Logo

தீர்த்த யாத்திரை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6920
theertha yathirai

ண்மையைச் சொல்லட்டுமா? நான் ஒரு நல்ல மனிதனே இல்லை. என்னிடம் பல பலவீனமான விஷயங்களும் இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த நான் பலமுறை முயற்சித்திருக்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை என்பதே உண்மை. இல்லாவிட்டால் என் இரண்டு அல்லது மூன்று நாட்கள் முயற்சியில் நான் வெற்றி பெற்றிருப்பேன். அதற்குப் பிறகு நிச்சயம் நான் தோல்வியையே சந்திப்பேன். சுருக்கமாகச் சொன்னால், நான் காமக் களியாட்டங்களில் விருப்பம் உள்ளவன். சுவையான உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடக்கூடியவன். மது அருந்தக்கூடியவன். ஆடம்பரப் பிரியனும், பணக்காரனுமான ஒரு மோசமான கிழவன். எனக்கு இப்போது அறுபத்தைந்தாவது வயது நடந்து கொண்டிருக்கிறது. 

கடவுளுக்கு நான் செய்யும் பாவச் செயல்கள் ஒவ்வொன்றும் நன்றாகத் தெரியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருந்தாலும், கருணை வடிவமான அவர் என்னைப் போன்ற ஒரு பாவியை தண்டிக்க வேண்டிய விதத்தில் தண்டிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மாறாக, பல விதங்களிலும் எனக்கு தன்னுடைய அருளை வாரி வழங்கி வந்திருக்கிறார் என்பதே உண்மை. ஒருவேளை... எனக்குக் கொடுக்க வேண்டிய தண்டனைகள் அனைத்தையும் அவர் ஒன்று திரட்டி தன் வசம் வைத்திருக்கலாம். எனக்கொரு சந்தேகம்- பாவம் செய்கிற நேரங்களில் தனியே அமர்ந்து, ரகசியமாக, யாருக்கும் தெரியாமல், ஒரு திருடனைப்போல் நான் கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பேன். இதனால் அவர் மிகவும் குழப்பமடைந்து போயிருப்பாரோ? இந்தக் கிழவன் ஒரு துரோகி; அவன் அவ்வளவு நல்லவன் இல்லை; அவன் காதைப் பிடித்துத் திருகினால்தான் சரியாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றுகிற நேரத்தில், நான் அவரை நோக்கிச் செய்த பிரார்த்தனைகள் அவரின் பாதங்களில் சாஷ்டாங்கமாய் போய் விழுந்திருக்குமோ? மனம் இரங்கிப்போன கடவுள் என்னை மீண்டும் பிழைத்துப் போகட்டும் என்று மன்னித்திருப்பாரோ? அதன் விளைவு- இந்த அறுபத்தைந்தாவது வயதிலும் ஏகப்பட்ட கெட்ட செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு நான் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். யாரும் இதைத் தங்கள் வாழ்விலும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். ஆனால், ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- வேறு வழியே இல்லை என்றால்தான் பாவம் செய்ய வேண்டும். நாம் செய்யக்கூடிய பாவச் செயல் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு பாதிப்பு  உண்டாக்கக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது. நான் எவ்வளவு கவனமாகச் சிந்தித்துப் பார்த்து, மனதிற்குள் அசை போட்டுப் பார்த்து, ஒவ்வொரு பாவச் செயலையும் செய்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். இனி என் விஷயம் என்னவென்று சொல்கிறேன். நான் ஒரு தனிமனிதன். மனைவி இறந்துவிட்டாள். எனக்கிருந்த இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்வித்து, அனுப்பிவிட்டேன். இளைய மகளின் திருமணம் முடிந்து, எல்லாரும் போய்விட்டபிறகு நான் வேஷ்டியை மடக்கிக்கட்டி, இரண்டு கைகளையும் நன்றாக விரித்துக் கொண்டு, ஒரு சினிமா பாட்டை படு உற்சாகமாக விசிலடித்தவாறு இந்த வீட்டில் ஜாலியாக இங்குமங்குமாய் நடந்தேன். இனிமேல் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். என் மனதில் இருந்த ஆசைகளை எல்லாம் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பசுக்களை அவிழ்த்துவிடுவதைப்போல நான் சுதந்திரமாகக் காற்றில் பறந்து திரிய விட்டேன்.

கிழவனான என்னைக் கனிவுடன் கடவுள் பார்க்கட்டும் என்று நினைத்ததே காரணம். இப்படித்தான் இந்த முதுமை வயதிலும் நான் காமக் களிட்டங்களில் விருப்பமுள்ள மனிதனாகவும், சுகபோகங்களில் எந்நேரமும் திளைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடியவனாகவும் மாறிப் போனேன். கடவுள் எனக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தந்திருந்தார். எனக்கு இருக்கும் ஒரேயொரு பிரச்சினை- கண்ணில், குறிப்பாக இரவு நேரங்களில் பார்வை கொஞ்சம் மங்கலாகத் தெரியும். அந்தக் குறையைக்கூட சீக்கிரம் இல்லாமல் செய்துவிடலாம் என்று கூறிய டாக்டர் பரமேஸ்வரன் நாயர் மதுரையில் அதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளைக்கூட இப்போது செய்து கொண்டிருக்கிறார். எனக்கு அவர் சொன்னது அதிகமான தைரியத்தைத் தந்தது. எனக்கு நண்பர் என்று இருப்பவர் எங்களின் சர்ச் ஃபாதர்தான். ஃபாதர் எப்போதாவது நல்ல சுவையான உணவு சாப்பிடுவதற்கோ, என் மருமகன் இங்கிலாந்தில் இருந்து கொடுத்து விடுகிற நெப்போலியன் பிராந்தியைக் கொஞ்சம் ருசி பார்க்கலாம் என்றோ இங்கே வருவார். சமீபத்தில் ஒருநாள் நான் அவரிடம் சொன்னேன்.

"ஃபாதர், எனக்கும் வயசாயிடுச்சு. என் வாழ்க்கை இப்படியே ஆயிடுச்சு. என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் நடைபெறுகிற சம்பவங்கள் எல்லாமே உங்களுக்கு நல்லா தெரியும். உங்களைத் தவிர, இந்த உண்மைகள் வேற யாருக்கும் தெரியக்கூடாது, நான் சர்ச்சுக்கு வந்து பாவமன்னிப்பு கூண்டுக்குள் முழங்கால் போட்டு, நான் செஞ்ச ஒவ்வொரு பாவத்தையும் சொல்லணுமா?  இல்லாட்டி- இந்த ஸ்மால் அடிக்கிறப்பவே, என்னோட பாவங்கள் ஒவ்வொண்ணையும் ஃபாதர்  உங்கக்கிட்ட இங்கேயே ஒரு கதை மாதிரி சொன்னா போதாதா? நாம ஏதோ பேசினது மாதிரியும் இருக்கும். என்னோட பாவச் செயல்களைக் கேட்டு பரிகாரம் உண்டாக்க வேண்டியது ஃபாதர், உங்க விருப்பம்...''

ஃபாதருக்கு இப்போது வயது ஐம்பதுகூட ஆகவில்லை. அவரின் முகம் திடீரென்று சிவந்துவிட்டது. அவருக்குக் கோபம் வந்துவிட்டது என்பதை என்னால் உணரமுடிந்தது. சிறிது நேரம் ஃபாதர் எதுவுமே பேசவில்லை. கோபம் மறைந்தபிறகு ஃபாதர் சொன்னார்:

"கதையையும் குற்றவாளிக் கூண்டையும் ஏன் தேவையில்லாம ஒண்ணு சேக்குறீங்க யோஹன்னான் அண்ணே? இடையில ஒருநாள் சர்ச்சுக்கு வந்து மன்னிப்பு கூண்டுல முழங்கால் போட்டு கொஞ்ச நேரம் இருக்குறதுல நாம் என்ன இழந்திடப் போறோம்? இல்லாட்டி ஆளுங்கதான் என்ன நினைப்பாங்க? ஏதாவது  ரெண்டு சின்ன பாவங்களை நீங்க சொன்னாகூட போதும். அந்தச் சடங்கை வேண்டாம்னு நீங்க சொல்லக்கூடாது. மனசுல நாம செஞ்சது தப்புன்னு பட்டதுல்ல? அதுவே பெரிய விஷயம்தான். இருந்தாலும், சர்ச்ல அதைச் சொல்லணும்னு சில விதிமுறைகள் இருக்கே! எனக்குப் பின்னால வேற யாராவது ஃபாதரா வரலாம். வரப்போறது யாருன்னு நமக்குத் தெரியுமா? யோஹன்னான் அண்ணனுக்கு எந்தவிதமான சடங்குகளும் சரிவர நடத்தலைன்னு நாலு பேர் எதிரா சொன்னாங்கன்னு வச்சுக்கோங்க. இது தேவையில்லாத பிரச்சினைதானே!''

"நீங்க சொல்றது  சரிதான் ஃபாதர்..'' நான் லேசாக நடுங்கியவாறு சொன்னேன். உண்மையிலேயே இந்த விஷயம் இவ்வளவு பெரிய விஷயம் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஃபாதர் வந்த கொட்டாவியை அடக்கியவாறு சொன்னார்: "மரணம்ன்ற விஷயத்தை நாம எல்லாருமே மறந்திடுறோம்.


யோஹான்னான் அண்ணே... அந்த ஜன்னலைக் கொஞ்சம் திறந்துவிட்டா, காத்து நல்லா உள்ளே வருமே!''

"நிச்சயமா காத்து நல்லா வரும் ஃபாதர்.'' நான் சொன்னேன். ஃபாதரே நடந்து போய் ஜன்னலைத் திறந்துவிட்டார். நான் எனக்குள் சொன்னேன்: "அப்பாடா... ஃபாதரிடம் விஷயத்தைச் சொல்லியாச்சு. இனி எல்லாமே நல்லபடி நடக்கும்!" சமீபத்தில் நான் ஃபாதரைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்:

"ஃபாதர், வாளாடியில் இருக்குற ஏலத் தோட்டத்துல இருந்து வேட்டைக்காரன் நீலஞ்சிற மத்தாயி கொஞ்சம் மான்கறியைக் காய வச்சு கொடுத்தனுப்பி இருக்கான். ஃபாதர், நீங்க கொஞ்சம் இங்கே வந்தா, அதை நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து ருசி பார்க்கலாம். பிறகு... ஜோமோன் இந்த முறை பிராந்திக்குப் பதிலா ப்ளுலேபல்ன்ற விஸ்கியைக் கொடுத்து விட்டிருக்கான். அதையும் ஒரு கை பார்ப்போமே?''

