Logo

மூன்று சீட்டுக்காரனின் மகள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6690
moondru-cheettukaranin-magal

மூன்று சீட்டுக்காரனின் மகள்' என்ற இந்த சரித்திரக் கதையின் மூலம் தெரிய வரும் அருமையான பாடம் என்ன என்பதை ஆரம்பத்திலேயே உங்களால் சொல்லிவிட முடியும். எனினும், பெண்களின் உடல்நலம் கருதி அதை இப்போது சொல்லாமல் இருப்பதே நல்லது. மொத்தத்தில் பெண்கள்... அவர்கள் என்ன வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி... எவ்வளவு வேகமாக முடியுமோ... அவ்வளவு சீக்கிரம் அவர்களை உலகத்தில் ஒரேயடியாக இல்லாமல் செய்துவிடுங்கள்!

இதைக் கேட்டு யாரும் திகைப்படைந்து போய் விடாதீர்கள். இது என்னுடைய சொந்தக் கருத்து என்று நினைத்துவிட வேண்டாம். இதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நான் ஒன்றுமே தெரியாதவன். ஒரு பாவமும் அறியாதவன். பெண்மணிகளும் அவரின் ஆதரவாளர்களும், அவர்களை நம்பியிருப்பவர்களும் என்னோடு சண்டை போடும் நோக்கத்தில் வந்து விடாதீர்கள். என்னைத் தாக்கும் எண்ணத்திலும் வரவேண்டாம். இது விஷயமாக யாருக்காவது சண்டை போட வேண்டும் என்று தோன்றினால், நேராக ஒற்றைக் கண்ணன் போக்கரைத் தேடி போகவும். அவன்தான் இந்தச் சரித்திர கதையில் துக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் முக்கிய நாயகன். இதில் வில்லனாக வருபவன் முட்டாள் முத்தபா. ஆனால், அந்த வில்லன் ஒரு போர்வீரனாக, கதாநாயகனாக ஒற்றைக் கண்ணன் போக்கருடன் சண்டை போடும் அருமையான காட்சியை நாம் பார்க்கலாம். ஸைனபா கூட சண்டை போடுகிறாள். இவர்களைத் தவிர, ஊரில் இருக்கும் இரண்டு போலீஸ்காரர்கள், பிறகு... பெரிய திருடர்களான தொரப்பன் அவறான், ட்ரைவர் பப்புண்ணி ஆகியோரும் கூட இருக்கிறார்கள். அவர்கள் இப்போது ஊரில் இல்லை. கிட்டத்தட்ட அவர்களின் தொழிலைச் செய்பவர்கள்தான் தங்கச் சிலுவை தோமாவும், யானைவாரி ராமன்நாயரும் (இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நான் எழுதிய 'யானைவாரியும் தங்கச் சிலுவையும்' என்ற சரித்திரத்தைப் படிக்க வேண்டும். இவர்களும் பெயர் பெற்ற திருடர்கள்தான். அவர்களின் சீடனான எட்டுகாலி மம்மூந்து, பிறகு... அவர்களின் வேறு சில ரசிகர்கள்... இவர்கள் தவிர, ஊரில் இருக்கும் இரண்டாயிரத்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்... அவர்கள் எல்லோருமே பொதுவாக அமைதியாக வாழ விரும்புபவர்கள்தாம். போர்க்குணம் கொண்ட மனிதர்கள் அல்ல அவர்கள். இவ்வளவு விஷயங்களையும் உலகத்தில் உள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இந்த வரலாற்று ஆசிரியனின் விருப்பம். பிறகு...மேலும் விஷயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. இந்தச் சரித்திரத்தில் வரும் ஊர்க்காரர்கள் இல்லாமல் ஆண்களும் பெண்களுமென ஒரு இரண்டாயிரத்து அறுநூறு பேர் வருவார்கள். அவர்கள் இந்தச் சரித்திரத்தில் செவ்வாய்க் கிழமையும் சனிக்கிழமையும் மட்டுமே வருவார்கள். அவர்கள் வருவது சந்தைக்குத்தான். வாங்குவதற்கும் விற்பதற்கும்... பொதுவாக அவர்கள் வந்தாலே ஊர் பயங்கரமான ஆரவாரத்தில் மூழ்கி விடும். எங்கு பார்த்தாலும் ஒரே குரல்கள் மயம்தான்...

அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து வேலை செய்யும் இரண்டு கலைஞர்கள்தான் மூன்று சீட்டுக்காரன் ஒற்றைக் கண்ணன் போக்கரும், பிக்பாக்கெட் அடிக்கும் முட்டாள் முத்தபாவும்.

ஸைனபாவும் பொதுமக்களில் ஒருத்திதான் என்றாலும், அவளை பொதுமக்களுடன் சேர்த்துப் பார்க்க முடியாது. அவளின் கலைகள் எல்லாம் மிக மிக ரகசியமானவை. அவள் என்ன செய்தாள்?

அதை நினைத்துப் பார்த்தால் யாரின் கண்ணும் வெளியே வந்து விடும். பெண்களில் ஒருத்தியையாவது நம்ப முடியுமா? தந்தைமார்களின் திட்டங்களை ஏன்தான் இவர்கள் ஒன்றுமே இல்லாமல் அடித்து நொறுக்குகிறார்களோ தெரியவில்லை.

ஹா! தந்தைமார்களின் கஷ்டம் என்னவென்று இந்தப் பெண்களுக்குத் தெரியுமா?

இது எல்லாமே ஒற்றைக் கண்ணன் போக்கரின் கேள்விகள். இதற்கு நாம் என்ன பதில் சொல்வது?

இந்தக் கதையை எழுதும் சரித்திர ஆசிரியனான நான் இதில் வரும் எல்லோருடனும் பேசிப் பார்த்தேன். ஆரம்பத்தில் என்னுடைய தார்மீக ஆதரவை சிலருக்குத் தரவும் செய்தேன். யாருக்கு என்கிறீர்களா? மொத்தத்தில் விஷயம் லேசானதல்ல. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்தது. வரலாற்று மாணவர்களுக்காக அந்தச் சரித்திரத்தை நான் இங்கு எழுதுகிறேன்.

ஒற்றைக் கண்ணன் போக்கரிடமிருந்து சரித்திரத்தை ஆரம்பிப்போம். அவனுக்கு இருப்பது ஒரே ஒரு கண்தான். 'ஒன் ஐஸ் மங்கி'  என்று ஊரில் இருக்கும் சில அறிவுஜீவிகள் அவனைப் பற்றி ரகசியமாகக் கூறுவதுண்டு. பரவாயில்லை.மற்றொரு கண்ணை அவன் இளம் பிராயத்தில் இருந்தபோது ஏதோ ஒரு தர்ம சண்டையில் இழந்து விட்டிருக்கிறான். அவனுக்கு இப்போது நடப்பது நாற்பத்தொன்பது வயது.ஆள் பார்க்க வெள்ளையாக இருப்பான். அவனுடைய வாயில் எஞ்சி இருக்கும் பற்களின் நிறம் என்ன என்பதை யாராலும் கூற முடியாது. வெற்றிலை போட்டுப் போட்டு அந்தப் பற்கள் எல்லாம் காவி வண்ணத்தில் இருக்கும். ஒற்றைக் கண்ணன் போக்கரை பொதுவாக எல்லோருமே மூன்று சீட்டுக்காரன் ஒற்றைக் கண்ணன் போக்கர் என்றுதான் அழைப்பார்கள்.

இவ்வளவு விஷயங்கள் கூறியதிலிருந்து மேற்சொன்ன நபரின் செல்ல மகள்தான் ஸைனபா என்ற உண்மையைச் சரித்திர மாணவர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? அவளுக்கு இப்போது நடப்பது பத்தொன்பது வயது. ஊரிலேயே நல்ல அழகி அவள்தான். அவளை நல்ல ஒரு இளைஞனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒற்றைக் கண்ணன் போக்கர் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தான். சமீபத்தில் அவன் கையில் ரொக்கம் என்று நூற்று இருபது ரூபாய் இருந்தது.

அந்தப் பணம் எங்கே போனது? அந்தக் கதையையும் பின்னால் நான் இங்கு எழுதுகிறேன்.

ஸைனபா அந்தப் பணத்தை எடுக்கவில்லை என்ற உண்மையை முன் கூட்டியே கூறி விடுகிறேன். தங்கச்சிலுவை தோமாவும் அதை திருடவில்லை. யானைவாரி ராமன் நாயரும் திருடவில்லை. எட்டுகாலி மம்மூந்தும் திருடவில்லை. சொந்தத்தில் சொத்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடன்பாடு இல்லாத மனிதர்கள் அவர்கள். அவர்களின் தொண்டரடிப் பொடிகள் கூட்டம் கூட அதைத் திருடவில்லை. ஊரில் இருக்கும் இரண்டு போலீஸ்காரர்கள் கூட அதை எடுக்கவில்லை. பிறகு யார்தான் திருடியது? ஸ்ரீஜித் முட்டாள் முத்தபாவா?

யாரும் அந்தப் பணத்தைத் திருடவில்லை என்று உறுதியான குரலில் கூற முடியும். அப்படியென்றால் அந்த நூற்று இருபது ரூபாய் எங்கே போனது? அதைப் பின்னால் சொல்கிறேன்.

