Logo

இளம் பருவத்துத் தோழி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7009
ilam-paruvathu-thozhi

சுராவின் முன்னுரை

1944ஆம் ஆண்டில் வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) எழுதிய சாகா வரம் பெற்ற காதல் கதை இது. மஜீத், ஸுஹ்ரா இருவரும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள், ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள். வாழ்விலும் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டியவர்கள். ஆனால், சேர முடியவில்லை. இதைத்தான் விதி என்கிறார்களோ?

இந்த நாவலைப் படிக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் மஜீத் என்ற இளைஞனும், ஸுஹ்ரா என்ற இளம் பெண்ணும் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இந்த கதை மலையாளத்தில் 1967ஆம் ஆண்டில் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. பிரேம் நசீர், ஷீலா ஆகியோர் அதில் நடித்திருக்கிறார்கள்.

உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)


சிறு வயதிலிருந்தே ஸுஹ்ராவும் மஜீத்தும் நண்பர்களாக இருந்தார்கள் என்றாலும் அவர்களின் நட்பில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஒருவரையொருவர் அறிமுகம் ஆவதற்கு முன்பு அவர்கள் விரோதிகளாக இருந்தார்கள் என்பதுதான். அப்படி விரோதத் தன்மையுடன் இருந்ததற்குக் காரணம் என்ன? அவர்கள் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். அந்த இரண்டு குடும்பங்களும் மிகவும் நெருங்கிய நட்புடன் இருந்தன. ஆனால், ஸுஹ்ராவும் மஜீத்தும் மட்டும் பரம எதிரிகளாக இருந்தார்கள். ஸுஹ்ராவுக்கு அப்போது ஏழு வயது. மஜீத்திற்கு ஒன்பது வயது. ஒருவரையொருவர் கிண்டல் செய்வதும் பயமுறுத்துவதும் அவர்கள் அன்றாடம் செய்து கொண்டிருந்த செயல்கள்.

நிலைமை இப்படி இருக்கும்போது மாம்பழத்திற்கான காலம் வந்தது. ஸுஹ்ராவின் வீட்டிற்கு அருகிலிருந்த மாமரத்தில் மாங்காய் பழுத்து விழ ஆரம்பித்தது. ஆனால், அவளுக்கு ஒரு மாம்பழம் கூட கிடைக்கவில்லை. மாம்பழம் விழுவதைக் கேட்டு அவள் ஓடிச் செல்லும்போது அதை மஜீத் எடுத்து கடித்துத் தின்று கொண்டிருப்பதை அவள் பார்ப்பாள். அவன் அதை அவளுக்குத் தரமாட்டான். அப்படியே கொடுக்கத் தயாராக இருக்கிறானென்றால் அது அவன் கடித்துக் கொண்டிருக்கும் பழத்தின் மீதியாக இருக்கும். அவள் கையை நீட்டும்போது “இந்தா... இந்த கையைக் கடிச்சிக்கோ...” என்று கூறியவாறு அவன் தன் கையை அவளுடைய முகத்திற்கு நேராக நீட்டுவான். பிறகு, காணும் நேரமெல்லாம் அவன் அவளை பயமுறுத்துவான். கண்களை உருட்டியும் நாக்கை தட்டிக் காண்பித்தும் அவளுக்குப் பயமூட்டுவான்.

அதற்கெல்லாம் ஸுஹ்ரா சிறிதும் பயப்பட மாட்டாள். அவளும் பதிலுக்கு அவனிடம் ஏதாவது செய்வாள். ஆனால், மாம்பழ விஷயத்தில் மட்டும் ஸுஹ்ராவுக்குக் கிடைத்தது தோல்விதான். எந்தக்காரணத்தால் அவளுக்கு மாம்பழம் கிடைக்கவில்லை? காற்று இருக்கும்போதும் அது இல்லாத -நேராத நேரத்திலும் கூட அவள் ஆர்வத்துடன் மரத்திற்குக் கீழே நின்றிருப்பாள். அப்போது மாம்பழம் எதுவும் விழாது. ஒரு இலைகூட கீழே விழாது. நன்றாகப் பழுத்திருக்கும் மாம்பழம் கொத்துக் கொத்தாக மாமரத்தில் இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். மாம்பழம் கீழே விழாமல் இருந்தால், மரத்தில் ஏறி அதைப் பறிக்க வேண்டும். ஆனால், மரத்தில் நிறைய எறும்புகள் இருந்தன. அது கடித்துக் கொன்றுவிடும்! கடிக்கும் அந்தப் பெரிய எறும்புகள் மட்டும் இல்லாமலிருந்தாலும் மரத்தில் ஏறுவது என்பது ஸுஹ்ராவிற்கு முடியக்கூடிய காரியமா என்ன! என்ன இருந்தாலும் அவள் ஒரு பெண்ணாயிற்றே!

வாயில் நீர் ஊறிக்கொண்டிருக்க ஒருநாள் அவள் மாமரத்திற்குக் கீழே நின்றிருந்தபோது, கிளைகளில் மோதியவாறு ஓசையை எழுப்பிய வண்ணம் என்னவோ கீழே விழுந்தது!

அந்தச் சத்தத்தைக் கேட்டு ஸுஹ்ரா வேகமாக ஓடினாள். மனதில் மகிழ்ச்சி பொங்க அவள் அதைக்குனிந்து எடுக்க முயன்றாள். அப்போது அவளுக்கே வெட்கமாகி விட்டது. கீழே விழுந்து கிடந்தது ஒரு வெள்ளரிக்காய். தான் ஓடிவந்து ஏமாந்த விஷயத்தை வேறு யாராவது பார்த்திருப்பார்களா என்று சுற்றிலும் அவள் பார்த்தாள். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. இருந்தாலும், மாமரத்திலிருந்து வெள்ளரிக்காய் விழுந்தது எப்படி என்று அவள் ஆச்சரியப்பட்டாள். அவள் நாலா திசைகளிலும் கண்களை ஓட்டிப் பார்த்தாள். அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவ்வளவுதான் - அவளுக்கு ஒருவித நடுக்கமே உண்டாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் காரணம் அவன்தான்!

மஜீத் வெற்றி பெற்றுவிட்ட மமதையுடன் அர்த்தமில்லாத ஒரு சத்தத்தை உண்டாக்கினான். ‘ஜுகு! ஜுகு!’ என்று கூறியவாறு அவன்

மாமரத்தடியை நோக்கிச் சென்றான். அதோடு நிற்காமல் அவன் தன் கண்களை பயங்கரமாக உருட்டவேறு செய்தான். நாக்கை வெளியே நீட்டி அவளை அவன் பயமுறுத்தினான். பார்ப்பதற்கே அவன் அப்போது பயங்கரமாகத் தெரிந்தான்!

அந்தக்கோலத்தில் அவனைப் பார்த்தால் அந்தக் கிராமத்திலுள்ள சிறுமிகள் எல்லாரும் பயந்து நடுங்கி ‘அம்மா’ என்று உரக்கக் கத்தியவாறு நிச்சயம் ஓடுவார்கள். இப்படி பலரும் ஓடவும் செய்திருக்கிறார்கள். ஆனால் ஸுஹ்ரா ஓடவில்லை. அதோடு சும்மாவும் நிற்கவில்லை. தலையை ஒருபக்கம சாய்த்தவாறு நாக்கை நீட்டிக்கொண்டு கண்களால் வெறித்துப் பார்த்தவாறு அவளும் அவனைப் போலவே நின்றிருந்தாள்.

அதைப்பார்த்து மஜீத்துக்குக் கோபம் வந்தது. பெரிய ஒரு ஆண்பிள்ளையை ஒரு சிறு பெண் பயமுறுத்த முயற்சிப்பதா? அவன் அவளை நெருங்கி நடந்து வந்தான். தன் கண்களால் அவன் அவளை முறைத்துப் பார்த்தான். புருவங்களை உயர்த்தினான். அவனுடைய மூக்கின் இரண்டு துவாரங்களும் விரிந்தன. உரத்த குரலில் ‘த்தூ...’ என்று பயங்கரமாக அவன் கத்தினான்.

அவள் பயந்து ஓடவில்லை. தன்னுடைய புருவங்களை உயர்த்திய படி கண்களால் முறைத்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள். அவளுடைய மூக்குத் துவாரங்களும் விரிந்தன. அவளும் சொன்னாள்:

‘த்தூ...’

அதைப்பார்த்து மஜீத் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டான். ஒரு சின்னஞ்சிறு பெண்... ஒவ்வொரு வீடாக ஏறி பாக்கு வாங்கி கோணியில் சுமந்துகொண்டு வந்து அதை விற்பனை செய்யும் சாதாரண ஒரு பாக்கு வியாபாரம் செய்யும் மனிதனின் மகள் தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு நிற்பதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவள் எந்த காரணத்தால், பணக்காரனான - மர வியாபாரம் செய்பவரின் மகனான தன்னைப் பார்த்து பயப்படவில்லை? எந்தச் சூழ்நிலையிலும் ஒரு பெண் ஆணைப் பார்த்து பயப்படவேண்டுமல்லவா? மஜீத் அவளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்றான். சிறிதுகூட அவள் நின்றிருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. தன்னுடைய மரியாதை காற்றில் பறந்துவிட்டதைப் போல உணர்ந்தான் மஜீத். அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“உன் பேர் என்னடி?” - அவன் அவளுடைய கையைப் பிடித்து மிடுக்கான குரலில் கேட்டான். அவளுடைய பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு இல்லை. காரணம் - அவளின் பெயர் என்னவென்பது அவனுக்கு ஏற்கனவே தெரியும். இருப்பினும், அவளைப் பார்த்து அவன் ஏதாவது கேட்கவேண்டுமே! என்ன இருந்தாலும், அவன் ஆணாயிற்றே! அவளை இப்போது ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முடிவில் நின்றிருந்தான் மஜீத்.

அவளின் சிறு பற்களும் பாறையைப் போல் உறுதியாக இருந்த பத்து நகங்களும் ஏதாவது செய்வதற்குத் துடித்தன. ஒரு நிமிடம் அவளுக்கு என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை. அவனுடைய கையைக் கடிக்கலாமா? இல்லாவிட்டால் முகத்தை நகத்தால் கீறலாமா என்று தெரியாமல் அவள் தத்தளித்தாள். ‘உன் பேர் என்னடி?’ என்று அவன் கேட்டதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளின் வாப்பாவோ உம்மாவோ கூட அவளை இதுவரை ‘நீ’என்றோ ‘அடியே’ என்றோ அழைத்தது இல்லை.


அப்படியிருக்கும்போது வக்கனை காட்டிக்கொண்டும், மாம்பழம் தராமலும், கையைக் கடிக்கும்படி கூறிக்கொண்டும் இருக்கும் இந்த நாற்றம்பிடித்த பையன் தன்னை அப்படி அழைப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? அவள் கோபத்துடன் முன்னோக்கி நடந்து தன்னுடைய இடது கையில் பாறைபோல் உறுதியாக இருந்த நகங்களால் மஜீத்தின் வலது கையை பலமாகக் கிள்ளினாள்.

அடுத்த நிமிடம் நெருப்பு பட்டதைப் போல் உணர்ந்த மஜீத் நிலை தடுமாறிப்போய் தான் பிடித்திருந்த பிடியை விட்டு “என் உம்மா...” என்று உரத்த குரலில் அலற ஆரம்பித்தான். அப்படியொரு சூழ்நிலை தனக்கு உண்டாகும் என்பதை அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை. இருந்தாலும், அவனும் பதிலுக்கு அவளைத் தாக்க நினைத்தான். ஆனால், தன்னுடைய நகங்களை அவன் ஏற்கனவே முழுமையாக வெட்டியிருந்தான். அதற்குப் பிறகு அவன் செய்வதாக இருந்தால், ஒன்று அவளை அடிக்கலாம்; இல்லா விட்டால் கடிக்கலாம். ஆனால், பதிலுக்கு அவளும் அதே மாதிரி தன்னிடம் நடந்துவிட்டால், என்ற பயம் அவனுக்கு இல்லாமலில்லை. என்ன இருந்தாலும், அவள் நகத்தால் அவனைக் கிள்ளி முடித்துவிட்டாள். இனிமேல் அவள் அவனை அடிக்க வேறு செய்தாள் என்ற உண்மையை உலகம் அறிந்தால் அது அவனுக்கு எந்த அளவிற்கு மரியாதைக் குறைவான ஒரு செயலாக இருக்கும்? அதனால் அவன் ஒன்றும் செய்யவில்லை. தோற்றுப்போய் பல்லைக் காட்டிக்கொண்டு அவன் நின்றிருந்தான்.

ஸுஹ்ரா அவனைப் பார்த்து பற்களை இளித்துக் காட்டினாள். மஜீத் சிறிதுகூட அசையவில்லை. அவள் வக்கனை காட்டியவாறு மஜீத்தைப் பார்த்துக் கிண்டல் செய்தாள். “என் உம்மா...”

அதற்குப்பிறகும் மஜீத் அசையவில்லை. தனக்கு வந்த அவமானத்தை மறைப்பதற்காக உடனடியாக தான் ஏதாவது சொன்னால்தான் சரியாக இருக்குமென்றும், இந்த விஷயத்தில் ஸுஹ்ரா கட்டாயம் தோற்றே ஆகவேண்டும் என்றும் அவன் தீர்மானித்தான். என்ன இருந்தாலும் அவன் ஒரு ஆணாயிற்றே! இருந்தாலும்... அவளிடம் என்ன சொல்வது? அப்படிச் சொல்வது அவள் நம்பக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், என்ன சொல்வது என்ற விஷயம் அவன் மனதில் தோன்றவேயில்லை. அவன் ஒருவித பதற்றத்துடன் அவளைப்பார்த்தான். வாழை மரங்களுக்கு நடுவில் வைக்கோல் வேயப்பட்டு களிமண் பூசப்பட்ட ஸுஹ்ராவின் வீட்டையும் தென்னை மரங்களுக்கு நடுவில் ஓடு போடப்பட்டு சுண்ணாம்பு அடிக்கப்பட்ட தன்னுடைய வீட்டையும் பார்த்தபோது மஜீத்திற்கு ஒரு எண்ணம் பளிச்சிட்டது. ஸுஹ்ரா அவமானப்பட்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விடாத மாதிரி அவன் சொன்னான்:

“என் வீடு ஓடு போட்டதாக்கும்!”

இதிலென்ன உயர்வு இருக்கிறது? அவளுடைய வீடு வைக்கோல் வேய்ந்ததும்,  களிமண் பூசப்பட்டதும்தான். ஆனால், அதற்குள் என்ன குறைவாக இருக்கிறது? அவள் மீண்டும் வக்கனை காட்டியவாறு அவனைப் பார்த்து கிண்டல் பண்ணினாள்: “என் உம்மா...”

அதற்கு மஜீத் வேறொன்றைச் சொன்னான். ஸுஹ்ராவின் வாப்பா ஒரு சாதாரண பாக்கு வியாபாரிதானே? மஜீத்தின் வாப்பா பெரியவொரு மர வியாபாரம் செய்யும் பணக்காரர். அதற்குமேல் மரியாதையான ஒன்றை ஸுஹ்ரா இதுவரை பார்த்ததேயில்லை. மஜீத் என்ற உயிர் தனக்கு மிகவும் அருகில் நின்றிருக்கிறது என்ற எண்ணம் சிறிதுகூட இல்லாமல் ஸுஹ்ரா மாமரத்தின் உச்சியைப் பார்த்தாள்.

மஜீத்திற்கு அழுகை வருவதைப் போல இருந்தது. அவமானம்! தோல்வி! எல்லாம் சேர்ந்து அவனைப் பாடாய்ப்படுத்தின. அவனுக்கு ஒரு கழுதையைப் போல ‘பே’ என்ற உரத்த குரலில் அழ வேண்டும் போல இருந்தது. அப்படி அழுதாலாவது நிம்மதி கிடைக்காதா என்ற நினைப்புதான் அவனுக்கு. ஆனால், அடுத்த நிமிடமே அவனுக்கு ஒரு விஷயம் ‘பளிச்’சென்று தோன்றியது. மற்ற யாரிடமும் இல்லாத ஒரு திறமை தன்னிடம் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் தான் ஸுஹ்ராவைத் தோற்கடித்திருப்பது உண்மை என்றும் திடமாக அவன் நம்பினான். அந்த நினைப்புடன் அவன் வானமும் பூமியும் கேட்கிற மாதிரி கம்பீரமான குரலில் சொன்னான்:

“எனக்கு மாமரம் ஏறத்தெரியுமே!”

அடுத்த நிமிடம் ஸுஹ்ராவின் கண்கள் அசையாமல் அப்படியே நின்றுவிட்டன. மாமரத்தில் ஏறுவதற்கு தெரிந்திருப்பது... உண்மையிலேயே அது ஒரு பெரிய விஷயம்தான்! அவள் அதைக்கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அவன் மரத்தில் ஏறுவதாக இருந்தால் அவளுக்கு அவன் மாம்பழத்தைத் தருவானா? அதற்கு முன்பே அவள் தன்னுடைய உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தாள். கையெட்டும் உயரத்தில் இருந்த பெரிய இரண்டு மாம்பழங்களைச் சுட்டிக் காட்டிய ஸுஹ்ரா மிடுக்கான குரலில் சொன்னளாள்:

“பையா, அந்த பெரிய ரெண்டு மாம்பழங்களையும் முதல்ல பார்த்தது நான்தான்.”

மஜீத் பதிலெதுவும் பேசாமல் மவுனமாக இருந்தான்.

அவன் ஏன் பேசாமல் இருக்கிறான்? ஒருவேளை எறும்புகளைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டானோ! அவள் சொன்னாள்:

“ஓ... எறும்பு கடிக்குதோ!”

அவளின் குரல், நடந்து கொள்ளும் முறை எதுவுமே மஜீத்திற்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது. எறும்பு! எறும்பல்ல... கருந்தேள்களே சுற்றியிருந்தாலும் அவன் மரத்தில் ஏறுவது உறுதி! பெரிய இரண்டு மாம்பழங்களையும் முன்கூட்டியே பார்த்தது அவளாயிற்றே! அடடா... மஜீத் வேஷ்டியை மடித்து தார் பாய்ச்சியவாறு மாமரத்தின் மீது ஏறினான். மார்பில் மாமரத்தின் தோல் உராய்ந்தபோதும் எறும்பு உடம்பைச் சுற்றிக் கடித்தபோதும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஸுஹ்ரா பார்த்து வைத்திருந்த மாம்பழங்கள் இரண்டையும் பறித்துக்கொண்டு வெற்றி வீரனாக அவன் மரத்தை விட்டிறங்கினான்.

ஸுஹ்ரா ஓடி வந்தாள். ஆர்வம்! பரபரப்பு! அவள் தன் கைகளை நீட்டினாள்.

“இங்கே தா பையா... நான் பார்த்துவச்ச மாம்பழங்களாச்சே!”

மஜீத் பதிலேதும் பேசவில்லை. வாயின் இரண்டு பக்கங்களையும் இழுத்துக்கொண்டு உதடுகளை ஒருமாதிரி வைத்தவாறு அவன் நின்றிருந்தான்.

“இங்கே தா பையா... நான் பார்த்த மாம்பழங்கள்தானே?”

மஜீத் கிண்டலாகப் பார்த்தான்.

“பெருசாதான் ஆசைப்படுற...” - அவன் நடந்தான். தொடர்ந்து மாம்பழங்களை மூக்கின் முன் வைத்து வாசனை பிடித்தவாறு அவன் சொன்னான் :

“அடடா... என்ன மணம்!”

ஸுஹ்ராவிற்கு அதைக்கேட்டு எரிச்சல் உண்டானது. அவள் கோபப்பட்டாள். அவளின் இதயம் ஓ... அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. தேம்பித்தேம்பி அழுதாள்.

அவன் திரும்பி வந்தான். தன்னுடைய உயர்ந்த குணத்தைக் காட்டிக் கொள்வதற்கு அவனுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்! அவன் மாம்பழத்தை அவள் முன்னால் நீட்டினான். அதை வாங்கவேண்டும் என்ற ஆர்வம் மனதில் இருந்தாலும் அவள் தன் கைகளை நீட்ட வில்லை.


மஜீத் மாம்பழங்கள் இரண்டையும் அவளுக்கு முன்னால் வைத்தான். ஆனால், அவள் அவற்றை எடுக்கவில்லை. அவளால் அவன் போக்கைச் சிறிதுகூட நம்பமுடியவில்லை. அவன் அந்த அளவிற்கு நல்லவனா என்ன? அவளுக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கையே வரவில்லை. கைகள் இரண்டையும் பின்னால் கட்டியவாறு கண்ணீர் விட்டபடி அதே இடத்தில் அவள் நின்றிருந்தாள்.

மஜீத் அன்பு மேலோங்கச் சொன்னான்:

“வேணும்னா இனியும் பழங்கள் பறிச்சுத் தர்றேன்.”

அதைக்கேட்டு ஸுஹ்ராவின் இதயம் நொறுங்கிப் போய் விட்டது. அவளுக்கு வேண்டுமென்றால் இனியும் அவன் பழங்களைப் பறித்துத் தருகிறானாம். தியாகி... தைரியசாலி! எவ்வளவு நல்ல பையன்! அவனைத்தான் கிள்ளியது சரிதானா? அவள் மிகவும் அமைதியான பெண்ணாக மாறி நின்றிருந்தாள். பிறகு மெதுவான குரலில் சொன்னாள்:

“எனக்கு ஒண்ணு போதும்.”

அந்த நல்லவனான பெரிய தியாகி அலட்சியமான குரலில் சொன்னான்:

“எல்லாத்தையும் எடுத்துக்கப் பெண்ணே!”

“எனக்கு ஒண்ணு போதும்.”

அவள் ஒரு மாம்பழத்தை எடுத்து மஜீத்திடம் நீட்டினாள். அவன் வேண்டாமென்று மறுத்தான். அவள் அதை வாங்கிக் கொள்ளும் படி அவனை வற்புறுத்தினாள். அவன் அதை வாங்கவில்லையென்றால் தனக்கு அழுகை வந்துவிடுமென்று அவள் சொன்னாள்.

மஜீத் மாம்பழத்தை வாங்கிக் கடித்தபோது மாம்பழச்சாறு அவன் மார்பின் வழியே ஒழுகிக் கொண்டிருந்தது. அப்போது அவனுடைய உடம்பில் எறும்பு கடித்திருப்பதை ஸுஹ்ரா பார்த்தாள். அதைப் பார்த்து அவளுக்கு வருத்தம் உண்டானது. அவள் அவனுடைய உடம்போடு சேர்ந்து நின்றுகொண்டு உடம்பில் ஒட்டியிருந்த எறும்புகளை மெதுவாக விரல்களால் எடுத்தாள். அவளின் நகங்கள் மஜீத்தின் உடம்பைத் தொட்டபோது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

அன்று மஜீத்தை அவள் மீண்டும் அடிக்கவில்லையென்றாலும் எவ்வளவோ நாட்கள் அவள் மஜீத்தை அடிக்கவும் கிள்ளவும் செய்திருக்கிறாள். அவள் ‘அடிப்பேன்’ என்று சொன்னால் மஜீத் பயந்து நடுங்குவான். அவளின் மிகவும் கூர்மையான ஆயுதமான அந்த நகங்களை தந்திரமான ஒரு வழியைப் பின்பற்றி அவளின் முழு சம்மதத்துடனே ஒருநாள் அவன் வெட்டியெறிந்தான்.

2

ரு நாள் காலையில் ஸுஹ்ராவும் மஜீத்தும் சேர்ந்து அருகிலுள்ள இடங்களிலெல்லாம் அலைந்து பூஞ்செடிக் கொம்புகளைச் சேகரித்துக் கொண்டு வந்தார்கள். மஜீத்தின் வீட்டு வாசலுக்கருகில் ஒரு தோட்டம் அமைப்பது அவர்களின் நோக்கம். பூஞ்செடிக் கொம்புகளை ஸுஹ்ராதான் சுமந்துகொண்டு வந்தான். மஜீத் அவளுக்கு முன்னால் மிடுக்காக நடந்து வந்து கொண்டிருந்தான். என்ன இருந்தாலும் அவன் ஆணாயிற்றே!

அவனுடைய கையில் விரிக்கப்பட்ட ஒரு பேனாக்கத்தி இருந்தது. எதிர்காலத்தில் தான் செய்யப்போகும் பெரிய பெரிய காரியங்களைப் பற்றி மஜீத் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொல்லும் ஒவ்வொன்றையும் ‘உம்’ கொட்டி கேட்டுக் கொண்டிருக்கவும், மகிழ்ச்சி கொள்ளவும், ஆச்சரியப்படவும் மட்டுமே ஸுஹ்ராவால் முடிந்தது. மஜீத்தின் கனவுகள் எல்லையற்றிருந்தன. தங்க வெளிச்சத்தில் மூழ்கிப் போயிருக்கும் ஒரு அழகான உலகம்... அதன் ஒரே அரசனாக சுல்த்தான் மஜீத் இருந்தாலும் பட்டமகிஷியான ராஜகுமாரி என்னவோ ஸுஹ்ராதான். அதை மறுப்பதற்கில்லை. அப்படி மறுத்தால், அவளுக்கு அழுகை வரும். அவளின் நகங்கள் முன்னோக்கி நீளும். அதற்குப்பிறகு மஜீத்திற்குத் தாங்க முடியாத வேதனைதான். அப்படிப்பட்ட ஒரு அனுபவம் தனக்கு வேண்டுமா என்பதை மனதில் வைத்துக் கொண்டு தான் மஜீத் எதையும் பேசவே செய்வான். இருப்பினும் சில நேரங்களில் அவன் அதை மறந்து விடுவான். பிறகென்ன... அடி, உதைதான்!

