Logo

சசினாஸ்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6560
sasinaas

குபேர புத்திரனாக வளர்ந்து, வறுமை சூழ்ந்த ஒரு இளைஞனாக வாழ்க்கைப் பாதையில் நான் இறங்கி நடந்தேன். தாங்க முடியாத கொடுமையான தனிமையில், மனம் முழுக்க கவலைகள் ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருந்த என்னுடைய இருபத்து இரண்டாவது வயது. பள்ளி இறுதி வகுப்பு முடித்து அதில் தேர்ச்சி பெற்ற சான்றிதழைக் கையில் வைத்துக் கொண்டு வேலை தேடி ஒவ்வொரு அலுவலகத்தின் படியாக ஏறி இறங்கி விரக்தியடைந்து நான் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

மக்கள் ஏராளமாக நடமாடிக் கொண்டிருக்கும் நகரத்திற்கு வெளியே தென்னை மரங்கள் வானளவிற்கு உயர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு நிலத்தின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய வீட்டில் தான் நான் வசித்துக் கொண்டிருந்தேன். நானிருக்கும் அறைக்கு அடுத்து மேற்குப் பக்கமாய் இருக்கும் ஜன்னலைத் திறந்தால் அமைதியான ஒரு வெளிச்சுவரைப் பார்க்கலாம். அதற்குள் எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்ட, கம்பீரமான மவுனத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு இரண்டு மாடி கட்டிடம். எப்போதும் அங்கு ஒரே அமைதி நிலவிக் கொண்டிருக்கும். அங்கு ஒரு பறவையின் ஓசையைக் கூட கேட்க முடியாது. ஒரு காட்டின் மவுனம் அங்கு இருப்பதை நம்மால் உணர முடியும். அந்த தாங்க முடியாத அமைதி மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கும். என் மனதில் ஏற்கனவே கவலைகள் அளவுக்கு மேல் ஆக்கிரமித்து விட்டிருந்ததால், மேற்குப் பக்கம் இருந்த அந்த ஜன்னலை பொதுவாக நான் திறப்பதேயில்லை.

இப்படியே நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. கோடை காலத்தின் ஒரு மதிய நேரம். ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு நான் வேக வேகமாக ஒரு மனு எழுதிக் கொண்டிருந்தேன். என் பேனாவின் 'கரகரா'சத்தம் அங்கு நிலவிக் கொண்டிருந்த அமைதியை இலேசாக கலைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு சத்தம். ஒரு மணியோசை போன்ற சிரிப்பு. எங்கேயிருந்து அது வருகிறது என்று காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு கவனித்தேன். இனிமையான அந்தச் சிரிப்பு அதற்குப் பிறகும் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.

ஆவலுடன் நான் எழுந்தேன். ஜன்னலை வேகமாகத் திறந்தேன். என்ன ஆச்சரியம். அந்த பெரிய கட்டிடம் புன்னகை தவழ நின்றிருந்தது. ஜன்னல்கள் நன்றாகத் திறந்து விடப்பட்டிருந்தன. வெள்ளை நிறத்தில் திரைச்சீலைகள் ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருந்தன. சமையறையில் இருந்து நீல நிறத்தில் புகை வந்து கொண்டிருந்தது. ஆட்களின் சத்தம். எங்கும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

என் கண்கள் இங்குமங்குமாய் ஆர்வத்துடன் அலைந்தன. ஒரு நிமிடத்தில் என் விழிகள் ஆச்சரியத்துடனும் ஆனந்தத்துடனும் அப்படியே அசையாமல் நின்றுவிட்டன. மேல் மாடியில், நடுவில் இருக்கும் ஜன்னலில், வெள்ளை நிற திரைச்சீலைக்கு மேலே மஞ்சள் கரை போட்ட கறுப்பு வர்ணத்தில் புடவையும், வெள்ளை ப்ளவுசும் அணிந்த ஒரு அழகு தேவதை.

வெள்ளை வகிடு எடுத்து வாரப்பட்ட தலையில் ஒரு பக்கம் சுருண்டு காணப்படும் முடியும், நிலவென பிரகாசமாக தெரியும் அவளின் முகமும்.

இதயம் படபடவென அடிக்க, நான் நின்றேன். ஒரு வகை அமைதியுடன் பிரகாசமாக இங்குமங்குமாய் நகர்ந்து கொண்டிருந்த கனவுகள் குடியிருக்கும் அந்தக் கண்களை என் மனதில் பதிய வைப்பதற்கு நான் படாதபாடு பட்டேன். அதிக சத்தம் செய்யாமல் வெறுமனே இருமினேன். திடுக்கிட்டாலும் போல அந்தக் கண்கள் திரும்பிப் பார்த்தன. கறுத்து, வளைந்து காணப்பட்ட புருவம் இலேசாக உயர்ந்தது. கண்ணிமைக்கும் நேரம் அவளின் பார்வை என் மீது படிந்தது. அவ்வளவுதான் - என் இதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டது. பிரகாசத்தை ஒளிர்ந்து கொண்டிருந்த அவளின் இரண்டு விழிகளும் என் கண்கள் வழியே இதயத்திற்குள் நுழைந்ததைப் போல் உணர்ந்தேன். மூச்சு விடக்கூட மறந்து ஒரு சிலையைப் போல நான் செயலற்று நின்று விட்டேன். அடுத்த நிமிடம் அந்த முகம் மறைந்தது. யாருமே இல்லாத ஜன்னல். இலேசாக ஆடிக் கொண்டிருந்த வெள்ளை நிற திரைச் சீலைகள். கறுத்து உருண்டு காட்சியளிக்கும் நீளமான இரும்புக் கம்பிகள்.

அந்த வனதேவதையை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று என் கண்கள் அலைபாய்ந்தன. நிமிடங்கள் கடந்து கொண்டிருந்தன. வெயியே கொடிகள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த மாமரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு வெள்ளைப்புறா தன் ஜோடியை அழைத்து அதோடு சேர்ந்து இன்பத்தில் ஈடுபட்டிருந்தது. எதிர்பார்ப்புடன் நான் அந்த வெறுமையாக இருந்த ஜன்னலையே பார்த்தவாறு ஒரு தூணைப்போல நின்றிருந்தேன்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடியிருக்கும். அவள் வந்தாள். என்னைப் பார்த்தாள். அடுத்த நிமிடம் மறைந்தாள். நான் நின்றேன். நின்று நின்று கால்கள் பயங்கரமாக வலித்தன. நான் அந்த இடத்தை விட்டு நகர்வதாய் இல்லை. எனக்கு என்னவோ ஆகிவிட்டது. அது மட்டும் நிச்சயம். தாகம் இல்லை. பசி இல்லை. மொத்தத்தில் ஒரு ஆர்வம்.

நான்கு மணி கடந்திருக்கும். நிழல் போல அவள் அசைவதை ஜன்னல் வழியாக நான் பார்த்தேன். படியைக் கடந்து ஒரு ரிக்க்ஷா வண்டியில் ஏறி அவள் வேகமாக எங்கோ போனாள். காற்றில் பறந்து கொண்டிருந்த கருப்பு வண்ண புடவைத் தலைப்பும் அழகான கழுத்தின் ஒருபகுதியும் நன்றாக வாரி கட்டப்பட்டிருந்த தலை முடியும் கொஞ்சம் கொஞ்சமாக என் பார்வையை விட்டு மறைந்தன. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் உண்டானது போல் இருந்தது. எல்லாமே என்னை விட்டு போய் விட்டதைப் போல் உணர்ந்தேன். இருளடைந்து விட்டது மாதிரி தோன்றியது எனக்கு. வாய்விட்டு உரக்க அழவேண்டும் போல் இருந்தது.  

