Logo

வானம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6640
vanam

சுராவின் முன்னுரை

கழி சிவசங்கரப் பிள்ளை (Thakazhi Sivasankara Pillai) எழுதிய ‘ஆகாசம்’ (Aakaasam) என்ற புதினத்தை ‘வானம்’ (Vaanam) என்ற பெயரில் நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள தகழியில் 1912-ஆம் ஆண்டில் பிறந்த சிவசங்கரப் பிள்ளை, 1935-ஆம் ஆண்டிலிருந்து 15 வருடங்கள் அம்பலப்புழை நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றி இருக்கிறார்.

1929-ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தபோது, தகழி ‘சாதுக்கள்’ என்ற பெயரில் ஒரு சிறுகதையை எழுதினார். அதுதான் அவருடைய முதல் சிறுகதை. 1934-ஆம் வருடம் அவருடைய முதல் புதினமான ‘தியாகத்தினு ப்ரதிஃபலம்’ வெளிவந்தது.

தகழி எழுதிய ‘ரண்டிடங்ஙழி’, ‘செம்மீன்’, ‘ஏணிப்படிகள்’, ‘கயர்’ ஆகிய புதினங்கள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. தகழி அமெரிக்கா, சோவியத் யூனியன், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கிறார்.

1956-ஆம் ஆண்டில் ‘செம்மீன்’ நாவலுக்கு தேசிய சாகித்ய அகாடெமி விருது (National Sahitya Academy Award) கிடைத்தது. 1964-ல் ‘ஏணிப்படிகள்’ நாவலுக்கு கேரள சாகித்ய அகாடெமி (Kerala Sahitya Academy Award) பரிசு கிடைத்தது. 1985-ஆம் ஆண்டில் ஞானபீட விருது (Gnana Peedam Award) தகழிக்கு அளிக்கப்பட்டது. இவை தவிர, பத்மபூஷன் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

தகழியின் பல புதினங்கள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ‘செம்மீன்’ மத்திய அரசாங்கத்தின் தங்கத்தாமரை விருதைப் பெற்றது. தகழியின் மூன்று சிறுகதைகளை மையமாக வைத்து அடூர் கோபால கிருஷ்ணன் இயக்கிய படம் ‘நாலு பெண்ணுங்ஙள்’.

1967-ஆம் ஆண்டில் தகழி எழுதிய கதை ‘வானம்’. வழக்கமான தகழியின் புதினங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தையும், கருவையும் கொண்ட கதை இது. இப்படியும் கூட தகழி எழுதுவாரா என்று நம்மை அவர் வியக்க வைப்பதென்னவோ உண்மை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை தனக்கே உரிய அபாரமான எழுத்தாற்றலைக் கொண்டு சிறப்பாக எழுதியிருக்கும் தகழியை தலை குனிந்து வணங்குகிறேன்.

‘வானம்’ கதையில் வரும் யசோதரன், விஸ்வநாதன், மோகனன், யசோதரனின் அக்கா, குமுதம், கொச்சு தேவகி – இவர்களில் யாரை நம்மால் மறக்க முடியும்? கொச்சு தேவகி – தகழியின் அருமையான பாத்திரப் படைப்பு!

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


சாய்வு நாற்காலியில் கால்கள் இரண்டையும் அதன் கைகளின்மீது தூக்கி வைத்துக்கொண்டு, மல்லாந்து படுத்திருந்தான். அப்படி சாய்ந்து படுத்திருந்ததில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ஏன் தெரியுமா? ஞாபகப்படுத்திப் பார்ப்பது. வெறுமனே ஞாபகப்படுத்திக் கொண்டு படுத்திருப்பது. வாழ்க்கையில் அந்த அளவிற்கு நினைத்துப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? நினைத்துப் பார்ப்பதற்குத்தானே விஷயங்களே இருக்கின்றன!

அந்த நாற்காலியில் பல வினோதமான வேலைப்பாடுகள் இருக்கின்றன. அதன் கால்கள் புலியின் கால்கள். தன்னைப் போன்ற மூன்றுபேர் ஒன்றாக உட்காரும் அளவிற்கு அதன் அளவு இருக்கிறது. ஒவ்வொரு மரத்துண்டுகளையும் எடுத்து வைத்து ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. தலை சாய்க்கும் பகுதிக்கு மேலே சில பெண்கள் சுற்றிப் பிணைந்து கிடப்பதைப்போல செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் ஒரு அழகு இல்லை. ஆனால், அதில் ஒருமுறை உட்கார்ந்த ஆளைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்த கதைகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான்.

ஊரை ஆண்டுகொண்டிருந்த தம்புரானின் நம்பிக்கைக்குரிய - அனைத்து அதிகாரங்களையும் கொண்ட மனிதராக அவர் இருந்தார். அவரை திவான்ஜியாக ஆக்குவதாக தம்புரான் கூறியதற்கு, வேண்டாம் என்று மறுத்துவிட்டார் அவர். திவான்ஜி மார்கள் சர்வ அதிகாரங்களையும் கொண்ட அந்த மனிதருக்கு முன்னால் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு நின்றிருப்பார்கள். உயரம் குறைந்த, பெரிய அளவில் தொப்பை விழுந்த வயிற்றைக் கொண்ட மனிதராக அவர் இருந்தார். பிரகாசமான தோற்றத்தைக் கொண்டிருந்தார். அப்போது அந்த மனிதரைக் கண்களை மூடிக்கொண்டு கற்பனை பண்ணிப் பார்க்க முயன்றான். குடுமி இருந்ததாம்! மனதில் உருவம் சரியாகத் தோன்றவில்லை. தடித்து, வெளுத்து, தொப்பை விழுந்த வயிற்றைக்

கொண்ட ஒரு மனிதருக்குப் பொருத்தமான நாற்காலிதான் அது. சாதாரண ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ஒரு நாற்காலி தேவையே இல்லை. விசேஷமாகத் தயார் செய்யப்பட்டது அது.

அந்த நாற்காலியில் அவனுடைய தாயின் மாமா உட்கார்ந்ததில்லை. அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் நாற்காலியை விரும்பினார்கள். பிறகு ஒரு மாமா அதில் உட்கார்ந்திருக்கிறார். இப்போது அந்த நாற்காலியைப் பல நேரங்களில் அவன் பயன்படுத்துகிறான். வேறொன்றை வாங்குவதற்கு முடியாததாலா?

அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கு அது சரியாக இருக்காது. மனதிற்குள் குழப்பங்கள் இருக்கும் நேரங்களில் அதில் உட்காரலாம். அதில் உட்கார்ந்திருக்கும்போது குடும்பத்தின் கற்பனைக்கெட்டாத காலத்தின் மேன்மையை நோக்கி மனம் பறந்து செல்லும். அது சில நேரங்களில் என்றல்ல - பல நேரங்களிலும் சுவாரசியமான விஷயமாக இருக்கும். நினைத்து நினைத்து உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு ஏராளமான கதைகள் இருக்கின்றன. கோந்தி நாயரும் கிட்டுண்ணி அய்யாவும் அவனுடைய தாயும் கூறியிருக்கும் கதைகள். சர்வ அதிகாரங்களையும் கொண்ட கோவிந்தமேனனின் வீரச் செயல்கள்... ஒரு குடும்பத்தை உண்டாக்கியதன் வரலாறு!

இன்றைய வாழ்க்கையில் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளில் இருந்து பழைய வரலாற்றின் தூசுபடிந்த ஏடுகளில் மூழ்கிப் போய் இருப்பது... பெண்மையை வெளிப்படுத்தி பிறகு நரம்பைத் தளரச் செய்யும் குமுதத்தின் கழிவறையின் கெட்ட நாற்றத்திலிருந்து, இந்த மரத்தாலான அறைகளில் பழமையுடன் இரண்டறக் கலந்திருக்கும் வாசனையில் சுதந்திரமாக மூச்சுவிடுவது... இப்படித்தான் வாழ்க்கை முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

பஞ்சாப் - ஹிமாச்சலப் பிரதேசங்களுக்கு, வாசனையை உணரும் சக்தியில் துளைகளை உண்டாக்கும் ஒரு வகையான வாசனை இருக்கிறது. இமாலயத்தின் மலைச் சரிவுகளில் மலர்ந்திருக்கும் மலர்கள் தாங்க முடியாத வாசனை கொண்டவையாக இருக்கலாம். பனியில் மோதி வரும் காற்றுக்கு அடர்த்தி அதிகமாக இருக்கலாம். அந்த பூமிப்பகுதியின் மண்ணுக்குக் கீழே போன நாகரிகங்களில் எத்தனையோ தலைமுறைகளுக்காக நூற்றாண்டுகள் வழியாகப் பின்தொடர்ந்து வரும், வாரிசு மூலம் கிடைக்கக்கூடிய சொத்தாக அது இருக்கலாம். எல்லா அதிகாரங்களையும் கொண்ட மாமாவின் காலத்தில் இருந்து இப்போது இருப்பவர்களுக்குக் கிடைத்திருக்கும் முட்டாள்தனத்தைப் போல... இல்லை... சிந்துநதிக்கரையில்தான் பாரதத்திற்குத் தேவையான போர்கள் அனைத்தும் நடைபெற்றிருக்கின்றன. அங்குள்ள மண் மனித ரத்தத்தில் கலந்தது. குருதியில் பட்ட மண்ணில் வளரும் செடிகளிலும் மரங்களிலும் இருக்கும் மலர்களுக்குத் தாங்க முடியாத வாசனை இருக்கும்.

பத்து பஞ்சாபிப் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்தால் அந்த வாசனை இருக்கும். மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க முடிந்தால், அவர்களுடன் நெருங்கி நிற்கத் தோன்றும். இல்லாவிட்டால் அந்தப் பெண்களுக்கு மென்மைத் தனம் இருக்கிறதா? மலரைப் போன்ற மென்மைத் தனம்? "என்னைத் தொடக்கூடாது. நான் உதிர்ந்து விடுவேன்" என்று காதலனைப் போல காதல் பாட்டு பாடிக்கொண்டு வரும் பிரகாசமான நிலவிடம் நடுங்கிக்கொண்டே கெஞ்சும் மென்மைத் தனம்! இல்லை காலை நேரத்தில் குளித்து முடித்து கோவிலுக்குச் சென்று சந்தனத்தை நெற்றியில் அணிந்து கொண்டு வரும் கேரளப் பெண்ணின் புனிதத் தன்மை இருக்கிறதா? எளிமை இருக்கிறதா? அவளுடைய கூந்தலில் இருந்து வரும் துளசி, மூலிகை, சந்தனம் ஆகியவற்றின் மெல்லிய வாசனையுடன் சேர்ந்து, வாசனையைப் பரப்பும் அந்த பஞ்சாபிப் பெண்கள் மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார்கள். நல்ல சதைப்பிடிப்புடன் அவர்கள் காணப்படுவார்கள். கடுகு எண்ணெய், பவுடர், கடுமையான வாசனையைக் கொண்ட ஹேர்ஆயில் ஆகியவை சேர்ந்த வாசனை!

குமுதம் அருகில் வரும்போது அந்த வாசனை இருக்கும். ஒரு சர்தார்ஜி நடந்து போகும்போது, தனியான ஒரு வாசனை இருக்கும். மூக்கை மூடிக்கொள்ள வேண்டும் என்பதைப் போன்ற வாசனை. ஆனால், நாற்றமல்ல. வாசனைதான் - தாங்க முடியாத வாசனை.

அங்கு மாமரங்களும் பலா மரங்களும் இடைவெளியின்றி வளர்ந்திருக்கும் இடத்தில் காகங்களின் கூட்டம் கூடுகிறது. ஆயிரம் காகங்கள் இருக்கும். "க்ரா க்ரா க்ராக்"- கர்ண கொடூரமான சத்தம். அப்படிக் காகங்கள் ஒன்றாகச் சேர்வதற்குக் காரணம் என்ன? தூரத்திலிருந்து அங்கு... காகங்கள் பறந்து வருகின்றன. தங்களின் கூட்டத்தை அழைத்து வரவழைக்கின்றன. அங்கு என்ன நடந்தது?

பஞ்சாபில் காகங்கள் இருக்கின்றனவா? ஞாபகத்தில் இல்லை. குமுதத்திடம் கேட்டிருக்கலாம். அவள் இங்கு இல்லை. பஞ்சாபில் காகங்கள் இல்லாமலிருக்க வேண்டும். இல்லை என்று நினைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காகங்களின் கூட்டம் இருக்கும் இடத்தைக் கடந்து போகக்கூடாது. காகம் ஓடிவிடும் - குமுதம் வந்தவுடன். அவள் விஷயம் தெரியாமல் காகங்களின் கூட்டம் இருக்கும் இடத்தின் வழியாக நடந்து சென்றாள். காகங்கள் ஓடின. இந்த சின்னஞ்சிறிய கிராமத்தை ஒன்றிரண்டு நாட்களிலேயே அவள் வெறுக்கத் தொடங்கியிருந்தாள். அவளுடைய அந்த வெறுப்பிற்கு காகங்களின் அலகுகளால் ஆன கொத்தல்களும் கால்களால் ஆன மிதிகளும் சிறகுகளால் ஆன அடிகளும் மகுடங்களாக ஆயின.


தூர வடக்கிலிருந்து புதிய பெண் வந்து சேர்ந்திருக்கும் நான்காவது நாளாயிற்றே! வீட்டில் எல்லாரும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் பரபரப்புடன் இருந்தார்கள். ஒருத்தி மட்டும் சிரித்தாள். முழுமையாகக் குலுங்கிச் சிரிக்கும் சிரிப்பு அல்ல. அடக்கும்போது "பும்" என்று வெளிப்பட்டு, மீண்டும் அழுத்தப்படும் சிரிப்பு இருக்கிறது அல்லவா? அந்தச் சிரிப்பு. கொச்சு தேவகிதான் அது. அந்த அளவிற்கு வேதனை உண்டாகியிருக்கக் கூடாது. அவமானம் தான் அதிகம். பஞ்சாபியிலோ இந்தியிலோ என்னவோ அவள் பற்களைக் கடித்துக் கொண்டு கூறிக் கொண்டிருந்தாள். அந்த வினோதமான சத்தத்தைக் கேட்டுத்தான் கொச்சு தேவகி சிரித்தாள். கேரளத்தின் கிராமத்தைச் சேர்ந்தவள். மென்மையான தன்மையைக் கொண்ட பெண்! அவள்தான் இந்த கடாபடா மொழியைக் கேட்டிருக்கிறாள்.

குமுதம் யாரையோ அவளுடைய மொழியில் திட்டினாள். மோசமான வார்த்தைகளில் திட்டினாள். வேதனையும் வெட்கமும் ஏமாற்றமும் கோபமும் எல்லாம் சேர்ந்து ஒரு வகையான பைத்தியக்காரியாக அவளை ஆக்கின. பஞ்சாபில் இருக்கும் பெண்கள் அந்த மாதிரி பைத்தியம் பிடித்தால் எப்படி இருப்பார்கள்? அவள் மலையாளி அல்ல... பஞ்சாபிப் பெண். அந்த உயரமும் பருமனான உடம்பும் நீளமான கைகளும்... எல்லாம் இருந்தன.

சில சர்தார்களைப் பற்றி குமுதம் கூறியிருக்கிறாள். அந்தப் பெயர்களை அவன் ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சிக்கிறான். நாசம்! அந்தப் பெயர்கள் மறக்கக்கூடாதவை. ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று அவள் நினைத்ததால் அல்ல - அதற்கு மாறாக இருந்ததால். மறக்க வேண்டும் என்று அவள் நினைத்ததைப் போல தோன்றியது. அது எப்படி என்கிறீர்களா? அந்த உரையாடலை நினைத்துப் பார்க்கிறான்.

முதல் இரவன்று அல்ல. இரண்டாவது இரவு. அவள் பிரிந்து வந்த தோழிகளையும், நண்பர்களையும் பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள். அது இயல்பான ஒன்றுதான். அவர்களை இனிமேல் பார்க்க முடியுமா என்று கவலையுடன் கேட்டாள். அதற்கு இந்த பதிலைத்தானே கூற முடியும்!

"அவர்களின் இடத்தில் தோழிகளையும் நண்பர்களையும் இங்கு உண்டாக்கிக் கொள்ள வேண்டும்!''

"இந்த கிராமத்து மனிதர்களிடமிருந்தா?''

"இங்கும் சினேகிதிகள் இருப்பார்கள்.''

ஒரு நிமிடம் கழித்து யசோதரன் தொடர்ந்து சொன்னான்:

"நீயும் ஒரு கிராமத்துப் பெண்ணாக ஆவாய்.''

"ஆமாம்... ஆகிவிடுவேன்.''

அவள் தொடர்ந்து சொன்னாள்: "குல்தீப் சிங் சொன்ன விஷயம்தான் - என்னை குறைகூறிக் கொண்டு... திட்டிக் கொண்டு... வளர்ந்த ஊரைப் பற்றிச் சிந்திக்காமல் போகும் குமுதம் அனுபவிப்பாள் என்று...''

"யார் இந்த குல்தீப்சிங்?''

அவளுக்கு கோபம் வந்துவிட்டது என்று தோன்றியது...

"அதை எதற்கு தெரிஞ்சிக்கணும்?''

தூங்கும் அறையில் இருந்த மிகவும் மங்கிய வெளிச்சத்தில் அவளுக்கு கோபம் வந்ததா என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், குரலை வைத்து அந்தக் கேள்வி அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. யார் இந்த குல்தீப்சிங்? அவன் யார் என்று கூறினால் என்ன கெட்டுவிடப் போகிறது?

திருமணத்திற்கு பஞ்சாபில் இருந்து நன்கு நரைத்த ஒரு தாடிக்காரர் வந்திருந்தார். பெரிய தலைப்பாகையையும் ஏழு அடி உயரத்தையும் பருமனான உடலையும் கொண்டிருந்த அந்த மனிதர், அவனுடைய

கிராமத்திலிருந்து வந்திருந்த விருந்தாளிகளுக்கும் ஒரு காட்சிப்பொருளாக இருந்தார். குமுதமும் அவளுடைய தந்தையும் மிகவும் ஈடுபாட்டுடன் அந்த சர்தாரை வரவேற்றதை அவன் நினைத்துப் பார்த்தான். மகனைப்போல அந்த மனிதர் அவனை இறுக அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டதை யசோதரன் நினைத்துப் பார்த்தான். குமுதத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவளுடைய இறந்துபோன தாயின் படத்திற்கு முன்னால் போய் நின்று கொண்டு அந்த சர்தார்ஜி நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அவருடைய கண்கள் ஈரமானதைப் போல தோன்றியது.

அவளுடைய தாய் நல்ல நிறத்தையும் உயரத்தையும் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். அவளுக்கு கேரளத்தைச் சேர்ந்த பெண்ணின் உடம்பு இல்லை. பஞ்சாபிற்காக கேரளத்தின் மண்ணைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பொருளாக அவள் இருந்தாள். அவளை உயிருடன் பார்த்திருந்தால் எப்படி இருக்கும்?

அந்த சர்தார்ஜியின் முகம் சிவந்துபோய், நல்ல பிரகாசத்துடன் இருந்தது. ஆழமான சுருக்கங்கள் நெற்றியிலும் முகம் முழுவதிலும் காணப்பட்டன. வெள்ளை நிற தாடி காற்றில் பறந்து கொண்டிருந்தது. பஞ்சாபில் நீண்ட காலம் ஒரு மலையாள குடும்பம் இருந்தது. அதற்கிடையில் அந்த குடும்பத்தின் நெருங்கிய நண்பராக அவர் ஆகியிருக்க வேண்டும்.

அந்த சர்தார்ஜியின் கையில் ஒரு சிறு குழந்தையைப் போல குமுதம் தொங்கி ஆடிக்கொண்டிருந்தாள் - தந்தையும் மகளையும் போல. என்ன ஒரு நெருக்கம்! அவள் கொஞ்சுகிறாள்... குழைகிறாள்... கன்னம் வீங்க, பொய்யான கோபத்தைக் காட்டுகிறாள்.

அவள் தந்தை என்று அழைக்கும் அந்த மனிதர் சர்தார்ஜியுடன் நீண்ட நேரம் ஏதோ விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். மிகுந்த தீவிரத்துடன்... அப்படி என்ன விஷயமோ? ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசி முடிப்பதைப் போல...

ஆமாம்... அவர்களுக்கிடையே பல விஷயங்களும் இருக்கும். ஒரு வாழ்வு காலத்தின் உறவு அல்லவா? கேரளத்திற்கு சர்தார்ஜி வந்தார். அது கணக்கைத் தீர்ப்பதற்கா? என்னவோ...

குல்தீப்சிங் யார்? அவனைப் பார்த்தது இல்லை. நரைத்த தாடியைக் கொண்ட மனிதனாக இருக்க வாய்ப்பில்லை.

அந்தக் கேள்வியை எதற்குக் கேட்க வேண்டும்? எங்கோ தூரத்திலிருக்கும் பஞ்சாபிலோ இமாச்சலப் பிரதேசத்திலோ எங்கோ இருக்கும் சுற்றுலா தளத்திலோ ஏரியிலோ ஆப்பிள் தோட்டங்களிலோ அவன் இப்போது நடந்து கொண்டு இருப்பான். முன்பு ஒரு தோழி இருந்தாள். இப்போது அவள் இல்லை. அவன் திட்டி அனுப்பினான். அந்த அத்தியாயம் முடியவில்லையா?

குல்தீப்! அவன் எப்படி இருப்பான்? ரன்பீர்சிங்கின் ஒரு இளம் பிரதியாக இருப்பானா?

ஒருநாள் வெறுமனே கேட்ட ஒரு கேள்வி இருக்கிறது.

அந்த குல்தீப்சிங் திருமணத்திற்கு வந்திருந்த ரன்பீர்சிங்கின் மகனா?

கன்னத்தில் அடித்ததைப்போல ஒரு பதில்: "இல்லை.''

அந்த பதிலின் வேகத்தில் தலை திரும்பிவிட்டது. தன்னுடைய வாழ்க்கையில் இன்னொரு முட்டாள்தனமற்ற செயலாக அது இருந்ததோ? ரன்பீர்சிங்கின் மகன் குல்தீப்சிங். சிரிக்க வேண்டும் போல தோன்றுகிறது அப்படிக் கேட்கலாமா? குல்தீப்சிங் ஒரு மகாவீர்

சிங்கிற்கோ வேறு ஏதோ ஒரு தாடிக்காரருக்கோ மகனாக இருக்க வேண்டும். ரன்பீர்சிங்கின் மகனாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.


2

க்கா அங்கு வந்தாள்.

"என்னடா நீ பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறாய்? நேரம் என்ன ஆகிவிட்டது என்று தெரியுமா?''

"இன்று வேலை இல்லாத நாள்தானே! எல்லாம் மெதுவாக நடக்கட்டும்.''

"சீக்கிரமா குளி. இல்லாவிட்டால் சாயங்காலம் குளித்தால் போதும். ஏதாவது சாப்பிடு.''

"இல்லை... இல்லை... குளித்துவிட்டு சாப்பிட்டால் போதும்!''

அக்கா சென்றுவிட்டாள். சற்று அழைத்துக் கேட்க வேண்டும் போல தோன்றியது.

"காலையில் என்ன அக்கா?''

"கஞ்சி... பலாக் கூட்டு.''

பலாக் கூட்டு! கஞ்சி! பலாச் சுளையைத் துண்டுகளாக ஆக்கி, வேக வைத்து, மசாலா சேர்த்துக் கிளறி... தேங்காய் எண்ணெய்யை ஊற்றியிருப்பாள். கருவேப்பிலையை உருவிப் போட்டிருப்பாள்.

உடலுக்கு ஏற்ற வகையில் அதில் என்ன இருக்கிறது? எதுவும் இல்லை. எல்லா அதிகாரங்களும் படைத்த மாமாவுக்கு பலாக் கூட்டு என்றால் மிகவும் பிடிக்கும். பலா இல்லாத காலத்திலும் அந்தப் பெரிய மனிதருக்கு காலை வேளையில் பலாக் கூட்டு இருக்கும். பலா இருக்கும் இடத்திலிருந்து பலா வரும். கட்டளை கல்லையே பிளந்துவிடும். பலாவைக் கொண்டு வந்து சேர்க்கும்படி நாடு முழுக்க உத்தரவு பரவும். பலா வந்து சேர்க்கப்படும்.

காலையில் மூன்று நாழி அரிசியைக் கொண்டு உண்டாக்கப்பட்ட கஞ்சி. அம்மா எப்படிப்பட்ட ஆவேசத்துடன் அந்தக் கதையைக் கூறியிருக்கிறாள்! அப்பாவைப் பற்றிய விஷயம் எதையும் அம்மா கூறுவதில்லை. என்ன காரணம்? அப்பா ஒரு முக்கிய கதாபாத்திரமாக இல்லாமல் இருந்தார். தந்தை முக்கிய கதாபாத்திரமாக இல்லாத இந்த ஊரில் எத்தனை நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன! எல்லா அதிகாரங்களையும் கொண்ட மாமா கஞ்சி குடிக்கப் பயன்படுத்திய வெள்ளியாலான தட்டு பல தலைமுறைகளாக அறைக்குள் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அது எப்போது வரை இருந்தது? ஆ... பத்மாவின் திருமணம் வரை. அப்போது வெள்ளிக்கு நல்ல விலை இருந்தது. திருமணம் நடத்துவதற்குப் பணமில்லை என்ற சூழ்நிலை வந்தபோது அது விற்கப்பட்டது. நன்றாக அது ஞாபகத்தில் வருகிறது. அந்தத் தட்டு விற்கப்படுவதைப் பற்றி குடும்பத்தில் ஒரு கலகம் உண்டானது. அதை விற்கக்கூடாது என்று அம்மா கூறினாள். நிலத்தையோ வயலையோ விற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் அம்மா. எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் இருக்கக்கூடிய அந்தத் தட்டை விற்க வேண்டும் என்று மாமா கூறினார்.

தர்க்கம் அதிகமாகி இப்படி ஆனது. மாமா கேட்டார்:

"எதற்கு இவ்வளவு பெண்களைப் பெற்றெடுத்தாய்?''

அம்மாவிற்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. எனினும் சொன்னாள்: "குடும்பத்தில் பிள்ளைகள் உண்டாவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையா? இந்தக் குடும்பம் தனியா நிற்கணும். பிறகு உள்ளதை யாரும் உரிமை கொண்டாடாமல் உன்னுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும்!''

மாமாவைப் பார்க்கும்போது பாவமாக இருந்தது. அவர்களுக்கு, மாமரத்து அடியைச் சேர்ந்தவர்களுக்கு அம்மா என்ன கூறியும் எதையும் கொடுக்கவில்லை. குடும்பத்தை மாமா ஆட்சி செய்து கொண்டிருந்தார். இரவு உணவு முடிந்து ஒரு பந்தத்தைக் கட்டிக்கொண்டு தன் மனைவியின் வீட்டிற்குச் செல்வார். அவருக்கு நெருப்பு எரிந்து பாதியாக இருக்கும் ஒரு பந்தம் தினமும் கிடைக்கும். அதுதான் எல்லா அதிகாரங்களையும் கொண்ட வீட்டுடனான உறவில் கிடைத்துக் கொண்டிருந்தது.

மரத்தடிக்காரர்களுக்கு இப்போது மிகவும் கஷ்ட சூழ்நிலை. அத்தையும் சில பெண்களைப் பெற்றெடுத்தாள். மாமாவின் மரணத்திற்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டுத்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

மனதிற்குள் ஒரு அமைதியற்ற நிலை. அத்தை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். தூரத்தில் புகையன் மலை தலையை உயர்த்தி நின்று கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி வெயிலைத் தலையில் தாங்கிக்கொண்டு வேறொரு சிறிய மலை. அந்த மலையின் பெயர் என்ன? யாருக்குத் தெரியும்? எது எப்படி இருந்தாலும், அது புகையன் மலை அளவிற்குப் பெரியதாக இல்லை. சர்வாதி வீட்டையும் மரத்தடி வீட்டையும்போல அவை இரண்டும் இருந்தன.

சற்று புன்னகைக்க வேண்டும்போல இருந்தது. பரவாயில்லை. நல்ல உவமை! நூற்றாண்டுகளாக வெயிலையும் மழையையும் தாங்கிக் கொண்டு அந்த மலைகள் நின்று கொண்டிருக்கின்றன. கொஞ்சம் பாதிப்பு உண்டாகிவிட்டிருக்கிறது. இப்போது அழகும் தோற்றமும் அந்த இரண்டு மலைகளுக்குமே இல்லை.

புகையன் மலையில் நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் ஒரு பூதம் இருந்ததாம். யாரும் அதன்மீது ஏறுவதில்லை. ஆனால், போர்க்காலத்தில் அங்கு பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் கூடாரம் உண்டாக்கினார்கள். ட்ரக் வண்டிகளும் ஜீப்களும் இரைச்சல்களை எழுப்பிக்கொண்டு வந்தபோது பூதம் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது.

டேராடூனைத் தாண்டித் தெரியும் மலைச்சரிவின் பெயர் முஸ்ஸோரி. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். நைனிட்டால் அழகான ஊர். விஸ்வநாதன் அந்தப் பகுதியில் அப்படியே அலைந்து கொண்டிருப்பான். அங்குள்ள எல்லா இடங்களும் அவனுக்கு விருப்பமான இடங்களே. விஸ்வநாதன் தன்னுடைய புகழ் பெற்ற ஓவியங்களை அந்தப் பகுதிகளின் பின்புலத்தைக் கொண்டே வரைந்தான். ஒரு அழகு தேவதை அவனுடைய ஒவியங்களில் ஒளிந்து கொண்டும் தெளிவாக தெரியும்படியும் மறைந்து கொண்டும் மங்கலாகவும் இருப்பதைப் பார்க்கலாம். விஸ்வநாதனின் கனவுகளின் உயிராக இருப்பவள் அந்த அழகுப் பெண். அவள் பஞ்சாபைச் சேர்ந்தவள். இல்லாவிட்டால் காஷ்மீரைச் சேர்ந்தவள்.

புகையன் மலையின் பசுமை கலந்த பகுதியின் பின்புலத்தில் விஸ்வன் ஒரே ஒரு ஓவியத்தைக்கூட வரைந்ததில்லை. சிறு மலைகளின் அடிவாரத்தின் வழியாக வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருக்கும் வயல்கள். அந்த வயல்கள் கேரளம் முழுவதும் இப்படித்தான் இருக்குமோ? எங்கும் இப்படித்தான் இருப்பதைப் பார்க்க முடியும். அப்படித்தானே?

பலாக் கூட்டு! இனியும்கூட அக்கா திட்டிக் கொண்டிருந்தாலும் திட்டிக் கொண்டிருக்கலாம். திட்டுவதற்கு அக்காவிற்கு உரிமை இருக்கிறது. வெறும் அக்கா அல்ல அவள்... அம்மா. வளர்த்தெடுத்த தாய். வயிற்றில் இடம் தரவில்லை. அவ்வளவுதான்.

வாய்ப்புகளை உருவாக்காத, இல்லாவிட்டால் இழக்கப்பட்ட ஒரு வாழ்க்கை - பலம் கொண்டதாக அந்த வீழ்ச்சியடைந்த குடும்பத்தை ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது. தவறு எங்கே உண்டானது? மாமாவும் அம்மாவும் அக்காவை அப்படியே மறந்து போய்விட்டார்களா? அக்கா பெண்ணாக இருக்கிறாள்; குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்டாள் என்பதை நினைக்காமல் இருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். சாதமும் குழம்பும் வைப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்த அக்காவும் அதை அறிந்திருக்கவில்லை. அரிசியை பக்குவம் வரும் அளவிற்கு வேக வைப்பதிலும் நல்ல குழம்பை வைப்பதிலும்தான் கவனம் இருந்தது. பலாக் கூட்டும் துவையலும் ஊறுகாயும்... இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருந்தன. மூத்தவள் நின்று கொண்டிருக்க, அவளுக்கு தலைக்குமேலே மணமாலை ஒரு தங்கையின் தோளில் விழுந்தது.


