
"என்னோட அம்மா, அப்பா யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்." கவிதாவின் குரல் இதுவரை இந்த அளவுக்கு உரக்க ஒலித்தது இல்லை.
பூஜை அறையில் இருந்த விஜயா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். 'சோழிகளை சுழற்றிப் போட்டது போல கலகலவென்று சிரிக்கும் கவிதா, வார்த்தைகளால் வெடிக்கிறாள். ஏன்?..’ என்ற கேள்வி நெஞ்சில் முள்ளாக உறுத்த, பாதி பூஜையிலேயே எழுந்தாள் விஜயா.
கவிதாவின் அருகே சென்றாள். கவிதாவின் சிவந்த நெற்றியில் புரண்டு கொண்டிருந்த சுருள் முடிக் கற்றையை தன் கையால் அன்புடன் ஒதுக்கினாள். அவளது கையைத் தட்டி விட்டாள் கவிதா.
"என்னம்மா கவி, என்ன இது புதுசா கேள்வி, புதுசா இத்தனை கோபம்? சொல்லுடா..."
"புதுசாத்தானே எனக்கும் ஒரு விஷயம் தெரிய வந்திருக்கு? சொல்லுங்க... என்னோட அம்மா, அப்பா யாரு?"
"நான்தான் உன் அம்மா. உங்க அப்பா மாடியில இருக்காரு."
"நான் என்னைப் பெத்த அம்மா, அப்பாவைப் பத்திக் கேக்கறேன்."
"கவிம்மா, நீ... உனக்கு... எப்பிடி..."
"எப்படியோ தெரியும். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க."
"சொல்றேம்மா. எதிர்பார்க்காத நேரத்துல எதிர்பார்க்காத கேள்வியை கேட்டுட்ட. பதில் சொல்லித்தான் ஆகணும். நீ.. நீ.. எங்களோட வளர்ப்பு மகள். ஏராளமான சொத்து சுகங்களை தாராளமா அள்ளி வழங்கின அந்த தெய்வம் என் வயித்துல ஒரு வித்து விளைக்க மறந்துடுச்சு. அதனால சர்ச்லயும், அநாதை ஆசிரமங்கள்லயும் குழந்தைக்கு சொல்லி வச்சோம். சர்ச்ல இருந்து மதர் சுப்பீரியர், குழந்தை இருக்குன்னு தகவல் சொன்னாங்க. பச்சைக்குழந்தையா உன்னைப் பார்த்தப்ப, என் உடம்பு சிலிர்த்துப் போச்சு. அந்த நிமிஷமே நான் பெத்தெடுக்காத உன்னைத் தத்தெடுத்துக்கிட்டேன். விதை எங்கே முளைச்சாலும், உன்னோட விளைநிலம் இதுதான்மா."
"தனக்குப் பிறந்த குழந்தையை உங்களுக்குத் தூக்கிக் குடுத்த அந்த அம்மா இப்போ எங்கே இருக்காங்க?"
"எனக்குத் தெரியாதும்மா."
"என்னோட அப்பா யாரு?"
"அதுவும் தெரியாது. தத்து எடுக்கும்போது அந்த விபரம் எல்லாம் சொல்ல மாட்டாங்க. உன்னை எங்க மகளா, கையில தூக்கின நாள்ல இருந்து நீ சர்ச்ல இருந்து எடுத்துட்டு வந்த குழந்தைங்கற எண்ணத்தை நாங்க தூக்கிப் போட்டுட்டோம். உன்னை என் மடியிலயும், தன் தோள்ல உங்க அப்பாவும் சுமந்து வளர்த்தோம்."
"ஆனா வயித்துல சுமந்த அம்மா, சும்மா இருக்காங்களே?.."
"இப்பிடியெல்லாம் பேசக் கூடாது கவிம்மா. அவங்க எந்த நிலைமையில, எந்த சூழ்நிலையில இருந்தாங்களோ? யாருக்குத் தெரியும்?"
"யாருக்குத் தெரியாட்டாலும் எனக்குத் தெரிஞ்சாகணும்.."
"தெரிஞ்சு என்னம்மா செய்யப் போற? இருபது வருஷமா கண்ணுக்குள்ள வச்சு வளர்த்த எங்க கண்ணைக் குத்திடாதம்மா." விஜயா, பொங்கி வரும் கண்ணீரை அடக்க இயாமல் தவித்தாள். தொடர்ந்தாள்.
"என்னையும், அப்பாவையும் வெறுத்துடாதேம்மா." அதற்கு மேல் தாங்க முடியாதவளாய் கவிதாவை கட்டிப்பிடித்து அழுதாள்.
"அம்மா.. அழாதீங்கம்மா. நான் உங்களையோ அப்பாவையோ வெறுக்கலை. என்னை நானே வெறுக்கறேன்."
"வெறுமையா இருந்த இந்த வீட்டில தங்கப்பதுமையா நீ வந்த பிறகுதான்மா எங்க வாழ்க்கையில சந்தோஷம் வந்துச்சு. புது மழைத்துளி விழுந்த மண் எவ்வளவு குளிர்ச்சியா இருக்குமோ அந்தக் குளிர்ச்சியும், மலர்ச்சியும் உன் வரவாலதான் எங்களுக்குக் கிடைச்சது."
"உங்க சந்தோஷம் என்னால குறையாது, மறையாது. ஆனா என்னோட சஞ்சலம்? அது தீரணும். அதுக்கு ஒரே வழி, நான் என்னைப் பெத்தவங்களைப் பார்க்கணும். கருவில சுமந்த என்னோட உருவத்தைத் தன் கையில ஏந்தி வளர்க்காத காரணத்தைக் கேட்கணும்."
"அது கடந்த காலம். நடந்தது நடந்து போச்சு."
"உடைஞ்சு போன என் மனசு? என்னோட வளர்ப்பு வேணும்னா செல்வ ஸ்ரீமான் சிங்காரம் பிள்ளையோட செல்ல மகள்னு சொல்லலாம். என்னோட பிறப்பு? பாம்பு தன் சட்டையைக் கழற்றி எறியறது மாதிரி என்னை வீசி எறிஞ்ச அந்த அம்மாவைப் பார்க்கணும். பேர் வச்சு தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டிய மகளை, சர்ச்ல விட்டுட்டுப் போனாங்களே? இதைப் பத்தியெல்லாம் அந்த அம்மா கிட்ட நான் கேக்கணும். அப்பதான் என் மனசு ஆறும். உங்களை என்கிட்ட குடுத்த மதர் சுப்பீரியரை நான் பார்க்கணும்."
"பார்க்கலாம்மா. ஆனா.. இந்த உண்மை எல்லாம் உனக்குத் தெரிஞ்சுருச்சுன்னு அப்பாவுக்குத் தெரிஞ்சா அவரால இதைத் தாங்கிக்கவே முடியாதும்மா..."
"ஏன் விஜயா முடியாது? நம்ப கவிம்மா பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டு நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன்..." தளர்வான குரலில் பேசியபடி மாடிப்படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தார் சிங்காரம் பிள்ளை.
"அப்பா..." கவிதா அலறினாள். 'கம்பீரமான சிங்காரம் பிள்ளையின் கண்களில் கண்ணீரா?
"அப்பா..." கவிதாவின் கண்களிலும் கண்ணீர்!
"நீ ஏம்மா கண் கலங்கறே? இருபது வருஷகாலமா உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராம வளர்த்துட்டோம். உன் இஷ்டப்படியே மதர் சுப்பீரியரைப் பார்க்கலாம். நானே உன்னை கூட்டிட்டுப் போறேன்மா. எங்க மகள் கவிதா, கலங்கவே கூடாது. நீ எங்க உயிரின் உயிர். நீ விரும்பி கேட்ட எதையாவது மறுத்திருக்கோமா? இப்ப காலேஜுக்கு டைம் ஆச்சுல்ல? கிளம்பு. நாளைக்கு உனக்கு லீவுதானே? நாளைக்கு காலைல சர்ச்சுக்குப் போய் மதரைப் பார்க்கலாம்." கவிதாவின் தலையை அன்புடன் வருடிக் கொடுத்தார்.
ஏ.ஸி. அறையின் குளிர்ச்சியிலும், பட்டுத்துணி விரிக்கப்பட்ட பஞ்சு மெத்தையில் படுத்தும் கவிதாவின் கண்கள் உறக்கத்தைத் தழுவ மறுத்தது.
முந்தின நாள் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அத்தை, புறப்படுவதற்கு முன் பேசியதைக் கேட்க நேரிடாமல் இருந்தால்...? என் பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டிருக்காது. நிம்மதியான என் மனசு நிலைகுலைஞ்சு போயிருக்காது. என்னைத் தங்கள் கண் போல வளர்க்கும் இந்த அம்மா, அப்பாவின் மனசு புண்படற மாதிரி நான் பேச வேண்டிய சூழ்நிலையும் வந்திருக்காது. கடவுளே, ஏன் எனக்கு இப்பிடி ஒரு சோதனை... வேதனை... அத்தை பேசிய வார்த்தை சவுக்குகள் இன்னமும் என் இதயத்தில் அடித்து, நோகின்றதே.’
கவிதா, அத்தை என்று குறிப்பிடுவது சிங்காரம் பிள்ளையின் தங்கை கௌரியை. கௌரியின் கணவர் தனபாலன் ஒரு அச்சகத்தை நிர்வகித்து வருகிறார். நல்ல வசதி நிறைந்த வாழ்க்கை. ஒரே மகன் அவினாஷ். சிங்காரம் பிள்ளை, தன் தங்கை கௌரிக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தார். பண்டிகை நாட்களில் அவர், தன் தங்கைக்கு செய்யும் நிறைவான சீர்வரிசை ஏராளம் என்றாலும் கூட அவளது மனது, குறைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும்.
அவளுடைய வாய் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும். உடன்பிறந்த அண்ணனுக்கு வாரிசு இல்லை என்றால் அவரது அத்தனை சொத்துக்களும் தனக்கும், தன் மகனுக்கும் வந்து சேரும் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள்.
திடீரென சிங்காரம் பிள்ளை, கவிதாவை தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்ததும் கௌரியின் பொறாமை குடி கொண்ட மனது, கூடவே வெறுப்பையும் வளர்த்துக் கொண்டது.
எந்த நேரமும் கவிதாவை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்து ஊரில் நிகழும் குலதெய்வம் கும்பிடும் திருவிழாவிற்கு, சிங்காரம்பிள்ளையின் அழைப்பின் பேரில் வந்திருந்த அவள், வேறு ஒரு உறவுக்காரப் பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்ததைத் தற்செயலாக கவிதா கேட்க நேரிட்டது.
"கவிதாவாம் கவிதா, ரொம்பத்தான் செல்லம் குடுத்து வளர்க்கறாங்க என் அண்ணனும், அண்ணியும். அவ யாரோ, எந்த ஊரோ, என்ன ஜாதியோ, தத்து எடுத்து சொத்துக்கு வாரிசாக்கிட்டாரு எங்க அண்ணன். எங்கேயோ கிடந்து வந்தவளுக்கு கிடைச்ச வாழ்வைப் பார்த்தீங்களா, தரையில கால் பட விடாம தாங்கறதும், பங்களா, கார், ஏ.ஸின்னு சொகுசான வாழ்க்கையும். ஹும்.. விளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சலம்...!"
"அட, நீங்க என்ன மதினி ஒரேயடியா அங்கலாய்க்கறீங்க? உங்களுக்குத்தான் ஆம்பளை பிள்ளை அவினாஷ் இருக்கான்ல? இந்த கவிதாவை அவனுக்கு கட்டி வச்சுட்டா அத்தனை சொத்தும் உங்களுக்கு வந்துட்டுப் போகுது?"
"சொத்து, சுகத்தை விட சாதி, சனத்துக்குத்தாண்டி என் வீட்டுக்காரர் மதிப்பு குடுப்பார். இவ என்ன ஜாதியோ என்னவோ? குலம் கோத்திரம் தெரியாத இவ, கௌரவமான எங்க குடும்பத்துல மருமகளா வர முடியுமா? எங்களுக்கு மானம்தான் பெரிசு. சரி. சரி என்னமோ, ஆத்திரம் தாங்காம உன்கிட்ட கொட்டிட்டேன். யார்கிட்டயும் உளறி வச்சுடாதே. இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும். எங்க அண்ணன் என்கிட்ட சத்தியம் வாங்கி இருக்காரு. யாருகிட்டயும் சொல்லக் கூடாதுன்னு. எவ்வளவு பெரிய பங்களா, எத்தனை காரு, எவ்வளவு பணம்! எல்லாம் கையை வுட்டுப் போச்சேன்னு ஆதங்கத்துல பேசிட்டேன்டியம்மா..." பெருமூச்சு விட்டாள் கௌரி.
கௌரி, அவளது மகன் அவினாஷிற்கு, சிங்காரம்பிள்ளை கவிதாவை பெண் கொடுக்க மறுத்ததுதான் உண்மையிலேயே நடந்த விஷயம். ஜாதி, மதம், குலம், கோத்திரம் என்று அதற்கு ஒரு பொய் சாயம் பூசியிருந்தாள். அவினாஷ், தோற்றத்தில் வாட்ட சாட்டமாக இருந்தாலும், அவனது நடத்தை மோசமாக இருந்தது. ஊதாரித்தனமாக செலவழிப்பது, பெண்களுடன் ஊர் சுற்றுவது, குடிப்பது போன்ற தீய பழக்கங்கள் எல்லாவற்றையும் கொண்டிருந்தான்.
மகனைப் பற்றி தெரிந்தும், சிங்காரம் பிள்ளையிடம் பெண் கேட்டுச் சென்றாள் கௌரி. அந்த சம்பவத்தை நினைக்க நினைக்க கௌரிக்கு ஆத்திரம் மேலிட்டது.
"என்னம்மா கௌரி, உன் மகன் அவினாஷைப் பத்தி உனக்கே தெரியும். தெரிஞ்சும் எந்த எண்ணத்துல எங்க கவிதாவை பெண் கேட்டு வந்திருக்க?"
"நல்ல எண்ணத்துலதான் அண்ணா வந்திருக்கேன். நம்ப குடும்பத்தோட சம்பந்தம் செஞ்சுக்கிட்ட பிறகாவது அவினாஷ் திருந்திடுவான்னு நம்பறேன்..."
"உன் மகன் திருந்தறதுக்கு நாங்க பலியாகணுமா? தங்கச்சிங்கற முறையில உன்மேல நான் அன்பு, பாசம் வச்சிருக்கேன். ஆனா, அதுக்காக நீ கேக்கறதுக்கெல்லாம் சம்மதிக்கணும்னு அவசியம் இல்ல. முதல்ல உன் பையனை திருத்தறதுக்கு வழியை பாரு. இனியொரு தடவை கவிதாவை பெண் கேட்டு இங்கே வராதே. என்னோட தங்கையா நீ எப்ப வேணா வரலாம், போகலாம். அதுக்கு உனக்கு உரிமை இருக்கு. உன் மேல அன்பு செலுத்தறதுக்கு எனக்கு கடமையிருக்கு. நம்ப உறவை இந்த அளவோட நிறுத்திக்கணும்" நறுக்கென்று பேசி, தன் பேச்சை நிறுத்திக் கொண்டார் சிங்காரம்பிள்ளை.
தன் அண்ணன் அவ்விதம் பேசி விட்ட எரிச்சலிலும், மகளைக் கொடுப்பதற்கு மறுத்து விட்ட வெறுப்பிலும் கவிதாவைப் பற்றி எரிச்சலாக உறவுக்காரப் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தாள் கௌரி.
அத்தை பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கவிதாவின் உள்ளம் நொறுங்கியது அப்போதுதான். தன் பிறப்பில் ரகசியம் மறைந்திருப்பதை அறிந்ததும் அப்போதுதான். திரும்பத் திரும்ப காதுகளுக்குள் கேட்கும் இந்த வார்த்தைகள் அவளைத் தூங்கவிடவில்லை. முன் இரவில், தன் பிறப்பைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தவள், பின் இரவு வரை தன் வளர்ப்பு பற்றிய எண்ணங்களில் மிதந்தாள். கண்களைத் தூக்கம் தழுவும் வரை இதயம் கனத்தது. இதனால் கண்ணீர் வழிந்தது.
'நான் யார்? என்னைப் பெற்ற அம்மா யார்? என் அப்பா யார்? என்னை ஏன் இந்த அம்மா, அப்பா வளர்க்கிறார்கள்? என்னைப் பெற்ற அம்மா, என்னைக் 'கண்ணே’ 'மணியே’ன்னு கொஞ்சி வளர்க்காமல் எங்கே போனாங்க? உயிரோடு இருக்காங்களா?.. இல்லையா?’ இவ்வாறெல்லாம் அவள் நினைவலைகள் புரண்டன. அந்த நினைவலைகள் எழுப்பிய கேள்விக்கணைகளைத்தான் விஜயாவிடம் வீசினாள். அதன் தொடர்பாக, சிங்காரம்பிள்ளை, கவிதாவை சமாதானம் செய்து சர்ச்சுக்கு போகலாம் என்று சொன்னபிறகே ஓரளவு சமாதானமடைந்தாள்.
"இதுக்குத்தான் குழந்தையை தத்து எடுக்கும்போதே சொல்லி அனுப்பினோம். குழந்தைக்கிட்ட அவ புரிஞ்சுக்கக் கூடிய வயசு வந்ததும் உண்மையைச் சொல்லிடுங்கன்னு. நீங்க கேக்கலை. நீங்க மட்டுமில்ல. பெரும்பாலும் தத்து எடுக்கிற எல்லாருமே உண்மையை மறைச்சுடறாங்க. உங்க மனசுக்குள்ள மறைஞ்ச அந்த உண்மை அந்தக் குழந்தையோட அறிவுக்கு எட்டும்போது பிரச்னை உருவாகும். நீங்க சொல்லித் தெரிஞ்சுக்க வேண்டிய உண்மையைத் தானாவே தெரிஞ்சுக்கறப்ப அந்தப் பிரச்சனை பெரிசா ஆகி, உங்க குடும்பத்துல குழப்பம் ஏற்படும். உங்க பொண்ணு இப்ப எங்கே? அவ பேர் என்ன சொன்னீங்க?" மதர் சுப்பீரியர் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிங்காரம்பிள்ளை தன் அமைதியை கலைத்தார்.
"ஒரு அழகான கவிதையை வாசிக்கறப்ப எப்பிடி நம்ம சுவாசம் கூட சுகம்மா இருக்கோ அதுபோல எங்க வாழ்க்கைக்கு ஒரு சுகம் கொடுக்க, நாங்க உங்ககிட்ட தத்து எடுத்துக்கிட்ட அந்தக் குழந்தைக்கு 'கவிதா’ன்னு பேர் வச்சோம் மதர். பேருக்கு ஏத்த மாதிரி அவ அழகு, அவளோட அன்பு, பேச்சு எல்லாத்துலயும் ஒரு கவித்துவம் இருக்கும். 'யாரோ எழுதிய கவிதை’யை எங்களுக்குன்னு, எங்களோடதுன்னு சொந்தம் கொண்டாடினோம். அந்த சொந்தமும், பந்தமும் இரவல் வாங்கினதுன்னு தெரிஞ்சுக்கிட்ட கவிதா, தன்னோட பூர்வீகத்தைத் தெரிஞ்சுக்கணும்னு பிடிவாதம் பிடிக்கறா. தன்னை இந்த பூமியில பெத்துப் போட்ட அம்மா, ஏன் தத்து குடுத்துட்டாங்கன்னு வேதனையில துடிக்கறா. இது வரைக்கும் அவ கேட்ட எதையுமே நாங்க மறுத்ததில்லை.
இப்பவும் அவகேட்டதை மறுத்துப் பேச முடியாமதான் உங்களை சந்திக்க இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன். இப்ப அவ, கார்ல வெயிட் பண்ணிக்கிட்டிருக்கா மதர்.."
அவர் பேசியதை பொறுமையாகக் கேட்டபடியே பழைய கோப்புகளிலிருந்து ஒரு கோப்பை எடுத்து, அதில் கவிதாவை தத்து கொடுத்ததற்குரிய விபரங்களைக் கண்டறிந்தார் மதர். மதர் அவர்களின் சாந்தம் தவழும் அன்பு முகம் தெய்வீகமாக இருந்தது. உலகப் பற்றுகளை விட்டுவிட்ட நிலையிலும் ஒரு உண்மை மறைக்கப்பட்டு, அதனால் ஏற்பட்டுவிட்ட பிரச்சனைக்காக மனம் வருந்தினார். அந்த வருத்தத்தின் மெல்லிய ரேகைகள் அவரது முகத்தில் உணர்வுகளாக வெளிப்பட்டன.
"இங்கிருந்த குழந்தையை உங்க மகளாக நீங்க தத்தெடுத்துக்கிட்ட தேதி, உங்க பேர், அட்ரஸ் எல்லாம் இதில இருக்கு. இந்த விபரங்களின்படி பார்த்தா இவளைப் பெற்றவ பேர் மீரா. கர்த்தரின் கிருபையால மீரா இங்கேயேதான்... இந்த சர்ச்லயேதான் இருக்கா..."
மதர் சுப்பீரியர் கூறியதைக் கேட்டதும் சிங்காரம்பிள்ளையின் முகம் பிரகாசமானது. கவிதாவின் எண்ணம் ஈடேறப் போவதை நினைத்து சின்னதாய் பூத்த மகிழ்ச்சிப் பூக்கள் அவரது மனக்கலக்கத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்தது.
மதர் தொடர்ந்து பேசினார்.
