்திருந்து பார்த்தார்கள். அவர்கள் தங்களுக்குள் என்னவோ சொல்லி சிரித்தார்கள். அதைப் பார்த்த சத்யன் சொன்னான்.

சி.கெ.யோட மகள். டாக்டர். இருந்தாலும் பெண்ணுக்கு தைரியம் அதிகம்தான். நாலு ஆளுங்க பார்ப்பாங்களேன்னு எண்ணம் கொஞ்சமும் இல்ல.’’

ஓடிக் கொண்டிருந்த காரில் இருந்தவாறு அவர்கள் இருவரும் சிரித்தார்கள்.

ஆற்றங்கரை வழியே கார் முன்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது. சத்யன் பாதையைக் காட்டிக் கொண்டிருந்தான். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் மண் பானைகள் விற்கும் ஒரு கடையை அடைந்ததும், அவள் காரை நிறுத்தினாள். அதற்குப் பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை இருந்தது.

‘‘எனக்கு புட்டும் கடலையும் உனக்கு?’’

‘‘எனக்கும்தான்.’’

அவன் காரை விட்டு இறங்கி தேநீர் கடையை நோக்கி நடந்தான். வெறுமையாய் கிடந்த பாதையில் தூசியைக் கிளப்பியவாறு ஒரு பஸ் கடந்து போனது.

அவர்கள் காரில் இருந்தவாறு புட்டும் கடலையும் சாப்பிட்டார்கள். நகரத்திற்கு பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த சிறுமிகளுக்கு அவர்களைப் பார்த்து, வெட்கம் வந்தது.

லேசாக ஓரம் சிதைந்திருந்த கிண்ணத்தில் காரமான கடலையுடன் ஆவி பறந்து கொண்டிருந்த புட்டை கலந்து அவள் ஆர்வத்துடன் சாப்பிட்டாள். இடையில் பால் கலக்காத தேநீரைக் குடித்தாள்.

‘‘இந்த ஊர்லயே நல்ல சுவையான சாயா கிடைக்குறது அனந்தனோட இந்தக் கடையிலதான்.’’

அனந்தன் கேட்கும் வண்ணம் அவன் உரத்த குரலில் சொன்னான்.

‘‘அனந்தனோட சாயாவைக் குடிச்சாத்தான் என் மனசுக்கு திருப்தி.’’

சத்யன் அடுப்பில் இருந்த நெருப்புக் கட்டையை எடுத்து பீடியைப் பற்ற வைத்தான்.

‘‘இது யாரோடகார்?’’

‘‘அந்தப் பெண்ணோடது.’’

‘‘சி.கே.யோட மகள்தானே? எனக்குத் தெரியும்.’’

அனந்தன் கண்களைச் சுருக்கிக்கொண்டு சிரித்தான்.

சத்யான் காசு கொடுத்து விட்டு, மீண்டும் காருக்குள் வந்தான். கார் புறப்பட்டது. அவன் காட்டிய வழியில் அவள் காரை ஓட்டினாள். அவளுக்குத் தெரிந்தவரையில் அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடமோ கல்லூரியோ நிச்சயமாக இல்லை.

ஒரு மேட்டின் மேல் ஏறி இறங்கிய கார் இலேசாக குலுங்கி, வயலையொட்டி இருந்த கரைப் பக்கம் திரும்பியது. அவன் வண்டியை நிறுத்தச் சொன்னான். வயலில் இருந்த நீரில் கார் தெரிந்தது.

‘‘அதோ தெரியுதே... அதுதான் நான் வேலை பார்க்குற இடம்.’’

அவன் இடது பக்கம் கையைக் காட்டினான். அங்கே ஒரு பெரிய பங்களாவின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கல்லும் சிமெண்ட்டும் கம்பிகளும் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.

அவன் கார் கதவைத் திறந்து வெளியே இறங்கினான்.

‘‘எனக்கு கம்பி வேலை. கம்பிகளை வளைச்சா நாளொன்ணுக்கு முப்பது ரூபா கிடைக்கும். ராத்திரியும் வேலை செய்றதா இருந்தா ஐம்பதோ அறுபதோ கிடைக்கும். காலேஜ்ல படிச்சா இவ்வளவு ரூபா கிடைக்குமா, லில்லி?’’

அவளால் நம்ப முடியவில்லை.

அவன் சட்டையைக் கழற்றி பக்கத்திலிருந்த மாமரத்தின் கிளையில் தொங்கவிட்டான். வேட்டியை மடித்துக் கட்டியவாறு ஒரு பெரிய கம்பியை எடுத்து தேவையான அளவுக்கு அதை வளைத்தான். அவனின் கைகளிலும், தோளிலும் இருந்த சதைப் பகுதியில் சூரிய வெளிச்சம் பிரகாசித்தது.

‘‘எப்படி?’’

திரும்பவும் காரின் அருகில் வந்த அவன் கேட்டான்.

‘‘ரெண்டு கம்பிகளை வளைச்சு காட்டவா?’’


‘‘போதும்... போதும்.... உண்மையாகவே ஹெர்குலிஸ்தான். ஒத்துக்குறேன்.’’

ஒரு நிமிட மவுனத்திற்குப் பிறகு அவன் சொன்னான்.

‘‘கூலி வேலை செய்றதுக்காக எல்லாரும் என்னை ஒரு மாதிரி பேசுறாங்க. இதுல வெட்கப்படுறதுக்கு என்ன இருக்கு? எனக்கு உண்மையாகவே  இதைச் செய்றதுல சந்தோஷம்தான்.’’

அவவ் முகத்தைப் பார்த்து அவன் வெகுளித்தனமாக சிரித்தான்.

‘‘இனி நீ போகலாம். அச்சுதன் நாயர் உனக்காக காத்திருப்பார்ல.’’

க்ளட்சின் மீது அவளின் அழகான பாதமும் கியரின் மேல் அவளின் வெண்மையான நீளமான கை விரல்களும் இருந்தன. கார் முன்னால் போக மனமில்லாது மாதிரி அங்கேயே அசையாமல் நின்றிருந்தது.

காரைக் கிளப்பாமல், அதற்குள் அசையாமல் உட்கார்ந்திருந்த லில்லியை நோ£கி மீண்டும் சத்யன் வந்தான். அவள் தன்னிடம் ஏதோ கூற விரும்புவதைப் போல் அவனுக்குப் பட்டது.

‘‘என்ன லில்லி?’’

அவன் கார் கதவின்மேல் கையை வைத்து நின்றவாறு அவளின் முகத்தைப் பார்த்தான். ஷாம்புவின் வாசனை வந்து கொண்டிருந்த அவளின் தலை முடியில் வெயில்பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது. பாதையைத் தாண்டியிருந்த புதர்களின் மேல் காற்று மோதி வீசிக் கொண்டிருந்தது.

‘‘ஒரு விசேஷம்... சொல்லட்டுமா?’’

‘‘என்ன விசேஷம்?’’

இவ்வளவு நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது சொல்லாத அப்படிப்பட்ட விசேஷம் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள அவனும் ஆவலாகவே இருந்தான். அவன் கார் கதவைத் திறந்து அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்தான்.

‘‘சொல்லு லில்லி.’’

‘‘எனக்கு ஒரு ப்ரப்போஸல் வந்திருக்கு.’’

‘‘யார் அந்த அதிர்ஷ்டசாலி?’’

‘‘அமெரிக்காவுல செட்டிலான ஒரு டாக்டர்.’’

‘‘ஆள் பார்க்க எப்படி இருக்காப்ல?’’

‘‘நல்லா அழகாவே இருக்காரு...’’

‘‘வாழ்த்துக்கள், லில்லி...’’ - அவன் மகிழ்ச்சி பொங்க கூறினான். ‘‘ஆமா... நீ ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லல?’’

சி.கெ. லில்லியை ஆள் அனுப்பி ஏன் வரவழைத்தான் என்பதற்கான காரணத்தை அவன் புரிந்து கொண்டான்.

‘‘அவரோட பேரை நீ சொல்லலையே?’’

‘‘டாக்டர் கிருஷ்ணசந்திரன்.’’

‘‘பேரு நல்லாவே இருக்கு. சரி... ஆளை நீ பார்த்தியா?’’

‘‘ம்...’’

‘‘கொஞ்சம் விளக்கமா சொல்லு நான் மனசுல கற்பனை பண்ணி பார்க்கிறேன்.’’

‘‘நல்ல வெள்ளை நிறம். நல்ல உயரம் பார்த்தால் வெள்ளைக்காரன் மாதிரி இருப்பார்.’’

‘‘ஆடைகள்?’’

‘‘ஸஃபாரி ஸுட்...’’

‘‘இப்போ டாக்டர் கிருஷ்ணசந்திரனை தெளிவா என்னால மனசுல பார்க்க முடியுது. லில்லி... உண்மையிலேயே நீ அதிர்ஷ்டசாலிதான். இனிமேல் யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை நடத்த வேண்டியதுதான்.’’

அவள் காரை ஸ்டார்ட் செய்தாள். வெயிலும் நிழலும் விழுந்து கொண்டிருந்த பாதை வழியாக கார் நீந்தியது. எந்தவித இலக்கும் இல்லாமல் அவள் வெறுமனே காரை ஓட்டினாள். வானத்தில் வெண்மையான மேகங்களுக்கு மத்தியில் நீல வண்ணத்தில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது.

காரை ஓட்டியபடியே அவள் முதல் நாள் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவனிடம் விவரமாகக் கூறினாள். ஹோட்டலில் அமர்ந்து ஸ்காட்ச் அருந்திய விஷயத்தைச் சொன்னபோது, சத்யன் சொன்னான்.

‘‘லில்லி... நீ அப்படி நடந்திருக்கக் கூடாது.’’

‘‘கிருஷ்ணசந்திரன் என்னை ஹிப்னாட்டைஸ் செஞ்சிட்டான். சத்யன், உனக்கு தெரியாதா? மதுன்னாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காதுன்னு...’’

‘‘பிறகு...?’’

அவள் கிருஷ்ணசந்திரனுடன் அமர்ந்து பேசிய விஷயங்களை சிறிதளவு கூட விடாமல் எல்லாவற்றையும் விளக்கமாக அவனிடம் கூறினாள். தலை முழுக்க ஸ்காட்ச்சின் பாதிப்புடன் ஹோட்டல் கேட்டைக் கடந்து வெளியே வந்த கட்டத்தைக் கூறியபோது, சத்யன் சொன்னான்.

‘‘காரை கொஞ்சம் நிறுத்து. நாம எங்கேயாவது போய் உட்கார்ந்து பேசலாம்.’’

இல்லாவிட்டால் அவள் எங்கே காரைக் கொண்டு போய் எதிலாவது மோதி  இடித்து விடுவாளோ என்று அவன் பயந்தான். அவனுக்கு கார் ஓட்டத் தெரியாது.

அவள் பாதையோரத்தில் காரை நிறுத்தினாள். இடது பக்கத்தில் ஒரு சிற மைதானம் இருந்தது. அங்கே வளர்ந்திருந்த புற்களை மேய்ந்தவாறு பசுக்கள் நடந்து கொண்டிருந்தன. அவர்கள் இருவரும் காரை விட்டு இறங்கினார்கள். பசுக்களுக்கு மத்தியில் அவர்கள் எதுவுமே பேசாமல் நடந்தார்கள். பசுக்கள் ஈரமான தங்களின் கண்களால் அவர்களை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மீண்டும் புற்களை மேய்வதில் கவனத்தைச் செலுத்தின.

‘‘பரீட்சை முடிஞ்ச உடனே கல்யாணம் நடக்கணம்னு அப்பா சொல்றாரு.’’

பச்சைச் புல் மேல் நடந்த அவளின் செருப்புகள் இல்லாத பாதங்கள் நனைந்தன.

‘‘என்ன சத்யன்... ஒண்ணுமே பேசல?’’

‘‘நான் உள்ளபடியே சந்தோஷப்படுறேன். நான் பல நேரங்கள்ல உனக்கு வரப்போற கணவன் எப்படி இருப்பான்னு கற்பனை பண்ணி பார்ப்பதுண்டு. நான் எப்படி மனசுல கற்பனை பண்ணி வச்சிருந்தேனோ, கிட்டத்தட்ட அப்படியேதான் கிருஷ்ணசந்திரன் இருக்காப்ல...’’

‘‘ஆனா, எனக்கு அந்த ஆளைப் பிடிக்கல...’’

‘‘.ன் உண்மையாத்தான் சொல்றேன்.’’

அவன் அவளின் கைகளைப் பற்றி புல் மேல் அமர வைத்தான். அவனும் அருகில் அமர்ந்தான். உடம்பில் கருப்பு புள்ளிகள் இருந்த வெள்ளைப் பசு அவர்களுக்குப் பக்கத்தில் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தது. அதன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சிறு மணி அவ்வப்போது ‘‘க்ணிங் க்ணிங்’’ என்று ஒசை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

‘‘லில்லி... நீ என்ன சொல்றேன்னு என்னால புரிஞ்சிக்க முடியல. நீங்க ஒண்ணாவே ஒரு சாயங்கால நேரத்துல இருந்திருக்கீங்க. ஒண்ணா படுத்திருக்கீங்க. பிறகு நீ சொல்ற... உனக்கு அந்த ஆளைப் பிடிக்கலைன்னு...’’

‘‘ஐ ஹேட் ஹிம்...’’

அவள் கால் நகங்களால் பசும்புல்லில் வரைந்து கொண்டிருந்தாள்.

‘‘என்னால அந்த ஆளை கணவனா கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியல...’’

அவன் ஒரு பீடியைப் பற்ற வைத்து புகையை ஊதியவாறு தூரத்தில் ஆகாயத்தைப் பார்த்தான். அங்கு ‘பளிச்’சென பிரகாசித்துக் கொண்டிருந்தன. நீலவண்ணம் வெடித்துக் கொண்டிருந்தது. நொறுங்கி விழுந்த நீலவண்ண துண்டுகள் வெயிலில் ஓடிக்கொண்டிருந்தன.

‘‘நான் என்ன செய்யட்டும் சத்யன்? அப்பா சொன்ன வாக்கை மீறி நடக்க தைரியம் இல்ல...’’

‘‘நீ கதைகள்ல வர்ற கதாநாயகியைப் போல பேசுற’’- அவன் சீரியஸான குரலில் சொன்னான். ‘‘கிருஷ்ணசந்திரனைப் பிடிக்கலைன்னா, உன் அப்பாக்கிட்ட நீ மனம் திறந்து சொல்லிடுறதுதான் சரி.’’

‘‘அவ்வளவுதான்... - எங்கப்பா என்னைக் கொன்னுடுவாரு.’’

‘‘உனக்கு சொல்றதுக்கு தைரியம் இல்லைன்னா நான் வேணும்னா சொல்றேன்.’’

‘‘அப்பா உன்னையும் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.’’

‘‘அப்படி ஒவ்வொருத்தரையும் கொலை செய்றதா இருந்தா, இந்தத் தலச்சேரியில் உயிரோட யாருமே இருக்க முடியாது.’’


‘‘என்ன செய்யணும்னே எனக்கு தெரியல...’’

அவள் ஒரு குருவியைப் போல இலக்கு இல்லாமல் அலை பாய்ந்த மனதுடன் அமர்ந்திருந்தாள்.

‘‘நீ பரீட்சையில தோல்வி அடைஞ்சிடுவியோன்னு நான் பயப்படுறேன். உங்க அப்பா ஏன் இந்த நேரத்துல இப்படியொரு விஷயத்துல இறங்கினாரு?’’

‘‘தப்பு என் பக்கம்தான். நான் கிருஷ்ணசந்திரன் கூட போயிருக்கக்கூடாது.’’

‘‘ஃபர்கெட் இட்...’’ - அவன் சொன்னான். ‘‘எது எப்படியிருந்தாலும், லில்லி... உடனே நகரத்துக்குப் போக வேண்டாம். நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்குறேன். சாயங்காலம் நீ ஸ்டேடியதுக்கு வர்றியா? நான் அங்கே இருப்பேன்...’’

தன் காலை நக்கிக் கொண்டிருந்த பசுவின் கன்றை தலையில் மெதுவாக தடவியவாறு சத்யன் எழுந்தான். அவனுடன் லில்லியும் எழுந்தாள்.

அவளின் தோளில் கையைப் போட்டவாறு அவளுடன் சேர்ந்து நடந்த சத்யன் சொன்னான்.

‘‘லில்லி... உலகத்துல இருக்குறதுலயே நீதான் என்னோட நெருங்கிய ஃப்ரண்ட்  இந்த மாதிரியான நேரத்துல உனக்கு உதவலைன்னா, என்னோட நட்புக்கு என்னதான் அர்த்தம்? நான் உன் விஷயத்துல நிச்சயம் ஒரு நல்ல முடிவைச் சொல்றேன்.’’

அவர்கள் நடந்து காட்டுக்குப் பக்கத்தில் வந்தார்கள். அவள் தன் மனதில் தன்னுடைய தந்தையை நினைத்துப் பார்த்தாள். கோபக்காரரான, கறாரான குணத்தைக் கொண்ட தந்தை... அவள் கடவுளை விட அதிகமாக சி.கெ.யைப் பார்த்து பயப்படுகிறாள்.

‘‘தைரியமா இரு... லில்லி!’’

அவன் அவள் தோளில் இருந்த கையை எடுத்து அவளின் தாடையில் லேசாகத் தட்டினான். அவள் தன்னை மீறி அப்போது புன்னகைத்தாள்.

