Logo

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...

Category: புதினம்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 6568
unnidathil ennai koduthen

'உன் மேல என் உயிரையே வச்சிருக்கேன். நீதான் என் உயிர்’ன்னு சுதா மீது தன் இதயத்துக் காதல் முழுவதையும் செலுத்தினான் பரத்.

'நீ இல்லாம நான் இல்லை’ என்று அன்பினால் உருகினான். உயிருக்குயிராக பழகிய இருவரும் தங்கள் பழக்கத்தின் நெருக்கத்தில் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் வசமிழந்தனர்.

அனுபவிக்கும் முன்பு இல்லாத பயமும், பதற்றமும் எல்லாம் முடிந்தபிறகு தோன்றியது.

"பரத்! பயம்மா இருக்கு பரத். கல்யாணம்ங்கற சடங்கும் சாஸ்திரமும் இல்லாம கணவன், மனைவியா ஒன்றுபட்டது தப்புதானே?"

மான்விழிகள் மருள மருள சுதா அவன் தோள் மீது சாய்ந்து கண்ணீர் உகுத்தாள்.

"என்னை நம்பித்தானே உன்னைக் குடுத்த? நீ இப்பிடி அழறதைப் பார்த்தா என்னை சந்தேகப்படற மாதிரி இருக்கு. பழகிட்டு விலகி ஓடிப்போற அயோக்கியனா என்னை நீ நினைக்கறியா?..."

"ஐயோ... அப்பிடியெல்லாம் நான் நினைக்கல பரத். அவசரப்பட்டுட்டோமோன்னு ஆதங்கப்பட்டுதான் பேசறேன்..."

"யோசிக்காம நடந்து முடிஞ்ச விஷயத்தைப் பத்தி இப்ப ஏன் இந்தக் குழப்பம்? இனி என்ன செய்யறதுன்னுதான் யோசிக்கணும்..."

"உங்க வீட்ல சொல்லி உடனே நம்ப கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..."

"எங்க அப்பாகிட்ட ஒரு சந்தர்ப்பம் பார்த்து சொல்லணும். சொல்லி ஒரு நல்ல செய்தியோட உன்னைப் பார்க்க வருவேன். நம்ப ரெண்டு பேர் குடும்பத்துக்கும் பெரிய அந்தஸ்து பேதம் எதுவும் இல்லை. நானும் சாதாரண ஆபீஸ் அஸிட்டென்ட். உங்க வீட்ல உன்னோட சம்பளத்துலதான் நீயும், உன்னோட அம்மாவும் வாழ்க்கையை ஓட்டறீங்க..."

"அம்மாவுக்கு நம்ப காதலைப் பத்தித் தெரியும். உங்க மேல அவங்களுக்கு ரொம்ப மதிப்பு. மரியாதை. நீங்க எவ்வளவு சீக்கிரமா உங்க அப்பா கிட்ட இதைப் பத்தி பேசறீங்களோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு நல்லது. எல்லாம் சரியாயிடும்."

"புரியுதில்ல. அமைதியா இரு. நான் ஊருக்குப் போய் அப்பாகிட்ட பேசிட்டு உன்னை வந்து பார்க்கறேன்" சுதாவின் கைகளை அழுத்தி ஆறுதல் கூறி விடை பெற்றான் பரத்.

2

"சுதா... இந்த லெட்டரை செக் பண்ணிட்டு டைப் பண்றதுக்கு அனுப்புங்க. எங்க கம்பெனியில நீங்க வந்து வேலைக்கு சேர்ந்ததில இருந்து எல்லா வேலைகளும் சுறுசுறுப்பா நடக்குது. எல்லா டிபார்ட்மென்ட் வேலைகளையும் எந்தத் தேக்கமும் இல்லாம முடிக்க வைக்கறீங்க. யூ ஆர் வெரி ஸ்மார்ட்..."

விக்னேஷின் புகழ்ச்சி கேட்டு மகிழ்ந்தாள் சுதா.

"தாங்க் யூ சார்."

விக்னேஷ், 'விநாயகா எண்டர்பிரைசஸ்’ எனும் பெரிய கம்பெனிக்கு முதலாளி. அவனது அப்பா, தாத்தா இருவரும் பிள்ளையார் பக்தர்கள். எனவே தாத்தா, மகனுக்கு கணேசன் என்றும் பேரனுக்கு விக்னேஷ் என்றும் பெயர் சூட்டியிருந்தார். அவர்களது நிறுவனத்திற்கும் விநாயகா எண்டர்பிரைசஸ் என்று பெயரிட்டிருந்தார். கம்பெனி வளர்ந்துக் கொண்டிருக்கும்போது தாத்தா இறந்துவிட, அப்பா கணேசன் நிர்வகித்து வந்தார். விக்னேஷ் படித்து முடித்ததும் நிர்வாகப் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

துடிப்பான இளைஞனான விக்னேஷின் அதிக ஈடுபாட்டினால் நிறுவனம்  மேலும் வளர்ந்தது. லாபம் கொட்டியது. வெற்றி கிட்டியது. சுதா அவனது செக்கரட்டரியாக சேர்வதற்கு முன்பு வரை சற்று மந்தமாக இருந்த அலுவலக வேலைகள், தற்போது அவளது திறமையால் செவ்வனே நடைபெற்றது. விக்னேஷிற்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது. அவ்வப்போது விக்னேஷின் பாராட்டுக்களும் சுதாவிற்குக் கிடைத்தன. மாலை ஏழு மணியானாலும் தனது கடமைகளை முடித்தபின்பே வீட்டிற்குக் கிளம்புவாள் சுதா.

"மணி ஏழாச்சு சுதா. நாளைக்கு காலையில வந்து பாருங்களேன் மத்த வேலைகளை..."

"அதனாலென்ன சார். இன்னிக்கு இந்த வேலையை முடிச்சுட்டா நாளைக்குரிய வேலைகளை கவனிக்கச் சரியா இருக்கும்."

"நான் வேண்ணா உங்களை உங்க வீட்ல விட்டுடட்டுமா?"

"வேணாம் சார். நான் பஸ்லயே போய்க்கறேன்."

மறுத்த அவளை வற்புறுத்த மனமின்றி பண்பாடுடன் நடந்து கொண்டான் விக்னேஷ். சுதா, அவசர அவசரமாய் கிளம்பினாள்.

3

வாசலிலேயே காத்திருந்தாள் ஜெயா. சுதாவின் அம்மா.

"என்னம்மா சுதா, வர வர நீ ஆபீஸ்ல இருந்து வர்றதுக்கு ரொம்ப லேட்டாகுது?"

"பொறுப்புகள் அதிகமாக ஆக வீட்டுக்கு வர்ற நேரமும் லேட் ஆகுதும்மா. வேலைக்கு சேர்ந்த மூணு மாசத்துலயே சம்பளத்தை அதிகமாக்கி இருக்காங்க. வாங்கற சம்பளத்துக்கும், அவங்களோட நல்ல மனசுக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன்மா..."

"அதென்னமோ, நிஜந்தான்மா. மூணு வேளை சாப்பாடு கூட ஒழுங்கா சாப்பிட முடியாத நாம இன்னிக்கு ஏதோ ஓரளவுக்கு சமாளிக்கறோம். உங்கப்பா வச்சுட்டுப் போன இந்த வீட்டை அடமானம் வச்சு உன்னைப் படிக்க வச்சேன். அதோட வட்டியே ஆளை முழுங்குது. அசல் பணத்தையும் கட்டி முடிக்கணும். கஷ்டப்பட்டு நான் படிக்க வச்சதுக்கு, நீ நல்லா படிச்சு இன்னிக்கு உன் சம்பளம்தான் நம்ப குடும்ப வண்டியை ஓட்டுது. சரிம்மா. வா. வந்து டிபன் சாப்பிடு. உப்புமாதான் பண்ணியிருக்கேன். இன்னும் ரெண்டு வருஷம். வட்டியோட அசலைக் கட்டிட்டோம்ன்னா செலவுக்கு கொஞ்சம் தாராளமா பணம் இருக்கும். உனக்கு வகை வகையா சமைச்சுத் தருவேன்..."

"கவலைப்படாதீங்கம்மா. எல்லாம் சரியாயிடும்." சுதா சாப்பிட உட்கார்ந்தாள்.

"பரத் உன்னைப் பார்க்க வந்தானா?"

'துணுக்’ என்றது சுதாவிற்கு. புரை ஏறியது.

"தண்ணி குடிம்மா." ஜெயா தண்ணீர் கொடுத்தாள். சுதா குடித்தாள். கைகளால் உப்புமாவை அளைந்தபடியே சிந்தித்தாள்.

'ஊருக்குப் போய் அப்பாகிட்ட என்னைப் பத்தி பேசறதா சொல்லிட்டுப் போனார். வீட்டில அவங்க அப்பா கிட்ட பேசினாரா பேசலையா, என்ன நடந்துச்சோ என்னமோ...’

"என்னம்மா சுதா, உப்புமா நல்லாயில்லையா? ஏன் சாப்பிடாம இருக்க?..."

ஜெயாவின் குரல் கேட்டு, தன் உணர்வுக்கு வந்த சுதா, வேகமாக சாப்பிட்டு முடித்தாள்.

"உன் கையில இருக்கற கவரிங் வளையலைப் பார்க்கவே மனசுக் கஷ்டமா இருக்கு சுதா. உங்க அப்பா நீ பிறந்தப்பவே உனக்கு தங்க வளையல் பண்ணிப் போட்டார். நம்ம துரதிர்ஷ்டம், அவர் அல்பாயுசுல போய் சேர்ந்துட்டார். அவர் இருந்திருந்தா நல்லா வியாபாரம் பண்ணி நாமளும் செழிப்பா இருந்திருப்போம். உனக்கு நகை நட்டு, பட்டுத் துணிமணின்னு நிறைய வாங்கி குடுத்திருப்பாரு. இப்பிடி வேலைக்கு வேலைக்குன்னு நீ ஓட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. அவர் சம்பாதிச்சுக் கட்டின வீட்டையாவது என் உயிர் மூச்சு உள்ளவரை காப்பாத்தணும்ன்னுதான் வயித்தைக் கட்டி வாயைக் கட்டி, ஆளை முழுங்கற வட்டியைக் கட்டிக்கிட்டிருக்கோம்..."


"அம்மா, தங்க நகையோ பட்டுத் துணியோ எது மேலயும் எனக்கு ஆசை இல்லைம்மா. வறுமையில கஷ்டப்படாம வாழணும். மன நிம்மதியா இருக்கணும். பணம் என்னம்மா பணம்?..."

"அதென்னம்மா அப்படி சொல்லிட்ட? பணம் இல்லாததுனாலதான் உன்னை வளர்த்து, படிக்க வைக்கறதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்பவும் வீட்டு மேல கடன் குடுத்தவங்க நேரம், காலம், சூழ்நிலை பார்க்காம தவணைப் பணம் கேட்டு வந்து, குடுக்க லேட் ஆனா மரியாதையில்லாம பேசிட்டுப் போறாங்க. பொருளாதாரம்தாம்மா சுகமான வாழ்க்கைக்கு ஆதாரம். பணம்தான் எல்லாத்துக்கும் பிரதானம். பணம் இருந்தாத்தான் வசதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். மரம், பட்டுப் போனா அதுக்கு எந்த மதிப்பும் கிடையாது. அது போல பொருளாதார ரீதியா மனுஷன் கெட்டுப் போனா, மரியாதையே இருக்காது..."

"பணத்திற்கு அப்பாற்பட்டு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும்மா. நல்ல பண்பு, அன்பான மனசு, உதவி செய்யற மனப்பான்மை, பணிவு, இருப்பது போதும்ங்கற திருப்தியான எண்ணம் இதெல்லாம் இருந்தா பணம் இல்லாமயே மனம் நிம்மதியா இருக்கும்மா. பணக்காரங்க எல்லாருமே சந்தோஷமா இருக்காங்களா? அவங்களுக்கும் ஆயிரம் பிரச்னை ஆயிரம் வழிகள்ல வரும்..."

"வந்தாலும் அடிப்படை பிரச்னையா பணப்பற்றாக்குறை இல்லாததுனால அவங்க சமாளிச்சுருவாங்க சுதா..."

"பணத்தினால சரி செய்ய முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு… உங்களை அப்பா, அவர் இருந்த வரைக்கும் கஷ்டமே தெரியாம பொத்திப் பொத்தி வச்சிருந்ததுனால உங்களுக்கு வெளி உலகமே தெரியலை. நான் ஸ்கூல்லயும், காலேஜ்லயும் படிக்கறப்ப எத்தனையோ அனுபவங்கள் கிடைச்சிருக்கு. என் கூட படிச்ச பணக்கார சிநேகிதிகள் குடும்பத்துல பணத்தால தீர்க்க முடியாத பிரச்சனைகளைப் பத்தி பேசி இருக்காங்க. இப்ப ஆபீஸ்ல பல பேர் கூட பழகறேன். எவ்வளவோ சிக்கல்கள் பத்திச் சொல்றாங்க..."

