
நீண்ட நேரத்திற்கு முன்பே "பார்ட்டி" முடிவடைந்துவிட்டது. கடிகாரம் பன்னிரண்டரை மணி என்று அடித்தது.
அந்த வீட்டின் உரிமையாளர், செர்ஜி நிக்கோலேவிட்ச், வ்லாடிமிர் பெட்ரோவிட்ச் ஆகியோர் மட்டுமே அந்த அறையில் எஞ்சி இருந்தார்கள்.
வீட்டின் உரிமையாளர் மணியை அடித்து, இரவு நேர உணவின் மிச்சம் மீதிகளை உடனடியாக அகற்றி சுத்தம் செய்யும் படி கட்டளையிட்டார். "விஷயத்தைக் கூறியாகிவிட்டது...” தான் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியில் மேலும் சற்று சாய்ந்து உட்கார்ந்து கொண்டே அவர் சிகரெட் குழாயைப் பற்ற வைத்தார்.
"நாம் ஒவ்வொருவரும் தங்களுடைய முதல் காதல் அனுபவத்தைக் கூறவேண்டும். முதலில் கூறப்போவது... செர்ஜி நிக்கோலேவிட்ச்.”
பருமனான உடலையும், குள்ளமான உடலமைப்பையும், வீங்கிப் போன மாநிறத்தில் உள்ள முகத்தையும் கொண்ட செர்ஜி நிக்கோலேவிட்ச் வீட்டின் உரிமையாளரையே வெறித்துப் பார்த்துக் கொண்டே, தன் கண்களை மேல்நோக்கி உயர்த்தி கூரையைப் பார்த்தார். "எனக்கு முதல் காதல் என்று ஒன்று இல்லை.” அவர் இறுதியாகக் கூறினார்: "நான் ஆரம்பித்ததே இரண்டாவது காதல்தான்...”
"அது எப்படி?”
"அது மிகவும் சாதாரணமான ஒரு விஷயம். நான் ஒரு அழகான இளம் பெண்மீது மையல் கொள்ள ஆரம்பித்தபோது எனக்கு பதினெட்டு வயது. ஆனால், எனக்கு அது ஒரு புதிய விஷயமே அல்ல என்பதைப்போல நான் அவளைக் காதலித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு பிற பெண்களை எப்படியெல்லாம் காதலித்தேனோ, அதேபோலத்தான் அவளையும் காதலித்துக் கொண்டிருந்தேன். இன்னும் சரியாகக் கூறுவதாக இருந்தால் முதல் முறையாகவும் இறுதி முறையாகவும் நான் காதலித்தது, எனக்கு ஆறு வயது நடக்கும் போது என்னை கவனித்துக் கொண்டிருந்த நர்சைத்தான்.
ஆனால், அது எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் நடைபெற்றது. என்னுடைய நினைவுகளிலிருந்து எங்களுடைய உறவுகளைப் பற்றிய விஷயங்கள் மறைந்து போய்விட்டன. அவற்றை அப்படியே நான் ஞாபகத்தில் வைத்திருந்தாலும், அதைப் பற்றி யாருக்கு ஆர்வம் இருக்கப் போகிறது?”
"பிறகு எப்படி ஆகும்?” வீட்டின் உரிமையாளர் கூறினார்: "என்னுடைய முதல் காதல் விஷயத்தில்கூட ஆர்வத்தை உண்டாக்குகிற அளவிற்கு அப்படியொன்றும் முக்கியத்துவம் இல்லை. இப்போது என்னுடைய மனைவியாக இருக்கும் அன்னா நிக்கோலேவ்னாவைச் சந்திக்கும்வரை நான் யாரின் காதல் வலையிலும் விழவில்லை. எங்களுக்கிடையே எல்லா விஷயங்களும் கூடுமானவரைக்கும் மென்மையான நிலையில் சென்றன. நாங்கள் ஒன்று சேர்வதை எங்களின் பெற்றோர்கள்தான் முடிவு செய்தார்கள். நாங்கள் வெகு சீக்கிரமே ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கினோம். நாட்கள் அதிகம் ஆவதற்கு முன்பே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இரண்டே வார்த்தைகளில் என்னுடைய கதையைக் கூறிவிட முடியும். கட்டாயம் நான் ஒத்துக் கொள்ள வேண்டும், நண்பர்களே! முதல் காதல் என்ற விஷயத்தைப் பற்றிக் கூறும்போது... நான் உங்களிடம் பணிவான குரலில் கூறிக் கொள்கிறேன்- திருமணமாகாத இளம் நண்பர்களே, எங்களுடைய காதல் முதுமைவாய்ந்தது என்று கூறமாட்டேன். அதே நேரத்தில் இளமையானதும் அல்ல. வ்லாடிமிர் பெட்ரோவிட்ச், நாங்கள் மகிழ்ச்சியடைகிற மாதிரி ஏதாவது கூறுவீர்களா?”
"என்னுடைய முதல் காதல் நிச்சயமாக சாதாரணமான ஒன்றல்ல.” கறுப்பு நிற முடி நரை முடியாக மாறிக்கொண்டிருந்த- நாற்பது வயது இருக்கக் கூடிய வ்லாடிமிர் பெட்ரோவிட்ச் சிறிது தயக்கத்துடன் கூறினார்.
"அப்படியா?” வீட்டின் உரிமையாளரும் செர்ஜி நிக்கோலேவிட்சும் ஒரே குரலில் கூறினார்கள்: "அந்த அளவிற்கு சிறப்பானதாக இருந்தால்... எங்களிடம் அதைப் பற்றி கூறுங்கள்...”
"அதைக் கேட்பதற்கு உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ... நான் அந்தக் கதையைக் கூறப்போவது இல்லை. ஒரு கதையைக் கூறும் அளவிற்கு நான் மிகவும் திறமைசாலி இல்லை. நான் மிகவும் சுருக்கமாகவும் சுவாரசியம் இல்லாமலும்தான் கூறுவேன். இன்னும் சொல்லப்போனால், பல விஷயங்களையும் மறந்து விடுவேன். அல்லது ஒன்றுமே இல்லாத அளவிற்கு அது அமைந்துவிடும். நீங்கள் அனுமதித்தால், நான் என் ஞாபகத்தில் இருப்பவை எல்லாவற்றையும் எழுதி, உங்களிடம் வாசித்துக் காட்டுகிறேன்.”
அவருடைய நண்பர்கள் ஆரம்பத்தில் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், வ்லாடிமிர் பெட்ரோவிட்ச் தன் நிலையிலேயே நின்று கொண்டிருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் சந்தித்தார்கள். வ்லாடிமிர் பெட்ரோவிட்ச் தன்னுடைய வார்த்தைகளைக் காப்பாற்றினார்.
அவர் எழுதியிருந்ததில் கீழ்க்காணும் கதை இருந்தது...
அப்போது எனக்கு பதினாறு வயது. 1833-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் அது நடந்தது.
நான் என்னுடைய பெற்றோருடன் மாஸ்கோவில் வசித்துக் கொண்டிருந்தேன். கோடை காலத்திற்காக அவர்கள் நெஸ்குட்ச்னி கார்டனுக்கு எதிரில், கலவ்கா கேட்டிற்கு அருகில் கிராமிய பாணியில் அமைந்த ஒரு வீட்டை எடுத்திருந்தார்கள். நான் பல்கலைக் கழகத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், அப்படியொன்றும் அதிகமாக வேலை செய்யவில்லை. அதிகமாக அவசரப்பட்டுக் கொண்டும் இருக்கவில்லை.
என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினேனோ, அதைச் செய்தேன். குறிப்பாக- நான் அப்படி நடக்க ஆரம்பித்தது ஃப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த என்னுடைய இறுதி ஆசிரியரைப் பிரிந்த பிறகுதான். ஒரு வெடிகுண்டு விழுந்ததைப்போல தான் ரஷ்யாவிற்குள் விழுந்த பிறகு, அங்குள்ள விஷயங்களுடன் சிறிதும் ஒத்துப்போக எந்தச் சமயத்திலும் இயலாமல்போன அவர், நாட்கணக்கில் சோம்பிப் போன முகவெளிப்பாட்டுடன் படுக்கையில் விழுந்து கிடப்பார். என் தந்தை என்மீது சிரத்தையற்ற அன்பை வைத்திருந்தார். என் தாய், என்னைத் தவிர வேறு எந்தக் குழந்தையும் இல்லாவிட்டாலும்கூட, என்னை மிகவும் அரிதாகவே பார்ப்பாள். பல பிரச்சினைகள் அவளை முழுமையாக ஆக்ரமித்துவிட்டிருந்தன. இப்போது கூட இளமையாகவும் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவராகவும் இருந்த என் தந்தை அவளை முற்றிலும் கருணை மனம் கொண்டே திருமணம் செய்திருந்தார். அவரைவிட என் தாய்க்கு பத்து வயது அதிகம். என் தாய் மிகவும் கவலைகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட தன்மையுடனும் பொறாமை நிறைந்தவளாகவும் கோபம் கொண்டவளாகவும் காணப்படுவாள். ஆனால், என் தந்தை அருகில் இருக்கும்போது அவள் அப்படி இருக்க மாட்டாள். அவரைப் பார்த்து அவள் மிகவும் பயப்படுவாள். அவர் மிகவும் கறாரான மனிதராகவும் அமைதியானவராகவும் தன்னுடைய செயல்களை மிகவும் தூரத்தில் வைத்துக் கொண்டு செயல்படக்கூடியவராகவும் இருந்தார்... அவரைப் போல கண்டிப்பும் தன்னம்பிக்கையும் உத்தரவு போடக்கூடிய தன்மையும் நிறைந்த ஒரு மனிதரை வேறு எங்கும் நான் பார்த்ததே இல்லை.
அந்த கிராமிய பாணியில் அமைந்த வீட்டில் செலவழித்த ஆரம்ப வாரங்களின் வாழ்க்கையை நான் எந்த சமயத்திலும் மறக்க மாட்டேன். காலநிலை மிகவும் அருமையாக இருந்தது. நாங்கள் நகரத்தை விட்டு மே 9-ஆம் தேதி புனித நெக்கொலாஸ் நாளன்று புறப்பட்டோம். நான் எங்களின் தோட்டத்திலும் நெஸ்குட்ச்னி கார்டனிலும் டவுன் கேட்டிற்கு வெளியிலும் நடந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் சில புத்தகங்களையும் எடுத்துச் செல்வேன். உதாரணத்திற்கு- கெய்டனோவ் எழுதிய நூல். ஆனால், நான் அதை மிகவும் அரிதாகவே பார்ப்பேன். பெரும்பாலும் அதிலிருக்கும் கவிதைகளை உரத்த குரலில் கூறுவேன். மனப்பாடமாக எனக்கு ஏராளமான கவிதைகளைத் தெரியும். என்னுடைய ரத்தம் புத்துணர்ச்சி நிறைந்து காணப்படும். என் இதயம் வலிக்கும்- மிகவும் இனிமையாகவும் முட்டாள்தனமாகவும். நான் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகள் நிறைந்தவனாகவும் இருப்பேன். சில விஷயங்களைப் பார்த்து பயப்படுவேன். எதைப் பார்த்தாலும் முழுமையாக ஆச்சரியப்படக்கூடியவனாகவும் இருந்தேன். எல்லா விஷயங்களிலும் எதிர்பார்ப்பு என்ற ஒன்று இரண்டறக் கலந்திருந்தது. என்னுடைய கற்பனை தொடர்ந்து பறந்து கொண்டே இருந்தது.
பல விஷயங்களைப் பற்றியும் நினைத்தவாறு என் கற்பனைகள் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும். புலர்காலைப் பொழுதின் மணிகூண்டின் மணிச் சத்தங்களைப்போல அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும். நான் கனவுகள் காண்பேன். கவலைகளில் மூழ்கிக் கொண்டிருப்பேன். அழக்கூட செய்திருக்கிறேன். இசையுடன் கலந்த பாடல் வரிகளால் தூண்டப்பட்டோ மாலை நேரத்தின் அழகால் ஈர்க்கப்பட்டோ வெளிப்படும் கண்ணீரிலும் கவலையிலும், வசந்த காலத்தில் புத்துணர்ச்சியுடன் நின்று கொண்டிருக்கும் புல்லைப்போல, இளமையின் இனிய தன்மையும் வாழ்வின் பிரவாகமும் பொங்கி நுரை தள்ளிக் கொண்டிருக்கும்.
ஏறிப் பயணம் செய்வதற்காக என்னிடம் ஒரு குதிரை இருந்தது. நான் மட்டும் தனியே அதில் ஏறிப் பயணம் செய்வேன். நீண்ட தூரம் பயணம் செய்வதற்காக நான் மட்டும் தனியாகச் செல்வேன். மிகவும் வேகமாக குளம்புச் சத்தங்கள் ஒலிக்க பயணம் செய்யும்போது, போர்க்களத்தில் இருக்கும் ஒரு போர்வீரனைப்போல என்னை நான் உணர்வேன். என்னுடைய காதுகளுக்குள் காற்று எவ்வளவு குதூகலத்துடன் சீட்டி அடித்துக் கொண்டிருக்கும் தெரியுமா? அது வானத்தை நோக்கி என்னுடைய முகத்தை எவ்வளவு அருமையாகத் திரும்பச் செய்யும் தெரியுமா? வானத்தின் பிரகாசமான ஒளியையும் நீல நிறத்தையும் என் மனதிற்குள் வாங்கிக் கொள்வேன். மனம் பெரிதாக திறந்து அதை ஏற்றுக் கொள்ளும்.
அந்தச் சமயத்தில் பெண்ணைப் பற்றிய தோற்றமோ, காதலைப் பற்றிய சிந்தனையோ என் மூளையில் சொல்லிக் கொள்கிற அளவிற்கு வடிவமெடுத்து முகத்தைக் காட்டியதில்லை. அதே நேரத்தில்- மிகவும் அடியில்- பாதி சுய உணர்வு கொண்ட- இன்னது என்று கூற முடியாத... வெட்கப்படக்கூடிய... புதிதான... வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத- இனிதான... பெண்மைத்தனம் நிறைந்த ஏதோவொன்று மறைந்து கிடப்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடிந்தது- உணர முடிந்தது.
இந்த இனிய நிலை... இந்த அனுபவம்... என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தது. அதை வைத்து நான் உயிர் வாழ்ந்தேன். என்னுடைய ரத்தக் குழாய்களில் ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொரு துளி ரத்தத்திலும் கலந்து பயணம் செய்து கொண்டிருந்தது... வெகு சீக்கிரமே அது முழுமையாக நிறைந்துவிடும் என்று தெளிவாகத் தெரிந்தது.
கோடை காலத்திற்காக நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடம் மரங்களாலான ஒரு வீடாக இருந்தது. அதையொட்டி இரண்டு கட்டடங்கள் இருந்தன. இடது பக்கமிருந்த கட்டடத்தில் ஒரு சிறிய தொழிற்சாலை இருந்தது. அது விலை குறைந்த சுவர் தாள்களைத் தயாரிக்கக்கூடியது. ஒருமுறைக்கும் அதிகமாகவே நான் அந்தப் பக்கம் போயிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு டஜன் மெலிந்த, வாடிப் போன சிறுவர்கள் எண்ணெய் வழிந்த உடலுடனும் சோர்ந்துபோன முகத்துடனும் மரத்தாலான கைப்பிடிகளின்மீது தொடர்ந்து குதித்துக் கொண்டிருப்பதை அப்போது நான் பார்ப்பேன். அந்த மரத்தாலான கைப்பிடிகள் அச்சு இயந்திரத்தின் செவ்வக வடிவத்தில் அமைந்த சட்டங்களை அழுத்தும். அந்தச் சிறுவர்களின் மெலிந்த உடல்களின் எடை அழுத்த, வால் பேப்பர்களில் பல வகையான டிசைன்கள் விழுந்து கொண்டிருக்கும். வலது பக்கத்தில் இருக்கும் கட்டடம் காலியாகவே இருந்தது. ஒருநாள்- மே மாதம் 9-ஆம் தேதிக்குப் பிறகு மூன்று வாரங்கள் கழித்து- அந்தக் கட்டடத்தின் சாளரச் சட்டங்கள் திறக்கப்பட, அதில் பெண்களின் முகங்கள் தெரிந்தன. ஏதோ ஒரு குடும்பம் அந்தக் கட்டடத்திற்குள் வந்திருக்க வேண்டும். அதே நாளன்று மாலை நேர உணவு வேளையின்போது, என் தாய் சமையல்காரரிடம் எங்கள் பக்கத்து வீட்டுக்கு வந்திருப்பவர்கள் யார் என்று கேட்டது ஞாபகத்தில் இருக்கிறது. இளவரசி ஜாஸிகின் என்ற பெயரை சமையல்காரர் உச்சரிக்க, ஒரு மரியாதையுடன் "என்ன, இளவரசியா?” என்று ஆரம்பத்தில் சொன்ன என் தாய் தொடர்ந்து சொன்னாள்: "நான் நினைக்கிறேன்... யாரோ சாதாரணமானவர்கள்தான் என்று...”
"அவர்கள் மூன்று வாடகைக் கார்களில் வந்திருக்கிறார்கள்.” ஒரு உணவு பதார்த்தத்தைப் பரிமாறிக் கொண்டே அவர் சற்று வித்தியாசமான குரலில் சொன்னார்: "அவர்களுக்குச் சொந்தமான வாகனம் எதுவுமில்லை. நாற்காலிகள்கூட ஏழைகளிடம் இருப்பவை போன்றதுதான் இருக்கின்றன!”
"அப்படியா?” என் தாய் சொன்னாள்: "நல்லவையாக இருந்தால் சரி...”
என் தந்தை அவளை நோக்கி ஒரு குளிர்ச்சியான பார்வை பார்த்தார். அவள் மிகவும் அமைதியாக இருந்தாள்.
உண்மையாகவே ஜாஸிகின் இளவரசி மிகப்பெரிய பணக்காரியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவள் வாடகைக்கு தங்குவதற்காக எடுக்கப்பட்டிருந்த கட்டடம் மிகவும் சிதிலமடைந்ததாகவும்,அளவில் சிறியதாகவும், தரம் குறைந்ததாகவும் இருந்தது. சொல்லப் போனால்- உலகில் சற்று சுமாரான வசதிகளுடன் வாழ்பவர்கள்கூட அங்கு வந்து வசிப்பதற்கு யோசிப்பார்கள். எனினும், அங்கு பேசப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் ஒரு காதில் உள்ளே நுழைந்து இன்னொரு காதில் வெளியே போய்க் கொண்டிருந்தன. "இளவரசி" பட்டம் என்னிடம் சிறிய அளவிலேயே தாக்கத்தை உண்டாக்கியது. நான் அப்போது சில்லர்ஸ் எழுதிய "திருடர்கள்" நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் எங்களுடைய தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருப்பதை நான் வழக்கமான செயலாக வைத்திருந்தேன். அங்கு நடந்துகொண்டே நான் பறவைகளைப் பார்ப்பேன். அங்கு வரக்கூடிய கறுத்த, பரபரப்புடன் காணப்படும் காகங்களை நீண்டகாலமாகவே எனக்கு பிடிக்கவே பிடிக்காது. பேசப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த குறிப்பிட்ட நாளன்று, வழக்கம் போல நான் தோட்டத்திற்குச் சென்றேன். எந்தவித நோக்கமும் இல்லாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்த நான் (காகங்களுக்கும் என்னைத் தெரியும்.
அவை தூரத்தில் இருந்து கொண்டே வெறுமனே கரைந்து கொண்டிருந்தன) அந்தச் சிறிய வேலிக்கு அருகில் சென்றேன். அதுதான் நாங்கள் தங்கியிருந்த இடத்தையும் வலது பக்கமிருந்த கட்டடத்தைத் தாண்டியிருந்த சிறிய தோட்டத்தையும் பிரித்துக் கொண்டிருந்தது. நான் நடந்து கொண்டே இருந்தேன். என்னுடைய கண்கள் நிலத்தின்மீது இருந்தன. திடீரென்று நான் ஒரு குரலைக் கேட்டேன். அந்த வேலி இருந்த பக்கம் பார்த்த நான் அதிர்ச்சிக்குள்ளானேன். ஆர்வத்தைத் தூண்டக் கூடிய ஒரு காட்சியைப் பார்த்து நான் விக்கித்துப் போய் நின்றுவிட்டேன்.
நான் இருக்குமிடத்திலிருந்து சில அடிகள் தூரத்தில் பசுமையாக வளர்ந்திருந்த ராஸ்ப்பெர்ரி செடிகளுக்கு நடுவில், கோடுகள் போட்ட வாடாமல்லி வண்ணத்திலிருந்த ஆடையை அணிந்த ஒரு ஒல்லியான இளம்பெண் புல்லின்மீது நின்று கொண்டிருந்தாள்.
அவளுடைய தலையில் ஒரு வெள்ளை நிற கைக்குட்டை கட்டப்பட்டிருந்தது. அவளைச் சுற்றி நான்கு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். அவள் சிறிய சாம்பல் நிற பூக்களால் அவர்களை- அவர்களுடைய முன்நெற்றியில் தொடர்ந்து பலமாக அடித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பூக்களின் பெயர் என்ன என்று அவர்களுக்கு நன்கு தெரியும் என்றாலும், எனக்கு அதன் பெயர் தெரியவில்லை. அந்த மலர்களில் சிறிய பைகளைப் போன்று இருந்த பகுதிகள், ஏதாவதொரு கடுமையான பொருளின்மீது அடிக்கப்படும்போது, அவை திறந்து பெரிய ஒரு சத்தம் உண்டானது. அந்த இளைஞர்கள் தங்களுடைய நெற்றிப் பகுதிகளை மிகவும் ஆர்வத்துடன் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளம்பெண்ணின் பக்கத்திலிருந்து பார்த்தால் (நான் அவளை பக்கவாட்டு தோற்றத்தில் பார்த்தேன்),
அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த செயல்கள் சந்தோஷம் நிறைந்தவையாகவும், ஆர்வமானவையாகவும், முழு ஈடுபாடு கொண்டவையாகவும், கிண்டல்கள் நிறைந்ததாகவும், அழகானவையாகவும் இருந்தன. மிகுந்த ஈடுபாட்டுடனும் சந்தோஷத்துடனும் உரத்த குரலில் கத்தினேன். அந்த அழகான கைகள் என்னுடைய நெற்றியில் வேகமாக அடிப்பதற்காக உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் நான் இழப்பதற்குத் தயாராகிவிட்டேன் என்பதைப்போல அப்போது தோன்றியது. என்னுடைய துப்பாக்கி புல்லின்மீது விழுந்தது. நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். நான் என்னுடைய கண்களால் அழகான உடலமைப்பையும், கழுத்தையும், அழகான கைகளையும், வெள்ளை நிற கைக்குட்டைக்குள் கீழே சற்று தாறுமாறாக கலைந்து கிடந்த தலை முடியையும், பாதியாக மூடியிருந்த புத்திசாலித்தனமான கண்களையும், கண் இமைகளையும், அவற்றுக்குக் கீழே இருந்த மென்மையான கன்னத்தையும் பார்த்தேன்.
"இளைஞனே... ஏய்... இளைஞனே...” எனக்கு அருகில் ஒரு குரல் ஒலித்தது: "யாரென்று தெரியாத இளம் பெண்களை இப்படி வெறித்துப் பார்ப்பது அனுமதிக்கக் கூடிய ஒரு காரியமா?”
நான் நடக்க ஆரம்பித்தேன். நான் ஊமையைப்போல ஆகிவிட்டேன்... எனக்கு அருகில், வேலிக்கு அந்தப் பக்கம் ஒட்ட வெட்டப்பட்ட கறுப்புத் தலை முடியுடன் நின்றிருந்த ஒரு மனிதன் என்னையே வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் அந்தப் பெண்ணும் என்னை நோக்கித் திரும்பினாள். பிரகாசமான, துடிப்புடன் காணப்பட்ட முகத்தில் இருந்த, விரிந்த, சாம்பல் நிறக் கண்களை நான் சந்தித்தேன். திடீரென்று அந்த முழு முகமும் அசைந்து சிரித்தது. பிரகாசமான வெள்ளைநிறப் பற்கள் வெளியே தெரிந்தன. கண் இமைகள் மெதுவாக மேல் நோக்கி உயர்ந்தன. நான் உற்சாகமடைந்தேன். தரையில் வைத்திருந்த என்னுடைய துப்பாக்கியை எடுத்தேன். தொடர்ந்து இசையைப்போல முழங்கிய- அதே நேரத்தில் கெட்ட நோக்கம் இல்லாத சிரிப்புடன் என்னுடைய அறையை நோக்கி ஓடி வந்தேன். படுக்கையில் வேகமாக விழுந்த நான் என் முகத்தை என்னுடைய கைகளால் மறைத்துக் கொண்டேன். என் இதயம் அழகாக துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. நான் மிகவும் வெட்கத்துடனும் அதிகமான சந்தோஷத்துடனும் காணப்பட்டேன். இதற்கு முன்பு எப்போதும் அனுபவித்திராத சந்தோஷத்தை நான் உணர்ந்தேன்.
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, நான் என் தலைமுடியை வாரினேன். முகத்தைக் கழுவிவிட்டு, தேநீர் பருகுவதற்காக கீழே சென்றேன். அந்த இளம் பெண்ணின் உருவம் என் கண்களுக்கு முன்னால் தோன்றியது. அதற்குமேல் என் இதயம் துள்ளிக் குதிக்கவில்லை. ஆனால், அது முழுவதும் இனிய நினைவுகள் நிறைந்திருந்தன.
"என்ன விஷயம்?” என் தந்தை உடனடியாகக் கேட்டார்: "நீ காகம் எதையாவது கொன்றுவிட்டாயா?”
நான் அவரிடம் எல்லா விஷயங்களையும் கூறிவிடுவதாக இருந்தேன். ஆனால் என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு, வெறுமனே எனக்குள் சிரித்துக் கொண்டேன். நான் என் படுக்கைக்குச் சென்றபோது, நான் சுற்றினேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒரே காலில் நின்று கொண்டு மூன்று முறை சுற்றினேன். என் தலையைக் கையால் கோதிக் கலைத்தவாறு படுக்கைக்குச் சென்று, முழு இரவும் நிம்மதியாகத் தூங்கினேன். பொழுது புலர்வதற்கு முன்பே ஒரு கணத்தில் நான் கண் விழித்து, என் தலையைத் தூக்கினேன். உற்சாகத்துடன் சுற்றிலும் பார்த்துவிட்டு, மீண்டும் தூக்கத்தில் மூழ்கிவிட்டேன்.
"அவர்களுடன் நான் எப்படி பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வது?" காலையில் எழுந்தபோது என்னுடைய மனதில் இருந்த சிந்தனை இதுதான். காலை நேர தேனீருக்கு முன்னால், நான் தோட்டத்தின் பக்கம் சென்றேன். ஆனால், நான் வேலிக்கு மிகவும் அருகில் செல்லவில்லை. அங்கு யாரையும் காணவில்லை. தேநீரைப் பருகிவிட்டு, வீட்டுக்கு முன்னால் தெருவில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக பல முறை நடந்தேன். தூரத்தில் இருந்துகொண்டே சாளரங்களின் வழியாக உள்ளே பார்த்தேன். ஒரு திரைச்சீலைக்கு அருகில் அவளின் முகம் இருப்பதைப்போல எனக்குத் தோன்ற, நான் பரபரப்புடன் நகர்ந்து சென்றேன்.
"எப்படியாவது அவளுடன் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்." நெஸ்குட்ச்னி பூங்காவுக்கு முன்னால் பரவிக்கிடந்த மணல் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டே நான் மனதிற்குள் நினைத்தேன்: "ஆனால் அது எப்படி? அதுதான் பிரச்சினையே..." நேற்று நாங்கள் சந்தித்தபோது உண்டான சிறுசிறு விஷயங்களையும் நான் மீண்டும் மனதில் நினைத்துப் பார்த்தேன். எது எப்படியோ, என்னைப் பார்த்து அவள் எப்படி சிரித்தாள் என்பதை குறிப்பாக நான் மனதிற்கு திரும்பவும் கொண்டு வந்து அசை போட்டுப் பார்த்தேன். நான் என்னுடைய மூளையைக் கசக்கி, பல்வேறு திட்டங்களையும் போட்டுக் கொண்டிருந்தபோது, எனக்காக விதி வேறொரு பாதையைப் போட்டு வைத்திருந்தது.
நான் வீட்டில் இல்லாத நேரத்தில், புதிதாக வீட்டுக்கு அருகில் வந்திருப்பவர்களிடமிருந்து என் தாய் சாம்பல் நிறத்திலிருந்த ஒரு தாளில் எழுதப்பட்ட கடிதத்தைப் பெற்றாள். அந்தக் கடிதம் மர வண்ணத்திலிருந்த மெழுகால் அடைக்கப்பட்டிருந்தது.
அஞ்சல் அலுவலகத்திலிருந்து வரக்கூடிய தபால்களிலோ அல்லது விலை குறைவான ஒயின் அடைக்கப்பட்டிருக்கும் புட்டிகளின் "கார்க்" பகுதிகளிலோதான் அப்படிப்பட்ட மெழுகு இருக்கும். மிகவும் பாமரத்தனமான மொழியிலும், நடுங்கிக் கொண்டிருக்கும் கையாலும் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் அந்த இளவரசி, அவளுக்காக இயலும் வகையில் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த இளவரசியின் வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால்- என் தாய் மிக உயர்ந்த நிலைகளில் இருக்கும் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பவள், அவளை நம்பி இளவரசியின் சொத்துகளும் அவளுடைய குழந்தைகளின் எதிர்காலமும் இருக்கின்றன. அதற்குக் காரணம்-அவளின் கையில் சில முக்கியமான விஷயங்கள் இருந்தன. "நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு அடிப்படை காரணம்" அவள் எழுதியிருந்தாள்: "ஒரு நல்ல பெண் இன்னொரு நல்ல பெண்ணுக்கு கடிதம் எழுத வேண்டும் என்பதற்காகத்தான். அந்த காரணத்திற்காக இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்." என்னுடைய தாயை வந்து பார்ப்பதற்கு அவள் இறுதியாக அனுமதி கேட்டிருந்தாள். முடிவு எடுக்க முடியாத இக்கட்டான நிலையில் என் தாய் இருப்பதை நான் பார்த்தேன். என் தந்தை வீட்டில் இல்லை. அறிவுரை பெறுவதற்கு அவளுக்கு வீட்டில் யாரும் இல்லை. நல்ல ஒரு பெண்ணுக்கு... உதவி கேட்டு வேண்டுகோள் விடுக்கும் ஒருத்திக்கு பதில் கூறாமல் இருப்பது என்பது சரியான விஷயமல்ல. ஆனால், அவளுக்கு எப்படி பதில் கூறுவது என்ற சிரமமான கட்டத்தில் என் தாய் இருந்தாள். ஃப்ரெஞ்ச் மொழியில் பதில் எழுதுவது என்பது பொருத்தமற்ற விஷயமாக என் அன்னைக்குத் தெரிந்தது. ரஷ்ய மொழியில் எழுதுவது என்பது என் தாயைப் பொறுத்தவரை ஒழுங்காகத் தெரிந்த ஒன்றாக இல்லை. இந்த விஷயம் என் அன்னைக்கே நன்கு தெரியும். தன்னை அப்படி வெளிப்படுத்திக் கொள்வதற்கும் அவள் விரும்பவில்லை. நான் அங்கு வந்து நின்றபோது, என் தாய் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். அந்த இளவரசியிடம் உடனடியாக போகும்படி என்னைப் பார்த்துக் கூறினாள். தன்னால் முடியக் கூடிய எந்த வகையான உதவியையும் செய்வதற்கு தான் எப்போதும் சந்தோஷத்துடன் தயாராக இருப்பதாகக் கூறும்படி அவள் என்னிடம் கூறினாள். ஒரு மணிக்கு தன்னை வந்து பார்க்கும்படி அவள் பணிவான குரலில் சொன்னாள். என் மனதிற்குள் யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருந்த ஆசைகளை அது கிளர்ந்தெழச்செய்து, உற்சாகத்தின் உச்சத்திற்கு என்னைக் கொண்டு சென்றது. எனினும், என்னை வந்து ஆக்கிரமித்த பரபரப்புத் தன்மையை நான் சிறிதுகூட வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அதே நேரத்தில்- நான் முன்னேற்பாடாக என்னுடைய அறைக்குள் நுழைந்து, ஒரு புதிய கழுத்து "டை"யையும், வால் வைத்த "கோட்”டையும் எடுத்து அணிந்தேன். வீட்டில் இருக்கும்போது பொதுவாக நான் நீளம் குறைவானவையாகவும் கீழே இறங்கிய காலர்களைக் கொண்டவையாகவும் உள்ள மேற்சட்டைகளைத்தான் அணிவேன். அப்படி அணிவதுதான் பொதுவாகவே எனக்குப் பிடிக்கும்.
கட்டடத்தின் அகலம் குறைவானதாகவும் சுத்தமற்றதாகவும் இருந்த பாதையின் வழியாக என் கால்களில் இனம்புரியாத வேதனை உண்டாக நான் நடந்து சென்றபோது, எனக்கு முன்னால் தலைமுடியில் நரை விழுந்த, அடர்த்தியான செம்பு நிறத்தில் இருந்த ஒரு வயதான வேலைக்காரன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். பன்றிகளின் கண்களைப்போல மிகவும் சிறியவையாக இருந்த அவனுடைய கண்களையும் நெற்றியில் காணப்பட்ட ஆழமான கோடுகளையும், நெற்றியின் மேற்பகுதியையும்போல என் வாழ்க்கையில் வேறு எங்கும் பார்த்ததே இல்லை. அவன் கையில் வைத்திருந்த தட்டில் அறுக்கப்பட்ட மீனின் முட்கள் இருந்தன. அறைக்குச் செல்லக் கூடிய கதவை காலால் உதைத்து மூடிக்கொண்டே அவன் உரத்த குரலில் கேட்டான்: "உங்களுக்கு என்ன வேணும்?”
"வீட்டில் இளவரசி ஜாஸிகின் இருக்கிறார்களா?”
"வோனிஃபேட்டி!” உள்ளேயிருந்த ஒரு பெண்ணின் குரல் சத்தமாகக் கேட்டது.
அந்த மனிதன் ஒரு வார்த்தைகூட பதிலாக கூறாமல் என்னை நோக்கி தன்னுடைய முதுகைக் காட்டினான். அவன் அப்படிச் செய்தபோது அவனுடைய முதுகுப் பகுதியில் பளபளத்துக் கொண்டிருந்த சிவப்பு நிற பொத்தான் நன்கு தெரிந்தது. அவன் தரையில் தட்டை வைத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
"நீ காவல் நிலையத்திற்குச் சென்றாயா?” அதே பெண் குரல் மீண்டும் ஒலித்தது. அந்த மனிதன் அதற்கு பதிலாக என்னவோ முணுமுணுத்தான். "ம்... யாராவது வந்திருக்காங்களா?” நான் தொடர்ந்து கேட்டேன். "பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் வந்திருக்கிறாரா? அவரை உள்ளே வரச் சொல்.”
"நீங்கள் வரவேற்பறைக்குள் வருவீர்களா?” அந்த வேலைக்காரன் மீண்டும் அங்கு வந்து நின்றுகொண்டு கேட்டான்.
அவன் தரையில் இருந்த ப்ளேட்டை எடுத்துக் கொண்டிருந்தான். நான் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வரவேற்பறைக்குள் சென்றேன்.
அந்த வீடு அளவில் சிறியதாகவும், அந்த அளவிற்கு சுத்தமில்லாததாகவும் இருந்தது. அங்கிருந்த நாற்காலிகள் மிகவும் மோசமானவையாக இருந்தன. அவை மிகவும் அவசரம் அவசரமாக அவை இருந்த இடத்தில் போடப்பட்டவை போல தெரிந்தன. சாளரத்திற்கு அருகில் போடப்பட்டிருந்த கைப்பகுதி உடைந்த ஒரு நாற்காலியில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தாள். அவளுடைய தலையில் துணி எதுவுமில்லை. பார்க்கவே அசிங்கமாக இருந்தாள். பழைய ஒரு பச்சை வண்ண ஆடையுடனும், பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு இருந்த ஒரு துணியை கழுத்தில் சுற்றிய கோலத்துடனும் அவள் இருந்தாள். அவளுடைய சிறிய கருப்பு நிறக் கண்கள் என்னையே ஊசிகளைப்போல கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன.
நான் அவளுக்கு அருகில் சென்று தலை குனிந்து நின்றேன்.
"நான் இளவரசி ஜாஸிகினுடன் பேச கிடைத்த வாய்ப்பிற்காக பெருமைப்படுகிறேன்.”
"நான்தான் இளவரசி ஜாஸிகின்... நீங்கள்தான் "மிஸ்டர் வி"யின் மகனா!”
"ஆமாம்... என் அன்னையிடமிருந்து ஒரு தகவலுடன் உங்களிடம் வந்திருக்கிறேன்.”
"தயவு செய்து உட்கார்... வோனிஃபேட்டி, என்னுடைய சாவிகள் எங்கே? நீ அவற்றைப் பார்த்தாயா?”
ஜாஸிகின் மேடத்திடம் அவளுடைய வேண்டுகோளுக்கு என் தாய் அளித்த பதிலை நான் சொன்னேன். தன்னுடைய சதைப்பிடிப்பான சிவந்த விரல்களை சாளரத்தின் சட்டங்களில் தட்டிக் கொண்டே அவள் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் கூறி முடித்தபோது, அவள் மேலும் ஒருமுறை என்னையே கூர்ந்து பார்த்தாள்.
"நல்லது... நான் நிச்சயம் வருகிறேன்...” அவள் இறுதியாக சொன்னாள்: "ஆனால், நீ எவ்வளவு இளமையாக இருக்கிறாய்! உனக்கு என்ன வயது நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?”
"பதினாறு...” எதிர்பாராத ஒரு தடுமாற்றத்துடன் நான் சொன்னேன்.
இளவரசி தன்னுடைய பாக்கெட்டிற்குள்ளிருந்து ஏதோ எழுதப்பட்ட சில வழவழப்பான தாள்களை எடுத்து, அவற்றை தன்னுடைய மூக்கிற்கு மேலே இருக்கும் வண்ணம் தூக்கிப்பிடித்து, அவற்றின் வழியாக என்னைப் பார்த்தாள்.
"அருமையான வயது...” நாற்காலியில் அமர்ந்து கொண்டே அவள் சுற்றிலும் பார்த்தவாறு சொன்னாள்: "நீ வீட்டில் இருக்கும் போது கடவுளைத் தொழு... என்னால் விழாக்களில் நிற்கவே முடியாது.”
"இல்லவே இல்லை..." நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நினைத்துப் பார்க்க முடியாத அவளின் சுயத்தன்மையை கட்டுப்படுத்த முடியாத வெறுப்புடன் நான் ஊடுருவிப் பார்த்தேன்.
அந்தச் சமயத்தில் இன்னொரு கதவு வேகமாகத் திறந்தது. நேற்று மாலை நேரத்தில் தோட்டத்தில் நான் பார்த்த இளம் பெண் கதவிற்கு அருகில் நின்று கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய கையை உயர்த்தினாள். கிண்டல் கலந்த சிரிப்பு அவளுடைய முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது.
"இவள்தான் என் மகள்.” தன்னுடைய விரலால் சுட்டிக்காட்டியவாறு இளவரசி சொன்னாள்: "ஜினைடா, நம் பக்கத்து வீட்டிலிருக்கும் "மிஸ்டர் வி"யின் மகன் இவர். உன் பெயர் என்ன? நான் கேட்கலாமா?”
"வ்லாடிமிர்...” நான் வேகமாக எழுந்து, எனக்குள் உண்டான உற்சாகத்தால் தடுமாறிக் கொண்டே கூறினேன்.
"உன் தந்தையின் பெயர்?”
"பெட்ரோவிட்ச்.”
"அப்படியா? எனக்கு ஒரு போலீஸ் கமிஷனரைத் தெரியும்.
அவர் பெயர்கூட வ்லாடிமிர் பெட்ரோவிட்ச்தான். வோனிஃபேட்டி! என்னுடைய சாவிகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். அவை என்னுடைய பாக்கெட்டிற்குள் இருக்கின்றன.”
அந்த இளம் பெண் அதே புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளுடைய கண் இமைகள் லேசாகத் துடித்துக் கொண்டிருந்தன. அவள் தன்னுடைய தலையை ஒரு பக்கமாக சற்று சாய்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.
"நான் ஏற்கெனவே மிஸ்டர் வ்லாடிமிரைப் பார்த்திருக்கிறேன்.” அவள் ஆரம்பித்தாள். (அவளுடைய வெள்ளியைப் போன்ற தெளிவான குரல் எனக்குள் இனிய அதிர்வைப்போல ஓடிக் கொண்டிருந்தது.) "நான் உன்னை அவ்வாறே அழைக்கட்டுமா?”
"ஓ... தாராளமாக...” நான் சொன்னேன்.
"அது எங்கே?” இளவரசி கேட்டாள்.
அந்த இளம் இளவரசி தன் அன்னைக்கு பதில் கூறவில்லை.
"இப்போது நீ ஏதாவது செய்வதற்கு இருக்கிறதா?” என்னிடமிருந்து தன்னுடைய கண்களை எடுக்காமலே அவள் கேட்டாள்.
"இல்லை...”
"நூலைச் சுற்றி வைப்பதற்கு நீ சற்று எனக்கு உதவமுடியுமா? இங்கே எனக்கு அருகில் வா.”
அவள் என்னைப் பார்த்து தலையை ஆட்டியவாறு, வரவேற்பறையை விட்டு வெளியே வந்தாள். நான் அவளைப் பின்பற்றி நடந்தேன். நாங்கள் சென்ற அறைக்குள் போடப்பட்டிருந்த நாற்காலிகள் சுற்று மேம்பட்டதாக இருந்தன. அவை சற்று அதிகமான ரசனையுடன் போடப்பட்டிருந்தன. எனினும், அந்த நிமிடத்தில் அங்கிருக்கும் பொருட்களைக் கூர்ந்து கவனிக்கக் கூடிய நிலையில் நான் இல்லை. எனக்குள் உண்டான இனம்புரியாத சந்தோஷத்துடன் நான் ஒரு கனவில் நடப்பவனைப்போல நடந்துகொண்டிருந்தேன்.
