Logo

கிராமத்துக் காதல்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6797
graamathu-kaadhal

கோழிக்கோட்டில் உள்ள 'ஸ்டார் க்ளப்'பில் இரவு 10 மணிக்கு ஒரு பெரிய விருந்து உபச்சாரம் நடந்து கொண்டிருந்தது. வெளிநாட்டு மது புட்டிகளும் மீன்களும் மாமிசமும் நிரப்பப்பட்ட பெரிய பாத்திரங்களும் கத்திகளும் முட்களும் கரண்டிகளும் வைக்கப்பட்டிருந்த பெரிய மேஜையைச் சுற்றி நின்றவாறு இரண்டு டஜன் இளைஞர்கள் குடித்துப் பாடியவாறு ஆடிக் கொண்டிருந்தார்கள்.

இந்த அளவிற்கு மிகச் சிறப்பான ஒரு விருந்தைத் தந்த திரு.ரவீந்திரனைப் புகழ்ந்து ஒவ்வொருவரும் வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி சொற்பொழிவு ஆற்றி முடித்த பிறகு, உற்சாகத்தின் எல்லையைத் தொட்ட மகிழ்ச்சியான ஆர்ப்பாட்டங்களுக்கும் கைத்தட்டல்களுக்கும் மத்தியில் இரண்டு வார்த்தைகள் பேசுவதற்காக மிஸ்டர் ரவீந்திரன் எழுந்து நின்றான்.

"அன்பான நண்பர்களே..."- மிடுக்கான தோற்றத்தையும் எப்போதும் புன்னகை தவழும் முகத்தையும் கொண்டிருக்கும் அந்த இளைஞன் மதுவின் போதை இல்லாத குரலில் பேசினான்: "இந்தச் சிறு விருந்து உபச்சாரம் உங்கள் எல்லாருக்கும் பெரிய அளவில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்திருக்குன்றதை நினைச்சு நான் மிகவும் சந்தோஷப்படுறேன். ஆனால், நாளைக்குக் காலையில நான் உங்க எல்லாருக்கும் ஆச்சரியம் தரப்போற ஒரு புதிய செய்தியைச் சொல்லப் போறேன். அது என்னன்னு உங்களால கண்டுபிடிக்க முடியலைன்னா, நாளைக்குக் காலை வரை பொறுமையா காத்திருங்க."

அந்த மதுவின் போதையில் சிக்கியிருந்த மூளைகள் தீவிர சிந்தனையில் மூழ்கின. ஒவ்வொருவரும் தங்களுக்குள் மெதுவான குரலில் கேட்டுக் கொண்டார்கள்: "அந்தப் புதிய செய்தி என்னவாயிருக்கும்? க்ளப்புக்கு ஒரு வேளை ஏதாவது பெருசா பணம் தருவதா இருக்குமா? இல்லாட்டி... ரவியோட திருமணச் செய்தியாக இருக்குமோ?" இப்படி ஒவ்வொருவரும் தங்கள் மனதிற்குத் தோன்றியதையெல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டார்கள்.

மறுநாள் காலையில் 'ஸ்டார் க்ளப்'பின் மேஜையின் மீது 'க்ளப்பின் உறுப்பினர்களுக்கு' என்ற முகவரியுடன் ஒரு கடிதம் இருந்தது. அவர்கள் அதைப் பிரித்து ஆர்வத்துடன் படித்தார்கள்.

"நண்பர்களே, நான் சொல்வதாக இருந்த செய்தி இதுதான். நான் இரண்டு மாத காலத்திற்கு இங்கிருந்து இல்லாமற் போகிறேன். கடிதம் உங்கள் கையில் கிடைக்கும் போது நான் கோழிக்கோடு நகரைத் தாண்டியிருப்பேன். நான் எங்கு இருப்பேன் என்ற விஷயத்தை உங்களில் யாராவது கண்டுபிடிக்க முடிந்தால், அந்த மனிதருக்கு என்னுடைய புதிய மோரிஸ் காரைப் பரிசாக நான் தருகிறேன்.

ரவீந்திரன்"

அந்தச் செய்தி க்ளப் உறுப்பினர்களை ஆச்சரியப்பட வைத்தது. நண்பர்களுடன் தினமும் மது அருந்தி ஆடிப் பாடித் திரியும் இளைஞனான ஒரு லட்சாதிபதி வேறொரு இடம் தேடிப் போவது என்பது எந்த அளவிற்கு சந்தோ-ஷம் தரக்கூடிய விஷயமாக இருக்கும் என்பதை அவனே நடைமுறையில் தெரிந்து கொள்ளட்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அத்துடன் மோரிஸ் கார் தங்களுக்குக் கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர்களில் ஒவ்வொருவரும் முடிவெடுத்துக் கொண்டார்கள்.

2

திய நேரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது-. கோழிக்கோடு நகரத்திற்குக் கிழக்குத் திசையில் இருக்கும் ஒரு கிராமத்தின் அகலம் குறைவான வளைந்து வளைந்து செல்லும் ஒரு குண்டும் குழியுமான செம்மண் பாதையில் ஒரு வாடகைக்கார் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. பாதையின் இரு பக்கங்களிலும் பரந்து கிடக்கும் நெல் வயல்கள் இருந்தன. அறுவடை முடிந்து வெறுமனே கிடந்த அந்த வயல்களின் வரப்புகளில் இங்குமங்குமாய் முளைத்திருந்த இளம் பச்சை நிறப் புற்களை வாலை ஆட்டியவாறு பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சிறு கடைகள் தென்பட்டன. அங்கு சமையல் பொருட்களை வாங்கிக் கொண்டு போகும் பாதி உடையணிந்த கிராமத்துப் பெண்கள் பாதையோரத்தில் ஒதுங்கி நின்றார்கள். கள்ளு குடித்த மனிதர்களைப் போல ஆடி ஆடி போய்க் கொண்டிருந்த சில மாட்டு வண்டிகளும் அந்தக் காருக்கு வழி ஒதுக்கிக் கொடுத்தன.

தென்னை மரங்கள் வளர்ந்து நின்றிருக்கும் மேடுகள்... சிறு சிறு குன்றுகளைப் போல் உயர்ந்து நிற்கும் பாறைகள்... வயலுக்கு மத்தியில் ஆங்காங்கே தெரியும் வெற்றிடங்கள்... அவற்றில் இருக்கும் சில சிறிய குடிசைகள்... விழுந்து கிடக்கும் கோவில்கள்... இடிந்து கிடக்கும் பீடங்கள்... பாதி வற்றிப் போயிருக்கும் கோவில் குளங்கள்... மாந்தோப்புகள்... பச்சைப்புல் மைதானங்கள், காய்கறித் தோட்டங்கள்... இப்படிப் பல காட்சிகளையும் கடந்து கொண்டு அந்தக் கார் இருவழிஞ்ஞி ஆறும் ஒரு சிற்றாறும் ஒன்று சேரும் முக்கம் ஏரிக்கு அருகில் போய் நின்றது.

நடுத்தர வயதுடைய ஒரு கிராமத்து மனிதன் முன்னால் வந்து காரில் இருந்த மிடுக்கான மனிதனை வரவேற்றான்.

"எல்லாம் சரிபண்ணி வச்சிருக்கா?"-அந்த நவநாகரீகமான மனிதன் கேட்டான்.

"தங்கறதுக்கு இடம் ஏற்பாடு பண்ணியாச்சு. வேலைக்காரனையும் பேசி தயார் பண்ணி வச்சிட்டேன்."

"சரி... நான் உபயோகப்படுத்துற சாமான்களை கார்ல கொண்டு வந்திருக்கேன்."

"அது எல்லாத்தையும் அங்கே கொண்டு போயிடுவோம்."

அந்தக் கிராமத்து மனிதன் 'குஞ்ஞா கூ....' என்று உரத்த குரலில் அழைத்தவுடன் பருமனான ஒரு குள்ள மனிதன் அங்கு ஓடி வந்தான்.

"இந்த சாமான்களை என் இடத்துல கொண்டு போய் வை."

- பிறகு ரவீந்திரன் பக்கம் திரும்பிய அந்த ஆள் சொன்னான்: "இந்தச் சாமான்களை குஞ்ஞன் கொண்டு போய் வைப்பான். நாம அங்கே நடக்கலாம்..."

"சரி..."- ரவீந்திரன் கூலியைத் தந்து வாடகைக் கார்காரனை அனுப்பி வைத்தான்.

ரவீந்திரனும் அந்தக் கிராமத்து மனிதனும் அந்த நதிக்கரை வழியே நடக்க ஆரம்பித்தார்கள். வழி முழுவதும் பெண்கள் துணிகளைச் சலவை செய்து கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தார்கள். குழந்தைகள் ஆற்றங்கரையில் மணல் வீடுகள் அமைத்து பள்ளங்கள் தோண்டியும் சுவர்கள் கட்டியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில கிராமத்து மனிதர்கள் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆற்றின் கரையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு ஒற்றையடிப் பாதையில் திரும்பி, பிறகு ஒரு சிறிய வயலுக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்து சற்று மேடாக இருந்த ஒரு நிலத்தில் ஏறினார்கள்.

அங்கு ஒரு சிறு வீடு இருந்தது. புற்களைக் கொண்டு கூரை வேய்ந்தும், சுவர்களில் வெள்ளை அடிக்கப்பட்டும், முற்றத்தில் சாணம் தெளித்து சுத்தமாக்கியும் வைக்கப்பட்டிருந்த அந்த வீடு பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

ரவீந்திரனுக்கு அந்தச் சிறிய நிலமும், வீடும் மிகவும் பிடித்திருந்தது. அந்த நிலத்தில் மாமரங்களும் பலா மரங்களும் வாழை மரங்களும் இருந்தன. வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் மரங்கள், முன்னால் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பரந்து கிடக்கும் வயல்கள், வடக்குப் பக்கம் சிறிய மலைகள்... ஒரு பக்கம் ஆறு வளைந்து ஓடிக் கொண்டிருந்தது.


அவர்கள் வீட்டிற்குள் சென்றார்கள். அந்த வீட்டில் இரண்டு பெரிய அறைகள் இருந்தன. அது தவிர, ஒரு பக்கம் புதிதாக ஒரு சமையலறையும் அமைக்கப்பட்டிருந்தது.

தன்னுடைய படுக்கையையும், மடக்கு நாற்காலியையும் பெட்டிகளையும் எங்கு வைக்க வேண்டும் என்று கூறிய ரவீந்திரன் சிறிது ஓய்வெடுப்பதற்காக வாசலில் இருந்த மாமரத்திற்குக் கீழே போய்ப் படுத்தான்.

அந்த வயலிலிருந்து கிளம்பி வந்த ஒரு குளிர்ந்த காற்று அங்கு தவழ்ந்து வந்து ரவீந்திரனை ஆவேசத்துடன் தழுவிக் கொண்டது. கிராமப்புறத்தின் அந்த முதல் வரவேற்பில் சொக்கிப் போனான் ரவீந்திரன். நகரத்தின் சதாநேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் இரைச்சலையும் ஆரவாரத்தையும் கேட்டுக் கேட்டு பழகிப் போன அவனுடைய காதுகள் அந்தக் கிராமத்தின் ஆழமான அமைதியில் முழுமையாக மூழ்கிவிட்டதைப் போல் இருந்தன.

ரவீந்திரன் கோழிக்கோடு நகரத்தில் ஒரு மிகப்பெரிய லட்சாதிபதி. சொந்தத்தில் பேரீச்சம்பழத் தொழிற்சாலையும் ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பெரிய அளவில் மர வியாபாரமும் அவனுக்கு இருக்கின்றன. அரண்மனையைப் போன்ற வீடு, இரண்டு கார்கள், சொந்தத்தில் வங்கி, பண வசதி படைத்த நண்பர்கள்... இவற்றுக்கும் மேலாக திருமணமாகாதவன், தாராள மனம் படைத்தவன், நல்ல குணங்களைக் கொண்டவன், அழகான தோற்றத்தைக் கொண்ட ஒரு இளைஞன் என்று அவன் மக்களிடம் பெயர் பெற்றிருந்தான். நகரத்தின் ஆரவாரங்களிலிருந்து ஒதுங்கி, இரண்டு மாதங்கள் அமைதியாகத் தன் நாட்களைச் செலவிட அவன் தேர்ந்தெடுத்தது முக்கம் பகுதியில் இருக்கும் இந்தத் தனிமையான ஆற்றின் கரையைத்தான்.

3

??ன மாதம் அது. வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் மணலில் ஒரு இளம்பெண் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய கையில் ஒரு துணிக்கட்டு இருந்தது.

வெயில் காலத்தில் வறண்டு போன அந்த ஆறு வெறும் ஒரு வாய்க்காலாக மாறிவிட்டிருந்தது. வெண்மணல் பரவியிருக்கும் கரைகள் இரண்டு பக்கங்களிலும் இருந்தன. ஆற்றின் இரு பக்கங்களிலும் உயர்ந்து நின்றிருக்கும் மரங்களில் அவ்வப்போது சத்தம் உண்டாக்கிக் கொண்டிருக்கும் குருவிக் குஞ்சுகள் மட்டுமே அந்த அமைதியான சூழ்நிலையைச் சற்று கலைத்துக் கொண்டிருந்தன.

வெயில் குறைந்துவிட்டிருந்தாலும் மணலின் வெப்பம் முழுமையாகக் குறையவில்லை. அவள் அந்த ஆற்றின் நீரைத் தன்னுடைய காலால் மெதுவாகத் தொட்டுப் பார்த்தாள். குளிப்பதற்கு ஏற்ற வகையில் அந்த நீருக்கு ஒரு இளம் வெப்பம் இருந்தது.

அவள் மெதுவாகத் தன்னுடைய துணிப் பொதியைக் கீழே வைத்தாள். பிறகு கூந்தலை அவிழ்த்துவிட்டு கோதினாள். அவளுடைய தலைமுடி சுருள் விழுந்ததாக இல்லை. எனினும் அடர்த்தியாக வளர்ந்திருந்த அந்தக் கருங்கூந்தலுக்கு அசாதாரணமான ஒரு மினுமினுப்பும் பிரகாசமும் இருந்தது. அவள் கூந்தலை முழுமையாக இழுத்துக் கட்டி தலைக்குப் பின்னால் போட்டாள்.

வேலை செய்து தளர்ந்து போயிருந்த அவளுடைய உடல் அங்கங்கள் சுதந்திரமாக இயங்கின. அவள் ஆற்றின் மறு கரையைப் பார்த்தாள். மரக்கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய இடைவெளி வழியாகத் தூரத்தில் இருக்கும் வயல் தெரிந்தது. அங்கிருந்த மஞ்சள் வெயிலில் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்ததை அவள் பார்த்தாள்.

மீண்டும் அவளுடைய அலைபாயும் கண்கள் நாலா திசைகளையும் பார்த்தன. இயற்கை அழகைப் பற்றிய விஷயங்கள் எதையும் அவள் படித்ததில்லை. எனினும் அந்த இடத்தில் நிலவிக் கொண்டிருந்த ஒரு ஆழ்ந்த அமைதியும் எங்கிருந்து வருகிறது என்று தெரியாத ஒரு புது அழகும் அவளுடைய மனதில் ஒரு இனம்புரியாத புத்துணர்ச்சியை உண்டாக்கின.

குலந்தன் மாப்பிள்ளை, கழுத்தில் மணிகள் கட்டப்பட்ட இரண்டு காளைகளை 'நீர் காட்டுவதற்காக' ஆற்றுக்குக் கொண்டு வந்தான். நகரத்திலிருந்து மளிகைச் சாமான்கள் ஏற்றிக் கொண்டு திரும்பி வரும் ஒரு படகு, அந்த ஆற்றின் வளைவைத் தாண்டி கிழக்குப் பக்கமாகச் சென்றது. ஆற்றிலிருந்து ஒரு மீனை வாயில் கவ்விய ஒரு பறவை மேலே உயர்ந்து ஆகாயத்தில் பறந்தது. ஒரு கிராமத்து மனிதனின் கூக்குரல் கேட்டது. அவள் ஆற்றின் மேல் பக்கம் பார்த்தாள். சிறிது நேரத்திற்கு முன்னால் அந்த வழியே கடந்து சென்ற படகு முன்னோக்கிச் செல்வதற்கு ஏற்றபடி நீர் இல்லாததால், படகுக்காரன் படகை மேல்நோக்கிச் செலுத்துவதற்கு உதவி செய்யும் படி யாரையாவது அழைக்கும் கூக்குரலே அது.

கூக்குரலைக் கேட்டு கால்மணி நேரத்தில் பாதி உடையணிந்த ஐந்தாறு கிராமத்து மனிதர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் நீரில் இறங்கி படகைத் தள்ளிப் பார்த்தார்கள். படகு அசைவதாகத் தெரியவில்லை. எங்கே அது மணலுக்குள் சிக்கிக் கொண்டு விடுமோ என்பதைப் போல் இருந்தது.

"ஆஹா.. இக்கோரன் வந்துட்டான்..."- எல்லாரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

பருமனான, சற்று குள்ளமான, முழங்காலை மறைக்காத ஒரு துண்டை மட்டும் கட்டியிருக்கும் ஒரு உடல் ஆற்றின் வழியாகப் படகை நெருங்கி வந்தது.

இக்கோரனைப் பார்த்ததும் எல்லாருக்கும் மிகுந்த உற்சாகம் உண்டானது. அவன் படகின் மீது தன்னுடைய இரண்டு கைகளையும் அழுத்தி வைத்தான். தோளைச் சற்று குனிந்தவாறு 'தள்ளுங்கடா' என்று சொன்னதும் எல்லாரும் ஒன்று சேர்ந்து தங்களின் முழு பலத்துடன் படகைத் தள்ளினார்கள். படகு முன்னோக்கி நகர்ந்து நீரைத் தொட்டுக் கொண்டு நின்றது. தொடர்ந்து அவர்கள் மேலும் கொஞ்சம் தள்ளி விட்டதும், படகு முழுமையாக நீருக்குள் சென்றது.

எல்லாரும் மகிழ்ச்சி பொங்க சத்தமிட்டார்கள். படகுக்காரன் படகில் பாய்ந்து உட்கார்ந்து அதைச் செலுத்தத் தொடங்கினான். அதிலிருந்த ஆட்கள் அவரவர்கள் வழியில் பிரிந்தார்கள். அவர்கள் அந்த நீரில் தங்களின் கால்களையும், முகத்தையும் கழுவி, கரையில் ஏறி ஒவ்வொரு பாதையிலும் போய் மறைந்தார்கள். இக்கோரன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தவாறு ஆற்றின் கரை வழியாக மேற்கு திசை நோக்கி நடந்தான்.

அந்த இளம்பெண் அங்கு ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கியிருப்பதைப் பார்த்த இக்கோரன் நன்கு அறிமுகமான குரலில் கேட்டான்:

"மாளு, வானத்துல கந்தர்வன் இருக்கானா என்ன?"- என்று அவன் கேட்டதும் அவள் ஒரு கனவிலிருந்து எழுந்ததைப் போல திடுக்கிட்டு இக்கோரனின் முகத்தைப் பார்த்தாள். தொடர்ந்து ஆற்றின் அக்கரையைச் சுட்டிக் காட்டிக் கொண்டு சொன்னாள்: "நான் காஞ்ஞிரப் பறம்புக்காரகளோட நிலத்துல இருக்கிற வீட்டைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். அறுவடை எல்லாம் முடிஞ்சாச்சில்ல? பிறகு எதுக்கு அந்த வீட்டை இப்படி அழகு படுத்தி வச்சிருக்காங்க?"

"அதுக்கான காரணத்தை நான் சொல்றேன். நகரத்துல இருந்து யாரோ இங்க இருக்குறதுக்காக வர்றாங்களாம்!"

மாளு இக்கோரனின் வார்த்தைகளை நம்பவில்லை. அவள் கேட்டாள்: "நகரத்துல இருந்து எதுக்காக ஆளுங்க இங்கே வரணும்?"


"மகிழ்ச்சியா இருக்குறதுக்காக."

"மகிழ்ச்சியா இருக்குறதுக்கா? இங்கே மகிழ்ச்சியா இருக்குறதுக்கு என்ன இருக்கு?"

"உன்னை மாதிரி அழகா இருக்குற இளம் பெண்களைப் பார்க்குறது கூட ஒரு மகிழ்ச்சியான விஷயம்தானே?"

"வேண்டாம்... மனசுக்குத் தோணுறதையெல்லாம் பேசினா..."- அவள் ஒரு கோபத்துடன் சொன்னாள்: "நான் மணலை அள்ளி முகத்துல போட்டுடுவேன்..."

அதைக் கேட்டு இக்கோரன் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் ஒரு கிராமத்துப் பாடலைப் பாடியவாறு மீண்டும் மேற்கு திசை நோக்கி நடந்தான்.

மாளு தன்னுடைய துணிக்கட்டை அவிழ்த்து, அதிலிருந்து முண்டுகளை எடுத்து நீரில் நனைத்தாள். சோப் போட்டு அந்த முண்டுகளைக் கல்லின் மீது அவள் வைத்தாள். பிறகு ஒரு சிறிய துண்டை எடுத்து தனியாக வைத்தாள். தான் அணிந்திருந்த பெரிய முண்டையும் ரவிக்கையையும் அவிழ்த்து அவற்றை நீரில் போட்டுவிட்டு ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து அவள் அணிந்து கொண்டாள். இன்னொரு துண்டால் பாதி நெற்றியை மூடி அதைத் தலையில் கட்டி, துணிகளைச் சலவை செய்ய ஆரம்பித்தாள்.

நகரத்திலிருந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக வந்திருந்த ஆள் இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அக்கரையிலிருக்கும் செடிகளுக்குப் பின்னால் மறைந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற விஷயம் அவளுக்குத் தெரியவே தெரியாது.

சிறிது நேரம் சென்றதும் ரவி அந்த நீரோட்டத்தைத் தாண்டி இக்கரைக்கு நடந்து வந்தான். விலை உயர்ந்த ஆடைகளணிந்த ஒரு நாகரீக இளைஞன் தனக்கு முன்னால் வந்து நின்றதைப் பார்த்ததும் மாளுவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவள் ஒரு ஈரமான ஆடையை எடுத்து தன்னுடைய மார்பை மறைத்து, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

ரவி அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். 'இளமையின் புதிய நறுமணத்தைப் பரப்பும் அசாதாரணமான ஒரு கிராமத்து அழகு தேவதை'- ரவி தனக்குள் சொல்லிக் கொண்டான்.

முதல் பார்வையிலேயே ரவியின் சதைப்பிடிப்பான உடம்பும், நன்கு வாரிவிட்டிருந்த சுருள் முடியும், உயிரோட்டத்துடன் இருந்த பார்வையும் அவளுடைய மனதில் ஒரு மறையாத ஓவியத்தை உண்டாக்கிவிட்டிருந்தன. சிறிது நேரம் சென்றதும் ரவி அந்த வழியே மேற்குப் பக்கமாகச் சென்றான். அவனை மீண்டுமொருமுறை பார்க்காமல் இருக்க, அவளுடைய மனம் சம்மதிக்கவில்லை. அவள் இனம்புரியாத ஆர்வத்துடன் அவன் போன பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய போதாத நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். ரவியும் அவளை மீண்டும் ஒரு முறை பார்ப்பதற்காகத் தலையைத் திருப்பிய போதுதான், அவளும் அவனைப் பார்த்தாள். அவர்களின் பார்வைகள் ஒன்றோடொன்று சந்தித்தன. அவள் வெட்கத்தால் நெளிந்தாள். பின்னால் திரும்பி அவள் நின்றாலும், அந்த அரை நிமிட பார்வையிலேயே ரவியின் அழகான உடலை அவளால் நன்கு பார்க்க முடிந்தது.

4

லைகளின் வரிசை, பச்சைப் பசேல் என்றிருக்கும் புல்வெளிகள், வாய்க்கால்கள் ஓடிக் கொண்டிருக்கும் பள்ளத்தாக்குகள், வெட்டித் தெளிவாக்கப்பட்ட விவசாய நிலங்கள், மேடுகள், புதர்கள், தென்னை மரத்தோப்புகள், மிளகுத் தோட்டங்கள்- இவை அனைத்தும் நிறைந்த இயற்கை அழகு ஆட்சி செய்யும் ஒரு பகுதிதான் முக்கம். கோழிக்கோடு நகரத்திலிருந்து சுமார் 20 மைல்கள் கிழக்குத் திசையில் இருக்கும் சிறு கிராமம் அது.

நம்முடைய கதை நடந்த காலத்தில்- நாகரீகத்தின் ஒரு சிறு அலைகூட பெரிய அளவில் பாதிப்பு உண்டாக்கக்கூடிய ஒன்றாக இருந்தது அந்த குக்கிராமம். அந்தக் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் காட்டு யானைகளும் நரியும் முள்ளம்பன்றியும் மானும் இருக்கின்ற அடர்ந்த காடுகள் இருந்தன. புதர்களும் உயரமாக வளர்ந்திருக்கும் புற்களும் மட்டுமே அங்கு இருந்தன. வேட்டையாடுவதற்கும் மரங்களை வெட்டுவதற்கும் செல்லக்கூடிய மனிதர்கள் மட்டுமே அதைத் தாண்டிச் செல்வார்கள். அந்தக் கிராமத்திற்கு நகரத்திலிருந்து வரக்கூடிய ஒரு பாதை இருந்த-து. நாகரீகத்தின் இதயத்துடிப்பால் ஒரே ஒரு பஸ் மட்டும் அந்த வழியில் வந்து கொண்டிருக்கும். மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்யும் உழைப்பாளிகளான அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், சேம்பு, சேனை, நனக்கிழங்கு என்று பலவகை கிழங்குகளை விவசாயம் செய்தும், வேட்டைக்குப் போயும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். நல்ல திடகாத்திரமான உடலைக் கொண்டவர்களும், பாதி உடையணிந்தவர்களுமான அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அழகான இளம்பெண்கள் விவசாய வேலைகளில் மிகவும் திறமைசாலிகளாக இருந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்கு ஒரு சந்தை கூடுவது உண்டு. அன்று ஒரே ஒரு நாள் மட்டும் தான் பல கடைகள் ஒரே இடத்தில் இருக்கும் காட்சியை அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பார்க்க முடியும். அன்றாடத் தேவைக்கேற்ற பொருட்களுடன் வேறு பல பொருட்களும் கூட விற்பனைக்கென்று அங்கு கொண்டு வரப்படும். ஆற்றின் வழியாகவும் மாட்டு வண்டி மூலமும் தலையில் வைத்து சுமந்தும் முதல் நாள் இரவே பல பொருட்களும் அங்கு வந்து சேர்ந்து விடும். உப்பிலிருந்து கற்பூரம் வரை, பீங்கான் கிண்ணத்திலிருந்து அன்னாசிப் பழம் வரை, தந்தையும், தாயும் இல்லாத எல்லா விஷயங்களும் அங்கு கிடைக்கும் என்பதுதான் பொதுவாகப் பெரியோர்கள் சொல்லக் கூடிய ஒரு விஷயம். எது எப்படியோ, எது தேவையிருக்கிறதோ, இல்லையோ உப்பும் மண்ணெண்ணெயும் புகையிலையும் கருவாடும் வாங்குவதற்காகவாவது அவர்கள் சந்தைக்குப் போகாமல் இருக்க முடியாது. சந்தை நடக்கும் நாள் முக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பெரிய திருவிழா நாள் என்றுதான் சொல்ல வேண்டும். அறிமுகமானவர்களையும் இதற்கு முன்பு சந்தித்திராத ஆட்களையும் ஒரே இடத்தில் அன்று ஒருநாள் தான் பார்க்க முடியும்.

நகரத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அவர்களின் மடிக்கு அருகில் கொண்டு வந்து விற்கப்படும் புனித நாள் அது. தாங்கள் கொண்டு வரும் உற்பத்திப் பொருட்களை எளிதாக விற்று முடித்து, மடி நிறைய புதிய பொருட்களையும் கூடை நிறைய வேறு புதிய சாமான்களையும் வாங்கிக் கொண்டு அவர்கள் திரும்பிச் செல்வார்கள். அன்று அவர்களுக்கு விடுமுறை நாள். எனினும், அவர்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் நாள் கூட அதுதான். சாதாரண கொட்டாங்கச்சியால் ஆன பொருளிலிருந்து ஜப்பானில் செய்யப்பட்ட பொருள் வரை அங்கு விற்பனைக்கு வந்திருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் அவர்கள் எடுத்துப் பார்ப்பார்கள். தங்களுக்கு அது தேவையே இல்லை என்றாலும் கூட அதை அவர்கள் விலை பேசுவார்கள்.

சுமார் பதினொரு மணி ஆன போது சந்தையில் நல்ல கூட்டம் இருந்தது. பொருட்கள் வாங்க வந்தவர்களும் அவற்றை விற்பனை செய்பவர்களும் அங்கு நிறைந்திருந்தார்கள். கடை ஒன்று கூட ஆட்கள் இல்லாமல் இல்லை.


நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்களின் ஆரவாரமும், அவர்களின் கூக்குரலும், குறையாத அவர்களின் நடமாட்டமும் விற்பனை செய்பவர்களின் அழைப்பும், நாணயங்களின் சலசலப்பும் கூடிய வண்ணம் இருந்தது.  எல்லாரும் தங்களின் வேலையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஒரு முஸ்லிம் கிழவன் தன் கையிலிருந்து ஒரு ரூபாய் நாணயமொன்றை ஒரு கல்லின் மீது தட்டி அது உண்டாக்கும் ஓசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு பலகாரக் கடைக்கு முன்னால் நின்று கொண்டு ஒரு குழந்தை தன் தாயிடம் காப்பி வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து அழுது கொண்டிருக்கிறது. ஒரு புன்னை மரத்தடியில் ஆதிவாசிகளின் கூட்டமொன்று தாங்கள் வாங்கிய வண்ணக் கற்களின் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்தவாறு உட்கார்ந்திருக்கிறது.

கையில் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு மாளுவும் சந்தைக்குப் போயிருந்தாள். வெள்ளை நிறத்தில் பெரிய சிவந்த புள்ளிகள் போட்ட ஒரு ரவிக்கையையும், கறுப்பு வண்ணத்தில் கரை போட்ட ஒரு மெல்லிய கிராமத்து முண்டையும் அவள் அணிந்திருந்தாள். நெற்றிக்கு அருகில் தலைமுடியை வகிடு எடுத்து பிரித்து பின்னால் அழகாக அதைக் கட்டியிருந்தாள்.

மாமா சாமான்கள் வாங்குவதற்காகத் தந்த ஒரு ரூபாய் இல்லாமல், தான் கயிறு பிரித்து சம்பாதித்த எட்டணாவையும் அவள் கையில் வைத்திருந்தாள்.

உப்பு, மிளகாய் போன்ற சாமான்கள் வாங்குவது தவிர, தனக்கென்று ஒன்றிரண்டு பொருட்களை வாங்க வேண்டுமென்ற திட்டத்துடன் தான் அவள் சற்று சீக்கிரமே, சந்தையை நோக்கி வந்திருந்தாள். ஆனால், சந்தைக்கு வந்து பார்த்த பிறகுதான் தான் மனதில் நினைத்தே இராத பல புதிய பொருட்கள் அங்கிருப்பது அவளுக்குத் தெரிய வந்தது. அவற்றை அவளுக்கு வாங்க வேண்டும் போல் இருந்தது.