"சரி... யோஹன்னான் அண்ணே...'' ஃபாதர்  சொன்னார்:  "நல்ல  விஷயம்தான்!''

காயவைத்த மான் கறியை மிகவும் சுவையாகச் சமைப்பது எப்படித் தெரியுமா? முதலில் அதை தீயில் இப்படியும் அப்படியுமாய் திருப்பித் திருப்பி எல்லாப் பக்கமும் நன்றாக வேகும்படி சுட வேண்டும். அதற்குப் பிறகு அம்மியில் வைத்து குழவியால் நன்றாக அடித்துச் சின்னச் சின்ன துண்டுகளாக ஆக்க வேண்டும். அதற்குப் பிறகு அதனை நார் நாராகக் கிழிக்க வேண்டும். கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யைச் சூடாக்கி அதில் வெள்ளைப் பூண்டும் கருவேப்பிலையும் போட்டு கருகுகிற வரை வறுக்க வேண்டும். இப்போது சின்னச் சின்ன துண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் மான் இறைச்சியை எண்ணெய்யில் போட வேண்டும். கொஞ்சம் மிளகுப் பொடியைச் சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.  இப்போது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். என்ன ருசி இருக்கும் தெரியுமா? ஃபாதரும் நானும் வறுவல் கறியையும், முட்டை பொரியலையும் ப்ளூ லேபல் விஸ்கியையும் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது, நான் ஃபாதரிடம் சொன்னேன். "ஃபாதர்... சமீபத்துல என் வாழ்க்கையில ஒரு வினோதமான சம்பவம் நடந்துச்சு.  நான் இப்போ அதைச் சொல்லலாமா?'' ஃபாதர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "யோஹன்னான் அண்ணே... இது குற்றத்தை ஒப்புக்கொண்டு பாவ மன்னிப்பு கேக்குற விஷயமா... இல்லாட்டி கதையா? பாவமன்னிப்பு விஷயம்னா நான் கொஞ்சம் விலகி இருக்கணும்.''

"ஃபாதர்...'' நான் சொன்னேன்: "ரெண்டும் சேர்ந்ததுதான்னு வச்சுக்கோங்களேன். என்னைப் பொறுத்தவரை செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு பாவ மன்னிப்பு கேக்குறது வேற, கதை வேறன்னு நான் நினைக்கல!'' நான் இப்படிச் சொன்னதும், ஃபாதர் சிரித்தவாறே என்னைப் பார்த்தார். நான் சொன்னேன்:

"ஃபாதர்... உங்களுக்கு இது ஒரு தமாஷ்... எனக்கு என்னோட எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் இது. என்னோட பாவங்கள் நிறைஞ்ச வாழ்க்கையை இதோட நிறுத்திக்கணும்னு கடவுள் எனக்குக் காட்டின ஒரு அடையாளமா இது இருக்குமோன்னு எனக்கு ஒரே பயமா இருக்கு. இதுல கொஞ்சம் ஆபாசம் இருக்கு.

அதைப் பெரிசா எடுத்துக்காம ஃபாதர், நீங்க என்னை மன்னிக்கணும்.''

ஃபாதர் சொன்னார். "அண்ணே... உங்களோட விசேஷங்களை நான் என்ன முதல் தடவையாவா கேக்குறேன்! ரொம்ப நீட்டி முழக்கி சொல்லணும்னு அவசியம் இல்ல. சுருக்கமா சொன்னா போதும். தெரியுதா?'' நான் சொன்னேன்:  "பாதர்...  இதுல முக்கியமான ஒரு விஷயமே- விவரமா சொல்றதுலதான் இருக்கு!'' "சரி...'' ஒவ்வொரு சுண்டுவிரலையும் ஒவ்வொரு காதில் வைத்துக்கொண்டு ஃபாதர் சொன்னார்.

"இந்தக் காது மூலம் உள்ளே போகுது. இந்தக் காது வழியே வெளியே வருது. நம்மளோட காரியங்கள் எதுவாக இருந்தாலும் கடவுள் மன்னிக்கட்டும். இந்த விஸ்கி பரவாயில்லையே! இதோட பேர் என்னன்னு சொன்னீங்கண்ணே...?''

"ப்ளூ லேபல்.'' நான் சொன்னேன். "ஃபாதர்... இங்கே அப்பப்போ பெண்கள் வர்றது உண்டுன்னு உங்களுக்குத் தெரியுமில்லியா?'' ஃபாதர் ஸ்பூனால் ஐஸ்கட்டியை எடுத்துக் கொண்டிருந்தார்.  நான் சொன்னேன்: "ஒரு புரோக்கர்தான் பெண்களை இங்கே அழைச்சிட்டு வர்றான்ற விஷயம் ஃபாதர்... உங்களுக்குத் தெரியுமா?'' நான் கேட்ட கேள்விக்கு ஃபாதர் எதுவும் பதில் சொல்லவில்லை. நான் சொன்னேன்: "நம்மோட படமாவன் குஞ்ஞு- அவன்தான் அந்த புரோக்கர். அநேகமாக ஃபாதர்... அவன் ஏற்கெனவே உங்க முன்னாடி கூண்டுல நின்னு தன்னோட தப்புகளையெல்லாம் ஒப்புக்கொண்டிருக்கலாம். ஃபாதர், நான் சொல்றது சரிதானா?'' நான் உரத்த குரலில் சிரித்தவாறு ஃபாதரைப் பார்த்தேன். அவர் ஜன்னல் வழியாக எதையோ வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் நான் சொன்னதை கவனித்தது மாதிரி தெரியவில்லை. சிறிது நேரம்  சென்றதும், ஃபாதர் மான் கறியை எடுத்து வாய்க்குள் போட்டு மென்றவாறு சொன்னார்.

"ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு. மத்தாயி நல்லது இல்லைன்னா இங்க எதையும் கொடுத்து விடுறதே இல்ல!'' நான் சொன்னேன்:

"ஆரம்பத்துல என்னோட துப்பாக்கியை வச்சுத்தான் அவன் எப்படி சுடுறதுன்ற விஷயத்தையே தெரிஞ்சுக்கிடடான்.

அதற்குப் பிறகு நான் அந்தத் துப்பாக்கியை அவன்கிட்டயே கொடுத்துட்டேன். வேட்டைக்குப் போகணும். துப்பாக்கியால ஏதாவது ஒரு மிருகத்தைச் சுடணும்ன்ற ஆசையெல்லாம் படிப்படியா எனக்கு இல்லாமலே போச்சு. ஃபாதர்... காம விஷயங்கள்மேல எனக்கு உண்டான விருப்பம்... துப்பாக்கியை வச்சு வெடிக்கணும்ன்ற ஆசை எப்படி எனக்கு இல்லாம போச்சோ, அதேமாதிரி காம எண்ணங்களும் என்னைவிட்டு ஏன் போகல?'' ஃபாதர் கண்ணாடி டம்ளரில் விஸ்கியை ஊற்றி அதையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு ரசித்துக்கொண்டிருந்தார். பின்னர் இரண்டு மூன்று ஐஸ்கட்டிகளைப் போட்டு, குடிக்க ஆரம்பித்தார்.

"ஃபாதர்...'' நான் சொன்னேன்: "நீங்க இந்த உலகத்துல எவ்வளவோ ஆளுங்களைப் பார்த்திருப்பீங்க. என்னை இனிமேல் இந்த வயசுல காதலிக்க எந்தப் பெண்ணும் வரமாட்டா... உங்களால நான் சொன்னதைப் புரிஞ்சுக்க முடியுதா.''

ஃபாதர் தாடையில் கை வைத்தவாறு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"டேய், வர்கீஸ்...'' நான் சமையலறைப் பக்கம் பார்த்து சத்தம் போட்டேன். "கொஞ்சம் ஆம்லெட் தயார் பண்ணு!'' தொடர்ந்து ஃபாதரிடம் சொன்னேன். "அதுனாலதான் நான் படமாவன் குஞ்ஞுகூட பழகவே ஆரம்பிச்சேன். உண்மை என்ன தெரியுமா? ஃபாதர்... வயசாகிப்போன கிழவன்களையும் கிழவிகளையும் யாருமே காதலிக்காததுக்கு காரணம் என்னன்னு நினைக்கிறீங்க? புத்தகங்கள் ஆயிரம் சொல்லலாம். காதலுக்கு வெறும் இதயம் மட்டும் இருந்தா போதாது. நல்ல மினுமினுப்பான உடலும் வேணும். அந்த ஒரே காரணத்தாலதான் ஜாலியா வாழ்க்கையை நடத்தணும்ன்ற என்னோட ஆசையின் சாவி படமாவன் குஞ்ஞு கையில போய் சிக் கிக்கிடுச்சு. ஃபாதர்... நீங்க என்ன சொல்றீங்க?''


"இளமை போனா முதுமை வரத்தான் செய்யும். என்ன செய்வது.'' ஃபாதர் சொன்னார். நான் சொன்னேன்: "ஃபாதர்... ஒருநாள்... சாயங்கால நேரம். என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே, ஒண்ணுமே இல்லாம நாசமாப் போச்சே... என் ஆசைகள் ஒவ்வொண்ணும் மண்ணாப் போயிடுச்சேன்னு நான் திண்ணையில சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துக்கிட்டு வேதனைப்பட்டுக்கிட்டு இருக்கேன்.