ஒருவேளை, திருமணத்திற்கேற்ற சரியான வயது அவளுக்கு இருந்திருக்கலாம். மூத்தவள் அதைத் தாண்டியிருக்கலாம். அப்போதும் அக்கா பலாக் கூட்டு உண்டாக்கினாள். துவையல் செய்தாள். ஊறுகாயும் காளானும் தயாரித்தாள். தங்கைகளையும் தம்பிகளையும் திட்டினாள். வேலைக்காரர்களுக்குப் பரிமாறினாள். இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. நினைத்து நினைத்து அக்கா நின்று கொண்டிருப்பதை எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை. எப்போதும் வேலையிலேயே ஈடுபட்டிருப்பாள். வேலையில் மூழ்கிப்போய் காணப்படுவாள். அக்கா பெண்ணாக இல்லாமல் இருக்கலாம். ஆணாகவும் இல்லாமல் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஆனால், அக்கா மாதத்தில் நான்கு நாட்கள் ஒதுங்கி இருக்கிறாளே!

ஓ... நாசம்! பலாக் கூட்டு! அது ஆறிப்போயிருக்கும். பரம்பரையின் சின்னம் அது. அந்த நிலத்தில் எவ்வளவு பலா மரங்கள் இருக்கின்றன!

இந்த ஊர் முழுக்க பலாவும் மாமரங்களும் தான். இங்கு ஆப்பிள் வளராது. அது பஞ்சாபிலும் இமாச்சல பிரதேசத்திலும்தான் வளரும்.

இனி குமுதம் வந்தால்தான் இங்கு முட்டையும் ரொட்டியும் இருக்கும். பாரிட்ஜையும் கான்ஃப்ளேக்கையும் சாப்பிட்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன! இரண்டாவது அக்காவிற்கு புல்ஸ் ஐ தயாரிக்கத் தெரியும். நன்றாக இருக்காது. என்றாலும் குமுதம் தயாரிக்கும் தேநீர் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதைத் தயாரிப்பதற்கு அவளுக்கு தனியான ஆர்வம் இருக்கிறது. இந்த ஊரில் நல்ல தேயிலை கிடைப்பது இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டுத்தான் இருக்கிறது. இங்கு தயாராகும் தேயிலை முழுவதும் வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத்தான்.

கஞ்சியும் பலாக் கூட்டும் வேண்டாம் என்று அக்காவிடம் கூற முடியுமா?

குமுதம் கோபித்துக்கொண்டு போய்விட்டாள். அவளைக் கோபம் கொள்ளும்படி செய்து அனுப்பியாகிவிட்டது... அக்காதான் அதற்குக் காரணம். பலாக் கூட்டிற்கும் அதில் பங்கு இருக்கிறது. குடும்பத்தை நடத்துபவருக்கு உரிமைகள் இருக்கின்றன. அதிகாரங்கள் இருக்கின்றன. கூறியதைக் கேட்டு நடக்க வேண்டியவளே தம்பியின் மனைவி. அக்காவின் நாக்கிற்குக் கூர்மை இருக்கிறது. அவள் அங்கு நுழைந்து எதையும் கூறலாம். அவள் முறைப்பெண் அல்ல என்பது ஞாபகத்தில் இல்லை. அவள் பஞ்சாபியில் கூறுவது விரும்பத்தகாத ஒன்றாகக் கூறப்பட்டது.

பலாக் கூட்டு உண்டாக்கிய ஒருவிளைவு அது. குடும்பத்தின் அடித்தளமே பலாக் கூட்டில்தான் பிணைக்கப்பட்டிருக்கிறது. அங்கு வந்து சேர்ந்த குமுதம் பலாக் கூட்டை அவமதித்தாள். அவமதித்தது மட்டுமல்ல - அதற்கு எதிர்ப்பு காட்டவும் செய்தாள். அக்காவிற்கு

வெறியே வந்துவிட்டது. குமுதம் போய்விட்டாள். கதையின் சுருக்கம் அதுதானே!

பஞ்சாபில் பலா இருந்திருந்தால்...? அப்படியென்றால் பலாக் கூட்டு இந்த அளவிற்குப் பிரச்சினையை உண்டாக்கியிருக்காது. குமுதம் தவறு செய்தவள் அல்ல. சிறிது நாட்கள் காலை உணவில் புல்ஸ் ஐ சாப்பிட்டு அவள் வெறுத்துப்போய் இருந்தாள். டோஸ்ட் எங்கே கிடைக்கும்? தக்காளி நீரையும் ஆரஞ்சு நீரையும் கசக்கிப் பிழிந்து உண்டாக்கலாம். அந்த தினசரி செயல் ஒருநாள் அக்காவிற்கு வெறுத்துப் போய்விட்டது. அக்காவையும் குறை கூற வேண்டுமா?

அக்காவைத் திருமணம் செய்து கொண்டு போயிருந்தால்... அந்த ஆண் ஒரு விவசாயியாகவும் இருக்க வேண்டும். நம் ஊரில் விவசாயிகளின் வாழ்க்கை சுமாராக இருக்கிறது. மனதிற்குப் பிடித்திருக்கும் ஒரு மனைவி இருந்தால், விவசாயி வெற்றி பெற்றுவிடுவான். பப்பு நாயர், அவுசேப், கேசவன்- இப்படிப் பலரையும் நினைக்க வேண்டியதிருக்கிறது. குட்டி அம்மாவிற்கு வேலை செய்வது என்பது ஒரு சுகமான விஷயம். இப்படி நாற்காலியில் படுத்துக்கொண்டு நேரத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஊரில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? யாரும் இல்லை. அக்கா ஒரு விவசாயியுடன் சேர்ந்திருந்தால், அவள் வெற்றி பெற்றுவிடுவாள்.

பலாக் கூட்டு! நாசம். இந்த ஊரில் பலா மரங்கள் அனைத்தும் இல்லாமல் போயிருந்தால்! காய்ந்து போயிருந்தால்! இல்லாவிட்டால் காய்க்காமல் இருந்தாலும் போதும். அப்படியென்றால் குமுதம் திரும்பி வருவாளா? அவள் அதற்குப் பிறகும் வர மாட்டாள். அக்கா இறந்து போயிருந்தால்...? ஓ... என்ன தோன்றுகிறது? தவறு! குற்றம்! அக்காவைவிட குமுதம் பெரியவளா?

ஒருநாள் குமுதம் சொன்னதை நினைத்துப் பார்க்கிறான். அது சரியாக இருக்கலாம். அவள் நிறைய படித்திருப்பவள். மாமியார் சண்டை - ஏதோ ஒரு மனநல நிபுணரின் பெயரை அவள் சொன்னாள். ஓ! அந்தப் பெயர் மறந்து போய்விட்டது. மாமியார் சண்டை சபத்னியின் வாழ்க்கையின் இன்னொரு வடிவம்தான். அதைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது... விஸ்வநாதனும் பண்டிதன்தான். நிறைய படித்திருப்பவன்தான். ஒரு புகழ்பெற்ற ஓவியன், வாசிக்காமல் வரமுடியுமா? அவனும் ஒருநாள் சம்பவங்களின் காரணமாக அந்த வார்த்தையைச் சொன்னான். மாமியார் சண்டை சபத்னியின் வாழ்க்கையின் இன்னொரு வடிவம்தான் என்று.

ஈவ்ஸ் வீக்லி, ஃபெமினா - இப்படி ஊரிலும் வெளியிலும் இருக்கும் பெண்களுக்கான வார இதழ்களையும் மாத இதழ்களையும்தான் குமுதம் வாசிக்கிறாள். அவளுடைய தலைமுடியைக் கட்டும் முறை தினமும் மாறிக்கொண்டிருக்கும். அந்த வார இதழ்களிலிருந்து படித்தவை அவை. புடைவை அணிவதும் மற்ற விஷயங்களும்.

ஒரு மாதம் நான்கு புடைவைகள் வாங்கினாள் - இருபத்து ஏழு புடைவைகள் இருக்கும்போது. அணிந்து பார்ப்பதற்காக. அணிந்து பார்ப்பது நல்லதுதான். தேவையானதுதான்... விஸ்வநாதனின் ஓவியங்கள் அனைத்தும் சோதனை முயற்சிகள்தான்.

மாமியார் சண்டையைப் பற்றி விஸ்வனும் குமுதமும் கூறிய வார்த்தைகள் ஒன்றுதான். யார் யாருக்குக் கூறினார்கள்? அந்த மாத இதழ்களிலும் வார இதழ்களிலும் அது இருக்காது. விஸ்வன் அவளிடம் கூறியிருப்பானோ? அவள் அவனுக்குக் கூறியிருப்பதற்கு வழியில்லை.

"யசோதரா!''

அக்கா அழைக்கிறாள். பலாக் கூட்டின் அழைப்பு.

3

குளிர்காலத்தின் புலர்காலைப் பொழுதில் மலர்ந்து கொண்டிருக்கும் தாமரைப் பூவை ஈர்க்கக்கூடிய அளவிற்கு ஆக்குவது அதன் மென்மைத்தனமும் தனித்தன்மையும்தான். அந்த அளவிற்கு மிகப்பெரிய அழகும் நிறமும் தாமரை மலருக்கு இருக்க வேண்டியதில்லை. கொச்சு தேவகி காலையில் குளித்து முடித்து ஈரத்துணியை மாற்றி, நெற்றியில் குறியை அணிந்து கொண்டு வரும்போது ஒரு தனித்துவம் இருக்கும். அழுக்கு இல்லாமல் இருப்பதுதான் அவளுடைய அழகு! நல்ல ஒரு புன்சிரிப்பு அவளுடைய முகத்தில் விளையாடிக் கொண்டிருக்கும். அவளுக்கு ஒரு சந்தோஷம் இருக்கும். கள்ளங்கபடமற்ற தன்மையால் உண்டான சந்தோஷம். தாமரைப் பூவிற்கும் புலர்காலைப் பொழுதில் இவை எல்லாம் இருக்கும்.

அந்தப் பெண் அதிகாலைக்கு முன்பு குளித்துவிடுவாள். அது தவறாது. அவளுக்கு என்ன தலைமுடி! முனையைக் கட்டிப் பின்னால் போட்டிருக்கிறாள். பின்பாகத்திற்குக் கீழே வரை இருக்கும். கொச்சு தேவகி குளித்து முடித்து வருவதைப் பார்ப்பதற்காக வாசலில் அவன் போய் நிற்பதுண்டு.


அவள் உள்ளே போவாள். அப்போது குமுதம் தூக்கத்தில் இருப்பாள்.

பஞ்சாபில் அப்படி இருப்பதில்லை. பஞ்சாபில் பெரிய அளவில் குளிர் இருக்கும். சூரியன் தோன்றுவதற்கு முன்பே கண் விழிக்க வேண்டும்! குமுதம் நீரில் மூழ்கிக் குளிப்பதில்லை. அவள் மூழ்கிக் குளித்ததே இல்லை. எண்ணெய்யும் அரப்பும் தேய்க்காமல் வாசனை எண்ணெய்யையும் ப்ரஷையும் அவள் பயன்படுத்துவாள். சர்தார்கள் ஆண்டில் ஒருநாள்தான் குளிப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் அவர்கள் நடந்து செல்லும்போது, ஒரு வாசனை இருக்கிறது.

குமுதம் கண் விழித்து எழுந்து வரும்போது, வெளிறிப்போய் இருப்பாள். வாடிப்போய்க் காணப்படுவாள். அந்த மலர் மாலை நேரத்தில்தான் மலரும். சாயங்கால நேரத்தில் கொச்சு தேவகி கசங்கிப் போய் இருப்பாள். அணிந்திருக்கும் புடவையில் கரியும் அழுக்கும் படிந்து, உடம்பு முழுக்க வியர்வை அரும்பி, அழுக்கு படிந்த முகம் களை இழந்து காணப்படும். வேலை செய்து கொண்டிருப்பாள். ஆனால், அவள் களைத்துப் போயிருக்கமாட்டாள். மிகவும் உற்சாகத்துடன் இருப்பாள்.

நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வந்தது. குமுதம் ஊருக்கு வந்து அதிக நாட்கள் ஆகவில்லை. ஒரு சம்பவம் நடந்தது. அவளுடைய தலையில் ஒரு பேன் நுழைந்துவிட்டது. அவள் பைத்தியம் பிடித்ததைப் போல் ஆகிவிட்டாள். அவள் திட்டிக் கொண்டிருந்தாள். யார் யாரையெல்லாமோ திட்டினாள். என்ன ஒரு கெட்ட நேரம்! எல்லாரும் கவலைப்பட்டார்கள். கொச்சு தேவகி மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டு சிரித்தாள். அக்காகூட கவலைப்பட்டாள். அரப்பு தேய்த்து மூழ்கிக் குளிக்கும்படி பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஏதோ ஒரு வயதான பெண் அறிவுரை சொன்னாள். அருவியில் நீர் பாறைகளில் மோதி, சிதறிச் சிரித்துக் கொண்டு பாய்ந்து சென்றது. வெள்ளியால் ஆன தொங்கட்டான் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. ஊரில் இருக்கும் பெண்கள் எல்லாருக்கும் தலையில் பேன் இருக்கிறது. அவள் அரப்பு தேய்த்து மூழ்கிக் குளித்துக் கொண்டிருக்கிறாள்.

எப்படி குமுதத்தின் தலையில் பேன் ஏறியது?

குமுதத்தின் பேன்கடி பயங்கரமான விஷயந்தான். அந்தத் தலையில் பேன் சுகமாக இருக்கலாம். தலை நனையும் அளவிற்குக் குளியல் அபூர்வமாகவே நடக்கும்.

கொச்சு தேவகி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போகிறாள். கழுவுவதற்குத்தான். ஒரு குவியல் கூட்டை அக்கா பரிமாறிவிட்டிருந்தாள். நல்ல சிறிய அரிசியில் உண்டாக்கப்பட்ட கஞ்சி.

மூன்று நான்கு பலா இலைக் கஞ்சி குடித்தான். கூட்டைத் தொடவில்லை. மீதியை கொச்சு தேவகிதான் குடித்தாள் என்று தோன்றுகிறது. அந்தப் பாத்திரத்தைத்தான் அவள் சுத்தம் செய்வதற்காக எடுத்துக் கொண்டு சென்றாள். கொச்சு தேவகி முறைப்பெண். மாமாவின் மகள்! அவளுக்கு அந்த எச்சில் உரிமைப்பட்டது.

அது தேவையில்லாத ஒன்று. அந்த வகையில் அவளுடைய அந்த காலை நேர அழகையும் மென்மையையும் எச்சில் தின்றுவிட்டது. அதைவிடாமல் இருந்திருக்கலாம். நம்முடைய ஊரில் அது பரம்பரையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது தவறு. நம்மிடம் எந்த மாதிரியெல்லாம் தவறான நடவடிக்கைகள் இருக்கின்றன! கொச்சு தேவகிக்கு அந்த எச்சிலைச் சாப்பிட ஒரு வெறுப்பும் இல்லை.

முறைப்பெண்! ரசிக்கும்படியான வார்த்தை! ஒரு நல்ல சம்பிரதாயம்தான். மாமாவிற்கு ஒரு மகள் இருந்தால், அவள் முறைப்பெண் ஆகிவிடுவாள். அப்பாவின் மருமகளும் முறைப்பெண்தான். ஒன்றாக அவர்கள் வளர்கிறார்கள். அம்மாவும் மாமாவும் கொச்சு தேவகியும். அவள் பிறந்தபோதே கணவனை முடிவு செய்துவிட்டாள். ஒருவரோடொருவர் கூறிக்கொள்ளாத அந்த முடிவின்மீதுதான் அந்த வீடுகள் வாழ்ந்து கொண்டிருந்தன. எச்சிலைச் சாப்பிட கொச்சு தேவகிக்கு வெறுப்பு இல்லாமல் போனதற்குக் காரணம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

மரத்தடியில் ஒரு கந்தர்வனின் கோவில் இருந்தது. அதன் முன்பக்கத்தில் முல்லையும் பிச்சியும் செண்பகமும் துளசியும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அதற்கு அருகில் வானம் வரை உயரமுள்ள ஒரு மாமரம் இருந்தது. அதன் கீழேதான் விளையாடக் கூடிய இடம். கொச்சு தேவகி விளையாட்டுத் தோழியாக இருந்தாளோ? அப்படிக் கூற முடியாது. அவள் பின்னால் வருவாள். எதற்காக? அப்படி அத்தையும் மாமாவும் சேர்ந்து கூறியிருப்பார்கள் - பின்னால் நடந்து செல்லும்படி - இல்லாவிட்டால் பழக்கம் காரணமாக இருக்கலாம்.

கொச்சு தேவகியை அடித்தான். அவள் அழுதாள். யாரிடமும் புகார் கூறவில்லை. அழுகைச் சத்தத்தைக் கேட்டு அத்தை வந்தாள். அத்தையும் எதுவும் கூறவில்லை. அவளை அடித்து விட்டான் என்ற செய்தியை அறிந்தாள். அத்தை அவள்மீதுதான் கோபப்பட்டாள்... அத்தை சாதம் பரிமாறுவாள். முழுமையாக உண்ண முடியாது. கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விடுவான். அந்தப் பாத்திரத்தில் மீதமாக இருப்பதை கொச்சு தேவகிதான் சாப்பிடுவாள். அன்று அவள் எச்சிலைச் சாப்பிடக் கற்றுக் கொண்டாள். அவள் விளையாட்டுத் தோழியாக இருந்தாள் என்று கூறுவதற்கில்லை. வாலாக இருந்தாள்.

"கொச்சு தேவகி?''

"என்ன?''

அப்படி சற்று அழைக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. அழைப்பைக் கேட்டு அவள் என்ன என்று வருவாளா?

அதுதான் முறைப்பெண்! என்னவென்று அழைப்பைக் கேட்பவள்.

மரத்தடி வீட்டின் கொச்சு தேவகிக்கு அவளுடைய முறைப்பையன் இருக்கிறான் என்று எல்லாரும் நினைத்தார்கள். அவளுக்கு வயதாகியும் யாருக்கும் பதைபதைப்பு உண்டாகவில்லை. அதற்காக கவலைப்பட வேண்டியதில்லையே! அவளுக்கு முறைப்பையன் இருக்கிறான். இதுவரை மூன்று மருமகள்களுக்கு மாமா திருமணம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.

மூத்த அக்காவிற்கும் முறைப்பையன் இருந்தானா? அக்கா அப்படியே நின்றுவிட்டது அந்த வகையிலாகத்தான் இருக்க வேண்டும். கொச்சு தேவகிக்கு யசோதரன் இருக்கிறான் என்பதைப்போல. என்னவோ? அதை நினைக்கவில்லை. தெரியாது.

கொச்சு தேவகிக்கு ஒரு ஆளைக் கண்டுபிடிக்க வேண்டும். அது கடமை. ராமபத்ரன் நல்லவன். ராமபத்ரனை அப்படி நினைப்பதற்கு என்ன காரணம்? பிறகு ஒரு பெயர் மனதில் வரவில்லை.

ஐந்து வழிகளின் வழியாக காளைகளைச் செலுத்திக் கொண்டு கலப்பையைத் தோளில் வைத்தவாறு கோந்தி நாயர் போகிறார். அங்கு... மலைச் சரிவில் அவருடைய நிலம் இருக்கிறது. வழி வளைந்து அவர் காணாமல் போனார்.

வேலை இல்லாத ஒரு நாளைக் கடத்துவது என்பது கஷ்டமான ஒரு விஷயம்தான். செய்வதற்கு எதுவுமில்லை. குமுதம் இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது.

இப்போது குமுதம் என்ன செய்து கொண்டிருப்பாள்? பின்னிக் கொண்டிருப்பாள். எத்தனை கம்பளி நூல்களை அவள் பின்னி முடித்திருக்கிறாள்! அந்த நூல்களைக் கொண்டு பூமியை ஒரு தடவை சுற்ற முடியுமா? கட்டுக்கட்டாக அந்த நூல்கள் கம்பாலாவில் இருந்தும் ஜலந்தரில் இருந்தும் முஸ்ஸோரியில் இருந்தும் நைனிட்டாலில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.


அவள் பின்னி முடித்த ஸ்வெட்டர்களும் புல்லோவர்களும் எங்கே? இந்த ஊரில் அவை எதுவும் தேவையில்லை.

நேரம் போவதற்கு அவளுக்கு ஒரு நல்ல வேலையாக அது இருந்தது. ஒரு பெண்ணுடனும் இங்கு குமுதத்திற்குப் பழக்கமில்லை. கொச்சு தேவகி சிரித்துக் கொண்டே வெளியே வந்து நிற்பாள். அவள் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். குமுதம் மலையாளம் பேசும்போது, கொச்சு தேவகிக்கு சிரிப்பு வரும்.

அவள் தைத்து குவித்த ஸ்வெட்டர்கள் எல்லாம் எங்கே? அவை தேவையிருப்பவர்களுக்கு அவள் அனுப்பி வைத்திருக்கலாம். குல்தீப்சிங்கும் ரன்பீர்சிங்கும். நினைவுகளை எப்போதும் பசுமையாக வைத்துக் கொண்டிருப்பதற்கு அவையெல்லாம் போதுமானது. ஒவ்வொரு ஸ்வெட்டரையும் ஒவ்வொருவரையும் நினைத்துக் கொண்டு பின்னிக் கொண்டிருக்கலாம்.

"அக்கா!''

கொச்சு தேவகியின் குரல்தான். அவள் அக்காவை அழைக்கிறாள்.

"அக்கா!''

மெல்லிய குரல். ஒரு பெண்ணின் குரல்தான். ஆனால் உரத்த குரலில் அழைக்கிறாள். நிலத்தின் ஒரு எல்லையில் இருந்து அக்காவை அழைக்கிறாள்.

ராமபத்ரனுக்கு அவள் மிகவும் பொருத்தமாக இருப்பாள். ராமபத்ரன் சம்மதிப்பான். அதை எப்படிக் கூறுவது? அது தெரியாது... குமுதத்தைத் திருமணம் செய்ய விஸ்வநாதன் எப்படிச் சொன்னான்? ஞாபகமில்லை. அப்படிச் சொன்னானோ? சொல்ல வில்லையோ? பிறகு என்ன சொன்னான்? அந்தச் சம்பவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பஞ்சாபில் எங்கோ இருந்த ஒரு பெண்ணை எப்படித் திருமணம் செய்து வைத்தார்கள்?

ராமபத்ரனிடம் நேரடியாகக் கூறலாம். கூறவேண்டிய வார்த்தை என்ன?

"நீ என்னுடைய முறைப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.''

சிரிப்பு வருகிறது. இப்படிக் கேட்கும்போது, அவன் எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டால்...? ராமபத்ரன் அப்படிக் கூறக்கூடியவன் அல்ல. நல்லவன்.

சமீப காலமாக கொச்சு தேவகி இங்குதான் இருக்கிறாள். பொழுது விடியும் நேரத்தில் குளித்து முடித்து கோவிலுக்குப் போய்விட்டு இங்கு வருவாள். பிறகு, சாயங்காலம் திரும்பிச் செல்வாள். குமுதம் போனபிறகு, அதுதான் வழக்கமாக இருக்கிறது. குமுதம் இருந்தபோது, அவள் இங்கு அப்படி காலையிலிருந்து சாயங்காலம் வரை எப்போதும் தங்கியிருந்தது இல்லை.

புகையன் மலையின் உச்சியில் வெயில் பரவியது. ஒரு கூட்டம் பருந்துகள் அங்கு உயரத்தில் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. புகையன் மலைக்கு மேலே ஏதாவது இரையும் இருக்கலாம். எங்கோ இருந்துகொண்டு ஒரு குயில் கூவுகிறது. விஸ்வநாதனைப் பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்டன. குயிலின் அந்த மெல்லிய சத்தத்தை ஓவியமாக வரைய முடியுமா என்று கேட்க வேண்டும். ஒரு சவால்! அந்தத் தெளிவான சத்தத்தைச் சாயத்தில் கலக்க வேண்டும் - விஸ்வன் அதைச் சாதித்து விடுவான். பல இடங்களுக்குப் போய் வந்திருக்கும் அவன் குயிலின் சத்தத்தைக் கேட்டிருப்பான். அழகான எல்லாவற்றிலும் அந்த கலைஞனின் கவனம் பதியும். ஒருவேளை, குயிலின் சத்தம் இனிமையாக இல்லாமல் இருக்கலாம். அப்படி பரம்பரைகளின் வழியாக ஒரு நம்பிக்கை இன்று எல்லாருக்கும் கிடைத்திருக்கலாம்.

4

கரத்திற்கு இருபது நிமிடங்கள் இடைவெளியில் பேருந்து இருக்கிறது. ஒவ்வொரு பேருந்திலும் தொங்கிக் கொண்டு, நிற்பதற்குக்கூட இடமில்லாத அளவிற்கு ஆட்கள் ஏறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எட்டரை மணிக்கு இருக்கும் பேருந்தில் போக வேண்டும். அப்படியென்றால்தான் ஒன்பதரை மணிக்கு கடையை அடைய முடியும். எந்தச் சமயத்திலும் தாமதமாகப் போய்ச் சேர்ந்ததில்லை. அது ஒரு வெற்றி. பதினான்கு வருடங்களாக ஒருநாள்கூட தாமதிக்காத ஏதாவதொரு பணியாள் இருப்பாரா?

நான்கு பேன்ட்டுகள் சலவை செய்து தேய்த்து இருக்கின்றன. எதை எடுக்க வேண்டும்? ஒரு நிமிடம் அல்ல. பல நிமிடங்கள் சிந்தித்தான். குமுதம் எடுத்துத் தருவாள். அதுதான் வழக்கமாக இருந்தது. திருமணத்திற்கு முன்னால் எதை எடுக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது. இல்லாவிட்டால் ஒன்றை எடுப்பான்.

சாம்பல் நிறத்தில் இருப்பது - அதைப் போன்ற ஒன்றைத்தான் சனிக்கிழமை அணிந்திருந்தான். இளம் மஞ்சள் - சற்றும் சரியாக இருக்காது. கறுப்பு நிற பேன்ட்டை எடுத்தால்...? அதைத்தான் எடுத்து அணிந்தான். ஸாக்ஸ் நல்லதாக ஒன்றுகூட இல்லை. இரண்டு வாரங்களாக சிந்திக்கிறான். சரியான நேரத்திற்குப் பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றான்.

ஒரு தயக்கம் தோன்றவில்லை. எந்தச் சமயத்திலும் தோன்றியதில்லை. அன்றும் உரிய நேரத்தில் கடையை அடைந்தான். மோகனன் இரண்டு நிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்தான். மோகனன் கேட்டான்:

"நேற்றும் முந்தாநாளும் வீட்டில்தான் இருந்தாயா?''

"ஆமாம்... போகவில்லை!''

"இல்ல... வழக்கமான விஷயம் தவறிடுச்சே!''

ஒரு வழக்கமாக நடக்கும் விஷயத்தைச் செய்யாமல்விட்டதால் உண்டான மன அமைதியற்ற தன்மையே அப்போதுதான் தோன்றியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அது தோன்றவில்லை. சனிக்கிழமையும் இல்லை. அது ஏன்?

மோகனன் கடையைத் திறந்தான். கொஞ்சம் மருந்துப் பெட்டிகளை வாங்குவதுதான் முதல் வேலை. அதற்கான தாள்களை எடுத்துக்கொண்டு ஒன்பதரை மணிக்குச் சென்றான்.

திரும்பி வந்தபோது பத்தரை மணியாகிவிட்டது.

விற்பனை தொடங்கிவிட்டிருந்தது. மோகனன் பெட்டியைப் பிரிப்பதற்காகச் சென்றான். கேஷ் பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டான்.

இடையில் சிறிது நேரத்திற்கு ஓய்வு கிடைத்தது. ஆன்ட்டி பயாட்டிக்ஸ் எந்த அளவிற்கு விற்பனையாகிறது...! உண்மையிலேயே அது ஒரு அற்புதமான கண்டுபிடிப்புதான். அந்த இனத்தில் எத்தனையெத்தனை மருந்துகள் உண்டாகியிருக்கின்றன! ஆன்ட்டி பயாட்டிக்ஸின் காலம் கடந்துவிடும் என்று கூறுகிறார்கள்... என்னவோ ஸல்ஃபாட்ரக்ஸ்...

மோகனன் அருகில் வந்து உட்கார்ந்தான்.

"யசோதரா, உன் கணக்கை நேற்று கொஞ்சம் பார்த்தேன்!''

கணக்கைப் பார்த்தான். கணக்கு என்றால் ஒரு நோட்டின் பக்கங்களில் வரவு, பற்று ஆகியவற்றை இப்படி தேதிப்படி எழுதி வைப்பது. சிவப்புக்கோடு வரவையும் பற்றையும் பிரிக்கிறது. ஒரு பக்கம் முடிந்துவிட்டால் இன்னொரு பக்கத்திற்குக் கொண்டு செல்வான். ப்ராட் ஃபார்வர்ட் என்று கூறி அந்தப் பக்கம் ஆரம்பிக்கிறது.

மோகனன் கேட்டான்:

"என்ன வரும்னு தோணுது?''

கொடுக்க இருப்பவனுக்கு கணக்கு கேட்பது என்பது அந்த அளவிற்கு சந்தோஷம் அளிக்கக்கூடிய விஷயம் அல்ல. மோகனன்தான் அதைக் கூறுகிறான் என்றாலும், மோகனனின் முகம் சற்று கறுத்ததைப் போலத் தோன்றியது. அவனுடைய பற்களில் ஒரு நீல நிறம் தெரிந்தது. வெளுப்பின் முடிவில் நீல நிறம் இருந்தது. அது விஸ்வநாதன் ஒரு நாள் கூறியதுதான்.

"நான்காயிரத்தைத் தாண்டி.''

நான்காயிரம்! சற்று நடுங்கினான். அது பொய் என்று முகத்தைப் பார்த்துக் கூற வேண்டும் போலத் தோன்றியது. பதினான்கு வருடங்களுக்கு முன்னால் கடையை ஆரம்பித்தபோது ஏறியது.


கிழக்குத் திசையில் உயரமாக நின்றிருக்கும் புகையன் மலையின் கிழக்குச் சரிவின் வழியாக சிரமப்பட்டவாறு ஏறுவதற்கு முன்பு, மருந்துக் கடை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. ஆயிரம் ரூபாய் தயார் பண்ணலாம் என்று மோகனன் சொன்னான். புகையன் மலையின்மீது கஷ்டப்பட்டு ஏறினான்... கடையை வாடகைக்கு எடுத்தது மோகனன்தானே? நான்காயிரம் ரூபாய்! சுத்த பொய். உதடுகள் மெல்ல துடித்தன. எதையும் பார்க்க முடியவில்லை.

"திருமணத்திற்குப் பிறகுதான் இவ்வளவு ஆனது!''

"பொய்... பொய்..." என்று கூறவேண்டும். உதடு துடித்தது.

அந்த அலமாரிகளில், கண்ணாடிப் பெட்டிகளில், ஃபிரிட்ஜில், சற்று தூரத்தில் இருக்கும் சரக்குகள் வைக்கும் அறையில் புட்டிகள் அமைதியாக இருக்கின்றன. அவற்றுக்கும் வியப்பு! அது எதையும் தெரிந்து கொள்ள வேண்டாம் என்பதைப்போல அட்டைப் பெட்டிகள் இருக்கின்றன. தாங்கள் எப்படி அங்கு வந்து சேர்ந்தோம் என்று அவற்றிற்குத் தெரியும். புகையன் மலையை மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏறினான். ஒரு கல் விலகியபோது, தலை குப்புற விழுந்தான். முன்னால் ஒரு மிருகம் இருக்கிறது. நீல நிறப் பற்களைக் காட்டிக் கொண்டு... இரவில் தனியாக உட்கார்ந்து கணக்குகளை எழுதிப் பார்த்தான்... அந்தச் சிவந்த கோட்டைத் தாண்டி... எல்லாவற்றையும் தள்ளிவிட்டு உடைக்கத் தோன்றுகிறது... முன்னால் இருந்த ஒரு உயரமான கண்ணாடியில் இருண்டுபோன முகத்துடன் உடல் முழுவதும் வியர்வை வழிய நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் உட்கார்ந்திருக்கிறான்.

ஒரு குரல்:

"கவலைப்படுவதற்காக இல்லை. சொன்னேன். நாம் ஒன்றாகச் செயல்பட்டோம். இவ்வளவு ஆகிவிட்டது என்று சொன்னேன்.''

