
புதிதாக அன்றுதான் முதன் முதல் ரசிப்பது போல் ராகினியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மதன். நல்ல நிறம். இமை முடிகள் அடர்ந்த நீண்ட கண்கள். பியூட்டி பார்லர் போக வேண்டிய அவசியம் இல்லாதபடி நேர்த்தியான புருவங்கள். இயற்கையிலேயே சிவந்த உதடுகள் கொண்ட ராகினியின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்த மதனின் கவனத்தைக் கலைத்தாள் ராகினி.
"என்னங்க, வழக்கமா நாம இந்த மாசம் ஊருக்கு போவோமே, ஃபிளைட் டிக்கெட்ல்லாம் புக் பண்ணிட்டீங்களா?" இட்லி பரிமாறிக் கொண்டே கேட்ட ராகினியை குறும்பாக பார்த்து கண்ணடித்தான் மதன்.
"ஓ, புக் பண்ணியாச்சே. நான் மறப்பேனா?! உங்க பாட்டியை வந்து குழந்தைங்களை பார்த்துக்க சொல்லு. நாம பன்னிரெண்டாம் தேதி புறப்படறோம்."
"என்ன?! குழந்தைங்க இல்லாமயா?"
"அ... அ... ரொம்பத்தான் ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கற? வழக்கமா இந்த சீசன்ல நாம மட்டும்தானே போவோம்? புதுசா என்ன கேள்வி?" என்று கையை கழுவி விட்டு ராகினியின் புடவைத் தலைப்பில் துடைத்தவன் அவளது இடுப்பு மடிப்பில் கிள்ள முற்பட்டான்.
அப்போது டைனிங் டேபிளை சுத்தம் செய்ய வேலைக்கார சிறுமி பத்மா வந்தாள்.
கையை எடுத்துக் கொண்ட மதன், "இதுக்குத்தான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ பொண்டாட்டி கூட போயி ஜாலியா என்ஜாய் பண்ணனும்னு கிளம்பறது. பிஸினஸ், ஆபீஸ்னு நான் வேலையை முடிச்சுட்டு அர்த்த ராத்திரி வீட்டுக்கு வர்றதுக்குள்ள நீ தூங்கிடற. காலையில பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பறது, பூஜை, அது இதுன்னு நீ பிஸியாயிடற. இதையெல்லாம் ரெண்டு பேரும் மறந்துட்டு ஃப்ரீயா, ரிலாக்ஸ்டா ஒரு வாரம் போயிட்டு வரணும். எப்பதான் பன்னிரெண்டாம் தேதி வரும்னு இருக்கு. அதுக்குள்ள முக்கியமான வேலை எல்லாம் முடிச்சாகணும். நான் ஆபீசுக்கு புறப்படட்டுமா ராக்கம்மா?"
"இப்படி பட்டிக்காட்டுத்தனமா ராக்கம்மான்னு கூப்பிடறதை என்னிக்குதான் நிறுத்தப் போறீங்களோ?"
"உன்னை ராக்கம்மான்னு கொஞ்சி கூப்பிடறதுலதான் உன் மேல உள்ள ஆசை எல்லாம் வெளிப்படுத்தற மாதிரி ஃபீலிங் எனக்கு. வரட்டுமா?"
ப்ரீப்ஃபை எடுத்துக் கொண்டு ஸ்டைலாக நடந்து போகும் கணவனைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ராகினி கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தாள். தானும் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தாள்.
வாசலில் காலிங் பெல் ஒலித்து அழைத்தது.
"பத்மா யாருன்னு போய் பாரு?" வேலைக்காரியை அனுப்பினாள்.
"ஹாய் ராகினி..."
குரல் கேட்டு திரும்பினாள்.
"நீ... நீ... சுதா... ஏய் சுதா நீயா? என்னடி இது? திடீர்னு வந்து நிக்கற. போன வாரம் லெட்டர் போட்டப்ப கூட நீ இங்க வர்றதைப் பத்தி எழுதவே இல்லையே?"
"வர வேண்டிய நிலைமை ஆயிடுச்சு... அம்மா போயிட்டாங்க."
"என்ன? அம்மா போயிட்டாங்களா? ஏன் எனக்கு சொல்லலை?" திகைப்பான குரலில் கேட்டாள் ராகினி.
"த்சு... அவங்க உயிரோட இருந்து கஷ்டப் படறதை விட போயிடறதே நல்லதுங்கற அளவுக்கு வியாதி முத்திடுச்சு. உனக்கு சொல்லி, உன்னை அலைய வைக்க வேண்டாம்னுதான் நான் சொல்லலை. அதான் இப்ப வந்துட்டேனே..."
"சரி, கேன்சர்க்கு ட்ரீட்மெண்ட் எடுத்ததுக்கு அப்புறம் நல்லா இருக்காங்கன்னுதானே எழுதி இருந்த?"
"வெளியில பார்க்கறதுக்கு நல்லாதான் இருந்தாங்க. ஆனா உள்ளுக்குள்ள எல்லாம் செல்லரிச்சு போச்சாம். டாக்டர்ஸ் கையை விரிச்சுட்டாங்க. வயசும் ரொம்ப ஆயிடுச்சு இல்ல ராகி. இந்த நோயை அவங்க உடம்பு தாங்கல."
"சரி, சரி. முதல்ல சாப்பிடு. குளிச்சு ரிலாக்ஸ் பண்ணிட்டு அப்புறமா பேசலாம்."
மரியாதையான, பந்தாவான தன் ஆபீஸ் அறையில், ஏசியின் குளிர்ச்சியில் சற்று சூடாக இருந்தான் மதன்.
"என்ன சேகர், ஏன் இப்படி தப்பு நடக்குது? எந்த ஃபைலை கேட்டாலும் தேடணும், தேடணுங்கறீங்க? ஏன் இப்படி என்னை டென்ஷன் பண்றீங்க?"
"அது... வந்து சார்... உங்க செக்கரட்டரி ஷீலாதான் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அவங்க சீட்டுக்கு இன்னும் யாரையும் அப்பாயிண்ட் பண்ணல சார்."
"அதுக்காக, புது செக்கரெட்டரி அப்பாயிண்ட் பண்ற வரைக்கும் ஆபீஸ் இப்படிதான் இருக்குமா? இதை எல்லாம் ஃபாலோ பண்ணி வச்சிருக்கக் கூடாதா?"
"ஸாரி சார். ரெண்டு நாளைக்குள்ள எல்லாத்தையும் ஸ்டடி பண்ணி வச்சுடறேன்."
"ஓ.கே. யூ கேன் கோ. பை த பை, செக்கரட்டரி போஸ்ட் இன்ட்டர்வியூக்கு என்னைக்கு டேட் குடுத்திருக்கோம்?"
"பத்தாம் தேதி ஸார்."
"ஓ.கே."
சேகர் அந்த அறையைவிட்டு வெளியேறினான். பர்சனல் டெலிஃபோன் ஒலித்தது.
"எஸ், மதன் ஹியர்."
"நான்தாங்க ராகினி. என் ஃப்ரெண்டு சுதா வந்திருக்கா. அஞ்சு வருஷம் கழிச்சு நாங்க இப்பதான் நேர்ல பார்த்துக்கறோம். இன்னிக்கு சீக்கிரம் வந்துருவீங்களா? உங்ககிட்ட நிறைய பேசணும்."
"ஸாரிம்மா. நிறைய வேலை இருக்கு. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர ட்ரை பண்றேன்."
"ஓ.கே.ங்க. தேங்க் யூ."
ரிசீவரை வைத்த மதன் அதன்பின், தொடர்ந்த வேலை பளுவில் மூழ்கினான்.
தலை குனிந்து சோகத்துடன் உட்கார்ந்திருந்த சுதாவைப் பார்த்து, அனுதாபப்பட்டாள்.
"உன் அண்ணா ஏன் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலை?" கேட்ட ராகினியை நிமிர்ந்து பார்த்தாள் சுதா.
"என்னோட ஜாதகம் என் எதிர்கால கணவருக்கும், அவர் வீட்டாருக்கும் பாதகமான ஜாதகமாம்..."
"ஏன்? என்னவாம்?"