அந்த இளம் இளவரசி கீழே உட்கார்ந்தாள். அவள் அங்கிருந்த சிவப்பு நிற நூல் கண்டை எடுத்துக் கொண்டே அவளுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் என்னைப் போய் உட்காரும்படி சைகை செய்தாள். பிறகு மிகவும் கவனமாக நூல்கண்டை என் கைகளில் தந்தாள். இந்தச் செய்கைகள் அனைத்தையும் முழுமையான ஈடுபாட்டுடன்- அதே நேரத்தில்- ஒரே அமைதித் தன்மையுடன் அவள் செய்துகொண்டிருந்தாள். அப்போதும் அவளுடைய லேசாகப் பிரிந்த உதடுகளில் பிரகாசமான புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. அவள் சற்று வளைந்த ஒரு கொம்பில் நூலைச் சுற்ற ஆரம்பித்தாள். அப்போது அவள் பிரகாசமான, கூர்மையான தன்னுடைய பார்வையால் என்னைத் தடுமாறச் செய்து கொண்டிருந்தாள். நான் என்னுடைய கண்களைத் தரையை நோக்கி பதிப்பதை என்னால் தடை செய்ய முடியவில்லை. பொதுவாக பாதியாக மூடியிருந்த அவளுடைய கண்கள் முழுமையாகத் திறந்தபோது, அவளுடைய முகம் முற்றிலும் மாறி வேறுவிதமாகத் தெரிந்தது.
அவளுடைய முகம் விளக்கொளியில் மின்னுவதைப்போல தெரிந்தது.
"நேற்று என்னைப் பற்றி நீ என்ன நினைத்தாய், மிஸ்டர் வ்லாடிமிர்?” சற்று இடைவெளிவிட்டு அவள் கேட்டாள்:
"நீ என்னைப் பற்றி மோசமாக நினைத்தாய்...! அப்படித்தான் நினைக்கிறேன்.”
"நான்... இளவரசி... நான் எதையும் நினைக்கவில்லை. நான் எப்படி நினைக்க முடியும்?” குழப்பத்தில் பதில் சொன்னேன்.
"இங்கே பார்...” அவளே தொடர்ந்து சொன்னாள். "இதுவரை என்னைப் பற்றி உனக்கு எதுவுமே தெரியாது. நான் ஒரு வித்தியாசமான பெண். எனக்கு உண்மையைப் பேசினால்தான் பிடிக்கும். நான் இப்போதுதான் கேட்டேன்- உனக்கு பதினாறு வயது. எனக்கு இருபத்தொரு வயது நடந்து கொண்டிருக்கிறது. நான் உன்னைவிட எவ்வளவோ வயதுகள் அதிகமானவள் என்ற விஷயம் உனக்கு நன்கு தெரியும். அதனால் நீ எப்போதும் என்னிடம் உண்மையை மட்டுமே கூற வேண்டும். நான் உன்னிடம் எதைச் செய்யச் சொல்கிறேனோ, அதைத்தான் செய்ய வேண்டும்.” அவள் மேலும் சொன்னாள்: "என்னைப் பார்... நீ ஏன் என்னைப் பார்க்காமல் இருக்கிறாய்?”
நான் மேலும் குழப்பத்திற்கு ஆளானேன். எனினும், என் கண்களை அவளை நோக்கி உயர்த்தினேன். அவள் புன்னகைத்தாள். ஆனால், எப்போதும் இருக்கக்கூடிய புன்னகையாக அது இல்லை. ஒரு வகையான புரிந்துகொள்ளலுடன் அந்த புன்னகை இருந்தது. "என்னையே பார்...” தன்னுடைய குரலை சாதாரணமாக தாழ்த்திக் கொண்டு அவள் சொன்னாள்: "நான் அதை விரும்பாமல் இல்லை... உன் முகம் எனக்கு பிடித்திருக்கிறது. நாம் நண்பர்களாக இருக்க முடியும் என்று மனதில் தோன்றுகிறது. அதே நேரத்தில்- என்னை உனக்கு பிடித்திருக்கிறதா?” அவள் தொடர்ந்து கேட்டாள்.
"இளவரசி...” நான் ஆரம்பித்தேன்.
"முதல் விஷயம்- நீ என்னை ஜினைடா அலெக்ஸாண்ட்ரோவ்னா என்றுதான் அழைக்க வேண்டும். இரண்டாவது விஷயம்- குழந்தைகளுக்கு இது ஒரு மோசமான பழக்கம்.” (அவள் தான் சொன்னதைச் சரி செய்தாள்.) "இளம் வயதைச் சேர்ந்தவர்களுக்கு- அவர்கள் என்ன மனதில் நினைக்கிறார்களோ, அதை நேரடியாகச் சொல்லாமல் இருப்பது. வளர்ந்து விட்டவர்களிடம் அப்படிப்பட்ட பழக்கம் இருப்பதுதான் நல்லது... என்னை உனக்குப் பிடித்திருக்கிறது. இல்லையா?”
நான் மிகவும் சந்தோஷப்பட்டிருக்கிறேன் என்று மனதில் நினைத்து அவள் என்னிடம் மிகவும் இயல்பாகப் பேசினாள். நான் சிறிதளவு காயப்பட்டேன் என்பதென்னவோ உண்மை. ஒரு சிறு பையனுடன் பழகுவதைப்போல பழகக்கூடாது. காற்று எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு முக்கியத்துவம் தந்து என்னிடம் பேச வேண்டும் என்று அவளிடம் நான் கூற வேண்டுமென்று நினைத்தேன்.
நான் சொன்னேன். "நிச்சயமாக... உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஜினைடா அலெக்ஸாண்ட்ரோவ்னா. அதை மறைத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.”
அவள் வேகமாக தலையை ஆட்டினாள். "உனக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறாரா?” அவள் உடனடியாகக் கேட்டாள்.
"இல்லை... எனக்கு நீண்ட நாட்களாகவே ஆசிரியர் யாருமில்லை.”
நான் ஒரு பொய்யைச் சொன்னேன். என்னுடைய ஃப்ரெஞ்ச் மனிதரை விட்டுப் பிரிந்து சரியாக ஒரு மாதம்கூட ஆகவில்லை.
"அப்படியா? அப்படியென்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்... நீ ஓரளவுக்கு வளர்ந்தவனாக ஆகிவிட்டாயே!”
அவள் என்னுடைய விரல்களை மெதுவாகத் தட்டினாள். "உன்னுடைய கைகளை நேராக வைத்திரு.” தொடர்ந்து அவள் நூல் உருண்டையைச் சுற்றுவதில் தீவிரமாக மூழ்கினாள்.
அவள் கீழே பார்த்துக் கொண்டிருந்தபோது, இதுதான் சரியான சமயம் என்று நான் அவளையே பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தேன். முதலில்- சற்று தயங்கிக் கொண்டும், பின்னர் மேலும் மேலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டும். நேற்று மாலை நேரத்தில் பார்க்கும்போது இருந்ததைவிட, அவளுடைய முகம் மிகவும் அழகாக இருப்பதைப்போல எனக்குத் தோன்றியது. அவளுடைய முகத்திலிருக்கும் ஒவ்வொன்றுமே வெளிப்படையானதாகவும், புத்திசாலித்தனம் நிறைந்ததாகவும் இனிமையானதாகவும் இருந்தன. வெள்ளை நிற மெல்லிய திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்த சாளரத்தை நோக்கி தன்னுடைய முதுகைக் காட்டிக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். அந்த மெல்லிய வெள்ளை நிறத் திரைச்சீலை வழியாக உள்ளே நுழைந்து வந்த சூரிய வெளிச்சம், தன்னுடைய நேர்த்தியான ஒளியை அவளுடைய அடர்த்தியான தங்க நிறத் தலை முடிகளின்மீதும் அவளுடைய மென்மையான கழுத்தின்மீதும், அவளுடைய சரிந்திருந்த தோள்களின்மீதும், துன்பம் எதையும் அனுபவித்திராத மார்பின்மீதும் விழச்செய்து கொண்டிருந்தது. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் ஏற்கெனவே எனக்கு எந்த அளவிற்கு நெருக்கமானவளாகவும் வேண்டியவளாகவும் ஆகி விட்டிருக்கிறாள்! அவளை எனக்கு நீண்ட காலமாகவே நன்கு தெரியும் என்பதைப்போலவும், அவளைப் பற்றிய விஷயங்கள் எதுவுமே தெரியாமல், அவளை நான் பார்க்கும் நிமிடம் வரை அவளுடன் வாழாமலே இருந்திருக்கிறேன் என்பதைப்போலவும் எனக்குத் தோன்றியது. அவள் கருப்பு நிறத்திலிருந்த, பார்க்கவே சகிக்காத ஒரு ஆடையையும், மேலாடையையும் அணிந்திருந்தாள். அந்த ஆடையின் ஒவ்வொரு மடிப்பையும், மேலாடையையும் சந்தோஷம் பொங்க முத்தமிட வேண்டும்போல எனக்குத் தோன்றியது. அவளுடைய பாவாடைக்குள்ளிருந்து அவளுடைய சிறிய ஷூக்களின் நுனிப் பகுதிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. அந்த ஷூக்களைப் புகழ்வதற்கு, அவற்றுக்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு நிற்க வேண்டும் போல இருந்தது. "இந்த இடத்தில் அவளுக்கு முன்னால் நான் அமர்ந்திருக்கிறேன்..." நான் மனதில் நினைத்தேன்: "அவளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்... கடவுளே! என்ன நடக்கிறது!" நான் அமர்ந்திருந்த என்னுடைய நாற்காலியை விட்டு சந்தோஷத்தில் குதிக்க வேண்டும்போல எனக்குத் தோன்றியது. ஆனால், இனிப்பான மாமிசம் கொடுக்கப்பட்ட சிறு குழந்தையைப்போல என் கால்களை சற்று ஆட்டுவதோடு நான் நிறுத்திக் கொண்டேன்.
நீருக்குள் இருக்கும் ஒரு மீனைப்போல நான் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தேன். அந்த அறைக்குள்ளேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த இடத்தைவிட சிறிதும் நகர வேண்டும் என்று நான் ஆசைப்படவே இல்லை.
அவள் தன்னுடைய கண் இமைகளை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தினாள். அவளுடைய கண்கள் மீண்டுமொருமுறை பிரகாசமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தன. அவள் திரும்பவும் புன்னகைத்தாள்.
"நீ என்னை எப்படி பார்த்தாய்?” அவள் மெதுவாகச் சொன்னாள். அப்படிச் சொல்லிக் கொண்டே அவள் மிரட்டுவதைப்போல தன்னுடைய விரலை உயர்த்திக் காட்டினாள்.
என் முகமெல்லாம் சிவந்துவிட்டது. "அவள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கிறாள். எல்லாவற்றையும் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள். என் மனதிற்குள் இந்த எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் பார்த்த அவளால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?" நான் மனதிற்குள் கேட்டுக்கொண்டேன்.
அப்போது பக்கத்து அறையில் ஒரு சத்தம் கேட்டது- உறைவாளின் சத்தம்.
"ஜினா...” வரவேற்பறையில் இருந்தவாறு இளவரசி உரத்த குரலில் கத்தினாள். பைக்லோவ் ஸோரோவ் உனக்காக ஒரு பூனைக் குட்டியைக் கொண்டு வந்திருக்கிறான்!
"பூனைக்குட்டியா?” உரத்த குரலில் கேட்ட ஜினைடா தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு மிகவும் வேகமாக எழுந்தாள். அவள் நூல் பந்தை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு என் முழங்காலின்மீது போட்டுவிட்டு, அங்கிருந்து வேகமாக ஓடினாள்.
நானும் எழுந்தேன். நூல் பந்தை சாளரத்தின் அருகில் வைத்து விட்டு, வரவேற்பறைக்குச் சென்று தயங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். அறையின் மத்தியில், ஒரு அழகான பூனைக் குட்டி தன் கால்களை பரப்பிக்கொண்டு படுத்திருந்தது. ஜினைடா அந்த பூனைக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து அதன் சிறிய முகத்தைத் தூக்கிப் பார்த்தாள். வயதான இளவரசிக்கு அருகில், அங்கிருந்த இரண்டு சாளரங்களுக்கு இடையில் இருந்த ஒரு இடத்தை கிட்டத்தட்ட ஆக்கிரமித்துக் கொண்டு, சுருள் சுருளாக முடியை வைத்திருந்த, ரோஸ் நிறத்தில் முகத்தைக் கொண்டிருந்த, கூர்மையான கண்களைக் கொண்ட ஒரு குதிரைச் சவாரி செய்யும் இளைஞன் நின்றிருந்தான்.
"இந்தச் சின்ன பூனைக்குட்டி என்ன வினோதமாக இருக்கு!” ஜினைடா சொன்னாள்: "இதன் கண்கள் சாம்பல் நிறத்தில் இல்லை. ஆனால், பச்சை நிறத்தில் இருக்கின்றன. நன்றி, விக்டர் யெகோரிட்ச்! நீங்கள் எவ்வளவு அன்பான மனிதராக இருக்கிறீர்கள்!”
நேற்று சாயங்காலம் நான் பார்த்த இளைஞர்களில் ஒருவன்தான் அங்கு நின்று கொண்டிருக்கும் குதிரைக்காரன் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவன் புன்னகைத்தவாறு குனிந்தான். அப்போது அவன் வாளில் கட்டப்பட்டிருந்த சங்கிலி ஓசை உண்டாக்கியது.
"நீளமான காதுகளைக் கொண்ட ஒரு அழகான பூனைக்குட்டி வேண்டும் என்று நீங்கள் நேற்று கூறினீர்கள். அதனால் அப்படிப்பட்ட ஒரு பூனைக்குட்டியை நான் வாங்கினேன். உங்களின் வார்த்தையே சட்டம்...” அவன் மீண்டும் முதுகை வளைத்துக் கொண்டு நின்றான்.
அந்த பூனைக்குட்டி மெல்லிய ஒரு "மியாவ்" சத்தத்தை எழுப்பி விட்டு, தரையைப் பிராண்டிக் கொண்டிருந்தது.
"அது பசியாக இருக்கிறது!” ஜினைடா உரத்த குரலில் கத்தினாள்: "வோனிஃபேட்டி... சோனியா... கொஞ்சம் பால் கொண்டு வாங்க.”
மஞ்சள் நிறத்தில் இருந்த ஒரு பழைய கவுனையும் கழுத்தில் சாயம் போன ஒரு கைக்குட்டையும் அணிந்திருந்த ஒரு வேலைக்காரி ஒரு தட்டில் பாலுடன் வந்து, அதை பூனைக்குட்டிக்கு முன்னால் கொண்டு போய் வைத்தாள்.
அந்தப் பூனைக்குட்டி எழுந்து, கண்களை அகலத் திறந்து வைத்துக்கொண்டு, பாலைக் குடிக்க ஆரம்பித்தது.
"பூனைக்குட்டியின் சிறிய நாக்கு எந்த அளவிற்கு "பிங்க்" வண்ணத்தில் இருக்கின்றது!” தன்னுடைய தலையை கிட்டத்தட்ட தரையின் மீது வைத்துக்கொண்டு, பூனைக்குட்டியின் நாசிக்குக் கீழே பக்கவாட்டில் பார்த்துக் கொண்டே ஜினைடா சொன்னாள்.
தேவையான அளவிற்கு பாலைக் குடித்து முடித்து பூனைக்குட்டி அங்கிருந்து நகரும் எண்ணத்துடன் தன்னுடைய பாதங்களை எடுத்து வைத்தது. ஜினைடா எழுந்து, வேலைக்காரி இருந்த பக்கம் திரும்பி அலட்சியமான குரலில் சொன்னாள்: "இதை எடுத்துக் கொண்டு போ.”
"பூனைக்குட்டிக்காக- உங்களின் சிறிய கை...” அங்கு நின்றிருந்த பலமான உடலைக் கொண்டிருந்தவனும் இறுக்கமாக பொத்தான் இடப்பட்ட புதிய சீருடையில் இருந்தவனுமான குதிரைக்காரன் சொன்னான்.
"இரண்டு கைகளையும்...” ஜினைடா கூறிக்கொண்டே தன் கைகளை அவனிடம் தந்தாள். அவன் அவற்றை முத்தமிடும்போது, அவள் அவனுடைய தோளின் வழியாக என்னைப் பார்த்தாள்.
நான் அதே இடத்தில் எந்தவித அசைவும் இல்லாமல், சிரிப்பதா, இல்லாவிட்டால் வேறு ஏதாவது கூறுவதா அல்லது அமைதியாக இருப்பதா என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். அப்போது பாதையை நோக்கித் திறந்திருந்த கதவின் வழியாக எங்களுடைய வேலைக்காரன் ஃப்யோடரை நான் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்து சைகை செய்தான். நான் இயந்திரத்தனமாக அவனை நோக்கி நடந்தேன்.
"உனக்கு என்ன வேணும்?” நான் கேட்டேன்.
"உன் தாய் உன்னிடம் என்னை அனுப்பி வைத்தார்.” அவன் மிகவும் மெதுவான குரலில் சொன்னான்: "நீ பதிலுடன் திரும்பி வரவில்லை என்ற கோபத்துடன் அவர் இருக்கிறார்.”
"ஏன்? நான் இங்கு நீண்ட நேரம் இருந்து விட்டேனா?”
"ஒரு மணிக்கும் மேலாக...”
"ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவா!” நான் என்னை மறந்து அவன் சொன்னதையே திரும்பச் சொன்னேன். நான் வரவேற்பறைக்குள் சென்று தலையைக் குனிந்து, என் பாதங்களால் சத்தம் உண்டாக்கினேன்.
"நீ எங்கே புறப்பட்டு விட்டாய்?” இளம் இளவரசி அந்த குதிரைக்காரனுக்குப் பின்னால் இருந்தவாறு என்னைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
"நான் வீட்டிற்குச் சென்றாக வேண்டும். அதைக் கூறுவதற்காகத்தான் வந்தேன்.” தொடர்ந்து மூத்த இளவரசியிடம் நான் சொன்னேன்: "நீங்கள் இரண்டு மணியை அனுசரித்து எங்கள் வீட்டிற்கு வாங்க.”
"நீ அப்படிச் சொல்கிறாயா, என் இனிய மனிதனே.”
அவள் வேகமாக தன்னுடைய பொடி டப்பாவை எடுத்து, அதிலிருந்த பொடியை எடுத்துப் போட்டவாறு சத்தமாகக் கேட்டாள். நான் துள்ளிக் குதித்துவிட்டேன். "நீ அப்படியா சொல்கிறாய்!"
அவள் திரும்பவும் கேட்டாள். அப்போது அவள் கண்களில் கண்ணீர் வழிய தும்மிக் கொண்டிருந்தாள்.நான் மீண்டுமொரு முறை தலையைக் குனிந்து விட்டு, திரும்பி அறையை விட்டு வெளியேறினேன். பின்னால் இருப்பவர்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கும் எந்தவொரு இளைஞனிடமும் இருக்கக்கூடிய இனம் புரியாத ஒரு உணர்வில் அப்போது நானும் இருந்தேன்.
"நீ மீண்டும் வந்து எங்களைப் பார்ப்பாய் என்று நினைக்கிறேன். மிஸ்டர் வ்லாடிமிர்” இதைச் சொன்ன ஜினைடா மீண்டும் சிரித்தாள்.
"அவள் ஏன் எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்?" ஃப்யோடர் உடன் வர வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது நான் நினைத்தேன். அவன் என்னிடம் எதுவும் கூறவில்லை. ஆனால், என் பின்னால் வெறுப்பு கலந்த உணர்வுடன் வந்து கொண்டிருந்தான். என் தாய் என்னைத் திட்டினாள். அந்த இளவரசியின் வீட்டில் அந்த அளவிற்கு நீண்ட நேரம் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். நான் அவளுக்கு எந்த பதிலும் கூறவில்லை. நான் என்னுடைய அறைக்குச் சென்றேன். திடீரென்று நான் மிகுந்த கவலையில் மூழ்கிவிட்டேன். அழாமல் இருப்பதற்காக நான் மிகவும் கடுமையாக முயற்சி செய்தேன். அந்த குதிரைக்காரனை நினைத்து நான் பொறாமைப்பட்டேன்.
தான் வாக்களித்தபடி இளவரசி என் தாயை வந்து பார்த்தாள். என் அன்னையிடம் அவள் வெறுக்கத்தக்க ஒரு தாக்கத்தை உண்டாக்கிவிட்டிருந்தாள். அவர்களின் உரையாடலின்போது நான் அங்கு இல்லை. ஆனால், மேஜைக்கு அருகில் உட்கார்ந்திருந்தபோது, என் தாய் என் தந்தையிடம் இளவரசி ஜாஸிகின் தன்னிடம் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டாள் என்றும், தங்களுக்காக இளவரசன் செர்ஜியிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள் என்றும், முடிவே இல்லாத அளவிற்கு பல பிரச்சினைகளையும் அள்ளி அவள் தன் கையில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்றும் கூறிக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் தொல்லைகள் தரக்கூடியவளாகவும், பல சிக்கல்களிலும் மாட்டிக் கொண்டிருப்பவளாகவும் இருக்க வேண்டும் என்று என் தாய் கூறிக் கொண்டிருந்தாள். எனினும் நாளை அவளையும் அவளுடைய மகளையும், ("மகள்" என்ற சொல் காதில் விழுந்ததும், நான் என்னுடைய மூக்கை தட்டிற்குள் மூழ்க வைத்துக் கொண்டேன்) சாப்பிடுவதற்கு வரும்படி தான் கேட்டுக் கொண்டிருப்பதாக என் அன்னை கூறினாள். என்ன இருந்தாலும், அவள் பக்கத்து வீட்டுக்காரியாகவும், உயர்ந்த பெயரைக் கொண்டவளாகவும் இருக்கிறாளே என்றாள் என் தாய். அப்போது என் தந்தை, அந்தப் பெண் யார் என்பதை இப்போது தன்னால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடிகிறது என்றார். தன்னுடைய இளமைக் காலத்தின்போது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இளவரசன் ஜாஸிகினை தனக்கு நன்கு தெரியும் என்று அவர் கூறினார். அந்த இளவரசன் நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருந்தார். ஆனால், ஊதாரித்தனம் கொண்டவராகவும் முட்டாளாகவும் இருந்திருக்கிறார். நீண்டகாலம் பாரிஸில் வாழ்ந்த மனிதராக அவர் இருந்ததால், மக்கள் எல்லாரும் அவரை "பாரிஸ்காரர்" என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர் பெரிய பணக்காரராக இருந்திருக்கிறார். ஆனால், தன்னுடைய சொத்து முழுவதையும் சூதாடி அவர் அழித்திருக்கிறார். காரணம் எதுவுமே இல்லாமல்- சொல்லப் போனால், பணத்திற்காக இருக்க வேண்டும்- இதைவிட சிறந்த ஒரு பெண்ணையேகூட தேர்ந்தெடுத்திருக்கலாம்- அவர் ஒரு ஏஜெண்டின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். இந்த விஷயத்தை என் தந்தை ஒரு மெல்லிய புன்னகையுடன் கூறினார். அந்த மனிதர் திருமணம் செய்து கொண்ட பிறகு மனம்போல கற்பனைகளில் மிதந்து, தன்னை முற்றிலும் அழித்துக் கொண்டு விட்டிருக்கிறார்.”
"அவள் பணம் கடனாக வாங்காமல் இருந்தால்தான்...” என் தாய் கண்டுபிடித்துக் கூறுவதைப்போல கூறினாள்.
"அது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம்.” என் தந்தை உடனடியாகக் கூறினார்: "அவள் ஃப்ரெஞ்ச் மொழியைப் பேசுகிறாளா?”
"மிகவும் மோசமாக...”
"ம்.. அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. நீ அவளுடைய மகளையும் வரச்சொல்லியிருக்கிறாய் என்று நினைக்கிறேன். அவள் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்ட பெண் என்றும், நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டவள் என்றும் யாரோ என்னிடம் கூறினார்கள்.”
"அப்படியா? அப்படியென்றால் அவள், அவளுடைய அன்னையைப் பின்பற்றக் கூடாது.”
"அவளுடைய தந்தையைக் கூடத்தான்.” என் தந்தை சொன்னார்: "அவர் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட மனிதர்தான்...
ஆனால், முட்டாள்.”
என் தாய் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டே தீவிரமான சிந்தனையில் மூழ்கிவிட்டாள். அதற்குமேல் என் தந்தை எதுவும் பேசவில்லை. அந்த உரையாடலின்போது நான் ஒரு மாதிரியாக உணர்ந்து இப்படியும் அப்படியுமாக நெளிந்து கொண்டிருந்தேன்.
டின்னர் சாப்பிட்டு முடித்துவிட்டு நான் தோட்டத்திற்குள் சென்றேன். ஆனால், என்னுடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு செல்லவில்லை. ஜாஸிகினின் தோட்டத்திற்கு அருகில் போகக் கூடாது என்று எனக்குள் ஒரு உறுதியை முன்கூட்டியே எடுத்துக் கொண்டேன். ஆனால், தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்னை அந்தப் பக்கமாக இழுத்துச் சென்றுவிட்டது. அப்படிச் சென்றதும் வீணாகவில்லை. அங்கிருந்த வேலியின் அருகில்கூட போயிருக்க மாட்டேன். ஜினைடா அங்கு இருப்பதை நான் பார்த்தேன். இந்த முறை அவள் மட்டும் தனியே இருந்தாள். அவள் தன் கைகளில் ஒரு புத்தகத்தை வைத்திருந்தாள். அந்த புத்தகத்துடன் அவள் மெதுவாக பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் என்னைப் பார்க்கவில்லை.
நான் அவளை வெறுமனே நடக்கவிட்டேன். ஆனால், திடீரென்று நான் என்னுடைய மனதை மாற்றிக் கொண்டு இருமினேன்.
அவள் திரும்பிப் பார்த்தாள். ஆனால், நிற்கவில்லை. தன்னுடைய ஒரு கையால் அவளுடைய வட்ட வடிவத்திலிருந்த வைக்கோலாலான தொப்பியில் கட்டப்பட்டிருந்த நீலநிற ரிப்பனை பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டே என்னைப் பார்த்து மெதுவாக சிரித்தாள். தொடர்ந்து புத்தகத்தை நோக்கி தன் கண்களைத் திருப்பிக் கொண்டாள்.
நான் என்னுடைய தொப்பியைக் கழற்றினேன். ஒரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு, கனமான இதயத்துடன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றேன். "அதற்கான காரணம் கடவுளுக்குத்தான் தெரியும்!" என்று ஃப்ரெஞ்சில் நினைத்துக் கொண்டேன்.
எனக்குப் பின்னால் நன்கு தெரிந்த காலடிச் சத்தங்கள் கேட்டன. நான் சுற்றிலும் பார்த்தேன். என்னுடைய தந்தை தன்னுடைய
விளக்குடன் மிகவும் வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
"அவள்தான் இளம் இளவரசியா?” அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
"ஆமாம்...”
"உனக்கு அவளைத் தெரியுமா?”
"நான் இன்று காலையில் அவளை இளவரசியின் வீட்டில் வைத்து பார்த்தேன்.”
என் தந்தை நின்றார். பிறகு திரும்பி நடக்க ஆரம்பித்தார். ஜினைடாவிற்கு அருகில் சென்றபோது, அவர் மரியாதையுடன் குனிந்து நின்றார். அவளும் அவருக்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். தன்னுடைய முகத்தில் ஒருவித ஆச்சரியம் பரவியிருக்க, அவள் புத்தகத்தை கீழே போட்டாள். அவள் அவரை எப்படி பார்த்தாள் என்பதை நான் பார்த்தேன். என் தந்தை பொதுவாகவே தாறுமாறாக ஆடைகளை அணிவார். அவை மிகவும் எளிமையாகவும், அவருக்கென்று இருக்கக் கூடிய ஒரு தனி பாணியிலும் இருக்கும். ஆனால், அவருடைய தோற்றம் மிகவும் அழகு என்று கூறக்கூடிய அளவிற்கு எனக்கு எப்போதும் தோன்றியதில்லை.
அவருடைய சாம்பல் நிற தொப்பி அவருடைய சுருள் முடிகளில் எந்தச் சமயத்திலும் ஒழுங்காக இருப்பதாக எனக்கு தோன்றியதில்லை. அவை முன்பு இருந்ததைவிட அடர்த்தி குறைந்து விட்டிருந்தன.
நான் என்னுடைய பார்வையை ஜினைடாவை நோக்கித் திருப்பினேன். ஆனால், அவள் என்னை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. அவள் மீண்டும் தன்னுடைய புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அன்று சாயங்காலம் முழுவதும் மற்றும் மறுநாளும் நான் மிகவும் விரக்தி கலந்த கவலையுடன் என்னுடைய பொழுதைச் செலவிட்டுக் கொண்டிருந்தேன். நான் வேலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ததை நினைத்துப் பார்க்கிறேன். கெய்டனோவ் எழுதிய நூலை கையில் எடுத்தேன். ஆனால், கொட்டை கொட்டையான வரிகளையும் பக்கங்களையும் கொண்டிருந்த புகழ்பெற்ற அந்த பாடநூல் என்னுடைய கண்களுக்கு முன்னால் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் கடந்து சென்று கொண்டிருந்தது. "ஜுலியஸ் சீஸர் போர்க்குணமும் தைரியமும் கொண்ட தனித்துவ மனிதர்" என்ற சொற்களையே திரும்பத் திரும்ப பத்து முறை வாசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு எந்த விஷயமும் புரியவில்லை. புத்தகத்தை ஒரு மூலையில் தூக்கி வீசி எறிந்துவிட்டேன். சாப்பிடும் நேரத்திற்கு முன்னால் என்னை மீண்டுமொருமுறை அலங்கரித்துக் கொண்டேன். நான் மீண்டும் வால் தொங்கிக்கொண்டிருக்கும் கோட்டையும் கழுத்துப் பட்டையையும் எடுத்து அணிந்தேன்.
"எதற்காக இவற்றை நீ அணிகிறாய்?” என் தாய் கேட்டாள்:
"நீ இன்னும் ஒரு மாணவன் அல்ல. நீ தேர்வில் வெற்றி பெறுவாயா என்ற விஷயம் கடவுளுக்குத்தான் தெரியும். ரொம்ப நாட்களாகவே உனக்கு புதிய மேலாடை எதுவும் கிடையாது. நீ அதை விட்டெறிந்திருக்கக் கூடாது.”
"விருந்தினர்கள் யாராவது வருவார்கள்.” நான் எந்தவித எண்ணமும் இல்லாமல் முணுமுணுத்தேன்.
"என்ன, முட்டாள்தனமாக பேசுகிறாய்! அருமையான விருந்தாளிகள் இருக்கவே இருக்கிறார்கள்!”
நான் உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். மேலே அணியும் ஜாக்கெட்டிற்காக நான் என்னுடைய வால் பகுதி கொண்ட கோட்டை மாற்றினேன். ஆனால், நான் என்னுடைய கழுத்துப் பட்டையை அகற்றவில்லை. சாப்பிடும் நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் இளவரசியும் அவளுடைய தாயும் அங்கு வந்தார்கள். நான் ஏற்கெனவே பார்த்திருந்த பச்சை நிற ஆடையுடன், ஒரு மஞ்சள் வண்ண சால்வையையும், நெருப்புக் கொழுந்து நிறத்திலிருந்த ரிப்பன்களைக் கொண்ட பழைய பாணியில் அமைந்த ஒரு தொப்பியையும் கிழவி அணிந்திருந்தாள். வந்த நிமிடத்திலேயே அவள் தன்னுடைய பணக் கஷ்டங்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டாள். பெருமூச்சு விட்டவாறு அவள் தன்னுடைய வறுமையைப் பற்றி பேசி, அதற்கு ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்டாள். ஆனால், அவள் தன்னுடைய வீட்டில் இருப்பதைப்போலவே மிகவும் இயல்பாக இருந்தாள். அவள் மூக்குப் பொடியை மிகவும் சத்தமாக எடுத்து போட்டாள். எப்போதும் செய்வதைப்போல தான் அமர்ந்திருந்த நாற்காலியில் தன்னுடைய விருப்பப்படி இப்படியும் அப்படியுமாக நகர்ந்து கொண்டேயிருந்தாள். தான் ஒரு இளவரசி என்ற நினைப்பு அவளுடைய மனதில் சிறிதளவு கூட இல்லை.
அதற்கு நேர்மாறாகக் காணப்பட்டாள் ஜினைடா. அவள் மிகவும் இறுக்கமாக இருந்தாள்.
அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் மிகவும் விசித்திரமாக இருந்தன. ஒவ்வொரு அசைவிலும் அவள் தன்னை ஒரு இளவரசியாகவே காட்டிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய முகத்தில் ஒரு உயிரற்ற- அசைவற்ற தன்மையும் கர்வமும் வெளிப்பட்டது. நான் அதைக் கண்டுபிடிக்காமல் இருந்திருக்க வேண்டும். அவளுடைய புன்னகையையோ பார்வைகளையோ தெரிந்திராத ஒருவனாக இருக்க வேண்டும். இந்த புதிய சம்பவத்தில் கூட அவளுடைய தனித்துவத்தைப் பற்றி நான் மனதில் எண்ணிப் பார்த்தேன். அவள் வெளிர் நீலநிற மலர்கள் போடப்பட்ட ஒரு மெல்லிய ஆடையை அணிந்திருந்தாள். அவளுடைய கூந்தல் நீளமாக சுருண்டு தொங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய கன்னம் ஆங்கில முறைப்படி இருந்தது. அப்போதைய நடவடிக்கைகள் அவளுடைய முகத்திலிருந்த உயிரற்ற உணர்ச்சிகளுக்கு ஏற்றபடி இருந்தன. சாப்பிடும்போது என் தந்தை அவளுக்கு அருகில் உட்கார்ந்தார். தனக்கே உரிய விருந்தோம்பல் வரவேற்புகளுடன் அவர் அவளை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவளும் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், ஆச்சரியப்படும் வகையில் அந்தச் செயல் மிகுந்த பணிவு கொண்டதாக இருந்தது. அவர்களுடைய உரையாடல் ஃப்ரெஞ்ச் மொழியில் நடந்து கொண்டிருந்தது. ஜினைடாவின் மிக அருமையான உச்சரிப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். நாங்கள் மேஜையில் உட்கார்ந்திருந்தபோது, நான் முன்பு கூறியதைப்போல, கிழவி எந்தவித ஆரவாரமும் உண்டாக்கவில்லை. அவள் நன்றாக சாப்பிட்டாள். உணவு வகைகளை வாய்விட்டுப் புகழ்ந்தாள். அவளுடைய செயல்களால் என் தாய் மிகவும் களைத்துப்போய் விட்டதைப்போல தோன்றியது. அவளுக்கு விருப்பமே இல்லாததைப்போல என் அன்னை பதில் கூறிக் கொண்டிருந்தாள். என் தந்தை அவ்வப்போது மெதுவாக கண்ணயர்ந்து கொண்டிருந்தார். என் தாய்க்கு ஜினைடாவைப் பிடிக்கவே இல்லை. "எப்போதும் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கும் பெண்...” மறுநாள் அவள் சொன்னாள். "நீயே நினைத்துப் பார். எப்போது பார்த்தாலும் கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதற்கு என்ன இருக்கிறது?”
"நீ எந்த அழகான ஃப்ரெஞ்ச் பெண்ணையும் பார்த்ததில்லை என்பது தெளிவாக தெரிகிறது...” என் தந்தை என் தாயின் செயல்களை கவனித்துவிட்டு கூறினார்.
"கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்... நான் பார்த்ததில்லை!”
"உண்மையாகவே கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். பிறகு அவர்களைப் பற்றி எப்படி நீ ஒரு தீர்மானத்திற்கு வந்தாய்?”
என்னைப் பொறுத்த வரையில் ஜினைடா எந்த விஷயத்திலும் அக்கறை காட்டிக்கொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்ததும், இளவரசி புறப்படுவதற்காக எழுந்தாள்.
"உங்களுடைய அன்பிற்கு என்னுடைய நன்றி.” மரியா நிக்கோ லேவ்னா... ப்யோர் வாசிக...” அவள் ராகத்துடன் ஒரு பாடலைப் பாடுவதைப் போல என் தாயிடமும், தந்தையிடமும் சொன்னாள்: "இதற்கு பரிகாரமாக என்னால் எதுவும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட நாட்கள் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் முடிந்துவிட்டன. எதுவுமே இல்லாதவளுக்கு கிடைத்திருக்கும் ஒரு கௌரவம் இது.”
என் தந்தை அவளுக்கு முன்னால் மரியாதையுடன் முதுகை வளைத்துக் கொண்டு நின்று விட்டு, கூடத்தின் கதவை நோக்கி அவளை அழைத்துச் சென்றார். என்னுடைய சிறிய மேலாடையுடன் அங்கு நின்று கொண்டிருந்த நான் மரண தண்டனையை அனுபவிக்கப் போகும் ஒரு மனிதனைப்போல தரையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். ஜினைடா என்னிடம் நடந்து கொண்ட முறை என்னை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. என்னை ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால், என்னைக் கடந்து சென்றபோது, அவளுடைய வழக்கமான வெளிப்பாடு கண்களில் தெரிய, அவள் வேகமாக முணுமுணுத்தாள்: "எட்டு மணிக்கு எங்களை வந்து பார்... என்ன, கேட்கிறதா? கட்டாயம் வரணும்...” நான் வெறுமனே என் கைகளை மேல்நோக்கி உயர்த்தினேன். ஆனால், தலையில் ஒரு வெள்ளைநிற கைக்குட்டை அசைந்து கொண்டிருக்க, அவள் அதற்குள் அங்கிருந்து போய்விட்டிருந்தாள்.
சரியாக எட்டு மணிக்கு, வால் வைத்த கோட்டுடனும், என் தலையில் உயரமான மேடு ஒன்று இருக்க வாரப்பட்ட தலைமுடியுடனும் நான் இளவரசி வசிக்கும் அந்தக் கட்டடத்திற்குச் செல்லும் பாதைக்குள் நுழைந்தேன். அந்த பழைய வேலைக்காரன் ஓரக் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டே விருப்பமே இல்லாமல் தான் அமர்ந்திருந்த பெஞ்சை விட்டு எழுந்தான். வரவேற்பறைக்குள்ளிருந்து சந்தோஷமான குரல்கள் கேட்டன. நான் கதவைத் திறந்ததும், ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன். அறையின் நடுவில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் இளம் இளவரசி ஏறி நின்று கொண்டிருந்தாள். அவள் தனக்கு முன்னால் ஒரு ஆணின் தொப்பியைக் கையில் வைத்திருந்தாள். நாற்காலியைச் சுற்றி அரை டஜன் ஆண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்தத் தொப்பிக்குள் தங்களின் கைகளை நுழைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவளோ அந்தத் தொப்பியை அவர்களின் தலைகளுக்கு மேலே உயர்த்திக் காட்டிக்கொண்டே, மிகவும் வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும், அவள் உரத்த குரலில் கத்தினாள்: "நில்லுங்க... நில்லுங்க... இன்னொரு விருந்தாளி. அவனுக்கும் ஒரு டிக்கெட் வேண்டும்.” நாற்காலியிலிருந்து மெதுவாக கீழே குதித்தவாறு அவள் என்னுடைய கோட்டின் கீழ்ப்பகுதியைப் பிடித்து இழுத்தாள். "வா...” அவள் சொன்னாள். "நீ ஏன் வெறுமனே நின்று கொண்டிருக்கிறாய்? மிஸ்டர், நான் உன்னை இவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்... இது... மிஸ்டர் வ்லாடிமிர்... எங்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரின் மகன். அவள் என்னைக் குறிப்பிட்டு விட்டு பிறகு தன்னுடைய விருந்தாளிகளின் பெயர்களைக் கூற ஆரம்பித்தாள்: "கவுண்ட் மாலேவ்ஸ்கி, டாக்டர் லூஷின், கவிஞர் மெய்டனோவ், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நிர்மாட்ஸ்கி, குதிரை வீரர் பைலோவ்ஸொரோவ்.. இவரை நீ ஏற்கெனவே பார்த்திருக்கிறாய்... நான் நினைக்கிறேன்- நீங்கள் நல்ல நண்பர்களாக இருக்கலாம்.”
எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அந்த குழப்பத்தில் நான் யாருக்கும் தலை வணங்கவில்லை. தோட்டத்தில் ஈவு இரக்கமே இல்லாமல் என்னை அவமானப்படுத்திய அந்த கறுப்பு மனிதரின் பெயர் டாக்டர் லூஷின் என்பதைத் தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் எனக்கு யாரென்று தெரியாதவர்கள்.
"கவுண்ட்...” ஜினைடா தொடர்ந்து சொன்னாள்: "மிஸ்டர் வ்லாடிமிருக்கு ஒரு டிக்கெட் எழுது.”
"அது சரியாக இருக்காது...” லேசான போலந்து மொழியில் நல்ல அழகான தோற்றத்தைக் கொண்ட, நாகரீக உடையணிந்த, கதைகள் பேசும் ப்ரவுண் நிறத்திலிருந்த விழிகளைக் கொண்ட, சிறிய ஒல்லியான வெள்ளை நிற நாசியைக் கொண்ட, சிறிய வாய்க்குமேலே அழகாக வெட்டப்பட்ட சிறிய மீசையைக் கொண்ட மனிதன் சொன்னான்: "இந்த ஆள் நம்முடன் இதற்கு முன்பு சேர்ந்து விளையாடியதே இல்லை.”
"இது சரியில்லை...” பைலோவ்ஸொரோவ்வும் ஒய்வு பெற்ற ராணுவ வீரர் என்று கூறப்பட்ட மனிதரும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நாற்பது வயது கொண்ட, வட்டமான தோள்களைக் கொண்ட, பருமனான கால்களைக் கொண்ட, பொத்தான்கள் இடாத ராணுவ கோட் அணிந்த மனிதராக இருந்தார் அந்த ராணுவ வீரர்.
"நான் சொல்கிறேன்... இவருக்கு ஒரு டிக்கெட் எழுதுங்கள்.”