"மீரா, இங்கே இருந்தாலும் அவ, கவிதாவை சந்திக்க சம்மதிப்பாளான்னு எனக்குத் தெரியலை. அவ யார்கிட்டயும் பேசறதில்லை. ரொம்ப முக்கியமான விஷயம்னா மட்டும்தான் இங்க இருக்கற மத்தவங்க கூட பேசுவா. கடந்த இருபது வருஷமா இந்த சர்ச்சை விட்டு வெளியில எங்கயும் போனதில்லை. அவளைப் பார்க்கவும் யாரும் இங்கே வர்றதில்லை. அவ உண்டு, அவ ப்ரேயர் உண்டு, அவளோட வேலைகள் உண்டுன்னு அமைதியா இருப்பா. இப்படி தனக்குத்தானே ஒரு வேலியை அமைச்சுக்கிட்டு… பெரும்பாலும் மௌனமாவே இருக்கற மீரா, உங்களையோ, கவிதாவையோ சந்திக்க சம்மதிப்பாளாங்கறது சந்தேகம்தான்..."
"ப்ளீஸ் மதர், எப்படியாவது கவிதாவை, மீரா சந்திக்க ஏற்பாடு பண்ணிடுங்க. மீராவைப் பார்த்துப் பேசியே ஆகணும்னு கவிதா பிடிவாதமா இருக்கா. அவளைப் பத்தின உண்மை தெரிஞ்சதுல இருந்து அவளோட பேச்சு மாறிப் போச்சு. எப்பவும் சோகமாவே இருக்கா. இப்படி ஒரு நிலையில அவளை நாங்க பார்த்ததே இல்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு மதர். கவிதாதான் எங்க வாழ்க்கையின் உயிர் நாடி. அவ, பழைய கவிதாவா... சலசலன்னு பொங்கிப் பாயற அருவியா பேசற கவிதாவா எங்களுக்கு வேணும் மதர்..." சிங்காரம்பிள்ளையின் கண் கலங்கியதைக் கண்ட மதருக்கு, இதயத்தில் இரக்கம் சுரந்தது. சிங்காரம்பிள்ளையின் சிங்கம் போன்ற கம்பீரமான முகம், கவிதா பற்றிய கவலையினால் களை இழந்திருந்தது.
மதர் எழுந்து சென்றார். அந்த அறையில் நிசப்தம் நிலவியது. ஆனால் சிங்காரம்பிள்ளையின் உள்ளத்தில் புயல் வீசியது. 'என் மகள் கவிதா, என் ரத்தத்தின் ரத்தமாகவே நான் உணர்ந்து வளர்த்த என் மகள் கவிதா, இன்று தன் சொந்த ரத்தத்தின் உரிமைத்தாயைப் பார்க்கப் போகிறாள். பேசப் போகிறாள். அந்தப் பாசப் பேச்சு வார்த்தையின் முடிவு...?’
நினைத்துப் பார்த்துக் கலங்கியபடியே மதருக்காக காத்திருந்தார்.
அரைமணி நேரம் ஆனபின் மதர், ஒரு பெண்ணுடன் அறைக்குள் வந்தார்.
"மிஸ்டர் சிங்காரம்பிள்ளை. இவங்கதான் மீரா. உங்க கவிதாவை வடித்தவள். இவளிடம் பேசி, உங்களை சந்திப்பதற்கு சம்மதிக்க வைப்பது பெரிய கஷ்டமாயிடுச்சு. உங்களோட நல்ல மனசுக்காகத்தான் மீராவை சமாதானம் பண்ணி, கூட்டிட்டு வந்திருக்கேன். எனக்காக, நான் கேட்டுக்கிட்டதுனால மட்டுமே கவிதாவை சந்திக்க முன் வந்திருக்கா மீரா. ஆனா அதுக்கும் கூட ஒரு நிபந்தனை விதிச்சிருக்கா..."
"நிபந்தனையா..." வயிறு கலங்க மதரிடம் கேட்டார் சிங்காரம்பிள்ளை.
"ஆமா. கவிதா இந்த ஒரு தடவை மட்டுமே மீராவை சந்திக்கலாம். பேசலாம். இந்த நிபந்தனைக்கு நான் ஒத்துக்கிட்டதுனாலதான் மீரா, கவிதாவைப் பார்க்க இங்க வந்திருக்கா. கவிதா கிட்ட நீங்களும் இதைப் பத்தி சொல்லிடுங்க. அவளும் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால்தான் மீராவைப் பார்த்து அவ பேச முடியும்."
மதர் சொல்லி முடித்ததும் மீராவை நிமிர்ந்து பார்த்தார் சிங்காரம்பிள்ளை. கவிதாவின் முகசாயல் தென்பட்ட அந்த முகத்தில் ஒரு சோகமும் தென்பட்டது. மீராவின் கண்களும் அந்த சோகத்தைப் பிரதிபலித்தது. சிங்காரம்பிள்ளையை நேருக்கு நேர் சந்திக்காமல் மௌனமாக நின்றிருந்தாள்.
"மிஸ்டர் சிங்காரம்பிள்ளை... கவிதா, கார்ல காத்திருக்கறதா சொன்னீங்களே, அவகிட்ட பேசி அவளை இங்க கூட்டிட்டு வாங்க."
"சரி மதர்." சிங்காரம்பிள்ளை கார் நிறுத்துமிடத்தை நோக்கி தளர்வாய் நடந்தார்.
காரில் காத்திருந்த கவிதா, சிந்தனையில் மூழ்கி இருந்தாள். 'பாசமழையில் என்னை நனைக்க வேண்டிய தாய் தலைமறைவாக இங்கே இருக்க என்ன காரணம்? இங்கே இருக்கிறார்களா இல்லையா, கடவுளே.. அப்பா, மதர் சுப்பீரியரைப் பார்க்க போயிருக்கார். என்ன ஆச்சோ?' நினைவுகள் அலைபாய, நிலை கொள்ளாமல் தவித்தாள். பரபரப்பில் நகம் கடித்தாள்.
"கடிக்கறதுதான் கடிக்கற, என்னோட நகத்தையும் கடிக்கக் கூடாதா?" குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் கவிதா. அர்ஜுனின் கார் அருகே நின்றுக் கொண்டிருந்தான். அர்ஜுனைப் பார்த்ததும் கவிதாவின் நினைவலைகள் விரிந்தன.
விஜயாவின் அண்ணன் மகன் அர்ஜுன், தன் கம்பீரமான அழகாலும், அறிவாலும் கவிதாவால் கவரப்பட்டு அவளைக் காதல் வயப்படுத்தியவன். தோற்றத்தில் அழகான இளைஞனான அவன், அறிவுத் தேர்ச்சியிலும் வல்லவன். கம்ப்யூட்டருக்கு இணையாக விரல் நுனியில் உலக விஷயங்களை வைத்திருக்கும் வித்தகன். பால், பழத்துடன், பண்பாடும் சேர்த்து ஊட்டி வளர்க்கப்பட்டவன். தற்போதைய பணக்கார இளைஞர்களின் தேவையற்ற பழக்க வழக்கங்களை பின்பற்றாமல் ஒழுக்கமே உயர்வெனும் எண்ணத்தில் வாழ்பவன்.
அர்ஜுனும், கவிதாவும் மாமா மகன், அத்தை மகள் என்ற சொந்தம் ஏற்படுத்திய பந்தம் தந்த அன்பினால், சிறு வயதிலிருந்தே பாசத்துடன் பழகி வந்தனர். அந்தப் பாசம் நாளடைவில், பருவ வயதினை அடைந்ததும் காதல் எனும் ரூபத்தில் உருமாறியது.
ஒவ்வொரு முறை விடுமுறைக்கும் சென்னையிலிருந்து விஜயாவின் வீட்டிற்கு அர்ஜுன் வந்துவிடுவது வழக்கம். விடுமுறை நாட்களில் கவிதாவும், அர்ஜுனும் அரட்டை அடிப்பது, டென்னிஸ் விளையாடுவது, கம்ப்யூட்டரில் புதிது புதிதாக எதையாவது செய்து பார்த்து சந்தோஷப்படுவது என்று பொழுது போக்குவார்கள்.
அர்ஜுனின் அப்பா, விஜயாவின் அண்ணன் கோபால் மிகவும் நல்ல மனிதர். தங்கை விஜயாவின் மீது பாசத்தைப் பொழிபவர். அர்ஜுன் பிறந்த சில வருடங்களிலேயே தன் மனைவி பிரபாவை இழந்தவர். ஒரே மகன் அர்ஜுனுக்காக மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவர்.
அர்ஜுன், கவிதா இருவரது அன்பு, காதலாக பரிமளித்து விட்டதைப் புரிந்துக் கொண்ட விஜயா, சென்னைக்குக் கிளம்பினாள். அண்ணன் கோபாலின் வீட்டிற்குச் சென்றாள். அதிகமாக வராத தங்கை விஜயா, திடீரென வந்து நிற்பதைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தார் கோபால்.
"என்னம்மா விஜயா, நீ மட்டும் வந்திருக்க...? மாப்பிள்ளை, கவிதா யாருமே வரலியா..."
"நான் மட்டும்தான் அண்ணா வந்தேன். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு வந்திருக்கேன். எல்லாம் நல்ல விஷயம்தான்."
"நல்ல விஷயம்தானே? ரொம்ப சந்தோஷம். நிதானமா பேசலாம். நீ முதல்ல குளி. அர்ஜுன் விளையாடப் போயிருக்கான். அவன் வந்ததும் நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்." என்றவர் சமையல்காரப் பெண் சாந்தியை அழைத்தார்.
"சாந்தி... சாந்தி..."
சாந்தி வேகமாய் வந்தாள். பதற்றத்துடன் பேசினாள்.
"என்னங்கய்யா... கூப்பிட்டீங்களா...?"
"எதுக்குதான் பதறணும்னு ஒரு கணக்கே இல்லையா உனக்கு? எதுக்கெடுத்தாலும் ஒரு பதற்றம். உன்னைத் திருத்தவே முடியாது...."
பதற்றம் மாறி, தெளிவிற்கு வந்துவிட்ட சாந்தி சிரித்தாள்.
"அது என்னமோய்யா, அதுவே பழக்கமாயிடுச்சு... சொல்லுங்கய்யா என்ன செய்யணும்?"
"விஜயாம்மா வந்திருக்காங்க. அவங்களுக்கும் சேர்த்து சமைச்சுடு..."
"விஜயாம்மா வந்திருக்காங்களா? எங்கய்யா எங்கே அவங்க?..."
"இதுக்கும் பதற்றமா? அவங்க குளிக்கப் போயிருக்காங்க."
"கவிதாப் பொண்ணும் வந்திருக்குதாய்யா?"
"இல்லை சாந்தி. விஜயாம்மா மட்டும்தான் வந்திருக்காங்க. போ. போய் சீக்கிரமா சமையலை கவனி."
"சரிங்கய்யா. இதோ ஒரு நிமிஷம்... விஜயாம்மாவுக்குப் பிடிச்ச வெண்பொங்கல், சாம்பார் பண்ணிடறேன்" சொல்லிவிட்டு சாந்தி சமையலறைக்குள் நுழைந்தாள்.
குளித்து முடித்து வந்த விஜயா, பூஜையறைக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு கோபாலைத் தேடினாள். கோபாலும் குளித்துவிட்டு சாப்பிடும் மேஜைக்கு வந்தார்.
"அர்ஜுன் வந்துட்டானாண்ணா?"
"இல்லைம்மா. இப்பத்தான் ஃபோன் பண்ணினான். அவனோட டென்னிஸ் மாஸ்டருக்கு கால்ல அடிப்பட்டிடுச்சாம். ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வர்றதாவும், வர லேட் ஆகும்னும் சொன்னான். நாம சாப்பிடலாம்மா."
அவர்கள் இருவரும் உட்கார்ந்ததும், சாந்தி உணவு வகைகளை எடுத்து வைத்தாள்.
"விஜயாம்மா, நீங்க இங்கே வந்து எவ்வளவு நாளாச்சு? உங்களுக்குப் பிடிச்ச வெண் பொங்கல் பண்ணியிருக்கேன். நல்லா சாப்பிடுங்க. இன்னும் கொஞ்சம் சாம்பார் போட்டுக்கோங்க..."
"மூச்சு விடாம பேசறியே சாந்தி... நீ எப்படி இருக்க? உன் புருஷன் இப்ப எந்த ஊர்ல இருக்கார்?"
"அவரு துபாய்லதான்மா இருக்காரு. துபாய்ல பெரிசா சம்பளம் எதுவும் கிடையாது. இங்கேயே இருக்கலாம். ஆனா பிடிவாதமா போயிட்டாரு. அப்பப்ப ஏதோ பணம் அனுப்புவாரு. எனக்கென்னம்மா குறை... ஐயாவையும், அர்ஜுன் தம்பியையும் கவனிச்சுக்கறதுலயே என் பொழுது நிம்மதியா போகுதும்மா.." பேசிக் கொண்டே பரிமாறினாள் சாந்தி.
"உன்னோட வெண் பொங்கலுக்காகவே அடிக்கடி இங்கே வரலாம் போலிருக்கு சாந்தி..." விஜயா தன் சமையலைப் புகழ்ந்ததும் சாந்திக்கு ஏக மகிழ்ச்சியாகி விட்டது. பொதுவான விஷயங்களைப் பேசியபடி விஜயாவும், கோபாலும் சாப்பிட்டு முடித்தனர். சாப்பிடும் அறையிலிருந்து வரவேற்பறைக்கு வந்து சோபாவில் அமர்ந்தனர்.
"என்னம்மா விஜயா? ஏதோ நல்ல விஷயம் பேசணும்னு சொன்னியே?..."
"நம்ப கவிதாவும், அர்ஜுனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க அண்ணா..."
"நிஜம்மாவா சொல்ற? நான் என்னமோ அவங்க ரெண்டு பேரும் சும்மா ஃப்ரெண்ட்லியாத்தான் பழகறாங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்...."
"இல்லைண்ணா... அவங்க ரெண்டு பேரும் காதலிக்கறாங்க. சின்ன வயசுல ஃப்ரெண்ட்லியா அத்தை மக, மாமா மகன்னு பழகின அந்த சின்னஞ்சிறுசுக இப்ப காதலிச்சு, உனக்கு நான், எனக்கு நீன்னு பழக ஆரம்பிச்சுட்டாங்க..."
"இதை எப்பிடிம்மா நீ தெரிஞ்சுக்கிட்ட? கவிதாவோ, அர்ஜுனோ... உன்கிட்ட சொன்னாங்களா?"
"ஆமாண்ணா. கவிதாதான் என்கிட்ட சொன்னா. அவ எதையுமே என்கிட்ட மறைக்க மாட்டா. காலேஜ் விட்டு வந்தப்புறம் முதல் வேலையா என்கிட்ட வந்து அன்னிக்கு முழுசும் காலேஜ்ல நடந்தது எல்லாத்தையும் விலாவாரியா சொல்லிட்டுதான் வேற வேலையைப் பார்ப்பா. பையன்ங்க வந்து அவகிட்ட அசடு வழியறது முதற்கொண்டு, ப்ரின்ஸிபாலை கிண்டல் பண்றது வரைக்கும் எதிலயும் ஒளிவு மறைவுங்கறதே கிடையாது. திடீர்னு ஒரு நாள் நான் படுத்ததுக்கப்புறம் என்கிட்ட வந்து படுத்துக்கிட்டு அவளும், அர்ஜுனும் காதலிக்கற விஷயத்தை சொன்னா. எந்த அளவுக்கு அர்ஜுனை அவ விரும்பறான்னு தெளிவா எடுத்துச் சொன்னா. அப்பதான் எனக்குத் தெரியும்."
"நல்லதாப் போச்சும்மா. நம்ம சொந்தமும், பந்தமும் விட்டுப் போகாம இருக்க, அவங்களாவே எடுத்த இந்த முடிவு, அவங்களோட ஆனந்தமான வாழ்க்கையோட ஆரம்பமா இருக்கட்டும். ரெண்டு பேரும் படிச்சு முடிக்கட்டும். அர்ஜுன் கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டுக்குப் போகணும். அப்பதான் அவனுக்கு உலக அனுபவம், கிடைக்கும். ஒரு நாலஞ்சு வருஷம் கழிச்சு என்னோட இன்டஸ்ட்ரியை பார்த்துக்கட்டும். இதுதான் என்னோட திட்டம்."
"உங்க திட்டப்படியே நடக்கட்டும் அண்ணா. கவிதா வெளியில வேற யாரையாவது காதலிச்சிருந்தா நாங்க ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கும். ஆனா அவ விரும்பறது அர்ஜுன்ங்கறதுனால எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டியதில்லை. அர்ஜுனைப் போல ஒரு நல்ல பையன் இந்தக் காலத்துல கிடைக்கறது ரொம்ப கஷ்டமாச்சே."
"ஆமாம்மா. தாயில்லாம வளர்ற பிள்ளை தறுதலைன்னு சொல்லுவாங்க. ஆனா அதைப் பொய்யாக்கி, தானும் நல்ல பேர் எடுத்து எனக்கும் நல்ல பேர் எடுத்துக் குடுத்திருக்கான் அர்ஜுன். இப்படி ஒரு நல்ல பிள்ளையைப் பெத்துக் குடுத்துட்டு அவன் வளர்றதைப் பார்க்க முடியாம, பிரபா போய் சேர்ந்துட்டாளேன்னுதான் எனக்கு வருத்தம்."
"ஆமாண்ணா. அண்ணி என் மேலயும் அன்பா இருந்தாங்க. நாம குடுத்து வச்சது அவ்ளவுதான்" பெருமூச்சு விட்டாள் விஜயா.
"சரிம்மா. போனது போகட்டும். நம்ப பிள்ளைங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழறதைப் பார்க்கப் போறோமே. எல்லாம் தெய்வச் செயல்."
அண்ணனும், தங்கையும் தங்கள் அன்பான உரையாடலைத் தொடர்ந்தனர்.
எவ்வித மறுப்பும் இன்றி கவிதாவை, அர்ஜுனுக்கு மணமுடிக்க கோபால் சம்மதித்ததை நினைத்து மனநிறைவுடன் ஊர் திரும்பினாள் விஜயா.
தங்கள் காதலுக்குப் பச்சைக் கொடி காண்பித்த நிகழ்ச்சியை மனதளவில் ஓடவிட்டுக் கொண்டிருந்த கவிதா, தன் நினைவிற்கு வந்தாள்.
"என்ன கவி, திடீர்னு என்னைப் பார்த்ததும் சைலன்ட்டாகி எங்கேயோ கனவு லோகத்துக்குப் போயிட்ட?"
"அ..அ...அதெல்லாம் ஒண்ணுமில்ல..."
"எல்லாம் எனக்குத் தெரியும். வீட்டுக்குப் போயிட்டுதான் இங்கே வர்றேன். அத்தைகிட்ட ரொம்ப படபடப்பா பேசிட்டியாமே. என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க."
"நான் யாரையும் வருத்தப்படுத்தணும்னு பேசலை. என்னோட நிலைமை என்னை அப்படி பேச வச்சிடுச்சு. உண்மைக்கு வடிவம் இல்லை.
ஆனா ஒரு நம்பிக்கையோட அந்த வடிவத்தைத் தேடி இங்க வந்திருக்கேன். நாய்கள் கூட தன்னோட குட்டிகளை தேவதைகளா உணர்ந்து பாசம் வைக்குதுங்க. மனுஷங்க ஏன் இப்படி?..."
"நாய் அதோட குட்டிகளை குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான் தாய்மை உணர்வோட பார்த்துக்கும். அந்தக் குட்டிகள் கொஞ்சம் வளர்ந்ததும் தன் பக்கத்துலயே சேர்த்துக்காது. நம்மைப் பெற்ற தாய் அப்படிக் கிடையாது. தன் உயிர் உள்ளவரை தன்னோட குழந்தை நல்லா இருக்கணும்னு நினைப்பாங்க. உன்னைப் பெத்த தாயும் நீ நல்லா இருக்கணும்னுதான் நிச்சயமா நினைச்சிருப்பாங்க. தப்புன்னு நம்ம கண்ணு முன்னால நாம நினைக்கக்கூடிய சில விஷயங்கள் நம்ம அறிவுக்கு அப்பாற்பட்டு நியாயமானதாகவும் இருக்கும்."
"இருக்கலாம். ஆனா அந்த நியாயத்தை என்னை தன் வயித்துல சுமந்து பெத்து, இன்னொருத்தவங்க கையில தத்துக் கொடுத்துட்ட காரணத்தை என்னோட நிஜ அம்மா மூலமா தெரிஞ்சுக்கிட்டா நிம்மதியா இருக்கும்."
"நிம்மதி நமக்குள்ளேயே நம்ப மனசுலதான் இருக்கு. அத வெளியில எங்கும் தேட முடியாது கவி..."
"நான் தேடி வந்தது நிம்மதியை மட்டும் இல்லை அர்ஜுன். நிழலான ஒரு அம்மாவை ஏற்படுத்தின என்னோட நிஜ அம்மாவைத் தேடி இங்கே வந்திருக்கேன். ப்ளீஸ் இந்த விஷயத்துல நீங்க தலையிடாதீங்க. என் போக்குல என்னை விட்டுடுங்க..."
"பாவம் அத்தை. அங்கே அழுதுக்கிட்டிருக்காங்க."
"என் மனசுக்குள்ள நானும் அழுதுக்கிட்டிருக்கேன். நீங்க இப்ப இங்கேயிருந்து கிளம்புங்க..." அர்ஜுனிடம் சொல்லிக் கொண்டிருந்த கவிதா சற்று தூரத்தில் சர்ச்சின் ஆபிஸிலிருந்து சிங்காரம் பிள்ளை வந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.
மறுபடியும் அர்ஜுனிடம், "நீங்க இப்ப உடனே கிளம்புங்க" என்று கூறி அவனை அவசரமாக அனுப்பி வைத்தாள்.
கார் அருகே வந்த சிங்காரம்பிள்ளை கவிதாவை அழைத்தார்.
"கவிம்மா, உன்னைப் பெற்ற அம்மா இங்கேதான் இருக்காங்க..." அவர் சொல்லி முடிப்பதற்குள் கவிதா காரிலிருந்து துள்ளி குதித்தாள்.
