
சுராவின் முன்னுரை
மலையாளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளரான மாதவிக்குட்டி (Madhavikutty) 1988ஆம் ஆண்டில் எழுதிய ‘மனோமி’ (Manomi) என்ற புதினத்தை அதே பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
மனோமி என்ற சிங்களப் பெண்ணை மையமாகக் கொண்ட கதை இது. இப் புதினத்தை எழுதுவதற்காக மாதவிக்குட்டி எவ்வளவு சிரமப்பட்டிருப்பார், ஆதாரங்களைத் தெரிந்து கொள்வதற்காக எவ்வளவு முயற்சிகள் செய்திருப்பார், இலங்கைக்குச் சென்று நடைபெற்ற சம்பவங்களை எப்படியெல்லாம் நேரில் விசாரித்து தெரிந்து கொண்டிருப்பார் என்பதையெல்லாம் என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காகவே நான் மாதவிக்குட்டியை மதிக்கிறேன்.
‘மனோமி’ புதினம் 2010ஆம் ஆண்டில் ‘ராம ராவணன்’ என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்தது. மனோமி கதாபாத்திரத்தில் மித்ரா குரியன் நடிக்க, கதாநாயகனாக சுரேஷ் கோபி நடித்தார்.
உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
என் பெயர் மனோமி. இந்தியாவில் இருக்கும் என்னுடைய நண்பர்கள் கேட்கலாம் – இது என்ன பெயர் என்று. இது சிங்களக்காரர்களின் பெயரைப்போல இருக்கிறது என்று அவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தால் சரிதான். இது சிங்களக்காரர்கள் தங்களின் பெண்பிள்ளைகளுக்கு சாதாரணமாகவே வைக்கக்கூடிய பெயர்களில் ஒன்றுதான். நான் சிங்களக்காரி தான். நான் இந்தியாவிற்கு வந்திருப்பதற்குக் காரணம் என்னவென்று இனி நீங்கள் கேட்பீர்கள். இந்தியாவிற்கும் இலங்கைக் குமிடையில் நம்பிக்கையில்லாமை உண்டாகியிருக்கிற இந்தக் காலகட்டத்தில் நான் எதற்காக வந்தேன்? என் நோக்கம் விபச்சாரம் செய்வதற்காக இருக்குமோ? உங்களுக்கு பல வகைப்பட்ட சந்தேகங்களும் மனதில் உண்டாகலாம். அதனால் நான் என்னுடைய ஆரம்பகால கதையை உங்களிடம் கூறுகிறேன்.
மாத்தரையில் பிறந்த சரத் டென்னக்கூன் தான் என் தந்தை. கருனெகல என்ற இடத்தைச் சேர்ந்த புண்ணியகாந்திதான் என் தாய். நாங்கள் வெல்லா வாட்டெ என்ற இடத்தில் ஒரு இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஓரளவுக்கு வசதியான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்தப் பகுதியில் முக்கால் வாசிப்பேர் தமிழர்கள். டாக்டர்கள், பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள் எல்லோருமே தமிழர்கள்தான். எல்லோருக்கும் சிங்கள மொழி தெரியும். அவர்களுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களாகவும் குடும்ப நண்பர்களாகவும் நாங்கள் இருந்தோம். சிங்களர்களுக்குத் தமிழ்மொழியைப் புரிந்து கொள்ள முடியும். தட்டுத் தடுமாறி தமிழில் பேசுவதற்கும் தெரியும். அவர்களின் திருவிழாக்களில் நாங்கள் பங்கெடுத்திருக்கிறோம். எங்களுடைய திருவிழாக்களில் அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில், தேர்வில் வெற்றிபெற நானும் என்னுடைய சிங்கள நண்பர்களும் கட்டரகாம கோவிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறோம். இரண்டு இனத்தைச் சேர்ந்தவர்களும் உணவுப் பொருட்களைப் பங்கிடும் எளிமையுடன் கடவுள்களையும் பங்கிட்டுக் கொண்டு வாழ்ந்தார்கள். இடையில் அவ்வப்போது ஒரு சிங்களக்காரன் தமிழர்களின் கருப்பு நிறத்தைப் பற்றியோ, அவர்களின் ரசனையைப் பற்றியோ கேவலமாகப் பேசியிருக்கலாம். தமிழர்கள் சிங்களர்களின் சோம்பேறித் தனத்தைப் பற்றி விமர்சித்திருக்கலாம். ஆனால், அந்த விஷயங்கள் எதுவும் கத்தியைக் கொண்டு குத்துவதில் போய் முடிந்ததில்லை. என் வீடு மிகவும் அமைதியாக இருந்தது. எங்களுடைய பக்கத்து வீட்டில் அண்ணாதுரையின் குடும்பம் இருந்தது. அண்ணாதுரை மாமாவின் மனைவி சிவகாமியையும், பிள்ளைகள் பிரகாசம், ரூபாவதி, சுந்தரம் என்கிற மூவரையும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் நான் நினைத்தேன். என் தந்தையும் அண்ணாதுரை மாமாவும் தினமும் மாலை நேரங்களில் எங்கள் வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டு விஸ்கி பருகிக் கொண்டிருப்பார்கள். அண்ணாதுரை மாமா சொந்தத்தில் வியாபாரம் செய்வதற்காக ஒரு இடம் வாங்கப் பணமில்லாமல் சிரமப்பட்ட போது, என் தந்தை என் தாயின் ஒரு டஜன் தங்க வளையல்களையும், மூன்று இழைகளைக் கொண்ட மணிமாலையையும் அவருக்குப் பரிசாகத் தந்த கதையை நான் பல தடவை அவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். அந்தக் கடனை திரும்பச் செலுத்தும் விஷயத்தை ஆரம்பித்தபோது, என் தந்தை சொன்னார்:
“அண்ணா, அந்தக் கடன் தீர்க்கப்பட வேண்டிய கடன் இல்லை.”
அண்ணாதுரை மாமா அதற்குப் பிறகு நல்ல வசதி படைத்த மனிதராக மாறினார். அவர் இலங்கையில் தொழிற்சாலை ஆரம்பித்தார். நான்கு வருடங்களுக்குப் பிறகு அதை விற்றுவிட்டு சென்னைக்குப் புறப்பட்டார். தன்னுடைய சொந்த நாட்டில் சில இளைஞர்களுக்கு வேலை கொடுக்கத் தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று ஒரு கடிதத்தில் அவர் என் தந்தைக்கு எழுதியிருந்தார். என் தந்தை அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு சிரித்தார்.
“இலங்கையும் அவருக்குச் சொந்தமான நாடாகத்தானே இருந்தது!”- என் தந்தை சொன்னார். அவர்கள் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக் கொண்டார்கள். வருடத்தில் இரண்டு கடிதங்கள்... குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் ஊரில் இருப்பவர்களைப் பற்றியும் விளக்கமாக எழுதப்பட்ட இரண்டு கடிதங்கள்... அந்த உறவில் சிறிதும் பாதிப்பு உண்டாகவில்லை. 1983-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரைக் கொன்றபோதும், சிங்களர்கள் தமிழர்களை நெருப்பிட்டு எரித்தபோதும் அந்த நட்புறவில் சிறிதும் மாற்றம் உண்டாகவில்லை. அதற்குக் காரணம்- அவர்கள் இருவரும் மனித அன்பில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். நாடு, மதம், இனம் ஆகிய விஷயங்களைத் தாண்டி அவர்கள் அன்புமீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். பிரகாசம், ரூபாவதி, சுந்தரம் ஆகியோர் மீது என் தந்தை தன்னுடைய சொந்தப் பிள்ளைகள் மீது வைத்திருந்ததைப் போலவே அன்பு செலுத்தினார். அண்ணாதுரை மாமாவிற்கு நான் எப்போதும் அன்பிற்குரிய மகளாக இருந்தேன். என்னுடைய தந்தைக்கு 1974-ஆம் ஆண்டிலிருந்து ஒரு கெட்ட நேரம் ஆரம்பமானது. ஒரு பெண் துறவியைப் போல புனிதமான வாழ்க்கை நடத்திய என் தாய் மூன்று நாட்கள் மட்டுமே நீடித்த மூளைக் காய்ச்சலில் மரணத்தைத் தழுவிவிட்டாள். அதற்குப் பிறகு என்னை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறுவதற்கே என் தந்தை பயந்தார். அதன் காரணமாக, என் தந்தையின் இரும்புக் கடையில் வந்து கொண்டிருந்த வருமானம் குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் கடையை வேறொரு மனிதருக்கு விற்றுவிட்டு, அதன்மூலம் கிடைத்த பணத்தை வங்கியில் போட்டு விட்டு, அதிலிருந்து கிடைத்த வட்டியை வைத்து நானும் என் தந்தையும் சிக்கனமாக செலவுகள் செய்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தோம். என் தந்தைக்கு சயரோகம் பாதித்தபோதுதான், வறுமையின் கொடுமையை முதல் தடவையாக நான் உணர்ந்தேன். காட்டு முருங்கை இலைகளைக் கொண்டு குழம்பு வைத்து என் தந்தைக்குப் பரிமாறியபோது, என் கண்களிலிருந்து கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தது. என் தந்தைக்கு ருசியாக இருக்கும் வண்ணம் எதையாவது குழம்பு வைத்துக் கொடுத்தால், மருந்துக்காக ஒதுக்கி வைக்க வேண்டிய பணம் உடனடியாக செலவழிந்து விடும். அதனால் கொஞ்சம் மீன் சட்னியையும் முருங்கைக் குழம்பையும் சாதத்துடன் சேர்த்து நான் தினமும் என் தந்தைக்குப் பரிமாறினேன். என் தந்தை மிகவும் மெலிந்து, கறுத்துப் போய் தோன்றினார்.
“அண்ணாதுரை மாமாவுக்கு, உங்களுக்கு உடம்புக்கு சரியில்லைன்னு கடிதம் எழுதப் போறேன்” – நான் ஒரு நாள் என் தந்தையிடம் சொன்னேன். அண்ணாதுரை மாமாவின் உதவியை நாடுவதில் எந்தவித அவமானமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், ‘வேண்டாம்’ என்று என் தந்தை தடுத்துவிட்டார்.
என் தந்தை இறுதியாக எழுதிய கடிதத்தில் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. கொழும்பில் ஒரு காலத்தில் வசித்த இந்தியர்களின் எண்ணிக்கை 2,00,000 ஆக இருந்தது என்றும்; அவர்களில் 1,20,000 பேரைத் தவிர, மீதி அனைவரும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழப் போய்விட்டார்கள் என்றும் என் தந்தை எழுதினார்.
ஒவ்வொரு நாளும் நூறு தமிழர்களாவது இந்தியாவிற்கு அகதிகளாகப் போய்க் கொண்டுதான் இருக்கிறார்களென்றும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். இந்த இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வோ ராணுவம் மூலமான தீர்வோ சாத்தியமே இல்லை. அதையும் தாண்டிய ஒரு தீர்வே சரியாக இருக்கும். ‘நீயும் நானும் ஒருவரையொருவர் வெறுக்க முடியுமா அண்ணா?’ என்று என் தந்தை எழுதினார். எழுதும்போது என் தந்தையின் கலங்கியிருந்த கண்களை நான் பார்த்தேன்.
“அண்ணாதுரை எந்த சமயத்திலும் உன்னைக் கைவிட மாட்டார் மகளே. எனக்கு ஏதாவது நடந்தால் நீ எவ்வளவு சீக்கிரமா போக முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா சென்னைக்குப் போயிடணும். அண்ணாவை உன் தந்தையா நினைச்சு அவருடைய வீட்டில் போய் தங்கணும். உன்னை பொருத்தமான ஒரு ஆளுக்கு அவர் திருமணம் செய்து வைப்பார். நம்முடைய உறவினர்கள் யாரையும் என்னால நம்ப முடியவில்லை. அண்ணாவை நான் நம்புறேன்” என்றார் என் தந்தை. அன்று நான் என் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, நீண்ட நேரம் தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருந்தேன். மூன்று மாதங்கள் தொடர்ந்து என் தந்தைக்கு ஸ்ட்ரெப்ரோமைன் ஊசி போடப்பட்டது. பதினெட்டு மாதங்கள் சயரோகத்திற்கான மாத்திரைகளைச் சாப்பிட்டார். எனினும், என் தந்தை மரணத்தைப் பற்றிப் பேசியபோது, என்னுடைய நல்ல எதிர்பார்ப்புகள் அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விழுவதைப்போல் நான் உணர்ந்தேன்.
“அப்பா, உங்களுக்கு மீண்டும் உடல்நலம் நல்ல நிலைமைக்கு வரும் என்றுதானே டாக்டர் விஜயநாயக சொன்னாரு? பிறகு எதற்கு இப்படியெல்லாம் வாய்க்கு வந்ததையெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”
“டாக்டர்களால் விதியை சிகிச்சை செய்து மாற்ற முடியுமா மகளே?”
என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, எங்களுடைய பக்கத்து வீட்டுக்காரரின் மூத்த மகன் நிஸ்ஸாம்க என்னிடம் சொன்னான்:
“மனோமி, நீ இந்தியாவிற்குப் போகக்கூடாது. இது.... எங்களின் – சிங்களர்களின் மானப் பிரச்சினை. ஒரு சிங்கள இளம் பெண்ணைப் பத்திரமாக வைத்துக் காப்பாற்ற இலங்கையில் ஆண்களே இல்லை என்று நீ நினைக்கிறாயா? உன்னை நான் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கேன். சின்ன வயசுல இருந்தே நாம ரெண்டு பேரும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்கள் ஆச்சே!”
“என் தந்தை கூறியபடி நடக்காமல் இருக்க என் மனம் அனுமதிக்காது. நான் மூன்று மாதங்கள் அங்கு தங்குவேன். அதற்குப் பிறகு என் எதிர்காலத்தை எந்த நாட்டில் செலவழிக்க வேண்டியது என்பதைப் பற்றி நான் தீர்மானிக்கிறேன். நிஸ்ஸாம்க, உங்களை நான் தினமும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பேன்.”
“நான் கல்லூரியில் படிக்காதவனாக இருப்பதால், என்னைத் திருமணம் செய்து கொள்ள நீ தயங்குகிறாயா?”
“நிச்சயமா இல்ல. நான் இந்தியர்கள்மீது அன்பு செலுத்தி வளர்ந்தவள். இந்தியர்களைப் பிறவி எதிரிகளாக நினைக்க எனக்கு மனம் வரவில்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும், என்னால் யாரையும் வெறுக்க முடியவில்லை. என் ரத்தத்தில் காலத்திற்கேற்றபடி வெப்பம் உண்டாகவில்லை. இந்தியாவில் புலிகளுக்காக இருபது பயிற்சி முகாம்களை எல்.டி.டி.ஈ. தலைவர் பிரபாகரன் இந்திய அரசாங்கத்தின் மற்றும் முதலமைச்சர் ராமச்சந்திரனின் அனுமதியுடன் தமிழ்நாட்டில் ஆரம்பித்திருக்கிறார் என்று என்னிடம் சமீபத்தில் ஒரு நாள் சொன்னீங்க. உங்களுடைய கண்களில் இருந்து நெருப்புப் பொறிகள் உண்டாவதைப் போல் அன்று நான் உணர்ந்தேன். அதற்குப் பிறகும் இந்தியர்கள்மீது என் மனதில் கோபம் உண்டாகவில்லை. நான் அமைதியாக இருந்தேன். அன்னைக்கு நீங்க என்னைப் பார்த்து ‘மனோமி, நீ யார் பக்கம் இருக்குறே? எங்கள் பக்கமா இந்தியர்கள் பக்கமா?’ என்று கேட்டீங்க.
‘நான் இரண்டு பக்கங்களில் இருப்பவர்களையும் ஒன்றாகவே பார்க்கிறேன்’ என்று அந்த நிமிடத்தில் உங்களிடம் கூறுவதற்கான தைரியம் என்னிடம் இல்லாமல் போய்விட்டது. அதனால், நான் இப்போது அந்த உண்மையை மனம் திறந்து கூறுகிறேன். நிஸ்ஸாம்க, இந்தியர்களையும் சிங்களர்களையும் நான் ஒன்றாகவே நினைக்கிறேன். நான் யாரையும் வெறுக்கவில்லை” என்று நான் சொன்னேன். நிஸ்ஸாம்க என்னை அனுப்பி வைக்கக் கூட வரவில்லை. இந்தியா மீது கொண்டிருக்கும் பகைமை ஒரு தொற்று நோயைப் போல இலங்கையில் பரவிவி்ட்டிருந்தது. நெற்றியில் செந்தூரத் திலகம் வைத்து வெளியில் செல்ல பெண்கள் பயப்படத் தொடங்கியிருந்தார்கள். இந்தியப் பெண்களும் சிங்களப் பெண்களின் பாணியில் புடவைகளை அணிய ஆரம்பித்தார்கள். இளம் பெண்கள் பர்கர் இனத்தவரைப் போல ஆடைகள் அணிந்தார்கள். செய்தித் தாள்களும், சுவரொட்டிகளும், சுவர் எழுத்துக்களும் இந்திய அரசாங்கத்தை எதிர்த்தன. இளைஞர்கள் இந்திய தூதரகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். இந்திய அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் வறுமையில் சிக்குண்டு கிடப்பவர்களுக்கு அரிசி, பால்பொடி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை விமானத்தின் மூலம் விநியோகம் செய்தபோது, சிங்களர்கள் கடுமையாக கோபப்பட்டார்கள். ஒரிஸ்ஸாவிலும் பீஹாரிலும் வறுமையில் உழன்று கொண்டிருப்பவர்கள் அழுது கொண்டிருக்கும்போது, இந்திய அரசாங்கம் எதற்காக இலங்கைக்கு உணவைக் கொண்டு வந்து வினியோகம் செய்கிறது என்று இளைஞர்கள் கேட்டார்கள். தமிழ் தீவிரவாதிகளை ஆதரித்துப் போற்றி, அவர்களுடைய அமைப்பை வெற்றி பெறச் செய்வதற்குத்தான் இந்தியா இப்படிப்பட்ட ஒரு தந்திரச் செயலைச் செய்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள். இளைஞர்களின் ஒரு அமைப்பின் தலைவர் என்னிடம், “மனோமி, உங்களுடைய தந்தையைக் கொன்றது சயரோகம் இல்லை. முதுமையும் அல்ல. தமிழ் தீவிரவாதிகள்தான் அவரைக் கொன்னுட்டாங்க. கட்டரகாமாவிற்கு வழிபாடு செய்வதற்காகப் போயிருந்த உங்களின் தந்தை மீது வெடிகுண்டு வீசிக் கொன்றது தமிழ்த் தீவிரவாதிகள்தான் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியும். எனினும், நீங்கள் சென்னைக்குப் போறதுல மிகவும் ஆர்வமா இருக்கீங்க. உங்களுடைய இந்த மனநிலை மிகவும் வினோதமா இருக்கிறது” என்று சொன்னார். சென்னைக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நின்றிருந்தபோது, என் இதயம் பயத்தால் மிகவும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. எமிக்ரேஷன் கவுண்டரில் நின்றிருந்த ஒரு அதிகாரி என்னிடம் கேட்டார்:
“இதற்கான கால அளவு மூன்று மாதங்கள். என்ன தேவைக்காக இந்த மோசமான நேரத்துல நீங்கள் இந்தியாவுக்குப் போறீங்க? நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை.”
“நான் சாரநாத்தையும் புத்த கயாவையும் பார்க்க விரும்புகிறேன். என் தந்தை தன்னுடைய மரணத்திற்கு முன்னால், நான் அங்கு சென்று அவருடைய ஆன்மாவுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்”- நான் சொன்னேன். அதைக் கூறும்போது என் இதயம் மிகவும் பலமாக அடிப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.
என் தொண்டை வறண்டு போய்விட்டது. விமானம் மேலே உயர்ந்த பிறகுதான் என்னுடைய சுவாசமே சரியான நிலைக்கு வந்தது. அண்ணாதுரை மாமா மற்றும் அவருடைய பிள்ளைகள் ஆகியோரிடம் போய்ச் சேர்ந்ததும், பாதையில் இருக்கும் கோவிலை அடைந்த பயணியைப் போல, பலமணி நேரங்கள் எல்லா கவலைகளையும் மறந்துவிட்டு நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அச்சத்தில் சிக்குண்டு கிடக்கும் மனிதர்களின் வேதனைச் சத்தங்கள் காதில் விழாமல் மீண்டும் வாழ நான் விரும்பினேன். மகாத்மா காந்தியின் நாட்டிலாவது மன அமைதி கிடைக்கும் என்று நான் நினைத்தேன். உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் புதிய மதமான தீவிரவாதம் பரவிவிட்டிருக்கிறது. அதாவது – இம்சை! அகிம்சா மூர்த்தியான மகாத்மா காந்தி வாழ்ந்த நாட்டிலாவது அகிம்சை நிலவிக் கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன்.
விமான நிலையத்திற்கு அண்ணாதுரை மாமாவும் ரூபாவதியும் வந்திருந்தார்கள். பருமனான தன் உடலைத் தாங்குவதற்கு எங்கே தன்னுடைய கால்களுக்கு பலமில்லாமல் போய்விடுமோ என்று பயந்தோ என்னவோ, மாமா உருண்டையான ஒரு ஊன்றுகோலை வலதுகையில் இறுகப் பிடித்திருந்தார். முடி முழுமையாக நரைத்து விட்டிருந்தது. ரூபாவதி கறுப்பு நிறத்தில் ஒரு அழகியாக இருந்தாள். அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற விஷயத்தை முதல் பார்வையிலேயே நான் தெரிந்து கொண்டேன். ஐரோப்பிய முறையில் ஆடைகள் அணிந்திருந்த என்னுடைய முழங்காலுக்குக் கீழே தெரிந்த பகுதிகளை ரூபாவதி புருவத்தைச் சுருக்கிக் கொண்டு பார்ப்பதை நானும் பார்த்தேன்.
“புடவையை அணிந்து கொண்டு ஒரு இந்தியப் பெண்ணைப் போல கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால்தான் இந்த ஆடைகளை அணிந்தேன்” – நான் சொன்னேன்.
“இந்த நீலநிற ஆடை உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கு”- மாமா என் கன்னத்தைத் தடவிக் கொண்டே சொன்னார்: “நீ எவ்வளவு வளர்ந்துட்டே! பார்க்குறப்போ புண்ணியகாந்தியைப் பார்க்குற மாதிரியே இருக்கு. அதே நிறம்... அதே உயரம்.... அதே தலை சீவல்...”
“மனோமிக்கு அவளோட தாயின் நிறம் கிடையாதுன்னு நீங்க சொன்னீங்களே அப்பா?”- ரூபாவதி தன் தந்தையிடம் கேட்டாள்.
“சின்ன பிள்ளையா இருக்குறப்போ மனோமிக்கு இப்போ இருக்குற நிறம் இல்லைதான்.”
“பயத்துனால வெளுத்துப் போயிட்டேன் மாமா”- நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
“இனி எந்தச் சமயத்திலும் நீ பயப்படுற மாதிரியான சூழ்நிலையே வராது. உனக்கு இந்த மாமாவான நான் இருக்கேன். உன்னைப் பத்திரமா பாத்துக்கிறதுக்கு இரண்டு சகோதரர்கள் இருங்காங்க. பிரகாசமும், சுந்தரமும் நீ வருவதை எதிர்பார்த்து வீட்டுல இருப்பாங்க. அவங்க மதிய உணவிற்காக வீட்டுக்கு வந்திருப்பாங்க”- மாமா சொன்னார்.
