Logo

மரக்குதிரையின் வெற்றி வீரன்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6600
marakkudhiraiyin vetri veeran

சுராவின் முன்னுரை

த்திய இங்கிலாந்தில் ஈஸ்ட்வுட் என்ற சுரங்கங்கள் நிறைந்த ஒரு நகரத்தில் பிறந்த டி.எச்.லாரன்ஸ் (D.H.Lawrence), ‘Sons and lovers’, ‘The white peacock’, ‘Rainbow’. ‘The Lost Girl’ ஆகிய நாவல்களை எழுதியவர். அவர் எழுதிய ‘Lady chatterly’s Lover’ என்ற நாவல் 1928-ஆம் ஆண்டில் மிகவும் ரகசியமாகப் பிரசுரிக்கப்பட்டது.

போரில் காயமடைந்து ஆண்மை சக்தியை இழந்த ஒரு மிகப் பெரிய பணக்கார போர்வீரரின் மனைவி, தன் கணவரின் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு இளைஞனிடம் மனதைப் பறி கொடுக்கிறாள். உண்மை தெரிந்தும், அவளுக்கு அவர் விவாகரத்து அளிக்க தயாராக இல்லை. இந்த நாவல் அமெரிக்காவில் அப்போது தடை செய்யப்பட்டது.

டி.எச்.லாரன்ஸ் எழுதிய ‘The Rocking – Horse Winner’ என்ற புதினத்தை ‘மரக் குதிரையின் வெற்றி வீரன்’ (Marakkuthiraiyin vetri veeran) என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். கதையின் நாயகனான சிறுவன் பால் அருமையான பாத்திரப் படைப்பு. மிகவும் வித்தியாசமான கருவைக் கொண்ட இந்தக் கதை எல்லாருக்கும் பிடிக்கும்.

நாவலாசிரியரான டி.எச். லாரன்ஸ் ஒரு மிகச் சிறந்த ஓவியரும்கூட. பல துணிச்சலான இலக்கியப் படைப்புகளை உலகிற்கு அளித்த அவர் 1930-ஆம் ஆண்டு ஃப்ரான்ஸில் மரணத்தைத் தழுவினார்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


ழகான ஒரு பெண் இருந்தாள். எல்லா பின்புலங்களும் அவளுக்கு இருந்தாலும், அவள் அதிர்ஷ்டமில்லாதவளாக இருந்தாள். அவள் அன்பிற்காக ஏங்கி திருமணம் செய்து கொண்டிருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு அவள் மனதில் கற்பனை செய்து வைத்திருந்த எல்லா விஷயங்களும் தவிடுபொடியாகி விட்டன.

அவளுடைய குழந்தைகள் அழகும் நல்ல உடல் நலமும் நிறைந்தவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களை அவள் ஒரு சுமையாக எண்ணினாள். அவளால் அவர்கள் மீது அன்பு செலுத்த முடியவில்லை. அந்த குழந்தைகள் அவளை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தன. அவளிடம் அவர்கள் குற்றங்கள் கண்டு பிடிப்பதைப்போல, தனக்குள் இருக்கும் ஏதோ குற்றத்தைத் தேடி அதை மறைத்து வைப்பதற்கு அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஆனால், அது என்னவென்று அவளே கண்டு பிடிக்கவில்லை. எந்தச் சமயத்திலும் அவளுக்கு அது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும்- அவள் தன்னுடைய குழந்தைகளுக்கு முன்னால் கடுமையான இதயத்தைக் கொண்டவளாக இருந்தாள். அது அவளை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டாள். அதைப் பார்க்கும்போது, அவள் அவர்கள்மீது நிறைய பாசம் வைத்திருந்தாள் என்பதைப்போல தோன்றும். தன்னுடைய இதயத்தின் அடித்தளத்தில் ஒரு இடத்தில் அன்பு என்ற ஒன்று எந்தச் சமயத்திலும் தொடவே செய்திராத ஒரு இடம் இருக்கிறது என்ற விஷயம் அவளுக்கு மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு ஒரு இனிய உணர்வு அவளுக்கு யார்மீதும் தோன்றியதில்லை. எல்லாரும் சொன்னார்கள்: "அவள் அந்த குழந்தைகள்மீது மனப்பூர்வமாக அன்பு வைத்திருக்கிறாள். அவள் உண்மையிலேயே மிகச் சிறந்த தாய்”. உண்மை அதுவல்ல என்ற விஷயம் அவளுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே தெரியும். அந்த அன்னையும் குழந்தைகளும் ஒருவரையொருவர் கண்களால் பார்த்தவாறு, அந்த உண்மையை வாசித்துக் கொள்வார்கள்.

ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளும். அவர்கள் நல்ல வசதிகளைக் கொண்ட ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு பூந்தோட்டம் இருந்தது. அவர்களுக்கு நல்ல வேலைக்காரர்களும் இருந்தார்கள். தாங்கள் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு இருந்தது.

அவள் நாகரீகமாகவும் அலங்காரங்களின்மீது மோகம் கொண்டவளாகவும் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அந்த வீட்டில் எப்போதும் ஒரு கவலை நிறைந்த சூழ்நிலை நிறைந்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் தேவையான அளவிற்கு பணம் எந்தச் சமயத்திலும் இருந்தது இல்லை. தாய்க்கும் தந்தைக்கும் சிறிய வருமானம் வந்து கொண்டிருந்தாலும், அது அவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்த சமூக அந்தஸ்தைத் தொடரும் அளவிற்கு உதவவில்லை.

தந்தைக்கு நகரத்தில் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை. அவருக்கு பெரிய திட்டங்கள் இருந்தாலும், அவற்றை எந்தச் சமயத்திலும் நடைமுறையில் வெற்றி பெறச் செய்ய அவரால் முடியவில்லை. அவர்கள் ஆடம்பரமாகவே வாழ்ந்தார்கள்- வருமானம் தேவையான அளவிற்கு வரவில்லையென்றாலும்...

இறுதியில் தாய் கூறினாள்: "நான் கொஞ்சம் முயற்சிக்கட்டுமா?” ஆனால், எங்கே ஆரம்பிப்பது என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவள் மூளையைப் போட்டு குழப்பிக் கொண்டாள். பலவற்றையும் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் போட்டாள். ஆனால், எதுவுமே வெற்றி பெறவில்லை. தோல்விகள் அவளுடைய முகத்தில் சுருக்கங்களை உண்டாக்கின. வளர்ந்து கொண்டிருந்த குழந்தைகளுக்கு பள்ளியில் படிப்பதற்கு மேலும் பணம் தேவைப்படும். தன்னுடைய சொந்த சந்தோஷங்களுக்காக பணத்தை செலவழித்துக் கொண்டிருந்த அழகான தோற்றத்தைக் கொண்ட அந்த தந்தையாலும் குறிப்பிட்டுக் கூறும் வகையில் எதையும் செய்ய முடியவில்லை. தாய் மிகவும் தன்னம்பிக்கை குணம் கொண்டவளாக இருந்தாள். அத்துடன் ஒரு ஊதாரித்தனம் நிறைந்தவளாகவும்...

"கொஞ்சம் பணம் வேண்டுமே! கொஞ்சம் பணம்...” என்ற குரல் அந்த வீட்டில் பெரும்பாலான நேரங்களில் கேட்க ஆரம்பித்தது. யாரும் அப்படி உரத்த குரலில் கூறவில்லையென்றாலும், குழந்தைகள் அப்படி ஒரு குரல் ஒலிப்பதைக் கேட்டார்கள். அந்தக் குழந்தைகள் கிறிஸ்துமஸ் நேரத்தில் அந்த குரல் உரத்து ஒலிப்பதைக் கேட்டார்கள். அழகானவையாகவும் விலை அதிகம் கொண்டவையுமான பொம்மைகள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்தபோது அது நடந்தது. பிரகாசித்துக் கொண்டிருந்த ஆடும் மரக்குதிரைக்குப் பின்னாலும் சிறிய பொம்மைக் கூண்டிற்குப் பின்னாலும் அந்தக் குரல் ஒலித்தது- ஒரு முணுமுணுப்பைப்போல... "கொஞ்சம் பணம் இருந்தால்...! கொஞ்சம் பணம் வேண்டுமே!” அந்த குழந்தைகள் விளையாட்டுகளிலிருந்து ஒரு நிமிடம் விலகி நின்று அந்த மந்திரச் சொற்களைக் கேட்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கண்களால் பார்த்துக் கொண்டு, அந்த மந்திரச் சொற்களைக் கேட்டுக் கொண்டதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

"அதிகமாக பணம் வேண்டும். கொஞ்சம் பணம் இருந்தால்...!”