அந்த இளம் இளவரசி திரும்பவும் கூறினாள்: "ஏன் இப்படியொரு பிடிவாதம்? மிஸ்டர் வ்லாடிமிர் நம்முடன் முதல் முறையாக இருக்கிறார். இவருக்காக இதுவரை எந்தவொரு சட்டதிட்டங்களும் இல்லை. இவருக்காக முணுமுணுப்பதில் பிரயோஜனமே இல்லை. எழுதுங்க... நான் விரும்புகிறேன்.”
அதற்கென இருந்த ஆள் தன்னுடைய தோள்களைக் குலுக்கினான். அதே நேரத்தில், பணிவுடன் தலையைக் குனிந்துகொண்டே தன்னுடைய வெள்ளையான, மோதிரம் அணிந்திருந்த விரல்களில் பேனாவை எடுத்து, ஒரு தாளைக் கிழித்து அதில் எழுதினான்.
"மிஸ்டர் வ்லாடிமிரிடம் நாம் எதற்காக இங்கு கூடியிருக்கிறோம் என்பதையாவது நாம் விளக்கிக் கூறுவோம்.” லூஷின் ஒரு கேலி கலந்த குரலில் கூற ஆரம்பித்தார்: "இல்லாவிட்டால் அவர் முழுவதையும் இழந்துவிடுவார். இளைஞனே... நாங்கள் அதிர்ஷ்ட சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதை நீ பார்க்கிறாய் அல்லவா? இளவரசி ஒரு சீட்டை தேர்வு செய்திருப்பார். அந்த அதிர்ஷ்ட சீட்டு யாருக்கு வருகிறதோ, அந்த நபர் இளவரசியின் கையில் முத்தம் தரும் தகுதியைப் பெறுகிறார். நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் அல்லவா?”
நான் வெறுமனே அந்த மனிதரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரே குழப்பத்துடன் அதே இடத்தில் தொடர்ந்து நின்று கொண்டிருந்தேன். அப்போது இளவரசி அந்த நாற்காலியில் இருந்தவாறு மீண்டும் குதித்துக் கொண்டே திரும்பவும் அந்த தொப்பியை ஆட்ட ஆரம்பித்தாள். அவர்கள் எல்லாரும் அவளைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்குப் பின்னால் போய் நின்றேன்.
"மெய்டனோவ்...” அங்கு ஒல்லியான முகத்துடனும் சற்று மங்கலான பார்வை கொண்ட கண்களுடனும் மிகவும் நீளமாக வளர்ந்திருந்த கருப்பு முடியுடனும் நின்று கொண்டிருந்த ஒரு உயரமான மனிதரிடம் சொன்னாள்: "ஒரு கவிஞர் என்ற வகையில், நீங்கள் மிகவும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். உங்களுடைய எண்ணை மிஸ்டர் வ்லாடிமிருக்கு கொடுங்க...
அதன்மூலம் ஒன்றுக்கு பதிலாக, அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும்.”
ஆனால், மெய்டனோவ் அதற்கு மறுப்பு தெரிவிப்பதைப்போல தலையை ஆட்டியவாறு, தலையில் அடித்துக் கொண்டார். எல்லாரும் கையை நுழைத்த பிறகு, நான் என் கையை தொப்பிக்குள் நுழைத்து, எனக்குக் கிடைத்த சீட்டைப் பிரித்தேன். சொர்க்கங்கள்! அந்தச் சீட்டில் "முத்தம்" என்று எழுதப்பட்டிருப்பதை வாசித்தபோது என்னுடைய நிலை எப்படி இருந்திருக்கும்?
"முத்தம்!” சத்தம் போட்டு என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.
"அப்படியா? இவர் வெற்றி பெற்றுவிட்டார்.” இளவரசி வேகமாகக் கூறினாள்: "எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?” அவள் நாற்காலியை விட்டுக் கீழே இறங்கி வந்து என்னை அந்த அளவிற்கு பிரகாசமான, இனிய பார்வையுடன் பார்த்தாள். அதைப் பார்த்து என் இதயம் துள்ளிக் குதித்தது.
"உனக்கு சந்தோஷமா?” அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.
"எனக்கா?” நான் தயங்கினேன்.
"உன் டிக்கெட்டை எனக்கு விற்று விடு.” பைலோவ்ஸொரோவ் திடீரென்று என் காதில் வந்து முணுமுணுத்தான்: "நான் உனக்கு நூறு ரூபிள்கள் தருகிறேன்.”
நான் ஒரு கேவலமான பார்வையை அந்த குதிரைக்காரனுக்கு பதிலாக தந்தேன். அதைப் பார்த்து ஜினைடா தன்னுடைய கைகளைத் தட்டினாள். அப்போது லூஷின் உரத்த குரலில் கத்தினார்: "இவன் ஒரு நல்ல பையன்.”
"எனினும், இந்த நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் என்ற முறையில்...” அவர் கூறிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்: "எல்லாவித சட்டங்களும் முறைப்படி பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டியது என்னுடைய கடமை. மிஸ்டர் வ்லாடிமிர், முழங்கால் போட்டு அமர்ந்து, ஒரு காலை மட்டும் வைத்து நடந்து செல்லுங்கள். இதுதான் நம்முடைய சட்டம்.”
ஜினைடா எனக்கு முன்னால் நின்றிருந்தாள். என்னை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவள் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து வைத்துக் கொண்டிருந்தாள். அவள் பெருமையுடன் தன்னுடைய கையை என்னை நோக்கி நீட்டினாள். ஒரு பனிப்படலம் என் கண்களுக்கு முன்னால் கடந்து சென்றது. நான் என்னுடைய ஒரு காலால் நடந்து சென்று, இரண்டு கால்களாலும் தள்ளாடிக் கொண்டே, என்னுடைய உதடுகளை ஜினைடாவின் விரல்களில் கொண்டு போய் வைத்தபோது, நான் மோசமான முறையில் அவளுடைய நகத்தின் நுனியைச் சற்று உரசிவிட்டேன்.
"மிகவும் அருமை!” உரத்த குரலில் சத்தமிட்ட லூஷின் நான் எழுந்திருப்பதற்கு உதவினார்.
அந்த பொழுதுபோக்கான விளையாட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அவள் பல வகைப்பட்ட- மிகவும் அருமை என்று கூறக்கூடிய அம்சங்களையும் கண்டுபிடித்து வைத்திருந்தாள். எல்லா விஷயங்களுக்கும் மத்தியில் ஒரு "சிலை"யாக நிற்பது என்பதையும் தேர்வு செய்து வைத்திருந்தாள். அதற்காக உயரமாக இருந்த நிர்மாட்ஸ்கியைத் தேர்வு செய்து, அவரை ஒரு வளைவைப்போல அவருடைய தலையை அந்த மனிதரின் நெஞ்சின்மீது படும்படி வளைந்து இருக்கும்படி சொன்னாள். சிறிது நேரத்திற்கு அங்கு எழுந்த சிரிப்புச் சத்தம் நிற்கவேயில்லை. எனக்கோ, மதிப்பான ஒரு வீட்டில் மிகவும் அமைதியாக வளர்க்கப்பட்ட ஒரு பையனுக்கு, இந்தச் சத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும், இந்த கட்டுப்பாடற்ற ஆரவாரங்களும், இதற்கு முன்பு அறிமுகமே இல்லாத மனிதர்களுடன் கொண்டிருக்கும் உறவுகளும் மயக்கத்தை உண்டாக்குவதைப்போல இருந்தன. ஒயின் குடித்ததைப்போல என் தலை சுற்றியது. நான் மற்றவர்களைவிட அதிகமாக சிரித்துக்கொண்டும் சத்தம் போட்டு பேசிக் கொண்டும் இருந்தேன். அப்படி நான் நடந்து கொண்ட செயல்- வியாபார விஷயமாக ஏதோ விவாதிப்பதற்காக ட்வெர்ஸ்கி கேட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த யாரோ ஒரு க்ளார்க்குடன் பக்கத்து அறையில் அமர்ந்திருந்த மூத்த இளவரசி கட்டாயம் அறைக்குள் வந்து என்னை பார்க்கும்படி செய்தது. ஆனால், நான் மிகவும் சந்தோஷத்தில் இருந்தேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. நான் யாரின் கோபத்தைப் பற்றியும் ஆச்சரியமான பார்வையைப் பற்றியும் சிறிதளவுகூட அக்கறை செலுத்தவில்லை. ஜினைடா தொடர்ந்து எனக்கு ஒரு முக்கியத்துவத்தைத் தந்து கொண்டிருந்தாள். அவள் என்னை தனக்கு அருகிலேயே இருக்கும்படி செய்தாள்.
ஒரு விளையாட்டின்போது, நான் அவளுக்கு அருகில் உட்கார வேண்டியிருந்தது. நாங்கள் இருவரும் ஒரு சில்க் கைக்குட்டையால் மூடப்பட்டிருந்தோம்.
"என்னுடைய ரகசிய"த்தை நான் அவளிடம் கூற வேண்டும். வெப்பம் நிறைந்த, பாதி விஷயங்கள் மட்டுமே தெரிந்த, நறுமணம் பரவிவிட்டிருந்த இருட்டில் எங்களுடைய இரு தலைகளும் மிகவும் அருகருகே இருந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த இருட்டில் அவளுடைய கண்கள் மிகவும் அருகில் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தன. அவளுடைய திறந்த உதடுகளின் வழியாக வெப்பமான மூச்சு வெளியே வந்து கொண்டிருந்தது. அவளுடைய பற்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய கூந்தலின் நுனிப்பகுதி என்னை கிச்சுக்சிச்சு மூட்டி என்னை நெருப்பின்மீது அமர்ந்திருக்கும் நிலைக்குள் தள்ளிவிட்டது. நான் மிகவும் அமைதியாக இருந்தேன். அவள் அழகும், உள்ளர்த்தமும் பொதிந்த ஒரு புன்னகையை வெளியிட்டாள். இறுதியில் என்னிடம் முணுமுணுத்தாள்: "நல்லது... இது என்ன?” ஆனால், நான் கூச்சப்பட்டு சிரிக்க மட்டும் செய்தேன். அந்தப் பக்கமாக திரும்பிக் கொண்டு என் மூச்சை சிரமப்பட்டு அடக்க முயற்சித்தேன். நாங்கள் அந்த சீட்டு விளையாட்டில் மிகவும் களைத்துப் போய் விட்டோம். நாங்கள் நூலைக் கொண்டு ஒரு விளையாட்டை விளையாட ஆரம்பித்தோம். என் கடவுளே! நான் முழுமையான ஈடுபாட்டைச் செலுத்தாமல் இருக்கும்போது, எனக்கு எப்படிப்பட்ட அனுபவங்களெல்லாம் உண்டாயின! என் விரல்களில் அவள் ஆவேசமான, பலமான அடியைத் தந்தாள். அதற்குப் பிறகு நான் ஞாபக மறதியில் இருந்துவிட்டதைப்போல நடித்தேன். அதற்காக அவள் என்னைப் பார்த்து கிண்டல் பண்ணினாள். நான் அவளை நோக்கி கையை நீட்டியபோது, அவள் அதைத் தொடாமல் இருந்தாள். நாங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அவற்றையெல்லாம் அன்று மாலையில் செய்தோம். நாங்கள் பியானோ இசைத்தோம்.... பாடினோம். நடனமாடினோம்... நாடோடிகளாக நடித்தோம். நிர்மாட்ஸ்கி ஒரு கரடியாக ஆடைகள் அணிவிக்கப்பட்டு, உப்பு நீரைப் பருக வைக்கப்பட்டார். கவுண்ட் மாலேவ்ஸ்கி எங்களுக்கு சீட்டுகளை வைத்து பல வகையான தந்திர விஷயங்களைச் செய்து காட்டினார். சீட்டுகள் அனைத்தையும் கலைத்துப் போட்டு, விரல் நுனியில் பல சாகசங்களையும் செய்து காட்டினார். லூஷின் அவரை வாழ்த்துவதற்காக பெருமைப்படுவதாகக் கூறினார். மெய்டனோவ் தன்னுடைய "தி மேன்ஸ்லேயர்" என்ற கவிதையிலிருந்து சில பகுதிகளைப் பாடிக் காட்டினார். (அந்த காலகட்டத்தில் ரொமான்டிசிஸம் என்ற விஷயம் உச்சத்தில் இருந்தது). அந்த கவிதை நூல் கருப்பு நிற மேலட்டையில் ரத்த சிவப்பு நிற எழுத்துக்களில் தலைப்பு எழுதப்பட்டு இருந்தது. அவர்கள் க்ளார்க்கின் மடியில் இருந்த தொப்பியைத் திருடி, அதற்கு வெகுமதியாக அவரை ஒரு காஸாக் நடனம் ஆடவைத்தார்கள். வயதான வோனிஃபேட்டிக்கு ஒரு பெண்கள் அணியக் கூடிய தொப்பியை அணிவித்தார்கள். இளம் இளவரசி ஒரு ஆண்களின் தொப்பியை அணிந்திருந்தாள்... நாங்கள் செய்த எல்லா விஷயங்களையும் நான் ரசித்தேன் என்று கூறுவதற்கில்லை. பைலோவ்ஸொரோவ்தான் பின்னால் இருந்து கொண்டு உரத்த குரலில் கத்திக் கொண்டும் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தான். சில நேரங்களில் அவனுடைய கண்கள் ரத்தச் சிவப்பில் காட்சியளித்தன. அவன் எல்லாவற்றையும் கோபத்துடன் பார்த்தான். ஒவ்வொரு நிமிடமும் அவன் எங்கே எங்கள் எல்லார்மீது பாய்ந்து விடுவானோ என்பதைப்போல தோன்றியது. எங்களை நாலா பக்கங்களிலும் அவன் ஒரு வேளை சிதறியோடும்படி செய்து விடுவானோ என்பது மாதிரிகூட தோன்றியது. ஆனால், இளம் இளவரசி அவனைக் கூர்ந்து பார்த்தாள். அவனிடம் சென்று தன் கையைக் குலுக்கினாள். தொடர்ந்து அவன் தான் இருந்த மூலையில் போய் உட்கார்ந்தான்.
இறுதியில், நாங்கள் மிகவும் சோர்வடைந்து போய்விட்டோம். சொல்லப்போனால்- எதையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக சொன்ன வயதான இளவரசியை எந்தவித சத்தமும் சிறிதளவுகூட பாதிக்கவில்லை. அவள்கூட இறுதியில் சோர்வடைந்து விட்டாள். சமாதானமான சூழ்நிலையும், அமைதியும் உண்டானால் நன்றாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். இரவு பன்னிரண்டு மணிக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. அங்கு பரிமாறப்பட்ட உயர்ந்த வெண்ணெயும், குளிர்ச்சியான உணவுப் பொருட்களும் இதற்கு முன்பு நான் எப்போதும் ருசித்துச் சாப்பிட்டதைவிட மிகவும் சுவையாக இருந்தன. ஒரே ஒரு புட்டி ஒயின்தான் அங்கு இருந்தது. ஆனால், அது மிகவும் வினோதமான ஒன்றாக இருந்தது. ஒரு கனமான கழுத்துப் பகுதியைக் கொண்ட கருப்பு நிற புட்டியில் இருந்த ஒயின் பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. எனினும், யாரும் அதைப் பருகவில்லை. மிகவும் களைத்துப் போய், சந்தோஷத்தால் உண்டான மயக்கத்துடன் நான் அந்த கட்டடத்தை விட்டு வெளியேறினேன். அங்கிருந்து புறப்படும்போது, ஜினைடா என் கையை வெப்பம் உண்டாகும் அளவிற்கு அழுத்தினாள். தொடர்ந்து உள்ளர்த்தம் தொனிக்க மீண்டும் புன்னகைத்தாள்.
இரவு நேர காற்று மிகவும் கனமானதாகவும் குளிர்ச்சி நிறைந்ததாகவும் என்னுடைய வெப்பமான முகத்தில் வந்து மோதிக் கொண்டிருந்தது. ஒரு சூறாவளி வந்து சேர்வதைப்போல தோன்றியது. கருத்த சூறாவளி மேகங்கள் வளர்ந்து வானத்தில் திரண்டு கொண்டிருந்தன. அவற்றின் புகையையொத்த விளிம்புகள் நன்கு தெரியும்படி மாறிக் கொண்டேயிருந்தன. பலமான காற்று இருண்டு போய் காணப்பட்ட மரங்களில் தொடர்ந்து மோதி அதிரச் செய்து கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில், வானத்தின் விளிம்பில், மிகுந்த கோபத்துடன் இடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
நான் பின்பக்கமிருந்த படிகளின் வழியாக என்னுடைய அறைக்கு வந்தேன். என்னுடைய வயதான பணியாள் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். நான் அவனைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. அவன் கண் விழித்து, என்னைப் பார்த்தான். என் தாய் மீண்டும் என்மீது மிகுந்த கோபத்துடன் இருப்பதாக அவன் சொன்னான். என்னை திரும்பவும் ஒருமுறை அழைத்து வரும்படி அவள் அவனை அனுப்புவதாக இருந்ததாகவும், என் தந்தை அதைத் தடுத்துவிட்டதாகவும் அவன் சொன்னான். (நான் என் அன்னையிடம் "இரவு வணக்கம்" கூறாமல் படுக்கைக்குப் படுக்கச் சென்றதே இல்லை.
அவளுடைய ஆசீர்வாதத்திற்காக நான் அப்படிப் போய் நிற்பேன். ஆனால், அந்த காரியத்தை இப்போது செய்ய முடியாது.)
என்னை கவனித்துக் கொள்ளும் பணியாளிடம் நான் ஆடைகளைக் கழற்றிவிட்டு, படுக்கையில் போய் சாயப் போகிறேன் என்று கூறினேன். நான் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தேன். ஆனால், நான் ஆடைகளைக் கழற்றவில்லை. படுக்கைக்கும் செல்லவில்லை.
நான் ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நான் ஏதோ மந்திரத்தால் கட்டுண்டவனைப்போல அந்த நாற்காலியிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தேன். இதற்கு முன்பு நான் அனுபவித்திராத ஒரு புதிய, இனிய உணர்வை நான் அடைந்தேன். நான் அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தேன். நான் மிகவும் அரிதாகவே சுற்றிலும் பார்த்தேன்.
சிறிதும் நகராமலே, மெதுவாக மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தேன். ஏதோ நடைபெற்ற சம்பவங்களை மனதில் நினைத்துக் கொண்டு சிறிது நேர இடைவெளி விட்டு விட்டு அவ்வப்போது மெதுவாக நான் சிரித்துக் கொண்டிருந்தேன். நான் காதல் வலையில் விழுந்திருக்கிறேன் என்ற விஷயத்தை மனதில் நினைத்துப் பார்த்தபோது, மிகவும் குளிர்ச்சியான ஒரு உணர்வை நான் அடைந்தேன். அந்த காதலுக்குக் காரணம் அவள்... அதுதான் காதல்... ஜினைடாவின் முகம் அந்த இருட்டில் மெதுவாக...
எனக்கு முன்னால் மெதுவாக காற்றில் மிதந்து கொண்டிருந்தது. அது மிதந்து கொண்டிருந்ததே தவிர, அங்கிருந்து மிதந்து காணாமல் போய் விடவில்லை. அவளுடைய உதடுகள் எப்போதும் இருக்கக் கூடிய அதே உயிரோட்டமான புன்னகையை அணிந்திருந்தன.
அவளுடைய கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு ஓரத்தில் இருந்தவாறு பார்த்த அந்த பார்வையில் ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டிருந்தது. அந்தப் பார்வையில் ஒரு கனவு காணும் தன்மை இருந்தது. மெல்லிய பார்வை... அவளிடமிருந்து பிரிந்து வந்த நிமிடத்தில்... இறுதியில் நான் எழுந்தேன். மெதுவாக நடந்து என் படுக்கைக்கு வந்தேன். ஆடையைக் கழற்றாமலே, தலையணையின்மீது மிகவும் கவனமாக என் தலையைக் கொண்டு போய் வைத்தேன். என் ஆன்மாவை ஆக்கிரமித்து விட்டிருக்கும் விஷயம் எதுவோ, அதை எங்கே திடீரென்று ஏதாவது அசைவு உண்டாக்கி பாழ் செய்து விடுவேனோ என்று நான் பயந்தேன். நான் படுக்கையில் சாய்ந்தேன். ஆனால் என் கண்களை மூடக்கூட இல்லை. அப்போது ஏதோ விளக்கொளியின் கீற்று தொடர்ந்து அறைக்குள் வந்து கொண்டிருப்பதைப்போல நான் உணர்ந்தேன். நான் எழுந்து, சாளரத்தைப் பார்த்தேன். மெல்லிய விளக்கொளி விழுந்து கொண்டிருந்த, மர்மத்தன்மை கொண்ட சாளரத்தின் கண்ணாடியிலிருந்து, அதன் ஓரப் பகுதிகள் வேறுபட்டு தெளிவாக தெரிந்தன. அது ஒரு சூறாவளியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. உண்மையாகவே அது ஒரு சூறாவளிதான். ஆனால், அது மிகவும் தூரத்தில் மிகவும் வேகமாக வீசிக்கொண்டிருந்ததால், இடிச்சத்தம் கூட சரியாக காதில் கேட்கவில்லை. நீண்ட இரைச்சல் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அது படிப்படியாக கிளைகள் பரப்பி விட்டிருப்பதைப்போல எல்லா திசைகளிலும் உரத்து ஒலித்தது. மின்னலின் கீற்றுகள் தொடர்ந்து ஆகாயத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சொல்லப்போனால்- அது கண் சிமிட்டிக் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக அசைந்து கொண்டும் இறந்து கொண்டிருக்கும் ஒரு பறவையின் சிறகைப்போல துடித்துக் கொண்டும் இருந்தது. நான் எழுந்தேன். சாளரத்தின் அருகில் சென்றேன். பொழுது புலரும் வரை அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன்... மின்னல் சிறிது நேரத்திற்குக்கூட நிற்கவேயில்லை. அதைத்தான் விவசாயிகள் "குருவி இரவு" என்று குறிப்பிடுவார்கள். நான் அமைதியாக இருந்த மணல் வெளியையே பார்த்துக் கொண்டிருந்தேன். இருட்டாக இருந்த ரெஸ்குட்ச்னி தோட்டத்தையும் தூரத்திலிருந்த கட்டடங்களில் மஞ்சள் நிற நிழல்களையும் பார்த்தேன். ஒவ்வொரு முறை மின்னல் கண் சிமிட்டும் போதும், அவையும் அதிர்வதைப்போல எனக்குத் தோன்றியது. நான் பார்த்தேன்.... என் கண்களை அவற்றிலிருந்து திருப்பவே இல்லை. இந்த அமைதியான மின்னலின் கண் சிமிட்டல்கள், இந்த ஒளிக் கீற்றுகள் என் மனதிற்குள் ரகசியமாகவும் அமைதியாகவும் எரிந்து கொண்டிருந்த நெருப்பை நினைவூட்டின. பொழுது புலர ஆரம்பித்தது. ஆகாயத்தில் மஞ்சள் நிறத்தின் சிதறல்கள் தெரிய ஆரம்பித்தன. ஆதவன் அருகில் வர வர, மின்னல் படிப்படியாக மங்கலாகி, நின்றே போனது. கண் சிமிட்டிக் கொண்டிருந்த ஒளிக் கீற்றுகள் சிறிது சிறிதாகக் குறைந்து இறுதியில் இல்லாமலே போயின. அவை மெதுவாக வந்து கொண்டிருந்த பகல் பொழுதின் வெளிச்சத்திற்குள் கரைந்து போயின.
என்னுடைய மின்னல் பளிச்சிடல்களும் காணாமல் போயின. நான் மிகுந்த களைப்பையும் அமைதித் தன்மையையும் உணர்ந்தேன். ஆனால், ஜினைடாவின் உருவம் இப்போதும் என் மனதில் வெற்றிப் பெருமிதத்துடன் தோன்றிக் கொண்டிருந்தது. அவளுடைய உருவம் "பளிச்" என காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஏரியில் இருக்கும் செடிகளுக்கு மத்தியிலிருந்து தோன்றும் அன்னப் பறவையைப்போல அந்தக் காட்சி இருந்தது. அந்த உருவத்தைச் சுற்றிலும் இருந்த மற்ற அழகற்ற உருவங்களுக்கு மத்தியில் அது கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அந்த உருவத்துடன் விடை பெற்றுக்கொண்டு, முழுமையான நம்பிக்கையுடன் புகழ்ந்து கொண்டு நான் தூக்கத்தில் மூழ்கினேன்.
ஓ... இனிய உணர்வுகள், சுகமான நினைவுகள், மென்மையான இதயத்தின் நல்ல, அமைதியான தன்மை, அரும்பிய காதலின் இளகிய ஆசீர்வாதம்... அவையெல்லாம் எங்கே? அவையெல்லாம் எங்கே?
மறுநாள் காலையில் நான் தேநீர் பருகுவதற்காக வந்தபோது, என் தாய் என்னைப் பார்த்து திட்டினாள். மிகவும் கடுமையாகத் திட்டவில்லை என்றாலும், அது நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து நான் முந்தைய நாள் சாயங்கால நேரத்தை எப்படிச் செலவழித்தேன் என்பதை அவளிடம் நான் சொன்னேன். சில வார்த்தைகளில் மட்டும் அவளுக்கு நான் பதில் சொன்னேன். பல விஷயங்களை நான் மறைத்து விட்டேன். நான் கூறிய ஒவ்வொரு விஷயங்களின் மூலமும் குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன்.
"எது எப்படியோ... அவர்கள் அந்த அளவிற்கு மிகப் பெரிய நபர்கள் இல்லை.” என் தாய் சொன்னாள்: "தேர்வுக்காக உன்னை தயார் பண்ணிக் கொள்வதையும், மற்ற வேலைகளைப் பார்ப்பதையும் விட்டு விட்டு, அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் அளவிற்கு உனக்கு எந்தவொரு வேலையும் இல்லை.”
என்னுடைய படிப்பு விஷயங்களைக் குறித்த அக்கறை என் தாயின் அந்த சில வார்த்தைகளில் இருந்ததால், நான் அதற்கு எந்தவொரு பதிலும் கூறவில்லை. ஆனால், காலை நேர தேநீர் பருகி முடித்தவுடன், என் தந்தை என் கையைப் பிடித்து என்னை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ஜாஸிகினின் வீட்டில் நான் என்னவெல்லாம் பார்த்தேன் என்பதைக் கூறியே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்.
என்மீது என் தந்தைக்கு ஒரு வினோதமான பிடிப்பு இருந்தது. எங்கள் இருவருக்குமிடையே நிலவிக் கொண்டிருந்த உறவுகூட வினோதமானதே. என்னுடைய படிப்பு விஷயங்களில் மிகவும் அரிதாகவே அவர் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் அவர் எந்தச் சமயத்திலும் என்னுடைய உணர்வுகளைக் காயப்படுத்தியது இல்லை. என்னுடைய சுதந்திரத்திற்கு அவர் மரியாதை தந்தார். நான் அப்படிக் கூறியதற்காக என்னை அவர் மரியாதையுடன் நடத்தினார். ஆனால் உண்மையிலேயே நான் அவருடன் மிகவும் நெருங்கி வராமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்.
நான் அவர்மீது பாசம் வைத்திருந்தேன். அவர்மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தேன். ஒரு மனிதர் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக எனக்கு அவர் இருந்தார். சொர்க்கங்களுக்கு நிகரானவராக அவர் எனக்குத் தோன்றினார். என் கையைப் பிடித்து என்னை அவர் அழைத்துக் கொண்டு போன உணர்வே இல்லாத அளவிற்கு நான் அவர்மீது அளவற்ற அன்பை வைத்திருந்தேன். அதே நேரத்தில், எல்லா விஷயங்களையும் என்னை கூறும்படி கேட்ட தருணத்தில், ஒரே வார்த்தையில்... ஒரே பார்வையில்... அவர்மீது அளவற்ற நம்பிக்கை எனக்கு உண்டாகும்படி அவரால் செய்ய முடிந்தது. நான் முழுமையாக மனதைத் திறந்தேன். அவரிடம் நான் பேசினேன்.... ஒரு அறிவாளியான நண்பரிடம் பேசுவதைப்போல... ஒரு அன்பு கொண்ட ஆசிரியரிடம் பேசுவதைப் போல! அடுத்த நிமிடம் அவர் என்னை தனியே விட்டு விட்டு, நாகரீகமாகவும் பாசத்துடனும் அங்கிருந்து நகர்ந்தார்.
சில நேரங்களில் அவர் மிகவும் உற்சாகத்துடன் இருப்பார். அந்த மாதிரியான நேரங்களில் அவர் என்னிடம் அளவுக்கு மீறி கொஞ்சிக்கொண்டும் தட்டிக் கொடுத்துக்கொண்டும் இருப்பார். (பலதரப்பட்ட உடல் பயிற்சி விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகம்). ஒரே ஒரு முறைதான்- பின்னொரு முறை அது எந்தச் சமயத்திலும் நடக்காது. அவர் அளவற்ற மென்மைத்தன்மையுடன் என்மீது அக்கறை செலுத்துவார். சொல்லப் போனால்- அதைப் பார்த்து நான் கண்ணீர் விட்டிருக்கிறேன். ஆனால், அளவுக்கு அதிகமாக இருந்த உற்சாகமும் மென்மைத்தனமும் சொல்லி வைத்ததைப்போல முழுமையாக இல்லாமல் போனது.
எங்களுக்கிடையே நடந்து கொண்டிருந்த விஷயங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு பயன்படுவது மாதிரி எனக்கு எதையும் தரவில்லை. நான் அப்படிப்பட்ட விஷயங்கள் நடக்க வேண்டும் என்று கனவு கண்டேன். சில நேரங்களில் நான் அவருடைய புத்திசாலித்தனம் நிறைந்த பிரகாசமான முகத்தை கற்பனை செய்து பார்ப்பேன். என் இதயம் மிகவும் வேகமாக அடிக்க ஆரம்பிக்கும். அவரை நினைத்து என்னுடைய முழு உடலும் ஏங்கிக் கொண்டிருக்கும். எனக்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அவரால் உணரமுடியும். நடந்து கொண்டிருக்கும்போதே அவர் என்னுடைய கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டுவார். தட்டிவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்துவிடுவார். அல்லது ஏதாவது வேலையைச் செய்து கொண்டிருப்பார். இல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் உறைந்து போகும் அளவிற்கு ஏதாவது செய்வார். எங்களை உறையச் செய்வது எப்படி என்ற விஷயம் அவருக்கு நன்கு தெரியும். நான் எனக்குள் ஒரு உலகத்தை உண்டாக்கிக் கொண்டு சுருங்கிக் கொள்வேன்.
அதற்குப் பிறகு மிகவும் அமைதியான சூழ்நிலைக்குள் நான் மூழ்கி விடுவேன். ஒரு நண்பனைப்போல மிகவும் அரிதாக அவர் நடந்து கொள்ளும் விஷயத்தை என்னுடைய அமைதியான நடவடிக்கைகள் சிறிதும் எதிர்பார்க்காது. ஆனால் அவருடைய அந்த நடவடிக்கைகள் மிகவும் அறிவாளித்தனம் நிறைந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட சம்பவங்கள் சிறிதும் எதிர்பாராமலே நடக்கும். என் தந்தையின் நடவடிக்கைகளைப் பற்றி நினைக்கும்போது பின்னர் அவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். என்னைப் பற்றியோ குடும்ப வாழ்க்கையைப் பற்றியோ அக்கறை செலுத்த வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு சிறிதுகூட இல்லை என்பதுதான் அந்த முடிவு. அவருடைய மனம் வேறு பல விஷயங்களில் மூழ்கி விட்டிருந்தது. வேறு ஏதோ விஷயங்களில் அவர் முழுமையான திருப்தி கண்டு கொண்டிருந்தார். "உன்னால் எப்படி நடக்க முடிகிறதோ, அப்படியே நட. மற்றவர்கள் உன்னை ஆட்சி செய்வதற்கு அனுமதிக்காதே. இன்னொரு மனிதனுக்குச் சொந்தமானவனாக நீ ஆகிவிடாதே. முழு வாழ்க்கையின் வெற்றியுமே அதில்தான் அடங்கியிருக்கிறது." ஒரு நாள் என்னைப் பார்த்து அவர் சொன்னார். இன்னொரு நாள், மக்களாட்சி கொள்கையை விரும்பக்கூடிய இளைஞனான நான் சுதந்திரம் பற்றிய என்னுடைய பார்வைகளை (அவரை உண்மையிலேயே "மிகவும் கனிவான மனிதர்" என்று நான் குறிப்பிடுவேன். அப்படிப்பட்ட நேரங்களில் நான் என்ன கூற வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை அவரிடம் கூறி விடுவேன்) கூறுவேன். "சுதந்திரம்..." அவர் மீண்டும் கூறுவார்: "சுதந்திரம் ஒரு மனிதனுக்கு எதை அளிக்கும் என்று உனக்கு தெரியுமா?"
"என்ன?"
"விருப்பப்படி செயல்படும் எண்ணம்... தனக்கென ஒரு விருப்பம்... அது வலிமையை அளிக்கும்... அது சுதந்திரத்தைவிட மேலானது... விருப்பப்படி செயல்படுவது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டு விட்டால், நீ சுதந்திர உணர்வு கொண்ட மனிதனாக ஆகிவிடுவாய்... அதற்குப் பிறகு செயல்பட ஆரம்பித்துவிடுவாய்?"
எல்லாருக்கும் முன்னால், எல்லாரையும்விட என் தந்தை சுதந்திரமாக வாழவேண்டும் என்று மனதில் ஆசைப்பட்டார்.
அப்படியே வாழவும் செய்தார்... அதே நேரத்தில் வாழ்க்கையின் "கொடை"யை அனுபவித்துக்கொண்டு அதிக நாட்கள் வாழ மாட்டோம் என்றொரு எண்ணம் அவருடைய மனதில் இருந்து கொண்டே இருந்தது. அவர் தன்னுடைய நாற்பத்து இரண்டாவது வயதில் மரணத்தைத் தழுவிவிட்டார்.
ஜாஸிகினின் இல்லத்தில் அன்று சாயங்காலம் நடைபெற்ற விஷயங்களை ஒன்று விடாமல் நான் என் தந்தையிடம் கூறினேன். பாதி அக்கறையுடனும் பாதி அலட்சியப் போக்குடனும் நான் கூறுவதை அவர் தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, தன் கையில் இருந்த குச்சியால் மணலில் படம் வரைந்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது இடையில் அவர் சிரிக்கவும் செய்தார். பிரகாசமான முகத்துடன் பார்வைகளால் என்னைத் துளைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இடையில் சிறுசிறு கேள்விகளையும் விளக்கங்களையும் என்னிடம் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஜினைடாவின் பெயரை உச்சரிக்கவே கூடாது என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ஆனால், நீண்ட நேரம் என்னால் அப்படிக் கூறாமல் இருக்க முடியவில்லை. அவளைப் பற்றிய புகழ்மாலைகளைப் பாட ஆரம்பித்துவிட்டேன். என் தந்தை அப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் என்னவோ தீவிரமான சிந்தனையில் மூழ்கினார். பின்னர் உடலை நீட்டி நிமிர்த்திக் கொண்டு அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார்.
வீட்டை விட்டு வெளியே வந்தபோது தன்னுடைய குதிரையை வண்டியில் பூட்டிவைக்கும்படி அவர் கட்டளை போட்டிருந்தார். அவர் ஒரு மிகச் சிறந்த குதிரை வீரராக இருந்தார். இப்போது இருக்கும் "ராரி" என்ற குதிரைக்கு முன்னால், பல அடங்காத குதிரைகளையும் அடக்கக்கூடிய ஆற்றல் பெற்றவராக அவர் இருந்தார்.
"நான் உங்களுடன் வரட்டுமா, அப்பா?” நான் கேட்டேன். "வேண்டாம்...” அவர் சொன்னார். அவருடைய முகம் எப்போதும் இருக்கக்கூடிய ஒரு நண்பனுக்குரிய உணர்ச்சி வெளிப்பாடுகளை திரும்பவும் பெற்றது. "நீ விரும்பினால், தனியாகப் போ. வண்டிக்காரனிடம் நான் போகவில்லை என்று கூறு.”
அவர் தன்னுடைய முதுகை என் பக்கமாகக் காட்டியவாறு மிகவும் வேகமாக நடந்து சென்றார். நான் அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் வெளி கேட்டிற்கு வெளியே சென்று மறைந்துவிட்டார். வேலிக்கு அப்பால் அவருடைய தொப்பி நகர்ந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவர் ஜாஸிகினின் வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தார்.
அவர் அங்கு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இருந்திருப்பார். தொடர்ந்து அங்கிருந்து நகரத்திற்குப் புறப்பட்டு விட்டார். அன்று சாயங்காலம் வரை அவர் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.
"டின்னர்" சாப்பிட்டு விட்டு நான் ஜாஸிகினின் வீட்டிற்குச் சென்றேன். வரவேற்பறையில் மூத்த இளவரசி மட்டும் இருப்பதை பார்த்தேன். என்னைப் பார்த்ததும் தொப்பிக்குக் கீழே இருந்த தன்னுடைய தலையை, ஒரு பின்னக் கூடிய ஊசியால் அவள் சொறிந்தாள். உடனடியாக என்னைப் பார்த்து அவளுக்கு ஒரு விண்ணப்ப கடிதத்தை பிரதி எடுத்து தரமுடியுமா என்று கேட்டாள்.
"சந்தோஷமாக...” நான் அங்கிருந்த நாற்காலியின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டே கூறினேன்.
"எழுத்துகள் மிகவும் பெரியதாக இருக்குமாறு பார்த்துக் கொள்.” இளவரசி சொன்னாள். தொடர்ந்து என்னிடம் ஒரு அழுக்கடைந்த பேப்பரைக் கொடுத்துக் கொண்டே கூறினாள்." "இன்றைக்கே இதை பிரதி எடுத்து விடுவாயா என் அருமை சார்?”
"நிச்சயமாக... நான் இன்றே பிரதி எடுத்து விடுகிறேன்.”
பக்கத்து அறையின் கதவு அப்போது திறந்தது. இடைவெளியின் வழியாக நான் ஜினைடாவின் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய முகம் வெளிறிப்போயும் வாட்டத்துடனும் காணப்பட்டது. அவளுடைய கூந்தல் அலட்சியமாக பின்னால் தொங்கிக் கொண்டிருந்தது அவள் தன்னுடைய அகலமான, எரிந்து கொண்டிருக்கும் கண்களால் என்னையே வெறித்துப் பார்த்தாள். தொடர்ந்து மெதுவாகக் கதவை அடைத்தாள்.
"ஜினா! ஜினா!” கிழவி அழைத்தாள். ஜினைடா எந்தவொரு பதிலும் கூறவில்லை. நான் கிழவியின் விண்ணப்ப கடிதத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அன்று முழு சாயங்காலமும் அந்த வேலையிலேயே ஈடுபட்டேன்.
என்னுடைய "வெறித்தனமான ஈடுபாடு" அன்றுதான் ஆரம்பமானது. வேலைக்குள் நுழையும்போது, ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட உணர்வு உண்டாகும் என்பதை அப்போது நான் நினைத்துப் பார்த்தேன். ஒரு சாதாரண பையனாக இருப்பது என்னும் விஷயத்தை நான் அப்போதே நிறுத்திக் கொண்டேன். நான் காதலில் ஈடுபட்டிருக்கும் ஒருவன். அன்றிலிருந்துதான் என்னுடைய வெறித் தனமான ஈடுபாடு ஆரம்பமானது என்று நான்தான் சொன்னேனே! இன்னும் சொல்லப் போனால்- என்னுடைய கவலைகளும் அன்றிலிருந்துதான் ஆரம்பமாயின. ஜினைடாவிடமிருந்து விலகி இருக்கும் போது நான் மிகவும் வேதனைப்பட்டேன். என் மனதிற்குள் எதுவுமே நுழைய மறுத்தது. எந்த வேலையைச் செய்தாலும், அது என்னைப் பொறுத்த வரையில் தவறிலேயே போய் முடிந்தது. முழு நாட்களும் நான் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதிலேயே செலவிட்டேன். அவள் இல்லாதபோது, நான் ஊசியின்மீது இருப்பதைப்போல் உணர்ந்தேன். அதே நேரத்தில், அவள் அருகில் இருக்கும் போதும், அப்படியொன்றும் பெருமைப்பட்டுக் கொள்கிற அளவிற்கு நான் இல்லை. நான் பொறாமைப்பட்டேன். எனக்கு முக்கியத்துவம் இல்லாமலிருப்பதை நான் உணர்ந்தேன். நான் முட்டாள்தனமாக அவளைப் பற்றி நினைத்துக் கொண்டும், கற்பனை பண்ணிக் கொண்டும் இருந்தேன். இனம் புரியாத ஒரு சக்தி என்னை அவளிடம் இழுத்துச் சென்றது. அவளுடைய அறையின் கதவு வழியாக செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அளவற்ற சந்தோஷத்தை அடையாமல் என்னால் இருக்க முடியவில்லை நான் அவள்மீது காதல் உணர்வு கொண்டிருக்கிறேன் என்பதை உடனடியாக ஜினைடா கற்பனை செய்து தெரிந்து கொண்டு விட்டாள். சொல்லப் போனால், நான் அதை தெரியாமல் மறைக்க வேண்டும் என்று மனதில் நினைக்கக்கூட இல்லை. என்னுடைய அந்த வெறி கலந்த ஈடுபாட்டை அவள் ரசித்தாள். என்னை முட்டாள் என்று நினைத்து, சாதாரணமாகக் கருதி, மனதில் வேதனையைத் தந்து கொண்டிருந்தாள். அவளை நினைக்க நினைக்க மனதில் ஒரு இனிய உணர்வு உண்டானது. தன்னிச்சை, பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றால் உண்டான அளவற்ற சந்தோஷம் ஒரு பக்கம், அதே நேரத்தில்- இன்னொருவருக்கு தாங்க முடியாத வேதனை... ஜினைடாவின் கையில் நான் ஒரு மெழுகுபோல ஆனேன். இன்னும் சொல்லப்போனால் அவளுடன் காதல் உணர்வு கொண்டிருந்தவன் நான் ஒருவன் மட்டுமல்ல. அவளுடைய வீட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கும் எல்லா ஆண்களுமே அவள்மீது பைத்தியம் கொண்டிருந்தனர். அவள் அவர்கள் எல்லாரையும் தன் கால் பாதத்தில் நூலில் கட்டிப் போட்டு வைத்திருந்தாள். அவர்கள் மனதில் நம்பிக்கை உண்டாவதையும் பய உணர்வுகள் எழுவதையும், அவர்களை தன்னுடைய விரலைச் சுற்றி வலம் வரச் செய்வதையும் பார்த்து அவள் மனதிற்குள் சந்தோஷப்பட்டாள். (அவர்களின் தலைகளை ஒன்றோடொன்று அவள் மோதச் செய்து கொண்டிருந்தாள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்). அதற்கு அவர்கள் எந்தச் சமயத்திலும் சிறிதளவு கூட எதிர்ப்பு காட்ட வேண்டும் என்று மனதில் நினைத்ததே இல்லை. அதற்கு மாறாக அவர்களே தங்களை அவளிடம் வலியச் சென்று ஆர்வத்துடன் ஒப்படைத்துக் கொண்டிருந்தார்கள். அவளைப் பற்றி முழுமையாகக் கூறுவதாக இருந்தால்- அவள் வாழ்வின் முழுமையையும் அழகையும் ஒன்று சேர கொண்டிருந்தாள். அவளிடம் வினோதமான கவர்ந்திழுக்கும் கலவைகளாக மென்மையான அணுகுமுறையும், அலட்சியப் போக்கும், செயற்கைதனமும், எளிமையும், பன்முகத் தன்மையும், சாதாரண இயல்பும் இருந்தன. அவள் எதைச் செய்தாலும் அல்லது கூறினாலும், அவள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், அவற்றில் புரிந்து கொள்ள முடியாத ஒரு கவர்ச்சித் தன்மை ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு தனி நபரின் ஆளுமை பலமாக சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்தது. அவளுடைய முகம் எப்போதும் மாறிக் கொண்டே இருந்தது. அது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருந்தது. ஒரே நேரத்தில் அது கிண்டல், கனவுத் தன்மை, வெறி கலந்த ஈடுபாடு- எல்லாவற்றையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. பலவகைப்பட்ட உணர்ச்சிகள், காற்று வீசியடித்துக் கொண்டிருக்கும் ஒரு கோடை நாளின்போது மேகங்களின் நிழல்கள் மாறிக் கொண்டேயிருப்பதைப்போல புரிந்து கொள்ள முடியாதவையாகவும், மிகவும் வேகமாக மாறிக் கொண்டே இருப்பவையாகவும் இருந்தன. அவள் தன்னுடைய உதடுகளாலும் கண்களாலும் ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டிருந்தாள்.
