Logo

தினா

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6470
thinaa

டுப்பை வளைத்து குனிந்து, கைகள் தரையை நோக்கி தொங்கிக் கொண்டிருக்க, மாதலா மதிய நேரத்தில் அடிக்கப்படும் பன்னிரண்டு அடிகளின் கடைசி அடியைக் கேட்டான். தலையை உயர்த்தி, பத்து எட்டுகளுக்கு அப்பால் கதிர்களுக்கு மத்தியில், பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் ட்ரவுசர் அணிந்து வந்துகொண்டிருந்த கங்காணியைப் பார்த்தான். அதற்குமேல் நிமிர்ந்து நிற்க வேண்டுமென்று அவன் நினைக்கவில்லை. ஏனென்றால், கட்டளை மிகப்பெரிய சத்தமாக மாற்றப்பட்டு காதில் விழும்போது, தன்னுடைய வேலையை அவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அவனுடைய ஆடையற்ற முதுகிற்கு நேர் மேலாக சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எனினும் இவ்வளவு நேரமும் இருந்ததைவிட அதன் வெப்பம் இப்போது பரவாயில்லாமல் இருந்தது. தன்னுடைய நாசியின் நுனியிலிருந்து, பாதத்திற்கருகே தரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த கல்லின்மீது விழுந்த வியர்வைத் துளிகளைக் கொண்டு அவன் நேரத்தைக் கணக்கிட்டான். கங்காணி மிகவும் கோபத்தில் இருக்கவேண்டுமென்று அவன் நினைத்தான். பத்து அடிகளுக்கு அப்பாலிருந்த கால்களை அவன் மீண்டும் பார்த்தான். அவை அப்போதும் அதே இடத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டான். அவற்றைத் தாண்டி தன்னுடைய கண்களை நகர்த்தியபோது, மிகவும் உயரமாக வளர்ந்திருந்த தானியக் கதிர்களைவிட இன்னொரு மடங்கு உயரத்தில் ஒரு கறுப்பு நிழலாக ஃபிலிமோனின் உடல் தெரிவதைப் பார்த்தான். அவனும் வேலையை நிறுத்தச் சொல்லி வரும் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னுடைய முதுகில் ஒரு பகுதியில் உண்டான வலி அவனால் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. இது போதாதென்று தினாவை (தொழிலாளர்களின் உணவு) பற்றிய சிந்தனைகள் வேறு அவனை பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தன. தன்  தலையை உயர்த்தியபோது, தானே ஏற்படுத்திய அந்தச் செயலால் கழுத்தின் தசைகள் வேதனையை உண்டாக்க, அவன் தன் கைகளை முழுமையாக கீழ் நோக்கித் தொங்கவிட்டான். தான்  பிடுங்கவேண்டிய- வழவழப்பான இலைகளைக் கொண்ட கொழுகொழு என்று வளர்ந்திருந்த- களைகளைத் தொடும் அளவிற்கு அது தொங்கிக் கொண்டிருந்தது.

அதன் மெல்லிய தண்டுப் பகுதி பலமாக படும் வரை, அவன் விரல்களை நீட்டிக் கொண்டிருந்தான். கிளைகளுக்கு மத்தியில் அவன் தன்னுடைய விரல்களை நுழைத்தபோது, தன்னுடைய சரீரத்தை அவன் நன்கு நிமிர்த்தி வைத்திருந்தான். அதற்குமேலும் நிமிரக்கூடிய அளவிற்கு அந்தச் செடியிடம் சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய அளவில் பலமில்லையென்றாலும், அவனுடைய முழங்கால் மூட்டுக்குப் பின்னாலிருந்த சதைப் பகுதிகள் மிகவும் பயங்கரமாக வலித்தன. தொடர்ந்து அவன் அந்தச் செடியைப் பிடித்து மேலே தூக்கினான். அதன் வெள்ளை நிற வேர்களில் இறுக ஒட்டிக்கொண்டிருந்த கறுப்பு மண்ணின் அடர்த்தியான வாசனையை முகர்வதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.

அந்தச் செடியின் வேர்களை தன்னுடைய மேலுதட்டிற்கு அருகில் வைத்து ஆழமாக முகர்ந்துகொண்டே, பூமியில் இருந்த துளையைப் பார்த்தான் அவன். சொல்லப் போனால்- அன்றைய நாள் மிகவும் வெப்பமாகவே இருந்தது. சிறிதுகூட நீராவி இல்லாமல் இருந்ததே அதற்குக் காரணம்.

புலர்காலைப் பொழுதில், காலை நேரத்தின் ஆரம்ப நேரங்களில், சாயங்காலப் பொழுதின் பனித் துளிகளுடன் பரந்து கிடக்கும் வயல் வெளிகள் இன்னும் ஈரத்தன்மையுடன் இருக்க, மண்ணின் சிறுசிறு துளைகளில் இருந்துகூட நீராவி பரவலாகக் கிளம்பி மேலே வந்து கொண்டிருக்கும். வேலை செய்வதில் அந்த அளவிற்கு களைப்பு தோன்றாது. ஆனால், சூரியன் மேலே இருக்கும்போது, பிடுங்கப்பட்ட செடிகளால் உண்டான குழிகளில் இருந்து மட்டுமே நீராவி கிளம்பி மேலே வரும். அதுகூட மிகவும் குறைவான நேரம் மட்டுமே தங்கி நின்றிருக்கும்.

அவன் செடியைக் கீழே போட்டுவிட்டு, கவனித்தான். எதுவுமே இல்லை. உயரமான தானியக்கதிர்களின் இலைகளிலிருந்து புறப்பட்டு வந்த காற்றை மட்டும் உணரமுடிந்தது.

அவன் மீண்டும் தன்னுடைய சரீரத்தை நிமிர்த்து வைத்துக்கொண்டான். தான் கையில் பிடித்திருந்த செடி, அதற்குமேலும் பூமியில் இல்லாத நேரம் வரை, அவன் தன் சரீரத்தைச் சற்று பின்னோக்கி வளைத்து வைத்திருந்தான். இப்படித்தான் அவன் தன்னை பல சிரமமான அசைவுகளிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தான். இன்னும் சொல்லப்போனால் ஒரு செடியைப் பிடுங்க முயலும்போது, அவனுடைய சரீரத்தின் கழுத்துப் பகுதியிலிருந்த தசைகள்தான் உண்மையாகவே இயங்கிக் கொண்டிருந்தன.

அவனுடைய கையின் தசைகள், செயல்படவில்லை. வேர்களை இறுகப் பிடித்துக் கொண்டிருந்த மண்ணுக்குள்ளிருந்து செடிகளைப் பிடுங்குவதற்கான பலத்தைக் கொண்டு வருவதற்காக, அவன் அவ்வப்போது குனிந்து கொண்டிருந்தான்.

"தினா'விற்கான இறுதி மணி அடிப்பதைக் கேட்டபோது, அவன் ஏழாவது செடியைப் பிடுங்கிக் கொண்டிருந்தான். மாதலா தானியக் கதிர்களின் வழியாக மீண்டும் பார்த்தபோது, கங்காணியின் குரல் இன்னும் செவிகளில் விழவில்லையே என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டான். அவன் சிறிதுநேரம் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டான். ஆனால், காற்றின்    மெல்லில் முணுமுணுப்புச் சத்தம் மட்டுமே கேட்டது.

தாங்கமுடியாத அளவிற்கு வேதனை உண்டாகும்வரை, மாதலா முன்னோக்கி வளைந்தான். செடியை இறுகப் பற்றிக்கொண்டே அவன் பின்னோக்கி வளைய, அது தரையிலிருந்து பெயர்ந்து தனியே வந்தது. அதன் வேர்களிலிருந்து தேள் ஒன்று தாவிக் குதித்தது. செடியை நேரடியாகத் தூக்க முடியாததாலும், கையில் ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்ததாலும், அதை அவன் தப்பித்து ஓடும்படி விட்டுவிட்டான். ஆனால், அவன் பயந்தே போய் விட்டான். தான் அந்த தேளால் கொட்டப்பட்டிருந்தால், மூன்று நாட்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வேதனையை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்த மாதலா இன்னும் சொல்லப்போனால் நான்காவது நாளன்று தான் இறந்துபோனாலும் போகலாம் என்றும் நினைத்தான். உண்மைதான்... அந்த அளவிற்குப் பெரிதாக இருக்கும் ஒரு தேளின் விஷத்தை, வேதனையுடன் மூன்று நாட்கள் தாங்கக் கூடிய அளவிற்கு அவன் பலமற்றவனாக இருந்தான்.

காலைப் பொழுதின் ஆரம்ப நேரங்களில், விட்டில் பூச்சிகள் பிடுங்கப்பட்ட செடிகளின் இலைகளிலிருந்து குதித்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது தேள்களும், பல்லிகளும், ஏன்.... பாம்புகளும்கூட தென்படும். இதே வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோதுதான், ஒரு பாம்பு கடித்ததைத் தொடர்ந்து, பிட்டரோஸி மரணத்தைத் தழுவினான். வேறு யாருக்குமே பிட்டரோஸியைத் தெரியாது. ஆனால், அங்கிருந்த எல்லாருக்குமே அவனுடைய மனைவியைத் தெரியும். அந்தச் சம்பவம் நடந்தபிறகு, பொதுக் கடையில் விற்கப்படும் தனக்கான மதுவிற்கு யாரெல்லாம் பணம் தருகிறார்களோ, அந்த மனிதர்களுடனெல்லாம் அவள் படுக்க ஆரம்பித்தாள். யார் தனக்கு இருபது எஸ்க்குடோக்கள் (ஐந்து ஷில்லிங்குகள்) அளிக்கிறார்களோ, அவர்களுடன் மட்டுமே தான் படுக்க முடியும் என்று ஆரம்பத்தில் அவள் கூறிக் கொண்டிருந்தாள்.


ஆனால், இப்போது அவளைப் பொறுத்தவரை, மது அருந்துவது மட்டுமே முக்கியம். பணி செய்யும் தொழிலாளர்கள் இருக்கும்போது, அவள் அளவுக்கும் அதிகமாகக் குடிப்பாள்.

