
வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?
இல்லை.
மரணத்திற்கு அர்த்தம் இருக்கிறதா?
இருக்கிறது.
அர்த்தமில்லாத வாழ்க்கையில் இருந்து தப்பிப்பது - அதுதான் மரணம் என்பதற்கு அர்த்தம்.
படித்து முடித்த ஆங்கில நாவலை மேஜைமீது வைத்துவிட்டு, ராஜேந்திரன் நாற்காலியை விட்டு எழுந்தான். மேஜை டிராயரைத் திறந்து உள்ளே பார்த்தான்.
பீடி இல்லை.
சாலைக்குச் சென்றால் பீடிக் கடைகள் இருக்கின்றன. அங்கு பீடி கிடைக்காது - ராஜேந்திரன் புகைக்கும் பீடி!
அந்த பீடிக்கு உலகமெங்கும் பரவும் வாசனை இருக்கும். உலகத்தைப் பார்ப்பதற்கான பார்வையைத் தரும் பீடி அது.
மாலை நேரம் வந்ததும் அப்புக் குட்டன் அந்த பீடியுடன் வருவான் - யாருக்கும் தெரியாமல்.
எல்லோருக்கும் தெரிய விற்கக்கூடிய பீடி அல்ல அது. ஏனென்றால், மனதின் உன்னதமான ரகசியம் அந்த பீடியில் அடங்கி இருக்கிறது.
கஞ்சா!
ராஜேந்திரன் சாளரத்தை நோக்கி நடந்தான். இரண்டு கைகளையும் கம்பிகளில் வைத்துக் கொண்டு அவன் வெளியே பார்த்தான்.
பெரிய வீடுகளும் அலுவலகங்களும்... அவற்றைத் தாண்டி மேகங்கள் படர்ந்திருக்கும் ஆகாயம்....
என்ன ஒரு வெப்பம்! கோடை காலத்தில் மழை மேகத்தின் வெப்பம்! அதற்குப் பெயர் ஹ்யூமிடிட்டி – ஹ்யூமிடிட்டி!
எரிந்தது - வாழ்க்கை எரிச்சலாக இருந்தது. மனிதன் பிறந்ததில் இருந்து இறப்பது வரையில் எரிச்சலை அனுபவித்துக்கொண்டே இருப்பது என்றால்...!
எதற்கு?
எதற்காக?
பயனற்ற வாழ்க்கை.... இலக்கே இல்லாத வாழ்க்கை... வீணான ஆசைகளும் வேதனைகளும் கொண்ட எரிச்சல் நிறைந்த வாழ்க்கை....
மரணத்திற்கு நோக்கம் இருக்கிறது. பயன் இருக்கிறது - வாழ்க்கையிலிருந்து தப்பிப்பது!
துக்கத்தை அழிக்கும் மரணம்!
கீழே, சாலையின் வழியாகப் பெண்களும் ஆண்களும் நிறைய நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எதற்காக என்றும்; எங்கே என்றும் தெரியாத பயணம்!
கவலையிலிருந்து கவலைக்கு... ஏமாற்றத்திலிருந்து ஏமாற்றத்திற்கு... கரையைக் காணாமல் நீந்திக் கொண்டிருக்கும் புழுக்கள்!
அங்கு நடந்து போய்க் கொண்டிருப்பவர்களில் பலரும், ராஜேந்திரனுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான். அரசாங்க அலுவலகங்களில் க்ளார்க்குகளாகப் பணியாற்றுபவர்களும் அவர்களில் இருக்கிறார்கள் - தங்களுடைய கவலைகளை மனதிற்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டு, பிறரின் கவலைக்கான ஃபைல்களை ஆராயச் செல்பவர்கள்!
ஆசிரியர்களும் இருக்கிறார்கள் அந்தக் கூட்டத்தில் - அறிவு இல்லாதவர்களுக்குக் கல்வி புகட்டப் போகும் அறிவு இல்லாதவர்கள்!
மாணவர்களும் இருக்கிறார்கள் அந்தக் கூட்டத்தில் - அறிவைத் தேடி அறிவு இல்லாமைக்குச் செல்பவர்கள்!
ஒரு ஆளை மட்டும் அந்தக் கூட்டத்தில் காணவில்லை - துளசி!
அவளை நேற்றும் காணவில்லை. நேற்றைக்கு முந்தின நாளும் காணவில்லை. அதற்கு முந்தைய நாளும் பார்க்கவில்லை.
அவள் கல்லூரிக்குப் போகவில்லையா? அவள் தன் படிப்பை நிறுத்தி விட்டாளா? அவளை யாராவது திருமணம் செய்து கொண்டு விட்டார்களோ? அவளுக்கு ஏதாவது நோய் வந்திருக்குமோ?
அவளுடைய வீடு எங்கே இருக்கிறது?
அவன் எதற்காக அவளுடைய வீட்டைத் தேடுகிறான்?
வெறுமனே பார்க்க.
எதற்காகப் பார்க்க வேண்டும்?
அடுத்த அறையில் ஒரு குலுங்கல் சிரிப்பு! நேற்று அந்த அறைக்கு வந்தவர்கள். அவர்களும் - அவளும் அவளுடைய அவனும்.
தேன் நிலவிற்காக வந்திருக்கும் புதுமணத் தம்பதிகளாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், காதலனும் காதலியுமாக இருக்க வேண்டும்.
நேற்று இரவு ராஜேந்திரன் தூங்கவில்லை. பக்கத்து அறையில் இருந்து வந்த அந்தக் குலுங்கல் சிரிப்பு அவ்வப்போது கேட்டுக் கொண்டேயிருந்தது. அந்தச் சிரிப்பையும் கேட்டுக் கொண்டு எப்படி உறங்க முடியும்?
புதுமணத் தம்பதிகள்! காதலன், காதலி! சிரிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். எவ்வளவு நிமிடங்கள்? வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்பதை அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கும் புழுக்கள்!
அடைக்கப்பட்டிருந்த கதவில் ஒரு தட்டல்!
ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தான்.
தபால்.
ராஜேந்திரன் வேகமாக நடந்து சென்று கதவைத் திறந்தான். அஞ்சல் ஊழியர் ஒரு மணியார்டர் ஃபாரத்தையும் ஒரு கடிதத்தையும் ராஜேந்திரனின் கையில் கொடுத்தார். ராஜேந்திரன் நாற்காலியில் உட்கார்ந்தான். மணியார்டர் ஃபாரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.
அஞ்சல் ஊழியர் சில பத்து ரூபாய் நோட்டுகளை எண்ணி மேஜைமேல் வைத்தார். ராஜேந்திரன் அதை எடுத்துத் தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்தான். அஞ்சல் ஊழியர் கேட்டார்:
“எண்ணிப் பார்த்தீங்களா சார்?”
“எதற்கு எண்ணணும்? ஐந்நூறுதானே?”
“ஐந்நூறா?” – அஞ்சல் ஊழியர் நெற்றியைச் சுருக்கினார். அவர் மணியார்டர் ஃபாரத்தை ராஜேந்திரனின் முகத்திற்கு அருகில் காட்டியவாறு சொன்னார்:
“சார், பாருங்க.”
“இருநூறுதானே!” - ராஜேந்திரனின் முகம் வெளிறியது.
அஞ்சல் ஊழியர் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது மாதிரி சிரித்துக்கொண்டே வெளியேறினார்.
ஐந்நூறு ரூபாயாவது அனுப்பி வைக்க வேண்டும் என்று அவன் எழுதியிருந்தான். இருநூறு அனுப்பி வைத்திருக்கிறான்!
ஹோட்டலுக்கு முந்நூறு ரூபாயைத் தாண்டித் தர வேண்டியதிருக்கிறது. ஹோட்டல் மேனேஜர் உடனடியாகப் பணத்தைத் தர வேண்டுமென்று கறாரான குரலில் கூறி விட்டார்.
இருநூறு ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
தேநீர் கடைக்காரனுக்குப் பதினைந்து ரூபாய் தரவேண்டும். சலவை செய்பவனுக்கு ஆறு ரூபாய் தர வேண்டும். முடி வெட்டும் கடையில் கடன் கூறி முடி வெட்டியிருக்கிறான். பேண்ட்டையும் சட்டையையும் சலவை செய்யக் கொடுத்திருக்கிறான். அதை வாங்குவதற்குப் தரவேண்டும். டூத் பேஸ்ட் தீர்ந்து விட்டது. வாங்க வேண்டும்.