பெருமூச்சு விட்டவாறு பாதி எழுதி வைத்திருந்த மனுவைக் கையில் எடுத்தேன். அதற்கு மேல் எதுவும் எழுத எனக்கு உற்சாகம் இல்லை. மனதில் ஒரே கோபம் கோபமாக வந்தது. அதே நேரத்தில் இனம் புரியாத ஒரு வெறுப்பும்... எரிச்சலுடன் அந்த மனுவைக் கசக்கி முற்றத்தில் விட்டெறிந்தேன். அறையைப் பூட்டிவிட்டு வெளியே இறங்கினேன். பாக்கு மரத்தோடு சேர்ந்து இருந்த மாமரத்தின் கிளையில் இருந்த இரண்டு புறாக்களும் தங்களுக்குள் என்னவோ ரகசிய குரலில் பேசிக் கொண்டிருந்தன. கருப்பு நிறத்தில் இருந்த புறா வெள்ளை வண்ணப் புறாவின் தலையில் தன்னுடைய சிறிய உதடுகளால் என்னவோ செய்தது. அதைப் பார்த்து எனக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து எறிந்தேன். அவ்வளவுதான் - புறாக்கள் இரண்டும் அடுத்த நிமிடம் இடத்தை விட்டுப் பறந்தன.


நான் எறிந்த கல் இலைகள் வழியாக அடுத்த வீட்டின் மேல் போடப்பட்டிருந்த ஓடுகள் மேல் போய் விழுந்தது. நீருண்டு கிடந்த ஒற்றையடிப் பாதை வழியாக நான் சாலையை அடைந்தேன். எங்கு போகிறோம் என்று தெரியாமலே நடந்தேன். ஒரு இலட்சியமும் இல்லை. மக்களின் ஆரவாரமும் வண்டிகளின் சத்தமும் ஏதோ கனவில் கேட்பதைப் போல என் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. நடந்து நடந்து கடைசியில் கடற்கரையை அடைந்தேன்.

நீல வண்ண விரிப்பைப் போல கடல் எந்தவிதமான அசைவும் இல்லாமல் பரந்து கிடந்தது. மேற்கு திசையில் ஆகாயம் கடலில் முத்தமிடுகிற இடத்தில் செக்கச் செவேர் என்று சூரியன் எரிந்தவாறு கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று என் தலையில் பட்டு ஒருவித சுகமான அனுபவத்தைத் தந்தது. கடற்கரையின் வெண்மையான மணலில் ஆங்காங்கே ஆட்கள் சிதறிப் போய் உட்கார்ந்திருந்தார்கள். நான் யாரும் உட்காராத ஒரு தனிமையான இடத்தில் போய் உட்கார்ந்தேன். சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்த சிரிப்புச் சத்தங்களிலும், சந்தோஷ வெளிப்பாடுகளிலும், ஆரவாரங்களிலும் என் கவனம் செல்லவில்லை. என் கண்கள் வெறுமனே இங்குமங்குமாய் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது நான் பார்த்தேன் - தூரத்தில் வெள்ளை வெளேர் என்றிருந்த சர்க்கரை மணலில் தனியாக அமர்ந்திருந்தாள் ஒரு பெண்! மஞ்சள் கரை போட்ட கருப்புப் புடவை!

இதயம் படபடவென்று அடிக்க, நான் நடந்து அவளின் அருகில் சென்றேன். ஹா.. அவளேதான்! என் இதயத்தில் இடத்தைப் பிடித்த அந்த மோகினிதான்! அவளின் அழகு முகத்தில் விழுந்த தலைமுடியை வலது கரத்தால் தள்ளிவிட்ட அவள் இடதுகையில் பிடித்திருந்த புத்தகத்தைக் கண்களால் மேய்ந்து கொண்டிருந்தாள். கருப்பு வண்ண புடவைக்கு சரியான மாற்றைப் போல அவள் அணிந்திருந்த தூய வெள்ளை நிற ப்ளவுஸின் வலது பக்கம் இலேசாக முன்புறமாக உயர்ந்து தெரிந்தது. இளம் சிவப்பு வண்ண நீள முகம் அவளுக்கு.

லேசாகப் பட்டாலே சரிந்துவிடக்கூடிய மணலில் இங்கும் அங்குமாய் இரண்டு மூன்று முறை நடந்தேன். அவளின் இடையைப் பார்த்தேன் - மிகவும் அழகாக இருந்தது. அருமையான ஒரு வாசனை காற்றில் மிதந்து வந்தது. எனக்கு பைத்தியம் பிடிப்பதைப் போல் இருந்தது. என்னுடைய முகத்தில் உஷ்ணமேறியது. இதயம் அளவுக்கு மேல் படபடத்தது. அமைதியாக அவளிடமிருந்து சற்று தூரத்தில் நான் உட்கார்ந்தேன். இருமலாம் என்று முயற்சி பண்ணினால், சத்தமே வெளியே  வரமாட்டேன் என்றது. கண்களைக் கொஞ்சம் கூட இமைக்காமல் அவளையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தேன். கடைசியில் அவள் என்னைப் பார்த்து விட்டாள். என்னை அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அவளின் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அமைதியாக என்னை ஒரு பார்வை பார்த்தாள். அதற்குப் பிறகு அவள் பார்க்கவே இல்லை. நான் ஏதோ கல்லோ மரமோ என்று அவள் நினைப்பது மாதிரி இருந்தது.

ஒரு வகை சோகம் கப்ப, சூரியன் கடலுக்குள் மூழ்கினான். பிரபஞ்சத்தின் முகம் லேசாக மங்கியது. குளிர்ந்த காற்று அப்போது வீசியது மனதிற்கு இதமாக இருந்தது. அவள் எழுந்தாள். அடடா... என்ன அழகு! கம்பீரமாக உயர்ந்து நின்று உலகத்தைச் சவால் விட்டு அழைத்தன அவளின் மார்பகங்கள். அமைதி தவழ என்னை நோக்கி அவளின் கண்கள் திரும்பின. கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. பொசு பொசுவென்று உதிரும் மணல் மீது அவள் நடந்து சென்றாள். அந்த நடையில் இருந்த கம்பீரத்தைப் பார்க்க வேண்டுமே!

என் உடல் உஷ்ணத்தால் தகித்தது. பாதி இரவு கழிந்த பிறகும் கூட எனக்கு தூக்கம் வரவில்லை. இதயத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட அந்த அழகு தேவதை என்னை ஒவ்வொரு நிமிடமும் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தாள். 'கிண்' என்று உயர்ந்து நின்ற அவள் உடல் வனப்பு என்னைப் பித்துப் பிடிக்கச் செய்தது. அவளின் ஒவ்வொரு அங்கமும் என் ஞாபகத்தில் தோன்றித் தோன்றி என்னைப் பாடாய் படுத்தின. கண்களை மூடினால் கருப்பு வண்ணப் புடவையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த அழகு விக்கிரகம்தான் தோன்றியது. உடல் முழுக்க ஒரே உஷ்ணமயம்... அக்னி திராவகம் நரம்புகளில் ஓடுகின்றதோ என்று நானே சந்தேகம் கொள்ள ஆரம்பித்தேன். கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் அக்னி குண்டத்திற்குப் பக்கத்திலேயே படுத்திருப்பதைப்போல் ஒரு உணர்வு. உஷ்ணம்... தாங்கிக்கொள்ள முடியாத உஷ்ணம்...

எப்படியோ பொழுது விடிந்தது. தலை ஒரே வேதனையாக இருக்க, நான் படுக்கையை விட்டு எழுந்தேன். ஜன்னல் வழியாகப் பார்த்தேன். அங்கு யாருமே இல்லை! எனக்கு மூச்சுவிடவே கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் மிகவும் கனமாகக் கடந்து செல்வதைப் போல் இருந்தது. திடீரென்று கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அவள் வந்தாள். அவழித்து விடப்பட்டு சுதந்திரமாகக் கிடந்த தலைமுடியின் நுனிப்பகுதி ப்ளவுஸின் முன் பக்கத்தில் கிடந்தது. காலை நேர சூரியனின் கதிர்கள் பட்டு அவளின் முகம் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தது. அவள் என்னைப் பார்த்து புன்னகைக்கிறாளா என்ன? என் உடல் நடுங்கியது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. ஜன்னல் கம்பிகளை நான் இறுக பற்றிக்கொண்டேன். பார்த்தேன். அவள் இப்போது அங்கு இல்லை. போய் விட்டிருந்தாள்.