அவளுக்கு எதுவுமே தரவேண்டிய அவசியமில்லை. யாரென்று இல்லை. வயலில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரிதான்... அவளை பொதுக் கடைக்குப் பின்னாலிருந்த புல் மேட்டிற்கு அவர்கள் அழைத்துக் கொண்டு சென்றார்கள். அவள் உடனடியாகத் தூங்கி விடுவாள் என்ற விஷயமும், அழைத்துச் சென்ற மனிதன் எழுந்த பிறகுதான் அவள் கண் விழிப்பாள் என்பதும் எல்லாருக்குமே தெரியும்.

இப்போது அவனுக்கு வயதாகி விட்டது. அவளுடன் படுக்காத ஒரே மனிதன் அவன் மட்டுமே. எது எப்படியோ, அவனுக்கு பிட்ட ரோஸியை நன்கு தெரியும்.

மாதலா மேலும் இரண்டு செடிகளைப் பிடுங்கிவிட்டு, முழங்காலைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தான். ஒவ்வொரு மணித்துளி தாண்டும் போதும், சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்து கொண்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. வேலையை நிறுத்திக் கொள்ளும்படி கங்காணி உத்தரவு பிறப்பிப்பதற்கு இன்னும் அதிக நேரமாகாது.

தன்னுடைய உடல்நலக் குறைவு காரணமாக, உள்ளுக்குள் கயிறுகள் ஒன்றோடொன்று முறுக்குவதைப்போல திடீரென்று அவனுக்குத் தோன்றியது. முதல் முடிச்சு விழுந்து விட்டதைப் போல அவன் உணர்ந்தான்.

கங்காணியின் உத்தரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தால், உள்ளுக்குள் கயிறுகள் இறுக்கியதைப் போன்ற ஒரு உணர்வை ஆரம்பத்தில் மாதலா உணராமல் இருந்தான். ஆனால், இப்போது தன்னுடைய குடல்களுக்கு இடையே முதல் முடிச்சு விழுந்திருப்பதை உணர்ந்தும், சதைகள் முறுக்கேறும் அளவிற்கு உடலுக்குள் கயிறுகள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்வதை நேரடியாகச் சந்திப்பதற்காக, அவன் உடலை நிமிர்த்தி வைத்துக் கொள்ளும் வீணான முயற்சியைச் செய்தான். எது எப்படியோ தன்னுடைய தொண்டைப் பகுதியிலிருந்து கீழ்நோக்கி இறங்கிய கயிறு நெஞ்சின் மையப் பகுதியில் சுருண்டு கிடந்து, வயிற்றை நோக்கி ஒருவித வேதனையை மிகவும் வேகமாக உண்டாக்கிக் கொண்டிருந்தது. பசியுடன் இருந்த அந்த  மணித் துளிகளில், அவனுடைய கழுத்துப் பகுதியிலிருந்த நரம்புகள் புடைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட வெடிக்கும் நிலையில் இருந்தன. நிலை குலைந்து போய் அவனுடைய சரீரம் இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது. அவன் தன் கையில் வைத்திருந்த செடியின் இலைகள் நசுக்கப்பட்டு சிறுசிறு துண்டுகளாக ஆகிக் கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து அவை தாங்கமுடியாத ஒரு வாசனையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. இரண்டாவது முடிச்சு கிட்டத்தட்ட அவனுடைய சிறுநீரகங்களை வெடிக்க வைக்கும் நிலையில் இருந்தது. ஆனால், மாதலாவின் அழுத்தப்பட்ட உதடுகளிலிருந்து ஒரு சிறிய முனகல் சத்தம்கூட வெளிப்படவில்லை.

"அந்த மனிதர் ஏன் இன்னும் வேலையை நிறுத்தும்படி கூறாமல் இருக்கிறார்?'' மாதலா முணுமுணுத்தான். முணுமுணுத்துக் கொண்டே, ஒரு புதரின் கிளைகளை நோக்கி நகர்ந்து செல்ல முயற்சித்தான். “தினாவிற்கான மணி அடித்து, நிழல்கள்கூட இரண்டு பனை மரங்களின் உயரத்திற்கு நீண்டுவிட்டன...'' அவன் மெதுவான குரலில் கூறிக்கொண்டான்.

புதரைப் பிடித்து இழுத்தபோது, தன்னை விட்டு விலகிச் செல்லும் கால்களை அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. கிளைகளின் பிடிகையை விட்டுச் செல்ல, அவன் நிலை தடுமாறி தரையில் விழுந்தான்.

உள்ளுக்குள் விழுந்த முடிச்சு உண்டாக்கிய வேதனை வெளிப்பட, அவனுடைய கால்கள் மிகவும் வேகமாக விரிந்து நீண்டன.

சிறிது நேரத்திற்குப் பிறகு, தன்னுடைய சரீரம் மென்மையாகவும் வறண்டு போயும் இருந்த மண்ணில் பரவிக் கிடக்க, உள்ளுக்குள் இருந்த கயிறுகள் தன்னை இறுக்குவதைப் போல அவன் உணர்ந்தான். அவன் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு, வேதனைகள் மறைவதை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

தவழ்ந்துகொண்டே, அந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுபட்டு, தன் கையை செடிகளை நோக்கி நீட்டி அவற்றை மெதுவாகப் பிடித்து இழுத்தான்.

“கீழே படுத்துக் கொண்டு வேலை செய்ய உன்னை அனுமதிக்க மாட்டார்கள்.'' செடிகளைக் கீழே போட்டுக்கொண்டே அவன் முணு முணுத்தான். ஒரு சிறிய செடியின் தண்டுப் பகுதியை அவன் இறுகப் பற்றினான். ஆனால், அதை மேல் நோக்கிப் பிடித்து இழுப்பதற்கு முன்னால், சிறிது நேரத்திற்கு முன்பு தான் தரையில் விட்டெறிந்த சிறிய குவியலிருந்து, செடிகளைத் தனித்தனியே பிரித்து எண்ணினான்: “ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... ஐந்து...''

எண்ணி முடித்ததும், தன்னுடைய வலது கையில் வைத்திருந்த செடியை இறுகப் பிடித்து, அதை மற்ற செடிகளுடன் சேர்த்து வைத்தான். “ஆறு...''

“கீழே படுத்துக்கொண்டே வேலை செய்ய உன்னை அனுமதிக்க மாட்டார்கள்.'' தன் விரல்களால் ஆறாவது செடியின் இலைகளை நசுக்கிக் கொண்டே அவன் முணுமுணுத்தான்...

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டபடி தன் வலது பக்கத் தோளுடன் கீழே விழுந்து, அவன் தரையில் உருண்டான். தன்னுடைய தாடைப் பகுதியை முழங்காலின்மீது வைத்து அப்போது அழுத்தினான். ஒரு வகையான திருப்தியுடன், தன்னுடைய உடல்நல பாதிப்பிற்குக் காரணமான உள்ளே சுருண்டு கடந்த கயிறுகள், தன்னுடைய உடல் உறுப்புகளெங்கும் பரவிப் பின்னுவதை அவன் நினைத்துப் பார்த்தான். ஆறாவது செடியின் எஞ்சியிருந்தவற்றை, தன் வாயை நோக்கி அவன் பிடித்துத் தூக்கி, கண்களை மூடிக்கொண்டே அதைச் சுவைக்க ஆரம்பித்தான்.

“சரி... பையன்களே! நாம் போய் சாப்பிடுவோம்!''

“ஏழு... எட்டு... ஒன்பது... பத்து...'' மாதலா வேகமாக எழுந்து, நான்கு செடிகளை மேல் நோக்கிப் பிடுங்கினான். தொடர்ந்து தன் விரல்களை நெற்றியில் வைத்து கீழ் நோக்கி வழிக்கும் போது, தன் கண்களை மூடும்படிச் செய்த வியர்வைத் துளிகளை அவன் துடைத்தெறிந்தான்.

அவன் உடனடியாக அங்கிருந்து நகரவில்லை. வேலை செய்வதை நிறுத்துவதில் தான் மிகவும் அவசரமாக இருப்பதாக கங்காணி நினைத்துக் கொண்டால், அது ஒரு நல்ல விஷயமாக இருக்காது என்று அவன் எண்ணினான்.

அவன் சற்று மேலே தலையைக் காட்டியபோது, ஒரு கடைசி முடிச்சு உள்ளுக்குள் விழுந்திருப்பதைப் போலவும், ஒரு வகையான மயக்க நிலையையும் அவன் உணர்ந்தான். ந் குயானாவும் முத்தக்காட்டியும் ஏற்கெனவே அங்கு நின்று கொண்டிருந்தார்கள். கங்காணி அவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். “கிளம்புகிற நேரம் என்றால் உங்களை நீங்களே சுரண்டிக் கொண்டு தயாராக நின்று கொண்டிருப்பீர்கள். வேலை முடிந்து போவதென்றால், இரண்டு மடங்கு வேகம் வந்துவிடும் உங்களுக்கு. உங்களை நான் ஒரு வழிபண்றேன்...''

கங்காணியின் உரத்த சத்தத்தைக் கேட்டதும், தன் தலையை உயர்த்தி காட்டிக்கொண்டிருந்த ஃபிலிமோன் தன் கண்களை கீழே தாழ்த்திக் கொண்டான். ஆனால், மாதலாவைப் பார்த்ததும், தைரியம் உண்டாகி, சவால் விடுவதைப்போல நேராகப் பார்த்தான்.


படிப்படியாக டாண்டனே, ட்ஜிமோ, முத்தம்பி என்று ஒவ்வொருவராக தங்களுடைய கண்களை கங்காணியின்மீது பதித்துக்கொண்டே வயலுக்குள் இருந்து வெளியே வந்தார்கள்.