"நீ என்னதான் சொல்லு. பணம்தான் வாழ்க்கைக்கு முக்கியம். பணம் இல்லாதவன் பிணம். நீ சொன்னியே, அப்பா இருந்தவரைக்கும் என்னை சுகமா பார்த்துக்கிட்டார்னு. பணம் சம்பாதிச்சதுனாலதான் அது முடிஞ்சுது. அவர் போனப்புறம் அந்தப் பணம் இல்லாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்... சரி, நீயாவது பணக்கார குடும்பத்துல வாழ்க்கைப்பட்டு வசதியா சொகுசா, கார், பங்களான்னு வாழ்வேன்னு ஆசைப்பட்டேன். உன்னோட அழகுக்கு உனக்கு அப்பிடி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நம்பினேன். நீ என்னடான்னா பரத்தைக் காதலிக்கிறேன்னு என்னோட ஆசையிலயும், நம்பிக்கையிலயும் மண் அள்ளிப் போட்டுட்ட... நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவ மனசுப்படி அவ விரும்பறவனையே கல்யாணம் பண்ணிக்கட்டும்னு நான் இருக்கேன். மத்தபடி நீ அந்த பரத்தைக் காதலிக்கறது எனக்குக் கொஞ்சம் மனக்குறைதான்..."

"மனம் நிறைஞ்ச வாழ்வு வாழறதுதாம்மா ஒரு பொண்ணுக்கு வேணும். குணம் நிறைஞ்ச பரத் கூடத்தான் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். பணம் என்னிக்கும் நிரந்திரமில்ல. குணம்தான் நிரந்தரம். அதுதான் நிம்மதியைக் குடுக்கும்."

"என்னமோ போ... இந்த வயசுலயே வேதாந்தம் பேசற… உன் இஷ்டம்..."

"சங்கடப்படாதீங்கம்மா. நான் உங்க செல்லப் பொண்ணு இல்ல..." ஜெயாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, கொஞ்சிப் பேசி சமாளித்தாள்.

"ஏதோ செய். நீ நல்லா இருக்கணும்னுதான் நான் ஆசைப்படறேன். நேரமாச்சு. போ. நைட்டி மாத்திட்டு படுத்துக்க. நீ தூங்கறதுக்குள்ள பால் காய்ச்சிக் கொண்டு வரேன்." சுதா அங்கிருந்து நகர்ந்தாள். அவளது நினைவுகளும் பரத்தைச் சுற்றி நகர்ந்தன.

'பரத்... நீங்க எனக்கு வேணும். உங்கப்பா நமக்கு நல்ல பதில் சொல்லணும். ஊரறிய உலகறிய உங்க கூட என் வாழ்க்கை ஆரம்பிக்கணும். நாம ஆனந்தமா வாழணும். என் மேல உயிரையே வச்சிருக்கற நீங்க நிச்சயமா நல்ல சேதியோட வருவீங்க’ நினைவுகளில் நீந்திய சுதா, "இந்தாம்மா பாலைக் குடி" ஜெயாவின் குரல் கேட்டு திடுக்கிட்டாள். சுதாரித்துக் கொண்டு பால் டம்ளரை வாங்கினாள். குடித்தாள்.

"நீங்க படுத்துக்கலையாம்மா?"

"இன்னும் ஒரே ஒரு சீரியல் இருக்கு. அதைப் பார்த்துட்டு நான் படுத்துக்கறேன்."

சிரித்துக் கொண்டே சுதா சிந்தித்தாள்.

'டி.வி.யின் சக்தி மக்கள் மனசை எப்படிக் கொள்ளை அடிக்குது? பாவம் அம்மா. தனிமையில.. இந்த டி.வி.யும் இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவாங்க. அம்மாவுக்கு அடுத்த மாசமாவது கலர் டி.வி வாங்கிக் குடுக்கணும்.’

மறுபடியும் பரத் பற்றிய நினைவுகள் இன்பத்தையும், இனம் புரியாத துன்பத்தையும் அளிக்க, நீண்ட நேரம் தூக்கம் வராமல் தவித்தாள். பின் இரவில்தான் கண் அயர்ந்தாள்.

4

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் காலை. சுதா ஆபீஸ் புறப்பட்டுச் சென்ற ஒரு மணி நேரத்தில் மிகப் பெரிய, அழகிய கார் ஒன்று வந்து நின்றது. 'நம்ம வீட்டு வாசலுக்கு காரா?! வியந்தபடியே வெளியே எட்டிப் பார்த்தாள் ஜெயா.

அந்தக் காரில் இருந்து விக்னேஷும், அவனது தந்தை கணேசனும் இறங்கினர். அதற்கு முன் அவர்களை ஜெயா பார்த்ததில்லை.

'இங்கே சுதான்னு ஒருத்தங்க... அவங்க வீடுதானே?..."

தயங்கியபடியே கேட்ட விக்னேஷை கேள்விக் குறியோடு பார்த்தாள் ஜெயா.

"சுதா வீடுதான். நான் சுதாவோட அம்மா. நீங்க..."

"உங்க பொண்ணு சுதா வேலை பார்க்கற கம்பெனி உரிமையாளர் நான். என் பேர் கணேசன். இவன் என் மகன் விக்னேஷ்..." கணேசன் தங்களை அறிமுகப்படுத்தியதும் பதற்றமானாள் ஜெயா.

"வாங்க வாங்க. உள்ளே வாங்க..."

"உங்களை உட்கார வைக்கக் கூட நல்ல நாற்காலி இல்லைங்க." இரண்டு ஸ்டூல்களை எடுத்துப் போட்டாள் ஜெயா.

"அதனாலென்னம்மா... நாங்க இதிலயே உட்கார்ந்துக்கறோம்" இருவரும் உட்கார்ந்தனர்.

"என்ன சாப்பிடறீங்கய்யா? காபி போடட்டுமா?"

"வேண்டாம்மா. நீங்க சிரமப்படாதீங்க" கணேசன் பேசுவதைப் பார்த்து பெரிதாக ஆச்சர்யப்பட்டாள் ஜெயா.

'எவ்வளவு பெரிய மனுஷங்க இவ்வளவு எளிமையா இருக்காங்களே... எதுக்காக நம்ப வீடு தேடி வந்திருக்காங்க?...’ ஜெயாவின் சிந்தனையைக் கலைத்தது கணேசனின் 'கணீர்’ குரல்.

"நேரடியா விஷயத்துக்கு வந்துடறேம்மா. எங்க மகன் விக்னேஷுக்கு உங்க பொண்ணு சுதாவைப் பெண் கேட்க முறைப்படி வரலாமான்னு உங்க கிட்ட கேட்கலாம்ன்னு வந்திருக்கோம். சுதாவை தப்பா நினைச்சுடாதீங்க. அவளுக்கு இந்த விஷயத்துல சம்பந்தம் இல்ல. இது காதல் விவகாரமும் இல்லை. விக்னேஷ், அவளைத் தன் மனைவியா அடையணும்னு நினைக்கறான். ஆசைப்படறான். சுதா கிட்ட கூட அவன் கேட்கலை.


முதல்ல என் கிட்டதான் சொன்னான். மாறிப் போயிட்ட இந்தக் காலத்துல காதல், ஓடிப் போறதுன்னு எவ்வளவோ நடக்குது. ஆனா என் மகன் விக்னேஷ், கௌரவமா என்கிட்ட வந்து சொன்னான். அவன் பெண்களை மதிக்கறவன். என் பையன்ங்கறதுனால அதிகமா பாராட்டறதா நினைச்சுடாதீங்க. உண்மையிலேயே அவன் நல்லவன். ஒழுக்கமானவன். பணக்கார இளைஞர்களுக்குரிய வறட்டு கௌரவம், கெட்ட பழக்கங்கள் எதுவும் அவனுக்குக் கிடையாது. உங்க பொண்ணு சுதாவோட அழகு அவனைக் கவர்ந்ததுங்கறது உண்மையாக இருந்தாலும், அவளோட சுறுசுறுப்பு, திறமை, அடக்கம் இதெல்லாம் தான் அவனுக்கு அதிகமான ஈர்ப்பை உருவாக்கியிருக்கு. உங்ககிட்ட கேட்டு, நீங்க அவகிட்ட கேட்டு, அதுக்கப்புறமா முறைப்படி சாஸ்திர சம்பிரதாயங்களோட பெண் கேட்கலாம்னு முடிவு பண்ணினோம். அதுக்காகத்தான் உங்களைப் பார்க்க வந்திருக்கோம்."

கணேசன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜெயாவிற்கு நடப்பது கனவா நனவா என்று புரியவில்லை. மகிழ்ச்சியில் அவளது உள்ளம் துள்ளியது. கை, கால் ஓடாமல் பரபரப்பானாள். அவளது மனநிலையைப் புரிந்து கொண்ட கணேசன் தொடர்ந்து பேசினார்.

"பதற்றப்படாதீங்கம்மா. இந்த நாகரீக யுகத்துல ஜாதி, மதம் இதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை. பையனுக்கு பொண்ணைப் பிடிக்கணும். பொண்ணுக்குப் பையனைப் பிடிக்கணும். ரெண்டு தரப்பிலயும் நல்ல குணநலன் இருக்கணும். உங்க பொண்ணுக்கும் நல்ல பண்புகள் இருக்கு. எங்க மகனும் நல்லவன். ஆனா... என் மகனுக்கு உங்க பொண்ணைப் பிடிச்சது போல உங்க பொண்ணுக்கு என் மகனைப் பிடிக்கணும். அதுதான் முக்கியம். யோசிச்சு, உங்க மகளையும் கலந்து பேசிட்டு சொல்லுங்க. அவசரமே இல்லை..."

"அதில்லீங்கய்யா, நீங்க பெரிய பணக்காரங்க. நாங்க ரொம்ப கீழ் மட்டத்துல இருக்கறவங்க..."

"அதைப் பத்தி நீங்க ஏன் யோசிக்கிறீங்க? உங்க மகளை, என்னோட மருமகளா எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க. அதைத் தவிர வேற எதுவும் நாங்க எதிர் பார்க்கலை."

வாயடைத்துப் போனாள் ஜெயா. பின்னர், தன்னை சுதாரித்துக் கொண்டு பேசினாள்.

"எனக்கு சம்மதம்தான். சுதாவை ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேங்கய்யா. ஒரு காபியாச்சும் சாப்பிட்டுட்டு போங்கய்யா" கூறியவள், சமையலறைக்குச் சென்றாள். ஐந்து நிமிடத்தில் காபி கலந்தாள். கொண்டு வந்து கொடுத்தாள்.

"டிகாஷன் காபி, மணம்மா, சூப்பரா இருக்கும்மா" குடித்துவிட்டு இருவரும் கிளம்பினர். கார் புறப்பட்டது. அதைப் பார்த்த ஜெயா பிரமித்தாள்.

'யம்மா... இவ்வளவு பெரிய காரா? சுதா ஒரு வார்த்தை சரின்னு சொன்னா சொகுசான கார், பங்களான்னு வசதியா வாழ்வாளே. எப்படியாவது அவ மனசை மாத்தணும். எட்டாயிரம் ரூபா சம்பாதிக்கற பரத் எங்கே... எட்டாத உயரத்துல இருக்கற இந்த விக்னேஷ் எங்கே... சுதா கிட்ட பேசினா அவ ஒத்துக்க மாட்டா. அவளுக்குப் பணம் ஒரு பொருட்டே இல்லை. அதனால இதுக்கு வேற வழி ஏதாவது யோசிக்கணும். நல்ல வேளை அந்தப் புண்ணியவானுங்க, சுதா கிட்ட பேசாம என் கிட்ட கேட்க வந்தாங்க. அவளை சமாளிக்கறதுக்கு ஒரு நல்ல யுக்தியைக் கையாளணும்’ தீவிரமாக யோசித்தாள். திட்டம் தீட்டினாள். தன் மகள் சௌகர்யமான வாழ்க்கை மட்டுமல்ல, சகல ஐஸ்வர்யங்களையும் ஆளப்போகும் சீமாட்டியாக வாழ வேண்டும் என்ற தன் கனவை வளர்த்தாள்.

5

ரத், கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே வருவதைப் பார்த்தாள் ஜெயா.

'இவன்தான் என் துருப்புச் சீட்டு’ உள்ளத்தில் உள்ள கள்ளம் வெளிப்படாமல், புன்னகைத்தபடியே பரத்தை வரவேற்றாள்.

"வா பரத். என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம். உன் அட்ரஸ் கூட எங்களுக்குத் தெரியலை. சுதா படிச்சவ. காதலிக்கறவனோட அட்ரஸை கூட தெரிஞ்சுக்காம இருக்கா. அவ்வளவு நம்பிக்கை உன்மேல. என்ன… ஏன் என்னவோ போல இருக்க?..."

"அப்பாவுக்கு உடம்பு ரொம்ப மோசமா இருக்கு ஆன்ட்டி..."

"வயசாயிடுச்சுல்ல. உடம்பு தளர்ந்துதானே போகும். அதிருக்கட்டும். உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நல்ல வேளை. காலை நேரமா வந்த. சுதா இருந்தா பேச முடியாது..."

"என்ன ஆன்ட்டி... என்ன விஷயம்?"

"பரத் நீ நல்லவன். பண்பானவன். அதனாலதான் சுதா உன்னைக் காதலிக்கறதா சொன்னப்ப உங்க காதலை நான் தடுக்கலை. ஆனா வாழ்க்கைக்கு அன்பும், பண்பும் மட்டும் போதாதுப்பா. பணமும் வேணும்..."

ஜெயாவின் பேச்சு, இதுநாள் வரை இல்லாத வித்தியாசமான விதத்தில் இருப்பதை உணர்ந்தான் பரத். ஜெயா மேலே தொடர்ந்தாள்.