அப்போ படமாவன் வந்து முற்றத்துல நிற்கிறான். "என்னடா குஞ்ஞூ விசேஷம்?"னு நான் கேட்டேன். "ஒண்ணுமில்ல"ன்னு சொல்லிட்டு அவன் ஒரு பீடியைப் பத்த வச்சு இழுக்க ஆரம்பிக்கிறான். ரெண்டு மூணு முறை புகையை விட்டுட்டு அவன் என்னையே பார்த்தான். பணம் கிணம் கடன் வாங்கலாம்னு வந்திருப்பான்போல இருக்குன்னு நான் நினைச்சேன். கொடுக்கலாமா வேண்டாமா? முதல்ல எவ்வளவு கேக்குறான்னு பார்ப்போம்னு நான் அவனுக்காகக் காத்திருந்தேன். அப்போ அவன் கேட்டான்: "ஏண்ணே... இப்படியே தனியா எத்தனை நாளைக்குத்தான் இருக்கப் போறீங்க? உங்களுக்கே வெறுப்பா இல்லியா?" நான் ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு அவனைப் பார்த்து கேட்டேன். "என்னடா பேசுறே? என்னை என்ன இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீயா?" அவன் வராந்தாவுக்குப் பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு சாதாரணமா சொல்ற மாதிரி என்னைப் பார்த்துச் சொன்னான்: "அண்ணே... நீங்க இப்போ கூட திடகாத்திரமா, ஆரோக்கியமாத்தான் இருக்கீங்க... உடம்புல நல்ல தேஜஸ் இருக்கு. நடை, எடுப்பு எல்லாமே நல்லாத்தான் இருக்கு. உங்க பிள்ளைங்க எல்லாம் கல்யாணம் ஆகிப் போயிட்டாங்க. பொண்டாட்டியும் போய்ச் சேர்ந்தாச்சு. கடவுள் உங்களுக்கு எல்லாத்தையும் கொடுத்திருக்கார். கல்யாணம் செய்யிங்கன்னு நான் சொல்லல. காரணம்- அதுக்கெல்லாம் வயசுன்னு ஒண்ணு இருக்கு. ஆனா, ஒரு பெண் பக்கத்துல இருக்கணும்னா அதுக்காக கட்டாயம் கல்யாணம் பண்ணினாத்தான் முடியுமா என்ன? சொல்லுங்கண்ணே.." ஃபாதர், அவன் அப்படிச் சொன்னதும் என் மனசுல எந்த அளவுக்கு சந்தோஷம் உண்டாச்சு தெரியுமா? என் மனசுக்குள்ள நான் சொல்லிக் கிட்டேன். "என்னைப் படைச்ச ஆண்டவனே! நீ என் மனசைப் புரிஞ்சிக்கிட்டு நான் எதற்காக ஏங்கிக்கிட்டு இத்தனை நாட்கள் இருந்தேனோ, அதைக்கூட நிறைவேத்தி வைக்கிறதுன்னு முடிவு பண்ணினியா? இல்லாட்டி சாத்தானை என் பக்கம் அனுப்பி விட்டிருக்கியா?" ஜாலியாக, குதூகலத்தோட இந்த வாழ்க்கையை வாழலாம்னு நான் முடிவெடுத்துட்டேனே தவிர, உண்மையிலேயே நான் பயப்படவும் செஞ்சேன். ஏன் தெரியுமா? ஃபாதர்... தெய்யாம்மாவைப் பத்தி அப்போ எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துல வந்துச்சு. ஃபாதர், நடந்தது என்ன தெரியுமா? ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் என்னோட மகள்கள் ஜெயா, கீதா- இவங்களோட ட்யூஷன் டீச்சர் வீட்டுக்கு ட்யூஷன் சொல்லித் தர்றதுக்கு வந்தப்போ, என் மனைவி தெய்யாம்மா, மகள்கள் ஜெயா, கீதா எல்லாரும் சர்ச்சுக்குப் போயிருந்தாங்க. இன்னும் திரும்பி வீட்டுக்கு வரல. நான் ஏதோ ஒரு தைரியத்தில் கனகம்மாக்கிட்ட சொன்னேன்.  "டீச்சர்... அவங்க வர்றதுக்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். நான் முன்னாடி கேட்ட கேள்வியையே இப்பவும் கேக்குறேன். நாம ரெண்டு பேரும் கொஞ்சம் பிரியமா இருந்தா என்ன?" நான் இப்படிக் கேட்டதும் டீச்சர் வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டு சிரித்தாள். எனக்கு அப்போ வயசு குறைவுதான். பார்க்குறதுக்குக்கூட நல்லாவே இருப்பேன். ஃபாதர்...

அந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய ஃபாதருக்குப் பதிலா சின்ன ஃபாதர் காலை நேரப் பிரார்த்தனையை நடத்தியிருக்கார்.

அன்னைக்கு பிரசங்கம் எதுவும் இல்ல. சின்ன ஃபாதர் வேக வேகமா எல்லாத்தையும் சொல்லுவார். அதனால நான் கனகம்மா டீச்சரைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு தரையில் ஒரு பாயை விரிச்சு படுத்துக்கிடக்கிறப்போ, தெய்யாம்மா தலையில துணியைப் போர்த்திக்கிட்டு கதவைத் திறந்து உள்ளே வந்துக்கிட்டு இருக்கா. அடுத்த அறையில ஜெயாவும் கீதாவும் என்னவோ பேசி சிரிக்கிறாங்க. நான் காரியமே கண்ணாக இருந்ததால், இவங்க ஏற்கெனவே வந்த விஷயத்தை கவனிக்கவே இல்ல. நாங்க இருந்த இடம் ஒரே இருட்டா இருந்ததால், தெய்யாம்மா எங்களை கவனிக்கல. கனகம்மா டீச்சரை அவளோட புடவையால மூடிட்டு நான் வேஷ்டியை எடுத்து கட்டிக்கிட்டு எழுந்து நின்னு மெதுவான குரல்ல கூப்பிட்டேன். "தெய்யாம்மா..."

அவள் துணி மாற்றிக்கொண்டிருந்தாள். அதிர்ச்சியடைந்து அவள் அறையைச் சுற்றிலும் பார்த்தாள். நான் சொன்னேன்: "தெய்யாம்மா நான்தான். நீ விளக்கைப் போடாதே. பிள்ளைங்க பார்த்தா பிரச்சினை ஆயிடும். என்கூட இன்னொரு ஆள் இருக்கு. நீதான் என்னைக் காப்பாத்தணும். அந்தக் கதவை முதல்ல அடை." நான் சொன்னவுடன் தெய்யாம்மா போய் கதவை அடைச்சா. நான் ஓடிப்போய் அவளோட காலடியில் போய் விழுந்து, அவளோட இரண்டு கால்களையும் இறுக கட்டிப்பிடிச்சுக்கிட்டு சொன்னேன்: "நீ என்னை மன்னிக்கணும். இங்கே ஒரு தப்பு நடந்திடுச்சு. இந்த அறையில இப்ப கனகம்மா டீச்சர் இருக்கா." தெய்யாம்மா குனிஞ்சு இருட்டுல என் முகத்தை உற்றுப் பார்த்தா. பேசுறது நான்தானா இல்லாட்டி வேற யாருமான்னு அவளுக்கு சந்தேகம்போல. கொஞ்ச நேரம் கழிச்சு அவளோட ரெண்டு கைகளாலயும் என் தலையையும் முகத்தையும் தொட்டுப் பார்த்தா. ஃபாதர்... எனக்கு இப்போ கூட ஞாபகம் இருக்கு. அவளோட புடவையில சர்ச் மெழுகுவர்த்தியோட மணம் இருந்துச்சு. அவள் கொஞ்ச நேரம் விக்கிவிக்கி அழுதா. அதுக்குப் பிறகு ஒரு சத்தத்தையும் காணோம்.

கனகம்மா ஓடி வந்து தெய்யாம்மாவோட ரெண்டு கைகளையும் பிடிச்சிகிட்டு வாய்விட்டு யாருக்கும் கேட்காத மாதிரி அழுதா. கண்ணீர்த் துளிகள் என் தலைமேல் விழுந்துச்சு. இது யாரோட கண்ணீர்த் துளிகளா இருக்கும்னு நான் யோசிச்சேன். தெய்யாம்மாவோட கண்ணீரா, இல்லாட்டி கனகம்மாவோட கண்ணீரா? கண்ணீரை வச்சு இது யாரோடதுன்றது கண்டுபிடிக்க முடியாதுல்லியா? தலையை உயர்த்திப் பார்க்குறதுக்கு எனக்கும் ரொம்பவும் பயம். யாரோட கண்ணை நான் பார்ப்பேன்? கொஞ்ச நேரம் ஆனவுடனே தெய்யம்மா நடந்துபோய் அடைச்சிருந்த கதவைத் திறந்து வெளியே போய் கதவைத் திருப்பியும் அடைச்சா. நானும் கனகம்மாவும் மட்டும் அறைக்குள்ளே தனியா நின்னுக்கிட்டு இருக்கோம். நடந்த சம்பவத்தைப் பிள்ளைங்ககிட்ட சொல்லி அழுறதுக்காக ஒருவேளை தெய்யாம்மா போயிருப்பாளோ? யாருக்குத் தெரியும்? அப்போ தெய்யாம்மா உரத்த குரல்ல சொல்லிக்கிட்டு இருந்தது காதுல விழுந்துச்சு: "அடியே கீதா, ஜெயா... நீங்க ரெண்டு பேரும் அந்த நெல்லிக்காய் மரத்துக்கிட்ட போயி கூட்டு வைக்கிறதுக்கு பாவைக்காய் பறிச்சிட்டு வாங்க. போங்க... போங்க..." மகள்கள் ரெண்டு பேரும் கிளம்பிப் போயிட்டாங்கன்னு தெரிஞ்சப்புறம், நான் முன்பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.