ட்ஜிமோவின் சரீரம் வியர்வையால் நனைந்திருந்தது. ஆற்று மணலின் நிறத்திலிருந்த தோலுக்கு உள்ளிருந்த  அவனுடைய சதைகள் நரம்புகளுடன் துடித்துக் கொண்டிருப்பதை மாதலா கவனித்தான்.

“நாம் சாப்பிடச் செல்வோம்.'' தன் கையிலிருந்த புத்தகத்தை மூடிக் கொண்டே கட்டளை பிறப்பித்தான். “இந்தத் தேவடியாள்கள் இல்லாமலே ஒரு புத்தகத்தை ஒரு மனிதன் அந்த நாட்களில் எழுதியிருக்கிறான்...'' புத்தகத்தின் மேலட்டையைப் பார்த்துக்கொண்டே அவன் சொன்னான்.

கங்காணி அணிவகுப்பை ஆரம்பித்து வைக்க, மற்றவர்கள் அமைதியாகப் பின்தொடர்ந்து நடந்தார்கள்.

மாதலா தன்னைச் சுற்றிலும் பார்த்தான். மென்மையான தானியக் கதிர்களின் இலைகளுக்கு மத்தியிலிருந்து வந்த சூரியனின் கீற்றுகளைப் பார்த்தபோது, அந்தப் பார்வையில் ஒரு சுகம் கலந்திருப்பதை அவன் உணர்ந்தான். "தானியக் கதிர்கள் வளர்ந்திருக்கும் வயல்வெளிகள் பார்ப்பதற்கு கடல்போல இருக்கிறது...'' மாதலா தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

மற்றவர்கள் மிகவும் முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களின் உடல்களின் பாதி வயலில் இருந்த பச்சைச் செடிகளால் மறைக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே ஏதோ ஒரு திரவத்திற்குள் ஊடுருவிச் செல்வதைப்போல அவர்கள் மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

மாதலா அசைவே இல்லாமல் நின்றிருந்தான். "வெள்ளைக்காரனின், தானிய வயல்கள் கடலைப்போல இருக்கின்றன...' கண்கள் வயல்களிலிருந்த செடிகளின் மேற்பகுதி காற்றில் அசைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். வீசிக் கொண்டிருந்த காற்றின் வழியே மாதலாவின் பார்வை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் காற்று விலகி தூரத்தில் வீசிக் கொண்டிருக்க, அதோடு சேர்ந்து ஓராயிரம் வெள்ளிக் கீற்றுகள்... சிறிய சூரியன்கள் காற்றால்  நட்சத்திரங்களாக மாறிக் கொண்டிருந்தன. தன் கண்களால் இதற்கு மேல் எரிச்சலைத் தாங்கமுடியாது என்ற நிலை உண்டானவுடன், அவன் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.

திடீரென்று, தானியக் கதிர்கள் வளர்ந்திருந்த வயல்வெளிகளை கடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் களைத்துப் போனான். "தினா'விற்காக மணியடிக்கும் சத்தம் கேட்டதும், தான் மேலே எழும்போது, இந்த ஒப்பிடல் உண்டாவதை நினைத்துப் பார்த்தான். அவன் தன் கண்களை, தன்னைச் சுற்றியிருந்த வெட்ட வெளியில் பதித்தான். “கடல் வேறு வகையானது...'' அவன் சோர்வு கலந்த குரலில் முணுமுணுத்தான்.

“கடலில், மேலே, பிடித்து இழுப்பதற்கு களைகள் இருக்காது...'' அவன் தன்னுடைய சுண்டு விரலை உயர்த்தினான். “கடலில் காற்றில் மிதக்கும் பறவைகளைப்போல மீன் இருக்கும்.'' அவன் இன்னொரு விரலை நீட்டினான். “ஆமாம்.. கடல் வேறு மாதிரியானதுதான்...'' சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு, அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.

மாதலா வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தபோது, மற்ற குழுவினர் ஏற்கெனவே அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களில் சிலர் முன்கூட்டியே சாப்பிட்டும் முடித்திருந்தார்கள். சுத்தம் செய்யக் கூடிய குழுதான் எப்போதும் முதலில் வரக்கூடியது. அது அந்த நிழலுக்குள் இப்போது சிதறி விட்டிருந்தது. காலையிலிருந்து வேலை செய்த களைப்பிலிருந்து விடுபடுவதற்காக, பெரும்பாலான மனிதர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வயலில் வேலை செய்யும் குழுவினர் தாமதமாகத்தான் சாப்பிட்டு முடித்து வருவார்கள். ஏனென்றால், அவர்களுடைய சமையல்காரனான ஜோஸ், அவர்களுடைய சாப்பிட்டிற்கான நெருப்பை இன்னும் அடுப்பில் மூட்டிக் கொண்டிருந்தான்.

மாதலா பழைமையான ஒரு கூடத்திற்குள் சென்று, அங்கு நிழலில் அமர்ந்திருந்த குழுவினருக்கு மத்தியில் தன்னுடைய இடத்தைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்தான். அவன் அருகில் வருவதைப் பார்த்ததுமே, பெண்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, அவர்கள் நல்ல காற்றை வீசச் செய்தனர்.

“மாதலா, உன்னுடைய குழுவில் விஷயங்கள் எப்படி போய்க் கொண்டிருக்கின்றன?'' ஒரு குரல் கேட்டது. உடனடியாக மாதலா எந்தவொரு பதிலையும் கூறவில்லை. ஏனென்றால், ஏதாவது கருத்தைக் கூறுவதற்கு முன்னால், அந்தக் கேள்வியை தனக்குத்தானே ஒருமுறை கேட்டுக் கொள்ள வேண்டும்; அதற்கான பதிலை தானே சொல்லிக் கேட்டுக்கொள்ள வேண்டுமென்ற பழக்கத்தைக் கொண்டவன் அவன்.

“வயல்களில் சூரியன் மிகவும் வெப்பமாக இருக்கிறது.'' மாதலாவின் மவுனத்திற்கு முன்னால், அந்தக் கேள்வி மன்னிப்பு கேட்பதைப்போல ஒலித்தது.

“ஆமாம்... வயல்களில் சூரியன் மிகவும் வெப்பமாகத்தான் இருக்கிறது...'' (மாதலா என்ன பதில் கூறுவது என்பதைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை.)

தொடர்ந்து உரையாடல் நடைபெற வேண்டுமென்ற எண்ணத்துடன், அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது: “முழு நேரமும் கங்காணி உனக்கு மேலேயே நின்று கொண்டிருந்தார்...''

கேள்வி கேட்ட அந்த மனிதனின் இளமையான முகத்தையே வெறித்துப் பார்த்தான் மாதலா. வயல்களில் நடக்கும் வேலையைப் பற்றிய விஷயங்களிலேயே ஆர்வத்தைச் செலுத்திக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை என்பதைப் புரியவைக்கும் வகையில், அவனிடம் என்ன கூறுவது என்பதைப் பற்றி சிந்திக்க அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். தனக்குள் சிந்தனையைச் செலுத்தி, அதைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் அவன் ஈடுபட்டான்.

“கங்காணி மிகவும் மோசமான மனிதர்...'' அந்த இளைஞன் தொடர்ந்து கூறினான்: “உன்னை அனுப்புவதற்கு அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். நான் வயலில் வேலை செய்யும்போதே, அதைக் கவனித்தேன். இன்னும் சொல்லப் போனால்- சிறிது முதுகை நிமிர்த்துவதற்குக்கூட அவர் ஆட்களை விடுவதாக இல்லை... நான் ஒருமுறை அதைப் பார்த்தேன்...'' திடீரென்று உற்சாகம் உண்டானதைப்போல, அந்த இளைஞன் தன்னுடைய முழுவைச் சேர்ந்த மற்ற ஆட்கள் இருக்கும் பக்கம் திரும்பிக்கொண்டே சொன்னான்: “இது பொய்யல்ல. நான் உறுதியாகக் கூறுகிறேன். இது ஒரு பொய்யே அல்ல. ஒருநாள் நாங்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தோம். கங்காணி அங்கேதான் இருந்தார். அப்போது மிகவும் வெப்பமாக இருந்தது. வயலில் மிகுந்த வெப்பம் இருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும். கங்காணி மிகவும் மோசமான ஒரு மனிதர் என்று நான் ஏன் சொல்கிறேன் என்பதை நீயே தெரிந்து கொள்வாய். நாங்கள் வயலில் வேலை செய்துகொண்டிருந்தோம்...'' அந்த இளைஞன் தான் கூறிக்கொண்டிருந்ததை தொடர்ந்து கொண்டிருந்தான். தன்னுடைய உற்சாகத்தால் மேலும் மேலும் தூண்டப்பட, அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் வார்த்தைகளை மாதலாவிடமிருந்து விலக்கி, தன்னுடைய ஆட்களிடம் கூற ஆரம்பித்தான்.

அருகிலிருந்த நிழலான ஒரு இடத்தில் போடப்பட்டிருந்த பெட்டியின் மீது அமர்ந்து தன்னுடைய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கங்காணியையே மாதலா கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த இன்னொரு பெட்டி மேஜையைப் போல செயல்பட, அதில் அவருடைய உணவுப் பொருட்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அவர் மிகுந்த சந்தோஷத்துடன் உணவைச் சாப்பிட்டுக் கொண்டே, ஒயினையும் பருகிக் கொண்டிருந்தார்.


மாதக் கடைசியில் பொதுக் கடைக்குச் செல்லும் போது தன்னுடைய ஒயினின் ஒரு பகுதியை நண்பர்களுக்கு மாதலா பரிமாறுவான். ஆனால், கங்காணி தன்னுடைய ஒயினை வேறு யாருடன் எந்தச் சமயத்திலும் பங்கு போட்டதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மதிய உணவின் போது பருகுவதற்காக அவருடைய மனைவி அனுப்பி வைக்கும் ஒயின் புட்டிகளை பெரும்பாலும் அவர் முழுமையாகப் பருகியிருக்கவே மாட்டார்.

