
ஒரு காலத்தில் ஒரு நாட்டின் ஒரு மூலையில் ஒரு பணக்கார விவசாயி வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். போர் வீரனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சைமன், தடிமனாக இருந்த தாராஸ், முட்டாளாக இருந்த ஐவான்- இவர்களே அவர்கள். அவர்களைத் தவிர, திருமணமாகாத மார்த்தா என்ற மகளும் அவருக்கு இருந்தாள். அவள் காது கேட்காதவளும், ஊமையுமாக இருந்தாள்.
சைமன் போர்களில் பங்கு புரிந்து அரசனுக்கு சேவை செய்வதற்காகச் சென்றிருந்தான். தாராஸ் நகரத்திலிருந்த ஒரு வியாபாரியை வர்த்தக விஷயமாகத் தேடிச் சென்றிருந்தான். முட்டாளான ஐவான் வீட்டிலேயே தன் தங்கையுடன் இருந்துவிட்டான். முதுகு ஒடியும் அளவிற்கு நிலத்தில் அவன் வேலை செய்ய வேண்டி இருந்தது.
போர் வீரனான சைமன் உயர்ந்த பதவியை அடைந்து ஒரு எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரனாக ஆனான். ஒரு நல்ல மனிதரின் மகளை அவன் மணம் புரிந்தான். அவன் வாங்கும் சம்பளம் ஒரு பெரிய தொகையாக இருந்தது. அவனுடைய நிலம் மிகப் பெரியதாக இருந்தது. எனினும், வரவுக்கும் செலவுக்கும் சரியாக இல்லை என்ற நிலைதான் அவனிடம் இருந்தது. கணவன் எவ்வளவு சம்பாதித்தாலும், அந்தப் பணத்தை அவனுடைய மனைவி தாறுமாறாகச் செலவழித்தாள். அதன் விளைவாக அவர்களிடம் எப்போதும் பணம் இல்லை என்ற நிலையே இருந்தது. அதனால் சைமன் எஸ்டேட்டில் வரும் வருமானத்தை வாங்கலாம் என்று அங்கு போனான். ஆனால், அங்கிருந்த வேலைக்காரன் சொன்னான்: "எங்கிருந்து வருமானம் வரும்? இங்கே ஆடு, மாடுகளோ, கருவிகளோ, குதிரைகளோ, உழவோ, பரம்போ எதுவுமே கிடையாது. முதல்ல நமக்கு இவையெல்லாம் வேணும். அதுக்குப் பிறகுதான் பணம் நம்மைத் தேடி வரும்."
அதற்குப்பிறகு சைமன் தன்னுடைய தந்தையிடம் சென்று சொன்னான்: "அப்பா, நீங்க வசதியா இருக்கீங்க. ஆனா, எனக்கு எதுவும் நீங்க தரல. உங்கக்கிட்ட இருக்குறதை நீங்க பாகம் பிரிங்க. மூணாவது பாகத்தை எனக்குத் தாங்க. நான் என் எஸ்டேட்டை விருத்தி செய்யப்போறேன்."
அதற்கு அந்த வயதான கிழவர் சொன்னார்: "நீ என் வீட்டுக்கு எதையும் கொண்டு வரல. நான் எதுக்கு உனக்கு மூணாவது பங்கைத் தரணும்? ஐவானுக்கும் அந்தப் பொண்ணுக்கும் நான் செய்யிற கெடுதலா அது இருக்கும்."
அதற்கு சைமன் சொன்னான்: "அவன் ஒரு முட்டாள். அவன் கூட இருக்குற சதோதரி காது கேட்காதவ, ஊமை... வயசு வேற ஆயிடுச்சு. அவங்களுக்கு சொத்து கிடைச்சு என்ன பிரயோஜனம்?"
அதற்கு அந்த வயதான கிழவர் சொன்னார்: "இந்த விஷயத்தைப் பற்றி ஐவான் என்ன சொல்றான்றதைப் பார்ப்போம்."
ஐவான் சொன்னான்: "அவனுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்கட்டும்."
அதனால் சைமன் தன் தந்தையிடமிருந்து தனக்குச் சேர வேண்டிய பாகத்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பிரித்து எடுத்துக்கொண்டு அதைத் தன்னுடைய எஸ்டேட்டிற்கு அவன் கொண்டு சென்றான். எல்லாம் முடிந்ததும் மீண்டும் அவன் அரசனுக்குச் சேவை செய்வதற்காகக் கிளம்பினான்.
தாராஸும் நிறைய பணம் சம்பாதித்தான். ஒரு பெரிய வியாபாரியின் மகளை அவன் மணம் செய்தான். எனினும், அவனுக்கு இன்னும் பணம் தேவைப்பட்டது. அதனால் அவனும் தன் தந்தையைத் தேடி வந்தான். அவன் தந்தையைப் பார்த்துச் சொன்னான்: "எனக்கு என் பங்கைப் பிரிச்சுக் கொடுங்க".
ஆனால் அந்த வயதான கிழவர் தாராஸுக்கு ஒரு பாகத்தைப் பிரித்துத்தர விரும்பவில்லை. அவர் சொன்னார்: "நீ எதுவும் இங்கே கொண்டு வரல. நம்ம வீட்டுல இருக்கிற எல்லா பொருட்களுமே ஐவான் சம்பாதிச்சதுதான். அவனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் எப்படி துரோகம் செய்ய முடியும்?"
அதற்கு தாராஸ் சொன்னான்: "அவனுக்கு என்னவேணும்? அவன் ஒரு முட்டாள். அவன் கல்யாணம் பண்ணப்போறது இல்ல. யாரும் அவனைக் கல்யாணம் பண்ணச் சம்மதிக்க மாட்டாங்க. ஊமைப் பொண்ணுக்கு எதுவுமே தேவைப்படாது. இங்க பாரு ஐவான்..."- அவன் சொன்னான்: "இருக்குற தானியத்துல பாதியை என்கிட்ட கொடுத்திடு. எனக்கு கருவிகள் எதுவும் வேணாம். காய்ஞ்சுபோன வைக்கோலை மட்டும் நான் எடுத்துக்குறேன். அது உனக்கு எந்த விதத்திலேயும் பயன்படாது!"
ஐவான் சிரித்துக்கொண்டே சொன்னான்: "உனக்கு எது வேணுமோ அதை நீ எடுத்துக்கோ. நான் உழைச்சு தேவையானதை சம்பாதிச்சுக்கிறேன்."
தாராஸுக்கு ஒரு பாகம் பிரித்துத் தரப்பட்டது. தானியக் கதிர்களை அவன் வண்டியில் ஏற்றிக் கொண்டு நகரத்தை நோக்கிப் புறப்பட்டான் - காய்ந்து போன வைக்கோலையும் தான். ஐவானுக்கென்று விடப்பட்டது ஒரே ஒரு வயதான ஆடுதான். அதை வைத்துத்தான் அவன் தன் விவசாய வாழ்க்கையை நடத்த வேண்டும். அதை வைத்துத்தான் அவன் தன் தந்தையையும் தாயையும் காப்பாற்ற வேண்டும்.
வயதான சாத்தானுக்கு நடந்த சம்பவங்களைப் பார்த்து ஏமாற்றமே உண்டானது. சகோதரர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளாமல், மிகவும் சமாதானமாக தங்களின் பாகங்களைப் பிரித்துக் கொண்டு விட்டதை நினைத்து அவன் விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டான். அவன் மூன்று குட்டிச்சாத்தான்களை அழைத்தான்.
"இங்க பாருங்க..."- அவன் சொன்னான்: "மூணு சகோதரர்கள் இருக்காங்க. போர் வீரனான சைமன், தடிமனான தாராஸ், முட்டாளான ஐவான்... அவங்க தங்களுக்குள் சண்டை போட்டிருக்கணும். ஆனா, அவங்க சமாதானமா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. ஒருவரோடொருவர் நட்பா பேசிக்கிறாங்க. அந்த முட்டாள் ஐவான் என் வேலை முழுசையும் கெடுத்து நாசம் பண்ணிட்டான். நீங்க மூணு பேரும் போயி அந்த மூணு சகோதரர்கள்கிட்டேயும் அவங்க ஒருத்தர் கண்ணை இன்னொருத்தர் பிடுங்குறது வரை அவங்களை ஒரு வழி பண்ணுங்க. உங்களால அதைச் செய்யமுடியுமா?"
"நிச்சயமா... எங்களால செய்ய முடியும்" அவர்கள் சொன்னார்கள்.
"எப்படி செய்வீங்க?"
"முதல்ல நாங்க அவங்களோட வசதியை ஒழிப்போம். சாப்பிடுறதுக்கு எதுவுமே இல்லைன்னு ஒரு நிலை உண்டாகுறப்போ நாங்க அவங்களை ஒண்ணா சேர்ந்து கட்டுவோம். அப்போ அவங்க ஒருத்தரோட ஒருத்தர் கட்டாயம் சண்டை போட்டுக்குவாங்க."
"கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. நீங்க உங்க வேலையை ஒழுங்கா செய்வீங்கனு நினைக்கிறேன். போங்க. அவங்களை ஒருத்தரையொருத்தர் காதைப் பிடிச்சு சண்டை போடுறதுக்கு முன்னாடி நீங்க இங்கே திரும்பி வரவே கூடாது. இல்லாட்டி நான் உங்களை உயிரோட இருக்குறப்பவே தோலை உரிச்சுடுவேன்."
குட்டிச் சாத்தான்கள் அங்கிருந்து கிளம்பிப்போய் ஒரு இடத்தில் உட்கார்ந்தார்கள். எப்படி செயல்படுவது என்பதைப் பற்றி அவர்கள் மூவரும் விவாதித்தார்கள்.
ஒருவர் கருத்தோடு இன்னொருவர் முரண்பட்டார்கள். ஒவ்வொருவரும் எளிதான வேலை எதுவோ, அதைச் செய்யவே தயாராக இருந்தார்கள். கடைசியில் ஒவ்வொரு குட்டிச்சாத்தானும் ஒவ்வொரு சகோதரரை கவனிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஒரு குட்டிச்சாத்தான் மற்ற குட்டிச்சாத்தான்களுக்கு முன்பே தன்னுடைய வேலையை முடித்துவிட்டால் அந்தக் குட்டிச்சாத்தான் மற்ற குட்டிச்சாத்தான்கள் வேலையைச் சீக்கிரம் முடிக்க உதவ வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. குட்டிச் சாத்தான்கள் அந்த இடத்தை விட்டு புறப்பட்டார்கள். மீண்டும் தாங்கள் எப்போது சந்திப்பது என்றொரு நேரத்தையும் அவர்கள் நிச்சயித்தார்கள். சந்திக்கும்போது தங்களில் யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள், யாருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாமே என்று அவர்கள் நினைத்தார்கள்.
குறிப்பிட்ட அந்த நிச்சயிக்கப்பட்ட நேரம் வந்தது. குட்டிச்சாத்தான்கள் தாங்கள் முடிவெடுத்தபடி மீண்டும் சந்தித்தார்கள். காரியங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தார்கள். போர் வீரனான சைமனிடம் சென்றிருந்த முதல் குட்டிச்சாத்தான் முதலில் சொல்ல ஆரம்பித்தது: "என் வேலை நல்லா போய்க்கிட்டு இருக்கு. நாளைக்கு சைமன் தன் அப்பாவோட வீட்டுக்கு வர்றான்."
அந்த முதல் குட்டிச்சாத்தானிடம் மற்ற இருவரும் கேட்டார்கள்: "நீ என்ன செஞ்சே?"
அந்தக் குட்டிச்சாத்தான் சொன்னது: "நான் சைமனை ரொம்பவும் தைரியசாலியான ஆளா ஆக்கினேன். தன்னோட அரசனுக்காக முழு உலகத்தையும் வெற்றி பெற்று காட்டுறதா அவன் சொன்னான். அவனை அரசன் படைத்தளபதியா ஆக்கினான். இந்தியாவோட மன்னரை எதிர்த்து சண்டை போடுறதுக்காக அவனை அரசன் அனுப்பி வைத்தான். போருக்கு எல்லாரும் கிளம்பினாங்க. ஆனா, போர் நடக்குறதுக்கு முந்தின நாள் ராத்திரி நான் இந்திய அரசரோட படை பக்கம் ஏராளமான வீரர்கள் இருப்பது மாதிரி செஞ்சேன். அவங்களோட எண்ணிக்கையை எண்ணவே முடியாது. தங்களைச் சுற்றி இருக்கிற இந்திய வீரர்களோட எண்ணிக்கையைப் பார்த்ததும் சைமனோட வீரர்கள் ரொம்பவும் பயந்துட்டாங்க. சைமன் அந்த வீரர்களைச் சுடச் சொன்னான். ஆனா, அவங்க சுடுறதுக்கு முயற்சி பண்றப்போ அவங்களோட துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் செயல்படாம போயிடுச்சு. அவ்வளவுதான்- சைமனோட வீரர்கள் பயந்துபோய் ஆடுகளை மாதிரி அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பிச்சாங்க. ஆனா, இந்தியாவோட அரசர் அவங்களை விடல. அவங்களை அவர் தண்டிச்சார். சைமன் அவமானப்படுத்தப்பட்டான். அவனோட நிலம் அவனிடம் இருந்து பிடுங்கப்பட்டது. நாளைக்கு அவனுக்கு அவங்க கடைசி தண்டனை அளிக்கிறதா இருக்கு. எனக்கு இன்னும் ஒரே ஒருநாள் வேலைதான் மீதி இருக்கு. அவனை சிறையில இருந்து நான் தப்பிக்க வைக்கப்போறேன். அவனை வீட்டுக்குப் போக வைக்கப்போறேன். நாளைக்கு உங்கள்ல யாருக்கு என்னோட உதவி தேவையோ, அவங்களுக்கு உதவ நான் தயாரா இருக்கேன்."
இப்போது தாராஸிடம் போன இரண்டாவது குட்டிச்சாத்தான் தன்னுடைய அனுபவத்தைக் கூற ஆரம்பித்தது: "எனக்கு எந்த உதவியும் வேண்டாம். என் வேலை ரொம்பவும் நல்லா போய்க்கிட்டு இருக்கு. தாராஸ் ஒரு வாரத்துக்கு மேல தாக்குப்பிடிக்க மாட்டான். முதல்ல நான் அவனை ரொம்பவும் பேராசை பிடிச்சவனாகவும், பலசாலியாகவும் ஆக்கிட்டேன். அவனோட பேராசை எந்தளவுக்குப் போயிடுச்சுன்னா, கண்ணால எதையெல்லாம் பார்க்கிறானோ, அதையெல்லாம் அவன் உடனே வாங்கணும்னு நினைக்கிறான். அவன் தன் கையில இருந்த பணம் முழுவதையும் கண்ட கண்ட பொருட்களையெல்லாம்
வாங்கறதுக்காக செலவழிக்கிறான். பொருட்களை வாங்கறதை அவன் நிறுத்துறதாகவே தெரியல. கடன் வாங்கி பொருட்களை வாங்கறான். கடன் படிப்படியா அதிகமாகி அவனோட கழுத்துல கனமான பொருளா தொங்கிக்கட்டு இருக்கு. அதுக்குப்பிறகும் அவன் திருந்துறது மாதிரி தெரியல. ஒரு வாரத்துல அவன் கடன் வாங்கின பணத்தைத் திருப்பித் தரணும். ஆனா, அதுக்கு முன்னாடி அவனோட சொத்து முழுவதும் காலியாகுறது மாதிரி நான் பண்ணிடுவேன். அவன் கடனைத் திருப்பித் தரமுடியாது. அதுக்குப் பிறகு தன் தந்தையைத் தேடிப் போறதைத் தவிர அவனுக்கு வேற வழி?"
இப்போது அவர்கள் ஐவானிடம் சென்ற மூன்றாவது குட்டிச்சாத்தானைப் பார்த்துக் கேட்டார்கள்: "உன் அனுபவம் எப்படி?"
அந்தக் குட்டிச்சாத்தான் சொன்னது: "என்னோட அனுபவம் ரொம்பவும் மோசமானது. முதல்ல நான் அவன் குடிக்கிற தண்ணியைக் கெடுத்தேன். அதுனால அவனுக்கு வயிற்று வலி உண்டாயிடும்னு நான் நினைச்சேன். அதுக்குப்பிறகு நான் நேரா அவனோட வயல் பக்கம் போனேன். அங்கேயிருந்த மண்ணை கல் மாதிரி கடுமையா ஆக்கினேன். மண்ணு கடுமையா இருந்தா அவனால உழவே முடியாதே! ஆனா, நடந்தது என்னன்னா... ஒரு முட்டாள் மாதிரி அவன் வந்தான். எதைப் பற்றியும் கவலைப்படாம அவன் கலப்பையை வச்சி உழ ஆரம்பிச்சிட்டான். தன் வயிற்றுல ஏதோ வலி இருக்குன்றதை அவனும் உணர்ந்தான். இருந்தாலும் அதைப் பெரிசா நினைக்காம அவன் உழுவதிலேயே கவனமா இருந்தான். அவனோட கலப்பையை நான் உடைச்சேன். அதுக்காக அவன் கவலைப்படல. நேரா அவன் வீட்டுக்குப் போனான். இன்னொரு புதுக்கலப்பையை அங்கேயிருந்து எடுத்துட்டு வந்து திரும்பவும் உழ ஆரம்பிச்சுட்டான். நான் பூமிக்கு அடியில இருந்துக்கிட்டு கலப்பையோட நுனியைப் பிடிச்சேன். ஆனா, என்னால அதைத் தொடர்ந்து கையில பிடிச்சிருக்க முடியல. அவன் அழுத்தி உழுதுக்கிட்டு இருந்தான். கலப்பையோட முனை ரொம்பவும் கூர்மையா இருந்ததுனால, அது என் கையைக் கிழிச்சிடுச்சு. அவன் வயலோட பெரும்பகுதியை உழுது முடிச்சுட்டான். ஒரே ஒரு துண்டு தான் இன்னும் உழ வேண்டியதிருக்கு. வாங்க சகோதரர்களே, எனக்கு வந்து உதவுங்க. அவனை வழிக்குக் கொண்டு வர முடியலைன்னா, நம்மோட முழு உழைப்பும் வீணாயிடும். அவன் இப்படி முழு கவனத்தோட நிலத்தை உழுது
முடிச்சிட்டான்னா, அவனோட சகோதரர்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் போயிடும். அவங்களை இந்த ஒருத்தனே சாப்பாடு போட்டு காப்பாத்திடுவான்."