இப்போது சரித்திரத்தை பெரும் மதிப்பிற்குரிய முட்டாள் முத்தபாவிடமிருந்து ஆரம்பிப்போம். அவன் வயது இருபத்தொன்று. ஆள் நல்ல கருப்பாக இருப்பான். லேசாக மாறுகண் இருக்கும். இருந்தாலும் முட்டாள் முத்தபாவின் வெள்ளைப் பற்களால் ஆன சிரிப்பு எல்லோருக்குமே பிடிக்கும். ஸைனபாவைப் போலவே அவனுக்கும் உம்மா இல்லை.


அவனின் வாப்பா ஒரு பெரிய திருட்டு குற்றத்தில் சிக்கி போலீஸ்காரர்களிடம் சண்டையிட்டதன் விளைவாக பல வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு சிறையில் கிடந்து மரணத்தைத் தழுவினான் என்று சொல்வார்கள். அதாவது... வீர சொர்க்கத்தை அடைந்திருக்கிறான். சொந்தம் என்று கூற அவனைப்

பொறுத்த வரை வேறு யாருமே இல்லை. அவனைப் பொதுவாக பாக்கெட்டடிக்காரன் முத்தபா என்றுதான் பொதுமக்கள் அழைப்பார்கள்.

முட்டாள் என்று முத்தபாவுக்குப் பெயர் வைத்தது மூன்று சீட்டுக்காரன் ஒற்றைக்கண்ணன் போக்கர்தான். ஒரு ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு முத்தபாவிற்கு பீடியை இழுத்து எப்படி மூக்கு வழியே புகையை விடுவது என்ற அற்புத வித்தையைச் சொல்லித் தந்தது ஒற்றைக்கண்ணன் போக்கர்தான். ஆனால், முத்தபா கொடுத்ததென்னவோ வெறும் ஐந்தரை அணாதான் (ஒரு அணா- ஆறு பைசா)

'முட்டாள்னு சொல்லப்படுறவன் எனக்கு பத்தரை அணா இன்னும் பாக்கி தரணும். (16 அணா ஒரு ரூபாய்')' மூக்கு வழியா எப்படி புகை விடுறதுன்றதை அவனுக்கு நான் தான் சொல்லித் தந்தேன்...' என்பான் போக்கர்.

அவனின் இந்தக் கூற்று ஒரு வித குழப்பத்தை உண்டாக்கியதென்னவோ உண்மை. முட்டாள் முத்தபாவின் எதிர்காலத்தை அது ஓரளவிற்கு பாதித்தது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். முட்டாள் முத்தபா உண்மையாகப் பார்க்கப்போனால் தங்கச் சிலுவை தோமா, யானைவாரி ராமன் நாயர் ஆகியோரிடம் தொழில் கற்றவன். ஒற்றைக்கண்ணன் போக்கர் இப்படிக் கூறியதால், மேலே சொன்ன பெரிய மனிதர்களான இரண்டு பேரும் முட்டாள் முத்தபாவை தங்களுக்கு வேண்டாதவன் என்று ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

முட்டாள் யாருக்கு வேண்டும்?

முட்டாள் முத்தபா பாக்கெட்டுக்குள் கையை விட்டு பணத்தைத் திருடும் தொழிலுக்கு வருவதற்கு முன்னால் பெருமைக்குரிய மூன்று சீட்டு விளையாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒற்றைக்கண்ணன் போக்கரிடம் பயிற்சி பெறுவதற்காக பலமுறை அவன் முயற்சி செய்தான். பலரையும் வைத்து சிபாரிசு கூட செய்ய வைத்தான். ஒற்றைக் கண்ணன் போக்கர் கோபத்துடன் கூறுவான்.

'போடா கழுதை கொஞ்சமாவது மூளையை வச்சிட்டு வா...'

அவன் சொன்னது உண்மைதான். எந்தத் தொழிலாக இருந்தாலும், கொஞ்சமாவது மூளை இருப்பதுதான் நல்லது. அதோடு சேர்ந்து கொஞ்சம் மூலதனமும் இருந்தால்... பேஷ்!

இது இரண்டுமே ஒற்றைக் கண்ணன் போக்கர் அவர்களிடம் இருக்கின்றன. அப்படியென்றால் மூன்று சீட்டு விளையாடுவதற்கு வேறென்னவெல்லாம் வேண்டும்? சரித்திர மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக நான் இங்கு கூறுகிறேன்.

ஒரு கட்டு புதிய சீட்டு. நல்ல நிலையில் உள்ள ஒரு நாளிதழின் கிழியாத ஒரு பழைய பக்கம். நான்கு சுத்தமான சிறிய கற்கள்... அந்த நான்கு கற்களும் பேப்பரை நன்கு விரித்து அதன் நான்கு முனைகளிலும் வைப்பதற்காகத்தான். முன் கூட்டியே எச்சரிக்கையாக இந்த ஏற்பாடுகளைச் செய்வதற்குக் காரணம், காற்றில் விரிக்கப்பட்டிருக்கும் நாளிதழ் பறந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான். பிறகு... புதிய சீட்டுக் கட்டில் இருந்து மூன்று சீட்டுகளை எடுக்க வேண்டும். ஒருபடச் சீட்டும் இரண்டு எண் சீட்டுகளும். ஒரு கையில் இரண்டு சீட்டுகளையும் இன்னொரு கையில் ஒரு சீட்டையும் விரல்களில் பிடித்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் நன்றாகப் பார்க்கும் வண்ணம் படம் உள்ள சீட்டு மேலே இருக்க வேண்டும். அடுத்து நம்முடைய நேர்மையை வெளிப்படுத்தும் வண்ணம், பிரபஞ்சத்துடன் உரத்த குரலில் பேச வேண்டும்.... இப்படித்தான்.

'ஹாய்...வை ராஜா வை. ஒண்ணு வச்சா ரெண்டு. ரெண்டு வச்சா நாலு... படத்துல வச்சா உங்களுக்கு. எண்ணுல வச்சா எனக்கு. ஹாய்!... பார்த்து வைங்க... மாயமில்ல, மந்திரமில்ல... ஹாய்! வை ராஜா வை. யார் வேணும்னாலும் வைக்கலாம். பார்த்து வைங்க...'

இப்படிக் கூறியவாறு சுர்ரென்று மூன்று சீட்டுகளையும் பேப்பரில் கவிழ்த்து வைக்க வேண்டும். முதலில் கீழே விழுவது படம் உள்ள சீட்டாக இருக்கலாம், இல்லாவிட்டால் எண் உள்ள சீட்டாகக் கூட இருக்கலாம். இருந்தாலும், இதையெல்லாம் கவனமாகப் பார்க்க வேண்டியது புரட்சி எண்ணங்களைக் கொண்ட பொதுமக்கள்தாம். பொதுமக்கள் நன்றாகக் கவனிக்கவும் செய்வார்கள்...எது எப்படியோ ஒன்று வைத்தால் இரண்டு கிடைக்கக் கூடிய ஒரு விஷயத்தை விரும்பாத பொது மக்களும் இருப்பார்களா என்ன? அவர்கள் காசு வைப்பார்கள். அணா வைப்பார்கள். ரூபாய் வைப்பார்கள்... ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று வைக்கிற பொதுமக்களும் இருக்கவே செய்வார்கள். இருந்தாலும், சீட்டுகளை மல்லாக்க விரித்துப் பார்க்கிற போது, கஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்... பொது மக்கள் எல்லோருமே பணத்தை வைத்திருப்பது எண் உள்ள சிட்டிலாகத்தான் இருக்கும்.

ஒற்றைக் கண்ணன் போக்கர் அந்தப் பணம் முழுவதையும் தான் எடுத்துக் கொள்வான். (அந்தப் பணத்தில் இருந்து ஒவ்வொரு சந்தைக்கும் வெளிநாட்டு அரசாங்கத்தின் ஆட்களான போலீஸ்காரர்களுக்கு இரண்டு ரூபாய் போயாக வேண்டும்.) இப்படித்தான் போர் பாரம்பரியம் உள்ள பொதுமக்கள் தோல்வியடைவதும், ஒற்றைக்கண்ணன் போக்கர் வெற்றி பெறுவதும் எப்போதும் நடக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. இப்படியே எப்போது விளையாடினாலும் நடக்கிறது என்றால், பொதுமக்கள் எப்படி ஒற்றைக்கண்ணன் போக்கரைத் தேடி வருவார்கள்? பொதுமக்கள் என்பவர்கள் ஒன்றுமே தெரியாத முட்டாள் கழுதைகளா என்ன? அப்படியெல்லாம் இல்லை என்று உலகத்திற்குக் காட்டுவதற்காக ஒற்றைக் கண்ணன் போக்கர் ஒரு காரியம் செய்வான். பத்தில் ஒன்று என்றல்ல- ஆறு முறை ஒற்றைக் கண்ணன் போக்கர் பொதுமக்களைத்தான் வெற்றி பெற வைப்பான். அதாவது... இப்படி வெற்றி பெறுகிற பொதுமக்கள் எப்போதும் ஒற்றைக்கண்ணன் போக்கரிடம் தொழில் கற்றுக் கொண்டிருக்கும் அப்ரண்டீஸாக இருப்பார்கள். இந்த ரகசியம் மற்ற பொதுமக்களுக்குத் தெரியவே தெரியாது. இதில் ஏதாவது வஞ்சனை இருக்கிறதா? சதித் திட்டம் இருக்கிறதா? எதுவுமே இல்லை. எல்லாமே க்ளீன்! இதுபோல ஏதாவதொரு இடத்தில் உட்கார்ந்து புத்திசாலித்தனத்துடன் செய்வதுதான் பாக்கெட்டடிக்காரன் முட்டாள் முத்தபாவின் தொழிலா என்ன?