ஒயின் சிவப்பும் மஞ்சளும் கலந்த அழுக்கடைந்த நிறத்தில் இருந்தது. புட்டியின்மீது வியர்வை படிந்திருந்தது. ஒயினைப் பழகும்போது, கங்காணி தன் கண்களை முழுமையாக மூடிக்கொண்டார்.

“மாதலா...'' ட்ஜிமோதான் அழைத்தான். “மாதலா, நாம் சென்று சாப்பிடுவோம்.''

நிழல்களுக்குக் கீழே வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த மனிதர்கள் ஓய்வெடுத்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள். அவர்களில் மாதலாவிற்குத் தெரியாத பல மனிதர் களும்கூட இருந்தார்கள். ஆனால், அவனை எல்லாருக்கும் தெரியும். அவன் கடந்து சென்றபோது, அவனிடம் அவர்கள் விசாரிப்பார்கள்.

“மாதலா! நான் உன்னிடம் நேரடியாகக் கூறக் கூடாது. ஆனால், இதற்கெல்லாம் காரணம்- கங்காணித்தான். உன்னுடைய மகள் இங்கே வந்திருக்கிறாள். உன்னை அவள் பார்க்க விரும்புகிறாள்.''

அதற்குள் மரியா அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். “பிற்பகல் வணக்கம், அப்பா!''

“பிற்பகல் வணக்கம், என் மகளே!''

ட்ஜிமோ மரியாவிற்கு அருகில் வந்தான்: "மரியா, நீ பார்க்கவேண்டும் என்பதற்காக நான் உன் அப்பாவை இங்கே அழைத்துக்கொண்டு வந்தேன். ஆனால், நீ இங்கே இருக்கிறாய் என்ற விஷயத்தை மட்டுமே நான் அவனிடம் கூறியிருக்கிறேன். ஏனென்றால், உன் அப்பா எங்கே அமர்ந்திருக்கிறாரோ, அந்த இடத்திற்கு மிகவும் அருகில் தான் கங்காணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.''

“மரியா, வீட்டில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்?''

“மாதலா, அங்கே இருக்கும் நிழலுக்குச் சென்று நீ உன் மகளுடன் பேசிக் கொண்டிருப்பது தான் சரியாக இருக்கும். அங்கே சூரியனின் வெப்பம் இல்லை. அதுதான் சரியான இடம்... மரியா, நீ உன் அப்பாவை அந்த நிழலுக்கு அழைத்துச் சென்றுபேசு. அங்கே சூரியனின் வெப்பம் இருக்காது...''

ட்ஜிமோ மரியாவின்மீது மிகுந்த விருப்பம் வைத்திருக்கிறான் என்பதென்னவோ உண்மை. ஆனால், அவள் ஏராளமான மனிதர்களுடன் படுத்திருக்கிறாள் என்பதால், யாருமே அவளைத் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள் என்ற விஷயம் மாதலாவுக்கு நன்கு தெரியும்.

“எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள் அப்பா. நான் உங்களைப் பார்ப்பதற்காகத்தான் வந்தேன்..''

“நான் நன்றாக இருக்கிறேன். மகளே!''

அங்கிருந்த எல்லா ஆண்களும் மரியாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அனைவரின் கண்களும் அவள் அணிந்திருந்த பல வண்ணங்களைக் கொண்ட மேலாடைக்குள் இருந்த அவளுடைய சரீரத்தின் அளவுகளையே மேய்ந்து கொண்டிருந்தன.

“பிற்பகல் வணக்கம், மரியா!'' எல்லோரும் அவளைப் பார்த்துக் கூறினார்கள். அப்போது அவளிடமிருந்து ஒரு பார்வை தங்களுக்குக் கிடைக்காதா என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவள் தரையிலிருந்து தன்னுடைய கண்களை உயர்த்தாமலே, அவர்களுக்கு அவள் பதில் வணக்கம் கூறினாள்.

சிறிது நேரத்திற்கு மாதலாவும் மரியாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

அங்கிருந்த எல்லா ஆண்களும் தன்னையே வெறித்துப் பார்ப்பதைப் பார்த்து மரியாவிற்கு என்னவோபோல இருந்தது.

“மாதலா, வந்து சாப்பிட வேண்டுமென்ற விருப்பம் உனக்கு இல்லையா?'' மீண்டும் ட்ஜிமோ கேட்டான்: “உண்மையாகவே, இதுதான் சாப்பிடுவதற்கான நேரம். ஏனென்றால், ந் குய்யானாவும் முத்தக்காட்டியும் ஏற்கெனவே உணவைத் தயாரித்து விட்டார்கள். உன் மகள் உன்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் விஷயம், கங்காணிக்குத் தெரியக் கூடாது என்பதற்காகக் கூறவில்லை. உண்மையிலேயே, இதுதான் சாப்பிடுவதற்கான நேரம்...''

“நான் என் மகளுடன் இருக்கிறேன், ட்ஜிமோ.''

கூடத்தின் ஒரு மூலையில் தன் கையில் ஒரு சிகரெட்டை வைத்துக் கொண்டு தோன்றிய கங்காணி அவர்களை நோக்கி வந்தார். “ஹலோ, மரியா! நீ இங்கே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்? நீ மாதலாவைத் தூண்டில் போடுவதற்கு முயற்சிக்கிறாயா? அதற்கு சரியான ஆள் இல்லை, மாதலா. ஏனென்றால், அவனுக்கு வயது அதிகமாகி விட்டது. ஒருவேளை, ட்ஜிமோ... மரியா, நீ ட்ஜிமோவை வளைத்துப் போடுவதற்கு முயற்சிக்கிறாயா?''

“நான் ட்ஜிமோவைத் தூண்டில் போட்டு இழுக்க முயற்சிக்கவில்லை.'' மரியா கூறினாள். அவள் போர்த்துக்கீசிய மொழியில் பேசுவதற்கு முயற்சி செய்தாள்.

ஆச்சரியப்பட்ட கங்காணி, சிகரெட்டை தன் உதடுகளுக்குக் கொண்டு செல்லும் வழியில் பாதியிலேயே நிறுத்திவிட்டு, அவர் கேட்டார்: “ஆனால், நீ அவனுடன் படுக்க வேண்டுமென்று ஆசைப்படவில்லையா?''

தரையையே பார்த்துக் கொண்டிருந்த மரியா எந்தப் பதிலையும் கூறவில்லை.

“மாதலா, நாம் போய்ச் சாப்பிடுவோம். வயலில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், வேறு இடங்களில் பணி செய்பவர்களாக இருந்தாலும் ‘தினா'விற்கான நேரம் வந்தவுடன் சாப்பிட்டுவிட வேண்டும்.''

மாதலா அதற்கு உடனடியாக பதிலெதுவும் கூறவில்லை. அந்தச் சமயத்தில் அவன் தன்னுடைய மகளையே பார்த்துக் கொண்டிருந்தான். கங்காணி அவளுடன் உரையாடியபோது, அவள் என்ன நினைத்திருப்பாள் என்பதைக் கண்டுபிடிக்க அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். மரியா வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்பா, நீங்கள் போய் சாப்பிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.'' தன் பாதங்களை மணலுக்குள் பதிய வைத்துக்கொண்டே கூறினாள். தன்னுடைய நடுக்கத்தை தன் தந்தை நன்கு அறிவார் என்பதைப் புரிந்து கொண்டவுடன், அவள் வேகமாக தன் பாதங்களைப் பின்னோக்கி இழுத்தாள். தன் கைகளை தன்னுடைய மார்போடு குறுக்காக சேர்த்து வைத்திருந்த அவள், தன் முதுகுப் பகுதிகளை கைகளால் இறுகப் பற்றிக் கொண்டாள்.

மாதலா தன் மகளின் அருகில் வந்து, கீழ் நோக்கிக் கவிழ்ந்திருந்த இமைகளால் உண்டான நிழல்களுடன் இருந்த அவளுடைய கண்களைப் பார்க்க முயற்சி செய்தான்.

தன்னுடைய முகத்திற்கு மிகவும் அருகில் ஒலித்த ஆழமான குரலைக் கேட்டு, சற்று நகர்ந்து உட்கார்ந்த மரியா, தன் முதுகை கிட்டத்தட்ட திருப்பியவாறு தன் தந்தையிடம் கூறினாள்: “சரி... ஒன்றுமில்லை ஒன்றுமே இல்லை... அது என்னை என்ன நினைக்க வைக்கிறது என்றால்...'' அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு மேலும் கரிசனம் கலந்த குரலில் சொன்னாள். “எனக்குத் தெரியவில்லை. அப்பா, ஆனால் நான் நினைக்கிறேன். நீங்கள் போய் சாப்பிட வேண்டுமென்று...''

மாதலா மரியாவின் உடலைப் பிடித்து வட்டமாகத் திருப்பி, அவளையே பார்த்தான். அவனுடைய கால்கள் வளைந்து பரப்பி காணப்பட்டன. அவன் இமைகளுக்குப் பின்னால் முழுமையாக மூடிவிட்டிருந்த கண்களைப் பார்க்க முயற்சி செய்தான். “நீ அப்படி நினைக்கிறாயா?'' அவன் கேட்டான்.


“நீங்கள் கட்டாயம் போய் சாப்பிட வேண்டும், அப்பா''. தன் கண்களை மூடியவாறு, மரியா முன்பு இருந்ததைவிட சத்தமான குரலில் கூறினாள்.

“ஆனால், என் வயிற்றில் பசி இல்லை...'' மாதலா ஆச்சரியம் தொனித்த கண்களுடன், தன் கைகளை விரித்துக்கொண்டே கூறினான்:'' என் வயிற்றில் பசியே இல்லை என்பதை நீ கட்டாயம் பார்க்க வேண்டும்.''

மரியா அதற்கு பதிலெதுவும் பேசவில்லை. “உனக்கு சாப்பிட விருப்பமில்லையா, என் மகளே?''