கற்பனைகளுக்கு அடிமையாகிப்போனவன் மஜீத். எதிர்காலத்தில் தன் வாப்பா சொல்லக் கேட்டிருக்கும் அரேபியக் கதைகளில் வரும் அழகான அரண்மனையைத்தான் கட்டவேண்டும் என்று அவன் கற்பனை பண்ணுவான். அதன் சுவர்கள் ஒவ்வொன்றும் பொன்னால் செய்யப்பட்டிருக்க வேண்டும். திண்ணை சுத்தமான மாணிக்கக் கற்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் மேற்கூரை எதனால் செய்யப்பட்டிருக்கும்? அவனுடைய கற்பனையில் எதுவுமே தோன்றாது. தேவைப்படும் நேரத்தில் ஸுஹ்ரா ‘உம்’ கொட்டாமல் இருந்திருப்பாள். அவள் மட்டும் ‘உம்’ கொட்டிருந்தால் மஜீத்திற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் பதில் கிடைத்திருக்கும்.

“ஸுஹ்ரா...”

“என்ன மஜீத்?”

“நீ ஏன் ‘உம்’ கொட்டல?”

“நான் ‘உம்’ கொட்டினேனே! அப்புறம்... பையா, நீ ஏன் என்னை ‘நீ’ன்னு கூப்பிடுற?”

அவள் பயங்கர கோபத்துடன் அவனுக்கு மிகவும் நெருக்கமாக வந்து அவனை அறைந்தாள். அடியை வாங்கிய மஜீத் நிலை குலைந்து நின்றிருந்தான். அவன் பேனாக்கத்தியுடன் திரும்பினான். அவள் தன்னுடைய பத்து நகங்களையும் முன்னால் நீட்டி, கண்களால் முறைத்து மஜீத்தை பயமுறுத்தினாள்.

“நான் இனிமேலும் உன்னை அடிப்பேன்.”

பழைய அடிகளின், கிள்ளல்களின் ஞாபகம் மஜீத்தின் இரத்தத்தைக் குளிரச் செய்தது. நகங்களைக் கொண்ட ஸுஹ்ரா ஒரு ராட்சசியைப் போல அவனுக்குத் தோன்றினாள். அவளிடம் அந்த நகங்கள் இல்லாமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால், முன்பிருந்தே அவளுக்கு நகங்கள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்துவதில் அவளுக்கு எந்தவொரு தயக்கமுமில்லை. இந்தச் சூழ்நிலையில் அவளை மீண்டும் கோபம் கொள்ளச்செய்தது நல்லதா என்று நினைத்தான் மஜீத். அந்த ஒரே காரணத்தால்தான் ஸுஹ்ரா தன்னை அடித்திருக்கிறாள் என்று எடுத்துக்கொண்ட அவன் ஒரு அப்பிராணியைப்போல் அவளைப் பார்த்துக் கேட்டான்:

“ஸுஹ்ரா, ஏன் என்னை அடிச்சே?”

“என்னை நீ எப்படி ‘நீ’ன்னு அழைக்கலாம்?”

மஜீத் ஆச்சரியப்படுவதைப் போல் நடித்தான்.

“எப்போ நான் கூப்பிட்டேன். நான் உன்னை அப்படி கூப்பிடவே இல்ல. ஸுஹ்ரா ... கனவு கண்டிருப்பே!”

மஜீத் பேசிய விதத்தையும், நடந்துகொண்ட முறையையும் பார்த்த ஸுஹ்ராவின் இதயத்தில் வேதனை அரும்பியது. உண்மையில் மஜீத் தன்னை ‘நீ’ என்று அழைத்தானா? இல்லாவிட்டால் அப்படி தனக்குத் தோன்றியதா? அப்படி யென்றால் மஜீத்தை அடித்தது கொடூரமான ஒரு விஷயமாயிற்றே! சிவந்து போய், தடித்துக் காணப்பட்ட நான்கு விரல்தடங்கள்... அது அவளுடைய மனதிலிருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதானே!

அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்தது.

மஜீத் அதைப் பார்க்காதது மாதிரி வெண்மையான மணல் நிறைந்த கிராமத்துத் தெரு வழியே நடந்துகொண்டே தனக்குத் தானே சொன்னான்:

“நான் எதுவுமே செய்யலைன்னாக்கூட வாப்பாவும் உம்மாவும் என்னை வெறுமனே அடிப்பாங்க. இல்லாட்டி வாய்க்கு வந்தபடி திட்டுவாங்க. பிறகு... சிலபேரு எதுக்குன்னே தெரியாம என்னை அடிப்பாங்க... அப்படி அடிக்குறதுல அவங்களுக்கு என்னவோ சுகம். ஒருநாள் நான் சாகுறப்போ அவங்க புலம்புவாங்க - அந்த அப்பிராணிப் பய மஜீத் மட்டும் உயிரோட இருந்திருந்தான்னா, அவனை அடிக்கவாவது செய்யலாம்னு..”


இவ்வளவும் முடிந்து மஜீத் திடீரென்று திரும்பிப் பார்த்தான். பேஷ்! ஸுஹ்ராவின் கன்னங்கள் வழியாகக் கண்ணீரின் இரு அருவிகள். அதைப்பார்த்து அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

அவனுடைய மகிழ்ச்சியில் பங்குகொள்வது மாதிரி சூரியன் மலையின் உச்சிக்கு வந்து சிரித்தவாறு மலைச்சரிவில் இருந்த அந்தக் கிராமத்தை தன்னுடைய பொற்கதிர்களால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. மலைக்குப் பின்னால் இரண்டாகப் பிரிந்து மலையையும் கிராமத்தையும் கடந்து தூரத்தில் ஒன்றாகச் சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நதி உருகிய பொன்னைப் போல தெரிந்தது. கிராமத்தின் அமைதியான சூழ்நிலையை பாதிக்கும் பறவைகளின் சத்தத்தில் மஜீத் ஆனந்தத்தின் கூத்தாட்டத்தை தரிசித்தான்.

ஆனால், ஸுஹ்ராவின் இதயத்தில் மட்டும் சிறிதுகூட சந்தோஷமே இல்லை. அவள் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரிய தவறைச் செய்திருக்கிறாள். எந்தக் காரணமுமில்லாமல் அவள் மஜீத்தை அடித்தது தவறுதானே! அதை நினைக்க நினைக்க அவளுக்கு வேதனைதான் உண்டானது. சிவந்துபோய் தடிமனான நான்கு விரல் தடங்கள் மஜீத்தின் உடலில் இருந்தன. அவள் செய்த தவறை எப்படி அழிக்க முடியும்?

மஜீத் சொல்லிக்கொண்டிருந்த தங்க அரண்மனையை மனதில் ஞாபகப்படுத்திக்கொண்ட ஸுஹ்ரா எதுவுமே நடக்காத மாதிரி மெதுவான குரலில் கேட்டாள்:

“பையா, அரண்மனை இருக்குறது எந்த இடத்துல?”

மஜீத் உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. சிறிதுநேரம் கழித்து அவன் கேட்டான்:

“ஸுஹ்ரா, நீ ‘உம்’ கொட்டுவியா?”

அவள் வருத்தம் கலந்த குரலில் சொன்னாள்.

“நான் ‘உம்’ கொட்டுறேன்” - தான் சொன்னதற்கு அடையாளமாக அவள் தெளிவான குரலில் ‘உம்...உம்...உம்...’ என்று மூன்று தடவை சொல்லவும் செய்தாள்.

“பிறகு...” - அவன் தொடர்ந்தான்: “தங்க அரண்மனை இருக்குறது மலை உச்சியிலயாக்கும்...”

அரண்மனை மலை உச்சியில் இருந்தால் கிராமம் முழுவதையும் அங்கிருந்தே பார்க்கலாம். அது மட்டுமல்ல - இரண்டு நதிகள் ஒன்றாகச் சேர்ந்து பெரிய ஒரு நதியாக தூரத்தில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதைக் கூடப் பார்க்கலாம். மஜீத்தும் ஸுஹ்ராவும் கிராமத்தின் மற்ற பிள்ளைகளும் பலமுறை மலை உச்சியில் ஏறி பார்த்திருக்கிறார்கள் அல்லவா? அங்கு மஜீத் உண்டாக்கப்போகும் தங்க அரண்மனை உண்மையிலேயே ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் இருக்கும்.

“பிறகு...” அவள் ஆர்வத்துடன் மஜீத்தைப் பார்த்துக் கேட்டாள்:

“அப்போ தங்க அரண்மனையோட உயரம் எவ்வளவு இருக்கும்?”

உயரத்திற்கு ஏதாவது எல்லை இருக்கிறதா என்ன? - மஜீத் சொன்னான்:

“நல்ல உயரம்...”

நல்ல உயரம் என்று சொன்னதால் எவ்வளவு என்பதை ஸுஹ்ராவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் சுற்றிலும் பார்த்தாள். வாழை மரங்களும் தென்னை மரங்களும் நிறைய இருந்தன. அவள் கேட்டாள்:

“வாழைமரம் அளவு இருக்குமா?”

“வாழை மரம்...” - அவனுக்கு அது பிடிக்கவில்லை. வாழைமரம் அளவு உயரத்தில் அரண்மனை.

“த்ஃபூ” என்று சொல்லியவாறு அவன் ஸுஹ்ராவைப் பார்த்தான்.

அவள் கேட்டாள்:

“தென்னை மர உயரத்துல இருக்குமா?”

அதையும் மஜீத் கிண்டல் பண்ணியதால் ஸுஹ்ரா வானத்தை நோக்கி முகத்தை உயர்த்தியவாறு சந்தேகத்துடன் கேட்டாள்:

“வானம் உயரத்துக்கு...?”

“அதுதான் சரி...” - மஜீத் சொன்னான். “தங்க அரண்மனை வானம் உயரத்துக்கு இருக்கும்.”

அவளுக்கு அதற்குப் பிறகும் ஒரு சந்தேகம் அவள் கேட்டாள்:

“பையா, அதுல நீ மட்டும் தனியாவா இருக்கப்போற?”

“இல்ல...” -மஜீத் அரேபியக் கதைகளை மனதில் நினைத்தவாறு சொன்னான்: “நானும் ஒரு ராஜகுமாரியும்...”

ராஜகுமாரி! அப்படி ஒருத்தி அந்த ஊரில் எந்த இடத்திலும் இல்லை. இருப்பினும்-

“அந்த பொண்ணு யாரு?”

ஒரு ரகசியத்தைக் கூறுவதுமாதிரி மஜீத் சொன்னான்:

“இருக்கா...”

அவன் அப்படிச் சொன்னவுடன் ஸுஹ்ராவின் முகத்திலிருந்த ஒளி மறைந்து போனது. அவளுக்குக் கோபமும் வருத்தமும் உண்டானது. அவள் செடிக் கொம்புகளைக் கீழே போட்டாள். அவளின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது. அவள் சொன்னாள்: “ராஜகுமாரியை வச்சு நீ இதை எடுத்துக்கோ.”

அதைக்கேட்டு மஜீத் அதிகார குரலில் சொன்னான்:

“அதை எடுத்துட்டு வா பெண்ணே-”

ஸுஹ்ரா தேம்பித் தேம்பி அழுதாள்.

“பையா, நான் உன்கூட வரமாட்டேன். ராஜகுமாரியை வச்சு அதை நீ எடுத்துக்கோ...”

அவள் அப்படி நடந்துகொண்டது மஜீத்தின் மனதை மிகவும் இளகச் செய்தது. அவன் அவளுக்கு அருகில் போய் அவள் முன்னால் உட்கார்ந்தான்.

“ஸுஹ்ரா, நீதான் என்...”

“?...”

“ரா..ஜ..கு..மா..ரி..”

அதைக்கேட்டு அவளுடைய முகத்தில் பிரகாசம் படர்ந்தது.

“போ பையா...”

“உம்மா மேல சத்தியமா...”

அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மஜீத், ஸுஹ்ரா இருவரும் சேர்ந்து அந்தத் தங்க அரண்மனையில் ஒன்றாக வசிக்கலாம். நினைக்கும்போதே எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அவள் கண்ணீருடன், புன்னகையுடன் அப்படியே நின்றிருந்தாள். மஜீத் அவளுடைய நகத்தை வெட்டுவதற்காக முயன்றான்.

“விடு பையா.”

சாரல் மழைக்கு நடுவில் சூரியன் பிரகாசிப்பதைப் போல கண்ணீருக்கு மத்தியில் ஸுஹ்ரா புன்னகைத்தாள்.

“அதற்காக என் நகத்தை வெட்ட வேண்டாம்” - அவள் தன் உதடுகளைக் குவித்துக்கொண்டு சொன்னாள்: “பையா, நீ ஏதாவது சொல்றப்போ நான் உன்னைக் கிள்ளணும்ல”

"ஸுஹ்ரா, நீ என்னைக் கிள்ளுவியா?"

“கிள்ளுவேன்! எப்பவும்... எப்பவும்... கிள்ளுவேன்.”

அவள் பற்களைக் கடித்துக்கொண்டு, புருவங்களை உயர்த்திக் கொண்டு அவனைக் கிள்ள முயன்றாள்.

மஜீத் நடுங்கிப்போய் நின்று கொண்டிருந்தான்.

ஏதோவொரு பெரிய தவறை ஞாபகப்படுத்துவதைப்போல் மஜீத் சொன்னான்:

“ராஜகுமாரி கிள்ளக்கூடாது.”

ராஜகுமாரி கிள்ள முயன்றால், அது ஒரு கொடூரமான பாவச்செயல்! சந்தேகத்துடன் ஸுஹ்ரா கேட்டாள்:

“உம்மா சத்தியமா?”

மஜித் சத்தியம் செய்தான்.

“உம்மா சத்தியமா கிள்ளக்கூடாது.”

அவ்வளவுதான் - அவள் திகைத்துப்போய் நின்றுவிட்டாள். ராஜகுமாரி கிள்ளக்கூடாது என்றால், பிறகு நகங்கள் இருந்து என்ன பிரயோஜனம்? மிகப்பெரிய ஒரு தியாகத்தைச் செய்வதைப்போல தன்னுடைய இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு அவள் நகங்களை நீக்க சம்மதித்தாள்.

“அப்படின்னா நகத்தை வெட்டிடு.”

பாறையைப் போல் நீளமாக, கூர்மையாக வளர்ந்திருந்த பத்து நகங்களையும் மஜீத் வெட்டி நீக்கினான். நகங்களை வெட்டிய மஜீத் எழுந்தான். அவர்கள் இருவரும் போய் தோட்டம் உண்டாக்கினார்கள். மஜீத்தின் வீட்டின் அகலமான முற்றத்திற்கு முன்னால் அவர்கள் சிறிய குழிகளைத் தோண்டினார்கள். அந்தக்குழிக்குள் ஸுஹ்ரா ஒவ்வொரு கொம்பாக நட்டு, அதைச்சுற்றி மண்ணைப் போட்டு மூடி நீர் ஊற்றினாள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையைச் சேர்ந்த பூஞ்செடிகள். பிரிபன், மஞ்சள், கோழிவாலன் இப்படி...  மூலையில் குழி தோண்டி ஒரு செம்பருத்திக் கொம்பை அதில் நட்டாள் ஸுஹ்ரா.


அதை அவள் நடும்போது, அதில் ஒரு சிவப்பு வண்ண மலர் பூத்திருந்தது.

ஒவ்வொரு நாளும் காலையில் ஸுஹ்ரா மஜீத்தின் வீட்டிற்குச் சென்று செடிகளுக்கு நீர் ஊற்றுவாள்.

ஒருநாள் விளையாட்டாக ஸுஹ்ராவின் உம்மா கேட்டாள்:

“ஸுஹ்ரா, எதுக்கு நீ யாரோ ஒருத்தரோட செடிக்கு ஒவ்வொரு நாளும் போயி தண்ணி ஊத்திட்டு இருக்கே?”

அதற்கு ஸுஹ்ரா சொன்னாள்:

“அது ஒண்ணும் யாரோ ஒருத்தரோட செடி இல்ல...”

அன்று சாயங்காலம் ஸுஹ்ராவும் மஜீத்தும் வீட்டு வாசலில் நின்றிருந்தார்கள். முளைத்து நின்றிருந்த செடிகளைச் சுட்டிக் காட்டிய மஜீத் உரத்த குரலில் கேட்டான்:

“ஸுஹ்ரா, இந்தச் செடிகளெல்லாம் உன்னோடதா?”

“பையா. இது எல்லாம் என் செடிகள்தான். உன்னோடதா என்ன?”

அதைக்கேட்டு ஒரு கேலிச்சிரிப்பு சிரித்தான் மஜீத்.

“பொண்ணுக்கு ஆசை அதிகம்தான்.”

அதைக்கேட்டு அவளுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவள் அவனைக் கிள்ளினாள். எப்போதுமிருக்கும் நகங்கள் இல்லாததால் மஜீத் சொன்னான்:

“இனியும் கிள்ளு. எனக்கு நல்லா சுகமாத்தான் இருக்கு!”

ஸுஹ்ரா தன்னுடைய நகங்களைப் பார்த்து தேம்பித்தேம்பி அழுதாள்.

“அப்படின்னா நான் கடிப்பேன்.”

அவள் மஜீத்தின் கையைக் கடிக்க முயன்றாள். வேறு வழியில்லாமல் மஜீத் ‘குர்-ஆன்’ மீது சத்தியம் செய்தான்.

“முப்பது யூதர்கள் உள்ள முஸ்ஹஃப் மேல சத்தியமா சொல்றேன் - ராஜகுமாரி கடிக்கக்கூடாது.”

ஸுஹ்ரா கண்ணீர் வழியக் கேட்டாள்.

“யாரையுமா?”

புன்னகை சிந்தியவாறு மஜீத் சொன்னான்:

“யாரையும்.”

3

ஸுஹ்ரா கணக்குப் பாடத்தில் மிகவும் திறமை வாய்ந்தவளாக இருந்தாள். ஆசிரியர் அவளைப் புகழ்வதும் மஜீத்தை அடிப்பதும் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். கணக்குகளைப் போடுவதென்றால் மஜீத்திற்கு எப்போதுமே பிரச்சினைதான். எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவனுக்குச் சரியாகக் கணக்குப் போட வரவே வராது.

“மரமண்டை...” என்றுதான் மஜீத்தை ஆசிரியர் அழைப்பார். வருகைப் பதிவிற்காக பெயர் சொல்லி அழைக்கும்போதுகூட அப்படித்தான். அதைப்பற்றி யாரும் குறைபட்டுக்கொள்ளவும் இல்லை. காரணம் - மஜீத் ஒரு முட்டாள்தான். அதனால் அவன் மாணவ-மாணவிகளுக்கு மத்தியில் இருந்தவாறு உரத்த குரலில் சொல்லுவான்:

“ஆ..ஜர்...”

“ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா எத்தனைடா?”

ஆசிரியர் ஒருநாள் மஜீத்தைப் பார்த்துக் கேட்டார். ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு என்பதுதான் உலகத்திற்கே தெரிந்த விஷயமாயிற்றே! ஆனால், அதற்கு மஜீத் சொன்ன வினோதமான பதிலைக் கேட்டு ஆசிரியர் விழுந்து விழுந்து சிரித்தார். மொத்த வகுப்பும் விழுந்து விழுந்து சிரித்தது. மஜீத் சொன்ன பதில், பிறகு அவனுக்குக் கேலிப்பெயர் வைக்கக் காரணமாக அமைந்துவிட்டது. அந்த பதிலைக் கூறுவதற்கு முன்பு மஜீத் சிந்தித்தான். இரண்டு நதிகள் ஒன்றாகச் சேர்ந்து மேலும் பெரிய ஒரு நதியாக ஓடுவதைப் போல இரண்டு ஒன்றுகள் ஒன்று சேரும்போது மேலும் பெரிய ஒன்றாக அது மாறுகிறது. இப்படி கணக்குப்போட்ட மஜீத் சொன்னான்:

“கொஞ்சம் பெரிய ஒண்ணு...”

இவ்வாறு கணக்குப் பாடத்தில் ஒரு புதிய தத்துவத்தைக் கண்டு பிடித்ததற்காக மஜீத்தை அன்று ஆசிரியர் பெஞ்சின்மீது ஏறி நிற்கச் சொன்னார்.

‘கொஞ்சம் பெரிய ஒண்ணு...’ என்று கூறியவாறு எல்லாரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். அதற்குப்பிறகும் மஜீத் ஒப்புக் கொள்ளவில்லை. ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு என்பதுதான் சரியான விடையாக இருப்பதால், வினோதமான அந்த பதிலைச் சொன்னதற்கான பரிசு என்ற வகையில், மஜீத்தின் கையில் ஆறு அடிகளைக் கொடுத்த ஆசிரியர் எல்லா அடிகளையும் சேர்த்துப் பார்த்து அதை ஒரு பெரிய அடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவனிடம் கூறினார்.

அதற்குப்பிறகு அவனுடைய நண்பர்கள் அவனைப் பார்க்கும்போது தங்களுக்குள் கூறிக்கொள்வார்கள்:”

“கொஞ்சம் பெரிய ஒண்ணு!”

அந்தக்கிண்டலும், அதற்குக் காரணமான சம்பவமும் மஜீத்தை மிகவும் வேதனை கொள்ளச் செய்தன. தான் சொன்னது ஒரு பரம சத்தியமே. ஆனால், யாருமே அதை நம்பாமல் போனதற்குக் காரணம் என்ன? ஒருவேளை, தான் சொன்னது தவறோ? எல்லாரும் சொல்வது மாதிரி தான் ஒரு அடிமுட்டாள்தானோ? தாங்கமுடியாத வருத்தத்துடன் மஜீத் தன் மனக்குறையைத் தன்னுடைய உம்மாவிடம் போய்ச் சொன்னான். அவன் சொன்னதைக் கனிவுடன் கேட்ட அந்தத்தாய் மனதில் இருக்கும் வருத்தத்தைக் கடவுளிடம் கூறும்படி சொன்னாள்.

“ரப்புல் ஆலமீன் ஒவ்வொருத்தரோட வேண்டுதலையும் செவிசாய்ச்சு கேட்பாரு...”

தாய் சொல்லியபடி அந்த இளம் மனது பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளிடம் இதயபூர்வமாகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

“என் ரப்பே, என் கணக்குளையெல்லாம் நீங்கதான் சரியாக்கித் தரணும்...”

மஜீத்தின் முதல் பிரார்த்தனையே அதுதான் இரவு, பகல் எந்நேரமும் மஜீத் பிரார்த்திப்பான். இருப்பினும், எல்லா கணக்குகளும் தப்பாகவே வந்து கொண்டிருந்தன. அதனால் மஜீத்துக்கு ஏராளமான அடிகள் கிடைத்தன. அவன் உள்ளங்கைகள் எப்போதும் வீங்கிப் போயே காணப்படும். அவனால் அதற்குமேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. நடந்த எல்லா விஷயங்களையும் அவன் ஸுஹ்ராவைப் பார்த்துச் சொன்னான். இது நடந்தது அவர்களுக்கிடையே நிகழ்ந்த பல சண்டைகளுக்குப் பிறகு... ‘கொஞ்சம் பெரிய ஒண்ணு’ ஆனபிறகு மஜீத் யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. அடுத்த பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ஸுஹ்ரா அவனைப் பார்ப்பாள். அப்போது மஜீத் தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொள்வான். கடைசியில் மஜீத் பேசினான். ஸுஹ்ரா சிரித்தாள். அவள் இடம் மாறி உட்கார்ந்தாள். மஜீத்திற்கு அருகிலிருக்கும் பெஞ்சின் ஓரத்தில் அவளுடைய இருக்கை இருந்தது. அதற்குப்பிறகு மஜீத்திற்கு அடி எதுவும் கிடைக்கவில்லை. ஆச்சரியப்படும் வண்ணம் அவனுடைய எல்லா கணக்குகளும் சரியாக வந்து கொண்டிருந்தன.

“அடடா...!” - ஆசிரியர் ஆச்சரியப்பட்டார்: “நான் மனசுல நினைச்சதைப் போல உன் தலைக்குள்ளே இருக்குறது முழுவதும் களிமண் இல்ல...”

இவ்வாறு ஆசிரியர் சொன்ன புகழ் வார்த்தைகள் மஜீத்தின் கேலிப் பெயரை மாற்றின. மாணவர்கள் பொறாமையுடன் கூறுவார்கள்: “மஜீத்தான் வகுப்பிலேயே முதல் மாணவன்!”