மாமாவின் காரும் சீருடை அணிந்த ஓட்டுநரும் அவருடைய குடும்பத்தின் பொருளாதார வசதியை வெளிக்காட்டின. வீட்டிற்குச் செல்லும் வழியில் வானத்தில் நின்று கொண்டிருந்த புகைப்படலத்தைச் சுட்டிக் காட்டியவாறு மாமா சொன்னார்:
“அந்தப் புகைக்குக் கீழேதான் என்னுடைய தொழிற்சாலை இருக்கு. நான் நூற்றி இருபத்து இரண்டு பேருக்கு சம்பளம் தர்றேன். அந்த வகையிலாவது மக்களுக்கு உதவுறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே!”
ஓட்டுநருக்கு இடது பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞன் தன்னுடைய மூக்காலோ நாக்காலோ ஒரு கொடூரமான சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தான். அது ஒரு கேவலமான செயல் என்று நான் நினைத்தேன். ஆனால் மாமா எதையும் தெரிந்து கொள்ளாதது மாதிரி தான் மக்கள் மீது கொண்டிருக்கும் அன்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
முன் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன், ரூபாவதியின் கணவனாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ரூபாவதி பிராமணனான மூர்த்தியைத் திருமணம் செய்திருக்கிறாள் என்ற விஷயத்தை மிகுந்த பெருமையுடன் ஒருமுறை மாமா என் தந்தைக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தார். பிராமணர்கள் மீது கொண்டிருக்கும் எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்தாலும், குடும்பத்தில் மருமகனாக ஒரு பிராமணன் வந்து சேர்ந்ததற்காக மாமா மனதில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் என்பதை அப்போதே நாங்கள் புரிந்து கொண்டோம். முதலாவதாக – மூர்த்தியின் ஜாதி. இரண்டாவதாக – அவனுடைய பொன்நிறம். மூன்றாவதாக – அவனுடைய அறிவு சார்ந்த வாழ்க்கை. மூன்று காரணங்களால் அந்தத் திருமணம் அண்ணாதுரை மாமாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. வரதட்சணையாக யாரும் கேட்காமலே இரண்டு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தையும், ஒரு பென்ஸ் காரையும், ஐந்து லட்சம் ரூபாய்களையும் தன்னுடைய மருமகனுக்குத் தந்ததாக மாமா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த பிராமண இளைஞனின் நடவடிக்கைகளில் எனக்கு சிறிது கோபம் கூட உண்டானது. அவன் என்னைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவோ புன்னகைக்கவோ கூட இல்லை. நன்கு படித்திருக்கும் இளைஞர்களிடம் இருக்கக்கூடிய நடவடிக்கைகள் எதுவும் மூர்த்தியிடம் இல்லை.
“விமானப் பயணம் சுகமாக இருந்ததுல்ல?” - மாமா என்னிடம் கேட்டார்.
“நினைத்திருந்த அளவிற்கு சிரமம் கொண்டதாக இல்லை. இது என்னுடைய முதல் விமானப் பயணம். விமானம் திடீரென்று மேலே உயர்ந்தபோது பயத்தால் என்னுடைய நாடி நரம்புகளெல்லாம் ஒடுங்கிவிட்டன. விமானப் பணிப்பெண்கள் மிகவும் அழகு படைத்தவர்களாக இருந்தார்கள். ஆனால், நான் ஒரு சிங்களப் பெண் என்பது தெரிந்து விட்டதாலோ என்னவோ, அவங்க என்னைப் பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.”
“சிங்களப் பெண் என்பதை அவங்க எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள்?”- ரூபாவதி கேட்டாள்.
“அது மிகவும் சாதாரண விஷயம். இந்தியப் பெண்களிடம் இருக்கக் கூடிய உருவ அழகு எங்களுக்கு இல்லை. எங்களுடைய தலை முடிக்கு மினுமினுப்பு குறைவு”- நான் சொன்னேன். ரூபாவதியைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் சாதாரணமாக அதைச் சொன்னேன். ஆனால், அவள் அதைப் புரிந்து கொள்ளாமல் புன்னகைத்தாள்.
“மனோமி, நீ அந்த அளவுக்கு அழகற்றவள் அல்ல”- அவள் சொன்னாள்: “பார்ப்பதற்கு அப்படியொன்றும் மோசம் இல்லை. உன் உடல் இன்னும் கொஞ்சம் சதைப்பிடிப்புடன் இருந்தால், நீ அழகான பெண்ணாக மாறிடுவே... உன் தலைமுடி ரொம்பவும் சுருண்டு போய் இருக்கு. சுருட்டை முடியை இப்போ யாரும் விரும்புறது இல்லை. அது நாகரிகமற்ற மனித இனத்தின் அடையாளம் என்று நினைக்கிறார்கள். வேணும்னா நான் உன்னை அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்று, உன் தலைமுடியில் இருக்கும் சுருட்டையை முழுமையாக எடுத்துவிடும்படி செய்யறேன். அதற்குப் பிறகு நீ பார்க்குறதுக்கு அழகான இருப்பே.”
“ரூபா, நீ என்ன இப்படிப் பேசுறே?”- மாமா வெறுப்புடன் கேட்டார்: “மனோமியின் தலைமுடி மிகவும் அழகாக இருப்பதாக நான் நினைக்கிறேன். அவளுடைய தாயின் தலைமுடியும் சுருள் சுருளாகத்தான் இருக்கும். எந்தச் சமயத்திலும் தலைமுடியைச் சரிபண்ண வேண்டும் என்று நீ இவளை அழகு நிலையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது.”
“அப்பா, உங்க குரலில் ஒரு உரிமையாளரின் ஈடுபாட்டை நான் உணருகிறேன். மனோமியின் தலைமுடியின் சுருள் தன்மையைச் சரி பண்ணுகிற விஷயத்திற்காகவோ, தலைமுடியைக் குறைப்பதற்காகவோ நீங்க எதற்கு சங்கடப்படணும் அப்பா? மனோமி ஒரு சுதந்திரமான பெண்ணல்லவா? சட்டப்படி அவள் மீது உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லையே!” - ரூபாவதி அழுத்தத்துடன் சொன்னாள்.
நாக்கு நுனியால் மீண்டும் ஒரு வினோதமான சத்தத்தை மூர்த்தி உண்டாக்கினான்.
“சட்டப்படி மனோமி மீது எனக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம்” – மாமா சொன்னார்: “ஆனால், தார்மிக ரீதியான சில உரிமைகள் எனக்கு இருக்கே!”
“தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைப் பற்றி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருப்பதுண்டு”- ரூபாவதி சொன்னாள்.
“மாமா, எனக்காக நீங்களும் ரூபாவும் எந்தச் சமயத்திலும் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. என்னுடைய வரவால்... மாமா, உங்க குடும்பத்துல சண்டை உண்டாகும்னு தெரிஞ்சிருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன்.”
“நாங்கள் சண்டை போடல மனோமி”- மாமா சொன்னார்: “ரூபாவுக்கு இது ஒன்பதாவது மாதம். அவளுடைய நரம்புகள் தளர்ந்துபோய் இருக்கின்றன. இது முதல் பிரசவம் ஆச்சே!”
ரூபா அடுத்த நிமிடம் குனிந்து, தன்னுடைய முகத்தைக் கையால் மறைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். நான் அவளுடைய தோள்களை இறுக அணைத்துக் கொண்டேன். அவளுடைய வேதனைக்குக் காரணம் நான்தான் என்ற நினைப்பு என்னை கவலை கொள்ளச் செய்தது. என்மீது இந்த அளவிற்கு விரோதத் தன்மை அவளிடம் இருக்கும் என்பதை நான் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. சிறு வயதில் இருக்கும்போது அவளும் சுந்தரமும் என்னுடன் சேர்ந்து திருடனும் போலீஸும் விளையாட்டு விளையாடும்போது, என்னை அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அதிலிருந்து விலகிப் போக நினைப்பாள் அவள். அவளை ரூபா என்று அழைக்கக் கூடாது என்று மாமா பலமுறை அப்போது என்னிடம் கூறியிருக்கிறார். ‘ரூபாவை நீ அக்கா என்றும்; சுந்தரத்தை அண்ணா என்றும் அழைக்கணும்’ என்று கூறுவார் மாமா. ‘நான் தமிழ்ப் பெண் இல்லையே!’ என்று பதில் கூறியவாறு எல்லா நேரங்களிலும் நான் ஓடித் தப்பித்துக் கொள்வேன்.
“ரூபா அக்கா, நீ ஏன் இப்படி அழறே? உன் கவலையைப் போக்க நான் என்ன செய்யணும்?” - நான் கேட்டேன். அவள் என் வலது கையைத் தடவ மட்டும் செய்தாள்.
“கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹிஸ்டீரியா இருப்பது வழக்கம் என்று நான் நூல்களில் படிச்சிருக்கேன்”- மூர்த்தி சொன்னான். அவனுடைய கண்கள் அப்போதுகூட கண்ணாடியில் என்னைத் தேடிக் கொண்டிருந்தன.
சுந்தரத்தையும் பிரகாசத்தையும் பார்ப்பதற்கு நான் மிகவும் ஆவலாக இருந்தேன். 1974-ஆம் ஆண்டில் மாமாவின் குடும்பம் எங்களிடம் விடைபெற்றுப் பிரிந்து சென்றபோது, பிரகாசத்திற்கு பதினேழு வயதும், சுந்தரத்துக்கு பத்து வயதும், ரூபாவிற்கு பனிரெண்டு வயதும், எனக்கு எட்டு வயதும் இருக்கும். காலம் அவர்களிடம் உண்டாக்கிய மாற்றங்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற விருப்பமும், அவர்கள் ஆண்களாக இருக்கும் ஒரே காரணத்தால் அவர்களைப் பார்ப்பதற்கு சிறிது வெட்கமும் ஒரே நேரத்தில் என் மனதில் தோன்றின.
“மாமா, சுந்தரத்திற்கும் பிரகாசத்திற்கும் உங்க அளவுக்கு உயரம் இருக்குமா?”- நான் கேட்டேன்.
“என்னைவிட அவர்களுக்கு உயரமும் பருமனும் இருக்கு. பிரகாசத்தின் பிள்ளைகளுக்கும் நல்ல உயரம். ஆறு வயதான பிரதீப் இப்பவே என் தோள்வரை இருப்பான்”- மாமா சொன்னர்.
“வளர்ச்சிக்கான ஹார்மோனைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீங்கள்ல? அதை பிரகாசமும், வேதவல்லியும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்கும் பாலில் கலந்து தர்றாங்க”- உரத்த குரலில் சிரித்தவாறு மூர்த்தி சொன்னான்.
“மாமா, இது பொய்தானே?”- நான் கேட்டேன்.
“இங்கே சிறிது காலம் தங்கியிருக்கும்போது...”- ரூபா சொன்னாள்: “உனக்குப் புரியும். என் மூர்த்தியின் வாயில் இருந்து உண்மையான வார்த்தைகள் மிகவும் அபூர்வமாகத்தான் வெளியே வரும் என்பதை நீயே தெரிஞ்சுக்குவே.”
அழுகை முடிந்து, கண்ணீரின் அடையாளங்கள் முழுமையாக நீங்காமல் இருந்த அந்த முகத்தில் மலர்ந்த புன்சிரிப்பு மிகவும் அழகாக இருப்பதைப்போல் நான் உணர்ந்தேன்.
“ரூபா... நான் உங்க எல்லோருடனும் சேர்ந்து வாழுறப்போ, என்னுடைய எல்லா கவலைகளையும் நான் மறந்துவிடுவேன்”- நான் சொன்னேன்.
“ஆமா மனோமி... நீ எல்லா கவலைகளையும் மறக்கணும். இன்னையில இருந்து உனக்கு புதிய ஒரு வாழ்க்கை ஆரம்பமாகுது”- மாமா சொன்னார். அந்த நிமிடத்தில் மீண்டும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மூர்த்தி கோழிகள் கத்துவதைப் போல ஒரு சத்தத்தை உண்டாக்கினான்.
“இந்தியாவில் வாழ்வதாக இருந்தால், புதிய ஒரு பிறவியே எடுக்கணும்”- மூர்த்தி சொன்னான்: “சிங்களர்களை உயிருடன் புதைக்க வேண்டும் என்று தமிழர்கள் சத்தியமே பண்ணியிருக்காங்க.”
நான் அப்போதும் உரக்க சிரித்தேன். விஷயத்தின் தீவிரத் தன்மையை அப்போதுகூட நான் புரிந்து கொண்டிருக்கவில்லை.
மாமாவின் வீடு அடையாறு கலாச்சேத்ரா காலனிக்கு அருகில் இருந்தது. அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்தின் நடுப்பகுதியில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த ஒரு பெரிய கட்டிடம்... கார் போர்ட்டிக்கோவில் போய் நின்றவுடன் ஓடி வந்தது அவளுடைய பிள்ளைகள் அல்ல – ராஜம்மா என்ற வயதான பெண்தான். அவள் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கேட்டாள்: “மனோமி... மகளே... இந்தக் கிழவியை ஞாபகத்தில் இருக்குதா?”
அவள் மாமாவின் மகளுக்கு ஆயாவாக இருந்தாள். இலங்கையில் என் தாய்க்கு தமிழ் கற்றுத் தந்தவள் ராஜம்மாதான். நான் அவளின் தாம்பூலம் கமழ்ந்து கொண்டிருந்த கன்னத்தில் முத்தமிட்டேன்.
“ராஜம்மா, உங்களிடம் எந்தவித மாறுதல்களும் உண்டாகவில்லை. நீங்க முன்னாடி இருந்ததைவிட ரொம்பவும் அழகா இருக்கீங்க.”
“ராஜம்மா இன்னைக்குக் காலையில் மவுண்ட் சாலையில் இருக்கும் ஒரு அழகு நிலையத்திற்குப் போய் ஒப்பனை பண்ணிக்கிட்டாங்க”- மூர்த்தி சொன்னான். அந்த வாக்கியத்தின் முடிவில் அவன் வாயைத் திறந்து ஹா... ஹா... ஹா... என்று சிரிக்கவும் செய்தான்.
வரவேற்பறையில் பொன்நிறத்தைக் கொண்ட ஃப்ரேமிற்குள் அத்தையின் படம் தொங்கிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.
அதற்குக் கீழே சிவப்பு பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த முக்காலியில், சந்தனத்திரி எரிந்த பாத்திரங்களும் மலர்களும் இருப்பதை நான் பார்த்தேன். ரூபாவிற்கு அவளுடைய இறந்துபோன தாயின் சாயல் இருப்பது வெளிவாகத் தெரிந்தது.
“ரூபா அக்கா, உனக்கு உன் தாயின் அழகு அப்படியே இருக்கு”- நான் சொன்னேன்.
“தேநீரா, காஃபியா?”- ராஜம்மா கேட்டாள்.
“தேநீர்... ஒரு இலங்கையைச் சேர்ந்த பெண்ணுக்குத் தேநீர் இல்லாமல் வேறு எதைக் கொடுத்து உபசரிக்க முடியும்?”- நான் அந்த வயதான கிழவியிடம் கேட்டேன்.
“பிரகாசமும் வேதவல்லியும் பிள்ளைகளும் சுந்தரமும் இங்கே இருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன்”- மாமா சொன்னார்.
“பிரகாசமும் வேதமும் பிள்ளைகளும் ஆங்கிலத் திரைப்படம் பார்க்கப் போயிருக்காங்க. சாப்பாட்டுக்கு அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சுந்தரத்தைத் தேடி சில அரசியல்வாதிகள் வந்தாங்க. அவங்க சுந்தரத்தை அழைச்சிட்டுப் போயிட்டாங்க. மதிய உணவுக்கு வரமாட்டேன்னு சுந்தரம் சொல்லியாச்சு.”
அவர்கள் என்னை வரவேற்க வீட்டில் இல்லாமல் போனது குறித்து நான் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால், நான் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு மாமாவின் வீட்டையும் சுற்றுப் புறங்களையும் நடந்தே பார்த்தேன்.
“இது ஒரு அரண்மனை மாதிரியே இருக்கு!” - நான் மாமாவிடம் சொன்னேன். அண்ணாதுரை மாமாவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
அண்ணாதுரை
மனோமி இலங்கையிலிருந்து எங்களின் வீட்டிற்கு வரப் போகிறாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட நிமிடத்திலிருந்து என்னுடைய மூன்று பிள்ளைகளும் என்னுடன் சண்டை போட ஆரம்பித்தார்கள். பிரகாசம் பிறந்ததிலிருந்தே கோப குணத்தைக் கொண்டவனாக இருந்தான். அந்தக் காரணத்தால்தான் இருக்க வேண்டும். அவன் உணவு சாப்பிட உட்கார்ந்தபோது, தன்னுடைய சாப்பாட்டுத் தட்டை எடுத்துத் தரையில் எறிந்து அதை நொறுக்கிவிட்டான். சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த ராஜம்மா பதைபதைப்பு அடைந்து சமையலறைக்குள் ஓடினாள். தான் சமையல் செய்த உணவுப் பொருட்கள் பிடிக்காமல் போனதால், பிரகாசம் சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்து உடைத்துவிட்டானோ என்று அந்த வயதான கிழவி தவறாக நினைத்து விட்டாள். தாய் இல்லாத குழந்தைகளைப் பொன்னைப் போல பார்த்து வளர்த்த தன்மீது இந்த அளவிற்குக் கோபமா என்று அவள் அழுது கொண்டே கேட்டாள்.
அமைதியாக உட்கார்ந்து உணவு சாப்பிட நான் முயற்சித்தேன்.
“மனோமிக்கு இனிமேல் என்னை விட்டால் வேறு யாருமில்லை”- நான் சொன்னேன். பிள்ளைகளுக்கு என்னுடைய பழைய வரலாறு நன்றாகத் தெரியும். எவ்வளவோ தடவை நான் அவர்களிடம் அதைக் கூறியிருக்கிறேன்- அந்த நட்புறவு பற்றிய கதையை. இலங்கையில் போய் வசிக்க நேர்ந்த எனக்கு ஒரே ஒரு ஆதரவாக இருந்தது பக்கத்து வீட்டில் இருந்த டென்னக்கூன் மட்டும்தான் என்ற விஷயம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்போதைய வசதியான சூழ்நிலைக்கு மூலகாரணமாக இருந்ததே டென்னக்கூன்தான் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனினும், அவருடைய ஒரே மகள் அனாதையாக ஆனபோது அவளுக்கு நான் ஆதரவு அளிக்கும் விஷயத்தில் இந்த அளவிற்கு எதிர்ப்பா?
“நான் புலியும் அல்ல... கரடியும் அல்ல”- நான் ஒருநாள் பிள்ளைகளிடம் சொன்னேன்: “ஒரு அரசியலும் இல்லாத ஒரு சாதாரண மனிதன் நான். என்னுடைய உயிர் நண்பரின் மகளை... அவள் சிங்களக்காரியாக இருந்தாலும் சரி... கறுப்பர்கள் இனத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் சரி... நான் பாதுகாத்துக் காப்பாற்றாமல் இருக்க மாட்டேன். அவளைக் கைவிடக்கூடிய அளவிற்கு நன்றி கெட்டத்தனம் என் இதயத்தில் இல்லை.”
பிரகாசமும் ரூபாவும் சுந்தரமும் எவ்வளவோ தடவை என்னிடம் சண்டை போட்டிருக்கிறார்கள். ரூபா தேம்பித் தேம்பி அழவும் செய்திருக்கிறாள்.
“சென்னையில் நாங்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். சிங்களப் பெண்ணை வீட்டில் தங்க வைக்கும் ஒரே காரணத்தால், நாம் எல்லோரும் பலராலும் கண்காணிக்கக் கூடிய நபர்களாக ஆகிவிடுவோம். தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களே நம்முடைய பகைவர்களாக மாறிவிடுவார்கள். அப்பா, பிரச்சினைகளைப் புரிந்து கொண்டே நீங்கள் இந்த தேவையில்லாத சுமையை தலையில் எடுத்து வைக்க வேண்டாம். அவள் படிப்பில் மிகவும் திறமை படைத்தவளாக இருந்தாள் என்று நீங்க தானே சொன்னீங்க? படிப்பைத் தொடர்வதற்காக அவளை கேம்ப்ரிட்ஜுக்கு அனுப்புங்க. அவளை இந்தியாவில் வசிக்கச் செய்வது ஆபத்தை நாமே தேடி வரவழைத்துக் கொள்வதற்கு நிகரானது”- சுந்தரம் சொன்னான். அவனுடைய குரல் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தாலும், இதயத்திற்குள் இறங்கிச் செல்லக்கூடிய அளவிற்கு அது பலம் கொண்டதாக இருந்தது. அரசியல் உலகில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றிருக்கும் ஒரு இளம் தலைவனாக சுந்தரம் இருந்தான். அவனுடைய சொற்பொழிவைப் பற்றி பலரும் பாராட்டிப் பேசுவதை மிகவும் ஆச்சரியத்துடன் நான் கேட்டிருக்கிறேன். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், மிகவும் எளிமையான, ஆடம்பரம் எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கையை சுந்தரம் வாழ்ந்து கொண்டிருந்தான். பிரகாசம் க்ளப்களிலும், குதிரைப் பந்தயங்கள் நடக்கக்கூடிய நகரங்களிலும் தன்னுடைய பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டான். சுந்தரம் நூலகங்களில் தன்னுடைய பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டான். பிரகாசம் பட்டுச் சட்டைகளையும் ஐரோப்பிய பாணியில் தைக்கப்பட்ட சூட்டுகளையும் அணிந்தான். சுந்தரம் தொழிலாளிகள் அணியும் ஆடைகளை அணிந்தான். இரண்டு பேரைப் பற்றியும் என்னால் எடைபோட முடிந்தது. தொழிற்சாலையில் நிர்வாகி என்ற முறையில் பிரகாசம் என்னுடைய வலது கையாக செயல்பட்டான். திடீரென்று ஆடம்பரமாகக் காட்சியளித்த வீட்டிற்கு சுந்தரத்தின் புனிதமான கொள்கைகள் ஒரு தனிப்பட்ட புனிதத் தன்மையைத் தேடித் தந்ததென்னவோ உண்மை. வார்த்தைகளால் கூற முடியாத ஒரு குற்ற உணர்வு இரவு நேரங்களில் எனக்குள் உருவாகி என்னை பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. சுந்தரத்தின் முகத்தை நினைக்கும்போதெல்லாம், அந்த அமைதியற்ற நிலை படிப்படியாகக் குறைந்து இல்லாமல் போவதை நான் உணர்ந்திருக்கிறேன். பிரகாசத்தையும் சுந்தரத்தையும்விட ரூபா வேறுபட்டவளாக காட்சியளித்தாள். அவள் சொன்னாள்: “அந்த சிங்களக்காரியுடன் சேர்ந்து வெளியே செல்ல என்னால் முடியாது. என்னை இனிமேல் திருமண விருந்துகளுக்குக் கூட யாரும் கூப்பிட மாட்டாங்க. அவளுக்கு இடம் தந்திருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக நாம் சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவோம்.”
நான் என்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னேன்: “நீ அவளை அழைத்துக் கொண்டு எங்கும் போக வேண்டாம். அவள் என் கூட வரட்டும். வயதான காலத்தில் எனக்கு ஒரு வளர்ப்பு மகள் கிடைத்திருப்பது குறித்து நான் மிகவும் சந்தோஷப்படுறேன்.”