"அவசரப்படாதேம்மா. ஒரு தடவை மட்டும்தான் நீ அவங்களை பார்க்க முடியுமாம். இந்த நிபந்தனைக்கு நீ சரின்னு சம்மதிச்சா மட்டும்தான், மதர் சுப்பீரியர் உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாங்க."
தன் அழகிய கண்களை ஒரு சுழற்று சுழற்றியபடி யோசித்தாள் கவிதா.
"சரிப்பா."
"வாம்மா உள்ளே போகலாம்."
இருவரும் மதர் சுப்பீரியரின் அறைக்குள் சென்றனர். சிங்காரம்பிள்ளை, மதர் சுப்பீரியரிடம், கவிதாவை அறிமுகப்படுத்தினார்.
"மதர், இவதான் எங்க கவிதா."
கவிதா, மதர் சுப்பீரியரை வணங்கினாள்.
"காட் பிளஸ் யூ மை சைல்ட்" மதர் சுப்பீரியர் கவிதாவை ஆசீர்வதித்தார்.
அப்போது மீரா மெதுவாக உள்ளே வந்தாள்.
"கவிதா, இவங்கதான் உன்னைப் பெத்த அம்மா மீரா."
மீராவை ஏறிட்டுப் பார்த்தாள் கவிதா. அந்த சாந்தமான முகத்தையும், தெய்வீகம் பொருந்திய கண்களையும் கண்ட கவிதா மனம் தடுமாறினாள். ஆனால் அத்தை கௌரி, தன்னை ஜாதி கெட்டவள், குலம் கோத்திரம் அறியாதவள் என்று மிகக் கடுமையாக பேசியது நினைவில் மோத, அவளுக்குள் கோபம் தீப்பொறியாய் கூட கிளம்பாமல், தீப்பிழம்பாய் எழும்பியது. அதன் விளைவாய் அவளது வார்த்தைகளிலும் கனல் வீசியது.
"தோட்டத்துச் செடிகளுக்கு நடுவில் இருக்கற களைகளை வீசி எறியற மாதிரி உங்க வயித்துல சுமந்த என்னை வீசி எறிஞ்சிட்டீங்களே, அதுக்கு என்ன காரணம்? கொடிக்கு காய் பாரமாகுமா? நான் பிறந்தப்புறம் என்னைத் தூக்கிப் போட்டதுக்கு பதிலா நான் பிறக்கறதுக்கு முன்னாடியே என்னை அழிச்சிருக்கலாமே. உடலால எனக்கு உயிர் கொடுத்து பிறக்க வச்சு, இப்படி மனசால சாக வைக்கறீங்களே இதுக்கு என்ன காரணம்? ஏன் இப்பிடி செஞ்சீங்க?"
கவிதாவின் கோபமான வார்த்தைகள் மீராவை எந்தவிதத்திலும் சலனப்படுத்தவில்லை. அவளது மனம் உணர்ந்த உணர்வுகளை முகம் வெளிப்படுத்த வில்லை. பந்த பாசத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவள், நீண்ட காலத்திற்குப் பிறகு பேச ஆரம்பித்தாள். அமைதியான அவளது பேச்சு அழுத்தமாக ஆரம்பித்தது.
"உன்னை களையாய் நினைச்சு பிடுங்கி எறியலை. ரோஜாவை பதியம் போடற மாதிரி இந்த சர்ச்ல மதர்கிட்ட உன்னை ஒப்படைச்சேன். உன்னோட அதிர்ஷ்டம் நீ ராஜா வீட்டு ரோஜா ஆயிட்ட. சிங்காரம்பிள்ளை, செல்வம் படைச்ச பெரிய மனுஷன் மட்டுமில்ல. உண்மையிலேயே குணத்திலயும் அவர் பெரிய மனுஷன்னு மதர் சொன்னாங்க. நல்ல குடும்பத்துல உன்னை மதர் சேர்த்திருக்காங்க."
"நான் சேர்ற இடம் தெரிஞ்சா என்னை மதர் கிட்ட விட்டீங்க?"
"இந்த மதர் கிட்ட ஒப்படைச்சா போதும். உன்னை இன்னொரு நல்ல மதர் கிட்ட சேர்த்துடுவாங்கங்கற நம்பிக்கை இருந்துச்சு. பணத்தையோ, செல்வாக்கையோ வச்சு நான் இதை சொல்லலை. அன்பான பெற்றோர் உள்ள பண்பான குடும்பத்துல நீ மகளா வளர்ந்துக்கிட்டிருக்க...."
"நான் வளர்ற இடத்தைப் பத்தி எனக்குத் தெரியும். நான் பிறந்த இடத்தை பத்திதான் கேட்கிறேன். அதை ஏன் ரகசியமா மறைச்சு வச்சிருக்கீங்க? என்னோட பிறப்பு புதிரானதா?"
"இல்லை புனிதமானது. இதப்பத்தியோ, என்னோட கடந்த காலத்தை பத்தியோ உன்கிட்ட சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்னு நான் எதிர்ப்பார்க்கலை. இப்ப, அத சொல்ல வேண்டிய நிலைமைக்கு என்னை நீ ஆளாக்கிட்ட. மத்தவங்களைப் பொறுத்தவரைக்கும் என்னோட வாழ்க்கையில நடந்த சோகங்கள் எல்லாம் வெறும் சம்பவங்கள். ஆனா என்னைப் பொறுத்தவரை அது ஒரு சோக சரித்திரம். உன்னோட இதே வயசுலதான் என் வாழ்க்கையில சில சுகங்களையும், சோகங்களையும் சந்திச்சேன்.” மீரா மறந்திருந்த பழைய நினைவுகள் மறுபடியும் அலைஅலையாய் எழும்பின.
"அப்பப்பா... எவ்வளவுதான் பேசினாலும் இந்த பெண்கள் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியாது. ரகசியத்தை பெண்களால காப்பாத்த முடியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா ரகசியத்தை தங்களோட இதயத்துக்குள்ள புதைச்சு வச்சுக்கறது பெண்கள்தான். இவ்வளவு நேரமா நான் என்ன கதாகாலட்சேபமா பண்ணினேன். நீ பாட்டுக்கு கதை கேட்கற மாதிரி உட்கார்ந்துக்கிட்டிருக்க. நான் கேட்ட கேள்விக்கு இப்படி பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?" மீராவின் தோள்களைப் பிடித்து உலுக்கினான் குணா.
"ஸ்... ஆ... வலிக்குது. ஏன் உங்களுக்கு இவ்வளவு முரட்டுத்தனம்?"
"அய்ய.. சும்மா ரீல் விடற பாத்தியா? நான் இப்படித் தொட்டு பேசணும்னுதான நீ பேசாமலேயே உட்கார்ந்திருக்க. நான் சொல்றது சரிதானே?"
"ச்சீ... நான் ஒண்ணும் அதுக்காக பேசாம இருக்கல. நம்ப காதலை வீட்ல உள்ள பெரியவங்க ஏத்துக்கலைன்னா என்ன பண்றதுன்னு ரொம்ப சீரியஸா கேட்டீங்க. அதனால நானும் அதைப்பத்தி சீரியஸா யோசிச்சுக்கிட்டிருக்கேன்.
நீங்க என் கிட்ட கேட்ட அதே கேள்வியை நான் உங்ககிட்ட கேட்கிறேன். நம்ப காதலை பெரியவங்க ஏத்துக்கலைன்னா என்ன பண்றது?"
"பெரியவங்க ஏத்துக்கிட்டா அது நம்ப அதிர்ஷ்டம். இல்லைன்னா அது நம்ப தலையெழுத்து..."
"தலையெழுத்தா?"
"ஆமாம் மீரா. எது நடந்தாலும் அது கடவுளின் செயல்தான்."
"இதுதான் உங்ககிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம். எந்த விஷயமாயிருந்தாலும் வர்றத ஏத்துக்கணும்னு உறுதியா சொல்றீங்களே இந்த மனதிடம் உங்ககிட்ட நிறைய இருக்கு."
"ஆமாம் மீரா. பகல்னு ஒண்ணு இருந்தா இரவுன்னு ஒண்ணும் வரும். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். நன்மையும், தீமையும் கூட இப்படித்தான். நம்ம கலாச்சாரத்துக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்கு. ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளயும், குறிப்பிட்ட சில பழக்கவழக்கங்கள் இருக்கு. நெறிமுறைகளும், வழிமுறைகளும் இருக்கு. இதெல்லாம் சேர்ந்த ஒரு வேலிதான் குடும்பம். இந்த வேலியைத் தாண்டின வெள்ளாடுகளா நாம இப்ப பழகிக்கிட்டிருக்கோம். ஜாதி மதம்ங்கற அலைகள்ல நீந்திக்கிட்டிருக்கற பெரியவங்க, அதையெல்லாம் தாண்டி நம்பளோட அன்பைப் புரிஞ்சுக்கிட்டு பெரிய மனசு வச்சு, கரை சேர்த்தாத்தான் நமக்கு வாழ்க்கை."
"இல்லைன்னா?"
"இல்லைன்னா, இதயத்துல காதல் இயக்கங்கள் நின்னு போகும். மனசு மரத்துப் போகும். உடம்போட மற்ற இயக்கங்கள் மட்டுமே செயல்படும்..."
"அப்படி ஒரு இயந்திரக்கதியாகிப் போன வாழ்க்கை வாழறதுக்கா நாம இப்படி உயிருக்குயிரா காதலிக்கிறோம்?"
"நீ ஏன் முடியலைன்னா என்ன பண்றது? இல்லைன்னா என்ன பண்றதுன்னு எதிர் மறையாவே நினைக்கற, நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும். இன்னிக்கு ராத்திரி எங்க அப்பா கிட்ட நம்ப காதலைப் பத்தி சொல்லப் போறேன். அவரை சம்மதிக்க வைக்கிற சாமர்த்தியம் எனக்கு உண்டுன்னு நான் நம்பறேன்."
"எல்லை மீறி பழகிட்ட நாம, ஊரறிய உலகறிய கல்யாணம் பண்ணி கௌரவமா வாழணும். உங்க அப்பா கிட்ட நல்லபடியா பேசுங்க. நானும் எங்க அம்மா கிட்ட உங்களைப் பத்தி இன்னிக்கு பேசிடுவேன்..."
"குணா, ரொம்ப நல்ல பையன்னு உங்க அம்மா கிட்ட எடுத்துச் சொல்லும்மா." கிண்டலாகச் சிரித்தபடியே குணா பேசியதும், அதை ரசித்தாள் மீரா.
'இந்த அழகான சிரிப்புலதான் என் மனசை நான் பறி கொடுத்தேன். அன்னிக்கு இவரோட கைபட்டப்ப வெட்கப்பட்ட நான், அவர் என்னை முழுமையா தொட்டப்ப, சொர்க்கத்தை உணர்ந்தேன். காதலாலயும், அன்பாலயும் இணைஞ்ச எங்க இதயங்கள், எதிர்கால வாழ்க்கையிலயும் இணைஞ்சே இருக்கணும். இதுக்கு அவரோட அப்பா, அம்மாவும், என்னோட அம்மாவும் சம்மதிக்கணும்....
"ஏய்.. மீரா, என்ன திடீர்னு கனவுலோகத்துக்குப் போயிட்ட? நேரமாச்சு கிளம்பலாம் வா." உட்கார்ந்திருந்த அவளுக்குத் தன் கை கொடுத்து தூக்கி விட்டான். அந்தக் கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டாள் மீரா. குணாவின் பஸ் வந்ததும் அதில் குணா ஏறிக் கொள்ள, அவனுக்குக் கையசைத்து விடை கொடுத்தாள் மீரா. பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த குணாவின் எண்ணங்களும், போராட்டத்தோடு பயணித்தன. 'அப்பாவிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது? அம்மா இதை எப்படி ஏத்துக்குவாங்க’ என்ற சிந்தனைகள் அவனது இதயத்தை ஆக்கிரமித்துக் கொண்டன.
வீட்டு வாசற்படியில் வழக்கத்துக்கு மாறான இரண்டு ஜோடி செருப்புகளைப் பார்த்த குணா, 'யாரோ வந்திருக்காங்க போலிருக்கே?’ யோசித்துக் கொண்டே உள்ளே போனான்.
அவனைக் கண்டதும் அவனது அப்பா சதாசிவம் வேகமாக அவன் அருகே வந்தார். "உங்க அத்தை பத்மா வந்திருக்கா. சின்ன வயசுல வட நாட்டுப் பையனை காதலிச்சு, எங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு மும்பை பக்கம் செட்டில் ஆயிட்டான்னு சொல்லுவேனே, அவதான் வந்திருக்கா. காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்களை பகைச்சுக்கிட்டுப் போன அவளை இப்ப திடீர்னு நான் எதிர்பார்க்கலை. அவ வந்திருக்கற நிலைமை அவ மேல உள்ள கோபத்தை எல்லாம் மாத்திடுச்சு. வா. வந்து பாரு..."
கட்டிலில் சாய்ந்து படுத்திருந்த பத்மாவின் அருகே அவனை அழைத்துச் சென்றார் சதாசிவம். குணாவின் மனதில் எண்ணங்கள் ஓடியது. 'அத்தை ஏன் இப்படி படுத்திருக்காங்க?’ அவனது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சதாசிவம், பேச ஆரம்பித்தார்.
"என்னப்பா குணா, அத்தை படுத்திருக்காளேன்னு பார்க்கறியா? அவ மரணப் படுக்கையில இருக்கா. ஈரல் புற்றுநோயாம். புருஷனையும் பறி கொடுத்துட்டு, நோயாளியா தன்னோட ஒரே பொண்ண கூட்டிக்கிட்டு என்னைத் தேடி வந்திருக்கா. அவ மேல உள்ள பழைய கோபம், இப்ப பரிதாபமா மாறியிருக்கு. அவ பொண்ணப் பத்தின கவலை இல்லைன்னா எப்பவோ செத்திருப்பாளாம். நோய் அந்த அளவுக்கு முத்திப் போச்சாம். மரணப் படுக்கையில இருக்கற பத்மா அசைக்க முடியாத நம்பிக்கையோட கஷ்டப்பட்டு என்னைத் தேடி வந்திருக்கா. அவ பொண்ணுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைஞ்சுட்டா அவ நிம்மதியா கண்ணை மூடுவா. உன்னை பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருக்கா. வந்து அவ பக்கத்துல உட்காரு..."
சதாசிவம் பேசியதை எல்லாம் கேட்ட குணாவிற்கு எல்லாமே ஏதோ கனவில் நடப்பது போல் இருந்தது. திகைப்பு மாறாத முகத்துடன், பத்மாவின் அருகே கட்டிலில் உட்கார்ந்தான். நோய் காரணமாக மிகவும் தளர்ச்சியடைந்திருந்த பத்மா, குணாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். குணாவை தீர்க்கமாகப் பார்த்தாள். மெதுவான குரலில் பேசினாள்.
"சின்ன வயசுல எங்க அண்ணன் இருந்தது மாதிரியே இப்ப நீ இருக்க. அவருக்கு ரொம்ப பிடிவாத குணம். இப்ப கூட என்னைப் பார்த்து பேசுவாரோ மாட்டாரோன்னு எனக்கு ரொம்ப யோசனையா இருந்துச்சு. காலம் மாறி, நம்ம மனசும் மாறி, பழைய பகை, வருத்தம் இதெல்லாம் போய் பாசம் மட்டுமே இப்ப இருக்கு...."
"பழசைப் பத்தி எல்லாம் பேசி என்ன அத்தை ஆகப் போகுது? உங்களுக்கு நல்லபடியா வைத்தியம் பார்த்தா நீங்க சரியாயிடுவீங்க..."
"சரியாகாதுப்பா குணா, எனக்கே தெரியுது, என்னோட முடிவு நெருங்கிடுச்சுன்னு. என்னோட பொண்ணு ஷீத்தலை உனக்கு, கட்டி வச்சுட்டு அந்த நிம்மதியில போய் சேர்ந்துடணும். உன்னைப் பார்க்கறதுக்காகத்தான் என் உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டிருக்கேன்."
பத்மா பேசியதைக் கேட்ட குணா அதிர்ச்சி அடைந்தான். 'இன்னிக்கு அப்பாகிட்ட மீராவை பத்தி பேசணும்னு தைரியமா வந்தேன். இங்கே என்னடான்னா புதுசா ஒரு கதை நடக்குது. அத்தை என்னமோ பொண்ணுங்கறாங்க. அவளை நான்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றாங்க. கடவுளே! இது என்ன குழப்பம்? கல்யாணம் பண்ணிக்காமலேயே மீரா கூட ஒரு நாள் கணவனா வாழ்ந்துட்டேன்.
இப்ப அத்தையோட பொண்ணுக்கு நான் எப்படி கணவனா ஆக முடியும்? என்னை நம்பி, தன்னைக் கொடுத்த மீராவை விட்டுட்டு அத்தையோட பொண்ண எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? இப்ப இங்க இருக்கற சூழ்நிலையைப் பார்த்தா என்னால எதைப் பத்தியும் வாயே திறக்க முடியாது போலிருக்கே...
"என்ன குணா, அத்தை பேசிக்கிட்டே இருக்கா. நீ பாட்டுக்கு எதுவுமே சொல்லாம இருக்க. அப்படி என்ன யோசனை திடீர்னு?"
"அ...அ... அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. திடீர்னு அத்தையைப் பார்த்ததும் என்ன பேசறதுன்னு தெரியலை..."
"உன் அத்தைக்கு நான் வாக்கு கொடுத்திருக்கேன். அவளோட பொண்ணு ஷீத்தலை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு."
"ஷீத்தல்..." பத்மா குரல் கொடுத்தாள்.
அவளது குரல் கேட்டதும் வீட்டின் உள் அறையிலிருந்து மெதுவாக எட்டிப் பார்த்தாள் ஒரு இளம் பெண். அவளது கருவண்டு போன்ற கண்களில் புது இடத்தின் மிரட்சி தென்பட்டது. உடை அலங்காரம் மும்பை ஸ்டைலில் இருந்தது. முகத்தில் குழந்தைத்தனம் மாறாத ஒரு வெகுளித்தனம் தோன்றியது. ஷீத்தல் கட்டில் அருகே வந்தாள். பத்மா, ஷீத்தலின் கையைப் பிடித்து குணாவின் கையில் கொடுத்தாள்.
"காமாட்சி, பூஜை அறையிலிருந்து மஞ்சக் கயிறை எடுத்துட்டு வா" அவரசப்படுத்தினார் சதாசிவம்.
காமாட்சி, மஞ்சள் கயிறை எடுத்து வந்தாள். இதற்குள் பத்மாவின் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருந்தது. காமாட்சி கொடுத்த மஞ்சள் கயிறை சதாசிவம், குணாவிடம் கொடுத்தார். பத்மாவின் நிலைமையைப் பார்த்து மேலும் பரபரப்பானார்.
"குணா, சீக்கிரம்... இந்தக் கயிறை ஷீத்தல் கழுத்துல கட்டு. அறுந்து போன பந்தம் தொடரட்டும். நீ ஷீத்தலோட கழுத்துல தாலி கட்டறத பார்த்தாத்தான் என் தங்கையோட உயிர் நிம்மதியாப் போகும். கட்டுடா குணா. சீக்கிரம்..."
பரபரப்பான சூழ்நிலை, திடீரென்று அறிமுகப்படுத்தப்பட்ட புது உறவுகள், ஊஞ்சலாடி விடைபெறப் போகும் ஒரு உயிர்! அப்பாவின் திடமான கட்டளை...
"அப்பா..."
"முதல்ல தாலியை கட்டுடா. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம். அவசரப்படுத்தினார் சதாசிவம். செய்வதேதும் அறியாமல் அப்பா சொல்வதை மறுக்கவும் முடியாமல், வேறு வழியே இல்லாத நிலையில் மனதிற்குள் ஆயிரமாயிரம் குழப்பங்களோடும் அவை விளைவித்த வேதனையோடும் ஷீத்தலின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டினான். தன் மகளை தன் உடன் பிறப்பின் மகனிடம் நல்லபடியாக ஒப்படைத்து, அவளது கழுத்தில் தாலி ஏறுவதையும், கண் குளிரக் கண்ட பத்மா, சதாசிவத்தை நன்றியுணர்வுடன் ஒரு பார்வை பார்த்தாள். மறுகணம் அவளது கண்கள் மூடிக்கொண்டன. உயிரும் பிரிந்து விட்டது. 'தெய்வம் கோலம் போடும்பொழுது சில புள்ளிகளை தப்பாக வைத்து விடுகிறது. என் வாழ்க்கைக் கோலத்தில் ஆண்டவன் வைத்த புள்ளிகள் தப்பாகி விட்டதோ? இதுவே என் தலை விதியோ’ ஷீத்தலின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி அவளுக்குக் கணவனாகி விட்ட குணா, ரகசியமாய் மனதிற்குள் அழுதான். 'மீரா... மீரா...’ என்று அவனது உள்ளம் புலம்பியது.
'என்ன செய்றது, திரிஞ்சு போன பாலை நல்ல பாலாக மாற்ற முடியாதே. அதுபோல ஸ்திரமாக ஷீத்தலின் கழுத்தில் தாலி கட்டி விட்ட நான், இனி என் வாழ்வை மாற்றிக் கொள்ள முடியாதே...’ நினைத்து நினைத்து அல்லல் பட்டான் குணா. நீண்ட நேரம் யோசித்தான். திடமான மனதை வலிந்து உருவாக்கிக் கொண்டான்.