கார் மீண்டும் ஓடத் தொடங்கியது. பின்னோக்கி வண்டியை எடுத்த அவள் வந்த வழியே ஓட்டினாள். சத்யன் வேலை செய்யும் இடத்தை அடைந்ததும், காரை நிறுத்தினாள்.

‘சாயங்காலம் அஞ்சு மணிக்கு நான் ஸ்டேடியத்துல உனக்காக காத்திருக்கேன்.’’

அவன் காரை விட்டு இறங்கியதும், வண்டி மீண்டும் ஓடத் தொடங்கியது. மேடுகளும், பள்ளங்களுமாய் சரளைக் கற்கள் நிறைந்த அந்தப் பாதையில் காரோட்டிச் செல்லும்போது, அவள் மனதில் பலவித எண்ணங்களும் அலை புரண்டு போய்க் கொண்டிருந்தன. கஞ்சா குடித்துக் குடித்து மனதும் உடம்பும் தளர்ந்து போன விபினன் என்ற இளைஞன்... ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவன்  திரும்பி வருவானா? கூலி வேலை செய்து கொண்டிருக்கும் எம்.எஸ்ஸி படித்து ரேங்க் வாங்கியிருக்கும் சத்யன். முதல் சந்திப்பிலேயே தன்னுடைய வருங்கால மனைவிக்கு படுக்கையறையைத் தயார் பண்ணி வைத்திருந்த டாக்டர் கிருஷ்ணசந்திரன். இந்த உலகமே ஒரு விதத்தில் பார்த்தால் விசித்தரமான ஒன்றாகத் தோன்றியது அவளுக்கு.

கார் வீட்டிற்கு முன்னால் வந்து விட்டதை அவள் உணரவேயில்லை.

வாசலில் பெரிய மடக்கு நாற்காலியைப் போட்டுக் கொண்டு வெளியே பார்த்தவாறு அமர்ந்திருந்த தன்னுடைய தந்தையை தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டாள் அவள். தோய்த்து இஸ்திரி போட்ட சட்டையும் வேட்டியும் அணிந்து புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்தார் அச்சுதன் நாயர். தோளில் மடித்து போடப்பட்டிருந்த மஃப்ளர் வேறு. நகரத்தை நோக்கி போகிறபோது அந்த மஃப்ளரை எடுத்துக் கொள்ள எப்போதும் மறக்க மாட்டார் அவர்.

‘‘அச்சுதன் நாயரற்... பெட்டியை எடுத்து கார்ல வைங்க...’’

சி.கெ. சொன்னார். அச்சுதன் நாயர் வராந்தாவில் இருந்த லில்லியின் சிவப்பு வண்ண சூட்கேஸையும் கேசட் ப்ளேயரையும் எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார்.

‘‘நான் இன்னைக்கு போகல...’’

வராந்தாவில் ஏறிய லில்லி சொன்னாள். அதைக்கேட்டு அச்சுதன் நாயர் கையில் பெட்டியுடனும், கேசட் ப்ளேயருடனும் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றுவிட்டார்.

‘‘பரீட்சை நடக்குதுன்றதை ஞாபகத்துல வச்சுக்கோ.’’

‘‘நாளை பொழுது விடியிறதுக்கு முன்னாடி போனாப் போதும்.’’

‘‘உன் மனசு மாறினதுக்குக் காரணம்? அவன் மாற்றி விட்டுட்டானா?’’

அதைக் கேட்டு லில்லி அதிர்ந்து விட்டாள். அவள் மனது பனியைப் போல உருகத் தொடங்கிவிட்டது. அவள் தன்னுடைய கீழுதட்டைக் கடித்து மனதில் தைரியத்தைக் கொண்டு வர முயற்சித்தாள்.

‘‘எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நீ நெனைச்சிக்கிட்டு இருக்கியா? இந்தத் தலச்சேரியில் எது நடந்தாஓலும், அது கட்டாயம் எனக்குத் தெரியாமல் போகாது.’’

‘‘அப்பா... நீங்க என்ன சொல்றீங்க?’’

‘‘அந்தப் பிச்சைக்காரப் பய சத்யனோட உனக்கு இருக்குற நட்பைப் பற்றிச் சொல்றேன்.’’

‘‘அப்பா, நீங்க தப்பா நினைக்கிறீங்க. நாங்க வெறும் நண்பர்கள். அவ்வளவுதான்...’’

சி.கெ. நாற்காலியை விட்டு எழுந்து ஒரு பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸை எடுத்து நெருப்பைப் பற்ற வைத்து ஊதியவாறு வாசலில் இங்குமங்குமாய் நடந்தார். புடவைத் தலைப்பை தோள் மீது இழுத்து விட்டுக் கொண்ட லில்லி தன் தந்தையையே பார்த்தவாறு நின்றிருந்தாள். காருக்குப் பக்கத்தில் என்ன செய்வது என்ற தடுமாற்றத்துடன் அச்சுதன் நாயர் நின்றிருந்தார்.

வாயில் இருந்த சிகரெட்டை பாதி எரிந்த நிலையில் சாம்பல் தட்டில் போட்ட  சி.கெ. மகளுக்கு முன்னால் வந்து நின்றார்.

‘‘லில்லி...’’

அவரின் குரலில் சற்று கனம் கூடியிருந்தது.

‘‘மற்ற எதை வேணும்னாலும் என்னால பொறுத்துக்க முடியும். விளையாட்டுத்தனம் பண்றது மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது...’’

அவள் கண்களில் கோபத்தின் ரேகைகள் தெரிந்தன. என்னவோ சொல்வதற்காக வாயைத் திறக்க முற்பட்டாள். அதற்குள் அவள் தந்தை சொன்னார்.

‘‘இங்கே பார்... நீ சொல்றது எதையும் நான் கேட்க விரும்பல. இப்பவே நேரம் அதிகம் ஆயிடுச்சு. உடனே புறப்படு...’’

அச்சுதன் நாயர் காரின் கதவைத் திறந்து சூட்கேஸையும் கேசட் ப்ளேயரையும் பின்னிருக்கையில் வைத்தார். சூட்கேஸில் அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவள் தாய் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தாள்.

அவள் முன்னால் வைத்த தன்னுடைய கால்களை பின்னோக்கி வைத்தாள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் குடிக்க வேண்டும் என்று நினைத்தாள். பிறகு என்ன நினைத்தாளோ வேண்டாம் என்று அதை ஒதுக்கி வைத்து விட்டாள்.

அடுத்த நிமிடம் அவளை ஏற்றிக் கொண்டு புதிதாக வாங்கிய மார்க் ஃபோர் கேட்டைக் கடந்து தெருவில் இறங்கியது. அவள் இருக்கையில் கண்களை மூடியவாறு சாய்ந்தாள்.

தன் தந்தையை எதிர்த்து நிற்க தன்னால் எந்தக் காலத்திலும் முடியாது என்பதை அவள் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். தன் தந்தையின் வாக்கு அவளைப் பொறுத்தவரை கடவுளின் வாக்கைப் போல. அவளின் தந்தை ஒரு தீர்மானம் எடுத்தாரென்றால், அதுதான் கடைசி தீர்மானம். சி.கெ.யைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது, பயத்தால் அவள் மனதில் நடுக்கம் உண்டானது.


 அவளுக்கு சி.கெ. ஒரு தந்தை மட்டுமல்ல. அவளின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சக்தி அவர். தன்னுடைய ஒவ்வொரு காலடி வைப்பையும் கட்டுப் படுத்திக் கொண்டிருப்பதும், தன்னுடைய வாழ்க்கையின் மேல் எங்கோ தூரத்தில் இருக்கும் கிரகங்களைப் போல ஆட்சி செய்து கொண்டிரப்பதும் தன்னுடைய தந்தைதான் என்பதை அவள் அறியாமல் இல்லை.

அவளின் வெளுத்த உடம்பில் வியர்வை அரும்பி வழிந்து கொண்டிருந்தது. கன்னத்தில் தலை முடி விளையாடிக் கொண்டிருந்தது.

பலமான கடற்காற்று காருக்குள் புகுந்து வந்தபோது, அவள் கண்களைத் திறந்தாள். ஒரு பக்கம் நீலக்கடல் வெயிலில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கடல் நீருக்கு மேலே மென்மையான நீல மேகங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. காற்றில் பறந்து முகத்தில் வந்து விழுந்து கண் பார்வையை மறைக்க முடிகளை கையால் நீக்கி ஒதுக்கி விட்ட லில்லி கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நெற்றியில் வியர்வை அரும்பியபோது, அவளின் தலை யெங்கும் ஒருவித குளிர்ச்சி உண்டானதை அவள் உணர்ந்தாள். மனதில் அமைதி வந்து ஒட்டிக்கொண்டதைப் போல் இருந்தது அவளுக்கு.

கார் ஸ்டேடியத்தைக் கடந்து, ஒவ்வொரு தெருவையும் தாண்டி, எங்கோ தூரத்தில் மலையின் மேல் இருக்கும் மருத்துவக் கல்லூரியை இலக்காக வைத்து  ஓடியது.

7

ரு கையில் சூட்கேஸையும் இன்னொரு கையில் கேசட் ப்ளேயரையும் வைத்துக் கொண்டு காட்டுக்குள் நடப்பது என்பது அவளுக்கு மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாகவே இருந்தது. இருந்தாலும் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவள் காட்டுக்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் மறைந்து விட வேண்டும் என்று நினைத்தாள். மரங்கள் வழியாக பார்த்தபோது பாதையோரத்தில் உட்கார்ந்து சிறுநீர் கழித்துக் கொண்டிரந்த அச்சுதன் நாயர் நன்றாகவே அவள் கண்களுக்குத் தெரிந்தார்.

தரையில் முழங்கால் அளவிற்கு காட்டு புற்களும் கள்ளிச்செடிகளும் வளர்ந்திருந்தன. புற்களுக்கு மத்தியில் என்னவோ பாய்ந்து போய்க் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அசையும் புற்கள்தான் தெரிந்ததே தவிர, வேறு எந்த உயிரும் அவள் கண்களுக்குத் தெரியவில்லை. வேறொரு சூழ்நிலையாக இருந்தால், பயத்தால் அந்த இடத்தை விட்டு அவள் சிறிது கூட நகர்ந்திருக்க மாட்டாள். ஆனால், அச்சுதன் நாயரிடமிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே அவளின் மனதில் அப்போது இருந்ததால், வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் அவள் நினைத்துப் பார்க்கவே இல்லை. கடந்து போனது என்ன என்பதை கிட்டத்தட்ட அவள் மறந்தே போனாள்.

நடக்கும்போது அவள் சூட்கேஸை அந்தக் கைக்கு மாற்றி, கேசட் ப்ளேயரை இந்தக் கைக்கு மாற்றினாள். கேசட் ப்ளேயர்தான் மிகவும் கனமாக இருந்தது. சூட்கேஸில் அவசியம் வேண்டுமென்ற புடவைகளும், படிப்பதற்காக எடுத்து வைத்த சில பாடப் புத்தகங்களும் மட்டுமே இருந்தன. அந்தப் பெட்டியும் ப்ளேயரும் மட்டும் தற்போது அவளின் கைகளில் இல்லாமல் இருந்திருந்தால், இதற்குள் அவள் ஓடி காட்டுக்குள் எங்கோ மறைந்து போய் விட்டிருப்பாள்.

அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கு மத்தியில் சில இடங்களில் நீர் காணப்பட்டது. இரண்டு முறை அவள் கால்கள் தடுமாறின. கள்ள முற்கள் பட்டு புடவை கிழிந்து, கணுக்காலில் இரத்தம் வழிந்தது.

சிறிது தூரத்தில் அவள் ஒரு பெரிய பாறையைப் பார்த்தாள். காட்டில் யாரோ ஒரு அரக்கன் கொண்டு வைத்ததைப் போல இருந்த அந்தப் பெரிய பாறை ஒரு மாட்டு வண்டி அளவிற்குப் பெரிதாக இருந்தது. அதன் அடிபாகம் முழுக்க பாசி படர்ந்திருந்தது.

அவள் கையில் இருந்த பொருட்களைக் கீழே வைத்து விட்டு பாறையின் பின்னால் மறைந்து நின்றாள். அச்சுதன் நாயர் அவளைத் தேடிக் கொண்டு எந்த நிமிடமும் அங்கு வந்தாலும் வரலாம். அவர் வருவதற்கு முன்பு தான் காட்டுக்குள் எங்காவது தூரத்தில் போய் மறைந்து கொள்ள வேண்டும். அவர் மட்டுமல்ல, தன்னை யாருமே கண்டுபிடித்து விட முடியாத அளவிற்கு அடர்ந்த காட்டிற்குள் போய் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

பெட்டியைக் கனமாக இருக்கச் செய்வது மருத்துவம் சம்பந்தமான புத்தகங்கள்தாம். அவள் சூட்கேஸைத் திறந்து அந்த கனமான புத்தகங்களை எடுத்து பாறையில் மேல் வைத்தாள். இனி இந்தப் புத்தகங்கள் அவளுக்கு எப்போதுமே தேவையில்லை. தேர்வு தொடங்குவதற்கு முன்பே, அதன் தேவை முடிந்துவிட்டது.

அவள் கனம் குறைந்து போன சூட்கேஸையும் கேசட் ப்ளேயரையும் கையில் எடுத்துக் கொண்டு தன் நடையைத் தொடர்ந்தாள். அரை மணி நேரம் நடந்த பிறகு, ஒரு ஒற்றையடிப் பாதை அவள் கண்களில் தெரிந்தது. உயர வளர்ந்திருந்த காட்டுச் செடிகளுக்கும் பெரிய பெரிய கற்களுக்கும் மத்தியில் அந்த காட்டுப் பாதை நீளமாக ஓடிக்கொண்டிருந்தது. ‘‘இந்தப் பாதை எங்கு நோக்கிப் போகிறது? எங்குப் போனால் என்ன... மனிதன் ஒருத்தனைக் கூட வழியில் பார்க்காமல் இருந்தால் சரி என்று நினைத்தாள். எல்லா மனிதர்கள் மேலும் அவளுக்கு பயங்கர வெறுப்பு உண்டானது.

அச்சுதன் நாயரால் இனிமேல் தன்னைக் கண்டு பிடிக்க முடியாது என்ற முடிவுக்கு அவள் வந்துவிட்டாள். தலையை விட்டு ஒரு பெரிய பாரம் இறங்கியதைப் போல் இருந்தது அவளுக்கு.

ஒரு காட்டு மரத்தின் கிளையில் இருந்த சில குருவிகள் அவளைப் பார்த்து ஓசைகள் எழுப்பின. கிளிகள் அவளை வரவேற்பதுபோல் இருந்தது. அந்தப் பகுதி முழுவதும் மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்கள் சிதறிக் கிடந்தன. மரங்களின் கிளைகளுக்கு மத்தியில் நீல வண்ணத்தில் ஆகாயம் தெரிந்தது.

அவளின் கால்களுக்கு வேகம் கூடியது. காட்டுப் பாதை வழியாக பல வண்ணங்களைக் கொண்ட பட்டாம்பூச்சியைப் போல அவள் சிறகு விரித்து நடந்து சென்றாள்.

ஒற்றையடிப் பாதை வழியே நடந்து நடந்து அவள் ஒரு மேட்டை அடைந்தாள். அங்கே முருங்கை இலைகளைப் போல சிறிய இலைகளைக் கொண்ட மரங்கள் நிறைய பக்கங்களிலும் பார்த்தாள். சற்று தூரத்தில் ஒரு பெரிய பாறைக் கூட்டத்தைப் பார்த்ததும் அவளின் மனதில் ஆனந்தம் அலை மோதியது. பாறைகளுக்கு மத்தியில் அமர்ந்து சீக்கோ ஃப்ரீமேன் சீனியரின் ஜாஸ் இசையைக் கேட்க அவள் ஆசைப்பட்டாள்.

ஒரு முறை கடற்கரையில் பாறைகளுக்கு மத்தியில் அமர்ந்து ஜாஸ் இசையைக் கேட்பதற்காக அவள் கேசட் ப்ளேயரைக் கையில் எடுத்துக் கொண்டு அங்கே சென்றாள்.


ஆகாயத்தில் மழை பெய்து கொண்டிருந்த ஒரு காலை நேரமது. கடல் காலை நேர வெயிலில் பளபளத்தது. பாறைகள் நனைந்திருந்தன.

பாதையில் காரை நிறுத்தி விட்டு, ப்ளேயரைக் கையில் வைத்துக்கொண்டு மணலில் அவள் நடக்கும்போது, மீனவக் குழந்தைகள் அவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஐந்தாரு பேர் இருப்பார்கள்.

கடல் நீர் நுரையுடன் மோதிக் கொண்டிருந்த பாறைக்கு மத்தியில் புடவையை  உயர்த்தி பிடித்தவாறு நடந்த அவள் ஒரு பாறையின் ஓரமாக போய் அமர்ந்தாள். பாறையின் மறுபக்கத்தில் அலைகள் வந்து மோதிக் கொண்டிருந்தன. அவ்வப்போது பாறையின் மேல் பகுதி வழியாக நுரையும் நீரும் அவளின் தலை முடியிலும் புடவையிலும் வந்து விழுந்தன. அவள் கேசட் ப்ளேயரை மடியில் வைத்து, அதை ‘ஆன்’ செய்தாள். இயர் ப்ளக்குகளை காதுகளில் வைத்தபோது கடலின் ஓசை முழுமையாக நின்றது. அதற்கு பதிலாக ஜாஸ் இசை முழங்கியது.