சசியும் பாபுவும் காத்திருப்பார்கள். ஒரு புட்டியாவது இல்லாமல் அங்கு போக முடியாது. வெறும் ஹெவேர்ட் ப்ராண்டியாவது வாங்க வேண்டும். அதற்குப் பிறகும் வேறு ஏதாவது வேண்டாமா?
இருநூறு ரூபாய் - அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
ஓ! தந்தையின் கடிதம். ராஜேந்திரன் அலட்சியமாகக் கடிதத்தைப் பிரித்துப் படித்தான்.
“என் அன்பற்குரிய மகனே,
இருநூறு ரூபாய் அனுப்பியிருக்கிறேன். மிகவும் சிரமப்பட்டு இந்தப் பணத்தை அனுப்பியிருக்கிறேன். விற்பதற்கு எதுவும் இல்லை. அடமானம் வைப்பதற்கும் எதுவும் இல்லை. எல்லாம் நம்மை விட்டுப் போய்விட்டன மகனே. அப்பா ஒடிந்து போய் விட்டேன். எல்லோரும் உன்னை எதிர்பார்த்துத்தான் இருக்கிறோம். உன் இரண்டு தம்பிமார்களும் இரண்டு தங்கைமார்களும் உனக்கு வேலை எப்போது கிடைக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா தினமும் கோவிலுக்குப் போகிறாள் - உனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தக் குடும்பத்தைத் தாங்கப் போகிற தூணும் நிழலும் நீதான் மகனே!”
ராஜேந்திரன் பற்களைக் கடித்தான். கடிதத்தைக் கைகளால் கசக்கினான். அதைச் சிறு சிறு துண்டுகளாகக் கிழித்தான். பிறகும் கைகளால் கசக்கி, வேஸ்ட் பேப்பர் கூடைக்குள் எறிந்தான்.
வேலை கிடைப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். குடும்பத்தைத் தாங்கப் போகிறவனும் நிழலும் அவன்தானாம்!
யாருக்கும் யாரும் தாங்குபவனும் இல்லை; நிழலும் இல்லை. யாரும் யாரிடமும் கடன்பட்டிருக்கவில்லை.
மனிதன் தனியானவன். தனியனாக வருகிறான். தனியனாகவே போகிறான்.
அர்த்தமே இல்லாத வாழ்க்கை. இலக்கே இல்லாத வாழ்க்கை!
பக்கத்து அறைக்குள்ளிருந்து மீண்டும் குலுங்கல் சிரிப்பு கேட்டது. ராஜேந்திரன் ஜன்னலருகில் சென்று சாலையைப் பார்த்தான்.
இல்லை - துளசி வரவில்லை.
அவள் இனி வரமாட்டாளா?
எம்.ஏ. படித்தவன் - மலையாளம் எம்.ஏ! படிப்பதெல்லாம் ஆங்கில நாவல்கள்! ஆங்கிலப் புதினங்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஃப்ரெஞ்ச் புதினங்களும்.
சில குறிப்பட்ட வகையைச் சேர்ந்த நாவல்களைத்தான் அவன் படிப்பான். வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. நோக்கம் இல்லை. மனிதன் இந்த உலகத்தில் எந்தவித நோக்கமும் இல்லாமல் உழன்று கொண்டிருக்கும் ஒரு தனியன்... கவலையில் இருப்பவன். மரணம் எப்போதும் மனிதனுக்காகக் காத்திருக்கிறது. அவனுடைய அறிவும் சிந்தனையும் அவனுக்கு உதவப் போவதில்லை. மரணத்திற்கென்று படைக்கப்பட்ட மனிதன் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கிறான்.
அந்த வகையில் அவன் வாசித்த அனைத்தும் மரணத்தைப் பற்றிய தகவல்களைச் சத்தம் போட்டுக் கூறிக் கொண்டிருந்தன.
மலையாளம் எம்.ஏ. தேர்வில் இரண்டாம் வகுப்பில் அவன் வெற்றி பெற்றான். வேலைக்காகப் பல இடங்களுக்கும் மனு போட்டான் - அரசாங்க கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும்.
அரசாங்க வேலையென்றால் அதற்கு சிபாரிசு வேண்டும். சிபாரிசு! தனியார் கல்லூரிகளில் வேலை கிடைப்பதற்கு நன்கொடை கொடுக்க வேண்டும் - ஐயாயிரம் பத்தாயிரம் என்று!
ஒருவனை எம்.ஏ. படித்து முடிக்கச் செய்வதற்காக ஒரு குடும்பமே தியாகம் செய்திருக்கிறது. தாயும் தந்தையும் இளைய சகோதரர்களும் சகோதரிகளும். இரண்டு நேரம் மட்டுமே அவர்கள் கஞ்சி குடித்து வாழ்க்கையை நடத்தினார்கள் - கல்லூரியில் படிக்கும் மூத்த மகனுக்கு பணம் அனுப்பி வேண்டும் என்பதற்காக.
பணம் அனுப்ப ஒருநாள் தவறினால், பயமுறுத்துகிற மாதிரி கடிதம் வரும். படிப்பை நிறுத்திவிட்டு, ஏதாவதொரு பாதையைத் தேடிப் போகப் போவதாக எழுதுவான். தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறுவான்.
தாயும் அவனுடைய தம்பிகளும் தங்கைகளும் அழுவார்கள். தந்தை மிகவும் சிரமப்பட்டு பணத்தைத் தயார் பண்ணி அனுப்ப வைப்பான்.
அந்த வகையில் ராஜேந்திரன் படித்தான். வெற்றி பெற்றான். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் வீட்டிற்குச் சென்று வசிக்க ஆரம்பத்தான். கல்லூரி விடுதியில் கிடைத்ததைப் போன்ற உணவு வகைகள் அவனுக்கு வேண்டும். சிகரெட் வேண்டும். கஞ்சா பீடி வேண்டும்.
அவை மட்டுமல்ல - ப்ராண்டியோ விஸ்கியோ வேண்டும்.
வாழ்க்கைக்கு அப்பால் ஏதாவது இருக்கிறதா என்பதைத் தேட வேண்டும்.
சுய உணர்வு அற்ற மனதின் அடி ஆழத்திற்குள் செல்ல வேண்டும்.
கஞ்சாவின் உதவி இல்லாமல் வாழ்க்கைக்கு அப்பால் போக முடியுமா? ப்ராண்டியோ விஸ்கியோ இல்லாமல் சுய உணர்வு அற்ற மனதின் அடி ஆழத்திற்குள் நுழைய முடியுமா?
பகல் நேரத்தில் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும்தான் வீட்டில் உணவு. இரவு வேளையில் சோறும் மரவள்ளிக் கிழங்கும் மீனும்.
“அவன் எம்.ஏ. படிச்சவன் ஆச்சேடி! அவனுக்கு இப்படிக் கொடுத்தா சரியா இருக்குமா? ”- அவனுடைய தந்தை தாயிடம் சொன்னான்.
“அதை விட்டால் எப்படித் தரமுடியும்? அங்கே இருக்குறது மாதிரி கறியும் மீன் வறுவலும் சாம்பாரும் வச்சு சோறு தர இங்கே முடியுமா?”
“அவனுக்கு மட்டும் சோறு கொடு. ஏதாவதொரு குழம்பையும் வை.”
“அவனுக்கு மட்டும் சோறும் குழம்பும் கொடுத்தால், இளைய பிள்ளைகள் அதைப் பார்ப்பாங்கள்ல? அவங்களையும் நான்தானே பெத்திருக்கேன்?”
“அவங்க பார்க்கக் கூடாது.”
யாருக்கும் தெரியாமல், அவள் எம்.ஏ. படித்தவனுக்குச் சோறு கொடுத்தாள். புளிக் குழம்பும் அவியலும் சோறும். மாமிசம் இல்லை. மீன் இல்லை. அப்பளம் இல்லை.
அவன் கொஞ்சம் சோற்றை வாரித் தின்றான். எழுந்து கைகளைக் கழுவினான். கட்டிலில் போய் படுத்துக் கொண்டான்.
இரவிலும் அதேதான்.
காலையில், தேநீர்க் கடையிலிருந்து அவனுடைய தம்பி ஒரு தேநீர் வாங்கிக் கொண்டு வந்தான். ராஜேந்திரன் அதைக் குடித்தான்.
ப்ராண்டி இல்லை. விஸ்கி இல்லை. கஞ்சா பீடி இல்லை.
யாருடன் எதைப் பற்றிப் பேசுவது? வாழ்க்கைக்கு அப்பால் பார்க்கக்கூடியவர்கள் அந்த கிராமத்தில் யாரும் இல்லை. சுய உணர்வற்ற மனதின் ஆழத்திற்குள் நுழைந்து செல்லக்கூடியவர்கள் யாரும் அங்கு இல்லை.
