Logo

ஹேராம்

Category: புதினம்
Published Date
Written by sura
Hits: 6467
hey-ram

அர்ஜுனா பல்குணா...

குளிரே குலுங்கிப் போகிற அளவிற்கு முழங்கிய குண்டு வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு புல்வெளியில் இருந்த மனிதக் கூட்டம் முழுவதும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தது.

கொலையாளி குளிர்ந்த காற்றில் புகைந்து கொண்டிருக்கும் கைத்துப்பாக்கியுடன் அமைதியாக எந்தவித சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான்.

5.17 சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு வேலை முடிந்தது. மரண ராசியைப் பார்க்க வேண்டும். கிழவர் எங்கே போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமே!

பனிக்காலமாக இருந்ததால் நேரம் இரவைப் போல இருண்டு போயிருந்தது. சூரியன் அஸ்தமனம் ஆகாமலே காணாமல் போயிருந்தது. காக்கி கால் சட்டையும் காக்கி மேல் சட்டையும் அணிந்திருந்தான் கொலைகாரன். அவற்றின் குளிர்ச்சி அவன் உடலெங்கும் தொட்டுப் பரவிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் பங்களாவின் அடைக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்களுக்குப் பின்னால் இலேசான வெளிச்சம் விழுந்து கொண்டிருந்தது. மதிலுக்கு அருகில் பெரிய நாவல் மரங்களும், வேப்ப மரங்களும் இருட்டில் கலந்து நின்றிருந்தன.

குண்டடிபட்ட மனிதரின் உடனிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தியைத் தன் இடது கையால் தள்ளி மாற்றிவிட்டுத்தான் கொலையாளி தன் துப்பாக்கியால் குறி பார்த்தான். குண்டபடி பட்ட மனிதரின் கைத்தடியும் பிரார்த்தனை மாலையும் நோட்டு புத்தகமும் அவளது மென்மையான கைகளில் இருந்து கீழே விழுந்தன. அவள் அதைப் பொறுக்குவதற்காக குனிவதையும் கிழவர் ஒரு வாக்கை உச்சரித்தவாறு நிலத்தில் விழுவதையும் கொலையாளி பார்த்தான்.

குளிரில் விரைத்து போயிருந்த புல்லின் மேல் கிழவர் உறக்கம் வந்த மனிதரைப் போல மரணத்தைத் தழுவி விழுந்தார். ஆடை எதுவும் அணியாதிருந்த அவர் நெஞ்சில் தொப்புள் துவாரங்கள் போல தெரிந்த காயங்களின் வழியாக குருதி கொட்டியது.

கிழவருக்கு இவ்வளவு ரத்தமா!

பெண்ணே, கீழே விழுந்த பொருட்களை எடுப்பதா உனக்கு முக்கியம்? கீழே விழுந்து கிடக்கும் கிழவரின் சரீரத்தை நீ பார்க்கவில்லையா? இப்போது அனேகமாக அவருக்கு உயிர் போய்க் கொண்டிருக்கும். சரி... உயிர் எப்படி போகும்? கண்கள் வழியாகவா? மூக்கு வழியாகவா? வாய் வழியாகவா? உள்ளங்கால் வழியாகவா? உயிர் இப்போது உடலைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிக் கொண்டிருக்கும். சரீரம் அதன் விருப்பப்படி கிடக்கட்டும். கைத்தடியும் பிரார்த்தனையும் மாலையும் நோட்டு புத்தகமும் இனி தேவையில்லை. சரீரம் சாம்பலாகப் போகிறது!

துப்பாக்கியின் குழலிலிருந்து புறப்பட்டு வந்த நீலப்புகையின் மணத்தை கொலையாளி நாசிக்குள் இழுத்தான். இரவில் தான் உடல் உறவு கொண்ட சிறுவனின் கையிடுக்கிற்குள் இருந்து வந்த வாசனை இதைப் போலத்தான் இருந்தது என்று நினைத்தான் அவன். அவனுடைய இளம் ரோமங்களில் முத்தம் தந்து அவனை கிளுகிளுக்கச் செய்த போது, வெடிமருந்தின் மணம்தான் அவன் நாசித்துவாரத்திற்குள் நுழைந்தது. திடீரென்று என்ன நினைத்தானோ, அவன் அந்தச் சிறுவனை நகங்களால் மிருதுவாகவும் கடினமாகவும் ஒரே நேரத்தில் வருட ஆரம்பித்தான்.

ஓய்வு எடுக்கும் அறைக்குப் பின்னால், வெளியே விளக்குகள் தட்டி உடைக்கப்பட்ட இரவு நேரத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு புகை வண்டிகள் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டும் கூவிக் கொண்டும் தண்டவாளங்களில் தாளம் போட்டுக் கொண்டும் போய்க் கொண்டிருந்தன. சிறுவன் அறையை விட்டு கிளம்பிப் போனபிறகு, அவன் முதல்நாள் படித்து நிறுத்தி வைத்திருந்த பெரிரோசனின் நாவலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். கண்கள் இலேசாக மூடத் தொடங்கியபோது, அவன் ஒரு கையால் தலையணைக்குக் கீழே எதையோ தேடினான். துப்பாக்கியின் குழலை அவன் விரல்கள் தொட்டன. தன்னை விட்டுப் போன சிறுவனின் பிறப்பு உறுப்பைத் தொட்டதைப் போல, அவன் ஒரு நிமிடம் அந்தத் துப்பாக்கியைப் பிடித்தான்.

புல்வெளியின் அமைதியைக் கலைக்கிற மாதிரி ஒரு பெண் உரத்த குரலில் அலறினாள். தன்னைச் சுற்றிலும் சத்தங்களால் ஒரு போர்க்களமே உண்டாகிவிட்டிருப்பதை கொலையாளி தெரிந்து கொண்டான். 'அர்ஜுனா பல்குணா பார்த்தா கிரீடி...'& அவன் தனக்குள் முணுமுணுத்தான். குளிர் அவனுக்குள் நுழைந்து, ஆக்கிரமித்து அவனை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தது. துப்பாக்கிக் குழலின் வெப்பத்தை அவன் விரல்கள் தொட்டுப் பார்த்தன.

'வணக்கம்' என்று கிழவரிடம் சொல்ல நினைத்ததை உண்மையில் அவன் சொன்னானா?

தானல்ல& துப்பாக்கியின் ஒடுங்கிப் போன முகம்தான் 'வணக்கம்' என்ற வார்த்தையை உச்சரித்தது என்று அவன் உணர்ந்தான்.

கஷ்டம்! எதிரி மரியாதைக்குரிய மனிதராக இருக்கிறார். என் நாக்கு 'வணக்கம்' என்ற வார்த்தையை உச்சரித்திருக்க வேண்டும். வணக்கம்! வணக்கம்! வணக்கம்! நீங்கள் செய்த எல்லா நன்மைகளையும் நினைத்துப் பார்த்து வணக்கம்! செய்த தீமைகளுக்கு இந்தத் துப்பாக்கியின் தண்டனை.

அவன் துப்பாக்கியைப் பார்த்தான். அதிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த புகை இப்போது நின்று விட்டிருந்தது.

நாம் இப்போது பிரிகிறோம், நண்பரே! இனி உன்னுடைய விதி என்னவென்று யாருக்குத் தெரியும்? என் விதியையும் தான் சொல்கிறேன்.

பல கைகள் சேர்ந்து அவனை இறுகப் பிடித்த போது இது தான்தானா என்ற அதிர்ச்சி அவனை ஒரு நிமிடம் அலைக்கழித்தது. தன் உடம்பை இத்தனை மனிதர்கள் ஒரே நேரத்தில் சேர்ந்துபிடிப்பது இதுவே முதல்முறை என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான்.

நண்பர்களே, நான் இங்கேதானே இருக்கிறேன். வேறு எங்கும் நான் போகப் போவதில்லை. ஒரு வேலையைச் செய்து முடித்த பிறகு, அதன் விளைவுகளில் இருந்து தப்பி ஓடி விடுவதா? நீங்கள் கீதையின் வாசகத்தைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? 'பலனைப் பற்றி கொஞ்சமும் நினைக்காமல் கர்மம் செய்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கர்மத்தின் விளைவால் அவர்கள் கர்மத்தின் தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால், பலனை எதிர்பார்த்து காரியம் செய்பவர்கள் கர்மத்தின் விளைவு மூலம் பாவத்தையே செய்கிறார்கள்.'

என்னுடைய கடமை முடிந்தது. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.

துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்தவாறு கொலையாளி உரத்த குரலில் கூப்பிட்டான். "போலீஸ்! போலீஸ்! தான் சரணடைவதை வெளிப்படையாக அறிவித்தான்.

கொலையாளியின் நன்கு வெட்டப்பட்ட தலைமுடியின் ஓரங்கள் நரைத்திருந்தன. அமைதி தவழ்ந்து கொண்டிருந்த முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிந்தன. தெளிவும், சந்தேகமும் நிறைந்த கண்களிலும் உதடுகளிலும் ஒரு மிடுக்கு தெரிந்தது. அவன் பார்வை நாலாபக்கங்களிலும் அலைந்து கொண்டிருந்தது. அவனுக்கு கிட்டத்தட்ட முப்பத்தேழு வயது இருக்கும். எதையோ மறந்து நின்றிருக்கும் ஒரு மனிதனைப் போல அவன் அங்கே நின்றிருந்தான்.


அவன் வலது கையை யாரோ பிடித்து பலவந்தமாக அவனிடமிருந்த துப்பாக்கியை வாங்கினார்கள். அவர்களின் மிருகத்தனமான பிடியைத் தாங்க முடியாமல் வேதனையால் அவன் உதடுகளைக் கடித்துக் கொண்டான். முறுக்கேறி நின்ற நரம்புகளை இடது கை கொண்டு தடவினான்.

எதற்கு? எதற்கு இந்த முரட்டுத்தனம்?

மக்கள் கூட்டத்துக்கு மேலே மெல்ல பறந்து செல்லும் ஒரு கறுப்பு பறவையைப் போல அவனுடைய துப்பாக்கி ஒவ்வொரு கையாகக் கடந்து தூரத்தில் போய்க் கொண்டிருப்பதை மின் விளக்கு வெளிச்சத்தில் அவன் பார்த்தான். ஒரு போலீஸ்காரனைப் பார்த்து அவன் சொன்னான், "அந்தத் துப்பாக்கியைப் பத்திரமா பார்த்து பிடிங்க. இல்லாட்டி தேவையில்லாம அவங்க துப்பாக்கி வெடிச்சு சாகப் போறாங்க."

அவன் தோளிலும் தலையிலும் முதல் முறையாக அடிகள் விழுந்தன.

நண்பர்களே, உபநிஷத்தில் இருக்கும் வாக்கியத்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? 'அடிப்பவன் நான் இவனை அடிக்கிறேன் என்றோ அடிவாங்கியவன் எனக்கு அடி கிடைத்தது என்றோ கருதினால், அவர்கள் இருவருக்குமே ஆத்மா என்ற ஒன்றைப் பற்றி தெரியாது என்று அர்த்தம். ஆத்மா அடிப்பதும் இல்லை. அடி வாங்குவதும் இல்லை.'

கொலையாளி:

இந்தியர்களே, நான் ஆரம்பத்தில் பிரம்மத்தில் இருந்து புறப்பட்டது அழகான பெண் வண்ணத்துப் பூச்சியாகத்தான்.

ஏழு வண்ண சிறகுகளை வீசியவாறு பாற்கடலுக்கு மேலே இஷ்டம் போல பறந்து திரிந்தேன். தாமரையில் இருந்த தேனைப் பருகி சந்தோஷத்துடன் இருந்தேன். பாற்கடலைப் பார்த்துப் பார்த்து ஆனந்தத்தில் திளைத்தேன்.