“உங்களைப் பார்க்க வருவதற்கு முன்னால், நான் உணவு சாப்பிடும் இடத்தில் சாப்பிட்டு விட்டேன். அந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் போது, ஒரு நண்பர் என்னைப் பார்த்து உள்ளே வரும்படிக் கூறினார். அந்த நண்பர் சில உணவுப் பொருட்களை எனக்காக கொண்டுவந்து கொடுத்து விட்டு "இங்கே உட்கார். இது நீ சாப்பிடுவதற்காகத்தான்...' என்று சொன்னார். நான் சாப்பிட ஆரம்பித்தேன்.'' மரியா தன் கண்களைத் திறந்து, மீண்டும் அவற்றை உடனடியாக மூடிக் கொண்டாள்.

“அதற்கு மேலும் நீ பசியாக இல்லையா? இங்கே வந்து எங்களுடைய குழுவினருடன் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று நீ நினைக்கவில்லையா?'' மாதலா மிகவும் ஆர்வத்துடன் கேட்டான். “இல்லை அப்பா. அந்த நண்பர் எனக்கு சாப்பிடுவதற்கான நிறைய உணவுப் பொருட்களைக் கொடுத்தார். எனக்கு இப்போது பசியே இல்லை. நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நான் இங்கே உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.''

ட்ஜிமோ மாதலாவின் அருகில் வந்தான். “மாதலா, உன் மகள் என்ன கூறுகிறாளோ அது சரிதான்...''

அதை மாதலா ஒப்புக்கொண்டான்: ''சரி... நான் போய் சாப்பிட்டுவிட்டு வருகிறேன். நீ இங்கே எனக்காகக் காத்திரு.''

தன்னுடைய தந்தை அங்கிருந்து எழுந்து போய்விட்டார் என்பதை உணர்ந்தவுடன் மரியா தன் கண்களைத் திறந்தாள்.

மாதலா ஒரு துண்டு "காய்'யை (தானியத்தால் உண்டாக்கப்பட்ட ஒரு வகை உணவு) "ம்ட்சோ வெலோ' (வேர்க்கடலை கொண்டு உண்டாக்கப்பட்ட ஒரு திரவ உணவு)விற்குள் மூழ்கச் செய்து, அதை தன் வாயை நோக்கி உயர்த்திக் கொண்டு சென்றான். மற்றவர்களும் அதையே செய்தார்கள். அவர்கள் மிகவும் அமைதியாகச் சாப்பிட்டார்கள். அந்த திரவ உணவு மிகவும் சிவையாகவும், தரமான கொழுப்புச் சத்து நிறைந்ததாகவும் இருந்தது.

தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மாதலா வால் மரியாவைப் பார்க்க முடியும். அவள் கூடத்தின் நிழலில் பாதி மறைந்து தெரிந்தாள். இவ்வளவு நேரமும் அதே திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாலும், கங்காணி அங்கு வருவதை அவன் பார்க்கவே இல்லை.

தரையிலிருந்து தன் கண்களை உயர்த்தாமலே, கங்காணி கேட்ட கேள்விகளுக்கு மரியா பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் காதில் கேட்க முடியாததற்கு, மாதலா மிகவும் வருத்தப்பட்டான். ஒரு மனிதன் தான் ஒரு பெண்ணுடன் படுக்க விரும்பும் விஷயத்தை வெளிப்படுத்தும்போது, அவன் ஒருத்தியிடம் என்ன வார்த்தைகளைக் கூறுவான் என்பதை அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

கங்காணி மரியாமீது மிகுந்த கோபத்தில் இருப்பதைப்போல தோன்றியது. ஆனால், சில நேரங்களில் அவர் மிகவும் இனிமையாகப் பேசுவார். அவர் ஒரு சிகரெட் பாக்கெட்டை தன்னுடைய பாக்கெட்டிற்குள்ளிருந்து வெளியே எடுத்து, அதைத் திறந்து, அவற்றிலிருந்து ஒரு சிகெரட்டை எடுத்துப் பற்ற வைத்து, எரிந்து கொண்டிருந்த நெருப்புக் குச்சியை அணைத்து விட்டு, சிகெரட்டை ஊதி ஒரு புகை மண்டலத்தை உண்டாக்கினார். அவர் தன்னுடைய கையை உயர்த்தி, காற்றில் நெருப்புக் குச்சியை ஆட்டிக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.

அவர் தான் புகைத்துக் கொண்டிருந்த சிகெரட்டை முடித்தவுடன் மரியாவின் பக்கம் தன்னுடைய முதுகைத் திருப்பியவாறு, அந்தக் கூடத்தின் மூலையில் மறைந்து போனார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அதே திசையை நோக்கி மரியாவும் நடந்து சென்றாள்.

கங்காணி மரியாவுடன் உரையாடிக் கொண்டிருந்த இவ்வளவு நேரமும், அவள் தரையைவிட்டு தன்னுடைய கண்களை உயர்த்தவே இல்லை.

சாப்பிடுவதற்கு இன்னும் கொஞ்சம் "காய்'தான் இருந்தது. ஆனால், யாருடைய பசியும் முழுமையாகத் தீர்க்கப்பட்டு விடாது என்று உறுதியாக நினைத்தான் மாதலா. கடைசித் துண்டு அந்த குழுவின் சமையல்காரர்களின் ன்குய்யானாவிற்கும் முத்தக்காட்டிக்கும் இருந்தன. "ம்ட்சோவெலோ'வின் எஞ்சிய பகுதியும்கூட அவர்களுக்குத்தான்.

உறிஞ்சிக் கொண்டும், விரல்களை நக்கிக் கொண்டும் இருந்த மாதலா, அவற்றைத் தேய்த்துக் கொண்டே, தன் தலை முடிகளின் மீது விரல்களால், வருடினான். சாப்பிட்டு முடித்துவிட்டதால், அவன் எழுந்தான்.

மற்றவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.

மீண்டும் வயலுக்குள் செல்வதற்கு முன்னால், அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. அதனால், ஓய்வெடுப்பதற்கு ஒரு இடத்தைத் தேடி மாதலா சுற்றிலும் பார்த்தான்.

‘க்ரால் குழு'வைச் சேர்ந்த மனிதர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தார்கள். முன்பு தானிருந்த அதே இடத்திற்கு மாதலா மீண்டும் திரும்பி வந்தான்.

சிறிது நேரத்திற்கு முன்னால் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்த அந்த இளைஞன் இப்போது அவனை முற்றிலும் ஒரு கிண்டல் கலந்த முக பாவனையுடன் பார்த்தான்: “மாதலா, உன் மகள் பின்னால் நின்று கொண்டிருக்கிறாள்... கங்காணியுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்...''

‘க்ரால் குழு' தலைவனான எலியாஸ் இந்த கிண்டல் கலந்த வார்த்தைகளை விரும்பவில்லை. அவன் சொன்னான்: “மனிதர்கள் சில விஷயங்களைப் பற்றி புரிந்துகொள்ள முடியாமலிருந்தால் அவர்கள் மிகவும் அமைதியாக இருந்துவிட வேண்டும்...'' அவன் அந்த இளைஞனிடம் நேரடியாகச் சொல்லாமல் சொன்னான்.

அங்கு நிலவிக் கொண்டிருந்த அமைதி தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. தன்னுடைய இடது பாதத்திற்கு அருகிலிருந்த ஒரு செடியைத் தொடுவதற்காக மாதலா கையை நீட்டினான். அந்தச் செடியின் கிளைகளைத் தொட்டவுடன், அதன் மென்மையான தண்டுப் பகுதியை தன் மணிக்கட்டில் சுற்றிய அவன், அந்தச் செடியை ஒரு தீர்மானத்துடன் பிடித்து இழுத்தான். அந்தச் செடி ஒரு மெல்லிய வெடிப்பு உண்டாவதைப்போல மண்ணுக்குள்ளிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தது.

ட்ஜிமோ அருகில் வந்தான் “மாதலா, நீ சந்தோஷப்படுவது மாதிரி, நான் ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்புகிறாயா?'' என்று அவன் கேட்டான். அதற்கு மாதலா எந்தவொரு பதிலும் கூறவில்லை. ட்ஜிமோவுக்குப் பின்னால், வயலுக்குச் செல்லக்கூடிய வழியில், கங்காணி முன்னோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார். பத்தடிகளுக்குப் பின்னால், அவரைப் பின்பற்றி மரியா நடந்து சென்று கொண்டிருந்தாள்.

மாதலா அந்த ஜோடியை தன்னுடைய கண்களால் பின்தொடர்ந்தான். மண்ணில் தான் பார்க்கமுடியாத ஏதோவொன்றை அவன் தேடிக் கொண்டிருந்தான். மனதில் கற்பனை செய்து கொண்டிருந்த ஒரு செடியை அவனுடைய விரல்கள் மூடிக்கொண்டிருந்தன.


மரியா மிகவும் வேகமாக பச்சை நிறக் கடல்போல வளர்ந்திருந்த தானியக் கதிர்களுக்கு மத்தியில் நடந்து கொண்டிருந்தாள். வயலின் எல்லைப் பகுதிகளில் வளர்ந்திருந்த, மென்மையான தானியக் கதிர்களின் வழியாக அவள் ஓசை உண்டாக்கிக் கொண்டு ஆரவாரத்துடன் போய்க் கொண்டிருந்தாள். அந்த வகையில், அந்த மனிதரின் பாதச் சுவடுகளில் தன்னுடைய பாதங்களை வைத்துச் செல்வதற்கு அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

பசுமையாகவும், அடர்த்தியாகவும் நன்கு வளர்ந்திருந்த தானியக் கதிர்கள் அவளுடைய முழங்கால் வரை வளர்ந்திருந்தன. எனினும், அவள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள். எது எப்படியோ அவள் மிகவும் மெதுவாகத்தான் நடந்தாள். காற்றை எதிர்த்து நடக்க வேண்டியதிருந்ததால், அவளுடைய நடை மிகவும் உறுதியானதாக இருந்தது.

வயலுக்குள் அதிக தூரம் சென்றதும், இப்போது கங்காணி நின்று மரியாவை நோக்கித் திரும்பினார். அவளும் சில அடிகள் தூரத்திலேயே நின்றுவிட்டாள்.