என்ன ஒரு தனிமை!
மனிதன் தனியானவன்! செயலற்றவன்!
ஆனால், சுய உணர்வற்ற மனதின் அடி ஆழத்திலிருந்து குமிழிகள் மேலே வந்து கொண்டிருந்தன.
காமம்!
அவனுடைய தந்தையின் மருமகள் வத்சலா வழக்கமாக அங்கு வருவாள். ராஜேந்திரன் கல்லூரியிலிருந்து வந்துவிட்டால், அவள் அவனை விட்டுப் போகவே மாட்டாள். எப்போதும் விளையாட்டும் சிரிப்பும்தான்.
ஆனால், அந்த முறை கல்லூரியிலிருந்து வந்த பிறகு, அவள் அவன் இருக்கும் பக்கம் வரவேயில்லை. கதவின் மறைவில் நின்றுகொண்டு எட்டிப் பார்த்துச் சிரித்துவிட்டு, அவள் ஓடி விடுவாள். ஒரே வருடத்தில் உண்டான மாறுதல் அது!
அவள் வளர்ந்துவிட்டாள். அவள் மாறிவிட்டாள். அவளுடைய மார்பகத்திலும் பார்வையிலும் நடையிலும் மாற்றங்கள் உண்டாகிவிட்டன.
அவளுக்கு அருகில் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிறகு... என்னவோ வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் - அவளுக்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
மனிதன் சுதந்திரமானவன் இல்லை. ராஜேந்திரன் பற்களைக் கடித்தான். மனிதர்கள் ஒருவரையொருவர் நெருங்கக்கூடாதாம்! இந்த அடிமைத்தனத்தைச் சுமந்துகொண்டு எதற்காக வாழ்கிறார்கள்?
பக்கத்து வீட்டிலிருக்கும் அம்புஜம் வாசலில் வந்து நின்றிருந்தாள். அவள் குலுங்கிச் சிரித்தவாறு கேட்டாள்:
“ஒரு நாவல் தர்றீங்களா?”
“தர்றேன்... வா...” - ராஜேந்திரன் எழுந்து கதவுக்கு அருகில் சென்றான். அவன் அவளுடைய கையைப் பற்றினான்.
அவள் வெட்கப்பட்டு நெளிந்தாள். அவன் அவளை உள்ளே இழுத்தான். அவள் உள்ளே வந்தாள். அவனுடைய விரல்கள் அவளுடைய மார்புப் பகுதியில் ஆர்மோனியம் வாசித்தன.
“அம்புஜம் அக்கா....” - ஒரு அழைப்பு கேட்டது.
அவள் அவனுடைய பிடியை விட்டு விலகி வெளியே வேகமாக ஓடினாள். அவள் ஓடியே போய்விட்டாள்.
மனிதன் கோழையானவன். கோழைத்தனமும் அடிமைத்தனமும் கொண்ட மனிதன்! ராஜேந்திரன் காலால் தரையை வேகமாக மிதித்தான்.
ராமன் குட்டி உள்ளே வந்தான். ராஜேந்திரனின் நண்பன் அவன். நடுநிலைப் பள்ளியோடு அவன் படிப்பை நிறுத்திவிட்டான். இப்போது விவசாயம் செய்து கொண்டிக்கிறான். சிறிய ஒரு வியாபாரமும் இருக்கிறது. எம்.ஏ.தேர்வு எழுதிவிட்டு வந்திருக்கும் தன்னுடைய பழைய நண்பனைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று அவன் வந்திருக்கிறான்.
“ம்.... என்ன?” - ராஜேந்திரன் மிடுக்கான குரலில் கேட்டான்.
ராமன் குட்டியின் முகம் வெளிறிப் போனது. அவன் தடுமாறிய குரலில் சொன்னான்:
“ராஜன், உன்னைக் கொஞ்சம் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”
“ம்...”
ராமன் குட்டி சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். ராஜேந்திரன் அவனை உட்காரும்படிக் கூறவில்லை. நலம் விசாரிக்கவுமில்லை.
“நான் புறப்படட்டுமா?” - ராமன் குட்டி கேட்டான்.
“ம்”
ராமன் குட்டி போய் விட்டான்.
ராமன் குட்டி எம்.ஏ. தேர்வு எழுதவில்லை. அவன் நாகரீக மனிதன் இல்லை. அவன் சார்த்ரேயைப் படிக்கவில்லை. எஸ்ராபோண்டைப் படிக்கவில்லை. எலியட்டைப் படிக்கவில்லை. அவனிடம் என்ன பேச முடியும்? எப்படிப் பேச முடியும்?
மனிதன் என்ன, எதற்கு? - இவையெல்லாம் ராமன் குட்டிக்குத் தெரியுமா? அந்தக் கேள்வியைக் கேட்டிராத அதைப் பற்றி எதுவும் தெரிந்திராத ராமன் குட்டியிடம் அவன் என்ன பேசுவான்?
விவசாயியும் வியாபாரியுமான ராமன் குட்டிக்கு வாழ்க்கை என்பது வெறும் ஒரு தரிசு நிலம் என்பது தெரியுமா?
“கஞ்சி குடிக்க வா மகனே!” - அவனுடைய தாய் தன் மகனை அழைத்தாள்.
கஞ்சியா? மதிய உணவு சாப்பிடக் கூடிய நேரமாயிற்றே! சாப்பாட்டுக்கும் கஞ்சி குடிப்பது என்றுதான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுவது வழக்கம். படிப்பு இல்லாதவர்களும் நாகரீகம் இல்லாதவர்களும்! அவர்களுக்கு மத்தியில் ராஜேந்திரன் மட்டும் தனியனாக இருந்தான்.
உணவு சாப்பிடும் தரையில் போய் அவன் உட்கார்ந்தான். அவனுடைய தாய் கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தாள். அவித்த மரவள்ளிக் கிழங்கையும் கொண்டு வந்து வைத்துவிட்டு அவள் சொன்னாள்:
“கஞ்சிதான் இருக்கு மகனே. இப்போ இதை நீ குடி...”
ராஜேந்திரன் எழுந்தான்.
“சோறும் குழம்பும் வைக்க இங்கே எதுவும் இல்லை மகனே” - அவனுடைய தாய் வருத்தத்துடன் சொன்னாள்.
“எனக்கு இது வேண்டாம்” - ராஜேந்திரன் திரும்பி நடந்தான்.
“இதைக் குடிச்சிட்டு போ மகனே” - அவனுடைய அன்னை தன் மகனின் கையைப் பற்றினாள்.
ராஜேந்திரன் கையை அவளிடமிருந்து இழுத்தான். கோபத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு அவன் கேட்டான்:
“எதற்கு என்னை பெத்தீங்க? நான் என்னைப் பெறுங்கன்னு கேட்டேனா?”
அவனுடைய தாய் அதைக் கேட்டு அதிர்ந்து விட்டாள். அவள் தன் மகனையே வெறித்துப் பார்த்தாள்.
ராஜேந்திரன் மீண்டும் திரும்பி நடந்தான்.
“இல்லை.... அவன் பெறச் சொல்லி நான் அவனைப் பெறல”... - அந்த அன்னை தன் கண்ணீரைத் துடைத்தாள்.
அவனுடைய தந்தை தாயிடம் சொன்னான்:
“அவனுக்கு இங்கே இருக்குற உணவு பிடிக்காதுடி... திருவனந்தபுரத்துல ஹாஸ்டல்ல சாப்பிட்டு அவனுக்குப் பழக்கமாயிடுச்சு. அவன் இப்போ எம்.ஏ. படிச்சவன் ஆச்சே! நிலைமை அப்படி இருக்குறப்போ நம்ம கஞ்சியையும் மரவள்ளி கிழங்கையும் அவன் சாப்பிடுவானா?”
“அவனுக்கு தினமும் இங்கே விருந்து உண்டாக்கித் தர முடியுமா?” - அவனுடைய அன்னை கேட்டாள்.
“அது முடியாது. அப்படின்னா என்னதான் செய்றது?”
“தன்னைப் பெறச் சொல்லி கேட்டேனான்னு என்கிட்ட அவன் கேட்கிறான்.”