தேவர்களின் கூட்டத்திற்கும், அசுரர்கள் கூட்டத்திற்கும் மேலே சுதந்திரமாக வானத்தில் நான் பறந்து திரிந்தேன். காமதேனுவும், சந்திரனும், காளைக் குடமும், அமிர்தக் கலசமும் என எல்லாவற்றையும் நான் பார்த்தேன்.

பாற்கடலில் ஒரு பெரிய சலனம். பாற்கடல் அலைகளைக் கிழித்துக் கொண்டு ஒரு திவ்ய உருவம் உயர்ந்து வருகிறது. பார்த்தால் தாமரைப் பூவில் அமர்ந்தவாறு மகாலட்சுமி!

நான் தேவியின் அழகில் என்னையே மறந்து போனேன். தீபத்தில் இருக்கும் எண்ணெயைப் போல நான் தேவியின் பக்கத்திலேயே பறந்து கொண்டிருந்தேன். அமிர்தம் கலந்த தாமரைத் தேனின் மணம் என்னை பைத்தியம் கொள்ளச் செய்தது.

நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். தேவர்களும் அசுரர்களும் நடுங்கும் வண்ணம் சிறகுகளால் தேவியை தாமரைப் பூவில் இருந்து தள்ளிவிட்டு, அமிர்தத் தேன் குடிக்க முயற்சித்தேன். வியப்பு கலந்த ஒரே ஒரு பார்வையால் தேவி என்னைச் சாம்பலாக்கினாள்.

சகோதரர்களே, இதுதான் என்னுடைய முதல் பிறவியும் அதன் இறுதி முடிவும்.

இன்னொரு பிறவியில் நான் அயோத்தியில் தசரத மகாராஜாவின் பூங்காவனத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த தாமரைத் தடாகத்தில் வசிக்கும் வண்டாகப் பிறந்தேன். சிறு குழந்தையாக இருந்த ஸ்ரீராமன் ஒருநாள் தடாகத்தின் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தான். தனக்கு மிகவும் பிடித்தமான நீலத்தாமரையின் தண்டின் மேல் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து ராஜகுமாரன் பயந்து போய் உரத்த குரலில் அழ ஆரம்பித்தான்.

அவ்வளவுதான்&

ஆயுதங்களைக் கையில் வைத்திருந்த வேலைக்காரர்கள் ஓடி வந்தார்கள். ஸ்ரீராமன் அவர்களிடம் என்னைச் சுட்டிக் காட்டினான். ஒரு வேலையாள் வெறுப்புடன் என்னைப் பிடித்து கரையில் போட்டான்.

என்னை மிதித்துக் கொல்வதற்காக அவன் தன் கால்களை உயர்த்தினான். அப்போது இராமபிரான் அவனைத் தடுத்தான். அருகில் நிழல் தந்து கொண்டிருந்த மலர்களுடன் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த மரக்கிளையில் என்னைப் பிடித்து வைக்கச் சொன்னான். கருணைமனம் கொண்டு ஸ்ரீராமனும், வேலைக்காரர்களும் திரும்பிச் சென்ற பிறகு, நான் மீண்டும் தாமரை மலரில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

மறுநாள் தாமரை மலரைப் பறிப்பதற்காக கையை நீட்டிய ஸ்ரீராமன், அதன் தண்டில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து அதிர்ந்து போனான். அவன் முகம் கோபத்தால் அக்னியென சிவந்தது. வெறுப்புடன் என்னைக் கரையின் மேல் எறிந்தான்.

பிறகு... தன் வலது காலை உயர்த்தி என்னை அவன் மிதித்தான். சிறுவனாக இருந்த அவனின் பிஞ்சு பாதத்தால் என்னைச் சரியாக மிதித்து நசுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் தன் மிருதுவான பாதம் கொண்டு ஸ்ரீராமன் என்னை மிதித்துக் கொண்டே இருந்தான்.

என்னுடைய மகா பாக்யத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்! எத்தனை தடவைகள் ராமனின் பாதம் என்மேல் திரும்பத் திரும்ப பட்டும், நான் சாகவில்லை.

என் உடம்பில் இருந்து வெளிப்பட்ட விஷ திரவம் ஸ்ரீராமனின் புண்ணிய பாதத்தில் ஒரு கறுப்பு அடையாளத்தை உண்டாக்கியது. அதற்குள் வேலைக்காரர்கள் குழந்தையைத் தேடி ஓடி வந்து விட்டார்கள். அவர்கள் அவனை என்னிடமிருந்து பிரித்தார்கள்.

அவர்களில் அனுபவம் அதிகம் கொண்ட வேலைக்காரன் ஒரே மிதியில் என்னை நசுக்கித் தேய்த்தான். ஹா... ராமனின் பாதம் தொட்டு நான் உயிரை விட்டிருந்தால்! நான் இப்போதும் பிரம்மத்தில் ஆனந்த அனுபவங்களுடன் உல்லாசம் கொண்டு இருந்திருப்பேன்!

தேசத் துரோகிகளைப் பரலோகத்திற்கு அனுப்பி வைக்கிற வேலை என்மீது விழுந்திருக்காது. கஷ்டம்!

2

கிரக நிலை

கைகளைப் பின்பக்கமாகப் பிடித்து வளைத்ததால் உண்டான வேதனையில் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருந்த கொலையாளி ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தான்.

மரண ராசி! இன்று வெள்ளிக்கிழமை. 1948 ஜனவரி 30. மரண நேரம் குத்துமதிப்பாக 5.17

அவன் வேகவேகமாக தான் போட்டுக் கொண்டிருந்த கணக்குகளைக் கழித்தான். நெருப்பு பிடித்து எரியும் வெடிமருந்து கிடங்கைக் போல அவனைச் சுற்றிலும் ஒரே சத்தங்கள்! யாரோ அவனைப் பிடித்து குலுக்கினார்கள். சாபங்களும், வசவும் அவனை மூச்சு முட்டச் செய்தன.

அப்போது மரண ராசி& மிதுனம். ஆத்ம சாந்தி& ரிஷபம்... ரிஷபமா?...

அவன் முகம் இருண்டது. கணக்குகளின் கிளைகளை விட்டு வேறு கிளைகளுக்கு அவன் தாவிக் கொண்டே இருந்தான்.

ஆமாம்! ரிஷபம்தான்! அதிபதி சுக்கிரன்! ஹே கடவுளே! இது உண்மையா?

தன்னையும் அறியாமல் படுகுழிக்குள் விழுந்து விட்டதைப் போல் அவன் உணர்ந்து, சிலிர்த்தான். அவனுக்குள் இருந்து ஒரு அடிநாதம் எந்தவித சத்தமும் இல்லாமல் மெதுவாக எழுந்து உயர்ந்து வந்தது. தன்னைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளை உதறிவிட்டு வேகமாக ஓடிப் போய் துப்பாக்கியைப் பிடுங்கி குழாயை வாய்க்குள் வைத்து விசையை அழுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அப்போது அவன் நினைத்தான்.


அது நடக்காமல் போய்விட்டது! நேரம் தவறி விட்டது! கிழவர் சதி செய்து விட்டார். கஷ்டம்! அவருக்கு அவன் முக்தியைத் தேடிக் கொடுத்துவிட்டான். சுக்கிரனுடன் சங்கமம்! கடவுளே கிழவருக்கு சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்! சாந்தி கூட தேவைப்படாத ஆத்மா. நீண்ட நெடுங்காலம் கடந்து இங்கு திரும்பி வந்தால் போதும். அதுவரை பிறப்பதற்கு பெண்களின் பிறப்பு உறுப்பைத் தேட  வேண்டியதில்லை. உறவு கொள்ளுவதற்கும் அவை தேவையில்லை. கஷ்டம்! என்னுடைய இந்தக் கைகளால் கிழவர் தப்பித்துக் கொண்டார்!

அவன் தனக்குள் கொதித்தான். தன்னுடைய கைகளை யாராவது வெட்டி எறிந்திருக்கக்கூடாதா என்று அவன் விருப்பப்பட்டான்.

ஹா! என்னுடைய கணக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது! கிழவரின் உயிர் இப்போது கடவுளின் பாதத்தை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது! மகா பாவி!

தன் மேல் மற்றவர்களின் கைகள் வந்து விழுவதை அவன் பாதி மயக்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் அறிந்தான். 'ஸ்வேதவாஹன: பீபத்ஸர், விஜயோ, ஜிஷ்ணு: ஸவ்யஸாசி, தனஞ்ஜய:'& அவன் மனதிற்குள் சொன்னான்.

இந்தியர்களே, நான் செய்த இந்த தியாகம் பாலைவனத்தில் விழுந்த பனித்துளிபோல் ஆகிவிட்டதே! ஹே, ராம்! எனக்கு மட்டும் முக்தி இல்லையா? கவணில் இருக்கும் கல்துண்டைப் போல எத்தனைக் காலத்திற்கு நான் வீசி வீசி எறியப்பட்டுக் கொண்டே இருப்பது? எவ்வளவு காலத்திற்கு கர்மத்திற்குப் பின்னால்& எலும்புக்குப் பின்னால் பாய்ந்தோடும் நாயைப் போல அலைந்து கொண்டிருப்பது?

கிழவருக்கு முக்தியின் காலம் நீண்ட நெடுங்காலம் மூன்று கோடி. பதினொரு இலட்சத்து நான்காயிரம் கோடி, கோடி மனித வருடங்கள்... நீண்ட ஆனந்தம்; ஓய்வு அதற்குப் பிறகுதான் அவர் வெளியே வருவார். நானோ? நான் எவ்வளவு காலத்திற்கு பெண்களின் பிறப்பு உறுப்புக்குள் விந்து வடிவத்தில் செல்வதும், யோனிகள் வழியாக அழுதவாறு இரத்தத்தில் தேய்ந்து வெளியே வருவதுமாய் இருப்பது! மஹாமாயே!

தன்னைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளுக்குள் அவன் தன்னையும் அறியாமல் நெளிந்தவாறு 'ஹா! ஹா!' என்று மெதுவாக சொல்லிக் கொண்டே முரண்டு பிடித்தான்.

நான் இனியும் ஆணுக்குள் உண்டாகி, பெண்ணுக்குள் நுழைந்து, பிறந்து, அழுது, தவழ்ந்து, வளர்ந்து, புணர்ந்து, நரக வாழ்க்கை வாழ்ந்து மீண்டும் மீண்டும் சாக வேண்டும். எனக்கு போதும் போதுமென்றாகி விட்டது. என் பாரத மாதாவே! உன்னுடைய மக்களுக்காகத்தான் நான் கிழவரைக் கொன்றேன். ஆனால், அவருக்கு பிரம்மானந்தம்! ஹா! மனிதர்களின் நூறு ஆனந்தம், மனித கந்தர்வர்களின் ஒரு ஆனந்தத்திற்குச் சமம்! மனித கந்தர்வர்களின் நூறு ஆனந்தம் தேவ கந்தர்வர்களின் ஒரு ஆனந்தத்திற்கு சமம்! தேவ கந்தர்வர்களின் நூறு ஆனந்தம் பிதுர்களின் ஒரு ஆனந்தத்திற்குச் சமம்! பிதுர்களின் நூறு ஆனந்தம் பெரிய தேவர்களின் ஒரு ஆனந்தம்! பெரிய தேவர்களின் நூறு ஆனந்தம் கர்ம தேவர்களின் ஒரு ஆனந்தம்! கர்ம தேவர்களின் நூறு ஆனந்தம்! இந்திரனின் ஒரு ஆனந்தம்! இந்திரன்மார்களின் நூறு ஆனந்தம் பிரகஸ்பதியின் ஒரு ஆனந்தம் பிரகஸ்பதியின் நூறு ஆனந்தம் பிரஜாபதியின் ஒரு ஆனந்தம்! பிரஜாபதியின் நூறு ஆனந்தம்! ஒரு பிரம்மானந்தம்! ஓம்! ஓம்! ஓம்! சச்சிதானந்த ஸ்வரூபமான ப்ரம்ம சாட்சாத்காரமே!

