Logo

அபிமன்யு

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 9027
abimanyu

சுராவின் முன்னுரை

காக்கநாடன் (Kakkanadan) எழுதிய மாறுபட்ட நாவலான ‘அபிமன்யு’ (Abhimanyu) வை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

காக்கநாடனின் முழுப் பெயர் ஜார்ஜ் வர்கீஸ் காக்கநாடன். 1935-ஆம் ஆண்டில் பிறந்த அவர் இரண்டு தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் இரண்டு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957-ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடங்கன் தென்னக ரெயில்வேயிலும், 1961-லிருந்து 1967 வரை ரெயில்வே அமைச்சரகத்திலும் பணியாற்றினார்.

இதற்கிடையில் ஆக்ரா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசியாபாத் எம்.எம்.எச். கல்லூரியில் எம்.ஏ. படித்தார். 1967-ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்றார். லைப்ஸிகிலில் ஆறு மாத காலம் ஜெர்மன் மொழியைக் கற்றார். ஆறு மாதங்கள் ஐரோப்பா முழுவதும் சுற்றினார். 1968-ஆம் ஆண்டில் கேரளத்திற்குத் திரும்பி வந்தார். அதற்குப் பின் அவருடைய வாழ்க்கை கொல்லத்தில் தொடர்ந்தது.

1984-ஆம் ஆண்டில் சிறந்த புதினத்திற்கான கேரள சாகித்ய அகாடெமி விருது காக்கநாடன் எழுதிய ‘ஒரோத’ நாவலுக்குக் கிடைத்தது. இந்தப் புதினத்தை ‘வெள்ளம்’ என்ற பெயரில் நான் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். 1996-ஆம் ஆண்டு காக்கநாடனின் ‘உஷ்ண மேகல’ என்ற புதினத்திற்கு ‘முட்டத்து வர்க்கி’ விருது கிடைத்தது.

மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக மதிக்கப்படும் காக்கநாடனின் மிகச் சிறந்த எழுத்தாற்றலை ‘அபிமன்யு’வின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் உணரலாம். இந்தப் புதினத்தில் வரும் உண்ணி உண்மையிலேயே அபிமன்யுவைப் போல சக்கர வியூகத்திற்குள் சிக்கிக் கொண்டவன்தான். அவன் மட்டுமல்ல; உலகத்தில் உள்ள பல கோடி மனிதர்களும் தங்களுக்கே தெரியாமல் சக்கர வியூகத்திற்குள் மாட்டிக் கொண்டு கிடக்கிறார்கள் என்பதுதானே உண்மை! மிகப் பெரிய விஷயத்தை மையக் கருவாக வைத்துக் கொண்டு மாறுபட்ட ஒரு புதினத்திற்கு வடிவம் கொடுத்திருக்கும் காக்கநாடனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

இன்று காக்கநாடன் உயிருடன் நம்மிடையே இல்லையென்றாலும், இத்தகைய படைப்புக்களின் மூலம் அவர் காலத்தைக் கடந்து வாழ்வார் என்பது நிச்சயம்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா(Sura)


காளிகாவை அடைந்தவுடன், கோமன் அவனுடைய வீட்டிற்குத் திரும்பினான். உண்ணி தனிமையில் விடப் பட்டான்.

பள்ளிக்கூடப் பையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, நிர்வாண மான கால்கள் சரளைக் கற்களில் மிதித்து, கால் பாதங்களிலிருந்து கிளம்பி உள்ளேயே மேல் நோக்கிப் பரவி ஏறிய வேதனையைக் கடித்து அழுத்தியவாறு, அஸ்தமனத்தை நெருங்கிக் கொண்டிருந்த பகலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, மலை மேலே செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்து ஏறிய உண்ணிக்கு முன்னால் அவனுடைய நிழல் சாய்ந்து கிடந்து ஊர்ந்து ஏறிக் கொண்டிருந்தது. சரளைக் கற்களின் மேல் ஒரு அட்டையைப் போல ஒட்டிக் கொண்டு கிடந்த நிழல் அவனை இழுத்துக் கொண்டு போவதைப் போல தோன்றியது.

சிவப்பு நிறத்தில் இருந்த சரளைக் கற்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் அடர்ந்த புதர்கள் இருந்தன. புதர்களில் இருந்த முட்செடிகள் உண்ணியின் ஆடையைக் கடித்து இழுத்தன. ஆடை கிழிந்து போகாமல் இருப்பதற்காக அவன் நின்று, மெதுவாக முட்களின் பிடியில் இருந்து சட்டையை விடுதலை செய்தான்.

சிறிது தூரம் ஏறியவுடன் உண்ணியின் கால்கள் எப்போதும் போல தளர்ந்து போயின. அவன் ஒரு பாறையின்மீது உட்கார்ந்து மேற்கு திசையில் பார்த்தான். அஸ்தமனம் மேற்கு திசையில் இருந்த மேகங்களின் கழுத்துக்களில் வானவில்களாக நிறைந்து இருந்தது. சாயங்கால வானத்தின் விளிம்பிற்குப் பறந்து போய்ச் சேர வேண்டும் என்ற ஒரு ஆசை அந்த நிமிடத்தில் அவனுக்குள் தோன்றியது. முளையிலேயே அவன் அதைக் கிள்ளி எறியவும் செய்தான்.

கூடுகளில் அடைவதற்காக வரும் பறவைகளின் ஆரவாரம் அவனுக்குள் ஆர்வத்தை உண்டாக்கியது.

பறவைகளின் ஆரவார சத்தங்கள் நிறைந்த வானத்திற்குக் கீழே அடிவாரத்தில் கிராமம் விரிந்து கிடந்தது. அஸ்தமனத்தின் சிவந்த பின்புலத்திற்கு எதிராக கிராமத்தின் அழகான தோற்றத்தைப் படைத்த அறிமுகமில்லாதவர்களும், யாரென்று தெரியாதவர் களுமான கலைஞர்கள்மீது அவனுக்கு மிகப் பெரிய மதிப்பு உண்டானது.

ஆனால், தூரத்தில்- கீழே தெரிந்த கிராமம், உண்ணிக்கு தெரியாத ஒன்றல்ல. அங்குதான் அவனுடைய பள்ளிக்கூடம் இருக்கிறது. பள்ளிக்கூடம் தவிர, கிராமத்தில் தேவாலயங்கள், சந்தை இடங்கள், மருத்துவமனை, தபால் அலுவலகம் ஆகியவையும் இருந்தன. கிராமத்தின் வீடுகளில் உண்ணியின் நண்பர்கள், அவர்களுடைய தாய் தந்தையருடன் வாழ்ந்தார்கள்.

அதிர்ஷ்டசாலிகளான அந்த நண்பர்களைப் பற்றி உண்ணி நினைத்தான்.

கிராமத்திற்கும் மலைக்கும் இடையில் இருக்கும் எல்லையாக காளி காவு இருந்தது.

காளி காவில் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் வசித்தார்கள். அவர்களில் சிலர் கல்வி கற்கத் தொடங்கியிருந்ததால், காளி காவு வரை உண்ணிக்கு துணைக்கு ஆள் இருந்தார்கள். காளி காவில் இறுதியாக இருந்த வீட்டில் கோமன் தன்னுடைய தந்தை தேவனுடனும் தாய், அக்கா, தம்பி ஆகியோருடனும் வாழ்ந்தான்.

கோமனிடம் விடை பெற்றுவிட்டால், தினமும் உண்ணி தனிமையில் விடப்பட்டு விடுவான்.

"இல்லாவிட்டாலும் நீ தனிதான். தனியாகத்தான் இருக்க வேண்டும். " -பெரிய மாமாவின் வார்த்தைகள் உண்ணியின் மனதிற் குள் அலைகளைப் போல அசைந்து கொண்டிருந்தன. தனியாக இருப்பவனின் முரட்டுத்தனம் தெரியாதா?

ஆனால், உண்ணி நினைத்தான்- இந்த அளவிற்கு முரட்டுத்தனம் எதற்கு?

திடீரென்று அவன் கையைச் சுருட்டி பாறை மீது இடித்தான்.

தனியாக இருந்து பலத்தை வெளிப்படுத்துவதைவிட தேவைப் பட்டால், சற்று பலவீனமானவனாக இருந்தாலும், வாழ்வது எவ்வளவோ மேல் என்று அவனுக்குத் தோன்றியது.

மற்ற பையன்களுக்கும் முரட்டுத்தனத்திற்கு எந்தவிதக் குறைவும் இல்லை. பள்ளிக்கூடத்தில் கயிறு இழுக்கும் போட்டியில் உண்ணியும் நண்பர்களும் தோல்வியடைந்து விட்டார்கள். ஓட்டப் பந்தயத்திலும் தாண்டுவதிலும் உண்ணிக்கு இரண்டாவது இடம்தான் கிடைத்தது. முதல் இடத்தைப் பெற்ற ராகுலன் தனியாக இருப்பவன் அல்ல. அவன் தன்னுடைய தாய், தந்தையுடனும் உடன்பிறப்புக்களுடனும் கிராமத்தில் வசிக்கிறான்.

அப்போது உண்ணிக்கு ராகுலன் மீது பொறாமை தோன்றியது. கோமன் மீதும் அதே பொறாமை தோன்றியது. கோமனுடைய தந்தை மிகவும் ஏழை. தேவன் மற்றவர்களின் விவசாய நிலங்களில் வேலை செய்தான். மிகவும் சாதாரணமான கூலியைப் பெற்று, கூலியாகக் கிடைத்த பணத்திலிருந்து கள்ளு குடித்த தொகையைக் கழித்து, மீதியிருக்கும் பணத்தை மட்டுமே அவன் வீட்டிற்குக் கொண்டு வந்து தருவான். அந்தச் சிறிய தொகையை வைத்துதான் அந்த வீடு வாழ்ந்து கொண்டிருந்தது. கோமனின் தாயும் வெளியே சென்று பணிகள் செய்வாள். காட்டிற்குச் சென்று விறகு ஒடித்துக் கொண்டு வந்து, நெருப்பை எரிய வைத்து அவள் உணவைச் சமைத்தாள். இருக்கும் கஞ்சியை அவள் பிள்ளைகளுக்குப் பரிமாறி னாள். மீதியிருக்கும் கஞ்சியை வைத்துக்கொண்டு தேவனுக்காகக் காத்திருந்தாள். தேவன் புளித்த கள்ளு, கள்ளச் சாராயம் ஆகியவற்றின் வாசனையுடனும் ஓசையுடனும் அங்கு வந்தான். தாயையும் பிள்ளை களையும் வாய்க்கு வந்தபடி மோசமான வார்த்தைகளால் திட்டி னான். கஞ்சி இருந்த பானையை எறிந்து உடைத்தான். சாணம் மெழுகப்பட்ட முன் திண்ணையில் படுத்து குறட்டை விட்டுத் தூங்கி, பொழுது விடிவதற்கு முன்பே எழுந்தான். பிள்ளைகளை மிதித்து எழுப்பினான். அதிகாலைக் குளிரில், ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வரும்படி சொன்னான். குளித்து முடித்து பால் இல்லாத காப்பியைப் பருகிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான்.

அதையெல்லாம் கேட்டபோது ஒரு கவலை நிறைந்த கனவைக் காண்பதைப் போல உண்ணி உணர்ந்தான்.

உண்ணியின் பெரிய மாமா வேலைக்குச் செல்வதில்லை. காலையில் குளியலும் பூஜையும் முடிந்துவிட்டால், புத்தகங்களைப் படிப்பதில் மூழ்கிவிடுவார். சில நேரங்களில் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சாயங்கால வேளைகளில் மலையைச் சுற்றி நடப்பார். திரும்பி வந்த பிறகு மீண்டும் குளியலும் பிரார்த்தனையும். பிறகு உண்ணியை அழைத்து அறிவுரை கூறுவார். உண்ணி தூங்கும்போது, அவர் தூங்கியிருக்க மாட்டார். உண்ணி கண் விழிக்கும்போதும், பெரிய மாமா கண் விழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

பெரிய மாமா வேலை எதுவும் செய்வதை உண்ணி பார்த்ததே இல்லை. வேலைக்கு அய்யப்பன் என்ற ஒரு பணியாள் இருக்கிறான். அய்யப்பன் உணவு சமைக்கிறான். ஆடைகளைச் சலவை செய்து சுத்தமாக்குகிறான். வீட்டைப் பெருக்குகிறான். பெரிய மாமாவின் கால்களை அமுக்கி விடுகிறான். பூஜைக்கு மாமாவிற்கு உதவியாக இருக்கிறான்.


அய்யப்பனுக்கு கறுப்பு நிறத்தில் தோல் இருக்கும். அந்த அளவிற்குத் தலை முடியும் கறுப்பாக இருக்கும். முகத்தில் வயதை வெளிப்படுத்தும் கோடுகள் இருந்தாலும், தலைமுடியில் ஒன்றுகூட நரைக்கவில்லை. நல்ல சதைப்பிடிப்புடன் அய்யப்பன் இருப்பான். உடலில் முடி என்று எதுவும் இருக்காது. கொழுத்த, மென்மையான உடல் அய்யப்பனுக்கு. உடலிலேயே ஐந்தாறு செம்பு நிற உரோமங்கள் இருப்பது மூக்கிற்குக் கீழேயும் தாடையிலும்தான். ஒரு வாரம் ஆகிவிட்டால் செம்பு நிற உரோமங்களுக்கு கால் அங்குலம் நீளம் கூடும். உடைந்த ஒரு வட்டக் கண்ணாடியுடன் அய்யப்பன் வாசலுக்கு வந்து உட்கார்ந்திருப்பான். கண்ணாடியை ஒரு கல்லின்மீது சாய்த்து வைப்பான். எல்லா வாரமும் செய்யக்கூடிய வழக்கமான ஒரு செயல்தான் என்றாலும், ஒவ்வொரு முறையும் கண்ணாடியை ஒழுங்காக நிற்கச் செய்வதற்கு அய்யப்பன் சிறிது நேரம் படாத பாடு படுவான். இந்தச் சம்பவம் நடப்பது ஞாயிற்றுக் கிழமை என்பதால் உண்ணியால் அதைப் பார்க்க முடியும். கண்ணாடியை நிற்கச் செய்தவுடன், ஒரு மண் பாத்திரத்தில் இருக்கும் நீருடன் அய்யப்பன் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான்.

எதையோ தேய்த்து சுத்தப்படுத்துவதைப் போல நீரைத் தொட்டு முகத்தில் தடவிக் கொண்டே இருப்பான். அது முடிந்தவுடன், கத்தியை எடுத்துத் தேய்ப்பான். பெரிய மாமாவின் தூக்கி எறியப்பட்ட பழைய இடுப்பு பெல்ட்டுகளில் ஒன்றின்மீது கத்தியை வைத்து அவன் கூர்மைப்படுத்துவான். பார்த்தால் பயத்தைத் தோற்றுவிக்கக்கூடிய நீண்டு வளைந்த பெரிய கத்தி ஒரு தனி சத்தத்துடன் பெல்ட்டின் மீது அங்குமிங்குமாக நகரும். அப்போது அய்யப்பனின் கண்களில் தெரியும் குரோதத்தைப் பார்த்தால், அவன் கத்தியைக் கூர்மைப்படுத்துவது யாருடைய கழுத்தையோ வெட்டுவதற்காக இருக்குமோ என்று தோன்றும். கத்தியைக் கூர்மை செய்யும் செயல் முடியும்போது, முகம் காய்ந்து வறண்டு போயிருக் கும். அதற்குப் பிறகும் நீரைத் தேய்த்து விடுவான். பிறகு கத்தியைப் பயன்படுத்துவது ஆரம்பமாகும். ஒரு உரோமத்தைக்கூட மீதம் வைக்காமல் மிகவும் கவனம் செலுத்தி பல முறை கத்தியைப் பயன் படுத்துவான். அதைப் பார்க்கும்போது தோலைக்கூட அய்யப்பன் உரித்து எடுத்து விடும் வெறியுடன் இருக்கிறானோ என்று தோன்றும். இறுதியில் கத்தியைப் பயன்படுத்துவது முடிந்தவுடன், மேலுதட்டின் மீதும் கீழ்த்தாடையிலும் இரத்தத்தை வெளிப்படுத்தியவாறு, ஏதோ கடுமையான வேலை முடிந்து விட்டதைப் போல தளர்ந்து போய், மேலும் கீழும் மூச்சு விட்டவாறு வியர்வை வழிய அய்யப்பன் எழுந்திருப்பான். மிகவும் உயரமான மரத்தின் அடியை நோக்கிப் பதைபதைப்புடன் ஓடுவான். ஏதோ ஒரு பச்சிலையைப் பறித்து நசுக்கி, அதை மேலுதட்டிலும் கீழ்த்தாடையிலும் நீண்ட நேரம் வைத்திருப்பான். திரும்பி வந்த பிறகு பற்களைக் கடிப்பான். கண்கள் சிறியனவாக ஆகிவிடும். நெற்றியைச் சுளிப்பான். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், மிகுந்த வேதனையை அவன் அனுபவிக்கி றான் என்பது தெளிவாகத் தெரியும். பிறகு கத்தியைக் கழுவி சுத்தம் செய்யும் செயல் நடக்கும். இவை அனைத்தும் மணிக்கணக்காக நடக்கும்.

“மிகுந்த வேதனை, சின்ன எஜமான்'' -அய்யப்பன் வலியைத் தாங்கிக் கொண்டே கூறியவாறு நடந்து செல்வான். “கடவுள் மனிதனுக்கு எதற்குத்தான் மீசையை வைத்தாரோ?''

“யாருக்குத் தெரியும்?'' -உண்ணி சாதாரணமாகக் கூறுவான்.

ஆனால், உடம்பெங்கும் உரோமங்களைக் கொண்ட, தினமும் முகத்தை சவரம் செய்யக் கூடிய மாமாவின் முகத்தில் ரத்தம் கசிவதை உண்ணி பார்த்ததேயில்லை.

“அது இங்கிலீஷ் கத்தி'' -அய்யப்பன் விளக்கிச் சொன்னான்: “பட்டு மாதிரி இருக்கும். காயமே உண்டாகாது.'' தமிழும் மலையாளமும் கலந்த ஒரு வெங்கல மொழியில் அய்யப்பன் பேசுவான். அந்த மொழியில் நீண்ட பெருமூச்சை விட்டவாறு அய்யப்பன் தொடர்ந்து சொன்னான்: “அதே மாதிரி நம்மால முடியுமா? முடியாது.''

தொடர்ந்து அய்யப்பன் எந்தவொரு காரணமும் இல்லாமல் பயங்கரமாகச் சிரித்தான்.

நினைவு தெரிந்த காலத்திலிருந்து உண்ணி அய்யப்பனைப் பார்த்து வருகிறான். அய்யப்பனிடம் எந்தவொரு மாறுதலும் உண்டாகவில்லை. உண்ணி வளர்ந்தான். மரங்கள் வளர்ந்தன. விளைச்சல்கள் மாறி மாறி வந்தன. கிராமத்தில் புதிய வீடுகளும் கடைகளும் உண்டாயின. மலையில் இருக்கும் பாறைகளுக்கும் பெரிய மாமாவிற்கும்கூட மாற்றங்கள் உண்டாயின. மாமா மேலும் சற்று தடிமனாக ஆனார். தலை முடிகள் இன்னும் கொஞ்சம் நரைத்தன. அய்யப்பன் அப்போதும் இப்போதும் ஒரே மாதிரி இருந்தான். அய்யப்பன் எப்போதும் அய்யப்பன்தான். வயது வேறுபாடுகூட இல்லை அய்யப்பனுக்கு. கண்களுக்குக் கீழேயும் கன்னத்திலும் இருக்கும் சுருக்கங்களுக்குக்கூட எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை.

“பெரிய எஜமான்கூட வர்றப்போவும் நான் இப்படித்தான். அதன் ரகசியம் தெரியுமா?'' -தொடர்ந்து குரலை அடக்கிக் கொண்டு, ரகசியத்தைக் கூறுவதைப் போல அய்யப்பன் சொன்னான்: “உடல் பயிற்சி.''

தினமும் நடக்கும் செயல்களில் உடல் பயிற்சி மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருந்தது. அதைச் செய்வதற்கு உண்ணியும் கட்டாயப்படுத்தப்பட்டான். அதிகாலைப் பொழுதில் ஒரு மணி நேரமோ அதைவிட அதிக நேரமோ அவர்கள் மூவரும் உடற்பயிற்சி செய்தார்கள். மிகவும் அதிகமான நேரம் செய்தது மாமாதான். அந்தச் சமயத்தில் உண்ணி அந்த விஷயத்தில் சோம்பேறித்தனத்தைக் காட்டினான். புலர்காலைப் பொழுதிற்கு முன்பிருக்கும் இரவின் சிறிய மணித்துளிகளில், சுருண்டு படுத்து, அணிந்திருக்கும் ஆடையை அவிழ்த்து மூடித் தூங்கிக் கொண்டிருப்பதற்கு இணையான ஒரு பெரிய சுகத்தைப் பற்றி உண்ணியால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அந்த சுகத்தை தியாகம் செய்துவிட்டுதான் அதிகாலை வேளையில் உடல் பயிற்சி செய்வதற்காக அவன் கண் விழிக்க வேண்டியதிருந்தது. உண்மையாகச் சொல்லப்போனால் மாமாவிற்கு பயந்துதான் உண்ணி சற்று முன் கூட்டியே கண் விழிக்கவும் உடல் பயிற்சியில் ஈடுபடவும் செய்தான்.

“உடல் பயிற்சி செய்தால் உடல் பலம் கொண்டதாக மாறும். மனிதன் எப்போதும் ஒரே மாதிரி இருப்பான்.'' -அய்யப்பன் சொன்னான்.

“எப்போதும் ஒரே மாதிரி இருந்தால் போதுமா?'' -உண்ணி கேட்டான்: “நான் வளர வேண்டாமா?''

ஏதோ தமாஷைக் கேட்டதைப் போல அய்யப்பன் சிரித்தான். உண்ணிக்கு இதுவரை பெயர் தெரியாத- அதே நேரத்தில், பல நேரங்களிலும் அவன் கேள்விப்பட்டிருக்கும் ஒரு காட்டுப் பறவையின் சத்தத்தை அய்யப்பன் அப்போது வெளிப்படுத்தினான். அவன் சிரித்தபோது, அந்தக் காட்டுப் பறவை கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு ஓசைகள் உண்டாக்குவதைப் போல உண்ணிக்குத் தோன்றியது. சிரிப்பு என்ற அந்த சகித்துக் கொள்ள முடியாத செயல் முடிந்தவுடன், அய்யப்பனின் குரல் உயர்ந்தது.


“வளரக்கூடியது வளரும். பெரிதாகிவிட்டால், அதற்குப் பின்னால் வளராது. சின்னதாக ஆவதும் இல்லை. நரை விழாமல் கிழவன் ஆக முடியாது. அதுதான் ரகசியம். ஆமாம்...''

உண்ணி அதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்த போது, அய்யப்பன் கேட்டான்: “புரிஞ்சதா?''

“புரிந்தது'' -உண்ணி சிரித்துக் கொண்டே சொன்னான். தொடர்ந்து உண்ணி ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தினான்: “பிறகு ஏன் பெரிய மாமாவிற்கு நரை அதிகமாக இருக்கு?''

அய்யப்பன் தலைமுடியைத் தடவினான். பதில் இல்லாமல் போகிறபோது அய்யப்பன் செய்யக்கூடியது அதுதான். மிருகங்களின் குரலில் முனகுவான்.

“எல்லாம் ஆண்டவனின் விளையாட்டு.'' சிறிது நேரம் சிந்தித்துவிட்டு ஒரு தத்துவ ஞானியின் கம்பீரத்துடன் அய்யப்பன் பதில் கண்டு பிடித்தான்.

“அப்படியென்றால்- உடற்பயிற்சி செய்யவில்லையென்றால்...?'' -உண்ணி கேட்டான். அதற்குப் பிறகும் அய்யப்பன் முனகிக் கொண்டே இருந்தான்.

ஆனால், உண்ணி உடற்பயிற்சியில் ஈடுபடத்தான் செய்தான். இல்லாவிட்டால் பெரிய மாமா கோபப்படுவார் என்ற விஷயம் அவனுக்குத் தெரிந்திருந்தது. பெரிய மாமா கோமனின் தந்தையைப் போல கஞ்சிப் பானையை எறிந்து உடைப்பதில்லை. மோசமான வார்த்தைகளால் திட்டுவதில்லை. அதிகாலை நேரத்தில் மிதித்து எழுப்புவதில்லை. எனினும், கோமனின் தந்தை என்ற கெட்ட கனவை விட பயங்கரமான கனவாகவும் கவலையைத் தரும் உண்மை யாகவும் பெரிய மாமா இருக்கிறார் என்பதாக உண்ணிக்குத் தோன்றியது.

கோமனுடைய தந்தை சில நேரங்களில் நல்ல வடிவத்திலும் வீட்டிற்கு வந்திருக்கிறான். அப்போது அவன் பழம், மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வந்து பிள்ளைகளுக்குக் கொடுத்தான். அவர்களை இறுக அணைத்துக் கொண்டு முத்தமிட்டான். அவர்களிடம் இனிமையாகப் பேசினான். திருவிழாவிற்கு கோவிலுக்கு அழைத்துச் சென்றான். சுக்கு காப்பியும் பலகாரமும் வாங்கிக் கொடுத்தான். வேர்க்கடலை வாங்குவதற்கு காசு தந்தான். அந்த அளவிற்கு ஒரு நடத்தை பெரிய மாமாவிடம் இருந்ததே இல்லை. எல்லா நேரங்களிலும் பெரிய மாமா ஒரே மாதிரி இருப்பார். தேள் மலையின் உச்சியில் தேள் பாறையைப் போல குலுக்கல் இல்லாமல், அசைவு இல்லாமல், மாறுதல் இல்லாமல் வேறு ஏதாவது இந்த பூமியில் இருக்கிறது என்றால் அது பெரிய மாமாதான் என்று உண்ணி தெரிந்து வைத்திருந்தான். வெடி வெடிக்கும்போது பெரிய பாறைகள்கூட அடியோடு பெயர்ந்து சிதறி உருண்டு விலகி ஓடும் என்பதை உண்ணி கேள்விப்பட்டிருக்கிறான். எந்த வெடி வெடிக்கும்போது பெரிய மாமா அசைவார் என்று உண்ணி ஆச்சரியப்பட்டான்.

பெரிய மாமா சிரிப்பதை உண்ணி பார்த்ததில்லை. அழுவதையும் பார்த்ததில்லை.

அதை நினைத்ததும் உண்ணி திடீரென்று எழுந்தான். கால்களில் இருந்த சோர்வு திடீரென்று இல்லாமற்போனது. தெற்கு திசை வானத்தின் அழகு முழுமையாக இல்லாமற் போய் விட்டதைப் போல அவன் உணர்ந்தான். மிகவும் சீக்கிரம் வீட்டை அடைய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே அப்போது நினைக்க முடிந்தது. தோளில் இருந்து எடுத்துப் பாறைமீது வைத்திருந்த பையை எடுத்து மீண்டும் தோளில் தொங்கவிட்டவாறு உண்ணி மீண்டும் மலையில் ஏறத் தொடங்கினான்.

2

ண்ணியின் இருப்பிடத்தை ஒரு வீடு என்று அழைக்க முடியாது. ஆசிரமம் என்றுதான் மாமா குறிப்பிடுவார். மகரிஷி இல்லாத ஆசிரமம். பெரிய மாமாதான் மகரிஷி என்று அய்யப்பன் கூறுவதற்கு முயலும்போதெல்லாம் பெரிய மாமா அதைத் தடுப்பார்.

“அதற்கான தகுதி எனக்கு இல்லை அய்யப்பா!  நான் பாவத்தில் வளர்ந்தவன். இப்போதும் என்னிடம் பாவம் எஞ்சி நிற்கிறது'' -மாமா சொன்னார்: “இங்கு இருக்க வேண்டிய மகரிஷி இனிமேல்தான் வர வேண்டும்!''

திடீரென்று மாமாவின் பெரிய தலை மேல் நோக்கித் திரும்பியது. மிகப் பெரிய கண்கள் பாதி அளவில் மூடின. உதடுகள் துடித்தன.

“மகாதேவி!''

மாமா அழைத்தபோது, மாமா நாவால் அல்ல- முழு உடலையும் கொண்டு அழைக்கிறார் என்று அதைக் கேட்பவர்களுக்குத் தோன்றியது.

ஆசிரமம் இருந்த நிலத்திற்கு எல்லைகள் வகுத்தார். அது யாருக்கும் சொந்தமானது அல்ல. ஆனால், அங்கு ஒரு கூரையைக் கட்டி உருவாக்கியது மாமாதான். மாமா பணத்தை முதலீடு செய்து மேற்பார்வை பார்த்தார். அய்யப்பனும் வேறு சில பணியாட்களும் சேர்ந்து அதை உண்டாக்கினார்கள். கருங்கல்லால் ஆன அடித்தளம். அதன்மீது சிமெண்டால் போடப்பட்ட தரை. கருங்கல்லால் ஆன அரைச் சுவர்கள். அரைச் சுவர்களின்மீது மூங்கிலால் ஆன சுவர்கள்... மூங்கில் சுவர்கள் அறைகளைப் பிரித்தன. பனையோலைகளாலான மேற்கூரை...

வீட்டிற்குத் தேவையான அளவு அழகு இருந்தது. மாமாவின் வாசிக்கும் அறை, மாமாவின் படுக்கையறை, பூஜையறை... உண்ணிக்கு படிப்பதற்கும் தூங்குவதற்கும் சேர்த்து ஒரு அறை... சமையலறை, சாப்பிடும் அறை, ஸ்டோர் அறை, வெளி வாசல்...

அய்யப்பன் வாசலில் படுத்தான்.

சமையலறையில் அய்யப்பன் உணவு சமைத்தான். சாப்பிடும் அறையில் இடப்பட்டிருந்த காட்டு மரத்தின் தடியால் செய்யப்பட்ட மேஜைமீது பரிமாறினான். மாமாவும் உண்ணியும் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவு சாப்பிட்டார்கள். மதியத்திற்கு உண்ணி உணவைக் கொண்டு போய் பள்ளிக் கூடத்தில் வைத்துச் சாப்பிட்டான். ஞாயிற்றுக் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் மற்ற விடுமுறை நாட்களிலும் மாமாவும் உண்ணியும் ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவைச் சாப்பிட்டார்கள். இரவு வேளைகளில் அவர்கள் எந்தச் சமயத்திலும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டதில்லை. உண்ணி சீக்கிரமே இரவு உணவைச் சாப்பிட்டான். படித்தான். தூங்கினான். அதற்குப் பிறகுதான் மாமாவும் அய்யப்பனும் உணவைச் சாப்பிடுவார்கள்.

படிக்கும் அறையில் இரண்டு மூன்று அலமாரிகள் நிறைய புத்தகங்கள் இருந்தன. பழையனவாக இருந்த பெரிய புத்தகங்கள். அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இல்லாமல் இல்லை. புத்தகங்களில் ஒன்றுகூட கதைப் புத்தகமாக இல்லாமல் இருந்ததைப் பற்றித்தான் உண்ணி கவலைப்பட்டான்.

பெரும்பாலும் வேதாந்தம், தத்துவ ஞானம், மதம் ஆகியவை பற்றிய நூல்களே இருந்தன. ஒருநாள் ஒரு கவிதை நூலைப் பார்த்து உண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், திறந்து பார்த்த போதுதான் தெரிய வந்தது- அதுவும் மதம் சம்பந்தப் பட்டதுதான் என்பதே. பெரிய மாமா படிக்கும் அறையில் உட்கார்ந்து கொண்டு வாசித்துக் கொண்டிருப்பதை உண்ணி அப்போதும் பார்த்தான்.

சில நேரங்களில் வாசலில் சாய்வு நாற்காலியில் சிந்தனையில் மூழ்கிப் படுத்திருக்கும் மாமா, திடீரென்று எழுந்து படிக்கும் அறைக் குள் செல்வதைப் பார்க்கலாம். அவர் ஓடிச் சென்று ஒரு அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தைத் தேடி எடுப்பதை உண்ணி பார்த்தான்.


புத்தகத்தின் தாள்களைப் புரட்டி மாமா ஒரு குறிப்பிட்ட பகுதியில் கண்களைப் பதித்தார். அவருடைய உதடுகள் அசைந்தன. புத்தகத்தைத் திறந்து வைத்துப் பிடித்துக் கொண்டே அவர் கண்களை மூடிக் கொண்டு மேல் நோக்கித் தலையைத் திருப்பி நின்று கொண்டு, திரும்பத் திரும்ப வாசித்ததையே வாசித்துக் கொண்டிருந்தார். பிறகு புத்தகத்தை மடக்கித் திரும்பவும் அலமாரி யிலேயே வைத்தார். வாசித்த சமஸ்கிருத சுலோகத்தை முணுமுணுத்துக் கொண்டே வாசலுக்குச் சென்றார். அதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே ஒரு கனவில் நடப்பதைப் போல மலையின் உச்சியை நோக்கிச் சென்றார். மாமா எங்கு போகிறார் என்பது உண்ணிக்குத் தெரியும்.

மலை மேலே ஒரு பழைய காளி கோவில் இருக்கிறது. காளியின் பக்தனான பெரிய மாமா அந்த இடத்தில், ஒரு மலைச்சரிவில் வந்து தங்கியிருப்பதற்கு முக்கிய காரணமே அந்தக் கோவில்தான். மாநிலத்தில் வேறு எந்த இடத்திலும் அந்த அளவிற்குப் பழமை வாய்ந்த ஒரு காளி கோவில் இல்லவேயில்லை என்று பெரிய மாமா கூறுவார்.

மாமா நடந்து மறைந்தவுடன், அதே திசையை நோக்கி அய்யப்பனும் நடக்க ஆரம்பித்தான்.

படிக்கும் அறையில் இருந்த இன்னொரு அலமாரி முழுவதும் மருந்துகள் இருந்தன. கிடைப்பதற்கு மிகவும் அரிதான மருந்துகள்.

மாமாவின் படுக்கை அறை ஒரு சிறிய அறையாக இருந்தது. படுப்பதற்குத் தவிர வேறு எதற்கும் மாமா அந்த அறையைப் பயன் படுத்தியதில்லை. மாமாவின் படுக்கையறையைத் தவிர, அந்த அறையில் ஒரு பீடம் மட்டுமே இருந்தது. மரக்கட்டையை வைத்து உண்டாக்கப்பட்ட பீடத்தின்மீது ஒரு சாம்பல் தட்டும் ஒரு வெற்றிலை டப்பாவும் மட்டுமே இருந்தன. தூக்கத்திற்கு மத்தியில் இரவு நேரங்களில் நீர் குடிக்க வேண்டும் என்பதற்காக மாமா படுக்கையறையை விட்டு வெளியே வருவார். சாப்பாட்டு மேஜைமீது கூஜாவில் நீர் எப்போதும் இருக்கும்.

உண்ணியின் படுக்கையறை மாமாவின் படுக்கையறையைவிட பெரியதாக இருந்தது. ஒரு கட்டிலும் ஒரு மேஜையும் ஒரு நாற்காலியும் ஒரு பெரிய மரப்பெட்டியும் அந்த அறையில் இருந்தன. உண்ணி தன்னுடைய அறையின் மூலையில் எபோதும் கூஜாவில் நீர் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். மலை உச்சியில் இருந்த காளி கோவிலின் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஊற்றுப் பாறையில் இருந்து வரக்கூடிய நீர் அது. அந்த நீருக்கு மருத்துவ குணமும் ஏதோ அமானுஷ்ய சக்தியும் இருக்கின்றன என்று மாமா அவனிடம் கூறியிருந்தார். அந்த நீரைப் பருகினால் எப்படிப்பட்ட களைப்பும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று உண்ணி நம்பினான். உண்ணி பாட நூல்களை மேஜைமீது அடுக்கி வைத்தான். பள்ளிக்கூடப் பையை சுவரில் இருந்த ஆணியில் தொங்கவிட்டான். மரப் பெட்டியில் இருந்த சிறிய பிரிவில் மை புட்டி, பழைய பேனாக்கள், மலையில் இருந்து எடுத்த வினோதமான பொருட்கள் ஆகியவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். பெட்டியின் பிரதான பகுதியில் ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. அணிந்த ஆடைகளைத் தொங்க விடுவதற்கு சிவப்பு நிறத்தில் காட்டு மரத்தின் கொம்பு இருந்தது.

அய்யப்பன் ஒருநாள் காட்டிற்குச் சென்று அந்த மரக் கொம்பை வெட்டிக் கொண்டு வந்தான். அதை வெட்டுவதற்காகச் சென்ற நாளன்று அய்யப்பன் ஒரு காட்டெருமையைப் பார்த்தான். காட்டெருமை அய்யப்பனை விரட்டியது. வெட்டப்பட்ட மரக் கொம்புடன் அய்யப்பன் ஓடினான். இறுதியில் மரக் கொம்பை எறிந்துவிட்டு, அய்யப்பன் ஒரு பெரிய மரத்தின்மீது ஏறினான். நீண்ட நேரம் மரத்திற்கு அடியிலேயே காத்து நின்றுவிட்டு காட்டெருமை பின்வாங்கிச் சென்றுவிட்டது. எருமை மிகவும் தூரத்தில் போய்க் கொண்டிருப்பதை மரத்தின்மீது அமர்ந்து பார்த்த பிறகுதான், அய்யப்பன் கீழேயே இறங்கினான். அந்தக் காட்டெருமையை சில நாட்களுக்குப் பிறகு பெரிய மாமா துப்பாக்கியால் சுட்டார். மாமிசத்தில் ஒரு பகுதியை ஆசிரமத்திற்குக் கொண்டு வந்தார். மீதியை காளிகோவில் இருக்கும் மலைவாழ் மக்களுக்குக் கொடுத்தார். அந்த காட்டெருமையின் தலையும் தோலும் இப்போதும் ஆசிரமத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கின்றன.