போர் வீரனான சைமனை கவனித்துக் கொண்டிருந்த குட்டிச்சாத்தான் மறுநாள் வந்து உதவுவதாகச் சொன்னது. அத்துடன் அவர்கள் அந்த இடத்தைவிட்டுக் கலைந்தார்கள்.
ஐவான் ஏறக்குறைய முழு வயலையும் உழுது முடித்திருந்தான். ஒரே ஒரு துண்டுமட்டும் உழப்படாமல் இருந்தது.அவன் அதை முடிப்பதற்காக வந்திருந்தான். வயிறு வலித்துக்கொண்டு தானிருந்தது. எனினும், அதைப்பற்றி அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உழவுவேலை முழுவதுமாக முடித்தாக வேண்டுமே! அவன் கயிறை அவிழ்த்தான். கலப்பையை எடுத்து உழ ஆரம்பித்தான். அவன் ஒரு முறை உழுதான். திரும்பிவரும்போது உழுவதே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.
யாரோ தன்னைப் பிடித்து இழுப்பதைப் போலவும், ஏதோ வேரில் தான் சிக்கிக் கொண்டிருப்பதைப் போலவும் அவன் உணர்ந்தான். அது அந்தக் குட்டிச்சாத்தானின் வேலைதான். அது தன் கால்களை கலப்பையின் நுனியைச் சுற்றி வைத்துக் கொண்டு அதை நகரவிடாமல் செய்தது. 'என்னடா ஆச்சரியமா இருக்கு!’- ஐவான் மனதிற்குள் நினைத்தான். 'இதை நகரவிடாம தடுக்கிற அளவுக்கு நிலத்துல வேர் எதுவும் இல்ல. இருந்தாலும் நிக்குதே!’
ஐவான் தன் கையை உழுத இடத்திற்குக் கீழே விட்டான். கீழே மெல்லிய ஏதோவொன்று தன் கையில் படுவதைப் போல் அவன் உணர்ந்தான். கையில் பட்டதை அவன் வேகமாக வெளியே எடுத்தான். ஒரு வேரைப் போல கறுப்பு நிறத்தில் அது இருந்தது. அது மெதுவாக அசைந்தது. உயிருடன் இருக்கும் குட்டிச்சாத்தான் அது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
"இப்படியும் ஒரு காரியம் நடக்குமா?"- ஐவான் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் தன் கையை உயர்த்தி குட்டிச்சாத்தானை கலப்பையின் மீது வேகமாக அடிக்க முயன்றான். ஆனால், குட்டிச்சாத்தான் உரத்த குரலில் அழுதது.
"என்னை ஒண்ணும் செய்யாதே. நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்."
"நீ என்ன செய்வே?"
"நீ எது செய்யச் சொன்னாலும் செய்யறேன்."
அடுத்த நிமிடம் ஐவான் தன் தலையைச் சொறிந்தான்.
"என் வயிறு வலிக்குது"- அவன் சொன்னான்: "உன்னால அதைக் குணப்படுத்த முடியுமா?"
"நிச்சயமா..."
"அப்படின்னா செய்."
குட்டிச்சாத்தான் உழுதிருந்த கோட்டிற்குக் கீழே சென்றது. எதையோ இங்குமங்குமாய் தேடியது. கை விரல்களை நீட்டி மூன்று வேர்களைக் கொத்தாய்ப் பிடித்துக் கொண்டு வந்து ஐவானிடம் தந்தது.
"இந்த வேர்கள்ல ஒண்ணைத் தின்னாப்போதும். உடம்புல இருக்கிற, எந்த நோயா இருந்தாலும் இருந்த இடம் தெரியாம ஓடிடும்."
ஐவான் அந்த வேர்களை வாங்கிப் பிரித்தான். அந்த வேர்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டு தின்றான். அந்த நிமிடமே அவன் வயிற்றில் இருந்த வலி இல்லாமற்போனது. குட்டிச்சாத்தான் தன்னை விட்டு விடும்படி அவனைப் பார்த்து மீண்டும் கெஞ்சியது. "நான் இப்பவே பூமிக்குள்ள போயிடுறேன். இனிமேல் நான் திரும்பி வரவே மாட்டேன்" என்று அது சொன்னது.
"சரி... அப்படியே நடக்கட்டும்"- ஐவான் சொன்னான்: "ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கோ. கடவுள் உன் கூடவே இருக்கார்..."
ஐவான் கடவுள் பேரைச் சொன்னதுதான் தாமதம். குட்டிச் சாத்தான் தண்ணீரில் வீசி எறியப்பட்ட கல்லைப் போல வேமாக பூமிக்குள் சென்று மறைந்தது. ஒரே ஒரு ஓட்டை மட்டும் பூமியில் தெரிந்தது.
ஐவான் மீதமிருந்த இரண்டு வேர்களையும் தன்னுடைய தொப்பியில் வைத்துவிட்டு, உழுவதில் மீண்டும் இறங்கினான். அவன் அந்தத் துண்டு நிலத்தின் கடைசி வரை சென்று உழுதான். எல்லாவற்றையும் உழுது முடித்த அவன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான். குதிரையை கொட்டடியில் கட்டினான். வீட்டிற்குள் நுழைந்தான். அவன் போன போது அவனுடைய மூத்த அண்ணன் சைமனும் அவனுடைய மனைவியும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். சைமனின் நிலம் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு விட்டிருந்தது. சிறையிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு அவன் தப்பித்து வந்திருந்தான். தன் தந்தையின் வீட்டில் இருக்கலாம் என்று நினைத்து அவன் அங்கு வந்திருந்தான். சைமன் ஐவானைப் பார்த்துச் சொன்னான்: "நான் உன்கூட சேர்ந்து வாழறதா முடிவு பண்ணி வந்திருக்கேன். எனக்கு வேலை கிடைக்கிறது வரை எனக்கும் என் மனைவிக்கும் நீ சாப்பாடு போடு."
"கட்டாயம் போடுறேன்."- ஐவான் சொன்னான்: "நீ எங்கக்கூடவே தங்கிடு."
ஆனால் ஐவான் அருகிலிருந்த பெஞ்சின்மீது உட்கார்ந்தபோது, சைமனின் மனைவி ஐவான் மீதிருந்து எழுந்த நாற்றத்தை விரும்பவில்லை. அவள் தன் கணவனைப் பார்த்துச் சொன்னாள்: "அழுக்கடைஞ்சு போயிருக்கிற இந்த விவசாயி இருக்கிற வீட்டுல என்னால இருக்க முடியாது."
அதைத் தொடர்ந்து சைமன் சொன்னான்: "என் மனைவி உன்மேல நாற்றமடிக்குதுன்னு சொல்றா. அதுனால நீ வெளியே போயி ஏதாவது சாப்பிட்டுக்கோ."
"சரி..."- ஐவான் சொன்னான்: "எப்படி இருந்தாலும் நான் ராத்திரியில வெளியே இருந்துதான் ஆகணும். நான் ஆட்டுக்கு இரை தேடி ஆகணுமே!"
தொடர்ந்து அவன் அங்கிருந்த ரொட்டித் துண்டு ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு தன்னுடைய ஆட்டுடன் வயலை நோக்கி நடந்தான்.
அன்று இரவு செய்யவேண்டிய வேலைகளை முடித்துவிட்டு, சைமனைப் பின்பற்றும் குட்டிச்சாத்தான் தான் முன்பு கொடுத்த வாக்குறுதிப்படி ஐவானின் குட்டிச்சாத்தானுக்கு உதவுவதற்காக வந்தது. அது வயலுக்கு வந்து தேடோதேடு என்று தேடியது. ஆனால் தன்னுடைய சினேகிதனுக்குப் பதிலாக அது ஒரு ஓட்டையைத்தான் பார்த்தது.
"நிச்சயமா..."- அது சொன்னது: "நடக்கக்கூடாதது ஏதோவொண்ணு என் நண்பனுக்கு நடந்திருக்கு. அவன் இடத்தை நாம் பிடிச்சுக்க வேண்டியதுதான். வயல் முழுமையா உழப்பட்டிருக்கு. அந்த முட்டாப்பய சேற்றுக்குள்ளே எங்கேயாவது மாட்டியிருக்கணும்."
அந்த குட்டிச்சாத்தான் கதிர்கள் நிறைந்திருந்த வயலை நோக்கி நடந்தது. ஐவானின் தானியக் கதிர்களை நீரால் அது நிறைத்தது. கதிர்கள் சேற்றுக்குள் நின்றிருந்தன.
ஐவான் அதிகாலை நேரத்தில் தேவாலயத்திலிருந்து திரும்பி வந்தான். கதிர் அறுக்கும் அரிவாளைக் கூர்மைப்படுத்தினான். தானியக் கதிர்கள் இருக்கும் வயலை நோக்கி அவன் நடந்தான். கதிர்களை அறுக்க முயன்றான். இரண்டு, மூன்று முறை அவன் கதிர்கள் மீது அரிவாளை வைக்க, அதன் நுனிப்பகுதி வளைய ஆரம்பித்தது. அது கதிரை அறுக்கவேயில்லை. ஐவான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். ஆனால், முடியவில்லை. அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்: 'இது சரியா வராது. நான் உடனடியா வீட்டுக்குப் போயி ஒரு கருவியை எடுத்துட்டு வந்து, வளைஞ்சு போன இந்த அரிவாளை நேராக்கணும். வர்றப்போ ஒரு பொதி ரொட்டியையும் எடுத்துட்டு வரணும். இங்கேயே ஒரு வாரம் இருந்து அறுவடை முடியாம இந்த இடத்தை விட்டு நான் நகரமாட்டேன்.'
குட்டிச்சாத்தான் ஐவான் சொன்னதைக் கேட்டது. அது தனக்குள் நினைத்தது: 'இந்த முட்டாள் உண்மையிலேயே கையாள்றதுக்கு ரொம்பவும சிரமமான ஆள்தான். இவனை இந்த வழியில விட்டா சரியா இருக்காது. வேற ஏதாவது உத்தியைத்தான் இவன்கிட்ட பயன்படுத்தி ஆகணும்.'
ஐவான் அரிவாளைச் சரிப்படுத்திக்கொண்டு மீண்டும் திரும்பி வந்தான். அவன் கதிரை அறுக்க ஆரம்பித்தான். குட்டிச்சாத்தான் தானியக் கதிர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு அரிவாளைத் தன்னுடைய காலால் பற்றிக்கொண்டு அரிவாள் நுனியை பூமியை நோக்கித் திரும்பியது.
ஐவான் கதிரை அறுக்க முடியாமல் தடுமாறினான். இருப்பினும் தன் முயற்சியை அவன் கைவிடவில்லை. ஏறக்குறைய அவன் அறுவடையை முடித்தான். ஒரு சிறு பகுதி மட்டும் அறுவடை செய்யப்படாமல் மீதமாக நின்றது. அந்தப்பகுதி சேறு நிறைந்ததாக இருந்தது. குட்டிச்சாத்தான் அந்தச் சேற்றுக்குள் நுழைந்துகொண்டு தனக்குத் தானே சொல்லிக்கொண்டது: "என் காலே தனியா துண்டானாக் கூட கவலையில்ல, நான் அவனை அறுவடை செய்ய விடமாட்டேன்."
ஐவான் அந்தச் சேற்றுப் பகுதிக்கு வந்தான். தானியக் கதிர்கள் அப்படியொன்றும் முரட்டுத்தனமாக இல்லை. எனினும் அரிவாளைக் கொண்டு அதை அறுக்க முடியவில்லை. ஐவானுக்கு இப்போது பயங்கரமாகக் கோபம் வந்தது. கையிலிருந்த அரிவாளைத் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி இப்படியும் அப்படியுமாய் சுழற்றினான். குட்டிச்சாத்தானால் அதற்குமேல் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. அரிவாளைப் பிடித்துக் கொண்டு அதனால் இருக்க முடியவில்லை. நிலவும் சூழ்நிலை சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டு அது புதருக்குள் போய் மறைந்து கொண்டது. ஐவான் அரிவாளை வீசியபடி புதர் பக்கம் வந்தான். குட்டிச்சாத்தானின் வால் பகுதியில் பாதியை வெட்டினான். தொடர்ந்து எந்தவித பிரச்சினையுமில்லாமல் அவன் கதிர்களை அறுத்தான். தன் சகோதரியை அழைத்து தானியக் கதிர்களைக் கட்டாக அடுக்கும்படி சொல்லிவிட்டு, கம்பு கதிர்களை அறுப்பதற்காக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். அரிவாளை எடுத்துக்கொண்டு அவன் செல்ல, அவனுக்கு முன்பே அங்கு பாதி வாலை இழந்த குட்டிச்சாத்தான் இருந்தது. கம்புக் கதிர்களை அது இறுகப் பிடித்துக்கொண்டது. அதன் விளைவாக அரிவாளால் அதை அறுக்கவே முடியவில்லை. அதற்காக ஐவான் கலங்கி விடவில்லை. அவன் நேராகத் தன் வீட்டிற்குச் சென்றான். அங்கிருந்த சிறு கத்தியொன்றை எடுத்துக்கொண்டு வந்து, அதை வைத்து அறுக்க ஆரம்பித்தான். இப்போது கம்பை முழுமையாக அவன் அறுவடை செய்து முடித்திருந்தான்.
“ம்... இப்போது ஓட்ஸ் கதிர்களை அறுவடை செய்ய வேண்டியதுதான்.”
பாதி வாலை இழந்த குட்டிச்சாத்தானின் காதுகளில் ஐவானின் வார்த்தைகள் விழுந்தன. அது தனக்குத்தானே சொல்லிக் கொண்டது: “கம்பு அறுவடையில் என்னால பெருசா அவனை ஒண்ணும் பண்ண முடியாமப் போச்சு. ஆனா, ஓட்ஸ் அறுவடையில அவன்கிட்ட நிச்சயமா என் வேலையை காட்டுவேன். நாளைக்குக் காலைவரை காத்திருக்க வேண்டியதுதான்.”
காலையில் குட்டிச்சாத்தான் ஓட்ஸ் வயலை நோக்கி வேகவேகமாகச் சென்றது. ஆனால், அது செல்வதற்கு முன்பே ஓட்ஸ் கதிர்கள் முழுமையாக அறுவடை செய்யப்பட்டு விட்டிருந்தன. இரவோடு இரவாக ஐவான் அதை அறுவடை செய்திருந்தான். அதைப்பார்த்து குட்டிச்சாத்தானுக்கு பயங்கர கோபம் வந்தது.
“அவன் என்னை நல்லா ஏமாற்றிட்டான். நானே சோர்வடைஞ்சிட்டேன். முட்டாப்பய... போரை விட இது ரொம்பவும் மோசமா இருக்கு. அந்த பாழாய்ப்போன முட்டாள் தூங்கவே மாட்டான் போல இருக்கு. அவன்கூட மாரடிக்குறது உண்மையிலேயே கஷ்டமான ஒண்ணுதான். நான் கதிர்களுக்குள்ள போயி அவற்றை ஒண்ணுமில்லாம செய்யப்போறேன்.”
தொடர்ந்து அந்தக் குட்டிச்சாத்தான் கம்புக் கதிர்களுக்குள் நுழைந்தது. அது கதிர்களை வெப்பமுறச் செய்தது. அங்கேயே படுத்துத் தூங்க ஆரம்பித்தது.
ஐவான் ஆட்டைக் கட்டிப்போட்டு விட்டு தன் சகோதரியுடன் கம்புக் கதிர்களை ஏற்றுவதற்காக வண்டியுடன் வந்தான். தானியக் கதிர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து அவற்றை வண்டியில் ஏற்றுவதற்காக ஒவ்வொன்றாக எடுத்தான். இரண்டு கட்டுகளை நீக்கிவிட்டு கையிலிருந்த முள்ளால் சரியாக குட்டிச் சாத்தானின் முதுகில் குத்தினான். அவன் முள்ளை வெளியே எடுத்தான். அப்போது உயிருடன் ஒரு குட்டிச்சாத்தான் பாதி வாலுடன் இப்படியும் அப்படியுமாக நெளிந்து போராடிக் கொண்டிருப்பதையும் தப்பித்து ஓடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதையும் அவன் பார்த்தான்.
“அட...! அசிங்கம் பிடிச்சதே... நீ இங்க திரும்பவும் வந்துட்டியா?”
“நான் வேற...” - அந்தக் குட்டிச்சாத்தான் சொன்னது: “முதல்ல வந்தது என்னோட சகோதரன். நான் உன் சகோதரன் சைமன் கூட இருந்தேன்.”
“அப்படியா?” ஐவான் சொன்னான். “நீ யாரா இருந்தாலும் உனக்கு இதுதான் கதி.”
