Logo

ப்ரெய்ஸ் தி லார்ட்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6609
praise the lord

னக்கு இப்படி உட்கார்ந்திருப்பதுதான் மிகவும் பிடித்தமான விஷயம்; வராந்தாவில் நாற்காலியை போட்டுக் கொண்டு முற்றத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருப்பது. வேலை செய்பவர்கள் வருவார்கள்- போவார்கள். சில நேரங்களில் அடுக்களையில் இருந்தவாறு ஆன்ஸி ஏதாவது கேட்பாள். முற்றத்தில் இருக்கிற களத்தில் மரவள்ளிக் கிழங்கும் நெல்லும் ஜாதிக்காயும் காய்ந்து கொண்டிருக்கின்றன.

இங்கிருந்து பார்த்தால் மிளகும் ரப்பரும் தென்னையும் கொக்கோவும் யாரும் ஒன்றும் சொல்லாமலே மகிழ்ச்சியாக வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். சில நேரங்களில் வரி வசூலிப்பவர்கள் யாராவது வருவார்கள். சில நேரங்களில் சர்ச் ஃபாதர் நடந்து போகின்ற வழியில் கொஞ்ச நேரம் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார். இடையில் திருமண விஷயமாக கூப்பிடுவதற்கோ, முக்கிய நிகழ்ச்சி அது இது என்று அழைப்பதற்கோ, சொந்தக்காரர்களோ, நண்பர்களோ காரில் வருவார்கள். பிறகு... எனக்கு மதியம் சாப்பிடுவதற்கு முன்பு கொஞ்சம் மது அருந்த வேண்டும். அதை ஆன்ஸி மேஜை அருகில் மறைத்து வைத்திருப்பாள். மாலையில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு பெக் அடிக்க வேண்டும். அதை பிரார்த்தனை முடிந்தபிறகு நானே அலமாரியைத் திறந்து எடுத்துக் கொள்வேன். புகை பிடிப்பதை என்றோ நான் நிறுத்திவிட்டேன். ஆன்ஸிக்கு புகை வாசனை என்றாலே கொஞ்சமும் பிடிக்காததே காரணம். நான் இப்படித்தான் வராந்தாவில் உட்கார்ந்திருப்பேன். முற்றத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் வரப்பார்க்கிறது. கோழி ஓடுகிறது. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இடையில் யாருடைய பசுவோ கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடி வருகிறது. நாய்கள் இரண்டு ஒன்று சேர்ந்து ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றன. பூச்செடிகள் காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. எனக்கு இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில் மிகமிக திருப்தி. எங்குமே போக வேண்டாம். என் இந்த முப்பத்து ஐந்து வயதில் நான் இன்னொரு வீட்டில்- நல்ல ஞாபகத்தோடு கூறுவது என்றால்- இரவு நேரத்தில் தங்கியதில்லை. சாயங்காலம் வந்துவிட்டால் எனக்கு திண்ணையில் வந்து உட்கார்ந்து விட வேண்டும். சிறு பிள்ளையாய் இருந்தபோது அம்மா இருந்த வீட்டில் படுத்திருக்கிறேன். பிறகு ஆன்ஸியின் வீட்டில் ஏதாவது கல்யாணத்திற்கோ சவ அடக்கத்திற்கோ கால் நாளோ அரை நாளோ போய் படுத்திருக்கிறேன். எனக்கு இந்த திண்ணையும் முற்றமும் போதும். நான் குழந்தைகளைப் பள்ளியில் விடுவதற்காக அந்த மஹேந்திராவை எடுத்துக்கொண்டு போவேன். மாலையில் அவர்கள் பஸ்ஸில் வந்தால் போதும் என்று கூறி இருக்கிறேன். குழந்தைகள் சிறுவயதாக இருக்கிறபோதே இப்படி காரில் மட்டுமே போய் படிக்கக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போவதற்காக மட்டுமே நான் அந்த லேண்ட் மாஸ்டரை எடுப்பேன். என் அருமை தந்தையார் ஆரம்பத்தில் வாங்கிய கார் அது. அதை வாங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் அதன்மீது ஒரு சிறு கீறலாவது இருக்க வேண்டுமே! என்ஜின் ஓடுவதையே காதைத் தீட்டிக்கொண்டு கேட்டால்தான் தெரியும். என் வயதுதான் இந்த வண்டிக்கும். இதுவரை தேவையில்லாத ஒரு சப்தம் இந்த என்ஜினில் கேட்டிருந்தால்தானே! அதிகாலையில் நான் வெட்டுக்காரர்களுடன் ரப்பர் தோட்டத்திற்குள் நுழைவேன். பிறகு தோட்டத்தில் வேலை செய்பவர்கள் வந்த பிறகே அந்த இடத்தைவிட்டு நான் அகலுவேன். அதற்குப்பிறகு வெயில் நேரத்தில் நான் இன்னொரு முறை செல்வேன். ரப்பர் மரங்களிலிருந்து பால் இறக்குகிற நேரத்தில் பெரும்பாலும் நான் போய்ப் பார்ப்பேன். நாம் இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. எல்லாம் அதுவாகவே ஒழுங்காக நடக்கும். நாம் ஒரு வழியை மட்டுமே காட்டிவிட்டால் போதும். தேவை இல்லாமல் ஓடித்திரிய வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது. நமக்கு பயந்தா செடியும் மரமும் கிழங்கும் வளர்கின்றன. ரப்பர் மரம் பால் தருகிறது? அவை என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டிருக்கும். நாம் தொந்தரவு செய்யாமல், அவற்றை சுதந்திரமாக விட்டாலே போதும்.

ஆனால், போன வாரம் அந்த ஒருநாள் இரவில் நடைபெற்ற நிகழ்ச்சியை என்னால் இப்போதுகூட நம்ப முடியவில்லை. இந்த நான்தானா அந்த நான்? ஏதோ ஒருவித பாதிப்பை அந்த நிகழ்ச்சி என்னிடம் உண்டாக்கி விட்டிருப்பது மட்டும் உண்மை. அதற்காக என் மனதில் வருத்தமெல்லாம் கிடையாது. வருத்தப்பட என்ன இருக்கிறது? அதைப்போல ஒரு நிகழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் நாம் விருப்பப்பட்டால்கூட நடக்குமா? ஒரு கணக்கில் சொல்வதாக இருந்தால் இப்போது இந்த முற்றத்தில் வெளுத்த மணலைப் பார்த்தவாறு உட்கார்ந்து அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறபோது சிரிப்புத்தான் வருகிறது. இன்று காலையில் ஆன்ஸி கேட்டே விட்டாள்; "ஜாய், என்ன இப்படி தனியா உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க? ஏதாவது கனவு கண்டீங்களா என்ன? கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டே சிரிக்கிறீங்களே!”என்று, நான் சொன்னேன்: "ஒண்ணுமில்லடி ஆன்ஸி... நான் இந்த முற்றத்துல இருக்கிற மணலோட வெண்மையைப் பார்த்து சிரிச்சேன்”என்று. அவள் உடனே ஓடி வந்து குனிந்து என் முகத்தை முகர்ந்து பார்த்தாள். காலையில் அவளுக்குத் தெரியாமலே குப்பியை எடுத்துக் குடித்திருப்பேனோ என்ற சந்தேகம்தான் அவள் என்னை முகர்ந்து பார்த்ததற்கான காரணம். ஆன்ஸியின் முகத்தில் குட்டிக்குராவின் அருமையான வாசனை. நான் ஒரு கையை அவளின் பின் பக்கத்தில் நீட்டி அவளின் வசீகரமான உட்காரும் பகுதியைப் பிடித்து "பாம்... பாம்...”என்று அமுக்கினேன். அவள் அடுக்களையை நோக்கி ஓடினாள். இதுவல்லவா குடும்ப வாழ்க்கையின் சுகம் என்பது. இந்த உலகம் முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதோ, இப்போது இருப்பதைவிட மிக அதிகமாக சொத்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலோ என்னிடம் கிடையாது. இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க நான் ஒன்றுமே பயப்படத் தேவையில்லை. அதற்கு வேண்டிய பணத்தை இந்தத் தோட்டமே கொடுக்கும். அவளுக்கு இப்போது பத்து வயதுதான் நடக்கிறது. அவளுக்கு இளைய பையனுக்கு நடப்பது எட்டு வயது. அவனுக்குத்தானே இந்தத் தோட்டமும், இந்த வீடும், தெய்வம் தந்த எல்லா பொருட்களும். இனியும் ஒன்றோ இரண்டோ குழந்தைகள் இருந்தாலும் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் ஆன்ஸிக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் விருப்பமில்லைதான். சரி... வேண்டாம் என்றால் வேண்டாம். ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்த்தால் அவள்தானே இந்தக் குழந்தைகளை பத்து மாதங்கள் சுமப்பதும் பிறகு தோளில்போட்டு, தொட்டிலில் ஆட்டி, பால் குடிக்கவைத்து, உறங்கிக் கீழே விழுந்து விடாமல் பார்த்து...


இப்படி எல்லாவற்றையும் கவனமாகப் பார்ப்பது! அவள் இனி குழந்தை வேண்டும் என்று கூறட்டும் நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். நான் இதோ இந்த திண்ணையில் தான் உட்கார்ந்திருக்கிறேன். அவள் எப்போது சொன்னாலும் நான் ரெடி. பகல் நேரத்தில் எங்களின் கட்டிலைப் பார்க்கிறபோது என் மனதில் ஒரு ஆசை எழும். என்னவென்றால், இவ்வளவு வருடங்களில் ஒருநாள் கூட நான் தலைகீழாக முயற்சி செய்து பார்த்தும்கூட ஆன்ஸியை என்னால் பகல் நேரத்தில் பிடிக்க முடியவில்லை. கேளுங்கள். இரவில் எந்தவித பிரச்சினையும் இல்லை... எல்லாம் ஓ.கே... ஓ.கே... மற்றொரு விஷயம் மட்டும்... அதாவது குழந்தைகள் விஷயத்தை மட்டும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவாள். "குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் நீ கூறுகிறபடி நான் நடக்கட்டுமா ஆன்ஸி”என்று நான் கேட்டால், அவள் "இது கடவுளோட செயல். அப்பாக்கள் இதில் செய்ய என்ன இருக்கு?" என்று பதில் கூறுவாள். இந்தப் பெண்களுக்குத்தான் சில விஷயங்களில் நம்மைவிட என்ன தைரியம்! இரவில் அவளின் ஒரு தெளிவற்ற தோற்றம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவள் பகல் நேரத்தில் எப்படி இருப்பாள் என்பதுதான் என் ஒரே சிந்தனை. ஆனால், எங்களின் வீடு கட்டப்பட்டிருக்கும் விதத்தில் பகலில் அடைக்கிற மாதிரி கதவைக்கொண்ட ஒரு அறை இல்லை. ஏதாவது ஒரு வாசல் கதவை அடைப்பது என்பது ஒரு பெரிய பிரச்சினையே. இன்று குழந்தைகள் இரண்டையும் வேலைக்காரியுடன் சினிமா பார்க்க அனுப்பிவிட்டேன். நான் ஆன்ஸியை எப்படியாவது தயார் பண்ணி கட்டிலில் படுக்கவைத்து ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிமிடத்தில் முற்றத்தில் யாரோ இருமும் சத்தம் கேட்கிறது. அந்தக் கிழக்குப் பக்கம் இருக்கிற வீட்டில் வசிக்கிற ஆசாரிச்சியும் குழந்தைகளும் டி.வி.யில் மலையாளப் படம் பார்க்க வந்திருக்கிறார்கள். காட்டாமல் இருக்க முடியுமா? அவளின் கணவன் ஆசாரி ஆயிற்றே! எப்போது அழைத்தாலும் ஓடி வரக்கூடிய மனிதன் அவன். இந்தக்காலத்தில் அழைத்தால் ஓடி வரக்கூடிய ஆசாரி எங்கு கிடைக்கிறான்? ஆனால்... என்பகல் நேர ஆசை நிறவேறாமலேயே போய்விட்டதே!

2

ன்னைப் பொறுத்த வரை டில்லி என்றால், பத்திரிகைகளில் என்ன படித்திருக்கிறேனோ அவ்வளவுதான் அதைப்பற்றித் தெரியும். அங்கு மிகவும் குளிராக இருக்கிறது என்றும் உஷ்ணமாக இருக்கும் என்றும், கிளிண்டனும் கார்ப்பசேவும் வருகிறார்கள் என்றும் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். பிறகு... குடியரசு தினத்தன்று நடக்கும் அணிவகுப்பையும் வண்ணக் கோலாகலங்களையும் டி.வி.யில் பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்துப் பார்த்தே வெறுப்பாகிவிட்டது. இவ்வளவு கோலாகலங்கள் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் எங்களின் வீட்டில் உதவி கேட்டுவரக் கூடியவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறதே தவிர, குறைந்ததாகக் காணோம். இந்த டில்லிக்காரர்களின் பந்தாவான இந்திப் பேச்சைக் கேட்கிறபோது பேசாமல் டி.வி.யை ஆஃப் செய்துவிட்டு வராந்தராவில் போய் உட்கார்ந்து விடுவேன். அவன் ஒய்யாரமாக இந்தி பேசுவதைக் கேட்டு இங்குள்ள ஏழைகளுக்கு வயிறு நிரம்பிவிடுமா என்ன? இருந்தாலும், ஆன்ஸிக்கும் குழந்தைகளுக்கும் அது ஒரு பிரச்சினை இல்லை. அவர்கள் அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த டில்லியில் இருந்து இந்த இடத்திற்கு- மூலையில் கிடக்கும் இந்த இடத்திற்கு ஒரு பிரச்சினை தேடிப்பிடித்து வருகிறது என்றால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நமது வக்கீல் சண்ணிதான் என்னிடம் தொலைபேசி மூலம் கூறினான், "ஜாய் ஒரு சின்ன பிரச்சினை. நீ ஒரு உதவி செய்யணும். நான் அங்கே வர்றேன்” என்று. நான் வரச்சொன்னேன். நான் இங்குதான் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். நான் உள்ளே அழைத்து சொன்னேன், "ஆன்ஸி, நம்ப வக்கீல் சார் வர்றார்" என்று. "இப்ப காபியோ வேற ஏதாவதோ ரெடி பண்ணு. அன்னைக்கு உங்க அம்மா கொடுத்துவிட்ட அச்சப்பம் இருக்குல்ல..." என்றேன். அதற்கு ஆன்ஸி, "அன்னைக்கு  அச்சப்பம் நல்லாவே இல்லைன்னீங்க. இன்னைக்கு தேவைப் படுதாக்கும்" என்றாள். "சரி... தெரியாம சொல்லிவிட்டேன். போதுமா? " என்றேன் நான். தேவையில்லாமல் எதற்கு பெண்ணுடன் சண்டைபோட வேண்டும்? அவர்களை மட்டும் சந்தோஷப்படுத்தி வைத்திருந்தால் எந்தவித குழப்பமும் உண்டாகவே செய்யாது.