ஒரு தொழில் என்று பார்த்தால் பாக்கெட்டிற்குள் கையை விட்டு பணத்தைத் திருடுவது என்பதை மோசமான ஒன்று என்று கூறுவதற்கில்லை. வெளிநாடுகளில் இந்தத் தொழில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அங்கு இதற்கென கல்லூரிகளெல்லாம் கூட இருக்கின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும்- இந்தத் தொழிலைச் செய்வதாக இருந்தால், அதற்கு ஒரு முழுமையான கவனம் வேண்டும். பொறுமை இருக்க வேண்டும். பிறகு... கொஞ்சமாவது மூளை இருக்க வேண்டும்.


முட்டாள் முத்தபாவிற்கு மூளை இருக்கிறதா? இந்தத் தொழில் செய்ய வேறு என்ன மூலதனங்கள் வேண்டும்? சாதாரணமாக பாக்கெட்டிற்குள் கையை விட்டு பொருட்களை அடிப்பதற்கு கட்டாயம் வேண்டியது மகா துணிச்சல். அதோடு நீளமான மெலிந்த விரல்களும், பெரிய ஒரு சால்வையும். அவற்றை வைத்துக் கொண்டு பொதுமக்கள் மத்தியில் நடக்க வேண்டும். கோஷங்களோ, வாய் பேச்சோ எதுவுமே இங்கு தேவையில்லை. முழுமையான நிசப்தம்தான் இங்கு அவசியத் தேவை. இருந்தாலும், கவனம் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். பிறகு... எப்போதும் பொதுமக்களுடன் இரண்டறக் கலந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தத் தொழிலைச் செய்யவே முடியாது. பொதுமக்களுடன கலந்து சங்கமமாகாமல், தனியாக, கோபுரத்தின் உச்சியில் இருந்தால் கூட இந்தத் தொழிலைச் செய்ய முடியாது. சரித்திர மாணவர்கள் இந்த விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல பிக்பாக்கெட் எப்போதும் மக்களுடன் கலந்து உறவாடக் கூடியவனாக இருக்கவேண்டும். வாய் நாற்றத்தைப் பற்றியோ, வியர்வை நாற்றத்தைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் மக்களுடன் மக்களாய் கலந்து பழகத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் பொதுமக்களின் நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் அவன் பங்கு கொள்ளவேண்டும். கூட்டு வாழ்க்கை!

இதுதான் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தேவையான அடிப்படை குணம். திருமணங்கள், கூட்டங்கள், மாட்டுச் சந்தைகள், திருவிழாக்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், குஸ்தி, பந்து விளையாட்டு, இலக்கியக் கூட்டங்கள், அரசியல் மாநாடுகள், சவ ஊர்வலங்கள்- சுருக்கமாக கூறுவது என்றால் எங்கெல்லாம் பொதுமக்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் ஆரவாரம் இருக்கிறதோ, எங்கே நெருக்கம் அதிகமாக இருக்கிறதோ, அங்கே இந்தத் தொழிலைச் செய்யக் கூடிய கலைஞன் அவசியம் போய் கலந்து கொள்ள வேண்டியதுதான். கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களுடன் நெருக்கியடித்துக் கொண்டு மடியிலோ, பாக்கெட்டிலோ பணம் வைத்துள்ளவர்களை நெருங்கிப் போக வேண்டும். சால்வை நுனியால் அவர்களின் பாக்கெட்டையோ மடியையோ மூட வேண்டும். வலது கை சால்வைக்கு அடியில் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை மறந்து விடக்கூடாது. கண்கள் இமைக்கக்கூடிய நேரத்தில் என்று சொல்வார்களே! அந்த நேரத்திற்குள் 'சட்புட்'டென்று பையையோ பர்ஸையோ எடுத்துவிட வேண்டும். இதை எப்படி வேகமாகச் செய்வது என்பதை ஆரம்பத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி ஒன்றால் மட்டுமே இந்த விஷயத்தை ஒருவன் கற்றுக் கொள்ள முடியும். இது தவிர, ஒருவனுக்கு நம்பிக்கையான ஒரு உதவியாளரும் கட்டாயம் இருக்க வேண்டும்.

நாம் உள்ளேயிருந்து பிடுங்கும் பொருளை உடனே வாங்குவதற்கு ஒரு ஆள் வேண்டுமல்லவா? அவன் அதைப் பெற்றுக் கொண்டு அந்தக் கணமே இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும். இந்தத் தொழிலைப் பண்ணுவதற்குத் தேவையான விஷயங்களில் முட்டாள் முத்தப்பாவிடம் இருப்பது சற்று நீளமான விரல்களும் ஒரு பழைய சால்வையும் மட்டும்தான். பொருத்தமில்லாத ஒன்று என்று சொல்வதாக இருந்தால் அவனிடம் ஒன்று இருக்கவே செய்தது. அது- அவனின் உயரம் ஆறடி இரண்டு அங்குலம் அவன்.

அதனால் எவ்வளவு பெரிய கூட்டத்தில் அவன் நின்றாலும் அவன் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதை யாராலும் மிக எளிதாகக் கண்டு பிடித்துவிட முடியும். அதோடு நின்றால் பரவாயில்லை,தூரத்தில் நின்று கொண்டிருக்கும் பொதுமக்களில் யாராவதொரு பரம துரோகி உரத்த குரலில் சத்தமாகச் சொல்லுவான்! 'டேய்,

வாழைக்குலைக்காரா! உனக்குப் பக்கத்துல உயரமா நின்னுக்கிட்டு இருக்குற ஆள் ஸ்ரீஜித் முட்டாள் முத்தபா. மடியை பத்திரமா பார்த்துக்கோ. உஷார்! உஷார்!’

கலைஞர்களுக்கு எப்படி பரிசு கிடைக்கிறது பார்த்தீர்களா? இப்படி உரத்த குரலில் சொல்வது ஊர்க்காரர்களில் யாருமில்லை. வெளியே இருந்து வந்தவர்கள். வெளிநாட்டு அரசாங்கத்தின் ஆட்கள். அப்படிப்பட்ட ஆட்கள் ஒன்று சேர்ந்து முட்டாள் முத்தபாவிற்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியே உண்டாக்கி விட்டார்கள். இது போன்ற சந்தர்ப்பங்கள் வருகிறபோது அரசியல்வாதிகள் அழைப்பதைப் போல முட்டாள் முத்தபா அப்படிப்பட்டவர்களை 'துரோகிகள்' என்றோ, 'முதுகில் குத்துபவர்கள்' என்றோ சொல்வதில்லை. மாறாக, அவர்களைப் பார்த்து அவன் புன்னகை செய்வான். வெகுளித்தனமான புன்னகை. அந்தப் புன்னகையில் யாருமே மயங்கி விடுவார்கள். ஆனால் போலீஸ்காரர்கள் மயங்குவார்களா என்ன? ஒவ்வொரு சந்தையிலும் முட்டாள் முத்தபாவிடமிருந்து போலீஸ்காரர்களுக்குப் போய் சேர வேண்டிய தொகை ரூபாய் ஒன்று. இந்த விஷயத்தில் ஊர்க்காரர்கள் போலீஸ்காரர்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் நேர்மையானவர்கள். யோக்கியர்கள். வெளிநாட்டு அரசாங்கத்தின் ஆட்களான போலீஸ்காரர்கள் அந்த ஊர்க்காரர்களுக்கு தேவையே இல்லை. ஆனால், போலீஸ்காரர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களுக்குப் பணத்தை எப்படி கொடுக்க முடியும்? ஒன்றுமே கிடைக்கவில்லை. இதைச் சொன்னால் போலீஸ்காரர்கள் சரி என்று ஏற்றுக்கொள்வார்களா என்ன? இருந்தாலும், முட்டாள் முத்தபாவுக்கு எதிராக சாட்சி சொல்ல எப்போதும் ஒற்றைக்கண்ணன் போக்கர் தயாராகவே இருக்கிறான்.

"அந்த முட்டாள் பயலுக்கு இன்னைக்கு பத்து ரூபா கிடைச்சது. நானே பார்த்தேன்."

அப்போது  முட்டாள் முத்தபா சொல்லுவான்.

"ஒற்றைக் கண்ணன் இப்லீஸே... ஒன்ஐஸ் மங்கி... உன்னோட இன்னொரு கண்ணும் இல்லாமப் போகும்!"

இப்படித்தான் ஒற்றைக்கண் போக்கரின் முக்கியமான எதிரிகளின் முக்கிய மனிதனாக ஆனான் முட்டாள் முத்தபா. இப்படித்தான் முட்டாள் முத்தபாவின் முக்கிய எதிரிகளில் முக்கிய மனிதனாக ஆனான் ஒற்றைக் கண்ணன் போக்கர். இந்த விஷயம் பொதுவாக எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். ஊரிலேயே மிகப் பெரிய முட்டாள் பிக்பாக்கெட் அடிக்கும் முட்டாள் முத்தபாதான். ஊரில் இருக்கும் ஒரு அறிவு ஜீவி ஒற்றைக்கண்ணன் போக்கர்.

