
சுராவின் முன்னுரை
எம்.முகுந்தன் (M.Mukundan) மலையாளத்தில் எழுதிய ‘நக்னனாய தம்புரான்’ என்ற புதினத்தை ‘நிர்வாண தம்புரான்’ (Nirvaana Thampuran) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
குஞ்ஞிகிருஷ்ணன் அந்த ஊருக்கே கடவுளைப் போன்றவர். அவர் மீது பெண்களுக்கு அப்படியொரு மதிப்பு! எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாத அவரை ஊரே போற்றுகின்றது. அப்படிப்பட்ட அந்த நல்ல மனிதர் லட்சுமி என்ற பெண்ணிடம் மாட்டிக் கொள்கிறார். அந்தச் சிக்கலில் இருந்து அவர் மீண்டாரா?
இதுதான் ‘நிர்வாண தம்புரா’னின் கதை.
இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
கல்லிசேரியில் ஒரு தம்புரான். பெயர் குஞ்ஞிகிருஷ்ணன். கடவுளைவிட அழகும் செல்வமும் உடையவர் அவர். ஊரில் உள்ள மனிதர்களுக்கு அவர்தான் கண்கண்ட தெய்வம்.
தம்புரானைக் கண்டுவிட்டால் பெண்களின் கண்களில் ஒருவித மயக்கம் தெரியும். ஆண்கள் தலையில் துணி கட்டியிருந்தால், அதை அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொள்வார்கள். நாகரிக வளர்ச்சி என்று சொல்லப்படும் பல விஷயங்களுக்கும் எதிரானவர் தம்புரான். வாத்தியாரின் இளையமகன் நீளமான கால்சட்டை அணிந்து நடப்பதைப் பார்த்த தம்புரான், உடனே தன் ஜட்காவை நிறுத்தும்படி வண்டிக்காரனிடம் ஆணை பிறப்பித்தார்.
"நீ சீமையிலிருந்தா வந்திருக்கே?''
"அய்யய்யோ.. நான் வாத்தியாரோட மகன்.''
"அப்படின்னா வாத்தியாரோட மகனைப்போல நடக்கணும். இனியும் இந்த மாதிரி நீளமான கால் சட்டை அணிஞ்சு நடக்குறதைப் பார்த்தால், உன் காலை நான் ஒடிச்சிடுவேன்.''
உண்மையிலேயே பையன் நடுங்கிவிட்டான். கல்லிசேரியைப் படைத்தது கடவுளாக இருந்தாலும், அதை ஆட்சி செய்து கொண்டிருப்பது தம்புரான்தான் என்பது வாத்தியாரின் மகனுக்கு நன்றாகவே தெரியும்.
ஒரு காரோ ஜீப்போ வாங்க முடியாமல் அல்ல தம்புரான் ஜட்காவில் போய்க்கொண்டிருப்பது. மோட்டார் வாகனங்கள் ஆடம்பரப் பிரியர்களுக்கு மட்டுமே தேவையானது என்பது அவரின் எண்ணம். ஜட்காவிற்குள்ள மண்வாசனை மோட்டாருக்கு நிச்சயம் கிடையாது. அவருக்கு எல்லாவற்றையும்விட அந்தஸ்தும், மண்ணின் பெருமையும் மிகமிக முக்கியம். மானம் கெட்டு வாழ்வதைவிட தூக்கில் தொங்கிச் சாவது எவ்வளவோ மேல் என்று அவர் அடிக்கடி கூறுவார். அதனால் ஊர் மக்கள் மானத்தையும் மரியாதையையும் காப்பாற்றிக்கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அடுக்களையில் நெருப்பு எரியாமல் போனால்கூட அவர்கள் கடன் வாங்கமாட்டார்கள். வீட்டில் குடும்பச்சண்டை நடந்திருந்தாலும், வெளியே செல்கிறபோது எதுவுமே நடந்தது மாதிரி காட்டிக் கொள்ளாமல் சிரித்தவாறேதான் செல்வார்கள். அந்த ஊரைப் பொறுத்தவரை களவும், கொள்ளையும் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே ஏதாவது களவு போயிருந்தாலும், யாரும் அதை வெளியில் கூற மாட்டார்கள். கல்லிசேரியில் திருடன் ஒருவன் இருக்கிறான் என்று மற்றவர்கள் நினைத்தால் அது ஊருக்கே அவமானம் என்று எண்ணி பேசாமல் இருந்துவிடுவார்கள். உயிரைக் கொடுத்தேனும் பெண்கள் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதெல்லாம் தம்புரானின் ஆணைப்படி அந்த ஊரில் நடந்து கொண்டிருக்கும் காரியங்கள்.
"என்ன கோவிந்தா?''
தேவாரமும் பால்கஞ்சிக் குடியும் முடிந்து, பொன் நிற மேனியில் ஒற்றை வேஷ்டியைக் கட்டிக்கொண்டு, கையில் விசிறியை வைத்து வீசியவாறு தம்புரான் வாசலில் வந்து நின்றார். முற்றத்தில் பத்து பதினைந்து பேர் கூப்பிய கைகளுடன் நின்றிருந்தார்கள். இது ஒவ்வொரு நாளும் நடக்கிற ஒரு விஷயம்தான். நீர்க்கட்டு ஏற்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தால்கூட காலை நேரத்தில் தம்புரான் எழுந்துவந்து தன்னைப் பார்க்க வந்திருக்கும் மனிதர்களைச் சந்திப்பது என்பது மட்டும் முடங்காமல் கட்டாயம் நடக்கும்.
"தெச்சு பிள்ளை பெத்திருக்கா.''
"ரொம்ப நல்லது. இது எத்தனாவது குழந்தை?''
"ஆறாவது...''
"இன்னும் ஒண்ணு பிறக்கட்டும். ஏழோட நிறுத்திக்கணும்.''
தம்புரான் ஆணை பிறப்பித்தார். கோவிந்தன் "சரி" என்று தலையை ஆட்டினான். திரும்பி நடந்து செல்லும்போது அவன் மனதில் ஒரு எண்ணம். தோட்டத்தில் ஏழு வாழைக்கன்றுகளை நட வேண்டும் என்று தம்புரான் சொன்னால் அதை அப்படியே செயலில் காட்டலாம். ஆனால், ஏழு குழந்தை பெற்றுக்கொள்ளும்படி தம்புரான் கூறுகிறார் என்றால், அது கட்டாயம் நடக்குமா? தானே நினைத்தால்கூட நிச்சயம் நடக்கும் என்று சொல்ல முடியாத விஷயமாயிற்றே அது என்று நினைத்தான் கோவிந்தன்.
ஒன்பது மணி வரை தம்புரான் மக்களுக்கு தரிசனம் தந்தார். நாடி வந்தவர்களுக்கு அறிவுரைகள் சொன்னார்... ஆணை பிறப்பித்தார். எல்லாம் முடிந்ததும் சிலர் உடன்வர ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார். விதைப்பதையும், கதிர் அறுப்பதையும் போய்ப் பார்த்தார். ஜட்காவில் அமர்ந்தவாறு கடை வீதியை வலம் வந்தார். நீண்ட கால் சட்டை அணிந்த பள்ளிச் சிறுவர்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என்று பார்த்தார். பெட்டிக்கடை ஒன்றின் அருகில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரனைப் பார்த்ததும் தம்புரானின் முகம் கோபத்தால் சிவந்துவிட்டது.
"உனக்கு இங்கே என்ன வேலை?''
"ஆடு ஒண்ணு திருடு போயிடுச்சு. அதை விசாரிக்கிறதுக்காக வந்தேன்!''
"தொப்பியை எடுத்து கையில வச்சிக்கிட்டு விஷயத்தைச் சொல்லணும்- தெரியுதா?''
அடுத்த நிமிடம் தலையில் இருந்த தொப்பியைக் கழற்றி கை இடுக்கில் வைத்துக்கொண்டான் போலீஸ்காரன். தம்புரானின் ஊர் வழக்கம் இது.
"யாரோட ஆடு காணாமப் போனது?''
"குஞ்ஞிராமன் மேஸ்திரியோட...''
மேஸ்திரி ஆற்றின் அக்கரையில் வசிக்கிற வெளியூர்க்காரன்.
அதைக் கேட்டதும் தம்புரானுக்கு எரிச்சல் வந்துவிட்டது.
"கல்லிசேரியில இருக்கிறவங்களுக்கு குஞ்ஞிராமன் மேஸ்திரியோட ஆட்டைத் திருடுற அளவுக்கு மோசமான நிலைமை உண்டாகல. புரியுதா?''
போலீஸ் தலையை ஆட்டினான்.
"சரி... புறப்படு. படித்துறையில படகு இருக்கு. இனிமேல் உன் தொப்பி இந்தப் பக்கம் தெரியக்கூடாது...''
போலீஸ் கையில் தொப்பியை வைத்தவாறு தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேகமாக நடந்தான்.
அரசாங்கத்தையும், அரசாங்கத்தின் சட்டங்களைச் செயல்படுத்துபவர்களையும் தம்புரானுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. பத்திரிகைகளில் காந்தித் தொப்பி அணிந்து முழுப்பற்களையும் வெளியில் காட்டிச் சிரித்து போஸ் தருகின்ற மந்திரிகளின் புகைப்படங்களைப் பார்த்தாலே கடுப்பாகிவிடுவார் தம்புரான். கல்லிசேரியில் தேர்தல் என்ற ஒன்று தேவையே இல்லை என்று அரசாங்கத்திடம் சொன்னார் தம்புரான். ஆனால், அரசாங்கம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.
"அப்படியா? நான் யார்னு உனக்குக் காட்டுறேன்.'' தம்புரான் சொன்னார்.
தேர்தல் வந்தது. எதிர்த்து நின்ற வேட்பாளர் தோற்றுப் போனான். தோற்றவன் வியாபாரி ராமன் செட்டி. அவன் இந்த ஊர்க்காரன் அல்ல. வெளியூரைச் சேர்ந்தவன். ஆற்றின் அக்கரையில் இருந்து வந்தவர்கள்தான் ராமன் செட்டிக்காகப் பிரச்சாரம் செய்தார்கள். அவனுக்கு நான்கு வாக்குகள் கிடைத்தன. செட்டியின் மனைவிகூட தம்புரானுக்குத்தான் வாக்களித்திருந்தாள். தம்புரான், செட்டியே நினைத்துப் பார்க்காத ஒரு மிகப்பெரிய தண்டனையை அளித்தார். அவன் கடையில் யாரும் துணிகள் வாங்கக்கூடாது என்று ஊர்க்காரர்களுக்கு தம்புரான் உத்தரவிட்டார். வீட்டில் குழந்தைகள் பசியால் அழுதன.
"என்ன வேணும்?''
"மன்னிக்கணும்!''
"மன்னிக்க முடியாத குற்றம் நீ செஞ்சது!''
"அக்கரையைச் சேர்ந்தவங்க சொன்னாங்கன்னு நான் அந்தத் தப்பைச் செஞ்சிட்டேன்!''
செட்டி, தம்புரானின் காலைப் பிடித்துக் கெஞ்சினான்.
அவன் நல்ல உயரமான தேகத்தையும் பருமனையும் கொண்டவன். கைகள்கூட சற்று நீளமானவையே.
"உன் பொண்டாட்டிகூட எனக்குத்தான் வாக்களிச்சா, தெரியுமா? அதனால உன்னை நான் மன்னிக்கிறேன்!''
தம்புரான், செட்டியின் கையில் கடையின் சாவியைத் தந்தார்.
அந்த ஆள் மீண்டும் துணிக்கடையைத் திறந்தான்.
செட்டி அக்கரையில் இருக்கும் சாலிய காலனியில் இருந்து, கல்லிசேரியில் வந்து குடியேறியவன். எண்ணெய் ஆட்டுவதுதான் அவன் குலத் தொழில். புண்ணாக்கு சாப்பிட்டதால்தான் அவனுக்கு இந்த உடலழகும், தடிமனும் என்று சொல்வார்கள். சாலிய காலனியில் இருந்தபோது அவன் துணி நெய்யும் தொழிலைக் கற்றுக்கொண்டான். பேரழகு வாய்ந்த ஒரு பெண்ணுடன்தான் கல்லிசேரிக்குள் நுழைந்தான் ராமன் செட்டி. தேனின் நிறத்தையும், அடர்ந்த- கறுத்த கூந்தலையும் கொண்ட அழகுச் சிலை அவள். சொல்லப்போனால், அங்கிருந்து இவர்கள் ஓடிவந்துவிட்டார்கள் என்பதே உண்மை.
"டேய், உன் பொண்டாட்டியோட பேர் என்ன?''
"லட்சுமி...''
"பார்த்தா செட்டிச்சி மாதிரி இல்லியே?''
"அவள் செட்டிச்சி இல்ல... சாலியத்தி...''
"அப்படியா? சரி போ...'' தம்புரான் சொன்னார்.
பட்டணத்தில் உள்ள செட்டிச்சிகளைத் தம்புரானுக்கு நன்றாகவே தெரியும். ஓணம் பண்டிகைக் காலத்தில் மாட்டு வண்டிகள் நிறைய வாழைப்பழங்களை ஏற்றிக்கொண்டு சந்தைக்குப் போகும்போது, எண்ணெய்யும் தயிரும் விற்பதற்காக வரும் செட்டிச்சிகளை அவர் பார்த்திருக்கிறார். செட்டிச்சிகளின் நாற்றமெடுத்த உடம்பைப் பார்த்து முகம் சுளிப்பார் தம்புரான். சாலியத்திகளை தம்புரானின் கண்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கும்.
"டேய் செட்டி... உன்னோட லட்சுமியை நல்லவிதமா பார்த்துக்கணும். இல்லாட்டின்னா யாராவது கொத்திக்கிட்டுப் போயிடுவாங்க!''
செட்டி பதிலொன்று கூறாமல் இடுப்பில் இருந்து ஒரு பெரிய அரிவாளை எடுத்தான். அதைப் பார்த்து உண்மையிலேயே தம்புரான் நடுங்கிப்போனார். இப்படி ஒரு ஆயுதத்தை அந்த மனிதன் இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டு அலைவான் என்பதை தம்புரான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
"இது கல்லிசேரி. இங்கு யாரும் கத்தியோ, அருவாவோ வச்சிக்கிட்டு நடக்கக்கூடாது. கல்லிசேரியில ஒரு பெண்ணுக்கு மானக்கேடு வர்றதை நான் எந்தக் காலத்திலயும் அனுமதிக்க மாட்டேன்.''
செட்டி எடுத்த அரிவாளை மீண்டும் இடுப்பில் மறைத்துக் கொண்டான்.
தன் தேர்தல் அறிக்கையில் தம்புரான், பெண்களின் முழுமையான பாதுகாப்பை வலியுறுத்தி வாக்குறுதி அளித்திருந்தார்.
லட்சுமிகூட தம்புரானுக்கு வாக்களித்ததற்குக் காரணம் இதுதான். கல்லிசேரியில் எந்தப் பெண்ணும் எந்த நேரத்திலும் ஆற்றில் இறங்கி குளிக்கலாம். உடம்பில் துணியே இல்லாமல் குளித்தாலும் ஒருவன்கூட ஒளிந்து பார்க்கமாட்டான். படித்துறைப் பக்கம் போய் தம்புரான் கேட்பார்:
"என்ன, யாருடைய தொந்தரவாவது இருக்கா?''
"இல்ல தம்புரானே!''
"இருந்துச்சுன்னா சொல்லுங்க. நான் காவலுக்கு இங்கே ஆளை நிறுத்துறேன்!''
"அய்யோ... அதெல்லாம் வேண்டாம் தம்புரானே!''
பின்பக்கம் முதுகைக் காட்டிக்கொண்டுதான் தம்புரான் பேசினார்.