"எனக்கு ஒரே மகள் சுதா. அவங்கப்பா இருந்தவரைக்கும் வசதியா வாழ்ந்த நாங்க, அவர் போனதுக்கப்புறம் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டோம். எங்க கஷ்டத்துக்கெல்லாம் விடிவு காலமா இப்ப ஒரு விடி வெள்ளி வந்திருக்கு. வெளிப்படையாவே சொல்லிடறேனே, சுதா வேலை செய்யற கம்பெனியோட முதலாளியும், அவரோட மகனும் சுதாவைப் பெண் கேட்டு வரலாமான்னு என்கிட்ட கேட்க வந்தாங்க. நான் கொஞ்ச நாள் அவகாசம் கேட்டிருக்கேன். சுதா உன்னை விரும்பறதுனால நான் கேட்ட உடனே எடுத்த எடுப்பிலேயே மறுத்துடுவா. இப்ப நான் உன்னைத்தான் மலை போல நம்பியிருக்கேன். சுதாவை அந்தப் பையனுக்குக் கட்டி வச்சுட்டா, என் பொண்ணு வாழ்க்கை ரொம்ப நல்லாயிருக்கும். இருபது வருஷமா கஷ்டத்துலயே உழன்ற நானும், என் பொண்ணும் ஒரு உயர்ந்த அந்தஸ்தான வாழ்க்கை வாழறதுக்கு கடவுள் ஒரு வழி காண்பிச்சிருக்காரு. அதனால... அதனால... நீ... நீ... இனிமே சுதாவைப் பார்க்காதே. போன் போட்டு பேசாதே. நீ அவளை விரும்பறது நிஜம்னா, உன்னோட காதல் சத்தியமானதுன்னா அவளை மறந்துடு. செங்கல்பட்டுக்கும், சென்னைக்குமா தினமும் ட்ரெயின்ல இடிபட்டு வந்து வேலை செஞ்சு கேவலம் எட்டாயிரம் ரூபா சம்பாதிக்கற உன் கூட வாழறதுல எம்பொண்ணு என்ன சுகப்படுவா? தானா வீடு தேடி வந்திருக்கற அவளோட பொன்னான வாழ்வுல மண்ணை அள்ளிப் போட்டுடாதே..."

"போதும் ஆன்ட்டி. உங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். மனித மனம் எப்ப வேணாலும் எப்பிடி வேணாலும் மாறிடும்ங்கறதுக்கு நீங்க ஒருத்தர் போதும்..."

"என்ன... பேச்சு ரொம்ப அதிகமா இருக்கு...? வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு. உனக்கு சுதா முக்கியமா? அவளோட செழிப்பான வாழ்க்கை முக்கியமா?..."

அவள் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான் பரத்.

"எனக்கு சுதாதான் ஆன்ட்டி முக்கியம்... பயந்துடாதீங்க. சுதா முக்கியம்ங்கறதுனாலதான் இனி அவளோட வாழ்க்கையில குறுக்கிடக் கூடாதுங்கற முடிவுக்கு வந்திருக்கேன்..."


"அப்பிடின்னா இனி சுதாவைப பார்க்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடு. அவ வாழ்க்கையில இனி குறுக்கிட மாட்டேன்னு சத்தியம் பண்ணு..."                                                                                                                                                                                                                             "சுதாவோட டிஸிப்ளின் பத்தி உங்களுக்குத் தெரியாதா? ஆபிசுக்கு போன் பண்ணக் கூடாதுன்னு ஆபீஸ் போன் நம்பரே தரலை. உங்க வீட்லயும் போன் கிடையாது. என் வீட்லயும் போன் கிடையாது. என்னோட ஆபீஸ்ல தனிப்பட்ட போன் யாருக்கும் வரக்கூடாது. நாங்க இது வரைக்கும் போன்ல பேசினதே இல்லை. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லாததுனாலதானே சத்தியம் கேக்கறீங்க? உங்க திருப்திக்காக சத்தியம் பண்றேன். இனி நான் சுதாவைப் பார்க்க மாட்டேன்... பேச மாட்டேன்… இது சத்தியம்" துக்கமும் அதை மீறிய கோபமும் சேர்ந்து சற்று குரல் ஒலிக்க பேசிவிட்டு, வெளியில் நடந்தான் பரத்.

'அப்பாவின் உடம்பு மோசமா இருக்கறதுனால இந்த முறை நம்ப காதல் விஷயத்தைப் பேச முடியலைன்னு சுதா கிட்ட சொல்ல வந்தா... ஆன்ட்டி இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாங்க. பணக்காரங்களைப் பார்த்ததும் ஆன்ட்டி இப்படி மாறிட்டாங்களே... பத்து நாள் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு அப்பாவை நல்லா கவனிக்கணும்.’ சிந்தனைகள் துணைக்கு வர ரயில் நிலையத்தை அடைந்தான். செங்கல்பட்டு செல்லும் ரயிலில் ஏறினான். உட்கார்ந்தான். ரயில் புறப்பட்டது. 'சுதா... என் உயிர்... அவள் இல்லாம நான் இல்லைன்னு சொன்னேன். அவள் இல்லாமதான் இனி நான் வாழப் போறேன். என் அப்பாவுக்காக, படிச்சிக்கிட்டிருக்கற என் தம்பிக்காக நான் வாழ்ந்தே ஆகணும்’ ஜெயாவின் மாறிவிட்ட போக்கும், அவளது நிபந்தனையும் அவனது மனதை அலைக்கழித்தது. சில மணித் துளிகளில், விரக்தியான அவனது மனதில் வைராக்கியம் பிறந்தது. 'என் சுதா என்னை மறந்துட்டு எப்பிடி வாழ்வா? என்னைப் பத்தி தப்பா நினைப்பாளே... என் காதலை பொய்யா மதிப்பாளே... காதலிச்சுட்டு, அவளோட அழகை அனுபவிச்சுட்டு ஓடிப் போயிட்டானேன்னு நினைப்பாளே... ஐயோ... கடவுளே...’ மீண்டும் பரத்தின் மனதிற்குள் துயரப் பூகம்பம் உருவாகியது. கண்களில் கண்ணீர் வழிந்தது.

6

லுவலகத்திலிருந்து வீடு திரும்பிய சுதாவிற்கு லேசாக தலை சுற்றியது. வாந்தி எடுப்பதற்காக குமட்டியது. வாந்தி எடுத்தாள். காலண்டரைப் பார்த்தாள். திடுக்கிட்டாள்.

'ஐயோ... அப்பிடின்னா... நான்... என்... வயித்துல... பரத்தின் குழந்தை உருவாகியிருக்கா?’ அவள் வாந்தி எடுப்பதைப் பார்த்த ஜெயா அவளருகே வந்தாள்.

"ஆபீஸ்ல மீட்டிங் கீட்டிங்னு ஹோட்டல் சாப்பாடு சாப்பிடற. அதுதான் உனக்கு ஒத்துக்கலை. எலுமிச்சம்பழம் பிழிஞ்சு தரேன், குடி."

"அம்மா" அலறியபடியே ஜெயாவின் காலில் விழுந்தாள் சுதா.

"என்னம்மா என்ன ஆச்சு?" அதிர்ச்சி பலமாகத் தாக்க நெஞ்சைப்பிடித்தபடி கேட்டாள் ஜெயா.

பரத்தின் உயிர் தன்னுள் உருவாகி இருப்பதைக் கூறி, மேலும் அழுதாள் சுதா.

'ஐயோ... அப்பிடின்னா... இன்னிக்கு அவங்க கம்பெனி முதலாளி பெண் கேட்ட விஷயமா பேசலாம்னு இருந்தேனே... எல்லாமே போச்சா? என் பொண்ணோட வாழ்க்கை இனி அந்த பரத் கூடத்தானா? அவங்கப்பாகிட்ட இவங்க காதலைப்பத்தி பேசினானா என்னன்னு கூட கேட்காம படபடப்பா பேசி அனுப்பிட்டேனே... சுதாவை பார்க்கக் கூடாதுன்னு வேற சத்தியம் வாங்கினேனே... கடவுளே...’ துன்பச் சுமை இதயத்தை அழுத்த, நெஞ்சு வலி வந்து துடித்தாள் ஜெயா. சில நிமிடங்களில் மயங்கிய அவளை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றாள் சுதா.

7

"உயிர் போய் ஒரு மணி நேரமாச்சும்மா" டாக்டர் கூறியதைக் கேட்ட சுதா அலறினாள். அழுதாள். அரற்றினாள். "நானே உலகமாக வாழ்ந்த என் அம்மா... நான் நல்லா இருக்கணும்னு இளமையில் கொடுமையான வறுமையுடன் போராடி என்னை படிக்க வைத்த என் அம்மா... தனக்கென்று எதுவும் நினைக்காம எனக்கென்று வாழ்ந்த என் அம்மா... உயிரோடு இல்லையா? எனக்கு அம்மா இல்லையா? நான் அநாதையா..." சுதா கதறி அழுததைப் பார்த்தவர்கள் பரிதாப உணர்வில் மூழ்கினார்கள்.

எல்லாம் முடிந்தது.

"ஸாரி சுதா. உங்கம்மாவோட இழப்பு ஈடு செய்ய முடியாதது..." விக்னேஷ் வந்து ஆறுதல் கூறினான்.

'சுதாவிடம் பேசிவிட்டு, பதில் கூறுவதாக ஒரு வாரம் டைம் கேட்டிருந்தாங்க. இவ கிட்ட பேசினாங்களா என்னமோ தெரியலையே... ஒரு வார காலம் அவகாசம் கேட்டாங்க. இப்பிடி அகாலமா இறந்துட்டாங்களே...’ பல நினைவுகளின் ஊடுருவலில் சுதாவிற்கு மேலும் சிறிது நேரம் ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டான் விக்னேஷ்.

ஜெயாவின் வாழ்வு முடிந்ததோடு சுதாவின் துன்பங்கள் துவங்கின.

'அப்பா கிட்ட பேசிட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போன பரத் வரவே இல்லை. அவனோட ஊர் செங்கல்பட்டுன்னு மட்டும்தான் தெரியும். அங்கே அவரோட அட்ரசும் தெரியாது. இங்கே அவர் வேலை செய்ற ஆபிசும் தெரியாது. ஐய்யோ கடவுளே... அவரை எங்கேன்னு போய் தேடுவேன்? காதல் என் கண்ணை மறைச்சுடுச்சா? பரத்தை நல்லவர்னு நம்பினேனே... நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாரே… கல்யாணம் ஆகாம கர்ப்பத்தை சுமக்கறது களங்கமாச்சே. என் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பா யார்னு ஊரும் உலகமும் கேட்டா நான் என்ன சொல்வேன்? ஊர் உலகம் இருக்கட்டும். இந்தக் குழந்தையே பிறந்து வளர்ந்து விபரம் தெரிஞ்சதும் 'என் அப்பா யார்’ன்னு கேட்குமே. அப்ப நான் என்ன செய்வேன்...’ தனிமையில் புலம்பி அழுவதைத் தவிர வேறு வழியே தெரியவில்லை சுதாவிற்கு.

'இன்று வருவான்’ 'நாளை வருவான்’ என்று எதிர்பார்த்து, தினமும் காத்திருந்தாள். ஆனால் அவளது வயிற்றில் உருவான கரு காத்திருக்கவில்லை. அது மேலும் வளர்ந்தது. அதன் அடையாளமாய் சுதாவின் வயிறும் வளர்ந்து மேடிட்டது. மேடிட்ட வயிறை மூடி மறைக்க இயலாமல் தவித்த அவளைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் சிரித்தனர். அவமானப்படுத்தினர். வாய்க்கு வந்தபடியெல்லாம் கண்டபடி கேவலமாகப் பேசினார்கள். வெட்கமும் வேதனையும் அவளது இதயத்தைத் துளைத்தது. ஆபிஸிலும் அவளுக்கு இருந்த மரியாதை தேய்ந்தது. முதல் வேலையாக வேலையை ராஜினாமா செய்தாள். எத்தனை துன்பப்பட்டாலும் வெறுமையாகிப் போன மனது எதுவும் கேட்பதில்லை. ஆனால் வயிறு? அவள் வயிற்றில் வளரும் சிசுவிற்கும் சேர்த்து உண்ண வேண்டுமே? கையிலிருந்த பணம் குறைந்தது. கரைந்தது. இனி பரத் வர மாட்டான் என்று தோன்றியதும், அவனது ஊரான செங்கல்பட்டிற்குப் புறப்பட்டாள். பஸ் நிலையத்திலிருந்து பைத்தியக்காரி போல பரத்தைத் தேடினாள்.


பஸ்ஸிற்கு டிக்கட் எடுத்ததோடு கையிலிருந்த ஒரு சில ரூபாய்களும் முடிந்தது. மனதில் கனமான உணர்வுடனும், வயிற்றில் குழந்தையோடும், வாட்டி வதைத்த பசியோடும் அலைந்தாள். திரிந்தாள். ஓரளவிற்கு மேல் சக்தியின்றி மயங்கி விழுந்தாள்.

8

டல்நிலை மோசமாக இருந்த பரத்தின் அப்பா சோமசுந்தரம், பரத்தின் கவனிப்பினாலும், நவீன மருத்துவத்தின் மகத்துவத்தினாலும் உடல் நிலை தேறினார். வழக்கம் போல் நடமாடினார். பரத்தின் தம்பி மோகன் மிக நன்றாகப் படிப்பான். அறிவாளி. ஸ்காலர்ஷிப் கிடைத்தபடியால் உயர் கல்வி கற்பதற்காக கல்லூரியில் சேர்ந்தான். அவன் படித்து முன்னேறி குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவான் என்று காத்திருந்தனர் குடும்பத்தினர்.