இப்படிப்பட்ட முட்டாள், இப்படிப்பட்ட அறிவு ஜீவியை மூன்று சீட்டு விளையாட்டில் தோற்கடித்தான் என்பதும், ஸைனபாவை.. ஆ!

அந்த வரலாற்றைத் தான் இனி கொஞ்சம் கொஞ்சமாகக் கூறப் போகிறேன்.

ஒரு சனிக்கிழமை. சந்தை எப்போதும் ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பு மூன்று சீட்டு விளையாட்டுக்காரனான ஒற்றைக் கண்ணன் போக்கர் சந்தையில் இருக்கும் பழைமையான பூவரச மரத்தின் நிழலில் தன்னுடைய கலைத் திறமையைக் காட்ட ஆரம்பித்தான். முட்டாள் முத்தபா பொழுது நன்றாக விடிந்திருந்தும், எதுவுமே சாப்பிடாமல் இருந்தான். தேநீர் அருந்தாமல் அவனுக்கு என்னவோ போல் இருந்தது. யாரும் அந்தக் கலைஞனை ஒரு பொருட்டாக நினைத்ததாகவே தெரியவில்லை. அரை டம்ளர் தேநீர் கூட அவனுக்கு வாங்கி வந்து தர பொதுமக்களில் ஒருவர் கூட தயாராக இல்லை. ஸைனபாவைத் தேடிப் போனால் என்ன என்று நினைத்தான் முட்டாள் முத்தபா.


ஆனால், அவளுக்கு அவன் பணம் பாக்கி தர வேண்டி இருக்கிறதே! இதையெல்லாம் மனதிற்குள் நினைத்தவாறு அவன் நடந்தபோது, ஒரு ஜிப்பா தரித்த மனிதன் எதிரில் வந்தான். தங்கக் கலரில் கைக் கடிகாரமும் தங்கக் கலரில் பவுண்டன் பேனாவும் அந்த ஆள் வைத்திருந்தான். மொத்தத்தில் ஒரு ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருள் அந்த ஜிப்பாக்காரனிடம் இருந்தது. அவன் ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து புகைத்து உலகத்தையே மறந்து புகையை ஊதியவாறு சந்தையைத் தாண்டி நடந்தபோது, முட்டாள் முத்தபா அந்த மனிதனிடம் பிக்பாக்கெட் அடித்துவிட்டான். உண்மையிலேயே வெற்றிகரமாகச் செய்யப்பட்ட பிக்பாக்கெட் நிகழ்ச்சி அது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால், அந்தச் சம்பவம் முட்டாள் முத்தபாவை சந்தோஷப்படுத்தும் விதத்தில் அமையவில்லை. துணியால் செய்யப்பட்ட ஒரு பர்ஸ். அதில் ஐந்தரை அணாவும் மூக்குத்தி அணிந்திருந்த ஒரு திரைப்பட நடிகையின் சிறிய படமும் இருந்தன. “அவளும் அவளின் மூக்குத்தியும்! போ கழுதை...” -என்று கூறியவாறு முட்டாள் முத்தபா அந்த அழகியின் படத்தைக் கிழித்து தூரத்தில் எறிந்தான். மனதிற்குள் அந்த ஜிப்பாக்காரனை வாய்க்கு வந்தபடி திட்டினான். திருட்டுப்பயல்! என்ன பந்தாவாக அவன் நடந்து வந்தான்! ஆனால், அவனிடம் இருந்த பர்ஸில் இருந்ததென்னவோ வெறும் ஐந்தரை அணா!

ஊரில் புதிதாகக் திறக்கப்பட்ட ஒரு ஹோட்டலில் ஏகப்பட்ட கூட்டம். அங்கு தன் வேலையைக் காட்டினால் என்ன என்று நினைத்த முட்டாள் முத்தபா ஒரு தடிமனான ஆளின் பக்கவாட்டு பாக்கெட்டையொட்டிப் போய் உட்கார்ந்தான். அவன் சொல்லாமலே கொண்டு வந்து வைக்கப்பட்ட தேநீரையும் பலகாரத்தையும் சாப்பிட்டான். மொத்தம் நாலணா ஆனது. அங்கேயிருந்து புறப்பட்டு வெளியே வந்தான். அரையணாவிற்குப் பீடி வாங்கி உதட்டில் வைத்து புகைத்தான். ஒரு அணாவைக் கையில் வைத்துக்கொண்டு ஒற்றைக் கண்ணன் போக்கரைத் தேடி வந்தான்.

“ஹாய்... வை ராஜா வை. ஒண்ணு வச்சா ரெண்டு... எந்த முட்டாள் கழுதையும் வைக்கலாம்...” என்று சொல்லி முடிப்பதற்கு முன்பே சீட்டுகளைக் கவிழ்த்து வைத்தான்.

முட்டாள் முஸ்தபா படம் இருக்கும் சீட்டின் மேல் ஒரு அணா வைத்தான்.

“போடா கழுதை” என்று சொல்லிய ஒற்றைக் கண்ணன் போக்கர் சீட்டை எடுத்தான். எண் உள்ள சீட்டு! “இன்னும் வைக்கிறியாடா?” - ஒற்றைக் கண்ணன் போக்கர் சவால் விடுவது மாதிரி அழைத்தான். ஆனால் அதற்கு மேல் வைப்பதற்கு முட்டாள் முத்தபாவிடம் எங்கே காசு இருக்கிறது?

அவன் ஒரு பீடியை எடுத்து பிடித்து புகைவிட்டவாறு சந்தையின் ஆரவாரத்தை விட்டு வெளியே வந்து தூரத்தில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த நதியை நோக்கி வந்தான். தன்னுடைய நிலையை முட்டாள் முத்தபா ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தான். பாவம்... அவன் என்ன செய்வான்? அவனின் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருந்திருக்க வேண்டியது! மனதிற்குள் அவன் தொரப்பன் அவறானின், டிரைவர் பப்புண்ணியின், தங்கச் சிலுவை தோமாவின், யானைவாரி ராமன் நாயரின் சீடன்தான். அவனை மட்டும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்றால்...? எல்லாவற்றிற்கும் காரணம் அந்த ஒன் ஐஸ் மங்கி... ஒற்றைக் கண்ணன் போக்கர்தான். முட்டாள் முத்தபா நினைத்தான். இப்படிப்பட்ட பல சிந்தனைகளுடன் அவன் நதிக்கரையை ஒட்டி நடந்தவாறு வந்து சந்தைக்குப் பக்கத்தில் இருந்த படகுத் துறைக்கு வந்தான்.

படகுத் துறையில் நிறைய படகுகள் நின்றிருந்தன. நீருக்குப் பக்கத்திலேயே சேனை, மரவள்ளிக்கிழங்கு, தேங்காய், வாழைக்குலை- எல்லாமே குவியலாகக் கிடந்தன. படகுகளில் ஏற்றுவதற்காக வந்தவையா இல்லாவிட்டால் அவற்றிலிருந்து இறக்கப்பட்டவையா?

அவன் அதைப் பற்றி பெரிதாக எண்ணாமல் ஸைனபாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தபோது, ஆச்சரியமான ஒரு சம்பவம் நடைபெற்றது.

அந்தக் குவியலில் இருந்து ஒரு வாழைக்குலை நகர்ந்து நகர்ந்து மெதுவாக நதிக்குள் செல்கிறது. அடுத்த நிமிடம் கொஞ்சம் கொஞ்சமாக நதிக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. நதிக்குள் அது உருண்டு விழவில்லை. இறங்கி நடக்கிறது. உயிருள்ளதைப் போல!

இதென்னடா அதிசயம் என்று நினைத்தான் முட்டாள் முத்தபா. வாழைக்குலை மேல் சைத்தான் ஏதாவது புகுந்திருக்கிறதா என்ன? பிசாசு புகாமல் ஒரு வாழைக்குலையால் இப்படியெல்லாம் நீருக்குள் இறங்கிப் போக முடியுமா? அது நீருக்குள் மூழ்கி நகர்ந்து சென்று அடுத்த படகுத் துறைக்குப் போனது. அந்தப் படகுத் துறைக்குப் பக்கத்தில்தான் மூன்று சீட்டுக்காரன் ஒற்றைக்கண்ணன் போக்கரின் வீடு இருக்கிறது. அந்தப் படகுத் துறைக்கும் நடுவில் நதியில் சாய்ந்து நிற்கும் மரங்களில் கூட்டம் உண்டு. பெரும்பாலும் இலவ மரங்கள் தான். மொத்தத்தில் பச்சைப் பசேல் என்று நின்றிருக்கும் அந்த மரங்கள் ஒரு மறைவு போல இருக்கும். படகில் ஆண்களும் பெண்களும் சாமான்களுடன் இக்கரைக்கும் அக்கரைக்குமாய் போய்க் கொண்டிருந்தார்கள். படகுத் துறையிலும் ஆட்கள் இருந்தார்கள். நகர்ந்து நகர்ந்து நீருக்குள் செல்லும் வாழைக் குலையை யாரும் பார்க்கவில்லை.