தன்னுடைய ஒவ்வொரு ஆராதகரும் அவளுக்குத் தேவைப்பட்டார்கள். பைலோவ்ஸொரோவ்வை சில நேரங்களில் அவள் "என்னுடைய பயங்கரமான மிருகமே" என்றும், சில வேளைகளில் சுருக்கமாக "என்னுடையவன்" என்றும் குறிப்பிடுவாள்.
அவன் அவளுடைய சந்தோஷத்திற்காக தானே மகிழ்ச்சியுடன் நெருப்புக்குள் பாய்ந்து கொண்டிருப்பான். அவனுடைய அறிவாளித்தனமான திறமைகளிலும், வேறு சில தகுதிகளிலும் சிறிது நம்பிக்கை கொண்டிருந்ததால், அவன்தான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறவன் என்பதைப் போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் எந்தவிதமான தீவிரமான உள் நோக்கங்களும் இல்லாமல் மற்றவர்கள் வெறுமனே அங்கு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் போன்ற ஒரு கருத்தும் உண்டாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மெய்டனோவ் அவளுடைய இயல்பான நடவடிக்கைகளில் கலந்திருந்த கவிதைத் தன்மைகளுக்கு தன்னைப் பறி கொடுத்து விட்டிருந்தார். எல்லா எழுத்தாளர்களையும் போல அவரும் மிகவும் சாதுவான குணம் கொண்ட மனிதராக இருந்தார். அவளை சந்தோஷப் படுத்துவதற்காக அவர் வலியச் சென்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவர் அவளை வழிபட்டார். எல்லையற்ற வார்த்தைகளில் அவர் அவளைப் புகழ்ந்து தள்ளினார். அவற்றை அவர் ஒரு இனம் புரியாத உற்சாகத்துடன் அவளிடம் வாசித்துக் காட்டினார். அதனால் அவர் பாதிக்கப்பட்டாலும் அவர் தன் செயல்களில் நேர்மையாக இருந்தார். அவரைப் பார்த்து அவள் பரிதாபப்பட்டாள். அதே நேரத்தில்- சிறிதளவு அவரைப் பார்த்து அவள் உற்சாகம் அடையவும் செய்தாள். அவரின் மீது அவளுக்கு பெரிய அளவில் நம்பிக்கை எதுவுமில்லை. அவருடைய கவிதை மழைகளைக் கேட்ட பிறகு, அவள் அவரை புஷ்கினின் படைப்பை வாசிக்கும்படி கூறுவாள். நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையைச் சுத்தம் செய்வதற்காக தான் அதைச் செய்வதாக அப்போது அவள் கூறுவாள். வினோதமான மருத்துவரான லூஷின் தன்னுடைய வார்த்தைகளில் எப்போதும் மனதிலிருக்கும் காட்டத்தைக் காட்டக் கூடியவர். மற்ற எல்லாரையும்விட அவளைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அனைவரையும்விட அவர் அவளை அதிகமாகக் காதலித்தார். அவளை நேருக்கு நேராகவும் அவள் இல்லாத நேரத்திலும் திட்டினாலும், அவள்மீது அவருக்கு காதல் இருக்கத்தான் செய்தது. அவரை அவள் மதிக்காமல் இல்லை. அதற்கு தகுதியான நபர் அவர் என்பதை அவள் காட்டினாள். சில நேரங்களில் ஒரு இனம் புரியாத தற்பெருமை கலந்த சந்தோஷத்துடன் அவரும் தன்னுடைய கருணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்தான் என்று அவரே நினைக்கும்படி செய்வாள். "நான் ஒரு சலன மனம் கொண்டவள்... நான் இதயமற்றவள்... என்னுடைய உணர்வுகளில் நான் ஒரு நடிகையைப் போன்றவள்..." ஒரு நாள் நான் இருக்கும்போது அவள் அவரிடம் கூறினாள்: "மிகவும் நல்லது... கையை கொடுங்க. நான் இந்த "பின்”னைக் கொண்டு அதில் குத்துகிறேன். இந்த இளைஞன் இதைப் பார்ப்பதற்காக நீங்க வெட்கப்படுவீர்கள். அது உங்களை வேதனை கொள்ளச் செய்யும் ஆனால் இந்த எல்லா விஷயங்களுக்காகவும் நீங்கள் சிரிப்பீர்கள். நீங்கள் ஒரு உண்மையான மனிதர்....” அதைக் கேட்டு லுஷினின் முகம் சிவந்துவிடும். அவர் அந்தப் பக்கமாகத் திரும்பி தன் உதடுகளைக் கடிப்பார். ஆனால், இறுதியாக தன்னுடைய கையை அவளை நோக்கி நீட்டுவார்.
அவள் அதைக் குத்துவாள். ஆனால் அவரோ சிரிக்க ஆரம்பிப்பார்.... அவளும் சிரிப்பாள். "பின்”னால் இன்னும் ஆழமாக குத்திக்கொண்டே... அப்போது அவள் அவருடைய கண்களையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பாள். அவர் தன் கண்களை வீணாக வேறு திசைகளை நோக்கி செலுத்துவதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருப்பார்.
ஜினைடாவிற்கும் கவுண்ட் மலேவ்ஸ்கிக்குமிடையே நிலவிக் கொண்டிருக்கும் உறவு பற்றி எனக்கு சிறிதளவே, தெரியவந்தது.
அவன் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவன், புத்திசாலி, பிடிவாத குணம் கொண்டவன். ஆனால், அவளிடம் சரிசமமாக பேசக் கூடியவன். அவனிடம் போலித்தனமான ஏதோவொன்று இருப்பது எனக்கே தோன்றியிருக்கிறது.
ஒரு பதினாறு வயது பையனான எனக்கே அந்த விஷயம் தெரிகிறது என்றால், ஜினைடா எப்படி அதைக் கண்டுபிடிக்காமல் இருக்கிறாள் என்பதை நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை அவள் இந்த மாதிரியான போலித்தனங்களை உண்மையாகவே தெரிந்துகொண்டிருக்கலாம். அதே நேரத்தில் அவள் அவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அவளுடைய சீராக இல்லாத படிப்பு, வினோதமான பழக்கவழக்கங்கள், உறவுகள், அவளுடைய அன்னையிடமிருந்து தொடர்ந்து கிடைத்து வரும் அழுத்தங்கள், வீட்டில் நிலவும் வறுமை, ஒழுங்கற்ற தன்மை, அந்த இளம் பெண் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரப் போக்கு, தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் தான் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவள் என்று காட்டிக் கொள்ளும் மனப்பாங்கு- இவை அனைத்தும் சேர்ந்து அவளிடம் ஒரு வகையான பாதி வெறுப்பு கலந்த அலட்சியப் போக்கையும் சுறுசுறுப்பற்ற தன்மையையும் உருவாக்கி விட்டிருந்தன. எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். வோனிஃபேட்டி வீட்டில் சர்க்கரை இல்லை என்று கூறலாம். அல்லது ஏதாவது எதிர்ப்பைக் காட்டும் சண்டையைப் பற்றிய தகவல் அவளுடைய காதுகளுக்கு வந்து சேரலாம். அல்லது அவளுடைய விருந்தாளிகள் தங்களுடன் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்ளலாம். அந்த மாதிரியான நேரத்தில் அவள் தன்னுடைய சுருள் விழுந்த தலை முடியை ஆட்டியவாறு கூறுவாள்: "அதனால் என்ன?” அதைப் பற்றி சிறிதளவே அவள் அக்கறை செலுத்துவாள்.
ஆனால் மாலேவ்ஸ்கி அவளைத் தேடி வரும்போது எப்படிப் பார்த்தாலும் என்னுடைய ரத்தம் நெருப்பில் இருப்பதைப்போல கோபத்தில் கொதிக்க ஆரம்பித்துவிடும். அவன் ஸ்டைலாக நடந்து வந்து, குள்ளநரித்தனமான நடவடிக்கைகளுடன் அவளுடைய நாற்காலியின் பின்பக்கத்தில் மிடுக்காக சாய்ந்துகொண்டு அவளுடைய செவியில் தனக்குள் உண்டான சந்தோஷத்துடன் மெல்லிய புன்னகையுடனும் என்னவோ முணுமுணுப்பான்.
அப்போது அவள் தன்னுடைய கைகளை தன் மார்பின்மீது மடித்து வைத்துக்கொண்டு, அவனையே வெறித்துப் பார்த்தவாறு, புன்னகைத்துக் கொண்டே தன்னுடைய தலையை ஆட்டிக் கொண்டிருப்பாள்.
"கவுண்ட் மாலேவ்ஸ்கியிடம் நீ விரும்புகிற அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது?” ஒருநாள் நான் அவளைப் பார்த்துக் கேட்டேன்.
"அவருக்கு அந்த அளவிற்கு அழகான மீசை இருக்கின்றது.” அவள் சொன்னாள். "ஆனால், அது உனக்கு தேவையில்லாத விஷயம்...”
"நான் அவரைப் பற்றி அக்கறை கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நீ நினைக்க வேண்டிய அவசியமில்லை.” “இன்னொரு முறை அவள் சொன்னாள். "இல்லை... நான் தலை குனிந்து பார்க்கும் நிலையில் இருக்கும் மனிதர்களைப் பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை. என்னைக் கட்டுப்படுத்துகிற அளவிற்கு எனக்கு யாராவது வேண்டும். ஆனால், இரக்கம் நிறைந்த சொர்க்கங்களே! அப்படிப்பட்ட ஒரு மனிதரை நான் எந்தச் சமயத்திலும் பார்க்கவே மாட்டேன் என்று தோன்றுகிறது. எந்த காரணத்தைக் கொண்டும் நான் யாருடைய கைப்பிடிக்குள்ளும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன்.”
"அப்படியென்றால் நீ எந்தச் சமயத்திலும் காதலிக்க மாட்டாய்... அப்படித்தானே?”
"ஏன்... நீ? நான் உன்னைக் காதலிக்கவில்லையா?” அவள் சொன் னாள். சொல்லிக்கொண்டே அவள் தன்னுடைய கையில் அணிந்திருந்த உறையின் துணியால் என் மூக்கைக் கிள்ளினாள்.
ஆமாம்... நான் அருகில் இருக்கும்போது, ஜினைடா தன்னை மிகவும் சந்தோஷக் கடலில் மூழ்க வைத்துக் கொண்டிருந்தாள். மூன்று வாரங்கள் ஒவ்வொரு நாளும் நான் அவளைப் போய் பார்த்தேன். என்னிடம் அவள் என்னதான் செய்யவில்லை? அவள் மிகவும் அரிதாகவே எங்களைப் பார்ப்பதற்காக வந்தாள். அதற்காக நான் கவலைப்படவில்லை. எங்கள் வீட்டில் இருக்கும்போது, அவள் ஒரு அழகான பெண்ணாக ஒரு இளம் இளவரசியாக தன்னை அவள் மாற்றிக்கொள்வாள். நான் அவளைப் பார்த்து வியந்து போய் நிற்பேன். என் அன்னைக்கு முன்னால் என்னை நானே கொடுமைப்படுத்திக் கொள்கிறேனோ என்று நினைத்து நான் பயந்தேன். ஜினைடா மீது அவளுக்கு ஒரு மிகப் பெரிய வெறுப்பு இருந்தது. எங்கள்மீது அவள் வெறுப்பு கலந்த ஒரு பார்வையை வீசிக் கொண்டிருப்பாள். நான் என் தந்தையைப் பார்த்து அந்த அளவிற்கு பயப்படவில்லை. சொல்லப் போனால்- அவர் என்னை கவனிப்பதே இல்லை என்று தோன்றியது. அவர் அவளிடம் ஒருசில வார்த்தைகளே பேசுவார். ஆனால், அப்படிப் பேசுவதுகூட மிகுந்த புத்திசாலித்தனத்துடனும் முக்கியத்துவம் நிறைந்ததாகவும் இருக்கும். நான் வேலை செய்வது, படிப்பது எல்லாவற்றையும் நிறுத்திவிட்டேன். பக்கத்து வீட்டிற்கு நடந்து செல்வதையும் குதிரைச் சவாரி செய்வதையும்கூட நான் நிறுத்திக் கொண்டேன். கால் கட்டப்பட்டுவிட்டிருக்கும் ஒரு வண்டியைப் போல, நான் என்னுடைய காதலுக்குரிய அந்த கட்டடத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். நான் அங்கேயே ஒரேயடியாக இருந்துவிட்டால், மிகவும் சந்தோஷமாக இருக்கும். அப்படித்தான் தோன்றியது. ஆனால் அது நடக்காத விஷயம். என் தாய் என்னைப் பார்த்து திட்டினாள். சில நேரங்களில் ஜினைடாவேகூட என்னை விரட்டிவிட்டாள். அந்த மாதிரியான நேரங்களில் நான் என்னுடைய அறைக்குள் வந்து கதவை மூடிக்கொள்வேன். அல்லது தோட்டத்தின் எல்லை வரை நடந்து செல்வேன். அங்கு இடிந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் கல்லாலான உயரமான பச்சை நிற கட்டடத்தின் மீது ஏறி உட்கார்ந்திருப்பேன். அங்கேயே மணிக்கணக்கில் அமர்ந்திருப்பேன். என் கால்கள் சாலையைப் பார்த்துக்கொண்டு சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். நான் பார்ப்பேன்... பார்ப்பேன். ஆனால், எதையும் பார்க்க மாட்டேன். வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சிகள் சோம்பேறித்தனமாக எனக்கு அருகில், தூசி படிந்த கட்டடத்திலேயே பறந்து கொண்டிருக்கும். மிகவும் அருகிலேயே பாதி இடிந்த நிலையில் இருந்த செங்கற்களால் கட்டப்பட்டிருந்த கட்டடத்தின் ஒரு பகுதியின்மீது அமர்ந்திருக்கும் ஒரு அழகான குருவி எரிச்சல் உண்டாகக்கூடிய அளவிற்கு தன் சிறகுகளை அடித்துக் கொண்டே இருந்தது. தொடர்ந்து அது இப்படியும் அப்படியுமாக நகர்ந்து கொண்டும், திரும்பிக் கொண்டும், தன்னுடைய நீளமான வால் பகுதியைக் குடைந்துகொண்டு இருந்தது. மிகவும் உயரமாக வளர்ந்திருந்த ஒரு பிர்ச் மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த நம்பமுடியாத காகமொன்று அவ்வப்போது கரைந்து கொண்டிருந்தது. ஆதவனும் காற்றும் அந்த மரத்தின் கிளைகளில் மெதுவாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். டான் தேவாலயத்தின் மணிகள் உண்டாக்கிய சத்தம் அவ்வப்போது அமைதித் தன்மையுடனும் இனிய ஓசையுடனும் என்னைத் தேடி வந்து கொண்டிருந்தது. நான் அங்கு அமர்ந்து பார்த்துக்கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தபோது, அவை அனைத்தும் சேர்ந்து உண்டாக்கிய ஒரு வகையான உணர்வு நிலை எனக்குள் முழுமையாக நிறைந்திருந்தது. கவலை, சந்தோஷம், எதிர்காலத்தைப் பற்றிய இனிய கனவு, வாழ்க்கைகளின்மீது கொண்டிருக்கும் ஈடுபாடு, எதிர்பார்ப்பு- இவை அனைத்துமே அப்போது என் மனதில் இருந்தன. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. எனக்குள் அவை மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. அதனால், அவற்றைப் பெயர் கூறி குறிப்பிட்டுக் கூறக்கூட என்னால் முடியவில்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே பெயரில் குறிப்பிட்டால்கூட போதும்- ஜினைடாவின் பெயரை.
ஜினைடா என்னுடன் எலியும் பூனையும் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். என்னுடன் அவள் சண்டை போடுவாள். நான் எதிர்ப்பைக் காட்டும் வகையில் கோபப்படுவேன். உடனடியாக அவள் என்னை வெளியே போகும்படி கூறுவாள். நான் அவளுக்கு அருகில் போகாமல் இருப்பேன். நான் அவளைப் பார்க்கக்கூட செய்யமாட்டேன்.
தொடர்ந்து பல நாட்கள் அவள் என்னிடம் எந்தவித உற்சாகமும் இல்லாமல் இருப்பதை நான் நினைத்துப் பார்த்தேன். நான் மிகவும் நொறுங்கிப் போய்விட்டேன். மெதுவாக அவர்களின் கட்டடத்திற்குள் நுழைந்து, வயதான இளவரசியுடன் நெருங்கிப் பழக முயன்றேன். அவள் என்னைப் பார்த்து எந்த மாதிரியான நேரங்களிலெல்லாம் திட்டியிருக்கிறாள்,முணுமுணுத்திருக்கிறாள் என்பதை, அந்த நேரத்தில் நான் மனதில் நினைக்கவேயில்லை. அவளுடைய பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருந்தது. அவள் ஏற்கெனவே காவல்துறை அதிகாரிகளிடம் இரண்டு "விளக்கங்கள்” கொடுத்திருந்தாள்.
ஒருநாள் நான் தோட்டத்தில் ஏற்கெனவே நன்கு அறிமுகமாகியிருக்கும் வேலிக்கு அருகில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது நான் ஜினைடாவைப் பார்த்தேன். அவள் உடலை சிறிதுகூட அசைக்காமல் தன் இரண்டு கைகளில்மீதும் சாய்ந்தவாறு புல்லில் உட்கார்ந்திருந்தாள். நான் முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து நகர்ந்துபோய்விடலாம் என்று நினைத்தேன். ஆனால், உடனடியாக அவள் தன் தலையை உயர்த்தி என்னைச் சைகை காட்டி அழைத்தாள். என் மனதிற்கு எதுவுமே புரியவில்லை. முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்றே தெரியவில்லை. அவள் தன்னுடைய சைகையை திரும்பவும் செய்தாள். நான் உடனடியாக வேலிக்கு மேல் தாண்டி அவளை நோக்கி சந்தோஷம் பொங்க ஓடினேன். ஆனால், அவள் ஒரு பார்வையால் என்னை நிற்கச் செய்துவிட்டாள். அவளிடமிருந்து இரண்டு அடி தூரத்தில் பாதையிலேயே என்னை சைகை செய்து நிறுத்திவிட்டாள். என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்துடன், பாதையின் ஓரத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். அவள் மிகவும் வெளிறிப் போய் காணப்பட்டாள். கசப்பு நிறைந்த துன்பங்கள், தாங்க முடியாத கவலைகள்- இவை அனைத்தும் அவளுடைய முகத்தில் வெளிப்பட்டன. அந்நிலை என் இதயத்தில் ஒரு மிகப் பெரிய பேரடியை உண்டாக்கியது. நான் என்னை மறந்து முணு முணுத்தேன். "என்ன விஷயம்?”
ஜினைடா தன்னுடைய தலையைச் சற்று முன்னோக்கி நீட்டி, ஒரு புல்லின் ஒரு இதழைப் பறித்து வாயில் வைத்துக் கடித்துவிட்டு அதை தூரத்தில் விட்டெறிந்தாள்.
"நீ என்னை அதிகமாகக் காதலிக்கிறாய். அப்படித்தானே?”
அவள் இறுதியில் சொன்னாள்: "ஆமாம்...”
நான் எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை. சொல்லப் போனால்- அங்கு பதில் கூறுவதற்கு என்ன இருக்கிறது?
"ஆமாம்...” அவள் முன்பு மாதிரியே என்னையே பார்த்துக்கொண்டு மீண்டும் கூறினாள்: "அது அப்படித்தான்... அதே கண்கள்...” அவள் கூறிக்கொண்டே சென்றாள். பின்னர் ஆழமான சிந்தனையில் மூழ்கினாள். அவள் தன்னுடைய முகத்தை தன் கைகளால் மறைத்துக் கொண்டாள். "எல்லா விஷயங்களுமே வளர்ந்து என்னை மிகவும் களைப்படையச் செய்துவிட்டன.” அவள் முணுமுணுத்தாள்: "நான் முதலில் உலகத்தின் இன்னொரு எல்லைக்குச் சென்றிருக்க வேண்டும். என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு முன்னால் என்ன இருக்கிறது? நான் மிகவும் மோசமானவள்! என் கடவுளே? நான் எந்த அளவிற்கு மோசமானவளாக ஆகிவிட்டேன்!”
"எதற்கு அப்படிக் கூறுகிறாய்?” நான் உறுதியான குரலில் கேட்டேன்.
ஜினைடா அதற்கு எந்தவொரு பதிலையும் கூறவில்லை. அவள் சாதாரணமாக தன் தோள்களைக் குலுக்கினாள். நான் அதே இடத்தில் நின்று கொண்டு, அவளையே அளவற்ற கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கூறிய ஒவ்வொரு சொல்லும் என் இதயத்தை அறுத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவள் வருத்தப்படாமல் இருந்தால், மிகவும் சந்தோஷமாக என் வாழ்க்கையையே அவளிடம் ஒப்படைத்துவிடலாமா என்று நான் நினைத்தேன். நான் அவளையே பார்த்தேன். அவள் ஏன் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தாங்கிக்கொள்ள முடியாத கோபத்துடன், ஒரு உணர்ச்சியின் உந்துதலால் தள்ளிவிடப் பட்டத்தைப்போல திடீரென்று அவள் தோட்டத்திற்குள் நுழைந்து மண்ணில் உட்கார்ந்தாள். அவள் மிகவும் பிரகாசமாகவும், சுற்றிலும் பச்சை நிறம் சூழ்ந்திருக்கவும் காணப்பட்டாள். காற்று மரங்களின் இலைகளில் மோதி முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த புதரில் இருந்த ஒரு செடியின் நீளமான கிளை ஜினைடாவின் தலையை அவ்வப்போது ஆடி ஆடி தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. புறாக்களின் சத்தம் அங்கு நிறைந்திருந்தது. தேனீக்கள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அவை புற்களுக்குமேலே மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தன. தலைக்குமேலே சூரியன் நீல நிறத்தில் காட்சியளித்தது. நான் மிகுந்த கவலையில் இருந்தேன்...
"நீ எனக்கு ஏதாவது கவிதையைக் கூறு.” ஜினைடா மிகவும் தாழ்ந்த குரலில் கூறினாள். அப்போது அவள் தன்னுடைய புருவத்தை வளைத்துக் கொண்டே சொன்னாள்: "நீ கவிதை படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நீ ராகம் போட்டே அதைப் பாடலாம். அது ஒரு பிரச்சினை இல்லை. அது இளமையாக இருக்க வேண்டும். "ஜார்ஜியா மலைகளின் மேலே” என்ற கவிதையைக் கூறு. முதலில் நீ உட்கார்...”
நான் அமர்ந்து "ஜார்ஜியா மலைகளின் மேலே” என்ற கவிதையைக் கூறினேன்.
"இதயம் காதலைத் தேர்ந்தெடுக்க முடியாது...” ஜினைடா திரும்ப சொன்னாள்: "அந்த இடத்தில்தான் கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது. அது எது இல்லை... எது இப்போதிருப்பதைவிட மிகச் சிறப்பானதாக இருப்பது மட்டுமல்ல- அது உண்மையைப்போல அதைவிட மேலானது... தேர்ந்தெடுக்க முடியாதது.... காதலை... அது விரும்பாமல் இருக்கலாம். ஆனால், அதுவால் எதுவும் செய்ய முடியாது...” அவள் மீண்டும் அமைதியில் மூழ்கிவிட்டாள். பின்னர் திடீரென்று அவள் எழுந்து நின்றாள். "வா... மெய்டனோவ் வீட்டில் என் தாயுடன் இருக்கிறார். அவர் தன்னுடைய கவிதையை எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால், நான் அவரை விரட்டியடித்து விட்டேன். இப்போது அவருடைய உணர்வுகள் காயம்பட்டிருக்கும். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஒருநாள் உன்னால் அதைப் புரிந்துகொள்ள முடியும். என்மீது நீ கோபம் கொள்ளாமல் இரு...”
ஜினைடா என் கையை வேகமாக அழுத்திவிட்டு, முன்னால் ஓடினாள். நாங்கள் அவளுடைய வீட்டை நோக்கி நடந்தோம். மெய்டனோவ் தன்னுடைய "மேன்ஸ்லேயர்” என்ற கவிதையை வாசிப்பதற்குத் தயாராக இருந்தார். அது அப்போதுதான் பிரசுரமாகியிருந்தது. ஆனால், நான் அவன் வாசிப்பதைக் கேட்கவில்லை. அவர் உரத்த குரலில் கத்தினார். தன்னுடைய நான்கடிகள் இருக்கும் கவிதை வரிகளை வாசித்தார். வரிகள் தாளத்திற்கு நிகராக சிறிய மணிகளைப்போல சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தன. சத்தமாகவும், அர்த்தமற்றும் அவை இருந்தன. அப்போதும் நான் ஜினைடாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுடைய அந்த இறுதி வார்த்தைகளை நான் மனதிற்குள் செலுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
"எதிர்பாராமல் யாரென்று தெரியாத பகைவன் உன்னை ஆச்சரியப்படவும் ஆளவும் செய்கிறானா?”
மெய்டனோவ் திடீரென்று தன் மூக்கால் உறிஞ்சினார். என்னுடைய கண்களும் ஜினைடாவின் கண்களும் ஒன்றோடொன்று சந்தித்தன. அவள் தலையைக் குனிந்துகொண்டு, லேசாக வெட்கப்பட்டாள். நான் அவளுடைய சிவந்த கன்னங்களைப் பார்த்தேன். உணர்ச்சிவசப்பட்டு, அமைதியாக இருந்தேன். முன்பெல்லாம் நான் பொறாமைப் பட்டிருக்கிறேன். அந்த நிமிடம்தான் அவள் காதல் வயப்பட்டிருக்கும் விஷயமே என் மனதில் தோன்றியது. "நல்ல கடவுள். அவள் காதல் வயப்பட்டிருக்கிறாள்!”
என்னுடைய உண்மையான கவலைகள் அந்த தருணத்திலிருந்துதான் ஆரம்பமாயின. நான் என் மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டேன். என் மனதை மாற்றிக் கொண்டேன். அதை மீண்டும் மாற்றினேன். தொடர்ந்து அதை ஒரே மாதிரி இல்லாமல் செய்து கொண்டே இருந்தேன். என்னால் முடிந்த வரைக்கும், ஜினைடாவை ரகசியமாகக் கண்காணித்துக்கொண்டே இருந்தேன். அவளிடம் ஒரு மாறுதல் வந்து சேர்ந்திருக்கிறது. அது மட்டும் தெளிவாக தெரிந்தது. அவள் மட்டும் தனியாக "வாக்கிங்” செல்ல ஆரம்பித்தாள். அதுவும் நீண்ட தூரத்திற்கு. சில நேரங்களில் அவள் வீட்டிற்கு வந்திருக்கும் யாரையும் பார்க்கவே மாட்டாள். அவள் மணிக்கணக்காக தன்னுடைய அறைக்குள்ளேயே உட்கார்ந்திருந்தாள். இதுவரை அப்படிப்பட்ட ஒன்று அவளுடைய பழக்கமாக இருந்ததே இல்லை. திடீரென்று நான் அளவுக்கும் அதிகமாக அவளுடைய விஷயங்களுக்குள் நுழைகிறோமோ அல்லது மனதில் கற்பனை பண்ணிக்கொள்கிறோமோ என்றுகூட நினைத்தேன்.
"இவனாக இருப்பானோ? அல்லது அவனாக இருப்பானோ?” நான் எனக்குள் கேட்டுக் கொள்வேன். அவளுடைய ஆராதகர்களில் ஒவ்வொருவரையும் நினைத்து அவர்களுடன் மனதிற்குள் போராடிக் கொண்டிருப்பேன். கவுண்ட் மாலேவ்ஸ்கி மற்ற எல்லாரையும்விட அச்சத்தை உண்டாக்கக் கூடியவனாக இருந்தான் என்ற எண்ணம் என் மனதில் ரகசியமாகப்பட்டது. எல்லாவற்றையும் ஜினைடாவிற்காக தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்... இதை ஒத்துக்கொள்வதற்காக எனக்கு நானே வெட்கப்பட்டுக் கொண்டேன்.
நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த விஷயம் என் நாசியின் நுனியைத் தாண்டி செல்லவில்லை. அதன் ரகசியத் தன்மை யாரையும் எதுவும் செய்யவில்லை. டாக்டர் லூஷின் என்னால் கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
சமீபகாலமாக அவர்கூட மிகவும் மாறி விட்டிருந்தார்.
அவர் மிகவும் மெலிந்துபோய் விட்டிருந்தார். எப்போதும்போல அவர் சிரித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவருடைய சிரிப்பு உயிரற்றதாகவும், விருப்பமில்லாமல் சிரிப்பதைப் போலவும், மெல்லியதாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. முன்பு அவரிடம் இருந்த கிண்டல் கலந்த பேச்சு, குத்தல் வார்த்தைகள் ஆகியவற்றின் இடத்தில் நரம்புரீதியான எரிச்சல் விருப்பமில்லாமல் வந்து உட்கார்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்தது.
"நீ ஏன் தொடர்ந்து இங்கேயே இருந்து கொண்டிருக்கிறாய், இளைஞனே?” ஒருநாள் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார். ஜாஸிகினின் வரவேற்பறையில் நாங்கள் மட்டுமே தனியாக விடப்பட்டபோது இப்படியொரு கேள்வி அவரிடமிருந்து வந்தது. (இளம் இளவரசி தன்னுடைய "வாக்கிங்”கிலிருந்து இன்னும் திரும்பி வராமல் இருந்தாள். நடுங்கிக் கொண்டிருக்கும் மூத்த இளவரசியின் குரல் வீட்டிற்குள் கேட்டுக்கொண்டிருந்தது. அவள் வீட்டு வேலைக்காரியைத் திட்டிக் கொண்டிருந்தாள்). "நீ படிக்க வேண்டும்... வேலை செய்ய வேண்டும்... அதுவும் இளம் வயதில் இருக்கும்போதே... ம்... நீ என்ன செய்கிறாய்?”
"நான் வீட்டில் வேலை செய்கிறேன் என்று நீங்கள் கூற முடியாது.” நான் லேசாக சிரித்துக்கொண்டே பதில் கூறினேன்.
ஆனால், அந்த பதில் சிறிது தயக்கத்துடனே வெளியே வந்தது.
"நீ எவ்வளவோ வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாய். ஆனால், நீ நினைத்துக் கொண்டிருப்பது அதைப்பற்றி அல்ல. இருக்கட்டும்... நான் அதில் எந்த தவறையும் பார்க்கவில்லை. உன்னுடைய வயதில் இயற்கையின் முறைப்படி அப்படித்தான் காரியங்கள் நடக்கும். ஆனால், உன்னுடைய தேர்வில் நீ மிகவும் அதிர்ஷ்டமில்லாதவனாக இருக்கிறாய். இந்த வீடு எப்படிப்பட்டது என்று உனக்குத் தெரியாதா?”
"உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.” நான் சொன்னேன்.
"உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா? அந்த அளவிற்கு நீ மோசமாக இருக்கிறாய் என்று அர்த்தம். உன்னை எச்சரிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று நான் நினைக்கிறேன். என்னைப் போன்ற வயதான பிரம்மச்சாரிகள் இங்கே வரலாம். எங்களுக்கு அதனால் என்ன கேடு வரப்போகிறது? நாங்கள் கறாரான மனிதர்கள்... எதுவும் எங்களைக் காயப்படுத்தாது. அது எங்களுக்கு என்ன கெடுதலை உண்டாக்கி விட முடியும்? ஆனால், உன்னுடைய தோல் மிகவும் மெலிதானது... இந்தக் காற்று உனக்கு நல்லதல்ல... என்னை நம்பு... இந்த விஷயத்தால் உனக்கு கேடு உண்டாகும்!”
"எப்படி?”
"ஏன்? இப்போது நீ நன்றாக இருக்கிறாயா? நீ சீரான நிலைமையில் இருக்கிறாயா? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? நல்லது நடக்கிறதா?”
"ஏன்? நான் என்ன உணர்கிறேன்?” நான் சொன்னேன். அதே நேரத்தில்- டாக்டர் மிகவும் சரியாகவே கூறுகிறார் என்ற எண்ணம் என் இதயத்தில் இருந்தது.
"இங்கே பார்... இளைஞனே! இளைஞனே!” டாக்டர் தன்னுடைய பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் ஆரம்பிக்கும்போதே அவருடைய பேச்சில் என்னை அவமானப்படுத்துவதைப்போல ஏதோ விஷயம் அதில் அடங்கியிருக்கிறது என்பதை அவரின் இந்த இரண்டு வார்த்தைகளே தெரிவித்தன. "உன்னுடைய செயல்களால் உண்டான பயன் என்ன? கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உன் இதயத்தில் என்ன இருக்கிறதோ, அது உன் முகத்தில் தெரிகிறது. இதுவரை நடந்ததுதான் என்ன? அதே நேரத்தில்... பேசுவதால் என்ன பயன்? நானே இங்கு வந்திருக்கக்கூடாது. ஒருவேளை... (டாக்டர் தன்னுடைய உதட்டைக் கடித்துக் கொண்டார்) ஒரு வேளை... நான் அந்த அளவிற்கு புத்திசாலித்தனமான மனிதனாக இருக்கவில்லையென்றால்... இந்த விஷயம்தான் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. இது எப்படி? உன்னுடைய சிந்திக்கும் ஆற்றலுடன்... உன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கவில்லையா?”
"இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.
டாக்டர் என்னையே கிண்டல் கலந்த வெறியுடன் பார்த்தார்.
"என்னைப் பார்த்து நல்ல கேள்வி கேட்டாய்.” அவர் தனக்குத் தானே கூறிக் கொள்வதைப்போல சொன்னார்: "எனக்கு ஏதோ தெரியும் என்பதைப்போல... இருந்தாலும், திரும்பவும் நான் உனக்கு கூறுகிறேன்...” தன்னுடைய குரலை உயர்த்திக் கொண்டு அவர் தொடர்ந்து சொன்னார்: "இங்கே நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலை உனக்கு ஏற்றது அல்ல. இங்கே இருப்பது உனக்கு விருப்பமான விஷயமாக இருக்கும். அதனால் கிடைக்கப் போவது என்ன? ஒரு பசுமை சூழ்ந்த வீட்டில் இருப்பது என்பது இனிமையான நறுமணம் கமழும் அனுபவம்தான்... ஆனால் இங்கு ஒரு வாழ்க்கை இல்லையே! ஆமாம்... நான் என்ன சொல்கிறேனோ, அதன்படி நட. நீ உன்னுடைய கெய்டனோவ் வீட்டிற்கே போய் விடு.”
வயதான இளவரசி அப்போது உள்ளே வந்து விட்டாள். அவள் டாக்டரிடம் தன்னுடைய பல்வலியைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டாள். தொடர்ந்து ஜினைடா அங்கு வந்தாள்.
"வா...” வயதான இளவரசி சொன்னாள்: "நீங்கள் இவளை திட்ட வேண்டும் டாக்டர். ஒருநாள் முழுவதும் இவள் பனிக்கட்டி போட்ட குளிர்ந்த நீரைப் பருகிக் கொண்டிருக்கிறாள். அது இவளுக்கு நல்லதா? இவளுக்காக நீங்கள் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.”
"நீ ஏன் அதைச் செய்தாய்?” லூஷின் கேட்டார்.
"ஏன்? அதனால் என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது?”
"என்ன பாதிப்பா? நீ குளிர்ச்சியடைந்து இறந்து போவாய்.”
"உண்மையாகவா? நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்? நல்லது... அப்படி நடந்தால் மிகவும் நல்லது.”
"ஒரு நல்ல திட்டம்!” டாக்டர் முணுமுணுத்தார். வயதான இளவரசி வெளியே போய்விட்டாள்.
"ஒரு நல்ல திட்டம்!” ஜினைடா திரும்பச் சொன்னாள்: "வாழ்க்கை அந்த அளவிற்கு கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா? உங்களையே நினைத்துப் பாருங்கள்... அது நன்றாக இருக்கிறதா? அல்லது நான் அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் அதை உணரவில்லை என்பது உங்களின் எண்ணமா? அது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது... பனிக்கட்டி போட்ட குளிர்ச்சியான நீர்... ஒரு நிமிட சந்தோஷத்திற்காக வாழ்க்கையை இழப்பதைவிட நீங்கள் சொல்லக்கூடிய வாழ்க்கை அந்த அளவிற்கு மிகவும் உயர்வானது என்பதை உங்களால் உறுதியாக கூறமுடியுமா? நான் சொல்லக்கூடிய சந்தோஷத்தைப் பற்றி நான் பேசக் கூட மாட்டேன்!”
"சரி... மிகவும் நல்லது...” லூஷின் சொன்னார்: "சபல புத்தி... பொறுப்பற்ற தன்மை... இந்த இரண்டு வார்த்தைகளுக்குள் நீ அடக்கம். உன்னுடைய முழு இயல்புமே இந்த இரண்டு வார்த்தைகளில் அடங்கி விடுகின்றன...”
ஜினைடா அதிர்வடைந்து சிரித்தாள்.
"நீங்கள் பதவிக்கு மிகவும் தாமதமாக வந்திருக்கிறீர்கள், டாக்டர்.
நீங்கள் பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும் தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் காலங்களுக்குப் பின்னால் இருக்கிறீர்கள். உங்களுடைய கண்ணாடியை எடுத்து அணிந்து கொள்ளுங்கள். நான் இப்போது சபல புத்தியுடன் நகைச்சுவையாகப் பேசவில்லை. உங்களையெல்லாம் முட்டாள்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று... அதில் நிறைய தமாஷான விஷயங்கள் இருந்தன! பொறுப்பற்ற தன்மை என்று கூறினீர்களே! மிஸ்டர் வ்லாடிமிர்...” திடீரென்று ஜினைடா சொன்னாள்- அழுத்தமான குரலில்: "இந்த அளவிற்கு கவலை கொண்ட முகத்துடன் இருக்கக்கூடாது. எனக்காக பரிதாபப்படும் மனிதர்களை நான் ஏற்றுக் கொள்வதே இல்லை.” அவள் வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.
"இது உனக்கு கெட்டது... உனக்கு மிகவும் கெட்டது... இந்த சூழ்நிலை இளைஞனே!” லூஷின் என்னைப் பார்த்து மீண்டுமொருமுறை கூறினார்.
அதே நாளின் சாயங்கால பொழுதில் வழக்கமான விருந்தாளிகள் ஜாஸிகினின் இல்லத்தில் கூடியிருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
உரையாடல் மெய்டனோவின் கவிதையைப் பற்றி திரும்பியது. ஜினைடா அதைப் பற்றிய தன்னுடைய உண்மையான பாராட்டை வெளியிட்டாள்.
"ஆனால், உனக்கு என்ன தெரியும்? நான் கவிஞராக இருந்திருந்தால், நான் முற்றிலும் வேறுபட்ட விஷயங்களைத் தேர்ந்தெடுத்திருப்பேன். சொல்லப்போனால்- அவை எல்லாமே முட்டாள்தனமாக இருந்தன. ஆனால், சில நேரங்களில் வினோதமான ஐடியாக்கள் என்னுடைய தலைக்குள் வரும். குறிப்பாக புலர்காலை வேளையில் நான் தூங்காமல் இருக்கும்போது... அப்போது வானம் ரோஸ் வண்ணத்திலும் சாம்பல் நிறத்திலும் ஒரே நேரத்தில் மாறிக் கொண்டிருக்கும். நான்... உதாரணத்திற்கு... நீங்கள் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டீர்கள் அல்லவா?”
"இல்லை... இல்லை..." நாங்கள் எல்லாரும் ஒரே குரலில் சத்தம் போட்டு சொன்னோம்.