"பரத், இதுநாள் வரைக்கும் எப்படியோ குடும்பப் பொறுப்பை ஓட்டிட்டோம். எனக்கும் உடல் தளர்ந்துடுச்சு. அதனால உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். இனி உனக்கு மனைவியா வர்றவதான் நம்ப குடும்பப் பொறுப்பை எடுத்துக்கணும். உங்க அம்மா இறந்து போனப்புறம் இத்தனை வருஷம் ஒரு தைர்யத்துல வாழ்க்கையை ஓட்டிட்டேன். இனிமேல என்னால முடியாதுப்பா. உங்கம்மாவோட தூரத்து உறவுக்காரங்க மதுராந்தகத்துல இருக்காங்க. நம்பளை விட ஏழையான குடும்பம். ஆனா நல்லவங்க. அவங்க பொண்ணைத்தான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதா முடிவு பண்ணி, அவங்க கிட்டயும் பேசிட்டு வந்துட்டேன். இந்தப் பொண்ணுதான் நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா நம்பளை நல்லா பார்த்துக்கறவளா இருப்பா. அது மட்டும் உறுதி. அடுத்த மாசமே நாள் நல்லாயிருக்கு. கல்யாணத்தை முடிச்சுடலாம்."

'முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்ட அப்பாவிடம் என்ன சொல்வது? காதலிச்ச சுதா நமக்கு இல்லைன்னு ஆயிடுச்சு. இனி கல்யாணம் யாரோட நடந்தா என்ன? வர்றவ அப்பா சொன்ன மாதிரி குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்கிட்டா போதும்’ சுதாவின் நினைவு தந்த வலியில் உள்ளம் துடித்தான் பரத்.

"என்னப்பா பரத்.. இவ்வளவு பேசறேன் உன் கல்யாணத்தைப் பத்தி.. பொண்ணோட பேரைக் கூட கேட்க மாட்டேங்கறியே?"

"பேர்ல என்னப்பா இருக்கு? நீங்க பார்த்து என்ன செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்..."

"இதைத்தாம்பா அந்தப் பொண்ணோட அம்மா, அப்பா கிட்டயும் சொல்லிட்டு வந்தேன்.

'என் மகன் பரத், என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான். நான் எது சொன்னாலும் கேட்பான்னு சொல்லிட்டு வந்தேன். என்னோட நம்பிக்கையைக் காப்பாத்திட்டேப்பா…" அப்பா சந்தோஷமாகப் பேசிக் கொண்டே போனார்.

'உங்க நம்பிக்கையை காப்பாத்திட்டேன்பா. ஆனா... ஆனா... என் சுதாவுக்குக் குடுத்த நம்பிக்கையை காப்பாத்த முடியலையேப்பா... சுதா... சுதா...” சதா சர்வகாலமும் சுதாவின் நினைவு வாட்டியது.

"என்னப்பா பரத், உற்சாகமே இல்லாம ஏதோ யோசனையா இருக்க?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா." உடல்நிலை தேறி, மனதளவிலும் சற்று சந்தோஷமாக இருக்கும் அப்பாவை, தன் மௌனம் சங்கடப்படுத்தி விடக்கூடாது என்ற உணர்வில் பொய்யாக சிரித்து வைத்தான். கல்யாண விஷயம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பது போல் நடித்தான்.

9

முக்கியமான உறவினர் வீட்டில் ஒரு சாவு. துக்கம் விசாரிக்கவும், சாவு சடங்குகளில் கலந்துக் கொள்ளவும் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றார் சோமசுந்தரம். பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார். தெருவின் நடைபாதையோரம் கர்ப்பிணியான இளம் பெண்ணொருத்தி மயங்கிக் கிடப்பதைப் பார்த்தார். திடுக்கிட்டார். சாலை வழியே போய்க் கொண்டிருந்த ரிக்ஷாவைக் கூப்பிட்டார். அக்கம் பக்கம் இருந்த இரண்டு பெண்களின் உதவியோடு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். அங்கு போன சில மணி நேரங்களில் சுதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. (ஆம். பரத்தைத் தேடி அலைந்து மயங்கிக் கிடந்த சுதாவைத்தான் அவள் யாரென்றே தெரியாமல் அவளுக்கு உதவி செய்தார் சோமசுந்தரம்.)

அயர்ச்சியிலும், மிக ஆழ்ந்த தூக்கத்திலும் இருந்த சுதாவைப் பார்க்கவே அவருக்குப் பரிதாபமாக இருந்தது. அங்கு பணியிலிருந்த நர்ஸை அழைத்தார்.

"இங்க பாரும்மா. இந்தப் பொண்ணு யார்னு எனக்குத் தெரியாது. தெருவோரமா மயங்கிக் கிடந்தா. இப்ப நல்லபடியா குழந்தையை பெத்துட்டா. ஆனா கண் முழிக்கலை. நான் கொஞ்சம் வேலையா வெளியூர் போகணும். ரெண்டு மூணு நாள்ல திரும்பி வந்துடுவேன். அதுவரைக்கும் இவளை பார்த்துக்கம்மா. என்னால முடிஞ்சது இதுதான்மா." நூறு ரூபாயை நர்ஸிடம் கொடுத்தார்.

"பால், பழம் வாங்கிக் குடும்மா. ரெண்டு நாள்ல்ல வந்துடுவேன்." சோமசுந்தரம் கிளம்பினார்.

10

ல்லூரியில் படிப்பதற்காக வெளியூர் சென்றிருந்த பரத்தின் தம்பி மோகன் படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தபடியாலும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவனது பாட்டுப்பாடும் திறமையாலும், நடனமாடும் திறமையாலும் கல்லூரியின் மொத்த கவனத்தையும் ஈர்த்திருந்தான். குறிப்பாக மாணவிகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியிருந்தான். அவனது கருத்தைத் தன் பக்கம் திருப்பியவளும் இருந்தாள். அவள்தான் சரண்யா. பெரிய செல்வந்தர் சிதம்பரத்தின் ஒரே மகள். அழகென்றால் அழகு. அப்படியோர் அழகு. துடுக்குத் தனமான பேச்சும், குறும்புத் தனமான ஆட்டமுமாக கல்லூரியின் இளமை பொங்கும் மலர்ச்சியான வாழ்வை அனுபவித்து ரசிப்பவள்.

மோகனும், சரண்யாவும் காதலைப் பரிமாறிக் கொண்டனர். நாட்கள் வளர வளர அவர்களது காதலும் வளர்ந்தது.

11

சோமசுந்தரம் சொன்னது சொன்னபடி ஊரில் நிகழ்ந்த துக்க வீட்டின் சடங்குகளை முடித்துக் கொண்டு சுதாவை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு வந்தார். சுதாவை பார்த்துக் கொள்வதாக கூறியிருந்த நர்ஸ், சோமசுந்தரத்தைப் பார்த்ததும் அவரருகே வந்தாள்.

"ஐயா... அந்தப் பொண்ணு நேத்து ராத்திரி யார் கிட்டயும் சொல்லாம போயிட்டாங்க."

"என்ன போயிட்டாளா? அப்பிடின்னா குழந்தை?"

"குழந்தையை இங்கேயே விட்டுட்டு அவ மட்டும் சொல்லாம கொள்ளாம போயிட்டா..."

"குழந்தை எங்கேம்மா..?"

"அதோ அந்த தொட்டிலில தூங்குது பாருங்கய்யா."

தொட்டிலினருகே சென்றார் சோமசுந்தரம்.

"ஐயா, குழந்தைக்கு பால் வாங்கிக் குடுக்க எங்க யாருக்கும் வசதி இல்லய்யா. ஏதோ இங்க வேலை செய்றவங்க ஆளாளுக்கு காசு போட்டு பால் வாங்கிக் குடுக்கறோம். ரொம்ப கஷ்டமா இருக்குங்கய்யா..."

இதற்குள் குழந்தை கண் விழித்தது. திராட்சை போன்ற கண்கள். குழந்தையைப் பார்த்த சோமசுந்தரம் மனம் கலங்கினார். எதுவும் யோசிக்காமல் தன் கைகளில் அள்ளி எடுத்தார்.

"நான் எடுத்துட்டுப் போய் வளர்த்துக்கறேம்மா..."

"தாராளமா எடுத்துட்டுப் போங்கய்யா. பாவம் பெரும்பாலான நேரம் குழந்தை பட்டினியாத்தான்யா கிடக்குது."

குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்றார் சோமசுந்தரம்.


12

காலம் வெகு வேகமாக கழிந்தது. பரத்திற்கு ஆணும், பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள் பிறந்தன. சோமசுந்தரம் எடுத்து வந்து வளர்த்து வரும் சுதாவின் குழந்தை பானு, அவர்களுடன் சேர்ந்து வளர்ந்து வந்தாள்.

பரத்தின் குழந்தைகள் நீலுவிற்கும், சாய்ராமிற்கும் அக்காவாய் அன்பு செலுத்தினாள் பானு. பரத்தின் மனைவி சிவகாமி, குடும்பத்தின் குத்து விளக்காய் விளங்கினாள். வயதான மாமனார், அன்புக் கணவன், ஆருயிர் குழந்தைகள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி தன் கண்களைப் போல் பாதுகாத்தாள்.

வளமான, செல்வச் செழிப்பான வாழ்வு இல்லையென்ற போதும், கட்டும் செட்டுமாக அளந்து செலவு செய்து 'இருப்பதைக் கொண்டு நிறைவு காண்போம்’ என்ற எண்ணத்தில் குடும்பத்தை நடத்தினாள்.

சிவகாமியைத் தன்னைப் பெற்றத் தாயாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள் பானு.  அதனால் அவளை அம்மா என்றும் பரத்தை அப்பா என்றும் அழைத்து வந்தாள். தன் வயிற்றில் பிறந்தக் குழந்தையைப் போலவே பாசம் செலுத்தி வளர்த்தாள் சிவகாமி. மருத்துவமனையிலிருந்து எடுத்து வந்து வளர்க்கப்பட்டவள் பானு என்பது பானுவிற்கு மட்டுமே தெரியாத உண்மை. பொருளாதாரத்தில்தான் அந்தக் குடும்பத்தினர் ஏழ்மையாக இருந்தனரே தவிர, அன்பிலும், பாசத்திலும் வெகு வளமையாக இருந்தனர்.

13

மோகனின் படிப்பு முடிந்து, உலகிலேயே பிரபலமான ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. குடும்பத்தினர் அனைவருக்கும் ஆளுக்கொரு பரிசுப் பொருளாக வாங்கி வந்து அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டான்.

சென்னையிலேயே உத்யோகம் கிடைத்தபடியால் குடும்பத்தினர் அனைவரையும் சென்னைக்குக் கூட்டி வந்து குடி வைத்தான்.

மகனது கல்வியாற்றல் தங்கள் வறுமையை நீக்கும் பேராற்றலாக உருவெடுத்துள்ளதைப் பார்த்து அகமகிழ்ந்தார் சோமசுந்தரம்.

அவரது மகிழ்ச்சியை நீடிக்க விடாமல் விதி எள்ளி நகையாடியது.

மோகனைக் காதலித்துக் கொண்டிருக்கும் சரண்யா, ஒரு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் தன் தந்தையுடன் சோமசுந்தரத்தின் வீட்டிற்கு வந்தாள். திடுதிப்பென்று வந்து நின்ற அவர்களைப் பார்த்ததும் தயக்கத்துடன் சோமசுந்தரத்திடமும், மற்றவர்களிடமும் சரண்யாவை அறிமுகப்படுத்தி வைத்தான் மோகன். அவளது அப்பா சிதம்பரத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

இரண்டு நாட்கள் ஆட்டமும், பாட்டமுமாக சரண்யாவுடன் நாட்களைக் கழித்த அந்த அன்புக் குடும்பத்தினர், சரண்யாவின் அடங்காத ஆட்டத்தையும் சந்திக்கப் போகிறோம் என்று அப்போது அறியவில்லை.

சிவகாமி மட்டும் மோகனும், சரண்யாவும் காதலிப்பதைப் புரிந்துக் கொண்டாள். மற்றவர்கள், கல்லூரியில் உடன் படித்த சினேகிதி என்று மட்டுமே எண்ணி இருந்தனர்.

தங்களை விட மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் செல்வச் சீமான் சிதம்பரத்தின் மகளைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க அப்பா சம்மதிக்க மாட்டார் என்பதால், சிவகாமியிடம் சரணடைந்தான் மோகன்.

சிவகாமி, சந்தர்ப்பம் பார்த்து சோமசுந்தரத்திடம் நயந்து பேசி, மோகனின் காதலைப் பற்றி எடுத்துச் சொல்லி, சரண்யாவை மோகனுக்குத் திருமணம் செய்து வைக்க சம்மதிக்க வைத்தாள்.

"அண்ணின்னா அண்ணிதான். தாங்க்ஸ் அண்ணி" அவ்வளவு சந்தோஷத்தில் இருந்தான் மோகன்.

"என்னடா, அண்ணிக்கு ஐஸ் வைக்கற? என்ன விஷயம்?"