அவள் சந்தையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தாள். கண்ணாடி வளையல்கள் விற்பனை செய்யும் இடத்திற்குச் சென்று புதிய மாதிரியில் இருந்த வளையல்களைப் பார்த்தாள். இன்னொரு இடத்திற்குச் சென்று கல் வைத்த மோதிரங்களை எடுத்து இப்படியும், அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு, அவற்றை அங்கேயே வைத்தாள். ஒரு துணிக்கடைக்குச் சென்று அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல வண்ணத் துணிகளைப் பார்த்து வியப்படைந்துநின்று கொண்டிருந்தாள். கடைசியில் பச்சை நிறத்தில் படங்கள் போட்ட ஒரு ஜப்பான் துணியின் விலை என்ன என்று கேட்டாள். பக்கத்தில் நின்றிருந்த ஒரு செட்டியாரிடம் கறுப்புக் கரைபோட்ட முண்டின் விலை என்ன என்று விசாரித்தாள். அடுத்த நிமிடம் குனிந்து நின்று கழன்று விழும் நிலையில் இருந்த கொலுசுகளைச் சரி செய்தாள். கூட்டத்தில் யாரையோ அவள் மிதித்துவிட்டாள். அந்த ஆளின் உடம்பைத் தொட்டு நெற்றியில் ஒற்றிக் கொண்டாள். சோப், சீப்பு, கண்ணாடி, நீலம், வளையல்கள் விற்கும் கடைக்குச் சென்று ஒரு காசுக்கு நீலமும், இரண்டு காசுகளுக்கு நூலும் கேட்டாள். கடைக்காரன் அவற்றை எடுக்கும் நேரத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த முகக் கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டு அங்கேயே அவள் அதை வைத்தாள். திரும்பிப் பார்த்தபோது அங்கு தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு தன்னுடைய பளபளப்பான பற்களைக் காட்டி அவள் சிரித்தாள். பிறகு முன்பு சென்ற துணிக்கடைக்குச் சென்று வேறொரு ஜப்பான் துணியின் விலை என்ன என்று விசாரித்தாள். கடைக்காரன் சொன்ன விலையைக் கேட்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏமாற்றத்துடன் திரும்பிய போது எதிரில் நின்றிருந்த முகத்தைப் பார்த்து அவள் மேலும் அதிர்ச்சியடைந்தாள். நேற்று மாலை நேரத்தில் ஆற்றின் கரையில் அவளையே உற்றுப் பார்த்த அந்த மனிதன் அவளுக்குப் பின்னால் நின்றிருந்தான்.

இனம்புரியாத ஒரு நடுக்கத்துடன் அவள் வேறொரு வழியில் திரும்பி நடந்தாள். பல இடங்களுக்கும் போய் சுற்றி நடந்துவிட்டு கடைசியில் ஒரு புகையிலை வியாபாரியின் கடையில் போய் நின்றாள்.

அவித்த மரவள்ளிக் கிழங்கை வாயில் போட்டு, தேங்காய் பூக்களைச் சேர்த்து ருசித்துத் தின்றவாறு ஒரு தடிமனான முஸ்லிம் அங்கு வந்தான். அவன் கடையில் ஒரு பிடி புகையிலையை வாங்கி தன் கையில் வைத்து அதன் குணத்தைச் சோதித்துப் பார்ப்பதற்காக, நாசிக்கு அருகில் கொண்டு வந்து அதை முகர்ந்து பார்த்தான்.

அடுத்த நிமிடம் சிறிதும் எதிர்பார்க்காமல் அந்த முஸ்லிம் ஒரு தும்மல் போட்டான். அவனுடைய வாய்க்குள் பாதி மென்ற நிலையில் இருந்த உணவுப்பொருள் ஒரு பெரிய துப்பாக்கியிலிருந்து கிளம்பியதைப் போல சிதறி கடைக்காரனின் முகத்தின் மீது விழுந்தது. அந்தக் காட்சியைப் பார்த்து மாளு அணை உடைந்ததைப் போல விழுந்து விழுந்து சிரித்தாள்.

அதைவிட உரத்த குரலில் பின்னாலிருந்து சிரிப்புச் சத்தம் கேட்கவே, அவள் திரும்பிப் பார்த்தாள். மீண்டும் அதே ஆள்தான்!

அடக்க முடியாமல் அவன் மீண்டும் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தான். அவளும் முகத்தைத் திருப்பிக் கொண்டு வாயை மூடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவள் சந்தையை விட்டுத் திரும்பிப் போன போது, ஒரு பையன் அவளை நோக்கி ஓடி வந்தான். ஒரு பேப்பர் பொட்டலத்தை அவளுக்கு நேராக அவன் நீட்டினான்.

"இதை யார் தந்தது?"- அவள் சந்தேகத்துடன் அந்தப் பையனைப் பார்த்துக் கேட்டாள்.

"நீளமான சில்க் சட்டை போட்ட ஒருமீசை வச்ச ஆளு..."

அந்தப் பொட்டலத்தை வாங்க வேண்டுமா என்று சந்தேகப்பட்டவாறு அவள் தயங்கி நின்றிருப்பதைப் பார்த்த அந்த சிறுவன் அந்தப் பொட்டலத்தை அவள் கூடையில் போட்டுவிட்டு ஓடி விட்டான்.

அவள் ஒரு தனியான இடத்திற்குச் சென்று அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தாள். தான் விலை விசாரித்த அந்த அதிக விலை கொண்ட துணியும் ஒரு வாசனை சோப்பும் அதில் இருந்தன. அதைப் பார்த்து அவளுக்கு மகிழ்ச்சியைவிட பதைபதைப்புத்தான் உண்டானது.


5

திய நேரம் தாண்டிவிட்டிருந்தது. மாளு ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினாள். அவள் ஒரு சிறு துண்டை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு ஆற்றுக்குள் குதித்தாள். கைகளால் நீரைத் துழாவி, சீராகக் கால்களால் நீரை அடித்து, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து வைத்துக் கொண்டு அவள் நீரைக் கிழித்துக் கொண்டு முன்னோக்கி நீந்தினாள். மாளு நன்றாக நீந்தக் கூடியவள். அவள் சாய்ந்தவாறும் மல்லாக் படுத்துக் கொண்டும் நீந்தினாள். தான் நீரில் நீந்திக் குளிப்பதை யாரும் பார்க்கவில்லை என்றுதான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் திறந்து கிடந்த நீரில் அவள் சுதந்திரமாக நீந்திக் கொண்டிருந்த காட்சிக்கு ஒரு கவர்ச்சி இருக்கவே செய்தது.

அவள் நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசித்தவாறு ரவி அந்தப் புற்கள் அடர்ந்த புதருக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தான். அவள் ஏரியின் நடுப்பகுதியை அடைந்தபோது, அவளின் நீச்சல் திறமையைப் பாராட்டுவதைப் போல ரவி மெதுவாக விசிலடித்தவாறு வெளியே வந்தான்.

ரவியைப் பார்த்ததுதான் தாமதம். வெட்கத்தால் அவள் நீருக்குள் தன்னை மூழ்கச் செய்து கொண்டாள். அதற்குப் பிறகு மூன்று நிமிடங்களுக்கு அவளை மேலே பார்க்கவே முடியவில்லை. ரவிக்கு அதைப் பார்த்து பதைபதைப்பு உண்டாகாமல் இல்லை. ஆனால் ஆற்றின் கீழ்ப்பகுதியில் ஏரிக்கப்பால் அவள் திடீரென்று நீருக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டினாள்.

ரவியின் பார்வையைப் பார்த்ததும், அவளுக்கு கரைக்கு வரவேண்டும் என்றே தோன்றவில்லை. தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு அவள் நீருக்குள்ளேயே ஒரு மீனைப் போல அமைதியாக நீந்திக் கொண்டிருந்தாள். நான்கு பக்கங்களிலும் நீரில் பரவிக் கிடக்கும் தலைமுடிகளுக்கு மத்தியில் அவளுடைய பிரகாசமான முகம் நீருக்கு மத்தியில் இருக்கும் செந்தாமரையைப் போல இருந்தது.

கால்மணி நேரம் கடந்தது. அதற்குப் பிறகும் ரவி அந்த இடத்தைவிட்டு நகர்வதாகத் தெரியவில்லை. ஒரு சிகரெட்டைப் புகைத்தவாறு அவன் அதே இடத்தில் நின்றிருந்தான்.

மாளு மெதுவாகக் கரையை நோக்கி நீந்தத் தொடங்கினாள். கரையில் கால்கள் பட்டவுடன், அவள் தன் கைகளால், மார்புப் பகுதியை மறைத்துக் கொண்டு தன்னுடைய ஆடைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வேகமாக ஓடினாள்.

முஸ்லிம் பெண்கள் குளிப்பதற்காகக் கரையில் ஒரு இடத்தில் ஓலையால் மறைக்கப்பட்ட ஒரு குளியலறை இருந்தது. ஆடைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் அதற்குள் நுழைந்தாள்.

அவள் ஆடைகளை அணிந்து முடித்து வெளியே வந்தாள். ரவி அதே இடத்தில் நின்றிருந்தாள். அவளிடம் என்னவெல்லாமோ பேசவேண்டுமென்று ரவி ஆசைப்பட்டான். ஆனால், வார்த்தைகள் வராமல் அவன் செயலற்று நின்றிருந்தான். எத்தனையோ நவநாகரீகமான இளம்பெண்களின் காதல் சுகத்தில் சங்கமமாகி ஆனந்தம் கண்ட அந்த இளைஞனுக்கு சாதாரண ஒரு கிராமத்துப் பெண்ணிடம் பேசுவதற்கு ஒரு வார்த்தைகூட வெளியே வரவில்லை. வார்த்தைகள் கிடைக்கவில்லை.

அப்போது நேற்று தான் சந்தையில் வாங்கிக் கொடுத்தனுப்பியிருந்த சோப் அவளுடைய கையில் இருப்பதை அவன் பார்த்தான். ரவிக்கு பேச்சை ஆரம்பிப்பதற்கு ஒரு விஷயம் கிடைத்தது-.

"சோப் நல்ல வாசனையா இருந்துச்சா?"

மாளு சோப்பை ஆடைக்குள் மறைத்து வைத்தாள். எதுவும் பேசாமல் அவள் திரும்பி நடந்தாள்.

அன்று மாலையில் ரவி வயல்கள் பக்கமாக நடந்து போனபோது, அவளுடைய வீட்டை அவன் பார்த்தான்.

பழ மரங்கள் நிறைய இருந்த ஒரு நிலத்தின் நடுவில், புல் வேயப்பட்ட ஒரு சிறு ஓலைக் குடிசை. முன்பக்கம் சாணம் தெளிக்கப்பட்டு சுத்தமாக இருந்த முற்றம் இருந்தது. மூன்று நான்கு பசுக்கள் இருந்த ஒரு தொழுவம். ஒரு மூலையில் உயரமாக இருந்த வைக்கோல் போர்.

மாளுவின் மாமாவும் அத்தையும் அவர்களின் இரண்டு வயது வரக்கூடிய ஒரு ஆண் குழந்தையும் மட்டுமே அவளைத் தவிர, அந்த வீட்டில் இருந்தவர்கள்.

ஆற்றின் கரையில் தினந்தோறும் சொல்லி வைத்ததைப் போல ரவியும், மாளுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அப்படி வெறுமனே பார்க்க ஆரம்பித்தது பழக்கமாக வளர்ந்தது. அவளுக்குச் சிறிது சிறிதாகப் பேசுவதற்கான தைரியம் வந்தது. ரவியின் கேள்விகளுக்கு உண்டு என்றோ இல்லை என்றோ அவள் பதில் கூறிக் கொண்டிருந்தாள். அந்த எல்லையும் படிப்படியாக மீறப்பட்டது. அவர்களுக்கிடையே சர்வசாதாரணமாக உரையாடல் எந்தவித தயக்கமும் இல்லாமல் நடந்தது. ரவி தந்த பரிசுப் பொருட்களை அவள் சிறிதும் தயங்காமல் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். எது எப்படியோ, ஒரு கிராமத்துப் பறவை தன்னுடைய வலையில் விழுந்து விட்டது என்பதை ரவி புரிந்து கொண்டான்.

ஒரு நாள் ரவி தன்னைப் பற்றி எந்த வித கெட்ட எண்ணமும் உண்டாகாத முறையில் அவளிடம் கேட்டான்: "இன்னைக்கு பொழுது சாய்ஞ்ச பிறகு நீ இங்கே வரமுடியுமா? நாம நிலா வெளிச்சத்துல இந்த மணல்ல உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம். தனியா இங்கே இருந்திருந்து எனக்கே வெறுத்துப் போச்சு."

ரவி தன்னுடைய தனிமைச் சூழ்நிலையைப் பற்றி சொன்னதைக் கேட்டு மாளுவிற்கு அவன் மீது பரிதாபம் உண்டானது. அவள் சொன்னாள்: "நான் வரலாம். ஆனா, யாராவது அதைப் பார்த்துட்டா...?"

ரவி சொன்னான்: "ராத்திரி நேரத்துல இங்கே யார் வரப்போறது? அப்படியே யாராவது வந்தா, நாம இந்தக் குளியலறைக்குள்ள போயி ஒளிஞ்சுக்குவோம்."

அவள் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அதை மவுனம் நிறைந்த சம்மதம் என்று ரவி கணக்குப் போட்டுக் கொண்டான். அவன் ஒரு வெற்றி மனப்பாங்குடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அன்று வசந்த பஞ்சமி நாள். சிலையின் மார்பில் தொங்கிக் கொண்டிருக்கும் புல நகத்தைப் போல நிலவு மலைக்கு மேலே பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்த நிலவொளியில் இருவழிஞ்ஞி ஆற்று நீர் தகதகத்தது. மென்மையாக வீசிக் கொண்டிருந்த காற்றில் ஆடிய மரங்களும் பூச்செடிகளும் பரந்து கிடக்கும் மணலில் அழகான ஒரு தோற்றத்தைத் தந்தன. வானத்திலிருந்து புறப்பட்டு வந்த ஒரு அமைதியான சூழ்நிலை அந்தப் பகுதியெங்கும் பரவியது.

மாளுவின் வரவை எதிர்பார்த்து ரவி அந்தக் குளியலறையில் உட்கார்ந்திருந்தான்.

நீண்ட நேரமாகியும், ஒரு நிழல் கூட அங்கு வரவில்லை. ரவி பொறுமையை இழந்து அடுத்தடுத்து சிகரெட்டுகளைப் புகைத்த வண்ணம் இருந்தான். பஞ்சமி நிலவு மறையும் நிலையில் இருந்தது.

அருகிலிருந்த ஒரு மரப்பொந்தில் இரண்டு பறவைகள் தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டிருந்தன. மர இலைகளை 'கலபலா' என்று அசைத்தவாறு ஒரு குறும்புத்தனமான காற்று கடந்து போனது. ஆற்றின் வழியாக ஒரு தகர விளக்கின் சிவப்பு வெளிச்சம் நகர்ந்து கொண்டிருந்தது. நகரத்திலிருந்து நேரம் கடந்து திரும்பி வரும் ஒரு சரக்குகள் ஏற்றப்பட்ட படகு அது.

நிமிடங்களை மனதில் எண்ணிக் கொண்டு ரவி அதற்குப் பிறகும் உட்கார்ந்திருந்தான். நரியொன்று அந்தப் புதருக்குள் இருந்து ஆற்றை நோக்கி வந்தது. ஏதோ ஒரு சந்தேகத்துடன் அது தலையை உயர்த்திக் கொண்டு அந்த இடத்திலேயே நின்றது.

நரியை மிகவும் அருகில் பார்த்ததும் ரவிக்கு ஒருவித ஆர்வம் உண்டானது. தனிமைச் சூழ்நிலையில் தனக்குக் கிடைத்த அந்தப் புதிய நண்பனின் கவனத்தை ரவி ஒரு குறும்புத்தனமான ஓசையை உண்டாக்கித் திரும்பினான்.


அந்தச் சத்தத்தைக் கேட்டதும் நரிக்கும் ஒரு உற்சாகம் உண்டானது. அது மெதுவாக நடந்து வந்து ஓசை புறப்பட்டு வந்த குளியலறைக்குள் எட்டிப் பார்த்தது. அதற்குள் ஒளிந்திருந்த காமவயப்பட்ட  மனிதனைப் பார்த்ததும், நரி வேகமாக ஒரு ஓட்டம் பிடித்தது. தூரத்திற்குப் போன அது பின்னால் ஒருமுறை திரும்பிப் பார்த்தது.

ரவி விழுந்து விழுந்து சிரித்தான். நிலவு சிறிது நேரத்திற்கு மறைந்து விட்டு மீண்டும் தன் முகத்தைக் காட்டியது. ரவி பொறுமையை இழந்தான். அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று அவன் முடிவெடுத்தான்.

அதற்குப் பிறகு ஐந்து நிமிடங்கள் ஓடின. சற்று தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது.

வெள்ளைத் துணியால் தலையை மறைத்துக் கொண்டு புதிதாக உதயமாகும் நிலவைப் போல அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

ரவியின் இதயம் மகிழ்ச்சியால் துள்ளியது.

வெற்றி பெற்று விட்டதன் ஒரு அடையாளம் அவனுடைய முகத்தில் தெரிந்தது. அவன் முகத்தில் ஆர்வம் பொங்க தன்னுடைய ஆசை இளங்கொடியைக் கண்களை விரித்துக் கொண்டு பார்த்தவாறு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான்.

அந்தக் குளியலறையை நெருங்கியபோது அவளுடைய வேகம் குறைந்தது. அவள் அதற்குச் சற்று தூரத்திலேயே நின்றுவிட்டாள்.

"மாளு..."- ரவி பொறுமையை இழந்து கட்டளையிட்டான்.

ஒரு வெண்மையான கற்சிலையைப் போல அவள் மீண்டும் அந்த இடத்தில் நின்றிருந்தாள்.

ரவி வெளியே வந்து அவளுடைய கையைப் பற்றினான். அது ஒரு மின் கம்பியைப் போல வெப்பமடைந்து நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் அவளுடைய தலையை மூடியிருந்த வெள்ளைத் துணியை அகற்றி அவளை உற்றுப் பார்த்தான். ஒரு பிணத்தின் முகத்தை மூடியிருக்கும் துணியை விலக்கிவிட்டுப் பார்க்கும் போது இருப்பதைப் போல, எந்தவித உயிர்ப்பும் இல்லாமல் அவளுடைய முகம் இருந்தாலும், அந்தக் கண்கள் நட்சத்திரங்களைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தன. அவளுடைய கன்னங்களில் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.

"மாளு, நீ ஏன் அழறே?"- ரவி ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு ஒரு அமைதியான குரலில் கேட்டான்.

தன்னைப் பிடித்த ரவியின் கையை உதறிவிட்டு திக்கிய குரலில் அவள் சொன்னாள்: "நான் போறேன்."

"என்ன, போறியா? நீ எதுக்கு பயப்படுறே? நீ எதுக்கு நடுங்கவும், அழவும் செய்ற? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? முட்டாள் பெண்ணே, இங்கே வா..."

ரவி அவளுடைய கையை மீண்டும் பிடித்தான். அவள் திரும்பவும் அவனுடைய கையை உதறிவிட்டு ஒருவித பதைபதைப்புடன் திரும்பி நடந்தாள்.

"மாளு... மாளு... கொஞ்சம் நில்லு..."- என்று அழைத்தவாறு ரவி அவளுக்குப் பின்னால் நடந்தான். அவள் வேகமாக நடந்தாள். நடந்து தளர்ந்து மேல்மூச்சு கீழ்மூச்சுவிட்டபடி அவள் அந்த மணலில் ஓட ஆரம்பித்தாள். சிறிது தூரம் ரவியும் ஓடினான். அவள் ஒரு பட்டாம்பூச்சியைப் போல தன்னுடைய இடம் வந்ததும் பறந்து போய் விட்டாள்.

அவள் சிறிதும் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. நிலத்தின் சுவர் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த மர ஏணி மீது ஏறி இறங்கி அவள் அந்த மரக் கூட்டங்களுக்கிடையே மறைந்து போனாள். ரவி என்ன செய்வதென்று தெரியாமல் அந்த ஆற்றின் கரையை நோக்கி வரும் ஒற்றையடிப் பாதையில் விழித்துக் கொண்டு நின்றிருந்தான். நடந்த சம்பவம் ஒரு கனவைப் போல இருந்தது அவனுக்கு.

சிறிது நேரம் எந்தவித அசைவுமில்லாமல் நின்றுவிட்டு அவன் என்னவோ சிந்தித்தவாறு திரும்பி நடந்தான். காதல் சம்பந்தப்பட்ட பல வினோதமான அனுபவங்கள் இதற்கு முன்பு அவனுக்கு இருக்கின்றன என்றாலும், இந்த அளவிற்கு மனதைத் தொடக்கூடிய ஒரு சம்பவம், இதுவரை அவனுடைய வாழ்க்கையில் நடந்ததில்லை என்பதே உண்மை. அதில் மறைந்திருந்த மனரீதியான தத்துவத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவளுடைய காற்பாதங்களின் அடையாளங்கள் மணலில் தெளிவாகத் தெரிந்தது. அதன் மீது மிதித்து நடந்த போது அவனுக்கு ஒரு வகை மகிழ்ச்சி உண்டானது. அவன் அந்தக் காலடிச் சுவடுகளிலேயே தன் காற்பாதங்களை வைத்தபடி சிறிது தூரம் நடந்தான்.

அப்போது மாளுவின் பாதம் பட்டிருந்த ஒரு இடத்தில் ஏதோவொரு பொருள் மின்னிக்கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அந்தப் பொருளைக் குனிந்து எடுத்தான். வெள்ளியால் ஆன ஒரு கொலுசு அது.

"சந்தேகமே இல்ல... இது அவளோடதுதான்..." -ரவி அந்தக் கொலுசைத் திருப்பிப் திருப்பிப் பார்த்தவாறு தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் அதைத் தன்னுடைய உதட்டில் வைத்து முத்தமிட்டான்.

அவன் அந்தக் கொலுசைக் கையால் தடவியவாறு நடக்காமற்போன ஒரு ஆசையை மனதில் வைத்துக்கொண்டே தான் இருக்குமிடத்திற்குத் திரும்பி வந்தான்.

மறுநாள் ரவியால் மாளுவை எங்கும் வெளியில் பார்க்க முடியவில்லை. அவன் அன்று கொலுசைக் கையில் எடுத்துக் கொண்டு மாலை மயங்கும் வரையில் ஆற்றின் கரையிலேயே அவளுக்காகக் காத்திருந்து, எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் திரும்பிப் போனான்.

நான்காவது நாள் நடுப்பகல் நேரத்தில் அவள் ஆடைகளைச் சலவை செய்வதற்காக ஆற்றின் கரைக்கு வந்தாள். ரவி மெதுவாக அவளருகில் சென்று கேட்டான்: "மாளு, இந்தக் கொலுசு உன்னோடதுதானே?"

அவள் நன்றியுடன் அவனைப் பார்த்து, தலையை ஆட்டியவாறு "ஆமாம்" என்றாள்.

ரவி இன்னும் கொஞ்சம் அவளுக்கு அருகில் வந்து நின்று கொண்டு மெதுவான குரலில் கேட்டான்: "நீ ஏன் அன்னைக்கு ராத்திரி ஓடினே?"

அவள் தலையைக் குனிந்து கொண்டு விரக்தியுடன் புன்னகைத்தாளே தவிர, வாய் திறந்து பதில் எதுவும் சொல்லவில்லை. அவளைப் பார்த்து ரவி கேட்டான்: "இன்னைக்கு ராத்திரி வருவியா? உன்கிட்ட சில விஷயங்கள் நான் பேச வேண்டியதிருக்கு."

அவள் எதுவும் பேசாமல் ஊமையைப் போல முகத்தைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள். ரவி அவளிடம் வற்புறுத்தி கேட்டான்: "நீ வருவியா? அன்னைக்கு இருந்த இடத்துலேயே இன்னைக்கு உனக்காக நான் காத்திருக்கேன். வர்றேன்னு சொல்லு..." அவன் அவளுடைய கையைப் பிடித்து அழுத்தினான்.

அவள் தாழ்வான குரலில் சொன்னாள்: "வர்றேன்."

"அப்படின்னா, கொலுசை நீ வர்றப்போ தர்றேன்."

ரவி திரும்பி நடந்தான். தெளிந்த நிலவு அன்றும் அந்த ஆற்றின் கரையில் வெண்பட்டை விரித்தது. மரங்கள், புதர்கள் ஆகியவற்றின் நிழல்கள் அந்தப் பரந்து காணப்பட்ட பட்டு விரிப்பிற்கு அற்புதமான கரைகளை உண்டாக்கின.


முன்பு இருந்த அதே இடத்தில் வந்து ரவி அவளுக்காகக் காத்திருந்தான். ஆற்றில் மிகவும் அதிகமாகவே சாய்ந்து கிடந்த ஒரு தென்னை மரத்தில் வந்து உட்கார்ந்த ஒரு ஆந்தை முனகியது. ரவியின் கால்களுக்குக் கீழே ஒரு காட்டெலி வேகமாக ஓடியது. அதைப் பார்த்து அவன் திடுக்கிட்டுப் போனான்.

நட்சத்திரங்களைப் பார்க்கும் ஒரு மனிதனைப் போல அவன் மாளுவின் குடிசையில் மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

அந்த விளக்கு அணைந்தது. ரவிக்கு அதைப் பார்த்து சற்று நிம்மதி தோன்றியது. அவன் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்து, அந்த ஒற்றையடிப் பாதையையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அரை மணி நேரமாகியும் அவள் வந்து சேரவில்லை. ரவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளைத் தேடி அங்கு போவது என அவன¢ மனதில் தீர்மானித்தான்.

அவன் எதற்கோ முகத்தைத் திருப்பியபோது, ஒரு உருவம் அவனுக்குப் பினனால் வந்து நின்றிருந்தது.

"மாளு..."- அவள் வேறொரு வழியே அங்கு வந்திருந்தாள். அவன் அவளுடைய நெற்றியை மறைத்திருந்த துணியை அகற்றி அவளின் முகத்தைப் பிடித்து உயர்த்தினான். புதிதாக மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய வெள்ளை ஆம்பல் மலரின் வெண்மையும் கள்ளங்கபடமற்ற தன்மையும் அழகும் அந்த முகத்தில் குடிகொண்டிருந்தன.

அவன் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த ஆவேசத்துடனும் இனம் புரியாத காதல் உணர்வுடனும் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் அவளையே பார்த்தவாறு நின்று கொண்டிருக்க, அவள் ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள். முதல் சந்திப்பில் நடந்ததைப் போல எங்கே அவள் ஓடிப் போய்விடப் போகிறாளோ என்று பயந்த ரவி அவளுடைய கையை இறுகப் பிடித்துக் கொண்டான்.

இருந்த நிலையிலிருந்து அவள் மாறினாள். அவள் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டே, திக்கிய குரலில் சொன்னாள்: "நான் எதுவுமே தெரியாத ஒரு பொண்ணு. எனக்கு அப்பாவோ, அம்மாவோ, அண்ணன்மார்களோ யாரும் இல்ல.. ஏதாவது எனக்கு மானம்போறது மாதிரி நடந்திருச்சின்னா, அதுக்குப் பிறகு..."

ரவி அவளை இறுகத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு சொன்னான்: "மாளு, என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? உனக்கு அப்படி மானம் போறது மாதிரி ஏதாவது நடக்குறதுக்கு முன்னாடி உன்னை அழைச்சிட்டுப் போயி நான் பெருமை சேர்ப்பேன்..."

அவர்கள் அன்று பிரிந்து போது நிலவு மறைந்துவிட்டிருந்தது. ரவி அவளுடைய வீடுவரை அவளுக்குப் பின்னால் போனான். திரும்பி வீட்டிற்கு வந்தபிறகுதான் மாளுவின் கொலுசை அவளிடம் திருப்பித் தராமல் போய்விட்டோமே என்று அவன் நினைத்தான்.

6

ந்த நிலவைப் போலவே ஒவ்வொரு இரவு முடியும் போதும் அவர்களின் காதலும், காதல் லீலைகளும் கூடிக் கொண்டே இருந்தது. அவர்களுடைய இரவு நேர சந்திப்பிற்கு வானத்திலிருக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் சாட்சிகளாக இருந்தன.

மாலை மயங்குவதற்கு முன்பே அந்த குக்கிராமம் படு அமைதியில் மூழ்கிவிடும். சூரியன் மறைந்து சிறிது நேரத்தில் இரவு வருவதற்கு முன்பே அந்தக் கிராமத்து மக்கள் இரவு நேரக் கஞ்சியைக் குடித்துவிட்டு உறங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தன் வீட்டில் இருப்பவர்கள் முழுமையாக உறக்கத்தில் ஆழ்து விட்டார்கள் என்பது தெரிந்துவிட்டால், மாளு மெதுவாக வீட்டை விட்டு வெளியே வருவாள். இருட்டில் காதல் அவளுக்கு ஒளி காட்டியது. இருவழிஞ்ஞி ஆற்றின் வளைந்த வெண்மணல் பரவிக் கிடக்கும் கரை வழியாக அவள் நடந்து, முழங்கால் வரை இருக்கும் நீரைக் கடந்து அக்கரையை அடைந்து, ரவி தங்கியிருக்கும் உயர்ந்த இடத்தின் நிலத்தில் இருக்கும் வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் ஒளியை இலக்காக வைத்துக் கொண்டு அவள் நடப்பாள். அந்தச் சிறு வீடு நெருங்க, நெருங்க அடக்க முடியாத ஒரு ஆவேசம் அவளுக்குள் ஆட்சி செய்து கொண்டிருக்கும். அவளுடைய இதயம் அவளுக்கே கேட்காதபடி உரத்த சத்தத்தில் துடிக்கும். அவளின் காற்பாதங்கள் மணலில் படாமல் நடுங்கும். உதடுகள் காரணமே இல்லாமல் வறண்டு போகும். திடீரென்று பின்னாலிருந்து சிறிதும் எதிர்பார்க்காமல் யாரோ தொடுவதைப் போல் இருக்கும். ஒரு மின்சக்தி அவளுடைய உடம்பிலுள்ள சகல நரம்புகளிலும் பாய ஆரம்பிக்கும். தன்னை அவன் இறுகக் கட்டிப்பிடிக்கும் போது தன்னையே முழுமையாக இழந்து விட்டதைப் போல் அவளுக்குத் தோன்றும். அவளுடைய நடுங்கிக் கொண்டிருக்கும் உதடுகளில் ஒரு இனிய முத்தம்- மேலும் கீழுமாக உயர்ந்து கொண்டிருக்கும் மார்பகத்தில் ஒரு ஆக்கிரமிப்பு- பாதி சுய உணர்வுடன் அவனுடைய அந்த அணைப்பில்- அந்த ஆனந்தமான சூழலில் அவள் ஒரு ஆம்பல் மலரைப் போல தன் நிலையிலிருந்து கீழே இறங்குவாள். தன்னிடமிருந்து கிளம்பிய வெப்பத்தால் வாடிய ஒரு இளம் கொடியை வாரி எடுத்துக் கொண்டு ரவி தான் தங்கியிருக்கும் இடத்தை நோக்கி நடப்பான். அங்கிருக்கும் படுக்கையறையில் போடப்பட்டிருக்கும் பட்டு மெத்தை மீது அந்தக் காதல் தேவதையைக் கொண்டு போய் அவன் கிடத்துவான்.

ரவி ஒரு காதல் மந்திரவாதி என்பதில் சந்தேகமேயில்லை. தன்னுடைய பிடியில் சிக்கிய காதல் வயப்பட்ட இளம்பெண்களை சில நொடிகளில் பொம்மைகளாக மாற்றும் சித்து வேலையை அவன் தன் கைவசம் வைத்திருந்தான். அவனுடைய காதல் வலை பாவம் ஒரு அப்பிராணி கிராமத்து இளம்பெண் மீது பல மடங்கு வலிமையுடன் வந்து விழுந்தது. "மாளு..."-ரவியின் அந்த அழைப்பு காதலின் பிரணவ மந்திரம் போல இருந்தது அவளுக்கு. ரவியின் ஒவ்வொரு பார்வையும் செயலும் தொடலும் மாளுவின் இதயத்தில் புத்துணர்ச்சியை உண்டாக்கியது. ஒவ்வொரு நிமிடம் முடியும் போதும் அவள் வேறு வேறு மாதிரி மாறிக் கொண்டேயிருந்தாள். வெட்கப்பட வேண்டிய நேரத்தில் அவள் தைரியத்துடன் இருந்தாள். தைரியமாக இருக்க வேண்டிய நிமிடத்தில் அவள் அழுது கொண்டிருந்தாள். அவனிடமிருந்து அவள் காதலைப் பற்றிய ஆழமான பாடங்களைப் படித்தாள். அந்தக் காதல் போதையில் அவளும் சிலவற்றை வெளிப்படுத்தினாள்.