அவன் அந்தக் குட்டிச்சாத்தானை வண்டியில் மோத வைக்க முயற்சித்தான். ஆனால், குட்டிச்சாத்தான் உரத்த குரலில் அழுதது. “என்னை விட்டுடு. உன்னை விட்டு நான் போறதோட மட்டுமில்ல, நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்.
“நீ என்ன செய்வே?”
“நீ சொல்லுற எதுல இருந்து வேணும்னாலும் நான் வீரர்களை உருவாக்குறேன்.”
“அவங்க எந்த விதத்துல எனக்கு பிரயோஜனமா இருப்பாங்க?”
“அவங்களை நீ எப்படி வேணும்னாலும் பயன்படுத்திக்கலாம். நீ என்ன சொன்னாலும் அவங்க கேட்பாங்க.”
“அவங்க பாடுவாங்களா?”
“நிச்சயமா... நீ பாடச்சொன்னா பாடுவாங்க.”
“சரி... அப்படின்னா எனக்காக சில வீரர்களை உருவாக்கு.”
தொடர்ந்து குட்டிச்சாத்தான் சொன்னது: “இங்கே பாரு... ஒரு கொத்து கம்புக் கதிரை எடு. அதை நிலத்துல நேரா நிக்க வச்சிட்டு இப்படிச்சொல்லு. ஏ, கதிரே! என் அடிமை இந்த விஷயத்தைச் சொன்னான். ஒவ்வொரு கதிரும் ஒரு வீரனாக மாறட்டும்.”
ஐவான் கம்புக் கதிரைக் கையில் எடுத்தான். நிலத்தில் அதை ஊன்றி வைத்தான். குட்டிச்சாத்தான் சொன்னதைச் சொன்னான். கதிர்க்கொத்து அடுத்த நிமிடம் சாய்ந்து கீழே விழுந்தது. அதிலிருந்த கதிர்கள் ஒவ்வொன்றும் போர் வீரர்களாக மாறின. வீரர்களுக்கு முன்னால் ட்ரம்பெட் வாசிக்கும் ஒரு மனிதனும் ட்ரம் ஒலிக்கச்செய்யும் ஒரு மனிதனும் இருந்தார்கள். மொத்தத்தில் ஒரு பெரிய படையே அங்கு இருந்தது.
ஐவான் சிரித்தான்.
"எவ்வளவு புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்திருக்கே!" அவன் சொன்னான்: "ரொம்பவும் நல்லா இருக்கு. இதைப்பார்த்தா பெண்கள் எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா?"
"நான் இப்போ போறேன்"- குட்டிச்சாத்தான் சொன்னது.
"வேண்டாம்..."- ஐவான் சொன்னான்: "வீரர்களை மறுபடியும் கதிர்களா மாத்தணும். இல்லாட்டி நல்ல தானியமெல்லாம் வீணாயிடும். இந்த வீரர்களை மறுபடியும் கதிர்களா மாத்துறதுக்கு வழியைச் சொல்லு. நான் கதிர்களை அடிச்சு தானியத்தைப் பிரிக்கணும்..."
குட்டிச்சாத்தான் சொன்னது: "நான் சொல்றதை நீ சொல்லணும்.
ஒவ்வொரு கதிரும் மாற வேண்டும்.
முன்பிருந்த வீரர் நிலையை விட்டு
என் உண்மையான அடிமையின் பெயரில்
இந்தக் கட்டளையை நான் பிறப்பிக்கிறேன்..."
ஐவான் அந்த வரிகளைச் சொல்ல, மீண்டும் கதிர்கள் தோன்றின.
குட்டிச்சாத்தான் மீண்டும் அவனைப் பார்த்துக் கெஞ்சியது:"நான் இப்போ போகட்டுமா?"
"சரி..."
ஐவான் அந்தக் குட்டிச்சாத்தானை வண்டியின் பக்கவாட்டின் மீது வைத்து அழுத்தினான். அதைக் கையால் தள்ளி கீழே விழவைத்தான். கையிலிருந்த முள்ளால் அதைப்பிடித்துத் தள்ளினான்.
"கடவுள் உன்னோடு இருக்கட்டும்"- அவன் சொன்னான்.
கடவுள் பெயரை அவன் உச்சரித்ததுதான் தாமதம் அந்தக் குட்டிச்சாத்தான் தண்ணீரில் கல்லை எறிவதைப் போல பூமிக்குள் நுழைந்தது. ஒரே ஒரு ஓட்டை மட்டும்தான் வெளியே தெரிந்தது.
ஐவான் வீட்டிற்குத் திரும்பி வந்தான். அங்கு அவனுடைய இன்னொரு சகோதரன் தாராஸும் அவனுடைய மனைவியும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
தாராஸ் தான் வாங்கிய கடன்களைக் கொடுக்க முடியாமல் கடன்காரர்களிடமிருந்து தப்பித்து தன் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்தான். அவன் ஐவானைப் பார்த்ததும் சொன்னான்: "இங்கே பாரு. நான் திரும்பவும் என் வியாபாரத்தை ஆரம்பிக்கிற வரைக்கும் என்னையும் என் மனைவியையும் நீதான் பார்த்துக்கணும்..."
"சரி..."- ஐவான் சொன்னான்: "நீ பிரியப்பட்டா இங்கேயே இருக்கலாம்."
ஐவான் தன் கோட்டைக் கழற்றிவிட்டு மேஜையின் அருகில் போய் உட்கார்ந்தான். அதற்கு அந்த வியாபாரியின் மனைவி சொன்னாள்: "இந்தக் கோமாளிக்குப் பக்கத்துல என்னால உட்கார முடியாது. ஒரே வியர்வை நாற்றம்..."
அதற்கு தாராஸ் சொன்னான்: "ஐவான், உன் மேல கெட்ட வாடை அடிக்குது. போய் வெளியே உட்கார்ந்து சாப்பிடு."
"சரி..."- ஐவான் சொன்னான்: 'கையில் கொஞ்சம் ரொட்டியை எடுத்துக் கொண்டு அவன் வெளியே சென்றான்.'ஆட்டைக் கொண்டுபோய் மேய்க்கிறதுக்கு நேரமாயிருச்சு...'- தனக்குள் அவன் சொல்லிக் கொண்டான்.
தாராஸை கவனித்துக் கொண்டிருந்த குட்டிச்சாத்தான் இப்போது எந்தவித வேலையும் இல்லாமலிருந்ததால் அன்று இரவு ஏற்கெனவே சொன்னபடி ஐவானை கவனிக்கச் சென்ற தன் நண்பர்களுக்கு உதவுவதற்காக வந்தது. அது நேராக தானிய வயலுக்கு வந்தது. தன் நண்பர்களைத் தேடியது. யாரும் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. நிலத்தில் ஒரு ஓட்டை மட்டும் இருப்பதைப் பார்த்தது. கதிர்கள் இருந்த பக்கம் சென்றது. சேற்றில் ஒரு குட்டிச்சாத்தானின் வால் கிடந்தது. அதைத் தாண்டி கம்புக் கதிர்கள் இருந்த இடத்தில் இன்னொரு ஓட்டை இருந்தது.
‘நிச்சயமா என் நண்பர்களுக்கு ஏதோ கெட்டது நடந்திருக்கு’-அது மனதிற்குள் நினைத்தது: ‘அவங்க இடத்துல இப்போது நான் இருந்து அந்த முட்டாள்பயலை ஒரு வழி பண்ணணும்.’
தொடர்ந்து அந்த குட்டிச்சாத்தான் ஐவானைத் தேடிச் சென்றது. தானியக் கதிர்களிலிருந்து தானியத்தைப் பிரித்து சேகரித்து முடித்திருந்த அவன் காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான். எல்லாரும் ஒரே வீட்டில் இருந்ததால் அவனுடைய இரண்டு சகோதரர்களும் வீட்டில் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், அதனால் மரத்தை வெட்டி தங்களுக்குப் புதிய வீடுகள் அமைத்துத் தரும்படியும் அவனிடம் கேட்டுக்கொண்டார்கள்.
குட்டிச்சாத்தான் காட்டை நோக்கிச் சென்றது. மரங்களில் ஏறி அது உட்கார்ந்து கொண்டு ஐவான் வெட்டிய மரங்கள் கீழே விழாமல் பலவித சிக்கல்களையும் உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஐவான் ஒரு மரத்தை வெட்டினான். வெட்டியபடி அது எந்தவித பிரச்சினையுமில்லாமல் கீழே விழுந்திருக்கவேண்டும். ஆனால், கீழே விழும்போது அது சற்று திரும்பி மற்ற கிளைகளின் மீது போய் விழுந்தது. ஐவான் ஒரு கொம்பை வெட்டி அதன் உதவியால் அந்த மரத்தைத் தள்ளி விட்டான். அதைத் தரையில் விழச் செய்வதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. அவன் இப்போது இன்னொரு மரத்தை வெட்டும் வேலையில் இறங்கினான். இந்த முறையும் முன்பு நடந்ததுதான் நடந்தது. மிகவும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து அந்த மரத்தை அவன் தரையில் விழ வைத்தான். அவன் மூன்றாவதாக ஒரு மரத்தை வெட்டினான். அப்போதும் அதுவேதான் நடந்தது.
ஐம்பது சிறு மரங்களையாவது வெட்டவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தான் ஐவான். ஆனால் பத்து மரங்களைக் கூட அவனால் வெட்டி வீழ்த்த முடியவில்லை. அதற்குள் இரவு வந்துவிட்டது. அவன் மிகவும் களைத்துப் போய்விட்டான். அவனிடமிருந்து கிளம்பிய வெப்பம் மேகத்தைப் போல காற்றில் பரவியது. இருப்பினும், தன் வேலையை நிறுத்தாமல் அவன் தொடர்ந்துகொண்டே இருந்தான். அவனுடைய முதுகு பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. அவனால் நிற்கவே முடியவில்லை. அவன் மரத்திலேயே கோடரியைக் கொத்தி வைத்துவிட்டு, கீழே அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான்.
ஐவான் தன் வேலையை நிறுத்திவிட்டு உட்கார்ந்ததைப் பார்த்த குட்டிச்சாத்தானுக்கு இனம்புரியாத மகிழ்ச்சி உண்டானது.
‘கடைசியல...’ - குட்டிச்சாத்தான் மனதிற்குள் பேசிக் கொண்டது. ‘அவன் களைச்சுப் போயிட்டான். அவன் மரம் வெட்டுறதை விட்டது மாதிரிதான்... இனிமேல் நான் ஓய்வெடுக்க வேண்டியதுதான்!”
குட்டிச்சாத்தான் ஒரு கிளையில் உட்கார்ந்து தூங்க ஆரம்பித்தது. அப்போது திடீரென்று எழுந்த ஐவான் மரத்தில் இருந்த கோடரியை எடுத்தான். எதிர்ப்பக்கத்தில் இருந்து அந்த மரத்தை தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி வேகமாக வெட்டினான். அடுத்த சில நிமிடங்களில் அந்த மரம் கீழே சாய்ந்தது.
குட்டிச்சாத்தான் இப்படியொரு காரியம் நடக்கும் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. மரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அளவிற்கு அதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. மரம் சாய்ந்து கீழே விழுந்ததில் அதன் கால் அதோடு சேர்ந்து பலமாக மாட்டிக் கொண்டது. ஐவான் மரத்தின் கிளைகளை வெட்ட ஆரம்பித்தான். அப்போது மரத்தில் உயிருடன் ஒரு குட்டிச்சாத்தான் தொங்கிக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்து ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டான் ஐவான்.
“என்ன மோசமான காரியம்!” -ஐவான் சொன்னான்: “திரும்பவும் நீ இங்கேயே வந்துட்டியா?”
“நான் வேற...” -குட்டிச்சாத்தான் சொன்னது: “நான் உன் சகோதரன் தாராஸ்கூட இருந்தேன்.”
“நீ யாரா இருந்தாலும், உன் கதி இதுதான்” -ஐவான் சொன்னான். அவன் தன் கோடாரியைச் சுழற்றி அதன் கீழ்ப்பகுதியால் குட்டிச்சாத்தானைத் தாக்கவேண்டுமென்று நினைத்தான். ஆனால், குட்டிச்சாத்தானோ அவனைப் பார்த்து கருணை காட்டும்படி கெஞ்சியது. “என்னை அடிக்காதே....” அது சொன்னது: “நான் நீ எதைச் செய்யச் சொன்னாலும் செய்யிறேன்.”
“உன்னால என்ன செய்ய முடியும்?”
“நீ எவ்வளவு தங்கம் கேட்டாலும் என்னால உண்டாக்கித் தர முடியும்.”
“அப்படியா? அப்படின்னா எனக்காக கொஞ்சம் தங்கத்தை உண்டாக்கிக் காட்டு பார்க்கலாம்!” எப்படி தங்கம் தயாரிப்பது என்பதை குட்டிச்சாத்தான் அவனுக்குச் செய்து காட்டியது.
“இந்த ஓக் மரத்திலிருந்து கொஞ்சம் இலைகளை எடுக்கணும். அதை உன் கையில வச்சு கசக்கணும். நீ அதைச் செஞ்சவுடனே, தங்கம் உன் கையில இருந்த ‘பொல பொல’ன்னு கொட்ட ஆரம்பிக்கும்.”
ஐவான் கொஞ்சம் ஓக் மர இலைகளை எடுத்து கையில் வைத்து தேய்த்தான். அவனுடைய கைகளிலிருந்து தங்கம் கொட்ட ஆரம்பித்தது.
“இது நல்லா இருக்கே!” -அவன் சொன்னான்: “விடுமுறை காலத்துல பசங்க இதை வச்சு நல்லா விளையாடலாம்.”
“சரி... நான் போகட்டுமா?” -குட்டிச்சாத்தான் கேட்டது.
“சரி...” -ஐவான் குட்டிச்சாத்தானைச் சுதந்திரமாகப் போகவிட்டான். “ரொம்பவும் கவனமா இரு. கடவுள் உன்கூட இருக்கார்...” - அவன் சொன்னான்.
கடவுள் பெயரை அவன் உச்சரித்ததுதான் தாமதம்... தண்ணீரில் வீசி எறியப்பட்ட கல்லைப் போல அந்தக் குட்டிச்சாத்தான் வேகமாக பூமிக்குள் நுழைந்துகொண்டது. கடைசியில் வெளியே தெரிந்தது ஒரு ஓட்டை மட்டும்தான்.
சகோதரர்கள் வீடுகளைக் கட்டி முடித்து தனித்தனியாக வாழ ஆரம்பித்தார்கள். ஐவான் அறுவடை வேலைகளை முடித்தான். பீர் தயாரித்து, தன் சகோதரர்களை மறுநாள் விடுமுறையன்று தன்னுடன் செலவழிக்கும்படி அழைத்தான். ஆனால், அந்த அழைப்பை அவனுடைய சகோதரர்கள் நிராகரித்து விட்டார்கள்.
“நாங்க விவசாயிகளோட விருந்தை விரும்புறது இல்ல” - அவர்கள் சொன்னார்கள்.
அதனால் ஐவான் விவசாயிகளையும் அவர்களின் மனைவிமார்களையும் விருந்திற்கு அழைத்தான். மயக்கமடைந்து கீழே விழும் அளவிற்கு அவன் மது அருந்தினான். பிறகு தெருவில் இறங்கி அங்கிருந்த நடனப் பெண்களை நோக்கி நடந்தான். அந்த நடனப் பெண்களைப் பார்த்து தன்னைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடும்படி கேட்டுக்கொண்டான். அவர்களிடம் அவன் சொன்னான்: “நீங்க பாடினா நீங்க வாழ்க்கையிலேயே இதுக்கு முன்னாடி பார்த்திராத ஒரு பரிசை உங்களுக்கு நான் தருவேன்.”
அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் சிரித்தவாறு அவனைப் புகழ்ந்து பாட்டு பாடினார்கள். பாடலைப் பாடி முடித்தவுடன் அவர்கள் சொன்னார்கள்: “இப்போ உன் பரிசைக் கொடு பார்ப்போம்.”
“நான் போயி கொண்டுட்டு வர்றேன்”- அவன் சொன்னான்.
அடுத்த நிமிடம் அவன் விதைகள் வைக்கப் பயன்படும் கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு காட்டை நோக்கி ஓடினான். அவனைப் பார்த்து அந்தப் பெண்கள் சிரித்தார்கள். “அவன் ஒரு முட்டாள்!” பிறகும் அவர்கள் வேறு பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் ஐவான் தான் கொண்டுசென்ற கூடையில் எதையோ கனமாகச் சுமந்துகொண்டு திரும்பி வந்தான்.
“நான் உங்களுக்கு அந்தப் பரிசைத் தரவா?”
“ம்... கொடு...”
ஐவான் கை நிறைய தங்கத்தை எடுத்து அந்தப் பெண்கள் மீது வீசி எறிந்தான். தங்கள்மீது விழும் தங்கத்தை பிடித்து யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்ற எண்ணம் அவனுக்கு. அவர்களைச் சுற்றி நின்றிருந்த ஆண்கள் பாய்ந்து ஓடிவந்து அந்தத் தங்கத்தை அவர்களிடமிருந்து பிடுங்கினார்கள். ஒரு வயதான கிழவி அந்தக் கூட்டத்தில் சிக்கி சாகவேண்டியவள், தப்பித்துக் கொண்டாள். அவர்களின் அந்தச் செயலைப் பார்த்து ஐவான் விழுந்து விழுந்து சிரித்தான்.