"அது... அது... வந்து... அந்த சரண்யாவை எனக்கு கல்யாணம் பண்ணிக்க அண்ணி, அப்பா கிட்ட சம்மதம் வாங்கிட்டாங்கண்ணா. அதுக்குத்தான் தாங்க்ஸ் சொன்னேன்ணா."

"மோகன், நீ எனக்கு கொழுந்தன்தான்னாலும் உன்னை என் மகன் போலத்தான் நினைக்கிறேன்.."

"தம்பி, வருஷக்கணக்கா ஆபீஸ் அஸிஸ்டெண்ட் வேலையிலேயே குப்பை கொட்டிட்டிருக்கேன். நம்ம கஷ்டத்தைத் தீர்க்க வந்திருக்கற உனக்கு உன் காதலை நிறைவேத்தி வைக்கறது மூலமாவது நன்றிக்கடன் செலுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்குதே..." பரத்தின் குரல் தழுதழுத்தது.

"அடடா என்னண்ணா நீங்க. நான் வேற நீங்க வேறயா? நன்றிக்கடன் அது இதுன்னு சொல்லிக்கிட்டு..."

"சித்தப்பா.... மோகன் சித்தப்பா."

குழந்தைகள் மூவரும் மோகனிடம் ஓடி வந்தனர்.

"சித்தப்பா... சித்தி ரொம்ப அழகா இருக்காங்க…" கண்கள் மின்ன, அழகாய் சிரித்தபடியே கூறிய பானுவை அணைத்துக் கொண்டான் மோகன். நீலுவும், சாய்ராமும் மோகனின் தோள் மீது ஏறி உட்கார்ந்து ஆடினர். அங்கே ஆனந்தம் மிதந்தது.

14

மோகன்-சரண்யா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. சரண்யா அந்த இல்லத்தில் கால் வைத்தாள். பெரிய பங்களாவில் வாழ்ந்து பழகிய அவளுக்கு அந்த சிறிய வீட்டில் இருக்கும் வசதிகளை விட இல்லாத வசதிகள்தான் பெரிதான குறையாகத் தெரிந்தது. அத்தனை பேரும் அன்போடு பழகினாலும் முகத்தை 'உம்’ என்று வைத்துக் கொண்டிருந்தாள்.

மோகனுக்கு சம்பளம் அதிகமாக வருகிறது என்பதற்காக செலவை அதிகமாக விரித்துக் கொள்ள சோமசுந்தரம் விரும்பவில்லை. 'குடும்பம் பெரிதாகிறது. மூன்று பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். அதில் இரண்டு பெண் குழந்தைகளின் திருமணம், தனது வயோதிகம், அதன் காரணமாய் அவ்வப்போது ஏற்படும் சுகவீனம், அதற்கான வைத்திய செலவுகள்’ என்று நீண்ட பட்டியல் இருப்பதால் முன்பு இருந்ததை விட சற்று நல்ல வீடு பிடித்தனர். திடீரென்று வரும் மோகனின் அதிகப்படியான வருமானம் யாருடைய மனதிலும் ஆடம்பர செலவு செய்யும் மனப்பான்மையை உருவாக்கி விடக்கூடாது என்பதில் சோமசுந்தரம் கவனமாக இருந்தார். குடும்பத்தினரும் அதிலுள்ள நன்மைகள் கருதி அதை ஏற்றுக் கொண்டனர், சரண்யாவைத் தவிர. ஓரிரு மாதங்களில் அவளது சுபாவம் வெளிப்பட்டது. எதிலும் குறை கண்டாள். சிவகாமி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தால் அவளுக்கு உதவுவது இல்லை. குழந்தைகளிடமும் மனம் ஒட்டுவது இல்லை. வேலை வேலை என்று சதா சர்வமும் ஆபீஸ் வேலையில் மூழ்கியிருந்த மோகனுக்கு குடும்பத்தில் நடப்பது எதுவும் தெரியவில்லை.

15

சோமசுந்தரத்தின் போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். மோகனுக்கு ஆபிஸில் பாண்டிச்சேரிக்கு ஊர் மாற்றம் கொடுத்து விட்டார்கள்.

சரண்யா, சந்தோஷமாக மோகனுடன் பாண்டிச்சேரிக்குக் கிளம்பினாள்.

கவலையோடு வழி அனுப்பிய குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினான் மோகன்.

"கவலைப்படாதீங்கப்பா. மாசா மாசம் பணம் அனுப்பறேன். பாண்டிச்சேரி எங்கயோ தொலை தூரத்துலயா இருக்கு? ரெண்டு மணி நேரம் பிரயாணம் பண்ணா வந்துடலாம். எனக்கும் நேரம் கிடைக்கும்போது உங்களைப் பார்க்க வருவேன்."

"சரிப்பா."

"மோகன், நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்பா. எங்களைப் பத்தி நினைச்சுக் கவலைப்படாதே. நீ இன்னும் முன்னேறணும். அதுக்கு இன்னும் கவனமா உழைக்கணும். அதனால வேற எதைப் பத்தியும் யோசிக்காம நிம்மதியா உன் வேலையைப் பாரு." பரத் நெஞ்சம் கனக்க மோகனை வழியனுப்பி வைத்தான்.

'சித்தப்பா சித்தப்பா’ என்று தோளில் தொங்கிய குழந்தைகளை ஆரத் தழுவி முத்தமிட்டான் மோகன்.


எதிலும் ஒட்டாமல் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சரண்யாவிற்கு, நெற்றியில் குங்குமமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினாள் சிவகாமி. சரண்யா மனம் ஒட்டாமல் பழகுவதைப் பற்றி வருத்தம் இருந்தாலும் 'நாளடைவில் எல்லாம் சரியாகும்’ என்ற நம்பிக்கையில், சரண்யாவின் அலட்சியப் போக்கைப் பொருட்படுத்தாமல் இருந்தாள் சிவகாமி. மோகன், பாண்டிச்சேரிக்குக் குடி போய் ஒரு மாதம் ஆகியது.

16

வுன் போட்டுக் கோட்டிருந்த பானு, பெரிய மனுஷியானாள். சாஸ்திரமாக சடங்கு வைக்க ஏற்பாடாகியது. மோகனை அழைக்க போன் பண்ணினான் பரத்.

"ஹலோ"

"ஹலோ" மறுமுனையில் சரண்யாவின் குரல் கேட்டது.

"ஹலோ... சரண்யாதானே... நம்ப பானு வயசுக்கு வந்துட்டாம்மா."

"அதுக்கென்ன?"

"அதுக்கென்னவா? இந்த விஷயத்தை மோகன்கிட்ட சொல்லணும்மா. மோகனை பேசச் சொல்லும்மா. வர்ற ஞாயித்துக்கிழமை நம்ப வீட்டு ஆட்கள் வரைக்கும் சின்னதா சடங்கு சீர் செஞ்சு சிம்பிளா விருந்து வச்சிருக்கோம். நீயும், மோகனும் அவசியம் வரணும்மா. போனை மோகன்கிட்ட குடேன்..."

"அ... அ... அவர் இல்லையே... வர லேட்டாகும்னு சொன்னார். அவர் வந்ததும் நானே சொல்லிடறேன்." அவசர அவசரமாய் பேசிவிட்டு ரிஸீவரை வைத்தாள்.

அதே சமயம் மாடிப்படிகளில் இருந்து வந்துக் கொண்டிருந்தான் மோகன்.

"போன்ல யாரு சரண்யா?"

"அது... அது... ஏதோ ராங் நம்பர்ங்க."

"சரி… சரி… நான் ஒரு முக்கியமான மீட்டிங்குக்கு போறேன். மீட்டிங் மாஸ் ஹோட்டல்ல. டின்னர் மீட்டிங். எனக்காக சாப்பிடாம காத்திருக்காதே. நான் வர லேட் ஆகும். வரட்டுமா?"

"சரிங்க."

மோகனின் அலுவலகக் கார் கிளம்பியது.

சம்பளப் பணத்தில் ஒரு தொகையை அப்பாவிற்கு அனுப்பி வைக்கும்படி மாதா மாதம் மோகன் கொடுக்கும் பணத்தில் பாதி தொகையை மட்டுமே அனுப்புவாள். சில நேரம் அனுப்பாமல் தானே வைத்துக் கொள்வாள். அதில் ஆடம்பரமான வீட்டு அலங்காரப்பொருட்கள், மேக்கப் சாதனங்கள் என்று அனாவசியமாக செலவு செய்தாள். அவளது அப்பா சிதம்பரத்திடம் பணம் எதுவும் பெறக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தான் மோகன். இதன் காரணமாகவும், தன் புருஷனின் பணம் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற தவறான உணர்வினாலும் மோகனின் சம்பளப் பணத்தை மனம் போனபடி செலவிட்டாள். சென்னையிலுள்ள அவளது குடும்பத்தினரின் கஷ்டங்கள் தெரிந்தும் தன் இஷ்டப்படி இருந்தாள். இது எதுவுமே தெரிய வாய்ப்புகள் இன்றி வேலையில் மூழ்கியிருந்தான் மோகன்.

17

சுபமங்கள நாள். பதிமூன்று வயது நிறைந்த பானு பாவாடை, தாவணி அணிந்து மனைப்பலகையில் அமர்ந்திருக்க சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் நடந்தன. மோகனையும், சரண்யாவையும் எதிர்பார்த்து ஏமாற்றம் கொண்டனர். சிவகாமியின் கைப்பக்குவத்தில் மணத்தது அறுசுவை விருந்து. மோகனுக்குப் பிடித்த சேமியா கேசரியை சுவையாகத் தயாரித்து வைத்திருந்தாள் சிவகாமி. அவர்கள் வராததால் அவளது மனம் துன்பப்பட்டது. வழக்கம் போல் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனம் காத்தாள்.

18

ரத்தின் உலகமே இருண்டது. திடீரென கண்பார்வை பறிபோனவனைப் போல உணர்ந்தான். எதிர்காலம் இருட்டாகத் தோன்றியது.

காலையில் ஆபிஸ் போனதும் மேனேஜர் கொடுத்த கவரைப் பிரித்துப் பார்த்த நிமிடத்திலிருந்து பித்துப் பிடித்தவனைப் போல ஆனான். அவன் வேலை செய்து வந்த நிறுவனம் அவனை வேலை நீக்கம் செய்து விட்டது. அதற்குரிய கடிதத்தையும், கூடவே அவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் அவன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தின் நகலையும் இணைத்து அனுப்பியிருந்தது தலைமை நிர்வாகம்.

அதாவது, 'எப்பொழுது வேண்டுமானாலும், என்று வேண்டுமானாலும், எந்தவிதக் காரணமும் சொல்லாமல், முன் அறிவிப்பு இல்லாமல் வேலை நீக்கம் செய்யலாம்’ என்று எழுதியிருந்த பத்திரத்தில் பரத் கையெழுத்திட்டிருந்தான். அன்றைய கஷ்ட நிலைமையில்’ 

'எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்கிற ரீதியில் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கையெழுத்துப் போட்டது தன் தலையெழுத்து என்று நொந்துக் கொண்டான்.

சரண்யா அனுப்பும் சிறு தொகை, சில மாதங்கள் அனுப்பாததால் ஏற்படும் பணமுடை... இத்தோடு இன்று வேலை நீக்கம் வேறு. இதயத்தில் விழுந்த அடி தந்த வலி! சோர்ந்து போன முகத்துடன், தளர்ந்த நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

19

மையலறையில் நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே வந்த சிவகாமி, பரத்தின் முகத்தைப் பார்த்துக் கலவரமானாள்.

"என்னங்க.. என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? களைப்பா இருக்கா? இதோ போய் காபி கொண்டு வரேன்" நகர்ந்தவளின் கைகளைப் பிடித்துத் தடுத்தான். அவளது தோள் மீது சாய்ந்து அழுதான்.

"ஐய்யோ என்னங்க இது. அழறீங்க. என்னங்க ஆச்சு?" மேலும் பதறி, துடித்துப் போனாள் சிவகாமி.

தோளில் சாய்ந்து அழும் கணவனை மடியில் போட்டு ஆதரவாய் முதுகைத் தடவினாள். சிறிது நேரம் அழ விட்டாள். குமுறிய துக்கம் சற்று அடங்கியது. அதற்குக் காரணம் சிவகாமியின் நிதானமும், அவளது ஆறுதலான அரவணைப்பும். தோள் குலுங்க அழுது முடித்தவன், சிவகாமியின் முகத்தை ஏறிட்டான்.

"நாம மோசம் போயிட்டோம் சிவகாமி. என் வேலை போயிடுச்சு..." எதிர்பாராத இந்தத் தகவலினால் அதிர்ந்து போன சிவகாமி, தன் உணர்வை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பேசினாள்.

"என்ன காரணம்?" கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் சிவகாமியின் குரல் மிக மெதுவாகக் கேட்டது.

"எந்தக் காரணமும் இல்லை. காரணம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லைங்கறது எழுதப்பட்ட ஒப்பந்தம்."

"சரிங்க... என்ன பண்றது? வேற வேலை தேடுங்க..."

"நடுத்தர வயசாச்சு. பெரிய படிப்பும் இல்லை. ஒண்ணுமில்லாததுக்கு ஏதோ ஒரு வேலைன்னு இருந்துச்சு. அந்த ஆபீஸ் அஸிஸ்டெண்ட் வேலையைத் தவிர வேற ஒரு வேலையும் தெரியாது. எங்கே போய், யார்கிட்டப் போய் எந்தத் தகுதியில வேலை கேட்பேன் சிவகாமி?"