ரவி கூறுவான்: "உன்னை நான் கோழிக்கோட்டுக்கு அழைச்சிட்டுப் போகப்போறேன்."

மாளு கேட்டாள்: "எதுக்கு?"

"உன்னை திருமணம் செய்றதுக்கு..."

"என்னை ஏமாத்திட மாட்டீங்களே?"

அவளின் கன்னத்தைக் கிள்ளியவாறு ரவி கேட்டான்: "என்ன மாளு, என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?"

மாளு தலையைக் குனிந்து கொண்டு, ரவியின் இஸ்திரி தேய்த்து பளபளப்பாக்கப்பட்ட சட்டைக் காலரைப் பார்த்தவாறு கூறுவாள்: "வேண்டாம்... நான் இங்கேயே எப்படியாவது வாழ்ந்தால் போதும்."

"போ... போ... இடியட்...."


"இடியட்"- என்ற அந்த ஆங்கிலச் சொல்லுக்கான அர்த்தம் என்ன என்பதை அவள் எப்படி அறிவாள்? இருந்தாலும், அது ஒரு செல்லமான வார்த்தை என்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.

தொடர்ந்து ரவி நகரத்தைப் பற்றியும், நகர வாழ்க்கையைப் பற்றியும் விளக்கமாக வர்ணனை சகிதமாக அவளுக்குக் கூற ஆரம்பித்து விடுவான். கடல், கப்பல், கடற்கரை, வியாபாரம், மக்கள் கூட்டம் நிறைந்த தெருக்கள், பெரிய கட்டிடங்கள், கைத்தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், க்ளப்புகள், திரைப்பட அரங்குகள், புகை வண்டி நிலையங்கள்-இவை ஒவ்வொன்றைப் பற்றியும் ரவி அவளிடம் வர்ணிப்பான். அப்போது அவளுடைய கண்கள் அகலமாக விரியும். நகரத்தைப் பற்றி- அந்த அற்புத ஊரைப் பற்றி- அவள் தன் மனதில் எவ்வளவோ கற்பனை பண்ணி வைத்திருப்பாள். அவளுடைய கற்பனா விஷயங்களுக்கு மேல் அவன் பலவற்றைச் சேர்ப்பான்.

தெரு. அது முக்கம் எஸ்டேட்டிலிருக்கும் வெளிநாட்டுக்காரரின் பங்களாவைப் போல ஐந்நூறு கட்டிடங்கள் அடுத்தடுத்து இருக்கும். கடைவீதியில் மக்கள் கூட்டம். நூறு முக்கம் சந்தைகள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு காட்சியை அவள் மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அதே நேரத்தில் கப்பல், புகைவண்டி ஆகியவற்றைப் பற்றி தெளிவான ஒரு வரைபடம் அவளுடைய மனதில் உண்டாகவில்லை. மாளு அதிகம் பயணம் செய்ததில்லை. வேற்றூர்களைப் பார்த்ததில்லை. முக்கத்திலிருந்து கிழக்கு திசையில் இருக்கும் 'அல்லி தோட்டம்' (ரப்பர் எஸ்டேட்) வரையும் மேற்குப் பக்கம் பெரிய தோட்டம் வரையும் மட்டுமே அவள் போயிருக்கிறாள். அவற்றைத் தாண்டி இருக்கும் இடங்களைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது. எனினும், முக்கத்தைப் பற்றி முழுக்க முழுக்கத் தெரிந்தவர்கள் அவள் அளவிற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஒருநாள் இரவு நேரத்தில் ரவியும் மாளுவும் அங்கு சந்தித்து பிரியும் நேரத்தில், ஒரு பாட்டு அதிக தூரமில்லாத ஒரு இடத்திலிருந்து கேட்டது.

'அங்கு ஜானுவோட சோப்பு டப்பாவுல

டைவரோட போட்டோ பார்த்தேன்

பொன்னம்மா, டைவரோட போட்டோ பார்த்தேன்.

கறுத்த ஆளும் வேண்டாம் வெளுத்த ஆளும் வேண்டாம்

எனக்கு என்னோட டைவருதான் வேணும்..."

அந்தப் பழமையான நாட்டுப் பாடலைக் கேட்டு ரவி விழுந்து விழுந்து சிரித்தான்.

மாளு மெதுவான குரலில் சொன்னாள்: "இக்கோரனோட பாட்டு அது."

ரவி கேட்டான்: "இக்கோரன்றது யாரு?"

"அவர் ஒரு சாதுவான மனிதர். எல்லாருக்கும் உதவி செய்யக் கூடியவர். அந்த ஆளால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்ல. காலையில இருந்து சாயங்காலம் வரை தெற்கு, கிழக்குன்னு அலைஞ்சு மாடு மேய்ச்சோ வண்டி பூட்டியோ ஏதாவது செய்து காசு சம்பாதிப்பார். சாயங்காலத்துல இருந்து நடுராத்திரி வரை கள்ளு குடிச்சிட்டு பாட்டுப் பாடிக்கிட்டு திரிவார். இதுதான் அந்த ஆளோட தொழில் எல்லாரும் அந்த ஆளை மதராஸ் இக்கோரன்னுதான் கூப்பிடுவாங்க."

ரவியும் மாளுவும் அருகிலிருந்து புதர்க்கருகில் சற்று ஒதுங்கி இருக்க, இக்கோரன் முன்பு பாடிய அதே பாடலை மீண்டும் திரும்பப் பாடியவாறு அந்த ஆற்றின் கரை வழியாக- அவர்களுக்கு மிகவும் அருகில் நடந்து போனான்.

ரவி அவளுடைய உதட்டில் பிரிந்து போகும் போது கொடுக்கும் கடைசி முத்தத்தை அழுத்திக் கொடுத்தான்.

வைரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் நீலவிரிப்பைப் போல ஆகாயம் ஒளிமயமாக இருந்தது.

மிகுந்த ஒளியுடன் ஒரு நட்சத்திரம் கீழே விழுந்தது.

மாளு கண்களை விரித்துக் கொண்டு சொன்னாள்: "அதோ அங்கே ஒரு மீன் விழுகுது..."

அவளுடைய பிரகாசமான கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே ரவி சொன்னான்: "பார்க்குறேன்... அந்த மீன் உன் கண்ணுலதான் வந்து விழுந்துச்சு..."

மாளுவிற்கு அவன் வார்த்தைகளில் இருந்த கவிதையை ரசிக்கத் தெரியவில்லை. அவள் கள்ளங்கபடமற்ற குரலில் சொன்னாள்: "இல்லை இல்ல... அது அந்த முஸ்லிமோட வயல்ல போய் விழுந்துச்சு. அது விழுந்த இடத்துல நாளைக்குப் போயி தோண்டிப் பார்த்தா ஒரு புதையல் இருக்கும்."

ரவி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு அவளுடைய கண்களை விடாமல் முத்தமிட்டவாறு சொன்னான்: "என் புதையல் இங்கேதான் இருக்கு..."

அவளுக்கு ரவி ஆர்வத்தைத் தூண்டக்கூடிய காதல் சம்பந்தப்பட்ட படங்களை- அவற்றில் பெரும்பாலானவை நிர்வாண கோலத்தில் இருக்கும்- காட்டுவான். அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது அவள் ஒரு குழந்தையைப் போல விழுந்து விழுந்து சிரிப்பாள். அவன் அவளிடம் காதல் கவிதைகளைக் கூறுவான். காதல் சுலோகங்களைக் கூறுவான்.

ஒருநாள் இரவு அவள் வந்தபோது, ரவி தின்பதற்காக ஒரு கிராமத்து பலகாரத்தைக் கொண்டு வந்தாள். மாவில் சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்து அல்வாவைப் போல தயார் பண்ணியிருந்த அந்தக் கிராமத்துப் பலகாரம் கேக்கை விட நல்ல ருசியாக இருந்ததால் அவன் அதை முழுமையாகத் தின்று முடித்தான். பிறகு அவளைப் பார்த்து அவன் சொன்னான்: "நீ தின்ன உனக்கு நானொரு பலகாரம் தர்றேன்."

ரவி தன்னுடைய கோட்டு பாக்கெட்டினுள் கையை விட்டு ஒரு சாக்லெட்டை எடுத்து மாளுவிடம் நீட்டினான்.

அந்தப் பளபளப்பான பொருளை மாளு இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இது என்ன?"

"ஒரு நகரத்து பலகாரம்... ம்... தின்னு..."

அவள் அந்தப் பளபளப்பான பொருளை வாய்க்குள் போட்டாள்.

"யூ ஸில்லி கேர்ள்..."- ரவி அவளுடைய வாய்க்குள் விரலை விட்டு அதை வெளியே எடுத்தான். "இந்தச் சிவப்பு நிறத்துல பிரகாசமா இருக்குறது மேல சுத்தியிருக்குற பேப்பர். அதையும் சேர்த்து சாப்பிட்டா எப்படி?"-அவன் அந்த வெளி பேப்பரை நீக்கி அந்த இனிப்பை அவளுடைய வாய்க்குள் திணித்து அவளைத் தன் மடியில் படுக்க வைத்தான்.

அந்த இனிப்பின் மணமும் நிறமும் முதலில் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அதன் ஒரு மாதிரியான சுவையை உணர்ந்ததும், அவளால் அதை என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனினும், ரவி வாய்க்குள் திணித்த அந்தப் பொருளை வெளியே துப்ப வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. மனதைப் புரட்டும் ஒரு மருந்தைச் சாப்பிடுவதைப் போல எண்ணி அவள் அதை எப்படியோ சுவைத்து உள்ளே போக வைத்தாள்.

ரவி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து புகைத்துக் கொண்டு அவளுடைய முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் சென்றதும் அவள் சொன்னாள்: "எனக்கு மனசைப் புரட்டுறது மாதிரி இருக்கு. வாந்தி வர்றதைப் போல இருக்கு."


ரவி அந்த சிகரெட்டை அவளிடம் நீட்டியவாறு சொன்னான்: "பரவாயில்ல... இதை ரெண்டு தடவை இழுத்து புகையை வெளியே விடு. மனம் புரட்டல் சரியாயிடும்."

அவள் முதலில் தயங்கினாள்.

"ம்..."

அவள் 'வேண்டாம்' என்று தலையை ஆட்டினாள்.

"மாளு... இது நல்லது..."

ரவி அந்த சிகரெட்டை அவளுடைய உதடுகளுக்கு நடுவில் வைத்தான். அவள் அதை உள் நோக்கி இழுத்தாள். புகைபலமாக அவளுடைய தொண்டைக்குள் ஏறியது. அடுத்த நிமிடம் மூக்கிற்குள்ளும், கண்களிலும் அவளுக்குப் புகைச்சல் உண்டாக ஆரம்பித்தது. அவள் இருமத் தொடங்கினாள். அதைப் பார்த்து ரவி விழுந்து விழுந்து சிரித்தான்.

"இதுக்கும் இன்னொரு மருந்து இருக்கு"- ரவி அவளை ஒரு குழந்தையைப் போல தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு சொன்னான்: "ஒரு முத்தம்..."

ஒரு நாள் மாலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் ரவியைத் தேடி வந்தாள் மாளு. அவள் சொன்னாள்: "அத்தை அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. இனி ரெண்டு மாதங்கள் கழிச்சுத்தான் அவங்க திரும்பி வருவாங்க..."

ரவி அவளை வாரி எடுத்து முத்தமிட்டவாறு சொன்னான்: "இனி என்னோட பஞ்சவர்ணக்கிளி எப்பவும் இங்கே வர்றதுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்குல்ல....!"

ஒரு பயங்கரமான சத்தத்தை உண்டாக்கியவாறு ஒரு பறவை வாசலிலிருந்த தென்னை மரத்தின் மீது பறந்து வந்து விழுந்தது. ரவி அப்படிப்பட்டட ஒரு பறவையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. அவன் அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். மாளு சொன்னாள்: "இந்த பறவையோட பேரு வேழாம்பல். கடவுளோட சாபத்தால இந்தப் பறவை இப்படி ஆயிடுச்சு..."

ரவி அந்த சாபக் கதையைக் கேட்க விரும்பினான். அவள் அதைச் சொல்ல ஆரம்பித்தாள்: "முன்பு கடவுளோட பசுக்களுக்குத் தண்ணீர்  காட்ட ஒரு பையன் இருந்தான். ஒரு நாள் அவன் பசுக்களுக்குத் தண்ணீர் கொடுக்காம தண்ணி இருக்கிற வாளியை முன்னாடி வச்சிட்டு தன்னை மறந்து தூங்கிட்டான். பசுக்கள் தண்ணீர் இல்லாம தாகமெடுத்து கஷ்டப்படுறதைப் பார்த்த கடவுள் இங்கே வந்து பார்த்தா, பையன் நிம்மதியா தூங்கிக்கிட்டு இருக்கான். அடுத்த நிமிடம் அவர் அந்த வாளியை அவனோட தலையில கவிழ்த்து வச்சாரு. அப்போ அவர், 'நீ தண்ணீர் குடிக்க முடியாத, தாகமெடுத்து கஷ்டப்படுற, தொண்டையில துவாரம் உள்ள ஒரு பறவையா பிறக்கணும்' என்று சாபம் போட்டார். அதுனாலதான் இந்தப் பறவையோட தலையில் இப்பவும் ஒரு வாளி கவிழ்த்து வச்சது மாதிரி ஒரு அடையாளம் இருக்கும். தெரியுதா?"

வேழாம்பல் பறவையின் கடந்த கால வரலாறைக் கேட்டு ரவி விழுந்து விழுந்து சிரித்தான். "இனி என் குயிலுக்கு வேற என்னென்ன கதைகளெல்லாம் தெரியும்?"- அவன் அவளுடைய கன்னங்களைக் கிள்ளியவாறு கேட்டான்.

கிராமம்! நாகரீகத்தின் ரசனைகள் எதுவும் எட்டிப் பார்த்திராத கிராமம்... அங்குள்ளவர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் ஒரு இலக்கியம் இருக்கவே செய்கிறது. பழங்கதைகளும், பேய்க் கதைகளும், அழகும் கற்பனையும் கலந்த சரித்திரக் கதைகளும், வீரச் செயல்களைப் புகழ்ந்து பாடும் பாடல்களும் நிறைந்த எளிமையான அந்தக் கிராமப்புற இலக்கியத்திற்கும் ஒரு சொந்தமான வசீகர சக்தி இருக்கவே செய்கிறது. அங்குள்ள ஒவ்வொரு சிறு பாறைக்கும் அருவிக்கும் ஏரிக்கும் குளத்திற்கும் ஆற்றுக்கும் ஒவ்வொரு பெயர் இருப்பதைப் போல அங்குள்ள கரும்பாறைக் கூட்டங்களின், குளங்களின், ஆலமரத் திண்ணை ஆகியவற்றிற்குப் பின்னால் மிகவும் நீளமான சரித்திரக் கதைகள் நிச்சயம் இருக்கவே செய்கின்றன. அதோ அந்தப் பெரிய கரும்பாறை... அது ஒரு கல்லாக மாறிய ஆண் யானை! எந்தவொரு கிராமத்து மனிதனைப் பார்த்துக் கேட்டாலும் அந்தக் கரிய நிற ஆண் யானை கரும்பாறையாக மாறிய பயங்கரமான அந்தக் கதையை நமக்குக் கூறுவான். அதோ, அந்த பாலா மரத்திற்கு அருகில் உள்ள குளத்திற்கருகில் பொதுவாகவே யாரும் போகமாட்டார்கள். அதற்குக் காரணம்- பல வருடங்களுக்கு முன்னால் அது குற்றவாளிகளின் கழுத்துகளை வெட்டுவதற்காகப் பயன்படுத்திய குளம். அதைப் பற்றி கேள்வி எதுவும் இல்லை. ஒவ்வொரு புதிய பருவத்தின் விடை பெறுதலையும் வருதலையும் கிராமத்து மக்கள் பூக்கள் மூலமும், பறவைகள் மூலமும் அறிந்து கொள்கிறார்கள். குயில் வந்தால், மழை வருகிறது. 'வித்தூன்றும் காலம் வந்தது' என்று பாடிக் கொண்டு வரும் ஒரு புதிய விருந்தாளிப் பறவை நிலத்தை உழுதுவித்து விதைப்பதற்குக் காலம் வந்துவிட்டது என்பதை அறிவிக்கிறது. இப்படிப்பட்ட பல அறிவுகளின், நம்பிக்கைகளின் ஒரு உறைவிடம்தான் மாளு. மிகவும் பழமையான எந்தவிதக் கெடுதலும் இல்லாத இந்த மாதிரியான நம்பிக்கைகளை அவள் ஆர்வத்துடன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பது என்பது ரவிக்குக் கூட ஒரு புதுமையான அனுபவம்தான்.

அத்தை போன பிறகு அவர்களுக்கு அதிக சுதந்திரம் கிடைத்ததைப் போல் ஆகிவிட்டது. சிறிதும் எதிர்பார்க்காமல் இந்த சுதந்திரம் கிடைத்தவுடன், ஆற்றின் அக்கரையிலிருந்த அந்தக் காதல் காளையை அவள் பகல் நேரத்திலும் போய்ப் பார்க்கத் தொடங்கினாள்.

7

க்கோரனின் பெயரைக் கேட்காதவர் என்று முக்கம் பகுதியில் யாரும் இல்லை. மாநிறத்தில் திடகாத்திரமான, உயரம் குறைவான உருவம். ஒட்ட முடிவெட்டிய தலை. எப்போதும் சிரித்தவண்ணம் இருக்கும் முகம். இந்த விஷயங்கள் அசாதாரணமானவை என்று கூற முடியாவிட்டாலும் மொத்தத்தில் இக்கோரன் ஒரு அசாதாரணமான படைப்பு என்பதில் சந்தேகமேயில்லை. மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து முழங்காலை மறைக்கும் வண்ணம் கட்டியிருக்கும். ஒரு துண்டுத் துணியைத் தவிர ஒவ்வொரு நாளும் அவன் அணிவதற்கு அவனிடம் வேறு உடையே இல்லை. வேலை என்று இறங்கும் போது அந்தத் துணி கறுத்து அழுக்காகிப் போயிருக்கும். மற்ற நேரங்களில் வெண்மையாகக் காணப்படும். இது ஒன்றுதான் வேறுபாடு. முன்பு, தங்கத்தால் ஆன ஒரு ஜோடி பெரிய கடுக்கன்கள் அணிந்திருந்த காதில் இப்போது அவை உண்டாக்கிய ஓட்டைகள் மட்டுமே இருக்கின்றன. தனக்கு என்ன வயது நடக்கிறது என்பது அவனுக்கே தெரியாது. இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் அவனுடைய வயது இருக்கலாம். அவன் எப்போதும் ஒரு பேனாக் கத்தியை இடுப்பில் வைத்திருப்பான். அவனுடைய ஒரே ஆயுதம் அதுதான்.

அவனுடைய செசந்த ஊர் எது, வீடு எங்கே இருக்கிறது, தாய்- தந்தை யார் போன்ற எந்த விஷயங்களும் முக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது. மலபார் கலகம் நடந்த காலத்தில் அவன் தெற்குப் பக்கத்திலிருந்து எப்படியோ இறக்காமல் தப்பித்து முக்கம் பகுதிக்கு பிழைப்புத் தேடி வந்திருக்கிறான். அவனுடைய தாய், தந்தை இருவரும் கலகத்தில் சிக்கி மரணமடைந்து விட்டார்கள்.


கலகக்காரர்கள் பரிசாகத் தந்த காயம் அவனுடைய கழுத்தில் ஒரு ஆபரணத்தைப் போல காட்சியளிக்கும். முக்கம் பகுதிக்கு வந்து சேர்ந்த பிறகு இதுவரை தானே மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துதான் அவன் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

அவன் வெற்றிலை போடுவது இல்லை. பீடி புகைப்பது இல்லை. தேநீர் குடிப்பது இல்லை. அந்த மாதிரியான கெட்ட பழக்கங்கள் எதுவும் அவனிடம் கிடையாது. ஆனால், அவற்றை விட ஒவ்வொரு நாளும் ஆபத்துவிளைவிக்கக்கூடிய ஒரு கெட்ட பழக்கம் அவனிடம் இருக்கவே செய்தது. அது- மது அருந்துவது! அவனுடைய வார்த்தைகளிலேயே கூறுவது என்றால் 'சின்ன குடியான், பெரிய குடியன்.' பொழுது புலரும் நேரத்திலிருந்து மாலை முடியும் வரை அவன் எலும்புகளே நோகும் அளவிற்கு மதுவை உள்ளே தள்ளுவான்.

பகல் முடிந்து மாலை வரை அவன் மூக்கு முட்ட குடிப்பான். மாலை முதல் நள்ளிரவு வரை பல இடங்களிலும் நடந்தவாறு ஏதாவது பாட்டுகளைப் பாடிக் கொண்டு திரிவான். இதுதான் அவனுடைய ஒவ்வொரு நாளும் சிறிதும் மாறாத நிகழ்ச்சி நிரல்.

அவனுக்கென்று இருக்கின்ற சொத்தும் சம்பாத்தியமுமே இரண்டே இரண்டு மாடுகள்தான். கண்ணப்பனும் மைசனும். அவன் அன்பு வைத்திருக்கின்ற இரண்டு உயிர்கள் அவை மட்டுமே. அவற்றை வைத்து வேலை செய்ய வைத்துதான் அவன் தன் வயிற்றையே கழுவிக் கொண்டிருக்கிறான். அந்த வாயில்லா பிராணிகளுக்குப் புல் அறுத்துக் கொண்டு வந்து தந்து தண்ணீர் காட்டி அவற்றின் வயிறை நிறைக்காமல் இக்கோரன் தன்னுடைய வயிற்றைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. 'பரோபகாரார்த்தமிதம் சரீரம்' என்ற வார்த்தையைச் சிறிதும் பிசகாமல் வாழ்க்கையில் பின்பற்றுகிற இன்னொரு ஆள் இக்கோரனைப் போல இல்லை என்பதே உண்மை. மொத்தத்தில் பார்க்கப்போனால் அவன் முக்கத்துக்காரர்களின் பொதுச்சொத்து என்பதே சரி. விசேஷமாக ஏதாவது, எங்காவது நடந்து விட்டால் அதற்கு உரிய நேரத்தில் உதவுவதற்கு இக்கோரன் அந்த இடத்திற்குப் போகாமல் இருக்கமாட்டான். மரணம் நடக்கும் இடங்களில் இலை வெட்டுவது முதல் எச்சில் இலையைப் பொறுக்குவது வரை அவன் செய்வான். இக்கோரன் இல்லாத ஒரு விசேஷமும் முக்கத்தில் நடக்காது. அவனுடைய பாட்டும் தாளமும் வேலை செய்பவர்களுக்கு உணர்ச்சியையும் உற்சாகத்தையும் தந்து கொண்டிருக்கும். ஜாதி, மத வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் அவன் மீது அன்பு வைத்திருப்பார்கள். எதையும் பலனாக எதிர்பார்க்காமல் யாருக்கு வேண்டுமென்றாலும் அவன் தன் உடம்பைக் கொடுத்து வேலை செய்வான். சிறுவர்கள் கூட்டமாக அவனுக்குப் பின்னால் கூடுவார்கள். ஒரு பாட்டுப் பாடும்படி அவனிடம் கூறுவார்கள். அப்போது தான் தெரிந்து வைத்திருக்கும் கிராமத்துப் பாடல்களில் ஒன்றை அவன் தாளம் போட்டவாறு பாடுவான். அவர்கள் ஆரவாரம் எழுப்பியவாறு அவனைச் சுற்றிலும் நின்று கொண்டு கூறுவார்கள்: "மதறாஸ் இக்கோரா, இன்னொரு பாட்டுப் பாடு..."

அவன் வேறு வேறு பாட்டுக்களை அதற்குப் பிறகும் பாடுவான். கடைசியில்-

''பாட்டெல்லாம் பாடி

பழம்பாயில் கட்டி

முக்கம் ஆற்றில் போக விட்டார்கள்"

என்று பாடி முடித்தால், அதற்குப் பிறகு அவன் பாடமாட்டான் என்று அர்த்தம். அதைக் கேட்டு சிறுவர்கள் ஆரவாரித்தவாறு பிரிந்து போகும் போது அவன் அவர்களுக்கு ஒரு துண்டு பத்திரியோ இல்லாவிட்டால் ஆளுக்கு ஒரு பழமோ சில வேளைகளில் வாங்கித் தருவான்.

பெண்களுக்கு அவன் மீது நல்ல அபிப்ராயம். அவன் அவர்களுக்கு தென்னை மரத்திலிருந்து தேங்காய் பறித்துத் தருவது, வெயில் காலத்தில் ஆற்றின் கரையில் சுத்தமான நீருக்காகக் குழி தோண்டி தருவது, காட்டிலிருந்து விறகு கொண்டு வந்து தருவது, படகோட்டுவது போன்ற பல உதவிகளை அவன் செய்து தருவான். அவர்கள் அவனை தாங்கள் ரசிக்கக்கூடிய ஒரு பெரிய குழந்தை என்றே மனதில் நினைப்பார்கள். இரவு நேரங்களில் இக்கோரன் முக்கத்தைப் பொறுத்தவரை ஒரு போலீஸ்காரன் என்றுதான் சொல்ல வேண்டும். இரவு வேளைகளில் நேரம் தவறி யாராவது தனியாகப் பிரிந்து போக வேண்டிய சூழ்நிலை உண்டானால், பயணிகள் தங்களுக்குள் கூறிக் கொள்வார்கள்: "பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல, எங்காவது கட்டாயம் இக்கோரன் உட்கார்ந்திருப்பான்" என்று. அவர்கள் சொல்வதைப் போலவே, முக்கத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் கேட்டு கொண்டிருக்கும் இக்கோரனின் பழைய பாட்டுகள். அவர்கள் நடந்து செல்லும் போது அவர்களின் காதுகளில் வந்து மோதும். அதைக் கேட்டுக் கொண்டே எந்தவித பயமும் இல்லாமல் அவர்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.

இரவு வேளைகளில் நேரம் தவறி ஆற்றைக் கடக்க முடியாமல் போகும் போது "இக்கோரா! கூ..ஊய்..." என்றொரு கூக்குரல் போட்டால் போதும். எங்கு குடித்து தலைகீழாக விழுந்து கிடந்தாலும், அவன் அந்தக் கூக்குரலைக் கேட்டால் 'கு...கு...கூ...' என்று பதிலுக்கு கூக்குரல் கொடுத்தவாறு அவன் படகுடன் வந்து சேர்வான். அதற்கு அவர்களிடம் பலன் என்று எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், பிறகு எப்போதாவது நீங்கள் அவனைப் பார்க்கும் போது ஒரு கோப்பை கள்--ளு வாங்கிக் கொடுத்தால் அவன் ஒரு புன்சிரிப்புடன் அதை வாங்கிக் கொள்வான்.

அவனுக்கு 'மதராஸ் இக்கோரன்' என்றொரு பட்டப்பெயர் இருக்கிறதென்பதை நாம் மாளுவின் வார்த்தைகளிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம் அல்லவா? சில நேரங்களில் அந்தப் பெயர் 'மதராஸிக்கோரன்' என்றோ இல்லாவிட்டால் வெறும் 'மதராஸி' என்றோ கூட மாறி அழைக்கப்படுவதுண்டு. மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மதராஸ் பொது மருத்துவமனைக்குப் போயிருந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒரு ஜமீன்தாருக்கு உதவியாளனாக உடன் போகும் வாய்ப்பு இக்கோரனுக்குக் கிடைத்ததால் அவனுக்கு இப்படியொரு பெயர் பட்டப்பெயராக வந்து சேர்ந்தது.

மதராஸ் இரயில்வே ஸ்டேஷனிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இருந்த இடங்களை மட்டுமே பார்த்திருந்தாலும், அவன் மதராஸ் நகரத்தைப் பற்றி வர்ணனை சகிதமாக பெரிய ஒரு பாட்டு ஒன்றைத் தயார் பண்ணிப் பாடினான். அந்தப் பாட்டு அந்தக் கிராமத்து மக்களை ஆச்சரியத்தின் எல்லையில் கொண்டு போய் நிறுத்தியது. அவர்கள் அவனை 'மதராஸிக் கோரன்' என்ற பட்டப்பெயர் வைத்ததோடு நிற்காமல், அவனுடைய கவிதை பாடும் திறமைக்கும் ஒரு அங்கீகாரம் தந்தார்கள்.

மதிய நேரக் கஞ்சியைக் குடித்துவிட்டு அன்றும் இக்கோரன் கள்ளுக் கடையை நோக்கி நடந்தான். ஒரே இழுப்பில் இரண்டுகோப்பைக் கள்ளை அடித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினான். சிறிது தூரம் சென்ற பிறகு உண்ணிச் சேக்கு மாப்பிள்ளை தனக்கு எதிரில் வருவதை அவன் பார்த்தான்.


"என்ன மதராஸி?" என்று அவன் அழைத்தான்.

"நல்லா இருக்கேன்"- இக்கோரன் பதில் சொன்னான்.

தொடர்ந்து அந்த முஸ்லிமை பாதம் முதல் தலை வரை தன் கண்களால் பார்த்து இக்கோரன் பாட ஆரம்பித்தான்.

'மாப்பிள்ளை மார்களுக்கு நான்கு குற்றம்

சலவை உடுப்பார்கள் தலையைக் கட்டுவார்கள்

தாடியிருக்க, முடியை எடுப்பார்கள்

தாழ்ந்த குலத்தின் கையைப் பிடிப்பார்கள்'

அதைக் கேட்டு உண்ணிச் சேக்கு மாப்பிள்ளை விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு விஷயத்திற்குள் நுழைந்த அவன் கேட்டான்:

"இக்கோரா, நாளைக்கு எங்கேயாவது மாடுகளைப் பூட்டுறதா இருக்கா?"

"இல்ல..."

"அப்படின்னா மாடுகளை அழைச்சிட்டு நாளைக்கு வந்திடு. நம்ம வயலை உழணும்..."

"சரி...."

இக்கோரன் அதற்குப் பிறகும் இலக்கு இல்லாமல் நடந்து கொண்டிருந்தான். பாட்டுப் பாடியவாறு வயலின் வரப்பு வழியாக நடந்து போன போது அருகிலிருந்த ஒரு குடிசைக்குள்ளிருந்து ஒரு குழந்தை அழும் குரல் கேட்கவே, அங்கு அவன் சென்றான்.

அது வீடு கட்டும் பாச்சுவின் வீடு. பாச்சு அப்போது அங்கு இல்லை. பாச்சுவின் மனைவி தொழுவத்தில் பசுவைக் கறந்து கொண்டிருந்தாள். குழந்தையைப் பார்ப்பதற்கு அங்கு யாருமில்லை. அழுது அழுது குழந்தையின் தொண்டையே வற்றிப் போயிருந்தது.

இக்கோரன் நேராக வீட்டிற்குள் சென்றான். ஒரு பழைய பனையால் ஆன ஓலைப் பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையை எடுத்து தாலாட்டுப் பாட்டுப் பாடியவாறு அவன் வாசலில் நடந்து கொண்டிருந்தான்.

'அழாதே மகளே, அழைக்காதே மகளே

உன்னைக் கட்டும் கல்யாணத்துக்கு

பன்னிரண்டு யானைகள் அலங்கரித்து வரும்

பொன் உள்ள பெட்டியைத் தூக்கிவரும்

பின்னால் பித்தளைச் சாவி ஓடிவரும்...'

இக்கோரனின் பாட்டில் அடங்கியிருந்த எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பாலோ என்னவோ குழந்தையின் அழுகைச் சத்தம் நின்றது. பாச்சுவின் மனைவி தொழுவத்திலிருந்தாவறு சொன்னாள்:

"இக்கோரா, இதோ வந்துட்டேன்."

அவள் பால் கறந்து, உள்ளே கொண்டு போய் ஒரு பாத்திரத்தில் ஊற்றிவிட்டு வந்து குழந்தையை இக்கோரனிடமிருந்து வாங்கினாள்.