"உன்னுடைய பற்று என்ன?" என்று உரத்த குரலில் அலற வேண்டும் போல இருந்தது. அலறலுக்கு பதிலாக அமைதியான ஒரு உதடு நடுக்கம், கண்ணாடியில் தெரிகிறது.

தபால்காரர் ஒரு பழைய மனிதர். அவர் ஒரு சலாம் போட்டார். அதற்கு பதிலாக சலாம் போடவில்லை. மோகனன் கடிதங்களை முன்னால் வைத்தான். அப்போது இரண்டு பேர் சீட்டுகளைக் கொண்டு வந்தார்கள். "கோனோ காக்கஸ் வாக்ஸயின்" என்ற பழைய மருந்து. இப்போது அது விற்பனைக்கு இல்லை. பழைய நூற்றாண்டிலிருந்து உறங்கிக் கிடந்துவிட்டு, இப்போது கண்விழித்து டாக்டர் எழுதித் தந்த மருந்து. வந்து சேர்ந்த மாறுதல்களை அவர் அறிந்திருக்கவில்லை.

"இங்கு இந்த மருந்து இல்லை.''

மோகனன் எதற்காக அந்த சீட்டை எடுத்துப் பார்க்கிறான்? பார்க்கட்டும். "இல்லை" என்று அவனும் கூறட்டும்.

ஒரு கவரை முன்னால் வைத்தான். மேலே எழுதப்பட்டிருந்த முகவரியில் இருந்த கையெழுத்து நன்கு தெரிந்த ஒன்றாக இருந்தது. அதை எழுதிய நபர் ஒரு நல்ல இனத்தைச் சேர்ந்த நாற்காலியில் அமர்ந்து அதை எழுதியிருக்க வேண்டும். குமுதத்தின் தந்தைக்கு வீட்டுச் சாமான்களைப் பார்த்து வாங்குவதற்குத் தெரியும். வீட்டை அழகுபடுத்துவது என்றால் அவருக்கு விருப்பம் அதிகம். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அதற்காகச் செலவிடுவார்... டாட் பென்சிலைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சினேகிதி கொடுத்தது அது. அதை எழுதியது இரவிலா, பகலிலா?

"குமுதத்தின் கடிதமா?''

மோகனனின் குரல்.

"அதுதான் என்று தோன்றுகிறது.''

குரல் தெளிவாக இருந்தது.

கவரைப் பிரித்துக் கடிதத்தை எடுத்தான். கடிதத்துடன் இருந்த ஒரு தாளில் கோடு போட்டுக் கணக்கு எழுதி மொத்த தொகை குறிக்கப்பட்டிருந்தது. 217 ரூபாய் நாற்பத்து ஏழு நயாபைசா. விவரம் என்ன என்பதைப் படித்தான். குமுதத்தின் இரண்டு மாதங்களுக்கான மெஸ் பில். மெஸ் பில்லா? ஆமாம்... சரிதான். மெஸ் பில்லே தான். யசோதரனின் ஏழு ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெஸ் பில்லும் இருக்கிறது. குமுதத்தின் வாடகை கழிக்கப்பட்டிருக்கிறது என்று அடிக்குறிப்பும் இருக்கிறது. குமுதத்தின் தந்தையின் பெயர் எழுதிக் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

அவளுடைய ஒரு கடிதம் இருந்தது. டார்லிங் என்று அழைத்திருக்கிறாள். பில்லை அனுப்பியிருக்கிறாள். பணத்தை ஞாயிற்றுக்கிழமை போகும்போது கொண்டுபோக வேண்டும்.

அப்படியென்றால் நான்காயிரத்து இருநூற்றுப் பதினேழு ரூபாய். நான்கு இரண்டு ஒன்று ஏழு என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நான்கு இரண்டு ஒன்று ஏழு என்று மனம் அப்படியே ஒலித்துக்கொண்டிருந்தது.

மோகனன்தான் கேஷில் உட்கார்ந்திருக்கிறான். எதுவும் செய்யாமல், கடையில் ஒரு இடத்தில் அப்படி நின்று கொண்டிருப்பது சரிதானா?

சோர்வைத் தரும் நாள்! இல்லை... கனமான நாள்... அப்படித்தான் சுமை வந்து விழுகிறது. ஒரு நிமிடம் ஒரு சுமை வந்து விழுகிறது. அப்போது குனிந்து கொள்வான். முதுகெலும்பு ஒடிந்து அடிபடவில்லையென்றால், பிறகு அந்தச் சுமை, சுமையாக இல்லை என்றாகிவிடும். அந்த வகையில் தினந்தோறும் சுமையைத் தூக்கி மிகப்பெரிய சுமைகளுடன் இருப்பவர்கள்தான் இந்த சாலையில் போய்க் கொண்டிருக்கும் எல்லாரும்.

கணக்கு எப்போது ஆரம்பமானது? என்ன ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி அது? ஒவ்வொரு நாளும் கேஷில் இருந்து பணத்தை எடுத்தான். ஒவ்வொரு நாளும் தாளில் அதைக் குறித்து வைத்தான். நான்காயிரம் ரூபாய்!

"இன்னைக்கு குறிப்பாகப் பணத்திற்குப் பிரச்சினையா?''

என்ன ஒரு கேள்வி அது! அந்தக் கேள்வி அந்தச் சூழ்நிலையில் கேள்வி கேட்ட ஆளையே கிண்டல் பண்ணுகிற ஒன்றாக இருந்தது.

மோகனன் சொன்னான்:

"அதுவல்ல யசோதரா... நான் அதிகப் பற்றாக இருக்கும் தொகையை மட்டும் சொன்னேன். அதற்காகக் கவலைப்படுகிறாயா? நாம் ஒன்றாகச் சேர்ந்து உண்டாக்கி வளர்த்துக் கொண்டு வந்த நிறுவனம் இது!''

"இல்லை... நான் கேட்டேன்- பணத்திற்குப் பிரச்சினை இருக்கிறதா என்று!''

ஒரு நிம்மதி உண்டானதைப் போல இருந்தது. சுமை குறைந்தது. மோகனன் கேட்டான்:

"என்ன குமுதத்தின் கடிதம்? நேற்று போகாதது குறித்துக் கவலையா?''

உணர்ச்சியற்ற விதத்திலேயே பதில் கூற முடிந்தது.

"இல்லை.''

"ஓ.... நேற்று காத்திருந்து ஏமாற்றம். நேற்று முடிந்து இன்றைக்குத்தானே எழுத முடியும்! அந்தக் கடிதம் இன்று கிடைக்காது.''

"மெஸ் பில்.''

முழுமையான மிடுக்குடன் சொன்னான்.

"மெஸ் பில்லா? யாருடையது?''

"குமுதத்தின்...''

"குமுதம் தங்கியிருப்பது ஹாஸ்டலிலா?''

"இல்லை.''

"அவளுடைய தந்தையுடன்தானே?''

"ஆமாம்.''

"யசோதரா?''

எதற்காக மோகனன் திகைத்துப் போய் பார்க்கிறான்? புரியவில்லையா? மனைவிக்கு செலவுக்குக் கொடுக்க வேண்டும். ஓ... கழுத்தில் தாலி

கட்டும்போது வந்து சேரும் சுமை! அந்தச் சுமை விழுவது அந்த நிமிடத்தில் தெரியாது. நூறு ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் இருக்கும் சுமை. அந்த வகையில் ஐம்பது வருடங்கள் ஆனால் என்ன ஒரு கணக்கு வரும்? கூட்டுவதற்குக் கஷ்டமாக இருக்கும்.


ஐம்பதாயிரமோ அறுபதாயிரமோ ரூபாய்களின் சுமை. மோகனன் மிகவும் வேகமாக அந்தக் கணக்கைக் கூட்டுவான். அவனுக்கு கணக்கு கூட்ட மிகவும் நன்றாகத் தெரியும். அந்த ஒரு நிமிடம் இந்தப் பெரிய கணக்கைத் தெரிந்து கொண்டால், அதைப் பற்றிய புரிதல் உண்டானால், திருமணம் செய்து கொண்ட இளைஞன் தலையைக் குனிந்து கொள்வான். தரையில் விழுந்துவிடுவான்... பஞ்சாபிலும் யூ.பி.யிலும் வாழ்ந்த ஆள் என்பதால் குமுதத்தின் தந்தை அதற்கு பில்லை அனுப்பினார். அதில் என்ன தவறு இருக்கிறது?

மோகனனின் முகம் மிகவும் கடுமையாக மாறியது. ஒரு குரல் வந்தது:

"அந்த மனிதர் பரவாயில்லையே!''

அதில் என்ன தவறு இருக்கிறது என்பதைப் போல மோகனனின் முகத்தைப் பார்த்தான்.

மீண்டும் ஒரு கேள்வி.

"அவர் பணக்காரர் என்றல்லவா சொன்னாய்? ஒரே ஒரு மகள்தான் இருக்கிறாள் என்றும்...''

ஒரே ஒரு மகள்தான் இருக்கிறாள். பணக்காரர்தான். அப்படிக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்போல தோன்றியது. அடக்கி வைக்க முடியாத ஒரு தோணல் அது. உதடுகள் அதைக் கூறுவதற்குத் தயங்கின. ஆனால், மனம் கூறிக் கொண்டிருந்தது.

தெருவின் வழியாக ஏராளமான பயணிகள் போய்க் கொண்டிருந்தார்கள். ஆணின் மிகவும் முக்கியமான நோக்கம் மனைவியின் செலவிற்குக் கொடுப்பதுதான்... அப்பா - அம்மாவின் செலவிற்குக் கொடுத்ததில்லை. மாமா- அத்தைக்கு செலவிற்குக் கொடுத்ததில்லை. மாமாவின் பெயருக்கு அத்தையின் செலவிற்கு ஒரு பில்லை அனுப்பி வைத்திருந்தால்...! அப்பாவின் பெயருக்கு அம்மாவின் மெஸ் பில்லை அனுப்பியிருந்தால்... சிரிக்கக் காரணமாக இருக்கும் விஷயங்கள்தான். சிரிக்கத் தோன்றுகிறது. ஆனால், உதடுகள் சிரிக்கவில்லை. இந்த உதடுகளுக்கு என்ன ஒரு பிடிவாதம்! கூறத் தோன்றுவதை வெளியேவிடுவதில்லை. சிரிப்பு வந்தால் சிரிக்க சம்மதிப்பதில்லை. கட்டுப்பாடு போலும்! உதடுகள்தான் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகின்றன.

குமுதத்தின் சிவப்புச் சாயம் தேய்த்த உதடுகள் அவளைக் கட்டுப்படுத்துவது உண்டு. சாயம் மறைந்துவிடும் என்பதற்காகவோ சாயம் தேய்த்திருப்பதை அந்த கிராமப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதற்காகவோ மலர்ந்து சிரிக்காமல் இருந்தாள். பேசாமல் இருந்தாள்.

5

விஸ்வநாதன் வந்திருந்தான். ஒரு அழகான ஓவியத்தை வரைந்திருந்தான். இவ்வளவு நாட்களாக தவம் இருந்ததன் விளைவு. அந்த ஓவியத்தின் உத்தி தனித்துவம் உள்ளதாக இருந்தது. இமாச்சலப் பிரதேசம்தான் பின்புலம். முழுக்க முழுக்க நீல நிறத்தில் இருக்கும் ஏரியில் நீந்திக் கொண்டிருக்கும் ஒரு படகில் அந்த அழகு தேவதை உட்கார்ந்திருக்கிறாள். அவள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறாள். ஏமாற்றம் அடைந்தவளாக இருக்கிறாள். கட்டுப்பாட்டை இழக்கப் போகிறவள். எதற்கோ யாரையோ திட்டிக் கொண்டிருப்பவள். அது மட்டுமல்ல; அவளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கூறலாம். மோனலிஸாவின் ஒன்றுமற்ற தன்மையோ மறை பொருளோ ஆழமோ என்னவோ அதில் இருந்தது. மோனலிஸா! மோனலிஸா! அந்த ஓவியத்தைப் பார்த்ததில்லை.

எப்படி இருக்கும்? விஸ்வன் ஆவேசம் கொண்டவனாக ஆகிவிட்டான். என்னவோ கூறினான். புரியவில்லை... ஆனால், சில விஷயங்களைப் பற்றி விஸ்வன் கூறும்போது, அவனுடைய கண்கள் பிரகாசமாகும். முகம் சிவக்கும். அவன் ஆளே மாறிவிடுவான்... அந்த ஓவியங்கள் மனதில் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாதவையாக இருக்க வேண்டும்! அப்படி இல்லாமலிருக்க வழியில்லை. விஸ்வனை உணர்ச்சிவசப்படச் செய்த ஓவியங்கள் உலக மகா படைப்புகளாகத்தான் இருக்கும். அவற்றிற்கும் பார்ப்பதைக் கடந்து அர்த்தம் இருக்கும்.

நார்வே, சுவீடன், டென்மார்க், ஸ்பெயின்- இந்த நாடுகளை ஒரு முறை பார்த்தால்...? அங்கெல்லாம் ஓவியக் கலையில் புரட்சி படைத்த இளம் ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உத்தியும் கற்பனைக்கு மாறுபட்டவையாக இருக்கும். விஸ்வநாதன் தான் சொன்னான். சிலருடைய பெயர்களையும் அவன் கூறியிருக்கிறான். அவர்களை நம்முடைய ஊரில் யாரும் தெரிந்திருக்கவில்லை. இங்கு ஓவியக் கலை இருக்கிறதா? இங்கு ஓவியக் கலையின் படைப்பாளிதான் விஸ்வநாதன்! சோதனை! நிரந்தரமான சோதனை!

விஸ்வநாதனின் புதிய ஓவியத்திற்குப் பெயர் - சுவாரசியமான பெயரை அதற்குக் கொடுத்திருந்தான். "மனைவி - காதலனுடன் தேன்நிலவு!" ஹோ... அர்த்தம் நிறைந்த தலைப்பு! உணர்வை வெளிப்படுத்தும் பெயர் சூட்டல்! அழகான தோற்றம் கொண்ட ஓவியம்!

"மனைவி - காதலனுடன் தேன்நிலவு" ஓவியத்தில் காதலனின் முகம் இல்லை. அது ஒரு ஒப்பிட முடியாத ஓவியம்! புலர்காலைப் பொழுதில் தலையில் மூடுபனி தங்கியிருக்க, தெளிவில்லாமல் புகையன் மலை நின்று கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டம் இல்லாத மலை! அங்கு நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் பூதம் இருந்தது.

ஒரு பக்கம் கிழக்கு நோக்கி சாய்ந்து கொண்டு இருந்தது... நாகரிகத்தின் கால மாறுதலைப் போல, ஒரு வழி அந்த மலையைச் சுற்றி இறுகக் கட்டியவுடன், புகையன் மலையின் ஆன்மா பறந்து போய்விட்டது. நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் பூதம் போனதுடன், அந்த மலை ஒரு உயிரற்ற பொருளாக ஆகிவிட்டது. உயிர்போன பிணமாக ஆகிவிட்டது. அந்த மலையை ஒரு ஓவியனும் பொருட்படுத்தவில்லை... அந்தக் கதையை நூறுமுறை விஸ்வநாதனிடம் கூறியிருக்கிறான். கூறவில்லை. ஏன் அதைக் கூறாமல் விட்டுவிட்டான்? குயிலின் சத்தத்தை சாயத்தில் கலந்து வெளிப்படுத்தும்படி சொன்னான். அது நடக்கவில்லை. அது மட்டுமல்ல - விஸ்வன் இப்படிச் சொன்னான்: "அது மிகவும் பழமையான கற்பனை. அர்த்தமே இல்லாதது.''

புகையன் மலையில் முன்பு ஏறியபோது, அதற்கு மேலே இருந்து பார்த்தால் நிலத்தின் கரையில், பச்சிலைக் காட்டிற்கு மத்தியில், செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு மாளிகை தெரியும். மோகினிக் கதைகளில் வரும் பழைய இடிந்துபோன அரண்மனையைப் போல... அங்கு மனிதர்கள் இருந்தார்களா? என்னவோ? அது ஒரு தகர்ந்து போன குடும்பமாக இருக்க வேண்டும் - மரத்தடி கூட்டைப் போல. காலையில் குளித்து முடித்து தலைமுடியின் நுனியைக் கட்டி பின்னல் போட்டுக் கொண்டு, சந்தனம் அணிந்த ஒரு இளம் பெண்ணை அந்த வீட்டின் பின்புலத்தில் வரைய வேண்டும்... அவள் ஒரு முறைப்பெண்ணாக இருக்க வேண்டும் - கொச்சு தேவகியைப் போல. கொச்சு தேவகியைக் காட்டினான்... ஆனால், படம் வரையும்படிக் கூறவில்லை... புகையன் மலைக்கு மேலே ஏற எவ்வளவோ கட்டாயப்படுத்தினான்.

கொச்சு தேவகி ஓவியனுக்குப் பயன்படக்கூடிய ஒரு கதாபாத்திரம்தான். அந்த மென்மைத்தனத்தை வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியுமா? சிறு பிள்ளையாக இருந்த காலத்திலிருந்து பின்னால் நடந்தாள். எச்சிலை சாப்பிட்டாள். சாப்பிடுகிறாள். உதைகள் வாங்கினாள். எனினும், சிறிதும் களங்கமே இல்லாத சிரிப்பு... எதுவும் அவளை பாதிக்கவில்லை.


எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இல்லை. திருப்தி! திருப்தி! திருப்தி! அவள் எதற்காக இன்னும் வருகிறாள்? அது எதையும் கூறவில்லை. அவளுடைய அழகு வடிவத்தை அந்த இடிந்து போன வீட்டின் பின்புலத்தில் ஓவியமாக வரைய வேண்டும்- அந்த விஷயம் விஸ்வநாதனால்தான் முடியும்.

விஸ்வன் குமுதத்தைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறான். அவளுடைய தந்தை தனித்துவம் கொண்ட - பஞ்சாபில் இருக்கும் ஒரு அருமையான பகல் விருந்தை அளித்திருக்கிறார். அவ்வளவுதான் அவன் சொன்னான். அது மட்டுமே. மோகனன் ஒரு வார்த்தை கூறியிருக்கிறான். அதைப் பற்றி என்ன செய்வது? செய்வதற்கு எதுவும் இல்லை. விசேஷமாகத் தங்க வேண்டுமென்று... குமுதத்தின் கடிதத்தில் விஸ்வநாதன் சென்ற விஷயத்தைக் கூறவேயில்லை. அந்த குறிப்பிடத்தக்க சம்பவத்தை அவள் ஏன் கூறவில்லை?

பஞ்சாபில் இருக்கும் சுற்றுலா இடங்களிலும் கிராமப் பகுதிகளில் இருக்கும் கோதுமை வயல்களிலும் ஒரு வானம்பாடியைப் போல, நண்பர்களுடன் பாடித் திரிந்த அவளுடைய இப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கும்? அவள் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு சினேகிதியைக் கண்டுபிடிக்க அவளால் முடியவில்லை. எப்படி கண்டுபிடிக்க முடியும்? அது அவளால் முடியாது. வெளியேறி நடந்தால், இங்கு நடந்ததைப் போல, அவள் இப்போது தங்கியிருக்கும் இடத்திலும் ஆட்கள் வெறித்துப் பார்ப்பார்கள்... எதையும் தாங்கிக் கொள்ளலாம். வெறித்துப் பார்ப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? அவள் இப்போதும் ஒரு வினோதமான பொருள்தான்... குமுதத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட விஸ்வநாதன் கூறவில்லை.

பஞ்சாபில் எங்கோ சிறிது காலம் அவள் ஒரு ஆசிரியையாக இருந்திருக்கிறாள். எங்கு என்று தெரியவில்லை. அவள் எப்படிக் கற்பித்திருப்பாள்? குமுதம் ஒரு நல்ல ஆசிரியையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகளைக் கடுமையாக தண்டித்திருப்பாள். மிகவும் எளிதில் கோபம் வரக்கூடிய குணத்தைக் கொண்டிருந்திருப்பாள். முன்கோபம் கொண்டவர்கள் நல்ல ஆசிரியையாக இருப்பார்களா? யாருக்குத் தெரியும்?

மோகனன் கேட்கிறான் - அவளுக்காக ஒரு வேலைக்கு முயற்சித்தால் என்ன என்று... சரிதான். அவன் செல்வாக்கு உள்ளவன். அவனுக்கு பள்ளிகளின் உரிமையாளர்கள் பலரையும் தெரியும். அவளுக்கு ஒரு வருமானம் உண்டானால், தனியாக வந்து வாழலாம். மோகனன் நடைமுறை சிந்தனை கொண்ட மனிதன். மோகனனின் நடைமுறை அறிவைப் பற்றி இப்போது அல்ல - எப்போதுமே மதிப்பு உண்டு. கடை சரிவை அடைந்த சூழ்நிலைகள் உண்டாகி இருக்கின்றன. அப்போதெல்லாம் எவ்வளவு சீக்கிரம் சர்வ சாதாரணமாக விஷயங்களை அவன் சரி பண்ணியிருக்கிறான்... மோகனனுக்கு எல்லா விஷயங்களிலும் ஒரு திட்டம் இருக்கும்... விஸ்வநாதனுக்கு அது இல்லை. சிறிதும் இல்லை. அவன் ஒரு கலைஞன். கனவில் வாழ்பவன். எனினும், அந்தத் திட்டத்தைக் கூறியது - குமுதத்திற்கு ஒரு வருமானத்திற்கான வழியைக் கண்டுபிடித்து தனிப்பட்ட முறையில் வாழலாம் என்ற விஷயத்தைக் கூறியதைக் கூறியது விஸ்வநாதன்தான். அது ஒரு நடைமுறை அறிவா? கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலைஞனின் நடைமுறை அறிவு... அதில் என்ன நடைமுறை அறிவு இருக்கிறது? வேலையைக் கண்டுபிடிப்பதுதான் நடைமுறை அறிவு.

அக்காவின் கூர்மையான நாக்கில் இருந்தும் அந்த வீட்டின் பலாக் கூட்டில் இருந்தும் தப்பித்தால் குமுதம் சந்தோஷத்துடன் இருப்பாள். போதாது. பேசுவதற்கு மனிதர்கள் வேண்டாமா? பள்ளிக்கூடமாக இருந்தால், அப்படியே இருந்துவிடுவாள். இரண்டு ஊசிகள், கொஞ்சம் நூல் உருண்டைகள் இவற்றுடன் எத்தனை நாட்கள் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்! அந்த வாழ்க்கை பயங்கரமானது... இப்போதும் அவள் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருக்கலாம்.

விஸ்வநாதன் எல்லா விஷயங்களையும் மோகனனிடம்தான் சொன்னான். ஏன் அது? நேரில் கூறுவதற்குத் தயக்கமாக இருக்கலாம். குமுதத்தைச் சந்தித்த மனிதன் விஸ்வநாதன்தான். குறைகள், தேவைகள் வாழ்க்கையில் உண்டானபோது விஸ்வநாதனுக்கு கூச்சம்தான் உண்டானது.

ஒவ்வொரு கற்களாக, இப்போது எவ்வளவு கற்களைக் குளத்தில் வீசி எறிந்திருக்கிறான்! அரச மரத்திற்கு மேலே காகங்கள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால் இங்குதான் இந்த ஊரில் உள்ள காகங்கள் முழுவதும் வந்து சேர்கின்றன. குமுதத்தின் தலைக்கு மேலே ஓடிய காகமும் இந்தக் கூட்டத்தில் இருக்கும்.

ஆள் அரவமற்ற கோவில்! ஒரு கோவிலும் மிகவும் அருகில் ஒரு மடமும் மட்டுமே இருக்கின்றன! இங்கு எதற்கு ஒரு கோவில்? கொச்சு தேவகி குளித்து முடித்து தொழுவதற்கு வருவது இங்கு அல்ல. மேற்கு திசையில் பரந்து தெரியும் ஏரிக்கு சிவப்பு நிறம் இருக்கும். மறையும் சூரியன் சிவப்பு நிறப் பொடியை அள்ளி வீசிக் கொண்டிருக்கும்.

அந்த ஏரியின் அலைகள் புகையன் மலையின் அடிப்பகுதியை நக்கிக் கொண்டிருக்கின்றன. ஏரி தன் கால்களை நக்குகிறதே என்று அப்பிராணியான மலை நினைத்துக் கொண்டிருந்தது. நூற்றாண்டுகளாக அப்படி நக்கி நக்கி, மலையின் ஒரு நல்ல பகுதி ஏரியின் வயிற்றுக்குள் போயிருக்கும். அகலம் குறைவான மலைச் சரிவுகளின் வழியாக வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருக்கும் வயல் எங்கிருந்து ஆரம்பமாகிறது? எங்கு போய் முடிவடைகிறது?

ஒரு சங்கநாதம்! கோவிலில் இருந்துதான். முழுமையான ஆள் அரவமற்ற சூழ்நிலையில் அந்த சங்க நாதத்திற்கு தனிப்பட்ட சுகம் இருக்கிறது. கடலில் வாழ்ந்த ஒரு உயிரினம்! அது கடலின் அடிப்பகுதியில் எப்போது உருண்டு நடந்திருக்கும்? ஒரு வடிவமும் இல்லை. அதன் அடுக்குகளுக்குள் முழுவதும் உயிருள்ள சதை ஒட்டியிருக்கிறது... அதன் மேலோட்டின் வழியாகக் காற்று கடந்து செல்லும்போது, இப்படி ஊர் முழுவதும் மலைச் சரிவுகளிலும் மிக உயரமான மரங்களின் அசைவுகளுக்கு மத்தியிலும் எதிரொலிக்கக்கூடிய சத்தம் உண்டாகும் என்று கண்டுபிடித்தார்கள்... புராண காலத்துப் போர்களில் சங்கநாதம் முழங்கியது.

ஒரு பெண் குளிப்பதற்காக அந்தக் குளத்திற்கு வந்தாள். அவள் ஒரே ஒருத்திதான் அங்கு குளிப்பதற்காக வந்திருந்தாள். கோவிலில் பணி செய்யும் பெண் என்று தோன்றியது. அதோ ஒரு ஆண் ஓடி வருகிறான். பூசாரி... அவர்கள் இருவரும் மட்டுமே... அல்ல... இன்னொரு ஆளும் இருக்கிறார் - மாரான்.

அந்தக் கோவில் எதற்காக இருக்கிறது? ஒரு மனிதன்கூட அங்கு செல்வதில்லை. அந்த ஆள் அரவமற்ற இடத்தில் அது அமைதியாக இருந்து கொண்டிருக்கிறது - யாரும் கவனிக்காமல், பயன்படுத்தாமல்.

கொச்சு தேவகியிடம் கூற வேண்டும் - இனிமேல் வேறு கோவிலுக்குப் போய் குளித்து வழிபட வேண்டும் என்று. யாரும் செல்லாத கோவிலுக்கு அவள் போகட்டும். கூறினால் அவள் அதன்படி கேட்பாள். ஆனால், காலையில் அவள் குளித்து வழிபடுகிறாள்.


பொழுது விடிவதற்கு முன்பே இது என்ன சிந்தனை? அந்த கோவிலில்தான் வழிபட வேண்டும் என்று கட்டளை இட வேண்டுமென்று... ஒருவேளை காலை நேரத்தில் அங்கு வேறு ஆட்கள் குளித்து வழிபடுவதற்கு இருப்பார்கள் என்று வரலாம்... சாயங்கால நேரத்திலும் அவள் குளித்து வழிபட வேண்டும் என்று கூறினால் என்ன? மாலை வேளைகளில் அவள் வீட்டிலிருந்து செல்லும்போது, அணிந்திருக்கும் ஆடைகள் கரியும் அழுக்கும்பட்டுக் கசங்கிப் போயிருக்கும். முகத்தில்கூட அழுக்கு புரண்டிருக்கும். சந்தனக்குறி மட்டும் இருக்கும். சாயங்கால நேரத்திலும் அவள் குளிக்கட்டும். அந்தப் புனிதத்தன்மை உண்டாகட்டும். அதிகாலை நேரத்தில் அந்த மலருக்கு மலர முடியுமென்றால் சாயங்கால ராகத்திலும் மலரக்கூடிய ஒரு மலராக ஆகட்டும்... ஆனால், இரவில் அவளுக்கு ஏன் அந்த அழகு இருக்க வேண்டும்? யார் தெரிந்து கொள்வதற்கு?

பெரிய கோவிலில் இருக்கும் தேவதையிடம் எத்தனைப் பேர் பிரார்த்தனை செய்கிறார்கள்? இங்கு அவளுடைய பிரார்த்தனையை தேவதை கேட்பாள். ஏனென்றால், ஒரே ஒருத்திதான் பிரார்த்தனையே செய்கிறாள். அவள் என்ன கூறிப் பிரார்த்திப்பாள்? பிரார்த்தனை செய்வது... அந்தப் பெண் பிரார்த்தனை செய்து, பிரார்த்தனை செய்து காரியத்தைச் சாதித்து விடுவாள் என்று தோன்றுகிறது. என்ன காரியம்?

அப்படியே அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் கடந்து போனது.

6

மோகனன் மிகவும் பிடிவாதமாக இருந்தான். என்ன ஒரு கடுமையான பிடிவாதம்! குமுதத்தைப் பார்க்க வேண்டும் என்று மனதிற்குள் ஏன் ஒரு விருப்பம் உண்டாகவில்லை? முந்நூறு ரூபாய்களை ஒரு கவருக்குள் போட்டுத் தந்துவிட்டு, சனிக்கிழமை மதியத்திற்குப் பிறகு மோகனன் விரட்டி விட்டான்.

நான்காயிரத்தைத் தாண்டிய ரூபாய்கள் அவ்வப்போது எடுத்ததுதான். அதைக் குறிப்பிட்டு வைத்திருந்தான். அது கணக்கில் வந்துவிட்டது.

கணக்கு சரியாக இருக்க வேண்டும். கணக்கில், பேரேட்டில் வரவேண்டியதுதான். இது ஒவ்வொரு மாத சம்பளத்திற்கும் மேலே. இருநூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் என்ன நடக்கும்? எதுவும் நடக்காது. காரட்- பீன்ஸ் போன்றவற்றிற்கு இங்கு கடுமையான விலை. முட்டைக்கு இருபத்தைந்து பைசா. மாட்டு மாமிசமும் பன்றி மாமிசமும் வாங்கப்படுவதில்லை. அதை சமையல் பண்ணுவதில் அக்காவிற்கு விருப்பம் இல்லை... அது நல்லதுதான். எனினும், சம்பளம் முழுவதும் தீர்ந்து, அதிக பற்று என்று ஆகிவிட்டது. அப்படி பற்று அதிகமாகக் கூடாது என்று நினைத்துதான் மோகனன் சொன்னானா? இருக்கலாம்... இதோ இப்போது மேலும் முந்நூறு ரூபாய்களைத் தந்தான். கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தான்.

ஆமாம்... பில்லைச் செலுத்திவிட்டான். அவளுடைய தந்தையிடம் கொடுத்தான். அந்த மனிதர் நன்றி கூறி கையெழுத்துப் போட்டார். அவருக்கு பஞ்சாபில் ஹோட்டல் வியாபாரம் இருந்ததா? இருந்தது என்று தோன்றுகிறது. பிசினஸ் இருந்தது என்றோ பட்டாளத்திற்குப் பொருட்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்றோ கேள்விப்பட்டிருக்கிறேன். என்னவாக இருந்தாரோ? யாருக்குத் தெரியும்?

விஸ்வநாதன் அங்கு ஒரு வாரம் தங்கிவிட்டு வந்தான். அவ்வளவு நாட்கள் அங்கு தங்கியிருந்த விவரத்தை அவன் கூறவில்லை... குமுதம் அமர்ந்து பின்னிக் கொண்டிருந்தாள். வாசிக்கவும் செய்தாள்... அவளுடைய வாழ்க்கை மிகவும் சிரமம்தான். அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டுத்தான் வந்தான். குமுதம் எதுவும் சொல்லவில்லை.

தெருவைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பதே ஒரு சுவாரசியமான விஷயம்தான். எவ்வளவு... எவ்வளவு ஆட்கள் அங்குமிங்குமாகக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்! நன்கு தெரிந்தவர்களும் இருப்பார்கள். தெரியாதவர்களும் இருப்பார்கள். கடுமையான வெய்யில்.