எந்தவித இலட்சியமும் இல்லாமல் இரவும், பகலும் கடந்து போய்க் கொண்டிருந்தன. எங்களுக்குள் பெரிய போட்டி என்றுதான் சொல்ல வேண்டும். நான் இருக்கும்போது அவள் அந்த ஜன்னல் பக்கம் வருவதேயில்லை. அவள் இல்லாதபோதும் இருக்கிறபோதும் நான் என்னுடைய அறையில் இருக்கும் ஜன்னலை விட்டு நகர்வதே இல்லை. சரியாக உணவு உட்கொள்ளாமலும் ஒழுங்கான நேரத்திற்கு தூங்காமலும் நான் எந்தவித கட்டுப்பாடும் இல்லாத ஒரு மனிதனாக மாறினேன். கவலையும், அக்கறையின்மையும் என்னை வெகுவாக வந்து பாதித்தன. உடல் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. மனதோ நாட்கள் ஆக ஆக இறுகிக்கொண்டே வந்தது.

எவ்வளவு நாட்களுக்கு இப்படியே ஜன்னலைப் பார்த்தவாறு நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பது! அவளுடன் பேசுவதற்கு என்ன வழி? வீட்டுச் சொந்தக்காரரைப் போய் பார்த்தால் உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மனதில் ஏகப்பட்ட கவலைகள் மண்டிக்கிடக்க, நான் சென்றேன். வீட்டுச் சொந்தக்காரர் பெரிய ஒரு ஹோட்டலுக்கு அதிபர். தொப்பை உள்ள வயிறையும், வழுக்கைத் தலையையும் கொண்ட அறுபது வயதைத் தாண்டிய ஒரு மனிதர் அவர்.


எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் காட்சியளிப்பது அந்த மனிதரின் தனித்துவம். எந்த விஷயத்தையும் நன்கு ரசித்து பேசக் கூடியவர், கேட்கக் கூடியவர். நாட்டு நடப்புகளைப் பற்றி நீண்ட நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இடையில் புதிதாக வந்து அங்கு தங்கியிருக்கும் பெண்ணைப் பற்றி பேச்சோடு பேச்சாக கேட்டேன். ஹோட்டல்காரரின் வட்ட முகம் மலர்ந்தது. கண்களில் ஒரு பிரகாசம் வந்து ஒட்டியது. ஒரு கண்ணை லேசாகச் சுருக்கியவாறு என்னைப் பார்த்து கேட்டார். "எதுக்கு கேக்குறீங்க?"

"சும்மாதான் கேட்டேன்..."

அவள் வட இந்தியாவில் எங்கோயிருந்து வந்திருக்கிறாள் என்றும், ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காகவோ நாட்டைச் சுற்றி பார்க்க வேண்டும் என்பதற்காகவோ வந்திருக்கிறாள் என்றும், இங்கு வந்து இறங்கியது இவரின் ஹோட்டலில்தான் என்றும், மக்களின் தொந்தரவும் எதுவும் இல்லாத ஒரு இடத்தில் ஒரு வீடு வேண்டுமென்று கேட்டதால் அந்த மாளிகையைத் தான் அவளுக்குத் தந்ததாகவும் நான்கு மாதங்களுக்கான வாடகையை முன் கூட்டியே அவள் தந்துவிட்டாள் என்றும் ஹோட்டல்காரர் சொன்னார்.

"அந்தப் பெண் தனியாவா வந்திருக்காங்க?"

"ஏய்!"- அவர் கண்களால் உற்று பார்த்தவாறு, பயந்தது மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்.

"புலியைப் போல ஒரு பொம்பளை கூட இருக்கா. பத்து ஆம்பளைங்க கூட ஒரே நேரத்துல சண்டை போடுற அளவுக்கு உடம்பை வளர்த்து வச்சிருக்குற கருப்பான தடிச்ச பொம்பள..."

அங்கு வந்து தங்கியிருப்பவர்களைப் பற்றி எனக்கு ஓரளவுக்கு விஷயங்கள் தெரிந்துவிட்டன. மனதில் கவலையுடன் நான் திரும்பி வந்தேன். இருபது நாட்கள் ஆகியிருக்கின்றன! இருந்தாலும், நேரம் இன்னும் சரியாகக் கை கூடி வரவில்லை. வெறுப்பும் கோபமும் மனதில் புகுந்து என்னை அலைக்கழித்தது. இருபத்தொன்றாம் நாள். நான் தவம் இருக்க ஆரம்பித்து இருபத்தொன்று யுகங்கள் கடந்துவிட்டன. என் மீது எனக்கே வெறுப்பாக இருந்தது. அவளுடைய முகம் தெரிந்ததுதான் தாமதம், நான் ஜன்னலை படேர் என்று ஓங்கி அடித்து மூடினேன். தலைக்கு கீழே கையைக் கொடுத்து திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தேன். இருந்தாலும் அப்படியே நீண்ட நேரம் என்னால் உட்கார முடியவில்லை. நான் எழுந்து போய் ஜன்னலைக் கொஞ்சமாகத் திறந்தேன். மனதில் எரிச்சலுடன் ஜன்னல் இடைவெளி வழியே பார்த்தேன். மாளிகையின் ஜன்னல் தெரிந்தது. நான் அதே இடத்தில் நின்றிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் வந்தாள். மூடியிருந்த ஜன்னலை அவள் பார்ப்பது தெரிந்தது. அந்த அழகான முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிகின்றனவா என்ன? கொஞ்சம் கூட கண்களை நகர்த்தாமல் இங்கேயே பார்த்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு தொண்டையில் லேசாக அடைத்தது. மூச்சு விடவே கஷ்டமாக இருந்தது. இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள்! நான் கண்ணிமைக்கிற நேரத்தில் ஜன்னலைத் திறந்தேன். அவள் அப்படியே அதிர்ந்து போனாள். என் கண்களும் அவள் கண்களும் சந்தித்தன. அவள் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்தவாறு நீண்ட நேரம் இருந்தோம். அழகான ஒரு புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு அவள் தலைகுனிந்தாள். நான் இருமினேன். அவள் தலையை உயர்த்தினாள். அவள் முகம் நன்றாக சிவந்து போயிருந்தது. கனவுகள் இழையோடியிருந்த அந்தக் கண்களில் நல்ல பிரகாசம் தெரிந்தது. பதைபதைப்பு கலந்த ஒரு புன்னகையுடன் அவள் அந்த இடத்தை விட்டு நீங்கினாள்.

என் இதயத்தில் இருந்த அமைதித்தன்மை இருந்த இடமே தெரியாமல் போனது. வாய் விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு. ஜன்னல்களிலும் சுவர்களிலும் முத்தம் கொடுக்க வேண்டும் போல் ஒரு உணர்வு உண்டானது.

கண்ணாடியைப் பார்த்தேன். என் கண்கள் படு பிரகாசமாக சிரித்துக் கொண்டிருந்தன. என் முகத்தில் இனம்புரியாத ஒரு உற்சாகம் தெரிந்தது. நான் என் முகத்தைச் சவரம் செய்தேன். நன்றாகக் குளித்தேன். காலரைக் கொண்ட நன்கு துவைத்து இஸ்திரி போட்டு தேய்த்த ஒரு சட்டையையும் சிவப்பு வண்ணத்தில் கரை போட்ட ஒரு வேட்டியையும் எடுத்து அணிந்து, கண்ணாடியைப் பார்த்து பின்னோக்கி தலை முடியை அழகாக வாரினேன். சட்டையின் காலரை உயர்த்தி விட்டு கண்ணாடியில் மீண்டும் என்னைப் பார்த்தேன். முடியை மீண்டும் தடவி சரிப்படுத்தினேன். கண்ணாடியில் பார்த்தவாறு புன்னகைத்தேன். அறையைப் பூட்டிவிட்டு மெல்ல வெளியே இறங்கி நடந்தேன்.