“ஏ... முட்டாள்களே!” - அவன் சொன்னான்: “ஏன் அந்த வயதான கிழவியைப் போட்டு நசுக்குறீங்க? அமைதியா இருங்க. நான் உங்களுக்கு மேலும் கொஞ்சம் தங்கத்தைத் தர்றேன்.” சொன்னதோடு நிற்காமல் அவன் மேலும் தங்கத்தை அவர்கள்மீது எறிந்தான். மக்கள் அவனைச் சுற்றிலும் கூடிவிட்டார்கள். தன்னிடமிருந்த தங்கம் முழுவதையும் ஐவான் அவர்கள் மீது வீசினான். அவர்கள் மேலும் தங்கம் வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு ஐவான் சொன்னான்: “இப்போ என்கிட்ட இருந்தது அவ்வளவுதான். இன்னொரு தடவை நான் மேலும் கொஞ்சம் தங்கம் தர்றேன். நாம இப்போ நடனம் ஆடுவோம். நீங்க உங்க பாடல்களை எனக்காகப் பாடுங்க.”
அந்தப் பெண்கள் பாட ஆரம்பித்தார்கள்.
“உங்க பாடல்கள் அவ்வளவு நல்லா இல்லியே!” என்றான் அவன்.
“இதை விட நல்ல பாட்டு உனக்கு எங்கே கிடைக்கும்?” -அவர்கள் கேட்டார்கள்.
“சீக்கிரமே உங்களுக்குக் காட்டுறேன்.”
அவன் நேராகத் தானியங்கள் இருந்த இடத்திற்குச் சென்றான். ஒரு கதிர்க்கொத்தை எடுத்தான். தரையில் அதை நிற்கவைத்து அவன் சொன்னான்:
“ஏ கதிரே! என் அடிமை
இந்த விஷயத்தைச் சொன்னான்.
ஒவ்வொரு கதிரும் ஒரு வீரனாக மாறட்டும்”
அடுத்த நிமிடம் அந்தக் கதிர்க்கொத்து கீழே சாய்ந்து விழ, ஏராளமான வீரர்கள் அதிலிருந்து வந்தார்கள். ட்ரம்களும் ட்ரம் பெட்களும் ஒலிக்க ஆரம்பித்தன. ஐவான் அந்த வீரர்களைப் பார்த்து இசை எழுப்பியபடி பாடச் சொன்னான். அவன் அவர்களை தெரு வழியே அழைத்துச் சென்றான். மக்கள் ஆச்சரியப்பட்டு அந்தக் காட்சியைப் பார்த்தனர். வீரர்கள் இசை எழுப்பிக் கொண்டே பாடினார்கள். தொடர்ந்து ஐவான் யாரும் தன்னைப் பின்பற்றாமல் பார்த்துக் கொண்டே அவர்களை தானியங்களை அடிக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று, மீண்டும் அவர்களை தானியக் கதிர்களாக மாற்றினான். அந்தக் கதிர்களை மீண்டும் அவை இருந்த இடத்தில் கொண்டுபோய் வைத்தான்.
பிறகு அவன் தன் வீட்டிற்குச் சென்று லாயத்தில் படுத்து உறங்கத் தொடங்கினான்.
சைமன் மறுநாள் காலையில் முதல்நாள் நடைபெற்ற எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவன் நேராகத் தன் சகோதரனிடம் வந்தான்.
“சொல்லு... அந்த வீரர்கள் உனக்கு எங்கேயிருந்து கிடைச்சாங்க? அவங்களை நீ எங்கே அழைச்சிட்டுப் போனே?”
“அதை தெரிஞ்சு நீங்க என்ன செய்யப்போறீங்க?” -ஐவான் கேட்டான்.
தெரிஞ்சு என்ன செய்யப்போறேனா? வீரர்களை வச்சு ஒரு ஆளு எது வேணும்னாலும் பண்ணலாமே! ஒரு நாட்டையே பிடிக்கலாம்.”
அதைக் கேட்டு ஐவான் ஆச்சரியப்பட்டான்.
“உண்மையாகவா? நீங்க ஏன் இந்த விஷயத்தை முன்னாடியே என்கிட்ட சொல்லல? உங்களுக்கு எவ்வளவு வீரர்கள் வேணுமோ, அவ்வளவு வீரர்களை நான் உண்டாக்கித் தர்றேன். சகோதரியும் நானும் சேர்ந்து எவ்வளவு கதிர்களை அடிச்சு வச்சிருக்கோம் தெரியுமா?”
ஐவான் தானியங்கள் சேமித்து வைத்திருக்கும் இடத்திற்கு தன் சகோதரனை அழைத்துக்கொண்டு வந்து சொன்னான்:
“இங்க பாருங்க... நான் உங்களுக்காக சில வீரர்களை உருவாக்கினா, நீங்க உடனடியா அவங்களை அழைச்சிட்டு போயிடணும். அவங்களுக்கு நாம சரியா சாப்பாடு போட்டு கவனிக்கலைன்னா, அவங்க ஒரே நாள்ல இந்த முழு கிராமத்தையும் சாப்பிட்டுடுவாங்க....”
உடனடியாக வீரர்களுடன் தான் போவதாக வாக்குறுதி தந்தான் சைமன். அந்தக் கணமே ஐவான் வீரர்களை உருவாக்கும் வேலையில் இறங்கினான். அவன் ஒரு கதிர்க்கொத்தை எடுத்து தரையில் வைத்தான். கூட்டமாக சில வீரர்கள் அதிலிருந்து வந்தார்கள். இன்னொரு கதிர்க் கொத்தை எடுத்து மீண்டும் தரையில் வைத்தான். இரண்டாவது கூட்டமாக வீரர்கள் உருவானார்கள். அந்த இடம் முழுக்க நிற்கும் அளவிற்கு ஏராளமான வீரர்களை ஐவான் உருவாக்கினான்.
“போதுமா?” - அவன் கேட்டான்.
சைமனுக்கு உண்டான சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அவன் சொன்னான்: “போதும்... போதும்... நன்றி ஐவான்.”
“சரி... இன்னும் வீரர்கள் உங்களுக்குத் தேவைப்பட்டா, திரும்பவும் வாங்க. நான் உருவாக்கித் தர்றேன். இந்த சீசன்ல நம்மக்கிட்ட ஏராளமான கதிர்கள் இருக்கே!”
சைமன் அந்த வீரர்கள் படைக்கு அந்த நிமிடத்திலேயே தலைமை தாங்க ஆரம்பித்தான். வீரர்களை ஒழுங்காக நிற்க வைத்து, கட்டமைப்புடன் அவர்களை வழி நடத்தியவாறு போர் புரிவதற்காகப் புறப்பட்டான்.
சைமன் அங்கிருந்து கிளம்பியவுடன், தடியனான தாராஸ் அங்கு வந்தான். முதல்நாள் நடைபெற்ற சம்பவத்தை அவனும் கேள்விப்பட்டிருந்தான். அவன் தன் சகோதரனைப் பார்த்துச் சொன்னான்: “உனக்கு எங்கேயிருந்து தங்கம் வந்ததுன்னு எனக்குக் காட்டு. என் கையில ஆரம்பத்துல கொஞ்சம் தங்கம் இருந்ததுன்னா, நான் அதை வெச்சு என்னென்னவோ செய்வேன். அதை வச்சு நான் உலகம் முழுக்க இருக்குற பணத்தை என் கைக்கு வர்றமாதிரி செய்திடுவேன்.”
அதைக்கேட்டு ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டான் ஐவான்.
“உண்மையாகவா? இதை முன்கூட்டியே நீ சொல்லியிருக்கக் கூடாதா? எவ்வளவு வேணுமோ அவ்வளவு தங்கத்தை உனக்கு நான் உண்டாக்கித் தர்றேன்.”
அதைக்கேட்டு அவனுடைய சகோதரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“ஆரம்பத்தில எனக்கு, மூணு கூடை நிறைய தங்கம் உண்டாக்கித்தா, போதும்...”
“சரி...” -ஐவான் சொன்னான்: “காட்டுக்கு என் கூட வா. ஆட்டை அங்கே மேயவிட்ட மாதிரியும் இருக்கும்.”
அவர்கள் காட்டை நோக்கி நடந்தார்கள். ஐவான் ஓக் இலைகளை கையில் வைத்து தேய்த்தான். ஒரு பெரிய குவியல் தங்கத்தை அவன் உண்டாக்கினான்.
“போதுமா?”
தாராஸ் அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தான்.
“இப்போதைக்கு இதுபோதும். நன்றி ஐவான்.”
“சரி...” - ஐவான் சொன்னான்: “இன்னும் தங்கம் வேணும்னா எப்ப வேணும்னாலும் வா. நிறைய இலைகள் இங்கே இருக்கு.”
தாராஸ் ஒரு வண்டி நிறைய தங்கக்காசுகளை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்காகப் புறப்பட்டான்.
ஐவானின் இரண்டு சகோதரர்களும் ஊரைவிட்டு சென்றுவிட்டார்கள். சைமன் போர் புரிவதற்காகவும் தாராஸ் பொருட்களை வாங்கி, விற்பதற்கும் போய்விட்டார்கள். சைமன் ஒரு நாட்டை போர் புரிந்து கடைசியில் வென்று தனக்கென ஆக்கிக் கொண்டான். தாராஸ் வியாபாரத்தில் ஏராளமான பணத்தைச் சம்பாதித்தான்.
இரண்டு சகோதரர்களும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். தான் போர் வீரர்களைப் பெற்ற விஷயத்தை சைமன் தாராஸிடமும், தான் பொற்காசுகளைப் பெற்ற விஷயத்தை தாராஸ் சைமனிடமும் கூறிக் கொண்டார்கள். சைமன் தன் சகோதரனைப் பார்த்து சொன்னான். “நான் ஒரு நாட்டைப் பிடிச்சிட்டேன். இப்போ உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். ஆனா, என் வீரர்களைக் காப்பாத்துற அளவுக்கு என்கிட்ட பணம் இல்லை...”
அதற்கு தாராஸ் சொன்னான்: “நான் ஏராளமான பணத்தைச் சம்பாதிச்சிட்டேன். ஆனா, தொந்தரவு என்னன்னா அந்தப் பணத்தைப் பத்திரமா பாதுகாக்குறதுக்கு என்கிட்ட ஆள் இல்லை.”
தொடர்ந்து சைமன் சொன்னான்: “நாம நம்ம தம்பிக்கிட்ட போவோம். நான் அவன்கிட்ட சொல்லி இன்னும் நிறைய வீரர்களைத் தயார் பண்ணித்தரச் சொல்றேன். அந்த வீரர்களை நான் உனக்குத் தர்றேன். அவங்களை வச்சு நீ உன்கிட்ட இருக்குற பணத்தைப் பாதுகாத்துக்கோ. தம்பிக் கிட்ட சொல்லி நிறைய பொற்காசுகளை உண்டாக்கச் சொல்லு. அதைவச்சு நான் என் வீரர்களுக்குச் சாப்பாடு போட்டு காப்பாத்திக்கிறேன்.”
அவர்கள் இருவரும் ஐவானிடம் சென்றார்கள். ஐவானிடம் சைமன் சொன்னான்: “அன்பு தம்பியே, என்கிட்ட இருக்கிற வீரர்கள் எனக்குப் போதாது. இன்னும் நிறைய வீரர்கள் வேணும்.”
அதற்கு ஐவான் தலையை ஆட்டினான்.
“மாட்டேன்... இனிமேல் நான் வீரர்களைப் படைக்கிறதா இல்ல.”
“வீரர்களைப் படைச்சு தர்றதா என்கிட்ட நீ சொன்னியே!”
“நான் அப்போ சொன்னேன். ஆனா, இனிமேல் வீரர்களைப் படைக்கிறதா இல்ல.”
“ஏன்டா முட்டாள்?”
“உன் வீரர்கள் ஒரு மனிதனைக் கொன்னுட்டாங்க. சாலையோரத்துல ஒருநாள் நான் உழுதுக்கிட்டு இருந்தேன். அப்போ ஒரு பொம்பளை வண்டியில ஒரு பொணத்தை வச்சு அழுதுக்கிட்டு போனா. செத்துப்போனது யாருன்னு அவளைப் பார்த்துக் கேட்டேன். அவ ‘சைமனோட வீரர்கள் என் புருஷனை போர்ல கொன்னுட்டாங்க’ன்னு சொன்னா. வீரர்கள் இசை மீட்டுவார்கள்னு மட்டும் தான் நான் நினைச்சிருந்தேன். ஆனா, அவங்க ஒரு ஆளையே கொன்னிருக்காங்க. அதுனால இனிமேல் உனக்கு நான் வீரர்களைத் தர்றதா இல்ல.”
இந்த விஷயத்தில் அவன் மிகவும் பிடிவாதமாக இருந்தான். இனிமேல் வீரர்களை உருவாக்குவதில்லை என்று உறுதியாக முடிவெடுத்திருந்தான்.
தாராஸ் ஐவானிடம் மேலும் தனக்கு பொற்காசுகள் வேண்டும் என்றான். அதற்கும் ஐவான் தலையை ஆட்டினான்.
“மாட்டேன்... நான் இனிமேல் பொற்காசுகள் உனக்கு தர்றதா இல்ல.” என்றான்.
“நீ எனக்கு வாக்குறுதி தந்தாயே?”
“வாக்குறுதி தந்தது உண்மைதான். ஆனா, இனிமேல் நான் பொற்காசுகள் உண்டாக்குறதா இல்ல.”
“ஏன்டா முட்டாளே?”
“உன் பொற்காசுகள் மைக்கேல் மகளோட மாட்டைக் கொண்டு போயிடுச்சு.”
“எப்படி?”
“கொண்டு போயிடுச்சு. அவ்வளவுதான். மைக்கேலோட மகள்கிட்ட ஒரு மாடு இருந்துச்சு. அவ குழந்தைங்க அந்த மாட்டுப் பாலைத்தான் குடிப்பாங்க. ஒருநாள் அந்தப் பசங்க என்கிட்ட வந்து பால் கேட்டாங்க. நான் அவங்களைப் பார்த்து ‘உங்க மாடு எங்கே போச்சு?’ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க சொன்னாங்க- ‘தாராஸோட வேலைக்காரங்க வந்து எங்க அம்மாகிட்ட மூணு பொற்காசுகளைக் கொடுத்தாங்க. எங்க அம்மா அவங்ககிட்ட பதிலுக்கு மாட்டைக் கொடுத்துட்டாங்க. இப்போ எங்களுக்குப் பால் குடிக்க மாடு இல்ல...’ன்னு. பொற்காசுகளை வச்சு நீ வியாபாரம் பண்ணுவேன்னு நான் நினைச்சேன். ஆனா, நீயோ சின்னப் பசங்களோட மாட்டை எடுத்துட்டுப் போயிட்டே. அதுனால இனிமேல் உனக்கு நான் பொற்காசு உருவாக்கித் தர்றதா இல்ல.”
இந்த விஷயத்தில் ஐவான் மிகவும் பிடிவாதமாக இருந்தான். நிச்சயமாக அவன் அதற்குமேல் பொற்காசுகளை உருவாக்க மாட்டான். அதனால் அவனுடைய இரண்டு அண்ணன்மார்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். போகும் வழியில் தங்களின் இந்த கஷ்டமான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி இருவரும் விவாதித்தார்கள். சைமன் சொன்னான்:
“இங்கே பாரு. என்ன செய்யணும்னு நான் சொல்றேன். நீ உன்கிட்ட இருக்கிற பணத்துல ஒரு பகுதியை எனக்குத் தா. நான் அதை வச்சு என் வீரர்களைப் பாத்துக்குறேன். அதேபோல் என்னோட நாட்டுல பாதியை வீரர்களோட உனக்கு நான் தர்றேன். அவங்க உன் செல்வத்தைப் பாதுகாப்பாங்க.”
சைமன் சொன்னதற்கு தாராஸ் சம்மதித்தான். அதன்படி சகோதரர்கள் இருவரும் தங்களிடமிருந்ததைப் பகிர்ந்து கொண்டார்கள். அந்த விதத்தில் இருவரும் அரசர்களாக ஆனார்கள். இருவரும் பணக்காரர்களாகவும் ஆனார்கள்.
ஐவான் வீட்டில் இருந்துகொண்டு தன்னுடைய தந்தையையும் தாயையும் எந்தவித கவலையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். தன்னுடைய ஊமை சகோதரியுடன் சேர்ந்து வயலில் வேலை செய்தான். இந்தச் சூழ்நிலையில் ஐவானின் நாய்க்கு உடல்நலமில்லாமல் போனது. அது மிகவும் இளைத்துப்போய் மரணத்தின் வாயிலில் இருந்தது. அதன்மீது பரிதாபப்பட்ட ஐவான் தன் சகோதரியிடமிருந்து கொஞ்சம் ரொட்டியை வாங்கித் தன் தொப்பிக்குள் வைத்துக்கொண்டு போய் நாயிடம் தூக்கி எறிந்தான். தொப்பி அப்போது கிழிந்ததோடு அதிலிருந்து ரொட்டியுடன் சேர்ந்து ஒரு சிறு வேரும் நிலத்தில் விழுந்தது. அந்த வயதான நாய் ரொட்டியுடன் சேர்த்து அந்த வேரையும் தின்றது. அந்த வேரை அது தின்றதுதான் தாமதம். அந்தப் பெண் நாய் வேகமாக குதித்து விளையாடத் தொடங்கிவிட்டது. குரைத்துக் கொண்டே அது தன் வாலை ஆட்டியது. அந்த வேரைத் தின்றவுடன் அந்த நாயின் நோயெல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து, அது நல்ல நிலைக்கு வந்துவிட்டது.
ஐவானின் தாயும் தந்தையும் அதைப் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டார்கள்.
“நீ எப்படி நாயைக் குணப்படுத்தினே?” - அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு ஐவான் சொன்னான்: “எந்த வலியையும் இல்லாம செய்யிற மாதிரி என்கிட்ட இரண்டு வேர்கள் இருந்துச்சு. அந்த நாய் அதுல ஒண்ணை சாப்பிட்டுச்சு. சரியாயிடுச்சு!”