"வேற யார்கிட்டயோ எதுக்காகங்க நீங்க போகணும்? உங்க தம்பி மோகன் இருக்கானே அவன் கிட்ட சொல்லி வேலை கேளுங்க..."

"சரண்யாவைப் பத்தி தெரிஞ்சுமா பேசற? போன்ல பேச விட மாட்டேங்கறா. நேர்ல போலாம்னா அவனைப் பார்க்கறதே அபூர்வமா இருக்கு. அப்படியே சந்திக்க முடிஞ்சாலும் என்னைக்கோ ஒரு நாள் பார்க்கறதுனால நம்ப கஷ்டத்தை சொல்லவும் மனசு வர மாட்டேங்குது. சரண்யா ஒழுங்கா பணம் அனுப்பறதில்லைன்னு அவன்கிட்ட சொன்னா அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் தகராறு வரும்..."

"ஐய்யோ வேணாங்க... மோகன் நல்லா இருக்கணும். அதையெல்லாம் அவன் கிட்ட சொல்லாம, வேலைக்கு மட்டும் சொல்லி வையுங்க. கிடைக்கும்னு நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை..."

"சரிம்மா."


பானு, நீலு, சாய்ராம் மூவரும் பள்ளிக் கூடத்தில் இருந்து திரும்பினர்.

"அம்மா... அப்பா என்னம்மா இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டார்?" பானு கேட்டாள்.

"அப்பாவுக்கு வேலை போயிடுச்சும்மா. நீங்க மூணு பேரும் போய் முகம் கழுவிட்டு வாங்க. டிபன் சாப்பிடலாம்."

பரத்திற்கு வேலை போன கஷ்டம் ஓரளவு புரிந்தது பானுவிற்கு. வயதில் குறைந்திருந்தாலும், குடும்ப சூழ்நிலையையும், பொருளாதார நிலையையும் நிறையவே புரிந்து வைத்திருந்தாள் பானு.

பானுவிடம், பரத்திற்கு வேலை போனது பற்றிக் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்ட சோமசுந்தரம் சோகமே உருவானார்.

20

பாண்டிச்சேரி. அந்த ஊரின் இயல்பான உஷ்ண சீதோஷ்ண நிலை வெம்மை அளித்தது. மொபெட்டிலும், பைக்கிலும் சுறுசுறுப்பாய் திரியும் ஃப்ரெஞ்சு மனிதர்கள் ஆங்காங்கே தென்பட்டனர். வழி நெடுக ஹோட்டல்களும் பேக்கரிகளும் ஏகமாய் காணப்பட்டன. மதுபானக் கடைகளில் பளிச் என்ற வண்ண விளக்குகள் போவோர் வருவோரை 'வாங்க... வாங்க’ வென்று அழைப்பது போலிருந்தது.

மோகனின் வீட்டுற்குச் சென்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான் பரத்.

கதவைத் திறந்த சரண்யா, பரத்தைப் பார்த்ததும் உதட்டளவில் வரவேற்றாள்.

"வாங்க."

உள்ளே சென்றான். சரண்யா உட்காரச் சொல்லாமலே உட்கார்ந்தான். வீடு மிகப் பெரியதாக இல்லாவிடினும் அழகானதாய், வசதிகள் நிறைந்ததாய் இருந்தது. அலங்காரப் பொருட்கள் கூடுதல் அழகை அளித்திருந்தன. எதுவும் பேசாமல் சமையலறைக்குச் சென்று ஏனோதானோவென்று ஒரு காபியைத் தயாரித்துக் கொண்டு வந்தாள். பரத் உட்கார்ந்திருந்த சோபாவின் முன்பு இருந்த சிறிய டீப்பாய் மீது காபி கப்பை வைத்தாள்.

"நல்லா இருக்கியாம்மா சரண்யா?"

"இருக்க வேண்டிய இடத்துல இருக்கறதுனால நல்லாத்தான் இருக்கேன்" இடக்காக பேசினாள் சரண்யா.

"மோகனைப் பார்க்கணும்மா..."

"அவர் வெளியூருக்குப் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும். என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லுங்க. நானே சொல்லிடறேன்."

"எ... எ... எனக்கு வேலை போயிடுச்சு. அதான் மோகன்கிட்ட சொல்லி வேற வேலைக்கு சொல்லி வைக்கலாம்னு... வந்தேன்..."

'ஓ... வேலை வேற போயிடுச்சா? ஏற்கெனவே பணம் பிடுங்கிக்கிட்டிருக்கீங்க. இந்த லட்சணத்துல வேலையும் இல்லைன்னா... கவனமா இருக்கணும்’ மனதிற்குள் இவ்விதம் நினைத்தவள், வார்த்தைகளால் வேறு விதமாகப் பேசினாள்.

"அவர் வரட்டும். நானே அவர்கிட்ட சொல்லி நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணச் சொல்றேன்."

"சரிம்மா. நான் கிளம்பறேன்."

"சரி."

கணவனின் உடன்பிறப்பிற்கு ஒரு வேளை விருந்து கூட செய்து போட மனமில்லாவளாய் சரண்யா. தேடி வரும்பொழுது தம்பியைப் பார்க்க முடியாமல் பல தடைகள் பரத்திற்கு. தன் குடும்பத்தினரின் உண்மையான நிலையை அறிந்துக் கொள்ளக் கூட முடியாத அளவுக்கு மோகனின் அலுவலக நடவடிக்கைகள். ஊர் ஊராக செல்வதும், பாண்டிச்சேரியில் இருக்கும் நாட்களிலும் மீட்டிங், நிகழ்ச்சிகள் என்று போக நேரிடுவது விதியின் விளையாட்டன்றி வேறு எதுவாக இருக்கும்?

தம்பியைப் பார்க்க முடியாத ஏமாற்றத்திலும், சோகத்திலும் கால் போன வழியே தன்னை மறந்து நடந்த பரத், கடற்கரையோரமாக நடந்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். மீண்டும் நடந்தான். பாண்டிச்சேரி கடற்கரை மிக அழகாக இருந்தது. அதை ரசிக்கும் மனநிலைதான் பரத்திற்கு இல்லை.

தளர்ந்த நடையைத் தொடர்ந்தான். தூரத்திலிருந்து, பெரிய காரின் அருகே நின்ற ஓர் உருவம் அவனை கவனித்தது. அவனது சோகநிலை கண்டு கெக்கலி கொட்டி சிரித்தது.

21

ல்ல கம்பெனியின் அலுவலகத்தில் இன்ட்டர்வியூ. அந்த நிறுவனத்தில் மேனேஜர், பரத்திடம் கேள்விகள் கேட்டு முடித்தார்.

"மிஸ்டர் பரத், உங்களைப் போல அனுபவசாலிகள்தான் எங்களுக்குத் தேவை. உங்களுக்கு இங்கே வேலை நிச்சயம்..."

அவர் பேசி முடிப்பதற்குள் அவரது மேஜை மீதிருந்த இன்ட்டர்காம் ஒலித்தது. பேசினார்.

"அப்படியா மேடம்... சரிங்க மேடம்..." ரிஸீவரைக் கவிழ்த்து வைத்த மேனேஜர் சில நொடிகள் தன் தலையையும் கவிழ்த்து, பின் தயக்கத்துடன் பேசுவதற்குத் தயாரானார்.

"மிஸ்டர் பரத்.. உங்களுக்கு வேலை இல்லை. உங்களுக்கு வேலை குடுக்கக் கூடாதுன்னு எங்க மேடம் சொல்லிட்டாங்க. இன்ட்டர்காம்ல என்னைக் கூப்பிட்டு உங்க பேரைக் கேட்டாங்க. நீங்க இங்கே வரும்போதே உங்களைப் பார்த்திருக்காங்க போலிருக்கு. அவங்க ஏன் உங்களுக்கு வேலைக் குடுக்கக் கூடாதுன்னு சொன்னாங்கன்னு எனக்குத் தெரியலை. ஆனா எங்க மேடம் சொன்னா சொன்னதுதான். அதை மீறி ஒரு வார்த்தை பேச முடியாது. பேசக் கூடாது. அவ்வளவு கண்டிப்பு. ஸாரி மிஸ்டர் பரத். வெரி ஸாரி..."

"நீங்க எதுக்கு சார் சாரி சொல்லிக்கிட்டு. உங்க மேடம் செய்றதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? நான் கிளம்பறேன் சார்."

பரத் தலை குனிந்தபடி, துயரமான முகத்துடன் போவதை ஓர் உருவம் பார்த்து மகிழ்ந்தது. எதையோ சாதித்துவிட்ட பெருமிதத்தில் மிதந்தது.

22

வீடு திரும்பிய பரத், வாசலிலேயே காத்திருந்த பானுவை பார்த்தான். "ஏம்மா இருட்டற நேரத்துல வாசல்ல நிக்கற?"

"நீலு பாப்பாவுக்கு உடம்பு சரியில்லைப்பா. தலைவலி, ஜுரம், வாந்தி... தாத்தா, பக்கத்துத் தெரு டாக்டர் மாமாவைக் கூப்பிடப் போயிருக்காரு." பரத் உள்ளே சென்றான்.

செவ செவத்த முகத்துடன கிழிந்த நாராக கிடந்தாள் நீலு. கண்ணீர் மல்க அவளது நெற்றியில் ஈரத்துணியைப் போட்டுக் கொண்டிருந்தாள் சிவகாமி. நீலுவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். அனல் தகித்தது. டாக்டர் வந்தார். காய்ச்சல் குறைவதற்கும், வாந்தி நிற்பதற்கும் மருந்துகள் கொடுத்தார்.

"வாந்தி எடுக்கறதுனால கொஞ்சம் சிக்கலா இருக்கு. தலைவலி வேற கடுமையா இருக்கு. காய்ச்சலும் ஏறிக்கிட்டே போகுது. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடறதுதான் நல்லது. மூளைக் காய்ச்சலா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு..."

அனைவரும் அதிர்ந்தனர்.

"உங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். கஷ்டத்துல இருக்கீங்க. இருந்தாலும் கடனை உடனை வாங்கியாவது நீலு பாப்பாவை பெரிய ஹாஸ்பிடல்ல சேர்த்துடுங்க. எவ்வளவு சீக்கிரம் சேர்க்கறீங்களோ அவ்வளவு நல்லது. எனக்கு ஃபீஸ் தர வேண்டாம். பக்கத்து தெருவுல இருந்து எவ்வளவோ பழகி இருக்கோம். இந்த மாதிரி இக்கட்டான நேரத்துல என்னால செய்ய முடிஞ்சது அவ்வளவுதான். சீக்கிரமா பணத்துக்கு ஏற்பாடு பண்ணி ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போங்க." டாக்டர் கிளம்பினார்.

'ஏற்கெனவே செஞ்சுக்கிட்டிருந்த வேலையும் போய், கிடைக்க இருந்த வேலையும் தட்டிப் போய், கையில தேவையான அளவு பணம் இல்லாத இந்த நேரத்துல குழந்தையும் இப்படி நோய்ப்பட்டு படுத்துக் கிடக்கறாளே...


இதுக்குக் காரணம்... அவள்... அவள்... புது கம்பெனி மேனேஜர் சொன்னாரே யாரோ 'மேடம்’னு அவள்தான்…?’ இதயச்சுவரில் கோப அலைகள் மோதித் தெறித்தன.

"பரத், இனி மோகனைப் பார்க்கப் போய் நேரத்தை வீணாக்காதே. குழந்தையை ஆஸ்பத்திரியில சேர்க்கற வழியைப் பாரு. அதுக்கு முன்னால கையில இருக்கற பணத்துக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கிட்டு வா."

"சரிப்பா."

பரத் கிளம்பினான்.

"அம்மா, தலை வலிக்குதும்மா. தாங்க முடியலைம்மா" நீலு, வலியில் துடிப்பதைப் பார்த்து அனைவரும் அழுதனர்.

பரத் விரைந்தான்.

டாக்டர் எழுதிக் கொடுத்த சில மருந்துகள் பக்கத்திலுள்ள கடைகளில் கிடைக்காததால் நகரின் பிரபல மருந்துக்கடைக்குச் சென்றான். சீட்டைக் கொடுத்துவிட்டு காத்திருந்தான். அங்கே, அவன் இன்ட்டர்வியூவிற்கு சென்றிருந்த கம்பெனியின் மேனேஜர் நின்றிருந்தார்.

"ஸார்... ஸார்..." பரத் கூப்பிட்டான்.

அவர் திரும்பிப் பார்த்தார்.

"அட, பரத்!"

"ஸார், என் பேரை ஞாபகம் வச்சிருக்கீங்க. ஆனா, உங்க பேரைக் கூட கேட்காம நான் வந்துட்டேன்."

"என் பேர் சீனிவாசன். சரி, வேற வேலைக்கு முயற்சி எடுத்தீங்களா?"

"இல்ல சார். அதுக்கு நடுவுல என் குழந்தை உடல் சுகமில்லாம படுத்திருக்கா... வீட்ல ரொம்ப கஷ்டம். அது சரி சார். அன்னிக்கு உங்க மேடம் சொன்னாங்கன்னுதானே என்னோட வேலையை நீங்க கன்ஃபர்ம் பண்ணலை? நீங்க குடுக்க வந்த வேலையைத் தடுக்க வந்த அந்த மேடம் யாரு? அவங்க எங்கே இருக்காங்க?"