குடையும் செருப்பும் இல்லாமல் எப்படி நடக்கிறார்கள்? காரியங்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். காரியம் என்னவாக இருக்கும்? சீறிப்பாய்ந்து செல்லும் கார்களில் பெண்கள் இருக்கிறார்கள்... ஆண்கள் இருக்கிறார்கள். தினமும் மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஒரு மனிதனின் பின்னால் ஒரு பெண் அவனை நெருக்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். அந்தப் பெண் நவநாகரீகம் உள்ளவளாக இருப்பாள். உதடுகளைச் சிவப்பாக்கி இருப்பாள். அவர்கள் மலையாளிகளா? என்னவோ? நிச்சயமில்லை.

மோகனன்தான் எவ்வளவு நேரமாக கேஷில் உட்கார்ந்திருக்கிறான்! அப்படித் தெருவைப் பார்த்துக்கொண்டு நிற்கக்கூடாது. நான்காயிரம் ரூபாய்களைத் தாண்டி அதிகப் பற்றாக இருக்கும்போது, மிகவும் முக்கியமான பில் தொகையைக் கட்டுவதற்காக, முந்நூறு ரூபாய்களைக் கொடுத்தனுப்பினான். அப்படி ஒரு சிந்தனை இன்றுவரை தோன்றியதில்லை. மோகனனிடம் ஒரு நன்றியுணர்வு தோன்றுகிறது. கடை ஆரம்பமானது. மோகனன் பணத்திற்கு ஏற்பாடு செய்தான். இரண்டு பேரும் சேர்ந்து கடையை நடத்தினார்கள். சம்பளத்தைத் தீர்மானித்தார்கள். அப்படியே நடந்து கொண்டிருக்கிறது. மோகனன் தனியாக உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறான் என்ற சிந்தனை இதுவரை தோன்றியதில்லை. இப்போது இப்படித் தோன்றுவதற்குக் காரணம் என்ன?

பணம் மோகனனுக்குச் சொந்தமானது. ஆயிரம் ரூபாய் பெற்றுப் பெருகியிருக்கிறது. பணம் வேறு எதையும்விட வேகமாக பெற்றுப் பெருகும். பெற்றுப் பெருகிய பணம் மோகனனுடையது. வேறு யாருடையதுமல்ல. அப்படியென்றால் நான்காயிரத்தைத் தாண்டிய பணம் அவனுடையதுதான்... என்னவோ மனதிற்குள் கிடந்து நெருடுகிறது. என்ன அது? இவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானதுதானே? முகவரியே "மாடர்ன் ட்ரக்ஸ்" என்பதுதான். அவனுடைய பெயருக்குத்தான் சரக்குகள் வருகின்றன. விற்பனையையும் அவன் பார்த்துக் கொள்கிறான். லைசன்ஸும் மோகனனின் பெயரில்தான் இருக்கிறது. அப்படியென்றால்... அப்படியென்றால்... பணம் அவனுடையதே. கடன் வாங்குவதோ? அவன்தான். இல்லாவிட்டால் யார்? பொறுப்பு யாரிடம் இருக்கிறதோ, அவன்தான் உரிமையாளன். அந்த வாசகத்தை மீண்டுமொருமுறை திரும்பச் சொல்ல வேண்டும்போல தோன்றுகிறது. அந்த வாசகம் எப்படி மனதில் வடிவம் எடுத்தது? நன்றாக இருக்கிறது... குமுதத்தைப் பற்றிய பொறுப்பு யாருக்கு இருக்கிறதோ, அவனுக்குத்தான் உரிமையும் இருக்கிறது. அப்படியென்றால், அதிக பற்றிற்குக் கணக்கு கூறலாம்... சிரிப்பு வருகிறது. யார் அதிகம் வாங்கியிருப்பது?

அவளுடைய தந்தையிடம் ஏராளமான பணம் இருக்கிறது என்று அன்று விஸ்வநாதன் சொன்னான். அதையேதான் மோகனனும் கூறுகிறான். ஒரே ஒரு மகள்தான் இருக்கிறாள். அந்த மனிதர் எதற்காக அந்தப் பணம் முழுவதையும் வைத்திருக்கிறார்? யாருக்குத் தெரியும்? அவளுடைய பணத்தைப் பற்றிய பேச்சு எந்தச் சமயத்திலும் எழுந்ததில்லை.

சாலையைத் தாண்டி இருந்த அரச மரத்திற்குக் கீழே ஒரு மனைவியும் கணவனும் அமர்ந்திருக்கிறார்கள். அரச மரத்தின் இலைகள் அசைந்து கொண்டிருக்கின்றன. காலையிலிருந்து அவை அப்படியே அசைந்து கொண்டிருக்கின்றன. கீழே நல்ல காற்று இருக்கிறது. ஏதோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ காரியமாக நகரத்திற்கு வந்திருக்கிறார்கள். அரச மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இளம் வயதில் இருப்பவர்கள். அவளுடைய மடியில் இருந்து அவன் வெற்றிலையையும் பாக்கையும் எடுத்துப் போடுகிறான். பரவாயில்லை.


அது ஒரு நல்ல காட்சி. சுட்டுக் கொண்டிருக்கும் வெயிலில் இருந்து தப்பும் எண்ணத்தில், அந்த நிழலில் ஓய்வெடுக்கிறார்கள். விஸ்வநாதனுக்கு ஒரு நல்ல விஷயமாக அது இருக்கும். விஸ்வநாதனைப் போன்ற ஒரு பெரிய கலைஞனுக்கு உரிய விஷயங்கள் அல்ல அவை எதுவும். அது பச்சையான வாழ்க்கை. தனிப் பச்சையான வாழ்க்கை. மிகப்பெரிய கலைஞர்களை அது ஆவேசம் கொள்ளச் செய்யாது. அந்த வாழ்க்கைக்கு மதிப்பு மிக்க வெளிப்பாடுகள் இல்லாமல் இருக்கலாம். உயர்ந்த நிலையை அடைய உணர்வுகள் மூலம் கடந்து செல்ல வேண்டும் என்று என்னவோ விஸ்வநாதன் சமீபத்தில் சொன்னான். புரியவில்லை. எல்லா விஷயங்களுக்கும் உன்னத நிலை இல்லாமல் இருக்கலாம். அங்கு அடையக்கூடிய உணர்ச்சிகளின் பிரவாகமும்... அதைத் தாண்டிய தன்மை கொண்டதாக அது இருக்கலாம். எனினும் அந்த விவசாய தம்பதிகள் முழுமையான மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்... ஒருவேளை, கொச்சு தேவகிக்கும் உள்ளுணர்வுகள் இல்லாமல் இருக்கலாம்... குறிப்பிடத்தக்க வாழ்க்கைக்கு உள்ளுணர்வும், உயர்ந்த எண்ணங்களும் அவசியத் தேவைகளாக இருக்கலாம் - அந்த மோட்டார் சைக்கிளில், பின்னால் மனைவியை வைத்துக் கொண்டு செல்பவனுக்கு? அவனுடைய பயணம் மரணப் பாய்ச்சலைப்போல இருக்கும்.

மோகனன் நாற்காலியை விட்டு எழுந்தான். அங்கு போய் உட்காரும்படி கூறவில்லை என்பது உண்மைதான். அங்கு உட்காரும் படி அமைதியாகக் கட்டளை போடலாம் அல்லவா? கேஷில் ஆள் இல்லாமல் இருக்கக் கூடாது. அங்கு போய் கட்டாயம் உட்கார வேண்டும். சில நேரங்களில் கடை அடைக்கும் வரை... மோகனன் எழுந்திருக்கலாம். அங்கு உட்கார ஆளை நியமித்திருக்கிறான். அந்த ஆள் அங்கு உட்கார்ந்திருக்க வேண்டும். அப்படி நியமிக்கப்பட்ட அந்த ஆளுக்கு எழுந்து செல்வதற்கு அதிகாரம் இல்லை. அவன் கேட்க வேண்டும்.

"நான் எழலாமா?''

"சரி...''

"அப்படியென்றால் எழுகிறேன்.''

நேர் மாறாக -

"நான் எழுந்திருக்கிறேன்.''

அதற்கு அர்த்தம் - நியமிக்கப்பட்ட ஆள் உட்கார வேண்டும் என்பது.

அந்த நாற்காலியில் போய் உட்கார்ந்திருக்கிறான். அவ்வளவுதான். இப்படி ஒரு அதிகாரத்தைப் பயன்படுத்த எங்கு இடம் இருக்கிறது? என்றைக்காவது பயன்படுத்தி இருக்கிறானா? பயன்படுத்தி இருக்கிறான். கொச்சு தேவகியிடம்.

ஒரு சுற்று கடந்தவுடன், கொச்சு தேவகி தோன்ற ஆரம்பித்துவிடுகிறாள். பல வருடங்களாக அவளை மறந்துவிட்டிருந்தாள். இப்போது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் அவள் சிந்தனையில் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறாள்.

சாயங்காலம் படுக்கையறையில் மெத்தை விரித்துப் போடப்பட்டிருக்கும். அந்த வேலையையும் கொச்சு தேவகி செய்கிறாள். எதற்காக? அவள் கூறியபடி கேட்கக்கூடியவள்... குமுதம் இருந்த போது வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்பவள்தான் அந்த வேலையைச் செய்தாள். இரண்டு பேரின் மெத்தைகளையும் சேர்த்துப் போட்டு விரிக்க வேண்டும். அதற்குத் தனியாக இரண்டு ரூபாய் கொடுத்தான்.

மோகனன் அந்தப் பகுதியில் இருந்த மேனேஜ்மென்ட் பள்ளிக்கூடங்களில் ஏதோ விசாரித்துப் பார்த்திருக்கிறான். ஒரு வகையில் பார்க்கப் போனால் அது நல்ல விஷயம்தான். தனியாக வாழ்வது நல்லதுதான். இந்த வருடம் அது முடியாத விஷயம் என்று கூறிவிட்டார்கள். அடுத்த பள்ளிக்கூட வருடத்தில் பார்க்கலாம் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். மோகனன் சொன்னான்:

"ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கும் மேலே மெஸ் பில்லாகக் கொடுக்க வேண்டாமா? பதினைந்தோ பதினெட்டோ மாதங்களுக்கான மெஸ் பில் போதுமே!''

சரிதான். அவ்வளவு போதும். மோகனன் அந்தத் தொகையை உண்டாக்கித் தருவான். அதிகப் பற்று நான்காயிரம் என்பது ஆறாயிரமாக ஆகும். அவ்வளவுதான். அந்த விஷயத்தில் மோகனனுக்கு கவலை தோன்றாது. எது எப்படி ஆனாலும், அங்கு கேட்காமல் இருப்பதே நல்லது.

மோகனனுக்கு கோபம் வந்தது.

"அந்த விஸ்வன் இங்கு வரட்டும். அவனுடைய கலையும் இதுவும்... நான் நல்ல முறையில் நான்கு வார்த்தைகள் அவனைப் பார்த்து கேட்கணும்.''

அந்த ஆசீர்வதிக்கப்பட்ட கலைஞனிடம் மோகனன் ஒரு போருக்குத் தயார் பண்ணிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறான். விஸ்வன் என்ன தப்பு பண்ணினான்?

மோகனன் சொன்னான்:

"யசோதரா, அவன் உன்னை பிரச்சினையில் மாட்டிவிட்டுட்டான். அவன் இலட்சாதிபதியாக இருக்கலாம்!''

மோகனன் கேட்கிறான்:

"நீ அவனிடம் கொஞ்சம் பணம் கேட்டால் என்ன யசோதரா?''

அப்படி ஒரு கேள்வியை இன்றுவரை யாரும் கேட்டதில்லை. உடனடியாக பதில் கூறக்கூடிய ஒரு கேள்வி அல்ல அது.

அப்படியே பணம் கிடைத்தாலும், அவளுக்கு இந்த ஊரில் வேலை பார்க்கத் தகுதி இருக்கிறதா?

"ம்... ஏன்?''

"அவளுக்கு மலையாளம் தெரியுமா?'' அப்படித்தான் அந்தக் கேள்வியிலிருந்து தப்பித்தேன்.

"அந்த துரோகியை இனிமேல் பார்த்தால், அவனுடைய கன்னத்தில் அடிப்பேன்.''

மோகனனுக்கு விஸ்வன் மீது என்னவொரு கோபம்!

நிலவு உள்ள இரவு வேளை. முன்வாசலுக்கு வெளியே இருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தான். மின்மினிப் பூச்சிகள் அங்கும் இங்குமாக அமர்ந்து கொண்டு சத்தம் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. என்னவோ கதைகளைப் பாடிக்கொண்டு நிலவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. புகையன் மலைக்கு மேலேயும் நிலவு வெளிச்சம் பரவித் தெரிகிறது.

"குழந்தை, நீ ஏன் இங்கே உட்கார்ந்திருக்கே?''

அக்காதான். ஏதோ காரியமாக அக்கா வந்திருக்கிறாள். அந்த அப்பிராணிப் பெண்ணின் வேலை முழுவதும் முடிந்துவிட்டது. தம்பி உறங்கிவிட்டானா என்பதைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறாள். அங்கு தம்பியைக் காணவில்லை. வெளி வாசலுக்கே வந்துவிட்டாள்.

"போய் படு... இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது.''

"தூக்கம் வரவில்லை.''

"போய் படு... தூக்கம் வரும்.''

அக்கா கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனாள். அப்படித் தனியாக உட்கார்ந்திருப்பதில் அக்காவிற்கு ஒரு பதைபதைப்பு!

7

ரு மனிதனை அப்படியே சிலையைப் போல உட்கார வைத்துக் கொண்டு, இரண்டு பேர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு ஆராய்ச்சி செய்வது... அது ஒரு அனுபவம்தான். அப்படிப்பட்ட ஒரு அனுபவம் முன்பு எந்தச் சமயத்திலும் உண்டானதில்லை. அது பயனற்ற ஒன்று என்று கூறுவதற்கில்லை. இருள் மூடிக்கிடந்த பல விஷயங்களும் வெளியே வந்தன. அது மட்டுமல்ல - சில காரியங்களில் சிந்தனை மோதி, வழிமாறிப் போய்விட்டிருந்தது. அந்தக் காரியங்களைப் பற்றி இப்போது தெளிவு கிடைத்தது. எல்லா விஷயங்களும் மேலும் சற்று தெளிவாகத் தெரிவதைப் போலத் தோன்றியது.

மோகனனும் அக்காவும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டார்கள். கடையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தபோது மோகனனும் வீட்டிற்கு வருவதாகச் சொன்னான். அப்படித்தான் ஒரு இரவு முழுவதும் தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டு மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.


மோகனனுடன் எத்தனையோ வருடங்களாக உறவு இருந்து கொண்டு இருக்கிறது! ஒன்றாகவே வளர்ந்தவர்கள்.

மோகனனுடன் எப்போதாவது கருத்து வேறுபாடு உண்டாகியிருக்கிறதா? மிகவும் சாதாரண விஷயங்களிலாவது அப்படி நடந்திருக்கிறதா என்று நினைத்துப் பார்க்கிறேன்... இல்லை. கருத்து வேறுபாடு எப்படி உண்டாகிறது? அறிவின் ஒவ்வொரு பாதையை நோக்கிய செயல்கள் காரணமாகவா? அல்லது கருத்து வேறுபாடு உண்டாவதற்கு உணர்ச்சிகள் காரணமாக இருக்கின்றனவா? அபிப்ராயம் என்றால் என்ன? தனித்துவமா? தனித்துவத்தின் குணமா... எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அக்காவும் மோகனனும் தங்களுக்கென்று சொந்தமான அபிப்ராயம் உள்ளவர்கள்தான். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்தபோது, அவர்களுக்கு ஒரு பிடிவாதம் இருந்தது.

குமுதத்தின் தந்தை ஒரு பேராசைக்காரர் என்று இருவரும் கூறினார்கள். ஒழுங்கு நேர்த்தியுடனும் கணக்குப் போட்டும் வாழ்க்கையை உண்டாக்கி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதர் அவர். பிறந்த ஊரில் வாழ்வதற்கு வழியில்லாமல் ஊரைவிட்டு வெளியேறினார். இன்னொரு ஊரில், பழக்கமே இல்லாத சூழ்நிலையில், உதவி செய்வதற்கோ பரிதாபப்படுவதற்கோ ஆள் இல்லாத நிலையில் வாழ ஆரம்பித்தார். திட்டமிடல், நேர்த்தி ஆகியவற்றைக் கொண்டு கொஞ்சம் பணம் சம்பாதித்தார். அவருக்கு ஒரே ஒரு மகள்தான். உள்ளவை அனைத்தும் அந்த மகளுக்குத்தான். வேறு யாருக்கும் அவர் கொடுக்கப்போவதும் இல்லை. குமுதம் ஆழமாக அதை நம்பினாள். அவள் காரிய காரண உறவுகளுடன் - புரியக்கூடிய வகையில் சரியாக அந்த விஷயத்தைப் பற்றி வாதாடினாள்... ஆமாம்... வாதாடத்தான் செய்தாள்.

"அப்பா இப்போதும் ஒழுங்கையும் சடங்குகளையும் விடவில்லை.''

அது நியாயமானதுதான். அந்த மனிதரைக் குறை கூறுவதற்கில்லை.

"மகளுக்குத் திருமணம் செய்து வைத்தாகிவிட்டது. அவளைக் காப்பாற்றக்கூடிய தந்தையின் பொறுப்பு முடிவடைந்துவிட்டது. அதற்குப் பிறகு இருக்கும் பொறுப்பு கணவனைச் சேர்ந்தது. அவள் இரண்டு மாதங்கள் தங்கியிருப்பதற்கான பணத்தைக் கணவன் தர வேண்டும்!''

அதுவும் சரிதான்.

"அந்தப் பணம் யாருக்குப் போய்ச் சேர்கிறது?''

குமுதம் கேட்ட கேள்விதான். அந்த மகளுக்குத்தான். இப்போது அந்தப் பணத்தைத் தருவதில் ஏன் இந்த அளவிற்குக் குறைப்பட்டுக் கொள்ள வேண்டும்? அந்தக் கேள்விக்கும் பதில் கூற முடியவில்லை.

எந்தெந்த வகையிலான மாறுபாடுகளை மனிதன் கண்டுபிடிக்கிறான்! ஆச்சரியம்தான். புகையன் மலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இருக்கக்கூடிய ஆச்சரியம். புகையன் மலைக்கு உள்ளே என்ன இருக்கிறது? அது உண்மை அல்ல. அந்தப் பெரிய பலா மரத்தின் சில கிளைகள் நேராகவும் வேறு சில கிளைகள் வளைந்தும் போய்க் கொண்டிருக்கின்றன. குமுதத்தின் வாதங்கள் நன்றாக இருந்தன. புரிய வைப்பதற்குத்தான். அவளுக்கு அறிவு இருக்கிறது.

ஆனால், அந்த வாதத்தை அக்காவோ மோகனனோ ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமல்ல - அந்த வாதம் அவர்களுக்கு முன்னால் உடைந்து நொறுங்கிவிட்டது. அவர்கள் கூறுவதும் சரிதான்.

வயலில் இலைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே நிலவு வெளிச்சம் விழுந்து வெள்ளை அடையாளங்கள் தெரிகின்றன. அதைப் பார்க்கும்போது அழகாக இருந்தது. எவ்வளவு நேரமாக அந்த இரவுப் பறவை அழுது கொண்டிருக்கிறது! வேறு எங்கோ இருந்து இன்னொரு இரவுப் பறவை அதற்கு எசப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறது. யார் முதலில் செல்வது என்ற பிடிவாதமா? இல்லை... அந்த அழுகையில் பிடிவாதம் இல்லை. ஒருவேளை, எங்கு போய் இரவில் தங்குவது என்று தெரியாமல் கவலைகளில் மூழ்கி இருக்கலாம். ஆண் பறவை எங்கேயோ இருக்கிறது என்று பெண் பறவைக்குத் தெரியும் - பெண் பறவை எங்கேயோ இருக்கிறது என்று ஆண் பறவைக்கும். ஒவ்வொன்றும் இந்த இடத்தில்தான் என்று அவற்றிற்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த இரவுப் பொழுதில், அது நிலவு வெளிச்சம் நிறைந்ததாக இருக்கிறது என்றாலும்கூட, மரங்களுக்கிடையே பறந்து பறந்து கண்டுபிடிப்பதற்கு முடியாமல் இருக்கலாம். அவை ஒன்றையொன்று அழைப்பதில் ஏமாற்றம்தான் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

மரத்தடி வீட்டில் கொச்சு தேவகி படுத்து அழைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது எங்கோ தூர இடத்தில் இருக்கும் ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு குமுதத்தின் ஆன்மா அழைத்துக் கொண்டிருக்கலாம். இதில் எது சரியானது?

அக்காவிற்கு மிகவும் கடுமையான வெறுப்பு விஸ்வன்மீது இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள முடியும். கிராமப் பகுதியில் இருக்கும் ஒரு பழைய வீட்டின் சமையலறையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண். கோவிலில் நடக்கும் திருவிழாவிற்குக்கூட அந்த வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. ஓவியக் கலையைப் பற்றி அக்காவிற்கு எதுவும் தெரியாது... உள் வாசலுக்கு மேலே நான்கைந்து படங்கள்... குருவாயூரப்பன், பழனி கடவுள், கிருதா வைத்திருக்கும் சிவன் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அக்கா வாங்கி கண்ணாடி போட்டு வைத்தவை. அக்காவின் ஓவியக்கலை பற்றிய அறிவை அந்தப் படங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். விஸ்வனைப் பற்றி அக்கா மிகவும் ஆபாசமாகப் பேசுவாள். அந்த மிகப் பெரிய கலைஞனை அக்காவால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? ஆனால், மோகனனும் அக்காவுடன் சேர்ந்து கொள்கிறான். அதுதான் ஆச்சரியம்! இரண்டு பேரும் சேர்ந்தவுடன், அவர்களுக்கு விஸ்வனைப் பற்றிப் பேசுவதில்தான் என்ன ஒரு சுவாரசியம்! ஒரு ஆள் கூறுவதை இன்னொரு ஆள் முழுமை செய்யும் செயல் நடந்து கொண்டிருந்தது.

அக்காவின் வெறுப்பை முன்பே அவன் புரிந்து வைத்திருந்தான். அது இந்த அளவிற்கு அதிகமாக இருக்கும் என்று நினைத்ததில்லை. விஸ்வநாதன் அதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை என்று தோன்றுகிறது.

"இனிமேல் அவன் இங்கு வரட்டும். நான் சமையலறையைச் சுத்தம் செய்யும் துடைப்பத்தை எடுத்து முகத்தில் அடிப்பேன்.''

அக்கா வெறிபிடித்துக் கூறுவது இதுதான். அக்கா அதைக் செய்தாலும் செய்யலாம்.

"யசோதரா! உனக்கு குறைச்சல் உண்டாகும் என்று நினைத்துதான் நான் பேசாமல் இருந்தேன்.''

முன்பு அந்த மாதிரி செய்யாமல் இருந்ததற்கு அக்கா கூறிய சமாதானம் இது. ஆரம்பத்திலேயே அக்கா ஏன் அதைச் செய்யவில்லை என்று மோகனன் கேட்டதற்குக் கிடைத்த பதில்தான் அது. அப்படியென்றால் அக்கா அதை இவ்வளவு நாட்களாக மனதில் வைத்துக் கொண்டிருக்கிறாள்!

இயற்கையைக் காதலிக்கும் அந்த கலைஞன், அமைதி தவழும் இந்தக் கேரளத்தின் கிராமப் பகுதிகளில் இருக்கும் வயல்களின் வரப்புகள் வழியாகவும் மாந்தோப்புகளிலும் அலைந்து திரிந்திருக்கிறான். புகையன் மலைமீது ஏறவில்லை. அவ்வளவுதான். அவனுடன் ஒரு சினேகிதியும் இருந்தாள். பஞ்சாபிலும் இமாச்சலப் பிரதேசத்திலும் இப்படிப்பட்ட நண்பர்களுடன் குமுதம் அலைந்து திரிந்திருக்கிறாள். அது இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்குப் புரியாது. அக்காவிற்கும் அது புரியாது.


ஆனால், கேரளத்திற்கு வெளியே போயிருக்கும் மோகனனுக்கு அது புரியாமல் போனதுதான் ஆச்சரியம். மோகனனின் தனி உருவத்தை இப்போதுதான் பார்க்கிறான். சமையலறையில் மட்டுமே வாழ்ந்த அக்காவைவிட அவனுடைய மனம் சுருங்கிப் போய்க் காணப்பட்டது. பழமையில் ஊறிப் போய்விட்டிருந்தது.

"அவன் இந்த அப்பிராணியின் தலையில் அவளைக் கட்டி வைத்துவிட்டான்.''

மோகனன் வெளிப்படையாகக் கூறினான். அவளுடைய வாழ்க்கையின் பங்குதாரர் தனக்கு அருகிலேயே இருக்கிறான் என்பதை அவன் புரிந்திருக்கவில்லை. அந்த மனிதனைப் பற்றித்தான் இப்படிக் கூறுகிறான்.

அக்காவும் தன்னையே மறந்துவிட்டதைப் போல் தோன்றியது.

"இங்கு அவன் வரும்போது அவளுக்கு என்ன ஒரு உற்சாகமும் சிரிப்பும்! அவள் ஆளே மாறிவிடுவாள். அவள் அவனை விட்டு விலகுவதே இல்லை. அவனை கவனிப்பதில் அவளுக்கு அளவற்ற ஈடுபாடு. அவர்களுடைய மொழியில் பேசிக் கொள்வார்கள். இவனுடைய வீடு இது. நான் இவனுடைய மூத்த அக்கா- இந்த விஷயங்களையாவது அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா? இல்லை... அப்போது எனக்கு அடியிலிருந்து முடிவரை வெறியே உண்டாகும். மோகனா, நீ சொன்னதுதான் சரி. இந்த அப்பிராணியின் தலையில் அவன் அவளைக் கொண்டு வந்து தள்ளிவிட்டான்.!''

அக்காவும் சேர்ந்து இதைச் சொன்னபோது "நிறுத்துங்க" என்று உரத்த குரலில் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால், உதடுகள் ஒட்டிக் கொண்டன. விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறாள் என்று தோன்றிய எண்ணத்தைக்கூட தாண்டி, அந்தச் சத்தம் வேகமாகப் பாய்ந்து தொண்டை வரை வந்துவிட்டது. உதடுகள் மூடிக் கொண்டன. சத்தம் வெளியே வரவில்லை.

எழுந்து நிற்பதுதான் ஒரு சுகமான விஷயம். அந்த இரவுப் பறவைகள் பாடலை நிறுத்திவிட்டன. புகையன் மலையில் நிழல் தெரிந்தது. எதன் நிழல்? நிலவு நடு உச்சியை அடைந்துவிட்டிருந்தது. அப்படி உண்டான நிழலாக இருக்கலாம். ஒரு மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரமும் அந்தக் காற்று எங்கே ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது? அடர்த்தியான இலைகளுக்கு மத்தியிலா, அல்லது புகையன் மலையின் அடிவாரத்திலா? காற்றும் தூங்கிக் கொண்டிருந்திருக்கலாம். அதை எது தட்டி எழுப்பியது?

அக்காவிற்கும் மோகனனுக்கும் கடுமையான அபிப்ராயங்கள் இருந்தன. எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால் ஒருவார காலம் விஸ்வநாதன் அவளுடைய தந்தையின் விருந்தாளியாகப் போய் தங்கியிருந்தும், அந்த விஷயத்தை அங்கிருந்து நேராக இங்கே வந்த பிறகும் அவன் கூறவில்லை. அவளுடைய தந்தை கூறித் தெரிந்து கேட்டபோது அவன் ஒப்புக் கொண்டான். ஒப்புக் கொண்டானா? ஒப்புக் கொண்டான் என்றால், அதில் சிறிது பலத்தை பயன்படுத்திய அடையாளம் இருக்கிறது அல்லவா? மனதைத்திறந்து கூறுவதற்குப் பெயரா ஒப்புக் கொள்வது? கேட்பது... ஒப்புக் கொள்வது... அப்படியென்றால் அவளும் மறைத்தாள். மறைத்தாள் என்று கூறுவது குற்றச்சாட்டு. கூறுவதற்கு அது ஒரு விசேஷ சம்பவமா? அங்கேயிருந்து நேராக இங்கே வருகிறான் என்பது தெரியும். அப்படியென்றால் அதைக் கூற வேண்டுமா? ஆனால், விஸ்வநாதன் இன்று வரை வரைந்து வைத்திருப்பவைகளிலேயே மிகவும் சிறந்த ஓவியங்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவள் கூறியதில்லை. அது ஏன்?

அந்த மெல்லிய காற்று ஒரு குறும்புத்தனம் நிறைந்தது. அது மரங்களின் இலைகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. மரங்கள் சண்டை போடுகின்றன. மரங்களுக்கும் உறக்கம் உண்டு. இப்போது கடைக்கு முன்னால் இருக்கும் அரச மரத்தின் இலைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். தூரத்தில் ஒரு நரி ஊளையிடுகிறது. ஆயிரம் நரிகள் ஊளையிடுகின்றன. எங்கோ ஒரு குழந்தை கண் விழித்து அழுகிறது. கீழே வசிக்கும் கருத்தாவின் குழந்தை என்று தோன்றுகிறது. ஏன் கோழி கூவவில்லை? இரவு எவ்வளவு நீண்டதாக இருக்கிறது!

அக்கா அன்று கூறியது காதில் விழுவதைப்போல இருந்தது. எத்தனையோ நாட்களுக்கு மத்தியில் அந்த வார்த்தைகள் கடந்து வந்து செவிகளில் மோதிக் கொண்டிருந்தன.

"அங்கு இருக்கும்போதே அவர்கள் காதலர்களாக இருந்திருக்க வேண்டும்!''

8

ன்ன எழுதுவது? எதுவும் தோன்றவில்லை. தாளையும் பேனாவையும் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பான். ஒரு எழுத்து கூட எழுதவில்லை. ஒரு இரவு முழுக்க கடிதம் எழுதுவதற்கு உட்கார்ந்திருக்கிறான். எழுதவில்லை.

இப்படியும் இருக்குமா? மனைவிக்கு ஒரு கடிதம் எழுத இயலாமை... அது ஏன்? மனம் முழுமையான வெறுமையில் இருக்கும் ஒரு நிலைமை... சிரமப்பட்டு ஒரு வாசகம் கிடைக்கிறது - "அடுத்த வாரமும் வர இயலவில்லை" பிறகு இன்னொரு வாசகமும் வந்து சேர்ந்தது - "இங்கு விசேஷம் எதுவும் இல்லை. அங்கும் இப்படித்தான் என்று நினைக்கிறேன்." - இந்த வாசகங்களா ஒரு மனைவிக்கு எழுதக்கூடிய கடிதத்தில் எழுதுவதற்காக இருப்பவை?

குமுதத்தின் கடிதங்கள் வருவதுண்டு. இரண்டு கடிதங்கள் வந்தன. அவையும் குடும்ப வாழ்க்கையைப் பற்றியதாகவே இருந்தன. அவள் சோர்வடைந்து வெறுத்துப் போய்விட்டாள் என்று எழுதியிருந்தாள். நாட்களுக்கு பெரிய சுமை இருக்கின்றனவே! அது இயல்பான ஒன்றுதானே! மோகனனும் அக்காவும் சேர்ந்து சில முடிவுகளை எடுத்ததைப் போல தோன்றுகிறது. வெறும் தோணல் தான். ஏதாவது தீர்மானங்கள் எடுத்ததாக அனுபவத்தில் இல்லை.

ஒருநாள் சற்று முன்கூட்டியே கடையில் இருந்து கிளம்பினான். விசேஷமாகக் கூறும் அளவிற்கு எதுவும் இல்லை. அப்படித் தோன்றியது. செல்ல வேண்டும் என்று மட்டும். அதுவும் ஒரு விசேஷ சம்பவமாக இருந்தது. கடை ஆரம்பமான பிறகு அப்படி ஒரு காரியம் நடந்ததில்லை. அன்று வழக்கமான ஒன்றை மீறி நடந்தான். அதற்குத் தனிப்பட்ட ஒரு தைரியம் தேவைப்படுமே! ஆமாம்... குடையையும் எடுத்துக் கொண்டு "நான் போகிறேன்'' என்று கூறி, மோகனனின் பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியேறினான். திரும்பிப் பார்க்கவில்லை. சிறிது தூரம் நடந்தபிறகுதான் எதற்கு வெளியேறினோம் என்பதைப் பற்றியே சிந்தித்தான். அதற்கு ஒரு காரணமும் கண்டுபிடிப்பதற்கு இல்லாமலிருந்தது. சீக்கிரமே வீட்டிற்குச் சென்று என்ன செய்வது?