"நான் விளக்கிக் கூறுகிறேன்...” அவள் தன்னுடைய கைகளை மடக்கி மார்பின் குறுக்காக வைத்துக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டே தொடர்ந்து சொன்னாள்: "இளம் பெண்கள் கூட்டமாக... இரவு நேரத்தில்... ஒரு அழகான படகில்... ஒரு அமைதியான நதியில்... நிலவு பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் வெள்ளை நிற மலர்களாலான மாலைகளை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் பாடுகிறார்கள். எப்படிப்பட்ட பாடல் என்று உங்களுக்குத் தெரியுமா? அருமையான ராகத்துடன்...”
"அப்படியா? அப்படியா? தொடர்ந்து சொல்...” மெய்டனோவ் கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவனைப்போல கூறினான்.
"திடீரென்று... உரத்த சத்தம்... சிரிப்பு... விளக்கொளிகள்... கரையில் ஆரவாரம்... "பக்கான்டெஸ்” இனதைச் சேர்ந்த ஒரு கூட்டம் மனிதர்கள் பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். சத்தம் போட்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்... இதைப்பற்றி மனதில் ஒரு ஓவியம்போல வரைந்து கொள்ளவேண்டியது உன்னுடைய வேலை மிஸ்டர் கவிஞரே! அந்த விளக்கொளிகள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புகை மண்டலம் அதிகமாக இருப்பதும் எனக்குப் பிடிக்கும். "பக்கான்டெஸ்” மக்களின் கண்கள் அவர்களுடைய தலையில் இருக்கும் மாலைகளுக்குக் கீழே பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த மாலைகள் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். புலிகளின் தோல்களை மறந்துவிடக்கூடாது... விலைமதிப்புள்ள பொருட்கள்... பொன்... ஏராளமான பொன்...”
"பொன் எங்கே இருக்க வேண்டும்?” மெய்டனோவ் தன்னுடைய நீளமான தலைமுடியைப் பின்னால் தள்ளிவிட்டவாறு மூக்கை உறிஞ்சிக் கொண்டே கேட்டான்.
"எங்கே? அவர்களுடைய தோள்களில், கைகளில், கால்களில்... எல்லா இடங்களிலும். அந்தக் காலத்தில் பெண்கள் பொன்னாலான ஆரங்களை தங்களுடைய கணுக்கால்களில் அணிவார்கள் என்று கூறுவார்கள். இளம்பெண்கள் தாங்கள் பாடிக்கொண்டிருப்பதை நிறுத்தி விடுகிறார்கள். அதை அவர்களால் தொடர்ந்து பாட முடியவில்லை. ஆனால், அவர்கள் கலக்கமடையவில்லை. நதி அவர்களை கரைக்குக் கொண்டு செல்கிறது. திடீரென்று அவர்களில் ஒரு இளம் பெண் மெதுவாக எழுகிறாள்... இதை மிகவும் அருமையாக விளக்கிக் கூறவேண்டும். நிலவொளியில் அவள் எப்படி மெதுவாக எழுந்து நிற்கிறாள் என்பதை... அவளுடைய மற்ற தோழிகள் எப்படி பயப்படுகிறார்கள் என்பதை... அவள் படகின் ஒரு நுனியில் காலைத் தூக்கி வைக்கிறாள். "பக்கான்டெஸ்” இனத்தைச் சேர்ந்தவர்கள் அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். இரவிலும் இருட்டிலும் அவளைத் தட்டாமாலை சுற்றுகிறார்கள்... இந்த இடத்தில் மேகங்கள் புகைகளைப்போல திரண்டிருக்க வேண்டும்... எல்லா விஷயங்களும் ஒரு குழப்பத்திற்குள் சிக்கிக் கொள்கின்றன. அவர்களுடைய கூச்சல் கலந்த அழுகைச் சத்தத்தைத் தவிர, வேறு எதுவுமே கேட்கவில்லை. அவளுடைய கழுத்து மாலை கரையில் விழுந்து கிடக்கிறது...”
ஜினைடா நிறுத்தினாள். (ஓ! அவள் காதல்வயப்பட்டிருக்கிறாள்! நான் மீண்டும் நினைத்தேன்).
"அவ்வளவுதானா?” மெய்டனோவ் கேட்டான்.
"அவ்வளவுதான்...”
"அது ஒரு முழு கவிதைக்கும் கருப்பொருளாக இருக்க முடியாது.” அவன் தெளிவான குரலில் சொன்னான்: "ஆனால், நான் உன்னுடைய கருத்தை ஒரு பாடலின் பகுதிக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்”
"காதல் பாடலா?” மாலேவ்ஸ்கி கேட்டான்.
"கிட்டத்தட்ட காதல் பாடல்தான். பைரனின் பாடலைப்போல...”
"அப்படியா? எனக்குத் தெரிந்த வரையில்... ஹ்யூகோ, பைரனைத் தோற்கடித்து விட்டார்.”
இளம் கவுண்ட் அலட்சியமான குரலில் சொன்னான்: "அவர் மிகவும் அதிக ஆர்வத்தைத் தூண்டும் அளவிற்கு கவிதை இயற்றக் கூடியவர்.”
"ஹ்யூகோ முதல் தலைமுறையின் மிகச்சிறந்த எழுத்தாளர்.” மெய்டனோவ் பதில் கூறினான்.
"என் நண்பன் டோன்கோஷீவ் தன்னுடைய ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட காதல் காவியத்தில்...”
"ஆ! கேள்விக்குறிகள் அந்தப் புத்தகத்தில்தானே தலைகீழாகப் போடப்பட்டிருக்கும்?” ஜினைடா இடையில் புகுந்து கேட்டாள்.
"ஆமாம்... ஸ்பானிஷ் மொழியில் அப்படி எழுதுவதுதான் வழக்கம். நான் டோன்கோஷீவ் எழுதிய படைப்பைப் படித்தேன்...”
"வா... நீ காவிய காலத்தையும் ரொமான்டிக் காலத்தையும் பற்றி விவாதம் செய்யப் போகிறாய்...” ஜினைடா இரண்டாவது முறையாக இடைமறித்தாள்.
"இதைவிட நாம் ஏதாவது விளையாடலாம்...”
"சீட்டு...?” லூஷின் கேட்டார்.
"இல்லை. சீட்டு விளையாட்டு சோர்வைத் தரும் விளையாட்டு. ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட்டுப் பார்ப்பது...” (அந்த விளையாட்டை தனக்கென்று கண்டுபிடித்தவளே ஜினைடாதான். ஒரு பெயர் கூறப்படும். அங்கிருக்கும் எல்லாரும் அதை இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்... யார் மிகச்சிறந்த ஒப்பீட்டைக் கூறுகிறார்களோ, அவர்களுக்கு பரிசு கிடைக்கும்) அவள் சாளரத்தின் அருகில் சென்றாள். சூரியன் மறையும் நிலையில் இருந்தது. வானத்தின் உச்சியில் சிவப்பு நிறத்தில் பெரிய மேகங்கள் நின்று கொண்டிருந்தன.
"அந்த மேகங்கள் எதைப்போல இருக்கின்றன?” ஜினைடா கேட்டாள். எங்களின் பதிலுக்காக காத்திருக்காமல் அவள் சொன்னாள்: "ஆன்டனியைச் சந்திப்பதற்காக கிளியோபாட்ரா பொன்னாலான கப்பலில் பயணம் செய்யும்போது, அவளுடன் சென்ற மனிதர்களைப் போல அவை எனக்குத் தோன்றுகின்றன...
மெய்டனோவ், உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? நீதான் நீண்ட நாட்களுக்கு முன்னால் அதைப் பற்றி என்னிடம் கூறினாய்!”
நாங்கள் எல்லாரும் "ஹேம்லட்”டில் வரும் போலோனியஸைப் போல, வானத்திலிருக்கும் மேகங்கள் படகில் செல்லும் மனிதர்களை ஞாபகப்படுத்துவதாகவே உணர்ந்தோம். எங்களில் ஒருவர்கூட அதைவிட சிறந்த ஒப்பீட்டைக் கண்டுபிடிக்கவில்லை.
"அப்போது ஆன்டனிக்கு என்ன வயது இருக்கும்?” ஜினைடா கேட்டாள்.
"ஒரு இளைஞன்... அதில் சந்தேகமே இல்லை.” மாலேவ்ஸ்கி சொன்னான்.
"ஆமாம்... ஒரு இளைஞன்...” அதை உறுதிப்படுத்திக் கூறுகிற மாதிரி மெய்டனோவ் சொன்னான்.
"என்னை மன்னிக்க வேண்டும்...” உரத்த குரலில் கூறினார் லூஷின்: "அப்போது அவனுக்கு நாற்பது வயதைவிட அதிகம்.”
"நாற்பதுகளைவிட அதிகமா?” ஜினைடா திரும்பக் கூறினாள். கூறிக்கொண்டே அவரையே வெறித்துப் பார்த்தாள்.
நான் உடனடியாக வீட்டிற்குச் சென்று விட்டேன். "அவள் காதல் வயப்பட்டிருக்கிறாள்...” என்னுடைய உதடுகள் என்னையே அறியாமல் திரும்ப கூறிக்கொண்டிருந்தன: "ஆனால், யாரிடம்?”
நாட்கள் கடந்தோடின. ஜினைடா மேலும் மேலும் வினோதமானவளாக ஆகிக் கொண்டிருந்தாள். அதிகமாக... அதிகமாக... புரிந்துகொள்ள முடியாதவளாக இருந்தாள். ஒருநாள் நான் அவளைத் தேடிச் சென்றேன். அவள் ஒரு கூடை நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அவளுடைய தலை மேஜையின் கூர்மையான ஓரத்தில் அழுத்திக் கொண்டிருந்தது. அவள் தலையை உயர்த்தினாள்... அவளுடைய முகம் முழுவதும் கண்ணீரால் ஈரமாகி விட்டிருந்தது.
"ஆ! நீயா?” அவள் ஒரு குரூரமான புன்னகையுடன் சொன்னாள்: "இங்கே வா.”
நான் அவள் அருகில் சென்றேன். அவள் தன்னுடைய கைகளை என் தலையில் வைத்தாள். திடீரென்று என் தலைமுடியைப் பிடித்து அவள் இழுக்க ஆரம்பித்தாள்.
"இது எனக்கு வேதனையைத் தருகிறது.”
"அப்படியா? வலிக்கிறதா? என்னை எதுவுமே வேதனைப்படுத்தவில்லை என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” அவள் கேட்டாள்.
"ஆ......!” அவள் திடீரென்று உரத்த குரலில் கத்தினாள். நான் பார்க்கும்போது அவள் ஒருசிறு கொத்து மயிரை வெளியே பிடுங்கி விட்டிருந்தாள். "நான் என்ன செய்திருக்கிறேன்? அப்பாவி மிஸ்டர் வ்லாடிமிர்!”
அவள் மிகவும் கவனமாக தான் பிடுங்கிய மயிரைக் கையால் தடவி விட்டாள். அதை தன்னுடைய விரலில் சுற்றி, ஒரு மோதிரத்தைப்போல இருக்கும் வண்ணம் முடிச்சைப் போட்டாள்.
"நான் உன்னுடைய தலை முடியை ஒரு "லாக்கெட்”டிற்குள் போட்டு அதை என்னுடைய கழுத்தில் அணியப் போகிறேன்.” அவள் சொன்னாள். அப்போதும் கண்ணீர் அவளுடைய கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. "சொல்லப்போனால் அது உனக்கு ஏதோ ஒரு வகையில் சிறிய ஆறுதலாகக்கூட இருக்கும்... இப்போதைக்கு குட்பை.”
நான் வீட்டிற்குச் சென்றேன். அங்கு நிலவிக் கொண்டிருந்த சூழ்நிலை நான் விரும்புகிற மாதிரி இல்லை. என் அன்னை என் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் ஏதோ ஒரு விஷயமாக அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். என் தந்தை அவருடைய வழக்கப்படி, பணிவு கலந்த ஒரு குளிர்ச்சியான அமைதியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அடுத்த நிமிடம் அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார். என் தாய் என்ன சொல்கிறாள் என்பது என் காதில் விழவில்லை. அந்த விஷயத்தைப் பற்றி பேசவேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. ஒரு விஷயம் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் முடிந்தவுடன், அவள் தன்னுடைய அறைக்கு வரும்படி எனக்கு ஆள் அனுப்பினாள். இளவரசியின் வீட்டிற்கு நான் அடிக்கடி செல்வது குறித்து தனக்கு இருக்கும் விருப்பமின்மையை அவள் வெளிப்படுத்தினாள். அவளைப் பொறுத்த வரையில், இளவரசி எந்தவித பயனும் இல்லாதவள். நான் அவளுடைய கையில் முத்தம் தந்தேன். (ஒரு உரையாடலை முடிவுக்குக் கொண்டுவர நான் எப்போதும் செய்து கொண்டிருந்தது இதைத்தான்). அதற்குப் பிறகு நான் என் அறைக்குச் சென்று விட்டேன். ஜினைடாவின் கண்ணீர் என்னை பாடாய்படுத்திவிட்டது. என்ன நினைப்பது என்பதைப் பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை. நான் எனக்குள் அழுவதற்கு தயாராக இருந்தேன். சொல்லப்போனால்- நான் பதினாறு வயது நிறைந்த இளைஞனாக இருந்தாலும், நானே ஒரு குழந்தைதானே! இப்போது நான் மாலேவ்ஸ்கியைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டேன். சொல்லப்போனால்- பைலோவ்ஸொரோவ்தான் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அதிகமாக பயமுறுத்தக் கூடிய மனிதனாக ஆகி விட்டிருந்தான். அவன் மாலேவ்ஸ்கியை ஒரு ஓநாய் ஆட்டிக்குட்டியைப் பார்ப்பதைப்போல பார்த்தான். ஆனால், நான் எதைப்பற்றியும் நினைக்கவில்லை. அப்படி நினைத்து ஒரு பயனும் இல்லை. நான் கற்பனை பண்ணிக் கொண்டிருப்பதிலேயே என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். எப்போதும் மற்றவர்களிடமிருந்து விடுபட்டு தனிமையிலேயே இருந்து கொண்டிருந்தேன். சிதிலமடைந்து கிடந்த அந்த பசுமை சூழ்ந்த வீடு எனக்கு விருப்பமான ஒன்றாக ஆகிவிட்டிருந்தது. நான் சுவரின் மேற்பகுதிக்கு ஏறிச் சென்று, அங்கு போய் உட்கார்ந்து கொண்டிருப்பேன். சந்தோஷமற்றவனாகவும், தனிமைப்பட்டவனாகவும், கவலையில் மூழ்கிக் கிடக்கும் இளைஞனாகவும் நான் இருந்தேன். என்னைப் பற்றி நினைக்கும்போது எனக்கே கவலையாக இருந்தது. மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த அந்த உணர்ச்சிகரமான ஞாபகங்கள் எந்த அளவிற்கு எனக்கு ஆறுதலாக இருந்தன! அவற்றில் நான் எப்படி என்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தேன்!
ஒருநாள் நான் சுவரின்மீது உட்கார்ந்து கொண்டு தூரத்தைப் பார்த்தவாறு மணிகள் ஒலிப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். திடீரென்று எனக்குள் ஏதோ மிதப்பதைப்போல உணர்ந்தேன். காற்றின் வருடல் அல்ல... காற்றால் உண்டான நடுக்கமல்ல... ஒரு அருமையான நறுமணம்... யாரோ அருகில் இருப்பதைப் போன்ற ஒரு தோணல்... நான் கீழே பார்த்தேன். கீழே- பாதையில் மெல்லிய சாம்பல் நிற கவுன் அணிந்து, தன் தோளில் பிங்க் நிறத்தில் சிறிய குடையை வைத்துக் கொண்டு ஜினைடா வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் என்னைப் பார்த்துவிட்டாள். பார்த்ததும் நின்றாள். தன்னுடைய வைக்கோலாலான தொப்பியின் ஒரத்தைப் பின்னால் நகர்த்தியவாறு அவள் தன்னுடைய பளபளப்பான கண்களை என்னை நோக்கி உயர்த்தினாள்.
"இவ்வளவு பெரிய உயரத்தில் இருந்து கொண்டு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” அவள் சிறிது புன்னகை தவழ என்னைப் பார்த்துக் கேட்டாள். "வா...” அவள் தொடர்ந்து சொன்னாள்: "நீ என்னைக் காதலிக்கும் விஷயத்தை எப்போதும் என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறாய். நீ உண்மையிலேயே என்னைக் காதலிப்பதாக இருந்தால், கீழே சாலையில் எனக்கு அருகில் குதி....”
ஜினைடா அந்த வார்த்தைகளைக் கூறி முடித்திருக்கக்கூட மாட்டாள், யாரோ என்னை பின்னால் இருந்து தள்ளிவிட்டதைப் போல, நான் கீழே குதித்தேன்.
அந்தச் சுவர் கிட்டத்தட்ட பதினான்கு அடி உயரத்தைக் கொண்டது. நான் நேராக தரையில் வந்து சேர்ந்தேன். ஆனால், அதில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமோ மிகப் பெரியது. என்னால் சாலையில் பாதத்தைச் சரியாக பதிக்க முடியவில்லை. நான் கீழே விழுந்தேன். ஒரு நிமிட நேரம் மயக்க மடைந்து விட்டேன்.
நான் மீண்டும் முன்பு இருந்த நிலைக்குவர முயற்சித்துக் கொண்டிருந்தபோது, கண்களைத் திறக்காமலேயே, ஜினைடா எனக்கு அருகில் இருப்பதை உணர்ந்தேன். "என் அன்பு பையனே...” அவள் எனக்கு மேலே வளைந்து கொண்டு கூறினாள். அவளுடைய குரலில் குறிப்பிடத்தக்க மென்மைத்தனம் கலந்திருந்தது. "நீ எப்படி நடந்தாய்? நீ எப்படி கீழ்ப்படிந்து நடந்தாய்? நான் உன்னை காதலிக்கிறேன் என்ற விஷயம் உனக்குத் தெரியும். எழுந்திரு...”
அவளுடைய மார்பகம் எனக்கு மிகவும் அருகில் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தது. அவளுடைய கைகள் என்னுடைய தலையைத் தடவிக் கொண்டிருந்தன. திடீரென்று... அந்த நிமிடம் என்னுடைய உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்? அவளுடைய மென்மையான, புத்தம்புது உதடுகள் என்னுடைய முகத்தை முத்தங்களைக் கொண்டு மறைத்தன... அவை என்னுடைய உதடுகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. அதற்குப் பிறகு என்னுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை வைத்து நான் சுயஉணர்விற்குத் திரும்பிவந்து விட்டேன் என்பதைப் புரிந்து கொண்டாள். இருப்பினும், அப்போதும் நான் என் கண்களை மூடிக்கொண்டுதான் இருந்தேன். அவள் வேகமாக எழுந்து கொண்டே சொன்னாள்: "வா, எழுந்திரு.. குறும்புக்கார பையா... முட்டாள்... நீ ஏன் தூசியில் விழுந்து கிடக்கிறாய்?” நான் எழுந்தேன். "என்னுடைய சிறிய குடையை என்னிடம் கொடு” ஜினைடா சொன்னாள்:
"நான் அதை வேறு எங்காவது வீசி எறிகிறேன். இந்த மாதிரி என்னையே வெறித்துப் பார்க்காதே. எந்த அளவிற்கு கேலியாகவும் முட்டாள்தனமாகவும் இருக்கிறது! நீ காயப்படவில்லை... இல்லையா? குப்பைமேனி செடிகளால் பாதிக்கப்பட்டாய்... நான் சொல்லட்டுமா? என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்காதே. நான் சொல்கிறேன்... ஆனால், அவன் புரிந்து கொள்ளவே இல்லை...
அவன் பதில் கூறுவதே இல்லை...” தொடர்ந்து அவள் தனக்குத்தானே கூறிக்கொள்வதைப்போல கூறினாள்: "வீட்டிற்குச் செல், மிஸ்டர் வ்லாடிமிர். உடலை நன்றாக சுத்தம் செய்... என்னைப் பின்பற்றி வரவேண்டும் என்று நினைக்காதே. இல்லாவிட்டால் நான் மிகவும் கோபத்திற்கு ஆளாகிவிடுவேன்... திரும்பவும் எந்த சமயத்திலும் பின்னால் வரவேண்டும் என்று நினைக்காதே...”
அவள் தான் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தையைக்கூட முடிக்கவில்லை. அதற்குள் மிகவும் வேகமாக அங்கிருந்து நடந்து சென்றுவிட்டாள். நான் சாலையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். என் கால்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. குப்பைமேனி என் கைகளைக் குத்திவிட்டிருந்தன. என் முதுகு பலமாக வலித்தது. தலை சுற்றுவதைப்போல இருந்தது. ஆனால், நான் சந்தித்த சுகமான அனுபவம் இன்னொரு முறை என் வாழ்க்கையில் வரப்போவதில்லை. அது என்னுடைய நரம்புகளில் ஒரு இனிய வலியாக மாறியது. அது இறுதியில் என்னுடைய சந்தோஷமான குதித்தல்களிலும், துள்ளல்களிலும், உரத்த கத்தல்களிலும் வெளிப்பட்டது. ஆமாம்... நான் இன்னும் ஒரு குழந்தையாகவே இருந்தேன்.
அன்று முழுவதும் நான் மிகவும் கர்வம் கொண்டவனாகவும், மனம் லேசாகிவிட்ட மனிதனாகவும் இருந்தேன். ஜினைடா முத்தங்களைத் தந்த உணர்வை என் முகத்தில் தொடர்ந்து நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் சந்தோஷப் பெருமிதத்துடன் நான் மனதில் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தேன். நான் சந்திக்க வேண்டும் என்றே மனதில் நினைத்திராத அவள் அளித்த இந்த புதிய உணர்வுகளையும், எதிர்பாராமல் வந்து சேர்ந்த மகிழ்ச்சியையும் நான் இறுக அணைத்துக் கொண்டேன். உடனடியாக விதியிடம் சென்று, "நான் இப்போதே போகிறேன். இறுதியாக ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டுவிட்டு இறந்து விடுகிறேன்” என்று கூறவேண்டும்போல எனக்குத் தோன்றியது. ஆனால், மறுநாள் அந்த கட்டடத்திற்குள் நுழைந்தபோது, நான் மிகுந்த பதைபதைப்பை அடைந்தேன். நான் அதை மரியாதைக்குரிய தன்னம்பிக்கை உணர்விற்குப் பின்னால் மறைத்து வைக்க முயன்றேன். ஒரு பக்குவப்பட்ட மனிதன் தன் மனதில் இருக்கும் தைரியத்தை எப்படி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருப்பானோ, அப்படிப்பட்ட ஒருவனாக நான் நடந்துகொண்டேன். ஜினைடா என்னை மிகவும் சாதாரணமாக வரவேற்றாள். அவளிடம் எந்தவிதமான உணர்ச்சி வெளிப்பாடும் இல்லை. அவள் சாதாரணமாக தன் கையை என்னுடன் குலுக்கி என்னைப் பார்த்து நான் ஏன் கருப்பு, நீல நிறங்களில் ஆடைகள் அணியவில்லை என்று கேட்டாள். என்னுடைய முழு தன்னம்பிக்கை உணர்வும், புரியாத புதிரைப் போன்றிருந்த அடையாளங்களும் உடனடியாக மறைந்து போயின. அத்துடன் என்னுடைய பதைபதைப்பும்.
அதே நேரத்தில்- நான் எதையும் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு பெரிதாக எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஜினைடாவின் செயலைப் பார்க்கும்போது, ஒரு வாளி குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து என் மீது ஊற்றியதைப்போல இருந்தது. அவளுடைய கண்களில் நான் ஒரு குழந்தையாகத் தெரிவதைப்போல எனக்குத் தோன்றியது.
அதுதான் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருந்தது! ஜினைடா அறைக்குள் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்து ஒரு சிறிய புன்னகையை- எப்போதெல்லாம் அவள் என் கண்களைச் சந்திக்கிறாளோ, அப்போதெல்லாம் தவழ விட்டாள். ஆனால், அவளுடைய சிந்தனைகளோ எங்கோ தூரத்தில் இருந்தன. அதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. "நேற்று எனக்குள் என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் கூற ஆரம்பிக்கட்டுமா?” நான் நினைத்தேன்: "அவளிடமே கேட்க வேண்டும். அவள் அந்த அளவிற்கு வேகமாக எங்கே போய்க் கொண்டிருந்தாள்? அதை கட்டாயம் கண்டுபிடித்தே ஆகவேண்டும்...” ஆனால், ஒரு விரக்தி உணர்வுடன், நான் வெறுமனே நடந்து ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விட்டேன்.
பைலோவ்ஸொரோவ் அறைக்குள் வந்தான். அவனைப் பார்க்கும் போது எனக்கு ஒரு நிம்மதி வந்தது.
"உனக்கு ஒரு அமைதியான குதிரையைத் தேடிக் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை.” அவன் தழுதழுத்த குரலில் சொன்னான்: "ஃப்ரெய்டாக் ஒரு குதிரையைப் பற்றி சொன்னான். ஆனால், அதன்மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது.”
"நீ எதற்கு பயப்படவேண்டும்? என்னை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு அனுமதி...”
"நான் ஏன் பயப்படுகிறேனா? ஏன்? உனக்கு எப்படி குதிரைச் சவாரி செய்வது என்பதே தெரியாது. கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். எது வேண்டுமானாலும் நடக்கலாம்! திடீரென்று உனக்கு ஏன் இப்படியொரு அதிரடி எண்ணம் வந்து சேர்ந்திருக்கிறது?”
"வா... அது என்னுடைய விஷயம். காட்டு மனிதனே! அந்த விஷயத்தைப் பற்றி நான் ப்யோர்வாசிலிவிட்சிடம் விசாரித்துக் கொள்கிறேன்.” (என்னுடைய தந்தையின் பெயர்தான் ப்யோர்வாசிலிவிட்ச்). அவருடைய பெயரை இந்த அளவிற்கு மென்மையாகவும், சர்வ சாதாரணமாகவும் அவள் உச்சரித்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் உண்டானது. அவர் அவளுக்காக அந்த உதவியைக் கட்டாயம் செய்வார் என்று அவள் முழுமையான நம்பிக்கையுடன் இருப்பதைப்போல அவளின் செயல் இருந்தது.
"தாராளமாக... அப்படியென்றால் நீ அவருடன் வெளியே குதிரைச் சவாரி செய்யலாம் என்று நினைத்திருக்கிறாயா?”
"நான் அவருடன் போகிறேனா இல்லாவிட்டால் வேறு யாருடனாவது போகிறேனா என்பது உன்னுடைய விஷயம் அல்ல. எப்படிப் பார்த்தாலும்... நிச்சயம் உன்னுடன் இல்லை!”
"என்னுடன் இல்லை...” பைலோவ்ஸொரோவ் அதையே திரும்பச் சொன்னான்: "உன் விருப்பப்படி நடக்கட்டும்... சரி... உனக்காக நான் குதிரையைக் கண்டுபிடிக்கிறேன்!”
"சரி... இப்போது ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள். ஏதாவது கிழட்டுப் பசுவை அனுப்பி வைத்துவிடாதே. நான் குதிரையின்மீது ஏறி மிகவும் வேகமாகப் பாய்ந்து செல்ல திட்டமிட்டிருக்கிறேன் என்பதை முன்கூட்டியே கூறி விடுகிறேன்!”
"எப்படி வேண்டுமானாலும் வேகமாக குதிரைமீது ஏறி பாய்ந்து செல்... யாருடன்? நீ சவாரி செய்யப்போவது மாலேவ்ஸ்கியுடனா?”
"ஏன், அவருடன் சவாரி செய்யக்கூடாதா? வா... அமைதியாக இரு...” அவள் தொடர்ந்து சொன்னாள்: "என்னையே அப்படி வெறித்துப் பார்க்காதே. நான் உன்னையும் அழைத்துச் செல்வேன். உனக்கே தெரியும்- இப்போது என் மனதில் இருப்பது மாலேவ்ஸ்கி... சரியா?” அவள் தன் தலையை ஆட்டினாள்.
"நீ என்னை தேற்றுவதற்காக அப்படிக் கூறுகிறாய்...” பைலோவ் ஸொரோவ் முனகினான்.
ஜினைடா பாதி கண்களை மூடியிருந்தாள். "இது உனக்கு ஆறுதலாக இருக்கிறதா? ஊ... ஊ.. ஊ...” அவள் வேறு எந்த வார்த்தையும் கிடைக்கவில்லை என்பதைப்போல இறுதியாகச் சொன்னாள்: "நீ... மிஸ்டர் வ்லாடிமிர், எங்களுடன் நீயும் வருகிறாயா?”
"எனக்கு விருப்பமில்லை... ஒரு பெரிய கூட்டத்துடன்..” நான் என் கண்களை உயர்த்தாமலேயே சொன்னேன்.
"ஒரு தனி உலகத்தை விரும்புகிறாயா? சரி... சுதந்திரத்தை விரும்புவர்களுக்கு சுதந்திரம்... ஞானிகளுக்கு சொர்க்கம்...” அவள் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டே சொன்னாள்: "பைலோவ்ஸொரோவ், நீ கிளம்பு... உன் வேலையைப் பார். நாளைக்கு எனக்கு ஒரு குதிரை கட்டாயம் வேண்டும்.”
"ஓ... பணம் எங்கிருந்து வரும்?” வயதான இளவரசி கேட்டாள். அதைக்கேட்டு ஜினைடா கோபத்துடன் சொன்னாள்: "நான் அதை உங்களிடம் கேட்க மாட்டேன். பைலோவ்ஸொரோவ் என்னை நம்புவார்.”
"அவன் உன்னை நம்புவான்... அவன் நம்புவானா?” வயதான இளவரசி முணுமுணுத்தாள். அடுத்த நிமிடம் அவள் உரத்த குரலில் கத்தினாள்: "துனியாஷ்கா!”
"அம்மா, நான் உங்களுக்கு ஓசை உண்டாக்குவதற்கு ஒரு "பெல்” தந்திருக்கிறேன்...” ஜினைடா சொன்னாள்.
"துனியாஷ்கா!” கிழவி மீண்டும் சொன்னாள்.
பைலோவ்ஸொரோவ் புறப்பட்டான். நான் அவனுடன் சேர்ந்து வெளியேறினேன். என்னைத் தடுப்பதற்கு ஜினைடா முயற்சிக்கவே இல்லை.
மறுநாள் நான் சீக்கிரமே எழுந்து ஒரு குச்சியை வெட்டி கையில் வைத்துக்கொண்டு நகரத்தின் கேட்டுகளைத் தாண்டி சென்றேன். என் மனதிற்குள் இருந்த கவலைகளின் காரணமாக நான் நடந்து செல்லலாம் என்று நினைத்தேன். அது ஒரு அழகான நாளாக இருந்தது. நல்ல பிரகாசம் இருந்தது. அதிகமான வெப்பம் இல்லை. ஒரு மென்மையான காற்று பூமிக்கு மேலே சிறிய ஓசைகளை உண்டாக்கிக் கொண்டு, எல்லாவற்றையும் லேசாக ஆடச் செய்து கொண்டு, அதேநேரத்தில்- எதையும் தொந்தரவு செய்யாமல் வீசிக் கொண்டிருந்தது. நான் மலைகளின்மீதும் மரங்களுக்கு மத்தியிலும் நீண்ட நேரம் உலாவிக்கொண்டிருந்தேன். நான் சந்தோஷத்தை உணரவில்லை. கவலையில் மூழ்கிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நான் வீட்டை விட்டே வெளியேறினேன். ஆனால், இளமை, அருமையான காலநிலை, புத்தம்புது காற்று, வேகமான அசைவுகளால் உண்டான சந்தோஷம், இனிய சூழ்நிலை, ஒரு அமைதியான மூலையில் அடர்த்தியாக இருந்த புற்களின்மீது படுத்திருந்தது- இவை எல்லாம் அதை வென்றுவிட்டன. எப்போதும் மறக்க முடியாத அந்த வார்த்தைகளைப் பற்றிய நினைவுகள், அந்த முத்தங்கள்- இவை மீண்டும் என் மனதில் வேகமாக வந்து மோதிக் கொண்டிருந்தன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜினைடா என்னுடைய தைரியத்திற்கும், ஹீரோயிசத்திற்கும் நேர்மையாக இருப்பதில் தவறு செய்யமாட்டாள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது இனிமையாக இருந்தது. "என்னைவிட அவளுக்கு மற்றவர்கள் மேலானவர்களாகத் தோன்றலாம்.” நான் மனதிற்குள் நினைத்தேன்: "அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், மற்றவர்கள் தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதைத்தான் கூறமுடியும். நான் அதைச் செய்துவிட்டேன். அவளுக்காக நான் செய்வதற்கு இதற்குமேல் வேறு என்ன இருக்கிறது?” என்னுடைய கற்பனை நீண்டு கொண்டிருந்தது. பகைவர்களின் கைகளிலிருந்து அவளை நான் எப்படி காப்பாற்றுவேன் என்பதை நான் எனக்குள் கற்பனை பண்ணிப் பார்க்க ஆரம்பித்தேன். சிறையிலிருந்து பலத்தை பயன்படுத்தி, ரத்தம் சொட்டச் சொட்ட நான் எப்படி விடுதலையடையச் செய்து வெளியே கொண்டு வந்து, அவளின் பாதங்களில் ஓய்வெடுப்பேன் என்பதை நினைத்துப் பார்த்தேன். எங்களுடைய வரவேற்பறையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஓவியத்தை நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். மலேக்- அடேல் மாட்டில்டாவைத் தூக்கிக் கொண்டு செல்வது- ஆனால், அந்த நேரத்தில் என்னுடைய கவனத்தை ஒரு மரங்கொத்திப் பறவை ஈர்த்துவிட்டது. அது அங்கிருந்த ஒரு பிர்ச் மரத்தின் மெல்லிய தண்டில் சுறுசுறுப்பாக ஏறி, என்ன செய்வதென்று தெரியாமல் பின்னால் இருந்தவாறு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. முதலில் வலது பக்கம் பார்த்தது. பிறகு இடது பக்கம் பார்த்தது. பேஸ் வயலினுக்குப் பின்னால் இருக்கும் இசைக் கலைஞனை அது ஞாபகப்படுத்தியது.
அப்போது நான் "வெள்ளை நிற பனியைப் பற்றி அல்ல” என்ற பாடலைப் பாடினேன். அதிலிருந்து அந்த காலகட்டத்தில் எல்லாருக்கும் நன்கு தெரிந்த ஒரு பாடலுக்குத் தாவினேன். "நான் உனக்காகக் காத்திருக்கிறேன்- குளிர்காற்று வீசிக்கொண்டிருக்கும் நிமிடத்தில்” என்பதே அந்தப் பாடல். தொடர்ந்து நான் உரத்த குரலில் யெர்மார்க், ஹோம்யாகோவ்வின் சோக சம்பவத்தின்போது நட்சத்திரங்களிடம் பேசியதைக் கூற ஆரம்பித்தேன். உணர்ச்சிகள் கொப்பளிக்கும் வண்ணம் நானே சொந்தத்தில் எனக்குள் மெட்டுபோடும் ஒரு முயற்சியையும் செய்தேன். அந்த வரியையும் கண்டுபிடித்துவிட்டேன். ஒவ்வொரு பாடலும் இப்படி முடிவது மாதிரி: "ஓ ஜினைடா... ஜினைடா...!” ஆனால், அதற்குமேல் அதில் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் டின்னர் சாப்பிடுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் கீழே பள்ளத்தாக்கிற்குச் சென்றேன். ஒரு சிறிய மண்ணாலான பாதை அதன் வழியாக வளைந்து வளைந்து நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
நான் அந்தப் பாதையின் வழியே நடந்தேன்... குதிரைகளின் மெல்லிய குளம்படிச் சத்தங்கள் எனக்குப் பின்னால் கேட்டன. நான் உடனடியாக என்னைச் சுற்றிலும் பார்த்தேன். அந்த இடத்திலேயே நின்று என் தொப்பியைக் கழற்றினேன். நான் என் தந்தையையும் ஜினைடாவையும் பார்த்தேன். அவர்கள் பக்கம் பக்கமாக இருந்து கொண்டு சவாரி செய்து வந்து கொண்டிருந்தார்கள். என் தந்தை வலது பக்கமாக அவளிடம் குனிந்துகொண்டு என்னவோ கூறிக் கொண்டிருந்தார். அவளுடைய கை குதிரையின் கழுத்தைத் தடவிக் கொண்டிருந்தது. அவர் புன்னகைத்தார். ஜினைடா அவரையே அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் தீவிரமாக கீழ்நோக்கி இருந்தன. அவளுடைய உதடுகள் ஒன்றோடொன்று இறுக்கமாக அழுத்தியிருந்தன. முதலில் நான் அவர்களை மட்டுமே பார்த்தேன். ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு, பைலோவ்ஸொரோவ் சூரிய வெளிச்சத்தில் ஒரு வளைவில் திரும்பி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவன் ஒரு குதிரை வீரனுக்கே உரிய சீருடையை அணிந்திருந்தான். அத்துடன் ஒரு உரோமத்தாலான மேலாடையையும்... அவன் நுரை தள்ளிக் கொண்டிருந்த ஒரு கருப்பு நிற குதிரையில் ஏறி வந்து கொண்டிருந்தான். அந்த கம்பீரமான குதிரை தன்னுடைய தலையை ஆட்டிக் கொண்டிருந்தது. அது மூச்சு விட்டுக் கொண்டே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக துள்ளிக் கொண்டிருந்தது. அதன்மீது ஏறியிருந்த மனிதன் உடனடியாக அதைப் பிடித்து நிறுத்தினான். நான் ஓரத்தில் நின்றிருந்தேன். என் தந்தை கடிவாளத்தைப் பிடித்தார். ஜினைடாவிடமிருந்து அவர் விலகிச் சென்றார். அவள் மெதுவாகத் தன் கண்களை அவரை நோக்கி உயர்த்தினாள். இருவரும் வேகமாக குதிரையைக் கிளப்பினார்கள். பைலோவ்ஸொரோவ் அவர்களுக்குப் பின்னால் வேகமாகப் பறந்தான். அவனுடைய உறையிலிருந்த கத்தி அவனுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தது. "அவன் ஒரு நண்டைப்போல சிவப்பானவன்.” நான் சொன்னேன்: "அவள்... அவள் ஏன் இந்த அளவிற்கு வெளிறிப் போய் இருக்கிறாள்? காலை முழுவதும் சவாரி செய்ததன் காரணமாக, வெளிறிப்போய் விட்டாளோ?”
நான் என்னுடைய நடையை இரண்டு மடங்கு வேகமாக்கி, டின்னர் சாப்பிடும் நேரத்திற்கு சரியாக வீட்டிற்கு வந்துவிட்டேன். என் தந்தை எனக்கு முன்பே அங்கு வந்து என் தாயின் நாற்காலிக்கு அருகில் அமர்ந்திருந்தார். அவர் குளித்து, சாப்பிடுவதற்காக உடை அணிந்து, புத்துணர்ச்சியுடன் இருந்தார். அவர் "ஜர்னல் தெ தெபாட்ஸ்” பத்திரிகையிலிருந்த ஒரு கட்டுரையை அவருக்கென்றே இருக்கும் இசையைப் போன்ற குரலில் வாசித்துக் கொண்டிருந்தார். ஆனால், என் தாய் அதை சிறிதுகூட கவனமே செலுத்தாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் என்னைப் பார்த்ததும், அன்று முழுவதும் நான் எங்கே போயிருந்தேன் என்று கேட்டாள். இப்படி நான் சுற்றிக் கொண்டிருப்பதை தான் விரும்பவில்லை என்று அவள் கூறினாள். நான் எங்கே இருக்கிறேன் என்பது கடவுளுக்குத் தான் தெரியும் என்றும், நான் யாருடன் இருக்கிறேன் என்பதும் கடவுளுக்குத்தான் தெரியும் என்றும் அவள் சொன்னாள். "ஆனால், நான் தனியாகத்தான் நடந்து வந்தேன்” இப்படி நான் கூறுவதற்காக வாயைத் திறந்தேன். ஆனால், நான் என் தந்தையைப் பார்த்ததாலோ அல்லது வேறு ஏதோ காரணத்திற்காகவோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டேன்.
அடுத்த ஐந்து அல்லது ஆறு நாட்களில் நான் மிகவும் அரிதாகவே ஜினைடாவைப் பார்த்தேன். தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவள் சொன்னாள். எனினும், எப்போதும் அவளை வீட்டிற்கு வந்து பார்க்கக்கூடிய மனிதர்கள் அவளைச் சந்திப்பதை அது தடைசெய்யவில்லை. அவர்களே அதைப்பற்றிக் கூறுவதைப் போல, அவர்களுடைய கடமையாக அது இருந்தது. எல்லாரும் வந்து பார்த்தார்கள். ஒரே ஒரு ஆளைத்தவிர. அது- மெய்டனோவ். அவர் ஆர்வம் கொண்டிருக்கும் வகையில் எந்த விஷயங்களும் இல்லாததால், நாளடைவில் விரக்தியும், வெறுப்பும் அடைந்து விட்டார். பைலோவ்ஸொரோவ் மிகவும் கவலையுடனும் சிவந்த முகத்துடனும் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் தொண்டை வரை பொத்தான் இட்டிருந்தான். வேறுமாதிரி மாறிவிட்டிருந்த மாலேவ்ஸ்கியின் முகத்தில் தொடர்ந்து வஞ்சகத்தனமான புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. அவர் உண்மையாகவே ஜினைடாமீது கொண்டிருந்த வெறுப்பு அலைகளுக்குள் வீழ்ந்து விட்டிருந்தார். வயதான இளவரசிமீது வைத்திருந்த தனிப்பட்ட ஈடுபாட்டுடன் அவர் காத்திருந்தார். அதற்கும் மேலாக அவளுடன் சேர்ந்து அவர் ஒரு வாடகைக்கு எடுக்கப்பட்ட கோச் வண்டியில் கவர்னர் ஜெனரலைப் பார்ப்பதற்காகச் சென்றார். ஆனால், அந்தப் பயணம் தோல்வியில் முடிந்துவிட்டது. அத்துடன் மாலேவ்ஸ்கிக்கு அந்தப் பயணம் கவலையை அளிக்கக்கூடிய ஒரு அனுபவமாக அமைந்துவிட்டது.