"மூல நட்சத்திரமாம். புகுந்த வீட்டாரை நிர்மூலமா ஆக்கிடுமாம். மாமியாரை மூலையில உட்கார வைச்சுடுமாம். அண்ணா ரொம்ப முயற்சி எடுத்து அலுத்துப் போயிட்டான். அவனுக்குன்னு வாழ்க்கை வேண்டாமா? நிறைய படிச்சுட்டு ஏகமா சம்பாதிக்கறவனா இருந்ததுனால பொண்ணு வீட்டுக்காரங்க விலை பேசி வளைச்சு போட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பி வைச்சுட்டாங்க. எத்தனை நாளைக்கு எனக்காக அவன் வாழ்க்கையை தியாகம் பண்ண முடியும்?"
"அதுக்காக, உனக்கு ஒரு வழி பண்ணாமலே அமெரிக்காவுல செட்டில் ஆனது எனக்கென்னமோ நியாயமா படலை சுதா."
"ராகி, அண்ணாவை நான் குத்தம் சொல்ல மாட்டேன். ஜாதகம், நட்சத்திரம்னு மூட நம்பிக்கை வைச்சு ஒரு பெண்ணோட மனசை நோகடிக்கறவங்களாலதான் எனக்கு கல்யாணம் ஆகலை. அது என் தலைவிதி. அதை மாத்த யாரால முடியும்?"
"என்னால முடியும். உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க என்னால முடியும். எங்க வீட்டுக்காரருக்கு வெளி உலக பழக்கம் நிறைய உண்டு. அவர்கிட்ட சொல்லி உனக்கு நான் மாப்பிள்ளை பார்க்கறேன்.
நாத்தனார் ஸ்தானத்துல இருந்து நானே என் கையால் தாலி எடுத்துக் குடுத்து உன் கல்யாணத்தை நடத்தி வைக்கறேன்."
ராகினியின் அன்பில் நெகிழ்ந்து போன சுதா, அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். "எனக்கு கல்யாண ஆசையே இல்லை. கல்யாணமே வேண்டாம்னு எல்லாம் நான் வெளி வேஷம் போடலை. என் மனசுக்குள்ள எவ்வளவோ ஆசை இருக்கு. கணவன், அவனுடைய அன்பு, அவனுக்கு சமைச்சுப் போட்டு, சந்தோஷப்படுத்தி, குறும்பும், குதூகலமுமா வாழணும்னு ஏராளமா கனவும், ஏக்கமும் எனக்குள்ள இருக்கு. தற்போதைய சில பெண்கள் மாதிரி ஆபிஸ், உத்யோகம், பிஸினஸ்உமன் அப்படின்னு எல்லாம் சொல்லிக்கிட்டு, வெளியில ஒண்ணும், மனசுக்குள்ள ஒண்ணுமா ரெட்டை வேஷம் போடறது என்னோட சுபாவம் இல்லை. உண்மையிலேயே ஒருத்தரோட அன்பும் அரவணைப்பும் எனக்கு வேணும்னு நான் ஏங்காத நாளே இல்லை." சொல்லி முடிக்கும் முன்பே ராகினியின் மடியில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழுதாள் சுதா.
"மம்மி... மம்மி..." பள்ளிக் கூடத்தில் இருந்து திரும்பிய பிள்ளைகள் சுரேஷும், எழிலும் புதிதாக யாரோ வந்திருப்பதைப் பார்த்து சற்று பின்னடைந்தார்கள்.
அழுதுக் கொண்டிருந்த சுதா தன்னை சமாளித்து, பிள்ளைகளைப் பார்த்து புன்னகைத்தாள்.
"சுரேஷ், இது சுதா ஆன்ட்டி. அம்மாவோட ஃப்ரண்ட். எழில், ஆன்ட்டிக்கு வணக்கம் சொல்லு."
குழந்தைகள் நெருங்கி வந்தார்கள்.
"என்ன க்ளாஸ்ப்பா படிக்கற?"
"செகண்ட் ஸ்டாண்டர்டு ஆன்ட்டி." உடனே பதில் சொன்ன சுரேஷின் கன்னத்தில் செல்லமாய் கிள்ளினாள் சுதா.
"ஆன்ட்டி, உங்களை ஃபோட்டோவுல அம்மா காமிச்சுருக்காங்க." சுரேஷைவிட ஒரு வயது குறை்நத எழில் சுட்டித்தனமாய் பேசினாள். இருவரையும் அன்புடன் அணைத்துக் கொண்டாள் சுதா.
இரவு மணி பதினொன்று. தூக்கக் கலக்கத்துடன் வந்து கதவை திறந்து விட்ட வேலைக்காரி பத்மாவிடம், அந்த நேரத்திலும் பண்புடன் 'ஸாரி' சொல்லிவிட்டு ராகினி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான் மதன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவளை எழுப்ப மனமின்றி, மெதுவாக அவளது தோளை தொட்டான்.
"என்னம்மா நிறைய பேசணும்ன்னியே, என்ன விஷயம்? காலையில பேசிக்கலாமா?"
"இல்லை... இல்லை... இப்பவே பேசிடலாம்" என்று சொல்லிவிட்டு சுதாவின் பரிதாகக் கதையைச் சொன்னாள் ராகினி.
"ஆதரவு இல்லாத அவளோட கஷ்டத்தைக் கேக்கறப்ப மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா."
"என்னங்க, நான் ஒரு உதவி கேட்பேன். கோவிச்சுக்க மாட்டீங்களே?"
"என்ன உதவி? சொல்லும்மா."
"நம்ம ஆபீசுல செக்கரட்டெரி போஸ்ட்டுக்கு இன்னும் யாரையும் அப்பாயிண்ட் பண்ணலை இல்லை? அந்த வேலையை சுதாவுக்கு போட்டு குடுத்துருங்களேன். ப்ளீஸ் எனக்காகங்க..." மதனின் கன்னத்தை தன் கைகளால் மெதுவாக தடவியபடி கொஞ்சலாக கெஞ்சினாள் ராகினி.
"இதுக்கா இவ்ளவு தயங்கற? குட் குவாலிஃபிகேஷன் இருந்தா கண்டிப்பா இந்த வேலையை அவளுக்கே குடுத்துடலாம்."
"அவளோட வேலை திறமையைப் பத்தி நீங்க ஒண்ணும் யோசிக்காதீங்க. சுதா ரொம்ப ஸ்மார்ட். உங்க வேலையில பாதியை குறைச்சுடுவா. எனக்கு நல்லா தெரியும்."
"அப்ப ஓ.கே."
"ரொம்ப தேங்க்ஸ்ங்க. காலையில அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்."
"அது சரி... தாங்க்ஸை சொல்ற விதமா சொல்லக் கூடாதா?" கண் அடித்தபடி கேட்டான் மதன். புரிந்துக் கொண்ட ராகினி அவன் கைகளுக்குள் தன் கைகளை பின்னிக் கொண்டாள். அன்பும், ஆசையும் அங்கே சங்கமித்தது.
விடுமுறையை மகிழ்ச்சியாக போக்குவதற்கு வந்திருந்த பல நாட்டு மனிதர்கள் சூழ்ந்திருந்த தாய்லாந்து. ஃபுக்கெட் கடற்கரையில் நெருக்கமாக அமர்ந்தபடி மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தனர் ராகினியும், மதனும்.
அரை குறை ஆடைகளில் சிறிதும் தயக்கம் இன்றி வெளிநாட்டுப் பெண்கள், தங்கள் ஜோடியுடன் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தனர். மசாஜ் செய்யும் பெண்கள் கடற்கரையில் வெட்ட வெளியில் படுக்க வைத்து, தைலம் தடவி மசாஜ் செய்து விட்டுக் கொண்டிருந்தனர். தங்களின் பிரச்சனைகளை மறந்து பல வெளிநாட்டவரும் உல்லாசமாக அனுபவிக்கும் அழகிய தீவு ஃபுக்கெட். குறிப்பாக, காதலர்கள், தம்பதியர்க்கு ஏற்ற இடம்.
"பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னதும் நம்ம ப்ரோகிராம் கேன்சல்னு நினைச்சேன். நல்ல வேளை உன் ஃபிரெண்டு சுதா பிள்ளைங்களைப் பார்த்துக்கிறேன்னு பொறுப்பு எடுத்துக்கிட்டா."
"ஆமாங்க. சுரேஷையும், எழிலையும் சுதா நல்லா பார்த்துக்குவா."
"ஆபிசுக்கும் பொறுப்பான ஆளா சுதா அமைஞ்சுட்டா. அதனாலேதான் நாம இங்க ஜாலியா..."
மதனின் வாயை தன் கைகளால் மூடினாள் ராகினி.