அப்போதும் ஆடிக் கொண்டிருந்த அந்த மரக் குதிரையின் ஸ்பிரிங்குகளில் இருந்துதான் அந்த மந்திரச் சொற்கள் புறப்பட்டு வந்திருக்க வேண்டும். அந்த மரக்குதிரை அந்த மந்திரச் சொற்களை எழச் செய்தது. அங்கு குறும்புத்தனமான புன்னகையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒரு புதிய, பெரிய பொம்மை இருந்தது. அது மேலும் தைரியத்துடன் அந்த மந்திரச் சொற்களைக் கேட்டு சிரிப்பதைப்போல தோன்றியது.

ஆனால், யாரும் அதைப் பற்றி உரத்த குரலில் பேசவில்லை. அந்த மந்திரச் சொற்கள் அங்கே கேட்டுக் கொண்டிருந்தன. அதனால்தான் யாரும் சத்தம் போட்டு அதைப் பற்றிப் பேசவில்லை. "நாங்கள் சுவாசிக்கிறோம்” என்று யாரும் கூறுவது இல்லையே! ஒவ்வொரு நிமிடமும் சுவாசம் என்ற விஷயம் நடந்து கொண்டிருந்தாலும்...

“அம்மா...” பால் என்ற ஆண் குழந்தை சொன்னான்: “நமக்கு ஏன் சொந்தமாக ஒரு கார் இல்லை? ஏன் எப்போதும் மாமாவின் காரையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்? இல்லாவிட்டால் ஒரு வாடகைக் காரை...”

“காரணம் இருக்கிறது. நாம் அந்த அளவிற்கு பெரிய பணக்காரர்கள் அல்ல...” தாய் சொன்னாள்.

“அது ஏன்?” அவன் கேட்டான்.

“உன் தந்தைக்கு அதிர்ஷ்டமில்லை... அவ்வளவுதான்... அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.” கசப்பை உணர்ந்து கொண்டே அன்னை சொன்னாள்.

அந்த சிறுவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“அதிர்ஷ்டம் என்றால் பணமா, அம்மா?”

அவன் கேட்டான்.

“இல்லை பால்..., அது அல்ல. அதிர்ஷ்டம்தான் பணத்தைக் கொண்டு வருகிறது என்பதே உண்மை.”

“அப்படியா?” பால் தெளிவில்லாத குரலில் சொன்னான்: “ஆஸ்கார் மாமா கேவலமான பணமென்று சொன்ன போது, அவர் பணத்தைப் பற்றித்தான் கூறுகிறார் என்று நான் நினைத்தேன்.”

“ஆமாம்... ஆனால், கேவலமானது என்று அதிர்ஷ்டத்தைப் பற்றி கூறவில்லை!”


“சரிதான்... அப்படியென்றால், அதிர்ஷ்டம் என்றால் என்ன?”

“உனக்கு பணத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதற்குப் பெயர்தான் அதிர்ஷ்டம். நீ அதிர்ஷ்டமும் உள்ளவனாக இருந்தால், உனக்கு பணம் வந்துசேரும். அதனால்தான்- பணக்காரனாக அல்ல, அதிர்ஷ்டசாலியாகப் பிறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பணக்காரன் தரித்திரவாதியாக மாறலாம். ஆனால், அதிர்ஷ்டசாலியின் செல்வம் அதிகரிக்கவே செய்யும்.”

“அப்படியென்றால்... அப்பா அதிர்ஷ்டசாலி அல்ல...  அப்படித்தானே?”

“சிறிதும் அதிர்ஷ்டமே இல்லாத மனிதர் என்றுதான் நான் கூறுவேன்.” அவள் கசப்புணர்வுடன் கூறினாள். நம்பவே முடியாமல் அந்தக் குழந்தை தன் தாயையே கூர்ந்து பார்த்தான்.

“ஏன் அப்படி?” அவன் கேட்டான்.

“ஒரு மனிதன் அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கும், இன்னொரு மனிதன் அதிர்ஷ்டமே இல்லாமல் இருப்பதற்குமான ரகசியம் யாருக்குமே தெரியாது குழந்தை...”

“யாருக்குமே தெரியாதா?”

“ஒருவேளை கடவுளுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவர் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.”

“அவர் அதைக் கூறியே ஆகவேண்டும். அம்மா, நீங்கள் அதிர்ஷ்டசாலிதானே?”

“என் கணவர் அதிர்ஷ்டசாலி அல்ல என்றால், நான் எப்படி அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியும்?”

“அம்மா, நீங்கள் அதிர்ஷ்டசாலி அல்ல என்று கூறிகிறீர்களா?”

“திருமணத்திற்கு முன்பு அப்படியில்லாமல் இருந்தேன் குழந்தை. ஆனால், நான் அதிர்ஷ்டசாலி அல்ல என்று இப்போது நினைக்கிறேன்.”

“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?”

“சரி... அதெல்லாம் இருக்கட்டும்.... நான் அதிர்ஷ்டசாலி அல்ல... அவ்வளவுதான்...” தாய் சொன்னாள்.

சிறுவன் அவளையே வெறித்துப் பார்த்தான்- தன் தாய் அர்த்தத்துடன் கூறியது அதைத்தானே என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப்போல. வாயைச் சுற்றிலும் இருந்த சுருக்கங்களைப் பார்த்து, தன் தாய் தன்னிடமிருந்து எதையோ  மறைத்து வைக்கிறாள் என்பதாக அவன் நினைத்தான்.

“எது எப்படி இருந்தாலும்- நான் அதிர்ஷ்டசாலிதான்.” அவன் உறுதியான குரலில் சொன்னான்.

“அது எப்படி?” திடீரென்று குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே தாய் கேட்டாள்.

அவன் தன் அன்னையையே வெறித்துப் பார்த்தான். தான் ஏன் அப்படிச் சொன்னோம் என்று அவனுக்கே தெரியவில்லை.

“தெய்வம் என்னிடம் அவ்வாறு கூறினார்...” அவன் தன்னுடைய உயர்வைக் காட்டுகிற விதத்தில் உறுதியான குரலில் கூறினான்.

“அவர் அப்படிக் கூறியிருப்பார் மகனே.” அவள் அப்போதும் சிரித்தாள். ஆனால், அந்த சிரிப்பில் கசப்பு நிறைந்திருந்தது.

“அவர் உண்மையாகவே கூறினார் அம்மா.”

“நல்லது...” தாய் சொன்னாள். அவளுடைய கணவர் ஆச்சரியப்படும் வகையில் எப்போதும் பயன்படுத்தும் ஒரு வார்த்தை "நல்லது” என்பது.

தன்னை தன் தாய் நம்பவில்லை என்ற விஷயம் அந்தச் சிறுவனுக்குப் புரிந்தது. அவனுடைய ஆழமான நம்பிக்கையை அவனுடைய தாய் பொருட்படுத்தியதே இல்லை. இந்த விஷயம் அவனுக்குள் எங்கோ கோபத்தை உண்டாக்கியது. தன் தாயின் கவனத்தை அந்த விஷயத்தை நோக்கி பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற உறுதியான முடிவுடன் அவன் இருந்தான்.

"அதிர்ஷ்ட”த்தை நோக்கிச் செல்லக் கூடிய வழி எது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவன் அங்கிருந்து குழந்தைகளுக்கே உரிய தெளிவற்ற சிந்தனையுடன் நகர்ந்து சென்றான். அவன் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்தான். யாரைப் பார்த்தும் வெட்கப்படாமல் அவன் அதைப் பற்றி மட்டுமே மனதில் நினைத்தான். அவன் அதிர்ஷ்டத்தின்மீது மட்டுமே ஆசை உள்ளவ னாக இருந்தான். அதிர்ஷ்டத்தை மட்டுமே விரும்பினான். அதிர்ஷ்டத்தைக் கைப்பற்றுவதற்கு கடுமையாக முயற்சித்தான். விளையாடும் இடத்தில் இரண்டு சிறுமிகள் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவன் அந்த ஆடும் குதிரையின் மீது ஏறி உட்கார்ந்து, பலமாக அதை ஆட்டினான். அவன் குதிப்பதைப் பார்த்து சிறுமிகள் பயந்துவிட்டார்கள். அவனுடைய கறுப்பு தலைமுடிகள் பக்கங்களில் பறந்து ஆடிக் கொண்டிருந்தன. அவனுடைய கண்களில் வெறித்தனமான ஒரு வெளிச்சம் தெரிந்தது. சிறுமிகள் அவனுடன் உரையாடுவதற்கு பயந்தார்கள்.

