
எம்.ஏ. மலையாளம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சில மாதங்கள் ஆன பிறகும் வேலை எதுவும் கிடைக்காததால், பாபு, மெத்ரானச்சனைப் பார்க்கத் தீர்மானித்தான். முதலில் அவன் அம்மாவின் மூத்த சகோதரியைப் போய்ப் பார்த்தான். அந்த மூத்த அக்காவின் இளைய மருமகன் திருமணம் செய்திருந்தது மெத்ரானச்சனின் இரண்டாவது தங்கையின் மூத்த மகளை.
பெரியம்மா சொன்னாள்: "நான் அம்மாக்கிட்ட சொல்லி, உன் வேலை விஷயமா ஏற்பாடு பண்ணச் சொல்றேன். சரி... நீ போ... வேலை கெடைச்ச பிறகு எங்களுக்குக் கெட்ட பெயர் வராமப் பார்த்துக்கோ. அதை மட்டும் நல்லா ஞாபகத்துல வச்சுக்கோ.''
பாபு சொன்னான்: "அதென்ன பெரியம்மா அப்படிச் சொல்றீங்க? என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லியா?''
"யாருக்குத் தெரியும்? மனிதனோட மனசு, மாறி நடக்குறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது!''
பெரியம்மாவிற்கும் சரி, பாபுவிற்கும் சரி... அவன் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று- அவர்கள் பேசிக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் அவர்களால் கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
சில நாட்கள் கழித்து பெரியம்மாவின் மகன் உண்ணி, பாபுவைத் தேடி வந்தான்.
"புதன்கிழமை காலையில பதினொரு மணிக்கு உன்னை அரண்மனைக்கு வரச்சொன்னாங்க.'' உண்ணி சொன்னான்.
அதைக் கேட்டதும் பாபுவின் இதயம் "டிக் டிக்" என்று அடித்தது.
மெத்ரானச்சனை அவன் நேரடியாகப் பார்க்கப் போகிறான்.
பாபு அரண்மனைக்குப் போய் வரவேற்பறையில் சில நிமிடங்கள் காத்திருந்தான். சிறிது நேரம் ஆனபிறகு காரியதரிசி அச்சன் வந்து சொன்னார்: "அச்சன் உன்னைக் கூப்பிடுறாரு...''
அவன் உள்ளே சென்று மெத்ரானச்சனை காலில் விழுந்து வணங்கினான். அவரின் நீட்டிய கையில் இருந்த மோதிரத்தில் முத்தம் பதித்தான்.
மெத்ரானச்சன் பாபுவைப் பார்த்து அமரும்படி கையால் சைகை காட்டினார். அவரின் மோதிரத்தில் இருந்த சிலுவையின் மத்தியில் பதிக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் ஒளிர்ந்தது. அதைப் பார்த்தபோது, பாபுவிற்கு அழ வேண்டும்போல் இருந்தது. அவன் தேம்பித் தேம்பி அழுதவாறு மெத்ரானச்சனின் முன்னால் முழு உடம்பையும் தரையில் பதித்து விழுந்து அவரின் கால்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டு சொன்னான்: "பிதாவே... என்னால கஷ்டத்தைத் தாங்கிக்க முடியல...'' பிதாவின் காலணியில் அன்று புதிதாகப் போட்ட பாலீஷ் கமகமத்தது.
பாபு காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டதால், இருந்த இடத்தை விட்டு எழுந்து நிற்க முடியாத நிலையில் இருந்த மெத்ரானச்சன், காரியதரிசி அச்சனை இன்டர்காமில் அழைத்தார்: "ஜேம்ஸ் அச்சா... கொஞ்சம் இங்கே வரமுடியமா?''
காரியதரிசி அச்சன் வந்தார். மெத்ரானச்சன் சப்தமே கேட்காத வண்ணம் மெதுவான குரலில் அவரிடம் கேட்டார்: "இது யார்?'' காரியதரிசி அச்சன் ஏற்கெனவே வந்திருக்கும் நபரைப் பற்றிக் கூறியிருந்தாலும், மெத்ரானச்சன் அதை முழுமையாக மறந்து போயிருந்தார். பாபு, மெத்ரானச்சனின் கால்களில் தலையை வைத்து அழுது கொண்டிருந்தான். காரியதரிசி அச்சன் மெத்ரானச்சனின் காதில் என்னவோ சொன்னார். பிறகு குனிந்து பாபுவின் இரண்டு தோள்களையும் பற்றியவாறு சொன்னார்: "எழுந்திரு... அழாதே... வந்த விஷயம் என்னன்னு சொல்லலியே!''
பாபு, மெத்ரானச்சனின் தவிட்டு நிறத்தில் பளபளத்துக் கொண்டிருந்த காலணிகளில் முகத்தைப் பதித்து அழுதான். "பிதாவே... அந்த மோதிரத்தோட வெளிச்சத்தைப் பார்த்தப்போ என்னால துக்கத்தை அடக்க முடியல...''
மெத்ரானச்சன் தன் கையை உயர்த்தி மோதிரத்தைப் பார்த்தார்.
"எனக்கொரு வேலை கிடைக்கலைன்னா, நான் தற்கொலை பண்ணிக்குவேன்.'' கண்ணீர் விட்டவாறு பாபு சொன்னான். காரியதரிசி அச்சன், பாபுவின் இரண்டு தோள்களையும் பற்றி அவனை எழ வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் பாபுவோ, மெத்ரானச்சனின் கால்களை விடுவதாயில்லை.
காரியதரிசி அச்சன், மெத்ரானச்சனை உற்றுப் பார்த்தார். மெத்ரானச்சன் குனிந்து பாபுவைப் பார்த்துக் கேட்டார்: "குழந்தை... நீ எதுவரை படிச்சிருக்கே?''
பாபு அவரின் காலணியை விட்டு தலையைத் தூக்கி ஆர்வத்துடன் சொன்னான்: "மலையாளம் எம்.ஏ. இரண்டாம் வகுப்பு!''
மெத்ரானச்சன் தொடர்ந்தார்: "உனக்கு என்ன வேலை செய்ய விருப்பம்?''
பாபு தலையை உயர்த்தி மெத்ரானச்சனைப் பார்த்தான்.
கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்ததால், பிதாவைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.
பிதா என்ன நினைத்தாரோ- மோதிரம் அணிந்த தன் கையை ஆடையின் பாக்கெட்டினுள் நுழைத்தார்.
பாபு சொன்னான்: "பிதாவே, நான் எந்த வேலைன்னாலும் செய்வேன்!''
மெத்ரானச்சன் காரியதரிசி அச்சனை அர்த்தம் தொனிக்க பார்த்துச் சிரித்தவாறு கேட்டார்: "பெரிய பள்ளியில் குழி வெட்டுற வேலையைப் பார்க்கத் தயாரா இருக்கியா?'' மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டியவாறு அவனின் பதிலுக்காக அவர் காத்திருந்தார்.
பாபு, பிதா சிரிப்பதைப் பார்த்தான். தொடர்ந்து அவன் சொன்னான்: "பிதாவே... எனக்கு அந்த வேலை வேண்டாம்!''
மெத்ரானச்சன் சிரித்தவாறு- ஜன்னலுக்கு வெளியே பார்த்தவாறு கேட்டார்:
"ஏன் பிடிக்கல?''
மீண்டும் அவர் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினார்.
"எனக்கு மரணம், சவப்பெட்டி, எலும்புகள், கல்லறை இவற்றைப் பார்த்தால் ரொம்ப பயம்.'' பாபு சொன்னான்.
"ஹா... ஹா... ஹா...'' பிதா சிரித்தார். "அப்போ எம்.ஏ. மலையாளம் படிச்சிருந்தாக்கூட கடவுளைப் பார்த்தா பயம்தான். இல்லியா?''
காரியதரிசி அச்சன் சிரிப்பை அடக்க முடியாமல், முகத்தை இன்னொரு பக்கம் திருப்பினார்.
பாபு எழுந்து நின்று தன் முகத்தைத் துடைத்தான்.
மெத்ரானச்சன் என்னவோ யோசித்தவாறு பாபுவிடம் கேட்டார்: "புத்தகம் படிப்பது பிடிக்குமா?''
பாபு சொன்னான்: "பிதாவே... நான் ஒரு புத்தகப் புழு...''
"சபாஷ்...'' பிதா சொன்னார்: "நல்ல புழுவா கெட்ட புழுவா?''
அவன் பிதாவை ஒரக்கண்ணால் பார்த்தான்.
பிதா சொன்னார்: "நல்ல புத்தகம் படிக்கிற புழுவா, கெட்ட புத்தகம் படிக்கிற புழுவான்னு கேக்குறேன்!''
"நல்ல புழு, பிதாவே!''
"வெரி குட்... நம்ம கல்லூரி நூல் நிலையத்துக்கு ஒரு ப்யூன் தேவைப்படுது. உனக்கு அந்த வேலை பிடிச்சிருக்கா?''
பாபுவின் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.
மெத்ரானச்சன் பாக்கெட்டில் இருந்த கையை வெளியே எடுத்து இரத்தினத்தைத் தேய்த்தவாறு கேட்டார்: "என்ன, வேலை பிடிச்சிருக்கா?''
அடுத்த நிமிடம்-
பாபு, காரியதரிசி அச்சனை ஒரு பக்கம் தள்ளியவாறு மயக்கமடைந்து கீழே விழுந்தான். காரியதரிசி அச்சன் அவனைக் குனிந்து பார்த்துவிட்டு உதவிக்கு ஆளைக் கூப்பிடப் போனார்.
பிதா மேஜைமேல் இருந்த டிஷ்யூ பேப்பர் ஹோல்டரில் இருந்து ரோஸ் நிறத்தில் இருந்த இரண்டு பேப்பர்களை எடுத்து, பெருமூச்சு விட்டவாறு குனிந்து இரண்டு காலணிகளையும் துடைத்தார். பாபுவின் மூக்கில் இருந்தும் கண்களில் இருந்தும் உதட்டில் இருந்தும் வழிந்த நீரின் கோடுகள் மறைந்து காலணிகள் பிரகாசித்தன.
மெத்ரானச்சன் பாபுவை இன்னொரு முறை பார்த்து, "ஈஸோ" என்று முணுமுணுத்தவாறு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினார்.
அன்று இரவு பாபு தன் டைரியில் இப்படி எழுதினான்: "பிதாவைப் பார்த்தேன். வேலை கிடைத்தது. பொய் சொன்னதற்காக வருத்தப்படுகிறேன். நான் குடும்பத்திற்குக் கெட்ட பெயர் வாங்கித் தர மாட்டேன்!"
பாபு, மெத்ரானச்சனிடம் பொய் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. மலையாளம் பி.ஏ. பாடப் புத்தகங்களையும் எம்.ஏ. பாடப் புத்தகங்களையும் தாண்டி அவன் ஆபத்தான பல புத்தகங்களையும் படித்திருந்தான். சொல்லப்போனால்- ஒரே சமயத்தில் அவன் நல்ல புழுவாகவும், கெட்ட புழுவாகவும் இருந்தான். க்ரைம் கதைகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆபாசக் கதைகளையும் நிறைய படித்திருக்கிறான். அதே விருப்பத்துடன் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட கதைகளையும், வைக்கம் முஹம்மது பஷீரின் "தங்கச் சிலுவை"யையும் (ஆனவாரியும் பொன் குரிஸும்) அவன் படித்தான். உள்ளூரின் இலக்கிய வரலாற்றை (உள்ளூர்- மலையாளத்தின் முதுபெரும் கவிஞர்) ஆர்வத்தால் இரண்டு முறை அவன் படித்திருக்கிறான். "வீணபூவு", "பூதப்பாட்டு" போன்றவற்றில் இருந்து ஆரம்பத்திலிருந்தோ அல்லது இடையில் இருந்தோ எந்த வரிகளை வேண்டுமானாலும் அவனால் பாடிக்காட்ட முடியும். காமு, காஃப்கா, க்யேர்க்கெகார்ட், சார்த்ர போன்ற பழைய சிந்தனையாளர்களில் இருந்து நெரூடா, ஈகிள்டன், ஃபுக்கோ, அல்த்துஸர் போன்ற நவீன சிந்தனையாளர்கள் வரை ஆங்கிலம்- மலையாளம் டிக்ஷனரியை வைத்துக்கொண்டாவது பாபு படித்திருக்கிறான். "குற்றமும் தண்டனையும்" படித்தபிறகுதான் ஒரு குற்றவாளிகூட வரலாற்று நாயகனாக முடியும் என்ற விஷயமே அவனுக்குத் தெரிய வந்தது. செயின்ட் அகஸ்ட்டின் குற்ற ஒப்புதல்களில் இருந்து வாழ்க்கையையே ஒருவித குற்றக் களமாகப் பார்க்க அவன் கற்றுக் கொண்டான். கல்லூரி யூனியன் ஆரம்ப விழாவிற்கு வந்த பாலசந்திரன் சுள்ளிக்காடின் கையை- கூட்டத்துக்கு மத்தியில் கிழித்துக்கொண்டு அருகில் போய் குலுக்கியபோது அவனுக்கு தலையே சுற்றுவதுபோல் இருந்தது. அவன் எழுதிய இரண்டு கடிதங்களுக்கும் மாதவிக்குட்டியிடமிருந்து பதில் கடிதங்கள் வந்திருந்தன. ஆர்ட்ஸ் க்ளப் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும்படி சுகதகுமாரியை, பாபு தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டான். நரேந்திர பிரசாத் கேவலமான மனிதனாகவும், பெண் பித்தனாகவும் வில்லன் பாத்திரம் ஏற்று "அம்மயாணெ சத்யம்" படத்தில் நடித்திருப்பதைப் பார்த்த மறுநிமிடமே, அவன் பக்கத்தில் இருந்த ஒரு புத்தகக் கடைக்கு வேகமாக ஓடினான். ஆனால், அவர் எழுதிய ஒரு புத்தகம்கூட அங்கு கிடைக்கவில்லை.
இப்படி அமைதியான- தெளிவான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பாபு வர்கீஸ்தான் ஒரு வேலை கிடைத்ததும் குற்றவாளியாக மாறினான்.
ஆரம்ப நாட்களில், லைப்ரேரியனான சிஸ்டர் அனஸ்டேஸ்யாவுடன் பொதுவான விஷயங்களைப் பேசுவதில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தான் பாபு. பொதுவாக அழகான பெண்களிடம் அவன் எப்போதுமே இப்படித்தான் விலகி இருப்பான். அதற்குக் காரணம்- அவர்களின் அழகு நம்மேல் எதற்கு ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று அவன் நினைத்ததே. வெறுமனே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கின்ற தன்மேல் எதற்கு ஒரு பெண்ணின் அழகு தேவையில்லாமல் ஏறிப் படர வேண்டும் என்று அவன் மனம் நினைத்ததென்னவோ உண்மை. அவனுடன் சேர்ந்து படித்த பெண்கள் அவனுக்கு என்றுமே ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. அவர்களை அவன் பெண்கள் என்று தனியாகப் பிரித்துப்பார்த்து நினைத்ததே இல்லை. அவன் வேலையில் சேர்ந்த நாளன்று மலையாளம் எம்.ஏ. இரண்டாம் வருடத்தில் படிக்கும் எலிஸபெத்தும், சரோஜாவும் புத்தகங்கள் எடுக்க வந்தபோது, அங்கு பாபுவைக் கண்டதும் அவர்கள் அப்படியே ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டார்கள். அவர்களைப் பார்த்து அவன் புன்சிரிப்பைத் தவழ விட்டான். அனஸ்டேஸ்யா காதில் விழாத மாதிரி அவர்கள் கேட்டார்கள்: "சிஸ்டர் மாறியாச்சா? பாபு, நீதான் இனிமே அவங்களுக்கு பதிலா?''
"இல்ல... நான் ப்யூன்...'' பாபு சொன்னான்.
அவர்களால் அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை. அவனையே உற்றுப் பார்த்தார்கள்.
பாபு அவர்களைப் பார்த்துச் சொன்னான்: "இது என்ன பெரிய விஷயமா? இங்க இருக்குறதுக்கு பதிலா அமெரிக்காவுல ப்யூனா வேலை பார்த்தா யாருமே அதை மோசமான விஷயமா எடுத்துக்குறது இல்ல. நான் சொல்றது உண்மைதானே? நான் உங்களுக்கு ஃபைன் குறைச்சு போடுறேன். போதுமா?'' என்று சொன்ன பாபு, சரோஜாவின் மார்பையே உற்றுப் பார்த்தான். புடவையைச் சரிப்படுத்த மட்டும் பார்க்கும் பார்வையாக சரோஜா அதை எடுத்துக் கொள்ளவில்லை.
முகத்தைத் தவிர, உடம்பின் எல்லா பாகங்களையும் பழக்கத்தின் காரணமாக முழுமையாக மூடிப் போர்த்தியிருக்கும் சிஸ்டர் அனஸ்டேஸ்யா ஒரு அழகி என்பதை பாபுவும் சரி, மற்றவர்களும் சரி- கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொள்வார்கள். மாணவர்களும் மாணவிகளும் அனஸ்டேஸ்யாவை ஷோபனா என்று ரகசியமாக அழைப்பதை பாபுவும் தெரிந்து வைக்காமல் இல்லை. நடிகை ஷோபனாவின் உதடும், கன்னமும், நெற்றியும், கண்களும் அப்படியே அனஸ்டேஸ்யாவுக்கும் உரித்து வைத்ததுபோல் இருந்தன. ஷோபனாவை மனதிற்குள் காதலியாக எண்ணி வழிபட்டுக் கொண்டிருந்த ஒரு எம்.ஏ. ஆங்கிலம் படிக்கும் மாணவன் நூல் நிலையப் பகுதியை விட்டு வேறு எங்கும் போகாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தான்.
தான் ஒரு பேரழகி என்ற உண்மையை சிஸ்டர் அனஸ்டேஸ்யா அறிவாளா இல்லையா என்பது யாருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஸ்டீலால் ஆன ஃப்ரேமைக் கொண்ட கண்ணாடியைத்தான் அவள் எப்போதும் அணிந்திருப்பாள். கல்லூரிப் பெண்கள்கூட அனஸ்டேஸ்யாவின் உதட்டில் முத்தம் கொடுக்கலாமா என்று ஆசைப்படுவார்கள். பாபுவிற்குள் ஒரு பெண்மைத்தனமும் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்து அவனை முழுமையாக நம்பிய எலிஸபெத்தும், சரோஜாவும் ஒருநாள் அவனிடம் சொன்னார்கள்: "பாபு, நீ எப்படித்தான் அந்த ஷோபனாகூட இப்படி இருக்குறியோ? நாங்களா இருந்தா அலமாரிக்குப் பின்னாடி வச்சு கட்டிப்பிடிச்சு அந்த தாடையை ஒரு கடி கடிக்காம விடமாட்டோம்!''