இக்கோரனுக்கு ஒரு நெய்யப்பம் கிடைத்தது-.

பிறகு அவன் ஆற்றின் கரையை நோக்கித் திரும்பினான். அங்கு அவன் போன போது மாளு குளிப்பதற்குத் தயாராக நின்றிருந்தாள். இக்கோரன், புன்சிரிப்புத் தவழ, அர்த்தம் நிறைந்த பார்வையால் அவளைக் கீழிலிருந்து தலை வரை அளந்து கொண்டு பார்த்தான். பிறகு அவன் தலையை ஆட்டியவாறு ஒரு பாட்டைப் பாடினான்:

'கந்தர்வனைக் கண்டு காதலிச்சா ஒரு பொண்ணு

சாயங்காலம் முக்கம் ஆற்றைக் கடந்தா...

எனக்கு இது எதுவும் தெரியாது ராமநாராயணா...'

மாளுவின் உள்ளத்தில் நெருப்பு பற்றி எரிந்தது. தன்னுடைய ரகசியம் முழுவதையும் இந்தக் கள்ளு குடிக்கும் மனிதன் நன்கு தெரிந்திருக்கிறானோ என்று அவள் நினைத்தாள்.

8

ஞ்சமி நிலவு அதற்குப் பிறகும் இரண்டு முறை முக்கம் ஆற்றில் முகத்தைக் காட்டியது. ரவி தன்னுடைய அஞ்ஞாத வாதம் முடிந்து நகரத்திற்குத் திரும்பிச் செல்லும் ஆயத்தத்தில் இருந்தான்.

இந்தக் கிராமத்தில் தங்கியிருந்த அந்த நாட்களில் ரவிக்கு ஆச்சரியப்படத்தக்க மன அமைதியும் உடல் நலமும் கிடைத்தன. அவற்றுடன் சிறிதும் எதிர்பார்த்திராத 'அந்தக் காதலும்'. எனினும், நகரத்திற்குப் புறப்படும் நேரம் வந்துவிட்டது என்றவுடன் ரவியின் குணம் மீண்டும் மாற ஆரம்பித்தது. நகரத்தின் ஆனந்தத்தையும், ஆர்ப்பாட்டமான விருந்துகளையும், கேளிக்கைகளையும், நண்பர்களையும், சினேகிதிகளையும் பற்றி மனதில் நினைத்து பார்த்தபோது, உடனே அவற்றில் போய் மூழ்க வேண்டும் என்றொரு ஆவேசம் அவனுக்குள் உண்டானது. இரண்டு மாதங்கள் தான் நகரத்தை மறந்து இருப்பதைப் போல, இங்கிருந்து கிளம்பிவிட்டால் இந்தக் கிராமத்தையும் தான் மறந்துவிட வேண்டும் என்று அவன் மனதில் முடிவெடுத்தான். சாமான்களைக் கட்டி ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு மறுநாள் அதிகாலையில் அவற்றை பாதையில் கொண்டு வந்து தரும்படி ஒரு கூலிக்காரனையும் ஏற்பாடு பண்ணினான்.

அன்று இரவு மாளு அங்கு வந்த போது, சாமான்கள் கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்: "இதோட அர்த்தம் என்ன?"

ரவியின் பதில் மிடுக்கான குரலில் வந்தது: "மாளு, நான் அவசரமா நகரத்துக்குப் போக வேண்டியதிருக்கு."

ஒரு இடியும், மின்னலும் அவளுடைய இதயத்தைப் பிளந்து கொண்டு பாய்ந்து சென்றன. அவளுடைய கண்களில் இருள் வந்து ஆக்கிரமித்தது.

அவள் அதைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்த்ததில்லை. ரவி இங்கிருந்து கிளம்புவான் என்று அவள் நினைத்ததேயில்லை. இப்போது இதோ சிறிதும் எதிர்பார்க்காமல் ஒரு விடை பெறுதல்!

அவள் ரவிக்கு அருகில் வந்தாள். அவனைப் பார்த்து அவள் கேட்டாள்: "என்னை விட்டுட்டு போறீங்களா?"

"மாளு, வேற வழியே இல்ல. ஆனா, உன்னை நான் நிச்சயமா மறக்க மாட்டேன். நீயும் என்னை மறக்கமாட்டேன்னு நம்புறேன்."

அவன் பெட்டியைத் திறந்தான். பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கத் தயங்கவில்லை -ரூபாய் என்ற நிலையில் அல்ல. காதலனின் ஒரு உதவி என்றே அதை அவள் எண்ணினாள்.

அவன் அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளுடைய கன்னத்தில் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது. அவள் அவனுடைய வலது கையைப் பிடித்து, அந்த விரலில் இருந்த மோதிரத்தைப் பிடித்து என்னவோ சொல்ல நினைத்தாள். ஆனால், வார்த்தைகள் வெளியே வரவில்லை.

"என்ன, இந்த மோதிரம் வேணுமா? எடுத்துக்கோ.."- ரவி மோதிரத்தைக் கழற்றி அவளிடம் நீட்டினான்.

அவளுக்கு மோதிரம் தேவையில்லை. வேறு என்னவோ கூற வேண்டும் என்றுதான் அவள் நினைத்தாள். ஆனால், காதலன் நீட்டிய அந்தக் காணிக்கையை அவள் வேண்டாம் என்று மறுக்க வில்லை. ஒரு பொம்மையைப் போல அவள் அதை கையை நீட்டி வாங்கினாள்.

ரவி அவளைக் கடைசி தடவையாக முத்தமிட்டான். அவன் சொன்னான்: "நான் புறப்படுறேன். கோழிக்கோட்டுக்குப் போயி ஒரு வாரம் ஆகுறதுக்கு முன்னாடி, உன்னைப் பார்த்து விசாரிக்குறதுக்காக நான் ஒரு ஆளை அனுப்பி வைக்கிறேன்.

அவள் அதற்கு ஒரு வார்த்தைகூட பதிலாகக் கூறவில்லை. அவள் அவனுடைய அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அமைதியாக அவனிடமிருந்து விடை பெற்றாள்.

அவள் ஒரு உயிரற்ற பிணத்தைப் போல ஆற்றைக் கடக்கும் போது, தூரத்தில் இக்கோரனின் ஒரு பாட்டு தெளிவாகக் காற்றில் மிதந்து வந்தது:

'வானத்தில் நிலவு ஒளிர்வதைக் கண்டு

ஆசைப்பட வேண்டாம் நீ பெண்ணே....'


மறுநாள் காலையில் பத்து மணிக்கு ரவி தன்னுடைய இல்லமான 'ராஜேந்திர விலாஸ'த்தை அடைந்தான்.

ரவி வந்து சேர்ந்த விவரத்தை அறிந்த அவனுடைய நண்பர்கள் ஈக்களைப் போல அவனை வந்து மொய்த்தனர்.

இத்தனை நாட்கள் ரவி எங்கு போயிருந்தான் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாததால், மோரீஸ் கார் ரவிக்கே கிடைத்தது.

அதிலிருந்து பதினைந்து நாட்கள் சென்ற பிறகு, ரவி இன்னொரு செய்தியை வெளியிட்டு தன்னுடைய நண்பர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கினான்.

தான் ஆறுமாத காலம் நீண்டு நிற்கும் ஒரு ஐரோப்பிய பயணம் போகத் தீர்மானித்திருப்பதாக அவன் ஒரு புதிய செய்தியைச் சொன்னான்.

க்ளப், ரவிக்கு மிகச்சிறப்பான ஒரு பயண அனுப்பு விழா நடத்தியது. அந்த மாத இறுதியில், ஜெர்மனிக்கு மேற்படிப்புக்காகச் செல்லும் ஒரு நண்பனுடன் சேர்ந்து ரவி க்ளப்பிலிருந்து ஐரோப்பாவிற்குக் கப்பல் ஏறினான்.

9

மாளு ஒவ்வொரு நாட்களையும் எண்ணியவாறு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள். பஞ்சமி இரவு வளர்ந்து பௌர்ணமி நிலவானது. பிறகு படிப்படியாக அது சுருங்கிச் சுருங்கி இருட்டு அதிகரிக்க அதிகரிக்க அவளுக்குள்ளும் இருட்டு பெரிதாகத் தொடங்கியது.

அவள் அந்த ஆற்றின் கரையைக் கவலையுடன் பார்ப்பாள். அங்கு வெறுமனே கிடக்கும் இடத்தில்- சில காட்சிகள் நடந்து கொண்டிருப்பதைப் போல் அவளுக்குத் தோன்றும். அவளுடைய மனதில் இருக்கும் கவலைகளையும் இதயத்தில் உள்ள ரகசியங்களையும் சொல்லப்போனால் ஒரே ஒரு ஆண் மட்டும் தான் ஓரளவுக்கு அறிவான்.

அவன்- சந்தன். ரவியின் வேலைக்காரனாக இருந்த சந்தன் ஒரு சிறுவன். ரவி- மாளு இருவருக்குமிடையில் இருந்த காதல் ரகசியங்களைக் கொஞ்சம் அந்தப் பையன் தெரிந்து வைத்திருந்தான். ஆனால், அவன் அவளுடைய ஒரு பழைய நண்பனாக இருந்ததால், அவளுக்கு அவன் தைரியமும் ஆறுதலும் கூறிக் கொண்டிருந்தான். "பயப்படாதே மாளு, முதலாளி நல்ல மனிதர். போறப்போ எனக்கு ஒரு நல்ல சில்க் சட்டை கொடுத்தாரு. ஒரு பெட்டியும் பத்து ரூபாயும் தந்தாரு...." என்றான் அவன்.

அவனுக்கு ரவி பத்து ரூபாய் தந்து போயிருக்கும் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் மாளு அதிர்ந்து போனாள். அவளுடைய கள்ளங்கபடமற்ற மனதில் இப்படியொரு சிந்தனை உண்டானது. 'எனக்கு அவர் பத்து ரூபா தந்தாரு. சந்தனுக்கும் அதே பத்து ரூபாவைத் தந்திருக்காரு. அப்படின்னா என்னையும் சந்தனையும் ஒரே நிலையில வச்சுத்தான் அவர் பார்த்திருக்காரா? நிச்சயம் அப்படி இருக்காது...' என்று அவள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். 'எனக்கு ஒரு மோதிரமும் அவர் தந்தாரே!'

அவள் அந்த மோதிரத்தைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். யாருக்கும் காட்டாமல் மிகவும் ரகசியமாக வைத்திருந்த அந்தத் தங்க மோதிரம் அவளுடைய உயிரை அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூடாக இருந்தது.

ரவி அங்கிருந்து போய் ஒரு மாதம் முடிந்தது. பஞ்சமி நிலவும், இரவு நட்சத்திரமும் அந்த மலையின் உச்சியில் ஒரு கேள்விச் சின்னத்தைப் போல நின்றிருந்தன.

ரவியைப் பற்றி எந்தவொரு தகவலும் மாளுவிற்குக் கிடைக்கவில்லை. அப்போதுதான் பயங்கரமான ஒரு உண்மை அவளை உயிரோடு பாடாய்ப்படுத்தியது. தாயாகக் கூடிய சில அறிகுறிகள்...

திருமணமாகாத ஒரு தாய்! கிராமத்தில் அவளுடைய கடைசி புகலிடம் கயிற்று நுனியோ, குளமோ, ஆறோதான்.

புகைந்து கொண்டிருக்கும் இதயத்துடன் அவள் இவ்வளவு நாட்களும் தன்னை விட்டுப் பிரிந்து போன தன்னுடைய காதலனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இனி அந்தக் காதலனைத் தேடி தானே நகரத்திற்குப் போவதுதான் சரியான செயலாக இருக்கும் என்ற முடிவுக்கு அவள் வந்தாள்.

சகுந்தலையின் கதையை யாரோ சொல்ல அவள் ஒரு முறை  கேட்டிருக்கிறாள். காதலன் தன்னைப் பார்த்து யார் என்று தெரிந்து கொள்வானா? தன்னை அவன் ஏற்றுக் கொள்வானா? இப்படிப் பலவிதப்பட்ட எண்ணங்களும் அவளுடைய மனதில் தோன்றி அவளைப் பாடாய்ப் படுத்தின. இந்த எண்ணங்கள் அவளை நகரத்திற்குப் புறப்பட விடாமல் தடுத்தன. தவிர, ரவியின் வீட்டை நகரத்தில் அவள் எப்படிக் கண்டுபிடிப்பாள்?

இது ஒரு புறமிருக்க, சந்தன் நகரத்தைப் பற்றி அவளிடம் சொன்ன சில விஷயங்களையும் அவள் நினைத்துப் பார்த்தாள். சந்தன் ரப்பர் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு படகின் மூலம் சில நேரங்களில் கோழிக்கோட்டிற்குப் போயிருக்கிறான். சந்தன் சொன்ன விஷயங்களை ஒரு முறை கேட்டால் அதற்குப் பிறகு கிராமத்திலுள்ள பெண்கள் யாருமே நகரத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்.

சந்தன் ஒன்றுக்குப் பத்தாக எந்த விஷயத்தையும் தன்னுடைய சொந்த கற்பனைகளைக் கலந்து கூறக் கூடிய பழக்கத்தைக் கொண்டவன். ஒருமுறை சந்தனின் படகில் ஒரு கூடை நிறைய ஈத்தம்பழம் இருப்பதைப் பார்த்து அது எங்கிருந்து வருகிறது என்று மாளு கேட்டதற்கு அவன் இப்படி பதில் சொன்னான்:

"ஏழு கடல்களைக் கடந்து கருங்கடலுக்கு அப்பால் தாண்டிப்போனால், ஒரு நாடு இருக்கும். அவங்க கப்பல்ல ஏற்றி கோழிக்கோட்டுக்கு இந்தப் பழங்களைக் கொண்டு வர்றாங்க. அய்யோ, மாளு... அவங்களைப் பார்க்கணுமே! பார்க்க கரேல்னு இருப்பாங்க. அவங்க சிரிப்பு எப்படி இருக்கும் தெரியுமா? தாடிக்கு மேலே பெரிய பை தொங்கிக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கும் அது. அவங்க எவ்வளவு உயரமா இருப்பாங்கன்னு நினைக்கிற... அவங்க படுத்தா இந்தப் படகோட அந்த முனையில தலையிருக்கும்.. இந்த முனையில கால் இருக்கும். அவங்கள்ல ஒருத்தன் செய்ததை நீ கேட்கணுமே! நம்ம நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவன் பிடிச்சு கப்பல்ல கொண்டு போயிட்டான். இனிமேல் அவளை நாம பார்க்க முடியாது... அவ நமக்குக் கிடைக்கமாட்டா. அந்த நாட்டுல பெண்களே கிடையாது..."

அந்தக் கதையைக் கேட்டு மாளு உண்மையிலேயே பயந்து போய்விட்டாள். அவள் அழாதது ஒன்றுதான் பாக்கி. அவள் சந்தனிடம் கேட்டாள்: "அவளுக்கு எத்தனை வயசு சந்தா?"

"உன் வயசு... உன் நிறம்... உன் உயரம். அவ அய்யோ அய்யோன்னு அழறதை என் கண்ணால நான் பார்த்தேன்."

"அவங்ககிட்ட இருந்து அவளைக் காப்பாற்ற யாருமே போகலையா?"

"ம்... யார் போவாங்க? அவங்ககிட்ட யாரும் போக முடியுமா? அந்த ஆளுங்க ஆட்களை பச்சையா தின்னுறவங்க. இங்கே ஈத்தம் பழத்தைக் கொண்டு வருவாங்க. போறப்போ அங்கே பெண்களைக் கொண்டு போவாங்க..."

அன்று இரவு முழுவதும் மாளு பயத்தால் சிறிது கூட உறங்கவேயில்லை.


பின்னொருமுறை சந்தன் இன்னொரு கதையை இப்படிச் சொன்னான்: "இன்னைக்கு நான் ஏன் தாமதமா வந்தேன் தெரியுமா? பொல்லாத ஒரு கூட்டம் கோழிக்கோடு மார்க்கெட்ல இருந்த எல்லாக் கடைகளையும் கொள்ளை அடிச்சுடுச்சு. பணப்பெட்டி, தங்கம், துணி எதையும் விடாம வாரி எடுத்துட்டு போயிட்டாங்க. போலீஸ்காரங்க எல்லாத்தையும் வெறுமனே பார்த்து நின்னுக்கிட்டு இருக்காங்க. என்ன செய்யிறது? அந்தக் கொள்ளைக் கூட்டத்துல ஆண்கள் எந்த அளவுக்கு இருக்காங்களோ, அந்த அளவுக்குப் பெண்களும் இருக்காங்க...."

காபுல்காரர்களைப் பற்றி சந்தன் சொன்ன அந்தக் கதையை அப்படியே முழுமையாக நம்பினாள் மாளு.

இப்படிப்பட்ட பல கதைகள் அவளுடைய சிந்தனை ஓட்டத்தைத் தடை பண்ணின. மழைக்காலம் வந்தது. அந்த வருடத்தின் மழைக்காலம் மற்ற வருடங்களை விட மிகவும் பயங்கரமாக இருந்தது. இடைவிடாமல் எப்போது பார்த்தாலும் வானம் இருண்டே கிடந்தது. நடுங்கும் அளவிற்கு இடிச்சத்தம் கேட்டது-. சிறிதும் நிற்காமல் பெருமழை பெய்தவண்ணம் இருந்தது. எல்லா வேலைகளும் பாதிப்பிற்கு உள்ளாகின. வீடுகளை விட்டு யாரும் வெளியில் இறங்க முடியவில்லை. பாதைகள் நீரில் மூழ்கிக் கிடந்தன. கடுமையான காற்று வீசி மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரத்தால் கட்டப்பட்ட வீடுகள் மழையில் நனைந்து தரையில் சாய்ந்தன. நீரில் போக்குவரத்து முழுமையாக நின்றது. வறுமையும் பஞ்சமும் எல்லா இடங்களிலும் அதிகமானது.

ஊரே பெருங்கடலாக மாறியது. மலைகளும் பாறைகளும் கப்பல்களைப் போல நீருக்குள் மூழ்கிக் காணாமல் போயின.

இருவழிஞ்ஞி ஆற்றின் இரு கரையிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. சிற்றாறு இரத்த வெறி பிடித்ததைப் போல கரை புரண்டு ஓடியது. கரை இடிந்து விழும் சத்தம் தூரத்தில் வரும் போதே கேட்டது. இரு கரைகளிலும் வளர்ந்திருந்த புதர்களும், பனை, தேக்கு, கும்மட்டி போன்ற மரங்களும் அந்தச் சிவப்பு நிறத்தில் ஓடிக் கொண்டிருந்த நீரோட்டத்திற்கு அழகான ஒரு வேலி அமைத்ததைப் போல் இருந்தன.

அன்று இரவு அவளுக்கு ஒரு பயங்கரமான இரவாக இருந்தது. பல விதப்பட்ட சிந்தனைகளாலும் சூழப்பட்ட அவள் தூக்கம் வராமல் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தாள்.

'இல்ல... நான் இனிமேல் வாழ்ந்து எந்தவித பிரயோஜனமும் இல்ல. நான் கர்ப்பமாகி அஞ்சு மாசம் முடிஞ்சிடுச்சு. இனியும் அதை மத்தவங்ககிட்ட இருந்து மறைச்சு வைக்க முடியாது. அய்யோ! இந்த விஷயம் மாமாவுக்குத் தெரிஞ்சிச்சின்னா... ஊர்ல இருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சிச்சின்னா...'

அவள் அந்தக் கிழிந்து போன பாயில் திரும்பிப் படுத்தாள். அடைக்கப்பட்டிருந்த கதவின் இடைவெளி வழியாக மின்னலின் ஒளி ஊடுருவி அவளின் கண்களை மங்கலாக்கியது. தொடர்ந்து பூமியே வெடிக்கும் அளவிற்கு ஒரு இடிச்சத்தம் கேட்டது.

அவளின் சிந்தனை தொடர்ந்து 'நான் பேசாம எப்பவும் போல வாழ்ந்திருக்கலாம். அவர் எதுக்காக இங்கே வரணும்? என்னை எதுக்கு அவர் பார்க்கணும்? என்னை எதுக்கு அவர் காதலிக்கணும்? எதுக்கு நான் என்னோட நிலையையும் மதிப்பையும் மறந்துட்டு அவரோட ஆசைக்கு சம்மதிச்சேன்? எது எப்படியோ, இந்தக் கிராமத்துல இருக்குற எந்தப் பெண்ணையும் விட நான் சுகம் அனுபவிச்சிருக்கேன்றது உண்மை. அதுக்கு இப்போ உயிரோட வெந்து செத்துக்கிட்டு இருக்கேன்.'

அவள் தன்னுடைய இறந்து போன தந்தையையும் தாயையும் அன்பான சகோதரனையும் நினைத்துப் பார்த்தாள். தன்னை மட்டும் இப்படி கஷ்டப்படும்படி விட்டுவிட்டு அவர்கள் மட்டும் ஏன் முன்பே போய்ச் சேர்ந்தார்கள்? வயல்களிலும், காடுகளிலும் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டும், காய்கறித் தோட்டங்களிலும், வெள்ளரித் தோட்டங்களிலும் காவல் காத்தும், புல் அறுத்தும், களை பறித்தும், அறுவடை செய்த கதிர்களைக் கட்டியும், வாசலில் போட்டுக் கதிர்களை மிதித்தும், களத்தில் கொண்டு போய் போட்டும், தோழிகளுடனும் நண்பர்களுடனும் வாழ்ந்த தன்னுடைய இளமைக் காலத்தைப் பற்றிய இனிமையான நினைவுகள் அவளின் வெந்து கொண்டிருந்த மனதின் அடித்தளத்தில் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருந்தன. பிறகு நடந்த அவளுடைய தாய், தந்தை, சகோதரன் ஆகியோரின் மரணக் காட்சிகள்... எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு அவளுடைய மாமா அவளை அழைத்துக் கொண்டு சென்றது... மாமாவின் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தது... மாமாவின் அன்பான குணம்... முக்கம் சந்தையின் காட்சிகள்... அந்த மறக்க முடியாத மாலை நேரத்தில் ரவியை முதல் தடவையாகப் பார்த்தது... அவனுடைய காதல் பிரார்த்தனை... சந்தையில் நடைபெற்ற சுவையான சம்பவம்... அவனுடைய முதல் பரிசு... நள்ளிரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் ஆற்றின் கரையில் நடைபெற்ற முதல் சந்திப்பு... அதைத் தொடர்ந்த இனிமையான இரவுகள்... அனுபவித்தத சுகங்கள்... அந்த சிலிர்க்க வைக்கும் தொடல்கள்... அவள் தன்னனயே மறந்த அணைப்புகள்... இதய ஓட்டமே நின்று விடுவதைப் போன்ற முத்தங்கள்... அவளுடன் அவன் ஆடிய மதன லீலைகள்... அந்த உறவில் அவள் கொண்ட ஈடுபாடும் கடைசி முத்தமும்... கடைசியாக அந்தக் காதலனின் பயணம்... அவனைப் பிரிந்த பின் வேகமாக ஓடிய நாட்கள்... சர்ப்பத்துடன் போராடிக் கொண்டிருந்த அந்த பயங்கர இரவு... ஒரு திரைப்படத்தின் அமைதியான காட்சியைப் போல பத்து நிமிடங்களுக்குப் பலவிதப்பட்ட காட்சிகளும் அவளுடைய மனதின் கறுப்பான திரைச்சீலையின் மீது மாறி மாறி தோன்றிக் கொண்டிருந்தன.

அவள் வானத்தைப் பார்த்தாள். மேகங்கள் காட்டு யானைகளைப் போல கூட்டம் கூட்டமாக வந்து வானத்தை மூடிக் கொண்டிருந்தன. மலையில் போய் மோதி நூறு எதிரொலிப்புகளுடன் திரும்பி வரும் இடிச்சத்தம் எல்லாத் திசைகளிலும் கேட்டது.

மழைக்கு நடுவில் காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. மரம் ஆடி, கூடு கலைந்து, மழையில் நனைந்த பரிதாபமான இரண்டு பறவைகள் மாளுவின் வீட்டு வாசலில் இருந்த தொழுவத்திற்குள் அபயம் தேடின.

அந்தச் சூழ்நிலையுடன் மிகவும் ஒத்துப் போயிருந்தது மாளுவின் உள் மனதின் நிலை. கவலை தரும் சிந்தனைகள் அங்கு முழுமையாக ஆட்சி செய்து கொண்டிருந்தன. ஏமாற்றத்தின் சூறாவளியில், பயத்தின் இடி முழக்கத்தில் சிக்கியிருந்த அவளுடைய மனம் எதிர்கால இருட்டை எட்டிப் பார்த்தது.

10

திகாலை ஆறு மணியிருக்கும். மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழை அப்போதும் நிற்கவில்லை. இரு கரைகளையும் தின்றுகொண்டு இருவழிஞ்ஞி ஆறு படு வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருக்கும் இடங்களையெல்லாம் கூட எங்கே அது அழித்துவிடுமோ என்ற நிலையில் அது பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. மரங்களும் பழங்களும் ஆற்று நீரோடு சேர்ந்து போய்க் கொண்டிருந்தன.


ஆற்றுக்கு அப்போது அளவிட முடியாத ஆழமும் யானையைக் கூட தூக்கி எறியக்கூடிய பலம் பொருந்திய நீரோட்டமும் இருந்தன.

ஆற்றின் கரையிலிருந்து அரை பர்லாங் தூரத்தில் உயரமான ஒரு நிலமும், அந்த நிலத்தில் ஒரு பழமை வாய்ந்த பகவதி ஆலயமும் இருப்பதைப் பார்க்கலாம். நேற்று இரவு குடித்து, சுயநினைவு இல்லாத நிலையில் அந்த ஆலயத்தின் வாசலில் வந்து படுத்துறங்கிய இக்கோரன், ஒரு பெரிய கூக்குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான்.

அவன் எழுந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தான்.

"அய்யோ! அய்யோ!" - அந்தக் கூக்குரல் மிகவும் பரிதாபமாக அதே நேரத்தில்- படிப்படியாக வலிமையை இழந்து அவனுடைய காதுகளில் வந்து மோதியது. அக்கரையிலிருந்துதான் அந்தக் குரல் வருகிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். அவன் அந்தப் பக்கம் உற்றுப் பார்த்தான்.

அக்கரையில் நீரை நோக்கித் தாழ்ந்திருந்த கொம்பு ஒன்றில் யாரோ தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. கரை புரண்டு வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நீர் அந்தக் கொம்பையும் அதில் தொங்கிக் கொண்டிருந்த உருவத்தையும் கீழ்நோக்கி சிறிது நேரம் இழுத்துக் கொண்டு போகும். அங்கிருந்து கொம்பும் அந்த உருவமும் காற்றோடு சேர்ந்து முன்பிருந்த இடத்திற்கு மீண்டும் வருவார்கள். அப்போதுதான் அந்தக் கூக்குரல் கேட்டது. மீண்டும் முன் சொன்ன மாதிரி நடக்கும்... உயிருக்கும், மரணத்திற்கும், மனித உயிருக்கும், ஆற்றுக்கும் இடையில் நடக்கும் அந்தப் போராட்டம் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதாக இருந்தது.

அந்த மனித உயிரைக் காப்பாற்ற இக்கோரன் அக்கரைக்குப் போய் ஆக வேண்டும்.

அதிர்ஷ்டவசத்தால் அந்தக் கோவிலுக்கருகில் ஒரு படகு கிடந்தது. சிறுவர்கள் வெயில் காலத்தில் குளிப்பதற்குப் பயன்படுத்திய ஒரு சிறு படகு அது. நீரில் துளாவுவதற்கு ஒரு தென்னை மரத்தின் மடலை இக்கோரன் கையில் எடுத்தான். அதற்குப் பிறகு ஒரு நிமிடம் கூட அவன் தாமதிக்கவில்லை. ஆபத்துடன் போராடுவது என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான். அவன் தானிருந்த இடத்திலிருந்து சுமார் ஒரு பர்லாங்க தூரம் மேல்நோக்கி படகைக் கொண்டு போனான். பிறகு படகில் ஏறி வேகமாக அதைச் செலுத்த ஆரம்பித்தான். அந்தப் படகு இப்படியும் அப்படியுமாக ஆடியவாறு பல சர்க்கஸ் வித்தைகளையும் காட்டியது. எனினும், அவன் நீரோட்டத்திற்கேற்றபடி அதைச் செலுத்தி, ஆற்றுக்கே தெரியாமல் அதை நெறிப்படுத்தினான். கஷ்டப்பட்டு முன் சொன்ன இடத்தை அடைந்தான். மேலும் சிறிது கீழே போனால், தானும் படகும் பயங்கரமான ஒரு சுழலில் சிக்கிச் சாகப் போவது உறுதி என்பது அவனுக்குப் புரிந்தது. அதனால் அவன் அந்த இடத்திலேயே படகை கரையின் பக்கம் கொண்டு போனான்.

கீழேயிருந்த அந்தப் பயங்கரமான சுழலின் மேற்பகுதியில்தான் அந்த உருவம் தொங்கிக் கொண்டிருந்தது. இப்போது அது ஒரு பெண் என்பதை இக்கோரன் புரிந்து கொண்டான். அவளை மூழ்கச் செய்து கொண்டிருந்த நீரோட்டம் அவளை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தது. அவளை நீரிலிருந்து உயர்த்திக் கொண்டிருந்த கொம்பு மட்டுமே அவளுக்கு ஆதாரமாக இருந்தது. நீருக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக அவளே சில நேரங்களில் கொம்பைப் பிடித்திருந்த தன் பிடியை அவளே விடுவிக்க முயற்சித்தாலும், அவளுடைய நீளமான கூந்தல் கொம்பில் சுற்றிக் கொண்டதால் அவளால் அந்தப் பிடியை விட முடியவில்லை.

அவளுடைய உயிர் அந்தக் கொம்பில் ஊசலாடிக் கொண்டிருப்பதை இக்கோரன் உணர்ந்து கொண்டான். அந்தக் கொம்பும் நீரோட்டத்தின் வேகமும் சேர்ந்து ஒரு இழுபறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது அவள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த வேதனையுடன் கொம்பைப் பிடித்து மேலே உயரப் பார்ப்பாள். ஆனால், அதற்கான பலம் அவளிடம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. நீரைக் குடித்துக் குடித்து அவளுடைய வயிறு வீங்கிக் கொண்டே வந்தது.

இக்கோரன் கரை வழியாக அந்தக் கொம்பு இருக்கும் இடத்திற்குச் சென்றான். கண் இமைக்கும் நேரத்தில் அவளைக் காப்பாற்றுவதற்கு ஒரு வழியை அவன் கண்டுபிடித்தான். முன் சொன்ன கொம்பிலிருந்து சுமார் முப்பதடி கீழே இன்னொரு இடத்தில் கூட்டமாக கொம்புகள் மணலில் சாய்ந்தவாறு நின்றிருந்தன. அவன் ஒரே நிமிடத்தில் அதன் மீது வேகமாக ஏறி, நீரில் சாய்ந்திருந்த கொம்பை ஒரு கையால் இறுகப் பிடித்தான். இன்னொரு கையை நீட்டி அந்தக் கொம்பும் பெண்ணும் நீரில் மூழ்கி மேலே வருவதற்காக அவன் காத்திருந்தான். அந்தக் கொம்பும் அதில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணும் நீருக்குள் காணாமல் போனார்கள். இக்கோரன் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தான். நீருக்குள்ளிருந்து பெண்ணின் தலை மேலே வருவதைப் பார்த்தவுடன், அவன் அவளுடைய கூந்தலை கையை நீட்டிப் பிடித்து, அதைக் கத்தியால் அறுத்து, 'கொம்பை விடு' என்று சொன்னான். அவள் தன் பிடியை விட்டாள். இக்கோரன் நீர் வழியாக அவளை தன்னை நோக்கி இழுத்தான். பிறகு அவளை ஒரு கையால் தூக்கி தனக்கு அருகில் அந்தக் கொம்பின் மீது உட்கார வைத்தான்.