ஸ்டோர் அறையில்தான் அப்படிப்பட்ட பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அன்றாடம் தேவைப்படும் வீட்டுப் பொருட்கள் சமையலறையில் இருக்கும்.

பூஜையறையில் ஒரு ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குரு வரைந்து மாமாவிற்குப் பரிசாகத் தந்தது அது என்று கேள்விப் பட்டிருக்கிறான்.

ஸ்ரீ சக்கரத்திற்கு முன்னால்தான் அவர் தினமும் பூஜையை நடத்துவார். ஸ்ரீ சக்கரத்தைப் பற்றி மாமா கூறியவை எதுவும் உண்ணிக்குப் புரியவில்லை. ஆழமான அர்த்தமும் அசாதாரணமான சக்தியும் கொண்ட ஒரு உக்கிரமூர்த்தி அது என்பதை உண்ணி புரிந்து கொண்டிருந்தான்.

ஸ்ரீசக்கரத்திற்குப் பின்னால் ஒரு ரகசிய அறை இருக்கிறது என்பதை உண்ணி கேள்விப்பட்டிருக்கிறான்.

ஒரு இரவு வேளையில் மாமாவிற்கும் அய்யப்பனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இருந்து அவன் அதைத் தெரிந்து கொண்டிருந்தான். மாமாவிற்கும் அய்யப்பனுக்குமிடையில் இருக்கும் நெருக்கத்தையும் அன்றுதான் அவன் தெரிந்து கொண்டான். இரவு தூக்கத்திலிருந்து திடீரென்று கண் விழித்த உண்ணி சாப்பிடும் அறையில் ஏதோ பேச்சு வருவதைக் கேட்டான். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றவே, வாசலை நோக்கி நடக்கும்போது அவன் சற்று சாப்பிடும் அறையை எட்டிப் பார்த்து நின்றான். அப்போதுதான் அய்யப்பனுக்கும் மாமாவிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை அவன் கேட்டான். ஸ்ரீ சக்கரத்திற்குப் பின்னால் இருக்கும் ரகசிய அறையைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொண்டதைவிட அவனை அந்த நேரத்தில் ஆச்சரியப்பட வைத்த விஷயம்- சாப்பிடும் அறையின் காட்சிதான். அய்யப்பனும் மாமாவும் சமமானவர்களைப் போல ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டி ருந்தார்கள். உண்ணி முழுமையாகத் திகைத்துப் போய்விட்டான். மாமாவைப் பற்றி பேசும்போதுகூட பக்தர்களுக்கே உரிய மரியாதையுடன் நடக்கும் அய்யப்பன், மாமாவிற்கு எதிரில் தான் அமரும் ஸ்டூலின்மீது உட்கார்ந்து பேசிக் கொண்டே சாப்பிடும் காட்சியை உண்ணியின் கண்களால் நம்பவே முடியவில்லை.

திடீரென்று அவர்களுடைய உரையாடல் நின்றது. மாமாவின் மிடுக்கு நிறைந்த குரல் கேட்டது.

“உண்ணி...''

உண்ணி நின்ற இடத்தில் சிறுநீர் கழிக்கவில்லை என்பதுதான் பாக்கி.

“என்ன?'' - அவன் அந்த கேள்வியைக் காதில் வாங்கினான்.

அதற்குள் அய்யப்பன் பணியாளனாக மாறிவிட்டிருந்தான். அவன் மேஜைக்கு அருகில் உணவு பரிமாறுவதைப் போல நடித்துக் கொண்டு நின்றிருந்தான்.

“என்ன?''- மாமாவின் குரல்: “தூக்கம் வரலையா?''

“சிறுநீர் கழிக்க...'' - உண்ணி திக்கித் திக்கி அந்த சொற்களைக் கூறி முடித்தான்.


“ம்...'' -மாமாவின் நீளமான முழக்கம் நேராக உண்ணியின் மனதிற்குள் போய் நுழைந்தது.

“சிறுநீர் கழிச்சிட்டு போய் படு.'' -மாமா சொன்னார்.

உண்ணி வாசலுக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு திரும்பவும் படுக்கைக்குச் சென்று படுத்தான். மணிக்கணக்கில் தூங்காமல் காதுகளைத் தீட்டிக் கொண்டு படுத்திருந்தான். ஆனால், அவன் தூங்குவது வரையில் அய்யப்பன், மாமா இருவரின் சத்தமும் கேட்கவே இல்லை.

சாப்பிடும் அறையில் பாத்திரம் அசைவது கேட்டது. சாப்பாட்டு அறையிலும் வாசலிலும் பாதங்களின் சத்தங்கள் கேட்டன. மாமாவின் அறையில் கட்டிலின் அழுகைச் சத்தம் கேட்டது. பிறகு காட்டின் இசை மட்டும் கேட்டது. இறுதியில் இரவின் அசைவுகளும் அவனுடைய காதுகளில் இல்லாமல் போயின.

ஒரு சாதாரண புலர்காலைப் பொழுதை நோக்கி உண்ணி கண் விழித்தான்.

எப்போதும் போல அய்யப்பன்தான் அழைத்து எழச் செய்தான். கண் விழித்துச் சென்று பார்த்தபோது மாமா எப்போதும் போல உடற்பயிற்சிக்குத் தயாராகி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். மனதிற்குள் ஒரு மந்திரத்தை முணுமுணுத்ததைத் தொடர்ந்து உடற் பயிற்சி ஆரம்பமானது. வழக்கம் போல மாமாவும் அய்யப்பனும் உண்ணிக்குக் கூற வேண்டிய அறிவுரைகளைக் கூறினார்கள். முந்தைய இரவைப் பற்றி யாரும் எதுவும் கேட்கவில்லை. அய்யப்பன் "சின்ன எஜமான்' என்றுதான் அழைத்தான். உண்மையான வேலைக்காரனைப் போலவே நடந்து கொண்டான். முந்தைய நாள் இரவு மாமாவுடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உணவு சாப்பிட்ட அய்யப்பன் எங்கு போனான் என்று உண்ணி ஆச்சரியத்துடன் நினைத்தான்.

உடற்பயிற்சி முடிந்து எப்போதும் போல மூவரும் ஒன்றாக ஆற்றுக்குச் சென்று குளித்தார்கள். குளிக்கும் இடத்திலும் அய்யப்பன் உண்மையான வேலைக்காரனாகவே இருந்தான்.

குளித்து முடித்து திரும்பி வந்து பூஜையை ஆரம்பித்தார்கள். காலை நேர பூஜையில் அய்யப்பன் முழு நேரமும் பங்கெடுப்பதில்லை. முதல் பூஜை முடிந்ததும், அய்யப்பன் சமையலறைக்குள் சென்றான். மாமாவும் உண்ணியும் பூஜையைத் தொடர்ந்தார்கள்.

பூஜை முடிவடைந்தபோது, அய்யப்பன் உணவு சமைத்து முடித்து விட்டிருந்தான். அவித்த கிழங்கும் மாமிச வறுவலும் சுக்கு காப்பியும்தான் அன்றைய காலை உணவாக இருந்தன. அய்யப்பன் எஜமானனிடம் முழுமையான பக்தி கொண்ட ஒரு வேலைக்காரனைப் போல் நடந்து கொண்டான்.

காலை உணவு முடிந்து மாமா படிக்கும் அறையை நோக்கிச் சென்றார். உண்ணியும் பாட நூல்களை நோக்கித் திரும்பினான். அய்யப்பன் வேறு பணிகளில் மூழ்கினான்.

உண்ணிக்குப் புறப்பட வேண்டிய நேரம் ஆனபோது, அய்யப்பன் பக்தியுடன் மதிய உணவுடன் வந்தான். அவன் உண்மையான வேலைக்காரனாக இருந்தான்.

உண்ணி அய்யப்பனின் கண்களையே பார்த்தான். எப்போதும் இருக்கும் பணிவைவிட வேறு எதுவும் அங்கு இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான்.

ஆனால், அந்த இரவு முதல் அய்யப்பன் வெறும் வேலைக்காரன் அல்ல என்பதும், மிகவும் முக்கியமான ஒரு ஆள் அவன் என்ற ஒரு எண்ணமும் உண்ணிக்குள் உண்டானது. அவனுடைய மனதின் உள்ளறையில் அய்யப்பன்மீது மதிப்பு உண்டானது. ஒரு மெல்லிய பயம் கூட உண்டானது. ஆனால், அய்யப்பனோ முன்பு இருந்ததைவிட எஜமான்மீது பக்தி கொண்டிருக்கும் ஒரு தனி வேலைக்காரனைப் போல நடந்து கொண்டான்.

ஆசிரம நிலத்தின் வடக்கு எல்லையில் ஆறு இருந்தது. காளி கோவிலைத் தாண்டி அதைவிட உயரத்தில் இருந்த ஏதோ ஊற்றில் இருந்து ஊறி வந்த தெளிந்த நீர்தான் நதியாக ஓடிக் கொண்டிருந்தது. பாறைகளில் மோதித் திரும்பி, பாறைக்கூட்டங்களின் வழியாகச் சுற்றித் திரிந்து, பாறைகளில் இருந்து அருவிகளாக மாறி, மீண்டும் பாய்ந்தோடிய வாய்க்கால்கள் ஒன்றாகச் சேர்ந்தபோது ஆறு பிறந் தது. ஆற்றுநீர் கண்ணீரைப் போல தெளிந்ததாக இருந்தது. ஆற்று நீருக்கு அடியில் உருண்டைக் கற்கள் கிடந்தன.

அந்த ஆற்றில்தான் உண்ணி தினமும் குளிக்கச் செல்வான். ஆற்றின் ஒரு பகுதியில் செடி, கொடிகள் படர்ந்து மறைவு உண்டாக்கிய- பாறைகள் நிறைய இருந்த பகுதியில்தான் உண்ணி எப்போதும் குளிப்பான். அந்த இடத்திற்கு அவன் உண்ணிக்கடல் என்று பெயரிட்டான். அதற்குச் சற்று மேலே மாமா குளிக்கும் இடத்திற்கு மாமா படித்துறை என்றும்; அய்யப்பன் குளிக்கும் இடத்திற்கு அய்யப்பன் படித்துறை என்றும் உண்ணிதான் பெயர்கள் வைத்தான்.

ஆற்றில் குளியலும் மலைச் சரிவில் வாழ்க்கையும் மனம் மற்றும் உடலின் நலனுக்கு மிகவும் நல்லது என்று மாமா சொன்னார். நகரத்திலும் கிராமங்களிலும் இருக்கும் காற்று மக்கள் பெருக்கம் காரணமாகக் கெட்டுப் போய்விட்டது என்றும்; இங்கு மட்டுமே சுத்தமான காற்று கிடைக்கிறது என்றும்; சுத்தமான காற்றையும் நல்ல நீரையும்விட மனிதனுக்கு மிகவும் முக்கியமானவை வேறு எதுவும் இல்லை என்றும் மாமா சொன்னார்.

ஆனால், நண்பர்கள் என்று யாரும் இல்லாத- விளையாட்டும் சிரிப்பும் இல்லாத வனவாசம் உண்ணியைப் பொறுத்த வரையில் ஒரு தண்டனையாக இருந்தது. அங்கிருந்த வாழ்க்கை இருட்டறையில் வாழ்வதைப் போல அவனுக்குத் தோன்றியது.

3

ண்ணி வந்தபோது பெரிய மாமா பொறுமையை இழந்து வாசலில் நடந்து கொண்டிருந்தார். பின்னால் கைகளைக் கோர்த்து வைத்துக் கொண்டு படுவேகமாக இருந்த அந்த நடை மாமாவின் கோபத்தை வெளிப்படுத்தக்கூடியதாக இருப்பதை உண்ணி தெரிந்து கொண்டிருந்தான். வாசலின் எல்லையில் நின்று கொண்டிருந்த கொய்யா மரத்தின்மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த அய்யப்பன்தான் முதலில் உண்ணியைப் பார்த்தான்.

உண்ணி மெதுவாக வாசலுக்கு வர ஆரம்பித்ததும், அய்யப்பன் சொன்னான்:

“இதோ, சின்ன எஜமான் வந்துட்டாரே!''

“ம்...'' -பெரிய மாமா நீட்டி முழங்கினார்.  அந்த முணுமுணுப்பிற்கு, உண்ணி முன்னால் வைத்த காலை பின்னோக்கி இழுக்கச் செய்யும் சக்தி இருந்தது. சிறிய ஒரு குற்ற உணர்வுடன் உண்ணி திரும்பி நின்றான்.

பெரிய மாமா அவனைப் பார்த்தார்.

“உள்ளே போய் புத்தகங்களை வைத்துவிட்டு ஆடைகளை மாற்றிவிட்டு வா, உண்ணி'' -அவருடைய குரலின் தனித்துவம் உண்ணியைப் பாடாய்ப் படுத்தியது.

அவன் தன்னுடைய அறைக்குச் சென்றான். தோளில் இருந்த பையை எடுத்து ஆணியில் தொங்கவிட்டான். ஆடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான். அப்போதும் மாமா அதே வேகத்தில் நடந்து கொண்டிருந்தார்.

“உண்ணி, போய் குளிச்சிட்டு வா.'' -மாமா கட்டளையிட்டார்.


ஆசிரமத்தின் வாசலில், அது உயரத்தில் இருந்ததால் மாலை நேரத்தின் இயல்பான வெளிச்சம் தெளிவாகக் காணப்பட்டது. மலையின் அடிவாரங்களில் இப்போது இருட்டு பரவ ஆரம்பித்தி ருக்கும். ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வரும்போது இருட்டாகி விட்டிருக்கும் என்பதை உண்ணி தெரிந்து வைத்திருந்தான். அவன் பயப்பட்டான். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உண்ணி உள்ளே சென்று மரக்கொம்பில் மாட்டப்பட்டிருந்த துண்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

“உண்ணி, நீங்க வர்றப்போ நேரமாயிடும்.'' - அய்யப்பன் சொன்னான்: “நானும் வர்றேன்.''

உண்ணி நன்றிப் பெருக்குடன் அய்யப்பனைப் பார்த்தான்.

“அய்யப்பா, நீ போக வேண்டாம்.'' -மாமா கட்டளையிட்டார்: “உண்ணி நீ போய் குளிச்சிட்டு வா.''

பிறகு எதுவும் கூறுவதற்கு இல்லை என்பதை உண்ணியும் அய்யப்பனும் அறிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் வாயைத் திறக்கவில்லை.

உண்ணி ஆற்றின் கரையில் நடந்தான். நடக்கவில்லை- அவன் ஓடிக் கொண்டிருந்தான்.

ஆற்றின் கரையில் இயல்பாக இருக்கும் வெளிச்சம் இருந்தது- ஆற்றிலும்.

குளிர்ந்த நீரில் மூழ்கி நிமிர்ந்து மேற்கு திசையைப் பார்த்தபோது, வானத்தில் சாயங்கால மேகங்கள் இருண்டு கொண்டிருப்பது தெரிந்தது.

குளித்து முடித்து வெளியே வந்தபோது இருட்டிவிட்டிருந்தது. இருட்டு விழுந்தவுடன் ஆற்றின் ஓட்டம் உண்டாக்கிய சத்தம்கூட இதற்கு முன்பு கேட்டிராத ஒன்றைப் போலவும் அச்சத்தை உண்டாக்கக்கூடியதாகவும் தோன்றியது. உள்ளே நடுக்கத்தை உண்டாக்கக்கூடிய காட்டின் சத்தங்கள் வேறு.

இங்கு வந்ததைப் போல திரும்பிச் செல்லும்போது ஓட முடியாது. நல்ல இருட்டு. இருட்டில் ஓடினால் தட்டுத் தடுமாறி விழ வேண்டியதிருக்கும். அதைவிட நல்லது மெதுவாக நடப்பதுதான். வழியில் ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் இருக்கும். இரவு நேரத்தில் பூதங்களும் வெளியேறி அலைந்து கொண்டிருக்குமே!

இரவில் ஆற்றின் படித்துறையில் குளிப்பதற்காகச் சென்ற ஒரு மலைவாழ் பெண்ணை சுடலை மாடன் அடித்த கதையை சமீபத்தில் தான் அவன் கேட்டான். மலைவாழ் பெண் கர்ப்பிணியாக இருந்தாள். அவளை சுடலை மாடன் அடித்துக் கொன்றுவிட்டான். மலைவாழ் பெண்ணின் இறந்த உடலில் இரத்தமே இல்லை என்று அதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மோசமான மரணம் நடைபெற்றால் அவளுடைய ஆன்மா பேய் வடிவம் எடுத்து அலைந்து திரியும் என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.

அப்போது திடீரென்று யாரோ தேம்பி அழும் சத்தத்தைக் கேட்டு உண்ணி நடுங்கிவிட்டான். திரும்பிப் பார்த்தான். இருட்டைத் தவிர எதையும் பார்க்க முடியவில்லை. இருட்டில், இருட்டைவிட கறுப்பாக இருந்த மரங்களின் நிழல்கள் தெரிந்தன.

அழுதது யார்?

ஒரு பெண்ணின் சத்தம்தான் என்று தோன்றியது. இங்கு இந்த நேரத்தில் எந்தப் பெண் வந்திருப்பாள்? குறிப்பாக மலைவாழ் பெண்ணின் மோசமான மரணத்திற்குப் பிறகு பகல் வேளையில்கூட பெண்கள் யாரும் அந்தப் பக்கம் தனியாக வருவதில்லை. தனக்கு வெறுமனே தோன்றியிருக்கும் என்று உண்ணி நினைத்துக் கொண்டான். காளியைப் பற்றிய மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டே உண்ணி நடந்தான்.

ஒவ்வொரு அடியை வைக்கும்போதும், காதுகள் சத்தங்களுக்காக அலைந்து கொண்டிருந்தன. கேட்ட சத்தங்கள் காட்டில் எப்போதும் கேட்கக் கூடிய சாதாரண சத்தங்கள்தான் என்பதை நம்புவதற்கு அவன் முயற்சி செய்தான். எனினும், அய்யப்பன் தன்னுடன் வந்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என்று அவன் ஆசைப்பட்டான். அப்போது அவனுக்கு மாமாமீது கோபம் உண்டானது. மாமா தடுக்காமல் இருந்திருந்தால் அய்யப்பன் வந்திருப்பான். கதைகள் கூறியிருப்பான். சிறிதும் பயமே இல்லாமல் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றிருக்கலாம்.

மாமா இன்று மிகவும் கோபத்தில் இருக்கிறார் என்பதை உண்ணி புரிந்து கொண்டான். இல்லாவிட்டால் நிச்சயமாக தன்னை இந்த சாயங்கால நேரத்தில் தனியாக அனுப்பி இருக்கமாட்டார். தான் வருவதற்குத் தாமதமானதால் மாமா கடும் கோபத்துடன் இருக் கிறார். மாமா கடும் வார்த்தைகளால் திட்டவோ இரண்டு அடிகளைக் கொடுக்கவோ செய்திருந்தால், அது இதைவிட சிறந்த தாக இருந்திருக்கும் என்று அவன் நினைத்தான். இந்த தண்டனை சற்று அதிகம் என்று அவனுக்குத் தோன்றியது.

ஒவ்வொரு அடியை வைக்கும்போதும் பயத்தைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தச் சத்தத்தையும் எந்த ஆபத்தையும் எதிர்பார்த்துக் கொண்டு, ஒவ்வொரு இலையின் அசைவிற்கும் ஒவ்வொரு சத்தத்திற்கும் நடுங்கிக் கொண்டே உண்ணி நடந்தான். இறுதியில் காளியின் கருணையால் உண்ணி ஆசிரமத்தை அடைந்தான்.

ஆசிரமத்தில் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. மாமாவும் அய்யப்பனும் பூஜையை ஆரம்பிப்பதற்காக உண்ணியின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். உண்ணி வந்ததும் மாமா சொன்னார்:

“பூஜையை ஆரம்பிப்போம்.''

பூஜை ஆரம்பமானது. பூஜை முடிவடைந்தது. மாமா சொன்னார்: “அய்யப்பா, உண்ணிக்கு உணவு கொடு.''

உண்ணி உணவைச் சாப்பிட ஆரம்பித்தபோது, மாமா அங்கு வந்தார். அவனுக்கு எதிரில் இருந்த ஸ்டூலின்மீது உட்கார்ந்தார். அது அசாதாரணமான ஒரு செயலாகத் தெரிந்ததால், உண்ணி பதைபதைப்புடன் மாமாவைப் பார்த்தான். அவனுடைய மனதிற்குள் இருந்த பதைபதைப்பைப் புரிந்து கொண்ட மாமா சொன்னார்:

“உண்ணி, சாப்பிடு.''

அவன் சாப்பாட்டைத் தொடர்ந்தான். இயந்திரத்தனமாக தான் சாதத்தின் உருண்டைகளை விழுங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும், தன்னுடைய பசி எங்கோ போய் மறைந்து விட்டிருக்கிறது என்பதையும் உண்ணி தெரிந்து கொண்டிருந்தான்.

“உண்ணி, இன்றைக்கு நீ பள்ளிக்கூடத்தில் இருந்து வருவதற்கு ஏன் தாமதமானது?'' அவன் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த கேள்வி மிகவும் தாமதமாக மாமாவிடமிருந்து வந்தது.

கையில் உருட்டி வைத்திருந்த உருண்டையை வாய்க்குள் போடலாமா, பாத்திரத்தில் போடலாமா என்று தெரியாமல் உண்ணி எந்த வித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்தான்.

“இன்னைக்கு...''- உண்ணி தடுமாறினான்.

“இன்னைக்கு... பள்ளிக்கூடத்தில் பந்து விளையாட்டு இருந்தது...''

“உண்ணி, நீ விளையாட்டில் பங்கெடுத்தாயா?'' -மாமா சாதாரணமாகக் கேட்டார்.

“இல்லை...'' - உண்ணி பதில் சொன்னான்: “நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.''

“விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு நிற்கக்கூடாது என்று பல நேரங்களில் நான் சொல்லியிருக்கேன்ல?'' - மாமா சொன்னார்: “அந்த நேரம் வீணாக ஆயிடுது. நேரம் நம் கையில் இல்லை. அதைப் பாழாக்குவதற்கு நமக்கு உரிமையில்லை.''

மாமா நிறுத்தினார். ஒரு பெரிய சுருட்டிற்கு நெருப்பைப் பற்ற வைத்தார்.

உண்ணியுடைய மனதின் கண்கள் விளையாட்டு மைதானத்தில் இருந்தன. கால்பந்து மைதானத்தில் போட்டி போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் நண்பர்களின் உற்சாகமான அசைவுகளையும் சந்தோஷத்தில் திளைத்திருக்கும் முகங்களையும் அவன் பார்த்தான்.


“உண்ணி, நீ விளையாடுவதாக இருந்தால், தேவையில்லை.'' -மாமா சொன்னார்: “அது ஒரு உடல் பயிற்சிதான். அதில் பயன் இருக்கிறது. ஆனால், அதுவும் தேவையில்லை. காலையில் வேண்டிய அளவிற்கு உடல் பயிற்சி செய்துவிட்டுத்தானே நீ பள்ளிக்கூடத்திற்கே போகிறாய்? அங்குமிங்குமாக நடப்பதுகூட நல்ல ஒரு உடல் பயிற்சிதான்.''

இந்த நடக்கும் செயல் ஒரு தண்டனை என்று கூற வேண்டும் போல உண்ணிக்கு இருந்தது. கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் இந்த அளவிற்கு நடக்க வேண்டியதில்லை. பள்ளிக்கூட நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அவர்கள் புறப்பட்டால் போதும். வீட்டிற்குச் சென்று தாய், தந்தையுடன் சேர்ந்து உட்கார்ந்து உணவு சாப்பிடலாம். சாயங்காலம் விருப்பம்போல விளையாடித் திரிந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வரலாம். கோமனைப் போல சற்று தூரத்தில் வசிப்பவர்கள் மதிய உணவைச் சுமந்து செல்ல வேண்டும். ஆனால் அவர்கள்கூட மலை ஏற வேண்டியதில்லையே! அவர்கள்மீது உண்ணிக்கு பொறாமை உண்டானது.

“இந்த அளவிற்கு உடல் பயிற்சி முடிந்து...'' -மாமா கூறினார்: “வேறு உடல் பயிற்சி எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் என்று கேள்விப் பட்டிருக்கிறாய் அல்லவா? அளவுக்கு மீறிய உடல் பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்குக் கெடுதலாக அமையும்.''

மாமா சுருட்டை உள்ளே இழுத்துப் புகைத்துக் கொண்டே எழுந்தார். அவர் சாப்பாட்டு அறையில் நடக்க ஆரம்பித்தார்.

“உண்ணி, நான் பேசுவதால் நீ சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. சாப்பிடுவது காது வழியாக இல்லையே!''

உண்ணி இயந்திரத்தனமாக சாப்பாட்டைத் தொடர்ந்தான்.

“உடலுக்கான பயிற்சி உனக்குத் தேவையான அளவிற்கு இருக்கிறது.'' -மாமாவின் குரல் அதிகமானது. “பிறகு... மனதிற்குத்தான் பயிற்சி வேண்டும். வாசிப்பு, தியானம், பூஜை ஆகியவற்றால்தான் அதை அடைய முடியும். உண்ணி, அதற்கான நேரத்தைத்தான் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில் நீ வீண் செய்கிறாய்.''

அதற்குப் பிறகும் மாமா சுருட்டை இழுத்துப் புகையை ஊதியவாறு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

“உண்ணி, நீ பெரியவனாக ஆக வேண்டியவன்'' -மாமா சொன்னார்: “எனக்கு முடியாமல் போனதும் உனக்கு அந்த தகுதி கிடைக்க வேண்டும். அதனால்தான் உன்னை நான் இந்த முறையில் வளர்க்கிறேன். நீ தைரியசாலியாக ஆகவேண்டும். பலம் கொண்டவ னாக இருக்க வேண்டும். வெற்றி பெற்றவனாக ஆகவேண்டும். அதற்காகப் பிறந்தவன் நீ. ஜாதகப்படி நீ பெரியவனாக ஆகியே தீரவேண்டும். அதற்குத் தேவையான பயிற்சியைத் தர வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.'' - ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு தான் கூறியது சரிதானா என்ற அர்த்தத்தில் அவர் அழைத்தார்: “அய்யப்பா!''

“ஆமாம்... எஜமான்!'' - அய்யப்பன் எஜமானரை ஆதரித்துச் சொன்னான்.

உண்ணிக்கு மாமா கூறியதன் அர்த்தம் புரியவில்லை. இப்படித்தான் பெரியவனாக ஆக முடியும் என்றால், பெரியவனாக ஆகாமல் இருப்பதே நல்லது என்றுகூட உண்ணிக்குத் தோன்றியது.

“உண்ணி, உனக்கு அப்பாவை ஞாபகத்தில் இருக்குதா?'' -மாமா கேட்டார்.

“இல்லை.'' -உண்ணி பதில் சொன்னான்.

“அம்மாவை ஞாபகத்தில் இருக்குதா?''

“இல்லை.''

“அந்த நினைவுகள்கூட வேண்டாம் என்று நினைத்துத்தான் உன்னை நான் இளம் வயதிலிருந்தே என்னுடன் கொண்டு வந்துவிட்டேன். உன் அப்பா இறந்துவிட்டார். அம்மா இருந்தாள். இப்போது இருக்கிறாளோ என்னவோ? அப்பா, அம்மாவுடன் கொண்டிருக்கும் உறவுகூட கடமைப்பட்டிருப்பதுதான். கடமைப் பட்டிருப்பதும் வலைகள்தான். விளையாட்டுகள்மீது கொண்டிருக்கும் ஆர்வங்களும் அதேமாதிரி வலைகள்தான். பெரியவனாக ஆவதற் காகப் பிறந்தவனை- உயர்ந்த நிலையை அடைய அனுமதிக்காமல் வலையில் விழ வைப்பது என்ற விளையாட்டு சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். தற்காலிக மோகங்களும் சில நிமிடங்கள் மட்டுமே நிலைத்து நிற்கக் கூடிய சந்தோஷங்களும் பல வர்ண ஜாலங்களுடன் உன்னை இழுக்கின்றன. ஒருமுறை அதற்கு அடிபணிந்துவிட்டால் நீ நுழைவது ஒரு புதிய உலகத்திற்குள்ளாக இருக்கும். வெளியே - கவர்ச்சியான உலகம். அதற்குள் நுழைந்து செல்லும் ஒரு மனிதன்கூட வெளியே வர முடியாது. வலையில் சிக்கிக் கொண்டால், சிக்கியதுதான். பிறகு... வெளியே வருவதற்கான வழியைத் தேடி அலைய வேண்டும். அலைந்து திரிந்து இறுதியில் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் தளர்ந்து, தகர்ந்து, ஏதாவதொரு இருண்ட மூலையில் நெளிந்து விழுந்து மரணத்தைத் தழுவுவது... தனக்கென்று இருக்கும் பாதையை விட்டுவிட்டு, மேலோட்டமான சுகங்கள் என்னும் மாயவலையை நோக்கிச் செல்லும் ஒவ்வொருவரின் அனுபவமும் அதுதான். அய்யப்பா!'' “ஆமாம் எஜமான். உண்மை! உண்மை!'' -அசாதாரணமான ஒரு பிரகாசம் அய்யப்பனின் முகத்தில் தோன்றியது.

ஆனால், உண்ணி நினைத்தான் -அந்த வலைகள்தானே சுகமானவை!

முந்தைய நாள் ராகுலன் திரைப்படம் பார்த்த விஷயத்தைச் சொன்னான். அவனும் அம்மாவும் அப்பாவும் ஒன்றாகச் சேர்ந்து திரைப்படம் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாத பகுதிகளை அவனுடைய தந்தை அவனுக்கு விளக்கிக் கூறியிருக்கிறார். மிகவும் சுவாரசியமாக இருந்தது என்று ராகுலன் சொன்னான். ராகுலன் திரைப்படத்தைப் பற்றி விளக்கமாகப் பேசியபோது உண்ணியிடம் ஆர்வம் தோன்றியது. ராகுலன்மீது உண்ணிக்கு பொறாமைகூட தோன்றியது.

உண்ணி திரைப்படம் பார்த்ததில்லை.

கோமன் கூட திரைப்படம் பார்த்திருக்கிறான். ஓணத்திற்கு கோமனின் தந்தை பிள்ளைகளையும் அவர்களுடைய தாயையும் திரைப்படம் பார்ப்பதற்காக அழைத்துச் செல்வான். வேறு சில நாட்களில் திரைப்படத்திற்குச் செல்ல காசு தருவான். தன்னுடைய வகுப்பில் தன்னைத் தவிர, மற்ற மாணவர்கள் எல்லாரும் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் என்பது தெரிந்தது. உண்ணிக்கு கடுமையான வருத்தம் உண்டானது. என்னவொரு கேடு கெட்ட விஷயம்? இந்தக் காலத்தில், திரைப்படம் பார்த்ததே இல்லை என்று கூறுவது என்றால்...

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்த உண்ணியைப் பார்த்து மாமா சொன்னார்:

“போய் கையைக் கழுவிவிட்டு வா.''

உண்ணி இயந்திரத்தனமாக எழுந்தான். போய் கையைக் கழுவி விட்டுத் திரும்பி வந்தான்.

“காலம் செல்லச் செல்ல வலைகள் அதிகமாகும்.'' -மாமா தொடர்ந்து சொன்னார்:

“அவற்றின் நிறக் கவர்ச்சியும்... நாம் மேலும் மேலும் கவர்ந்து இழுக்கப்படுவோம். இளம் வயதிலேயே முழுமை யான கட்டுப்பாட்டுடன் இருக்கப் பழகிக் கொண்டால் மட்டுமே, நம்மால் அந்த வலையில் சிக்காமல் தப்பிக்க முடியும். எனக்கும் அய்யப்பனுக்கும் அந்த முழுமையை அடைய முடியவில்லை. உனக்கு அது நடக்க வேண்டும், உண்ணி.''

உண்ணி சலனமற்ற கண்களுடன் எந்தவித அசைவும் இல்லாமல் நிற்பதை மாமா பார்த்தார். அவர் சொன்னார்: “உண்ணி, நீ போய் படி. படித்து முடித்து படுக்குறப்போ நான் சொன்ன விஷயங்களை நினைச்சுப் பார்க்க முயற்சி செய். நல்லா சிந்திச்சுப் பார்.''


உண்ணி பதிலெதுவும் கூறாமல் நின்றான்.

“உண்ணி, நான் சொன்னதை நீ காதில் வாங்கினாயா?''

“ம்...''

“அப்படியென்றால், போ.''

உண்ணி தன்னுடைய அறையை நோக்கிச் சென்றான். பாடப் புத்தகங்களுடன் மேஜைக்கு அருகில் போய் உட்கார்ந்தான். மேஜை மீது இருந்த விளக்கின் வெளிச்சம் திறக்கப்பட்ட புத்தகத்தின் எழுத்துகளில் விழுந்தது.

ஆனால், உண்ணி அந்த எழுத்துகளைப் பார்க்கவில்லை.

4

ராகுலன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்தபோது உண்ணி அதற்கு மறுப்பு தெரிவித்தான்.

“எந்தவொரு வீட்டிற்கும் போகக்கூடாது என்று மாமா சொல்லிஇருக்கிறார்.'' -அவன் சொன்னான்.

“ஏன்?'' -ராகுலன் கேட்டான்.

“எனக்குத் தெரியாது.'' -உண்ணி சொன்னான்.

“அப்படியென்றால் நான் சொல்றேன்.'' ராகுலனுக்கு அவனுடைய வயதைத் தாண்டிய பக்குவம் இருப்பதாகத் தோன்றியது.

“வேறு எந்த வீட்டிற்கும் போகக்கூடாது என்று என் அப்பாவும் அம்மாவும் என்னிடம்கூடத்தான் சொல்றாங்க. ஆனால், நான் கிரிஜாவின் வீட்டிற்குப் போன விஷயத்தைச் சொன்னப்போ, அப்பாவும் அம்மாவும் என்னைத் தடுக்கவில்லை. அதற்காகத் திட்டவும் இல்லை. அது ஏன் என்று உனக்குப் புரியுதா?''

“இல்லை...'' -உண்ணி தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

“பார்த்தியா? அதனால்தான் உனக்கு சில நேரங்களில் கொஞ்சம்கூட அறிவே இல்லைன்னு நான் சொல்றது...'' -ராகுலன் மீண்டும் பக்குவம் வந்தவனைப் போல பேசினான். “பள்ளிக்கூடத்தில் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் நம்முடைய நண்பர்களாக இருப்பார்கள். ஆனால், உண்மையாகச் சொல்லப்போனால்- நெருக்கமாகப் பழகக் கூடியவர்கள் சிலர்தான் இருப்பார்கள். பெரும்பாலான வீடுகள் நாம் யாரும் போவதற்கோ பழகுவதற்கோ முடியாதவையாகத்தான் இருக்கும். அதனால்தான் நாம் பிற வீடுகளுக்குச் செல்லக் கூடாது என்று அப்பாவும் அம்மாவும் மாமாவும் தடைபோடுகிறார்கள். புரியுதா?''

அவன் கூறியது சரிதான் என்று உண்ணிக்கும் தோன்றியது. ஆனால்...

“இருந்தாலும்...'' -உண்ணி சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

“அப்படியொன்றும் இல்லை...'' -ராகுலன் சொன்னான்: “என் வீட்டிற்கு வந்ததாகச் சொன்னால் உன் மாமா திட்ட மாட்டார். என் அம்மாவை எடுத்துக் கொண்டால், அவங்க உன்னைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பாங்க. அம்மாவுக்கு உன்னை நல்லா தெரியும். நான் சொல்லிச் சொல்லி அம்மாவுக்கு இப்போ உன்னை முழுசா தெரியும்.''

ராகுலன் சிரித்தான். “உன்னைப் பார்த்தால் யாரும் சொல்லாம லேயே என் அம்மாவுக்கு நீதான் உண்ணின்னு தெரியும்.''

ராகுலன் மீண்டும் சிரித்தான்.

உண்ணிக்கு சிரிப்பு என்பது எப்போதும் இருக்கக்கூடிய ஒன்று அல்ல என்பதால், அவன் சிரிக்க முயற்சித்தபோது சிரிப்பு மிகவும் சகிக்க முடியாமல் இருந்தது.

“என் பிறந்த நாளன்று மதியம் சாப்பிடுவதற்கு உன்னை அழைக்க வேண்டும் என்று அம்மா சொன்னாங்க. அந்த நாளன்று நான் அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அன்று நீ வந்தே ஆகவேண்டும்.''