தாளமுடியாத துக்கத்திலும், மீளமுடியாத சோகத்திலும் புதையுண்டு கிடந்த தன் இதயத்தை தைரியப்படுத்திக் கொண்டான். மனப்பக்குவத்தை அடைந்தான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து முடிவு செய்தான். அந்த முடிவின் ஆரம்பமாக பேனா, பேப்பர் சகிதம் உட்கார்ந்தான். தனக்கு நிகழ்ந்த திடீர் திருமணம் பற்றிய தகவல்களையும், திடீரென்று தன் குடும்பத்திற்கு வந்து சேர்ந்த அத்தை, அவளது மகள் பற்றியும், தடுக்க முடியாத சூழ்நிலையில் அத்தை மகள் ஷீத்தலுக்கு தாலி கட்டியது பற்றியும் விரிவாக எழுதினான். தன்னையும் தனக்கு ஏற்பட்ட நிலைமையையும் புரிந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டான். விரிவாக எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை மீராவின் வீட்டருகே வசிக்கும் பையனிடம் கொடுத்தனுப்பினான். மீராவை மனைவியாக அடைந்து, அவளுடன் இணைந்து வாழ்வதற்கு ஆசைப்பட்ட அவன், அவளை இழந்து விட்ட நிலைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்ள பெரிதாக முயற்சி எடுத்தான்.
குணாவின் கடிதத்தை படித்துப் பார்த்த மீரா அதிர்ச்சி அடைந்தாள். ஏமாற்றத்தால் உள்ளம் நொறுங்கிப் போனாள்.
'என் காதல், அது தந்த சந்தோஷம், கற்பனைகள் அனைத்தும் வெறும் கனவாகிப் போச்சே. எனக்கென்று ஒரு நல்லவன் கணவனாக வரப் போகிறான்னு அம்மா நம்பிக்கிட்டிருக்காங்க. அவங்க நம்பிக்கை பொய் இல்லை. என் குணா நல்லவர். அவரோட குடும்ப சூழ்நிலை காரணமா இப்படி ஒரு நிலைமை ஆயிடுச்சு. ஆனா, அம்மா இதை அவ்வளவு சுலபமா ஏத்துக்குவாங்களா? இந்த விஷயத்தை அம்மாகிட்ட எப்படி சொல்லப் போறேன்?...' நீண்ட நேரம் யோசித்தவள், எழுந்தாள்.
வருங்கால மருமகன் குணாவிற்காக கைக்குட்டைகளில் அழகிய எம்ப்ராய்டரி வேலை செய்து கொண்டிருந்தாள் வனஜா. அவளருகே சென்று உட்கார்ந்தாள் மீரா.
"அம்மா..."
"என்னம்மா மீரா..." தையல் வேலையில் கவனமாக இருந்த வனஜா, அதிலிருந்து கண்களை எடுக்காமல் கேட்டாள்.
"அம்மா... குணாவை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாதும்மா..."
"ஸ்... ஸ்..." வனஜாவின் கையில் ஊசி குத்தி, ரத்தம் துளிர்த்தது. தொடர்ந்து, குணாவின் கடிதம் பற்றிய விபரம் அனைத்தையும் கூறி முடித்தாள். அந்த அதிர்ச்சியை கேட்டதிலிருந்து நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாய் உடல் நலம் குன்றினாள் வனஜா.
'அயோக்கியனைக் காதலித்து அவனால் கைவிடப்பட்ட அவல நிலையில் நான் இல்லை. என் குணா, பெண்ணைப் போகப் பொருளாக நினைக்கும் போக்கிரியும் அல்ல. நல்லதொரு பண்பான ஆணைத்தான் காதலித்தேன். காதலிக்கப்பட்டேன். அவனோடு பழகிய சில காலம் என் வாழ்வின் பொற்காலம். அவனோடு சங்கமித்த ஓரிரு நிமிடங்களே என் வாழ்வின் அர்த்தமுள்ள நிமிடங்கள். இனி குணாவின் வாழ்வில் குறுக்கிட்டு ஆகப் போவது என்ன? காதல் கைகூடாவிட்டாலும் காதலித்தவன் எங்கே இருந்தாலும் எந்தக் குறையும் இல்லாம நல்லா இருக்கணும்னு நினைக்கறதுதான் உண்மையான காதல். என்னோட காதல் உண்மையானது. உத்தமமானது. நான் விரும்பிய குணா, நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதே என் வாழ்வின் லட்சியம்!' உறுதியாக முடிவு செய்தாள் மீரா. நாட்கள் தன் கடமையை செய்தன.
மனதைக் கொடுத்த குணாவுடன் ஓருயிராகக் கலந்த சில நிமிடங்கள், ஈரைந்து மாத பந்தமாக மீராவின் வயிற்றில் உதயமானது. தைரியமாக இருந்த மீரா, இதை அறிந்து நொந்து போனாள்.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் மகளின் நிலைமை அளித்ததன் விளைவு? வனஜா, மாரடைப்பால் மரணம் அடைந்தாள்.
காதல் கைகூடாத வேதனை, தாயின் மறைவு! அடுக்கடுக்கான துன்பங்கள் மீராவின் பெண்மைக்கு வலிமையை அளித்தன. காதலும் கைகூடாமல், பெற்றவளும் இல்லாமல் மனம் சோர்ந்திருந்த மீரா, அந்த ஊரை விட்டுக் கிளம்பினாள். வயிற்றில் வளரும் குணாவின் சின்னஞ்சிறு உயிருடன் வாழ்க்கை எனும் போராட்டத்தில் நீச்சல் போடத் தயாரானாள். பசி, தாகம் தாங்காமல் ஒரு சர்ச் வாசலில் மயங்கி விழுந்தாள்.
மயங்கிக் கிடந்த அவளுக்கு அடைக்கலம் கொடுத்த மதர் சுப்பீரியரிடம் தன் சோகக் கதையைக் கூறினாள். அவளது பரிதாபக் கதையினால் இரக்கப்பட்ட மதர் சுப்பீரியர், அவளுக்கு அங்கேயே ஒரு வேலையும் கொடுத்துத் தங்கிக் கொள்ளும் வசதியையும் செய்துக் கொடுத்தார். மீரா, மதர் சுப்பீரியரிடம் தன் வேண்டுகோளை விடுத்தாள். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையை நல்லவர்கள் யாராவது கேட்டால் அவர்களுக்குக் கொடுத்து விடும்படி கேட்டுக் கொண்டாள்.
இயற்கை அன்னையின் இயல்பான செயலால் மீரா, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு, பிறந்த குழந்தையைத் திரும்பிக் கூட பார்க்காமல் சலனமற்று இருந்தாள். குழந்தையின் அதிர்ஷ்டம், சிங்காரம்பிள்ளை, விஜயா தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்டாள்.
அன்று தன் சோகக் கதையைப் பற்றி பேசிய மீரா, அதன்பின் பேசுவதையே குறைத்துக் கொண்டாள். தானுண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள். கர்த்தரின் காலடிகளில் பிரார்த்தனை, பைபிள் படிப்பது, சர்ச் வேலைகளில் ஈடுபடுவது போன்ற காரியங்களில் மனதை செலுத்தினாள். மௌனம் எனும் விலங்கு பூட்டி சலனம் என்ற உணர்வு சிறிதும் இல்லாமல் இளம் பெண் துறவியாக ஒரு வேள்வி போன்ற வாழ்வை நடத்தி வந்தாள். மதர் சுப்பீரியருக்கு மட்டும், குணாவின் விலாசத்தைக் கொடுத்திருந்தாள்.
குணாவிற்கு, மீரா அந்த சர்ச்சில் இருப்பதை தெரிவித்தார் மதர் சுப்பீரியர். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும், மீராவை சந்திக்க அனுமதி இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருந்தார். குணாவிற்கு அங்கே வருவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஓரிரு முறைகள் முயற்சித்த குணாவும் அதன்பின் மீராவின் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து அட்டை அனுப்பத் தவறுவது இல்லை.
தன் மரணத்திற்குப்பின் தன்னை அடக்கம் செய்யும்பொழுது குணா வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவளது இருப்பிடமான சர்ச் பற்றிய தகவலைக் கொடுத்திருந்தாள். மற்றபடி பிறந்த நாளன்று அவளுக்கு தபாலில் வரும் குணாவின் வாழ்த்துக்களுக்குக் கூட அவள் பதில் போடுவது இல்லை.
'எங்கேயோ நன்றாக இருக்கிறான். இருக்கட்டும்.’ என்கிற ரீதியில் மௌனமெனும் துடுப்பால் தன் வாழ்க்கைப் படகை ஓட்டிக் கொண்டிருந்தாள். அமைதியான நதியினில் செல்லும் ஓடம் போல் அவளது வாழ்வு இவ்விதம் ஓடிக் கொண்டிருக்கையில் புயல் போல் நுழைந்தாள் கவிதா.
புயலாய் மாறிப்போன பூப்போன்ற கவிதாவை மறுபடியும் பூவாய் மலரவும், மாறவும் தன் சோகக் கதையை பொறுமையாக அவளிடம் கூறினாள் மீரா. 'தன் உதிரத்தில் உதித்தவள் இவள் என்ற எண்ணம் அவளது இதயத்தில் தோன்றி மறைந்தது. அவளும் மனித இனம்தானே? பெண்தானே? அவளது இதயமும் ரத்தமும் சதையுமாய் ஆனதுதானே? இரும்பால் செய்யப்படவில்லையே? என்றாலும் தன்னை உணர்ந்த அவள், கவிதாவிடம் தன் மனதில் தோன்றிய எந்த சலனத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் சர்வ ஜாக்கிரதையாகப் பேசினாள். இருபது வருடங்களுக்கு முன்பு மதர் சுப்பீரியரிடம் தன் கதையைக் கூறியவள், இன்று பெற்ற பிள்ளையிடம், சொல்லி முடித்தாள். பெற்ற பொழுது முகத்தைக் கூட சரியாக பார்க்காத மீரா, இன்று இருபது வயது இள நங்கையாக தன் மகளைப் பார்க்க நேர்ந்தது ஏன்?...
'எதற்காக இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இவளைப் பார்க்க வைத்தீர்கள் இயேசுவே... என் குணா... என்னை நேருக்கு நேர் பார்க்காமலே என்னைப் புரிந்துக் கொண்ட என் குணா... அவர் கூட என்னைப் பார்க்க முயற்சிப்பதில்லை. அவரது மகள்... இந்தக் கவிதாவை ஏன் என்னை சந்திக்க வைத்தீர்கள் கர்த்தரே....’மீராவின் உள்ளம் இயேசுவிடம் மன்றாடியது. ஆனால் அவளது தூய்மையான வாழ்வு தந்த கட்டுப்பாடு, அவளை திடப்படுத்தியது.
"இப்ப என்னோட அப்பா எங்கே இருக்கார்? நான் அவரைப் பார்க்கணும்."
"அவரை நீ சந்திக்கக் கூடாது. சீதைக்கு லஷ்மணன் போட்ட கோடு மாதிரி, அவரோட அப்பா தன் மகனோட வாழ்க்கைப் பாதைக்கு தண்டவாளம் போட்டிருக்காரு. அவரோட வாழ்க்கைத் தடம் புரளாம போகணும்னுதான் நான் என் வாழ்வை வேள்வியாக்கி, உன்னையும் தத்துக் குடுத்துட்டு தவம் இருக்கேன். அதைக் கலைச்சிடாதே. நீ அவரைச் சந்திச்சா அவர் குடும்பத்துல குழப்பம் வரும். குருவிக் கூட்டை கலைக்கற மாதிரி ஆயிடும். குருவிக் கூட்டை கலைக்கறது பாவம். அந்தப் பாவம் உனக்கு வேண்டாம்."
"உங்க தவம் கலையற மாதிரியோ அவர் குடும்பத்துல குழப்பம் ஏற்படற மாதிரியோ நான் எந்தக் காரியமும் பண்ண மாட்டேன். அவர் எங்கே இருக்கார் சொல்லுங்க."
"சூழ்நிலைகள்தான் மனிதர்கள் குணத்தை மாத்திடுது. உன்னோட இந்த மாறுபட்ட மனநிலையும், சூழ்நிலையும்தான் உன் குணத்தை நிச்சயமா மாத்தி இருக்கு. அப்பிடி இல்லைன்னா இங்கே வந்து இப்படி பேச மாட்ட. உங்க அப்பாவைப் பத்தியும் விசாரிக்க மாட்ட..."
"என்னை நம்புங்க. நான் கெடுதல் எதுவும் செய்யறதுக்காக கேட்கலை. நான் இந்த உலகத்துல பிறக்கறதுக்குக் காரணமா இருந்த அவரை ஒரே ஒரு தடவை பார்க்கணும். அதுக்காகத்தான் கேட்கறேன். அட்ரஸ் மட்டும் குடுங்க ப்ளீஸ்."
"தரேன். ஆனா அவர்கிட்ட உன்னை நீ யார்னு அடையாளம் காட்டிக்கக் கூடாது. இதுக்கு நீ கட்டுப்படணும்."
"சரி."
மீரா, மதர் சுப்பீரியரைப் பார்க்க, அவளது சம்மதத்தைப் புரிந்துக் கொண்ட மதர், குணாவின் அட்ரஸை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுக்க, அதை கவிதா எடுத்துக் கொண்டாள்.
"கவிதா மை சைல்ட், உன் அம்மா மீரா சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவ. அவளைப் போல நீயும் உண்மையா இருக்கணும். மீராவை எப்படி நம்பறேனோ அதுபோல உன்னை நம்பி இந்த அட்ரஸ் தரேன். கவனம்..." அன்பையும் மீறிய ஒரு கண்டிப்பு தென்பட்டதைப் புரிந்துக் கொண்ட கவிதா, "ப்ராமிஸ் மதர். வேறு யாருக்கும் இதை சொல்ல மாட்டேன்."
அதுவரை காத்திருந்த மீரா குறுக்கிட்டாள்.
"இனி நீ போகலாம். மதர் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்." சொல்லிவிட்டு மீரா வேகமாக உள்ளே சென்று மறைந்தாள். அப்போது அவள் அறியவில்லை, விதியின் விளையாட்டு எப்படி திசை மாறும் என்று.
மீராவின் கட்டுப்பாடான, திடமான மனம் கொண்ட செயலைப் பார்த்த சிங்காரம்பிள்ளை திகைத்துப் போனார். தான் பெற்ற குழந்தை, கண் முன்னாடி இருபது வருட பருவப் பெண்ணாக முன்னால் வந்து நின்ற போதும், கோபத்தால் வார்த்தைக் கணைகளை வீசியபோதும் எப்படி எந்த சலனமும் இல்லாமல் பேசி விட்டு போக முடிகிறது இந்தப் பெண்ணால்? மீராவின் பேச்சும், நிதானமும் அவரை பிரமிக்க வைத்தன.
"மிஸ்டர் சிங்காரம்பிள்ளை, கவிதாவை நீங்க கூட்டிட்டுப் போங்க. இதுவரைக்கும் மீரா இவ்வளவு அதிகமா பேசியதே கிடையாது. கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதில் சொல்வாள். தானாக எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் பேசுவதில்லை. அவளோட மௌன விலங்கை உங்க பொண்ணு கவிதா உடைச்சுட்டா. ஆனா இன்னைக்கு மீரா பேசிட்டாள்ங்கறதுனால இதே வழக்கமா, கவிதாவோ, நீங்களோ மறுபடியும் வராதீங்க. அந்த நிபந்தனையிலதான் மீரா உங்களை சந்திக்க சம்மதிச்சா. மறந்துடாதீங்க." உறுதியான குரலில் பேசினார் மதர் சுப்பீரியர். அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகளில் கண்டிப்பு தொனித்தபோதும் அவரது கண்களில் மின்னும் கருணை மட்டும் சிறிதும் குறையவில்லை.
"இவ்வளவு தூரம் எங்களுக்காக மீராவை சந்திக்க வச்சதே பெரிய விஷயம் மதர். இனிமேல உங்களை இது விஷயமா தொந்தரவு பண்ண மாட்டோம் மதர்." சிங்காரம்பிள்ளையின் கனிவான, பணிவான பேச்சில் மதர் சுப்பீரியரின் முகத்தில் புன்னகை தோன்றியது.
"மிஸ்டர் சிங்காரம்பிள்ளை, உங்க மனைவி ஏன் வரலை?"
"அவ மனசே சரி இல்லைன்னு எப்பவும் சோகமா இருக்கா மதர். கவிதாவுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சேங்கிற சோகம் அவளை பாடா படுத்துது. கவிதாவுக்கு உண்மை தெரியற வரைக்கும் எங்க வீடு சொர்க்கமா இருந்துச்சு."
"இப்பவும் உங்க வீடு சொர்க்கம்தான் மிஸ்டர் சிங்காரம்பிள்ளை. கவிதா எப்பவும் உங்க மகள்தான். இந்த சர்ச் கான்வெண்டுக்கும், பல கல்வி நிறுவனங்களுக்கும் நீங்க எவ்வளவோ தருமம் பண்ணி இருக்கீங்க. உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது. நீர் அடிச்சு நீர் விலகாது" சிங்காரம்பிள்ளைக்கு மதரின் பேச்சு ஆறுதலாக இருந்தது.
"கவிதா... இருபது வருஷம் ஒரு குறையும் இல்லாம உன்னை அன்போடும் பாசத்தோடும் வளர்த்தவங்கதான் உனக்கு நிரந்தரம். அவங்க மனசு நோகாம நடந்துக்க மை சைல்ட். காட் பிளஸ் யூ.."
"சரிங்க மதர். தேங்க் யூ..."
"வா கவிதா" சிங்காரம்பிள்ளை கவிதாவை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
"அம்மா... அம்மா..."
கவிதாவின் அழைப்பில் தன் துயரங்களை எல்லாம் மறந்தாள் விஜயா. 'என் மகள் மாறவில்லை. நான் பெறாத மகள் என்று அறிந்தும், பழைய கவிதா போலவே அன்பாக அழைக்கும் என் மகள் கவிதா மாறவே இல்லைங்க" சிங்காரம்பிள்ளையிடம் திரும்பத் திரும்ப இதையே சொல்லி மகிழ்ந்தாள் விஜயா.
"தாயிடம் கற்றுக் கொள்ளும் பண்புகள்தானே பிள்ளைகளிடமும் வரும்? கவிதா என்னிக்குமே நம்ம மகள்தான். கவலையே படாதே."
"அம்மா, நான் ஊருக்குப் போகப் போறேன்மா."
"காலேஜுல இருந்து போறீங்களாடா கவிம்மா?"
"இ... இ... இல்லம்மா... அ... ஆமாம்மா..."
"என்னம்மா, இல்லைங்கற... ஆமாங்கற..."
"காலேஜுல இருந்து போகலைம்மா... அது வந்து... என் ஃப்ரெண்ட் ரங்கநாயகி அவங்களோட சொந்த ஊருக்குப் போயிருக்கா. அவ என்னை அங்கே கூப்பிட்டுக்கிட்டே இருக்கா. அவளுக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சாம். அதனால அவ கல்யாணம் ஆகி வெளிநாட்டுக்குப் போறதுக்குள்ள என்னை அங்கே வந்து நாலு நாள் தங்க சொல்லியிருக்கா..."
பொய்களை உண்மை போல சொல்வதற்கு அதிகக் கஷ்டப்பட்டாள் கவிதா. ஆனால் அந்தப் பொய்களைக் கூறும் பொழுதே அவளுக்குள் ஒரு மின்னல் அடித்து அதன் பலனாய் ஒரு திட்டமும் அவளது மனதிற்குள் உருவானது.
"நீ போறதெல்லாம் சரிதாம்மா கவிதா. அப்பா எங்கயோ வெளியூர் போறதா சொன்னார். அவர் போயிட்டு வந்தப்புறம் அவரையும் துணைக்குக் கூட்டிட்டுப் போயேன். எனக்கு இந்த ப்ளட் ப்ரஷர் தொந்தரவு.. செக்கப்புக்கு போகற நாளாயிடுச்சு. இல்லைன்னா நானே உன் கூட வந்திருப்பேன்..."
"அம்மா... நான் என்ன சின்னக் குழந்தையா? ரங்கநாயகியோட ஊருக்குப் போயிட்டு வர்றதுக்கு எனக்கு துணை வேணுமா? பொண்ணுங்கள்லாம் வெளிநாட்டுக்கே தனியா போறாங்க. அங்கயே தங்கிப் படிக்கறாங்க. இதோ இங்க பக்கத்துல இருக்கற தஞ்சாவூருக்கு தனியா போயிட்டு வர முடியாதா?..."
கவிதா சற்று கோபமாகப் பேசியதும் பயந்து விட்டாள் விஜயா.
'இப்பத்தான் புதுசா முளைச்சிருக்கற பிரச்னையில இருந்து விடுபட்டிருக்கா. பழைய பாசத்தோட பேசிக்கிட்டிருக்கா. நான் பாட்டுக்கு அவ மனநிலையை மாத்திடக் கூடாது. கவனமா இருக்கணும். விட்டுத்தான் பிடிக்கணும். கொஞ்சம் விட்டுக் கொடுத்தும் போகணும்...’மனதிற்குள் எண்ணங்கள் எச்சரிக்க, அவசரமாய் பேச ஆரம்பித்தாள் விஜயா.
"நீ போயிட்டு வாம்மா கவிதா. ரங்கநாயகிக்குப் பிடிச்சமான ரவா லட்டு பண்ணித் தரேன். எடுத்துக்கிட்டுப் போ." விஜயா முழு மனசாய் சம்மதித்ததும் குஷியானாள் கவிதா.
"சரிம்மா.."
"அது சரி, நேத்து அர்ஜுன் உன்னைப் பார்த்தானாமே?"
"ஆமா.. பேசாம அவருக்கு அட்வைஸ் அர்ஜுன்னு பேர் வச்சுடலாம்னு பார்க்கிறேன். சரியான ரம்பம்."
"என்னடா கவி, கட்டிக்கப் போற மாப்பிள்ளையை இப்பிடியா சொல்றது? சரியான குறும்புக்காரிதான் நீ."
"அண்ணன் மகன் மருமகனாகறதுக்குள்ள ரொம்பத்தான் வக்காலத்துக்கு வரீங்க? டைம் ஆச்சும்மா. நான் போய் கொஞ்சம் புத்தகங்கள் எல்லாம் வாங்கணும். லாண்ட் மார்க் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்மா."