அதைக்கேட்டு ஸுஹ்ரா புன்சிரிப்பாள். அதற்கு அர்த்தம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. மஜீத்தின் கணக்குகள் சரியாக வருவதன் ரகசியம் ஸுஹ்ராவின் புன்சிரிப்பிற்குப் பின்னால் மறைந்திருந்தது.

கணக்குகள் போடுவதற்காக மாணவர்களும் மாணவிகளும் எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றிருக்கும் போது மஜீத்தின் இடதுகண் ஸுஹ்ராவின் சிலேட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும். அவள் எழுதியிருப்பதைப் பார்த்து மஜீத் அதை அப்படியே தன் சிலேட்டில் எழுதுவான். கணக்குப் போட்டு முடித்த பிறகுகூட, அவள் உட்கார மாட்டாள். முதலில் மஜீத் அமர வேண்டும்!

பள்ளிக்கூடத்தை விட்டு அவர்கள் சேர்ந்து வீட்டிற்கு வரும்போது வேறு யார் காதிலும் விழாதமாதிரி மஜீத்தை ஸுஹ்ரா கிண்டல் செய்வாள்.


பல விஷயங்களையும் நினைத்து ஸுஹ்ரா புன்னகைப்பாள். பிறகு மெதுவான குரலில் கூறுவாள்: “கொஞ்சம் பெரிய ஒண்ணு!”

அப்போது மஜீத் தன்னுடைய கோபம் முழுவதையும் அடக்கிக் கொண்டு ஒரே வார்த்தையில் கூறுவான்: “ராஜகுமாரி!”

அதைக்கேட்டவுடன் வெள்ளிமணியின் மந்திர ஓசையைப் போல சோகமாகச் சிரித்தவாறு அவள் தன்னுடைய விரல்களையே பார்ப்பாள். அங்கிருந்த நகங்கள் முழுமையாக வெட்டப்பட்டிருக்கும். சுறுசுறுப்பிற்கும் சுத்தத்திற்கும் பள்ளிக்கூடத்திலேயே சரியான உதாரணம் ஸுஹ்ராதான். மஜீத்தின் ஆடைகளில் எப்போது பார்த்தாலும் மையும் கறையும் இருக்கும்.

அவன் ஊரிலுள்ள எல்லா மாமரங்களிலும் போய் ஏறுவான். மரங்களின் உச்சியிலிருக்கும் கிளைகளைப் பிடித்துக்கொண்டு இலைகள் வழியாகப் பரந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் அவனுக்கு அப்படியொரு விருப்பம். வானத்தின் விளிம்பைத்தாண்டி இருக்கும் உலகங்களைப் பார்க்கவேண்டும் என்ற தணியாத வெறி அவனுக்கு இருந்தது. கற்பனையில் மூழ்கியவாறு அவன் மரத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கும்பொழுது மரத்திற்கு அடியிலிருந்து ஸுஹ்ரா அவனைப் பார்த்துக் கேட்பாள்:

“மக்கா தெரியுதா பையா?”

மஜீத் அதற்குப் பதிலாக உயரத்தில் மேகங்களோடு சேர்ந்து பறந்து போய்க்கொண்டிருக்கும் பருந்துகளின் பாட்டு என்று நம்பப்படும் வரிகளைத் தன்னுடைய இனிமையான குரலில் பாடுவான்:

“மக்காவைப் பார்க்கலாம்... மதீனாவின் பள்ளிவாசலையும் பார்க்கலாம்..”

4

ஸுஹ்ராவின் காதுகுத்துக் கல்யாணத்தில் மஜீத் கலந்து கொண்டது - தாங்கிக்கொள்ள முடியாத வேதனையுடனும் யாருக்கம் தெரியாமல் மறைந்தும்தான்.

மஜீத் மார்க்கம் செய்யப்பட்டு படுத்திருந்தான். அப்போது அவனுக்கு விடுமுறை நாட்கள். மஜீத்தின் சுன்னத்து கல்யாணம் கிராமத்தையே கலக்கிய ஒரு சம்பவமாக இருந்தது. பட்டாசு வெடிப்புடன் ஒரு பெரிய விருந்தும் நடந்தது. பேண்ட் வாத்தியங்களுடனும் க்யாஸ் விளக்குகளுடனும் நடந்த அந்த ஊர்வலத்தில் யானைமீது உட்கார்ந்திருந்தான் மஜீத். அதற்குப் பிறகுதான் பிரியாணி விருந்து நடைபெற்றது. ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கெண்டார்கள். விருந்துக்கு முன்னால்தான் மார்க்கம் நடந்தது. அந்த நாள் முழுவதும் மஜீத் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். எதையோ அறுக்கப்போகிறார்கள்! எதை அறுப்பார்கள்? இறந்து விடுவோமோ? இப்படி பலவகைகளிலும் எண்ணிக்கொண்டிருந்த அவன் பயத்தில் தளர்ந்து போயிருந்தான். அன்று விருந்துவரை நாம் உயிருடன் இருக்கமாட்டோம் என்ற எண்ணத்தில்தான் அவன் இருந்தான். என்ன நடக்கப்போகிறது என்பதைப்பற்றி அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. உலகத்திலுள்ள எல்லா முஸ்லிம் ஆண்களையும் மார்க்கம் செய்திருக்கிறார்கள். அப்படி செய்யப்படாதவர்களே இல்லை. இருப்பினும்... “இந்த மார்க்கம்ன்றதை எப்படி செய்யிறாங்க?” என்று மஜீத் ஸுஹ்ராவைப் பார்த்துக் கேட்டான்.

அவளுக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியவில்லை.

“எது எப்படியானாலும், நீ சாகமாட்டே...” என்று கூற மட்டுமே அவளால் முடிந்தது. இருந்தாலும் மஜீத்திடம் சிறிதும் பதைபதைப்பு குறையவில்லை. ‘அல்லாஹு அக்பர்’ என்று ‘தக்பீர்’ பந்தலில் கம்பீரமாக முழங்கப்பட, மஜீத்தை அவனுடைய வாப்பா கையில் பிடித்துக்கொண்டு ஒரு சிறு அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே குப்புறப் போடப்பட்ட வெள்ளைத்துணி விரிக்கப்பட்ட உரலுக்கு முன்னால் பதினோரு திரிகளைக்கொண்ட குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அறையில் நாவிதனான ‘ஒஸ்ஸான்’ தவிர பத்துப் பன்னிரண்டு ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் மஜீத்தின் சட்டையைக் கழற்றி, துணியை நீக்கி பிறந்த கோலத்தில் அவனை உரலில் மீது உட்கார வைத்தார்கள். எல்லாமே அவனுக்கு வினோதமாக இருந்தது. அவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்? சூழ்நிலை ஒரே பரபரப்பாக இருந்தது.

மஜீத்தின் கண்களை மூடினார்கள். கைகளையும் கால்களையும் தலையையும் ஆட்கள் பிடித்துக்கொண்டார்கள். அவனால் சிறிதுகூட அசையமுடியவில்லை. ‘அல்லாஹு அக்பர்’ என்ற சத்தம் தவிர வேறு எதுவும அவன் காதில் விழவில்லை. மஜீத்திற்கு நன்றாக வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் அவனுடைய தொடைகளின் இணைப்பில் சிறிது வேதனை தோன்றுவதைப்போல இருந்தது. காய்ந்த தென்னை மட்டையை நீக்குவதைப் போன்ற ஒரு உணர்வு. ஒரே ஒரு நிமிடம்தான். எல்லாம் முடிந்ததும அவன்மீது நீரைத் தெளித்தார்கள். இலேசாக எரிச்சல் இருப்பதைப்போல இருந்தது. இனம் புரியாத ஒரு குழப்பநிலை.

மஜீத்தைப் படுக்க வைத்தார்கள். தலைக்கும் கால்களுக்கும் தலையணை போட்டார்கள். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் மஜீத் ஒன்றைக் கவனித்தான். சிவப்பு மை இருக்கும் புட்டிக்குள் கைவிரலை விட்டதைப் போல... அல்ல... கையில் படாமல் புட்டியின் வாய்ப்பகுதியிலிருந்து விரலின் தலைப்பகுதியைச் சுற்றிலும் சிவப்பு மை அப்பியிருப்பதைப் போல... அங்கே இரத்தம் படிந்திருந்தது என்று கூறுவதே பொருத்தமானது. ஸுஹ்ராவிடம் மறுநாள் இவ்வளவு விஷயங்களையும் மஜீத் சொன்னான்.

அவள் ஜன்னலுக்கு அப்பால் நின்றுகொண்டு கேட்டாள்:

“மஜீத், நீ பயந்துட்டியா?”

“நானா?” மஜீத் படுத்துக்கொண்டே வீரவசனம் பேசினான் : “நான் ஒண்ணும் பயப்படல...”

அந்த நேரத்தில் ஸுஹ்ரா தன்னுடைய காது குத்தும் விஷயத்தைப் பற்றிச் சொன்னாள். பத்துப் பன்னிரண்டு நாட்களில் அவளுடைய காதுகுத்தும் நிகழ்ச்சி நடக்கப்போகிறது!

“மஜீத், உன்னால வரமுடியாதுல்ல...?”

மஜீத் சொன்னான் : “நான் வருவேன்.”

ஆனால், அந்தநாள் வந்தபோது மஜீத்தால் அசையக்கூட முடியவில்லை. முதலில் ஸுஹ்ராவின் உம்மாவும் பிறகு ஸுஹ்ராவும் வந்தார்கள். வீட்டிலுள்ளவர்களை அவர்கள் அழைப்பது அவனுடைய காதுகளில் விழுந்தது. சிறிதுநேரம் கழித்து ஸுஹ்ராவை ஜன்னலுக்கு அருகில் அவன் பார்த்தான். உற்சாகத்தால் அவளுடைய முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. கண்களில் கூட அந்தப் பிரகாசம் இருந்தது.

“இன்னைக்கு எனக்கு காது குத்து...”

மஜீத் எதுவுமே பேசாமல் வெறுமனே புன்னகைத்தான். அந்தப் புன்னகை அவளிடமும் படர்ந்தது. மஜீத் அவளின் அழகான காதுகளைப் பார்த்தான். காதுக்குத்து! அது ஒரு சடங்கு! “காதுகளை ‘குனுகுனா’வென்று குத்தி துளை போடும்போது அவை வலிக்காதா?” மஜீத் ஆச்சரியப்பட்டான்.

அவள் சொன்னாள்:

“எனக்குத் தெரியாது. வந்து பாரு...”

அவள் ஓடி மறைந்தாள்.

மஜீத்திற்கு போகவேண்டும்போல் இருந்தது. படுத்திருந்த இடத்தைவிட்டு அவனால் எழுந்து நிற்கவே முடியவில்லை. இருப்பினும் சிறிதுநேரம் கழிந்தபின் யாருக்கும் தெரியாமல் மஜீத் படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்தான். உடல் பயங்கரமாகக் கனத்தது. அம்மிக் குழவியைப்போல கனம்! ஆயிரம் புண்களின் வேதனை... எல்லாம் சேர்ந்து இதயத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். சிறு சிறு எட்டாக வைத்து யாரும் பார்க்காத வகையில் மஜீத் ஒளிந்து ஒளிந்து வெளியேறினான். நீரில்லாத வாய்க்கால் வழியே மெதுவாக நடந்து வயலில் ஏறி ஸுஹ்ராவின் வீட்டை நோக்கி நடந்தான். அங்கு பெரிய கொண்டாட்டமோ, ஆட்களின் கூட்டமோ எதுவும் இல்லை. அது அவர்கள் பணக்காரர்களாக இல்லாத காரணத்தால்தான் என்பதை மஜீத் புரிந்துகொண்டான்.


அவர்கள் பணக்காரர்களாக இருந்திருப்பார்களேயானால் மேளதாளம், பட்டாசு, விருந்து, ஆரவாரம் எல்லாமும் இருந்திருக்கும்.

மஜீத்தைப் பார்த்தவுடன் ஸுஹ்ராவின் உம்மா உரத்த குரலில் கத்தியவாறு ஓடிவந்தாள்.

"என் பிள்ளையே, நீ எதுக்கு வந்தே?"

மஜீத் மனதில் ஒருவித கவலையுடன் வேதனையுடன் சொன்னான்:

“காதுக்குத்தைப் பார்க்குறதுக்கு...”

அப்போது ஸுஹ்ராவும் அங்க வந்துவிட்டாள். அவள் முகம் சிவந்தும், கண்கள் கலங்கியும் இருந்தன. மேலிருந்து கீழ்வரை இரண்டு காதுகளையும் குத்தி துளைபோட்டிருந்தார்கள். கறுப்பு நூல் போட்டுக் கட்டியிருந்தார்கள். வலது காதில் பதினொன்று துளைகளும் இடது காதில் பத்து துளைகளும் போடப்பட்டிருந்தன. துளைகள் பழுத்து காய்ந்தவுடன், நூலை நீக்கி வெள்ளியால் ஆன கம்மலை அதில் அணிவிப்பார்கள் என்பதையும், அதற்குப்பிறகு கல்யாணத்தின்போது வெள்ளிக் கம்மலை அகற்றி அதற்குப்பதிலாக தங்கத்தால் ஆன கம்மலை அணிவிப்பார்கள் என்பதையும் மஜீத் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தான்.

மஜீத் ஸுஹ்ராவைப் பார்த்துக் கேட்டான்: “எதுக்கு காது குத்துறாங்க?”

“எனக்குத் தெரியாது.”

“ரொம்ப வலிச்சுதா?”

ஸுஹ்ரா வலி ஒரு பக்கம் இருக்க, புன்னகைத்தாள்: “கொஞச்ம்...”

இதற்கிடையில் மஜீத்தைக் காணவில்லையென்று ஆட்கள் தேட ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு ஆட்கள் அவனைத் தூக்கி வீட்டிற்குக்கொண்டுபோய் படுக்க வைத்தார்கள்.

அந்தச் சம்பவம் ஒரு ரகளையையே உண்டாக்கிவிட்டது. மஜீத்தை அவனுடைய வாப்பா கண்டபடி திட்டனார். அவனுடைய உம்மாவை வாப்பா வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டார். ஸுஹ்ராவின் வாப்பாவையும் உம்மாவையும்கூட அவர் திட்ட ஆரம்பித்தார். அத்துடன் இந்த விஷயம் முடிந்தது.

மஜீத்திற்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. அன்று மஜீத்தைக் குளிப்பாட்டி புதிய ஆடைகளை அணிவித்தார்கள். செண்ட் பூசி புதிய குடை சகிதமாக அவனை பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றார்கள். அது ஒரு பெரிய கொண்டாட்டமாகவே நடந்தது. நன்கு அலங்கரிக்கப்பட்டு அவனைக் கொண்டுசென்ற அந்தச் சம்பவத்தைப் பற்றி ஸுஹ்ரா கிண்டலாகச் சொன்னாள்:

“அடடா... பையனோட நாமூஸைப் பார்க்கணுமே!” அவள் சொன்னாள் : “ஏதோ பொண்ணைக் கட்டப்போற மாதிரி...”

5

ஸுஹ்ராவும் மஜீத்தும் அந்த வருடம் தேர்ச்சி பெற்றார்கள். கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் கடைசி வகுப்பில் நடந்த சம்பவம் அது. தொடர்ந்து நகரத்திலிருக்கும் உயர்நிலைப்பள்ளியில் போய்ப்படிக்கவேண்டும் என்ற ஸுஹ்ராவின் ஆர்வம் நிறைவேறாமற்போன ஒரு சம்பவம் நடைபெற்றது. மஜீத் வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு மரணத்தைப் பார்த்தான். ஸுஹ்ராவின் வாப்பா இந்த உலகை விட்டு நீங்கினார்.

அத்துடன் அவளும் அவளின் இரண்டு தங்கைகளும் உம்மாவும் யாரும் இல்லாத அனாதைகளாக ஆனார்கள்.மொத்தத்தில் அவர்களுக்கென்றிருந்தது ஒரே ஒரு அறையைக் கொண்ட சிறிய வீடு மட்டுமே. பாக்கு வியாபாரத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு தான் அவளின் வாப்பா இதுவரை அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.வெள்ளை நிறத்தில் தொப்பியும் செம்மண் படிந்த பழைய வேட்டியும் அதே நிறத்திலிருக்கும் மேற்துண்டும்தான் எப்போதும் அவர் அணிந்திருந்தார். கருந்தாடியுடன் கூடிய வெளுத்த வட்டமான முகத்தில் கறுப்பான விழிகள் எப்போதும் புன்சிரித்த வண்ணமிருக்கும். முன்னோக்கி இலேசாக வளைந்து, மடிக்கப்பட்ட கோணியைக் கையிடுக்கில் வைத்தவாறு அவர் நடந்து செல்வார். ஊரிலிருக்கும் வீடுகளில் ஏறி பாக்கு வாங்கி கோணியில் நிறைத்துக்கொண்டு தானே தலையில் வைத்து சுமந்துகொண்டு போய் நகரத்தில் அதை விற்பனை செய்வார். பேசுவது என்றால் அவருக்கு விருப்பம் அதிகம். தான் பார்த்த ஊர்களில் உள்ள விசேஷங்களைப் பற்றி அவர் மஜீத்திடம் கூறுவார். வெளியில்தான் உண்மையான முஸ்லிம்கள் இருக்கிறார்களென்றும் அந்தக் கிராமத்திலுள்ளவர்கள் மூடநம்பக்கைகளில் உழன்று கொண்டிருப்பவர்களென்றும் அவர் கூறுவார். ஊரிலிருப்பவர்கள் கடின மனம் கொண்டவர்களாக இருக்கிறார்களென்றும், நல்ல மனிதர்களைப் பார்க்கவேண்டுமென்றால் வெளியில்தான் போய் பார்க்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் சொல்லுவார்.

“இங்கே இருக்குறவங்க மனசில் தாங்கள்தான் உண்மையான முஸ்லிம்கள்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அறிவில்லாத மனிதர்களின் குறுகிய பார்வை அது! கடவுள் அருளால நீங்கள்லாம் படிச்சு பெரிய ஆளுகளா வர்றப்போ இந்த நிலைமை அடியோட மாறிடும்.”

ஸுஹ்ராவை நன்கு படிக்க வைக்கவேண்டும் என்பதுதான் அவருக்கு வாழ்க்கையிலேயே மிகப்பெரிய இலட்சியமாக இருந்த்து.

“பிறகு” அவர் கூறுவார்: “அவ பெரிய உத்தியோகத்துல இருக்குறப்போ நம்மளை மறந்திடுவா. இது என் வாப்பான்னு சொல்றதுக்கு அவளுக்கே வெட்கமா இருக்கும்.”

“நீங்க சொல்றது சரிதான்...” மஜீத் கடைக்கண்ணால் பார்த்தவாறு சொல்லுவான். “ஸுஹ்ரா எப்பவும் தன்னை உயர்வா நினைச்சிக்கிட்டு இருக்கிறவதான்.”

அப்போது ஸுஹ்ரா கதவின் மறைவில் நின்றவாறு கண்களை அகலவிரித்துக்கொண்டு, பற்களைக் கடித்தவாறு சிறிய கோபம் மேலோங்க மெதுவான குரலில் கூறுவாள்: “கொஞ்சம் பெரிய ஒண்ணு”

அந்த மாதிரியான நேரங்களில் மஜீத் அவளைத் தண்டிப்பான். அந்தத் தண்டனை தனித்துக் கூறக் கூடியதாக இருக்கும். அவனிடம் எப்போதுமிருக்கும் ரப்பரால் ஆன வில்லில் மடியிலிருந்து ஒரு சிறு உருண்டையான கல்லை எடுத்து வைத்து ஸுஹ்ராவின் முழுங்காலை நோக்கி மெதுவாகச் செலுத்துவான். பொதுவாக அவனுடைய குறி தப்பாது.

அவள் முழுங்காலில் கல் பட்டவுடன் அவன் கூறுவான்: “அந்தக் கதவுல இருக்குற சுண்ணாம்பு மேல நான் அடிச்சேன். அது உன்மேல பட்டுடுச்சு.”

ஸுஹ்ரா அசைய முடியாது நிற்பாள். அவளுடைய கண்களிலிருந்து ஒன்றிரண்டு துளி கண்ணீர் திரண்டு நிற்கும். அவ்வளவுதான். அது எதையும் பார்க்காமல் ஸுஹ்ராவின் உம்மா மஜீத்தைப் பார்த்துக் கூறுவாள். “நீ சரியா குறி பார்த்து எங்களோட காலையும் சட்டியையும் உடைப்பே. மஜீத், உங்களைப் போல பணக்காரங்களா நாங்க?”

“ஒ.. நான் இனிமேல் குறிவச்சு அடிக்கவே மாட்டேன். நான் இந்த ஊரை விட்டு தூர இடத்துக்குப் போகப்போறேன்”.

“எங்கே?”

“தூரத்துல இருக்குற ஊருக்கு”

“ஆனா...” ஸுஹ்ரா கூறுவாள்: “சாயங்காலம் வீட்டுக்கு வந்திடணும்..”

இதுதான் மஜீத்தைப் பற்றி ஸுஹ்ரா கொண்டிருக்கும் அபிப்ராயம். ஸுஹ்ராவைப் பற்றிய மஜீத்தின் அபிப்ராயம் அப்படியல்ல.

“நான் ஊர் ஊரா சுத்திட்டு திரும்பி வர்றப்போ ஸுஹ்ரா பெரிய உத்தியோகத்துல இருப்பா. அப்போ இந்த அம்மணி என்னைப் பார்த்தா, பார்த்த மாதிரியே காட்டிக்கமாட்டா”

தூரத்திலிருக்கும் நல்ல ஒரு எதிர்காலத்தைப் பார்த்ததைப்போல் ஒரு மெல்லிய புன்னகை அவள் முகத்தில் அரும்பும்.

நீண்டநேர சிந்தனைக்குப் பிறகு அவள் கூறுவாள்: “பையா, நீதான் படிச்சு படிச்சு பெரிய உத்தியோகத்துல போய் உட்காரப்போற! எங்கக்கிட்ட பணம் எதுவும் இல்லியே!”

அப்போது ஸுஹ்ராவின் வாப்பா கூறுவார் “அல்லாஹ் நமக்குப் பணத்தைத் தருவார்- நாம மூணுபேரும் பள்ளிக்கூடத்துல இருந்து ஒண்ணா திரும்பி வருவோம். நான் பாக்கு வித்துட்டு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துல வந்து நிக்கிறேன்! “


ஆனால், அந்த விஷயம் நடக்கவேயில்லை. அவர் மழையில் நனைந்து இரண்டு மூன்று நாட்கள் கடும் காய்ச்சல் வந்து படுத்தார். மூன்றாவது நாள் மாலையில் அவர் மரணத்தைத் தழுவினார். பிணத்திற்கருகில் மஜீத்தும் உட்கார்நிதிருந்தான். அணைந்துபோன விளக்கின் புகை பிடித்த கறுப்பு நிற சிம்னியைப் போல இருந்தன அந்தக் கண்கள் இரண்டும்! ஒளியையும் வெப்பத்தையும் இழந்த அசைவற்ற அந்த உடல்!

மறுநாள் சவ அடக்கம் நடைபெற்றது. அன்று மாலையில் ஸுஹ்ராவை எதிர்பார்த்து எப்போதும்போல மஜீத் மாமரத்தடியில் நின்றிருந்தான். துக்கம் முழுமையாக அவளை ஆக்ரமித்திருக்க மெதுவாக நடந்து மஜீத்திற்கு அருகில் வந்தாள். மஜீத் அவளின் முகத்தைப் பார்த்தபோது, அவள் தேம்பித் தேம்பி அழுதாள். மஜீத்தால் ஒரு வார்த்தைகூட பேசமுடியவில்லை. அவளுடைய கண்ணீர்த் துளிகள் அவளுடைய நெற்றியிலும் அவளுடைய கண்ணீர் அவனுடைய மார்பிலும் விழுந்து கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் இருண்டு கிடந்த தென்னை மரங்களுக்கு மத்தியில் நீல வானத்தில் சந்திரன் தன் பிரகாசமான முகத்தைக் காட்டினான்.

6

ஜீத்தை அவனுடைய வாப்பா நகரத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக அழைத்துச் செல்வதை ஸுஹ்ரா தன் வீட்டு வாசலில் நின்றவாறு பார்த்தாள். இரண்டு பேர் கைகளிலும் குடை இருந்தது. மஜீத்தின் கைகளில் இருந்தது புதிய குடை. அவன் அணிந்திருந்த சட்டை, வேட்டி, தொப்பி எல்லாமே புதியனவாக இருந்தன. கிராமத்துத் தெரு வழியே அவர்கள் நடந்துபோய் தூரத்தில் மறைவதுவரை அவள் பார்த்தாள்.

அன்று சாயங்காலம் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவந்த மஜீத் மாமரத்தடியை  நோக்கி வந்தான். நல்ல மணம் வந்து கொண்டிருந்த புதிய பாடப்புத்தகம் அவனுடைய கையிலிருந்தது. ஆர்வத்துடன் ஓடிவந்த ஸுஹ்ராவிடம் அவன் அந்தப் புத்தகத்தைக் காட்டினான்.