"சரி... சரி... அதுக்குத்தானே இங்கே வந்திருக்கோம். வாங்க இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. இனிமேல் ஷாப்பிங் போகலாம்."
இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.
சுதா ஆபீஸ் வேலைகளை பழகியபின் மதனின் வேலை பளு வெகுவாய் குறைந்தது. அவளுடைய வேலை திறமையை கண்டு வியந்தான் மதன். எதையும் கற்பூரம் பற்றிக் கொள்வது போல் சட்டென்று புரிந்துக் கொண்டு செயலாற்றும் அவளது புத்திசாலித்தனமும், சுறுசுறுப்பும் அவனை மிகவும் கவர்ந்தது.
நாளாக ஆக கம்பெனி விஷயமாக வெளியே போனாலும் சுதாவை அழைத்துச் செல்ல ஆரம்பித்தான் மதன். அந்த அளவிற்கு அவள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்கிற அளவில் சுதா அவனுக்கு உதவியாக இருந்தாள்.
அவர்கள் இருவருக்கும் சேர்த்தே மதிய உணவு சமைத்துக் கொடுத்தனுப்புவாள் ராகினி. இருவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு ராகினியின் சுவையான சமையலை போன் மூலம் ஓரிரு நிமிடங்கள் பேசி பாராட்டுவார்கள்.
குழந்தைகள் ஸ்கூலுக்கு அனுப்புவதற்கு ராகினிக்கு உதவிக் கொண்டிருந்தாள் சுதா. அவர்கள் போனதும் பூஜை அறைக்குப் போய்க் கொண்டிருந்த ராகினியை கூப்பிட்டாள்.
"ராகி, உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்."
தயக்கமாய் பேசியவளை கேள்விக் குறியுடன் பார்த்தாள் ராகினி.
"ராகி, உன் தயவால ஒரு நல்ல வேலையும் கிடைச்சுடுச்சு..."
"இது ஒரு பெரிய விஷயமா? இதையே ஏன் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க?"
"அது .. அது... வந்து... இங்க உன் வீட்ல எத்தனை நாளைக்கு உனக்கு பாரமா இருக்கிறது... அ... அதனால உமன்ஸ் ஹாஸ்ட்ல்ல போயி..."
"ஓஹோ... நீ எனக்கு பாரமா இருக்கியா? நான் ஒண்ணும் அப்படி நினைக்கலையே? ஒரு வேளை உனக்கு என் வீட்ல இருக்கிறது பிடிக்கலையோ என்னமோ?" ராகினியின் குரலில் லேசாக கோபம் எட்டிப் பார்த்தது.
"சீச்சீ... என்ன ராகி, நீ பேசறது? உனக்கு இடைஞ்சலா இருக்க...." சுதா பேசி முடிக்கும் முன் ராகினி பேச ஆரம்பித்தாள்.
"நீ எங்கேயும் போக வேணாம். நீ இங்கே இருக்கிறதுனால எனக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. என்கூட பிறந்தவளா இருந்தா வெளியே அனுப்பிடுவேனா? இனிமேல் ஹாஸ்டலுக்கு போறதைப் பத்தின பேச்சையே எடுக்காதே. சொல்லிட்டேன்."
ராகினியின் அன்பும், பாசமும் சுதாவின் கண்களில் நீரை நிறைத்தது.
ஞாயிற்றுக் கிழமைகளில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர். வெளியே எங்கே போனாலும் சுதாவையும் கூடவே அழைத்துக் கொண்டு போனார்கள். குழந்தைகளுடன் கலகலப்பாக சிரித்துப் பேசி மகிழ்ந்த சுதா வெறுமையான, வெறித்த பார்வையை மறந்திருந்தாள். மாறுதலான சந்தோஷமான சூழ்நிலையில், அவளது கண்களை சுற்றிய கருவளையம் காணாமல் போனது.
இரவின் மடியில் நிலவு அமைதியான நித்திரையில் ஆழ்ந்திருந்தது. ராகினியின் மீது கைகளைப் போட்டபடி காதோரமாய் கிசு கிசுத்தான் மதன்.
"ராக்கம்மா"
"என்ன, ஐயாவுக்கு தூக்கம் வரல்லியாக்கும்?"
"ம்... புரிஞ்சா சரி" மேலும் இறுக்கமாக அணைத்தவனுடன் இணக்கமாக தன்னைக் கொடுத்தாள் ராகினி. விடிவதற்கு முன்பாகவே விழித்துக் கொண்டவள், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மதனை எழுப்பினாள்.
"என்னம்மா?"
"நான் ஒரு விஷயம் சொன்னேன். அதைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லலியே?"
"எதைப் பத்தி?"
"சுதாவுக்கு மாப்பிள்ளை விசாரிக்க சொன்னேனே?"
"ஓ. அதுவா? அதுக்கா இந்த விடியக்காத்தால எழுப்பினே? நல்ல பொண்ணும்மா நீ. என் ஃப்ரெண்டு செந்தில் குமாரை உனக்கு தெரியுமில்ல?"
"யாருங்க? சினிமா டைரக்டர் செந்தில் குமாரா? உங்க கூட காலேஜ்ல படிச்சதா சொல்லுவீங்களே அவர்தானே?"
"ஆமாம். அவனோட சொந்தக்காரப் பையன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு அமெரிக்காவுல நல்ல வேளையில இருக்கானாம். 32 வயசு ஆகுதாம். செந்தில் குமார் கிட்ட சுதாவைப் பத்தி சொல்லி அந்த பையனுக்கு கேட்க சொல்லியிருக்கேன். என்ன பதில் வருதுன்னு பார்க்கலாம்."
"ஜாதகத்தைப் பத்தி ஏதாவது கேட்டாங்களாமா?"
"இது வரைக்கும் கேட்கலை. இனிமேல் கேட்டாலும் கேட்கலாம்."
"ஜாதகம் கேட்டாங்கன்னா கஷ்டம்தான். இல்லீங்க?"
"பார்க்கலாம். இந்த மாப்பிள்ளை இல்லைன்னா வேற மாப்பிள்ளை விசாரிக்கலாம்."
"சுதாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சு, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்ங்க."
"எல்லாம் நல்லபடியா அமையும். நீ கவலைப்படாதே. இன்னும் விடியறதுக்கு நேரம் இருக்கு. இப்ப நிம்மதியா தூங்கு." அவளது தலையை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான் மதன்.
ஆபீஸில் பொறுப்பாக பணிபுரிந்து மதனின் வேலைகளில் பாதியை சுதா ஏற்றுக் கொண்டாள். நாளடைவில் அவள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டாகி பணப் பொறுப்புகளையும் அவளிடம் ஒப்படைக்க ஆரம்பித்தான் மதன்.
இதற்கிடையே, சுதாவிற்கு பார்த்து விசாரித்த வரன்கள் எல்லாம் தட்டிப் போனது. பெரும்பாலும் ஜாதகம் காரணமாகவே சுதாவை பெண் கொள்ள மறுத்தனர்.
ஞாயிற்றுக் கிழமை இந்து, மங்கையர் மலர், தினமலர் என்று எல்லா பத்திரிகைகளிலும் மணமகள் தேவை விளம்பரம் பார்த்து பொறுமையாய் எழுதிப் போட்டாள் ராகினி. பலன் பூஜ்யமாக இருந்தது.
ஒரு நாள், ஆபீஸில் மதிய உணவு இடைவேளை, வீட்டிலிருந்து வந்திருந்த டிபன் கேரியரை எடுத்து மேஜை மீது வைத்தாள் சுதா. மதனின் பிளேட், டம்ளர், ஸ்பூன் எடுத்து வைத்தாள். ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டர் பாட்டிலை எடுத்து டம்ளரில் ஊற்ற முற்பட்டாள். கை தவறி தண்ணீர் கொட்டியது. நாற்காலியில் உட்கார்ந்திருந்த மதனின் ஷர்ட் மீது தண்ணீர் தெறித்தது.
பதறிய சுதா, தன் கர்சீப்பால் அவன் ஷர்ட்டை துடைத்தாள்.
"ஸாரி, ஸாரி" என்றபடியே துடைத்தவளின் இதயத்தில் மின்சார அலைகள் பாய்ந்தது போன்ற உணர்வு. முதல் முதலாக ஒரு ஆடவனின் ஸ்பரிசம் பட்ட புதுமையான அனுபவத்தில் தன்னை மறந்தாள். தன் சூழ்நிலையை மறந்தாள். மதன் அணிந்திருந்த ஷர்ட்டின் மேல் பட்டன் போடப்படாமல் இருந்த படியால் அவனது மார்பு முடிகளின் மீது அவள் கை பட்டது. பட்ட கையை எடுக்க மனமின்றி தவித்தாள்.