அன்று பேருந்தில் செல்லவில்லை. நடப்பது என்று தீர்மானித்தான். அந்த வழியே நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. முன்பு பள்ளிக்கூடத்தில் படித்தபோது அந்த வழியே நடந்து பயணம் செய்திருக்கிறான்.

நகரத்தின் எல்லை கடந்தது. கிராமப்புறம்தான். இடது பக்கத்தில் இருக்கும் பெரிய வீடு தாமஸுக்குச் சொந்தமானது. தாமஸுடன் ஒன்றாகச் சேர்ந்து படித்திருக்கிறான். தாமஸின் தந்தைக்கு வீட்டிலேயே கடை இருந்தது. இப்போது ஒரு பெரிய வீடு அந்த இடத்தில் இருந்தது. தாமஸ் பெரிய பணக்காரனாக ஆகிவிட்டான்.


தாமஸ் காரில் பயணம் செய்யும்போது, அவனை அவ்வப்போது பார்த்திருக்கிறான். மெதுவாக சிரிப்பான். தடிமனான ஒரு பெண்தான் அவனுடைய மனைவியாக இருந்தாள்.

அதைத் தாண்டி இருந்த ஒரு பெரிய வீடு இப்போது சிதிலமடைந்து போய் காணப்பட்டது. பேருந்தில் செல்லும்போது சில நேரங்களில் அந்த வீட்டைப் பார்ப்பதுண்டு. பாதையின் அருகில் அந்த வீட்டின் நிலத்தில் ஒரு விளையாட்டு மைதானம் இருந்தது. வழிப்போக்கர்கள் ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டது அது. முன்பு கோடை காலத்தில் அங்கு மோர் கொடுப்பதுண்டு. மிகவும் வயதான ஒரு மனிதர் அந்த வேலையைச் செய்தார். பெரிய கல்லால் ஆன தொட்டி நிறைய மோர் கலக்கி வைக்கப்பட்டிருக்கும். உப்பும் வற்றலும் சேர்த்து, எலுமிச்சம் பழத்துண்டை அறுத்துப்போட்டு தயார் பண்ணிய அந்த மோர்நீருக்கு நல்ல சுவை இருந்தது. நீளமான கைப்பிடி இணைக்கப்பட்ட ஒரு குவளையைக் கொண்டு அந்த வயதான மனிதர் மோரை மொண்டு ஊற்றுவார். குடிப்பவர்கள் குனிந்து நின்று கொண்டு கையைக் குவித்து உதட்டுடன் சேர்த்து வைக்க வேண்டும். கையில் கொஞ்சம் கொஞ்சமாக மிகவும் கவனத்துடன் மோர் விழுந்து கொண்டிருக்கும். நகரத்திற்கு பெரிய சுமையுடன் செல்பவர்களும் திரும்பி வருபவர்களும் அங்கு வந்து பசியையும் தாகத்தையும் போக்கி, அந்த மைதானத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுத்துவிட்டுத்தான் போவார்கள்.

அந்த ஏற்பாடுகள் அனைத்தும் அந்த வீட்டில் இருந்துதான் செய்து வந்தார்கள். ஒரு பெரிய செலவு வந்திருக்கும். அந்த வயதான மனிதருக்கு சம்பளம் என்ன கிடைத்திருக்கும்? யாருக்குத் தெரியும்? ஒரு வாழ்க்கைக் காலம் முழுவதும் தாகமெடுத்து வருபவர்களுக்கு நீர் கொடுத்த அந்த மனிதர் ஒரு பெரிய நிலையில் வைத்து நினைக்கப்பட வேண்டியவர்தான். எத்தனை லட்சம் பேருக்கு அந்த மனிதர் நிம்மதி அளித்திருக்கிறார்! ஒருமுறைகூட சுளித்த முகத்துடன் அந்த மனிதரைப் பார்த்ததில்லை. கவனக் குறைவுடன் நீரை மொண்டு கொடுத்து மூக்கில் காரமான நீர் நுழைந்து, யாரையும் அந்த மனிதர் சிரமத்திற்கு உள்ளாக்கவில்லை. உண்மையிலேயே அந்த வயதான மனிதரை புண்ணியத்தைச் சம்பாதித்தவர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போது அவர் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு வழியில்லை. அவர் எங்குள்ளவரோ? யாருக்குத் தெரியும்? சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால், அவர் நிச்சயமாக சொர்க்கத்தில் இருக்கக்கூடிய தகுதியைக் கொண்டவர்தான். அந்த வீடு செய்தது நல்ல காரியம்தானே? ஆனால் அது சிதிலமடைந்து போயிருக்கிறது.

அந்தக் கருங்கல் தொட்டி வெறுமனே கிடக்கிறது. விளையாட்டு மைதானம் பாழ்பட்டுக் கிடக்கிறது. அங்கு சிறிது நேரம் உட்கார்ந்தால் என்ன? கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த ஒரு வாழ்க்கை நெறியின் தகர்ந்த சின்னம்தான் அது. இப்படிப்பட்ட பிரம்மாண்டமான கல்தொட்டிகளை இப்போது தயார் பண்ணுவதில்லை. அதற்கான தேவையும் இல்லை. ஒரு வாழும் காலம் முழுவதையும் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வெயிலில் பசியாலும் களைப்பாலும் வாடிவரும் பயணிகளுக்கு நீர்மோர் மொண்டு கொடுக்க செலவழித்திருக்கிறார்கள். அந்தப் பாதையில் செயல்படக்கூடிய ஒரு மனிதனை இப்போது பார்க்க முடியுமா? அந்த வயதான மனிதர் இளம் வயதில் இருந்தபோது, அந்த வேலையில் சேர்ந்த வேளையில் அவருடைய தந்தையோ மூத்தவரோ கூறியிருப்பார்கள்:

"இவனுடைய ஆன்மா புண்ணியம் செய்தது. வழிப்போக்கர்களுக்கு நீர் தருவது என்பது எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய வேலை இல்லை.''

இப்போது வாழ்க்கைக்கு எப்படி விலை கற்பிக்கிறார்கள்?

உன்னத வாழ்க்கை, வாழ்க்கையின் செயல்கள் ஆகியவற்றின் சின்னம் முதுமைக் கோலத்தில் நின்று கொண்டிருக்கும் நிலை - விஸ்வநாதன் இந்தப் பின்புலத்தில் ஒரு ஓவியத்தை வரையக் கூடாதா? இந்த சிதிலமடைந்த கட்டிடம், அதன் கருங்கல் தூண்களில் கைகளைக் குவித்து நீட்டிக் கொண்டு நின்றிருக்கும் பெண் வடிவம் இருக்கிறது. அந்தக் கைகளுக்குள் எண்ணெய் ஊற்றி விளக்கு பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அகலமும் நீளமும் கொண்ட படிக்கற்கள் சேதமடைந்திருக்கின்றன. எனினும், ஒரு காலத்தில் அது நல்ல நிலையில் இருந்தது. அந்த வயதான மனிதர் முழுமையான சந்தோஷத்துடன் மோர் ஊற்றுகிறார் - விஸ்வநாதன் அந்த ஓவியத்தை வரைய மாட்டான். அவனுக்கு ஓவியம் வரைவதற்கு பஞ்சாபை சேர்ந்த பெண் வேண்டும். நைனிட்டாலின் ஏரி வேண்டும். அந்த ஓவியக்கலை ரசனையில்தான் என்ன ஒரு விரும்பத்தகாத தன்மை! உன்னத நிலைக்கு உணர்ச்சிகளின் வழியாக... என்ன பைத்தியக்காரத்தனம் அது! சோதனை முயற்சியாம்... சோதனை முயற்சி. பஞ்சாபின் ஏரியில் நடக்கும் உல்லாசப் பயணம்தான் சோதனை முயற்சியா? என்னவோ? யாருக்குத் தெரியும்?

அந்த ஓவியங்கள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமையான உருவம் இருப்பதைப் போல தோன்றியது. ஒரே ஒரு விஷயம்தான் இருந்தது ஓவியம் வரைவதற்கு. பஞ்சாபைச் சேர்ந்த பெண்! அது சரியா? சரியாக இல்லாமலிருந்தால் தேவையில்லை. "ஒரு பறவையில் இருந்து உதிரும் சிறகுகளைப்போல இருந்தன விஸ்வநாதனின் ஓவியங்கள்" என்று இல்லாமலிருந்தால் நல்லதாக இருக்கும்.

அந்த விளையாடும் இடத்தில் ஆடும் நாயும் புலியும் விளையாடிய படம் வரைந்து காணப்படுகிறது. இப்போதும் அங்கு ஆட்கள் பொழுதைப் போக்குகிறார்கள். யார் ஆடும் நாயும் புலியும் விளையாடுகிறார்கள். எதுவும் செய்ய முடியாத நேரம் போக்கிகள்! அவர்கள் நேரத்தை வீண் செய்கிறார்கள். அந்த விளையாடும் இடம் நேரத்தை வீண் செய்வதற்காக உண்டாக்கப்பட்டது அல்ல. கடுமையான, தூக்க முடியாத சுமையைத் தூக்கிக் கொண்டு வந்த வழிப்பயணிகளுக்காக உண்டாக்கப்பட்டது அது. அருகிலேயே ஒரு சுமைதாங்கி இருக்கிறது. அங்கு சுமையை இறக்கி வைத்துவிட்டு, மோர் அருந்திவிட்டு ஓய்வெடுக்கலாம். அதுதான் நோக்கமாக இருந்தது.

அந்த சாலையின் ஓரத்தில் வீட்டின் வாசலில் ஒரு பெண்ணும் மூன்று நான்கு குழந்தைகளும் நின்று கொண்டிருக்கிறார்கள். அங்கேயிருந்து முன்பு ஒரு மாணவி வந்து கொண்டிருப்பாள். அவள் "பி" பிரிவில் படித்துக் கொண்டிருந்தாள். அடுத்த வருடம் "ஏ" பிரிவிற்கு வந்துவிட்டாள். அவளுடைய பெயர் என்ன... என்ன...? ஞாபகத்தில் வரவில்லை... அந்தப் பெண் மிகவும் மெலிந்து போய் இருக்கிறாள். கன்னங்கள் ஒட்டிப்போய்... கண்களில் குழி விழுந்திருக்கிறது... தலைமுடி மிகவும் குறைவாக இருக்கிறது. அந்தப் பெண் சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பு நன்கு தெரிந்த ஒன்றாகத் தோன்றியது.

"யசோதரா!''

அந்தப் பெண் அழைக்கிறாள். திடீரென்று அப்போது "ஏ" பிரிவில் படித்த மாணவியின் பெயர் ஞாபகத்தில் வந்தது. கலாவதி!

சற்று புன்னகைக்க முடியுமா? இப்படி வாழ்க்கையில் எத்தனை எத்தனை தடவைகள் புன்னகைக்க வேண்டும்! வெளிப்படையாக சிரிக்க வேண்டும்!


ஒரு சாதாரண பெண்ணுக்கு நிறைய குசல பிரச்சினைகள் கேட்பதற்கு இருக்கும். பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும்போது மனைவியைப் பற்றித்தான் ஒருத்தி கேட்பாள். மனைவி எங்கேயிருந்து வந்தவள், மனைவியின் தந்தை யார்... - இப்படிப் போய்க் கொண்டிருக்கும் அந்தக் கேள்விகள். எந்த அளவிற்கு அசௌகரியமான கேள்விகளாக அவை இருக்கின்றன! மனைவி எங்கேயிருந்து வந்தாள்? பஞ்சாபியா, கேரளக்காரியா? தந்தை யார்? என்ன வேலை? ஒரே வார்த்தையில் அந்தக் கேள்விகளுக்கு பதில் கூறிவிட முடியாது. விளக்கிக் கூறினால்தான் புரிந்து கொள்ள முடியும். அது எவ்வளவு கஷ்டமானது!

ஒரு அவமதிப்பு, மரியாதை இல்லாமை உண்டானது. அவனைப் பார்த்து குசலம் விசாரித்தல்கள் அசெகளரியமாக இருந்ததால், அப்படி நடந்திருக்கலாம். கலாவதியைப் பற்றிய விஷயம் எதையும் அவன் கேட்கவில்லை. தப்பித்தால் போதும் என்று இருந்தது. எத்தனை குழந்தைகள் என்றுகூட கேட்கவில்லை. அவள் மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்டாள். அந்த அளவிற்கு நல்ல ஒரு வாழ்க்கை இல்லை. எனினும் திருப்திதான் என்று தோன்றுகிறது.

திருப்தி என்றால் என்ன? அவள் பட்டினி கிடக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். பட்டினி இல்லாமல் இருப்பதற்காக புல்ஸ் அய்யும் ரொட்டியும், வெண்ணெய்யும் ஜாமும், கான் ஃளெக்ஸும் பாலும், சாப்பிடவில்லை- கஞ்சியும் துவையலும். கணவன் பாடுபட்டு உழைக்கிறான் என்பது உறுதியானால், அது கிடைக்கவில்லையென்றாலும் திருப்தி உண்டாகும். என்ன காரணத்தாலோ அது சிலருக்கு மட்டுமே இருக்கலாம்.

சாயங்கால சந்தையில் ஆட்கள் கூடியிருக்கிறார்கள். அங்கு சில கட்டிடங்கள் உண்டாகி இருக்கின்றன. இன்று சந்தையில் கூடும் ஆட்களுக்கு மாற்றம் இருக்கிறது. எனினும், அந்த இடம் ஒரு அழுக்கடைந்த இடம்தான்.

சிறிது தூரம் நடப்பது ஒரு சுகமான விஷயம்தான். அந்த நாளிலிருந்து அதை அவன் தெரிந்து கொண்டான். மாலையில் பேருந்திற்காகக் காத்து நின்றிருக்காமல் வீடு வரை நடந்தால் எப்படி இருக்கும்? உடல் பயிற்சி மனதிற்கும் உற்சாகம் அளிக்கும்.

இளம் வயதில் அப்படிப் படித்திருக்கிறான். உடல் பயிற்சி தேவை என்று.

அந்த ஒரு நடையில் அவன் என்னென்ன காரியங்களைப் பற்றியெல்லாம் சிந்தித்திருக்கிறான்! உடலுக்கும் மனதிற்கும் ஏதோ ஒரு பெரிய மாறுதல் உண்டானது. விஸ்வநாதனின் ஓவியக்கலை ரசனையைப் பற்றிக் கேள்வி கேட்டான். அது ஒரு பெரிய விஷயம் தான். அவனுடைய ஓவியங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன என்று தோன்றியது. சரிதானா? சரிதான் என்று கூறுவது

ஒரு ரசனை. ஒரு தண்ணீர்ப் பந்தலை அவன் வரையட்டும்... கொச்சு தேவகியை வரையட்டும்... ஒப்புக்கொள்ளலாம். அவற்றையெல்லாம் அவன் மறுக்கிறான் என்றால்... ஒருவேளை, ஒரே மாதிரியான ஓவியங்களை வரையக்கூடிய ஒரு மனிதன்தான் அவன் என்று கூறுவான். எனினும், அவனுடைய ஆரம்ப கால ஓவியங்கள் நன்றாக இருந்தனவே!

திருப்தியைப் பற்றி ஒரு புதிய விளக்கம் கிடைத்தது. பேஷ்! அது கேரள கிராமத்தின் விளக்கம். நகரத்தின் அல்ல... பஞ்சாபின் அல்ல... இமாச்சலப் பிரதேசத்தின் அல்ல.

9

ரையில் இருந்த எல்லா வீடுகளின் படிகளிலும் நடந்தான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அங்கெல்லாம் அவன் நடக்கிறான்! மிகவும் இளம் வயதில் அந்த ஒற்றையடிப் பாதைகளிலும் வயலின் வரப்புகளிலும் அவன் நடந்து திரிந்திருக்கிறான். அந்தக் கரையின் வாழ்க்கையைவிட்டு அவன் விலகி வாழ்ந்து கொண்டிருந்தான்.

அவ்வாறு கழிந்த ஞாயிற்றுக்கிழமை கடந்து சென்றது. அது சந்தோஷமான நாளாக இருந்தது. அடுத்த வாரம் எல்லா வீடுகளுக்கும் செல்ல வேண்டும். மனிதர்களிடம் நெருங்க வேண்டும். இப்படி ஒரு மனிதன் இருப்பதை ஊர்க்காரர்கள் மறந்து விட்டார்கள். அவர்களுடன் ஒரு தொடர்பும் இல்லை. அப்படி இல்லை. மறந்திருக்க மாட்டார்கள். குமுதம் அங்கு வசித்த நாட்களில் ஒரு பேச்சு விஷயமாக இருந்திருக்க வேண்டும்.

அந்த வீடுகளுக்குச் சென்றால் ஒரு தொல்லை உண்டாகும். பதில் கூற இயலாத ஓராயிரம் கேள்விகள் உண்டாகும். அனைத்தும் குமுதத்தைப் பற்றியதாக இருக்கும். ஒரு கேள்விக்குக்கூட பதில் கூற முடியாது. இந்தப் பச்சிலைக் காடுகளுக்குக் கீழே வாழ்ந்து கொண்டிருக்கும்

மனிதர்களுக்கு வித்தியாசமெல்லாம் கிடையாது. அது எந்த அளவிற்கு ஒரு கஷ்டமான விஷயம்! இதைத்தான் கேட்க வேண்டும் என்று அல்ல. எதையும் கேட்கலாம். எல்லா செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு மூச்சை அடைக்கக் கூடிய விஷயம். அவர்கள் எதற்காக இவற்றையெல்லாம் தெரிந்து கொள்கிறார்கள்? பழகும்போது மரியாதையுடன் பழக வேண்டும் என்பது அவர்களிடம் இல்லை. அது எப்படி உண்டானது?

அந்த வீடுகளில் பலவும் நன்றாக இருக்கின்றன. சில வீடுகள் சிதிலமடைந்து போயிருக்கின்றன. எல்லா இடங்களிலும் மனிதர்கள் மிகவும் கடுமையாக உழைக்கிறார்கள். உழைக்கின்றவர்களும் நன்றாக ஆகாமல் போவதற்குக் காரணம் என்ன? ஏதாவது பிரச்சினை வாழ்க்கையில் எங்கேயாவது உண்டாகியிருக்கும். முகத்தலைக்காரர்கள் பழைய வீட்டுடன் சேர்ந்து மேலும் ஒரு நல்ல கட்டிடத்தையும் கட்டி இருக்கிறார்கள். சுவர் கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வசதி... அதைத் தாண்டியிருக்கும் நேந்திர வாழைத் தோட்டத்தைப் பார்த்தால் ஆர்வம் தோன்றும். எந்த அளவிற்குப் பெரிய குலைகள் விழுந்திருக்கின்றன! யானையின் கொம்பு அளவிற்கு காய்கள் பெரிதாக இருந்தன. வாழையால் தாங்க முடியவில்லை. நல்ல தாங்கியை வைத்துக் கட்டியிருக்கிறார்கள். அப்படி ஒரு தோட்டத்தை உண்டாக்கி லாபம் சம்பாதிப்பது ஒரு ஆனந்தமான விஷயம்தான்... பஞ்சாபில் இருக்கும் தோட்டங்களைப் பற்றி அவன் கூறக் கேட்டிருக்கிறான். இமாச்சலப் பிரதேசத்தில் எங்கோ இருக்கும் ஒரு ஆப்பிள் தோட்டத்தைப் பற்றி ஒருமுறை விஸ்வநாதன் சொன்னான்... ஓ... விஸ்வநாதன் கூறுகிறான்... இந்த வாழைத் தோட்டத்தைப் பார்க்க முடியவில்லை... விளக்கத்தைக் கேட்டான். அந்த ஆப்பிள் தோட்டத்தைக் கண்களுக்கு முன்னால் அவன் பார்த்தான். அங்கு காதல் வயப்பட்ட ஜோடிகள் சாயங்கால வேளையில் சொர்க்கப் பிறவிகளைப்போல நடந்து செல்வதையும் அவன் மனதில் நினைத்துப் பார்த்தான். அது நிரந்தரமாக இதயப் பலகையில் பதிய வைக்கப்பட்டுவிட்டது. அதை மறப்பதற்காக கண்களை அடைத்துப் பார்த்தான். பலித்தது. மூடுபனியைப் போல அந்தக் காட்சி மங்கலானது. பௌலோஸின் நேந்திர வாழைத் தோட்டம் தெளிவாகத் தெரிந்தது.

அது ஒரு வெற்றி பெற்ற காரியம். எதிர்பக்கத்தில் இருந்த கண்ணாடியில் பிரகாசமான ஒரு முகம் தெரிவதைப் பார்த்தான். இந்த அளவிற்குப் பிரகாசமாக அந்த முகத்தை முன்பு எந்தச் சமயத்திலும் அவன் பார்த்ததில்லை. ஏதோ ஒரு காரியத்தை அடைந்துவிட்டதைப் போல தோன்றுகிறது.


எதை அடைந்தான்? பௌலோஸின் நேந்திர வாழைத் தோட்டத்தை நினைத்துக் கொண்டு இருக்க முடிவதா?

அப்படி ஒரு நேந்திரவாழைத் தோப்பை உண்டாக்கினால் என்ன? அவனே மண்வெட்டியை எடுத்து வெட்டினால் மட்டுமே அப்படியொரு வாழைத் தோப்பை உண்டாக்க முடியும்... ஏரியின் கரையில் மிகவும் அழகான ஒரு சிறிய வீடு இருக்கிறது. அங்கு யார் வசிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அப்படி ஒரு வீட்டை உண்டாக்கினால் நல்ல விஷயமாக இருக்கும். இப்போதைய காலத்தில் கட்டிடம் கட்டுவது என்பது மிகவும் பணச் செலவு வரக்கூடிய ஒரு காரியமாக இருக்கிறது. ஏராளமான தொல்லைகளும் இருக்கின்றன. எனினும், இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில்கூட நிறைய புதிய வீடுகள் உண்டாகியிருக்கின்றன... அப்படியென்றால் மரத்தை மட்டுமே வைத்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் இந்தக் கரையில் எவ்வளவு இருக்கும்? எந்தவொரு மாறுபாடும் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருப்பது, சர்வாதி வீடு மட்டும்தான்... பிறகு. மரத்தடி வீடு இருக்கிறது. அந்த வீடு தகர்ந்துவிட்டது. பழைய காலத்தில் பலமாகக் கட்டி முடித்ததால் நிலத்தில் சாயவில்லை என்பதே உண்மை.

இந்த மாற்றங்களை இவ்வளவு நாட்களாகப் பார்க்க முடியவில்லை. எதைப் பார்த்தான்? எதையும் பார்க்கவில்லை. இளம் வயதில் இவ்வளவு பெரிய வாழைத் தோப்பும் பாக்குத் தோட்டமும் இந்தக் கரையில் இருந்ததில்லை.

இந்த மாறுதலுக்கேற்ப மக்களும் வளர்ந்திருக்கிறார்களா? வளர்ந்திருக்க வேண்டும்... இங்கும் புடவை அணியக்கூடிய பெண்கள் இருக்கிறார்கள். பேன்ட் அணிந்து செல்பவர்களும் அபூர்வமாக இருக்கிறார்கள். இங்கு தேவைப்படும் அரிசியை இங்கே கடுமையாக உழைத்து உண்டாக்குகிறார்கள். இங்கிருக்கும் வீடுகளில் சப்பாத்தி உண்டாக்குகிறார்களா? சப்பாத்தி என்ற ஒன்றை முன்பு கேள்விப்பட்டதுகூட இல்லை. இன்றிருக்கும் நிலைமை மாற்றத்தால், அரிசி இல்லாததால், அந்த மரத்தைப் போன்ற பொருளைத் தயார் பண்ணிக் கொண்டிருக்கலாம். அப்படி நெல் இல்லாதவர்கள் இருக்கிறார்களா? ஒவ்வொரு வீட்டையும் நினைவுபடுத்திப் பார்த்தான். அவர்களுக்கெல்லாம் நெல் இருந்தது. இப்போதைய விஷயம் தெரியாது.

ஒரு செழிப்பான கிராமமாக இருந்தது. பழைய கால நிலையில் அப்போதைய நல்ல வீடுகள் இருந்தன. கஷ்டப்பட்டு உழைத்து நல்ல சந்தோஷத்துடன் வாழ்ந்தார்கள். இப்போதைய நிலையைவிட சிறந்ததாக இருந்தது. குமுதம் வந்தபோது அவளுக்கு சப்பாத்தி வேண்டும். அதை தயார் பண்ணுவதற்கு அக்கா எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டாள்! ஆரம்பத்தில் அக்கா உண்டாக்கிய சப்பாத்தியை அவள் சாப்பிடவில்லை. பிறகு அக்கா கற்றுக் கொண்டாள்.

இந்தக் கரையில் எப்படியெல்லாம் பொழுதுபோக்குகள் நடைபெற்றிருக்கின்றன? கரோட் பெரியவரை நினைக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை. கடந்து சென்ற தலைமுறைக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தார். பார்த்த

காலத்தில் மிகவும் வயதானவராக அவர் இருந்தார். கூறிக் கேள்விப்பட்ட கதைதான். அவர் ஒரு நல்ல குடும்ப மனிதராக இருந்தார். அதாவது- உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். இந்தக் கரையில் இருந்த நாயர்களில் மிகவும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். அப்படித்தான் அவனுடைய தாயும் அக்காவும் கூறியிருக்கிறார்கள். உயர்ந்த ஜாதிக்காரர்! அப்படியென்ன உயர்ந்த நிலை? தொட்டு சாப்பிட மாட்டாராம்! எப்படி அது நடந்து வந்தது? இந்தக் கரையில் ஒரு குறிப்பிடத்தக்க தேவையை அந்த மனிதர் நிறைவேற்றி வந்திருக்கிறார். பெரிய குடும்பங்களில் கன்னியாக இருக்கும்போதே தப்பு செய்துவிடுகிற பெண்களைத் திருமணம் செய்து, அவர் குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றிவிடுவார்... எப்படி என்கிறீர்களா? ஒரு வீட்டில் ஒரு கன்னிப் பெண் கர்ப்பம் தரித்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்ற வேண்டாமா? அந்தக் குழந்தைக்கு ஒரு தந்தை வேண்டாமா? பெரியவரைப் போய் பார்ப்பார்கள். பெரியவர் தயார்தான். அன்று புடவை கொடுப்பதுதான் சடங்கு. அது மட்டும் தான். அந்தப் புடவையை வாங்கிக் கொடுத்தால் போதும். பெரியவர் முகூர்த்தத்திற்கு வந்து விடுவார். குத்து விளக்கேற்றி முன்னால் நின்று கொண்டு புடவையை பெண்ணுக்குக் கொடுப்பார். பிறகு அந்த வீட்டில் ஒன்றோ இரண்டோ நாள் அவளுடன் சேர்ந்து இரவு நேரத்தில் தூங்கினார் என்று வரும். அவ்வளவுதான். அவருடைய வாதம் இதுதான்:

"ஒரு குழந்தைக்கும் அப்பா என்று அழைப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கக் கூடாது. குடும்பத்தின் மானமும் போகக் கூடாது!''

அவர் ஏராளமான திருமணங்களைச் செய்திருக்கிறார். மூன்று நான்கு வருடங்கள் ஆனதும், அப்படி ஒரு சம்பவம் அந்த கிராமத்தில் உண்டாகும். ஒரே வருடத்தில் இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்தன என்றும் வரும்... இப்போது அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதில்லையா? கேள்விப்படவில்லை... என்றும் கூறுவதற்கு இல்லை. ஏதோ பெண்ணைப் பற்றி யாரோ குற்றப்பத்திரிகை அனுப்பினார்கள் என்றோ போலீஸ்காரர்கள் வந்தார்கள் என்றோ அப்படி நடக்கும்போது கேட்கலாம்... கர்ப்பத்தடைக் கருவிகள் இந்த ஊரில் அந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவா? யாருக்குத் தெரியும்? எது எப்படியோ, கரோட் பெரியவர் ஊரில் ஒரு தேவைப்படும் மனிதராக இருந்தார். அன்றைய சமூகச் சூழ்நிலையில்... அப்படிப் பிறந்த ஏதாவது குழந்தை பெரியவரை "அப்பா" என்று அழைத்திருக்கிறதா? அந்தக் குழந்தைகளை மகன் என்றோ மகள் என்றோ பெரியவர் அழைத்திருப்பாரா? அப்படி பிள்ளைகளாக ஆனவர்கள் யார் யார் என்று பெரியவருக்கு நினைவில் இருந்திருக்குமா? என்னவோ? தெரியாது. ஆதாரங்களில் அந்த விஷயங்கள் இருக்கும்... இறுதியில் வீடுதோறும் நடந்து சாப்பிட்டுப் பெரியவர் இறந்திருக்கிறார். அது ஞாபகத்தில் இருக்கிறது. ஒருவகையில் மரியாதையுடன் அவருக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள்...

பிறகு... ஒரு ராமக்கைமள் இருந்தார். எப்போதும் பிரச்சினைதான். ஒரு காசு கையில் இல்லாமல் எந்தப் பொருளையும் எழுதி வாங்கிவிடுவார். கொஞ்சம் அதிகமாகவே பூமி அந்த மனிதரின் கைவசம் அந்தக் காலத்தில் இருந்தது. அது எப்படி முடிந்தது? அது ஒரு கலை தான்... நல்ல இளமையுடன் இருந்த காலத்தில் வேட்டியின் இரண்டு நுனிகளையும் எடுத்து மேலே சொருகி, ஒரு பெரிய கட்டைக் கையிடுக்கில் வைத்துக் கொண்டு, ஒரு துணியால் ஆன குடையைப் பிடித்தவாறு, ஒற்றையடிப் பாதையின் வழியாக நகரத்திற்கு தினமும் காலையில் கைமள் போவதை அவன் பார்த்திருக்கிறான். காலையிலும் மாலையிலும் இந்தப் பாதை முழுவதும் நடந்து திரிவார்... அந்த ஊரில் முதல் தடவையாக ஒரு துணியால் ஆன குடையைக் கொண்டு வந்தவர் கைமள்தான். அதற்கு முன்னால் ஓலையால் ஆன குடைதான் இருந்தது. ஆண்டில் ஒவ்வொரு ஒலையால் ஆன குடையை ஒவ்வொரு வீட்டில் உள்ள பெரியவருக்குக் கொடுக்க வேண்டும் என்பது ஊரில் இருந்த ஜோதிடரின் வேலை.


அந்த ஜோதிடரின் குடும்பம் இப்போது ஊரில் இருக்கிறதா? என்னவோ? அதை விசாரித்துப் பார்த்ததில்லை. அங்கும் பிள்ளைகள் படித்து வேலைக்குப் போயிருப்பார்கள். வைத்தியமும் ஜோதிடமும் குடை உண்டாக்கலும் வைத்துக் கொண்டு நடப்பதற்கும் ஆள் இல்லாமல் போய்விட்டது. மெடிக்கல் ஸ்டோர்களும் துணியால் ஆன குடைகளும் வந்தவுடன், ஜோதிடருக்குப் பிழைப்பில் மண் விழுந்துவிட்டது... துணிக்குடையை ஊருக்குக் கொண்டு வந்த கைமள், ஒரு நாகரீகத்தையே கொண்டு வந்திருக்கிறார். பரவாயில்லை... பௌலோஸின் தோப்பைத் தாண்டியிருக்கும் மலைச்சரிவும் நிலமும் இப்போதும் கைமளின் பிள்ளைகளுக்குச் சொந்தமானவையே. ஒரு வாழ்வு காலம் முழுவதும் பிரச்சினைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தது வீண் போகவில்லை. இன்று அவர்கள் பிரச்சினைகளை உண்டாக்குகிறார்களா? என்னவோ? அந்தப் பிரச்சினைகள் முழுமையாக முடிந்திருக்க வாய்ப்பில்லை. அதை சற்று விசாரிக்க வேண்டும்.