"எங்களைப் பார்த்தா என்ன உங்க கண்ணா கெட்டுப் போயிடும்?" தம்புரான் அந்த இடத்தைவிட்டுச் சென்ற பிறகு, பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
"டேய்... பெண்களோட மானம்தான் நாட்டோட மானம், இந்த ஊர்ல ஒரு பெண்ணுக்கு மானக்கேடா ஏதாவது நடந்துச்சுன்னா, கல்லிசேரியோட மானமே போயிடுச்சுன்னு வச்சுக்கோ!''
வாய் வார்த்தைக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர் தம்புரான். வெறுமனே சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் சொன்னபடி கட்டாயம் நடந்தும் காட்டுவார் அவர். பலவித வேலைகள் விஷயமாக அந்த ஊரைச் சேர்ந்த ஆண்கள் பட்டணத்தை நாடிப் போவார்கள். அப்போது தம்புரானின் கண்கள் முழுக்க முழுக்க ஊருக்குப் போயிருக்கும் ஆண்களின் மனைவிகள் மேல்தான் இருக்கும். தம்புரான் ஊரில் இருக்கிற காலம் வரை தங்கள் மனைவிகளின் கற்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்ற எண்ணம் அந்த ஆண்களுக்கு.
வந்த வேலைகள் முடிந்துவிட்டால்கூட கல்லிசேரிக்கு உடனே திரும்பாமல், வெறுமனே பட்டணத்தின் தெருக்களில் அவர்கள் ஜாலியாக அலைந்துகொண்டிருப்பார்கள். எண்ணெய் விற்கும் செட்டிச்சிகளைப் பார்த்துக் கண்ணடிப்பார்கள். தியேட்டர்களுக்குள் நுழைந்து படம் பார்ப்பார்கள். மாப்பிள்ளைமார்கள் நடத்தும் ஹோட்டல்களில் பிரியாணி சாப்பிடுவார்கள்.
இறப்பதற்கு முன்பு கல்லிசேரியை ஒரு முன்மாதிரி ஊராக மாற்றிக்காட்ட வேண்டும் என்ற வெறியே இருந்தது தம்புரானுக்கு. நல்ல பழக்க- வழக்கங்களைக் கற்று வளரும் குழந்தைகள், கற்புத்தன்மை வாய்ந்த பெண்கள், நேர்மையான வியாபாரிகள். கலப்படமோ, கள்ளக்கடத்தலோ பெயருக்குக்கூட அந்த ஊரில் கிடையாது. குளித்து முடித்து ஈரம் சொட்டும் கூந்தலுடன் கோவிலுக்குப் போவார்கள் இளம் பெண்கள். ஆனால், அவர்களை எந்த இளைஞனும் திருட்டுத்தனமாகக்கூடப் பின்தொடர மாட்டான். பெற்றோர்கள் பெண்களின் படிப்பு முடிந்த உடனேயே, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். எல்லாரும் கட்டாயம் அம்மை குத்தி இருக்க வேண்டும். பஞ்சம் நிலவுகிற நேரத்தில் ஊர்மக்கள் தங்களுக்குள் அரிசியும், பணமும் கொடுத்து பரஸ்பரம் உதவிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உதவி தேவைப்படுபவர்கள் தம்புரானைத் தேடி வரவேண்டும். நீண்ட முழுக்கால் சட்டையோ, இதைப்போன்ற வேறு நாகரிகச் சின்னங்களோ அந்த ஊருக்குள் நுழையக்கூடாது. சாராயக்கடை நாயர் கலப்படமே இல்லாத சுத்த சாராயத்தை விற்க வேண்டும். தேர்தலும், ஜிந்தாபாத் கோஷங்களும், ஊர்வலமும் முழுக்க முழுக்க அங்கு தடை செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள். எல்லாரும் கடவுளை நம்பவேண்டும். அதேபோல் தம்புரானையும் நம்பவேண்டும்.
ஆனால், தம்புரானுக்கு ஒரு கேடு நேர்ந்துவிட்டது. அதன் விளைவாக அவர் தான் கட்டியிருந்த ஆடையையே இழந்து நிற்க வேண்டிய நிலை உண்டாகிவிட்டது. யாரோ ஒருவனின் மனைவியின் மானத்தைக் காப்பாற்ற அல்ல; தனது மானத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு குழிக்குள் ஒளிந்து கிடக்கவேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை தம்புரானின் வாழ்க்கையில் உண்டானது.
ஊரே கடுமையான உஷ்ணத்தால் தகித்துக்கொண்டிருந்தது. தம்புரானுக்கு உஷ்ணத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. சூடு அதிகமாக இருக்கிற நேரங்களில், மின்சாரம் வேறு நின்று போகிறது. உண்மையிலேயே எந்த அளவுக்குக் கொடுமையான விஷயம் இது!
கல்லிசேரிக்கு சமீபத்தில்தான் மின்சாரம் வந்தது. இருந்தாலும் தம்புரானும் சரி; ஊர் மக்களும் சரி- மின்சாரத்தின் மாயவலையில் சிக்கிப்போய் விட்டிருந்தார்கள் என்பது மட்டும் உண்மை. அரைமணி நேரம் மின்சாரம் வருவது நின்றுபோய்விட்டால் குழம்பிப்போய் விடுகிறார் தம்புரான். இந்த மீன மாதத்தின் இரவில் நடந்ததும் இதுதான். மின்சாரம் வராததால், காற்றாடி நின்றுவிட்டது. உஷ்ணம் உடம்பைப் பாடாய்ப்படுத்தியதால், உள்ளே இருக்க முடியாமல் ஒரு விசிறியைக் கையில் வைத்தவாறு மாளிகையை விட்டு வெளியே வந்த தம்புரான் முற்றத்தில் இப்படியும் அப்படியுமாய் உலவிக் கொண்டிருந்தார். சிறிதளவில்கூட காற்று வீசவில்லை.
பாதி இரவு கடந்து விட்டது. நிச்சயம் இனிமேல் மின்சாரம் வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் தம்புரான்.
இந்த உஷ்ணச் சூழ்நிலையில் எப்படி அவரால் உறங்க முடியும்? குழம்பிப்போன தம்புரான் கட்டியிருந்த ஒற்றை வேஷ்டியுடன் கையில் இருந்த விசிறியை வீசியவாறு நிலத்தில் இறங்கி மெல்ல நடக்கத் தொடங்கினார். தம்புரானின் வாழ்க்கையில் பெரிய ஒரு விபத்தை உண்டாக்கிய நடை இதுதான்.
வயல் பக்கத்திலிருந்து காற்று மெல்ல புறப்பட்டு வந்து மேனியைத் தடவிச் சென்றபோது, தம்புரானுக்கு இனம்புரியாத ஒரு உணர்வு உண்டானது. அந்தக் காற்று அவரின் வயிற்றுப் பகுதியையும், தோளையும் சுகமாக வருடிச்சென்றது. வயல் பக்கம் போனால் நிச்சயம் காற்று இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அந்தத் திசையை நோக்கி நடந்தார் தம்புரான். வயதாகி நரையோடிய ஒரு பூதத்தைப்போல் இருட்டில் அவரின் மாளிகை இங்கிருந்து தெரிந்தது.
தம்புரான் எதிர்பார்த்ததில் ஏமாற்றம் உண்டாகவில்லை. வயல் பக்கத்தில் இருந்து சுகமான காற்று கிளம்பி உடலை முத்தமிட்டு ஆனந்த உணர்வை உண்டாக்கிக் கொண்டிருந்தது. சுட்டிப் பையனைப் போல அந்தக் காற்று அவரின் கால்களுக்கிடையே புகுந்து அவரை நெளியச் செய்தது. உற்சாகமாகிப்போன தம்புரான் விசிறியை மடக்கி கையில் பிடித்தவாறு, வயலை நோக்கி மேலும் நடந்தார். வயலை நெருங்க நெருங்க காற்று ஏகமாய்க் கிளம்பி தம்புரான் கட்டியிருந்த வேஷ்டியோடு விளையாடத் தொடங்கியது. தம்புரான் உயரமான ஒரு இடத்தில் போய் அமர்ந்தார். கிட்டத்தட்ட சில நிமிடங்களுக்கு முன்பு வரை தான் அனுபவித்த கொடுமையான உஷ்ணத்தை அவர் மறுந்தே போனார்.
காற்று வயலுக்குள் மறைந்திருந்தது. அவர் கையில் இருந்த விசிறியை எடுத்து வீசத் தொடங்கியவுடன், "கலகல" எனச் சிரித்தவாறு காற்று புறப்பட்டு வந்து அவரின் வயிற்றிலும், தோளிலும் மோதி விளையாட்டு காண்பித்தது. ஒரு மென்மையான சின்னஞ்சிறு காற்று அவரின் வேஷ்டியை அவரிடமிருந்து பிரிக்க முயற்சித்தது. காற்றின் விளையாட்டு முழுவதும் தம்புரானின் வேஷ்டியிடம்தான்.
வீட்டுக்குத் திரும்பிப் போகவே தம்புரானுக்கு மனம் இல்லை. அவரின் தாத்தா கட்டியது- தாழ்வான மேற்சுவரும், குறுகலான வாசல்களையும் கொண்ட இந்த மாளிகை. அதற்குள் இருக்கவே சொல்லப்போனால் அவருக்குப் பிடிக்கவில்லை. உலகத்தில் உள்ள எதை வேண்டுமென்றாலும் தம்புரான் சகித்துக் கொள்வார். உஷ்ணத்தை மட்டும் அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஒரு ராட்சத காற்றாடி ஆகாயத்தில் இருந்து இப்படியும் அப்படியுமாய் சுழன்று வீசுவது மாதிரி, தம்புரான் நாலா பக்கங்களிலும் குளிர்ச்சியை உணர்ந்தார். அவர், தான் அமர்ந்திருந்த அந்த மேட்டைவிட்டு எழுந்திருக்கவே இல்லை. பொழுது புலர்கிற நேரம் வரை இப்படியே உட்கார்ந்திருந்தால்கூட போதும் என்று நினைத்தார் அவர். அப்போதுதான் மாளிகையின் ஓட்டிலும் மேற்கூறையிலும் உஷ்ணம் நீங்கியிருக்கும் என்று அவர் மனதில் பட்டது. அதற்குப் பிறகுதான் மின்சாரம் இல்லை என்றாலும், விசிறி இல்லை என்றாலும் பரவாயில்லை என்று அவரால் உறங்க முடியும். இன்று இனிமேல் மின்சாரம் வரும் என்ற எண்ணம் தம்புரானுக்கு இல்லை. வயல்வெளியிலும் சுற்றியிருந்த இடத்திலும் பிரகாசமான வெளிச்சம் படர்ந்து கொண்டிருந்தது. ஒரு நட்சத்திரம் வயலுக்கு மேலே கீழ்நோக்கி விழுவது தெரிந்தது.
தம்புரான் பல விஷயங்களையும் நினைத்துப் பார்த்தார். நினைத்துப் பார்ப்பதற்கு அவர் மனதில் எத்தனையோ நிகழ்ச்சிகள்... விஷயங்கள்...! காலையில் தம்புரானின் இளைய மகள் வத்சலாவைப் பெண் பார்ப்பதற்காக வருகிறார்கள். நான்கு பெண்களில் மூன்று பேருக்கு அந்தந்த காலத்தில் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டார் தம்புரான். பொழுது விடிந்தால் வத்சலாவின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டுவிடும். திருவிழாவிற்கான கொடியேற்றமும் நாளைக்குத் தான். ஏழு நாட்கள் தொடர்ந்து நடக்கப் போகிற திருவிழாக் கொண்டாட்டங்கள் அனைத்துமே அவரின் தலைமையில்தான் நடக்கப் போகின்றன. திருவிழா சம்பந்தமான எல்லா விஷயங்களுக்கும் அவர்தான் பொறுப்பேற்றிருக்கிறார். முன்பெல்லாம் திருவிழா மூன்று நாட்கள்தான் நடந்தது. தம்புரானின் முயற்சியால் அது ஐந்து நாட்களாக நீண்டது. போன வருடம் முதல் அதுவே ஏழு நாட்கள் என்று அதிகரித்துவிட்டது. தம்புரானின் பெருமையையும் செல்வாக்கையும் பறைச்சாற்றக்கூடிய திருவிழாவாக அது இருக்கும்.
வயலின் வடக்குப் பக்கம் இருந்த கரையில் மக்களின் வசிப்பிடங்கள் பூதக்குட்டிகளைப்போல இருளில் மூழ்கிப்போய் இருந்தன. ஒரு வீட்டில் மட்டும் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. இருட்டுக்கு மத்தியில் மஞ்சள் சாயம்போல விளக்கு வெளிச்சம் வந்து கொண்டிருந்தது- லட்சுமி வீட்டிலிருந்து என்பது மட்டும் தம்புரானுக்குத் தெரிந்தது. இந்த அர்த்த ராத்திரி நேரத்தில் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்? தம்புரான் வியப்புடன் பார்த்தார்.
அவர் தன் மனைவி பாருக்குட்டியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். ஊர் மக்களுக்கு அவரின் மனைவி- பாருக்குட்டித் தம்புராட்டி. தம்புரானின் மேனி அழகு தம்புராட்டிக்குக் கிடையாது. மெலிந்த கறுத்துப்போன தேகத்தைக் கொண்டவள் அவள். பாருக்குட்டித் தம்புராட்டி மாளிகையைவிட்டு வெளியே வருவது என்பதே அபூர்வமான ஒரு விஷயம். திருமண வீடுகளிலும், திருவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெறுகிற இடங்களிலும்கூட அவளைப் பார்க்க முடியாது. கல்லிசேரியின் தம்புராட்டி தான் என்ற நினைப்பு அவள் மனதில் சதா நேரமும் வலம் வந்துகொண்டிருக்கும். ஊர்க்காரன் யாராவது தன்னைப் பார்ப்பதற்காக மாளிகைக்கு வந்தால், அவனை வெறும் கையுடன் பாருக்குட்டி அனுப்ப மாட்டாள். ஒரு வெள்ளியாலான ரூபாயோ, ஒரு மரக்கால் நிறைய அரிசியோ, ஒரு வெள்ளரிக்காயோ அவள் பரிசாகத் தருவாள். மூத்த மூன்று மகள்களும் தம்புரானைப்போல என்றால், இளைய பெண் வத்சலா அம்மாவைப்போல இருந்தாள். அதற்காக தம்புரான் கவலைப்படவில்லை. பார்க்க சுமார்தான் என்றாலும் குஞ்ஞிகிருஷ்ணன் தம்புரானின் மகளுக்கு தேவகுமாரனைப்போல ஒரு கணவன் கிடைப்பான் என்பது மட்டும் உறுதி. காலையில் அவர்கள் வந்து மகளைப் பார்த்து திருமணம் நிச்சயமாகிவிட்டால், தம்புரானின் அந்த பாரமும் தீர்ந்த மாதிரிதான்.
திருவிழா நடக்கிற ஏழு நாட்களும் பொழுது புலர்கிற நேரம் வரை கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஹரிகதா காலட்சேபம், சாஸ்த்ரீய சங்கீதம், கதகளி, ஓட்டம் துள்ளல், நாட்டிய நாடகம், பரதநாட்டியம்- இப்படிப் பல நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடக்கும். கல்லிசேரியில் குடிக்கொண்டிருக்கும் தேவியின் மகிமையைப் பற்றி தூரத்தில் இருக்கும் கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்கள்கூட தெரிந்திருந்தார்கள். குடகுப்பகுதியில் இருந்துதான் அதிகமான பக்தர்கள் திருவிழாவைப் பார்க்க வருவார்கள். கல்லிசேரி ஆரம்பப் பாடசாலையில்தான் அவர்கள் தங்குவது. மற்ற கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஆற்றைக் கடந்து வருவதற்கு படகுகள் ஏற்பாடு செய்யவேண்டும். இப்படி இன்னும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. இந்தப் பொறுப்புகளையெல்லாம் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் தலையில் போட்டுக் கொண்டிருக்கிறார் தம்புரான்.