தரையில வெளிச்சம் விழுந்துச்சு. கனகம்மா ஒரு பக்கம் ஒதுங்கி நின்னா. நான் வராந்தாவுல போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, அங்கேயிருந்த பத்திரிகையை எடுத்துப் பார்த்தேன். அதுல இருந்த எதுவுமே என் மனசுக்குள்ள நுழையல. நான் எந்திரிச்சு உள்ளே பார்த்தப்போ கனகம்மா டீச்சர், அவ எப்பவும் ட்யூஷன் சொல்லித் தர்ற மேஜைக்குப் பக்கத்துல நோட்டுப் புத்தகத்தைத் திறந்து வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கா. தெய்யாம்மா சமையலறையில என்னவோ செஞ்சிக்கிட்டு இருக்கிற சத்தம் கேக்குது. கொஞ்ச நேரம் போனதும் அவ ரெண்டு டம்ளர் காப்பியோட வந்து, ஒரு டம்ளரை என்கிட்டயும் இன்னொரு டம்ளரை கனகம்மாகிட்டயும் கொடுத்தா... ஃபாதர்... அன்னைக்கு ராத்திரி அவ என்கிட்ட கேட்டது இது ஒண்ணுதான். "என்னை உங்களுக்குப் பிடிக்கலியா? கனகம்மா என்னைவிட நல்லா இருக்காளா?" நான் அழுதுகிட்டே அவகிட்ட சொன்னேன்: "என் தெய்யா... எப்படியோ நான் இப்படியொரு காரியத்தைச் செஞ்சிட்டேன். இனி நிச்சயம் எந்தக் காலத்திலயும் இப்படி நடக்க மாட்டேன். நீ என்னை மன்னிக்கணும்." இது நடந்து பல வருடங்களுக்குப்  பின்னாடி, என் மகள்கள் கல்லூரிக்குப் போகிற வரை கனகம்மாதான் அவங்களுக்கு ட்யூஷன் சொல்லித் தந்தா... ஃபாதர்... தெய்யாம்மா சாகுறதுவரை, நான் இன்னொரு பெண்ணைத் தொட்டுப் பார்த்தது கூட இல்ல. படமாவன் இப்படிச் சொன்னதும் தெய்யாம்மாவை நினைச்சுப் பார்த்தேன். மனசுக்குள்ள சங்கடமா இருந்துச்சு. நான் படமாவன்கிட்ட சொன்னேன்: "டேய்... நீ சொல்றதைக் கேக்குறப்போ ஒருவிதத்துல சரிதான். ஆனா, இப்படி நினைச்சுப் பாரு. நான் செத்துப்போயிட்டேன்னு வச்சுக்கோ. தெய்யாம்மா வயசு ஒண்ணும் அதிகம் ஆகாம இப்படி அவ மட்டும் தனியா இருக்கான்னு வச்சுக்கோ. அவளுக்கொரு துணை வேணும்னு நினைச்சா, என் ஆத்மா அதை ஒத்துக்குமா? அது தெரிஞ்சா நீகூட என்ன நினைப்பே? இந்த முற்றத்துல அப்படி ஒரு காரியம் நடந்தா, காரித்துப்பிட்டு போகமாட்டியா?" படமாவன் சொன்னான்: "அண்ணே... தெய்யாம்மா அக்கா இப்ப உயிரோட இல்ல. அவங்க செத்துப் போயி எவ்வளவோ நாளாச்சு. இனி அதை எல்லாம் நினைச்சுப் பார்த்தா பிரயோஜனமே இல்ல. இப்ப இருக்கிறது அண்ணே... நீங்கதான். உங்களோட மனசாட்சியும் ஆசையும் ஒண்ணு சேர்றது எப்படின்னு முதல்ல பாருங்க. நான் இங்கே வந்தது ஒரு முக்கியமான விஷயத்துக்காகத்தான்றதை மட்டும் நீங்க ஞாபகத்துல வச்சுக்கோங்க".

ஃபாதர்... சிந்திச்சுப் பார்த்தா, படமாவன்கூட நான் வச்ச கொடுக்கல் வாங்கல்கள் என் எண்ணங்களோட கொஞ்சம்கூட ஒத்துப் போகக் கூடியது இல்ல... ஆனா, காம எண்ணங்களை மனசுல வச்சக்கிட்டு இருக்கிற ஒரு வயசான மனிதனோட வாழ்க்கை இப்படித்தான் போகும்... இந்தப் புத்தகங்கள்ல சொல்றதெல்லாம் உண்மையே இல்ல. இதயத்துக்கு எல்லாம் இங்கே வேலையே கிடையாது. நம்ம உடம்புதான் முக்கியம். ஆனா, நான் நினைக்கிறது வேற. இது எல்லாமே எனக்கு இருக்கே! கடவுள் என்னை வாழறதுக்கும், இந்தப் பாவங்களையெல்லாம் நினைச்சுப் பார்க்குறதுக்கும் அனுமதிச்சிருக்காரே! நானும் தெய்யாம்மாவைப் போல செத்துப் போயிருந்தா? ஃபாதர்... ஆளுங்க செத்துப் போறதையும் உயிரோட இருக்கிறதையும் என்னைப் பொறுத்தவரை ரெண்டையுமே ஒரே மாதிரியான வினோதமான விஷயங்களாகத்தான் நான் நினைக்கிறேன்.''

இதைக் கேட்டதும் ஃபாதர் சிரித்தார். அவர் சொன்னார்: "நல்லா சொன்னீங்க அண்ணே... நாம வாழறப்போதான் நாம மரணத்தைப் பற்றி சிந்திச்சுப் பார்க்க முடியும். செத்துப் போன பிறகு, வாழ்றதைப் பற்றி யாராவது நினைச்சுப் பார்க்க முடியுமா?''

நான் சொன்னேன்: "அய்யோ... ஃபாதர், உங்களுக்கு நான் சொன்னது ஒருவேளை போரடிக்க ஆரம்பிச்சிடுச்சோ? நான் இதையெல்லாம் உங்களைவிட்டா வேறு யார்கிட்ட போய்ச் சொல்றது? அதனாலதான் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்றேன்!''

ஃபாதர் சிரித்தவாறு என் தோளில் கை வைத்தவாறு தலையை ஆட்டினார். தொடர்ந்து கண்ணாடி டம்ளரில் விஸ்கியை ஊற்றி ஒரே மடக்கில் குடித்துவிட்டு கீழே கிடந்த ஐஸ் கட்டியை எடுத்து வாயில் போட்டார்.  "நீங்க சொல்லிக்கிட்டு இருக்குற எல்லா விஷயத்தையும் நான் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். அது ஒண்ணும் போரடிக்கல...'' ஃபாதர் சொன்னார்.

"சரி... அப்படின்னா நான் தொடர்ந்து விஷயத்துக்கு வர்றேன்.'' நான் சொன்னேன். "கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நான் படமாவன்கிட்ட சொன்னேன்: "டேய், குஞ்ஞூ.. நீ எனக்காக புரோக்கர் வேலை பார்த்து எவ்வளவோ காலமாயிடுச்சு. நீ எனக்கு நல்லதும் பண்ணியிருக்கே- கெட்டதும் பண்ணியிருக்கே. என்னைப் பல நேரங்கள்ல ஏமாற்றமடையவும் செஞ்சிருக்கே. பல நேரங்கள்ல எதிர்பார்த்ததுக்கும் மேலேயே சந்தோஷப்படவும் வச்சிருக்கே. நீ உன்னோட தொழிலை ஒழுங்கா, உண்மையா செஞ்சிக்கிட்டு இருக்கே. இந்தத் தொழிலை நீ ஏன் தேர்ந்தெடுத்தேன்றதைத்தான் என்னால புரிஞ்சுக்கவே முடியல. காரணம் என்னன்னா உலகத்துல இருக்குற வேற எவ்வளவோ வேலைகளைச் செஞ்சு உன்னால காசு சம்பாதிக்க முடியும். அதுக்கான திறமை உன்கிட்ட இருக்கு!'' நான் வராந்தாவுல போட்டிருக்குற சாய்வு நாற்காலியில சாஞ்சு உட்கார்ந்திருக்கேன். படமாவன் குஞ்ஞு ஒரு பீடியைப் புகைச்சுக்கிட்டே பக்கத்துல இருந்த தூண்ல சாஞ்சு நின்னுக்கிட்டு இருக்கான். அவன் பிடிச்ச பீடியை முற்றத்துக்கு வெளியே தூக்கி எறிஞ்சிட்டு என்னைப் பார்த்து சிரிச்சான்: "அண்ணே... நீங்க என்ன சொல்றீங்க?" -அவன் கேட்டான். நான் சொன்னேன்: "நான் உன்னைப் பற்றி பல விஷயங்களையும் நினைச்சுப் பார்த்தேன்!" ஆனால் என் மனசுல என்னவோ இருக்குன்னு அவன் எண்ணியிருக்கணும். கொஞ்ச நேரத்திற்கு அவனும் நானும் எதுவுமே பேசிக்கல. சில நிமிடங்கள் போனபிறகு, அவன் முற்றத்துல இறங்கி, ஒரு காலால் மண்ணைக் கிளறிக்கிட்டு சொன்னான்: "கடவுளுக்குத் தெரியாம இந்த உலகத்துல எந்தக் காரியமும் நடக்குறது இல்ல. அண்ணே..., நான் முற்றத்துல இறங்கி அவனையும் என்கூட கூட்டிக்கிட்டு நடந்துக்கிட்டே சொன்னேன்:  "டேய் குஞ்ஞு, என மனசுலே ஒரு விருப்பம்..." அவன் எதுவும் பேசாமல் என்னையே பார்த்து நின்னுக்கிட்டிருந்தான். நான் சொன்னேன்: "படமாவா... எனக்கு எவ்வளவோ வயசாயிடுச்சு. பெண்கள் விஷயத்துல என் மனசுல நிறைவேறாத ஆசைகள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அவங்க சம்பந்தப்பட்ட சில விஷயங்களை நான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. உதாரணத்திற்கு ஒரு கொள்ளைக்காரியோட உள்மனசு எப்படி இருக்கும்? அதை நான் அவகூட படுக்குறப்போ என்னால தெரிஞ்சிக்க முடியுமா?"

படமாவன் முற்றத்தின் ஒரு மூலையில் இருந்த இலந்தை மரத்தில் இருந்து மூணு நாலு இலந்தைப் பழங்களைப் பறிச்சு எடுத்துக்கிட்டு வந்தான்.


என் முன்னாடி அதை நீட்டினான். ஒரே ஒரு பழத்தை நான் எடுத்துக்கிட்டு சொன்னேன்: "என்னோட அப்பா வச்ச மரம் இது. நல்ல சுவையா இருக்கும்!" படமாவன் இலந்தையைத் தின்னுக்கிட்டே என்கிட்ட கேட்டான். "அண்ணே... நீங்க மகாத்மா காந்தியோட சுயசரிதையைப் படிச்சிருக்கீங்களா?" அவன் என்ன காரணத்தாலோ விஷயத்தை மாற்றுகிறான்றதை நான் புரிஞ்சுக்கிட்டேன். இருந்தாலும் நான் சொன்னேன்: "படிக்கணும்னு பல தடவை நினைச்சிருக்கேன். ஆனா, காலம் கடந்து போயிடுச்சு. நீ அதைப் படிச்சிருக்கீயா?' "படிச்சிருக்கேன்." அவன் சொன்னான். "நீ எங்கே அதைப் படிச்சே?" நான் கேட்டேன். "படிப்பகத்துல எடுத்து படிச்சேன்."

அவன் சொன்னான்.  "நீ எதற்கு காந்தியோட சுயசரிதத்தையும், மத்த புத்தகங்களையும் படிக்கிறே?'' நான் கேட்டேன். "சும்மாதான்..."