பொறியியல் நிபுணர்களின் சில குறிப்பிட்ட அதிகாரிகளிடம் அவர் நடத்த வேண்டிய சில தவறான செயல்கள் அவருக்கு ஞாபகப்படுத்தப்பட்டன. அவருடைய இளமையான வயதும், அனுபவமற்ற தன்மையும் அவருடைய விளக்கங்களில் வற்புறுத்தப்பட்டு கூற வைக்கப்பட்டன. லூஷின் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை வருவார். ஆனால், அதிக நேரம் அங்கு இருப்பதில்லை. கடந்தமுறை எங்களுக்கிடையே நடைபெற்ற எதிர்பாராத உரையாடலுக்குப் பிறகு, சொல்லப்போனால்- நான் அவரைப் பார்த்து பயந்தேன். அதே நேரத்தில், அவர்மீது உண்மையான ஈர்ப்பு எனக்கு உண்டாகிவிட்டிருப்பதையும் நான் உணர்ந்தேன். ஒருநாள் அவர் என்னுடன் சேர்ந்து நெஸ்குட்ச்னி தோட்டத்திற்கு "வாக்கிங்” வந்தார். அவர் மிகவும் நல்ல இயல்புகள் கொண்டவராகவும், அருமையான மனிதராகவும் இருந்தார். அவர் அங்கிருந்த ஒவ்வொரு செடியின், மலர்களின் பெயர்களையும் அவற்றின் சிறப்புகளையும் எனக்கு கூறினார். அடுத்த நிமிடம் எந்தவித காரணமும் இல்லாமல் சத்தம் போட்டு அழுது கொண்டே, அவருடைய முன்தலையில் அவரே அடித்துக்கொண்டார். "நான்... மோசமான முட்டாள்... அவளை நினைத்தேன்... ஆளைவிட்டு ஆள் பறந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணை! பல மனிதர்களுக்கு தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வது இனிப்பான விஷயமாக இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது...”
"அதன்மூலம் நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?” நான் கேட்டேன்.
"நான் உன்னிடம் எதையும் விளக்கிக் கூற விரும்பவில்லை.” லூஷின் உடனடியாகக் கூறினார்.
ஜினைடா என்னைத் தவிர்த்தாள். நான் உடன் இருப்பதையே அவள் விரும்பவில்லை. அதை கவனிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அவளே விரும்பாத அளவிற்கு அது அவளை பாதித்தது. அவள் விருப்பமே இல்லாமல் என்னை விட்டு விலகிச் சென்றாள். விருப்பமே இல்லாமல்! அதுதான் மிகவும் கசப்பான உண்மையாக இருந்தது.
அதுதான் என்னை அழுத்தி பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால், அதை எதுவுமே செய்ய முடியவில்லை. அவளுடைய பாதையில் குறுக்கிடக்கூடாது என்று நான் முயற்சி செய்தேன்.
அவளை தூரத்திலிருந்து நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அவ்வளவுதான். அந்த விஷயத்தில் நான் எப்போதும் வெற்றிபெற்றேன் என்று கூறுவதற்கில்லை.
முன்பு மாதிரியே, புரிந்து கொள்ள முடியாத ஏதோவொன்று அவளுக்கு நடந்திருக்கிறது. அவளுடைய முகம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவளே முற்றிலும் மாறிவிட்டவளைப்போல இருந்தாள். ஒரு வெப்பம் நிறைந்த சாயங்கால வேளையில் அவளிடம் உண்டாகிவிட்டிருக்கும் மாற்றங்களைப் பார்த்து நான் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டேன். நான் பரந்து கிடந்த ஒரு புதருக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த ஒரு தாழ்வான தோட்டத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு அந்த மூலையை மிகவும் பிடிக்கும். அங்கிருந்து நான் ஜினைடாவின் அறையின் சாளரத்தைப் பார்க்க முடியும். நான் அங்கு அமர்ந்திருந்தேன். என் தலைக்கு மேலே ஒரு சிறிய பறவை இருண்டு கிடந்த இலைகளுக்கு மத்தியில் அமர்ந்து சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது. ஒரு சாம்பல் நிறப் பூனை தன்னுடைய உடலை நீட்டி நிமிர வைத்துக் கொண்டு மிடுக்காக தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. வண்டுகள் நிறைய காற்றில் பறந்து கொண்டிருந்தன. அப்போது சரியான வெளிச்சம் இல்லாமலிருந்தாலும், அவை தெளிவாகத் தெரிந்தன. நான் அங்கு அமர்ந்து கொண்டு சாளரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அது திறக்கப்படுமா என்பதை எதிர்பார்த்தவாறு நான் அமர்ந்திருந்தேன். அது திறந்தது. அதில் ஜினைடா தெரிந்தாள்.
அவள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். அவளே... அவளுடைய முகம், தோள்கள், கைகள் எல்லாமே வெளிறிப்போயும் வெள்ளை நிறத்திலும் இருந்தன. அவள் அதே இடத்தில் எந்தவித அசைவும் இல்லாமல் நீண்ட நேரம் இருந்தாள். தன்னுடைய அழகான புருவங்களுக்குக் கீழே பளபளத்துக் கொண்டிருந்த கண்களால் அவள் தனக்கு முன்னால் இருப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் இந்த மாதிரி இதற்கு முன்பு அவளைப் பார்த்ததே இல்லை. பிறகு அவள் தன்னுடைய கைகளை இறுகக் கட்டிக் கொண்டாள். அவற்றை அவள் தன் உதடுகளுக்கும், நெற்றிக்கும் கொண்டு சென்றாள். தொடர்ந்து அவள் தன் விரல்களைப் பிடித்து இழுத்தாள். அவள் தன் கூந்தலை செவிகளுக்குப் பின்னால் இருக்குமாறு செய்து, அதை தடவி விட்டாள். பிறகு ஏதோ தீர்மானத்துடன் தன் தலையை ஆட்டினாள். தொடர்ந்து சாளரத்தை மூடினாள்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அவள் என்னை தோட்டத்தில் சந்தித்தாள். நான் அங்கிருந்து நகரத் தொடங்கினேன். ஆனால், அவள் என்னை நிற்கச் சொன்னாள்.
"உன்னுடைய கையை என்னிடம் தா.” அவள் பழைய பாசத்துடன் என்னிடம் சொன்னாள்: "நாம் இருவரும் உரையாடி எவ்வளவோ நாட்களாகி விட்டன.”
நான் அவளையே ஓரக்கண்ணால் பார்த்தேன். அவளுடைய கண்கள் ஒரு மென்மையான விளக்கைப்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவளுடைய முகம் பனிப் படலத்திற்கு நடுவில் இருப்பதைப்போல புன்னகைத்துக் கொண்டிருந்தது.
"நீ நலமாக இல்லையா?” நான் அவளிடம் கேட்டேன்.
"இல்லை... இப்போது எல்லாம் சரியாகி விட்டது.” அவள் சொன்னாள். அவள் ஒரு சிறிய ரோஜா மலரைக் கையில் எடுத்துக் கொண்டே சொன்னாள்: "நான் கொஞ்சம் களைத்துப்போய் இருக்கிறேன். அதுகூட விரைவில் சரியாகிவிடும்.”
"நீ எப்போதும் இருப்பதைப்போல மீண்டும் இருப்பாயா?” நான் கேட்டேன்.
ஜினைடா அந்த ரோஜா மலரை தன் முகத்தின் அருகில் கொண்டுபோய் வைத்தாள். அந்த மலரின் பிரகாசமான இதழ்கள் அவளுடைய கன்னங்களில் உண்டாக்கிய பிரதிபலிப்பை நான் மனதில் கற்பனை செய்து பார்த்தேன். "ஏன்? மாறிவிட்டேனா?”
அவள் என்னைப் பார்த்து கேட்டாள்.
"ஆமாம்... நீ மாறிவிட்டாய்...” நான் தாழ்ந்த குரலில் பதில் சொன்னேன்.
"நான் உன்னிடம் மிகவும் சாதாரணமாக நடந்து கொண்டேன். எனக்கு தெரியும்.” ஜினைடா கூற ஆரம்பித்தாள். "ஆனால், நீ அதில் கவனம் செலுத்தக்கூடாது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வா. அதைப் பற்றி ஏன் பேசுகிறாய்?”
"நான் உன்னைக் காதலிப்பதை நீ விரும்பவில்லை. அதுதான் விஷயமே...” நான் கவலையுடன் உரத்த குரலில் கத்தினேன். தவிர்க்க முடியாத ஒரு மனக்குமுறலாக அது இருந்தது.
"இல்லை... என்னைக் காதலி. ஆனால், நீ செய்ததைப்போல வேண்டாம்.”
"பிறகு எப்படி?”
"நாம் நண்பர்களாக இருப்போம். இப்போது வா!” ஜினைடா எனக்கு ரோஜா மலரை முகர்ந்து பார்ப்பதற்காகத் தந்தாள். "இங்கே பார்... உனக்கே தெரியும்... நான் உன்னைவிட மிகவும் மூத்தவள். உண்மையிலேயே பார்க்கப்போனால், நான் உன் அத்தையாக இருக்கலாம். ம்... உன் அத்தையாக அல்ல... உன்னுடைய ஒரு மூத்த சகோதரி... நீ...”
"நீ என்னை ஒரு குழந்தையாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்.” நான் இடையில் புகுந்து சொன்னேன்.
"இருக்கட்டும்... ஆமாம்... ஒரு குழந்தையாகத்தான். ஆனால், என் அன்பிற்குரியவனே! நல்ல புத்திசாலித்தனமான குழந்தையாக... நான் மிகுந்த அன்பு வைத்திருக்கும் குழந்தையாக... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்றிலிருந்து நான் உன்னை எனது மெய்க்காப்பாளனாக நியமிக்கிறேன். மெய்க்காப்பாளர்கள் எப்போதும் தான் பாதுகாக்க வேண்டிய பெண்ணின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதை நீ மறந்து விடாதே, இந்த புதிய பதவிக்கான அடையாளம் இது!” அவள் கூறிக்கொண்டே கையிலிருந்த ரோஜா மலரை என்னுடைய சட்டையின் பொத்தான் துளையில் சொருகினாள். "என் அன்பிற்கான அடையாளம்!”
"நான் உன் அன்பிற்கான அடையாளத்தை ஒருமுறை பெற்றிருக்கிறேன்!”
"ஆ...!” ஜினைடா கூறிக்கொண்டே என்னை ஓரக்கண்களால் பார்த்தாள். "இவனுக்கு என்ன ஞாபக சக்தி! சரி... நான் இப்போது தயாராக இருக்கிறேன்...” என்னை நோக்கி குனிந்து கொண்டே, என் நெற்றியில் அவள் ஒரு புனிதமான இனிய முத்தத்தைப் பதித்தாள்.
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் திரும்பியவாறு கூறினாள். "என்னை பின்பற்றி வா, என் நண்பனே!” அவள் அந்த கட்டடத்திற்குள் நுழைந்தாள். நான் அவளைப் பின்பற்றி நடந்தேன். எல்லாமே வினோதமானவையாக எனக்கு இருந்தன. "இந்த அருமையான.. அறிவாளித்தனமான பெண்...” நான் மனதிற்குள் நினைத்தேன். "எனக்கு எப்போதும் தெரிந்த ஜினைடாவாக இருப்பாளா?”
அவளுடைய நடை மிகவும் அமைதியானதாகவும், அவளுடைய முழு உடலமைப்பு வசீகரத்தன்மை கொண்டதாகவும் பேரழகு படைத்ததாகவும் இருப்பதை நான் நினைத்துப் பார்த்தேன்...
கருணை கிடைக்க வேண்டும்! எந்த அளவிற்கு புத்துணர்ச்சி கலந்த வேகத்துடன் காதல் எனக்குள் எரிந்து கொண்டிருந்தது தெரியுமா?
டின்னருக்குப் பிறகு வழக்கமான குழுவினர் அந்தக் கட்டடத்தில் மீண்டும் வந்து கூடினர். இளைய இளவரசி அவர்களிடம் வந்தாள். அவர்கள் எல்லாரும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்கள். நான் எந்தச் சமயத்திலும் மறக்க முடியாத முதல் சாயங்காலத்தைப்போல... சொல்லப் போனால் நிர்மாட்ஸ்கி கூட அவளைப் பார்ப்பதில் மிகவும் துடிப்புடன் இருந்தார்.மெய்டனோவ் இந்த முறை மற்ற எல்லாரும் வருவதற்கு முன்பே வந்து சேர்ந்திருந்தார். அவர் தன்னுடன் சில புதிய கவிதைகளைக் கொண்டு வந்திருந்தார். பொழுதுபோக்கு விளையாட்டு மீண்டும் ஆரம்பமானது- ஆனால்... வினோதமான குறும்புத் தனங்களோ, நகைச்சுவைத் துணுக்குகளோ, சத்தமோ இல்லாமல். நடோடித்தனமான எந்த விஷயங்களும் அங்கு இல்லாமலிருந்தன. ஜினைடா அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரு வித்தியாசமான வண்ணத்தை அளித்திருந்தாள். எனக்குத் தந்திருந்த புதிய பதவியையொட்டி நான் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். மற்ற விஷயங்களுடன், விளையாட்டில் ஈடுபட நினைக்கும் யாராக இருந்தாலும் அந்த நபர் தன்னுடைய கனவைக் கூற வேண்டும் என்ற நிபந்தனையை அவள் வைத்தாள். ஆனால், அது வெற்றிகரமாக அமையவில்லை. ஒன்று- கனவுகள் மிகவும் சுவாரசியமே இல்லாமல் இருந்தன. (பைலோவ்ஸொரோவ் தன்னுடைய ஆட்டை புற்களில் மேயவிட, அதற்கு ஒரு மரத்தாலான தலை வந்து சேர்கிறது.) அல்லது- செயற்கையான, தானே கற்பனை பண்ணிக்கொண்ட கனவுகள். மெய்டனோவ் எங்களை ஒரு வழக்கமான காதல் கவிதையால் மகிழ்வித்தார். அவற்றில் கற்பனைகள் இருந்தன. யாழ் வாசிக்கும் தேவதைகள், பேசக்கூடிய மலர்கள், தூரத்திலிருந்து ஒலிக்கும் இசை... இப்படி. ஜினைடா அவரை முடிக்க விடவில்லை. "நாம் பாடல்களைக் கோர்க்க வேண்டுமென்றால்...” அவள் சொன்னாள்: "தாங்கள் ஏற்கெனவே மனதில் கற்பனை பண்ணி தயார் செய்து வைத்திருப்பவற்றை ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். அதைப் பற்றி போலியாக நடிக்கக் கூடாது.” முதலில் பேச எழுந்த நபர்- திரும்பவும் பைலோவ்ஸொரோவ்தான்.
அந்த இளம் குதிரை வீரன் மிகவும் குழம்பிப் போய்விட்டிருந்தான். "என்னால் எதுவும் செய்ய முடியாது!” அவன் உரத்த குரலில் சத்தம் போட்டுச் சொன்னான்.
"என்ன, முட்டாள்தனமாகப் பேசுகிறாய்!” ஜினைடா சொன்னாள்: "சரி... உதாரணத்திற்கு இப்படி கற்பனை பண்ணிப் பார். உனக்கு திருமணமாகிவிட்டது. எங்களிடம் நீ எப்படி உன் மனைவியை நடத்துவாய் என்பதைக் கூற வேண்டும். அவளை நீ பூட்டி வைத்து விடுவாயா?”
"ஆமாம்... நான் பூட்டித்தான் வைக்க வேண்டும்.”
"நீ அவளுடன் சேர்ந்து தங்குவாயா?”
"ஆமாம்... நான் நிச்சயம் அவளுடன் சேர்ந்து தங்கத்தான் வேண்டும்.”
"மிகவும் நல்லது... சரி... அவளுக்கு அந்த விஷயம் பிடிக்காமல் போய், அவள் உன்னை ஏமாற்றிவிட்டால்...?”
"நான் அவளைக் கொன்று விடுவேன்.”
"அவள் ஒருவேளை ஓடிவிட்டால்...?”
"நான் அவளைப் பிடித்து அதற்குப் பிறகு முன்பு சொன்னது மாதிரியே கொன்றுவிடுவேன்.”
"அப்படியா? உதாரணத்திற்கு நான்தான் உன் மனைவி என்று வைத்துக்கொள். அப்போது நீ என்ன செய்வாய்?”
பைலோவ்ஸொரோவ் ஒரு நிமிட நேரத்திற்கு அமைதியாக இருந்தான். "என்னை நானே கொன்றுகொள்வேன்.”
ஜினைடா சிரித்தாள். "அப்படியா? உன் கதை நீளமான கதையாக இல்லையே!”
அடுத்த முறை ஜினைடாவிற்கு வந்தது. அவள் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே யோசித்தாள். "சரி... கேளுங்க...” இறுதியில் அவள் சொன்னாள்: "நான் என்ன நினைத்தேன் என்றால்... உங்களின் மனங்களில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையைக் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். ஒரு கோடைகால இரவு வேளை... ஒரு அழகான பந்து... அந்தப் பந்தை அளித்தவள் ஒரு இளம் மகாராணி. எங்கு பார்த்தாலும் தங்கம், பளிங்கு, படிகம், பட்டு, விளக்குகள், வைரங்கள், மலர்கள், நறுமணம் கமழும் வாசனைத் திரவியங்கள். ஒவ்வொன்றுமே ஆடம்பரத்தைக் காட்டக் கூடியவை.”
"உனக்கு ஆடம்பரத்தைப் பிடிக்குமா?” லூஷின் இடையில் புகுந்து கேட்டார்.
"ஆடம்பரம் அழகானது...” அவள் சொன்னாள். "நான் அழகாக இருக்கும் எல்லாவற்றையும் விரும்புகிறேன்.”
"எதைவிட எது சிறந்தது?” அவர் கேட்டார்.
"அது ஏதோ புத்திசாலித்தனம் கொண்டது. அது எனக்குப் புரியவில்லை. நான் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் தலையிடாதீர்கள். ம்... அந்த பந்து அழகானது. மிகப் பெரிய விருந்தினர்களின் கூட்டம்... அவர்கள் அனைவரும் இளம் வயதினர், அழகானவர்கள், தைரியசாலிகள். எல்லாருமே அரசியிடம் காதல் உணர்வு கொண்டவர்கள்.”
"அந்த விருந்தாளிகள் மத்தியில் பெண்களே கிடையாதா?” மாலேவ்ஸ்கி கேட்டார்.
"இல்லை... அல்லது ஒரு நிமிடம் இரு... ஆமாம்... சிலர் இருந்தார்கள்...”
"அவர்கள் எல்லாரும் அழகே இல்லாதவர்களா?”
"இல்லை... நல்ல அழகான தோற்றத்தைக் கொண்டவர்களே.. ஆனால், அங்கிருந்த ஆண்கள் எல்லாருமே அரசிமீது காதல் கொண்டிருந்தார்கள். அவள் நல்ல உயரத்தைக் கொண்டவள். வசீகரமான தோற்றத்தைக் கொண்டவள்.... தன்னுடைய கருப்பு நிற கூந்தலில் தங்கத்தாலான ஒரு சிறிய குப்பியை அணிந்திருந்தாள்.”
நான் ஜினைடாவையே பார்த்தேன். அந்த நிமிடம் எங்கள் எல்லாரையும்விட அவள் மேலானவளாகவே எனக்குத் தோன்றினாள். அவள் அந்த அளவிற்கு பிரகாசமான அறிவைக் கொண்டவளாக இருந்தாள். அவளுடைய அழகான புருவங்களைப் பார்த்து, நானே வியந்து நின்றுவிட்டேன். நான் மனதிற்குள் நினைத்தேன்: "நீதான் அந்த மகாராணி.”
"அவர்கள் எல்லாரும் அவளையே சூழ்ந்து கொண்டிருந்தனர்.” ஜினைடா தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தாள்: "அவர்கள் எல்லாரும் அளவுக்கு அதிகமான புகழ்ச்சியுரைகளை அவள்மீது கணக்கே இல்லாமல் வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.”
"அவளுக்கு அப்படிப் புகழ்வது பிடித்திருந்ததா?” லூஷின் கேட்டார்.
"எந்த அளவிற்கு தாங்கிக் கொள்ள முடியாத மனிதராக இருக்கிறார்! தொடர்ந்து இடையில் புகுந்து தலையிட்டுக் கொண்டே இருக்கிறார். யாருக்குத்தான் புகழ்ச்சியைப் பிடிக்காது.”
"இன்னொரு இறுதி கேள்வி...” மாலேவ்ஸ்கி கேட்டாள்: "அந்த அரசிக்கு ஒரு கணவர் இருக்கிறாரா?”
"நான் அதைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. இல்லை....
அவளுக்கு எதற்கு கணவன் இருக்க வேண்டும்?”
"உண்மைதான்.” மாலேவ்ஸ்கி சொன்னார்: "அவளுக்கு எதற்கு கணவன் இருக்க வேண்டும்?”
"அமைதி...!” உரத்த குரலில் மெய்டனோவ் ஃப்ரெஞ்ச் மொழியில் கத்தினார். அவர் அந்த மொழியை மிகவும் மோசமாகப் பேசினார்.
"நண்பரே...!” ஜினைடா அவரைப் பார்த்து சொன்னாள்: "அந்த அரசி அவர்களுடைய பேச்சுகளைக் கேட்டாள். அவர்களுடைய இசையை காது கொடுத்துக் கேட்டாள். ஆனால், அந்த விருந்தாளிகளில் ஒருவரை மட்டும் அவள் பார்க்கவேயில்லை. மேலேயிருந்து கீழே வரை ஆறு சாளரங்கள் திறந்திருந்தன. தரையிலிருந்து மேற்கூரை வரை... அவற்றைத் தாண்டி மிகப் பெரிய நட்சத்திரங்கள் நிறைந்திருந்த ஒரு இருண்ட வானம்....
ஒரு இருண்ட தோட்டம்... அதில் பெரிய மரங்கள்... அந்த அரசி வெளியே இருந்த தோட்டத்தைப் பார்த்தாள். அங்கிருந்த மரங்களுக்கு மத்தியில் ஒரு நீர் வீழ்ச்சி இருந்தது. அந்த இருண்ட தோட்டத்தில் அது வெள்ளை நிறத்தில் இருந்தது. அது உயரமாக மேலே எழுந்தது. பேச்சு, இசை ஆகியவற்றின் மூலமாக அந்த நீரின் மெல்லிய சலசலப்பு ஓசையை அரசி கேட்டாள். அவள் பார்த்துக் கொண்டே நினைத்தாள்: நீங்கள் எல்லாருமே நாகரீகமான மனிதர்கள், மிக உயர்ந்தவர்கள், புத்திசாலிகள், வசதி படைத்தவர்கள்... நீங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நான் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். என் காலடிகளில் விழுந்து இறப்பதற்கு நீங்கள் எல்லாருமே தயாராக இருக்கிறீர்கள். நான் என்னுடைய ஆளுமையால் உங்களைப் பிடித்து வைத்திருக்கிறேன். ஆனால், அங்கே... நீர்வீழ்ச்சிக்கு அருகில்... அங்கு தெறித்துக் கொண்டிருக்கும் நீருக்கு அருகில்... நான் யாரைக் காதலிக்கிறேனோ, அவன் அங்கு நின்று கொண்டு எனக்காகக் காத்திருக்கிறான். அவன் தன்னுடைய ஆளுமையால் என்னைப் பிடித்து வைத்திருக்கிறான். அவன் மிகப் பெரிய பணக்காரனும் அல்ல... விலை மதிப்புமிக்க வைரக் கற்களும் அல்ல... அவனை யாருக்குமே தெரியாது. ஆனால், அவன் என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக நான் அங்கு செல்வேன்.... நான் அங்கு செல்வேன்.
அவனைத் தேடி நான் போக வேண்டும். அவனுடன் சென்று தங்க வேண்டும். தோட்டத்தை ஆக்கிரமித்திருக்கும் இருட்டில்... மரங்களின் முணுமுணுப்புகளுக்குக் கீழே... நீர்வீழ்ச்சியின் நீர் தெளிப்பிற்கு மத்தியில்... அவனுடன் கரைந்து காணாமல் போய்விட வேண்டும் என்றெல்லாம் நான் விருப்பப்படும்போது, என்னைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த ஒரு சக்தியாலும் முடியாது.” ஜினைடா நிறுத்தினாள்.
"இது மனதில் கற்பனை செய்து வைத்திருந்த கதையா?” மாலேவ்ஸ்கி தயங்கிக் கொண்டே கேட்டார். ஜினைடா அவரைப் பார்க்கவே இல்லை.
"நாம் என்ன செய்திருப்போம், நண்பர்களே?” லூஷின் திடீரென்று ஆரம்பித்தார்: "நாம் எல்லாரும் அந்த விருந்தாளிகளின் கூட்டத்தில் இருந்து, நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்த அந்த அதிர்ஷ்டசாலி மனிதன் யார் என்று தெரிந்துவிட்டால்...?”
"ஒரு நிமிடம் நில்லுங்கள்... ஒரு நிமிடம் நில்லுங்கள்...” இடையில் புகுந்து ஜினைடா சொன்னாள்: "நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்திருப்பீர்கள் என்பதை நானே உங்களிடம் கூறுகிறேன். நீ... பைலோவ்ஸொரோவ், நீ அவனை சண்டைக்கு வரும்படி சவால் விட்டிருப்பாய். மெய்டனோவ், நீங்கள் அவனைப் பற்றி கிண்டல் செய்து பாடல் எழுதியிருப்பீர்கள். இல்லை... உங்களால் கிண்டல் பாடல் எழுத முடியவில்லையென்றால், நீங்கள் அவனைப் பற்றி "பார்பியர்” பாணியில் ஒரு நீண்ட கவிதையை எழுதியிருப்பீர்கள். அந்த கவிதையை "டெலிக்ராப்” பத்திரிகையில் வரச் செய்திருப்பீர்கள். நீங்கள்... நிர்மாட்ஸ்கி, நீங்கள் கடன் வாங்கியிருப்பீர்கள்... இல்லை... நீங்கள் அவனுக்கு அதிக வட்டிக்கு பணத்தைக் கடனாகத் தந்திருப்பீர்கள்... நீங்கள்... டாக்டர்...” அவள் நிறுத்தினாள்: "உங்கள் விஷயம்... உண்மையாகவே நீங்கள் என்ன பண்ணியிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை...”
"அரசு மருத்துவர் என்ற முறையில்...” லூஷின் பதில் சொன்னார்: "அங்கு குழுமியிருந்த விருந்தாளிகளை நகைச்சுவையாக ஏதாவது செய்து மகிழ்விக்காத அவனுக்கு அந்த பந்துகளைத் தரக்கூடாது என்று நான் அரசிக்கு அறிவுரை கூறுவேன்.”
"சொல்லப்போனால்- உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. சரி... நீங்கள், கவுண்ட்...”
"நான்!” மாலேவ்ஸ்கி திரும்ப தன்னுடைய கள்ளத்தனமான புன்னகையுடன் கூறினார்.
"நீங்கள் அவனுக்கு ஒரு விஷம் கலக்கப்பட்ட இனிப்பு கலந்த மாமிசத்தைத் தந்திருப்பீர்கள்.”
அதைக் கேட்டு மாலேவ்ஸ்கியின் முகம் லேசாக மாறிவிட்டது. ஒரு நிமிடம் ஒரு யூதனுக்கே உரிய உணர்ச்சியை முகத்தில் காட்டிவிட்டு, அவர் வெளிப்படையாக சிரித்தார்.
"நீ வ்லாடிமிர்...” ஜினைடா கூறிக்கொண்டே போனாள். "சரி... இது போதும். நாம் இன்னொரு விளையாட்டை விளையாடுவோம்.”
"மிஸ்டர் வ்லாடிமிர்... அரசியின் முக்கியமான வேலைகளைப் பார்ப்பவன் என்ற முறையில் அவள் தோட்டத்திற்குள் ஓடும்போது, அவளுடைய புகைவண்டியை தடுத்து நிறுத்தி வைத்திருப்பான்.” மாலேவ்ஸ்கி பொறாமையுடன் கூறினார்.
எனக்கு அதைக்கேட்டு கோபத்தால் முகம் சிவந்துவிட்டது..
ஆனால், ஜினைடா வேகமாகத் தன் கையை என் தோளின்மீது வைத்தாள். அவள் எழுந்து, சற்று நடுங்குகிற குரலில் சொன்னாள்: "வன்முறை எண்ணத்துடன் நடந்து கொள்வதற்கு உங்களுக்கு நான் உரிமையைத் தரவில்லை. அதனால், எங்களை விட்டு நீங்கள் செல்லும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!” அவள் கதவை நோக்கி கையை நீட்டினாள்.
"என் வார்த்தைகளை, இளவரசி...” மாலேவ்ஸ்கி முணுமுணுத்தார். அவர் இப்போது மிகவும் வெளிறிப்போய் காணப்பட்டார்.
"இளவரசி நடந்து கொண்டது சரிதான்...” பைலோவ்ஸொரோவ் உரத்த குரலில் கூறினான். தொடர்ந்து அவனும் எழுந்து நின்றான்.
"நல்ல கடவுளே! எனக்கு சிறிதுகூட அப்படியொரு எண்ணம் இல்லை...” மாலேவ்ஸ்கி தொடர்ந்து சொன்னார்: "என் வார்த்தைகளில் எதுவுமே இல்லை. நான் நினைக்கிறேன்... அவை... உங்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே எனக்கு இல்லை... என்னை மன்னித்துவிடுங்கள்...”
ஜினைடா அவரையே மேலிருந்து கீழ்வரை எந்தவித சலனமும் இல்லாமல் பார்த்தாள். பிறகு அமைதியாகப் புன்னகைத்தாள். "சரி... இங்கேயே நிச்சயமாக நீங்கள் இருங்கள்...” அவள் அலட்சியமாக தன் கையை ஆட்டிக்கொண்டே சொன்னாள்: "மிஸ்டர் வ்லாடிமிரும் நானும் தேவையில்லாமல் அவமானப்படுத்தப்பட்டுவிட்டோம். நீங்கள் விருப்பப்பட்டால்... அது உங்களை சந்தோஷப்படுத்தும்.”
"என்னை மன்னித்துவிடுங்கள்...” மாலேவ்ஸ்கி திரும்பவும் இன்னொரு முறை கூறினார். அப்போது நான் ஜினைடாவின் நடவடிக்கைகளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டிருந்தேன். மிக உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் எந்தவொரு உண்மையான அரசியும் கற்பனை செய்த விஷயத்திற்காக கதவைச் சுட்டிக் காட்டியிருக்க மாட்டாள்.
அந்த பொழுதுபோக்கு விளையாட்டு அந்த சிறு சம்பவத்திற்குப் பிறகு சிறிது நேரம் தொடர்ந்து நடந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரும் சிறிது கவலையில் மூழ்கியவர்களாக இருந்தார்கள். நடைபெற்ற அந்தச் சம்பவத்திற்காக அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை. என்ன காரணத்திற்காக என்பதையும் உறுதிபட கூறமுடியவில்லை. ஆனால், தாங்க முடியாத ஒரு உணர்வு எல்லாருக்குள்ளும் இருந்து கொண்டிருந்தது. யாரும் அதைப் பற்றி பேசவில்லை. ஆனால், எல்லாரும் அதைப் பற்றி தங்களுக்குள் இருப்பதையும் சக நண்பர்களின் மனங்களில் இருப்பதையும் உணர்ந்திருந்தார்கள். மெய்டனோவ் தன்னுடைய கவிதை வரிகளை எங்களுக்கு முன்னால் வாசித்தார். மாலேவ்ஸ்கி அந்த வரிகளை அளவுக்கும் அதிகமான உற்சாகத்துடன் பாராட்டினார். "இப்போது அவர் எந்த அளவிற்கு நல்லவராக இருக்கிறார் என்பதைக் காட்ட நினைக்கிறார்!” லூஷின் என்னிடம் முணுமுணுத்தார்.
நாங்கள் சீக்கிரமே பிரிந்துவிட்டோம். ஒரு கனவு நிலையைப் போன்ற ஒரு உணர்வு ஜினைடாவை வந்து ஆக்கிரமித்து விட்டிருப்பதைப்போல தோன்றியது. வயதான இளவரசி தனக்கு தலைவலி வந்திருப்பதாக தகவல் அனுப்பியிருந்தாள். நிர்மாட்ஸ்கி தனக்கு வந்திருக்கும் மூட்டுவலி நோயைப் பற்றி கூறினார்.
என்னால் நீண்ட நேரத்திற்கு தூங்க முடியவில்லை. ஜினைடாவின் கதையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டேன். "அதில் ஏதாவது அடையாளம் தொக்கி இருக்குமா?” நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன்: "யாரைப் பற்றி... அவள் எதைப்பற்றி குறிப்பிடுகிறாள்? அப்படி உண்மையிலேயே குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு ஏதாவது இருக்கும்பட்சம்... எப்படி ஒரு நபரின் மனதைப் புரிந்து கொள்வது? இல்லை... இல்லை... அப்படி இருக்காது...” நான் முணுமுணுத்தேன். ஒரு பக்கம் இருந்த கன்னத்திற்கு பதிலாக இன்னொரு கன்னத்தைத் திருப்பிக் கொண்டேன். ஆனால், தன் கதையைக் கூறும்போது, ஜினைடாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். நெஸ்க்குட்ச்னி தோட்டத்தில் லூஷினிடமிருந்து வெளிப்பட்ட ஆச்சரியத்தை நான் நினைத்துப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அவளிடம் உண்டான திடீர் மாற்றத்தையும் நினைத்துப் பார்த்தேன். நான் குழப்பமான நிலைமையில் மாட்டிக் கொண்டு விட்டிருந்தேன். "அவன் யாராக இருக்கும்?” அந்த இருட்டு வேளையில் இந்த மூன்று சொற்களும் என் கண்களுக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருந்தன. ஒரு இனம்புரியாத மேகம் எனக்கு முன்னால் பரவிக் கொண்டிருப்பதைப்போல எனக்குத் தோன்றியது. நான் அதன் பாதிப்பை உணர்ந்தேன். அது உடைந்து பிரிந்து செல்வதற்காக நான் காத்திருந்தேன். சமீபகாலமாக நான் பலவகையான விஷயங்களுக்கும் நன்கு பழகிப்போய் விட்டிருந்தேன். ஜாஸிகினின் இல்லத்தில் நான் பார்த்த பலவற்றிலிருந்து நான் எவ்வளவோ கற்றுக் கொண்டிருந்தேன்.
அவர்களுடைய ஒழுங்கற்ற போக்குகள், எரிந்துபோன மெழுகுவர்த்தி முனைகள், உடைந்த கத்திகளும் முள்களும், முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வோனிஃபேட்டி, அழுக்கடைந்த பணியாட்கள், வயதான இளவரசியின் நடவடிக்கைகள்- இவை அனைத்தும் உள்ள அவர்களுடைய வினோதமான வாழ்க்கை என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை... ஆனால், இப்போது நான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் ஜினைடாவைப் பற்றிய மங்கலான ஞாபகங்கள்... இது எனக்குப் பழக்கமே இல்லை... "ஒரு சாகசப் பெண்!” என் தாய் அவளைப் பற்றி ஒருநாள் சொன்னாள். ஒரு சாகசப் பெண்- அவள், நான் வழிபடும் பெண்- என் தேவதை! அந்த வார்த்தை என்னைக் குத்தி துளைப்பதைப்போல இருந்தது. நான் அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்து, தலையணைக்குள் அபயம் தேடினேன். நான் ஒரு புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். நான் எதைச் செய்வதற்கு சம்மதிக்கவில்லை? நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்த அந்த அதிர்ஷ்டசாலி மனிதன் அளவிற்கு நான் வேறு எதைச் செய்யவில்லை? என் ரத்தம் நெருப்பில் இருப்பதைப்போல இருந்தது... அது எனக்குள் கொதித்துக் கொண்டிருந்தது. "அந்த தோட்டம்... அந்த நீர்வீழ்ச்சி...” நான் மனதில் நினைத்தேன்: "நான் தோட்டத்திற்குள் செல்வேன்.” நான் வேகமாக ஆடையை எடுத்து அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். இரவு மிகவும் இருட்டாக இருந்தது. மரங்கள் அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டிருந்தன. வானத்திலிருந்து ஒரு மெல்லிய குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இறங்கி வீசிக்கொண்டிருந்தது. தோட்டத்திற்குள் இருந்த சமையலறைக்குள்ளிருந்து ஒருவகையான எண்ணெய் வாசனை வந்து கொண்டிருந்தது. நான் எல்லா பாதைகளிலும் நடந்தேன். என்னுடைய கால்கள் உண்டாக்கிய மெல்லிய ஓசைகள் என்னைக் குழப்பத்திற்குள்ளாக்கி ஆக்கிரமித்து விட்டிருந்தன. நான் அங்கேயே நின்றேன்... காத்திருந்தேன்... என்னுடைய இதயம் வேகமாகவும் சத்தமாகவும் துடிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியில் நான் வேலியின் அருகில் சென்று, அங்கிருந்த ஒல்லியான இரும்புத் துண்டின் மீது சாய்ந்து நின்றேன். திடீரென்று... அல்லது என் கற்பனையாகக்கூட இருக்கலாம்... ஒரு பெண்ணின் உருவம் தோன்றியது... என்னிடமிருந்து சில அடிகளுக்கு முன்னால்... நான் சிரமப்பட்டு என் கண்களால் ஆர்வத்துடன் இருட்டுக்குள் ஊடுருவிப் பார்த்தேன். என் மூச்சை நான் நிறுத்தினேன். அது என்ன? காலடிச் சத்தத்தைக் கேட்கிறேனா? அல்லது அது திரும்பவும் என்னுடைய இதயத்தின் துடிப்புகளா? "இங்கே இருப்பது யார்?” நான் தடுமாற்றத்துடன் கேட்டேன்- வெளியே கேட்காத அளவிற்கு. மீண்டும் அது என்ன? ஒரு மெல்லிய சிரிப்பு. அல்லது இலைகளுக்கு மத்தியில் ஒரு சலசலப்பு... அல்லது என் காதில் ஒரு பெருமூச்சு...? நான் பயந்துபோய் விட்டேன். "இங்கே இருப்பது யார்?” நான் இதே கேள்வியை மேலும் மென்மையாகக் கேட்டேன். ஒரு நிமிட நேரம் காற்று பலமாக வீசியது. வானத்தில் ஒரு கற்றை நெருப்பு தோன்றியது. ஒரு நட்சத்திரம் கீழே விழுந்து கொண்டிருந்தது. "ஜினைடா?” நான் அழைக்க விரும்பினேன். ஆனால், என் உதடுகளுக்குள்ளேயே வார்த்தை இறந்துவிட்டது. என்னைச் சுற்றிலும் இருந்த அனைத்தும் சலனமில்லாமல் நின்று விட்டதைப்போல எனக்குத் தோன்றியது. நள்ளிரவு நேரத்தில் பொதுவாக அப்படித்தான் நான் உணர்வேன். வெட்டுக்கிளிகள்கூட தங்களுடைய இரைச்சல் சத்தத்தை மரங்களில் நிறுத்திக் கொண்டன- ஒரு ஜன்னல் மட்டும் எங்கோ "க்ரீச்”சிட்டுக் கொண்டிருந்தது. நான் நின்றேன்... நின்றேன்... பிறகு என்னுடைய அறைக்குத் திரும்பிச் சென்றுவிட்டேன்- என்னுடைய குளிர்ந்துபோய் காணப்பட்ட படுக்கைக்கு. ஒரு இனம் புரியாத உணர்ச்சியை நான் அனுபவித்தேன். நான் ஒரு புதிரான இடத்திற்குப் போனதைப்போல எனக்குத் தோன்றியது. நான் தனிமையில் விடப்பட்டவனைப்போல உணர்ந்தேன். மற்றவர்களின் சந்தோஷங்களை மிகவும் நெருக்கமாக நான் கடந்து சென்றதைப் போல எனக்கு தோன்றியது.
மறுநாள் நான் கடந்து கொண்டிருக்கும் ஜினைடாவை நொடி நேரத்திற்குப் பார்த்தேன். அவ்வளவுதான். அவள் ஒரு வாடகை வண்டியில் வயதான இளவரசியுடன் சேர்ந்து எங்கோ போய்க் கொண்டிருந்தாள். ஆனால், நான் லூஷினைப் பார்த்தேன். அவர் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் எனக்கும் மாலேவ்ஸ்கிக்கும் வாழ்த்து கூறிக் கொண்டிருந்தார். அந்த இளைஞர் முணுமுணுத்துக் கொண்டே என்னிடம் பாசத்துடன் பேச ஆரம்பித்தார். அங்கு வந்து கொண்டிருந்த மனிதர்களில், அவர் மட்டுமே எங்கள் வீட்டிற்குள் நுழைவதில் வெற்றி பெற்றவராக இருந்தார். சொல்லப்போனால்- அவர் என் தாயின் மனதைக் கவர்ந்து விட்டார். என் தந்தை அவருடன் பேசுவதில்லை. அவரை மிகவும் கீழ்த்தரமாக- இன்னும் சொல்லப்போனால்- அவமானப்படுத்துகிற அளவிற்கு என் தந்தை நடத்தினார்.
"ஆ... மெய்க்காப்பாளரே!” மாலேவ்ஸ்கி ஆரம்பித்தார். "உன்னை சந்திப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். உன்னுடைய அன்பான அரசி என்ன செய்து கொண்டிருக்கிறாள்?”
அவருடைய புத்துணர்ச்சி தவழ்ந்து கொண்டிருந்த அழகான முகம் அந்த நேரத்தில் எனக்கு வெறுப்பை உண்டாக்குவதாக இருந்தது. நான் அவருக்கு எந்தவித பதிலையும் கூறாமல் இருந்ததால், அவர் கிண்டல் கலந்த வெறுப்புடன் என்னையே பார்த்தார்.