“அது உண்மைதானே? தன்னைப் பெத்தெடுக்கச் சொல்லி அவன் உன்கிட்ட சொன்னானா?” - அவனுடைய தந்தையின் முகம் வாடியது. அவன் சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டுச் சொன்னான்:
“அவன் சொல்லாமலே அவனைப் பெற்றெடுத்ததால், நாம தினமும் அவனுக்கு விருந்து உண்டாக்கித் தரணும்ன்றது கட்டாயமா இருக்கும்... ம்...! அவன் படிச்சு படிச்சு எம்.ஏ. க்காரன் ஆயிட்டான்ல! இனி அவன்...” - தான் சொல்ல வந்ததை அவன் முழுமையாகக் கூறவில்லை. அவனும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
ராஜேந்திரன் அறைக்குள்ளிருந்து வேகமாக வந்து கத்தினான்:
“நான் புறப்படணும்.”
“மகனே! எங்கே போகணும்?” - அவனுடைய தந்தை கேட்டான்.
“என்னால இங்கே இப்படி வாழ முடியாது. நான் திருவனந்தபுரத்துக்குப் போறேன்.”
“வேலை எதுவும் கிடைக்காமல் நீ அங்கே போறியா மகனே? எங்கே தங்குவே? எப்படித் தங்குவே?”
“நான் போறேன். நான் யாருக்கும் கட்டுப்பட்டவன் இல்லை. நான் தனி மனிதன்.”
அவனுடைய தந்தையும் தாயும் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த இளைய சகோதரர்கள் திகைத்துக் போய் நின்றார்கள்.
“எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்” - இப்படி உத்தரவு போட்டு விட்டு ராஜேந்திரன் வீட்டிற்குள் சென்றான்.
“அவனுக்குப் பணம் வேணும்னு...” - அவனுடைய தாய் மெதுவான குரலில் சொன்னாள்.
“ம்...”
“இப்போ எங்கேயிருந்து பணம் தயார் பண்ண முடியும்?”
“எங்கேயிருந்தாவது தயார் பண்ணணும். நான் கொஞ்சம் வெளியே போய் முயற்சி பண்ணிப் பார்க்குறேன்.”
நேரம் சாயங்காலம் ஆனது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட புலியைப் போல ராஜேந்திரன் அமைதியற்ற மனதுடன் அறைக்குள் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனுடைய தாய் அவன் அருகில் சென்றாள்.
“மகனே! நீ சாப்பிட வேண்டாமா?”
ராஜேந்திரன் தன் தாய் இருந்த பக்கம் திரும்பி உரத்த குரலில் கத்தினான்:
“என்னை ஏன் பெத்தீங்க?”
“கடவுள்கிட்ட கேளு மகனே. என்கிட்ட கேட்டால்... நான் என்ன சொல்வேன்?”
“பெறக் கூடாது... யாரும் யாரையும் பெறக் கூடாது. கஷ்டப்பட... கவலைப்பட... எதற்காகப் பிறக்கணும்? எதற்கு வாழணும்?”
“மகனே உனக்கு இப்போ என்ன கவலை இருக்கு?”
“கவலை இல்லாமல் வேற என்னதான் இருக்கு? தேவைக்குப் பணம் இல்லாமல், கஷ்டப்பட்டு படிச்சேன். வீட்டிற்கு வந்தால், நல்ல உணவு இல்லை. கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் சட்டினியும்தான் உணவு. படிக்க புத்தகங்கள் இல்லை. பேசுறதுக்கு ஆள் இல்லை. பிறகு... பிறகு... நான் போகணும்... இங்கேயிருந்து...”
அவனுடைய தாய் கண்ணீரைத் துடைத்தவாறு அறையை விட்டு வெளியேறினாள்.
“ஐம்பது ரூபாய் கிடைச்சது” - அவனுடைய தந்தை உள்ளே வந்தான். பணத்தைத் தன் மகனின் கையில் கொடுத்துவிட்டுச் சொன்னான்:
“இனி நாளைக்குப் போகலாம். மகனே, எதையாவது சாப்பிட்டு படுத்துத் தூங்கு.”
“நான் இப்பவே போகணும்” - பணத்தைத் தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்த அவன் தோல்பெட்டியைக் கையில் எடுத்தான்.
“இந்த இரவு நேரத்துல...” - அவனுடைய தாயின் தொண்டை இடறியது.
“தடை சொல்லாதடி... அவன் போகட்டும்” - அவனுடைய தந்தை அவளை அமைதிப் படுத்தினான்.
ராஜேந்திரன் வெளியேறி நடந்தான்.
“கடிதம் எழுதணும் மகனே” - அவனுடைய தந்தை உரத்த குரலில் அழைத்து சொன்னான்.
அதற்கு பதில் வரவில்லை.
ராஜேந்திரன் ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கத் தொடங்கினான். வேலைக்கு விண்ணப்பங்கள் எழுதி அனுப்பினான். நேர் காணல்கள் நடந்தன.
வேலை எதுவும் கிடைக்கவில்லை.
வேலை கிடைப்பதாக இருந்தால், சிபாரிசு வேண்டும்! நன்கொடை கொடுக்க வேண்டுமே!
தன் தந்தைக்கு வெகு சீக்கிரமே வேலை கிடைக்குமென்றும்; ஹோட்டலுக்குக் கொடுப்பதற்கு ஐந்நூறு ரூபாய் உடனடியாக வேண்டுமென்றும் அவன் கடிதம் எழுதினான். வீட்டிலிருந்து சீக்கிரமே பணம் வரும் என்று ஹோட்டல் மேனேஜரிடம் உறுதி அளித்திருந்தான்.
ஹோட்டல் அறையில் உட்கார்ந்து கொண்டு அவன் நவீன இலக்கியத்தைப் படித்தான். சொற்களுக்காகத் தேடுதல் நடத்தினான்.
எதற்காக சொற்கள்?
வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் விஷயங்களை எழுதுவதற்கு.... அதற்காகத்தான் சொற்கள்! மொழியில் இருக்கும் சொற்கள் அனைத்தும் பழையனவாகிவிட்டன. காலப் பழக்கத்தால், சொற்களின் அர்த்தங்கள் அனைத்தும் மாறிப் போய்விட்டன.
வாழ்க்கை மாறிப்போயிவிட்டது. வாழ்க்கையைப் பற்றிய நடவடிக்கைகள் அனைத்தும் தகர்ந்து போய்விட்டன. அந்த நம்பிக்கைகளின் தகர்தலைத்தான் எழுத வேண்டும் - அதைத்தான் வெளிப்படுத்த வேண்டும்.
சொற்கள் இல்லை!
அப்புக்குட்டன் கஞ்சா பீடி கொண்டு வருவான். கஞ்சா பீடியைப் புகைக்கும்போது சுய உணர்வற்ற மனதின் அடி ஆழங்களுக்குள் இறங்கிச் செல்லலாம்.
மனதின் அடி ஆழத்தின் பாம்பு படத்தை விரித்துக் கொண்டு ஆடுகிறது.
காமம்!
அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துக் கொண்டு, பார்வைகளை குவியச் செய்து கொண்டு அவள் சாலையின் ஓரத்தில் நடந்து செல்வாள் - துளசி!
எல்லோரும் அவளைப் பார்ப்பார்கள். அவள் யாரையும் பார்க்க மாட்டாள். காலை நேர வானத்தின் விளிம்பு அவள். அருகில் சென்றால், தூரத்தில் போகும் வானத்தின் விளிம்பு.
ராஜேந்திரன் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வந்து, சாலையின் அருகில் போய் நிற்பான். துளசியைப் பார்த்துப் புன்னகைப்பான். அவள் புன்னகைக்க மாட்டாள். அவள் பார்க்கக்கூட மாட்டாள்.
ஹோட்டலைத் தேடிப் பெண்களும் ஆண்களும் வருவார்கள். ஒன்றோ இரண்டோ நாட்கள் தங்குவார்கள். திரும்பிப் போவார்கள்.
எங்கிருந்தோ வருகிறார்கள். எங்கேயோ போகிறார்கள். அதுதான் வாழ்க்கை! வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. நோக்கம் இல்லை.
இப்படியே சில நாட்கள் கடந்து சென்றன. துளசியையும் பார்க்க முடியவில்லை. அவள் அந்த வழியே செல்லவில்லை.
ஹோட்டல் மேனேஜரின் நடவடிக்கைகள் மாறின. அவன் கறாராகக் கூறினான்:
“சார் கணக்கைச் சரிபண்ணி பணம் தரணும். இல்லாவிட்டால் பெட்டியை இங்கே வச்சிட்டு, வெளியேறுங்க.”
“நாளைக்குக் கணக்கைச் சரிபண்ணி பணம் தர்றேன்” - ராஜேந்திரன் கெஞ்சுகிற குரலில் சொன்னான்.
“நாளைக்குத் தரலைன்னா...”- மேனேஜர் திரும்பி நடந்தான்.