தன்னைப் பிடித்தவர்களை கொலையாளி முறைத்துப் பார்த்தான்.

"நீங்கள் யார்? நீங்கள் எல்லாம் யார்? எந்த பாழாய்ப் போனதன் நிழல்கள் நீங்கள்? என்னுடன் வர உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது? ச்சீ... என்னை விட்டு விலகிச் செல்லுங்கள். இது நான் மட்டும் போகும் பயணமே."

திடீரென்று வந்த அழுகையால் அவன் முகம் என்னவோ போல் ஆனது.

யாருடைய பிடியிலோ இருந்த தன் கைகளை உயர்த்தி தன் மேல் விழுந்து கொண்டிருந்த அடிகளை அவன் தடுக்க முயற்சித்தான்.

எதற்காக இந்த உடம்பை நீங்கள் அடிக்கிறீர்கள்? அது அதன் கடமையைச் செய்திருக்கிறது. பரந்து கிடக்கும் பாரதத்திற்காக செய்யப்பட்ட கடமை!

தன்னை வலிந்து இழுத்துக் கொண்டு போகும் மனிதர்களை ஒரு விளையாட்டு பொம்மையைப் போல அவன் பின்பற்றினான்.

பயணம் போவதற்காக தயாராக இருக்கிற என்னை எதற்கு இழுத்துச் செல்கிறார்கள்? தள்ளுகிறார்கள்? இடிக்கிறார்கள்? எந்த அளவிற்கு முட்டாள்தனமாக நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்? உங்களின் எதிரியைக் கொன்ற பிராமணனை நீங்கள் இப்படி துன்பப்படுத்தலாமா? நீங்களே உங்கள் மேல் எவ்வளவு பெரிய பாவத்தைச் சுமத்திக் கொள்கிறீர்கள் தெரியுமா? இதற்கு எப்படி நீங்கள் பரிகாரம் காண்பீர்கள்? கஷ்டம்!

கொலையாளி:

இந்தியர்களே, உங்களுக்குத் தெரியுமா? இன்று ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து எட்டில் நின்று கொண்டிருக்கும் உலகத்தின் காலக்கணக்கிற்கு மூல காரணமாக இருந்தவரும் பாரதத்தில் ஆன்மீகப் பயிற்சி பெற்றவருமான யூதகுரு தன் தாயின் பிறப்பு உறுப்பில் இருந்து கோமாதாக்கள் சாட்சியாக பிறவியெடுத்தபோது, அவரை வணங்க நட்சத்திரங்கள் தோன்றியதைத் தொடர்ந்து கிழக்குப் பக்கத்திலிருந்து வந்த மூன்று ஞானிகளில் நானும் ஒருவன்.

பிறந்த குழந்தையிடம் குடி கொண்டிருந்த ஆன்மீக சக்தியை முதல் பார்வையிலேயே தெரிந்து கொண்ட நான் பொறாமையால் பிடிக்கப்பட்டவன் ஆனேன். குழந்தையின் சிறுவயது தாயையும் என்னுடன் வந்த சக பிரயாணிகளையும் ஏமாற்றி அவர்கள் கண்களில் படாத மாதிரி ஒரு பிடி புற்களை குழந்தையின் வாய்க்குள் திணித்தேன்.

அந்தப் புற்கள் மூச்சுக் குழலில் பட்டு, அவன் மரணமடைநது விடுவான் என்று எதிர்பார்த்த நான், வெளியேறினேன். நீர் எடுக்கப் போயிருந்த தாய் திரும்பி வந்து தொழுவத்திற்குள் நுழைந்தாள்.

அவள் உரக்க சத்தமிடுவதைக் கேட்டு, மற்றவர்களுடன் சேர்ந்து பரிதாபப்படுவது மாதிரி நடித்தேன். தொடர்ந்து எதுவுமே பேசாமல் மவுனமாக நின்றிருந்தேன்.

குழந்தைக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு பசு குழந்தையின் வாயில் இருந்த புற்களை நக்கியெடுப்பதை நான் பார்த்தேன்.

திரும்பி வந்த போது காஷ்மீரில் இருந்த ஒரு தெருவில் நடனமாடும் பெண் மீது நான் காதல் கொண்டேன். நாட்கள் செல்லச் செல்ல அவளையே விடாமல் நான் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். அவள் மீது நான் கொண்ட அளவுக்கும் அதிகமான காதலைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன். அவளின் காதல் பிச்சைக்காகக் கெஞ்சினேன். இளம் வயதுப் பெண்ணான அவள் நடுத்தர வயதுக்காரனான என்னுடைய காமத்தை வெறும் தமாஷாக எண்ணினாள். என்னை மனம் போன படியெல்லாம் அவள் கிண்டல் பண்ணினாள். என்னுடைய காதலைக் காற்றில் பறக்க விடவும் அவள் தயாரானாள்.


கடைசியில் ரகசிய ஞானங்களும், மிகப்பெரிய மந்திரங்களும் குறிக்கப்பட்டிருக்கும் என்னுடைய நூல்களுக்காகவும் வேறு சில அபூர்வ பொருட்களுக்காகவும் என்னுடன் காதல் கொள்ள அவள் சம்மதித்தாள். ஒரு வசந்தகால இரவில் என் சொத்துக்களை அவள் பெயருக்கு நான் மாற்றிக் கொடுத்தேன். பிறகு ஒரு பெரிய மரத்திற்குக் கீழே கிடந்த மலர்ப் படுக்கை மேல் அவளைக் கிடத்தி நான் உடலுறவு கொள்ளத் தொடங்கும் போது, அவளின் இளம் காதலன் மரத்தின் மேலே இருந்த கிளையொன்றில் இருந்து ஆயுதத்துடன் குதித்து அவளைக் கொன்றான். என்னுடைய பிறப்பு உறுப்பையும், கை கால்களையும் வெட்டி எடுத்தான்.

நான் அந்த மரத்தினடியில் ஒரு இரவும் ஒரு பகலும் காகங்களும், கழுகுகளும், குள்ள நரிகளும் கொத்த, கடிக்க& எறும்பும் ஈக்களும் மொய்க்க கிடந்தவாறு இறுதி மூச்சை விட்டேன்.

3

கடித்தாலும் வெடிக்காத உயிர்

லது கண்ணையும் கன்னத்தையும் சேர்த்து கொடுத்த ஒரு அடியில் கொலையாளியின் தலை ஒரு பக்கம் சாய்ந்து போனது. ஒரு நிமிடம் அவனுக்கு கண்கள் இருண்டு போனது மாதிரி இருந்தது.

இந்துக்களே, உங்களின் கைகளாலா பிராமணனை வதைக்கிறீர்கள்? மூன்று குண்டுகளைக் கொண்டு உங்கள் எதிரியின் உயிரைப் பறித்தவன் ஆயிற்றே நான்! பிராமணனான என்னுடைய சுய தர்மம் அல்ல அது. இருந்தாலும் காயைப் பறிப்பது போல எதிரியின் உயிரை நான் தனியாகப் பிரித்தேன் என்பது உண்மை தானே? அதுவும் பிடிவாத குணமும் கடின இதயத்தையும் கொண்ட ஒரு கிழவரின் கடித்தால்கூட வெடிக்காத ஒரு உயிரை& பெரிய வரம் கிடைத்த மனிதன் தான் என்று கருதிக் கொண்டிருக்கும் ஒரு அகங்காரம் கொண்ட மனிதனின் உயிரை.

மனதைக் கோவிலாக நினைத்து வழிபடும் மனிதன். சின்னச் சின்ன பைத்தியக்காரத்தனமான விஷயங்களுக்கும் பிடிவாதங்களுக்கும் அடிமையாகிப் போன மனிதன் பாரத மாதாவின் அகண்ட சொத்தின் மேல் முட்டாள்தனத்திற்கு மேல் முட்டாள்தனமும், தோல்விக்கு மேல் தோல்வியும், சர்வநாசத்திற்கு மேல் சர்வ நாசமும் உண்டாக்கிய மனிதன்.

எங்கே அந்த மனிதர்? -சாம்பலாவதற்கு முன்பு அவரின் உடம்பை நான் ஒருமுறை பார்க்க வேண்டும். என்னுடைய புதிய படைப்பை கடைசி முறையாக நான் ஒருதடவை பார்க்க விரும்புகிறேன். நான் புதிதாக உருவாக்கிய கிழவர்! அப்படி நான் புதிதாக உண்டாக்கியதில் நடந்தது ஒரு தண்டனையும் இரண்டு தப்பித்தல்களும். கிழவருக்கு அவர் செய்த பாவத்திற்குத் தண்டனை கிடைத்தது. பாரதத்திற்கு அந்த மனிதரிடமிருந்து விடுதலை கிடைத்தது. அதோடு கிழவரும் தப்பித்துக் கொண்டார். கஷ்டம்! இது எப்படி? மந்திரமா? மாயாஜாலமா? பிசாசின் வேலையா? அந்த மனிதரால் எப்படி இதை அடைய முடிந்தது?

அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? மரணமும் ஆத்மசாந்தியும் என்னுடைய சத்திரிய கர்மங்களும் அவர் உண்டாக்கும் கண்ணாமூச்சு விளையாட்டாக இருக்குமா? என்னுடைய வெடிகுண்டுகள் அவரின் மாயத் தோற்றத்துக்குள் நுழைந்து கடந்து போயிருக்குமோ? கிழவர் கீழே விழுந்து கிடக்கும் இடத்தை விட்டு எழுந்து உடல் உறுப்புகளை அசைத்தவாறு கால்களை நீட்டி நீட்டி நடந்தவாறு எனக்குப் பின்னால் வருவாரோ?

அவர் ஒரு திருடன். கபன சன்னியாசி. மாயாவி. கடவுளைப் பற்றிய கீர்த்தனைகள் தெரியும். பகவத் கீதையைப் பார்க்காமலேயே தெரியும். பாரதமாதாவை முஸ்லீம்களுக்கு அறுத்து விற்கவும் தெரியும். அந்த மனிதரின் அகிம்சை! உள்ளுக்குள் அவர் இம்சை மனம் கொண்ட மிருகமே. வஞ்சகன். கடிகாரமும் கண்ணாடியுமாய் எனக்குப் பின்னால் அவர் ஓடி வருகிறார். எனக்கு மன்னிப்பு தருவதாக நாடகம் நடத்துவதற்கு! ஹேய்! ஹேய்! என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்! நான் அந்த ஆளின் காலடி ஓசையை கேட்க வேண்டும். என் கையை விடுங்கள்! நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்னை நீங்கள் அந்த மனிதரின் கையில் ஒப்படைக்கப் போகிறீர்களா?

கொலையாளி போராடிக் கொண்டு முன்னால் வேகமாய் போனான். அவன் கண்கள் மூடியிருந்தன. திடீரென்று ஒருவித பதைபதைப்புடன் அவன் தன் கண்களைத் திறந்தான். விலங்கு போடப்பட்டிருந்த தன்னுடைய கைகளைப் பார்த்தான். அவன் முகத்தில் அதைப் பார்த்ததும் வருத்தம் உண்டானது.

பாரதத்தைக் காப்பாற்றிய கைகளுக்கு அவர்கள் விலங்கு அணிவித்திருக்கிறார்கள்! விதியின் கொடுமையை என்னவென்பது!