“ஆனால்...'' -உண்ணி அதற்குப் பிறகும் தயக்கத்திற்குள் விழுந்தான்.

“ஒரு ஆனாலும் இல்லை...'' -ராகுலன் சொன்னான். அவன் திடீரென்று உண்ணியின் தோளில் கையை வைத்தான். உண்ணியின் கண்களையே உற்றுப் பார்த்தான். ராகுலன் பேசியபோது, அவனுடைய குரல் நெகிழ்ந்தது.

“உனக்கு என்மீது அன்பு இல்லை.'' -அவன் சொன்னான்.

“அதுவல்ல ராகுலா.'' -உண்ணி சொன்னான்: “எனக்கு...''

அவன் எப்படித் தொடர்வது என்று தெரியாமல் நிறுத்தினான்.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.'' -ராகுலனின் குரல் மேலும் கனத்தது. “உனக்கு என்மீது விருப்பம் இருந்தால், என்னுடைய பிறந்த நாளுக்கு வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லு!''

“அதைப் பற்றி நாம் சிந்திப்போம்.'' -உண்ணி சொன்னான்: “நீ சனிக்கிழமை பார்த்த திரைப்படத்தைப் பற்றிச் சொல்லு.''

“நீ வாக்குறுதி தா.''

“அதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்று சொல்லிவிட்டேனே! நீ கதையைச் சொல்லு.''

“வேண்டாம்... வேண்டாம்... வாக்குறுதி தந்தபிறகு கதை!''

ஒன்றிரண்டு நிமிடங்கள் அமைதி நிலவியது. அந்த அமைதிக்குள் துடுப்பைச் செலுத்தி உண்ணி இன்னொரு கரையை நோக்கிச் சென்றான். மாமாவின் நரைத்த மேல் மீசையும் அதற்கு மேலே ஒளி வீசிக் கொண்டிருக்கும் கண்களும் எந்தச் சமயத்திலும் மாறாத குணமும் எந்த நிமிடத்திலும் தாளத் தவறுகள் உண்டாகாமல் இருக்கும் குரலும் நிறைந்த ஒரு கரைக்கு... அந்தத் தீவின் தலைவர் மாமாதான். தலைவருடைய வேலைக்காரன் அய்யப்பன். மினுமினுப்பான, கறுத்த தோலையும் சப்பையான மூக்கையும் சிறிய கண்களையும் கொண்ட அய்யப்பன்... மேலுதட்டின் மீதும் தாடையிலும் இரத்தம் கசிய நின்று கொண்டிருக்கும் அய்யப்பன். மாமாவுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு உணவு சாப்பிடும் அய்யப்பன்.

கையில் நீளமான கத்தியைப் பிடித்திருக்கும் அய்யப்பனும் துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கும் மாமாவும் சேர்ந்து கொண்டு உண்ணியைத் துரத்துகிறார்கள். உண்ணி பயந்து ஓடுகிறான். காட்டு வேர்களில் தட்டி அவன் விழுகிறான். காட்டுச் செடிகளின் முட்புதர்களில் சிக்கி அவனுடைய ஆடைகளும் உடலும் கிழிகின்றன. கூர்மையான சரளைக் கற்களும் விழுந்து கிடக்கும் முட்களும் அவனுடைய கால்களுக்குள் நுழைகின்றன. உடம்பெங்கும் குருதி வழிய அவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடுகிறான். ஓடி ஓடிக் காட்டைக் கடந்து வெட்ட வெளி நிலத்தை அடைந்து திரும்பிப் பார்த்தபோது, அவனைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த மாமாவும் அய்யப்பனும் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். முன்னால் அசைந்து புரளும், இரைச்சலிட்டு ஆரவாரிக்கும் நீர்ப்பரப்பு. எல்லையற்ற நீர்ப்பரப்பு. அவன் பார்த்திராத பள்ளிக் கூடத்தில் காதால் மட்டும் கேட்டுத் தெரிந்து வைத்திருக்கும் கடல் என்ற முடிவற்ற நீர்ப்பரப்பு. சுற்றிலும் நீர். மத்தியில் காடு. காட்டில் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆயுதங்களைத் தாங்கிய இரண்டு மனிதர்கள். உண்ணி நடுங்கிச் சிதறிக் கொண்டிருந்தான்.

இந்தக் கொடூரமான- அச்சத்தை வரவழைக்கக்கூடிய காட்சியை தன்னுடைய கண்களுக்கு உள்ளே இருந்து இல்லாமல் செய்ய வேண்டுமே என்று அவனுடைய மனம் மலை உச்சியில் இருந்த பகவதியிடம் வேண்டிக் கொண்டது.

“ம்... சொல்லு உண்ணி.'' -உண்ணி அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினான்.

தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டவனைப் போல எதுவும் புரியாமல், திகைத்துப் போய் உண்ணி கேட்டான்: “என்ன சொல்றது?''

“அடடா! அதற்குள் மறந்து விட்டாயா?''

ராகுலன் சொன்னான்: “பிறந்த நாளன்று என்னுடைய வீட்டிற்கு வருகிறேன் என்று வாக்குறுதி தரவேண்டும். அதற்குப் பிறகுதான் திரைப்படத்தின் கதையைக் கூறுவேன்.''


நிகழ்காலத்திற்குத் திரும்பி வருவதற்கு, மனதிற்குள் பலமாக பிரகாசித்து நுழைந்த ஒரு பயங்கரமான காட்சியிலிருந்து தற்போதைய நடைமுறைக்குத் திரும்பி வருவதற்கு உண்ணி மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. ஆனால், திரும்பி வந்தபோது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. உலகம் சாதாரணமாக இருந்தது. முன்னால் ராகுலன் இருந்தான். இடம் - பள்ளிக்கூட வளாகத்திற்குள் இருக்கும் ஆலமரத்தின் அடியாக இருந்தது. உண்ணி நீண்ட பெருமூச்சு விட்டான்.

ராகுலன் வற்புறுத்தினான்: “எனக்கு வாக்குறுதி தா, உண்ணி.''

உண்ணி மீண்டும் திகைப்புடன் பார்த்தான்.

“என்ன வாக்குறுதி?''

“வீட்டிற்கு வருகிறேன் என்று.''

“வர்றேன்...'' உண்ணி முணுமுணுத்தான்.

“திரைப்படத்தின் கதை?''

பள்ளிக்கூட மணி அடித்தது. அவர்கள் வகுப்பறைக்குச் சென்றார்கள்.

ராகுலனின் பிறந்த நாளன்று உண்ணி ராகுலனின் வீட்டிற்குச் சென்றான்.

மதிய நேர மணி அடித்தபோது, அவர்கள் ஒன்றாக வகுப்பறையைவிட்டு வெளியே வந்தார்கள். பள்ளிக்கூடத்தின் வெளி வாசல் கதவுக்கு வெளியே கருப்பு நிறத்தில் இருந்த கார் ராகுலனை எதிர்பார்த்துக் காத்து நின்றிருந்தது. ஓட்டுனர் கதவைத் திறந்து பிடித்திருந்தான். ராகுலனும் உண்ணியும் ஏறினார்கள்.

உண்ணிக்கு மனதிற்குள் பதைபதைப்பு இருந்தது.

அவன் காரில் முதல் தடவையாக அப்போதுதான் ஏறுகிறான். காரிலும் பேருந்திலும் ஏற வேண்டிய தேவையே உண்ணிக்கு உண்டானதில்லை.

பள்ளிக்கூடத்திலிருந்து ஆசிரமத்திற்குத் திரும்பிச் செல்லும் போது சில நேரங்களில் காலியாக வரும் மாட்டுவண்டிகளுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டு நடந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் வண்டிக்காரனின் கருணை மனத்தால் வண்டியில் ஏறி உட்காரு வதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவையெல்லாம் சற்று சிறிய வயதில் இருந்தபோது நடந்தவை. இப்போது வண்டியின் பின்னால் பிடித்துக் கொண்டு நடப்பது என்பது வெட்கக் கேடான விஷயம். சற்று வயதில் மூத்தவர்களாக இருக்கும் மாணவர்கள் அப்படி நடப்பதில்லை.

காருக்குள் ஏறி உட்கார்ந்தபோது, உண்ணிக்கு நிலை கொள்ளாத ஒரு மனநிலை உண்டானது. குஷன் இருக்கையின் மென்மைத்தனமும் ஸ்பிரிங்கின் அசைவும் சேர்ந்து ஒருவித அசாதாரண தன்மையை உண்டாக்கின.

அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்தவுடன் ஓட்டுனர் கதவை அடைத்துவிட்டு, முன் இருக்கையில் ஏறி உட்கார்ந்து காரை ஓட்ட ஆரம்பித்தான்.

கார் நகர்ந்தபோது, வெளியே பார்த்துக் கொண்டிருந்த உண்ணிக்கு முதலில் உண்டான அமைதியற்ற தன்மையுடன் ஒரு விதமான புதிய சுகமான உணர்வும் உண்டானது. உண்ணிக்கு கார் பயணம், கிராமத்து தெருக்களின் புதிய உயிரோட்டமான ஒரு தரிசனத்தை அளித்தது. வேகமாகப் பின்னோக்கி நகர்ந்து கொண்டி ருக்கும் ஆட்களும் கட்டிடங்களும் வாகனங்களும், அதைவிட வேகமாக நகரும் வானமும் சேர்ந்து அவனுக்குப் புதிய சுவாரசியமான காட்சிகளாக இருந்தன. ராகுலன் என்னவோ கூற, அதை உண்ணி கேட்கக்கூட இல்லை. தினமும் இப்படிப் பயணம் செய்ய முடிகிற ராகுலன்மீது அவனுக்கு பொறாமையே உண்டானது.

காலையில் ராகுலன் பள்ளிக் கூடத்திற்கு வருவதும், சாயங்காலம் திரும்பிச் செல்வதும் காரில்தான். மதிய நேரம் ராகுலன் வீட்டிற்குச் செல்வதில்லை. வீட்டிலிருந்து வேலைக்காரன் சாதம் கொண்டு வருவான். காலையில் ராகுலனின் தந்தை அவனைப் பள்ளிக் கூடத்திற்கு காரில் கொண்டு வந்து விடுவார். மாலையில் ஓட்டுனர் காருடன் வந்து அழைத்துக் கொண்டு செல்வான். இதுதான் வழக்கமாக நடப்பது.

ராகுலனுக்கு என்ன ஒரு சுகமான வாழ்க்கை! உண்ணி சிந்தித்தான். உண்ணியை எடுத்துக் கொண்டால், அவன் நடந்தே ஆகவேண்டும். வெறும் நடை போதாது. மலைமீது ஏற வேண்டும்.

கீழே எங்கேயாவது, கிராமத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வீட்டில் தங்குவதைப் பற்றி உண்ணி ஒன்றிரண்டு தடவை மாமாவிடம் கூறியிருக்கிறான்.

“கிராமம் அசுத்தமானது.'' மாமா சொன்னார்: “அங்கு மனிதர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அசுத்தமான மனிதர்கள். அவர்களுடைய சுவாசிக்கும் காற்று நிறைந்த வெட்டவெளி அசுத்தமானதாகி விடுகிறது. போதாதற்கு, அங்கு தொழிற்சாலைகள் இருக்கின்றன அல்லவா? தொழிற்சாலைகளின் புகைக் குழாய்கள் வெளியே விடும் கறுப்புப் புகை முழுக்க விஷம்... இங்கே எடுத்துக் கொண்டால், அப்படிப்பட்ட அசுத்தங்கள் எதுவும் இல்லை. இயற்கையின் அழகும் சுத்தமும் மலையில் இருக்கின்றன. இயற்கை புனிதத் தன்மையுடன் இருக்கிறது. இயற்கைதான் அன்னை. இயற்கை அப்பழுக்கற்றது. இங்குதான் சுத்தமான காற்று கிடைக்கும். இங்குதான் ஆரோக்கியம் தங்கி நிற்கும்.''

மாமா கறுப்பு நிறத்தில் இருந்த பெரிய சுருட்டை இழுத்துப் புகைத்தார். புகையை ஊதினார். புகையிலையின் முகத்தைச் சுளிக்க வைக்கக்கூடிய எரிந்த வாசனை உண்ணியின் உள்ளுக்குள் வேகமாக நுழைந்தது. அவன் இருமினான். மாமா தொடர்ந்து சொன்னார்: “கிராமத்தில் பல வகைப்பட்ட கவர்ந்து இழுக்கக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன, உண்ணி. திரைப்பட அரங்குகள், தேநீர்க் கடைகள், மது விற்பனை நிலையங்கள்... குழந்தைகளை வழி தவறச் செய்யக்கூடிய, அவர்களைப் பொறியில் சிக்க வைக்கக்கூடிய எல்லா வகைப்பட்ட வலைகளும் அங்கு தயார் பண்ணி வைக்கப் பட்டிருக்கின்றன. அங்கு தங்கினால் இந்த கவர்ச்சியான விஷயங்கள் தினமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவற்றை எதிர்த்து நிற்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும். புரியுதா?''

உண்ணி பதிலெதுவும் கூறவில்லை.

“பிறகு... மலை ஏறக்கூடிய விஷயம்.'' மாமா தொடர்ந்து சொன்னார்: “அதனால் பரவாயில்லை. தினமும் ஒருமுறைதானே ஏறி வர வேண்டியதிருக்கிறது! அது மிகச் சிறந்த உடல் பயிற்சி. உடல் நலத்திற்கு உடல் பயிற்சியைவிட சிறந்த மருந்து வேறு இல்லை.''

உண்ணி பதிலெதுவும் கூறவில்லை.

கார் ராகுலின் வெளி வாசல் கதவைக் கடந்தபோது சுவரில் இருந்த பெயர்ப் பலகை உண்ணியின் கவனத்தில் பட்டது. "பி.கெ.எஸ். நாயர், அசிஸ்டெண்ட் எஞ்ஜினியர்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகை. பி.கெ.எஸ். நாயர் ராகுலின் தந்தை என்பதை உண்ணி புரிந்து கொண்டான்.

இரு பக்கங்களிலும் இருந்த பூஞ்செடிகளுக்கு மத்தியில் முன்னோக்கி நகர்ந்த காரில் உட்கார்ந்து கொண்டே உண்ணி ராகுலின் வீட்டைப் பார்த்தான். மிகவும் பெரியது என்று கூற முடியா விட்டாலும், அழகான- இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடமாக அது இருந்தது.

கார் போர்ச்சில் போய் நின்றது. ஓட்டுனர் இறங்கினான். அவன் வருவதற்கு முன்பே ராகுலன் கதவைத் திறந்து இறங்கினான். அவன் திறந்து பிடித்திருந்த கதவின் வழியாக உண்ணியும் இறங்கினான்.

அப்போது நடுத்தர வயதைக் கொண்ட ஒரு பெண்ணும் ஒரு இளம் பெண்ணும் வாசலில் தோன்றினார்கள். அவர்கள் ராகுலனின் தாயும் அக்காவும்தான் என்பதை முடிவு செய்வதற்கு உண்ணிக்கு கஷ்டமாக இல்லை.

நடுத்தர வயது பெண் வந்து உண்ணியின் கையைப் பிடித்தாள்.


“வா மகனே...'' -அவள் சொன்னாள்: “நான் எவ்வளவு நாட்களாக உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன் தெரியுமா?''

அவளுடைய மனதைத் தொடக்கூடிய குரலும் உண்ணிக்குள் ஏதோ சுகமான உணர்வை உண்டாக்கியது. அது என்ன என்பதை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல அவனால் முடியவில்லை.

“அம்மா, உண்ணி நான் எந்த அளவுக்கு வற்புறுத்தி வந்திருக்கி றான் தெரியுமா?'' -ராகுலன் சொன்னான்: “எனினும் மிகவும் தயக்கம்...''

உண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

அவனை இறுக அணைத்துக் கொண்டு அம்மா கேட்டாள்: “அப்படியா உண்ணி?''

உண்ணி வெட்கப்பட்டுச் சிரிக்க முயற்சித்தான்.

அப்போது ஒரு குரல் கேட்டது: “இதுதான் இவன் எப்போதும் சொல்லும் உண்ணியா?''

அந்தக் குரலுக்குப் பின்னால் ராகுலனின் தந்தை தோன்றினார். உண்ணி அவரைப் பார்த்தான். அவர் முன்னோக்கி வந்து உண்ணியின் கையைப் பிடித்தார்.

“வா... வா...''

உண்ணி அவருடன் சேர்ந்து உள்ளே சென்றான். அலங்கரிக்கப்பட்டிருந்த வரவேற்பறை அவனை ஆச்சரியம் கொள்ளச் செய்தது.

“உட்காரு... உட்காரு...'' -ராகுலனின் தந்தை சொன்னார். உண்ணி தயங்கி நின்றான்.

“உட்காரு'' -ராகுலனின் தந்தை உண்ணியைப் பிடித்து உட்கார வைத்தார். அவரும் அவனுக்கு அருகில் உட்கார்ந்தார். எதிர்பக்கத்தில் அம்மா உட்கார்ந்தாள்.

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இனி நாங்கள் தேவையில்லை என்று தோணுது.'' இன்னொரு சோபாவில் உட்கார்ந்து கொண்டே ராகுலனின் அக்கா கூறினாள்.

“உண்மைதான்.'' அவளுக்கு அருகில் அமர்ந்தவாறு ராகுலன் சொன்னான். அவன் தொடர்ந்து சொன்னான்: “உண்ணி, இதுதான் என்னோட ஷீபா அக்கா. நான் உன்னிடம் சாலமன் அண்ட் ஷீபாவின் கதையைக் கூறியிருக்கிறேன் அல்லவா?''

தொடர்ந்து அவன் ஷீபாவைப் பிடித்துக் குலுக்கினான்.

உண்ணி ஷீபாவைப் பார்த்தான். அவளுடைய அழகு காட்டின் அழகுகளையே தோற்கடிப்பதைப் போல அவன் உணர்ந்தான். தனக்கு இப்படி ஒரு அக்கா இருந்திருந்தால், அவளை இப்படி இறுக அணைக்க முடிந்திருந்தால் எப்படி இருக்கும் என்று உண்ணி மனதில் நினைத்தான்.

தம்பியின் பிடியில் இருந்து பலவந்தமாக விடுபட முயற்சித்தவாறு ஷீபா சொன்னாள்:

“சும்மா இரு பையா.''

“பையனா?'' -ராகுலன் கோபப்பட்டான். “என்னை பையன் என்று அழைத்தால், நான் பெண்ணே என்று அழைப்பேன்!''

“அழைத்தால் காதைப் பிடித்து நான் புண்ணாக ஆக்குவேன்.''

“அவ்வளவுதானா? அதை நான் இப்போதே செய்கிறேன்.''

ராகுலன் கூறியதுடன் நிற்கவில்லை. அவன் அவளுடைய காதைப் பிடித்து திருகவும் செய்தான்.

“அம்மா! இதைப் பார்த்தீங்களா? இந்தப் பையன்...!'' -ஷீபா சிணுங்கினாள். அவள் அவனுடைய பிடியிலிருந்து பலவந்தமாக விலகி குதித்து எழுந்தாள். “பிறந்த நாள் என்றுகூட நான் பார்க்க மாட்டேன்.''

அப்பாவும் அம்மாவும் சிரித்தார்கள். உண்ணி சிரித்தான். அதைப் பற்றி உண்ணிக்கே ஆச்சரியம் தோன்றியது.

“சாப்பாடு கொண்டுவரும்படி சொல்லட்டுமா?'' -அம்மா கேட்டாள்.

“நான் உண்ணிக்கு வீட்டைக் கொஞ்சம் காட்டட்டுமா, அம்மா. என்னுடைய அறையையும், அக்காவின் அறையையும்கூட...'' -ராகுலன் சொன்னான்.

“ஆமாம்... அது முடிந்த பிறகு சாப்பாட்டை வச்சுக்குவோம்.'' அப்பா தன் மகனின் கருத்தை ஒப்புக் கொண்டார்.

“வா உண்ணி.'' ராகுலன் எழுந்தான். உண்ணியும் எழுந்தான்.

அவர்கள் மேலே செல்லும் படிகளில் ஏறத் தொடங்கியபோது, ஷீபா சொன்னாள்: “நானும் வர்றேன்.''

அவள் அவர்களைப் பின் தொடர்ந்தாள்.

அசிஸ்டெண்ட் எஞ்ஜினியரின் வீட்டின் மேல் மாடியில் இருந்த அழகான விஷயங்களை நோக்கி ஷீபாவுடனும் ராகுலனுடனும் சேர்ந்து உண்ணி ஏறிச் சென்றான்.

5

விளக்கை ஊதி அணைத்துவிட்டு, தூங்குவதற்குப் படுத்த பிறகும் உண்ணிக்கு உறக்கம் வரவில்லை. அறையின் இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டே அவன் படுத்திருந்தான்.

ஆசிரமத்தில் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி சத்தம் எதுவும் கேட்கவில்லை. மாமா வாசிக்கும் அறையில் இருந்தார். வாசலில் அய்யப்பன் இருக்கிறான் என்பதை, கதவின் சிறிய இடைவெளி வழியாக உண்ணியின் அறைக்குள் விழுந்த வெளிச்சத்தின் கீற்று அழைத்துச் சொன்னது.

திறந்து கிடந்த மூங்கிலால் ஆன சாளரத்திற்கு வெளியே இருட்டில் காடு சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது. இரவின் அமைதியில் விஷத் துளிகளைப் போல காட்டின் சத்தங்கள் கேட்டன.

உண்ணியின் கவனம் அந்த சத்தங்களிலோ இருட்டிலோ பதிந்திருக்கவில்லை.

அவனுக்குள் இருந்த அவன் பி.கெ.எஸ். நாயரின் வீட்டின் அந்தப்புரங்களில் ஷீபாவுடனும் ராகுலனுடனும் சேர்ந்து சந்தோஷத்துடன் நடந்து கொண்டிருந்தான்.

அங்கு கண்டவை அனைத்தும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தன. ரேடியோக்ராம், ட்ரான்சிஸ்டர் ரேடியோ, ரெக்கார்ட் பிளேயர், டெலிஃபோன்- இவற்றை மட்டுமல்ல- தண்ணீர்க் குழாய், ஷவர்பாத், மின்சார விளக்கு- இவற்றைக்கூட அவன் வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்க்கிறான். ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த நீரின் குளிர்ச்சி அவனுடைய வயிற்றையும் குடலையும் மரத்துப் போகச் செய்தது.

ஆச்சரியங்களைவிட சந்தோஷங்களுடன் உண்ணி அந்த வீட்டை விட்டு வெளியேறினான். அப்பாவும் அம்மாவும் ஷீபாவும் ராகுலனும் அந்த வீட்டின் உறுப்பினர் என்பதைப் போலவே அவனிடம் நடந்து கொண்டார்கள்.

ராகுலனின் தாய் "மகனே" என்று வாசலுக்கு அருகில் முதல் தடவையாக அழைத்தபோது தனக்குள் உண்டான இதற்கு முன்பு உணர்ந்திராத சந்தோஷம் எப்படிப்பட்டது என்பதை வார்த்தைகளால் கூறுவதற்கு உண்ணி பயனில்லாமல் முயற்சித்தான். அவனைச் சுற்றிலும் அறையில் சூழ்ந்து நின்றிருந்த இருட்டிற்கு இந்த விஷயத்தில் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை. ஒரு விஷயம் மட்டும் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. அந்தப் புத்துணர்வை அளித்தது ஒரு வகையான சுகம் என்பதே அது. வார்த்தைகளால் கூற முடியாத ஒரு சுகம். தனக்கு யாரோ இருக்கிறார்கள் என்று வாழ்க்கையில் முதல் தடவையாக அவனுக்குத் தோன்றியது. ராகுலனின் தாயை "அம்மா' என்று அழைத்தபோது, அவனுடைய ஆன்மாவும் உடலும் ஒரு வகையான உணர்ச்சி நிறைந்திருக்க நின்றிருந்தன.

அந்தத் தாயின் குரல், அந்த தாயின் தொடல் எல்லாவற்றையும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம், மலையின் இரவு வேளைக்கு நடுவில், ஆசிரமத்தின் சிறிய படுக்கையறையின் இருட்டில், தனியாகப் படுத்திருந்தபோது அவனுக்குள் அலைகளை எழுப்பிக் கொண்டு உயர்ந்து நின்றது.

அம்மா அவனைத் தன்னுடைய உடலோடு சேர்த்து நிறுத்திக் கொண்டாள். அவளிடமிருந்து தாயின் வாசனை கிளம்பி வருவதை தெரிந்து கொண்டான். அவன் கேள்விப்பட்டிருந்த மிகவும் சக்தி படைத்த வாசனை அதுதான். அது அன்பின், பாசத்தின் வாசனை. அம்மா தொட்டபோது அவன் ஏதோ தெரிந்திராத சந்தோஷப் பகுதிகளை நோக்கி உயர்ந்து சென்றான்.


அவளுடைய சதைப்பிடிப்பான கைகள் அவனை இறுகத் தழுவின. அவனுடைய உடல் அன்பின் வெப்பத்துடன் அவளை உரசியது. அவளுடைய பெரிய மார்பகத்தில் அவன் தன்னுடைய அபய இடத்தைக் கண்டு பிடித்தான்.

ஆசிரம அறையின் இருட்டில் அவனுடைய மோகம் அமைதியாக அழைத்தது: "அம்மா... அம்மா... அம்மா...'

இருட்டு அசைவே இல்லாமல் நின்று கொண்டிருந்தது.

உணவு சாப்பிடும்போது, அவனுக்குப் பரிமாறுவதில்தான் அம்மாவின் கவனம் இருந்தது. ராகுலனின் தந்தையும் உண்ணியின் உணவு விஷயத்தில் ஈடுபாட்டைக் காட்டினார்.

அங்கு பரிமாறப்பட்டவைகளில் பெரும்பாலானவை அவனுக்கு இதற்கு முன்பு தெரிந்திராத உணவுப் பொருட்களாக இருந்தன. அவனுக்கு அங்குள்ள உணவு மிகவும் ருசி நிறைந்தவையாகவும் பிடித்தவையாகவும் தோன்றின.

எனினும், ராகுலனின் தாய் சொன்னாள்:

“உண்ணி, உனக்கு திருப்தி உண்டாகி இருக்காது. அப்படித்தானே? காட்டில் கிடைக்கும் மாமிசத்திற்கு நிகராக ருசியுள்ள உணவுப் பொருள் இருக்குமா? எங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறைதான் காட்டு மாமிசமே கிடைக்கும்!''

உண்ணிக்கு வெறும் மரியாதைக்காக பேசத் தெரியாது. அதனால் அவன் உண்மையைச் சொன்னான்.

“எனக்கு மிகவும் திருப்தி. இந்த அளவிற்கு ருசி நிறைந்த உணவை நான் சாப்பிட்டதே இல்லை.''

அம்மா அவனுடைய தலைமுடியை வருடினாள்.

“உண்ணி, நீ சும்மா சொல்றே!'' -அவள் சொன்னாள்: “என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக!''

“இல்லை அம்மா.'' -உண்ணி சொன்னான்: “நான் உண்மையைத்தான் சொன்னேன். எனக்கு இங்கே சாப்பிட்ட உணவு மிகவும் பிடிச்சிருக்கு.''

அம்மா மீண்டும் அவனுடைய தலை முடியை வருடினாள்.

“உண்ணி, உன்னுடைய பெரிய மாமாவைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.''

சாப்பிடுவதற்கு மத்தியில் ராகுலனின் தந்தை சொன்னார்: “பெரிய சித்தராம்!''

“அப்படியா?'' -அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“இந்த விஷயத்தை உண்ணி என்னிடம்கூட கூறவில்லையே!'' -ராகுலன் சொன்னான்.

உண்ணி எதுவும் பேசவில்லை.

“அவர் முன்பு ராணுவ அதிகாரியாக இருந்தவர். ராணுவ சேவையை விட்டுவிட்டு ஊருக்கு வந்ததிலிருந்து வாசிப்பு, ஆராய்ச்சி, தியானம் என்று இறங்கிவிட்டார்.'' -அப்பா தொடர்ந்து சொன்னார்: “அவர் மிகப் பெரிய பண்டிதர். அவருக்குத் தெரியாத மூலிகை மருந்தே இல்லை. அவரின் கையில் இருக்கும் ஒரு பச்சிலை மருந்தின் தைலத்தைத் தேய்த்தால் மிகவும் கடுமையான பாம்பின் விஷம்கூட ஒன்றும் இல்லாமற் போய்விடும். எங்களுடைய க்ளப்பில் அவரைப் பற்றித்தான் எப்போதும் பேசிக் கொண்டிருப்போம்.''

“அப்படியா?'' -அம்மா ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள்.

ஆனால், உண்ணிக்கு அந்த உரையாடல் பிடிக்கவில்லை. மாமாவைப் பற்றி பேசியபோது மாமாவின் உருவம் அவனுடைய மனத் திரையில் தோன்றியது. உக்கிர மூர்த்தியாக இருக்கும் உருவமும் அமைதியும் கம்பீரமும் தாள மாறுபாடு இல்லாத குரலும் அவனை நடுங்கச் செய்தன.

ராகுலனின் தந்தை மாமாவைப் பற்றிய பேச்சை நிறுத்தியபோது உண்ணிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

உணவின் இறுதிப் பகுதி ஃப்ரூட் சாலட். பழங்கள், இனிப்பு, குளிர்ச்சி எல்லாம் சேர்ந்திருந்த அந்த உணவுப் பொருள் உண்ணிக்கு மிகவும் பிடித்திருந்தது.

உணவைவிட அன்பு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. ராகுலனின் தாயுடன் மிகவும் அதிகமாக அவன் உரையாடினான். அவனைக் கட்டிப்பிடித்து அருகில் உட்கார வைத்துக் கொண்டு, அவனுடைய தாய், தந்தையைப் பற்றிக் கேட்டாள். தாய், தந்தையரைப் பார்த்ததில்லை என்று சொன்னபோது, உண்ணியின் கண்கள் நிறைந்துவிட்டன. ஆனால், அம்மா புடவைத் தலைப்பால் அவனுடைய கண்ணீரைத் துடைத்தாள்.

“மகனே, கவலைப்படாதே!'' -அம்மா சொன்னாள்: “நான்தான் உன் அம்மா! என் ராகுலனைப் போலத்தான் நீயும் எனக்கு. அம்மாவை எப்போது பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் இங்கே வந்துடு!''

அம்மா அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“அம்மா... அம்மா... அம்மா...'' -அவளுடைய மார்பில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டு ஆசையைத் தணித்துக் கொள்வதைப் போல அவன் திரும்பத் திரும்ப அழைத்தான்.

“மகனே... என் மகனே...'' -அம்மா அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அந்த அணைப்பின் சுகத்தை நினைத்துப் பார்த்தவுடன் அவன் தன் தலையணையில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டான். “இது என்னுடைய தாயின் மார்பகம்.'' -அவன் நினைத்தான்: “இது என்னுடைய அபய இடம்.'' தலையணையில் உதட்டை வைத்துக் கொண்டு அவன் அழைத்தான்: “அம்மா...''

அடுத்த நிமிடம் அவனுக்கு சுற்றுப்புறத்தைப் பற்றிய புரிதல் உண்டானது. சத்தம் வெளியே வந்தால் பிரச்சினை. தூங்காமல் படுத்திருக்கக் கூடாது என்பது சட்டம். இரவின் அமைதியில் சிறிய சிறிய சத்தங்கள்கூட இடி முழக்கங்களைப் போல பெரியதாகக் கேட்கும். மாமாவும் அய்யப்பனும் கேட்டு விடுவார்கள் என்பது மட்டும் உறுதி. அவனுடைய நினைப்பு சரியாகவே இருந்தது. வெளியே மாமாவின் குரல் கேட்டது.

“உண்ணி!''

உண்ணி பதிலெதுவும் கூறவில்லை. அழைத்ததைக் காதில் வாங்கவும் இல்லை. சத்தத்தைக் கேட்டான். மாமாவின் காலடிச் சத்தங்களைக் கேட்டான். மாமா வாசிக்கும் அறையை விட்டு, வாசலுக்கு வந்திருப்பதை உண்ணி தெரிந்து கொண்டான்.

“உண்ணி ஏதாவது சொன்னானா அய்யப்பா?''

“உறங்கிக் கொண்டிருப்பார். ஏதோ சத்தம் கேட்டது'' -அய்யப்பனின் பதில் உண்ணிக்கு நிம்மதியை அளித்தது.

ஆனால்...

“தூக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை.'' -மாமா சொன்னார்: “சமீப காலமாக அவனுடைய உறக்கம் சரியாக நடக்கவில்லை என்று தோன்றுகிறது.''

அடுத்த நிமிடம் மாமா அதைச் சோதித்துப் பார்ப்பதற்காக தன்னுடைய படுக்கையறைக்குள் வருவார் என்று உண்ணி பயந்தான்.

கடவுளின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். அது நடக்கவில்லை.

“அய்யப்பா...'' -மாமா அழைத்தார்.

“என்ன?''

“நான் ஒரு சுலோகத்தை உருவாக்கினேன்.''

“அப்படியா?'' -அய்யப்பன் ஆர்வத்துடன் கேட்டான்.

இப்போது அய்யப்பனின் முகம் எப்படி இருக்கும் என்பது உண்ணிக்கு தெரியும். சிறிய கண்கள் பிரகாசமாக இருக்கும். நெற்றி யில் சுருக்கங்கள் விழுந்திருக்கும். உதடுகள் சற்று மலர்ந்திருக்கும்.

“அப்படியென்றால், கேள்...'' -மாமா சொன்னார்.

உண்ணிக்கு சந்தோஷமாக இருந்தது. விஷயம் மாறிவிட்டது. ஆர்வம் சுலோகத்தை நோக்கிப் போய்விட்டதால், மாமா இனி இந்தப் பக்கம் வர மாட்டார்.

மாமா சுலோகத்தைக் கூறும் சத்தம் கேட்டது. மாமாவின் தனித்துவமான குரலுக்கு சற்று மாறுபாடு உண்டாவது- சுலோகங்களைக் கூறும்போதும் பூஜை செய்கிறபோதும் "மகாதேவீ' என்று அழைக்கும்போதும்தான். அந்த மாறுபட்ட குரல் காட்டில் இரவு நேரத்தில் உரத்துக் கேட்டது. உண்ணிக்கு வரிகள் சரியாகப் புரியவில்லை. ஆனால், அர்த்தம் புரிந்தது. ரத்த வடிவத்தில் இருக்கும் அசுரனின் குருதியை நக்கிக் குடிக்கும் வாய்க்குள் பிறந்த அசுரர்களை விழுங்கும் காளியைப் போற்றிப் புகழும் ஒரு சுலோகம் அது.


மாமா முதலில் மொத்தமாகச் சொன்னார். பிறகு ஒவ்வொரு வரியாக, நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தி, விளக்கினார். தொடர்ந்து மாமா சொல்லித் தந்தார். அய்யப்பன் அதைக் காதில் வாங்கிச் சொன்னான். அய்யப்பன் காதில் வாங்கிச் சொல்லும் போதுதான், எப்படிப்பட்ட சுலோகமும் உன்னதம் என்ற நிலையை அடையும். சுலோகத்தைக் கூறும்போது அய்யப்பனின் குரல் அசாதாரணமானதாகவும் இனிமையானதாகவும் இதற்கு முன்பு கேட்டிராததாகவும் உயர்வானதாகவும் மாறிவிடும். மினுமினுப்பான- மென்மையான- கறுத்த ஒரு அவலட்சணமான வடிவத்தில் இருந்து இந்த அளவிற்கு அருமையான குரல் வெளியே வருகிறது என்பதை நம்புவதற்குக் கூட முடியாது.

அந்த அளவிற்கு அந்த நேரத்தில் அய்யப்பனின் குரல் மிகவும் அருமையாக இருக்கும்.

ஆனால், இருட்டில், அறையில் தூங்க முடியாமல் படுத்திருந்த உண்ணிக்கு அந்த நேரத்தில் ராகுலனின் தாயின் குரல்தான் உயர்வானதாகவும் இனிமையானதாகவும் தெரிந்தது. சிறந்ததாக இருக்கும் இன்னொரு குரலைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட அவனால் முடியவில்லை.

அய்யப்பனின் குரல் பக்தர்களை வானத்தை நோக்கி உயர்த்தியபோது, அம்மாவின் குரல் உண்ணியை மண்ணை நோக்கி இழுத்தது. அவனுக்கு மண்ணை நோக்கி வரவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. மாமாவும் அய்யப்பனும் பாறைகளும் காட்டு மிருகங்களும் விஷத்தை முறிக்கும் மூலிகைகளும் காட்டு ஊற்றுகளும் காட்டுக் கிளிகளும் பெரிய மரங்களும் நிறைந்த மலையின் சிறப்பை விட அவனை அப்போது ஈர்த்தது ராகுலனும் ஷீபாவும் அம்மாவும் அப்பாவும் ஃப்ரூட் சாலட்டும் ரெக்கார்ட் இசையும் உள்ள மண்தான். பிறகு... காளி...?

“காளி மலையில் மட்டுமல்ல'' -உண்ணி சொன்னான்: “மண்ணிலும் இருக்கிறாள். காளி எங்கும் இருக்கிறாள்.''