"இதுல நிறைய படங்கள் இருக்கு."

அவள் அதை வாங்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். மஜீத் பல மைல்களைத் தாண்டியிருக்கும் நகரத்தின் அற்புதமான காட்சிக வர்ணித்தான். கடைசியில் பள்ளிக்கூடத்தைப் பற்றிச் சொன்னான்.

“நகரத்தோட நடுவுல, சுண்ணாம்பு பூசப்பட்ட, ஓடு போட்ட பெரிய கட்டிடங்கள். இங்க இருக்கிற பள்ளிக்கூடத்தைப் போல இல்ல. பெரிய ஒரு தோட்டம்! அதுல என்னென்ன மாதிரியான செடிகளெல்லாம் இருக்கு தெரியுமா? நான் அதோட விதைகளைக் கொண்டு வர்றேன். பிறகு... விளையாடுறதுக்கான இடம்...ஓ... அதைக் கட்டாயம் நீ பார்க்கணும்!” மஜீத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான்.

“படிக்கிற பசங்க எவ்வளவு தெரியுமா? கணக்கே இல்ல. தலைமை ஆசிரியர் தங்கக் கண்ணாடி போட்ட ஒரு தடிமனான ஆளு- கையில எப்ப பார்த்தாலும் பிரம்பு வச்சிருக்காரு. பிறகு... எங்க  சாருக்கு ஒரே ஒரு கண்ணுதான் இருக்கிறதே- எங்க வகுப்புல மொத்தம் இருக்குறது நாற்பத்திரெண்டு பேரு. அதுல பதினாலு பேரு பொம்பளை பசங்க.“

திடீரென்று தான் சொல்லிக்கொண்டிருந்ததை மஜீத் நிறுத்தினான். ஸுஹ்ராவின் கண்களிலிருந்து வழிந்த நீர் புத்தகத்தில்-

“ஸுஹ்ரா!” மஜீத் அழைத்தான். கண்களிலிருந்து வழிந்த நீருக்கான காரணம் என்னவென்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“நீ ஏன் அழற?-”“  மஜீத் திரும்பத் திரும்பக் கேட்டான்.

கடைசியில் அவள் தன் முகத்தை உயர்த்திக்கொண்டு மெதுவான குரலில் சொன்னாள்: “நானும் படிக்கணும்!”

ஸுஹ்ராவும் படிக்கவேண்டும்! ரப்பே - அதற்கு என்ன வழி? மஜீத் ஆழமாகச் சிந்தித்தான். மின்மினிப் பூச்சிகள் கக்துவதைப்போல் ஒரு சத்தம் அவனுடைய தலைக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது. இறுதியில் வழி தெரிந்தது.

மஜீத் சொன்னான்:

“நான் படிக்கிறதை ஒவ்வொரு நாளும் உனக்குச் சொல்லித் தர்றேன், ஸுஹ்ரா- “

இப்படி அவன் சொன்னாலும் அதைவிட நல்ல ஒரு வழி இருப்பதை மஜீத் கண்டுபிடித்தான். மஜீத்தின் வீட்டில்தான் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றனவே! அதனால் ஸுஹ்ராவையும் சேர்த்து பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைத்தால் என்ன? இந்த விஷயத்தைத் தன்னுடைய வாப்பாவிடம் சொல்ல அவன் பயந்தான். உம்மாவிடம் சொல்லலாம் என்று அவன் தீர்மானித்தான். அவனுடைய வாப்பா அவன்மீது நல்ல பாசம் கொண்டவரே. சிறிது முன்கோபி. அவ்வளவுதான் விஷயம். எப்போது பேசினாலும் ‘நான் சொல்வது புரிகிறதா’ என்று கேட்டுவிட்டு ‘இல்லை’ என்று அவரே பதிலும் சொல்லிக்கொள்வார்.

அன்று இரவு சாப்பாடு முடித்து மஜீத்தின் வாப்பா வெற்றிலையில் சுண்ணாம்புத் தடவிக்கொண்டிருந்தார். அவனுடைய உம்மா பாக்கு வெட்டிக்கொண்டிருந்தாள்.

இதயம் ‘டக்டக்’கென்று அடித்துக்கொள்ள, மஜீத் தன் உம்மாவினருகில்  போய் உட்கார்ந்து, மெதுவான குரலில் அழைத்தான்: “உம்மா!”

அவனுடைய உம்மா அன்பு கலந்த குரலில் கேட்டாள்: “என்ன மகனே?”

மஜீத் மெதுவாகச் சொன்னான்: “நாம ஸுஹ்ராவைப் படிக்க வச்சா என்ன?”

சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை. அவனின் வாப்பா வெற்றிலையை மடித்து சுருட்டி வாய்க்குள் வைத்து துண்டாக்கப்பட்ட பாக்கையும் வாய்க்குள் போட்டு மெல்ல ஆரம்பித்தார். பிறகு தங்கத்தைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்த பித்தளைச் செல்லத்தைத் திறந்து அதிலிருந்த வெள்ளை நிற டப்பா வைத்திறந்தார். கனமான ஒரு வாசனை அப்போது அங்கு பரவியது. கையில் எடுத்த புகையிலையை உள்ளங்கையில் வைத்து வாய்க்குள் போட்டார். வாய்க்குள் போட்டுக் குதப்பிய அவர் சிறிது நேரம் சென்றதும் வாசல் பக்கமாக வெற்றிலை எச்சிலைத் துப்பினார்.

“இதுல துப்பலாம்ல?” - மஜீத்தின் உம்மா எச்சில் பாத்திரத்தை நீட்டியவாறு சொன்னாள்: “அந்தச் செடியோட இலையில இரத்தம் மாதிரி அது தெரியும்.”

“அவன் உம்மாவோட செடி?” என்று கிண்டலாகச் சொன்ன மஜீத்தின் வாப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். பகலைவிட பிரகாசமாக இருந்த சரவிளக்கின் வெளிச்சத்தில் அவனுடைய வாப்பாவின் ஃப்லானல் சட்டையிலிருந்த தங்க நிற பொத்தான்கள் மஞ்சளாக ஜொலித்தன. அவரின் கறுத்த புருவங்கள் உயர்ந்தன. தவிட்டு நிறத்தில் மினுமினுப்பாக இருந்த நெற்றி சுருங்கியது. தங்கக் கண்ணாடியின் வட்டத்துண்டு வழியாகப் பார்த்தவாறு அவர் மஜீத்தைப் பற்றிய தன் எண்ணத்தைக் கூற ஆரம்பித்தார்:

“அடியே... இவன் எங்கே வேணும்னாலும் போகட்டும். நாடு முழுவதும் சுத்தட்டும். நம்மளைப்போல உலகத்துல இருக்கிற மத்தவங்க எப்படி வாழுறாங்கன்றதை இவன் படிச்சு தெரிஞ்சுக்கட்டும். புரியுதா? இல்ல...”

“பேச ஆரம்பிச்சிட்டீங்களா? ஏதாவது சொல்லிட்டா உடனே போ... ஊரைவிட்டுப் போ; அது இதுன்னு... வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பிச்சுருவீங்க. ஆமா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?“”

“அடியே... இவனுக்கு அறிவு கிடையாது.”

“மத்தவங்களுக்கு மட்டும் நிறைய இருக்குதாக்கும்!”

உம்மாவின் குத்துகிற மாதிரியான வார்த்தை! மஜீத்தின் வாப்பா வெறுமனே இருப்பாரா?

“அடியே... இவனுக்கு இருக்கிறது உன்னோட அறிவு. புரியுதா? இல்ல...”


“நானும்தான் பார்க்குறேன். சமீப காலமா என்னைக் குறை சொல்லிக்கிட்டே இருக்கீங்க. எல்லாம் கடவுளோட செயல்...”

“அடியே... இல்லாட்டி இவனுக்கு இப்படித் தோணுமா? என் தம்பிமார்களுக்கு மொத்தம் இருபத்தாறு பிள்ளைங்க. உன் தம்பிமார்களுக்கும் தங்கச்சிமார்களுக்கும் மொத்தம் இருக்கிறது நாற்பத்தொரு பிள்ளைங்க. அடியே... அவங்க எல்லாரும் இங்கே வந்து சோறு தின்னப்போ நான் ஏதாவது சொல்லியிருக்கேனாடி? இல்ல...”

“என் கடவுளே! ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?”

“அடியே! நீ ஆயிரம் கடவுள்களைக் கூப்பிடு. அதுக்குப் பிறகாவது உனக்குப் புத்தி வருமா? இல்ல... நான் சொல்றதை உன்னால புரிஞ்சுக்க முடியுதா? இல்ல...”

“அப்படின்னா எழுதிக் காட்டுங்க...”

எழுத, படிக்கத் தெரியாத உம்மா சொன்னாள்.

அதைக்கேட்டு மஜீத்தின் வாப்பா விழுந்து விழுந்து சிரித்தார்.

உம்மாவின் வெண்மை நிற சட்டையில் சிவப்பு நிறத்தில் வெற்றிலைக்காவி துளித்துளியாய் பட்டது.

“போடி அந்தப்பக்கம்...” - மஜீத்தின் வாப்பா உரத்த குரலில் சொன்னார்: “போயி உன் சட்டையை மாத்திட்டு வா. புரியுதாடி? இல்ல...”

மஜீத்தின் உம்மா உள்ளே போய் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு வந்தாள்.

வாப்பா தொடர்ந்தார்: “எழுதணுமா? அடியே. உன் வாப்பா படிச்சிருக்காரா? இல்ல... அடியே... உன் சகோதரர்கள் படிச்சிருக்குகாங்களா? இல்ல...”

உம்மா விடுவாளா? “ஆமா உங்கள்ல எல்லாரும் நல்லா படிச்சவங்கதான்...”

அதற்கு மஜீத்தின் வாப்பா நீண்டநேரம் எதுவும் பேசவில்லை. அவர் எதுவும் படிக்கவில்லை. வாப்பாவின் வாப்பாவும் வாப்பாவின் உம்மாவும் கூட படிக்கவில்லை. அதை மஜீத்தின் உம்மா ஞாபகப்படுத்தியதும், வாப்பாவிற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“இதுக்கு மேல ஏதாவது பேசின...?” மஜீத்தின் வாப்பா கர்ஜித்தார்: “உன் கழுத்தை நான் மிதிச்சு நசுக்கிருவேன். புரியுதாடி? இல்ல...”

அதற்கு மஜீத்தின் உம்மா ஏதாவது பதில் சொன்னால் உடனே அங்கு சண்டை உண்டாக ஆரம்பித்துவிடும். வெற்றிலைப் பெட்டியை எடுத்து வாசலில் அவர் வீசி எறிவார். மஜீத்தின் உம்மாவை அடிப்பார். மஜீத்தை அடிப்பார். அவன் சகோதரிகளை அடிப்பார். அது மட்டுமல்ல - மஜீத்தின் செடிகள் முழுவதையும் பிடுங்கி ஒருவழி பண்ணிவிடுவார். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு அவன் உம்மா வாய்திறந்து எதுவும் பேசவில்லை. அவள் ஒரு வார்த்தைகூட சொல்லாததால் மஜீத்தின் வாப்பா கேட்டார்: “என்னடி, உன் நாக்குக்கு என்ன ஆச்சு? இல்ல...”

மஜீத்தின் உம்மா அமைதியான குரலில் கேட்டாள்: “நீங்க எதுக்கு இதெல்லாம் பேசுறீங்க? மஜீத் ஏதோ கேட்டுட்டான். கடவுள் அருளால நமக்கு வேண்டிய அளவுக்குச் சொத்து இருக்குல்ல? அந்த ஸுஹ்ராவோட வாப்பா இறந்துட்டாரு. இப்போ அவளுக்குன்னு யாருமில்ல. நாம அவளையும் படிக்க வச்சா என்ன?”

மஜீத் தன் வாப்பா என்ன சொல்லப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் காத்திருந்தான். அவனுடைய உம்மாவின் கழுத்திலும் காதுகளிலும் அணிந்திருந்த தங்க நகைகள் மின்னின.

“இருக்குடி... நமக்கு வேண்டிய அளவுக்கு சொத்து இருக்கு. உன் வாப்பா சம்பாதிச்சுத் தந்த சொத்தா என்ன இது? இல்லாட்டி உனக்கு இதை வரதட்சணையா தந்தாரா?”

“ஆரம்பிச்சிட்டீங்களா வரதட்சணை அது இதுன்னு? என்னை என்ன நீங்க சும்மாவா கட்டிட்டு வந்தீங்க? என்னைக் கல்யாணம் பண்ணி கொடுக்குறப்போ ஆயிரம் ரூபா ரொக்கமா தந்தாங்க. இடுப்புலயும் நகை போட்டு அனுப்பிவச்சதை மறந்துட்டீங்களா?”

“ம்ஹும்... மஜீத்தின் வாப்பா மீசையைக் கையால் நீவிவிட்டவாறு சொன்னார்: “பெரிய ஆயிரம் ரூபா... அடியே... உன்னைப்போல தூங்கு மூஞ்சி ஒருத்தியை ஆயிரம் ரூபா கொடுத்து அனுப்பினாலும், உன்னை மாதிரி கொஞ்சம் கூட அறிவு இல்லாம இருக்கிற ஒருத்தியை வேற எவனாவது கட்டுவானாடி? இல்ல...”

“அப்படின்னா நீங்க வேணும்னா இனிமேல் போயி ஒரு அறிவு உள்ள ஒருத்தியைக் கட்டிக்கங்க...”

“கட்டுவேண்டி...கட்டுவேன்... என்னை மாதிரியான தகுதியுள்ள ஆம்பளைக்கு ஆயிரம் என்ன... பத்தாயிரம் தர்றதுக்குக்கூட ஆள் இருக்கு. புரியுதாடி? இல்ல...”

மஜீத்தின் உம்மா அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. தேவைப்பட்டால் அவனுடைய வாப்பாவால் எத்தனை பேரை வேண்டுமென்றாலும் கல்யாணம் கட்டிக்கொள்ள முடியும்தான். அவனின் உம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது அவனின் வாப்பாவிற்கு கோபத்தை அதிகமாக்கியது.

“இவ சொல்றதைப் பார்த்தியா, நமக்கு வேண்டிய அளவுக்குச் சொத்து இருக்காம்...”

ஒரு பைசாகூட கையில் இல்லை என்பது மாதிரி இருந்தது அவருடைய பேச்சு. உண்மை என்னவென்பது மஜீத்திற்கு நன்றாகத் தெரியும். அந்த ஊரிலேயே மிகவும் அதிகமான சொத்து அவனுடைய வாப்பாவிற்குத்தான் உள்ளது. ஒவ்வொரு முறையும் தென்னந்தோப்பில் தேங்காய்கள் மலைபோலக் குவிந்து கிடக்கும். ஒவ்வொரு தடவையும் அறுவடை செய்து கொண்டுவரும் நெல்லைப் போடுவதற்கே இடமிருக்காது. அது தவிர, மர வியாபாரத்தில் ஏராளமான லாபம் கிடைத்துக்கொண்டிருந்தது. ஒருமுறை மர வியாபாரம் செய்து, அதற்கு ஈடாக மஜீத்தின் வாப்பா தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்தார். அதை வெள்ளைத்தாளில் மலைபோலக் குவித்து வைத்துக்கொண்டு சரவிளக்கின் முன்னால் வைத்து அவர் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணி துணியில் கட்டி பெட்டிக்குள் வைத்துப் பூட்டினார். பூட்டுவதற்கு முன்னால் மஜீத் அதைக் கையில் எடுத்து எடுத்து விளையாடினான். அதன் மஞ்சள் நிறத்தையும் வசீகரத் தன்மையையும் மஜீத்தால் இப்போது கூட மறக்கமுடியவில்லை. அந்த அளவிற்குப் பணக்காரர்களான அவர்கள் இந்த ஒரு ஏழைச் சிறுமியைப் படிக்க வைக்கக் கூடாதா?

மஜீத்தின் உம்மா சொன்னாள்: “இல்லைன்னு சொல்லாதீங்க. நம்மக்கிட்ட தேவையான அளவு சொத்து இருக்குல்ல! இந்த ஊர்ல இருக்கிற மத்த எல்லாரையும்விட நம்மக் கிட்ட சொத்து அதிகமாக இருக்குறது உண்மைதானே? மஜீத்துக்கு ஆகுற செலவுதானே அந்த ஸுஹ்ராவோட படிப்புக்கும் ஆகும்?”

அதைக்கேட்டு மஜீத்தின் வாப்பாவிற்குக் கோபம் வந்துவிட்டது.

“அடியே... உனக்கு அறிவு கொஞ்சம்கூட இல்லைன்னு நான் சொன்னா உன்னால புரிஞ்சுக்க முடியுதா? இல்ல... அடியே... நம்ம ரெண்டு பேரோட இரத்த சம்பந்தம் கொண்ட சொந்தம் எத்தனை பேரு தெரியுமாடி? இல்ல... இருபத்தியாறும் நாற்பத்தொண்ணும் சேர்ந்தா எவ்வளவு வருதுடி? இல்ல...”

மஜீத்தின் உம்மா கேட்டாள்: “எத்தனை வருதுடா மஜீத்?” மஜீத்தின் மூளை குழம்ப ஆரம்பித்தது. பயங்கரக் கணக்குத்தான்! அவன் தாளையும் பென்சிலையும் எடுப்பதற்காக உள்ளே ஓடினான்.

உரத்த குரலில் கிண்டலாக மஜீத்தின் வாப்பா ஒரு சிரிப்பு சிரித்தார்.

“போடி நீயும் உன் அறிவும்...”

மஜீத் தாளையும், பென்சிலையும் எடுத்துக்கொண்டு வந்து இருபத்து ஆறை எழுதி அதற்குக் கீழே நற்பத்தொன்றை எழுதினான். பிறகு வியர்வை வழிந்து கொண்டிருக்க அவன் அதைக் கூட்ட ஆரம்பித்தான்.


அப்போது சிரித்துக்கொண்டே மஜீத்தின் வாப்பா சொன்னார்:

“அடியே... அறுபத்தியேழு!”

அதற்குள் மஜீத்தும் கூட்டி முடித்திருந்தான்.

“சரிதான்... அறுபத்தியேழு” - மஜீத் சொன்னான்.

அவனின் வாப்பா கர்ஜனைக் குரலில் சொன்னார்: “அடியே... அந்த ஸுஹ்ரா நல்ல பொண்ணு. நல்ல புத்திசாலியும் கூட அதே நேரத்துல அவளை நாம படிக்க வைக்கணும்னா அறுபத்தேழு பேரையும் நாம படிக்க வைக்கணும். அந்த அளவுக்கு நம்மகிட்ட சொத்து இருக்காடி?”

மஜீத்தின் உம்மா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

“அவன் இன்னும் வெளியே போகலியா?” - மஜீத்தைப் பார்த்து அவனுடைய வாப்பா சொன்னார்: “போடா!”

மஜீத் வருத்தத்துடன் வெளியே போனான். அவன் ஜன்னலருகில் நின்று இருட்டினூடே ஸுஹ்ராவின் வீட்டைப் பார்த்தபோது, கைகளில் முகத்தைத் தாங்கியவாறு மண்ணெண்ணெய் விளக்கின் மஞ்சள் நிற சுடரைப் பார்த்தவணண்ணம் தீவிர சிந்தனையுடன் வாசலில் உட்கார்ந்திருந்தாள் ஸுஹ்ரா.

அப்படி அவள் எதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறாள்?

7

ஸுஹ்ராவின் வாழ்க்கை எந்தவித இலக்கும் இல்லாமல் கழிந்து கொண்டிருந்தது. பெரும்பாலான நேரங்களில் அவள் மஜீத்தின் வீட்டில்தான் இருப்பாள். எல்லாருக்கும் அவள்மீது பிரியம் உண்டு. இருப்பினும், அவள் முகத்தில் எப்போதும் ஒரு கவலை குடிகொண்டிருக்கும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கவலைப்படக்கூடாது என்று மஜீத்தின் உம்மா அடிக்கடி அவளைப் பார்த்துக் கூறுவாள்.

“எனக்கு கவலை ஒண்ணுமில்ல...” - புன்னகையுடன் ஸுஹ்ரா கூறுவாள். எனினும் தன்னுடைய குரலில் கலந்திருந்த கவலையின் சாயலை அவளால் மறைக்கவே முடியவில்லை. அதைப் பார்த்து மஜீத்தும் கவலைப்பட்டான்.

அவன் கூறுவான்: “ஸுஹ்ரா, முன்னாடி மாதிரி உன் சிரிப்பைக் கேட்கணும்போல இருக்கு!”

அவள் கூறுவாள்: “நான் முன்னாடி சிரிச்ச மாதிரிதானே இருக்கிறேன்?”

“இல்ல... இப்போ இருக்கிற உன் சிரிப்புல கண்ணீர் கலந்திருக்கு...”

“அப்படியா? அது நான் வளர்ந்துட்டதுனால இருக்கலாம்...”

சிறிது நேரம் கழித்து அவள் கூறுவாள்: “நாம வளராமலே இருந்திருக்கலாம்.”

வளர்ந்ததனால்தான் கவலைகளும் விருப்பங்களும் உண்டாயினவா?

அவர்கள் சிறு பிள்ளைகளாகத்தான் இருந்தார்கள். தங்ளை அறியாமலே அவர்கள் வளர்ந்து விட்டார்கள். மார்பும் தலையும் வளர்ந்த ஒரு இளம்பெண்ணாக ஸுஹ்ரா ஆனாள். மஜீத் அரும்பு மீசை முளைத்த ஒரு இளைஞனாக மாறினான்.

தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள் ஸுஹ்ரா. அவள் சகோதரியும், தாயும், அவளும் யாரும் இல்லாத அனாதைகள். அவளுடைய தந்தையின் மரணத்திற்குப்பிறகு அந்தக் குடும்பத்தின் முழுச்சுமையும் அவள்மீது வந்து விழுந்தது.

அவளுக்குப் பதினாறு வயது. என்ன இருந்தாலும் பெண்தானே! எனினும், அவள்தான் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும். எவ்வளவு காலத்திற்கு மஜீத்தின் உம்மாவிடமிருந்து உதவிகள் பெற்றுக் கொண்டிருக்க முடியும்; மற்றவர்களின் இரக்க குணத்தின் கீழ் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்க முடியும்! அங்கு மஜீத் மட்டுமே இருப்பானேயானால் அவளுக்கு எந்தவித பிரச்சினையுமில்லை.

மஜீத்தின் வாப்பா, உம்மா, சகோதரிகள் யாருடனும் ஸுஹ்ராவுக்கு எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. இருந்தாலும் மஜீத்திடம் அவளுக்கு இருக்கும் ஏதோவொன்று மற்றவர்களிடம் இல்லை என்பதென்னவோ உண்மை. மஜீத் தனக்கு முன்னால் இருக்கும்போது அவளுக்கு எதுவும் தோன்றாது. அவன் இல்லாத நேரங்களில்தான் அவளுக்குப் பிரச்சினையே.

மஜீத் காலையில் பள்ளிக்கூடம் சென்று சாயங்காலம் திரும்பி வரும்வரை அவள் ஒருவித பதைபதைப்புடனே இருப்பாள். மஜீத்தின் உடல் நலத்திற்கு ஏதாவது சிறு பாதிப்பு உண்டானால் கூட அவளால் தூங்க முடியாமற்போய்விடும். எந்த நேரத்திலும் மஜீதிற்குப் பக்கத்திலேயே இருக்கவேண்டும். இரவு-பகல் எந்நேரமும் அவனை உடனிருந்து கவனிக்கவேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசைப்படுவாள் ஸுஹ்ரா.

அவள் விருப்பப்பட்ட மாதிரியே ஒரு சம்பவம் அந்த நேரத்தில் நடந்தது. மஜீத்தின் வலது காலில் கல் குத்திவிட்டது. நகரத்திலிருக்கும் பள்ளிக்கூடத்திற்கு அவன் படிக்கப்போய் நான்கு வருடங்கள் ஆனபிறகு அந்தச் சம்பவம் நடந்தது. பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் காலில் வலி தோன்றியது. நொண்டி நொண்டித்தான் அவன் வீட்டிற்கே வந்தான். மறுநாள் காலின் அடிப்பகுதியில் இலேசான பழுப்பு தெரிந்தது. உடம்பு பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. மஜீத் கட்டிலில் படுத்தவாறு அனத்திக் கொண்டிருப்பான். காலில் பழுத்திருந்தது வெடித்தால் வலி சரியாகிவிடும் என்று எல்லாரும் கூறினார்கள். ஆனால், ஆட்கள் யாராவது அருகில் சென்றால் வாய்விட்டு அழ ஆரம்பித்துவிடுவான் மஜீத்.