அந்தக் குலை மூழ்கி நீந்திச் சென்று கரையில் ஏறுகிற அற்புத காட்சியைப் பார்ப்பதற்காக முட்டாள் முத்தபா இலவ மரங்களினூடே அந்தப் பக்கம் செல்லும்போது ஒரு அதிசயம் நடந்தது. மூன்று சீட்டுக்காரன் ஒற்றைக் கண்ணன் போக்கரின் அருமை மகள் அழகி ஸைனபா தண்ணீருக்குள் குனிந்தவாறு நின்றிருக்கிறாள்... கட்டியிருந்த ஆடைகள் முழுவதும் நனைந்து உடம்போடு ஒட்டிக்கிடந்த அருமையான காட்சி! அவள் ஏதோ ஒரு கயிறை இழுத்தவாறு நின்றிருக்கிறாள். சிறிது நேரம் கழித்து அவள் அந்தப் பெரிய வாழைக் குலையைத் தூக்கி எடுத்தாள். அடடா! அந்தக் குலையில் ஒரு பெரிய கொக்கிமாட்டப்பட்டிருந்தது. முட்டாள் முத்தபாவிற்கு எல்லா விஷயங்களும் நன்கு புரிந்து போனது. மிகவும் நீளமான சணலின் நுனியில் ஒரு கொக்கி. மெதுவாக நீருக்குள் மூழ்கிச் சென்று படகுகளின் மறைவில் இருந்தவாறு வாழைக்குலையில் கொக்கியை மாட்ட வேண்டும் பிறகு மூழ்கியவாறு வந்து சணலை மெதுவாக, மிக மிக மெதுவாக இழுக்க வேண்டும். முட்டாள் முத்தபாவிற்கு இதைப் பார்த்தபோது ஒரு விதத்தில் மனதிற்குள் கவலை உண்டானது. ஆண்கள் திருடுவதோ, பிக்பாக்கெட் அடிப்பதோ, கொள்ளை அடிப்பதோ தவறு என்று கூறுவதற்கில்லை. அவை எல்லாமே பார்க்கப் போனால் கலைத் திறமைகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதையே பெண்கள் செய்வது என்பது...? முட்டாள் முத்தபாவிற்கு அது சரியான விஷயமாகப் படவில்லை. வருத்தமும், பதைபதைப்பும் குடிகொள்ள முட்டாள் முத்தபா அங்கேயே நின்றிருந்தான்.


ஸைனபா வாழைக்குலையுடன் பயங்கரமாக நனைந்து கரையில் ஏறினாள். இப்படியொரு ஆள் கரையில் நின்று கொண்டிருப்பான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முட்டாள் முத்தபாவைப் பார்த்தபோது வாழைக்குலை தானாகவே கீழே விழுந்தது. அவளின் முகம் சிவந்துவிட்டது. அடுத்த நிமிடம் வெலவெலத்துப் போய் அவள் நின்றாள். தலைமுடியில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. ஈரம் சொட்டச் சொட்ட பெரிய ஒரு குற்ற உணர்வுடன் தலையைக் குனிந்தவாறு முட்டாள் முத்தபாவின் முன்னாள் நின்றிருந்தாள்.

“ஸைனபா! -முட்டாள் முத்தபா மெதுவான குரலில் அழைத்தான். அந்த அழைப்பில் அன்பும், வேதனையும், பதைபதைப்பும்... எல்லாமே கலந்திருந்தன என்பதுதான் வரலாறு.

“என்ன?” -ஸைனபா மெல்லிய குரலில் கேட்டாள்.

“நீ இப்படிச் செஞ்சது சரியா?”

“இல்ல...”

“போயி சீக்கிரமா தலையை துவட்டிட்டு முண்டையும் ஜாக்கெட்டையும் மாத்திக் கட்டு. காய்ச்சல் வந்துடப் போகுது!”

ஸைனபா வாழைக் குலையை எடுக்காமலே வீட்டை நோக்கி ஓடினாள். முட்டாள் முத்தபாதான் அதை எடுத்துக்கொண்டு போய் கொடுத்தான். ஸைனபா வீட்டில் வைத்தே ஒரு வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். புட்டு, அப்பம் வேக வைத்த கடலை, பருப்புவடை, பழம் போன்றவற்றை விற்பது. யானைவாரி ராமன் நாயர், தங்கச்சிலுவை தோமா, முட்டாள் முத்தபா, எட்டுகாலி மம்மூந்து- இவர்கள் எல்லோருமே அவளின் வாடிக்கையாளர்கள்.

முட்டாள் முத்தபா, ஸைனபா வைத்த இடியாப்பம், பழம், தேநீர் ஆகியவற்றைச் சாப்பிட்டான். தன்னை ஸைனபாவிற்குப் பிடித்திருக்கிறதா என்று அவன் கேட்டதற்கு, அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. முத்தபா அப்படியொன்றும் முட்டாள் இல்லை என்பதை மட்டும் அவள் நன்கு அறிவாள். அவளே சொன்னாள்.

“அது சும்மா வாப்பாவும் மத்தவங்களும் சொல்றது!” ஒற்றைக் கண்ணன் போக்கர் என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்போம். ஸைனபாவின் மனதில் உள்ள விஷயம்

அவனுக்குக் கொஞ்சமும் தெரியாது. அதாவது- ஸைனபாவைப் பற்றி அவன் சிறிது கூட சந்தேகப்படவே இல்லை. என்ன இருந்தாலும் அவன் அருமை மகளாயிற்றே அவள்! ஒரு ஐநூறு ரூபாயாவது செலவழித்து அவளின் காதுகளிலும் கழுத்திலும் தங்க நகைகள் வாங்கி அணிவித்து அவளை நன்கு காப்பாற்றக் கூடிய ஒரு நல்ல இளைஞனாகப் பார்த்து கல்யாணம் பண்ணித் தர வேண்டும் என்பது அவன் திட்டம். இந்த ஒரே எண்ணம் தான் அவன் மனதில் இரவில், பகலிலும் இருந்து கொண்டிருந்தது. பெண் நன்றாக வளர்ந்துவிட்டாள். சீக்கிரம் அவளுக்கேற்ற மாப்பிள்ளையைக் கண்டுபிடிக்க வேண்டும்- இப்படிப்பட்ட எண்ணங்களை மனதில் ஓடவிட்டவாறு ஒற்றைக் கண்ணன் போக்கர் ஒரு நாள் சந்தை முடிந்து கொஞ்சம் மரவள்ளிக் கிழங்கு, உப்பு, மிளகாய், ஒரு கட்டு வெற்றிலை, கொஞ்சம் கருவாடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி வந்தான். அப்போது ஒற்றைக் கண்ணன் போக்கர் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு காட்சி!

ஸைனபாவின் மடியில் தலையை வைத்தவாறு முட்டாள் முத்தபா சுகமாக படுத்திருந்தான்!

ஒரு தந்தையின் நெஞ்சு வெடிக்க இதற்கு மேலா இன்னொரு விஷயம் வேண்டுமா?

ஊரிலேயே இருக்கும் அடி முட்டாள், பிக்பாக்கெட் அடிப்பவன், கருப்பன், மாறுகண்ணை உடையவன் தன் செல்ல மகளின் மடியில் தலையை வைத்து படுத்துக் கிடப்பதா? இப்படிப்பட்ட ஒரு காட்சி எந்த தந்தைக்கும் நிச்சயம் பிடிக்கவே பிடிக்காது. எப்படிப் பிடிக்கும்?

“வாப்பா...” -என்று கூறியவாறு ஸைனபா அடித்துப் பிடித்து எழுந்தாள்.

முட்டாள் முத்தபா தன் வெண்மை நிற பற்களைக் காட்டியவாறு முடிந்தவரை தன்னை அழகாகக் காட்டிக் கொண்டு சிரித்தான்.

அதைப் பார்த்து ஒற்றைக் கண்ணன் போக்கரின் கண்கள் கோபத்தால் சிவந்தது. அவன் ஒரு பெரிய சர்க்கரைவள்ளிக் கிழங்கை எடுத்து முத்தபாவின் நெஞ்சின் மேல் ஓங்கி ஒரு அடி அடித்தான்.

முத்தப்பாவிற்கு நெஞ்சு பயங்கரமாக வலித்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய வெள்ளைச் சிரிப்பை கொஞ்சம் கூட நிறுத்தாமல் தன் மேல் பட்ட மரவள்ளிக்கிழங்கை எடுத்து ஒடித்து சர்வ சாதாரணமாக தன்னை ஆக்கிக்கொண்டு ‘கரமுர’ என்று அதைக் கடித்து தின்ன ஆரம்பித்தான். பிறகு மகிழ்ச்சியுடன் சொன்னான்.

“மாமா... நான் ஸைனபாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்...”

அவன் சொன்ன அந்தக் கூற்றில் இரண்டு முக்கிய விஷயங்கள் மறைந்திருந்தன. சாதாரணமாக “மாமா” என்று யாரை அழைப்பார்கள்! தாயின் சகோதரனைத்தான். இல்லாவிட்டால் மனைவியின் தகப்பனை. முட்டாள் முத்தபா, போக்கரின் சகோதரி மகனா என்ன? அதே நேரத்தில் அவன் போக்கரின் மகளுடைய கணவனுமல்ல. நிலைமை இப்படி இருக்கிறபோது அவன் மாமா என்று அழைக்கிறான் என்றால்... சரி, அது இருக்கட்டும். ஸைனபாவைத் திருமணம் செய்யப் போவதாகச் சொல்கிறான். “தயவுசெஞ்சு எனக்கு அவளைத் திருமணம் செஞ்சு தாங்க” என்று அவன் கேட்கவில்லை. மாறாக தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறான். எப்படி இருக்கிறது விஷயம்?