நாளைக்குக் கொடுக்கவில்லையென்றால் என்ன நடக்கும் என்று ராஜேந்திரனுக்குத் தெரியும். பெட்டி, ஆடைகள், புத்தகங்கள் எல்லாவற்றையும் மேனேஜர் எடுத்துக் கொண்டு போய்விடுவான். ராஜேந்திரனைக் கழுத்தைப் படித்து வெளியே தள்ளுவான். ஆனால் -
ஆனால், அது எதுவும் நடக்கப் போவதில்லை என்று ராஜேந்திரனுக்குத் தெரியும். ஏனென்றால், தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் இறந்த உடலின் பின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முடியுமா?
மனதில் இருந்த எதிர்பார்ப்பு கையை விட்டுப் போய்விட்டது. பணம் வராது என்று அவன் முடிவே செய்துவிட்டான். ஆனால், வந்தது.
ஐந்நூறு ரூபாய் அல்ல. இருநூறு ரூபாய் மட்டும். ஹோட்டலுக்குக் கொடுக்க அந்தப் பணம் போதாது. இருநூறு ரூபாயைக் கொடுக்கலாமா? மீதிப் பணத்தைப் பிறகு தருவதாகக் கூறலாமா?
பிறகு அவன் எப்படித் தருவான்? எங்கேயிருந்து அவன் பணத்தை உண்டாக்குவான்? வீட்டிலிருந்து இனிமேல் பணம் கிடைக்காது.
அதற்குப் பிறகும் ஹோட்டலில் கடன் அதிகமாகும். மேனேஜர் கழுத்தைப் பிடித்து வெறியே தள்ளுவான். இல்லாவிட்டால் இறந்த உடல் தூக்கில் தொங்கும்.
எதற்காக வாழ வேண்டும்?
வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. நோக்கம் இல்லை. மரணத்திற்கு அர்த்தமும் நோக்கமும் இருக்கின்றன - வாழ்க்கையிலிருந்து தப்பிப்பது!
மணியார்டர் மூலம் வந்த இருநூறு ரூபாய் அவனுடைய பாக்கெட்டில் இருக்கிறது. ராஜேந்திரன் அறையை விட்டு வெளியேறி நடந்தான். அப்போதும் பக்கத்து அறையில் அந்தக் குலுங்கல் சிரிப்பு கேட்டது.
அவளுடைய சிரிப்பு! அப்படியே சிரித்து சிரித்து அவள் பிள்ளை பெறுவாள். பிறகு அழுவாள் - ராஜேந்திரனின் தாய் அழுததைப்போல பிறகு இறப்பாள். சிரிப்புக்கும் அழுகைக்கும் - இரண்டுக்குமே அர்த்தம் இல்லை. மரணத்திற்கு மட்டும் அர்த்தம் இருக்கிறது - சிரிப்பிலிருந்தும் அழுகையிலிருந்தும் தப்பிப்பது!
துளசி சிரிப்பாளா?
ராஜேந்திரன் சாலையில் இறங்கி நடந்தான். மதிய நேரம் ஆனது. தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் இருந்தது.
அப்புக் குட்டனைப் பார்த்தான். கஞ்சா பீடி வாங்கினான். அதைப் பற்ற வைத்து இழுத்தான். கஞ்சாவின் புனிதமான புகை மனதிற்குள் நுழைந்து ஆக்ரமித்தது. மனம் எல்லையற்ற நிலையை நோக்கிப் பறந்து சென்றது.
வெயில் வெப்பமே இல்லாமல் இருந்தது. இருந்தது வெளிச்சம் மட்டுமே.
என்ன ஒரு மக்கள் கூட்டம்! என்ன ஒரு ஆரவாரம்! அந்த மனிதர்களும்.... மனிதர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும்... இவ்வளவு அவசரமாக எங்கு போகிறார்கள்? எதற்காகப் போகிறார்கள்?
இறப்பதற்காகப் போகிறார்கள். எல்லோரும் வாழ்க்கை என்ற பொய்யிலிருந்து மரணம் என்ற உண்மையை நோக்கிப் போகிறார்கள்?
அவன் கல்லூரி கேட்டிற்கு அருகில் வந்தான். சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
துளசி வரவில்லை. அவள் இனிமேல் கல்லூரிக்கு வராமல் இருக்கலாம். ஒருவேளை, அவள் மரணம் என்ற உண்மையைக் கண்டிருக்கலாம்.
ராஜேந்திரன் நடந்தான். சாலையின் வலது பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பெயர் பலகையையே அவன் வெறித்துப் பார்த்தான். ஒரு ஹோட்டல் அது - பார் அட்டாச்ட். நண்பர்களுடன் சேர்ந்து அந்த ஹோட்டலுக்குச் சென்று அவன் மது அருந்தியிருக்கிறான்.
ராஜேந்திரன் தன் பேன்ட் பாக்கெட்டைத் தடவிப் பார்த்தான். இரு பக்கங்களிலும் பார்த்தான். தொடர்ந்து ஹோட்டலுக்குள் நுழைந்தான்.
ஒரு சிறிய அறையில் ராஜேந்திரன் மட்டும் இருந்தான். ப்ராண்டியும் சோடாவும் - குவளையை நிறைத்தான். அவன் வெறியுடன் அதைக் குடித்தான். ஹோட்டல் பையன் கேட்டான்:
“சாப்பிடலையா சார்?”
“வேண்டாம்...”
வேறு ஏதாவது வேணுமா? வேர்க்கடலை இருக்கு. கட்லட் இருக்கு வறுத்த மீன் இருக்கு...”
“எதுவும் வேண்டாம்”- காலியான குவளையைச் சுட்டிக் காட்டியவாறு அவன் சொன்னான்:
“இன்னொரு பெக் வேணும்.”
மீண்டும் குவளை நிறைந்தது. ப்ராண்டியையும் சோடாவையும் கலந்து ராஜேநிதிரன் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தான்.
பக்கத்து அறையில் சிரிப்புச் சத்தம் கேட்டது. மூன்று நான்கு பேர் ஒன்றாகச் சிரிக்கிறார்கள். ராஜேந்திரனின் முகத்தில் கேலியான புன்னகை அரும்பயது.
சிரிக்கிறார்கள்! கழுத்தில் கொலைக் கயிறு சுற்றியிருக்கும் மனிதர்கள் சிரிக்கிறார்கள்! ராஜேந்திரனுக்கும் வாய் விட்டுச் சிரிக்க வேண்டும்போல இருந்தது. பக்கத்து அறையிலிருந்து கேட்ட சிரிப்பைப் போலவே தானும் சிரிக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் சிரிக்கவில்லை.
ராஜேந்திரன் ஒரு கஞ்சா பீடியைப் பற்ற வைத்தான். ப்ராண்டியும் கஞ்சாவும்! ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்தது.
குவளை காலியானது. ராஜேந்திரன் எழுந்தான். ஹோட்டல் பையன் ஒரு சிறிய தட்டில் பில்லைக் கொண்டு வந்து வைத்தான்.
ராஜேந்திரன் பில்லைப் பார்க்கவில்லை. பாக்கெட்டிலிருந்து நோட்டுகளைத் வெளியே எடுத்தான். மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை தட்டில் வைத்துவிட்டு, அறையை விட்டு வெளியேறி நடந்தான்.
பையன் நோட்டுகளை எடுத்துப் பார்த்தான். அவன் சிரித்தான்.
ராஜேந்திரன் நடந்தான் - மரணத்தை நோக்கி. எங்கு இறப்பது? எப்படி இறப்பது?
மரணத்தைத் தழுவுவதில்தான் எவ்வளவு கஷ்டங்கள்! இறப்பதை யாரும் பார்க்கக் கூடாது. பார்த்தால் அதைத் தடுத்து விடுவார்கள். மனிதர்களின் கண் பார்வை படாத இடத்திற்குப் போய் இறக்க வேண்டும்.
எப்படி இறப்பது? விஷம் அருந்தி இறக்கலாம். அதற்கு விஷம் வேண்டுமே! மருந்துக் கடையில் போய் கேட்டால், அவர்கள் விஷம் தர மாட்டார்கள். பிறகு என்ன செய்வது?
தூக்கில் தொங்கி சாகலாம். அதற்கு ஒரு கயிறு வேண்டும். ஒரு மரத்தின் கிளை வேண்டும். யாருடைய கண் பார்வையும் படாத இடத்தில்.
ராஜேந்திரன் வேகமாக நடந்தான்.
மாலை தாண்டியது. மக்களும் வாகனங்களும் நிறைந்து சாலை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது. தெரு விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. ராஜேந்திரன் வேகமாக நடந்தான். மனிதர்களின் பார்வை படாத ஒரு மரக்கிளையைத் தேடி அவன் நடந்து கொண்டிருந்தான்.