"என்கிட்ட இதையெல்லாம் ஏன் சொல்றீங்க?'' என்று சொன்ன பாபு, எலிஸபெத்தின் மார்பையே பார்த்தான். உடனே எலிஸபெத் தன்னுடைய புடவையை இழுத்துவிட்டு சரிப்படுத்தினாள். அதே நேரத்தில் அப்படிச் செய்திருக்க வேண்டியதில்லை என்றும் அடுத்த நிமிடமே எண்ணினாள்.
"இப்போ அடிக்கடி நான் அழ ஆரம்பிச்சிடுறேன்.'' பாபு அவர்களிடம் சொன்னான்.
"வேலை கிடைச்ச சந்தோஷமாயிருக்கும்.'' சரோஜா சொன்னாள். "இல்ல...'' பாபு சொன்னான்: "என் வாழ்க்கையில சீக்கிரம் ஏதோ நடக்கப் போகுதுன்றதை என்னால உணரமுடியும்...''
"அப்படித் தோணுறப்போ கண்ணை மூடி அதைப் பிடி''
எலிஸபெத் சொன்னாள்: "இருட்டில் ஒரு வெளிச்சம்போல அது தெரியும். அதை "ஈஸோ"ன்னு கருதி பிரார்த்தனை செய்ய வேண்டியதுதான்!''
"சிஸ்டர் பார்க்குறது மாதிரி அழணும்.'' சரோஜா சொன்னாள்: "ஒருவேளை கண்ணீரை அவங்க துடைச்சாலும் துடைக்கலாம்!''
தன்னை யாருமே ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பது மீண்டும் பாபுவிற்குப் புரிந்தது.
ஒருநாள் அனஸ்டேஸ்யா தன்னுடைய கண்ணாடியை நீக்கிவிட்டு ஷோபனா கண்களுடன் பாபுவைப் பார்த்துக் கேட்டாள்: "பாபு... ஏதாவது நல்ல மலையாளப் புத்தகங்களோட பேரை எனக்குச் சொல்றியா? நான் அந்தப் புத்தகங்களைப் படிச்சுப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்!''
அவள் அப்படிக் கேட்டது பாபுவிற்கு மிகவும் பிடித்தது. அவர்கள் இருவருக்குமிடையே கொடுக்கல்- வாங்கல் என்ற ஒன்று ஆரம்பித்தது அன்றிலிருந்ததுதான். அனஸ்டேஸ்யா ஆங்கிலம் எம்.ஏ. படித்திருந்ததால், ஆங்கிலப் புத்தகங்களில் பாபுவிற்கு இருந்த சந்தேகம் எதுவாக இருந்தாலும், அதை உடனடியாக அவள் தெளிவுபடுத்துவாள்.
"எம்.ஏ. மலையாளம் படிச்ச நீ, எதுக்காக ஆங்கிலப் புத்தகங்களை விழுந்து விழுந்து படிச்சிக்கிட்டு இருக்கே?'' அனஸ்டேஸ்யா கேட்டாள்.
"சும்மா.'' பாபு சொன்னான்: "ஒவ்வொண்ணையும் கண்டுபிடிக்கத்தான்.'' பாபுவிற்கு அந்த நேரத்தில் அழவேண்டும்போல் இருந்தது.
மாதவிக்குட்டியின் "என்றெ கத" (என் கதை) நூலின் தன் சொந்த பிரதி ஒன்றை அனஸ்டேஸ்யாவிடம் கொண்டு வந்து கொடுத்தான் பாபு. அதைப் படித்துவிட்டு அவள் சொன்னாள்: "நம்ம நாட்ல இதெல்லாம் நடக்குமா? ஆனா, ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க. நீ இந்தப் புத்தகத்தைப் படிக்கக் குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி...''
"கஸாக்கின் இதிகாசம்" (ஓ.வி. விஜயன் எழுதிய நாவல்) புத்தகத்திலிருந்து பல தகவல்களை எடுத்து தன் சொந்த குறிப்பேட்டில் அனஸ்டேஸ்யா எழுதி வைப்பதை பாபுவே பார்த்தான். அந்த நோட்டை எப்படியாவது எடுத்து ஒருமுறை படித்துவிட வேண்டும் என்று பல முறை முயற்சி செய்து பார்த்தான். ஆனால், அவனால் அது முடியவே இல்லை. ஒன்று- அந்த நோட்டு அவளுக்கு நேர் எதிரில் மேஜைமேல் இருக்கும். இல்லாவிட்டால் மேஜை டிராயருக்குள் வைத்துப் பூட்டு போட்டிருப்பாள்.
"தெய்வ நம்பிக்கை கம்மி...'' புத்தகத்தைப் படித்து முடித்ததும் அனஸ்டேஸ்யா சொன்னாள்: "ஆனால், நல்ல புத்தகம்.''
"தெய்வ நம்பிக்கை உள்ள புத்தகங்கள் சிலவற்றையும் ஓ.வி.விஜயன் எழுதியிருக்காரு...'' பாபு சொன்னான். சொன்னதோடு நிற்காமல் "குரு சாகரம்" என்ற புத்தகத்தை அவளுக்கு படிக்கக் கொடுத்தான்.
"ரமணன்" படித்து முடிக்கும் வரை சிஸ்டர் நோட்டுப் புத்தகத்தில் பல விஷயங்களை எடுத்து எழுதுவதை பாபு கவனித்தான்.
"சிஸ்டர்... இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?'' பாபு கேட்டான்.
அனஸ்டேஸ்யா சொன்னாள்: "ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. இதுல காதல் விஷயங்களுக்கு வேலையே இல்ல... ஆனா, இப்படி ஒரு மலையாளத்தை எப்படி எழுதுறாங்க? இந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொன்னதுக்கு நன்றி...''
நூல் நிலையத்தில் கூட்டம் முழுவதுமாகக் குறைந்து ஆளே இல்லை என்கிற நிலை வரும்போதுதான், அனஸ்டேஸ்யா கண்ணாடியைக் கழற்றி, தலையைத் திருப்பி சுற்றிலும் பார்ப்பாள். அப்போது பாபு அவளைப் பார்ப்பான். காரணம்- கார்ட்டூன்களில் காணப்படும் ஃபான்டம், முகமூடியைக் கழற்றுவது மாதிரி- ஃபான்டம் அதைச் செய்யவில்லை என்றாலும்- சிஸ்டர் கண்ணாடியைக் கழற்றி பாபுவைப் பார்ப்பாள்.
பாபு, அனஸ்டேஸ்யாவைப் பற்றி இரண்டு விஷயங்களை கற்பனை செய்துபார்த்தான். ஒன்று- அவள் ஒரு பெண் மாயாவி. நூலகத்தை விட்டு வெளியே இறங்கி மடத்தில் இருக்கும் அறைக்குச் சென்று, அணிந்திருக்கும் ஆடையை மாற்றி, வேறு ஆடை அணிந்து அனஸ்டேஸ்யா வெள்ளைக்குதிரை மேல் உட்கார்ந்து வேகமாகச் சவாரி செய்கிறாள். கொடுங்காற்றின் நடுவில் கோல் கொதாவிற்குச் சமமான மலையின் அடிவாரத்தில் வெண்மையான அருவியைக் கடந்து பெரிய ஒரு குகையில் இருக்கும் சிலுவைக்குப் பக்கத்தில் அனஸ்டேஸ்யா உட்கார்ந்திருக்கிறாள். குற்றவாளிகளைப் பற்றியும், மற்ற கெட்ட செயல்கள் புரியும் நபர்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்கிறாள். ஒருநாள் பாபு வர்கீஸ் என்ற குற்றவாளியை அங்கு கொண்டு வருகிறாள். இதை பாபு நினைத்தபோது, அழுகை வரும்போல இருந்தது.
இன்னொரு விஷயம்: அனஸ்டேஸ்யா பெண் மான்ட்ரேக். ஒருநாள் நூலகத்தை அடைக்கும்போது அவள் கண்ணாடியைக் கழற்றி, தன்னுடைய நீண்ட ஷோபனா முகத்தை பாபுவிற்கு நேராகத் திருப்பி, மை தீட்டிய நீண்ட விரல்களை ஆட்டியவாறு என்னவோ பண்ணுகிறாள். அவளின் விரல் அசைவுகள் மந்திரத் தன்மை கொண்டவைபோல் இருக்கின்றன. அடுத்த நிமிடம் பாபு உருகிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியாக மாறுகிறான். காற்றில் அது அணைந்து போகாதது மாதிரி கைகள் கொண்டு மறைத்துப் பிடித்தவாறு, ஷோபனாவையே சவாலுக்கு அழைக்கும் அதரங்களில் புன்சிரிப்பு தவழ தான் தங்கியிருக்கும் மடத்தை நோக்கி நடக்கிறாள் அனஸ்டேஸ்யா. அறையில் இருக்கும் சிலுவைக்கு முன்னால் மெழுகுவர்த்தியை வைக்கிறாள். பிறகு முழந்தாளிட்டு அமர்ந்து கடவுளைத் தொழுகிறாள். பிரார்த்தனை முடிந்ததும் தான் அணிந்திருந்த ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் ஒரு மந்திரத்தன்மை கொண்ட நடனத்தை ஆடுகிறாள். மெழுகுவர்த்தி உருகிக்கொண்டே இருக்கிறது. நடனம் ஆடி ஆடி களைத்துப்போன அனஸ்டேஸ்யா ஒரு திண்டில் சாய்ந்து உறங்குகிறாள். பாபு என்ற மெழுகுவர்த்தியை அனஸ்டேஸ்யா மறந்தே போய் விடுகிறாள். உருகி... உருகி... கடைசியில் ஒரு குள்ள மெழுகுவர்த்தியாகி... பின்னர் அதுவும் உருகி... அந்த அறையில் மறக்கப்பட்ட ஒரு பொருளாகக் கிடக்கிறான் பாபு.
அவனுக்கு மீண்டும் அழுகை வரும்போல் இருந்தது.
ஒருநாள் பாபு யாருமே திறக்காமல் விட்டிருந்த ஸ்டோர் ரூமைத் திறந்து பார்க்கத் தீர்மானித்தான். சிறிது நேரம் கழித்து கைகளிலும் ஆடையிலும் தூசு படிந்து இருக்க, வேகமாக வந்த அவன் அனஸ்டேஸ்யாவிடம் சொன்னான்: "சிஸ்டர்... ஸ்டோர் ரூம் வரை கொஞ்சம் வர்றீங்களா? நான் ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் காட்டுறேன்!''
இறந்துபோன ப்ரின்ஸிபல் அச்சன் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய புத்தகங்கள் சேகரிப்பை நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார். அன்று லைப்ரேரியனாகப் பணியாற்றிய ஜோசப் ஸார், ஆக்டிங் ப்ரின்ஸிபலிடம் ரகசியமாகச் சொன்னார்: "அவர் தந்ததுல நல்ல புத்தகம் ஒண்ணுகூட இல்ல... எல்லாமே துப்பறியும் நாவல்கள்." ஆக்டிங் ப்ரின்ஸிபல் சொன்னார்: "என்ன இருந்தாலும் நன்கொடையா லைப்ரரிக்குத் தந்ததாச்சே! கொஞ்ச நாட்கள் இங்கே அந்தப் புத்தகங்கள் இருக்கட்டும். அதற்குப் பிறகு பழைய பேப்பர் விலைக்கு வித்துடுவோம்." ஜோசப் ஸார் புத்தகங்கள் கொண்டுவரப்பட்ட கோணிகளை அப்படியே சிறிதுகூட அவிழ்க்காமல் ஸ்டோர் ரூமில் வைத்துப் பூட்டினார். அந்தப் புத்தகங்கள் வெளியே வராமல் அங்கேயே அடைபட்டுக் கிடந்தன.
அனஸ்டேஸ்யாவிடம், வேலையில் ஓய்வு பெற்றுப்போன ப்யூன் சங்கரன் நாயர் சொன்னார்: "அங்கே இருக்குற புத்தகங்கள் எல்லாமே ப்ரின்ஸிபல் அச்சன் வேண்டாம்னு கழிச்சுப் போட்டவை. தேவையில்லாம அதைத் திறந்து பார்த்து, இடத்தை அடைக்காம பார்த்துக்கோங்க." ப்ரின்ஸிபல் அச்சன் தன் புத்தகங்களை எந்த அளவுக்கு நேசித்தார் என்பதை நன்றாக அறிந்திருந்த சங்கரன் நாயர், அச்சன் நிச்சயம் வாயில் சுருட்டு புகைத்தவாறு ஸ்டோர் ரூமுக்கு புத்தகங்கள் படிக்க வருவார் என்று உண்மையாகவே நம்பினார். சங்கரன் நாயர் இந்த விஷயத்தை ஒன்றிரண்டு முறை அனஸ்டேஸ்யாவிடம் ஜாடைமாடையாகச் சுட்டிக் காட்டவும் செய்தார்: "சிஸ்டர்... ஸ்டோர் ரூம் அவ்வளவு நல்லதா எனக்குத் தெரியல. எந்தக் காரணத்தாலும் தனியா அந்தப் பக்கம் போகாதீங்க. அச்சன் உயிரோடு இருந்தப்ப அப்பாவியான மனிதரா இருந்திருக்கலாம். அதற்காக அதேமாதிரிதான் இப்பவும் இருப்பார்னு நாம நினைச்சிக்கிட்டு இருக்கக்கூடாது." அதற்கு அனஸ்டேஸ்யா சொன்னாள்: "சங்கரன்நாயரே... மனிதர்கள் செத்துப் போனபிறகு, பொதுவா இன்னும் அதிக நல்லவங்களாகவே இருப்பாங்க." "அதைப்பத்தி எனக்குத் தெரியாது" என்றார் சங்கரன் நாயர். "எதுக்கும் கவனமாக இருந்துக்கோங்க!"
இதை மனதிற்குள் எண்ணியவாறு அனஸ்டேஸ்யா பாபுவின் பின்னால் ஸ்டோர் ரூமை நோக்கி நடந்துபோனாள். புத்தகக் கட்டுகளை பாபு பிரித்து வைத்திருந்தான்.
"சிஸ்டர்... இங்க கொஞ்சம் பாருங்களேன்.'' பாபு சொன்னான். தொடர்ந்து- அந்தப் புத்தகங்களைத் தனித்தனியாகப் பரப்பினான்.
இப்படித்தான் அனஸ்டேஸ்யாவும் பாபுவும் "ப்ரின்ஸிபல் அச்சனின் புத்தகங்கள்" என்ற ரகசியத்தில் கூட்டாளிகள் ஆனார்கள். அச்சன் வைத்துவிட்டுப் போன புத்தகங்கள் சிறந்தவையாக இருந்தன. த்ரில்லர்களும், துப்பறியும் நாவல்களும், வீர சாகசக் கதைகளும், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களுமே அவை. ரெய்மண்ட் சான்ட்லர், எல்.ஸ்டான்லி கார்ட்னர், அகதா கிறிஸ்ட்டி, ஸிமெனோன், இயன் ஃப்ளெமிங், எட்கர் வேலஸ், பி.டி. ஜேம்ஸ், டொரோத்தி ஸேயர்ஸ், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், மிக்கி ஸ்பில்லெய்ன், லெஸேஸ்லி சாட்டரீஸ், ராபர்ட் லட்லம், அலிஸ்டர் மக்லீன், ஸ்டீஃபன் கிங், மரியோ பூஸோ, ஆர்தர் ஸி.க்ளார்க், ஃப்ராங்க் ஹெர்பர்ட், ரேப்ராட்பரி, ப்ரயன் ஆல்டிஸ், ஐஸக் ஆஸிமோவ், ஊர்ஸுலா கே.லெக்வின், ராபர்ட் சில்வர்பர்க், டக்னஸ் ஆடம்ஸ்- இப்படி மர்ம, துப்பறியும், விஞ்ஞான நாவல்கள் எழுதுவதில் கொடி கட்டிப் பறந்த- பறக்கும் எழுத்தாளர்களின் நாவல்களும், கதைத் தொகுப்புகளும் அங்கு நிறைந்திருந்தன. அவற்றைத் தூசு தட்டி நூலகத்திற்குப் பின்னால் ஒரு மூலையில் இருந்த அலமாரியில் வைத்தான் பாபு.
அனஸ்டேஸ்யா, தான் தற்போது நினைப்பதை பாபுவிடம் சொன்னாள்: "பாபு... நான் சொல்றதை யார்கிட்டயும் சொல்லாதே... நான் இந்தப் புத்தகங்களை எல்லாம் இப்ப படிக்கப் போறேன்.'' பாபு சொன்னான்: "சிஸ்டர்... நானும்தான்...'' அனஸ்டேஸ்யா, செஸ்டர்ட்டன் எழுதிய "ஃபாதர் ப்ரவுன்" கதைகளையும், பாபு, ஆர்தர் கானன் டாய்ஸ் எழுதிய நூல்களையும் முதலில் படிக்க ஆரம்பித்தார்கள். விஞ்ஞான நாவல்களில் அனஸ்டேஸ்யா ஆர்தர் ஸி.க்ளார்க் எழுதியவற்றையும், பாபு, ஃப்ராங்க் ஹெர்பர்ட் எழுதியதையும் படித்தார்கள்.
ஒருநாள் ப்ரின்ஸிபல் அச்சனின் புத்தகங்களின் கடைசி கட்டை பாபு திறந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அனஸ்டேஸ்யா கேட்டாள்: "அச்சன் எதற்காக இந்தப் புத்தகங்களை எல்லாம் படிச்சிருப்பார்?'' பாபு சொன்னான்: "தூக்கம் வர்றதுக்காக இருக்கும்.''
"நிச்சயமா அதற்காக மட்டுமில்ல... நம்மள அமைதியாக உட்கார்ந்து படிக்க வைக்கிற அளவுக்கு இதுல ஒண்ணு இருக்கத்தான் செய்யுது. எனக்குத் தோணுறது என்னன்னா, மனித உறவுகளோட ஒரு நோக்கம் குற்றம் செய்யிறதும்தான். என்னோட அபிப்ராயத்தில் இதுல வர்ற மனிதர்களோட செயல்கள் நல்லது போலவே இருக்கு. நாம இதுல முழுமையா மூழ்கிப் போயிடுறதுனால, நாம அதைப் பெரிசா எடுக்காம இருக்கோம்னு நினைக்கிறேன்...''