"சுதா" மதன் கூப்பிட்ட பிறகுதான் தன் உணர்வுக்கு வந்தாள். ஒரு கணம் தடுமாறிவிட்ட தன் புத்தியை மனதிற்குள் நொந்துக் கொண்டபடி அவனுக்கு பரிமாறினாள். வழக்கமாய் லஞ்ச் நேரத்தில் கூட ஆபீஸ் விஷயங்களை அலசிப் பேசும் அவர்கள் இருவரும் அன்று எதுவும் பேசாமல் சாப்பிட்டு எழுந்தனர்.
சுதாவின் படுக்கை அறை. இரவு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் நினைவலைகளால் தாக்கப்பட்டு தூக்கம் இழந்து தவித்துக் கொண்டிருந்தாள் சுதா.
'இனி விளக்கை அணைத்தாலாவது தூக்கம் வருகிறதா பார்ப்போமே எண்ணமிட்டபடி எழுந்தாள். கட்டிலின் அருகே மேஜை மீதிருந்த தண்ணீர் ஜக் அவளது கை பட்டு சரிந்தது. தண்ணீர் வழிந்தது. உடனே அன்று மதிய உணவு இடைவேளையில் மதன் மீது தண்ணீர் கொட்டி விட்ட சம்பவம் நெஞ்சில் நிழலாடியது.
மதனின் ஸ்பரிஸ உணர்வு அவளுக்குள் இன்ப வீணையை மீட்டியது. ஆனால்... ஆனால்... இது தப்பு. மதன் ராகினியின் சொத்து. ராகினியின் உயிர். வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தவளின் உயிரை என் மனம் நாடக் கூடாது. உப்பிட்டவளை உள்ளளவும் நன்றியுடன் நினைத்து வாழ வேண்டும். மனசாட்சி இடித்தது. மறு நிமிடமே மதனின் மார்பில் பட்ட கைகளில் ஏற்பட்ட சுகம் அவளது உள்ளத்தை தடுமாற வைத்தது.
மதன் ஷேவ் பண்ணிக் கொண்டிருந்தான்.
"என்னங்க, பிள்ளைங்களுக்கு நாலு நாள் லீவு வருது. நம்ப தோட்ட வீட்டுக்கு போய் இருந்துட்டு வரலாமா?"
"லீவு என்னைக்கும்மா?"
"வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாலு நாள் லீவாம்."
"வியாழக் கிழமை நான் பெங்களூர் போகணும். காலையில போயிட்டு ராத்திரி வந்துடுவேன். வெள்ளிக் கிழமை காலையில் தோட்ட வீட்டுக்கு போகலாமா?"
"ஒண்ணு செய்யலாங்க. நானும், சுதாவும் குழந்தைகளை கூட்டிக்கிட்டு வியாழக்கிழமையே போயிடறோம். நீங்க பெங்களூர்ல இருந்து நேரா தோட்ட வீட்டுக்கு வந்துடுங்க."
"சுதாவும் என்கூட பெங்களூர் வர்றா. அவளுக்குத்தான் புது ப்ராஜெக்ட் பத்தின எல்லா டீடெயில்சும் தெரியும்."
"சரிங்க. நீங்க வந்தப்புறம் எல்லாரும் சேர்ந்து போகலாம்."
"ஓ.கே." ஷேவ் செய்து முடித்த மதன் குளிக்கப் போனான்.
காலை உணவு தயாரித்து எடுத்து வருவதற்காக சமையலறைக்கு சென்றாள் ராகினி. இதற்குள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளம்ப தயாராக்கி வைத்திருந்தாள் சுதா.
"என் வேலையில பாதியை குறைச்சுட்ட சுதா. இதுங்க ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு கிளப்பறது ரொம்ப கஷ்டம்."
"நோ... நோ.. என் கிட்ட சமர்த்தா கிளம்பிடறாங்க. தொந்தரவு குடுக்கறதே இல்லை."
"உனக்கும் காலா காலத்துல கல்யாணம் ஆகி இருந்தா, இவங்க மாதிரி ரெண்டு குழந்தைங்க இருந்திருக்கும். உனக்காக முயற்சி எடுக்கற வரன்கள் எதுவுமே ஒத்துவர மாட்டேங்குது. எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு சுதா."
"த்சு... என் தலை விதி எப்படியோ அதுவே நடக்கும் ராகி. உனக்கு கிச்சன்ல ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா?"
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ போய் குளிச்சுட்டு ஆபீசுக்கு புறப்படு. வியாழக்கிழமை பெங்களூர் போறீங்களாமே? வந்தபிறகு நாம்ப எல்லாரும் தோட்ட வீட்டுக்கு போகலாம்."
"தோட்ட வீடா?"
"உன் கிட்ட தோட்ட வீடு பத்தி சொல்லவே இல்லையோ? மகாபலிபுரம் போற வழியில, நீலாங்கரையில இவர் ஒரு இடம் வாங்கி, அங்க ஒரு குட்டி பங்களா கட்டியிருக்கார். பங்களாவை சுற்றி தோட்டம். ரொம்ப சூப்பரா இருக்கும். அமைதியான ஏரியா. பிள்ளைங்களுக்கு லீவு விட்டு, அவரும் ஃப்ரீயா இருந்தா, அப்பப்ப அங்கே போயிடுவோம். ஸ்விம்மிங்பூல் கூட அங்க இருக்கு. குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். நாமதான் வெள்ளிக்கிழமை போப்போறோமே, உனக்கு அந்த இடம் ரொம்ப பிடிக்கும் பாரேன்."
"சரி ராகி, நான் போய் குளிச்சு ரெடியாகறேன்."
பெங்களூர் ஹைவேஸ் சாலையில் மதனின் சென்னை ஃபோர்ட்டு கார் விமானம் பறப்பது போல் ஜிம்மென்று சாலையில் வழுக்கி சென்று கொண்டிருந்தது. லாவகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்த மதனை தன்னையும் அறியாமல் ரசித்தபடி உட்கார்ந்திருந்தாள் சுதா.
இடுப்பில் அவள் செருகி இருந்த கர்சீப் நழுவி விழுந்தது. அதை எடுப்பதற்காக குனிந்தாள். அதே சமயம் கியர் மாற்றுவதற்காக கியரின் மீது மதன் கை வைத்தான். சுதாவின் மீது மதனின் கைகள் பட்டது.
"சாரி.."
மதன் 'சாரி சொன்னது கூட சுதாவின் காதில் விழவில்லை. அவளது உணர்வுகள் எங்கோ மிதந்தன. மதனின் மனதிலும் ஒரு புரட்சி. ராகினியைத் தவிர வேறு பெண்ணைத் தொட்டு அறியாத அவனுக்கு அந்நியப் பெண்ணான சுதாவின் தொடு உணர்வு ஒரு புதுமையான உணர்வை அளித்தது. முதிர் கன்னி என்றாலும் கன்னி அல்லவா? கன்னிப் போகாமல் கனிந்திருந்தாள்.
"சுதா, உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நானும், ராகினியும் எடுத்த முயற்சி எல்லாம் தோல்வி ஆயிடுச்சு. உன்னைப் பத்தி ராகினி ரொம்ப கவலைப்படறா."
"எனக்காக கவலைப்பட சில ஜீவன்கள் இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனால் மதன்.. எனக்கே எனக்குன்னு யாருமே இல்லையேன்னு உள் மனசுக்குள்ள ஆழமா நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு." திடீரென்று மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் பொங்கி வர குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் சுதா.
"சுதா... சுதா.. என் ஆச்சு?" பதறிய மதன் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்.
"ஏன் சுதா? இப்படி அழற?" முகத்தை மூடியுள்ள அவளது கைகளை தன் கைகளால் விடுவித்தான். அவளது கண்ணீரைத் துடைத்தான். அந்த பரிவில் உள்ளம் நெகிழ்ந்து போன சுதா அவன் மடியில் முகம் புதைத்து மேலும் அழுதாள். அவளது அழுகையை அடக்குவதற்காக அவளை அணைத்தான் மதன். அந்த அணைப்பில் சிலிர்த்துப் போன சுதா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"இப்பவே, இந்த நிமிஷமே என் உயிர் போயிடணும் மதன்."