அவன் சொன்னான்: "அண்ணே... அதுல காந்தி இந்த மாதிரியான சில விஷயங்களைச் சோதனை பண்ணி பார்த்ததைச் சொல்லி இருக்காரு. அண்ணே... நீங்க அதைக் கொஞ்சம் படிச்சுப் பார்த்தா, உங்களுக்குப் பிரயோஜனமா இருக்கும்!" "நல்லாச் சொன்னடா, குஞ்ஞு..." நான் சொன்னேன்: "இந்தப் பாவம் பிடிச்ச நான் நினைக்கிறது ஒண்ணும் அவ்வளவு மோசமில்லடா..." ஃபாதர் கண்ணாடி டம்ளரை மேஜைமேல் வைத்துவிட்டு, ஒரு கையை உயர்த்திக் காட்டியவாறு சொன்னார்: "அண்ணே... படமாவன் சொன்னது சரியில்ல. சுயசரிதையில காந்திஜி இந்த மாதிரியான விஷயங்கள் எதையும் சொல்லல. அதெல்லாம் அவர் பின்னாடி செஞ்சு பார்த்த சோதனைங்க அண்ணே... நீங்க மனசுல நினைச்ச விஷயங்களை காந்தி மனசுல நினைக்கல. முதல்ல அதைப் புரிஞ்சுக்கோங்க!" நான் சொன்னேன்: "படமாவன் என்னைப் பார்த்து காந்தியோட சுயசரிதையைப் படிச்சிருக்கீங்களான்னு கேட்டான். அப்போ அவன் என்னை ஏமாத்திட்டான்னு சொல்றீங்களா? நான் அவன் சொன்னதைப் பெரிசா நினைச்சுக்கிட்டு கோட்டயத்துக்குப் போயி அந்தப் புத்தகத்தை வாங்கிட்டு வந்தது வீண் வேலைன்னு சொல்றீங்களா? நான் அதைப் படிக்கணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். என்னோட அனுபவங்களுக்கும் காந்தியோட அனுபவங்களுக்கும் ஏதாவது ஒத்துப் போகுதான்னு பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா, ஃபாதர்... ஒண்ணு மட்டும் நிச்சயம். என் வாழ்க்கையில நடந்தது மாதிரி ஒரு ஆச்சரியமான விஷயம் நிச்சயம் காந்தியோட வாழ்க்கையில நடந்திருக்கறதுக்கு வாய்ப்பே இல்ல. அது பாவியான எனக்கு ஏதோ ஒரு அடையாளம்போல கடவுள் காட்டினது. நான் கொஞ்சம் போர்த்திக்கிறேன். ஃபாதர்... எனக்கு ஒரே பயமா இருக்கு. கண் ஆபரேஷன் வேற பண்ண வேண்டியதிருக்கு. ஏதாவது நடக்கக்கூடாதது நடந்திடுச்சுன்னா...?''

ஃபாதர் சொன்னார்: "யோஹன்னான் அண்ணே... கடவுள் என்ன நினைக்கிறார்ன்றதை நம்மால கண்டுபிடிக்க முடியாது. நமக்கு அது தெரியவும் தெரியாது. நம்மால எட்டிப்பிடிக்க முடியாத ஒரு மனிதர் காந்திஜி!''

நான் சொன்னேன்: "அப்பன்னா போகட்டும். ஃபாதர்... ஒரு புத்தகத்தை வாங்கினது நஷ்டமாப்போச்சு. அவ்வளவுதான்! இருந்தாலும், நான் படமாவன்கிட்ட சொன்னேன்: "டேய்... எனக்கு மனநிலையில் வித்தியாசம் உள்ள சில பெண்கள்கிட்ட பழகணும். அதாவது- அவுங்களோட பழக்க- வழக்கங்களும் மனசுல உள்ள எண்ணங்களும் மாறுபட்டதா இருக்கணும். அவங்களைப் பத்தி என்னோட மனசுல ஒரு பட்டியல் இருக்கு. நான் சொல்றேன். நீ எழுதிக்கோ." அவன் வராந்தாவில் கிடந்த ஒரு பத்திரிகையைக் கிழிச்சு கையில் வச்சிக்கிட்டு சொன்னான். "அண்ணே... ஒரு பேனா கொடுங்க." நான் உள்ளே போய் ஒரு பென்சிலை எடுத்துக்கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தேன். "பென்சில்தான் இருக்கு. இதை வச்சு எழுது." நான் சொன்னேன். தொடர்ந்து பதிமூணு வகையில மாறுபட்ட டைப்ல இருக்குற பெண்களோட ஒரு பெரிய பட்டியலையே அவன்கிட்ட நான் சொன்னேன். ஃபாதர்... அந்தப் பட்டியல்ல...'' என்று நான் சொல்ல வாய் எடுத்தபோது, ஃபாதர் என் கையைப் பிடித்து அழுத்தினார். "யோஹன்னான் அண்ணே...'' ஃபாதர் சொன்னார். "நான்தான் ஏற்கெனவே சொன்னேனே, பெரிய அளவில் விவரமா எனக்கு இந்த விஷயங்களைச் சொல்ல வேணாம்னு.''

"சரிதான்...'' நான் சொன்னேன். "ஒருவகையில் பார்க்கப் போனா ஃபாதர், நீங்க தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயங்கள் ஒண்ணும் இல்ல அது. ஃபாதர்... சரி... சுருக்கமாகவே சொல்றேன். அந்தப் பட்டியல்ல தெய்வ வசனங்களை உச்சரிக்கிற பெண்ல இருந்து இந்து மதத்தைப் பரப்புறவ வரை இருந்தாங்க.'' நான் இப்படிச் சொன்னதும் ஃபாதர் இரண்டு கைகளையும் உயர்த்தினார். "ஃபாதர்... நான் ஒண்ணும் உங்களை போரடிக்கல. மீதி நடந்தது என்னன்றதையும் நான் சொல்லிக்கிறேன். நீங்க கேட்டுக்கோங்க. குஞ்ஞு அந்தப் பட்டியலை முழுவதுமா படிச்சிட்டு சொன்னான்: "என்னைக்கு இருந்து அதை ஆரம்பிக்கலாம் அண்ணே..."

அவன் அப்படிக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைஞ்சு நின்னுட்டேன். அவன் எந்தவித தயக்கமும் இல்லாமல் நான் சொன்ன விஷயத்தைச் செய்றேன்னு ஒத்துக்கிட்டானே! அதுலதான் நான் ஆச்சரியப்பட்டு நின்னுட்டேன். "டேய்..." நான் சொன்னேன். "வர்ற மாசம் நான் கண் ஆபரேஷனுக்காக மதுரைக்குப் போறதா இருக்கு. அங்கே இருந்து திரும்பி வந்தபிறகு இதைச் செஞ்சா போதும். காரணம் என்ன தெரியுமா? உண்மையாகச் சொல்லப் போனா நீ இதுவரை கொண்டு வந்த எந்தப் பெண்ணையும் சரியா பார்த்ததுகூட இல்லடா. வழியில நான் நடந்து போறப்ப என்னை அடையாளம் தெரிஞ்சு, என்னையே வச்ச கண் எடுக்காம அவங்க பார்த்து நின்னுக்கிட்டு இருப்பாங்க. ஆனா, எனக்கு அவுங்க யார்ன்னே தெரியாது. இதுதான் பெரிய பிரச்சினையே!" குஞ்ஞு முற்றத்துல உட்கார்ந்து விரலால் மணல்ல என்னவோ எழுதுறதும் அழிக்கிறதுமா இருந்தான். கொஞ்ச நேரம் கழிச்சு அவன் எந்திரிச்சு நின்னு சொன்னான்: "அண்ணே... ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கோங்க. உங்களுக்கு கண் ஆபரேஷன் நடக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதுன்னா என் கையில எல்லா பெண்களும் இருக்காங்க. பள்ளிக்கூடங்களை மூடிட்டாங்கன்னா அவங்க எல்லாம் எங்கே இருக்காங்கன்னே தெரியாம வேற வேற இடங்களுக்கு சிதறிப் போயிடுவாங்க. அதனால இந்த விஷயத்தை உடனடியாகச் செஞ்சாதான் சரியா இருக்கும்." "சரி... அப்படின்னா நீ சொல்ற மாதிரியே நடக்கட்டும்." -நான் சொன்னேன். "ஆனா... ஒரு விஷயம் இருக்கு..." குஞ்ஞு சொன்னான். அவன் பண விஷயத்தைப் பற்றி பேசப்போறான்னு நான் நினைச்சேன். அப்போ அவன் சொன்னான்: "அண்ணே... நான் இங்கே கொண்டு வரப்போற ஒவ்வொருத்தரும் சாதாரணமானவங்க இல்ல. சமூகத்துல அவுங்களுக்குன்னு ஒரு நல்ல இடத்தை வச்சிக்கிட்டு இருக்குறவங்க.

அண்ணே... அவுங்களை நீங்க வேற ஏதாவது காரியமா பார்க்கப் போறது மாதிரி எதிர்காலத்துல ஒரு சூழ்நிலை வருதுன்னு வச்சுக்கோங்க.


அப்ப உங்க முகத்தைப் பார்க்குறப்போ அவுங்களுக்கு ஒரு மாதிரி ஆயிடக்கூடாது. அதனால, அவுங்க உங்க பக்கத்துல இருக்குறப்போ நீங்க அறையில இருக்குற விளக்கைப் போடக்கூடாது. முழுசா அணைச்சிடணும். அண்ணே... உங்களுக்கு இதுல ஒண்ணும் பிரச்சினை இல்லியே!"