"சரிம்மா."
"துள்ளி ஓடும் புள்ளிமான் போல இருக்கற இந்தப் பெண் சில சமயம் சீறிப்பாயும் புலியா மாறிடறாளே, எல்லாம் சரியாகி, இவ கல்யாணம் நல்லபடியா நடக்கறதைக் கண் குளிரப் பார்க்கணும். தெய்வமே..." தெய்வ சிந்தனையில் லேசான பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தாள் விஜயா.
காரை விட்டு இறங்கிய கோபால், யாரோ தன்னை அழைப்பதைக் கேட்டு நின்று, திரும்பிப் பார்த்தார்.
"அட, கௌரி மதினி நீங்களா?"
"ஆமா, கோபால். ஒரு கல்யாணத்துக்காக சென்னைக்கு வந்தோம். என் மகன் அவினாஷ் ஏதோ ஷாப்பிங் பண்ணனும்னு சொன்னான். ஷாப்பிங் முடிச்சுட்டு ஊருக்குக் கிளம்பணும்..." அவள் பேசி முடிப்பதற்குள் கையில் ஏகப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் தொங்கிக் கொண்டிருக்க, அங்கே நடமாடிக் கொண்டிருந்த பெண்கள் மீது கண்களை மேய விட்டுக் கொண்டே நடந்து வந்துக் கொண்டிருந்தான் அவினாஷ்.
கோபாலைப் பார்த்ததும் திடுக்கிட்டான். பின்னர் சமாளித்து அருகில் வந்தான்.
"நல்லா இருக்கீங்களா கோபால் சித்தப்பா?"
"நான் நல்லா இருக்கேன். உங்க அப்பா எப்பிடி இருக்கார்? அவர் வரலியா?..."
"அச்சுத் தொழிலோ நச்சுத் தொழிலோன்னு அச்சாபீஸ்ல வேலை சரியா இருக்கு சித்தப்பா. ஒண்ணு நான் வரணும். இல்லைன்னா அப்பா வரணும். அப்பாவை சுலபத்துல வெளியூருக்குக் கிளப்ப முடியாது. அதனால நானும் அம்மாவும் வந்தோம்."
"அது சரி. சென்னைக்கு வந்த நீங்க, எங்க வீட்டுக்கு வராம நேரா கல்யாணத்துக்குப் போயிட்டீங்களா? எங்க வீட்ல வந்து இறங்கியிருக்கலாம்ல?"
"கல்யாண வீட்டுக்காரங்களே நல்ல லாட்ஜுல ரூம் போட்டிருந்தாங்க. அங்கதான் தங்கணும்னு அன்புத் தொல்லை குடுத்தாங்க. அதனால அங்க போக வேண்டியதாயிடுச்சு. அர்ஜுன் நல்லா இருக்கானா சித்தப்பா?"
"அவன் நல்லா இருக்கான்ப்பா..."
"டேய் அவினாஷ்... சித்தப்பா ஏதோ வேலையா கார்ல இருந்து இறங்கினார். நாம்ப பிடிச்சுக்கிட்டோம். அவருக்கு வேலையோ என்னவோ..."
"ஆமா மதினி. முக்கியமான மீட்டிங்க்காக போய்ட்டிருக்கேன். இதோ தெரியுதே இந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோட கன்வென்ஷன் ஹால்ல தான் மீட்டிங். மீட்டிங் ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு. வாங்களேன். காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்."
மூவரும் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரெண்டிற்குள் சென்றனர். அமர்ந்தனர். கோபாலைப் பார்த்ததும் அவருக்குப் பரிச்சயமான வெயிட்டர் பணிவன்புடன் ஓடி வந்தான்.
"ஸார்... என்ன ஸார் வேணும்?"
"இவங்க ஹோட்டல்ல ஃபில்ட்டர் காபி ரொம்ப விசேஷம் மதினி. ஆர்டர் பண்ணட்டுமா? அவினாஷ்.. உனக்கு ஐஸ்க்ரீம்... ஜுஸ்..."
"எனக்கு கோல்ட் காபி வித் ஐஸ்க்ரீம் அங்கிள்."
"எனக்கு காபி கோபால்."
காத்திருந்த வெயிட்டரிடம் ஆர்டர் கொடுத்தார் கோபால்.
"அப்புறம் மதினி... வேற என்ன விசேஷம்?"
"எங்க வீட்டில என்ன விசேஷம்? உங்க வீட்லதான் விசேஷமாமே? ஊருக்கு வர்றவங்க பேசிக்கறாங்க."
"ஊர் பேசறது என்ன? ஊரே கொண்டாடற மாதிரியில்ல எங்க அர்ஜுனுக்கும் உங்க கவிதாவுக்கும் கல்யாணம் நடத்தப் போறேன்?"
இதைக் கேட்டதும் முகம் மாறியது கௌரிக்கு. சமாளித்து சிரித்தாள்.
"சந்தோஷமான சமாச்சாரம்தான் கோபால். ஆனா... ஆனா... கவிதா.... எங்க அண்ணனோட சொந்தப் பொண்ணு இல்லையே...."
"என்ன அண்ணி நீங்க? கவிதா, என் தங்கச்சி விஜயாவோட வளர்ப்பு மகள்ங்கற விஷயம் என்ன புதுசா? கவிதாவை தத்து எடுத்தப்புறம்தான் எங்க விஜயா சந்தோஷமா இருக்கா."
"அதெல்லாம் சரிதான் கோபால். கவிதா எங்க அண்ணனோட வளர்ப்பு மகள்ங்கறது தெரிஞ்ச விஷயம்தான். இதில யாருக்குமே தெரியாத ஒரு விஷயம் கவிதாவோட பிறப்பு பத்தின விபரங்கள். அண்ணனும், அண்ணியும் அநாதைக் குழந்தையை தத்து எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தது வரைக்கும் சரிதான். ஆனா இப்ப, கவிதாவோட பிறப்பு பத்தின ரகசியம் வெளியே கசிய ஆரம்பிச்சிருக்கு. கவிதா யாரோ பெத்த பொண்ணுங்கற வரைக்கும் சரி. ஆனா, சர்ச்ல வேலை செய்யற ஒரு பொம்பளைக்கு முறையில்லாம பிறந்தவ கவிதான்னு ஊர்ல பரவலா பேசிக்கறாங்க. இதைப் பத்தி பொண்ணு எடுக்கப் போற நீ யோசிக்கணுமே கோபால். உன் அந்தஸ்து என்ன? உன்னோட பிரபலமான பேரு என்ன? இவ்வளவு பெரிய சென்னையில உன்னை அடையாளமிட்டு சொல்ற அளவுக்கு செல்வாக்கோட இருக்கறவன் நீ... எவளோ முறை தவறி, நெறி தவறி, அதனால பிறந்துட்ட கவிதாவை உன் வீட்டு மருமகளா ஆக்கறது அவ்வளவு கௌரவமா இல்லியே..."
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெள்ள வார்த்தைகளை கோபாலின் மனதில் ஏற்றினாள் கௌரி.
கோபாலின் மனதிற்குள் 'சுர்'ரென்று கோபம் ஏறினாலும் அவரது இயல்பான பண்பாடு, அந்தக் கோபத்தை சட்டென்று வெளிப்படுத்துவதைத் தடுத்தது.
"இங்க பாருங்க மதினி, நீங்க என் தங்கச்சி விஜயாவோட நாத்தனார்ங்கற முறையில உங்க மேல எனக்கு அன்பு, மரியாதையெல்லாம் இருக்கு. ஆனா என் தங்கச்சி குடும்பத்தைப் பத்தி என்கிட்டயே இப்பிடி நீங்க பேசறது சரியில்ல.. விஜயா எப்பிடி என் உடன் பிறந்த ரத்தமோ அது போல கவிதாவும் எங்க ரத்தம்தான். அப்பிடித்தான் கவிதா வந்ததிலிருந்து விஜயா மட்டுமில்ல, நாங்க எல்லாருமே நினைக்கிறோம். கவிதா மேல பாசம் வச்சிருக்கோம். அவளோட பிறப்பைப் பத்தின விமர்சனம் எங்களுக்குத் தேவை இல்லாதது. அதைப் பத்தி பேசறது உங்களுக்குத் தேவை இல்லாதது" அவர் வெகுவாகக் கோபத்தைக் குறைத்துப் பேசியபோதும் அவரது வார்த்தைகள் மறைமுகமாகத் தெளித்த கோபத்தைப் புரிந்துக் கொண்ட கௌரி, பயந்து போனாள்.
"ஸாரி கோபால். யதார்த்தமாத்தான் நான் சொன்னேன்."
"நானும் யதார்த்தமாத்தான் சொல்றேன். எங்க குடும்ப விஷயம். என் தங்கச்சியோட நல்லது கெட்டது எல்லாமே என்னோட சொந்த விஷயம். அதனால இனிமேல் கவிதாவைப் பத்தியோ, அவ கல்யாணத்தைப் பத்தியோ பேசாதீங்க. எனக்கு மீட்டிங் போறதுக்கு நேரமாச்சு."
கோபால் எழுந்து கன்வென்ஷன் ஹாலை நோக்கி நடந்தார்.
கௌரியும், அவினாஷும் மௌனமாக அங்கிருந்து கிளம்பினர்.
"ஏம்மா, வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கக் கூடாதா? கோபால் அங்கிள்கிட்ட போய் கவிதாவைப் பத்தி பேசலாமா? எதுக்கெடுத்தாலும் அவசரம்தான் உங்களுக்கு. பிறப்பைப் பத்தி கௌரவம் பார்க்கறவங்களா இருந்தா, அவளை தத்து எடுத்திருக்கவே மாட்டாங்க. விஜயா அத்தை வயித்துல பிறந்த குழந்தை மாதிரி எவ்வளவு அன்பா பாசமா கவிதாவை வளர்த்துக்கிட்டிருக்காங்க! தத்து எடுத்த பொண்ணுன்னு தெரிஞ்சும்தான் கோபால் அங்கிள், அவரோட பையன் அர்ஜுனுக்குக் கட்டி வச்சு மருமகளாக்கிக்கணும்னு முடிவு பண்ணியிருக்காரு. கவிதா, சர்ச்ல பிறந்தவ, முறை தவறி பிறந்தவ அது இதுன்னு யார் யாரோ பேசறதையெல்லாம் கேட்டுட்டு அதைப் போய் அவர்கிட்டயே இப்படி பேசலாமாம்மா... என்னம்மா நீ?... என்னமோ நம்ம நல்ல நேரம்.. அவர் கோபத்தை அடக்கி வாசிச்சாரு..... அது மட்டும் இல்ல. அவர் ஒரு ஜென்ட்டில் மேன். அதனாலதான் கோபப்பட்டாலும் கடுமையான வார்த்தைகளை வீசாம அமைதியா எழுந்து போயிட்டாரு......?"
"அட... போடா... முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்னு சொல்வாங்க. கேள்விப்பட்டதில்லை?... அதனால்தான் சின்னதா ஒரு ஆப்ரேஷன் பண்ணிப் பார்க்கலாமேன்னு லேசா கத்தியை வச்சேன்..."
"லேசாவா வச்சீங்க? லேஸர் தனமா இல்ல வச்சீங்க? அம்மா... இது ஆப்ரேஷன் இல்லம்மா. படுகொலை. உங்க வார்த்தைகள் சாதாரண கத்தி இல்லம்மா. விஷம் தோய்ச்ச கத்தி..."
"கத்தியில கீறினா ரத்தம் வெளியே வந்துதாண்டா ஆகணும். பொறுத்திருந்து பாரு. நான் பேசிய வார்த்தைகளைப் பத்தி கோபால் யோசிப்பான். இப்ப என்னமோ தங்கச்சி மேல உள்ள பாசத்துல பொங்கிட்டுப் போறான். பாசி பிடிச்ச தரை வழுக்கும். அது போல கோபாலுக்கு தங்கச்சி மேல உள்ள பாசமும் வழுக்கும்..."
"ம்கூம். வீண் வம்புதான் இழுக்கும். நீங்க பாட்டுக்கு பார்த்தோமா நாலு வார்த்தை பேசினோமான்னு இல்லாம கவிதாவோட பூர்வீகக் கதையைப் பத்தி அவர்ட்ட பேசினது கொஞ்சம் கூட சரி இல்லம்மா."
"எது சரி எது தப்புன்னு எனக்குத் தெரியும்டா"
"என்னம்மா தெரியுது உங்களுக்கு? அந்தக் கவிதாவைத்தான் கோபால் அங்கிள் பையன் அர்ஜுனுக்குன்னு முடிவாயிடுச்சுல்ல? அது தெரிஞ்சும் எதுக்கு அந்தப் பேச்சு?"
"போடா உலகம் புரியாதவனே... நாம என்னமோ பெரிய தியாகம் பண்ற மாதிரி கவிதாவைப் பொண்ணு கேட்டு முடிச்சுடலாமில்ல?.. அதுக்காகத்தான் கவிதாவைப்பத்தி அரசல் புரசலா என் காதுக்கு வந்த விஷயத்தை கோபால் காதுல போட்டேன். இதெல்லாம் கோபாலோட மனசை கலைக்கத்தான். புரிஞ்சுக்க."
"எது புரியுதோ இல்லையோ... ஒண்ணு மட்டும் புரியுதும்மா. சினிமாவுல வர்ற வில்லித்தனமா பேசறீங்கன்னு நல்லாவே புரியுது."
"எல்லாம் உனக்காகத்தாண்டா. எங்க அண்ணனோட சொத்துக் கணக்கு உனக்குத் தெரியுமா?"
"நம்பகிட்ட இல்லாத சொத்தாம்மா?"
"ஆமாண்டா. நம்மகிட்ட இல்லாத சொத்துதான். நம்ம சொத்தைப் போல பல மடங்கு மாமா கிட்ட இருக்கு. எஸ்டேட், டெக்ஸ்டைல் மில், ஹோட்டல், ரெடிமேட் ஷாப்ஸ் இப்படி எத்தனை பிஸினஸ்? எத்தனை கார்? எத்தனை பங்களா? விஜயா அத்தை கிட்ட ஒரு வைர சுரங்கமே இருக்கும். அது போக ஏகப்பட்ட இடங்கள்ல நிலங்கள் வாங்கிப் போட்டிருக்காரு. ஏழு தலைமுறை உட்கார்ந்தே சாப்பிடலாம்."
"உட்கார்ந்து சாப்பிடறதுக்கு அவ்வளவு சொத்து வேணுமாம்மா? ஒரு டைனிங் டேபிள், சேர் போதுமேம்மா..."
"போதும்டா உன் கேலி. எல்லாம் நான் பார்த்துக்கறேன்..."
"ஆண்டவா... எங்கம்மாவை நீ பார்த்துக்கப்பா..." அவினாஷ் மேலே பார்த்து கைகளைக் கூப்பி வணங்கினான்.
"ஆண்டவனை கூப்பிடறது இருக்கட்டும். முதல்ல ஆட்டோவைக் கூப்பிடுடா..."
ஆட்டோவை அழைத்து இருவரும் அதில் ஏறிக் கொண்டனர்.
நீண்ட தூர கார் பிரயாணம் கௌரிக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே ரயிலில் வந்து இறங்கி, ஊருக்குள் அங்குமிங்கும் போக, வர ஆட்டோ அல்லது டாக்ஸியை அமர்த்திக் கொள்வது அவர்களது வழக்கம்.
வழக்கத்தை விட அரைமணி நேரம் கூடுதலாக நடைப்பயிற்சி சென்று வந்தும் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் கோபால். இரவு எட்டு மணிக்கு நடக்க ஆரம்பித்தால் ஒன்பது மணிவரை நடந்துவிட்டு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விட்டு உடனே படுத்து விடுவார். தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் கிடையாது. நல்ல புத்தகங்களை படிப்பார். பத்து பக்கங்கள் படிப்பதற்குள் தூக்கம் அவரைத் தழுவிக் கொள்ளும். அன்று எவ்வளவோ முயற்சித்தும் அவரால் தூங்க முடியவில்லை.
கவிதாவின் பிறப்பு பற்றி கௌரி பேசியது அவருக்குள் சின்னதாய் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. கௌரி பேசியபோது தன் தங்கையையும், அவளது குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டு வந்தாலும் கௌரி விட்டெறிந்த சலனக் கற்கள் தெளிந்த நீரோடை போன்ற மனதை லேசாகக் குழப்பியது. அதன் விளைவால் தூக்கமின்றித் தவித்தார். கவிதாவின் மேல் தன் உயிரையே வைத்திருக்கும் விஜயாவின் மீது தன்னுயிரையே வைத்திருந்த கோபாலுக்கு இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல், மனம் கலங்கினார். 'குலம் பார்த்து பெண்ணெடு' என்று பெரியவங்க சொல்வாங்களே. இப்ப என் பையன் அர்ஜுனுக்கு யாரோ முன்ன பின்ன தெரியாதவங்களோட மகளை மனைவியாக்குவது சரிதானா...? விஜயா என்னவோ கவிதாவை ரொம்ப நல்லபடியா வளர்த்திருக்கறது உண்மைதான். ஆனா அவளோட ஜீன்ஸ், விஜயாவோடதில்லையே. முறைப்படி குலம் கோத்திரம் பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கிற பெண்களே எப்படி எப்படியோ மாறிடறாங்க. கவிதாவை யாரு என்னன்னே தெரியாம, விஜயா தத்தெடுத்துக்கிட்ட ஒரே காரணத்துக்காக என் பையனுக்கு கட்டி வைக்கிறது சரிதானா? நான் வேற ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழிச்சிடலாம்னு பார்த்தா, அர்ஜுன் அவளை உயிருக்குயிரா விரும்பறதா விஜயா சொன்னாளே. நான் சம்மதிச்ச விஷயம் தெரிஞ்சு அர்ஜுன் ஏகப்பட்ட சந்தோஷத்துல இருக்கான். விஜயா அன்னிக்கு வந்து அவங்களோட காதல் விஷயத்தை சொன்னப்ப நானும் ரொம்ப சந்தோஷமா கல்யாணத்துக்கு சம்மதிச்சேனே! குடுத்த வாக்கை மீறக் கூடாதே.
கவிதாவால ஏற்பட்ட பிரச்சனைக்கே விஜயா எவ்வளவு துடிச்சுப் போனா. இப்ப, கவிதாவோட பிறப்பு பத்தின விஷயந்தான் நான் மறுக்கறதுக்கு காரணம்னு தெரிஞ்சா விஜயாவால தாங்கிக்க முடியாது. இந்த பிரச்னைக்கு என்னதான் முடிவு? கௌரி மதினியை சந்திச்சுப் பேசினதுனாலதான் என் மனசுல இவ்வளவு குழப்பமா? அதுவரைக்கும் நான் தெளிவாத்தானே இருந்தேன்? சுயமா சிந்திக்கிற என்னோட தனித்தன்மையை விட்டு நான் ஏன் விலகினேன்.? நல்லதை மட்டுமே நினைக்காம, கௌரி மதனி சொன்னதை கேட்டதை நினைச்சு வீணான கற்பனைகளை வளர்த்துக்கிட்டதுனால தூக்கம் வராத இந்த இரவு கூட வளர்ந்துக்கிட்டே போகுது' எண்ணங்கள் ஏற்படுத்திய அலைகள் அவரது இதயத்தில் மோதி மன அழுத்தத்தை தோற்றுவித்தன. நடு இரவைத் தாண்டி மூன்று மணிக்கு மேல்தான் கண்ணயர்ந்தார்.
ரங்க நாயகியின் ஊருக்குப் புறப்படுவதற்காக பெட்டியில் உடைகளையும், மற்ற பொருட்களையும் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் கவிதா. அறையிலிருந்த தொலைபேசி ஒலித்து அழைத்தது. எடுத்துப் பேசினாள்.
"ஹாய் அர்ஜுன், இப்பதான் நினைச்சேன். நீங்களே போன் போட்டுட்டீங்க. உங்களுக்கு நூறு ஆயுசு."
"உன் கூட வாழறதா இருந்தா நூறு வயசு கூட பத்தாது... கவி."
"அவ்வளவு ஆசையா என் மேல?"
"எவ்வளவு ஆசைன்னு என்னால சொல்லவே முடியாது."
"ஆசை மட்டும்தானா?"
"சச்ச... ஆசையை விட பாசமும், அன்பும்தான் உன் மேல எனக்கு ரொம்ப அதிகம். ஆசை மட்டும்தானான்னு அப்பிடி ஒரு கேள்வி கேட்டுட்டியே?"
"சும்மா, தமாஷுக்கு கேக்கறதுக்குள்ள எங்கேயோ ஆழமா யோசிச்சிட்டீங்க?"
"நான் அப்படித்தான். எதிலயுமே தீவிரமா ஈடுபடறது என்னோட குணம். படிப்புல முதன்மையா வரணும்னு தீவிரமா படிச்சேன். வந்துட்டேன். பொதுவா எல்லாரும் அவங்கவுங்க அப்பா மேல ரொம்ப பிரியம் வச்சிருப்பாங்க. பாசமும் வச்சிருப்பாங்க.
ஆனா நான் என்னோட அப்பா மேல வச்சிருக்கற அன்பை மாதிரி வேற யாருமே வச்சிருக்க மாட்டாங்க. எங்க அம்மா என்னை விட்டு இறந்து போனப்பிறகு, அவரோட சொந்த சுகங்களுக்காக இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்காம என்னை உயிருக்குயிரா நேசிச்சு வளர்த்தவர் எங்கப்பா..."
"அப்பாடா... அப்பா புராணம் ஆரம்பிச்சாச்சா? இந்த கதையெல்லாம் நீங்க சொல்லிதான் எனக்கு தெரியணுமா? இப்ப எதுக்காக போன் பண்ணீங்க. முதல்ல அதைச் சொல்லுங்க."
"நீ உன் ஃப்ரெண்டு ரங்கநாயகியோட ஊருக்குப் போறதா அத்தை சொன்னாங்க..."