"நீ... நீ.. ஏன்... இப்படி பேசற சுதா...?"
"எனக்கும் ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழணும்னு கனவு இருந்துச்சு... ஆனால் இதோ இப்ப உங்க அணைப்பிலே இருந்த அந்த சில நிமிடங்கள் போதும்னு ஃபீல் பண்றேன் மதன். ஐ லவ் யூ."
"சுதா...?"
"என்ன மதன் யோசிக்கறீங்க? நான் சொன்னது தப்பா?"
"அது... அது... வந்து..."
"தெரியும் மதன். கல்யாணம் ஆகி மனைவி, குழந்தைகள்னு இருக்கிற நீங்க எப்படி என்னை 'ஐ லவ் யூ சொல்ல முடியும்னு தானே யோசிக்கறீங்க. நீங்க ஐ லவ் யூன்னு சொல்லாட்டாலும் பரவாயில்லை, நான் உங்களைக் காதலிக்கிறேன். மனப்பூர்வமா விரும்பறேன்."
பதில் ஏதும் கூறாமல் மதன் காரை, ஸ்டார்ட் செய்தான்.
கார் பெங்களூரை நோக்கி விரைந்தது.
பெங்களூருக்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் சந்திக்க வேண்டிய பசவப்பாவின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசி முடித்தாள் சுதா.
"என்ன சுதா? பசவப்பா மீட்டிங் ப்ளேஸ்ல ரெடியா இருக்காரா?"
"இல்லை மதன், அவரோட அம்மாவுக்கு திடீர்னு சீரியஸாகி நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணி இருக்காராம். நம்பளுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நாளைக்கு சந்திக்கறதா சொன்னாராம். அவரோட செக்ரட்டரிதான் சொல்றா."
"நாளைக்கா? இன்னிக்கு அவரைப் பார்த்ததும் மெட்ராஸ் புறப்படறதா நம்ப ப்ரோக்ராம். நாளைக்கு பார்க்கறதா இருந்தா... ம்.. என்ன.. செய்யலாம்? சரி, ஒண்ணு செய்யலாம். நமக்கு பெங்களூர்ல பசவப்பாபை பார்க்கறதைத் தவிர வேற வேலை இல்லை. அதனால, இன்னிக்கு பெங்களூரை சுத்தி ஒரு விஸிட் அடிக்கலாம். சாயங்காலம் பசவப்பாவோட செக்ரட்டரிக்கு போன் அடிச்சு பார்க்கலாம். நாளைக்கு ஷ்யூரா நம்பளை பசவப்பா மீட் பண்றாருன்னா அவரைப் பார்த்துட்டு போகலாம்."
பல முறை பிஸினஸ் விஷயமாக பெங்களூர் வந்திருந்தாலும் முக்கியமான சுற்றுலா இடங்களை மதன் பார்த்ததே இல்லை. வந்ததும் வேலை முடிந்ததும் கிளம்பி விடுவான். இந்த முறை தானாக வாய்ப்பு நேரிட்டபடியால் சுதாவுடன் முக்கியமான எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தான். பசவப்பாவின் செக்ரட்டரிக்கு போன் செய்தாள் சுதா.
"என்ன சுதா? என்ன ஆச்சு? செக்ரட்டரி என்ன சொன்னார்?"
"பசவப்பா நாளைக்கு காலையில நம்பளை மீட் பண்றாராம்."
"அப்பிடின்னா அவரை மீட் பண்ணிட்டு நாளைக்கு மெட்ராஸ் புறப்படலாம்."
"நான் மாத்து ஸாரி எதுவும் கொண்டு வரலையே...?"
"அதுக்கென்ன? 'பிக் கிட்ஸ் கெம்ப் போய் ஸாரி, இன்டீரியர் ஐட்டம் எல்லாம் வாங்கிடலாம்."
'பிக் கிட்ஸ் கெம்ப் வாசலில் கார் நின்றது. சிறுவர் சிறுமிகளை கவரும் விதமாக முயல், கிளி, குதிரை வடிவத்தில் வேஷமிட்ட மனிதர்கள் முன் பக்கம் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். கடை மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. ஒரு பக்கம் அழகிய பெண்கள் கவர்ச்சிகரமான விதவிதமான உடைகளை அணிந்தபடி மினி ஃபேஷன் பரேட் நடத்திக் கொண்டிருந்தனர்.
அளவுக்கு மீறிய மேக்கப்புடனும், ஆடை அலங்காரத்துடனும் காணப்பட்ட சிகப்பு நிற பெண்கள் புடவை விற்பனை பகுதியில் இவர்கள் இருவரையும் வசீகர சிரிப்பினால் வரவேற்றார்கள். சேலைகளைத் தேர்ந்தெடுத்தான் மதன்.
"எதுக்கு மதன் இத்தனை சேலைங்க? ராகினி எனக்கு நிறைய புடவை குடுத்திருக்கா."
"பரவாயில்லை. இதையும் எடுத்துக்க."
"... ராகினிக்கு?"
"அவளுக்கும் எடுக்கத்தான் போறேன்."
'புடவைகளை பங்கு கொடுத்த ராகினி, அவளுடைய புருஷனை நான் பங்கு போடுவதை அறிந்தால்... நெஞ்சம் நடுங்கியது சுதாவிற்கு.
"போலாமா சுதா?"
"ம்"
சென்ட்ரல் பார்க் ஹோட்டல். விசாலமான படுக்கைகளைப் பார்த்ததும் ஏ.ஸி அறையின் அந்த குளிரிலும் வியர்த்தாள் சுதா.
எவ்வளவுதான் தைரியமான, திடமான மனது உடைய பெண் என்றாலும் படுக்கை அறையில் ஒரு ஆடவனுடன் தனித்திருக்கும் புதிய அனுபவம் அவளுக்கு பயத்தை அளித்தது. திக் திக் என்று அடிக்கும் அவளது இதய ஒலி அவளுக்கே கேட்டது.
"என்ன சுதா? டின்னர் ஆர்டர் பண்ணப் போறேன். உனக்கு என்ன வேணும்?"
"எதுவும் வேண்டாம்."
"என்ன இது? மத்யானம் கூட நீ சரியா சாப்பிடலை. நானே உனக்கு ஆர்டர் பண்றேன். பெங்களூர்ல கேசரிபாத், காராபாத் ரொம்ப ஃபேமஸ்."
டின்னர் ஐட்டங்கள் வந்தன. குழம்பிய மனநிலையில் அரை குறையாக சாப்பிட்டு முடித்தாள் சுதா. பிக் கிட்ஸ் கெம்ப் கடையில் வாங்கின இரவு உடைக்கு மாறினான் மதன். சினிமாவில் வரும் பணக்காரர்கள் அணியும் கம்பீரமான இரவு உடையில் வித்தியாசமான அழகோடு காணப்பட்ட மதனின் உருவம் சுதாவின் மனதை அலைக்கழித்தது.
கட்டிலில் உட்கார்ந்திருந்த சுதாவின் அருகில் வந்து கிசுகிசுப்பாக மதன் கூப்பிட்டது அவளுக்கு கிளுகிளுப்பூட்டியது. தன் நிலை மறந்தாள். ராகினியை மறந்தாள். மதன் மீது கொண்டுள்ள காதல் மற்ற அனைத்தையும் மறக்க வைத்தது.
கன்னத்தோடு கன்னம் இழைத்த மதனின் தலைமுடியை வருடினாள்.
"மதன், ஊரறிய, உலகறிய நீங்க என்னை மனைவி ஆக்கிக் கொள்ள முடியாது. தாலிங்கற கௌரவத்தையும் உங்ககிட்ட எதிர்பார்க்க முடியாது. இதெல்லாம் தெரிஞ்சும் உங்ககிட்ட மனப்பூர்வமா என்னை ஒப்படைக்கிறேன்." அவனுடைய நெஞ்சில் புறாவைப் போல் புதைந்து தஞ்சம் புகுந்தாள்.
மகாபலிபுரம் செல்லும் சாலை. சுற்றிலும் பச்சை பசேலென்று செடிகளும், மரங்களும் சூழ்ந்திருக்க, நடுவே சின்னதாய் ஆனால், மிகவும் வசதியான அழகிய பங்களா காணப்பட்டது. மதன், ராகினியின் கனவு இல்லம் அது. வாசலில் சலவைக் கல்லில் 'ஆராதனா என்று பங்களாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
"அம்மா, சுதா ஆன்ட்டி எப்பம்மா வருவாங்க? அவங்க இல்லாம ரொம்ப போர் அடிக்குதும்மா." சுரேஷ், ராகினியின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சினான்.