குளிர் எல்லா பக்கங்களிலும் இருந்தும் தன்னை முழுமையாகத் தாக்குவதை அவனால் உணர முடிந்தது. போலீஸ்காரர்களின் தாளத்திற்கேற்ப அவன் நடந்தான். கைகளை ஆட்டாமல் நடந்து போவதைப் பற்றி அவன் எண்ணிப் பார்த்தான். ‘‘கிழவரின் சடலத்தை ஒரு தடவை என்னைப் பார்க்க அனுமதிப்பீர்களா?’’ அவன் யாரிடம் என்றில்லாமல் கேட்டான். அங்கிருந்த சத்தத்தில் அவன் கேட்டது யார் காதிலும் விழவில்லை. ஒரு போலீஸ்காரன் மட்டும் அவனைப் பார்த்து கேட்டான். ‘‘என்ன? நீங்க ஏதாவது சொன்னீங்களா?’’ கொலையாளி தலையை ஆட்டினான்.

கிழவரிடம் விடை பெற வேண்டும். இப்போது அந்த மனிதர் எனக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார். பிறப்பைத் தருகிற தாய், தந்தை கொண்டிருக்கும் உறவைவிட கொல்லுபவன் கொல்லப்படுபவன் கொண்டிருக்கும் உறவு பலம் படைத்தது ஆயிற்றே! பிறப்பை யார் வேண்டுமானாலும் தரலாம். மரணத்தை எல்லோராலும் தர முடியுமா? மரணம் அடையலாம்... மரணத்தைத் தர எத்தனை பேருக்குத் தைரியம் இருக்கிறது! அதுவும் கொலை செய்து முக்திக்கு அனுப்புவது! பிரம்மனின் காலடிகளுக்கு! சிவ சம்போ! எனக்கு எங்கே தவறு நேர்ந்தது!

கிழவரின் கிரக நிலைக் கட்டத்தை அவன் மனம் மீண்டும் அசை போட்டுப் பார்த்தது. மீண்டும் மீண்டும் கணக்குகள் போட்டுப் போட்டு அவன் அழித்தான்.

முன்பே இதைப்பற்றி நான் ஏன் எண்ணிப் பார்க்கவில்லை! கஷ்டம்! கிழவரின் ஜாதகம் எனக்கு நன்றாக மனப்பாடம் ஆகியிருந்தும்! இதோ! கிழவருக்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆயுள் இருக்கிறது! பிரம்மாவே காவலுக்கு நின்றிருந்தாலும், இந்தத் திங்கட்கிழமைக்கு மேல் இந்த மனிதர் இருக்கப் போவதில்லை.

கொலையின் மூலம்தான் மரணம். மகாத்மாவின் மரணம். அகிம்சாவாதியின் இறுதி முடிவைப் பாருங்கள். ஆனால், இன்று தாண்டியிருந்தால், இவரின் மரணம் என் கைகளை விட்டு வேறொரு மனிதனின் கைக்குப் போயிருக்கும். அவ்வளவுதான் இவரின் மரணராசியும் மாறும். கிழவர் என்னைப் போல காலத்தின் பிடியில் சிக்கி நீந்திக் கொண்டே இருப்பார்.

ராம: ராம! விதி எவ்வளவு சரியாக என்னை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது! கிழவர் விடை பெற்றுக்கொண்டு புறப்படத் தயாராக இருக்கும்போதுதான் பிரம்மத்திற்கு அவரை அனுப்புவதற்காக நான் வந்து நின்றேன். ஹே, பகவான்! நீயும் கிழவரின் பக்கம்தானா!


கொலையாளி:

இந்தியர்களே, என்னுடைய இன்னொரு பிறவி பிரான்ஸ் நாட்டில். அங்கு ஒரு பிரபல பிரபு குடும்பத்தில் நான் பிறந்தேன். தாய், தந்தையின் விருப்பப்படி கடவுள் வழிபாடு விஷயங்களில் பயிற்சி பெற்றேன். இதன்மூலம் குடும்ப செல்வாக்கைக் கொண்டு போப்பாண்டவர், பிரெஞ்ச் மன்னர் ஆகியோரிடம் தனிக்கவனம் என்மீது படும்படிச் செய்ய முடிந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு புராதன நகரத்தில் இருந்த பாஷண்டர் கிறிஸ்தவர்களை அடக்குவதற்காக போப்பாண்டவர் அனுப்பி வைத்த சிலுவைப் போர்ப்படையின் ஆலோசகராக நான் நியமிக்கப்பட்டேன். அந்த நகரத்தை கிட்டத்தட்ட நாங்கள் முழுமையாகப் பிடித்து எங்கள் கைகளில் கொண்டு வந்த மாதிரிதான். நிலைமை அமைந்தது. காரணம்& பாஷண்டர்கள் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. மாறாக, கோட்டை வாசலைத் திறந்தே வைத்திருந்தார்கள். ஒருவேளை எங்களிடமிருந்து அவர்கள் கருணையை எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆட்சி செய்து கொண்டிருந்த பிரபுவும் மதத் தலைவரான பாதிரியாரும் தப்பித்து ஓடி விட்டார்கள். எங்களின் படை கொள்ளை, கொலை, காமவெறி என்று நகரத்தையே ஒரு வழி பண்ணியது.

அங்கிருந்த தேவாலயம் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது. மாலை நேர வாக்கில் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கிறிஸ்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தேவாலயத்திற்குள் நுழைந்து வாசல் கதவை அடைத்துக் கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும்.

நான் கோட்டை கோபுரத்தின் மீது அமர்ந்து கொண்டு கீழே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது படைத் தலைவன் என்னைத் தேடி வந்தான். அவன் சொன்னான், ‘‘பிதாவே... பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று ஒரு மிகப்பெரிய கூட்டம் தேவாலயத்தில் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நுழைந்து தங்கியிருக்கிறார்கள். அவர்களில் பாஷண்டர்களும் இருக்கிறார்கள். உண்மையான கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கதவை மூடிக் கொண்டிருக்கிறார்கள். நம் விஷயம் என்னவென்றால் அரச கட்டளைப்படி நாம் அடுத்த போர் முனைக்கு உடனடியாகப் போயாக வேண்டும். அதற்கு முன்பு நாம் எப்படி தண்டனையை நிறைவேற்றுவது?’’

நான் சரியான பதிலுக்காக பரமபிதாவிடம் பிரார்த்தித்தேன். படைத் தலைவன் எனக்கு முன்னால் முழங்கால் போட்டு அமர்ந்திருந்தான். அவனை என் கையில் இருந்த சிலுவையால் ஆசீர்வதித்த நான் சொன்னேன், ‘‘இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். எல்லோரையும் கொன்றுவிடு. கடவுளுக்கு யார் தேவைப்படுகிறார்களோ, அவர்களை கடவுள் எடுத்துக் கொள்வார்’’ புனித நீரைத் தெளித்து அவனை நான் போகச் சொன்னேன்.

கோபுரத்தின் மேல் நான் மீண்டும் காவல் தெய்வத்தைப் போல் போய் அமர்ந்தேன். தேவாலயத்தைச் சுற்றிலும் விறகையும், சுள்ளிகளையும், காய்ந்து போன புற்களையும் படையைச் சேர்ந்த வீரர்கள் ஏற்கனவே போட்டு தயாராக வைத்திருந்தார்கள். சூரியன் மறைந்ததும், அந்த மிகப்பெரிய தேவாலயத்தைச் சுற்றிலும் இன்னொரு தேவாலயத்தைப் போல நெருப்பு கொழுந்து விட்டு உயரமாக எழுந்து நின்றது.

இருட்டைக் கிழித்துக் கொண்டு நெருப்பு ஜுவாலைகள் காற்றில் கம்பீரமாக எழுந்தன. ‘‘எல்லாவற்றிற்கும் மேலான கடவுளே, வணக்கம்’’ & நான் உரத்த குரலில் சொன்னேன். மின்னல்களின் கூட்டத்தைப் போல நெருப்பு தேவாலயத்தை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டிருந்தது. கண்களைத் திறந்து மூடுகின்ற சமயத்திற்குள் அந்த உயர்ந்து நிற்கும் தேவாலயம் ஆகாயத்தையே எட்டிக் கொண்டிருக்கும் நெருப்பு இல்லமாக மாறியது. கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் தீயைப் பார்த்து நான் அச்சத்துடனும், வியப்புடனும் கைதட்டி மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தேன்.

நெருப்பில் சிக்கி எரிந்து கொண்டிருந்த மக்களின் அலறல் சத்தமும், கூப்பாடுகளும் என் காதுகளில் வந்து விழுந்தன. பாஷண்டர்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேவாலயம் சாம்பலாகிக் கொண்டிருப்பதை நான் வெறியுடனும் ஆவேசத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘‘உண்மை விசுவாசத்தின் பதிலடி!’’ & நான் உரத்த குரலில் சொன்னேன்: ‘‘சரித்திரத்தின் தவறு திருத்தப்பட்டிருக்கிறது!’’

நெருப்பு மாலையைப் போல, புகையும் ஜுவாலையும் காற்றில் விண்ணளவு உயர்ந்து நின்று, அழகு காட்டிக் கொண்டிருந்த அந்தக் கம்பீரமான தேவாலயத்தையும், அதில் அபயம் தேடிக் கொண்டிருந்த மக்களையும் முழுமையாக எரித்து சாம்பலாக்கி விட்டிருந்தன. புதிய சூரியன் உதித்ததைப் போல நகரத்தின் மேல் ஒரு சிவப்பு வெளிச்சம் பரவி முழுமையாக ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஒரு கையில் உருவிய வாளையும், இன்னொரு கையில் சிலுவையையும் வைத்துக் கொண்டு நான் முழங்கால் போட்டு அமர்ந்து கடவுளைத் தொழுதேன். மக்களின் கூப்பாடுகளும், ஓலங்களும் முற்றிலுமாக நின்று போயிருந்தன. நெருப்பு எரிந்து முடிந்திருந்தது. ஒரு நெருப்பு மாலையைப் போல தேவாலயம் எலும்புக்கூடாய் இருட்டில் நின்று ஒளிர்ந்தது.

நான் சிலுவையையும் வாளையும் கீழே வைத்தேன். வேதப் புத்தகத்தை அதன் உறையில் போட்டேன். முழு நிலவு அப்போது உதயமாகிவிட்டிருந்தது. சந்திரனையே நான் ஆவேசம் பொங்கப் பார்த்தேன். என்னுடைய பிறப்பு உறுப்பு முறுக்கேறி நின்றதை என்னால் உணர முடிந்தது. ஒருவித ஓசையை எழுப்பியவாறு நான் அதை வெளியே எடுத்தேன். கண்களைக் கொஞ்சம்கூட இமைக்காமல் சந்திரனையே பார்த்தவாறு நான் என் கையால் பிறப்பு உறுப்பை மேலும் கீழுமாய் ஆட்டிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து வந்த விந்தை அந்த மிகப்பெரிய நகரத்தின் மேல் வட்டமாக வீசியெறிந்தவாறு நான் அலறினேன். ‘‘கடவுளுக்கு வணக்கம்!’’ கீழே இருட்டில் இரத்தத்தில் மூழ்கியிருந்த படைவீரர்கள் பதிலுக்குச் சொன்னார்கள்: ‘ஆமென்!’

4

துண்டு நாட்டின் தந்தை

கொலையாளிக்கு வாந்தி வரும்போல் இருந்தது. அவன் போலீஸ்காரர்களைப் பார்த்துச் சொன்னான்: ‘‘எனக்குக் கொஞ்சம் உட்காரணும்போல இருக்கு. என்னால முடியல...’’ அவர்களின் சம்மதத்துடன், அவன் தரையில் உட்கார்ந்தான். தலையை கீழ்நோக்கி குனிந்திருந்தான். கண்களை மூடியிருந்தான்.