பதட்டத்தை உண்டாக்கிய அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து அவன் கீழே இறங்கி அந்தக் குதிரையின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அதன் சிவந்த வாய் சிறிது திறந்திருந்தது. கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

“இப்போது...” அவன் கோபத்துடன் அந்த மரக் குதிரையிடம் சொன்னான்: “அதிர்ஷ்டம் உள்ள இடத்திற்கு என்னையும் அழைத்துக் கொண்டு வேகமாக செல். வேகம்... வேகம் வேண்டும்.”

வேண்டிய அளவிற்கு அடிமைப்படுத்தினால் மட்டுமே அந்த குதிரை தன்னை தான் நினைக்கும் இடத்திற்குக் கொண்டுபோய் சேர்க்கும் என்ற எண்ணம் உண்டானதால், அவன் ஆஸ்கார் மாமா தந்த சிறிய சாட்டையை எடுத்து குதிரையை அடித்தான். அவன் மீண்டும் குதிரையின்மீது ஏறி கோபத்துடன் சவாரியை ஆரம்பித்தான். தான் அதிர்ஷ்டம் இருக்கும் இடத்தை அடைவோம் என்ற நம்பிக்கை அவனுக்குள் ஆழமாக வேரூன்றி விட்டிருந்தது.

“பால், நீ உன்னுடைய குதிரையை ஒரு வழி பண்ணிவிடுவாய்.” வேலைக்காரி சொன்னாள்.

“அவன் இப்போதுதான் இதை ஆரம்பித்தானா என்ன? அவன் குதிரையை விட்டு ஏன் இறங்காமல் இருக்கிறான்?” மூத்த சிறுமி கேட்டாள்.

ஆனால், அவன் எதுவும் பேசாமல் அமைதியாக வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். வேலைக்காரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவள் தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.

இன்னொரு நாள் இதே பிரயோஜனமில்லாத பயணத்தைச் செய்து கொண்டிருந்தபோது, அவனுடைய அன்னையும் ஆஸ்கார் மாமாவும் அங்கு வந்தார்கள். அவன் அவர்களிடம் வாய் திறக்கவே இல்லை.

“ஹலோ, சவாரி செய்யும் குழந்தையே! நீ ஒரு வெற்றி பெறக்கூடிய குதிரையையா ஓட்டிக் கொண்டிருக்கிறாய்?”

“ஒரு ஆடும் குதிரையை ஓட்டுவதற்கு மட்டும்தான் நீ இருக்கிறாய் என்பது உன்னுடைய எண்ணமா? நீ பெரியவனாக ஆகிவிட்டாய். தெரியுதா?” அவனுடைய தாய் சொன்னாள்.

அவன் கிட்டத்தட்ட மூடியிருந்த தன் பெரிய கண்களின் வழியாக ஒரு பார்வை பார்த்தான். பிடிவாதம் பிடிக்கும் நேரங்களில் அவன் யாரிடமும் பேசுவதில்லை.

அவனுடைய தாய் அவனையே ஆர்வத்துடன் பார்த்தாள். அவன் இயந்திரத்தனமாக குதிரையைப் பிடித்து நிறுத்தினான்.

“சரி... நான் அங்குபோய் சேர்ந்து விட்டேன்.” அவன் உறுதியான குரலில் சொன்னான். விரித்து வைத்திருந்த தன் கால்களையே அவன் பார்த்தான்.

“நீ எங்கு போய் சேர்ந்தாய் என்கிறாய்?”

“நான் விரும்பிய இடத்திற்கு...” அவன் கோபமான குரலில் சொன்னான்.

“சரி மகனே...” மாமா சொன்னார்: “நீ மனதில் நினைத்த இடத்தை அடையாமல் இறங்க மாட்டாய். இல்லையா? சரி... உன்னுடைய குதிரையின் பெயர் என்ன?”


“இதற்கு குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு பெயர் இல்லை.”

“பெயர் இல்லாமலே போட்டியில் பங்கு பெறலாம். அப்படித்தானே?”

“இதற்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. போன வாரம் ஸன்ஸோவினோ என்பது இதன் பெயராக இருந்தது.”

“ஸன்ஸோவினோ... ஆஸ்காட்டில் வெற்றி பெற்ற குதிரை... உனக்கு அந்தப் பெயர் எப்படிக் கிடைத்தது?”

“அவன் எப்போதும் தோட்ட வேலை செய்பவனுடன் உரையாடிக் கொண்டே இருப்பான். அந்த ஆளுக்கு குதிரைப் பந்தய பைத்தியம் உண்டு.” அவனுடைய இன்னொரு சகோதரி ஜோவான் சொன்னாள். தன்னுடைய சிறிய மருமகனுக்கு குதிரைப் பந்தயத்தைப் பற்றி சிறிது அறிவு இருக்கிறது என்ற புரிதல் ஆஸ்கார் மாமாவிற்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. போரில் வலது காலில் காயம் பட்ட பஸ்ஸே என்ற இளைஞனுக்கு ஆஸ்காரின் மூலம்தான் அந்த வீட்டில் தோட்ட வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பஸ்ஸே குதிரைப் பந்தயம் நடைபெறும் மைதானத்திற்கு நிரந்தரமாக செல்லக்கூடியவனாக இருந்தான். அவனுடைய வாழ்க்கையே போட்டிகளின்தான் இருந்தது. பால் என்ற அந்த சிறுவன் தோட்டக்காரனுடன் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தான். ஆஸ்கார், பஸ்ஸேயைப் போய் பார்த்து அதைப் பற்றி விசாரித்தார்.

“பால் தம்பி என்னிடம் ஒவ்வொன்றையும் கேட்பான். நான் சொல்லித் தராமல் இருக்க முடியுமா?” அப்படிக் கூறியபோது அவனுடைய முகம் தத்துவத்தைப் பற்றிப் பேசுவதைப்போல மிடுக்காக இருந்தது.

“அவன் ஏதாவது குதிரையைப் பற்றி பந்தயம் வைத்திருக்கிறானா?”

“சரிதான்... நான் அந்தச் சிறுவனை விடுவதற்குத் தயாராக இல்லை. அவன் என்மீது உயிரையே வைத்திருப்பவன். அவனிடமே அவனைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். நான் அவனை விட்டு விடுவதாக இருந்தால், அவனுக்கு பெரிய அளவில் வருத்தம் உண்டாகும். ஆமாம் சார்...”

ஒரு தேவாலயத்தில் நிற்பதைப்போல மிடுக்குடன் அந்த வேலைக்காரன் நின்றிருந்தான்.

மாமா மருமகனை காரில் ஏற்றிக் கொண்டு ஒரு பயணம் புறப்பட்டார்.

“டேய், பால்... மகனே, நீ ஏதாவது குதிரைக்காக பந்தயத்தில் போட்டியிட்டிருக்கிறாயா?”

அழகான தோற்றத்தைக் கொண்ட தன் மாமாவையே பால் வெறித்துப் பார்த்தான்.

“மாமா, என்னால் முடியாது என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?” அவன் சற்று ஒதுங்கினான்.

“வெற்றி பெறக்கூடிய ஒரு குதிரையைப் பற்றி உனக்கு ஏதாவது ரகசிய தகவலைத் தரமுடியுமா?”

“டாஃபோடில்.”

“உன்னால் அந்த அளவிற்கு உறுதியாகக் கூறமுடிகிறதா? இல்லாவிட்டால் மிர்ஸாவா?”

“எனக்கு வெற்றிபெறக் கூடிய குதிரையை மட்டுமே தெரியும்.” சிறுவன் சொன்னான்: “அது... டாஃபோடில்தான்.”

“இருந்தாலும்.... டாஃபோடில்...”

ஒரு நிமிடம் அமைதி நிலவியது. டாஃபோடில் என்பது கிட்டத்தட்ட யாருக்குமே தெரியாத ஒரு குதிரையாக இருந்தது.

“மாமா...”

“என்ன மகனே?”

“அதிகமாக எதுவும் கேட்க வேண்டாம். நான் பஸ்ஸேயுடன் வைத்திருக்கும் பந்தயம் அது.”

“பஸ்ஸே! நாசமாயப் போனவன்! அவனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?”

“நாங்கள் பங்காளிகள். ஆரம்பத்திலிருந்தே... முதன்முதலாக நான் இழந்த ஐந்து ஷில்லிங், அந்த ஆள் கடன் கொடுத்ததுதான். மாமா, நீங்கள் கொடுத்த பத்து ஷில்லிங்கில்தான் என்னுடைய அதிர்ஷ்டமே ஆரம்பமானது. அப்போது... மாமா, நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று நான் நினைத்தேன். அந்த அதிர்ஷ்டத்தை இல்லாமல் செய்து விடாதீர்கள்...”

தன்னுடைய பெரிய நீலநிற கண்களால் அவன் தன் மாமாவையே வெறித்துப் பார்த்தான். மாமா அதிர்ச்சியடைந்தாலும், என்ன செய்வதென்று தெரியாமல் சிரித்தார்.