சிறிது நேரத்தில் சண்ணி வந்தான். அவன் எல்லா வக்கீல்களையும் போல எந்த விஷயத்தையும் அளந்து, எடைபோட்டு, அலசிப் பார்த்து பேசுவானே தவிர, உண்மையில் அவன் மிகமிக நல்லவன். பிறகு... அவனுக்கு கேரளா காங்கிரஸின் தொந்தரவு கொஞ்சம் இருக்கிறது.

எப்படியோ அவன் அந்தக் கட்சியில் போய் சிக்கிக் கொண்டான். நான் அதை எந்தக் காலத்திலும் பெரிய ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்வதில்லை. நானும் அவனும் முன்பு ஒன்றாகச் சேர்ந்து எத்தனை முறை ஆசை தீர குளித்திருக்கிறோம்! படகோட்டி மகிழ்ந்திருக்கிறோம்! ஆற்றில் வெளுத்த சலவை செய்யும் பெண்களை வலை வீசித் தேடி இருக்கிறோம். ஓ... நல்ல வெளுத்த துணியின் பிரகாசம் இருந்தது தேவகியின் வெள்ளை வெளேர் சிரிப்புக்கு. நாங்கள் சிறிது கண்ஜாடை காட்டிவிட்டால் போதும், வேறொன்றும் நடக்காது. சிறிது நேரத்திற்கு துணி துவைக்கும் சப்தம் கேட்காது. அவ்வளவுதான். தேவகி உடலில் எப்போதும் பார் சோப்பின் வாசனை வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். ஒருநாள் பில்லாணிக் காட்டுக்குப் பின்னால் நாங்கள் விரித்த துணியில் அமர்ந்திருந்தபோது தேவகி சண்ணியிடம் கூறினாள், "நான் இப்போது துவைத்துக் கொண்டிருந்தது உங்களோட வேஷ்டிதான். சரியான நேரத்துல நீங்க வர்றீங்க!" உடனே சண்ணி சொன்னான்: "அப்படின்னா நீ இங்க இருக்க வேண்டாம். உடனே போ. நாளைக்கு நான் ஒரு கல்யாணத்துக்குப் போகணும். அதுக்குக் கட்டாயம் இந்த வேஷ்டி வேணும். போய் உடனே இதைத் துவைச்சு ரெடி பண்ணு" அவன் வக்கீலாக ஆனதில் ஆச்சரியப்பட ஏதாவது இருக்கிறதா என்ன? எப்படியோ அவன் கேரளா காங்கிரஸில் போய் மாட்டிக் கொண்டான். அதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம். என்னை அந்தக் கட்சிக்காரர்களால் பிடிக்க முடியவில்லை. மாணி சார் என்னதான் செய்யட்டும். என் தந்தை வாக்களித்த காங்கிரஸை விட்டு விலகவே மாட்டேன். எந்தக் காலத்திலும் மாற மாட்டேன். யார் என்ன சொன்னாலும் இந்தக் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எல்லா பாரம்பரியத்திலும் குற்றச்சாட்டுகள் இருக்கத்தானே செய்யும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொள்வதே சரி. சண்ணி அவனின் மாருதியை முற்றத்தில் இருக்கிற காற்றாடி மரத்திற்குக் கீழே நிறுத்திவிட்டு முகத்தில் ஒரு கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டு நாற்காலியில் வந்து அமர்ந்தான்.


அவனின் வழக்கமான சிரிப்பையோ ஆன்ஸியைப் பார்த்து குசலம் விசாரிக்கும் குணத்தையோ பார்க்க முடியவில்லை. எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்காத ஒன்று இந்த மாருதி கார். அம்பாஸிடர் வாலில் கட்ட முடியுமா இந்த மாருதி காரை? "என்னடா சண்ணி இப்படி அமைதியா உட்கார்ந்திருக்கே? " நான் கேட்டேன். "உன்னோட கேரளா காங்கிரஸ் மேலும் பிளந்திடுச்சா? இல்லாட்டி எவனாவது கள்ள சாட்சி சொல்லி குழப்பத்தை உண்டாக்கிட்டானா? அதுவும் இல்லைன்னா உனக்கு எய்ட்ஸ் ஏதாவது வந்திருச்சா? என்ன பிரச்னை? சொல்லு...” அவன் உடனே குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்: "ஜாய், நான் இப்போ சொல்லப்போறதை ஆன்ஸி கேட்க வேண்டாம். நாம் கொஞ்சம் தோட்டத்துப் பக்கம் தள்ளி நின்னுட்டுப் பேசுவோம்...”நான் அவனுடன் ஜாதிப்பூவும் கொக்கோவும் இருக்கின்ற வேலியைத் தாண்டிப் போனேன். அப்போது சண்ணி சொன்னான்:”டேய் ஜாய், எனக்கு இங்கே ஒரு ஆளை இல்லன்னா இரண்டு பேரை ஒளிச்சு வைக்கணும்.” அவ்வளவுதான்-. நின்ற இடத்திலேயே நான் அதிர்ந்து விட்டேன். என் அம்மாவே... இந்த வீட்ல ஆளை ஒளிய வைக்கிறதா? அவன் என்ன சொல்றான்... நான் சின்னப் புள்ளையா இருக்கிறப்போ வரி வசூலிக்கிறதுக்காக யாராவது வர்றப்போ அப்பா ஓடிப்போய் வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிறதை நான் பார்த்திருக்கேன். பிறகு... ராஜீவ் காந்தியை கொன்னவங்க பெங்களூர்ல ஒளிஞ்சிருந்ததை நாம பேப்பர்ல படிச்சிருக்கோம். ஏதாவது கொலை செய்தவங்களையோ அந்தமாதிரி பெரிய குற்றம் செய்த நபர்களையோவா இவன் இந்த வீட்ல ஒளிச்சு வைக்கச் சொல்றான்? நான் இங்கே ஆன்ஸியோடும் குழந்தைகளோடும் சந்தோஷமா எந்தவிதப் பிரச்சினையும் இல்லாம வாழ்ந்துக்கிட்டு இருக்கிறப்போ, இது தேவைதானா? நான் அவனையே ஒருவார்த்தைகூட பேசாமல் உற்றுப் பார்த்தேன். பிறகு சொன்னேன்: “டேய் சண்ணி” உனக்கு பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா? ஆன்ஸியையும் குழந்தைகளையும் வச்சுக்கிட்டு இந்த வீட்ல கொலைக்குற்றவாளிகளைத் தங்க வைக்க முடியுமா? என்னைப்பத்தி நீ என்னதான் நெனைச்சுக்கிட்டு இருக்கே! “உடனே அவன் என்தோளில் கை வைத்துக் கொண்டு சொன்னான்:”நான் அந்த அளவுக்கு முட்டாளா ஜாய்? இது கொலைகாரனும் இல்லை. ஒண்ணுமில்லை. ஒரு பொண்ணும் பையனும்டா...”என்ன? பொண்ணும் பையனுமா?” “ஆமாடா...காதலனும் காதலியும்...”

இங்குதான் நான் விழுந்து போனேன். நான் என் வாழ்க்கையில் அதுவரை ஒரு காதலன்- காதலியையும் நேரடியாகச் சந்தித்ததில்லை. சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் உண்மை இல்லையே! பிறகு நாவலில் படித்திருக்கிறேன். அதுவும் உண்மை அல்ல. அதே நேரத்தில் காதலன்- காதலி என்றொரு இனம் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு நன்றாகவே தெரியும். காரணம்? அவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள்தான் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வந்து நாம் படித்துக் கொண்டிருக்கிறோமே! அதைப்போல அவர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் செய்து வைக்கிற செய்திகளும் நிறையவே பேப்பர்களில் படித்திருக்கிறேன். ஆனால், நேரடியாக இப்படி ஒரு காதலன்- காதலியை வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததே இல்லை. எங்களின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கொல்லத்துக்காரியும், ஒரு அழகான வாலிபனும் காதலன்- காதலியாக இருந்தார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து நடந்து சென்றதையெல்லாம் நான் பார்த்ததில்லை. நான் அவர்களைப் பார்த்ததே எங்களின் எட்டு ஏக்கர் ரப்பர் தோட்டத்திலிருந்த ஒரு மரத்தில் அவர்கள் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு ஆள் ஓடிவந்து சொன்னதைக் கேட்ட பிறகுதான். வெட்டுக்காரன் பாப்பி பொழுது புலர்வதற்கு முன்பு நெற்றி விளக்குடன் மரம் வெட்ட போயிருக்கிறான். அந்த மரத்தில் கத்தியை வைத்தபோது, அவன் தோளை என்னவோ இடித்திருக்கிறது. அவ்வளவுதான், அவன் பயந்து போனான். திரும்பிப் பார்த்தபோதுதான் நெற்றி விளக்கு வெளிச்சத்தில் இரண்டு முகங்கள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்திருக்கிறது. அவன் தோளை இடித்தது கொல்லத்துக்காரியின் கால். அவன் அடுத்த நிமிடம் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து தகவல் சொன்னான். முன்னூறு ரூபாய் விலை உள்ள நெற்றி விளக்கு எங்கே போனதோ- யாருக்குத் தெரியும்? பாப்பி ஒரு மாதகாலம் காய்ச்சல் உண்டாகிக் கிடந்தான். இப்போதும் அவன் அடிக்கடி நடுங்கிப்போய் நிற்பான். அந்த மரத்தை நான் வெட்டி விட்டேன். காலை எட்டு மணி ஆகிறபோது மூன்று செரட்டை நிறைய பால் தரக்கூடிய மரம் அது. நான் கேட்க விரும்புவது என்னவென்றால் இதற்காகத்தான் அவர்கள் காதலன்- காதலியாக ஆகின்றார்களா? காதலிக்கிறோம் என்று கூறிக்கொண்டு இப்படி பயந்தோடிப்போய் சாவதைவிட எவ்வளவோ மேல்- என்னைப்போல திருமணம் செய்து கொண்டு மனைவிமீது அன்பைப் பொழிந்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்வது. ஆன்ஸியைத் திருமணம் செய்த பிறகு சத்தியமாகச் சொல்கிறேன். ஒரு புல்வெட்டுகிற பெண்ணைக்கூட நான் தொட்டதில்லை. தூரத்தில் நிற்கிற ஒன்று இரண்டு பெண்களை என்னையும் மீறி நான் ஏறிட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஆன்ஸி என்னை எங்கே பார்த்துவிடுவாளோ என்ற சிந்தனை வந்தவுடன் அந்தப் பார்வையையே தவிர்த்து விடுவேன். ஒருமுறை கோவாவிற்குத் திருவிழா பார்க்கப் போனபோது நானும், சண்ணியும், குட்டிச்சனும், டோமியும் எங்களின் மனைவிமார்களை ஏமாற்றிவிட்டு மது அருந்திவிட்டு கடற்கரை பக்கம் போனோம். அங்கு போய் வெள்ளைக்காரிகளின் பின்பாகத்தையும் முலையையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வளவுதான். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் அவர்களிடம் என்ன பேசி நெருங்குவது? இது ஒருபுறமிருக்க... எங்கு பார்த்தாலும் இப்போது எய்ட்ஸைப் பற்றித்தானே பேச்சு! அதனால், நாங்கள் வெறுமனே சுற்றிவிட்டுத் திரும்பி வந்து இரண்டு குப்பி மதுவை மேலும் அருந்தி, பொரித்த பன்றி மாமிசத்தைத் தின்று தீர்த்தோம். காலையில் எழுந்தபோது ஆன்ஸி சொல்கிறாள்:”ஜாய், உங்களுக்குக் கொஞ்சம்கூட வெட்கமாக இல்லயா?” என்று. நான் சொன்னேன்:”மன்னிச்சுக்கோ ஆன்ஸி. கொஞ்சம் குடி அதிகமாயிடுச்சி.” அவள் சொன்னாள்:”நான் இது ஏற்கெனவே பார்த்துதானே! நீங்க உறக்கத்துல சொல்றீங்க...” நான் கேட்டேன்:”என்ன சொன்னேன்?” அவள் கூறினாள்:”மேடம் வாட் ஈஸ் யுவர் நேம்? கம் ஹியர்... ஐ லவ் யூன்னு” நீங்க சொன்னீங்க. உண்மையாகவே நான் ஆடிப்போயிட்டேன்.” நான் சொன்னேன்:”ஏதோ வெள்ளைக்காரங்க நடத்துற ஆஸ்பத்திரியிலே நான் சுகமில்லாம கிடக்கிறதா கெட்ட கனவு கண்டேன். கனவுல ஐ லவ் யூன்னு நிச்சயம் சொல்லவே இல்ல. ஐ கிவ் யூ என்று சொல்லி இருப்பேன்.  அதாவது... பணத்துக்காக பில்லை நீட்டினப்போ பணம் உடனே தரலாம், அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்னு சொல்லி இருப்பேன்.