"குற்றம் செய்றதும் மனித உறவுகளோட விளைவுன்ற விஷயத்தை இதுவரை நான் நினைச்சுப் பார்க்கல!''
அனஸ்டேஸ்யா சொன்னாள்: "நான் இன்னைக்கு நினைச்சுப் பார்த்தேன். ஏசுவைத் தண்டிச்சதுக்குப் பின்னாடி ஒரு நல்ல புலனாய்வுக் கதைக்குத் தேவையான, நமக்கே தெரியாத எத்தனை விஷயங்கள் மறைஞ்சிருக்கும்! ஏசுவின் உயிர்ப்பு எவ்வளவு பெரிய வீர சாகசம் நிறைஞ்ச ஒரு சமாச்சாரம்! நாம இந்த விஷயத்தை எந்தக் கோணத்துல பாக்குறோம்ன்றதுதான் முக்கியம்!''
பாபு தூசு படிந்த கைகளுடன் எழுந்து நின்றான். அனஸ்டேஸ்யா தொடர்ந்தாள்: "நாம பேசுற விஷயங்களை யாருகிட்டயும் சொல்லாதே பாபு. ஏசுவிற்கும் யூதாஸுக்கும் இடையே இருந்த உறவு எந்த மாதிரி? யூதாஸ் மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நம்மோட மேய்ப்பரா இருக்குற ஏசு நமக்குக் கிடைத்திருப்பாரா? என் மனசுல படுறது என்னன்னா, அன்பும், பாசமும், நம்பிக்கையும் போல கபடமும், துரோகமும், களவும்கூட நமக்குக் கிடைத்திருப்பவைதாம். வில்லன்களுக்கும் வாழ்க்கை உறவுகளில் இடமிருக்கே!''
"ஏதன் தோட்டத்தில் இருந்த பாம்பையும் கடவுள்தானே படைச்சு விட்டார்?'' பாபு சொன்னான்.
வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வீசிய குளிர்ந்த காற்று ப்ரின்ஸிபல் அச்சனின் கடைசி புத்தகக் கட்டில் படிந்திருந்த தூசியைக் கிளப்பி, ஸ்டோர் ரூமின் ஒரு மூலைக்கு அவற்றைக் கொண்டு போய்ச் சேர்த்தது. அனஸ்டேஸ்யா ஆச்சரியத்துடன் சொன்னாள்: "நீ சொல்றது சரிதான். அந்தக் குற்றத்துல இருந்துதான் நாமெல்லாம் உருவானது. ஏன்- ஏசுகூட!''
அனஸ்டேஸ்யா கண்ணாடியைக் கழற்றி தன்னுடைய ஷோபனா கண்களுடன் பாபுவைப் பார்த்தாள்: "அச்சன் சாகுறப்போ இந்த மாதிரி சிந்திச்சிருப்பாரோ!''
பாபு அதற்கு பதில் கூறவில்லை. இருவருமே பேசாமல் நின்றிருந்தனர்.
அப்போது அனஸ்டேஸ்யா சொன்னாள்: "பாபு, இதையெல்லாம் நினைச்சுப்பார்த்தா, எனக்கு ஒருவிதத்துல பயம் வருது. சும்மா விளையாட்டுக்காகக்கூட நாம பேசின விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாதே!''
பாபு சொன்னான்: "நான் இந்த விஷயங்களை யார்கிட்டயும் பேசமாட்டேன். நான் ஒரு புத்தகப் புழு. அவ்வளவுதான். ஆனால், எனக்கென்ன நடக்கப்போகுதுன்னு எனக்கு இப்பவே தெரியுது சிஸ்டர்!''
"மரணத்தைப் பற்றி நினைச்சு பயப்படுறியா என்ன?''
"இல்ல... டாக்டர் ஜேக்கிலுக்கு உண்டானது மாதிரி எனக்கு உருமாற்றம் நடந்திடுமோன்னு பயப்படுறேன்!''
"பகலில் நல்லவன். இரவில் கெட்டவன்.'' அனஸ்டேஸ்யா சொன்னாள்: "நிறைய படிக்கிறதுனால வர்ற பிரச்சனை இது. எனக்குக்கூட சில நேரங்கள்ல மாடஸ்டி ப்ளேஸ் ஆக மாறனும்னு தோணும்!''
இதைக்கேட்டு பாபு அதிர்ந்து போனான். தான் நினைத்தது நடக்கப் போகிறதோ? எதையும் செய்யத் தயங்காத, ஜேம்ஸ் பாண்டையே தோற்கடிக்கிற அழகி ஆயிற்றே மாடஸ்டி!
அனஸ்டேஸ்யா தொடர்ந்து சொன்னாள்: "நான் சில நேரங்கள்ல புத்தகம் படிக்கிறதை நிறுத்திட்டு, மாடஸ்டிக்கு எந்த வித ஆபத்தும் வந்துடக்கூடாதுன்னு கடவுளைத் தொழ ஆரம்பிச்சிடுறேன்!''
பாபு லேசாகச் சிரித்தான். பின்னர் கேட்டான்: "நான் குற்றவாளியா ஆயிடுறேன்னு வச்சுக்கோங்க. சிஸ்டர்... எனக்காக பிரார்த்தனை பண்ணுவீங்களா?''
அனஸ்டேஸ்யா சொன்னாள்: "பாபு, மனசுல எதையும் மறைச்சு வைக்காம திறந்த மனசோட பிரார்த்தனை செஞ்சா போதும்... ஒண்ணுமே நடக்காது!''
"யார்கிட்ட பிரார்த்திக்கச் சொல்றீங்க?''
"இதென்ன கேள்வி பாபு? தெய்வத்துக்கிட்டதான்!''
"தெய்வம்தான் என்னைக் குற்றவாளியா ஆக்குதுன்னா...?''
"அப்படிச் செய்யாம இருக்க பிரார்த்திக்கணும்!''
அனஸ்டேஸ்யா சிரித்தாள்: "பாபு, உனக்கு ஒரு குற்றவாளியா மாறுவதற்கான தகுதி இருக்கா என்ன? நீ ஒரு புத்தகப் புழுவாச்சே!''
பாபு சொன்னான்: "சிஸ்டர்... நான் பயப்படுறதே தெய்வத்திற்குத் தான். தெய்வம் நினைச்சா குற்றவாளியா மாறுவதற்கான எல்லா தகுதிகளும் என்கிட்ட ஒரே நிமிடத்துல வந்திடும். அதுக்குப் பிறகு நான் என்ன செய்ய முடியும்?''
அனஸ்டேஸ்யா தன் ஷோபனா உதட்டைக் கடித்தாள். ஸ்டீல் ஃப்ரேம் கண்ணாடியை ஜன்னலுக்கு வெளியே திருப்பினாள். பின்னர் சொன்னாள்: "பிரார்த்தனை செய்யணும். மீண்டும் மீண்டும் பிரார்த்திக்கணும். குற்றம் செய்றப்பவும் பிரார்த்திக்கணும்!''
"உலகத்திலேயே மிகப்பெரிய குற்றத்தைச் செய்றப்பவும் பிரார்த்திக்கலாமா?''
"நீ என்ன சொல்ற?''
"தெய்வம் கட்டளை இடுறபடி அழிக்கிறது, அணுகுண்டு பயன்படுத்துறது...''
அனஸ்டேஸ்யா சிறிது நேரம் சிந்தனை வயப்பட்டாள். "பாபு, உனக்கு அப்படி எல்லாம் நடக்குற ஆசை இருக்குதா என்ன?''
"யாருக்குத் தெரியும், சிஸ்டர்? இனிமேல் என்ன நடக்கும்னு இப்போ என்னால எப்படிச் சொல்ல முடியும்?'' பாபு சொன்னான்: "அணுகுண்டு இருக்குற காலத்துல வாழ்கிற மனிதனோட வாழ்க்கையில இருந்து ஒரு நிமிடம்கூட அணுகுண்டு மறையிறது இல்ல. யாருக்குத் தெரியும்? உலகத்திலேயே ஒரு பெரிய குற்றவாளியாகூட என்னை தெய்வம் ஆக்கலாம்.'' பாபு உயிரோட்டமே இல்லாமல் சிரித்தான்.
அனஸ்டேஸ்யாவும் சிரிக்க முயற்சித்தாள். "அணுகுண்டு வரை நான் சிந்திக்கல, தெரியுதா? பாபு, நீ சின்னச்சின்ன குற்றங்கள் செய்தால் பரவாயில்லை. எங்களுடைய பிரார்த்தனைகள் அணுகுண்டு வரை இன்னும் போகல...''
"அதுவரை வரணும்ல...'' பாபு சொன்னான்.
அனஸ்டேஸ்யா சிந்திக்க ஆரம்பித்தாள்: "ஆமா... நீ சொல்றது ஒரு விதத்துல உண்மைதான். ஆனா, பிரார்த்தனைகள்ல அணுகுண்டைக் கொண்டு வரமுடியுமா? நரகத்தைப்போல வேற ஏதோ ஒரு இடத்துல இல்ல அது இருக்கு...''
பாபு சொன்னான்: "சிஸ்டர், அணுகுண்டை வெடிக்க வைக்கிற குற்றவாளி யாருக்கிட்ட பிரார்த்திப்பான்? வழிப்பறி செய்றவன், பலாத்காரம் செய்றவன், போர்நடத்தி வீரர்களையும், பொது மக்களையும் போர்க் கருவிகளுக்கு இரையாக்குறவங்க- இவங்க எப்படி தெய்வத்துக்கிட்ட வேண்டுவாங்க? அணுகுண்டோட ஸ்விட்சில கையை வச்சுக்கிட்டு யாரைப் பார்த்து பிரார்த்திக்கிறது?''
அனஸ்டேஸ்யா தர்மசங்கடம் மேலோங்க சுற்றிலும் பார்த்தாள்: "நாம இப்படி பேசுறது அவ்வளவு நல்லதா தெரியல. அணுகுண்டுல தெய்வம் கலந்திருக்கு. எனக்கு அந்த உறவைத்தான் புரிஞ்சுக்கவே முடியல. இது கொஞ்சம் ஆபத்தை வரவழைக்கக்கூடிய பேச்சுதான்...''
"அந்த உறவைப் பத்தி என்னைக்காவது ஒருநாள் உங்களுக்கு விடை தெரிஞ்சா, கட்டாயம் எனக்கு சொல்லுவீங்களா சிஸ்டர்? அணுகுண்டைப் பத்திய முதல் புத்தகத்தைப் படிச்ச அன்னைக்கு, மரணத்தைப் பத்திய பயம் எனக்குள்ள புக ஆரம்பிச்சிடுச்சு.
அன்னைக்கு ராத்திரி பார்த்தா, என் உடம்பு முழுக்க வியர்வை அரும்பி, தெப்பமா நனைஞ்சு போயிருக்கேன். சொல்லப்போனா எனக்கு கண்ணே சரியா தெரியல. நான் படுத்திருக்கிற அறை தலை கீழா சுத்துற மாதிரி இருக்கு. பயத்துல மூத்திரம், மலம் எல்லாத்தையும் படுத்திருக்கிற பாயிலேயே இருந்துட்டேன். உடம்பு ஐஸ் கட்டிபோல குளிருது. கொஞ்ச நேரத்துல அக்னியா உடம்பு மாறி சுடுது!''
அனஸ்டேஸ்யா அவன் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தாள்.
"இன்னைக்குத்தான் என்னோட வரையறை என்னன்றதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. தெய்வத்தோட பங்குதாரரா சேர்ந்து வியாபாரம் பண்ணுறதுக்கான தகுதி எனக்கு இல்ல. அதனால சின்னச்சின்ன குற்றங்களை நான் செய்யத் தீர்மானிச்சிட்டேன். சிஸ்டர், எனக்காக நீங்க பிரார்த்திக்கணும்...''
அனஸ்டேஸ்யா லேசாகச் சிரித்தவாறு சொன்னாள்: "பாபு, நீ குற்றவாளியா ஆகுறப்போ, நான் மாடஸ்டி ப்ளேஸா வந்து உன்னைப் பிடிப்பேன்!''
ப்ரின்ஸிபல் அச்சன் ஸ்டோர் ரூமுக்குள் ஒரு கருவண்டாக மாறிப் பறந்து கொண்டிருந்தார். சுவரில் மோதி கீழே மல்லாக்க விழுந்து தன் கால்களை "விசுக் விசுக்" கென்று ஆட்டிக்கொண்டிருந்தார்.
அனஸ்டேஸ்யா வாசலில் நின்றவாறு சொன்னாள்: "நம்ம ரெண்டு பேரையும் கடவுள் காப்பாத்தட்டும்.''
பாபு, ப்ரின்ஸிபல் அச்சனின் பாதி திறந்து கிடந்திருந்த புத்தகக் கட்டின்மேல் தலையை வைத்து தேம்பித் தேம்பி அழுதான்.
மல்லாக்க விழுந்து கிடந்த வண்டு எப்படியோ புரண்டு எழுந்தது. சிறகுகளின் பெரிய ஓசையுடன், அது ஜன்னல் வழியே வெளியே போய் ஆகாயத்தில் பறந்தது.
சில வருடங்கள் கழித்து, சிறையில் இருந்து தன் முதல் பரோலில் வெளியே வந்த பாபு. ஒருநாள் இரவு தன் பழைய நாட்குறிப்பு புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். தாள்கள் ஒவ்வொன்றையும் புரட்டிய பாபு தனக்குத்தானே பேசிக் கொண்டான்: "என்னோட வாழ்க்கை எவ்வளவு எளிமையானதா இருந்துச்சு! மெத்ரானச்சனை நான் பார்த்ததும், எனக்கு வேலை கிடைச்சதும் எவ்வளவு சீக்கிரம் நடந்துச்சு!" சிஸ்டர் அனஸ்டேஸ்யா சிறை முகவரிக்கு எழுதிய கடிதங்களின் ஒரு சிறு கட்டை, அவன் ஒரு கையால் தொட்டுப் பார்த்தான். "எல்லா கருணைக்கும் நன்றி!" தனக்குள் அவன் சொன்னான்.
படிக்கப் பயன்படும் விளக்கின் தண்டைச் சற்று கீழ்நோக்கி இறக்கிவிட்டு, நாட்குறிப்பில் எழுதப்பட்ட சிறிய எழுத்துகளையே கூர்மையாக அவன் பார்த்தான். ஒரு இடத்தில் அவன் இப்படி எழுதியிருந்தான்:
"இது என்னுடைய குற்ற வாழ்க்கை அனுபவங்களின் சரித்திரம்!"
பாபு தன்னுடைய அனுபவங்களைக் கொண்டு ஒரு மர்ம நாவல் எழுத முயற்சித்த காலகட்டத்தில் அவன் இப்படி எழுதியிருந்தான்:
"இந்த குற்ற விசாரணை வரலாற்றைப் படிக்கின்ற ஒவ்வொருவரையும் தெய்வம் காப்பாற்றட்டும். என்னுடைய சொந்த குற்றச் செயல்களின் சரித்திரத்தைத்தான் இப்போது நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள். இதில் குற்றவாளியும் நான்தான். சூத்திரதாரியும் நான்தான். தெய்வம் இதில் எங்கோ மறைந்திருக்கிறது. அது மட்டும் உண்மை. ஆனால் தெய்வத்தைச் சுட்டிக்காட்டக்கூடிய சக்தி எனக்கு இல்லை. நான் புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண குற்றவாளி. ஸுஃபி ஞானிகளையும், ரமண மகரிஷியையும், டியெலார்த் தெஷார்தானெயும், ஆலன் வாட்ஸையும் நான் படித்திருக்கிறேன் என்பது உண்மை. ஆனால், என் செயல்களில் பதியும் தெய்வத்தின் அடையாளத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் குற்ற விசாரணையிலேயே என்னை மிகவும் அதிகமாகப் பயமுறுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால் நான் கடைசியில் கண்டுபிடிக்கப்போவது தெய்வமாக இருக்குமோ என்பதுதான்.
கத்தோலிக்கர்கள் பாவமன்னிப்பு கேட்பதற்கு முன்பு அவர்கள் சொல்கின்ற பிரார்த்தனை என்ன தெரியுமா? "நான் தவறு செய்தவன்" என்பதுதான். அந்தப் பிரார்த்தனையின் கடைசியில் "என் தவறு, என் தவறு, என் பெரிய தவறு..." என்று சொல்லிக்கொண்டே நெஞ்சில் வலது கையால் மூன்று முறை அடித்துக்கொள்வார்கள். அதற்குப் பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கூண்டின் உலோக வலையால் செய்யப்பட்ட கதவின் மணத்தை நுகரும் வண்ணம் முகத்தைப் பக்கத்தில் கொண்டு செல்ல வேண்டும். அப்போது வெளியே எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கும் அச்சன் கொட்டாவி விடுவார். அவரின் டூத் பேஸ்ட் மணம் சுற்றிலும் பரவும் ஆனால், இந்த என் சரித்திரம் ஒரு பாவமன்னிப்பு அல்ல. இதில் டூத் பேஸ்ட் மணத்திற்கும் வழியில்லை. இருந்தாலும், முதலில் நான் சொன்னதையே திரும்பச் சொல்கிறேன். இதில் தெய்வம் இருக்கவே செய்கிறது. என்னிடம் இருப்பது ஒரே ஒரு குற்றச்சாட்டுதான். இது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது. தெய்வம் நினைத்திருந்தால், என்னை நல்லவனாக ஆக்கியிருக்கலாம். ஆனால், என்ன காரணத்தாலோ அது என்னை இப்படியொரு தர்மசங்கடமான சூழ்நிலையில் தள்ளிவிட்டிருக்கிறது. இதில் இருக்கும் கஷ்டம், நஷ்டம்- இரண்டும் எனக்கு மட்டுமே. அன்புள்ள நாட்டு மக்களே... நீங்கள் என்னுடைய கதையைக் கேளுங்கள். கேட்டுவிட்டு நீங்களே மனதிற்குள் எல்லா விஷயங்களையும் ஒருமுறை அசைபோட்டுப் பாருங்கள். அணுகுண்டுகளின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒரு விதத்தில் பார்த்தால், அணுகுண்டுகள் பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதும் உண்மை. காரணம்- அவற்றை வெடிக்கச் செய்வதன் மூலம் நம்முடைய மரணத்தை நாம் எளிதாக்கி இருக்கிறோமே!"