"அது ஒரு பெரிய பிரச்சினையே இல்ல." நான் சொன்னேன். "குஞ்ஞு... எப்படி நினைக்கிறியோ அப்படியே நடக்கட்டும். பிறகு... இந்தக் காரியத்தை நான் செய்றதுக்குக் காரணமே அவுங்களோட மனசை நான் புரிஞ்சிக்கணும்ன்றதுக்குத்தான். சரி... இப்போ உன்னோட ரேட் எவ்வளவுன்னு சொல்லு..." அவன் கொஞ்ச நேரம் வராந்தாவுல சுவர்ல மாட்டியிருந்த என்னோட பெரியப்பா, பெரியம்மாவோட புகைப்படங்களைப் பார்த்துக்கிட்டு நின்னான். பிறகு சொன்னான்: "அண்ணே இந்த விஷயத்தை நான் செய்றதுக்கு உங்ககிட்ட ரேட்னு ஒண்ணு நான் கேட்கல. ஒரே ஒரு விஷயத்தை எனக்கு நீங்க செஞ்சு தந்தா போதும்." "சரி... சொல்லு... செய்றேன்." நான் சொன்னேன். அதே நேரத்துல என் மனசுக்குள்ள நான் நினைச்சேன்... உலகத்துல இல்லாத ஒண்ணைச் சொல்லி வேணும்னு கேக்கப் போறான். அப்ப என்ன செய்யப் போறேனோன்னு. ஆனா... ஃபாதர், அவன் ஒண்ணும் பெரிசா கேக்கல. அவன் என்ன கேட்டான் தெரியுமா? "அண்ணே... நான் இதுவரை கேரளத்தைத் தாண்டிப் போனதே இல்ல.... சினிமாவுல தவிர வேற எங்கேயும் பனியை நான் பார்த்ததே இல்ல. கேரளத்தை விட்டு வேற எங்கேயாவது வெளியே போயி பனி இருக்குற இடமா நான் பார்த்துட்டு வரணும். அண்ணே... நீங்க எனக்கு அந்த ஏற்பாட்டை மட்டும் செஞ்சு கொடுத்தா போதும். நான் கொண்டுவர்ற பெண்களுக்கு அண்ணே... நீங்க நல்ல மாதிரி ஏதாவது தாங்க. நீங்க இதுவரை செஞ்சதைப் பத்தி யாரும் ஒரு குறையும் என்கிட்ட சொன்னது இல்ல." "டேய்... குஞ்ஞு!" நான் சொன்னேன்: "உனக்கு இதுதானே நான் செய்யணும். நிச்சயம் நான் இந்த ஏற்பாட்டைச் செஞ்சு தர்றேன். ஆனா, பனிக்கு நான் எங்கேடா போவேன்?" "காசியில பனி இருக்குமாண்ணே?" அவன் கேட்டான். நான் அவனைப் பார்த்துக் கேட்டேன்: "டேய்... ஒரு கிறிஸ்துவனான உனக்கு காசியில என்னடா வேலை? அங்க போறவங்க யாரு தெரியுமா? மரணமடையணும்னு நினைக்கிற இந்துக்கள்..." அவன் சொன்னான்: "அங்க இருக்குற ஆத்துல இறங்கி குளிச்சா நல்லதுன்னு நான் ஏதோ ஒரு புத்தகத்துல படிச்சிருக்கேன்." நான் சொன்னேன்: "டேய், படமாவா! இரு... பனி இருக்குற இடம் எங்கே இருக்குன்னு நான் விசாரிச்சுப் பாக்குறேன். டிக்கெட் எடுத்துத் தந்து, செலவுக்குப் பணமும் நான் தர்றேன். நீ இப்பத்தான் முதல் தடவையா உனக்குன்னு இருக்குற ஒரு விருப்பத்தை என்கிட்ட சொல்லி இருக்கே! நான் அதைச் செஞ்சு தராம இருப்பேனா? அப்ப... நமக்குள்ள நடக்க வேண்டிய ஒப்பந்தம் முடிஞ்சாச்சு இல்லியா?" "ஆமா..." அவன் சொன்னான்.

"ஃபாதர்.'' நான் சொன்னேன்: "நான் கொடுத்த பட்டியல்ல இருந்த பெண்கள்ல தினமும் ஒருத்தியை அவன் என்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு வருவான்.'' இதைச் சொல்லிவிட்டு நான் ஃபாதரை உற்று பார்த்தேன். அவர் கொஞ்சம் விஸ்கியை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதைக் கையால் சுற்றியவாறு, வெளிச்சத்துக்கு நேராகப் பிடித்துப் பார்த்தார். அப்போது சர்ச்சில் பிரார்த்தனை முடிந்து மணியடித்தது. ஃபாதர் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, சிலுவை வரைந்தவாறு கண்களை மூடினார். நானும் கண்களை மூடி ஒரு நிமிடம் கடவுளை நினைத்துப் பார்த்தேன். நான் மனதிற்குள் சொன்னேன்: "என்னைப் படைத்த கடவுளே... என்னை மன்னிச்சிடு. எனக்கு இவ்வளவு வயசாயிடுச்சு. இனி எவ்வளவு நாட்களுக்கு நான் உயிரோட இருக்கப் போறேனோ தெரியல... கண்ல ஆபரேஷன் வேற பண்ண வேண்டியதிருக்கு." நான், ஃபாதர் எப்போது கண்களைத் திறப்பார் என்பதற்காகக் காத்திருந்தேன். அவர் கண்களைத் திறந்தபோது நான் சொன்னேன்: "ஃபாதர்... நான் நடந்த விஷயத்தைச் சொல்லிடட்டா?'' ஃபாதர் ஒன்றுமே பேசவில்லை. நான் சொன்னேன்: "ஃபாதர்... இதைக் கொஞ்சம் விவரமாத்தான் சொல்லி ஆகணும். அப்படிச் சொன்னாதான், நான் முழுமையா இந்த விஷயத்தைச் சொன்னேன்ற மாதிரி ஆகும். நான் சொல்லட்டுமா?'' ஃபாதர் தலையை ஆட்டினார். தொடர்ந்து கண்களை மூடியவாறு, தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்க்கும்போது உறங்குவதைப்போல இருந்தது. ஆனால்...

கண்ணாடி டம்ளரை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு அவர் லேசாக அதைச் சுற்றினார். நான் சொன்னேன்: "ஃபாதர்... நான் சொன்னா நம்ப மாட்டீங்க. படமாவன் கொண்டு வந்த பதிமூணு பெண்களுக்கும் ஒரே இடத்துல மரு இருந்துச்சு. ஒரே இடத்துல... ஃபாதர்! வலது பக்க தொடைக்கு மேலே உள் பக்கமா... தொட்டுப் பார்த்தா விரல்ல தட்டும். ஒரு தடவை... ரெண்டு தடவை... அஞ்சாவது தடவையும் அந்த மருவைப் பார்த்ததும், எனக்கு வந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்ல. ஒவ்வொரு தடவையும் மருவைப் பாக்குறப்போ என் மனசுல தோணும்- இதென்னடா அதிசயமா இருக்கு! இப்படியும் உலகத்துல நடக்குமா என்னன்னு நினைப்பேன். ஆனா, அதைப் பத்தி எப்படி வாயைத் திறந்து கேக்குறதுன்னு நினைச்சுக்கிட்டு பேசாம இருந்திடுவேன். சொல்லப்போனா மனசுக்குள்ள ஒருவித பயமே எனக்கு உண்டாயிடுச்சு. ஒவ்வொரு பெண்ணும் என்னைத் தேடி வர்றப்போ, இந்தத் தடவையும் மரு கட்டாயம் இருக்குமோன்னு, சொல்லப்போனா, முன்கூட்டியே நான் பயப்பட ஆரம்பிச்சிட்டேன். பெண் என்னோட அறைக்குள்ள நுழைஞ்ச உடனே, நான் பார்க்குற முதல் விஷயமே மரு இருக்கான்னு  கவனிக்கிறதாத்தான் இருக்கும். எனக்கு மூளையில ஏதாவது பிரச்சினையோன்னு அவங்ககூட என்மேல சந்தேகப்பட்டிருக்கலாம். கடைசியில, பதிமூணாவது பெண் என் பக்கத்துல இருக்குறப்போ, அவளோட தொடையைத் தடவிப் பார்த்தேன். அதேமாதிரி மரு இருந்துச்சு! அவ்வளவுதான்- ஆடிப்போனேன். "என்னைப் படைச்ச கடவுளே!"ன்னு இருட்டுல உரத்த குரல்ல கத்திட்டேன். என் உடம்பெல்லாம் பயங்கர வலி. தெப்பமா வியர்வையால உடம்பு முழுக்க நனைஞ்சு போச்சு. வாய் முழுசா வறண்டு போச்சு. கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டேன். மூச்சைக்கூட சரியா விட முடியல. இருட்டுல தரையில கிடந்தேன். என்கூட இருந்த பெண் பயந்து போயிட்டா... ஃபாதர்... அவள் விளக்கைப் போட்டுட்டு என் பக்கத்துல ஓடி வந்து நின்னு, என்னோட நெத்தியில கையை வச்சு பார்த்தா. நான் அவளோட முகத்தை உற்றுப் பார்த்துட்டு ரெண்டு கண்களையும் மூடிக்கிட்டேன்.