நீ இதை யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாது. என் தங்கக்குடமல்லவா நீ? சொன்னால் கேவலமான ஒரு விஷயமாயிற்றே இது!” ஆன்ஸி என்னை பலவந்தமாக அழைத்துக்கொண்டு போய் முற்றத்தில் வக்கச்சன் கடையில் அவள் பார்த்து வைத்திருந்த மூன்று பவுன் வைர நெக்லஸை என் கையால் வாங்க வைத்து அணிந்து கொண்டாள். வெள்ளைக்காரியின் உடல் வனப்பைப் பார்க்கப்போய், கையை விட்டுப்போய்விட்டது பத்தாயிரம் ரூபாய்!

3

நான் சொன்னேன்:”டேய் சண்ணி, காதலன்- காதலியாக இருந்தால், என்னன்னு ஒரு கை பார்த்துடலாம். அவுங்க எப்படித்தான் இருக்காங்கன்னு ஒரு முறை பார்த்திடுவோமே! நீ இதுக்கு முன்னாடி காதல் ஜோடியைப் பார்த்திருக்கியா?” சண்ணி சொன்னான்:”இப்பத்தான் பார்க்கிறேன். பிறகு... உன்னையும் ஆன்ஸியையும் பார்த்திருக்கேன்.” அதற்குப் பதிலாக நான் சொன்னேன்:”நானும் ஆன்ஸியும் நண்பர்களாக வாழ்கிற கணவன்- மனைவி. நான் பகல்ல அவள் பக்கத்துலக்கூட இருக்க முடியல. காதலன்- காதலின்னா அப்படியா? ராத்திரியும் பகல்லயும் ஒரே மாதிரி கட்டிப் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க.” சண்ணி சொன்னான்:”உண்மையில் காதல்னா என்னடா? இவங்க ரெண்டு பேரும் டில்லியை விட்டு ஓடி வந்தது இந்தக் காதலால்தானே! அப்படின்னா உனக்கு ஆன்ஸிமேல இருக்கிறதும், எனக்கு கொச்சுராணி மேல இருக்கிறதும் என்ன?” நான் சொன்னேன்: “எனக்குத் தெரியும். நமக்கு விதிக்கப்பட்டது இது. அவ்வளவுதான். சின்ன வயசுல என்ன நடந்துச்சுன்னு யோசிச்சுப் பாரு. புல்வெளிகள்லயும் தோட்டத்துப் பக்கங்கள்லயும் புல் அறுக்க வர்ற பொண்ணுங்க பின்னாடி நாம அலைஞ்சி திரிஞ்சதை மறந்திட முடியுமா? அன்னைக்கி நாம காதலிச்சிருந்தா கதையே வேறதான். சண்ணி சொன்னான்:”நீ சொல்றது சரிதாண்டா... போனது போயிடுச்சு.” நான் சொன்னேன்:”அது கிடக்கட்டும். நீ அவங்க விஷயம் என்னன்னு சீக்கிரமா சொல்லு. ஏதாவது பிரச்சினை உள்ள விஷயமான்னு முதல்ல பார்க்கணும்ல! காரணம் ஆன்ஸிகிட்ட இந்த விஷயத்தைச் சொல்லாம அவுங்களை இங்கு ஒளிச்சு வைக்கிறதுன்றது நடக்காத சமாச்சாரம். அதை ஞாபகத்துல வச்சுக்கோ.” அவன் சொன்னான்: "ஆன்ஸிக்கிட்டே நான் எல்லாத்தையும் தெளிவா சொல்லிர்றேன். இதுல எந்தப் பிரச்சினையும் வரப்போறதில்லை.” நான் கூறினேன்:”அப்படின்னா என்ன நடந்ததுன்னு சீக்கிரமாச் சொல்லு. தற்கொலை அது இதுன்னு எதுவும் இல்லைன்னா நான் ஆதரவு தரத்தயார்.” சண்ணி சொன்னான்: “தற்கொலைப் பிரச்சினை இல்லைடா. இது மனசு சம்பந்தமான பிரச்சினை.”

சண்ணி என்னிடம் கூறியதன் சுருக்கம் என்னவென்றால், அந்தப் பையனும் பெண்ணும் டில்லியில் நண்பர்களாகி இருக்கிறார்கள்.  அவளுக்கு நல்ல வேலை. அவனுக்கும் நல்ல வேலை. அவள் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே டில்லியில். அவளின் தந்தை பொருளாதார ரீதியாக பெரிதாகக் கூறுவதற்கில்லை. சாதாரண நிலையில் இருப்பவர். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். பையன் கரிமண்ணு என்ற ஊரைச்சேர்ந்த வசதியான குடும்பம். அவன் பங்கு என்று மட்டும் இருபத்தேழு ஏக்கர் நிலம் இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்றால், டில்லியில் மதசம்பந்தமான ஒரு சொற்பொழிவு கூட்டமோ தியான முகாமோ நடந்திருக்கிறது. பையன் ஆரம்பத்திலிருந்தே ஆன்மிக விஷயங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவன். இங்கே இருந்து டில்லிக்குப் போவதற்கு முன்பே அவன் போட்டேலுக்கு ரெகுலராக போய்க் கொண்டிருந்தவன். இந்தப் பெண்ணின் தந்தை- அந்த ஆளுக்கு அங்கு நல்ல வேலை- டில்லியில் கெட்ட நண்பர்கள் கூட்டத்தால் பாதிக்கப்பட்ட தன் மகளை நல்லவள் ஆக்க வேண்டும் என்று தியானத்தில் ஈடுபட வைத்திருக்கிறார். டில்லியில் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு இங்கிலீஷ், இந்தி என்று பேசிக் கொண்டு ஹோட்டல்களில் ஏறி, பல இடங்களிலும் ஜாலியாகச் சுற்றித்திரிந்த பெண் அவள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எது எப்படியோ, தந்தை சொன்னதைக்கேட்டு அவள் தியான வகுப்பிற்கு ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தாள் என்பது உண்மை. அங்கு எல்லாரும் அடுத்தடுத்து நின்று ஆண்- பெண் வித்தியாசம் இல்லாமல் பாட்டு பாடுவதும் கை கொடுப்பதுமாய் இருந்தார்கள். இங்குபோல அங்கு ஆண்- பெண் என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. எது எப்படியோ, அந்தப் பையன் பெண்ணின் தலைமேல் தன் கையை வைத்துப் பிரார்த்தனை செய்தான். இப்படித்தான் அவர்கள் நெருக்கமானார்கள். பிறகு... யாருக்குத் தெரியும்? ஒன்றாகச் சேர்ந்து சினிமா பார்க்கப் போயிருப்பார்கள். ஓட்டலுக்குள் நுழைந்து காபி குடித்திருப்பார்கள். பூங்காக்களில் போய் அமர்ந்திருப்பார்கள். வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணியிருப்பார்கள். மாறி மாறி காதல் கடிதங்கள் எழுதியிருப்பார்கள். தொலைபேசியில் மணிக்கணக்காகப் பேசி இருப்பார்கள். எப்படியோ அவர்கள் காதலன்- காதலியாக வடிவமெடுத்து விட்டார்கள்.”அப்புறம் என்னடா? கர்ப்பமாயாச்சா? இதுதான் பிரச்சினையா? டேய் சண்ணி! இந்தக் கர்ப்பத்தைக் கலைக்க நான்தான் கெடைச்சேனா?” நான் கேட்டதற்கு சண்ணி பதில் சொன்னான்:”அப்ப முன்னாடி நீ கருப்புப் பூனை குட்டி யம்மாவுக்கு இருநூற்றைம்பது ரூபா எண்ணிக் கொடுத்தியே! அது எதுக்கு? அதை மறந்திட்டியா?” நான் சொன்னேன்:”டேய், மெதுவாகப் பேசு! அவள் என்னை ஏமாத்திட்டா. அவளுக்கு கர்ப்பமும் இல்ல ஒண்ணுமில்ல.” சண்ணி சொன்னான்:”சரிடா, நான் நம்புறேன்.” தொடர்ந்து நான் கேட்டேன்:”அது கிடக்கட்டும். நீ வந்த காரியம் என்னன்னு சொல்லு.” அவன் சொன்னான்:”டேய், கர்ப்பமும் இல்ல ஒண்ணும் இல்ல. நான் இதை ஏற்கனவே விசாரிச்சிட்டேன். நடந்த உண்மை என்னன்னா, இவர்களோட உறவு எப்படியோ பையனோட வீட்ல தெரிஞ்சு போச்சு. கரிமண்ணு குடும்பம்தான் வசதியான பெரிய குடும்பாச்சே! இருபத்தேழு ஏக்கரைப் பங்காக வைத்திருக்கும் தங்களோட பையனை அவ்வளவு சாதாரணமா டில்லிக்காரங்களுக்குத் தாரை வார்த்து அவுங்க கொடுத்துடுவாங்களா என்ன? அது மட்டுமல்ல. பெண்ணோட குடும்பம் அவ்வளவு பெரிசா சொல்றமாதிரி இல்ல. அவுங்களுக்குன்னு பெரிய பாரம்பரியமெல்லாம் ஒண்ணும் இல்ல. அவுங்களோட அம்மா வழியில ஏதோ ஜாதிக்குறைச்சல் சங்கதி வேற இருக்கு.ஆனா, பொண்ணப் பார்த்தா இதெல்லாம் பேசவே மாட்டே. நல்ல மணிக்குட்டி மாதிரி இருப்பா.”அப்படியா?” நான் வாய் பிளந்து கேட்டேன். சண்ணி தொடர்ந்தான். “ஆமாடா, அவள ஒரு முறைப் பார்த்துட்டா, கண்ணையே எடுக்க மாட்டே. அவள் ஒரு சாதாரண ஆளோட மகள்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. வெளுத்து சிவந்த நீண்ட முகம். தலைமுடியை என்னையும் உன்னையும்போல வெட்டியிருக்கா,” “அய்யோடா...” நான் சொன்னேன். சண்ணி தொடர்ந்தான்: அழகுன்னா என்ன அழகுன்றே! மெலிஞ்ச உடம்பு. சரியான உயரம். நல்ல ஷேப். போடறது ஜீன்ஸூம் ஷர்ட்டும். டேய், இங்கிலீஷ் பத்திரிகைகள்ல நாம பார்ப்போமே மாடலிங் அழகிகளோட புகைப்படங்கள்...