இரண்டு கைகளையும் நீட்டியவாறு தன் பார்வையற்ற கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தியவாறு பாதையோரத்தில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரனின் கையில் ஒரு அணாவைக் கொடுத்து விட்டு நான் நடந்தேன். அடடா என்ன நடை என்கிறீர்கள்! கடைசியில் ஒரு சிகரெட்டை உதட்டில் வைத்து ஊதியவாறு அந்த வீட்டின் வெளி வாசலைக் கடந்தேன்.

வீட்டை நெருங்க நெருங்க என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் கதவைத் தட்டினேன். கதவு திறந்தது. நான் அதிர்ச்சியடைந்து நின்று விட்டேன். கதவைத் திறந்தது புலியைப் போன்ற அந்த பெண்தான்! அம்மைத் தழும்புகள் உள்ள கருப்பான பெரிய முகம். கூர்மையாக யாரையும் ஆராய்ச்சி செய்யும் கண்கள். ஆறடி உயரம். மிகப் பெரிய ரவிக்கை ஒன்றை அணிந்திருந்தாள். கருப்பு வண்ணத்தில் முண்டு கட்டியிருந்தாள். பாதத்திலிருந்து தலை வரை அவளை நான் ஆராய்ந்தேன்.

"என்ன வேணும்?"- அவள் கர்ஜித்தாள். என்னிடமிருந்த தைரியம் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்து விட்டது. இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னேன்.

"அவுங்களைப் பார்க்கணும்"...

"ம்..."

"நான் வீட்டுச் சொந்தக்காரரோட மகன்..."

"வீட்டுக்காரரோட மகனா?"

"ஆமா..."

அவள் அடுத்த நிமிடம் வீட்டிற்குள் போனாள். உள்ளங்கால்கள் பயங்கரமாக பரபரத்தன. கால் மூட்டுகள் வலித்தன. சிறிது நேரம் கழித்து, அவள் திரும்பி வந்து கர்ஜிக்கும் குரலில் சொன்னாள்.

"அதுல போ..."

மேலே செல்லும் படிகளைச் சுட்டிக் காட்டிய அவள் சமையலறைக்கோ வேறு எங்கோ சென்றாள். நான் மெதுவாக மாடியை நோக்கி படிகளில் ஏறினேன். இதயம் என் வாய்க்கே வந்து விட்டது போல் இருந்தது. தலையைச் சுற்றுவது போல் உணர்ந்தேன். என் தைரியமெல்லாம் எங்கோ பறந்தோடிவிட்டது. என்னைப்

பார்த்ததும் அவள் தான் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து நின்றாள். எனக்குத் தொண்டை அடைத்தது.


வியர்வை வழிய ஒரு நாற்காலியைப் பிடித்தவாறு நான் நின்றிருந்தேன். ஒரே பதைபதைப்பாக இருந்தது. வாய் முற்றிலும் வற்றிப் போய்விட்டது. அவளின் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. முகத்தில் ஒருவித நட்புணர்வு நிழலாடியது.

"உட்காருங்க..."

இனிமையான கிளிக்குரலில் அவள் சொன்னாள். ஹா...! என்ன இனிமையான குரல்! வானத்திலிருந்து மழை நீர் இறங்கி வருவதைப் போல, காலம் காலமாக ஒலிக்கும் சங்கீதத்தைப் போல, அந்தக் குரல் எனக்குள் நுழைந்து என்னை என்னவோ செய்தது. நான் நாற்காலியில் அமர்ந்தேன். கைகளும் கால்களும் விறைத்துப் போனது போல் நான் உணர்ந்தேன். தொண்டையில் ஈரமே இல்லாமல் வற்றிப் போனது போல் இருந்தது. நான் அவளைப் பார்த்து சொன்னேன்.

"எனக்கு தாகமாக இருக்கு..."

அவள் போய் ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் கொண்டு வந்தாள். நான் அதை வாங்கியபோது, எங்களின் விரல்கள் உரசிக்கொண்டன. நான் உன்மத்தம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன். கையில் இருந்த நீரை கடகடவென்று குடித்தேன். தண்ணீர் அமிர்தம் போல் இருந்தது. அந்தக் குளிர்ந்த நீர் என் தொண்டை வழியே உள்ளே இறங்கியது. அதன் விளைவாக உள்ளெல்லாம் குளிர்ந்தது. உடம்பெங்கும் ஒரு புத்துணர்ச்சி பரவியது போல் இருந்தது. ஆனால், எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவள் எனக்கு முன் அமர்ந்திருக்க... அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்று என் மனம் சொல்லியது. ஒரு வார்த்தை கூட பேசாமல் மணிக்கணக்காக அவளை கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாலே, மனம் முழுக்க குளிர்ச்சியாக இருக்கும் என்பதுபோல் பட்டது. நீண்ட இமைகளைக் கொண்ட அவளின் அழகிய விழிகளில் கனவு நிழலாடிக் கொண்டிருந்தது. அடடா! கண்கள்தான் என்ன அழகு! கரு மணியைச் சுற்றிலும் பிரகாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கவர்ச்சியான கண்கள்! அருகில் உட்கார்ந்திருந்ததால், அருமையான நறுமணம் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றியும் பரவி இருந்தது. கருப்பு நிறத்தில் புடவையும் வெள்ளை நிறத்தில் ப்ளவுஸும் அவள் அணிந்திருந்தாள். அவளின் கண்கள் என்னவோ கதை சொல்லி கொண்டிருந்தன! அந்தக் கண்கள் தந்த போதையில் நான் மூழ்கிப்போய் கிடந்தேன். அதன் குளிர்ச்சியில் என்னையே நான் இழந்து கீழே கீழே போய்க் கொண்டிருந்தேன். அசாதாரணமான ஒரு சூழ்நிலையில் நானே இதுவரை அனுபவித்திராத ஒரு மாய உலகத்தில் சிக்கிக் கிடந்தேன். வெள்ளி மேகங்களுக்கு நடுவில், பனிமலையை நெருங்கி மேலும் மேலும் நான் போய்க்கொண்டே இருந்தேன். ஆழமான கடலுக்குள் நான்...

"ஆமா... நீங்க வந்த விஷயம்?" அழகான தன்னுடைய விரலில் கருப்பு வண்ண புடவையின் நுனியைச் சுற்றி நீக்கிக் கொண்டே அவள் கேட்டாள். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றே அவளைப் பார்த்து விழித்தேன். நான் எதற்காக வந்திருக்கிறேன் என்பது அவளுக்கு தெரியாதா என்ன?

"நீங்க வந்த விஷயம்?"

மீண்டும் அவள் கேட்டாள். வெள்ளிமணியின் ஓசை போல இருந்தது அவள் குரல். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என் இதயத்தைப் பிடுங்கி அவளின் காலடிகளில் சமர்ப்பணம் செய்வதாக இருந்தால்... ஒரு வேளை நான் எதற்காக இங்கு வந்திருக்கிறேன் என்பதை அவள் புரிந்து கொள்ளலாம். என் நெற்றியில் வியர்வை அரும்பி முத்து முத்தாகத் தெரிந்தது. அமைதியான குரலில் நான் சொன்னேன்.

"சும்மாதான்..."

"சும்மாவா...?"

அவள் எனக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள். நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஜன்னல் வழியே வெளியே பார்த்தவாறு கனவுலகில் சஞ்சரிப்பதைப் போல அவள் மெதுவான குரலில் கேட்டாள்.

"கடற்கரையில் உங்களைப் பார்த்தேனே!"

"ஆமா... ஆனா, காற்று வாங்குறதுக்காக நான் அங்கே வரல..."

"பிறகு?"

நான் பதில் எதுவும் கூறவில்லை.

லேசாகத் தயங்கியவாறு நான் சொன்னேன்.

"உங்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு..."

"என்னைப் பற்றி என்ன தெரிஞ்சிக்கப் போறீங்க? ஊரைச் சுற்றி பார்க்க வந்தேன்..."

"பேரு?"