“சரி... நீ கூறிய விஷயத்தை நான் ரகசியமாக வைத்துக் கொள்கிறேன். டாஃபோடில்... அப்படித்தானே? நீ அந்தக் குதிரையின் மீது எவ்வளவு பந்தயம் வைப்பாய்?”

“இருபது பவுண்ட்... நான் அந்த அளவுக்கு சேர்த்து வைத்திருக்கிறேன்.”

அவனுடைய மாமாவிற்கு அது ஒரு நல்ல தமாஷான விஷயமாகத் தோன்றியது.

“நீ பெரிய அளவில் திட்டம் போடும் ஆளாச்சே, பால்! அப்படியென்றால் நீ எவ்வளவு தொகைக்கு பந்தயம் வைப்பாய்!”

“முந்நூறு...” மிடுக்கான குரலில் பால் சொன்னான். “மாமா, இந்த பந்தயம் நமக்கு இடையேதான்... தெரியுதா?”

மாமா அதைக் கேட்டு உரத்த குரலில் சிரித்துக் கொண்டே கேட்டார்:

“சரி... உன் பணம் எங்கே?”

“பஸ்ஸேயின் கையில் இருக்கிறது. நாங்கள் பங்காளிகள் ஆயிற்றே!”

“சரிதான்... அப்படியென்றால் பஸ்ஸே டாஃபோடிலின்மீது பந்தயம் வைக்கும் தொகை எவ்வளவு?”

“என்னைப் போல பெரிய தொகையைக் கட்டுவதற்கு அந்த ஆளால் முடியாது என்று நான் நினைக்கிறேன். அதிகபட்சம், நூற்றைம்பது...”

“நூற்றைம்பது பெனியா?”

“இல்லை... நூற்றைம்பது பவுண்ட்...” ஆச்சரியமடைந்ததைப்போல பால் தன் மாமாவைப் பார்த்தான்: “பஸ்ஸேயின் கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது. மிச்சம் பண்ணி சேர்த்து வைத்த பணம்...” சிந்தனைக்கும் ஆச்சரியத்திற்கும் இடையே ஆஸ்கார் அப்படியே மூழ்கிப் போய்விட்டார். இந்த விஷயத்தைப் பற்றி அதற்கு மேலும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் ஆஸ்கார் மாமா, பாலை உடன் அழைத்துக் கொண்டு குதிரைப் பந்தயம் நடக்கும் லிங்கன் மைதானத்திற்குச் செல்ல தீர்மானித்தார்.

“மகனே... நான் இப்போது மிர்ஸா என்ற குதிரையின்மீது இருபதையும் இன்னொரு ஐந்தை நீ விரும்பும் ஏதாவது குதிரையின் மீதும் பந்தயம் வைக்கிறேன். நீ சொல்வது... அந்தக் குதிரை எது?”

“மாமா, டாஃபோடில்...”

“டாஃபோடில் அதற்கான குதிரை இல்லை.”

“மாமா, அந்த குதிரைக்கு ஐந்து பவுண்ட் கரன்ஸி நோட் மதிப்பு இருக்கிறது. என் கையில் அந்தப் பணம் இருந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன்.”

“சரி... சரி... உனக்காக நான் அதைச் செய்கிறேன்.” அவனுடைய மாமா அதை ஏற்றுக்கொண்டார்.

அதற்கு முன்பு குதிரைப் பந்தயம் நடக்கும் இடத்திற்கு அந்தச் சிறுவன் எந்தச் சமயத்திலும் சென்றதே இல்லை. அவனுடைய கண்களில் மினுமினுப்பு தெரிந்தது. அவன் வாயை மூடிக்கொண்டு எதுவுமே பேசாமல் எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த ஒரு ஃப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்தவன் லான்ஸிலோட் என்ற குதிரையின் மீது பணம் கட்டினான். ஃப்ரெஞ்ச் மொழி உச்சரிப்பில் "லான்ஸெலோட்... லான்ஸெலோட்...” என்று சத்தம் போட்டு கத்திக் கொண்டே அந்த மனிதன் தன் கைகளைக் காற்றில் வீசிக் கொண்டிருந்தான். முதலில் டாஃபோடிலும், அதற்குப் பின்னால் லான்ஸிலோட்டும், மூன்றாவதாக மிர்ஸாவும் வந்தன. ஆர்வத்தால் அகல விரிந்த கண்களுடன் அந்தச் சிறுவன் உட்கார்ந்திருந்தான். ஐந்து பவுண்ட்களைக் கொண்ட ஐந்து நோட்டுகளை எடுத்து ஆட்டிக் கொண்டே அவனுடைய மாமா கேட்டார்: “நான் இதை என்ன செய்ய வேண்டும்?”


“நாம் பஸ்ஸேயுடன் இதைப் பற்றி கலந்தாலோசிப்போம். இப்போது என்னிடம் ஆயிரத்தைந்நூறு இருக்க வேண்டும். இருபது சேமித்து வைத்தது.... பிறகு... இந்த இருபது...”

மாமா சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டே, மனதிற்குள் சில விஷயங்களை நினைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

“சரி, மகனே... நீ பஸ்ஸேயையும் அந்த ஆயிரத்து ஐநூறையும் அந்த அளவிற்குச் சாதாரணமாக நினைக்கிறாயா?”

“இருக்கலாம்... ஆனால், நமக்கு இடையே அப்படி அல்ல. பெரியவரை மதிக்க வேண்டாமா?”

“சரி... அப்படியே இருக்கட்டும்... ஆனால், நான் பஸ்ஸேயுடன் பேச வேண்டும்.”

“நீங்கள் ஒரு பங்காளியாக ஆகவேண்டுமென்றால், சரி... அப்படி நடக்கலாம். ஆனால் மேலும் இன்னொரு ஆள் இதற்குள் வரக் கூடாது. நாம் மூன்று பேர் மட்டுமே. நானும் பஸ்ஸேயும் அதிர்ஷ்டசாலிகள். மாமா, நீங்களும் அதிர்ஷ்டசாலிதான். காரணம்- நீங்கள் பரிசாகத் தந்த பத்து ஷில்லிங்கில்தான் என்னுடைய ஆரம்பமே...”

ஒரு மதிய வேளைக்குப் பிறகு அவனுடைய மாமா பஸ்ஸேயையும் பாலையும் அழைத்துக் கொண்டு ரிச்மண்ட் பூந்தோட்டத்திற்கு வந்து உரையாடலை ஆரம்பித்தார். பஸ்ஸே சொன்னான்: “விஷயங்கள் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றன சார்... பந்தயம் நடக்கும் இடத்தில் நடைபெறும் விஷயங்களைப் பற்றி பால் தம்பி என்னிடம் குத்திக் குத்தி கேட்டுத் தெரிந்து கொள்வான். நான் பந்தயம் வைக்கும்போது வெற்றி பெறுகிறேனோ, தோல்வியைத் தழுவிகிறேனா என்பதைத் தெரிந்துகொள்வதில் பால் மிகவும் ஆர்வம் காட்டினான். ஒரு வருடத்திற்கு முன்னால், பால் தந்த ஐந்து ஷில்லிங் பணத்தை வைத்து நான் பந்தயம் கட்டினேன். இழப்பு உண்டாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் நீங்கள் பரிசாகத் தந்த பத்து ஷில்லிங்கை பந்தயத்தில் வைத்தோம். அது நோக்கத்தை அடைந்தது. அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகவே இல்லை என்பதுதான் உண்மை. இல்லையா பால் தம்பி?”

“நாம் தெளிவாக இருக்கிறபோது, எதற்கு பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும்?” பால் சொன்னான். “அந்த அளவிற்கு உறுதி இல்லாமல் இருக்கும்போதுதான் நாம் தோல்வியைச் சந்திப்போம்.”

“அப்படி இருக்கும்போது, கவனமாக இருப்பதுதான் நல்லது.” பஸ்ஸே தன் கருத்தைச் சொன்னான்.

“அப்படியென்றால், உங்களுக்கு எப்போது தெளிவு உண்டாகிறது?”

“அது பால் தம்பியின் அருள்வாக்கைப்போல இருக்கும்.” அவன் ரகசிய செய்தியைக் கூறுவதைப்போல, மாமாவின் காதில் மிடுக்கான குரலில் சொன்னான்: “சொர்க்கத்திலிருந்து வந்துசேரும் தகவல் என்பதைப் போல தோன்றும்!”

“நீ டாஃபோடிலின்மீது பந்தயம் வைத்திருக்கிறாயா?”

“ம்... கொஞ்சம்...”

“என் மருமகன்?”