சற்று தூரத்தில் கண்களை அகல விரித்துக்கொண்டு நின்றிருந்த மீனவச் சிறுவர்கள் அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தனர். நேரம் செல்லச் செல்ல அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுடன் இரண்டு வாலிபர்களும் இருந்தார்கள்.

‘‘கடற்கரைக்கு வந்து இந்த பந்தா தேவையா? வீட்ல இடம் இல்லையா என்ன?’’

அவர்களின் ஒருவன் உரத்த குரலில் அழைத்து கேட்டான். காதுகளில் ப்ளக்குகள் இருந்ததால், அவன் அழைத்தது அவளுக்குக் கேட்கவில்லை. ஆனால், அவர்கள் முகத்தில் தெரிந்த கேலியையும், கிண்டலையும் அவளால் உணர முடிந்தது.

அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் எண்ணிக்கை மேலும் கூடியது. அவளுக்கு நீண்ட நேரம் இசையைக் கேட்டதால், ஒருவித அலுப்பு பிறந்தது. இயர் ப்ளக்குகளை காதுகளில் இருந்து அவள் எடுத்தபோது, காதுகளில் கடலின் ஓசை கேட்டது. ப்ளக்குகளைப் பாக்கெட்டில் போட்ட அவள் ப்ளேயரை ‘ஆஃப்’ செய்து விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து நின்றாள். நனைந்து போயிருந்த சாம்பல் நிற பாறைகளைக் கடந்து அவள் நடந்தபோது, சிவப்பு வண்ணத்தில் பூக்கள் வரையப்பட்டிருந்த அவளின் புடவை காற்றுபட்டு உயர்ந்தது. அவளுக்குப் பின்னால் பாறையில் மோதி சிதறிய ஒரு பெரிய அலையிலிருந்து வெளிப்பட்ட நுரைகள் வெண்மை நிற மலர்களைப் போல அவளின் விரிந்து கிடந்த கூந்தல் மேல் வந்து விழுந்தன.

பாறைகளுக்கு நடுவில் கடல் நீரைக் கடந்து அவள் நடந்து மணலில் ஏறினாள்.

‘‘இது என்ன இறக்குமதி சரக்கா? விற்பனை செய்யப் போறீங்களா என்ன?’’

கேசட் ப்ளேயரைப் பார்த்து ஒரு இளைஞன் கேட்டான். மற்றொரு இளைஞன் தொடர்ந்து சொன்னான்.

‘‘கள்ளக் கடத்தல் பொருளாக இருக்கணும். அப்படித்தானே! என்ன விலை?’’

அவள் அவர்களை கவனிக்காமல் காரை நோக்கி நடந்தாள். நனைந்து போயிருந்த பாதங்களில் மணல் ஒட்டிக் கொண்டிருந்தது.

‘‘டேய்... இது சி.கெ.யோட மகள். பேசாம இரு...’’

அவள் காருக்குள் ஏறி அதை ஓட்ட ஆரம்பித்தாள். பூமியில் மனிதர்கள் யாருமே இல்லாதிருந்தால்-

இப்போது... இதோ... யாருமே இல்லாத காட்டில் ஒரு பாறைக் கூட்டம்...

மேட்டின் ஓரமாக கீழே இறங்கி, அவள் பாறைக் கூட்டத்தை நோக்கி நடந்தாள். பல்வேறு மாதிரி கிடக்கும் பெரிய பெரிய உருண்டையான பாறைகள். மூன்று பாறைகளுக்கு நடுவில் இருந்த ஒரு இடைவெளியில் அவள் போய் நின்றாள். அந்தப் பாறைகளுக்கு நடுவில் இருந்த மவுனம் அவள் மனதில் ஆனந்த உணர்வை அள்ளித் தெளித்தது.

மாலை நேர வெயிலில் மூழ்கிப் போய் மவுனமாக காட்சியளித்த காட்டில் திடீரென்று ஜாஸ் இசை முழங்கத் தொடங்கியது. அந்த இசையால் காடே ஒரு புத்துணர்ச்சி பெற்றுத் திகழ்ந்தது. ஒரு வகை உயிர்ப்பு எல்லா திசைகளிலும் பரவியது.

நேரம் போய்க் கொண்டிருந்ததை அவள் உணரவேயில்லை. வெயில் முழுமையாக மறைய ஆரம்பித்தது. காட்டில் நிழல் பரவத் தொடங்கியது. இரவு மெதுவாக தன் முகத்தைக் காட்டியது. காட்டின் பாதுகாப்பில் பாறைகளுக்கு மத்தியில்  ஒலித்துக் கொண்டிருந்த ஸ்டீரியோ இசையில் தன்னை முழுமையாக இழந்து லில்லி கண்களை மூடிக் கிடந்தாள்...

ஒரு குள்ள நரி அப்போது வந்து கடித்தால்...?

ஒரு விஷப் பாம்பு அப்போது வந்து கொத்தினால்...?

அந்த நேரத்தில் அப்படிப்பட்ட சிந்தனைகள் எதற்கும் அவளின் மனதில் இடமே இல்லை என்றாகி விட்டிருந்தது.

மாமன்னூர் நகரத்தின் தெரு விளக்குகள் அணைந்து கிடந்தன. பாதி இரவின் அமைதி அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்தது. மலைச்சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் அவ்வப்போது முக்கி முனகிக் கொண்டு கடந்து போய்க் கொண்டிருந்தன. சுவாமியின் பெட்ரோல் பங்க்கில் மட்டும் வெளிச்சம் இருந்தது.

காரில் செயலற்று படுத்துக் கிடந்தார் அச்சுதன் நாயர். அவர் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். இந்த அரை இரவு நேரத்திலும் அவர் உடம்பு பயங்கரமாக வியர்த்துக் கொண்டிருந்தது. கண்கள் திறந்திருந்தாலும், பார்வை தெளிவாக இல்லை. ஒரு புகையைப் பார்ப்பது போல கண்கள் மங்கலாகத் தெரிந்தன.

‘‘கவலைப் படாதீங்கண்ணே...’’- சுவாமி அடிக்கொரு தரம் வந்து சொல்லிக் கொண்டிருந்தார். ‘‘காப்பி வேணுமா? தண்ணி வேணுமா?’’

அச்சுதன் நாயர் எந்தவித பதிலும் கூறாமல், அசையாது கிடந்தார்.

அச்சுதன் நாயர் சொன்ன கதையைக் கேட்டபோது சுவாமிக்கு கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. நன்கு படிக்கக் கூடிய ஒரு இளம் பெண் எதற்கு காட்டிற்குள் ஓட வேண்டும்? அவள் ஒரு டாக்டரென்பதையும், ஒரு கோடீஸ்வரனின் ஒரே மகள் என்பதையும் அவன் அறிய வந்தபோது, அந்தச் சம்பவத்தை அவனால் மனதளவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

தலையில் மஃப்ளரைச் சுற்றிக்கொண்டு பெட்ரோல் பங்க்கிற்குள் போடப்பட்டிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் சுவாமி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். மலைச் சரக்குகளுடன் கடந்து போகும் லாரிகளின் சத்தம் கேட்கும் நேரங்களில் மட்டும் அவனின் குறட்டை ஒலி கொஞ்ச நேரத்திற்கு நிற்கும். பிறகு மீண்டும் அது தொடர ஆரம்பிக்கும்.

பொழுது புலர்வதற்கு முன்னால்- இருட்டு நன்றாக இருக்கும்போது ஒரு கார் வேகமாக பெட்ரோல் பங்க்கிற்கு முன்னால் வந்து நின்றது. அதன் ஹெட்லைட் வெளிச்சம் சுற்றிலும் பரவியது.

காரில் இருந்து சி.கெ.யும் வேறு இரண்டு ஆட்களும் இறங்கினார்கள். அவற்றில் ஒருவர் மேஜர் நம்பியார். இன்னொரு ஆள் சி.கெ.யின் பாடி கார்ட் பீட்டர்.

‘‘அச்சுதன் நாயர்!’’


கார் கதவை வேகமாக இழுத்து சி.கெ. அவரைத் தூக்கினார்.

‘‘லில்லி எங்கே? என் மகளுக்கு ஏதாவது நடந்திருந்தா, உன்னை நான் உயிரோட விடமாட்டேன்.’’

அவர் அச்சுதன்நாயரை காரை விட்டு வெளியே இழுத்தார். அந்த வயதான பெரியவர் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தார். அவருக்கு மலை உச்சியில் இருந்த பனிப்படலம் மட்டுமே தெரிந்தது.

‘‘ஏய் கிழவா... நீ தண்ணி போட்டிருக்கியா?’’

சி.கெ. கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு நாயைப் போல விசுவாசமாக வேலை செய்த ஒரு மனிதர் அச்சுதன் நாயர் என்ற விஷயத்தை அந்த பணக்காரர் மறந்தே போனார்.

வெளியே நடக்கும் ஆர்ப்பாட்டத்தைக் கேட்டு பங்க்கிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சுவாமி வெளியே வந்தான்.

‘‘நான் மிஸ்டர் ஆர்.பெரியசுவாமி. இந்த பெட்ரோல் பங்க் மேனேஜர்.’’

‘‘போடா அந்தப் பக்கம்...’’

சி.கெ. அவனைப் பார்த்து கத்தினார். அவ்வளவுதான் சுவாமிக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. மேஜர் நம்பியார் சி.கெ.யின் கோபத்தை மாற்ற முயற்சித்தார். இதற்கு முன்பு இப்படி சுய கட்டுப்பாடு இல்லாமல் சி.கெ. நடந்து, அவர் பார்த்ததே இல்லை என்பதே உண்மை.

மேஜர் நம்பியார் சுவாமியை தனியே அழைத்து ஏதோ பேசினார். இந்த இரவு நேரத்தில் காட்டுக்குப் போவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே புரிந்தது.

‘‘சி.கெ. பொழுது விடிஞ்ச பிறகுதான் நம்மால ஏதாவது செய்ய முடியும்.’’

‘‘அதுவரை என் மகள் காட்டுக்குள்ளேயே இருக்கவா?’’

அவருக்கு அதை நினைத்துப் பார்க்கும்போதே உடல் நடுங்கியது. இருட்டில் தனியாக வீட்டு முற்றத்தில் படுப்பதற்கே தைரியம் கொஞ்சமும் இல்லாதவள் லில்லி. காட்டு மிருகங்களும், விஷப் பாம்புகளும் நிறைந்த காட்டில் தான் மட்டும் தனியாக இந்த இரவு நேரத்தில் எப்படி அவளால் இருக்க முடியும் என்று ஒரு நிமிடம் அவர் நினைத்துப் பார்த்தார்.

‘‘மேஜர்... நாம உடனே கிளம்புறதுதான் சரி’’- அவர் சொன்னார். ‘‘டேய், பீட்டர்... வண்டியைத் திருப்பு.’’

‘‘சி.கெ., ப்ளீஸ்...’’

மேஜர் தன்னுடைய பருமனான கையை சி.கெ.யின் தோள் மேல் போட்டார். உணர்ச்சி வசப்படாமல் இருக்கும்படி தன்னுடைய நண்பனைக் கேட்டுக் கொண்டார். சுவாமி அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டான். சி.கெ. ஒரு கோடீஸ்வரர் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். மேஜருடைய கம்பீரமான தோற்றத்தைப் பார்த்தே அவர் ஒரு பெரிய பட்டாள அதிகாரியாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் சுவாமி கற்பனை பண்ணிக் கொண்டான். அது மட்டுமல்ல- அவர்கள் வந்த காரின் பின்னிருக்கையில் கிடந்த துப்பாக்கியையும் அவன் பார்த்தான்.

மேஜர் லேசாக கண் ஜாடை காண்பிக்க, பீட்டர் ஓடிச் சென்று காரில் இருந்த ஒரு பெரிய ஃப்ளாஸ்க்கையும் ஒரு பாட்டிலையும் இரண்டு கண்ணாடி டம்ளர்களையும் எடுத்து கொண்டு வந்தான். சுவாமியின் மேஜை மேல் டம்ளர்களை வைத்து, நம்பியார் அதில் மதுவை ஊற்றினார். ஒரு டம்ளரை எடுத்து அசையாமல் உட்கார்ந்திருந்த சி.கெ.யின் கையில் தந்தார்.

‘‘ஜென்டில்மேன், உட் யூ லைக் டு ஹேவ் எ ட்ரிங்க்?’’

மேஜர் சுவாமிக்கு நேராகத் திரும்பினார். அதைக் கேட்டு சுவாமி வெட்கத்துடன் சிரித்தான். மேஜர் தந்த டம்ளரை வாங்கியபோது துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாக ஒரு பெண்ணை தனக்கு முன்னால் பார்ப்பதைப் போல அவன் வெட்கப்பட்டான்.

மேஜர், ஃப்ளாஸ்க்கின் மூடியின் தனக்கு ட்ரிங்க்ஸ் ஊற்றிக் கொண்டார்.

அவர்கள் கையில் விஸ்கி டம்ளர்களை வைத்துக் கொண்டு சூரிய உதயத்திற்காக காத்திருந்தார்கள். மேஜரின் பைப் தொடர்ந்து அணையாமல் ஹெட்ஜஸ்ஸின் சிவப்பு வண்ண பாக்கெட் முழுமையாக தீர்ந்தது. மாமமன்னூருக்கு மேலே குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது.

காலை நேர சேவல்கள் கூவின. கிழக்குப் பக்கம் ஆகாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்க ஆரம்பித்தது. மாமன்னூருக்கு மேலே காலை நேரம் தன் கண்களைத் திறந்தது. எருமைகளை ஒட்டிக் கொண்டு பால்காரர்கள் தெருவில் போய்க் கொண்டிருந்தார்கள். தெருவின் திருப்பத்தில் இருக்கும் தேநீர் கடையில் புகை கிளம்பி மேலே காற்றில் கலந்து கொண்டிருந்தது.

பறந்து கொண்டிருந்த கொசுக்களில் இருந்து முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தொப்பியை முகத்தோடு சேர்த்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த நம்பியார் கண்களைத் திறந்தார். அவர் தன்னுடைய முரட்டு மீசையைத் தடவியவாறு கொட்டாவி விட்டார். மது மயக்கம் தலைக்குள் ஏறியதில் சுவாமி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான். சி.கெ. சிகரெட்டைப் பிடித்தவாறு பெட்ரோல் பங்க்கின் முன்னால் இங்குமங்குமாய் உலாத்திக் கொண்டிருந்தார்.

தெருவின் திருப்பத்தில் இருந்த தேநீர் கடையிலிருந்து பீட்டர் லேசாக உடைந்திருந்த கண்ணாடி டம்ளர்களில் தேநீர் வாங்கிக் கொண்டு வந்தான்.

‘‘லில்லியைப் பார்த்த பிறகுதான் நான் தொண்டையை நனைப்பேன்’’- பீட்டர் வற்புறுத்தியபோது சி.கெ. சொன்னார். மனப் போராட்டமும், இரவில் சரியான தூக்கமில்லாமையும் சேர்ந்து சாதாரணமாகவே தடித்து காணப்படும் அவரின் முகத்தை மேலும் வீக்கமாகக் காட்டின. அச்சுதன் நாயர் நடுங்கிக் கொண்டிருந்த கைகில் கண்ணாடி டம்ளரை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

‘‘குடிங்க பெரியவரே- நாம போகணும்ல?’’

பீட்டர் அவசரப்படுத்தினான்.

அச்சுதன்நாயர் சி.கெ.யைப் பார்த்தார். அவரும் அச்சுதன் நாயரையே வெறித்துப் பார்த்தார். அடுத்த நிமிடம் அச்சுதன் நாயர் டம்ளரைக் கீழே வைத்தார். லில்லியைப் பார்க்காமல் தானும் ஒரு துளி நீர் கூட அருந்துவதாக இல்லை என்று மனதிற்குள் ஒரு முடிவை எடுத்தார் அவர்.

மாமன்னூர் முழுமையாக தூக்கம் கலைந்து எழுந்தது. தெருக்களில் காகங்கள் கரைந்தன. அவை வானத்தில் பறக்க ஆரம்பித்தன. குழாய்களைச் சுற்றிலம் பல வண்ணங்களைக் கொண்ட புடவைகளை அணிந்த தமிழ்ப் பெண்கள் ‘‘சலசல’’வென பேசியவாறு நின்றிருந்தனர். அந்தப் பகுதியையே அதிர வைத்துக் கொண்டு வந்த ஒரு லாரி டீசலை ஊற்றிக்கொண்டு வேகமாக பாய்ந்தோடியது.

சி.கெ.யும். அவருடன் இருந்தவர்களும் காட்டை நோக்கிப் புறப்பட்டார்கள்.

ஒரு காரில் சி.கெ.யும் மேஜர் நம்பியாரும் உட்கார்ந்திருக்க, இன்னொரு காரில் அச்சுதன் நாயரும் பீட்டரும் வந்தார்கள். அந்தக் காரை பீட்டர்தான் ஒட்டினான். மாமன்னூரின் மேடும் பள்ளமுமான பாதையை விட்டு இரு கார்களும் படு வேகமாக மலை அடிவாரத்தின் வழியாக முன்னோக்கி சென்றன. மெயின் ரோட்டை விட்டு கார்கள் காட்டுப் பாதையில் திரும்பியது.


காரின் முன் பக்க கண்ணாடியில் காடு தெரிந்தவுடன், அச்சுதன் நாயர் தளர்ந்து போய் இருக்கையில் சாய்ந்தார். அவரின் கண்களுக்கு எதுவுமே சரியாகத் தெரியாமல் மங்கலாகத் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்துக் கொண்டிருந்த காட்டில் குருவிகள் அப்போது தான் உறக்கம் கலைந்து எழுந்து இங்குமங்குமாய் பறந்து கொண்டிருந்தன. அவர்கள் காட்டிற்குள் நுழைந்தார்கள்.