இந்த நேரத்தில் அரசனின் மகள் நோய்வாய்ப்பட்டாள். ஒவ்வொரு நகரத்திலும் கிராமப் பகுதிகளிலும் கேட்கிற மாதிரி அரசன் ஒரு அறிவிப்பு செய்தான். தன்னுடைய மகளுக்கு வந்திருக்கும் நோயை குணப்படுத்தக் கூடிய மனிதன் தன் நாட்டில் யாராவது இருக்கிறார்களா என்றும்; அப்படி நோயைக் குணப்படுத்தக் கூடியவன் இன்னும் திருமணமாகாத இளைஞனாக இருக்கும்பட்சம், அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் அரசன் எல்லோரும் கேட்கும்வண்ணம் அறிவித்தான். எல்லா ஊர்களிலும் அந்தச் செய்தி அறிவிக்கப்பட்ட மாதிரி ஐவானின் கிராமத்திலும் அறிவிக்கப்பட்டது.
ஐவானின் தந்தையும் தாயும் ஐவானை அழைத்துச் சொன்னார்கள்: “அரசன் என்ன அறிவிச்சிருக்காருன்னு கேள்விப்பட்டியா? உன்கிட்ட எந்தவித நோயையும் குணப்படுத்தக்கூடிய ஒரு வேர் இருக்கிறதா சொன்னே. போ... போயி அரசோரட மகளுக்கு வந்த நோயை ஒண்ணுமில்லாமப் பண்ணி, அவளை அதுலயிருந்து காப்பாற்று. அரசன் உன் வாழ்க்கை ரொம்பவும் சிறப்பா இருக்கும்படி செய்திடுவார்.”
“சரி...” என்றான் ஐவான்.
ஐவான் புறப்படுவதற்குத் தயாரானான். இருப்பதிலேயே பார்க்க மிகவும் நன்றாக இருக்கக்கூடிய ஆடைகளை அவனுக்கு அணிவித்தார்கள். வீட்டின் வெளிவாசல் கதவைத் தாண்டி வெளியே வந்ததும், எதிரில் ஒரு பிச்சைக்காரப் பெண் மடங்கிய கைகளுடன் நின்றிருப்பதை ஐவான் பார்த்தான்.
“நான் கேள்விப்பட்டேன்” - அந்தப் பெண் சொன்னாள்: “நீ ஆளுங்களோட நோயைக் குணப்படுத்துவேன்னு. என் கையில் இருக்கிற நோயை நீ குணப்படுத்தணும். இந்த நோயால என் காலணியைக் கூட என்னால ஒழுங்கா போட முடியல."
"அப்படியா?" என்ற ஐவான் தன் கையிலிருந்த சிறிய வேரை அந்தப் பிச்சைக்காரப் பெண்ணிடம் கொடுத்து அதை உடனடியாகத் தின்னும்படி சொன்னான். அந்தப் பெண் தின்றதுதான் தாமதம், தன் நோயிலிருந்து முழுமையாக அவள் குணமாகி விட்டாள். இப்போது எந்தவித பிரச்சினையுமில்லாமல் அவள் தன் கையை அசைக்க முடிந்தது.
ஐவானின் தந்தையும் தாயும் ஐவானுடன் சேர்ந்து அரசனைப் பார்ப்பதற்காகக் கிளம்பினார்கள். ஆனால், தன் கையிலிருந்த ஒரே வேரை அந்தப் பிச்சைக்காரப் பெண்ணின் நோயைக் குணப்படுத்துவதற்காக அவன் கொடுத்துவிட்டான் என்பதையும், தற்போது அவனிடம் அரசனின் மகளுக்கிருக்கும் நோயைக் குணப்படுத்துவதற்கான வேர் எதுவும் இல்லை என்பதையும் தெரிந்ததும் அவர்கள் அவனை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்.
"நீ ஒரு பிச்சைக்காரப் பொம்பளையைப் பார்த்து பரிதாபப்படுறே. ஆனா, ஒரு அரசனோட மகளைப் பற்றி நீ கவலைப்படல"- அவர்கள் சொன்னார்கள். ஆனால், அரசனின் மகளுக்காகவும் உண்மையிலேயே வருத்தப்பட்டான் ஐவான். அதனால் அவன் குதிரையை அவிழ்த்து வண்டியில் கட்டி வைக்கோலைப் போட்டு உட்கார்ந்து வண்டியைக் கிளப்பினான்.
"நீ எங்க போற முட்டாளே?"
"அரசனோட மகளைக் குணப்படுத்த."
"குணமாக்குறதுக்கு உன்கிட்ட என்ன இருக்கு?"
"அதைப்பற்றிக் கவலையில்ல..."-என்று சொல்லியவாறு அவன் வண்டியை ஓட்டினான்.
அவன் நேராக அரசனின் அரண்மனைக்கு வந்தான். அரண்மனையில் அவன் கால் வைத்ததுதான் தாமதம், அரசனின் மகள் நோய் குணமாகி சரியாகிவிட்டாள்.
அரசனுக்கு உண்டான சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஐவான் அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். அவனுக்கு விலை உயர்ந்த ஆடைகளை அணிவித்தான் அரசன்.
"இனிமேல் நீதான் என் மருமகன்..."- அரசன் சொன்னான்.
"அப்படியே இருக்கட்டும்..." ஐவான் சொன்னான்.
ஐவான் இளவரசியை மணம் முடித்தான். இளவரசியின் தந்தை அடுத்த சில நாட்களில் மரணத்தைத் தழுவினான். அதற்குப்பிறகு ஐவான் அரசன் ஆனான். இந்த விதத்தில் மூன்று சகோதரர்களும் அரசர்களாக ஆகிவிட்டார்கள்.
மூன்று சகோதரர்களும் தங்கள் நாடுகளை ஆட்சி செய்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சைமன் மிகவும் சிறப்பான வாழ்க்கை நடத்தினான். தானியக் கதிரிலிருந்து உருவாக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு உண்மையான போர்வீரர்களை அவன் உருவாக்கினான். பத்து வீடுகளுக்கு ஒரு போர்வீரன் கட்டாயம் வேண்டும் என்று அவன் நாடு முழுக்க கட்டளையிட்டு, அதைச் செயல் வடிவிலும் காட்டினான். அவ்வாறு வரும் வீரர்கள் உயரமானவர்களாகவும், சுத்தம் உள்ளவர்களாகவும், நல்ல தோற்றத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கும்படி அவன் பார்த்துக் கொண்டான். இப்படி பல வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி கிடைக்கும்படி சைமன் செய்தான். யாராவது தன்னை எதிர்த்து நின்றால், உடனடியாக அவன் தன் வீரர்களை அனுப்பி அவர்களை அழித்தான். அதனால் அவனைப் பார்த்தாலே எல்லாரும் பயந்தார்கள். அவனுடைய வாழ்க்கை வண்டி எந்தவித பிரச்சினையுமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. தான் கண்ணில் எதைப் பார்த்தாலும், அடுத்த நிமிடம் அது தனக்குக் கிடைக்கும்படி அவன் செய்தான். அவன் தன் வீரர்களை அனுப்பி தான் ஆசைப்பட்டது எதுவானாலும் கொண்டு வரும்படி செய்தான்.
தடியனான தாராஸும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தான். ஐவானிடம் பெற்ற பணத்தை அவன் வீண்செய்யவே இல்லை. மாறாக, பல மடங்கு அதைப் பெருக்கினான். அவன் சட்டம், ஒழுங்கு நிலைமையை நாட்டில் கொண்டு வந்தான். தன்னிடமிருந்த பணத்தை அவன் பாதுகாப்பான அறைகளில் வைத்து கவனமாகப் பார்த்துக் கொண்டான். மக்களுக்கு வரிகள் விதித்தான். தேர்தல்வரி என்ற ஒன்றை அவன் உண்டாக்கினான். நடப்பதற்கும் வாகனங்களை ஓட்டுவதற்கும் கட்டணம் விதித்தான். காலணிகளுக்கும், காலுறைகளுக்கும், ஆடைகளுக்கும் வரி போட்டான். எதுவெல்லாம் தனக்கு வேண்டும் என விரும்பினானோ, அதை அவன் பெற்றான். பணத்திற்காக அவனுக்கு மக்கள் எதை வேண்டுமென்றாலும் கொண்டுவந்தார்கள். அவனுக்காக வேலை செய்ய அவர்கள் எப்போதும் தயாராக இருந்தார்கள். அவர்களுக்குத் தேவை பணம் மட்டுமே.
முட்டாளான ஐவானின் வாழ்க்கையும் மோசமாக இல்லை. தன்னுடைய மாமனாரை மண்ணுக்குள் புதைத்த மறுநிமிடமே தான் அணிந்திருந்த விலை மதிப்புள்ள ஆடைகளை அவன் தன் உடம்பிலிருந்து கழற்றினான். அவற்றைத் தன் மனைவியிடம் தந்து ஒரு அறையில் வைக்கும்படி சொன்னான். தான் எப்போதும் அணியும் பழைய ஆடைகளை எடுத்து அவன் அணிந்தான். பிய்ந்து போன விவசாயிகள் அணியும் காலணிகளை எடுத்து அவன் காலில் மாட்டினான். மீண்டும் வேலை செய்வதில் அவன் தீவிரமாக இறங்கினான்.
"எனக்கு ரொம்பவும் சோர்வா இருக்கு"- அவன் சொன்னான்: "நான் ரொம்பவும் சதைப்பிடிப்பா ஆயிட்டேன். எனக்கு ருசின்னா என்னன்னே தெரியாமப் போச்சு. ஒழுங்கா தூங்கி எவ்வளவோ நாட்கள் ஆயிடுச்சு." தொடர்ந்து அவன் தன் தாயையும் தந்தையையும் ஊமை சதோதரியையும் தன்னுடன் கொண்டு வந்து வைத்துக்கொண்டான். முன்பு வேலை செய்ததைப் போலவே இப்போதும் தன் வேலையை அவன் தொடர்ந்தான்.
மக்கள் சொன்னார்கள்: "நீங்க இப்போ அரசர்!"
"எனக்குத் தெரியும்"- அவன் சொன்னான்: "ஆனா, அரசனும் சாப்பிடணுமே!"
அவனுடைய அமைச்சர்களில் ஒருவர் அவனிடம் வந்து சொன்னார்: "சம்பளம் கொடுக்கிறதுக்கு நம்மகிட்ட பணமே இல்ல..."
"அப்படியா?"- அவன் சொன்னான்: "அப்படின்னா அவங்களுக்குச் சம்பளம் தரவேண்டாம்."
"சம்பளம் இல்லைன்னா, யாருமே வேலை செய்ய மாட்டாங்க."
"சரி... அப்படியே இருக்கட்டும். யாருமே வேலை செய்ய வேண்டாம். அவங்க செய்யிறதுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு. வண்டியில உரத்தை ஏற்றிட்டுப் போகணும். எவ்வளவோ குப்பைகளை அள்ள வேண்டியதிருக்கு."
மக்கள் கடைசியாக ஐவானைப் பார்க்க வந்தார்கள். ஒரு ஆள் சொன்னான்: "அவன் என்னோட பணத்தைத் திருடிட்டான்"- அதற்கு ஐவான் சொன்னான்: "அவன் அப்படி செஞ்சான்னா அதுக்கு அர்த்தம் என்ன? அவனுக்கு அது தேவைப்படுதுன்றது தானே?"
ஐவான் சரியான முட்டாள் என்பதை அவர்கள் எல்லாரும் புரிந்து கொண்டார்கள். அவனுடைய மனைவி அவனிடம் சொன்னாள்: "மக்கள் எல்லாரும் உங்களை முட்டாள்ன்றாங்க."
"சரிதான்..."- ஐவான் சொன்னான்.
அவனுடைய மனைவி அவன் சொன்னதை பலமுறை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தாள். சொல்லப்போனால் அவள்கூட ஒரு முட்டாள்தான்.
"நான் என் கணவனுக்கு எதிரா என்ன சொல்லமுடியும்? ஊசி எந்தப்பக்கம் போகுதோ, அந்தப்பக்கம் நூல் போக வேண்டியது தான்" என்றாள் அவள்.
அவள் தான் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஆடைகளைக் கழற்றினாள். அவற்றை ஒருஅறையில் கொண்டுபோய் வைத்தாள். சாதாரண ஆடைகளை அணிந்து கொண்டு ஊமை பெண்ணிடம் சென்று வேலை செய்வது எப்படி என்பதை அவள் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். படிப்படியாக அவள் வேலை செய்யக் கற்றுக் கொண்டு, தன் கணவனுக்கு உதவியாக இருந்தாள்.
ஐவானின் நாட்டில் இருந்த அறிவாளிகள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினார்கள். முட்டாள்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தனர்.
யாரிடமும் பணம் இல்லை. ஒவ்வொருவரும் வேலை செய்து வாழ்ந்தார்கள். அவர்கள் தங்களையும் காப்பாற்றிக்கொண்டு, மற்றவர்களையும் காப்பாற்றினார்கள்.
வயதான சாத்தான் மூன்று சதோதரர்களையும் அழிப்பதாகச் சொல்லிவிட்டுப் போன குட்டிச்சத்தான்களுக்காக நீண்டகாலம் காத்திருந்தான். ஆனால், குட்டிச்சாத்தான்களிடமிருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை. அதனால் நடந்த விஷயம் என்னவென்பதை அறிந்து வரலாம் என்று அவனே கிளம்பிவிட்டான். குட்டிச்சாத்தான்களை அவன் தேடித்தேடிப் பார்த்தான். ஆனால், மூன்று குட்டிச்சாத்தான்களுக்குப் பதிலாக அவன் மூன்று ஓட்டைகளைத் தான் பார்த்தான்.
"நிச்சயமா அவங்க தோத்துட்டாங்க"- தனக்குள் அந்த சாத்தான் சொல்லிக் கொண்டான்: "இனிமேல் நானே நேரடியா விஷயத்தைக் கவனிச்சாதான் சரியா வரும்."
அந்த நிமிடமே அந்த மூன்று சதோதரர்களையும் பார்க்க வேண்டும் என்று அவன் கிளம்பிவிட்டான். ஆனால், அந்த மூன்று சகோதரர்களும் அவர்களின் பழைய இடங்களில் இல்லை. அவர்கள் மூவரும் மூன்று தனித்தனி நாடுகளில் இருப்பதை அவன் தெரிந்து கொண்டான். மூவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது- அந்த விஷயம் வயதான அந்த சாத்தானை பாடாய்ப்படுத்தியது.
"ம்..."-சாத்தான் தனக்குள் சொல்லிக்கொண்டான்: "இந்த விஷயத்தை நானே கையாண்டாதான் சரியா இருக்கும்."
முதலில் அவன் சைமனின் நாட்டுக்குச் சென்றான். அவன் தன்னுடைய வடிவத்தில் அங்கு செல்லவில்லை. மாறாக, ஒரு இராணுவ அதிகாரியைப் போல் உடையணிந்து கொண்டு சைமனின் அரண்மனையை நோக்கிப் பயணம் செய்தான்.
"நான் கேள்விப்பட்டேன், சைமன் அரசரே நீங்க மிகப்பெரிய போர்வீரர்ன்ற உண்மையை... போர் பற்றிய விஷயங்கள் எனக்கு நல்லா தெரியும். அதுனால உங்களுக்கு சேவை செய்ய நான் விரும்புறேன்."
அரசன் சைமன் சாத்தானைப் பார்த்துப் பல கேள்விகளைக் கேட்டான். மிகவும் அறிவாளியான மனிதரைப்போல் தோன்றியதால், அந்த நிமிடத்திலேயே ராணுவ அதிகாரி உடையில் இருந்த சாத்தானை அவன் வேலைக்கு எடுத்துக் கொண்டான்.
புதிதாக வந்திருக்கும் படைத்தளபதி அரசன் சைமனுக்கு உறுதியான படை அமைப்பது எப்படி என்பதைக் கற்றுத் தந்தான்.
"முதல்ல... நாம வீரர்களின் எண்ணிக்கையை மேலும் பெருக்கணும். உங்க நாட்டுல ஏற்கெனவே நிறைய பேர் வேலை இல்லாம இருக்காங்க. நாட்டுல இருக்கிற எல்லா இளைஞர்களையும் ஒருவர் விடாம வேலைக்கு எடுக்கணும். அப்படின்னா இதுக்கு முன்னாடி இருந்ததைவிட, உங்கக்கிட்ட ஐந்து மடங்கு வீரர்கள் அதிகமா இருப்பாங்க. ரெண்டாவது... நம்மகிட்ட புது துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் இருக்கணும். ஒரே நேரத்துல நூறு குண்டுகள் வெடிக்கிற துப்பாக்கியை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அந்த குண்டுகள் பட்டாணி மாதிரி காற்றுல பாய்ஞ்சு போகும். மனிதர்களோ, குதிரையோ, சுவரோ எதுவா இருந்தாலும் அந்த நிமிடத்திலேயே அழிக்கக்கூடிய வெடிகுண்டை நான் வாங்கித் தர்றேன். எறிஞ்சா, எல்லாவற்றையும் அழிக்கக்கூடியது அது."