“அப்பா, உங்களுக்குக் கெட்ட பெயர் கிடைப்பதை எங்களால பொறுத்துக்க முடியாது”- பிரகாசம் என்னிடம் சொன்னான்.
“இறந்துவிட்ட நண்பரின் மகளைப் பத்திரமாக காப்பாற்றும் காரணத்தால் எனக்கு கெட்ட பெயர் வரும் என்றால், நான் அதற்காக வருத்தப்பட மாட்டேன். அவளைக் கைவிடும்படி கடவுளே சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.”
அதற்குப் பிறகு அந்த விஷயத்தைச் சொல்லி அவர்கள் என்னிடம் சண்டை போடவில்லை. அவர்களுடைய தாய் இறந்தபோது நான் இளைஞனாக இருந்தேன். என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பலரும் கேட்டார்கள். ஆனால், ஒரு இரண்டாவது தாயை என் பிள்ளைகள் மீது கொண்டு வந்து திணிக்க நான் மறுத்துவிட்டேன். ஐம்பத்து இரண்டாவது வயதில் சென்னைக்குத் திரும்பி வந்து வசிக்க ஆரம்பித்த நேரத்திலும் நலம் விரும்பிகள், ‘அண்ணாதுரை, நீங்கள் ஒரு அழகான பெண்ணைத் திருமணம் செய்து எதிர்காலத்தைப் பாதுகாப்பாக ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறத்தான் செய்தார்கள். ஆரம்பத்தில் சென்னையில் இருப்பவர்கள் மிகுந்த தயக்கத்துடன்தான் என்னுடன் பழகவே செய்தார்கள். இலங்கைக்காரன் அண்ணாதுரை என்றுதான் என்னைப் பெயர் சொல்லியே அவர்கள் அழைத்தார்கள். பிரகாசத்தின் திருமணம், மிகவும் புகழ்பெற்ற ஒரு தஞ்சாவூர் குடும்பத்தில் இருந்த ஒரே மகளுடன் நடந்து முடிந்த பிறகுதான் என் வீட்டிற்கு விருந்தினர்களே வர ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னால் என் குடும்பத்தைப் பற்றிப் பல வினோதமான கதைகள் சென்னையில் பரப்பி விடப்பட்டிருந்தன. நானும் என் பிள்ளைகளும் ஒருவரோடொருவர் சிங்கள மொழியில்தான் பேசிக் கொள்கிறோம் என்றும்; சிங்களக்காரர்களின் பெயர்பெற்ற ‘சாம்போ’லைத்தான் நாங்கள் தேங்காய் சட்னிக்குப் பதிலாக காலை நேரங்களில் தோசையுடன் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்றும் பலரும் கூறித் திரிகிறார்கள் என்று ராஜம்மா ஒருநாள் சொன்னாள். அதற்குப் பிறகு எங்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தபோது, மக்கள் எங்களைப் பற்றித் தவறாக நினைத்த விஷயங்கள் மாறத் தொடங்கின. என் பிள்ளைகள் பேசிய தமிழில் கொஞ்சம் வெளிநாட்டு வாசனை இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால், அது இந்தியாவிற்கு வெளியே போயிராத லவ்டேல் மாணவர்கள் மத்தியிலும் இருந்தது. அது கவனிக்கத்தக்க ஒரு குற்றம் என்று யாரும் நினைக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் ரூபாவதி தன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மூர்த்தியின் காதல் வலையில் போய் விழுந்தாள். கோயம்புத்தூரில் நிரந்தரமாக வசித்துக் கொண்டிருந்த ஒரு கோடீஸ்வரருடைய மகனுக்கு அவளைப் பெண் கேட்டு வந்திருந்தார்கள். அவள் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது என்னிடம் சொன்னாள்:
“எனக்குப் பணத்தின்மீது மிகப்பெரிய மதிப்பொண்ணும் கிடையாது. நான் மதித்து மரியாதை கொடுக்கிற அளவுக்கு இந்த கோயம்புத்தூர் மனிதரின் குணங்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மூர்த்தியை நான் மிகவும் பெரிதாக நினைக்கிறேன். அவரைத் திருமணம் செய்து கொள்வதுதான் என் விருப்பம்.”
மூர்த்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜாதி வேறுபாட்டைக் காரணம் காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பெரிய படிப்பு படித்திருப்பதை வெளிக்காட்டக் கூடிய பண்பாடு அவர்களின் ஒவ்வொரு முடிவிலும் தெரிந்தது. யாரும் கேட்காமலே நான் மூர்த்திக்கு ஸ்டெர்லிங் சாலையில் ஒரு இரண்டு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தையும் ஒரு மெர்ஸிடஸ் பென்ஸ் காரையும் வாங்கிக் கொடுத்து, அவற்றுடன் ஐந்து லட்சம் ரூபாயை வரதட்சணையாகவும் தந்தேன். திருமணம் முடிந்து, நான் கன்னிமரா ஹோட்டலில் கொடுத்த திருமண வரவேற்பிற்கு கவர்னரும் அமைச்சர்களும் மட்டுமல்ல- சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகிய திரைப்பட நட்சத்திரங்கள் கூட வந்திருந்தார்கள்.
நான் தம்பி என்று அழைக்கும் சுந்தரத்திற்கு மட்டும் திருமணத்திற்குப் பெண் கொடுப்பதாகச் சொல்லி யாரும் வரவில்லை. வழக்கறிஞராக இருந்தாலும், அரசியல் வேள்வியில் உழன்று கொண்டிருந்த அந்த இளைஞனை மருமகனாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு கோடீஸ்வரன் கூட முயற்சிக்கவில்லை. சுந்தரத்திற்கும் திருமண விஷயத்தில் அப்படியொன்றும் ஆர்வம் இல்லை. மனோமியை அவன் காதலிக்க ஆரம்பித்தால், அவர்களுடைய திருமணத்தை நடத்துவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால், அப்படியொரு முடிவை எடுக்க வேண்டும் என்று நான் எந்தச் சமயத்திலும் அவர்களிடம் கூறப்போவதும் இல்லை. மனோமியை இளம் பெண்ணாகப் பார்க்கும்போது, சுந்தரம் அவளிடம் மனதைப் பறிகொடுப்பானா? மனோமியின் தாய் குருநகல என்ற இடத்தைச் சேர்ந்த புண்ணியகாந்தி மிகவும் அழகு படைத்தவளாக இருந்தாள். நிலவு வெளிச்சத்தில் ஆம்பல் மொட்டு காட்சியளிப்பதைப்போல, மிகவும் மென்மையாக ஒளிர்ந்து கொண்டிருந்த அவள், மரண நேரத்தில்கூட என்னையும் தன்னுடைய கணவரையும் மலர்ந்த விழிகளால் தடவினாள். நல்ல குணங்களைக் கொண்ட பேரழகி... விமான நிலையத்தில் போடப்பட்டிருந்த குளிர்ச்சியான நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது கூட நான் புண்ணிய காந்தியை நினைத்துப் பார்த்தேன். எந்த அளவிற்கு சர்வ சாதாரணமாக அவள் தன்னுடைய தங்க வளையல்களைக் கைகளிலிருந்து கழற்றினாள்!
“அண்ணா, என் வளையல்களை எடுத்துக்கோங்க. வியாபாரம் செய்வதற்கு ஒரு இடத்தை உடனடியா வாங்குங்க. நீங்க பணக்காரரா ஆனால், என் கணவரும் பணக்காரரா ஆயிடுவாரு உங்களுக்கிடையே இருக்கும் அன்பின் மதிப்பு என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?”- புண்ணியகாந்தி கேட்டாள். அந்த நிமிடத்திலிருந்து என்னுடைய வர்த்தகம் வளர்ந்தது. என்னுடைய செல்வப் பெருக்கத்திற்கான அடிப்படை அந்த வெளுத்த நிறத்தைக் கொண்ட கைகளே என்பதுதான் உண்மை. வளையல்களைக் கழற்றிய பிறகு எதுவும் இல்லாமல் வெறுமனே இருந்த கைகள். எந்த நிமிடத்திலும் என் பிள்ளைகள் அந்த நன்றியை மறக்கவே கூடாது.
ரூபா விமான நிலையத்திலிருந்த குளியலறையை விட்டு வெளியே வந்தபோது, அவளுடைய முகத்தில் நீர்த் துளிகள் நின்றிருந்தன.
“அந்த துவாலையைப் பயன்படுத்துவதற்கான தைரியம் எனக்கு இல்லை”- ரூபா சொன்னாள்.
“நாற்பது டிகிரி வெப்பம் இருக்கிறதா வானொலி சொன்னது”- மூர்த்தி சொன்னான்.
“அப்பா, நீங்க விமான நிலையத்திற்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கு ரத்த அழுத்தத் தொல்லை இருக்கிற உண்மை மனோமிக்குத் தெரியும். விமானம் ஒரு மணி நேரம் தாமதமா வர்றதா கேள்விப்பட்டேன். அவளை வரவேற்க நானும் மூர்த்தியும் இங்கே இருக்கோமே! அப்பா, நீங்க வீட்டுக்குப் போங்க”- ரூபா சொன்னாள்.
“அவளை நானே வரவேற்கிறேன்”- நான் சொன்னேன்.
“அப்பா, நீங்க குழந்தைகளைப் போல பிடிவாதம் பிடிக்கிறீங்க”- ரூபா குறைப்பட்டுக் கொண்டாள். ரூபாவின் வார்த்தைகளில் மறைந்து கிடந்த கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு உயர்ந்த இடத்தை அவளுக்கு நான் பரிசாகத் தந்திருக்கிறேன். அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனோமி மீது எனக்கு இருந்த இரக்கமும் ஈடுபாடும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஏதாவது பாதிப்பு உண்டாகிவிடக் கூடாதே என்பதற்காக தான் வீட்டிற்கு வெளியே செல்வதற்கே பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக அவள் எழுதியிருந்தாள். ஒருமுறை கூட டென்னக்கூன் தன்னுடைய கஷ்டங்களைப் பற்றி எனக்கு எழுதியதில்லை. எழுதியிருந்தால் நான் நிச்சயமாக அவருக்கு உதவியிருப்பேன். அவரை பாதித்திருந்த சயரோக நோயை நான் சிகிச்சை செய்து குணமாக்க உதவியிருப்பேன். தன்னுடைய கஷ்டங்களை மறைத்துக் கொண்டு டென்னக்கூன் நகைச்சுவை ததும்பும் கடிதங்களை மட்டும் எனக்கு அனுப்பினார்.
“சுந்தரத்துக்குத்தான் பெரிய பிரச்சினையே!”- ரூபா சொன்னாள்: “புலிகளின் தலைவர்கள்தான் அவனுடைய நண்பர்கள். இனிமேல் அவர்களுடைய முகத்தை எந்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சுந்தரம் பார்ப்பான்?”
“சிங்களப்பெண் என்ற ஒரே காரணத்தால் மனோமி வெறுக்கப்பட வேண்டியவள் அல்ல. கள்ளங்கபடமில்லாத அந்தப் பெண்ணை எதிரியாக நினைக்கக் கூடிய நட்பை சுந்தரம் வேண்டாம் என்று உதறி விடுவதே நல்லது. உயர்ந்த கொள்கைகளைப் பற்றிப் பேசுவதும், மனிதத் தன்மைக்குப் பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடுவதும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதே...” - நான் ரூபாவிடம் சொன்னேன்.
அதற்குப் பிறகும் ரூபா பேச ஆரம்பித்தாள்:
“அப்பா, எங்களுடைய கவலையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நேற்று என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்... அந்த நீதிபதியின் மனைவி என்னைப் பார்த்து, ‘நான் கேள்விப்பட்டது உண்மைதானா ரூபாவதி? உங்க அப்பாவுக்கு சிங்களப் பெண்ணான ஒரு மகள் இருக்கிறான் என்று கேள்விப்பட்டது உண்மையா?’ன்னு கேட்டாங்க. அப்பா, கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நான் எப்படி பதில் சொல்வேன்?” அதைக் கேட்டு எனக்குக் கோபம் வந்துவிட்டது.
“உண்மையைக் கூற வேண்டியதுதானே”- நான் சொன்னேன். “உண்மையைக் கூறி புரிய வைப்பதுதான் உன்னுடைய, என்னுடைய, எல்லோருடைய கடமையும். மனோமி என்னுடைய உயிர் நண்பரின் மகள் என்று சொல்ல வேண்டியதுதானே? எனக்கு வியாபாரத்தில் உதவிய ஒரே ஒரு மனிதர் அவளுடைய தந்தை என்ற உண்மையைக் கூற வேண்டியதுதானே! செய்த உதவிக்கு நன்றி செலுத்தக்கூடிய மனிதன் உன் தந்தை என்ற விஷயத்தை நீ அந்த நீதிபதியின் மனைவியிடம் கூறியிருக்க வேண்டும்” என்றேன் நான் அவளைப் பார்த்து.
“உண்மையைச் சொன்னால் அதை யார் நம்புவார்கள்? அப்பா, உங்களுக்கும் ஒரு சிங்களப் பெண்ணுக்கும் பிறந்த மகள்தான் மனோமி என்று பலரும் பேசிக்கிட்டு இருக்காங்க”- ரூபா சொன்னாள்.
“அது முழுமையான பொய்”- நான் உரத்த குரலில் சொன்னேன்: “அப்படிப் பேசுறது மிகப் பெரிய பாவமும்கூட மனோமியின் தாயை ஒரு குருவோட மனைவியின் இடத்தில் வைத்து நான் பார்க்கிறேன். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும்போல இருந்தோம் டென்னக்கூனும் நானும் புண்ணியகாந்தியும். பக்தி உணர்வு இல்லாமல் நான் அந்தப் பெண்ணைப் பார்த்ததே இல்லை. அந்த முகத்தைப் பார்த்த அடுத்த நிமிடமே ஒரு தட்டில் கற்பூரத்தை எரிய வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றும். புனிதமான ஒரு உறவைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசியவர்களிடம் என்னுடைய மகள் என்ற முறையில் நீ சூடாக பதில் கொடுத்திருக்க வேண்டும்.”
“எனக்கு வேண்டியவர்களை நான் ஏன் வெறுப்படையச் செய்யணும்?”- ரூபா என்னிடம் கேட்டாள்.
“உனக்கு நான் வேண்டப்பட்டவன் இல்லையா?”
அந்த நிமிடத்தில் மூர்த்தி நாற்காலியை விட்டு வேகமாக எழுந்தான். “அதோ... விமானம் வந்திடுச்சு...” - அவன் சத்தமாகச் சொன்னான் வரவேற்பறையில் அமர்ந்திருந்த எல்லோரும் மூர்த்தியையே பார்த்தார்கள். விமானம் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய இதயத்துடிப்பு எனக்குக் கேட்டது.
“மனோமியை கவலைப்பட வைக்கக்கூடாது” - நான் ரூபாவிடம் சொன்னேன்.”
“அவளைத் தோழியாக என்னுடன் எந்த நேரமும் அழைத்துக் கொண்டு நடந்து செல்ல என்னால் முடியாது. போதாக்குறைக்கு இது எனக்கு ஒன்பதாவது மாதம் வேறு. எனக்கு நடப்பதற்கே மிகவும் சிரமமாக இருக்கும். கால்களில் நீர் வேற கோர்த்திருக்கு.”
“உன்னுடைய பிரசவ சமயத்துல மனோமி உனக்கு உதவியா இருப்பா”- நான் சொன்னேன்.
“எனக்கு உதவி செய்ய டாக்டர்களும் நர்ஸ்களும் இருக்காங்களே!”- ரூபா சொன்னாள்.
“பணம் கிடைக்கும் என்பதற்காக உதவுவதற்கு தயாராக இருப்பவர்களில் இருந்து மாறுபட்டவர்கள் பணத்தை விரும்பாமல் உதவுபவர்கள்”- நான் சொன்னேன். என்னுடைய குரல் கட்டுப்பாட்டை விட்டு விலகி கோபத்தால் கடுமையாக ஒலிப்பதை என்னால் உணர முடிந்தது.
“அப்பா, அவள் பணத்தை எதிர்பார்த்து உங்களைத் தேடி வரவில்லை என்பதை உறுதியாக உங்களால் கூற முடியுமா?”- ரூபா என்னைப் பார்த்துக் கேட்டாள்.
“ரூபா, உன் மனதில் இருக்கும் எண்ணங்களை நினைத்து நான் வெட்கப்படுறேன். என் மகளான உனக்கு இப்படிப்பட்ட ஒரு குணம் எங்கிருந்து வந்தது?”
“அப்பா, அவள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்பே என் குணத்தைப் பற்றி குறை சொல்றீங்க. அவள் வந்து சேர்ந்துட்டா, நீங்க உயிலையே மாற்றி எழுதுடுவீங்கன்னு நினைக்கிறேன்.”
“உனக்கு ஒரு ஆயுள் முழுவதும் சந்தோஷமா வாழ்வதற்கான சொத்தை நான் ஏற்கெனவே தந்திருக்கேன். போதாதற்கு என் தொழிற்சாலையில் உனக்கு பங்கு வேற இருக்கு. நீ டைரக்டர் வேறு. அவளை என் வீட்டில் தங்க வைப்பதால் உனக்கும் மூர்த்திக்கும் எந்தவித இழப்பும் வரப்போவது இல்லை. மனோமிக்கும் நான் மதிப்புடன் திருமணம் செய்து வைப்பேன். அவளும் ஒருவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தவாள்.”
“அப்பா, நீங்க எதுவுமே தெரியாத குழந்தைகளைப் போல பேசுறீங்க. மனோமி ஒரு சிங்களப் பெண்ணாச்சே! அவளை எந்தத் தமிழன் திருமணம் செய்து கொள்வான்? நீங்க எவ்வளவு லஞ்சம் கொடுத்தாலும் அவளுக்குத் திருமணம் என்ற ஒன்று நடக்காது. ஒரு கெட்ட சகுனத்தைப் போல அவள் உங்க வீட்ல வந்து இருக்கப் போறாள்.”
“ச்சே... கெட்ட சகுனமா? நிச்சயமா இல்ல. அவள் மகாலட்சுமியைப் போல வாழ்வாள். அவளுடைய தாய் என்னுடைய அதிர்ஷ்ட லட்சுமியாக இருந்தாள். அவளுடைய தாராள குணத்தால் நான் பணக்காரன் ஆனேன். மனோமியை சுந்தரத்திற்குத் திருமணம் செய்து வைக்க நான் விரும்புறேன். அதற்குப் பிறகு அவள் என் வீட்டிலேயே வாழ்க்கையைத் தொடர்வாள் அல்லவா? தம்பியின் மனைவியாக ஆன பிறகு, நீ அவளை வெறுக்க மாட்டே.”
“அப்பா, முழுமையான சுய உணர்வுடன்தான் இப்படி சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசிக்கிட்டு இருக்கீங்களா? இனப்பற்று கொண்ட என் தம்பி, இலங்கையில் போராடுவதற்காக புலிகளுக்குப் பணம் திரட்டித் தந்த தம்பி, தமிழர்களுடைய பிறவிப் பகைவர்களான சிங்களர்களுக்கு மத்தியில் இருந்து வந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதா?
அப்பா, உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? தம்பி மனோமியைக் கொல்லாமல் இருந்தாலே பெரிய விஷயம். அவளுடைய முகத்தைப் பார்க்கவே தம்பி சம்மதிக்க மாட்டான்.”
“சிங்களர்கள் தமிழர்களின் பிறவிப் பகைவர்களாக எப்போதிருந்து ஆனார்கள்? நான் இலங்கையில் வசித்தபோது சிங்களர்கள் என்னுடைய நண்பர்களாக இருந்தார்கள் என்னுடன் சேர்ந்து தைப்பூசத் திருவிழாவின்போது அவர்கள் முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக வருவார்கள். ‘வேஸாக்’ கொண்டாடும்போது, நான் கலைனியாவில் இருக்கும் புத்தர் ஆலயத்திற்குச் சென்று அங்கிருக்கும் சிலைக்கு முன்னால் தாமரை மலர்களைக் கொண்டு போய் வைப்பேன். நீயும் உன் சகோதரர்களும் சிங்களர்களின் பாதுகாப்பில்தான் வளர்ந்தீர்கள். உங்கள் மூன்று பேரையும் குளிப்பாட்டி, உணவு ஊட்டி, தாலாட்டு பாடித் தூங்க வைத்த காந்திஹாமி என்ற ஆயாவை நீ மறந்துட்டியா? உனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தப்போ, அவள் தூக்கத்தைக்கூட மறந்துட்டு உன் கட்டிலின் கால் பகுதியில் உட்கார்ந்திருந்ததை நீ மறந்துட்டியா? ராஜம்மா உன்னைப் பார்த்துக்க வந்தப்போ நீ காந்திஹாமியை நினைச்சு அழுதே! பிஸாக்கா பாட சாலையில் தானே நீ படிச்சே? உனக்கும் உன் சகோதரர்களுக்கும் ட்யூஷன் மாஸ்டராக இருந்தவர் தர்மபந்து.... அவரையும் நீ மறந்துட்டியா? தர்மபந்து மகாத்மா என்று உரத்த குரலில் அழைத்தவாறு நீ அவருக்குப் பின்னால் ஓடினதை நான் இன்னைக்கும் ஒரு வண்ணப் படத்தைப் போல மனதில் பார்க்கிறேன். நம்முடைய பக்கத்து வீட்டிலிருந்த புண்ணிய காந்தி உனக்காக கிரிபாத் உண்டாக்கிக் கொண்டு வந்ததை நீ மறந்துட்டியா? அய்யோ... ரூபா, வேறு யார் சொன்னாலும் என்னால் பொறுத்துக்க முடியும். ஆனால், நீ சிங்களக்காரர்களைப் பிறவி பகைவர்கள் என்று கூறுவதைக் கேட்கக்கூடிய சக்தி எனக்கு இல்லை.”
“பயணிகள் இறங்க ஆரம்பித்து விட்டார்கள்”- மூர்த்தி எங்களுக்கு ஞாபகப்படுத்தினான். அவன் திறந்திருந்த வாசல் பக்கமாக ஓடினான்.
“மூர்த்தி ஏன் முன்னால் ஓடுகிறான்? அவனுக்கு மனோமியை அடையாளம் தெரியாது”- நான் சொன்னேன்.
விமானத்திலிருந்து இறங்கிய பெண்கள் தங்களுடைய புடவையின் நுனிகள் காற்றில் பறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டும் கீழே குனிந்து கொண்டும் நடந்தார்கள்.
முழங்காலை மட்டும் மறைக்கக்கூடிய நீலநிற ஆடை அணிந்த ஒரு இளம்பெண் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவள்தான் மனோமியாக இருக்க வேண்டும். ஆடை அணிந்திருந்தாலும், பழைய பாணியில் தலை முடியைப் பின்னியிருப்பவள்”- மூர்த்தி சொன்னான்.
“அவள் நிச்சயம் இந்தியப் பெண் அல்ல”- ரூபா சொன்னாள்.
“மனோமி!”- நான் அழைத்தேன். என் குரல் கரகரகவென்று முரட்டுத் தனமாக மாறிவிட்டிருந்தது.