நான் மட்டும் தனியா? என்னுடைய எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரா?

பல தடவைகள் முயற்சி செய்து பார்த்தும் அவனால் வாந்தி எடுக்க முடியவில்லை. முழுமையாக அடைத்துக் கொண்ட காதுகளும், நீர் வழிந்து கொண்டிருந்த கண்களுமாய் மேல்மூச்சு, கீழ்மூச்சு விட்டவாறு அமர்ந்திருந்த அவன் தரையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் உரத்த குரலில் சொன்னான். ‘‘எனக்கு ஒரு போர்வை தாங்க. இல்லாட்டி குளிர்ல நான் செத்தே போயிடுவேன்.’’ சில நிமிடங்களுக்குப் பிறகு, அவன் உடம்பின்மீது ஒரு கம்பளியைக் கொண்டு வந்து போட்டார்கள். கொலையாளி நன்றிப் பெருக்குடன் தலையை உயர்த்திப் பார்த்தான். தன்னையே பார்த்துக் கொண்டிருந்த முகங்களில் கம்பளியின் சொந்தக்காரர் யார் என்பதை அவனால் பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் மன வேதனையுடன் தலையைக் குப்புற கவிழ்த்துக் கொண்டான்.


நண்பர்களே, எதற்காக என்னிடம் இப்படி கடினமாக நடந்து கொள்கிறீர்கள்? இலட்சக்கணக்கான இந்துக்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்த கிழவனுக்கு நிரந்தர மரணத்தைத் தர உங்களால் முடியுமா? ஆண் சிங்கமான சிவாஜி மகாராஜை நீங்கள் மறந்து விட்டீர்களா? இரத்தத்தை விலையாகக் கொடுத்து வாங்க வேண்டிய இடத்தில் இரத்தத்தை விலை தந்து வாங்கத்தான் வேண்டும். கண்ணீரால் முடியாது. துன்பத்தால் முடியாது. கொள்ளையால் ஆகாது. இருட்டறையில் ஒன்றும் நடக்காது. தொல்லைகளாலும் சாதிக்க முடியாது. இரத்தத்தைக் குடம் குடமாகப் பிடித்து வாங்க வேண்டும். பிராமணனான என்னுடைய கைகளில் பட்ட இந்தக் கிழவனின் ரத்தம் அவர் உங்களுக்குத் தரவேண்டிய விலையே. உங்களின் கொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான சகோதரர்களின் உயிருக்கான விலை அது.

ஆனால், அது போதாது. உடலுக்குக் கிடைத்த தண்டனை போதாது. என் வெடிகுண்டுகள் துளைத்தெடுத்த கிழவனின் உயிர் இன்னும் விலை தரவேண்டி இருக்கிறது. அது மீண்டும் ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வேறொரு பெண்ணின் பிறப்பு உறுப்பிற்கு முட்டை இடுவதற்காக ஆழத்தில் நீந்திக் கொண்டிருக்கும் கடல் ஆமையைப் போல காலம் காலமாக சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சம், அந்த உயிரை ஒவ்வொரு பிறவியிலும் நான்தான் தண்டிப்பேன். கிழவன் பாம்பாக இருந்தால், நான் கீரியாக இருப்பேன். அவர் மரமாகப் பிறந்தால் நான் கோடாரியாக இருப்பேன். அவர் மலராக இருந்தால், நான் புழு. அவர் மகானாக இருந்தால் நான் மரண ஆயுதம். அவர் புறாவாகப் பிறந்தால் நான் அதைப் பிடிப்பவன். அவர் நாய் என்றால் நான் பேயின் அணு. அவர் நாடாக இருந்தால் நான் பஞ்சமாக வருவேன். அவர் வீடாக இருந்தால் நான் வெண் கரையானாக இருப்பேன். அவர் கர்ப்பம் என்றால் நான் சிதைவு.

அவரை நீங்கள் நாட்டின் தந்தை என்று அழைக்கிறீர்களா? அவர் நாட்டின் கசாப்புக்காரன். அவர் ஏதாவதொரு நாட்டின் தந்தை என்றால், அது விரிந்து கிடக்கும் பாரதத்தில் இருந்து அவர் உயிருடன் பிரித்தெடுத்த அந்த துண்டு நாட்டிற்குத்தான் சரியாக இருக்கும். அவர் உங்களுக்காக தியாகம் செய்திருக்கலாம். உங்களிடம் விழிப்புணர்வு உண்டாக்க முயற்சித்திருக்கலாம். பணத்தைத் தேடி ஓடாமல் இருந்திருக்கலாம். இவை எல்லாமே அவரது மன விளையாட்டின் ஒரு பகுதி என்பதே உண்மை. அவரை விட மகாத்மாக்களான எத்தனையோ தியாக புருஷர்கள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வீரசிங்கம் என உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற, கப்பலில் இருந்து கடலில் நீந்தி தப்பித்த என்னுடைய குருநாதர் மட்டும் போதும், இப்படிப்பட்ட ஆயிரம் சிறுவர்களை அழிப்பதற்கு அகிம்சையாம்! அவரின் செப்படி வித்தைகளைவிட எவ்வளவு பழமையானது அகிம்சை! இருந்தாலும் ஒரு கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு நான் அவரை நோக்கி கைகளைக் குவித்தேன். காறித் துப்பியிருக்க வேண்டும். துஷ்டன்!

போலீஸ்காரர்கள் அவனை எழுப்பினார்கள். அவன் பார்வை போலீஸ்காரர்களைதத் தாண்டி தூரத்தை நோக்கிப் போனது. அவன் உதடுகளில் ஒரு வெளிறிப் போன புன்னகை உண்டானது.

நமஸ்தே ஸதா வத்சலே மாத்ருபூமே!

கொலையாளி:

இந்தியர்களே, இன்னொரு பிறவியில் நான் காசியில் ஒரு பெரிய சன்னியாசியாகப் பிறந்தேன். புனிதப் பயணம் வரும் பக்தர்களைக் கொள்ளையடிக்கும் சண்டாளர்களின் ஒரு கூட்டத்தை நானே பாதுகாத்து வளர்த்தேன். கொள்ளையடித்து அவர்கள் தரும் பணமும், பொருட்களும் என்னைச் செல்வந்தனாக்கியது. அதோடு எனக்கு திருப்தி வரவில்லை. சுடுகாட்டு காவலர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு இளம்பெண்களின் செத்துப்போன உடல்களைத் திருட்டுத்தனமாக புணர நினைக்கும் மனிதர்களுக்கு அவற்றைத் தந்து அதன்மூலம் நிறைய பணம் சம்பாதித்தேன். அப்படி வாழ்க்கை போய்க் கொண்டிருந்தபோது, காசியின் கன்னியான ராஜகுமாரி திடீரென்று மரணத்தைத் தழுவினாள். அவளின் செத்துப்போன உடம்புடன் உடலுறவு கொள்வதற்காக பணக்காரர்களும், முக்கிய நபர்கள் பலரும் என்னை அணுகினார்கள். பக்கத்து நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் பலரும் கூட இந்த விஷயத்திற்காக ரகசிய தூதர்களை அனுப்பி வைத்தார்கள். நான் அவர்களிடமிருந்து கணக்கு வழக்கு பார்க்காமல் பணத்தை வாங்கினேன். தந்திரச் செயல்கள் மூலம் ராஜகுமாரிக்கு உயிரைத்தர முடியும் என்று மகாராஜாவிடம் பொய் சொல்லிவிட்டு ராஜகுமாரியின் செத்துப்போன உடலை என்னுடைய ஆசிரமத்துக்கு கொண்டுவந்து விட்டேன். அவளின் அழகில் மயங்கிப்போன நான் முதலில் அவளைப்புணர ஆசைப்பட்டேன். விளைவு ஒரு வகையான விஷயம் அவள் உடம்பிலிருந்து புறப்பட்டு என் உடம்புக்குள் நுழைய, சில விநாடிகளிலேயே நான் வீங்கிப் போய், அவலட்சணமாகி, இரத்தம் கக்கி இறந்தும் போனேன்.

இன்னொரு பிறவியில் நான் ஸோதோம் நகரத்தின் பெரிய வணிகனாகப் பிறந்தேன். என் கடைக்கு வருகிற சிறு குழந்தைகளைக் கூட நான் உடலுறவு கொள்ள ஆரம்பித்தேன். ஸோதோம்&கொமோ நகரங்களை அவற்றின் பாவச் செயல்களுக்காக பூமியில் இருந்து இல்லாமல் செய்வதற்காக கடவுள் அனுப்பி வைத்த இரண்டு தேவதூதர்கள் அதே நகரத்தைச் சேர்ந்த லோத்தின் வீட்டிற்கு வந்தார்கள். வெளியே இருந்து வந்திருக்கும் இரண்டு அழகான வாலிபர்களைப் பற்றியும் நகர எல்லையில் காவல் காத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் என்னிடம் சொன்னார்கள். நானும் என் நண்பர்களும் லோத்தின் வீட்டை வளைத்தோம். "இரண்டு இளைஞர்களையும் எங்களின் உபயோகத்திற்கு விட்டுத்தரவேண்டும்" என்று உரத்த குரலில் சொன்னோம். லோத் வெளியே வந்து எங்களைப் பார்த்துச் சொன்னார். "என் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளை நீங்க அவமானப்படுத்துகிறது அவ்வளவு நல்லது இல்லை. எனக்கு ரெண்டு கன்னிப் பெண்கள் மகளாக இருக்கிறார்கள். அவுங்களை வேணும்னா உங்ககூட அனுப்பி வைக்கிறேன்."

அவ்வளவு தான்& நான் சத்தம் போட ஆரம்பித்துவிட்டேன். "யாருக்கு வேணும் உங்க மகள்கள்? அந்தத் தடியன்களை வெளியே அனுப்புறியா இல்லியா?" அடுத்த நிமிடம் லோத் உள்ளே போய் வாசல் கதவை மூடிக் கொண்டார். நாங்கள் கதவைத் தட்டி உடைக்க முற்பட்டோம். திடீரென்று எங்களால் எதையுமே பார்க்க முடியவில்லை. கண்கள் ஒரே இருட்டாகிவிட்டன. எங்களுக்குப் பார்க்கும் சக்தி இல்லாமல் போய்விட்டது. அழுது புரண்டவாறு நாங்கள் இருட்டில் தடவிக் கொண்டிருந்தோம். வழி தெரியாமல் அஞ்சி நடுங்கிப் போய் ஒருவரையொருவர் மோதிக் கொண்டு தெருவில் விழுந்து கிடந்தோம். எப்போதோ எழுந்தபோது, சூரிய உதயத்தைப் போல ஒரு வெளிச்சத்தைப் பார்ப்பது போல இருந்தது. நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். வெளிச்சத்திற்குப் பின்னால் கர்ண கொடூரமான ஒரு ஒலி கேட்டது. அந்த ஒலி பெரிதாகப் பெரிதாக ஆகாயத்தில் இருந்து கந்தகமும் நெருப்பும் கொட்ட ஆரம்பித்தன. என் உடல் மெதுவாக எரிய ஆரம்பித்தது. வாய்விட்டு அழுது, கண் பார்வை இல்லாமல், வேதனையால் துடித்து நான் செத்தேன்.


5

வெற்றித் திலகம்

போலீஸ் வண்டியை நோக்கி கொலையாளி தலையை உயர்த்தியவாறு நடந்தான். அடி விழுந்த உடலின் பகுதிதான் பலமாக வலித்தது. வேதனை தெரிந்த இடங்களில் கையால் தடவிப் பார்க்க அவன் விரும்பினான். விலங்குகளைத் தொட்டதும் என்ன காரணத்தாலோ அவன் கைகள் அப்படியே நின்றன. மக்களை விலக்கிக் கொண்டு போலீஸ்காரர்கள் உண்டாக்கிய பாதை வழியே நடக்கும் போது, அவன் இரு பக்கங்களிலும் நின்றிருந்த மக்களின் முகங்களை ஒருவித எதிர்பார்ப்புடன் பார்த்தான். என்ன காரணத்தாலோ, அவன் முகம் வாடியது.