"செய்தி ஒலிபரப்பாயிடுச்சா? ரங்கநாயகிக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. அமெரிக்க மாப்பிள்ளை. கல்யாணம் ஆன மூணாவது வாரத்துல அமெரிக்காவுக்கு பறந்துடுவா... அதனால அவ கூட போயி ஒரு நாலு நாள் இருந்துட்டு வரலாம்னு கிளம்பியிருக்கேன்."
"ரங்க நாயகியை நான் ரொம்ப கேட்டதா சொல்லு."
"அதெல்லாம் சரி. மாமா உங்களை அமெரிக்காவுக்குப் போய் ட்ரெய்னிங் எடுத்துட்டு வரச் சொன்னாராமே!"
"ஆமா கவி. உன்னைப் பிரிஞ்சிருக்கணுமேன்னு நினைச்சா போகவே பிடிக்கலை."
"சீச்சி... அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. மாமா சொல்றதைக் கேட்டு, புறப்படற வழியைப் பாருங்க."
"புறப்படறதுக்கு ஏற்பாடெல்லாம் நடந்துக்கிட்டுதான் இருக்கு. உன்னை மிஸ் பண்றது மட்டும்தான் யோசனையா இருக்கு."
"யோசிக்கவே வேண்டாம். உங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும், அவரோட பிஸினஸ்ஸை நீங்க செஞ்சு அவரை மாதிரியே திறமைசாலியா வரணும்னுதானே மாமா எல்லா ஏற்பாடும் செய்யறார்.. அவரும் இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருப்பார்? ஓய்வு வேண்டாமா?"
"சரிம்மா தாயே. உன் புத்திமதிக்கு ரொம்ப நன்றி. ஹாவ் எ நைஸ் ட்ரிப்."
"அர்ஜுன், உங்க கிட்ட மட்டும் ஒரு விஷயம் சொல்லணும். நீங்கதான் என்னைப் புரிஞ்சிக்கிட்டு, என்னைத் தடுக்காம இருப்பீங்க. அதனாலதான் சொல்றேன். நான், ரங்கநாயகியை பார்க்கறதுக்காக மட்டும் அவ ஊருக்குப் போகலை. என்னோட பிறப்புக்குக் காரணமான என்னோட அப்பா, அவ ஊருக்குப் பக்கத்துல இருக்கற ஊர்லதான் இருக்காராம். அவரைப் போய் பார்க்கணுங்கறதுக்காகவும்தான் இந்த ட்ரிப்...."
"நீ அங்கே போய் அவரைப் பார்க்கறது சரிதானா கவிதா? நல்லா யோசிச்சியா? அவங்க குடும்பத்துல உன்னால குழப்பம் வந்துடக்கூடாது..."
"அப்படியெல்லாம் என்னால அங்கே எந்த பிரச்னையும் ஏற்படாது. என்னை யார்னு அடையாளம் காட்டிக்காமலே என்னோட அப்பாவை நான் பார்த்துட்டு வரணும். ஒரு தடவை, சும்மா பார்க்கணும். அவ்வளவுதான். மத்தபடி உரிமை கொண்டாடியோ, பழங்குப்பையைக் கிளறவோ நான் அங்கே போகலை..."
"கவனம் கவிதா. ஏற்கெனவே உன் மனசுல ஒரு பூகம்பம் உருவாகி, அடங்கி இருக்கு. மறுபடியும் புதுசா எந்த சிக்கல்லயும் நீ மாட்டிக்காத, அந்தக் குடும்பத்தினர்க்கும் சிக்கலை உண்டாக்கிடாத. உன்னை எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன். ஜாக்கிரதையா போயிட்டு வா. நீ வர்றதுக்குள்ள நானும் அமெரிக்காவுக்கு கிளம்பிடுவேன். டேக் கேர்."
"ஓ.கே. அர்ஜுன் தேங்க் யூ." ரிஸீவரை வைத்து விட்டு மீண்டும் பெட்டியில் துணிகளை அடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள் கவிதா.
'நலம்’ மருத்துவமனையின் கட்டிடம் நவீன கட்டட அமைப்பில் கம்பீரமாகக் காணப்பட்டது. அனைத்து மருத்துவ வசதிகளையும், மருத்துவப் பரிசோதனை சாதனங்களும் அமையப் பெற்றிருந்தது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு மிகச் சிறியதாகவும், எளிமையாகவும் ஆரம்பிக்கப்பட்ட அந்த மருத்துவமனை, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, தற்போது மிக உயர்தரமான மருத்துவமனை எனும் பெயரையும், புகழையும் பெற்றுத் திகழ்ந்தது.
பொது வார்டில் இருந்த கட்டிலில் மிக மெல்லிய தேகத்துடன், ஒளி மங்கிய கண்களுடன் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் ரேச்சல். அவளது கை விரல்கள் அவளது நெற்றியின் நடுவே இருந்த ஆழமான பெரிய தழும்பைத் தடவிக் கொண்டிருந்தது. சிறிய வயதில், கீழே விழுந்து கல்குத்தியதால் ஏற்பட்ட காயத்தின் தழும்பை அடிக்கடி விரல்களால் தடவுவது அவளது வழக்கமாகிப் போனது.
ரேச்சல், 'நலம்’ மருத்துவமனையின் முன்னாள் தலைமை நர்ஸ். ஆரம்ப காலத்திலிருந்தே அந்த மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து, மருத்துவமனையின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைத்தவள்.
மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் செங்குட்டுவன், ரேச்சலின் உண்மையான உழைப்பைப் பார்த்து அவள் மீது அதிக மதிப்பும், அக்கறையும் கொண்டார். எனவே அவளது திருமணம், குழந்தைகளின் படிப்பு போன்ற குடும்பப் பொறுப்புகளுக்கு உதவி செய்து வந்தார். கணவன், குழந்தைகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள் ரேச்சல். வயது முதிர்ந்ததும் எந்த நோயும் தாக்கப்படாமல் திடீரென உயிரை விட்டார் அவளது கணவர். கஷ்டப்படாத அமைதியான மரணம் அடைந்த கணவனின் மறைவு தந்த துன்பத்தைத் தன் சேவைகளில் ஓரளவு மறந்தாள். அவளது மகன்கள் இருவரும் உயர்கல்வி கற்று வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டனர்.
அங்கே சென்று பெருவாரியாக சம்பாதித்த பிறகு ரேச்சலை தங்களுடன் வெளிநாட்டிற்கு வந்துவிடும்படி அவர்கள் அழைத்தும் மருத்துவமனையை விட்டு நிரந்தரமாக போவதில் உடன்பாடு இல்லாத ரேச்சல், மகன்களின் ஆசையை மதித்து ஒரு முறை அவர்கள் இருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று வந்தாள். வெளிநாடுகளில் அவளது மனம் எதிலும் லயிக்கவில்லை. மருத்துவமனையும், அதன் சேவையுமே தன் வாழ்வாக உணர்ந்த ரேச்சல், இந்தியாவில்தான் மன நிறைவைப் பெற்றாள்.
வயோதிகம் அவளுக்கு உடல் தளர்ச்சியை அளித்தது. அவளது ரத்தத்தில் ஏதோ குறைபாடு கண்டனர் மருத்துவர்கள். பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின் அவர்கள் கண்டறிந்த கசப்பான உண்மை, ரேச்சலுக்கு ரத்தப்புற்று நோய் என்பதாகும்.
டாக்டர் செங்குட்டுவனும் வயதின் முதிர்ச்சி காரணமாக ஓய்வு பெற்று வீட்டிலிருந்த போதும், அவரது மகன் டாக்டர் இளங்கோ மூலமாக ரேச்சலுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகளை செய்து வந்தார்.
நல்லபடியாக, உடல்நலமுடன் இருந்து, மருத்துவமனை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் உயிர் பிரிந்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும், பிரார்த்தனையிலும் இருந்த ரேச்சல், தன்நிலை அறிந்து மனம் துவண்டாள். கவலை கொண்டாள்.
அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மேரி, ரேச்சலின் அருகே வந்தாள். ரேச்சலின் கைகளைப் பிடித்தாள்.
"என்ன ரேச்சல் அக்கா, சாப்பிட்டீங்களா இல்லியா? இந்த ஆஸ்பத்திரிக்கு நோய் நொடியோட வர்ற அத்தனை பேருக்கும் தைர்யம் சொல்லி, அதனால அவங்க சீக்கிரமா குணமாகி, சந்தோஷமா வீட்டுக்குத் திரும்பிப் போயிட்டிருக்காங்க. நீங்க என்னடான்னா இப்பிடி சோர்ந்து போய், எப்பவும் கவலையாவே இருக்கீங்க?..."
நெற்றியிலுள்ள தழும்பை மீண்டும் தடவியபடியே லேசாக சிரித்தாள் ரேச்சல். "இவ்வளவு வருஷமா பழகியும் நீ என்னைப் புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா மேரி? என்னோட உயிர் பிரியறதைப் பத்தியா நான் கவலைப்படறேன்? அதைப்பத்தின கவலையோ பயமோ எனக்குக் கொஞ்சம் கூட கிடையாது. ஏன்னா, என் குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எந்தக் குறையும் இல்லை. இந்த நர்ஸ் சேவையில என்னோட மனசுக்கு நல்ல நிம்மதி, ஆறுதலெல்லாம் கிடைச்சாச்சு. அனாவசியமான ஆசைகளை எனக்குள்ள உருவாக்கிக்கிட்டு அதெல்லாம் கிடைக்கலியேன்னு ஆதங்கப்பட்டதும் இல்லை... நம்ம பெரிய டாக்டர் செங்குட்டுவனும், அவரோட மகன் சின்ன டாக்டர் இளங்கோவும் என்னை அவங்களோட குடும்பத்துல ஒருத்தியா நேசிக்கறாங்க. கவனிச்சிக்கறாங்க. இதோ அறுபத்தஞ்சு வயசு தாண்டியாச்சு. உயிர் மேல ஆசை வச்சு இன்னும் நீண்ட நாள் வாழணும்னா நான் நினைக்கிறேன்...?"
"அதில்ல அக்கா, உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? உங்க முகத்துல ஒரு இனம் புரியாத வேதனை இருந்துக்கிட்டே இருக்கு. அது தொடர்பான சிந்தனையிலேயே மூழ்கிப் போயிருக்கீங்க? எதையோ யோசிக்கறீங்கன்னு மட்டும் தெரியுது. ஆனா என்னவா இருக்கும்னு என்னால யூகிக்க முடியலை. மத்தபடி, நோய் காரணமாத்தான் இப்படி இருக்கீங்கன்னு உங்களைப் போய் நான் நினைப்பேனாக்கா?... என் கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க..."
"உன்கிட்ட சொல்றதுக்கென்ன மேரி. என் மனசுக்குள்ளேயே புதைச்சு வச்சிருக்கறதை விட வெளியில சொல்லிட்டா எனக்கும் கொஞ்சம் பாரம் குறையும். இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு பணக்கார வீட்டுப் பொண்ணு இங்க பிரசவத்துக்கு வந்திருந்தா. அவ பேர் கூட பிரபான்னு ஞாபகம். அதே சமயம் இந்த ஊருக்குப் பக்கத்து கிராமத்துல இருந்து ஒரு அபலைப் பொண்ணு பிரசவத்துக்கு வந்திருந்தா. அந்தப் பொண்ணு எவன் கிட்டயோ ஏமாந்து வயித்துல பிள்ளையோட இங்க வந்தா. அவ ரொம்ப பலவீனமா இருந்தா. அதனால அதிகப்படியான ரத்தப் போக்கு வேற. குழந்தையைப் பெத்துட்டு செத்துப் போயிட்டா. அதே சமயம், பணக்கார வீட்டுப் பொண்ணுக்கும் பிரசவமாச்சு. ஆனா அவளோட குழந்தை பிறந்த மறுநிமிஷமே செத்துடுச்சு. ஒரு பக்கம் தாயில்லாத ஒரு குழந்தை. இன்னொரு பக்கம் பெத்த குழந்தை செத்துப் போனது கூட தெரியாத மயக்கத்துல ஒரு தாய். எனக்கு அந்தத் தாய் மேலயும், குழந்தை மேலயும் ரொம்ப பரிதாபமாயிடுச்சு. அதனால செத்துப் போன குழந்தையைத் தூக்கி, பிரசவத்துல கண்ணை நிரந்தரமா மூடிட்ட அபலைப் பொண்ணு பக்கத்துல யாருக்கும் தெரியாம போட்டுட்டேன். அவளுக்குப் பிறந்த குழந்தையைத் தூக்கி பணக்காரப் பொண்ணு பக்கத்துல போட்டுட்டேன். அந்த நேரத்துல அந்த அனாதைக் குழந்தைக்கு ஒரு அம்மாவைக் குடுக்கறோம்ங்கற நல்ல எண்ணம் மட்டும்தான் தோணுச்சு. வேற எதைப்பத்தியும் சிந்திச்சுக் கூட பார்க்கலை. அதனால அப்பிடி செஞ்சேன்..."
"கர்த்தர் மற்ற உயிர்கள் மேல 'இரக்கப்படு'ன்னு தானே சொல்லியிருக்காரு?... நீங்க செஞ்சது நல்ல விஷயம்தானே.. அதுக்கு ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க?..."
"நல்ல விஷயமா இருந்தாலும், ஒரு உண்மையை புதைச்சுட்டேனேன்னு என்னோட மனசாட்சி உறுத்துது. மரணத்தோட எல்லையிலே இருக்கற எனக்கு அந்த உண்மையை சம்பந்தப்பட்டவங்ககிட்ட சொல்லிடணும்னு ஒரே துடிப்பா இருக்கு. சொன்னாத்தான் என் ஆத்மாவுக்கு நிம்மதியும், அமைதியும் கிடைக்கும்..."
"இதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலை? நம்ம ஹாஸ்பிட்டல் ஃபைலைப் பார்த்தா அவங்க அட்ரஸ் கிடைக்கும். லெட்டர் போட்டு வரவழைக்கலாம். ஃபோன் போட்டு பேசலாம்..."
"ஏற்கெனவே நான் எடுத்த முயற்சிதான் அது. அந்த வருஷத்து ஃபைல்ல, அந்தப் பணக்காரப் பொண்ணோட அம்மா வீட்டு அட்ரஸ்தான் இருக்கு. அந்த அட்ரஸ்க்கு லெட்டர் போட்டேன். அப்பிடி யாருமே இல்லைன்னு லெட்டர் திரும்பி வந்துடுச்சு..."
"அந்தப் பெண் கூட வந்தவங்க வேற யாரையாவது தெரியுமா?"
"அவளோட கணவரை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ரொம்ப உயரமா இருப்பார். சராசரி உயரத்தை விட அதிகமான உயரம். அதனால மட்டுமில்ல, அவர் ரொம்ப நல்லவர். அந்தப் பொண்ணை இங்கே சேர்த்ததில் இருந்து தினமும் வருவார். பொண்டாட்டி மேல உயிரா இருந்தாரு. என் கூடயும் 'சிஸ்டர், சிஸ்டர்'ன்னு அன்பா பேசுவாரு. பண்பாடு நிறைஞ்சவரு. அதனால அவரை நல்லா ஞாபகம் இருக்கு. அந்தப் பொண்ணோட அம்மா வீட்டு ஆளுங்களும் மாத்தி மாத்தி வந்து இருந்தாங்க. ஆனா அவங்களுக்குப் போட்ட லெட்டர் திரும்பிடுச்சு..."
"பல வருஷமா உங்க மனசுக்குள்ள இருக்கற இந்த உண்மையை அந்தப் பொண்ணோட கணவர் கிட்டயோ, அவங்க குடும்பத்தினர் கிட்டயோ இப்ப சொல்றதுனால உங்க மனசுக்கு அமைதி கிடைக்கும். ஆனா... அவங்க குடும்பத்துல குழப்பம் வந்துடாதாக்கா?..."
"வரக்கூடும். ஆனா வரக்கூடாது. மனசாட்சிக்குப் புறம்பா நான் செஞ்ச ஒரு காரியத்தை அது நல்லதுக்காகவே இருந்தாலும் கூட அதை சொல்லிட்டாதான் என் மனசுக்கு நிம்மதி. இந்த என்னோட உந்துதல், நல்லதுக்காகத்தான் இருக்கும்னு நான் நம்பறேன். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னு ஆண்டவனை மன்றாடி கேட்டு, பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருக்கேன்."
"உங்க பிரார்த்தனை பலிக்கும் ரேச்சல் அக்கா. அந்தப் பொண்ணோட குடும்பத்தினரை ஆண்டவன் உங்களுக்கு எப்படியாவது காட்டணும்னு நானும் வேண்டிக்கிறேன்க்கா. நீங்க அதையே நினைச்சு கலங்காம, அமைதியா இருங்க. வயித்தைக் காயப் போடாம நல்லா சாப்பிடுங்க. அப்பதான் மருந்து, மாத்திரையெல்லாம் எடுத்துக்க முடியும்."
"சரிம்மா மேரி" கூறிவிட்டு சோர்வுடன் படுத்துக் கொண்டாள் ரேச்சல். பழக்க தோஷமாய், தன் நெற்றியின் நடுவிலுள்ள தழும்பைத் தடவிக் கொண்டிருந்தாள்.
நெஞ்சின் நடுவே சிலுவை போட்டபடி அங்கிருந்து நகர்ந்தாள் மேரி.
கிராமத்து ஸ்டேஷன். மிகச்சிறியது. விடிஞ்சும் விடியாத இருட்டு. ஒளி மங்கிய லைட் ஒன்று 'மினுக்'கென்று எரிந்துக் கொண்டிருந்தது. தூக்கம் கலைந்த முகத்துடன், ரயிலிலிருந்து இறங்கினாள் கவிதா. தோளில் நவீன ஏர்-பேக் தொங்கிக் கொண்டிருக்க, கையில் சிறிய ஹாண்ட்-பேக்குடன் அந்தக் கிராமத்து சூழ்நிலையிலிருந்து வெகுவாய் வித்யாசமாய் காணப்பட்டாள். கைப்பையைத் திறந்து ரங்கநாயகியின் விலாசம் இருந்த சிறிய டைரி போன்ற நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள். பிரித்துப் பார்த்தாள். 'ரங்கநாயகி, ஸ்டேஷனுக்கு வர்றதா சொன்னாளே...' நினைத்தபடியே சற்று நேரம் நின்றாள். ரங்கநாயகி வரவில்லை.
மேலும் சில நிமிடங்கள் காத்திருந்தாள்.
'சரியான தூங்கு மூஞ்சி. தூங்கியிருப்பா. அட்ரஸ்தான் இருக்குல்ல. நாமளே போயிடலாம்' நினைத்தபடியே நடக்க ஆரம்பித்தாள். இருட்டில் நடப்பது சற்று சிரமமாக இருந்தது. தோப்பும், துரவுமாக அடர்ந்து இருந்த பகுதி ஆகையால் இருட்டு கப்பியிருந்தது. சமாளித்து நடந்தாள். லேசாக மழை வேறு தூற ஆரம்பித்தது. நிற்காமல் நடையைத் தொடர்ந்தாள்.
மழை வலுத்தது. நனைந்தாள். அதன்பின் எங்காவது ஒதுங்கலாமே என்று இடம் தேடினாள். எதிரே ஓர் உருவத்தைப் பார்த்தாள்.
'யாரோ வர்றாங்களே ரங்கநாயகியோ? சச்ச... ஏதோ ஒரு ஆள் மாதிரியில்ல இருக்கு? ரங்கநாயகி யாரையாவது அனுப்பியிருப்பாளோ... நல்லதாப் போச்சு. இனி பயமில்லாம போகலாம்' நின்றாள்.
எதிரே வந்தவன் ஒரு குடிகாரன். இரவில் ஏகமாய் குடித்துவிட்டு விடியும் தறுவாயில் போதை முழுமையாகத் தெளியாமல் தள்ளாடி வந்துக் கொண்டிருந்தான். மதுவின் அரைகுறை போதையில், மங்கலான வெளிச்சத்தில் மழையில் முழுவதும் நனைந்து போன உடையுடன் காட்சி அளித்த அழகிய மாதுவைக் கண்டதும் மதி மயங்கினான். கவிதாவின் அருகே வந்தான். முரட்டுத்தனமாக அவளை அணைத்தான்.
"ஐயோ... ஹெல்ப்... ஐயோ..." அலறிய கவிதாவின் வாயைத் தன் கையால் மூடினான். அவனது அதிரடியான நடவடிக்கையை எதிர்த்துப் போராடியும் சமாளிக்க முடியாத கவிதா தடுமாறிக் கீழே விழுந்தாள். அதிர்ச்சியில் அரைகுறை மயக்கத்தில் ஆழ்ந்த கவிதாவின் மேல் படர்ந்தான் அவன். போதையில் மிருகமாகிவிட்ட அந்த மனிதனால்
கவிதாவின் கற்பு, காற்று பட்ட கற்பூரமாய் கரைந்து போனது.
"ஐய்யோ ஓடி வாங்களேன், ஒரு பிள்ளை மயங்கிக் கிடக்கு. வாங்க." தண்ணீர் எடுப்பதற்காக குடம் எடுத்து சென்ற பெண்மணி ஒருத்தி கவிதா மயங்கிக் கிடப்பதைப் பார்த்துக் கத்தினாள்.
சுற்றும், முற்றும் வயக்காட்டு வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பெண்கள் ஓடி வந்தனர்.
"பார்த்தா பட்டணத்துப் பிள்ளை மாதிரி இருக்கே? யாரா இருக்கும்?"
"அசலூராத்தான் இருக்கும்."
"அட! ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா?... முகத்துல தண்ணி தெளிச்சுப் பாருங்க."
தண்ணீர் தெளித்ததும், கவிதா லேசாகக் கண் விழித்தாள். விழித்ததும் பயத்தில் 'வீல்' என்று அலறினாள்.