நீலநிற ஆடை அணிந்த பெண் என்னைப் பார்த்து புன்னகையைத் தவழ விட்டாள். கம்பிக்கு அப்பால் நின்று கொண்டு அவள் என் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“மாமா, உங்களுக்கு என்னை எப்படி அடையாளம் தெரிஞ்சது?”- அவள் கேட்டாள்.
ரூபா அவளுடைய நிர்வாணமான முழங்கால்களைப் பார்த்து புருவத்தைச் சுருக்குவதை கவனித்ததால் இருக்க வேண்டும் – மனோமி சொன்னாள்: “புடவையை அணிந்து கொண்டு ஒரு இந்தியப் பெண்ணாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால்தான் இந்த ஆடைகளை அணிந்தேன்.”
“இந்த நீலநிற ஆடை உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கு”- நான் அவளுடைய கன்னத்தை ஒருமுறை தடவிக் கொண்டே சொன்னேன்: “நீ எவ்வளவு வளர்ந்திருக்கே! பார்த்தால் புண்ணியகாந்தியின் அதே வார்ப்பு... அதே நிறம்... அதே உயரம் அதே தலைவாரல்...”
“மனோமிக்கு அவளுடைய தாயின் நிறம் இல்லைன்னு சொன்னீங்களே அப்பா?”- ரூபா என்னிடம் கேட்டாள்.
“சிறு வயதில் மனோமிக்கு இந்த அளவுக்கு நிறம் கிடையாது” - நான் சொன்னேன்.
“பயத்தால் வந்த நிறம் இது மாமா...” - அவள் குலூங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
நிஸ்ஸாம்க
1987- ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி என்னுடைய இளம் பருவத்துத் தோழியான மனோமி இந்தியாவிற்கும் பயணமானாள். விமான நிலையத்திற்கு அவளுக்கே தெரியாமல் நான் சென்றிருந்தேன். பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அவள் மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டே தேயிலை விற்கக்கூடிய மூலையில் நான் நின்றிருந்தேன்.
மனோமி ஒரு நீலநிற ஆடையை அணிந்திருந்தாள். அந்த இடத்தில் உட்கார்ந்திருந்த மற்ற பெண்கள் எல்லோரும் புடவை அணிந்திருந்தார்கள். எல்லோரும் இந்தியர்கள் என்ற விஷயம் ஒரே பார்வையில் யாருக்கும் புரிந்துவிடும். இந்தியர்கள் என்பது மட்டுமல்ல- தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுகூட யாருக்கும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கக்கூடிய ஒரு விஷயமல்ல. அவர்களுடைய தலைமுடியில் எண்ணெய்யும் பூச்சரங்களும் இடம் பிடித்திருந்தன. நெற்றியில் சிவப்பு நிறத் திலகங்கள் இருந்தன. அவர்களில் முக்கால்வாசி பேர் கருப்பு நிறத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் மெலிந்துபோய், வெளுத்த நிறத்தில் மனோமி அமர்ந்திருப்பதைப் பார்த்த போது, என் மனதில் இருந்த கவலை மேலும் அதிகமானது. என்னுடைய எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அவள் இலங்கையை விட்டுப் புறப்பட்டுவிட்டாள். “அனாதையாக இருப்பதால் நான் அண்ணாதுரையின் வீட்டிற்குச் செல்கிறேன்” என்று அவள் ஒருநாள் சொன்னாள். அதைக் கேட்டு எனக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. அவள் எப்படி அனாதையாக இருக்க முடியும்,? நான் உயிருடன் இருக்கும்போது அவள் அனாதை அல்ல. ஆதரவு உள்ளவள்தான். “மனோமி, நீ என் மனைவியாக இலங்கையிலேயே இருந்துவிடு” என்று நான் சொன்னேன். சிறுவயதிலிருந்து நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். பிஸாக்கா பாடசாலையை விட்டு அவள் வெளியே வரும்போது, எல்லா மாலை நேரங்களிலும் நான் ஃபோன் செக்காப்ளேஸில் மாணவர்களும் மாணவிகளும் பந்து விளையாடும் இடத்தில் நின்றிருப்பேன். நாங்கள் ஒன்று சேர்ந்து ஓடித்தான் பேருந்தையே பிடிப்போம். பல நாட்களிலும் நாங்கள் வகுப்பை `கட்’ பண்ணிவிட்டு, கால்பெட்டி மார்க்கெட்டிற்குச் சென்று பச்சை ஆப்பிள்களையும் துரியான் என்ற பழத்தையும் வாங்கித் தின்றிருக்கிறோம். துரியான் காம உணர்ச்சியை எழச் செய்யும் என்று என்னிடம் கடைக்காரன் சொன்னான். அவன் என்னுடைய வயதைப் பற்றிக் கிண்டல் பண்ணிப் பேசியபோது மனோமி அவனிடம் பொய் சொன்னாள்: “நிஸ்ஸாம்கவிற்கு இருபது வயது முடிந்துவிட்டது.” அப்போது எனக்கும் அவளுக்கும் பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது. நாங்கள் வீட்டிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு சில நேரங்களில் ஹாப்பர் வாங்கித் தின்போம். கோழிமுட்டை தடவப்பட்ட அப்பம் என்றால் மனோமிக்கு மிகவும் பிடிக்கும்.
“நீ தமிழர்களின் தோசையைத் தின்றவள்தானே? உனக்கு நான் ஹாப்பர் வாங்கித் தரமாட்டேன்” என்று நான் பல நேரங்களில் அவளுக்குக் கோபம் உண்டாக வேண்டும் என்பதற்காகக் கூறுவேன். கோபப்படும்போது மட்டுமே அவள் முழுமையான அழகு கொண்டவளாகத் தோன்றுவாள். கோபம் அவளுடைய கன்னங்களைச் சிவப்பாக்கும்.
என்னுடைய வீட்டிற்கும் மனோமியின் வீட்டிற்கும் எதிர்பக்கத்தில் அண்ணாதுரை முதலாளியின் வீடு இருந்தது. அவருடைய மகன் சுந்தரம் என்னுடன் சேர்ந்து கால்பந்து விளையாடுவது உண்டு. சுந்தரம் இலங்கையை விட்டுப் போகும்போது நானும் அவனும் சில பையன்களாக இருந்தோம். அவன் கறுப்பு நிறத்தில் தடிமனான ஒரு பையனாக இருந்தான் என்பது மட்டுமே இப்போது என்னுடைய ஞாபகத்தில் இருக்கிறது. மனோமி சுந்தரத்துடன் சென்னையில் போய் வசிக்கப் போகிறாள் என்ற விஷயத்தை நினைத்துப் பார்த்தபோது எனக்கு அது முதலில் ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அண்ணாதுரை அவளைத் தன்னுடைய மருமகளாக ஆக்கிக் கொண்டால், அதற்குப் பிறகு அவள் இலங்கைக்குத் திரும்பி வரமாட்டாள்.
மனோமி உள்ளே போன பிறகு, நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் அவளுக்கு விடைகூறி இருக்கலாம். என்னை அவள் நிச்சயமாக எதிர்பார்த்திருப்பாள். நான் மிகவும் தரம் தாழ்ந்தவன் என்றும்; கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்கு அடிமையானவன் என்றும் என் மனதில் பட்டது. விமானங்களின் இரைச்சல் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தபோது, நான் மனோமியின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன்.
‘எவ்வளவு முயற்சி செய்தாலும், யாரையும் வெறுக்க மனம் வரவில்லை.’
நோயாளியும், பலவீனம் அடைந்த நிலையில் இருந்தவருமான அவளுடைய தந்தையைக் கொன்ற புலியையும் அவள் வெறுக்கவில்லையா? கட்டரகாமாவில் வெடிகுண்டு எறிந்த கதிரேசன் என்ற புலியை வெளிக்கடை சிறையில் இருந்த கைதியே கொன்றான். ஆனால், அவனுடைய நண்பன் ஓடி மறைந்துவிட்டான். இடுப்பிற்குத் தேவைப்படும் வீரத்தை வெடிகுண்டுகளிலும், துப்பாக்கிகளிலும் வைத்துக்கொண்டு அலைந்து திரிபவர்கள்... அமைதியாக இருக்கும் சிங்களர்களைக் கொன்றவர்கள்... புத்த மதத்தைச் சேர்ந்த துறவிகளையும் குண்டுகளைப் பயன்படுத்திக் கொன்றவர்கள்... அவர்களில் சிலரின் தலைகளுக்கு இலங்கை அரசாங்கம் இரண்டு லட்சம் ரூபாய் பரிசாக அளிப்பதாக அறிவிப்பே வெளியிட்டிருந்தது. கந்தசாமி, பழனி, தாமோதரம், திருச்செல்வம், ராஜு... ‘அவர்களில் ஒருத்தனை நான் பார்த்தால், நான் என்னுடைய வெறும் கைகளைக் கொண்டு கழுத்தை நெறித்து, மூச்சுவிட முடியாமல் செய்து கொன்றுவிடுவேன்’ என்று ஒருநாள் நான் மனோமியிடம் சொன்னேன். கல்லூரியிலிருந்து தனியாக நடந்து வரும்போது, புலிகள் அவளை எங்கே வளைத்து விடப் போகிறார்களோ என்று நான் பயந்தேன். அதனால் எப்போதெல்லாம் கல்லூரி முடிகிறதோ, அப்போதெல்லாம் நான் அவளை என்னுடைய நீலநிற ஸ்கூட்டரில் ஏற்றி வீட்டில் கொண்டு போய் விடுவேன். ஒரு நாள் என் தாய் சொன்னாள்:
“நீ மனோமியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறாயா? அப்படி இல்லைன்னா, அவளைப் பின்னால் உட்கார வைத்து வண்டியை ஓட்டாதே. அதற்குப் பிறகு அவளுக்கு வேறொரு மணமகன் கிடைக்காமல் போயிடுவான். எல்லாரும் இப்பவே சொல்றாங்க- மனோமி உன் காதலின்னு.”
மனோமியின் தந்தைக்குப் பொருளாதார வசதி குறைவாக இருந்தாலும், அவள் கல்லூரியில் சேர்ந்து ஒரு பட்டதாரியாக ஆனாள். நான் படிப்பு விஷயத்தில் மோசமாக இருந்தேன். அதனால் இரண்டு முறை தோற்றதும், நான் கல்லூரியை விட்டு ஒரு மெக்கானிக் ஆவதற்கான பயற்சியைப் பெற்றேன். அந்தக் காரணத்தால் இருக்கலாம்- அவளுக்குப் பக்கத்தில் இருக்கும்போது ஒரு குற்ற உணர்வு என்னை எப்போதும் பாடாய்ப் படுத்திக் கொண்டேயிருந்தது.
“உன் மனதில் பலமாக வேரூன்றியிருக்கும் வெறுப்புணர்வை நீ அடியோடு இல்லாமல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீ எந்தச் சமயத்திலும் சுதந்திரமான மனிதனாக இருக்க மாட்டாய்”- மனோமி என்னிடம் சொன்னாள். எதிர்வீர சரத் சந்திராவின் ‘சிங்கபாகு’ என்ற நாடகத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பி வந்து கொண்டிருந்தோம். இந்திய நாடகப் படைப்பாளியான காளிதாசனின் பாதிப்பில் அந்நாடகம் எழுதப்பட்டிருக்கிறது என்று அவள் சொன்னபோது நான் அவளை பலமாக எதிர்த்தேன்.
“இந்தியர்களை முழுமையாக நீ வெறுக்கிறாய் நிஸ்ஸாம்க. அது மட்டுமல்ல – நீ கறுப்பர்களைக் கேவலமாகப் பார்க்கிறாய். நாம் இருவரும் வழிபாடு செய்யும் புத்தர் இந்தியாவில் பிறந்தவர்தானே! புத்தர் ஒரு கறுப்பான மனிதராக இல்லை என்று என்னாலோ உன்னாலோ உறுதியாகக் கூற முடியுமா?”- மனோமி என்னைப் பார்த்துக் கேட்டாள்.
“புத்தர் வெள்ளை நிறத்தில்தான் இருந்திருக்க வேண்டும்” என்று நான் உரத்த குரலில் ஆவேசத்துடன் சொன்னேன். அவள் அதைக் கேட்டு சத்தமான குரலில் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“ஒரு மனிதன் தன் உள்ளுக்குள் காணும் வண்ணத்தைத்தான் தன் கடவுள் பற்றிய எண்ணத்திற்கும் கொடுக்கிறான்”- அவள் சொன்னாள்: “கறுப்பின மக்கள் கடவுளை கறுப்பு நிறத்தில் இருப்பவனாகத்தான் நினைப்பார்கள். புத்தரை வழிபாடு செய்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு அதிகமான நிறங்களும் உண்டு. அதற்குக் காரணம்- நான் பார்க்கும் சிவப்பு நிறத்திலிருந்து மாறுபட்டிருக்கும் நீ பார்க்கும் சிவப்பு.”
அவள் அந்த மாதிரி பேச ஆரம்பிக்கும்போது, நான் அமைதியாக இருந்து விடுவேன். என்னால் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களையும் அவள் எனக்குக் கற்றுத் தந்தாள். புரிந்து கொள்ள முடியவில்லையென்றாலும், அவை என் மனதில் தங்கி நின்றன என்பதென்னவோ உண்மை.
“நீயும் டென்னக்கூனின் மகளும் என்ன பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?”- ஒரு நாள் என் தாய் கேட்டாள்.
“அம்மா, அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.”
“இருந்தாலும் சொல்லேன்... எனக்கு புரியுமான்னு நான் தீர்மானிக்கிறேன்.”
“அவள் பொதுவா கடவுளைப் பற்றித்தான் பேசுறாள்.”
“அவளுடைய தாய் புண்ணியகாந்தியும் அப்படித்தான் இருந்தாள். தான் ஒரு பெண் சாமியாராக ஆகியிருக்க வேண்டியவள் என்று புண்ணியகாந்தி என்னிடம் பலமுறை கூறியிருக்கிறாள்.”
தமிழர்கள் கலாச்சாரம் மிகவும் பழமையானது என்றும்; அத்வைதத்தைப் பின்பற்றக்கூடியது என்றும் ஒருமுறை மனோமி என்னிடம் சொன்னாள். நாங்கள் கால்ஃபேஸ் ஹோட்டலுக்கு எதிர் பக்கத்தில் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தோம். ஐந்து மணி கடந்து விட்டிருந்தாலும், வெயிலின் அளவு தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. மனோமி தன்னுடைய நீலநிற சில்க் துணியாலான குடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.
“அப்படின்னா நம்ம சிங்களர்களின் கலாச்சாரம்...?”- நான் கேட்டேன். மனோமி அதைக் கேட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
“சிங்களர்கள், கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்போ என்னவோ இலங்கைக்கு வந்து சேர்ந்த அகதிகள்தான். தமிழர்களும் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இங்கே வந்து சேர்ந்திருக்காங்க. சிங்களர்கள் வங்காளத்திலிருந்தும் ஒரிஸ்ஸாவிலிருந்தும் வந்தார்கள். நம்முடைய கலாச்சாரத்தை தமிழர்களின் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே முட்டாள்தனமானது...”
நான் திடீரென்று உண்டான கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டேன். நான் அவளுடைய குடையைப் பிடுங்கி கடலுக்குள் எறிந்தேன்.
“போய் தமிழனைக் கல்யாணம் பண்ணிக்கோ. அதற்குப் பிறகு தலைமுடியில் எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, பூ மாலையைத் தலையில் வச்சுக்கோ”- நான் சத்தம் போட்டுச் சொன்னேன்.
அடுத்த நிமிடம் மனோமி தேம்பித் தேம்பி அழுதாள்.
“என்னுடைய நீல நிற சில்க் குடை...”- அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே சொன்னாள். கடல் அலைகளுக்கு மேலே அந்தக் குடையின் நீலநிறத்தை நான் பார்த்தேன். அதற்குப் பிறகும் நான் என்னுடைய குறும்புத்தனத்தை நினைத்து வருத்தப்படவில்லை.
மனோமி ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தாள். தன்னுடைய முகத்தைக் கைகளால் மறைத்துக் கொண்டாள். அவள் அப்போதுகூட ஒரு சிறு குழந்தையைப் போல அழுது கொண்டுதான் இருந்தாள்.
“ஒரு குடை போயிடுச்சுன்றதுக்காக இங்கே நாடகம் நடத்துறியா?”- நான் சிறிதும் இரக்கமே இல்லாத குரலில் கேட்டேன்.
“நாங்கள் ஏழைகள். அப்படிப்பட்ட ஒரு குடையை வாங்கித் தர என் தந்தையால் முடியாது”- மனோமி சொன்னாள்.
“அதை உனக்கு யார் தந்தது?”- நான் கேட்டேன்.
“நான் படித்த பள்ளிக் கூடத்தின் ப்ரின்சிப்பால் மிசஸ் சிரிவர்த்தன எனக்குப் பரிசாகத் தந்ததுதான் அந்தக் குடை.”
நான் அவளுடைய தோளைப் பாசத்துடன் வருடினேன்.
“நான் உனக்கு அதே மாதிரியான ஒரு சில்க் குடையை வாங்கித் தர்றேன்”- நான் சொன்னேன்: “ஒரு வேளை நீ நினைக்கலாம்... எனக்கு சில்க் குடைகள் வாங்கித் தர்ற அளவுக்குப் பணம் இல்லைன்னு. நான் படிக்காதவனாக இருக்கலாம். நான் ஒரு சாதாரண மெக்கானிக்காக இருக்கலாம். ஆனால், என்னிடம் உனக்காக ஒரு பட்டுக்குடை வாங்கித் தர்ற அளவுக்குப் பணம் இருக்கு. நீ சொன்னால் குடை மட்டுமல்ல- வைரமும் இந்திர நீலமும் பதித்த ஒரு மோதிரத்தையேகூட உனக்கு நான் வாங்கித் தருவேன்.”
“எனக்கு எதற்காக மோதிரம் வாங்கித் தர்றே?”
“நம்முடைய திருமணத்தை உறுதிப்படுத்த...”
“உன்னுடைய கோப குணத்தைப் பார்த்து நான் பயப்படுறேன். ஒருநாள் என்னை நீ அள்ளி எடுத்துக் கடலுக்குள் எறிய மாட்டாய் என்பதை உறுதியாகக் கூற என்னால் முடியவில்லை...”
“உனக்கு எப்படிப்பட்ட ஒரு கணவன் வேணும்?”
“என்னுடைய அப்பாவைப் போல அமைதியான ஒரு ஆள்.”
“அமைதியான குணத்தைக் கொண்டதால் உன் அப்பா எதைச் சம்பாதித்து விட்டார்? தமிழர்கள் அவரை இரக்கமே இல்லாமல் கொல்லவில்லையா? வழிபாடு செய்து கொண்டிருந்த உன் அப்பாவைக் கொன்ற தமிழர்கள் மீதுதான் இரக்கத்தைக் காட்டுறே!”
“யாழ்ப்பாணத்தில் கொலைச் செயல் புரிந்த சிங்கள ராணுவத்திடமும் நான் இரக்கப்படலாம். சொந்த வீட்டை வெளியே தேடி அலையும் பிராணிகளைப் போல, மனிதர்கள் தங்களுடைய மரணத்தைத் தாங்களே தேடிக் கொள்கிறார்கள். மரணத்தை வெற்றி பெற்று விட்டதாக வேறொரு மனிதனைக் கொன்றவன் நம்புகிறான். அவன் மரணமடைந்துவிட்டான்; நான் வாழ்கிறேன் என்று கொலை செய்தவனின் மனம் பாடுகிறது. அந்த நிமிடத்திலாவது அவன் மரணத்தைத் தோல்வியடையச் செய்கிறான். பேராசை பிடித்தவனிடம் பேராசை இருப்பது இயல்பான ஒன்றுதானே நிஸ்ஸாம்க?”
அவளுடைய இனிய வார்த்தைகளுக்கான அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் எந்தச் சமயத்திலும் ஒரு தத்துவ சிந்தனை கொண்டவனாக ஆக முடியாமல் போகலாம். என்னுடைய அரசியலில் எனக்கு ஈடுபாடு இருந்தது. ஆனால்? அரசியல் கொள்கைகள் அவளை ஆச்சரியம் கொள்ளச் செய்தன.
ஒரு நாள் கார்னர்ஸ் என்ற பல்பொருள் கடைக்கு முன்னால் போகும்போது அவள் சொன்னாள்:
“ஸ்கூட்டரை நிறுத்து. நாம் உள்ளே போய் வசதி படைத்தவர்கள் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்களைப் பார்த்து ரசிப்போம்.”
உள்ளே பணம் எண்ணுவதற்கும், பொருட்களை எடுத்துத் தருவதற்கும் அமர்த்தப்பட்டிருந்த சீருடை அணிந்த பெண்கள் எங்களைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. உந்து வண்டிகளைப் பிடித்துக் கொண்டு ஷெல்ஃபுகளுக்கு நடுவில் நகர்ந்து கொண்டிருந்தவர்களை நாங்கள் சற்று வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லாரும் வயதானவர்களாக இருந்தார்கள். விலை அதிகமானதாக இருந்தாலும், கண்களை நோகச் செய்யாத ஆடைகளை அணிந்திருக்கும் வெளிநாட்டினர்...
“இந்தியர்கள் இங்கு கன்சல்டன்டுகளாக வந்து, ஒரே ஒரு மாலை நேரத்தில் நம்முடைய ஒரு சிங்களக் குடும்பத்தில் ஒரு மாதம் சந்தோஷமாக வாழ்வதற்குச் செலவழிக்கக்கூடிய பணத்தை தங்கள் விருப்பப்படி செலவழிப்பதைப் பார்க்கும்போது என் ரத்தம் கொதிக்குது”- நான் சொன்னேன்.
“இந்தியர்களை மட்டும் ஏன் பழிக்கிறே? பெரும்பாலான கன்சல்டன்டுகளும் வெள்ளைக்காரர்கள்தானே? அவர்கள் பணத்தை செலவழிப்பதைப் பற்றி நீ குறை சொல்லமாட்டே… அப்படித்தானே? வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட உரிமைகளில் அது ஒன்று என்று நீ மனசுல நினைக்கிறியா?”- மனோமி கேட்டாள். அவளுடைய கண்கள் ஐஸ்கிரீமும் இனிப்பு தயிரும் வைக்கப்பட்டிருந்த ஷெல்ஃப்களில் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. நான் ஒரு அரை கிலோ பிஸ்தா ஐஸ்கிரீம் பெட்டியை வாங்கி அவளுக்குத் தந்தேன்.
“இங்கே வந்து ஏதாவது வாங்குவது என்பது நம்மைப் போல் உள்ளவர்கள் செய்யக்கூடாத ஒன்று… அப்படித்தானே?”
“இங்கே வந்து ஐஸ்கிரீமைப் பார்த்து வாயில் எச்சில் ஊற நின்று கொண்டிருப்பது மட்டும் செய்யக்கூடிய ஒன்று… அப்படித்தானே?”
அதைக் கேட்டு மனோமி விழுந்து விழுந்து சிரித்தாள். அவளுடைய அந்தச் சிரிப்பு ஆண்களின் சிரிப்பைப் போல கட்டுப்பாடு இல்லாதது என்று ஒருமுறை என் தாய் என்னிடம் கூறியிருக்கிறாள். கட்டுப்பாடு இல்லாத சிரிப்பு என்பதால் இருக்க வேண்டும்- அது அந்த அளவிற்கு விரும்பக் கூடியதாகவும் இருந்தது.
ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும்போது என்னுடைய இடுப்பைப் பிடிப்பதைத் தவிர, அவள் ஒருமுறை கூட என்னைத் தொட்டதில்லை. என் நண்பர்கள் சொன்னார்கள்: “மடையா, அவள் நீ ஒருமுறை கூட கட்டித் தழுவாத தன்னுடைய உடலுடன் இங்கிருந்து போய்விட்டாள். பல வருடங்களாக அந்தப் பெண்ணை ஸ்கூட்டரில் உட்கார வைத்துக் கொண்டு திரிந்தும், உன்னால் எதையும் அடைய முடியவில்லையே!”
நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு நாள் சாயங்காலம் நாங்கள் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்ப்பதற்காக திரை அரங்கிற்குச் சென்றிருந்தோம். ஸ்கூட்டரை நிறுத்துவதற்காகப் போனபோது, சுவரின் மறு பக்கத்தில் புத்தமத சன்னியாசிகள் மந்திரங்கள் கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் கேட்டோம்.
அவளும் நானும் அடுத்த நிமிடம் எங்களுடைய பேச்சை நிறுத்தி விட்டோம். கடலில் அலைகள் சக்கரங்களாக உருள்வதை ஞாபகப்படுத்தக் கூடிய அந்த மந்திர உச்சரிப்பு அவளுடைய கண்களை நனையச் செய்தது. அந்த நிமிடத்தில் அவள் என்னிடம் சொன்னாள்:
“இனி மேல் நீ மந்திரங்களைக் கேக்குறப்போ, என்னை நினைச்சுக்கலாம்.”
நான் எதுவும் கூறவில்லை. சூரியன் மறையப்போகும் நேரம் என்பதால் வானம் சிவக்க ஆரம்பித்திருந்தது. மனோமியின் சுருள் சுருளான தலைமுடி, காற்றில் தென்னங் கீற்றுகளைப் போல பறந்தது.
ஆமாம்... அந்த மாலை நேரம் எனக்கு ஒரு கொடுப்பினைதான்.
மனோமி
அன்றே பிரகாசத்தையும் சுந்தரத்தையும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், மாமா சொன்னார்: “இன்னைக்கு நீ சீக்கிரமே தூங்கப் போ. நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு சாப்பிடுகிற நேரத்தில் நீ எல்லோரையும் பார்க்கலாமே!”
“என்னைப் பார்ப்பதற்கு பிரகாசத்திற்கும் சுந்தரத்திற்கும் விருப்பம் இல்லையா? நான் வருகிறேன் என்பது தெரிந்தும் என்னைப் பார்க்காமல் அவர்கள் வெளியே போனதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டதற்கு மாமா சொன்னார்:
“என் பிள்ளைகள் உன்னைப் பார்க்க விருப்பப்படாமல் இருக்க மாட்டார்கள். ஏழு பிறவிகளிலும் அவர்கள் உன்னுடைய உடன் பிறப்புகளாகத்தான் இருப்பார்கள்.”
மாமாவின் வார்த்தைகளில் இருந்த உற்சாகம் அவருடைய குரலில் இல்லை. உணவு சாப்பிடுவதற்கு நடுவில் அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அவ்வப்போது எங்கேயோ பார்த்துக் கொண்டு ஒரு சிலையைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
“என்ன அப்பா, எப்போதும் இல்லாம இப்படி...?”
“விமான நிலையத்திற்குப் போனதால் அய்யாவுக்கு ஒரே களைப்பு”- ராஜம்மா சொன்னாள்.
“மாமாவின் உடல்நிலை அந்த அளவுக்கு மோசமாகவா இருக்கு?”- நான் ரூபாவிடம் கேட்டேன்.
மாமா தலையை ஆட்டினார்.
“இல்ல மனோமி... எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. என் வயதைக் கொண்டவர்களுக்குச் சாதாரணமா இருக்கக் கூடிய விஷயங்களான நீரிழிவு, இதய நோய், ரத்த அழுத்தம்...”
“அப்பா, உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்றதுக்கான காலம் வந்துவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில்தானே கடைசியா சோதனை நடத்தியது?”- ரூபா கேட்டாள்.
“ஆமாம்... மார்ச் மாதத்தில்தான். இப்போ ஜூலை மாதம் ஆயிடுச்சு. இந்த முறை மருத்துவமனைக்குப் போறப்போ என்னுடன் மனோமி வரட்டும். ரூபாவால் இந்த முறை வர முடியாதே!”
சாப்பிடுவதற்கு சாதமும் சாம்பாரும் வறுத்த மாமிசமும் ரசமும் அப்பளமும் இருந்தன. முன்பு மாமாவின் வீட்டில் சாப்பிட்ட பொழுதுகளை நான் அன்புடன் நினைத்துப் பார்த்தேன். ராஜம்மாவின் கைத்திறமைக்கு வயது அதிகமானதால் சிறிதும் குறைச்சல் உண்டாகவில்லை.
மாடியில் எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் ஒரு இரட்டைக் கட்டிலும் சிறிய ஃப்ரிட்ஜும் கண்ணாடியும் அலமாரியும் இருந்தன. குளியலறையில் வெந்நீர் வரக்கூடிய கீஸரும் குளியல் தொட்டியும் இருந்தன. மிகவும் வேகமாக நான் குளித்து முடித்தேன். பிறகு ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்தபோதுதான் பாரிஜாதம் மலர்ந்து உண்டாக்கிய நறுமணம் என்னைப் புத்துணர்வு கொள்ளச் செய்தது. கீழேயிருந்த தோட்டத்தில் ஐந்தெட்டு மரங்களை நான் பார்த்தேன். ஒரு நீச்சல் குளமும் அங்கு இருந்தது. குளத்தின் ஓரத்தில் இருந்த திண்ணைமீது அரை நிர்வாணக் கோலத்தில் ஒரு மனிதன் உட்கார்ந்திருந்தான். திண்ணைமீது கல்லில் செதுக்கி வைக்கப்பட்ட ஒரு சிலையாக இருக்குமோ என்று நான் முதலில் சந்தேகப்பட்டேன். அந்த அளவிற்கு அந்த இளைஞன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தான். அவன் மனிதர்கள் சாப்பிடும் உணவைச் சாப்பிடக் கூடியவனாக எனக்குத் தெரியவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும்போது அவன் தன் இரண்டு கைகளையும் மேல்நோக்கித் தூக்கினான். அவற்றை மீண்டும் அவன் கீழே இறக்கினான். அவனுடைய மார்பில் ஒரு தகடு ஒளிர்வதை என்னால் பார்க்க முடிந்தது. நிலவைவிட வெளுத்திருக்கும் ஒரு வெள்ளித் தகடு. முகம் இருட்டில் இருந்தது. அவன் மேல்நோக்கிப் பார்த்தபோது, நான் ஜன்னலில் பிடித்திருந்த என் பிடியை விட்டுவிட்டு என் படுக்கையில் சாய்ந்தேன். சிறிது நேரம் தூக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு படுத்திருந்தபோது, கதவை யாரோ தட்டும் தத்தம் என் காதுகளில் விழுந்தது. கதவைத் திறந்தபோது, ராஜம்மா ஒரு ஃப்ளாஸ்க்குடன் நின்றிருந்தாள்.
“மனோமி, இதோ ஓவல் டின்... தூங்குறதுக்கு முன்னால் இதைக் குடிக்கணும்”- அவள் சொன்னாள்.
வயது அதிகமானதால் சுருங்கிப் போயிருந்த அந்தக் கைகளை நான் என் கைகளில் எடுத்தேன்.
“உட்காருங்க ராஜம்மா”- நான் சொன்னேன்: “கொஞ்ச நேரம் என்னிடம் பேசிக்கொண்டு இருங்க. இலங்கையை விட்டு வந்ததாலோ என்னவோ, என் மனம் அமைதியில்லாமல் இருக்கு.”
“சந்தோஷமா இரு...”- கிழவி சொன்னாள்: “மனோமி, உன்னை சுந்தரத்துக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அய்யா ரூபாவிடம் சொன்னதைக் கேட்டப்போ எனக்கு சந்தோஷமா இருந்தது.”
“அந்தத் திருமணத்திற்கு நாங்கள் சம்மதிக்கலைன்னா..?”- நான் கேட்டேன்.
“சம்மதிக்காமல் இருக்கக் காரணமே இல்லையே! சுந்தரம் நல்ல உடல்நலத்தைக் கொண்ட இளைஞன். விரும்புகிற அளவுக்குப் பணம் இருக்கு. நீ அழகான பெண். அய்யாவுக்கு நீ என்றால் உயிர். இந்த வீட்டிலேயே நீயும் வேதவல்லியும் ஒண்ணா சேர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும்.”
“எல்லோருடைய விருப்பமா? எந்தச் சமயத்திலும் அது உண்மை அல்ல. மாமா இந்தத் திருமணத்தில் விருப்பம் கொண்டிருக்கலாம். உங்களுக்கும் விருப்பம் இருக்கலாம். மீதி இருப்பவர்களுக்கு இதில் விருப்பமே இல்லை என்பதை என்னால் புரிஞ்சிக்க முடியுது.”
“அப்போ இருந்த மாதிரியே இப்பவும் நீ சரியான புத்திசாலிதான்! மனிதர்களின் முகத்தைப் பார்த்த உடனே அவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கன்றதை உன்னால கண்டுபிடிக்க முடியுதுன்னு நினைக்கிறேன்.”
“சொல்லுங்க ராஜம்மா... நான் வர்ற விஷயத்தைப் பற்றி இந்த வீட்ல சண்டைகள் உண்டாச்சுல்ல?”
ராஜம்மா தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உட்கார்ந்தாள்.
“இங்கே... என் பக்கத்துல கட்டிலில் வந்து உட்காருங்க. இங்கே நீங்கதான் எனக்கு அம்மா.”
நான் அந்த வயதான பெண்ணைப் பிடித்து எழ வைத்து கட்டிலில் உட்கார வைத்தேன். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
“உன்னை என் மகளாகவே நான் நினைக்கிறேன்”- அவள் தொண்டை இடறச் சொன்னாள்: “நான் கல்யாணம் பண்ணிக்கல. அதனால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கக் கூடிய அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்கல. பிரகாசமும் சுந்தரமும் ரூபாவதியும் என் பிள்ளைகளாக வளர்ந்தாங்க. உன்னையும் அப்போ ஒரு மகளாகத்தான் நான் நினைச்சேன். நீ சென்னைக்கு வரப் போறேன்னு கேள்விப்பட்டப்போ, மிகவும் மகிழ்ச்சியடைந்தது நானாகத்தான் இருக்கும்.
என்னை ஒரு மனிதப் பெண்ணாக நினைக்கக் கூடிய ஒரு உயிர் இந்த வீட்டில் இனிமேல் இருக்குமோ என்று நான் சந்தோஷத்துடன் நினைச்சுப் பார்த்தேன். இங்கே இருப்பவர்கள் என்மீது பாசம் வைத்திருக்கிறார்கள். ஆனால் தங்களோட அன்பை வெளிப்படுத்த அவர்களுக்கு நேரமே இல்லையே! என்னுடன் பேசுவதற்குக்கூட அவங்க மறந்து போயிடுறாங்க. பிரகாசம்... என் மடியில் படுத்து நான் சொன்ன கதைகளைக் கேட்டுத் தூங்கிய பிரகாசம் என்னைப் பார்த்து, ‘நலமா?’ன்னு இரண்டு வார்த்தைகள் கேட்டே எவ்வளவு நாட்களாகிவிட்டன! சரிதான்... அவருக்கு வேலைப் பளு... அய்யாவோட தொழிற்சாலையை நடத்தக்கூடிய சுமை பிரகாசத்தின் தலைமேலதான் இருக்கு. தினந்தோறும் வேலை நிறுத்தம் அது இதுன்னு அங்கே ஒரே பிரச்சினை... இலங்கையில இருந்து வந்து சேரும் அகதிகளை வேலைக்கு எடுத்தாங்க. வேலைக்கு எடுக்காமல் இருக்க முடியுமா? அங்கே புலிகளின் தலைவர்களாக இருப்பவர்கள் நம்ம சுந்தரத்தின் நண்பர்கள் ஆச்சே! ஆனால், இலங்கையிலிருந்து வந்தவர்கள் கம்யூனிஸ்ட்காரர்கள் என்று நான் கேள்விப்பட்டேன். அவர்கள் வேலை நிறுத்தம் செய்து அய்யாவின் மனதில் கவலையை உண்டாக்குகிறார்கள். அவர்களுக்கு தண்டனை அளிக்க இறங்கும்போது, சுந்தரம், பிரகாசத்துடன் சண்டை போட இறங்கிடுவார்... அவர்களுக்கிடையே நடக்கும் வாக்கு வாதங்களைக் கேட்டால் ஒரு ஆள் இன்னொரு ஆளைக் கொல்லப் போறாரோன்னு நமக்குத் தோணும். ஒரே ரத்தத்திலிருந்து பிறந்த இரண்டு பிள்ளைகள் எதிரிகளைப்போல நடந்து கொள்வது ஆச்சரியமான ஒரு விஷயம்தானே?”
“சிங்களர்களும் தமிழர்களும் ஒருவரையொருவர் கொலை செய்ய ஆரம்பிப்பார்கள் என்று அந்தக் காலத்தில் நீங்க நினைச்சீங்களா?”
“இல்ல மனோமி... உங்க ஆளுங்களும் எங்க ஆளுங்களும் ஒருவரையொருவர் வெறுப்பாங்கன்னு நான் ஒருநாள்கூட நினைச்சது இல்ல. ஆனால், இது கலியுகம் மகளே. உடன் பிறந்தவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு இறக்க வேண்டிய யுகம் இது. இதற்கு யாரையும் குறை சொல்லிப் பிரயோஜனம் இல்லை...”
“ரூபாவின் கணவர் எப்படிப்பட்ட மனிதர்? அவர்கள் ஒருவருக்கொருவர் இடையில் அன்பு இருக்கிறதா?”
“அவங்க ஒருத்தர்மேல் ஒருத்தர் அன்பு வச்சிருக்காங்க. சிவன், பார்வதி மாதிரிதான் அவங்க இரண்டு பேரும். அந்தப் பையன் ஒரு கோமாளி மாதிரி நடந்து கொள்வான், அவ்வளவுதான். எந்த நேரம் பார்த்தாலும் நாக்கை வச்சுக்கிட்டு கண்ட கண்ட சத்தங்களையெல்லாம் உண்டாக்கிக் கொண்டிருப்பான்.”
“சுந்தரத்திற்கு நான் இங்கே வர்றது கொஞ்சமும் பிடிக்கவில்லை. உண்மையைச் சொல்லுங்க ராஜம்மா... சண்டை போட்ட சம்பவம் நடந்ததா?”
“சண்டை நடந்தது உண்மை. இறுதியில் அது முடிஞ்சும் போச்சு. உன்னை மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி சுந்தரம் அய்யாவிடம் சொன்னார். அவருக்கு இந்த விஷயத்தில் எதிர்ப்பு இருப்பதற்குக் காரணம் இருக்கு. மறைவில் இருக்கும் புலிகளில் பலர் அவருக்கு நண்பர்களாக இருக்காங்க. அவர்களுக்காகப் பணம் திரட்டுவது சுந்தரம்தான். வானொலி வழியாக யாழ்ப்பாணத்திலிருந்து அவ்வப்போது சுந்தரத்திற்குச் செய்திகள் கிடைத்துக் கொண்டிருக்கும்.”
“ராஜம்மா, உங்க கருத்து என்ன? புலிகள் கெட்டவங்களா? இல்லாவிட்டால் சிங்களர்களா?”
“கடவுள்கள்தான் கெட்டவர்களாக ஆகியிருக்காங்க.”
நான் படுக்கையில் படுத்துக் கொண்டே சிரித்தேன்.
“என் மகளே, நீ இந்த உரையாடலைப் பற்றி வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.”
“நிச்சயமா இல்ல...”
ராஜம்மா போன பிறகும், எனக்குத் தூக்கம் வரவில்லை. எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு தங்குமிடம் கிடைத்தும், நான் சிறிதும் தூக்கம் வராமல் மேலே பார்த்தவாறு படுத்திருந்தேன். வெளியிலிருந்து வீசிய காற்றில் பாரிஜாதம் செண்பகம் ஆகிய மலர்களின் நறுமணங்கள் அறைக்குள் வந்தன. நடு இரவு நேரமாக இருக்கும்... ஒரு முனகல் சத்தம் கேட்டு நான் கண் விழித்தேன். என் கனவிலிருந்து விழுந்த முனகலாக அது இருக்கலாம் என்று முதலில் நான் நினைத்தேன். அது வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மிருகத்தின் முனகலாக இருந்தது. மாமாவிடம் நாய் இருக்கிறதா? அதற்கு நோய் உண்டாகியிருக்குமோ? இல்லாவிட்டால்.... பசுவாக இருக்குமோ? நான் எழுந்து என் மெல்லிய இரவு ஆடைக்கு மேலே சால்வையைப் போர்த்த வேண்டும் என்றுகூட நினைக்காமல் டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டு வெளியே இருந்த அறைக்குள் நுழைந்தேன். எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் வலது ஓரத்திலிருந்த ஒரு கதவை நான் நெருங்கியபோது, அந்த வேதனைச் சத்தம் மேலும் சற்று உரத்து ஒலிப்பதைப் போல எனக்குத் தோன்றியது கதவைத் தள்ளித் திறந்தவாறு நான் சுற்றிலும் பார்த்தேன். அது ஒரு படிகளின் கீழ்ப்பகுதியாக இருந்தது. படிகளில் ஏறியபோது, நான் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த அறையை அடைந்தேன். பூச்சிகளுடைய சிறகுகளின் அசைவுகளை நான் கேட்டேன். சிலந்தி வலை என் முகத்தில் பட்டது. டார்ச் விளக்கை அடித்தபோது, ஒரு பாயில் சுருண்டு படுத்தவாறு முனகிக் கொண்டிருந்த ஒரு மனித உருவத்தை நான் பார்த்தேன். அவனிடமிருந்து காயங்கள் பழுத்து உண்டான வாசனை என் மூக்கு துவாரங்களுக்குள் நுழைந்தது. அவனுடைய வலது தோளிலும் கையிலும் ரத்தம் வழிய இருந்த காயங்களை நான் பார்த்தேன். சுருள் முடியைக் கொண்ட அந்த இளைஞனின் தலையை நான் என் மடியில் வைத்தேன். ரத்தம் பட்டு சடை பிடித்திருந்த அந்தத் தலைமுடியையும், மூடிய கண்களின் நீளமான இமைகளையும், திறந்துகிடந்த மார்பையும் நான் துடிக்கும் இதயத்துடன் பார்த்தேன். என்னிடம் இல்லாத ஒரு தனி அன்புடன் நான் அவனுடைய நெற்றியைத் தடவினேன்.
“அழக் கூடாது... நான் வேதனையை இல்லாமல் செய்கிறேன்”- நான் அவனிடம் மெதுவாகச் சொன்னேன். தொடர்ந்து அவனுடைய காயங்களைக் கழுவித் துடைத்து, அதில் போரிக் பவுடரைப் பூசிய பிறகு, நான் ஃப்ளாஸ்க்கைத் திறந்து அவனுடைய வாயில் ஓவல் டின்னை ஊற்றினேன்.
“உங்க பேர் என்ன?”- நான் கேட்டேன்.
“என் பெயர் திருச்செல்வம்”- அவன் சொன்னான். அப்போதும் அவன் கண்களைத் திறக்கவோ என்னைப் பார்க்கவோ இல்லை.
கட்டரகாமாவில் வெடிகுண்டு எறிந்ததில் எரிந்து சாம்பலான என் தந்தையின் உடலின் மீதிகளை திரும்பவும் பார்ப்பதைப் போல நான் உணர்ந்தேன். என் கண்களுக்குள் சிறிது நேரம் இருட்டு நுழைந்தது. சாயங்கால நேரத்தில் ஒலிக்கும் மந்திரங்களை நான் மீண்டும் கேட்பதைப் போல் உணர்ந்தேன். நானும் என் தந்தையும் இருந்த வீட்டிற்குச் செல்லும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் தொங்கவிடப்பட்டிருந்த வெள்ளைநிறக் கொடிகள்- மரணத்தை அறிவிக்கும் அடையாளங்கள்- காற்றில் அசைந்து ஆடுவதையும் நான் பார்த்தேன்.
திருச்செல்வத்தின் அழகான முகத்தை நான் இலங்கையில் பல இடங்களிலும் சுவரொட்டிகளில் பார்த்திருக்கிறேன். அவனுடைய தலைக்கு இலங்கை அரசாங்கம் இரண்டு லட்சம் ரூபாய் பரிசாக அளிப்பதாக அறிவித்திருந்தது. பயங்கரவாதிகளில் மிக பயங்கரவாதியான திருச்செல்வத்தைச் சிறையில் அடைக்க உதவி செய்பவர்களுக்கு எதை வேண்டுமானாலும் கொடுக்க ஜனாதிபதி ஜெயவர்த்தன தயாராக இருந்தார். உயிருடனோ பிணமாகவோ திருச்செல்வத்தை இலங்கை காவல்துறையிடம் ஒப்படைத்தால்...
முப்பது வயதுகூட ஆகாத ஒரு இளைஞன். எதிர்காலத்தை மோதல்களில் வைத்துக்கொண்டு நடந்து திரியும் ஆண். எதிர்காலத்தின் தந்தை! கண்களைத் திறந்தபோது, அவன் என்னை இலங்கைப் பெண்ணாகப் பார்ப்பானோ என்று நான் பயந்தேன். இறப்பதற்கு நான் பயப்படவில்லை. ஆனால், என்னால் வேறொரு மனிதன் தலை குனிந்து நிற்க வேண்டிய ஒரு சூழ்நிலையை... என்ன காரணத்தாலோ... நான் நல்லதாக நினைக்கவில்லை.
“இங்கே வந்து கிடந்து எவ்வளவு நாட்களாச்சு?”- நான் அவனிடம் கேட்டேன்.
“நேற்று இரவு திருவனந்தபுரம் வழியாக வந்தேன்”- அவன் சொன்னான்.
“பதினெட்டாம் தேதி... அப்படித்தானே?”
“இல்லை... பத்தொன்பதாம் தேதி. சுந்தரம் என்னை பெண் வேடத்தில் இங்கு கொண்டு வந்தார். நாளை இரவு ஒரு டாக்டரை யாருக்கும் தெரியாமல் இங்கே கொண்டு வருவதாக சுந்தரம் சொல்லியிருக்காரு.”
“நீங்க ஏன் கண்களைத் திறக்காம இருக்கீங்க?”
“திறக்க முடியல. தாங்க முடியாத வேதனை. என் கண்களிலும் அவங்க காயத்தை உண்டாக்கிட்டாங்க.”
“யார்?”
“இலங்கை கப்பல்படை. நாங்கள் வந்து கொண்டிருந்த படகை அவர்கள் வெடிகுண்டு வீசித் தகர்த்துட்டாங்க. மற்றவர்கள் இறந்திருக்க வேண்டும்... கடலில் நீந்திக் கொண்டிருந்த என்னைத் தூக்கி எடுத்து அவர்கள் குத்தி காயம் உண்டாக்கிட்டாங்க. ஆனால், நான் அவர்களிடமிருந்து போராடி ஓடிட்டேன். ரத்தத்தைச் சிந்தியவாறு நான் நீருக்கடியில் நீந்தினேன். ஒரு விஷயத்தை நினைக்கும்போது எனக்கு மனசுல சந்தோஷமா இருக்கு.”
