Logo

பழிக்குப் பழி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7290
paliku pali

"ஜபல்புரி”யில் இருக்கும் மிஸ்டர் ரதிலாலின் வீட்டில்தான் நான் ரமாதேவியை முதல் தடவையாக சந்தித்தேன். அன்று மிஸ்டர் ரதிலாலின் சகோதரி லீலாவதியின் திருமண நாள். விருந்தாளிகள் கிளம்பிப் போவதற்கு முன்பு, பேரழகு படைத்த ஒரு பெண்ணை சுட்டிக் காட்டியவாறு மிஸ்டர் ரதிலால் என்னிடம் கூறினார்: "அதோ... அந்தப் பெண்ணைத் தெரியுமா? அவள் ஒரு காலத்தில் குஜராத்தின் புகழ் பெற்ற கவிதாயினியாக இருந்தாள்.

ஆனால், ஒரு காதல் சம்பவம் அவளை அமைதியானவளாக ஆக்கிவிட்டது. இன்று அவள் ஒரு சமூக சேவகியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு திவானின் மகள். பவனகிரியில் அவள் பிறந்தாள்.''

ஒரு காதல் சம்பவம் அந்த கவிதாயினியை அமைதியானவளாக ஆக்கிவிட்டதா? நான் ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டேன். கேரளத்தை எடுத்துக் கொண்டால் எத்தனைப் பேர் காதல் விஷயத்தில் சிக்கி தற்காலத்திற்காவது கவிஞர்களாக மாறியிருக்கிறார்கள்.

நான் அவளுடைய அந்தக் காதல் கதையைக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். மிஸ்டர் ரதிலால் என்னிடம் கூறினார். "எனக்கு அதைப் பற்றி முழுமையாகத் தெரியாது. ஆனால், நான் உங்களை அவளிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அப்படியென்றால் அவளிடமிருந்தே அந்தக் கதையை உணர்ச்சிப் பூர்வமாக நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே!''

அதைத் தொடர்ந்து மிஸ்டர் ரதிலால் என்னை ரமாதேவியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

மிஸ்டர் ரதிலால் ஜபல்புரியில் ஒரு பெரிய நகை வியாபாரியாக இருந்தார். லீலாவதியின் திருமணத்திற்காக மிஸ்டர் ரதிலால் அவளை பவனகிரியில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைத்து வரும்படி செய்தார்.

திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆனபிறகு, மணமகளின் குடும்பமும் மணமகனும் பேராகட்டில் இருக்கும் புகழ்பெற்ற "மார்பிள் ராக்”கைப் போய் பார்ப்பதற்குத் தயாரானார்கள். அவர்களுடன் வரும்படி அவர்கள் என்னையும் அழைத்தார்கள். ரமாதேவியும் அவர்களுடன் இருந்தாள்.

பேராகட்டில் இருந்த விருந்தினர் மாளிகையில்தான் நாங்கள் தங்கினோம். அன்று முழு நிலவு நாளாக இருந்தது. ஒரு படகில் ஏறி "மார்பிள் ராக்”கைப் பார்த்து விட்டு, இரவு பதினொரு மணிக்கு நாங்கள் திரும்பி வந்தோம். எல்லாரும் உறக்கத்தில் இருந்தார்கள். நானும் ரமாதேவியும் மட்டும் இயற்கையின் அழகைப் பார்த்து ரசித்தவாறு வாசலில் உட்கார்ந்திருந்தோம். அப்போது தன்னுடைய சொந்தக் கதையை அவள் என்னிடம் கூறினாள்.

உமாவிற்கும் எனக்குமிடையே இருந்த நட்பைப் பற்றி சற்று கூறிவிட்டு, நான் என்னுடைய கதையை ஆரம்பிக்கிறேன்.

மிகவும் இளம் வயதிலேயே உமாவும் நானும் தோழிகளாகி விட்டோம். ஆனால், இன்டர்மீடியட் வகுப்பில் படிக்கும்போது எங்களுடைய நட்பு அதன் உச்சகட்டத்தை அடைந்தது. எவ்வளவு வைராக்கியம் கொண்ட ஆணையும் சற்று திரும்பிப் பார்க்கும்படி தூண்டக்கூடிய அசாதாரணமான ஒரு அழகும் ஈர்ப்பும் அவளுக்கு இருந்தது. மெலிந்த உடல், அளவெடுத்ததைப் போன்ற முகம், நல்ல துடிப்பும் சுறுசுறுப்பும் கொண்ட குணம், வாழ்க்கையில் பிரகாசத்தை மட்டுமே பார்க்கக் கூடிய மனம், எப்போதும் நகைச்சுவையுடன் பேச விரும்பும் ரசனை- அந்த

சிவந்த உதடுகளுக்கு மத்தியில் எப்போதும் ஒரு புன்சிரிப்பைச் சேமித்து வைத்திருப்பாள். அவளுடைய கண்களின் ஓரத்தில் எப்போதும் தொந்தரவு செய்யாத சில குறும்புத்தனங்களின் அசையும் ஓவியங்கள் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

நாங்கள் ஒருவரையொருவர் அன்பு செலுத்தியதைப் போல, வேறு இரண்டு பெண்களால் அன்பு கொண்டு இருக்க முடியுமா என்று தோன்றவில்லை. எங்களுக்கிடையே எந்தவொரு ரகசியமும் இருந்ததில்லை. காரணம்- நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்தே ஒரு பெரிய ரகசியமாக இருந்தோம்.

அந்தக் கல்லூரி வாழ்க்கை! கவிதைமீது கொண்ட மோகம் என்னுடைய தலைக்குள் நுழைந்து கொண்ட காலம் அது. உமா, கவிதைக்கு மிகப்பெரிய ஒரு எதிரியாக இருந்தாள். அவள் நடைமுறை வாழ்க்கைக்காக வாதிட்டாள். கவிதையை- அவளுடைய மொழியில் கூறுவதாக இருந்தால் "காற்றில் ஓவியம் வரையும் வித்தை”யை- தன்னால் முடிந்த வரைக்கும் அவள் கிண்டல் செய்து கொண்டிருந்தாள். ஏதாவதொரு புதிய கவிதையின் இறுதி வரி கிடைக்காமல் கவலைப்பட்டு நான் முகத்தை உயர்த்திக் கொண்டு குறும்புத்தனமான முக பாவங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது, என்னுடைய முக வெளிப்பாடுகளையே நீண்ட நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, ஒரு கிண்டல் குரலில் அவள் என்னிடம் கூறுவாள்: "என் அப்பாவிப் பெண்ணே, இனி உனக்கு, உன் கத்திரி போட்டு பண்ணும் பிரசவத்திற்கு அதிகம் சிரமங்கள் எதுவும் இருக்காது.''