வீட்டில் எப்போதும் ஆட்களின் கூட்டமாகவே இருந்தது. அவன் உடல்நலத்தை விசாரிப்பதற்காக வந்தவர்களின் ஆரவாரம் அடங்கிய அபூர்வ நிமிடங்களில் ஸுஹ்ரா அறைக்குள் சென்று மஜீத்தின் காலின் அருகில் அமர்ந்து பழுத்திருந்த இடத்தை உதட்டால் ஊதிக் கொண்டிருப்பாள். பழுத்த பெரிய கொய்யாப் பழத்தைப்போல காலுக்குள் வீங்கிப்போயிருந்தது. அது உண்டாக்கிய வேதனையை மஜீத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

“ஸுஹ்ரா, நான் சாகப்போறேன்..." - மஜீத் கவலையுடன் அழுதான்.

அதற்கு என்ன செய்வது? அவளுக்கு ஒரு பிடியும் கிடைக்கவில்லை. அவளுக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது. அவள் மஜீத்தின் வலது காலைத் தன்னுடைய கன்னத்தோடு சேர்த்து வைத்துக்கொண்டாள்.

பாதத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

முதல் முத்தம்...!

அவள் எழுந்து சென்று சூடாக இருந்த நெற்றியைத் தடவியவாறு மஜீத்தின் முகத்தை நோக்கிக் குனிந்தாள்.

அவளின் தலைமுடி கட்டைவிட்டு அவிழ்ந்து மஜீதின் மார்பின் மீது பரவிக்கிடந்தன. அவளுடைய மூச்சு அவன் முகத்தில் பட்டது. அவளிடமிருந்து வந்த நறுமணம். ஒரு மின்சக்தி நாடி நரம்புகளில் பாய்ந்து கொண்டிருந்தது. காந்தத்தால் இழுக்கப்பட்டதைப் போல மஜீத்தின் முகம் உயர்ந்தது. அவனுடைய கைகள் அவளுடைய கழுத்தைச் சுற்றின. அவளை அவன் தன்னுடைய மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான். அவளைத் தன்னுடைய உடம்போடு உடம்பாய் அவன் சேர்த்துக் கொண்டான்.

“ஸுஹ்ரா!”

“என்னோட...”

ஸுஹ்ராவின் சிவந்த உதடுகள் மஜீத்தின் உதடுகளில் பதிந்தன.

வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அன்று முதல் முறையாக எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்புடன் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மறந்து ஒட்டி இணைந்தார்கள். ஒருவருக்கொருவர் ஆயிரமாயிரம் முத்தங்களைப் பரிமாறிக்கொண்டனர். கண்கள், நெற்றி, கன்னங்கள், கழுத்து, மார்பு - இருவரும் உணர்ச்சிவசப்பட்டு நின்றனர். சுகமான ஒரு களைப்பும், புதிதான ஒரு நிம்மதியும் அவர்களுக்குத் தோன்றின. என்னவோ நடந்தது! அது என்ன?

“பழுத்து இருந்தது வெடிச்சிருச்சு...” - புன்னகையுடன்,தெய்வீகமான ஒரு சங்கீதத்தைப் போல ஸுஹ்ரா மெதுவான குரலில் சொன்னாள்.

மஜீத் எழுந்து நின்றான். ஆச்சரியம்! பழுத்த இடம் உடைந்திருந்தது. வெட்கத்தால குனிந்திருந்த ஸுஹ்ராவின் காதல் உணர்வு பரவியிருந்த முகத்தையே மஜீத் பார்த்தான்.


அந்த பவளத்தைப் போல் சிவந்திருந்த உதடுகளின் சுவையும், அந்த முதல் முத்தங்களின் பெண்மைத் தன்மையும்...

ஸுஹ்ரா முத்தமிட்ட வலது கால் பாதத்தில் எப்போதுமில்லாத குளிர்ச்சி தெரிந்தது...

ஸுஹ்ராவிற்கு அன்று இரவு முழுவதும் சிறிதுகூட தூக்கம் வரவில்லை. உடல் அனலாகக் கொதித்தது... அதில் அவள் ஆவியானாள்.

ஸுஹ்ராவின் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. எனினும், அதன் சாத்தியத்தைப் பற்றி நினைக்கும்போது அவளுக்கு அச்சம்தான் தோன்றியது.

தாங்கமுடியாத நிச்சயமற்ற நிலையுடன் அவளுடைய இரவுகளும் பகல்களும் சுழிந்து கொண்டிருந்தன.

8

ஸுஹ்ரா மஜீத்தைக் காதலிக்கிறாள். மஜீத் ஸுஹ்ராவைக் காதலிக்கிறான். இந்த விஷயம் அவர்கள் இரண்டு பேருக்கும் நன்றாகவே தெரியும். காதல் வளையத்திற்கு மத்தியில் இருந்தான் மஜீத். எனினும், வாழ்க்கை பற்றிய சிந்தனைகளும் உள்ளுணர்வும்தான் மஜீத்தை வழிநடத்திக்கொண்டிருந்தன. கவுரவத்தை எப்போதும் பெரிதாக நினைக்கக்கூடியவன் மஜீத். தன்னைப்பற்றி அவனுக்கு உயர்வான மதிப்பு இருந்தது. வாழ்க்கை அவனுடைய தந்தையின் உலகத்தைப் போல் இல்லை. குடும்ப விஷயங்களைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது. வாப்பாவிடம் ஏதாவது பேசுவது என்றால் உண்மையாகவே பயந்தான் மஜீத்.

அவனுடைய வாப்பா வேறு யாருடைய கருத்தையும் ஏற்றுக் கொள்ளாத சர்வாதிகாரியைப் போல் நடந்து கொண்டிருந்தார். தனக்கு ஏதாவது தேவைப்பட்டால், அவன் தன் உம்மாவைப் பார்த்துக் கேட்டு வாங்கிக் கொள்வான். வாப்பாவின் குரலைக் கேட்கும்போது மஜீத்தின் இதயத்திற்குள்ளிருந்து எதிர்ப்பின் உரத்த குரல் மௌனமாகக் கிளம்பி மேலே வரும். எதற்காக தான் எதிர்க்கவேண்டும்? அதைப் பற்றிய தெளிவான அறிவு மஜீத்திற்கு இல்லை. என்ன இருந்தாலும் அவர் அவனுக்கு ஒரு நல்ல தந்தைதானே? மஜீத்திற்கு தேவையானது எல்லாவற்றையும் அவர் வாங்கிக் கொடுக்கிறாரே! அவன் மீது ஆழமான அன்பை அவர் கொண்டிருக்கிறாரே! பிறகு... ஒரு தந்தை என்ற வகையில் அவர்மீது என்ன குற்றம் இருக்கிறது?

தன்னுடைய வாப்பா மீது கொண்டிருந்த அன்பைவிட அதிகமான அன்பை மஜீத் ஸுஹ்ராவின் வாப்பா மேல்தான் வைத்திருந்தான். ஸுஹ்ரா தன்னுடைய வாப்பாவைப் பார்த்து என்றுமே பயந்தது இல்லை. தன்னுடைய தந்தையைப்பற்றிப் பேசும்போது அவளின் கண்கள் நீரால் நிறைந்துவிடும். தன்னுடைய வாப்பா இறந்த போது மஜீத் அழுதானா? தன் உம்மா இறந்தால் நிச்சயமாக மஜீத் அழுவான். உம்மாமீது அவனுக்குப் பயமில்லை. வாப்பாவைப் பார்த்து அவன் பயப்பட்டான் - பயத்துடன் கலந்த அன்பு அவனுக்குத் தன் வாப்பா மீது இருக்கிறது.

மஜீத்திற்கு வீட்டிலேயே இருப்பது சிறிதும் பிடிக்காது. அதிகநேரம் அவன் தன் வீட்டிற்கு வெளியில்தான் இருப்பான். இல்லாவிட்டால் தன்னுடைய சொந்த அறைக்குள்ளேயே இருப்பான். இப்படி அவன் நாட்களை ஓட்டிக்கொண்டிருந்த போதுதான் மிகவும் முக்கியமான ஒரு சம்பவம் நடந்தது.

மஜீத் அன்று நகரத்திலிருந்த பள்ளிக்கூடத்தில் கடைசி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அறுவடை தொடங்கியிருந்தது. நல்ல வெயில் காலம். போதாததற்கு நோன்புக் காலம் வேறு. ஒருவாய் தண்ணீர்கூட குடிக்காமல், எச்சிலைக்கூட உள்ளே போக விடாமல் பகல் முழுவதும் பட்டினி கிடக்கும் காரணத்தால் சாதாரண விஷயத்திற்குக் கூட மஜீத்தின் வாப்பா வெறிபிடித்த மனிதரைப் போல் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் காலையில் மஜீத்தின் வாப்பா வயலுக்குச் செல்வதற்கு முன்பு மஜீத்திடம் சொன்னார்: "அறுவடை செய்து காயப் போட்டிருக்கிற நெல்லை படகு மூலம் கொண்டு வர்றாங்க. கூட ஆள் இல்லாமலிருந்தா படகு ஓட்டுறவங்க வர்ற வழியில நெல்லை வித்துடுவாங்க."

"உனக்கு நோன்பு இல்லையே?" - வாப்பா சொன்னார்:

“நீ பள்ளிக்கூடத்துல இருந்து வந்தவுடனே வயலுக்கு வந்திடணும். என்ன சரியா? இல்ல...”

மஜீத் சொன்னான்: “வந்திடுறேன்.”

ஆனால், மஜீத் வயலுக்குச் செல்லவில்லை. வழக்கம்போல பள்ளிக்கூடம் விட்டவுடன் அவன் விளையாடப் போய்விட்டான். சாயங்காலம் நோன்பு திறக்கும் நேரத்தில் தன் வாப்பாவைப் பார்க்காமலிருந்தபோதுதான் அவனுக்கு அவர் வயலுக்கு வரச்சொன்ன விஷயமே ஞாபகத்தில் வந்தது. சிறிதுநேரம் கழித்து நன்கு பொழுது இருட்டிய பிறகு அவன் வாப்பா வந்தார். மஜீத்தைப் பார்த்ததும் அவர் உரத்த குரலில் சத்தம் போட்டார். பயங்கர கோபத்துடன் மஜீத்தின் முதுகில் ஒரு அடி கொடுத்தார். மஜீத்திற்கு தலை சுற்றுவதைப் போலிருந்தது. தலைக்குள் மின்மினிப் பூச்சிகள் பறப்பதைப் போலிருந்தது.

மீண்டும் மீண்டும் அவனுடைய வாப்பா அவனை அடித்தார்.

“ஒண்ணு நீ திருந்தணும். இல்லாட்டி சாகணும். புரியுதா? இல்ல...”

அவனுக்குக் கிடைத்த அடிகளின் சத்தத்தைக் கேட்டு அவனுடைய உம்மா ஓடிவந்து மஜீத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“கொஞ்சம் நிறுத்துங்க. தெரியாம செய்த தப்புக்கு இப்படியா அடிக்குறது?”

“போடி அந்தப்பக்கம்...” - அவனுடைய வாப்பா உரத்த குரலில் கத்தினார். “நீ அவனைப் பார்த்துக் கேட்டியா?” தொடர்ந்து அவனின் தாயை அவர் அடித்தார். அழுதுகொண்டு அங்கு ஓடிவந்த அவன் சகோதரிகளையும் அவர் அடித்தார். கதவுகளை அடித்து உதைத்து பாத்திரங்களை அவர் விட்டெறிந்தார்.

இந்த ஆரவாரத்திற்கு மத்தியில் மஜீத் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.

“போடா... போ! நீ ஊரெல்லாம் சுற்றி படிச்சிட்டு வா. புரியுதா? இல்ல...” - மஜீத்தின் வாப்பா உரத்த குரலில் கத்தியவாறு அவனுடைய பிடரியைப் பிடித்து வாசலை நோக்கித் தள்ளிவட்டார். மஜீத் குப்புறப் போய் விழுந்தான். உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது. மஜீத் எழுந்து நிற்க, மீண்டும் அவர் அவனைப் பார்த்துக் கத்தினார்: “போ!”

அவரின் அந்த சத்தம் உலகின் ஒரு மூலையை நோக்கி மஜீத்தை ஓடச்செய்யப் போதுமானதாக இருந்தது.

மஜீத் அந்த இடத்தைவிட்டு அகன்றான். இருளில் படியில் போய் உட்கார்ந்தான். அவனால் அழ முடியவில்லை. கண்களில் ஒரு துளி நீர் கூட இல்லை. பலமான எதிர்ப்பின் கொடுங்காற்று அவனுடைய இதயத்திற்குள் வீசிக்கொண்டிருந்தது. நல்ல வார்த்தைகள் சொல்வதற்கோ ஆறுதல் கூறுவதற்கோ அவனை நோக்கி யாரும் வரவில்லை.

வீட்டில் மயான அமைதி நிலவிக்கொண்டிருந்தது. சரவிளக்கு அடர்த்தியாக எரிந்து கொண்டிருந்தது. இருந்தாலும் மரணம் நடந்த வீட்டைப்போல... ஒரு சிறு அசைவாவது அங்கு இருக்கவேண்டுமே!

பரந்து கிடக்கும் இந்த உலகில் தான் மட்டும் தனியே இருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். வீட்டையும், ஊரையும் விட்டுப்போக அவன் முடிவெடுத்தான். ஆனால், எங்கே செல்வது? கையில் பணமில்லை. எதுவுமே இல்லாத ஒருவன் தான் என்பதை அவனால் உணரமுடிந்தது. எனினும் வாழ முடியும்! என்ன இருந்தாலும், அவன் ஒரு இளைஞனாயிற்றே!


மஜீத் கிளம்பினான்.

அதற்கு முன்பு ஸுஹ்ராவைத் தேடிச் சென்றான். எப்போதும் அமர்ந்திருக்கக் கூடிய மாமரத்தடியில் இருட்டின் தனிமையில் அவன் நின்றிருந்தான்.

தூரத்தில் ஸுஹ்ராவின் இனிய குரல் கேட்டது. மண்ணெண்ணெய் விளக்கிற்கு முன்னால் அமர்ந்து அவள் குர்-ஆன் மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள். இடையில் அவள் தன் முகத்தை உயர்த்தி மாமரம் இருக்கும் திசையைப் பார்த்தாள். எதையோ கேட்பதைப் போல அவளின் கண்கள் எந்தவித அசைவுமில்லாமல் நின்றன. தங்கத்தைப் போன்ற அவளின் கன்னங்கள் பிரகாசித்தன. இரத்தத்தைத் தொட்டதைப் போன்றிருந்த அவளின் உதடுகள் விரிந்தன.

சிறிதுநேரம் எந்தவித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்த ஸுஹ்ரா மீண்டும் குர்-ஆன் படிப்பதைத் தொடர்ந்தாள்.

“ஸுஹ்ரா...” - மஜீத் அழைத்தான். மெதுவான குரலில்தான். உரத்த குரலில் அழைக்கவே மனம் நினைத்தது. இறுதியாக அவளிடம் விடைபெறலாம் என்று நினைத்த அவன் வேண்டாம் என்று முடிவெடுத்தான்.

மஜீத் நடந்தான் - ஒரு பைத்தியக்காரனைப் போல. கிராமத்தைத் தாண்டி, நகரத்தைக் கடந்து, காட்டையும் மலைகளையும், மேலும் பல நகரங்களையும் தாண்டி மஜீத் சென்றான்.

சுமார் பத்து வருடகாலம் அவன் பயணம் செய்தான். எங்கெங்கோ திரிந்த நாட்கள் அவை!

அதற்கிடையில் தன்னுடைய வீட்டில் என்ன நடந்தது என்பதோ ஸுஹ்ராவின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களெல்லாம் உண்டாயின என்றோ மஜீத்திற்குத் தெரியாது. அவன் கடிதங்கள் எதுவும் எழுதவில்லை. எதையும் தெரிந்துகொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் அல்ல- அவன் சாதாரணமாகவே கடிதம் எழுதவில்லை என்பதே உண்மை. அவனுடைய வீட்டிலிருந்து யாராவது அவனைத் தேடி வந்தால்...?

மஜீத் பயணம் செய்துகொண்டேயிருந்தான். பல வகைகளில் அவனுடைய பயணம் நடந்தது. நடந்தும், வாகனங்களிலும், பிச்சைக்காரர்களுடனும், பயணிகளின் நண்பனாகவும், சன்னியாசிகளின் சீடனாகவும், ஹோட்டல் வேலைக்காரனாகவும், அலுவலக க்ளார்க்காகவும், அரசியல்வாதிகளுடனும், பணக்காரர்களின் விருந்தினனாகவும்... இப்படி பல வகைப்பட்ட நிலைகளில் அவன் வாழ்ந்தான். பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுடனும் அவன் பழகினான்.

மஜீத்திற்குப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று ஆசை இல்லாமலிருந்தது. அந்த வசதிகளை அவன் சிறிதுகூட தனக்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. வெறுமனே பார்ப்பது, அறிவது... இதுதான் அவன் நோக்கமாக இருந்தது.

சிறு கிராமங்களையும் பெரிய நகரங்களையும் சிறு அருவிகளையும் பெரிய நதிகளையும் சிறு குன்றுகளையும் பெரிய மலைச்சிகரங்களையும் தூசு நிறைந்த விவசாய நிலங்களையும் வெள்ளை மணல் விரிந்து கிடக்கும் பெரிய உலகமான பாலைவனங்களையும்... இப்படி ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி மஜீத் பயணம் செய்தான். எதைப் பார்ப்பதற்காக? எதைக் கேட்பதற்காக?

மனிதர்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். பேசும் மொழியிலும் அவர்களின் தோற்றத்திலும் மட்டும்தான் வேறுபாடு தெரிந்தது. எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும்... அவர்கள் பிறந்து, வளர்ந்து ஒருவரோடாருவர் கலந்து மக்கள் தொகையைப் பெருகச் செய்கிறார்கள். பிறகு... மரணம். அவ்வளவுதான். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலிருக்கும் கஷ்டங்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. மரணத்துடன் அவை எல்லாம் முடிந்து விடுகின்றனவா? இப்படி பல விஷயங்களையும் சிந்தித்துப் பார்த்த மஜீத் மீண்டும் தன்னுடைய ஊருக்கே திரும்பி வந்தான். எதற்காக? ஸுஹ்ராவைத் திருமணம் செய்து எங்காவது ஒரு இடத்தில் அமைதியாக வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணத்துடன்தான் அவன் வந்தான். ஆனால், ஊரில் அவனே ஆச்சரியப்பட்டு நிற்கும் அளவிற்கு மாறுதல்கள் உண்டாகியிருந்தன.

வியாபாரத்தில் அடிக்கொருதரம் உண்டான இழப்பாலோ அல்லது ஊரில் ஒரு பாலம் உண்டாக்கவேண்டும் என்பதற்காக அரசச்கத்திற்குத் தரும் ஒரு விண்ணப்பம் என்று சொல்லி மிகப்பெரிய ஒரு தொகையை ஏமாற்றி வாங்கிய ஒரு மனிதரின் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டதாலோ... இப்படி ஏதோ காரணத்தால் மஜீத்தின் வாப்பாவின் சொத்து முழுவதும் கடனில் மூழ்கிப் போயிருந்தது. வாழ்ந்து கொண்டிருந்த வீடுகூட அடமானத்தில் இருந்தது.

அவனுடைய பெற்றோர் இருவரும் வயதாகிப் போயிருந்தனர். சகோதரிகள் இருவரும் வளர்ந்து திருமண வயதைத் தாண்டியிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஸுஹ்ராவிற்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது!

மஜீத் ஊருக்கு வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே ஸுஹ்ராவிற்குத் திருமணமாகிவிட்டது. நகரத்தில் எங்கேயோ இருக்கும் ஒரு கசாப்புக் கடைக்காரன் அவளைத் திருமணம் செய்திருந்தான்.

ஸுஹ்ரா மஜீத்திற்காகக் காத்திருக்கவில்லை. ‘சுயநலம்தான் வாழ்க்கை’ என்பதை மஜீத் புரிந்து கொண்டான்.

எது எப்படியோ ஊர்க்காரர்கள் மஜீத்தைப் பார்க்க வந்தார்கள். நான்கைந்து நபர்கள் சுமந்துகொண்டு சென்ற பெட்டிகளையும் படுக்கையையும் பார்த்த மனிதர்கள் மஜீத் நிறைய பணம் கொண்டு வந்திருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். ஆனால், உண்மையில் மஜீத்திடம் இருந்தது ஏராளமான புத்தகங்களும் பத்து ரூபாயும்தான்.

மஜீத்திற்கு ஊரில் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் நாள்தோறும் இரண்டு மூன்று முறை அவன் விருந்தாளியாகச் சென்றான். வயிறு புடைக்கச் சாப்பிட்ட பிறகும் அவர்கள் வற்புறுத்தி அவனுக்கு ஊட்டுவார்கள்.

ஆனால், ஒரு மாதத்தில் அவர்களுக்கு உண்மை நிலவரம் என்ன என்பது தெரிந்துவிட்டது. வறுமையில் சிக்கிக் கிடக்கும் அந்தக் குடும்பத்தின் இன்னொரு வறுமைச் சின்னம்தான் மஜீத்தும் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

 “அவன் எதுக்கு இங்கே வந்தான்?” - இதுதான் அந்த ஊர்க்காரர்களின் கேள்வியாக இருந்தது. எத்தனையோ வருடங்கள் கழித்து அவன் வந்திருக்கிறான். அதுவும் வெறும் கையுடன்!

வெறுப்பு கலந்த பார்வைகளும் கிண்டலான பேச்சும் மஜீத்திற்கு தினமும் கிடைத்துக் கொண்டிருந்தன. அதன் விளைவாக அவன் வீட்டைவிட்டு வெளியிலேயே செல்வதில்லை. வீட்டில் முன்பு தான் இருந்த அறைக்குள்ளேயே அவன் எப்போதும் முடங்கிக் கிடந்தான். அந்த அறைக்குத்தான் எவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது! படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் பயன்படுத்திய அறை அதுதான். மஜீத்தின் ‘மார்க்க கல்யாணம்’ அந்த அறையில்தான் நடந்தது. விஷக்கல் காலில் குத்தி படுத்துக் கிடந்ததும் அந்த அறையில்தான்.

அந்த அறையில் பழைய சாய்வு நாற்காலியைப் போட்டு வெளியே பார்த்தவாறு மஜீத் சாய்ந்திருப்பான். வீட்டில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாது. மஜீத்தின் சகோதரிகள் தோலை நீக்கிப் பிரிக்கும் கயிறை அவனுடைய வாப்பா கடை வீதிக்குள் கொண்டுபோய் விற்று ஏதாவது வாங்கிக்கொண்டு திரும்பி வருவார். மிகப்பெரிய புகழின் அந்தஸ்தில் இருந்த அவனுடைய வாப்பா! மஜீத்தின் இதயம் அழுதது. அன்புள்ள வாப்பா!.. அவனுடைய வாப்பா கொண்டு வருவதில் மஜீத்திற்குத்தான் அதிகமாகத் தருவாள். அவனுடைய உம்மா. பிறகு அவள் கருணை கலந்த குரலில் கூறுவாள்:


“இங்கு வந்தபிறகு மகனே, நீ ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டே. உன்னை எப்படியெல்லாம் நான் வளர்த்தேன்? உனக்கு நிறம் போதலைன்னு பால்ல பொன்னையும் வசம்பையும் அரைச்சு சேர்த்து உன்னை எத்தனை தடவை குடிக்க வச்சிருப்பேன்டா மகனே!”

எதுவுமே பேசாமல் அமைதியாக மஜீத் அதே இடத்தில் அமர்ந்திருப்பான். என்ன செய்யவேண்டும்? கையில் காசு எதுவும் இல்லை. பணத்தைச் சம்பாதிப்பதற்கான வழியும் தெரியவில்லை. உதவுவதற்கும் மனிதர்கள் இல்லை...

மஜீத் நாளாக நாளாகச் சோர்ந்து போய்க்கொண்டேயிருந்தான். மனதைச் சரி செய்வதற்கு வேறு வேலைகள் எதுவும் இல்லாததால் மீண்டும் அவன் ஒரு தோட்டத்தை உண்டாக்கும் முயற்சியில் இறங்கினான். இந்த முறை அவன் மட்டும் தனியே.

வாசலுக்கு முன்னால் மஜீத் சதுர வடிவத்தில் வெள்ளை மணலைக் கொண்டுவந்து பரப்பினான். நான்கு மூலைகளிலும் செடிகளைக் கொண்டுவந்து நட்டான். ஸுஹ்ரா வைத்த செம்பருத்தி ஒரு மரமாக வளர்ந்திருந்தது. மஜீத் வந்தபோது, அதில் பூக்கள் உண்டாகியிருந்தன. பச்சிலைக் காடுகளில் இரத்தம் சிதறியிருப்பதைப் போல எப்போதும் மறையாத அடர்த்தியான சிவப்பு நிற மலர்கள்.

அதற்கு அடியில் சாய்வு நாற்காலியைப் போட்டு அதில் படுத்தவாறு அவன் எதையாவது படித்துக்கொண்டிருப்பான். ஆனால், எதையும் அவனால் மனமொன்றி வாசிக்க முடியாது. புத்தகத்தைத் திறந்து மடியில் வைத்தவாறு அவன் அசையாமல் படுத்திருப்பான்.