“பிறகு... நான் எதற்கு...?'' -உண்ணி கேட்டான்: “நான் மட்டும் எதற்கு சந்தோஷங்களையும் அன்பையும் தியாகம் செய்துவிட்டு, இந்த மலைக்கு மேலே திருப்தியே இல்லாமல் வாழணும்?''

“அது உன்னுடைய பிறப்பின் சம்பளம். உன்னுடைய கர்ம யோகம்.'' -மாமா சொன்னார்.

உண்ணி நடுங்கினான். மாமா தான் தூங்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு வந்திருக்கிறார் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

ஆனால், அவன் பார்த்தபோது இருட்டு மட்டுமே இருந்தது. அமைதியான இருட்டு. மாமா படுக்கைக்கு அருகில் இருந்தால், அவருடைய மூச்சு விடும் சத்தமாவது கேட்குமே!

அய்யப்பனுக்கு சுலோகம் சொல்லிக் கொடுக்கும் சத்தம் வாசலில் கேட்டபோது, மாமா அறைக்குள் வரவில்லை என்பது உண்ணிக்கு உறுதியாகத் தெரிந்தது.

ஷீபாவும் ராகுலனும் ஒன்றாக உட்கார்ந்து கேரம் விளையாடியதை உண்ணி நினைத்துப் பார்த்தான். என்ன ஒரு சுவாரசியம்!

ஷீபாவைப் பார்த்துக் கொண்டிருப்பதே சந்தோஷமான விஷயம் தான்! ஷீபா பேரழகு படைத்தவளாக இருந்தாள். கடைந்தெடுத்ததைப் போன்ற உடலமைப்பு. நீண்டு மலர்ந்த கண்கள். அடர்த்தியான புருவங்கள். சுருண்ட தலைமுடி. நீளமான மூக்கு. பருக்கள் முளைக்கும் கன்னங்கள். நீளமான கை, கால்கள். மெலிந்த, முனை கூர்மையான விரல்கள். அவள் நகங்களைச் சிவப்பாக்கியிருந்தாள்.

“மருதாணியா?'' -உண்ணி கேட்டான்.

“இல்லை.'' -ஷீபா சொன்னாள்: “க்யூட்டெக்ஸ்.''

உண்ணிக்கு அது ஒரு புதிய வார்த்தையாக இருந்தது. நகத்திற்குப் போடும் சாயங்களில் அது ஒன்று என்ற விஷயத்தை ஷீபா அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

கேரம் விளையாட்டிற்கு மத்தியில் ஷீபா, உண்ணி இருவரின் விரல்களும் தொட்டபோதெல்லாம் அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவன் ஏதோ உள்ளுணர்வால் பாதிக்கப்பட்டவனைப் போல உடனடியாகக் கையைப் பின்னால் இழுத்துக் கொண்டான். எந்தவொரு காரணமும் இல்லாமல் அவன் அவளைப் பார்த்தான். அவள் அவனையும். அவர்களுடைய கண்கள் சந்தித்தபோது, ஷீபாவின் கண்களில் ஒரு அளவுக்கு மீறிய பிரகாசம் தெரிந்ததைப் போல உண்ணி உணர்ந்தான். அந்தப் பிரகாசம் எப்படி வந்தது? அதன் அர்த்தம் என்ன?

இருட்டால் அந்தக் கேள்விக்கு பதில் கொடுக்க முடியவில்லை. "எனக்கு தெரியலையே!' -உண்ணி புலம்பினான். ஒருவேளை அதற்கு குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அர்த்தம் எதுவும் இல்லாமல்கூட இருக்கலாம்.

எனினும், அதற்குப் பிறகும் ஷீபா இருட்டில் வெளிச்சத்தால் படைக்கப்பட்ட ஒரு பேரழகியாக அவனுடைய அறைக்குள் படுக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள்.

உண்ணி கூர்ந்து பார்த்தான். ஆமாம்... அவளேதான். எப்போது வந்தாள்? உண்ணி கேட்டான்.

அவள் பதிலெதுவும் கூறவில்லை. அடுத்த நிமிடம் அவள் இருட்டில் கரைந்து காணாமல் போனாள்.

அவன் படுக்கையில் படுத்துக் கொண்டே அறை முழுவதிலும் கண்களை ஓட்டினான். யாரும் இல்லை. அறை முழுவதும் இருட்டு முடியை அவிழ்த்துவிட்டு உற்சாகத்துடன் நின்று கொண்டிருந்தது.

வாசலில் அய்யப்பன் சுலோகங்களைக் கூறுவது கேட்டது. அதற்குத் தாளம் போடுவதைப் போல பின்புலத்தில் காட்டின் சத்தங்கள் உரத்துக் கேட்டன.

விடை கூறிவிட்டு வெளியேறுவதற்கு முன்னால் ஷீபா அறையில் அவனுடைய கையைப் பிடித்து அழுத்தினாள்.

“இனிமேலும் வரணும், தெரியுதா?'' -அவள் சொன்னாள்.

அவள் கையைப் பிடித்து அழுத்தியபோது, அவனுக்கு என்னவோ போல இருந்தது.

அதை நினைக்கும்போதெல்லாம் அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. "எதற்காக?' - அவன் கேட்டான்: "அவள் கையைப் பிடித்து அழுத்த வேண்டும்?'

அம்மா இறுகக் கட்டிப் பிடித்தபோது உண்டாகாத ஒரு தனிப்பட்ட சந்தோஷத்தை அவளுடைய தொடல் அவனிடம் உண்டாக்கியது. அது ஏன் என்பதைப் பற்றி உண்ணி தலை வலிக்கும் அளவிற்கு யோசித்துப் பார்த்தான். ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அந்தத் தொடல் உண்டாக்கிய நிலைகொள்ளாமை சுகமான ஒரு அனுபவமாக இருந்தது என்பதையும், அந்தத் தொடுதலை ஏற்றுக் கொள்வதற்கு இனிமேலும் தனக்கு ஆசையாக இருக்கிறது என்பதையும் உண்ணி புரிந்து கொண்டான்.

காருக்குள் ஏற முயன்ற உண்ணியைத் தழுவியவாறு அம்மா சொன்னாள்: “அடிக்கடி வரணும். தெரியுதா மகனே?''

“வர்றேன் அம்மா.'' -அதைச் சொன்னபோது தான் அழுது விடுவோமோ என்று உண்ணிக்குத் தோன்றியது. அவன் அதற்குள் காருக்குள் நுழைந்துவிட்டான்.

பள்ளிக்கூடத்தின் வாசல் வரை ராகுலனின் தந்தை அவர்களுடன் இருந்தார். பள்ளிக்கூடத்தின் வாசலில் அவர்களை இறக்கிவிட்டு, செல்வதற்கு முன்னால் அவரும் உண்ணியை வீட்டிற்கு மீண்டும் வரும்படி அழைத்தார்.

திடீரென்று உண்ணி நினைத்தான் - அதுதான் வாழ்க்கை... அதுதான் அன்பு.

ரத்தத் துளிகளில் இருக்கும் அசுரனின் குருதியைக் குடிக்கும் காளியின் புகழைப் பாடியவாறு வாசலில் அய்யப்பனின் குரல் உரத்து ஒலித்தது.


6

காலையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது உண்ணியின் நினைப்பு ராகுலனின் வீட்டில் குளியலறையில் இருந்தது. வாஷ்பேசின். வாஷ்பேசினுக்கு மேலே பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குழாய். ஷவர். ஓ... என்ன சுவாரசியம்! உண்ணி நினைத் துப் பார்த்தான். ஷவரின் குழாயைத் திறந்து அதற்கு அடியில் நிற்கும்போது... மழை பெய்வதைப் போல நீர் சிதறி விழும். ஷீபாதான் அவனுக்கு அதைக் காட்டினாள். அவர்கள் இருவரின் உடல்களிலும் நீர் தெறித்து விழுந்தது. அடுத்த நிமிடம் ஷீபா குழாயை அடைத்தாள். இல்லாவிட்டால் இரண்டு பேரும் அங்கேயே குளித்து ஒரு வழி ஆகியிருப்பார்கள்.

குளியலறையில் இருக்கும்போது ஷீபா கேட்டாள்: “உண்ணி, நீ தினமும் எங்கு குளிப்பாய்?''

“ஆற்றில்...'' -உண்ணி சொன்னான்.

“அதிர்ஷ்டசாலி!'' - ஷீபா சொன்னாள்: “ஆற்றில் குளிக்க வேண்டும் என்று எனக்கு எந்த அளவிற்கு ஆசை இருக்கிறது தெரியுமா? நீருக்குள் மூழ்கிக் கிடக்கலாம். அப்படியே மூழ்கிக் கிடந்து கண்களைத் திறந்து பார்த்தால் ஆற்றின் அடிப்பகுதியில் இருக்கும் உருளைக் கற்கள் அனைத்தும் பெரிதாகத் தெரியும். இல்லையா?''

உண்ணி சிரித்தான். ஷீபா தொடர்ந்து சொன்னாள்: “நான் சிறு குழந்தையாக இருந்தபோது ஆற்றில் குளித்திருக்கிறேன். ஆற்றில் குளிப்பது என்பது மிகவும் சுவாரசியமான விஷயம்!''

அது உண்மைதான் என்பதை உண்ணியும் உணர்ந்தான். ஷவருக்குக் கீழே எவ்வளவு நேரம் நின்றாலும், இந்த நீருக்குள் மூழ்கிக் கிடப்பதைப் போன்ற சுகமான அனுபவம் கிடைக்காது.

ஆனால், ராகுலனின் வீட்டில் ஷவர் மட்டுமல்ல- ராகுலன் இருக்கிறான். ஷீபா இருக்கிறாள். அம்மா இருக்கிறாள். அப்பா இருக்கிறார். அந்த வீட்டில் செலவழித்த சுருக்கமான நேரம்தான் தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் விலை மதிப்புள்ள நேரம் என்று உண்ணி நினைத்தான். இந்த அளவிற்கு சந்தோஷம் அவனுடைய வாழ்க்கையில் முன்பு எந்தச் சமயத்திலும் இருந்ததில்லை. எந்த அளவிற்கு சிரித்தான்? தான் இந்த அளவிற்கு சிரித்ததே இல்லை என்பதை மிகவும் ஆச்சரியத்துடன் உண்ணி நினைத்துப் பார்த்தான்.

இந்த ஆற்றில் குளிப்பது மிகவும் இன்பமான ஒரு அனுபவம். ஆனால், தன்னுடன் ராகுலனோ ஷீபாவோ இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நீரைத் தெறிக்கச் செய்து கொண்டும், தமாஷாக பேசிக் கொண்டும் பிடித்துக் கொண்டும் இழுத்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் குளித்திருந்தால், குளியல் சுவாரசியமாக இருந்திருக்கும்! கீழே இருக்கும் படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கும் அய்யப்பனோ, மேலே இருக்கும் படித்துறையில் குளிக்கும் மாமாவோ அப்படிப்பட்ட விளையாட்டுகளுக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் விளையாட்டுகள் இல்லை. வாழ்க்கை வாழ்ந்து முடிக்கக்கூடிய ஏதோ ஒன்று என்பதுதான் அவர்களுடைய எண்ணமாக இருந்தது.

உண்ணிக்கு மாமா மீதும் அய்யப்பன் மீதும் வெறுப்புகூட உண்டானது. எனினும், அவன் ஆற்றில் குளித்துவிட்டு மேலே வந்தான். அவர்களுக்காக அவன் காத்து நின்றிருந்தான். அவர்கள் குளித்து முடித்து வந்தபோது அவர்களுடன் சேர்ந்து ஆசிரமத்திற்குச் சென்றான். பூஜையறையில் அவர்களுடன் பூஜையில் பங்கெடுத்தான்.

பூஜை வேளையிலும் அவனுடைய மனம் வேறு எங்கோ இருந்தது.

"என் மனம் உன்னை விட்டுப் போய்விட்டால்...' -உண்ணி பிரார்த்தித்தான்: "காளி, என்னை மன்னித்துவிடு.'

ராகுலனின் தாய் காளியின் பாசத்துடன் அவனுக்கு முன்னால் நின்றிருந்தாள். ராகுலனின் அக்காவும்தான். "காளியின் அவதாரங்கள் அவர்கள்' -உண்ணி தனக்குத்தானே கூறிக் கொண்டான். "அவர்களை எனக்குச் சொந்தமானவர்களாக ஆக்கு.' -அவன் காளியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

கடமைகளும் உறவுகளும் நிறைந்த வாழ்க்கைதான் மலை உச்சியில் தனிமையாக- அமைதியாக வாழும் வாழ்க்கையைவிட சிறந்தது என்று அவனுக்குத் தோன்றியது. அந்த வாழ்க்கைக்காக அவன் ஏங்கினான். அந்த வாழ்க்கை கிடைக்க வேண்டுமே என்று அவன் காளியிடம் வேண்டிக் கொண்டான்.

திடீரென்று அவனுக்கு இயற்கைமீது அளவற்ற அன்பு தோன்றியது. காட்டில் இருக்கும் பெரிய மரங்கள் மீதும் காட்டு மலர்கள் மீதும் அருவி மீதும் பாசம் உண்டானது. இந்த இயற்கையின் அழகைப் பார்ப்பதற்காக கிறங்குபவனுக்கு இது அழகு நிறைந்தது தான் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். ஆசிரமத்தில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டதைப்போல இருந்தால், இந்த அழகை அனுபவிக்கவே முடியாது என்பதை உண்ணி எண்ணிப் பார்த்தான்.

“உண்ணியின் இடத்திற்கு நாம ஒருநாள் போகணும், அப்பா.'' -ஷீபா சொன்னாள்.

“உண்மைதான்.'' -அம்மா ஷீபாவின் கருத்தை ஒப்புக் கொண்டு சொன்னாள்.

“உண்ணி என்னைக்கூட இதுவரை அழைத்துக் கொண்டு போனதில்லை.'' -ராகுலன் குற்றம் சாட்டினான்.

“என்ன உண்ணி, நாங்கள் ஒருநாள் வரலாமா?'' -ராகுலனின் தந்தை கேட்டார்.

உண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு சிரித்தான்.

“பார்த்தீங்களா பார்த்தீங்களா?'' -ராகுலன் சிரித்துக் கொண்டே சொன்னான்: “திருடன்! எதுவும் பேசாமல் இருக்கிறான்!''

“போடா'' -அம்மா உண்ணியின் உதவிக்கு வந்தாள். “அழைக்க வேண்டியது உண்ணியா? உண்ணியின் மாமா அல்லவா?''

“நாம் யாருடைய அழைப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம்.'' -அப்பா சொன்னார்: “நாம அங்கே போகலாம்.''

“அதுதான் சரி.'' -ஷீபா சொன்னாள்.

“அங்கே வரக்கூடாது என்று அவர் சொல்லவில்லையே!'' -ராகுலன் தன் கருத்தைச் சொன்னான்.

“ஆமாம்.'' -அப்பா சிரித்தார்.

உண்ணி அப்போதும் எதுவும் பேசவில்லை.

ஆனால், பூஜையறையில் இருந்துகொண்டு உண்ணி ஆசைப் பட்டான்- அவர்கள் எல்லாரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்பாவும் அம்மாவும் பெரிய மாமாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவன் ராகுலனுடனும் ஷீபாவுடனும் சேர்ந்து காட்டில் விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆற்றிற்குச் சென்று குளிக்கலாம். அவர்களுக்கு காட்டையும் காட்டில் இருக்கும் காளி கோவிலையும் சுற்றிக் காட்டலாம். தினமும் ஊரில் வாழும் ஷீபாவும் ராகுலனும் காட்டைப் பார்த்தால் சந்தோஷப் படுவார்கள்.

அவன் ராகுலனையும் ஷீபாவையும் காளி கோவிலுக்கு அழைத் துக் கொண்டு செல்வான். காளி ரத்த மயமாக இருக்கும் அசுரனைக் கொல்வதற்காகப் பயன்படுத்திய கதாயுதங்களில் ஒன்று என்று நம்பப்படும், கோவில் நிலத்தில் இருக்கும் ஒற்றைக் கல்லைச் சுட்டிக் காட்டுவான். காளி கோவிலுக்கு வடக்குப் பகுதியில் மேலே இருக்கும் தாமரைப் பாறையை அவர்களுக்குக் காட்டுவான். தாமரைப் பாறைக்கு நடுவில் இருக்கும் பாறைக்குள் இருந்து ஊறி வரும், கோடை காலத்திலும் வற்றாத ஆச்சரியமான கிணற்றைப் பார்க்கும் போது ஷீபாவும் ராகுலனும் ஆச்சரியப்படுவார்கள். தாமரைப் பாறைக்கு அருகில் பீமசேனனின் காலடிச்சுவடு பதிந்த பீமன் பாறையைக் காட்டும்போது அவர்களுக்கு என்ன ஒரு சந்தோஷமாக இருக்கும்!


வரும்போது கேரம்போர்டைக் கொண்டு வரும்படிக் கூற வேண்டும். நடந்தும் ஓடியும் சோர்வடையும்போது தாமரைப் பாறைக்கு வெளியே- பாறைக் கிணறுக்கு சமீபத்தில் இருக்கும் வெட்ட வெளியில் உட்கார்ந்து கேரம் விளையாடலாம். கேரம் போர்டைக் கொண்டு வரவில்லையென்றால், தட்டாங்கல் விளையாடலாம். அதில் ஷீபாதான் வெற்றி பெறுவாள். தட்டாங்கல் பெண்களுக்கென்றே இருக்கும் விளையாட்டாயிற்றே!

தளர்ச்சி உண்டாகும்போது, ஊற்றின் நீரை ஊற்றித் தேன் கொடுக்கலாம். அவர்களுடைய ஃப்ரூட் சாலட்டை விட தேன் மிகவும் சிறந்ததாயிற்றே!

அப்போது ஃப்ரூட் சாலட்டின் ருசி அவனுடைய நாக்கில் ஊறியது. அதற்கு என்ன ஒரு குளிர்ச்சி! தேனை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பிறகு சாப்பிடும்போது என்ன ஒரு சுவையாக இருக்கும் என்று உண்ணி நினைத்துப் பார்த்தான்.

அந்த நினைவுடன் உண்ணி பூஜைக்குப் பிறகு மாமாவுடன் காலை நேர உணவிற்காக சாப்பாட்டு மேஜைக்கு அருகில் உட்கார்ந்திருந்தான். முன்னால், மேஜைமீது அடை பரிமாறப் பட்டது. வறுத்த மான் மாமிசம் பரிமாறப்பட்டது. மானின் மாமிசத்தை வறுத்து மிளகாயும் உப்பும் சேர்த்து துண்டு துண்டாக ஆக்கியிருந்தது உண்ணிக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், ராகுலனின் தாய் பரிமாறிய உணவுப் பொருட்களுக்கு முன்னால் இந்த அய்யப்பனின் அடையும் மாமிச வறுவலும் ஒன்றுமே இல்லை.

அய்யப்பனும் மாமாவும் எந்தக் காலத்திலும் நல்ல உணவுப் பொருட்களைச் சாப்பிட்டதேயில்லை. கடந்த நாள் வரை- ராகுலனின் வீட்டில் உணவு சாப்பிடும் வரை, இதுதான் உலகத் திலேயே மிகவும் சுவையான உணவு என்று உண்ணியும் நினைத் திருந்தான். அப்படி இருக்கும்போது அவர்களைக் குறை கூறிப் பிரயோஜனமே இல்லை. ஒருமுறையாவது வேறு ஏதாவது உணவுப் பொருளை சாப்பிட்டுப் பார்த்தால்தான், நல்ல உணவின் ருசியை அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.

மாமாவை ஒருமுறை ராகுலனின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு செல்ல வேண்டுமென்று உண்ணி நினைத்தான். அப்போது அன்பு என்றால் என்ன என்று மாமாவிற்குப் புரியும். நல்ல உணவின் ருசி என்றால் என்ன என்பதும்.

ஆனால், அடுத்த நிமிடமே உண்ணி நடுங்கினான். மாமாவை ராகுலனின் வீட்டிற்கு அவன் எப்படி அழைத்துக்கொண்டு போவான்? மாமாவை அங்கு அழைத்துச் செல்லக் கூடிய தைரியம் தனக்கு இல்லை என்ற விஷயம் உண்ணிக்கு நன்கு தெரியும். அங்கு சென்ற விஷயத்தைப் பற்றி மாமாவிடம் கூறுவதற்குக்கூட தைரியம் இல்லாததால், மாமாவை அங்கு அழைத்துக் கொண்டு போவதைப் பற்றி சிந்தித்ததை நினைத்து உண்ணி தன்னையே ஏளனம் செய்தான்.

அவன் காய்ந்த அடை என்ற உண்மையுடன் சண்டை போடுவதற்கு மத்தியில் கேட்டான்:

“பெரிய மாமா, உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?''

அய்யப்பன் சிரித்தான். மாமா உண்ணியைப் பார்த்தபோது, மாமாவின் கண்களில் சந்தேகம் துடித்துக் கொண்டிருப்பதை உண்ணி பார்க்காமல் இல்லை.

சிரிப்பை நிறுத்திவிட்டு, அய்யப்பன் பதில் சொன்னான்: “தெரியு மாவா? சின்ன வயசுல இருந்தே பெரிய எஜமான் கார் ஓட்டுவார். எஜமானுக்கு எல்லாம் தெரியும். கார் ஓட்டுவது மட்டுமல்ல...''

“அப்படியா?'' -உண்ணியின் குரலில் பெரிய மாமாமீது கொண்டி ருந்த தனிப்பட்ட ஈடுபாடு வெளிப்பட்டது. அவன் தொடர்ந்து கேட்டான்:

“அப்படியென்றால் நாம் ஒரு கார் வாங்கினால் என்ன?''

மாமா மீண்டும் உண்ணியை சந்தேகத்துடன் பார்த்தார். அந்தப் பார்வையை கவனிக்காமல் உண்ணி தொடர்ந்து சொன்னான்: “கார் இருந்தால் நடக்காமல் பள்ளிக்கூடம் போகலாம்.''

மாமா மீண்டும் அவனைப் பார்த்தார்.

“அந்த அளவிற்கு உண்ணிக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டதா, அய்யப்பா?''

மாமாவின் குரல் உண்ணியின் மனதிற்குள் பயத்துடன் அதற்கு இணையான ஏதோ உணர்வை எழுப்பியது.

“சோம்பேறித்தனமாக இருக்காது. ஆசையாக இருக்கலாம்.'' -அய்யப்பன் உண்ணியை நியாயப்படுத்த முயற்சித்தான்.

“ஆசைகள்தான் மனிதர்களை அழிக்கிறது.'' -மாமா சொன்னார்: “அய்யப்பா!''

“உண்மை, எஜமான்.''

“கார் மலையில் ஏறுமா?'' -மாமா உண்ணியிடம் கேட்டார்.

“ஏறாது.'' -உண்ணி பதில் சொன்னான்.

“பிறகு எப்படி கார் வாங்கினாலும் நடக்காமல் பள்ளிக்கூடத்திற்குச் செல்வாய்?''

உண்ணி பதிலெதுவும் கூறவில்லை. அவன் குனிந்து உட்கார்ந்தி ருந்தான். மான் மாமிசத்துடன் போராடினான்.

சற்று நேரம் கழித்து உண்ணி இன்னொரு விஷயத்தை வெளியிட்டான்.

“நாம் ஒரு ரேடியோ வாங்கினால் என்ன?''

மாமா மீண்டும் அதிகமான சந்தேகத்திற்கு ஆளானார். அவருடைய கண் இமைகள் சுளிந்தன. புருவங்கள் வளைந்தன. கண்கள் மிகவும் சிறியனவாக ஆயின.

“ரேடியோவா? எதற்கு?'' -அவர் கேட்டார்.

“பாட்டு கேட்பதற்கு...'' -உண்ணி திடீரென்று பதில் சொன்னான். ராகுலனின் வீட்டில் இருந்தபோது ரேடியோவிலும் ரேடியோ க்ராமிலும் கேட்ட பாடல்களை அவன் நினைத்துப் பார்த்தான். பாடல்களைக் கேட்ட சூழ்நிலைகளை ஞாபகப்படுத்திப் பார்த்தான். பாட்டுடன் உடல் முழுவதையும் அசைத்துத் தாளமிடும் ஷீபாவை நினைத்துப் பார்த்தான். ஷீபாவின் முகத்தை முன்னால் கண்டபோது, அவன் ஒரு சந்தோஷமான உணர்வுக்கு ஆளானான்.

நிமிடக்கணக்கில் உண்ணியைப் பார்த்துக் கொண்டே அமைதி யாக இருந்துவிட்டு, மாமா அடையை நோக்கித் திரும்பினார்.

“எலெக்ட்ரிக் விளக்கும் தண்ணீர்க் குழாயும் இருந்தால், எவ்வளவு வசதியாக இருக்கும்?'' -உண்ணி யாரிடம் என்றில்லாமல் சொன்னான்.

மாமா மீண்டும் அவனைப் பார்த்தார். அவர் அழைத்தார்: “அய்யப்பா''.

உண்ணி சற்று பதறிவிட்டான். மாமாவிடம் இந்த அளவிற்கு நேரடியாகப் பேசக்கூடிய தைரியம் தனக்கு எங்கிருந்து கிடைத்தது என்று அவன் ஆச்சரியப்பட்டான். நினைத்தபோது- ராகுலனின் வீட்டிலிருந்துதான் அது கிடைத்திருக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரிந்தது. ராகுலனும் ஷீபாவும் எந்த அளவிற்கு சுதந்திர உணர்வுடன் தங்களுடைய தந்தையிடம் பேசுகிறார்கள் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். அவர்களுக்கு அந்த தைரியம் கிடைப்பதற்கு மிகவும் முக்கிய தூண்டுகோலாக இருப்பவள் அம்மா வாக இருக்க வேண்டும். அம்மா இருப்பதுதான் அவர்களுடைய மிகப் பெரிய பலமே. அம்மாதான் அவர்களுடைய நிழலாக இருக்கிறாள்.

அம்மா இல்லாத ஒரு வாழ்க்கையில் ஒரு சந்தோஷமே இல்லை என்று அப்போது உண்ணிக்குத் தோன்றியது. அதைத் தொடர்ந்து அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அவனுக்குள் எழுந்தது.


"எனக்கு அம்மா இல்லையா?' -அவன் கேட்டான்: "என் அம்மா இருந்திருந்தால் எனக்கு சோறு பரிமாறுவாள். குளிப்பாட்டுவாள். இறுக அணைத்துக் கொள்வாள். ஆசைகளை நிறைவேற்றுவாள். கண்ணீரைத் துடைப்பாள். என்னைப் பெற்றெடுத்த அன்னையே! நீ எங்கே?'

உண்ணியின் மௌனம் உரத்த குரலில் அழுதது: "பூமியின் எந்த மூலையில் நீ மறைந்திருக்கிறாய்? வானத்தில் எந்தப் பகுதிகளில் நீ அலைந்து திரிகிறாய்?'

அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்தான். எப்போதும் சாப்பிடுவதைவிட குறைவான உணவையே அவன் சாப்பிட்டான்.

“என்ன உண்ணி?'' -மாமா கேட்டார்: “பசியில்லையா?''

“எனக்குப் போதும்.'' -உண்ணி சொன்னான். அவன் கையைக் கழுவுவதற்காக வெளியே நடந்தான். வெளியே நடக்கும்போது, திரும்பிப் பார்க்காமலே மாமாவின் பார்வை தன்மீது பதிந்திருக்கிறது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. கையைக் கழுவிக் கொண்டு நின்றிருந்தபோது, உள்ளே மாமாவின் குரல் கேட்டது.

“அய்யப்பா!''

“எஜமான்...'' -அய்யப்பனின் பதில்.

ஒரு நிமிடத்திற்குப் பிறகு மாமாவின் குரல் மீண்டும் கேட்டது.

“உண்ணிக்கு என்ன ஆச்சு?''

“தெரியல எஜமான்.''

உண்ணி கையைக் கழுவி விட்டு, தன்னுடைய அறைக்குள் சென்று, பாடப் புத்தகங்களில் மூழ்கினான்.

பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டபோது அய்யப்பன் மதிய உணவைத் தயார் பண்ணிக் கொடுத்தான். அதையும் புத்தகங்களையும் பைக்குள் வைத்து, பையைத் தோளில் தொங்கவிட்டவாறு, எப்போதும்போல மாமாவிடம் கூறிவிட்டுச் செல்வதற்காக உண்ணி மாமாவின் படிக்கும் அறையின் கதவுக்கு அருகில் சென்றான்.

மேஜைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு டைரியில் எதையோ எழுதிக் கொண்டிருந்த மாமா திடீரென்று டைரியை மூடி வைத்து விட்டு எழுந்து வாசலை நோக்கி வந்தார்.

அடுத்த நிமிடம் அவனுக்கே ஆச்சரியம் உண்டாகிற மாதிரி, உண்ணியின் குரல் வெளியே வந்தது.

“என் அம்மா எங்கே மாமா?''

மாமாவின் கண்களில் திடீரென்று ஏதோ தோன்றி மறைவதை உண்ணி பார்த்தான். அதே வெளிப்பாடு அய்யப்பனின் கண்களிலும் தெரிந்ததை உண்ணி தெரிந்து கொண்டான்.v மாமா கேள்வி கேட்பதைப் போல முனகினார்: “ம்...?''

எங்கிருந்தோ பெற்ற தைரியத்தில் உண்ணி சொன்னான்: “எனக்கு அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.''

மாமா சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. இறுதியில் மாமா சொன்னார்:

“ஏற்பாடு பண்ணுறேன். உண்ணி, நீ பள்ளிக்கூடத்திற்குப் போய் விட்டு வா.'' -மாமா அழைத்தார்: “அய்யப்பா..''

“பார்க்கலாம் எஜமான்.''

உண்ணி வெளியேறி நடந்தான்.

7

ருவரையொருவர் இறுக அணைத்துக் கொண்டு நின்றிருக்கும் அழகான இளைஞனும் பேரழகியான இளம் பெண்ணும். அவனுக்கு சுருட்டை முடி... அரும்பு மீசை... வசதி படைத்த தோற்றம்... அவனுடைய உதட்டில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் புன்னகை. அவனுடைய கைகளில் அவன் மார்போடு ஒட்டிக்கொண்டு நின்றிருக்கும் அவள்.

அவள் பேரழகு படைத்தவளாக இருந்தாள். அவளுடைய அவிழ்த்து விடப்பட்டு படர்ந்து கிடந்த தலை முடி தொடை வரை தொங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய பெரிய மார்பகங்கள் அவனுடைய நெஞ்சோடு சேர்த்து அழுத்திக் கொண்டிருந்தன. அவளுடைய முழு உடலும் அவனுக்குள் கலக்க ஏங்குவதைப் போல தோன்றியது. அவனுடைய முகத்தை நோக்கித் திரும்பியிருந்த அவளுடைய உதடுகள் தாகம் நிறைந்த ஒரு வசிய புன்னகையில் மலர்ந்திருந்தன.

“இன்னும் இறுக்கி என்னை அணைத்துக் கொள். என்னை உன்னுடையவளாக ஆக்கு. என் தாகத்தைத் தீர்த்து வை.'' -அவள் அவனிடம் கூறுவதைப் போல தோன்றியது.

அவர்களுக்குப் பின்னால் மலைச்சரிவின் அமைதி. மலைச்சரிவில் மேலேயிருந்து விழுந்து கொண்டிருக்கும் ஆற்றின் தாளமேளம்.

ஒரு மூலையில் ஒரு கத்தியைக் கண்களுக்கு முன்னால் உயர்த்திப் பிடித்துக்கொண்டு, அதிலேயே கண்களைப் பதித்துக் கொண்டு நின்றிருக்கும் கொடூரமான மனிதன். வளர்ந்த கிருதா. படர்ந்த முடி. முறுக்கு மீசை. கண்களில் குரூரம்.

உண்ணிக்கு அந்த இளைஞன்மீது அன்பு உண்டானது. கொடிய மனிதன்மீது கோபமும்.

“அவனை உதைத்து சட்னி ஆக்கணும்''. -உண்ணியின் குரலில் கோபம் இருந்தது.

“கதையிலும் அப்படித்தான்.'' -கோமன் சொன்னான்: “நான் போன வாரம் என் அப்பாவுடன் போய் இந்தப் படத்தைப் பார்த்தேன்.''

திடீரென்று உண்ணிக்கு தன்மீதே வெறுப்பு வந்தது. ஏழை மலைவாழ் சிறுவனான கோமனுக்கு இருக்கும் சுதந்திரம்கூட தனக்கு இல்லையே என்று அவன் கவலைப்பட்டான்.

மணி அடிக்கும் சத்தம் கேட்டது. மதியத்திற்குப் பிறகு வகுப்பு தொடங்குவதற்கான நேரமானது.

உண்ணியும் கோமனும் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்காகத் திரும்பினார்கள்.

திரும்பிப் பார்த்து உண்ணி திடீரென்று நடுங்க ஆரம்பித்தான். தெருவின் அந்தப் பக்கத்தில் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த அய்யப்பனின் சிறிய கண்கள். கண்ணில் மிளகாய்த் தூள் விழுந்ததைப் போல அவனுடைய உடம்பு முழுக்க எரிந்தது. அவனுடைய இதயத் துடிப்பு அதிகமானது. அவனுடைய மனதில் நடுக்கத் தின் வடிவத்தில் பயம் உண்டானது.

எந்தவித சலனமும் இல்லாமல் நின்றிருந்த அவனைப் பார்த்து கோமன் சொன்னான்:

“வா... சார் திட்டுவார்.''

உண்ணி அதைக் காதிலேயே வாங்கவில்லை. அவனுக்கு முன்னால் அய்யப்பன் நின்றிருந்தான். அய்யப்பனின் சிறிய கண்கள் இருந்தன. அய்யப்பனின் உரோமம் இல்லாத, கறுத்த, மினுமினுப்பான உடல் இருந்தது.

கருப்புப் பூனை தேங்காய்க் கீற்றை கடித்ததைப் போல, அய்யப்ப னின் கறுத்த உதடுகள் விலகி, வெளுத்த பெரிய பற்களைத் தெரிய வைத்தன.''

உண்ணியின் பார்வையைப் பின் தொடர்ந்து சென்ற கோமனின் கண்கள் அய்யப்பனைப் பார்த்தன.

“அய்யப்ப சுவாமி...'' -கோமன் சொன்னான்: “நீ இருக்கிற இடத்துல இருக்குற அய்யப்ப சுவாமிதானே?''

உண்ணி பதில் சொல்லவில்லை. குரல் அவனுடைய தொண்டையில் எங்கோ உறைந்து போய் தங்கிவிட்டது.

நிமிடங்களின் சலனமற்ற நிலைக்குப் பிறகு, மிகவும் சிரமப்பட்டு உண்ணி மீண்டும் சுயவுணர்விற்கு வந்தான். அவன் பாதையைக் குறுக்காகக் கடந்து, அய்யப்பனுக்கு அருகில் சென்றான். கேள்வி வடிவத்தில் அய்யப்பனைப் பார்த்தான். அதைப் புரிந்துகொண்ட அய்யப்பன் கையில் தொங்கிக் கொண்டிருந்த பையைக் காட்டியவாறு சொன்னான்:

“சாமான்கள் வாங்குவதற்காக வந்தேன் எஜமான்.''

என்ன கூறுவது என்று தெரியாமல் இருந்ததால், உண்ணி கேட்டான்: “வாங்கியாச்சா?''

“ம்...'' -அய்யப்பன் பதில் சொன்னான்: “இதோ.''

அவன் மீண்டும் பையைக் காட்டினான்.

அப்போதும் அய்யப்பனின் கண்களில் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு உணர்ச்சி தெரிந்து கொண்டிருந்தது. அது உண்ணியை அச்ச முறச் செய்தது. அவன் எதுவும் பேசவில்லை. அசையவும் இல்லை. அந்தப் பார்வையை விலக்காமலே அய்யப்பன் சொன்னான்:

“மணி அடிச்சாச்சு, சின்ன எஜமான்.''

“அப்படியா?'' -உண்ணி அதிர்ச்சியடைந்தான். தொடர்ந்து அவனை நோக்கித் திரும்பி வந்து அவன் சொன்னான்: “ம்... நான் போகட்டுமா?''

“ம்...'' -அய்யப்பன் சொன்னான்.

உண்ணி கோமனுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்குச் சென்றான். பள்ளிக்கூடத்தின் வெளிவாசலை அடைந்து திரும்பிப் பார்த்த போதும், அய்யப்பன் அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அய்யப்பனின் கண்களில் இருக்கும் உணர்ச்சி தூரத்தில் இருந்து பார்க்கும்போது தெரியவில்லையென்றாலும், உண்ணிக்கு அது நன்கு தெரிந்தது.


வகுப்பறையில் போய் உட்கார்ந்த பிறகுகூட சின்னஞ் சிறிய கண்களால் இதற்கு முன்பு பார்த்திராத மனிதனைப் போல தன்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அய்யப்பனின் முகம் அவனுடைய கண்களில் நிறைந்து நின்றிருந்தது.

சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் அய்யப்பனின் முகம் அவனுடைய கண்களில் இருந்தே மறைந்தது. அப்போது மதியம் பார்த்த திரைப்பட சுவரொட்டி பற்றிய ஞாபகம் வந்தது. இளைஞ னின் முகமும் இளம்பெண்ணின் முகமும் மனதில் தோன்றின. அவர்களுடைய முகங்களில் தெரிந்த உணர்ச்சிகள் அவனிடம் சலனத்தை உண்டாக்கியது. சுகமான சந்தோஷத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த உணர்வு மண்டலம் திடீரென்று அதிர்ச்சிக்கு ஆளானது. மூலையில் கத்தியைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருக்கும் கொடூரமான மனிதன்...

கொடூர மனிதனிலிருந்து அய்யப்பனை நோக்கியும், அய்யப்ப னிடமிருந்து மாமாவை நோக்கியும் மனம் தாவித் தாவி குதித்துக் கொண்டிருந்தது.

அய்யப்பன் சென்று தன்னை வழியில் பார்த்த விஷயத்தை மாமா விடம் கூறுவான். மாமாவிற்கு அது பிடிக்காது என்பது மட்டும் உண்மை. ஆசிரமத்தில் விஷயத்தைக் கூறக் கூடாது என்று அய்யப்ப னிடம் கூறியிருக்கலாம். அதை மறந்ததற்காக உண்ணி வருத்தப் பட்டான். அந்த நேரத்தில் எதுவும் தோன்றவில்லை. அதுதான் கஷ்டம்...

வகுப்பறையிலோ பாடப்புத்தகங்களிலோ நண்பர்களிடமோகூட கவனம் செலுத்த உண்ணியால் முடியவில்லை. அவனுடைய நினைப்பு அய்யப்பனின் சிறிய கண்களில் நிறைந்து நின்றிருந்தது. அது மறைந்தவுடன் அந்த இடத்தில் மாமாவின் முகம் தோன்றும்.

“இவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்?'' -உண்ணி தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்: “இந்த மனிதர்கள் எனக்கு யார்? ஒரு நாயையோ பூனையையோ ஆட்டையோ வளர்ப்பதைப் போல இவர்கள் என்னை தீனி போட்டு எதற்கு வளர்க்கிறார்கள்?''

அடுத்த நிமிடம் உண்ணி அதிர்ச்சியடைந்து உறைந்து போய் விட்டான். பலி கொடுப்பதற்கா? மிருகங்களைத் தீனி போட்டு வளர்த்து, காளி கோவிலில் பலி கொடுப்பதுண்டு. அதேபோல ஒரு நாள் சாமுண்டி சிலைக்கு முன்னால் இந்தக் கழுத்து தனியாகத் துண்டிக்கப்பட்டு விழப் போகிறதோ? அவனுக்குள் பயம் வேகமாக நுழைந்தது. மனிதர்களையும் கவனித்து வளர்ப்பதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான். அதற்கும் தயங்கக் கூடியவர்கள் அல்ல மாமாவும் அய்யப்பனும். அவர்களுக்கு மனிதர்களிடம் சாதாரணமாகக் காணப்படும் உணர்ச்சிகள் இல்லை. ஒரு மரத்தை வெட்டும் லாவகத்துடன், ஒரு ஆடு அல்லது கோழியின் கழுத்தை வெட்டும் அதே உணர்ச்சியற்ற தன்மையுடன் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைக்க அவர்களால் முடியும். அதுதான் அவர்களுடைய தனித்துவம். அதனால்தான் சாதாரண மனிதர்களின் பலவீனங்களான கோபம், கவலை போன்ற உணர்ச்சிகள் அவர்களிடம் எந்தச் சமயத்திலும் இல்லாமலே இருக்கின்றன.

உண்ணி மனப்பூர்வமாக ராகுலனின் தாயை நினைக்க முயற்சித் தான். பாசமும் அன்பும் அலையடித்துக் கொண்டிருக்கும் கண்கள்... வெப்பத்தையும் நிம்மதியையும் அளிக்கும் மார்பகங்கள்... மந்திரத்தனமான தழுவலால் மனதிற்கு குளிர்ச்சியை உண்டாக்கும் கைகள்...

ஆனால், அந்த வடிவம் ஒரு நிமிடம்கூட ஞாபகத்தில் நிற்க வில்லை. அதை விலக்கிக்கொண்டு அய்யப்பனின் கறுத்த முகம் நினைவில் வருகிறது. அதன்மீது எடுத்துப் பதிக்கப்பட்டதைப் போல மாமாவின் முகம்.

தன்னுடைய சிறுபிள்ளைத்தனம்தான் இப்படிப்பட்ட பயங்களுக் கெல்லாம் காரணம் என்று உண்ணிக்கு அப்போது தோன்றியது. தான் இப்போது சிறிய குழந்தை அல்ல- தனக்குப் பல விஷயங்களும் தெரியும். தான் தன்னுடைய வயதிருக்கும் அளவிற்கு வளரவில்லை என்பதுதான் பிரச்சினையே. இந்த அச்சங்களுக்கெல்லாம் காரணம் வேறு யாருமல்ல- தானேதான். சிறுபிள்ளைத் தனத்தை விட்டு விட்டதைப் போல தான் நடந்தால், மாமா தன்னைப் பற்றி கொண்டிருக்கும் எண்ண ஓட்டத்தில் மாறுதல் உண்டாகாமல் இருக்காது என்று உண்ணி நினைத்தான்.

ஆனால், அது எப்படி நடக்கும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரு வழியும் தெரியவில்லை. உண்ணி தவித்தான்.

அன்று சாயங்காலம் ஆசிரமத்தை அடைந்தபோது பாதையில் நடந்து திரிந்ததைப் பற்றியோ திரைப்பட சுவரொட்டியைப் பார்த் துக் கொண்டு நின்றதைப் பற்றியோ மாமா எதுவும் கேட்கவில்லை. மாமாவின் அமைதி உண்ணியைப் பதைபதைப்பு கொள்ளச் செய்தது. சந்தோஷம் கொள்ளுமாறும் செய்தது.

அவன் ஆற்றிற்குச் சென்று குளித்தான். குளிக்கச் சென்ற நேரத்தில்கூட அவன் எப்போதும் இருப்பதைவிட சந்தோஷமாக இருந்தான். அவன் நீரைத் தட்டித் தெறிக்கச் செய்தான். வானத்தை நோக்கித் தெறித்த நீர்த்துளிகளில் மாலை நேர வெயில் மின்னி ஒளிர்வதை அவன் பார்த்தான். அவன் சுவரொட்டியில் இருந்த அழகான இளைஞனை நினைத்துப் பார்த்தான். பேரழகியான இளம் பெண்ணையும் நினைத்தான். அவளைவிட ஷீபா பேரழகி என்பதை நினைத்துப் பார்த்தான். திடீரென்று ஷீபாவைப் பார்க்க வேண்டும் என்ற அளவற்ற ஒரு விருப்பம் அவனுக்கு உண்டானது.

அடுத்த நிமிடம் ஷீபா அவனுக்கு முன்னால் தோன்றினாள். இடுப்பு வரை இருக்கும் நீரில் குனிந்து நின்று கொண்டு அவள் அவனை நோக்கி நீரைத் தெறிக்கச் செய்தாள். அவனும் அதையே தான் செய்தான். நீரைத் தெறிக்கச் செய்து தெறிக்கச் செய்து அவர்கள் ஒருவரோடொருவர் நெருங்கினார்கள். மிகவும் நெருங் கினார்கள். பிறகு பிடித்து இழுப்பது ஆரம்பமானது. இறுதியில் ஒருவரையொருவர் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்கள் ஒன்றாக ஆற்று நீருக்குள் விழுந்தார்கள். அவர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

“ஆண்பிள்ளையுடன் சேர்ந்து விளையாடினால் இப்படித்தான் நடக்கும்!'' -தட்டுத் தடுமாறி எழுந்து, ஷீபாவைக் கிண்டல் பண்ணியவாறு உண்ணி சொன்னான்.

“எஜமான், யாருடன் பேசிக்கொண்டு இருக்கீங்க?''

உண்ணி அதிர்ச்சியடைந்துவிட்டான்.

ஆற்றின் கரையில் அய்யப்பன். அய்யப்பனின் சின்னஞ்சிறிய கண்கள். ஆனால், பிரகாசமாக இருந்தன. உதட்டில் சிரிப்பு மலர்ந்திருந்தது.

அடுத்த நிமிடம் சுய உணர்விற்கு மீண்டும் வந்த உண்ணி சொன்னான்: “ஆற்றுடன்...'' -நிமிட நேரத்திற்குப் பிறகு அவன் சொன்னான்: “நான் ஆற்றுடன் பேசுவது உண்டு.''

“ம்...'' -அய்யப்பன் முனகினான்.

“குளிச்சாச்சா?'' -உண்ணி கேட்டான்.

“ம்...'' அய்யப்பன் பதில் சொன்னான்: “நான் போகலாமா?''

“சரி...''

“எஜமான், நீங்க வரலையா?''

“நான் வர்றேன். நீ போ அய்யப்பா.''

“ம்...''

அய்யப்பன் நடந்தான்.

உண்ணி மீண்டும் நீருக்குள் மூழ்கினான். அவனும் அவனுடைய நதியும் ஒருவரையொருவர் இறுக அணைத்துக் கொண்டார்கள். ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார் கள். மேற்கு திசை வானத்தில் சிவப்புச் சூரியன் சாட்சியாக நின்றது.


உண்ணி உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுருட்டு புகைத்துக் கொண்டே மாமா அருகில் வந்து உட்கார்ந்தார். மாமா வின் பார்வை தன்னை ஆராய்வதை மாமாவைப் பார்க்காமலேயே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

"அய்யப்பன் புளி' ஊற்றப்பட்ட சாதத்தை அவன் அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அய்யப்பனின் கண்டுபிடிப்புதான் அய்யப்பன் புளி. ஏதோ ஒரு காட்டிலையைப் பிழிந்து எடுக்கப்பட்ட நீர், புளி, மிளகாய், தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்து உண்டாக்கிய ஒருவகையான குழம்புதான் அய்யப்பன் புளி. அதன் ருசி உண்ணிக்கு மிகவும் பிடிக்கும். எப்போதாவது ஒருமுறைதான் அது தயார் பண்ணப்படும். மகிழ்ச்சியுடன், ருசியுடன் உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த உண்ணியின் "சாப்பாட்டு மோகம்' மாமா வந்ததும், சற்று குறைந்து விட்டது. எனினும், அய்யப்பன் உணவைச் சாப்பிடத் தூண்டியது. அவன் சாப்பாட்டைத் தொடர்ந்தான்.

அப்போதுதான் மாமா அழைத்தார்: “உண்ணி...''

அவன் தலையை உயர்த்திப் பார்த்தான்.

துறவிகள் வெட்ட வெளியில் இருந்து திருநீறை எடுத்து பக்தர் களிடம் தருவதைப்போல, மாமா எங்கிருந்தோ கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தை நீட்டிக் கொண்டிருந்தார்.

உண்ணி பதைபதைத்துப் போய்விட்டான். ராகுலன் அவனுக்கு வாசிப்பதற்காகக் கொடுத்திருந்த ஒரு புதினம் அது. அவன் மிகவும் ரசித்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு நாவல். இது எப்படி மாமாவின் கையில் சிக்கியது என்று உண்ணி ஆச்சரியப்பட்டான். அவனுக்குள் திடீரென்று பயம் உண்டானது.

மாமாவின் நடவடிக்கை எப்படி இருக்கும்? மாமா கோபப் பட்டதில்லை என்பது அவனுக்குத் தெரியும். என்ன நடந்தாலும் மாமாவிற்கு கோபம் வராது. குறைந்த பட்சம் கோபம் வெளியே வராது. ஆனால் தண்டனை வரும். தண்டனை கடுமையாகவும் இருக்கும். இரவு முழுவதும் தொடர்ந்து தலைகீழாக நின்று கொண்டு ஆசனம் செய்ய வேண்டும், கழுத்து வரை நீருக்குள் மூழ்கி பொழுது புலரும் வரை நின்று கொண்டிருக்க வேண்டும், இரவில் தனியாக காட்டிற்குள் சென்று விறகு சேகரித்துக் கொண்டு வரவேண்டும், இரவு முழுவதும் மலை உச்சியில் இருக்கும் காளி கோவிலில் மந்திரங்களைக் கூறிக் கொண்டிருக்க வேண்டும், இரவு முழுவதும் கண்விழித்திருந்து தேவி மாகாத்மியம் வாசிக்க வேண்டும், பகலாக இருந்தால் பதினேழு முறைகள் காளி கோவில் வரை போய் வர வேண்டும் - இப்படித்தான் மாமாவின் தண்டனைகள் இருக்கும். திடீரென்று எந்தத் தண்டனையையும் தந்துவிடமாட்டார். தண்ட னையை அளித்து விட்டால், அதை அனுபவித்தே ஆக வேண்டும்.

இரவு வேளையில் கழுத்து வரை நீருக்குள் நின்று கொண்டி ருப்பதை நினைத்துக் கொண்டு, இருட்டில் ஒரு முட்டை விளக்குடன் காட்டில் விறகைத் தேடி அலைவதை கனவு கண்டு கொண்டு பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த உண்ணியின் காதுகளில் மாமாவின் மென்மையான குரல் வந்து விழுந்தது.

“இது யாருடைய புத்தகம் உண்ணி?''

“என்னுடைய...'' -உண்ணி தடுமாறினான். “என்னுடைய ஒ... ஒரு நண்பனுடையது!''

“இது எப்படி இங்கே வந்தது?''

“அவன்...'' -உண்ணி பாதியில் நிறுத்தினான்.

“அவன்...?''

“அவன் எனக்கு... வா... வாசிப்பதற்குத் தந்தான்.'' -உண்ணியின் வார்த்தைகள் துண்டுத் துண்டாக வந்து விழுந்தன.

“உண்ணி, நீ இதை வாசித்தாயா?''

“கொஞ்சம் வாசித்தேன்.''

“மீதியை வாசிக்க வேண்டாம்.'' -மாமாவின் குரல் மிகவும் மென்மையாக இருந்தது. ஆனால், அவருடைய கண்கள் குரலை உயர்த்தி, வளவளவென்று கோபத்துடன் பேசுவதைப்போல உண்ணிக்குத் தோன்றியது. மாமா ஏற்ற இறக்க வேறுபாடு இல்லாத குரலில் தொடர்ந்து சொன்னார்: “இது சிறுவர்கள் வாசிக்கக்கூடிய புத்தகம் அல்ல. குறிப்பாக உண்ணி, உன்னைப் போன்ற சிறுவர் களுக்கு...'' அவர் சுருட்டை வேகமாக இழுத்தார். சுருட்டின் புகையை உள்ளே இழுத்தபோது அவருடைய நெற்றி சுளிந்தது. சிவந்த கண்கள் பாதி மூடின. “அய்யப்பா!'' -அவர் அழைத்தார்.

“எஜமான்...'' -அய்யப்பன் அழைப்பைக் கேட்டான்.

“நாம உண்ணியை எப்படிக் கொண்டு வரணும்னு திட்டமிட்டிருக்கிறோம்?'' -மாமா கேட்டார்.

“ரொம்ப பெரிய நினைப்பு, எஜமான்.''

“ம்...'' -மாமா நீட்டி முழக்கினார்: “உண்ணி, உனக்குப் புரியுதா? நீ பெரிய ஆளாக வரவேண்டியவன். கெட்ட குணங்களைக் கொண்ட சாதாரண மனிதர்களைப்போல உள்ளவன் அல்ல நீ. இந்த தரம் தாழ்ந்த நூல்களை வாசித்து விலை மதிப்புள்ள நேரத்தை வீண் செய்யக்கூடாது. இவையெல்லாம் சிறுவர்களைப் பாழாக்கக்கூடிய வலைகள். இதில் சிக்கிக் கொள்பவர்கள் சிக்கிக் கொள்ளட்டும். நீ இந்த வலையில் விழ வேண்டியவன் அல்ல. விலை குறைவான, திடீரென்று பிடித்து இழுக்கக்கூடிய புத்தகங்கள், திரைப்படம், நாடகம், நடனம் -இவை அனைத்துமே வலைகள்தான். மிக உயர்ந்த ஒரு லட்சியத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பவர்களை விழச் செய்யும் மிக ஆழமான குழிகள் அவை.'' மாமா சுருட்டை இழுத்துப் புகையை ஊத, குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்த உண்ணிக்கு "அந்த நிடமே இந்த லட்சியம் என்ன?' என்று கேட்க வேண்டும் போல தோன்றியது.

ஆனால், அவன் கேட்கவில்லை. அப்படிக் கேட்டால், அது மாமாவை மீறியதைப்போல ஆகும் என்று அவனுக்குத் தோன்றியது.

“நண்பர்கள் கூட்டம்...'' மாமா தொடர்ந்து சொன்னார்: “உண்ணி, உனக்குத் தேவையில்லை. சாதாரண சிறுவர்களுக்குத்தான் அவர்கள் வேண்டும். நீ சாதாரண சிறுவன் அல்ல. உறவுகள்கூட வலைகள் என்று ஆகிவிட்டதால்தான் நான் உன் தாயிடமிருந்து உன்னை இங்கே கொண்டு வந்தேன். பிறப்பின் உறவைக்கூட ஒரு தவம் செய்பவனால் மறக்க முடியும்.''

மாமாவின் குரலின் தனித்துவம் உண்ணியின் தலைக்குள் நுழைந்தது.

அவன் ஒரு தடுமாற்றத்தில் இருந்தான். தலை சுற்றுவதைப் போலவும் தான் கீழே விழுவதைப் போலவும் தான் ஏதோ ஒரு மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு விட்டவனைப் போலவும் உண்ணிக்குத் தோன்றியது.

“உணவு சாப்பிடு உண்ணி.'' -மாமா சொன்னார். உண்ணி ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல உணவைச் சாப்பிட்டான்.

“இந்தப் புத்தகத்தை நாளைக்கே இதைத் தந்த பையனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். மீதியை வாசிக்கக்கூடாது. வாசித்ததை மறந்துவிட வேண்டும்.'' -மாமா சொன்னார்.

“சரி...'' -உண்ணி ஒப்புக் கொண்டான்.

திடீரென்று வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது. பனையோலைகளால் ஆன கூரையின்மீது மழைத்துளிகள் விழுந்து ஆரவாரித்தன.

மழை பெய்யும்போது பாம்புகள் இறங்கும் என்பதை நினைத்துப் பார்த்தான்.

“சாதகனாக ஆவதற்காக உருவாக்கப்பட்டவன் கவர்ச்சிகளில் விழுவது சரி அல்ல. ஆசைகளின் சுவர்களைத் தாண்டக்கூடிய வலிமை உனக்கு இருக்கிறது. ஆசைகள் உண்டாக்கக்கூடிய சக்கர வியூகங்களில் நீ போய் மாட்டிக் கொள்ளக்கூடாது. அது பாவம். விடுதலையே இல்லாதவ பாவம்.''


ஒரு கெட்ட சகுனத்தைப்போல மாமாவின் தாள லய வேறுபாடு இல்லாத மந்திரக் குரல் அறையில் நிறைந்திருந்தது. அந்த மந்திர சக்திக்கு கீழ்ப்படிந்துவிட்ட உண்ணி இயந்திரத்தனமாக உணவைச் சாப்பிட்டு முடித்து எழுந்தான். இயந்திரத்தனமாக கையைக் கழுவினான். இயந்திரத்தனமாக படுக்கையறையை நோக்கி நடந்தான்.

அவன் நடக்கும்போது, மாமா அழைத்தார்: “உண்ணி.''

அவன் திரும்பி நின்றான்.

“உன் அம்மா வருவாள்.'' -மாமா சொன்னார்: “ஆனால் நான் சொன்ன விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள். அந்த உறவு பலமானதாக ஆகக்கூடாது. ஒரு சடங்கு என்ற முறையில் மட்டுமே நீ உன் தாயைப் பார்க்க வேண்டும்.''

அம்மா என்று கேட்டபோது உண்டான சந்தோஷம் திடீரென்று உண்ணியின் ஒரு சடங்காக மாறியது.

“புரியுதா?'' -மாமா கேட்டார்.

“ம்....'' -உண்ணி சொன்னான். அவன் படுக்கையறைக்குள் நுழைந்து பாடப்புத்தகங்களை எடுத்து வைத்தான். எழுத்துகளுக்கு மத்தியில் தன் தாயின் முகத்தைத் தேடினான்.

8

ண்ணி மீண்டும் ராகுலனின் வீட்டிற்குச் சென்றான். ஒரு முறை அல்ல, பல முறைகள். ரேடியோ, ரேடியோக்ராம், கேரம் போர்டு எல்லாமே அவனுக்கு மேலும் நன்கு பழக்கமாயின. ராகுலனின் தந்தையும். அவர் எல்லா நேரங்களிலும் அங்கு இருக்க மாட்டார். அதனால் அதிகமாக நெருக்கம் உண்டானது ஷீபாவுடனும் அம்மாவுடனும்தான்.

அம்மா சொன்னாள்: “மகனே. இது உன்னுடைய வீடு என்று நினைத்துக் கொள்.''

ஷீபா அவனுடன் பேசிக் கொண்டிருப்பதிலும் நெருங்கிப் பழகுவதிலும் அதிக ஆர்வத்தைக் காட்டினாள். அது உண்ணியைச் சற்று பதைபதைப்பிற்கு உள்ளாக்காமல் இல்லை. அவள் ப்ரீ டிகிரி இரண்டாம் வருடத் தேர்வில் தோல்வியைத் தழுவியிருந்தாள்.

“ராகுலன் பெரிய புத்திசாலியாச்சே!'' -உண்ணி சொன்னான்: “பிறகு எப்படி அவனுடைய அக்கா தோல்வியைத் தழுவினாங்க?''

“அவளுடைய அகங்காரம்.'' -அம்மா சொன்னாள்: “அப்படி இல்லாமல் வேறென்ன? எஸ். எஸ். எல்.ஸி.யில் க்ளாஸ் வாங்கிய பெண். கல்லூரிக்குச் சென்றதும் அகங்காரம் பிடிச்ச கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு திரைப்படம் பார்த்துக் கொண்டு திரிந்தாள் அல்லவா? பிறகு எப்படி எதையாவது படிக்க முடியும்? படிச்சாத்தானே வெற்றி பெற முடியும்?''

“பிறகு.. பிறகு...'' -ஷீபா கோபத்துடன் சொன்னாள்: “அம்மா சொல்றதைக் கேட்டால் அவங்க என் கூடவே இருந்ததைப்போல இருக்கும். அப்படியெல்லாம் எதுவும் இல்லை உண்ணி.''

“பிறகு எப்படி என்று கேள், உண்ணி.'' -அம்மாவும் விடவில்லை.

உண்ணி சிரித்தான். “சண்டை போட வேண்டாம்.'' -அவன் சொன் னான்: “அப்படி நடந்துவிட்டது என்று நினைத்தால் போதும்.''

ராகுலன் உரத்த குரலில் சிரித்தான்: “அதுதான்... அதுதான் சரி!''

இதைப்போல தமாஷாகப் பேசுவதற்கும் குலுங்கிக் குலுக்கிச் சிரிப்பதற்கும் தன்னால் எப்படி முடிகிறது என்று உண்ணி ஆச்சரியப்பட்டான். ஞாபகம் தெரிந்த காலத்திலிருந்து இன்று வரை அவனால் இப்படிச் சிரிக்கவும் சந்தோஷமாக இருக்கவும் முடிந்ததில்லை. ஆசிரமத்தில் சிரிப்பு என்றால் ஏதோ எழுதப்படாத சட்டங்களால் தடை செய்யப்பட்ட ஒன்று என்ற நிலை நிலவிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில் வளர்ந்ததால் இருக்க வேண்டும். அந்த சூழ்நிலை எப்போதும் மனதில் ஒரு பெரிய கார்மேகத்தைப்போல திரண்டு நின்று கொண்டிருந்ததால் இருக்க வேண்டும்- பள்ளிக் கூடத்தில் இருக்கும் போதுகூட உண்ணியால் மனதைத் திறந்து சிரிக்க முடிந்ததில்லை. ராகுலனின் வீட்டிற்குச் சென்ற சம்பவங்கள் தன்னிடம் அடிப் படையிலேயே நடத்தை வேறுபாடுகளை உண்டாக்குகின்றன என்பதை அவன் ஆச்சரியத்துடன் தெரிந்து கொண்டான். குணத்தில்கூட குறிப்பிடத்தக்க அளவில் மாறுதல் உண்டாகியிருக்கிறது. மனநிலைகூட மாறியிருக்கிறது.

இந்த சந்தோஷங்கள் வலைகள் என்பது மாமாவின் கருத்து. இந்த பாசங்களும், அன்பு செலுத்தவும் அன்பு செலுத்தப்படவும் தன்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக உண்டான சந்தர்ப்பங்கள் வலைகள் என்றால், அந்த வலைகள் சுதந்திரத்தைவிட சுகமானவை ஆயிற்றே என்று உண்ணி பலமாக சந்தேகப்பட்டான்.

“உண்ணி வந்த பிறகு உங்களுக்கு நான் வேண்டாதவனாகி விட்டேன், அம்மா.'' - ஒரு நாள் ராகுலன் சொன்னான்.

“அது என்னுடைய விருப்பம்.'' -அம்மா சொன்னாள்.

உண்ணி சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தான். ராகுலன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டான்.

அம்மா இருவரின் தோள்களிலும் கைகளை வைத்து, இருவரையும் பாசத்துடன் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டாள். இரண்டு பேருமே என்னுடைய பிள்ளைகளாச்சே?'' அம்மா சொன்னாள்: “உண்ணியை நான் பெற்றெடுக்கவில்லை; அவ்வளவுதான்.''

“அம்மா...'' -உண்ணி மனதிற்குள்ளிருந்து எழுந்த உணர்ச்சிப் பெருக்குடன் அழைத்தான்.

“ஆமாம் மகனே.'' -அம்மாவும் உணர்ச்சிவசப்பட்டாள். “நீ என்னுடைய மகன்தான்.''

தான் சந்தோஷத்தின் கற்பனைக்கு எட்டாத ஏதோ தூரத்தை நோக்கி உயர்ந்து செல்வதைப்போல உண்ணி உணர்ந்தான்.

அவன் திரைப்படம் பார்த்ததில்லை என்ற விஷயம் அவர்கள் எல்லாருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது.

“மகனே, திரைப்படம் பார்ப்பது தவறல்ல.'' -ராகுலனின் தாய் சொன்னாள்: “திரைப்படமே கதி என்று கூறிக்கொண்டு தன்னுடைய படிப்பையும் பிற பொறுப்புகளையும் மறந்துவிட்டுத் திரிவதுதான் தவறு.''

ஷீபா அவனிடம் கல்லூரியிலும் கல்லூரி இருக்கும் நகரத்திலும் உள்ள வாழ்க்கையைப் பற்றியும், தான் பார்த்த திரைப்படங்களைப் பற்றியும், வாசித்த புத்தகங்களைப் பற்றியும் சொன்னாள். அவளுடைய பேச்சு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. கையைத் தூக்கி, உதட்டை வளைத்து, கண்களை வெட்டி, புருவத்தைச் சுளித்து அபிநயத்துடன் ஷீபா பேசினாள். அவளுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. இறுதியில் கிளம்பும்போது அவளுடன் செலவழித்த நேரம் திடீரென்று முடிந்துவிட்டதற்காக மனதில் கவலை உண்டாகும்.

பிறகு ஷீபா அவன் நினைவுகளில் வாழ்ந்தாள். ஆசிரமத்தின் படுக்கையறையின் இருட்டில் அவளைக் கனவு கண்டு கொண்டு, அவளுடைய குரலின் முழக்கத்திற்காக காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு உண்ணி படுத்திருந்தான். ஆனால், தூக்கத்திலிருந்து கண் விழித்தால் அவன் காதுகளில் விழுவது மாமா அல்லது அய்யப்பனின் குரலாக இருக்கும். அவர்களும் தூங்கிவிட்டால், இரவுப் பறவைகளின் இசை கேட்க ஆரம்பித்துவிடும். காட்டின் இரவு நேர சத்தங்கள்.

சமீப காலமாக அய்யப்பனை பல நேரங்களில் கிராமத்தில் பார்க்க முடிகிறது என்பதை நினைத்து உண்ணி ஆச்சரியப்பட்டான். அன்றொரு நாள் மதிய நேரத்தில் திரைப்பட சுவரொட்டியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது பார்த்ததிலிருந்து, பல நேரங் களிலும் பார்த்திருக்கிறான். பார்க்கும் போதெல்லாம் அவன் ஏதாவது ஒரு விளக்கத்தைக் கூறுவான். அந்த விளக்கம் பல நேரங்களில் உண்ணிக்கு திருப்தியைத் தராது. அது அவனுக்குள் சந்தேகத்தை எழச் செய்தது. சந்தேகம் அதிகமாக ஆனதற்கு இன்னொரு காரணம்- சற்றும் எதிர்பார்த்திராத நேரங்களில், சிறிதும் எதிர்பார்த்திராத சந்தர்ப்பங்களில், சற்றும் எதிர்பார்த்திராத இடங்களில் அவன் அய்யப்பனைப் பார்த்தான்.


ஒரு நாள் ராகுலனின் வீட்டிற்குச் செல்வதற்காக அவன் காரில் ஏறினான். ஓட்டுனருக்கு நேர்பின்னால் உண்ணி உட்கார்ந்திருந்தான். ஓட்டுனருக்கு அருகில் இருந்த கண்ணாடியை உண்ணி வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். காரை ஸ்டார்ட் செய்தபோது கண்ணாடி யில் அய்யப்பனின் உருவம் தெரிவதை உண்ணி பார்த்தான். அடுத்த நிமிடம் உண்ணி திரும்பிப் பார்த்தான். பத்து பதினைந்து அடிகளுக்குப் பின்னால் அய்யப்பன் நின்று கொண்டு காரில் அமர்ந்திருக்கும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் ஒரு நண்பனுடன் தேநீர் கடைக்குள் நுழைந்து அவன் தேநீர் பருகினான். அவன் வெளியே வந்தது நேராக அய்யப்பனுக்கு முன்னால்தான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் ராகுலனின் வீட்டிற்குச் சென்றுவிட்டு சற்று தாமதமானதால், ஷீபாவும் ராகுலனும் சேர்ந்து உண்ணியை காளி காவு வரை கொண்டு வந்து விட்டார்கள். ராகுலனிடமும் ஷீபாவிடமும் விடை பெற்றுத் திரும்பிய அவன் நேராகப் பார்த்தது அய்யப்பனின் சின்னஞ்சிறிய கண்களைத்தான்.

பல முறைகள் நடந்தவுடன் இது சிறிதும் எதிர்பாராமல் நடக்க வில்லை என்பதும், தன்னுடைய அசைவுகள் நோட்டமிடப்படுகின்றன என்பதும் உண்ணிக்குத் தெரிந்தது. அந்த தோணல் அவனுக்குள் பயத்தை வளர்த்தது. பிறகு எங்கு போனாலும் என்ன செய்தாலும் அவன் முதலில் அந்த இடத்தில் அய்யப்பனைத் தேட ஆரம்பித்து விடுவான்.

ஆனால், அதற்குப் பிறகும் அய்யப்பனைச் சந்தித்தது சிறிதும் எதிர்பார்க்காமல்தான். அய்யப்பனைத் தேடினால் இருக்க மாட்டான். சற்றும் எதிர்பாராத நிமிடங்களில் அய்யப்பன் தோன்றுவான்.

உண்ணியை ஆச்சரியத்திற்குள்ளாக்கிய ஒரு விஷயம் இருந்தது. அய்யப்பன் உண்ணியைப் பார்த்த நாட்களில் ஒரு நாள்கூட சாயங் காலம் ஆசிரமத்தில் அந்த சம்பவத்தைப் பற்றியோ அந்த சந்தர்ப்பத்து டன் தொடர்புகொண்ட விஷயங்களைப் பற்றியோ மாமா ஒரு வார்த்தைகூட உண்ணியிடம் கேட்டதில்லை. அய்யப்பன் மாமாவிடம் கூறாமல் இருந்திருப்பான் என்று உண்ணி முதலில் நினைத்தான். பிறகு அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஒரு விஷயத்தையும் மாமாவிடம் கூறாமல் பத்திரப்படுத்தி வைக்க அய்யப்பனால் முடியாது என்று உண்ணிக்குத் தெரிந்திருந்தது. அப்படியென்றால் அய்யப்பன் எல்லா விஷயங் களையும் கூறியிருக்க வேண்டும். மாமா மனப் பூர்வமாகக் கேட்காமல் இருக்கிறார். அந்த சிந்தனை வந்ததும், உண்ணி பயப்பட்டான். ஒரு நாள் இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒன்றாக அனுபவிக்க வேண்டியதிருக்கும்.

மாமா பேசும்போதெல்லாம் பொதுவான விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை உண்ணி குறிப்பாக கவனித்தான். குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி அவர் எந்தவொரு விஷயத்தையும் கூறவில்லை. எப்போதும் சொல்லக்கூடிய விஷயங்களைச் சொன்னார். முடிந்த வரையில் ஆபத்துகள் நிறைந்த வலையை அறுத்தெறிந்து விட்டு வெளியே வருவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படை விஷயத்தைத்தான் மாமா திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.

“உண்ணி, நான் உனக்குப் பயிற்சி தருகிறேன். நீ தேர்ந்தெடுக்கப் பட்டவன். இனிமேல் உனக்குத் தேவை பயிற்சிதான். பயிற்சியின் மூலம், தவத்தின் மூலம், சாதகத்தின் மூலம் எதையும் எதிர்த்து நிற்கக் கூடிய வலிமை கிடைக்கும். நீ பலவீனமானவனாக ஆகிவிடக் கூடாது. பலவீனம் தான் இருப்பதிலேயே பெரிய பாவம். நீ அறிவுள்ளவனாக ஆக வேண்டும். அறிவில்லாமைதான் மிகப் பெரிய தீமை.''

மாமா கூறியது உண்மைதான் என்பதை உண்ணி அறிந்திருந்தான். தான் வலை யில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அவன் அறிந்திருந்தான். ஆனால், எது வலை என்று அவனுக்குத் தெரியாமல் இருந்தது. அந்த விஷயத்தில் அவனுக்கு சந்தேகம் இருந்தது.

சாயங்கால வெயில் விழுந்து கொண்டிருந்த ஆற்று நீரில் இறங்கி நின்று மூழ்கிக் குளிக்கும்போது, அந்தக் கேள்வியை அவன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். எது வலை? ஏற்கெனவே மழை பெய்திருந்தது. மழையில் நனைந்த பச்சை மண்ணின் வாசனையால் கவரப்பட்ட பாம்புகள் இறங்கியிருக்கும்.

அவன் திடீரென்று ஷீபாவை நினைத்தான். அவளுக்குப் பாம்பு என்றால் பயம். சுற்றுலா மாளிகையில் இருந்த கூட்டிற்குள் கிடந்த பாம்பைப் பார்த்தபோது கூட அவள் பயந்து சத்தம் போட்டாள். உண்ணிக்கு சிரிப்பு வந்தது.

“அப்படியென்றால், பிறகு எங்களுடைய காட்டிற்கு வருவது எப்படி?'' -அவன் கேட்டான்.

“அங்கே பாம்பு இருக்குமா?''

“இருக்குமாவா?'' -அவன் சிரித்தான்: “அங்கு அதுதான் இருக்கு.''

“வீட்டின் வாசலுக்குக்கூட பாம்பு வருமா?'' -அவள் கேட்பாள்.

“வாசலுக்கா?'' -அவன் சொன்னான்: “சில நேரங்களில் விட்டிற்கு உள்ளேகூட நுழைந்து வரும்.''

அவள் பயந்துவிட்டாள். அதைப் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

“நான் அங்கே வர மாட்டேன்'' -அவள் சொன்னாள்.

“இப்படி பயப்படலாமாடீ?'' -அவளுடைய தாய் இடையில் புகுந்து சொன்னாள்: “பாம்பு ஊர்ந்து போயிடும். அதற்குத் தொல்லை கொடுத்தால்தான் அதுவும் தொல்லை தரும்.''

“எனக்கு ஒரு பயமும் இல்லை.'' -ராகுலன் சொன்னான்.

“எனக்கு பயம் இருக்கு.'' -ஷீபா சொன்னாள்.

“அம்மா, நீங்க சொன்னதுதான் சரி.'' -உண்ணி அந்த விஷயத்தில் எல்லாவற்றையும் தெரிந்திருந்த ஒருத்தனைப் போல பேசினான்: “பாம்பு வெறுமனே வந்து யாரையும் கடிக்காது. பிறகு... எங்களுடைய பகுதியில் கடித்தால் பயப்பட வேண்டாம். மாமாவிடம் விஷத்தை முறிக்கக் கூடிய மூலிகை இருக்கு.''

“அப்படியென்றால் போகலாம்.'' -ஷீபா சொன்னாள்.

“பயந்து சத்தம் போடுறதா இருந்தால், வர வேண்டாம்.'' -உண்ணி அவளைக் கிண்டல் செய்தான்.

“உண்மைதான்.'' ராகுலன் சொன்னான்: “பிறகு எனக்கும் உண்ணிக்கும் வெட்கக் கேடு.''