எப்போது தும்மப் போகிற ஒரு வெளிப்பாடு என்னுடைய முகத்திற்கு இருக்கிறது என்று அவள் கருத்து கூறுவாள்.

ஆனால், எனக்கும் உமாவிற்குமிடையே இருக்கும் நட்பைப் பற்றி நான் இயற்றியிருந்த கவிதை அவளை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த கவிதையின் முதல் இரண்டு வரிகளை அவள் சில நேரங்களில் வெளியே கேட்கும்படி கூறியவாறு நடப்பதுண்டு.

"உமாவிற்கும் ரமாவிற்குமிடையே உள்ள உறவு மலருக்கும் மணத்திற்குமிடையே என்பதைப் போல...''

எனினும், அவளுக்கு சில கனவுகள் இருந்தன. அதைப் பற்றி அவள் கூறுவாள்: "நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் மனிதன் ஹிட்லரைப் போல இருக்க வேண்டும். அப்படியென்றால் அந்த மனிதனை குரங்கைப் போல விளையாடச் செய்வது எவ்வளவு சுவாரசியமான விஷயமாக இருக்கும் ரமா?'' அவள் குலுங்கிக் குலுங்கி சிரிப்பாள். தொடர்ந்து என்னிடம் கேட்பாள்: "எப்படிப்பட்ட ஒரு கணவன் வேண்டுமென்று நீ ஆசைப்படுகிறாய்?''

நான் கூறுவேன்: "உமா... நான் திருமணமே செய்து கொள்வதாக இல்லை.''

"ஃபூ... ஃபூ...!'' கேலியான ரசனையுடன் அவள் என்னையே பார்ப்பாள். "நீ ஒரு கனவு காண்பவள். உன் கனவும் கவிதையும் உன்னை போதைக்குள் சிக்க வைத்து, இறுதியில் நீ ஒரு பெண் துறவியாக மாறி காட்டிற்குள் தவம் செய்பவளாக ஆகிவிடப் போகிறாய் என்று தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் நீ ஏதோ ரசனையே இல்லாத ஒரு கவிஞனை இறுதியில் கணவனாக ஆக்கிக் கொண்டால்கூட போதும்...'' அவள் என் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரிப்பாள்.

"உமா, உனக்கு எந்தச் சமயத்திலும் கவலை நிறைந்த சிந்தனையே உண்டாகாதா?'' நான் கேட்பேன்.

ஒரு கோமாளியின் கவலையை வேண்டுமென்றே காட்டியவாறு அவள் பதில் கூறுவாள்: "என்ன செய்வது, ரமா? ஒரு கவலை மனம் கொண்ட குழந்தையைக் கொஞ்சக் கூடிய அதிர்ஷ்டம் என்னுடைய இதயத்திற்கு இல்லை.''

உமாவின் வெளிச்சம் ஆனந்தமாக இருந்தது. அவள் சுதந்திரத்தை சுவாசித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகு ஏராளமான இளைஞர்களைச் சுண்டி இழுத்தது.


அதன் மூலம் முற்றிலும் காம எண்ணங்களுடன் இருந்த பல இளைஞர்களுக்கும் அவளால் முட்டாள் பட்டம் கட்ட முடிந்தது. அவள் ஒரு முறை புகை வண்டியில் பயணம் செய்யும்போது, திடீரென்று இடி மின்னலைப்போல அவள்மீது காதல் கொண்டுவிட்ட, அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த ஒரு இளைஞனைத் தன்னுடைய பெட்டியைத் தூக்கச் செய்து வீடு வரை நடந்து வரச் செய்ததையும் அங்கு வந்தவுடன் தன்னுடைய தாயிடம் கூறி அவனுக்கு நாலணா கூலி கொடுக்கும்படி செய்த கதையையும் அவள் பல நேரங்களிலும் கூறி சிரித்திருக்கிறாள்.

ஒரு நாள் நான் அவளிடம் கேட்டேன்: "உமா, உனக்கு எப்போதாவது ஒரு இளைஞனிடம் காதல் உணர்வு தோன்றியிருக்கிறதா?''

"காதலின் வெளிப்பாட்டை இதுவரை நான் என் இதயத்தில் உணர்ந்தது இல்லை. இந்தக் காலத்தின் காதல் என்பது காம உணர்வின் நாகரீகமான பெயர் என்பது மட்டுமே உண்மை.

ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வது, காதலில் விழுவது, சில சுகங்களை அனுபவிப்பது... இல்லாவிட்டால் அனுபவித்ததாகத் தங்களுக்குள் நினைத்துக் கொள்வது... பிறகு ஒதுங்கிக் கொள்வது... காலப்போக்கில் மறந்துவிடுவது... இதுதான் நாகரீகக் காதலில் நடக்கும் செயல்கள். நான் இதை எதிர்க்கவும் வெறுக்கவும் செய்கிறேன். என் காதலை ஒருவருக்காக நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.''

நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்: "யாருக்காக?''

"என் எதிர்கால கணவருக்காக.''

அவள் சீரியஸாகவே பேசினாள். அப்படிப்பட்ட ஒரு பதிலை நான் அவளிடமிருந்து சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவளுடைய அந்த மனம் திறந்த வெளிப்படையான பதில் அவள் மீது எனக்கு இருந்த மதிப்பை மேலும் அதிகமாக்கியது. அவளைப் பாராட்டி, அவளின் கையைப் பிடித்து அழுத்தியவாறு நான் சொன்னேன்: "உமா, உன்னுடைய அந்தக் கணவர் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலிதான்!''

திருமணம் செய்து கொள்வது, இல்லத்தரசியாக ஆகி அதிகார சுதந்திரங்களுடன் வாழ்வது, பிறக்கும் குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டிருப்பது- இவற்றையெல்லாம் அவள் விரும்பினாள். ஆனால், எல்லா விஷயங்களிலும் அவளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். என்னுடைய கதை வேறாக இருந்தது. என் பெண்மையை பெரிதாக மதித்துக் கொண்டிருந்தாலும், திருமணம் என்ற ஒன்றை நான் வெறுத்தேன். ஒரு ஆணின் விளையாட்டு பொம்மையாக வாழ்வது என்பதை என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. காதலை நான் ஒரு புனிதமான விஷயமாகப் பார்த்தேன்.

இன்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி பெற்றபிறகு, அவள் படிப்பைத் தொடரவில்லை. அதற்குப் பிறகும் நான் இரண்டு வருடங்கள் படித்தேன். பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றேன்.