ஆனால், இந்த உஷ்ணத்தைச் சகித்துக் கொள்வதுதான் அவரைப் பொறுத்தவரை பெரிய விஷயம். திருவிழா முடிகிறவரை மின்சாரம் போகாமல் இருக்க வேண்டும் என்று தேவியிடம் பிரார்த்தித்தார் தம்புரான்.
"கரண்ட் கல்லிசேரியிலயா உற்பத்தி ஆகுது? எங்கோ தூரத்துல இருந்து அது வருது. நம்ம தேவி அதுக்கு என்ன பண்ண முடியும்?"
ஊரில் செண்டை அடிக்கிற அப்புமாராரின் கருத்து இது.
மின்சாரம் வருகிற கம்பிகள் ரயில் தண்டவாளத்தைப்போல. அவை எங்கே ஆரம்பமாகின்றன- எங்கே முடிகின்றன என்பது தம்புரானுக்கே தெரியாது.
ஊரே பிரகாசத்தில் மூழ்கிப்போயிருந்தது. நிலவின் ஒளியே காரணம். மேட்டில் உட்கார்ந்தவாறு தன் ஊரின் அழகை மகிழ்ச்சியுடன் அள்ளிப் பருகிக்கொண்டிருந்தார் தம்புரான். கல்லிசேரிக்கு இப்படி ஒரு அழகா என்று வியந்து போனார் அவர். இதற்கு முன்பு ஒருநாள்கூட நிலவு வெளிச்சத்தில் இப்படி வயல் பக்கமாக வந்து அமராமல் போய்விட்டோமே என்பதற்காக ரொம்பவும் வருத்தப்பட்டார் தம்புரான்.
பொழுது விடிய இன்னும் அதிக நேரமில்லை. மனமே வராமல் தம்புரான் அமர்ந்திருந்த மேட்டைவிட்டு எழுந்து நின்றார். மாளிகையின் மாடியில் ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டுப் படுக்கவேண்டும். தம்புரானுக்கு அயர்ச்சி வந்தது. தலைமுழுக்க திருவிழாவைப் பற்றிய நினைப்பு மட்டுமே இருந்தது. மகளின் திருமணக் காரியமும் இடையில் ஞாபகத்தில் வந்தது. இனி உறக்கம் தனக்கு வருமா என்று தம்புரானுக்கே சந்தேகமாக இருந்தது. அவர் மட்டும் குஞ்ஞிகிருஷ்ணன் தம்புரானாக இல்லாமல் போயிருந்தால், இந்நேரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த மேட்டிலேயே குளிர்ந்த காற்றின் அருமையை அனுபவித்தவாறு படுத்துத் தூங்கியிருப்பார். இப்படிப் பொதுவாக எப்போதும் அவர் நினைத்துப் பார்த்ததில்லை. தான் ஒரு தம்புரானாகப் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படவே செய்தார். தம்புரான்களுக்கே உரிய கௌரவத்தோடும், உயர்ந்த அந்தஸ்தோடும் உயிரோடு இருக்கிற காலம் வரை வாழ்ந்து கண் மூட வேண்டும் என்பதொன்றே அவரின் மன ஆசை. கடவுள் அந்த ஆசையை சரியாக நிறைவேற்றி வைத்தால் போதும் என்று அவர் நினைத்தார்.
லட்சுமியின் வீட்டில் இப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நிலவு வெளிச்சத்துக்கு மத்தியில் அந்த விளக்கொளி, நனைந்து போன தாளில் விழுந்த மஞ்சள் வண்ண சாயம்போல இருந்தது. அவள் வீட்டின் முன்பக்கமாய் தெற்குப் பக்கம் போகின்ற பாதை வழியே நடந்து வீட்டுக்குப் போகத் தீர்மானித்தார் தம்புரான். இதுவரை அவரிடம் விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்த இளம் காற்று வயலின் கதிர்களோடு சேர்ந்து மயங்கிக் கிடந்தது. மழை பெய்தது போன்ற ஒரு குளிர்ச்சியை நாலா பக்கங்களிலும் உணர்ந்தார் தம்புரான்.
நிலவு காய்ந்து விழுந்துகொண்டிருந்த ஒற்றையடிப்பாதை வழியே நடந்து சென்ற தம்புரான், லட்சுமியின் வீட்டின்முன் நின்றார். திறந்திருந்த ஜன்னல் வழியே நல்ல வெளிச்சம் முற்றத்தில் விழுந்து கொண்டிருந்தது. லட்சுமியின் கணவனுக்கு ஒருவேளை உடல் நலம் இல்லையோ? முன்கோபக்காரனும், யாருக்கும் அடங்காதவனுமான அவனுக்கு தலைசுற்றுலும், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குவதும் ஒரு சர்வ சாதாரணமான விஷயம் என்றே சொல்லலாம்.
வீட்டை நோக்கி ஏறியபோது, துவைத்துக் காயப்போட்டிருந்த துணிக்காக மேலே போட்டிருந்த தடியில் தன் தலையை லேசாக இடித்துக்கொண்டார் தம்புரான். அந்த மங்கலான வெளிச்சத்திலும் காயப்போட்டிருந்த லட்சுமியின் புள்ளி போட்ட ப்ளவுஸை அவரால் அடையாளம் காணமுடிந்தது.
தம்புரான் மெல்ல கதவைத் தட்டினார். கதவு இடுக்கின் வெளிச்சத்தில் லட்சுமியின் முகம் தெரிந்தது. அவள் உறங்காமல் விழித்திருக்கிறாள் என்பதைத் தம்புரான் புரிந்துகொண்டார்.
அவளின் விரிந்து கிடந்த கூந்தலும் கன்னங்களும் விளக்கு வெளிச்சத்தில் பிரகாசித்தன. தம்புரான் நின்றிருந்த இடம் இருட்டாக இருந்ததால், லட்சுமிக்கு அவரை சரியாகத் தெரியவில்லை.
"யார் அது?''
"நான்தான்... தம்புரான்!''
அவ்வளவுதான். ஓடி வந்த லட்சுமி கதவுக்குப் பக்கத்தில் நின்றாள். ஒருவித சத்தத்துடன் கதவுகள் திறந்தன. சாதாரண மக்களின் வீடுகளைத் தேடி வந்து சுக சவுகரியங்களைத் தம்புரான் விசாரிப்பது என்பது அந்த ஊரைப் பொறுத்தவரை அசாதாரண விஷயமொன்றுமில்லை. முற்றத்தில் நின்றிருந்த தம்புரான் சொன்னார்: "பாக்கு மரத்துக்குத் தண்ணி போதாது. செட்டிகிட்ட சொல்லணும்!''
இதை எல்லாம் கவனிப்பதற்கு செட்டிக்கு எங்கே நேரம்? துணி நெய்யவும், அதை விற்கவுமே அந்த ஆளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஓய்வு கிடைக்கிற நேரத்தில் கள்ளு குடிக்கிறான். தோட்டத்தில் இருக்கும் தென்னை மரங்களையும், பாக்கு மரங்களையும் கவனிப்பதற்கு நேரமில்லை என்றாலும், அவன் தன் மனைவியான லட்சுமியை, ஸ்ரீலட்சுமியைப்போல சீராட்டிப் பார்க்கிறான் என்பது மட்டும் உண்மை. சாலியக் காலனியின் முழு எதிர்ப்பையும் சம்பாதித்தல்லவா அவன், அவளைத் தனக்குச் சொந்தமாக ஆக்கியது! திருமணம் முடிந்ததும் அவன் மீசை வளர்க்கத் தொடங்கினான். லட்சுமி சொல்லித்தான் அவன் அந்தக் காரியத்தைச் செய்தான். தம்புரானுக்கு மனதளவில் இப்போதுகூட செட்டியைப் பிடிக்காது. தேர்தலில் தன்னை எதிர்த்து துணிச்சலாக நின்ற ஆளாயிற்றே அவன்! பெண்ணைக் கடத்திக்கொண்டு போவது... தம்புரானையே எதிர்த்து தேர்தலில் நிற்பது... அவன் உண்மையில் தைரியசாலிதான்!
உள்ளே ஒரு பெரிய விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தைப் பார்த்து ஒரு விட்டில் பூச்சியைப்போல தம்புரான் அங்கு போய் நின்றார். நன்கு துடைக்கப்பட்ட கண்ணாடிக்கூடு வழியே நாலா பக்கங்களிலும் பிரகாசமாக விளக்கொளி பரவியது.
"என்ன... விளக்கை அணைச்சிட்டு படுக்காம இருக்கே?''
"எனக்கு பயமா இருக்கு... தம்புரானே!''
"இங்கே வேற யாரும் துணைக்கு இல்லியா?''
"யாருமில்ல...''
"எங்கே போயிருக்கான் செட்டி?''
"டவுனுக்கு வேஷ்டி வாங்கப் போயிருக்காரு!''
பொழுது புலர்ந்தால் ஊரில் திருவிழா. கல்லிசேரி திருவிழா சந்தையில் விற்கப்படும் வேஷ்டிகளுக்கு நல்ல கிராக்கி. குடகில் இருந்து வருகின்ற பக்தர்களுக்கு வேறு எதை வாங்கத் தோன்றுகிறதோ இல்லையோ, நிச்சயம் வேஷ்டிகளை வாங்குவார்கள்.
"என்ன பயம் உனக்கு? கல்லிசேரியில என்ன திருடனா இருக்கான்?''
"எனக்கு திருடனைப் பார்த்து பயமில்லை தம்புரானே!''
"பிறகு யாரைப் பார்த்து பயம்?''
"பேய்களை நெனைச்சு!''
அதைக்கேட்டு தம்புரானுக்கு சிரிப்பு வந்தது.
"பேய்க்கு பயந்துட்டுத்தான் விளக்கை அணைக்காம எரிய விட்டுட்டு உறங்காம உட்கார்ந்துக்கிட்டு இருக்கியா?''
"ராத்திரி நேரத்துல தனியா இருந்தா எனக்கு உறக்கம் வராது. தம்புரானே... கண்ணை மூடுனா... சம்பந்தமில்லாம ஒண்ணொண்ணா கண்ணுல தெரியும்!''
இதைச் சொல்லும்போது லட்சுமி அழுதுவிடுவாள்போல் இருந்தது. அவளைப் பார்த்த தம்புரானுக்கு அவள்மேல் ஒருவித பரிதாப உணர்வு உண்டானது.
"இனி செட்டி டவுனுக்குப் போறப்போ என்கிட்ட சொல்லிட்டு தான் போகணும். ராத்திரி உன்கூட துணைக்கு இருக்குறதுக்கு யாரையாவது மாளிகையில இருந்து அனுப்பி வைக்கிறேன்!''
தம்புரான் அவளின் கவலையைப் போக்குவது மாதிரி கூறினார்:
"விளக்கை அணைச்சிட்டு உறங்கு. நான் போறேன்.''
"அய்யோ... தம்புரானே! நீங்க போகாதீங்க...''
அவள் கெஞ்சினாள். எரிந்து கொண்டிருந்த விளக்கிற்கு மிகவும் சமீபத்தில் நின்று கொண்டிருந்த அவளின் தலைமுடி விளக்கில் பட்டு லேசாகக் கருகுவதை அவர் உணர்ந்தார்.
தம்புரானுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. செட்டி இந்த இரவு வீட்டுக்குத் திரும்பி வர சாத்தியமில்லை என்பதை அவரும் நன்றாகவே அறிவார். நகரத்தில் இருந்து கல்லிசேரிக்கு வரவேண்டும் என்றால் ஆற்றைக் கடந்து வரவேண்டும். இந்த நேரத்தில் ஆற்றைக் கடக்க அங்கு படகுகள் இருக்காது. மற்றொரு வழி இருக்கிறது. அதன் வழியே வரவேண்டும் என்றால் நான்கு மணி நேரம் சுற்றி ஒரு பாலத்தைக் கடந்து வரவேண்டும். கல்லிசேரியில் இருந்து சரக்கு ஏற்றிச் செல்கின்ற மாட்டு வண்டிகள் அந்தப் பாதை வழியேதான் நகரத்திற்குப் போகும். தினமும் ஒன்றோ இரண்டோ மாட்டுவண்டிகள் அந்த வழியே வரத்தான் செய்கின்றன.
"கொஞ்ச நேரம் வேணும்னா நான் இங்கே இருக்கேன். நீ கதவை மூடிட்டு தூங்கு!''
தம்புரான் வெளியே இருந்த திண்ணையில் உட்காரப் போனார். லட்சுமி சொன்னான்:
"தம்புரானே... நீங்க உள்ளே இருங்க!''
"என் லட்சுமியே... உன் முன்னாடி நான் தோற்றுத்தான் போனேன்!''
தம்புரான் மேலே தன் தலை இடித்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாகக் குனிந்தவாறு உள்ளே போனார். சுவரோடு சேர்ந்து ஒரு பழைய கட்டில் போடப்பட்டு இருந்தது.
"தம்புரானே... கட்டில்ல இருங்க!''
தம்புரான் தயங்கி நின்றார். அறையில் உட்கார வேறு எதுவும் இல்லை. தான் கட்டிலில் இருந்தால் அவள் எங்கே படுத்து உறங்குவாள்?
தம்புரான் தயக்கத்துடன் கட்டிலில் போய் உட்கார்ந்தார். கட்டிலில் அவளின் தலைமுடி மணத்தையும், புடவை வாசனையையும் அவர் உணர்ந்தார்.
அவள் விளக்குக்குப் பக்கத்தில் நின்றவாறு தம்புரானையே கண்களை அகற்றாமல் பார்த்தாள். விளக்கு வெளிச்சத்தில் தேன் நிறமுள்ள அவளின் உடல் மேலும் பிரகாசமாகத் தெரிந்தது.
அவளின் பார்வை தம்புரானை என்னவோ செய்தது.
"நான் எங்கே படுக்குறது?''
உதட்டில் புன்னகை தவழ, லட்சுமி தம்புரானைப் பார்த்தாள். ஒளி வீசும் அழகான அரிசிப் பற்கள். தம்புரான் ஏதும் கூறுவதற்கு முன்பே, அவள் விளக்கை வாயால் ஊதி அணைத்தாள். தம்புரான் தன் அருகில் தேன் மணம் கமழுவதை உணர்ந்தார்.
அதிகாலை நேரத்தில் மழை பெய்கிறபோது கம்பளியைப் போர்த்திக்கொண்டு சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பது மாதிரி தம்புரான் லட்சுமியுடன் மிகமிக அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
என்னவென்று விவரிக்க முடியாத அற்புத நொடிகள் அவை. எல்லாவித பொறுப்புகளையும் மறந்து, தனது நிலை என்ன என்பதை எல்லாம் மறந்து, தம்புரான் ஒரு குழந்தை மனதுடன் தூங்கிக்கொண்டிருந்தார். தம்புரான் என்ற நிலையில் கல்லிசேரியைச் சேர்ந்த மக்களுக்கு அவர் செய்ய வேண்டிய கடமைகளும் கடவுளிடம் நீங்காத நன்றியும் அவர் மனதில் நிலை பெற்று இருக்கின்றன என்பது உண்மை. இந்த உணர்வு அவரை ஒரு சுதந்திர மனிதனாக உலவ ஒருபோதும் சம்மதிக்கவில்லை என்பதும் உண்மை. ஊரில் உள்ள அழகிய பெண்களைப் பார்க்கிறபோது அழகுணர்வு கொண்ட தம்புரான் மனதில் இளமையான எண்ணங்கள் அரும்பி எழும்பும். அப்போது பார்த்து தான் ஒரு தம்புரான் என்ற நினைப்பு அவர் மனதில் உண்டாகும். அவ்வளவு தான் - ஒரு பெருமூச்சு விட்டவாறு அந்த இடத்தை விட்டு நீங்குவார் தம்புரான்.
கடைசியில் எல்லா பொறுப்புகளில் இருந்தும், எல்லா கடமைகளில் இருந்தும் சுதந்திரம் பெற்ற தம்புரான் தேனின் நிறத்தைக்கொண்ட பெண்ணோடு சேர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் ஆனந்தம் என்றால் என்ன என்று அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. அவளின் மூக்குத்தியைப்போல ஆகாயத்தின் ஒரு மூலையில் காலைப்பொழுது நட்சத்திரம் கண் விழித்ததை அவர் பார்க்கவில்லை.