பதினாறாவது மைலில் முதல் நாள் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்திய இடத்தை அடைந்தபோது, அச்சுதன் நாயர் காரை ஓட்டிக்கொண்டிருந்த பீட்டரின் கையைப் பிடித்தார்.

‘‘என்ன பெரியவரே?’’

‘‘வண்டியை நிறுத்து!’’

ப்ரேக் சத்தத்துடன் மணல் நிறைந்திருந்த பாதையில் கார் நின்றது. அந்தக் காருக்குப் பின்னால் சி.கெ.யின் கார் நின்றது.

‘‘இங்கேயா?’’

காரை விட்டிறங்கிய சி.கெ. கேட்டார். அச்சுதன் நாயர் ஆமாம் என்பது மாதிரி தலையை ஆட்டினார். மேஜரும் பீட்டரும் கூட காரை விட்டு இறங்கினார்கள். இரு பக்கங்களிலும் பெரிய பெரிய மரங்களும் புதர்களும் காணப்பட்டன. பாதையில் மரங்களின் நீண்ட நிழல்கள் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.

‘‘நீங்க என்ன காட்டைச் சுற்றிப் பார்க்கவா வந்தீங்க?’’- சி.கெ. கோபமான குரலில் சொன்னார்! ‘‘வெளியே இறங்க வேண்டியதுதானே!’’

அச்சுதன் நாயர் கார் கதவைத் திறந்து பாதையில் இறங்கி நின்றார்.

‘‘லில்லி எந்தப் பக்கம் போனாள்? அப்போ நீங்க என்ன செஞ்சிக்கிட்டு இருந்தீங்க?’’

‘‘ஒண்ணுக்கு இருக்கப் போயிட்டேன்.’’

‘‘ஓண்ணுக்கு இருக்கப் போயாச்சாம் ஒண்ணுக்கு! சரி... எங்கே போயி ஒண்ணுக்கு இருந்தீங்க?’’

‘‘அங்கே...’’

அவர் முதல் நாள் கீழே அமர்ந்து சிறுநீர் கழித்த இடத்தைச் சுட்டி காட்டினார்.

‘‘லில்லி எந்தப் பக்கம் போயிருப்பான்னு நீங்க நினைக்கிறீங்க?’’

நம்பியார் ஒரு துப்பறியும் அதிகாரியைப் போல கேள்வி கேட்டார். அதற்கு அச்சுதன் நாயர் எந்த பதிலும் கூறவில்லை. அவர் பாதையின் இடதுபக்கத்தில்தான் சிறுநீர் கழித்தார். அதனால் லில்லி கட்டாயம் வலது பக்கம்தான் போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நம்பியார் வந்தார். தான் நினைத்ததை அவர் சி.கெ.விடம் கூறினார்.

‘‘முதல்ல வலது பக்கம்...’’

நம்பியார் காரின் பின்னிருக்கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து தோள் மேல் வைத்தார். கம்பூட்ஸ்களை பேன்ட்டுக்கு மேலே இழுத்து விட்ட அவர் தலையில் இருந்து தொப்பியைச் சரி செய்தார். வேட்டைக்குப் போவது போல் இருந்தது அவரின் செயல்.

காட்டிற்குள் நுழைந்த நம்பியாரை மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். அச்சுதன் நாயர் உள்ளே செல்லவில்லை. வளர்ந்து படர்ந்து கிடந்த காட்டுக் கொடிகளை கைகளால் அகற்றியவாறு அவர்கள் புற்களைக் கடந்து முன்னோக்கிப் போனார்கள். மரங்களின் உச்சிகளில் இளம் வெயில் விழுந்திருந்தாலும், காடு அப்போதும் இருண்டு போயே காணப்பட்டது. காட்டுக்குருவிகள் ‘சலசல’வென சத்தம் உண்டாக்கியவாறு கிருஷ்ணமணிப் பூக்கள் நிறைந்த கொடிகளில் பறந்து சென்று அமர்ந்தன. மேஜரின் கம்பூட்ஸ் அணிந்த முரட்டுத்தனமான கால்கள் புற்களுக்குக் கீழே இருந்த நீரில் பட்டு ‘ப்ளும் ப்ளும்’ என்று ஓசை உண்டாக்கின. ராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய மேஜருக்கு காட்டுக்குள் நடப்பதென்பது ஒரு கஷ்டமான காரியமாக இல்லை.

சி.கெ. தன்னுடைய பருமனான உடம்புடன் புற்களையும் நீரையும் கடந்து கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டார். காட்டுச் செடிகள் கால்களைச் சுற்றியபோது அவருக்குக் கோபம்தான் வந்தது. இரண்டு ஃபர்லாங் நடந்ததும், அவரின் உடம்பும் மனமும் மிகவும் தளர்ந்து போய் விட்டன. சி.கெ.யைப் பொறுத்தவரை அவருக்கு அதிகக் நடந்து பழக்கமில்லை. நூறு அடி தூரம் போக வேண்டுமென்றால் கூட, காரை எடுத்து ஓட்டி பழக்கப்பட்டவர் அவர். போதாதென்று, காட்டுப் பாதை வேறு...

‘‘என்ன சி.கெ.?’’

மிகவும் பின்னல் வந்து கொண்டிருந்த சி.கெ.யைப் பார்த்து நம்பியார் கேட்டார்.

‘‘ஓண்ணுமில்ல. நடங்க...’’

சி.கெ. சொன்னார்.

தோளில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அடிக்கொரு தரம் தலையில் இருந்த தொப்பியைச் சரி செய்தவாறு வீசிலடித்துக் கொண்டே மேஜர் நம்பியார் காட்டுப் பாதையில் வேகமாக நடந்தார். தொடை வரை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பீட்டரும் அவரைத் தொடர்ந்து நடந்தான். இப்போது சி.கெ.வும் மிகவும் பின்னால் வந்து கொண்டிருந்தார். அவர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்து கொண்டிருந்தார். ஊரில் மகாராஜா மாதிரி வாழும் சி.கெ. காட்டில் இப்படி...

சி.கெ.யால் இப்படி ஜீரணிக்கவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அந்தப் பாழாய் போன கிழவன்தான். எதற்காக அந்த ஆள் இந்தக் காட்டுப் பாதையில்  வர வேண்டும்? சி.கெ.யின் கோபம் அதற்குப் பிறகு லில்லி மேல் திரும்பியது. அவளுக்கு கொழுப்பு அதிகமாகி விட்டது. அவளை ஒரு அரசகுமாரியைப் போல அவர் வளர்த்திருந்தார். அதற்கு அவள் இப்படி நன்றியைக் காட்டுகிறாள். காட்டுக்குள் இப்படியொரு தேவையில்லாத தேடல்...

‘‘சி.கெ., என்ன களைப்பா இருக்கா?’’

நம்பியாரின் கேள்விக்கு பதில் எதுவும் கூறாமல் அவர் வெறுமனே நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.

‘‘முதலாளி கொஞ்ச நேரம் எங்கேயாவது உட்காரட்டும்’’ பீட்டர் சொன்னான். ஆனால், அங்கு உட்காருகிற மாதிரி ஒரு இடம் இல்லை.

சி.கெ. அருகில் வந்ததும், ஒற்றையடிப் பாதை வழியாக அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். சிறிது தூரத்தில் ஒரு மேடு தெரிந்தது. அங்கே போனதும், கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என்று மேஜர் மனதிற்குள் நினைத்தார்.

மேட்டில் இருந்த ஒரு பாறை மேல் அமர்ந்து சி.கெ. தன் களைப்பைப் போக்கினார். மேஜர் நம்பியார் பேன்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு பைப்பையும் புகையிலையையும் வெளியே எடுத்து உதட்டில் வைத்து புதைக்க ஆரம்பித்தார். சி.கெ.விற்கு இந்தப் பயணம் பிரயோஜனமில்லாத ஒன்று என்று தோன்றத் தொடங்கியது. இவ்வளவு பெரிய காட்டில் எவ்வளவு தூரம் நடப்பது? எங்கே போய் தேடுவது?’’

பைப் அணைந்ததும், நம்பியார் எழுந்தார். அவருடன் சேர்ந்து சி.கெ.யும் எழுந்தா£. அவர்கள் மேட்டை விட்டு இறங்கி நடையைத் தொடர்ந்தார்கள். அப்போது காட்டிற்குள் இருந்த பெரிய பாறைக் கூட்டம் நம்பியாரின் கண்களில் பட்டது.

‘‘ஹௌ ப்யூட்டி ஃபுல்!’’

மேஜர் தன்னுடைய காகிள்ஸை எடுத்து அணிந்தார். காட்டில் இப்போது நல்ல வெளிச்சம் இருந்தது. மரக்கிளைகளுக்கு மத்தியில் சூரிய வெளிச்சம் நன்கு தெரிந்தது. அவர்கள் பாறைகளை ஒட்டி நடந்தார்கள். இந்தக் காட்டில் இந்த இடத்தில் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய பாறைகள் வந்து சேர்ந்தன என்று மேஜர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.


ஏதாவதொரு அரக்கன் கொண்டு வந்து இதை வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

பாறையையொட்டி ஓடிக்கொண்டிருந்த ஒற்றையடிப் பாதை அதற்குப் பிறகு வளைந்து திரும்பி போய்க் கொண்டிருந்தது. அதை வைத்து இந்தப் பாதையில் ஆட்கள் நடந்து போவார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டார். இந்தக் காட்டுப் பாதையில் ஆட்கள் நடந்து போகக்கூடியவர்கள் யாராக இருப்பார்கள்? வேட்டைக்குப் போகிறவர்கள் ஒரு வேளை இதில் நடந்து போவார்களோ? இந்த அடர்ந்த காட்டுக்குள் தூரத்தில் ஆதிவாசிகளோ? இந்த அடர்ந்த காட்டுக்குள் தூரத்தில் ஆதிவாசிகளோ இல்லாவிட்டால் காட்டு வாழ் மக்களோ வசித்துக் கொண்டிருப்பார்களோ?- இப்படி பல்வேறு வகைகளில் தன் சிந்தனையை ஓட்டிக் கொண்டிருந்தார் மேஜர் நம்பியார்.

‘‘இப்படியே எவ்வளவு நேரம் நாம நடப்பது மேஜர்?’’

‘‘யாரையாவது பார்க்குறது வரை நடக்க வேண்டியதுதான். டோண்ட் லூஸ் யுவர் ஸ்ப்ரிட், மை ஃபிரண்ட்.’’

‘‘இந்த காட்டுல நாம யாரைப் பார்க்குறது?’’

‘‘இங்க எங்கேயாவது காட்டு வாழ் மக்கள் இருப்பாங்க. யுவர் டாட்டர் வில் பி தேர்...’’

நம்பியார் தோளில் துப்பாக்கியுடன் கம்பூட்ஸின் சத்தம் கேட்க முன்னோக்கி நடந்தார். அடிக்கொருதரம் அவர் சத்தமாக விசிலடித்தார். அப்போது அவருக்கு கடந்த கால நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் வந்தன. அவர் ஒரு அருமையான வேட்டைக்காரர். தொழில் விஷயமாக பல்வேறு இடங்களுக்கும் கேம்ப் அடிக்கிறபோது அவர் வேட்டைக்குப் போவதை மறப்பதேயில்லை. அந்தக் காலத்தில் அவர் வேட்டையாடி கிடைத்த மிருகங்களின் தோல்களும், கொம்புகளும் இப்போது அவர் பங்களாவின் வரவேற்பறையில் அலங்காரப் பொருட்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.

வேட்டை நினைவுகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த மேஜர் நம்பியாரின் கால்கள் படுவேகமாக இயங்கின. தோளில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் கையில் வைத்துக் கொண்டார்.

சி.கெ.யால் ஒன்றுமே முடியவில்லை. இனி ஒரு அடி கூட அவரால் எடுத்து வைக்க முடியாது என்ற நிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டார். இருந்தாலும் லில்லியைப் பற்றிய நினைவால் தன்னுடைய பருமனான உடலைத் தூக்கிக் கொண்டு அவர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடந்தார்.

பதினைந்து நிமிடங்கள் கடந்த பிறகு ஒற்றையடிப்பாதை திடீரென்று காணாமல் போனது. காடு பயங்கரமாக அடர்ந்து காணப்பட்டது. சுற்றிலும் நெருக்கத்துடன் காணப்படும் மரங்களும், கொடிகளும் முன்னால் போன வழியை முழுமையாக மறைத்து விட்டிருந்தன. நம்பியாருக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.

‘‘ஹால்ட்...’’

திடீரென்று அவர் உரத்த குரலில் சொன்னார். பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த சி.கெ.யும் பீட்டரும் சடன் பிரேக் போட்டது மாதிரி நின்றார்கள்.

நம்பியார் துப்பாக்கியுடன் முன்னோக்கி போனார். வளைந்து நெளிந்து ஒரு புதருக்குப் பின்னால் போய் மறைந்தார். சி.கெ.யும். பீட்டரும் திகைத்துப் போய் நின்றார்கள்.

தொடர்ந்து வெடி வெடிக்கும் சத்தம். புதருக்குள் இருந்து வெளியே ஓடி வந்த ஒரு கீறி அவர்களுக்கு முன்பு பாய்ந்தோடி படர்ந்து கிடந்த கொடிகளுக்கு மத்தியில் மறைந்து போனது.

புகைந்து கொண்டிருக்கும் துப்பாக்கியுடன் நம்பியார் புதரை விட்டு வெளியே வந்தார்.

‘‘ஐ மிஸ்ட் ஹிம், டாமிட்...’’

‘‘மேஜர்... நாம திரும்பிப் போகலாம்’’ - சி.கெ. ஒரு பெரிய மரத்திற்குக் கீழே தளர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். ‘‘லெட் அஸ் இன்ஃபார்ம் தி போலீஸ்.’’

‘‘நான் இருக்குறப்போ போலீஸ் எதுக்கு?’’

கீஜீயைத் தவற விட்ட ஆக்ரோஷத்துடன் மேஜர் சொன்னார்.

‘‘லில்லியை நான் கண்டுபிடிப்பேன். யு டேக் மை வேர்ட். ஷீ கான்ட் ஹைட் ஹியர் ஃபார் எவர்...’’

ஆனால், சி.கெ.யால் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. மேஜர் நம்பியாருக்கு சி.கெ. கூறுவதைக் கேட்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்றாகிவிட்டது. கொஞ்சம் கூட மனம் வராமலே அவர் துப்பாக்கியை மீண்டும் தோளில் வைத்து திரும்ப நடந்தார்.

‘‘சார்... காட்டைப் பற்றி நல்லா தெரிஞ்சிருக்குற யாரையாவது வைத்து தேடுறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன்.’’

இதுவரை எதுவுமே பேசாமல் இருந்த பீட்டர் சொன்னான்.

‘‘மாமன்னூரில் அதுக்கு ஆள் கிடைப்பான்.’’

சி.கெ.விற்கு கடும் இருட்டில் லேசாக வெளிச்சம் கிடைத்தது போல் இருந்தது. போலீஸுக்கு விஷயத்தைத் தெரிவிப்பது என்பதில் இந்த நிமிடம் வரை அவருக்கு உடன்பாடில்லை. பத்திரிகைக்காரர்கள், தொடர்ந்து ஒலிக்கும் தொலைபேசி, ஆறுதல் கூறுவதற்காக வந்து நிற்கும் ஆட்கள்... மருத்துவக் கல்லூரியில்  பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் சி.கெ.யின் மகள் லில்லியைக் காணவில்லை. இதற்கு மேல் மானக்கோன காரியம் வேறு என்ன இருக்கப் போகிறது?

லில்லி காணாமல் போன விஷயம் மேஜர் நம்பியாரைத் தவிர, வேறு யாருக்குமே தெரிய வேண்டிய அவசியமில்லை.

மாமன்னூருக்குப் போய் காட்டுக்குள் நுழைந்து பழக்கமுள்ள ஆட்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை வைத்து தேட வேண்டும். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவழிக்கலாம். முடிந்தால் லட்சம் கூட என்று முடிவெடுத்தார் சி.கெ.

திரும்பி நடந்தபோது, கால்களுக்கு கனம் குறைந்திருப்பது போல் அவருக்குத் தோன்றியது.

மேட்டைக் கடந்து ஒற்றையடிப் பாதை வழியாக அவர்கள் நடையைத் தொடர்ந்தார்கள். தனியாக இருந்த அந்தப் பாறைக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தபோது மகிழ்ச்சி மிகுதியால் பீட்டர் கத்தினான். சி.கெ.யும். நம்பியாரும் என்னவென்று பார்த்து நின்றிருக்க, அவன் கையில் லில்லியின் மெடிசின் புத்தகங்களுடன் ஓடி வந்தான்.

சி.கெ. புத்தகங்களை வாங்கிப் பார்த்தார். லில்லியின் பாட புத்தகங்கள்தாம். அதை வாங்கிப் பார்த்த அவரின் கைகள் நடுங்கின. புத்தகங்களை மட்டுமல்ல - தன்னுடைய எதிர்காலத்தையும் சேர்த்து அல்லவா அவள் அந்தப் பாறை மேல் வைத்து விட்டுப் போயிருக்கிறாள்!