என் முகத்தையே அவள் பார்த்தாள். அவளின் கண்கள் மேலும் பிரகாசமாகி ஒளிர்ந்தன. அவளின் செக்கச் செவேரென்றிருந்த உதடுகள் புன்னகையுடன் மலர்ந்தன. முத்து மணிகளாக இருந்த பற்கள் அந்தப் புன்னகையால் கதிர்களை வஞ்சகமில்லாமல் வீசிக்கொண்டிருந்தன. தேன் ஊறிக்கொண்டிருந்த வாயால் அவள் மெதுவான குரலில் கேட்டாள்.

"என்ன... என்னோட பேரா?"

"ஆமா..."

"எதுக்கு?"

"சும்மாதான்..."

அவள் அமைதியானாள். அவளின் மார்பகங்கள் உயர்ந்து தாழ்ந்தன. ஆழமான ஒரு இடத்தில் இருந்து பேசுவதைப் போல அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.

"சசினாஸ்..."

"சசினாஸ்?"

"ஆமா..."

சசி... னாஸ்! சசி... னாஸ்! ஆயிரம் முறைகள் அவளின் அந்தப் பெயரை நான் மனதிற்குள் சொல்லிச் சொல்லி பார்த்தேன். கவலையால் துவண்டு போயிருந்த என் மனதிற்கு அந்தப் பெயரைச் சொல்ல சொல்ல ஒரு புத்துணர்ச்சி கிடைத்ததைப் போல் இருந்தது. அந்தப் பெயர் என் இதயத்தின் அடித்தளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆழமாக அது பதிந்து மீண்டும் எழும்பி மேலே வந்தது! சசி... னாஸ்!

"நிலவின் ஒளி. இதுதானே இந்தப் பெயரின் அர்த்தம்!-  நான் சிந்தித்துப் பார்த்து கேட்ட இந்தக் கேள்வியைக் கேட்டு அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அந்தச் சிரிப்பில்தான் என்ன கவர்ச்சி! சொல்லப் போனால் அது ஒரு இசை என்றுதான் சொல்ல வேண்டும். அவளின் அந்தச் சிரிப்பை மீண்டும் கேட்க வேண்டும் போல் எனக்கு இருந்தது. புன்சிரிப்பு தவழ அவள் கேட்டாள்.

"சசினாஸ்... இது ஒரு பெர்ஸியன் சொல். புதிய ரோஜாமலர்னு இதற்கு அர்த்தம்..."

"கை படாத ரோஜா..."

"கவலை இழையோடிய குரலில் அவள் சொன்னாள்.

"ஆமா... கைபடாத ரோஜா..."

"நல்ல சிந்தனையைத் தூண்டக்கூடிய பெயர்... சசினாஸ்! சசி... னாஸ்...

நான் அந்தப் பெயரைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். எனக்கு போன தைரியம் திரும்பி வந்தது மாதிரி இருந்தது. என் முகத்தில் பிரகாசம் உண்டாகத் தொடங்கியது. நாங்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். சசினாஸைப் பற்றி பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள நான் ஆசைப்பட்டேன். ஆனால்,அவள் ஆர்வத்துடன் என்னைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தாள். என் பெயர், என் வீடு, என் வேலை என ஒவ்வொன்றையும்... நேரம் போனதே எங்களுக்குத் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.


அந்தப் புலியைப் போன்ற பெண் வாசல் கதவோரத்தில வந்து நின்றாள். அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை அவள் பார்வையில் இருந்தே தெரிந்து கொண்டேன். அவளின் முகத்தில் கொஞ்சம் கூட அன்பின் வெளிப்பாடு தெரியவில்லை. அவள் சசினாஸை அழைத்து சாப்பாட்டு விஷயத்தைப் பற்றியோ இல்லாவிட்டால் வேறு ஏதோ விஷயத்தைப் பற்றியோ சொல்லி விட்டு அடுத்த நிமிடம் மறைந்து போனாள். நான் புறப்படலாமென்று எழுந்தேன். அவள் என்னைப் பார்த்து சொன்னாள்.

"சாப்பிட்டுட்டுப் போகலாமே!"

அவள் அப்படிச் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் மரியாதை காரணமாக நான் அதை நிராகரித்தேன்.

"சொன்னதற்கு ரொம்ப மகிழ்ச்சி. நான் புறப்படுகிறேன்"

"ஏன்?"

"ஒண்ணுமில்ல..."

ஒருவகை ஏக்கத்துடன் அவளின் முகத்தைப் பார்த்த நான் படிகளில் இறங்கினேன். "வந்த விஷயத்தைச் சொல்லலையே!"

பாதிப்படிகளில் நின்றவாறு, நான் மேலே பார்த்தேன்.

"நான் வந்த விஷயமா?"

"ஆமா..."

என் மனதில் கவலை தோன்றியது. நான் அழுகிற குரலில் சொன்னேன்.

"சும்மாதான் வந்தேன்..."

"சும்மாவா?"

அவள் புன்னகைத்தாள். அந்தக் கண்கள் படு பிரகாசமாக இருந்தன. அவற்றில் ஏதோ ஒன்று வெளிப்படுவதைக்  கண்டேன். அதைப் பார்த்து என் இதயம் குளிர்ந்தது. உதடுகளில் புன்னகை தவழ, நான் படிகளில் இறங்கி வெளியே வந்தேன். வெளியே நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. கண்களைக் கூச வைக்கும் வெயிலில் நான் மகிழ்ச்சியுடன் நடந்தேன்.

ஒவ்வொரு நாளும் நான் அங்கு போவேன். நான் அங்கு சென்று பேசிக் கொண்டிருக்கும் நிமிடங்களில் சசினாஸ் மிகவும் சந்தோஷத்துடன் இருப்பதாக எனக்குப் பட்டது. நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். தான் போயிருக்கும் இடங்களில் உள்ள சிறப்புச் செய்திகள் பலவற்றையும் சசினாஸ் என்னிடம் கூறுவாள். இப்படியே நாட்கள் படுவேகமாக நீங்கிக் கொண்டிருந்தன.

ஒரு நாள் காலையில் பூங்காவைத் தாண்டி நான் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, புதிதாக மலர்ந்திருந்த பன்னீர் பூவின் வாசனை என்னை மிகவும் கவர்ந்தது. உயர்ந்து நிற்கும் கம்பி வேலிக்கு அப்பால் பெரிதாக வளர்ந்திருக்கும் செடிகளில் கொத்துக் கொத்தாக மலர்ந்து நிற்கும் ரோஜாச் செடிகளைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் சசினாஸைப் பற்றி எனக்கு நினைவு வந்தது. யாரும் பார்க்காதபடி நான் கம்பி வேலியின் மேல் ஏறி சில ரோஜாப் பூக்களைப் பறித்துக் கொண்டு வெளியேறினேன். கம்பிவேலி பட்டு என் சட்டையின் கைப்பகுதியில் லேசாக கிழிசல் உண்டானது. உடம்பில் லேசாக கீறிவிட்டது. விளைவு- அந்த இடத்தில் இரத்தம் வந்தது. ஒரு பச்சை இலையில் அந்த மலர்களை வைத்துச் சுற்றி, அவற்றை எடுத்துக் கொண்டு போனேன். சசினாஸ் ஒரு புத்தகத்தைப் படித்தவாறு ஜன்னலின் அருகில் நின்றிருந்தாள். நான் வரும் ஓசை கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள். புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கேட்டாள்.

"என்ன இலையில பொட்டலமா கட்டி கொண்டு வர்றீங்க?" லேசாக தயங்கியவாறு நான் சொன்னேன்.

"சசி... னாஸ்..."

"சசினாஸ்?"

"ஆமா... புதிய ரோஜா மலர்கள்..."