காரணம்- ஃபாதர், அவள் தியானம் செய்யவும், பிரார்த்தனை செய்யவும் இருக்குற நம்ம கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண். அப்படிப்பட்ட சேவையில இருக்கிற ஒரு பெண்ணை இப்படியொரு தொழில் பண்றவளா பார்க்க என் மனசு இடம் கொடுக்கல. நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: "திடீர்னு எனக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு. இப்போ ஒண்ணும் பிரச்சினை இல்ல. நீ போயி லைட்டை ஆஃப் பண்ணு." அவ முகம் பார்க்க ரொம்ப அழகாகவே இருந்துச்சு, ஃபாதர். அவ முகம் இப்பக்கூட என் ஞாபகத்துல இருக்கு. விளக்கை அணைச்சிட்டு வந்த அவளைப் பார்த்து நான் சொன்னேன். "ஏம்மா... இங்க வா... என்னை நீ தப்பா நினைக்கக் கூடாது. நான் ஒரு விஷயம் உண்மையான்னு தெரிஞ்சுக்கணும்."அவள் இருட்டுல தரையில உட்கார்ந்திருந்த என் பக்கத்துல வந்து நின்னா. நான் என் சந்தேகத்தைத் தீர்க்குறதுக்காக இன்னொரு முறை அவளைத் தொட்டுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை. அதே மருதான். அவளும் முழுசா வியர்வையில நனைஞ்சு போயிருந்தா. நான் அவளோட கைகள் ரெண்டையும் பிடிச்சு என் கைக்குள்ள வச்சிக்கிட்டு சொன்னேன்: "பெண்ணே... நீ ஒரு தெய்வ நம்பிக்கை கொண்டவள்தானே? அற்புதங்கள் நடக்கிறதில நம்பிக்கை உள்ள பெண்தானே?" "ஆமா..." அவள் சொன்னாள். நான் சொன்னேன்: "என் வாழ்க்கையில ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்திருக்கு. என்னைப்போல இருக்குற ஒருத்தனோட வாழ்க்கையில அற்புதமான காரியங்கள் நடக்குறதுன்றது அவ்வளவு நல்ல விஷயமா எனக்குப்படல. ஒருவேளை நடக்குற இந்த விஷயங்கள் எல்லாம் பிசாசோட வேலையாக்கூட இருக்கலாம். இல்லாட்டின்னா கடவுள் ஏதோ மனசுல வச்சுக்கிட்டு எனக்குத் தர்ற எச்சரிக்கையாகூட இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், கடவுள் இதை செஞ்சாலும் சரி, பிசாசு பண்ணினாலும் சரி, எனக்கு ஒரே பயமா இருக்கு. ஏம்மா... எனக்காக நீ பிரார்த்திப்பியா?" நான் இப்படிச் சொன்னதும் அவள் ஒரு விதத்துல அதிர்ந்து போயிட்டா. ஆனால் நான் அவளோட கைகள் ரெண்டையும் பலமா பிடிச்சுக்கிட்டு சொன்னேன்: "என்னைப் போல பாவம் செஞ்சவங்களுக்கு இல்லாம வேற யாருக்குத்தான் நல்லவங்க பிரார்த்திப்பாங்க? எனக்கு கட்டாயம் நீ உதவணும்." நான் அவளோட கைகள் ரெண்டையும் எடுத்து என்னோட தலையில வச்சேன். நான் சொன்னேன்: "பாவியான எனக்காக நீ கடவுள்கிட்ட பிரார்த்தனை செய்யணும். கடவுள் ஆதரவு இல்லாம நின்னுக்கிட்டு இருக்குற எனக்கு ஆச்சரியமான விஷயங்களை இனிமேலும் காட்டாம இருக்கணும்னு நீதான் அவர்கிட்ட வேண்டிக்கணும்!" நான் அவள் முன்னாடி முழங்கால் போட்டு தலைகுனிஞ்சு நின்னேன். ஃபாதர்... அப்ப என்ன நடந்துச்சு தெரியுமா? இருட்டுல என் கண்களுக்கு முன்னாடி அவளோட மரு ஒரு நெருப்புத்துண்டு மாதிரி பிரகாசமா தெரிஞ்சது. ஆனா, என்னைச்சுத்தி எதையுமே பார்க்க முடியாத இருட்டு. ஆனா, என் தலையில கையை வச்சு உடம்பெல்லாம் வேர்த்துப்போய் அந்தப் பெண் நின்னுக்கிட்டு இருக்கா... ஃபாதர்... அப்போ அவளோட தொடை, மரு எல்லாமே அந்த இருட்டுல, ரேடியம்னு நாம சொல்லுவோம்ல... அது மாதிரி பயங்கர பிரகாசமா இருக்கு. என் கண்களை அந்த இடத்தைவிட்டு நகர்த்தாம அதையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.  இது நரகத்தோட வெளிச்சமா- இல்லாட்டி சொர்க்கத்தோட வெளிச்சமான்னு நான் சிந்திச்சிக்கிட்டு இருந்தப்போ, என்ன காரணத்தாலோ என் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. நான் அப்படியே தரையில உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா, அந்தப் பெண்ணை அறையில காணோம். அவள் வெளியே போயிட்டான்றதை அப்பத்தான் புரிஞ்சிக்கிட்டேன். ஃபாதர்... அன்னைக்கு ராத்திரி எனக்குக் கொஞ்சமாவது தூக்கம் வரணுமே! கண்களை கொஞ்சம் மூடினா கூட போதும். அந்தப் பெண்ணோட தொடையும், மருவும் என் கண் முன்னாடி படு பிரகாசமா நெருங்கி நெருங்கி வரும். அதோட புகைவண்டி வர்றது மாதிரி ஒரு ஓசை வேற கேட்கும். அவளுக்குச் சேர வேண்டிய பணத்தை அடுத்த நாள் படமாவன்கிட்ட நான் கொடுத்து அனுப்பினேன். அவன்கிட்ட இந்த விஷயத்தைப் பத்தி ஒரு வார்த்தைகூட சொல்லல.''

ஃபாதர் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். டம்ளரில் இன்னும் கொஞ்சம் விஸ்கியை ஊற்றிக் குடித்தார். பிறகு என்னைப் பார்த்துக் கேட்டார்: "அண்ணே... அவள் உங்களுக்காக பிரார்த்தனை செஞ்சாளா?'' நான் சொன்னேன்: "பிரார்த்தனை பண்ணினா...''

அவர் கேட்டார்: "என்ன சொல்லி பிரார்த்தனை பண்ணினா?''

நான் சொன்னேன்: "ஃபாதர்... அவ பிரார்த்தனை செய்றான்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். அவ்வளவுதான்.''

"எப்படி?'' ஃபாதர் கேட்டார்.

"அவ தன்னோட கையை என் தலையில வச்சிருந்தாளா? அதை வச்சு என்னால ஓரளவுக்கு ஊகிக்க முடிஞ்சது ஆனா, ஃபாதர்... பிசாசுக்கும் அந்த பிரகாசம் இருக்கலாம்...? இதை எல்லாம் நினைச்சுப் பார்த்துத்தான் நான் என்ன பண்றதுன்னு தெரியாம திக்கு முக்காடிப்போய் உட்கார்ந்துட்டேன்.'' ஃபாதர் கண்களைத் திறந்தார். மேஜைப் பக்கம் கண்களை ஓட்டியவாறு என்னைப் பார்த்துச் சிரித்தார். பிறகு சொன்னார்: "அண்ணே... என்னை முழுசா மறந்திட்டீங்களே! கொஞ்சம் இறைச்சி இருந்தா கொண்டு வரச் சொல்லுங்க.'' நான் அப்போதுதான் பார்த்தேன். அவர் சொன்னது சரிதான். அவருக்கு முன்னால் இருந்த ப்ளேட் காலியாக இருந்தது. நான் கதை சொல்லிக்கொண்டிருந்ததில், இந்த விஷயத்தை மறந்தே போய்விட்டேன். நான் சமையலறைப் பக்கம் பார்த்தவாறு சொன்னேன்: "வர்கீஸ்... கொஞ்சம் இறைச்சி கொண்டு வா.''

ஆனால், எந்தவித சத்தத்தையும் காணோம். என்னவென்று நான் போய்ப் பார்த்தபோது, அவன் ஒரு மூலையில் சுவரில் சாய்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்தான். நான் பாத்திரத்தின் மூடியைத் திறந்து இறைச்சித் துண்டுகளை எடுத்து ப்ளேட்டில் போட்டு எடுத்துக் கொண்டு வந்தேன். பிறகு ஃபாதரிடம் கேட்டேன்: "ஃபாதர்... உங்ககிட்ட இப்படியொரு மோசமான விஷயத்தைச் சொல்றதுன்றது அவ்வளவு நல்லதா எனக்குப் படல. ஆனா, உங்களைவிட்டா வேற யாருகிட்ட இதை நான் சொல்ல முடியும்? ஏன் இப்படியொரு காரியம் என் வாழ்க்கையில நடந்திச்சு? இது முழுக்க முழுக்க இயற்கைக்கு விரோதமானதாச்சே! கடவுள் இதை வச்சு எனக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்திருப்பாரோ? இல்லாட்டி ஏதாவது மந்திர வாதமாக இருக்குமோ? என்னால இந்த விஷயத்தை மனசுல நினைச்சுப் பாக்குறப்ப எல்லாம் நிம்மதியா இருக்க முடியல!''

ஃபாதர் சொன்னார்: "அண்ணே... எந்த விஷயத்துக்கும் உடனடி பதில் வேணும்னா பாடப் புத்தகங்கள்லதான் இருக்கும். வாழ்க்கையில அப்படி இல்ல. மெதுவாத்தான் பதில் கிடைக்கும்.''


ஃபாதர் சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டுக் கேட்டார்: "பனியைப் பார்க்கணும்னு படமாவன் சொன்னான்ல? அவனை எங்கே அனுப்பி வைக்கப் போறீங்க?''

நான் சொன்னேன்: "அவன் காசிக்குப் போறேன்ல சொன்னான்? ஃபாதர்... அங்கே என்ன பனியா இருக்கு?''

"இல்ல...'' ஃபாதர் சொன்னார்: "பனி உருகி வர்ற தண்ணி இருக்கு.''

நான் கேட்டேன்: "தண்ணியா? என்ன தண்ணி?''

அவர் சொன்னார்: "ஓடி வர்ற கங்கை நதியைச் சொல்றேன். பனி உருகி வர்ற தண்ணீராமே அது!'' "அது எங்கேயுள்ள பனி?'' நான் கேட்டேன். "இமயமலையில...'' ஃபாதர் சொன்னார். "அப்படின்னா... படமாவனை பேசாம அங்கேயே அனுப்பிவிட வேண்டியதுதான்.'' நான் சொன்னேன். "அவன் அங்கே போய் குளிக்கட்டும். தன்னுடைய பனியைப் பார்க்க வேண்டும்ங்கற ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும். தன் பயணத்தை அவன் நடத்திக் கொள்ளட்டும். அவன் பிரச்சினை ஒருவிதத்தில் முடிந்தது. ஒரு விதத்தில் அது நல்லதாகவும் போயிற்று.'' ஃபாதர் சொன்னார்: "அவன் காசி வழியே இமயமலைக்குப் போகட்டும்.'' "செலவு அதிகமாகுமா ஃபாதர்?'' நான் கேட்டேன்.

ஃபாதர் சொன்னார்: "அதைப் பற்றி பெரிசா நினைக்காதீங்க அண்ணே... என்ன இருந்தாலும் ஒரு நல்ல காரியத்துக்குத்தானே செலவழிக்கிறீங்க?'' நான் கொஞ்சம் ப்ளூ லேபிளை ஃபாதரின் டம்ளரிலும் என் டம்ளரிலும் ஊற்றினேன். நான் சொன்னேன்: "என்னோட இந்த விஷயங்களை, ஃபாதர்... நீங்க மட்டும் இல்லேன்னா, நான் வேற யாருகிட்ட சொல்லியிருக்க முடியும்?'' ஃபாதர் சிரித்துக் கொண்டே சொன்னார்: "அண்ணே... நான் இல்லைன்னா இன்னொரு ஆள்.'' நான் சொன்னேன்: "என்னோட பயம் இப்போ கூட போகல ஃபாதர்.'' "பயப்படாதீங்க...'' ஃபாதர் சொன்னார்:

"அண்ணே... உங்க மனசுல ஏதாவது கவலை இருக்கா? கவலை இருக்குற மாதிரிதான் எனக்குத் தெரியுது?'' நான் சொன்னேன்: "என் மனசுல இருக்குற விஷயங்களை என்னாலயே பல நேரங்கள்ல புரிஞ்சுக்க முடியல!'' ஃபாதர் என் கையில் தன் கையை வைத்துக் கொண்டு சொன்னார்: "அண்ணே... நீங்க கடவுளை மனசுல நினைச்சா போதும்.'' நான் வர்கீஸை அழைத்தேன்: "வர்கீஸ்... என்னடா நீ தூங்கிக்கிட்டு இருக்கியா?'' அவன் என்னவோ சொன்னான். நான் சொன்னேன்: "ஃபாதருக்கும் எனக்கும் சாதம் போடு!'' சாப்பிட்டு முடித்து ஃபாதர் மோட்டார் சைக்கிளைக் கிளப்பியபோது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. "குட் நைட்.'' ஃபாதர் சொன்னார்: "பத்திரமா போகணும், ஃபாதர்.'' நான் சொன்னேன்.