அந்த மாதிரியான அமைப்பில் இருக்கிற ஒரு பொண்ணு இவள்” நான் சொன்னேன்: “போடா, என்னை இழுக்கறத்துக்காக அளந்து விடாதே” “சண்ணி அதற்குச் சொன்னான்: “இல்லடா. உங்க அப்பாமேல சத்தியமா சொல்றேன்.” அவன் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று பட்டது. “சரி அதற்குப் பிறகு இந்த நிலை வர காரணம்?” “நான் கேட்டேன். சண்ணி தொடர்ந்தான்: “ம்...... சொல்றேன். விஷயம் தெரிஞ்சவுடன் பையனோட வீட்டுக்காரங்க ராத்திரியோட ராத்திரியா டில்லிக்குப் புறப்பட்டுட்டாங்க. எப்படியும் அவனை ஊருக்குக் கூப்பிட்டுட்டு வந்துர்றதுன்னு. டில்லியிலே இறங்கினா, ஒரு ஆட்டோ ரிக்க்ஷாக்காரன் அவங்களை எங்கே எல்லாமோ தேவை இல்லாம சுத்தி அடிச்சுக்கிட்டு இருக்கான். கடைசியில ஒரு இடத்துல இருந்து பையனோட ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி இருக்காங்க. "அந்த இடத்திலேயே நில்லுங்க. இந்தா வந்திர்றேன்”னு சொன்ன பையன் அடுத்த நிமிடமே வீட்டு ஓடிப்போயி துணி, பணம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பொண்ண ஆபீஸ்ல இருந்து வரச்சொல்லிட்டு, அவளோட ஒரே ஓட்டம், "அப்ப பொண்ணு துணி எதுவும் எடுக்கலியா?” நான் கேட்டேன். "காசு கையில இருக்குறப்போ துணிக்கு என்னடா கஷ்டம்? கடையிலதான் காசை அள்ளி விட்டா எந்தத் துணிய வேணும்னாலும் வாங்கலாமே!” "ஒருவிதத்தில் பார்த்தால் காதலன்-காதலிக்கு அப்படி ஒண்ணும் அதிகமா துணி தேவைப்படாது.” நான் சொன்னேன். "அது எனக்கும் தெரியும். பையன் என்ன சொல்றான் தெரியுமா? முதல்நாள் தியானத்துல இருக்குறப்பவே ஊருல இருந்து வீட்டு ஆளுங்க கிளம்பி தன்னை இழுத்துக்கிட்டுப் போறதுக்கு டில்லி வர்றாங்கன்னு கடவுள் காண்பிச்சிட்டாராம்” சண்ணி சொன்னான். "பரவாயில்லையே!” நான் சொன்னேன். சண்ணி தொடர்ந்தான்: "பெரியவங்க விஷயம் தெரிஞ்ச சமயத்துல காதல்ஜோடிங்க ஊரைவிட்டே வெளியேறிட்டாங்க. போதாதக் குறைக்கு இந்தி பேசுற இடம். அதே சமயத்துல பையனோட வீட்டுக்காரங்களுக்கு டில்லியில கொஞ்சம் அரசியல் வாதிகளைத் தெரியும். மனசுல ஒண்ணு நெனச்சாங்கன்னா, அதை உடனடியா செயல் வடிவத்துக்குக் கொண்டு வரணும்னு நெனைக்கிற டைப் ஆளுங்க. ஹோட்டல்ல நாள் கணக்குல தங்கி எம்.பி.மார்களையும் போலீஸ்காரங்களையும் பார்த்து, பார்க்க வேண்டியதைப் பார்த்து பையனைக் கடத்திட்டுப் போயிட்டாங்கன்னு பொண்ணோட வீட்டுக்காரங்கமேல கிரிமினல் பெட்டிஷன் கொடுத்தாங்க. அவ்வளவுதான்- பொண்ணோட வீட்டுக்காரங்க ஆடிப்போயிட்டாங்க. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைன்னு கடவுள்மேல சத்தியம் பண்ணி அழுதாங்க. இதுனால எல்லாம் கரிமண்ணுக்காரங்க மனசு இளகுமா என்ன? அப்பத்தான் அந்தப் பொண்ணு ஃபோன் பண்றா, பையன்கூட கேரளத்துக்கு ஓடி வந்துட்டதா. அவ்வளவுதான்- எல்லாரும் இங்கே கிளம்பிட்டாங்க. அதோடு நிற்காமல் டில்லி, போலீசை விட்டு இங்கே இருக்கும் போலீஸுக்குச் செய்தி சொல்ல வச்சாங்க.” "அந்த சமயத்துல இந்தப் பொண்ணும் பையனும் எங்க இருந்தாங்க?” நான் கேட்டேன். "இவங்க எர்ணாகுளத்துல ஒரு ஸ்டார் ஹோட்டல்ல தங்கி இருந்தாங்க.” நான் கேட்டேன்: "ஸ்டார் ஹோட்டல்லயா?” "ஆமாடா, இருபத்தேழு ஏக்கர் பையனோட பங்கா இருக்குன்னு நான் சொன்னேனே! மறந்திட்டியா? இந்த மாதிரி கஞ்சத்தனமா இல்லாமல் இருந்தால் நீயும் என்னைக்கோ போய் ஸ்டார் ஹோட்டல்ல தங்கியிருக்கலாம்.” சண்ணி சொன்னான். நான் அதற்குச் சொன்னேன்: "போடா எனக்கு என் வீட்ல பாயும் தலையணையும் இருந்தா போதும்டா. அவங்க ஒண்ணாவாடா ஸ்டார் ஹோட்டல்ல தங்கினாங்க?” சண்ணி சொன்னான்: "இல்ல தனித்தனியா இருந்தாங்க, ஏன்டா... இதென்ன கேள்வி? ஏன்டா இதுக்காகவா அவங்க காதலிச்சாங்க?” நான் சொன்னேன்: "அதுக்கில்லை... கடவுள் கனவுல முன்கூட்டி சொல்லி ஒரு பையன் ஒரு பொண்ணைத் தனியா கூட்டிட்டுப்போய்...” சண்ணி சொன்னான்: "அதுதான்டா கரிஸ்மேட்டிக்கோட தத்துவம். அந்தப் பையன் அந்தப் பொண்ணோட ஒரு ரோமத்தைக்கூட இதுவரை தொட்டதில்லை. அவங்க ரெண்டு பேரோடையும் பேசினதுல நான் தெரிஞ்சிகிட்ட விஷயம் இது.” "அது சரி... இதுதான் வக்கீல்ன்ற முறையில் நீ விசாரிச்சுக்கிட்டிருக்கிற விஷயங்களா?” நான் கேட்டேன். அவன் சொன்னான்: "டேய்... தமாஷா பேசுறத விடு. நிலைமை சீரியஸானது. டில்லியில போலீஸ் பொண்ணோட அப்பாவையும் அம்மாவையும் ஸ்டேஷனுக்குக் கொண்டுட்டுப்போய் மிரட்டி இருக்காங்க. பொண்ணு எப்போ டில்லிக்கு ஃபோன் பண்ணினாலும் அவுங்க ஃபோன்ல ஒரேயடியா அழறாங்க. "டாடியும் மம்மியும் பயப்பட வேண்டாம். நாங்கள் தினம் பிரார்த்தனை செய்றோம்”னு பையனும் பொண்ணும் பதில் சொல்லியிருக்காங்க. அவ்வளவுதான். இங்கு போலீஸ்காரங்க பையனும் பொண்ணும் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டு பிடிச்சுட்டாங்க. போலீஸ் ரூமுக்குப் போய் கதவைத் தட்டினப்போ, இவங்க ரெண்டு பேரும் அங்கே இல்ல. போட்டேலுக்குப் போயிட்டாங்க. மஃப்டியில போலீஸும் போட்டேலுக்குப் போயிட்டாங்க. பிரார்த்தனைக் கூட்டத்திலே அவங்களால காதலர்களைக் கண்டுபிடிக்க முடியல. ஆனால் கர்த்தர் போலீஸ்காரங்களை இவங்களுக்குக் காட்டிக் கொடுத்துட்டாரு. பையன் சொன்ன விஷயம் இது. "ப்ரெய்ஸ் தி லார்ட்”. நான் சொன்னேன். "குறுக்கே எதுவுமே பேசாம நான் சொல்றதை நீ கேளு. அவங்க ரெண்டு பேரும் போட்டேல்ல இருந்து ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்துட்டுப் புறப்பட்டுட்டாங்க. இன்னைக்குக் காலங்காத்தால நாய் குரைக்கிற சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தா இவங்க ரெண்டு பேரும் அங்க நின்னுக்கிட்டு இருக்காங்க.” "இது என்னடா புதுக்கதையா இருக்கு? அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ அந்த அளவுக்கு பேர்போன வக்கீலா என்ன?” நான் அவனைக் கிண்டலாகக் கேட்டேன். சண்ணி சொன்னான்: "இங்கேதான்டா ஒரு பிரச்சினையே. பொண்ணோட பெரியப்பா செக்ரட்டேரியட்ல பெரிய ஆளு. அந்த ஆளு இவங்க பக்கம். பப்ளிக் பிராஸிக்யூட்டரா நான் ஆகுறதுக்கான பேப்பர் அந்த ஆளோட மேஜை மேலதான் இருக்கு. நான் பலமுறை இதுக்காகப்போய் பார்த்திருக்கேன். அவருதான் பையன்கிட்ட சொல்லி இருக்காரு. நீங்கபோய் பாலாவில் சண்ணிங்ற வக்கீலைப் பாருங்க. அவர் உங்களுக்கு என்ன தேவையோ, எல்லா வசதிகளையும் செய்து தருவார்ன்னு.” நான் சொன்னேன்: "ஓ... விஷயம் இப்படிப் போகுதா? அதாவது இந்த விஷயத்தை நீ சரியாச் செய்திட்டா நீ பப்ளிக் பிராஸிக்யூட்டரா ஆயிடுறே! அதானே!” சண்ணி தொடர்ந்தான். "நிலைமை இப்படி இருக்கிறப்போ நான் இதைச் செய்யாம எப்படி இருக்க முடியும்? அதே நேரத்துல என் வீட்ல இவங்கள மறைச்சு வைக்கவும் முடியாது. போலீஸ் படி ஏறினாங்கன்னு வச்சுக்கோ... அத்தோடு போச்சு என்னோட பப்ளிக் பிராஸிக்யூட்டரா ஆகக் கூடிய வாய்ப்பு. அதோட... கொச்சு ராணியோட நாக்குமேல அவ்வளவா எனக்கு நம்பிக்கை கிடையாது. "நம்ம பாம்பே ஜார்ஜ் குட்டியோட சொந்தக்காரங்க இவங்க.


போட்டேல் ஆசிரமத்துக்கு தியானத்திற்கு வந்த வழியிலே இங்கே வந்திருக்காங்க”ன்னு அவக்கிட்டே சொல்லி வச்சேன். சொல்லப் போனால் வீட்டுக்குள்ளே கால் வைச்சதிலே இருந்து ரெண்டுபேரும் ஒரே பாட்டும் பிரார்த்தனையும்தான். பொண்ணுக்கு மலையாளம் தெரியாததுனால பிரச்சினை இல்லை. பையன் தன்னை மறந்து ஏதாவது சொல்லிட்டான்னு வச்சுக்கோ, அவ்வளவுதான். பிரச்சினை பெரிசாயிடும்.” நான் சொன்னேன்: "டேய், சண்ணி... நான் ஒரு சாதாரண விவசாயி. நான் இதுக்கு ஒரு வழி சொல்லட்டா?” "சொல்லு!” சண்ணி சொன்னான். நான் சொன்னேன்: "இவுங்க ரெண்டு பேரையும் ஒரு ரெஜிஸ்டர் ஆஃபீஸுக்குக் கூப்பிட்டுட்டுப் போயி கல்யாணம் செஞ்சு வச்சு நம்ம சர்க்கிள் பாலசந்திரன் சார் கிட்டே போய் நிறுத்து. அவருதான் நம்ம ஆளாச்சே! எந்தப் பிரச்சினையும் உண்டாகாது. முன்னாடியே விஷயத்தைச் சொல்லிட்டாப்போதும்.” சண்ணி சொன்னான்: "அங்கேதான்டா பிரச்சினையே! பையன் பதிவு திருமணத்திற்கு நூற்றுக்கு நூறு எதிரா இருக்கான். அவனைப் பொறுத்தவரை போட்டேல் ஆசிரமத்துல வச்சு கடவுளுக்கு முன்னாடி, அவரோட அருளோடு பாட்டுப் பாடி பிரார்த்தனை செய்து கல்யாணம் பண்ணணும். இது தன்னோட ஆத்மா சம்பந்தப்பட்ட விஷயம்- இப்படித்தான் கட்டாயம் நடக்கணும்ன்றான் பையன்.” நான் சொன்னேன்: "அவனுக்கு ஆத்மாவோட பிரச்சினை, உனக்கு உன்னோட வேலை பிரச்சினை. இதுல எது பெரிது?” சண்ணி ஒன்றும் பதில் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவன் சொன்னான்: "பையன் ஒரு விதத்தில பிரச்சினைக்காரன்தான். அப்பா! அண்ணன்மார்கள் கையில் சிக்கிட்டா அவங்களை எதிர்த்து தன்னால ஒண்ணுமே செய்ய முடியாதுன்னும் சொல்றான் அவன். அதுக்காக அவங்களோட மனசு மாறணும்னு பிரார்த்தனை செய்றான் அவன். டேய் ஜாய், நான் பையன் கிட்டே தனியா இருக்கறப்போ கேட்டேன், "சாம்குட்டி, அப்பா அம்மா கையில நீ அகப்பட்டுட்டேன்னு வச்சுக்கோ, அப்ப அவங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டு இந்தப் பொண்ணை கைகழுவி விட்டிருவியா”ன்னு. அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? "கை கழுவுறதுன்றது சும்மா ஒரு வார்த்தை அவ்வளவுதான். அண்ணா, இது நாமளே உருவாக்கிக் கொண்ட ஒரு வார்த்தை. நான் ஒருவேளை அப்பாவுக்கும், அண்ணன்மார்களுக்கும் அடிபணிய வேண்டிய நிலை உண்டாச்சுன்னா, அது தெய்வத்தோட விருப்பம்னுதான் எடுத்துக்கணும். ஆனி என்னை விட்டுப் பிரிஞ்சு போறதா இருக்குன்னு வச்சுக்கோங்க. அதுகூட தெய்வத்தோட விருப்பம்னுதான் நாம எடுத்துக்கணும். யாரும் யாரையும் விட்டுப் பிரியறது இல்ல. கை கழுவிவிடறதும் இல்ல. எல்லாம் தெய்வத்தோட செயல்... அவனோட விருப்பம்... அவ்வளவுதான்”னு சொல்றான் அவன்.” நான் சொன்னேன்: "பாவம்டா அந்தப் பொண்ணு, "சண்ணி தொடர்ந்தான்: "பொண்ணோட விஷயத்தை எடுத்துக்கிட்டா அதுவும் ஒரு தமாஷாதான் இருக்கு. நான் அவள்கிட்ட கேட்டதற்கு அவள் சொல்றா, அவளுக்கு கொஞ்சம் கூட திருமணத்துல நம்பிக்கை இல்லையாம். அவள் படிச்ச ஜெ.என்.யூ.வில் யாருமே கல்யாணத்தை நம்புறது இல்லையாம். சாம்குட்டியோட பாட்டும், சாந்தமான குணமும், பணிவும்தான் அவளுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். பிறகு... இந்த தியானம் வேற. முன்னால ரஜனீஷ் ஆசிரமத்துக்குப் போயி தியானமெல்லாம் செஞ்சிருக்கிறா இவ. டான்ஸும் பாட்டும் அவள் சாதாரணமாகவே டிஸ்கோவில செய்யிறதுதானாம். சொல்லப் போனால், இந்த மாதிரியான விஷயங்கள்ல இவளுக்கு ஈடுபாடு ரொம்ப அதிகமாம். அவள் இதைப்பற்றி என்ன சொல்றா தெரியுமா? இது அவளைப் பொறுத்தவரை "ஆத்மீய விநோத யாத்திரை”யாம். அவள் சொன்னதைக் கேட்டு சாம்குட்டிக்கிட்ட கேட்டேன். "பொண்ணுக்குக் கல்யாணத்தில நம்பிக்கையில்ல. அப்ப நீ என்ன செய்யப்போறே?”ன்னு. அதுக்கு சாம்குட்டி என்ன சொல்றான் தெரியுமா? அவளுக்காக அவன் கடவுள்கிட்ட வேண்டிக்கப் போறானாம். போட்டேல் ஆசிரமத்துக்குப் போறதுனால அவளோட மனசுல மாற்றம் உண்டாயிடும்ன்றான் அவன். அவள் சொல்றா, "அண்ணா,என்னோட மனசை நான் கடவுள் முன்னாடி திறந்து வச்சிருக்கேன். எது வேணும்னாலும் நடக்கட்டும்”னு. அவ்வளவுதான்- "ப்ரெய்ஸ் தி லார்ட்”னு சொல்லிக்கிட்டு சாம்குட்டி எழுந்தோடி அவளோட கையைச் சேர்த்துப்பிடிச்சுக்கிட்டு கண்களை மூடிக்கிட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டான். இப்படித்தான் காரியம் நடந்துக்கிட்டிருக்கு.” "உனக்கு இது பெரிய பிரச்சினை ஆயிடுச்சே!” நான் சொன்னேன். சண்ணி சொன்னான்: " நீ என்ன செய்யிறன்னா... இங்க ரெண்டு நாளு பையனும் பொண்ணும் இருக்கட்டும். நீயும் ஆன்ஸியும் ரெண்டு பேர்கிட்டேயும் பேசிப்பாருங்க. இதுக்கிடையில நான் போலீஸ் பிடியில மாட்டாமல் இவுங்களை போட்டேல் ஆசிரமத்துல கொண்டு போய் எப்படி விடறதுன்னு பார்க்கிறேன். பேசிக்கிட்டு இருக்கிற நிமிஷத்துல நீயும் ஆன்ஸியும் பொண்ணோட மனசை எப்படியாவது கல்யாணத்தை நோக்கித் திருப்பப் பாருங்க.”