நான் பொட்டலத்தைத் திறந்து காண்பித்தேன். அவளுடைய முகம் வியப்பால் விரிந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நான் மலர்களுடன் அவளை நெருங்கினேன். அவள் அதை வாங்கி முகத்தில் ஒற்றிக் கொண்டாள். அதைப் பார்த்து என் இதயம் வேகமாகத் துடித்தது. பூக்களில் முகத்தை அமர்த்திக் கொண்டு அவள்  ஏக்கத்துடன் அழுவது போல் எனக்குப்பட்டது. அவள் முகத்தை உயர்த்தினாள். அவளின் கண்கள் நனைந்திருந்தன. முகம் சற்று வெளிறித் தெரிந்தது. மீண்டும் புன்னகையைத் தவழவிட்டபடி அவள் நாற்காலியில் போய் அமர்ந்தாள். இலையைப் பிரித்து மடியில் வைத்தபடி, ஒரு ரோஜா மலரை எடுத்து என்னை நோக்கி நீட்டினாள். என் இதயம் என் கை வழியே இறங்கியதைப் போல் உணர்ந்தேன். நான் அந்தப் பூவை வாங்கி இரண்டு கண்களிலும் வைத்து, அதற்கு ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் என் கையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"சட்டை கிழிஞ்சிருக்கே! இரத்தம் வேற வருதே!"

அவள் எழுந்து என்னருகில் வந்தாள். நான் என் கையை அவள் முன் நீட்டினேன். லேசாகக் கீறியிருந்த இடத்தில் இரத்தம் வெளியே கசிந்து கொண்டிருந்தது.

"இது எப்படி வந்துச்சு?"

அதைப் பற்றி கவலைப்படாத குரலில் நான் சொன்னேன்.

"ஓ... பூவைப் பறிக்கிறதுக்காக ஏறினப்போ, கம்பிவேலி கீறிவிட்டிருச்சு..."

அவள் உள்ளே போய் என்னவோ ஒரு ஆயின்மென்ட்டை எடுத்துக்கொண்டு வந்து என் கையில் தடவி விட்டாள். என் உடம்பு முழுக்க இப்படி கீறி விட்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று அப்போது நினைத்தேன். அதற்காக நான் வருத்தப்படவும் செய்தேன். எனக்கு எங்கே மயக்கம் வந்து விடப்போகிறதோ என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அப்படியே அவளின் உடல் மேல் சாய்ந்து விழ வேண்டும் போல் இருந்தது. எந்த அளவிற்கு இதய பூர்வமாக அவள் என் கையை தடவுகிறாள்!

இனிமேல் இப்படி கம்பிவேலி மேல் ஏறி இப்படிப்பட்ட காரியங்களை நான் செய்யக்கூடாது என்ற அறிவுரையுடன் என்னை அவள் அனுப்பினாள். சசினாஸ் தந்த மலரை நான் ஒரு புத்தகத்திற்குள் வைத்தேன். அறையின் வெண்மை நிற சுவரில் சசினாஸ்.. சசி.. னாஸ் என்று கருப்பு பென்சிலால் எழுதி வைத்தேன். கண்ணால்

பார்க்குமிடங்களில் எல்லாம் அவளின் பெயர் இருக்கும். உறங்கிப் போவதற்கு முன் கடைசியாகவும், தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது முதலாவதாகவும் என் கண்களில் படுவது அவளாக இருக்க வேண்டும்.

இதயத்தைத் திறந்து சசினாஸிடம் காட்டுவதற்கு நான் பலமுறை முயன்றேன். அப்போதெல்லாம் அவள் வேறு ஏதாவது விஷயங்களைப் பற்றி பேசி நான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல முடியாமலே போய்விடும். மனதிற்குள் புழுங்கிப் புழுங்கியே நான் ஒரு மாதிரி ஆகிவிடுவேன் போல் இருந்தது.

நிலவு காய்ந்து கொண்டிருந்த ஒரு அமைதியான இரவு. அழுது கொண்டிருக்கும் இதயத்துடன் முற்றத்தில் நின்று கொண்டிருந்தேன். உஷ்ணமே இல்லாத பகல் நேரத்தில் தெரிவதைப் போல மரங்களும் செடிகளும் மற்ற பொருட்களும் ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருந்தன. நட்சத்திரங்கள் நிலவுடன் போட்டி போடுவதைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன. நிர்மலமான ஆகாயத்தில் மேற்குப் பக்க விளம்பில் சில மேகங்கள் எட்டி பார்த்துக் கொண்டிருந்தன. அமைதியாக தவழ்ந்து வந்து என் மேல் மோதிய இளம் காற்றில் கலந்திருந்த நறுமணத்தை நாசிக்குள் இழுத்தவாறு நான் தலையை உயர்த்திப் பார்த்தேன்.


மாளிகையின் முற்றத்தில் நிலவொளியில் ஒரு பெண் உருவம்! காற்றில் சுதந்திரமாக பறந்து கொண்டிருந்த தலை முடி, மிருதுவான வெண்மை நிற ஆடையால் மூடப்பட்ட உடம்பு... சசினாஸ்! அவள்தான் நிலவொளியில் நின்றிருந்தாள்! அவளிடமிருந்து புறப்பட்டு வந்த நறுமணம்தான் என்னிடம் இதுவரை வந்து சேர்ந்தது.. நான் அவளையே பார்த்தேன். மனதில் ஒரே பதைபதைப்பு. வேதனை அதிகமாகக் குடிகொள்ள, நான் மதிலைத் தாவிக் கடந்தேன். கீழே கிடந்த காய்ந்து போன இலைகள் மீது 'கிருகிரா' என சத்தம் வருமாறு நடந்து சென்றேன். ஒருவித நடுக்கத்துடன் கனவுகள் காணும் அந்த கண்கள் என்னை நோக்கித் திரும்பின. நான் ஒரு வித கலக்கத்துடன் அவள் முன் போய் நின்றேன்.

"என்ன?"

அவளின் கேள்வி என்னை எரிச்சலடையச் செய்தது. என் இதயம் கட்டுப்பாட்டை இழந்தது.

"சசினாஸ்... சசி...னாஸ்! நான் வெந்து சாகுறேன்.. காதலால். தயவு செஞ்சு.. தயவு செஞ்சு... சொல்லு. என்னை நீ காதலிக்கிறேல்ல? என் சசி.. னாஸ்...சொல்லு..." 

நான் அவளின் பாதங்களில் விழுந்து வணங்கினேன். என் கண்ணீரால் அவளின் கால்களை நனைத்தேன். அவள் தேம்பித் தேம்பி அழுதாள். அடுத்த நிமிடம் அவள்

குனிந்தாள். அவளின் மார்பகங்கள் என் தலை மீது பட்டு உரசின. அவள் என்னைப் பிடித்து தூக்கினாள். குளிர்ச்சியான அந்த ஸ்பரிசம்! அவளுடைய முகம் ஏனோ வெளிறிப் போயிருந்தது. அந்தக் கண்களில் என்னவோ ஒரு கவலை நிழலாடிக் கொண்டிருந்தது. அவள் கீழே உட்கார்ந்தாள். நானும் உட்கார்ந்தேன். இதயத்தில் கையை வைத்தவாறு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சசினாஸ் மெதுவான குரலில் சொன்னாள்.

"நான் யாருன்னோ எப்படிப்பட்ட பெண்ணுன்னோ உங்களுக்குத் தெரியுமா?"

நான் இடையில் புகுந்து தடுத்தேன்.

"சசினாஸ்! எனக்குத் தெரிய வேண்டாம். என்னை நீ காதலிச்சா போதும்... என்னைக்கும் காலாகாலத்திற்கும்..."

வேகமாக மூச்சு விட்டதால் அவளின் மார்பகங்கள் இடைவிடாது உயர்வதுமாய் தாழ்வதுமாய் இருந்தன. என் இரண்டு கைகளையும் தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டு, என் கண்களை கனிவுடன் பார்த்தவாறு அவள் கேட்டாள்.

"தெரியுமா? நான் எப்படிப்பட்ட பெண்ணுன்னு..."

"தெரியாம என்ன? அழகான... பிரகாசமான மென்மையான புதிய பனி நீர் சொறியும் மலர்... என்னுடைய உயிரான சசி...னாஸ்!"

அவளின் உள்ளங்கையில் நான் முத்தம் பதித்தேன். அவளின் கைகள் நடுங்குவதை என்னால் உணர முடிந்தது.

"சசினாஸ்! என்னை நீ காதலிக்கிறியா?"