எதற்காக அவள் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்? அந்த உருப்படாத சத்யன்தானே இதற்கெல்லாம் காரணம்? அவனுக்குச் சரியான ஒரு பாடம் கற்பித்துத் தர வேண்டும். இனி ஒரு நாள் கூட தலச்சேரியில் அவன் மன நிம்மதியுடன் வாழ முடியாது. பாம்பின் வஞ்சத்தை விட பயங்கரமானது சி.கெ.யுடன் கெகண்டிருக்கும் பகை என்பது தலச்சேரிக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும்.

புத்தகங்கள் கைக்கு வந்துவிட்டதைத் தொடர்ந்து லில்லி காட்டில் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறாள் என்ற எண்ணத்திற்கு வந்தார் மேஜர். அதனால் காட்டுக்குள் உடனடியாக அவளைத் தேடுவதுதான் சரியான செயலாக இருக்கும் என்றார் அவர். சி.கெ. அதற்குத் தயாராக இல்லை.


பீட்டர் சொன்ன விஷயம்தான் சரியான ஒன்றாக அவருக்குப் பட்டது. எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாமன்னூருக்குப் போய் காட்டைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும் ஆட்களை ஒன்று சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் இரவில் கூட தேடுதலைத் தொடரலாம். ஸர்ச் விளக்கோ பெட்ரோமாக்ஸோ எதை வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யலாம்.

இடுப்பு வரை வளர்ந்து கிடந்த காட்டுப் புற்களைக் கடந்து நடந்து அவர்கள் பாதைக்கு வந்தார்கள். காட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அச்சுதன் நாயர் லில்லியைக் காணாமல் பேதலித்துப் போயிருந்தார். சி.கெ.யின் முகத்தைப் பார்த்தபோது, அவரால் எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை.

காட்டுப் பாதை வழியாக இரண்டு கார்களும் மாமன்னூரை நோக்கி விரைந்தன. ஒரு காட்டுக் கிளி கத்தியவாறு சிறிது தூரம் அந்தக் கார்களை பின் தொடர்ந்தது. அதற்குத் தெரியும் லில்லி எங்கே இருக்கிறாள் என்றும் சி.கெ.விற்கு கிளியின் மொழி தெரியாதே!

8

ரியன் மகன் காளு காட்டிலேயே பிறந்து வளர்ந்தவன். காட்டின் வறுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் அவன் குடும்பத்தோடு மாமன்னூரில் வந்து வசிக்க ஆரம்பித்தான். இபபாது அவனுக்கு முப்பது வயது கூட ஆகவில்லை - அதற்குள் அவனுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் இருந்தார்கள். என்ன வேலை வேண்டுமானாலும் அவன் செய்வான். சுவாமியின் பெட்ரோல் பங்க்கைப் பெருக்கிச் சுத்தம் செய்வது அவன்தான். அவ்வப்போது காட்டிற்குள் சென்று கீறியைக் கண்ணி வைத்து பிடிப்பான். அதன் மாமிசத்தைச் சாப்பிட்டவாறு கள்ளு குடிப்பான்.

‘‘எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன். உன்னையும் உன் குடும்பத்தையும் இனி இருக்குற காலம் முழுவதும் நான் பார்த்துக்குறேன். காட்டுக்குப் போய் என் மகளைத் தேடிக் கண்டு பிடிச்சு வா...’’

காட்டை தன்னுடைய சொந்த உள்ளங்கையைப் போல தெரிந்து வைத்திருக்கும் காளு, சி.கெ.யைத் தலைகுனிந்து வணங்கினான்.

‘‘உடனே புறப்படு.’’

‘‘சார்... கவலையே பட வேண்டாம். உங்க பொண்ணு காட்ல இருந்தாங்கன்னா, காட்டாயம் காளு கண்டு பிடிச்சு கொண்டு வந்திடுவான்.’’ சுவாமி சொன்னான்.

காளுவின் பெயரைச் சொன்னவன் சுவாமிதான். அவனுக்கு காட்டை நன்றாகத் தெரியும் என்பது மட்டுமல்ல - ஒரு வேலையைக் கொடுத்தால் அதை முழுமையாகச் செய்து முடித்த பிறகே காளு திரும்பி வருவான். சுவாமிக்காக மட்டுமல்ல, மாமன்னூரில் உள்ளவர்களுக்காக அவன் எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்கிறான்!

‘‘பீட்டர்... நீயும் அந்த ஆளு கூட போ...’’

சி.கெ. ஒரே பரபரப்புடன் இருந்தார். சீக்கிரம் வெயில் போய் விடும். மாலை நேரம் வந்து விடும். இன்னொரு இரவு நேரத்தில் எப்படி லில்லி காட்டுக்குள்ளேயே இருப்பாள்? இந்த நிமிடம் வரை அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்? அதை நினைத்துப் பார்த்தபோது சி.கெ.யின் நெஞ்சு வலித்தது. தன்னுடைய சொத்தும், பணமும், அந்தஸ்தும் எல்லாமே பிரயோஜனமற்றவை என்று அவருக்குத் தோன்றியது. தலச்சேரியிலேயே மிகப் பெரிய பங்களா அவருடையதுதான். ஆனால், அது வாயால் ஊதினால் சரிந்து விழக்கூடிய சாதாரண ஒரு சீட்டால் ஆன அரண்மனைதான் என்பதை இப்போது சி.கெ. புரிந்து கொண்டார்.

பீட்டர் கார் சாவியை சுண்டு விரலில் மாட்டி ஆட்டியவாறு காரை நோக்கி நடந்தான். திரும்பத் திரும்ப சி.கெ.யை வணங்கிய காளு அவனின் பின்னால் நடந்தான். அடர்த்தியான சிவப்பு நிறத்தில் ஒரு ட்ரவுசர் மட்டுமே அவன் அணிந்திருந்தான். கையில் இருந்த ஒரு கம்பைக் காருக்குள் நீளமாக வைத்தவாறு அவன் பீட்டரின் அருகில் அமர்ந்தான். காளு எங்கே போனாலும், அந்தக் கம்பை கையில் வைத்திருப்பான் காட்டில் பழகிய பழக்கம் அது.

கார் பதினாறாம் மைலை இலக்காக வைத்து ஓடியது.

சி.கெ. மனதில் எல்லா கடவுள்களின் பெயர்களையும் சொல்லி வணங்கினார். அவர் பொதுவாக கடவுள்களை மறந்து போயிருந்தார். நீண்ட காலமாக அவர் கடவுள்களை வணங்குவதேயில்லை.

லில்லியின் தாய் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பாள். சுவாமியிடம் சொல்லி அவர் வீட்டிற்கு ஒரு ட்ரங்கால் புக் செய்தார். லைன் கிடைக்க எப்படியும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு முழு நாள் கூட ஆகும்.

சி.கெ. மேஜர் நம்பியார் இருவருக்கும் காளு திரும்ப வரும்வரை தங்குவதற்கு ஒரு இடம் இல்லை. அங்கே நல்ல ஹோட்டல்கள் எதுவும் கிடையாது. காரில் எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருப்பது! அவர்களுக்கு அது பயங்கர வெறுப்பைத் தந்தது.

கடைசியில் சுவாமி அவர்கள் தங்க ஒரு இடத்தை ஏற்பாடு பண்ணித் தந்தான். மாமன்னூரில் இருப்பவர்களிலேயே பெரிய பணக்காரரான முத்துவண்ணனின் பங்களாதான் அது.

‘‘முத்து வண்ணனோட பங்களாவுல போய்குளிச்சு சாப்பிட்டுட்டு ஓய்வெடுங்க. எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க. காளு இருட்டுறதுக்கு முன்னாடி திரும்பி வந்திடுவான்.’’

சுவாமி சொன்னான்.

முத்துவண்ணன் நேரிலேயே வந்து அவர்களை பங்களாவிற்கு அழைத்துச் சென்றார்.

‘‘ஃப்ரண்ட்ஸ்... யு ஆர் வெல்கம் டு மை ஹம்பிள் பங்களா.’’

முத்துவண்ணனின் கறுமை நிற உதடுகளுக்கு மத்தியில் தங்கப் பற்கள் பிரகாசித்தன.

குளித்து சாப்பிட்டு முடித்து பைப்பை உதட்டில் வைத்து புகைத்தவாறு மேஜர் நம்பியார் முத்துவண்ணனுடன் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஸோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சி.கெ.விற்கு பசி எடுக்கவில்லை. அவர் உணவு எதுவும் உட்கொள்ளாமல் வீட்டிற்குப் போட்ட ட்ரங்காலுக்காகக் காத்திருந்தார். அவ்வப்போது தெருவிற்கு அப்பால் தெரிந்த மாரியம்மன் கோவில் பக்கம் திரும்பி வேண்டிக் கொண்டிருந்தார். ஒரே நாளில் அவர் ஒரு தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட மனிதராக மாறியிருந்தார்.

அதே நேரத்தில் காளு காட்டுக்குள் நுழைந்து போய்க் கொண்டிருந்தான். ஒரு காட்டு வாழ் உயிரினத்தைப் போல அவன் சர்வ சாதாரணமாக ஓடியும் குதித்தும் காட்டிற்குள்ளே முன்னேறிக் கொண்டிருந்தான். அடர்த்தியான சிவப்பு ட்ரவுசர் அணிந்திருந்த அந்த மனிதன் காட்டு மரங்களுக்கு மத்தியில் மறைந்து மறைந்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

‘‘டேய் காளு, நீ எப்படியாவது அந்தப் பொண்ணைக் கண்டு பிடிச்சிடணும். உனக்கு சி.கெ. ஆயிரம் ரூபா தருவாரு. அப்புறம்... ஓட்டுக் கம்பெனியில வேலையும் போட்டுக் கொடுப்பாரு.’’

சுவாமி சொன்ன வார்த்தைகள் அவனின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

சி.கெ. ஒரு கோடீஸ்வரர் என்பதை சுவாமியின் வார்த்தைகள் மூலம் காளு அறிந்திருந்தான். அவருக்கு சூப்பர் மார்க்கெட், ஓட்டு கம்பெனி எல்லாமே இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொண்டான்.


ஆயிரம் பாய் என்ன லட்ச ரூபாய் கூட அவருக்குச் சர்வ சாதாரணம் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன!

மாலை ஆவதற்கு முன்பே எப்படியும் லில்லியைக் கண்டுபிடித்தாக வேண்டும். நாளை ஆனால் என்ன நடக்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. காட்டின் மேல் வெறுப்புண்டாகி, அந்தப் பெண் அவளாகவே திரும்பி வந்து விட்டால் பரவாயில்லை. இல்லாவிட்டால் ஏதாவது விஷப்பாம்பு அவளைக் கொத்திவிட்டால்? இல்லாவிட்டால் காட்டு பன்றி வந்து அவளைக் கடித்து விட்டால்? என்ன இருந்தாலும் காடு பயங்கர காடாயிற்றே!

இப்படி ஏதாவது நடக்கக் கூடாது நடந்து விட்டால், அவளை கண்டுபிடித்துக் கூட பிரயோஜனமில்லை என்றாகிவிடும். அப்படியொரு நிலைமை உண்டானால் சி.கெ. தன்னை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார் என்பதையும் அவன் அறியாமல் இல்லை. ஆயிரம் என்ன நூறு ரூபாய் கூட அவர் அவனுக்குத் தர மாட்டார். அதனால் பெண்ணுக்கு அசம்பாவிதமாக எதுவும் நடக்கக் கூடாது. உயிருடன் கண்டுபிடித்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவளை சி.கெ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான் காளு.

அதற்குப் பிறகு கரியன் மகன் காளுவின் தலைவிதியே வேறு மாதிரி எழுதப்பட்டு விடும். ஆயிரம் ரூபாய் பரிசு... ஓட்டு கம்பெனியில் வேலை... முப்பது வருடங்கள் வாழ்ந்தும் இதுவரை காளு ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கூட பார்த்ததில்லை. இனியும் பத்து பிறவிகள் எடுத்தாலும், இந்தக் காளுவால் ஆயிரம் ரூபாயைக் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது.

அவன் மாமன்னூரில் இருக்கும் மாரியம்மனிடம் நேர்த்திக் கடன்கள் செய்வதாகச் சொன்னான். அந்தப் பெண் கிடைத்துவிட்டால், காவடி ஆடுவதாகச் சொன்னான். கன்னத்திலும், நாக்கிலும் சூலங்கள் குத்துவதாகச் சொன்னான்.

அவன் படு வேகமாக நடந்தான். காட்டு மரங்களுக்கு மத்தியில் அவனின் சிவப்பு வண்ண ட்ரவுசர் ஒரு தீப்பந்தத்தைப் போல நீந்திச் சென்றது.

சிறிது தள்ளி கிழக்குப் பக்கம் போனால் ஒரு காட்டருவி தென்படும். அங்கிருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்தில் காட்டு வாழ் மக்களின் குடிசைகள் இருக்கின்றன. அங்கு எங்காவது அந்தப் பெண் இருக்கிறாளா என்று பார்க்க வேண்டும். அதையும் தாண்டி போனால் பயங்கரமாக அடர்ந்திருக்கும் காடு, பெரிய பெரிய பாம்புகளும், புலிகளும் நடமாடிக் கொண்டிருக்கும் இருண்டு போன காடு, காட்டு வாழ் மனிதர்கள் கூட அந்தப் பக்கம் பொதுவாக போவதில்லை. அந்தப் பெண் ஒரு வேளை அந்தப் பக்கம் போயிருந்தால், ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு கூட ஒரு பிரயோஜனமும் இல்லை.

இரண்டு பக்கங்களிலும் பார்த்தவாறு கையிலிருந்த கம்பை நிலத்தில் ஊன்றி ஓசை எழுப்பிக் கொண்டு காட்டுப் பாதையின் வழியாக காளு கிழக்குப் பக்கம் ஓடினான். ஒரு பெரிய மரத்தின் கிளையில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த பின் பக்கம் சிவந்த ஒரு குரங்கு காளுவிற்கு வாழ்த்துச் சொல்லியது. கீழே விழுந்து கிடந்த பழுத்துப் போன இலைகளுக்கு மத்தியில் ஒரு குருட்டுப் பாம்பு ஊர்ந்து போனது.

அருவியை நெருங்கியபோது நனைந்து சிவந்து காணப்பட்ட மண்ணில் செருப்பணிந்த இரண்டு சிறிய பாதச்சுவடுகளைப் பார்த்தான். காளு மனதிற்குள் மாரியம்மனை நினைத்துக் கொண்டான். இது ஒரு இளம் பெண்ணின் காலடிச் சுவடைத் தவிர வேறென்ன என்று அவன் நினைத்தான். நான்கு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வாழும் காட்டு வாழ் மனிதர்கள் செருப்புகள் அணிவதில்லை. அவர்களை விட்டால் காட்டிற்குள் வருபவர்கள் வேட்டைக்காரர்கள்தாம். அவர்களின் பூட்ஸ் அணிந்த காலடிச் சுவடுகள் இவ்வளவு சிறியதாக இருக்க வாய்ப்பில்லை.

ஆயிரம் ரூபாயில் ஐந்நூறு ரூபாய் தன் கைக்கு வந்து விட்டதாகவே முடிவு செய்துவிட்டான் காளு. அவனின் கால்களுக்கு இப்போது வேகம் கூடியது. கையில் இருந்த கம்பை உயர்த்திப் பிடித்தவாறு அருவியை இலக்காக வைத்து அவன் ஓடினான்.

அப்படி ஓடும்போது காற்றில் மிதந்துவரும் சத்தத்தைக் கேட்டு அவன் தலையைத் தூக்கிப் பார்த்தான். மரங்களின் இளம் இலைகள் கூட அசையாமல் அப்படியே நின்றிருந்தன. காளுவிற்கே வியப்பாக இருந்தது. மர இலைகளுக்கு மத்தியின் அவனின் கண்கள் காற்றைத் தேடின. காட்டு மரங்களிலும் கொடிகளிலும் நிரந்தர அமைதியைத் தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.

சற்று முன்னோக்கி நடக்கவே, காட்டின் ஒரு சிறு மூச்சைக் கூட நன்கு தெரிந வைத்திருக்கும் காளுவிற்கு தான் கேட்ட சத்தம் காற்று உண்டாக்கியதல்ல என்பது புரிந்தது. பயங்கரமான அமைதியில் இருந்த அந்தப் பழைமையான மரங்களில் அவனுக்கு இதற்கு முன்பு அறிமுகமாயிராத அந்த சத்தம் துடித்துக் கொண்டிருந்தது. செடிகளிலும், கொடிகளிலும் அந்த நாதம் முழுமையாக நிறைந்திருந்தது.

மரக்கூட்டங்களினூடே அவன் தூரத்தில் தெரிந்த அருவியைப் பார்த்தான். மழைக்காலம் இப்போதுதான் முடிந்திருந்ததால், அருவியில் நிறைய நீர் வந்து கொண்டிருந்தது. தெளிந்த நீரில் ஆகாயத்தின் நீல நிறம் முழுமையாகத் தெரிந்தது.

காளுவின் கால்கள் முன்னோக்கி நடக்காமல் நின்று விட்டன. இப்போது காடு ஸ்டீரியோ இசையில் முழுமையாக மூழ்கிப் போய் விட்டிருந்தது. மரங்களையும் செடிகளையும் தாண்டி இசை அவனின் காதுகளை வந்தடைந்தது. அவன் ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று கொண்டு அருவியையே பார்த்தான்.