“எதை நினைக்கும்போது உங்களுக்கு சந்தோஷமா இருக்கு?”
“நான் ஒரு சிங்களக்காரனை நீரில் வைத்து மூச்சுவிட முடியாமல் செய்து சாகடிச்சேன். ஒருத்தன்தான் என்றாலும் அவன் செத்துட்டான்.”
“சிங்களர்கள்மீது உங்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பா?”
“ஆமாம்... அவங்க முழுசா இறப்பதைப் பார்க்க நான் விரும்புறேன்.”
அவனுடைய கைகளையும் கால்களையும் மூடியபோது, என் கைகள் நடுங்கின. அந்த மொட்டை மாடியிலும் புத்தமதத் துறவிகளுடைய மந்திரங்களின் உச்சரிப்பு கேட்பதைப் போல மீண்டும் எனக்குத் தோன்றியது. நான் வேகமாக என் படுக்கையறைக்குத் திரும்பினேன். கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டே நான் அழைத்தேன்: “நிஸ்ஸாம்க!”
என் விளையாட்டுத் தோழன் அங்கு வந்து நின்றிருந்தால் மீண்டும் நான் அவனிடம் கூறுவேன்: “ஓ... நிஸ்ஸாம்க! என்னால் யாரையும் வெறுக்க முடியவில்லை. என் தந்தையைக் கொன்றவர்களையும் என்னால் வெறுக்க முடியவில்லை.”
அண்ணாதுரை
சென்ற முறை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தபோது அவர் சொன்னார்: “இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருங்க. எல்லா சோதனைகளையும் நடத்தி, உங்களுடைய நோய் என்ன என்பதை டாக்டர்களாகிய நாங்கள் கண்டுபிடிக்கிறோம். வேதனையும் மனக்குழப்பமும் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது என்கிறீர்கள். பதினாறு ராத்தல் எடை குறைஞ்சிருக்கு. எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை செய்து மாற்ற எங்களால் எளிதில் முடியும்.”
“நோயைவிட என்ன நோய் என்று தீர்மானிப்பதற்கு நான் பயப்படுறேன்.”
“உங்களைப்போல் உலக அனுபவமும் அறிவும் உள்ள ஒருவர் மருத்துவமனையில் கிடப்பதற்கு மனமில்லாமல் இருப்பதற்கான அர்த்தம்தான் எனக்குப் புரியவில்லை. நீங்கள் பிள்ளைகளைப் படிக்க வச்சீங்க. நல்ல நிலைக்கு அவர்களைக் கொண்டு போகவும் செய்தீர்கள். உங்களின் பல கடமைகளையும் நீங்கள் செவ்வனே செய்து முடித்திருக்கிறீர்கள். இனிமேல் மரணத்தைப் பற்றிக் கூட நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.”
“ஒரே ஒரு கடமை மீதமிருக்கிறது. என் பழைய நண்பரான டென்னக் கூனின் மகளை அழகான ஒரு இளைஞனுக்குத் திருமணம் செய்து தர வேண்டும்... அவள் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைவது வரையில், நான் வாழ்க்கையில் பற்களைக் கடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பேன்.”
“உங்களுக்கு அப்படியொண்ணும் சொல்லுற மாதிரி நோய் எதுவும் இருக்குன்னு நான் நினைக்கல. ஆனால், வயதைக் கணக்கில் எடுக்கும்போது, நோய்க்கான எந்த அறிகுறியையும் தீவிரமாக எடுக்க வேண்டியது உங்களுடைய குடும்ப டாக்டர் என்ற முறையில் என்னுடைய கடமை... என்னுடன் ஒத்துழையுங்கள்...”
“நான் மருத்துவமனைக்கு வர்றேன் டாக்டர். ஆனால், எனக்கு ஒரு மாதம் விடுமுறை வேணும். ரூபாவின் பிரசவம் முடியட்டும். மனோமியின் திருமணம் நடக்கட்டும். அதற்குப் பிறகு உண்மையாகவே நான் எந்தவித சோதனைக்கும் தயாராக இருப்பேன்.”
ரூபா பிரசவம் ஆன நாளன்று மருத்துவமனையில் மனோமிதான் அவளுக்கு உதவியாகத் தங்கினாள். இரவில் அவளுக்கு சப்பாத்தியும் குழம்பும், ரூபாவிற்கு பாலும் ரொட்டியும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நானும் மூர்த்தியும் வீட்டிற்குத் திரும்பி விட்டோம்.
“கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்”- நான் புறப்படுகிற நேரத்தில் அவளுடைய தலையில் கையை வைத்துக் கொண்டு சொன்னேன். அவள் எங்களுடன் மருத்துவமனையின் கேட் வரை நடந்து வந்தாள். உள்ளே இடம் இல்லாமலிருந்ததால், வெளியே பாதையின் ஓரத்தில் காரை மூர்த்தி நிறுத்தியிருந்தான்.
“நாளைக்கு உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நான் கார் கொண்டு வர்றேன்”- மூர்த்தி சொன்னான்.
“வேண்டாம்... நான் மாமாவின் காரில் வந்திடுறேன்”- அவள் சொன்னாள்.
“அது என்ன அப்படிச் சொல்றே? என் டிரைவிங் உனக்கு பிடிக்கலையா?”
“விருப்பமில்லாத பதிலைக் கேட்காமல் இருக்க வேண்டுமென்றால், கேள்வி கேட்காமல் இருப்பது நல்லது”- மனோமி சொன்னாள். அவள் மூர்த்தியைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு பேசினாள். அவளுடைய நடவடிக்கை மிகவும் வினோதமாக இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். என் மருமகன் ஏதாவதொரு விதத்தில் அவளைக் கவலை கொள்ளச் செய்திருப்பானோ என்று நான் பயந்தேன். ‘மூர்த்தி அப்படிப்பட்டவன் இல்லையே!’ என்ற நான் எனக்குள்ளேயே கூறிக் கொண்டேன்.
மூர்த்தியின் காரில் பயணம் செய்யும்போது நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம் கேட்டேன்:
“மூர்த்தி, மனோமிக்கு உங்கள் மீது அப்படியென்ன பகை?”
“பகை ஒண்ணும் இல்ல. ஆண்களுடன் பேசுவது என்றால் அவளுக்குப் பெரிய அளவில் உற்சாகமே இருக்கு. நீங்க அதைக் கவனிக்காமல் இருக்கலாம். அவளால் பிரகாசமும் வேதவல்லியும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாதவர்களாக ஆகிவிட்டார்கள்.”
“எனக்கு எதுவும் தெரியாது. என்ன நடந்தது?”
“மனோமி பிரகாசத்தைத் தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறாள். நேற்று வேதவல்லிக்குப் புடவைகள் வாங்கினப்போ, பிரகாசம் மனோமிக்கும் புடவைகள் வாங்கினார். ஒரே மாதிரி விலையைக் கொண்ட புடவைகள். புடவைகளைத் தருவதற்கு தனிப்பட்ட காரணம் ஏதாவது இருக்கிறதா என்று ரூபா கேட்டதற்கு ‘மனோமிக்கு எப்போது தேவைப்பட்டாலும் புடவைகள் வாங்கித் தர்றதுக்கு எனக்கு உரிமை இருக்கு’ன்னு பிரகாசம் சொல்லி இருக்காரு. அடுத்த நிமிடம் வேதவல்லி அறையை விட்டு வெளியே போயிட்டா. அதற்குப் பிறகு உணவு சாப்பிடக்கூட அவள் வரவில்லை. இரவு முழுவதும் அறையில் ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டிருந்தாள் என்று ரூபா சொன்னாள். நான் எதையும் கேட்கல. அப்படியே படுத்துத் தூங்கிட்டேன். இன்னைக்குக் காலையில் நீங்க சொன்னதைக் கேட்காமல் வேதவல்லி தோட்டத்தை நோக்கிப் போனது ஞாபகத்துல இல்லையா?”
“இல்ல... எனக்கு எதுவும் ஞாபகத்துல இல்ல.”
“ரூபாவை மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போறப்போ அவளுடன் வேதவல்லியும் போகணும்னு நீங்க சொல்லியிருந்தீங்கள்ல? வேதவல்லி தோட்டத்துல போயி மறைஞ்சிக்கிட்டாள்... அதற்குப் பிறகுதான் நான் மனோமியை அழைச்சேன்.”
“எனக்கு இவை எதுவும் தெரியாது. இந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதே எனக்குப் புரியவில்லை ஒருவருக்காருவர் அன்புடன் நடந்துகொள்ள வேண்டிய நீங்கள் சண்டை போட்டுக் கொள்வதை இந்த வயதான காலத்தில் நான் பார்க்கணுமா?”
“மனோமி வந்து சேரும் வரையில் நாங்கள் யாரும் சண்டையே போட்டதில்லை. அவளுடைய நடவடிக்கைகள்தான் ஆண்களைச் சண்டை போட வைக்குது.”
“மனோமி அப்படிப்பட்ட மோசமான ஒரு பொண்ணுன்னு நான் நினைக்கல. புத்தமத தத்துவங்களில் ஆழமான அறிவு கொண்டிருக்கும் அந்தப் பொண்ணு எந்தச் சமயத்திலும் தவறான செயல்களைச் செய்ய மாட்டாள். நீங்கள் அவளைத் தவறாக நினைக்கிறீர்கள். நீங்க எல்லாரும் சேர்ந்து அவளுக்கு எதிராக ஒரு சதி ஆலோசனை செய்றீங்கன்னு நான் பலமாக சந்தேகப்படுறேன்.”
“மாமா, உங்களையும் அவள் வசீகரம் பண்ணிட்டா. அவளைப் பற்றி குறை சொன்னால், அடுத்த நிமிடமே நீங்கள் ஒரு மாதிரி ஆயிடுறீங்க. உங்களுக்கு வியர்வை வழிய ஆரம்பிச்சிடுது.”
“வாய்க்கு வந்தபடி பேசாதீங்க மூர்த்தி... என் வயதை மனசுல வச்சாவது, என்னை அவமானப்படுத்தாம இருக்கணும்.”
நான் சமையலறைக்குச் சென்று ராஜம்மாவை வரச் சொன்னேன். சண்டை உண்டானது என்ற விஷயம் மட்டுமே அந்தக் கிழவிக்குத் தெரிந்திருந்தது. சண்டைக்கான காரணங்கள் என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.
“மனோமி கள்ளங்கபடமில்லாத பொண்ணு”- அவள் சொன்னாள்: “அவள் சுத்த தங்கம். அவளுக்கு இந்த மூணு முட்டாள்களும் சேர்ந்து தொல்லைகள் கொடுக்குறாங்க...”
“என் பிள்ளைகளையும் மருமகனையுமா நீங்க இப்படி முட்டாள்கள் என்று குற்றம் சுமத்துறீங்க?”- நான் கேட்டேன்.
“மோசமா நடக்குறப்போ நான் அவங்களை எப்படிச் சொல்ல முடியும்? நேற்று காலையில் மனோமியின் காலை மேஜைக்கு அடியில் இரண்டு தடவை மூர்த்தி மிதிப்பதை நானே பார்த்தேன். கடைசியில் பொறுக்க முடியாமல் உணவு சாப்பிடாமலே அவள் எழுந்து போயிட்டாள். போன வெள்ளிக்கிழமை படிகளுக்குக் கீழே வச்சு பிரகாசம் அவளை திடீர்னு கட்டிப்பிடிச்சு பிரகாசத்தை விலக்கி விட்டுட்டு, மேலே ஓடிட்டாள். அதற்குப் பிறகு அழுது சிவந்த கண்களுடன்தான் அவள் சாப்பாட்டு அறைக்குள்ளேயே வந்தாள். அவளை இங்கு மனநிம்மதியுடன் இருக்க அவங்க விடமாட்டாங்க.”
“இவற்றையெல்லாம் கேட்கும்போது என் மனசே ஒரு மாதிரி ஆகுது. நான் அவளை இங்கே வரவழைத்திருக்கக் கூடாது. அவளை அவமானப்படுத்துறதுக்கு இந்த வீட்டுக்கு அவளை வரவழைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. சுந்தரமுமா? சொல்லுங்க, ராஜம்மா... அவனும் அவளுக்குத் தொல்லை தருகிறானா?”
“சுந்தரம் ஒரு இரவு வேளையில் அவளுடைய அறையில் கதவை பலமாக தட்டிக் கொண்டிருந்தார். அறைக்குள்ளிருந்து எந்தவொரு அசைவும் இல்லை. நான் சுந்தரத்துக்கு அருகில் போனப்போ அவர், “நீங்க போயி தூங்குங்க. எனக்கும் மனோமிக்கும் இடையில் இருக்குற விஷயத்தில் நீங்க தலையிட வேண்டாம்” என்று சொன்னார். ஒரு இரவு தாண்டின நேரத்தில் திருமணமாகாத ஒரு இளம்பெண் இருக்கும் அறையில் நுழைவதற்கு முயலும் ஒரு ஆணை அந்த முயற்சியிலிருந்து விலக்க வேண்டியது என் கடமைன்னு நான் சத்தம் போட்டுச் சொன்னேன். அப்போதுதான் சுந்தரம் தோல்வியை ஒத்துக்கிட்டு தன் அறையைத் தேடிப் போனார்.”
“சொல்லுங்க, ராஜம்மா... நான் இனிமேல் என்ன செய்யணும். என் பிள்ளைகள் மோசமானவர்களா மாறிட்டாங்களே!”
“மனோமிக்குத் திருமணம் செய்து வைத்து சென்னையை விட்டு வெளியே அனுப்புங்க.”
“சுந்தரம் அவளைத் திருமணம் செய்து, அதை நான் பார்க்க விரும்பினேன்.”
“அவள் சுந்தரத்தைத் திருமணம் செய்து கொள்ள மாட்டாள்.”
“சுந்தரம் மீது அவளுக்கு அந்த அளவுக்கு வெறுப்பா?”
அவளுக்கு சுந்தரத்தின் மீது வெறுப்பு இருக்கு. இங்கு இருக்கும் மூணு இளைஞர்கள் மீதும் அவளுக்கு வெறுப்பு இருக்கு. அதை அவள் எல்லா நேரங்களிலும் என்னிடம் கூறியிருக்கிறாள். தன்னுடைய அண்ணன்மார்கள் என்று மனதில் நினைத்திருந்தவர்கள் எல்லோரும் பொறுக்கிகளா ஆயிட்டாங்களே என்று அவள் என்னிடம் கவலைப்பட்டுச் சொன்னாள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசாகக் கொடுப்பதற்காகக் கொண்டு வந்திருந்த வெள்ளை நிற இலங்கை சட்டைகளை அவள் தன் பெட்டியிலேயே வைத்துக்கொண்டாள். `ராஜம்மா, அவர்கள் என் பரிசுக்குத் தகுதியானவர்கள் இல்லை’ என்று மனோமி என்னிடம் சொன்னாள். ஆமாம், எஜமானரே... மனோமி மிகவும் கவலைப்படுறா. அவ்வப்போது அறைக்குள் போயி அழறா. ஆண்களின் தொந்தரவு ஒரு பக்கம். பெண்களின் குத்தல் வார்த்தைகள் இன்னொரு பக்கம். அவள் இப்போ நரகத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கா. வேதவல்லியும் ரூபாவும் அவளை வெறுக்குறாங்க. தங்களுடைய கணவர்களைக் கைக்குள் போட வந்த மோகினி அவள் என்று வேதவல்லி ரூபாவிடம் சொல்வதை நானே கேட்டேன். கருப்பு நிற இளம் பெண்களுக்கு வெள்ளையா இருக்கிறவர்கள் மீது வெறுப்பு தோணும். ஆனால், இந்த அளவுக்கு வெறுப்பு எதற்கு? இந்த அளவிற்குப் பகை உணர்ச்சி எதற்கு? இது சாதாரண ஒரு விஷயம் அல்ல. மனோமியை இவர்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து எங்கே கொன்னுடுவாங்களோன்னுகூட நான் பயப்படுறேன்.”
“கொன்னுடுவாங்களா? நிச்சயமா நடக்காது. இங்கே இருப்பவர்கள் யாரும் கொலை செய்யக் கூடியவர்கள் அல்ல. கொலை செய்வதற்குக் கொஞ்சம் தைரியமும் மன வலிமையும் வேணும்...”
“கொலைக்காரர்களைத்தானே இந்த வீட்டின் மொட்டை மாடி அறையில் கொண்டு வந்து மறைச்சு வச்சிருக்காங்க! இரண்டு வருடங்களாக இப்படிப்பட்ட ஆட்களை சோறு தந்து மொட்டை மாடியில் பாதுகாத்துக் கொண்டிருக்கவில்லையா?”
“சத்தம் போட்டுச் சொல்லாதீங்க. யாராவது கேட்டால் சுந்தரம்தான் தண்டனையை அனுபவிக்கணும்.”
“சின்ன வயசல இருந்தே சுந்தரம் இதே மாதிரிதான். தவறு செய்ய தைரியம் இல்லை. ஆனால், தவறு செய்தவர்களை ஆதரிப்பார். மற்றவர்களின் பாவத்தைக் கடன் வாங்கக் கூடிய ஒரு வினோதமான பிறவி சுந்தரம் என்று சொல்லலாம்.”
“நீங்கள் என் பிள்ளைகளை அன்பு செலுத்தி வளர்த்த வயதான பெண். இல்லாவிட்டால் நான் இப்படிப்பட்ட வசைபாடலைக் கேட்டதற்காக உங்களை மிதிச்சு நொறுக்கியிருப்பேன்.”
அதைக் கேட்டு ராஜம்மா சிரித்தாள்.
“மனோமியின் திருமணத்தை முடிவு செய்யணும். இல்லாவிட்டால் அவளை திரும்பவும் இலங்கைக்கு அனுப்பி வைக்கணும்.”
- நான் சொன்னேன்.
“ஆமாம்... இலங்கைக்கு அவளைத் திரும்ப அனுப்பி வைக்க வேண்டியதுதான்.”
“அவளுடன் சேர்ந்து நானும் இலங்கைக்குப் போகப் போறேன். அந்தத் தீவை விட்டு இங்கே வந்து பதினேழு வருடங்கள் ஆயிடுச்சு. சொர்க்கத்தைப் போன்ற அந்த நாட்டிற்கு இன்னொரு முறை போக வேண்டும் என்றும்; அங்கிருக்கும் கடற்கரையில் நின்று கொண்டு சூரியன் மறைவதை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டுமென்றும் என் மனதில் ஆசையா இருக்கு.”
“பயணம் செய்யக்கூடிய அளவிற்கு உங்களுக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவமனையில் வந்து படுக்கும்படி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சொன்னாருல்ல...?”
“நோயாளியாக ஆனதுனாலதான் எனக்கு சீக்கிரம் இலங்கைக்கு போகணும்ன்ற விருப்பமே வந்தது. என்னுடைய உடல் நலத்தையும் இளமையும் நான் அங்கே எறிஞ்சிட்டு வந்துட்டேன். இழந்தவற்றையெல்லாம் திரும்ப எடுக்க நான் ஆசைப்படுறேன்.”
“உங்களுக்கு புண்ணியகாந்தி மீது ஒருவித ஈர்ப்பு இருந்திருக்குமோன்னு பல நேரங்கள்ல நான் நினைச்சிருக்கேன்...”
“உங்களுடைய கற்பனைகள் அளவுக்கு மீறிப் போகுது தாயே!”
ராஜம்மா ஈறுகள் தெரியும்படி உரத்த குரலில் சிரித்தாள்.
அன்று இரவு எனக்கு தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும் தூங்க முடியவில்லை. ரத்த அழுத்தம் காரணமாக வந்த தலைவலி என் தலையை பாடாய்படுத்திக் கொண்டிருந்தது. கண்கள் மங்கலாவதைப் போலவும் காதுகளில் காற்று சீட்டி அடிப்பதைப் போலவும் நான் உணர்ந்தேன். நான் எழுந்து வரவேற்பறைக்குச் சென்று ராஜம்மாவை அழைத்து, கொஞ்சம் காபியும், பொறித்த ரொட்டித் துண்டும் கொண்டு வரச் சொன்னேன். அவள் சமையலறையில் வேலை செய்யும்போது, தோட்டத்தில் நரி ஊளையிடும் சத்தம் என் காதுகளில் விழுந்தது. அதற்குப் பிறகு திரும்பவும் அமைதி நிலவியது. அப்போது நான் ஒரு மனிதனின் முனகல் சத்தத்தைக் கேட்டேன். பிரசவ வலியை அனுபவிக்கும் பெண்கள் சாதாரணமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு மெல்லிய சத்தம்... தலையணையையோ வேறு எதையோ கடித்துக் கொண்டு வேதனையை வெளியே தெரியாமல் அழுத்த முயற்சிக்கும் ஒரு ஆள் அழுவதாக நான் உணர்ந்தேன். “முனகுறது யாரு? வேலைக்காரர்களில் யாருக்காவது உடல் நலம் சரியில்லையா?” – நான் ராஜம்மாவிடம் கேட்டேன்.
“முனகறது புலிதான். சுந்தரம் அந்த மனிதனிடம் டாக்டரை அழைத்துக் கொண்டு வந்திருக்காரு. உடலெங்கும் காயங்கள் இருக்குறதா கேள்விப்பட்டேன். பெண் வேடம் அணிவித்து இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வந்திருக்காங்க.”
“சுந்தரம் மொட்டை மாடியில் இப்போ இருப்பானா? நான் அவனைப் பார்த்துப் பேச வேண்டியதிருக்குன்னு சொல்லுங்க.”
“சரி... படிகளில் ஏறித்தான் என் முழங்கால்கள் இப்படி வலிக்குது. எனக்கு எழுபது வயது ஆயிடுச்சுன்ற விஷயத்தை இங்கே இருக்குற யாரும் நினைப்பதே இல்லை”- ராஜம்மா முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள்.
சுந்தரம் டாக்டரை அனுப்பிவிட்டு, வரவேற்பறைக்கு வந்தபோது கடிகாரம் இரண்டு முறை ஒலித்தது.
“அப்பா, இன்னைக்கு உங்களுக்கு உறக்கம் வரலையா?”- அவன் கேட்டான்.
“எனக்கு இந்த வீட்டில் எப்படி உறக்கம் வரும்? நீங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த அப்பாவி சிங்களப் பெண்ணை வேட்டையாடுறப்போ, நான் எப்படி உறங்குவேன்? நீங்க என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள் இல்லை என்பதை அவளுக்குத் தெரிய வைக்க முயற்சிக்கிறீங்களா?”
“அப்பா, விஷயத்துக்கு வாங்க. நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க?”
“எனக்கு அந்தக் குடும்பத்தின் மீது இருக்கும் நன்றி உனக்கு நல்லா தெரியும். நீ அவளை மனைவியாக ஆக்கிக் கொள்வாய் என்று நான் நினைச்சிருந்தேன்...”
“அப்பா, உங்களுக்கு விருப்பம் இருந்தால், அந்தத் திருமணம் நடக்கட்டும். ஆனால், புலிகள் என்னை உயிருடன் விட்டு வைப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா? அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள். அப்பா, சிங்களக் காரியைத் திருமணம் செய்தால், அவங்க என்னைக் கொன்றுடுவாங்க.”