"பாவம்.. காத்து கருப்பு பட்டிருக்கு போலிருக்கு, ஏம்மா, வயசுப் பொண்ணு தனியா இருட்டுக்குள்ள எதுக்காக வந்தே? நீ யாரு?"
மலங்க மலங்க விழித்தாள் கவிதா.
"நிதானமா சொல்லு தாயி, நாங்க இந்த ஊர்க் காரங்கதே, பயப்படாதே. பார்த்தா படிச்ச பிள்ளையா தெரியுது. இப்பிடி பயந்துக்குதே."
"இதுக்கு முன்னால இந்த ஊர்ல இந்தப் பிள்ளையை பார்த்தது கூட இல்லையே? யார் வீட்டுக்கு, யாரைப் பார்க்க வந்துச்சோ? பட்டணத்துல பட்டப்படிப்பு படிச்சுட்டா தனியா எங்க வேண்ணாலும் கிளம்பிடுதுங்க."
"என்னம்மா நீங்க, பயத்துல வாயடைச்சுக் கிடக்கற பிள்ளைகிட்ட சாவகாசமா விசாரிக்காம மடமடன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு... முதல்ல குடிக்கறதுக்கு ஏதாவது குடுங்க. அந்த திண்ணைக்குக் கூட்டிட்டு போய் உட்கார வைங்க." பெரிய மனிதர் ஒருவர் சொன்னார்.
கவிதாவை கைத்தாங்கலாக கூட்டிச் சென்று திண்ணையில் உட்கார வைத்தனர். பானகம் கரைத்து வந்து கொடுத்ததும், தாகத்தில் மடமடவென்று குடித்தாள்.
அதன்பிறகு, மறுபடியும் அவள் யார்? ஏன்று கேட்க ஆரம்பித்தனர். கவிதா அழுதாள், சிரித்தாள், பயத்தில் அலறினாள். இவற்றையே மாறி மாறி செய்தாள்.
"ஐயய்யோ, இந்தப் பிள்ளை பைத்தியம் போலிருக்கு. இந்தப் பிள்ளையோட பையை எடுங்க. விலாசம் ஏதாவது இருக்கான்னு பார்ப்போம்" பெரியவர் சொன்னதும் கவிதாவின் பையைப் பிரித்துப் பார்த்தனர். அதில் ரங்கநாயகியின் முகவரி எழுதப்பட்டு இருந்தது. கூட்டத்தில் நின்றிருந்த படித்த வாலிபன் ஒருவன் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த விலாசத்தை, தமிழில் எடுத்துச் சொன்னான்.
"அட, நம்ம பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் ஐயா வீட்டு விலாசமில்ல எழுதியிருக்கு? அவுக வீட்டுக்கு வந்த பிள்ளை.. இருட்டுல எதையோ கண்டு மிரண்டிருக்கு. கூட்டிட்டுப் போய் அவுக வீட்டில விட்டுரலாம். அம்மன் கோயில் பூசாரி ஒரு தட்டு தட்டினார்னா இந்த பயம் எல்லாம் போயிடும்."
ரங்கநாயகியின் வீட்டுக்குக் கவிதாவை அழைத்துச் சென்றனர்.
"அம்மா... இந்தப் பிள்ளை வயக்காட்டுப் பக்கம் மயக்கமா கிடந்தா. மயக்கம் தெளிஞ்சப்புறம் யாரு என்னன்னு கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்குது. எதையோ கண்டு மிரண்டிருக்கு. இவ பையில உங்க விலாசம் இருந்துச்சு."
பெரியவர், கவிதாவை ரங்கநாயகியின் தாய் புவனேஸ்வரியிடம் ஒப்படைத்து விடை பெற்றார்.
தன் கிராமத்து வீட்டின் ஒரு ஓரமாய் கயிற்றுக் கட்டிலில் வேப்பிலை தூவப்பட்ட படுக்கையில் படுத்திருந்த ரங்கநாயகி, கவிதாவின் நிலை கண்டு திடுக்கிட்டாள்.
"அம்மா, இவதாம்மா என் ஃபிரண்டு கவிதா. ஸ்டேஷனுக்கு வர்றதா சொல்லி இருந்தேன். ஐய்யோ... ஏம்மா இவ இப்பிடி இருக்கா? கவிதா... கவி..." ரங்கநாயகி எழுந்திருக்க முயற்சி செய்தாள்.
"நீ எழுந்திருக்காத கண்ணு, நான் கூட்டிட்டு வரேன்."
"வாம்மா கவிதா. உன்னைக் கூப்பிடறதுக்கு ஸ்டேஷன் போகணும்னு ரங்கநாயகி சொல்லிக்கிட்டிருந்தா. ஆனா ஆத்தா முத்து போட்டுடுச்சு. அவுக ஐயாவும் ஊர்ல இல்லை. அதான் உனக்கு தகவல் குடுக்க முடியலை." புவனேஸ்வரி பேசியது எதுவுமே கவிதாவை பாதிக்கவில்லை. ரங்கநாயகியின் அருகே கவிதாவை உட்கார வைத்தாள் புவனேஸ்வரி.
"நான் போய் காபித்தண்ணி கொண்டாரேன்."
"கவிதா... கவி... என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்கற? கோபமா? ஸாரிடி. எனக்கு உடம்புக்கு முடியாததுனாலதான் உன்னைக் கூப்பிட ஸ்டேஷனுக்கு வர முடியலை... கவிதா.. கவி..." ரங்கநாயகியின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கவிதா சிரித்தாள். அழுதாள். அவளது நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது ஒரு குழந்தை போல இருந்தது.
"ஐயோ கவிதா..." ரங்கநாயகி கத்தியதும், புவனேஸ்வரி ஓடி வந்தாள்.
"என்ன கண்ணு, என்ன ஆச்சு?"
"அம்மா... கவிதாவைப் பாருங்கம்மா, அவளுக்கு என்னமோ ஆயிடுச்சு."
கவிதா தொடர்ந்து சிரிப்பதும் அழுவதுமாய் இருந்தாள். இரட்டைப் பின்னலைப் பிரித்தாள். மீண்டும் போட்டாள். சம்பந்தம் இல்லாமல் என்னென்னவோ உளறினாள்.
"ஐயய்யோ, என்ன கண்ணு, இந்தப் பிள்ளையைப் பார்த்தா பித்துப் பிடிச்ச பிள்ளை மாதிரியில்ல இருக்கு?"
"ஆமாம்மா, எனக்கு அவளைப் பார்க்கவே பயம்மா இருக்கும்மா."
"உங்க ஐயா இன்னிக்கு ராத்திரி வந்துருவாரு. வந்ததும் மொத வேலையா இந்தப் பிள்ளையை அவுக ஊர்ல அவுக அம்மா, ஐய்யாகிட்ட ஒப்படைக்க சொல்லணும். தாயே கருமாரி, இதென்னம்மா சோதனை?" புவனேஸ்வரி புலம்புவதும், ரங்கநாயகி அழுவதும் கவிதாவை சிறிதும் பாதிக்கவில்லை. அவள் ஒரு சிறுமியைப் போல தனக்குத்தானே பேசி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவளது மாறுபட்ட நடவடிக்கைகளைக் கண்டு பயந்து போன புவனேஸ்வரி, தன் உறவுக்காரப் பெண்மணியை ரங்கநாயகிக்குத் துணையாக இருக்கச் செய்தாள். கவிதாவை அழைத்துக் கொண்டு கிளம்பினாள். சிங்காரம்பிள்ளையிடமும், விஜயாவிடமும் கவிதாவை ஒப்படைக்கப் புறப்பட்டாள்.
தன் சிநேகிதியைப் பார்த்துவிட்டு, அவளுடன் கிராமத்தில் தங்கி விட்டு வரலாம் என்று ஆசையுடன் புறப்பட்டுச் சென்ற மகள், இப்படி ஒரு நிலைமையில் திரும்பி வருவாள் என்று சிறிதும் எதிர்பார்க்காத விஜயாவும், சிங்காரம்பிள்ளையும் அதிர்ச்சி அடைந்தனர்.
"ஐயோ, நாங்க பெத்த பிள்ளை இல்லை; மத்தவங்க யாரோ பெத்த பிள்ளைன்னு தெரிஞ்சு, மிரண்டு போன அதிர்ச்சியில இருந்து கவிதா மீள்றதுக்குள்ள, அவளுக்கு இன்னொரு அதிர்ச்சியா? அதுவும்... புத்தம் புதுசா பூத்த பூப்போல சந்தோஷ முகத்தோட போன என் பொண்ணு இப்பிடி வாடி வதங்கின பூங்கொடியா வந்து நிக்கறாளே..." குரலெடுத்து அழுத விஜயாவை அமைதிப்படுத்தினார் சிங்காரம்பிள்ளை.
"அழுகையை நிறுத்திட்டு கிளம்பு விஜயா. முதல்ல கவிதாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும். சீக்கிரம்..."
கவிதாவை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள். ரங்கநாயகியின் அம்மா கூறிய தகவல்கள், டாக்டருக்குப் பெரிய அளவில் உதவ வில்லை. ஸ்கேன் அது இது என்று ஏகப்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்துக் கொண்ட டாக்டர், மருந்து, மாத்திரைகளை பரிந்துரைத்து அவர்களை வீட்டிற்கு போகச் சொன்னார்.
"எங்க கவிதா, பழைய கவிதாவா எங்களுக்கு வேணும் டாக்டர். எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை. வெளிநாட்டுக்குக் கூட்டிட்டுப் போறதுன்னாலும் கூட போகலாம் டாக்டர்..."
"தேவையில்லை மிஸ்டர் சிங்காரம்பிள்ளை. நான் எழுதிக் குடுத்திருக்கற மருந்துகளைத் தவறாம குடுங்க. இந்த மாத்திரைகளுக்குத் தூக்கம் வரும். பயந்துடாதீங்க. நல்லா தூங்கி முழிக்கட்டும். மனரீதியான பாதிப்புகளுக்குத்தான் இப்ப கவிதாவுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கறேன். அதனால கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாறும். குணமாகும். பொறுமையா இருங்க. என்னோட வைத்தியத்துக்கு மேல, கடவுளோட அனுக்கிரகமும் துணை வரணும். வரும். நம்பிக்கையோட இருங்க..."
"டாக்டர், எங்க கவிதா... எங்க... கவிதா...." மேலே பேச இயலாமல் அழுகை வெடித்தது விஜயாவிற்கு.
"அழாதீங்கம்மா. நீங்கதான் வேளை தவறாம கவிதாவுக்கு மருந்து குடுத்து, அவ பக்கத்துலயே இருந்து பார்த்துக்கணும். அழுது அழுது நீங்களும் உடம்புக்கு வந்து படுத்துக்கிட்டா எல்லாருக்கும் கஷ்டம். அழாம, கவிதாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க."
"சரி டாக்டர்."
கவிதாவை வீட்டிற்கு அழைத்து வந்து அவளைக் கண்ணின் கருமணியாய் பாதுகாத்தாள் விஜயா. மனநிலை மாறிப்போனதால் செயல்களும் வித்தியாசமாய் மாறிப்போன கவிதாவைப் பார்த்து, அவளது தாயுள்ளம் பரிதவித்தது.
"அண்ணா, கவிதாவுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீங்களா அண்ணா? தோழியைப் பார்க்க ஊருக்குப் போறேன்னு போனவ, மனநிலை சரியில்லாதவளா திரும்ப வந்திருக்கா அண்ணா..."
தங்கையின் தவிப்புகளுக்கு ஆறுதல் சொல்ல வந்த கோபால், அவளுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். மனதிற்குள் கௌரி விதைத்திருந்த விஷ விதை துளிர்த்திருந்த போதும், தங்கையின் மீதுள்ள அதீத பாசத்தால் அவளுக்கு ஆறுதல் கூறினார். தைர்யமாக இருக்கும்படி தேற்றினார்.
விசேஷங்கள், நல்ல காரியங்கள் போன்ற சந்தர்ப்பங்களை விட துன்பத்தில் துவண்டிருக்கும் பொழுதுதான் உடன்பிறப்புகளுக்கும், உறவுகளுக்கும் உற்ற துணையாய் இருப்பது நலம்தரும் என்பதைப் புரிந்துக் கொண்ட கோபாலின் பண்பு, விஜயாவிற்கு பெருத்த ஆறுதலளித்தது. அண்ணனின் அண்மையால் ஓரளவு மனம் அமைதியடைந்த விஜயா, அவர் கிளம்பும்பொழுது கதறி அழுது விடை கொடுத்தாள்.
இரவும், பகலும் மாறி மாறி பல முறைகள் வந்தன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீட்டிற்கே வந்து கவிதாவைப் பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர் மாதவன்.
"மிஸ்டர் சிங்காரம்பிள்ளை... மருந்து, மாத்திரைகள் குடுக்கறதோட ரியாக்ஷனா கவிதாகிட்ட ஓரளவு முன்னேற்றம் தெரியுது. ஆனா..."
டாக்டர் மாதவன் 'ஆனா’ என்று இழுத்ததும்.. பதறிப் போனார்கள் விஜயாவும், சிங்காரம்பிள்ளையும். "பயப்படும்படியா ஒண்ணுமில்லையே டாக்டர்?" இருவரும் ஒருசேர கேட்டனர். இருவரையும் பரிதாபமாகப் பார்த்தார் மாதவன்.
"ஸாரி... சார். கவிதா, மனரீதியா மட்டும்தான் பாதிக்கப்பட்டிருப்பாள்ன்னு நினைச்சேன். ஆனா... அவ... இப்ப உடல்ரீதியா...."
"ஐயோ... கவிதாவுக்கு என்ன ஆச்சு டாக்டர்...?"
"கவிதா... கர்ப்பமா இருக்கா...."
இதைக் கேட்ட விஜயா மயங்கி விழப் போனாள். அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, அவளை உட்கார வைத்த சிங்காரம்பிள்ளை, அதிர்ச்சி குறையாத திகிலுடன் டாக்டரை ஏறிட்டார்.
"டாக்டர்... கவிதா... கர்ப்பமா...?"
"ஆமா மிஸ்டர் சிங்காரம்பிள்ளை. நான் குடுக்கற மருந்துகள் போலவே இந்த விஷயமும் கசப்பானதுதான். ஆனா உண்மை..."
"கல்யாணம் ஆகாமலே எங்க மக கர்ப்பமா? கழுத்தில தாலி இல்லாமலே அவ வயித்துல குழந்தையா? கடவுளே..." விஜயா தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
மனரீதியாக பாதிக்கப்பட்டு தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே அறியாத நிலையில் கவிதா கர்ப்பமாக இருக்கும் துயரமான தகவலைத் தன் அண்ணனுடன் பகிர்ந்துக் கொண்டாள் விஜயா.
அவளுக்கு என்ன வார்த்தைகள் கூறி தேற்றுவது என்று புரியாமல் தவித்தார் கோபால். 'தாயைப் போலவே முறை தவறி விட்டாளா கவிதா? கௌரி மதினி சொன்னது போல எவளோ ஒரு முறை தவறியவளுக்குப் பிறந்ததால்தான் கவிதாவிற்கும் இந்த நிலையா? 'மாமா’... 'மாமா’ன்னு என் மீது உயிரையே வைத்திருக்கும் பூங்கொடி போன்ற அந்தப் பெண்ணை நான் இவ்விதம் நினைப்பது சரிதானா? கவிதாவை அர்ஜுன் காதலிப்பதாக விஜயா சொன்னாளே? ஒரு வேளை அர்ஜுனும், கவிதாவும் உடலால் ஒன்று பட்டு விட்டார்களா? கடவுளே எதுவுமே புரியலியே? என் மகன் அப்படிப்பட்டவன் அல்லவே? அவர்கள் காதலுக்குத்தான் நான் பச்சைக் கொடி காட்டி விட்டேனே? அந்த தைர்யத்தில்தான் இருவரும் தங்களை மறந்து, இப்படி ஒரு நிலையாகி விட்டதா? இருக்காது. என் மகன் அப்படி முறை கேடாக நடந்து கொள்ளவே மாட்டான்...’குழப்பங்கள் மன உளைச்சலை அளித்தன.
வெளிநாட்டில் இருக்கும் அர்ஜுனுக்கு கவிதா பற்றிய எந்த விஷயத்தையும் கூறக்கூடாது என்று அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்திருந்தனர். எனவே, தன் உள்ளக் கிடக்கையை வெளியிடும் தடம் அறியாது கவலையில் மூழ்கினார் கோபால்.
சொகுசுக் காரில் சாய்ந்து அமர்ந்தபடி பிரயாணித்துக் கொண்டிருந்தார் கோபால். முக்கியமான மீட்டிங் ஒன்றிற்காகப் போய் கொண்டிருந்தார். எதிரே அசுர வேகத்தில் ஒரு லாரி வந்துக் கொண்டிருந்ததைப் பார்த்த டிரைவர் இடது பக்கமாய் காரை வளைத்துத் திருப்ப, சரியாக மூடப்படாத காரின் கதவு திறந்துக் கொண்டது. சாய்ந்திருந்த கோபால், காரின் வெளியே விழுந்தார். பதறிப்போன டிரைவர், காரை நிறுத்தினான். கோபாலின் கையைப் பிடித்துத் தூக்கினான்.
"ஒண்ணுமில்ல சேகர். லேஸான அடிதான்." என்று சொன்னபடியே எழுந்தார். முழங்கைகளில் சிராய்ப்பு சற்று ஆழமாகப் பட்டிருந்தது. ரத்தம் வடிந்தது.
"இல்லீங்க சார். ரத்தம் நிறைய வருது. ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு டி.டி. போட்டுடலாங்க சார்..." என்று கூறியபடியே சுற்றும், முற்றும் பார்த்தான். சற்று எதிர்ப்புறமாக 'நலம் மருத்துவனை எனும் போர்டைத் தாங்கியபடி இருந்த கட்டிடத்தைப் பார்த்தான்.
"இதோ பக்கத்துலயே பெரிய ஆஸ்பத்திரி இருக்குங்க ஐயா. வாங்கய்யா போகலாம்." என்றவன் அவரை காரில் உட்கார வைத்து நலம் மருத்துவமனைக்குள் காரை செலுத்தினான். மருத்துவமனையின் பக்கத்தில் வந்த பிறகே அந்தக் கட்டிடத்தையும், அதன் பெயரையும் நன்றாகப் கவனித்தார் கோபால்.
"இது... இது... அர்ஜுன் பிறந்த நர்ஸிங்ஹோம் ஆச்சே... முன்ன சின்னதா இருந்துச்சு. இப்ப இவ்வளவு பெரிசா இருக்கே..." நினைத்தபடியே காரை விட்டு இறங்கினார் கோபால்.
அவசர சிகிச்சைப் பிரிவு டாக்டர் வந்து கோபாலுக்கு டி.டி. ஊசி போட்டார். நர்ஸ் மேரி வந்து, அவரது காயங்களைத் துடைத்து மருந்து போட்டு, கட்டு போட்டு விட்டார்.
'சற்று காற்று வாங்கலாம்’ என்று தளர் நடையுடன் வெராண்டாவை நோக்கி வந்துக் கொண்டிருந்த நர்ஸ் ரேச்சலை தற்செயலாய் பார்த்தார் கோபால். ரேச்சலின் நடு நெற்றியிலிருந்த ஆழமான வடு, அவருக்கு அவளை மிகத் தெளிவாக நினைவுபடுத்தியது.
"சிஸ்டர்..." ரேச்சலைக் கூப்பிட்டார்.
"நீங்க... நீங்க.. ரேச்சல் சிஸ்டர்தானே? என்னை ஞாபகமிருக்கா சிஸ்டர்...?"
கூர்ந்து கவனித்த ரேச்சலுக்கு அவரைப் புரிந்து விட்டது.
நெஞ்சிற்குள் இனம் புரியாத உணர்வு! 'இயேசுவே... இயேசுவே’ அவளது மனம் பதறியது. உதடுகள் இயேசுவை அழைத்தன.
"நீங்க... நீங்க.. உங்க.. மனைவியோட பிரசவம் இங்கேதானே நடந்துச்சு? அவங்க பேர் பிரபா... சரிதானே?"
"ஆமா சிஸ்டர். பிரபாவோட ஹஸ்பண்ட் கோபால்தான் நான். நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே..."
"உங்களோட அன்பான, பண்பான பேச்சையும், செயலையும் மறக்க முடியுமாங்க..."
"அது சரி, நீங்க ஏன் இவ்வளவு களைப்பா இருக்கீங்க? உடம்புக்கு என்ன?"
"ரத்தப் புற்று நோய். அது இருக்கட்டும். நீங்க சொல்லுங்க. உங்க மனைவி பிரபா, குழந்தையெல்லாம் நல்லா இருக்காங்களா...?"
"குழந்தை அர்ஜுன் நல்லா இருக்கான். பிரபாதான் சீக்கிரமாகவே இறந்துப் போயிட்டா..."
"என்ன, பிரபா இறந்துடுச்சா...?" ரேச்சல் இந்த செய்தியை எதிர் பார்க்கவில்லை. சோகத்துடன் சில நிமிடங்கள் மௌனம் காத்தாள்.
மௌனத்திலிருந்து விடுபட்ட ரேச்சல், நெற்றியிலிருந்த வடுவைத் தடவியபடியே கோபாலைப் பார்த்தாள்.
"தம்பி... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..."
"முதல்ல நீங்க உட்காருங்க."
இவர்கள் பேசியதிலிருந்து அவர்தான், ரேச்சல் சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்த நபர் என்று புரிந்துக் கொண்ட மேரி மகிழ்ந்தாள். கூடவே பயந்தாள். அன்று நடந்த உண்மையை இன்று தெரிந்து கொண்டபின் கோபால் என்ன சொல்வாரோ என்று யோசித்தபடியே ரேச்சலுக்கு நாற்காலி எடுத்துப் போட்டு உட்கார வைத்தாள்.
உடன் நின்றிருந்த டிரைவர் சேகரை வெளியே காத்திருக்கும்படி பணித்தார் கோபால்.