 

அருவியின் அருகில் இருந்த சிவப்பு மண்ணில் நல்ல ஈரம இருந்தது. அங்கே மினுமினுப்பான பெரிய வெள்ளை நிற கற்கள் சிதறிக் கிடந்தன. அந்த இடத்தில் லில்லியின் கேசட் ப்ளேயர் பாடிக் கொண்டிருந்தது. ஸ்டீரியோ சங்கீதத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்த அந்த கேசட் ப்ளேயருக்கு மேலே உயரத்தில் காட்டுக் குருவிகள் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. அந்தச் சின்னஞ்சிறு குருவிகள்தாம் காட்டின் கனவுகள்!

‘பிக்மி ட்விலிட்’ - காட்டின் எல்லா இடங்களிலும் பரவி ஒலித்தது. பணத்தையும், சுகத்தையும், அதிகாரத்தையும் வேண்டாமென்று மறுக்கும் ஃப்ராங்க் ஸாப்பாவின் இசையை அவளுக்கு மிகவும் பிடிக்கும். காட்டுக் கொடிகளைப் போல நீளமான தலைமுடியைக் கொண்ட ஃப்ராங்க் ஸாப்பாவின் ஒரு பெரிய கலர் போஸ்ட¬¬ அவளின் படுக்கையறைச் சுவரில் பார்க்கலாம். அமைதியான அருவி அருகில் இருந்து புறப்பட்டு வந்த ஸாப்பாவின் மின்சார கித்தாரின் ஓசை காட்டுக் கொடிகள மேல் பாய்ந்து பரவியது. கேசட் ப்ளேயருக்கு மேலே பறந்து விளையாடிக் கெகண்டிருந்த குருவிகள் அங்கிருந்த வெள்ளை நிற கற்களில் போய் அமர்ந்தன. தொடர்ந்து ‘விஸல்’ஸில் இருந்து வந்த பாட்டுகள்.


 ‘விஸல்ஸ் ரிப்பட் மை ஃப்ளெஷ் - எல்லா இசைக் கருவிகளும் ஒரே அலை வரிசையில் காற்றில் தவழ்ந்து வந்தன. அது முழுமையாக முடிந்த போது காட்டில் இசை என்னும் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

ஆட்டோ ஸ்டாப்பில் கேசட் ப்ளேயர் நின்றபோது, காளு முழு உணர்விற்கு வந்ததன். வெள்ளைக் கற்களில் அமர்ந்திருந்த காட்டுக் குருவிகளைத் தவிர, அங்கு வேறு யாரும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. மரங்களுக்குப் பின்னால் இருந்து அருவியையொட்டி துடிக்கும் மனதுடன் நடந்த அவன் அருகில் போய் அருவியையே பார்த்தான். ஸ்டீரியோ இசை போய் சங்கமமான தெளிந்த நீரில் விழுந்து கிடந்த காட்டு இலைகளைத் தவிர, வேறெதையும் அவனால் பார்க்க முடியவில்லை.

அந்த இளம் பெண் பக்கத்தில்தான் எங்கோ இருக்கிறாள் என்பது அவனுக்கு நிச்சயமாகி விட்டது. இந்தப் பாட்டு பெட்டி அவளுக்குச் சொந்தமானதுதானே தவிர வேறு யாருக்கு?

அவன் கையில் கம்பபை வைத்துக் கொண்டு திரும்பி நின்று காட்டைப் பார்த்தான். காட்டின் இருண்ட நிழல்கள் விபந்த அருவிக்கரை வழியாக அவன் கண்கள் சஞ்சரித்தன. அவன் கண்கள் ஒரு பெரிய வெள்ளைக் கல் மேல் அசையாமல் நின்றன.

சாய்ந்து படுத்திருக்கும் ஒரு வெள்ளைப் பசுவைப் போல இருந்த அந்த வெள்ளை வண்ணக் கல்லின் மறைவில் நிறைய பட்டாம்பூச்சிகள் வண்ணச் சிறகுகளை விரித்துக் கொண்டிருப்பதைப் போலிருந்தது. அதையே வைத்த கண் எடுக்காது அவன் பார்த்தான். பிறகு மெதுவாக அந்த இடத்தை நோக்கி அவன் நடந்தான்.

அருவி நீரின் குளிர்ச்சியைக் கொண்ட வெள்ளைக்கல்லின் மறைவில் கண்களை மூடிப் படுத்திருந்தாள் அந்த இளம் பெண். இளம் சிவப்பு வண்ணத்தில் வயலட் நீல நிறத்தி பூக்கள் போட்ட மெலிதான புடவையை அவள் அணிந்திருந்தாள். வெள்ளைக் கல்லின் வெண்மை நிறத்துடன் அவளின் வெளுத்த தோள்களும் வயிறும் ஒத்திசைவுடன் இருந்தன.

மேலும் முன்னோக்கிப் போகும் தைரியமில்லாமல் காளு அசையாமல் நின்றான் பல வண்ணங்களைக் கொண்டு ஜொலித்த புடவைக்கு வெளியே தெரிந்த வெண்மையான கால்கள் அவனை பெருமூச்சுவிடச் செய்தன. பிறகு அவனின் கண்கள் அவளின் வெண்மையான வயிறையும் தோள் பகுதியையும் நோக்கிச் சென்றன. காளு அசைவே இல்லாமல் நின்றிருந்தான். அவனின் கண்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன.

கரியாத்தியின் கறுத்துப்போன உடம்பையும் அதில் ஆறு குழந்தைகள் சப்பிக் குடித்த மார்பகங்களையும் மட்டுமே பார்த்திருக்கும் காளு அந்த நிமிடமே கனவு உலகத்திற்குள் முழுமையாக நுழைந்தான். அவன் உடம்பில் இரத்த நாளங்களில் இரத்தம் வேகமாக ஓடியதன் விளைவாக அவை வழக்கத்தை விட வீங்கித் தெரிந்தன. அவனின் தலையில் இருந்து சர்வ சாதாரணமாக ஆயிரம் ரூபாய் பற்றிய எண்ணமும் ஓட்டு கம்பெனி வேலையும் மறைந்து போயின.

மூச்சை அடக்கிக்கொண்டு அதிகரித்த இதயத் துடிப்புடன் காளு அந்த இளம் பெண்ணையே பார்த்தவாறு நின்றிருந்தான். அருவிக் கரையையொட்டி வீசி வந் இளம் காற்றில் மார்புக்கு மேலே மெல்லிய புடவை விலகும் போது, காளு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டான். வெள்ளைக் கல்லின் மேல் தன்னுடைய கருமையான கூந்தலை விரித்துப் போட்டு கண்களை மூடிப் படுத்திருந்த காளு அங்கு நிற்பதையே கவனிக்கவில்லை.

கடைசியில் அருவிக்கரையில் வீசிய காற்றின் விளையாட்டால் முழங்காலுக்கு மேலே பூ போட்ட புடவை உயர்ந்தபோது காளுவால் பொறுமையாக இருக்கவே முடியவில்லை. அவன் கையிலிருந்த கம்பு கீழே விழுந்தது. மறைந்தும் பதுங்கியும் இரையைப் பிடிப்பதற்காகப் போகும் ஒரு புலியைப் போலஅவன் மெதுவாக அடியெடுத்து வைத்து முன்னோக்கிப் போனான்.

அப்போது மரக்கிளைகளில் அமர்ந்திருந்த காட்டுக்கிளிகள் ஒன்றாகச் சேர்ந்து கத்தின. கிளிகளின் ஒருமித்த குரலைக் கேட்டு கண்களைத் திறந்த லில்லியின் கண்களில் சிவப்பு வண்ண ட்ரவுசர் மட்டும் அணிந்து தனக்கு நேராக வந்து கொண்டிருக்கும் காளு தெரிந்தான். அவன் கண்களில் காமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

லில்லி வெள்ளைக் கல்லின் மேல் எழுந்து உட்கார்ந்து புடவையை இழுத்து விட்டு தோள்களைப் போர்த்தினாள். பாகவதரைப் போல முடியை நீளமாக வைத்துக் கொண்டு சிவப்பு ட்ரவுசர் மட்டுமே அணிந்த ஒரு கருப்பு மனிதன். காட்டில் அவள் பார்க்கும் முதல் மனிதப் பிறவி அவன்தான். காட்டில் வாழும் ஏதோ ஒரு மனிதனாக அவன் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். அதனால் அவள் கொஞ்சமும் பயப்படவில்லை.

‘‘நீங்க யாரு? என்ன வேணும்?’’

அவள் கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் கண்களால் அவன் லில்லியைக் குடித்து விடுவதைப் போல் பார்த்தான். இந்த அளவிற்கு வெளுத்த ஒரு பெண்ணை அவன் கனவில் கூட இதுவரை பார்த்ததில்லை. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு தனக்கு இனியொரு முறை கிடைக்கப் போவதில்லை என்பதையும் அவன் நன்கு அறிவான். காளுவின் மோகத் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவன் எது செய்யவும் இப்போது தயாராக இருந்தான். அவள் லேசாக அசைந்தால் கூட போதும்... காளு அவனை ஒரு வழி பண்ணி விடுவான். அவனின் உடல் முறுக்கேற ஆரம்பித்தது. பற்கள் கிடுகிடுவென நடுங்கியது.

‘‘என்ன பார்வை...’’ - அவள் சொன்னாள். ‘‘இதுக்கு முன்னாடி நீ பெண் யாரையும் பார்த்தது இல்லையா?’’

‘விருப்பம்போல பார்த்துக்கொள்’ - அவள் மனதிற்குள் கூறினாள். ‘வேணும்னா தொட்டுக்கோ காட்ல வளர்ந்த மனிதனாச்சே! என்னைப் போல ஒரு பெண்ண்ண நீ இதுக்கு முன்னாடி பார்த்திருக்க மாட்டே. அதுனாலதான் இப்படி பார்க்குறே!’’

டாக்டர் கிருஷ்ணசந்திரன் தந்திரமாக அழைத்துச் சென்று தன்னுடைய வலையில் விழ வைத்து தன்னுடன் படுத்தான். பெரிய பெரிய பட்டங்களை வாங்கிப் படித்தவனான கிருஷ்ணசந்திரன் அப்படி நடக்கலாமென்றால் இந்தக் காட்டு மனிதன் தன்னை ஏன் பார்க்கக்கூடாது? ஏன் தொடக்கூடாது?

‘என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோ...’

அவள் முகத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் மேலும் முன்னோக்கி வந்தான். அவன் சூடான மூச்சு அவளின் தலைமுடியில் பட்டது. அவன் உடலிலிருந்து உழுது போட்ட மண்ணின் வாசனை வந்தது.

தான் இப்போது ஒரு எல்லையை மீறி போய்க் கொண்டிருப்பதை காளு உணர்ந்தான். மனக் கட்டுப்பாட்டின் எல்லா சங்கிலிகளையும் அவன் கிட்டத்தட்ட முழுமையாக அறுத்தெறிந்து விட்டான். அவன் இரண்டு கைகளையும் நீட்டியவாறு அவளின் குளிர்ச்சியான வெண்மை நிற முகத்தை கையால் தொட்டான்.


அப்போது ஒரு மின்னலைப் போல மாமன்னூரின் மாரியம்மனின் முகம் அவன் மனதில் தெரிந்தது. கோபம் கொண்ட மாரியம்மனின் கண்களில் இருந்து நெருப்புப்பொறி பறந்தது. மனதிற்குள் முழுமையான நடுக்கம் உண்டாக, அவன் தன்னுடைய கைகளை பின்னோக்கி எடுத்தான். மாரியம்மனின் இரத்தக் கண்களில் இருந்து இடியும், மின்னலும் கிளம்பின. ‘‘கெட்டவனே! நீ என்ன காரியம் செஞ்சே? காட்டுல பார்த்த இந்த இளம் பெண்ணை என்ன பண்ணலாம்னு நினைச்சே?’’ - மாரியம்மனின் ஆக்ரோஷமான குரலை அவன் காடே அதிரும் வண்ணம் கேட்டான். அவ்வளவுதான் - அவன் கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்தான். அந்த நடுக்கத்துடன் அவளை விட்டு பின்னோக்கி நகர்ந்தான்.

‘‘காட்டு மனிதனே! என் முகத்தை உனக்கு தொட்டுப் பார்க்கணும் போல இருக்கா?’’ - அவள் அன்பு இழையோடிய குரலில் கேட்டாள்.

‘‘தொட்டுக்கோ. நான் ஒண்ணும் சொல்லல. ஆமா... ஏன் பயப்படுற?’’

அவன் இரண்டடி பின்னோக்கி நடந்தான். மீண்டும் பின்னால் போய் ஒரு மரத்தில் சாய்ந்து நின்று அவன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.

அவனின் நடவடிக்கைகளைப் பார்த்த அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவள் எழுந்ந் காளுவிற்கு நேராக நடந்து வந்தாள். அவன் மாரியம்மனை மனதில் நினைத்தவா£ கண்களை மூடி நின்றிருந்தான்.

‘பாவம்...’ - அவள் மனதிற்குள் நினைத்தாள். ஒரு காட்டு வாழ் மனிதனாக இருப்பதால்தானே அவன் இப்படி நடந்து கொள்கிறான்! அவனின் இடத்தில் இப்போது டாக்டர் கிருஷ்ணசந்திரன் இருந்திருந்தால்...? அவளுக்கு காளுவைப் பார்த்து பரிதாப உணர்வு தோன்றியது.

நேரம் செல்லச் செல்ல காளுவின் மனதை ஆக்கிரமித்திருந்த நெருப்பு முழுமைமமக அணைந்தது. மாரியம்மன் அவனை எப்படியோ காப்பாற்றி விட்டாள். இதற்கு முன்புகூட அவள் அவனைக் காப்பாற்றியிருக்கிறாள். நாலாவது பிரசவ சமயத்தில் அவன் மனைவி கரியாத்தி இறந்திருக்க வேண்டியவள். எட்டு நாட்கள் சுய நினைவே இல்லாமல் படுத்துக் கிடந்தாள். அப்போது அவளைக் காப்பாற்றியது மாரியம்மன்தான். மனமும் காலும் தடுமாறி நின்ற இந்த நிமிடத்திலும் அவனை அவள்தான் காப்பாற்றியிருக்கிறாள்.

அமைதியாக நின்றிருந்த காளு நடந்து சென்று தரையில் கிடந்த தன்னுடைய கம்பைக் கையிலெடுத்தான். இப்போது அவன் பழைய காளுவாக மாறினான். ஆயிரம் ரூபாய், ஓட்டு கம்பெனியில் வேலை.

‘‘என்ன... ஒண்ணமே பேசல? வாய்ல என்ன முத்தா இருக்கு!’’

காளு எதுவுமே பேசாமல் நின்றிருந்தான். அவன் கண்கள் ஒரு மரத்தினடியில் இருந்த லில்லியின் சூட்கேஸையே பார்த்தன.

‘‘காட்டுல எங்கே இருக்காப்ல? உங்க பேரென்ன?’’

‘‘கரியன் மகன் காளு’’

‘‘கல்யாணம் ஆயிடுச்சா?’’

‘‘ம்...’’

‘‘பிறகு ஏன் என்னைத் தொட்டீங்க?’’

செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடுவதைப் போல கையிலிருந்த கம்பை உயர்த்தி அவன் காலில் அதனால் ஒரு போடு போட்டான்.

‘‘என்ன... தலையில ஏதாவது பிரச்னையா?’’

புடவை அப்போது அவளின் தோளை விட்டு நீங்கி, தோள் வெளியே தெரிந்தது. காளு முகத்தைத் திருப்பிக் கொண்டு எங்கோ தூரத்தில் பார்த்தான்.

‘‘உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?’’

அவளின் முகத்தைப் பார்க்காமலே கிளி பேசுவதைப் போல காளு சொன்னான்.’’ ‘‘ஆறு...’’

‘‘அடக் கடவுளே... சஞ்ஜய்காந்தி இறந்து போனது உங்களோட அதிர்ஷ்டம்...’’

காளு திடீரென்று முன்னால் அடியெடுத்து வைத்து அவளின் சூட்கேஸைக் கையிலெடுத்தான். அவளின் முகத்தைப் பார்க்காமலே கனத்த குரலில் அவன் கட்டளை இட்டான்.

‘‘நட...’’

‘‘எங்கே -?’’

அவள் கேட்டாள்.

‘‘மாமன்னூருக்கு. நான் அங்கேயிருந்துதான் வர்றேன்.’’

அவ்வளவுதான். அவளின் ஆனந்தமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்து கொண்டது. அவன் காட்டில் வாழும் மனிதன் இல்லை என்பதையும், மாமன்னூரில் இருந்து வந்திருப்பவன் என்பதையும் தெரிந்து கொண்டபோது அவளுக்கு ஒரே வெறுப்புத்தான் தோன்றியது. அந்தக் கணமே அவனை அவள் வெறுத்தாள். அவன் தன் முகத்தை எதற்காகத் தொட்டான் என்பது இப்போது அவளுக்குப் புரிந்துவிட்டது. அவனின் பார்வையின் பொருளையும் இப்போது அவள் புரிந்து கொண்டாள். அவனுக்கும் டாக்டர் கிருஷ்ணசந்திரனுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.

‘‘நீ ஏன் காட்டுக்கு வந்தே?’’

‘‘அது என்னோட விருப்பம்.’’

‘‘இங்கே பாம்பு, காட்டுப் பன்றி எல்லாமே இருக்கு.’’

‘‘மனிதர்கள் இல்லையே?’’

காளு கம்பைத் தரையில் தட்டி ஓசை உண்டாக்கியவாறு அவளுக்குப் பக்கத்தில் வந்தான்.