"ஆன்ஸிக்கிட்ட நாம என்ன சொல்றது?” நான் கேட்டேன். சண்ணி சொன்னான்: "உள்ளது எதுவோ அதையே சொல்லிவிட வேண்டியதுதான். டேய், நம்மளைப் போலத்தான்டா பொம்பளைங்களும். அவுங்களும் காதலர்களை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருப்பாங்க. அவர்கள் நேராக வீட்டுக்குள்ளேயே     வர்றாங்கன்னா...? ஆன்ஸியை நான் எப்படியாவது சொல்லி சம்மதிக்க வச்சிர்றேன். ஆனா இதுல ஒரு பிரச்சினை இருக்கு. அதையும் நீ கேட்டுகோ.” "சரி... சொல்லு...” நான் சொன்னேன். சண்ணி சொன்னான்: "கரிமண்ணுக்காரங்க குளப்புரத்தைச் சேர்ந்த வக்கனையும் அவன்கூட வேற ரெண்டு ரவுடிகளையும் இவுங்களைத் தேடி ஏவிவிட்டிருக்காங்க. அதனால நாம ரொம்ப கவனமா இருக்கணும்.” "அடக்கடவுளே!” நான் சொன்னேன். "டேய், சண்ணி... ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் போல இருக்கேடா...!” அவன் ஒன்றும் பதில் கூறாமல் ஆன்ஸியைத் தேடி அடுக்களைப் பக்கம் போனான்.

4

ணி பத்து அடிப்பது கேட்டபோது ஆன்ஸி சொன்னான்: "இனி அவுங்க வருவாங்கன்னு தோணல.” நாங்கள் பிரார்த்தனை முடித்து, குழந்தைகளை உறங்க வைத்தோம். சண்ணி காதலர்களை அழைத்து வருவதை எதிர்பார்த்து இருட்டில் திண்ணையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். முற்றத்தில் இருந்த பூச்செடிகளில் மின்மினி பூச்சிகள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. ஒரு அரை நிலாவின் வெளிச்சம் மணல்மேல் தெரிந்தது. இருந்தாலும், கண்ணில் சந்திரன் தென்படவில்லை. "ஏய்... வராம இருக்க மாட்டாங்க.” நான் சொன்னேன். "என்ன இருந்தாலும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு நாம தூங்குவோம்... சரி... நாளைக்கு நம்ம பசங்க இவங்க யார்னு கேட்டா நாம என்ன பதில் சொல்றது?” அவள் சொன்னாள்: "டில்லியில இருந்து மத்தச்சனோட சொந்தக்காரங்க இவங்க. கேரளத்தைச் சுற்றிப்பார்க்க வந்திருக்காருங்கன்னு சொல்ல வேண்டியதுதான்.” நான் சொன்னேன்: "இந்த விஷயத்தை முன்கூட்டியே அந்தப் பையன்கிட்டயும் பொண்ணுக்கிட்டயும் சொல்லிடணும். இல்லாட்டின்னா நாம ஒண்ணு சொல்லி அவுங்க வேற ஒண்ணு சொன்னாங்கன்னா... பசங்களுக்கு ஒரே குழப்பமாயிடும்.


என்ன இருந்தாலும் இந்தக்கால பிள்ளைங்களாச்சே!” ஆன்ஸி சொன்னாள்: "அதுவும் உங்கள் பிள்ளைகளாச்சே!” "எனக்கு மட்டுமா இதுல பொறுப்பு? உனக்கும்தான். அடியே ஆன்ஸி... உனக்குத் தெரியுமா?” நான் அவள் காதில் சொன்னேன்: "இந்த மின்மினிப் பூச்சிகள் கண் சிமிட்டுவது அவர்கள் காதலன்- காதலியாக இருப்பதால்தான். அங்கும் இங்கும் கண் சிமிட்டி எப்படி அழைக்கின்றன... பார்...” அடுத்த நிமிடம் "ஜாய்... இது திண்ணை. ஞாபகத்துல வச்சுக்கோங்க” என்று சொன்ன அவளின் காலைப் பிடித்து, வெள்ளை வெளோர் என்று இருந்த பாகத்தை கையால் தடவினேன். அப்போது கேட் அருகே கார் ஒன்றின் விளக்கு திரும்புவது தெரிந்தது. ஆன்ஸி என்னைவிட்டு அகன்று வீட்டுக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டாள். நான் டார்ச் விளக்கை எடுத்துக்கொண்டு கேட்டை நோக்கி ஓடியபோது, சண்ணியின் மாருதி வந்து நின்றது. அவன் இறங்கி என்னை நோக்கி வந்தான். வண்டியின் பின்கதவைத் திறந்துகொண்டு சாம்குட்டி இறங்கி வந்தான். அழகான முகமும் புன்சிரிப்புமாய் இருந்தான் அவன். நீண்ட கையுள்ள வெள்ளை ஷர்ட்டும் வெள்ளை பேண்ட்டும் அணிந்திருந்தான். "இவன் ஒரு அப்பா பிள்ளையாச்சே!” நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அவன் காரைப் பார்த்துக் குனிந்தவாறு கூறினான்: "கம் ஆனி...” "ஓ எல்லாமே இங்கிலீஷ் தானா...?” நான் மனதிற்குள் கூறிக்கொண்டேன். அவளிடம் எப்படிப் பேசி சரிப்படுத்துவது? ஆனி இருக்கை வழியே மெல்ல நகர்ந்து கால்கள் இரண்டையும் வெளியே வைத்தாள். நல்ல மெழுகுபோல முற்றத்தில் வெள்ளை நிறத்தில் இரண்டு கால்கள். அவள் அணிந்திருந்தது முழங்காலுக்குக் கீழே இருக்கிற மாதிரி ஒரு கறுத்த பாவாடையும் கறுப்பும் வெண்மையும் கலந்த ஒரு சிறிய ஷர்ட்டும். பாதத்தில் ஏதோ மினுமினுத்தது. என்னவென்று பார்த்தேன். வெள்ளிக் கொலுசு. காருக்குள் இருந்தவாறே அவள் புன்னகைத்தாள். பிறகு காரை விட்டு இறங்கி கையைக் கட்டியவாறு காருக்குப் பக்கத்தில் நின்றாள். சண்ணி சொன்னான்: "ஜாய், இது ஆனி... இது சாம்குட்டி...” "ஆனி சிரித்தவாறு கூறினாள்: "ஹல்லோ அங்கிள்...” க்ராப் வெட்டிய தலையைத் தடவியவாறு நெற்றியில் கிடந்த தலைமுடியை ஒதுக்கி விட்டாள். நான் மனதிற்குள் நினைத்தேன். "சண்ணி சொன்னது சரிதான். நல்ல வெளுத்த நீண்ட முகம். பளிங்குச்சிலை போன்ற உடல் அமைப்பு. சிரிக்கும்போது எல்லா பற்களும் ஜொலிக்கின்றன. கால்கள் வெண்ணெய்போல் இருக்கின்றன வெள்ளை வெளோர் என்று.” நான் இரண்டு பேர் முகத்தையும் உற்றுப் பார்த்தேன்- ஏதாவது விசேஷமாகத் தெரிகிறதா என்று. காதலன்- காதலிக்கென்றே இருக்கிற ஏதாவது தனித்துவம் தெரிகிறதா? ஒரு தடவை பார்த்ததில் ஒன்றுமே பிடிபடவில்லை. சண்ணி அவர்களின் சாமான்களை வண்டியில் இருந்து இறக்கி வராந்தாவில் வைத்தான். அப்போது ஆன்ஸி வராந்தாவிற்கு வந்தாள். நான் சாம்குட்டியிடம் ஆனியிடமும் சொன்னேன். "உள்ளே வாங்க. குளிக்கிறதா இருந்தா குளிச்சு சாப்பிடலாம். ஆன்ஸி இவுங்களை உள்ளே கூட்டிட்டுப் பேர்” அவர்கள் வீட்டுக்குள் போனவுடன் நான் சண்ணியிடம் சொன்னேன்: "எப்படியோ ரெண்டு பேரையும் இங்கே கொண்டு வந்துட்டே!” சண்ணி சொன்னான்: "ஆமா... ரெண்டு நாட்கள் எப்படியோ சமாளிச்சிக்கோ... அதுக்குள்ள நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்.” நான் சொன்னேன்: "டேய் சண்ணி... அதெல்லாம் உன் பிரச்சினை. ஆனால் குளப்புரம் ரவுடி வந்தால் மட்டும் என்னோட பிரச்சினையா?” சண்ணி சொன்னான்: "எப்படியாவது மேனேஜ் பண்ணுடா. வேற என்ன செய்றது? சரி... உன்னோட அப்பாவோட ரெட்டைக் குழல் துப்பாக்கி ஒண்ணு அங்க இருக்குமே! எது எங்கே?” நான் சொன்னேன்: "எனக்கு அதுக்குள்ள தோட்டா போடுறது எப்படின்னே தெரியாதுடா.” சண்ணி சொன்னான்: "டேய் ஜாய்... தோட்டா இருக்கணும்னு கூட அவசியமில்ல... சும்மா எடுத்து நீட்டினா போதும்... எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும் பயந்து ஓடிடுவான். "நான் சொன்னேன்:          "அப்படியா... அப்ப அதையும் பார்த்திடுவோம்.

நான் உள்ளே சென்றபோது ஆன்ஸி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள். சாம்குட்டியும் ஆனியும் ஷோபாவில் அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அப்படி அமர்ந்திருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. சாம்குட்டி ஆன்ஸிடம் சொன்னான்:  "அக்கா, இப்படி வந்து உங்களுக்குத் தொந்தரவு கொடுத்ததுக்கு மன்னிக்கணும். எங்களை வெறும் காதலன்- காதலியா மட்டும் பார்க்க வேண்டாம். நாங்கள் தெய்வத்தை அடைவதற்கான தீர்த்த யாத்திரை இப்போது நடத்திக்கிட்டிருக்கோம். இல்லையா ஆனி?” அவன் இப்படிக் கேட்டதும் தன் முல்லைப் பூபோன்ற முப்பத்திரெண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவாறு தலையை ஆட்டினாள் ஆனி. ஆன்ஸி கேட்டாள்: "நீங்க போட்டேல் தவிர வேற எங்கே எல்லாம் போனீங்க?” சாம்குட்டி சொன்னான்: "இல்ல... வேற எங்கேயும் போகல... இது ஒரு இதயத்தோட புனிதப் பயணம் அக்கா.” ஆன்ஸி சிரித்தவாறு ஆனியை நோக்கி கேட்டாள்: "எப்போ உங்களோட கல்யாணம்? எங்களையும் கூப்பிடுவீங்கள்ல?” ஆனி சாம்குட்டியிடம் என்னவோ சொன்னான். அவன் சொன்னான்: "ஆனி சொல்றா போட்டேலுக்குப் போயி தெய்வம் எப்படி நினைக்குதோ அப்படி நடக்கட்டும்னு.” ஆன்ஸி சொன்னாள்: "என்ன இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு கஷ்டப்பட்டும் கல்யாணம் நடக்கலைன்னா, இதெல்லாம் எதுக்குன்னு ஆயிடும்.”  அவன் அவளிடம் என்னவோ ஆங்கிலத்தில் கேட்டான். பிறகு ஆன்ஸியிடம் சொன்னான்: "ஆனி சொல்றா, எங்களோட அன்பையும் நட்பையும் கல்யாணம்ன்ற வரையறையோட நிறுத்திக்க முடியாதுன்னு.”அப்போது அவள் என்னவோ ஆங்கிலத்தில் கூறினாள். உடனே சாம்குட்டி சொன்னாள்: "நாங்க அன்பை விரும்பக் கூடியவர்கள். எங்களோட இந்த பயணம் ஒரு ஆத்மீக சாகச யாத்திரைன்னு சொல்லலாம். அக்கா... ஒரு ஸ்பிரிச்சுவல் அட்வென்சர். இல்லையா ஆனி? "நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்: "ஆனால்... பாவம் சண்ணியோட பிராஸிக்யூட்டர் வேலைக்கு அதுவே தட்டையாக இருந்திடக்கூடாது குழந்தைகளே! ஆனி முல்லைமொட்டை ஒத்த தன் வெண்பற்களை மீண்டும் காட்டிச் சிரித்தவாறு தலையைக் குலுக்கினாள். பிறகு இரண்டு கால்களையும் முன்னால் நீட்டி செருப்பைக் கீழே கழற்றி, ஒரு பாதத்தால் இன்னொரு பாதத்தைத் தடவினாள். நான் என் கடைக்கண்களால் அதைப் பார்த்தேன். அவளின் ஒவ்வொரு கால் விரலும் ரோஜாப்பூ மொட்டை நினைவூட்டின. ஆன்ஸி உள்ளே இருந்த அறைக்குள் சென்று என்னைக் கை காட்டி அழைத்தாள். அவள் என்னை அழைத்ததும் நான் நினைத்தேன். ஆனியின் கால் விரல்களை நான் பார்த்ததை அவள் கண்டுபிடித்துவிட்டாள் என்று. ஆனால், அவள் ஒரு முக்கிய விஷயமாகத்தான் அழைத்திருக்கிறாள் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.