திடீரென்று மின்சாரம் நின்றது. அறை இருளில் மூழ்கியது. ஒரே நிசப்தம். ஜன்னல் கண்ணாடி வழியே உள்ளே நுழைந்த நிலவொளி இருட்டை ஊடுருவி அறைக்குள் விழுந்தது. பாபு முன்னால் உற்றுப் பார்த்தவாறு, நாற்காலியில் அசையாமல் அமர்ந்திருந்தான். அவன் உதடுகள் ஒரு சுலோகத்தை மெல்ல முணுமுணுத்தன.
அடுத்த அறையில் இருந்து அவன் தந்தை அழைத்தார்:
"பாபு...''
பாபு அவர் அழைப்பதைக் கேட்டான்.
"நீ இன்னும் படுக்கலியா?''
"இல்ல... படுக்கப் போறேன்!''
மின்சாரம் திரும்ப வந்தது. ரீடிங் லேம்ப்பின் வெளிச்சத்தைக் குறைத்த பாபு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான். குடும்பத்திற்குக் கெட்ட பெயர் கிடைத்தாலும் தான் திரும்ப வந்ததில் தன் தந்தைக்கும் தாய்க்கும் ரொம்பவும் சந்தோஷம் என்பதை பாபு உணராமல் இல்லை. அதனாலோ என்னவோ அவர்கள் நிம்மதியாய் தூங்கினார்கள். பாபு குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அக்காவுக்கும் தங்கைக்கும் திருமணம் செய்து வைத்தான். இரண்டு அண்ணன்களுக்கும் வளைகுடா நாட்டில் வேலை வாங்கித் தந்தான். தம்பிக்கு சாந்தாம் பாறையில் ஏலத்தோட்டம் வாங்கித் தந்தான். அப்பா பெயரிலும் அம்மா பெயரிலும் கோதமங்கலத்தில் இரண்டு கட்டடங்கள் வாங்கினான். தந்தையின் பெயரில் மூன்று டாட்டா லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ரைஸ் மில்லை வளைகுடாவில் இருக்கும் அண்ணன் பெயரில் வாங்கினான். குடியிருந்த ஓலைக்குடிசையின் இடத்தில், அதை மாற்றி அன்றைய நிலவரப்படி ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் மிகப்பெரிய மாளிகை எழுப்பினான். அவனுக்கு வேலை கிடைத்தபோது குடும்பத்திற்கென்று இருந்தது வெறும் ஒன்றேகால் ஏக்கர் நிலம்தான். அவனின் தந்தை கிராம அலுவலகத்தில் இருந்து பென்ஷன் வாங்க இன்னும் ஒரு வருடம் இருந்தது. கட்டடங்கள், நிலம், வண்டிகள்- தவறான காரியங்கள் மூலம் அவன் சம்பாதித்தது இதோடு நின்றுவிடவில்லை. பாபு தன்னைச் சுற்றிலும் பார்த்தான். "இதோடு இருக்கிறது என்னுடைய லைப்ரரி" என்பது மாதிரி தனக்கென்று இருக்கும் லைப்ரரியை மிகவும் பெருமையுடன் அவன் பார்த்தான். புத்தக அலமாரிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. எல்லா சுவர்களையும் புத்தக அடுக்குகள் மறைத்திருந்தன. மேலே இருக்கின்ற அடுக்கில் இருந்து புத்தங்களை எடுக்கப் பயன்படும் சக்கரங்கள் மாட்டப்பட்ட ஏணி- அலுமினியத்தால் ஆனது. அறையின் நடுவில் விரிப்பின்மேல் இருக்கும் கண்ணாடி போடப்பட்ட மேஜை. அதற்கு அருகில் ரிவால்லிங் சேர். எல்லா அலமாரிகளிலும், ஷெல்ஃப்களிலும் ஏராளமான புத்தகங்கள். அவன் சொந்தத்தில் என்னென்ன புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டானோ- மலையாளம், ஆங்கிலம்- இரண்டு மொழிகளிலும்- எல்லாவற்றையும் வாங்கிக் குவித்திருந்தான். ஆசை ஆசையாக- ஒவ்வொரு புத்தகத்தையும் அவன் வெறித்தனமாக வாங்கினான். டெல்லியில் இருந்தும், பம்பாயில் இருந்தும், ஏன் - சில புத்தகங்களை வெளிநாடுகளில் இருந்தும்கூட அவன் வாங்கினான்.
புத்தக அலமாரிகளைக் கைகளால் தொட்டவாறு பாபு, அறைக்குள் நடந்தான். இதோ... ரமண மகரிஷியின் உரை அடங்கிய பெரிய பெரிய புத்தகங்கள்... ப்ராய்ட், பொற்றெக்காட், தகழி, பாண்டிச்சேரியில் அன்னை உரையாற்றியவற்றின் தொகுப்புகள், நார்மன் ஓ. ப்ரவுன், காஸ்தநேதா, எலியட், ஒயிட்ஹெட், பஷீர், குமாரனாசான், சி.ஜெ. தாமஸ், எம்.டி., காந்திஜியின் நூறு நூல்கள், நியூரம்பர்க் விசாரணைகளைப் பற்றிய ரெக்கார்டுகள், ஜெ. கிருஷ்ணமூர்த்தி, வி.டி., வைலோப்பிள்ளி, சி.வி.ராமன்பிள்ளை, சங்கரக்குருப்பு, ஆரோக்கிய நிகேதனம், கேரளத்தில் பறவைகள், மலபாரில் சிக்கார், டால்கியன், மாரார், ஆயிரத்தொரு இரவுகள், குரான், பைபிள் மொழிபெயர்ப்புகள், காரூர், எம்.கோவிந்தன், ஸ்ரீராமகிருஷ்ணரின் உரைகள்...
பாபு தன் புத்தகங்கள் முன்னால் தலைகுனிந்து நின்றுகொண்டு சொன்னான்: "நான் தப்பான காரியங்கள் செஞ்சு சம்பாதிச்ச பணத்தை வச்சுத்தான் உங்களை எனக்குச் சொந்தமாக்கினேன். அது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது. உங்களுக்குள்ளே தெய்வம் மறைஞ்சிருக்கு. அது மட்டும் எனக்குத் தெரியும். அதைப் பலமுறை உங்கக்கிட்ட இருந்து நானே தெரிஞ்சிருக்கேன். இருந்தாலும், காலேஜ் லைப்ரரியில் உங்களைப் பத்திரமா பாதுகாக்குற வேலையில் நான் இருந்தப்போ, நான் தவறான செயல்களில் ஈடுபடணும்னு முடிவு செஞ்சப்போ நீங்க ஏன் எனக்கு அறிவுரை சொல்லல? சாதாரணமாக திறந்து கிடக்கிற ஒரு தாள்ல இருக்கிற வார்த்தைகள் மூலம் எனக்குப் புரிய வச்சாலே போதுமே! இல்லாட்டி ஷெல்ஃப்ல இருந்து கீழே விழுற ஒரு புத்தகத்தோட மடிஞ்சுபோன பக்கத்தின் மூலம் எனக்கு செய்தி சொன்னாக்கூட சரியா இருந்திருக்குமே! இல்லைன்னா யாராவது தாளை வச்சு அடையாளம் காண்பிச்சிருக்கற, அடிக்கோடிட்டிருக்கிற வரிகள் போதுமே! தெய்வத்தைப்போல, உங்களோட வாசகனான என்கிட்ட மவுனமா இருந்திட்டீங்களே! என்னைக் காப்பாத்த வேண்டியது உங்களோட கடமை கிடையாதா?''
மீண்டும் பாபு நாற்காலியில் வந்து உட்கார்ந்தான். விளக்கு வெளிச்சத்தை அதிகமாக்கினான். தன்னைச் சுற்றிலும் அமைதியாக நின்று கொண்டிருந்த புத்தக அலமாரிகளை இன்னொரு முறை பார்த்த அவன் ஒரு டைரியைக் கையில் எடுத்தான். தன் தவறான குற்றச் செயல்களின் ஆரம்ப நாட்களில் எழுதப்பட்ட தாள்களைப் புரட்டினான்:
"1990 ஆகஸ்ட் 6. அனஸ்டேஸ்யாவிடம் நான் சொன்னேன்: "நானொரு சிறிய குற்றவாளியாக ஆகப்போறேன். இப்படித்தான் நான் ஆகணும்ன்றதுக்கான விதை முன்பே விதைக்கப்பட்டாச்சு." அணுகுண்டு, பிராத்தனைக்கு வெளியே இருப்பது என்று சொன்னாள் அனஸ்டேஸ்யா. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்து இன்றோடு நாற்பத்து ஆறு வருடங்கள் ஆகின்றன. இதை நான் அவளிடம் சொன்னேன். வரலாற்றை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன? ஒவ்வொரு கணத்திலும் அதை நாம் ஞாபகத்தில் கொண்டு வந்தே ஆகவேண்டியிருக்கிறது. ஆனால், பலரும் அதை மறந்து போகிறார்கள். வெடிகுண்டு வெடித்த இடத்தில் கொஞ்ச நஞ்சம் மீதியிருந்ததில் ஒரு சர்ச்சின் வாசலும், அதில் இருந்த சிலுவையும் அடங்கியிருந்தது. இதையும் நான் அனஸ்டேஸ்யாவிடம் சொன்னேன். இதில் ஏதாவது அர்த்தத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று அனஸ்டேஸ்யாவிடம் நான் கேட்டிருக்கலாம். ஆனால், கேட்கவில்லை!"
பாபு அடுத்த நாள் எழுதியிருந்த விஷயத்திற்குப் போனான்:
"1990 ஆகஸ்ட் 7. முதல் முறையாக நேற்று இரவு நான் ஒரு இன்பக் கனவு கண்டேன். எங்களின் பேரி மரத்தின் கீழே இருக்கிற கிளையில் அமர்ந்திருந்த ஒரு அழகான பெண் பேரிக்காயைத் தின்றவாறு காலாட்டிக் கொண்டிருக்கிறாள். அவள் என்னைக் கை காட்டி அழைத்தாள். நான் அவள் அருகில் போய் நின்றேன். அவளின் ஒரு கால் என் தலை முடிமேல் பட்டு என் உடலெங்கும் இன்ப அதிர்வை உண்டாக்கிக் கொண்டிருந்தது. தன் கையிலிருந்த பேரிக்காயைக் கடித்து, ஒரு துண்டை எடுத்து என் வாயில் அவள் வைத்தாள். நான் வாயைத் திறக்கவில்லை. என்ன நினைத்தாளோ, ஒரு காலால் என் முகத்தில் ஓங்கி மிதித்தாள். அடுத்த நிமிடம் உரக்க சத்தமிட்டவாறே என் தோள்கள் வழியே தன் இரண்டு கால்களையும் என் முதுகுப் பக்கம் தொங்குமாறு செய்து என்னை இறுக கட்டிப்பிடித்தாள். என் கழுத்தில் அவள் மிகவும் பலமாகப் பிடித்திருந்தாள். அவளின் பறந்துகொண்டிருந்த புடவையை உயர்த்தி, அதைக்கொண்டு என் தலையை மூடினாள். அவள் அடுத்த நிமிடம் அலறினாள். அப்போது அவளின் அடிவயிறு குலுங்கியது. அவளின் அடிவயிறுக்கு காப்பிப் பூவின் மணம் இருந்தது. என்னை ஏதோ நனைத்ததுபோல் உணர்ந்தேன். அவ்வளவுதான் - திடுக்கிட்டு எழுந்தேன். எனக்கு வெட்கமாகவும், பயமாகவும் இருந்தது. என்னால் சரியாக மூச்சுவிட முடியவில்லை. மூச்சு அடைப்பது போல் இருந்தது. அதற்குப்பிறகு என்னால் உறங்க முடியவில்லை. இன்று அதிகாலையில் நான் படுக்கையை விட்டு எழுந்ததும், கட்டியிருந்த வேஷ்டியையும், போர்த்தியிருந்த போர்வையையும் நீரில் அலசி காயப் போட்டேன். உடம்புக்கு சோப்பு போட்டு நன்றாகக் குளித்தேன். எல்லாம் முடிந்ததும், தேங்காய் வெட்டுவதற்காக நாங்கள் பயன்படுத்தும் பெரிய அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து அந்த பேரிக்காய் மரத்தின் கிளையை வெட்டிக் கீழே போட்டேன். "நீ ஏன்டா அந்தக் கிளையை தேவை இல்லாம வெட்டுறே?" என் தாய் கேட்டாள். "அது ஏற்கெனவே காய்ஞ்சுபோய் இருந்துச்சு அம்மா. அதனாலதான்..." நான் சொன்னேன். வெட்டிப் போட்ட கிளையைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு மூக்கில் விரல் வைத்தவாறு என் தாய் சொன்னாள்: "உனக்கு பைத்தியம் கியித்தியம் பிடிச்சுப் போச்சாடா பாபு?"
பாபு டைரியை மூடினான். விளக்கை அணைத்தான். ஒரு மூலையில் போய் நின்று ஜன்னல் வழியே நிலா வெளிச்சத்தைப் பார்த்தவாறு இப்படி பிரார்த்தனை செய்தான்: "என் தெய்வமே... உன்னோட சின்ன குற்றவாளி நான். நீ எனக்கு அணுகுண்டோட சூட்சுமத்தைத் தர்ற வரை எனக்கு பைத்தியம் கிடையாது. அதுவரை நான் என் மனசாட்சிப்படி நடப்பேன்..."
அவன் எழுந்து அலமாரிகளுக்கு மத்தியில் தடவித் தடவிப் போய் தன் படுக்கையறைக்குள் நுழைந்தான்.
எம்.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது, பாபு டைரியில் இப்படி எழுதி இருந்தான்:
"வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய கருத்து என்னவென்றால் - வெறுமனே அதை மரணத்தில் கொண்டுபோய் விட்டுவிடக் கூடாது என்பதுதான். மரணத்தைத் தவிர, இன்னும் எவ்வளவு விஷயங்கள் இந்த எல்லையற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகத்தில் இருக்கின்றன! இத்தனை வருடங்கள் ஆகியும் வாழ்க்கையால் இந்த உண்மையை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? சிலர் சொல்வார்கள் பரிணாமம் என்று. பரிணாமத்தின் வாசல்தான் மரணம்! நீண்ட காலமாக நடக்கும் பரிணாமத்தால் எனக்கும் உங்களுக்கும் என்ன லாபம்? கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு ஜுராஸிக் சதுப்பு நிலங்களில் ஊர்ந்து நடந்த ஒரு ஜந்து நான் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னை நகத்தை வைத்துக் கீறிவிட்டு குட்டி டினோஸர் குதித்துப் பாயும்போது, பத்து கோடி வருடங்களுக்குப் பிறகு நான் மனிதனாவேன் என்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நம்மைப் போன்றவர்களுக்கு தேவைப்பட்டால் பத்து வருடங்களிலேகூட இந்தப் பரிணமாம் சாத்தியமாகலாம்!"
கொள்ளையடிப்பதுதான் தன்னுடைய பாதை என்பதைத் தேர்ந்தெடுத்தபோது, பாபு இந்த டைரிக் குறிப்பை எடுத்துப் பார்த்தான். அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்: "சாதாரண ஒரு லைப்ரரி ப்யூன் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டுமென்றால் அவனுக்கு முதலில் தேவை குறுகிய கால பரிணாமம். அதற்குத் தேவை பணம். காரணம்- குறுகிய கால அளவில் அவன் வாழ்க்கையில் பரிணாம வளர்ச்சியைப் பெற வேண்டுமென்றால் அதற்கு கட்டாயம் தேவை ஒன்று என்றால்- அது நிச்சயம் பணம் மட்டுமே. ஆன்மிகப் பாதைகள் இருக்கலாம். அவை என்னை மட்டுமே காப்பாற்ற முடியும். ஆனால், பணம்? என்னையும் என்னைச் சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றும். பத்து கோடி வருடங்கள் ஒரு நல்ல பாயசம் குடிப்பதற்காகக் காத்துக் கிடக்கும் அவல நிலையிலிருந்து நிச்சயம் அது எல்லாரையும் காப்பாற்றும். ஏன் என் நாட்டிற்கும் மட்டும் பரிணமா வளர்ச்சியில் ஒரு இடமே இல்லாமல் போய்விட்டது? என்ன காரணத்தால் ஒவ்வொரு பெரிய பரிணாம வளர்ச்சியும் இங்கு நடக்காமல் உலகத்தில் வேறு எங்கோ நடக்கிறது? இங்கு பணம் உண்டாக்கப்படுவதில்லை. ஆனால், அபகரிக்கப்படுகிறது! இங்குள்ள எல்லாருமே இருக்கும் பரிணாம வளர்ச்சியிலேயே திருப்தியடைந்து விடுகின்றனர். விஞ்ஞானமும் செல்வமும் பரிணாமத்தின் வானவில்லை உலகத்தின் வேறு எங்கோ உண்டாக்கிவிட்டிருக்கின்றன.
அங்கேயுள்ளவார்கள் க்ளோனிங், உலகப் பயணம் என்று போய்விட்டனர். ஆனால்..." பாபு ஒருவித சிலிர்ப்புடன் சொன்னான்: "இங்கே நமக்கு பரிணாமத்தின் ஒரு பயங்கர இயந்திரம் இருக்கிறது. வேறு எங்கோயிருந்து கடத்திக் கொண்டு வந்து இங்கு உண்டாக்கப்பட்டிருக்கும் ஒரு ரகசிய இயந்திரம் அது!"
பாபு வேகமாக அனஸ்டேஸ்யாவைத் தேடிச்சென்றான்.
அனஸ்டேஸ்யா கண்ணாடியைக் கழற்றி, கண்களை உருட்டியவாறு பாபுவைப் பார்த்தாள்.
பாபு சொன்னான்: "சிஸ்டர்... அணுகுண்டைப் பற்றி நாம பேசியதே இல்லியா? எனக்கு ஒரு விஷயம் தோணுது...''
அனஸ்டேஸ்யா, பாபு பேசட்டும் என்று காத்திருந்தாள்.
பாபு கேட்டான்: "சிஸ்டர், பரிணாமத்தில் தெய்வம் இருக்கா?''
அனஸ்டேஸ்யா சொன்னாள்: "தெய்வம் எல்லாத்திலயும் இருக்கு!''
பாபு சொன்னான்: "சிஸ்டர்... ஒவ்வொரு அணுகுண்டு வெடிப்பும் உயிர் உற்பத்தி அம்சங்களை சின்னாபின்னமாக்கி விடுதே!''