அப்போது என் தந்தையை போர்பந்தரின் திவானாக நியமித்தார்கள். குடும்பத்துடன் நாங்கள் போர்பந்தருக்குப் புறப்பட்டோம்.

உமாவைப் பிரிந்து செல்வதில் எனக்குப் பெரிய கவலை இருந்தது. நான் விடை பெறுவதற்காகச் சென்றிருந்தபோது, அவள் கவிதை பாடினாள்.

"உமாவிற்கும் ரமாவிற்குமிடையே உள்ள உறவு

மலருக்கும் மணத்திற்குமிடையே என்பதைப் போல...''

"ஆமாம், ரமா...'' அவள் என்னுடைய கையைப் பிடித்து அழுத்தியவாறு மெதுவான குரலில் சொன்னாள்: "அந்த மணம் இதோ போகிறது. இனி நான் ஒரு மணமில்லாத மலர்.''

உமாவின் இதயத்தைத் திறந்த கடிதங்கள், வாரத்தில் ஒன்று என்ற கணக்கில் எனக்கு போர்பந்தரில் கிடைத்துக் கொண்டிருந்தன. இறுதியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ள ஒரு கடிதமும் வந்தது. அவளுடைய திருமணப் பேச்சு வார்த்தையைப் பற்றி முதல் தடவையாக எழுதிய அந்தக் கடிதம்.

வ்ரஜலால் என்ற பெயரைக் கொண்ட பெரிய ஒரு வியாபாரியும் வட்டிக்குக் கடன் கொடுக்கக்கூடிய மனிதருமான ஒரு ஆள்தான் அவளுடைய மணமகன். வ்ரஜலாலை நான் பார்த்ததில்லையென்றாலும், அவர் ஒரு பெரிய பணக்காரர் என்பதை நான் முன் கூட்டியே கேள்விப்பட்டிருக்கிறேன். உமாவைப் பொறுத்த வரையில், அந்தத் திருமணம் ஒரு பெரிய அதிர்ஷ்டம் வாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம்- அவளுடைய தந்தை பணக்காரராக இல்லாத ஒரு துணி வியாபாரியாக இருந்தார்.

அவளுடைய திருமண கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக நானும் சென்றிருந்தேன். வ்ரஜலால் தடித்து வெளுத்த, பெரிய மீசையைக் கொண்ட ஒரு அழகான மனிதராக இருந்தார். உமாவின் அதிர்ஷ்டத்தைப் பற்றி நான் மனப்பூர்வமாகப் பாராட்டினேன்.

அவளுக்கு நான் கொடுத்த பல திருமணப் பரிசுப் பொருட்களில் அழகான சந்தனத் தொட்டிலும் ஒன்று.

திருமணம் முடிந்த பிறகும், அவள் எனக்குத் தவறாமல் முறைப்படி கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தாள். அவளுடைய புகுந்த வீட்டு வாழ்க்கை, முதலிரவு, அவளுடைய தினசரி சிந்தனைகள்- இவற்றைப் பற்றிய சுவாரசியமான அம்சங்களைக் கொண்ட நீளமான கட்டுரைகளாக இருந்தன அந்தக் கடிதங்கள். கடிதங்களின் இறுதியில் அவள் இப்படி எழுதியிருப்பாள்: "ரமா, இவை அனைத்தும் முன்னுரை. தாம்பத்திய வாழ்க்கையின் இனிய கனவுகளும், என் வாழ்க்கையின் மிகப் பெரிய பயன்களும் இனிமேல்தான் வரப்போகின்றன. பார்த்துக் கொண்டிரு.”

அந்த மாதம் கடந்தது. ஒரு நீளமான கடிதத்தின் இறுதியில் ஒரு குறிப்பு: "ரமா, உன் சந்தனத் தொட்டிலுக்கு ஒரு வாரிசு உண்டாகப் போகிற அடையாளங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.”

அதற்குப் பிறகும் மாதங்கள் கடந்தன. ஆனால், அவளுடைய கடிதங்கள் தாமதமாகத் தொடங்கின. அது மட்டுமல்ல- சுருக்கமான வார்த்தைகளும், அங்குமிங்கும் தொடாத சில செய்திகளும் மட்டுமே அவற்றில் இருந்தன. அத்துடன் இன்னொரு விஷயத்தையும் நான் கூர்ந்து கவனித்தேன். அவளுடைய கணவரைப் பற்றி எந்தவொரு தகவலையும் அவள் அந்தக் கடிதங்களில் எழுதவேயில்லை. அதற்கு அர்த்தம்- அவளுக்கு தன் கணவர்மீது அன்பு இல்லையோ என்னவோ? இல்லாவிட்டால்- அவளுடைய கணவர் அவள்மீது அன்பு இல்லாமல் இருக்கிறாரோ? அவளுடைய நிலைமைகளைத் தெளிவாக, உண்மையுடன் எழுதி அனுப்பும்படி நான் அவளிடம் கேட்டுக் கொண்டேன். அவளுடைய பதில் என்னை அதிகமாக ஏமாற்றம் கொள்ளச் செய்தது. "ரமா, எனக்கு எதுவும் நடந்துவிடவில்லை. நான்

முன்பு இருந்த அதே உமாதான்” என்று அவள் சடங்கிற்காக எழுதியிருந்தாலும், கடிதத்தில் இருந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு கவலை ஒளிந்திருந்தது. நான் நினைத்தேன்: "உமாவிற்கு என்ன ஆச்சு?”

அதிகமான சிரமங்களை அனுபவிக்காமல் அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். குழந்தைக்கு என்ன பெயரை வைத்து அழைக்கலாம் என்று அவள் என்னிடம் எழுதிக் கேட்டிருந்தாள். "பிரேமகுமாரி” என்று நான் எழுதியிருந்தேன்.

அதன்படி அவள் குழந்தைக்கு "பிரேமகுமாரி'' என்று பெயர் வைத்தாள். அதற்குப் பிறகு அவளுடைய அனைத்து கடிதங்களிலும் பிரேமகுமாரியைப் பற்றி வர்ணனைகள்தான்.


அவள் தன் குழந்தை மீது ஆழமான பாசம் வைத்திருந்தாள். அது உடல் உறுப்புக்களைக் கொண்டு செய்த சேட்டைகள், அதன் அழுகை, செயல்கள் இவை எல்லாவற்றைப் பற்றியும் அவள் விளக்கமாக எழுதுவாள். "ஹா... ரமா, பிரேமாவின் விளையாட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், உனக்கு உண்மையாகவே கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும். என்ன ஒரு தங்கக் கட்டி!”