பஸ்ஸே, பாலைப் பார்த்துக் கொண்டே பதிலெதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

“நான் ஆயிரத்து இருநூறு வைத்தேன். இல்லையா? நான் மாமாவிடம் சொன்னேன்- டாஃபோடிலின்மீது முந்நூறுதான் வைத்தேன் என்று...”

“ம்... சரிதான்...” தலையை ஆட்டிக் கொண்டே பஸ்ஸே சொன்னான்.

“சரி... நீ பணத்தை எங்கே பாதுகாத்து வைத்திருக்கிறாய்?”

“நான் அலமாரியில் பத்திரமாகப் பூட்டி வைத்தேன். பால் தம்பி வேண்டும் என்று கேட்கும்போது, நான் அதை வெளியே எடுத்துக் கொடுப்பேன்.”

“எவ்வளவு? பத்தாயிரம் பவுண்ட் வருமா?”

“அதைவிட அதிகமாக இருக்கிறது... இருபதாயிரம்... பிறகு... ஒரு நாற்பது தனியாக...”

“தெய்வமே! நம்பவே முடியவில்லை!” மாமா ஆச்சரியப்பட்டார்.

“மன்னிக்க வேண்டும். அப்படியென்றால், நீங்களும் பங்காளியாக ஆகலாமே? உங்களுடைய இடத்தில் நான் இருந்தால், உண்மையாகவே அப்படித்தான் செய்வேன்.” பஸ்ஸே சொன்னான்.

ஆஸ்கார் மாமா ஒரு நிமிடம் சிந்தனையில் மூழ்கினார்.

“நான் அந்தப் பணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.” அவர் சொன்னார்.

அவர் திரும்பவும் வீட்டிற்கு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். தோட்டக்காரன் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த பணத்தை மாமாவிற்கு காட்டினான். மாமாவிற்கு திருப்தி உண்டானது.

“மாமா... எல்லாம் சரியாக இருக்கின்றனவா? நாம் ஒன்று சேர்ந்து நிற்போம். அப்படியென்றால் பலமும் பணமும் அதிகமாகும். அப்படித்தானே?” பால் கேட்டான்.

“ஆமாம்... ஆமாம்... மகனே.” பஸ்ஸே சொன்னான்.

“சரி... இனி நீ ஒரு விஷயத்தைக் கூற வேண்டும். அது எப்போது வேண்டும்?” மாமா கேட்டார்: “டாஃபோடிலை உன்னால் எப்படி உறுதியாக முடிவு செய்ய முடிகிறது?”

“அது எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு உறுதியாகத் தெரியும்.... அவ்வளவுதான்...”

“அந்த தகவல் சொர்க்கத்திலிருந்து வரும்.” பஸ்ஸே மீண்டும் கூறினான்.

“நானும் அப்படிக் கூற வேண்டியதிருக்கும்.” மாமா சொன்னார்.

மாமாவும் பங்காளியாகச் சேர்ந்தார். லைவ்லிஸ்பார்க் என்ற குதிரையை இறுதியாக பால் கண்டுபிடித்தான். அந்தக் குதிரையை யாரும் அந்த அளவிற்கு பெரிதாக நினைக்கவே இல்லை. ஆனால், பால் அந்தக் குதிரைத்தான் வேண்டுமென்று பிடிவாதமான குரலில் சொன்னான். பால் ஆயிரம், பஸ்ஸே ஐந்நுறு, மாமா இருநூறு என்று அந்த குதிரையின்மீது பணத்தைக் கட்டினார்கள். பந்தயத்தில் அந்த குதிரைதான் வெற்றி பெற்றது. ஒரே போட்டியில் பாலின் தொகை பத்தாயிரமாக உயர்ந்தது.

“பார்த்தீர்களா? எனக்கு அந்த அளவிற்கு உறுதியாகத் தெரியும்.” பால் சொன்னான். அவனுடைய மாமாவிற்கும் எங்கும் தொடாமல் இரண்டாயிரம் கிடைத்தது.

“இன்னும் சில நாட்களுக்கு இப்படிப்பட்ட ஒரு உறுதியான முடிவை எடுப்பதற்கு என்னால் இயலும் என்று தோன்றவில்லை.”பால். சொன்னான்.

“சரி... ஆனால், இந்தப் பணத்தை வைத்து நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்?”

“உண்மையாகவே நான் இதை என் அன்னைக்காகத்தான் ஆரம்பித்தேன். என் தந்தை அதிர்ஷ்டமில்லாத மனிதராக இருந்ததால், தானும் அதிர்ஷ்டமில்லாதவள் என்று எல்லா நேரங்களிலும் என் தாய் கூறிக் கொண்டிருக்கிறாள். அந்த முணுமுணுப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று நான் மனதிற்குள் உறுதி எடுத்தேன்.”

என் வீடு! அது பெரும்பாலும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறது!”

“அப்படி என்ன முணுமுணுப்பு? சரிதான்...”

“என்ன முணுமுணுப்பா? எனக்கே தெரியவில்லை மாமா. வீட்டில் எப்போதும் பணம் இல்லாத நிலை என்ற உண்மை உங்களுக்குத்தான் தெரியுமே, மாமா?”

“ஆமாம் மகனே... எனக்கு நன்றாகவே தெரியும்.”

“என் அன்னைக்கு எதிராக ஆட்கள் புகார்கள் அனுப்புவார்கள். அதுவும் உங்களுக்குத் தெரியும்.”

“ம்... அது எனக்குத் தெரியாது.” மாமா பதைபதைப்புடன் கூறினார்.

“மனிதர்கள் பின்னால் நின்றுகொண்டு நம்மைக் கிண்டல் பண்ணி சிரிப்பதைப்போல என் வீடு முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. எந்த அளவிற்கு வேதனை அளிக்கும் விஷயம் தெரியுமா? எனக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்று நான் மனதிற்குள் நினைத்தேன்.”

“நீ அந்த முணுமுணுப்பை ஒரு முடிவிற்குக் கொண்டு வர வேண்டும்.” மாமா சொன்னார்.


நீல நிறக் கண்களால் அந்தச் சிறுவன் தன் மாமாவையே பார்த்தான். அந்தக் கண்களில் அசாதாரணமான பிரகாசம் நிறைந்திருந்தது. தன் மாமா கூறியதற்கு அவன் பதிலெதுவும் கூறவில்லை.

“சரி... இனி என்ன?” மாமா கேட்டார்.

“நான் அதிர்ஷ்டத்தை அழைத்துக் கொண்டு வந்த விஷயத்தை என் தாயிடம் இதுவரை கூறவேயில்லை...” அவன் சொன்னான்.

“ஏன் அதை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறாய்?”

“என் தாய் அதைத் தடுத்து விடுவாள்.”

“ம்... அப்படி நடக்காது.”

“ஓ...!” அந்தச் சிறுவன் வேதனை காரணமாக சிறிது நேரம் தன் முகத்தைச் சுருக்கினான்: “அந்த விஷயத்தை என் தாய் அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.”

“சரி... அவளுக்கே தெரியாமல் நாம் முன்னோக்கிச் செல்வோம்.” மாமா ஒத்துக் கொண்டார்.

அவர்கள் மிகவும் எளிதில் காரியங்களைச் செயல்படுத்தினார்கள்.

பால் தன்னுடைய ஐயாயிரம் பவுண்ட்டையும் தன் மாமாவின் கையில் கொடுத்தான். மாமா அதை குடும்ப வக்கீலிடம் தந்தார். அவர் பாலின் அன்னையிடம் இவ்வாறு கூறினார்: “உங்களுடைய ஒரு உறவினர் என்னிடம் ஐயாயிரம் பவுண்டைக் கொடுத்திருக்கிறார். அடுத்த ஐந்து பிறந்த நாளன்றும் ஆயிரம் பவுண்ட் வீதம் உங்களுக்குத் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.”

“அப்படியென்றால் அவளுக்கு ஐந்து வருடங்கள் பிறந்த நாள் பரிசாக ஆயிரம் பவுண்ட் வீதம் கிடைத்துக் கொண்டிருக்கும்.பரவாயில்லையே!” அந்த விஷயம் பாலிற்கு ஒரு வகையில் நிம்மதியை அளிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. தன் அன்னையின் பிறந்த நாள் எப்போது வரும் என்பதில் அவன் ஆர்வமாக இருந்தான். பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கக்கூடிய கடிதங்களுக்கு மத்தியில் அவனுடைய தாய்க்கு அந்தச் செய்தி அடங்கிய கடிதமும் கிடைக்குமல்லவா?