கொச்சுமிச்சாரை ஞாபகத்தில் வருகிறது. ஊரில் புரட்சிவாதி. மிகவும் வயதான பிறகுதான் அவரை அவன் பார்த்தான். அவரைப் பற்றிய கதைகளை அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அவ்வளவுதான். மிகவும் வயதான காலத்தில் ஒரு துண்டையோ பழைய துணியையோ தலையில் கட்டிக் கொண்டு நடப்பார். ஊரில் உள்ள நாயர்களில் மிகவும் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவராக அவர் இருந்தார். அந்த வீட்டைச் சேர்ந்தவர்களை தொட்டு நீர் குடிக்க யாரும் விடமாட்டார்களாம். அந்த வீட்டில் யாராவது இறந்தால் ஊரில் இருப்பவர்கள் எல்லாரும் செல்வார்கள். ஆனால், தூர திசையிலிருந்து தெரிந்தவர்களோ உறவினர்களோ வந்துதான் பிணத்தைக் குளிப்பாட்டவோ, சிதை தயார் பண்ணவோ வேண்டும். அந்த வீட்டில் ஊரில் உள்ள யாரும் அதைச் செய்ய மாட்டார்கள். கொச்சுமிச்சார், தலையில் அப்படிக் கட்டு போட்டிருப்பார். யார் எதிரில் வந்தாலும், தலையிலிருந்து அந்தக் கட்டை அவிழ்ப்பதில்லை. சற்று நெளிந்து நடப்பார். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ வேண்டிய சூழ்நிலை அந்தக் குடும்பத்திற்கு இருந்திருக்கிறது. அதை வைத்து அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சர்வாதி வீட்டின் பெரியவரை... ஏன் மனயில் நம்பூதிரி ஆசானைப் பார்த்தால்கூட அந்தத் தலைக்கட்டை அவிழ்ப்பதில்லை. நம்பூதிரி ஆசானை நம்பூதிரி என்றுதான் அழைப்பார்... அந்த அளவிற்கு முதுகெலும்பு உள்ள ஒரு மனிதர்... ஆனால், அந்தக் காலத்தில் அப்படி நடந்து கொண்டதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு அடிவீதம் கிடைத்துக் கொண்டிருக்கும். அந்தக் குடும்பத்திற்குள் புகுந்து அக்கிரமங்களும் நடந்திருக்கின்றன. எனினும், கொச்சுமிச்சார் தலைக்கட்டை அவிழ்க்கவேயில்லை.

அந்த கொச்சுமிச்சாரின் பேரன் இன்று ஊரிலேயே வசதி படைத்த குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறான்.

இப்படி ஏராளமான ஆட்களை நினைக்க வேண்டியதிருக்கிறது. கோப்பன் நாயர் - அவரை நினைத்தபோது சிரிப்பு வருகிறது. கோப்பன் நாயர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

10

நிலம் முழுவதையும் கிளறச் செய்தான். அந்த மண் அசைந்து எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன! தென்னை மரங்கள் மிகவும் பலவீனமாகி அரைப்பதற்கு உள்ள தேங்காய்கூட கிடைக்காத சூழ்நிலை... வேலைக்கான கூலி மிகவும் அதிகம்... ஆனால், இவ்வளவு பெரிய கூலி கிடைத்தும் செம்பனும் சடையனும் ஏன் நல்ல நிலைக்கு வரவில்லை? நல்ல நிலைக்கு வரமாட்டார்கள் என்று கூற முடியுமா? செம்பனின் மகன் இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். சடையனின் நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை. அவனுக்கு குழந்தைகள் அதிகம். பொறுப்பு அதிகமாகவும் ஆகியிருக்கிறது.

இருநூறு நேந்திர வாழை வைத்தான். அதற்கும் மேலே வைக்கலாம். ஆனால், அதிகமானால் கஷ்டம் என்று எல்லாரும் கூறுகிறார்கள். இருநூறு வாழை சரியாக வந்தால் போதும். அந்த அளவு எண்ணிக்கைக்கு கடுமையாக உழைக்க வேண்டும். கொஞ்சம் மரவள்ளிக்கிழங்கு கொம்பையும் நட்டு வைத்தான். இந்த ஊரில் மிளகு ஏன் நல்ல முறையில் உண்டாகாமல் இருக்கிறது? சற்று சோதனை பண்ணிப் பார்ப்போம் என்று முடிவெடுத்தான். கிழங்கு, சேனை, சேம்பு ஆகியவற்றை அவசியம் என்பதால் அக்காவும் கொச்சு தேவகியும்கூட நட்டார்கள். இந்த வருடம் வீட்டிற்குத் தேவையானவை போக மீதமிருப்பதை விற்பதற்காகவும் நட்டார்கள்.

அக்கா இப்போது மிகவும் சந்தோஷத்துடன் இருந்தாள். ஒரு கோபமும் இல்லை. மோகனன் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் வருவான். கடந்த ஒருநாள் வந்தபோது, கத்தரிக்காய், வெண்டை ஆகியவற்றையும் இனிமேல் அக்கா விவசாயம் செய்ய வேண்டும் என்று உடனடியாக ஏற்பாடு செய்தான். அக்கா ஒப்புக் கொண்டாள். அதற்கான வித்து வகைகளை அவன் கொடுத்தனுப்பினான்.

நிலத்தில் இறங்கி நடக்கலாம் என்று வந்தது எவ்வளவு நிம்மதி அளிக்கக்கூடிய ஒன்று! ஒவ்வொரு வாழையையும் பார்க்க வேண்டும். இளம் வயதில் சில பிரச்சினைகள் வரலாம். அது எதையும் பார்க்கவில்லையென்றாலும், கூம்பி வரும் வாழையின் வனப்பைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும். இப்போது சற்று நேரம் கடந்த பிறகுதான் கடையைப் போய் அடைய முடியும். வழக்கமான வண்டியைப் பிடிக்க முடியாது.

சென்ற மாத சம்பளத்திலும் அதிகமாக வாங்கியாகிவிட்டது. இன்னும் சில மாதங்களுக்கு அதிகமாக வாங்கியே ஆக வேண்டும். மோகனனுக்கு அதில் கருத்து வேறுபாடு இல்லை என்று தோன்றுகிறது... அல்லது எப்போதாவது மோகனனுக்கு கருத்து வேறுபாடு இருந்திருக்கிறதா? நான்காயிரத்திற்கும் மேலே அதிகப் பற்றாக இருக்கிறது என்று ஒருநாள் கூறினான். அவ்வளவுதான். அது கருத்து வேறுபாடு ஆகுமா? மோகனனின் கணக்கைப் பார்த்து, "மோகனன், இந்த அளவிற்கு அதிகப்பற்று இருக்கிறது" என்று சொன்னால் அதை அவன் ஒப்புக் கொள்வான். அப்படி முன்பு அவனை கட்டுப்படுத்தவில்லையா? கட்டுப்படுத்தி இருக்கிறான்.

இருநூறு வாழைக்கு எவ்வளவு குறைந்தாலும் செலவு கழித்து ஆயிரம் ரூபாய் மீதம் கிடைக்கலாம். அதற்கும் அதிகமாகக் கிடைக்கவும் வழியுண்டு. நல்ல ஒரு காய்க்கு முப்பது, முப்பத்தைந்து பைசா விலை கிடைக்கும்... அப்படி ஒரு கணக்கு கூட்டல் பண்ணிப் பார்ப்பதில் சிரிப்பு வருகிறது. என்ன இருந்தாலும் ஒன்று நிச்சயம். நஷ்டம் வராது. வாழ்க்கையில் இன்றுவரை கணக்கு போட்டுப் பார்த்ததில்லை. இப்போது, வாழைக்கன்று கூம்பி நிற்க ஆரம்பித்தவுடன் கணக்குக் கூட்டல் ஆரம்பமாகிறது. இது எப்படி நடந்தது? காலையில் வீட்டைவிட்டு வெளியேறும்போது இருநூறு ரூபாய் வேண்டும் என்று கணக்கு வருகிறது. சாயங்காலம் அந்தத் தொகையை வைத்துக் கொண்டுதான் வர முடிகிறது.

நிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது, சலவை செய்பவன் அருகில் வந்தான். அவன் ஒரு கவரை கையில் தந்தான்! ஓ! என்ன பயனுள்ள காரியம்! நேற்று சலவை செய்வதற்காகக் கொடுத்த சட்டையின் பாக்கெட்டில் இருந்த கவர் அது. அந்தச் சட்டைக்குப் பிறகு இரண்டு சட்டைகள் மாறிவிட்டன.


எனினும், அந்த கவரை எடுத்து பத்திரமாக வைக்க முடியவில்லை. அது எத்தனை நாட்களாக மறந்து போய்க்கிடக்கிறது! சட்டை, பேன்ட் ஆகியவற்றின் கணக்குகளை எழுதிக் கொடுத்தது வேறு யாருமல்ல. அந்த கவரை சலவை செய்பவன் படித்திருப்பானோ என்னவோ? கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது. எனினும், சலவை செய்பவனின் வீட்டில் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள் இருக்கலாம். படித்தால் குறைச்சல்தான்.

"உன் வீட்டில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?''

"பத்தாம் வகுப்பில் படிப்பவன் இருக்கிறான்.''

பத்தாம் வகுப்பில் படிப்பவன் வாசித்தால் எதுவும் புரியாது. இப்போதைய பத்தாம் வகுப்புதானே? அச்சடித்த புத்தகங்களைக் கூட ஒழுங்காக வாசிக்க முடியாது. வாசித்தாலும் புரியாது... குமுதத்தின் ஆங்கிலம் இங்குள்ள பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றவருக்கும்கூட புரியக்கூடியது இல்லை. ஆனால், அவளுடைய கையெழுத்து மிகவும் தெளிவாக இருக்கும். சிறுவயதில் நன்கு கவனம் செலுத்தி எழுத்தைப் பார்த்து எழுத வைத்துக் கற்றுத் தந்திருக்கிறார்கள்... எனினும், வாசித்து ஏதாவது புரிந்துகொண்டிருந்தால்? அவமானமான விஷயம். எல்லா ரகசியங்களையும் அந்த கவரில் இருந்து அறிவு உள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

"இதற்குள் இருப்பதை எடுத்து பத்தாம் வகுப்பில் படிக்கும் சிறுவனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னாயா?''

"இல்லை... அய்யோ.. அப்படிச் செய்யமாட்டேன். சில நேரங்களில் சிலரின் சட்டை, ட்ரவுசர் பாக்கெட்டுகளில் இப்படி தாள் இருக்கும். நாங்கள் அதைத் திறந்து பார்ப்பதில்லை. சில வேளைகளில் ரூபாய் நோட்டே இருக்கும். அது தொழிலுக்கு துரோகம்!''

சலவை செய்பவன் உண்மையைத்தான் சொன்னான். அந்த கவருக்குள் இருந்து தாள்களை வெளியே எடுத்தபோது, அதை யாரும் திறந்து வாசிக்கவில்லை என்று தோன்றியது. அவற்றில் ஒன்று குமுதத்தின் கடிதம். இன்னொன்று அடுத்த மாதத்திற்கான பில். கடிதம் கிடைத்த நாளன்று பில்லை கவனம் செலுத்திப் பார்க்கவில்லை. அதில் குமுதத்தின் ஒரு மாதத்திற்கான மெஸ் கட்டணம் மட்டுமே இருந்தது. அதிகமாக பற்று இல்லை. அப்படியென்றால் கடந்து சென்றவை ஆறு ஞாயிற்றுக்கிழமைகளா ஏழு ஞாயிற்றுக்கிழமைகளா? ஒரு ஞாயிற்றுக்கிழமை வரமாட்டேன் என்று சொன்னேன். அடுத்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருக்க வேண்டும். அன்று போகவில்லை. அடுத்த ஞாயிற்றுக்கிழமைதான் ஊர் முழுவதும் நடந்து பார்த்ததா? வாழை நட்டது எந்த ஞாயிற்றுக்கிழமை? மங்கலத்து குடும்பத்தின் திருமணத்திற்குச் சென்றது என்றைக்கு? இந்தக் கடிதத்திற்குப் பிறகு எத்தனை நாட்கள் கடந்து சென்றுவிட்டன! எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. எத்தனை ஞாயிற்றுக்கிழமை வேண்டுமானாலும் ஆகட்டும். கடிதத்தை எப்படியும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். ஒரு ஆதாரம். பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்க வேண்டிய பொருள்.

கடிதத்தை வைத்துவிட்டு வெளியே வந்தபோது கொச்சு தேவகி குளியலும், கோவில் தரிசனமும் முடிந்து ஈர ஆடையை அணிந்து திரும்பி வந்து கொண்டிருந்தாள். இன்று அவள் நெற்றியில் சந்தனத்தை செங்குத்தாக வைத்திருந்தாள். இவ்வளவு அதிகமான தலைமுடி அவளுக்கு இருக்கிறதா? கிட்டத்தட்ட முழங்கால் வரை இடைவெளி இல்லாமல் வளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவள் மார்பை மறைத்துக் கொண்டிருந்த துண்டு நேற்று வாங்கிக் கொடுத்தது. அவளுக்கு மட்டுமே துணிக்கு முப்பது ரூபாய்கள் ஆயின. அக்காவிற்கும் அவ்வளவு ஆனது. இருவருக்கும் ஒரே மாதிரி வாங்கினான்... பரவாயில்லை. அது அப்படி நடந்தது. அவ்வளவுதான். மனப்பூர்வமாக திட்டமிட்டு நடந்ததல்ல. கொச்சு தேவகிக்கு இனியும்

ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும்... புடவையா? என்றைக்காவது கொச்சு தேவகி புடவை அணிந்து பார்த்திருக்கிறோமா? நினைத்துப் பார்த்தபோது, அப்படி ஒரு காட்சியை ஞாபகப்படுத்திப் பார்க்கவே முடியவில்லை. இல்லை. அப்படி நடந்ததில்லை. அவளுக்குப் புடவை அணிய விருப்பம் இருக்காதா? இருக்கும். இல்லாமல் இருக்காது. அவளுடைய வயது அதுதானே? அக்காவைப் பொறுத்தவரையில் அந்த வயது கடந்து விட்டது... கொச்சு தேவகிக்கு அதைப் போல எப்படிப்பட்ட விருப்பங்கள் எல்லாம் இருக்கும்?

தங்க நகைகளை அணிய வேண்டும் என்ற ஆசை இருக்குமல்லவா? ஒரு வகையில் பார்க்கப் போனால் இந்தத் தங்க நகைகள் இருக்க வேண்டியவைதான். அது ஒரு நல்ல சேமிப்பு. திடீரென்று பணம் வேண்டுமென்றால் அடமானம் வைக்கலாம். மோகனன் ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய்களுக்காக ஓடித் திரிந்துவிட்டு, எல்லா வழிகளையும் பார்த்துவிட்டு, இறுதியில் அவனுடைய வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்து அடமானம் வைத்தான். வங்கியின் சட்டதிட்டப்படி அவ்வளவு தொகை கிடைக்காது. ஆனால் மேனேஜர் தலையிட்டு அந்தத் தொகை கிடைக்கும்படி செய்தார்... கொச்சு தேவகிக்கு ஒரு நான்கைந்து பவுன் இருக்கும்படி நகைகள் வாங்கிக் கொடுத்தால் என்ன? தேவை ஏற்படும்போது அடமானம் வைப்பதற்காக அவள் அதைத் தரவும் செய்வாள். அவளுக்கு நகைகள் வாங்கிக் கொடுப்பதை அக்கா விரும்புவாளா? விரும்பாமல் இருக்க வழியில்லை. அவள்மீது பாசம் இருக்கிறது. அவர்கள் ஒன்று சேர்ந்திருப்பவர்கள். என்ன இருந்தாலும் அக்காவிடம் கேட்க வேண்டும். ஆனால், அதை எப்படிக் கேட்பது?

கொச்சு தேவகிக்கு தங்கம் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவளுடைய உடலில் நகைகள் கிடந்து அழாது. புடவை அவளுக்குப் பொருத்தமாக இருக்காது. ஒன்றரையும் முண்டும் ஜரிகை மேல்துண்டும் நன்றாக இருக்கும். அவற்றை அணிந்து அவள் நின்றால் - அதுதான் கேரள அழகு!

இதன் அர்த்தம் என்ன? கவரில் முகவரி விஸ்வநாதனின் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. எந்தவொரு சந்தேகமும் இல்லை. அஞ்சலக முத்திரையும் அவனுடைய ஊரில் உள்ளதுதான். உள்ளே ஒரு வெள்ளைத்தாள் இருந்தது. ஒரு எழுத்துகூட எழுதப்படவில்லை. ஒரு கோடுகூட அதில் இல்லை. மோகனனிடம் காட்டினான். நனைந்தால் மட்டுமே தெரியக்கூடிய ஏதோ ஒரு மை இருக்கிறதே! அதையும் சோதித்துப் பார்த்தார்கள். எதுவும் தெரியவில்லை. இந்த வெள்ளைத்தாளை எதற்காக அனுப்ப வேண்டும்? ஒருவேளை, தவறு நேர்ந்திருக்கலாம். கடிதம் என்று நினைத்து வெள்ளைத் தாளை கவருக்குள் வைத்திருக்க வேண்டும்... இது எதுவும் இல்லையென்றால், விஸ்வநாதன் கலைஞன்தானே? கலைஞர்களுக்கு அவர்களுக்கென்றே இருக்கக்கூடிய சில பைத்தியக்காரத்தனங்கள் இருக்கும். அப்படியொரு பைத்தியக்காரத்தனமாக இருக்குமோ?

மோகனனுக்கு கோபம் உண்டானது.

"அவனுடைய கலை! போக்கிரி வேலைகள் செய்துவிட்டு, அதன் பெயரில் ஓவியம் வரைந்து, கலையில் சோதனை முயற்சி என்று பெயர் வைப்பது... யசோதரா, இது உன்னை விரட்டுவதற்கான வேலை!''

அதற்குப் பிறகும் மோகனனுடைய கோபம் குறையவில்லை. அவன் தொடர்ந்து சொன்னான்:

"எழுதப்படாதவை எல்லாம் முடிவற்றது என்று கூறுவான். அப்படி முடிவற்ற ஒரு கடிதத்தை உனக்கு அனுப்பினேன் என்று விளக்கம் கூறுவான்.


கூறவேண்டிய அனைத்தும் அதில் இருக்கிறது என்று அவன் கூறுவான்!''

போதாது... மோகனனுக்கு போதும் என்று தோன்றவில்லை.

"நீ போய் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன என்று அவள் அவனுக்கு எழுதியிருப்பாள். அதற்கு அவன் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பான். இதே முறையில் திருப்பிக் கொடுக்க உனக்கு தைரியம் இருக்கிறதா?''

பதில் வரவில்லை. மோகனன் விளக்கிச் சொன்னான்: "இப்படி ஒரு வெள்ளைத் தாளை அங்கும் அனுப்பி வைக்க வேண்டும். ஒரு எழுத்து எழுதக்கூடாது!''

மோகனன் தொடர்ந்து சொன்னான்:

"இந்த வெள்ளைத் தாளுக்கு அர்த்தம் என்ன என்று எழுதிக் கேட்பாய் என்று அந்தப் போக்கிரி இப்போது நினைத்துக் கொண்டு இருக்கிறான்!''

11

யலைத் தாண்டி மலையின் சரிவில் நம்பூதிரியின் நிலம் இருக்கிறது. நிலம் அந்த மலையின் சரிவு முழுவதும் இருக்கிறது. நிலத்தில், அந்த மலைச் சரிவில் நூற்றாண்டுகளாக வளர்ந்து நின்றிருக்கும் மரங்கள் இருக்கின்றன. பலாவும் மாமரங்களும்... ஆட்களுக்கு மத்தியில் புகை எழுந்து மேலே வருகிறது. மனைக்கல் நம்பூதிரி ஆசான்மீது நெருப்பு பட்டு, சிதையிலிருந்து உயர்ந்து வரும் புகை அது.

காலையில்தான் நம்பூதிரி ஆசான் இறந்தார். அந்த வீட்டைச் சேர்ந்த முப்பது பறை நிலம் சர்வாதி வீட்டிற்குக் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. அந்தக் காரணத்தால் சர்வாதி வீட்டைச் சேர்ந்தவர்கள் குடியான்மார்கள் என்று வரும். நம்பூதிரி ஆசான் இறந்துவிட்டார். குடியான் என்ற முறையில் கட்டாயம் போயே ஆக வேண்டும். அக்கா வற்புறுத்துகிறாள். குடியானாக இல்லா விட்டாலும்,

கரையில் இருக்கும் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்பதற்காகவாவது கட்டாயம் போய்த்தான் ஆக வேண்டும்.

அந்த நம்பூதிரி ஒரு அப்பிராணி மனிதர். அவருடைய காலத்தில்தான் வீடு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதற்கு அவர்தான் காரணம் என்று கூறுவதற்கில்லை. குத்தகைப் பணமும், வர வேண்டிய பாக்கிகளும் ஒழுங்காக வந்து சேராத காலமாகிவிட்டது. அந்த மலையின் சரிவும், கீழே அகலம் குறைந்து அங்கே தூரத்தில் தெரியும் பல மலைகளுக்கு நடுவில் வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருக்கும் நிலங்களும் அந்த வீட்டிற்கு உரியவைதான். குத்தகைக்கும், தந்த பணத்திற்காகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் நெல்லாகவும் பணமாகவும் விளைச்சலாகவும் வீட்டிற்கு வந்து சேரும். ஒரு காலத்தில் அனைத்தும் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னவோ தொகையைக் கூறுவார்கள்! எவ்வளவு அது? ஓ! ஞாபகத்தில் இல்லை. அல்லது எதற்காக நினைக்க வேண்டும்? கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் இருப்பது ஒரு வகையில் பார்க்கப் போனால் சரிதானா? "விவசாய நிலம் விவசாயிக்கே" - அந்த கோஷம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அந்த சிந்தனைக்கு முன்னால் மரத்தைப் போல நின்றுவிட்டான். மிகவும் பலம் கொண்ட ஒரு உண்மை அது. எந்தவொரு சட்டத்தாலும் அதை ஒதுக்கிவிட முடியாது. நூற்றாண்டுகளாக இந்த விரிந்த பூமியில் உண்டானதில் பெரிய அளவு பங்கு நம்பூதிரியின் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தது. உழவன் கஷ்டப்படவேண்டும். விளைச்சல் நம்பூதிரியின் வீட்டிற்குப் போக வேண்டும். விளைச்சலை அளப்பதற்காக ஒருமுறை மாமாவுடன் அவன் போயிருக்கிறான். அன்று அந்த நெல் நன்றாக இல்லை என்று கூறி மீண்டும் ஒருமுறை எடை போடப்பட்டது. அன்று மாளிகைக்குக் கீழே ஒரு நாற்காலியில் இருந்த நம்பூதிரியா இன்று இறந்துவிட்டார்? அங்கு போய் நீண்ட காலம் ஆகிவிட்டது.

விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய வகையில் ஒரு கதை, அந்த மாளிகையில் இருந்த ஒரு நம்பூதிரியைப் பற்றிக் கூறப்படுவதுண்டு. அது இந்த நம்பூதிரியா? அவரை விட்டால் வேறு நம்பூதிரி அங்கு இல்லை. அந்தக் கதை இவரைப் பற்றித்தான் இருக்க வேண்டும். அவர் இறந்துவிட்டார். இனி கோப்பன் நாயர் என்ன செய்வார்? கோப்பன் நாயர் வாழ்வார். வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? பாரு அம்மா இப்போது மார்பில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருப்பாள். கோப்பன் நாயரை "அப்பா" என்று அழைக்கும் குழந்தைகள் அழுவார்களோ என்னவோ? அதெல்லாம் சற்று விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான். வெறுமனே ஒரு சுவராசியத்திற்காக அல்ல - அதில் சில சமூகப் பிரச்சினைகளும் உள்ளடங்கி இருக்கின்றனவே!

பாரு அம்மா இப்போதும் அந்த மாளிகையில் வேலைக்காரிதானா? அப்படித்தான் இருக்க வேண்டும். வேலைக்காரியாக இல்லாமலிருப்பதற்கு காரணமெதுவும் இல்லை. அவளைத் தன்னுடைய மனைவியாக நம்பூதிரி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறிவிடமுடியாது. பெருக்கி சுத்தம் செய்யும் பெண்ணாக இருக்கும்போதுதானே பாரு அம்மா கர்ப்பிணியாக ஆகியிருக்கிறாள்! அப்போது ஊரில் நிலவிய பேச்சை நினைத்துப் பார்க்கிறான். கோப்பன் நாயருக்கு நம்பூதிரி திருமணத்தைச் செய்து வைத்துவிட்டார். அப்போது கரோட் பெரியவரை ஏன் தேடவில்லை? ஒருவேளை, அப்போது கரோட் பெரியவர் மிகவும் வயதானவராக ஆகியிருக்கலாம். கோப்பன் நாயர் அப்போது இளம் வயதில் இருந்தார். பெரியவரை வேண்டாம் என்று கூறியிருக்கலாம். அந்தக் காலத்தில் நம்பூதிரிக்கு மனைவி இல்லாமல் நாயர் வீட்டில் சம்பந்தமும் இருந்தது. பள்ளிக்கூடத்தில் ஒரு நம்பூதிரியின் நம்பூதிரி மகனும் நாயர் மகனும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்த விஷயம் அவனுக்குத் தெரியும். இந்த நம்பூதிரி பாரு அம்மாவை ஏன் திருமணம் செய்யவில்லை? பாரு அம்மா பெருக்கி சுத்தம் பண்ணும் வேலைக்காரியாக இருந்ததுதான் காரணமாக இருக்க வேண்டும். உயர்ந்த நிலையில் இருக்கும் வீடுகளில்தான் அப்போது நம்பூதிரிகள் திருமணம் செய்வார்கள். அதனால் குடும்பத்திற்குப் பயன் இருந்தது. அந்தக் காரணத்தால்தான் அவர்கள் திருமணம் செய்தார்கள்.

கோப்பன் நாயரை சில நேரங்களில் பார்ப்பான். ஒரு சமயம் அவர் நம்பூதிரியின் குடும்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பிறகு அந்த வேலையை விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. இப்போது என்ன தொழில்? குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு எதுவும் இருப்பதைப் போல தோன்றவில்லை. பிறகு, வாழ்வது?

அப்போதும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் போலத்தான் தோன்றுகிறது. நம்பூதிரிக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தந்தை என்ற பதவியையும் சுமந்து கொண்டு நடக்க வேண்டாமா? அந்த வகையில் கோப்பன் நாயர் வாழ்ந்து கொண்டிருப்பார்.

ஆனால், கரோட் பெரியவர் கூலி வாங்கவில்லை. அது ஒரு சேவையாக இருந்தது. குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றுவது, குழந்தைகளுக்குத் தந்தை இல்லை என்று வராமல் பார்த்துக் கொள்வது... உண்மையாகச் சொல்லப் போனால், அது மறக்கக் கூடிய விஷயமா? அப்படிக் கூறிவிட முடியாது... இனிமேல் கோப்பன் நாயர் எப்படி வாழ்வார்?


பாரு அம்மாவின் நிலை என்ன? அவருக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்? நம்பூதிரியின் குடும்பத்தில் அடுத்து ஆட்சி செய்யப் போகும் மனிதர் அந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது கொடுப்பாரா? எத்தனையெத்தனை கேள்விகள் அந்த உயர்ந்து மேலே எழுந்து கொண்டிருக்கும் காற்றில், கிழக்கு நோக்கிப் பறந்து வெட்ட வெளியில் இருக்கும் புகையில் இருந்து உயர்கின்றன! இந்த விஷயங்கள் எதையும் நம்பூதிரி நினைத்திருக்க மாட்டார். கோப்பன் நாயர் சிந்தித்திருப்பாரா? அவர் எதற்காகச் சிந்திக்க வேண்டும்? அப்படியும் இருக்கக்கூடாதா? தனிப்பட்ட உறவு அந்தப் பிள்ளைகளின் விஷயத்தில் இருக்கிறதா? பாரு அம்மாவின் விஷயத்தில் இருக்கிறதா? நம்பூதிரி வீட்டில் வேலைக்காரராக வேலை பார்த்துத் திரிந்தபோது நம்பூதிரி கூறியிருப்பார்:

"கோப்பா, நாளைக்கு நீ இங்கு வேலைக்காரியாக இருக்கும் பாருவிற்கு ஒரு துணி கொடுக்கணும்!''

"சரி.''

அதில் பெரிதாகக் கூறும் அளவிற்கு என்ன இருக்கிறது? நம்பூதிரி கட்டளையிட்டார். அதைக் கேட்டு நடந்தார். மறுநாள் குத்துவிளக்கிற்கு முன்னால் வைத்து கோப்பன் நாயர் பாருவிற்குத் துணி கொடுத்தார். கோப்பன் நாயர் பாருவின் கணவராக ஆனார். பாரு அந்த வகையில் பிறகு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், அந்த மாளிகையின் வேலையை வேண்டாம் என்று கோப்பன் ஏன் சொன்னார்? பாரு அம்மா இப்போதும் அங்கு பெருக்கி சுத்தம் செய்யும் வேலைக்காரிதான். ஒருவேளை, கணவர் என்ற உரிமையில் நம்பூதிரியின் திருட்டுத்தனத்திற்கு எதிர்ப்பு காட்டியிருப்பாரோ? என்ன இருந்தாலும், கோப்பன் நாயர் ஒரு ஆண் அல்லவா? அவருடைய ஆண்மைத்தனம் எப்போதாவது சற்று கண்விழித்திருக்கலாம். இவை அனைத்தும் கோப்பன் நாயர், பாரு அம்மா, நம்பூதிரி ஆகியோருக்குள் இருக்கும் ரகசியங்கள்.

ஊரின் நிலைமை அதுதான். இன்னும் சிறிது நாட்களில் பாரு அம்மாவும் பிள்ளைகளும் கோப்பன் நாயரும் அடுத்து பொறுப்பை ஏற்கப் போகும் நம்பூதிரியும் பேச்சுக்கான விஷயமாக ஆவார்கள். அந்தப் பிள்ளைகளை வளர்ப்பதற்கு மாளிகைக்கு இப்போது சக்தி இல்லை. அங்கு நடக்கும் காரியங்களே சிரமத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. அப்போது அந்தச் சுமைகளையும் தாங்கிக் கொண்டார் என்று வருமா?

கோப்பன் நாயரைப் பற்றி ஏன் இந்த அளவிற்குச் சிந்திக்க வேண்டும்? பல நாட்களாகவே கோப்பன் நாயரைப் பற்றிய நினைவுதான். கடையில் இருக்கும்போதும், வீட்டிற்கு வந்த பிறகும் மனதில் கோப்பன் நாயர்தான். அவர் விலகிப் போக மாட்டார். கோப்பன் நாயரின் நிலையை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருப்பதென்னவோ உண்மை. ஆமாம்- பெரிய அளவில் ஆர்வம் உண்டாகியிருக்கிறது. அந்த மனிதருடன் உரையாடியதுகூட இல்லை. எந்தவொரு நெருக்கமும் இல்லை. ஆனால், மிகவும் நெருக்கமான ஒரு மனிதரைப் போல தோன்றுகிறார்.

ஒன்றிரண்டு மனிதர்களிடம் கேட்டான். கோப்பன் நாயருக்கோ பாரு அம்மாவிற்கோ அவர்களின் பிள்ளைகளுக்கோ - அவர்கள் யாருக்கும் அந்த அளவிற்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. யாரும் விசாரிக்கவில்லை.

ஒருநாள் சாயங்காலம் சற்று சீக்கிரமே வீட்டிற்கு வந்தான். அக்கா அப்படியே செயலற்று நின்று கொண்டிருக்கிறாள். வழக்கமாக இல்லாத ஒரு செயல் அது. ஏதோ காரியம் நடந்திருக்கிறது என்பதென்னவோ நிச்சயம். இறுதியில் அக்கா சொன்னாள்:

"இன்றைக்கு ஒரு காரியம் நடந்தது!''

"அப்படியா, என்ன?''

"உனக்குப் பிடிக்காத விஷயம்!''

"விஷயம் என்ன என்று தெரியாமல் பிடித்திருக்கிறதா இல்லையா என்று எப்படிச் சொல்ல முடியும்?''