“பிறகு... உனக்கும் உண்ணிக்கும்!'' -ஷீபா கோபத்துடன் சொன்னாள்: “போடா!''

உண்ணி நீரில் மூழ்கினான். கண்களைத் திறந்தான். உருளைக் கற்கள் பெரிதாகத் தெரிந்தன. “ஷீபாவை இங்கு ஒரு முறை அழைத்துக்கொண்டு வர வேண்டும்.'' -அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான். அவள் உருளைக் கற்களைப் பார்க்கலாம். பாம்புகளைப் பார்க்கலாம்.

உண்ணி குளித்து முடித்து ஆசிரமத்தை நோக்கி நடந்து சென்றபோது சாயங்காலம் மயங்க ஆரம்பித்திருந்தது. மாமாவும் அய்யப்பனும் போய் விட்டிருந்தார்கள். ஆசிரமத்திற்குச் செல்லும் வழியில் கரடிப் பாறை என்ற ஒரு பாறை இருந்தது. அதற்கு அருகில் சென்றபோது புதர்களுக்கு மத்தியில் ஏதோ அசைவு கேட்டதைப் போல இருக்கவே உண்ணி நின்றான். பாறையின் மீது வேகமாக ஏறினான்.

மூச்சுகளின் சத்தம் கேட்ட அவன் ஆச்சரியப்பட்டான். இங்கு இந்த நேரத்தில் யார் வந்து மூச்சு விடுவது?

யாராக இருந்தாலும் தான் அங்கு இருப்பது தெரிய வேண்டாம் என்று நினைத்து, முடிந்தவரையில் ஓசை எதுவும் உண்டாக்காமல் இருக்க முயற்சித்துக் கொண்டே அவன் பாறையின்மீது பதுங்கி, இன்னொரு பகுதியை நோக்கி மெதுவாக நகர்ந்தான்.


இன்னொரு முனைக்கு அருகில் வந்தபோது அழுத்தப்பட்ட சத்தத்தில் பேச்சு கேட்டது.

ஒரு குரல் சொன்னது: "இந்த நேரத்தில் இங்கே யாரும் வர மாட்டாங்க. சுவாமி மார்கள் குளித்துவிட்டுப் போய் விட்டார்கள். அவங்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த நேரத்தில் இங்கே வருவதற்கு தைரியம் இருக்காது. முதல் காரணம்- பாம்பு, இரண்டாவது- கோவில். இன்னும் கொஞ்சம் நேரம் தாண்டினால், நேரம் இருட்டிவிட்டால், இங்கு பூதங்களும் பேய்களும் நடமாட ஆரம்பித்து விடுமே!''

இன்னொரு குரல் சொன்னது: “எனக்கு பயமா இருக்கு.''

அது ஒரு பெண் குரலாக இருந்தது. உண்ணி மேலும் ஆச்சரியப் பட்டான். அவன் பதைபதைப்பில் நடுங்கினான். தான் எதையோ பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் அவனை நிலை கொள்ளாமல் ஆக்கியது. அவன் பாறையின் இன்னொரு பக்கத்தை நோக்கி ஊர்ந்து நகர்ந்தான்.

“நீ எதற்கும் பயப்பட வேண்டாம்.'' -குரல் சொன்னது: “நான் உன்னுடன் இருக்கேன்ல? என்னை ஒரு பிசாசும் பிடிக்காது.''

பிறகு சத்தம் இல்லை.

ஒரு நிமிடத்திற்குப் பிறகு ஆண் குரல் ஒலித்தது: “நீ இங்கே வா.''

பெருமூச்சுக்கள் கேட்டன.

“ஸ்...'' -மூச்சுவிடும் பெண்ணின் சத்தம்.

அதிகரித்த ஆர்வத்துடன் உண்ணி எட்டிப் பார்த்தான். அடுத்த நிமிடம் அவன் தலையை பின்னோக்கி இழுத்துக் கொண்டான். “ச்சே... வெட்கக்கேடு...'' -உண்ணி நினைத்தான். ஆனால், அத்துடன் மேலும் பார்க்க வேண்டும்; அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் பொங்கி எழுந்தது.

அவன் மீண்டும் எட்டிப் பார்த்தான். இப்போது ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் இறுக அணைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அரை நிர்வாண கோலத்தில் இருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டார்கள். அவர்களுடைய கைகள் ஒருவரையொருவர் கிச்சுக் கிச்சு மூட்டின. கிச்சுக்கிச்சு சிரிப்புகளும் சீட்டி அடித்தல்களும் பெருமூச்சுகளும் கேட்டன.

உண்ணி முற்றிலும் ஒரு மாதிரி ஆகிவிட்டான். தன்னுடைய ரத்தக் குழாய்களில் வெப்பம் பரவியதைப் போல அவனுக்குத் தோன்றியது. நரம்புகளில் ஏதோ சலனங்கள். உடல் வெடித்துச் சிதறத் துடிப்பதைப் போல இருந்தது.

ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் முழு நிர்வாணமாக ஆக்கும் முயற்சியில் இருந்தார்கள். ஒரு சிறு குழந்தையைப் போல ஆண் பெண்ணின் மார்பகத்தில் பால் குடிப்பதைப் பார்த்தபோது, உண்ணிக்குத் தாங்க முடியாத அளவிற்கு வெட்கம் வந்தது. பெண் எந்தவொரு வெட்கமும் இல்லாமல் அவனுடைய கழுத்தில் முத்தமிட்டு, அவனுடைய வேட்டியை அவிழ்த்துவிட்டு, அவனுடைய முழு உடம்பையும் தடவி, ஆவேசத்துடனும் வெறியுடனும் இறுக ஒட்டிக்கொண்டாள்.

தன்னுடைய ஆடைகளுக்குத் தன்னைத் தாங்குவதற்கு சக்தி இல்லை என்று உண்ணிக்குத் தோன்றியது

9

பூஜையறையில் பூஜை நடந்தது. சாப்பாட்டு அறையில் சாப்பாடு நடந்தது. படுக்கையறையில் படுப்பது நடந்தது. ஆனால், எல்லாம் சடங்குகள் மட்டுமே.

பூஜை நேரத்தில் உண்ணியின் மனம் ஸ்ரீசக்கர பிரதிஷ்டையின் மீதோ பூஜைக் கான கட்டுப்பாடுகளிலோ நிலைத்து நிற்கவில்லை. உணவு நேரத்தில் உணவின் ருசி யையோ தன்மையையோ அவன் அறிந் திருக்கவில்லை. எரிபொருளை உட்கொள்ளும் ஏதோ ஒரு இயந் திரத்தைப் போல அவன் உணவை விழுங்குவதுதான் நடந்து கொண்டிருந்தது. பாடப் புத்தகங்களுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த உண்ணி எழுத்துக்களைப் பார்க்கவில்லை. எழுத்துகளுக்குப் பின்னால் இருந்த அர்த்தம் எதையும் பார்க்கவில்லை. எனினும், விளக்கின் வெளிச் சத்தில் எழுத்துக்களின் ஓரத்தில் ஒரு கடமையை நிறைவேற்றுவதைப் போல அவன் அமர்ந்திருந்தான். இறுதியில்ùச்யய வேண்டிய வேலையைச் செய்யும் இயந்திரத்தைப் போல உரிய நேரத்தில் அவன் எழுத் துக்களின் கரையிலிருந்து படுக்கைக்கு இடம் மாறினான். படுத்தான். ஆனால், பூஜை நேரத்தில் பிரதிஷ்டையும் பூஜை மந்திரங்களும் போல, உணவு வேளையில் ருசியும் தன்மையும் போல, தூக்கத்திற்கான நேரத்தில் தூக்கமும் அவனை விட்டு விலகிச் சென்றுவிட்டது.

தான் தானல்லாதவனாக ஆகிவிட்டோம் என்பதை ஒரு வகையான தாங்க முடியாத பயத்துடன் உண்ணி தெரிந்து கொண்டான். அவனுடைய உடம்பு முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. தசைகளில் மிகுந்த வேதனை உண்டானது. நரம்புகள் புடைப்பதைப் போலவும் தனக்குள் இருந்து வெப்பம் கிளம்புவதாகவும் அவனுக்குத் தோன்றியது.

விளக்கை ஊதியபோது, இருட்டு பரவியது. இருட்டில் இருட்டின் அளவிற்கோ இருட்டைவிட அதிகமாகவோ கறுத்த- தெளிவற்ற உருவங்கள் அவனுடைய கண்களுக்கு முன்னால் தாண்டவம் ஆடின. அவற்றின் தாண்டவம் பயத்தை உண்டாக்கக் கூடியதாக இருந்தது. தாண்டவமாடும் தெளிவற்ற உருவங்களில் இருந்து தெளிவற்ற, அச்சத்தை உண்டாக்கும் சத்தங்கள் எழுந்தன.

அவனுடைய மனதில் எழுந்த உணர்ச்சிகள் கட்டுப்பாட்டிற்குள் கீழ்ப்படியாமல் ஒதுங்கி, ஒளிந்து முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தன. ஆனால், கட்டுப்பாட்டிற்கு அடி பணியாத சிந்தனைகள் மனதை அளவுக்கு மேல் பிடித்து இழுத்தன. பாடாய்ப் படுத்தின. மனம் ஒரு அடுப்பைப் போல புகைய ஆரம்பித்தது.

புகைச்சலில் இருந்து விடுதலை பெறுவதற்காக உண்ணி ஷீபாவை நினைக்க முயற்சித்தான். ஆனால், அவளுடைய முகம் அவனுடைய ஞாபக அரங்கத்திற்கு வருவதற்குத் தயாராகாமல், சுற்றிலும் இருந்த இருட்டில் மறைந்த திரிந்தது. ஷீபாவின் தலை முடியும் நெற்றியும் புருவங்களும் கண்களும் மூக்கும் உதடுகளும் தாடையும்... இவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்து ஞாபகத்திற்குக் கொண்டு வந்து, எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அவளுடைய முகத்தை உருவாக்குவதற்கு அவன் கடுமையான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தான். ஆனால், அந்த உழைப்பு வீண் ஆனது. எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் கட்டிய பிறகு பிறந்தது- குளித்து முடித்து வரும் வழியில் கரடிப் பாறைக்கு அருகில் இருந்த புதர்களுக்கு மத்தியில் பார்த்த பெண்ணின் முகமாக இருந்தது. காமம் பற்றி எரிந்து கொண்டி ருந்த முகம். கண்கள் மூடிய முகம். மூச்சு விடும், முனகும், ஏங்கும் முகம். அந்த முகம் அவனுடைய புலன்களில் தாங்க முடியாத ஒரு வகை உணர்ச்சியை எழச் செய்தது. அவனுடைய மனதிற்குள் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு நிலையற்ற தன்மையை உண்டாக்கியது.

"அந்தக் காட்சியைப் பற்றிய நினைவு என்னை விட்டுப் போகவில்லையே!' -உண்ணி புலம்பினான்.

அந்த முகங்கள் அந்த அளவிற்கு பலம் கொண்டதாக இருந்தன. இழுத்துப் பிடுங்கி எறிய முயற்சித்தாலும் மழைக்காலத்தில் காட்டில் நடக்கும்போது, காலில் இறுகப் பிடித்திருப்பதன் காரணமாக கிள்ளி எறிய முயற்சித்தால் போகாமல் ஒட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் அட்டைகளைப் போல அந்த முகங்கள் அவனுடைய நினைவில் இறுக பதிந்துவிட்டிருந்தன.


அவனுடைய அறையில் இருந்த இருட்டில், அவன் கண்களுக்கு முன்னால் அந்த முகங்கங்களும் உடல்களும் ஒன்றோடொன்று இறுகத் தழுவிக் கொண்டு நடனமாடின. சத்தங்களை உண்டாக்கின. அந்த நடன அசைவுகளும் சிணுங்கல் சத்தங்களும் உண்ணிக்குள் பயத்தை உண்டாக்கின. பயமென்னும் நீர்த் தடாகத்தில் யாரோ அவனைப் பிடித்து அழுத்தி வைத்திருந்தார்கள். அவனுக்கு மூச்சு விட முடியவில்லை.

அவன் கண்களை மூடிக்கொண்டான். மூடிய கண்களுக்கு முன்னால் அந்த உருவங்கள், அந்த சீட்டி அடித்தல்கள்... படிப்படியாக அந்த உருவங்கள் ஒன்றோடொன்று இறுகப் பிணைந்த பாம்புகளாக மாறின. சீட்டி சத்தங்கள் பாம்புகளின் சீறலாக மாறின. உண்ணி பயந்து சத்தம் போட்டுக் கத்த முயற்சித்தான். ஆனால், சத்தம் வெளியே வராது என்பதை அவன் புரிந்துகொண்டான். தன்னுடைய முழு உடலும் மரத்துப்போய் விட்டதைப் போல அவனுக்குத் தோன்றியது.

"இதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது? எப்படி?' -உண்ணி இருட்டிடம் கேட்டான். இருட்டு மிகவும் அமைதியாக இருந்தது. இருட்டு அந்த உருவங்களின் பயங்கரமான செயல்களுக்கு அரங்கு அமைத்துக் கொடுத்தது.

இருட்டிற்குள் கண்களைப் பதித்துக் கொண்டு உண்ணி விழித்தவாறு படுத்திருந்தபோது, வெளியே மாமா, அய்யப்பன் இருவரின் குரல்களும் கேட்டன. சாப்பிடும் அறையில் இருந்து உரையாடல் கேட்டதாக அவனுக்குத் தோன்றியது. ஆனால், பேச்சு எதைப் பற்றி என்பதோ என்ன பேசப்பட்டது என்பதோ அவனுக்குத் தெரியவில்லை. அவர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதை மட்டும் அவனால் நினைக்க முடிந்தது. அது எப்படி இருந்தாலும் அவர்கள் இரவு வேளையில் கண் விழித்திருந்து பேசுவது நல்ல விஷயம்தான். அருகில் மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்ற உணர்வு பயத்தின் அளவைக் குறைத்தது.

திடீரென்று இன்று சாயங்காலம் பார்த்த விஷயம் முழுவதையும் அவர்களிடம் கூறினால் என்ன என்று உண்ணி நினைத்தான். முழுவதையும் மனதைத் திறந்து கூறிவிட வேண்டும். அதற்குப் பிறகு அது என்ன என்று கேட்க வேண்டும். அதற்கு ஒரு விளக்கம் வேண்டும் என்று கேட்க வேண்டும். ஆனால் அது கேட்கக் கூடாத ஏதோ ஒன்று என்று அடுத்த நிமிடத்திலேயே அவனுக்குத் தோன்றியது. எந்தச் சமயத்திலும் பார்த்தோ அறிந்தோ இராத அந்த அசாதாரண சம்பவத் தில் தனக்கு ஏதோ ஒரு வகையில் மனரீதியான உறவு இருக்கிறது என்று உண்ணி நினைத்தான். அந்த நினைப்பு அவனை பதைபதைப்பு கொள்ளச் செய்தது. அந்தச் சம்பவம் மிகவும் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது. அது அவனை அடி பணியச் செய்தது. தானும் அதில் பங்கு பெற்றிருப்பவன் என்ற உணர்வு அதைப் பற்றிய நினைவை அவனிடம் உண்டாக்கியது.

"என்னால் அந்தக் குற்றத்தில் இருந்து விலகி நிற்க முடியவில்லையே!' -உண்ணி கவலைப்பட்டான். அது குற்றம் என்றும் அதற்கான பொறுப்பு தனக்கும் இருக்கிறது என்றும் அவனுக்குத் தோன்றியது. எந்த அளவிற்கு வினோதமானது, எந்த அளவிற்கு அசாதாரணமானது அது என்று உண்ணி ஆச்சரியப்பட்டான்.

சாப்பாட்டு அறையில் நிலவிக் கொண்டிருந்த பேச்சு நின்றது. பாத்திரங்கள் அசைவது காதில் விழுந்தது. வாசலில் காலடிச் சத்தம் கேட்டது. தீப்பெட்டி உரசும் சத்தம் கேட்டது. தொடர்ந்து உலகம் இரவு நேர சத்தங்கள் நிறைந்த பேய்களின் பூமியில் இறந்து விழுந்தது.

உண்ணியின் இரவு முற்றிலும் அமைதியற்றதாக இருந்தது. கெட்ட கனவுகள் நிறைந்த தூக்கங்கள், தூக்கங்களில் இருந்து எழுந்திருத்தல்கள், கண் விழித்தாலும் தொடர்ந்து கொண்டிருக்கும் கெட்ட கனவுகள்... அவன் திரும்பியும் புரண்டும் படுத்துக் கொண்டிருந்தான். மந்திரங் களையும் சுலோகங்களையும் மனதிற்குள் முணுமுணுத்தான். கெட்ட கனவுகள் நிறைந்த காட்டின் வழியாக, நெருஞ்சி முட்கள் நிறைந்த பாதைகளின் வழியாக ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்தான். நேரம் ஒரு விதத்தில் வெளுத்தது. அப்போது தான் பொழுது விடிந்துவிட்டது என்பதிலும் தனக்கு உயிர் இருக்கிறது என்பதிலும் உண்ணிக்கு நம்பிக்கை வந்துது.

ஆற்றுக்குச் செல்வதற்காக கரடிப் பாறையை அடைந்தபோது உண்ணி காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டான். சத்தங்கள் இல்லை. அசைவுகள் இல்லை.

ஆற்றில் குளிக்கும்போது, உண்ணி அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தான். அவனுக்கு பயத்தைவிட வேறு என்னவோ தோன்றியது. அவனுக்கு இதுவரை தெரிந்திராத வேறு ஏதோ ஒரு உணர்ச்சி. ஆற்று நீருக்குள் நிர்வாணமாகப் படுத்திருந்தபோது அவனுக்கு வெட்கம் தோன்றியது. ஆற்றின் மார்பில் நிர்வாணத்தை மறைத்து வைக்க முயற்சிக்கும்போது, அவனுக்கு ஆற்றின்மீது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ஒரு வகையான மோகம் உண்டானது.

“இது என்ன? இது எனக்கு புரியவில்லையே!'' -உண்ணி முணுமுணுத்தான்.

குளித்து முடித்துத் திரும்பி வரும் வழியில், உண்ணி கரடிப் பாறைக்கு அருகில் வந்தபோது தன்னையே அறியாமல் அவனுடைய கால்கள் நின்றன. அவன் பயந்து பயந்து பாறையைச் சுற்றிப் பாறையின் இன்னொரு பகுதிக்குச் சென்றான். அங்கு யாராவது இருக்கிறார்களா என்று பயந்தபடியே கூர்ந்து பார்த்துக் கொண்டே அவன் நடந்தான்.

அங்கு யாரும் இல்லை. ஆனால், அந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க அவனால் முடிந்தது. கொஞ்சம் காட்டு முல்லை மலர்கள் அங்கு வாடி விழுந்து கிடந்தன. அவற்றிலிருந்து பழகிப் போன கடுமையான வாசனை வந்து கொண்டிருந்தது. மலர்களுக்கு அருகில் உடைந்த கண்ணாடி வளையல்களின் துண்டுகள் கிடந்தன. அவற்றிற்கு அருகில் இரண்டு மூன்று பீடித் துண்டுகள் விழுந்து கிடந்தன.

ஷீபா கூறிய ஒரு பேய்க் கதையில் வரும் காவல்துறை அதிகாரியைப் போல உண்ணி தனக்கு முன்னால் பார்த்த ஆதாரங்களை வைத்து தீர்மானங்களை எடுப்பதற்கு முயற்சித்தான்.

இறுதியில் அவன் ஆசிரமத்திற்கு சென்றான்.

பள்ளிக்கூடம் செல்லும் வழியிலும் பள்ளிக்கூடம் சென்ற பிறகும் முந்தைய நாள் சாயங்காலம் பார்த்த காட்சி மனதிற்குள் உண்டாக்கிய அதிர்ச்சியில் இருந்து அவனுக்கு விடுதலை கிடைக் காமலேயே இருந்தது.

பள்ளிக்கூடத்தில் அவன் யாருடனும் பேசவில்லை. யாராவது எதையாவது கேட்டபோதெல்லாம், அவன் ஒரே வார்த்தையில் பதில் கூறி ஒதுங்கிக் கொண்டிருந்தான்.

பாட விஷயங்களில் அவனுக்கு ஆர்வம் உண்டாகவில்லை. ஒரு பொம்மையைப் போல அவன் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தான்.

சாயங்காலம் ராகுலன் கேட்டான்: “உண்ணி, நீ ஏன் என்னவோ மாதிரி இருக்கே?''

“ஒண்ணுமில்ல...'' -உண்ணி சொன்னான்.

“பொய்...'' -ராகுலன் சொன்னான்: “உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு.''

“எதுவும் இல்லை.'' -உண்ணி பொய்தான் சொன்னான்.

“மாமா திட்டினாரா?''

“இல்லை.''

“எதையாவது தொலைச்சிட்டியா?''

“இல்லை.''

“பிறகு... நீ ஏன் இப்படி...?''

உண்ணி எதுவும் கூறவில்லை.


அவனுடைய இரவுகளும் பகல்களும் அன்றைய காட்சியைக் கொண்டு நிறைந்திருந்தன. அது உண்டாக்கிய சலனங்கள் துடைத்து அகற்ற முடியாமல் உண்ணியின் மனதில் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தன. அதை நினைத்தபோது நடுக்கம் உண்டானாலும், அந்தக் காட்சியை மீண்டும் பார்க்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் எல்லா நாட்களிலும் மாலை நேரங்களில் அவன் கரடிப் பாறையின்மீது போய் உட்கார்ந்து கொண்டிருந்தான். ஏதாவது சத்தங்களுக்காக, மிகவும் தாழ்ந்த குரலில் ஒலிக்கும் உரையாடலுக்காக, சிணுங்கல்களுக்காக அவன் காத்திருந்தான்.

குறிப்பிட்டுக் கூறும்படியான சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை. அவனுடைய கதையின் நாயகனும் நாயகியும் தோன்றவில்லை.

நாட்கள் கடந்து போனபோது, அந்தக் காட்சி உண்ணியிடம் உண்டாக்கி விட்டிருந்த பயம் இல்லாமற் போனது. ஆனால், அது அவனுடைய மனதிற்குள் அழியாமல் நின்றிருந்தது. அந்தக் காட்சியை மீண்டும் பார்க்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அந்த சம்பவத்தில் தானும் பங்காளியாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஒருவகையான தெளிவற்ற, காட்டுத்தனமான வெறி அவனுக்குள் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்தது. பெண்ணின் நிர்வாணத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்க முயற்சித்துக் கொண்டே அவன் தூங்குவதற்காகப் படுத்திருந்தான். இருட்டில் அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும் என்று அவன் தேடினான். அந்தக் காட்சி கனவில் வரவேண்டும் என்று அவன் விரும்பினான்.

ஆனால், கனவில் பார்த்தது பாம்புகளைத்தான். சீறிக்கொண்டிருக் கும் பாம்புகள். வேகமாக பாய்ந்து கொண்டிருக்கும் பாம்புகள். ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்து கொண்டிருக்கும் பாம்புகள்.

பாம்புகளின் கனவில் இருந்து ஒரு நாள் திடுக்கிட்டு எழுந்த அவன், இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத ஒரு பயங்கரமான சத்தத்தைக் கேட்டு நடுங்கிப் போய்விட்டான். சத்தம் மிகவும் அருகில் கேட்டது. அது எதனுடைய சத்தம் என்று அவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு நன்கு தெரிந்திருந்த ஏதாவது மனிதன் அல்லது மிருகத்தின் அல்லது பறவையின் சத்தமாக அது இருக்கவில்லை. கிழக்குத் திசையில் இருந்த அடர்ந்த காடுகளில் இருந்து ஏதோ ஒரு பயங்கர மிருகம் வெளியேறி வந்திருக்கிறது என்றும்; அது ஆசிரம நிலத்திற்குள் நுழைந்திருக்கிறது என்றும் அவனுக்குத் தோன்றியது. மாமாவும் அய்யப்பனும் இவை எதையும் கேட்பதில்லையா? கேட்டுக் கண் விழித்திருந்தால் அவர்களின் சத்தங்களும் கேட்குமே! ஒருவேளை, வெளியே வந்த பயங்கர மிருகம் அவர்களைக் கொன்று தின்றிருக்குமோ? அப்படியென்றால் அடுத்து இருப்பது அவன்தான்.

உண்ணி நடுங்கினான்.

என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அவன் குழப்பத்தில் இருந்தான். இதுவரை சந்தித்திராத சத்தம் நின்றவுடன், அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால், அந்த பயங்கர மிருகம் போய்விட்டதா, ஆசிரம பகுதியில் நின்று கொண்டிருக்கிறதா என்று எப்படித் தெரியும்? அவன் இக்கட்டான நிலையில் இருந்தான். எழுந்து கதவைத் திறந்து சென்று பார்த்தால் என்ன?

ஆனால்-

ஒருவேளை, மிருகம் இந்த அறையின் கதவுக்கு அருகில் வாசலில் நின்றிருந்தால்...? போய் சேர்வது அதன் வாய்க்குள்ளாகத்தான் இருக்கும்.

அப்போது மீண்டும் அந்தக் காட்டு மிருகத்தின் உரத்த சத்தம் கேட்டது. அத்துடன் யாரோ மேலும் கீழும் மூச்சு விடுவதும் முனகு வதும் கேட்டது. பூஜையறை இருக்கும் பகுதியில் இருந்துதான் சத்தங்கள் புறப்பட்டு வந்தன. அந்த மிருகம் மாமாவையும் அய்யப்பனையும் பிடித்துத் தின்னுகிறது. எதுவுமே செய்ய முடியாமல் இங்கு படுத்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? உண்ணி சிந்தித்த போது எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவிலும் பயத்தை நுழைத்து வைத்துக் கொண்டு, பயங்கரமான இரவின் இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் எவ்வளவு ஆனது என்று தெரியவில்லை. மீண்டும் சத்தம் நின்றவுடன் உண்ணி எழுந்தான். படுக்கையின்மீது உட்கார்ந்தான். விளக்கை எரிய வைக்க வேண்டுமா என்று ஒரு நிமிடம் சிந்தித்தான். இறுதியில் வேண்டாம் என்று முடிவெடுத்தான்.

இது தன்னுடைய இறுதி இரவு என்று அவனுக்குப் புரிந்தது. யாருமே இல்லாத இந்த மலைப் பகுதியில், இந்தக் காட்டிற்குள், இந்த கறுத்த இரவில், யாருக்கும் தெரியாமல், ஏதோ ஒரு தெரியாத மிருகத் தின் பற்களில் சிக்கி முடியப் போவதுதான் தன்னுடைய தலையெழுத்து என்பதை நினைத்தபோது உண்ணிக்கு கடுமையான கவலை உண்டானது. தன்னைப் பெற்றெடுத்த வயிறை அவன் திட்டினான்.

"எதற்காக அம்மா எனக்கு இந்தப் பிறவியைத் தந்தீர்கள்? மூச்சு மூச்சுவிட முடியாமல் இந்த மலையில் வாழ்வதற்கா? பிறகு ஒரு இரவு வேளையில் யாருக்கும் தெரியாமல் ஏதோ ஒரு கொடிய மிருகத்தின் கைகளில் சிக்கியோ பற்களில் சிக்கியோ மரணமடைவதற்கா? இதுதான் என்னுடைய பிறவிப் பயனா? அப்படியென்றால் எதற்கு என்னைப் பெற்றெடுத்தீர்கள்? நான் கர்ப்பத்தில் பிறந்தபோது, ஏதாவது பச்சை மருந்தைச் சாப்பிட்டு நீங்கள் என்னை இரத்தமாக்கி கலக்கி ஓடச் செய்திருக் கலாமே! இல்லாவிட்டால் இறந்த குழந்தையாகவே பெற்றெடுத் திருக்கலாமே! அதுவும் நடக்கவில்லையென்றால் உங்களுடைய வயிற்றுக்குள்ளிருந்து வெளியே வந்து, உங்களுடைய மார்பகத்தை இறுகப் பற்றிக் கொண்டு படுத்தவாறு நான் அழுதபோது, நீங்கள் என்னைக் கழுத்தை நெறித்துக் கொண்றிருக்கலாம் அல்லவா?'

எந்த அம்மாவிடம் கேட்பது? அதற்கு அம்மா எங்கே இருக்கிறாள்? ராகுலனின் தாய் சொன்னாள்: “நான் உன்னைப் பெற்றெடுக்கவில்லை. அவ்வளவுதான்.''

பெற்றெடுக்காத பெண்ணின்மீது பெற்றெடுத்தற்கான குற்றத்தை எப்படி சுமத்துவது?

"என்னைப் பெற்றவள் எங்கே?' -உண்ணி இருட்டிடம் கேட்டான். கண்ணுக்குத் தெரியாத கொடூர மிருகத்தின் சத்தத்தைக் கேட்டு பயந்து திகைத்துப்போய் நின்றிருந்த இருட்டு அவனுடைய கேள்வியைக் கேட்டதா என்பதுகூட தெரியலில்லை.

பிறந்தான். எங்கு என்று தெரியவில்லை. எதற்கு என்பதும் தெரிய வில்லை. வளர்ந்தான். இங்கே இந்த காட்டில், கடுமையான கட்டுப் பாடுகளுக்கு அடிபணிந்து, பட்டாள நெறிமுறைகளுடன் வளர்கிறான். மூச்சு விடுவதற்கு சுதந்திரம் இல்லாமல், எப்போதும் யாராலோ கண்காணிக்கப்படுபவனாக, எப்போதும் யாராலோ பின்தொடரப் பட்டு வளர்கிறான். எதற்கு என்று தெரியவில்லை. அப்படி வளர்ந்துவிட்டு இறுதியில் இப்போது... இதோ... அர்த்தமில்லாத ஒருமுடிவைப் பார்த்த பிறகும், பார்க்கவோ கேட்கவோ செய்யாத ஏதோ ஒரு கொடிய மிருகத்தின் வாயில் குடியிருக்கும் மரணத்தை நோக்கி ஒரு பயணம்.


உண்ணிக்கு சிரிப்பு வந்தது. ஆசிரமம் என்பதையே மறந்துவிட்டு, இரவு வேளை என்பதை மறந்துவிட்டு, உண்ணி சிரிக்க ஆரம்பித்தான். ஒரு வலிப்பு நோய் வந்தவனைப் போல உரத்த குரலில் சிரிக்கத் தொடங் கினான். இறுதியில் சிரிப்பு நின்றபோது, சிரித்து சிரித்து தளர்ந்தபோது, உண்ணி பலவிதப்பட்ட சிந்தனைகளுடன், இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால் எதையும் சிந்திக்காததைப் போல, கதவை நோக்கி நடந்தான். நிறைந்த வெளிச்சத்தை நோக்கி கதவை இழுத்துத் திறந்தான்.

பூஜையறையில் பார்த்த காட்சி அவனை திகைப்புக்குள்ளாக்கியது. தரையில் ஓடிக்கொண்டிருந்த குருதிக்கு மத்தியில், கையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்த வாளை வைத்துக் கொண்டு உரத்த குரலில் கத்தியவாறு அய்யப்பன் குதித்துக் கொண்டிருந்தான். அய்யப்பனுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தார் மாமா. மாமாவின் கையிலும் உடலிலும் ரத்தம் தோய்ந்திருந்தது. உண்ணி சத்தம் போட்டுக் கத்திவிட்டான். அய்யப்பனின் முகம் அந்த அளவிற்கு குரூரமாக இருந்தது. அவன் பயப்பட்டான். இதற்கு முன்பு கேட்டிராத, பயத்தை வரவழைக்கக்கூடிய அந்த மிருகத்தின் சத்தம் அய்யப்பனிடம் இருந்துதான் வந்திருக்கிறது என்பதை நம்புவதற்கு உண்ணிக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவன் அங்கு நிற்பதை அறியாமல் அய்யப்பன் குதித்துக் கொண்டிருந்தான். தான் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று உண்ணி நினைத்தான். என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அய்யப்பன் உரத்த குரலில் கத்திக் கொண்டே இருந் தான். குதித்துக் கொண்டும். இறுதியில் அனைத்து சக்திகளையும் கொண்டு வந்து, முழு தைரியத்தையும் வரவழைத்து, ரத்தம் முழுவதையும் நாவின் முனையில் இருக்கும்படி செய்து முடிந்தவரையில் சத்தமான குரலில் உண்ணி கத்தி அழைத்தான்.

“அய்யப்பா!!!''

அய்யப்பனின் சத்தம் நின்றது. குதித்துக் கொண்டிருப்பது நின்றது. அய்யப்பன் அவனின் முகத்தையே வெறித்துப் பார்த்தான். குரூரம் நின்று எரிந்து கொண்டிருந்த சிறிய கண்களில் இதற்கு முன்பு பார்த்திராத தன்மையும் பகையும் இருப்பதை உண்ணி கண்டான். அய்யப்பனின் கண்கள் கூர்மையான ஈட்டிகளாக மாறி தன் உடலுக்குள் நுழைந்திருப்பதைப் போலவும், தன்னுடைய இதயம் பிளப்பதைப் போலவும் அவன் உணர்ந்தான். அய்யப்பனுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்த நாக்கு தன்னுடைய இதயத்திலிருந்து குத்தப்பட்டு வழிந்து கொண்டிருந்த ரத்தத்திற்காக தாகமெடுத்து இருப்பதைபோல உண்ணிக்குத் தோன்றியது.

அய்யப்பனின் கையில் இருந்த வாள் ஆடியது. உடல் அசைய ஆரம்பித்தது. கால்களில் சலங்கைகள் ஓசை உண்டாக்கின. முழு உடலும் ஆட ஆரம்பித்தது. அய்யப்பன் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு விட்டதைப்போல குதிக்க ஆரம்பித்தான். குதிப்பது மேலும் அதிக பயங்கரத்தனம் கொண்டதாக இருந்தது. கண்களிலும் முகத்திலும் குரூரம் மேலும் அதிகமாகத் தெரிந்தது. குதிப்பது அதிகமானவுடன் அய்யப்பன் கத்த ஆரம்பித்தான். சத்தம் மீண்டும் மிருகத்தனத்துடன், பயத்தை வரவழைக்கிற மாதிரி, இதற்கு முன்பு கேட்டிராத அலறலாக மாறியது. நடுங்கித் திகைத்துப்போய் நின்றிருந்த உண்ணியின்மீது பார்வையை பதித்து நின்றிருந்த அய்யப்பனின் அலறல் அதன் உச்ச நிலையை அடைந்தபோது, ஆடிக்கொண்டிருந்த வாளை ஓங்கியவாறு ஒரு கொடிய மிருகத்தைப் போல அவனை நோக்கிப் பாய்ந்தோடி வந்தான்.

அதிர்ச்சியடைந்ததைப் போல உண்ணி ரத்தம் தோய்ந்த தரையில் தலைக் குப்புற விழுந்தான்.

10

”எஜமான்... எஜமான்...''

அய்யப்பனின் குரலைக் கேட்டுத்தான் உண்ணி கண்களையே திறந்தான். அய்யப்பன் அவனைப் பிடித்துக் குலுக்கினான். அய்யப்பன் தினமும் பார்க்கக்கூடிய அய்யப்பனாக இருந்தான். ஆனால், உண்ணி பார்த்தது அய்யப்பனின் இன்னொரு வடிவத்தைத்தான். வாளை ஆட்டிக் கொண்டு, சிலம்பு சத்தங்கள் கேட்க, எரியும் கண்களில் கோபமும் பகையுணர்வும் நெருப்பு நாக்குகளும் தெரிய, ஒரு பழிவாங்கும் கடவுளைப்போல உரத்த குரலில் அலறியவாறு குதித்துக் கொண்டு வந்த வடிவம். அந்த வடிவமும் அந்த அசாதாரணமான அலறலும் உண்ணியை நடுங்கச் செய்தன.

அவன் சத்தம் போட்டுக் கத்தினான். மீண்டும் சுய உணர்வை இழந்து கீழே சாய்ந்துவிட்டான்.

பிறகு உண்ணி சுய உணர்விற்கு வந்தபோது அவனை மாமாவின் கைகள் தொட்டுக் கொண்டிருந்தன. அவனுடைய காதுகளில் மாமாவின் ஏற்ற இறக்கம் இல்லாத குரல் ஒலித்தது.

“உண்ணி...'' -மாமா மென்மையான குரலில் அழைத்தார்: “உண்ணி... உண்ணி...''

உண்ணி நம்பிக்கையில்லாமல் மாமாவைப் பார்த்தான். இது மாமாவின் ஆவியாக இருக்குமோ என்று அவன் பயப்பட்டான். ஆனால், அவனைத் தொட்டுக் கொண்டி ருந்த மாமாவின் கைகளுக்கு வெப்பம் இருந்தது. மாமாவின் குரல் சாதாரணமானது. இது ஆவி அல்ல. மாமாதான் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனால், அது அவனுக் குள் அதிகமான சந்தேகங்களை உண்டாக்கியது. அப்படியென்றால் இரவில் அய்யப்பனின் வெறி பிடித்து குதித்துக் கொண்டிருந்த பயங்கரமான உருவத்திற்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தது யார்? தரையிலும் அய்யப்பனின் கையில் இருந்த வாளிலும் குருதி எங்கேயிருந்து வந்தது? உண்ணி முழுமையான குழப்பத்தில் மூழ்கி விட்டான்.