“நீயும் அவளை எதிரியாக நினைக்கிறியா? அவளைக் கொல்ல நீயும் விரும்புறியா? உண்மையைச் சொல்லு... அவளுடைய உயிருக்கு இந்த வீட்டில் ஆபத்து எதுவும் இருக்குமா? அப்படின்னா நான் அவளையும் அழைச்சிக்கிட்டு இலங்கைக்குப் பயணமாயிடுறேன்.”
“நீங்களா? இந்த இக்கட்டான நேரத்தில் நீங்க இலங்கைக்குச் செல்வதா? நிச்சயமா நடக்காத விஷயம். அப்பா, உங்களை இலங்கைக்குச் செல்ல நாங்கள் நிச்சயமா அனுமதிக்க மாட்டோம்.”
“இறப்பதற்கு முன்னால் இலங்கையை மீண்டும் ஒருமுறை பார்க்க நான் ஆசைப்படுறேன். அங்கு போனாலாவது எனக்கு மன அமைதி கிடைக்கும் என்று நான் நம்புறேன். அங்கு இருக்குறப்போ நான் மகிழ்ச்சியான மனிதனாக இருந்தேன். அன்பு செலுத்தப்பட்ட மனிதனாக இருந்தேன். ஆமாம், மகனே... நான் இலங்கைக்குப் போக வேண்டும்.”
மனோமி
ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் இதர சோதனைகள் ஆகியவற்றின் முடிவைத் தெரிந்து கொள்வதற்காக நான்தான் மருத்துவமனைக்குச் சென்றேன். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்னைக் கண்டதும் ஆச்சரியத்துடன் கேட்டார்: “நீங்க மட்டுமே வந்திருக்கீங்க! ஏன் ஆண் பிள்ளைகள் வரவில்லை?”
“சுந்தரம் திருச்சிராப்பள்ளிக்குப் போறார். பிரகாசத்திற்கு நேரமில்லை. தொழிற்சாலையில் வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் நடந்தன. வேலைவாய்ப்பு அதிகாரி வீட்டுக்கு வந்து பிரகாசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.”
“அப்படின்னா மிஸ்டர் அண்ணாதுரையின் நோய் பற்றிய விவரங்களை நான் உங்களுக்குத் தெரியப்படுத்துறேன். அவருக்கு புற்று நோய் இருக்குன்னு தெளிவாகி இருக்கு. அறுவை சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு அது வயிற்றில் முற்றிப் போயிருக்கு. கல்லீரலைத்தான் புற்றுநோய் பாதிச்சிருக்கு. வலியைக் குறைக்கக்கூடிய மருந்துகளைக் கொடுத்து ஓய்வெடுக்கச் செய்ய மட்டுமே நம்மால் முடியும். என்னைக்கு வேணும்னாலும் அவர் இறக்கலாம். ஒரு மாதத்திற்குள் மரணம் நடக்க வாய்ப்பு இருக்கு. மிஸ் மனோமி, ஐயாம் ஸாரி...”
மாமாவின் அறைக்குச் சென்று நான் அவருடைய வலது கையை மெதுவாகத் தடவினேன். என் கண்களைப் பார்த்தவுடன் மாமாவிற்கு விஷயம் புரிந்துவிட்டது.
“எனக்குப் புற்றுநோய் என்று டாக்டர் சொன்னாரு... அப்படித்தானே?”- அவர் கேட்டார்.
நான் தலையை ஆட்டினேன். அறையில் இருள் பரவத் தொடங்கிவிட்டது என்பதையும், திறந்திருக்கும் ஜன்னல் வழியாக கொசுக்கள் பாடிக் கொண்டே உள்ளே நுழைகின்றன என்பதையும் நான் உணர்ந்திருந்தேன். எனினும், நான் எழுந்து போய் விளக்கை எரிய வைக்கவோ ஜன்னல் பலகைகளை அடைக்கவோ செய்யவில்லை. எங்களுக்கிடையே நிமிடங்கள் நகர நகர மவுனம் ஒரு மண் குன்றைப் போல அதிகமாகிக் கொண்டு வந்தது. மாமாவிடம் அந்தக் கடினமான செய்தியை அவருடைய மூத்த மகன் கூறியிருக்க வேண்டும் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். இந்த அளவிற்கு கவலையை நான் எதற்கு அந்த அன்பே வடிவமான மனிதனுக்கு அளிக்க வேண்டும்? இறுதியில் நீண்ட நேரமான பிறகு, மாமா தன் கையை நீட்டி என் முகத்தில் ஒட்டியிருந்த கண்ணீரைத் துடைத்தார்.
“இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நீ ஒரு தந்தையை இழந்தே! வருடம் முடிவதற்குள் மீண்டும் அதே வேதனையை நீ அனுபவிக்கப் போறே, மகளே!”- அவர் சொன்னார்.
“ஏதாவதொரு பொருளை, அது நிரந்தரமற்றதாக இருந்தாலும், அது அழிவற்றது என்று நினைப்பதால்தான் மனதில் வேதனை என்ற ஒன்று உண்டாகிறது. எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு மாற்றமும் வேறொரு மாற்றத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. எல்லா மாற்றங்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்னும் அதே நேரத்தில், அந்தக் காரணத்திற்கும் வேறொரு காரணம் இருக்கிறது என்னும்போது, மாறுதல் இல்லாததும், முதலுமான ஒரு காரணம் கட்டாயம் இருக்க வேண்டும் மாமா.”
“மனோமி, நீ என்ன சொல்றே?”
“மாறுதல் இல்லாதது சூனியம் மட்டும்தான் என்கிறேன்.”
“நீ எனக்கு வேதாந்தத்தைக் கற்றுத் தர முயற்சிக்கிறியா?”
“இல்லை, மாமா. தடாகத்தில் தெரியும் நிலவின் உருவத்தைப் பிடிக்க ஆசைப்படுகிற குரங்குக்கு நிகரானவன் வேதாந்தி என்று புத்ததேவன் கூறினார். ப்ரமத்தை நம்பி ப்ரமத்தைத் தேடுபவன், நாற்சந்தியில் ஏணியை வைத்து தான் இதுவரை பார்த்திராத- தனக்குத் தெரிந்திராத கோபுரத்தில் ஏற முயற்சிக்கும் ஒரு மனிதனைப் போன்றவன்.”
“மரணத்திற்கு என்ன அர்த்தம்?”
“ஆத்மா பரமாத்மாவுடன் போய்ச் சேரும்போது அதற்கு நிர்வாணம் கிடைக்கிறது என்று இந்துக்கள் கூறிகிறார்கள். கர்மங்கள் முடிவுக்கு வந்தால், சிந்தனை நின்று விடுகிறது. அப்போது அன்பும் வாழ்க்கையும் சிந்தனையும் இல்லாமல் போய் விடுகின்றன.”
“நினைவு இல்லாமல் போகுமா? உன்னையும் என் பிள்ளைகளையும் நான் செய்து முடிக்காத செயல்களையும் நினைத்து, வேறொரு உலகத்தில் நான் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பேனா? முதுமைக்கும் மரணத்திற்கும் காரணம் என்ன?”
“ஒரு மனிதன் புத்தரிடம் கேட்டான்: ‘முதுமை என்றால் என்ன? மரணம் என்றால் என்ன?’ என்று. அதற்கு புத்தர் சொன்னார்: ‘ஆன்மாவும் உடலும் ஒன்றாக இருந்தால், உடல் அழியும்போது ஆன்மாவும் அழிந்துவிடும். அது அல்ல- ஆன்மாவும் உடலும் தனித்தனி என்றால், கர்மத்தின் விளைவால் ஆன்மா நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றில்லை. இரண்டும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கலாம். முதுமையும் மரணமும் பிறப்பைச் சார்ந்திருக்கின்றன’ என்று. ஆமாம், மாமா... சிந்திப்பதற்கு மனிதன் இல்லையென்றால், சிந்தனை இல்லை. சிந்தனைகள் சிந்திப்பவனுக்கு வடிவம் தருகின்றன. சிந்திக்கப்பட்ட ஒரு சிந்தனை வாழ்ந்தது. ஆனால், அது வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. வாழப் போவதும் இல்லை. சிந்திக்க இருக்கும் சிந்தனை வாழும். ஆனால், வாழ்ந்ததில்லை. வாழ்ந்து கொண்டிருக்கவும் இல்லை. சிந்திக்கப்படும் சிந்தனை வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், வாழ்ந்ததில்லை. இனி வாழப் போவதும் இல்லை. மாமா, உங்களுடைய சிந்தனைகள் கவலைகள் நிறைந்தவையாக இருந்தாலும் சரி... சந்தோஷங்கள் நிறைந்தவையாக இருந்தாலும் சரி... சிந்திக்கப்படுவதற்கு நீங்கள் வேண்டும். நீங்கள் இல்லாமல் போகும்போது, உங்களுடைய சிந்தனைகளும் இல்லாமல் போய்விடும்.”
“நீ என் ஆன்மாவை மறந்து பேசுறே?”
“ஆன்மாவைத் தேடுவது முட்டாள்தனமானது. காரணம், ஆன்மா என்பது மாயை, கனவு. உண்மை அல்ல. ‘புனித பாதை’ என்ற நூலில் புத்தகோஷன் கூறுகிறார்: ‘பெயரும் வடிவமும் மட்டுமே மனிதன்’ என்று. விஞ்ஞான அணுவிலிருந்து பெயர் வடிவம் கிடைக்கிறது. தத்துவஞானி அகம்பாவத்துடன் கூறுகிறான்- தனக்குத் தெரியும், தனக்குத் தெரியும், தனக்குத் தெரியும், தனக்குத் தெரியும் என்று. கண்ணாடிக்குள் பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல, கதையில் கதையைப் போல முடிவே இல்லாமல் நீண்டு கிடக்கும் உணர்வுத் தோன்றல்கள்… சில சூழ்நிலைகளின் பாதிப்பால் காய்ந்துபோன மரக்கொம்பு மற்றொரு கொம்பில் உரசும்போது நெருப்புப் பொறி பிறப்பதைப் போல உணர்வு பிறக்கிறது. அதே சூழ்நிலைகளின் மாற்றத்தால் உணர்வு மறைந்தும் போகலாம்.”
“நீ முதலில் சொன்ன அந்த அழகான வார்த்தையான ‘நிர்வாணம்’ என்றால் என்ன? அதை எப்படி அடைவது?”
“ ‘நிர்’ என்றால் ‘மாறுபட்டு’ என்று அர்த்தம். ‘வா’ என்றால் ‘காற்று’ என்று அர்த்தம். காற்றிலிருந்து மாறுபட்டு என்றால் அசையாத நிலை என்று அர்த்தம். காமம், பகை, அறியாமை- இவை மூன்றும் அழிவதுதான் நிர்வாணம். பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட வழிப்போக்கன் கடுமையான வெயிலில் மரமும் தடாகமும் தெரியும் கானல் நீரைக் காண்பதைப் போலத்தான் நாம் வாழ்க்கையைப் பார்க்கிறோம். கானல் நீரை உண்மையென்று நம்பும் வெறிபிடித்த மனம்.”
மாமா என் கை விரல்களில் முத்தமிட்டார். அவருடைய முகத்தில் முன்பு எப்போதும் தெரிந்திராத ஒரு சாந்தத்தை என்னால் பார்க்க முடிந்தது.
ஜன்னலுக்கு வெளியே கறுத்த வெல்வெட்டைப் போன்றிருந்த வானம் திடீரென்று பிரகாசமானது. மரத்தைவிட்டு வெளியே வந்த நிலவொளி, யாரோ திடீரென்று எரிய வைத்த விளக்கைப்போல எனக்குத் தோன்றியது. வழிகாட்டும் விளக்கு. நிலவை விளக்காகப் பார்த்ததற்காக நான் அந்த நிமிடமே வெட்கப்பட்டேன். சாதாரண காட்சிகளை உருவகங்களாக்கிப் பெரிதாக பார்க்கும் குணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இந்தியாவிற்கு வந்து இருபத்து இரண்டு நாட்கள் கடந்தபோது, பாரத சிந்தனையின் பாதிப்பு என்னுடைய சிந்தனைகளில் வெளிப்பட்டது.
“உனக்குப் பசிக்கும் மனோமி. நீ கீழே போய் உணவு சாப்பிடு. ராஜம்மாவிடம் இங்கே எனக்குக் கொஞ்சம் கோதுமைக் கஞ்சியைக் கொண்டு வந்து தரச்சொல்லு.”
“ராஜம்மா கோவிலுக்குப் போயிருக்காங்க. இன்னைக்கு ஆவணி அவிட்டம் என்று அவங்க என்னிடம் சொன்னாங்க.”
“அவங்க திரும்பி வர்றப்போ கஞ்சி விஷயத்தை நீ ஞாபகப்படுத்து.”
“மாமா, நான் கோதுமைக் கஞ்சி உண்டாக்கித் தர்றேன். வேணும்னா ஒரு பாத்திரம் கிரிபாத் உண்டாக்கித் தர்றேன். இலங்கையை விட்டு வந்த பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றப்பட்ட அந்தக் கஞ்சியை நீங்க குடிச்சிருக்க மாட்டிங்க.”
“தேங்க்யூ, மகளே!”
படிகளில் என் காலடிச் சத்தம் கேட்டதும், உணவறையில் உரையாடல் நின்றது. அவர்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும். எல்லோரும் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்பே இரவு உணவு உண்பதற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“அப்பாவைக் கூப்பிடுங்க”- வேதவல்லி சொன்னாள்.
“இன்னைக்கு தாத்தாவுக்குப் பிடித்தமான சேமியா பாயசம் இருக்கு”- பிரகாசத்தின் மூத்த மகன் உரத்த குரலில் சொன்னான்.
என் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- பிரகாசம் கேட்டார்: “என்ன ஆச்சு? அப்பாவைப் பற்றி டாக்டர் என்ன சொன்னார்?”
“அப்பாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் இருக்கு.”
“கடவுளே! இனி நாம என்ன செய்வது?”- வேதவல்லி யாரிடம் என்றில்லாமல் கேட்டாள்.
“அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும். அப்படித்தானே?”- பிரகாசம் கேட்டான்.
“இனிமேல் அறுவை சிகிச்சை செய்வதால் எந்தவிதப் பயனும் இல்லை என்பது டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் கருத்து.”
“டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தவறுதலா கூறியிருக்கலாமே! நான் டாக்டர் தாமஸை ஃபோன் பண்ணி வரச் சொல்றேன்.”
பிரகாசம் நாற்காலியை விட்டு எழுந்தான்.
“வேண்டாம்...”- நான் சொன்னேன்: “இப்போ அப்பாவை சிரமப்படுத்துவது நல்லது இல்ல. நாளைக்குக் காலையில் அப்பாவின் சம்மதத்தைப் பெற்று, புதிய டாக்டரை அழைப்போம். இன்னைக்கு அப்பா நிம்மதியா தூங்கட்டும்.”
“அப்பா எப்படி தூங்குவார்?”- பிரகாசம் கேட்டான்: “புற்றுநோய் என்பது தெரிந்த பிறகு, அப்பா இன்னைக்கு இரவு தூங்குவார்னு நீ நினைக்கிறீயா?”
“உங்க அப்பாவுக்கு மரண பயம் இல்லை.”
“தாத்தா சாகப் போறாரா?” – பிரகாசத்தின் மூத்த மகன் கேட்டான்.
இளைய மகன் நாற்காலியை விட்டு வேகமாக எழுந்தான்.
“நான் தாத்தா சாகுறதைப் பார்க்கணும்”- அவன் படிகளில் ஏற ஆரம்பித்தான்.
“சந்தீப், உன்னை நான் அடிக்கப் போறேன்”- வேதவல்லி உரத்த குரலில் சொன்னாள்.
“சுந்தரம் எங்கே?”- பிரகாசம் கேட்டான்.
“சுந்தரம் திருநெல்வேலிக்குப் போயிருக்கார்.”
“எல்லா சுமைகளையும் என் தலையில் வைத்துவிட்டு அவன் ஊர் சுற்றப் போயிடுவான். தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் ஆரம்பித்து இன்னைக்கு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இது தொடர்ந்து நடந்தால், நாம சிரமப்படுற நிலைமைக்கு வந்திடுவோம். போராடும் தொழிலாளிகளை வேலையை விட்டு விலக்கிவிட்டு, புதிய ஆட்களைத் தொழிலுக்கு எடுப்போம் என்று சொன்னபோது, சுந்தரம் என்னைப் பார்த்துக் கோபப்பட்டான். கொள்கைகளைச் சத்தம் போட்டு பேசுவதும், சொற்பொழிவு ஆற்றுவதும் அவனுக்கு மிகவும் எளிய விஷயங்களாக இருக்கலாம். எல்லோரின் கண்களிலும் மிகப் பெரிய வில்லனாக தெரிந்து கொண்டிருப்பவன் நான்தானே? தீபாவளிக்கு போனஸ் வேண்டும் என்று சொல்லிப் பிடிவாதம் பிடித்தால், நான் பணத்திற்கு எங்கு போவேன்? ஒரு வங்கியும் இனிமேல் எனக்கு ஓவர் ட்ராஃப்ட் தராது. வேலை நிறுத்தம் தொடர்ந்தால், வீட்டை விற்றுவிட்டு, சென்னையை விட்டுப் புறப்பட்டு ஏதாவது குக்கிராமத்தில் போய் வாழ வேண்டிய சூழ்நிலை நமக்கு வரும்.”
“குக்கிராமம் என்றால் என்ன, அம்மா?”- பிரதீப் என்ற சிறுவன் வேதவல்லியிடம் கேட்டான்.
“பேசாம இரு”- வேதவல்லி சொன்னாள்.
“நமக்கு என்ன ஆச்சு? இரண்டு மூன்று வாரங்களாக எல்லா சம்பவங்களும் நடக்கக் கூடாதவையாகவே இருக்கின்றன. ரூபாவின் குழந்தை கண் பார்வை தெரியாமல் பிறந்துவிட்டது. தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டது. அப்பாவுக்குப் புற்று நோய் வந்திருக்கு. ராஜம்மா இன்னைக்கு என்னிடம் சொன்னாங்க. ‘யாராவது நம்ம குடும்பத்தை அழிப்பதற்காக கெட்ட மந்திரச் செயல் எதையாவது செய்திருப்பார்களோ?’ என்று.”
“பிரகாசம்... நீங்கள் மந்திரவாதத்தை நம்புறீங்களா?”- நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்: “படித்தவரான நீங்க இந்த அளவுக்கு எப்படி மூடநம்பிக்கை கொண்டவரா ஆனீங்க?”
“நான் நம்பக் கூடியவன்தான். என் நம்பிக்கை மூடத்தனமானதா இல்லையான்னு முடிவு செய்ய வேண்டியது நீ அல்ல”- பிரகாசம் கோபத்துடன் சிலிர்த்தவாறு என் பக்கம் திரும்பிக் கொண்டு சொன்னான்.
“ஏன் இப்படிக் கோபப்படுறீங்க? நான் என்ன தப்பு செய்திட்டேன்?”
“கோபப்படாமல் இருக்க முடியுமா?”- வேதவல்லி எழுந்து உரத்த குரலில் சொன்னாள்: “நீ எங்களின் விஷயத்தில் ஏன் தலையிடுறே? நீ ஒரு இலங்கைக்காரி... சிங்களக்காரி... நீ எங்களுக்கு அந்நியமானவள். இங்கே வந்து நீ எங்களுக்கு அறிவுரை சொல்லவும் உபதேசங்கள் கூறவும் ஆரம்பிச்சுட்டே.... அதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. நீ வருவதற்கு முன்னால் இங்கே உள்ள சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டதில்லை. அப்பா என்னையும் ரூபாவையும் திட்டியதில்லை. நீ வந்த பிறகு இந்த வீட்டிலிருந்த செல்வம் போயிடுச்சு. நீ என்னைக்கு இங்கே கால் வச்சியோ, அன்னைக்கு தொடங்கியது எங்களுடைய சனி தசை.”
“எனக்குத் தெரியாது... நான் போயிடுறேன். எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா நான் திரும்பிப் போயிடுறேன். பிரகாசம், எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா?”
“மனோமி அக்காவுடன் நானும் போகப் போறேன்”- சந்தீப் சத்தமான குரலில் சொன்னான்.
“மனோமி கூட நீ போகவில்லை. யாரும் போகவில்லை. அவள் தனியாக வந்தாள். அவள் தனியாகவே போகவும் செய்வாள்”- வேதவல்லி சொன்னாள்.
நான் என்னுடைய தட்டில் வைத்திருந்த சப்பாத்தியைக் கிழித்து துண்டுகளாக ஆக்கினேன். என் தொண்டை வறண்டு விட்டதைப் போல் உணர்ந்தேன். முதல் முறையாக அந்த வீட்டில் எனக்கு ஒரு அன்னிய உணர்வு உண்டானது. என் நெற்றியில் அன்று சாயங்காலம் ராஜம்மா வைத்த குங்குமம் என் நெற்றியைப் பொசுக்குவதைப்போல் நான் உணர்ந்தேன். உணவு அறையில் மேஜைக்கு எதிர்பக்கத்தில் ஒரு பெரிய கண்ணாடி இருந்தது. அதில் தெரிந்த என்னுடைய புதியதும் இதற்கு முன்பு நான் பார்த்திராததுமான வடிவத்தை நான் வெட்கத்துடன் பார்த்தேன். தமிழ்ப் பெண்களைப் போல நான் கூந்தலில் பூச்சரம் அணிந்திருந்தேன். அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு காஞ்சிபுரம் புடவையைத்தான் நான் உடுத்தியிருந்தேன். என் ரசனைக்கு சிறிதும் ஒத்து வராத ஒரு வண்ணம்- சிவப்பு.
“நான் வந்திருக்கக் கூடாது” – நான் முணுமுணுத்தேன்.
“திடீர்னு எதையும் முடிவு செய்ய வேண்டாம்”- பிரகாசம் சொன்னான்: “அப்பாவுக்கு மனதில் கவலை உண்டாக்கக் கூடிய எந்த விஷயத்தையும் நாம செய்யக்கூடாது. நீ போற விஷயம் இந்தக் கட்டத்தில் அப்பாவுக்குத் தெரிஞ்சா, அவர் ரொம்பவும் கவலைப்படுவாரு. சிறிது காலம் பொறுத்திரு.”
“மனோமியைப் பார்க்காமல் அப்பாவால இருக்க முடியாது. அப்பாவின் பிள்ளைகளாலும் முடியாது”- வேதவல்லி முணுமுணுத்தாள்.
அந்த நேரத்தில் சுந்தரம் கதவைத் திறந்து கொண்டு சாப்பிடும் அறைக்குள் வந்தான். அவனுடைய முகத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஒரு புன்னகை வெளி்ப்பட்டது.
“நான் வெற்றி பெற்றுவிட்டேன்”- அவன் சொன்னான்: “நான் திரட்டி அனுப்பிய பணம் பழனிக்குக் கிடைச்சிடுச்சுன்னு வானொலி மூலம் தகவல் வந்திருக்கு.”
“யார் பழனி?”- சந்தீப் கேட்டான்.
அண்ணாதுரை
என் உயிலை நான் புதுப்பித்து எழுத நினைத்திருக்கிறேன் என்ற விஷயம் தெரிந்ததும் மனோமி இன்று என்னிடம் கோபப்பட்டாள்.
“நான் இங்கு வந்ததில் கெட்ட நோக்கம் இருக்கிறது என்ற அவர்கள் எல்லோருடைய நம்பிக்கையும் உண்மைன்றது மாதிரி ஆயிடும். அது வேண்டாம்...”