அனஸ்டேஸ்யா அவன் சொன்னதை ஒப்புக்கொண்டாள்.
பாபு தொடர்ந்தான்: "இதுல தெய்வத்தோட பங்கு என்ன?''
"சரி.... பாபு, உனக்கு ஏன் திடீர்னு அணுகுண்டைப் பத்திய சிந்தனை வந்சுச்சு?''
பாபு சொன்னான்: "நான் எனக்காக ஒரு குறுகிய கால பரிணாமத் திட்டத்தைத் தயாரிக்கிற வேலையில் இருந்தேன். அப்பத்தான் இந்த சிந்தனையெல்லாம் குறுக்கே வருது. உண்மையா சொல்லப்போனா, நான் கொள்ளையடிக்கிறதைப் பற்றிய சிந்தனையில இருந்தேன்!''
அதைக்கேட்டு அனஸ்டேஸ்யா லேசாக சிரித்தாள்: "பாபு, நான் உனக்காகப் பிரார்த்தனை செய்றேன். சரிதானா?''
பாபுவும் அவள் சொன்னதைக் கேட்டுச் சிரித்தான். "பிரார்த்தனை பண்றப்போ அணுகுண்டை மறந்திடக்கூடாது, சிஸ்டர். காரணம்- பரிணாமம் இல்லாத சில இடங்கள்ல அணுகுண்டுதான் பரிணாமத்தோட வேலையைச் செய்யுது...''
பாபு மீண்டும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். ஒரு சிறிய குற்றவாளியைப் பொறுத்தவரை, கொள்ளையடிப்பதைத் தாண்டி அவன் வேறு எதையும் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னென்ன தேவையோ, எல்லாமே அதன்மூலம் ஒருவருக்குக் கிடைக்கும். பணம்- கடுமையான முயற்சியாலும், உழைப்பாலும், திட்டத்தாலும் கிடைக்கூடிய ஒரு சுகம். கொள்ளையடிக்கப்படுகின்ற ஆள்மீது உண்டாகின்ற பெயர் தெரியாத உறவிற்குப் பின்னால் மறைந்திருக்கும் சாகசம், உழைப்பு, பரிணாமம்... இவை பாபுவிற்குப் பிடித்திருந்தது. அதனால்தான் அவன் அதைத் தேர்ந்தெடுத்தான்.
1996ஆகஸ்டு 6-ஆம் தேதி பாபு சிறையில் இருந்தான். குற்றவாளியாக வேண்டும் என்று அவன் முடிவெடுத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. சிறைக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன.
பாபு அருகில் இருந்த சத்யானந்தனைப் பார்த்தான். அவன் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். விசேஷ பூஜை நடத்துவதாகச் சொல்லி, பிரசவத்திற்குத் தயாராக இருக்கும் பெண்களை ஏமாற்றி அவர்களின் மார்பகங்களில் பால் குடித்ததற்காகவும், அவர்களின் உடம்பில் வெண்ணெய்யைத் தேய்த்து நாவால் நக்கியதற்காகவும் அவன் குற்றவாளி அங்கியை அணிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாபு, சத்யானந்தனைத் தொட்டுக் கூப்பிட்டான்.
சத்யானந்தன் தூக்கத்தை விட்டு எழுந்து, பாபுவைப் பார்த்தான்.
பாபு சொன்னான்: "சத்யானந்தா, நீங்க உண்மையிலேயே சந்நியாசியா?''
சத்யானந்தன் சொன்னான்: "நான் சந்நியாசிதான்.''
"எனக்கொரு சந்தேகம். கேட்கட்டுமா? உண்மையா பார்க்கப் போனா, தெய்வம்தானே உலகத்திலேயே பெரிய கொலையாளி! பூகம்பம்... ப்ளேக்... வைரஸ்... எரிமலை... கற்பனைக்கெட்டாத வேகத்தில் பலகோடி மக்களை அழிக்கக்கூடிய சக்தி தெய்வத்துக் கிட்டத்தானே இருக்கு!''
சத்யானந்தன் தன்னுடைய நீளமான சுருண்ட முடியைக் கையால் தடவினான். தன் அழகான முகத்தில் இருந்த தாடி ரோமத்தை திரும்பத் திரும்ப கையால் தடவிக் கொண்டான். பதிலாக ஒன்றும் சொல்லவில்லை.
பாபு தொடர்ந்தான். "எனக்கு கடவுளைப் பார்த்தா பொறாமையா இருக்கு. தெய்வம் உயிர்களைக் கொன்னா, அது குற்றம் கிடையாது. அதே காரியத்தை நான் செஞ்சா, நான் குற்றவாளி. இது எப்படி இருக்கு?''
சத்யானந்தன் சொன்னான்: "பாபு, தெய்வம் உயிர்களைக் கொல்றப்போ, அந்தக் காரியம் குற்றமில்லாத ஒண்ணுன்னு நினைக்கிறதுக்குக் காரணம் இருக்கு. அது என்னன்னா, தெய்வம் எப்பவும் உயிர்களை அழிச்சுக்கிட்டே இருக்குறது இல்ல. அது தொடர்ந்து உயிர்களைப் படைச்சுக்கிட்டும் இருக்கு. நீங்க ஒரு ஆளைக் கொல்றீங்கன்னு வச்சுக்கோங்க. அதே நேரத்துல உங்களால ஒரு உயிரைப் படைக்க முடியுமா? ஒரு குழந்தையை உருவாக்கணும்னா கூட உங்களுக்கு ஒரு பெண் தேவைப்படுறா. இதுதான் உண்மை. புரிஞ்சுக்கணும்.''
பாபு சொன்னான்: "சத்யானந்தா, நீங்க செஞ்சது என்ன? குழந்தைகள் குடிக்க வேண்டிய பாலை நீங்க திருட்டுத்தனமா கொஞ்சம் குடிச்சீங்க... வேற யாரோ அந்தப் பெண்களோட உடம்பைத் துடைச்சு சுத்தமாக்கணும். அந்த வேலையை நீங்களே செஞ்சீங்க. என்னை எடுத்துக்கிட்டா... நான் கொள்ளையடிச்சு பணம் சம்பாதிச்சேன்.
வாழ்க்கையைப் பத்திய உங்களோட எண்ணம் என்னன்னு எனக்குத் தெரியாது. என்னோட லட்சியம் என்ன தெரியுமா? அணுகுண்டுகளின் சொந்தக்காரனா நான் ஆகணும்- இதுதான் நான் மனசுக்குள்ள ஆசைப்படுறது. தெய்வத்தைப்போல வேகமாவும் தெளிவாவும் உயிர்களை முடிக்கக்கூடிய சக்தி என் கையில இருக்கணும். ஆனா, நான் ஒரு புத்தகப் புழுவா இருந்ததால, அணுகுண்டைப் பத்திய ஒரு புத்தகத்தைப் படிச்சேன். அன்னைக்கு ராத்திரி என்னால தூங்கவே முடியல. என்னோட மூத்திரம், மலம், வியர்வை, கண்ணீர்- இவற்றால் நான் படுத்திருந்த பாயே நாறிப்போயிடுச்சு. அந்த நிகழ்ச்சிதான் என்னோட வாழ்க்கையையே திசை மாத்திவிட்டுடுச்சு. ஆனா, பொறாமையும் விருப்பங்களும் சில நேரங்கள்ல மீண்டும் மனசுல தோணத்தான் செய்யுது!''
சத்யானந்தன் லேசாகச் சிரித்தவாறு, தன்னுடைய பெரிய கண்களால் பாபுவையே உற்றுப் பார்த்தான். அவன் சொன்னான்: "பாபு, உங்க மனசுல. இருக்கிற லட்சியம் மாதிரியே என்கிட்டயும் இருந்திருக்கு. நான் நாக்கால நக்கி துடைச்ச பெண்களை அப்படியே கழுத்தை நெரிச்சுக் கொன்னுடலாமான்னு பல நேரங்கள்ல நினைச்சிருக்கேன். ஆனா, அதுக்கு பதிலா... ஒவ்வொரு தாயோடும் நிதானமா, முழுமையான ஈடுபாட்டோடு, அன்புவயப்பட்டு உடல் உறவு கொண்டேன்றதுதான் உண்மை. அதை மட்டும் அவங்க யாருகிட்டயும் சொல்லல...''
சத்யானந்தன் புன்சிரிப்பு தவழ தொடர்ந்தான்: "பாபு, உங்களோட வாழ்க்கையில பெண்கள் இல்ல... அதுதான் பிரச்சினையே. அவங்ககூட நெருங்கிப் பழகினா அணுகுண்டு ஏன் தெய்வமா மாறுச்சுன்றதை நீங்க சிந்திக்கவே மாட்டீங்க...''
பாபு சொன்னான்: "என் வாழ்க்கையிலேயே எனக்குத் தெரிஞ்ச பெண் ஒரே ஒருத்திதான். அவள்கிட்டதான் நான் தெய்வத்தைப் பத்தியும், அணுகுண்டைப் பத்தியும் பேசுறதே. அதைத் தாண்டி அவள்கிட்ட எனக்கு எந்த வேலையும் இல்ல...''
"கஷ்டம்!'' சத்யானந்தன் சொன்னான்: "உங்களுக்கு நல்லது நடக்கட்டும். நம்மளைப் பொறுத்தவரை சின்னச் சின்ன குற்றங்கள் செஞ்சு வாழ்ந்தா போதும். என்னைப் பொறுத்தவரை, அணுகுண்டை விட எனக்குப் பிடிச்சது ஒரு பெண்ணோட முலைக்காம்புதான்...''
1990செப்டம்பர் 30 முதல் 1993 டிசம்பர் 25 வரை பாபு தவறான பாதையில் தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான்.
செப்டம்பர் 30-ஆம் தேதி பாபு கல்லூரியின் சம்பளப் பையை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு அதில் தோல்வியைச் சந்தித்தான். அவனது முதல் குற்றச்செயலே அதுதான். சம்பளப் பையைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தபோது, அவன் மனதில் ஒரு குழப்பம் இருக்கவே செய்தது. சிஸ்டர் அனஸ்டேஸ்யாவின் சம்பளமும் அதில்தானே இருக்கிறது. அதோடு பாபுவிற்குச் சேரவேண்டிய சம்பளமும். அப்போது பாபு ஒரு முடிவு செய்தான். அனஸ்டேஸ்யாவின் சம்பளப் பணத்தைத் தனியாக எடுத்து வைக்க வேண்டும். தன் சம்பளத்தையும்தான். மீதி இருப்பது கொள்ளையடித்துப் பெறும் பணம். அனஸ்டேஸ்யாவின் சம்பளப் பணத்திற்கு புத்தகங்களை வாங்கிக் கொடுத்துவிட அவன் தீர்மானித்தான்.
பாபு திட்டமிட்டபடி சம்பளப் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டுமென்றால், அதற்கு இரண்டு பேரின் உதவி கட்டாயம் வேண்டும். சம்பளப் பையுடன் அட்டெண்டர் மாத்யூ வரும் ஆட்டோ ரிக்ஷாவை வழியில் தடுத்து நிறுத்த ஒரு ஆள். அப்படி தடுத்து நிறுத்துவது ஒரு விபத்துபோல, பார்க்கும்போது தெரியவேண்டும். அதற்காக பாபு தள்ளுவண்டியில் வறுத்த வேர்க்கடலை விற்கும் ஒரு தமிழ் பேசும் பையனை ஏற்பாடு பண்ணியிருந்தான். வண்டிக்கு ஒரு விலை போட்டு அவனுக்கும் ஒரு கூலி பேசி- மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி அவனுக்கு ஐம்பது ரூபாய் முன்பணமாகத் தந்தான். அட்டெண்டர் மாத்யூவை விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்- அதே நேரத்தில் க்ளோரோஃபார்ம் நனைத்த துணியை மாத்யூவின் முகத்தில் காட்டுவதன் மூலம் அவனை மயக்கமடையச் செய்து, சம்பளப் பணம் கொண்ட பையை எடுத்துக்கொண்டு ஒரு காரில் படுவேகமாகப் பாய்ந்து செல்ல வேண்டும் என்று சொல்லி, ஹெட் கான்ஸ்டபிள் திவாகரனின் தம்பி டாக்ஸி டிரைவர் பத்மனை இந்த வேலைக்கு பாபு அமர்த்தி இருந்தான். அதற்காக பத்மனுக்கு பாபு பேசியிருந்த கூலி பத்தாயிரம் ரூபாய். பத்மன் எர்ணாகுளத்தில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருக்கும் ஆள் என்பதால் அவனை இங்கு யாருக்குமே அடையாளம் தெரியாது. அவனும் பாபுவும் சிறுவர்களாக இருந்தபோது, பத்மனின் தந்தை, தாயோடு அவனை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார். அப்போதிருந்து பத்மன் தன் தாயுடன் எழுபது கிலோமீட்டர் தூரத்தில் எர்ணாகுளத்தில்தான் இருக்கிறான். திவாகரன் தன் தந்தையுடன் இங்கேயே இருந்து விட்டான். விடுமுறைக் காலங்களில் தந்தையைப் பார்க்க வருகிற போது, பாபு பத்மன் கூறுகிற எர்ணாகுளம் சம்பந்தப்பட்ட கதைகளை ஆர்வத்துடன் கேட்டவாறு, அவனுடன் ஆற்றில் நீந்திக் குளித்து மகிழ்ச்சியடைவான். போலி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பத்மன் சொல்லியிருந்தான். மெத்ரானச்சனின் வீட்டிற்கு முன்னால்தான் இடம் பரந்து காணப் பட்டது. சாலையும் சற்று அகலமாக இருந்தது. தான் நினைத்த காரியத்தை நடத்துவதற்கு அந்த இடமே சரியான இடம் என்று நினைத்தான் பாபு. தவிர, அங்குதான் பாபு யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருப்பதற்கேற்ற ஒரு இடமும் இருந்தது. மாத்யூ ஏறிவரும் ஆட்டோ ரிக்ஷாவைச் சற்று தூரத்தில் பார்த்ததும், தள்ளுவண்டி தமிழ்ப் பையனுக்கு மறைவிடத்தில் இருந்து சைகை காட்டுவான் பாபு. பையன் அடுத்த நிமிடம் ஆட்டோவை நோக்கி தள்ளு வண்டியை வேகமாகக் கொண்டு செல்வான். அதேநேரத்தில் சற்று தூரத்தில் காரை நிறுத்தியிருக்கும் பத்மன் காருடன் பக்கத்தில் வருகிறான். பாபு வேகமாக அடுத்த வளைவைத் தாண்டி நடந்து போகிறான். பத்மன், காருக்குள் மயக்கமடைந்து கிடக்கும் மாத்யூவுடனும் சம்பளப் பணம் கொண்ட பையுடனும் வருகிறான். பாபு, காரில் ஏறுகிறான். சற்று தாண்டி ஒரு ஒதுக்குப்புறமாக வந்தவுடன் மாத்யூவை ஒரு மர நிழலில் இறக்கிப் போட்டுவிட்டு, ஓடிப்போவதற்கு முன்பு, பத்மனுக்கு பத்தாயிரம் ரூபாய்- செய்த காரியத்திற்காக கூலி தருகிறான் பாபு. பையில் இருந்த மீதி ரூபாய் நோட்டுகளை, புத்தகக் கடையின் பெயர் போட்டிருக்கும் இரண்டு ப்ளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுகிறான். பத்மன் ஆற்றங்கரை வழியே வண்டியைச் செலுத்தி, பாபுவை கல்லூரியைத் தாண்டி இறக்கிவிட்டு, அந்த இடத்தை விட்டு காருடன் வேகமாகச் செல்கிறான். பாபு புத்தகப் பைகளுடன் லைப்ரரிக்குச் சென்று ஸ்டோர் ரூமைத் திறந்து அங்கே ஒரு மூலையில் போட்டு வைத்திருக்கிற பழைய இன்டெக்ஸ் பீரோவைத் திறந்து அதற்குள் பணத்தை வைத்துப் பூட்டுகிறான். அனஸ்டேஸ்யாவிடம் இரண்டு மணி நேரம் வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தான் பாபு. அந்த நேரம் இன்னும் முடியவில்லை.
ஆனால் மெத்ரானச்சனும் பெரியம்மாவும் சேர்ந்து பாபுவின் முதல் குற்றச் செயலை ஒரு படுதோல்வியான விஷயமாக மாற்றி விட்டார்கள் என்பதுதான் உண்மை. பாபு தமிழ்ப் பையனுக்கு சைகை காட்டியதும், மெத்ரானச்சனின் கருப்பு நிற 118- என்.ஈ. கார் கேட்டைக் கடந்து சாலைக்குத் திரும்பியதும் ஒரே நேரத்தில் நடந்தது. அப்போது பெரியம்மாவும், பெரியம்மாவைவிட வயதான இன்னொரு பெண்ணும், ஒரு இளம்பெண்ணும் சாலையோரத்தில் நின்று மெத்ரானச்சனின் காரைப் பார்த்து கையை ஆட்டி என்னவோ சொல்கிறார்கள். 118 என்.ஈ. சாலையின் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டு நிற்கிறது. பின்பக்க கறுப்பு பக்கவாட்டுக் கண்ணாடி இறங்குகிறது. பெரியம்மாவும், அவருடன் நின்றிருந்தவர்களும் என்னவோ சொல்லியவாறு காருக்குப் பக்கத்தில் போகிறார்கள். இரத்தினக்கல் ஒளிவீசும் ஒரு கை வெளி நோக்கி நீள்கிறது. பாபு அந்த ஒளிரும் ரத்தினக்கல்லையே மறைந்திருக்கும் இடத்திலிருந்து பார்க்கிறான். அவனுக்கு அழுகை வருகிறது. ஆனால், அடக்கிக் கொள்கிறான். அப்போது மெத்ரானச்சனின் காருக்குப் பக்கத்தில் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்த வேர்க்கடலை தமிழ்ப் பையனின் வண்டியைத் தாண்டி, மெத்ரானச்சன்மீது கொண்ட மரியாதை காரணமாக, வேகத்தைக் குறைத்தவாறு அட்டெண்டர் மாத்யூவின் ஆட்டோ ரிக்ஷா கடந்து போகிறது. ஆட்டோவில் உட்கார்ந்திருக்கும் மாத்யூ, மடக்கிக் கட்டியிருந்த வேஷ்டியை மெத்ரானச்சனைப் பார்த்ததும் கீழே இறங்கிவிடுவதை ஒளிந்திருந்த இடத்திலிருந்தே பாபு கவனிக்கத் தவறவில்லை. அதற்குப் பிறகு நடந்ததுதான் மிகவும் கேவலமானது. மாத்யூவின் ஆட்டோ முன்னோக்கிச் செல்லும்போது அவனின் கண்கள் பாபுவைப் பார்க்கின்றன. மாத்யூவின் முகத்தில் ஒரு பிரகாசம். அடுத்த நிமிடம் டிரைவரின் முதுகில் லேசாகத் தன் கையால் தட்டிய மாத்யூ, வண்டியைச் சற்று நிறுத்தச் சொல்லிவிட்டு, பாபுவைப் பார்த்துக் கையை ஆட்டியவாறு, "சீக்கிரமா வா" என்றான்.