‘‘நீ எவ்வளவு நாட்கள் இந்தக் காட்டில் இருப்பே? இங்கே சாப்பிடுறதுக்கும் குடிக்கிறதுக்கும் ஏதாவது இருக்கா?’’

‘‘நீங்க யாரு இதையெல்லாம் கேக்குறதுக்கு?’’

அவள் அவனின் கையிலிருந்த சூட்கேஸை பலவந்தமாக இழுத்து வாங்கி மவுனமாக இருந்த கேசப் ப்ளேயரையும் எடுத்துக் கொண்டு அருவிக் கரையோரமாக நடந்தாள். இப்போது அவள் காளுவைப் பார்த்து பயப்பட்டாள்.

அவள் திரும்பிப் பார்க்கவில்லையென்றாலும், நிலத்தில் படுவதன் மூலம் கேட்கும் கம்பின் ஓசையைக் கொண்டு காளு தன்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த மனிதன் எப்படி இங்கே வந்தான்? காட்டிற்குள்ளும் தன்னால் மன நிம்மதியாக இருக்க முடியவில்லையே!

‘‘ஏம்மா...’’ - காளு மெதுவான குரலில் சொன்னான். ‘‘அம்மா... கொஞ்சம் நில்லு....’’

அவள் நிற்கவில்லை. அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்பதைப் பற்றி சிந்தித்தவாறு அவள் தன்னுடைய நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். காடு கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகிக் கொண்டு வந்தது. சீக்கிரம் மாலை நேரம் வந்து விடும். தொடர்ந்து இரவும்.

அவள் படு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். சொல்லப் போனால் அவள் வேகமமம ஓடினாள். அவளுக்குப் பின்னால் கம்பின் சத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது.

கோபத்தின் உச்சிக்கே சென்ற லில்லி காளுவிற்கு நேராக திரும்பி நின்றாள்.

‘‘உங்களுக்கு என்ன வேணும்? பணமா?’’

அவள் சூட்கேஸைத் திறந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனை நோக்கி நீட்டினான். தான் செய்வது முட்டாள்தனம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். பணம்தான் அவனுக்கு முக்கியம் என்றால் வெறும் நூறு ரூபாய் நோட்டைப் பபர்த்து விட்டு அவன் வெறுமனே அடங்கி விடுவானா? சூட்கேஸையும் கேசட் ப்ளேயரையும் கழுத்தில் கிடக்கும் சங்கிலியையும் கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தையும் அவன் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விட மாட்டானா? தன்னுடைய தர்மசங்கடமான நிலையைப் பார்த்து அவள் உண்மையிலேயே தன்னைத் தானே நொந்து கொண்டாள். அது அவளிடம் ஒரு வித சோர்வை உண்டாக்கியது.


இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் தைரியம் தன்னிடம் இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாள்.

‘‘இங்க பாருங்க... இதை எடுத்துக்கோங்க. என்னை என் வழியில் விட்டுடுங்க...’’

‘‘இங்க பாரும்மா... உன்னோட பணமொண்ணும் எனக்கு வேண்டாம்.’’

அவள் தன்னுடைய சிவப்பு வண்ண சூட்கேஸை எடுத்து அவன் காலுக்குக் கீழே எறிந்தாள்.

‘‘போதுமா? இனியாவது இந்த இடத்தை விட்டு போங்க...’’

கா£ தன்னுடைய காலடியில் கிடக்கும் சூட்கேஸையே பார்த்தான். அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், ஒரு கோடீஸ்வரரின் மகளின் சூட்கேஸ் ஆயிற்றே! அதில் ஆயிரங்களின் மதிப்புள்ள பொருட்கள் நிச்சயம் இருக்கும் என்பது மட்டும் அவனுக்குத் தெரியும்.

சூட்கேஸ், கேசட் ப்ளேயர் - இவை இல்லாமல் அவளின் கழுத்தில் தங்கத்தால் ஆன சங்கிலியும், கையில் கைக்கடிகாரமும் இருக்கின்றன. வேண்டுமென்றால் அவை எல்லாவற்றையுமே காளுவால் எடுத்துக் கொள்ள முடியும். இந்த அடர்ந்த காட்டில் அவளைக் காப்பாற்றுவதற்கு யார் வரப் போகிறார்கள்?

மாமன்னூரில் இருக்கும் மாரியம்மன்... மாரியம்மன் வருவாளே!

காளுவிற்கு அவமானமாக இருந்தது. தேவையற்ற இப்படிப்பட்ட சிந்தனைகள் தன்னுடைய மனதை வந்து எப்படி ஆக்கிரமிக்கின்றன? இந்த நிமிடம் வரை காளு உண்மையானவனாகவும் நேர்மையானவளாகவும் வாழ்ந்திருக்கிறான. வறுமையும், நோயும் அண்டியபோதுகூட, யார் பணத்தையும் அபகரிக்க அவன் நினைத்ததில்லை. பிறகு இப்படிப்பட்ட கேவலமான சிந்தனைகள் ஏன் தன்னுடைய மனதில் உண்டாகின்றன என்று அவன் ஆச்சரியப்பட்டடன். ஒரு வேளை மாரியம்மன் தன்னைச் சோதனை செய்து பார்க்கிறாளோ என்று அவன் நினைத்தான்.

காளு தன் காலடியில் கிடந்த சூட்கேஸை தொடக் கூட இல்லை. லில்லிக்கு பயம் வந்தது. இந்த மனிதனுக்கு என்ன வேண்டும்? அவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?

‘‘முதலாளி சொல்லித்தான் நான் வந்தேன்.’’

‘‘எந்த முதலாளி?’’

‘‘உங்க அப்பா...’’

அதைக் கேட்டதும், இளம்பிள்ளைவாதம் வந்ததைப் போல லில்லியின் கால்கள் தளர்ந்தன.

‘‘இங்க பாரும்மா... பிடிவாதம் பிடிக்காம என் கூட நீ வந்திடு’’

‘‘அப்பா எங்கே இருக்காரு?’’

‘‘மாமன்னூர்ல... உன்னைப் பார்க்காம ரொம்பவும் கவலையில இருக்காரு அவரு...’’

அச்சுதன் நாயர் எல்லாவற்றையும் சொல்லித் தந்திருப்பார். இடத்தைக் காட்டி இருப்பார். ஒரு காட்டுக் கரடியை தன் தந்தை இங்கு அனுப்பியிருக்கிறாரே என்று அப்போது லில்லி நினைத்தாள்.

பலத்தைப் பயன்படுத்தி அவனிடமிருந்து தன்னால் தப்பிக்க முடியாது என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.

‘‘காளு...’’ - அவள் கெஞ்சினாள். ‘‘என் கழுத்துல கிடக்குற சங்கிலி, கைக்கடிகாரம், சூட்கேஸ் எல்லாத்தையும் எடுத்துக்குங்க... என்னை என் வழியில விட்டுடணும்...’’

காளு அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. மாரியம்மன் மேலும் தன்னைச் சோதித்துப் பார்க்கிறாள் என்று அவன் நினைத்தான். அவளுடைய கருணை இருக்கும்வரை தனக்கு எந்தவித கவலையுமில்லை என்று அவன் நினைத்தான்.

காளு பக்கத்தில் இருந்த கேசட் ப்ளேயரை எடுத்து சூட்கேஸில் வைத்து பூட்டினான். கம்பை எடுத்து கையிடுக்கில் வைத்தான். சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டு அவளின் கையை பலமாகப் பற்றிய அவன் வேகமாக நடக்கத் தொடங்கினான். அவளை கார் வரை கொண்டு போய் சேர்ந்தால் போதும். அதோடு அவனின் பொறுப்பு முடிந்தது. அதற்குப் பிறகு அவனின் வாழ்க்கையின் நிலையே மாறி விடும்.

அவனின் பிடி மேலும் இறுகியது. அவளின் கையை அவன் இறுக நெறிப்பதைப் போல் இருந்தது.

‘‘கையை விடுங்க... நான் வர்றேன்...’’

அவன் கொஞ்சமும் சந்தேகப்படாமல் தன் கையை விட்டான். அவள் திரும்பி ஓடவில்லை. திடீரென்று அவள் குனிந்து அவனின் சேறு புரண்ட கருப்பான கால்களை இறுகப் பற்றினாள்.

காளு அதிர்ச்சியடைந்து நின்று விட்டான். கோடீஸ்வரரான சி.கெ.யின் மகள் கரியன் மகன் காளுவின் கால்களை பிடிப்பதா? மாரியம்மனின் சோதனைக்கு அளவே இல்லையா? தன்னுடைய சேறு அப்பியிருக்கும் கால்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணைப் பார்த்தபோது காளுவிற்கு முதல் முறையாக மாரியம்மனிடம் வெறுப்பு தோன்றியது. இவ்வளவு பெரிய தண்டனையை மாரியம்மன் தனக்குத் தந்திருக்கக் கூடாது என்று அவன் நினைத்தான்ன்

காளுவிற்கு அவள் சொன்னது எதுவுமே புரியவில்லை. அவளின் உலகம் பணக்காரர்களின் உலகம். இந்தக் காட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் காளுவிற்கு அந்த உலகத்தைப் பற்றி என்ன தெரியும்? இருந்தாலும், ஒரு விஷயம் அவனுக்குப் புரிந்தது. இந்தப் பெண்ணை ஏதோ சில பிரச்சினைகள் வாட்டிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் அது.

அவன் சூட்கேஸையும் கம்பையும் தரையில் வைத்துவிட்டு, குனிந்து தன்னுடைய கால்களைப் பிடித்திருக்கும அவளின் கைகளை நீக்கினான். அப்போது அவனின் கண்கள் லேசாக பனித்தன.

‘‘என்னைப் பார்த்ததை யார்கிட்டயும் சொல்லக்கூடாது.’’

காளு சரியென்று தலையை ஆட்டினான். அவள் என்ன சொன்னாலும் அவன் கேட்பான். மாரியம்மன் இன்னொரு முறை அவனுக்கு வழிகாட்டி இருக்கிறாள்.

மனதில் சமநிலைக்கு வந்த காளு வெள்ளைக் கல்லுக்கு அருகில் அமர்ந்து லில்லிக்கு காட்டைப் பற்றிய விவரத்தை தெளிவாக விளக்கினான். விஷமுள்ள பாம்பையும் விஷமில்லாத பாம்பையும் எப்படி கண்டு கொள்ளலாம் என்பதையும், தின்னக் கூடாத காட்டு பழங்கள் என்னென்ன என்பதையும் அவன் அவளுக்கு சொல்லித் தந்தான். அவன் அவளுக்கு காட்டைப் பற்றிய விஷயங்களைக் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, காட்டின் பச்சை நிழல்கள் கறுத்துக் கொண்டே வந்தது. காட்டுக் குருவிகள் கூடுகளைத் தேடி போய்க் கொண்டிருந்தன.

‘‘காளு... இனி நீங்க போகலாம்.’’

அவள் சொன்னாள். அவளின் மனதில் இருந்த சந்தேகங்கள் முழுமையாகத் தீர்ந்திருந்தன.

காளு வெள்ளைக்கல்லை விட்டு எழுந்து தன்னுடைய கம்பைக் கையில் எடுத்தான். காட்டு வழியே நடக்கும் போதே அவன் பல முறை திரும்பித் திரும்பி பார்த்தான். லில்லியுடன் அவனுக்குத் திடீரென்று ஒரு நெருங்கிய நட்பு தோன்றியது மாதிரி இருந்தது.

மாலை நேரத்தில் அருவியில் நிறைந்திருந்த சிவப்பு வண்ணம் மாறி, அருவிக் கரையில் இருள் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. காடு நிசப்தத்தில் மூழ்கியது. மேலே நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

அவள் சிவப்பு வண்ண சூட்கேஸைத் திறந்து கேசட் ப்ளேயரை வெளியே எடுத்தாள்.

9

காயம் முழுமையாக மூடியிருந்தது. காட்டு மரங்களுக்கு மேலே மழை நன்றாக இறங்கி பெய்து கொண்டிருந்தது. அவ்வப்போது மின்னல்களும் தோன்றிக் கொண்டிருந்தன. தூரத்தில் எங்கோ இடி முழக்கங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. நேரம் மதியமாகி இருந்தாலும், சூரியனைப் பார்க்கவே முடியவில்லை.


முதல் நாள் இரவு மழை பெய்யத் தொடங்கியது. ‘சலசல’ வென்று சத்தம் உண்டாக்கியவாறு அது காடு முழுக்கப் பெய்து கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருக்கும் கிளிகள் எதுவும் காலை முதல் கூடுகளை விட்டு வெளியே வரவேயில்லை. பெரிய ஓசையுடன் மர இலைகளில் மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. காடு முழுக்க மழையின் ஆரவாரம் சிறிது கூட நிற்காமல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. காற்றில் பழுத்த இலைகள் தொடர்ந்து கீழே விழுந்து கொண்டிருந்தன. அருவியில் தண்ணீர் அதிகமாகி கொட்டிக் கொண்டிருந்தது.

எல்லா இடங்களிலும் இருந்து வந்த நீர் கலங்கிப் போய் அதில் வேகமாகக் கீழ் நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.

நண்பகலுக்குப் பிறகு மழை கொஞ்சம் நின்றது. சூரிய வெளிச்சம் இலைகளினூடே லேசாக எட்டிப் பார்த்தது. மழையில் நனைந்திருந்த பச்சிலைகள் வெயில் பட்டு பிரகாசித்தன. மரக்கிளைகளில் இருந்து மழை நீர் கீழே கிடக்கும் காய்ந்த இலைகள் மேல் ‘சொட் சொட்’டென்று சத்தம் உண்டாக்கியவாறு விழுந்து கொண்டிருந்தது.

அப்போது மழையில் நனைந்திருந்த காட்டுக்குள் ஒரு இளைஞன் தோன்றினான். அவன் சிறு சிறு புள்ளிகள் போட்ட சட்டை பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து ஒரு நனைந்த பீடியை எடுத்து நெருப்புப் பற்ற வைத்து இரண்டு முறை ஊதி புகையை விட்டான். அவன் காட்டின் நாலா பக்கங்களிலும் கண்களை ஓட்டினான். மழை நீர் புகுந்த கூடுகளை விட்டு கிளிகள் ஓசை எழுப்பியவாறு வெளியே பறந்து வந்தன. மழையில் கீழே விழுந்து குவிந்து கிடந்த பழுத்த இலைகளைத் தாண்டி கீற பாய்ந்தோடியது. முதுகை வளைத்துக் கொண்டு நனைந்து போன உடலைக் குடைந்து கொண்டிருந்த ஒரு முள்ளம்பன்றியையும் அவன் பார்த்தான்.

அவன் எங்கு போக வேண்டும் என்று தெரியாமல் தயங்கி நின்றான்.

மாமன்னூரில் இருந்து பதினாறாம் மைல் வரை அவன் கால் நடையாக நடந்தே வந்திருக்கிறான். இந்தக் காட்டுப் பாதையில்தான் பஸ்கள் ஓடவில்லையே! நான்கு மணி நேரம் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு அவன் படு வேகமாக காட்டுப் பாதையில் நடந்து வந்தான். அவ்வப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. பதினாறாம் மைலை அவன் அடைந்தபோது ஒரு கட்டு பீடி முழுமையாக தீர்ந்திருந்தது. இருந்தாலும், அவன் களைப்படையவில்லை. கம்பியை வளைத்து வளைத்து கைகளுக்கு மட்டுமல்ல கால்களுக்கும் நல்ல பலம் கூடியிருந்தது.

இடுப்பளவு வளர்ந்திருந்த காட்டு புற்களுக்கு மத்தியில் மழை நீர் தெப்பம் போல நிறைந்திருந்தது. சில இடங்களில் புல்லின் நுனி மட்டுமே தெரிந்தது. அதற்கு மத்தியில் நடந்து போவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாகவே இருந்தது. மழை நின்றது ஒரு விதத்தில் நல்லதாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் மாமன்னூருக்கே திரும்பிப் போவதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போயிருக்கும்.

இடுப்பு வரை அவன் முழுமையாக நனைந்துதான் ஒற்றையடிப் பாதைக்கே வந்தான். அப்போது வானம் மேலும் தெளிவாக இருந்தது. வெப்பமான சூரிய வெளிச்சம் அவன் மேல் விழுந்தது. நனைந்து போயிருந்த காடு ஒரு பச்சை மரகத்தைப் போல ஒளிர்ந்து, தன்னம்பிக்கை மேலோங்க அவன் முன்னோக்கி நடந்தான்.

மாமன்னூரில் கிடைத்த தகவல்களை வைத்துத்தான் அவன் பதினாறாம் மைலில் இருந்து காட்டை நோக்கித் திரும்பினான். பஸ்சிலும் வண்டியிலுமாக பயணம் செய்து அவன் மாமன்னூரை அடைந்தபோது, அங்கு காணாமல் போன இளம்பெண்ணைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சாதாரணமாக எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய நகரம் ஒரு தேனீக்களின் கூட்டத்தைப் போல பயங்கர ஆரவாரமாக இருந்தது. விவரம் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்திருந்த சி.கெ.யின் எண்ணம் வெற்றி பெறவில்லை. சென்னையைச் சேர்ந்த ஒரு நாளிதழின் ரிப்போர்ட்டர் சி.கெ.யையே விடாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். தளர்ந்து படுத்துக் கிடந்த அச்சுதன் நாயரை அவன் கேள்விகள் கேட்டு துளைத்துக் கொண்டிருந்தான்.

இவ்வளவு விஷயங்கள் நடந்த பிறகும், சி.கெ. இதை போலீஸில் ரிப்போர்ட் செய்யவில்லை.