“ஆனால், உனக்கு வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பு நிலையை உண்டாக்கித் தர நான் தயாராக இல்லை என்றால், என்னுடைய மரண நேரத்திலும் அந்தச் சிந்தனை என் மன அமைதியைக் கெடுத்திடும்.”
“என்னுடைய பாதுகாப்பு என்பது என்னுடைய மனசாட்சியின் பாதுகாப்பு மட்டும்தான். நான் அன்பைத் தேடி வந்தேன். மாமா, உங்களுடைய பிள்ளைகளின் அன்பை என்னால் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதை நினைத்து நான் வெகு சீக்கிரமே இலங்கைக்குத் திரும்பிப் போறேன். உங்களை என்னுடன் அழைத்துச் செல்ல முடிந்ததை ஒரு மிகப் பெரிய கொடுப்பினையாக நான் நினைக்கிறேன்”- அவள் என் கட்டிலின் கால் பகுதியில் அமர்ந்திருந்தாள். தலையைக் குனிந்து கொண்டு என் கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். என்னுடைய மதிப்பிற்குரிய வளர்ப்பு மகள்... என் சொத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டவள்... அவளுடைய மண்டை ஓட்டிற்குக் கூட சந்தனத்தின் புனிதம் இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன். நகங்கள் சங்குகளைப் போல இருந்தன. சுந்தரம் அவளைக் காதலித்திருக்கக் கூடாதா என்று மீண்டும் என் மனம் முணுமுணுத்தது. அவள் என் மகனின் மனைவியாக ஆகியிருந்தால்...
“மாமா, வீணா மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. உங்களுக்கு இந்த இலங்கைப் பயணம் மகிழ்ச்சியானதாக இருக்கும். நாம இரண்டு பேரும் சேர்ந்து அனுராதபுரத்திற்குப் போவோம். ஒரு வாரம் நுவரேலியாவில் தங்கணும். இல்லையா, மாமா?” – அவள் கேட்டாள்.
நான் தலையை ஆட்டினேன். “எவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளுடன் நீ சென்னைக்கு வந்து சேர்ந்திருப்பே! என் பிள்ளைகளிடம் அன்பு இல்லாமல் போனது உன்னை ஆச்சரியப்படச் செய்திருக்கலாம்”- நான் சொன்னேன்.
“உங்க பிள்ளைகளை நான் குற்றம் சொல்லவில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நானும் தகர்த்துவிட்டேனே!”
“நீ என்ன அப்படிச் சொல்றே?”
“அவர்கள் எதிர்பார்த்த பெண்ணாக நான் இல்லை. வெறுப்பதற்கும் பயிற்சி தேவைப்படுது. என்னுடைய அப்பிராணி தந்தை எனக்கு எப்படி வெறுக்க வேண்டும் என்ற பயிற்சியைத் தரவில்லை.”
அன்று மதிய நேரத்தில் பிரகாசம் என் அறைக்குள் வந்து கோபத்துடன் சொன்னான். “அப்பா, அந்த மலையாளி யூனியன் தலைவரை உங்களுக்கு ஞாபகத்துல இருக்குதா? கிருஷ்ணன்... அவன்தான் வேலை நிறுத்தத்துக்கான மூலகாரணமே... அவனுடைய வீட்டில் இருந்து மனோமி வெளியே வர்றதை நான் என் சொந்த கண்களால் பார்த்தேன். இது எவ்வளவு பெரிய அவமானம் நமக்கு! சுந்தரத்தைத் தாக்கி அவமானப்படுத்தின இந்தப் பெண் நம்ம தொழிலாளிகளில் ஒரு ஆளை ரகசியமாகப் போய்ப் பார்ப்பது என்பது சாதாரண விஷயமா? அவளை சீக்கிரமே திருப்பி அனுப்பி வைக்கிறதுதான் நல்லது.”
“அவள் போகத்தான் போறா. சுந்தரத்தை அவள் என்ன செய்தாள்? அவளைத் தாக்குற அளவுக்கு அப்படி என்ன நடந்தது?”
“சுந்தரம் அவளுடைய கையைப் பிடிச்சப்போ அவள் பெண் புலியைப் போல சுந்தரத்தின் கையைக் கடிச்சிட்டா. சுந்தரம் அவளைத் தொடக்கூடாது. ஆனால், தொழிலாளியான கிருஷ்ணன் அவளுக்கு பிரியமானவனா ஆயிட்டான். நாம அட்டையைக் கொண்டு வந்து மெத்தையில படுக்க வச்சிட்டோம்.”
தொடர்ந்து நான் மனோமியிடம் அதைப் பற்றி கேட்டதற்கு, தான் கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்றது உண்மைதான் என்று அவள் ஒப்புக் கொண்டாள். “வேலை நிறுத்தத்தை நிறுத்தும்படி கிருஷ்ணனிடம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். மாமா, வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, உங்களை இலங்கைக்கு எப்படி அழைச்சிட்டுப் போக முடியும்?”- அவள் கேட்டாள்.
சுந்தரத்தை அவள் கடித்தாளா என்ற விஷயத்தைக் கேட்டதற்கு அவள் தயக்கத்துடன் சொன்னாள்: “ஒரு நிராயுதபாணியான பெண்ணுக்குத் தன்னுடைய பற்கள்தான் காவலாளிகள்.”
சுந்தரம் தன்னைக் கட்டிப் பிடிக்க முயற்சித்தான் என்றும், அன்பிலிருந்து பிறந்த காமத்தை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியும் என்றாலும், வன்முறையிலிருந்து பிறக்கும் காமத்தை தான் நிச்சயமாக வெறுப்பதாக மனோமி சொன்னாள்.
“நீ பெண் சாமியாராக விரும்புகிறாயா?”- நான் கேட்டேன் அவள் தலையை ஆட்டினாள். அவளுடைய கண்கள் ஈரமாயின.
என்னுடைய இனத்தவருக்கும் தமிழர்களுக்குமிடையில் நடக்கும் போராட்டத்திற்கு முடிவு உண்டாக்க ஒரேயொரு வழிதான் எனக்குத் தெரியுது. புத்த மதத்தை அசுத்தங்கள் நீக்கிப் பரிசுத்தமாக ஆக்குவதே அது. புத்த மதத்தை மேலும் சக்தி படைத்ததாக ஆக்க வேண்டும். வன்முறையைக் கைவிடுமாறு கூற அதற்கு தைரியம் உண்டாக வேண்டியதிருக்கிறது. அரசியல் பேசும் பிட்சுக்கள் அதை விட்டு விலகிப் போக வேண்டியதிருக்கிறது.
அந்தக் காலத்தில் சேரன் செங்குட்டுவன் ராஜசூய நடத்தியபோது, அவன் தன்னுடைய வலது பக்கத்தில் வணங்கி அமர வைத்த விருந்தாளி இலங்கையின் மன்னனான கஜபாகுதான். அதற்கு முன்னால் சிங்கபாகுவின் மகன் விஜயா, வங்கதேசத்திலிருந்து வந்து இலங்கையில் ராஜ வாழ்க்கை ஆரம்பித்தபோது, அவனுடைய காதலியான குவேணிக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், நல்ல குணங்களைக் கொண்ட ஒரு தமிழ் ராஜகுமாரியை பட்டமகிஷியாக ஆக்கினான். சிங்களனின் ரத்தத்தில் விஜயா, தமிழ்ப் பெண் ஆகியோரின் ரத்தம்தான் ஓடுகிறது. தந்தையின் இனத்தைச் சேர்ந்தவர்களும் தாயின் இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் பகைமையை வெளிப்படுத்துவதால் என்ன பயன்? ஒருவரையொருவர் எதிரியாகப் பார்க்கும் இந்தப் போக்கு முடிவுக்கு வர நேரமாகிவிட்டது.”
மனோமி நீண்ட நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தாள். சாயங்காலம் தேநீர் அருந்துவதற்காக உணவு அறைக்குச் சென்றபோது, வேதவல்லி சொன்னாள்: “உங்களைப் பார்க்க வக்கீல் வந்திருக்காரு. அலுவலக அறையில் இருக்கிறார்.” அவளுடைய மோசமான முனம் என் கண்களில் படாமல் இல்லை.
அந்த நிமிடத்தில் அழகான அந்த வீட்டையும் அங்கிருக்கும் குடும்ப உறுப்பினர்களையும் விட்டுவிட்டு இலங்கைக்குப் போவது குறித்து எனக்கு மிகப் பெரிய சந்தோஷம் உண்டானது. பாசங்கள் மனப்பூர்வமானதாக இல்லை என்றிருந்த சூழ்நிலையில், தன்னுடைய வார்த்தைகளாலும் கறை படியாத அன்பாலும் மனோமி அதை எனக்குப் புரிய வைத்தாள். நான் இறுதியில் சுதந்திரமானவனாக மாறிக் கொண்டிருந்தேன். என்னுடைய மனம் பாடியது. அது தோட்டத்திலிருந்த பாரிஜாதக் கிளைகளில் வானம்பாடியைப்போல சிறகுகளை அடித்தது.
அலுவலக அறையில் என்னுடைய நண்பரும் வக்கீலுமான சண்முகம் உட்கார்ந்திருந்தார். அவர் எழுந்து என்னை இறுக அணைத்தார்.
“விவரம் தெரிஞ்சிருப்பீங்களே?” – நான் கேட்டேன்.
“ம்... நான் வருத்தப்படுறேன்.”
“எனக்கு மரணத்தைப் பற்றிக் கொஞ்சம்கூட பயம் இல்லை. என் கடமைகள் எல்லாவற்றையும் நான் எப்பவோ முடித்துவிட்டேன். மனோமிக்காகக் கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைக்கணும்னு நான் நினைச்சேன். ஆனால், அவள் அதை ஏற்றுக் கொள்ளல. அவளுக்கு அவமானமோ மனவேதனையோ தரக்கூடிய எந்தவொரு செயலையும் நான் செய்யமாட்டேன்.”
“மிஸ் மனோமிக்கு இலங்கையில் சொத்து இருக்கா? அவங்களுக்கு சந்தோஷமா வாழ்வதற்குப் பணம் இருக்கா?”
“இல்லை, சண்முகம். அவள் மிகவும் ஏழை. ஆனால், அவள் புத்த மதத்தை நம்புகிறவள். சன்னியாசினியாக ஆக ஆசைப்படுகிறாள் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு ஆன்மிக சக்தி கொண்ட ஒரு பெண்ணுக்குப் பணத்தைப் பரிசாகத் தந்து அவளை தலை குனிய வைக்க நான் தயாராக இல்லை.”
“நீங்க இலங்கையில் இரண்டு வார காலம் தங்கிட்டு வரலாம்னு போறதா பிரகாசம் சொன்னார். உடல்நலம் இவ்வளவு மோசமாக இருக்கிற நிலையில், இந்தப் பயணத்தைத் தவிர்ப்பதுதானே நல்லது?”
“இல்ல, சண்முகம். நான் இழந்த மன அமைதியைத் திரும்பவும் அடைவதற்காகத்தான் போவதே...”
“மன அமைதி கிடைக்குமா? அங்கே தமிழர்கள் ஒவ்வொரு நாளும் செத்து விழுந்து கொண்டே இருக்காங்களே!”
“தமிழர்கள் மட்டுமல்ல... சிங்களர்களும் இறக்கிறார்கள். மரணத்திற்கு இனத்தைத் தெரிந்து கொள்ளக் கூடிய முட்டாள் தனமான குணமெல்லாம் கிடையாதே! அங்குள்ளவர்களின் ரத்தம் ஆரியமோ திராவிடமோ இல்லை. அது ஆரிய திராவிட ரத்தம். அதை மறந்து விட்டு அவர்கள் அழகான அந்தத் தீவில் மரணத்தை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.”
“நீங்க யாருடைய பக்கம்? சிங்களர்களின் பக்கமா?”
“நான் கொல்லப்படுகிறவர்களின் பக்கம்தான் நிற்கிறேன். கொல்லப்படும் கள்ளங்கபடமற்றவர்களின் பக்கம்... திடீர் ஆச்சரியத்துடன் இறந்துவிழும் இலங்கைக்காரர்களின் பக்கம். ஈழல் என்றால் என்னவென்று தெரியாமல்- பிரபாகரனைப் பற்றியோ அமிர்தலிங்கத்தைப் பற்றியோ கேள்விக் கூடப்பட்டிராமல், மரணத்தைத் தழுவும் அப்பாவிகளின் பக்கம்... அவர்கள் இறுதியாக அழுவது சிங்கள மொழியிலாக இருக்கலாம். இல்லாவிட்டால் தமிழாகக் கூட இருக்கலாம். அதில் எந்தவொரு வேறுபாட்டையும் நான் பார்க்கவில்லை. அப்படியே பார்த்தாலும் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. இரண்டு கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் அம்மா என்றோ அம்மி என்றோ அழைத்து இறந்து கீழே விழுகிறார்கள். பெண்களின் தொடைகளுக்கு இடையில் பிறந்தவர்கள்... அன்பு என்றால் என்னவென்று தெரிந்தவர்கள்...”
“நீங்க ஒரு கவிஞரைப்போல பேசுறீங்க?”
“ஆமாம்... ஒரு காலத்தில் நானும் கவிதைகள் எழுதினேன். கவிஞனாக ஆக வேண்டும் என்று நினைத்தேன். பிறகு மனோமியின் தாய் - தந்தை ஆகியோரின் உதவியால் வியாபாரியாக மாறினேன். என் வர்த்தகம் முடிந்துவிட்டது. என் தொழிற்சாலைகள் எப்போதோ பூட்டப்பட்டு விட்டன.”
“அப்படின்னா இன்னைக்கு உயிலைப் புதுப்பித்து எழுத வேண்டியதில்லை. அப்படித்தானே?”- சண்முகம் கேட்டார்.
“கண்ணுக்குத் தெரியாத சொத்துக்களைப் பரிசாகத் தர உயிலோ வக்கீலோ தேவை இல்லையே!”
சண்முகம் என்னுடன் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்தார்.
அன்று இரவு சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருக்கும்போது நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களை ஒரு தனிப்பட்ட பாசத்துடன் பார்த்தேன். பொதுவாகவே ‘உர்’ என்று இருக்கும் பிரகாசம் தன்னுடைய இளைய மகனின் வாயில் சப்பாத்தியைப் பிய்த்து வைத்துக் கொண்டிருந்தான். குழந்தை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தான். வேதவல்லி, பிரகாசம் அமர்ந்திருந்த நாற்காலியைப் பிடித்துக் கொண்டு என்னை எதிர்பார்த்து நின்றிருந்தாள்- வைரம் பதிக்கப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு, நான் சம்பாதித்த புகழின் முக்கிய நபர் என்பது மாதிரி.
சுந்தரம் மனோமிக்கு எதிரில் சிரிக்காத உதடுகளுடன் உட்கார்ந்திருந்தான். மேஜையை வலம் வந்து கொண்டு ராஜம்மா ஒவ்வொரு பாத்திரங்களையும் ஒவ்வொருவரையும் நேர்க்கி நீட்டிக் கொண்டிருந்தாள். மூர்த்தியும் ரூபாவும் அப்போதுதான் வந்து சேர்ந்தார்கள்.
“மூர்த்தி, குழந்தையைக் கொண்டு வரலையா?”- நான் கேட்டேன்.
அந்தக் கேள்விக்கு ரூபாதான் பதில் சொன்னாள்:
“இல்ல, அப்பா.”
“இரவு நேரமாக இருப்பதால் கொண்டு வரல... அப்படித்தானே? இரவு என்றால் குழந்தை பயப்படுமா?”
“இல்ல, அப்பா...”- ரூபா சொன்னாள். “இரவின் தனிப்பட்ட இருட்டைப் பார்த்து பயப்படுறதுக்கு குழந்தைக்குக் கண் பார்வை இல்லையே!”
நான் அதிர்ந்து போய் விட்டேன். அதை நினைத்துப் பார்க்காமல் அவளை வேதனைப்படுத்திவிட்டேன் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
“அப்பா, நீங்க இப்போ பயணம் செய்வது சல்லது இல்லன்னு மூர்த்தி சொல்றாரு”- ரூபா சொன்னாள்.
“ஆமாம், சார். சிறிது சிகிச்சையும் ஓய்வும் முடிந்த பிறகு போறது நல்லது”- மூர்த்தி சொன்னான்.
“அய்யா, நீங்க போறப்போ என்னையும் உடன் அழைச்சிட்டுப் போனா நல்லா இருக்கும். நான் சூப்பும் மிளகு ரசமும் உண்டாக்கித் தருவேன்”- ராஜம்மா சொன்னாள். அவளுக்கு எனக்கு இருக்கும் நோயைப் பற்றித் தெரியாது. அதனால் அவள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள்.
“மனோமி சூப் உண்டாக்கித் தருவாள்”- நான் சொன்னேன்.
“மனோமி வர்றப்போ வெறும் கையோட வந்தாள். திரும்பிப் போறப்போ அய்யா, உங்களைத் தன்னுடன் அழைச்சிட்டுப் போறா”- ராஜம்மா சொன்னாள்.
சிறு குழந்தைகள் மட்டும் ராஜம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு சிரித்தனர்.
“சண்முகம் போயாச்சா?”- சுந்தரம் கேட்டான்.
“ம்...”
“உயிலை மாற்றி எழுதுவதற்காக தான் வரப்போவதாக சண்முகம் தொலைபேசியில் சொன்னார்”- பிரகாசம் சொன்னான்.
நான் அமைதியாக இருந்தேன். ஆனால், மனோமியின் வெளிறிப் போன முகம் மாறுவதை என்னால் பார்க்க முடிந்தது. அவள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஏதோ கேட்க முயற்சிப்பதைப் போல் என் முகத்தையே பார்த்தாள்.
“அப்பா, நீங்க உயிலை மாற்றி எழுதினீங்களா?” – சுந்தரம் கேட்டான்.
“நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தைப் பிரித்துக் கொடுப்பதற்கு எனக்கு உரிமை இருக்கு”- நான் சொன்னேன்.
“உங்களுக்காக கஷ்டப்படுற என்னிடம்கூட கேட்காமல்...”- பிரகாசம் சொன்னான்.
“அம்மா, உயில் என்றால் என்ன?”- சந்தீப் வேதவல்லியிடம் கேட்டான்.
மனோமி
திருச்செல்வத்தின் காயங்கள் ஆறிவிட்டிருந்தன. கட்டுகளை அவிழ்த்து, வெந்நீரில் தொட்டுத் துடைக்கும்போது நான் அவனிடம் சொன்னேன்: “நான் இந்தக் கிழமை சென்னையை விட்டுப் புறப்படுறேன்.”
அவன் நீளமான இமைகளைக் கொண்ட தன்னுடைய கண்களால் என்னைப் பார்த்தான்.
“எதற்கு?”
“நான் திரும்பிச் செல்வதற்கு நேரம் வந்துவிட்டது.”
“எங்கே?”
“இலங்கைக்கு.”
“அய்யோ... இலங்கையில் சண்டை நடந்து கொண்டிருக்கிறதே? சிங்கள ராணுவம் உங்களுக்குத் தொல்லைகள் தரும்.”
“இல்லை. அவர்கள் எனக்குத் தொல்லை தரமாட்டார்கள் திருச்செல்வம். நான் சிங்களக்காரி ஆச்சே!”
“நீங்க சிங்களப் பெண்ணா?”- அவனுடைய தொண்டை இடறியது.
“ஆமாம். என் பெயர் மனோமி டென்னக்கூன். நான் அண்ணாதுரையின் வளர்ப்பு மகள்தான்.”
அவன் தன்னுடைய முகத்தை நான் பார்த்து விடக் கூடாது என்று நினைத்திருக்க வேண்டும் – பாயில் குப்புறப்படுத்துக் கொண்டான். அவனுடைய தோள்கள் அசைந்தன. “திருச்செல்வம், நீ அழுறியா?” – நான் கேட்டேன். அவளுடைய முதுகை இரண்டு தடவை தடவி விட்ட நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
“நில்...” – அவன் கட்டளையிட்டான். நான் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. இனத்தையும் அரசியலையும் தாண்டி ஒரு சக்தி எங்கே எங்களைத் தவறு செய்ய வைத்துவிடுமோ என்று நான் பயந்தேன்.
எங்களுடைய இளமை... அந்த இளைஞனைத் தொடும்போதெல்லாம் என் உடலில் சிலிர்ப்பு உண்டானதே! அந்த உதடுகளில் முத்தமிட நான் எத்தனை தடவை தயங்கினேன்! இல்லை... இனிமேல் ஒருமுறை கூட அவனை நான் பார்க்கக் கூடாது. நான் எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன். என்னுடைய போதி பயணத்திற்குத் தடையாகவும் விலங்காகவும் அந்த அழகான உடல் காரணமாக இருந்துவிடக் கூடாது. உடலின் புனிதத் தன்மை எப்போதும் பாழாகாமல் இருக்கட்டும்.
விமான நிலையத்திற்கு எங்களை அனுப்பி வைப்பதற்காக ஒரு பெரிய ஜனக் கூட்டமே வந்திருந்தது. மாமா அன்புடன் எல்லோரிடமும் விடை பெற்றார். ராஜம்மாவும் வேதவல்லியும் ரூபாவும் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள்.
“தாத்தா எப்போ திரும்பி வருவார்?”- சந்தீப் கேட்டான்.
“போர் முடிந்த பிறகு திரும்பி வருவேன்”- மாமா சொன்னார்.
“என்ன போர்?”- பிரதீப் கேட்டான்.
“எல்லா போர்களும் முடிந்த பிறகு நான் திரும்பி வருவேன்”- மாமா சொன்னார். குழந்தைகள் அவரை இறுக அணைத்துக் கொண்டனர்.
“அப்பா, நீங்க உயிலை மாற்றி எழுதவில்லை என்று சண்முகம் சொன்னார். உங்களை அன்னைக்கு வேதனைப்பட வைத்ததற்காக நான் வருத்தப்படுறேன்.”- பிரகாசம் தாழ்வான குரலில் சொன்னான்.
“நானும்...” - சுந்தரம் சொன்னான்.
“நீ இந்தியாவுக்கு வந்ததால் உனக்கு ஒரு பயனும் உண்டாகவில்லை மனோமி”- ரூபா சொன்னாள்.
“உன் பயணம் ஒரு நட்டம் உண்டான வியாபாரமாக ஆகிப் போச்சு!”- மூர்த்தி உரத்த குரலில் சிரித்துக் கொண்டே சொன்னான்.
“தரம் தாழ்ந்த நகைச்சுவையை வெளிப்படுத்தாமல் இருக்கணும்”- ரூபா அவனிடம் கோபத்துடன் சொன்னாள்.
விமானம் தரையை விட்டு உயர்ந்தபோது மாமா சொன்னார்: “உன் மீது எனக்கு என்னவென்று கூற முடியாத அளவிற்கு நன்றி இருக்கு.”
அந்த நன்றியைக் கூறியதற்கு பதில் கூற நான் முயற்சிக்கவில்லை. அவருடைய கண்களின் பிரகாசத்தைப் பார்த்துக் கொண்டே நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். மாமாவையும் அழைத்துக் கொண்டு கால்ஃபேஸ் கடற்கரையில் நடந்து செல்லப் போவதை நான் கனவு கண்டு கொண்டிருந்தேன். ரத்த நிறத்தில் இருக்கும் சூரியன் மறைவதையும்....