தொடர்ந்து எதுவும் பேசாமல் கையில் இருக்கும் பையைக் காட்டி, விரைவாக வரும்படி கையால் சைகை காட்டுகிறான் அவன். பாபு சாலையின் குறுக்காக ஓடி, ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி மாத்யூவிடம், "மெத்ரானச்சன் எங்கே போறாரு?" என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, ஆட்டோ கல்லூரி வாசலில் போய் நிற்கிறது. மாத்யூ ஆஃபிஸை நோக்கியும், பாபு லைப்ரரி பக்கமும் போகிறார்கள். அனஸ்டேஸ்யா படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை விட்டு தலையை உயர்த்தாமல் கேட்டாள்: "இவ்வளவு சீக்கிரம் வேலை முடிஞ்சிடுச்சா, என்ன?" அதற்கு பாபு சொன்னான்: "ஆமா... முடிஞ்சிடுச்சு!"
நடந்த சம்பவத்தை நினைத்தபோது பாபு மிகவும் வெறுப்படைந்து விட்டான். தான் நினைத்தபடி காரியம் நடக்காமல் போய் விட்டதே என்பதற்காக அல்ல. தான் போட்டிருந்த திட்டத்தில் எப்படியெல்லாம் ஓட்டைகளும் குழப்பங்களும் இருந்திருக்கின்றன என்பதை நினைத்தபோதுதான் தன்மீதே அவனுக்குக் கோபமாக வந்தது. எந்த நம்பிக்கையை வைத்து வேர்க்கடலை விற்கும் தமிழ்ப் பையனையும், டாக்ஸி டிரைவர் பத்மனையும் இந்தக் காரியத்தைச் சாதிக்கப் பயன்படுத்த நினைத்தோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தபோது, பாபுவிற்குச் சரியான பதிலே கிடைக்கவில்லை. உண்மையாகப் பார்க்கப் போனால், கொள்ளையடிக்கும் சாகசச் செயலில் பெரும் பங்கு வகிப்பவன் பத்மன். பாபுவைப் பொறுத்த வரை- கிட்டத்தட்ட அவன் ஒரு பார்வையாளன். அவ்வளவுதான். பத்மன், அவனுக்கு பாபு தருவதாகச் சொன்ன பத்தாயிரம் ரூபாயைக் கேட்டு நச்சரித்தபோதுதான் தன்னுடைய நிலையை எண்ணி அவனுக்கே அவமானமாக இருந்தது. பாபு அவனிடம் சொன்னான்: "பத்மா, என் கையில பணம் இருந்தா, நான் ஏன் இந்தக் காரியத்துல இறங்கப் போறேன்? நீயே நினைச்சுப் பாரு. நான் என்னைக்காவது ஒருநாள் நிச்சயம் உனக்கு அந்தப் பணத்தைத் தருவேன்.''
அன்று இரவு பாபு தன் டைரியில் எழுதினான்: "கொள்ளையடிக்க நினைப்பவன் ஒரு தனியளாக இருக்க வேண்டும். அவனுக்குக் கூட்டாளிகள் இருக்கக்கூடாது. அவன் தான் மட்டும் தனியே இருந்து எந்த மாதிரி தவறான செயல்களைச் செய்ய முடியுமோ, அதை மட்டுமே செய்ய முயற்சிக்க வேண்டும். கொள்ளையடிக்கும் செயலைப் பொறுத்தவரை, அது ஒரு கூட்டுக் கலை அல்ல."
நான்கு வருடங்கள் கழித்து பத்மன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தபோது, நீதிபதி கேட்டார்: "பிரதி உங்களுக்குத் தருவதாகச் சொன்ன பத்தாயிரம் ரூபாயைத் தந்தாரா?''
பத்மன் தயக்கத்துடன் சொன்னான்: "இல்ல...''
"சுத்தப் பொய்..." பாபு தனக்குள் சொன்னான். இருந்தாலும் தனக்குள் மீண்டும் சொல்லிக்கொண்டான்: "அப்படிச் சொன்னதுனால ஒண்ணும் ஆகப்போறதில்ல..."
தமிழ்ப் பையனை போலீஸ்காரர்கள் வலைவீசித் தேடினார்கள். ஆனால், அவன் அந்த ஊரைவிட்டு என்றோ போய்விட்டிருந்தான். அவனை பாபு, மீண்டும் ஒருநாள் பார்த்தான்- பல நூறு கிலோ மீட்டர்கள்தாண்டி- ஒரு இடத்தில்.
பிரபலமான தங்க வியாபாரியின் உயர்ந்த சுவர்களுக்குள் அமைந்திருக்கும் பளிங்கு மாளிகையில் கொள்ளையடித்துவிட்டு, பாபு தன் கையில் இருந்த சூட்கேஸின் கனத்தைத் தாங்க முடியாமல் உடம்பெங்கும் வியர்வை அரும்பி வழிய, மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு வெளியே குதித்துப் போவதற்கு வசதியான ஒரு இருண்ட மூலையைத் தேடி வந்தான். அப்போது மங்கலான நிலவொளிக்குக் கீழே, ரோமன் பாணியில் உருவாக்கப்பட்டிருந்த பூந்தோட்டத்தின் தூண்கள் ஒன்றின் நிழலுக்குப் பின்னால் இருந்து ஒரு உருவம் லேசாக அசைந்தது. பாபு உண்மையிலேயே பயந்து போய்விட்டான். எனினும், மேலும் கீழும் மூச்சு விட்டவாறு அந்த உருவத்தையே உற்றுப் பார்த்தான்.
யாரோ ஒரு மனிதன் வெளியே தாண்டிப் போவதற்காக மூலையில் குனிந்து உட்கார்ந்திருக்கிறான்- இப்படித்தான் நினைத்தான் பாபு. சிறிது நேரம் சென்றபிறகுதான் தெரிந்தது அது மனிதனல்ல- ஒரு பெரிய நாய் என்று. பாபுவையே உற்றுப் பார்த்த அந்த நாய் வாலை உயர்த்திக்கொண்டு- காதுகளை அகல விரித்துக்கொண்டு எந்தவித ஓசையும் எழுப்பாமல், அதே நேரத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட பாபுவின் இடுப்பு வரை அந்த நாய் இருந்தது.
பெட்டியைக் கீழே போட்டுவிட்டு ஓடி விடுவதுதான் சரியான செயல் என்று பாபுவிற்குப் பட்டது. ஆனால், பெட்டியில் இருக்கும் பணத்தை நினைத்துப் பார்த்தபோது அப்படி ஓடிவிட மனமில்லை அவனுக்கு. என்னதான் நடக்கட்டுமே- ஒரு கை பார்த்துவிடுவோம் என்று போருக்கு அவன் தயாரானான். உடம்பில் சக்தியை வரவழைத்துக்கொண்டு இரண்டு கைகளிலும் சூட்கேஸை எடுத்து தலைக்குமேலே உயர்த்திப் பிடித்தவாறு பாபு இரண்டடி முன்னால் வைத்தவாறு சொன்னான்: "போ நாயே!'' அப்போது நாயும் இரண்டடி முன்னால் வந்தது. அதன் கண்கள் வைரக்கற்கள்போல மின்னின.
வியர்வையும் மூச்சும் சேர்ந்து பாபுவின் உடலில் ஒருவித களைப்பை உண்டாக்கின. அடுத்த நிமிடம்- பெட்டி பாபுவின் கையைவிட்டு தரையில் "பொத்" என்று போய் விழுந்தது. பாபு நிற்க முடியாமல் தரையில் அமர்ந்து பெட்டியின்மீது தலையை வைத்துச் சாய்த்தான். நாய் மேலும் இரண்டடி முன்னால் வந்து ஒரு நிமிடம் அப்படியே அசையாமல் நின்றது. கண்களில் ஒளி வீச பாபுவிற்கு நேராக அமைதியாக அடி வைத்து அது வந்தது.
"என் தெய்வமே!'' பாபு சொன்னான்: "எனக்குத் தேவையான பலத்தைக் கொடு!'' நாய் பாபுவின் அருகில் வந்து நின்று அவனையே பார்த்தது. தன் கழுத்தில் இன்னும் சில நொடிகளில் பதியப்போகும் நாயின் பற்களை மனதில் கற்பனை பண்ணியவாறு அமர்ந்திருந்தான் பாபு. ஒரு நிமிடம் அனஸ்டேஸ்யாவின் முகத்தை அவன் மனதில் நினைத்துப் பார்த்தான் அணுகுண்டுக்கும் தெய்வத்திற்கும் இடையே உள்ள உறவைப்பற்றி இன்னும் சிஸ்டர் கண்டுபிடிக்கவில்லை. இருக்கட்டும். அதற்காக என்ன செய்ய முடியும்.
அப்போது குளிர்ச்சியான மென்மையான ஏதோ ஒன்று பாபுவின் காதில் பட்டது மாதிரி இருந்தது. பாபு தலையைச் சாய்த்து என்னவென்று பார்த்தான். நாயின் மூக்கு அது. "ஓ... என் தெய்வமே!'' பாபு சொன்னான். நனைந்த ஏதோ ஒன்று பாபுவின் நெற்றியில் ஊர்வது மாதிரி இருந்தது. என்னவென்று பார்த்தால்... நாய் அவனை நக்கிக்கொண்டிருந்தது. பாபு லேசாகத் தலையை உயர்த்திப் பார்த்தான் நாய் வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. காதுகள் மடங்கி இருந்தன. பாபு அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். அந்த அளவிற்கு அவன் உடலில் களைப்பும் தளர்ச்சியும். என்ன செய்வது என்று தெரியாமல் அவன் நாயையே உற்றுப் பார்த்தான்.
அப்போது நாய் குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னது: "சார்... எனக்கு உதவி செய்ய முடியுமா? நான் சின்னக் குட்டியா இருக்குறப்பவே என்னை ராஜபாளையத்துல இருந்து இங்கே கொண்டு வந்துட்டாங்க. என்னோட அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு சார்... எனக்கு உதவி செய்வீங்களா?'' என்று சொல்லியவாறு அந்த நாய் பாபுவின் கையை நக்கியது. பாபு வானத்தைப் பார்த்தான். மேகங்களுக்குப் பின்னால் சந்திரன் மறைந்து கொண்டு ஒளியைத் தந்துகொண்டிருந்தான். "என்னோட சந்திரா!'' பாபு சொன்னான்: "உன்னோட நிலைமை இப்படி ஆயிப்போச்சா?'' அப்போது நாய் மெல்லிய குரலில் சொன்னது: "சார்... எனக்கு உதவ முடியுமா? ராஜபாளையத்துக்குப் போய் நான் என்னோட அம்மாவைப் பார்க்கணும்...''
பாபு எழுந்து சூட்கேஸைக் கையில் எடுத்தவாறு நின்றான். நாயைப் பார்த்துச் சொன்னான்: "சரி... நான் உனக்கு உதவுறேன். எனக்கு சரியா வழி தெரியாது. ஆளுங்கக்கிட்ட விசாரிச்சுக்கிட்டே போவோம். சரியா?'' பதில் சொல்வதற்குப் பதிலாக நாய் பாபுவின் கைகளை மீண்டும் நக்கியது.
அன்று இரவு முழுவதும் பாபு, இரவலாகப் பெற்ற மாருதி வேனை ஓட்டிக்கொண்டே இருந்தான். முன் இருக்கையில் பாபுவிற்குப் பக்கத்தில் மூக்கை வெளியே நீட்டியவாறு நாய் உட்கார்ந்திருந்தது. நாய் நிலவைப் பார்த்தது. இருட்டை அனுபவித்தது. காற்றை நுகர்ந்தது. இடைப்பட்ட நேரத்தில் நாக்கைத் தொங்கப்போட்டு இளைத்தது. ஆரியங்காவைக் கடந்து செல்லும்போது பாபு பாடினான்:
"ஆரியங்காவிலே காற்று வந்து ஒரு விஷயம் கேட்டது- அது என்ன?''
நாயும் அவனோடு சேர்ந்து பாடியது.
செங்கோட்டையைத் தாண்டி குற்றாலத்திற்குப் போகிற திருப்பம் வந்தபோது, பாபு சொன்னான்:
"குற்றாலத்துக்குப் போவோமா?''
"வேண்டாம்...'' நாய் சொன்னது: "என்னோட அம்மா காத்திருக்கும்...''
பாபு தென்காசியைத் தாண்டி படு வேகமாகக் காரைச் செலுத்தினான். பின்னால் இருக்கைக்குக் கீழே தங்க வியாபாரியின் சூட்கேஸ் இப்படியும் அப்படியுமாய் ஆடியது. வாசுதேவநல்லூரைக் கடந்தபோது, நாய் சொன்னது: "என்னோட ஊர் மணம் வர ஆரம்பிச்சிடுச்சி.''
ராஜபாளையத்தை அடைந்ததும் பாபு வண்டியை நிறுத்தினான். வெயில் பயங்கரமாகத் தகித்துக்கொண்டிருந்தது. சுற்றிலும் தூசு பறந்தது.
மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தனர். பாபு நாயைக் கேள்விக்குறியுடன் பார்த்தான். நாய் சொன்னது. "நன்றி சார்... இனி நான் போய்க்கிறேன்...''
"இனி நாம பார்ப்போமா?'' பாபு கேட்டான். "இல்ல சார்...'' நாய் சொன்னது: "என்னோட விதி என்னை கேரளத்துக்குக் கொண்டு போயிடுச்சு. தங்கத்துக்குக் காவலா போட்டுச்சு. மழையையும், பசுமையான மரங்களையும் விதி என்னைப் பார்க்க வச்சுச்சு. உங்களோடு விதி என்னை வீட்ல கொண்டு வந்து சேர்ந்திடுச்சு. சார்... உங்களுக்கு நல்லது நடக்கட்டும்...''
பாபு கதவைத் திறந்தான். நாய் வெளியே குதித்தது. அடுத்த நிமிடம்- மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்து மறைந்து போனது. அப்போது பாபு, வண்டியின் திறந்த கதவுக்கு அருகில் நின்றிருந்த தள்ளுவண்டியைப் பார்த்தான். தள்ளுவண்டிக்குப் பின்னால் உட்கார்ந்து வறுத்த வேர்க்கடலை விற்கும் பையனைப் பார்த்தான். வண்டியை ஒரு ஒரத்தில் நிறுத்திவிட்டு வந்த பாபு அந்தப் பையனிடம் கேட்டான்: "என்னை ஞாபகமிருக்காடா?'' "அய்யா!'' அவன் ஒரு கையால் வாயை மூடிக்கொண்டு, பூதத்தைக் கண்டதுபோல பாபுவையே வெறித்துப் பார்த்தான். "அய்யா...'' அவன் மீண்டும் சொன்னான். பிறகு கொஞ்சம் கடலையை எடுத்து இரண்டு கைகளாலும் பவ்யமாக பாபுவிடம் நீட்டினான். "அய்யா... நீங்க என் வீட்டிலயே தங்கலாம். இங்க போலீஸ் வரமாட்டாங்க. ஸ்டேஷன்ல என்னோட அண்ணன் பெருக்குற வேலை பார்க்குறாரு. அதனால, அய்யா... நீங்க பயப்படவே வேண்டாம்.'' மெதுவான குரலில் பேசினான் பையன்.
"நான் அதுக்காக வரல...'' பாபு அவனின் தோளில் கை வைத்தவாறு சொன்னான். பையன் சூடாக இருந்த தன்னுடைய ஒரு கையைத் தூக்கி பாபுவின் கையில் பிரியத்துடன் வைத்தான்.
"நீ ஒரு நிமிஷம் என்கூட வா...'' பாபு சொன்னான். அந்தப் பையன் பக்கத்தில் இருந்த இன்னொரு தள்ளுவண்டிக்காரனிடம், "இதோ நான் வர்றேன்'' என்று சொல்லிவிட்டு பாபுவைப் பின்தொடர்ந்தான்.
வேனுக்குள் இருந்த சூட்கேஸைத் திறந்து ஒரு பெரிய ரத்தின மாலையைக் கையில் எடுத்தான் பாபு. அதை அந்தத் தமிழ்ப் பையனின் இரண்டு கைகளையும் பிடித்து வைத்துக்கொள்ளுமாறு சொன்னான்: "காத்திருக்கிற ஒரு அம்மாதான் என்னை இங்கே கொண்டு வந்தது. அதனால உன்னை நான் இங்கே சந்திச்சேன். இதோட விலை ரொம்பவும் பெரிசு. விக்கிறப்போ ரொம்பவும் கவனமா பார்த்து விக்கணும்.'' அந்தப் பையன் பாபுவின் பாதத்தைத் தொட்டு தலையில் வைத்தான். "அய்யா... உங்களை தெய்வம் நல்லா வச்சிருக்கணும்'' என்றான் பையன்.
திரும்பி வரும்போது ஆரியங்காவின் மலைப்பாதையின் குளிர்ந்த காற்று மேனியைத் தொட, ராஜபாளைய நாயைப்போல மணத்தை நுகர்ந்தவாறு பாபு தன்னை மறந்து பழைய ஒரு சினிமா பாட்டை ஜாலியாக முணுமுணுத்தவாறு வண்டியைச் செலுத்தினான்.