“சந்தேகப்பட வேண்டாம் உண்ணி.'' -மாமா சொன்னார்: “நானேதான். உன் பெரிய மாமாவேதான்.''

அப்போது உண்ணி நடுங்குகிற குரலில் தயங்கித் தயங்கி சொன்னான்: “அப்படியென்றால்...''

“எல்லாவற்றையும் சொல்றேன்.'' -மாமா சொன்னார்: “உண்ணி, எழுந்திரு. இந்த மருந்தைச் சாப்பிடு. பிறகு கொஞ்சம் பாலைக் குடி. குடித்தால் களைப்பு மாறும். காய்ச்சலும் சரியாகும். ம்... எழுந்திரு.''

எழுந்திருப்பதற்கு மாமா அவனுக்கு உதவினார். எழுந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகும் உண்ணி நடுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு குளிராக இருந்தது. அவன் சுற்றிலும் திகைப்புடன் பார்த்தான். மூங்கிலால் ஆன சுவர்கள்... மேஜை... நாற்காலி... பெட்டி... மேஜையின்மீது புத்தகங்கள். பிறகு அவன் கேட்டான்: “நான் எங்கே இருக்கிறேன்?''

“இங்கே.'' -மாமா அவனுடைய கண்களையே பார்த்துக் கொண்டு சொன்னார்: “நம்முடைய ஆசிரமத்தில்... உன்னுடைய அறையில்... அதோ பார். உன்னுடைய புத்தகங்கள். உன் பெட்டி. உன் நாற்காலி. உன் மேஜை. மரக்கொம்பில் உன்னுடைய ஆடைகள்.''

உண்ணிக்குப் புரியவில்லை. “என்னுடையவையா?'' -அவன் சிரித்தான். “என்னுடையவையா?''

“உண்ணி, இந்த மருந்தைச் சாப்பிடு.'' -மாமா சொன்னார்: “அப்படியென்றால் சரியாகிவிடும். அப்போது எல்லாம் புரியும்.''

“எனக்கு வேண்டாம்.'' -உண்ணி சொன்னான். பிறகு அவன் படுக்கத் தொடங்கினான். அப்போது மாமா அவனை இறுகப் பிடித்தார். தன் மீது செலுத்தப்பட்ட பலத்தை அவன் புரிந்து கொண்டான்.

மாமா அவனுடைய கண்களையே மீண்டும் வெறித்துப் பார்த்தார். “உண்ணி'' -அவர் அழைத்தார். “ம்... இந்த மருந்தைச் சாப்பிடு.''


திடீரென்று உண்ணி பயப்பட்டான். பாம்புக்கடி உண்டானவர்களுடைய காயத்தில் தேய்க்கும் ஒரு மருந்து இருக்கிறது. அது சிறிதளவில் உள்ளே சென்றால் போதும்- ஆள் மரணத்தை தழுவுவதற்கு. அந்த அளவிற்குக் கடுமையான விஷம் அது. மாமாவின் கையில் இருந்த களிம்பு அதைப்போல இருந்தது.

“ம்... சாப்பிடு.'' -மாமா திரும்பத் திரும்பச் சொன்னார்: “வாயைத் திற.''

மனம் நிறைய சிறகை அடித்துக் கொண்டிருந்த பயத்துடன் மரணத்தை முன்னால் பார்த்துக் கொண்டே உண்ணி வாயைத் திறந்தான். பச்சை நிறத்தில் இருந்த குழைக்கப்பட்ட மருந்தை ஒரு சிறிய நெல்லிக்காய் அளவிற்கு மாமா அவனுடைய நாவில் வைத்தார். “விழுங்கிவிடு.'' -மாமா சொன்னார். உண்ணி அதை விழுங்கினான். பால் பாத்திரத்தை நீட்டியவாறு மாமா சொன்னார்: “இதைக் குடி.'' அனைத்து கடவுள் களையும் ஷீபாவையும் ராகுலனையும் ராகுலனின் தாயையும் மனதில் நினைத்துக் கொண்டே உண்ணி அதைக் குடித்தான்.

அவனுக்குத் தலை சுற்றுவதைப் போலவும் கண்கள் மூடுவதைப் போலவும் உடல் தளர்வதைப் போலவும் தோன்றியது. மாமாவின் உதவியுடன் உண்ணி படுத்தான். அவனுடைய கண்கள் மூடின.

கண் விழித்தபோது அவனுக்கு சுகமாக இருப்பதைப் போல் இருந்தது. உடலில் இருந்த நடுக்கம் இல்லாமற் போயிருந்தது. தலையின் கனம் மறைந்துவிட்டிருந்தது. பிரகாசமான பகலில் அவன் கண் விழித்தான். அவன் சுற்றிலும் பார்த்தான். சாளரத் தின் வழியாக பகலின் வெளிச்சம் அவனுடைய அறைக்குள் விழுந்து கொண்டிருந்தது. மேஜையின்மீது புத்தகங்கள் இருப்பதைப் பார்த்தான்.

திடீரென்று குற்ற உணர்வுடன் உண்ணி எழுந்தான். பொழுது புலர்ந்து விட்டிருந்தது. பள்ளிக்கூடத்திற்குச் செல்லக்கூடிய நேரம் தாண்டியிருக்கும். பல் தேய்க்கவில்லை. குளிக்கவில்லை. உணவு சாப்பிடவில்லை. வகுப்பு ஆசிரியர் எழுதிக் கொண்டு வரச் சொன்னதை எழுதவில்லை. எல்லாமே பிரச்சினைகளாக இருந்தன. மாமா கோபப்படுவார்.

மாமாவை எப்படிச் சந்திப்பது என்ற பயத்துடன் அவன் வாசலை நோக்கி வந்தான். வாசலில் யாரும் இல்லை. வாசலில் நிழலைப் பார்த்ததும், மதிய நேரம் ஆகி விட்டிருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். முன்பே பெய்திருந்த மழையின் சிறு ஈரத்தின்மீது வாசலில் பிரகாசமான வெயில் விழுந்து கொண்டிருந்தது. உண்ணி மாமாவின் படிக்கும் அறையின் வாசலை நோக்கி நடந்தான்.

படித்துக் கொண்டிருந்த மாமா அவனைப் பார்த்தவுடன் எழுந்து வாசலுக்கு வந்தார். “உண்ணி, நீ எழுந்துவிட்டாயா?'' -அவர் கேட்டார்: “நல்லா உறங்கினாய் அல்லவா?''

“ம்...'' -உண்ணி சொன்னான்.

“அதற்குத்தான் நான் அந்த மருந்தைத் தந்தேன்.'' -மாமா சொன்னார்: “மருந்து சாப்பிடுவதற்கு நீ மிகவும் தயங்கினாய். நேற்றைக்கு முந்தின நாள் இரவில் அய்யப்பன் குதிப்பதைப் பார்த்து நீ முழுவதுமாக பயந்துவிட்டாய். பயத்தில் காய்ச்சல் வந்துவிட்டது.''

“நேற்றைக்கு முந்தின நாளன்றுதான்.'' -மாமா சொன்னார்: “இரண்டு இரவுகளும் ஒரு பகலும் நீ தூங்கியிருக்கிறாய். நேரம் மதியம் ஆயிடுச்சு.'' -மாமா அவனுடைய நெற்றியையும் கழுத்திற்குக் கீழேயும் தொட்டுப் பார்த்தார். நாடியைப் பிடித்துப் பார்த்தார். காய்ச்சல் முழுமையாக குணமாகி இருந்தது. மாமா தொடர்ந்து சொன்னார்: “பசி எடுக்கிறதா? பெரிய அளவில் பசி இல்லையென்றால் போய் குளித்து விட்டு வா. நாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.'' -மாமா உரத்த குரலில் அழைத்தார்: “அய்யப்பா!''

“எஜமான்...'' -சமையலறையில் இருந்து பதில் வந்தது. தொடர்ந்து கையில் ஒரு கரண்டியுடன் அய்யப்பனும்.

உண்ணி அய்யப்பனைப் பார்த்தான். அய்யப்பனின் இன்னொரு தோற்றம் அவனுடைய மனதிற்குள் வர ஆரம்பித்ததற்கு அறிகுறியாக அவனுடைய முகத்தில் உணர்ச்சி வேறுபாடு உண்டாவதை கவனித்த மாமா சொன்னார்:

“அய்யப்பன் குதிப்பதைப் பார்த்து நீ பயந்து போய்விட்டாய், உண்ணி. அதில் பயப்படுவதற்கு எதுவுமே இல்லை. பக்தர்களிடம் விருப்பம் கொள்ளும் காளி அவர்களுக்குள் நுழைகிறாள்.''

“சின்ன எஜமான் பயந்து விட்டீர்களா?'' -அய்யப்பன் சொன்னான்: “மன்னித்து விடுங்கள்...'' அவன் உண்ணிக்கு முன்பு கைகளைக் கூப்பிக் கொண்டு நின்றான்.

உண்ணிக்கு சிரிப்பு வந்தது. “நான் போய் குளிச்சிட்டு வர்றேன்.'' -அவன் சொன்னான்.

“போய் வாங்க.'' -அய்யப்பன் சொன்னான்: “சாப்பாடு இப்போ தயாராயிடும்.''

“நேற்று நாங்கள் வேட்டைக்குப் போனபோது ஒரு மான் கிடைத்தது.'' -மாமா சொன்னார்: “அதனுடைய மாமிசத்தைச் சமைத்து சந்தோஷமாக சாப்பிடுவோம். போய் குளிச்சிட்டு வா.''

மதிய வெயிலில் ஆற்றில் மூழ்குவது சுகமான ஒரு அனுபவமாக இருந்தது. குளித்துவிட்டு மேலே வந்தபோது, மலையில் பகல் பொழுது மிகவும் பிரகாசமாக இருந்தது. உண்ணிக்கு சந்தோஷமும் உற்சாகமும் உண்டாயின. காளி உள்ளே புகுந்து துள்ளிக் குதித்த அய்யப்பனைப் பார்த்து பயந்தது குறித்து அவனுக்குத் தன் மீதே வெறுப்பு தோன்றியது. நேர்த்திக்காக வெட்டிய கோழியின் ரத்தத்தைப் பார்த்து தான் இந்த அளவிற்குப் பயந்திருக்கிறோம் என்பதை அவன் தமாஷாக நினைத்துப் பார்த்தான்.

எனினும், அது ஒரு பயங்கரமான இரவுதான். அய்யப்பனிடமிருந்து புறப் படுகிறது என்றாலும், குதித்ததன் விளைவு என்றாலும், அந்த உரத்த அலறல் சத்தத்தை இரவு வேளைகளில் கேட்டால், தான் இனிமேல்கூட பயம் கொள்ளத்தான் செய்வோம் என்று உண்ணிக்குத் தோன்றியது. அந்த அளவிற்கு பயங்கரமான இரவாக அது இருந்தது.

கரடிப் பாறையை அடைந்தபோது வெறும் ஆர்வத்திற்காக அவன் பின் பக்கத்திற்கு நடந்து சென்றான். இந்த நேரத்தில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். அப்படிப்பட்ட சந்திப்புகள் பகல் நேரத்தில் இருக்காது.

அது ரகசியமானது. அதனால்தான் யாராவது வந்துவிடுவார்கள், பார்த்து விடுவார்கள் என்று அவர்கள் பயப்பட்டார்கள். புதிய சந்திப்புகள் ஏதாவது நடந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்ணிக்கு உண்டானது. புதிய பூக்கள் இருக்கின்றனவா, புதிய வளையல் துண்டுகள் இருக்கின்றனவா, புதிய பீடித் துண்டுகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் கண்டு பிடித்தால், அதிலிருந்து புதிய தீர்மானங்களில் போய்ச் சேர முடியும் என்று அவனுக்குத் தெரியும். பழைய பூக்களும் பீடித் துண்டுகளும் மழையும் வெயிலும் பட்டுக் காணாமல் போயிருக்கும். வளையல் துண்டுகள் மட்டும் இப்போதும் இருக்கும்.

ஈரமான துண்டை தோளில் இட்டு, ராகுலனின் வீட்டில் இருந்த ரேடியோக்ராமில் திரும்பத் திரும்பக் கேட்டுத் தெரிந்து கொண்ட ஒரு திரைப்படப் பாடலின் மெட்டில் சீட்டி அடித்தான். மிகவும் மெதுவாக உண்ணி அந்தப் பக்கம் நடந்து சென்றான்.


பாறையின் ஒரு மூலையை அடைந்து அவன் மறைந்து நின்றான். சீட்டி அடிப்பதை நிறுத்தினான். மெதுவாக ஓரத்தில் தலையை நீட்டிக் கொண்டு சற்று தூரத்திலிருந்து வந்த ஒரு தலை தன்னுடைய தலையில் மோதியபோது உண்ணி நடுங்கிப் போய்விட்டான்.

“யார் அது?'' -அந்த நடுக்கத்துடன் உண்ணி கேட்டான்.

ஒரு குலுங்கல் சிரிப்பு பதிலாக வந்தது. அதுவும் பெண்ணின் குரலில். உண்ணி அதிர்ச்சியில் தெறித்துப் போய்விட்டான்.

நடுங்கிக் கொண்டு நின்றிருந்த உண்ணியின் கண்களுக்கு முன்னால் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்த உம்மிணி தோன்றினாள். உம்மிணி என்ற மலைவாழ் பெண். கோமனின் பக்கத்து வீட்டுக்காரி.

“சின்ன தம்புரானா?'' -அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். “என்ன நினைத்து...''

அவள் சொல்ல வந்ததைப் பாதியாக நிறுத்தினாள். உண்ணி திகைத்துப் போய் நின்றிருந்தான். அவனுக்குள் இருந்து சத்தம் வெளியே வரவில்லை.

உண்ணிக்கு தன் குரலை மீண்டும் பெறுவதற்கு சற்று நேரம் வேண்டி வந்தது. இறுதியில் சிரமப்பட்டு பேசக்கூடிய நிலை வந்தபோது உண்ணி கேட்டான்:

“நீ இங்கே என்ன செய்கிறாய்?''

“நான் புல்லறுக்க வந்தேன்...'' -உம்மிணி அதற்குப் பிறகும் சிரித்தாள். அவளுடைய சிரிப்பு தன்னை மயங்கச் செய்கிறது என்று உண்ணிக்குத் தோன்றியது. அவளுடைய மலர்ந்த தடித்த உதடுகளும் வரிசையாக இருந்த பற்களும் கறுத்த கண்களும் ஸ்பிரிங்கைப் போல சுருண்டிருந்த தலைமுடியும் அவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்தன. இறக்கி வெட்டப்பட்டிருந்த ஜாக்கெட்டின் வழியாக அவளுடைய மார்பகங்களில் பாதியளவு வெளியே தெரிந்தது. தூக்கிக் கட்டப்பட்டிருந்த கட்டங்கள் போட்ட லுங்கியில் அவளுடைய தொடை பாதிக்கு மேல் நிர்வாணமாகத் தெரிந்தது. தனக்குள் என்னவோ எரிவதைப் போல உண்ணிக்குத் தோன்றியது. அவன் தாங்க முடியாமல் மேலும் கீழும் மூச்சுவிட ஆரம்பித்தான்.

“உண்ணித் தம்புரான், என்ன நினைக்கிறீங்க?'' -உம்மிணி கேட்டாள்.

“ஒண்ணுமில்ல...'' -உண்ணி திரும்பி நடந்தான். அவன் நடக்கவில்லை; ஓடினான். பின்னால் உம்மிணியின் பைத்தியம் பிடிக்கச் செய்யும் குலுங்கல் சிரிப்பு கேட்டது. உண்ணிக்கு பயம் தோன்றியது.

சற்று தூரத்தில் நின்று கொண்டு உண்ணி திரும்பிப் பார்த்தான். மலை வாழ் பெண் உம்மிணி கரடிப் பாறையின்மீது ஏறி அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் மீண்டும் திரும்பிப் பார்த்தபோது, அவள் அவனை அழைப்பதைப்போல கையை அசைப்பதைப் பார்த்தான். உண்ணி நேராக ஆசிரமத்திற்குச் சென்றான்.

உணவு சாப்பிட்டு முடித்தபோது மாமா சொன்னார்: “இன்னைக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டாம். தெரியுதா? கோவிலுக்குப் போய், கடவுளை வணங்கிவிட்டு வா, உண்ணி.''

“சரி...'' -உண்ணி சொன்னான்.

“அய்யப்பா...'' -மாமா அழைத்தார்.

“எஜமான்!'' -அய்யப்பன் பக்தியுடன் அழைப்பைக் கேட்டான்.

“இன்றுதானே?''

“ஆமாம், எஜமான்.''

இந்த அய்யப்பன் ஒரு ஆச்சரியமான மனிதனாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே உண்ணி கோவிலை நோக்கி மலையில் ஏறினான். பொதுவாகக் கூறப்போனால், அவன் ஒரு அருமையான வேலைக்காரன். இவனைவிட சிறந்த ஒரு வேலைக்காரன் கிடைக்க மாட்டான். அழைத்தால் அடுத்த நிமிடம் முன்னால் வந்து நிற்பான். நாயையே தோற்கடிக்கும் எஜமான் பக்தி. அளவுக்கு மீறிய மரியாதையும் பணிவும். இரவில் உண்ணி தூங்கிவிட்டால், மாமாவும் அய்யப்பனும் எஜமானும் வேலைக்காரனும் அல்ல. அவர்கள் சரி சமமாக ஒருவரோடொருவர் பழகும் நண்பர்கள். ஒன்றாக உட்கார்ந்து உணவு சாப்பிடுவார்கள். நகைச்சுவைகள் பேசி சிரிப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பார்கள்.

ஒருநாள் உண்ணி தூங்காமல் படுத்திருந்தபோது, மாமா அய்யப்பனுடன் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்பதைக் கேட்டான். ஒரு வருடம் தாண்டியபிறகு, தான் ஏதோ முக்கியமான கடவுள் சம்பந்தப்பட்ட காரியத்திற்காக பொறுப்பில் அமர்த்தப்படப் போகிறோம் என்ற விஷயத்தை அப்படித்தான் உண்ணி தெரிந்து கொண்டான். அந்த காலகட்டம் தாண்டிவிட்டால், சட்ட திட்டங்கள் இதைவிட கடுமையாக இருக்கும் என்பதை நினைத்தபோது, ஒரு வருடம் தாண்டக்கூடாது என்று உண்ணி விரும்பினான்.

அய்யப்பனின் வெறி பிடித்த தோற்றம் உண்ணியின் மனதில் தோன்றியது. அந்த தோற்றத்தையும் சத்தத்தையும் இப்போது நினைத்தாலும் பயமாக இருந்தது. எனினும், மாமாவின் விளக்கமும் அய்யப்பனின் மன்னிப்பு கேட்ட செயலும் அவனுக்கு நிம்மதியைத் தந்திருந்தன. அது கடவுளின் வெளிப்பாடு என்றும்; பயப் படுவதற்கு அதில் எதுவுமே இல்லை என்றும் உண்ணி நம்பினான்.

கோவிலில், மலையிலிருந்து இறங்கி வந்திருந்த வேடர்களும் வேடத்திகளும் கூட்டமாக இருந்தார்கள். அவர்கள் காளியின் சிலைக்கு முன்னால் துள்ளிக் குதித்துக் கொண்டு, நேர்த்திக் கடன்களைச் செய்து கொண்டிருந்தார்கள். உண்ணி அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். துள்ளிக் குதிப்பது முடிந்தவுடன், ஒரு வேடத்திப் பெண் காட்டு மரங்களைச் செதுக்கி பளபளப்பாக ஆக்கிக் கடைந்தெடுத்து மரத்துண்டுகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு மாலையை உண்ணியின் கழுத்தில் அணிவித்தாள். வேடர்கள் அவனைப் பார்த்து வணங்கினார்கள். அவனுக்குத் தெளிவாகப் புரிந்திராத அவர்களுடைய மொழியில் என்னவோ பாடவும் கூறவும் செய்தார்கள்.

அந்த தகவலைக் கேட்டுவிட்டு மாமா சொன்னார்:

“உண்ணி, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய உழைப்பிற்குப் பலன் கிடைத்திருக்கிறது. காளி உனக்குள் நுழைந்திருக்கிறாள்.'' மாமாவின் முகம் மலர்ந்தது. கண்கள் பிரகாசித்தன. எந்தச் சமயத்திலும் மாறியிராத குரலில்கூட மாறுதல் உண்டானது. “காளி வேடர்களுக்கு முதலில் தெரிவித்திருக்கிறாள். அவ்வளவுதான்.'' - தலையை மேல் நோக்கித் திருப்பி, கண்களைப் பாதியாக மூடி, பக்தி வயப்பட்ட குரலில் மாமா கூறினார்: “தாயே மகாமாயே!''

மாமாவின் குரல் காடுகளில் எதிரொலித்தது. நிமிடக்கணக்கில் மாமா செயலற்ற நிலையில் இருந்தார். இறுதியில் அவர் கண்களைத் திறந்து உண்ணியைப் பார்த்தார்.

“இனிமேல் நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும், உண்ணி.'' -அவர் சொன்னார்: “இனி நீ எதற்கும் அடிமைப்படக்கூடாது. சின்னஞ்சிறு தவறுகளை நோக்கி நீ விழுந்து கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தையும் நான் தெரிந்து கொண்டுதான் இருந்தேன்.'' அவருடைய குரல் சாதாரணமானதாக ஆனது. “நான் வேண்டுமென்றே கேட்காமல் இருந்தேன். இப்போது ஒரு திருப்பம் உண்டாகி இருக்கிறது. காளி உன்னைத் தேர்ந் தெடுத்திருக்கிறாள். இனிமேல் நீ மகாமாயாவைச் சேர்ந்தவன்!''

கண்களில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் உண்ணி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். மாமா தொடர்ந்து சொன்னார்: “ இனி உறவுகளும் கடமைகளும் இல்லை. உணர்ச்சிகள் இல்லை. இருக்கக்கூடாது.''


அந்த நேரத்தில் அய்யப்பன் வந்தான். அய்யப்பனுக்குப் பின்னால் நடுத்தர வயதைக் கொண்ட ஒரு பெண் இருந்தாள். முண்டும் ஜாக்கெட்டும் மேற்துண்டும் அணிந்த அவள் நல்ல உடல் நிலையுடன் இருந்தாள். சற்று முன்னோக்கி தள்ளிய பற்களையும் குழி விழுந்த கண்களையும் கண்களுக்கு நடுவில் கறுப்புப் புள்ளிகளையும் கொண்டிருந்த அவளிடம் அழகைக் காண உண்ணியால் முடியவில்லை. அய்யப்ப னைக் கண்டவுடன் மாமா சொன்னார்: “அய்யப்பா, உண்ணியை காளி தேர்ந்தெடுத்து விட்டாள். இன்றைக்கு கோவிலில் வேடர்கள் அவனை வணங்கி இருக்கிறார்கள். அவனுக்கு மாலை அணிவித்ததைப் பார்.'' மாமா உண்ணியின் கழுத்தில் கிடந்த மாலையை விரலால் சுட்டிக் காட்டினார்.

அய்யப்பனின் சிறிய கண்கள் மலர்ந்தன.

“உண்மையா எஜமான்?'' -அவன் உரத்த குரலில் அலறினான்: “தாயே மாரியம்மா.'' அவனுடைய குரல் காடுகளை நடுங்கச் செய்தது.

அய்யப்பன் உண்ணியின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவனுடைய கால்களில் முத்தமிட ஆரம்பித்தான்.

உண்ணி நின்று கொண்டே நெளிந்தான்.

எஜமான் பக்தியும் நன்றியும் கொண்ட ஒரு நாயைப் போல அய்யப்பன் ஆகிவிட்டிருந்தான்.

அவன் கால்களில் முத்தமிட்டு, நக்கினான். அளவுக்கு மேலே தலையையும் உடலையும் அசைத்தான்.

வால் இல்லாமலே அவன் வாலை ஆட்டுவதைப்போல உண்ணிக்குத் தோன்றியது.

கிச்சு கிச்சு மூட்டப்பட்டதைப் போன்ற ஒரு அமைதியற்ற தன்மையில் உண்ணி இப்படியும் அப்படியுமாக நெளிந்தான்.

இறுதியில் எல்லா செயல்களும் முடிவடைந்து அய்யப்பன் மேலும் கீழும் மூச்சு விட்டவாறு எழுந்து அதிகமான பக்தியுடன் உண்ணியைச் சுற்றிவிட்டு வந்து நின்றபோது, மாமா அழைத்தார்: “அய்யப்பா.''

“எஜமான்.'' - நாய் திடீரென்று வேலைக்காரனாக மாறியது.

“தேநீர் தயார் பண்ணு.'' -மாமா உத்தரவிட்டார்.

“எஜமான்...'' -அய்யப்பன் சமையலறையை நோக்கி ஓடினான்.

அய்யப்பன் போனவுடன், அய்யப்பனுடன் வந்திருந்த பெண்ணைச் சுட்டிக்காட்டி, மாமா சொன்னார்:

“உண்ணி, இதுதான் உன்னுடைய தாய்.''

உண்ணி ஒரு அதிர்ச்சியுடன் அய்யப்பனுடன் வந்த பெண் இருந்த பக்கம் திரும்பினான். அவனுக்குள் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு எதுவும் உண்டாகவில்லை. அவளைப் பார்த்த அவனுடைய கண்களில் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் காணப்பட்டன.

மாமா அந்தப் பெண்ணிடம் சொன்னார்: “உண்ணியிடம் போ, சுபத்ரா!'' -அவர் மேலும் சொன்னார்: “அவனை காளி தேர்ந்தெடுத்திருக்கிறாள். அவனுக்கும் மாறுதல் உண்டாகி இருக்கிறது. சாதாரண விஷயங்கள் அவனிடம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கின்றன.''

தனக்குள் உணர்ச்சிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் மாமா கூறியவை தானா என்று சந்தேகப்பட்டவாறு, உந்திய பற்களை வெளியே காட்டி, சிரித்து, கைகளை நீட்டி, தன்னை அழைக்கும் பெண்ணை நோக்கி நீட்டப்பட்ட கைகளுடன் உண்ணி நடந்தான்.

“அம்மா...'' -அவன் அழைத்தான். அவர்கள் இறுக்கமான ஒரு அணைப்பில் மூழ்கினார்கள்.

11

ண்ணி தன் தாயை அழைத்துக் கொண்டு ஆற்றின் படித்துறையில் குளிப்பதற்காகச் சென்றான். மாமா படித்துறையையும் அய்யப்பன் படித்துறையையும் தாய்க்குக் காட்டினான். தாய் தன் படித்துறையில் குளித்தால் போதும் என்று கட்டாயப் படுத்தினான். தாய் குளிப்பதற்கு முன்னால் உண்ணி குளித்துவிட்டு மேலே வந்தான்.

அம்மா குளித்த நேரத்தில் உண்ணி ஆற்றின் கரையிலும் சுற்றுப் புறங்களிலும் சுற்றி நடந்தான். உம்மிணி அங்கு எங்காவது இருக்கிறாளா என்று பார்த்தான். பயத்துடன்தான் பார்த்தான். தன் தாய் தன்னுடன் இருக்கும்போது பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. உம்மிணி அங்கு எங்கும் இல்லை.

தன் தாயுடன் உண்ணி காளி கோவிலுக்கும் சென்றான். அந்த கோவிலின் பெருமையைப் பற்றி அம்மாவிடம் விளக்கிச் சொன்னான். அம்மா நடந்து களைப் படைந்தபோது, அவளைக் கிண்டல் பண்ணினான். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தாயுடன் சேர்ந்து நடக்க அவன் முயன்றான்.

அம்மா அவனிடம் அவனுடைய விஷயங்களைவிட கோவிலைப் பற்றியும் ஆசிரமத்தைப் பற்றியும் மாமா, அய்யப்பன் ஆகியோரின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும்தான் விசாரித்தாள். அது உண்ணியைச் சற்று ஆச்சரியப்பட வைக்காமல் இல்லை. ஆர்வம்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான். எனினும், அந்த ஆர்வம் அவனுக்கு அசாதாரணமாகத் தோன்றியது.

“இந்த அய்யப்பன் எங்கே இருந்து வந்திருக்கிறான்?'' -அம்மா கேட்டாள்.

“பாண்டி நாட்டுக்காரன் என்று தோன்றுகிறது.'' -உண்ணி சொன்னான்: “என்ன... அம்மா, உங்களுக்கு அவனை முன்பே தெரியாதா?''

திடீரென்று அம்மா சொன்னாள்: “தெரியாது.''

பிறகு அவர்களுக்கு இடையில் அமைதி நிலவியது.

சிறிது நேரம் சென்றதும் அம்மா மீண்டும் கேட்டாள்: “அந்த ஆள் திருமணம் செய்துக்கலையா? இந்த அய்யப்பன்?''

உண்ணி ஆச்சரியப்பட்டான். “இல்லையென்றுதான் தோணுது.''

அவர்கள் கோவில் தரிசனத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மெல்லிய இருட்டு விழுந்திருந்ததாலும், பாதை இதற்கு முன்பு அவளுக்குத் தெரியாததாக இருந்ததாலும், உண்ணிதான் தாயின் கையைப் பிடித்திருந்தான்.

“இங்கு பாம்புகள் தாராளமாக இருக்கும். அப்படித்தானே?'' -அம்மா உரத்த குரலில் கேட்டாள்.

“பாம்புகள் இருக்கு.'' -உண்ணி சொன்னான்: “ஆனால் அம்மா... பயப்பட வேண்டாம். என்னுடன் வரும்போது பாம்பு கடிக்காது. அப்படியே கடித்தாலும் மாமாவிடம் விஷத்தை முறிக்கக்கூடிய மூலிகை இருக்கு!''

மெல்லிய இருட்டின் -மெல்லிய வெளிச்சத்தின் வழியாக அவர்கள் நடந்து சென்றார்கள்.

“இந்த அய்யப்பன் வாக்குறுதி அளித்தால், அதன்படி நடக்கக் கூடியவனா?'' -எதிர்பாராமல் அம்மா விசாரித்தாள்.

உண்ணி திகைத்துப் போய் விட்டான். அவனால் தன் தாயின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், தன்னுடைய கைக்குள் இருந்த தாயின் கை நடுங்கு வதை அவனால் உணர முடிந்தது.

“தெரியாது.'' -உண்ணி சொன்னான்: “அம்மா, ஏன் இப்படியெல்லாம் கேட்கறீங்க?''

“ஒண்ணுமில்ல...'' -அம்மா சொன்னாள்: “வெறுமனே கேட்டேன். அவ்வளவு தான்.''

அம்மா பொய் கூறுகிறாள் என்பதை உண்ணி புரிந்து கொண்டான். ஆனால், அவன் அந்த விஷயத்தைப் பற்றி அதற்கு மேல் கேட்கவில்லை. அவனுடைய மனம் பல திசைகளில் இருந்து பல அலைகள் வந்து சுற்றித் திரும்பி உயர்ந்து சிதறும் ஒரு சுழலாக ஆகிவிட்டிருந்தது.

அம்மா அவனுக்கு உணவு பரிமாறினாள். அவனும் அம்மாவும் ஒன்றாக உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்கள்.

மாமா சுருட்டைப் புகைத்தவாறு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். இடையில் அவ்வப்போது மாமா அம்மாவிடம் பேசவும் செய்தார். உண்ணியைப் பெரிய ஆளாக ஆக்கப் போவதாக மாமா அம்மாவிடம் சொன்னார்.

இரவில் உண்ணி தூங்குவது வரை அம்மா அவனுக்கு அருகில் இருந்தாள். அம்மா அவனுடைய படுக்கையில் உட்கார்ந்து கொண்டு அவனுடைய கன்னத்தையும் தலைமுடியையும் தடவினாள். அவனிடம் பேசினாள். தூக்கத்தில் வழுக்கிவிழும் வரையிலும் அம்மாவின் தொடலை அவன் உணர்ந்திருந்தான்.


காலையில் உண்ணியைத் தூக்கத்திலிருந்து எழுப்பியதுகூட அம்மாதான். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆற்றின் படித்துறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தார்கள்.

பூஜை நேரத்தில் அம்மா மட்டும் வெளியே வாசலில் நின்று கொண்டிருந்தாள். பெண்கள் பூஜையறைக்குள் வரக்கூடாது என்பது மாமாவின் கொள்கை.

பூஜைக்குப் பிறகு அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவு சாப்பிட்டார் கள். அய்யப்பன் அல்ல- அம்மாதான் பரிமாறினாள். ஆனால், மாமாவிற்கு அய்யப்பன் பரிமாறுவதைப் பார்த்தபோது, உண்ணிக்கு ஆச்சரியமாக இருந்தது.

உணவு சாப்பிடும்போது, உண்ணி கேட்க இருந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டதைப் போல மாமா சொன்னார்:

“உண்ணி, நீ பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டாம். அம்மா இன்றைக்கும் இருக்கிறாள் அல்லவா, அய்யப்பா?''

“ஆமாம் எஜமான். உண்மைதான்.'' -அய்யப்பன் சொன்னான்.

உண்ணி சிரித்தான். “வைத்தியன் சொன்னதும்...'' -அவன் சொன்னான்.

அய்யப்பனும் அம்மாவும் சிரித்தார்கள். மாமா சிரிக்கவில்லையென்றாலும், அவரும் அந்த நகைச்சுவையை ரசித்தார் என்பதை உண்ணி புரிந்து கொண்டான்.

இவை எல்லாம் நடந்தாலும், ஒரு பிரச்சினை உண்ணியைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அம்மா தலைமுடியை வருடியபோதும், அவள் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டபோதும், அவள் உணவைப் பரிமாறியபோதும் ராகுலனின் தாயின் முன்னிலையில் உண்டாகக்கூடிய ஒருவகையான சந்தோஷம் தனக்குள் உண்டாகவில்லை என்பதே அவனிடம் இருந்த பிரச்சினை. இந்த அம்மாவின் தொடுதலில் அந்த வெப்பம் இல்லை. இவளுடைய பேச்சிலும் நடத்தையிலும் அந்த உயிர்ப்பு இல்லை. இவளுடைய நடத்தை முற்றிலும் இயந்திரத்தனமாக இருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. அது அவனுக்குள் ஆச்சரியத்தின் வித்துக்களை விதைத்தன. எவ்வளவோ வருடங்களுக்குப் பிறகு மகனைப் பார்க்கும் தாயிடமிருந்து அவன் எதிர்பார்த்த தரத்திற்கு நடத்தை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டபோது அவன் ஆச்சரியத்துடன் கவலைப்பட ஆரம்பித்துவிட்டான். அம்மா விற்கு தன்னிடம் அளவான பாசம்தான் இருக்கிறதோ என்றுகூட அவன் சந்தேகப் பட்டான்.

அவன் சிந்தித்துச் சிந்தித்து தன் தாயின் நடத்தைக்கு மிகவும் சிரமப்பட்டு ஒரு நியாய விளக்கத்தையும் கண்டுபிடித்தான். தான் மிகவும் சிறிய குழந்தையாக இருந்த போதே தன்னை மாமா தன் தாயிடமிருந்து இங்கு கொண்டு வந்துவிட்டார். அப்போது அவளுடைய தாய் இதயம் மிகவும் துடித்திருக்கும். காலப் போக்கில் அந்தக் கவலை குறைந்திருக்கும். சாதாரண வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போய் வாழ முடிந்தபோது, தன்னை விட்டுப் போன மகனைப் பற்றி கவலைப்பட்டு கவலைப்பட்டு கவலையே வறண்டு போய்விட்ட ஒரு மனநிலையை அவள் அடைந்திருக்க வேண்டும். கவலைப் பட முடியாத அந்த தனிப்பட்ட மனநிலையில் அம்மா இப்போது இருக்க வேண்டும்.

ஆனால், தாய்க்காக மகன் கற்பனை பண்ணும் ஒரு பலவீனமான விளக்கமே அது என்பதை அவன் பின்னால் உணர்ந்தான். அவளுக்கு ஏதாவது மன ரீதியான நோய் இருக்குமோ என்பது அடுத்த சந்தேகமாக இருந்தது. சிந்தித்துச் சிந்தித்து இறுதியில் உண்ணி ஒரு முடிவுக்கு வந்தான். சந்தேகங்களுக்கு இடமில்லை. வெறுமனே அதையும் இதையும் சிந்தித்துப் பிரயோசனமில்லை. குறைந்த நேரத்திற்காவது எனக்கு என் தாய் திரும்பக் கிடைத்திருக்கிறாள். நான் என் தாயைத் தொட்டேன். என் தாய் எனக்கு உணவு பரிமாறினாள். அருகில் இருந்து கதை சொல்லி, தழுவி, கொஞ்சி என்னைத் தூங்கச் செய்தாள். எனக்கு அது போதும் என்று தனக்குள் அவன் கூறிக் கொண்டான்.

மீண்டும் அவனுக்குள் சந்தேகம் உண்டானது அய்யப்பனுக்கும் அம்மாவிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை சிறிதும் எதிர்பாராமல் கேட்க நேர்ந்த அந்த நாளில்தான். அவர்கள் இருவரும் சமையலறையில் இருந்தார்கள். நீர் குடிப்பதற்காக சாப்பாட்டு அறைக்கு உண்ணி போயிருந்தான். அப்போது அம்மாவின் குரலைக் கேட்டான்.