அப்போதும் ஆபத்தான கட்டம் கடக்கவில்லை. அவளையும் வைத்துக் கொண்டு அந்தக் கொம்பு வழியாகக் கீழே இறங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சொல்லப் போனால் இரண்டு பேர்களின் எடையையும் தாங்க முடியாத அந்தக் கொம்பு கொஞ்சம் கொஞ்சமாக நீரை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட ஒரு ஆபத்தை இக்கோரன் முன்கூட்டியே சிறிது கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. மொத்தத்தில் இரண்டு பேரும் ஒன்றாக நீருக்குள் போய் விழும் நிலை உண்டானது. இக்கோரனுக்கு வேறு எந்த வழியும் தோன்றவில்லை. கடைசியில் நீர் தன்னை ஆக்கிரமிப்பதற்கு முன்பு நீரை தான் ஆக்கிரமிப்பதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தான் இக்கோரன். அவளிடம் தைரியமாகத் தன்னை இறுகப் பற்றிக் கொள்ளும்படி கூறிவிட்டு அவன் மெதுவாக நீரை நோக்கி இறங்கினான்.

அவன் அவளையும் தாங்கிக் கொண்டு நீரைக் கிழித்துக் கொண்டு தன்னிடமிருந்த சகல சக்தியையும் பயன்படுத்தி கரையை நோக்கி அவன் நீந்தத் தொடங்கினான்.


சிறிது நேரம் சென்றதும் அவளுடைய பிடி சிறிது சிறிதாகத் தளர்வதைப் போல் அவனுக்குத் தோன்றியது. அவள் மயக்க நிலையில் நீரை நோக்கி தாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவன், அடுத்த நிமிடம் ஒரு கையால் அவளைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் முழு பலத்தையும் பயன்படுத்தி அவன் நீரைத் துளாவினான். வேகமான நீரோட்டத்துடன் போராடி எப்படியோ பத்து நிமிட சாகசத்திற்குப் பிறகு, ஆபத்து எதுவும் நடக்காமல் அவன் கரையை அடைந்தான்.

பிறகு அவன் அவளைக் கரையிலிருந்த புற்களின் மீது கொண்டு போய் படுக்க வைத்தான். அவளை இறுக்கிக் கொண்டிருந்த ஆடைகளை அவிழ்த்து தனக்குத் தெரிந்த சில ஆரம்ப முதல் உதவிகளைச் செய்தான்.

கால் மணி நேரம் ஆன பிறகு அவளுக்கு சுய நினைவு வந்தது. அவள் கண்களைத் திறந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த இக்கோரனைப் பார்த்து பயந்த குரலில் அவள் கேட்டாள்: "நான் சாகலையா?"

இக்கோரன் சொன்னான்: "அப்படித்தான் தோணுது, பெண்ணே!"

அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

இக்கோரன் தொடர்ந்து அவளைப் பார்த்துக் கேட்டான்: "அதெல்லாம் இருக்கட்டும் மாளு. நீ தண்ணியில விழுந்து சாகணும்னு நினைச்சதுக்குக் காரணம் என்னன்னு சொல்லு...."

அவள் தேம்பித் தேம்பி அழுதாளே தவிர, முதலில் எந்தவொரு பதிலையும் கூறவில்லை. இக்கோரன் மீண்டும் வற்புறுத்திக் கேட்டான்: "எது இருந்தாலும் நடந்தது நடந்திருச்சு. இந்தச் சம்பவத்தை யாரும் பார்க்கல. நீ சொல்லப் போற விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். இப்பவாவது காரணத்தைச் சொல்லலாம்ல?"

"நான் வாழ்ந்து ஒரு பிரயோஜனமும் இல்ல. அதுனாலதான்.."

"அதுக்குக் காரணம்?"

"அவமானத்துக்குப் பயந்து..."- அவள் ஒரு குற்றவாளியைப் போல தலை குனிந்து நின்றாள்.

"அப்போ உனக்கு?"

அவள் அமைதியாகத் தவறை ஒப்புக் கொண்டாள்.

"எல்லாத்தையும் நான் சொல்றேன். இன்னைக்குச் சாயங்காலம் அந்த பகவதி கோவிலுக்கு வந்தா போதும்."

அவள் சிரமப்பட்டு கால் மைல் தூரத்திலுள்ள தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தாள். இக்கோரன் தன்னுடைய சிறிய படகிலிருந்த நீரை வெளியேற்றினான். பிறகு அந்தப் படகிலேயே ஏறி உட்கார்ந்து துளாவியபடி மறுகரையை அடைந்தான்.

சொன்னதைப் போலவே அன்று மாலை நேரத்தில் அந்தப் பழமையான பகவதி கோவிலில் அவர்கள் இருவரும் சந்தித்தார்கள்

அங்கு மாளு எதையும் மறைக்காமல் தன்னுடைய வாழ்க்கைக் கதை முழுவதையும் மனதைத் திறந்து இக்கோரனிடம் கூறினாள். இக்கோரன் அவள் சொன்னதை கவனத்துடன் கேட்டான். கேட்கும்போது இரக்கம், சிரிப்பு, கோபம் எல்லாமே அவனுடைய முகத்தில் பிரதிபலித்தன. கதையின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏற்றபடி அவனுடைய முகத்தில் இருந்த உணர்ச்சிகளும் மாறிக் கொண்டிருந்தன.

மாளு எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு இக்கோரன் சொன்னான்: "நான் அப்பவே பாட்டுப் பாடி சொன்னேன்ல.... அந்தக் கோட்டும் சட்டையும் போட்ட ஆளை நீ நம்பாதேன்னு. நீ நான் சொன்னதைக் காதுலயே வாங்கல. அதுனாலதான் இப்போ அனுபவிக்கிறே. எது மண் எது சாணம்னு வித்தியாசம் பார்க்கத் தெரியாத ஒரு அப்பிராணிப் பெண் நீ. அந்த நகரத்துல இருந்து வந்த ஆள் இருக்கானே... அவன் ஒரு சரியான திருட்டுப் பய... அவனோட சில்க் சட்டையும், சிகரெட்டும், மணமும்...அதைப் பார்த்து நீ மயங்கிட்டே. இனி நீ அவனை விளக்கு வச்சுப் பார்த்தாலும், அவனை உன்னால பார்க்க முடியாது. உன்னை முகத்துக்கு நேரா பார்த்தால் கூட அவன் சத்தியம் பண்ணி சொல்லுவான் உன்னை இந்தப் பூமியில இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லைன்னு... சரி, இனி என்ன செய்யப் போற?"

மாளு எதுவும் பேசாமல் சிறிது இருந்துவிட்டு பிறகு சொன்னாள்: "பேசாம செத்துப் போயிடணும்றதுதான் என்னோட ஆசை. ஆனால், என் வயிற்றுல உயிருள்ள ஒரு குழந்தை இருக்கே! அதைக் கொல்ல இனிமேல் நான் நினைக்கல. அது வாழ வேண்டியது. அதுனாலதான் என்னால சாகமுடியாமப் போச்சு. அது என்னை 'அம்மா'ன்னு கூப்பிடுறதைக் கேக்குறதுக்காகவாவது நான் வாழ்ந்தாகணும். ஆனால், என் குலத்துக்கும், குடும்பத்துக்கும் அவமானம் உண்டாகுற அளவுக்கு நான் இங்கே இருக்க விரும்பல. உலகத்துல கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலைக்குப்போயி நான் பிச்சையெடுத்தாவது இருந்துக்குவேன். அதுதான் என் தலையெழுத்து..."

அவள் மீண்டும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். இக்கோரன் அவளுக்கு அருகில் மேலும் சற்று நெருங்கி வந்து, தடுமாறிய குரலில் கேட்டான்:

"மாளு, என்னைக் கல்யாணம் பண்ணிக்குறதுல உனக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா?"

அவள் தன் தலையை உயர்த்திக் கொண்டு ஆச்சரியத்துடன் கேட்டாள்: "என்ன?"

இக்கோரன் தன் கேள்வியை மீண்டும் திருப்பிச் சொன்னான்.

"எதுக்கு? உங்களுக்கும் அவமானம் உண்டாகுறதுக்கா? வேண்டாம்... வேண்டாம்... என்னோடவே அவமானம் இருந்துட்டுப் போகட்டும்..."

"என்ன அவமானம்? உனக்கும் எனக்கும் மட்டும் தானே இந்த விஷயம் தெரியும்! அதை என்னால பொறுத்துக்க முடியும். உனக்கு இந்த விஷயத்துல சம்மதமான்னு மட்டும்தான் நான் கேட்டேன். நீ கிட்டத்தட்ட ஒரு தடவை செத்துப் போனது மாதிரி தான். உன் பாவங்களெல்லாம் போன பிறவியில நடந்ததுன்னு வச்சுக்கோயேன்..."

"வேண்டாம். அந்தப் பெரிய பாவத்தை நீங்க ஏத்துக்க வேண்டாம். -அவள் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.

"ஏதோ ஒரு பெரிய பாவத்தால் தான் நான் பிறந்திருக்கேன். உனக்கு சம்மதமா, சொல்லு?"

அவள் பதிலெதுவும் கூறவில்லை. இக்கோரன் தொடர்ந்து சொன்னான். "சரி... உனக்குச் சம்மதம்தான்னு நான் எடுத்துக்குறேன். உன்னோட இந்த ரகசியம் இநத பகவதி கோவிலுக்கும் உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். உன்னை நான் கல்யாணம் பண்ணி என் ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன். ஒண்ணு, ரெண்டு வருடங்கள் கழிச்சு நாம இங்கே திரும்பி வருவோம்."

அவன் அவளுடைய கையைப் பிடித்தான். மாளு தன் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

ஒரு மாதம் ஆவதற்கு முன்பே இக்கோரன் மாளுவைத் திருமணம் செய்தான். கிராமத்து மக்கள் மத்தியில் அவர்களின் திருமணச் செய்தி பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது. உலகத்தில் தன்னுடைய நண்பனென்று கள்ளைத் தவிர வேறு எதுவுமே வேண்டாமென்று திரிந்த இக்கோரன் திருமணம் செய்து கொண்டான் என்ற செய்தியைச் சிலர் நம்பவே இல்லை.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு இக்கோரன் முழுமையாக மாறிவிட்டான். குழந்தை, குடும்பம் என்று வந்தவுடன் அவன் மது அருந்துவதை முழுமையாக நிறுத்திவிட்டான். அவன் தன்னுடைய வாழ்க்கை முறையையே முற்றிலுமாக மாற்றிக் கொண்டான் என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.


11

சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சம்பவங்கள் முடிந்து பதினோரு வருடங்கள் மிகவும் வேகமாகக் கடந்து போயின. முக்கத்தின் நெல் வயல்கள் இருபத்து இரண்டு அறுவடைகளை அதற்குப் பிறகு சந்தித்தன. இருவழிஞ்ஞி ஆற்றில் அதற்குப் பிறகும் எத்தனையோ முறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவிட்டது.

நாகரீகமும் மாறுதல்களும் நகரத்தைக் கூட பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு முற்றிலும் மாற்றிவிட்டிருந்தன. எத்தனையோ பழைய பணக்காரர்களும் நிறுவனங்களும் காணாமல் தரை மட்டமாகியிருந்தனர். புதிய பணக்காரர்களும் நிறுவனங்களும் கட்டிடங்களும் உருவான சம்பவங்களும் நடந்தன.

'ராஜேந்திர விலாஸம்'- இன்றும் ஒரு அரண்மனையைப் போல கோழிக்கோடு நகரத்தின் மையப் பகுதியில் உயர்ந்து கம்பீரமாக நின்றிருப்பதைப் பார்க்கலாம். முன்பு லட்சாதிபதியாக இருந்த அதன் நாயகன் இப்போது ஒரு கோடீஸ்வரன்.

ராஜேந்திர விலாஸத்தின் இரண்டாவது மாடியிலிருக்கும் தன்னுடைய அறையில் ரவீந்திரன் என்னவோ தீவிரமாகச் சிந்தித்தவாறு உட்கார்ந்திருந்தான். அவனுடைய நெற்றிக்கு மேலே பிறைச் சந்திர வடிவில் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. இடது பக்கக் காலுக்கு மேலே முழுவதாகவும் தலையின் பின்பகுதியில் இங்குமங்குமாகவும் தலைமுடி நரைத்திருந்தது. கண்களுக்குக் கீழே சிந்தனைகள் ஒன்றுகூடி உண்டாக்கியதைப் போல கறுத்த அடையாளங்கள் தெரிகின்றன. ஆனால், முகத்திலிருந்த ஒளியும் கண்களிலிருந்த பிரகாசமும் இப்போதும் மறையாமல் அப்படியே இருக்கின்றன. அந்த முதுமையின் ஆரம்ப அடையாளங்களில் கூட ஒரு கவர்ச்சி இருக்கவே செய்கிறது.

முகத்தைப் பளபளப்பாக இருக்கும் வண்ணம் சவரம் செய்து, தலைமுடியை சீராக வாரிவிட்டு, சில்க்கால் ஆன ஒரு பெங்காலி சட்டை அணிந்து, ஒரு நீளமான சுருட்டைப் புகைத்தவாறு தனக்கு முன்னாலிருந்த அகலமான ஜன்னல் வழியாக வெளியிலிருக்கும் தெரு வீதியைப் பார்த்தவாறு அவன் உட்கார்ந்திருந்தான். ஆனால், சிந்தனைகளின் நீராவியை வெளியேற்றிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் எதையும் குறிப்பாகப் பார்க்கவில்லை. அவை அவனுடைய வாழ்க்கையின் கடந்து போன நாட்களைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் கண்ணாடிகளாக இருந்தன.

அவன் இப்போது எல்லாராலும் போற்றப்படும் ஒரு குபேரன். இளம் வயதிலிருந்தே கவலை என்றால் என்னவென்றே அறிந்து கொள்ளும் சூழ்நிலை அவனுக்கு வரவில்லை. சுகங்களை அவன் தேடிச் சென்றதில்லை. அவை அவனைத் தேடி வந்தன. ஆனால், ஒரே ஒரு சுகம் மட்டும் அவனுக்குக் கிடைக்கவேயில்லை. அதாவது ஒரே ஒரு கவலை மட்டும் அவனை விடாமல், இந்த முதுமையின் ஆரம்ப கட்டத்தில் கூட அவனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. குழந்தை இல்லை என்ற கவலையே அது! ஒரு புதிய முகத்தைக் கண்டு இறப்பதற்கான அதிர்ஷ்டம் தனக்கு வாய்க்காதா என்று அவன் ஏங்கினான்.

குழந்தை இல்லையே என்ற எண்ணத்தில் தன்னுடைய இனிமையான இல்லற வாழ்க்கையைக் கூட அவன் பாழ்ப்படுத்திக் கொண்டான். தன்னுடைய முதல் மனைவியை, திருமணம் முடித்து எட்டு வருடங்களுக்குப் பிறகு வேண்டாம் என்று ஒதுக்கியதை இப்போது அவன் நினைத்துப் பார்த்தான். சுனந்தா.... என்ன அழகும், நல்ல குணத்தையும் கொண்ட பெண் அவள் என்பதை அவன் மனதில் இப்போது எண்ணிப் பார்த்தான். தங்களின் இல்லற வாழ்க்கையின் காதல் நிறைந்த ஒவ்வொரு நாட்களையும் அவன் நினைத்துப் பார்த்தான். இப்போது பத்மினியைத் திருமணம் செய்து மூன்று வருடங்களாகிவிட்டன. அவளும் யாரும் ஏறிட்டு பார்க்கும் அழகையும் எல்லாரையும் கவரக்கூடிய குணத்தையும், அறிவையும் கொண்ட ஒரு இளம்பெண்தான். ஆனால், அவளுக்கும் தன்னுடைய ஆசையை நிறைவேற்றித் தர வாய்ப்பில்லை என்றே அவனுக்குப் பட்டது. சொல்லப் போனால் அவர்கள் மீது தான் ஏன் குற்றம் சுமத்த வேண்டும். அதற்கான காரணம் தானே கூட இருக்கலாமே என்பதையும்அவன் நினைக்காமல் இல்லை. ஒரு தந்தை ஆகக்கூடிய அதிர்ஷ்டம் தன்னுடைய ஜாதகத்திலேயே இல்லை என்றால், எந்தப் பாவமும் செய்யாத அந்தப் பெண்களை தான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும் என்பதையும் அவன் நினைத்தான்.

வெளியே தெருவில் ஒரு ஆரவாரம் கேட்டது. அவன் என்ன சத்தம் வருகிறது என்று பார்த்தான். தெருவின் ஒரு மூலையில் வளர்ந்து நின்றிருக்கும் ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்து கூடடமாகப் பிச்சைக்காரர்கள் இரவு உணவைச் சமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஐந்து வயதுள்ள ஒரு சிறுவனின் கையிலிருந்து ஒரு துண்டு கருவாட்டை பத்து வயதுள்ள அவனுடைய அண்ணன் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான் என்பதற்காக தம்பி உண்டாக்கிய சத்தம் தான் அது. அடுத்தநிமிடம் கஷ்டப்பட்டு இடுப்பை மட்டும் மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு துண்டுத் துணியைச் சுற்றியிருந்த முழு கர்ப்பிணியான ஒரு அழுக்கடைந்த பிச்சைக்காரி ஒரு விறகுக் கொள்ளியை எடுத்து கருவாட்டைப் பறித்துக் கொண்டோடிய அந்தப் பெரிய பையனின் கையைப் பிடித்து 'டேய், நீ எதுக்கு உயிரோட இருக்கே? செத்துத் தொலைஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்!' என்று சத்தம் போட்டவாறு அவனுடைய முன் தலையில் ஒரு அடி கொடுத்தாள். அவ்வளவுதான். அந்தப் பையனின் தலையிலிருந்து இரத்தம் ஆறென வழிய ஆரம்பித்தது. பாதி கடித்திருந்த கருவாட்டைக் கீழே துப்பிய அந்த ஆடை எதுவும் அணிந்திராத பையன் உயிரே போவது மாதிரி இருந்த வேதனையைத் தாங்க முடியாமல் துடித்து அழுது கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து ரவீந்திரனின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. 'கஷ்டம்...'- அவன் தன் மனதிற்குள் நினைத்தான்: 'யாருக்கும் தேவைப்படாத குப்பைக்குழியில் பழங்கள் பழுத்துக் கிடக்குது. தங்கம் இருக்கிற சுரங்கங்கள்ல பழங்களைக் கண்ணால கூட பார்க்க முடியல.'

அவனுடைய தோள் மீது ஒரு கை பட்டது. அவன் முகத்தைத் திருப்பிப் பார்த்தான். பத்மினி புன்னகைத்தவாறு அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள்.

ரவீந்திரன் தன்னுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை மிகவும் கஷ்டப்பட்டு மறைக்க முயன்றான். எனினும், தன் கணவன் ஏதோ ஆழமான சிந்தனையில் மூழ்கியிருக்கிறான் என்பதை பத்மினி புரிந்து கொள்ளாமலில்லை.

"என்ன தீவிரமா சிந்திச்சுக்கிட்டு இருக்கீங்க?"- பத்மினி கள்ளங்கபடமற்ற புன்சிரிப்புடன் கேட்டாள்

ரவீந்திரன் பரிதாபமாக பத்மினியின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவனுடைய உள் மனதில் இருந்த வேதனை வெளிப்பட்டது. 'பத்மினி, உன்னோட மார்புல அழுது சாய்ந்து இருக்குற ஒரு குழந்தையைப் பார்க்குறதுக்கான அதிர்ஷ்டம் எனக்கு வாய்ச்சிருந்தா....'- அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.


பத்மினி விலை மதிப்புள்ள ஆடைகளை அணிந்து உடம்பு முழுக்க நகைகளை அணிந்து வந்திருந்தாள்.

ரவி கேட்டான்: "எங்கே புறப்பட்டுட்டே...?"

அவள் வருத்தம் கலந்த குரலில் சொன்னாள்: "என்ன, இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டீங்களா? என் கூட கடற்கரைக்கு வர்றேன்னு சொல்லியிருக்கீங்கள்ல!"

ரவி அவளுடன் போகாமல் இருக்க வழியைப் பார்த்தான். அவன் அவளுடைய அணிகலன்களை ஒழுங்குபடுத்தி, ப்ளவ்ஸின் கீழ்ப்பகுதியை இழுத்துவிட்டவாறு சொன்னான்: "கண்ணு, என் மனசு நல்லா இல்ல. சந்திரசேகரனை அழைச்சிட்டுப் போ."

"மனசு சரியில்லைன்னா கடற்கரைக்குப் போனா சரியாயிடும்..."- அவள் ரவியின் சட்டையைப் பிடித்து இழுத்தாள்.

"நான் இன்னைக்கு தனியா உட்கார்ந்து படிக்க ஆசைப்படுறேன். பத்மினி, நீ போய் காற்று வாங்கிட்டு வா."

அவன் அவளை இறுக அணைத்துக் கொண்டு அவளுடைய வலது கன்னத்தில் முத்தமிட்டான். ஒரு சிறு குழந்தையை முத்தமிடுவதைப் போல கள்ளங்கபடமற்ற முத்தம் அது.

அவள் சற்று ஏமாற்றத்துடன் அறையை விட்டு வெளியே போனாள். ரவி மீண்டும் சிந்தனையில் மூழ்கியவாறு அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

"என் சொத்துகளுக்கெல்லாம் வாரிசா இருந்து அனுபவிக்கிறதுக்கு ஒரு சிறு குழந்தைகூட இல்லாம, நான் சாகப் போறேன். இந்தப் பிறவியோட புனித ஆலயத்துக்குப் போயிட்டு திரும்பிப் போறப்போ நான் வந்ததுக்கு நினைவுச் சின்னமா ஒரு சிறு மலர்கூட இங்கே உருவாகலைன்னா... நான் இவ்வளவு பெரிய பணக்காரனா இருந்து என்ன பிரயோஜனம்? கடவுளே, என்னோட முழு சம்பாத்தியத்தையும் பொன்னா மாற்றி ஒரு பிண்டமா உனக்கு முன்னாடி வைக்கிறேன். அதை நீயே திரும்ப எடுத்துக்கோ. அதுக்குப் பதிலா எனக்கு உயிருள்ள ஒரு மனிதக் குழந்தையைக் கொடுத்தா போதும்.."

அன்று இரவும் அவனுக்குச் சிறிது கூட தூக்கம் வரவில்லை. நள்ளிரவைத் தாண்டியபோது, அவன் படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தான். அதற்குப் பிறகும் எதையெதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான். இரவு இரண்டு மணி ஆன போது, தான் இருந்த அதே கோலத்தில் அவன் அறையை விட்டு வெளியேறினான்.

எல்லாத் தெருக்களும் நல்ல உறக்கத்தில் இருந்தன. கடைகளின் திண்ணைகளிலும், நடைபாதைகளிலும் அனாதைகளும், பிச்சைக்காரர்களும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றையும் பார்த்தவாறு அவன் எந்தவித இலக்கும் இல்லாமல் நடந்து போய்க் கொண்டிருந்தான். ஒரு கடையின் வாசலில் ஒரு பிச்சைக்காரியும் அவளுடைய ஆறு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். தெருவின் ஓரத்தில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்கின் வெளிச்சம் அந்த வாசலில் சற்று விழுந்து கொண்டிருந்தது.

மரத் துண்டுகள் சிதறிக் கிடப்பதைப் போல நூறு நிர்வாணக் கோலத்தைக் கொண்ட குழந்தைகளும் தாறுமாறாகப் படுத்துக் கிடக்கும் காட்சியை அவன் பா£த்தான். அந்தக் காட்சி ரவியின் உள் மனதில் இனம்புரியாத ஒரு உணர்வை உண்டாக்கியது. 'கடவுளே, ஒரே ஒரு குழந்தையைக் கூட காப்பாத்துறதுக்குக் கஷ்டப்படுற இந்த அப்பிராணி ஏழைகளுக்கு கணக்கு இல்லாம குழந்தைகளைக் கொடுத்து, அவங்க வாழ்க்கையை நரகமாக்குற உன்னோட புத்தியைப் பற்றி என்ன சொல்றதுன்னே தெரியலை. எனக்குச் சொந்தமுன்னு சொல்லிப் பெருமைப்படுறதுக்கு பூவைப் போல ஒரு குழந்தையைத் தர்றதுக்கு உனக்கு முடியல... ஆறு வருடங்களா உன்கிட்ட நான் கேட்டுக்கிட்டு இருக்கேன். என் மனசுல இருந்த ஆசையெல்லாம் காய்ஞ்சு கரியாப் போச்சு. என் மனசுல இனிமேல் சந்தோஷத்துக்கே வழியில்ல...'- அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்று வேகமாக எழுந்து உட்கார்ந்தது. ஆனால், அது அழவில்லை. சிறிது நேரம் கண்களை மூடியவாறு அப்படியே உட்கார்ந்திருந்தது. பிறகு, அங்கு கிடந்த ஒரு உடைந்து போன பாட்டிலையும் ஒரு சிறிய குச்சியையும் எடுத்து மெதுவாக அது விளையாட ஆரம்பித்தது.

ரவி சாலையிலேயே அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தான். அந்தக் குழந்தை ரவியைப் பார்த்ததும் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து தன்னுடன் விளையாட அழைப்பது மாதிரி அந்தப் பாட்டிலை ரவிக்கு நேராக நீட்டி, தலையை ஆட்டிக் கூப்பிட்டது.

ரவியின் இதயத்தை அந்தக் குழந்தையின் அழைப்பு என்னவோ செய்தது. அவன் நான்கு பக்கங்களிலும் பார்த்தான். தெருவில் ஒரு உயிரின் அசைவும் இல்லை.

ரவி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தக் கடையைநோக்கி நடந்தான். தான் ஏதோவொன்றைத் திருடப் போவதைப் போல அவன் கொஞ்சம் பதுங்கினான். ஒரு நிமிடம் சற்று தயங்கியவாறு, சுற்று முற்றும் பார்த்தான். பிறகு அந்தக் குழந்தையை நோக்கி நடந்தான்.

அந்தக் குழந்தையின் தாய் தவளை கத்துவதைப் போல குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள். குழந்தைகளில் இரண்டு நீர்நாய்களைப் போல தாயின் மார்பில் பால் குடித்துக் கொண்டிருந்தன. மீதி மூன்று குழந்தைகள் இப்படியும் அப்படியுமாகத் தலை சாய்த்துப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தன.

ரவியின் அந்தக் குழந்தையை வாரி எடுத்துக் கொஞ்சி, அதன் முகத்திலும், மார்பிலும் தொடர்ந்து முத்தமிட்டான். அந்தக் குழந்தை தன் கையில் வைத்திருந்த குச்சியால் ரவியின் முதுகை அடித்துவிட்டு, குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தது.

திடீரென்று அந்தக் குழந்தையின் கையிலிருந்த பாட்டில் கீழே தரையில் விழுந்து பெரிய ஒரு ஓசையை உண்டாக்கியது.

அந்தச் சத்தத்தை கேட்டு அந்தக் குழந்தையின் தாய் தூக்கத்திலிருந்து எழுந்து தலையைத் தூக்கினாள். ரவி குழந்தையைக் கீழே வைத்துவிட்டு, பதைபதைப்புடன் சாலையை நோக்கி ஓடினான்.

எப்படியோ அவன் தன் வீட்டை அடைந்தான். படுக்கையறைக்குள் நுழைந்து படுத்தான். அதற்குப் பிறகும் அவனுக்கு உறக்கம் வரவேயில்லை. அவன் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தவாறு நின்றிருந்தான். சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டு மீண்டும் படுக்கையில் போய் சாய்ந்தான்.

பாதி ராக்கோழி கூவிய நேரத்தில் அவனை உறக்கம் வந்து அணைத்துக் கொண்டது.

உலகத்திலுள்ள எல்லாக் குழந்தைகளும் கூட்டமாக மகிழ்ச்சி பொங்கச் சிரித்தவாறு அந்த ஜன்னலுக்கருகில் வந்து நிற்கின்றன. ரவி படுக்கையை விட்டு வேகமாக எழுந்து கீழே தோட்டத்திற்கு ஓடிச்சென்று, ஒவ்வொரு குழந்தையையும் தூக்குவதற்காக கையை நீட்டுகிறான். ஆனால், ஒவ்வொரு குழந்தையும் ரவியைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றன. அவனுடைய கைப்பிடியில் சிக்காமல் ஓடிப்போய் அவர்கள் சற்று தூரத்தில் நின்றிருக்கும் தங்களுடைய பெற்றோர்களின் கால்களை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிரிக்கின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த குழந்தைகள் எல்லாருமே ஓடி மறைந்து விடுகின்றன.


ஒரே ஒரு குழந்தை மட்டும் நின்று கொண்டிருக்கிறது. ரவி தன்னுடைய இரண்டு கைகளையும் நீட்டி அந்தக் குழந்தையை நெருங்குகிறான். அவன் ஓடவில்லை. ரவியின் அணைப்பில் அந்தப் பையன் சிக்குண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, 'அப்பா...அப்பா...' என்று அழைக்க ஆரம்பிக்கிறான். உலகத்திலுள்ள எல்லா சுகங்களும் தன்னுடைய கைப்பிடியில் வந்துவிட்டதைப் போல் உணர்ந்த ரவி பெருமையுடனும் ஆவேசத்துடனும் அந்தச் சிறுவனை இறுக அணைத்து முத்தமிட்டவாறு கேட்கிறான்: "மகனே... திருட்டுப்பயலே... நீ இவ்வளவு நாட்களும் எங்கேயிருந்தே?"

"என்ன, இன்னும் எழுந்திரிக்கலையா?"- பத்மினியின் தொடலும் அந்தக் கேள்வியும் ரவியைத் தூக்கத்திலிருந்து சுய உணர்வுக்குக் கொண்டு வந்தன.

அந்தச் சிறுவனின் கரங்கள் உண்டாக்கிய சந்தோஷம் அவனுடைய இதயத்தை விட்டு அப்போதும் மறையவில்லை. அவனுடைய 'அப்பா' என்ற மந்திரத்தனமான இனிய அழைப்பு ரவியின் மனதிற்குள் அப்போதும் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.

ரவி பத்மினியின் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தான். கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக் கொண்டிருந்த இளம் வெயில் ஜன்னல் வழியாக மெத்தை மீது விழுந்து கொண்டிருந்தது.

'அப்படின்னா நான் பார்த்தது எல்லாமே வெறும் கனவு!'- ரவி நீண்ட பெருமூச்சு விட்டான்.

"என்ன, இன்னும் படுக்கையிலேயே படுத்திருக்கீங்க? மணி ஒன்பதைத் தாண்டிருச்சு. இனியும் எழுந்திரிக்கலையா? ஒரு ஐரோப்பாக்காரர் உங்களைப் பார்க்குறதுக்காக வெளியே காத்திருக்காரு."

ரவி கண்களைக் கசக்கியவாறு எழுந்து உட்கார்ந்து கேட்டான்: "யார் அது?"

பத்மினி ஒரு விசிட்டிங் கார்டை அவனிடம் நீட்டினாள். எ.டி.பர்ட்டன், ரப்பர் எஸ்டேட் உரிமையாளர், கோழிக்கோடு என்று அதில் இருந்தது.

ரவி எழுந்து முகத்தைக் கழுவி, ஆடைகளை எடுத்து அணிந்து, விருந்தினர் அறைக்குச் சென்று வெள்ளைக்காரரை வரவேற்றான்.

இருவரும் பொது விஷயங்களைப் பற்றி சிறிது நேரம் பேசிய பிறகு, திரு.பர்ட்டன் தான் வந்த விஷயத்திற்குத் திரும்பினார்.