“டேய் திருட்டுப் பயலே! முதல்ல நீ வீட்டை விட்டு வெளியேறுடா...”

முட்டாள் முத்தபா அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

“மாமா...” -முத்தபா ரொம்பவும் பவ்யத்துடன் பேசினான். “நான் இதற்கு முன்னாடி ஏதாவது தப்பா பேசியிருந்தா தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. இனி நான் பிக்பாக்கெட் அடிக்கவே கூடாதுன்னு ஸைனபா கறாரா சொல்லிட்டா. நிச்சயமா நான் இனிமேல் அந்தத் தொழிலைச் செய்யமாட்டேன்.”

“அப்படின்னா நீ இனிமேல் பிச்சை எடுக்கப் போறியாடா கழுதை?”

முட்டாள் முத்தபா சொன்னான்.

“இனிமேல் நான் சாயாகடை வைக்கப் போறேன். அதுக்கு மாமா... நீங்கதான் பத்துரூபா தந்து உதவணும்.”

ஒற்றைக் கண்ணன் போக்கர் சொன்னான்.

“உனக்கு மூக்குல புகை விடுறது எப்படின்னு சொல்லித் தந்ததுக்கே நீ இன்னும் பத்தரை அணா தர வேண்டியதிருக்கு. முதல்ல அதைத் தந்துட்டு வீட்டை விட்டு வெளியே போ.”

முட்டாள் முத்தபா அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அவன் சொன்னான். “எங்க கல்யாணம் இந்த மாசமே நடக்கணும்...”

“டேய்... நீ இடத்தை காலி பண்றியா இல்லியா?” -ஒற்றைக் கண்ணன் போக்கர் உரத்த குரலில் கத்தினான். “நான் உயிரோட இருக்குற காலம் வரைக்கும் அப்படி ஒரு விஷயம் நடக்கவே நடக்காது.”

ஒற்றைக் கண்ணன் போக்கரின் உயிர் இருக்கிற காலம் வரையில் ஸைனபா மேல் எந்தவொரு ஆசையையும் முட்டாள் முத்தபா வைக்கவே கூடாது என்பது போக்கரின் திடமான தீர்மானம். இருந்தாலும் முத்தபா சொன்னான்.


“மாமா... நீங்க உயிரோட இருக்குறப்பவே நான் ஸைனபாவைக் கல்யாணம் பண்ணத்தான் போறேன்.”

“இப்போ நீ புறப்படுறியா இல்லியா?” -ஒற்றைக் கண்ணன் போக்கர் அலறினான்.

அடுத்த நிமிடம் முட்டாள் முத்தபா அந்த இடத்தை விட்டு அகன்றான். ஸைனபாவைத் திருமணம் செய்து அவளை எப்படியும் மனைவியாக ஆக்குவதில் அவன் மிகவும் தீவிரமாக இருந்தான். அதை எப்படி அவன் நிறைவேற்றப் போகிறான்?

மக்களை இந்த விஷயத்திற்காகத் திரட்டுவது என்று முடிவு செய்தான் முட்டாள் முத்தபா. அவர்களை வைத்து போராடுவதுதான் சரியான விஷயமாக இருக்கும் என்ற தீர்மானத்திற்கு அவன் வந்தான். அமைதியான வழியில் நடக்கப் போகும் போராட்டம்தான்!

இந்த விஷயம் காட்டுத்தீ போல ஊரெங்கும் பரவியது. போர் பாரம்பரியமுள்ள ஊர்க்காரர்கள் உஷாரானார்கள். பொது மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். ஊருக்கு வெளியே அவுட் போஸ்ட்டில் இருக்கும் இரண்டு போலீஸ்காரர்களும் முதலில் ஒற்றைக் கண்ணன் போக்கரின் பக்கம் நின்றார்கள். பின்னால் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை அவர்களும், பொதுமக்களில் பெரும்பாலானவர்களும் முட்டாள் முத்தபாவின் பக்கம் வந்து விட்டார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும்-

“ஸைனபா யார் பக்கம்?” -இதுதான் பொதுமக்களின் கேள்வி.

“நம்ம பக்கம்தான்” -முட்டாள் முத்தபா நெஞ்சிலடித்து சொன்னான்.

இருந்தாலும், ஸைனபா யார் பக்கம் நிற்கிறாள் என்பதைப் பற்றி தெளிவாக யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யானைவாரி ராமன் நாயரும் தங்கச் சிலுவை தோமாவும் தலைமை தாங்கி கூட்டாக ஒரு அறிக்கைவிட்டார்கள்.

“அந்தப் பெண்ணோட மனசு எந்தப் பக்கம் இருக்கோ, அந்தப் பக்கம்தான் வெற்றி பெறும்!”

இந்த அறிக்கையை ஒரு குருட்டுத்தனமான அறிக்கை என்று பொது மக்களில் சிலர் கருத்து கூறினார்கள். “ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம்” என்ற கருத்து சரியானதா? சரி... அப்படியே எடுத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணைத் திருமணம் செய்து தர முடியாது என்று கூறுகிற பிடிவாதக்காரனும் ஒற்றைக் கண்ணனுமான ஒரு தந்தை இருக்கிறானே அவன் கையில் தற்போது நூற்று இருபது ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வேறு யாராவது ஒருவனைப் பிடித்து “சட்புட்”டென்று கூட அவனால் கல்யாணத்தை நடத்திவிட முடியும். இதுதான் உண்மையான நிலை. இந்தச் சூழ்நிலையில்தான் முட்டாள் முத்தபா போர்க்களத்தில் இறங்கியிருக்கிறான். ஸைனபாவைத் திருமணம் செய்தே ஆவது என்பதில் அவன் மிகவும் பிடிவாதமாகவே இருக்கிறான்.

போர் பயங்கர விறுவிறுப்புடன் ஆரம்பித்தது. முட்டாள் முத்தபா ஆரம்பத்திலேயே வெற்றி இலக்கை நோக்கி நடைபோட்டான். சூழ்நிலையே அவனுக்கு மிகவும் சாதகமாக மாறியது. முட்டாள் முத்தபா ஒரு புரட்சி சிந்தனையுள்ள வீரத்தொழிலாளியாக சித்தரிக்கப்பட்டான். ஒற்றைக் கண்ணன் போக்கர் பதுக்கல் குணம் கொண்ட மனிதனாகவும், கள்ளச் சந்தையில் பொருளை விற்பனை செய்யக் கூடியவனாகவும் வெளியே காட்டப்பட்டான்.

“முட்டாள் முத்தபா ஸிந்தாபாத்!”

கோஷங்கள் இப்படி ஆயின. முட்டாள் முத்தபாவைப் புகழ்வதற்கும், அவனுக்கு தேநீர் வாங்கிக் கொடுப்பதற்கும் ஊர்க்காரர்கள் போட்டி போட்டார்கள். அதைப் போல ஒற்றைக் கண்ணன் போக்கரைப் பற்றி கண்டபடி பேசுவதற்கும் ஆட்கள் ஏராளமாக இருந்தார்கள். அவர்கள் அவனுக்கு சுண்ணாம்பு கூட கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்கள்.

“நான் என்ன தப்பு செஞ்சேன்?” - ஒற்றைக் கண்ணன் போக்கர் மக்களைப் பார்த்து கேட்டதற்கு பொதுமக்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

“நீ உன் மகளைப் பதுக்கி வச்சு, அவளை திருட்டுத்தனமா யாருக்கும் தெரியாம விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கே! நீ ஒரு முதலாளித்துவ பிற்போக்குவாதி!”

“சரி... அப்படியே இருக்கட்டும். நான் ஸைனபாவை நிச்சயம் அந்த முட்டாள் பயலுக்கு கல்யாணம் பண்ணித் தரமாட்டேன்.”

“அப்படியா? பார்க்கலாம்.”

விஷயம் இப்படி போய்க் கொண்டிருந்தது. ஒரு விதத்தில் பார்க்கப் போனால் அது பொதுமக்களின் போராட்டம் மாதிரி ஆகிவிட்டது. முட்டாள் முத்தபா போராட்டத்தை ஆரம்பித்து வைத்தான் என்பது மட்டுமே உண்மை. போதாததற்கு போராட்டத்திற்கு ஆதரவாக யானைவாரி ராமன் நாயர், தங்கச் சிலுவை தோமா, எட்டு காலி மம்மூந்து போன்ற பெரிய மனிதர்களும் இருந்தார்கள். அதோடு ஊர்க்காரர்கள் எல்லோரும் மொத்தத்தில்- ஒரு பெரிய போர்தான் அது!

இந்தப் போர் எப்படி ஆரம்பித்தது என்பதை நான் இப்போது கூறுகிறேன். ஒரு செவ்வாய்க்கிழமை.சந்தை கூடி அப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சால்வையே இல்லாமல் முட்டாள் முத்தபா சந்தைப் பக்கம் வந்தான். கையில் ஒரு வெள்ளி ரூபாய் இருந்தது. அதை முத்தபா கடித்து இரண்டு மூன்று இடங்களில் அடையாளங்களை உண்டாக்கினான். பிறகு சொன்னான்.

“இது ஸைனபா கொடுத்த காசு!”