நகரத்தின் எல்லை முடிந்து விட்டது. இரவின் இரண்டாம் சாமம் முடிவடையும் நிலையில் இருந்தது. கிழக்கு திசையிலிருந்த மலைகளுக்கு மேலே சந்திரன் தெரிந்தது. ராஜேந்திரன் ஒரு கல் பாலத்தில் அமர்ந்து கொண்டு ஒரு கஞ்சா பீடியைப் பற்ற வைத்தான்.
ஒரு மலையை ஒட்டிச் செல்லும் சாலை அது. வலது பக்கத்தில், தென்னையும் மாமரங்களும் ஏராளமாக வளர்ந்து காணப்படும் தோப்புகள் இருந்தன. இடையில் சிறிய சிறிய வீடுகளும். இடது பக்கத்திலிருந்த மலையிலும் மரங்களும் வீடுகளும் இருந்தன.
ராஜேந்திரன் எழுந்து நடந்தான். சோர்வு இருந்தது. கடுமையான சோர்வு. ஆனால், அவன் நோக்கத்துடன் நடந்து கொண்டிருந்தான்.
அமைதியான இடம். மனிதர்கள் எல்லோரும் கண்களை மூடித் தூக்கத்தில் இருந்தார்கள். இனி ஒரு மரக்கிளையைக் கண்டுபடிக்க வேண்டும். ஒரு தூக்குக் கயிறையும்.
சிறியதாக இருந்தாலும், வீடு ஒரு அழகான வீடாக இருந்தது. நிலவு வெளிச்சத்தில் அந்த வீடு தெளிவாகத் தெரிந்தது. அந்த வீட்டைத் தாண்டி வேலியோடு சேர்ந்து ஒரு குறுகலான பாதை உள்நோக்கிச் சென்றது. அந்தப் பாதைக்கு அப்பால் ஒரு மண்ணாலான குடிசை தெரிந்தது.
ராஜேந்திரன் அந்த குறுகலான பாதையை அடைந்தான். பத்து பன்னிரண்டு அடிகள் நடந்தான். பாதையின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள் அடர்த்தியாக நின்றிருந்தன. அதனால், பாதையில் நிலவு வெளிச்சம் தெரியவில்லை.
அந்த அழகான வீட்டிற்குப் பின்னால் வராந்தா இருந்தது. அங்கு நிலவு வெளிச்சம் விழுந்து கொண்டிருந்தது. அந்த வராந்தாவில் ஏதோ அசைவதைப்போல ராஜேந்திரனுக்குத் தோன்றியது. அவன் வேலியின் மேற்பகுதி வழியாக எட்டிப் பார்த்தான்.
யாரோ அந்த வராந்தாவில் நின்றிருந்தார்கள். ஒரு பெண் என்பதைப்போல இருந்தது. தலைமுடி பின்னால் அவிழ்ந்து விரிந்து கிடந்தது.
அவள் புடவை அணிந்திருந்தாள். ஆனால், புடவையின் நுனிப்பகுதி தோளை விட்டு நழுவித் தரையில் விழுந்து கிடந்தது.
அவள் குனிந்து எதையோ எடுத்துக் கொண்டு வராந்தாவிலிருந்து முற்றத்தை நோக்கி நடந்து வந்தாள். முற்றத்தில் நல்ல நிலவு வெளிச்சம் இருந்தது. ராஜேந்திரன் கூர்ந்து பார்த்தான். அவள் ஒரு ஸ்டூலைக் கையில் வைத்து நடந்து கொண்டிருந்தாள். புடவை நுனி அவளுக்குப் பின்னால் போய்க் கொண்டிருந்தது.
மரங்களுக்கு மத்தியில் இருந்த இருட்டை நோக்கி அவள் நடந்து மறைந்தாள். ராஜேந்திரன் மூச்சை அடக்கிக் கொண்டு அதைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.
காய்ந்த இலைகளில் ஒரு சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. வேலிக்கு அருகில் இரு;த மாமரத்திற்குக் கீழே, அந்தச் சத்தம் நின்றது. அங்கு நிலவு வெளிச்ம் இல்லாமல் இருந்தாலும் ஆள் நின்றிருப்பது நன்றாகத் தெரிந்தது.
ஸ்டூலைத் தரையில் வைத்துவிட்டு, அவள் அந்த ஸ்டூல் மீது ஏறி நின்றாள். புடவையை அவிழ்த்தாள். பாவாடையை மட்டுமே இப்போது அவள் அணிந்திருந்தாள்.
அவிழ்ந்த புடவையை மாமரத்தின் கிளையில் கட்டி, அதன் நுனியில் ஒரு சுருக்கைப் போட்டாள். அந்த சுருக்கைத் தன் கழுத்தில் அணிந்தாள். சுருக்கிற்குள் சிக்கிய கூந்தலை எடுத்து வெளியே போட்டாள். கைகளைக் கூப்பியவாறு என்னவோ முணுமுணுத்தாள்.
சற்று தள்ளி இருந்த மண் குடிசையில் ஒரு சத்தம்! ஒரு குழந்தை கண் விழித்து அழுகிறது.
கழுத்தில் போட்ட சுருக்குடன் அவள் எந்தவித அசைவும் இல்லாமல் நின்றிருந்தாள்.
ராஜேந்திரனுக்கு ஒரு இருமல் வந்தது. இருமவில்லை. அதை அடக்கிக் கொண்டான்.
மண் குடிசையில் குழந்தையின் அழுகைச் சத்தம் அதிகமானது. அதன் தாய் ஒரு தாலாட்டுப் பாடலைப் பாடினாள். குழந்தையின் அழுகைச் சத்தம் நின்றது. சுற்றிலும் அமைதி நிலவியது.
அடுத்த நிமிடம் கழுத்தில் இருந்த சுருக்குக் கயிறை அந்தப் பெண் எடுத்தாள். மரத்தின் கிளையில் கட்டியிருந்த புடவையை அவிழ்த்த அவள் ஸ்டூலை விட்டுக் கீழே இறங்கினாள். அவள் புடவையைச் சரி பண்ணினாள் அவள் நடந்தாள்.
ராஜேந்திரனுக்கு மீண்டும் இருமல் வந்தது. அவன் அதை அடக்கிக் கொண்டே இருமினான். அவள் வேலிக்கு அருகில் வந்தாள். அவள் முணுமுணுத்தாள்:
“யாரு?”
“வழியில் போற ஆளு...” - அவனும் மெதுவான குரலில் சொன்னான். எப்படியோ, அவள் வேலியைத் தாண்டி அந்தக் குறுகலான பாதையை அடைந்தாள். அவள் மீண்டும் மெதுவான குரலில் கேட்டாள்:
“நீங்க யாரு?”
“தூரத்துல இருந்து வர்றேன்.”
அவள் சாலையை நோக்கி நடந்தாள் - ராஜேந்திரன் அவளுக்குப் பின்னால் நடந்தான்.
அவள் கேட்டாள்:
“நீங்க ஏன் என் பின்னால வர்றீங்க?”
“நான் உங்க பின்னால் வரல. நான் போக வேண்டிய பாதையில் போறேன்.”
அவள் நடந்தாள். ராஜேந்திரனும் நடந்தான். அவர்கள் சாலையை அடைந்தார்கள். இருவரும் நல்ல நிலவு வெளிச்சத்தில் இருந்தார்கள். அவள் அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.
“நீங்க... நீங்க ராஜேந்திரன்தானே?”
“துளசி.... துளசிதானே?”
இருவரும் எதுவும் பேசாமல் மவுனமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அவள் கேட்டாள்:
“நீங்க இங்கே?”
“துளசி இப்போ இங்கே?”
அவள் நடந்தாள். ராஜேந்திரன் அவளைப் பின்பற்றினான். ராஜேந்திரன் கேட்டான்:
“துளசி, இப்போ எங்கே போறே?”
“நான் எங்கே போகணும்னு முடிவு பண்ணல. நீங்க எங்கே போறீங்க?”
“எங்கே போகணும்னு நானும் முடிவு பண்ணல. நீ போற இடத்துக்கு நானும் வர்றேன்.”
“நீங்க என்கூட ஏன் வரணும்?”
“அதைப் பார்க்குறதுக்கு...”
“எதை?”
“தூக்குல தொங்கிச் சாகுறதை....”
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சிறிது நேரம் நின்றாள். மீண்டும் அவள் நடந்தாள். சிறிது தூரம் நடந்துவிட்டு, அவள் சாலையோரத்தில் உட்கார்ந்தாள். ராஜேந்திரனும் உட்கார்ந்தான். அவள் கேட்டாள்:
“நீங்க பார்த்தீங்களா?”