"அப்பாவும், சுதா ஆன்ட்டியும் பெங்களூர்ல இருந்து நேரா இங்க வந்துடுவாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் இப்ப சாப்பிடுங்க."
"அம்மா, ஸ்விம்மிங் பூல்ல குளிக்கணும்மா. ஸ்விம்மிங் டிரஸ் கூட எடுத்துட்டு வந்திருக்கேன்." எழில், ராகினியின் கையைப் பிடித்து இழுத்தாள்.
"ம்கூம். அப்பா வரட்டும். அதுக்கப்புறம் குளிக்கலாம்."
"அதோ கார். அப்பா வந்துட்டார். சுதா ஆன்ட்டியும் வந்துட்டாங்க." சுரேஷும், எழிலும் மகிழ்ச்சியில் குதித்தார்கள்.
"என்ன சுதா? ஏன் ஒரு மாதிரி இருக்க? டயர்டா இருக்கா? நீ ஒரு நாள் இல்லாம இவங்க ரெண்டு பேரும் என்னை படுத்திட்டாங்க." ராகினி பேசி முடிப்பதற்குள் சுதாவின் மீது விழுந்து கொஞ்சினார்கள். அந்த அன்பிலும், பாசத்திலும் சுதா கரைந்து உருகினாள். மனதிற்குள் உறுத்தலாய் இருந்தது.
"அப்பா, ஸ்விம்மிங் பூலுக்கு போலாம்ப்பா." எழில், மதனின் தோளைப் பிடித்தபடி தொங்கினாள்.
"போலாண்டா கண்ணு. ஏன் ராகினி, இவங்களை இங்க கூட்டிட்டு வர்றதுக்கு ரொம்ப சிரமப்பட்டுட்டியா?"
"அதை ஏன் கேக்கறீங்க? ஆட்டோக்காரன் கொண்டு வந்து விட்றதுக்குள்ள ரொம்ப தொல்லை பண்ணிட்டான். மீட்டருக்கு மேல ஐம்பது ரூபாய் கேட்டு அறுத்துட்டான். ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்."
"உனக்கு ஆட்டோ பேசி, ஆட்டோவுல அங்கே இங்கே போற பழக்கம் இல்லையே. சாரிம்மா, போனஇடத்துல பார்க்க வேண்டிய ஆள் ஒரு நாள் டிலே பண்ணிட்டார்."
"அதனால என்னங்க. பரவாயில்லை. குழந்தைங்களை நீங்க ரெண்டு பேரும் ஸ்விம்மிங் பூலுக்கு கூட்டிட்டு போங்க. நான் காபி போட்டு கொண்டு வர்றேன்."
"யே..." குழந்தைகள் குதூகலமாக கூச்சலிட்டபடி ஓடினார்கள். மதனும், சுதாவும் அவர்களுடன் போனார்கள்.
எதையோ யோசித்தபடி படுத்துக் கொண்டிருந்த மதனின் காதைக் கிள்ளினாள் ராகினி.
"என்னங்க, என்ன யோசனை? மூணு நாள் தோட்ட வீட்ல பொழுது போனதே தெரியலை. பிள்ளைங்க படிப்பு முடிஞ்சப்புறம் நாம அந்த வீட்டுக்கே போயிடலாங்க."
"ம்"
"அங்கே அமைதியான சூழ்நிலையில இருக்கிறது ரொம்ப நிம்மதியா இருக்குல்ல?"
"ம்"
"என்னங்க, ஏன் ஒண்ணுமே பேசாம 'ம் கொட்டறீங்க? தூக்கம் வருதா?"
"ஆமாம் ராகினி. ஆபீஸ்ல நாளைக்கு நிறைய வேலை இருக்கு" மழுப்பினான் மதன். உண்மையில் அவனுடைய எண்ணம் எல்லாம் பெங்களூரில் சுதாவுடன் இருந்த நினைவுகளில் லயித்திருந்தது.
"சரிங்க. நீங்க தூங்குங்க."
வழக்கமாய் ராகினியுடன் இணைந்து படுத்து தூங்கும் மதன், அவளுக்கு முதுகு காட்டியபடி தூங்க முற்பட்டான்.
மதன் -சுதா தொடர்பு நாளுக்கு நாள் வளர்ந்தது. ஆபீஸ் நேரம் போக, இருவரும் தோட்ட வீட்டில் சந்தித்து மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று பூனை நினைக்குமாம். அதுபோலதான், தங்கள் தொடர்பு யாருக்கும் தெரியாது என்று மதனும், சுதாவும் கற்பனை செய்திருந்தார்கள்.
ஆபீஸ் சம்பந்தப்படாத இடங்களில் இருவரையும் நெருக்கமாக பார்க்க நேரிட்ட நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அரசல், புரசலாக பேச்சு எழும்பியது.
பள்ளிக் கூடத்தில் இருந்து வாடிய முகத்துடன் திரும்பி வந்த சுரேஷைக் கண்டு திடுக்கிட்டாள் ராகினி. முகம் சிவந்திருந்தது. நெற்றியில் தொட்டுப் பார்த்தாள். அனல் அடித்தது. உடனே மதனுக்கு போன் செய்தாள். மதன் இல்லை.
'எங்கே போயிருப்பார்? யோசித்தபடியே செல்லுலார் போனில் முயற்சி செய்தாள். அதிலும் மதன் கிடைக்க வில்லை. பரபரவென்று செயல்பட்டாள். வேலைக்கார பெண் பத்மாவிடம் எழிலை விட்டுவிட்டு, ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு போனாள்.
"பையனை அட்மிட் பண்ணனும்மா. ஜுரம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. ஜுரம் குறைஞ்சப்புறம்தான் எல்லா டெஸ்ட்டும் எடுக்க முடியும். பையன் ரொம்ப சோர்வா ஆயிட்டான். குளூக்கோஸ் ஏத்தணும்." டாக்டர் சொன்னதும் ராகினியின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தன. சுரேஷை அட்மிட் செய்தாள். தனிமையில் செயல்பட, டென்ஷன் அதிகமானது. நர்ஸிடம் சொல்லிவிட்டு, மறுபடியும் மதனுக்கு போன் செய்தாள். மதனும் இல்லை. சுதாவும் இல்லை.
ஆபீஸ் பொது நம்பருக்கு போன் செய்து கேட்டபோது மதன், சுதா இருவரும் ஆபீஸ் வேலையாக வெளியே போய் இருப்பதாக தகவல் கிடைத்தது.
வீட்டிற்கு போன் செய்தாள்.
"பத்மா, எழில் அழாம இருக்காளா? ஒரு வேளை ஐயாவும், சுதாவும் வந்தா, நான் அரவிந்த் ஆஸ்பத்திரியில இருக்கேன்னு சொல்லு."
"எழில் டி.வி. பார்த்துக்கிட்டு இருக்கும்மா. ஐயா வந்தா நான் விபரம் சொல்லிடறேன்."
"சரி"
ரிசீவரை வைத்து விட்டு, திரும்பிய ராகினி தனக்கு அடுத்ததாக போன் செய்ய காத்திருந்தவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
"அட ஷீலா...!"
"எப்படி இருக்க? இந்த ஊர்லதான் இருக்கியா?"
"ஆமாம் மேடம். கல்யாணத்தப்ப அவருக்கு திருச்சியில வேலை. இப்ப இங்க டிரான்ஸ்ஃபர் ஆயிடுச்சு. நீங்க... இங்க..."
"என் பையன் சுரேஷுக்கு ரொம்ப ஜுரமா இருக்கு. அட்மிட் பண்ணியிருக்கேன். ஸாரை கான்டாக்ட் பண்ண முடியலை. ஆபீஸ்ல இல்லை. செல்லுலார் நம்பரும் ரீச் ஆக மாட்டேங்குது."