புதிய படைத்தளபதி சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் கவனமாகக் கேட்டான் சைமன். நாட்டில் உள்ள எல்லா இளைஞர்களையும் போர் வீரர்களாக வந்து சேரும்படி உத்தரவு பிறப்பித்தான். நவீன ரக துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் தயாரிக்கக்கூடிய புதிய தொழிற்காலைகளை அவன் உருவாக்கினான். தொடர்ந்து பக்கத்து நாட்டு அரசன் *து படையெடுக்கப் போவதாக ஒரு அதிரடி அறிவிப்பு செய்தான். அந்த நாட்டு படைகள் எதிரில் வந்ததுதான் தாமதம், தன் வீரர்களைப் பார்த்து மழையென துப்பாக்கிக் குண்டுகளை பொழியச் சொன்னான். வெடிகுண்டுகளை வீசி எறிந்து பார்க்குமிடங்களிலெல்லாம் நெருப்பு எழச்செய்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரியின் படையைப் பாதியாக ஆக்கினான். பக்கத்து நாட்டு அரசனால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வேறு வழியில்லை என்கிற சூழ்நிலை உண்டானதும், அவன் தன் நாட்டை சைமனிடம் ஒப்படைத்துவிட்டு சரணாகதி அடைந்துவிட்டான். அப்போது அரசன் சைமன் அடைந்த ஆனந்தத்தைப் பார்க்கவேண்டுமே!
"இப்போ..."- அவன் சொன்னான்: "நான் இந்தியாவோட அரசரை வெற்றிபெறப் போறேன்."
அரசன் சைமனைப் பற்றி இந்தியாவின் அரசன் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தான். புதிதாக பல கண்டுபிடிப்புகளைச் செய்து அவன் தன் படைகளின் பலத்தை பல மடங்கு கூட்டியிருந்தான். இந்திய அரசன் தன்னுடைய நாட்டில் உள்ள எல்லா இளைஞர்களை மட்டுமல்ல, தனியாக இருக்கும் எல்லா பெண்களையும்கூட அவன் தன் போர்ப்படையில் சேர்த்திருந்தான். மொத்தத்தில் அரசன் சைமனின் போர்ப்படையை விட இந்திய அரசனின் படை மிகப்பெரியதாக இருந்தது. சைமனிடம் இருக்கக்கூடிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றைத் தன்னிடமும் இருக்கும்படி அவன் பார்த்துக் கொண்டான். வானவெளியில் பறந்து சென்று வெடிக்கக்கூடிய குண்டுகளை எப்படி மேலேயிருந்து போடுவது என்பதையும் அவன் கண்டுபிடித்தான்.
அரசன் சைமன் இந்திய அரசனுடன் போர் புரிவதற்காகக் கிளம்பினான். இதற்கு முன்பு ஒரு அரசனைப் போரில் வென்றதுபோல் இந்திய அரசனையும் மிகவும் எளிதாக வென்றுவிட முடியும் என்று உறுதியாக நம்பினான். ஆனால் அவன் போட்டிருந்த திட்டமெல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடியாகிவிட்டது. இந்திய அரசன் சைமனின் படையை குறிப்பிட்ட தூரம் வரை கூட நுழைய விடவில்லை. மாறாக, அவன் தன் நாட்டுப் பெண்களை வானவெளியில் பறக்கவிட்டு சைமனின் படைமீது வெடிகுண்டுகளை சரமாரியாகப் பொழியச் செய்தான். கரப்பான் பூச்சிகளைக் கொல்வதற்காக 'போரேக்ஸ்' தூள்களைப் போடுவதைப் போல அந்தப் பெண்கள் சைமனின் படைவீரர்கள் மீது வெடிகுண்டுகளை மழையெனப் பொழிந்தனர். படைவீரர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். கடைசியில் அங்கு நின்றிருந்தது சைமன் மட்டும்தான். இந்திய அரசன் சைமனின் நாட்டைக் கைப்பற்றினான். சைமன் தப்பித்தால் போதும் என்று நாட்டை விட்டு ஓடினான். சைமனை இந்த அளவிற்குக் கொண்டு வந்த சாத்தான் இப்போது அரசன் தாராஸைத் தேடி வந்தான். ஒரு வியாபாரியாகத் தன்னை மாற்றிக்கொண்டு அவன் தாராஸின் நாட்டிற்குள் நுழைந்து வசிக்க ஆரம்பித்தான். அவன் ஒரு வியாபார நிறுவனத்தை ஆரம்பித்து பணத்தைத் தண்ணீரென செலவழித்தான். ஒவ்வொரு பொருளுக்கும் அவன் அதிகமான பணத்தைத் தந்தான். அதனால் இந்தப் புதிய வியாபாரியிடம் பணம் வாங்கவேண்டும் என்பதற்காக ஏராளமான ஆட்கள் அவனைத் தேடி வந்தார்கள்.
இதன் விளைவாக மக்கள் மத்தியில் நல்ல பண நடமாட்டம் உண்டானது. அவர்கள் தாங்கள் செலுத்தவேண்டிய வரிகளை ஒழுங்காகக் கட்டினார்கள். தங்களுக்கிருந்த கடன்கள் முழுவதையும் எளிதாக அடைந்தார்கள். அதைப் பார்த்து அரசன் தாராஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். 'புதிதாக வந்திருக்கிற வியாபாரிக்கு உண்மையிலேயே நன்றி சொல்லணும்'- அரசன் மனதில் நினைத்தான்: 'என்கிட்ட முன்னாடி இருந்ததைவிட இப்போ நிறைய பணம் இருக்கு. இனிமேல் என் வாழ்க்கை ரொம்பவும் செழிப்பா இருக்கும்.'
தொடர்ந்து அரசன் தாராஸ் புதிதாக பல திட்டங்களைப் போட ஆரம்பித்தான். அதன்படி ஒரு புதிய அரண்மனையைக் கட்டினான். அரண்மனைக்குத் தேவையான மரங்களையும், கற்களையும் கொண்டு வரும்படி அவன் மக்களிடம் சொன்னான். அவர்களை அவன் அரண்மனை கட்டும் வேலைக்கு வரும்படி அறிவித்தான். ஒவ்வொன்றுக்கும் அதிகமான பணம் தருவதாகச் சொன்னான். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தனக்காக வேலை செய்வார்கள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவனே ஆச்சரியப்படும் விதத்தில் மக்கள் மரங்களையும் கற்களையும் எடுத்துக்கொண்டு புதிதாக வந்திருக்கும் வியாபாரியைத் தேடிப் போய்க் கொண்டிருந்தார்கள். மக்கள் எல்லாரும் அந்த வியாபாரியிடம் போய் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அரசன் மேலும் அதிகமான பணத்தைத் தருவதாக மக்களுக்கு அறிவிப்புச் செய்தான். ஆனால், அந்த வியாபாரியோ அரசன் தருவதாகச் சொன்னதைவிட அதிகமான பணத்தைத் தந்தான். அரசன் தாராஸிடம் ஏராளமான அளவில் பணம் இருந்ததென்னவோ உண்மை. ஆனால், அந்த வியாபாரியிடம் அதைவிட அதிகமான பணம் இருந்தது. அதன் விளைவாக வியாபாரி எல்லா விஷயங்களிலும் அரசனை மிகவும் சர்வ சாதாரணமாகத் தோற்கடித்தான்.
அரசனின் மாளிகை வேலை சிறிதுகூட நடக்காமல் அப்படியே நின்றுவிட்டது. அரண்மனை கட்டுவதற்கான ஆரம்பவேலை கூட நடக்கவில்லை.
தாராஸ் ஒரு தோட்டம் உண்டாக்கவேண்டுமென்று நினைத்தான். இளவேனிற்காலம் வந்ததும் அவன் மக்களை அழைத்து செடிகளை நடும்படி சொன்னான். ஆனால், மக்களில் ஒருவராவது வரவேண்டுமே! எல்லா மக்களும் அந்த வியாபாரிக்கு ஒரு குளம் உண்டாக்கும் வேலையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். குளிர்காலம் வந்தது. அரசன் புதிய ரோமங்கள் வாங்கி புத்தம் புதிதான ஒரு மேலாடை தனக்கு உண்டாக்க நினைத்தான். அவன் தன் ஆட்களை அதற்கென அனுப்பினான். ஆனால், அவன் ஆட்களோ போன கையுடன் திரும்பி வந்தார்கள். அவர்கள் சொன்னார்கள்: "ரோமங்கள் எங்கேயும் கிடைக்கல. அந்த வியாபாரி எல்லாத்தையும் வாங்கிட்டார். அவர் அதிகமான விலை கொடுத்து அது எல்லாத்தையும் வாங்கி தோலால் ஆன விரிப்புகளா ஆக்கிட்டாரு...
அரசன் தாராஸ் சில குதிரைகள் தனக்கு வாங்க வேண்டுமென்று நினைத்தான்.அதற்கென சில மனிதர்களை அவன் அனுப்பி வைத்தான். ஆனால், அவர்களோ போன மாதிரியே திரும்பி வந்தார்கள். அவர்கள் வந்து சொன்னார்கள்: "அந்த வியாபாரிகிட்ட தான் எல்லா குதிரைகளும் இருக்கு. வியாபாரியோட குளத்தை நிரப்புறதுக்கு அந்தக் குதிரைகள் தான் தண்ணி கொண்டு போகுது."
அரசன் சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்காமல் நின்று விட்டன. அவனுக்கு வேலை செய்வதற்கு யாருமே தயாராக இல்லை. வியாபாரிக்கு வேலை செய்வதற்கே ஒவ்வொருவருக்கும் நேரம் சரியாக இருந்தது. வியாபாரி தந்த பணத்தைத்தான் அவர்கள் அரசனிடம் வரியாகக் கொண்டுபோய் கட்டினார்கள்.
தான் வரியாகப் பெற்ற பணத்தை வைப்பதற்கு இடம் இல்லாமல் தவித்தான் அரசன். இந்த விதத்தில் அவனுடைய வாழ்க்கை சோகம் நிறைந்த ஒன்றாக மாறியது. நாளடைவில் அவன் புதிய திட்டங்கள் எதுவும் வகுப்பதை நிறுத்திக்கொண்டான். எதுவும் செய்யாமல் வெறுமனே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தால் கூட போதும், அவன் மகிழ்ச்சி நிறைந்த மனிதனாக இருக்கலாம். ஆனால், அதிலும் அவனுக்குப் பிரச்சினை வந்தது. ஒருவருக்குப் பின் ஒருவராக அவனுடைய சமையல்காரன், வண்டியோட்டி, வேலைக்காரர்கள் என்று அவனைவிட்டு விலகி அந்த வியாபாரியைத் தேடிப் போய்க்கொண்டிருந்தார்கள். நாளடைவில் அவனுக்குச் சாப்பாடுகூட இல்லை என்ற நிலை உண்டாகிவிட்டது. சந்தைக்கு யாரையாவது அனுப்பி வைத்து ஏதாவது வாங்கிக் கொண்டு வரச்சொன்னால், போனவர்கள் அங்கு எதுவுமே இல்லை என்று கையை விரித்துக்கொண்டு வந்து நின்றார்கள். வியாபாரி சந்தையில் இருந்தவற்றையெல்லாம் ஏற்கெனவே வாங்கிக்கொண்டுபோய் விட்டதாகச் சொன்னார்கள். மக்கள் தாங்கள் கட்டவேண்டிய வரிப்பணத்தை மட்டும்தான் மன்னனிடம் கொண்டு வந்தார்கள்.
தாராஸ் பயங்கரமான கோபத்திற்கு ஆளாகி அந்த வியாபாரியை நாட்டை விட்டே விரட்டியடித்தான். ஆனால், வியாபாரி நாட்டின் எல்லையில் குடியிருந்துகொண்டு தான் முன்பு நடந்தபடியே நடந்து கொண்டிருந்தான். வியாபாரியிடம் இருக்கும் பணத்திற்காக மக்கள் அரசனுக்குக் கொண்டுபோவதற்குப் பதிலாக வியாபாரி எது கேட்டாலும் கொண்டு போய் கொடுத்தார்கள்.
அரசன் தாராஸின் நிலைமை படுமோசமாக ஆகிக் கொண்டிருந்தது. அவன் உண்பதற்குக்கூட எதுவும் இல்லை என்ற நிலையில் இருந்தான். வியாபாரி தன்னிடமிருக்கும் பணத்தால் அரசனையே கூட விலைக்கு வாங்கத் திட்டமிட்டிருப்பதாக ஒரு வதந்தி எல்லா இடங்களிலும் உலவிக்கொண்டிருந்தது. அரசன் தாராஸ் மிகவும் பயந்துபோய் விட்டான். அவனுக்கு என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் சைமன் தன் சகோதரனைத் தேடி வந்தான் அவன் சொன்னான்: "எனக்கு உதவி செய். இந்தியாவோட அரசன் என்னைப் போர்ல ஜெயிச்சிட்டான்..."
ஆனால் தாராஸின் நிலைமையோ தாங்க முடியாத ஒரு நிலையில் இருந்தது. அவன் சொன்னான்: "நானே சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. நான் எப்படி உனக்கு உதவமுடியும்?"
இரண்டு சகோதரர்களையும் இந்த நிலைமைக்குக் கொண்டு வந்த அந்த வயதான சாத்தான் நேராக ஐவானைத் தேடிச் சென்றான். அவன் தன்னை ஒரு ராணுவ அதிகாரியாக மாற்றிக் கொண்டான். ஐவானிடம் சென்று உடனடியாக ஒரு ராணுவத்தை வைத்துக் கொண்டால்தான் சரியாக இருக்கும் என்றான் அவன்.
"அரசன்னு சொன்னா இப்படி இருக்கக்கூடாது"- சாத்தான் சொன்னான்: "ராணுவம்னு எதுவுமே இல்லாம அரசனா? என்கிட்ட ஒரே ஒரு கட்டளை போடுங்க. அடுத்த நிமிடம் உங்க மக்கள் மத்தியில இருந்தே வீரர்களைத் தேர்வு செய்து ஒரு ராணுவத்தை நான் அமைச்சிக் காட்டுறேன்."
சாத்தான் சொன்னதை ஐவான் கூர்மையாகக் கேட்டான்: "சரி..." - ஐவான் சொன்னான்: "ராணுவத்தை அமைச்சு அவங்களுக்குப் பாட்டு பாடுறது எப்படின்றதை சொல்லிக்கொடுங்க. நான் அவங்க அப்படி பாட்டு பாடறதைத்தான் விரும்புறேன்."
தொடர்ந்து அந்த வயதான சாத்தான் ஐவானின் நாடெங்கும் சுற்றி ராணுவத்தில் சேர்வதற்கான மனிதர்களைத் தேடினான். அவர்களைப் பார்த்து உடனடியாகச் சென்று போர் வீரர்களாகச் சேரும்படி அவன் சொன்னான். எல்லாரும் ஒரு அழகான சிவப்பு தொப்பியை அணிந்து கொண்டு உற்சாகமாக இருக்கலாம் என்றான் அவன்.
சாத்தான் சொன்னதைக் கேட்டு மக்கள் எல்லாரும் சிரித்தார்கள்.
"எங்கக்கிட்ட ஏற்கெனவே நல்ல உற்சாகம் இருக்கு"- அவர்கள் சொன்னார்கள்: "நாங்க எவ்வளவோ மகிழ்ச்சியா இருக்கோம். தொப்பி விஷயத்தை எடுத்துக்கிட்டா, எங்க பொம்பளைங்க பலவிதமான தொப்பிகளையும் உருவாக்குறாங்க. கோடுகள் போட்ட தொப்பி, குஞ்சம் வைத்த தொப்பின்னு பல ரகங்கள்ல அவங்களே உருவாக்குறாங்க..."
அதனால் அவர்களில் யாரும் போர் வீரர்களாகப் போய் சேரவில்லை.
அந்த வயதான சாத்தான் மீண்டும் ஐவானிடம் வந்து சொன்னான்: "உங்க முட்டாள் மக்கள் அவர்களாகவே போர் வீரர்களாக வந்து சேர்றது மாதிரி தெரியல. அவங்களை நாமே சேர்த்தால்தான் சரியா வரும்."
"சரி..." -ஐவான் சொன்னான்: "முயற்சி பண்ணி பாருங்க."
தொடர்ந்து சாத்தான் மக்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தான். அதன்படி எல்லாரும் போர் வீரர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும், அப்படி அவர்களே வந்து பதிவு செய்யாவிட்டால், அவர்களுக்கு அரசன் மரண தண்டனை அளிப்பான் என்றும் அவன் மக்களுக்குத் தெரியப்படுத்தினான்.
மக்கள் ராணுவ அதிகாரியிடம் வந்து சொன்னார்கள்: "நாங்க போர் வீரர்களா மாற சம்மதிக்கலைன்னா, எங்களை அரசர் மரணத்திற்குக் கொண்டு போயிடுவார்னு நீங்க சொன்னீங்க. ஆனா, நாங்க போர் வீரரா ஆக சம்மதிச்சோம்னா நாங்க என்ன ஆவோம்ன்றதை நீங்க சொல்லல. அப்படி நாங்க ஆனோம்னா, நாங்க கொல்லப்படுவது உறுதின்னு சொல்றாங்களே!"
"நீங்க சொன்னது சரிதான்... அப்படியும் சில நேரங்களல நடக்கலாம்!"
அதைக் கேள்விப்பட்ட மக்கள், அதற்குப்பிறகு பிடிவாதமாக இருக்க ஆரம்பித்தார்கள்.
"நாங்க போறதா இல்ல..."- அவர்கள் சொன்னார்கள்: "நாங்க வீட்டுல இருந்தே சாகத்தயாரா இருக்கோம். எப்படி இருந்தாலும் நாங்க சாகத்தானே போறோம்?"
"முட்டாள்கள்! நீங்க எல்லாரும் முட்டாள்கள்!"- வயதான சாத்தான் சொன்னான்: "போர்ல ஈடுபடுற ஒரு வீரன் கொல்லப்படலாம்... கொல்லப்படாமலும் இருக்கலாம். அதே நேரத்துல நீங்க போய் படையில சேரலைன்னா, கட்டாயம் அரசர் உங்களைக் கொன்னுடுவாரு!"