2

ர்ச்சில் பாவமன்னிப்பு கூண்டுக்கு முன்னால் இன்று அப்படியொன்றும் கூட்டமில்லை. இரண்டு மூன்று பேர்கள் மட்டுமே நின்றிருந்தார்கள். ஏற்கெனவே அங்கு நின்றிருந்த கிழவி சிலுவையை வரைந்தவாறு எழுந்து போனபோது, ஃபாதர் முதுகை நிமிர்த்திக்கொண்டு கொட்டாவி விட்டார். பிறகு மீண்டும் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். அடுத்து ஒரு இளம்பெண் வந்து நின்றாள். அவள் பாவமன்னிப்பு கூண்டின் படியில் முழங்கால் போட்டு அமர்ந்து சிலுவை வரைந்தவாறு, அந்தக் கூண்டின் சிறிய பித்தளைச் சதுரத்தின்மேல் தன் முகத்தை வைத்தாள். உள்ளே ஃபாதரின் தலை அவளுக்கு நேராக சாய்ந்தது. அவள் சொன்னாள்: "நான் பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன்.''

"சொல்லு.'' ஃபாதர் சொன்னார்.

அவள் சொன்னாள்: "நான் ஆம்பளைங்கூட படுத்து பாவம் செஞ்சிக்கிட்டு இருக்குற ஒரு பெண்!''

"கடவுள் எல்லா பாவத்தையும் பொறுத்துக்குவார்.'' ஃபாதர் சொன்னார்: "நீ செஞ்ச பாவத்துக்காக வருத்தப்படுறதா இருந்தா...!''

"நான் செஞ்ச பாவச் செயலை என்னாலேயே தாங்கிக்க முடியல.'' அவள் சொன்னாள்.

"அப்படி நீ செஞ்ச பாவம்தான் என்ன?'' ஃபாதர் கேட்டார்.

"நான் பாவம் செஞ்சதோடு நிற்கல. அதோட சேர்ந்து நம்பிக்கை துரோகமும் செஞ்சிருக்கேன்.''

"எப்படின்னு சொல்லு.'' ஃபாதர் கேட்டார்.

அவள் சொன்னாள்: "என்னை ஆண்கள்கிட்ட அழைச்சிட்டுப்போற ஒரு ஆள் இருக்கான். அவன் சொன்னான்: "ரோஸ்... நீ நல்லா இருக்குறதுக்கு நான் உனக்கு ஒரு வழி சொல்லித் தரப் போறேன். விஷயம் என்னன்னு நான் சொல்றேன். ஒரு ஆளுக்கு பதிமூணு விதத்துல பெண்கள் தேவைப்படுது. ஆள் நல்ல மனுஷன். பணம் தருவார். தொந்தரவு எதுவும் கிடையாது. இங்க பாரு... இந்தப் பட்டியல்ல இருக்குற பதிமூணு பெண்கள்தான் அந்த ஆளுக்கு வேணும். நீ தைரியசாலிப் பெண்ணாச்சே! நல்லா பேசவும் செய்வே. நீ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணா அந்த ஆளு முன்னாடி போய் நிக்கணும். உன்னை அந்த ஆளால அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. காரணம்-அந்த ஆளோட கண்கள்ல பிரச்சினை இருக்கு. சரியா பார்வை தெரியாது. ஆபரேஷன் பண்ணப்போறாரு. நீ ஒவ்வொரு நாளும் அந்த ஆளுகிட்ட என்ன பேசணும்னு நான் சொல்லித் தர்றேன். ஒவ்வொரு நாளும் எந்தெந்த மாதிரி ஆடைகள் அணியணும்ன்றதையும் நானே சொல்றேன். உன் கையில பணம் வந்ததும், நீ என்னசெய்வே?" நான் சொன்னேன்: "அண்ணே... உங்களுக்கு அதுல பாதியைத் தந்திடறேன்.'' அவன் சொன்னான்: "வேண்டாம்... நான் வேற ஒரு ஊருக்குப்போறேன். நீ எனக்கு ஒரு உதவி செஞ்சா போதும். என்னோட அம்மா வீட்ல தனியா இருக்கு. தினம் நீ காலையில போயி பசுக்கிட்ட பால் கறந்து கொடுக்கணும். நல்ல- சாதுவான பசு. அம்மாவுக்கு ஏதாவது தேவையான்னு அப்பப்ப விசாரிச்சிக்கணும்!"

ஃபாதர்... நான் அந்த ஆளு சொன்னது மாதிரியே பதிமூணு ராத்திரிகளுக்கு அந்த வயசானவர் இருந்த வீட்டுக்குப் போனேன். ஒவ்வொரு முறை நான் போறப்பவும் அவர் நினைச்சிக்கிடுவாரு, நான் வேற வேற பெண்ணுன்னு. கடைசி நாள் என்னோட மரு...''

ஃபாதர் கையை உயர்த்திக்கொண்டு சொன்னார்: "விவரமா இதைச் சொல்லணும்னு அவசியம் இல்ல.''

அவள் கேட்டாள்: "எனக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா, ஃபாதர்?''

"கிடைக்கும்...'' ஃபாதர் சொன்னார்: "நீ செஞ்சது தப்புன்னு உனக்குத் தோணுதா?''

"நிச்சயமா... அந்த ஆளைப்பார்த்து உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்கணும்னு நான் நினைக்கிறேன்.''

ஃபாதர் சொன்னார்: "வேண்டாம்... இனி அதுக்கான அவசியம் இல்ல. நீ அந்தப் பணத்தை வச்சு என்ன செஞ்சே?''

"ஒரு தையல் மெஷினும் ஒரு ஆடும் வாங்கினேன். என்னோட அப்பாவுக்கு ஒரு வெள்ளெழுத்து கண்ணாடி வாங்கினேன். கொஞ்ச பணத்தை இன்னைக்கு மாதாவுக்கு காணிக்கையா போட்டேன். மீதிப் பணத்தை பேங்க்ல போட்டு வச்சிருக்கேன்.'' அவள் சொன்னாள்.

ஃபாதர் கேட்டார்: "நீ பசுவைக் கறக்கப் போறியா?''


"நாளைக்குத்தான் அவன் ஊருக்குப் புறப்படுறான். அவன் போன பிறகு நான் போனா போதும். ஃபாதர்...'' அவள் தாழ்ந்த குரலில் அழைத்தாள்.

"என்ன?'' ஃபாதர் கேட்டார்.

"அந்த வயசான பெரியவர் தலையில கையை வச்சு பிரார்த்திக்கச் சொன்னாரு. அப்ப என் உடம்புல துணியே இல்ல. இருந்தாலும் நான் பிரார்த்திச்சேன். நான் செஞ்சது தப்பா ஃபாதர்?'' - அவள் கேட்டாள்.

"இல்ல...'' ஃபாதர் சொன்னார்: "பிரார்த்தனைதான் முக்கியம். போட்டிருக்குற ஆடை இல்ல. ஆமா... நீ என்ன சொல்லி பிரார்த்தனை செஞ்சே?''

அவள் சொன்னாள்: "என் தெய்வமே... எனக்கு பிரார்த்தனை எல்லாம் செய்யத் தெரியாது. நான் இவரோட தலையில கையை வச்சு நின்னுக்கிட்டு இருக்கேன். உடம்புல துணி எதுவும் இல்ல. எங்க ரெண்டு பேரையும் நீ மன்னிக்கணும்னு சொல்லி பிரார்த்திச்சேன்.''

ஃபாதர் சொன்னார்: "அப்படியா? நீ செஞ்ச தப்புக்கு வருத்தப்படுறதுனால, உனக்கு நிச்சயம் பாவ மன்னிப்பு உண்டு. கடவுள் உன்னைக் காப்பாத்துவார். இனிமேல் பாவம் எதுவும் செய்யாமல் பார்த்துக்கணும்.'' பரிகாரமாகச் சொல்ல வேண்டிய பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுத்த ஃபாதர் வலது கையால் அவளுக்கு நேராக சிலுவை அடையாளத்தை வரைந்தவாறு சொன்னார்: "பிதாவின், மகனின், பரிசுத்த ஆத்மாவின் பெயரில்...''

அவள் பாவமன்னிப்பு கூண்டைவிட்டு எழுந்து போனாள். ஃபாதர் கடிகாரத்தைப் பார்த்தவாறு இனி யாராவது பாவமன்னிப்பு கேட்க வந்திருப்பவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பதற்காக கூண்டுக்கு வெளியே தலையை நீட்டினார். ஒரு பக்கத்திலிருந்து படமாவன் குஞ்ஞு குற்றவாளிக் கூண்டை நோக்கி நடந்துவந்தான். சிலுவை வரைந்தவாறு படியில் முழங்கால் போட்டு உட்கார்ந்தான்.

3

"அது சரி...'' காசியில் குளிக்கும் இடத்தின் கீழே இருக்கிற படியில் அமர்ந்தவாறு காலின் பெருவிரலை தண்ணீரில் தொட்டு, எந்த அளவிற்கு குளிர்ச்சி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்த படமாவன் குஞ்ஞு தனக்குள் கூறிக்கொண்டான்: "பனி உருகி வர்ற தண்ணி இதுதானா? நான் நினைச்ச அளவுக்கு குளிர்ச்சி இல்ல. இனி பனி இருக்குற இடத்துக்குப் போனா தெரியும் எந்த அளவுக்கு குளிர்ச்சின்னு!" சந்திரிகா சோப் கவரைப்பிரித்து, புதிதாக வாங்கிய சோப்பை எடுத்து குஞ்ஞு படி மேல் வைத்தான். பக்கத்தில் நின்று கையை ஆட்டிய குரங்கைப் பார்த்துச் சொன்னான்: "நஹி மாலும்..." பிறகு முழுங்கால் வரை தண்ணீரில் நனையைச் செய்து பார்த்துவிட்டு, குளிக்க இறங்கினான். ஒருமுறை முழுமையாக நீருக்குள் மூழ்கிவிட்டு, வேகமாக எழுந்து படிமேல் ஏறி நின்று உற்சாகத்துடன் உடம்பில் சோப்பைத் தேய்த்தவாறு குஞ்ஞு பாடினான்: "அக்கரைக்கு யாத்திரை போகும் பயணியே... நதியைப் பார்த்து நீ பயப்பட வேண்டாம்..."

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.