"மேடம், நான் ஒண்ணு சொல்றேன். தப்பா நினைக்காதீங்க. என்னோட செக்கரட்டரி போஸ்ட்ல இப்ப இருக்கிற பொண்ணு கூட ஸார் கண்டபடி சுத்துறார். இப்ப கூட நீலாங்கரையில இருக்கிற உங்க தோட்ட வீட்டுக்கு அவங்க ரெண்டு பேரும் போறதை என் கண்ணால பார்த்தேன். என் வீடு இப்ப அந்தப் பக்கம்தான். அந்த ரோடுல அவங்க ரெண்டு பேரும் கார்ல போறதை அடிக்கடி பார்த்திருக்கேன். எனக்கென்னமோ அவங்க ரெண்டு பேரும் முதலாளி, செக்கரட்டரியா பழகுற மாதிரி தெரியலை..." அவள் பேசி முடிக்கும் முன் குறுக்கிட்டாள் ராகினி.
"சீச்சீ.. அவ என் ஃபிரண்டு. நீ நினைக்கற மாதிரி எல்லாம் இருக்காது. சுதா ரொம்ப நல்லவ..."
"இல்லை மேடம். நீங்க அளவுக்கு மீறி இடம் கொடுத்திருக்கீங்க. அதிகமா நம்பறீங்க. உறுதியா சொல்றேன். அவங்ககிட்ட தப்பு இருக்கு."
ஆணித்தரமாக அடித்துச் சொன்னாள் ஷீலா. அவளுடைய குரலில் இருந்த உறுதியும், தெளிவான உண்மையும், அதைவிட அவளது முக வாட்டமும் நெஞ்சில் இடி இடித்தது போல் இருந்தது ராகினிக்கு.
சமாளித்து அவளிடம் விடைபெற்ற ராகினி, சுரேஷ் படுத்திருந்த அறைக்கு திரும்பினாள். எதிரே பாட்டி வந்துக் கொண்டிருந்தாள்.
"என்னடி ராகினி, தற்செயலா உன்னைப் பார்க்கறதுக்காக உன் வீட்டுக்கு போனேன். வேலைக்கார குட்டி சொன்னா நீ இந்த ஆஸ்பத்திரியில சுரேஷை சேர்த்திருக்கேன்னு."
"பாட்டி கொஞ்ச நேரம் சுரேஷ்கிட்ட இருந்து அவனை பார்த்துக்கோங்க. நர்ஸும் கூட இருப்பாங்க. இதோ நான் வந்துடறேன்."
பாட்டியின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக வெளியேறினாள் ராகினி.
'இதென்னடி இது. இவ இப்படி அரக்க பரக்க ஓடறா ஒன்றும் புரியாமல் பாட்டி சுரேஷின் அருகே உட்கார்ந்தாள்.
ஆட்டோவை தோட்ட வீட்டுக்கு கொஞ்சதூரம் முன்பாகவே நிறுத்தி விட்டு, பங்களாவை நோக்கி வேகமாக நடந்தாள் ராகினி. வெளிப்பக்க கேட்டின் பூட்டு, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. தன் உயிர் சொத்து கொள்ளை போகிறதா என்ற சந்தேகத்தினால் ஏற்பட்ட பரபரப்பிலும், பதட்டத்திலும் சூழ்நிலையை மறந்து இரும்பு கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்தாள். பங்களாவின் கதவுப் பக்கம் சென்று மெதுவாக கதவை தள்ளிப் பார்த்தாள். கதவு தானாக திறந்து கொண்டது. 'வெளி கேட் பூட்டப்பட்டிருந்த தைரியத்தில் கதவின் உள்பக்கம் பூட்டவில்லையோ சந்தேகம் ஏற்பட்ட மனதில் கேள்விக்குறி எழுந்தது.
வீட்டின் கதவு பூட்டப்படாமல் இருக்க, கை வைத்ததும் கதவு தானாக திறந்துக் கொண்டது. கீழே யாரும் இல்லை. மெதுவாக மாடிக்கு ஏறினாள். படுக்கை அறைக்கு வெளியே மதனும், சுதாவும் சிரிக்கும் ஒலி கேட்டது. நெஞ்சு எரிய, தொடர்ந்து அங்கேயே நின்று கவனித்தாள்.
கிசுகிசுப்பாய் பேச்சுகள், வாய் விட்டு மலர்ந்த சிரிப்புகள் தொடர்ந்தன.
சில நிமிடங்களுக்குப் பிறகு கதவு திறந்தது. சுதாவின் தோள் மீது கைகளை போட்டபடி மதன் வெளியே வர, இவளைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
ராகினி கீழே இறங்கி ஓடினாள்.
"ராகினி... ராகினி..." மதன் கூப்பிடும் குரல் கேட்டது. வாசலுக்கு ஓடி, தெருவிற்கு வந்து, காத்திருந்த ஆட்டோவில் ஏறி, மறுபடியும் நர்ஸிங் ஹோம் போய் இறங்கினாள்.
கன்னத்தில் கை ஊன்றியபடி உட்கார்ந்திருந்தாள் ராகினி.
'நாத்தனாராக நானே என் கையால் தாலி எடுத்து கொடுக்கிறேன்னு சுதாகிட்ட சொன்னேன். அவ என் தாலிக்கு அர்த்தமில்லாம பண்ணிட்டா. இவர் என்னுடையவர், எனக்கு உரிமையானவர், எனக்கு மட்டுமே சொந்தமானவர் என்று, என் நெஞ்சில் பட்டு மந்திரம் ஓதிய இந்த தாலி என்னைப் பார்த்து கேலி செய்யுதே... ராக்கம்மான்னு கூப்பிடறதை என்னைக்கு நிறுத்தப் போறீங்கன்னு கேட்டேன்... இன்னொருத்திக்கிட்ட சகலத்தையும் பங்கு போட்டுட்ட அவர், இனி மேல் அப்படி கூப்பிட்டாலும் முன்ன மாதிரி அதை என்னால அனுபவிக்க முடியாதே... எண்ணங்கள் அலைமோத, கண்களில் கண்ணீர் பெருகியது.
"ராகினி..." கூப்பிட்ட மதனை சுட்டு எரிப்பது போல் பார்த்தாள்.
பல முறை ராகினியிடம் பேச முயற்சி செய்த மதனை அலட்சியம் செய்து வந்தாள்.
'இன்று பேசி, ஒரு முடிவு எடுத்துவிடலாம். எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் போல ஒரு நாடகம் திடமான முடிவுடன் இருந்தாள்.
"ராகினி, ஏதோ... தெரியாம நடந்து போச்சு..."
"அப்போ... இனிமே நடக்காதுங்கறீங்களா?"
"............"
"என்ன பதிலையே காணோம்?"
".............."
"சரி, நடந்தது நடந்து போச்சு. அதை மறக்க முடியாட்டாலும், மன்னிச்சுடறேன். இனிமேல் நீங்க சுதா கூட பழக கூடாது. அவளுக்கு வேற இடத்துல வேலை தேடி குடுத்துடுங்க. அவ ஹாஸ்டல்லயே இருந்துக்கட்டும். அவ தொடர்பை அடியோட விட்டுடணும். சரியா?"
"ராகினி... அது.... அது.. என்னால முடியாதும்மா."
"என்ன? முடியாதா? ஏன்?"
"ஏன், எதுக்கு, எப்படின்னெல்லாம் எனக்கு சொல்லத் தெரியலை. ஆனா, அவளை விட்டுட முடியாது. எனக்கு நீயும் வேணும். அவளும் வேணும்..."
"அப்போ, நீங்க எனக்கு வேண்டாம்."
"ராகினி..." மதன் அதிர்ந்தான்.
"ஆமா. இன்னொருத்தியை மறக்க முடியாத உங்களோட என்னால குடும்பம் நடத்த முடியாது. என் குழந்தைங்களோட தகப்பன் நீங்க, அதுங்களுக்கு அப்பா வேணும். நான் சமைச்சு வைக்கறதை சாப்பிட இஷ்டம் இருந்தா சாப்பிடுங்க. என் கடமைகளை நான் செய்வேன். ஆனா, மனைவிங்கற உரிமை இனிமேல் உங்களுக்கு கிடையவே கிடையாது. இந்த வீட்ல நான் இருக்கறதே குழந்தைகளுக்காகத்தான்.
ஏன், சொல்லப் போனா உயிரோட இருக்கறதே அவங்களுக்காகத்தான். இந்த ஊர், உலகத்தைப் பொறுத்த வரைக்கும்தான் நாம புருஷன், பொண்டாட்டி. இந்த வீட்டுக்குள்ள நீங்க யாரோ, நான் யாரோ. என் கூட இனிமேல் பேசாதீங்க."
"இதுதான் உன் முடிவா?"