பாரதமாதாவின் பிள்ளைகள், என்னுடைய சகோதரர்கள் என்னைக் கோபத்துடன் வெறித்துப் பார்க்கிறார்கள். கஷ்டம்! உங்களுக்கு இது கூடவா தெரியவில்லை? அதாவது காயத்ரி மந்திரத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு பூணூல் என்னுடைய செயலை வளையம் செய்கிறது. இருந்தாலும் சுயநலம் இல்லாத சத்திரிய தர்மத்தை இந்துக்களின் பாதுகாப்பிற்காக நடத்திக் காட்டியவன் நான். ஆனால், இந்துக்களாகிய நீங்கள் தான் என் கைகளில் விலங்கு அணிவிக்கிறீர்கள்!

பரவாயில்லை. குருஷேத்திரத்தில் பார்த்தன் பார்வை தெரியாத இடங்களில் கூட பார்த்ததெல்லாம் அவன் உறவினர்களைத்தானே! நான் பூமியில் இருந்து நீக்கிய கிழவர் கூட ஒரு சனாதன இந்துதானே!

இந்தியர்களே, உங்களுக்கு இன்னுமா புரியவில்லை? வெறுமனே இந்துவாக இருப்பதல்ல பாரதீயத்துவம். உண்மையான இந்துவாக இருப்பதுதான் இங்கு முக்கியம். இதைத்தான் குருஜி கூறியிருக்கிறார். அவர் சொன்ன இந்துத்துவம் இதுதான். அதை அடைவதற்காக ஒரு இந்துவின் குருதியை எடுக்க வேண்டி நேரிடலாம். பரவாயில்லை. தர்மத்தின் வெற்றிக்கு இரத்தத்தின் உரம் கட்டாயம் தேவைப்படலாம். அதனால் என்ன? தர்மம்தானே இங்கு குலதெய்வம்!

ஒரு ஆள் சற்று எம்பி அவனை மிகவும் பலமாக அடித்தான். அவன் காதுகள் அடைத்தன. கண்கள் இருண்டு போயின.

சகோதரர்களே, இந்த உடலை எதற்கு துன்பப்படுத்துகிறீர்கள்? எவ்வளவு வேதனை உண்டானாலும் என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என்னுடைய கடமையை முடித்ததற்காக என்னுடைய உடலை இந்துக்கள் துன்பப்படுத்துவதைத்தான் என்னால் கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தன்னை அடிப்பதற்காக மீண்டும் அவர்கள் கைகள் நீளுவதை அவன் பார்த்தான். சுற்றிலும் நெருங்குவதையும் தள்ளுவதையும் அவன் கவனித்தான். யாரோ பிடித்ததில் அவனிடமிருந்த கம்பளிப்போர்வை கீழே விழுந்தது. அதை எடுத்துத் தரும்படி ஒரு போலீஸ்காரனிடம் மவுனமாக அவன் கெஞ்சினான். தொடர்ந்து அவன் போலீஸ் வாகனத்திற்குப் பக்கத்தில் போனதும் நின்றான். போலீஸ் வளையத்தையும் மீறி ஒரு மனிதன் அவனை மிகவும் பலமாகத் தாக்கினான். அவன் கால்கள் தடுமாறி, ஒரு பக்கம் விழுந்தான்.

அகிம்சையைப் போதித்த மனிதரின் சீடர்கள்! இவ்வளவுதான் அகிம்சை! கிழவரின் சூடு மாறாத சடலத்தைச் சாட்சியாக வைத்துக் கொண்டு அவரின் சீடர்கள் இம்சைக்குள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்!

போலீஸ் தங்களின் பாதுகாப்பு வளையத்தை மேலும் பெரிது படுத்துவதை, அவன் கீழே விழுந்து கிடந்த இடத்தில் இருந்தவாறு பார்த்தான். கைகளில் விலங்கு மாட்டப்பட்டிருந்ததால், எழுந்து நடக்க முடியாமல் அவன் சுருண்டபடி படுத்துக்கிடந்தான்.

கொஞ்சம் தள்ளி கிழவர் படுத்துக்கிடக்கிறார்! இங்கே நான்! ஒரே நிலையில் இருவரும்!

போலீஸ்காரர்களே, என்னை நீங்கள் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது? நீங்கள் காப்பாற்ற வேண்டியது முட்டாள்களான இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களைத்தான். ஒருவேளை இவர்கள் எல்லோருமே இந்துக்களாக இருப்பார்களா? கிழவரின் கவனம் முழுவதும் இவர்கள் மீதுதானே இருந்தது. அப்படிச் சொல்வதற்கில்லை. இவர்கள் கிழவரின் சதியில் சிக்கிக் கொண்டே விலை குறைந்த இந்துக்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். கஷ்டம்! சும்மாவா இவர்களை யவனர்களும், முஸ்லீம்களும், வெள்ளைக்காரர்களும், கிறிஸ்தவர்களும், மொகலாயர்களும் பௌத்தர்களும் அடிமைப்படுத்தினார்கள். கம்பீரமில்லாத வர்க்கம்! ஆணவமில்லாத வம்சம்! சுய மரியாதை இல்லாத கூட்டம்! துப்பாக்கியைத் தூக்கிய இந்த பிராமணனைப் பார்த்து படித்துக் கொள்ளுங்கள். குருதியைச் சிந்திய இந்த வீரனைப் பார்த்து தெரிந்து கொள்-ளுங்கள்.

போலீஸ் மக்களைக் கலைத்த போது தூரத்தில் கிழவரின் சடலத்தைச் சுற்றிலும் கூடியிருந்த மக்கள் கூட்டத்தைக் கொலையாளி பார்த்தான். அவன் முகத்தில் அவநம்பிக்கை படர்ந்தது.

அந்தச் சடலத்தை வைத்து அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்! வாழும் போது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சாபமாக வாழ்ந்த மனிதரின் செத்துப் போன உடல்! இவர்கள் எந்தக் காலத்திலும் வரலாற்றின் பாடத்தைப் படிக்க மாட்டார்களா? எதிரிக்காக புலம்புகிறார்கள். காப்பாற்றியவனுக்கு விலங்கு போடுகிறார்கள். எதிரியின் சடலத்தை வணங்குகிறார்கள். காப்பாற்றியவனைக் கொடுமைப்படுத்துகிறார்கள். எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான மக்கள்!

ஒரு போலீஸ்காரன் அவன் எழுவதற்கு உதவினான். தொடர்ந்து அவன் மேல் கம்பளிப் போர்வையை எடுத்து மூடினான். வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு, கொலையாளி ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தான். விலங்கு இடப்பட்டிருந்த கைகளை தலைக்கு மேலே உயர்த்தினான். அவன் முகத்தில் பலவித உணர்வுகள் தோன்றி மறைந்தன.

நீங்கள் என்னை இருட்டறையில் தள்ளப் போகிறீர்கள் அல்லவா? கலிகாலம்! தர்மத்தின் வீழ்ச்சி! தர்மம் தழைப்பதற்காக ஆயுதத்தைத் தூக்கியதற்காக நீங்கள் கட்டிப் போட்ட இந்தக் கைகள் இரண்டையும் சாட்சியாக வைத்து நான் இந்த நாட்டின் நான்கு திசைகளையும் பார்த்துச் சொல்கிறேன். 'எதிர்காலம் என்னுடையது தான். உண்மையான இந்துக்களுக்கானது. விரிந்து கிடக்கும் பாரதபூமி நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும். எமனின் சுருக்குக்கயிறை கழுத்தில் அணிந்து அந்தப் புல்வெளியில் படுத்துக்கிடக்கும் பாவியான கிழவரை இனியாவது நீங்கள் மறக்க வேண்டும். இனியாவது நீங்கள் யார் என்பதையும் நான் யார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

போலீஸ்காரர்களே, கிழவரின் இரத்தத்தைக் கொஞ்சம் தொட என்னை அனுமதிக்க வேண்டும். அந்த இரத்தத்தால் நெற்றியில் ஒரு வெற்றித்திலகம் நான் இட்டுக் கொள்ளட்டுமா?

அவன் தளர்ந்து போய், வாகனத்திற்குள் ஏறினான்.

கொலையாளி:

இந்தியர்களே, வேதனை நிறைந்த எத்தனை பிறவிகள் வழியாக இந்த உயிர் கடந்து வந்திருக்கிறது! ஒரு பிறவியில் கர்ப்பப்பையிலேயே வெட்டி நறுக்கப்பட்டேன்.

என் தாய் திரியின் கர்ப்பப்பையில் அப்போது நான் இருந்தேன். அப்போது வடிவமே இல்லாமல் வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியபடி வந்த இந்திரனைப் பார்த்து பயந்து போய் அலறினேன். காசியபன் மூலம் என்னை என் தாய் கர்ப்பம் தரித்ததற்காக பொறாமைத்தீயில் வெந்து தகித்த என் தாயின் சகோதரி அதிதி, காசியபன் மூலம் தனக்குப் பிறந்த மகனான இந்திரனை என்னைக் ª££ல்வதற்காக அனுப்பியிருந்தாள்.


இந்திரன் என் தாய் திதியை, பணிவிடைகள் செய்து சுகமாக உறங்க வைத்த பிறகு உருவமே இல்லாமல் கர்ப்பத்திற்குள் நுழைந்தான்.

அவனிடமிருந்த வஜ்ராயுதத்தின் முதல் வெட்டில் என் வலது கை துண்டானது. தொப்புள் கொடியால் கர்ப்பப் பைக்குள் கஷ்டப்பட்டுக் கிடந்த நான் எப்படித் தப்பிக்க முடியும்? நான் உரத்த குரலில் அலறினேன். இந்திரன் என்னை ஏழு துண்டுகளாக வெட்டினான். ஒவ்வொரு துண்டும் தனித்தனியாக அழுதது. என் தாய் எங்கே எழுந்து விடப் போகிறாளோ என்று பயந்த இந்திரன் 'அழாதே' என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் ஏழு துண்டுகளையும் மேலும் ஏழேழு துண்டுகளாக நறுக்கினான். மொத்தம் நாற்பத்தொன்பது துண்டுகள்! சொல்லப்போனால்& உலகத்திலேயே புராதனமான கர்ப்பச்சிதைவிற்கு இரையாகிப் போனவன் நான். இருந்தாலும் நான் நாற்பத்தொன்பது துண்டுகளாகப் பிறந்தேன். ஆனால் இந்திரனுக்குச் சமமான மகனை இழக்க நேரிட்ட என் தாயின் துக்கத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். தாயின் கர்ப்பப்பையை போர்க்களமாக மாற்றிய என்னுடைய விதியை என்னவென்பது?

இன்னொரு பிறவியில் நான் பிறந்தது துவாரகையில். அங்கு நான் ஒரு மது விற்பனையாளனாகப் பிறந்தேன். மதுவில் வெளிநாட்டு போதை மருந்துகள் பலவற்றையும் கலந்து நான் பெரிய அளவில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். ஸ்ரீகிருஷ்ண பகவானின் ஆணைப்படி பிரபாஸா தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்ட யாதவர் குலத்தைச் சேர்ந்தவர்களை நான் மதுவிற்கு அடிமைகளாக்கினேன். பாவ பரிகாரத்திற்காக பகவான் பிரத்யேகமாக சொல்லி நடந்த தீர்த்த யாத்திரை அது பகவானின் புத்திரர்களும், பேரன்மார்களும், பரமபத்ரன், ப்ரத்யும்னன், சாம்பவன், உக்ரசேனன், குருசேனன், உள்ளிட்ட யாதவ வீரர்களும் 'மைரேகம்' என்ற மதுவை அருந்தி அட்டகாசம் பண்ணிக் கொண்டு நடந்தார்கள். விஷம் கொண்ட உயிரினங்களை வேகவைத்து நான் எடுத்த வீரிய பொருட்களையும், கஞ்சாவையும் நான் மதுவுடன் கலந்திருந்தேன்.