அந்த வெள்ளிக்காசுடன் அவன் ஒற்றைக் கண்ணன் போக்கர் மூன்று சீட்டு விளையாட்டு ஆடிக் கொண்டிருந்த இடத்திற்குப் போனான். வழக்கம்போல அங்கு மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.

“ஹாய்... வை ராஜா வை. ஒண்ணு வச்சா ரெண்டு, ரெண்டு வச்சா நாலு... நம்பர்ல வச்சா எனக்கு... படத்துல வச்சா உங்களுக்கு... பார்த்து வைங்க...” -ஒற்றைக் கண்ணன் போக்கர் எப்போதும் போல சொல்லிக் கொண்டிருந்தான்.

முட்டாள் முத்தபா வெள்ளி ரூபாயைக் கையில் வைத்தவாறு பெருவிரலால் அதைத் தட்டி ஓசையுண்டாக்கினான்.

ஒற்றைக் கண்ணன் போக்கர் முட்டாள் முத்தபாவைப் பார்த்தான். தொடர்ந்து எப்போதும் சொல்லாத இரண்டு மூன்று கடுமையான வார்த்தைகளை அவன் சேர்த்துச் சொல்ல ஆரம்பித்தான்.

“ஹாய்... யார் வேணும்னாலும் வைக்கலாம். எந்த குப்பை வேணும்னாலும் வைக்கலாம். ஒண்ணு வச்சா ரெண்டு... ரெண்டு வச்சா நாலு... எந்த கழுதை வேணும்னாலும் வைக்கலாம். ஹாய்... உஷார்! உஷார்!... பார்த்து வைங்க...” இப்படிச் சொல்லியவாறு சர்ர்ர்புக்கோவென்று சீட்டுகளை விரித்து கீழே போட்டான் ஒற்றைக் கண்ணன் போக்கர். முட்டாள் முத்தபா சீட்டுகளையே மிகவும் கவனமாகப் பார்த்தவாறு ஒரு சீட்டின் மேல் ஒரு ரூபாயை வைத்தான்.

மர்ம ஸ்தானத்தைத் தொட்டதைப் போல் ஒற்றைக் கண்ணன் போக்கர் முகத்தை ஒரு மாதிரி சுளித்தான். இருபத்து இரண்டு வருட மூன்று சீட்டு விளையாட்டில் ஒற்றைக் கண்ணன் போக்கருக்குத் தெரியாமல் இதுவரை படச்சீட்டில் யாருமே பணம் வைத்ததில்லை. இருந்தாலும், சில நேரங்களில் சிலருக்கு அப்படிக் கூட அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஒற்றைக் கண்ணன் போக்கரால் அதை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லை. மூன்று சீட்டு விளையாட்டிற்கும் அதிர்ஷ்டத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?


 ஒரு தொடர்பும் கிடையாது. வந்து நிற்கும் பொது மக்கள் தோல்வியைத் தழுவுவதும், ஒற்றைக் கண்ணன் போக்கர் வெற்றி பெறுவதும் எப்போதும் நடப்பதுதான். இருந்தாலும்-

ஒற்றைக் கண்ணன் போக்கர் சீட்டை எடுத்துத் திருப்பினான். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்கள். அடுத்த நிமிடம் ஒரே ஆரவாரம்தான். முட்டாள் முத்தபா எந்தவித உணர்ச்சியையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“படமிருந்த சீட்டின் மேல் பணத்தை வைத்ததால், ஒற்றைக் கண்ணன் போக்கர் முணுமுணுத்தவாறு முட்டாள் முத்தபாவின் கையில் ஒரு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தான்.

“ஹாய்...வை ராஜா வை. எவன் வேணும்னாலும் வைக்கலாம். எந்த கழுதையோட மகன் வேணும்னாலும் வைக்கலாம். பார்த்து வைங்க”

விளையாட்டு ஆரம்பமானது. முட்டாள் முத்தபா சீட்டுகளை மிகவும் கவனமாகப் பார்த்தவாறு இரண்டு ரூபாய்களை வைத்தான்.

ஒற்றைக் கண்ணன் போக்கர் சீட்டைத் திருப்பினான். படச்சீட்டு! -முட்டாள் முத்தபாவிற்கு நான்கு ரூபாய் கிடைத்தது.

விளையாட்டு மீண்டும் ஆரம்பித்தது. முட்டாள் முத்தபா நான்கு ரூபாய்களையும் அங்கு வைத்தான். ஒற்றைக் கண்ணன் போக்கர் சீட்டைத் திருப்பினான். படம்! முட்டாள் முத்தபாவிற்கு எட்டு ரூபாய் கிடைத்தது.

ஒற்றைக் கண்ணன் போக்கருக்கு கவலையும் அதோடு சேர்ந்து கோபமும் வந்தது. அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியால் கூக்குரலிட்டார்கள். ஒற்றைக் கண்ணன்

போக்கருக்கு அதைப் பார்த்து வெறி உண்டானது. முட்டாள் முத்தபா எட்டு ரூபாயையும் அங்கே வைத்தான். ஒற்றைக் கண்ணன் போக்கர் சீட்டைத் திருப்பினான். படம்!

முட்டாள் முத்தபாவின் கையில் பதினாறு வெள்ளி ரூபாய் இருந்தது. அவன் அதைக் கையில் வைத்துக் கொண்டு இனிமையான ஓசையை எழுப்பினான். பிறகு அதில் இருந்து அடையாளமிருந்த ரூபாயைத் தனியே பிரித்தெடுத்தான். அதற்கு முத்தம் தந்தவாறு வேட்டி நுனியில் அதைக் கட்டி வைத்தான். அங்கு நின்றிருந்த மக்களைப் பார்த்துச் சொன்னான்.

“நான் இனிமேல் பிக்பாக்கெட் அடிக்கப் போறது இல்ல... நான் சாயா கடை வைக்கப் போறேன்!”

எது எப்படியோ முட்டாள் முத்தபா வெற்றிப் படியில் நின்று கொண்டிருந்தான். யானைவாரி ராமன் நாயர், தங்கச் சிலுவை தோமா, எட்டு காலி மம்மூந்து ஆகிய கலைஞர்கள் அவனுடன் நின்றிருந்தார்கள். அத்துடன் போராட்ட குணம் கொண்ட பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவனை வாழ்த்தினார்கள். முட்டாள் முத்தபாவின் வெற்றியைப் பற்றி ஊர்க்காரர்கள் எல்லோரும் அறிந்தார்கள். எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். முட்டாள் முத்தபாவின் வெற்றி பொதுமக்களின் வெற்றி!

இருந்தாலும் ஒற்றைக் கண்ணன் போக்கரின் தோல்வியைப் பார்த்து யாரும் வருத்தப்படுவதற்குத் தயாராக இல்லை. கள்ள சந்தைக்காரன், பதுக்கல் பேர்வழி, வெளிநாட்டு அரசாங்கத்தை ஆதரிப்பவன்- இப்படிப்பட்ட ஒரு மனிதனின் தோல்வியைப் பார்த்து யார்தான் வருத்தப்படுவார்கள்?

அன்று இரவு ஒற்றைக் கண்ணன் போக்கர் ஸைனபாவிடம் சொன்னான்.

“மகளே, வாப்பா இன்னைக்கு பதினைஞ்சு ரூபா தோத்தாச்சு... அந்த முட்டாள் என்னை தோற்கடிச்சிட்டான்...”

அதற்கு ஸைனபா ஒரு வார்த்தைகூட பதில் சொல்லவில்லை. வருத்தப்படுவது மாதிரியோ, மகிழ்ச்சியைக் காட்டுவது மாதிரியோ எதுவுமே சொல்லவில்லை. ஒற்றைக் கண்ணன் போக்கருக்கு கவலை, கோபம், பிடிவாதம்- எல்லாமே தோன்றியது. அவன் தனக்குள் சொன்னான்.

“இனியும் என்கிட்ட ரூபா இருக்கு. அந்த முட்டாள் கழுதை வரட்டும். இனியும் என்ன. விளையாடிப் பார்த்திடுவோம். சந்தை வரட்டும். போக்கர் யார்ன்றதை காட்டுறேன்...”

சந்தை வந்தது. ஆட்கள் கூடினார்கள். ஆரவாரம் உண்டாகத் தொடங்கியது. முத்தபாவின் தேநீர் கடை ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. உண்மையாகச் சொல்லப் போனால் அங்கு தேநீர் கிடையாது. இருப்பது வெறும் சர்க்கரை போட்ட காப்பியும் அவித்த கடலையும் மட்டும் தான். இரண்டு மூன்று கண்ணாடி டம்ளர்களும், வாழையிலையும், ஒரு பழைய பெஞ்சும் அங்கு இருந்தன. இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருந்த ஒரு இடுங்கிய இடம் தான் கடை அங்கே சில துணிகளைப் போட்டு மறைத்து... ஒரு ஹோட்டல் உருவாகிவிட்டது. டம்ளரில் ஸ்பூனைப் போட்டு அடித்தவாறு முட்டாள் முத்தபா ஆட்களைப் பார்த்துச் சொன்னான்.

“ஹாய்! சூடான வயநாடன் காப்பி குடிச்சிட்டுப் போங்க. விலை குறைவு. குணமோ பெரியது. ஹாய்... சூடான வயநாடன் காப்பி!”

எல்லாமே மதியத்திற்கு முன்பே விற்பனையாகிவிட்டது. முட்டாள் முத்தபா காசுகளை எண்ணி பேப்பரில் சுற்றியவாறு ஒற்றைக்கண்ணன் போக்கரின் முன்னால் போய் நின்றான்.