“என்னிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றவில்லையென்றால், உண்மை முழுவதையும் நான் உண்ணியிடம் சொல்லிவிடுவேன்.''

“நீ பேசாமல் இரு.'' -அய்யப்பன் சொன்னான்: “நான் எஜமானிடம் கேட்டுச் சொல்றேன்.''

அப்போது உண்ணி டம்ளரிûல் நீர் எடுக்கும் சத்தம் கேட்டது. சமையலறையில் நடந்த உரையாடல் திடீரென்று நின்று விட்டது.

அய்யப்பன் சாப்பிடும் அறைக்கு வந்தான். அவனுடைய முகத்தில் தாங்க முடியாத வெறுப்பு இருந்தது. “என்ன எஜமான்?'' -அவன் கேட்டான்.

“ஒண்ணுமில்ல...'' -உண்ணி சொன்னான்: “நான் நீர் குடிப்பதற்காக வந்தேன்.''

அவன் நீர் குடித்துவிட்டு வெளியேறினான். வெளியே சென்ற உண்ணி நேராக ஆற்றின் படித்துறைக்குப் போனான். அவன் ஆற்றின் கரையின் வழியாக காட்டில் அலைந்து திரிந்தான். அவனுடைய மனம் மீண்டும் சுழல்கள் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நீர் மையமாக மாறியது. அய்யப்பனுக்கும் அம்மாவுக்குமிடையே இந்த அளவிற்கு தனிப்பட்ட விஷயங்களை எப்படிப் பேச முடிகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான். உண்ணியிடம் எந்த உண்மையைக் கூறப் போவதாக அம்மா சொன்னாள்? அம்மா கூற நினைத்த உண்மை என்ன? ஏதாவது ஆபத்தில் மாட்டிக் கொள்வாளோ? அய்யப்பனுக்கும் மாமாவிற்கும் விருப்பமில்லாத ஒன்றை அவள் கூற நினைக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் திடீரென்று அய்யப்பன் பேசாமல் இருக்கும்படி சொன்னான். மிகவும் கெஞ்சுகிற குரலில் அய்யப்பன் சொன்னான். மாமாவிடம் கேட்டு தேவையானதைச் செய்வதாகச் சொன்னான். அப்படியென்றால் மாமாவும் சம்பந்தப்பட்டிருக்கும் ஏதோ ஒன்றுதான் அம்மா தன்னிடம் கூற நினைக்கும் விஷயமாக இருக்கிறது. ஒரு முடிவுக்கும் வர முடியாமல் சந்தேகத்தின் புதர்களில் அவன் சுற்றித் திரிந்தான்.

“எனக்கு எதுவுமே புரியவில்லையே!'' -அவன் கவலைப்பட்டான்.

அன்று சாயங்காலம் குளித்து முடித்து கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கி விட்டுத் திரும்பும்போது, அவன் தன் தாயிடம் அந்த விஷயத்தைக் கேட்டான்.

“ஒண்ணுமில்ல மகனே.'' - உரத்த குரலில் அம்மா சொன்னாள்.

“என்னவோ இருக்கு.'' -உண்ணி சொன்னான்: “அம்மா, உண்மையை என்னிடம் கூறப் போவதாக நீங்க அய்யப்பனிடம் சொன்னதை நான் கேட்டேனே!''

“ஒண்ணுமில்ல, மகனே.'' -அம்மா மீண்டும் சொன்னாள்.

“ம்... என்னவோ இருக்கு.'' -உண்ணி மெதுவான குரலில் சொன்னான்.

“அம்மா, உங்களுக்கு என்மீது விருப்பம் இல்லாத காரணத்தால்தான் நீங்க சொல்லாமல் இருக்கீங்க.''

“ஐயோ... என் மகனே, நீ உடனே கோபிச்சிட்டியா?''

அம்மா அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவள் சொன்னாள்: “மகனே, உன்னைத் தவிர வேறு யார்மீது எனக்கு விருப்பம் இருக்கப் போகிறது? நான் எல்லாவற்றையும் சொல்றேன். நீ சிரித்து விடுவாய்.''

“அப்படின்னா சொல்லுங்க.'' -அவன் சொன்னான்.


“நான் இன்றைக்கே போகணும் என்று அவர்கள் சொன்னார்கள்.'' -அம்மா சொன்னாள்: “நான் உன்னுடன் இதற்கு மேலும் தங்கினால், உன்னுடைய கவனம் சிதறிவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உன்னுடன் மேலும் ஒரு நாளாவது இருக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை. அதற்கு அனுமதித்தே ஆக வேண்டும் என்று நான் பிடிவாதம் பிடித்தேன். மாமாவிடம் கூறுவதற்கு தைரியம் இல்லாததால்தான் அய்யப்பனிடம் சொன்னேன். அப்போ அவன் முடியாது என்று சொன்னான். உன்னுடன் நான் இரண்டு நாட்கள் இருக்கலாம் என்று அவன் என்னிடம் முன்பு கூறியிருந்தான். பிறகு திட்டத்தை மாற்றி விட்டார்கள். அதற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று நான் சொன்னேன். அப்படிப் பிடிவாதம் பிடித்தால், அவர்கள் தான் என்னைத் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை என்ற விஷ யத்தை நான் உன்னிடம் கூறிவிடுவேன் என்று சொன்னேன்.'' சற்று நிறுத்திவிட்டு வெற்றி பெற்று விட்டதைப் போல சிரித்துக் கொண்டே அம்மா முடித்தாள்: “இறுதியில் அவர்கள் சம்மதித்துவிட்டார்கள். மாமாகூட. அப்படியில்லாமல் வேறென்ன நடக்கும்?''

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பொய்தான் என்று உண்ணிக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திடீரென்று அந்தப் பெண்ணின் விளக்கங்களின்மீது இருந்த ஆர்வம் அவனுக்கு இல்லாமல் போயிருந்தது. தனக்கு என்னவோ புரிபடுவதாக அவனுக்குத் தோன்றியது. திடீரென்று அவன் ஒரு அன்னியனாகி விட்டான். வீட்டை அடையும் வரை அவன் அந்தப் பெண்ணிடம் பேசவில்லை.

வீட்டை அடைந்த பிறகும் அவன் அமைதியாகவே இருந்தான். மாமா அதை கவனித்தார்.

“உண்ணி, நீ ஏன் உற்சாகமே இல்லாமல் இருக்கே?'' -உண்ணியும் அம்மாவும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சுருட்டைப் புகைத்துக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த மாமா கேட்டார்.

உண்ணி மாமாவைப் பார்த்துச் சிரித்தான். “ஒண்ணுமில்ல...'' அவன் சொன்னான்.

“நான் நாளை புறப்படுவதால் உண்டான கவலையாக இருக்கும்.'' -அம்மா சொன்னாள். உண்ணி உள்ளுக்குள் சிரித்தான்.

மாமாவின் மேலுதட்டின் ஒரு முனை மேல்நோக்கி வளைவதை உண்ணி கவனித்தான். மாமா சொன்னார்: “உண்மைதான். நாளை புறப்படுகிறாய் அல்லவா? அதை நான் மறந்துவிட்டேன்.'' -மாமா அழைத்தார்: “அய்யப்பா!''

“உண்மை எஜமான்.'' -அய்யப்பனின் பதில் வந்தது.

“ஆனால், உண்ணி...'' -மாமா உண்ணியின் பக்கம் திரும்பினார். “இப்படிப்பட்ட உணர்ச்சிகள்தான் உனக்கு இருக்கக்கூடாது என்று நான் சொன்னேன். இப்படிப்பட்ட உறவுகள், கடமைகள் ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. உறவுகளும் கடமைகளும் வலைகள் என்று நான் சொன்னேன் அல்லவா? தாயும் ஒரு வலைதான். நீ இந்த மாதிரியான வலைகளில் சிக்கிக் கொள்ள வேண்டியவன் அல்ல. பிறகு... உன் பிறப்பிற்குக் காரணமாக இருந்த பெண்ணைப் பார்க்க வேண்டும் என்பது உன்னுடைய ஒரு உரிமை. அது உன்னுடைய இருப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். அதனால்தான் சுபத்ராவை வரவழைத்தேன். அவள் வந்தாள். நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டீர்கள். இனி இருவரும் அவரவர்களுடைய கடமைகளை நோக்கித் திரும்பிச் செல்வதுதான் நடக்க வேண்டியது. புரியுதா?''

“புரியுது.'' -உண்ணி சொன்னான்.

“நல்லது... மிகவும் நல்லது...'' -மாமா அவனுடைய தோளில் தட்டினார்.

அன்றும் உண்ணி தூங்குவது வரை அம்மா அவனுடைய படுக்கையின் அருகிலேயே இருந்தாள். தன் தந்தையைப் பற்றித் கேட்டபோது, அதற்கு தெளிவான பதில்கள் அம்மாவிடமிருந்து கிடைக்காமல் போனது உண்ணியை ஆச்சரியப்பட வைத்ததுடன் வேதனைப்படவும் வைத்தது. தன் தந்தை இறந்துவிட்டார் என்பதையும், நல்ல மனிதராக இருந்தார் என்பதையும் தவிர, வேறு எதையும் அம்மா என்ற பெண் கூறவில்லை. உண்ணி தன் தந்தையைப் பற்றி மிகவும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அவனுடைய கேள்விகளுக்கு அம்மா தெளிவற்ற பதில்களைக் கூறவோ, இல்லாவிட்டால் விஷயத்தை மாற்றவோ செய்தாள். விஷயத்தை மாற்றுவதற்காக அவள் பாம்புகளைப் பற்றியோ அய்யப்பனைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தாள். ராகுலனின் வீட்டைப் பற்றியும் அங்கு இருக்கும் அம்மாவைப் பற்றியும் உண்ணி பேசிய போதும் அவள் பெரிய அளவில் ஆர்வத்தைக் காட்டவில்லை.

“எனக்கு அது சொந்த வீட்டைப் போல அம்மா.'' -அவன் சொன்னான்: “அவங்க எந்த அளவிற்கு ஒரு நல்ல அம்மா தெரியுமா?''

உண்ணியின் தாய் வெறுமனே "உம்' கொட்டினாள்.

“அங்கு என்னவெல்லாம் பொருட்கள் இருக்கின்றன தெரியுமா?'' -உண்ணி தொடர்ந்து சொன்னான்: “ரேடியோ, ரேடியோக்ராம், டெலிஃபோன், கார், ஃப்ரிட்ஜ், கேரம் போர்டு, செஸ் போர்டு... இவையெல்லாம் நம் வீட்டில் இருக்கின்றனவா அம்மா?''

அம்மா விழித்தாள்: “நம் வீட்டில் எல்லாம் இருக்கு மகனே.'' அவள் சொன்னாள்: “மகனே, நீ இருக்கே.''

மறுநாள் காலையில் புறப்பட இருக்கும் தன்னுடன் மேலும் ஒருநாள் இருக்க வேண்டும் என்பதற்காக மாமாவிடமும் அய்யப்பனிடமும் சண்டை போட்டதாகச் சொன்ன தாய்க்கு, தான் தூங்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதற்குக் காரணம் என்ன என்பதை உண்ணி ஆச்சரியத்துடன் சிந்தித்துப் பார்த்தான். எவ்வளவு சிந்தித்தும் திருப்தி அளிக்கும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க அவனால் முடிய வில்லை. அவன் கவலைப்பட்டான். தூக்கம் வருவது வரையில் அவன் பேசாமல் படுத்திருந்தான். அம்மா இயந்திரத்தனமாக அவனுடைய தலை முடியையும் கன்னத்தையும் வருடிக் கொண்டிருந்தாள். அவளுடைய மனம் வேறு எங்கோ இருக்கிறது என்பதை உண்ணி புரிந்து கொண்டான். தான் தன்னுடைய தாயுடன் செலவிடும் இறுதி இரவு இப்படி இயந்திரத்தனமாக இருப்பதை நினைத்து அவனுக்கு வேதனை தோன்றியது. வேதனையை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு, கண்களை மூடி அவன் படுத்திருந்தான்.

அடுத்த அதிகாலை வேளையில் அவனை கண்விழிக்கச் செய்தது அம்மா அல்ல. அவன் தானே கண் விழித்தான். எழுந்தபோது, அருகில் அம்மா இல்லை. எழுந்து வாசலுக்குச் சென்று பார்த்தபோது, உடல் பயிற்சிக்கு தயார் பண்ணிக் கொண்டு நின்றிருந்த மாமாவைப் பார்த்தான்.

“அம்மா எங்கே?'' -அவன் கேட்டான்.

“அவள் போய்விட்டாள்.'' -மாமா சொன்னார்: “உன்னைப் பார்த்து விடை பெறுவதற்கு அவள் நின்றால், அவளால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. பிறகு... அது உனக்கும் சிரமமான விஷயமாக இருக்கும் என்று தோன்றியதால் அவளை சற்று முன்கூட்டியே போகலாம் என்று கூறிவிட்டேன்.''

உண்ணி எதுவும் பேசவில்லை. அவன் உடற் பயிற்சியில் இறங்கினான்.


ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, அம்மா பேசாமல் போய் விட்டதைப் பற்றி தனக்கு கடுமையான கவலை எதுவும் உண்டாகவில்லையே என்று உண்ணி ஆச்சரியப்பட்டான். "என் தாய் என்னிடம் விடை பெறாமல் போனதைப் பற்றி எனக்கு ஏன் வருத்தமே உண்டாகவில்லை?' -அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்: "நான் மரத்துப் போய் விட்டேனா? இந்த மலையில், இந்த ஆசிரமத்தின் வாழ்க்கை எனக்குள் இருந்து என்னுடைய உணர்ச்சிகளை வீசி எறியும்படி செய்து விட்டதா? ஆனால், ஆற்று நீரே! உன்னை நான் விரும்புகிறேனே! உன்னுடைய தொடுதலில் என்னுடைய உணர்ச்சிகள் தட்டி எழுப்பப்படுகின்றனவே!'

பதில் இல்லாத கேள்விகள் அவை.

தனக்கு கேள்விகள் அனைத்தும் கேள்விகளாகவே இருந்து கொண்டிருக்கும் என்று உண்ணிக்குத் தோன்றியது.

குளித்து விட்டு மேலே வந்தபோது, உண்ணியின் மனதில் இருந்த சுமை குறைந்து விட்டிருந்தது. அவனுக்கு மீண்டும் உற்சாகம் உண்டானது.

தான் சிக்கிக் கிடக்கும் வலையின் காரணகர்த்தாக்கள் யார் என்று அவன் சிந்தித்தான். காரணகர்த்தாக்கள் யாராக இருந்தாலும், வலை எதுவாக இருந்தாலும், அதிலிருந்து தப்பித்தே ஆகவேண்டும் என்ற மாமாவின் கருத்து அவனுக்கு சரியானதாகத் தோன்றியது.

சீட்டி அடித்துக் கொண்டே அவன் நடந்தான். கரடிப் பாறையை அடைந்த போது, அவன் உம்மிணியை நினைத்துப் பார்த்தான். பயம் அல்ல- ஆர்வம்தான் அவனிடம் இருந்தது. இவ்வளவு அதிகாலையில் அவள் வந்திருக்க மாட்டாள் என்பது மட்டும் உண்மை. எனினும், எதிர்பாராத நேரங்களிலும் ஏதாவது நடக்கும் என்ற சிந்தனையுடன் அவன் பாறையின் பின் பகுதிக்குச் சென்றான். ஒரு இலைகூட அசையாமல் இருக்கும் அளவிற்கு மிகவும் கவனம் செலுத்தி அவன் நடந்தான். பாறையின் மூலையில் நின்று கொண்டு முன்பு செய்ததைப் போல அவன் தலையை நீட்டி பார்த்தான். அன்று பீடித் துண்டுகளும் முல்லை மலர்களும் கிடந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில், சிறிய செடிகளால் பாதி மறைக்கப்பட்ட ஒரு பெண் உருவம் படுத்திருப்பதை அவன் பார்த்தான்.

பெருகி வந்த சிரிப்பை உண்ணி அடக்கிக் கொண்டான். அதிகாலையில் வந்து என்னவோ செய்துவிட்டு உம்மிணி தூங்கிவிட்டாள் போலிருக்கிறது என்று நினைத்தபோது, தடை போட முடியாத அளவிற்கு சிரிப்பு வந்தது. வாயைக் கையால் மூடிக் கொண்டு அவன் அவளுக்கு அருகில் சென்றான்.

“டேம்...'' அருகில் சென்ற உண்ணி ஓசை எழுப்பினான்.

அவள் திடுக்கிட்டு எழுவாள் என்றும்; வெட்கப்பட்டு நிற்பாள் என்றும் அவன் எதிர்பார்த்தான்.

அப்படி எதுவும் நடக்காமல் இருக்க, சற்று பதைபதைப்பு அடைந்த உண்ணி மேலும் சற்று நெருங்கி, பெண் உருவத்தின் முகத்தைப் பார்த்தான். அடுத்த நிமிடம் அவன் பயந்து நடுங்கிவிட்டான். அவனுக்குள் இருந்து வடிவமற்ற ஒரு சத்தம் உண்டானது.

பயந்து கொண்டே அவன் ஓடினான். அவன் ஓடிக் கொண்டே இருந்தான்.

12

ண்ணி கண்களைத் திறந்து பார்த்தது காளி கோவிலில் இருந்த காளி சிலையின் முகத்தைத்தான். ரத்தமயமாக இருந்த அசுரனின் குருதியைக் குடித்த காளி பழி வாங்கும் கடவுளாக அவனுக்கு முன்னால் பிரகாசமாகத் தோன்றினாள். சிலையிலிருந்து காளி உயிர்த்தெழுந்து வந்து ஈரேழு பதிநான்கு உலகங்களிலும் நிறைந்து நின்றிருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.

உண்ணி கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் மீண்டும் தன்னைச் சுற்றி பார்த்தான். ஆமாம்... தான் காளி கோவிலில்தான் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டான். முன்னால் சாட்சாத் சாமுண்டியின் சிலை இருப்பதைப் பார்த்தான்.

ஆனால், உண்ணி ஆச்சரியப்பட்டான். "நான் எப்படி இங்கே வந்தேன்?'

இன்றுவரை சிக்கியிராத மிகப் பெரிய வலையில் தான் சிக்கிக் கொண்டிருக் கிறோம் என்பதை உண்ணி புரிந்து கொண்டான். இந்த வலையின் சணலைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள்.

திடீரென்று கரடிப் பாறைக்குப் பின்னால் பார்த்த இறந்த உடலின் விஷம் நீலம் படர்ந்த, வீங்கிப் போன முகம் அவனுடைய கண்களுக்குத் தெரிந்தது. உண்ணி அதிர்ச்சியடைந்து சிதறிப் போய்விட்டான்.

அந்தப் பெண் தன்னுடைய அன்னையா? அவன் தனக்குத்தானே ஆராய்ந்து பார்த்தான். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒரு விஷயம் உண்மை. அவள் ஒரு மனிதப் பெண். அவள் இறந்து போய்விட்டாள். கொல்லப்பட்டிருக்கிறாள். இங்கு பிரச்சினை-மரணம். கொலைச் செயல். மரணம் என்ற பரிகாரம் இல்லாத பிரச்சினையின் காலடிக்குக் கீழே வாடிய ஒரு வாழைத் தண்டைப் போல தான் விழுகிறோம் என்பதை உண்ணி புரிந்து கொண்டான். இரண்டு நாட்கள் தன்னுடைய தாயாக இருந்த- அல்லது தாயாக நடித்த ஒரு பெண்ணின் மரணத்தைப் பற்றிய கவலை அல்ல; அவனைத் தளரச் செய்து கொண்டிருந்தது மரணம் என்ற சம்பவம்தான்.

அது ஒருவகையில். இன்னொரு வகையில் பார்த்தால் தான் சிக்கியிருக்கும் வலையின் கனத்தை அவன் தெரிந்து கொண்டான். இறந்த உடலைப் பார்த்தவுடனே அய்யப்பனின் சிறிய கண்கள் தன்னுடைய மனக்கண்களில் ஏன் தோன்றின என்று அவன் ஆச்சரியப்பட்டான். அய்யப்பனின் உருவம் மட்டுமல்ல; அய்யப்பனுக்கும் தாய்க்கும் இடையில் நடைபெற்ற உரையாடலும் அவனுடைய நினைவில், அந்த நிமிடங்களில், பயந்துபோய் பதைபதைப்பு அடைந்து ஓடிக் கொண்டிருந்த அந்த நிமிடங்களில் ஏன் தோன்றியது என்று அவன் யாரிடம் என்றில்லாமல் கேட்டான். அவனுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த அய்யப்பனின் பயங்கரமான தோற்றம், வாளுக்கு பதிலாக முகத்தைச் சவரம் செய்யப் பயன்படுத்தும் பழைய கத்தியைப் பிடித்துக் கொண்டு கன்னங்களிலும் தாடையிலும் ரத்தத்தைக் கசிய விட்டுக் கொண்டு நிற்பதை, நின்று கொண்டு அலறுவதை உண்ணி பார்த்தான். அந்த அலறல் சத்தம் அவனுடைய காதுகளையும் அவனுடைய காட்டையும் நடுங்கச் செய்தது. முகத்தைச் சவரம் செய்யும் கத்தியில் இருந்து சொட்டுச் சொட்டாக விழும் ரத்தம் கோழியின் ரத்தம் அல்ல- தன்னுடைய தாய் என்று தான் நம்பவில்லையென்றாலும், அந்தத் தோற்றத்தில் தனக்கு முன்னால் வந்து நின்ற பெண்ணுடைய ரத்தம் என்று அவனுக்கு வெறுமனே தோன்றியது.

தன்னுடைய நரம்புகளின் வழியாக குளிர்ச்சியாக ஏதோவொன்று பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. அது பயமாக இருக்குமோ? நடுக்கமாக இருக்குமோ? மரணமாக இருக்குமோ?

"எனக்குத் தெரியவில்லையே!' -உண்ணி கவலையுடன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: "எனக்குத் தெரியவில்லையே!'

அந்தப் பெண்ணின் மரணத்துடன் அய்யப்பனைத் தொடர்பு படுத்திப் பார்க்க தனக்கு எந்தவொரு உரிமையும் ஆதாரங்களும் இல்லை என்பதை உண்ணி நினைத்துப் பார்த்தான். பிறகு வெறுமனே ஒரு சிந்தனை எதற்காக உண்டாக வேண்டும்? அவன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். பதில் கூறுவதற்கு அவனுக்குத் தெரியவில்லை. தான் கேள்விகளின் ஒரு பெரிய சின்னமாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை உண்ணி புரிந்து கொண்டான்.


அடுத்த நிமிடம் அவனுடைய சிந்தனை அவனை நோக்கியே திரும்பி வந்தது. என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வடிவமே இல்லை. தன்னுடைய உள் மன ஆசைகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்றால், அந்த வாழ்க்கையில் ராகுலனும் ஷீபாவும், அவர்களுடைய... இல்லாவிட்டால் தன்னுடைய... அம்மாவும் ரேடியோக்ராமும் ரேடியோவும் உம்மிணியும் இருக்க வேண்டும் என்று உண்ணிக்குத் தோன்றியது. அப்படிப்பட்ட ஈர்க்கக்கூடிய விஷயங்கள் இருக்கும் வலைகளில் சென்று விழுந்து விடக்கூடாது என்று அறிவுரை கூறும் மாமா இன்னொரு வலையின் காரணகர்த்தாவாக இருக்கிறாரே! பலம் படைத்த காரணகர்த்தா அல்லவா என்று உண்ணி பலமாக சந்தேகப்பட்டான். இதுவும் வலைதானே? தன்னை சிக்க வைக்கும் வலை. இது ஒரு பத்ம வியூகம். தான் வந்து சிக்கிக் கொண்டிருக்கும் இந்த ஆபத்தான வட்டத்தில் இருந்து தனக்கு விடுதலையே இல்லை என்பதை உண்ணி ஒரு உள் நடுக்கத்துடன் நினைத்துப் பார்த்தான்.

திடீரென்று மழைக்காலத்தின் மின்னல் கீற்றைப் போல ஏதோ ஒன்று அவனுடைய மனதிற்குள் தோன்றி மறைந்தது. அவன் காளி சிலையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களையே பார்த்தான். அடுத்த நிமிடம் உண்ணி எழுந்தான். நடுக்கமும் பயமும் தன்னிடமிருந்து விலகிப் போய்விட்டன என்பதை அவன் புரிந்து கொண்டான். உறுதியான எட்டுக்களுடன் உண்ணி மலையில் இறங்கினான்.

பூஜையறையில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த மாமா வெளியிலிருந்து உள்ளே வந்த உண்ணியைப் பார்த்தார். அவர் சில நிமிடங்கள் உண்ணியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“உண்ணி, தாமதம் ஏன்? பூஜைக்கு இல்லையே!'' -அவர் சொன்னார்.

“நான் குளித்து முடித்து விட்டு, கோவிலுக்குப் போயிருந்தேன்!'' - உண்ணி சொன்னான்.

“முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?'' என்று மாமா கேட்டார்.

“விழுந்து விட்டேன்.'' -உண்ணி பதில் சொன்னான்.

உண்மையாகக் கூறுவதாக இருந்தால் மாமா கூறியதைத் தொடர்ந்து காலைப் பார்த்த பிறகுதான் தன்னுடைய முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருப்பதையே உண்ணி தெரிந்து கொண்டான்.

“கவனமா நடக்கணும்.'' -மாமா அறிவுரை கூறினார். உண்ணி அந்த அறிவுரையை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு மனதிற்குள் வைத்துக் கொண்டான். மாமா கூறியது எல்லா அர்த்தங்களையும் வைத்து பார்க்கும்போது சரிதான் என்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

“போய் ஆடையை மாற்றி விட்டு வா.'' -மாமா தொடர்ந்து சொன்னார்: “உணவு சாப்பிடுவோம்.''

“சரி....'' -உண்ணி உள்ளே சென்றான்.

வெளியே செல்வதற்கான ஆடைகளை அணிந்து கொண்டு உண்ணி அறையை விட்டு வெளியே வந்தான். உணவு சாப்பிட உட்கார்ந்தபோது, மாமா அதை கவனித்து அவனிடம் கேட்டார்:

“இது என்ன வெளியே போகக்கூடிய ஆடைகளுடன்? இன்று பள்ளிக்கூடம் இல்லாத நாளாயிற்றே!''

“ஆமாம்...'' -உண்ணி சொன்னான்: “ஆனால், நான் கிராமத்திற்குக் கொஞ்சம் போக வேண்டியிருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் பள்ளிக்கூடத்திற்குப் போகாமல் இருந்தேன் அல்லவா? என்னவெல்லாம் சொல்லித் தந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மாமா, நீங்கள் அனுமதி தந்தால் போகலாம் என்று ஆடைகளை அணிந்தேன்.''

“அது எதற்கு?'' -மாமா சொன்னார்: “போயிட்டு... போயிட்டு வா.''

மானின் மாமிசத்தின்மீது அடையை எடுத்து சேர்த்து வைத்து அவர் சாப்பிட்டார். அதற்கிடையில் அவர் அழைத்தார்: “அய்யப்பா?''

“எஜமான்...'' -அய்யப்பன் வந்து சேர்ந்தான்.

“உண்ணி கிராமத்திற்குப் போகணுமாம்.''

“போகட்டும் எஜமான்.''

உண்ணி எதுவும் பேசவில்லை. ஆனால், அய்யப்பன், மாமா இருவரின் வெளிப்பாடுகளையும் கூர்ந்து கவனித்தான்.

உணவு சாப்பிட்டு முடித்து, உண்ணி புறப்பட்டான். அவன் நேராக சென்றது ராகுலனின் வீட்டிற்குத்தான். ராகுலனின் தாய்தான் அவனை முதலில் பார்த்தாள். அம்மா மகனை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு வரவேற்றாள். முந்தைய இரவில் தன்னுடைய படுக்கையின் மீது உட்கார்ந்து கொண்டு தலைமுடியையும் கன்னத்தையும் வருடிக் கொண்டிருந்த பெண்ணின் தொடுதலில் இருந்து கிடைக்காத சந்தோஷம் ராகுலனின் தாய் கட்டிப்பிடித்து அணைத்தபோது அவனுக்குக் கிடைத்தது.

“அம்மா...'' -அவன் அழைத்தான். அடுத்த நிமிடம் அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

“என்ன மகனே? என்ன ஆச்சு?'' -அம்மா பதைபதைப்புடன் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல அம்மா.'' -உண்ணி கண்களைத் துடைத்துக் கொண்டான்: “ஒண்ணுமில்ல.''

ஷீபாவும் ராகுலனும் உண்ணியும் ஒன்றாக உட்கார்ந்து நீண்ட நேரம் கேரம் விளையாடினார்கள். சிறிது நேரம் கதை கூறிக் கொண்டிருந்தார்கள். ஷீபா சமீபத்தில் வாசித்த ஒரு கதையை உண்ணியிடம் கூற ஆரம்பித்தபோது, அது தான் வாசித்த ஒன்றுதான் என்று கூறி ராகுலன் எழுந்து சென்றான். ராகுலன் போனவுடன் ஷீபா உண்ணியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவளுடைய தொடல் அவனுக்குள் ஒரு புதிய சந்தோஷத்தைப் பரவச் செய்தது. அவளிடமிருந்து வந்த இனிய வாசனை அவனுடைய நாசியின் வழியாக நுழைந்து உடல் முழுவதும் பரவுவதைப் போல உண்ணிக்குத் தோன்றியது. கதை முன்னேற முன்னேற அவர்கள் ஒருவரோடொருவர் மேலும் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். உண்ணிக்கு வேடர்கள் அளித்த மாலையின் கண்ணிகளைத் தொட்டு, அதன் அழகை ஷீபா ரசித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று உண்ணி சில நாட்களுக்கு முன்னால் கரடிப் பாறைக்குப் பின்னால் பார்த்த காட்சியை நினைத்துப் பார்த்தான். அவனுடைய கைகள் ஷீபாவை அணைத் தன. அவள் அவனுடைய கண்களையே வெறித்துப் பார்த்தாள். ஆனால், அந்தப் பார்வையில் பகையோ எதிர்ப்போ இல்லை. அவர்களுடைய பார்வைகள் மேலும் ஆழம் கொண்டவையாக ஆயின. முகங்கள் ஒன்றோடொன்று நெருங்கின. அப்போது யாரோ படிகளில் ஏறிவரும் சத்தம் கேட்டது. அவர்கள் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டிருப்பதை விட்டு, சற்று தள்ளி உட்கார்ந்தார்கள்.

"கதை முடிந்து விட்டதா?'' என்று கேட்டுக் கொண்டே ராகுலன் உள்ளே வந்தான். அவன் தொடர்ந்து சொன்னான்: “கொஞ்சம் நிறுத்துங்க, அக்கா. நாம கார்ட்ஸ் விளையாடுவோம்.''

அவர்கள் எல்லாரும் வற்புறுத்தியும் உண்ணி அங்கே சாப்பிடவில்லை.

“சீக்கிரமே, சாப்பாட்டுக்கு முன்பே திரும்பி வந்துவிட வேண்டும் என்று மாமா கூறியிருக்கிறார்.'' -உண்ணி சொன்னான். தான் வேறு யாருடைய குரலிலோ பேசுவதைப் போல உண்ணிக்குத் தோன்றியது.

“கொஞ்சம் சாப்பிடுவதால் என்ன ஆகிவிடப் போகிறது மகனே?'' -அம்மா வற்புறுத்தினாள்.

“வேண்டாம் அம்மா.'' -உண்ணி சொன்னான்: “பிறகு... அம்மா உங்களுக்குக் கட்டாயம் என்றால்... ஒரு ஃப்ரூட் சாலட் சாப்பிடுறேன். அது எங்களுடைய மலையில் கிடைக்காதே!''

“அப்படியென்றால் அதைச் சாப்பிடு.'' -அம்மா ஃப்ரிட்ஜில் இருந்து ஃப்ருட் சாலட்டை எடுத்தாள்.


“உணவு சாப்பிட்டிருந்தால் அது முடித்தவுடன் நாம் எல்லாரும் சேர்ந்து திரைப்படத்திற்குப் போகலாம்.''- ராகுலன் சொன்னான்.

“நீ போய்ப் பார்த்தால் போதும்.'' -உண்ணி சொன்னான்: “ பிறகு எனக்கு கதைக் கூற மறந்துவிடக் கூடாது. அவ்வளவுதான்.''

அதைச் சொன்னபோது உண்ணி உள்ளுக்குள் சிரித்தான்.

புறப்படும் நேரத்தில் அவன் ஒவ்வொருவரிடமும் திரும்பத் திரும்ப விடை பெற்றான்.

ஷீபாவின் கையைப் பிடித்து அழுத்தினான். ராகுலனை இறுக அணைத்துக் கொண்டு அவனுடைய கன்னங்களில் முத்தமிட்டான். அம்மா இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு முத்தமிட்டபோது எல்லா கட்டுப்பாடுகளையும் இழந்துவிட்டு உண்ணி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான்.

“அழாதே மகனே.'' -அம்மா சொன்னாள்: “அழாதே.''

அவன் வேண்டாம் என்று எவ்வளவு கூறியும், அம்மா அவனை காரிலேயே அனுப்பினாள்.

ராகுலனின் வீட்டின் வெளி வாசலைக் கடந்து கார் வெளியேறியபோது, காரையே பார்த்துக் கொண்டு வழியின் அருகில் நின்று கொண்டிருந்த அய்யப்பனை உண்ணி பார்த்தான். அவனுக்கு சிறிதும் ஆச்சரியம் உண்டாகவில்லை.

அய்யப்பனை அவன் இயல்பாகவே எதிர்பார்த்தான். அவன் அய்யப்பனைப் பார்த்துச் சிரித்தான். கையை அசைத்துக் காட்டினான்.

உண்ணி மாமாவுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டான். அவர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அய்யப்பனைப் பார்த்த விஷயத்தை உண்ணி மாமாவிடம் கூறி விட்டிருந்தான்.

“அவன் என்னவோ வாங்குவதற்காகப் போயிருந்தான். இப்படியொரு மறதிக் காரன். நேற்றும் மார்க்கெட்டிற்குப் போயிருந்தான். அப்போ மறந்துவிட்டானாம்!'' -மாமா விளக்கிக் கூறினார். மாமாவின் விளக்கம் மனதிற்குள் உண்டாக்கிய சிரிப்பு வெளியே வராமல் உண்ணி பார்த்துக் கொண்டான்.

உணவு சாப்பிட்டு முடித்து மாமாவின் அனுமதியை வாங்கிக் கொண்டு உண்ணி காளி கோவிலை நோக்கிப் புறப்பட்டான். மலையில் ஏறும்போது, ஏராளமான முகங்கள் அவனுடைய மனதில் வரிசையாக தோன்றின. ராகுலனின் அம்மா, ராகுலன், ஷீபா, ராகுலனின் தந்தை, இரண்டு நாட்கள் தன்னுடைய தாயாக நடிப்பதற்கு வந்த அதிர்ஷ்ட மில்லாத பெண், உம்மிணி, மாமா, அய்யப்பன், திரைப்படத்தின் சுவரொட்டியில் இருந்த காதலியும் காதலனும், கத்தியைப் பிடித்திருந்த கொடூரமான மனிதன், கோமன்... இப்படி எத்தனையெத்தனை முகங்கள்! பள்ளிக்கூடத்து நண்பர்கள், ஆசிரியர்... மனிதர்களின் நீளமான வரிசைக்கு முடிவே இல்லை என்று தோன்றியது. அந்த வரிசை அவனைச் சுற்றி வட்டமாக மாறி நகர தொடங்கியது. பல சுற்றுக்களாக ஆகியும், மனிதர்கள் முடிவடையவில்லை. மிகவும் அருகில் நிற்பவர்களின் முகங்களை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ராகுலன், அம்மா, அப்பா, ஷீபா- எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அய்யப்பன்கூட பற்களைக் காட்டினான். மாமா மட்டும் சிரிக்கவில்லை.

“கொஞ்சம் சிரிங்க மாமா.'' -உண்ணி சொன்னான்: “இப்போதாவது கொஞ்சம் சிரிங்க. சந்தோஷத்திற்காக சிரிக்க வேண்டாம். அன்பு காரணமாகவும் சிரிக்க வேண்டாம். வெறுமனே கொஞ்சம் சிரிங்க. நீங்க சிரித்தால் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மட்டும்...''

மாமாவின் மேலுதட்டின் ஒரு முனை மேல்நோக்கி அவலட்சணமாக வளைந்தது.

காளியின் சிலைக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்த உண்ணி சொன்னான்: “தாயே, இந்த சக்கர வியூகத்தில் இருந்து தப்பிப்பதற்கு வேறு எந்த வழியும் எனக்குத் தெரியவில்லை.''

அவன் நிமிர்ந்தான். யாருக்கும் தெரியாமல் கைகளுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த, மாமாவின் பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகையைக் கையில் எடுத்து வாய்க்குள் போட்டு விழுங்கிவிட்டு, உண்ணி மீண்டும் காளி சிலையின் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களையே பார்த்தான்.

அந்த ஜூவாலைகள் குறையக் குறைய உண்ணி காளியின் காலடிகளில் குலைந்து விழுந்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.