“மாதலா, எந்தவித சிரமமும் இல்லாமல் நீ மனதில் சந்தோஷப்படும்படி உனக்காக நான் ஏதாவது செய்யவேண்டும் என்று நீ நினைக்கிறாயா?''

மரியா நிற்குமிடத்தை நோக்கி தன்னுடைய பாதச் சுவடுகளை வைப்பதற்கு முயற்சி செய்த பிறகு கங்காணி, சில அடிகள் எடுத்து வைத்தபிறகு தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு அங்கேயே நின்றுவிட்டதை மாதலா பார்த்தான்.

ஒரு நதியைக் கடந்து செல்வதைப்போல அவன் நடந்தான்.

ட்ஜிமோவிடம் தான் ஏதாவது கூறவேண்டும் என்று மாதலா நினைத்தான். ஆனால், அந்தக் கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் அளவிற்குக்கூட அவனுக்கு ஞாபக சக்தி இல்லாமலிருந்தது. அதனால், என்ன கூறுவது என்றே தெரியாதவனாக அவன் இருந்தான்.

கங்காணி, மரியாவிடம் சைகை காட்டினார். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத நிலையில் அவள் இருந்தாள். மாதலா தன் கையில் பிடித்திருந்த செடி, அவனுக்கு ஒத்துழைக்காமல் இருந்தது. அந்தக் காரணத்தால், மாதலாவின் மணிக்கட்டு நடுங்கியது.

கங்காணி வயலுக்குள் மூழ்கி விட்டார். சில விநாடிகளுக்குப் பிறகு, மரியா தன்னுடைய கைகளை ஆட்டினாள். மிகவும் பலவீனமாக இருந்த தானியச் செடிகளைப் பிடித்திருந்த அவள், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனாள். அவர்கள் ஒன்று சேர்ந்த இடத்தில், தானியக் கதிர்களின் இலைகள் சிறிது நேரம் ஆடிக்கொண்டிருந்தன. ஆனால், வெகு சீக்கிரமே அந்த அலைகள் அடங்கிவிட்டன.

ட்ஜிமோவின் குரல் அதிர்ச்சியை உண்டாக்கு வதைப்போல ஒலித்தது: “மாதலா...'' ஆனால், அந்த அதிர்ச்சி உடனடியாக நின்றுவிட்டது. ட்ஜிமோ கட்டளை இட்டான்: “மாதலா, நீ அங்கே பார்க்காதே.''

மாதலாவின் மனதிற்குள் ஏதோ நொறுங்கியதைப் போல இருந்தது. ஆனால், அது அவனுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டதால் உண்டானது அல்ல.

தூரத்திலிருந்த பசுமை அடர்ந்திருந்த வயலின் எல்லையில், மரியா கங்காணியை உடனடியாகப் பார்த்து விடவில்லை. அவள் மிகவும் வேகமாக நடந்தாள். தன்னுடைய கால்களை மிகவும் சுதந்திரமாக வைத்து அவள் நடைபோட்டாள். ஒரு கை அவளுடைய தோள்களை பலமாக சுற்றியது.

மிகவும் வெப்பமான, அமில வாசனை நிறைந்த மனிதனின் மூச்சு, அவளுடைய முகத்திற்கு அருகில் வந்துகொண்டிருந்தது.

ஒரு சிறிய போராட்டத்திற்குப் பிறகு, மரியாவின் ஆடைகள் தளர்ந்தன.  ஒரு குளிர்ச்சியான நீர் தனக்குள் பரவுவதைப்போல அவள் உணர்ந்தாள்.

அவள் நடுங்கி, சுருங்கிப் போனாள்.

தன்னுடைய நிர்வாணமான தொடைகளில், அந்த மனிதரின் வெப்பம் நிறைந்த, முரட்டுத்தனமான, வெடிப்புகள் கொண்ட கைகள் ஊர்வதை அவளால் உணரமுடிந்தது.

மாதலா சுற்றிலும் பார்த்தான்: யாரும் அவனை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால், அந்தக் குழுவில் இருந்த எல்லா மனிதர்களும் அவனைப் பார்க்கக்கூடிய வகையில் ஒரு நிழல் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு தாங்கள் இருப்பது மாதிரி பார்த்துக் கொண்டார்கள். சிறிது நேரத்திற்கு முன்னால், அவனுடன் உரையாடிக் கொண்டிருந்த "கரால் குழு'வைச் சேர்ந்த அந்த இளைஞன் மட்டும் இன்னும் அந்த திமிரான முகபாவனையுடனே இருந்தான்.

அந்த அமைதி தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. "தோட்டக் குழு'வைச் சேர்ந்த சமையல்காரனான ஜோஸ் இடைவிடாமல் இருமிக் கொண்டிருந்தான். ஆனால், அதற்குப் பிறகும் அந்த அமைதி தொடர்ந்து கொண்டே இருந்தது.

வயலின் ஆழமான பசுமை நிறைந்த சாயங்கால வெயிலில், கங்காணியின் வெளிறிப்போன தோலுக்கு ஒரு பச்சை நிற மேற்பூச்சு கிடைத்து விட்டிருந்தது.

அவளுடைய மோகங்கள் அடங்கிய முரட்டுத் தனமான முகம், நிமிடத்திற்கு நிமிடம் மரியாவின் கண்களை நிறைத்துக் கொண்டிருந்தது.

அவளுடைய பயங்கரமான மூச்சுக் காற்று, பாதியாகத் திறந்திருந்த மரியாவின் உதடுகளுக்குள் ஊடுருவிச் சென்றது. அவள் இழுக்கப்பட்டு, போதையில் விழுந்தவளைப்போல, ஒரு சூறாவளிக்குள் சிக்கிக் கொண்டிருந்தாள். மரியா தன்னுடைய கண்களை வெறுப்பே இல்லாமல் மூடிக்கொண்டாள். வீசிக் கொண்டிருந்த காற்றை மனதிற்குள் திட்டினாள்.

மிதந்து வந்த காற்றிலிருந்து ஒரு இனம் புரியாத வெப்பம் கிளம்பி வந்து, வயலின் கீழ்ப் பகுதியில் வளர்ந்திருக்க செடிகளின்மீது மோதி, மரியாவின் வயிற்றுப் பகுதியை மெதுவாக வருடிக் கொண்டிருந்தது.

அந்த முரட்டுத்தனமான ஆளுமைச் சூழ்நிலையை ஒரு நீண்ட பெருமூச்சு தணித்தது.

தன் கையில் வைத்திருப்பதாக மனதில் கற்பனை செய்துகொண்டிருந்த முரட்டுத்தனமான செடியின் சிறிய இலைகளை, ஒவ்வொன்றாக மாதலா நசுக்கிக் கொண்டிருந்தான். தனக்குள் இருந்த உடல்நலக் குறைவு உடல் உறுப்புக்களை மிகவும் பலவீனமாக ஆக்கிவிட்டிருப்பதை நினைத்தபோது, அவனுக்கு அழவேண்டும்போல இருந்தது. வயலில் இருந்த செடிகளைப் பிடுங்கியபோது இருந்த அளவிற்கு இப்போது பூமியை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு செடியைப் பிடுங்குவதற்கு உடலில் பலமில்லாதவனாக அவன் இருந்தான்.

“அழாதே, மாதலா...'' ட்ஜிமோ கூறினான்.

"ஹோயிங் குழு'வில் ந்குய்யானாவும் ஃபிலிமோனும்தான் முக்கியமானவர்கள். அதற்குப் பிறகு வருபவர்கள் ஜோஸும் மாலீஸ்ஸேயும். ஏனென்றால், அவர்கள் இப்போது ‘சுத்தம் செய்யும் குழு'வில் இருந்தாலும், பொதுவாக அவர்கள் மாதலாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் தான். ஒரே நொடியில் "ஹோயிங் குழு'வையும் மற்ற குழுவைச் சேர்ந்தவர்களும் மாதலாவைச் சுற்றி வந்து கூடிவிட்டார்கள்.

யாருமே மாதலாவை நேரடியாகப் பார்க்கவில்லை. யாரும் பேசவும் இல்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்றார்கள்.

தன் மனதில் கற்பனை செய்துகொண்டிருந்த செடியின்- இப்போது நிர்வாணமாக இருக்கும் கிளைகளை மாதலா வாஞ்சையுடன் தடவி விட ஆரம்பித்தான்.

“மரியா, நீ ஏன் இங்கே வந்தாய்?'' கங்காணியின் குரல் முரட்டுத்தனமாக ஒலித்தது. அந்த மனிதரின் கனத்தால் நசுக்கப்பட்ட, மரியாவின் மார்பிற்குள்ளிருந்து மெதுவாக வந்துகொண்டிருந்த மூச்சுக் காற்று, இடைவெளி விட்டுவிட்டு வந்தது. கங்காணியின் குரல், எங்கோயிருந்து கேட்கும் காற்றின் முணுமுணுப்பைப்போல மெதுவாக அவனிடம் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தது.


“நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்?'' அவள் முனகினாள்.

“ம்...?''

“ஏன்?'' அவனைப் பிடித்து உலுக்கிக்கொண்டே மேலோட்டமாகக் கேட்டாள்.

"ம்...?'' கங்காணியின் கை மரியாவின் மார்பகங்களின்மீது அலட்சியமாகப் படர்ந்து கொண்டிருந்தது.

“ஏன்? இது உனக்குப் பிடிக்கவில்லையா?''

அந்த மனிதர் தாவி எழுந்தார். “ம்...? உனக்கு இது பிடிக்கவில்லையா?'' அவர் தன்னுடைய ஆடைகளை சரிப்படுத்திக் கொண்டே மரியாவின் பக்கம் திரும்பியவாறு கூறினார் : “ஏய்...? இது முடிந்துவிட்டது... எழுந்திரு!''