பிரேமாவைப் பாடித் தூங்க வைப்பதற்கு ஒரு தாலாட்டுப் பாடலை எழுதி அனுப்பி வைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டதையடுத்து, நான் "கண்ணே கண்மணியே” என்று தொடங்கும் ஒரு தாலாட்டுப் பாடலை எழுதி அவளுக்கு அனுப்பினேன். அந்தச் சமயத்தில்தான் நான் என்னுடைய "வாடிய செண்பகம்” என்ற கவிதை நூலைப் பிரசுரித்தேன். அந்தக் கவிதை நூல் என்னை குஜராத்தின் முதல் தர கவிதாயினியாக உயர்த்திவிட்டது. குறிப்பாக அதில் இடம் பெற்றிருந்த "கண்ணே

கண்மணியே” என்ற தாலாட்டுப் பாடல் எல்லையைக் கடந்து பாராட்டுக்களை அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தது.

பிறகு சிறிது காலத்திற்கு மிகவும் அரிதாகவே அவளுடைய கடிதங்கள் வந்தன. ஒரு கடிதம் மட்டும் சற்று நீளமாக இருந்தது. அதில் எங்களுடைய இளமைக் கால கல்லூரி வாழ்க்கையின் பல இனிய நினைவுகளையும் முழுமையான ஒரு மன வேதனையுடன் அவள் வெளிப்படுத்தி இருந்தாள். தன்னுடைய கணவரைப் பற்றியோ, தன்னைப் பற்றியோ எந்தவொரு தகவலையும் அவள் அதில் எழுதவில்லை. அவளுடைய கணவர் உயிருடன் இருக்கிறாரா என்று கூட நான் சந்தேகப்பட்டேன்.

உமாவின் கணவரின் வீட்டிற்கு அருகில் வசித்த விஜயா என்ற என்னுடைய ஒரு சிநேகிதி, போர்பந்தருக்கு வந்திருந்தபோது எங்களை வந்து பார்த்தாள். அவளிடமிருந்துதான் உமாவின் கணவரின் குணத்தைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன். விஜயா கூறினாள்: "வ்ரஜலால் பெரிய பணக்காரராக இருந்தாலும், மிகவும் பேராசை பிடித்த மனிதர். அவருக்கு உமாமீது மனப்பூர்வமான அன்பு இல்லை. இந்த உலகத்தில் பணத்தைத் தவிர, வேறு எதையும் விரும்ப அவரால் முடியாது. உமாவிற்குத் தேவையான அனைத்தையும் அவர் தருகிறார். அவ்வளவுதான். சில நேரங்களில் அவர் உமாவைத் திரைப்படம் பார்ப்பதற்கு அழைத்துக் கொண்டு செல்வதுண்டு. ஆனால், அது அவள் மீது கொண்ட அன்பால் அல்ல. தனக்கு மிகவும் அழகான ஒரு மனைவி இருக்கிறாள் என்பதை பிறரிடம் காட்டுவதற்காக மட்டுமே. காலையில் இருந்து நள்ளிரவு வரை, அவர் வியாபாரக் கணக்குகளில் மூழ்கிப் போய் இருப்பார். உமா கர்ப்பம் தரித்தபோது, அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டது. அது வ்ரஜலாலை அதிகமாக ஏமாறச் செய்தது.''

உமாவின் கணவரைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்டபோது, எனக்கு மிகுந்த மனவேதனை உண்டானது. கஷ்டம்! அன்றைய விளையாட்டுத்தனமாகப் பேசிக் கொண்டிருப்பவளும் சுதந்திரமான பாடகியுமான உமாவின் நிலைமை இப்படி ஆகிவிட்டதா? அவளுடைய காதல் கனவுகள் அனைத்தும் தகர்ந்து சாம்பலாகி விட்டனவா? ஹா! அவள் தன்னுடைய எதிர்காலக் கணவருக்காக சேர்த்து வைத்திருந்த காதல் சொத்துக்கள் அனைத்தும் ஒரு குருடனுக்குக் கிடைத்து விட்டனவா?

அவளை அதிகம் வேதனைப்படுத்த வேண்டாம் என்று நினைத்து நான் அவளுடைய இல்லற வாழ்க்கையைப் பற்றி அதற்குப் பிறகு எதுவும் விசாரித்ததே இல்லை.

நான் "சமேலி” என்ற சிறிய காவியத்தை ஆரம்பித்த நாளன்று, உமா உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கிறாள் என்ற தகவலைக் கொண்ட அவளுடைய கடிதம் எனக்குக் கிடைத்தது. "சமேலி” என்ற காவியத்தை உமாவிற்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று நான் முடிவெடுத்திருந்தேன். அந்தக் கடிதம் என்னை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது. அதை ஒரு கெட்ட சகுனமாக நான் நினைத்தேன். நான் அவளுக்கு ஆறுதல் கூறுகிற மாதிரி, ஒரு பதில் கடிதம் எழுதினேன். அதற்குப் பிறகு எனக்கு அவளுடைய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. பிறகு நான் இரண்டு கடிதங்கள் எழுதி அனுப்பினேன். அதற்கும் பதில் வரவில்லை. மூன்று மாதங்கள் கடந்த பிறகு, எனக்கு அவளுடைய ஒரு சிறிய குறிப்பு கிடைத்தது.

"ரமா, கொஞ்சம் இங்கு வர முடியுமா? நான் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு படுத்திருக்கிறேன். ஆனால், இந்த தனிமையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்புத் தோழியே, நீ நான்கு நாட்கள் என்னுடன் இருக்கக் கூடாதா? -சொந்தம் உமா.

கடிதம் கிடைத்த மறுநாளே நான் பவனகிரிக்குப் புறப்பட்டேன்.

"இந்திர நிவாஸ்” மிகவும் அழகான பெரிய ஒரு மாளிகையாக இருந்தது. அந்த வீட்டின் பெரிய அளவிற்கேற்றபடி அங்கு ஆட்கள் இல்லை. தாங்கிக் கொள்ள முடியாத ஒரு வெறுமையையும் தனிமையையும் அங்கு நான் உணர்ந்தேன்.

ஒரு பெரிய அறையில் உமா படுத்திருந்தாள். நீண்டகாலத்திற்குப் பிறகு உண்டான எங்களுடைய அந்த சந்திப்பு மிகவும் இதயப் பூர்வமான ஒன்றாக இருந்தது.