"என்ன பரத் நீங்க? சென்னையோட முதல் இருபது பிரபலமான சாதனைப் பெண்கள் வரிசையில எங்க மேடமும் இருக்காங்க. அவங்களோட சாதனைகள் பத்தி எழுதாத பத்திரிகை கிடையாது. எத்தனையோ விருதுகள் கூட வாங்கி இருக்காங்க."

"அவங்களோட வீடு எங்கே இருக்கு?"

"சென்னையில பெரிய பணக்காரங்க வசிக்கற ஏரியா அடையார் ஃபோட் க்ளப். அங்கதான் மேடம் வீடு..." அவர் பேசி முடிப்பதற்குள் மருந்துக்கடை கவுண்ட்டரில் பரத்தைக் கூப்பிட்டனர்.

'ஐயோ மருந்து... அவசரம்’ கவுன்ட்டருக்கு ஓடினான். மருந்துகளை வாங்கிக் கொண்ட பிறகுதான் ஞாபகம் வந்தது. 'அந்த மேடத்தின் பெயரைக் கேட்கவில்லையே’ என்று. சீனிவாசனைத் தேடினான். அவர் போய்விட்டிருந்தார்.

அவசரஅவசரமாய் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றான். அந்த ஆட்டோவை நிறுத்தி வைத்தான். மருந்துகளை சிவகாமியிடம் கொடுத்துவிட்டு அதே ஆட்டோவில் ஏறினான்.

"அடையார் போப்பா."

ஆட்டோ அடையாரை நோக்கி சென்றது. போட் க்ளப்பில் இறங்கிக் கொண்டான். விசாரித்தான்.

"யாரோ ஒரு பிரபலமான பெண்மணியாம். அவங்க வீடு....?"

"பேர் என்னன்னு சொல்லுங்க சார்..." ஒரு வாலிபன் கேட்டான்.

"பேரு தெரியலையே..."

"அட என்ன சார். இந்த ஏரியாவுல முக்கால்வாசிப்பேர் பிரபலமானவங்கதான். யாரைக் கேக்கறீங்கன்னு புரியலையே?"

அவர்கள் இருவரும் ஒரு பெரிய பங்களாவின் முன்பக்கம் நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பங்களாவின் பால்கனியில் இருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு உருவம். சில நிமிடங்களில் அந்தப் பங்களாவின் செக்யூரிட்டி இவர்கள் அருகே வந்தான். "ஸார், உங்க பேர் பரத்தா? எங்க மேடம் உங்களைக் கூப்பிடறாங்க" செக்யூரிட்டி சொன்னான்.

"என்னை யார்.. இங்கே என் பேர் தெரிஞ்சு கூப்பிடறாங்க!?" வியப்புக்கு ஆளான பரத், செக்யூரிட்டியுடன் சென்றான். பங்களாவின் வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றான் செக்யூரிட்டி. அங்கே ஓர் உயரமான சுழல் இருக்கையில் சால்வை போர்த்திய ஓர் உருவம் அவனுக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்திருந்தது.

"மேடம். அவர் வந்துட்டார் மேடம்" சொல்லிவிட்டு செக்யூரிட்டி வெளியேறினான்.

சுழல் இருக்கையை ஒரு சுழற்று சுழற்றித் தன்பக்கம் திரும்பிய அந்த உருவத்தைப் பார்த்த பரத் அதிர்ச்சிக்கு ஆளானான்.

"நீங்க... நீ... நீ... சுதாதானே..."

"ஓ... என் பேர் கூட ஞாபகம் இருக்கா..?" எகத்தாளமாய் கேட்டாள் சுதா.

"நீங்க எப்படி இருக்கீங்க, உங்க குடும்பம் எப்படி இருக்கு? எப்படியெல்லாம் கஷ்டத்துல தத்தளிச்சுக்கிட்டிருக்கீங்க... எல்லாமே எனக்குத் தெரியும். இவளுக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீங்களா? உங்க கஷ்டத்தையெல்லாம் உருவாக்கினதே நான்தானே? ஏற்கெனவே நீங்க வேலை செஞ்சுக்கிட்டிருந்த ஆபீஸ் நிர்வாகத்து ஆட்கள்ட்ட பேசி, என்னோட இமேஜை யூஸ் பண்ணி உங்களை வேலை நீக்கம் செய்ய வச்சேன். அதுக்கப்புறம் வேலை குடுக்க இருந்த மேனேஜர் சீனிவாசன்கிட்ட பேசி உங்களுக்கு வேலை குடுக்கக் கூடாதுன்னு தடுத்தேன். அந்த கம்பெனி என்னோடது. தீராத மனக்கஷ்டத்துல என்னை தவிக்க விட்டீங்க. தாளாத பணக்கஷ்டத்துல உங்களை சீரழிக்கணும்னு முடிவு பண்ணினேன். அதுக்கு உங்க குடும்ப சூழ்நிலைகள் கூட எனக்கு சாதகமா இருந்துச்சு. நான் பட்ட துன்பம் போல பல நூறு மடங்கு துன்பங்களை நீங்களும் படணும்னு திட்டம் போட்டேன். என் திட்டம் வெற்றியாயிடுச்சு... ஹா... ஹா... ஹா..." சுதா எக்காளமிட்டு சிரித்தாள். அவள் வெறியோடு சிரித்த சிரிப்பு, பெண் புலி சீறுவதைப் போலிருந்தது.

'சுதா... என் சுதா அவளா இவள்?! செல்வச் செழுமையாய், சீமாட்டியாய், ஆடம்பரமான பங்களாவில் சகல வசதிகளோடு இருக்கும் இவள் என் சுதாவா?’

'ஆமாம். ஆமாம்’ என்று அந்தக் குரலும், அழகிய கண்களும் சத்தியம் செய்தன.

"காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கறதா ஆசை வார்த்தைப் பேசி ஏமாத்திட்டு ஓடின மிஸ்டர் பரத்... என்னைப் பார்த்து திகைச்சுப் போயிட்டீங்களா? நான் பழைய சுதா இல்லை. ஸக்ஸஸ்ஃபுல் பிஸினஸ் வுமன் மேடம் சுதா. உங்களோட கோழைத்தனமே நான் உயர்ந்து நிக்கற படிக்கட்டா இருந்துச்சு. தியாகமே உருவான என்னோட அம்மா, துரோகமே உருவான உங்க முகத்துல முழிக்கக்கூட பிடிக்காம உயிரையே விட்டுட்டாங்க."

'ஜெயா ஆன்ட்டி இறந்துட்டாங்களா...’ பரத்தின் எண்ணம் மிதந்தது.

"என்ன யோசிக்கறீங்க? உயிரையே உன் மேல வச்சிருக்கேன்னு சொன்னீங்களே... உயிர் இல்லாமத்தான் இவ்வளவு சந்தோஷமா பொண்டாட்டி, பிள்ளைக்குட்டிகளோட வாழ்ந்துக்கிட்டிருக்கீங்களோ? என் வாழ்க்கைக்கு சமாதி கட்டிட்டு, அந்த சமாதி மேல உங்க மணமேடையை அமைச்சுக்கிட்டீங்க."

"சுதா... நான்..."

"எதுவும் பேசாதீங்க. நீங்களும் ஒரு சராசரி ஆண்மகன்தான்னு நிரூபிச்சிட்டீங்க. உங்க ஆசை வார்த்தைகள்ல மயங்கினேன். அப்பாகிட்ட பேசிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போன நீங்க என்னை வந்து பார்க்கவே இல்லை..."

"சுதா... நான்..."


"நோ... ஒரு பொண்ணான நான், வயித்துல கருவை சுமந்துக்கிட்டு எவ்வளவு கேவலப்பட்டேன்னு தெரியுமா? அக்கம்பக்கத்தினரும், ஊரும் உலகமும் காறித் துப்பாத குறை. மனசுல வேதனை சூழ, எதிர்காலம் சூன்யமா தெரிய ஒவ்வொரு விநாடி நேரமும் எப்படி துடிச்சேன் தெரியுமா? என் வயித்துல குழந்தை உருவாகலைன்னா செத்தாவது தொலைஞ்சிருப்பேன். உங்க கிட்ட என்னைத் தொலைச்சுட்டு ஊரெல்லாம் உங்களைத் தேடித் திரிஞ்சேன். பட்டினியால மயங்கி விழுந்த என்னை யாரோ ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. அது யார்னு கூட எனக்குத் தெரியாது. பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுட்டு தற்கொலை செஞ்சுக்கப் போனேன். ஏன் தெரியுமா? ஒரு குழந்தைக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே இல்லைன்னா அனாதைன்னு அனுதாபப்படுவாங்க. அப்பா இல்லாம அம்மா மட்டுமே இருக்கற குழந்தை மேல ஆத்திரப்படுவாங்க. அப்பன் யார்னு தெரியாத தறுதலைன்னு திட்டித் தீர்ப்பாங்க. சமுதாயத்துல மரியாதையோ மதிப்போ இருக்காது. என் குழந்தை அந்த அவஸ்தையெல்லாம் படறதை நான் எப்படி தாங்கிக்க முடியும்? அதனால தற்கொலை பண்ணிக்கப் போனேன். என் தற்கொலை முடிவுக்குக் காரணம் நீங்க.

“தற்கொலை பண்ணிக்கப் போன என்னை ஒரு பணக்கார முதியவர் தடுத்தார். உடனே எனக்குக் குழந்தை பிறந்த ஆஸ்பத்திரிக்குப் போனேன் என் குழந்தையை தூக்கிட்டு வந்து வளர்க்கறதுக்கு. ஆனா... ஆனா... அங்கே என் குழந்தை இல்லை. வளர்க்கறதா சொல்லி யாரோ எடுத்துட்டுப் போயிட்டாங்க.         என்னைக் காப்பாத்தின செல்வச்சீமான் சௌந்தர்ராஜன் தனக்கு வாரிசு இல்லைன்னு என்னை வாரிசாக்கினார். அவரோட சொந்தமும், உறவுக்கூட்டமும் அவரோட பணத்தையும் சொத்துக்களையும் அபகரிக்கறதுலதான் குறியா இருந்தாங்க. அதனால எனக்கு அவரோட நிறுவனங்களையும், சொத்துக்களையும் நிர்வகிக்கற உரிமையைக் குடுத்தார். ஏற்கெனவே ஆபீஸ் வேலை செஞ்ச அனுபவமும், அவரோட வழிகாட்டலும் சேர்ந்து அந்த நிறுவனங்களை முன்னுக்குக் கொண்டு வர உதவியா இருந்துச்சு. நானும் முன்னேறினேன்.

“அதிலயும் எனக்கு சிக்கல்.  'எவளோ ஒருத்தி உள்ள நுழைஞ்சிட்டாளே’ன்னு அவரோட உறவுக் கூட்டம் எனக்குக் குடுத்த தொந்தரவு கணக்குல அடங்காது. எல்லா பிரச்சனையும் சமாளிச்சு இன்னிக்கு சமூகத்துல உயர்ந்த அந்தஸ்துல இருக்கேன். ஆனா என் மனசுக்குள்ள? இதயத்துல ஓராயிரம் தேள் கொட்டற மாதிரி ஒவ்வொரு நாளும் வேதனையில துடிச்சிக்கிட்டிருக்கேன். என் குழந்தையை யாரோ எடுத்துட்டுப் போயிட்டாங்கன்னு தெரிஞ்ச அந்த நிமிஷத்துல இருந்து ஏற்கெனவே எரிமலையாக் குமுறிக்கிட்டிருந்த என் மனசுல பழி வாங்கற வெறி வந்துச்சு. அதனாலதான் ரொம்பத் தீவிரமா உங்களைத் தேடினேன். சௌந்தர்ராஜன் ஐயாவோட உதவியினால உங்களைக் கண்டுபிடிக்க முடிஞ்சது.  அன்னில இருந்து உங்க மேல பழிவாங்கற படலத்தை ஆரம்பிச்சேன். உங்க துக்கத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். என் வாழ்க்கை நிர்மூலமா ஆன மாதிரி உங்க வாழ்க்கையும் ஆகணும்னு முயற்சி செஞ்சு, அந்த முயற்சியின் விளைவுகள்தான் நீங்க சந்திச்ச பிரச்னைகள்..."

"போதும்... சுதா... போதும்... மண்ணில புதைஞ்சு போன..."

"நோ, உங்களோட விளக்கம் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நீங்க போகலாம்."

"என் மேல எந்தக் குற்றமும் இல்லைன்னு நிரூபிக்காம நான் இங்கே இருந்து போக மாட்டேன்..."

சுதா, இன்டர்காமை எடுத்தாள்.

"செக்யூரிட்டி... நீ அப்போ உள்ளே கூட்டிட்டு வந்த ஆளை வெளியே தள்ளு." அவள் கூறியதும் இரண்டு செக்யூரிட்டிகள் தடதடவென ஓடி வந்தனர். அவர்கள் பரத் மீது கை வைக்கும் முன், பரத் வேகமாக வெளியேறினான்.

23

"இந்தாங்க மாமா."

காதிலும், கழுத்திலும், கைகளிலும் இருந்த நகைகளைக் கழற்றி சோமசுந்தரத்திடம் நீட்டினாள் சிவகாமி.

"என்னம்மா இது."