கண்களில் நீர் வழிய, நான் தலையை உயர்த்தினேன். அவளின் துடித்துக் கொண்டிருந்த சிவந்த அதரங்களையும் கனவுகள் நிழலாடிக் கொண்டிருந்த கண்களையும் நான் பார்த்தேன்.

என் கண்களில் கண்ணீர் துளிகள் கீழே விழும் நிலையில் இருந்தன. லேசாக பதறிய குரலில் அவள் சொன்னாள்.

"சரி... போயி தூங்குங்க... நாளைக்கு நான் எல்லாத்தையும் சொல்றேன்."

அவள் எழுந்தாள். ஒரு வித ஏமாற்றத்துடன் நானும் எழுந்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஒரு சிறு குழந்தைப்போல எண்ணி என் கண்களை அவள் துடைத்து விட்டாள். என் கண்களைப் பார்த்து புன்னகைத்தவாறு அவள் சொன்னாள்.

"நாளைக்குச் சொல்றேன்... என்ன?"

"ம்..."

"சரி... போய் தூங்குங்க... நாளைக்கு..."

மனதில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல்... அதே நேரத்தில் சந்தோஷத்துடன் நான் மெதுவாக நடந்தேன். திரும்பிப் பார்த்தேன். சசினாஸ் வாசல் படியின் அருகில் நின்றிருந்தாள். இரண்டு கதவுகளையும் பிடித்தவாறு அவள் புன்னகை செய்தாள். நாங்கள் அப்படியே ஒருவரையொருவர் பார்த்தவாறு நின்றோம். சிறிது நேரம் சென்றது. அந்தக் கதவு அடைக்கப்பட்டது.

வெளி மதிலைத் தாண்டி நான் அறைக்குள் வந்தேன். கதவை அடைத்தேன். ஜன்னல் வழியே பார்த்தேன். தெளிவில்லாமல் அவளை அந்த ஜன்னல் மூலம் பார்க்கலாம். சிறிது நேரம் கழித்து அதுவும் இல்லாமல் போனது.

நான் ஜன்னலை அடைத்தேன்.

'நாளைக்கு... நாளைக்கு...' - இப்படி மனதிற்குள் சொல்லியவாறு மன அமைதியுடன் நான் உறங்கினேன். இங்குமங்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும் வெண்மையான மேகங்களைத் தாண்டி, எண்ணற்ற நட்சத்திரங்களைத் தாண்டி, நிலவைத் தாண்டி மலர்ந்து அழகு காட்டிக் கொண்டிருந்த மலர்கள் நறுமணத்தைப் பரவச் செய்ய, அதை முகர்ந்தவாறு நான் நடந்து செல்கிறேன். மெல்லிய வெண்ணிற ஆடை அணிந்த ஒரு அழகு தேவதை என்னுடன் இருக்கிறாள். சசினாஸ்... அவளின்  மயக்க வைக்கும் உடலழகை மெல்லிய ஆடைகள் வழியே தெளிவாகப் பார்க்கலாம். அவளை அப்படியே இறுகக் கட்டிப்பிடித்து அணைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவளை நெருங்குகிறேன். அழகான ஒரு சிரிப்புடன் அவள் என்னைப் பிடித்து பின்னால் தள்ளுகிறாள். நான் மல்லாக்க விழுகிறேன். சிரித்தவாறு நான் கண்களைத் திறந்தேன். பகல் பதினொரு மணி ஆகியிருந்தது!

"இன்னைக்குத்தானே அந்த நாளை..."- நான் வேகமாக படுக்கையை விட்டு எழுந்தேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகக் குளித்து முடித்தேன். வேக வேகமாக ஆடைகளை அணிந்தேன். பரபரப்புடன் காபியைக் குடித்து விட்டு, வேகமாக நடந்தேன். மூடப்பட்டிருந்த கதவைத் தட்டினேன்.

"சசினாஸ்! சசி... னாஸ்!"

ஒரு பதிலும் இல்லை. வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து தொண்டையே கிழிந்து விடும் அளவிற்கு கத்தினேன்.

"சசி....நாஸ்!"

ஒரு சிறு அசைவு கூட இல்லை. என்ன நடந்தது? ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அந்த மாளிகை கம்பீரமான மௌனத்துடன் இருந்தது. பதைபதைப்பும் ஏமாற்றமும் என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தன. நான் வேகமாக ஓடிப்போய் வீட்டுச் சொந்தக்காரரைப் பார்த்தேன். அவர்கள் அதிகாலையிலேயே இங்கிருந்து போய் விட்டார்களாம்! எங்கு போனார்கள் என்பது அவருக்குத் தெரியாதாம்!

எனக்கு உலகமே இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது. இனம் புரியாத சூனியம் என்னை ஆட்கொண்டு விட்டதைப் போல் உணர்ந்தேன். என் இதயம் தேம்பித் தேம்பி அழுதது. 

உயிரோட்டம் இல்லாத பகல்களும், தனிமையும் பயங்கரமும் நிறைந்த இரவுகளுமாக... வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. கஷ்டங்களின் கொடுங்காற்று என்னை நோக்கி வீசத் தொடங்கியது. ஹோட்டலின் கடன், குடியிருக்கும் அறை வாடகை... கையில் இருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. உலகம் கருணையே இல்லாமல் என்னைக் கொல்ல வருகிறதோ? பார்க்குமிடங்களில் எல்லாம் அவளின் பெயர்தான் தெரிந்தது. அதைப் பார்த்தபோது மனதிற்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சசினாஸ் முத்தம் தந்த அந்த மலர்... அவளின் கண்ணீர் விழுந்து வாடிப் போயிருக்கும் அந்த ரோஜா மலர்...


நான் அந்தப் பூவை எடுத்து எப்போது பார்த்தாலும் முத்தம் தந்து கொண்டிருப்பேன். கண்ணீரால் குளிப்பாட்டுவேன். அதையே மீண்டும் மீண்டும் பார்த்து பெருமூச்சு விடுவேன். இப்படியே முப்பது நாட்கள் ஓடி முடிந்துவிட்டன.

முப்பத்தொன்றாம் நாள். அறைக்கு முன்னால் மண்ணில் இரண்டு கைகளாலும் தாடியைத் தடவியவாறு நான் மல்லாக்க படுத்துக் கிடந்தேன். பச்சைப்பசேல் என்றிருந்த வயலைத் தாண்டி வானளவுக்கு உயர்ந்து நின்றிருக்கும் தென்னை ஓலைகளில் இருந்த இளம் சிவப்பு வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருந்தது. ஏமாற்றம் தந்த இன்னொரு நாள் இதோ முடியப் போகிறது. மனம் முழுக்க கவலையில் மூழ்கிப்போய் நான் படுத்துக்கிடந்த நேரத்தில்... என்னை யாரோ அழைத்தார்கள். நான் தலையை உயர்த்தி பார்த்தேன். தபால்காரன்!

ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினான். நான் எழுந்து அதை வாங்கி கொஞ்சமும் சிரத்தையே இல்லாமல் பிரித்தேன். சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த வெள்ளைத் தாளை உருவி எடுத்து கீழே பெயரைப் பார்த்தேன்... சசினாஸ்!

என் கண்களால் சரியாகப் பார்க்க முடியவில்லை. பரபரப்புடன் நான் அறைக்குள் சென்றேன். விளக்கை எடுத்தேன். அதில் சிறிது கூட மண்ணெண்ணெய் இல்லை. ஒரு அங்குல நீளத்தில் இருந்த ஒரு மெழுகுவர்த்தித் துண்டைத்தேடி எடுத்து எரிய வைத்தேன். அடுத்த நிமிடம் பதைபதைப்புடன் நான் அந்தக் கடிதத்தைப் படித்தேன்.