உமாவிற்கு நம்ப முடியாத அளவிற்கு ஒரு மாறுதல் உண்டாகிவிட்டிருந்தது. வேறொரு இடத்தில் சந்தித்திருந்தால், என்னால் அவளை அடையாளம் கண்டு பிடித்திருக்கவே முடியாது. அந்த அளவிற்கு மெலிந்தும், பிரகாசம் குறைந்தும், வெளிறிப் போயும் அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். என்னை நட்புடன் வரவேற்ற அவளுடைய அந்தப் புன்னகையைக் கொண்டு மட்டுமே, என்னால் அந்த பழைய உமாவை அடையாளம் காண முடிந்தது.

உமாவின் கடிதத்தில் கூறியிருந்ததைப் போலவே பிரேமா ஒரு தங்கக்கட்டியாகவே இருந்தாள். உமா நோயால் பாதிக்கப்பட்டு படுத்திருந்த கட்டிலுக்கு அருகிலேயே இருந்த என்னுடைய சந்தனத் தொட்டிலில் படுத்து பிரேமா விளையாடிக் கொண்டிருந்தாள்.

நான் அங்கு சென்றிருந்தது உமாவிற்கு மிகுந்த ஆறுதலை அளித்திருக்க வேண்டும். நான் அவளுக்கு என்னுடைய "சமேலி” என்ற காவியத்தை (அப்போது நான் அதன் பாதியைத்தான் எழுதி முடித்திருந்தேன்) வாசித்துக் காட்டினேன். முன்பு கவிதையை வெறுத்திருந்த அவள் இன்று அதை ஆர்வத்துடன் ரசித்தாள். எங்களுடைய இளம் பருவத்தின் ஏராளமான நினைவுகளைத் திரும்பத்

திரும்பக் கூறிக்கொண்டிருப்பதில் அவள் ஆர்வத்தை வெளிப்படுத்தினாள். சுருக்கமாகக் கூறினால், அவள் அந்த சந்தோஷத்தைத் தரும் சிந்தனைகள் நிறைந்த கடந்த காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஒரு உண்மைச் செயல் நடந்து கொண்டிருக்கும் நிகழ்காலமோ, ஆசைகளைச் சேர்த்து வைத்திருக்கும் எதிர்காலமோ அவளைப் பொறுத்த வரையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


மென்மையான நிலவு வெளிச்சத்தைக் கொண்ட ஒரு இரவு வேளை. பிரேமா சுகமாகத் தொட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

நான் உமாவின் மெத்தையின்மீது போய் உட்கார்ந்தேன். அவள் தூங்கியிருக்கவில்லை. என்னை அருகில் பார்த்ததும், அவள் தலையணையில் பாதி சாய்ந்து படுத்துக்கொண்டு வலது கையை என்னுடைய கழுத்தில் சுற்றி தோளில் ஓய்வெடுத்தாள்.

சாளரம் திறந்திருந்தது. அதன் வழியாக நாங்கள் வெளியே- அமைதியான வெட்டவெளியை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த மங்கலான சூழ்நிலையில் எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை. எனினும், இனம்புரியாத சில கனவுகளின் நிழல்கள் இங்குமங்குமாக நீந்திக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது.

இரண்டு மூன்று நிலங்களைத் தாண்டி ஒரு இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அங்கு சுட்டிக் காட்டியவாறு நான் உமாவிடம் கேட்டேன்: "அது என்ன? அங்கே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறதே?''

அவள் சொன்னாள்: "அது ஒரு சுடுகாடு. அங்கு யாருடைய பிணத்தையோ எரித்துக் கொண்டிருக்கலாம்.''

"இவ்வளவு அருகிலா சுடுகாடு இருக்கிறது? இங்கு தனியாகப் படுத்திருக்க உனக்கு பயமாக இல்லையா?''

உமா மெதுவாக சற்று சிரித்தாள்: "ரமா, இந்த பூமியே பெரிய ஒரு சுடுகாடுதானே?''

நானும் சற்று சிரித்துக்கொண்டே கேட்டேன்: "என்ன உமா, நீயும் தத்துவஞானம் பேச ஆரம்பிச்சிட்டியா?''

"பிறகு... தத்துவஞானம் பேசுவது உன்னுடைய குத்தகையொண்ணும் இல்லையே!''

"வேண்டாம்...'' நான் அவளுடைய கையைப் பிடித்து அழுத்தினேன். நாங்கள் இருவரும் அந்த சிதையின் நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

உமா சொன்னாள்: "ரமா, நீ ஒரு கவிதாயினி ஆச்சே! சொல்லு... அந்த சிதையின் நெருப்பு எதைப்போல இருக்கிறது?'' "மரண தேவதையின் தங்கத் தாலியைப் போல...''

"இல்லை...'' அவள் சொன்னாள்: "மரணம் என்ற வேட்டை நாய் நீட்டும் நாக்குதான் அது.''

"ஹா... உமா, நீ ஒரு கவிதாயினியாகவும் ஆயிட்டியா என்ன?''

அதற்குப் பிறகும் அந்த சிதையின் நெருப்பிலிருந்து எங்களுடைய பார்வைகளை விலக்கிக் கொள்ளவே இல்லை. அவள் சொன்னாள்: "சுடுகாடு அருகிலேயே இருப்பது எவ்வளவு நல்ல விஷயம்! நான் அதிக தூரம் போக வேண்டிய தேவை இல்லையே!''

அவளுடைய கன்னத்தில் மெதுவாகக் கிள்ளியவாறு நான் திட்டினேன்: "ச்சீ... முட்டாள்தனமாகப் பேசாதே.''