அவள் கேட்டாள்: "இவங்களை எங்கே படுக்கச் சொல்றது? ஒரே அறையிலா? இடிஇடித்ததுபோல் அதிர்ச்சியடைந்து நின்றேன்நான். "கடவுளே, இது சரியான கேள்விதான். நான் இதுவரை இதைப்பற்றி நினைக்கவே இல்லையே!” நான் ஆன்ஸியிடம் சொன்னேன்: "நீ கேட்டது சரிதான் ஆன்ஸி. நீ என்ன செய்தான் சரின்னு நினைக்கிறே.” அவள் சொன்னாள்: "நீங்க இதைப்பற்றி முடிவு செஞ்சிருப்பீங்கன்னு நான் நினைச்சேன்.” "நான் அதைப்பற்றி நினைக்கல...”. நான் சொன்னேன். "சண்ணியைக் கூப்பிட்டுக் கேட்டால் என்ன?” "சே... வேண்டாம். அவுங்க கேட்ருவாங்க” ஆன்ஸி சொன்னான்: "வேணும்னா தனித் தனியே படுக்கச் சொல்லுவோம்” நான் சொன்னான்: "அவன் வரவேற்பறையில் படுக்கட்டும். அவள் உன் ரூம்ல படுக்கட்டும். "ஆன்ஸி சொன்னான்: "ஆனா...” நான் கேட்டேன்: "என்ன ஆனான்னு இழுக்குறே...?”ஆன்ஸி என்னை ஒரு விரலால் குத்தியவாறு சொன்னான்: "அவுங்க ராத்திரி எழுந்துபோய் ஒண்ணா படுத்துக் கிட்டாங்கன்னா?” நான் சொன்னேன்: "அறையைப் பூட்டிட்டா எப்படி? பிறகு ஒரு விஷயம்... சண்ணி ஏற்கெனவே என்கிட்டே சொல்லி இருக்கான். அவங்க ஒரு ரோமம் அளவுக்குக்கூட ஒருத்தரை ஒருத்தர் தொட்டது இல்லன்னு.” அப்போது ஆன்ஸி சொன்னாள். "அப்ப எதுக்கு நாம இப்படி பயப்படணும்? அவங்க ஒரே ரூம்லேயே படுக்கட்டும். அவங்க விருப்பம் எப்படியோ அப்படி நடக்கட்டும். நாளைக்கு அவங்க எப்படிப் படுப்பாங்கன்ற விஷயத்தை நம்மால தீர்மானிக்க முடியுமா? "நான் சொன்னேன்: "நீ சொல்றது சரிதான். அவுங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தொடணும்னு தோணினால், அது நம்ம வீட்ல வச்சே நடக்கட்டும்மே! இல்லியா?” நான் ஆன்ஸியின் தொடையில் மெல்லக் கிள்ளினேன். பிறகு சொன்னேன்: "இந்த மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கிறப்போ அவங்களுக்கு ஏதாவது தோணலாம். பொண்ணுக்குக் கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சண்ணி சொன்னான். ஒருவேளை அந்த விருப்பம் இங்க உண்டாகலாம். இல்லியா? அவுங்களை ஒரே ரூம்லேயே படுக்க வைப்போம். அப்படிச் செய்வதுதான் சரியானது... சரியானது...”

ஆன்ஸியும் நானும் சேர்ந்து அறைக்குள் இரண்டு கட்டில்களை இணைத்துப்போட்டு, அதன்மேல் இப்போதுதான் சலவை செய்து இஸ்திரி போட்டுத் தயாராக இருந்த விரிப்புகளைக் கொண்டு வந்து விரித்து, சலவை செய்த போர்வைகளைக் கொண்டு வந்து வைத்து, தலையணைகளுக்கு உறை மாற்றி, மேஜைமேல் இரண்டு டம்ளர்களில் பாலும் ஒரு குப்பி நிறைய தண்ணீரும் வைத்தோம். குளியலறையில் புதிய துவாலையும் சோப்பும் வைத்தோம். எல்லாம் தயார் பண்ணிவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது பையனும் பெண்ணும் அருகருகில் நின்று முற்றத்தில் சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பரவாயில்லை. காதலன்- காதலி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று மனதிற்குள் நினைத்தேன் நான். நான் வராந்தாவில் நின்று லேசாகக் கனைத்தவாறு கூறினேன்: "என்ன படுக்கலாமா?” நான் அவர்களை அழைத்துக்கொண்டு அறையை நோக்கிப் போனபோது ஆன்ஸி அந்த அறையின் ஜன்னல்களை அடைத்துக் கொண்டிருந்தாள்,. சாம்குட்டி உடனே சொன்னான்: "அய்யோ... அதை எல்லாம் அடைக்க வேண்டாம் அக்கா. ஆனி சொல்றா கதவையும் ஜன்னல்களையும் திறந்து வச்சாதான் மின்மினிப் பூச்சிகள் அறைக்குள் வரும்ன்றா.” சாம்குட்டியும் ஆனியும் சிரித்தார்கள். அதை நான் மிகவும் ரசித்தேன். நான் மனதிற்குள் கூறினேன்: "பெண்ணே, உன்னோட ஒவ்வொரு ஆசையும் எவ்வளவு வித்தியாசமா இருக்கு! உனக்குத் தேவை மனிதர்கள் இல்லை... சும்மா திரிகிற மின்மினிப் பூச்சிகள் போதும் உனக்கு இல்லையா?” நான் சாம்குட்டியிடம் சொன்னேன்: "நீங்கள் கொஞ்சம் மறைவா இருக்க வேண்டியதுனால ஜன்னல்களையும் வாசல் கதவையும் அடைக்கிறதுதான் நல்லது.” சாம்குட்டி ஆகாயத்தைப் பார்த்தவாறு சொன்னான்: "எங்களை தெய்வம் காப்பாற்றும், ஜாய் அண்ணா,” நான் எனக்குள் சொன்னேன்: "உன்னோட அப்பாவையும் அண்ணன்களையும் குளப்புரம் ரவுடிகளையும் அதே தெய்வம்தான் காப்பாற்றுது.”படுப்பதற்கு முன்பு நான் அப்பாவின் துப்பாக்கியைப் பரணியில் இருந்து எடுத்துக்கொண்டு வந்து கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த பீடத்தின்மேல் சாய்த்து வைத்தேன். ஆன்ஸி அதை ஒரு நோட்டமிட்டுவிட்டு என்னைப் பார்த்தாள். "அடியே, காதலன்- காதலியைப் பத்திரமாகப் பாதுகாக்கணும்ல. நீ என்னை இறுக்கி அணைச்சுக் கிட்டயின்னா, நான் இன்னும் கொஞ்சம் வீரத்தோட இருப்பேன்?” நான் ஆன்ஸியிடம் நெருக்கமாகப் படுத்துக்கொண்டு கூறினேன். "எனக்கு இப்போ உறக்கம் வருது” அவள் சொன்னாள். நான் சொன்னேன்: "அடியே அவுங்க இப்போ என்ன செய்வாங்க? கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாரு. உங்களைப் போல அவுங்க என்ன பைத்தியமா என்ன? அவுங்க அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாய் திரும்பிப் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக்கிட்டு இருப்பாங்க.” என்று சொன்ன ஆன்ஸி எனக்கு முதுகைக் காட்டியவாறு திரும்பிப்படுத்தாள். "ஜாய்... நீங்க உறங்குங்க...” அவள் சொன்னாள். நானே உறங்காமல் இருட்டில் கண்களைத் திறந்தவாறு கிடந்தேன். என் மனதில் பல நூறு எண்ணச் சிதறல்கள் கடந்து போயின. அந்தப் பெண் என்ன அழகு! திரண்டு வந்த வெண்ணெய்ப்போல உடலை உடைய ஒரு அழகுப் பெண்! என் தெய்வமே! எங்கோ இருந்து வந்த ஒரு காதல் ஜோடி இதோ என் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இந்த வீட்டை விட்டுப் போனாலும் அவர்களின் காதலின் அடையாளமாக இங்கு ஏதாவது எஞ்சி இருக்கத்தான் செய்யும். அன்பைத் தேடும் உள்ளங்கள். இப்படியும் மனிதப்பிறவிகள் இருக்கின்றனவா? சிறிது நேரம் சென்ற பிறகு, என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மெதுவாக எழுந்து சென்று அவர்கள் படுத்திருந்த அறைக்கு வெளியே போய் ஒரு தூணின் மறைவில் நின்றவாறு நான் நோக்கினேன். ஆன்ஸி கூறியது சரிதான். அவர்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்துக்கொண்டு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாய் கட்டில்மேல் திரும்பிப் படுத்துக் கிடந்தார்கள். நல்ல உறக்கம். நான் திரும்பி வந்து ஆன்ஸியைச் சிறிது நேரம் பார்த்தவாறு நின்றேன். அடுத்த நிமிடம் எதோ நடக்கப்போவதை எதிர்பார்த்தவாறு போர்வையை மூடிபடுத்தேன்.


5

ரு மோட்டார் சைக்கிளின் ஒலி கேட்டு உறக்கத்தில் இருந்து நான் எழுந்தேன். லேசான நடுக்கத்துடன் எழுந்த நான் தூங்கி விழித்திருந்த ஆன்ஸியிடம் கூறினேன்: "ஆன்ஸி... பிள்ளைங்ககூட போய்ப் படு. நான் போய் யார்னு பாக்குறேன்.”

"வாசலுக்குப் போக வேண்டாம் ஜாய்.” ஆன்ஸி சொன்னாள். நான் துப்பாக்கியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு ஜன்னலுக்குப் பின்னால் மறைந்து நின்று பார்த்தவாறு கேட்டேன்: "யார் அது?” "நான்தான் ஜாய் அண்ணா, ஜோஸ். சண்ணியோட தம்பி. "மோட்டார் சைக்கிளில் வந்த ஆள் சொன்னான்.

 "நீயா...? என்ன ஜோஸ் இந்த நேரத்தில?” என்று கேட்டவாறு கையில் இருந்த துப்பாக்கியை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு நான் வராந்தாவிற்கு வந்தேன். ஜோஸ் சொன்னான்: "அண்ணன் சொல்லி விட்டாரு. வக்கனும் அவனோட "ஆளுகளும் இந்தப் பக்கம் வந்திருக்கிற மாதிரி ஒரு சந்தேகம் இருக்காம். ஜாய் அண்ணா, நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்னு அண்ணன் சொல்லச் சொன்னாரு. டில்லியில் இருந்து வந்த ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்கச் சொல்லச் சொன்னாரு. என்னை இங்கே அனுப்பிட்டு அண்ணன் சர்க்கிளோட வீட்டுக்குப் போயிருக்காரு. என்னை இங்கேயே அண்ணன் இருக்கச் சொன்னாரு”. நான் சொன்னேன்: "சரி... ஜோஸ், நீ முற்றத்தில் நிற்காம இங்கே வா.” அப்போது மணி இரண்டு அடித்தது. நான் ஆன்ஸியைப் பார்க்கலாம் என்று உள்ளே நடந்தபோது காலில் ஒரு நடுக்கம், உடல் முழுக்க ஒரு தளர்ச்சி. முன்பு மாடத்தக்குன்னில் மரம் இழுக்க வந்த யானை மதம் பிடித்து எனக்கு நேராக ஓடி வந்தபோது, எனக்கு இப்படித்தான் நடுக்கம் உண்டானது. "டேய் ஜாய்... நடுங்குற அளவுக்கு இப்போ என்ன நடந்திருச்சு!” எனக்குள் நான் கூறிக் கொண்டேன். அப்போது என் கையில் தந்தையின் துப்பாக்கி இருந்தது. நான் குழந்தைகளை எழுப்பாமல் ஆன்ஸியை மட்டும் எழுப்பி எனக்கு உடம்பின் நடுக்கத்தைச் சொன்னேன். அவள் சொன்னாள்: "இப்படி தைரியமே இல்லாத ஒரு ஆளு இந்த மாதிரியான ஆபத்தான விஷயங்களுக்கு ஏன் பொறுப்பேத்துக்கணும்? குளப்புரம் வக்கன் என்ன இங்க நுழைஞ்சு எல்லாரையும் கொன்னு தின்னுருவானா? இதென்ன மக்களே வசிக்காத இடமா? நாமளும் காலம் காலமா இங்க வாழ்ந்துக் கிட்டு இருக்கிறவங்கதானே?” நான் சொன்னேன்: "நீ சொல்றது சரிதான். ஆனால், தூங்கிக்கிட்டு இருக்கிற அந்த ஜோடிகளைத் தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னா, அதற்குப் பிறகு நமக்கு என்ன மரியாதை இருக்கு? அந்தப் பையனுக்கு அடி, உதை கிடைக்கும், பொண்ணோட நிலைமையோ.... சொல்லவே வேண்டாம். பிறகு சண்ணியோட முகத்தை நாம எப்படி பாக்குறது? அவன்கிட்ட நாம என்ன பதில் சொல்றது? அவனோட எவ்வளவு கால லட்சியம் தெரியுமா இந்த பிராஸிக்யூட்டரா ஆகணும்ன்றது! அதனால், நாம் நிச்சயம் ஏதாவது செய்தே ஆகணும். அவுங்க ரெண்டு பேரையும் இப்போதைக்கு அந்தத் தேங்காய் பரண் மேல இருக்க வைப்போம்”. ஆன்ஸி சொன்னாள். "ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தேங்காய்களை எறக்கிட்டு, பரணைச் சுத்தம் செஞ்சி வச்சிருக்கு. ஆனா, ஏணி பழசா ஆயிருச்சுன்னு, ஆசாரி அதை வெளியல பிரிச்சு போட்டுட்டாரு.” "பரவாயில்ல... ஒரு மேஜைமேல ஸ்டூலைப் போட்டு ஏறினாப் போச்சு...” நான் சொன்னேன்.