வயலின் தரைப் பகுதியின் அரைவெளிச்சத்தில் மரியாவின் கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. “இந்த மாதிரி... சரியாக இருக்காது... இரவு நேரமாக இருந்தால், ரொம்ப நல்லது...'' அவளுடைய குரலில் ஒருவித பயம் கலந்திருந்தது. “இப்போது மாதலா பார்த்து விட்டார்... மாதலா பார்த்து விட்டார்!'' அவள் முணுமுணுத்தாள்: “வரப்போகும் இரவு வேளையில்தான் நாம் இருவரும் சந்தித்துப் பேசப்போகிறோம் என்று தானே நீங்கள் கூறினீர்கள்!''

“சரி... வா... பெண்ணே நிகழ்ச்சி முடிந்துவிட்டது. நான் இப்போதுதான் உனக்கு தயிரைக் கொடுத்தேன்.''

தன்னுடைய முதுகு கிடக்கும் வயலின் கரடுமுரடான தரையை அவளால் உணர முடிந்தது.

பசுமையான கடலின் மேற்பகுதிக்கு வெளியே, தன்னுடைய உருவத்தை முதலில் காட்டியது கங்காணிதான். காற்றின் அலைகளுக்கு மத்தியில் தன்னுடைய கைகளை நுழைத்த அவர், பணி செய்து கொண்டிருக்கும் மனிதர்களை நோக்கி நடைபோட்டார்.

மரியா வயலின் மேற்பகுதிக்கு எழுந்தபோது, கடலின் பெருமூச்சு கலந்த அழுகை தொடர்ந்து அவளைச் சுற்றி ஒலித்துக்கொண்டே இருந்தது. தன்னுடைய ஆடைகளில் ஒட்டியிருந்த மண் துகள்களைத் தட்டிவிட்டு, அவள் பணி செய்யும் குழுவை நோக்கி நடந்தாள்.

பாதையில் நடந்து செல்லும்போது, அவ்வப்போது அவள் தன் கைகளை உயர்த்த வேண்டியதிருந்து. அதன்மூலம் கங்காணியைப் பின்பற்றி நடந்து சென்றதால் உண்டான அலைகளிலிருந்து தன்னை அவள் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதிருந்தது. "க்ரால் குழு'வைச் சேர்ந்த மனிதர்கள் மரியா கடந்து செல்வதற்காக சற்று விலகி, பாதையை விட்டார்கள். அந்த அமைதி அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தது.

மரியா, கடலின் வாசனையை உணர்ந்தாள்.

மாதலாவின்மீது எரிச்சலடைந்திருந்த ‘க்ரால் குழு'வைச் சேர்ந்த இளைஞனின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாற ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்கு முன்னால், கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருந்த அவன் இப்போது வெறுப்புக் கொள்ள ஆரம்பித்தான். நான்காவது முயற்சியில் அவன் சில வார்த்தைகளை வெளியே விட்டான். “மாதலா, சூரியன் மிகவும் வெப்பமாக இருக்கிறது... நீ வேலை செய்யும் இடத்தில்...''

அவன் கூறிய வார்த்தைகள் சரியானவைதானா என்பதைப் பற்றி தான் முடிவு எடுப்பதற்கு முன்னால் தான் ஏதாவது கூறவேண்டும் என்று மாதலா நினைத்தான். “ஆமாம், என் மகனே... வயலில் சூரியன் வெப்பமாகத்தான் இருக்கிறது.''

அங்கு நிலவிக் கொண்டிருந்த அமைதியை இல்லாமல் செய்வதற்கு அந்த வார்த்தைகள் போதுமானவையாக இல்லை. மரியா தன் கண்களை மேலே உயர்த்தவில்லை. குழுவைச் சேர்ந்த எல்லா மனிதர்களும் தூண்களைப்போல தரையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

“மாதலா... '' அந்த இளைஞனின் குரல் மிகவும் சிரமத்துடன் தொடர்ந்து கொண்டிருந்தது. “மாதலா... நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்... இப்போதே நாங்கள் அதை முடித்துக் காட்டுகிறோம். அவர்கள் எங்களைக் கொன்று விடலாம்... ஆனால், சாவதற்கு நாங்கள் பயப்படவில்லை...''

அதை ஒப்புக்கொள்வதைப் போன்ற முணுமுணுப்பு அங்கு குழுமியிருந்த மனிர்களிடமிருந்து எழுந்து மேலே வந்தது.

மாதலா தன் கண்களை உயர்த்தி, தன்னுடைய சக தொழிலாளிகளின் கோபத்தை மெதுவாக ஆராய்ந்து பார்த்தான்.

“மாதலா, உன் மகளிடம் அந்த மனிதர் எப்படி நடந்துகொண்டார் என்பதை நாங்கள் எல்லாருமே பார்த்தோம். சொல்லப்போனால் உன் கண்களுக்கு முன்னாலேயே! ஏதாவது பேசு... மாதலா!'' கெஞ்சுகிற நிலையில் இருந்த அந்த இளைஞனின் கண்கள் மாதலாவின் கண்களில் எதிர்ப்பை வெளிப்படுத்துகிற மாதிரியான ஒரு அறிகுறி தெரிகிறதா என்று தேடிக்கொண்டிருந்தன.

மாதலாவின் உள் மனம் மிகுந்த போராட்டத்தில் இருந்தது.

அங்கிருந்த பழைய கட்டடமொன்றின் மூலையில் கங்காணி நின்று கொண்டு, மரியாவைத் தேடிக்கொண்டிருந்தார். அவளைப் பார்த்ததும், அவர் ஒரு வெள்ளி நாணயத்தை அவளுடைய மடியில் தூக்கிப் போட்டார்.

“நான் உனக்குத் தரவேண்டியது...'' அவருடைய உதடுகளிலிருந்து ஒரு பற்ற வைத்த சிகரெட் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த உதடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தனக்குத்தானே திருப்திப்பட்டுக் கொள்ளும் புன்னகையாக மாறின.

தன்னுடைய ஆடைகளிலிருந்து தன் கைகளை எடுத்தாள். யாரோ இருமினார்கள். மரியா தன்னுடைய கையை நடுங்கிக்கொண்டே பின்னோக்கி இழுத்துக்கொண்டாள். அவள் தன் கைகளை மார்பின்மீது குறுக்காக வைத்தாள். தொடர்ந்து தன் கைகளைக் கொண்டு தன்னுடைய முதுகை அணைத்துக் கொண்டாள்.

“நல்லது, மரியா...'' கங்காணியின் கண்கள் ஆச்சரியத்தால் நிறைந்திருந்தன.

மரியா அந்த கட்டடத்திற்கு எதிராக தன்னுடைய சரீரத்தைக் காட்டியவாறு, தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

மாதலா தன்னுடைய கவலைகள் நிறைந்த கண்களால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

“நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்?'' அவள் கவலையுடன் முணுமுணுத்தாள்.

கங்காணி தன் இடுப்பில் கைகளை வைத்தவாறு, சிறிய ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினாள்: உன் விஷயம் என்ன பெண்ணே? உனக்கு பணம் தேவையில்லையா? பணம் வாங்குவதற்கு பயப்படுகிறாயா?'' அவர் நிறுத்தினார். மரியாவின் பதிலுக்காக காத்திருந்தார். பிறகு, அவரே தொடர்ந்து கேட்டார். “நீ ஒரு தேவடியாள் என்பதை அந்தப் பையன்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா?''

மரியா தன்னைத்தானே மிகவும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, தன் நகங்களை தன்னுடைய முதுகில் அழுத்திப் பதிய வைத்தவாறு, மெதுவான குரலில் வேதனையுடன் முணுமுணுத்தாள்: “மாதலா நம்மைப் பார்த்து விட்டார்... மாதலா பார்த்துவிட்டார்...''

“அதனால் உனக்கு என்ன?'' கங்காணி தன்னுடைய கைகளை நீட்டியவாறு, தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்திக்கொண்டே, அவற்றைத் தன் மார்பின்மீது மடித்து வைத்தார்.

"மாதலா... அவர் என்னுடைய தந்தை...'' மரியா வார்த்தைகளை பயத்துடன் கூறினாள்.

அந்தக் குழுவில் இருந்த மனிதர்கள், தூண்களைப்போல இறுக்கமாக நின்றுகொண்டு, கங்காணியின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அமைதியாக இருந்துகொண்டே அவரை துண்டு துண்டாக நறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

“என்ன!'' இறுதியாக கங்காணி வார்த்தையை உச்சரிக்க முயன்றார். ரத்தம் மிகவும் வேகமாக அவருடைய வெளிறிப்போன முகத்தை நோக்கிப் பாய்ந்தது. “நீ மாதலாவின் மகள் என்ற விஷயம் எனக்குத் தெரியாது''. அவர் மெதுவான குரலில் திக்கித் திணறி கூறினார். “உனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்ற விஷயமே எனக்குத் தெரியாது. என்ன அழகு! நான் அவருடைய ஒரு நண்பன்...''


அந்தக் குழுவில் இருந்த மனிதர்கள் மவுனம் இறுக்கத்தால் துடித்துக் கொண்டிருந்தது.

“மாதலா...'' கங்காணி மாதலாவின் அருகில் வந்தார். “மாதலா, நீ விரும்பினால், இன்றைய பிற்பகல் நீ வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை. இங்கே... ஒரு இடத்தில் உட்கார்ந்து உன் மகளுடன் உரையாடிக் கொண்டிரு.''

மாதலா தன்னுடைய கவலை நிறைந்த கண்களை தரையை நோக்கித் திருப்பினான். கண்ணுக்குத் தெரியாத செடியின் அளவு என்னவென்று தெரியாமல், அவனுடைய விரல்கள் பலமாக மூடின. அங்கு நிலவிக் கொண்டிருந்த பேரனமதி கங்காணியை ஒரு பதட்ட நிலைக்குத் தள்ளிக் கொண்டிருந்தது. உண்மையை ஒப்புக் கொண்ட ஒரு அரைப் பார்வையுடன், அவர் திக்கித் தடுமாறிக்கொண்டே கூறினார்: “நாசமாப் போக! எனக்கு எப்படித் தெரியும்? அவர் குழுவில் இருந்த ஆட்களை நோக்கித் திரும்பி, அந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்டார்.