தான் ஒரு குழந்தை அல்ல என்ற உணர்வுடன் விருந்தாளிகள் யாருமில்லாதபோது, வீட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டான். அவனுடைய அன்னை தினந்தோறும் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தாள். மென்மையான உரோம கோட்டுகளையும்  மற்ற ஆடைகளையும் உண்டாக்குவதில் தனக்கு இருக்கும் பழைய திறமையை வெளிப்படுத்த அவனுடைய தாய் தீர்மானித்திருந்தாள். அவனுடைய அன்னையின் சினேகிதியும் நகரத்தின் "முக்கியமான கலைஞி”யுமான ஒருத்தி ஸ்டுடியோவில்தான் எப்போதும் அடைக்கலம் தேடியிருந்தாள். அந்த இளம்பெண் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் பவுண்ட்டுகள் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். ஆனால், பாலின் தாய் வெறும் "நூறு”களை மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அன்னை மீண்டும் கையற்ற நிலையில் இருந்தாள். ஏதாவதொன்றில் தான் முதலிடத்தைப் பெற்றே ஆக வேண்டும் என்று அவள் முடிவு செய்திருந்தாலும், அந்த இலக்கை அவளால் அடையவே முடியவில்லை.

பிறந்த நாளன்று அதிகாலையில் அவள் உணவு சாப்பிட்டு விட்டு, கடிதங்களை வாசித்துக் கொண்டிருந்தபோது பால் தன் அன்னையின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். வக்கீல் கடிதத்தை அனுப்பியிருந்த விஷயம் அவனுக்குத் தெரியும். அவனுடைய தாய் அந்த கடிதத்தை வாசித்த போது, அவளுடைய முகம் உணர்ச்சிகள் அற்றதாகவும் தீவிரமானதாகவும் மாறிவிட்டிருந்தது. வெறுமைத்தன்மையும் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாத நிலையும் அந்த முகத்தில் வந்து சேர்ந்தன. அவள் அந்தக் கடிதத்தை மற்ற கடிதங்களுக்கு மத்தியில் மறைத்து வைத்தாள். அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட வாய் திறந்து பேசவில்லை.

“அம்மா... இன்றைய வாழ்த்துக் கடிதங்களுக்கு மத்தியில் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி ஏதாவது இருக்கிறதா?” பால் கேட்டான்.

“குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எதுவுமில்லை. வழக்கமான வாழ்த்துகள் மட்டுமே...” அவளுடைய அன்னையின் குரல் மிகவும் குளிர்ச்சியாகவும் அலட்சியமானதாகவும் இருந்தது. எதுவும் கூறாமல் அன்றும் அவள் நகரத்திற்குப் புறப்பட்டாள்.

சாயங்காலம் ஆஸ்கார் மாமா அங்கு வந்தார். பாலின் அன்னை வக்கீலுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தாள். தன்னுடைய கடன் ஒன்றை அடைக்க வேண்டியிருப்பதால், ஐயாயிரம் பவுண்ட் பணத்தையும் ஒரே நேரத்தில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று அவனுடைய தாய் வாதம் செய்து கொண்டிருந்தாள்.

“அவங்க என்ன சொல்றாங்க, மாமா?” பால் கேட்டான்.

“நீ முடிவு செய் குழந்தை.”

“சரி... அப்படியென்றால் ஒரே நேரத்தில் கொடுத்துவிடுங்கள். இன்னொரு பாதியை வைத்து நாம் இனியும் சம்பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.” பால் சொன்னான்.

“புற்களுக்கு மத்தியில் இருக்கும் இரண்டு கிளிகளைவிட, கையில் கிடைத்திருக்கும் ஒரே கிளி எவ்வளவோ மேல்...”

ஆஸ்கார் மாமா சொன்னார்.

“ஆனால், கிராண்ட் நேஷனலிலோ லிங்கனிலோ இல்லாவிட்டால் டெர்னியிலோ எங்காவது ஒரு இடத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்ற விஷயம் எனக்கு உறுதியாகத் தெரியும்.” பால் சொன்னான்.

பாலின் அன்னைக்கு முழு தொகையும் ஒரே நேரத்தில் கிடைக்கிற மாதிரி ஆஸ்கார் மாமா வக்கீலிடம் போட்ட ஒப்பந்தத்தைத் திருத்தி எழுதினார். அப்போதுதான் மேலும் ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் ஒரு திருப்பம் உண்டானது. வீட்டின் முணுமுணுப்பு அதிகமானது. குளிர்காலத்தின் தவளைகள் சத்தம் உண்டாக்குவதைப்போல வீடு "கலபில” என்று சத்தத்தை எழுப்ப ஆரம்பித்திருந்தது. சமீபகாலமாக சில புதிய ஏற்பாடுகள் உண்டாகிவிட்டிருந்தன. பாலுக்கு பாடம் கற்றுத் தர வீட்டில் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். வர இருக்கும் வசந்த காலத்தின்போது பாலை பள்ளிக் கூடத்தில் சேர்த்தாக வேண்டும்.

வசந்த காலத்தின்போது மலர்களுக்குப் பஞ்சமில்லை. அதே போல் பாலின் அன்னையின் ஊதாரித்தனத்திற்கும் தடையே இருக்காது. வீட்டின் பல இடங்களிலிருந்தும் அந்த முணுமுணுப்பு நிரந்தரமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தது. நாற்காலியின் குஷன்களுக்கு கீழேயிருந்தும் பூத்துக்குலுங்கும் ஆல்மண்ட் செடிகளிலிருந்தும் தொட்டாஞ்சிணுங்கி செடிகளுக்கு நடுவிலிருந்தும் அந்த மந்திரச் சொற்கள் உயர்ந்து கொண்டேயிருந்தன.

பணம்... பணம் வேண்டும்... மேலும் பணம்... மேலும் பணம்... எப்போதும் இருப்பதையும்விட அதிகமாக...

அது பாலை மிகவும் பயங்கரமாக பதைபதைப்பு அடையச் செய்தது. வீட்டிற்கு வரும் ஆசிரியர் அவனுக்கு லத்தீன் மொழியையும் கிரேக்க மொழியையும் கற்பித்தார். ஆனால், அவனுடைய நேரம் முக்கியமாக  பஸ்ஸேயுடன்தான் செலவழிந்தது. கிராண்ட் நேஷனலிலும் லிங்கனிலும் நடைபெற்ற குதிரைப் பந்தயங்களில் அவன் தன்னுடைய மனதில் தோன்றிய எண்ணத்தின்படி பந்தயப் பணத்தைக் கட்டினான். அவனுடைய நூற்றைம்பது பவுண்ட்கள் இழக்கப்பட்டுவிட்டன. அவனுக்கு "அருள்வாக்கு” கிடைக்கவில்லை. அவனுடைய பார்வை பயங்கரமானதாக ஆனது. அவனுடைய மனதிற்குள் என்னவோ தாங்க முடியாமல் வெடித்துச் சிதற தயாராக இருப்பதைப் போல தோன்றியது.

“அதெல்லாம் போகட்டும் மகனே. நீ அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.” அவனுடைய மாமா தேற்றினார். ஆனால், தன் மாமா கூறிய எதையும் அவன் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.


“நான் டர்பி குதிரைப் பந்தயத்தைப் பற்றி தெரிந்தே ஆக வேண்டும்... அறிந்தே ஆக வேண்டும்...” அந்தச் சிறுவன் திரும்பத் திரும்ப கூறினான். அவனுடைய நீல நிற, பெரிய கண்கள் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தன.

அவன் எந்த அளவிற்கு பைத்தியம் பிடித்தவனைப்போல இருக்கிறான் என்ற விஷயம் அவனுடைய அன்னைக்கு நன்கு தெரிந்தது.

“நீ கடற்கரைக்குச் செல்... அதுதான் நல்லது.” அவனுடைய தாய் சொன்னாள். அவள் பொறுமையற்றவளாக மாறினாள். அவள் தன் மகனின் முகத்தைப் பார்க்காமல் கீழ்நோக்கி தன் கண்களைப் பதித்தாள். அவனைப் பற்றி சிந்தித்து, அவளுடைய இதயத்தில் சுமை அதிகமானது.

“என்னால் முடியாது.” அவன் சொன்னான்.