ஜோஸ் வராந்தாவில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தான். ஆன்ஸி சொன்னாள்: "நீங்க போயி அவுங்க ரெண்டு பேரையும் எழுப்புங்க. நானும் ஜோஸும் போய் தேங்காய் பரண்ல ஏறுவதற்கு வசதியா மேஜை போட்டு வைக்கிறோம்”. நான் பையனும் பெண்ணும் படுத்திருந்த அறையை நெருங்கி ஜன்னல் வழியாகப் பார்த்தேன். இரண்டு பேரும் கழுத்து வரை போர்வையால் மூடிக் கொண்டு தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெண் "S” போல சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு முறை பெயர் சொல்லி அழைத்தவுடன் சாம்குட்டி எழுந்து வந்தான். நான் சொன்னேன்: "சாம்குட்டி, உங்க அப்பா குளப்புரம் வக்கனை உன்னைத் தூக்கிட்டு வர்றதுக்கு இந்தப் பக்க்ம ஏவி விட்டிருக்காரு. ஒருவேளை அவன் கூட உன்னோட அப்பாவும் அண்ணன்மார்களும்கூட வரலாம். உங்க ரெண்டு பேரையும் பத்திரமா ஒளிச்சு வைக்கணும்னு என்கிட்ட சண்ணி சொல்லி இருக்கான். இங்கு எந்தவித பிரச்சினையும் இல்லாம ஒளிஞ்சிக்கிறதுக்கு சரியான இடம் தேங்காய் பரண்தான். தலைமேல இடிச்சிக்கிடாம பாத்துக்கிடனும். அவ்வளவுதான். கொஞ்ச நேரம்தான். அவுங்க வந்துட்டுப் போயிட்டாங்கன்னா, நீங்களும் இறங்கி இங்கே வந்துடலாம். பாயும் தலையணையும் தர்றோம். நீங்க அங்கேயே படுத்தத் தூங்கலாம்.” "அப்பாவும் அண்ணன் மார்களும் வர்றாங்களா அண்ணா? - சாம்குட்டி கேட்டான். "ஒருவேளை வரலாம்.” நான் சொன்னான். மகனைப் பிடித்து வருவதற்கு ஒரு ரவுடியை மட்டும் ஒரு தந்தை அனுப்பி விடுவாரா என்ன? உடனே சாம்குட்டி மேல் நோக்கி பார்த்தவாறு சொன்னான்: "உலகைக் காக்கும் சொர்க்கத்தில் இருக்கும் என் பிதாவே! இந்தப் பானையோட விஷயத்துல எனக்கொரு வெளிச்சத்தை நீதான் காட்டணும்.” துள்ளித் திரியும் ஒரு ஆட்டுக் குட்டியைப்போல இருக்கும் ஒரு இளம் பெண்ணை அவன் பானை என்று சொன்னதைக் கேட்டதும், அவனை அடிக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு. "ம்... எது எப்படியோ... இந்தப் பானை உனக்குக் கெடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்.” நான் என் மனதிற்குள் கூறினேன். தொடர்ந்து அவனிடம் சொன்னேன்: சீக்கிரம் ஆனியை எழுப்பு. நாம தேங்காய் பரணுக்குப் போவோம்.” அவன் ஆனியைத் தட்டி எழுப்பினான். திடுக்கிட்டு எழுந்த அவள் எங்களையே வெறித்துப் பார்த்தவாறு கட்டிலில் உட்கார்ந்தாள். அவள் குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்த முறை, எனக்கு மூச்சை முட்டச் செய்தது. அவள் அணிந்திருந்தது ப்ளாஸ்டிக் பேப்பர் போல உடலின் பாகங்கள் அனைத்தும் வெளியே தெரியும் அளவுக்கு உள்ள ஒரு சிறு ஆடை. அறையில் அதிகம் வெளிச்சம் இல்லை என்றாலும், என்ன காட்சி அது! என் கையில் இருந்த டார்ச் விளக்கை இப்படியும் அப்படியுமாய் ஆட்டிப் பார்க்கலாமா என்று நினைத்தேன். "டும் டும்” என்று என் நெஞ்ச அடித்துக் கொண்டிருந்ததை எங்கே அவர்கள் கேட்டு விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு. அவன் அவளிடம் விவரத்தைக் கூறிக் கொண்டிருக்கும்போதே அவள் நடந்து போய் விளக்கைப் போட்டாள். நான் அவளையே உற்றுப் பார்த்தேன். அவள் எந்தவித சலனமும் இல்லாமல் சாம்குட்டி கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் சாம்குட்டியைப் பார்த்தேன், அவளைப் பார்த்தேன். சுற்றிலும் பார்த்தேன். என் இரண்டு கைகளும் லேசாக நடுங்கின. "ஆன்ஸி இந்த நேரத்தில் இங்கே வந்துவிடக் கூடாதே” என்று மனதிற்குள் நினைத்தேன். இனிமேலும் நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற எல்லைக்கு வந்தவுடன் நானே போய் விளக்கை அணைத்துவிட்டு சொன்னேன்: "விளக்கு வேண்டாம். தேவையில்லாத பிரச்சினை வரும்”. அவள் கைகளைத் தட்டியவாறு துள்ளி குதித்து அந்தப் ப்ளாஸ்டிக் துணியின் கீழே உள்ளதெல்லாம் குலுங்கிற மாதிரி இங்கிலீஷில் பாட்டுப் பாடியவாறே நடனமாடினாள்.


சாம்குட்டி சொன்னான். "நாம ஏதோ சாகசக் காரியம் செய்யப் போறோம்னு நெனைச்சுக்கிட்டு ஆனி தெய்வத்தை வேண்டிக்கிறா அண்ணா,” "ப்ரெய்ஸ் தி லார்ட்.” நான் உடனே சொன்னேன். சினிமாவில் பார்ப்பது மாதிரியே ஆனந்தமான சம்பவம்தான். சாம்குட்டி சொன்னான்: "இப்படியொரு அனுபவம் தந்ததற்கு தெய்வத்திற்கு நன்றி சொல்றா ஆனி. இப்படி ஒரு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததற்கு அண்ணனுக்கு அவள் நன்றி சொல்றா”. "ப்ரெய்ஸ் தி லார்ட்” நான் சொன்னேன். அவள் ஒரு போர்வையை எடுத்து தன்னைச் சுற்றி வேஷ்டி மாதிரி சுட்டிக் கொண்ட பிறகுதான் நான் இயல்பான நிலைமைக்கே வந்தேன். இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு நான் தேங்காய் பரணை அடைந்தபோது ஆன்ஸியும் ஜோஸும் பாயையும் தலையணையையும் எடுக்கப் போய்க் கொண்டிருந்தார்கள். நான் முதலில் சாம்குட்டியை மேஜைமேல் இருந்த ஸ்டூலில் மிதித்து மேலே ஏறச் செய்தேன். "சாம்குட்டி... ஆனி ஏறுகிறப்போ பிடிச்சுக்கோ.” நான் சொன்னேன். ஆனி போர்வையை மூடியவாறு மேஜைமேல் ஏறி மெதுவாக ஸ்டூலில் ஏறி நின்றாள். ஆனால், அங்கிருந்து அவளால் மேலே பிடித்து ஏற முடியவில்லை. சாம்குட்டி அவளின் கையைப் பிடித்து இழுத்தும், அவளால் மேலே போக முடியவில்லை. சாம்குட்டி கேட்டான்: "அண்ணா, கொஞ்சம் உதவ முடியுமா?” நான் அடுத்த நிமிடம் மேஜைமேல் ஏறி அவளின் இடுப்பை என் இரண்டு கைகளாலும் பிடித்து உயர தூக்கினேன். ஆனால், சாம்குட்டி சரியாகப் பிடிக்கவில்லையோ என்னவோ அவள் என் பக்கமே சாய்ந்து சாய்ந்து வந்தாள். நான் அவளின் பின்பாகத்தைப் பிடித்து உயர்த்தினேன். அவள் பெரிதாகச் சிரித்தவாறு கீழ்நோக்கி நழுவி வர, அவள் சுற்றியிருந்த போர்வை என் தலை மீது வந்து விழுந்தது. என்னால் எதையும் காண முடியவில்லை. "என் கடவுளே... ஆன்ஸி இப்போ வந்திடக் கூடாதே!” என்று மனதிற்குள் வேண்டியவாறு, நான் அவளை இரண்டு கைகளாலும் தூக்கி ஸ்டூல் மேல் ஏறி நின்று, மேலே போட்டேன். என் முகத்தை மூடியிருந்த போர்வையை எடுத்து அவளிடம் கொடுத்தேன். "சாரி அண்ணா...”- அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள்."நோ ப்ராப்ளம்”. நான் சொன்னேன். தொடர்ந்து ஏதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தது போல மூச்சுவிட முடியாமல் நான் மேஜையிலேயே உட்கார்ந்து விட்டேன். என் மூக்கில் அவளின் மணமும் என் நெஞ்சில் அவளின் மார்பும் என் கைகளுக்குள் அவளின் இடுப்பும் இருந்ததை எண்ணி எண்ணி எனக்கு ஒன்றும் பேசக்கூட முடியவில்லை. அப்போது ஆன்ஸியும் ஜோஸும் அங்கு வந்தார்கள். "நானோ ஆன்ஸியோ ஜோஸோ கூப்பிடாமல் நீங்க இறங்கி வரவே கூடாது.” நான் மேலே பார்த்தவாறு சொன்னேன். "சரி அண்ணா.” ஆனிதான் பதில் சொன்னாள். தொடர்ந்து அவளின் வழக்கமான சிரிப்பு. "சிரி பெண்ணே சிரி. இது நீ சிரிக்கக் கூடிய காலம்.” நான் மனதிற்குள் கூறினேன்.

"ஒரு பாய் இங்கே கொடுங்கக்கா. நான் இந்த வராந்தாவிலேயே படுத்துக்கிறேன்.” ஜோஸ் சொன்னான். ஆன்ஸி பாயை எடுப்பதற்காக உள்ளேபோன நேரத்தில், ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு ஜீப்புகள் கேட்டைக் கடந்து வந்தன. விளக்குகள் எரியவில்லை. "ஜோஸ்... யார்னுபாரு.” நான் சொன்னேன். முற்றத்தில் இருந்த விளக்கைப் போட்ட கையோடு நானும் ஜோஸும் வாசலுக்கு வந்தோம்.   "அவங்கதான்.” ஜோஸ் மெல்லிய குரலில் சொன்னான். துப்பாக்கி பக்கத்தில் இருப்பது என் ஞாபகத்தில் வந்தது. முன்னால் இருந்த ஜீப்பில் இருந்து மெலிந்துபோன தேகத்தைக் கொண்ட- நரம்பு புடைத்து வெளியே தெரிகிற தோற்றத்தைக் கொண்ட- ஒரு தலையில் துண்டு கட்டிய ஒரு மனிதன் முதலில் இறங்கினான். கழுத்தில் தங்கச்சங்கிலி டாலடித்தது. பெரிய அடர்த்தியில்லாத ஒரு முறுக்கு மீசை. வேஷ்டியை மடித்துக் கட்டி இருந்தான். லேசாக அவன் உடல் ஆடியது. நிச்சயம் அவன்தான் குளப்புரம் வக்கன் என்ற கேடியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு நான் வந்தேன். ஜுபிலிபெருநாள் நேரத்தில் ஒரு முறை நான் அவனைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குப் பின்னால் மூன்று நான்கு கைலி, பனியன் அணிந்த ஆட்கள் இறங்கினார்கள். பின்னால் நின்றிருந்த ஜீப்பில் இருந்து வெளுத்து தடித்த ஒரு வழுக்கைத் தலை பெரியவரும், இரண்டு மூன்று இளைஞர்களும் இறங்கினார்கள். பெரியவர் ஒரு தோளில்  கிடந்த துண்டை எடுத்து கழுத்தைச் சுற்றி போட்டார். இளைஞர்களின் முகத்தைப் பார்த்தபோது சாம்குட்டியின் அண்ணன்மார்கள் என்று அங்கு எழுதி ஒட்டியிருந்தது. நாங்கள் அவர்களைப் பார்த்தோம். அவர்கள் எங்களைப் பார்த்தார்கள். எனக்குப் பின்னால் ஆன்ஸி வாசலுக்கு வரும் காலடிச் சத்தம் கேட்டது. இவள் இப்போது எதற்கு இங்கு வருகிறாள் என்று நான் நினைத்தேன். இவள் பேசாமல் உள்ளே இருக்க வேண்டியதுதானே! வக்கன் ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்து புகை விட்டான். பிறகு பின் பக்கமாய் திரும்பி பெரியவரைப் பார்த்தான். பெரியவர் உடனே முன்னால் வேகமாக வந்தார். பிறகு கேட்டார்: "இது முல்லத்தாழத்தெ வீடுதானே?” "ஆமா... “ -நான் சொன்னேன். "உங்க பேர் ஜாய்தானே?” அவர் கேட்டார். "ஆமா...” நான் சொன்னேன். "என்ன விஷயம் இந்த ராத்திரி நேரத்துல?”- என் பயத்தை நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. "என்னோட இளைய மகன் சாம்குட்டியைக் கடத்திட்டு வந்து இங்க ஒளிச்சு வச்சிருக்கறதா எனக்குத் தெரியவந்தது. அவனைக் கூப்பிட்டுட்டுப் போகுறதுக்காக நான் வந்தேன்.” - பெரியவர் சொன்னார். "நீங்க சொல்றதைக் கேக்குறப்போ எனக்கே ஆச்சரியமா இருக்கு. உங்க பையனை நான் ஏன் கடத்திட்டு வரணும்? நீங்க யார்னே எனக்குத் தெரியாது. ஆமா... நீங்க யாரு?” நான் கேட்டேன். "நான் கரிமண்ணூர் கடுவாக்குன்னேல் குஞ்ஞுகுட்டி. இவங்க என்னோட மகன்கள்.” சாம்குட்டியின் தந்தை கூறினார். "இவங்கெல்லாம் யாரு?” நான் வக்கனையும், அவனுடன் நின்றிருந்தவர்களையும் காட்டி கேட்டேன். "என்னோட நண்பர்கள்” பெரியவர் சொன்னார்: "இவர் யார்னு தெரியலியே!” வக்கன் பீடியை நீட்டி ஜோஸைக் காட்டி கேட்டான். "என் தம்பி” - நான் சொன்னேன். ஆன்ஸி முற்றத்திற்கு வந்து எனக்குப் பக்கத்தில் நிற்பதை கடைக்கண்ணால் நான் கவனித்தேன். நான் ஒன்றும் பேசவில்லை. என் கவனம் முழுவதும் தேங்காய் பரண்மேல் இருந்தது. தந்தையின் குரலைக் கேட்டு சாம்குட்டி மன்னிப்பு கேட்டுக் கொண்டு இறங்கி வந்துவிட்டால்...? என் கதை அதோடு முடிந்தது.