மேக்குன்னு பாலத்தைக் கடந்து ஒரு மாட்டு வண்டி மெதுவாக கல்லிசேரியை நோக்கி வந்தது. வண்டியின் அடியில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த லாந்தர் விளக்கு வழியெங்கும் வெளிச்சத்தைப் படர விட்டுக்கொண்டிருந்தது. வண்டி ஆடுவதற்கேற்றப்படி துணிக் கட்டுகள் இப்படியும் அப்படியுமாய் ஆடின. உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வண்டிக்காரன் அவ்வப்போது காளையின்மேல் சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தான்.
காளையின் கழுத்து மணி ஓசை முற்றத்தில் கேட்டது. வண்டிச் சக்கரங்கள் க்ரீச்சிட்டவாறு நின்றன. வண்டிக்குக் கீழே கட்டியிருந்த விளக்கில் திரி முழுவதும் எரிந்து கரிந்து போயிருந்தது.
வாசலில் அரவம் கேட்டு எழுந்த லட்சுமி, தம்புரானின் உடம்பை விட்டு சற்று விலகினாள். வண்டிக்காரன் துணிக்கட்டுகளை வாசலில் இறக்கி வைத்தான். பட்டணத்தில் இருந்து லட்சுமிக்கென்று வாங்கிய புடவையையும், முத்து மாலையையும் கையில் பிடித்தவாறு அவளின் கணவன் வாசலை நோக்கி வந்தான். போன முறை பட்டணத்திற்குப் போய் வந்தபோது அவளுக்கு இரண்டு கைகளுக்கும் பல வண்ணங்களில் கண்ணாடி வளையல்கள் வாங்கி வந்திருந்தான். எங்கே போனாலும் தன் லட்சுமிக்கு ஏதாவது பொருட்கள் வாங்கி வராமல் இருக்கமாட்டான் செட்டி. உயிரைப் பணயம் வைத்து தனக்கென்று கொண்டு வந்த சாலியத்திப் பெண்ணாயிற்றே லட்சுமி!
"தம்புரானே... தம்புரானே...''
அவள் தம்புரானைக் குலுக்கி எழுப்பினாள். தம்புரான் கண் விழித்துப் பார்த்தார். இனிமையான கனவில் இருந்து கொடூரமாகத் தட்டி எழுப்பிய உணர்வு அவரின் அந்தக் கண் பார்வையில் தெரிந்தது.
"தம்புரானே... ஓடுங்க...''
அவள் எழுந்து தலைமுடியை வாரிக் கட்டினாள். தம்புரானுக்கு இப்போதுதான் சுய உணர்வு வந்தது. தான் ஏதோ பொறியில் மாட்டியிருக்கிறோமோ என்ற எண்ணம் அவர் மனதில் அப்போது தோன்றி மறைந்தது. தன் அந்தஸ்தும் மானமும் மட்டுமல்ல, உயிர்கூட இப்போது ஆபத்தில் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்தார்.
வாசல் கதவைத் தொடர்ந்து தட்டினான் செட்டி.
"என்னோட வேஷ்டி...''
"வேஷ்டி கிடக்கட்டும். நீங்க ஓடுங்க தம்புரானே...''
அவள் இருட்டுக்கு மத்தியில் நடந்து சென்று பின் கதவை எந்தவித ஓசையும் வராமல் மெல்ல திறந்தாள். தம்புரானை வெளியே கையைப் பிடித்துத் தள்ளி கதவை அடைத்துத் தாழ் போட்டாள்.
அவள் விளக்கை எரிய விட்டு முன்பக்கக் கதவைத் திறந்தாள். செட்டி உள்ளே நுழைந்தான். அவள் கொட்டாவிவிட்டு, தூக்கம் இன்னும் சரியாக நீங்கவில்லை என்பது மாதிரி நடித்தாள்.
"நான் இந்த நேரத்துல வருவேன்னு கொஞ்சம்கூட நீ எதிர்பார்த்திருக்க மாட்டியே!''
"ரெண்டு மணி வரைக்கும் விளக்கை அணைக்காம உங்களுக்காகக் காத்திருந்தேன்.''
அவள் நடித்தாள்.
விளக்கைப் பக்கத்தில் இருந்த திண்டின்மேல் வைத்துவிட்டு அவள் செட்டியின் நெஞ்சின்மேல் சாய்ந்தாள். அவன் காதுகளில் அணிந்திருந்த கடுக்கணும், சரியாக வெட்டப்பட்ட கனமான மீசையும் அவளின் முகத்திலும் கழுத்திலும் உரசின. தான் வாங்கி வந்திருந்த புடவையையும், முத்துமாலையையும் அவள் கையில் அவன் தந்தான்.
திருவிழா பார்க்கப் போறப்போ உடுத்துறதுக்கு...''
வெயில் வருகின்ற வரையில் அவளைக் கட்டிப்பிடித்து சொர்க்க சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான் செட்டி குளித்து முடித்து வீட்டுக்கு வெளியே அவள் கூந்தலை வாரி நின்றபோது, செண்டை அடித்துக்கொண்டு போன மாரார் ஒரு நிமிடம் அங்கு நின்றார்.
"உனக்குத் தெரியுமா சாலியத்தி? தம்புரானைக் காணோமாம்!''
அவள் பதிலொன்றும் கூறாமல் கூந்தலைக் கோதியவாறு நின்று கொண்டிருந்தாள். எள்ளெண்ணெய் தேய்த்த அவளின் முடி வெயில் பட்ட ஆற்று நீர்போல் ஜொலித்தது.
"ராத்திரி காத்து வாங்குறதுக்காக வயல்பக்கம் போன தம்புரான் மாளிகைக்குத் திரும்பியே வரலையாம்!''
லட்சுமி எதுவுமே பேசாமல் அவர் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஊரின் நாடி நரம்புகளைப்போல இருக்கும் வயல் வரப்புகளில் ஆட்கள் நடக்கத் தொடங்கினார்கள். உள்ளே பயணக் களைப்பு ஏற்பட்டு செட்டி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உறங்குகிறபோது சிரிப்பது மாதிரி அவன் பற்கள் வாய்க்கு வெளியே தெரிந்தன.
தூரத்தில் ஒரு ஜீப் வந்துகொண்டிருந்தது. குண்டும் குழியுமாக உள்ள கிராமத்துச் சாலையில் இப்படியும் அப்படியுமாய் ஆடியவாறு அது வேகமாக வந்தது. ஜீப் உண்டாக்கிய தூசுப் படலம் வெயிலில் பட்டு மஞ்சள் நிறத்தில் தெரிந்தது. கல்லிசேரியில் மோட்டார் வாகனம் வருவது என்பது மிகமிக அபூர்வமானது. மேக்குன்னு பாலத்தைக் கடந்து வருகின்ற பஸ்கள் கல்லிசேரிக்குள் நுழையாமல் நேராகப் போகும். ஆயிலக்கரைக்கும் பாணியாறுக்கும் போகிற இரண்டு பஸ்கள் ஒவ்வொரு நாளும் நான்கு முறை அந்த வழியே கடந்துபோகும். கல்லிசேரிக்கு வருபவர்கள் மேக்குன்னு பாலத்திற்கான திருப்பத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்து வரவேண்டும். மாட்டு வண்டியோ ஜட்காவோ கிடைத்தால் அவற்றில் ஏறியும் வரலாம்.
"அதோ ஒரு ஜீப் வருது!''
லட்சுமி விரலால் சுட்டிக் காட்டினாள். ஜீப்பைச் சுற்றிலும் தூசுப்படலம் வைரத் துகள்களாய் வெயிலில் மின்னியது. லுங்கியை சரியாகக் கட்டியவாறு செட்டி ஜீப்பைப் பார்த்தவாறு கொட்டாவி விட்டான். ஜீப்பில் மொத்தம் ஐந்து பேர் இருந்தார்கள். டிரைவருக்குப் பக்கத்தில் குடுமி வளர்த்த ஒரு வயதான மனிதர் இருந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நான்கு பேர்களில் வயது குறைந்த ஒரு பெண்ணின் காதுகளில் தங்கக் கம்மல் இருந்தது. தலை முடியை ஒரு பக்கமாய் வாரி விட்டிருந்தாள். அவள் உதடுகள் வெற்றிலை போட்டுச் சிவந்திருந்தன.
"தம்புரானோட மாளிகைக்குப் போறாங்கன்னு தோணுது!''
லட்சுமி சொன்னாள். வடக்குத் திசையில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பது தம்புரானின் வீடு மட்டும்தான். ஜீப்பில் வந்து கொண்டிருக்கும் வசதி படைத்தவர்கள் போவதற்கு அந்தப் பகுதியில் வேறொரு வீடு எங்கே இருக்கிறது?
"தம்புரானோட மகளைப் பெண் பார்க்க வர்றவங்களா இருக்கும்!''
அவள் நினைத்தது சரியே. தூசு பறக்கச் சென்ற ஜீப் தம்புரானின் மாளிகையை அடைந்ததும் நின்றது. மாளிகைக்குள் செய்தி போனது. பாருக்குட்டித் தம்புராட்டி கட்டியிருக்கும் துணியில் நெருப்பு பற்றிவிட்டதுபோல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் பரபரப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள். வத்சலா இன்னும் ரெடியாகவில்லை. அடுக்களையில் பலகாரங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. பொழுது புலர்ந்தது முதல் எல்லாருக்கும் தம்புரானைத் தேடுவதே வேலையாகிப் போனது.
ஜீப்பில் இருந்து முதலில் குடுமிக்காரர் சந்து நாயர் கையில் வெற்றிலைப் பெட்டியுடன் இறங்கினார். பச்சை வண்ணக் கரை போட்ட இரட்டை வேஷ்டியும், அரைக் கை சட்டையும் அணிந்து காது குத்தி இருந்தவன்தான் மணமகன் சங்கரன். தம்புரானின் மூத்த மகள் ஜானகியின் கணவன் உத்தமன் நம்பியாரும், மருமகன் வாசுதேவனும் சேர்ந்து வந்திருந்தவர்களை உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.
"பயணத்துல பிரச்சினை ஒண்ணும் இல்லியே?'' உத்தமன் நம்பியார் விசாரித்தான்.
"நேரம்கூட அதிகமாகல. அதுக்குள்ள இப்படி உஷ்ணமா இருக்கே!''
"சங்கரனோட அப்பாதானே நீங்க?''
"ஆமா...''
சந்து நாயர் குடுமியை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, தலையில் இருந்த வியர்வையைத் துடைத்தார். உடன் வந்திருந்த சட்டை அணியாத மெலிந்த தேகத்தைக் கொண்ட மனிதர் அமைதியாக நின்றிருந்தார்.
"இவர் யார்னு...?''
"என்னோட மூத்த அண்ணன். முதல் தடவையா ஜீப்ல வர்றாரு. அதனால அவருக்கு உடம்புல களைப்பு!''
அவருடைய ஊரில் அந்தப் பெரியவர் போவது வருவது எல்லாமே பல்லக்கில்தான்.
"உள்ளே போயி கொஞ்ச நேரம் படுங்க...''
"வேண்டாம் நம்பியாரே. கொஞ்சம் தண்ணி கொடுத்தா போதும். முகத்தைக் கழுவிக்கிறேன்.''
ஒரு கர்ப்பிணியைப்போல முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருந்த அந்தக் கிழவர் பளபளப்பான அந்தப் பாத்திரத்தில் இருந்த தண்ணிரை எடுத்து தன் முகத்தைக் கழுவினார்.
விருந்தாளிகள் மாளிகையின் முன்னால் இருந்த அறையில் அமர்ந்தார்கள். தக்கை அணிந்த இளைஞனின் சகோதரியை ஜானகி உள்ளே அழைத்துக்கொண்டு போனாள். ஆள் உயரக் கண்ணாடி முன்பு அமர்ந்து வத்சலா தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தாள். கறுத்த தன் கன்னங்களில் பவுடர் தடவி, நெற்றியில் சாந்துப்பொட்டு இட்டு, கண்களில் மை எழுதி தன்னைச் சிங்காரித்தாள் அவள். பல முறை திரும்பத் திரும்பக் கட்டினாலும் புடவை அவள் இடுப்பில் நிற்காமல் நழுவிக் கொண்டே இருந்தது. ஒரு முறை கட்டியபோது புடவை கணுக்காலுக்கு மேலே இருந்தது.
இன்னொரு முறை மாற்றிக் கட்டியபோது ஆங்காங்கே புடவையில் சுருக்கம் விழுந்தது. வாசுதேவனின் மனைவி கார்த்தியாயனிதான் கடைசியில் பக்கத்திலேயே இருந்து ஒழுங்காக வத்சலாவைப் புடவை கட்ட வைத்தாள். வத்சலா இதற்கு முன்பு ஒரே ஒருமுறைதான் புடவை கட்டியிருக்கிறாள். கல்லிசேரியில் திருவிழா நடந்த சமயம் அது.
"எங்க குடும்பத்துல இதுக்கு முன்னாடி ஒரு ஆம்பளை பெண் பார்க்கணும்னு படி ஏறினது இல்லை. வீட்டுப் பெரியவங்களோ, மூத்த பெண்களோதான் பொண்ணு பார்க்கவே வருவாங்க.
ஆனால், என் மகனுக்கு ஒரு பிடிவாதம். கட்டாயம் நானும் வருவேன்னு ஒற்றைக்கால்ல நின்னுட்டான்!''
உத்தமன் நம்பியார் சிரித்தான். தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து அதைப் பின்பக்கம் சுற்றிச் சாய்த்து வாரி இருந்த அந்த இளைஞன் வெட்கத்துடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவன் சட்டை பொத்தான்கள் தங்கத்தாலானவை.
"பேரு?''
"சங்கரன்!''
"எங்க குடும்பத்துல இவன்தான் கடைசி ஆண்பிள்ளை. இவனுக்குக் கீழே மூணு பேரும் பொண்ணுங்கதான்!''
சந்து நாயருக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அவர் வெற்றிலைப் பெட்டியைத் திறக்க முயன்றபோது நம்பியார் தடுத்தான்: "கொஞ்சம் தேநீர் குடிச்சிட்டு...''
இருள் கவிந்திருக்கிற படிகளுக்கு மேலே தயாராக நின்றிருந்தாள் வத்சலா. கார்த்தியாயனி உடன்வர, படிகளில் வத்சலா இறங்கி வந்தபோது, பழமையான அந்தப் படிகளில் அவளின் காலடிச் சப்தம் கேட்டது. சங்கரனின் அக்கா நாணியின் பார்வை முதலில் சென்றது வத்சலா அணிந்திருந்த நகைகள் மேல்தான். கழுத்தில் அணிந்திருந்த காசுமாலை ஐந்து பவுன் இருக்கும் என்று அவள் கணக்குப் போட்டாள். கைகளில் அணிந்திருந்த வளையல்களையும் மாலைகளையும் சேர்ந்தால் நாற்பது பவுன் நிச்சயம் வரும் என்று அவள் மனதில் பட்டது. ஒரே நோட்டத்தில் தங்கத்தின் அளவை எடை போடுவதில் அவளுக்கு நிகர் அவள்தான்.
"சங்கரா, உள்ளே வா!''
நாணி அழைத்தாள். சந்து நாயரும், வயதான பெரியவரும், மற்றவர்களும் உள்ளே வந்தார்கள். மேஜையைச் சுற்றிலும் அமர்ந்தார்கள். பலாப்பழ பாலும் சுண்ணாம்பும் கரையாய் ஒட்டிக் கொண்டிருந்த மேஜைமேல் தனித்தனி தட்டுகளில் நெய்யப்பமும், கலத்தப்பமும், அடையும் கொண்டு வந்து வைத்தார்கள். பெரியவருக்கு அதைப் பார்த்ததும், மனதில் ஒரு புரட்டல் உண்டானது. வத்சலா தேநீருடன் வந்து நின்றபோது, சங்கரனின் மனம் கடிகாரம்போல "டிக் டிக்" என்று அடித்தது.