"நீலுவை உடனே ஆஸ்பத்திரியில சேர்க்கணும் மாமா. டாக்டர் சொன்னதுக்கு மேல நாளாயிடுச்சு. என் குழந்தையோட உயிரை விட இந்த நகைகள் எனக்கு முக்கியம் இல்லை மாமா." வேறு வழி இல்லாமல் நகைகளை விற்று பணமாக்கினார் சோமசுந்தரம். சுதாவைப் பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்த பரத், நீலுவின் நிலைக்கண்டு பதறினாள். சுதாவைப் பார்த்துவிட்டு வந்ததால் ஏற்பட்ட உணர்வுகள் முற்றிலும் மறைந்து குழந்தையின் உயிரைக் காப்பது மட்டுமே தன் இப்போதைய வேலை என்று உணர்ந்தான்.

ஆம்புலன்ஸை வரவழைத்தான். பானு, சாய்ராம் இருவரும் அழுதுக் கொண்டிருக்க, நீலுவை ஏற்றிக் கொண்டு பறந்தது ஆம்புலன்ஸ்.

24

காற்றோட்டமானதாகவும், வெளிச்சமானதாகவும் இருந்த விசாலமான அறையில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் சௌந்தர்ராஜன். அவருக்கு ஆப்பிள் நறுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் சுதா.

சௌந்தர்ராஜனின் முகத்தில் தென்பட்ட கவலை ரேகைகளைப் பார்த்து தானும் கவலை அடைந்தாள் சுதா.

"என்னங்கய்யா ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?"

"உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லம்மா. உன்னைப் பத்திதான் கவலை..."

"எனக்கென்னங்கய்யா.. நான் நல்லாத்தான் இருக்கேன்..."

"அதை உன் உதடுதாம்மா சொல்லுது. உள்ளுணர்வு சொல்லலை. சுதாம்மா... உன்னோட பழி வாங்கற படலத்தை இதோட நிறுத்திக்கோ. தப்பு செய்றவங்களைக் கண்டிக்கலாம். தண்டிக்கக் கூடாது. பணம் இல்லாம அந்தக் குடும்பம் கஷ்டப்படுது. குழந்தைக்கு வேற பெரிசா உடம்புக்கு பிரச்னைன்னு சொன்னியே... பாவம் இல்லியாம்மா?"

"பரத் செஞ்ச பாவம் இப்ப அவரோட குடும்பத்தை ஆட்டுவிக்குது. இதுக்கு நான் என்னங்கய்யா பண்ண முடியும்?"

"மனுஷன் ஒவ்வொருத்தனும் செய்யற எல்லா செயல்களையும் கடவுள் பார்த்துக்கிட்டுதாம்மா இருக்காரு. தப்பு செய்றவங்களுக்கு அந்தக் கடவுள் தண்டனை குடுக்கட்டும்..."

"நான் என்ன தப்பு செஞ்சேன்னு கடவுள் எனக்கு தண்டனைக் குடுத்தார்...?"

"அதுக்குப் பேர்தான்மா விதி..."

அறையிலிருந்த போன் ஒலித்தது.

"மேடம், பரத்தோட குழந்தை ஆஸ்பத்திரியில இறந்து போச்சாம்."

எதிர்பாராத இந்தத் தகவலால், சுதா நெஞ்சம் கலங்கிப் போனாள். அவள் எதுவும் பேசாமல் ரிஸீவரைக் கையிலேயே வைத்திருப்பதைப் பார்த்து, அவளிடமிருந்து ரிஸீவரை வாங்கினார் சௌந்தர்ராஜன்.

"ஹலோ..." குரல் கொடுத்தார்.

"ஐயா... அம்மா சொன்னபடி பரத்தோட குழந்தைக்கு என்ன ஆச்சுன்னு அந்தக் குடும்பத்துக்குத் தெரியாம பார்க்கப் போனேன். ஆஸ்பத்திரியில சேர்த்த கொஞ்ச நேரத்துலயே அந்தக் குழந்தை செத்துப் போச்சுங்கய்யா..."

"சரி... போனை வை." கூறிய சௌந்தர்ராஜன், சுதாவிடம் திரும்பினார்.

"பார்த்தியாம்மா, உன்னோட பழி வாங்கற படலத்துனால ஒரு உயிர் பலியாயிடுச்சு..."

"நான்...நான்...நான்... இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலீங்கய்யா..." அழுதாள் சுதா.


"இப்ப அழுது என்னம்மா பிரயோஜனம்? ஆரம்பத்துல இருந்து உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன் இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்னு. இந்த ஒரு விஷயத்துல மட்டும் என் பேச்சை நீ கேட்கலை... முகம் தெரியாத அந்நியக் குழந்தைகளுக்குக் கூட இதய ஆப்ரேஷன் அது இதுன்னு பேப்பர்ல வர்ற அறிவிப்பைப் பார்த்துட்டு பணம் அனுப்பறோம். ஆனா..."

அவர் பேசி முடிப்பதற்குள் அழுகை வெடிக்க, அந்த அறையை விட்டு தன் அறைக்கு வந்தாள் சுதா. மேலும் அழுதாள். கல்லாகிப் போன அவளது நெஞ்சம் கலங்கியது.

25

நீலு இறந்து போன சேதி கூட குறித்த நேரத்தில் கிடைக்காமல் டெல்லியில் ஒரு மீட்டிங்கில் இருந்த மோகன் விமானம் பிடித்து சென்னை வந்தான்.

சிவகாமியைப் பார்த்து அவனும் அழுதான். ஆறுதல் கூறினான். வழக்கம்போல சரண்யா மௌனமாக இருந்தாள். அந்த நிலையிலும் மனம் கலங்கவில்லை. துக்கவீட்டு சூழ்நிலையில் குடும்பப் பிரச்சனைகள், சரண்யாவின் அலட்சியம் எதைப்பற்றியும் யாராலும் பேச இயலவில்லை. மோகனும், சரண்யாவும் புறப்பட்டனர்.

26

துக்க வீட்டின் சம்பிரதாங்கள் முடிந்தன. சோறு, தண்ணி இறங்காமல் துவண்டு கிடந்தாள் சிவகாமி. முதுமையின் தளர்ச்சியில், பேத்தியை இழந்த துக்கத்தில் சோமசுந்தரம். பானுவும், சாய்ராமும் தாயின் காலடியில். தலையைத் தாங்கிப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தான் பரத்.

'இவனோட மனசுல வேற ஏதோ பிரச்சனை இருக்கு. ஒரு வாரமாகவே இவன் சரி இல்லை’ யோசித்த சோமசுந்தரம், பரத்தைக் கூப்பிட்டார்.

"பரத்."

"என்னப்பா. வாசல் பக்கம் கொஞ்சம் வாப்பா."

"பரத்... தாய் அறியாத சூல் இல்லைம்பாங்க. அது போல ஒரு தாய் ஸ்தானத்துல இருந்து உன்னை வளர்த்திருக்கேன். உன்னோட வேலை நீக்கம், பணப்பிரச்சனை, நீலுவோட இழப்பு இதையெல்லாம் தாண்டி, உன் மனசுக்குள்ள ஏதோ ஒரு துன்பம் ஒளிஞ்சிக்கிட்டிருக்கு. இல்லைன்னு நீ சொன்னா அது பச்சைப் பொய். உன்னோட பிரச்சனை என்ன? அப்பா கிட்ட சொல்லுப்பா. என்னால முடிஞ்சதை செய்யறேன்...." அப்பா அழ ஆரம்பித்ததும் அவர் காலடியில் சரிந்து உட்கார்ந்தான் பரத். தான் சுதாவைக் காதலித்தது முதல் அவள் அவனைப் பழி வாங்குவது வரை அத்தனையையும் சொல்லி முடித்தான்.

"பெண் குலமே பழிச்சுப் பேசற அளவுக்குப் பழி வாங்கற மனப்பான்மையை வளர்த்துக்கிட்ட அந்தப் பொண்ணு எங்கே இருக்கா?"

சுதாவின் வீடு இருக்கும் அட்ரஸைத் தெளிவாகச் சொன்னான் பரத்.

27

"நீ... நீ... நீயா..."

சுதாவை சந்தித்துப் பேசுவதற்காக அவளது வீட்டிற்குப் போன சோமசுந்தரம் திடுக்கிட்டார். மங்கலான நினைவலைகளில் சுதாவின் முகம் மறக்காமல் இருந்தது அவருக்கு.

"நீங்க யார்னு சொல்லுங்க."

சொன்னார்.

"ஓ... பரத்துக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கீங்களா?"

"இல்லம்மா. உங்கம்மாவோட பணப்பேராசை பத்தி சொல்லி உன் பாவ மூட்டையோட சுமையைக் குறைக்க வந்திருக்கேன்."

"பாவ மூட்டையை சுமக்க வச்சதே உங்க மகன்தானே? உங்கக்கிட்ட பேசிட்டு வர்றதா சொல்லிட்டு போனார். பேசி இருப்பார். நீங்க மறுக்க, உங்க சொந்தக்காரப் பொண்ணைக் கட்டி வச்சுட்டீங்க."

"நீயாவே 'அப்படி இருக்கும்’ 'இப்படி நடந்திருக்கும்’னு யூகிச்சு, அதுதான் நிஜம்னு தப்புக் கணக்கு போடாதே..."

"என் கணக்கு எப்பவும் தப்பாது. நான் ஜெயிச்சுட்டேன்..."

"குடும்பம்ங்கறதும் வாழ்க்கைங்கறதும் ஓட்டப்பந்தயம் இல்லை ஜெயிக்கறதுக்கும், தோல்வி அடையறதுக்கும். இது ஒட்டி உறவாடும் பந்தம். புரிஞ்சுக்க..."

"நீங்கதான் ஒட்டவிடாம வெட்டி விட்டுட்டீங்களே..."

"நடந்த உண்மையை பரத், சொல்ல முயற்சித்தப்ப, அவன் வாயை அடக்கி கண்டபடி பேசி வெளியே அனுப்பிட்ட. அவனுக்கு தன் நிலையை விளக்கறதுக்கு சந்தர்ப்பமே நீ குடுக்கலை. நடந்ததை சொல்றதுக்கு இப்ப எனக்காவது வாய்ப்புக் குடு. உன் அம்மாவை நீ இழந்ததுக்குக் காரணமே என் மகன் பரத்தான்னு சொன்னியாமே. நீ, பரத்தை அடைய முடியாம தவிச்ச தவிப்புகளுக்கெல்லாம் காரணமே உங்க அம்மாதான்..."

"என்ன உளர்றீங்க?..."

"நான் உளறல. உண்மையைத்தான் சொல்றேன்" என்று சொல்ல ஆரம்பித்தவர், தன் மகள் பணக்கார வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசையில் பரத்திடம் சத்தியம் வாங்கியதிலிருந்து, தனக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால்தான் அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது காதல் பற்றி பரத் எதுவும் பேசவில்லை என்பது வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

"உங்க அம்மாவுக்கு குடுத்த சத்தியத்தைக் காப்பாத்தினான் என் மகன். காரணம்? உங்க அம்மா ஆசைப்பட்டபடி நீ செல்வச்சீமான் வீட்டு மருமகளா வாழணும்னு. நீ என்னடான்னா பழி வாங்கறேன்... குழி பறிக்கறேன்னு... எங்களை வேதனைப்படுத்திக்கிட்டிருக்க."

அம்மா, தன்னிடம் பணம்தான் அனைத்துக்கும் பிரதானம் என்று பேசியது நினைவில் தோன்ற, சுதாவின் சிந்தை தெளிந்தது. தன் அம்மா தவறு செய்திருக்க, பரத்திற்கு தண்டனை வழங்கிய குற்ற உணர்வில் வேதனைப்பட்டாள் சுதா.

"என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு அம்மா இல்லை, கணவன் இல்லை, குழந்தையும் இல்லை, எனக்குன்னு யாருமே இல்லைங்கற சுயபச்சாதாப உணர்வுலயும், சில உண்மைகளை புரிஞ்சுக்காம பழி வாங்கற மனப்பான்மையை வளர்த்துக்கிட்டேன். ஆனா இப்பவும் சொல்றேன்... எனக்கே எனக்குன்னு யாருமே இல்லை..."

"இல்லைம்மா. இருக்காங்கம்மா. எங்க பானுதான்மா உன்னோட பொண்ணு. நீ மயங்கிக் கிடந்தப்ப உன்னை யாரோ ஆஸ்பத்திரியில சேர்த்தாங்கன்னு நினைச்சுக்கிட்டிருக்கியே அந்த யாரோ வேற யாரும் இல்லம்மா நான்தான் அது. நீ விட்டுட்டுப் போன உன் குழந்தையை நான்தாம்மா தூக்கிட்டு வந்து வளர்த்துக்கிட்டிருக்கேன். அந்தக் குழந்தைதான் பானு. உன் மகள். இதோ வந்துடறேன்மா."   என்றவர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்று பானுவை அழைத்து வந்தார்.

"என்னை மன்னிச்சுடுங்க. இனி பரத் வாழ்க்கையில நான் குறுக்கிட மாட்டேன். எனக்கு என் மகள் இருக்கா. அது போதும்" கோழி, தன் குஞ்சுகளை அணைப்பது போல பாசத்துடன் பானுவை அணைத்துக் கொண்டாள் சுதா.

பானுவிற்கு சுதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதைப் புரிய வைத்தார் சோமசுந்தரம்.

பரத் மீது சுதாவின் மனதில் ஏற்பட்டிருந்த களங்கத்தைத் துடைத்ததுடன், தன் உண்மையான தாயிடம் பானுவை சேர்ப்பித்து விட்ட சோமசுந்தரம் அமைதி அடைந்தார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.