“ஏன் முடியாது?” அவன் எதிர்த்துக் கூறியவுடன் அன்னையின் குரல் கனமானது. “டர்பியில் நடைபெறும் போட்டியைப் பார்ப்பதற்காக மாமாவுடன் சேர்ந்து போ... நீ இங்கு இருக்க வேண்டாம்... பிறகு.. நீ இந்த குதிரைப் பந்தயங்களைப் பற்றி இந்த அளவிற்கு அதிகமான ஆர்வத்துடன் இருப்பதற்குக் காரணம் என்ன? நான் அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு சரியான குணம் இல்லை. தெரிகிறதா? சூதாடுபவர்கள் என்னுடைய குடும்பத்திலும் இருந்தார்கள். அவர்கள் குடும்பத்திற்கு உண்டாக்கிய கேடு என்ன என்ற உண்மை வளர்ந்த பிறகுதான் உனக்குத் தெரியும். நான் இந்த பஸ்ஸேயை இங்கிருந்து போய்விடும்படி கூறப் போகிறேன். பந்தயத்தைப் பற்றி எதுவுமே கூறக் கூடாது என்று ஆஸ்காரை இங்கிருந்து விலகியிருக்கும்படி கூறப் போகிறேன். நல்ல ஒரு சூழ்நிலையை நீ அடையும் வரை அப்படித்தான் காரியங்கள் நடைபெற வேண்டும். கடற்கரைக்குச் செல்... மற்ற எல்லா விஷயங்களையும் மறந்துவிடு. உன்னுடைய மனம் மிகவும் கலக்கத்தில் இருக்கிறது. குழந்தை...”

“அம்மா, நீங்கள் கூறுகிறபடி நான் நடப்பேன். ஆனால் டர்பியில் நடைபெறும் பந்தயம் முடியும் வரை, நீங்கள் என்னை வெளியே போகச் சொல்லக் கூடாது.” பால் சொன்னான்.

“உன்னை வெளியே போகச் சொல்வதா? இந்த வீட்டிலிருந்தா?” அவனுடைய தாய் கவலையுடன் கேட்டாள்.

“ஆமாம்...”அவன் தன் தாயை வெறித்துப் பார்த்தான்.

“என் குழந்தையே...! இந்த வீட்டைப் பற்றி இந்த அளவிற்கு கவலைப்படுவதற்கு உன்னை எது தூண்டுகிறது? நீ இந்த வீட்டை விரும்புகிறாய் என்று நான் மனதில் நினைத்ததே இல்லை.”

எதுவும் பேசாமல் அவன் தன் தாயையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவனுடைய விஷயங்கள் ரகசியங்களுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள் ஆயிற்றே! அது ஆஸ்கார் மாமாவிடமும், பஸ்ஸேவிடமும் கூட பங்கு வைக்காத ஒன்று... இதுவரை அவன் அதை வெளிக்காட்டியதே இல்லை.

எந்த தீர்மானமும் எடுக்காமல் சிறிது நேரம் நின்றுவிட்டு, அவனுடைய தாய் கவலை நிறைந்த குரலில் இப்படிச் சொன்னாள்:

“சரி... உனக்கு விருப்பமில்லையென்றால், நீ கடற்கரைக்குச் செல்ல வேண்டாம். ஆனால், எனக்கு நீ ஒரு உறுதியைத் தர வேண்டும். நீ ஒவ்வொன்றையும் நினைத்து தலையைப் புண்ணாக்கிக் கொள்ளக் கூடாது. குதிரைப் பந்தயம் போன்ற காரியங்களைப் பற்றி நீ ஏன் சிந்திக்க வேண்டும்?”

“வேண்டாம் அம்மா. அந்த விஷயங்களைலெல்லாம் சிந்தித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அந்த விஷயங்களை விட்டு விடுகிறேன். உங்கள் இடத்தில் நான் இருந்தால், நான் கவலையே பட்டிருக்க மாட்டேன்.” பால் சொன்னான்.

“நான் நீயாகவும், நீ நானுமாக இருந்திருந்தால்... அப்படித்தானே? நாம் எப்படி நடந்து கொண்டிருப்போம் என்பதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன்.”

“அப்படியென்றால்... அம்மா, அதைப் பற்றி வெறுமனே கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே!”

பாலின் ரகசியங்களுக்குள் அடங்கியிருக்கும் ரகசியம்- அந்த மரக்குதிரைதான். அதற்குப் பெயர் எதுவும் இல்லை. அவன் ஒரு குழந்தையைவிட வயதானபோது, அந்த மரக்குதிரை வீட்டின் பரணுக்கு மாற்றப்பட்டுவிட்டிருந்தது.

“ஒரு மரக்குதிரையின்மீது ஏறி சவாரி செய்யும் வயதை நீ தாண்டிவிட்டாய்.” அவனுடைய தாய் சொன்னாள்.

“அம்மா, ஒரு சரியான குதிரை கிடைக்கும் வரை எனக்கு அது இருக்க வேண்டும்.”

“அது உனக்கு நண்பனாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய். அப்படித்தானே!”

“ஆமாம்... ஒரு மரக் குதிரை என்னுடைய நண்பன். நான் அதோடு சேர்ந்து இருக்கும்போது...” பால் சொன்னான்.

அதைத் தொடர்ந்து அந்தக் குதிரை மீண்டும் பாலின் அறையில் இருக்கத் தொடங்கியது. குதித்து ஓடுவதற்கு ஆசை இருந்தாலும், அது இப்போது கட்டப்பட்டுக் கிடந்தது.

குதிரைப் பந்தயம் நெருங்கி வந்தது. அந்தச் சிறுவன் மேலும் மேலும் பதைபதைப்பு நிறைந்தவனாக ஆனான். அவன் சலனங்கள் நிறைந்தவனாகவும் பலவீனமானவனாகவும் ஆனான். அவனிடம் யாராவது பேசினாலும், அதை அவன் கவனம் செலுத்திக் கேட்பதேயில்லை. அவனுடைய கண்கள்- உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- அமானுஷ்ய தன்மை கொண்டவையாக மாறின. அவ்வப்போது அவனைப் பற்றி நினைத்து அவனுடைய அன்னை மனதிற்குள் கவலைப்பட்டாள். சில வேளைகளில் அரைமணி நேரம் கூட அவனுடைய தாய் அவனைப் பற்றி பதைபதைப்புடன் ஒவ்வொன்றையும் நினைத்துக் கொண்டிருப்பாள். திடீரென்று அவனுக்கு அருகில் ஓடிச் சென்று, அவன் பத்திரமாகத்தான் இருக்கிறான் என்பதை அவள் தெரிந்துகொள்வாள்.

பந்தயம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், நகரத்தில் நடைபெற்ற ஒரு இரவு நேர விருந்தில் அவனுடைய தாய் பங்கு பெற்றாள். திடீரென்று தன்னுடைய மூத்த மகனைப் பற்றிய கவலை அவளை வந்து ஆட்கொள்ள ஆரம்பித்தது. அவள் அதிர்ச்சியும் அமைதியும் நிறைந்தவளாக ஆனாள். அவள் தன்னைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். சமநிலையை திரும்பப் பெற்றாலும், படிகளில் இறங்கி கீழே சென்று கிராமத்திற்கு தொலைபேசியில் பேசாமல் அவளால் இருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தொலைபேசி மணி அடித்தபோது, வீட்டிலிருந்த ஆசிரியைக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டானது.

“மிஸ். வில்மோட்... குழந்தைகளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லையே!”

“எதுவுமே இல்லை... எல்லாரும் பத்திரமாக இருக்கிறார்கள்.”

“பால் விஷயம்...?”

“அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு போய் படுத்துவிட்டான். நான் ஓடிப்போய் பார்க்கட்டுமா?”

“வேண்டாம்...” மறுக்கும் குரலில் பாலின் அன்னை சொன்னாள்: “வேண்டாம்... தொந்தரவு செய்ய வேண்டாம். நாங்கள் சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிடுகிறோம். சரி...” தன்னுடைய மகனின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு கெடுதல் உண்டாவதை அந்த அன்னை விரும்பவில்லை.

“நல்லது...” வீட்டிலிருந்த ஆசிரியை தொலைபேசியைக் கீழே வைத்தாள்.

பாலின் தாயும் தந்தையும் வண்டியை ஓட்டி வீட்டிற்கு வந்தபோது, இரவு ஒரு மணி ஆகிவிட்டிருந்தது. அனைத்தும் எந்தவித அசைவுகளும் இல்லாமலிருந்தன.


பாலின் அன்னை தன்னுடைய அறைக்குள் நுழைந்து மேலாடைகளைக் கழற்றி எறிந்தாள். தனக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று வேலைக் காரியிடம் பகலிலேயே அவள் கூறிவிட்டிருந்தாள். கீழே தன் கணவர் மதுபுட்டியைத் திறக்கும் சத்தத்தை அவள் கேட்டாள். சோடா ஊற்றும் சத்தமும்... அவள் மெதுவாக, மனக் குழப்பத்துடன், ஓசை எதுவும் உண்டாக்காமல் தன் மகனின் அறைக்கு முன்னால் சென்றாள். அங்கு ஒரு பலவீனமான குரல் கேட்கிறதோ? என்ன அது?