அப்போதுதான் சந்து நாயர் மனதில் அந்தக் கேள்வி எழுந்தது.
"குஞ்ஞி கிருஷ்ணன் தம்புரானை எங்கே காணோம்?''
அப்படி அவர் கேட்டபோது, அவர் குரலில் ஆச்சரியம் மட்டுமல்ல; ஒருவகையான வருத்தமும் கலந்திருந்தது. தாங்கள் பெண் பார்க்க வரும் நேரத்தை முன்கூட்டியே சொல்லித்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். ஜீப் மாளிகையின் வாசலில் வந்து நின்றபோது நாட்டு நடப்புப்படி தம்புரான் அங்கு வந்து விருந்தாளிகளை வரவேற்றிருக்க வேண்டும் அல்லவா? சரி, அதுதான் போகட்டும். இவ்வளவு நேரம் ஆகியும், தம்புரான் இதுவரை தன் முகத்தைக்கூட இந்தப் பக்கம் காட்டவில்லையே!
சந்து நாயரின் கேள்வியைக் கேட்டதும், உத்தமன் நம்பியாருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. பாருக்குட்டி தம்புராட்டிக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.
"படகுத் துறைப்பக்கம் போயிருக்கார் உங்களை எதிர்பார்த்து...''
"நாங்க ஜீப்லதான் வருவோம்னு முன்கூட்டியே சொல்லிஇருந்தோமே!''
தம்புரானின் தர்மபத்தினிக்கு மூச்சை அடைத்தது.
அப்போது சந்து நாயருக்கு இன்னொரு விஷயமும் ஞாபகத்தில் வந்தது. ஜீப்பை விட்டு இறங்கியபோது வெளியே ஒரு மூலையில் இருந்த ஷெட்டில் தம்புரானின் ஜட்காவும் பக்கத்திலேயே குதிரையும் இருந்ததை அவர் பார்த்தார். ஏதோ ஒரு பிரச்சினை மறைந்திருப்பதை அவரால் உணரமுடிந்தது.
"மகளே... சங்கரனுக்கு நெய்யப்பம் வை...''
தம்புராட்டி சொன்னான். மகள் வத்சலா அதன்படி நடந்தாள். சங்கரனின் முகத்தில் வெட்கம் தெரிந்தது. தம்புராட்டி பெரியவரின் கிண்ணத்திலும், சந்து நாயரின் கிண்ணத்திலும் பலகாரங்களை எடுத்துவைத்தாள். சந்து நாயர் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். கருப்பாக இருந்தாலும் பெண்ணைப் பற்றிக் குறைவாக எண்ணுவதற்கில்லை. தம்புரானின் நடவடிக்கைதான் அவரை வெறுப்பேற்றியது. சந்து நாயரை யாரும் தம்புரான் என்று அழைக்கவில்லை என்றாலும், கல்லிசேரியில் குஞ்ஞிகிருஷ்ணன் தம்புரானுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் தன் ஊரில் அதே அளவிற்கு தனக்கும் இருக்கிறது என்பதை அவர் நன்றாகவே அறிவார்.
"அய்யோ... என்ன ஒண்ணுமே சாப்பிடாமல் எந்திருச்சிட்டீங்க?''
"தம்புரான் வரட்டும்...''
சந்து நாயர் எழுந்ததும், பெரியவரும் மற்றவர்களும்கூட எழுந்து விட்டார்கள். சங்கரன் மட்டும் அசையாமல் உட்கார்ந்திருந்தான். வாசல் படியில் ஒரு பக்கமாய் திரும்பி தலை குனிந்து நின்றிருந்த வத்சலா கடைக்கண்ணால் தன்னைப் பார்த்தபோது அவன் மனம் முழுவதும் நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது.
சந்து நாயர் தொண்டையை லேசாகக் கனைத்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட சங்கரன் மனமே வராமல் எழுந்து முன்னறைக்கு வந்தான்.
"நாங்க போறோம்...''
"அய்யோ... படகுத் துறைக்கு ஆள் அனுப்பியிருக்கு. தம்புரான் இப்போ இங்கே வந்துடுவாரு!''
"நம்பியாரே... நானும் ஒரு குடும்பஸ்தன்தான். உண்மை என்னன்னு மனம் திறந்து சொல்லணும். தம்புரான் படகுத் துறைக்குப் போயிருக்கார்னா வண்டியும் குதிரையும் ஏன் வெளியே நின்னுக்கிட்டு இருக்கு?''
உத்தமன் நம்பியார் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெளிறிப் போய் நின்றான். பாருக்குட்டி தம்புராட்டி மனதிற்குள் அழுதாள். அவள் கண்களில் இருந்து நீர் அருவியென வழிந்தது.
"வத்சலாவோட அப்பா ராத்திரி காத்து வாங்குறதுக்காக வெளியே போனார். ஆனா, அதுக்குப் பிறகு திரும்பியே வரல.
அவர் எங்கே போனார்னு தெரியல. கடவுளுக்குத்தான் தெரியும்!''
இதைக் கேட்டதும் சந்து நாயர் சிரித்தார்.
"பாருக்குட்டி அம்மா... இங்க பாருங்க... இந்த சின்னப் பிள்ளை விளையாட்டு என்கிட்ட வேணுமா? அண்ணே... நாணீ... சங்கரா... வாங்க போவோம்!''
புடவையின் நுனியை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்ட நாணி குடையை எடுத்து கக்கத்தில் வைத்தவாறு சந்து நாயருடன் வாசலுக்கு நடந்தாள். மற்றவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். தயங்கித் தயங்கி அவர்களுடன் நடந்தான் சங்கரன். இரண்டு முறை அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். கண்களைத் துடைத்தவாறு உள்ளே ஓடிய வத்சலாவைப் பார்த்து அவன் மனம் துடித்தது.
"அப்பா... எனக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு!''
"உன் விருப்பத்தை இங்கே எவன்டா கேட்டது?''
சந்து நாயர் வேகமாக நடந்தார். அவிழ்ந்த குடுமியை இழுத்துக் கட்டிய அவர் ஜீப்பில் ஏறி அமர்ந்தார். மண்ணையும் தூசியையும் கிளப்பியவாறு ஜீப் வேகமாகப் பாதையில் ஓடியது. தம்புராட்டி வாய்விட்டு அழுதாள். உத்தமன் நம்பியார் தலையில் கைவைத்து உட்கார்ந்தான்.
கல்லிசேரியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகக் கல் எடுத்தபோது தான் இந்தப் பெரிய குழியே உண்டானது. அதன் மத்தியில் ஊறித் தேங்கியிருந்த தண்ணீர் வெயிலின் சூட்டால் வற்றிப் போய் விட்டிருந்தது. குழியின் ஓரங்களில் செடிகளும் கொடிகளும் காடுபோல வளர்ந்து கிடந்தன. ஜீப் பள்ளிக்கூடத்தின் அருகில் வந்தபோது, குழிக்குள் பதுங்கி இருந்த தம்புரான் லேசாகத் தன் தலையை உயர்த்திப் பார்த்தார். ஜீப்பில் அமர்ந்திருந்த சந்து நாயரின் முகம் இங்கிருந்தே தம்புரானுக்கு நன்றாகத் தெரிந்தது. ஓடிப்போய் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைத்தார் அவர். ஆனால், உடம்பில் துணியே இல்லாத தம்புரான் குழியை விட்டு எப்படி வெளியே வருவார்?
ஜீப் பள்ளிக்கூடத்தைக் கடந்து மறைந்தபோது, தம்புரான் ஒரு ஆமையைப்போல தன் தலையை உள்ளே இழுத்து குழிக்குள் ஒளிந்துகொண்டார்.
தெற்குப்பக்கம் ஓடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் அந்தி வெயிலில் மின்னிக்கொண்டிருந்தது. பகல் முழுவதும் காய்ந்து கொண்டிருந்த சூரியன், நேரம் செல்லச் செல்ல மலைக்குப் பின்னால் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் கல்லிசேரி இருளில் மூழ்கிவிடும். அதோடு எல்லா நடமாட்டங்களும் நின்று போகும்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரச்சினையில் சிக்கிக்கொண்ட தம்புரான் சிறகொடிந்த பறவையைப்போல குழிக்குள் கூனிக் குறுகிப் போய்க்கிடந்தார். உடம்பில் ஒரு பொட்டுத் துணிகூட இல்லாமல் அவர் எப்படி வீட்டுக்குப் போவார்? சிறு பூச்சிகள் அவரைக் கடித்ததால் அவர் உடம்பில் அரிப்பு ஏற்பட்டது. மனதில் இனம் புரியாத ஒரு படபடப்பும், விரக்தியும் உண்டானது. குழிக்குள் அவர் ஒளிந்து கொண்டிருக்கும் இரண்டாவது இரவு இது.
எந்தவித கவலையும் இல்லாமல் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த தம்புரானால் உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் அந்தக் குழிக்குள் இருக்க முடியவில்லை. எப்படியாவது இன்று இரவு குழியை விட்டு வெளியே வந்து மாளிகைக்கு ஓடிச்சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் தம்புரான். அதற்குக் கடவுள் நிச்சயம் ஒரு வழியைக் காட்டுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர். தம்புரான் வானத்தை நோக்கிக் கைகளைக் குவித்து கண்களால் மேலே பார்த்தார். கடவுளைத் தேடி அலையும் ஒரு அப்பாவி மனிதனின் பிரார்த்தனைக்கு பதில் சொல்கிற மாதிரி தூரத்தில் ஒரு வாணம், ஆகாயத்தில் தோன்றி மறைந்தது.
தம்புரான் இருள் கவியும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்தக் குழியை விட்டு வெளியே வருவது என்றால் இருட்டின் உதவி கட்டாயம் தேவை ஆயிற்றே!
பகல் முழுவதும் எப்படிக் கழிந்தது என்பதை நினைத்துப் பார்த்தபோது தம்புரானுக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. உஷ்ணமும், வியர்வையும், பசியும், தாகமும்... இவை எல்லாவற்றையும்விட அவமானம். தம்புரானுக்குச் சுய உணர்வையே இழந்து விட்டதுபோல் இருந்தது.
மதிய நேரத்திலேயே குழியிருந்த இடத்திலோ அதைச் சுற்றியுள்ள பகுதியிலோ ஆள் நடமாட்டமே இல்லை என்றாகிவிட்டது. முதல்நாள் பகலில் யாரும் சாமி ஆடுவதில்லை. அதனால், பொதுவாகவே ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். வெறுமனே அமைதியாகக் கிடந்த கிராமத்துப் பாதையைப் பார்த்ததும் தம்புரானுக்கு ஒருவித ஆசை உண்டானது. காட்டுக் கொடிகளைக் கைகளால் நீக்கி தலையை உயர்த்திச் சுற்றிலும் பார்த்தார். பார்வைபோன இடத்தில் எல்லாம் யாருமே இல்லை. ஊரே பகல் நேர உஷ்ணத்தில் தளர்ந்துபோய்க் கிடந்தது.
மனதில் கடவுளின் பெயரை உச்சரித்துக்கொண்டே தம்புரான் குழியின் பக்கவாட்டுச் சுவரைப்பிடித்து மேலே ஏறினார்.
அவரின் நிலையைப் பார்த்து தொட்டாசிணுங்கிச் செடிகள் வெட்கத்தால் கண்களை மூடிக்கொண்டன. ஏதோ ஒரு செடி பட்டு கால்கள் எரிந்தன. குழியை விட்டு வெளியே வந்த தம்புரான் ஒரு மரத்தின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு நின்றார். நாலா பக்கங்களிலும் கண்களை ஓட்டினார். எந்தப் பக்கமும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உச்சி வெயிலின் கடுமை தாங்க முடியாமல் துவண்டு போன காகங்கள் கரையும் சத்தம் மட்டும் காதில் விழுந்தது.
மீண்டும் வானத்தை நோக்கி கைகூப்பிப் பிரார்த்தித்த தம்புரான் மரத்தின் மறைவை விட்டு வெளியே வந்து இரண்டு எட்டு முன்னால் வைத்து நடந்தார். சுத்தமான மஞ்சள் வெயில் அவரின் உடல்மேல் விழுந்தது. தம்புரான் உண்மையிலேயே நடுங்கிப் போனார். கல்லிசேரியின் தம்புரான் உடம்பில் துணியே இல்லாமல் வெட்ட வெளியில் நின்று கொண்டிருக்கிறார். அந்த நடுக்கமே அவரிடம் ஒரு தளர்ச்சியை உண்டாக்கியது. இளம்பிள்ளைவாதம் வந்ததைப்போல அவரின் கால்கள் துவண்டன.
தம்புரான் மீண்டும் தொட்டாசிணுங்கியும், கொடிகளும் வளர்ந்து கிடக்கும் குழிக்குள் இறங்கி ஒளிந்துகொண்டார்.
பகல் நேரத்தில் உடம்பில் துணி இல்லாமல் வீடு போய்ச் சேர்வது என்பது நடக்கக்கூடிய காரியம் இல்லை என்பது தம்புரானுக்கு நன்றாகவே புரிந்தது. தன் சொந்த ஊரில்- அந்த ஊருக்குச் சொந்தமான தம்புரான் கட்டிய துணி இல்லாமல் வெளியே நடந்துபோவது என்பது உலகத்தில் எங்காவது நடந்திருக்கிறதா என்ன? அதைவிட பேசாமல் உயிரை விட்டுவிடலாம். குஞ்ஞி கிருஷ்ணன் தம்புரான் சாதாரணமாகவே கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் உயிரைவிட அதிக மதிப்பு கொடுக்கக்கூடியவர். கல்லிசேரியின் மானம் போகக்கூடிய ஒரு செயலை யாரும் செய்யக்கூடாது என்று மக்களை ஒவ்வொரு நேரமும் கூறி நல்வழிப்படுத்தி வைத்திருந்தார் அவர். மானம் போகக்கூடிய ஒரு செயலை அவர் எந்தக் காலத்திலும் ஒப்புக்கொண்டதும் இல்லை. அதற்குத் துணை நின்றதும் இல்லை.
இருள் இப்போது முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தது. இனி முழுக்க முழுக்க தம்புரான் இருட்டில் இருக்க வேண்டியதுதான். வெளிச்சத்திற்கு அவர் எங்கே போவார்?
தூரத்தில் இருளில் கலந்திருந்த தென்னை மரங்களுக்கு மத்தியில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தைப் பார்த்து, சொல்லப்போனால்- தம்புரான் பயந்தார். மின்சாரம் தடையாகி கல்லிசேரி இருட்டில் மூழ்கிக் கிடக்காதா என்று மனப்பூர்வமாகப் பிரியப்பட்டார் அவர். இனி அவரைப் பொறுத்தவரை இருட்டு மட்டுமே சாட்சி.
எல்லா விஷயங்களுக்கும் ஆரம்பம் இந்த மின்சாரம்தான். மின்சாரம் இல்லாமல் போனதால்தானே காற்றாடி நின்றது!
அதனால்தானே மாளிகையைவிட்டு காற்று வாங்க அவர் வெளியே வந்ததும், சாலியத்திப் பெண்ணின் மாயாஜாலத்தில் அவர் மயங்கிப் போனதும் நடந்தது!
அப்போது நாட்டுப் பாதையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் எரிந்தன. தம்புரான் ஒளிந்திருந்த குழி வரை விளக்கு வெளிச்சம் விழுந்தது. மறைந்திருக்கின்ற ஒரு திருடன்மேல் டார்ச் விளக்கு பட்டதுபோல் தம்புரான் நடுங்கி சுருங்கிப்போய் உட்கார்ந்திருந்தார்.