குளப்புரம் வக்கனைவிட நான் பயந்தது பரண் மேல் இருக்கும் சாம்குட்டியை நினைத்துத்தான். "நடுராத்திரியில பெண்களும் குழந்தைகளும் உறங்கிக்கிட்டு இருக்கிற ஒரு வீட்ல வந்து உங்க பையனை நாங்க கடத்திட்டு வந்திருக்கோம்னு சொல்ற தைரியம் உங்களுக்கு எப்படி வரலாம்? - ஆன்ஸி கேட்டாள். நான் ஆன்ஸியைப் பார்த்தேன். அவள் கிழவனின் முகத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கிழவர் சொன்னார்: "நீங்க கடத்திட்டு வந்திருக்கீங்கன்னு நான் சொல்லல. என் மகனும் ஒரு பொண்ணும் டில்லியில் காணாமல் போயிட்டாங்க. அவுங்க ரெண்டு பேரும் இங்கே ஒளிஞ்சிருக்கிறதா எங்களுக்குத் தகவல். அதைத்தான் நாங்க சொல்றோம்”. "எங்க பையனை சீக்கிரம் இங்க விட்டிங்கன்னா, பொதுவாக எல்லாருக்கும் நல்லது.” வக்கன் இன்னொரு பீடியை இப்படியும் அப்படியும் ஆட்டி அணைத்தவாறு சொன்னான். தொடர்ந்து அந்தக் குச்சியை ஒரு விரலால் வீட்டை நோக்கி எறிந்தான். அடுத்த நிமிடம் ஆன்ஸி வேகமாக பெரியவருக்குப் பக்கத்தில் போய் நின்றாள். அவர் ஆன்ஸியையே பார்த்தவாறு நின்றிருந்தார். ஆன்ஸி வலது கையின் சுண்டு விரலை அவரின் முகத்தை உரசுவது மாதிரி வைத்துக் கொண்டு அவரிடம் சொன்னாள்: "அண்ணா, உங்களுக்கு தைரியம் இருந்தா எங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சு பாருங்க. உங்க மகன் மட்டும் இங்கே இல்லைன்னு வச்சுக்கோங்க, இந்த சம்பவத்தை நீங்க வாழ்க்கையில் ஒருநாள்கூட மறக்க மாட்டீங்க. இல்லைன்னா என்னோட அப்பன் பேரு சுள்ளிக்காமற்றத்தில் சாண்டிக்குஞ்ஞு இல்ல...” அவ்வளவுதான். கிழவரின் முகத்தில் கலவரம் படர்ந்தது. ஆன்ஸியின் தந்தையின் தம்பியின் மகன்தான் கலெக்டர் ஜான் சுள்ளிக்காமற்றம். ஐம்பது ஏக்கர் ரப்பர் தோட்டம் அவனுக்கு வரதட்சணையாகக் கொடுத்தார்கள். அதன் இப்போதைய மதிப்பு ஒன்றறை கோடி ரூபாய். கிழவரின் முகம் வெளிறிப் போனது. அவர் சொன்னார்: "எங்களுக்கு நியாயமான சந்தேகம் இருந்ததால், நாங்க...” ஆன்ஸி பின்னால் திரும்பி படியில் நின்றபடி அவர்களைக் கைகாட்டி அழைத்தவாறு சொன்னாள். "உங்க சந்தேகத்தைப் போக்கிடுங்க அண்ணா. வாங்க... தூங்கிக்கிட்டு இருக்குற குழந்தைகளை எழுப்பிடாதீங்க.” வக்கன் மீசையை வருடியபடி பெரியவரையும் அவரின் மகன்களையும் திரும்பிப் பார்த்தான். பையன்கள் பெரியவரிடம் என்னவோ முணுமுணுத்தார்கள். பெரியவர் ஜீப்பில் ஏறினார். அந்த ஜீப் நகர்ந்தது. வக்கன் என்னையும் ஜோஸையும் கூர்மையாகப் பார்த்தவாறு ஜீப்பில் ஏறினான். அந்த ஜீப்பும் நகர்ந்தது. அவன் புகைத்து விட்டு எறிந்த பீடித் துண்டு முற்றத்தில் இன்னமும் கனன்று கொண்டிருந்தது. நான் போய் அதைக் காலால் மிதித்து அணைத்தேன். ஆன்ஸி ஒரு புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு படிமேல் கால் நீட்டியவாறு திண்ணையில் அமர்ந்தாள். நானும் ஜோஸும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அவள் சொன்னாள்: "ஜாய், ஒண்ணுக்கும் உதவாத அந்தத் துப்பாக்கியைவிட என்னோட நாக்கு எவ்வளவு நல்லது..  அவள் சொன்னதைக் கேட்டு ஜோஸ் உரக்க சிரித்தான். நான் ஒன்றும் பதில் பேசவில்லை. "காதலர்களோட நிலை என்னன்னு பார்ப்போம்.” நான் சொன்னேன்: "தேங்காய் பரணுக்குப் பக்கத்தில் போய் நான் கூப்பிட்டேன்: "சாம்குட்டி...” திணறுகிற ஒலி கேட்டது. நான் மேஜையை இழுத்துப் போட்டு அதன்மேல் ஏறி நின்று டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தேன். "நான்தான்... ஜாய்...” நான் சொன்னேன்: "அப்பாவும் ஆளுக்களும் போய்ட்டாங்க. பயப்படாதே.” சாம்குட்டி பாயில் அமர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஆனி. அவள் என்னிடம் சொன்னாள்: "சாம்குட்டியோட அப்பா வந்தப்போ நான் சாம்குட்டியோட வாயை என் கையால பொத்திக்கிட்டேன்”. "தாங்க்யூ” நான் சொன்னேன். "நோ மென்ஷன் அண்ணா.” அவள் சொன்னாள். நான் டார்ச் விளக்கை அணைத்துவிட்டு கீழே இறங்கினேன்.

அதற்குப் பிறகு நாங்கள் உறங்கவில்லை. ஆன்ஸி பால் கலக்காத காபி தயாராக்கிக் கொண்டு வந்தாள். மணி நான்கு இருக்கும் கோழி கூவவில்லை. அப்போது சண்ணியின் மாருதி மெதுவாக முற்றத்தில் வந்து நின்றது. அவன் என்ஜினை ஆஃப் பண்ணவில்லை. "அவுங்கள எங்கே?” அவன் கேட்டான். "தேங்காய் பரண்ல இருக்காங்க.” நான் சொன்னேன். "கூப்பிட்டு வரட்டா?” நான் கேட்டேன். "சீக்கிரமா சீக்கிரமா” அவன் சொன்னான்: "விடியறதுக்கு முன்னாடியே வாக மண்ணுக்குப் போகணும்: "அதென்னடா வாகமண்ணு? போட்டேலுக்கில்ல போகவேண்டியது!” நான் கேட்டேன். "போட்டேலுக்குப் போனால் தேவையில்லாத பிரச்சினை வரும். வாகமண்ணில் தியானம் நடக்குது. நான் அங்கே உள்ள ஃபாதர்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டேன். தியானக் கூட்டத்துக்கு மத்தியிலேயே எல்லாத்தையும் நடத்தி முடிச்சிடலாம்.” அவன் சொன்னான். நான் மகிழ்ச்சி அலைமோத தேங்காய் பரணை நோக்கி நடந்தேன். மேஜைமேல் ஏறி நின்று நான் சொன்னேன்: "உங்கள அழைச்சிட்டுப் போக சண்ணி வந்திருக்கான். எறங்கி வாங்க”. முதலில் இறங்கி வந்தது ஆனிதான். அவள் விரிந்த என் இரண்டு கைகளுக்கு மத்தியில் ஒரு தேவதையைப்போல் இறங்கி வந்தாள். நான் அவளை மேஜைமேல் நிற்க வைத்து, கீழே இறங்கி, மேஜையிலிருந்து தூக்கி இறகினேன். அவள் போர்வையை எடுத்து வேஷ்டி மாதிரி கட்டிக் கொண்டாள். நான் கை நீட்டிய போது, சாம்குட்டி தானே இறங்கி விட்டிருந்தான். அதற்குப் பிறகு நேரத்தைக் கடத்தவில்லை. அந்தக் கறுத்த பாவாடையும் கறுப்பும் வெண்மையும் கலந்த சிறிய ஷர்ட்டும் அணிந்து ஆனியும், நீளமான கையுள்ள வெள்ளை ஷர்ட்டும் வெள்ளை பேண்டும் அணிந்து சாம்குட்டியும் சண்ணியின் காரில் ஏறி அமர்ந்தார்கள். கார் வேகமாகப் புறப்பட்டது. ஆன்ஸி அவர்கள் போவதையே பார்த்தவாறு நாடியில் கை வைத்து சொன்னாள். "பாவங்க... காதலுக்காக இவங்க எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கு!”

6

நான் இப்படி வராந்தாவில் வெறுமனே உட்கார்ந்திருக்கிறேன். சில நேரங்களில் அடுக்களையில் இருந்தவாறு ஆன்ஸி ஏதாவது கேட்பாள். முற்றத்தில் இருக்கின்ற களத்தில் மரவள்ளிக்கிழங்கும் நெல்லும் ஜாதிக்காயும் காய்ந்து கொண்டிருக்கின்றன. இங்கிருந்து பார்த்தால் மிளகும் ரப்பரும் தென்னையும் கொக்கோவும் யாரும் ஒன்றும் சொல்லாமலே மகிழ்ச்சியாக வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். சண்ணி அந்த இளம் காதலர்களைப் பற்றிய செய்தியுடன் திடீரென்று வந்து நின்றான். இரண்டு நாட்கள் தியானம் செய்த பிறகும், பெண்ணிற்கு தெய்வத்தின் கட்டளை கிடைக்கவில்லை. அவள் சாம்குட்டியை திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்த அழைத்திருக்கிறாள். ஆனால், சாம்குட்டி அவளை ஒரு வாடகைக் காரில் ஏற்றி கொச்சிக்குக் கொண்டுபோய், டெல்லிக்குப் போகிற விமானத்தில் அவளை ஏற்றி அனுப்பி விட்டான்.

வாகமண்ணில் இருந்து கொச்சி வரையும், கொச்சியில் இருந்து கரிமண்ணூர் வரையும் அவன் அழுதுகொண்டே வந்ததாக சண்ணி சொன்னான். வீட்டை அடைந்ததும், வாய்விட்டு அழுதவாறு சிலுவைமுன் முழங்காலிட்டு அமர்ந்திருக்கிறான் சாம்குட்டி. அவன் அழுவதைப் பார்த்து, அவனின் தந்தையும் அண்ணன்மார்களும் அழுதிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் வாகமண்ணில் அவர்களுடன் சேர்ந்து சண்ணியும் தியானத்தில் இருந்திருக்கிறான். அதனால், இப்போது அவன் மேலும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவனின் பிராஸிக்யூட்டர் வேலைக்கான பேப்பர் திருவனந்தபுரத்தில் கிடக்கிறது. ப்ரெய்ஸ் தி லார்ட்.

இன்று ஆன்ஸி சொன்னாள்: "நம்ம மேரிம்மாவோட மகள்  ஜானீஸுக்கு சாம்குட்டியப் பார்த்தா என்ன?” அந்த இருபத்தேழு ஏக்கரை நினைத்துப் பார்த்து நானும் சொன்னேன்: "நீ சொல்றது சரிதான் ப்ரெய்ஸ் தி லார்ட்”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.