விளையாட்டு ஜோராக ஆரம்பித்தது. ஒற்றைக் கண்ணன் போக்கர் அன்று இருபது ரூபாய் தோற்றான். நடந்த விஷயத்தை அன்று இரவு ஸைனபாவிடம் சொன்னான். அதற்கு ஸைனபா சொன்னாள்.

“வாப்பா... அந்த விளையாட்டை இப்போ எல்லோரும் படிச்சிருப்பாங்க.”

“அடியே... என்ன பேசுற? எந்த இருபத்திரெண்டு வருஷத்துல இதுவரை யாரும் இந்த விளையாட்டைப் படிச்சதே இல்ல. ரெண்டு நாட்கள்ல அந்த மாறு கண்ணுப்பய எப்படி இதைப் படிச்சிருக்க முடியும்?”

ஸைனபா அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. ஒற்றைக் கண்ணன் போக்கர் கேட்டான்.

“அந்தத் திருட்டு நாய்க்கு மூக்குல புகைவிடச் சொல்லித் தந்தது யாரு?”

“ஆ!”

அடுத்த சந்தை வந்தது. ஒற்றைக் கண்ணன் போக்கர் நிறைய பணத்தை இழந்தான். இப்படியே பத்துப் பன்னிரண்டு சந்தைகள் கடந்தன. ஒற்றைக் கண்ணன் போக்கர்

பாப்பராகி விட்டான். கடன் வாங்கி அவன் விளையாடினான். இருந்தாலும் ஒரு பலனும் இல்லை. கடைசியில் முட்டாள் முத்தபாவிடம் ஒற்றைக் கண்ணன் போக்கர் கெஞ்சியவாறு கேட்டான்.

“என் மகனே, இனிமேல் நீ விளையாட வராதே உனக்கு ஒவ்வொரு சந்தை அன்னைக்கும் நான் அஞ்சு ரூபா தந்திடுறேன். விட்டுடு...”

அதற்கு முட்டாள் முத்தபா சொன்னான்.

“எனக்கு காசு எதுவும் வேண்டாம். எனக்கு இப்போ சாயாகடை இருக்கு. ஸைனபாவை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டா, நான் ஒரு நாள் கூட இந்த விளையாட்டுக்கு வர மாட்டேன்.”

இதுதான் அவனின் கடைசி நிபந்தனை!

ஸைனபாவை முட்டாள் முத்தபாவிற்குத் திருமணம் செய்து தர வேண்டும். அதற்கும் குறைவாக அவன் வேறு எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதற்கு கீழே இருக்கும் எதையும் போராட்ட குணம் கொண்ட பொதுமக்களும் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

இனி என்ன செய்வது?

ஒற்றைக் கண்ணன் போக்கர் பொதுமக்களில் பலரையும் போய்ப் பார்த்தான். போலீஸ்காரர்களைப் பார்த்துச் சொன்னான். யானைவாரி ராமன் நாயரிடம் சொன்னான். தங்கச்சிலுவை தோமாவிடம் சொன்னான். எட்டுக்கால் மம்மூந்தைப் பார்த்துச் சொன்னான். எல்லோரும் சொல்லிவைத்த மாதிரி ஒரே கருத்தைத்தான் கூறினார்கள்.


“பேசாம அந்தப் பெண்ணை முத்தபாவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடு. அதுக்கும் குறைவா நாங்க எதையும் ஏத்துக்கிறதா இல்ல...”

“என் பொண்ணுக்கு ஒரு முட்டாள் பய மாப்பிள்ளையா?”

“அப்படியெல்லாம் கண்டபடி பேசாத...”

கடைசியில் வேறு வழியே இல்லாமல் முட்டாள் முத்தபாவிற்கு தன்னுடைய மகள் ஸைனபாவைத் திருமணம் செய்து கொடுத்தான் ஒற்றைக் கண்ணன் போக்கர். திருமணத்திற்கு பொதுமக்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். முட்டாள் முத்தபா அவர்கள் எல்லோருக்கும் வெற்றிலை, பீடி, சர்பத் ஆகியவற்றைக் கொடுத்தான். அன்று இரவு ஊர்க்காரர்கள் நிறைய வெடிகளையும், பட்டாசுகளையும் போட்டு மகிழ்ந்தார்கள்.

எல்லாமே நல்ல விதத்தில் நடந்து முடிந்தது. சுபம் என்று கூறலாம்.

ஆனால், ஒற்றைக் கண்ணன் போக்கரின் மனதில் எல்லாமே மங்களமாகவும், சுபமாகவும் முடிந்ததாக எண்ணம் இருந்ததா? நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவன் மூன்று சீட்டு விளையாடுவதையே சொல்லப் போனால் நிறுத்திவிட்டான். எந்த விஷயத்திலும் அவனுக்கு விருப்பமில்லாமல் ஆகிவிட்டது. அவன் விரக்தியடைந்த ஒரு மனிதனைப்போல் நடந்து திரிந்தான். ஸைனபாவின் மேல் அவனுக்கு ஏகப்பட்ட வருத்தம். முட்டாள் முத்தபாவின் மேல் பயங்கர கோபம். ஊரில் இருக்கும் இரண்டு போலீஸ்காரர்கள் மீதும் கோபம். தங்கச்சிலுவை தோமா, யானைவாரி ராமன் நாயர், ஆகியோர் மீதும் வருத்தம். எட்டுகாலி மம்மூந்து மீதும் நாறிக் கெட்டுப் போயிருக்கும் சமூக அமைப்பின் மீதும் அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. சுருக்கமாகச் சொல்லப் போனால் எல்லோர் மீதுமே அவனுக்கு வருத்தம்தான், கோபம்தான். ஒன்றுமே அவன் சாப்பிடுவதில்லை. எதையுமே குடிப்பதும் இல்லை. உண்ணாவிரதம், மரணமடையும் வரை உண்ணாவிரதம்.

ஆனால், அப்படிப்பட்ட நிலையில் இருந்த பொதுமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒற்றைக் கண்ணன் போக்கரைக் காப்பாற்றினார்கள். அவனை முட்டாள் முத்தபாவுடனும் ஸைனபாவுடனும் கொண்டு போய் தங்க வைத்தார்கள். ஹோட்டலில்தான். ஹோட்டல் பழைய மாதிரி ஒன்றுமில்லை. சாட்சாத் தேநீர் கடைதான். ஸைனபாவின் புட்டும், வேக வைத்த கடலையும் அங்கிருக்கும் சிறப்பு அயிட்டங்கள். வாடிக்கையாளர்களுக்குப் பஞ்சமே இல்லை. யானைவாரி ராமன் நாயர், தங்கச்சிலுவை தோமா, அவர்களின் சிங்கிடியான எட்டுகாலி மம்மூந்து, வெளிநாட்டு அரசாங்கத்தின் இரண்டு போலீஸ்காரர்கள். அவர்களைப் போல ஒற்றைக் கண்ணன் போக்கரும் விருப்பப்படி எதையும் சாப்பிடலாம். அங்கு அவனுக்கு எந்தக் குறையுமே இல்லை. ஒரு தொந்தரவும் இல்லை. இருந்தாலும் ஒரேயொரு விஷயம் மட்டும் அவனைச் சதா நேரமும் போட்டு பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அது- முட்டாள் முத்தபா எப்படி தொடர்ந்து படம் இருக்கும் சீட்டிலேயே பணம் வைத்தான் என்பதுதான். கடைசியில் அந்த விஷயத்தை முட்டாள் முத்தபாவிடமே கேட்டும் விட்டான். முட்டாள் முத்தபா சொன்னான்.

“என் அறிவை வச்சுத்தான்...”

அவன் சொன்னது உண்மையா? முட்டாள் முத்தபா என்ற மனிதனுக்கு அறிவு என்று ஒன்று எங்கேயிருந்து வந்தது? காசு கொடுத்து பீடி புகைத்து மூக்கின் வழியே புகையை வெளியே விடுவது எப்படி என்பதைக் கற்ற மனிதனாயிற்றே அவன்! முட்டாள் முத்தபாவுக்கும் அறிவுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என்பதை ஒற்றைக் கண்ணன் போக்கர் நன்றாகவே அறிவான். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, முட்டாள் முத்தபா அந்த ரகசியத்தைச் சொன்னான்.

“என் பொண்டாட்டி... ஸைனபாதான் என்னை ஜெயிக்க வச்சா, மாமா...”

ஸைனபா அவனை வெற்றி பெற வைத்தாளா? அது எப்படி என்பதையும் அவனே சொன்னான். அவன் சொன்னது உண்மைதான். நடுக்கத்துடன் அதைப் பார்க்கவும் செய்தான். ஒற்றைக் கண்ணன் போக்கர் சீட்டுக் கட்டில் இருந்த எல்லாப் படச் சீட்டிலும் அடையாளம்...! ஒவ்வொரு சீட்டின் மூலையிலும் ஊசியால் போடப்பட்ட நான்கு சிறிய குத்துகள்!

“இப்போ சொல்லு மகனே...” - ஒற்றைக் கண்ணன் போக்கர் சரித்திர எழுத்தாளனான என்னைப் பார்த்து சொன்னான். “பெண்கள்ல ஒருத்தியையாவது உயிரோட விடலாமா?”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.