என்னுடைய குதிரை வண்டி மதுவை விற்பனை செய்தவாறு அந்தக் கூட்டத்திற்குப் பின்னால் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. யாதவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதுவின் போதையில் தள்ளாடினார்கள். அவர்கள் இஷ்டப்படி வாக்குவாதங்களில் ஈடுபட்டார்கள். ஒருவரையொருவர் இடித்தார்கள், தள்ளினார்கள், வாயில் வந்த கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டிக் கொண்டார்கள். ஆயுதங்களைத் தூக்கித் தாக்கினார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டை போட ஆரம்பித்தார்கள். என்னுடைய ஆட்கள் மதுப்பாத்திரங்களுடன் உள்ளே நுழைந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களின் தாகத்தைத் தணித்தார்கள். போரின் கடுமை அதிகரித்தது. பாதை முழுவதும் சடலங்களால் நிறைந்தது. எங்கு பார்த்தாலும் இரத்தம் சிந்திக் கிடந்தது. ஆயுதங்கள் முழுமையாக வீணாய்ப் போனவுடன், வாட்களைப் போல கூர்மையும் பலமும் கொண்ட ஏரகைப்புல் ஓலைகளைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்தார்கள். யாதவர்களில் முக்கால் வாசிப்பேர் செத்து விழுந்தார்கள். பலபத்ரன் பைத்தியம் பிடித்தவனைப் போல போர்க்களத்தில் எஞ்சியிருந்த யாதவர்கள் ஒவ்வொருவரையும் அடித்தே கொன்றான். பிறகு எனக்கு நேராகப் பாய்ந்து வந்தான். நான் இரத்தக்களத்திற்கு மத்தியில் விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். அப்போது கால் இடறி, கீழே விழுந்தேன். நிலத்தில் ஒடிந்து கூர்மையாக இருந்த ஒரு மரத்துண்டு கழுத்துக்குள் நுழைய, நான் மரணத்தைத் தழுவினேன்.

6

வாக்குமூலம்

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே கூடியிருந்த மக்களின் உரத்த குரல்கள் கொலையாளி அமர்ந்திருந்த அறைக்குள் தெளிவாகக் கேட்டது. இடையில் போலீஸ்காரர்கள் கதவைத் திறந்தபோது, அவன் வெளியே நின்றிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தான். குளிர்ந்து போய், தளர்ந்து, பசி ஏற்பட்டு, தாகம் உண்டாகி அவன் மரபெஞ்சில் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

வெளியே மக்கள் கூட்டம் உரத்த குரலில் கத்துவது அவன் காதில் விழுந்தது.

அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்களா? விலங்குகள் மாட்டப்பட்ட என்னைக் கொல்ல இப்போது எந்த கோழையாலும் முடியுமே!

ஒரு இளம் வயது போலீஸ்காரன் தேநீருடன் வந்தான். அதை நன்றிப் பெருக்குடன் கையில் வாங்கினான் அவன். போலீஸ்காரனின் இரக்கம் கலந்த குணத்தைப் பார்த்து அவனுக்கு இரக்கம் உண்டானது. மனம் சற்று இலேசான மாதிரி உணர்ந்தான்.

போலீஸ்காரனைப் பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளி அவ்வளவுதான். என்னை வெறுக்க வேண்டிய காரணம் அவனுக்கு இல்லை.

கொலையாளி தேநீர் அருந்தி முடிக்கும் வரையில் அங்கேயே நின்றிருந்த போலீஸ்காரன் கப்பை வாங்கிக் கொண்டு போனான். கொலையாளி சுவர் மேல் இலேசாகச் சாய்ந்தவாறு அமர்ந்து, சற்று கண்களை மூடினான்.

திடீரென்று அவன் திடுக்கிட்டு கண் விழித்தான். தான் ஒரு நிமிடம் உறங்கினோமோ அல்லது நீண்ட நேரம் உறங்கி கொண்டிருந்தோமோ என்பது பற்றி அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவன் நேரத்தைப் பார்த்தான். ஆனால் கடிகாரம் காணாமல் போயிருந்தது-

நான் இனிமேல் நேரத்தைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது என்கிறீர்களா? முட்டாள்கள்! உங்களின் நேரத்தைப் பார்த்து நான் செயல்படக்கூடியவன் அல்ல. புரிந்து கொள்ளுங்கள்! நான் யுகங்களைப் பார்த்து, அதன்படி நடப்பவன், உங்களின் கடிகாரங்கள் காட்டும் சாதாரண நேரத்தை அடியொற்றி அல்ல, காலப் பெருவெள்ளத்தில் தான் என்னுடைய உயிரின் சமய ரேகைகள். பிச்சைக்காரர்கள்! நாய்கள்! இனத்துரோகிகள்!

குளிர் ஒரு பெரிய இயந்திரத்தைப் போல அவனைப்பிடித்து ஆட்டிப் படைத்தது.

கதவு திறக்கப்பட்டது. கூட்டமாக போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தார்கள். கொலையாளி அங்கிருப்பதைப் பற்றி அக்கறையே இல்லாதது மாதிரி அவன் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். அவன் அவர்களையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

நீங்கள் என்னுடைய வாக்குமூலத்தை இப்போது குறிக்கப் போகிறீர்கள் அல்லவா? கலிகாலம்! அப்படியென்றால் நீங்கள் அர்ஜுனனின், அபிமன்யுவின், ஸ்ரீகிருஷ்ண பகவானின், ஸ்ரீராமச்சந்திரனின் வாக்குமூலத்தையும் எடுப்பீர்களா?

நீங்கள் என் பெயரைக் கேட்கிறீர்களா? நண்பர்களே, பெயர்களை வெறுமனே உச்சரிக்கக் கூடிய நேரமில்லை இது. எதற்காக நீங்கள் என் பெயரைக் கேட்கிறீர்கள்? என் கடமை அதன் உச்ச எல்லையில் நிற்கின்ற நேரத்தில் என்னுடைய பெயர் உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன?

கொலை செய்யப்பட்ட மனிதரை எனக்குத் தெரியுமா என்று கேட்கிறீர்களா? சரிதான்... இல்லாவிட்டால் நான் ஏன் அந்த மனிதரைக் கொல்ல வேண்டும்? எனக்கே அறிமுகமில்லாத ஒரு ஆளைக் கொல்வதற்கு நான் என்ன பைத்தியக்காரனா? அவரை எனக்கு நன்றாகவே தெரியும். நீண்ட காலமாகவே தெரியும். அவரின் ஒவ்வொரு வாக்கையும் பார்வையையும் கூட நான் நன்கு அறிவேன்.


அவரின் பெயரைத் தெரியுமா என்கிறீர்களா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஒரு இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போது தட்டியெழுப்பிக் கேட்டாலும் அந்த மனிதரின் பெயர் என் நாக்கு நுனியில் எப்போதும் இருக்கும். ஆனால், நான் சொல்லமாட்டேன். இனி பெயர்களைச் சொல்லி என்ன ஆகப்போகிறது? சாகவேண்டிய மனிதர் செத்தாகிவிட்டது. கொலை செய்ய வேண்டியவன் கொலை செய்து விட்டான். செத்துப் போன மனிதருக்கு இனி பெயரால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. இனி யார் அழைத்தாலும் அவர் கேட்கப் போவதில்லை. ஒரு கல்லறை உண்டாகும் பட்சத்தில் அதில் அவரின் பெயரை எழுதலாம். ஆனால், அவ்வளவு நல்லவர்களா இந்து மக்கள்?

நீங்கள் என்னை பயமுறுத்துகிறீர்கள். இல்லையா? கஷ்டம்! நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னைக் கொடுமைப்படுத்தாதீர்கள். இது ஒரு தெரு குண்டனின் முரட்டுத்தனமான உடம்பல்ல. இது சத்தியவானும் கடவுள் நம்பிக்கை கொண்டவனும் நாட்டுப்பற்று உள்ளவனுமான ஒரு பிராமணனின் உடம்பு. கொடுமைகளை இந்த உடம்பால் தாங்கிக் கொள்ள முடியாது. எங்களின் ஆத்மாவிற்குத்தான் பலம் அதிகம். உடம்புக்கு அல்ல. என்னைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

தனக்கு முன்னால் நாற்காலிகளில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரிகளைக் கொலையாளி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அழகான தோற்றத்தைக் கொண்டிருந்த ஒரு இளம் போலீஸ் அதிகாரி சிகரெட்டைப் பற்றவைத்தபோது, அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அவர்கள் வீட்டுக்குத் திரும்பி ஓய்வெடுக்கிறபோது, மனைவிகளிடமும் பிள்ளைகளிடமும் தன்னைப் பற்றி என்ன கூறுவார்கள் என்று அவன் எண்ணிப் பார்த்தான். அவன் தொண்டை வற்றிப் போயிருந்தது. ஒரு கப் தேநீர் இப்போது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.

இந்திய சகோதரர்களே, நீங்களே சிந்தித்துப் பாருங்கள். உண்மையில் கிழவர் ஏற்கனவே செத்துப் போயிருக்கலாமே! எத்தனை தடவை அவர் மரணத்தின் எல்லை வரை போவதாக நடித்திருக்கிறார்! எதற்காக அவர் சாகவில்லை? உயிரைத் தியாகம் செய்யவில்லை? எதற்காக என் கைகளுக்காக அவர் காத்திருந்தார்? வக்கிரபுத்தி! அவருக்கு என்னவோ தெரிந்திருக்கிறது. நான் வாசல் கதவைத் தட்டுவதற்காகக் காத்திருந்தார் அந்த மனிதர்! ஹா! கிழவர் பிறக்காமலே இருந்திருந்தால்...! என்னுடைய பிராமண பிறப்பை சத்ரிய தர்மத்திற்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டிய சூழ்நிலையே உண்டாகியிருக்காது.

நான் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் எங்கேயிருந்து வந்தவன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்னைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் விலங்கின் எல்லையில் இந்த உடல் உங்களுக்கு கிடைக்கும். ஆனால், அதற்குள் இருக்கிற ஆத்மாவை உங்களால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியுமா? உங்கள் செயல்களில் இருந்து உங்களை யார் காப்பாற்றப் போகிறார்கள்?

கொலையாளி:

இந்தியர்களே, என்னை மிகவும் அதிர வைத்த பிறவியைப் பற்றி இப்போது கேளுங்கள். அயோத்தியில் வண்டாகப் பிறந்து மரணமடைந்த நான் சரயு நதியில் மீனாகப் பிறந்தேன். மிகவும் பலசாலியும் அகங்காரியுமான நான் ஒரு மீன் கூட்டத்திற்கே தலைவனாக இருந்தேன். நதியில் விழும் உணவுப் பொருட்கள் மேல் முழு ஆதிக்கமும் செலுத்தக் கூடியவன் நானாக இருந்தேன். நான் தின்றது போக மீதியிருப்பதைத்தான் மற்றவர்கள் தின்னவேண்டும்.