யாரைக் குற்றம் சொல்வது? ஆயிலக்கரையிலும் பாணியாற்றிலும் இப்போதுகூட மின்சாரம் கிடையாது. மேக்குன்னு பாலத்தின்மேல் வெளிச்சம் வீசிக்கொண்டிருப்பது, அதன் இரு முனைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் மண்ணெண்ணெய் விளக்குகள்தாம். மற்ற ஊர்களுக்கு மின்சார வசதி இன்னும் வராமல் இருக்கின்ற சூழ்நிலையில், கல்லிசேரிக்கு மின்சாரம் வந்ததற்குக் காரணமே தம்புரானின் தீவிர முயற்சிதான் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம். தம்புரான் மின்சாரத்தை மனதிற்குள் திட்டினார். எல்லா நாகரிக வளர்ச்சியும் ஒருவிதத்தில் மனிதனுக்குத் துரோகமே செய்கிறது என்ற எண்ணம் மேலும் அவர் மனதில் பலமானது. ஊர் மக்களின் நன்மைக்காக அவர் செய்த ஒரு நல்ல காரியம் தன்னுடைய மானம் போகக்கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று அவர் நினைத்துப் பார்த்தாரா என்ன?
ராமன் செட்டிமீது சொல்லப்போனால் தம்புரானுக்கு அடக்க முடியாத அளவிற்குக் கோபம் உண்டானது. பட்டணத்துக்கு வியாபார விஷயமாகப் போன அந்த ஆள் நேரம் கெட்ட நேரத்தில் எதற்கு அவசரமாக ஊர் திரும்ப வேண்டும்?
பேசாமல் அன்று இரவு பட்டணத்தில் இருந்துவிட்டு வரவேண்டியதுதானே! நள்ளிரவு நேரத்தில் மாட்டு வண்டியில் அவன் ஏறி வந்ததால்தானே இப்போது தேவையில்லாமல் தம்புரான் குழிக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்?
என்ன இருந்தாலும், செட்டி ஒரு போக்கிரித்தனம் கொண்ட மனிதன்தான். வேற்று ஊர்க்காரர்களும், குறுக்குப்புத்தி கொண்டவர்களும் சொன்னார்கள் என்பதற்காக தம்புரானை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட மனிதன்தானே அவன்! அன்று தன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட நிமிடத்திலேயே அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவனைத் தம்புரான் கல்லிசேரியை விட்டு நிரந்தரமாக வெளியேற்றி இருக்க வேண்டும். தான் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் தனக்குக் கெடுதல் செய்வதாகவே எப்படி அமைகிறது என்பதுதான் தம்புரானுக்குப் புரியவே இல்லை. கர்ம பலன்களைக் குறித்தும், பாவ புண்ணியங்களைப் பற்றியும் தான் காலம் காலமாக நினைத்து வந்திருக்கும் கருத்தை நிச்சயம் மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் தம்புரான். இந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்தபிறகு இந்த விஷயத்தில் நிச்சயம் கவனம் செலுத்தியே தீருவது என்ற தீர்க்கமான தீர்மானத்தில் இருந்தார் தம்புரான்.
ஆற்றங்கரையில் இருந்து வெடிச்சத்தம் காதைத் துளைத்தது. குழியின் சுவரையொட்டி வளர்ந்திருந்த அம்பழங்கா மரத்தில் இருந்த பறவைகள் வெடிச் சத்தத்தைக் கேட்டு நடுங்கிப்போய் வானத்தில் பறப்பதும், மீண்டும் திரும்பிவந்து கூட்டிற்குள் போவதுமாய் இருந்தன. தேவியைக் குளிப்பாட்டும் நேரம் வந்துவிட்டது என்பதைத் தம்புரான் புரிந்துகொண்டார். கல்லிசேரி ஆற்றில் குளித்தவுடன் தேவி வாத்திய கோஷங்களின் ஆரவாரத்துடன் ஊருக்குள் போவாள். அதோடு திருவிழா களை கட்ட ஆரம்பிக்கும்.
ஆற்றில் குளித்துவிட்டு வரும் தேவிக்கு சந்தனமும், ஆபரணமும் அணிவிப்பது தம்புரான்தான். குளித்து முடித்து, சந்தனம் பூசி, புத்தாடைகள் அணிந்து அழகு தேவதையென நிற்கும் தேவிக்கு முதல் மரியாதை செய்யக்கூடிய வாய்ப்பே தம்புரானுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரைத் தொடர்ந்து பாருக்குட்டி தம்புராட்டியும், மற்ற அரண்மனை உறுப்பினர்களும் மரியாதை செய்வார்கள். எந்தக் காலத்திலும் இந்த வழக்கம் நடைபெறாமல் போனதே இல்லை. என்றுமில்லாத ஒன்றாய் இப்போது அதற்கு பிரச்சினை வந்திருக்கிறது.
இத்தனை வருடங்களாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் காப்பாற்றி வந்த தேவி, இந்த ஆண்டு ஏன் தன்னை இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாக்கிவிட்டாள் என்று எண்ணி எண்ணிக் குமைந்து போனார் தம்புரான். இந்தத் துன்பத்தை அனுபவிக்கிற அளவிற்கு அப்படி என்ன தம்புரான் பெரிய தவறைச் செய்துவிட்டார்? மற்ற தம்புரான்கள் எப்படி எல்லாம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! என்ன மாதிரி எல்லாம் சுகபோகங்களில் அவர்கள் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால் இவரோ, பாருக்குட்டி தம்புராட்டியைத் தவிர இதற்கு முன்பு வரை இன்னொரு பெண்ணை சுண்டுவிரலால் கூடத் தொட்டுப் பார்த்ததில்லை. ஊரில் இருக்கின்ற எல்லாருமே ஒழுக்கசீலர்களாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசைப்பட்டவர் தம்புரான்.
அவர்களின் நன்மைக்காகத்தான் கல்லிசேரியில் காதல் திருமணமே நடக்கக்கூடாது என்பதைச் சட்டமாக்கினார் அவர். கல்லிசேரிக்காரர்கள் பார்த்த கடைசி காதல் திருமணமே ராமன் செட்டிக்கும் சாலியத்தி பெண்ணுக்கும் இடையே நடந்ததுதான்.
தம்புரான் தாடையில் கை வைத்து அசைவே இல்லாமல் சிலை என குழிக்குள் நின்றிருந்தார்.
ஆற்றங்கரையில் வாத்திய ஒலியும், மேளச்சத்தமும் காற்றைக் கிழித்துக்கொண்டு கேட்டன. தேவி புறப்படத் தயாராகி விட்டாள். முன்னால் இதில் முக்கிய பங்கு வகித்தது குஞ்ஞன் பூசாரி. கண் பார்வை முழுமையாகப் போன பிறகும்கூட, திருவிழாக் காலங்களில் ஊரில் "துள்ளல்" நடத்தியது இவர்தான். இப்போது அந்த இடத்தில் பட்டாடை அணிந்து, வாளைக் கையில் ஏந்தியவாறு தேவிக்கு முன்னால் நடந்து செல்வது ஆயிலக்கரைக்காரன் குறும்பன். மரங்களுக்கு மத்தியில் தெரியும் வெளிச்சத்தை இங்கிருந்தே தம்புரான் பார்க்க முடிந்தது.
ஊரை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் கூட்டம் இப்போது பொதுப் பாதையை அடைந்தது. எல்லா வீடுகளிலும் நெய் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தன. தான் பதுங்கியிருந்த குழிமேல் வெளிச்சம் விழுந்தபோது, ஒரு மூலையில் போய் பம்மிக் கொண்டார் தம்புரான். புதிய பட்டாடை உடுத்தி, நெற்றியில் சந்தனம் பூசி, தேவியுடன் கூட்டத்திற்கு முன்னால் கம்பீரமாக நடந்துசெல்ல வேண்டிய தம்புரான்... வெளிச்சத்தைப் பார்த்து ஒரு காட்டு மிருகத்தைப்போல பயந்துபோய் இலைகளுக்குள் தன்னை மறைத்துக்கொண்டு குழிக்குள் நின்றிருந்தார். நிழல்களும், வெளிச்சமும், தம்புரானுக்கு மேலே மாறி மாறி தோன்றும்படி கூட்டம் அவரைக் கடந்து போனது.
கூட்டம் தன்னைத் தாண்டிப் போனபிறகுதான், தம்புரானுக்கு மீண்டும் உயிரே வந்தது. இலைகளுக்குப் பின் தன்னை மறைத்துக் கொண்டிருந்த தம்புரான் இப்போது அதை விட்டு வெளியே வந்தார். தன் இப்போதைய பரிதாப நிலையை எண்ணி மனம் குமுறினார். இந்த இரவிலேயே இந்தக் குழியை விட்டு எப்படியாவது வெளியேறி தம்புரான் வீடுபோய்ச் சேர்ந்தால்தான். இல்லாவிட்டால் திருவிழா முடியும்வரை அவர் குழியை விட்டு வெளியே வருவது என்பது கிட்டத்தட்ட நடக்க முடியாத ஒன்று. பேசாமல் குழிக்குள்ளேயே மாட்டிக்கொண்டு கிடக்க வேண்டியதுதான். வேறு வழியே இல்லை. அதைத் தம்புரான் புரிந்துகொள்ளாமல் இல்லை. நாளை முதல் ஊரில் பலரும் சாமியாட ஆரம்பிப்பார்கள். ஊரே அல்லோல கல்லோலப்படும். மக்கள் வருவதும் போவதுமாய் இருப்பார்கள். சொல்லப்போனால் திருவிழா முடிகிறவரை கல்லிசேரி மக்களுக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருக்கும்.
தம்புரான் தன் உடலில் ஒட்டியிருந்த காய்ந்த இலைகளையும், பட்டைகளையும் கையால் துடைத்துவிட்டு, ஒரு கல்மேல் உட்கார்ந்தார். அப்போது ஒரு தேனீ அவரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. குழியின் மேற்குப் பக்கத்தில் ஒரு மூலையில் ஒரு தேன்கூடு இருந்ததை அவர் ஏற்கெனவே பார்த்திருந்தார். ஏதோ சில காரணங்களால் அந்தத் தேன்கூடு உருகிவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு சூழ்நிலை உண்டாகி, தேனீக்கள் அனைத்தும் கூட்டைவிட்டு வெளியேறினால்... தம்புரான் நிலையை என்னவென்று சொல்வது? அவர் அப்படியொரு நிலை வந்தால் எங்கே ஓடுவார்? கடவுள் அப்படி ஒரு சூழ்நிலையைத் தம்புரானுக்கு உண்டாக்காமல் இருக்கட்டும்.
பசியையும், தாகத்தையும் மறந்து கல்லின்மேல் அமர்ந்திருந்த தம்புரான் எப்படி இந்தக் குழியை விட்டு வெளியேறித் தப்புவது என்ற சிந்தனையில் இருந்தார். கல்லிசேரியில் இருக்கும் கண்பார்வை தெரியாத குருட்டு மனிதரான குஞ்ஞன் பூசாரி இந்த நேரத்தில் இந்தப் பாதையில் வரக்கூடாதா என்று மனப்பூர்வமாக ஏங்கினார் தம்புரான். அந்த மனிதர் மட்டும் இந்தப் பாதையில் வந்தால், சர்வ சாதாரணமாக தம்புரான் இந்தக் குழியில் இருந்து தப்பிவிடுவார்.
இப்போதுள்ள சூழ்நிலையில் கண்பார்வை தெரியாத அந்த ஆளுக்கு முன்னால் மட்டுமே எந்தவித கூச்சமும் இல்லாமல் தம்புரானால் போய் நிற்கமுடியும். கண் பார்வையற்ற அந்த மனிதருக்கு என்ன தெரியப் போகிறது? பூசாரியின் தோளில் போட்டிருக்கும் துணி போதும். அதை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு இருளோடு இருளாய்க் கலந்து மாளிகைக்கு ஓடிவிடலாம். முழங்கால் வரை மட்டுமே வரும் துணியைச் சுற்றிக்கொண்டு பொதுப் பாதையில் நடப்பது என்பது தம்புரானின் அந்தஸ்துக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், துணியே உடம்பில் இல்லாமல் நிர்வாணமாக இருப்பதைவிட, அது எவ்வளவோ நல்லதாயிற்றே!
பாதையிலோ, வயல்பக்கத்திலிருந்தோ ஏதாவது நிழல் தெரிந்தால், தம்புரான் ஆர்வத்துடன் யார் வருவது என்று தலையைத் தூக்கிப் பார்ப்பார். ஒருமுறை அவரின் மருமகன் வாசுதேவன் அவருக்கு முன்னால் பாதையில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.
அவனை அழைத்து ஒரு துணியை எடுத்து குழிக்குள் போடச் சொன்னால் என்ன என்று யோசித்தார். ஆனால், அடுத்த நிமிடம் தன் எண்ணத்தை அவர் மாற்றிக்கொண்டார். "டேய் வாசு..." என்று தம்புரான் அழைத்தால், பயந்துபோய் மூத்திரம் பெய்யக்கூடிய மனிதன் அவன். தம்புரானைக் கண்டால் அவனுக்கு அவ்வளவு பயம்! அப்படிப்பட்ட மருமகன் முன்னால் உடம்பில் துணியே இல்லாமல் தம்புரான் நின்றுகொண்டிருப்பது என்பது...! வாசுதேவன் கடந்து செல்லும் வரை, குழியின் ஓரத்தில் இருந்த ஆமணக்குச் செடிக்குப் பின்னால் தன்னை மறைத்தவாறு நின்றிருந்தார் தம்புரான். பலரும் பாதையில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். குஞ்ஞன் பூசாரியை மட்டும் காணவே காணோம். இருளில் கண்பார்வை தெரியாத ஒரு மனிதர் தட்டுத் தடுமாறி திருவிழா பார்க்க வருவாரா என்ன? அப்படி நினைத்துப் பார்ப்பதே முட்டாள்தனமாக இல்லையா? பரிதாபச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட தம்புரானுக்கு அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லாமல் போய்விட்டதுதான் விந்தையிலும் விந்தை.
நள்ளிரவு நட்சத்திரம் வானத்தில் தோன்றிய நேரத்தில், தம்புரான் ஒரு முடிவுக்கு வந்தார். தூரத்தில் ஊருக்குள் இருந்து மேள தாள ஒலிகள் கேட்டாலும், கிட்டத்தட்ட பாதையில் ஆள் நடமாட்டம் இல்லை என்கிற அளவிற்கு முழுமையாக நின்று போயிருந்தது.
அவ்வப்போது வேண்டுமானால் யாராவது ஒரு கல்லிசேரிக்காரன் பாதை தவறிய பயணியைப்போல அந்தப் பாதையில் தென்படலாம். பொழுது புலர இன்னும் அதிக நேரம் இல்லை. தம்புரான், தலையை உயர்த்திச் சுற்றிலும் பார்த்தார். தூரத்தில் தென்னந்தோப்பைத் தாண்டி ஒரு சிறு வெளிச்சம் தோன்றி மறைந்தது.
தம்புரானுக்கு மின்விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும் பொது வழியில் நடந்துசெல்ல தைரியம் இல்லை. ஆரானின் வயல் வழியே நடந்து, குறுக்குப் பாதைகளில் நடந்துதான் தான் செல்லவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். கடவுளை மனதிற்குள் நினைத்த வாறு, பெற்றோர்களை பயபக்தியுடன் தொழுதவாறு, மெல்ல குழியில் எழுந்து நின்றார் தம்புரான். இன்னொரு முறை நான்கு பக்கங்களிலும் பார்வையை ஓட்டினார். யாரும் வரவில்லை என்று மனதில் தெளிவாகப் பட்டவுடன் குழியை விட்டு வெளியே வந்தார்.