‘‘இங்க பாருங்க சி.கெ., இனி போலீஸ்காரங்க உதவி இல்லாம நம்மால ஒண்ணுமே செய்ய முடியாது. வி.சிம்ப்ளி கான்ட் லொக்கேட் ஹெர்.’’

காளு வெறும் கையுடன் திரும்பி வந்தபோது, மேஜர் நம்பியார் சொன்னார்.

‘‘என் மகளை போலீஸ் ஸ்டேஷன்ல ஏற வைக்கிறதா ? நோ... நெவர்...’’

சி.கெ. அதற்குச் சம்மதிக்கவில்லை.

முத்துவண்ணனின் உதவியுடன் காட்டைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும் மாமன்னூரைச் சேர்ந்த பல ஆட்களையும் ஒன்று சேர்க்க நினைத்தார் அவர். மாமன்னூரைச் சேர்ந்த இருபது ஆட்கள் அதற்காக முத்துவண்ணனின் பங்களாவிற்கு முன்னால் வந்து கூடி நின்ற போதுதான், சத்யன் காட்டுக்குள் நுழைந்திருந்தான். அவன் மாமன்னூரில் இறங்கிய விஷயம் சி.கெ.விற்குத் தெரியாது. அதுமட்டும் தெரிந்திருந்தால்...

பீட்டர் லில்லியின் மெடிக்கல் புத்தகங்கள் கண்டெடுத்த பாறையின் அருகில் நின்று கொண்டு சத்யன் காட்டை ஒரு முறை பார்த்தான். மழை போய் வெயில் வந்தவுடன் காடு பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. ஏராளமான காட்டுப் பறவைகள் ஓசை எழுப்பியவாறு இங்குமங்குமாய் பறந்து கொண்டிருந்தன. வெயில் பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்த பாறையின் மேல் ஏறி நின்று ஒரு ஓணான் அவனை வரவேற்றது. சிறிது தூரத்தில் மரக்கிளையில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு காட்டுக் குரங்குகளை அவன் பார்த்தான்.

காட்டின் விரிந்து கிடக்கும் பரப்பளவையும், ஆழ்ந்த அமைதியையும் பார்த்த அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவ்வளவு பெரிய காட்டில் காணாமல் போன ஒரு இளம் பெண்ணை அவனைப் போன்ற ஒரு ஆளால் தனியாக எப்படி கண்டுபிடிக்க முடியும்? தான் இப்படியொரு முயற்சியில் இறங்கியது வீணாகப் போய் விடுமோ? - இப்படி எல்லாம் அவன் மனம் நினைத்தது.

ஆனால், எப்போதும் அவன் மனதில் ஒளிர்ந்து நிற்கும் தன்னம்பிக்கை என்னும் சுடர் அவன் கால்களை முன்னோக்கி நகர்த்தியது. தன்னுடைய கை கால்கள் சோர்வடையும் வரை இந்தத் தேடலைத் தொடர்ந்தே ஆவது என்று அவன் தீர்மானித்தான். இன்று மட்டுமல்ல... என்றும்... அவளைக் கண்டுபிடிக்கும்வரை...

ஒரு பீடியை எடுத்து புகைத்த அவன் ஒற்றையடிப்பாதை வழியாக நடையைத் தொடர்ந்தான். மழையில் நனைந்திருந்த காட்டின் மணமும், காட்டுக் குருவிகளின் பாட்டும் பிரகாசித்துக் கொண்டிருந்த பச்சை வெயிலும் அவன் மனதில் இனம் புரியாத ஆனந்தத்தை உண்டாக்கின.


காட்டில் இருப்பது அந்த ஒற்றையடிப் பாதை மட்டுமே. அதில் நடந்து நடந்து அவன் அந்தப் பெரிய பாறைக்கூட்டத்திற்கு அருகில் வந்தான். லில்லி அமர்ந்து சீக்கோ ஃப்ரீமேனின் ஜாஸ் இசையைக் கேட்ட பாறை இடுக்கில் மழை நீர் தேங்கிக் கிடந்தது. பாறைகளில் இருந்த ஈரம் வெயில்பட்டு நீராவியாக மாறி மேலே போய்க் கொண்டிருந்தது.

அவன் காட்டுக்கு நுழைந்து நான்கு மணி நேரம் ஆகிவிட்டது. பீடி புகைத்து புகைத்து அவன் உதடுகள எரிந்தன. வேட்டியை மடித்துக் கட்டி, சூரிய வெளிச்சம் விழுந்து கிடந்த பச்சை இலைகளைத் தாண்டி காட்டருவிக் கரை வழியாக அவன் நடந்து சென்றபோது கிட்டத்தட்ட அவன் லில்லியை மறந்தே போனான். எப்போதும் இப்படி பீடி புகைத்துக்கொண்டு, காட்டிலேயே நடந்து கொண்டு... அடடா என்ன இனிமைமான அனுபவம்! அமைதியான இந்தக் காட்டை விட்டு வெளியே வந்து நகரங்களை உண்டாக்கிய முன்னோர்கள் மீது அவனுக்குப் பரிதாபமே தோன்றியது.

அடுத்த நிமிடம் லில்லியைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது.  இந்தக் காடு அவளுக்கு ஒரு துரோகமும் செய்திருக்காது எனது முழுமையாக அவன் நம்பினான். முனிவர்களைப் போல சமாதி நிலையில் இருக்கின்ற இந்தப் பெரிய மரங்களும், குழந்தைகளைப் போல விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கின்ற இந்தச் செடிகளும், பாட்டுப் பாடும் குருவிகளும் அவள் மேல் அன்பை மட்டுமே வாரிக் கொட்டியிருக்கும் என்று அவன் முழுமையாக நம்பினான். அவன் பயப்பட்டது கூட காட்டைப் பார்தது அல்ல. நாட்டையும் வீட்டையும் விட்டு காட்டில் வந்து ஒளிந்திருக்கும் அளவிற்கு அவளைத் தூண்டிய அவளின் உணர்வுகளை நினைத்துதான். அதை எண்ணி எண்ணித்தான் அவன் குமைந்தான்.

அருவிக்கரையின் குழைந்து போயிருந்த மண்ணில் அவன் கொஞ்சமும் எதிர்பாராமல் காலடிச் சுவடுகளைப் பார்த்தான். ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றிருந்தது. மரங்களிலிருந்து கீழே விழுந்த இலைகள் நீரோடு சேர்ந்து போய்க் கொண்டிருந்தன. சிறகுகளில் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட ஒரு குருவி ஒரு மரத்தின் கீழ் கிளையில் வந்தமர்ந்து அவனை நோக்கி குரல் தந்தது.

‘‘லில்லி!’’

சுற்றிலும் இருந்த செடிகளைப் பார்த்தவாறு அவன் மெதுவான குரலில் அழைத்தான். காட்டிற்குள் வந்த அவன் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. அவனின் தேடல் வீணாகவில்லை.

அவள் முகத்தை உயர்த்திப் பார்த்தாள். காட்டெறும்புகள் கடித்ததால் அவன் கன்னங்களும், கழுத்தும் சிவந்து போயிருந்தன. அவனின் முகத்தில் தெரிந்தது வெற்றி ரேகை அல்ல. மாறாக, இனம் புரியாத கவலை.

அவன் அவளுக்கு நேர் எதிராக ஒரு பெரிய மரத்தடியில் உட்கார்ந்தான். மரத்தின் மேலிருந்து பெரிய கொடிகள் கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. அவளின் கையிலும் சிவப்பு அடையாளங்கள் இருந்தன.

அவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அவள் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் தலை முடியில் செம்மண் படிந்திருந்தது. அவளை அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அது லில்லி இல்லையென்றும், லில்லி என்ற பெயரைக் கொண்ட ஏதோ ஒரு நாவலில் வரும் ஒரு கதாபத்திரமென்றும் அவன் மனதிற்குத் தோன்றியது. சமீப காலமாக அவள் ஒரு கதாநாயகியாக மாறிக் கொண்டிருப்பதை அவன் கவனித்தே வருகிறான்.

அப்படி அவளை அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. விஷக்காய்ச்சல் வந்து படுத்த படுக்கையால் கிடக்கும் ஒரு நோயாளியைப் போல பார்ப்பதற்கு அவள் இருந்ததே காரணம். அவளால் உட்காரும் அளவிற்கு உடலில் பலமில்லை என்ன்ன்த அவன் புரிந்து கொண்டான். ஒரு வேளை காட்டிற்குள் வந்த பிறகு அவள் எதுவுமே சாப்பிடாமல் இருக்கலாம் என்று அவன் மனதில் நினைத்தான். வயிறு, மனம் இவற்றின் பசிதான் அவளை இந்த நிலையில் கொண்டு வந்து விட்டிருக்க வேண்டும்.

‘‘நாம போகலாம்’’

கடைசியில் அவன் சொன்னான். அவள் முகத்தை உயர்த்தியபோது, அவளின் கண்களில் நீர் அரும்பியிருப்பதை அவன் பார்த்தான்.

‘‘இனி நான் வீட்டுக்குப் போறதா இல்ல... எல்லாரும் எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு சொல்லுவாங்க.’’

‘‘சொல்லிட்டுப் போகட்டும். நமக்கென்ன?’’

அவர்களுக்கிடையே மீண்டும் ஒரு நீண்ட நேர அமைதி நிலவியது. சிறிது நேரத்திற்குப் பிறகு தாழ்ந்த குரலில் அவள் கேட்டாள்.

‘‘உண்மையிலேயே பார்க்கப்போனா, எனக்கு பைத்தியம்தானே பிடிச்சிருக்கு. சத்யன்?’’

‘‘வாய்க்கு வந்தது எல்லாத்தையும் பேசாதே. உனக்கு ஒரு பிரச்சனையுமில்ல...’’

‘‘உண்மையாவா?’’

‘‘உண்மையாத்தான் சொல்றேன்.’’

லில்லியின் பிரச்சனை என்னவென்பதை ததான் புரிந்து கொண்டதாக அவன் நம்புகிறான். எதற்காக அவள் காட்டில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறாள் என்பதற்கான காரணத்தையும் அவன் நன்கு அறிவான். ஒரே ஒரு விஷயத்தில்தான் அவனைப் பொறுத்தவரை மனக்குறை என்று சொல்லுவான். அது - அவன் ஏன் தன் மன உணர்வுகளை அவனிடம் முன்கூட்டியே வெளிப்படுத்தவில்லை என்பதுதான்.

மாமன்னூரில் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏதாவது ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு வேளை இந்த நிமிடத்தில் அவர்கள் காட்டை நோக்கிப் புறப்பட்டிருக்கலாம். உடனே ஏதாவது செய்தாக வேண்டும்.

‘‘நடந்தது எல்லாத்தையும் முழுசா மறந்திடு’’ - அவன் சொன்னான். ‘‘இனி நீ என்ன செய்யப் போறே?’’

‘‘தலச்சேரிக்கு போறதா இல்ல.’’

‘‘அப்படின்னா ஹாஸ்டலுக்குப் போவோம். பரீட்சை ஆரம்பிச்சிருக்குமா?’’

பனி மூடிய மலைகளின் அடிவாரத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரியும் ஹாஸ்டலும் ஒரு நிமிடம் அவளின் ஞாபகத்தில் வந்தன. ஒரு கனவு போல அது அவள் மனதில் தோன்றியது.

‘‘என்னை எங்கேயாவது கொண்டு போ.’’

‘‘நான் கூப்பிடுற இடத்துக்கு நீ வருவியா?’’

ஒரு சிறு குழந்தையைப் போல கண்களில் நீர் மல்க அவள் தலையை ஆட்டி ‘‘நிச்சயமா’’ என்றாள்.

அவன் ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்தான். சில நிமிடங்கள் எதுவுமே பேசாமல் எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் ததலயில் பல்வேறு வகைப்பட்ட சிந்தனைகள் கடந்து போயிருக்க வேண்டும். காரணம் - அவ்வப்போது அவனின் முகம் மின்னலைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது.

‘‘நீ  ஒரு கோடீஸ்வரனோட ஒரே மகளாக வாழ முயற்சி பண்ணினே. அதுல தோல்வி அடைஞ்சிட்டே. அமெரிக்காவுல செட்டிலான டாக்டரோட மனைவியா வாழ நீ முயற்சித்தாலும் அதுல நீ தோல்வியைத்தான் தழுவுவே. உன்னோட இலக்கு இதுவல்ல...’’


அவன் அவள் என்ன சொல்கிறாள் என்று அறிந்து கொள்வதற்காக அவளின் முகத்தையே பார்த்தான். அவள் அவன் பேசுவதையே உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘‘கம்பி வளைச்சா நாளொண்ணுக்கு முப்பது ரூபா கிடைக்கும். உண்ணவும் உடுக்கவும் அது போதும். கொஞ்ச நாள் போனா, ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணலாம். குழந்தைகளைப் பெறலாம். ஆனா, இதுனால மட்டும் வாழ்க்கையில் நான் திருப்தியடைஞ்சு மனிதனா ஆயிடுவேன்ற நம்பிக்கை எனக்கு இல்ல. என்னோட இலக்கு இவை அல்லன்னு எனக்கு தோணத் தொடங்கியிருக்கு...’’

தூரத்தில் மின்னல் தெரிவதைப் போல லில்லியின் முகம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

‘‘பட்டினியும் நோயுமா காட்டுப் பிரதேசங்கள்ல வாழ்ந்துக்கிட்டு இருக்குற ஆதவாசிகளைப் பற்றி நான் சொன்னது உன் ஞாபகத்துல இருக்கா?’’

அவள் அதை மறக்கவில்லை. அந்தக் காட்டுப் பிரதேசங்களில் வாழும் பறவைகளுக்குக் கூட பசி இருக்கிறது.

‘‘நாம அங்கே போகலாம்’’ - அவன் அவளின் முகத்தைப் பார்த்தவாறு சொன்னான்.

‘‘நீ அவர்களோட நோய்க்கு சிகிக்சை பண்ணி குணப்படுத்து. நான் அவுங்களுக்கு எழுத, படிக்கச் சொல்லித் தர்றேன்.’’

அவள் புடவைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்தாள். நீர் வழிந்த அவளின் கண்கள் இப்போது சூரிய வெளிச்சம் பட்டு பிரகாசித்தன.

‘‘நாம எப்படி வேணும்னாலும் வாழலாம். இப்போ இருக்கிற மாதிரி நல்ல ரெணடு நண்பர்களாகவோ, மனைவியும் கணவனுமாகவோ எப்படி வேணும்னாலும்... இல்லாட்டி அண்ணன், தங்கச்சியா... நம்ம உறவுக்கு ஒரு பேர் வேணுமா என்ன?’’

எத்தனையோ வருடங்களாக மனதில் கனத்துக் கிடந்த மேகங்கள் பெய்து தீர்த்ததைப் போல் இருந்தது. தான் ஒரு குருவியாக மாறியதைப்போல் உணர்ந்தாள் அவள். மரங்களுக்கும், செடிகளுக்கும் மத்தியில் பறந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறு கிளி...

சிறிது தூரத்தில் ஒரு மரத்தடியில் கிடந்த அவளின் சிவப்பு வண்ண சூட்கேஸை அவன் கையிலெடுத்தான். கேசட் ப்ளேயர் எங்கே போனதென்று அவளுக்குத் தெரியவில்லை. பேட்டரி தீர்ந்து போனதுடன், அதன் ஸ்டீரியோ சத்தத்தை அது முழுமையாக இழந்து விட்டிருந்தது. முன்பு அந்த கேசட் ப்ளேயருக்கு மேலே மழை பெய்து கொண்டிருப்பதை எந்தவித உணர்வுமில்லாமல் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்று வரை அவள் தன்னுடைய சொந்த இதயத்தைப் போல நினைத்த விலை மதிப்பு கொண்ட அந்த கேசட் ப்ளேயரை முழுமையாக மழை நீர் சூழ்ந்துவிட்டிருந்தது.

காலியான பீடி கட்டில் இருந்த கடைசி பீடியை எடுத்து பற்ற வைத்து புகை விட்ட சத்யன் சிவப்பு சூட்கேஸைக் கையில் எடுத்தவாறு காட்டுப் பாதை வழியே நடந்தான். அவனுடன் பறந்து தளர்ந்து போன ஒரு சிறு கிளியைப் போல லில்லியும்.

அதே நேரத்தில் மாமன்னூரைச் சேர்ந்த சுமார் நூறு பேர் கூட்டமாக வந்து அந்தக் காட்டை வளைத்தார்கள். அவர்கள் கையில் ஆயுதங்களும் பந்தங்களும் இருந்தன. செடிகளையும், கொடிகளையும் கண்டபடி வெட்டியெறிந்து அவர்கள் பயங்கர ஆரவாரங்களை எழுப்பிக் கொண்டு காட்டில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல மரங்கள் சிவப்பு வண்ணத்திற்கு மாறின. காட்டில் இருள் வந்து ஆக்கிரமித்தது. எரியும் தீப்பந்தங்களுடன் அவர்கள் தேடுதலைத் தொடர்ந்தார்கள். காட்டின் ஒரு மூலை முடுக்கைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பொழுது புலரும் வரை அவர்களின் தேடல் தொடர்ந்தது. ஆனால், மழைநீர் புகுந்து சர்க்யூட்டுகள் பாதிக்கப்பட்டு ஒன்றுக்குமே உதவாமற்போன ஒரு கேசட் ப்ளேயரைத் தவிர, காட்டில் அவர்களால் வேறெதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.