“ம்... நான் எல்லாவற்றையும் பார்த்தேன்.”
“இனி...”- அவள் தான் சொல்ல வந்ததை முழுமையாகக் கூறவில்லை. அவளுக்கு மூச்சு அடைத்தது.
“இனி என்ன செய்யப் போறே?”
“நான் வாழணும். நானும், என்னுடைய...”
“சொல்லு... சொல்ல வந்ததை முழுசா சொல்லு....” - அவன் அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தான்.
“நானும் என்னுடைய குழந்தையும் வாழணும்”- அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு எங்கோ தூரத்தை நோக்கிப் பார்த்தவாறு கூறினாள்.
“குழந்தையா? அது எங்கே இருக்கு?” - அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“என் வயிற்றில்...” - அவள் சற்று தயங்கினாள். சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, உறுதியான குரலில் அவள் சொன்னாள்:
“நான் வாழணும். நான் வாழ்வேன். நான் உயிருடன் இருந்தால்தான் என் குழந்தை உயிருடன் இருக்கும்.”
“துளசி, உன் குழந்தை எதற்காக வாழணும்?”
“எதற்கு? அதைத்தான் நான் கேக்குறேன்.”
“யாரும் வாழ வேண்டாமா?”
“யாரும் வாழலைன்னா, யாருக்காவது ஏதாவது நஷ்டம் உண்டாகுமா? எல்லோரும் வாழ்ந்தால், யாருக்காவது ஏதாவது லாபம் இருக்கா? இறப்பதற்காக மனிதன் கஷ்டப்பட்டு வாழணுமா?”
“நீங்க எதற்காக வாழ்றீங்க?”
“நான் இறப்பதற்கு ஒரு இடத்தைத் தேடிப் புறப்பட்டேன்.”
“இறப்பதற்கு ஒரு இடமா? அது இதுவரை கிடைக்கலையா?”
“கிடைச்சது. அப்போதுதான் உன்னோட மரணத்தைப் பார்த்தேன். நான் அதைப் பார்த்து நின்னுக்கிட்டு இருந்துட்டேன்.”
“நான் இறக்கலையே!”
“நீ இறக்காமல் இருப்பதைப் பார்த்தவுடன், இறக்க வேண்டாம் என்று எனக்கும் தோணிடுச்சு.”
“நான் வாழணும் - என் குழந்தைக்காக நான் வாழணும்”- அவள் எழுந்தாள்.
“நானும் வாழணும். என் துளசி. உனக்காக நானும் வாழணும்” - ராஜேந்திரனும் எழுந்தான்.
கோழி கூவியது. அவர்கள் நடந்தார்கள்.
“எங்கே போறே?” ராஜேந்திரன் கேட்டான்.
“எங்கே போகணும்?”
“நீ போற இடத்துக்கு நானும் வர்றேன்.”
“மிகவும் தூரத்திற்கு போகணும். என் வீட்டை விட்டு மிகவும் தூரமா போகணும். என் வீட்டுல இருக்குற யாருக்கும் நான் எங்கே இருக்கேன்னு தெரியக் கூடாது.”
தூரத்தில் ஒரு ஹார்ன் சத்தம் கேட்டது. ராஜேந்திரன் சொன்னான்:
“ஒரு பேருந்து வருது. அதுல ஏறிடுவோம்.”
“ஏறினால், பணம் தர வேண்டாமா?”
“என் கையில இருக்கு.”
அவள் சாலையோரத்தில் நின்றாள். பேருந்து அருகில் வந்தது. ராஜேந்திரன் கையைக் காட்டினான். பேருந்து நின்றது. ராஜேந்திரன் பேருந்தில் ஏறினான். துளசியைக் கைப்பிடித்து ஏறச் செய்தான்.
பேருந்து ஓடியது.
“தூக்குல தொங்கி சாகணும்னு முடிவு செய்ததற்கு என்ன காரணம்?” - ராஜேந்திரன் கேட்டான்.
எர்ணாகுளத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலின் அறையில், கட்டிலில் அவர்கள அமர்ந்திருந்தார்கள். மிகவும் நெருக்கமாக அமர்ந்து, துளசியின் நெஞ்சில் தன் கையை வைத்துக் கொண்டு அவன் சொன்னான்:
“என்னிடம் எல்லா விஷயங்களையும் மனம் திறந்து சொல்லணும். எதையும் மறைச்சு வைக்கக் கூடாது.”
அவள் அவனுடைய உடல்மீது சாய்ந்து படுத்தாள். அவனுடைய கையை எடுத்து தன்னுடைய மடியில் அவள் வைத்தாள். அவனுடைய கையைத் தடவியவாறு அவள் சொன்னாள்:
“நான் உண்மையை மட்டுமே கூறுவேன். ஆனால்....”
“ஆனால்..?”
“ஒரு உண்மையைச் சொல்ல மாட்டேன்.”
“சொல்லாத உண்மை என்ன?”
“நான் கர்ப்பமா இருக்கேன்.”
“அந்த உண்மையைத்தான் சொல்லியாச்சே! அந்த உண்மைக்குக் காரணமான உண்மையைத்தான் நான் தெரிஞ்சிக்கணும்.”
“அதுதான் நான் சொல்லாத உண்மை.”
“அதை நான் தெரிந்து கொண்டால்...?”
“வேண்டாம்.... அதைத் தெரிஞ்சிக்கவே வேண்டாம்”- அவள் அவனுடைய நெஞ்சில் தலையைச் சாய்த்துக் கொண்டு சொன்னாள்:
“என் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் தந்தை...”
“யாரு? யாருன்னு சொல்லு.”
அவள் அடுத்த நிமிடம் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவனுடைய உதடுகளில் அவள் அழுத்தி முத்தமிட்டாள்.
“இதோ... இதோ... என் குழந்தையின் தந்தை...?” - அவள் திடீரென்று தன்னுடைய பிடியை விட்டு விலகி நின்றாள். அவனுடைய கண்களைப் பார்த்தவாறு அவள் கேட்டாள்:
“அப்படித்தானே? என் குழந்தையின் தந்தை நீங்கள்தானே?’’
“ஆமாம்...’’ - அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
அவள் மீண்டும் கட்டிலில், அவனுடன் சேர்ந்து உட்கார்ந்தாள். அவள் தன்னுடைய கதையைச் சொன்னாள். அது ஒரு நீளமான கதை அல்ல. அசாதாரண கதையும் அல்ல.
சிரமப்பட்டு வாழக்கூடிய வகையில் மட்டுமே இருக்கக் கூடியதுதான் அவளுடைய குடும்பம். அவளுடைய தாய், தந்தைக்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள் - மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண்ணும். மூத்தவன் ஆண். இரண்டாவது அவள். அவளுக்கு இளையவர்கள் இருவரும் ஆண்கள்.
மூத்த மகன் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றான். அவனுக்கு ராணுவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவன் ஒரு ராணுவ அதிகாரியாக ஆனான். அவன் தன்னுடைய உடன் பிறப்புக்களின் படிப்பிற்காகப் பணம் அனுப்பி வைக்கவும் செய்கிறான். மூன்று பேர்களும் நன்கு படிக்கக் கூடியவர்கள்தான்.
துளசி பி.ஏ. படிப்பவள். அவள் பலருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடிய ஒரு பேரழகி என்பதுதான் உண்மை. ஆனால், பார்வையாலோ வார்த்தையாலோ நடத்தையாலோ அவள் யாருக்கும் சிறிதளவுகூட பிடி கொடுத்ததில்லை. அவளுடைய முகத்தில் ஒரு முகமூடி இருக்கும். எப்போதும் உணர்ச்சியே இல்லாத முகமூடி.
பேருந்தில் ஏறிக் கல்லூரிக்குச் செல்வாள். பேருந்திலேயே திரும்பி வருவாள். இதற்கிடையில் பலரும் பல வகையில் அவளை நெருங்க முயற்சிப்பார்கள். அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடியும். அழகான பொம்மை! - கல்லூரியில் அவளுக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது. அவளுடைய அமைதியான போக்கு அவளுக்கு வாங்கித் தந்த பெயர் அது.
ராஜேந்திரனின் மார்பில் தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்:
“அப்படி இருக்குறப்போதான், நான் கர்ப்பணியா ஆனேன்.” அவனுடைய தலையைப் பிடித்து குனிய வைத்துக் கொண்டு, உதடுகளில் உதடுகளைச் சேர்த்து வைத்தவாறு அவள் சொன்னாள்:
“திருடன்! என்னை கர்ப்பிணியா ஆக்கியாச்சு!”