குழியைவிட்டு வெளியே வந்த தம்புரானின் நிர்வாண உடம்பு நிலவொளியில் பட்டுப் பிரகாசித்தது. அவர் அடுத்த நிமிடம் குழிக்கு வடக்குப் பக்கத்தில் இருந்த வறண்டு போயிருந்த குளத்தில் இறங்கி நடந்தார். எங்கோ இருந்த ஒரு நாய், "ஊ" என்று ஊளையிட்டது. குளத்தைத் தாண்டி பள்ளிக்கூட ஆசிரியர் சோயிக்குருப்பின் வீடு. அங்கே வெளிச்சம் எதுவும் இல்லை. அங்கிருந்த ஒரு மேட்டின் மேல் ஏறி வயலில் கால் வைத்தார் தம்புரான். வறண்டு போயிருந்த மண்கட்டிகள் அவருக்குப் பின்னால் "பொத் பொத்" என்று விழுந்தன. வயலில் கால்வைத்த தம்புரான் அங்கிருந்த புளிய மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டார். சோயி வாத்தியாரின் பரந்து கிடக்கும் நிலத்தைத் தாண்டி இருளோடு இருளாய் சங்கமமாகி அப்பு மாராரின் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் குறுக்குப் பாதையில் இறங்கி நடக்கத் தீர்மானித்தார் தம்புரான். அவர் திட்டம் போட்டபடி நடந்துவிட்டால், ஆபத்தான இந்தப் பயணத்தின் முதல்கட்ட வெற்றியை அவர் அடைந்த மாதிரி.
இரண்டடி முன்னால் நடந்திருப்பார். மேற்குப் பக்கத்தில் தீப்பந்தங்கள் ஒளிர்வது தெரிந்தது. மரத்திற்குப் பின்னால் போய் தன்னை மறைத்துக் கொண்ட தம்புரான் அது என்ன வெளிச்சம் என்று கூர்மையாகப் பார்த்தார். ஊருக்குள் இருந்து வரும் அவர்கள் பாதை வழியே போவதாக இருந்தால், அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால், பந்தம் ஏந்திக் கொண்டிருந்தவர்கள் பாதையைவிட்டு, வடக்குப் பக்கமாய்த் திரும்பியபோது, தம்புரானின் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அடங்கிய அந்தப் பெரிய கூட்டத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் கைகளில் தீப்பந்தங்கள் இருந்தன. அவர்கள் பாண்டியாற்றுக்காரர்கள் என்பதை தம்புரான் புரிந்துகொண்டார். தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய்க் கிடக்கும் குளத்தைத்தாண்டி, வயல்வழியே வடக்கு நோக்கி நடந்தால் சீக்கிரம் பாண்டியாற்றை அடைந்துவிடலாம். பந்தங்களின் வெளிச்சம் அவரை மிகவும் நெருங்கி வந்தது. குழந்தைகளும், பெண்களும் "சலசல" என்று பேசிக் கொண்டே வந்தனர்.
சில அடிகள் பின்னால் நடந்துசென்று வயதாகிப் போய் நின்றிருந்த புளிய மரத்திற்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டால் தம்புரானை யாரும் பார்க்க மாட்டார்கள். ஆனால் வெளிச்சத்தையும், மக்களின் பேச்சொலியையும் கேட்ட சோயி வாத்தியார் தூக்கம் கலைந்து எழுந்து வந்து தன் வீட்டின் முன்னால் இருந்த விளக்கைப் போட்டதுதான் தம்புரானுக்குப் பெரிய தடைக்கல்லாகி விட்டது. அவர் எப்படிப் பார்த்தாலும் தப்பிக்க வழியே இல்லை என்றாகிவிட்டது. அவரின் கண்கள் இருண்டன. "கடவுளே, ஏன் என்னை இப்படிச் சோதனை செய்றே?" என்று மனதிற்குள் அழுதார் தம்புரான்.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த தம்புரான் மீண்டும் திரும்பி, குளத்திற்குள் இறங்க முடிவெடுத்தார். மேட்டில் கை வைத்து இறங்கியபோது, தடுமாறி தன்னுடைய நிர்வாண உடம்புடன் வற்றிப்போன குளத்தில் விழுந்தார் அவர்.
அடுத்த நிமிடம்- பதறிப்போய் எழுந்து தான் ஏற்கெனவே ஒளிந்திருந்த குழியை நோக்கி ஓடினார். அப்படி ஓடும்போது, ஒரு இடத்தில் தடுமாறிக் கீழே விழுந்தார் தம்புரான். சிறிது தூரத்தில் நாய் ஒன்று பலமாகக் குரைத்தது. குழிக்குள் மீண்டும் இறங்கிய தம்புரான் இருளோடு இருளாய்க் கலந்து, மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டார்.
தீப்பந்தங்களின் வெளிச்சம் குழிக்கு மேலே கடந்துபோனது. குழந்தைகளும், பெண்களும் என்னென்னவோ மகிழ்ச்சியுடன் பேசியவாறு நடந்து போயினர். குளக்கரைப் பக்கம் வந்து நின்ற ஒரு சொறி நாய் நீண்ட நேரம் குரைத்துக்கொண்டே இருந்தது.
பாண்டியாற்றுக்காரர்கள் குளத்தைக் கடந்து குறுக்குப் பாதையில் இறங்கி நடந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் தீப்பந்தங்களின் வெளிச்சம் மறைந்து காணாமல் போனது.
அடுத்த சில நிமிடங்களில் வானம் வெளுத்தது. குளிர் காற்று வீசத் தொடங்கியது. அன்றைய திருவிழா முடிந்து, கண்களில் உறக்கம் குடிகொள்ள மக்கள் தங்கள் வீடுகளைத் தேடிப் போனார்கள்.
எப்போதும் எறும்புக் கூட்டைப்போல படு சுறுசுறுப்புடன் இருக்கும் தம்புரானின் மாளிகை சாவு வீடுபோல உயிரோட்டமே இல்லாமல் இருந்தது. பாருக்குட்டித் தம்புராட்டி சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டன. வீட்டு வேலைக்காரர்களும் மற்றவர்களும் இங்குமங்குமாய் நடந்துக்கொண்டிருந்தாலும் யாரும் ஒரு வார்த்தைக்கூட வாய் திறந்து பேசுவதில்லை. எல்லார் முகத்திலும் எதையோ பறிகொடுத்த மாதிரி கவலை தெரிந்தது. ஊர்க்காரர்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர்.
"நாமும் ஒருமுறை போய் பார்ப்போம்!''
ராமன் செட்டி சொன்னான்:
"நீங்க போங்க. நான் வரல...''
"என்ன இருந்தாலும் நம்ம தம்புரான் இல்லியா?''
லட்சுமி அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. செட்டியைப் பொறுத்தவரை அவனுடைய மனதில் தம்புரானைப் பற்றி வெறுப்பு ஒன்றும் இல்லை. பழமைவாதியாகவும், பிடிவாதக்காரராகவும் இருந்தாலும், ஊர்மீதும் ஊர் மக்கள்மீதும் பாசம் கொண்ட மனிதராயிற்றே தம்புரான்! அவர் திடீரென்று காணாமல் போனது ஊரையே பரபரப்பில் ஆழ்த்திவிட்டது. ஊரே அந்தக் கவலையில் மூழ்கிப் போய் இருந்தது. நிச்சயம் தம்புரானின் வீடுதேடிச் சென்று அங்குள்ளவர்களிடம் மரியாதை நிமித்தமாக விசாரிப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் செட்டி நன்கு உணர்ந்தே இருந்தான்.
செட்டி நீலநிற சட்டையை எடுத்து அணிந்தான். அதற்குமேல் லட்சுமியுடன் பேசிக்கொண்டிருக்க அவனுக்கு நேரமில்லை. திருவிழாவை ஒட்டி போடப்பட்டிருந்த சந்தையில் மும்முரமாக வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. முதல்நாள் கிட்டத்தட்ட முன்னூறு வேஷ்டிகள் விற்பனை ஆயின. எண்ணெய் தயாரிக்கும் தொழிலை நிறுத்திவிட்டு வேஷ்டிகள் விற்பனை செய்யும் வியாபாரம் தொடங்கியது ஒருவிதத்தில் செட்டிக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது. இந்த வருடம் குடகில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. ஒவ்வொரு குடகுக்காரனும் மூன்றோ நான்கோ வேஷ்டிகளை விலைக்கு வாங்கினார்கள்.
"கொஞ்சம் நில்லுங்க... நானும் வர்றேன்.''
செட்டிச்சியின் மனம் மாறிவிட்டது. அவள் யாருக்கும் தெரியாமல் தம்புரான் உடுத்தியிருந்த துணியை கல்லிசேரி ஆற்றில் கொண்டுபோய் வீசி எறிந்துவிட்டு வந்திருந்தாள்.
"கன்னத்துல இன்னும் கொஞ்சம் பவுடர் போடணும்.''
"நான் என்ன கல்யாணத்திற்கா போறேன்!''
அவளுடன் நடப்பது என்றால் செட்டிக்கு என்றுமே திருமணம் மாதிரிதான். அவர்கள் இருவரும் தம்புரானின் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார்கள். உச்சி வெயிலில் செட்டியின் காதுகளில் இருந்த பொன் கடுக்கன் மின்னியது.
திருவிழாக் காலமாக இருந்தாலும் ஊரில் மகிழ்ச்சியே இல்லாமல்தான் இருந்தது. திருவிழாவை ஒட்டி அடிக்கப்படும் செண்டை ஒலிகூட சோகம் கலந்ததாகவே ஒலித்தது.
"சொல்லப்போனால், சின்னப் பிள்ளைங்கதான் காணாமப் போவாங்க. இப்போ பார்த்தால் வயசானவங்ககூட காணாமப் போறாங்க ம்... எல்லாம் கலிகாலம்!''
மாளிகையில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்த சோயி வாத்தியார் சொன்னார்.
திருவிழாவை ஒட்டி மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடத்தில் பக்தர்கள் வந்து தங்கி இருந்தார்கள்.
"தம்புரானைப் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சதா வாத்தியாரே?''
"டேய் செட்டி... நீ சரியான வாத்துடா... என்னத்த தகவல் கிடைக்க? தம்புரான் நிச்சயம் உயிரோட இருக்க வாய்ப்பு இல்ல. அதுமட்டும் நிச்சயம்!''
வாத்தியார் நடந்துபோனார்.
"காற்று வாங்க நடந்து போறப்போ, இருட்டுல கால் தடுமாறி ஆற்றுல விழுந்திருப்பாரு. தண்ணி தம்புரானை இழுத்துட்டுப் போயிருக்கும்!''
செட்டி, யாரிடம் என்றில்லாமல் அவனாகவே சொன்னான்.
பாருக்குட்டி தம்புராட்டி ஒரு பழமையான கட்டிலில் படுத்துக் கிடந்தாள். ஏற்கெனவே சற்று நிறம் குறைந்த அவளின் முகம், அதிகமாக அழுததால் மேலும் இருண்டு போயிருந்தது.
"அம்மா... கொஞ்சம் கஞ்சித்தண்ணி குடிங்க. இப்படியே படுத்துக் கிடந்தா எப்படி?''
ஜானகி அருகில் வந்து நின்று சொன்னாள்.
"உங்கப்பா வரட்டும்!''
"அப்பா வராம எங்கே போகப் போறாரு? முதல்ல நீங்க கொஞ்சம் கஞ்சி குடிங்க...''
அவள் கிண்ணத்தில் சூடான கஞ்சியை ஊற்றி, தாயின் அருகில் வைத்தாள்.
"உங்கப்பா எங்கே போயிருப்பார்னு நினைச்சு நினைச்சு எனக்கு பைத்தியமே பிடிச்சுப்போச்சு!''
தம்புராட்டி கண்ணில் இருந்து வந்த நீரைத் துடைத்தாள்.
"அம்மா... இப்படி எதுவும் குடிக்காமல், சாப்பிடாமல் படுத்துக் கிடந்தால் உடல் என்ன ஆகுறது?''
"அப்படி உடலுக்கு ஏதாவது வர்றதா இருந்தால் வரட்டும். நான் இனிமேல் எதற்காக வாழணும்?''
"அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு நம்ம யாருக்காவது தெரியுமா? உண்மை தெரியிறது வரை மனசை அமைதிப்படுத்திக்கிட்டு சும்மா இருங்கம்மா.''
தம்புரானைத் தேடி நாலா பக்கமும் ஆட்கள் சென்றார்கள். உத்தமன் நம்பியார் பட்டணத்திற்குச் சென்று போலீஸில் தம்புரான் காணாமல் போன விஷயத்தைப் புகாராக எழுதிக் கொடுத்தான். கல்லிசேரிக்குள் போலீஸ் தலையே தெரியக்கூடாது என்பதில் மிகவும் கறாராக இருந்தார் தம்புரான். தன் ஊரில் நீதியையும், சட்டத்தையும் செயல் வடிவில் நிலைநாட்ட தான் மட்டுமே போதும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார் அவர். கடைசியில் அதே தம்புரானைக் காணவில்லை என்று போலீஸ் ஊருக்குள் வரவேண்டிய நிலை. உண்மையிலேயே இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்ததற்காக போலீஸ் சந்தோஷப்பட்டது. தம்புரான் விஷயமாக விசாரிக்கிறோம் என்று கண்ணில் கண்டவர்களை எல்லாம் அவர்கள் ஊர் முழுக்க விசாரித்தார்கள்.
குஞ்ஞிகிருஷ்ணன் தம்புரானின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உறவினர்களும் பல ஊர்களிலும் சிதறிக் கிடந்தார்கள். தம்புரான் காணாமல்போன செய்தியைக் கேள்விப்பட்டு அவர்கள் படகிலும் பல்லக்கிலுமாய் கல்லிசேரியைத் தேடி வந்தார்கள். அவர்களில் சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு திருவிழா கொண்டாட்டங்களைக் கண்டு களித்தார்கள். அப்படியே திருவிழாச் சந்தைக்குள் நுழைந்து கல்லிசேரி வேஷ்டிகள் வாங்கவும் செய்தார்கள். இதன்மூலம் ராமன் செட்டிக்கு நல்ல லாபம் கிடைத்தது.
திருவிழா கிட்டத்தட்ட முடிவடையும் கட்டத்திற்கு வந்தது. இன்றுதான் திருவிழாவின் கடைசிநாள். கல்லிசேரி பக்தர்களால் நிரம்பி வழிந்தது. குடகில் இருந்து வந்தவர்கள் பள்ளிக்கூடத்தில் குளியலும், ஓய்வுமாக இருந்தார்கள்.
வத்சலா இதுவரை திருவிழா நடக்கும் திசைப்பக்கமே போகவில்லை. சந்தைக்குப் போய் வளையல்களும், பவுடரும், ரிப்பன்களும், முடிப்பின்களும், வேறு சில பொருட்களும் வாங்க வேண்டும் என்று அவள் காசு சேர்த்து வைத்திருந்தாள். அவள் என்னவெல்லாமோ கற்பனை பண்ணி வைத்திருந்தாள். தன்னைப் பெண் பார்க்க வந்த சங்கரன் கூச்ச சுபாவம் உடையவனாகத் தோன்றினாலும், அவனை அவளுக்குப் பிடித்திருந்தது.
குடுமிக்கார சந்து நாயர் எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஜீப்பில் ஏறியபோது உண்மையிலேயே மனம் நொந்து போனாள் வத்சலா. திருவிழா பார்க்கப் போனாலாவது எல்லா கவலைகளையும் மறக்கலாம் என்று பார்த்தாள். ஆனால் வீடு ஒரு சாவு நடந்த வீடு மாதிரி ஆகிவிட்டதே! இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் திருவிழா காண எப்படிப் போவாள்? யாருடன் அவள் போவது?
"உனக்குக் கொடுத்து வச்சதே அவ்வளவுதான்!''
ஆளுயரக் கண்ணாடி முன்நின்று கொண்டு தனக்குத்தானே அவள் கூறிக்கொண்டாள். கண்ணாடியில் அவள் இருண்ட முகம் நிறைந்து நின்றது.