"மிஸ்டர் ரவீந்திரன். நான் ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி உங்ககிட்ட பேசறதுக்காக வந்திருக்கேன்."- வெள்ளைக்காரர் வாயில் உலக்கையைப்போல இருந்த சுருட்டை எடுத்து அதன் நுனியைத் தட்டி கையில் வைத்துக் கொண்டார். கண்ணாடியைச் சரி செய்த அவர் ரவீந்திரனுக்கு மேலும் சற்று அருகில் வந்து அமர்ந்து தீவிரமான குரலில் தான் வந்த விஷயத்தைக் கூறினார்: "எனக்கு அறுபத்தஞ்சு வயது முடிஞ்சிடுச்சு. நான் இந்தியாவுக்கு வந்து வசிக்க ஆரம்பிச்சு இருபது வருடங்களாச்சு. மீதி இருக்குற என்னோட வாழ்க்கையை சொந்த நாடான பர்மிங்ஹாமில் செலவிட நான் விருப்பப்படுறேன். என்னோட ஒரு மகன் அங்கே படிச்சுக்கிட்டு இருக்கான். நான் அங்கே இருக்குறதைத்தான் அவனும் விரும்புறான். சூழ்நிலைகள் இப்படி இருப்பதால், இந்தியாவுல இருக்கிற என்னோட எல்லா உறவுகளையும் நான் விடணும்னு நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனா, வெள்ளைக்காரர்கள் இந்தியாவுல இருந்து ஏதாவது எதிர்பார்க்குறதுன்றது இனிமேல் ரொம்பவும் கஷ்டமான ஒரு விஷயமா இருக்கும். அதற்கான சூழ்நிலைகள் இப்பவே தெரியுது. அதனால் நான் என்னோட பெரிய ரப்பர் தோட்டத்தை விற்றுவிட முடிவு பண்ணியிருக்கேன். இந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்தத் தோட்டத்தை விலைக்கு வாங்கி நடத்தினா அதுல நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். என் தோட்டத்தை விலைக்கு வாங்குறதுக்கு தகுதியுள்ள ஒரு ஆளா உங்களை மட்டும்தான் நான் பார்க்குறேன். நீங்க என் தோட்டத்தை வாங்கணும்."

திரு.பர்ட்டனின் வார்த்தைகளைக் கேட்டு ரவி நீண்ட நேரம் சிந்தனையில் மூழ்கியவாறு உட்கார்ந்திருந்தான். பிறகு அவன், சாந்தமான, அதே நேரத்தில் மிடுக்கான குரலில் சொன்னான்: "மிஸ்டர் பர்ட்டன்... இது நிதானமா யோசிச்சு பதில் சொல்ல வேண்டிய ஒரு விஷயம். பால் வற்றிப் போன பசுவை விலைக்கு வாங்கச் சொல்ற மாதிரி இது..."

திரு.பர்ட்டன் சிரித்தபடி மெதுவாகச் சொன்னார்: "அப்படி இல்ல மிஸ்டர் ரவீந்திரன் கடந்த நான்கு வருடங்கள்ல நான் சிங்கப்பூர்ல இருந்து விலை அதிகமான நல்ல இனம் ரப்பர் கன்றுகளை வரவழைச்சு நட்டிருக்கேன். அவற்றிலிருந்து பலனை எடுக்குறதுக்கு முன்னாடியே நான் தோட்டத்தை விலைக்கு விற்க முடிவு பண்ணிட்டேன். இப்போ என் தோட்டத்தோட மொத்த பரப்பளவு ஆயிரத்து நூறு ஏக்கர். ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரப்பர் மரங்கள் அதுல இருக்கு. போன வருடம் எல்லா செலவும் போக எனக்கு ஒரு லட்ச ரூபா லாபமா கிடைச்சது. எல்லா கணக்குகளையும் அங்கே வந்தால், நான் காட்டுறேன்."

ரவீந்திரன் சொன்னான்: "இப்போ எந்த பதிலும் கூற என்னால முடியாது."

"வேண்டாம்"-திரு.பர்ட்டன் சொன்னார்: "நான் உங்களுக்கு ரெண்டு மாதங்கள் தர்றேன். அதற்கிடையில் எல்லா விஷயங்களையும் யோசிச்சுப் பார்த்துட்டு, நீங்க ஒரு முடிவுக்கு வாங்க. அது ஒரு பக்கம் இருக்கட்டும். வர்ற ஞாயிற்றுக் கிழமை நான் உங்களையும் உங்க மனைவியையும் முக்கம் எஸ்டேட்டுல இருக்குற என் பங்களாவுக்கு வரணும்னு அழைக்கிறேன்."

ரவீந்திரன¢ அதற்கு ஒத்துக் கொண்டான். விடைபெறும் போது திரு.பர்ட்டன் கேட்டார்: "வழி காட்டுறதுக்கு நான் ஆளை அனுப்பனுமா?"

"வேண்டாம். நன்றி"- ரவீந்திரன் ஏதோ பழைய நினைவில் மூழ்கி, புன்சிரித்தவாறு சொன்னான்: "முக்கம் எனக்குத் தெரியாத ஊர் இல்ல..."

திரு.பர்ட்டன் போன பிறகு, பத்மனி ரவிக்கு அருகில் வந்து உட்கார்ந்து வெள்ளைக்காரர் வந்த விஷயத்தைப் பற்றி விசாரித்தாள்.

"பர்ட்டன்ஸ் ரப்பர் எஸ்டேட்'ன்ற தன்னோட சொந்த ரப்பர் தோட்டத்தை எனக்கு விற்கலாம்னு அவர் வந்திருக்கார்."

"அப்படியா? இந்த நாட்டைச் சேர்ந்தவங்களால ரப்பர் தோட்டத்தை நடத்த முடியுமா?- பத்மினி சிறிது கிண்டல் கலந்த குரலில் கேட்டாள்.

"பத்மினி, நீ என்ன முட்டாளா? நம்ம கேரளத்துல வருமானம் வரக்கூடிய விஷயங்களைக் கையில போட்டுக்கிட்டு எவ்வளவு வெளிநாட்டுக்காரர்கள் கோடீஸ்வரர்களா ஆகியிருக்காங்க தெரியுமா? நம்ம நாட்டுல இருக்குற பணக்காரர்கள் கோழைகளா தங்களோட பணத்தை வேற எதிலும் முதலீடு செய்யாம மறைச்சு வைக்கிறாங்க. காட்டையும், கரும்பாறையையும் அழிச்சு, எவ்வளவோ ஆயிரம் ரூபாய்கள் செலவழிச்சு ரப்பர் கன்றுகளைக் கொண்டு வந்து நட்டு, அவற்றை கவனம் செலுத்தி வளர்த்து அதேனாட பலனை அனுபவிக்க பல வருடங்கள் காத்திருப்பதற்கான மன தைரியமும் பொறுமையும் வெளிநாட்டுக்காரங்களுக்கு மட்டும்தான் இருக்கு. அவர் காடுகள்ல வந்து பணத்தை முதலீடு செய்யிறப்போ, நம்ம ஆளுங்க அவரைப் பார்த்து கிண்டல் பண்ணியிருப்பாங்க. இப்போ பாரு... அவர் அன்னைக்குச் செலவழிச்சதுல பத்தாயிரம் மடங்கு இதுவரை சம்பாதிச்சிருப்பாரு. ரப்பருக்கு இப்போ ஒரு ராத்தலுக்கு சராசரி எட்டணா விலை.


இப்போ அவரோட ஒரு வருட லாபம் ஒரு லட்ச ரூபாய்னு சொல்றாரு. ரப்பருக்கு விலை அதிகமா இருந்த காலத்துல ராத்தலுக்கு 15 விலை இருந்துச்சு. அப்போ ஒவ்வொரு வருடமும் அவருக்கு 30 இலட்சம் ரூபாய் லாபம் கிடைச்சிருக்கும்ல? இதுதான் அவரோட தூரப் பார்வைக்குக் கிடைச்ச பலன். கோழைத்தனமா இருந்தா பணம் சம்பாதிக்க முடியாது. சொல்லப் போனா, அது சரியான வழியும் இல்ல... வியாபாரம்னா அதுக்குக் கட்டாயம் தைரியம் வேணும்."

"அப்படீன்னா, நீங்க இந்த ரப்பர் தோட்டத்தை வாங்குறதுன்னு தீர்மானிச்சாச்சா?"

"தீர்மானிக்கல. அப்படிப்பட்ட ஒரு எண்ணம் இல்லாமலும் இல்ல. ஆனா, அங்கே போயி எல்லாத்தையும் பார்த்த பிறகுதான் முடிவா என்ன செய்யப் போறேன்றதை நான் சொல்ல முடியும். அது நடக்குறதுக்கு முன்னாடி வெள்ளைக்காரர் நம்ம ரெண்டு பேரையும் வர்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு டின்னருக்கு கூப்பிட்டிருக்கார். என்ன பத்மினி, நீ வரேல்ல?"

"கட்டாயம் வர்றேன். ரப்பர் பசையை எப்படி எடுக்குறாங்கன்றதை நான¢ நேரில் பார்க்கணும்."

"அப்படின்னா வர்ற ஞாயிற்றுக்கிழமை நாம போறோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்..."

12

முக்கம் கிராமத்தை மஞ்சள் வெயிலில் தாலாட்டிக் கொண்டிருந்த மேட மாதத்தின் ஒரு மாலை நேரம் கிராமத்துப் பெண்கள் ஆடைகளைச் சலவை செய்து, குழந்தைகளைக் குளிப்பாட்டி, தாங்களும் குளித்து முடித்து, ஆற்றிலிருந்து திரும்பிப் போக ஆரம்பித்தார்கள். கீழே குளிக்கும் இடத்தில் கோவணம் மட்டும் கட்டிய இரண்டு மூன்று ஆண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு காரின் 'ஹார்ன்' சத்தம் அவர்களின் கவனத்தைத் திருப்பியது. அந்தக் கார் குளிக்கும் இடத்தை விட்டு சற்று தூரத்தில் பாதையின் எல்லையில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் வெளியே இறங்கினார்கள். 

கிராமத்தைச் சேர்ந்தவர்களும், நிர்வாணக் கோலத்திலிருந்த கிராமத்து சிறுவர்களும் ஆர்வத்துடன் காரைச் சுற்றி வந்து நின்றார்கள். அந்தப் பெண் அணிந்திருந்த நகைகளில் பதிக்கப்பட்டிருந்த வைரக்கற்களின் பிரகாசம் அங்கிருந்தவர்களின் கண்களைக் கூச வைத்தது. சிறுவர்களும், சிறுமிகளும் காரைச் சுற்றி நின்று, அதைத் தொட்டுப் பார்த்தும் கடைக்கண்களால் பார்த்தும் தங்களுக்குள் மெதுவான குரலில் என்னவோ கூறிக் கொண்டார்கள்.

ரவி டிரைவரிடம் சொன்னான்: "சூரியன் மறையிறதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும். நாங்க இந்த ஆற்றின் கரையில நடந்துட்டு வர்றோம்."

ரவியும் பத்மினியும் ஆற்றின் கரை வழியாக கிழக்கு நோக்கி நடந்தார்கள். புதிய புதிய கிராமத்துக் காட்சிகள் பத்மினியின் மனதை வசீகரித்தன. பெரும்பாலும் வற்றிப் போய்க் காணப்பட்ட ஆற்றின் வெண்மையான மணலைக் கொண்ட இரு கரைகளும் அகலமாகக் காணப்பட்டன. அதைத் தாண்டி திரைச்சீலையைப் பிடித்து நிற்பதைப் போல் உயரமாகக் காட்சியளிக்கும் பச்சைப் புதர்கள், பச்சைக்குடை பிடித்து நின்றிருக்கும் பனை மரங்கள்... அவள் கண் இமைக்காமல் அவை ஒவ்வொன்றையும் பார்த்தவாறு நின்றிருந்தாள். இதற்கு முன்பு தான் பார்த்திராத அந்த அழகிலும், இதற்கு முன்பு தான் அனுபவித்திராத அமைதியிலும் அங்கிருந்த ஆரோக்கியமான சூழ்நிலையிலும் தன்னை மறந்து அவள் மூழ்கிப் போனாள்.

ஆனால், ரவி அந்தக் காட்சிகள் எதையும் பார்க்கவில்லை. தனக்கு முன்னால் இருக்கும் காட்சிகளை மறைத்துக் கொண்டு சில கடந்த கால நினைவுகள் சிறகடித்து அவனுக்கு முன்னால் பறந்து வந்து கொண்டிருந்தன.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தக் கிராமத்தில் இதே நதிக் கரையில் நடிக்கப்பட்ட ஒரு காதல் நாடகத்தின் கதாநாயகனாக அவன் இருந்தான். அப்போது நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும், அன்று தான் செய்த ஒவ்வொரு காரியத்தையும், அவன் அடுத்தடுத்து மனதில் நினைத்துப் பார்த்தான். எனினும், அதைத் தொடர்ந்து புரிந்து கொள்ள முடியாத ஒரு வேதனை- காரணமே இல்லாமல் தன் மீதே தனக்கு உண்டான ஒரு வெறுப்பு- தன் செயலை நினைத்து ஒரு வருத்தம்- இனம்புரியாத ஒரு தர்மசங்கடமான நிலை- ஒரு வெட்கம்- பயம்- பதைபதைப்பு- இவை ஒவ்வொன்றும் ரவிக்கு உண்டானது. ஒரு கோழையைப் போல அப்போது நடைபெற்ற சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதற்கு அவன் தயங்கினான். அப்போது நடைபெற்ற ஒவ்வொன்றையும் அவன் மறக்க முயற்சித்தான். ஆனால், அந்தக் கிராமத்தில் நின்று கொண்டு அவற்றை நினைத்துப் பார்க்காமல் இருப்பது என்பது முடியாத ஒரு காரியமாக இருந்தது. ஒவ்வொரு மரக்கிளையும், ஒவ்வொரு புல்வெளியும் தன்னைப் பார்த்து 'உங்களை எனக்குத் தெரியும்' என்று கூறுவதைப் போல அவனுக்குத் தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிறைந்து நின்ற சிந்தனைகளுக்கும், அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்த நினைவுகளுக்கும் மத்தியில் மாலை நேர மேகங்களுக்கு உள்ளேயிருந்து வெளிவரும் நிலவைப் போல ஒரு இளம்பெண்ணின் கள்ளங்கபடமற்ற அழகான முகம் தோன்றியது. அந்த முகத்தில் புன்னகையும், அழுகையும் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன. கள்ளங்கபடமில்லாத காதல்... அதை நம்பக்கூடிய அந்தக் கறுத்து விரிந்த கண்களில் அரும்பும் கண்ணீர் துளிகள்... இளம்பெண்ணின் அழகும் இளமையும் தாண்டவாடும் உதடுகளில் மலரும் புன்னகை... இவை ஒவ்வொன்றையும் பத்து மடங்கு பெரிதாக ஒருதிரைப்பட திரைச்சீலையைப் போல அவன் பசுமையான காடு பின்புலத்தில் இருக்க அவன் பார்த்தான்.

"நீங்க என்னை விட்டுப் போறீங்களா? ம்... இனி எப்போ?"- அவனுடைய மூளையின் ஏதோ ஒரு மூலையில் இதுவரை விட்டெறியப்பட்டுக் கிடந்த அந்தப் பழைய வார்த்தைகள் திடீரென்று ஒரு மின்சாரசக்தி பாய்வதைப் போல எழுந்து ஓடி ஒவ்வொரு நரம்புகளையும் தட்டின.

"அவள் எங்கே? அவள் எங்கே? அவளுக்கென்ன நடந்தது?- ஒரு குற்றவாளியின் மன சஞ்சலத்துடன் அவன் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

"க்யோ, க்யோ, க்யோ..."-என்று ஓசை எழுப்பியவாறு ஒரு கிளி கிழக்கு நோக்கி பறந்து போனது. ஒரு காளையின் கழுத்தில் கட்டப்பட்ட மணி அருகில் முழங்கியது.

"அந்தப் புதரைப் பாருங்க. என்ன அழகா இருக்கு! கிளிகள் கூட்டமா அதோ பறந்து போகுது... பார்க்குறதுக்கு எவ்வளவு அழகா இருக்கு! அந்தக் காட்டோட மூலையில இயற்கையோட அழகைப் பாருங்க... அங்கே பாருங்க... ஒரு முஸ்லிம் சி-றுமி ஆடுகளை மேய்ச்சுத் திரும்பி வர்றதை... அந்தப்படகுல ஏற்றி இருக்கிறது ரப்பர் பெட்டிகளா?"- இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லியும் கேட்டும் பத்மினி முன்னோக்கி நடந்து கொண்டிருந்தாள். ஆனால், சிந்தனையில் மூழ்கியிருந்த ரவி அவளுடைய சந்தேகங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இடையில் அவ்வப்போது 'உம்' கொட்டிக் கொண்டிருந்தானே தவிர, பதிலென்று எதுவும் கூறவில்லை.


ரவியின் சிந்தனை தொடர்ந்தது: "அவ இப்போ எப்படி இருப்பா, அவளுக்குக் கல்யாணம் நடந்திருக்கும். இல்லாட்டி... இன்னும் கல்யாணம் ஆகாம கன்னியாவே இருப்பாளோ? அப்படி இருக்காது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் அப்படி இருக்குறதுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஒரு வேளை நவநாகரீகமான படித்த வேற யாராவது அழகை ரசிக்கக்கூடியவன் அவளைத் தட்டிக்கிட்டு போயிருப்பானோ என்னைப் பார்த்தா அவளால அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா? அவள் என்னைப் பா£க்குறப்போ எப்படி நடந்துக்குவா? பத்மினிகிட்ட அவள் எப்படி நடப்பா? நான் அவளுக்கு எவ்வளவு பெரிய கெடுதல் பண்ணியிருக்கேன்! அவளோட இருந்த நாட்கள் உண்மையாகவே எவ்வளவு சந்தோஷமானது! அதுக்குப் பதிலா நான் அவளுக்கு என்ன செஞ்சேன்? அதுக்குப் பிறகு சொல்லப்போனா நான் அவளைப் பற்றி விசாரிச்சுப் பார்க்கக் கூட இல்ல. என் வாழ்க்கை முழுவதுமே மகிழ்ச்சி நிறைந்ததா இருக்கும்னு இளமை போதையில நான் தப்பா நினைச்சிட்டேன். முட்டாள்! பலவிதப்பட்ட மலர்கள் இருந்த தோட்டத்தை நோக்கி ஓடிய போக்கிரி நான்! அந்த எல்லா மலர்களையும் சொந்தமாக்கணும்ன்ற ஆசையில், முயற்சியில் எத்தனையோ மலர்களை நான் கால்ல மிதிச்சு அழிச்சுட்டேன். சுகத்தை மட்டும் தேடித்திரியிற ஒரு மனிதனா இருந்தேன் அன்று நான். இன்னைக்கோ நான் ஒரு தத்துவவாதியா மாறியிருக்கேன். ஆனால், உலகப் பாடங்கள் படிச்சு முடிக்கிறப்போ நான் பாதி கிழவனாயிட்டேன். செய்த காரியத்தை மறுபடி வேற மாதிரி செய்ய இனிமேல் முடியாது. பரிதாபப்பட்டும் பிரயோஜனம் இல்ல. அவளுக்குத் திருமணமாயிடுச்சு. கணவனோடும், குழந்தைகளோடும் சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கான்ற செய்தி முதல்ல காதுல விழட்டும்...'

"அதோ அங்கே பாருங்க... அது என்ன? இல்ல இல்ல... ஒரு பறவைன்னு நினைக்கிறேன். என்ன சுட்டித்தனம்ன்றீங்க! ஜாடாவு மாதிரியே இருந்திச்சு. பெருசா சத்தம் போட்டுக்கிட்டு அந்தக் கரும்பனை மேல அது வந்து விழுந்துச்சு..."- இப்படி தன் கணவனை அழைத்துச் சொன்ன பத்மினி பனை மரத்தின் உச்சியைப் பார்த்தாள்.

ரவியும் அங்கு பார்த்துவிட்டு சொன்னான்: "ஓ... அதுவா? அது ஒரு வேழாம்பல் பறவை. நீர் குடிப்பதற்காக மழை விழணும்னு காத்துக்கிடக்கிற ஒரு பறவையைப் பற்றி பத்மினி, நீ கேட்டது இல்லையா? அந்தப் பறவைதான் அது..."

"அதோ கழுத்துல ஓட்டை இருக்குமா?"

"அதோட கழுத்துல ஒரு ஓட்டையும் தலையில ஒரு கொண்டையும் இருக்கும்."

அதைக் கேட்டு பத்மினி சிரித்தாள். வேழம்பலின் முக் தலையில் வாளி கவிழ்த்தது மாதிரி இருக்கும் புடைப்பைப் பற்றி முன்பு மாளு சொன்ன கதை ரவியின் ஞாபகத்தில் வந்தது. அந்தக் கதையை அவன் பத்மினியிடம் சொன்ன போது, அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

முன்னால் நடந்து கொண்டிருந்த ரவி கதையைக் கூறி முடிப்பதற்கு முன்பு எதுவும் முன்கூட்டி சொல்லாமல் பக்கத்திலிருந்த தாழ்வான இடத்தில் உட்கார்ந்திருந்தான்.

அதைப் பார்த்தவாறு அருகிலிருந்த ஒரு புதருக்குப் பின்னால் மறைந்திருந்த குறும்புத்தனம் செய்யும் சிறுவர்கள் கூப்பாடு போட்டார்கள். அந்தக் கூட்டத்தின் தலைவனாக ஒரு சிறுவன் இருந்தான். அவன் முன்னால் நடந்தான். அவன் மிடுக்கான குரலில் சொன்னான்: "அய்யா, அந்த இடத்தை அசுத்தம் செய்ய நாங்க விடமாட்டோம்."

ரவி சிரித்துக் கொண்டே பத்மினிக்கு நேராகக் கையை நீட்டினான். பத்மினிக்கு வந்த சிரிப்பில், அவளுடைய பாதி பலம் போய்விட்டிருந்தது. எப்படியோ அவள் தன் கணவனை அந்தத் தாழ்வான இடத்திலிருந்து கையைப் பிடித்துத் தூக்கினாள். அதற்குப் பிறகு ரவியும் அவளுடைய சிரிப்பில் பங்கு கொண்டான்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி மாளுவுடன் நிலவு வெளிச்சத்தில் தான் நடக்கும் போது தான் அந்தத் தாழ்வான இடத்தில் விழுந்த ஒரு சம்பவத்தை ரவி நினைத்துப் பார்த்தான். இதைப்போல எத்தனையோ இனிமையான கடந்த கால நினைவுகளையும் அந்த இடம் அவனிடம் எழுப்பிவிட்டது. அந்தத் தேக்குக்காடு, அந்தக் குளிக்கும் இடம், அதற்கருகில் இடிந்து கிடக்கும் பகவதி கோவில். நெடுங்குத்தாக ஒரு ஈட்டியைப் போல உயரமாக இருக்கும் அந்தக் கணை மரம்- இவை எலலாமே இப்போதும் அங்கு இருக்கின்றன. பன்னிரண்டு வருடங்கள் கடந்தும், இன்றும் இருவழிஞ்ஞி ஆறு அப்படியேதான் ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையில் குறும்புத்தனம் செய்யும் சிறுவர்கள் அப்போது செய்ததைப் போலவே இப்போதும் மணலில் பள்ளங்கள் தோண்டி அதில் ஆட்கள் விழுவதைப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறார்கள். மனிதர்களைத் தவிர அந்தக் கிராமத்தின் இயற்கைக்கு எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை.

பச்சை நெல் செடிகள் ஆடிக் கொண்டிருக்கும் சிறிய வயலின் மேற்குப் பகுதியில் இருக்கும் மலை உச்சியில் மறையப் போகும் சூரியன் பொன் நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன.

ரவி தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து நெருப்புப் பற்ற வைத்து மெதுவாக புகை விடத் தொடங்கினான்.

'அவளைப் பார்க்கணும்னு என் கண்கள் துடிக்குது. எங்கே விசாரிப்பது?'

சிறிது தூரத்தில் ஆற்றோரம் இருந்த சுவரில் தலையை நீட்டிக் கொண்டு நின்றிருந்த அழகான ஒரு மேத்தோன்றிப் பூவைப் பறிப்பதற்காக பத்மினி அந்தப் பக்கம் போனாள்.

ரவி அவள் வருவதற்காகக் காத்து, சந்தோஷம் தந்து கொண்டிருந்த கடந்த கால நினைவுகளில் மூழ்கிப் போய், அங்கேயே நின்றிருந்தான்.

13

ளமையின் புதிய போதையில் தன்னை மறைத்திருக்கும் ஒரு இளைஞன் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ஒரு இளம் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தும் இனிய வார்த்தைகளைக் கூறுகிறான். இல்லாவிட்டால் விளையாட்டாக அவளைக் கிள்ளவோ, அதைக் கடந்து முத்தமிடவோ, கட்டிப்பிடிக்கவோ காதலின் கடைசிப் படியான உடல்ரீதியாக ஒன்று சேரவோ செய்கிறான். அந்த இளைஞன் இருபத்தைந்தாவது அனுபவமாக அது இருக்கும். அந்த அப்பிராணி இளம் பெண்ணோ காதலென்ற மின்சாரக் கம்பியைச் சந்திப்பது முதல் தடவையாக இருக்கும். அந்த இளைஞன் அந்த இளம் தேவதையை காலப்போக்கில் மறந்து விடுகிறான். காலச் சக்கரம் மீண்டும் சுற்றுகிறது. வாழ்க்கையின் பல நடப்புகளில் அவன் மூழ்கிவிடுகிறான். மொத்தத்தில் அவன் முழுமையாக மாறிவிடுகிறான். 

ஒரு ஆகாயத்தில், ஒரு ரெயில்வே ஸ்டேஷனில், ஒரு பொது இடத்தில், ஒரு தெருவில் இல்லாவிட்டால் ஒரு வெளியூரிலிருக்கும் ஹோட்டலில், ஒரு பெண் அவனை மறைந்து நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் இப்போது கன்னியோ, உத்தியோகத்தில் இருப்பவளோ, நோயாளியோ, இல்லாவிட்டால் பிச்சைக்காரியோ- இவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம். அவளுக்குள் அந்தக் கடந்து போன நாட்களின் நினைவுகள் ஓடிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியாது.


ஆனால், அவளுடைய கண்கள் 'அவனை'க் கண்டுபிடித்து விட்டது. அவளுடைய மனதில் பழைய நினைவுகள் அடுத்தடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றன. மலை அடுக்குகளில் மோதி தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கும் இடி முழக்கத்தைப் போல சில வார்த்தைகள் அவளுடைய இதய நரம்புகளில் முழங்கிக் கொண்டேயிருக்கின்றன. நடவடிக்கையில் அவள் மீண்டும் அன்றைய சிறு பெண்ணாக மாறுகிறாள். எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்ற இடைப்பட்ட காலங்களைப் பின்னால் தள்ளிவிட்டு அவளுடைய நினைவுகள் ஆழமான ஒரு தாழ்வாரத்தை நோக்கிப் பாய்கிறது. மனதிற்குள் எழுந்த கிளர்ச்சியால் உண்டான எழுச்சியுடன் அவள் புன்னகை செய்தவாறு தனக்குள் கூறிக் கொள்கிறாள்: ‘என்னோட காதல் பூங்காவனத்தில் முதன் முதலாக நுழைந்து என்னை ஆட்கொண்ட திருடா, நான் உன்னைத் திரும்பவும் பார்த்துட்டேன். நீ ஏமாற்றினதை நான் எப்பவும் மறக்கமாட்டேன். ஆனா, என்னை நீ பார்க்கல. பார்க்கக்கூடாதுன்றதுதான் என்னோட விருப்பம். நாம இப்படி தனித்தனியாவே இருப்போம்.’

காலம் முகத்தின் சதையில் எவ்வளவோ புதிய கைவேலைகளைக் காட்டியிருந்தாலும், தன்னை முதன் முதலாக முத்தமிட்ட ஆணை ஒரே பார்வையில் அடையாளம் கண்டுபிடிக்கப் பெண்ணுக்குப் பிறவியிலேயே ஒரு திறமை இருக்கிறது.

மலரைப் பறிக்கச் சென்ற மனைவியை எதிர்பார்த்து அந்த ஆற்றின் கரையில் நின்றிருந்த ரவீந்திரனை, அருகிலிருந்த ஒரு குடிசையின் ஜன்னல் வழியாக இரண்டு கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

ரவீந்திரன் தொடர்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தான்: 'அடடா! வாழ்க்கைன்றது எவ்வளவு அழகான ஒரு தோட்டம்! அதன் பரிணாம தன்மையும் புதிரும் தான் அதைப் பெரிதாக வணங்கக் கூடியதாகவும் பெருமைக்குரியதாகவும் ஆக்கியவை. என்னோட வாழ்க்கைன்ற கவிதை நூலின் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறப்போ, ஒரு காதல் பாடலின் ஆங்காங்கே காணாமல் போன சில வரிகளை நான் பார்க்குறேன். தெளிவற்ற அந்த வரிகள் ஒரு கவிஞனின் திறமையுடன் மீண்டும் இணைக்கப்படும் போது இப்படிப் படிக்கலாம்.

ஆடும் காட்டுக் கொடிகளுக்கிடையில்

உணர்ச்சிகள் புரளும் இதயத்துடன் நான்

அவள் குளிரலை வீசும் மனதுடன்

தினமும் வருவாள் ஆற்றின் கரைக்கு..

குளிர்நிலவு உயரத்தில் காயும்

தெளிந்த வெண்மணலில் இருக்கும் அவளின்

அமுதம் பொழியும் புதுப் புன்சிரிப்பில்

இழக்கவே, பொழுதென்ற ஒன்று அழியும்...'

பக்கத்தில் ஒரு பேச்சுச் சத்தம் கேட்டு ரவி பாட்டை நிறுத்திவிட்டு அங்கு திரும்பிப் பார்த்தான். பத்மினி மலரைப் பறித்து திரும்பி வந்து கொண்டிருந்தாள். அவளுடன் ஒரு சிறுவனும் இருந்தான். அவள் அவனுடன் பேசி, சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள். சிறுவனின் கை நிறைய மேத்தோன்றில் பூக்கள் இருந்தன.

பத்மினி அந்தச் சிறுவனின் கையைப் பிடித்து, ரவியின் அருகில் வந்தவுடன் கேட்டாள்: "இவனை உங்களுக்குத் தெரியுமா?"

ரவி ஆச்சரியத்துடன் அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்த்தவாறு ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்: "இல்ல..."

பத்மினி சொன்னாள்: "இதோ... இது நீங்களேதான்" அவள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு சொன்னாள்: "என்ன ஒற்றுமை! நான் முதல்ல பார்த்தப்போ ஆச்சரியத்துல மூழ்கிட்டேன். உங்களோட பன்னிரண்டாம் வயசுல எடுத்த ஒரு புகைப்படத்தை முன்னாடி ஒரு நாள் எனக்குப் பரிசாகத் தந்தீங்கள்ல? அந்தப் புகைப்படம் உயிரோடு எழுந்து வந்துச்சோன்னு எனக்கு சந்தேகமே வந்திருச்சு. இங்க பாருங்க... அதே கண்கள், அதே மூக்கு, அதே முகம், அதே நடவடிக்கை... இப்படியெல்லாம் ஒரே மாதிரி இருக்கமுடியுமா என்ன? நான் மலர் பறிக்க முயற்சி பண்ணினப்போ அவன் ஓடி வந்து எனக்கு உதவினான். அந்த உயர்ந்த சுவர் மேல ஏறி எவ்வளவோ பூக்களைப் பறிச்சுத் தந்தான். தைரியசாலி பையன்!"-  அவள் அந்தச் சிறுவனின் முகத்தைப் பிடித்து உயர்த்தி, அன்பு பொங்கக் கேட்டான்: "தம்பி, உன் பேர் என்ன?"

அவன் மிடுக்காக முகத்தை உயர்த்திக் கொண்டு சொன்னான்: "ராகவன்... பெரியவங்க என்னை இக்கோரன் பையன்னும் கூப்பிடுவாங்க."

"உன் அம்மா பேரு?"

"மாளு."

அவனைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ரவீந்திரனைச் சுட்டிக் காட்டிக் கொண்டு அவன் சொன்னான்: "அய்யா... சிகரெட் சாம்பல் விழுந்து உங்களோட சட்டை பொசுங்குது பாருங்க..."