பாபு மிகவும் அதிகமாகச் சம்பாதித்தது திருமண வீடுகளில் நடத்திய கொள்ளைகளில்தான். வரதட்சணைப் பணம், தங்க நகைகளின் எடை போன்ற விஷயங்களை அவள் நேரடியாகத் தெரிந்து வைத்திருந்த, அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமான மனிதர்களின் வீட்டிலேயே பெரும்பாலும் அவன் இந்தக் கொள்ளைகளை நடத்தினான். பாபு பொதுவாக இரண்டு வகை முகமூடிகளைப் பயன்படுத்தினான். ஒன்றில் சிரித்துக் கொண்டிருக்கும் முகம். இன்னொன்றில் அழுதுகொண்டிருக்கும் முகம். அழுது கொண்டிருக்கும் முகத்தை அவன் வங்கிகளிலும், தனியார் முதலீட்டு நிறுவனங்களிலும், டாக்டர்கள், அரசியல்வாதிகள், வக்கீல்கள் ஆகியோரின் வீடுகளிலும் கொள்ளையடிக்கும்போது பயன்படுத்தினான். சிரித்துக் கொண்டிருக்கும் முகத்தை அவன் திருமண வீடுகளுக்கு ஒதுக்கி வைத்தான்.
திருமண வீடுகளில் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இரவு நேரத்தில் நுழைய மாட்டான் பாபு. மறுநாள் மணமகனும், மணமகளும் திருமண வீட்டை விட்டுப் புறப்படுவார்கள் என்பதையும், கொள்ளையடிக்க இரவு நேரம் எந்தவிதத்தில் பார்த்தாலும் பொருத்தமானது என்பதையும் நன்கு தெரிந்திருந்தாலும், பாபு இரவு நேரங்களில் வீட்டுக்குள் நுழைவதை முழுமையாகத் தவிர்க்கவே செய்தான். உள்ளறையில் தான் பார்க்க வேண்டி நேரிடுகிற நிர்வாணத்தையோ, தேவையில்லாத உணர்ச்சிகளின் வெளிப்பாட்டையோ சந்திக்க அவனுக்கு விருப்பமில்லாததே காரணம்.
பாபு ஒரே முறைதான் நிர்வாண கோலத்தில் பெண்ணைப் பார்த்திருக்கிறான். நகரத்தில் நடந்த அகில இந்திய கண்காட்சியில் மருத்துவக் கல்லூரிக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டாலில், மக்கள் பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது கறுத்துப்போன ஒரு பெண்ணின் உடல். அந்த உடலில் வயிற்றின் நடுவில் கீறி ஒரு பக்கம் மடக்கி விட்டிருந்தார்கள்.
வயிற்றுக்குள் ஒரு சிவப்புத் தாளில் என்னவோ எழுதி ஒட்டியிருந்தார்கள். கர்ப்பம் தரிக்காத ஒரு பெண்ணின் கர்ப்பப்பை. பாபு சில நிமிடங்கள் அந்தப் பெண்ணின் உடலையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு என்ன நினைத்தானோ, கவுன்டரில் வெள்ளை உடையணிந்து நின்றிருந்த மருத்துவ மாணவியிடம் கேட்டான்: "இந்தப் பெண் யார்?'' அவளுக்கு மலையாளம் தெரியாததால் பதில் எதுவும் கூறாமல் வெறுமனே நின்றிருந்தாள். அதற்கு பதிலாக அவள் பெண்ணின் உடலைப் பற்றித் தனக்குத் தெரிந்தவரை விஞ்ஞானபூர்வமாக விளக்கிக் கொண்டிருந்தாள்.
பாபு அன்று சிஸ்டர் அனஸ்டேஸ்யாவிடம் சொன்னான்: "சிஸ்டர்... ஒரு உடலை எப்படி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு படிக்கக் கொடுப்பது? நான் என்னோட உடலைக் கொடுக்க விரும்புறேன்!''
அதற்கு அனஸ்டேஸ்யா சொன்னாள்: "பாபு, இவ்வளவு சீக்கிரமா உன்னோட உடலைக் கொடுக்கணும்ன்ற தீர்மானத்துக்கு வந்திட்டியா? செத்துப்போன பிறகாவது ஒரு உடலுக்கு ஓய்வு வேண்டாமா?''
பாபு சொன்னான்: "சிஸ்டர்... உங்களோட உடல் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?''
அனஸ்டேஸ்யா சொன்னாள்: "நிச்சயமா... இல்லாட்டி நான் எப்படி வாழ முடியும்?''
பாபு சொன்னான்:
"சிஸ்டர், குண்டு என்னோட உடலுக்குள் நுழைஞ்சதும், அதை நானே காறி வெளியே துப்பினதும் நடந்த அந்த பயங்கரமான ராத்திரிக்குப் பிறகு எனக்குன்னு ஒரு உடல் இருக்குறதா நான் நினைக்கல. நம்ம யாருக்குமே உடல்னு ஒண்ணு தேவையில்லை- குண்டு சொல்ற பாடம் இதுதான். நாம வெறும் அணுக்களா இருந்தாலே போதும்....''
அனஸ்டேஸ்யா, பாபு சொன்னதைக் கேட்டு லேசாகச் சிரித்தாள். கண்ணாடியைக் கழற்றி, கண்களைத் திறக்கவும் மூடவுமாக இருந்தாள்.
பாபு தொடர்ந்தான்: "தெய்வம் அணுவாக இருக்கலாம்னு சிஸ்டர், உங்களுக்குத் தோணுதா?''
அனஸ்டேஸ்யா இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததுபோல் இருந்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சொன்னாள்: "ஒரு வேளை இருக்கலாம். யாருக்குத் தெரியும்?''
அனஸ்டேஸ்யா தன் மேஜைக்குப் பின்னால் போய் அமர்ந்து கையால் கண்களை மூடி, அவற்றுக்கு ஓய்வு கொடுக்கத் தொடங்கினாள்.
ஆணும் பெண்ணும் சேர்ந்து, ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி என்பது மாதிரி ஒருவர் உடலை ஒருவர் தேடிப்பிடித்து. அவை ஒன்று சேருவதன் மூலம் ஆனந்தம் அடையக்கூடிய சமாச்சாரம் தனக்கு ஒத்துவராத ஒன்று என்பதைத் தீர்க்கமாக நம்பினான் பாபு. ஒருவேளை அவர்களைப் பார்த்து உடல்ரீதியான உறவுகளின் முக்கியத்துவமில்லாமையைப் பற்றி, தன்னுடைய சிரிக்கும் முகமூடிக்குப் பின்னால் இருந்து தான் பேசவேண்டிய சூழ்நிலை வரலாம் என்று எண்ணினான் அவன். பெண்ணின் உடல் பெண்ணுக்கும் ஆணின் உடல் ஆணுக்கும் உரியது. அவற்றை ஒன்று சேர்ப்பதற்காக உலகில் ஏன் இந்த பரபரப்பு? ஆர்ப்பாட்டம்? எதற்கு தங்க நகைகளும், ஆடம்பர விருந்தும், படுக்கையறையும், பூக்களும்? ஈடுபாடு, உணர்வுகளோடு இருக்க வேண்டும். உடல்களுடன் அல்ல. உடல்கள் அழிந்து போனால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரே ஒருமுறை தவறுதலாக, பாபு ஒரு முதலிரவு அறைக்குள் நுழைந்து விட்டான். தன் மனதில் இன்றும் அவன் மறக்காமல் இருக்கும் ஒரு தோல்விச் சம்பவம் அது. காப்பி பூவின் மணம் "குப்" என்று மூக்கில் பட்டவுடன் உண்மையிலேயே அவன் அதிர்ச்சியடைந்து போனான். இருட்டை ஊடுருவிக்கொண்டு பார்த்தபோதுதான், அந்த மணம் வருவது அங்கிருக்கும் முல்லைப்பூ மாலைகளில் இருந்து என்பதே அவனுக்குப் புரிய வந்தது. அதோடு ரோஜாப் பூச்செண்டுகள் வேறு. பெரிய பெரிய சூட்கேஸ்கள் திறந்து கிடந்தன. பளபளப்பான ஆடைகள் இங்குமங்குமாய் சிதறிக் கிடந்தன. அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் யாருமே இல்லை என்ற பிறகுதான் பாபுவிற்கு நிம்மதியே வந்தது. அறையில் யாருமே இல்லை. பாபுவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மெதுவாக சூட்கேஸ்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான். கால் எதிலோ பட்டது மாதிரி இருந்தது. பார்த்தால்- கீழே மனித உடல்கள். அவ்வளவுதான்- ஒருசிறு சத்தத்துடன் பின்னால் சாய்ந்தான் பாபு. பளபளப்பான கற்கள் பதித்த தரையை விட்டு மணமகனும், மணமகளும் திடுக்கிட்டு நிர்வாண உடல்களுடன் எழுந்து நின்றார்கள். பாபு தன் கையில் இருந்த விளையாட்டுத் துப்பாக்கியை நீட்டியவாறு சொன்னான்: "பயப்படாதீங்க... நான் உங்களோட நகைகளை மட்டும்தான் எடுக்கப் போறேன். உங்களை ஒண்ணும் பண்ண மாட்டேன். முதல்ல நீங்கள் ஏதாவது ஆடைகளை அணிஞ்சுக்கோங்க. ஆமா... நீங்க ஏன் தரையில போய் படுத்திருக்கிங்க?''
அவர்கள் இருவரும் போர்வையை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டார்கள். பாபுவின் சிரித்துக்கொண்டிருக்கும் முகமூடியையே உற்றுப் பார்த்தார்கள்.
பாபு சொன்னான்: "மார்பிள் தரை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்ல. நகைகளை ஒரு பையில் போட்டு சீக்கிரமா என்கிட்ட தாங்க. பொதுவா பூக்களோட வாசனையே எனக்குப் பிடிக்காது!''
அவர்கள் அலமாரியைத் திறந்து நகைகளை எடுத்து ஒரு சிறிய சூட்கேஸில் போட்டார்கள். பாபுவின் செயலை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள்.
பாபு சூட்கேஸை எடுப்பதற்காக அவர்களை நோக்கி நடந்தான். திடீரென்று அவன் பாதங்கள் தரையில் வழுக்கின. வழுக்கியதில் அவன் வேகமாகப் போய் அவர்களின் கால் அருகில் விழுந்தான். வழுவழுப்பான ஏதோ ஒன்றில் தன் பாதம் பட்டது மட்டும் பாபுவிற்கு ஞாபகத்தில் வந்தது. பாபு கீழே கிடந்தவாறு தலையைத் தூக்கி அவர்களைப் பார்த்தான். அவர்கள் ஓசையே இல்லாமல் குலுங்கிக்
குலுங்கிச் சிரித்தார்கள். எவ்வளவு முயற்சி செய்தும், அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"ஆமா... அது என்ன?'' பாபு அவர்களிடம் கேட்டான்.
அவர்கள் அப்போதும் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
பாபு தன் பொம்மைத் துப்பாக்கியை எடுத்தான். முகமூடியைச் சரிப்படுத்தினான். காலை இரண்டு மூன்று முறை தரையில் தேய்த்து சுத்தமாக்கினான். பிறகு அவர்களிடம் சொன்னான்: "என்ன காரியத்தைச் செஞ்சீங்க. இந்தப் படுக்கை எதற்கு? ஒருவேளை கட்டில்ல இருந்து ரெண்டுபேரும் கீழே விழுந்துட்டீங்களா? உங்களுக்கே வெட்கமா இல்ல...? உங்களைக் கொள்ளையடிக்கிறதே எனக்குக் கேவலமா தெரியுது. நான் புறப்படுறேன்....''
தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பாபு அங்கேயிருந்து வெளியேறினான்.
புகழ்பெற்ற ஒரு ஜோதிடரின் வீட்டில் கொள்ளையடிக்க, என்ன முகமூடி அணிந்தால் சரியாக இருக்கும் என்று பாபு சிந்தித்தான். கடைசியாக அழுதுகொண்டிருக்கும் முகமூடியை அணிந்து புறப்பட்டான். ரத்தினக்கற்களையும் தங்கத்தையும் பணத்தையும் எடுத்துத் தந்தபோது, ஜோதிடர் அழுதார். பாபு அந்த ஆளின் தோளைத் தட்டிக் கொடுத்தவாறு சொன்னான்: "அழவேண்டாம்.
நீங்க எனக்கு அணுகுண்டோட ஜாதகத்தை எழுதித் தந்தா, இது எல்லாத்தையும் திருப்பி உங்க கையிலேயே கொடுத்துர்றேன்!'' குண்டு என்று கேட்டதுதான் தாமதம்- நிலத்தில் உருண்டு போய் என்னவெல்லாமோ உளறியவாறு அறையின் ஒரு மூலைக்கே போய்விட்டார் மனிதர். அப்போது அவருக்குப் பின்னால் போன பாபு கொள்ளையடித்ததில் பாதியை எடுத்து அவரின் அருகில் வைத்துவிட்டுச் சொன்னான்: "இந்தாங்க... பாதியைத் திருப்பித் தர்றேன். எனக்கு பாதி போதும். குண்டோட ஜாதகம்- என்னோட வேலை!''
திரைப்பட நடிகையின் வீட்டில் கொள்ளையடிப்பதற்காகப் போனபோது பாபு சிரிக்கும் முகமூடியை அணிந்துகொண்டு போனான். நடிகை அப்போது உறங்கிக் கொண்டிருந்தாள். பாபு அவளைத் தொட்டு எழுப்பினான். அவள் கேட்டாள்: "நீங்க என்னைக் கொன்னுடுவீங்களா?'' பாபு சொன்னான்: "இல்ல....'' அந்த நடிகை சொன்னாள். "சிரிச்சிக்கிட்டு இருக்குற இந்த முகமூடியைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. அதுக்குப் பின்னாடியும் நீங்க சிரிக்கிறீங்களா என்ன?'' பாபு சொன்னான்: "இல்ல... நீங்க பயந்துபோய் கத்தவே இல்லியே என்ன காரணம்?'' அவள் சொன்னாள்: "நான் பயந்தா கத்த மாட்டேன். மனசுல சங்கடம் உண்டானாத்தான் கத்துவேன்.''
பாபு அவளருகில் சென்று அவளிடம் சொன்னான்: "கொஞ்சம் கண்களை மூடுங்க...'' அவள் கண்களை மூடினாள். அவன் முகமூடியைக் கழற்றி அவளின் முகத்தில் வைத்து, அதன் கண்களுக்கான ஓட்டைகளை மூடிக்கொண்டு சொன்னான்: "கண்ணைத் திறக்கக்கூடாது. இது ரகசியமா இருக்கட்டும். நான் போறேன். இந்த முகமூடி உங்கக்கிட்டயே இருக்கட்டும்...''
திரும்பிப் போகும்போது, பாதையில் சினிமா போஸ்டரில் சிரித்தவாறு உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் முகத்தையே ரொம்ப நேரம் உற்றுப் பார்த்தான் பாபு.
"உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாகக் கொடுப்பதைப் பற்றி பாபு, ஒருமுறை என்னிடம் பேசினாய் அல்லவா? நானும் அதைப் பற்றி சமீபத்தில் சிந்தித்தேன். என்னால், என் உடலை தானம் செய்ய முடியாது. கன்யாஸ்திரீகளைப் பொறுத்தவரை அவர்களின் உடலைக் காட்சிப்பொருளாக வைக்கக்கூடாது என்றொரு விதி இருக்கிறது- செத்துப்போன உடலாக இருந்தால் கூட. ஆனால், என் கண்களை தானமாகக் கொடுத்துவிட நான் பிரியப்படுகிறேன்.
யாருக்காவது நான் மரணமடைந்தபிறகு அவை பயன்படட்டும். உடலுக்குள் இருக்கும் உறுப்புக்களைகூட மற்றவர்களுக்கப் பயன்படும் பட்சம், நான் இறந்த பிறகு அவற்றை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
அணுகுண்டு விஷயத்தில் தெய்வத்தின் பங்கு என்ன என்பது குறித்து இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், பாபு... உனக்குக் கிடைத்த அனுபவங்கள் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை நான் பிரார்த்தனை செய்வதால் அது இருக்கலாம். உண்மையான அணுகுண்டில் இருந்து பிரார்த்தனை என்னைக் காப்பாற்றுமா என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். (இது ஆபத்தான சிந்தனைதான். தெய்வம் என்னை மன்னிக்க வேண்டும்). குண்டைப் பற்றி நான் படித்த புத்தகங்களில் ஒரு புத்தகத்தில் ஒரு படத்தைப் பார்த்தேன். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் எஞ்சி இருப்பவற்றில் ஒரு சர்ச் வாசலும், ஒரு சிலுவையும் அடக்கம். எனக்கு உண்மையிலேயே இதன் அர்த்தம் புரியவில்லை. யாருக்காக அந்தச் சிலுவை அங்கு இருக்கிறது? அணுகுண்டு போட்டவர்களுக்காகவா அல்லது அணுகுண்டுக்கு இரையானவர்களுக்காகவா? இல்லாவிட்டால் இனிமேல் அணுகுண்டுக்கு இரையாகப் போகிறவர்களுக்காகவா?"
முதல் பரோலில் வீட்டிற்கு வந்த பாபு, அனஸ்டேஸ்யா அவனுக்காக சிறைக்கு எழுதிய கடிதங்களில் ஒன்றை எடுத்துப் படித்துப் பார்த்தான். அனஸ்டேஸ்யாவை கல்லூரிக்குப் போய்ப் பார்க்க வேண்டும்போல் இருந்தது பாபுவிற்கு. அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் அவன் சிந்திக்காமல் இல்லை. ஒரு சிறு குற்றவாளிகூட தான் விருப்பப்படுகின்ற இடங்களுக்குப் போவதோ, பிரியப்படுகிற ஊர்களுக்குப் பயணம் செய்வதோ முடியாத காரியமாகிவிடுகிறது. காரணம்- அவன் மற்றவர்களுக்கு ஒரு காட்சிப் பொருள் மாதிரி ஆகிவிடுகிறான். குற்றவாளி தனக்கென்று இருக்கும் சில சுதந்திரச் செயல்களை வெட்டிவிட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அவன் எப்படி மற்றவர்களின் சுதந்திரத்தில் கை வைத்தானோ, அதற்கு அவனே பலிகடாவாகவும் ஆகிவிடுகிறான். குற்றவாளி மிகமிக எளிமையாக இருக்க வேண்டும். தான் பெரியவன் என்பது மாதிரி மார்தட்டிச் செயல்படக் கூடாது. "நான் ரகசியமா அழுதுக்கிட்டு இருக்குற ஒரு புழு. உருமாற்றத்தின் ஒரு கட்டம் முடிவடைஞ்சு, அடுத்த கட்டத்திற்காகக் காத்திருக்கிற ஒரு சாதாரண புழு நான்." தனக்குள் சொல்லிக் கொண்டான் பாபு.