"அவளை மறக்க முடியாதது உங்க முடிவுன்னா, நிச்சயமா இதுதான் என் முடிவு."
சோகம் கப்பிய முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் மதன்.
அவ்வப்போது துன்ப அலைகளால் தாக்கப்பட்டு, துவண்டு போகும் ராகினியைப் பார்த்து ஆறுதல் கூற அடிக்கடி பாட்டி வந்தாள்.
"யானை தன் தலையில தானே மண்ணை வாரிப் போட்டுக்குமாம். அந்த கதைதான் உன் கதை. தேவையில்லாம சிநேகிதின்னு ஒருத்தியை கொண்டு வந்து வீட்டோட வச்ச. அவ உன் வீட்டுக்காரனை வச்சுக்கிட்டா."
"அவ மேல தப்பு இல்லை பாட்டி. ஜாதகம் பாதகம்னு சொல்லி ஒரு பொண்ணோட மனசை நோகப் பண்ணி அவளை நிராகரிக்கறாங்களே அவங்களை சொல்லணும். இந்த மாதிரி மூட நம்பிக்கையினால் ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை கிடைக்காமதான் சுதா இப்படி ஆயிட்டா. என் வீட்டுக்காரருக்கு புத்தி எங்கே போச்சு? பெண் சுகம் அனுபவிக்காதவரா? பொண்டாட்டி புள்ளைங்கன்னு மதிப்பான குடும்பத் தலைவரா ஆனப்புறம் இப்படி... இப்படி... ஒரு அசிங்கம் தேவைதானா?"
"சரி, சரி விஷயம் வெளியில தெரிஞ்சுடுச்சுன்னு அவ வீட்டை விட்டு போயிட்டா. சனி விட்டுதுன்னு நிம்மதியா சந்தோஷமா இரு."
"இல்லை பாட்டி, அவரால அவளை மறக்க முடியாதாம்."
"என்ன, அப்பிடியா சொல்லிட்டான் உன் புருஷன்? அப்போ? அவ இன்னும் உங்க ஆபீஸ்லதான் வேலை பார்க்கறாளா?"
"ஆமா. ஆம்பளை கெட்டா சம்பவம், பொம்பளை கெட்டா சரித்திரம்ன்னு எழுதாத இந்த சட்டம்தானே ஆம்பளைங்களுக்கு அளவுக்கு மீறி திமிரை வளர்த்திருக்கு."
"என்னமோ, உன் தலைவிதி இப்பிடி ஆயிடுச்சு. குழந்தைங்க வர்ற நேரமாச்சு. டிபன் செஞ்சு வை. போய் வேலையைப் பாரு."
பிள்ளைகள் வளர்ந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய சுதா, தனியாக ஒரு ஃப்ளாட் எடுத்து தங்கி இருப்பதும், ஆபீஸ் நேரம் போக மதன் அங்கே போவதும், வருவதும் ராகினி கேள்விப்பட்ட செய்திகள். கண்களில் மாறாத சோகத்துடன், நடைப்பிணமாய் நடமாடிய ராகினியின் தலைமுடி கவலையினால் ஏகமாக நரை கண்டிருந்தது. மதனுடன் பேச்சு வார்த்தையை நிறுத்தி, மௌன யாகம் நடத்திக் கொண்டிருந்தாள். மற்றவர்களுடனும் தேவைப்பட்டால் மட்டுமே அளவோடு பேசினாள்.
மதனுக்கு தேவையானதை சமைப்பது, அவனுடைய துணிமணிகளை அயர்ன் செய்து வைப்பது போன்ற கடமைகளை தவறாமல் செய்து வந்தாள். ஒரு நாள் மதனுடனும், ஒரு நாள் ராகினியுடனும் குழந்தைகள் படுத்தனர். பல முறை மதன் முயற்சித்தும் ராகினியின் மௌனத்தைக் கலைக்க முடியவில்லை.
வருடங்கள் உருண்டன. பிள்ளைகளுக்கு விபரம் தெரியும்வரை அவர்களை சமாளிப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. விபரம் அறிந்தபின், அவர்கள் சுதாவை அறவே வெறுத்தனர். சுரேஷ் கல்லூரியில் மூன்றாவது ஆண்டிலும், எழில் இரண்டாவது ஆண்டிலும் படித்துக் கொண்டிருந்தனர்.
வாசலில் ஆம்புலன்ஸ் வேன் நிற்பது தெரிந்தது. ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்த ராகினி, பரபரப்பாக வாசலுக்கு சென்றாள். அதிர்ச்சி அடைந்தாள். தன் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் செயல்பட்டாள்.
மதனின் ஆஜானுபாகுவான உடல், உயிர் அற்றதாய் நடு வீட்டில் கிடத்தப் பட்டது. திடீர் என ஹார்ட் அட்டாக் வந்து விட்டதாகவும், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாகவும் ஆபீஸ் ஊழியர்கள் விளக்கம் கொடுத்தனர்.
அமெரிக்காவில் இருந்து பம்பாய் வந்திருந்த அண்ணனைப் பார்ப்பதற்காக சுதா போய் இருப்பதாகவும், அவளுக்கும் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் கூடி விட்டனர். சுரேஷும், எழிலும் வாய் விட்டு கதறி அழுது வறண்டு போனார்கள். ராகினியின் கண்களில் இருந்து சோகம் வெளிப்பட்டதே தவிர வாய்விட்டு அழவும் இல்லை. யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை.
உறவுக் கூட்டம் மதன்-சுதா தொடர்பு பற்றியும், ராகினியின் வைராக்யத்தைப் பற்றியும் வம்பளத்தபடி இருந்தது.
"கெட் அவுட்"
'துக்க வீட்டில் யாரிடம் இப்படி கோபமாக சுரேஷ் கத்துகிறான்? ராகினி நிமிர்ந்து பார்த்தாள்.
சுதா தயங்கியபடி வாசலில் நின்றிருந்தாள்.
"சுரேஷ்" ராகினி, சுரேஷை கூப்பிட்டாள்.
"சுரேஷ், ஊரறிய தாலி கட்டிய நானே அவர் கூட எட்டு வருஷம்தான் வாழ்க்கை நடத்தி இருக்கேன். தாலியே வாங்கிக்காம என்னைவிட அதிக காலம் அவ உங்க அப்பா கூட வாழ்ந்திருக்கா. அவளை உள்ளே வர விடு. உங்க அப்பாவோட கடைசி பயணம் வரைக்கும் அவ இருக்கட்டும். வீணா பிரச்சனை பண்ணி, எல்லாரும் வேடிக்கை பார்க்கற மாதிரி ஸீன் கிரியேட் பண்ணாதே. உங்க அப்பாவோட கௌரவம்தான் நமக்கு முக்கியம்."
"அம்மா..."
"உங்க அப்பாவை உயிரோட என்னைக்கோ பறி குடுத்துட்டேன். போப்பா, போய் ஆக வேண்டியதைப் பாரு."
ராகினியின் திடமான பேச்சும், மன உறுதியும் கண்டு அங்கு வந்திருந்த கூட்டம் மலைத்தது.
மதனின் இறுதி யாத்திரை புறப்பட்டது. சாஸ்திர, சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்தபின் அனைவரும் புறப்பட்டுப் போனார்கள். கதறி அழுததால் சிவந்து வீங்கிய முகத்துடன் இருந்த சுதா, கண்ணீரைத் துடைத்தபடி ராகினியின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு வெளியேறினாள்.
அத்தனை வருடங்களாக மதனை அழைக்காத ராகினி, திடீரென்று வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்.
'என்னங்க போயிட்டீங்களே பெரிதாக அலறினாள்.
மகள் எழிலின் மடியில் முகம் புதைத்து அழுதாள்.
"அம்மா, அழாதீங்கம்மா." அம்மா இப்படி அழுவதைப் பார்க்க சகிக்காத எழில், தானும் அழுதாள்.
"அம்மா அழட்டும் எழில். அவங்க மௌனம் கலையட்டும். இதுவரைக்கும் யார் முன்னிலையிலும் அழுது, புலம்பி தேவையற்ற அனுதாப அலைகளில் நீந்த விரும்பாத நம்ப அம்மா, இப்ப நல்லா அழுது தீர்க்கட்டும். அவங்க பாரம் குறையட்டும்." விவேகமாக பேசினான் சுரேஷ்.
நாமும், ராகினியை அழுது தீர்க்கட்டும் என்று விட்டுவிடுவோம்.