“உனக்கு என்னடா மகனே, கவலை?” அவனுடைய உம்மா கேட்பாள்.

மஜீத் மெதுவான குரலில் கூறுவான்: “ஒண்ணுமில்ல...”

அதைக்கேட்டு அவனுடைய உம்மா தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விடுவாள். அவள் தனக்குத்தானே கூறிக்கொள்வாள்: “எல்லாம் கடவுள் செயல்...”

மஜீத்தின் திருப்திக்காக அவன் விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளுக்கு நீர் ஊற்றும் விஷயத்தில் போட்டி போட்டுக்கொண்டு அவனுடைய சகோதரிகள் இருவரும் தங்களுக்குள் சண்டை போடுவார்கள். கடைசியில் இருவரும் ஒன்றாக மஜீத்தின் முன்னால் வந்து கூறுவார்கள்:

“அண்ணா. இன்னைக்குச் செடிகளுக்குத் தண்ணி ஊத்தினது நான்தான்...”

அதற்கு மஜீத் கூறுவான்: “செடிகள்ல வர்ற பூக்களை நீங்க ரெண்டு பேரும் சமமா எடுத்துக்கோங்க.”

“அவன் உம்மாவோட செடி...” - மஜீத்தின் வாப்பா கூறுவார்: “என் பணத்தையெல்லாம் செலவழிச்சு நான் அவனைப் படிக்க வச்சேன். அவன் ஊர் ஊரா சுத்திட்டு எத்தனையோ வருடங்கள் கழிச்சு திரும்பி வந்திருக்கான். அதுவும் வெறும் கையோட அவனோட செடி. இதுதான் அவன் சம்பாத்யம். இந்த வயசான காலத்துல நான் சுகமா பொழுதுபோக்க ஒரு தோட்டம்! எல்லா செடிகளையும் நான் வெட்டி எறியப்போறேன். நான் சொல்றது காதுல விழுகுதாடி? இல்ல...”

அதற்கு மஜீத்தின் உம்மா சொல்வாள்: “ஆயிரம் சொல்லுங்க... வாசல் இப்போ எவ்வளவு அழகா இருக்கு!”

மஜீத்தின் வாப்பா காய்ந்த வெற்றிலையில் சுண்ணாம்பு தேய்த்தவாறு கேட்பார்: “நான் சொன்னது உன் காதுல விழலியாடி? இல்ல...”

“என்ன சொன்னீங்க?”

“எங்கேயாவது போயி கொஞ்சம் புகையிலை வாங்கிட்டு வா.”

மஜீத்தின் தாய் ஒரு பழைய துணியைத் தலையில் இட்டவாறு கிழிந்துபோன ப்ளவ்ஸுடன் பக்கத்து வீடுகளைத் தேடி புகையிலைக்காகச் செல்வாள். வாப்பா, உம்மா, சகோதரிகள், ஸுஹ்ரா - நினைவுகள் மேகங்களைப் போல இதய ஆகாயத்தின் வழியாக வேகமாகப் போய்க் கொண்டிருக்கும். வறுமை உண்மையிலேயே ஒரு பயங்கரமான நோய்தான். அது உடலையும் இதயத்தையும் ஆன்மாவையும் அழித்துவிடுகிறது. அப்படி உடலும் இதயமும் ஆன்மாவும், அழிந்துபோன பல இனத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும்.

அந்தக் காட்சிகள் மஜீத்தின் மனதில் வந்து நிறைந்து கொண்டிருக்கும். தன்னுடைய அழகை இழந்துவிட்ட அந்தக் காட்சிகளை இப்போது நினைத்துப் பார்த்து என்ன பிரயோஜனம்? வாழ்க்கை பிரகாசமான ஒரு அழகு என்பதில் எந்த சந்தேமும் இல்லை. இருந்தாலும் அதன் முகத்தில் ஒட்டியிருக்கும் சேற்றையும் அழுக்கையும் நமக்கு ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கிறது. வாழ்க்கையின் அவலட்சணங்கள்! வாழ்க்கையின் கஷ்டங்கள்! அமைதியான, அழகான வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதா?

உணவு இல்லாதவர்கள், உடுக்க ஆடை இல்லாதவர்கள், வசிக்க வீடு இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள்.... இப்படிப் பரிதாபமான நிலையில் இருக்கும் எண்ணற்றவர்களின் ஒரு நீண்ட வரிசை... இரவு பகல் எந்நேரமும் மஜீத் எல்லாரையும் நினைத்தவாறு படுத்திருப்பான். எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் எண்ணுவான்.

ஆனால், அவனால் எப்படி மறக்க முடியும்? அவன் மூளை எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதயம் எப்போதும் எதையாவது நினைத்துக்கொண்டே இருக்கிறது.

ஸுஹ்ராவைப் பற்றி நினைக்கும்போது மஜீத்தின் கண்களில் நீர் வழியத் தொடங்கிவிடும். அவளை ஒருமுறை பார்க்கவேண்டும் போல் அவனுக்கு இருக்கும். ஆனால், அவள்தான் வேறொருவனுக்கு மனைவி ஆகிவிட்டாளே! இருந்தாலும், தூரத்தில் இருந்தாவது அவளைப் பார்க்கவேண்டும் என்று அவன் நினைத்தான். தன்னுடைய பரிதாபமான நிலையைக் கூறுவதற்காக அல்ல, கடுமையான வார்த்தைகளைக் கூறுவதற்காக அல்ல, வெறுமனே அவளை அவன் பார்க்கவேண்டும். அவளின் குரலை அவன் கேட்கவேண்டும்!

அவள் மஜீத்தை மறந்துவிட்டாள். ஆனால், மஜீத்தால் அவளை மறக்கமுடியுமா?

ஏராளமான மாம்பழங்களைத் தந்து அவர்களை வாழ்த்தியிருக்கும் அந்த மாமரத்தடியில், இரவு நேரத்தின் தனிமையில் மஜீத் உட்கார்நதிருப்பான். யாரையும் எதிர்பார்த்து அல்ல. எதிர்பார்ப்பதற்கு யார் இருக்கிறார்கள்?

மஜீத் நினைத்தான்: ‘நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சா ஒருமுறைகூட ஸுஹ்ரா இந்தப் பக்கம் வரமாட்டா.’

அவள் எதற்காக வரவேண்டும்? யாரைப் பார்ப்பதற்காக வரவேண்டும்? மஜீத்தைப் தேடிவந்த அவனுடைய உம்மா அவனுக்கு அருகில் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்நதிருப்பாள்.

உம்மா, வாப்பா, சகோதரிகள் இவர்களுக்கு நேரா நேரத்திற்குச் சாப்பாடு கிடைக்க என்ன வழி? மஜீத்தின் வாப்பா கோபப்படுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லையே! வயதுக்குவந்த மகன்... என்ன செய்வது? என்ன வாழ்க்கை?

ஸுஹ்ரா...

அன்புள்ள ஸுஹ்ரா! நீ வருவாயா?


9

ஸுஹ்ரா வந்தாள்.

மஜீத் வந்திருப்பது தெரிந்து காதல் மேலோங்க அவள் மூச்சுவாங்க ஒடி வந்தாள். ஆனால், அவளைப் பார்க்க மஜீத்திற்குத்தான் மனமில்லாமல் போய்விட்டது. அவன் மிகவும் அதிர்ச்சியடைந்து போயிருந்தான். அவனால் சிறிதுகூட அசைய முடியவில்லை.

“எங்கே?” என்ற ஸுஹ்ராவின் கேள்வியும் “தோட்டத்தில்...” என்ற தன் உம்மாவின் பதிலும் மஜீத்தின் காதுகளில் விழுந்தன. அவனுடைய இதயம் படுவேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கொஞ்சம்கூட அசையாமல் மஜீத் அந்தப் பழைய நாற்காலியில் படுத்திருந்தான்.

மாலை வெயிலில் தோட்டம் மூழ்கிவிட்டிருந்தது. பூக்களில் வண்டுகள் பறந்து கொண்டிருந்தன. நறுமணம் கலந்த மெல்லிய காற்று இலைகளை அசைத்துக் கொண்டிருந்தன. மஜீத் மஞ்சள் வெயிலில் மூழ்கிப்போன சிலையைப்போல சாய்வு நாற்காலியில் படுத்திருந்தான்.

ஸுஹ்ராவின் காலடிச் சத்தம் நெருங்கி வந்தது.

“ஓ... புதிய தோட்டம்!”

ஸுஹ்ராவின் துக்கம் கலந்த குரல் பின்னால் கேட்டது. அதைக் கேட்டு மஜீத்தின் இதயத்தில் வலித்தது. சாதாரண வலி என்று அதைச் சொல்வதற்கில்லை. முட்கள் குத்தி ஒடிந்து நின்றால் எப்படியொரு வலி இருக்கும்? அப்படியொரு வலி அங்கு இருந்தது.

தாங்க முடியாமல் அழப்போவதைப் போல சோகமயமாக நின்றிருந்த ஸுஹ்ரா மெதுவான குரலில் கேட்டாள்: “என்னைத் தெரியுதா?”

அமைதியான உலகம். அவனால் எதுவும் பதில் பேச முடியவில்லை. நினைவுகள்...

மஜீத்தின் கண்களில் நீர் நிறைந்தது.

அவள் மீண்டும் கேட்டாள் : “என்மேல கோபமா இருக்கும்!”

மஜீத் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். இதயம் வெடித்துவிடும் போலிருந்தது.

ஸுஹ்ரா முழுமையாக மாறிப்போயிருந்தாள். கன்னங்கள் ஒட்டி,  கைவிரல்கள் மெலிந்து, நகங்கள் தேய்ந்து, வெளிறிப்போய், காதுகளில் கறுப்பு நூல்கள் முடிகளால் மறைக்கப்பட்டு.

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தார்கள். நீண்ட... நீண்ட நேரத்திற்கு அவர்கள் இருவரும் பேசாமலே இருந்தார்கள். அவர்களால் பேசமுடியவில்லை என்பதே உண்மை.

சிறிது நேரத்தில் சூரியன் மறைந்தான். வேறுபாடுகளை இல்லாமற் செய்துகொண்டு சுற்றிலும் இருள் வந்து படர்ந்தது. அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. கிராமத்தைத் தழுவிச் செல்லும் நதியின் இரு பிரிவுகளையும் தன்னுடைய ஒளியால் பிரகாசிக்கச் செய்தவாறு முழு நிலவு மலையின் உச்சியில் எட்டிப் பார்த்தது.

கிராமத்தின் அமைதியைக் குலைத்துக்கொண்டு ஒரு காதல் பாட்டு தூரத்தில் எங்கோயிருந்து கேட்டது. யாரோ ஒரு காதலன் தன்னுடைய யாரோ ஒரு காதலியை நினைத்து சோகம் ததும்பப் பாடிக்கொண்டிருந்தான்.

இவ்வாறு மீண்டும் மீண்டும் யாரென்றே தெரியாத அந்தக் காதலன் பாடிக்கொண்டேயிருந்தான்.

கடைசியில் மஜீத் சொன்னான்: “ஸுஹ்ரா...”

இறந்த காலத்தின் இதயத்திலிருந்து கேட்பதைப்போல அவள் அந்த அழைப்பைக் கேட்டாள்.

“ம்..”

மஜீத் கேட்டான்: “உன் உடம்புக்கு என்ன?”

அவள் சொன்னாள்: “ஒண்ணுமில்லியே!”

“பிறகு ஏன் இவ்வளவு மெலிஞ்சு போயிருக்கே!”

ஸுஹ்ரா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவள் சொன்னாள்: “எனக்கு முந்தாநாள்தான் தெரியும்... இங்கே வந்திருக்கிறதே!”

சற்று மன வருத்தத்துடன் மஜீத் அவளைப் பார்த்துக் கேட்டான்:

“நான் திரும்ப இங்கே வரவே மாட்டேன்னு நீ நினைச்சுட்ட இல்ல?”

“எல்லோரும் அப்படித்தான் நினைச்சாங்க நான்...”

“...?”

“எனக்கு மட்டும் தெரியும்... கட்டாயம் நீ திரும்பி வருவேன்னு...”

“பிறகு?”

“அவங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டாங்க. என் சம்மதத்தை யாரும் கேட்கல. உம்மா என்னை தினமும் வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. என் வயசுல இருக்குற பொண்ணுங்க எல்லாரும் கல்யாணம் முடிஞ்சு மூணு நாலு பிள்ளைகளைப் பெத்து முடிச்சிருந்தாங்க. தங்கமும் வரதட்சணையும் தராம என்னை யாரும்... ”

“தங்கமும் வரதட்சணையும் வாங்காம உன்னைக் கல்யாணம் பண்ணுறதுக்கு இந்த உலகத்துல ஒரு ஆள்கூட இல்லையான்னு நீயும் நினைக்க ஆரம்பிச்சுட்டே! அப்படித்தானே?”

“நான் நம்பாம இல்ல. நான் ஒரு நிமிடம்கூட உன்னை மறக்கல. ஒவ்வொரு ராத்திரியிலும் ஒவ்வொரு பகல்லயும் நான் உன்னை நினைச்சு அழுவேன். உனக்கு எந்த ஆபத்தும், உடம்புக்கு எந்தக் கெடுதலும் வந்துடக்கூடாதுன்னு நான் ஒவ்வொரு நாளும் கடவுள் கிட்ட வேண்டிக்குவேன்.”

"நான் உன்னை முழுசா மறந்து போயிருப்பேன்னு நீ நினைச்சிட்டியா, ஸுஹ்ரா?"

“நான் அப்படி நினைக்கல. ஏன் நீ கடிதமே எழுதல?”

“எழுதி அனுப்பலைன்றதுதான் உண்மை. பல நேரங்கள்ல எழுதியிருக்கேன். ஆனா, அனுப்பல...”

“நான் ஒவ்வொரு நாளும் கடிதத்தை எதிர்பார்ப்பேன். இன்னைக்கு வரும் நாளைக்கு வரும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருப்பேன்.”

“பிறகு எப்படி இந்தக் கல்யாணம் நடந்தது?”

“நான்தான் சொன்னேனே என்கிட்ட யாரும் கேட்கவே இல்லைன்னு. அவங்களுக்கு நான் ஒரு பாரமா எவ்வளவு நாட்களுக்குத்தான் இருக்குறது? என்ன இருந்தாலும், நான் பெண்தானே?”

“....!”

“கடைசியில் வீட்டையும் நிலத்தையும் அடமானம் வச்சு தங்கமும் மற்ற பொருட்களும் வாங்கி கல்யாணத்தை முடிச்சாங்க.”

“பிறகு ஏன் இந்த அளவுக்கு மெலிஞ்சு போயிருக்கே?”

அதற்கு ஸுஹ்ரா பதில் எதுவும் கூறவில்லை.

“சொல்லு ஸுஹ்ரா. ஏன் இப்படி மெலிஞ்சு போயிருக்கே!”

“ஏக்கத்தால.”

“என்ன ஏக்கம்?”

“...!”

“ஸுஹ்ரா...”

“ம்...”

“சொல்லு...”

ஸுஹ்ரா தேம்பித் தேம்பி அழுதாள். தொடர்ந்து மெதுவான குரலில் அவள் தன் கணவனைப் பற்றிச் சொன்னாள்.

“அந்த ஆளு பயங்கர முன்கோபி. அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்டாட்டியும் இரண்டு குழந்தைகளும் இருக்காங்க. நான் என் வீட்டுக்கு வந்து பணம் வாங்கிட்டு வரணும்னு எப்போ பார்த்தாலும் என்னை வற்புறுத்துவாரு. எனக்கும் தங்கச்சிமாருங்க இருக்காங்களே! நான் முடியாதுன்னு சொன்னா, அந்த ஆளு என்னை அடிப்பாரு. ஒருமுறை என் வயித்துல அவர் எட்டி உதைச்சிட்டாரு. அவ்வளவுதான். நான் குப்புறப்போய் விழுந்தேன். அன்னைக்கு என் பல்கூட உடைஞ்சிடுச்சு... இங்க பாரு...”

அவள் தன் வாயைத் திறந்து காட்டினாள். வெண்மையான பற்களுக்கிடையில் ஒரு கறுப்பு இடைவெளி தெரிந்தது.

“ஸுஹ்ரா...”

“ம்..”

“பிறகு?”

“நான் அந்த ஆளுகூட வாழ்ந்ததுல பசி அடங்குற மாதிரி ஒருநாள் கூட சாப்பிட்டது இல்ல. ஒருநிமிடம் கூட மனநிம்மதியோட இருந்தது இல்ல... சொல்லப்போனா நான் அந்த ஆளுக்கு ஒரு பொண்டாட்டி இல்ல... ஒரு வேலைக்காரின்னு சொல்றதுதான் சரி. கூலிக்கு தேங்காயை உறிச்சு நானே சம்பாதிச்சிக்கணும். வேலையைச் சரியா செய்யலைன்னா, என்னை அவர் அடிச்சு உதைப்பாரு. எனக்குன்னு எதுவும் தர மாட்டாரு. நான் வெளியே இருந்தப்போ...”

“...?”

“தொடர்ந்து நாலு நாட்கள்...”

“...?”

“பட்டினி கிடந்தேன்.”

இதே மாதிரி கூறுவதற்கு அவளிடம் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. எத்தனையோ வெளியே தெரியாத ரகசியங்கள் அவள் மனதில் இருக்கின்றன. பலமுறை அவள் செத்துப்போய் விடலாமா என்று நினைத்திருக்கிறாள். அவள் மனதில் இருந்தது ஒரே ஒரு ஆசைதான்.

“உன்னை ஒரு தடவை பார்த்துட்டு சாகணும்னு நினைச்சேன்.”

“சாகுறதைப் பத்தி தேவையில்லாம நினைச்சு மனசைப் புண்ணாக்கிக்கவேணாம். இனியும் நீ வாழ வேண்டியிருக்கு. பிரகாசமான எதிர்காலம்னு ஒண்ணு எல்லாருக்கும் இருக்கத்தான் செய்யுது. நான் சொல்றதை நம்பு” என்று மஜீத் சொன்னபோது ஸுஹ்ரா பதிலுக்கு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.


அவள் நாற்காலிக்கு முன்னால் மஜீத்தின் பாதங்களையொட்டி அமர்ந்திருந்தாள். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் நிலவொளியில் மூழ்கிப் போயிருந்த உலகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். கடைசியில் மஜீத் சொன்னான். “ஸுஹ்ரா... நீ போயி சாப்பிட்டுவிட்டு அமைதியா தூங்கு. நாளைக்கு நாம பார்ப்போம்.”

“என்னால எதுவுமே செய்ய முடியல...” ஸுஹ்ரா எழுந்தாள்.

“அந்த அளவுக்கு சோர்வடைஞ்சிட்டியா?” மஜீத்தும் எழுந்தான்.

ஸுஹ்ரா சொன்னாள்: “எல்லாம் மனக்கவலைதான்.”

“தேவையில்லாம கவலைப்படாதே. போயி அமைதியா உறங்கு.”

“நாளைக்கு எங்கயாவது போறியா?”

“இல்ல...”

“நான் காலையில வர்றேன்” ஸுஹ்ரா நடந்தாள்.

மஜீத் சொன்னான்: “ம்...”

நிலவொளியில் மூழ்கிப் போயிருந்த தென்னை மரங்களுக்கு மத்தியில் அவள் நடந்துபோவதைப் பார்த்துக்கொண்டிருந்த மஜீத் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். நேரம் போவதே அவனுக்குத் தெரியவில்லை.

கையில் மண்ணெண்ணெய் விளக்குடன் அவனுடைய உம்மா வந்தாள். மஜீத் கண்களை மூடி சாய்ந்திருப்பதைப் பார்த்த அவள் பாசம் மேலோங்கக் கேட்டாள்: “என்னடா மகனே, நீ மட்டும் தனியா இருக்கே?”

“ம்... ஒண்ணுமில்ல...”

“மகனே, அந்த ஸுஹ்ரா எப்படி இருக்கான்னு பார்த்தியா?” கிளியைப்போல இருந்த பொண்ணு. எல்லாம் கடவுளோட செயல்...

“அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது யாரு?”

மஜீத்திற்குள் கோபமும் வெறுப்பும் உண்டானது.

“மகனே, வந்து ஏதாவது சாப்பிட்டு படு. நீ கண்டதையும் நினைச்சு கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவாரு.”

மஜீத் அன்று இரவு சிறிதுகூட தூங்கவில்லை. ஸுஹ்ராவும்தான். வயலும் வாய்க்காலும் அவர்களுக்கு இடையில் இருந்தன. இரண்டு சுவர்கள் அவர்களுக்கு இடையில் இருந்தன. எனினும், அவர்கள் தூங்கவில்லை. தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்தார்கள்.

எதிர்காலம்...?

10

ஸுஹ்ராவின் நடவடிக்கைகளில் திடீரென்று ஒரு மாற்றம் தெரிந்தது. அவள் உள்ளத்தில் ஒரு புதிய வெளிச்சம் உண்டானது. முகத்தில் இரத்தம் பரவியது மாதிரி இருந்தது. கண்களில் இதற்கு முன்பு இல்லாதிருந்த ஒளி உண்டானது. சுருண்டிருந்த தலைமுடியின் நடுவில் உச்சி வகுந்தெடுத்து காதுகளை முடிகளால் மூடி அழகாக அதை முடிச்சுப்போட்டுக்கொண்டு அவள் நடந்தாள். அவள் அப்படி நடப்பதைப் பார்த்து பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்களே ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.

“ஸுஹ்ரா இப்போ ரொம்பவும் நல்லாயிருக்கா. இப்போ, அவளைப் பார்த்தா, அவ புருஷனுக்குக்கூட அவளை அடையாளம் தெரியாது.”

புருஷன்!

அவள் எப்போதும் மஜீத்தின் வீட்டில்தான் இருந்தாள். செடிகளுக்கு நீர் ஊற்றுகிற விஷயத்தில் அவளும் மிகவும் கவனமாக இருந்தாள். மஜீத்தின் சகோதரிகள் கூறுவார்கள்:

“இந்தச் செடிகளை நாங்கதான் தண்ணி ஊற்றி வளர்த்தோம்.”

ஸுஹ்ரா அந்த செம்பருத்திச் செடியைப் பற்றிக் கேட்டாள்: “இந்தச் செடி?”

“இது முன்னாடியே இங்கே இருக்கு!”

ஸுஹ்ரா அதற்கு எதுவும் சொல்லவில்லை. எல்லாமே முன்பிருந்தே இருந்து வருபவைதானே!

முன்பிருந்தே...

ஒரு நாள் மஜீத் அவளைப் பார்த்துக் கேட்டான்: “ஸுஹ்ரா, இனி எப்போ போறதா இருக்கே?”

அவன் என்ன கேட்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ஆச்சிரியத்துடன் கேட்டாள்: “எங்கே போறது?”

“கணவனோட வீட்டுக்கு...”

“ஓ...” - அவள் முகம் சுருங்கி விட்டது. “அந்த ஆளு கல்யாணம் பண்ணினது என்னை இல்லை...”

“பிறகு?”

“நான் என்னோடு கொண்டுபோன தங்க நகைகளையும் நான் கொடுத்த வரதட்சணைப் பணத்தையும்தான். அதுல தங்க நகைகள் எல்லாத்தையும் அவன் விற்றுத்தின்னுட்டான். இனி இருக்கிறது பணம் மட்டும்தான். அது தனக்கு கிடைக்கவே கிடைக்காதுன்னு அந்த ஆளுக்கு நல்லாவே தெரியும்.”

சிறிது நேரம் கழித்து மெதுவான குரலில் அவள் சொன்னாள்:

“பிறகு.... என்னைப் பார்க்குறத ஊர்ல இருக்குறவங்க விரும்பலைன்னா, நான் போயிடுறேன்...”

“அப்படி ஊர்க்காரங்க நினைக்கிறாங்களா என்ன?”

"அப்படி  நினைக்கிறாங்கன்னுதான் நினைக்கிறேன்."

அவள் ஒரு ரோஜாப்பூவைப் பறித்து வாசனை பார்த்துவிட்டு கூந்தலில் அதைச் செருகினாள்.

மஜீத் சொன்னான்: “அந்தச் செம்பருத்திப் பூதான் உனக்கு ரொம்பவும் நல்லா இருக்கும்.”

அதைக்கேட்டு ஸுஹ்ரா சிரித்தாள். எனினும், அவளின் முகத்தில் ஒரு கவலை வந்து படரவே செய்தது.

“இந்தச் செம்பருத்தி... ஞாபகத்துல இருக்கா?” சிறிது நேரம் கழித்து அவள் கேட்டாள்.

“கேள்விப்பட்டிருக்கேன்...” என்றான் மஜீத்.

“அப்படின்னா கொஞ்சம் பெரிய ஒண்ணுன்றதைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பியே!”

“ம்... ராஜகுமாரி சொல்லிக் கேட்டிருக்கேன்.”

கொஞ்சம் பெரிய ஒண்ணு!