குழுவில் இருந்த மனிதர்கள் எதுவுமே பேசாமல், இருண்ட முகங்களுடன் கீழ்ப்படியாத மன நிலையுடன் நின்றிருந்தார்கள்.

“கேடுகெட்ட பிறவிகள்!'' கங்காணி முழுமையான கோபத்துடன் கர்ஜித்தார்.

“மாதலா... நான் உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன். நீ உன் மகளுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைக்குச் செல்.'' கங்காணி கூறினார். மாதலாவின் எந்தவித அசைவுமில்லாத உடலில் ஏதாவது உயிரோட்டம் உண்டாகிறதா என்பதை ஆர்வத்துடன் அவர் ஆராய்ந்தார்.

மாதலா மேலும் சற்று கீழே தன்னுடைய தலையைக் குனிந்து கொண்டிருந்தான்.

“மாதலா...'' திக்கித் தடுமாறியவாறு கங்காணி அழைத்தார். அவனைப் பார்த்துக்கொண்டே இருந்த அவர், தன்னுடைய கையை கீழே தொங்க விட்டார். “கேடுகெட்ட பிறவிகள்...'' அவர் அங்கேயிருந்த கட்டடத்தை நோக்கி நடந்து, மறைந்தார்.

‘க்ரால் குழு'வைச் சேர்ந்த அந்த இளைஞன் தன்னுடைய குரலை உயர்த்தினான். அவன் சொன்னான்: “மாதலா, உனக்கு முன்னால் வைத்து அந்த ஆண் உன் மகளிடம் எப்படி நடந்துகொண்டார் என்பதை நாம் எல்லாருமே பார்த்தோம்.''

அந்தக் முழு குழுவும் அந்த இளைஞன் கூறியதை அமைதியாக ஏற்றுக் கொண்டது.

மரியா தன் கைகளை தன்னுடைய முதுகுப் பகுதியில் வைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.

மாதலா தன் தலையை தன்னுடைய மார்பின் மீது வைத்துக்கொண்டான்.

கங்காணி அந்த கட்டடத்தின் மூலையில், தன் கையில் ஒரு ஒயின் புட்டடியை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். “ஏய்... பையன்களா!'' அவருடைய குரல் கம்பீரமாக இருந்தது. அவர் குழுவைப் பார்த்து உரத்த குரலில் கத்தினார்: “நாம் வேலைகளில் இறங்குவோம். நேரமாகி விட்டது! இப்போதே ஒன்றரை மணி ஆகிவிட்டது! சுத்தம் செய்யும் குழு மாலைய்ஸே! எலியாஸ்! ஆல்பெர்ட்டோ!... சுத்தம் செய்யும் குழுவை சேர்ந்த பையன்களே! சுத்தப்படுத்துங்கள். ஏய்... ஆற்றின் ஒரத்தில் இருக்கும் புதர்களைச் சுத்தம் பண்ணுங்கள்! தோட்ட வேலை செய்யும் குழு! புறப்படுங்கள். தோட்ட வேலை செய்யும் குழு முட்டைக் கோஸ்களில் இருக்கும் புழுக்களை நீக்குகங்ள! க்ராஸ்... க்ராஸ் குழு! கால்நடைகளை நீர் பருக அழைத்துக் கொண்டு செல்லுங்கள்! ஹோயிங் குழு! என்னைப் பின்பற்றி வாருங்கள்! வாருங்கள் ஹோயிங்குழு! வயலுக்குள் இறங்குங்கள்.

குழுக்களைச் சேர்ந்த மனிதர்கள், இப்போதும் அதே இடத்தில் எந்தவித அசைவுமில்லாமல் நின்றுகொண்டிருந்தார்கள்.

தன் மனதில் கற்பனை செய்து கொண்டிருக்கும் செடியின் ஞாபகம் திடீரென்று மாதலாவின் விரல்களுக்கு வந்தது. அவை திறந்து, அந்தச் செடியை வருட ஆரம்பித்தன.

“சரி... பையன்களே! நான் கூறுவது உங்களின் காதுகளில் விழவில்லையா? மணி அடித்தாகிவிட்டது! "தினா' முடித்து விட்டது!''  கங்காணி அதிகமான எரிச்சலுடன் கத்தினார். அவர் தன் கைகளில் வத்திருந்த அந்த புட்டியையே பார்த்தார். “மாதலா...'' அவர் உரத்த குரலில் அழைத்தார்.

மாதலா எழுந்தான்.

“நான் கூறுவது உனக்கு கேட்கவில்லையா? நீ போகலாம் என்று நான் ஏற்கெனவே கூறி விட்டேன்... போ... பன்றியே!''

மாதலா தனக்கு கொடுக்கப்பட்ட அந்த புட்டியை வாங்கிக் கொண்டான்.

“பன்றி! கேடு கெட்ட பயல்கள்! வேலைக்குப் போங்கள்... நீங்கள் கேடு கெட்ட பிறவிகள்!''

குழுக்களில் இருந்த எல்லாரும் மாதலாவையே பார்த்தார்கள். ‘க்ரால் குழு'வைச் சேர்ந்த அந்த இளைஞன் முன்னோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தான். அவன் சொன்னான்: “மாதலா!''

வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரமான ஒரு முக பாவனையுடன், மாதலா தன் கண்களால், தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த மனிதர்களின் ஆர்வம் நிறைந்த முகங்களைப் பார்த்தான்.

அந்த புட்டியின் வெளிப்பகுதியில் வியர்வை படிந்திருந்தது. அதற்குள் இருந்த ஒயின் அழுக்கடைந்த சிவப்பு நிறம் கலந்த மஞ்சள் நிறத்தில் இருந்தது. மாதலா ஒரே மடக்கில் அதைக் குடித்தான். அதன் பகுதியை தன்னுடைய தாடியை நனைக்குப்படி செய்தான். அது கீழே கழுத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. தொடர்ந்து அவன் காலியான புட்டியை கங்காணியிடம் கொடுத்தான்.

“நீங்கள்... கேடு கெட்ட பயல்களா! வேலைக்குப் போங்க... நான் கூறுகிறேன்!''

தூண்கள் அசைந்தன... சோர்வுடன் நடந்தன...

நிலவிக் கொண்டிருந்த அமைதி முழுமையான தோல்வியில் முடிந்தது.

ஒவ்வொரு விஷயத்தையும் மரியா மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

கங்காணி காலியாக இருந்த புட்டியை அதன் கழுத்துப் பகுதியைப் பிடித்தவாறு ஆட்டிக் கொண்டிருந்தார்: “கேடு கெட்ட கருப்பினப் பயல்கள்!''

"க்ரால் குழு'வைச் சேர்ந்த அந்த இளைஞன் மாதலாவின் கால் பாதத்தில் காறித் துப்பினான்: “நாயே!''

அந்த அவமரியாதையை மாதலா பொருட்படுத்தவில்லை. அவன் தன் முதுகைத் திருப்பிக் கொண்டு, வயலுக்குச் செல்லும் பாதையில் நடந்தான். ந்குய்யானாவும் ஃபிலிமோனும் அவனைப் பின்பற்றி நடந்தார்கள்.

ட்ஜிமோ மற்ற தொழிலாளர்களின் பக்கம் திரும்பி, கூறினான்: “நாம் புறப்படுவோம்...''

“சீக்கிரம்... சீக்கிரம்...'' கங்காணி கர்ஜித்தார்: “சீக்கிரம்... பன்றிகளே!''

ட்ஜிமோவின் தலைமையில், அந்த குழுவைச் சேர்ந்த மனிதர்கள் வேலை செய்வதற்காக நடக்க ஆரம்பித்தார்கள்.

“வேகமாக செல்லுங்கள்.'' கங்காணி கட்டளையிட்டார்.

முதல் அடி அடித்தபோது புட்டி உடைந்தது. ஆனால், ‘க்ரால் குழு'வைச் சேர்ந்த அந்த இளைஞன் சிறிதுகூட அசையவில்லை. இரண்டாவது அடி அவனுடைய உச்சந்தலையை உடைத்தது. கங்காணியின் காலணிகள் வெறியுடன் அவனுடைய முகத்தை நசுக்கின: “தேவடியாள் பையா!''

மாதலா முன்னோக்கி வளைந்து, செடியின் தண்டுப் பகுதியை தன் மணிக்கட்டில் சுற்றினான். அதை உறுதியாகப் பிடுங்க முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக அவன் மெதுவாக இழுத்துப் பார்த்தான்.


தொடர்ந்து அந்தச் செடி மண்ணுக்குள்ளிலிருந்து வெளியே வரும்வரை, அவன் தன்னுடைய சரீரத்தை பின்னோக்கி இழுத்து வைத்துக்கொண்டிருந்தான். பிடுங்கிய செடியை தரையில் மிகவும் கவனமாக, தன்னைச் சுற்றி தான் ஏற்கெனவே பிடுங்கி வைத்திருந்த செடிகளின் குவியலுடன் சேர்த்து வைத்தான். தானியக் கதிர்களுக்கு இடையே அவனுடைய பார்வை ஓடியது. ட்ஜிமோ, ஃபிலிமோன், ந்குய்யானா, முத்தம்காட்டி, டான்டேன், முத்தாம்பி- எல்லாரும் அருகிலேயே இருந்தார்கள். மாதலா அவர்களையே பார்த்தான். ஒரு நீண்ட பெரு மூச்சை வீட்டுக்கொண்டே, அவன் தன் வேலையில் மீண்டும் ஈடுபட்டான்.

தன்னுடைய வினோதமான மீனுக்கு மேலே, பசுமையான கடலின் மேற்பரப்பை ஒரு மென்மையான தென்றல் வருடிக் கொண்டு சென்றது. அது உண்டாக்கிய மென்மையான கலைகள் உடைந்து, தணிந்து நகர்ந்து, மீண்டும் உடைந்து, கடல் சிப்பிகளின் ரகசியத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.                

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.