ஒரு கனவிலிருந்து எழுவதைப்போல ரவி அதிர்ச்சியடைந்து, தன்னுடைய சட்டையின் கீழ்ப்பகுதியை உதறி தீயை அணைத்தான். சட்டையில் ஒரு ரூபாய் அளவுக்கு வட்டமாகக் கரிந்து போயிருந்தது.

பத்மினி ரவீந்திரனை அன்புடன் கோபித்தாள்: "இப்படியா சுய நினைவே இல்லாம நடந்துக்கிறது! சிகரெட்டிலிருந்து நெருப்பு விழுந்து இந்த அளவுக்கு வட்டமா எரியிற அளவுக்குத் தெரியாமலா இருப்பாங்க!"

அவள் சிறுவனை மெதுவாக அணைத்தவாறு கேட்டாள்: "ராகவன், உனக்கு எத்தனை வயசாச்சு?"

"பன்னிரண்டு..."- அவன் மலர்களை அவளிடம் நீட்டியவாறு சொன்னான்: "இதை வாங்கிக்கங்க. நான் போகணும். அப்பா தோட்டத்துல இருந்து வர்ற நேரமாச்சு."

பத்மினி பூக்களை வாங்கிவிட்டு, தன் கணவனிடம் சொன்னாள்: "இவனுக்கு ஏதாவது கொடுக்கணும்."

ரவீந்திரன் தன் கைகளை மெதுவாக பாக்கெட்டிற்குள் விட்டு, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து, அந்தச் சிறுவனிடம் கொடுத்தான். முதலில் அவன் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தான். ரவீந்திரன் அந்த நோட்டை அவனுடைய கையில் திணித்தான்.

பத்மினி ஆச்சரியத்துடன் தன் கணவனின் முகத்தைப் பார்த்து ஆங்கிலத்தில் கூறினாள்: "என்ன, அஞ்சு ரூபாய் நோட்டா? நீங்க என்ன தூங்குறீங்களா?"

ரவி அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. இதற்கிடையில் ராகவன் ஓடி மறைந்திருந்தான். ரவி கண்களை இமைக்காமல் தூரத்தில் பார்த்தபடி ஒரு பிணத்தைப் போல அதே இடத்தில் நின்றிருப்பதைப் பார்த்து, பத்மினி அவனைப் பிடித்து குலுக்கிக் கொண்டு கேட்டாள்: "உங்களுக்கு என்னஆச்சு? வாங்க... மாலை மயங்கப் போகுது. நாம திரும்பிப் போகணும்ல?"

"ம்..."- ரவி கனவில் நடக்கும் ஒரு மனிதனைப் போல நடந்தான். அவர்கள் அரை பர்லாங் தூரத்தை அடைவதற்கு முன்பு, அந்தச் சிறுவன் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க அவர்களை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான். சிறுவன் ரவியின் அருகில் வந்து, "அம்மா, என் மேல கோபப்பட்டாங்க. இதை உங்ககிட்ட தரச் சொன்னாங்க."

அவன் ஒரு சிறு பேப்பர் பொட்டலத்தை ரவியின் கையில் தந்துவிட்டு, அழ ஆரம்பித்தான்.

பத்மினி சற்று தூரத்தில் நிறைய மலர்களுடன் நின்றிருந்த ஒரு கொன்னை மரத்தை ஆர்வத்துடன் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். திரும்பியவாறு சிறுவன் மீண்டும் தன் கணவனின் அருகில் இருப்பதைப் பார்த்ததும் சிறிது சந்தேகத்துடன் அவர்களுக்கு அருகில் வந்தாள்.


ரவி அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தான். தான் கொடுத்த ஐந்து ரூபாய் தவிர, வேறு சில பொருட்களையும் அவன் பார்த்தான். ஐந்து ரூபாய் நோட்டும் ஒரு தங்க மோதிரமும்.

அவனுடைய இதயத்தில் கடந்த கால ஞாபகம் வந்து ஆக்கிரமித்தது. சிறிதும் அடக்க முடியாத அந்த உணர்ச்சியின் உந்துதலால் பாதிக்கப்பட்ட ரவி குலுங்கிக் குலுங்கி அழுதான். சிறுவனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவன் புலம்பினான்: "என் மகனே, செல்லமே, நீ இவ்வளவு நாட்களும் எங்கேடா மறைஞ்சிருந்தே?"

பத்மினி தன் கணவனின் சற்றும் எதிர்பார்த்திராத நடவடிக்கைகளைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள்: "என்ன, பைத்தியக்காரத்தனமா நடந்துக்குறீங்க?"

நடுத்தர வயது உள்ள ஒரு கிராமத்துப் பெண் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் ரவி அதிர்ச்சியடைந்தான். அவள் சிறுவனின் கையைப் பிடித்துக் கொண்டு, ரவியைப் பார்த்து கடுமையான குரலில் சொன்னாள்: "குழந்தையை விடுங்க..."

ரவி அவளுடைய முகத்தை பரிதாபமாகப் பார்த்துச் சொன்னான்: "மா...(அந்தப் பெயரை முழுமையாகக் கூற அவனால் முடியவில்லை) நீ என்னை மன்னிக்கமாட்டியா? இவன் என் மகன்...."

அந்த வார்த்தைகளைக் கேட்டு பத்மினிக்கு உயிரே போவது போல இருந்தது. அவள் ஓடி "கிருஷ்ணா...கிருஷ்ணா..." என்று கார் டிரைவரை உரத்த குரலில் அழைத்தாள். "கிருஷ்ணா ஓடிவா. இவரை இங்கேயிருந்து அழைச்சிட்டு போ" என்றாள்.

"உங்க மகனா?"- அவள் கிண்டலுடன் கேட்டாள்: "நீங்க யாரு? நீங்க இதுவரை எங்கேயிருந்தீங்க?"

மாளு சிறுவனைப் பிடித்து இழுத்தாள். ரவியும் அவனை விடவில்லை. "விடு... இவன் என் மகன்" என்றான் அவன்.

மாளு கோபத்துடன் சொன்னாள்: "உங்களைப் பார்க்குறப்போ பைத்தியம்னு தோணுது. ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா நடந்துக்குறீங்க? குழந்தையை விடுங்க. மரியாதையா சொல்றேன்."

ஆரவாரத்தைக் கேட்டு கிராமத்து ஆட்களில் சிலர் அங்கு வந்து சேர்ந்தார்கள். நகரத்திலிருந்து வந்த அந்தப் பணக்காரனின் செய்கைகளைப் பார்த்து அவர்கள் விழுந்துவிழுந்து சிரித்தார்கள். அவர்களில் சிலர் முன்னோக்கி வந்தார்கள். "இவன் இக்கோரனோட மகன். உங்க மகன் இல்ல" என்று நேரடியாக ஐடென்டிஃபிக்கேஷன் சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள். ரவீந்திரன் அவர்களை அடித்து விரட்டுவதற்காகத் தன் கையை உயர்த்திக் கொண்டு கத்தினான்: "தள்ளி நில்லுங்க. என் மகனை நான் அழைச்சிட்டு போகப் போறேன்."

காக்கி நிறத்தில ஒரு கால் சட்டையும் கிழிந்த ஒரு வலை போட்ட பனியனும் அணிந்த, தலையில் துண்டைக் கட்டிய ஒரு பலசாலியான மனிதன் கிராமத்து ஆட்களைத் தள்ளிக் கொண்டு முன்னால் வந்து உரத்த குரலில் சொன்னான்: "என் மகனை விடு.."

ரவியின் கை தளர்ந்தது.

"எனக்கு மூணு கோடி ரூபாவுக்கு சொத்து இருக்கு. அதுல பாதியை இவனுக்குத் தர்றேன். பையனை எனக்கு விட்டுத்தா இக்கோரா."

"ஓ... ஒரு கோடீஸ்வரர் வந்திருக்காரு"- பையனை மாளுவின் கையில் தந்த இக்கோரன் சொன்னான்: "குழந்தையை வேகமா வீட்டுக்குக் கொண்டு போ. இவன் பைத்தியம் மாளு. இவன் பைத்தியம்..."

தர்மசங்கடமான நிலையில் உள்ள ஒரு பைத்தியத்தைப் போலவே ரவி முணுமுணுத்தான்: "ஆமா... நான் பைத்தியம்தான்... நான் பைத்தியமா ஆகப்போறது உறுதி."

டிரைவர் கிருஷ்ணனும் பத்மினியும் ஒருவிதமாக ரவியைப் பிடித்துத் தாங்கியும் இழுத்தும் காரில் கொண்டு போய் உட்கார வைத்தார்கள்.

ரவிக்கு சிறிதும் எதிர்பாராமல் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வெள்ளைக்காரர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கு பெற முடியாமல் அவர்கள் திரும்ப வேண்டி வந்தது. திரு.பர்ட்டனுக்கு அதனால் மிகவும் ஏமாற்றமும் வருத்தமும் உண்டானது. அவர் அவர்களுடன் நகரம் வரை சென்றார். ஆனால், அன்றே முக்கத்திற்குத் திரும்ப ரவி அவரை விடவில்லை. "மிஸ்டர்.பர்ட்டன்... நீங்க போகக்கூடாது. உங்களால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியதிருக்கு" என்ற ரவியின் வேண்டுகோளைக் கேட்டு பர்ட்டன் அன்று ராஜேந்திர விலாஸத்தில் தங்கச் சம்மதித்தார்.

14

ன்று இரவு ரவீந்திரன் திரு.பர்ட்டனின் தன்னுடைய வாழ்க்கைக் கதை முழுவதையும் மனம் திறந்து கூறினான். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் தான் முக்கத்திற்கு ஓய்வு எடுப்பதற்காகச் சென்றதையும் தன்னுடைய இளமை வேட்கையால் தற்காலிகக் காதலில் ஈடுபட்டதையும், பிறகு அதைப் பற்றி முழுமையாக மறந்து போனதையும் ஒரு கதை படிப்பதைப் போல அவன் திரு.பர்ட்டனிடம் கூறினான். "மிஸ்டர்.பர்ட்டன், அந்தச் சிறுவன் என் பையன்றதை வெட்கத்தை விட்டு நான் சொல்றேன். அவனை ஏத்துக்குறதுக்கோ இல்லாட்டி தத்து எடுத்துக்குறதுக்கோ- நான் தயாரா இருக்கேன். என் சொத்துல பாதியை என்ன முழுசையே கூட அவனுக்குத் தர நான் தயாரா இருக்கேன். அதைப் பற்றி பேசுறதுக்குத்தான் நான் உங்களை இங்கே பிடிச்சு தங்க வச்சிருக்கேன். அந்தப் பையனோட அப்பான்னு சொல்லிக்கிர்ற இக்கோரன் உங்கத் தோட்டத்துல வேலை பார்க்குற ஒரு மேஸ்திரின்னு நான் கேள்விப்பட்டேன். அதுனால நீங்க சொன்னா அவன் கட்டாயம் கேட்பான்" என்றான் அவன்.

திரு.பர்ட்டன் ரவீந்திரனைத் தேற்றி தைரியம் சொன்னார்: "அந்த விஷயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்" என்றார் அவர்.

மறுநாள் சாயங்காலம் பர்ட்டன் இக்கோரனைத் தன்னுடைய பங்களாவுக்கு வரவழைத்தார்.

திரு.பர்ட்டன் நல்ல முறையில் மலையாளம் பேசக்கூடிய ஒரு ஐரோப்பியர். அவர் இக்கோரனிடம் அவனுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார்.

இக்கோரன் எல்லா விஷயங்களையும் விளக்கமாகச் சொன்னான். திருமணத்தைப் பற்றி அவன் சொன்ன போது, வெள்ளைக்காரர் அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் கேட்டார்: "நீ மாளுவைத் திருமணம் செய்ததற்குக் காரணம்?"

இக்கோரன் சிறிதும் தயங்காமல் பதில் சொன்னான்: "அய்யா, எங்களோட சாஸ்திரத்துல ஒரு சொல் இருக்கு. ஆம்பளைன்னு ஒருத்தன் இருந்தான்னா, அவனுக்குப் பக்கத்துல அவனைப் பார்த்துக்கிறதுக்கு ஒருத்தி கட்டாயம் இருக்கணும். எனக்கு ஒரு பெண் தேவைப்பட்டது. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுல என்ன புதுமை இருக்கு?"

அதற்குப் பிறகு வெள்கைக்காரருக்கு என்ன கேட்பது என்றே தெரியவில்லை. "சரி... பிறகு..."- அவர் தன்னுடைய கதையைத் தொடரும் படி இக்கோரனிடம் சைகை செய்தார்.

"திருமணம் முடிஞ்சு நான் அவளையும் அழைச்சுக்கிட்டு என் ஊருக்குப் போயி நான்கு வருடங்கள் இருந்தேன். அப்போ இங்கேயிருந்த மாளுவோட மாமாவும் அத்தையும் குழந்தையும்- மூணு பேரும் இரண்டே வாரங்கள்ல அம்மை நோய் வந்து செத்துப் போனாங்கன்ற செய்தி காதுல வந்து விழுந்துச்சு. அவளுக்குச் சொந்தம்னு வேற யாரும் இல்ல. அதனால நாங்க இங்கே திரும்பி வந்தோம்.


அவங்களோட வீட்டையும் நிலத்தையும் எடுத்து நாங்க இங்கே வசிக்க ஆரம்பிச்சோம். சீக்கிரமே உங்க தோட்டத்துல ஒரு ரப்பர் வெட்டுற கூலிக்காரனா என்னை நீங்க சேர்த்துக்கிட்டீங்க. எட்டு வருடங்கள் ஓடிருச்சு. இப்போ நான் மேஸ்திரி ஆயிட்டேன். இதுதான் என்னோட கதை."

வெள்ளைக்காரர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு கேட்டார்: "நீ மாளு மேல் உண்மையாவே அன்பு வச்சிருக்கியா?"

"அவ நல்ல ஒரு பெண்."

"குழந்தை?"

"ராகவன் என் உயிர்."

"நான் ஒரு நல்ல சந்தோஷமான விஷயத்தைச் சொல்றதுக்குத்தான் உன்னை இங்கே வரவழைச்சேன். கோழிக்கோடு ரவீந்திரன்ற பெரிய பணக்காரனைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கியா? அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்ல. சமீபத்துல அவர் இங்கே வந்திருக்குறப்போ, உன் மகனைப் பார்த்திருக்கார்-. என்ன காரணத்தாலோ உன் மகன் மேல அவருக்கு ஒரு விருப்பம் உண்டாயிடுச்சு. உன் அதிர்ஷ்டம்தான்னு அதைச் சொல்லணும். இக்கோரா, அவனை அவர் வாங்கப் போறதா என்கிட்ட சொன்னார். உங்களுக்குப் பெரிய ஒரு தொகையை அவர் அதுக்கு பதிலா தருவார். சம்மதம்தானே இக்கோரா?"

இக்கோரன் அமைதியாக இருந்தானே தவிர, பதிலென்று எதுவும் கூறவில்லை.

"என்ன, உனக்குக் கிடைச்சிருக்கிறது பெரிய அதிர்ஷ்டம்தானே, இக்கோரன் மேஸ்திரி?"- வெள்ளைக்காரர் சிரித்துக் கொண்டே இக்கோரனின் தோளில் தட்டினார். ஆனால், இக்கோரனின் முகத்தில் சிறிது கூட மலர்ச்சி உண்டாகவில்லை. சிறிது வெறுப்பும் மனஉறுதியும் கலந்த குரலில் அவன் பதில் சொன்னான்: "இதைச் சொல்றதுக்குத்தான் அய்யா, நீங்க என்னை இங்கே அழைச்சிருந்தீங்கன்னா, அதுக்காக நான் ரொம்பவும் வருத்தப்படுறேன். என் தங்க மகனை விற்று, அதுனால கிடைக்குற பணத்தை வச்சு நாங்க சந்தோஷமா வாழ வேண்டாம். அந்த சந்தோஷம் எந்தக் காலத்திலயும் என் மகனைக் கொஞ்சுகிற சந்தோஷத்தைத் தராது. கடவுள் அருளால இன்னைக்கு நாங்க மூணு பேரும் சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். சாகுறது வரை இப்படியே வாழ்ந்தால் போதும் எங்களுக்கு."

வெள்ளைக்காரர் அதைக் கேட்டு செயலற்று உறைந்துவிட்டார்.

வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிராமத்து மனிதன் தேடிவரும் ஒரு மிகப்பெரிய தொகையை வேண்டாம் என்று தூக்கி எறிவதா? திரு.பர்ட்டன் இக்கோரனின் முகத்தை உற்றுப் பார்த்தார். அங்கு எந்தவித உணர்ச்சி வேறுபாடும் இல்லை.

சிறிது நேரம் தீவிர சிந்தனையில் எதுவும் பேசாமல் இருந்த திரு.பர்ட்டன் அமைதியான, அதே நேரத்தில் மிடுக்கான குரலில் சொன்னார்: "இப்படியொரு பதிலை நீ சொல்வேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல இக்கோரா! உன் மகனை விலைக்கு விற்கணும்னு மட்டும்தான் நான் சொல்றேன்னு நீ தப்பா நினைச்சிட்டே"- வெள்ளைக்காரர் வேறொரு கோணத்தில் பேச்சைத் தொடர்ந்தார்: "கோழிக்கோட்டுல இருக்குற அநதக் கோடீஸ்வரருக்குப் பிள்ளைகள் இல்ல. உன் மகனைப் பார்த்ததும் அவருக்கு ஒரு பிரியம் தோணிருச்சு. உங்க இந்து மதத்துல முன்பிறவி தொடர்பு போல உள்ள ஒரு பிரியம்..."

வெள்ளைக்காரர் தான் பயன்படுத்திய உவமையின் பெருமையை தனக்குத்தானே பாராட்டிக் கொண்டு புன்னகைத்தார். பிறகு சொன்னார்: "உன் மகனை அவர்கிட்ட அனுப்பினால் அவர் அவனை ஒரு இளவரசனைப் போல வளர்ப்பார். உயர்ந்த அளவுல படிக்க வைப்பார். ஒரு வேளை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சு கூட அவர் படிக்க வைக்கலாம். உன் மகன் இந்தச் சின்ன கிராமத்துல வளர்ந்தால், யாருமே ஒரு பொருட்டா நினைக்காத ஒரு விவசாயியாகவோ, இல்லாட்டி ஒரு கூலிக்காரனாகவோதான் வரமுடியும். அதுனால உன் மகனை அங்கே அனுப்பி வைக்கணும்ன்றதுதான் நான் சொல்ல விரும்புறது. நீங்க சந்தோஷமா வாழுறதுக்கு கொஞ்சம் பணமும் கிடைக்கும். ஆயிரம் ரெண்டாயிரம் இல்ல. பத்தாயிரம் ரூபாய் வேணும்னா கூட, நான் வாங்கித் தர்றேன். என்ன, உன் மகனைப் பெரிய மனிதனும் பணக்காரனுமான ஒரு அதிகாரியாகவோ முதலாளியாகவோ பார்க்க இக்கோரன் மேஸ்திரி, உனக்கு விருப்பமில்லையா?"

இக்கோரன் எதுவும் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சொல்லு, மேஸ்திரி... எதையும் சிந்திச்சுப் பார்க்காம ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாது. நல்லா சிந்திச்சுப் பாரு. உன்னைத் தேடி மிகப்பெரிய அதிர்ஷ்டம் வந்திருக்கு...."

இக்கோரன் வருத்தம் கலந்த குரலில் சொன்னான்: "எஜமான். நானும் என் பெண்டாட்டியும் குழந்தையும் சந்தோஷமா முழு மன அமைதியோட வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இதைவிட பெரிய அதிர்ஷ்டம் எங்களுக்கு எதுக்கு? அதுனால இதுக்கு மேல அந்த விஷயத்தைப் பற்றி நீங்க என்கிட்ட பேச வேண்டாம், முதலாளி..."

வெள்ளைக்காரர் கோபம் கலந்த குரலில் சொன்னார்: "நீ ஒரு முட்டாள். அடி மடையன். சிந்திக்கத் தெரியாதவன். இல்லாட்டி இப்படிப் பேசுவியா?"

அதற்கு இக்கோரன் சொன்னான்: "எஜமான், நான் முட்டாள்தனமா பேசல. நல்லா, யோசிச்சுப் பார்த்துத்தான் பேசுறேன். சும்மா ஏதோ கிடைக்குதேன்னு வாங்கிச் சாப்பிட்டு நடக்குற ஆள் இல்ல நான். கிராமப்புறத்துல கஷ்டப்பட்டு வேலை செய்து கிடைக்கிறதுல சந்தோஷமா வாழ்றவங்க நாங்க. நினைவு தெரிஞ்ச காலம் முதல் உடல் உழைப்பு மூலம் கிடைக்கிறதை வச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவன் நான். அந்த சந்தோஷம் வேற வகையில கிடைக்கும்னு நான் நினைக்கல. இப்போ நாங்க திருப்தியா, சந்தோஷமா வாழறோம். இனிமேலும் இப்படியே வாழ்ந்தா போதும். லட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ பணம் கிடைச்சு... நாங்க அதை வச்சு என்ன செய்யப் போறோம்?"

வெள்ளைக்காரருக்கு இப்போது தர்ம சங்கடமான நிலையாகிவிட்டது. வாயை மூடக்கூடிய அளவிற்கு இக்கோரன் பேசிய கிராமத்து தத்துவஅறிவைக் கேட்டு, புதிதாக வேறு எதுவும் பேசத் தோன்றாமல் சிறிது வெறுப்புடனும், ஏமாற்றத்துடனும் அவர் அவனைப் பார்த்துக் கேட்டார்: "அப்படின்னா நீ இதைப் பெருசா நினைக்கல... அப்படித்தானே?"

வெள்ளைக்காரனின் குரலில் உண்டான மாற்றத்தைப் பார்த்து இக்கோரனின் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவன் சொன்னான்: "எஜமான், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். ஒருவேளை மாளுவிற்கு இந்த விஷயத்துல சம்மதம் இருந்தா, பையனைக் கொண்டு போகலாம்..."

அதைக் கேட்டு திரு.பர்ட்டனின் முகத்தில் பிரகாசம் உண்டானது. அவர் சொன்னார்: "அப்படின்னா பையன்மேல அவளுக்குத்தான் உரிமை அதிகம்னு உன் வார்த்தைகள்ல இருந்து தெரியுதே!"

இக்கோரன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. வெள்ளைக்காரர் அப்போதே மாளுவை அழைத்துக் கொண்டு வரும்படி ஆளை அனுப்பினார்.

வெள்ளைக்காரர் அவளிடம் எல்லா விஷயங்களையும் விளக்கிச் சொன்னார். கடைசியில் அவளைப் பார்த்துக் கேட்டார்:


 "நீங்க சந்தோஷமா வாழ்றதுக்கான சொத்து போக ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கமும் உங்களுக்குக் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணுறேன்-. உன் மகனைக் கொடுக்க உனக்கு விருப்பம்தானே?"

மாளு தைரியத்துடன் பதில் சொன்னாள்: "நாங்க கிராமப்புறத்துல இருக்குறவங்க. பத்து பிள்ளைகளை குழிக்கு வேணும்னா கொடுப்போமே தவிர, வேற யாரோ கேட்குறாங்கன்னு ஒரு பிள்ளையைக் கூட நாங்க தரமாட்டோம். எங்களுக்கு இருக்குறதே ஒரு மகன். அவனை வித்துட்டு, கிடைக்கிற சந்தோஷம் எங்களுக்கு வேண்டாம். இப்போ எங்க சந்தோஷத்துக்கு எந்தக் குறைச்சலும் இல்ல. ரெண்டு வயல்கள் சொந்தத்துல இருக்கு. ரெண்டு மாடுகள் இருக்கு. போதாததற்கு பையனோட அப்பாவுக்கு வேலையும் இருக்கு. இதுக்கு மேல நாங்க ஆசைப்படல." வெள்ளைக்காரருக்கு அவள் சொன்னதைக் கேட்டு வெறுப்பே உண்டாகிவிட்டது.

இதற்கு மேல் அவர்களிடம் பேசி பிரயோஜனமில்லை என்பதை அந்த ஐரோப்பாக்காரர் புரிந்து கொண்டார். அவர் மறுநாளே ரவீந்திரனுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார்:

அன்புள்ள மிஸ்டர்.ரவீந்திரன்,

நான் என்னால் முடிந்தவரை சொல்லிப் பார்த்தேன். அவர்கள் சம்மதிக்கவில்லை. பணம் எங்களுக்குத் தேவையில்லை என்று கூறுபவர்களிடம் இதற்கு மேல் என்ன பேச முடியும்! அவர்களுக்கு வேறு என்ன ஆசையைக் காட்ட முடியும்? உலகத்தில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு மனசாஸ்திர விஷயம் இது. இதில் ஏதோ ஒரு பெரிய ரகசியமோ ஆழமான சிந்தனையோ இருக்கிறது என்று நான் பலமாக சந்தேகப்படுகிறேன். எது எப்படி இருந்தாலும், நான் இனிமேலும் முயற்சித்துப் பார்க்கிறேன். ஆனால், நாம் நினைப்பது மாதிரி நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த விஷயத்தில் மனப்பூர்வமாக நான் வருத்தப்படுகிறேன்.

உங்களின்,

எம்.டி.பர்ட்டன்

15

ரு வாரம் ஆவதற்கு முன்பு, திரு.பர்ட்டனைத் தேடி ரவீந்திரனின் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஆள் வந்தான்.

திரு.பர்ட்டன் கடிதத்தைப் படித்தார். அப்போதே இக்கோரனை அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார். இக்கோரன் வந்ததும் திரு.பர்ட்டன் சொன்னார்: "மிஸ்டர் ரவீந்திரன் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். உன் மகனைப் பார்க்கணும்னு பிரியப்படுறார். இந்தப் பரிதாபமான நிலையிலயாவது நீ கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா?"

இக்கோரன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. வெள்ளைக்காரன் தொடர்ந்தார்: "குழந்தையை அப்பா, அம்மாவோட அங்கே அழைச்சிட்டு வரணும்னு கடிதத்துல எழுதியிருக்கார். அதுனால எந்தக் காரணத்தைக் கொண்டும் என்கிட்ட மறுத்துப் பேசக்கூடாது. நாளைக்குக் காலையில நீங்க மூணு பேரோட சேர்ந்து நானும், நகரத்துக்கு வர்றேன். தயாராயிக்கங்க..."

மறுநாள் இக்கோரனும் மாளுவும் ராகவனும் திரு.பர்ட்ட-னும் சேர்ந்து கோழிக்கோட்டுக்குப் புறப்பட்டார்கள்.

மாளு வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு நகரத்தைப் பார்க்கிறாள். எனினும், நகரத்தின் அற்புதமான காட்சிகளைப் பார்த்து சந்தோஷப்பட அவளால் முடியவில்லை. கொலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குக் கொண்டு போகப்பட்ட ஒரு குற்றவாளியின் மனநிலையில் அவள் இருந்தாள்.

இளம்பெண்ணாக இருந்த போது நடந்த சம்பவங்களையும் ரகசியங்களையும் இடிந்து விழுந்த மன ஆசைகளையும் அவளின் மனம் நினைத்துப் பார்த்தது. இக்கோரனின் முகத்திலும் ஒரு பயம் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி அவனால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை. கிராமத்திலிருந்து கிளம்பி வந்ததே தப்பு என்று அவன் நினைக்க ஆரம்பித்தான். ராகவன் மட்டும் சந்தோஷமாக புதிய புதிய காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

கார் 'ராஜேந்திர விலாஸ'த்தின் வாசலில் நின்றது. வெள்ளைக்காரர் கீழே இறங்கினார். அவர் சைகை காட்டியதைத் தொடர்ந்து ராகவனும் கீழே இறங்கினான். இக்கோரனால் ஒரு பக்கவாத நோயாளியைப் போல தனியே இறங்க முடியவில்லை. மாளுவிற்கு அந்த இடமே இருட்டாகத் தெரிந்தது. அவள் உடம்பில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. தாகத்தால் அவளுடைய தொண்டை வறண்டு போயிருந்தது. எனினும், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அவள் வாசலில் இறங்கி நின்றாள்.

ராஜேந்திர விலாஸத்தின் பல மூலைகளிலிருந்தும் ஏராளமான கண்கள் அந்த நான்கு பேரையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. குறிப்பாக மாளு அங்கு சந்தேகத்திற்கான மையப் பாத்திரமாக இருந்தாள். அவள் தலைகுனிந்து நின்றிருந்தாள்.

அப்போது மாடியிலிருந்து ஒரு ஆள் கீழே இறங்கி வந்து அவர்கள் நான்கு பேரையும் மேலே அழைத்துக் கொண்டு போனான்.

படிகளில் ஏறி, விசாலமான வராந்தாவையும் ஒரு ஹாலையும் தாண்டி அவர்கள் ஒரு பெரிய அறைக்குள் நுழைந்தார்கள்.

விலை மதிப்புள்ள பல நவீன பொருட்கள் இருந்த அந்த அறையில் போடப்பட்டிருந்த ஒரு உயரமான கட்டிலில் ரவீந்திரன் படுத்திருந்தான். அறையில் வேறு ஐந்தாறு பேர் இருந்தார்கள். இரண்டு டாக்டர்கள், இரு விருந்தாளிகள், பத்மினியும், அவளுடைய தந்தையும் ஆகியோரே அவர்கள். மிகவும் மெலிந்து போய் எந்தவிதமான அசைவும் இல்லாமல் கண்களை மூடி ரவீந்திரன் படுத்திருந்தான்.

"மிஸ்டர்.ரவீந்திரன், நான் இதோ குழந்தையை அழைச்சிட்டு வந்திருக்கேன்"- திரு.பர்ட்டன் அந்த அறையில் இருந்த மவுனத்தைக் கலைத்தார். ரவி கண்களைத் திறந்தான். சிறிது நேரம் ரவி அங்கிருந்த எல்லாருடைய முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். கடைசியில் ராகவனைப் பார்த்ததும் அவனுடைய முகத்திலிருந்த சதைகள் சுருங்கி விரிந்தன. அவனைப் பிடிப்பதற்காக அவன் வேகமாக எழுந்த போது வெள்ளைக்காரர் ராகவனை படுக்கைக்கு அருகில் கொண்டு போய் நிறுத்தினார்.

ரவீந்திரன¢ ராகவனை இறுகக் கட்டிப்பிடித்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, சிறிது நேரம் அப்படியே அசையாமல் இருந்தான். அவனுடைய கன்னங்கள் வழியாகக் கண்ணீர் அருவியைப் போல வழிந்து கொண்டிருந்தது. அவன் என்னவோ பேச முயன்றான். ஆனால், வார்த்தைகள் வெளியே வரவில்லை. திடீரென்று ஏதோ புதையல் கிடைத்ததைப் போல, அவன் தன் சந்தோஷத்தை சில சைகைகள் மூலம் வெளிப்படுத்தினான்.