அவர்கள் மிகவும் நெருங்கிவிட்டார்கள் என்றாலும் மஜீத்தின் வாழ்க்கையில் சில வருடங்களாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப்பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது. அந்த ரகசியங்களைத் தான் அறிய வேண்டும். எல்லா விஷயங்களையும் தான் தெரிந்து கொள்ளவேண்டும். அவனுக்குத் தெரிந்த எல்லா ஆண்கள்... பெண்களைப் பற்றியும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். பெண்களைப்பற்றி பேசும்போது ஸுஹ்ரா கேட்பாள்: “அவளுக்கு எவ்வளவு வயசு? நிறமென்ன? அவ என்ன அழகியா? அவளைப்பற்றி அடிக்கடி நினைப்பியா என்ன?”

அவள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் மஜீத் அமைதியாக பதில் கூறுவான். எனினும் அவள் அவனுடைய பதில்களில் திருப்தியடைய மாட்டாள். மஜீத் இன்னும் தன்னிடம் சொல்லாமல் இருக்கும் விஷயங்கள் இல்லாமலா இருக்கும் என்று அவள் நினைத்தாள்.

“என்கிட்ட என்கிட்ட உண்மை மட்டும்தான் பேசணும். தெரியுதா?”

மஜீத் சிரித்துக்கொண்டே கூறுவான்: “என்ன பொண்ணு நீ!”

“பையா...”

அவள் புருவங்களை வளைத்து அவனைப் பார்ப்பாள். பிறகு அவனைக் கிள்ள முயற்சிப்பாள். தொடர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள். வெண்மை நிறத்தில் அழகாக இருக்கும் சிறிய பற்களுக்கிடையில் இருக்கும் அந்தக் கறுமையான இடைவெளி, தேய்ந்துபோன கைநகங்கள், கிள்ள முயற்சிக்கும் அவளின் பழைய குணம் - மஜீத்தின் இதயத்தை மூடியிருந்த மெல்லிய தோலை கூர்மையான ஆயுதத்தால் பலமாகக் கிழித்ததைப் போல் அவை இருந்தன.

இந்த மஜீத்துக்கும் ஸுஹ்ராவுக்குமிடையே என்ன?

பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதை அறியவேண்டும்!

“அந்தப் பொண்ணு ஏன் தன் புருஷன் வீட்டுக்குப் போகல? என்ன இருந்தாலும் இதெல்லாம் கடவுளுக்கு அடுக்குமா?”

“மஜீத்தும், ஸுஹ்ராவும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருப்பது ஒழுக்கத்திற்கு எதிரானது. அதனால் வானம் இடிந்து கீழே விழுந்து விடுமோ என்று பலரும் நினைத்தார்கள்.

“அவளோட புருஷன் அவளை அடிச்சு உதைச்சாத்தான் என்ன? ஒரு தடவை அடிச்சதுல பல்லு போயிருக்கலாம். என்ன இருந்தாலும் அடிச்சது அவளோட புருஷன்தானே!”

“ஸுஹ்ரா ...” - மஜீத் ஒருநாள் சொன்னான் : “நம்மளைப் பற்றி பக்கத்து வீட்டுக்காரங்க என்னவெல்லாமோ பேசிக்கிறாங்க.”


அவள் கேட்டாள்: “அதுக்காக?”

“அதனால ஒண்ணுமில்ல. ஸுஹ்ரா, நீதான் ரொம்பவும் எச்சரிக்கையா இருக்கணும் என்ன இருந்தாலும் நீ ஒரு பெண். பேருக்குக் களங்கம் வராம பார்த்துக்கணும்...”

“அப்படியா களங்கம் வர்றதா இருந்தா வரட்டும். என் மனசுல கூட களங்கம் வரட்டும். அதுனால ஆகப்போறது ஒண்ணுமில்லையே!”

அவளுடைய கண்கள் நீரால் நிறைந்துவிட்டது. உடனே ஏதாவது சொல்லவேண்டும் போல் இருந்தது மஜீத்திற்கு. ஸுஹ்ரா சம்பந்தப்பட்ட கடைசி முடிவு அது. ஆனால், அதை எப்படி அவளிடம் அவன் கூறுவான்? ஸுஹ்ராவிற்கு கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? வீடு இல்லை. சொத்து இல்லை... எனினும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறான்.

மஜீத் சொன்னான்: “ஸுஹ்ரா... இனிமேல் நீ உன் கணவன் வீட்டுக்கு போகவேண்டாம்.

“போகல...”

மஜீத் தன் உம்மாவிடம் இந்த விஷயத்தைச் சொன்னான். நீண்ட நேரமாகியும் அவள் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. கடைசியில் மஜீத்தின் உம்மா தன் எண்ணத்தைச் சொன்னாள். மஜீத் ஸுஹ்ராவைத் திருமணம் செய்வது என்பது நல்ல ஒரு விஷயம்தான்! அதே நேரத்தில் மஜீத்தின் இரண்டு சகோதரிகள் பருவ வயதை எட்டியிருக்கிறார்களே!

“நாம எதுவும் இல்லாதவங்களா ஆயிட்டோம். இருந்தாலும் மானம், மரியாதையைப் பார்க்கவேண்டாமா? மகனே, நீ எங்கேயாவது போயி தங்கம் சம்பாதிக்கணும். வரதட்சணைப் பணத்தையும்தான். இந்தப் பொண்ணுங்க ரெண்டையும் நல்ல இடங்களா பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்திட்டு மகனே, நீ கல்யாணம் பண்ணிக்கோ...”

திருமணம் செய்ய ஆட்களைப் பார்த்துவிட்டால் போதாது. தங்கமும் வரதட்சணையும் கூட சம்பாதிக்கவேண்டும்!

மஜீத் கேட்டான் : “வரதட்சணை தராம யாரும் கல்யாணம் பண்ணமாட்டாங்களா?”

“யாரு பண்ணுவாங்க மகனே? அப்படியே சரின்னு வர்றதா இருந்தா அவன் யாராவது சுமை தூக்குறவனா இருப்பான். இல்லாட்டி ஒண்ணுக்குமே உதவாதவனா இருப்பான். நாம அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணித் தரமுடியுமா? காதுலயும் கழுத்துலயும் இடுப்புலயுமாவது நாம ஏதாவது நகை போட்டத்தான் சரியா இருக்கும்!”

மஜீத்தின் சகோதரிமார்களின் நான்கு காதுகளிலும் மொத்தம் நாற்பத்தியிரண்டு துளைகள் இருக்கின்றன. அவற்றை எந்தக் காரணத்திற்காகக் குத்தினார்கள்? கழுத்திலும் இடுப்பிலும் தங்கநகை போடாவிட்டால்தான் என்ன? வரதட்சணை என்ற ஒன்று இல்லாமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

“உம்மா, காதுகுத்து அது இதுன்னு பண்ணாம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? நம்ம மதத்தைச் சேர்ந்தவங்க மட்டும் எதுக்காக இந்தப் பாழாய்ப்போன விஷயத்தைச் செய்யணும்? பாழாய்ப் போன ஆடைகளும் பாழாய்ப்போன நகைகளும்...”

மஜீத்தின் உம்மாவும் வாப்பாவும் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. அதற்குப்பிறகு மஜீத்தும் எதுவும் பேசவில்லை. எதற்காக தேவையில்லாமல் அவர்களைக் குறை சொல்லவேண்டும் என்று அவன் நினைத்ததே காரணம். தங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ, அதற்கேற்றபடி அவர்கள் நடந்திருக்கிறார்கள். அது தேவையோ, தேவையில்லையோ என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கவில்லை. ஏற்கனவே பின்பற்றிக்கொண்டிருக்கும் விஷயங்களை விட்டு ஒரு துளி அளவிலாவது விலகுவது என்பதை அவர்கள் மனதில் என்றுமே நினைத்ததில்லை. அப்படி விலகிச் செயல்பட்டால், அதனால் துன்பமே வரும் என்று அவர்கள் நினைத்ததே காரணம். அப்படி மாற்றம் உண்டாவதற்கான சூழ்நிலைகள் இருக்க வேண்டும்!

இரவு நேரங்களில் மஜீத்திற்கு தூக்கமே இல்லை என்றாகி விட்டது. எந்த நேரம் பார்த்தாலும் தீவிர சிந்தனையிலேயே இருந்தான் அவன். தன் சகோதரிகளை யாருக்காவது திருமணம் செய்து தரவேண்டும் என்ற சிந்தனைதான் அவனை பலமாக ஆக்கிரமித்திருந்தது. இளமையின் உச்சத்தில் இருந்தார்கள் அவர்கள். மனதில் ஆசையும், விருப்பங்களும் இருந்தன. உடுத்த நல்ல ஆடைகள் இல்லை. உண்ண சரியான உணவு இல்லை. மனதில் விரக்தி உண்டாகும் சில நிமிடங்கள் வர வாய்ப்பு இருக்கிறது அல்லவா? அப்படிப்பட்ட நேரத்தில் நடக்கக் கூடாதது ஏதாவது நடந்து விட்டால்...?

நிம்மதியே இல்லாதவனாக ஆகிவிட்டான் மஜீத். ஏதாவது உடனடியாக செய்தால்தான் சரியாக இருக்கும் என்று அவன் நினைத்தான். வீட்டுக் கடனை அடைக்கவேண்டும், தன்னுடைய சகோதரிகளுக்குத் திருமணம் செய்து தரவேண்டும், தாயும் தந்தையும் மகிழ்ச்சியாக இருக்கும் வண்ணம் சில காரியங்களைச் செய்யவேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். மஜீத்தின் பெற்றோருக்கு வயதாகி விட்டது. மரணம் எந்த நிமிடத்தில் வரும் என்று சொல்வதற்கில்லை. அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற வேண்டியது தன் தலையாய கடமை என்பதை மஜீத் உணர்ந்திருந்தான். ஸுஹ்ராவைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பிறகு... அவளுக்குச் சகோதரிகள் இருக்கிறார்கள். உம்மா இருக்கிறாள். அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும். அதற்காக என்ன செய்வது? எல்லாவற்றுக்கும் பணம் வேண்டுமே? ஏதாவதொன்றை ஆரம்பித்து விட்டால், தொடர்ந்து அதைப்பின்பற்றி செயல்பட முடியும். ஆனால், முதலில் ஒன்றை ஆரம்பிப்பதுதான் கஷ்டம். கையில் காசு எதுவும் இல்லாமல், உதவிக்கு யாரும் இல்லாமல் இந்த உலகத்தில் யாரும் எதுவும் செய்யவில்லையா என்ன? அவன் இப்படி பல விஷயங்களையும் சிந்தித்தவண்ணம் இருந்தான். என்ன செய்வது?

ஒருநாள் மஜீத்தின் உம்மா ஒரு விஷயம் சொன்னாள்.

தூரத்திலிருக்கும் நகரங்களில் இரக்க குணம் கொண்ட முஸ்லிம் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நல்ல காரியங்கைளைச் செய்கிறார்கள். அனாதையாக இருக்கும் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது, வேலை இல்லாதவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தருவது, இலவசமாக கல்வி கற்றுத் தருவதற்காக பள்ளிக்கூடங்கள் கட்டுவது, ஆதரவற்றவர்களையும் உடல் ஊனமுற்றோர்களையும் பாதுகாப்பதற்காக ஆதரவு இல்லங்கள் உண்டாக்குவது - இப்படி பல நல்ல காரியங்களை அவர்கள் செய்து கொண்டிருப்பதாக மஜீத்தின் உம்மா சொன்னாள்.

“மகனே, நம்ம விஷயத்தை அவங்க தெரிஞ்சுக்கிட்டா போதும். மீதி காரியங்களை அவங்க பார்த்துக்குவாங்க. கட்டாயம் அவங்க நமக்கு உதவுவாங்க. அந்தப் பிச்சைக்காரன்தான் எனக்கு இந்த விஷயத்தையே சொன்னான்.”

ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கும் யாரோ ஒரு முஸ்லிம் பிச்சைக்காரன் இந்த விஷயத்தை மஜீத்தின் உம்மாவிடம் கூறியிருக்கிறான். பாலைவனப் பகுதிகளில் இருக்கும் நகரங்களில் வாழும் முஸ்லிம் பணக்காரர்கள் பெரிய மனது படைத்தவர்கள் என்பதை மஜீத்தின் உம்மா முழுமையாக நம்பினாள். அந்தக்காலத்தில் அவள் எத்தனையோ பேர்களுக்கு உதவி செய்திருக்கிறாள். தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அதையும் தாண்டிக்கூட மஜீத்தின் வாப்பா உதவியிருக்கிறார். இல்லாத கஷ்டங்களையெல்லாம் சொல்லி அவர்கள் இரண்டு பேரையும் பலரும் பல சமயங்களில் ஏமாற்றியிருக்கிறார்கள். மஜீத்தின் அம்மாவிற்கு அதெல்லாம் சிறிதும் புரியவில்லை.


பொய் சொல்பவர்கள் உண்மை கூறுபவர்கள் என்று இரு வகைப்பட்டவர்களும் உலகத்தில் இருக்கத்தானே செய்வார்கள்! உதவி வேண்டும் என்று கெஞ்சி கேட்கிறபோது மஜீத்தை அவர்கள் நம்பாமல் போய்விட்டால்?

யாரையும் எதிர்பார்க்காமல் பணம் சம்பாதிப்பதற்கு என்ன வழி என்பதை மணிக்கணக்கில் உட்கார்ந்து அவன் சிந்தித்தான். என்ன தொழில் செய்தால் நன்றாக இருக்கும்? இதுவரை தான் படித்திருக்கும் கல்வியையும் உலக அனுபவங்களையும் வைத்து...

ஒருவகை ஆவேசத்துடன் மஜீத் பயணம் புறப்பட தீர்மானித்தான். வீட்டிலிருந்த பொருட்களை விற்று அவனுடைய வாப்பா பணத்தைத் தயார் பண்ணிக்கொண்டு வந்து அவன் கையில் தந்தார்.

“நான் போயிட்டு சீக்கிரம் திரும்பி வர்றேன்” மஜீத் ஸுஹ்ராவிடம் எல்லா விஷயத்தையும் விளக்கிச் சொன்னான். “நான் எல்லோரையும் உன்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போறேன், ஸுஹ்ரா...”

“நீ திரும்பி வர்றது வரை நான் இவங்களை நல்லா பார்த்துக்குவேன்.”

ஸுஹ்ரா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

மஜீத் தெளிவான ஒரு தீர்மானத்துடன் பயணத்திற்கான வேலைகளில் இறங்கினான்.

ஒரு மாலை வேளையில் மேற்கு திசையில் தங்க நிறத்தில் மேகங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

மஜீத்தின் பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக்கொண்டு ஒரு பையன் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தான். மஜீத் எல்லாரிடமும் விடைபெற்றான்.

அவனுடைய வாப்பா சொன்னார் : “எனக்குப் பார்வை தெரியல. வெள்ளெழுத்துக்கான ஒரு கண்ணாடி வாங்கிட்டு வர்றியா? இல்ல...”

“வாங்கிட்டு வர்றேன்.” என்று சொன்ன மஜீத் அறைக்குள் சென்றான். கண்ணில் நீர் வழிய ஜன்னலுக்கு அருகில் ஸுஹ்ரா நின்றிருந்தாள்.

“ஒண்ணு சொல்லட்டுமா?” அவள் சொன்னாள்.

மஜீத் புன்னகைத்தான்: “சொல்லு, ராஜகுமாரி சொல்லு...”

“பிறகு...?”

அவளால் அதற்குமேல் பேசமுடியவில்லை. அந்த நேரத்தில் பஸ்ஸின் ஹாரன் தொடர்ந்து ஒலித்தவண்ணம் இருந்தது. மஜீத்தின் உம்மா அறையின் வாசலில் வந்து நின்றாள்.

“மகனே, சீக்கிரம் கிளம்பு. வண்டி புறப்பட்டுப் போகுது.”

மஜீத் புறப்பட தயாரானான். ஸுஹ்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

மஜீத் கேட்டான்: “நான் போயிட்டு வரட்டுமா?”

அவள் தன் தலையைக் குனிந்து அவனுக்கு அனுமதி தந்தாள்.

நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி மஜீத் புறப்பட்டான்.

படிவரை சென்று திரும்பிப் பார்த்தபோது கண்களில் பட்ட ஸுஹ்ராவும் வீடும் அவனுடைய இதயத்தை விட்டு எப்போதும் அழியாத ஓவியங்களாகி விட்டனர்.

இலட்சியங்களும், கடமைகளும் மஜீத்தை தைரியத்துடன் முன்னோக்கி அழைத்துச் சென்றன.

11

ஸுஹ்ராவைத் திருமணம் செய்யவேண்டும்.

அதற்குமுன்பு தன் சகோதரிகளுக்கு கணவர்களைத் தேடவேண்டும். வரதட்சணைகளுக்கும் நகைகளுக்கும் தேவையான பணத்தைச் சம்பாதிக்க வேண்டும். அதைச் சம்பாதிப்பதற்காக ஏதாவது ஒரு வேலையைத் தேட வேண்டும். ஆனால்... மஜீத்திற்குக் கிடைத்தது ஏமாற்றம்தான். அவனுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. அப்படியே வேலை கிடைப்பதாக இருந்தால், அது கிடைப்பதற்கு சிபாரிசு செய்ய ஆள் தேவைப்பட்டது. அந்த வேலை கொடுப்பதற்கு லஞ்சம் கேட்பார்கள். தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழும் கையில் இருக்க வேண்டும். இவை எதுவும் இல்லாமல் வேலை கிடைப்பதென்பது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. இருந்தாலும், அவன் தொடர்ந்து வேலைக்காக முயற்சித்தான். பல நகரங்களையும் சுற்றித் திரிந்தான்.

கடைசியில் தான் பிறந்த இடத்தைவிட்டு ஆயிரத்து ஐந்நூறு மைல் தூரத்திலிருந்த ஒரு பெரிய நகரத்தை மஜீத் அடைந்தான். இதற்கிடையில் நான்கு மாதங்கள் ஒடிவிட்டிருந்தன.

அங்கு அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது. வேலை ஒன்றும் கஷ்டமாக இருக்கவில்லை. நல்ல பணம் வரக்கூடிய வேலையாக அது இருந்தது. கொஞ்சம்கூட ஓய்வு இல்லாமல் அந்த வேலையைச் செய்ய வேண்டும். நூற்றுக்கு நாற்பது சதவிகிதம் கமிஷனாகக் கிடைக்கும். நிறுவனத்தின் உரிமையாளரே அவனிடம் இந்த விஷயத்தைச் சொன்னார்.

நிறுவனத்திற்குச் சொந்தமான சைக்கிள்கள் இருந்தன. அதில் சாம்பிள்களை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். நிறுவனம் இருந்த இடத்திலேயே தங்குவதற்கு இடமும் கொடுக்கப்பட்டது.

மஜீத் அங்கு வேலை செய்ய ஆரம்பித்தான். சிறிய ஒரு தூக்குப் பெட்டியில் சாம்பிள்களை அடுக்கி வைத்துக்கொண்டு அவன் ஆர்டர் ‘புக்’ செய்வதற்காகப் புறப்படுவான். நகரெங்கும் சுற்றி, ஆர்டர்கள் வாங்கி முடித்து மகிழ்ச்சியுடன் மாலை நேரத்தில் திரும்பி வருவான்.

இப்படியே ஒருமாதம் ஓடி முடிந்தது. எல்லா செலவுகளும் போக மஜீத் வீட்டிற்கு நூறு ரூபாய் அனுப்பி வைத்தான். தன்னுடைய வாப்பாவிற்கு வெள்ளெழுத்திற்கான ஒரு கண்ணாடியையும் வாங்கி அனுப்பி வைத்தான். ஸுஹ்ராவிற்கும் மற்றவர்களுக்கும் ஆடைகள் வாங்கி அனுப்பி வைத்தான்.

இன்னொரு மாதமும் முடிந்தது.

அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை யாராலும் கணித்துக் கூறமுடியாது அல்லவா? கவலைப்படக் கூடிய ஒரு விஷயம் நடக்கப்போகிறது என்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். மஜீத் அப்படி எதையும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

அது ஒரு திங்கட்கிழமை. மஜீத்திற்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அது ஒரு உச்சி பகல்பொழுது வழக்கம்போல சூட்கேஸை சைக்கிளில் தொங்கவிட்டவாறு கடலையொட்டியுள்ள தார்போட்ட சாலைவழியே அவன் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். சாலை இறக்கமாக இருந்தது. அவன் வேகமாக வண்டியை ஓட்டினான். பெட்டி அந்த வேகத்தில் குலுங்கியது. சிறிது நேரத்தில் அதன் கைப்பிடி சுழன்று சக்கரத்திற்கு இடையில் போய் விழுந்தது. அவ்வளவுதான் மஜீத் சைக்கிளிலிருந்து தூக்கி எறியப்பட்டு தூரத்திலிருந்த கம்பி வேலியில் மோதி அதற்கு அருகிலிருந்த ஆழமான சாக்கடையில் போய் விழுந்தான்.

ஒரு மலை தன் உடல்மீது இடிந்து விழுந்ததைப் போல, என்னவோ ஒடிந்ததைப் போல, வேதனையான ஒரு நினைவை, தன்னிடமிருந்து

என்னவோ அறுத்து துண்டிக்கப்பட்டு மாற்றப் பட்டிருப்பதைப்போல் மஜீத் உணர்ந்தான். எல்லாம் இருளில் நடந்து முடிந்ததைப் போல... எல்லாம் நினைவுகளின் ஆழத்தில்... கடுமையான காற்று வீசிக் கொண்டிருக்கும் இரவு நேரத்தில் இடி, மின்னலைப்போல சில நேரங்களில் ஞாபகங்களின் வெளிச்சம் வரும். தாங்க முடியாத வேதனை... மருந்துகளின் தாங்கமுடியாத வாசனை... மனிதர்களின் வேதனையை வெளிப்படுத்தும் முனகல்கள்... வாயிலிருந்து தொண்டை... வழியாக உயிருள்ள நீண்டு உருண்ட ஏதோவொன்று கீழே இறங்குகிறது. வயிற்றில் சூடான திரவம் நிறைந்திருக்கிறது. ஒரு தோணல்... இப்படிப்பட்ட அனுபவங்களுடன் யுகங்கள் கடந்து கொண்டிருக்கின்றன.

என்ன நடந்தது?

நினைவுகள் எங்கோ தூரத்தில் இருக்கின்றன. எதுவும் தெளிவாக இல்லை. வெண்மையான புகையைப் போல, வெள்ளி மேகங்களைப்போல, நினைவுகள் மஜீத்திடமிருந்து தூரத்தை நோக்கிச் செல்கின்றன. எல்லாம் அவனை விட்டுப்போய் மறைகின்றனவோ?

இல்லை... வாழவேண்டும்! வாழ்க்கை! கடினமான தாங்கமுடியாத வேதனை - எனினும் வாழவேண்டும்! மஜீத் முயற்சித்தான்.


தன் மீது வந்து விழுந்த மலையை சகல சக்தியையும் உபயோகித்து தூக்கி எறிவதைப் போல... வேதனையுடன் நினைவு திரும்பி வந்தது.

என்ன நடந்தது?

அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான். உடலை நன்றாக நீட்டி அவன் படுத்திருந்தான். கழுத்துவரை வெள்ளைத் துணியால் மூடியிருந்தார்கள். மருத்துவமனை! எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் பார்த்தான்.

கடினமான, தாங்க முடியாத வலி! வலதுபக்க காலில் நெருப்பு எரிவதைப் போல ஒரு வலி! தலைவரை அந்த வலியின் கொடுமை தெரிகிறது. மஜீத் தன் கையால் தடவினான். இடுப்பில் ஏராளமான துணிகளைச் சுற்றியிருக்கிறார்கள்.

என்ன நடந்தது? மஜீத் ஞாபகப்படுத்திப் பார்த்தான். உடம்பில் திடீரென்று ஒரு குளிர்ச்சி பரவியதை அவனால் உணரமுடிந்தது.

ஒரே இருட்டு!

மஜீத்திற்கு இப்போது வியர்த்தது. மயக்கம் வருவதைப் போல் அவன் உணர்ந்தான். நிரந்தரமாக அவன் காலின் ஒரு பகுதி இல்லாமற்போயிருக்கிறது!

படுத்த நிலையிலேயே ஆழமான ஒரு குழியில்தான் போய் விழுவதைப்போல அவன் உணர்ந்தான். உலகமே தலைகீழாகக் சுற்றுகிறதோ?

மீண்டும் மஜீத் தடவிப் பார்த்தான். வெறுமை! கீழே எதுவும் இல்லை. தாங்க முடியாத அளவிற்கு வலி எடுத்தது. ஸுஹ்ராவின் முதல் முத்தம் கிடைத்த வலது கால்!

அது எங்கு போனது?

கண்கள் திறந்துதான் இருந்தன. கன்னங்கள் வழியே கண்ணீர் சூடாக வழிந்துகொண்டிருந்தது. படுக்கைக்கு அருகில் டாக்டரும் நர்ஸும் அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேனேஜரும் வந்தார்கள்.