"நீ இன்னும் கோபமாக இருக்கிறாயா?” அவர் தன் பேச்சைத் தொடர்ந்தார்: "நீ அப்படி இருக்கவேண்டிய அவசியமே இல்லை. "மெய்க்காப்பாளர்” என்று நான் குறிப்பிடவில்லை. உனக்கு தெரியுமா? மெய்க்காப்பாளர்கள்தான் குறிப்பாக அரசிகளைப்போய் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நீ உன்னுடைய கடமைகளை மிகவும் மோசமாக செய்து கொண்டிருக்கிறாய் என்பதை குறிப்பிடுவதற்கு என்னை அனுமதி!”
"எப்படி சொல்கிறீர்கள்?”
"மெய்க்காப்பாளர்கள் தங்களுடைய எஜமானியிடமிருந்து பிரியாமல் இருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சொல்லப்போனால்- எஜமானிகளை அவர்கள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.” அவர் தன் குரலைத் தாழ்த்தி வைத்துக்கொண்டு மேலும் சொன்னார்: "இரவிலும் பகலிலும்...”
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
"நான் என்ன சொல்கிறேனா? நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ, அதை தெளிவாகக் கூறுகிறேன். அதுதான் என் எண்ணம். இரவிலும் பகலிலும்... பகல் நேரத்தில் அது ஒரு பெரிய விஷயமில்லை. அது சாதாரணமானது. மனிதர்கள் இயல்பாக நடப்பார்கள்.
ஆனால், இரவில்... அவர்கள் இழந்ததைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களில் நீ உறங்கக்கூடாது என்று நான் உனக்கு அறிவுரை கூறுகிறேன். தூங்காமல் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். உன்னுடைய அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். நீ ஞாபகத்தில் வைத்துக்கொள்... தோட்டத்தில்... இரவு வேளையில்... நீர்வீழ்ச்சிக்கு அருகில்... அங்குதான் நீ கண்காணிக்க வேண்டும். நீ எனக்கு நன்றி சொல்வாய்...”
மாலேவ்ஸ்கி சிரித்துக் கொண்டே எனக்கு தன்னுடைய முதுகைக் காட்டினார். தான் என்னிடம் கூறிய விஷயங்களுக்காக அவர் பெரிய அளவில் முக்கியத்துவம் தந்தது மாதிரி தெரியவில்லை. சதிகள் தீட்டுவதில் அவருக்கென்று பெயர் வாங்கியிருந்தார். மனிதர்களை மிகப்பெரிய செயல்களுக்குள் இழுத்துக் கொண்டுபோய் விடுவதில் சக்தி படைத்தவர் என்ற அளவில் அவர் குறிப்பிடப்பட்டார். அப்படிப்பட்ட செயல்களை சுய உணர்வே இல்லாத நிலையில்கூட அவர் செய்வார் என்ற அளவில் அவருடைய முழு ஆளுமையும் பெரிதாக நினைக்கப்பட்டது. அவர் என்னை வெறுமனே கிண்டல் பண்ண நினைத்தார். ஆனால், அவர் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையும் விஷமாக மாறி என்னுடைய நரம்புகளுக்குள் ஓடிக் கொண்டிருந்தன. ரத்தம் வேகமாக என் தலைக்குள் ஏறியது. "ஆ...! அதுதான்...!” நான் எனக்குள் கூறினேன்: "நல்லது! அப்படியென்றால் நான் தோட்டத்திற்குள் செல்வதற்கு காரணம் இருக்கிறது! அப்படி இருக்காது!” நான் உரத்த குரலில் சத்தம் போட்டேன். தொடர்ந்து என்னுடைய கை முஷ்டியால் என் நெஞ்சில் அடித்துக் கொண்டேன். மெதுவாகத்தான் என்றாலும், எதைக் கூறக் கூடாதோ, அதை நான் கூறியிருக்கக் கூடாது. "மாலேவ்ஸ்கியே தோட்டத்திற்குள் நுழைந்தாலும்...” நான் நினைத்தேன். (அவர் பெரும்பாலும் தற்பெருமை மேலோங்க இருப்பார். பொதுவாகவே- அவருக்கு அளவுக்கதிகமான செருக்கு குணம் இருக்கிறது.) "இல்லாவிட்டால், வேறு யாராக இருந்தாலும்... (எங்களுடைய தோட்டத்தின் வேலியின் உயரம் மிகவும் குறைவு. அதன்மீது ஏறி உள்ளே வருவது என்பதில் அப்படியொன்றும் சிரமமில்லை). எது எப்படி இருந்தாலும்- யாராவது என் கைகளில் சிக்கினால், அவர்களுக்கு அதுதான் கெட்டநேரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்! நான் யாரையும் என்னைச் சந்திக்க வேண்டும் என்று அறிவுரை கூறவில்லை. நான் பழிவாங்கப்படலாம் என்ற உண்மையை இந்த அகில உலகத்திற்கும் துரோகம் செய்யும் பெண்ணான அவளுக்கும் (உண்மையாகவே நான் "துரோகம் செய்யும் பெண்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்) நான் யார் என்பதை நிரூபிப்பேன்.”
நான் என்னுடைய அறைக்குத் திரும்பி வந்தேன். நான் சமீபத்தில் வாங்கிய ஆங்கில பாணியில் அமைந்த கத்தியை எழுதும் மேஜைக்கு குள்ளிருந்து வெளியே எடுத்து, அதன் கூர்மைத்தன்மையைச் சோதித்துப் பார்த்தேன். என்னுடைய புருவங்களை அமைதியாகவும் தெளிவாக தீர்மானிக்கப்பட்ட முடிவுடனும் நெற்றியைச் சுளித்துக் கொண்டே நான் அதை என் பாக்கெட்டிற்குள் வைத்தேன். அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வது என்னைப் பொறுத்தவரையில் பெரிய விஷயமே அல்ல என்பதைப்போலவும், இது எனக்கு முதல் முறையல்ல என்பதைப்போலவும் நான் காட்டிக் கொண்டேன். என் இதயம் கோபத்தில் மேலே எழும்பிக் கொண்டிருந்தது. அது ஒரு கல்லைப்போல கனமாக இருப்பதைப்போல உணர்ந்தேன். நாள்முழுவதும் நான் சிந்தனையுடன் உதடுகளை இறுக வைத்துக் கொண்டு, தொடர்ந்து மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தேன். பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து, உள்ளே இருந்த கத்தியைத் தொட்டுப் பார்த்தேன். நான் தொட்டபோது, அது சூடாக இருந்தது.
ஏதோ பயங்கரமான செயலைச் செய்வதற்காக நான் முன்கூட்டியே என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த புதிய, மனதை ஆக்ரமித்திருந்த இதற்கு முன்பு தெரிந்திராத உணர்ச்சிகள்... இன்னும் சொல்லப்போனால்... என்னை உற்சாகம் கொள்ள வைத்தன. நான் ஜினைடாவைப் பற்றி மிகவும் அரிதாகவே நினைத்துப் பார்த்தேன். நான் தொடர்ந்து அந்த இளம் நாடோடியான அலெக்கோவால் வேட்டையாடப்பட்டேன். "நீ எங்கே போகிறாய், அழகான இளம் மனிதனே? அங்கேயே இரு...” அதற்குப் பிறகு... "நீங்கள் எல்லாரும் ரத்தத்துடன் நட்பு கொண்டிருக்கிறீர்கள்... ஓ... நீ என்ன செய்து விட்டாய்? குறும்புக்காரா!” எப்படிப்பட்ட குரூரமான புன்னகையுடன் நான் அந்த "குறும்புக்காரா!” என்ற சொல்லை திரும்பவும் கூறினேன்! என் தந்தை வீட்டில் இல்லை. ஆனால், சமீபகாலமாகவே கிட்டத்தட்ட ஒரு ஊமையைப்போல அமைதியாகி விட்டிருந்த என் தாய் என்னுடைய புரிந்து கொள்ள முடியாத "ஹீரோயிசம்” வெளிப்படும் செயலைப் பார்த்து, இரவு நேர உணவு சமயத்தில் என்னிடம் சொன்னாள்: "நீ ஏன் சாப்பாட்டு கூடைக்குள் தலையை நுழைத்துக் கொண்டிருக்கும் பூனையைப்போல தடுமாறிக் கொண்டிருக்கிறாய்?” நான் அதற்கு பதில் கூறுவதற்குப் பதிலாக வெறுமனே புன்னகைக்க மட்டும் செய்தேன். அப்போது மனதிற்குள் நினைத்தேன்: "அவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால்...? மணி பதினொன்று அடித்தது. நான் என்னுடைய அறைக்குச் சென்றேன். ஆனால், ஆடைகளைக் கழற்றவில்லை. நான் நள்ளிரவு நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இறுதியில் அது அடித்தது. "நேரம் வந்துவிட்டது!” நான் என்னுடைய பற்களுக்கு நடுவில் முணு முணுத்தேன். தொடர்ந்து என் தொண்டை வரை பொத்தான்களைப் போட்டேன். பிறகு, கழுத்துப் பகுதியை மேலே இழுத்து விட்டுக் கொண்டு, தோட்டத்திற்குள் சென்றேன்.
நான் ஏற்கெனவே எந்த இடத்திலிருந்து கொண்டு கண்காணிப்பது என்பதையும் தீர்மானித்து வைத்திருந்தேன். தோட்டத்தின் எல்லையில், வேலி இருந்த இடத்தில், எங்களுடைய பகுதியையும் ஜாஸிகினின் பகுதியையும் பிரிக்கும் இடத்தில், பொதுவான சுவர் இருக்குமிடத்தில், ஒரு பைன் மரம் இருந்தது. அது மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தது. அதன் தாழ்வான அடர்த்தியான கிளைகளுக்கு கீழே நின்றுகொண்டு, நான் எல்லாவற்றையும் நன்கு பார்க்கலாம். இரவு நேரத்தின் இருட்டு எந்த அளவிற்கு அனுமதிக்கிறதோ, அந்த அளவிற்கு அந்த இடத்தைச் சுற்றி நடக்கக் கூடியதைப் பார்க்க முடியும். மிகவும் அருகிலேயே ஒரு கொடி இருந்தது. அது எப்போதுமே எனக்கு ஒரு புதிராக இருந்திருக்கிறது. அது ஒரு பாம்பைப்போல வேலிக்குக் கீழே சுருண்டு கிடந்தது. அங்கிருந்து கிளம்பி மேலே ஏறி, அங்கு வளைந்து தொங்கிக் கொண்டிருந்த சவுக்கின்மீது அது படர்ந்து கிடந்தது. நான் பைன் மரத்தை நோக்கி நடந்தேன். அந்த மரத்தின்மீது முதுகை வைத்து சாய்ந்து கொண்டே, நான் என்னுடைய கண்காணிக்கும் வேலையை ஆரம்பித்தேன்.
நேற்றைய இரவைப்போலவேதான் இன்றைய இரவும் இருந்தது. ஆனால், வானத்தில் கொஞ்சம் மேகங்கள் காணப்பட்டன. புதர்களின் விளிம்புகள், சொல்லப்போனால்- உயரமான மலர்கள்கூட மிகவும் தெளிவாகத் தெரிந்தன. எதிர்பார்ப்பின் ஆரம்ப நிமிடங்கள் மிகவும் புதிர் நிறைந்ததாகவும், ஏறக்குறைய பயங்கரமானதாகவும் இருந்தது. நான் என் மனதை எல்லா விஷயங்களுக்கும் தயார்படுத்தி வைத்திருந்தேன். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்தேன்- பருவநிலைக்கும் இடி இடிப்பதற்கும்... "நீ எங்கே போவாய்? நின்று கொண்டே இருப்பாயா? எங்கே நின்று காட்டு... இல்லாவிட்டால் இறந்து விடுவாய்!” அல்லது வெறுமனே ஒரு அடி... ஒவ்வொரு ஓசையும், ஒவ்வொரு முணுமுணுப்பும் சலசலப்பும்... எனக்கு பயங்கரமானவையாகவும் அபூர்வமானவையாகவும் தோன்றின. நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன்... நான் முன்னோக்கி குனிந்தேன். ஆனால், அரைமணி நேரம் கடந்தது. ஒரு மணி நேரம் கடந்தது... என் ரத்தம் அமைதியானதாக ஆனது... குளிர்ந்தது... நான் இவ்வாறு செய்து கொண்டிருப்பது அனைத்தும் பிரயோஜனமற்ற ஒன்று என்ற புரிதல் வந்தது... சொல்லப்போனால்- நான் ஒரு சிறிய முட்டாள் என்பதை உணர்ந்தேன். மாலேவ்ஸ்கி என்னைப் பார்த்து கிண்டல் பண்ணிக் கொண்டிருப்பார். என்னைத் தாண்டிச் செல்ல வேண்டுமென்று நினைப்பார். நான் மறைந்து நின்று கொண்டிருந்த இடத்தைவிட்டு, தோட்டமெங்கும் நடந்தேன். என்னைக் கேலி செய்வதைப்போல, எந்த இடத்திலும் ஒரு சிறிய சத்தம்கூட கேட்கவில்லை. எல்லாமே மிகவும் அமைதியாக இருந்தன. இன்னும் சொல்லப்போனால்- எங்களின் நாய்கூட உறங்கிக் கொண்டிருந்தது. கேட்டிற்கு அருகில் ஒரு பந்தைப்போல சுருண்டு படுத்திருந்தது. நான் பச்சை நிறத்தில் இருந்த அந்த வீட்டின் சிதிலமடைந்த பகுதிகளுக்குள் ஏறிச் சென்றேன். அங்கிருந்து எனக்கு முன்னால் தூரத்தில் தெரிந்த ஊரைப் பார்த்தேன். ஜினைடாவை நான் சந்தித்ததை நினைத்துப் பார்த்தேன்... அப்படியே கனவில் மூழ்கிவிட்டேன்.
நான் புறப்பட்டேன்... ஒரு கதவு திறக்கப்படும் "க்ரீச்” ஓசை என் காதில் விழுந்ததைப்போல எனக்குத் தோன்றியது. இரண்டே நிமிடங்களில் நான் மேலே இருந்த சிதிலமடைந்த பகுதிகளுக்குள்ளிருந்து கீழே வந்து, தயார் நிலையில் நின்றேன். வேகமான, மெல்லிய, அதே நேரத்தில்- எச்சரிக்கை உணர்வு கலந்த காலடிச் சத்தங்கள் தோட்டத்தில் தெளிவாகக் கேட்டன. அவர்கள் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். "இங்கே இவன்... இங்கே இவன்... இறுதியாக...” என் இதயத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்துடன், நான் கத்தியை என்னுடைய பாக்கெட்டிற்குள்ளிருந்து எடுத்தேன். எண்ணிப் பார்க்க முடியாத வேகத்துடன், நான் அதைத் திறந்தேன். சிவப்பு நிறத்தில் வெளிச்சங்கள் என் கண்களுக்கு முன்னால் சுற்றிச் சுற்றி வந்தன. தலையிலிருந்த மயிர்கள் பயத்தாலும் கோபத்தாலும் சிலிர்த்துக் கொண்டு நின்றன. காலடிகள் நேராக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தன. நான் குனிந்தேன்- நான் அவரைச் சந்திப்பதற்காக முன்னோக்கி வளைந்தேன். என் கடவுளே! அவர் என் தந்தை!
அவர் தன்னை முழுமையாக ஒரு கருப்பு நிறத் துணியால் போர்த்திக் கொண்டிருந்தாலும், அவருடைய தொப்பி கீழே இறக்கப்பட்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்தாலும் நான் உடனடியாக அவரை அடையாளம் தெரிந்து கொண்டேன். ஓசையே உண்டாக்காமல் அவர் நடந்து வந்து கொண்டிருந்தார். என்னை எதுவுமே மறைக்கவில்லையென்றாலும், அவர் என்னைப் பார்க்கவில்லை. ஆனால், நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என்னைச் சுருக்கிக் கொண்டிருந்தேன். எங்கே நான் தரையோடு தரையாக சப்பிப் போய் விடுவேனோ என்றுகூட கற்பனை பண்ணினேன். கொலை செய்வதற்குத் தயாராக இருந்த பொறாமை பிடித்த ஒத்தெல்லோ திடீரென்று ஒரு பள்ளிச் சிறுவனாக மாறினான். என்னுடைய தந்தையின் எதிர்பாராத வருகையைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். முதலில் அவர் எங்கே இருந்து வருகிறார் என்பதை நான் கவனிக்கவில்லை. அவர் எங்குபோய் மறைவார் என்பதும் தெரியவில்லை. நான் எனக்குள் இப்படி சிந்திக்க ஆரம்பித்தேன்: "என் தந்தை எதற்காக இந்த இரவு நேரத்தில் இந்த தோட்டத்திற்குள் நடந்து வரவேண்டும்?” மீண்டும் அனைத்தும் அசைவே இல்லாமல் போனதைப்போல இருந்தது. நான் பயந்துபோய், என்னுடைய கத்தியைப் புற்களுக்குள் நழுவவிட்டேன். ஆனால், அதைப் பார்ப்பதற்குக்கூட முயலவில்லை. என்னை நினைத்து எனக்கே மிகவும் அவமானமாக இருந்தது. நான் திடீரென்று பலவீனமானவனாக ஆகிவிட்டேன். எனினும், வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், அங்கிருந்த வயதான மரத்திற்குக் கீழே நான் எப்போதும் அமரக்கூடிய இடத்தில் போய் அமர்ந்து, தலையை உயர்த்தி ஜினைடாவின் சாளரத்தைப் பார்த்தேன். மங்கலான நீல நிறத்தில், இரவு நேர ஆகாயத்தால் பாய்ச்சப்பட்ட மெல்லிய வெளிச்சத்தில், சிறிய- லேசாக வெளியே தள்ளப்பட்டு காட்சியளிக்கும் சாளரத்தின் சட்டங்கள் மங்கலான நீல நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று- அவற்றின் நிறம் மாறத் தொடங்கியது. அவற்றுக்குப் பின்னால்- நான் அதைப் பார்த்தேன்... அதை தெளிவாகப் பார்த்தேன்... மெதுவாகவும் முன்னெச்சரிக்கையுடனும் ஒரு வெள்ளை உருவம் கீழே இறங்கி வந்து நின்றது... கீழே இறங்கி, சரியாக சாளரத்தின் சட்டத்தில்... அங்கேயே நின்று கொண்டிருந்தது.
"அது ஏன் அப்படி நடக்க வேண்டும்?” நான் மீண்டும் என்னுடைய அறைக்குள் இருப்பதைத் தெரிந்து கொண்டபோது நான் உரத்த குரலில்- கிட்டத்தட்ட என்னையே அறியாமல் சொன்னேன்: "ஒரு கனவு... ஒரு வாய்ப்பு... அல்லது...” என் தலைக்குள் உடனடியாக ஓடிக் கொண்டிருந்த கற்பனைகள் புதியனவாகவும் வினோதமானவையாகவும் நான் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் இருந்தன.
நான் காலையில் தலைவலியுடன் படுக்கையை விட்டு எழுந்தேன். நேற்று இருந்த என்னுடைய உணர்வுகள் காணாமல் போய்விட்டன. அதற்கு பதிலாக ஒன்றுமே இல்லாத ஒரு வெறுமையும் ஒரு வகையான கவலையும் வந்து நிறைந்திருந்தன. இவற்றை அதற்கு முன்பு நான் அறிந்ததே இல்லை. ஏதோவொன்று எனக்குள் இறந்து போய்விட்டதைப் போல உணர்ந்தேன்.
"நீ ஏன் பாதி மூளை எடுக்கப்பட்டுவிட்ட முயலைப்போல காணப்படுகிறாய்?” என்னைச் சந்தித்தபோது லூஷின் கேட்டார். மதிய உணவின்போது ஓரக் கண்களால் நான் முதலில் என் தந்தையைப் பார்த்தேன். பிறகு என் அன்னையைப் பார்த்தேன். வழக்கம்போல அவர் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தார். என் தாய் எப்போதும்போல ரகசியமாக எரிச்சலடைந்தாள். என் தந்தை நட்பு ரீதியாக என்னிடம் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு நான் அமர்ந்திருந்தேன். சில நேரங்களில் அவர் அப்படி நடந்திருக்கிறார். ஆனால், அவர் தினமும் என்னிடம் கூறக்கூடிய சாதாரண வணக்கத்தைக்கூட கூறவில்லை. "நான் எல்லா விஷயங்களையும் ஜினைடாவிடம் கூறினால் என்ன?” நான் ஆச்சரியப்பட்டேன். "எப்படிப் பார்த்தாலும், எல்லாம் ஒன்றுதான். எங்களுக்குள் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிடும்.” நான் அவளைப் பார்ப்பதற்காக சென்றேன். ஆனால், அவளிடம் எதுவும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால்- நான் அவளுடன் பேச விரும்பினால்கூட, அவளுடன் பேச முடியவில்லை. வயதான இளவரசியின் பன்னிரண்டு வயதைக் கொண்ட மகன் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து தன்னுடைய விடுமுறையில் வந்திருந்தான். அந்த நிமிடமே ஜினைடா தன் சகோதரனை என்னிடம் ஒப்படைத்துவிட்டாள். "இங்கே பார்...” அவள் சொன்னாள்: "என் அன்பிற்குரிய வாலோத்யா...” இப்போது தான் முதல் முறையாக அவள் என்னை அழைப்பதற்கு இந்த செல்லப் பெயரை பயன்படுத்துகிறாள். "இவர் உனக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பார். இவருக்கு வாலோத்யா என்றொரு பெயரும் இருக்கிறது. தயவு செய்து இவரை விரும்பு. இப்போதும் இவர் கூச்ச குணம் கொண்டவரே. ஆனால், இவருக்கு ஒரு நல்ல இதயம் இருக்கிறது.” தொடர்ந்து அவள் சொன்னாள்: "இவனுக்கு நெஸ்க்குட்ச்னி தோட்டத்தைச் சுற்றிக் காட்டு. இவனுடன் சேர்ந்து "வாக்கிங்” போ. உன்னுடைய பாதுகாப்பின்கீழ் இவனை வைத்துக் கொள். நீ அதைச் செய்வாய்... செய்வாய் அல்லவா? நீ மிகவும் நல்லவனும்கூட...” அவள் தன்னுடைய இரண்டு கைகளையும் பாசத்துடன் என் தோள்களின்மீது வைத்தாள். நான் முற்றிலும் குழப்பத்தில் நின்று கொண்டிருந்தேன். அந்த பையன் அங்கிருந்தது என்னையும் ஒரு பையனாக மாற்றிவிட்டது. நான் அந்த பையனையே அமைதியாகப் பார்த்தேன். அவன் அமைதியாக என்னையே வெறித்துப் பார்த்தான். ஜினைடா சிரித்தாள். பிறகு எங்களை ஒருவர்மீது ஒருவரை தள்ளிவிட்டாள். "ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள் குழந்தைகளே!” நாங்கள் ஒருவரையொருவர் இறுக தழுவிக் கொண்டோம். "நான் தோட்டத்தை உனக்கு சுற்றிக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறாயா?” நான் பையனைப் பார்த்துக் கேட்டேன். "நீங்கள் விரும்பினால்...!” அவன் வழக்கமான மாணவனின் பணிவான குரலில் சொன்னான். ஜினைடா மீண்டும் சிரித்தாள். இதற்கு முன்பு அவளுடைய முகத்தில் இந்த அளவிற்கு அருமையான வண்ணம் எந்தச் சமயத்திலும் இருந்ததில்லை என்பதைக் கண்டு பிடிப்பதற்கு எனக்கு நேரம் இருந்தது. நான் அந்த மாணவனுடன் வெளியேறினேன். எங்களின் தோட்டத்தில் ஒரு பழைய பாணியில் அமைந்த ஊஞ்சல் இருந்தது. நான் அவனை அந்த சிறிய பலகையாலான இருக்கையில் அமரச் செய்து, அவனை ஆட்டத் தொடங்கினேன். அகலமான தங்க நிற ஓரம் போடப்பட்டிருந்த- அடர்த்தியான துணியால் தைக்கப்பட்ட புதிய சீருடையை அணிந்திருந்த அவன் இறுக்கமாக அமர்ந்திருந்தான். அவன் கயிறுகளை இறுகப் பற்றியிருந்தான். "நீ உன் சட்டை காலரில் இருக்கும் பொத்தான்களைக் கழற்றிவிடுவது நல்லது...” நான் அவனிடம் சொன்னேன். "அது இருக்கட்டும்... நமக்குப் பழகிவிட்டது...” அவன் சொன்னான். அப்போது அவன் தன் தொண்டையைச் சரி பண்ணிக் கொண்டான். அவன் அவனுடைய சகோதரியைப்போலவே இருந்தான். குறிப்பாக கண்கள் அவளை ஞாபகப்படுத்தின. அவனிடம் அன்புடன் பழகுவதை நான் விரும்பினேன். அதே நேரத்தில்- ஒரு வேதனை கலந்த கவலை என் இதயத்தில் நிறைந்திருந்தது. "இப்போது நான் உண்மையிலேயே ஒரு குழந்தைதான்.” நான் நினைத்தேன்: "ஆனால், நேற்று...” நேற்று இரவு என்னுடைய கத்தியை எங்கே கீழே போட்டேன் என்பதை நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். அதைத் தேடி கண்டுபிடித்தேன்.
அந்தப் பையன் அதைக் கேட்டான். ஒரு காட்டுச் செடியின் பருமனான தண்டுப் பகுதியை கத்தியை வைத்து வெட்டி ஒரு குழாயை உண்டாக்கினான். அதை வைத்து சீட்டி அடிக்க ஆரம்பித்தான். ஒத்தெல்லோ சீட்டியும் அடித்தான்.
ஆனால், அன்று சாயங்காலம் இந்த ஒத்தெல்லோ, ஜினைடாவின் கரங்களில் இருந்து கொண்டு அவன் எப்படியெல்லாம் அழுதான்! தோட்டத்தின் ஒரு மூலையில் அவனை அவள் தேடி வந்து, அவன் ஏன் அந்த அளவிற்கு கவலையில் இருக்கிறான் என்று கேட்டதற்குத்தான் அவன் அப்படி அழுதான். என் கண்ணீர் அந்த அளவிற்கு பலமாக வழிந்தது. அதைப் பார்த்து அவள் பயந்து போய்விட்டாள். "உன்னிடம் என்ன பிரச்சினை? சொல்லு, வாலோத்யா.” அவள் திரும்பத் திரும்ப கேட்டாள். நான் எந்த பதிலும் கூறாமல் அழுகையையும் நிறுத்தாமல் இருக்கவே, அவள் என் ஈரமான கன்னத்தில் முத்தமிட்டாள். ஆனால், நான் அவளிடமிருந்து திரும்பிக் கொண்டேன். பிறகு என் தேம்பல்கள் மூலமாக முணுமுணுத்தேன்: "எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். நீ ஏன் என்னிடம் விளையாடினாய்? என் காதல் உனக்கு எதற்குத் தேவை?”
"நான்தான் குற்றவாளி, வாலோத்யா...” ஜினைடா சொன்னாள். "என்னைத்தான் அதிகம் குற்றம் சொல்ல வேண்டும்.” அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்டே சொன்னாள்: "எந்த அளவிற்கு எனக்குள் மோசமான விஷயங்களும், இருண்டதும், பாவம் நிறைந்தவையும் இருக்கின்றன தெரியுமா? ஆனால், நான் இப்போது உன்னிடம் விளையாடவில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏன், எப்படி என்றெல்லாம் நீ சந்தேகப்படக்கூடாது... ஆனால், உனக்கு என்ன தெரியும்?”
நான் அவளிடம் என்ன சொல்வேன்? அவள் என் பக்கமாகத் திரும்பி நின்று கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். தலையிலிருந்து பாதம் வரை. நான் அவளுக்குச் சொந்தமானவன். அவள் என்னையே பார்த்தாள். கால் மணி நேரத்திற்குப் பிறகு, நான் பையனுடனும் ஜினைடாவுடனும் சேர்ந்து ஓட்டப் பந்தயத்தில் ஓடினேன். நான் அழவில்லை. நான் சிரித்தேன்.
என்னுடைய வீங்கிப்போன கண் இமைகள் ஒன்றோ இரண்டோ கண்ணிர்த் துளிகளைச் சிந்தினாலும், நான் சிரித்தேன். ஜினைடாவின் ரிப்பனை நான் கழுத்தைச் சுற்றி "ஸ்கார்ஃப்”பைப்போல கட்டியிருந்தேன். எப்போதெல்லாம் அவளுடைய இடையைச் சுற்றிப் பிடிப்பதில் வெற்றி பெறுகிறேனோ, அப்போதெல்லாம் நான் சந்தோஷத்தில் உரத்த குரலில் கத்தினேன். என்னுடன் இருப்பதை தான் விரும்புவது மாதிரியே அவள் நடந்துகொண்டாள்.
என்னுடைய வெற்றி பெறாத நள்ளிரவு நேர பயணத்திற்குப் பிறகு அந்த வாரம் முழுவதும் என் மனதிற்குள் என்ன ஓடிக் கொண்டிருந்தது என்பதை உள்ளபடியே கூறியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், நான் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவிடுவேன். அது ஒரு வினோதமான, மோசமான காலமாக அமைந்துவிட்டது. முழுக்க முழுக்க குழப்பங்கள்... அதில் மிகவும் பயங்கரமான எதிர் உணர்வுகள், சிந்தனைகள், சந்தேகங்கள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், கவலைகள்- எல்லாம் சேர்ந்து ஒரு சூறாவளியைப்போல வீசி ஒரு வழி பண்ணிவிட்டன. நான் எனக்குள் நுழைந்து பார்ப்பதற்கே பயந்தேன். பதினாறு வயதுகளைக் கொண்ட ஒரு பையன் தனக்குள் அலசிப் பார்ப்பது... நான் எதைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பதற்கே பயந்தேன். நான் ஒவ்வொரு நாளையும் சாயங்காலம் வரை வேகமாக வாழ்ந்து ஓட்டிக் கொண்டிருந்தேன். இரவு நேரங்களில் தூங்கினேன்... குழந்தைப் பருவத்திற்கே உரிய மென்மையான மனம் எனக்கு உதவியாக வந்து சேர்ந்தது. நான் காதலிக்கப் பட்டேனா என்பதைப் பற்றி நான் தெரிந்துகொள்ள நினைக்கவில்லை. நான் காதலிக்கப்படவில்லை என்று எனக்கு நானே உறுதியான குரலில் கூறிக் கொள்வதையும் நான் விரும்பவில்லை. நான் என் தந்தையைத் தவிர்த்தேன். ஆனால், ஜினைடாவை என்னால் தவிர்க்க முடியவில்லை... அவள் அருகில் இருக்கும்போது நான் நெருப்பில் எரிவதைப்போல எரிந்தேன். ஆனால், நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்த விஷயம் என்னவென்றால்- எந்த நெருப்பில் நான் எரிந்து உருகிக் கொண்டிருந்தேனோ, அதே நெருப்பு எனக்கு எரிவதற்கும் உருகுவதற்கும் எப்படி இனிமையானதாக இருந்து என்பதைத்தான். எனக்குள் ஓடிக்கொண்டிருந்த அனைத்து உணர்வுகளிலிருந்தும் நான் விடுபட்டு நின்றேன். என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். நினைவுகளிலிருந்து நான் விலகி நின்றேன். எனக்கு முன்னால் என்ன இருக்கின்றனவோ, அவற்றைப் பார்க்காமல் என் கண்களை நான் மூடிக் கொண்டேன். இந்த பலவீனம் எந்த காரியத்திலும் அதிக காலத்திற்கு நீடித்திருக்காது. ஒரே நிமிடத்தில் ஒரு இடி வந்து விழுந்து, என்னை முழுமையாக ஒரு புதிய பாதையில் கொண்டு போய் சேர்த்தது.
ஒருநாள் ஒரு நீண்ட தூர "வாக்கிங்” போய்விட்டு டின்னருக்காக திரும்பி வந்தபோது, ஆச்சரியப்படும் வகையில் நான் மட்டுமே சாப்பிடுவதற்கு இருப்பதை நான் உணர்ந்தேன். என் தந்தை எங்கோ வெளியே போயிருந்தார். என் தாய்க்கு உடல்நலம் சரியில்லாததால், அவள் டின்னர் சாப்பிட விரும்பவில்லை. அதனால் அவள் தன்னுடைய படுக்கையறையில் கதவை மூடிப் படுத்திருந்தாள். வேலைக்காரர்களின் முகங்களிலிருந்து, ஏதோ பெரிய காரியம் நடந்திருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை. அந்த வெயிட்டர்களில் எனக்கு ஒரு இளம் நண்பன் இருந்தான். அவன் பெயர் ஃபிலிப். அவனுக்கு கவிதைகள் மீது விருப்பம் அதிகம். கிட்டாரை மிகவும் அருமையாக இசைப்பான்.
நான் அவனைப் பார்த்து கேட்டேன். அவனிடமிருந்து ஒரு பயங்கரமான சம்பவம் என் தந்தைக்கும் தாய்க்குமிடையே நடந்து விட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். (அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பணியாட்களின் அறைக்குள் ஒட்டுக்கேட்கப் பட்டிருக்கிறது. பேசிய பெரும்பாலான வார்த்தைகள் ஃப்ரெஞ்ச் மொழியில் இருந்திருக்கின்றன. ஆனால், மாஷா என்ற வேலைக்காரி பாரிஸைச் சேர்ந்த ஆடைகள் தைக்கும் மனிதருடன் ஐந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறாள். அவள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டாள்.) பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதாகவும், அந்த உறவு தகாதது என்றும் கூறி என் தாய் என் தந்தையிடம் சண்டை போட்டிருக்கிறாள். முதலில் என் தந்தை தன்னை குற்றமற்றவர் என்று கூறி தப்பிக்க முயன்றிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். அவரும் "இந்த வயதில் அப்படித்தான் பேசுவாய்?” என்றெல்லாம் குரூரமாகப் பேசியிருக்கிறார். அது என் தாயை அழ வைத்துவிட்டது. என் தாய் சில கடன் ஏற்பாடுகளை அந்த வயதான இளவரசிக்குச் செய்து தந்திருக்கிறாள். அவள், கிழவியைப் பற்றியும் அவளுடைய மகளைப் பற்றியும் வாய்க்கு வந்தபடி மோசமாகப் பேசியிருக்கிறாள். தொடர்ந்து என் தந்தை அவளை மிரட்டியிருக்கிறார். "எல்லாவிதமான மோசமான விஷயங்களும்...” ஃபிலிப் தொடர்ந்து சொன்னான்: "ஒரு அடையாளம் தெரியாத கடிதத்திலிருந்து வந்து சேர்ந்தன. அதை யார் எழுதியது என்று யாருக்கும் தெரியாது. இல்லாவிட்டால்- எது வேண்டுமானாலும் நடக்கட்டும்- அப்படியொரு சம்பவம் நடப்பதற்கு காரணமே இருந்திருக்காது.”
"ஆனால், உண்மையாகவே அதில் அடிப்படை இருக்கிறதா?” நான் மிகவும் சிரமப்பட்டு சிந்தித்துப் பார்த்தேன். அப்போது என் கைகளும் பாதங்களும் குளிர்ந்து போய்விட்டன. என் உடலில் ஒருவித நடுக்கம் உண்டானது.
ஃபிலிப் அர்த்தத்துடன் கண்ணடித்தான்: "நிச்சயம் இருக்கிறது. அந்த விஷயங்களை மறைக்கவே முடியாது. உன் தந்தை இந்த முறை மிகவும் கவனமாகவே இருந்தார். ஆனால்... நீயே பார்... அவர்... உதாரணத்திற்கு... வாடகைக்கு ஒரு வண்டியோ வேறு ஏதாவதோ ஏற்பாடு செய்யும்போது... பணியாட்களே இல்லாமல்...”
நான் ஃபிலிப்பைப் போகச் சொல்லிவிட்டு, என் படுக்கையில் போய் விழுந்தேன். நான் அழவில்லை. நான் என்னை விரக்தியடையச் செய்யவில்லை. இந்த விஷயங்கள் எப்போது, எப்படி நடந்தன என்று எனக்குள் நான் கேட்டுக் கொள்ளவில்லை. நான் எந்தக் காலத்திலும் மனதில் கற்பனை கூட பண்ணி வைத்திராத ஒரு விஷயம் எப்படி நடந்தது என்று நான் ஆச்சரியப்படவில்லை. எது தேவையோ அதைவிட அதிகமாகவே நான் தெரிந்துகொண்டிருந்தேன். இந்த எதிர்பாராத திடீர் செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. என்னுடைய இதயத்தில் இருந்த அனைத்து அழகான மலர்களும் முரட்டுத்தனத்துடன் உடனடியாகப் பிடுங்கப்பட்டு விட்டன. அவை எனக்கு அருகில், தரையில், கால்களால் மிதிபட்டுக் கிடந்தன.
மறுநாள் என் தாய் தான் நகரத்திற்கு திரும்பிச் செல்ல விரும்புவதாகக் கூறினாள். காலையில் என் தந்தை அவளுடைய படுக்கையறைக்குள் சென்றார். அங்கேயே நீண்ட நேரம் அவளுடன் அவர் மட்டும் இருந்தார்.
அவளிடம் அவர் என்ன சொன்னார் என்பதை யாரும் ஒட்டுக் கேட்கவில்லை. ஆனால், என் தாய் அதற்குப் பிறகு அழவில்லை. அவள் தன் பழைய இயல்பு நிலைக்கு மீண்டும் வந்தாள். சாப்பிடுவதற்கு உணவு கொடுக்கும்படி கேட்டாள். ஆனால், அவள் வெளியே வரவில்லை. தன்னுடைய திட்டங்களையும் அவள் மாற்றிக்கொள்ளவில்லை. நான் அன்று முழுவதும் வெறுமனே சுற்றித் திரிந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். ஆனால், நான் தோட்டத்துப் பக்கம் செல்லவில்லை. ஜினைடாவின் வீடு இருக்கும் கட்டடத்தை ஒரு முறையும் ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. சாயங்காலம் நடைபெற்ற ஒரு ஆச்சரியப்படக்கூடிய சம்பவத்திற்கு நான் பார்வையாளனாக இருந்தேன். என் தந்தை கவுண்ட் மாலேவ்ஸ்கியை கையைப் பிடித்து சாப்பிடும் அறை வழியாக கூடத்திற்குள் அழைத்துக் கொண்டு வந்தார். வேலைக்காரன் ஒருவனை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் மெதுவான குரலில் சொன்னார்: "சில நாட்களுக்கு முன்னால் எங்கள் வீட்டுக் கதவு உனக்கு காட்டப்பட்டது. இப்போது உன்னிடம் நான் எந்தவிதமான விளக்கத்தையும் கேட்கப் போவதில்லை. ஆனால், இன்னொரு முறை இங்கு நீ வந்தால், உன்னை சாளரத்திற்கு வெளியே தூக்கியெறிந்து விடுவேன் என்ற செய்தியை உன்னிடம் கூறுவதற்காக நான் பெருமைப்படுகிறேன். உன்னுடைய கையெழுத்து எனக்குப் பிடிக்கவில்லை...” மாலேவ்ஸ்கி தலை குனிந்து நின்றிருந்தான். அவன் தன்னுடைய உதடுகளைக் கடித்தான். சுருங்கியவாறு இருந்துகொண்டு, பிறகு காணாமல் போனான்.
நாங்கள் நகரத்திற்கு இடம் பெயர்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயின. நாங்கள் போவதாக இருந்தது- ஆர்பரி தெருவிற்கு. அங்கு ஏற்கெனவே எங்களுக்கு ஒரு வீடு இருந்தது. சொல்லப் போனால்- என் தந்தையே இதற்குமேல் கிராமத்து வீட்டில் இருப்பதற்கு விரும்பவில்லை. அதே நேரத்தில்- என் தாயைக் கெஞ்சிக் கூத்தாடி, நடந்த விஷயத்தை ஊர் முழுவதும் தெரியும் அளவிற்கு அம்பலமாகாமல் பார்த்துக் கொள்வதில் அவர் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டார். எல்லா விஷயங்களும் அமைதியாக நடந்து கொண்டிருந்தன. எதுவும் அவசரமே இல்லாமல் நடந்தன. இன்னும் கூறப்போனால் என் தாய் தன்னுடைய வாழ்த்துகளை வயதான இளவரசிக்குத் தெரியப்படுத்தி இருந்தாள். தான் இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவளைத் திரும்பவும் ஒருமுறை பார்க்க முடியாமல் போவதற்காக தான் மனதில் மிகவும் வருத்தப்படுவதாக அவள் குறிப்பிட்டிருந்தாள். நான் பேய் பிடித்தவனைப்போல அலைந்து கொண்டிருந்தேன். நான் ஒரே ஒரு விஷயத்திற்காகத்தான் ஏங்கினேன். எல்லா விஷயங்களும் எவ்வளவு சீக்கிரம் முடிய வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அது. ஒரு சிந்தனையை மட்டும் என்னால் என் தலைக்குள்ளிருந்து வெளியேற்றவே முடியவில்லை. அவள், அந்த இளம்பெண்... அவள் இளவரசி வேறு! இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு எப்படி வந்தாள்? திருமணம் செய்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்து... உதாரணத்திற்கு பைலோவ்ஸொரோவ்வையே வைத்துக் கொள்வோம்... என் தந்தை ஒரு தனி மனிதர் அல்ல என்பதைத் தெரிந்து அவள் ஏன் அப்படி நடந்தாள்? அவள் எதை எதிர்பார்த்தாள்? தன்னுடைய முழு எதிர்காலத்தையும் பாழ்படுத்திக் கொள்கிறோமே என்ற பயம் அவளுக்கு எப்படி இல்லாமல் போனது? ஆமாம்- நான் மனதிற்கு நினைத்தேன்- இது காதல்... இது வெறி... இது வழிபாடு... அப்போது லூஷினின் வார்த்தைகள் எனக்கு ஞாபகத்தில் வந்தன. யாருக்காகவாவது தன்னைத் தானே தியாகம் செய்வது என்பது இனிமையானது. எது எப்படியோ அந்த கட்டடத்தின் ஒரு சாளரத்தின் அருகில் வெள்ளை நிறத்தில் ஏதோவொன்றை பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது... "அது ஜினைடாவின் முகம்தானே?” நான் நினைத்தேன். ஆமாம்... உண்மையிலேயே அது அவளுடைய முகம்தான். என்னை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இறுதியாக அவளுக்கு ஒரு "குட்பை” கூறாமல் அவளிடமிருந்து நான் பிரிந்து செல்ல முடியாது. எனக்குச் சாதகமாக ஒரு தருணம் கிடைத்திருக்கிறது. அதனால் நான் அந்த கட்டடத்திற்குள் சென்றேன்.