அதைக்கேட்டு அங்கிருந்த மக்கள் திகைப்படைந்து போனார்கள். அவர்கள் ஐவானிடம் இதைப்பற்றி பேசி தெரிந்து கொள்வதாகச் சென்றார்கள்.
"ஒரு ராணுவ அதிகாரி வந்தாரு..."- அவர்கள் சொன்னார்கள். "நாங்க எல்லாரும் கட்டாயம் ராணுவத்துல சேரணும்னு அவர் சொன்னாரு. 'நீங்க எல்லாரும் ராணுவத்துல போர் வீரர்களா சேர்ந்தா போர்ல நீங்க கொல்லப்படலாம். இல்லாட்டி கொல்லப்படாமக் கூட இருக்கலாம். அதே நேரத்துல இராணுவத்துல சேரலைன்னா மன்னரால நீங்க கொல்லப்படப் போறது உறுதி'ன்னு அவர் எங்களைப் பார்த்து சொன்னாரு. இது உண்மையா?"
அதைக்கேட்டு ஐவான் சிரித்தான். அவன் சொன்னான்: "நான் ஒரு ஆளு மட்டும் உங்க எல்லாரையும் எப்படிக் கொல்லமுடியும்? நான் ஒரு முட்டாளா இல்லாம இருந்தா இதைப் பற்றி உங்களுக்குத் தெளிவா விளக்கிச் சொல்ல முடியும். சொல்லப்போனா எனக்கே நீங்க சொல்ற விஷயம் புரியல..."
"அப்படின்னா..." அவர்கள் சொன்னார்கள்: "நாங்க ராணுவத்துல சேர்றதா இல்ல."
"சரி..."- அவன் சொன்னான்: "சேர வேண்டாம்."
மக்கள் ராணுவ அதிகாரியிடம் சென்று ராணுவத்தில் நாங்கள் சேர்வதாக இல்லை என்று சொன்னார்கள். தான் போட்ட திட்டம் தவிடுபொடியாகி விட்டதைப் புரிந்து கொண்ட சாத்தான் நேராக கரப்பான் பூச்சி நாட்டின் அரசனைப் போய்ப் பார்த்தான்.
"நாம போர் தொடுப்போம்"- அவன் சொன்னான்: "ஐவானோட நாட்டைப் பிடிப்போம். அவங்க கிட்ட பணம் இல்லைன்றது உண்மை. அதே நேரத்துல தானியங்கள் நிறைய இருக்கு. கால்நடைகளுக்கோ, மற்ற விஷயங்களுக்கோ எந்தவித குறைபாடும் அங்கே இல்ல..."
சாத்தான் சொன்னதைக் கேட்ட கரப்பான் பூச்சி நாட்டு அரசன் போர் தொடுக்கத் தயாரானான். அவன் தன்னுடைய மிகப்பெரிய படையைத் திரட்டினான். அவன் படையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் எல்லாமே இருந்தன. போர்க்களத்தை நோக்கி அவனுடைய படை முன்னேறியது. அவர்கள் ஐவானின் நாட்டிற்குள் நுழைந்தார்கள்.
மக்கள் ஐவானிடம் வந்து சொன்னார்கள்: "கரப்பான் பூச்சி நாட்டு அரசர் நம்ம மேல போர் தொடுக்க வந்துக்கிட்டு இருக்கார்."
"அப்படியா?"- ஐவான் சொன்னான்: "வரட்டும்..."
எல்லையைக் கடந்தவுடன் கரப்பான் பூச்சி நாட்டின் அரசன் ஐவானின் ராணுவத்தை சந்திப்பதற்காகத் தன்னுடைய படையை அனுப்பினான். அவனுடைய படை தேடித் தேடிப் பார்த்தும் ஐவானின் ராணுவத்தை அவர்களால் கடைசிவரை பார்க்கவே முடியவில்லை. அவர்கள் பல மணி நேரங்கள் படை வீரர்களில் யாராவது ஒருவர் கண்ணில் படமாட்டார்களா என்று காத்திருந்தார்கள். ஆனால், இராணுவம் இருப்பதற்கான அறிகுறியே அவர்களின் கண்களில் படவில்லை. சண்டை போடுவதற்கு யாரும் தயாராக இருப்பதாகவும் தெரியவில்லை. கரப்பான் பூச்சி நாட்டு அரசன் கிராமங்களைப் பிடிப்பதற்காகத் தன்னுடைய படைகளை அனுப்பினான். வீரர்கள் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார்கள். அந்த ஊரிலிருந்த ஆண்களும் பெண்களும் வீட்டை விட்டு வெளியே வந்து ஆச்சரியம் மேலோங்க அந்த வீரர்களையே வெறித்துப் பார்த்தார்கள். வந்திருந்த வீரர்கள் கிராமத்து மக்களின் தானியங்களையும் கால்நடைகளையும் எடுத்துக் கொண்டார்கள். கிராமத்து மக்கள் அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், மவுனமாக இருந்தார்கள். அந்த வீரர்கள் இன்னொரு கிராமத்தைத் தேடிச் சென்றார்கள். இதே கதைதான் அங்கும் நடந்தது. வீரர்கள் முதல் நாள் மட்டுமல்ல, மறுநாளும் பல கிராமங்களுக்கும் சென்றார்கள். ஒவ்வொரு ஊரிலும் இதே விஷயம்தான் நடந்தது. அவர்கள் எதை எடுத்துக்கொண்டாலும், மக்கள் அதைப்பற்றி கவலையே படவில்லை. எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், வெறுமனே நின்றிருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த வீரர்களைத் தங்களுடன் வந்து வசிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
"ஐயோ பாவம்..."- கிராமத்து ஆட்கள் சொன்னார்கள்: "உங்க நாட்டுல அந்த அளவுக்கு கஷ்டமான ஒரு வாழ்க்கை உங்களுக்கு இருக்குன்னா, நீங்க ஏன் இங்கே வந்து எங்ககூட வாழக்கூடாது?"
வீரர்கள் எல்லா இடங்களிலும் பார்த்தார்கள். எந்த இடத்திலும் ராணுவம் என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. மக்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டும் அதே நேரத்தில் மற்றவர்களையும் கவனித்துக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். எதற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, போர் வீரர்களைத் தங்களுடன் வந்து வாழும்படி அவர்கள் அழைத்தார்கள். அதற்குமேல் வீரர்களால் வெறுமனே இருக்க முடியவில்லை. மிகவும் சோர்வடைந்துபோய் அவர்கள் கரப்பான் பூச்சி நாட்டு அரசனிடம் வந்தார்கள். அரசனிடம் அவர்கள் சொன்னார்கள்: "எங்களால இங்கே சண்டை போட முடியாது. எங்களை வேற எங்கேயாவது கொண்டு போங்க. போருக்குப் போறது நல்லதுதான்.
ஆனா, இப்போ நடக்குறது என்ன? ஏதோ பட்டாணி சூப்பை வெட்டுற மாதிரியான காரியங்கள் தான் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு. இனிமேலும் இங்கே நாங்க போர் புரியிறதா இல்ல..."
அதைக்கேட்டு கரப்பான் பூச்சி நாட்டு அரசன் பயங்கரமான கோபத்திற்கு ஆளானான். அவன் தன் வீரர்களைப் பார்த்து அந்த நாட்டிலுள்ள கிராமங்களை அழிக்கச் சொன்னான். தானியக் கதிர்களை எரிக்கச் சொன்னான். வீடுகளைத் தீக்கு இரையாக்கச் சொன்னான். கால்நடைகளைக் கொன்று குவிக்கச் சொன்னான். "நான் சொல்றதை நீங்க கேட்கலைன்னா"- அவன் சொன்னான்: "உங்க எல்லாரையும் நான் தூக்குல போட்டுடுவேன்."
அதைக்கேட்டு வீரர்கள் பயந்து நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் அரசன் சொன்னபடி நடந்தார்கள். வீடுகளை அவர்கள் எரிக்க ஆரம்பித்தார்கள்.தானியக் கதிர்களை எரித்தார்கள். ஆடு- மாடுகளைக் கொன்றார்கள். அந்த நாட்டு மக்கள் அப்போதும் அவர்களுக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக, அவர்கள் அழ மட்டும் செய்தார்கள். வயதான ஆண்கள், வயதான பெண்கள், இளம் வயதினர் எல்லாருமே அழுதார்கள்.
"எங்களுக்கு ஏன் தொந்தரவு தர்றீங்க?"- அவர்கள் கேட்டார்கள்: "நல்ல பொருட்களை ஏன் நாசம் பண்றீங்க? அந்தப் பொருட்கள் உங்களுக்குத் தேவைன்னா, தாராளமா நீங்களே எடுத்துக்கலாமே!"
அதற்குமேல் ஒரு நிமிடம் கூட அங்கு வீரர்களால் நிற்க முடியவில்லை. இனிமேல் ஒரு அங்குலம் கூட முன்னால் வைக்க அவர்கள் தயாராக இல்லை. அதன் விளைவாக ராணுவம் உடனடியாக அந்த இடத்தைவிட்டுப் பிரிந்து ஓடியது.
அந்த வயதான சாத்தான் தன்னுடைய முயற்சியைக் கைவிட வேண்டியதாகி விட்டது. தன் வீரர்களை வைத்து ஐவானை எதுவும் பண்ண முடியவில்லை என்பதை அவன் தெரிந்து கொண்டான். அதனால் தன்னை அவன் வேறு மாதிரி மாற்றிக் கொண்டான். ஒரு நாகரீக மனிதனாகத் தன்னை ஆக்கிக்கொண்டு அவன் ஐவானின் நாட்டிற்குள்ளேயே குடியிருக்க ஆரம்பித்தான். தாராஸிடம் செய்தது மாதிரி அவன் பணத்தை வைத்து ஐவானை வெல்ல திட்டமிட்டான்.
அவன் ஐவானைப் பார்த்துச் சொன்னான்: "நான் உங்களுக்கு ஒரு நல்ல காரியத்தைச் செய்ய நினைக்கிறேன். உங்களுக்குப் பல அறிவாளித்தனமான விஷயங்களைக் கற்றுத் தரப்போறேன். உங்க நாட்டுலேயே நான் ஒரு வீட்டைக் கட்டி வியாபாரம் செய்யப் போறேன்."
"சரி..."- ஐவான் சொன்னான்: "நீ விருப்பப்பட்டா, வந்து எங்கக் கூடவே இரு."
மறுநாள் காலையில் அந்த நாகரீக மனிதன் மக்கள் கூடும் இடத்திற்குச் சென்றான். அப்போது அவன் கையில் ஒரு மூட்டை தங்கமும் ஒரு தாளும் இருந்தன. அவன் சொன்னான்: "நீங்க வாத்தைப் போல வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க. எப்படி வாழ்க்கையில வாழணும்ன்றதை நான் உங்களுக்குக் கற்றுத் தர்றேன். இந்தத் திட்டப்படி எனக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து ஒரு வீடு கட்டுங்க. நீங்க எனக்காக வேலை செய்யுங்க. எப்படி வேலை செய்யணும்ன்றதை நான் சொல்லித் தர்றேன். நான் உங்களுக்குப் பொற்காசுகள் தர்றேன்" சொன்னதோடு நிற்காமல் அவன் அவர்களிடம் தங்கக் காசுகளைக் காட்டினான்.
அதைப் பார்த்து அந்த முட்டாள் மக்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அந்தக் காசுகளுக்கு வேலையே இல்லை. அவர்கள் இருக்கும் பொருட்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள். ஒருவருக்கொருவர் பணி செய்து உதவிக் கொள்வார்கள். அந்தப் பொற்காசுகளை வியப்புடன் அவர்கள் பார்த்தார்கள்.
"இது பார்க்குறதுக்கு எவ்வளவு அழகா இருக்கு!"- அவர்கள் சொன்னார்கள்.
அந்த நாகரீக மனிதனின் காசுகளுக்குப் பதிலாக அவர்கள் தங்களிடமிருந்த பொருட்களைத் தந்தார்கள். அந்தக் காசுகளுக்குப் பதிலாக அவர்கள் வேலை செய்தார்கள். தாராஸின் நாட்டில் செய்ததைப் போலவே அந்த வயதான சாத்தான் தன்னிடம் நிறைய தங்கம் இருந்ததால் அதை மக்களுக்குக் கொடுத்து அதற்குப் பதிலாக அவர்களிடம் வேலையை அவன் வாங்கினான்.
அந்த வயதான சாத்தான் உள்ளுக்குள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்: 'எல்லா விஷயங்களும் இந்த முறை நல்லா போய்க்கிட்டு இருக்கு. நான் இந்த முட்டாளை தாராஸை அழிச்சதைப் போலவே ஒண்ணுமில்லாமப் பண்ணுவேன். இவனோட உடல், ஆன்மா ரெண்டையும் வாங்காம விடமாட்டேன்.'
அந்த நாட்டு முட்டாள் மக்களின் கைகளில் தங்கக் காசுகள் கிடைத்ததுதான் தாமதம். தங்களின் மனைவிமார்களிடம் கொடுத்து கழுத்தில் அணியும் மாலைகளாகஅவற்றை அவர்கள் மாற்றினார்கள். இளம் பெண்கள் தங்களின் ஆடைகளில் அவற்றை அணிந்து ஒய்யாரமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சிறு குழந்தைகள் தெருவில் தங்கக் காசுகளை வைத்து விளையாடினார்கள். எல்லாரிடமும் அளவுக்கு அதிகமாகவே தங்கக் காசுகள் இருந்ததால், அதற்குமேல் தங்களுக்கு காசுகள் வேண்டாம் என்று அவர்கள் கூறி விட்டார்கள். அதனால், அந்த நவநாகரீக மனிதனின் வீடு பாதிவரை கூட கட்டி முடிக்கப்படவில்லை. தானியமும் கால்நடைகளும் அவன் கேட்டுக் கொண்ட அளவிற்கு வந்து சேரவில்லை. அதனால் உடனடியாக வந்து தனக்காக வேலை பார்க்கும்படி அவன் மக்களைக் கேட்டுக் கொண்டான். கால்நடைகளையும் தானியங்களையும் தன்னிடம் வந்து சேர்க்கும்படி அவன் அறிவித்தான். ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு வேலைக்கும் தான் மேலும் அதிகமாக தங்கக் காசுகளைத்தர தயாராக இருப்பதாக அவன் சொன்னான்.
ஆனால், அவர்களில் யாருமே வேலைக்கு வரவில்லை. யாரும் எதையும் அவனிடம் கொண்டு வந்து சேர்க்கவுமில்லை. எப்போதாவது ஒரு முறை ஒரு சிறுவனோ அல்லது ஒரு சிறுமியோ ஒரு முட்டையை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் தந்து அதற்குப் பதிலாக தங்கக் காசுகளைத் தரும்படி கேட்டார்கள். நாளடைவில் யாருமே அவனைத் தேடி வரவில்லை. அதன் விளைவு- அவன் சாப்பிடுவதற்குக் கூட எதுவுமே இல்லாத ஒரு ஆளாக ஆனான். மிகவும் பசியாக இருந்ததால், அந்த நாகரீக மனிதன் கிராமத்திற்குள் சென்று சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தான். ஒரு வீட்டு முன்னால் போய் நின்று ஒரு கோழியைக் கொடுத்தால், அதற்குப் பதிலாகத் தங்கக் காசுகளைத் தருவதாக அவன் சொன்னான். ஆனால், அந்த வீட்டில் இருந்த பெண் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
"என்கிட்ட ஏற்கனவே நிறைய காசுகள் இருக்கு" என்றாள் அவள்.
ஒரு விதவையின் வீட்டிற்குச் சென்று அவளிடம் உண்பதற்கு மீன் எதுவும் இருக்குமா என்று கேட்டான். அதற்குப் பதிலாக பொற் காசுகளைத் தருவதாகச் சொன்னான்.
"எனக்கு அது மேல விருப்பமே இல்லை" என்றாள் அவள். தொடர்ந்து அவள் சொன்னாள்: "அதை வச்சு விளையாடுறதுக்கு எனக்கு குழந்தைகள் எதுவும் இல்ல. என்கிட்ட ஏற்கெனவே மூணு பொற்காசுகள் இருக்கு. அதை வெறும் ஆர்வத்துக்காக நான் வச்சிருக்கேன்."
ஒரு விவசாயியின் வீட்டை அணுகி ரொட்டி ஏதாவது கிடைக்குமா என்று அவன் பார்த்தான். அந்த விவசாயியும் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டான்.
"எனக்கு அது தேவையே இல்ல"- அவன் சொன்னான்: "ஆனா இயேசு கிறிஸ்துவின் பேரைச் சொல்லி நீ கெஞ்சுறதா இருந்தா, கொஞ்சம் இங்கேயே காத்திரு. நான் போயி என் பொண்டாட்டி கிட்ட சொல்லி கொஞ்சம் ரொட்டியை வெட்டித் தரச் சொல்றேன்."
அடுத்த நிமிடம் சாத்தான் அந்த இடத்தைவிட்டு வேகமாக ஓடினான். இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி கெஞ்சச் சொல்லி அந்த விவசாயி சொன்னது சாத்தானின் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. தன்னுடைய உடம்புக்குள் கத்தியைச் சொருகுவதைவிட வேதனை தரக்கூடிய ஒன்றாக அந்த வார்த்தைகளை அவன் நினைத்தான்.