                                                                                                                                                                                         ஏடன்,

5219

சினேகிதனே,

நாளைக்கு எல்லாவற்றையும் கூறுகிறேன் என்று நான் சொல்லியிருந்தேன். நான் சொன்ன நேரம் முடிந்து எத்தனையோ இரவுகளும் பகல்களும் கடந்து விட்டன. இருந்தாலும் நான் வாழ்வதென்னவோ நிலவு வெளிச்சத்தில் மூழ்கிப் போயிருந்த அந்த இரவு நேரத்தில்தான். வாழ்க்கையிலேயே ஆனந்தமயமான ஒரே இரவாக அந்த இரவு மட்டுமே என் மனதில் தங்கி நின்று கொண்டிருக்கிறது. நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள். 'சசினாஸ்! என்னை நீ காதலிக்கிறாயா?' என்று. 'ஆமாம்... நான் காதலிக்கிறேன்' என்று கூற என் இதயம் துடித்ததென்னவோ உண்மை. ஆனால், ஒரு சம்பவம், ஒரு நினைவு நம் இரண்டு பேருக்கும் இடையில் ஒரு உயர்ந்த மலையைப் போல நின்று கொண்டிருக்கிறது. உங்களை ஏமாற்ற எனக்கு மனம் வரவில்லையாதலால், நான் புறப்படுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.

நான் இந்தக் கடிதத்தை கப்பலில் இருந்தவாறு எழுதுகிறேன். என்னைச் சுற்றிலும் கரையே பார்க்க முடியாத, இருண்டு போயிருக்கும். அகன்ற கடல். என் வாழ்க்கையின் கடைசி இரவு இதுதான். இந்த கடிதம் உங்கள் கையில் கிடைக்கிறபோது… சினேகிதனே, அதற்கு முன்பு... நீங்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். வெளியே பார்க்கும் அமைதிக்கும், அழகிற்கும் பின்னால் எப்படிப்பட்ட ஒரு பயங்கரமான சம்பவம் மறைந்து கிடக்கிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

என் வாழ்க்கையின் ஜன்னலைத் திறந்து நான் காட்டுகிறேன். பெரிய ஒரு வியாபாரி என் தந்தை. இது நடந்தது நான்கைந்து வருடங்களுக்கு முன்பு. அப்போது நான் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அண்ணன் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான்.

எனக்கு பதினேழு வயது. என்னுடைய அண்ணனுக்கு இருபது வயது. கோடைக்கால விடுமுறைக்கு அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தான்.

ஒரு பெரிய மைதானத்தைப் பார்த்தவாறு எங்களின் மாளிகை இருந்தது. ஒரு மாலை நேரத்தில் மேல் மாடியில் இருந்த என் அறையில் திறந்திருக்கும் ஜன்னலுக்குப் பக்கத்தில், ஒரு புத்தகத்தைத் திறந்து வைத்தவாறு கனவில் மூழ்கியிருந்தேன் நான். கீழே மலர்திருந்த ரோஜா மலர்களின் நறுமணம் என் முகத்தில் வந்து பட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று யாரோ என் கண்களை மூடினார்கள். என்னை இறுக கட்டிப் பிடித்தவாறு என் கழுத்திற்குப் பின்னால் ஒரு முத்தம்! நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்! நடு எலும்பில் நெருப்பு பரவியது போல் உணர்ந்தேன். கையை உதறி விட்டு பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

என் முகம் கோபத்தால் சிவந்து விட்டது. உடம்பே பற்றி எரிவது போல் இருந்தது. நான் வேகமாக கீழே இறங்கி ஓடினேன். என் தாயின் அருகில் போய் நின்றேன்.

"என்னடி வேகமாக ஓடி வர்ற?"

"ஒண்ணுமில்லம்மா..."

"பிறகு? ஏன் இப்படி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது? முகம் ஏன் இவ்வளவு சிவந்திருக்கு?"

உதடுகளைக் கடித்தவாறு நான் திரும்பிப் பார்த்தேன். அறைக்கு வெளியே என் அண்ணன் நின்றிருந்தான்.

நான் சொன்னேன்.

"முகத்துல ஒரு பூச்சி வந்து..."

"எங்கே... பார்ப்போம்."

"கடிக்கலம்மா... கடிக்க வந்துச்சு. நான் பயந்து ஓடி வந்துட்டேன்..."

அதற்கு பிறகு நான் தனியாக இருக்கும் நேரங்களில் அவன் வருவான். என்னைப் பார்ப்பான். நான் ஓடுவேன்.

ஒரு நாள் அறையில் வைத்து என்னைக் கட்டிப் பிடித்தான். நான் அவனிடமிருந்து தப்புவதற்காகப் போராடினேன்.

ஆனால், அவன் என்னைப் பிடித்திருப்பதை விடவில்லை. என்னை இறுகக் கட்டிப் பிடித்து முத்தம் தந்தான். என்னால் அதற்கு மேல் அவனிடம் போராட முடியவில்லை. நான் களைப்படைந்து போனேன். அன்று இரவு பாதி இரவு கழிந்த பிறகும், எனக்கு உறக்கம் வரவில்லை. உடம்பெங்கும் பயங்கர உஷ்ணமாக இருந்தது. உடம்பு முழுக்க எரிச்சல்... கிட்டத்தட்ட நிர்வாணமாக நான் படுத்திருந்தேன். ஒரு சால்வை மட்டும் என் மேல் இருந்தது. திடீரென்று என் மேல் ஒரு வெளிச்சம். நான் திடுக்கிட்டுப் போய் விழித்தேன். எனக்கு மிகவும் அருகில் வந்தான். என் முகத்தையும் மார்பகங்களையும் தடவினான். ஒரே மதுவின் நெடி... நான் அவன் கைகளைப் பிடித்து தடுத்தேன்.

வெப்பமான மூச்சு என் முகத்தில் பட்டது. காதுக்குள் சொன்னான்.

அப்படி... அப்படி... போனது கோடை காலம்.

கல்லூரி திறந்தார்கள். அதற்குப் பிறகு இரண்டு மூன்று மாதங்கள் கடந்தன. என்னிடம் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. என் தாய்க்கு விஷயம் தெரிந்தது. என் தந்தைக்கும்தான். டாக்டரை வரவழைத்தார்கள்-.

அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். கஷ்டப்படுத்தினார்கள். கையில் தீக்கனலை வைத்தார்கள். தீ பட்டு கை சுட்டது. தாங்க முடியாத வேதனையில் நான் உண்மையை ஒப்புக் கொண்டேன்.

தந்தி அடித்தார்கள். என் அண்ணன் வந்தான். மறுநாள் அவன் தற்கொலை செய்து கொண்டான். புகை வண்டி தண்டவாளத்தில் கழுத்து சிதைந்து கிடந்தான். மூன்று நாட்கள் கழித்து என் தாய் விஷம் குடித்து இறந்தாள்.


நானும் சாக முயற்சித்தேன். அப்போது எனக்கு அதற்கான தைரியம் வரவில்லை. 

கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். பல இடங்களிலும் பல வருடங்கள் சுற்றித் திரிந்தேன். கடைசியில் உங்களைப் பார்த்தேன். உங்களின் அறிமுகம் கிடைத்தது. உங்களைக் காதலித்தேன். பின்னர் மறக்க முயற்சித்தேன். எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் மரத்துப்போய் கிடந்த என் மனதில் மீண்டும் உணர்ச்சிகளை உண்டாக்கியது நீங்கள்தான். நான் போகிறேன். ஆனால் நினைவு! நினைவு!

என் மனம் இதோ தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறது. சூடான என்னுடைய கண்ணீர்த் துளிகளால் குளிப்பாட்டித்தான் இந்தக் கடிதத்தையே நான் உங்களுக்கு எழுதுகிறேன். நான் உங்களைக் காதலிக்கிறேன். அதனால் நான் மரணத்தைத் தழுவுகிறேன்.

நான் இனி வாழ விரும்பவில்லை. உலகம் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீச் தீச்சூளை. குளிர்ச்சியான அகன்ற கடல் இதோ எனக்காகக் காத்திருக்கிறது.

மீண்டும் ஒரு முறை சினேகிதனே... இறுதியாக விடை பெற்றுக் கொள்கிறேன். உங்களை நினைத்துக்கொண்டே நான் மரணத்தைத் தழுவுகிறேன்.

                                                                                                                                                                    உங்களின்,

                                                                                                                                                                    சசினாஸ்

பின்குறிப்பு : புதிதாக மலரும் பூவைப் பார்க்கிறபோது என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.