மஜீத்தின் நெற்றியில் தன்னுடைய குளிர்ச்சியான கையை வைத்த கம்பெனி மேனேஜர் மெதுவான குரலில் குனிந்துகொண்டே கூறினார்: “மிஸ்டர் மஜீத்... நான் உண்மையாகவே வருத்தப்படுகிறேன. நீங்க கவலைப்படக்கூடாது.”

“ஸுஹ்ரா!”

“என்ன மஜீத்?”

“நீ ஏன் ‘உம்’ கொட்டல?”

“நான் ‘உம்’ கொட்டினேனே! பிறகு... பையா, நீ ஏன் என்னை ‘நீ’ன்னு கூப்பிடுறே?”

அதைக்கேட்டு மஜீத் ஒருமாதிரி ஆகிவிட்டான்.

‘ஸுஹ்ரா’ என்று அழைத்தவாறு மஜீத் திடுக்கிட்டு எழுந்தான்.

“பகல் கனவு காணறியா?” -நர்ஸ் கேட்டாள்.

மஜீத் புன்னகைக்க முயற்சித்தான்.

அறுபத்து நான்கு பகல்களும் அறுபத்து நான்கு இரவுகளும் கடந்தோடின. தன்னைவிட உயரமாக இருந்த ஒரு கழியின் உதவியுடன் மஜீத் தான் பணியாற்றிய மேனேஜருடன் மருத்துவமனையின் வெளி வாசலைக் கடந்து மக்கள் நடமாடிக் கொண்டிருந்த தெருவில் கால் வைத்தான்.

சில ரூபாய்களை மஜீத்தின் கையில் தந்த நிறுவனத்தின் மேனேஜர் சொன்னார்: “நீங்கள் இனிமேல் வீட்டுக்குப் போங்க. இப்படியொரு சம்பவம் நடந்ததுக்காக நான் வருத்தப்படுறேன்.”

மஜீத்திற்கு அழுகை வருவதைப் போல் இருந்தது.

“என் சகோதரிகள் திருமண வயதைத் தாண்டி வீட்டுல இருக்காங்க. என் பெற்றோர் வயசானவங்க. எங்களுக்குன்னு இருந்த சொத்து முழுவதும் இப்போ கடன்ல இருக்கு. எங்க வீட்டுலயே ஒரே ஆம்பளைப் பிள்ளை நான் மட்டும்தான். வீட்டுல இருக்குற கஷ்டங்களுக்கு ஒரு மாற்று உண்டாக்காம நான் அங்கே போறதை என் மனசு விரும்பல. பிறகு... இந்தக் கோலத்தோட நான் அங்கே போயி அவங்களை ஏன் மன கஷ்டப்பட வைக்கணும்?”

“அப்படின்னா என்ன செய்யிறதா எண்ணம்?”

“என்னால தெளிவா சொல்ல முடியல.”

“என் நிறுவனத்துல உங்களுக்கேற்ற ஒரு வேலையும்.. க்ளார்க் வேலை செய்ய நீங்க தயாரா இருக்கீங்களா?”

“இல்ல... நான் கணக்குல ரொம்பவும் மோசம்.”

கொஞ்சம் பெரிய ஒண்ணு!

மஜீத் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டான். பரவாயில்லை. இந்த பிரபஞ்சத்தில் எல்லாருமே தனித் தனியானவர்கள்தான். அதற்கு ஏன் பயப்பட வேண்டும்?

தனக்குக் கிடைத்த பணத்தில் முக்கால் பங்கை மஜீத் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அதனுடன் ஒரு கடிதமும். தனது வலது கால் போன விஷயத்தை கடிதத்தில் அவன் எழுதவில்லை.

மஜீத் மீண்டும் வேலைதேடி அலைய ஆரம்பித்தான்.

இரண்டு கைகளிலும் தடியை ஊன்றிக்கொண்டு ஒரே ஒரு காலால் குதித்து குதித்து... நான்கடி நடந்த பிறகு அவன் நிற்பான். பிறகு நடப்பான். நின்று எதையாவது நினைப்பான்... பிறகு நடப்பான். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அவனுக்கென்று ஒரு இடமில்லை. எந்த இடத்தில் வேண்டுமானாலும் படுத்துத் தூங்குவான்.

கடைசியில் நகரத்தின் பணக்காரர்களைப் பார்த்து உதவி கேட்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்தான். பலரிடமும் விசாரித்ததில் நல்ல தாராள குணம் கொண்டவர் நகரத்திலேயே கான் பகதூர் என்பவர்தான் என்ற விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது. நகரத்திலிருந்த பெரிய கட்டிடங்களெல்லாம் அந்த மனிதருக்கச் சொந்தமானவையே. அவரின் பாதாள அறையில் ஏராளமான தங்கக் கட்டிகள் பாசி பிடித்து கிடக்கும் என்று சொன்னார்கள். அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு கொண்ட மனிதர் அவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டார்கள். சமீபத்தில்தான் அவர் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து கவர்னருக்கு ஒரு விருந்து தந்திருந்தார். அவரால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும்... எது வேண்டுமானாலும்.

ஆனால், வாசலில் நின்றிருந்த காவலாளிகள் மஜீத்தை உள்ளே விடவில்லை. தினந்தோறும் அந்த மாளிகையின் முன்னால் வந்து அவன் நிற்பான். இப்படியே ஒரு வாரம் ஓடி முடிந்தது. கடைசியில் காவலாளிகளுக்கே அவன் மீது இரக்கம் பிறந்துவிட்டது. கான் பகதூரின் முன்னால் அவன் கொண்டு போய் நிறுத்தப்பட்டான். மஜீத் அவரைப் பார்த்து ‘சலாம்’ சொன்னான். ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமைப் பார்க்கம்போது “அஸ்ஸாலாமு அலைக்கும்” என்று கூற வேண்டும். மஜீத் சொன்னான்.

ஆனால், கான் பகதூர் என்ன காரணத்தாலோ பதிலுக்கு சலாம் வைக்கவில்லை. அவன் ‘சலாம்’ சொன்னதை தான் கேட்கவேயில்லை என்பது மாதிரி அவர் காட்டிக்கொண்டார். கான் பகதூர் ஐம்பது வயது மதிக்கத்தக்க வெள்ளையான பருத்த உடம்பைக் கொண்ட ஒரு மனிதர். கல் வைத்த பெரிய தங்க மோதிரங்கள் விரல்களில் ஒளி வீச, தாடியைத் தடவி விட்டவாறு அவர் மஜீத்தின் கவலை தோய்ந்த வார்த்தைகள் முழுவதையும் ‘உம்’ கொட்டி கேட்டார்.

கடைசியில் கான் பகதூர் சொன்னார். “நம்ம சமுதாயத்துல கல்யாணம் பண்ண வசதியில்லாத எத்தனையோ பெண்கள் இருக்காங்க. சாப்பாட்டுக்கு வழியில்லாத ஆட்களும் நிறைய இருக்காங்க. என்னால் முடிஞ்ச அளவுக்கு நான் எல்லாருக்கும் செஞ்சிக்கிட்டுத் தான் இருக்கேன். சொல்லு... இதுக்குமேல நான் என்ன செய்யணும்?”

மஜீத் எதுவும் சொல்லவில்லை.

கான் பகதூர் முஸ்லீம் சமுதாயத்தின் உயர்வுக்காக தான் செய்திருக்கும் பெரிய காரியங்ளை விளக்கிச் சொன்னார். அவர் நான்கு பள்ளி வாசல்களைக் கட்டியிருக்கிறார்.


மற்ற கோடீஸ்வரர்கள் தலா ஒரு பள்ளி வாசலைத்தான் கட்டியிருக்கிறார்கள். அதோடு நிற்காமல் அவர் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக சமுதாயத்திற்கு ஒரு இடத்தை இலவசமாகவே தந்திருக்கிறார். அங்கு ஒரு கட்டிடம் கட்டி வாடகைக்கு அவர் விட்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் ஏராளமான பணம் வாடகையாகக் கிடைத்துக் கொண்டிருக்கும். முஸ்லீம் சமுதாயத்திற்காக ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பணத்தைத்தான் அவர் இழந்த ஒவ்வொரு வருடமம் எவ்வளவு பணத்தைத்தான் அவர் இழந்து கொண்டிருப்பார்!

“இதுக்கு மேல நான் என்ன செய்யணும்?சொல்லு...”

மஜீத் எதுவும் சொல்லவில்லை.

கான் பகதூர் மஜீத்தின் கால் போனதற்காக மிகவும் கவலைப்பட்டார். “எல்லாம் விதி! இதுக்குமேல வேற என்ன சொல்றது?”

விதியாக இருக்கலாம். பரவாயில்லை. அதற்குமேல் வேறு என்ன சொல்ல முடியும்?

மஜீத் அந்த நீளமான தடியை ஊன்றியவாறு ‘சலாம்’ சொல்லிவிட்டு, மெதுவாக நடந்தான். படியை அவன் தாண்டியபோது, கான் பகதூர் தன் வேலைக்காரன் மூலமாக ஒரு ரூபாய் கொடுத்தனுப்பினார்.

“இந்தப் பணத்தை என்கிட்ட தந்துட்டதா நீங்க சொல்லிடுங்க. நீங்களே இதை வச்சுக்கங்க” - வேலைக்காரனிடம் சொன்ன மஜீத் நடந்தான். அவன் அப்படி நடந்துகொண்டது சரிதானா?

மஜீத் என்ன காரணத்திற்காக அந்தப் பணத்தை வாங்கவில்லை? அந்தக் கோடீஸ்வரனுக்கு முன்னால் தினந்தோறும் எத்தனையோ ஏழைகள் போய் நிற்கும் விஷயமும், அவர்களுக்கு அவர் உதவிகள் செய்யும் விஷயமும் மஜீத்திற்கு நன்கு தெரிந்ததுதானே? மஜீத் ஒரு கோடீஸ்வரனாக இருந்தால் அவன் என்ன செய்வான்? முதலில் வந்து உதவி கேட்டு நிற்கும் ஏழைக்கு தன்னுடைய சொத்தில் பாதியைக் கொடுத்து விடுவானா என்ன? ஒரு செம்புத் தகட்டைவிட அதிகமாக அவன் கொடுப்பானா? கான் பகதூர் ஒரு ரூபாய் தந்தார். அதை அவன் வாங்கியிருக்க வேண்டாமா? மஜீத் எண்ணிப் பார்த்தான். ஆனால், அங்கு மொத்தம் இருப்பதே ஐந்து கோடீஸ்வரர்கள்தான். அவரை நீக்கிவிட்டு பார்த்தால் மீதியிருக்கும் பலவகைப்பட்ட மனிதர்களையும் சேர்த்தால், ஆறரை இலட்சம் பேர் வருவார்கள். எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இடையில் சிலர் மரணத்தைத் தழுவுகிறார்கள். மஜீத் இழந்தது ஒரு காலின் பகுதியை மட்டும்தான். இரண்டு கால்களை இழந்தவர்கள் கூட இருக்கிறார்கள். இரண்டு கைகளை இழந்தவர்களும் இருக்கிறார்கள். கண்களை இழந்தவர்களும் வாழ்கிறார்கள். வாழ்க்கையில் துயரம், மகிழ்ச்சி இரண்டுமேதான் இருக்கின்றன. பெரியவனும் இருக்கிறான். சிறியவனும் இருக்கிறான். நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வருகிறது. அதே நேரத்தில் அழுகையும்தான். பொதுவாக எதைப் பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மஜீத் இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தான். வாழ்க்கை நன்றாக நடப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உழைக்க வேண்டும். அதுதானே கடமை!

மஜீத்தின் கைத்தடி நான்கு அங்குலம் தேய்ந்துவிட்டது. உள்ளங்கையில் கால் அங்குல அளவிற்கு தழும்பு உண்டானது. பல இடங்களுக்கும் போய் அவன் தனக்கொரு வேலைக்காக முயற்சித்தான். பட்டினி கிடந்ததால் அவனுடைய உடல் மிகவும் மெலிந்துவிட்டது. அப்போது ஒரு மகிழ்ச்சியான விஷயம் நடந்தது.

மஜீத்திற்கு வேலை கிடைத்தது. ஒரு ஹோட்டலில் எச்சில் “ பாத்திரங்களைக் கழுவுவது - இதுதான் அவனுக்குக் கிடைத்த வேலை. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு பதினோரு மணி வரை தண்ணீர் குழாயின் அருகிலேயே இருக்க வேண்டும். பெரிய கூடையில் கொண்டு வந்து வைக்கப்படும் எச்சில் பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து கழுவி வேறொரு கூடையில் போட வேண்டும். அதை வேறொருவன் எடுத்துக்கொண்டு போவான். அப்போது இன்னொரு ஆள் எச்சில் பாத்திரங்களை அங்கு கொண்டு வருவான்... இதுதான் அவனுடைய வேலை. எனினும், வயிறு நிறைய எதையாவது சாப்பிடலாம். வெயில், மழை எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை வீணாக வெளியே அலைய வேண்டாம். ஒரு இடத்தில் அமர்ந்து மெதுவாக வேலையைச் செய்தால் போதும். கிடைத்ததுவரை நல்ல விஷயம்தான். வாழ்க்கை பெரிய கஷ்டம் எதுவும் இல்லாமல் சிறு சந்தோஷத்துடன் முன்னோக்கி நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் தன்னுடைய வீட்டிற்கு ஒரு சிறிய தொகையை அவன் அனுப்பிவைப்பான்.

வீட்டிலிருந்து முதன்முறையாக ஒரு கடிதம் வந்தது. அதில் ஸுஹ்ராவிற்கு சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டிப்பதாக எழுதப்பட்டிருந்தது. அவள் மிகவும் மெலிந்து போயிருக்கிறாளாம். கொஞ்சம் இருமலும் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. ‘இங்கு எல்லாரும் நலம். உன்னை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது’ என்றெழுதி கீழே ‘சொந்தம் ஸுஹ்ரா’ என்று ஸுஹ்ரா கையெழுத்துப் போட்டிருந்தாள்.

12

ஸுஹ்ராவைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தான் மஜீத். தன்னைப் பார்க்கும்போது அவனின் உம்மா, வாப்பா, சகோதரிகள், ஸுஹ்ராவின் உம்மா, அவளின் சகோதரிகள், ஊர்க்காரர்கள் எல்லாரும் என்ன நினைப்பார்கள்?

ஒன்றரைக் காலன் மஜீத்! ஸுஹ்ரா அவனை அப்படி அழைப்பாளா? நிச்சயமாக அவள் அப்படி அழைக்க மாட்டாள். மீதியிருக்கும் பாதி கால்பகுதியைக் கண்ணீருடன் அவள் முத்தமிடுவாள். முன்பு... நினைத்துப் பார்த்தபோது மஜீத்திற்கு சிரிப்பு வந்தது. கொஞ்சம் பெரிய ஒண்ணு!

அந்தக் கதைகளைச் சொல்லி மஜீத் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறான். ஸுஹ்ராவைப் பற்றி பலரிடமும், அவன் கூறியிருக்கிறான். ஹோட்டலில் பணியாற்றும் மற்ற பணியாட்களெல்லாம் மஜீத்தின் நண்பர்கள்தாம். குளித்து வயிறு நிறைய சாப்பிட்டு முடித்து இரவில் படுத்துக் கிடக்கும்போது மஜீத் தன்னுடைய அனுபவங்களையும் நகைச்சுவையான விஷயங்களையும் அவர்களிடம் கூறுவான். பெரும்பாலும் அவன் நகைச்சுவையான விஷயங்ளைத்தான் அதிகமாகச் சொல்லுவான். அதைக்கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். தினந்தோறும் இரவில் படுக்கும்போது மஜீத் ஏதாவது சொல்ல வேண்டும். சொல்வதற்குத்தான் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே! பெரும்பாலும் அவர்கள் எல்லாரும் சிரித்துக்கொண்டே தான் உறங்குவார்கள். எல்லாரும் தூங்கியபிறகு மஜீத் ஸுஹ்ராவிடம் ஏதாவது பேசுவான். ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் தாண்டி இருக்கும் ஸுஹ்ராவை அவன் பார்ப்பான். அவளின் இருமல் சத்தம் அவன் காதில் விழும். என்னென்னவோ சொல்லி அவன் அவளைத் தேற்றுவான்.

இரவும் பகலும் - எந்நேரமும்.

“ஸுஹ்ரா, இப்போ நீ எப்படி இருக்கே? நெஞ்சு வலி இருக்கா?” என்று கூறியவாறு தான் கழுவிய பாத்திரங்களை அவன் பார்ப்பான். உள்ளங்கைகளில் இருந்த தழும்புகள் காய்த்துப் போயிருந்தன. உடம்பில் நல்ல பலம் ஏறியிருந்தது. உற்சாகத்துடன் எதையும் பார்க்கப் பழகிக் கொண்டான் மஜீத். நியாயமாக உழைத்துக் கிடைக்கும் பணத்தைப் பார்க்கும்போது அவனுக்கே பெருமையாக இருந்தது. வாழ்க்கையில் சில மாறுதல்கள் உண்டாகத்தான் செய்கிறன்றன.


மரம் அல்லது ரப்பரால் ஆன கால் இருக்கவே செய்கிறது. பேன்ட்டும் ஷீக்களும் அணிந்தால்... ஹோட்டல் உரிமையாளர்தான் அவனிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். மஜீத் மீது அவருக்கு ஒரு இரக்க உணர்ச்சி இருந்தது. துயரக்கடலில் ஆறுதல் என்ற தீவைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை மஜீத்திற்கு இருந்தது. இரவில் மற்றவர்கள் தூங்கியபிறகு மஜீத் ஸுஹ்ராவிடம் கூறுவான் : “தூங்கு சினேகிதியே தூங்கு...” ஆனால், மஜீத் பார்ப்பது நட்சத்திரங்கள் நிறைந்த பரந்து கிடக்கும் வானத்தைத்தான்.

ஸுஹ்ராவை எப்போது பார்க்க முடியும்?

மஜீத் அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவான். காலைக் கடன்கள் முடித்து தேநீர் குடித்து முடிந்து தன் வேலையை ஆரம்பிப்பான். நகரம் எப்போதும் உற்சாகமாகவே இருக்கும். ஒரே ஆரவாரம் - ஆண்களின், பெண்களின், வாகனங்களின் ஓசைகள் - அந்த ஓசைகளைக் கேட்டவாறு மஜீத் பாத்திரங்களைக் கழுவி அடுக்கிக் கொண்டிருப்பான்.

அப்படி இருக்கும்பொழுது அடுத்த கடிதம் வந்து சேர்ந்தது.

அது ஸுஹ்ராவின் கையெழுத்து அல்ல.

வேறு யாரையோ வைத்து மஜீத்தின் தாய் எழுதியிருக்கிறாள். அதை வாசித்தபோது நகரத்தின் இரைச்சல் சத்தம் முழுமையாக நின்று விட்டதைப்போல் அவன் உணர்ந்தான்.

“அன்புள்ள மகன் மஜீத் படித்துத் தெரிந்து கொள்வதற்காக உன்னுடைய உம்மா எழுதிய கடிதம்.

முந்தா நாள் அதிகாலையில் நம் ஸுஹ்ரா மரணத்தைத் தழுவி விட்டாள். அவள் வீட்டில் என் மடியில் தலை வைத்துப்படுத்தவாறு அவள் உயிர் பிரிந்தது. பள்ளிவாசலுக்கருகில் அவளுடைய வாப்பாவின் கல்லறைக்கு அருகிலேயே ஸுஹ்ராவை அடக்கம் செய்தோம்.

எங்களுக்குத் துணையாகவும் உதவியாகவும் இருந்த ஸுஹ்ரா போய்விட்டாள். இனி அல்லாவை விட்டால் எங்களுக்கு இருப்பது நீ மட்டும்தான்.”

மகனே, போனமாதம் 30-ஆம் தேதி நம்முடைய வீட்டையும் நிலத்தையும் கடன்காரர்கள் எடுத்துக்கொண்டு விட்டார்கள். உடனே வீட்டை காலி பண்ணிவிட்டு வெளியேறவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த இரண்டு பெண் பிள்ளைகளையும் உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் உன் வாப்பாவையும் அழைத்துக்கொண்டு நான் எங்கு போவேன்?

மகனே, நான் தூங்கி எவ்வளவோ நாட்களாகிவிட்டன. உன் சகோதரிகளின் வயதையொத்த பெண்கள் மூன்று, நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏதாவது நடக்கக்கூடாதது நடந்துவிட்டால்... மகனே, இங்கு இருக்கும் முஸ்லிம்கள் கண்ணில் இரத்தமே இல்லாதவர்கள். நானும் வாப்பாவும் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்பதாயில்லை. உடனே வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்கிறார்கள்.

நம் ஜாதியைச் சேர்ந்த நல்லவர்களான பணக்காரர்கள் அங்கு இருக்கிறார்கள் அல்லவா? அவர்களிடம் சொன்னால் ஒரு நல்ல வழி பிறக்காமல் இருக்காது. தயங்காமல் நீ போய் அவர்களிடம் மனம் திறந்து உண்மையைக் கூற வேண்டும்.

என் தங்க மகனே, ஸுஹ்ரா உயிருடன் இருந்தபோது எனக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தாள். இங்கிருக்கும் கஷ்டங்களைச் சொல்லி உன்னைத் தேவையில்லாமல் மன வருத்தத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று ஸுஹ்ரா சொல்லிவிட்டாள். அதனால்தான் இதுவரை உனக்குக் கடிதம் எழுதவில்லை. இரண்டு மாதங்களாக ஸுஹ்ரா உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தாள். அவளுக்கு சிகிச்சை செய்யக்கூட இங்கு யாருமில்லை. மரணத்தைத் தழுவுதற்கு முன்பு அவள் உன்னுடைய பெயரைச் சொன்னாள். நீ வந்து விட்டாயா... வந்து விடடாயா என்று பலமுறை அவள் கேட்டாள்... எல்லாம் அல்லாஹுவின் விதி!”

மஜீத் அப்படியே அதிர்ச்சியடைந்து நின்று விட்டான்.

எல்லாம் அமைதியாகி விட்டதைப்போல்...

பிரபஞ்சமே சூனியமாகி விட்டதைப்போல...

இல்லை! பிரபஞ்சத்திற்கு எதுவும் நடக்கவில்லை. நகரம் இரைந்து கொண்டிருந்தது. சூரியன் வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. காற்று வீசிக்கொண்டிருந்தது. எல்லாமே கைவிட்டுப் போய் விட்டதைப்போல் அவன் உணர்ந்தான். வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டதா? பிரபஞ்சங்களைப் படைத்த கருணை வடிவமான கடவுளே!

மஜீத் மீண்டும் பாத்திரங்களைக் கழுவி மிகவும் கவனத்துடன் அடுக்கத் தொடங்கினான். தாயும், தந்தையும், சகோதரிகளும் எங்கு போவார்கள்? யார் இருக்கிறார்கள் உதவ? அல்லாவே அவரின் கருணை தவழும் கைகள் நீளுமா?

ஸுஹ்ரா!

நினைவுகள்... வார்த்தைகள்... செயல்கள்.... முகபாவங்கள்.... ஓவியங்கள்.... அவனுடைய மனதில் என்னவெல்லாம் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன! சாவைத்தழுவுவதற்கு முன்பு ‘மஜீத் வந்தாச்சா? வந்தாச்சா?’ என்று அவள் கேட்டிருக்கிறாள்!

நினைவுகள்.

கடைசி நினைவு...

அன்று... மஜீத் விடைபெற்றுவிடடு கிளம்பத் தயாராக இருந்தான். ஸுஹ்ரா என்னவோ சொல்ல ஆரம்பித்தாள். அதை அவள் முடிப்பதற்கு முன்பு பஸ்ஸின் ஹார்ன் சத்தம் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. அப்போது மஜீத்தின் உம்மா அங்கு வந்தாள்... மஜீத் வாசலுக்கு வந்தான். பூந்தோட்டத்தைத் தாண்டி படியில் இறங்கி... அவன் திரும்பிப் பார்த்தான்.

மேற்கு திசையில் தங்க நிறத்தில் மேகங்கள்... இளம் மஞ்சள் வெயிலில் மூழ்கி நிற்கும் மரங்களும், வீடும், வாசலும், பூந்தோட்டமும்...

மஜீத்தின் சகோதரிகள் இருவரும் முகத்தை வெளியே காட்டியவாறு கதவின் மறைவில் நின்றிருக்கிறார்கள். அவனுடைய வாப்பா சுவரில் சாய்ந்தவாறு வாசலில் அமர்ந்திருக்கிறார். உம்மா வாசலில் நின்றிருக்கிறாள்.

ஈரமான விழிகளுடன் செம்பருத்திச் செடியைப் பிடித்துக் கொண்டு பூந்தோட்டத்தில் நின்றிருக்கிறாள்... ஸுஹ்ரா.

சொல்ல நினைத்த விஷயம் அப்போதும் அவள் மனதில் இருந்திருக்க வேண்டும்.

அன்று கடைசி கடைசியாக ஸுஹ்ரா சொல்ல நினைத்தது என்னவாக இருக்கும்?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.