மாளு வேறுபக்கம் திரும்பிக் கொண்டு நின்றிருந்ததால், அங்கு நடந்து கொண்டிருந்த உணர்ச்சி வசப்பட்ட செயல்கள் எதையும் அவள் பார்க்கவில்லை. இக்கோரனோ ரவீந்திரனின் முகத்தில் தெரிந்த ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

பதினைந்து நிமிடங்கள் கடந்ததும் ரவீந்திரனுக்குப் பேசுவதற்கான பலம் திரும்பக் கிடைத்தது. அவன் திரு.பர்ட்டனிடம் கூறினான்: "மிஸ்டர்.பர்ட்டன், நான் உண்மையிலேயே பெரிய பாவி. ஆனா, இந்தப் பதினைந்து நிமிடங்கள்ல நான் அதிர்ஷ்டத்தின் சிகரத்துல இருந்தேன்." பிறகு ராகவனின் தாடையைப் பிடித்து உயர்த்தி, அவனுடைய முகத்தை உணர்ச்சிக் கொந்தளிப்பால் பூரித்துக் கொண்டிருந்த இதயத்துடன் பார்த்தவாறு அவன் சொன்னான்:


 "என் தங்கமே, உன்னை என் மகன்னு சொல்றதுக்கு எனக்கு அனுமதி இல்லைன்னா, உரிமை இல்லைன்னா, அதிர்ஷ்டம் இல்லைன்னா நான் இனிமேல் உலகத்துல வாழ்றதுல அர்த்தமே இல்ல. எனக்கு மூளை குழம்பிப் போச்சுன்னு இவங்க சொல்றாங்க பாரு... என்னோட இந்த உடல்! இந்த உடல்! என்னோடது இல்லைன்னும் இதுமேல எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னும் எல்லாரும் என்னைப் பார்த்து சொல்றாங்கன்னா எனக்கு எப்படிப் பைத்தியம் பிடிக்காம இருக்கும்? கடந்த சில நாட்களாகவே நான் அனுபவிச்ச வேதனையை நரகத்துல இருக்கிறவங்களுக்குக் கூட யாரும் தரமாட்டாங்க. என்னோட அந்தஸ்தோ, பணமோ எதுவுமே எனக்கு உதவல. அதுனால மிஸ்டர்.பர்ட்டன், இது என்னோட கடைசி வேண்டுகோளாக இருக்கலாம். இல்லாட்டி நான் மகனைப் பார்த்த சந்தோஷத்தை அனுபவிச்சு வாழணும்ன்றதுக்காக இனியும் கொஞ்ச நாட்கள் நான் வாழலாம். இது எல்லாமே இப்போ இங்கே நடக்கபோற விசாரணையையும் தீர்ப்பையும் வைத்துத்தான். மிஸ்டர்.பர்ட்டன், நீங்க கொஞ்சம் முன்னாடி வாங்க. சரி... இது ஒரு நோயாளியோட அறைன்றதை மறந்திடுங்க. நாம இதை ஒரு நீதிமன்றமா மாற்றுவோம். மிஸ்டர் பர்ட்டன், நீங்கதான் நீதிபதி. நான் தான் குற்றவாளி. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு குற்றம்- ஒரு கொலைன்னே வச்சுக்கலாம் செய்தேன். ஒரு பரிசுத்தமான கிராமத்துக் கன்னிப் பெண்ணோட கன்னித் தன்மையைக் கொலை செய்தேன். சுகத்தைத் தேடும் சுய நலத்தாலும், இளமையின் இரத்தத்தாலும் அந்தக் கொலையை நான் செய்தேன். அந்தச் சம்பவத்தை நான் மறக்கவும் செய்தேன். ஆனால் -கடந்த பன்னிரண்டு வருடங்களாக நான் அதற்கான தண்டனையை அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன்ற உண்மையே சமீபத்துலதான் எனக்குத் தெரிய வந்துச்சு. இப்போ அந்தத் தண்டனைக்கு கடுமை கூடியிருக்கு. ஒவ்வொரு நிமிடமும் நான் தூக்குமரத்துல தொங்குறது போல உணர்றேன். இதுல இருந்து தப்பிக்கணும்னா எனக்கு ஒரே ஒரு வழிதான் தோணுது. மன்னிப்புக் கேட்பது! அன்று நான் ஏமாற்றிய மனசாட்சியை மன்னிப்பு சாட்சியாக்கி நீங்க விசாரணை செய்யலாம்.. அதுனால நான் அன்று குற்றம் செய்த ஆளிடம் ஒரு அடிமையைப் போல இப்போ மன்னிப்பு கேட்கிறேன்..."

ரவீந்திரன் மாளுவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் முகத்தைத் தாழ்த்திக் கொண்டு நின்றாளே தவிர, எதுவும் பேசவில்லை. ரவீந்திரன் தழுதழுத்த குரலில் தொடர்ந்தான்: "அவங்க எனக்கு மன்னிப்பு தருவாங்கள்ல? என்னோட மானம், கவுரவம், பணம் எல்லாத்தையும் அவுங்க காலடியில வச்சு நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன்- நான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு தரணும்னும் அந்தக் குறறத்தின் விளைவை எனக்கே திருப்பித் தரணும்னும்..."

அங்கு ஒரே அமைதி நிலவியது.

"ஹா..."-ரவீந்திரன் அழுது கொண்டே சொன்னான்: "எனக்கு உள்ள தண்டனை மோசமான மரணத்துல போய் முடியணும்ன்றதுல அவங்க பிடிவாதமா இருக்காங்களா என்ன? கடைசியா- கடைசி கடைசியா நான் கேக்குறேன்- இந்தக் குழந்தை உங்களோடதுதான். நீங்களே வச்சுக்கங்கன்னு சொல்லி இந்த செல்லத்தை- என்னோட இந்தப் புதிய உயிரை- அவங்க எனக்குத் திருப்பித் தருவாங்கள்ல?"

மீண்டும் ஒரே அமைதி.

திடீரென்று தேம்பித் தேம்பி அழும் சத்தம்... எல்லாரின் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பியது. இக்கோரன்! அவன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், துண்டால் முகத்தை மூடிக் கொண்டு அழுதான். அவன் மெதுவாக ரவியின் அருகில் சென்று நின்று சொன்னான்: "இவனை வச்சுக்கங்க. இவன் உங்களோட குழந்தைதான். அதற்கு சாட்சி நான்தான்..."

அந்த வார்த்தைகள் முழுவதும் அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவதற்குள் மாளு தொண்டை இடற, இக்கோரனிடம் கூறினாள்: "நீங்க எனக்குத் துரோகம் பண்ணிட்டீங்க... எனக்குத் துரோகம் பண்ணிட்டீங்க..."

தொடர்ந்து அவள் நிற்க முடியாமல் அவள் பாதி சுய உணர்வுடன் வெளியே வந்தாள்.

ரவீந்திரன் வார்த்தைகளால் விவரிக்க முடியாத நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் இக்கோரனின் முகத்தைப் பார்த்தான். "என் உயிர் நண்பரே, பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு ஏமாற்றப்பட்ட இளம்பெண்ணை நீங்க காப்பாத்துனீங்க. இன்னைக்கு நீங்க என் உயிரையும் காப்பாத்தியிருக்கீங்க. உங்களைப் போல உள்ள ஆண்கள் உலகத்தில் இன்னும் கொஞ்சம் பேர் பிறந்திருந்தாங்கன்னா...."- அவன் சொன்னான்.

திரு.பர்ட்டனும் ரவீந்திரனும் தங்களுக்குள் ஏதோ பேசினார்கள்.

அவர்கள் புறப்பட்டார்கள். அவர்களுடன் ராகவன் இல்லை. மாளு ஒரு மர பொம்மையைப் போல காரில் உட்கார்ந்திருந்தாள். இக்கோரனும் காரின் முன்னிருக்கை மீது சேர்த்து வைத்த கைகளின் மீது தலையைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

திரு.பர்ட்டன் காரை ஓட்டினார். சிறிது தூரம் சென்றபிறகு அவர் காரை நிறுத்தினார். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இக்கோரனுக்கு நேராக கையை நீட்டிய அவர் சொன்னார்: "நான் உங்களைப் பாராட்டுறேன். உங்க பேர்லதான் மிஸ்டர் ரவீந்திரன் என்னோட ரப்பர் தோட்டத்தை விலைக்கு வாங்கப் போறார். இனிமேல் என்னோட பெரிய ரப்பர் தோட்டத்தின் உரிமையாளர் நீங்கதான்."

மற்ற இருவரும் அந்த வார்த்தைகளைக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

16

நேரம் இருட்ட ஆரம்பித்தது. ஆனா, மாளுவிற்கு அது எதுவும் தெரியவில்லை. அவள் தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தாள். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே மாதிரியான ஒரு முன்னிரவு நேரத்தில் அவளுடைய சிந்தனைகள் சிறகடித்துப் பறந்திருக்கின்றன. ஆனால், அப்போது அவள் உலகமென்றால் என்னவென்று தெரியாத ஒரு குழந்தையாக இருந்தாள். அதற்குப் பிற

கு பன்னிரண்டு வருட உலக அனுபவம். ஒரு கிராமத்து பெண் என்ற அளவில் இருந்தாலும், அவளை ஒரு பக்குவப்பட்ட பெண்ணாக மாற்றியிருந்தது. இந்தப் பன்னிரண்டு வருடங்களில் அவள் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அவள் முதன் முதலாகக் காதலித்த அந்த ஆணை மறக்கவும் வெறுக்கவும் அவள் கற்றுக் கொண்டாள். ஆனால், அன்று காலையில் ராஜேந்திர விலாஸத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைத்துப் பார்த்த போது அவளுக்கு ஆச்சரியமும் வருத்தமும்தான் உண்டானது. ரவீந்திரனின் வார்த்தைகள் பலமுறை அவளுடைய உறுதியை அடியோடு கலைக்க முயன்றன. அந்த இதயத்தைப் பிளந்து வெளியே வந்த அழுகையைக் கேட்டு, மனம் வழுக்கி விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவள் மிகவும் போராட வேண்டி வந்தது. அவனுடைய முகத்தை அவள் பார்க்கவே இல்லை. பார்த்தால் தன்னையே அறியாமல் பழைய கண்ணியில் போய் விழுந்து விடுவோம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ஒரே ஒரு நிமிடம் அதிகமாக அவள் அந்த இடத்தில் அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் அவள் உண்மையாகவே தன் நிலையிலிருந்து நழுவியிருப்பாள்.


அதற்கு முன்பு இக்கோரன் அவளுக்கு வஞ்சகம் செய்துவிட்டான். சொல்லப்போனால் அவன் அவளைக் காப்பாற்றவல்லவா செய்திருக்கிறான்? எது எப்படியோ பன்னிரண்டு வருடங்களும் 'அந்த பகவதி கோவிலும் அவர்கள் இரண்டு பேரும்' யாருக்கும் தெரியாமல் அடக்கி வைத்த ரகசியம் அன்று வெளியே வந்துவிட்டது. பன்னிரண்டு வருடங்கள் அவர்கள் உலகத்தில் உள்ளவர்களை ஏமாற்றி வாழ்ந்தார்கள். இப்போது அந்தப் பழைய ரகசியம் வெளியே வந்துவிட்டது. மலையளவு தங்கத்தைக் கொண்டு மூடினாலும் அதன் வாசனையை மூடி வைக்க முடியாது. போதாததற்குத் தன்னுடைய செல்ல மகனும் போய்விட்டான். எங்கே? அவனுடைய தந்தை இருக்குமிடத்திற்கு? அவனுடைய தந்தை! அவளுக்கு ஒரு உள்ளக் கொதிப்பே உண்டானது. பன்னிரண்டு வருடங்கள் வெறுத்தும் மறந்தும் இருந்தது ஒரே ஒரு நொடியில் மறைந்து போய்விட்டது. அந்தக் காதல்! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த அந்தக் காதல்! பன்னிரண்டு வருடங்கள் மண்ணுக்குக் கீழே போட்டு மூடிய முந்திரிச்சாறின் இனிய சுவையுடன் அது அவளை மீண்டும் தழுவ வருகிறதோ? தான் குழி தோண்டிப் புதைத்த நினைவுகள் அனைத்தும் முளைத்து தளிரிட்டு வளர்ந்து அவளை மீண்டும் எதற்காக வளைக்க வேண்டும்? அவளுக்குப் பணம் கிடைக்கப் போகிறதாம். அதை வைத்து அவள் என்ன செய்யப் போகிறாள்? இக்கோரன் ராகவனை அவனுக்குக் கொடுத்தவுடன், ராகவனுடன் சேர்த்து தன்னையும் கொடுத்துவிட்டது போலவே அவளுக்குத் தோன்றியது. அவன் அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொஞ்சினான். அவனுக்கு அவள் எப்போதோ மன்னிப்புக் கொடுத்துவிட்டாள். ஆனால், அவளிடம் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிப்படுத்திய அந்தக் காதலை மீண்டும் ஒரு கருகுமணி அளவாவது வெளிப்படுத்த அவள் விடுவாளா? நடக்காத விஷயம். அவள் அவனுக்கு அருகில் மனைவி கோலத்தில் நின்றிருந்த பத்மினியை நினைத்துப் பார்த்தாள்.

'ச்சே... நான் ஒரு வஞ்சகி. நீர்ல சிக்கின ஒரு படகைப் போல என் மனசு எங்கெங்கோ போய்க்கிட்டு இருக்கு. ஆனா, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்...'

முன்னறையில் ஒரு காலடிச் சத்தம் கேட்டு அவள் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். இக்கோரன் அறைக்குள் வந்து கொண்டிருந்தான்.

"என்ன இன்னும் விளக்கு பத்த வைக்கல?"

அவள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. இக்கோரனுடன் வாழ்ந்த இல்லற வாழ்க்கையைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். அவன் அவளுடைய உயிரையும், மானத்தையும் பன்னிரண்டு வருட வாழ்க்கையையும் காப்பாற்றியிருக்கிறான். அந்த இல்லற வாழ்க்கையில் அவளுக்குக் குறைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு எதுவும் நடந்ததில்லை. ஆனால், அவனுடன் அவள் வாழ்ந்த அந்த இரண்டு மாத வாழ்க்கை!அதில் பத்தில் ஒரு பங்கு அளவிற்கே கூடச் சந்தோஷம்- பெண்கள் மனதிற்குள் விரும்பக்கூடிய கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்- இந்தப் பன்னிரண்டு வருடங்களில் அவளுக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இக்கோரனைப் பார்க்கும் போதும் நினைக்கும் போதும் ஒரு பக்தியும் மரியாதையும் அவளுடைய இதயத்தில் தோன்றும். தீர்க்கவே முடியாத ஒரு நன்றிக்கடன் அவன் மீது அவளுக்கு இருக்கிறது. ஆனால், ரவீந்திரனைப் பற்றி நினைக்கும் போது அவள் முழுமையாக மாறிப் போகிறாள். தான் இக்கோரனுக்குத் துரோகம் செய்கிறோம் என்ற எண்ணம் அவளை வேதனைப்படுத்தியது.

வெளியே வானத்தில் கருமேகங்கள் நிறைந்தன. மழைக்காலத்தின் முதல் மழை. அதோடு சேர்ந்து இடி இடித்தது. இக்கோரன் அவளுக்கு அருகில் வந்தான். நீண்ட நேரம் நின்ற ஒரு மின்னல் வெட்டின் வெளிச்சத்தில் அவளுடைய முகத்தை நன்கு பார்க்க முடிந்தது. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இக்கோரன் மாளுவின் தோளில் கையை வைத்துக் கொண்டு கேட்டான்: "மாளு, ஏன் அழறே?"

சிறிது நேரம் அவள் அமைதியாக இருந்தாள். பிறகு தழுதழுக்கும் குரலில் அவள் சொன்னாள்: "பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னாடி நீங்க என் உயிரைக் காப்பாத்துனீங்க. இப்போ நீங்க எனக்குத் துரோகமும் பண்ணிட்டிங்க. இனி ஆளுங்களோட முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்? இவ்வளவு காலமா ஊர் மக்களை ஏமாற்றின குற்றத்தையும் அவமானத்தையும் நாளைக்கு நாம சந்திச்சு ஆகணும். என் செல்ல மகனை நான் இழந்துட்டேன். நீங்க பணத்துக்காக வித்தாச்சு. அதோட சேர்த்து என்னையும் வித்திருக்கலாமே!"

சுத்தமான இதயத்தைக் கொண்ட இக்கோரன்அவள் மீது கொண்ட இரக்கத்தால் குலுங்கிக் குலுங்கி அழுதான். "மாளு, நான் இப்படியெல்லாம் நினைக்கல. அந்த ஆளோட மோசமான நிலைமையைப் பார்த்து என் இதயம் இளகிடுச்சு. நான் அப்படிச் சொல்லிட்டேன். அதுக்குப் பிறகுதான் நான் உன்னைப் பற்றி நினைச்சேன். கடவுளே, பணத்துக்காகவா நான் இதைச் செய்தேன்? மாளு, நீ அதை மட்டும் சொல்லாதே."

இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

மழை பெரிதாகப் பெய்து கொண்டிருந்தது. கடுமையான இடியும் காற்றும் சேர்ந்து சூழ்நிலையை பயங்கரமாக்கின.

"ஆமா.."- அவள் தொடர்ந்தாள்: "ராகவனை வித்தப்போ என்னையும் வித்தது மாதிரிதான். ஆனா, இனிமேல் நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நீங்க பணக்காரர் ஆயிட்டீங்க. தோட்டத்துக்குச் சொந்தக்காரர் ஆயிட்டீங்க. சந்தோஷமா வாழுங்க. எனக்கு முன்னால ஒரே ஒரு வழிதான் இருக்கு..."

இக்கோரன் ஆர்வத்துடன் அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

அவள் இரைச்சல் எழுப்பியவாறு ஓடிக் கொண்டிருந்த இருவழிஞ்ஞி ஆற்றைச் சுட்டிக் காட்டிக் கொண்டு சொன்னாள்: "அந்த ஆறு..."

இக்கோரன் அவளுடைய கையைப் பிடித்து அழுத்தியவாறு கேட்டான்: "நீ முடிவு பண்ணிட்டியா?"

"முடிவு பண்ணிட்டேன்."

"சரி.. அப்படின்னா நானும் வர்றேன். நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே போவோம்."

17

திரு.பர்ட்டனும் இக்கோரனும் மாளுவும் போன பிறகு ரவீந்திரன் பத்மினியை அருகில் அழைத்து ராகவனைத் தொட்டுக் கொண்டு சொன்னான்: "பத்மினி, இவனை எனக்கு முதல்ல தந்ததே நீதான். இனிமேல் இவன் நம்மளோட பிள்ளை..."

பத்மினியின் முகத்தில் சந்தோஷம் உண்டாகவில்லை. எனினும் அவளுக்கு ராகவன் மீது உள் மனதில் ஒரு பாசம் பிறந்திருந்தது. அன்று ஆற்றின் கரையில் முதல் தடவையாக அவனைப் பார்த்த போது அவளிடம் உண்டான அன்பையும் கருணையையும் சம்பவங்களின் சற்றும் எதிர்பாராத இந்தப் பரிணாம வேளையிலும் அவளால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.    

ராகவனை அணைத்துக் கொண்டு அவன் சொன்னான்: "பாரு இவங்க உன் அம்மா..."

ராகவன் எதுவும் புரியாமல் ரவீந்திரனின் முகத்தையே பார்த்தான்.

"நான் தான் உன்னோட அப்பா. என்னை அப்பான்னு கூப்பிடுறதுல உனக்குச் சம்மதம்தானே?"- ரவீந்திரன் அவனுடைய நெற்றியில் முத்தமிட்டவாறு கேட்டான்.


சிறுவன் அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. அன்று ஆற்றின் கரையில் தனக்குப் பணம் தந்த நிமிடத்திலிருந்து ரவீந்திரன் மீது அவனுக்கும் ஒரு தனிப்பட்ட மரியாதையும் அன்பும் பிறந்து விட்டிருந்தன. அதனால் அவனுக்குப் பதைபதைப்பு உண்டாகவில்லை. ஆனால், தன்னுடைய தந்தையும் தாயும் அங்கே இல்லாமலிருந்தது அவனைக் குழப்பமடையச் செய்தது.

"என் அப்பாவும் அம்மாவும் எங்கே போனாங்க?"- ராகவன் நான்கு பக்கங்களிலும் பார்த்தவாறு கேட்டான்.

"இதோ இங்கே இருக்கோமே நாங்க ரெண்டு பேரும்! நான் உன் அப்பா. இவங்க உன் அம்மா."

"இல்ல இல்ல... என் அப்பாவையும் அம்மாவையும் நான் பார்க்கணும்."

"உனக்கு என்ன வேணும்? எல்லாம் தர்றேன். பிறகு எதுக்கு அவங்களைப் பார்க்கணும்?"-ரவீந்திரன் தன்-னுடைய பாக்கெட்டிற்குள் வைத்திருந்த வைரம் பதிந்த ஒரு சிகரெட் பெட்டியை எடுத்து ராகவனின் கையில் கொடுத்தான்.

ராகவனின் முகம் மலர்ந்தது. "இதை எனக்குத் தருவீங்களா?"- அவன் கேட்டான்.

ரவீந்திரன் சிரித்துக் கொண்டே அவனைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் சொன்னான்: "இதையா? இது என்ன... எது வேணும்னாலும் எடுத்துக்கோ. இதோ... இதுவும் உனக்குத்தான். (ரவீந்திரன் தன்னுடைய வைர மோதிரத்தைக் கழற்றி அவனிடம் தந்தான்) இதுவும்... இதுவும்.. இதுவும்...(ரவீந்திரன் தன்னுடைய தங்கத்தால் ஆன கைக்கடிகாரம், வைரத்தால் ஆன பொத்தான்கள், ஃபவுண்டன் பேனா ஆகியவற்றையும் அவனிடம் தந்தான்).

ராகவன் சந்தோஷத்தால் சிரித்தான். "எனக்கு விளையாட ஒரு பந்து வாங்கித் தருவீங்கா£?"- அவன் கேட்டான்.

ரவீந்திரன் சற்று மிடுக்கான குரலில் சொன்னான்: "எனக்கு ஒரு பந்து வாங்கித்தாங்க அப்பான்னு சொல்லு. அப்படின்னா, நான் ஒரு தங்கத்தால் ஆன பந்தையே உனக்கு வாங்கித் தருவேன்."

ராகவன் சற்றுத் தயங்கினான். பிறகு, "அப்பா, எனக்கு ஒரு பந்து வாங்கித் தாங்க" என்று சர்வசாதாரணமான குரலில் சொன்னான்.

ரவீந்திரனின் இதயத்தில் ஒரு புத்துணர்ச்சி உண்டானது. 'அப்பா' என்ற இனிமையான அந்த அழைப்பு! தான் ஒரு அப்பா ஆன முழுமையான உணர்வு! ராகவனின் சதைப்பிடிப்பான கன்னத்தில் இடைவிடாமல் முத்தங்கள் பதித்த ரவீந்திரன் சொன்னான்: "என் செல்ல மகனுக்கு இப்பவே ஒரு தங்கத்தால் ஆன பந்துக்கு 'ஆர்டர்' பண்ணப் போறேன்."

"என் அம்மாவுக்கு ஒரு புடவையும்..."-ராகவன் தாழ்வான குரலில் கேட்டான்.

ரவீந்திரனுக்குச் சிரிப்பும் வருத்தமும் ஒரே நேரத்தில் உண்டானது. அவன் பத்மினியின் முகத்தைப் பார்த்தான்.

அவள் பல விஷயங்களையும் சிந்தித்தவாறு சற்று ஒளி குறைந்த முகத்துடன் அங்கு எதிலும் கவனம் செலுத்தாமல், எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரவீந்திரன் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான். இந்தப் புதிய சந்தோஷத்தின் சூழ்நிலையையும் ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் மன வருத்தங்களையும் பொறாமைப் போட்டிகளையும் அவன் நினைக்காமலில்லை. எனினும், எல்லாவற்றையும் தன்னுடைய புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலமும் பொறுமையாலும் சரி பண்ணிவிடலாம் என்று அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

18

டியும் மழையும் தொடர்ந்து கொண்டிருந்தன. சூறாவளி உயர்ந்து நிற்கும் மரங்களின் உச்சியை மோதி அவற்றைப் பேயாட்டம் ஆடச் செய்தது.

இக்கோரன் வீட்டின் வாசலிலிருந்த திண்ணையில் படுத்திருந்தான். எப்படிப்பட்ட வெயில் காலத்திலும் மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும் அவன் படுத்திருக்கும் இடம் அதுதான்.

இரவு வெகு நேரமாகியும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. தாங்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று நுழைந்த எதிர்பாராத சம்பவங்களை நினைத்தவாறு அவன் படுத்திருந்தான். தான் ராகவனை அவனுக்குக் கொடுத்ததன் மூலம் மாளுவிற்குத் துரோகம் பண்ணிவிட்டோமா என்ன? பையன் உண்மையாகப் பார்க்கப் போனால் அவனுக்குச் சொந்தமானவனாக இருக்க, தனக்கு அவன் மீது என்ன உரிமை இருக்கிறது? தான் அவளையும் அன்று வயிற்றுக்குள்ளிருந்த இந்தக் குழந்தையையும் காப்பாற்றியதால், குழந்தையை அந்த மனிதனுக்குக் கொடுப்பதில், அவளைவிட உரிமை உள்ளது தனக்குத்தானே? ஆனால், தான் எதற்கு அந்த ரகசியத்தை அந்த இடத்தில் வெளிப்படுத்த வேண்டும்? தன்னை தற்சமயம் துரோகம் செய்தது ஒரு கிராமத்து மனிதனின் மனசுத்தமும் இதயத்தில் கொண்ட இரக்கமும்தான் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

திடீரென்று அவன் இடி, மின்னலின் வெளிச்சத்தில் ஒரு உருவம் படியைக் கடந்து மறைவதைப் பார்த்தான். அவனுக்கு அந்த உருவம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவனுடைய மனதிலும் ஒரு வெளிச்சம் தோன்றியது. கண் இமைக்கும் நேரத்தில் அவன் கதவுக்கு அருகில் போனான். அது உள்ளே பூட்டப்பட்டிருந்தது. அவன் வீட்டின் வடக்குப் பக்கம் இருந்த கதவைத் தேடி ஓடினான். அது வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அவன் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே புகுந்தான். மாளு படுத்திருந்த அறையில் சென்று பார்த்தான். அங்கு அவள் இல்லை. அவள் படுத்திருந்த பாய் ஒரு மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவன் வெளியே ஓடி, படியைக் கடந்து, கீழே இறங்கி, முன்பக்கம் ஓடிக் கொண்டிருந்த சேறு நிறைந்த பாதை வழியே ஆற்றின் கரையை நோக்கி ஓடினான்.

சிறிது நேரத்தில் அவன் அந்தப் பழைய பகவதி கோவிலுக்கு அருகில் வந்தான். அப்போது கண்களையே குருடாக்கும் அளவிற்கு மின்னல் அடித்தது. அதன் வெளிச்சத்தில் ஒரு வெள்ளை உருவம், இரைச்சல் உண்டாக்கி ஓடிக் கொண்டிருந்த ஆற்றுக்குள் குதிப்பதை அவன் பார்த்தான். ஒரு வினாடி! என்ன செய்வதென்று தெரியாமல் அவன் செயலற்று நின்று விட்டான். அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை. அந்த பகவதி கோவில் திண்ணை மீது ஏறி நின்று அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

19

திரு.பர்ட்டன் பதைபதைப்புடன் எழுதினார்.

                             முக்கம்,

                            ஏப்ரல் 17

அன்புள்ள மிஸ்டர். ரவீந்திரன்,

 கடைசி கடைசியாக வருத்தப்படக் கூடியதும், யாரும் நினைத்துப் பார்க்க முடியாததுமான ஒரு சம்பவத்தை உங்களுக்குத் தெரிவிக்கக் கூடிய துரதிர்ஷ்டம் எனக்கு உண்டானதற்காக மனப்பூர்வமாக நான் வருத்தப்படுகிறேன். இக்கோரனும் அவனுடைய மனைவி மாளுவும் இறந்துவிட்டார்கள். உங்களால் அதை நம்பமுடியாமல் இருக்கலாம். ஆனால், என்ன செய்வது! அது நடந்து முடிந்து விட்டது. அவர்களுடைய உடல்கள் இங்கிருந்து இரண்டு மைல்கள் தாண்டி கீழே ஒரு இடத்தில் ஒதுங்கிக் கிடந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா, இல்லாவிட்டால் ஒரு ஆளைக் காப்பாற்ற இன்னொரு ஆள் முயன்றபோது அந்த ஆளும் விபத்தில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உண்டாகிவிட்டதா என்பது தெரியவில்லை.


ஆனால், அவள் தற்கொலை செய்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் தன்னுடைய வாசல் கதவை வந்து தட்டும் போது, அவள் வேறொரு வாயில் போய்விட்டாள். இந்தத் துயர முடிவிற்கு அவள் வந்ததற்குக் காரணம் என்ன என்பதை எத்தனை முறை யோசித்தாலும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்குப் புரியாத எத்தனையோ மன விஞ்ஞானங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இன்னொரு விஷயத்தையும் உடனடியாக உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற நான் ஆசைப்படுகிறேன். அவளுடைய பிணத்தைப் பரிசோதனை செய்த போது அவளுடைய உள்ளாடையின் முடிச்சில் உங்களுடைய பெயர் பொறித்த ஒரு தங்க பொத்தான் இருந்தது. அந்தத் தங்க பொத்தானை நான் தனியாக எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இந்தச் சம்பவம் உங்களை வெகுவாக வேதனைப்படுத்தும் என்பது எனக்குத் தெரியும். நான் மனப்பூர்வமாக அதற்காக வருத்தப்படுகிறேன். இந்த விஷயத்தை அந்தக் குழந்தையிடம் சொல்ல வேண்டாம் என்பதை நான் தனியாகச் சொல்ல வேண்டாம் அல்லவா?

இனி தோட்ட விஷயத்தைப் எப்படி மாற்றப் போகிறீர்கள்? உங்களுடைய வசதிக்கேற்றபடி இந்த வாரத்திலேயே இங்கு வந்தால் நாம் எல்லா விஷயங்களையும் பேசி முடிக்கலாம்.

                    உங்களின்,

                    எம்.டி.பர்ட்டன்

பின் குறிப்பு: உடல்களை எஸ்டேட்டின் ஒரு பகுதியில், அழகான ஒரு இடத்தில் அடக்கம் செய்ய நான் ஏற்பாடு செய்கிறேன்.

                      எம்.டி.பி.

20

ட்டு வருடங்கள் கடந்தன.

ஒரு வயதான மனிதனும், அவனுடைய இருபது வயது வரக்கூடிய மகனும் அந்த ரப்பர் தோட்டத்தைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார்கள். மகன் தன் தந்தையைப் போல கம்பீரமாகவும் அழகானவனாகவும் இருந்தான். கிழவனின் தலை முழுவதும் நரைத்துப் போயிருந்தது. கன்னத்தின் மத்தியில் காகத்தின் கால் அளவிற்கு வயோதிகம் தெளிவாக முத்திரையைப் பதித்திருந்தது. கண்களுக்கு மத்தியிலிருந்த நெற்றிப் பகுதியில் மூன்று கோடுகள் தெளிவாகத் தெரிந்தன. பிரகாசமாகத் தெரிந்த பற்கள் அழகாக இருந்தன.

அவர்கள் ஒவ்வொன்றையும் சுற்றி நடந்து பார்த்தார்கள். கடைசியில் தோட்டத்தின் எல்லையில், ஒரு சிறு குன்றின் சரிவில் இருந்த ஒரு சிறு ஓய்வெடுக்கும் குடிலுக்கு அருகில் வந்தார்கள். அதன் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய மண்டபம் இருந்தது. அதன் மீது பலவிதப்பட்ட கொடிகளும படர்ந்திருந்தன.

மகனும் அந்த இடத்தின் முக்கியத்துவம் என்ன என்பது தெரியவில்லை. அவன் அதை அருகில் போய் ஆராய்ந்தான். கொடிகளைச் சற்று தூக்கிப் பார்த்த போது அதற்குள் ஏராளமான அழகான மலர்களும் கனிகளும் எடை தாங்க முடியாமல் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவன் ஆச்சரியத்துடன் தந்தையிடம் சொன்னான்: "இங்க பாருங்க... இதுக்கு முன்னாடி யாரோ ஒரு முறை நட்ட பிறகு, இங்கே திரும்பி வந்து இதைப் பார்க்கவோ, அவ்வப்போது வந்து நீர் பாய்ச்சவோ இல்ல போலிருக்கு. இருந்தாலும், இந்த இருட்டிலும் இது யாருக்கும் தெரியாம வளர்ந்து பூத்தும் காய்ச்சும் இருக்குறதைப் பார்த்தீங்களா?"

ஏதோ பழைய நினைவுகளிலிருந்து விடுபட்ட தந்தை மகனுடைய முகத்தையும் பிறகு அந்தக் கொடிகள் படர்ந்த குடிலையும் நீண்ட நேரம் பார்த்து, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னான்: "ஆமா.. ராகவா... அதுக்குப்பேரு தான் கிராமத்துக் காதல்."

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.