அக்கா சிறிது நேரத்திற்கு எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். அந்த அளவிற்குப் பெரிய ஆர்வம் எதுவும் தோன்றவில்லை.

"உன்னுடைய அந்தப் படம் வரைபவன் இருக்கிறான் அல்லவா? அவன் தூரத்தில் வருவதைப் பார்த்தேன்.''

அக்கா நிறுத்தினாள். முகத்தில் தெரியும் உணர்ச்சிகளைக் கவனிக்கிறாள். தைரியம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது.

"பூக்களும் பறவைகளும் எழுத்தும் உள்ள ஒரு ஆடையை அணிந்திருந்தான். கால்களை ஒட்டியிருக்கும் முழுக்கால் சட்டை!''

பிறகும் பேச்சு இல்லை- சிறிது நேரத்திற்கு.

"நான் தூரத்திலிருந்து வருவதைப் பார்த்தேன். எனக்கு அப்படித்தான் தோன்றியது. நான் நம்முடைய வெளிவாசல் கதவை அடைத்தேன். தாழ்ப்பாள் போட்டேன். பிறகு நான் திரும்பி நடந்தேன். அவன் மதில்களுக்கு மேலே என்னைப் பார்த்தான். கதவைத் திறக்கச் சொன்னான். "நான்தான்... விஸ்வநாதன்" என்று சத்தம் போட்டுச் சொன்னான். நான் திரும்பிப் பார்த்தேன். அதற்குப் பிறகும் பொருட்படுத்தாமல் நடந்தேன். அவன் இனிமேல் இந்தப் படிகளைத் தாண்டி வரக்கூடாது. அதுதான் என் முடிவு.''

அக்கா கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அச்சத்தால் அல்ல. அந்த அளவிற்கு அக்கா பயப்படக்கூடிய தன்மை உள்ளவள் அல்ல. என்ன காரணம் என்று தெரியவில்லை, அக்காவிடம் எதுவும் சொல்லவில்லை. அந்தப் பேச்சு மனதில் பதியவில்லை. அக்கா சொன்னாள்:

"அவன் உன்னை கோப்பன் நாயராக ஆக்கியவன்!''

மரங்களுக்கு மேலே வானத்தை நோக்கி நம்பூதிரி ஆசானின் சிதையிலிருந்து புகை உயர்ந்து செல்லும் காட்சி மனக்கண்களுக்கு முன்னால் தோன்றியது. நீண்ட நேரம் அப்படி இருந்தது.

12

"அய்யோ... உடல் முழுவதும் வியர்வையும் அழுக்கும்...''

கொச்சு தேவகியின் அந்த வார்த்தைகள் அமிர்த நதியைப் போல காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. உண்மைதான். பகல் முழுவதும் வேலை செய்து வியர்த்துப்போய் இருந்தாள் அவள். அதனால்தான் அந்த எதிர்ப்பைக் காட்டினாள். இல்லாவிட்டால் ஏன் எதிர்ப்பு? எதுவும் இல்லை. இளம் வயதிலிருந்தே சொன்னபடி கேட்பதற்கு மட்டும் தெரிந்திருப்பவள். அதுதான் அவளுக்குத் தெரியும். எதிர்ப்பதற்குத் தெரியாது.

அவள் குளித்து முடித்து சுத்தமாக இருக்கும்போது அந்தச் சம்பவம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் என்ன நடக்கும்? அவள் சொன்னதைக் கேட்பாள். கீழ்ப்படிவாள். அதன்மூலம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கசப்பான எதிர்காலம் உண்டாகிறது என்றால்- அதைச் சகித்துக் கொள்வாள். வசதிகளைப் பற்றி அவள் நினைப்பதில்லை. நினைப்பதற்கு வழியில்லை.

மெத்தையைத் தட்டிவிட்டு, விரித்துக் கொண்டிருந்த போதுதான் அவளுடைய உருண்ட, சதைப்பிடிப்பான கையைப் பிடித்தான். இந்தப் பக்கமாக நெருக்கிக் கொண்டு வர முயன்றான்.

அப்போதுதான் அவள் சொன்னாள்:

"மேலெங்கும் வியர்வையும் அழுக்கும்!''

அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கீழ்ப்படியத்தான் இருந்தாள். எதற்காக கையைப் பிடித்தான் என்று அவளுக்குத் தெரியும். அது மட்டும் நிச்சயம். அப்படியென்றால் அடியே திருடி... பெண்ணுக்கு எல்லாம் தெரிந்திருக்கின்றன. கதை தெரியாதவள் இல்லை.

முன்பு, அவள் குழந்தையாக இருந்தபோது, அவளைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து அதற்கு உள்ளே ஐந்தாறு மணி நேரங்கள் அவளை உட்கார வைப்பார்கள்.


அவள் அசைய மாட்டாள். சொன்னதைக் கேட்பதற்கு அத்தையும் மற்றவர்களும் அதன்மூலம் அவளுக்குக் கற்றுத் தந்திருக்க வேண்டும்.

அவளுடைய கையில் ஒரு குளிர்ச்சி இருந்தது. இல்லாவிட்டாலும் அவளுடைய உடல் குளிர்ச்சியான ஒரு பொருள்தான் என்று எப்போதும் தோன்றியிருப்பதுதான். நல்ல மென்மைத் தனமான உடல். அந்த கைக்கு தங்க வளையல் எப்படிச் சேரும்?

முன்கூட்டியே சிந்தித்து திட்டம் போட்டு பதுங்கியிருந்து அவளைப் பிடிக்கவில்லை. அவள் மெத்தையைத் தட்டித் தயார் பண்ணிக் கொண்டிருந்தபோது, சிறிதும் எதிர்பாராமல் அங்கு அவன் சென்றான். அப்படிச் சென்றபோது அவள் பயப்படவில்லை. பதைபதைப்பு அடையவும் இல்லை. அங்கு சென்றது அன்னியர் யாருமல்ல. அவளுடைய அத்தான்தான். "அண்ணா!" என்றுதான் அவள் அழைப்பாள்... பிடிக்கத் தோன்றியது. பிடித்து உடலுடன் சேர்க்கத் தோன்றியது. அப்படித் தோன்றாதா?

மாமாவின் மகள் என்றால் அதுதான். ஒரு உரிமை இருக்கிறது. சுதந்திரம் இருக்கிறது. அவளுக்கும் குளிர் நீங்கிவிட்டது என்று தோன்றுகிறது.

பிடியை விட்ட பிறகு, கேட்ட கேள்விதான் சுவராசியமானது.

"நீ அந்தக் கோவிலுக்குச் சென்று சாயங்கால நேரத்தில் குளித்து வழிபடுகிறாய் அல்லவா?''

"ஆமாம்... நீங்க அன்றைக்கு சொன்ன நாளில் இருந்து சாயங்கால வேளைகளில் குளித்து முடித்து வழிபட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். அதற்குப் பிறகுதான் நான் மரத்தடி வீட்டிற்கே போவேன்!''

அவள் மெத்தையைத் தட்டி விரித்துப் போட வழக்கத்தைவிட அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டாள் என்று தோன்றுகிறது. பிறகு... இன்னொரு முறை பிடித்திருந்தால்...? உடலெங்கும் வியர்வை என்று இரண்டாவது தடவை அவள் கூறாமல் இருந்திருக்கலாம்.

இதை அக்கா தெரிந்து கொண்டிருப்பாளா? அக்காவிடம் அவள் கூறுவாளா? அவர்களுக்கிடையே அந்த அளவிற்கு நெருக்கம் இருக்கிறது. நட்பு இருக்கிறது. இல்லை... கூற மாட்டாள்... வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் முதல் தடவையாக நடக்கிறது. அது ஒரு வன்முறையாக இருந்தது. குரூரமான வன்முறை. அதற்கு எப்படி தைரியம் வந்தது?

அந்த குணம் அத்துடன் நிற்கவில்லை. சாயங்காலம் அந்தக் கோவிலுக்குச் சென்று குளித்து, வழிபாடும் முடித்து மரத்தடி வீட்டிற்குச் செல்லாமல் நேராக இங்கு வரும்படி சொன்னால் என்ன? சொன்னால் அவள் நேராக வருவாள். அப்போது அத்தை கேட்பாள். அண்ணன் அப்படிக் கட்டளை போட்டார் என்று அவள் பதில் கூறுவாள். அப்போது அத்தை என்ன நினைப்பாள்? அத்தை நேராக வருவாள். பிறகு கேட்பாள்:

"நீ அப்படி அவளிடம் சொன்னாயா குழந்தை?''

"சொன்னேன்.''

"ஏன் அப்படிச் சொன்னே?''

பதில் இல்லை. சற்று பதுங்கி நிற்பது மட்டும்தான் நடக்கும். அத்தை உண்மையாகவே கேட்பாள்- ஒரு புன்சிரிப்புடன் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

"அது சரியா குழந்தை? கொஞ்சம் யோசித்துப் பார். நீ இங்கே இருக்கிறப்போ... அதுவும் உன் மனைவியும் இல்லை... அவள் இங்கே இரவு நேரத்தில் தூங்கலாமா? ஆட்கள் என்ன சொல்லுவாங்க?''

அத்தை சில நேரங்களில் மேலும் சற்று அதிகமாகக் கூறினாலும் கூறலாம்.

"அவள் உன்னுடைய முறைப்பெண். இருந்தாலும், அது சரியாக இருக்குமா?''

அத்தையைப் பார்த்து ஒரே ஒரு கேள்விதான் கேட்பதற்கு இருக்கிறது. அது ஒரு முட்டாள்தனமான கேள்வி.

"அதனால் என்ன கேடு?''

அத்தை உண்மையாகவே பதில் கூறுவாள்:

"அது கேடுதான். பிறகு... ஒரு விஷயம்... அவள் உங்களுடைய வகை. அவளை நாசம் செய்யிறதா இருந்தால் செய்துக்கோ.''

அதற்கும் மேலே பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. அவளை நாசம் செய்வதற்காக என்றா சொன்னாள்? நல்ல காரியம்... கொச்சு தேவகியை நாசம் செய்வதா? கொச்சு தேவகி யார்? அவர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த ஒருத்தி. அன்னிய பெண் அல்ல.

அந்தச் சந்தர்ப்பத்தில் மனதில் வேதனைப்பட்டு பதைபதைப்புடன் அத்தை கூறுவதற்குக் காரணம் இருக்கிறது.

"இதெல்லாம் தேவையே இல்லை. வயசுல இருந்தே அவளை உனக்குப் பின்னால் விட்டோம். அவள் உனக்குப் பின்னால்தான் இருந்தாள்.

இன்னொரு விளையாட்டு சினேகிதிகூட இல்லை. அப்படி இருக்கறப்போ நீ புறங்கையால தட்டி விட்டுட்டே...''

அத்தையின் கண்களில் ஈரம் உண்டானது. அவள் சற்று தொண்டை தடுமாற தொடர்ந்து சொன்னாள்:

"அதற்கு யாரையும் குறை சொல்ல வேண்டாம். அது அவளுடைய விதி!''

விதி! ஆமாம்... அப்படி ஒன்று இருக்கிறது என்று தோன்றுகிறது. எதுவும் நினைப்பதைப்போல நடப்பது இல்லை. ஒரு வழி அப்படிப் போகும்போது, ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வளர்கிறது. எங்கு போய்ச் சேர வேண்டும் என்று விரும்பினோமோ அங்கு அல்ல போய்ச் சேர்வது. இது ஒரு கண்களைக் கட்டிக் கொண்டு நடக்கும் பயணம். சில வழிகள் மிகவும் ஆழமான குழிகளில் போய் முடிவடைகின்றன. வழிகள் தவறிப் பயணம் செய்ததற்கு எவ்வளவோ உதாரணங்கள் இருக்கின்றன. அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு நேரான வழி கிடைக்கிறது. விதி! அது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான்.

அத்தை கூறியதற்கு எந்த பதிலும் இல்லை. பதில் கூற முடியவில்லை. கறாரான சில முடிவுகளை மட்டுமே இனி எடுக்க வேண்டும். அந்த முடிவுகளுக்கு அதிகாரத்தின் குணம் இருக்க வேண்டும்.

"அதெல்லாம் சரி... எனக்கு கொச்சு தேவகி வேணும். நான் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்.''

சரிதான். அது ஒரு நல்ல அறிவிப்புதான். அத்தை என்ன செய்வாள்?

அத்தை மறுக்கிற மாதிரி தலையை ஆட்டினாள். அவளும் சில முடிவுகளை எடுக்க முடியும். அதற்கு அதிகாரம் இருக்கிறது. திறமை இருக்கிறது. ஏராளமான நாட்கள் வாழ்ந்து அனுபவங்கள் உண்டாக்கியதன் அறிவு உண்டு.

"இல்லை... இல்லை... உனக்கு ஒரு மனைவி இருக்கிறாள். ஒரு ஆளுக்கு ஒரு மனைவிதான். நீ அவளை விரும்பலாம். கூர்ந்து பார்க்கவும் செய்யலாம். என் பிள்ளையே... அவள் உன்னுடைய மாமாவின் மகளாகவே இருந்தாலும்கூட இரண்டாவது மனைவியாக ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை.''

அத்தை அதற்கு மேலும் சேர்த்துக் கூறுவாள்:

"அந்த அப்பிராணி எதற்கும் தயாராக இருப்பாள் என்றாலும்...''

அந்த ஒரு வாதத்தை எப்படிச் சந்திப்பது? இதயத்தின் அடித்தட்டிலிருந்து ஒரு சத்தம் வெளியே வந்து வெடித்தது.

"இப்போது எனக்கு மனைவி இல்லை.''

அத்தை இப்படித் திருப்பி அடிப்பாள்:

"குமுதத்துடன் இருந்த திருமண உறவு முடிந்ததா?''

பதில் சொல்ல முடியவில்லை. ஒரு சம்பவ பரம்பரையையே விமர்சனம் செய்ய முடிகிறது.


இந்த ஊரில் மட்டுமல்ல, நகரத்திலும்கூட பேச்சு விஷயமாக இருக்கக் கூடிய ஒரு சம்பவ பரம்பரை! அது நடக்கக்கூடியதுதான். குமுதம் ஒரு அதிகாலை வேளையில் வரலாம். அது அவளுடைய வாழ்க்கைப் பிரச்சினை. அவளுக்கு உரிமை இருக்கிறது. அவள் வரும்போது ஒருவேளை, அக்கா வெளிவாசல் கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போடலாம். விஸ்வநாதனைப் போல பின்னால் திரும்பி அவள் போக மாட்டாள். அந்த வெளிவாசல் கதவைத் திறப்பதற்கு அவளுக்கு உரிமை இருக்கிறது. வெளிவாசல் கதவுக்கு வெளியே அவள் அமர்ந்திருப்பாள்.

இரவும் பகலும் அங்கே இருப்பாள். ஆட்கள் கூடுவார்கள். அப்போது நியாயம் உதயமாகாதா?

மிக உயர்ந்த அந்த ஈரடிகள் நாக்கின் நுனியில் வந்து சேர்கின்றன.

"இரண்டு மனைவிகளை உண்டாக்கி இருப்பவன்

அரண்டு ஓடினாலும் ஆனந்தம் இல்லை".

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அக்காதான் அந்த வழியைக் கூற வேண்டும். அக்கா அத்தையிடம் இப்படிக் கூறினால் போதும்:

"அத்தை, கொச்சு தேவகி இங்கே இருக்கட்டும். "

அத்தை அதை ஏற்றுக் கொள்வாள். பொறுப்பாளியாக அக்கா இருக்கிறாள். நம்புவதில் தவறில்லை.

இப்படி நடந்திராத விஷயங்களைப்பற்றி நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறோமோ என்பதை நினைத்தபோது அவனுக்கு சிரிப்பு வருகிறது. உள்ளே என்னவெல்லாம் பார்த்தான்! என்னவெல்லாம் நடந்தது! முன்பு பிராமணன் கனவு கண்டதைப் போல உரத்த குரலில் சத்தம் போட்டு எதுவும் சொல்லவில்லை. யாரும் எதையும் கேட்கவும் இல்லை என்று தோன்றுகிறது. நல்ல வேளை!

அக்காவிற்கும் என்னவோ மனதில் இருக்கிறது என்று தோன்றுகிறது. கொச்சு தேவகியின் மூலம்தான் இப்போது தொடர்ந்து காலையில் காப்பியையும் பலகாரத்தையும் அக்கா கொடுத்தனுப்புகிறாள். சாப்பாட்டையும் அவள்தான் கொண்டு வருகிறாள். முன்பு அப்படி இல்லை. அக்காதான் அவற்றையெல்லாம் செய்தாள். அதிகமாக நெருங்கக் கூடிய சந்தர்ப்பத்தை உண்டாக்குகிறாள்.

ஒரு இடைவெளி இருக்கிறது. அல்லது ஒரு இடம் காலியாகிவிட்டிருக்கிறது. அந்த இடத்தில் கொச்சு தேவகி வந்து

இருக்கட்டும் என்று அக்கா நினைத்துக் கொண்டிருக்கலாம். அப்படி வெற்றிடம் விழுந்துவிட்டது என்று நம்புவதற்குக் காரணம் இருக்கிறது; காரியமும் இருக்கிறது. விஸ்வநாதனுக்கு எதிராக வெளிவாசல் கதவை அடைத்ததைப் பற்றி ஒரு வார்த்தைகூட அந்தப் பக்கம் யாரும் கூறவில்லை. அது தவறாகிவிட்டது. குறைந்த பட்சம் மரியாதைக்குக் கேடு உண்டாகிவிட்டது என்றுகூட யாரும் கருத்து கூறவில்லை. அப்போது அக்கா மனதில் நினைத்திருக்கலாம் - அது முடிவடைந்துவிட்ட ஒரு அத்தியாயம் என்று.

எனினும், அந்த அத்தியாயம் முடிவடைந்துவிட்டதா? குமுதம் மனைவி இல்லை என்று நினைக்கக்கூடிய தைரியம் உண்டானது. அந்த தைரியம் எப்படி வந்தது? அவள் எப்படி மனைவியாக ஆனாள்? அன்று புத்தியில் தடுமாற்றம் இருந்ததோ என்னவோ...? இனிமேலும் கொச்சு தேவகியிடம் நேரடியாகக் கேட்டால் என்ன? அத்தையிடம் கூறி நிற்கலாம்.

13

பொதுவாகவே நீளமான கடிதம். அதை இன்னொருமுறை வாசிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு தடவை வாசித்தான். விளக்கமாக, ஒவ்வொரு வாக்கியத்தையும், வரிவரியாக வாசித்தான் என்று கூறுவதற்கில்லை. திடீரென்று எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்தே ஆகவேண்டும் என்று பலமுறை எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கடக்கும்போதும் ஏன் வரவில்லை என்று கேட்டிருக்கிறாளே தவிர, வரவேண்டும் என்று எழுதியதில்லை. அது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். கைவிட்டுவிட்டான் என்று தோன்றியதால் எழுதியிருக்கலாம்.

இப்போது ஆறு மாதங்கள் அல்லது ஏழு மாதங்களுக்கான மெஸ் பில் கொடுக்கப்பட வேண்டியதிருக்கிறது. வழக்கமாக அந்தக் கணக்கு வருகிறது. எல்லாம் பண விஷயம்தான். எனினும் அவர் குமுதத்தை அங்கே தங்க வைத்திருக்கிறார். அது ஒரு சுவாரசியமான விஷயம்தான். உணவு கொடுத்துக் கொண்டிருப்பது... மெஸ் பில் அனுப்புவது... திடீரென்று வரவேண்டும் என்று அவள் எழுதுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? அவர் அவளுக்கு உணவு கொடுக்கவில்லையா? வாடகை இல்லாததால் அடித்து வெளியே விரட்டி இருக்க வாய்ப்பில்லை. கடிதத்தை எடுத்து ஈடுபாடே இல்லாமல் வாசித்தான். ஆனால், வாசிக்கவில்லை. விஷயங்களை அப்படித் தெரிந்து கொள்ள வேண்டாம். தெரியாமல் இருப்பதே நல்லது. இப்படி நடந்தால் அடுத்த முறை கவரை பிரிக்க வேண்டிய சூழ்நிலையே வராது. எந்தவொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.

அப்படியென்றால் அவள் இங்கு வந்துவிடுவாள். வரவில்லை என்றும் ஆகலாம். அக்காவைப் பார்த்து பயம். அந்த குணத் தோற்றம் இயல்பாகவே உள்ளதாக இருக்கலாம். பஞ்சாபில் பிறந்து வளர்ந்த அவளுக்கு அந்த அளவிற்கு தைரியம் இல்லை - நம் ஊரில் இருக்கும் பெண்களாக இருக்க வேண்டும். அவர்கள் கொடியைப் பிடித்துக் கொண்டு இந்தக் கடைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்துவிடுவார்கள்... அரசியல்வாதிகளும் அப்போது அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். சரிதான். அப்படியென்றால் இப்படி அமைதியாக இருக்க முடியுமா? குமுதத்திற்கு உதவுவதற்கு இங்கே யார் இருக்கிறார்கள்? ஒரு மனிதனும் இல்லை. அவள் வீட்டை விட்டு வெளியேறி பிரச்சினை உண்டாக்காமல் இருக்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட வேலைகள் எதுவும் அவளுக்குத் தெரியாது.

அந்தக் கடிதத்தை பத்திரமாக எடுத்து வைத்தான். அந்த வகையில் ஒரு பிடி மண்ணையும் அந்த நினைவிற்கு மேலே அள்ளிப் போட்டான். அப்படித்தான் அதைப் பற்றித் தோன்றுகிறது. எவ்வளவு எளிதாக மறக்க முடிகிறது! மறப்பதற்கான முயற்சி ஞாபகத்தை பலம் கொண்டதாக ஆக்கும் என்று கூறுவார்கள். மறக்க முயற்சிக்கவில்லை. நினைக்க விரும்பவும் இல்லை... என்ன ஒரு விசேஷ உறவு அது! எல்லாம் ஒரு கனவைப் போல தோன்றுகிறது... அறிவு மயக்கத்தின் விளைவாக உண்டான ஒரு கனவு.

புகையன் மலையின் உச்சியில் நின்று கொண்டு பனிக்காலத்தில் நான்கு திசைகளையும் பார்க்கும்போது ஒரு மாய உலகத்தைப் பார்க்க முடியும். எல்லாம் உண்மையற்றது. எதிர்பார்ப்பு குறைந்து கொண்டிருப்பதுதான். சற்று தூரத்தில் மரங்களுக்கு மத்தியில் தெரியும் வரிவரியான நீல வெளிச்சமும் தேவாலயத்தின் கூர்மையான முனைகளும் ஏரியின் கரையில் கும்பத்தைப் போல உயர்ந்து தெரியும் ஆசிரம கோவிலின் கோபுரமும்... அனைத்தும் மாயமயம்தான். உண்மையற்றவைதான். அங்கெல்லாம் மனிதர்களின் இருப்பிடங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. புகையன் மலையிலிருந்து தெரியும் அந்தக் காட்சியை ஒரு ஓவியத்தின் சாயத்தில் வெளிப்படுத்தும்போது, மொத்தத்தில் ஒரு மாய உலகம் தெரியும். தூரத்தில் இருக்கும் தேவாலயத்தின் சத்தம் அதை விழுங்கிவிடும். ஆசிரம கோவிலின் சங்கநாதம் மெதுவாக சில நேரங்களில் காதுகளில் விழும்.


அதுவும் மாயமான ஒரு சத்தம்தான்... ஆங்காங்கே மரங்களுக்குக் கீழே கூட்டம் கூட்டமாக மறைந்திருக்கும் வீடுகளில் கவலை இருக்கிறது. வாழ்க்கை உள்ளுணர்வுகளால் தண்டிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கலாம். அங்கு பட்டினி இல்லையா? மரணம் இல்லையா? துரோகம் இல்லையா? சந்தோஷத்தின் புன்னகையும் ஆவேசம் நிறைந்த அன்பும் இருக்கும். எங்கேயோ தூரத்தில் இருக்கும் இமாச்சலப் பிரதேசத்திலேயோ காஷ்மீரிலேயோ இருக்கும் ஒரு பூமியின் பகுதி ஓவியமாக வரும்போது அங்கு இருப்பது ஆனந்தம் மட்டுமே... புகையன் மலையும் சுற்றுப் புறமும் ஓவியமாக ஆகும்போது காஷ்மீரைச் சேர்ந்தவன் சொர்க்கத்தைப் பார்ப்பதைப் போல நினைப்பான். எனினும், கொச்சு தேவகியையும் அணைத்துப் பிடித்துக் கொண்டு நிலவு இருக்கும் ஒரு இரவு வேளையில் புகையன் மலையில் ஏறவேண்டும். அங்கு நெருப்பைக் கக்கும் பூதம் இருக்கிறது என்று அந்தப் பெண் கூறுவாள். வேண்டாம்... பழுத்த பெரிய தங்கக் கட்டி அந்த ஏரியில் பொன் நிறப் பொடிகளைச் சிதறவிட்டுக் கொண்டு கீழே இறங்கும்போது, தங்கத் துகள்களைப் போல பறவைகள் கரையை நோக்கி அடைவதற்காகப் பறக்கும்போது, புகையன் மலையின் உச்சியில் கொச்சு தேவகியின் இடையில் கையைச் சுற்றிக் கொண்டு நின்று கொண்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில் வேறு ஆணோ பெண்ணோ அங்கு இருப்பார்களா?

கொச்சு தேவகிக்கு புடவை வாங்கிக் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக ஜரிகை போட்ட முண்டு வாங்கிக் கொடுத்தான். நேந்திர வாழைகள் நன்றாக வளர்கின்றன. சில வாழைகள் குலை தள்ளும் நிலையில் இருக்கின்றன. நிச்சயம் ஆயிரம் ரூபாய் எதிர்பார்க்கலாம். அது எவ்வளவு வந்தாலும் பரவாயில்லை... கொச்சு தேவகிக்கு நகை வாங்குவதற்குத்தான் அது. கடைந்து எடுத்ததைப் போல உருண்டு தெரியும் அழகான கைகளில் வளையல் அணிவிக்க... அந்த அழகான கழுத்தில் மாலை அணிவிக்க... அதை அவளிடம் கூறவில்லை. ஒரு பெரிய ரகசியமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்... ஒருநாள் அந்தப் பரிசுப் பொருளால் அவளைத் திகைப்பில் ஆழ்த்துவான்.

"ஓவியக்கலையும் பாட்டும் இலக்கியமும் யதார்த்தத்தை எந்த அளவிற்கு மறைக்கின்றன! என்ன ஒரு மாய உலகத்தை அவை படைக்கின்றன! எந்தக் காலத்திலும் அவற்றை நம்பிவிடக்கூடாது!''

எர்ணாகுளத்திலிருந்து திரும்பி வந்தபோது கடந்த ஒரு நாள் மோகனன் கூறியது அது. விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த போது கூறினான். அவ்வளவுதான். அதில் தவறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. சரிதான். ஆனால், அதற்காக ஓவியக் கலையும் பாட்டும் இலக்கியமும் வேண்டாம் என்று கூறிவிட முடியுமா? அவை அனைத்தும் மனிதர்களின் சொத்துக்கள் என்று மகான்கள் கூறியிருக்கிறார்கள். மனிதனின் வளர்ச்சியை அவை வெளிப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மாய உலகத்தை அவை எப்போதும் காட்டுகின்றன. அதுவல்ல விஷயம். அப்படிக் கூறுவதற்கு நோக்கம் என்ன? அப்படிக் கூறுவதற்கு குறிப்பிட்ட காரணம் ஏதாவது இருக்கும்.

"ஒன்றுமில்லை. வெறுமனே சொன்னேன்.''

அந்த அளவிற்கு நம்பிக்கை வரவில்லை. கூறப்படும் முறையையும் தொனியையும் வைத்து ஏதோ மனதில் இருக்கிறது என்பது சூசகமாகத் தெரிகிறது. வெளிப்படையாகத் தெரியும்படி கூறாதது தான் காரணம்... வெளிப்படையாகத் தெரியும்படி கூறவில்லையென்றால் வேண்டாம். அந்த அளவிற்குப் பெரிய அளவில் ஆர்வம் எதுவும் தோன்றவில்லை.

நாட்கள் கடந்தபிறகு மோகனன் கேட்டான்:

"நீ ஒரு ஓவியத்தைப் பார்க்கணுமா?''

"பார்க்கலாம்.''

"நீ எந்த அளவிற்கு சாதாரணமாக அதைக் கூறுகிறாய்?''

"ஓவியத்தைப் பார்க்கணும்; அவ்வளவுதான்''.

"விஸ்வநாதன் வரைந்தது...''

"பார்க்கலாம்.''

"தனிப்பட்ட ஆர்வம் இல்லையா?'' மோகனன் அப்படிக் கேட்டிருக்கக்கூடாது. எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கக் கூடியவன் அப்படி கேட்பது ஒரு வகையான சீண்டல்தான்... சிறு பிள்ளையாக ஆக்குவதுதான்... சரி, இல்லை... ஒருவேளை தெளிவாக - எனக்கு ஆர்வம் இல்லை என்ற ஒரு பதில் மோகனனுக்குத் தேவை என்றிருக்கலாம். அதைக் கூறுவதற்கு மனம் வரவில்லை. அதற்கு மாறாக, ஆர்வம் இருக்கிறது என்று கூறத்தான் தோன்றுகிறது. சிறியதாக ஆக்கலாம். தலையில் மிதித்துக் கீழே சாய்க்கலாம். ஆனால், அதற்கு ஒரு எல்லை இல்லையா? தாண்டி, அதையும் தாண்டி என்று போனால்...? மோகனன் தன்னைப் பாதுகாவலனாகக் காட்ட முயல்கிறான்... சரிதான்... பாதுகாவலன்தான்... எனினும், அதை வெளியே காட்டுவது சரியல்ல.

"விஸ்வநாதனின் மிகவும் சமீபத்திய ஓவியம்.''

அதற்கு ஒரு சொல்லில்கூட ஒரு பதில் கிடைக்கவில்லை. மோகனன் தொடர்ந்து சொன்னான்:

"அது இங்கே வந்து சேர்ந்து நீண்ட நாட்களாகி விட்டன. நான் உன்னிடம் கூறவில்லை. அவ்வளவுதான்.''

ஏன் அதைக் காட்டாமல் இருந்தான் என்றோ அது கிடைத்த தகவலை ஏன் கூறாமல் இருந்தான் என்றோ அவனிடம் யாரும் கேட்கவில்லை. மோகனன் ஒரு வாதம், எதிர்வாதத்திற்காக சிலவற்றைக் கூறினான். சில காரியங்களை வெளிப்படுத்தவும் முடிவு எடுப்பதற்காகவும் அந்த விஷயத்தைக் கூறினான் என்று தோன்றுகிறது. ஆனால், அவன் தோல்வியடைகிறான். இல்லை, தோற்கிறான் என்று கூறிவிட முடியாது. அவனுடைய கையில் துருப்புச் சீட்டு இருக்கிறது. அவனுடைய நடவடிக்கையே ஒரு மாதிரி இருந்தது.

"அந்த ஓவியம் உன் பெயருக்குத்தான் வந்தது. நான் பிரித்துப் பார்த்தேன்.''

"பிறகு?" - என்று கூட அவனிடம் கேட்கவில்லை.

"நீ கோபித்துக் கொண்டாயா? ஏன் எதுவும் பேசாமல் இருக்கே?''

"என்ன பேசணும்?''

"இமாச்சலப் பிரதேசத்திலோ காஷ்மீரிலோ இருக்கும் அந்த ஏரியில் ஒரு படகு சாய்ந்து காதலி விழுகிறாள். காதலன் கரையைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறான். அதுதான் ஓவியம். ஓவியம் நன்றாக இருக்கிறது. நல்ல வண்ணக் கலவை. வெறியுடன் வரைந்திருக்கிறான்.''

மோகனன் தொடர்ந்து கேட்டான்:

"என்ன... அதைப் பார்க்கணுமா?''

"காட்டினால் பார்க்கலாம்.''

மோகனன் சிரித்தான். அந்தச் சிரிப்பு சற்று குரூரமாக இருந்தது என்று கூறலாம்.

"அப்படியென்றால் நான் அதை நெருப்பில் எரிய வைத்து சாம்பலாக ஆக்கிவிட்டேன். ஓவியத்தைப் பற்றிய விளக்கத்தைக் கூறலாம் என்று நினைத்தேன்.''