1993டிசம்பர் 24-ஆம் தேதி பாதி இரவு முடிவடைந்தது. 25-ஆம் தேதி பிறந்து பின்னிரவு ஒரு மணி இருக்கும். அப்போது தான் பாபு தன்னுடைய கடைசி குற்றச் செயலைச் செய்கிறான். பெரியாற்றின் கரையோரத்தில் இருக்கும் ஒரு கான்வென்ட்டில் நிலம் வாங்குவதற்காக மிகப்பெரிய ஒரு தொகையைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் பாபுவிற்குக் கிடைத்தது. பெரியாற்றின் மணல் திட்டு வழியே- தூரத்தில் கிறிஸ்துமஸ் மணி முழங்குவதையும் பட்டாசுகள் வெடிப்பதையும் கேட்டவாறே- நடந்து சென்ற பாபு கான்வென்ட்டிலிருந்து ஆற்றைக் கடப்பதற்காகப் போடப்பட்டிருந்த சிறு பாலத்தில் அமர்ந்து, நள்ளிரவு பிரார்த்தனைக்காக முழங்கப்படும் மணியோசையை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அசைவே இல்லாத இருட்டில் அசைந்து கொண்டிருந்தவை- தூரத்தில் ஆற்று நீரில் தெரிந்த வானத்து நட்சத்திரங்கள் மட்டுமே. நள்ளிரவு பிரார்த்தனைக்கான மணியடித்து பத்து நிமிடங்கள் ஆன பிறகு, கான்வென்ட்டிற்குள் நுழைந்தான் பாபு. ஆள் நடமாட்டமே இல்லாத கான்வென்ட்டில்- பெண்மணம் கமழும் ஹாலைக் கடந்து ஆஃபீஸ் ரூமைத் தேடி கையில் ஒரு சிறு டார்ச் விளக்குடன் நடந்தான் அவன். அப்போது பாபு அழுது கொண்டிருக்கும் முகமூடியை அணிந்திருந்தான். சிரிக்கும் முகமூடியை திரைப்பட நடிகைக்குக் கொடுத்துவிட்ட பிறகு, புதிய முகமூடி எதுவும் அவன் வாங்கவில்லை. தான் புதிதாக சிரிக்கும் முகமூடியை வாங்கினால், நடிகைக்குப் பரிசாகத் தந்த முகமூடியையே திருப்பி அவளிடம் வாங்குவது மாதிரி அர்த்தமாகிவிடும் என்று எண்ணினான் அவன். சர்ச்சில் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து பாடினர். பாபு மெதுவாக ஒரு அறையின் கதவைத் தள்ளித் திறந்தான். யாருமே இல்லை. விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அறையில் ஒரு மேஜையும் நாற்காலியும் கட்டிலும் மட்டும் இருந்தன. மேஜைமேல் மூன்று நான்கு புத்தகங்களைப் பார்த்தான். எல்லாம் அவன் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. திறந்திருந்த புத்தகத்தைக் கையில் எடுத்துப் பார்த்த பாபு, அடுத்த நிமிடம், ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்ததுபோல் அதைக்கீழே வைத்தான். வி.டி. எழுதிய "கண்ணீரும் கனவும்" என்ற புத்தகம்! அதுவும் பாபுவிற்குச் சொந்தமான புத்தகம்! பாபு நடுங்கியவாறு மேஜைக்குப் பின்னால் தள்ளி நின்றான்.
இப்போது என்ன நடக்கிறது என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. உடல் வியர்வையில் குளித்தது. அழுது கொண்டிருக்கும் முகமூடிக்கு அடியில் கண்ணீர்த் துளிகளைப்போல வியர்வை அரும்பி வழிந்தது. உலகம் அழியப்போகிற நிமிடத்தில் முழங்கும் பெரும் பறையைப் போல அவன் இதயம் "டக் டக்" என்று பலமாக அடித்தது. அவன் ஒரு இயந்திர மனிதனைப்போல வாசல் பக்கம் திரும்பியபோது, அனஸ்டேஸ்யா வாசல் கதவைத் திறந்து கழுவிய முகத்தைத் துண்டால் துடைத்தவாறு உள்ளே வந்தாள். அடுத்த நிமிடம் அனஸ்டேஸ்யா அதிர்ச்சியடைந்து நின்றாள். இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சாந்தமான குரலில் கேட்டாள்: "நீங்க யாரு?'' பாபு தன் குரலைப் பெண்குரலாக மாற்றிக்கொண்டு சொன்னான்: "நான் ஒரு கொள்ளைக்காரி. ம்... ஆஃபீஸ் ரூம் எங்கே இருக்குன்னு சொல்லுங்க!'' அனஸ்டேஸ்யா சொன்னாள்: "நான் இங்கே பண்டிகைக்கு - தியானம் பண்றதுக்காக வந்திருக்கேன். இங்கே எனக்கு எதுவுமே தெரியாது. ஆஃபீஸ் ரூம் எங்கே இருக்குன்னு எனக்குத் தெரியாது.'' பாபு மயக்கமடைகிற நிலையில் இருந்தான். அவன் சொன்னான்: "சிஸ்டர்... எனக்குக் குடிக்க கொஞ்சம் தண்ணி வேணும்''. அப்போது இருந்த பரபரப்பில் அவன் பெண் குரலில் பேச மறந்து போனான். அனஸ்டேஸ்யாவுக்கு மீண்டும் அதிர்ச்சி. அறையின் ஒரு மூலையில் இருந்த ஒரு கூஜாவில் இருந்து ஒரு தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து பாபுவின் கையில் அவள் தந்தாள். அவன் அதைக் குடித்துவிட்டு டம்ளரைத் திருப்பித் தந்தபோது, அனஸ்டேஸ்யா சொன்னாள்: "பாபு.... உனக்கு நல்லா வேர்க்குது... பிரார்த்தனை முடிஞ்சு மற்ற பெண்கள் வர்றது வரை வேணும்னா நீ கொஞ்சம் இங்கே ஓய்வெடுக்கலாம்.''
பாபு மரணநிலையில் இருக்கும் மனிதனைப்போல அப்படியே நாற்காலியில் சாய்ந்தான்.
அனஸ்டேஸ்யா சொன்னாள்: "அந்த முகமூடியைக் கழற்ற வேண்டியதுதானே! ஃப்ரீயா இருக்கும்ல...?'' அதை வாங்குவதற்காக அவள் கைகளை நீட்டினாள்.
"இல்ல... இல்ல...'' பாபு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சொன்னான்: "நான் முகமூடியைக் கழற்ற மாட்டேன்!'' அவன் இரண்டு கைகளாலும் முகத்தை மூடியவாறு நாற்காலியில் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.
அனஸ்டேஸ்யா சொன்னாள்: ""கண்ணீரும் கனவும்" அருமையான புத்தகம்! அதைப் படிக்கக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி!''
சர்ச்சில் மணிகள் முழங்கின. அனஸ்டேஸ்யா நெற்றியில் சிலுவை வரைந்தாள். சில நிமிடங்கள் தலைகுனிந்து நின்றாள். பிறகு சொன்னாள்: "எனக்கு காய்ச்சல். அதனால நான் நள்ளிரவு பிரார்த்தனைக்குப் போகாம இங்கேயே உட்கார்ந்து புத்தகம் படிச்சிக்கிட்டு இருந்துட்டேன். அதனால பாபு... உன்னை இந்தக் கோலத்துல பார்க்க முடிஞ்சது. இதுதான் நீ சொன்ன சின்ன குற்றவாளியா?''
"ஆமா...'' - பாபு தலையை உயர்த்தி அனஸ்டேஸ்யாவைப் பார்த்தவாறு சொன்னான். ஆனால், அவன் மீண்டும் தப்பு பண்ணினான். அவன் இப்போது பெண் குரலில் பேசினான்.
அனஸ்டேஸ்யா அவன் செயலைப் பார்த்துச் சிரித்தாள்: "பாபு, நீ குரலை மாத்திப் பேசுறே பாரு... அது அந்த முகமூடியைவிட எனக்குப் பயத்தைத் தருது...''
பெரியாற்றின் மணல்திட்டு வழியே மீன்களையும், தவளைகளையும், தண்ணீரில் கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும் பார்த்தவாறு பாபு தட்டுத் தடுமாறி நடந்து போனபோது நள்ளிரவு பிரார்த்தனை முடிந்து மணியடித்தார்கள்.
அதற்குப் பிறகு, அவன் ஒருமுறைகூட அனஸ்டேஸ்யாவைப் பார்க்கவே இல்லை.
கிறிஸ்துமஸ் பண்டிகையன்று காலையில் பாபு வர்கீஸ் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தானே போய் சரணடைந்தான்.
1998மே 12-ஆம் தேதி பகல் நேர உணவுடன் ஒரு டம்ளர் பாயசமும் பாபுவிற்குத் தரப்பட்டது. பாயசத்தை வாங்க பாபு கை நீட்டியபோது ஜெயில் சூப்பிரண்டன்டன்ட் பக்கத்தில் வந்து கைகளைத் தட்டியவாறு சொன்னார்: "இன்னைக்கு ஒரு மகிழ்ச்சியான நாள். நேத்து இந்தியா மூணு அணுகுண்டுகள் வெடிச்சிருக்கு. அதைக் கொண்டாடுறதுக்காகத்தான் இப்போ எல்லாருக்கும் பாயசம். இந்த குண்டுகளை வெடிச்சது மூலம் நாம வல்லரசு நாடா வளர்ந்திருக்கோம். இன்னைக்கு சாயங்காலம் அரசோட செயலைப் பாராட்டுற விதத்துல கூட்டமும் சர்வமத நூல்களைப் படிக்கிற நிகழ்ச்சியும் நடைபெற இருக்கு. ஜெய்ஹிந்த்...''
பாபு நீட்டிய கையை பின்னால் இழுத்து, அசையாமல் நின்றான்.
சத்யானந்தன் கேட்டான்: "பாபு, நீ பாயசம் குடிக்கலியா?''
பாபு சொன்னான்: "இல்ல... நான் பரோல்ல போறப்போ என்ன செய்யணும்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்!''
"பாபு, நீ எம்.ஏ. தானே?'' சத்யானந்தன் கேட்டான்.
"ஆமா...''
"என்ன பாடம்?''
"மலையாளம்!''
"உனக்குச் சும்மாவா பரோல் கிடைச்சிருக்கு! எம்.ஏ. படிச்ச ஆள்ன்றதை வச்சுத்தான். நான்கூட சந்நியாசியா ஆகுறதுக்கு பதிலா ஏதாவதொரு விஷயத்தை எடுத்து எம்.ஏ. படிச்சிருக்கலாம்!''
"ஏன்- இனிகூட படிக்கலாமே!'' பாபு சொன்னான்.
"இப்போ முடியாது. சோம்பேறித்தனம் வந்திடுச்சு. சந்நியாசம்ன்றது நல்லா பழகின விஷயமாயிடுச்சு...'' சத்யானந்தன் சொன்னான்.
"பாபு, என்னைக்கு பரோல்ல போறதா இருக்கு?''
"இன்னைக்கு.'' பாபு சொன்னான்.
சிறைக்குள் இருந்தவாறு பாபு, அனஸ்டேஸ்யா எழுதிய கடைசி கடிதத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தான்:
"ரமண மகரிஷியின் நூல்களை வாங்க ப்ரின்ஸிபல் கடைசியாக சம்மதித்து விட்டார். நான் மகரிஷியின் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பதற்கிடையில், பல விஷயங்களையும் நினைத்துப் பார்த்தபோது, நமது பழைய சந்தேகத்தைப் பற்றி என் மனதில் ஒரு எண்ணம் உண்டானது. அணுகுண்டுக்கும் கடவுளுக்குமிடையே உள்ள உறவு பற்றிய விஷயத்தைத்தான் சொல்கிறேன். நான் நினைத்தது இப்படித்தான்: அணுவைப் பிளந்து ஆயுதமாக மாற்றுகிறபோது கடவுளுக்கு மட்டுமே சாத்தியமான வேகமும், தெளிவும், வலிமையும் கொண்ட அழிவு நடக்கிறது. க்வாண்டம் மெக்கானிக்ஸில் இருந்து கடவுள் நம்பிக்கை கொண்ட எனக்குத் தெரிய வருவது இதுதான். கடவுள் இருப்பதாக நாம் நம்பும் பட்சம், ஒவ்வொரு அணுவிலும் உள்ளடக்கமாக இருப்பது கடவுளின் அடிப்படை உருவமே. பெரியதும், சிறியதும், அவற்றுக்கு நடுவில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய துகள்களின் செயல்பாடும்... இவையெல்லாம் சேர்ந்த ஒரு அசைவிற்குப் பெயர்தான் கடவுள். கடவுள் என்பது படைப்பு. கடவுள் தன்னைத்தானே புதிது புதிதாய்- புதுப்பித்துப் புதுப்பித்துப் படைத்துக் கொண்டே இருக்கிறது. அதாவது- கடவுள் ஒரே சமயத்தில் செங்கல்லாகவும் இருக்கிறது. ஆசாரியாகவும் இருக்கிறது. மிட்டோகான்ட்ரியா சங்கிலியில் தன் அடையாளத்தை வெளிப்படுத்தி கடவுள் தன்னைத்தானே கூட்டுவதையும், குறைப்பதையும் செய்துகொண்டிருக்கிறது. இப்படித்தான் பூமியும், நிலவும், மீனும், பசுவும், மரமும், மனிதனும் உண்டானது... மனிதன் அணுவைப் பிளக்கிறான் என்றால், கடவுள் என்ற செங்கல்லை அவன் பிளக்கிறான் என்றே அர்த்தம்.
அதனால்தான் அதற்கு இப்படியொரு சக்தி. கடவுளை மனிதன் பிளந்து ஆயுதமாக மாற்றும்போது, கடவுள் கொலையாளியாக மாறுகிறது. செங்கல்லான கடவுள் தீயாகவும் கொடுங்காற்றாகவும் மாறுகிறது. சிறு பொறியான கடவுள் ஒரு பெரிய எரிமலையாக மாறி ஹிரோஷிமாவுக்கு மேலே படர்கிறது. பாபு, எனக்குத் தோன்றுவது இதுதான். ஆனால், இந்தச் சிந்தனைகளையெல்லாம் தாண்டி நான் பிளக்கப்படாத ஒரு கடவுள்மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பவள் என்பதை பாபு, நீதான் நன்கு அறிவாயே!"
பாபு எழுந்து, புறப்படத் தயாரானான்.
வீட்டில் அவன் சிறிது நேரமே இருந்தான். அனஸ்டேஸ்யாவுக்கு ஒரு குறிப்பு எழுதினான்: "நான் பரோலைப் பயன்படுத்தி ஒரு சிறு பயணம் செல்கிறேன். என்னுடைய சந்தேகத்தைப் போக்கியதற்கு மிகவும் நன்றி. எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டாகத் தொடங்கிவிட்டதோ என்று சந்தேகப்படுகிறேன். ஆனால், எனக்குத் தெளிவில்லாமல் தெரிவது பிளக்கப்பட்ட கடவுள்தான். எல்லாவற்றுக்கும் நன்றி. பிளக்கப்படாத கடவுள், சிஸ்டர், உங்களை ஆசீர்வதிக்கட்டும்!"
புகைவண்டி உதய்ப்பூரின் செங்கல் கட்டடங்களுக்கு நடுவில் பாய்ந்து போகிறபோது, பல வண்ணங்களைக் கொண்ட தலைப்பாக்களையும், புடவைகளையும் அணிந்து தன்னுடன் பயணம் செய்யும் ராஜஸ்தானின் கிராமப்புற மக்களைப் பார்த்தவாறு, பாபு தனக்குள் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தான்.
சிறு குற்றவாளியும் புழுவுமாயிருந்த பாபு, படை வீரர்களின் கண்களில் படாமல் பொக்ரானின் விலக்கப்பட்ட பகுதிக்கு இருளினூடே ஒளிந்து ஒளிந்து போய்ச் சேருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. பத்திரிகைகளிலும், டெலிவிஷன் திரையிலும் பலமுறை பார்த்து, பிரபலமான மணல் மேடுகளும், பிளவுகளும் எதிரே இருக்க, வறண்டு போன மண்ணில் பதுங்கிப் பதுங்கி பாபு தன் பயணத்தைத் தொடர்ந்தான். களைத்துப் போன சந்திரன் மணல் பரப்பின்மீது மங்கலாகத் தன் ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.
மண்ணில் இருந்த பிளவுகளின் எண்ணிக்கையும் ஆழமும் அதிகமாக இருந்தன. ராட்சத மண் அள்ளும் இயந்திரங்கள் பூமியைக் குத்திவிட்டதுபோல் பல இடங்கள் காட்சியளித்தன. அவன் ஒரு பிடி மண்ணை எடுத்து முகத்திற்குப் பக்கத்தில் கொண்டு போனான். "அம்மா!'' அவன் சொன்னான். அடுத்த நிமிடம் மண்ணைக் கீழே போட்டான்.
பத்திரிகைகளும், டெலிவிஷனும் பிரபலப்படுத்திய மணல் குழியில் இறங்கினான் பாபு. அவன் சொன்னான்: "இதுதான் ஆன்மிகக் கல்வி ஆலயம்!''
பாபு தன் தோள் பையைக் கீழே வைத்து நிலத்தில் உட்கார்ந்தான். பையில் இருந்த குப்பியை வெளியே எடுத்து, ஒரு மடங்கு தண்ணீர் குடித்தான். மீதி இருந்ததை மணலில் கொட்டினான்.
பாபு பையில் இருந்து ஒரு பிளேடை எடுத்தான். அவன், மண்ணில் தன் முகத்தை வைத்தவாறு இப்படிச் சொன்னான்: "என் தெய்வமே... ஒரு சிறு குற்றவாளியின் இந்தச் சிறு குற்றத்தை நீ மன்னிக்கணும். என் தவறு... என் தவறு... என்னோட பெரிய தவறு...''
இதைச் சொல்லிவிட்டு மண்ணில் மல்லாக்க படுத்த அவன் முதலில் இடது கையிலும் பின்னர் வலது கையிலும் நரம்புகளை வெட்டினான். பிளேடை பாபு பையில் திரும்ப வைத்தான். பிறகு... வானத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்த சந்திரனையே கண் இமைக்காமல் பார்த்தான். தொடர்ந்து அவன் வாய் முணுமுணுத்தது:
"யாரும் தோழி உலகில் மறைவதில்லை!
தேகம் அழிந்தால் எல்லாம் முடிந்ததா?
உடலுக்கும் ஆவிக்கும்
உறவு முறிந்தது!
துயரமும் முடிந்தது..."
சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமலே, பாபு மயங்கத் தொடங்கினான்.