குரல் தழுதழுக்க, இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை விவரித்தார் ரேச்சல்.
முழுவதையும் கேட்ட கோபாலுக்கு அந்த விஷயங்கள் யாவும் அதிர்ச்சியை அளித்தன.
'என் மகன் அர்ஜுன் என்னோட மகன் இல்லியா? வேற யாரோ ஒரு தந்தைக்கும், தாய்க்கும் பிறந்தவனா என் மகன்? அப்போ... அவனோட பிறப்புக்குக் காரணமான தகப்பன் எப்படிப்பட்டவன்? பெற்றுப் போட்ட தாய் எப்படிப்பட்டவள்?... மூணு வருஷம், தன்னோட சொந்தக் குழந்தையா நினைச்சு வளர்த்த பிரபா நிம்மதியா போய் சேர்ந்துட்டா. இருபது வருஷம் பார்த்து பார்த்து வளர்த்த நான் அவனைப் பத்தின உண்மை தெரிஞ்சு... ஏதேதோ நினைக்கத் தோணுதே... இவ்விதம் சிந்தித்துக் கொண்டிருந்த கோபாலின் மௌனத்தை ரேச்சல் கலைத்தாள்.
"என்னை மன்னிச்சுடுங்க தம்பி. இயேசுவிடம் மன்றாடி கேட்டு பிரார்த்தனை பண்ணி இருக்கேன். நன்மைகளை மட்டுமே நடத்தச் சொல்லி நான் பண்ற பிரார்த்தனை வீண் போகாது தம்பி..." உடையின் வண்ணத்தில் மட்டும் வெள்ளை அல்லாமல் உள்ளத்தின் உணர்விலும் வெள்ளையாக, களங்கமில்லாமல் பேசும் ரேச்சல் சிஸ்டரின் வார்த்தைகள் அவரது மனதைத் தொட்டன.
மரணத்தின் மடியில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் ரேச்சலின் கண்களில் தென்பட்ட கருணை அவரது மனதை பாதித்தது. ரேச்சல் தொடர்ந்தார்.
"தம்பி, குழந்தை இல்லாத எத்தனையோ தம்பதிகள் தத்து எடுத்து வளர்க்கறாங்க. உங்களுக்கு குழந்தை பாக்யம் இருந்தும் கூட அந்தக் குழந்தைக்கு நீங்க பெத்தவரா இருந்து வளர்க்கற பாக்யம் கிடைக்கல. கண்ணை மூடிடுச்சு. யாரோ பெத்த குழந்தையை உங்க குழந்தைங்கற உணர்வுலயே இருபத்து நாலு வருஷமா வளர்த்துக்கிட்டிருக்கீங்க. இப்ப திடீர்னு அது உங்க குழந்தை இல்லைன்னு சொன்னதும் அதிர்ச்சியாயிட்டீங்க. இது சாதாரண மனித இயல்பு. ஆனா... உங்க பிள்ளையாவே வளர்ந்துட்ட அந்தக் குழந்தையை வெறுத்துடாதீங்க தம்பி. வெறுத்துடாதீங்க. நான் செஞ்ச தப்புக்கு அந்த அறியா ஜீவனுக்குத் தண்டனை குடுத்துடாதீங்க தம்பி. இந்த உண்மையை சொல்றதுக்காகத்தான் ஆண்டவர் என்னை இத்தனை நாள் உயிரோட வச்சிருக்கார்.... பிறப்பு எங்கே இருந்தாலும் யாரால இருந்தாலும் நம்மளோட வளர்ப்புதான் தம்பி பிள்ளைகளோட குணநலனையும், நடத்தையையும் மேன்மைப்படுத்தும். நீங்க நல்லவர். பண்பானவர். நிச்சயமா நீங்க வளர்த்த அந்தப் பையன் நேர்மையானவனா, நல்ல குணமுள்ளவனாத்தான் இருப்பான்..."
ரேச்சலின் வார்த்தைகளிலிருந்த உண்மைகள், கோபாலின் புலன்களுக்கு தெளிவை அளித்தன.
'என் அர்ஜுன்? பணக்கார சூழ்நிலையில வளர்ந்தும் அடக்கமானவனா இருக்கான். அப்பாங்கற சொல்லுக்கு மறு சொல் சொல்லாத பிள்ளையா இருக்கான். அவனுக்காக மறு கல்யாணம் கூட பண்ணிக்காம அவனை உயிருக்குயிரா கவனிச்சு வளர்த்த பலனுக்கு அவன் ஒழுக்கமானவனா இருக்கான். அவன்கிட்ட என்ன குறை? என்னை ஒரு தோழனா நினைச்சு எல்லா விஷயத்தையும் சொல்றான். எந்த ஒளிவும், மறைவும் இல்லாம பண்போட வளர்ந்திருக்கான் அர்ஜுன். அவன் யாருக்கு பிறந்திருந்தாலென்ன? யாரோட வயித்துல உருவானவனா இருந்தா என்ன? அவன் நான் வளர்த்த வளர்ப்புக்குக் கொஞ்சமும் குறைவு வைக்காம நல்ல பையனா, புத்திசாலியா, பண்பாடு நிறைஞ்சவனா வளர்ந்து நிக்கறான். அது போதும். அவன் யாரா இருந்தாலும் என் மகன். என் மகன்தான்..’பிரபா இறந்த பிறகு, அர்ஜுனை, தான் வளர்த்தது பற்றியும், அவன் வளர்ந்த விதம் பற்றியும் நினைத்துப் பார்த்துத் தெளிவு அடைந்தார்.
'இந்தத் தெளிவிற்காகத்தான் என்னை தெய்வம் இங்கே வரவழைத்ததா? காரிலிருந்து என்னை விழ வைத்ததா? ரேச்சல் சிஸ்டர் சொன்னது போல எல்லாமே நன்மைக்குத்தானா...’ கோபாலின் முக பாவத்தில் பரிதவித்த உணர்வைப் புரிந்துக் கொண்ட ரேச்சல் சிரித்தார் மலர்ச்சியாய்.
"ஐயா, ரேச்சல் அக்கா தன் மனசுக்குள்ள போட்டு சங்கடப்பட்டுக்கிட்டிருந்த கஷ்டத்தில இருந்து அவங்களுக்கு விடுதலை கிடைச்சிடுச்சு. ரொம்ப நன்றிங்க ஐயா." மேரி, கோபாலிடம் பணிவன்புடன் தன் நன்றியைத் தெரிவித்தாள்.
"தம்பி, உங்க பையன் அர்ஜுனுக்கு இருபத்திநாலு வயசாயிருக்கும்ல? கல்யாணம் பண்ணனும்னு ஏதாவது ஏற்பாடா? அல்லது இன்னும் நல்லா படிக்க வைக்கப் போறீங்களா?..." ரேச்சல் சிஸ்டர் கேட்ட கேள்வி, கோபாலின் தலையில் யாரோ அடித்தது போலிருந்தது.
'கல்யாணம்…?’கவிதாவை அர்ஜுனுக்கு மணமுடிப்பதென்று முடிவு செய்தது, கௌரி மதினி, கவிதா முறை தவறி பிறந்தவள் என்று தன் மனதைக் கலைத்தது, அதன் காரணமாக இரவுகளில் தூங்காமல் தவித்தது, அதன்பின் கவிதா மனநிலை பாதிப்புக்குள்ளாகியது, மனநலம் சரியாகும் தருணத்தில், அவள் கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர் கூறியது யாவும் அவர் உள்ளத்தில் மாறி மாறி தோன்றியது.
ரேச்சலிடம் தன் தங்கை விஜயாவின் குடும்பத்தில், கவிதாவுக்கு ஏற்பட்ட அவலங்கள் அனைத்தையும் கூறினார்.
"இயேசுவே..." நெஞ்சில் கை வைத்தபடி பதறினார் ரேச்சல்.
"இது விஷயமா வெளிநாட்டில இருந்து வந்து உங்க மகன் அர்ஜுன் என்ன சொல்றானோ, அவன் என்ன முடிவு எடுக்கறானோ அதுவே உங்க முடிவா இருக்கணும்ங்கறது என்னோட ஆசை தம்பி. இதுக்கு மேல நான் உங்களை வற்புறுத்தக் கூடாது..."
"நீங்க சொல்றதுதான் சரி ரேச்சல் சிஸ்டர். இந்த விஷயத்துல அர்ஜுனோட முடிவும்தான் என்னோட முடிவா இருக்கும்."
"ரொம்ப நன்றி தம்பி."
மேரியிடமும், ரேச்சலிடமும் விடை பெற்றுப் புறப்பட்டார் கோபால்.
"அம்மா... அம்மா..." பூஜையறையில் கடவுளிடம் மனம் ஒன்றியிருந்த விஜயாவிற்கு உடம்பு புல்லரித்தது. 'கவிதாவின் பழைய பாசமான குரல்! என் கவிதாவின் இனிமையான குரல்! ஓடினாள்.
"கவிதா.. என் கண்ணே.." உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். மனநல மருத்துவத்தில் நிபுணரான டாக்டர் மாதவனின் திறமையாலோ, விஜயாவின் இடைவிடாத பிரார்த்தனையோ அல்லது அனைத்தும் இணைந்தோ, குழந்தை பிறப்பதற்கு டாக்டர் குறித்த தவணைக்கு இரண்டு நாள் முன்னதாக கவிதாவிற்கு மனநிலை பாதிப்பு நீங்கி, முற்றிலும் குணமாகியது.
சிங்காரம்பிள்ளையும், விஜயாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரித்தனர். தன்னை உணர்ந்தாள் கவிதா. தன் நிலை அறிந்தபோது? அவளது இதயத்தில் பலநூறு பட்டாம்பூச்சிகள் படபடத்தன.
'ரங்கநாயகியின் கிராமம்... ஸ்டேஷன்... இருட்டு... மழை... தனிமை... அடர்ந்த வயல் வெளி.... முகம் தெரியாத உருவம்... அதன் தொடர்ச்சியான பயம்.. மயக்கம்...’ அனைத்தும் நிழல் படமாய் விரிந்து, நடந்து முடிந்த நிஜங்களை உணர்த்தியது. நிஜத்தின் சாட்சியாய் உப்பிய வயிறு....’
"ஐயோ... அம்மா...." வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினாள். விஜயா பதறினாள்.
"அழாதம்மா. உன்னோட இந்த நிலைமைக்குக் காரணம் யாரு?" விஜயாவின் மடி மீது படுத்து, கதறி அழுதபடி கிராமத்தில் தனக்கு நேரிட்ட அவலத்தைக் கூறி முடித்தாள்.
"தனியா போகாதேன்னு நீங்க சொன்னதைக் கேக்காம விட்டுட்டேனே... என் கதி இப்படி ஆயிடுச்சே அம்மா..."
கவிதாவை அணைத்து ஆறுதல் கூறியபடியே தானும் அழுதாள் விஜயா.
சர்ச் காம்பவுண்டிற்குள் காரை நிறுத்திய சிங்காரம்பிள்ளை, மதர் சுப்பீரியரின் அலுவலக அறைக்குச் சென்றார்.
"மதர்... அடி மேல அடியா... இடி மேல இடியா... எங்க கவிதாவின் நிலைமையைப் பார்த்தீங்களா? அமைதியான நதியா ஓடிக்கிட்டிருந்த எங்க குடும்ப நிம்மதி அப்படியே மூழ்கிப் போயிடும் போலிருக்கே மதர்... நிர்க்கதியா நிக்கறோம் மதர்..." சிங்காரம்பிள்ளை கவிதாவிற்கு ஏற்பட்ட நிலைமை அனைத்தையும் கூறினார்.
"உங்க நிலைமை இப்படி ஆகியிருக்கவே கூடாது மிஸ்டர் சிங்காரம் பிள்ளை. எவ்வளவோ நல்ல மனசு கொண்ட நீங்க, ஏழை எளியவங்களுக்கு உதவி செய்யற நீங்க இப்படி வேதனைப்படறதைப் பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு. கர்த்தரின் சோதனைன்னுதான் சொல்ல முடியும். வேற என்ன சொல்றது?..."
"எங்க வீட்ல கவிதாவோட சிரிப்பு சப்தம் கேக்கறதில்லை. மான் போல துள்ளி ஓடற அவளது துள்ளல் இல்லை. தனக்கு ஏற்பட்டிருக்கற இந்த கர்ப்ப நிலைமை அவளை சோகப்படுத்திக்கிட்டிருக்கு. குத்து விளக்கா இருந்த எங்க பொண்ணு கவிதா, ஒளி மங்கிப் போய் இருக்கா. முகம் அறியாத ஒருவனால ஏற்பட்ட கர்ப்பநிலை காரணமா வீட்டோட விட்டத்தை வெறிச்சுப் பார்த்தபடி படுத்தே இருக்கா. பழையபடி அவளோட மனநலம் பாதிச்சுடுமோன்னு கலக்கமா இருக்கு மதர்..."
"டாக்டர் மாதவனோட ட்ரீட்மெண்ட்லதானே கவிதா இருக்கா? சரியாடுச்சுன்னு ட்ரீட்மென்ட்டையோ அவரோட மருந்துகளையோ நிறுத்திடாதீங்க. கவனம்.."
"சரி மதர். நான் கிளம்பறேன்..."
"கர்த்தர் உங்களுக்கு மன ஆறுதல் குடுப்பார். அதுக்காக நான் பிரார்த்தனை பண்றேன். கவலைப்படாம கிளம்புங்க மிஸ்டர் சிங்காரம் பிள்ளை." மதர் சுப்பீரியரிடம் பேசியதில் சிங்காரம்பிள்ளைக்கு சற்று ஆறுதல் கிடைத்தது. காரில் ஏறப்போகும் சமயம் ஒரு சிறுவன் அவர் அருகே வந்தான்.
"ஐயா, உங்களை மதர் கூப்பிடறாங்க."
மறுபடியும் நடந்து மதர் சுப்பீரியரின் அலுவலக அறைக்குச் சென்றார் சிங்காரம்பிள்ளை.
"கவிதாவோட நிலைமை பற்றி மீரா கிட்ட சொன்னேன். இருபது வருஷமா எங்கேயும் வெளிய வராத மீரா, இப்ப கவிதாவை பார்க்கணும்னு சொல்றா. மறுபடி ஒருதடவை கவிதா தன்னை சந்திக்கவே கூடாதுன்னு நிபந்தனை விதிச்ச மீராவே இப்ப கவிதாவைப் பார்க்க விரும்பறா. ஏன், எதுக்குன்னு நான் கேட்கலை. இப்ப உங்க கூடவே கூட்டிட்டுப் போறீங்களா? நானும் கூட வரேன்."
"அதுக்கென்ன மதர். கூட்டிட்டுப் போறேன். நீங்களும் வாங்க மதர்." மீராவையும், மதர் சுப்பீரியரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார் சிங்காரம்பிள்ளை.
கட்டிலில் படுத்திருந்தாள் கவிதா. விஜயா கொண்டு வந்து கொடுத்திருந்த மதிய உணவு சாப்பிடாமல் வறண்டு போய் கிடக்க, அவளது கண்கள் மட்டும் வறண்டு போகாத நதியாய் கண்ணீரை உகுத்த வண்ணமிருந்தது.
"வரலாமா?" குரல் கேட்டது.
"வாங்க மதர், வா மீரா"
மீரா, கவிதாவின் அருகே சென்றாள்.
"இப்ப நீ வயித்துல சுமக்கற பாரம் உன்னோட பாவத்தின் சம்பளமா? இருமனம் கலந்து ஒருமித்த எங்க உறவுல பூத்த மலர் நீ. ஆனா நீ? முகமே தெரியாத எவனுடைய குழந்தையையோ சுமந்துக்கிட்டிருக்க. கன்னித்தாய்ன்னு சொல்லிக்க நீ என்ன மேரி மாதாவா? நெஞ்சுல என் குணாவையும், அவரோட அன்புச் சின்னமா உன்னை என் வயித்துலயும் சுமந்தப்ப நான் எத்தனை வேதனைப்பட்டிருப்பேன்?!
உனக்கு அன்பு காட்டவும், ஆறுதல் சொல்லவும் தெய்வங்கள் போல உன் வளர்ப்புத்தாய், தந்தை இருக்காங்க. நான் யாருமே இல்லாத அனாதையா அவதிப்பட்டேன். அவமானமும் பட்டேன். சர்ச் வாசல்ல தற்செயலா மயங்கி விழுந்த என்னை மதர் சுப்பீரியர் காப்பாத்தி, என் மனசை ஆன்மீக வழியில ஈடுபட வச்சாங்க. அது வரைக்கும் நான் பட்ட துன்பமும், துயரமும் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. எனக்காவது குணாதான் அப்பான்னு அடையாளம் காட்ட முடிஞ்சுது. நீ என்கிட்ட வந்து கேட்டது போல உன் வயிற்றில் வளரும் இந்தக் குழந்தை பிறந்து வளர்த்தப்புறம் உன் கிட்ட வந்து, "என்னோட அப்பா யாரு?"ன்னு கேட்டா முகம் தெரியாத ஒருத்தருக்குப் பிறந்தே, அதனால அவரை அடையாளம் காட்ட முடியாதுன்னு சொல்லுவியா? சொல்லு. யாரோட முகத்தைக் காட்டுவே?... கவிதாவை உலுக்கினாள் மீரா.
"என் முகத்தைக் காட்டுவேன்." அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அர்ஜுன் நின்றிருந்தான். தொடர்ந்தான்.
"இவள் வயிற்றுக் குழந்தைக்கு அப்பாவாக நான் என் முகத்தைக் காட்டுவேன். கவிதாவுக்கு நடந்தது விபத்து. விபத்தால் கால், கை போன்ற உறுப்புகளை இழப்பது போலத்தான் கவிதா தன் கற்பை இழந்திருக்கா. மனதளவில அவ தூய்மையானவ, சிறிதும் களங்கம் இல்லாதவ. அவளை நான் நம்பறேன். காலமெல்லாம் கூடவே வாழப் போகும் என்னைத் தவிர வேறு யாரும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. கவிதாவின் குழந்தைக்கும் அப்பா யார்னு கேட்கும்படியான சூழ்நிலை ஏற்படாது. அது இந்த உலகத்துல முகம் காட்டும்போதே நான்தான் உன் அப்பான்னு முகம் காட்ட, நான் இருக்கேன்."
அங்கே அந்த சூழ்நிலையில், அர்ஜுனை யாரும் எதிர்பார்க்கவில்லை. 'அமெரிக்காவில் இருந்த அர்ஜுன் திடீரென்று வந்து நிற்கறானே’ யோசித்தனர்.
அவர்களது யோசனையைக் கலைத்தார் கோபால்.
"கவிதா பத்தின எந்த விஷயத்தையும் அர்ஜுன் கிட்ட சொல்ல வேணாம்னு முடிவு பண்ணி இருந்தோமில்லையா? ஆனா, நான் யோசிச்சேன். கவிதாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கற இந்த நேரத்துல நம்பளை விட அர்ஜுன், அவ பக்கத்துல இருந்தா அவளுக்கு நல்ல ஆறுதல் கிடைக்கும்னு தோணுச்சு. ஏற்கெனவே மனநலம் பாதிக்கப்பட்ட கவிதா, மறுபடியும் அப்படி ஆகிடக் கூடாது. அதுக்கு, அர்ஜுன் இங்க வந்தாத்தான் நல்லதுன்னு முடிவு பண்ணேன். அவனுக்கு போன் பண்ணி பேசினேன். நடந்ததையெல்லாம் சொன்னேன். அவனோட முடிவு எதுவோ அதை அப்பிடியே ஏத்துக்கணும்னு என் மனசைத் தயாரா வச்சிருந்தேன். இதோ இப்ப அர்ஜுன் எடுத்திருக்கற முடிவுதான் கவிதாவோட எதிர்கால வாழ்க்கையின் ஆரம்பம்." கோபால் பேசி முடித்ததும் விஜயா மற்றும் சிங்காரம்பிள்ளையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
‘கௌரி மதினி, தன்னோட சுயநலத்துக்காக கவிதாவின் பிறப்பைப் பத்தி என்கிட்ட பேசின விஷ வார்த்தைகளை மனசில் வச்சு குழப்பிக்கிட்டேன். இதோ என் மகன் அர்ஜுன்! பிறப்பிடம் வேறாக இருப்பினும் வளர்ப்பிடம் என் இதயமாக இருந்ததால தெளிவான ஒரு முடிவு எடுத்திருக்கான். உண்மைக்கும், உண்மையான காதலுக்கும் ஒரு அடையாளம் காண்பிச்சுட்டான். தன் அன்பால ரத்தம் வேறாக இருந்தாலும், மன சுத்தம்தான் வாழ்க்கைக்கு முக்கியம்னு நானும் புரிஞ்சுக்கிட்டேன். ரேச்சல் சிஸ்டர் சொன்ன உண்மை என் மனசுக்குள்ளயே என் காலத்தோடயே போகட்டும். இவன் என் மகன்’ நினைத்த கோபால் உள்ளம் பூரித்தார்.
"அப்பா, விளக்கம் முடிஞ்சுதா? இனி ஒரு புதிய முகத்தோட அறிமுகத்துக்காக நான் காத்துக்கிட்டிருக்கேன். வாழ்க்கையிலே அவ நம்பிக்கைதான் அவமானப்பட வேண்டிய விஷயம். நான் என் கவிதாவுக்கு வாழ்க்கைத் துணையா இருப்பேன். துளிர் இலையின் பசுமை போல இவளுடன் இணைந்து வாழ்வேன்."
மதர் சுப்பீரியர், கவிதாவையும், அர்ஜுனையும் ஆசீர்வதித்தார்.
தெய்வங்கள் கோயிலிலும், சர்ச்சிலும் மட்டுமல்ல. சில குடும்பங்களிலும், சிலரது இதயங்களிலும் உள்ளன என்பதை புரிந்து கொண்ட மீரா உட்பட அனைவரும் சிரித்தனர்.