மிகுந்த பேரமைதி! மோகனன் கேட்டான்:

"நீ நடுங்குகிறாயா யசோதரா?''

அதற்கு பதில் இருந்தது.

"நான் பார்க்கக் கூடாது என்பதற்காகவா நெருப்பு வைத்தாய்?''

"ஆமாம்''

"அப்படியென்றால்.... அது தேவையில்லை!''

"ஏன்?''

"விருப்பப்படாதவனாக இருந்தாலும் ஒரு ஓவியனின் ஆன்மாவும் உழைப்பும் அதில் இருக்கிறது.''

"அது தெரியும். ஆனால், அது விஷம். முழுமையான விஷம்!''

"இருக்கலாம். இருந்தாலும்... தகர்ந்துபோன ஒரு காதல் உறவைக் கூட அதில் பார்க்கலாம். வெளிவாசல் கதவை அடைக்கவில்லையா? அதுகூட இருக்கும். அவன் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தின் சோகமயமான முடிவும்...''


"எல்லாம் இருக்கின்றன.''

"அவனை நெருப்பில் போட்டு விட்டாய்.''

"அப்படியென்றால் அதை நான் நெருப்பில் போடவில்லை. நீ பார்க்கணுமா?''

"வேண்டாம்... நான் பார்க்க வேண்டும் என்றில்லை.''

14

னுர் மாதத்தின் திருவாதிரை நிலவு. அதற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. வேறொரு நிலவிற்கு இல்லாத சிறப்பு. இந்த மலையாளம் பெண் மலையாளமாக மாறுகிறது. அதுதான் அந்த நிலவின் சிறப்பு.

இப்படியொரு கண்டிப்பு இருக்குமா? கோபத்தை வரவழைக்கக் கூடிய கண்டிப்பாக இல்லை. பிரச்சினைக்குரிய கண்டிப்பும் அல்ல. அழகான, பிரகாசமுள்ள சிரிப்புடன்தான் அவள் சொன்னாள். அன்று அவளுடைய புதிய திருவாதிரை. புத்திருவாதிரை.

"அதற்கு உன்னை யார் திருமணம் செய்தார்கள்?''

அந்தக் கேள்வி சற்று கடுமையானதுதான். முகூர்த்தத்தை முடிவு செய்து, கரையில் இருப்பவர்களும் வேண்டியவர்களும் கூடியிருக்க, கொச்சு தேவகியை யாரும் தாலிகட்டி, புடவை கொடுத்துத் திருமணம் செய்யவில்லை. அப்படித்தான் திருமணம் நடக்கிறது. கோவிலில் குளியலும் தரிசனமும் முடித்து வந்த பெண்ணை படுக்கையறைக்கு அழைத்துக் கொண்டு சென்றான். அதுதான் திருமணமா? ஆனால், அவளுக்கு அவ்வளவு போதும். அவளுடைய திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக அவள் நம்புகிறாள். அவள் மட்டுமல்ல - எல்லாரும். படுக்கையறைக்கு அவளை அழைத்துக் கொண்டு போன ஆண் வரை.

முறைப்பெண்ணை முறைப்பையன் திருமணம் செய்து கொள்வது அப்படித்தான். அவர்களுக்கிடையே இருக்கும் உறவு அதிலேயே திருப்தி அடைந்துவிடும்.

அவ்வளவு கூட வேண்டாம். அதைவிடக் குறைவாகவும் நடப்பதுண்டு. நாத்துனார்மார்கள், முறைப்பையனின்- முறைப்பெண்ணின் தாய்மார்கள் முடிவு செய்தால் போதும். அவர்கள் பையனின் தாய் பெண்ணின் தாய்க்கு ஒரு துணி எடுத்துக் கொடுப்பாள். பிறந்த நாளில் இருந்தே நிச்சயிக்கப்பட்ட ஒரு காரியம் அது. அப்படியே அவர்கள் வளர்ந்து வந்தார்கள்... எத்தனையெத்தனையோ வருடங்களுக்கு முன்பு எந்தத் தலைமுறையில் அதெல்லாம் நடந்தது! அதற்குப்பிறகு தாய முறையில் தலைகீழ் மாற்றம் வந்தது. ஒரு காலத்தில் மாமா உண்ணுவதற்குத் தருபவனாக இருந்தான். மாமா ஒரு இடத்திலும் இன்று உண்ணுவதற்குக் கொடுப்பதில்லை. எனினும், முறைப்பெண் இருக்கிறாள். அந்த வழிமுறை இருக்கிறது. ஒரு பையனுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று வரும்போது, எந்த அளவிற்குப் பார்த்தாலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ளவளாக இருந்தாலும், அவளுடைய பெயர்தான் முதலில் வரும்.

பெண்ணுக்குத் திருமண வயது வரும்போது, எவ்வளவு மோசமான பையனாக இருந்தாலும் முறைப்பையனை ஒருமுறை நினைத்துப் பார்த்த பிறகே வேறு பையனை நோக்கி சிந்தனை போகும். அதுதான் முறைப்பையன், முறைப்பெண்! அந்தப் பழைய காலத்தில் என்ன ஒரு நல்ல விஷயத்தைப் பின்பற்றி இருக்கிறார்கள். முறைப்பெண்தான் மனைவி என்றால், பழைய காலத்தில் அவள் எதையும் விசாரிக்க வேண்டாம். மாமா விசாரித்துக் கொள்வார்.

எது எப்படி இருந்தாலும், கொச்சு தேவகியின் புத்திருவாதிரை உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு அனுபவமாக இருந்தது. அந்தப் பெண்ணின் உற்சாகத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. வானத்தில் பறக்கும் பறவையைப்போல, ஒரு சிறு குழந்தையைப் போல அவள் துள்ளிக் குதித்துக் கொண்டு திரிந்தாள். அவளுடைய புத்திருவாதிரை!

மரத்தடி வீட்டில் பெரிய அளவில் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நான்கு நாட்களுக்கு முன்பே காய்களை நறுக்கி வறுத்துத் தயார் பண்ணி வைத்துவிட்டார்கள். இரண்டு கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் திருவாதிரைக்களியும் (கொண்டாட்டம்) இருந்தன. ஒரு பறை சாமை அரிசியாக்கப்பட்டது. ஐந்து படி பயறு கூட்டிற்கு வேண்டுமென்றால், எத்தனை நேந்திர வாழைக்காய்கள் வேண்டும்! சேனை வேண்டும். திருவாதிரைக் களிக்காரர்களுக்கு மட்டுமல்ல- வருபவர்களுக்கெல்லாம் கூட்டு இருக்க வேண்டும். ஒரு பெரிய தொகை செலவாகும். நிச்சயமாக அத்தைக்கு அதற்கான வசதியில்லை. கொச்சு தேவகி ஒரு பைசா கேட்கவில்லை. பணம் எங்கிருந்து வந்தது? எஞ்சியிருக்கும் ஏதாவது பிறவி உரிமையையோ, ஏதாவது நிலத்தின் வரப்பையோ எழுதி வைத்து புத்திருவாதிரையைக் கொண்டாட முயற்சித்திருப்பார்களோ? அப்படி எதுவும் செய்ததாகக் கேள்விப்படவில்லை. நாயர் குடும்பங்கள் அப்படியெல்லாம் செய்து அழிந்திருக்கின்றன என்று காதில் விழுந்திருக்கிறது. பால்ய விவாஹமும் மஞ்சள் நீராட்டு விழாவும் முடியும்போது பாதி சொத்து இன்னொருவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். இது பெண்களின் கொண்டாட்டம். அவர்களுக்கு மட்டும். ஆண்களுக்கு அதில் சிறிய அளவில்கூட பங்கு இல்லை. ஆனால், அந்தச் செலவை கணவன்தான் செய்ய வேண்டும். அதுதான் முறை. திருவாதிரைக்குக் காய் கொண்டு செல்லாத கணவன், அடுத்த நாள் மனைவியின் வீட்டிற்குச் செல்லும்போது படுக்கையறையில் இருந்து பாயை எடுத்து வெளியே போட்டு, அவனுக்கு நேராக மனைவி கதவை அடைத்துவிடுவாள். அந்த உறவு அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

புத்திருவாதிரைக்கு ஒரு பைசாகூட கொடுக்கவில்லை. கொச்சு தேவகி பாயை வெளியே வீசி எறிந்து கதவை அடைப்பாளோ? சரிதான். அது சிரிப்பை வரவழைக்கும் ஒரு காரியம்தான். கொச்சு தேவகி படுக்கையறையை அடைப்பது... ஒருவேளை, அந்தச் செலவு முழுவதும் செய்தது அக்காவாக இருக்கும். அது நடக்கக் கூடியதுதான்.

இன்றைய பெண்களுக்கு, முறைப்பெண்ணாகவே இருந்தாலும் கூட ஆர்ப்பாட்டமான திருமணக் கொண்டாட்டம் இருக்கும். வாழ்க்கையில் ஒரு முறை அவள் கதாநாயகியாக ஆகிறாள். ஆயிரம் கண்கள் அவள்மீது பதியக் கூடிய நாள் அது. அன்று அவள் மகாராணி. அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்கிறாள். அவளுடைய விஷயத்தில் எல்லாரும் அக்கறை செலுத்துகிறார்கள். கொச்சு தேவகிக்கு அப்படி ஒரு நாள் உண்டாகவில்லை. அவளும் ஒரு நாள் முக்கியமானவளாக ஆக வேண்டாமா? அதற்காக ஒருவேளை, புத்திருவாதிரையைக் கொண்டாடிக் கொண்டிருக்கலாம். அன்று அவள் உண்மையிலேயே மிகவும் முக்கியமானவளாக இருந்தாள். எல்லாரும் கொச்சு தேவகியை அழைத்தார்கள். அந்தப் பூநிலவில் அவள் தட்டுத் தடுமாறிப் பறந்து நடந்தாள். ஒரு சிறிய பஞ்சுத்துண்டைப் போல அங்கேயும் இங்கேயுமாக ஓடித்திரிந்தாள்... மேல் முண்டுகூட அணியவில்லை. ஒரு சிறு பெண் என்று அவள் தன்னை நினைத்துக்கொண்டிருந்தாள். அன்று அவளுடைய திருமண நாள்!

ஆண்கள் ஊரைவிட்டு வெளியே சென்றுவிட வேண்டும். பெண் படை ஊரைப் பிடித்திருக்கிறது. என்ன ஒரு சிரிப்பும் கிண்டலும் ஆர்ப்பாட்டமும்! திருவாதிரைக்களி நன்றாக இருந்தது. அந்தப் பாடல்களுக்கு ஒரு இனிமை இருக்கிறது. மிகவும் அதிகமாகக் குழந்தைகள் கேரளத்தில் பிறப்பது இந்தக் காலத்திலாகத்தான் இருக்க வேண்டும். திருவாதிரை நிலவு இல்லாமற் போனால் மகிளா கேரளம் அமைதியாகிவிடும். பேச்சே இல்லாமல் ஆகிவிடும். மாமாவோ தந்தையோ அண்ணனோ அன்று பெண்களுக்கு இல்லை. அவர்களைத் தாண்டி நடக்கிறார்கள்.


மானம் வேண்டுமென்றால், அவர்கள் ஊரைவிட்டு வெளியே சென்றுவிட வேண்டும். அன்று கணவன் இருப்பான். காதலன் இருப்பான். வேறு யாரும் இல்லை. இந்த ஏற்பாட்டைச் செய்தது யார்? சிவனுடைய திருநாள் அது. ஒரு குறும்புத்தனத்திற்காக ஒரு முனிவரின் மனைவி தந்த தண்டனையால், இரவு நேரத்தில் மனைவிமார்களின் அருகில் செல்ல முடியாமல் கால்களையும் கைகளையும் உதைத்துக் கொண்டு அழும் குழந்தைகளாக திரிமூர்த்திகள் ஆகிவிடுகிறார்கள். மனைவிகள் கணவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். எது எப்படியோ, அந்தக் கதை சுவாரசியமான ஒன்றுதான். கணவனுக்குச் செய்யப்படும் பூஜையின் ஒரு நாள்தான் திருவாதிரை. நல்ல பூஜைதான். அப்படித்தானே கணவனுக்குப் பூஜை செய்ய வேண்டும்? கடவுளுக்கு பூஜை செய்வதைப் போலவா? தந்தையையும் தாயையும் பூஜை செய்வதைப் போலவா? குருவை பூஜை செய்வதைப் போலவா? தந்தையை வணங்குவதைப் போல கணவனை வணங்கினால், அந்தக் கணவன் உறவை அறுத்துக்கொண்டு போய்விடுவான். கடவுளைப் போல கணவனை வழிபடும் மனைவியுடன் சேர்ந்து ஒரு கணவனும் வாழமாட்டான். அவள் "பெண் துறவி" என்று அவன் கூறுவான். அந்த மனைவி எந்த அளவிற்கு ஒரு ரசிகையாக இருக்கிறாள். கணவனை வழிபடுவதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகள், தந்திரங்கள் ஆகியவற்றைக் கூறியிருக்கும் கொக்கோகனோ வாத்ஸ்யாயனோ அப்படிப்பட்ட முனிவர்களோ தான் அடுத்த வழிகாட்டிகள். அந்த சாஸ்திரத்தைப் பின்பற்றி கணவனுக்கான பூஜையை நடத்தினால் கணவன் அவளுடைய சொற்களின்படி நடப்பான். அதற்கான பூஜை விதிகளும் தந்திர வழிகளும் முற்றிலும் வேறு! முறைப்படி வழிபட்டால் அந்த தேவதை திருப்திப்படும்; பாததாசனாக ஆகும்.

திருவாதிரை ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவள் கண்டிப்புடன் கூறியபோது வெறுப்பு தோன்றினாலும். பிறகு அதை ரசித்தான். பூஜை செய்வதற்காக அவள் அவளுடைய விருப்ப தேவதையை அங்கு கொண்டு வந்திருந்தாள். கதவின் இடைவெளி வழியாக திருவாதிரைக் களியை அவன் பார்த்தான். இரண்டு குழுக்கள் போட்டி போட்டு விளையாடினார்கள். அன்று அவள்தானே முக்கிய நபர். இரண்டு குழுக்களிலும் அவள் போய் விளையாடினாள். என்ன ஒரு உற்சாகம்! நெற்றியில் இலைக்குறியும் குங்குமப் பொட்டும் அழிய ஆரம்பித்தன... முன்பு எப்போதும் இல்லாத ஒரு பிரகாசம் அவளிடம் காணப்பட்டது. ரதிதேவியின் அருள்!

அர்த்தத்தைத் தெரிந்துகொண்டு பாடல்களைப் பாடவில்லை. அது மட்டும் உண்மை. அர்த்தத்தைத் தெரிந்து கொண்டிருந்தால், சில பாடல்களை அவர்கள் பாடியிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வெட்கம் வந்துவிடும்.

சில பாடல்களையும் விளையாட்டையும் பார்த்து முடித்துவிட்டுப் படுத்தான். அந்தப் பெண்ணாதிக்க உலகத்தின் ஆர்ப்பாட்டத்தில் தூங்க முடியவில்லை. எனினும், தூங்கிவிட்டான். அப்போது அவள் அங்கு வந்தாள். தலைமுடிகளுக்கு மத்தியில் கொஞ்சம் பச்சிலைகளை அவள் சொருகினாள்.

"என்ன அது?''

"தசபுஷ்பத்தைச் சூட்டினேன்.''

"தசபுஷ்பம் என்றால் என்ன?''

"அதை எடுக்கக் கூடாது.''

கன்னங்கள் இரண்டிலும் கையை வைத்துக்கொண்டு அவள் சொன்னாள். அந்த உள்ளங்கைகளுக்குத்தான் என்ன ஒரு குளிர்ச்சி! அவளுடைய முகம் தாழ்ந்தது. முகம் முகத்துடன் சேர்ந்தது.

திடீரென்று அவள் முகத்தை உயர்த்தினாள். அவளைப் பிடிப்ப ற்காகக் கையை நீட்டினான். ஆனால், பிடிக்க முடியவில்லை.

சிறிது நேரம் கடந்ததும் ஆயிரம் அழகிகளின் ஒன்றாகச் சேர்ந்த சிரிப்புச் சத்தம் கேட்டது... அவ்வளவு பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து சிரிப்பதை யாராவது கேட்டிருக்கிறீர்களா?

அவளை மற்ற பெண்கள் கிண்டல் பண்ணினார்கள். அவள் போய்விட்டாள். பிடிக்க முடிந்திருந்தால், அவளை விட்டிருக்க மாட்டான். அது மட்டும் உண்மை. ஆனால், பிடியில் சிக்காமல் விலகிச் செல்வதற்கு அவளுக்குத் தெரியும். திருவாதிரை நாளில் பாதி இரவுப் பூ சூடுவதற்கு வரும் மனைவிக்கு அது நன்கு தெரிந்த விஷயம். அது ஒரு வழிபாட்டு விதி. அன்று அவள் விரதம் இருக்க வேண்டும். கணவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்யும் வித்தை!

புத்திருவாதிரை ஒரு இனிமையான அனுபவம். கணவனுக்குச் செய்யப்படும் பூஜை அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான். அனுபவித்திராத ஆண் அதிர்ஷ்டம் இல்லாதவன்! இந்த ஏற்பாட்டைக் கண்டுபிடித்த முன்னோரின் பெயர் வாழ்த்தப்பட வேண்டும்.

திருமணச் சடங்குகள் அனைத்தும் எதற்காக? அவை எதுவும் இல்லாமலே, ஒரு ஆணும் பெண்ணும் வாழும் காலம் முழுவதும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, மகிழ்ச்சியுடன் வாழக் கூடாதா? உண்மையாகவே, அந்த புத்திருவாதிரையால் அவள்மீது கொண்ட மோகம் அதிகமானது.

15

ந்தத் தெருவின் வழியாக நடந்து செல்லும் ஆட்கள் ஒவ்வொருவரும் கசப்பான, இனிமையான ஆயிரமாயிரம் அனுபவங்கள் உள்ளவர்கள். வெற்றி பெற்றவர்களும் தோல்வியைத் தழுவியவர்களும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரலாறு கொண்டவர்கள். தந்தையைப் பற்றியும் தாயைப் பற்றியும் அவர்களைத் தாண்டி இருக்கும் முன்னோர்களைப் பற்றியும் வரலாறு உள்ளவர்கள். அவர்கள் இப்படியெல்லாம் ஆனதற்கு ஒவ்வொருவரும் கதை கூற முடியும். மனைவி, நண்பர்கள், பிள்ளைகள், சகோதரர்கள்- இவர்களுடன் இருக்கும் உறவைப் பற்றியெல்லாம் அவர்களிடம் கதைகள் இருக்கும். எல்லாம் ஒவ்வொரு கதைகள். அந்த மனைவியும் சகோதரர்களும் நண்பர்களும் அந்தக் கதையைக் கூறுவது, அவர்கள் கூறுவதைப் போல இருக்காது.

குமுதத்திற்கு அவளுடைய ஒரு கதை இருந்தது. அவளுடைய தந்தைக்கும் அவருடைய ஒரு கதை. அந்தக் கதைகளில் ஒன்றோடொன்று பொருத்தமாக இருப்பதையும் சிறிய அளவில் வித்தியாசம் உள்ள விஷயங்களையும் வைத்துக்கொண்டு பார்க்கும் போது, குமுதத்தின் விளக்கங்களின்படி அவள் கூறுவதெல்லாம் சரியாக இருக்கலாம். அவருக்கும் சில விஷயங்கள் சரியாக இருக்கும்.

விஸ்வநாதனும் அவனுடைய பாகத்தைக் கூற வேண்டியதிருக்கிறது. அந்த சோகக் கதை. அப்படி ஒவ்வொருவரும் கூற வேண்டியதைக் கூறும்போது, மிகவும் வேதனையைத் தரும் ஒன்றாக அது ஆகிறது. பிரிக்காத கடிதங்கள் எத்தனை இருந்தன? எட்டா பத்தா? பத்து கடிதங்கள் என்று தோன்றுகிறது. அந்தந்த நேரத்தில் அந்தக் கடிதங்கள் அனைத்தையும் வாசித்திருந்தால், புத்திருவாதிரையைக் கொண்டாடியிருக்க முடியுமோ என்னவோ? எது எப்படி இருந்தாலும் கொண்டாடப்பட்டிருக்கும் என்பதுதான் நம்பிக்கை. அந்த சோக நாடகத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் அவரவர்களுடைய நியாயமும் அவற்றிற்கான விளக்கங்களும் இருக்கத்தானே செய்யும்? எனினும், அந்தக் கடிதங்களை உரிய நேரத்தில் பிரித்து வாசிக்காமல் இருந்தது நல்லதாகப் போய்விட்டது.

உடனே வரவேண்டுமாம்! கடிதம் கிடைத்தவுடன், ஒரு நிமிடத்தைக்கூட வீண் செய்யக்கூடாது. அவள் தந்தி அடித்தாள். மரணத்தைத் தழுவி விடுவேன் என்று பயமுறுத்தினாள். அப்போது அந்தக் கடிதத்தை வாசித்திருந்தால் ஒருவேளை அங்கு போயிருப்பான். அப்படியென்றால் இந்த சரித்திரத்தின் போக்கு மாறியிருக்குமோ? முடிவாகக் கூற முடியவில்லை.


கரோட் பெரியவர்! இந்தத் தெருவில் நடந்து போய்க் கொண்டிருப்பவர்களில், கரோட் பெரியவரால் மனைவி ஆக்கியவர்கள் எத்தனைப் பேர் இருப்பார்கள்? சுருக்கமாகப் பார்த்தாலும் ஐந்து பேராவது இந்த வழியாகக் கடந்து போய்க் கொண்டிருக்க மாட்டார்களா? யாருக்கோ பிறந்த குழந்தை "அப்பா" என்று அழைப்பது... அந்தக் குழந்தையை மகன் என்று அல்லது மகள் என்று அழைத்துக் கொஞ்சுவது...

இன்னொரு வகையில் பார்த்தால், அதில் அப்படியென்ன பெரிய விஷயம் இருக்கிறது? ஒரு மனிதக் குழந்தை. அது வளர வேண்டும். அது வளர்ந்தே ஆக வேண்டும். அதற்கு வளர்வதற்கான உரிமை இருக்கிறது. அந்தக் குழந்தை வளர்ந்து சில விஷயங்களை உலகத்தில் செய்ய வேண்டியதிருக்கிறது. அதை, அதன் தந்தை யார் என்பதைப் பார்க்காமல் வளர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? அதன் தாய், சொல்லப் போனால் வளர்க்கும் மனிதனுக்குக் கீழ்ப்படிந்துதானே இருக்கிறாள்? அதற்கு சம்பளமாக வளர்த்தால்தான் என்ன?

ஒரு காலத்தில் தோன்றிய சந்தேகம் சரிதான். ரன்வீர்சிங்கின் வெள்ளைத்தாடியைச் சவரம் செய்து, அந்தப் பெரிய தலைப்பாகையையும் எடுத்திருந்தால் அந்த ரகசியம் வெளியே வந்திருக்கும். தாடி இருக்கும்போதே, அந்த சந்தேகம் பலம் கொண்ட ஒன்றாக இருந்தது. அந்த நாளன்று அவளுடைய தாயின் படத்திற்கு முன்னால் போய் நின்றபோது, ரன்வீர்சிங் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அவளுடைய தாய் மலையாளத்தின் மண்ணைக் கொண்டு பஞ்சாபிற்காக உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஒரு சீக்கியப் பெண்! அப்படியென்றால் அவளுடைய தந்தை ஒரு கரோட் பெரியவராக இருந்திருக்கிறார்.என்று குமுதம் அவளுடைய இறுதிக் கடிதத்தில் கூறுகிறாள். அவ்வாறு தந்தை கூறுகிறார் என்று அவள் எழுதியிருக்கிறாள். சரியாக இருக்கலாம். அப்படியென்றால் அந்த மெஸ் பில் சம்பந்தப்பட்ட தொடர்பு விஷயங்கள் முழுவதும் கட்டவிழ்த்து வெளியே வந்துவிடுகின்றன.

ரன்பீர்சிங் அவளுடைய தாயை மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? அந்தக் கதைக்குள் நுழையும்போது, ஏராளமான உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கும். அப்படியென்றால் அவள் குல்தீப்சிங்கையோ வேறு யாரையோ திருமணம் செய்து இன்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்கலாம். கவனிக்க வேண்டும்.

எப்படியெல்லாம் பிரச்சினைகள் வாழ்க்கையில் வந்து சேர்ந்திருக்கின்றன. யார் அதில் தவறு செய்தவர்கள்? யார் சரியாக நடந்து கொண்டவர்கள்? ஒரு ஆதாரமும் இல்லாத கதை!

தெருவின் வழியாக அங்குமிங்குமாக வழிப்போக்கர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாருக்காவது இப்படி ஒரு மனக் குழப்பம் இருக்கிறதா? இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையைக் கடந்து போயிருக்கிறார்களா? அன்றும் ஒரு மனைவியும் கணவனும் ஆலமரத்திற்குக் கீழே அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பிச்சைக்காரர்கள். கணவனுக்குக் கண் பார்வை இல்லை. மனைவி அவனைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிச்சை எடுக்கிறாள். அவள் ஒரு கண் பார்வை இல்லாதவனைத் திருமணம் செய்தாளா? ஏதாவது பெண் கண் பார்வை இல்லாத குருடனைத் தானே முன் வந்து திருமணம் செய்வாளா? அப்படித் திருமணம் செய்பவளும் இருக்கலாம். ஏனென்றால், கணவன் குருடனாக இருந்தால், அவள் கெட்டவளாக இருக்கும் பட்சம், அவளுக்கு அது வசதியாகப் போய்விடும். அசிங்கம், கேவலம்! அப்படி அவர்களைப் பற்றி நினைக்கக் கூடாது. அவர்கள் ஒரு காலத்தில் வேலை செய்து வாழ்ந்தவர்கள். அவன் கண் பார்வையை இழந்துவிட்டான். அதற்குப் பிறகும் அவள் அவனை விட்டுப் பிரியவில்லை. அப்படியே அவர்கள் வாழ்க்கையை நடத்தினார்கள்.

மோகனன் கேஷில் உட்கார்ந்திருக்கிறான். வியாபாரம் நல்ல முறையில் நடக்கிறது. இன்றுவரை அந்த விஷயத்தைப் பற்றி மோகனன் பேசியதில்லை. அது எந்த அளவிற்குக் கொடுமையான ஒரு விஷயம்! அதைப் பற்றி மோகனனுடனும் அக்காவுடனும் சற்று பேசினால் நல்லதாக இருக்கும்.

தேதிகளின்படி குமுதத்தின் கடிதங்களை இன்று வரை வாசித்ததில்லை. எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கும் திட்டமும் இல்லாமல் வாசித்தான்.

விஸ்வநாதனின் அந்த ஓவியம் என்றைக்கு வந்தது? அந்த நாள் ஞாபகத்தில் இல்லை. அந்த ஓவியத்தை ஒரு முறை பார்த்தால் நல்லது. அதை நெருப்பை வைத்து எரித்துவிட்டதாக மோகனன் சொன்னான். அது கைவசம் இருக்கிறது என்றும் சொன்னான். பிறகு எந்தச் சமயத்திலும் அது எங்கே என்று அவன் கேட்கவில்லை.

அந்த ஓவியத்திற்கு இப்போது தனிப்பட்ட ஒரு அர்த்தம் இருக்கிறது. ஒரு ஓவியனின் உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றின் விளைவுதான் அந்த ஓவியம் என்ற அடிப்படையில் கூறவில்லை. அதைப் பற்றிப் பெரிதாக சிந்தித்து ஆகப்போவது ஒன்றுமில்லை. ஓவியனின் ஆர்வம் அந்த ஓவியத்தை வரைந்ததுடன் முடிந்து போயிருக்கலாம். புதிய விஷயங்களைத் தேடி அவன் நடக்க ஆரம்பித்திருப்பான். ஒரு ஓவியனுக்கு ஒரு விஷயமே ஓவியம் வரைவதற்கு இருக்கிறது என்றால், அதற்கு அடிமையாகிவிட்டிருக்கிறான் என்றால், அவனுடைய படைப்புகள் அனைத்தும் நீர்த்துப் போனவையாக ஆகி விடாதா? ஒரு காதலி ஏரியில் நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறாள். கரையைப் பார்த்துக் கொண்டு காதலன் நின்று கொண்டிருக்கிறான். பார்த்துக் கொண்டு எப்படி நிற்கிறான்? அவனும் குதிக்கப் போகிறானா? அல்லது அப்படியே பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறானா? முன்பு ஒரு ஓவியம் வரைந்திருந்தான். மனைவியும் காதலனும் என்றோ என்னவோ அதன் பெயர்! அதற்குப் பிறகு வரைந்த ஓவியமாக அது இருக்கலாம். அந்த மனைவி, காதலி ஆழமான நடு ஏரியில் மூழ்குகிறாள். ஓவியக்கலை என்பதைவிட மனரீதியில் முக்கியத்துவம் உள்ள ஒரு ஓவியம் அது.

இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அந்தக் கடிதங்களை எதற்குத் தேதிகளின்படி வாசிக்க வேண்டும்? தெரிய வேண்டியவையெல்லாம் தெரிந்தாகிவிட்டது. அந்த முக்கியமான சம்பவத்தை அவள் எப்படி எதிர்கொண்டாள் என்பதைப் பற்றி ஒரு வரைபடம் வரைந்து தெரிந்து கொள்வதற்கு அது ஒருவேளை பயன்படலாம். அது ஒரு போஸ்ட்மார்ட்டம்தான்.

போஸ்ட்மார்ட்டம்! ஒரு போஸ்ட்மார்ட்டம் முடிந்துவிட்டது- உடலின். இனி மனதின் போஸ்ட்மார்ட்டத்தை நடத்த வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தைக் கூட கூறுவதற்கு உலகத்தில் ஒரு உயிரும் இல்லை. அவள் ஏராளமான நண்பர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்தவளாக இருக்க வேண்டும். அவளைத் தெரிந்தவர்களாக இந்த ஊரில் யாருமில்லை. அவளுக்குத் தெரிந்தவராகவும் ஒரு ஆள்கூட இல்லை. எல்லாவற்றையும் வெளியே விடாமல் மனதிற்குள் வைத்துக்கொண்டே இருந்தாள். ஒவ்வொரு நிமிடமும் அந்தச் சுமை தாங்க முடியாத அளவிற்குப் பெரிதாகிக் கொண்டே இருந்தது. அந்த இறுதி நாட்களை அவள் எப்படிக் கடத்தினாள்?

குமுதம் வாழ்க்கையை நேசிக்காதவள் அல்ல. அவள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பியவள். சந்தோஷத்தைத் தேடிக் கொண்டிருந்தவள். அந்த வாழ்க்கையை விட்டெறிய நிச்சயமாக அவளுக்கு மனம் வந்திருக்காது.


எப்படிப்பட்ட ஒரு போராட்டம் நடந்திருக்கும்! இறுதியில் அது நடந்துவிட்டது. ஒரு கெட்ட நிமிடத்தில்! ஆமாம்... அந்த நிமிடம் கடந்திருந்தால், அதைக் கடக்க முடிந்திருந்தால், ஒரு வேளை அவள் வாழ்ந்திருப்பாள். எல்லாம் முடிந்துவிட்டது!

வீடுகளை இழந்து காணப்பட்டது. கொச்சு தேவகிக்கு சிரிப்பு இல்லை. விளையாட்டு இல்லை. அவளுடைய முகம் நிரந்தரம் என்பதைப் போல ஒளி இல்லாமற் போனது. இனி அவள் எப்போதும் போல சிரிப்பாளா? ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டோம் என்று அவள் நினைக்கிறாள். அவளால் ஒரு வாழ்க்கை முடிவடைந்துவிட்டது. அப்படிச் செய்திருக்க வேண்டியதில்லை என்று அவள் நினைத்திருக்கலாம். அவள் ஒருத்தியைக் கொன்றுவிட்டாள்.

அக்காவிற்கும் ஒரு அடி கிடைத்தது.

"அவள் அப்படிச் செய்வாள் என்று நினைக்கவில்லை.''

கொச்சு தேவகி சொன்னாள்:

"இரண்டு பேருமே இருப்போம் என்றுதான் நான் நினைத்தேன்.''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.