"நான் முட்டாள்தனமாகப் பேசவில்லை, ரமா. மரணத்தைப் பற்றி பேசுவதும் சிந்திப்பதும் எனக்கு இனிமையான விஷயமாகத் தோன்றுகிறது. நான் ஒரு தத்துவஞானியாக மாறியதைப் பற்றி நீ ஆச்சரியப்படலாம். தனிமையும் ஏமாற்றமும் ஒன்று சேர்ந்தால் மனிதர்கள் அவர்களாகவே தத்துவஞானியாக மாறிவிடுவார்கள். அப்போது உலகத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் சிந்திப்பதற்கு யாராக இருந்தாலும் கட்டாயப்படுத்தப்படுவார்கள். அதோ... பற்றி எரிந்து கொண்டிருக்கும் அந்த சிதையின் நெருப்பைச் சற்று பார். அந்த நெருப்பு யாருடைய இதயத்தில் சிந்தனையை எழச்செய்யவில்லை? அங்கு ஒரு மனிதன் வேறு ஏதோ ஒன்றாக மாறுகிறான். அவன் எங்கு போனான்? வானத்திற்கும் மேலே- ஆமாம்... அந்த வெறுமை நிறைந்த நீல நிறத்தையும் தாண்டி ஒரு உலகம் இருக்குமோ? அதோ... அந்த கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்- நிரந்தரத்தின் மைல் கற்கள்- அவனுடைய ஆன்மாவின் அங்கே செல்லும் பயணத்தில் ஓய்வு அளிக்குமா? இல்லாவிட்டால்... மரணம், மனிதனைப் பொறுத்தவரையில் எல்லாவற்றுக்கும் இறுதியா? வாழ்க்கைப் போர்க்களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மனிதனை, மரணம் அள்ளி எடுத்துக்கொண்டு எங்கே போகிறது? சகோதரி... நினைத்துப் பார். மனிதனின் பரிதாபமான, நிச்சயமற்ற- இதுவரை பார்த்திராத அந்த இறுதிப் பயணத்தை... நதியில் மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய படகு, பெரிய நீர் பாய்ச்சலின் மேலே இருந்து கீழ் நோக்கி "பும்” என்று பாய்ந்து செல்வதைப் போன்ற அந்த வீழ்ச்சி!''

நான் அவளுடைய முகத்திலிருந்து கண்களை எடுக்காமல் எல்லாவற்றையும் கேட்டேன். என்னுடைய தோழியாக இருந்த உமாதான் பேசுகிறாள் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.

மறுநாள் இரவிலும் நான் அவளுடைய படுக்கையின்மீது போய் உட்கார்ந்தேன். உமா சொன்னாள்: "ரமா, நீ அருகில் இருக்கும்போது

எனக்கு எந்த அளவிற்கு வினோதமான ஆனந்தம் தோன்றுகிறது தெரியுமா? ஹா! நாம் ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்தியது எதற்காக? ஒரு இளைஞனுக்கும் ஒரு இளம்பெண்ணுக்குமிடையே இருக்கும் காதலின் உச்சத்திற்கு எவ்வளவுதான் புனிதத்தன்மை இருக்கிறது என்று காட்டினாலும், அதற்குக் கீழே ஒரு சுயநலம் மறைந்து கிடப்பதைப் பார்க்கலாம். ஆனால், ஒரு இளம்பெண்ணுக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே உள்ள காதல்! உனக்கும் எனக்கும் இடையே உள்ள காதல்! ஹா...''

அவள் என்னை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். என்னுடைய கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

அன்று இரவு நேரம் மிகவும் அதிகமாவது வரை, நாங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் பேசிக்கொண்டேயிருந்தோம். இனிமையும் அமைதியும் கொண்ட ஒரு குரலில், பல தத்துவ ஞானங்களும் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. ஆனால், அவள் தன்னைப் பற்றியோ தன்னுடைய வாழ்க்கையில் உண்டான ஏமாற்றத்தைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட கூறவில்லை. பிரேமாவைப் பற்றி மட்டும் கொஞ்சம் சொன்னாள்: "என் பிரேமாவைப் பற்றி மட்டும் எனக்கு சற்று கவலை இருக்கிறது. அவள் ஒரு தங்கக்கட்டி என்றாலும், அவளுடைய தந்தைக்கு அவள்மீது பாசம் இல்லை. நான் இல்லாமல் இருப்பது என்றால், அவளுடைய நிலைமை எப்படி இருக்குமோ?''

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அவள் பாசத்துடன் சற்று பார்த்தாள். வறண்டு போன ஆசைகளும் இருண்டு போன சிந்தனைகளும் மட்டுமே எஞ்சியிருந்த அவளுடைய நொறுங்கிப் போன

இதயத்தின் வேதனை, அவள் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்டது.

மறுநாள் காலையில் ஆடைகள் அணிந்து, புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டு நான் அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் போய் நின்றேன்.

சோர்ந்து போய்க் காணப்பட்ட விழிகளை உயர்த்தியவாறு அவள் பரிதாபமாக என்னைச் சற்று பார்த்தாள்.

"உமா...'' அதற்குப் பிறகு கூறுவதற்கு எனக்கு நாக்கு வரவில்லை.

அந்தப் பிரிதல் இறுதியானது என்ற விஷயம் எங்கள் இருவருக்கும் தெரியும் என்பதைப்போல தோன்றியது. உமா என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய அகலமான விழிகள் என் முகத்தில் ஓய்வெடுத்தன. அந்த விழிகளில் இருந்த வேதனை நிறைந்த ஒரு அமைதியான இசை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது: "இனி என்ன?''

ஆமாம்... இனி என்ன?

அதாவது- நிச்சயமற்ற, கண்ணுக்குத் தெரியாத எங்களுடைய அடுத்த சந்திப்பு எங்கே நடக்கப் போகிறது?


அவள் மிகவும் சீக்கிரமே, நான் என்றென்றைக்குமாக இழக்கப் போகிற ஒருத்தியாக ஆகப் போகிறாள் என்பதை நினைத்தபோது, அன்பின் பலத்தால் என்னுடைய இதயம் அவளை நோக்கி வேகமாகப் பாய்ந்தது. உமாவை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு காட்டாற்றைப் போல மதகை உடைத்துக் கொண்டு நொறுங்கி அழ வேண்டும் போல எனக்கு ஒரு வெறி உண்டானது. ஆனால், நான் அசையவில்லை.

ஒரு ஓவியத்தில் இருப்பதைப் போல, நாங்கள் அதே நிலையில் பத்து நிமிட நேரம் இருந்தோம். இறுதியில் நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளாமலேயே பிரிந்தோம்.

அப்போதைய அவளுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை எந்தச் சமயத்திலும் என்னால் மறக்க முடியாது. நீல நிறத்தில் இருந்த, வாடிப்போயிருந்த அந்த உதடுகளுக்கு மத்தியில், கிரகண நிலவைப்போல ஒரு மங்கலான புன்சிரிப்பு தங்கி நின்றிருந்தது. அந்தக் கண்களில் பனி விழுந்ததைப் போன்ற ஒரு ஈரமும்...

உணர்ச்சிகளை ஒரு வழியாக அடக்கி வைத்து கொண்டு, திரும்பிப் பார்ப்பதற்கு சிறிதுகூட தைரியம் இல்லாமல், நான் வேகமாக நடந்தேன். முற்றத்தை அடைந்தபோது, மூக்கின்மீது ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, வேகமாக எதையோ எழுதிக் கொண்டிருந்த வ்ரஜலாலை சாளரத்தின் வழியாக நான் ஒருமுறை பார்த்தேன். அழகன்தான்... ஆனால், உலகத்தில் உள்ள அனைத்து பெண்களின் காதல் கொலைகாரனாக நான் அவரைப் பார்த்தேன்.