வரவேற்பறையில் வயதான இளவரசி தன்னுடைய வழக்கமான, சாதாரணமான, அலட்சியமான வார்த்தைகளுடன் என்னைச் சந்தித்தாள்.
"என்ன இது, என்னுடைய அருமையான மனிதனே! உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இவ்வளவு அவசரமாக இங்கிருந்து வெளியேறுகிறார்கள்!”அவள் மூக்குப் பொடியை மூக்கிற்குள் திணித்துக் கொண்டே கேட்டாள். நான் அவளையே பார்த்தேன். என் இதயத்திலிருந்து ஒரு மிகப்பெரிய சுமை இறங்கியதைப்போல இருந்தது. ஃபிலிப் கூறிய "கடன்” விஷயம் என்னை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. அவளுக்கு சந்தேகம் இல்லை... குறைந்த பட்சம் நான் அப்படி நினைத்துக் கொண்டேன். ஜினைடா பக்கத்து அறைக்குள்ளிருந்து அங்கு வந்தாள். அவள் வெளிறிப் போய் காணப்பட்டாள். கருப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள்.அவளுடைய கூந்தல் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வார்த்தைகூட உச்சரிக்காமல், அவள் என் கையை தன் கையால் பற்றியவாறு, என்னை தன்னுடன் சற்று தள்ளி அழைத்துக் கொண்டு சென்றாள்.
"நான் உன் குரலைக் கேட்டேன்.” அவள் ஆரம்பித்தாள்: "உடனடியாக நான் வெளியே வந்தேன். எங்களை விட்டு பிரிந்து செல்வது என்பது உனக்கு அந்த அளவிற்கு எளிய விஷயமாக இருக்கிறதா, மோசமான பையா?”
"இளவரசி, நான் உனக்கு "குட்பை” கூறுவதற்காகத்தான் இங்கே வந்தேன்” நான் சொன்னேன்: "இன்னும் சொல்லப் போனால்- நிரந்தரமாக... நீதான் ஏற்கெனவே கேள்விப்பட்டு விட்டாயே! நாங்கள் இங்கிருந்து புறப்படுகிறோம்...”
ஜினைடா என்னையே வெறித்துப் பார்த்தாள்.
"ஆமாம்... நான் கேள்விப்பட்டேன். இங்கு வந்ததற்கு நன்றி. மீண்டும் உன்னைப் பார்க்கவே கூடாது என்று நான் நினைத்தேன். என்னைப் பற்றி மோசமாக எதுவும் நினைக்காதே. சில நேரங்களில் உன்னை நான் துன்பத்திற்குள்ளாக்கி இருக்கிறேன். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்- நீ மனதில் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அதுவல்ல நான்...”
அவள் திரும்பி சாளரத்தின்மீது சாய்ந்து கொண்டு நின்றாள்.
"உண்மையாகவே... நான் அப்படிப்பட்டவள் இல்லை... நீ என்னைப் பற்றி மோசமாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்ற விஷயம் எனக்குத் தெரியும்.”
"நானா?”
"நீதான்... நீதான்... நீயேதான்...”
"நானா?” எதையோ நினைத்துக் கொண்டு நான் திரும்பவும் கூறினேன். முன்பு அவளுடைய ஆளுமையின் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஈர்ப்பின் பாதிப்பில் இருந்ததைப்போல, என் இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
"நானா? என்னை நம்பு ஜினைடா அலெக்ஸாண்ட்ரோவ்னா... நீ எதையெதையெல்லாம் செய்திருந்தாலும், எந்த அளவிற்கும் என்னைத் துன்பத்திற்குள்ளாகியிருந்தாலும்... என்னுடைய இறுதி நாட்கள் வரை நான் உன்மீது அன்பு வைத்திருக்க வேண்டும்... வழிபட வேண்டும்...”
அவள் ஒரு வேகமான எட்டுடன் என்னை நோக்கித் திரும்பி, தன் கைகளை அகல விரித்து, என் தலையை இறுக அணைத்து, எனக்கு ஒரு வெப்பம் நிறைந்த, வெறித்தனமான முத்தத்தைத் தந்தாள். அந்த நீண்ட நேரம் கொடுக்கப்பட்ட, விடைபெறும் தருணத்தில் கிடைத்த முத்தம் யாரைத் தேடுகிறது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால், நான் ஆர்வத்துடன் அதன் இனிமையைச் சுவைத்தேன். அது எந்தக் காலத்திலும் திரும்பவும் கிடைக்காது என்ற விஷயம் எனக்குத் தெரியும். "குட்பை... குட்பை...” நான் கூறினேன்.
அவள் என்னிடமிருந்து தன்னை வலிய பிரித்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்தாள். நானும் அங்கிருந்து புறப்பட்டேன். நான் அங்கிருந்து எப்படிப்பட்ட உணர்வுகளுடன் கிளம்பினேன் என்பதை என்னால் வார்த்தைகளில் விளக்கிக் கூற முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை மீண்டுமொருமுறை வருவதை நானே விரும்பவில்லை. அப்படிப்பட்ட ஒரு உணர்வை நான் எந்தக் காலத்திலும் அனுபவித்ததே இல்லை என்று கூறும்போது என்னை நானே அதிர்ஷ்டமில்லாதவன் என்றும் நினைத்துக் கொள்கிறேன்.
நாங்கள் திரும்பவும் நகரத்திற்குச் சென்றோம். நான் அவ்வளவு சீக்கிரம் பழைய நினைவுகளை உதறி விட்டு விடவில்லை. நான் அவ்வளவு சீக்கிரம் வேலைகளில் மூழ்கி விடவும் இல்லை. என்னுடைய காயங்கள் மெதுவாக ஆற ஆரம்பித்திருந்தன. ஆனால், என் தந்தையைப் பற்றி நான் மோசமான எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. அதற்கு நேர்மாறாக, என் கண்களில் அவர் நல்லவராகவே தெரிந்தார்... மனநல நிபுணர்கள் அந்த முரண்பாட்டை தங்களால் எந்த அளவிற்கு சிறப்பாக விளக்கிக் கூறமுடியுமோ, அவர்கள் கூறட்டும். ஒருநாள் நான் ஒரு தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். வார்த்தைகளால் விவரித்துக் கூறமுடியாத அளவிற்கு எனக்கு ஒரு சந்தோஷ சூழ்நிலை உண்டானது. நான் லூஷினைப் பார்த்தேன். அவருடைய மனதில் எதையும் மறைத்து வைக்காமல் நேரடியாக பேசும் குணத்தாலும், பாதிக்கப்படாத சுயத்துவத்தாலும் நான் அவரை விரும்பினேன். இவை தவிர எனக்குள் அவர் என் அன்பைச் சம்பாதித்து விட்டிருந்தார். நான் வேகமாக அவரை நோக்கிச் சென்றேன். "ஆஹா...” அவர் புருவத்தை உயர்த்திக் கொண்டே கூறினார். "ம்” நீயா? இளைஞனே! எங்கே... நான் உன்னைப் பார்க்கிறேன். நீ எப்போதும்போல் இப்போதும் மஞ்சள் நிறத்திலேயே இருக்கிறாய். ஆனால், உன் கண்களில் பழைய அந்த உருப்படாத விஷயங்கள் இல்லை. நீ ஒரு மனிதனாகத் தெரிகிறாய். மடியில் வைத்திருக்கும் நாயாகத் தெரியவில்லை. அதுதான் நல்லது... சரி... நீ என்ன செய்கிறாய்? வேலைக்குப் போகிறாயா?” நான் ஒரு பெருமூச்சை விட்டேன். நான் அவருக்கு ஒரு பொய்யைக் கூற விரும்பவில்லை. அதே நேரத்தில்- உண்மையைக் கூறுவதற்கும் எனக்கு அவமானமாக இருந்தது.
"சரி... பரவாயில்லை...” லூஷின் தொடர்ந்து கூறினார்: "வெட்கப்படாதே. ஒரு இயல்பு வாழ்க்கையை வாழ்வது என்பதுதான் மிகப் பெரிய விஷயம்... உன்னுடைய உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருப்பது பெரிய விஷயமல்ல. இல்லையென்றால், உனக்கு என்ன கிடைக்கும்? அலைகளால் நீ எங்கெங்கோ இழுத்துச் செல்லப்படுவது என்பது ஒரு மோசமான விஷயம். ஒரு மனிதன் தன்னுடைய சொந்தக் கால்களில் நிற்க வேண்டும். அவனுக்கு எதுவுமே கிடைக்க வில்லையென்றாலும், ஒரு பாறையைப் பிடித்துக் கொண்டாவது... இங்கே பார்... எனக்கு இருமல் இருக்கிறது. ம்... பைலோவ்ஸொரோவ்... அவனைப் பற்றி நீ ஏதாவது கேள்விப்பட்டாயா?”
"இல்லை... என்ன விஷயம்?”
"அவன் காணாமல் போய்விட்டான். அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அவன் காக்கசஸுக்கு சென்றுவிட்டதாக சிலர் கூறினார்கள். உனக்கு ஒரு பாடம், இளைஞனே! நேரத்துடன் எப்படி இணைந்து செயல்படுவது, கூட்டைப் பிரித்துக் கொண்டு எப்படி வெளியேறுவது ஆகிய விஷயங்கள் தெரியாததால் வரும் வினைகள் அவை... நீ அங்கிருந்து கிளம்பி வந்தது நல்ல ஒரு விஷயம். மீண்டும் அந்த பொறியில் விழாமல் இருக்க வேண்டும் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்... குட்பை...”
"நான்..” நான் நினைத்தேன்: "நான் அவளை மீண்டும் பார்க்க மாட்டேன்!” ஆனால், மீண்டுமொருமுறை ஜினைடாவைப் பார்க்கக் கூடிய சூழ்நிலை எனக்கு உண்டானது.
என் தந்தை தினமும் குதிரையின்மீது ஏறி சவாரிக்குச் செல்வார். அவரிடம் ஒரு அருமையான ஆங்கிலேய குதிரை இருந்தது. உறுதியான உடலமைப்பைக் கொண்டது. மெல்லிய நீளமான கழுத்து... நீளமான கால்கள்... சிறிதும் சோர்வடையாத சுறுசுறுப்பான மிருகம்... அவளுடைய பெயர் எலெக்ட்ரிக். என் தந்தையைத் தவிர, வேறு யாரும் அவள்மீது சவாரி செய்ய முடியாது. ஒருநாள் அவர் என்னிடம் ஒரு நல்ல நகைச்சுவை உணர்வுடன் வந்தார். அவரிடம் இப்படிப்பட்ட ஒரு மனநிலையை நீண்டகாலமாக நான் பார்க்கவில்லை. அவர் சவாரிக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். அதற்கான ஆடைகளைக்கூட அவர் அணிந்துவிட்டார். தன்னுடன் என்னையும் அழைத்துக் கொண்டு போகும்படி நான் அவரிடம் கூறினேன்.
"அதைவிட நாம் தவளை குதிக்கும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கலாம். நீ என்னைப் பின்பற்றி உன்னுடைய சிலந்தியைப் போன்ற சிறிய குதிரையில் சரியாக வரமாட்டாய்.”
"சரியாகப் பின்பற்றி வருகிறேன். சவாரிக்கான என் ஆடைகளை நான் அணிந்துகொள்கிறேன்.”
"சரி... அப்படியென்றால் வா.”
நாங்கள் புறப்பட்டோம். என்னிடம் ஒரு சிறிய கறுப்பு நிற, பலசாலியான நல்ல உற்சாகத்துடன் இருக்கும் குதிரை இருந்தது. எலெக்ட்ரிக் தன்னுடைய முழுவேகத்துடன் ஓடிக்கொண்டிருக்க, என்னுடைய குதிரையும் தன்னுடைய அதிகபட்ச வேகத்துடன் ஓடவேண்டும் என்பதுதான் உண்மை நிலை. எனினும், நான் அந்த அளவுக்கு பின்னால் இல்லை. என் தந்தை அளவிற்கு வேறு யாரும் குதிரைச் சவாரி செய்து நான் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு குதிரையில் அவர் மிகவும் அலட்சியமாக அமர்ந்திருப்பார்.
அவருக்குக் கீழே இருக்கும் குதிரை அந்த உண்மையை நன்கு தெரிந்தே வைத்திருக்கிறது என்பதைப் போலவும், தன்மீது அமர்ந்து சவாரி செய்யும் மனிதரை நினைத்து அது பெருமைப்பட்டுக் கொள்கிறது என்பதைப்போலவும் நமக்குத் தோன்றும். நான் எல்லா சாலைகளின் வழியாகவும் சவாரி செய்துவிட்டு, "மெய்டன்ஸ் ஃபீல்ட்”டிற்கு வந்து சேர்ந்தோம். பல வேலிகளையும் நாங்கள் தாண்டினோம். (முதலில் ஒரு பாய்ச்சல் பாய்வதற்காக நான் பயந்தேன். ஆனால், என் தந்தைக்கு கோழைகளைப் பார்த்தால் பிடிக்காது. அதனால் நான் பயப்படுவதை நிறுத்திக் கொண்டேன்.) இரண்டு முறை மாஸ்க்வா ஆற்றைக் கடந்தோம். நாங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறோம் என்று மனதில் பட்டது.
என் குதிரை மிகவும் களைத்துப்போய் விட்டதை என் தந்தை தெரிந்துகொண்டு விட்டிருக்கிறார் என்பதால் அப்படியொரு தீர்மானம் எடுக்கப் பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். திடீரென்று "க்ரிமியன் ஃபோர்ட்” என்ற இடத்தில் என்னிடமிருந்து அவர் விலகிச் சென்றார். ஆற்றின் கரையையொட்டி அவர் சவாரி செய்து போய்க் கொண்டிருந்தார். நான் அவரைப் பின்பற்றி சவாரி செய்தேன். நாங்கள் உயரமாக மரக்கட்டைகள் குவிக்கப்பட்டிருந்த ஒரு இடத்தை அடைந்தபோது, அவர் எலெக்ட்ரிக்கை விட்டு வேகமாகக் கீழே இறங்கினார். என்னையும் குதிரையிலிருந்து கீழே இறங்கச் சொன்னார். தன்னுடைய குதிரையின் கடிவாளத்தை அவர் என்னிடம் தந்துவிட்டு, அவரை எதிர்பார்த்து என்னை அங்கேயே காத்திருக்கும்படி கூறினார். அப்படிக் கூறிவிட்டு அவர் ஒரு சிறிய தெருவிற்குள் நுழைந்து காணாமல் போனார். ஆற்றின் கரையில் குதிரைகளைக் கைகளில் பிடித்தவாறு நான் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தேன். நான் எலெக்ட்ரிக்கைத் திட்டினேன். அது என்னை இழுத்துக் கொண்டிருந்தது. தன்னுடைய தலையை ஆட்டிக் கொண்டே அது தும்மிக் கொண்டும் கனைத்துக் கொண்டும் நடந்து கொண்டிருந்தது. நான் நின்றபோது, அதுவும் நின்று, கனைத்துக் கொண்டே என்னுடைய சிறிய குதிரையின் கழுத்தைக் கடித்தது. தாறுமாறாக வளர்க்கப்பட்டதால், தன் விருப்பப்படி அது நடந்து கொண்டிருந்தது. என் தந்தை திரும்பி வரவே இல்லை. ஆற்றிலிருந்து விரும்பத்தகாத ஒரு ஈரப்படலம் மேலே எழும்பிக் கொண்டிருந்தது. ஒரு அருமையான மழை மெதுவாகப் பெய்ய ஆரம்பித்தது. அதன் சிறுசிறு துளிகள் அந்தச் சாம்பல் நிற மரக் கட்டைகளின்மீது விழுந்து கொண்டிருந்தன. நான் அந்த இடத்தில் போவதும் வருவதுமாக இருந்தேன். எனக்கு இப்போது தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பு உண்டானது. நான் மிகவும் சலிப்படைந்து விட்டேன். அப்போதும் என் தந்தை வரவில்லை. காவலாளியைப்போல் தோன்றிய ஒரு மனிதன்... அனேகமாக ஒரு ஃபின்லேண்ட் நாட்டைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும்... மரக்கட்டையைப்போல சாம்பல் நிறத்தில், மிகப்பெரிய பழைய பாணியில் அமைந்த ஒரு பானையைப் போன்ற தொப்பியைத் தலையில் வைத்துக் கொண்டு, ஒரு கோடாரியுடன் (இந்த நேரத்தில் மாஸ்க்வா ஆற்றின் கரையில் ஒரு காவலாளி எப்படி வந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள்) எனக்கு மிகவும் அருகில் வந்து கொண்டிருந்தான்.
அவன் தன்னுடைய சுருக்கங்கள் விழுந்த முகத்தை என்பக்கம் திருப்பினான். அது ஒரு வயதான பெண்ணின் முகத்தைப்போல இருந்தது. அவன் சொன்னான்: "நீ இங்கே குதிரைகளை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய், இளைஞனே? நான் அவற்றைப் பிடித்துக் கொள்கிறேனே!”
நான் அவனுக்கு பதிலெதுவும் கூறவில்லை. அவன் என்னிடம் புகையிலை கேட்டான். அவனிடமிருந்து விடுபடுவதற்காக (நான் மிகுந்த பொறுமையற்ற நிலையில் இருந்தேன்.) என் தந்தை மறைந்து போன திசையில் சில அடிகளை எடுத்து வைத்தேன். பிறகு அந்தச் சிறிய தெருவின் இறுதிவரை நடந்து சென்றேன். அதன் மூலையில் திரும்பி அங்கேயே நின்றேன். தெருவில், என்னிடமிருந்து நாற்பது அடி தூரத்தில், மரத்தாலான ஒரு சிறிய வீட்டின் திறந்திருந்த சாளரத்தின் அருகில் என் தந்தை நின்று கொண்டிருந்தார். அவருடைய முதுகுப் பகுதி என்னை நோக்கித் திரும்பியிருந்தது.
அவர் சாளரத்தின் அருகில் முன்னோக்கி சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தார். திரைச்சீலை பாதி மறைத்திருந்த அந்த வீட்டில் கருப்பு நிற ஆடை அணிந்த ஒரு பெண் அமர்ந்து என் தந்தையுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்- ஜினைடா.
நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். இதை நான் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். நான் இதை எந்தச் சமயத்திலும் எதிர்பார்க்கவேயில்லை. நான் முதலில் அங்கிருந்து ஓடிவிடலாமா என்று நினைத்தேன். "என் தந்தை பார்த்து விட்டால்...” நான் நினைத்தேன்: "அவ்வளவுதான்... நான் தொலைந்தேன்.” ஆனால், ஒரு வினோதமான உணர்வு- ஆர்வத்தைவிட பலமான உணர்வு, பொறாமையைவிட பலமான... பயத்தைவிட பலமான உணர்வு என்னை அங்கேயே பிடித்து நிற்கச் செய்தது. நான் கவனிக்க ஆரம்பித்தேன். என் காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டேன். என் தந்தை ஏதோ விஷயத்தை மிகவும் வலியுறுத்திக் கூறுவதைப்போல தோன்றியது. ஜினைடா அதை ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது என்னால் அவளுடைய முகத்தைப் பார்க்க முடிந்தது- சிந்தனை வயப்பட்டு, சீரியஸாக, அழகாக, வார்த்தைகளால் விளக்கிக் கூறமுடியாத வழிபாட்டு உணர்வுடன், கவலையுடன், காதலுடன், ஒருவகையான விரக்தியுணர்வுடன்- அதற்கு வேறு வார்த்தையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் சிறு சிறு வார்த்தைகளாகக் கூறிக் கொண்டிருந்தாள். தன்னுடைய கண்களை அவள் உயர்த்தவில்லை. வெறுமனே புன்னகைத்தாள்- இயல்பாகவே. ஆனால், அடிபணியவில்லை. அந்தப் புன்னகையை மட்டும் வைத்துதான் என்னுடைய பழைய நாட்களின் ஜினைடாவையே நான் அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்தது. என் தந்தை தன்னுடைய தோள்களைக் குலுக்கிக் கொண்டிருந்தார். தன் தலையிலிருந்த தொப்பியை நேர் செய்தார். அப்படிச் செய்தால் அதற்கு எப்போதுமே அர்த்தம்- அவர் மிகவும் பொறுமையற்ற நிலையில் இருக்கிறார் என்பதுதான். சில வார்த்தைகள் என் காதில் விழுந்தன. ஜினைடா எழுந்து, தன் கையை நீட்டினாள்.... திடீரென்று என் கண்களுக்கு முன்னால் நடக்க இயலாதது நடந்தது. உடனடியாக என் தந்தை தன் கோட்டின்மீது படிந்திருக்கும் தூசியைப் பறக்கச் செய்வதற்காக பயன்படுத்தும் சாட்டையைத் தூக்கினார். அந்த கையில் ஒரு பலமான அடி விழுந்தது என் காதில் கேட்டது.
மணிக்கட்டுக்கு அருகில். நான் வாய் திறந்து அழாமல் இருப்பதற்காக மிகவும் படாதபாடு பட்டேன். அப்போது ஜினைடா ஓடிக் கொண்டே என் தந்தையையே ஒரு வார்த்தைகூட பேசாமல் பார்த்தாள். பிறகு தன் கையை மெதுவாக தன் உதடுகளை நோக்கி உயர்த்தினாள். அதில் இருந்த சிவப்புக் கறையை முத்தமிட்டாள். என் தந்தை சாட்டையை தூரத்தில் விட்டெறிந்து விட்டு, படிகளின் மேவே வேகமாக ஏறிச்சென்று, வீட்டின்மீது மோதினார்... ஜினைடா திரும்பி கைகளை நீட்டியவாறு, தலையைக் குனிந்து கொண்டே சாளரத்தை விட்டு நடந்து சென்றாள்.
என் இதயம் பயத்தில் உறைந்துபோய்விட்டது. ஏதோ பயங்கரமான சம்பவமொன்றைப் பார்த்து விட்டதைப்போல, நான் வேகமாக திரும்பி, தெருவில் ஓடிக்கொண்டிருந்தேன். எலெக்ட்டிரிக்கைப் பிடித்திருந்த என் பிடி எங்கே கைநழுவிப் போய்விடுமோ என்பதைப் போல தோன்றியது. நான் திரும்பவும் ஆற்றின் கரைக்கு வந்தேன். எதைப் பற்றியும் என்னால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை.
மிகவும் அமைதியாகவும், அதிகமாக பேசாமலும் இருக்கும் என் தந்தை சில நேரங்களில் கோபமுற்று வெறிபிடித்த மனிதரைப்போல ஆகும் விஷயம் எனக்குத் தெரியும். நான் சற்று முன்பு எதைப் பார்த்தேனோ, அதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரிந்தது. எவ்வளவு காலம் நான் உயிர் வாழ்கிறேனோ, அவ்வளவு காலத்திற்கும் என்னால் ஜினைடாவின் நடவடிக்கை, பார்வை, புன்னகை ஆகியவற்றை எந்தச் சமயத்திலும் மறக்கவே முடியாது. அவளைப் பற்றிய உருவகம்- திடீரென்று எனக்குக் கிடைத்திருக்கும் உருவகம்- என் நினைவில் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. நான் உயிர்ப்பே இல்லாமல் ஆற்றைப் பார்த்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததை நானே சிறிதும் பார்க்கவில்லை. "அவள் அடிக்கப்பட்டாள்...” நான் மனதில் நினைத்தேன்: "அடிக்கப்பட்டாள்... அடிக்கப்பட்டாள்...”
"ஹலோ! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்னுடைய குதிரையைத் தா.” எனக்குப் பின்னால் என் தந்தையின் குரல் காதில் விழுந்தது.இயந்திரத்தனமாக நான் கடிவாளத்தை அவரின் கைகளில் தந்தேன். அவர் எலெக்ட்ரிக்கின்மீது தாவி ஏறினார். குளிர்ந்துபோய் நின்று கொண்டிருந்த அந்தக் குதிரை, கிளம்புவதற்குத் தயாராகி, பத்து அடி தூரத்திற்கு தாவியது. ஆனால் என் தந்தை உடனடியாக அதை அடக்கிவிட்டார். அவர் கால்களை அதன் பக்கங்களில் போட்டு, அதன் கழுத்தில் தன் கையின் முஷ்டியால் ஒரு அடி அடித்தார். "ஆ... என்னிடம் சாட்டை இல்லை...” அவர் முணுமுணுத்தார்.
நான் சிறிது நேரத்திற்கு முன்பு கேட்ட சாட்டை அடியையும், அது கீழே விழுந்ததையும் மனதில் நினைத்துப் பார்த்து அதிர்ந்து நின்றேன்.
"அதை எங்கே போட்டீர்கள்?” சிறிது இடைவெளிக்குப் பிறகு நான் என் தந்தையைப் பார்த்துக் கேட்டேன்.
என் தந்தை எந்த பதிலும் கூறவில்லை. அவர் முன்னோக்கி வேகமாக குதிரையைக் கிளப்பினார். நான் அவரை முந்திச் சென்றேன். அவருடைய முகத்தை நான் பார்க்க வேண்டுமென்று நினைத்தேன்.
"எனக்காகக் காத்திருந்து நீ வெறுத்துப்போய்விட்டாயா?” அவர் பற்களுக்கு நடுவில் முணுமுணுத்தார்.
"கொஞ்சம்... நீங்கள் உங்களுடைய சாட்டையை எங்கே நழுவ விட்டீர்கள்?” நான் மீண்டும் கேட்டேன்.
என் தந்தை வேகமாக என்னைப் பார்த்தார். "நான் அதை நழுவ விடவில்லை.” அவர் சொன்னார்: "நான் அதை விட்டெறிந்து விட்டேன்.” அவர் என்னவோ சிந்தனையில் மூழ்கி, தன் தலையை குனிந்து கொண்டார்.... முதல்முறையாக, ஏன்... கடைசி முறையாக என்றுகூட சொல்லலாம்- அவருடைய உறுதியான அவயங்கள் எந்த அளவிற்கு மென்மைத்தனத்தையும் பரிதாப உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கு திறமை கொண்டவையாக இருக்கின்றன என்பதை நான் பார்த்தேன்.அவர் மீண்டும் வேகமாக சவாரி செய்தார். இந்தமுறை நான் அவரை முந்திச் செல்லவில்லை. அவர் போய் சேர்ந்த கால் மணி நேரம் கழித்து, நான் வீட்டை அடைந்தேன்.
"அதுதான் காதல்...” நான் எனக்குள் மீண்டும் கூறிக்கொண்டேன். அப்போது அந்த இரவு நேரத்தில் என்னுடைய எழுதும் மேஜைக்கு முன்னால், அதன்மீது புத்தகங்களும் தாள்களும் இருக்க, அமர்ந்து கொண்டு நான் இந்த வார்த்தைகளைக் கூறினேன்: "அதுதான் வெறி என்பது! எதிர்த்து செயல்படாமல் இருப்பது என்பதை நினைக்கும் போது... எவரிடமிருந்தாவது கிடைக்கக்கூடிய ஒரு அடியைத் தாங்கிக் கொள்வது என்பது... அந்த கரம் மிகவும் வேண்டியதாகவேகூட இருக்கட்டும்... ஆனால், ஒன்று தோன்றுகிறது... ஒரு நபர்... ஒரு நபர் காதலித்தால்...” நான்... நான் நினைத்தேன்.
கடந்த மாதத்தில் நான் நிறைய வளர்ந்துவிட்டேன். இந்த கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத சில விஷயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சந்தோஷங்களும் கவலைகளும் நிறைந்த என்னுடைய காதல் மிகவும் சிறியதாகவும் குழந்தைத்தனமாகவும் எனக்குத் தோன்றியது. அதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. யாரென்று தெரியாத, அழகான, பயமுறுத்தக் கூடிய முகத்தைப்போல என்னை அது பயமுறுத்திக் கொண்டிருந்தது. அரை இருட்டில் ஒருவன் எப்படி எந்த பலனும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பானோ, அந்த நிலையில் நான் இருந்தேன்.
அதே இரவு நேரத்தில் ஒரு வினோதமான, பயப்படக்கூடிய கனவு எனக்கு வந்தது. நான் மிகவும் இருண்ட ஒரு அறைக்குள் செல்வதைப் போல கனவு கண்டேன். என் தந்தை தன் கையில் ஒரு சாட்டையுடன், கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தார். மூலையில் ஜினைடா உட்கார்ந்திருந்தாள். அவளின் கையில் அல்ல...
அவளுடைய முன்தலையில் சிவப்பு நிறக்கோடுகள்... அவர்கள் இருவருக்கும் பின்னால் பைலோவ்ஸொரோவ் ரத்தத்துடன் நின்று கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வெள்ளை உதடுகளைத் திறந்து கோபத்துடன் என் தந்தையை மிரட்டினான்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தேன். ஆறு மாதங்களுக்குள் என் தந்தை மாரடைப்பு உண்டாகி பீட்டர்ஸ்பர்க்கில் மரணத்தைத் தழுவினார். அதற்கு சற்று முன்புதான் அவர் என் தாயுடனும் என்னுடனும் அங்கு குடிபெயர்ந்திருந்தார். அவருடைய மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்னால், மாஸ்கோவிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது அவரை பலமான கோபத்திற்கு ஆளாக்கியது. அவர் என் தாயின் மன்னிப்பை வேண்டி அவளைத் தேடிச் சென்றிருக்கிறார். நான் கேள்விப்பட்டேன்- அவர் உண்மையாகவே கண்ணீர் விட்டிருக்கிறார்- அவர் என் தந்தை! அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்த நாளன்று காலையில் அவர் ஃப்ரெஞ்ச் மொழியில் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். "என் மகனே...” அவர் எனக்கு எழுதியிருந்தார்: "பெண்ணின் காதலுக்குப் பயப்படு... அந்த அருளுக்கு பயப்படு... அந்த விஷத்திற்கு...” அவருடைய மரணத்திற்குப் பிறகு, என் தாய் ஒரு குறிப்பிடத்தக்க தொகையை மாஸ்கோவிற்கு அனுப்பினாள்.
நான்கு வருடங்கள் கடந்தோடிவிட்டன. நான் சமீபத்தில்தான் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியே வந்தேன். நான் என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை. எந்த கதவைத் தட்டுவது என்பதும் தெரியவில்லை. செய்வதற்கு எதுவுமே இல்லாமல் நான் நேரத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஒரு அருமையான மாலை வேளையில் தியேட்டரில் நான் மெய்டனோவ்வைப் பார்த்தேன்.அவருக்குத் திருமணமாகி விட்டிருந்தது. அவர் சிவில் சர்வீஸுக்குள் நுழைந்திருந்தார். அவரிடம் எந்தவொரு மாறுதலையும் என்னால் பார்க்க முடியவில்லை. முன்பு மாதிரியே ஆச்சரியப்படும் வகையில் அவர் கனவுகளில் மிதந்து கொண்டிருந்தார். திடீரென்று மீண்டும் கவலைகளில் மூழ்க ஆரம்பித்துவிடுவார்.
"உனக்குத் தெரியுமா?” எல்லா விஷயங்களுக்கும் மத்தியில் அவர் என்னிடம் சொன்னார்: "மேடம் டால்ஸ்கி இங்கேதான் இருக்கிறாள்.”
"எந்த மேடம் டால்ஸ்கி?”
"நீ அவளை மறந்து விட்டாயா? நாம் எல்லாருமே காதலித்தோமே! நீயும்கூடத்தான்... அந்த இளம் இளவரசி ஜாஸிகின்... நெஸ்க்குட்ச்னி தோட்டத்திற்கு மத்தியில் இருந்த அந்த பண்ணை வீடு உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா?”
"அவள் டால்ஸ்கியைத் திருமணம் செய்திருக்கிறாளா?”
"ஆமாம்...”
"அவள் இங்கேயா இருக்கிறாள்? இந்த தியேட்டரிலா?”
"இல்லை... ஆனால், அவள் பீட்டர்ஸ் பர்க்கில் இருக்கிறாள். சில நாட்களுக்கு முன்னால் அவள் இங்கே வந்தாள். அவள் வெளி நாட்டுக்குச் செல்லப் போகிறாள்.”
"அவளுடைய கணவன் எப்படிப் பட்டவன்?” நான் கேட்டேன்.
"ஒரு அருமையான மனிதன்! நிறைய சொத்துகள் இருக்கின்றன. மாஸ்கோவில் அவன் என்னுடைய நண்பனாக இருந்தவன்... நீ தெரிந்து கொண்டிருப்பாய்... அந்த மிகப்பெரிய சம்பவத்திற்கு பிறகு... நீ எல்லா விஷயங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். (மெய்டனோவ் அர்த்தத்துடன் புன்னகைத்தார்). ஒரு நல்ல திருமணத்தைச் செய்து கொள்வது என்பது அவளைப் பொறுத்தவரையில், ஒரு சாதாரண விஷயமல்ல. ஆனால், அவளுடைய புத்திசாலித்தனத்தின் காரணமாக எல்லாமே நடந்தது. போய் அவளைப் பார். உன்னைப் பார்த்தால், அவள் சந்தோஷப்படுவாள். அவள் எப்போதும் இருப்பதைவிட மிகவும் அழகாக இருக்கிறாள்.”
மெய்டனோவ் ஜினைடாவின் முகவரியை என்னிடம் தந்தார்.
அவள் ஹோட்டல் டீமட்டில் தங்கியிருக்கிறாள். பழைய நினைவுகள் என் மனதிற்குள் வலம் வந்தன. மறுநாளே என்னுடைய முன்னாள் "நெருப்புக் கொழுந்”தைப் போய் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். ஆனால், சில வேலைகள் அது நடக்காமல் தடுத்துவிட்டன. ஒரு வாரம் கடந்தது. அதற்குப் பிறகு இன்னொரு வாரம்... இறுதியில் நான் ஹோட்டல் டீமட்டிற்குச் சென்று மேடம் டால்ஸ்கியைப் பற்றி விசாரித்தபோது, எனக்குத் தெரியவந்தது- நான்கு நாட்களுக்கு முன்னால், அவள் மரணத்தைத் தழுவி விட்டாள். கிட்டதட்ட திடீரென்று... பிரசவத்தின்போது...
என் இதயத்தில் குத்து விழுந்ததைப்போல நான் உணர்ந்தேன். நான் அவளைப் பார்த்திருக்கலாம். அவளைப் பார்க்கவேயில்லை. அவளை எந்தச் சமயத்திலும் இனி பார்க்கவே முடியாது- இந்த கசப்பான மன ஓட்டம் பலமாக என்னைத் தாக்கி நிலைகுலையச் செய்து கொண்டிருந்தது. "அவள் இறந்துவிட்டாள்!” நான் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தேன். முட்டாள்தனமாக அங்கிருந்த பணியாளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் மெதுவாக தெருவிற்கு மீண்டும் திரும்பி வந்து, எங்கே போகிறேன் என்றே தெரியாமல் நடந்துபோய்க் கொண்டிருந்தேன். கடந்த காலங்கள் மேலே எழுந்து அந்த நிமிடமே தலையை உயர்த்திக் கொண்டு எனக்கு முன்னால் நின்றிருந்தன. இதுதான் இறுதி முடிவு... இந்த இலக்கை அடைவதற்குத்தான் அந்த இளம், அழகான, அறிவாளித்தனம் நிறைந்த வாழ்க்கை பாடுபட்டிருக்கிறது! அனைத்திலும் அவசரம்! ஆரவாரம்! நான் அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினேன். நான் அந்த அழகான தோற்றங்களை மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தேன். அந்தக் கண்கள், அந்தச் சிறிய பெட்டியில் இருந்த சுருள் முடிகள், ஈரமான மண்ணுக்குக் கீழே இருக்கும் இருட்டு... அங்கே கிடந்து கொண்டு... என்னைவிட அதிக தூரத்தில் இல்லாமல்... ஆனால், நான் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டு... சொல்லப்போனால்- என் தந்தையிடமிருந்து சில அடிகள் தள்ளி... நான் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன். நான் என் கற்பனையைச் சிரமப்பட்டு தொடர்ந்து கொண்டிருந்தேன். இந்த வரிகள்:
"உதடுகளிலிருந்து, அவளின் மரணத்திற்கு மாறாக, நான் கேட்டேன். மாறாக, நான் கவனித்தேன்...”
அவை என் இதயத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஓ இளமையே! இளமையே! நீ எதைப் பற்றியும் சிறிதளவே அக்கறை கொண்டிருக்கிறாய். இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொக்கிஷங்களுக்கும் நீதான் எஜமானன். துக்கம்கூட உனக்கு சந்தோஷத்தைத் தருகிறது. கவலையைக்கூட நீ உன்னுடைய ஆதாயமாக மாற்றிக் கொள்கிறாய். நீ தன்னம்பிக்கை கொண்டவனாகவும் மரியாதையற்றவனாகவும் ஆகிறாய். நீ சொல்கிறாய்: "நான் மட்டுமே வாழ்கிறேன். நீயே பார்!” ஆனால், உன்னுடைய நாட்கள் எல்லா வகையிலும் பறந்தோடிக் கொண்டிருக்கின்றன. ஒரு சிறு அடையாளமோ அல்லது அதிர்வோ இல்லாமல் மறைந்து போகின்றன. உனக்குள் இருக்கும் அனைத்தும் இல்லாமல் போகின்றன- சூரியனுக்கு முன்னால் மெழுகைப்போல, பனியைப்போல... ஆனால், உன்னுடைய வசீகரத்தன்மையின் முழு ரகசியமும் அப்படியே இருக்கின்றன... எதையும் செய்ய இயலாமல்... ஆனால், நீ எதை வேண்டுமானாலும் செய்வாய் என்று அதனால் சிந்திக்க முடிகிறது. நீ காற்றில் வீசி எறியும் சக்திகளை நீ வேறு எதற்கும்கூட பயன்படுத்த முடியாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் அடி ஆழத்தில் "நான்தான் உண்மை” என்றொரு எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும். அவன் இப்படிக் கூறிக் கொள்வதில் திருப்திப்பட்டுக் கொள்வான். "நான் என்னுடைய நேரத்தை வீணடிக்காமல் இருந்திருந்தால், என்னவெல்லாம் செய்திருப்பேன்!”
நான் இப்போது... நான் எதை எதிர்பார்த்தேனோ, எதை மதித்தேனோ, எந்த செல்வச் செழிப்பான எதிர்காலத்திற்காக நான் முன்கூட்டி திட்டமிட்டேனோ, அந்த என்னுடைய முதல் காதலின் நிழல், ஒரு நிமிட நேரத்திற்கு உயர்ந்து, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு, ஒரு உணர்ச்சி நிறைந்த நினைவில் மூழ்குகிறதோ?
நான் எதிர்பார்த்ததில் எதுவெல்லாம் கிடைத்திருக்கிறது? இப்போது... சாயங்கால வேளையின் நிழல்கள் என் வாழ்வைக் கவர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் சூறாவளியை, காலை நேரத்தை, இளவேனிற் காலத்தைப் பற்றிய நினைவுகளைவிட நான் எதை புத்துணர்ச்சியுடனும் அதிக மதிப்புடனும் விட்டுச் செல்கிறேன்?
ஆனால், எனக்கு நானே தவறு இழைத்துக் கொள்கிறேன்.
அப்படி இருந்தும் அந்த மென்மையான இதயம் இருந்த இளமையான நாட்களில், கவலையின் குரல் என்னை அழைக்கும்போது நான் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கவில்லை. கல்லறைக்குள்ளிருந்து பாடல் வரிகள் புறப்பட்டு வரும்போது செவிடாக இருந்ததில்லை. நான் நினைத்துப் பார்க்கிறேன்- ஜினைடாவின் மரணத்தைப் பற்றி நான் கேள்விப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அதே வீட்டில் வாழ்ந்த ஒரு வயதான ஏழைக் கிழவியின் மரணத்தின்போது, அடக்க முடியாத உணர்வுகளுடன் நான் அதே இடத்தில் இருந்தேன். துணிகளால் சுற்றப்பட்டு, அட்டையின்மீது படுத்தவாறு, தன்னுடைய தலைக்கு அடியில் ஒரு கோணியை வைத்துக் கொண்டு, அவள் சிரமப்பட்டும் வேதனைகளுடனும் இறந்து போனாள். அவளுடைய முழு வாழ்க்கையும் அன்றாட தேவைக்கான கசப்பான போராட்டங்களிலேயே கழிந்துவிட்டது. அவளுக்கு சந்தோஷமென்றால் என்னவென்று தெரியவில்லை. அவள் மகிழ்ச்சி என்ற தேனை ருசி பார்த்ததே இல்லை. யாராவது நினைக்கலாம்- அவள் நிச்சயம் தன் மரணத்தில் சந்தோஷத்தைப் பார்த்திருப்பாள், உலகை விட்டு விடுதலை ஆனதில், ஓய்வில் என்று...
ஆனால், அவளுடைய வயதான உடல் எவ்வளவு நேரம் கிடக்கிறதோ, அவளுடைய மார்பகங்கள் எவ்வளவு நேரம் குளிர்ச்சியான கைகளுக்குக் கீழே உயர்ந்து தாழ்ந்து கொண்டிருக்கின்றனவோ, அவளுடைய இறுதி சக்திகள் எப்போது அவளை விட்டுப் போகின்றனவோ- அதுவரை அந்த வயதான கிழவி தன்மீது சிலுவையை வரைந்து கொண்டு முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். "கடவுளே என் பாவங்களை மன்னித்துவிடு” பயம் கலந்த பார்வை, முடிவைப் பற்றிய திகில்- சுய உணர்வின் இறுதி நிமிடத்தில்தான் இவை அவளுடைய கண்களிலிருந்து காணாமல் போகும். நான் நினைத்துப் பார்க்கிறேன்- அந்த வயதான ஏழைக் கிழவியின் மரணப் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தபோது, நான் ஜினைடாவை ஆச்சரியப்படும் வகையில் நினைத்துப் பார்த்தேன். அவளுக்காக நான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று விரும்பினேன், என் தந்தைக்காகவும்- எனக்காகவும்.