அதிர்ச்சியில் உறைந்து போய்விட்ட சதைகளுடன் அவள் வெளியே நின்றிருந்தாள். பெரிதாக இல்லையென்றாலும், பலமானது என்று தோன்றக் கூடிய ஒரு சத்தம் உள்ளேயிருந்து கேட்பதைப்போல அவளுக்குத் தோன்றியது. இதய ஓட்டமே நின்று விட்டதைப்போல அவனுக்கு இருந்தது. அந்த சத்தத்தில் தெளிவு இல்லாமலிருந்தது. ஆனால் பலமான அசைவின் ஓசையாக அது இருந்தது. அது என்ன? தெய்வமே, அது என்னவாக இருக்கும்? அவளுக்கு அது தெரிந்தே ஆக வேண்டும். இதே சத்தத்தை அவள் ஏற்கெனவே கேட்டு பழகியிருக்கிறாள். அவளுக்கு நன்கு தெரிந்த ஒன்றே அது. ஆனால், உறுதியாகக் கண்டுபிடித்துக் கூற முடியவில்லை. என்ன என்று கூற முடியவில்லை. பைத்தியம் பிடித்ததைப் போல, அந்தச் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

பதைபதைப்பு காரணமாக மரத்துப்போய் விட்டிருந்தாலும், அவள் மெதுவாக கதவின் பிடியைப் பிடித்தாள்.

அறை இருட்டாக இருந்தது. எனினும், சாளரத்திற்கு அருகில் ஏதோவொன்று முன்னோக்கியும் பின்னோக்கியும் அசைந்து கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அவள் பயம் கலந்த சிந்தனைகளுடன் அந்தப் பக்கமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

திடீரென்று அவள் வெளிச்சத்திற்காக அறையிலிருந்த ஸ்விட்சை அழுத்தினாள். அவளுடைய மகன் ஒரு பச்சை நிற ஆடையை அணிந்துகொண்டு, அந்த மரக்குதிரையின்மீது ஏறி அமர்ந்து, பைத்தியம் பிடித்தவனைப்போல குதித்து ஓடிக்கொண்டிருக்கும் காட்சியை அவள் பார்த்தாள். அவள் அதிர்ச்சியடைந்து கதவிற்கு அருகில் உறைந்துபோய் நின்றுவிட்டாள்.

“பால், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“இது மலபார்...” அவன் உரத்த குரலில் கத்தினான். அந்தக் குரல் பலமானதாகவும் வினோதமானதாகவும் இருந்தது: “இது... மலபார்...”

அறிவற்ற, வினோதமான ஓரு பார்வை ஒரு நிமிடம் அவனிடமிருந்து வெளிப்பட்டது. அவன் குதித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, உடனடியாக சோர்ந்து போய் தரையில் சாய்ந்தான். வேதனையடைந்த தாய்மை அவனைத் தாங்குவதற்காக வேகமாக முன்னோக்கிப் பாய்ந்தது.

ஆனால், அவன் சுய உணர்வை இழந்துவிட்டிருந்தான். மூளைக் காய்ச்சலைப்போல ஏதோவொன்று அவனை பாதித்திருந்தது. அவனுடைய அன்னை சிலையைப்போல அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தாள்.

“பஸ்ஸே... பஸ்ஸே... இது மலபார்... எனக்குத் தெரியும்... மலபாரேதான்...”

அந்தச் சிறுவன் கோபத்துடன் சொன்னான். அவன் எழுந்து நிற்கவும், தனக்கு தூண்டுகோலாக இருந்த மரக்குதிரையை கட்டிப் பிடிக்கவும் முயற்சித்தான்.

"இவன் மலபார் என்று எதைக் கூறுகிறான்?” இதயம் உறைந்து போன நிலையில் இருந்த அவனுடைய தாய் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

“எனக்குத் தெரியவில்லை...”அவனுடைய தந்தை உணர்ச்சியே இல்லாமல் கூறினார்...

“இவன் மலபார் என்று எதைக் கூறுகிறான்?” அவனுடைய தாய் தன்னுடைய சகோதரர் ஆஸ்காரிடம் கேட்டாள்.

“அது பந்தயத்தில் பங்குபெறும் குதிரையின் பெயர்...” இதுதான் பதிலாக வந்தது.

சிறிதும் தாமதிக்காமல் பஸ்ஸேயுடன் கலந்தாலோசித்து, ஆஸ்கார் மலபாரின்மீது ஒரு ஆயிரத்தைப் பந்தயத் தொகையாகக் கட்டி வைத்தார்- நாற்பதுக்கு ஒன்று என்ற கணக்கில்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாள் பரவாயில்லாமல் இருந்தது. சிறிது முன்னேற்றம் உண்டாகும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அந்த நீண்டு சுருண்டு காணப்பட்ட தலைமுடியைக் கொண்ட சிறுவன் தலையில் கை வைத்த கோலத்தில் அப்போதும் விழுந்து கிடந்தான். அவனுக்கு சுயஉணர்வு மீண்டும் வரவோ, தூக்கம் வந்து அணைக்கவோ இல்லை. அவனுடைய கண்கள் நீலநிறக் கற்களைப்போல இருந்தன. அவனுடைய அன்னை ஒரு சிலையைப்போல உறைந்துபோய் உட்கார்ந்திருந்தாள். தனக்கு இதயம் என்ற ஒன்று இல்லாமற் போய்விட்டதைப்போல அவள் உணர்ந்தாள். அது உருகி ஒன்றுமில்லாமல் போய்விட்டிருந்தது.

சாயங்காலம் ஆஸ்கார் வரவில்லை. ஆனால் பஸ்ஸே ஒரு செய்தியை அனுப்பியிருந்தான். தான் உடனடியாக அங்கு வந்து சேர்வதாக அவன் செய்தி அனுப்பியிருந்தான். பாலின் அன்னைக்கு கோபம் வந்தது. ஆனால், அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். பஸ்ஸே திருப்பி வந்தால், பாலின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உண்டாகும் என்று அவள் மனதில் நினைத்தாள். சிறிது நேரம் கழித்து பஸ்ஸே வந்து சேர்ந்தான். அந்த உயரம் குறைவான தோட்ட வேலை செய்யும் மனிதன் ஓசை எதுவும் உண்டாக்காமல், பெருவிரலை உயர்த்திக் காட்டியவாறு உள்ளே வந்தான். பாலின் படுக்கைக்கு அருகில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களுடன் அவன் நின்றான்.

“மாஸ்டர்... பால்...” அவன் அழைத்தான்: “பந்தயத்தில் மலபார்தான் வெற்றி பெற்றது. மிகச்சிறந்த வெற்றி! குழந்தை, உனக்கு கிடைத்திருப்பது எழுபதாயிரம் பவுண்ட்கள்! நீ கூறியதை நான் செய்தேன். மாஸ்டர் பால், மலபார் முதலில் வந்தது...”

“மலபார்! மலபார்! அம்மா... நான் மலபாரைப் பற்றிக் கூறினேனா?  மலபாரை எனக்குத் தெரியும். அப்படித்தானே? ஹோ! எனக்கு இந்த அளவிற்குக் கிடைத்திருக்கிறதா? கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். இல்லையா, அம்மா? நான் அதிர்ஷ்டசாலி... என் குதிரையை ஓட்டும்போதே, எனக்கு உறுதியாகத் தெரியும்- மலபார் வெற்றி பெறும் என்று! உனக்கு ஏதாவது கிடைத்ததா, பஸ்ஸே?”

“எனக்கு ஒரு ஆயிரம் கிடைத்தது, குழந்தை!”

“அம்மா, நான் உங்களிடம் இதைப் பற்றி எந்தச் சமயத்திலும் கூறியது இல்லையே! என்னுடைய குதிரையை ஓட்டிக்கொண்டு என்னால் அங்கு வரை போய்ச் சேர முடிந்தால், அதற்குப் பிறகு என்னால் உறுதியாகக் கூற முடியும்! நான் அதை கூறினேனா? நான் அதிர்ஷ்டசாலி!”

“இல்லை... நீ எதுவும் கூறவில்லை.” அவனுடைய தாய் பதில் சொன்னாள்.

அந்தச் சிறுவன் அன்று இரவு மரணமடைந்துவிட்டான்.

அவன் இறந்து கிடக்கும்போது, அவனுடைய அன்னை, தன்னுடைய சகோதரர் ஆஸ்காரின் வார்த்தைகளை இவ்வாறு கேட்டாள்: “என் தெய்வமே, அவன் போய்விட்டான்.. தன்னுடைய விளையாட்டு மரக்குதிரையுடன் சேர்ந்து... சொர்க்கத்தில் அவன் அதை ஆட்டிக் கொண்டிருப்பான்- புதிய வெற்றி பெறும் குதிரையைக் கண்டுபிடிப்பதற்கு...”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.