நான் போர்பந்தருக்கு வந்து, "சமேலி” சம்பந்தப்பட்ட வேலைகளை முழுமை செய்வதற்காக மூழ்கியிருந்தபோது, உமாவின் மரணச் செய்தி கொண்ட ஒரு பத்திரிகை, அவளுடைய வயதான தந்தையிடமிருந்து எனக்கு வந்தது.

உமா மரணமடைந்து விட்டாள்! அது நான் எதிர்பார்த்ததுதான். எனினும் அந்த மரணச்செய்தி, என் மனதில் அமைதியற்ற தன்மையையும் சிந்தனைகளில் நிலையற்ற தன்மையையும் உண்டாக்கியது.

உமா இறந்துவிட்டாள்! அதாவது- இந்த உலகத்தில் எந்தவொரு சக்தியாலும் என்னுடைய அன்புத் தோழியின் முகத்தை, இன்னொரு முறை எனக்கு காட்டும்படி செய்ய இயலாது. ஹா! ஒரு செப்படி

வித்தைக்காரனின் கையில் சிக்கிக் கொண்ட பந்தைப்போல, அவள் எங்கோ மறைந்து போய்விட்டாள்!

தத்துவ சிந்தனைகள் கொண்ட புத்தகங்கள் என்னுடைய சூடாகிப் போன மூளைக்கு குளிர்ச்சி தரவில்லை. புரட்சிகரமான எண்ணங்கள்

என்னுடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டன. உமா இறக்கவில்லை. வ்ரஜலால் அவளை மரணத்திற்குத் தள்ளிவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. அந்தக் காதல் கொலைகாரனின் முகம் எனக்கு முன்னால் பிரகாசமாகத் தெரிந்தது.

அப்படியே பதினைந்து நாட்கள் முழு நேரமும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ராணுவ ஆட்சி நடக்கக்கூடிய ஒரு சிறிய கிராமத்தைப் போல என்னுடைய அமைதியான கவிதை மனம் கலக்கத்திற்கு ஆளானது. இறுதியில் நான் ஒரு விஷயத்தை முடிவு செய்தேன்.

அந்தக் காதல் கொலைகாரனை நான் திருமணம் செய்வேன். அதுதான் என்னுடைய முடிவு.

அது ஒரு வகையான பைத்தியக்காரத்தனமாகவோ முட்டாள்தனமாகவோ கேட்பதற்குத் தோன்றும். ஆனால், அந்த தீர்மானத்திற்கு அடியில் பயங்கரமான ஒரு பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மறைமுகமான ஒரு பழிக்குப் பழி வாங்கும் தந்திரத்தின் தெளிவான செயல்பாடு அதற்கு தேவையாக இருந்தது. நான் காத்திருந்தேன். வ்ரஜலாலை நான் திருமணம் செய்வது என்று தீர்மானித்தேன்! என்னுடைய பழிவாங்கும் உணர்ச்சியை அதன் முழுமையான வடிவத்தில் நிறைவேறச் செய்வதற்கு அந்த வியாபாரியை வசீகரிக்க நான் முயற்சித்தேன். என்னைப் பொறுத்தவரையில், அது அந்த அளவிற்கு சிரமமான ஒரு விஷயமாக இருக்கவில்லை.

உடல் ஆரோக்கியத்தைச் சீர் செய்ய வேண்டும் என்று கூறி, சில மாதங்கள் கிராமப் பகுதியில் இருப்பதற்கு என் தந்தையிடம் ஒப்புதல் வாங்கிவிட்டு நான் பவனகிரிக்குப் புறப்பட்டேன். என் தந்தை என் மீது அதிகமான அன்பு செலுத்தக் கூடியவராகவும், மதிப்பாக நினைப்பவராகவும் இருந்தார். அதனால் அவர் என்னுடைய கருத்துக்கு எதிராகக் கூறுவதையோ, விருப்பங்களுக்குத் தடை போடுவதையோ எந்தச் சமயத்திலும் செய்ததில்லை.

நான் வ்ரஜலாவைத் திருமணம் செய்து கொள்வதில், இன்னொரு நோக்கமும் இருந்தது. பிரேமாவின் விஷயம். உமா மரணத்தைத் தழுவும்போது, அவளுக்கு இருந்த ஒரே கவலை பிரேமா மட்டும்தான். வ்ரஜலாலின் மனைவியாக இன்னொருத்தி அங்கு வந்தால் பிரேமாவின் விஷயம் பரிதாபப்படும் நிலைமைக்கு ஆளாகாமல் இருக்காது.

பிரேமாவைப் பார்ப்பதற்காக, நான் அவ்வப்போது வ்ரஜாலின் வீட்டிற்குப் போக ஆரம்பித்தேன். ஒரு திவானின் மகள், தன்னுடைய வீட்டிற்கு வருவது என்பது வ்ரஜலாலிற்கு பெரிய மரியாதைக்குரிய விஷயமாக இருந்தது. அவர் என்னை ஒரு ராணியைப் போல வரவேற்று உபசரித்தார். பிறகு... படிப்படியாக ஒரு ஆணை வசீகரிக்கக் கூடிய பெண்ணின் இயல்பான சாமர்த்தியத்தை நான் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

உமாவின் மரணத்தை, தன் பணத்திற்கான வட்டி சற்று கைவிட்டுப் போய்விட்டதைப் போன்ற ஒரு இழப்பாகவே வ்ரஜலால் நினைத்தார். பிரேமாவை கவனிப்பதற்கு அவர் ஒரு நர்ஸை தனிப்பட்ட முறையில் நியமித்திருந்தார்.

ஆறு மாதங்கள் கடந்தன.

என் காதல் முயற்சி தடையின்றி நடந்து கொண்டிருந்தது. அது நல்ல பலனையும் தந்தது. இறுதியில் திருமண நிச்சயமும் நடந்தது.