அடுத்த நிமிடம் ராஜேந்திரன் தன் தலையை உயர்த்தினான். அவன் அவளையே வெறித்துப் பார்த்தான்.
“நானா? நானா உன்னை கர்ப்பிணியா ஆக்கினேன்?”
அவள் வேகமாக எழுந்தாள். அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு அவள் கேட்டாள்:
“அதுதானே உண்மை? என் முகத்தைப் பார்த்து சொல்லுங்க, இல்லைன்னு...”
ராஜேந்திரன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். துளசி மீண்டும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். மீண்டும் அவர்களுடைய முகங்கள் நெருங்கின. பெருமூச்சுகள் கலந்தன. உதடுகள் உரசின. அவள் முணுமுணுத்தாள்:
“என் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் தந்தை யார்...? யார்...? யார்?”
“நான்தான்...” ராஜேந்திரனுக்கு மூச்சு அடைத்தது.
அவள் மீண்டும் கட்டிலில் அவனுடன் சேர்ந்து உட்கார்ந்தாள். அவனுடைய மார்பை வருடியவாறு அவள் சொன்னாள்:
“திருமணம் ஆகாத பெண் கர்ப்பம் தரிப்பது என்பது.... பெண்ணுக்கு மிகவும் அவமானம் உண்டாக்கக்கூடிய ஒரு விஷயமாயிற்றே அது! அவளுடைய குடும்பத்தை முழுமையா பாதிக்கக்கூடிய அவமானச் செயலாயிற்றே அது! அவமானத்தைத் தாங்க முடியாமல், கர்ப்பமா இருக்குற பெண்ணை வீட்டை விட்டு வெளியே விரட்டுறது உண்டு. சில பெற்றோர்களை இப்படிப்பட்ட காரியங்கள் பைத்தியம் பிடிக்க வச்சிருக்கு. கர்ப்பமா இருக்குற பெண்ணைக் கொல்லவும் செய்திருக்காங்க. பெற்றோர்கள் தற்கொலை பண்ணியிருக்காங்க. இல்லையா...? இல்லையா?’’
“தினமும் அப்படிப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றனவே!”
“பெரிய அளவில் சொத்துக்கள் எதுவும் இல்லை என்றாலும், மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பம்தான் என்னுடையது. அப்பாவும் அம்மாவும் அண்ணனும் கொஞ்சம் சந்தேக குணம் கொண்டவர்கள். என் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்தால், என்னைக் கொன்னுடுவாரு. இல்லாவிட்டால், அவர் செத்திடுவாரு. அண்ணனுக்குத் தெரிந்தால், விடுமுறை எடுத்துக் கொண்டு உடனடியா வீட்டுக்கு வந்திடுவாரு. என்னைக் கொல்வார் என்பது மட்டும் நிச்சயம். என்னைக் கொலை செய்துவிட்டு, அண்ணன் தப்பிக்க முடியாது. அவர் கொலையாளியா ஆவார். என் தாய் கவலையில் மூழ்கி இறப்பாள். என்னுடைய தம்பிமார்கள் நிரந்தரமா என்னைத் திட்டுவார்கள். நான் என்ன செய்யணும்? சொல்லுங்க... நான் என்ன செய்யணும்? என்னைக் கொலை செய்தால், என் அண்ணன் தப்பிக்க முடியாது. அவர் கொலையாளியா ஆவார். என் தாய் கவலையில் இறந்து விடுவாள். என் தம்பிமார்கள் எப்போதும் என்னைச் சபிப்பார்கள். நான் என்ன செய்யணும்? சொல்லுங்க... நான் என்ன செய்யணும்?” - அவள் வேகமாக எழுந்தாள். ராஜேந்திரனை நோக்கி விரலைக் காட்டியவாறு அவள் வெறி பிடித்தவளைப்போல கேட்டாள்:
“சொல்லுங்க... என் இடத்தில் நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீங்க?”
“தற்கொலை செய்து கொள்ள இடம் தேடி வந்தவன் நான்...” - ராஜேந்திரன் சிரித்துக் கொண்டே தொடர்ந்து சொன்னான்:
“வாழ்க்கைக்கு நோக்கம் இல்லை என்றும்; அர்த்தம் இல்லை என்றும்; மரணம் உண்மையானது என்றும் நம்பி இறப்பதற்கு வந்தவன் நான்...”
“பிறகு?”
“பிறகு... பிறகு... இந்தக் கேள்வியை... துளசி, நான் உன்கிட்ட கேட்கிறேன். நீ இறக்க முயற்சித்து, ஏன் இறக்கவில்லை? கயிற்றின் சுருக்கைக் கழுத்தில் அணிந்தேல்ல? பிறகு...?
அவள் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தாள். அவள் சாளரத்தைப் பார்த்தாள். தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல.... எதையோ கேட்பதைப்போல கவனத்தை வைத்துக் கொண்டு, அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
“அந்த அழுகை... அந்தக் கதறல்... ஆயிரமாயிரம் குழந்தைகளின் அழுகைச் சத்தத்தை நான் கேட்டேன்... என் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை கதறியது. வாழ வேண்டும் என்பதற்கான அழுகை அது.... இல்லையா?” - அவள் அடுத்த நிமிடம் ராஜேந்திரன் பக்கம் திரும்பினாள்.
“அந்தக் குழந்தை கண் விழித்துக் கதறினப்போ, அதன் தாய் தாலாட்டு பாடினாள். தாயின் மார்பில் படுத்துக் கொண்டே அந்தக் குழந்தை தூங்கியிருக்கும்” - அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தன. தொண்டை இடறியது.
“என் குழந்தை... கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை... பிறக்காத குழந்தை... அந்தக் குழந்தையின் தாய் நான். அந்தக் குழந்தை வாழவேண்டும் என்றால், நான் உயிருடன் இருக்க வேண்டும். இறப்பதற்கு எனக்கு உரிமை இல்லை. நான் இறக்க மாட்டேன்... நான் வாழணும்... நான் வாழ்வேன்.”
வாழ்க்கை மிகவும் சக்தி படைத்ததாக, அதன் எல்லா குணங்களுடனும் தனக்கு முன்னால் நின்றிருப்பதைப்போல் ராஜேந்திரன் உணர்ந்தான். அவன் முணுமுணுக்கும் குரலில் கேட்டான்:
“எதற்காக வாழ்றே? வாழ்க்கையின் அர்த்தம் என்ன? வாழ்க்கையின் நோக்கம் என்ன?”
அடுத்த நிமிடம் துளசி அவனை விட்டு விலகி நின்றாள். கன்னங்கள் வழியாக வழிந்த கண்ணீரை அவள் துடைத்தாள். அவளுடைய முகத்தில் கம்பீரம் தெரிந்தது. அந்த கம்பீரத்திற்கு மத்தியில் கேலி கலந்த ஒரு புன்னகை வெளிப்பட்டது.
“எதற்காக வாழ்கிறேன்னு கேக்குறீங்களா? வாழ்க்கைக்கு அர்த்தம் என்னன்னு கேக்குறீங்களா? வாழ்க்கையின் நோக்கம் என்னன்னு கேக்குறீங்களா...? எனக்குத் தெரியாது...” - அவள் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே தொடர்ந்து சொன்னாள்:
“என் தந்தைக்கும் தாய்க்கும் தெரியாது. என் அண்ணனுக்கம் தெரியாது. என் ஊரில் உள்ளவர்களுக்கும் தெரியாது. என் தோழிகளுக்கும் தெரியாது. என் பேராசிரியர்களுக்கும் தெரியாது. அர்த்தம் என்ன என்பதும் நோக்கம் என்ன என்பதும் தெரியாமலே எல்லோரும் வாழ்கிறார்கள்... உங்களுக்குத் தெரியுமா?” - அவள் விரலை நீட்டியவாறு ராஜேந்திரனை நெருங்கினாள்.
அடுத்த நிமிடம் அவன் அவளுடைய கையைப் பற்றி அவளைத் தன் மடியில் உட்கார வைத்தான். அவளுடைய கைகள் அவனை வளைத்தன. அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
“நான் வாழணும்...”
“நானும்தான்...”
அவன் கட்டிலில் சாய்ந்தான். அவளுடைய மார்பகம் அவனுடைய மார்பில் அழுத்தியது. அவன் மெதுவான குரலில் சொன்னான்:
“என் இதயத்தில் வாழ்க்கை ஒலிக்கிறது.”
“என் கர்ப்பத்தில் வாழ்க்கை நெளிகிறது.”