ஒருநாள் உயிர் இருக்கிறது போல் தோன்றுகிற சடலம் நதி வழியே கடந்து சென்றது. நானும் மற்ற மீன்களும் அதைப் பின் தொடர்ந்தோம். உயிர் இருப்பதற்கான அடையாளம் எதையும் சடலம் காட்டவில்லை என்பது உறுதியான பிறகு நான் முதலில் போய் அதைக் கடித்தேன். வலது பாதத்தில் நான் கடித்தது. அப்போது பாதத்தின் உள் பக்கத்தில் நீலநிறத்தில் காணப்பட்ட ஒரு அடையாளத்தை நான் பார்த்தேன். அப்போது அயோத்தியில் என்னுடைய பழைய பிறப்பு ஞாபகத்தில் வந்தது. கடினமான மனதுடனும் கவலையுடனும் குற்ற உணர்வுடனும் நான் நதியின் ஆழத்தை நோக்கி நீந்தினேன். அடியில் இருந்த சேறை நோக்கி என் உடலை படுவேகமாகச் செலுத்தினேன். சேற்றில் என்னை நானே மூழ்கடித்து இறந்தேன்.

நான்தான் சத்ரபதியின் முதல் குதிரையாக இருந்தேன். என்னுடைய ஆணவத்தால் நான் இளைஞனான சிவாஜியைக் கீழே தள்ளி விட்டு, மிதிப்பதற்காக என்னுடைய முன்னங்கால்களை உயர்த்தினேன். அடுத்த நிமிடம் அவர் மின்னல் வேகத்தில் வாளை உருவி என் இதயத்தில் சொருகினார். சிவாஜியின் மேல் இரத்தத்தைச் சிந்தியவாறு நான் செத்து விழுந்தேன்.

நான்தான் நாதிர்ஷாவின் பிரதான அடியாள். சாந்தினி சவுக்கின் ஓடைகளில் இரத்தம் மழை வெள்ளத்தைப்போல பாய்ந்து வந்து கொண்டிருந்தபோது, என்னுடைய தலைமையில்தான் மயில் சிம்மாசனம் கொள்ளையடிக்கப்பட்டது. பெண் வேடமிட்டு கோமாளித்தனங்கள் பலவற்றையும் காட்டியவாறு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த என்னைத் தங்களின் தலைமேல் வைத்தவாறு ஊர்வலமாக வீரர்கள் கொண்டு சென்றார்கள். அன்று இரவு வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்று நான் அலிகளின் கூட்டத்தைத் தேடிப்போனேன். ஒரு இளம் அலியுடன் உடல் இன்பம் கண்டுகொண்டிருந்தபோது, என் தலையில் எமன் தாக்கியதன் விளைவு, பிடரி அடிபட்டு நான் மரணமடைந்தேன்.

கண்ணகி மார்பகத்தை வீசி எறிந்தபோது, ஓடிப்போய் அதைப்பிடித்த தெருப் பிச்சைக்காரனாக நான் இருந்தேன்.

தைமூரின் படையில் போரில் தோற்ற மன்னர்களின் பற்களைப் பிடுங்கும் வேலைக்காரனாக நான் இருந்திருக்கிறேன். தேவி சரஸ்வதியைப் பார்ப்பதற்காக பிரம்மா மேலே முளைக்க வைத்த தலையாக நான் இருந்திருக்கிறேன்.

சாக்ரட்டீஸை விஷம் வைத்துக் கொல்லச் சொன்ன நீதிபதி நான்தான். ரோமில் காஸீஸியத்தில் மிருகங்களுக்கு உணவாகத் திறந்துவிடப்படுகிற கைதிகளைக் கொன்று தின்னும் சிங்கங்களில் ஒன்றாக நான் இருந்திருக்கிறேன்.

க அபய்க்கு முன்னால் முகத்தை நிலத்தில் வைத்து தொழுகை செய்து கொண்டிருந்த முஹம்மது ரஃபியின் மீது ஒட்டகத்தின் குடலை வீசியெறிந்த மனிதன் நான்தான்.

பரீக்ஷித் மகாராஜாவைக் கொல்வதற்காக தட்சன் கிருமியாக ஒளிந்திருந்த மாதுளம்பழத்தை பிராமணவேடம் தரித்து மன்னரின் சன்னதியில் கொண்டுபோய் கொடுத்த இளைஞன் நான்தான்.

ஜெரிக்கோ நகரத்தைத் தகர்ப்பதற்காக வந்து சேர்ந்த ஜோஷாவின் படைக்கு ஆலோசனைகள் தந்து நகரம் அழியக் காரணமாக இருந்த ரஹாப் என்ற விபச்சாரியாக இருந்தது நான்தான்.

இப்லீஸின் வஞ்சனையால் ஆதாமும் ஏவாளும் கொன்று வேக வைத்து தின்ற இப்லீஸின் குழந்தை கன்னஸ் நான்தான்.

பிறப்பு உறுப்பில் விஷப்பற்களை வைத்துக் கொண்டு பார்வதி வேடத்தில் சிவனைக் கொல்வதற்காகச் சென்றது நான்தான்.

முதல் அணுகுண்டு மூலம் ஆயிரம் சூரியன்களைப்போல வெடித்துச் சிதறிய அணுசக்திகூட நான்தான்.

 


7

இதுதான் என் பெயர்

வெளியே ஆரவாரம் சற்று குறைந்திருந்தது. ஒரு போலீஸ்காரன் எரிந்து கொண்டிருந்த ஒரு கரி அடுப்பை கொலையாளிக்கும் அதிகாரிக்குமிடையில் கொண்டு வந்து வைத்தான். அடுப்பில் இருந்து தனக்கு நேராக வந்த சூடான புகையை கொலையாளி மூச்சில் கலந்து சுவாசித்தான். அடுப்பின் சிவந்த வெளிச்சத்தை அவன் ஒரு நண்பனைப் பார்ப்பதுபோல் பார்த்தான். தந்தை, பாட்டன் பக்கத்தில் இருக்க, ஹோம குண்டத்தின் தீக்கனல்களின் பிரகாசத்தைப் பார்த்தவாறு கனவு கண்டு கொண்டிருந்த ஒரு சிறுவன் அப்போது அவனின் ஞாபகத்தில் வந்தான். எங்கோ தூரத்தில் வீசியெறியப்பட்டவனைப் போல அவன் ஒரு நிமிடம் சிலிர்த்தான். போலீஸ் அதிகாரிகள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட போதுதான் தான் அழுவதையே அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. விலங்கு போடப்பட்ட கைகளை உயர்த்தி அவன் கண்ணீரைத் துடைத்தான். முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தான் அவன். நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவன் சொன்னான்.

‘‘நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ருபூதமே

த்வயாஹிந்துபூமே ஸீகம் வர்த்தி தோஹம்...’’

அவன் மீண்டும் குளிரை உணர்ந்தான். காலைநேர ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பதாகைக்கு முன்னால் தான் ஒரு படை வீரனாக நின்று கொண்டிருக்கும் காட்சி அவன் திறந்த கண்களுக்கு முன்னால் ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது.

போலீஸ்காரர்களே, உங்களைப் போன்ற படைவீரன்தான் நானும். என்னுடைய போர் சீருடையும் காக்கிதான். காக்கிக்கும் காவிக்கும் மண்ணின் நிறம்தான். தெரிகிறதா?

இந்தியர்களே, கீதை சொல்கிறது: ‘‘அர்ஜுனா... எனக்கும் உனக்கும் எத்தனையோ பிறவிகள் கடந்து போயிருக்கின்றன. என்னுடைய, உன்னுடைய அந்தப் பிறப்புகள் அனைத்தையும் நான் அறிவேன். வீரனான அர்ஜுனனே, உனக்கு அது தெரியவில்லை.

ஆனால், துர்பாக்கியசாலியான நான் இதோ எல்லாவற்றையும் தெரிந்திருக்கிறேன். நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை, கிழவரின் சாபமாக இருக்குமோ கசப்பான அந்த நினைவுகள்? இல்லாவிட்டால் பிறப்பு சம்பந்தமான இந்த நினைவுகள் என்னுடைய முக்தியின் ஆரம்பமாக இருக்குமோ? அப்படியென்றால் இப்போதைய என் நினைவுகள் கடவுளின் வேலையாகத்தான் இருக்கும்!

கர்ம சக்கரத்திற்கு முன்னால் நான் பதைபதைப்புடன் நின்றிருக்கிறேன். பார்த்தன் பகவானிடம் கேட்ட அதே கேள்விதான் என் நாவிலும்: ‘‘மனிதன் விருப்பப்படவில்லையென்றாலும் என்ன காரணத்திற்காக அவன் பாவம் செய்ய நேரிடுகிறது?’’ பகவான் பதில் சொன்னார்: ‘‘மனிதனை வற்புறுத்தி பாவம் செய்ய வைக்கிற சக்தி ரஜோ குணத்தில் இருக்கிறது. அந்த ரஜோ குணத்தை அதிகப்படுத்தும் அந்த சக்திக்குப் பெயர்தான் காமம். அந்தக் காமத்தை அடக்குகிறபோது அதுவே குரோதமாக மாறுகிறது...’’

காமம்! காமம்! குரோதம்!

காமத்தின் கொழுப்பு தடவாமல் உலகத்தில் என்ன இருக்கிறது? குரோதத்தையும் எடுத்துக் கொள்வோம்... எல்லாவற்றின் மீதும் கறுத்த சிறகை அடித்துக் கொண்டு அது பறந்து திரிகிறது. பிறகு எப்படித்தான் நாம் தப்பிப்பது?

கஷ்டம்! கீதை வாக்கியம் என் சந்தேகத்தைப் போக்கவில்லை.

என்னுடைய காமம் உடம்பின் ஆசையைத் தீர்ப்பது மட்டுமே! என்னுடைய குரோதம் தடை செய்யப்பட்ட காமம் அல்ல. அது ஒரு மன வியாதி அல்ல. இந்தியர்களே, எனக்குப் பைத்தியம் கிடையாது.

குருஜியின் வார்த்தைகளை மூளைக்குள் செலுத்துகிறது என்னுடைய குரோதம். குரோதத்தின் வேதாந்தம்தான் என்னுடையது. இரத்தத்தின் வேதாந்தம் பாரதாம்பிகைக்கு நான் இரத்தத்தால் அபிஷேகம் செய்கிறேன்.

நான் பிரம்மத்தின் படியில் ஏற்றிவிட்ட அந்தக் கிழவர் காமத்திற்கு அடிமையாக இருந்தார். உடலை அவர் எப்படியெல்லாமோ அடக்கினார். ஆனால், ஆத்மாவின் காமத்தில் மூழ்கிப்போனார். மகாத்மா என்ற பெயர்! ஆன்மீக வெளிப்பாடு! அவற்றை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார். குரோதத்தை அவர் அகிம்சை என்ற பட்டுத்துணியில் சுற்றி வைத்துக் கொண்டார். ஏதோ சில தகிடுதத்த செயல்கள் மூலம் அவர் முக்தியடைந்து விட்டார். எங்கேயோ சில குறுக்கு வழிகளில் அவர் பாய்ந்ததென்னவோ உண்மை & துர்பாக்கியமான என் கைகள் மூலம்! குறுக்கு புத்தி! என்ன இருந்தாலும் வைசியன் ஆயிற்றே! சூத்திரக்காரனாக மாறியே ஆக வேண்டும். பாரதாம்பாவே, என்னை மன்னித்து விடு. எனக்கு வருத்தமில்லை நண்பர்களே, எனக்கும் ஒரு நாள் வரும்.

நான் பெயரை எழுதி கையொப்பம் இடவேண்டுமா? சரி... இதோ... என் பெயர் மோகன்தாஸ். அது அந்தக் கிழவரின் பெயர் என்கிறீர்களா? நண்பர்களே, என்னைப் பொறுத்தவரை இனிமேல் இதுதான் என் பெயர். கிழவருக்கு இனி பெயரில்லை. பிரம்மத்தில் இருக்கும் எதற்கும் பெயர் கிடையாது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.