தன் தந்தைக்கு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி அவளால் ஒரு முடிவுக்குமே வரமுடியவில்லை. தம்புரானைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடும், கொள்கைகளும் வைத்து நடக்கக்கூடிய ஒரு மனிதர். தன் மனைவியிடம் கூறாமல் அவர் எங்குமே வெளியே போக மாட்டார். இரவில் ஜன்னல் அருகில் அமர்ந்து நாவலொன்றைப் படித்துக் கொண்டிருந்த அவள் கீழே கையில் விசிறியுடன் உலாத்திக் கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தாள். தூக்கம் வந்ததும், விளக்கை அணைத்துவிட்டு அவள் படுக்கச் சென்றுவிட்டாள். காலையில் படுக்கையை விட்டு எழும்போது, தன் தந்தை வீட்டில் இல்லை.
"வத்சலா, உன் அப்பா எங்கே?''
"நான் பார்க்கலியே!''
தாயின் தவிப்பைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்தது. தன் தந்தை என்ன சிறு குழந்தையா- அம்மா இப்படி அல்லாடுவதற்கு என்று அப்போது நினைத்தாள் வத்சலா.
சில நேரங்களில் தம்புரான் குதிரை லாயத்திற்குச் சென்று தன் வண்டிக் குதிரையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பார். தன்னைப்போல கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அந்தக் குதிரையை அவருக்கு மிகவும் பிடிக்கும். அதன்மீது ரொம்பவும் அவர் பாசம் வைத்திருந்தார். தேவையில்லாமல் அந்தக் குதிரையை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்று வண்டிக்காரனுக்கு கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார் தம்புரான்.
குதிரை லாயத்திலும் தம்புரானைக் காணவில்லை.
"அடக் கடவுளே, இனி எங்கே இவரைத் தேடுவது?''
"தம்புராட்டி, வெளியே நிற்க வேண்டாம். வீட்டுக்குள்ள போங்க. தம்புரான நான் தேடிட்டு வர்றேன்.'' அன்புவச்சன் சொன்னார்.
மாளிகையில் முக்கியமான ஆள் அவர். எப்போதும் அவர் மாளிகையைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருப்பார். அவருக்குத் தெரியாமல் அங்கு ஒரு ஆள்கூட வரவோ, போகவோ முடியாது.
குளிப்பதற்கு வைத்திருந்த வெந்நீர் ஆறிப்போனது. பால் கஞ்சியும் ஆறிவிட்டது. தம்புரானைக் காணோம்.
தம்புராட்டி வெளியே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
அப்படியே தம்புரானை அவள் எதிர்பார்த்து உட்கார்ந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.
ஏழாம் நாள் தம்புராட்டியின் தொண்ணூறு வயது தந்தை பல்லக்கில் வந்து இறங்கினார்.
"நான் இனி எதற்காக உயிரோட வாழணும், அப்பா!''
பாருக்குட்டி தம்புராட்டி கதறி அழுதாள்.
தம்புராட்டியின் தந்தை அன்புவச்சனை அருகில் அழைத்து காதில் ரகசியமாக ஏதோ கேட்டார். பொதுவாக எல்லா தம்புரான்களுக்கும் மனைவி இல்லாமல் வேறு சில பெண்களின் தொடர்புகள் இருக்கும். ஒருவேளை குஞ்ஞிகிருஷ்ணன் தம்புரானுக்கும் கல்லிசேரியிலோ அல்லது பக்கத்து ஊர்களிலோ அந்த மாதிரியான பெண் தொடர்பு ஏதாவது இருக்குமா என்று சந்தேகப்பட்டார் கிழவர். அவர் இப்படிக் கேட்டதும் அன்புவச்சனின் முகம் சிவந்துவிட்டது. அது கோபத்தால் வந்த சிவப்பு. தம்புராட்டியின் தந்தை அவர் என்பதால் கொஞ்சம் பொறுமை காத்தார் அன்புவச்சன். ஒரு பெண்ணையும் கண்ணால் ஏறெடுத்துப் பார்க்காத யோக்கியன் குஞ்ஞிகிருஷ்ணன் தம்புரான். கிழவன் நம்பியார்மேல் தாங்கமுடியாத அளவிற்கு எரிச்சல் வந்தது அன்புவச்சனுக்கு.
"அப்படின்னா அவர் எங்கே போயிருப்பாருன்னு நீ நினைக்கிறே?''
"அது அங்கே இருக்குற கடவுளுக்குத்தான் தெரியும்!''
அன்புவச்சன் ஆகாயத்தை நோக்கி கையைக் காட்டினார்.
உத்தமன் நம்பியாரும் வாசுதேவனும் வெளியே உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு பேருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்களும் தேடோ தேடென்று தேடி விட்டார்கள். ஒரு இடம்கூட பாக்கி இல்லை. நாளடைவில் அவர்களின் நம்பிக்கை குறைந்து விட்டிருந்தது. எல்லா இடங்களிலும் அவர்கள் அலைந்து விசாரித்து விட்டார்கள். ஒரு இடத்தில்கூட நம்பிக்கையான பதில் கிடைக்கவில்லை. படகு ஓட்டுபவன் கடவுள்மேல் சத்தியம் பண்ணிச் சொல்கிறான். தம்புரான் ஆற்றைக் கடந்து போயிருக்க வழியே இல்லை என்று. மேக்குன்னு பாலம் கடந்து அவர் போகவே இல்லை என்று அந்த வழியே வரும் பஸ்காரர்களும் உறுதியான குரலில் சொன்னார்கள். பாண்டியாறுக்கும், ஆயிலக்கரைக்கும் தம்புரான் செல்லவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆற்றைக் கடந்து தம்புரான் செல்லவில்லை. பாலத்தைக் கடந்தும் போகவில்லை. சொல்லப்போனால் விடை கிடைக்காத ஒரு மர்மக் கதை மாதிரி ஆகிவிட்டார் தம்புரான்!
தம்புரானைத் தேடுவதும், அவரைக் குறித்து நான்கு பேரிடம் விசாரிப்பதும் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தம்புரானின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், உறவினர்களும் இனிமேலும் தம்புரானைத் தேடிக் கொண்டிருப்பது வீண் வேலை என்ற முடிவுக்கு வந்து, மாளிகையில் ஒன்றாக அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினார்கள்.
தம்புரான் இனி திரும்பி வரப்போவதில்லை. அவர் மரணத்தைத் தழுவிவிட்டார்.
இந்த முடிவுக்கு அவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள்.
தம்புரான் காணாமல் போனதால் மற்ற எல்லா வருடங்களையும்விட இந்த ஆண்டு திருவிழா அவ்வளவாக சோபிக்கவில்லை. மதுரையில் இருந்து வந்திருக்க வேண்டிய ஹரிகதா காலட்சேப பார்ட்டி வரவே இல்லை. விராஜ்பேட்டைக்காரர்களுக்கும் கல்லிசேரிக்காரர்களுக்கும் மோதலும், சண்டையும் உருவானது. திருவிழாச் சந்தையில் பொருட்கள் நாசமாகி பெரும் நஷ்டம் உண்டானது. தம்புரான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது.
"எல்லாரும் பத்திரமா இருந்துக்கோங்க.'' குருடன் குஞ்ஞன் பூசாரி சொன்னார்: "கல்லிசேரிக்கு இப்போ போதாத காலம்...''
நேரம் செல்லச் செல்ல வெயில் அதிகமானது. கையில் அன்றைய பத்திரிகையுடன் பள்ளிக்கூட வாத்தியார் மூச்சிரைக்க ஓடிவந்தார். காலை நாளிதழ் கல்லிசேரிக்கு வந்துசேர மதியம் ஆகிவிடும். படிக்கத் தெரிந்த எல்லாரும் கட்டாயம் பத்திரிகைகள் படிக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்களுக்குக் கட்டளை போட்டிருந்தார் தம்புரான். இருந்தாலும், கல்லிசேரியில் மொத்தம் விற்பனை ஆவதே ஆறே பத்திரிகைகள்தான்.
"என்ன வாத்தியாரே?''
உத்தமன் நம்பியார் ஆர்வத்துடன் கேட்டான். எல்லாரும் ஏதோ ஒரு செய்திக்காக பயந்து கொண்டிருந்தனர். ஒரு கெட்ட செய்தி எப்போது காதில் விழும் என்ற எதிர்பார்ப்புடனே அவர்கள் இருந்தனர்.
வேகமாக ஓடிவந்த சோயி வாத்தியார் முற்றத்தில் நின்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். வீடே தீப்பற்றி எரிந்தாலும், இந்த வயதில் அவர் இப்படி ஓடி வரக்கூடாதுதான். நான்கு வருடங்களுக்கு முன்புதான் இவர் பென்ஷன் வாங்க ஆரம்பித்தார். இவர் வீட்டில் இருக்கும் வறுமையைப் பார்த்து தம்புரான் பென்ஷனுக்கான கால அளவை நீட்டிக் கொடுத்தார்.
வயது அதிகமாகிவிட்டது என்பதுடன் வேறு பல உடல்நலக் கேடுகளும் அவருக்கு இருந்தன.
"என்ன, ஒண்ணுமே பேசாம இருக்கீங்க?''
"தம்புரான் நம்மள விட்டுப் போயிட்டார்!''
அவ்வளவுதான்.
வீட்டுக்குள் இருந்த எல்லாரும் கூக்குரலிட்டு அழுதார்கள்.
உத்தமன் நம்பியார் வாத்தியாரின் கையில் இருந்த செய்தித் தாளை வாங்கினான். அன்றைய காலைப் பத்திரிகைதான். இருந்தாலும், தாளின் நிறத்தைப் பார்த்தபோது பழைய பேப்பர் மாதிரி இருந்தது.
"என்னடா இருக்கு பேப்பர்ல?''
பாருக்குட்டி தம்புராட்டியின் தந்தை அருகில் வந்து நின்றார். உத்தமன் நம்பியார் அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்தான். வாசுதேவன் தலையைத் தொடங்கப்போட்டுக்கொண்டு நின்றான்.
"என்ன, யாரும் ஒண்ணுமே பேசமாட்டேங்கிறீங்க? என்ன போட்டிருக்கு பேப்பர்ல?''
கிழவர் அதிகாரத் தொனியில் கேட்டார்.
"இனி சந்தேகப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல...''
வாத்தியார் தலையில் கை வைத்து உட்கார்ந்தார். அவரால் சரியாக மூச்சுவிடக்கூட முடியவில்லை. "ஆள் யார்னு அடையாளம் தெரியல எப்படி? ஏழு நாள் ஆயிடுச்சே!''
ஆற்று நீர் குடித்து, வயிறு வீங்கி, முகத்தை மீன்கள் தின்று...
திருவிழா பார்க்க வந்த மக்கள் வழிமாறி தம்புரானின் வீட்டைத் தேடி கூட்டம் கூட்டமாக வந்தார்கள். கல்லிசேரிக்காரர்களுக்கு இனி என்ன திருவிழா கொண்டாட்டம் வேண்டி இருக்கிறது? தம்புரான் மீது கொண்ட மதிப்பு காரணமாக வெடி வெடிப்பதை நிறுத்த வேண்டும் என்று சிலர் கருத்து சொன்னார்கள்.
"யாரும் எந்தச் சத்தமும் போடக்கூடாது.'' உத்தமன் நம்பியார் உள்ளே போய்ச் சொன்னான். "அது தம்புரான்றதுக்கு எந்த ஆதாரமும் இல்ல... நாங்க போய் விசாரிக்கிறோம்!''
ஆனால், பெண்கள் அழுகையை நிறுத்தவில்லை. உத்தமன் நம்பியார் சொன்னதை யாரும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
பகல் நேரமாக இருந்தால்கூட, மின்விளக்குகள் எரிந்து கொண்டு தான் இருந்தன. உத்தமன் நம்பியார் சுவரில் இருந்த பெரிய படத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்தான். அந்தப் படத்தில் முகத்தில் புன்னகை தவழ நெஞ்சை விரித்துக் கொண்டு தங்க மெடல் அணிந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் தம்புரான். பட்டணத்தில் இருந்து வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவர்தான் அந்த தங்க மெடலை அவருக்கு அணிவித்தார்.
உத்தமன் நம்பியார் தலையைக் குனிந்தவாறு வெளியே வந்தான். அவன், பிணம் கரை ஒதுங்கி இருக்கும் ஆலத்தூருக்குப் போகத் தீர்மானித்தான். பதினாறு கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஊர் இருந்தது. வண்டிக்காரன் லாயத்தில் இருந்த குதிரையை ஜட்காவில் பூட்டினான். நம்பியாருடன் இன்னும் சிலரும் புறப்பட்டார்கள். மேக்குன்னு பாலம் வரை ஜட்காவில் செல்வது, அதற்குப்பிறகு பட்டணம் வரை பஸ்ஸில். அங்கே இருந்து ஜீப் வாடகைக்கு எடுத்து ஆலத்தூருக்குப் போவது. இதுதான் அவர்கள் திட்டம்.
மன தைரியத்தை முழுமையாக இழந்துவிட்ட வாசுதேவன் உள்ளே பெண்களுடன் சேர்ந்து கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தான். அவன் எப்போதுமே மன பலம் கொஞ்சம்கூட இல்லாதவன். பாருக்குட்டி தம்புராட்டி செயலற்று உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் அடைந்த துன்பத்திற்கு எல்லையே இல்லை. வத்சலா அழுது அழுது கண்கள் சிவந்து போயிருந்தன.
வாசலில் நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. சில நிமிடங்களில் அங்கு நிற்க இடம் இல்லாமல், இருந்த இடத்தில் எல்லாம் ஆட்கள் நிற்கவும், உட்காரவும் தொடங்கினார்கள். மக்கள் கூட்டத்தைப் பார்த்த சில வியாபாரிகள் அங்கேயே மிட்டாய், பலூன் விற்க ஆரம்பித்தார்கள். தம்புரானின் வீடும், சுற்றுப்புறமும் திருவிழா நடக்கும் இடம்போல மாறியது.
அப்போது தூரத்தில் வெறுமனே இருந்த பாதையில் ஆதி மனிதனைப் போல ஒருவர் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரின் உடல் முழுக்க ஒரே அழுக்கு. முடியிலும், தாடி ரோமங்களிலும் தூசியும் மரப்பட்டைகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. காட்டுக்கொடியில் கோர்க்கப்பட்ட இலைகளால் தன்னுடைய நிர்வாணக் கோலத்தை அவர் மறைந்திருந்தார். காட்டில் இருந்து வழி தவறிப்போய் வந்த ஏதோ ஒரு ஆதிவாசிபோல அந்த மனிதர் மக்கள் கூட்டத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். தம்புரானின் வீடும், சுற்றப்புறமும் "கப்சிப்" ஆயின.
"தம்புரான்...'' கூட்டத்தில் இருந்த ஒரு ஆள் சொன்னார். ஆகாயமே கீழே விழுந்ததைப்போல எல்லாரும் ஸ்தம்பித்துப் போய் நின்றார்கள்.
நடக்கப் பழகும் ஒருசிறு குழந்தையைப்போல தம்புரான் சின்னச் சின்ன எட்டாக வைத்து வீட்டின் முற்றத்திற்கு வந்தார். உள்ளே சென்று துணியை எடுத்து உடலைச் சுற்றி நிர்வாணத்தை மறைக்க வேண்டும் என்ற ஆர்வம் எதுவும் அவரிடம் இல்லை. திகைத்து நிற்கும் மனிதர்களைக் கடந்து நடந்து போன தம்புரான் கிணற்றின் அருகில் சென்று ஒரு வாளி நிறைய தண்ணீரை இறைத்துக் குடித்தார். வாழ்க்கையில் முதல் முறையாக அவரே கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் குடிக்கிறார். தாகத்தைத் தீர்த்துக்கொண்ட தம்புரான் கூடியிருந்த ஊர்க்காரர்கள் பக்கம் திரும்பினார். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், வேலைக்காரர்கள், ஊர் மக்கள்... எல்லாரையும் பார்த்து ஒரு குழந்தையைப்போல தம்புரான் கள்ளங்கபடமே இல்லாமல் சிரித்தார்.