கடைசியில் அவனுக்கு ரொட்டி எதுவும் கிடைக்கவில்லை. அந்த நாட்டில் இருந்த எல்லாரிடமும் தங்கம் இருந்தது. அதனால் அந்த வயதான சாத்தான் எங்கு சென்றாலும் பணத்துக்குப் பதிலாக எதையும் தருவதற்கு யாரும் தயாராக இல்லை. மாறாக, அவனிடம் வேறு எதையாவது கொண்டு வரும்படி சொன்னார்கள். இல்லாவிட்டால் தங்களுக்காக அவனை வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். இல்லாவிட்டால் இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி தனக்குத் தேவைப்படுவதை வாங்கிக் கொள்ளும்படி அவனைப் பார்த்துச் சொன்னார்கள்.
அந்த வயதான சாத்தானிடம் பணத்தைத் தவிர எதுவும் இல்லை. வேலை செய்வதற்கு அவனுக்குச் சிறிதும் விருப்பமில்லை. இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி பிறரிடம் எதுவும் வாங்குவது என்பது அவனால் செய்ய முடியாத ஒரு விஷயம். அதன் விளைவாக அந்த வயதான சாத்தான் பயங்கர கோபத்திற்கு ஆளானான்.
"நான்தான் உங்களுக்குப் பணம் தர்றேனே!" இதைவிட உங்களுக்கு என்ன வேணும்?"- அவன் கேட்டான்: "இந்தப் பொற்காசுகளை வைத்து நீங்க என்ன வேணும்னாலும் வாங்கிக்கலாம். யாரை வேணும்னாலும் வேலைக்கு வச்சுக்கலாம்!" ஆனால், அவன் சொன்னதை அந்த முட்டாள் மக்கள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
"வேண்டாம். எங்களுக்குப் பணமே வேண்டாம்"- அவர்கள் சொன்னார்கள்: "நாங்க யாருக்கும் பணம் தரவேண்டியது இல்ல. வரி கட்ட வேண்டியதும் இல்ல. அந்தப் பணத்தை வச்சு நாங்க என்ன செய்றது?"
அவ்வளவுதான். அந்த வயதான சாத்தான் சாப்பாடு எதுவும் இல்லாமல் கீழே படுத்து உறங்க ஆரம்பித்தான்.
இந்த விஷயம் முட்டாள் ஐவானின் காதிற்குச் சென்றது. மக்கள் அவனிடம் சென்று கேட்டார்கள்: "நாம என்ன செய்யிறது? அந்த நாகரீக மனிதனோட தற்போதைய நிலை இந்த மாதிரி இருக்கு! அவன் சாப்பிடணும்னு நினைக்கிறான். குடிக்கணும்னு நினைக்கிறான். நல்லா ஆடைகள் அணியணும்னு நினைக்கிறான். ஆனா, வேலை செய்யிறதுக்கு மட்டும் அவனுக்கு விருப்பம் இல்ல. இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி பிச்சை எடுக்கவும் அவன் தயாரா இல்ல. ஆனா, எல்லாருக்கும் தன்கிட்ட இருக்கிற தங்கக்காசுகளைத் தர்றதுக்குத் தயாரா இருக்கான். ஆரம்பத்துல அவன் என்னவெல்லாம் வேணும்னு சொன்னானோ, எல்லாத்தையும் மக்கள் கொண்டுபோய்க் கொடுத்தாங்க. மக்கள் கிட்ட நிறைய பொற்காசுகள் வந்து சேர்ற வரைக்கும் அது நடந்தது. இப்போ யாருமே அவனுக்கு எதுவும் தர்றது இல்ல. அவனை என்ன செய்றது? ரொம்ப சீக்கிரமே அவன் சாப்பிடுறதுக்கு எதுவும் இல்லாம செத்துடுவான் போலிருக்கு..."
அவர்கள் சொன்னதை காது கொடுத்துக் கேட்டான் ஐவான்.
"அப்படியா?"- அவன் சொன்னான்: "நாம அவனுக்குச் சாப்பாடு போடணும். ஆடு மேய்க்கும் ஒரு மனிதன் செய்யிறதைப் போல அவன் ஒவ்வொரு வீட்டுலயுயும் ஒவ்வொரு நாள் சாப்பிடட்டும்."
இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. அந்த வயதான சாத்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிற்கும் போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அதன்படி ஒரு நாள் அவன் ஐவானின் வீட்டிற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானது. சாத்தான் சாப்பிடுவதற்காக அங்கு வந்தான். ஐவானின் ஊமைச் சகோதரி அவனுக்கான சாப்பாட்டைத் தயார் செய்து காத்திருந்தாள்.
பலமுறை அந்தப் பெண் ஏமாற்றப்பட்டிருக்கிறாள். ஏமாற்றியவர்கள் அந்த ஊரைச் சேர்ந்த சோம்பேறிகள்தான். அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலையை முழுமையாகச் செய்யாமலே சாப்பிட வந்து, இருக்கும் சாப்பாடு முழுவதையும் சாப்பிட்டு முடித்து விட்டுப் போய் விடுவார்கள். அவர்களின் கையை வைத்தே அவர்கள் சரியாக வேலை செய்திருக்கிறார்களா, இல்லையா என்பதை அவள் கண்டுபிடித்து விடுவாள். கடுமையாக உழைத்த கரங்களைக் கொண்டவர்களை மேஜையில் உட்கார வைத்து சாப்பாடு போடுவாள். சரியாக உழைக்காதவர்களுக்கு அவர்கள் சாப்பிட்டது போக மீதியிருப்பதுதான் கிடைக்கும்.
அந்த வயதான சாத்தான் மேஜையில் வந்து உட்கார்ந்தான். ஊமைப்பெண் அவனுடைய கைகளைப் பிடித்து இழுத்து அவற்றை உற்றுப் பார்த்தாள். வேலை செய்ததற்கான எந்த அடையாளமும் அந்த கைகளில் இருக்கவில்லை. கைகள் மிகவும் சுத்தமானவையாகவும், மென்மையானவையாகவம் நீளமான நகங்களைக் கொண்டனவாகவும் இருந்தன. அடுத்த நிமிடம் என்னவோ பெரிதாக முணுமுணுத்த அந்த ஊமைப்பெண் சாத்தானை மேஜையைவிட்டு இழுத்தாள். அப்போது ஐவானின் மனைவி அவனைப் பார்த்துச் சொன்னாள்: "மனசு சங்கடப்படாதே. என் மச்சினிச்சி காய்ச்சுப்போன கைகள் இல்லாத ஆளுங்களை மேஜையில உட்கார எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டா. கொஞ்சம் காத்திரு. கிராமத்து ஆளுங்க சாப்பிட்டு முடிச்சதும், மீதி இருக்கிறதை நீ சாப்பிடலாம்."
அந்த வயதான சாத்தான் உண்மையிலேயே மனதளவில் மிகவும் காயப்பட்டு விட்டான். அரசனின் வீட்டில் தன்னை ஒரு பன்றியைப் போல் அவர்கள் நடத்த ஆசைப்படுவதை அவனால் உணர முடிந்தது. அவன் சொன்னான்: "உங்க நாட்டுல இருக்கிற ஒவ்வொரு வரும் தன்னோட சொந்த கைகளால உழைக்கணும்ன்ற முட்டாள்தனமான சட்டத்தை நீங்க வச்சிருக்கீங்க. உங்க முட்டாள்தனம்தான் இப்படியொரு சட்டத்தை உருவாக்கியிருக்கு. மக்கள் அவங்க கைகளால மட்டும் தான் வேலை செய்யமுடியுமா? அறிவாளிகள் எதை வச்சு வேலை செய்வாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?"
அதற்கு ஐவான் சொன்னான்: "முட்டாள்களான எங்களுக்கு அது எப்படித் தெரியும்? நாங்க எங்களோட பெரும்பாலான வேலைகளை எங்க கைகளாலும் முதுகை வச்சும்தான் செய்யிறோம்."
"நீங்க முட்டாள்களாக இருக்குறதுனால அப்படிச் செய்யிறீங்க. தலையை வச்சு வேலை செய்யிறது எப்படின்றதை நான் உங்களுக்குச் சொல்லித் தர்றேன். அதுக்குப் பிறகுதான் உங்களுக்கே தெரியும், கைகளால வேலை செய்றதைவிட தலையை வச்சு வேலை செய்யிறது எவ்வளவு லாபகரமா இருக்குன்றது."
அதைக் கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தான் ஐவான்.
"அப்படின்னா..." அவன் சொன்னான்: "எங்களை முட்டாள்கள்னு சொல்றதுல நிச்சயம் அர்த்தம் இருக்கு..."
அந்த வயதான சாத்தான் தொடர்ந்தான்: "ஒருத்தன் தன்னோட தலையை வச்சு வேலை செய்யிறதுன்றது சாதாரண ஒரு விஷயமில்ல. என் கைகள் காய்ச்சுப் போகாம இருக்குன்றதுக்காக எனக்கு நீங்க சாப்பிடுறதுக்கு எதுவும் தரல. கைகளால வேலை செய்யிறதைவிட தலையை வச்சு வேலை செய்யிறது நூறு மடங்கு கஷ்டமானதுன்ற உண்மை உங்க யாருக்கும் தெரியல. சில நேரங்கள்ல ஒருத்தனோட தலை பிளந்துகூட போகும்..."
ஐவான் சிந்திக்க ஆரம்பித்தான்.
"அப்படின்னா எதுக்கு நண்பனே, உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கணும்? தலை உடைஞ்சு போச்சுன்னா அது நல்லதா? கைகளை வச்சும் முதுகை வச்சும் வேலை செய்யிறது ரொம்பவும் எளிமையானதா தெரியலியா?"
அதற்கு சாத்தான் சொன்னான்: "உங்கமேல உண்டான பரிதாபத்துனாலதான் நான் எல்லாத்தையும் செய்யிறேன். என்னை நானே கஷ்டப்படுத்திக்கலைன்னா, நீங்க எல்லாரும் எப்பவும் முட்டாளாவேதான் இருப்பீங்க. என் தலையைப் பயன்படுத்தி நான் உங்களுக்குத் கற்றுத்தர முடியும்."
அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தான் ஐவான்.
"எங்களுக்குக் கற்றுத்தா"- அவன் சொன்னான்: "எங்க கைகள் வலிக்கிறப்போ, ஒரு மாற்றத்துக்காக நாங்க தலையைப் பயன்படுத்தலாமே!"
சாத்தான் மக்களுக்குக் கற்றுத் தருவதற்குச் சம்மதித்தான். தொடர்ந்து ஐவான் தன்னுடைய நாடு முழுக்க "ஒரு அருமையான நவநாகரீக மனிதன் வந்திருக்கான். அவன் தலையைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் வேலை செய்றது எப்படின்றதை உங்களுக்குச் சொல்லித் தருவான். கைகளால உழைச்சு செய்யிற வேலையைவிட தலையைப் பயன்படுத்தி அதிக வேலை செய்யலாமாம். அதனால மக்கள் எல்லாரும் கட்டாயம் வந்து அதைக் கற்றே ஆகணும்" என்று அறிவித்தான்.
ஐவானின் நாட்டில் ஒரு உயரமான கோபுரம் இருந்தது. அந்தக் கோபுரத்திலிருக்கும் படிகள் மேலே சென்று உச்சியிலிருக்கும் ஒரு விளக்கில் போய் முடியும். ஐவான் அந்த நாகரீக மனிதனை அங்கு போகச் செய்தான். அங்கு அவன் நின்றால்தான் எல்லாரும் அவனைப் பார்க்க முடியும் என்பது ஐவானின் எண்ணம்.
ஐவான் சொன்னபடி அந்த நாகரீக மனிதன் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று பேச ஆரம்பித்தான். மக்கள் திரண்டு அவனைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அவன் கைகளுக்குப் பதிலாகத் தலையைப் பயன்படுத்தி எப்படி வேலை செய்வது என்பதைக் காட்டப்போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். ஆனால், அந்த வயதான சாத்தானோ அவர்கள் எப்படி வேலை செய்யாமல் வாழலாம் என்பதை வார்த்தைகள் மூலம் சொல்லிக் கொண்டிருந்தான். அது எந்த விதத்திலும் அவர்களுக்குப் பிரயோஜனமாக இல்லை. அவர்கள் வெறுமனே அவனைப் பார்த்தார்கள். தொடர்ந்து என்ன நினைத்தார்களோ தங்களின் வேலைகளைப் பார்க்க அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
அந்த வயதான சாத்தான் ஒரு நாள் முழுக்க கோபுரத்தின் உச்சியில் நின்றான். இரண்டாவது நாளும் நின்று பேசிக்கொண்டே இருந்தான். ஒரே இடத்தில் நின்று பேசிக்கொண்டே இருந்ததால், அவனுக்குப் பசி உண்டாக ஆரம்பித்தது. கோபுரத்தின் உச்சியில் நின்றிருக்கும் அவனுக்கு உணவு கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு உண்டாகவில்லை. தன்னுடைய கைகளைவிட தலையைப் பயன்படுத்தி அவன் வேலை செய்யும்பட்சம், அவனே தனக்குத் தேவைப்படும் ரொட்டியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
அந்த வயதான சாத்தான் மேலும் ஒருநாள் கோபுரத்தின் உச்சியில் நின்று பேசியவண்ணம் இருந்தான். மக்கள் அவனிடம் வந்தார்கள். சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு போய் விட்டார்கள்.
ஐவான் மக்களைப் பார்த்துக் கேட்டான்: "அந்த மனிதன் தலையைப் பயன்படுத்தி வேலை செய்ய ஆரம்பித்து விட்டானா?"
"இன்னும் இல்ல..."- மக்கள் சொன்னார்கள்: "அந்த ஆளு இன்னும் பேசிக்கிட்டேதான் இருக்கான்."
அந்த வயதான சாத்தான் மேலும் ஒருநாள் கோபுரத்தின் உச்சியில் நின்றான். இப்போது அவன் மிகவும் தளர்ந்துபோய் காணப்பட்டான். அதன் விளைவாக அவன் தடுமாறித் தன்னுடைய தலையை கோபுரத்தின் ஒரு தூணில் இடித்துக் கொண்டான். மக்களில் ஒருவன் அதைப்பார்த்து ஐவானின் மனைவியிடம் சொன்னான். அவள் வயலில் இருந்த தன் கணவனிடம் ஓடினாள்.
"வாங்க... வந்து பாருங்க..."-அவள் சொன்னாள்:
"அந்த ஆளு தன் தலையை வச்சு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டதா நம்ம ஆளுங்க வந்து சொன்னாங்க!"
அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தான் ஐவான்.
"உண்மையாகவா?"- அவன் கேட்டான். தொடர்ந்து அவன் தன் குதிரை மீது ஏறி கோபுரத்தை நோக்கி வேகமாகச் சென்றான். கோபுரத்தை அவன் அடைந்தபோது, அந்த வயதான சாத்தான் பசியால் மிகவும் சோர்வடைந்து தடுமாறித் தன்னுடைய தலையைத் தூண்கள் மீது இடித்துக் கொண்டிருந்தான். ஐவான் அங்கு வந்தபோது சாத்தான் நிலைகுலைந்து கீழே விழுந்து படிகள் வழியாக உருண்டு உருண்டு கோபுரத்தின் கீழ்பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு படியில் விழும்போதும் அவனுடைய தலை அதில் பலமாக மோதியது.
"நல்லது!"- ஐவான் சொன்னான்: "இந்த மனிதன் சரியாத்தான் சொல்லியிருக்கான். 'சில நேரங்கள்ல ஒருத்தனோட தலை பிளக்கவும் செய்யும்'னு சொன்னானே! இது ரொம்பவும் மோசமான ஒண்ணா இருக்கே! இப்படி வேலை செஞ்சா, தலை முழுவதும் வீக்கம்தான் உண்டாகும்."
அந்த வயதான சாத்தான் ஒவ்வொரு படியையும் தாண்டி கீழே வந்து, தரையில் தலையால் மோதினான். ஐவான் அவனுக்கு அருகில் சென்று அவன் எவ்வளவு வேலை செய்திருக்கிறான் என்பதைப் பார்க்க நினைத்தான். அப்போது திடீரென்று பூமி பிளந்து அதற்குள் வேகமாக சாத்தான் சென்றான். கடைசியில் மீதி இருந்தது ஒரே ஒரு ஓட்டை மட்டும்தான்.
அதைப் பார்த்து ஐவான் தன் தலையைச் சொறிந்தான்.
"என்ன நாசம் பிடிச்ச காரியம்!"- அவன் சொன்னான்: "மறுபடியும் இன்னொரு சாத்தானா? என்ன போக்கிரி! இவன்தான் அவங்க எல்லாரோட தலைவனாகவும் இருக்கணும்!"
ஐவான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய நாட்டில் ஏராளமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவனுடைய சொந்த சகோதரர்கள்கூட அவனுடன் சேர்ந்து வாழ வந்துவிட்டார்கள். அவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் அவன் பார்த்துக் கொண்டான். யார் வந்து 'எனக்குச் சாப்பாடு வேணும்' என்று கேட்டாலும் அவர்களைப் பார்த்து ஐவான் கூறுவான்: "சரி... நீங்க எங்கக் கூடவே இருக்கலாம். எங்கக்கிட்ட தேவையானதெல்லாம் இருக்கு..."
ஒரே ஒரு விசேஷச் சட்டம்தான் அவனுடைய நாட்டில் இப்போதும் இருக்கிறது. காய்த்துப் போன கைகளைக் கொண்டவர்கள் மேஜையில் வந்து உட்கார்ந்து சாப்பிடலாம். அப்படிப்பட்ட கைகள் இல்லாதவர்கள் மற்றவர்கள் சாப்பிட்டது போக மீதி இருப்பதைத்தான் சாப்பிட முடியும்.