வ்ரஜலால் என்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற தகவல், மக்களுக்கு மத்தியில் பலவிதப்பட்ட சந்தேகங்களுக்கும் பேச்சுக்களுக்கும் காரணமாக அமைந்தது. எந்த விதத்திலும் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் மிகவும் வசதி படைத்தவராக இருந்தாலும், ஒரு திவானின் மகளைத் திருமணம் செய்யக்கூடிய அளவிற்குத் தகுதி வ்ரஜலாலிற்கு இல்லை. அது மட்டுமல்ல- பல ஐ.சி.எஸ். படித்தவர்களின் திருமண வேண்டுகோளை மறுத்து ஒதுக்கிவிட்டு, திருமணமே வேண்டாம் என்று விரதத்துடன் இருந்துவிட்டு, பெரும்பாலும் ஒரு பெண் துறவியைப் போல வாழ்ந்து கொண்டிருந்த நான் மனைவியை இழந்தவருடன், ஒப்பிட்டுப் பார்க்கும்போது சற்று வயதில் அதிகமானவராகவும், மிகவும் கருமி குணம் கொண்டவராகவும் இருந்த ஒரு வியாபாரியை மணமகனாக ஏற்றுக்கொள்ளப் போகிறேன் என்ற செய்தியைப் பலராலும் நம்ப முடியவில்லை. இறுதியில், அவர்கள் "கண்மூடித்தனமான காதலுக்கு ஒரு உதாரணம்” என்று மட்டும் கூறி அமைதியாக இருந்துவிட்டார்கள். "காதலின் போக்கு அப்படியாகிவிட்டதா?” என்று ஒரு தோழி என்னிடம் வெளிப்படையாகக் கேட்டாள். "பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்தின் போக்கு அப்படித்தான் இருக்கும்” என்று நானும் நினைத்துக் கொண்டேன்.

எங்களுடைய திருமணத்தை மிகுந்த கொண்டாட்டத்துடன் கொண்டாடினோம். வ்ரஜலால் தன்னுடைய கஞ்சத்தனத்தை அங்கு காட்டவில்லை.

முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட, தெளிவான ஒரு செயல் திட்டத்துடன் நான் மணமகனின் வீட்டிற்குள் நுழைந்தேன்.


திருமணம் முடிந்த மறுநாள் நான் படுக்கையறையில், தனியே உட்கார்ந்திருந்தேன்.

அன்று முழு நிலவு நாளாக இருந்தது. மாலை நேரம் கடந்தது. மாலை நேரக் காட்சி மறைந்து, இருள் பரவி வருவதற்கு முன்பே, நிலவு

வெளிச்சம் எல்லா இடங்களிலும் படர்ந்து விட்டிருந்தது. நான் விளக்கை எரிய விட்டு வாசிப்பதற்காக உட்கார்ந்தேன். உமா, முன்பு பயன்படுத்தி இருந்த படுக்கையறையே அது. உமாவும் நானும் சேர்ந்து செலவிட்ட அந்த இறுதி இரவை நான் நினைத்துப் பார்த்தேன். ஆள் அரவமில்லாமல் அமைதியாக இருந்த படுக்கையறை, உமாவின் சரிந்து படுத்திருந்த நிலை, திறந்திருந்த சாளரத்தின் வழியாகத் தெரிந்த கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த சிதையின் நெருப்பு- இவை அனைத்தும் சேர்ந்து உண்டாக்கிய அந்தக் காட்சியை நான் தெளிவாக மனதில் நினைத்துப் பார்த்தேன். நான் சிந்தித்தேன்: "பாவம் என் உமா... அவள் இன்று எங்கே? பூலோக வாழ்க்கையிலிருந்து கற்பனையைத் தாண்டிய, அந்த என்னவென்று தெரியாத நிலையை அவள் அடைந்துவிட்டாள். மரணம் மனிதர்களை எங்கே கொண்டு செல்கிறது?” வானத்தை நோக்கி என்னுடைய பார்வைகள் உயர்ந்தன. உமா கூறிய வார்த்தைகள் என்னுடைய இதயத்திற்குள் ஒலித்தன: "வானத்திற்கு அப்பால்... ஆமாம்... அந்த வெறுமை நிறைந்த நீல நிறத்தைத் தாண்டி ஒரு உலகம் இருக்குமோ?” "இருக்குமோ?” திரைச்சீலைக்கு அப்பால் இருந்து திரும்பி வந்து, அவளுடைய ஆன்மா இப்போது என்னைச் சுற்றி வளைத்துக் கொள்ளுமோ? (எனக்கு காரணமே இல்லாமல் ஒரு பயம் தோன்றியது. என் இதயத்தில் ஒரு குளிர்ச்சி உண்டானது.) என் சிந்தனைகளை அவளால் கேட்க முடியுமா? என்னவோ... எனக்குத் தெரியவில்லை. அந்தத் தனிமையான சூழ்நிலையில் தெளிவற்ற சில எதிரொலிப்புகள் கேட்பதைப் போல எனக்குத் தோன்றியது. அவளுக்காக நான் செய்யப் போகும் இந்தப் புதிய பழிவாங்கும் செயலுக்கு அவளுடைய ஆன்மா உதவியாக இருக்குமா?

என் சந்தேகங்களுக்கு சமாதானம் கிடைக்கவில்லை. என்னுடைய சிந்தனைகள் நின்றுவிட்டன. என் மூளையை ஒரு புகைப்படலம் வந்து

மூடிக்கொண்டது. முன்னால் இருந்த காட்சிகள் அனைத்தும் மறைந்துவிட்டன. நான் என்னையே அறியாமல் அழுதுவிட்டேன்.

நான் எழுந்து, பெட்டியைத் திறந்து, உமாவின் பெரிதாக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். நாங்கள் இறுதியாகப் பிரிந்த நாளுக்கு முந்தைய நாள் அவள் எனக்குப் பரிசாகத் தந்த புகைப்படம் அது. அந்தப் படத்தில் அவள் புன்னகைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாலும், அந்த மலர்ந்த விழிகளில் ஒரு கவலையும், அந்த ஓரக் கண்களில் ஒரு ஏமாற்றமும் நிறைந்திருந்தன. அந்த மார்புப் பகுதியில் ஒரு நொறுங்கிய இதயம் தெரிகிறதோ என்று தோன்றுகிற அளவிற்கு ஒரு அருமையான புகைப்படமாக அது இருந்தது. நாங்கள் இறுதியாகப் பிரிந்தபோது கூட அவளுடைய முக வெளிப்பாடு அப்படித்தான் இருந்தது. நான் அந்தப் படத்தையே கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"உமா, என் பிரியமான உமா...'' தேம்பித் தேம்பி அழுது கொண்டே நான் அழைத்தேன்: "தோழியே, நான் அழைப்பதை நீ கேட்கிறாயா?''

என்னுடைய கண்ணீர் அந்தப் படத்தின் கண்களின்மீது விழுந்தது. அவளும் என்னுடன் சேர்ந்து அழுவதைப்போல எனக்குத் தோன்றியது. திடீரென்று கதவு "கடகட” என்று ஒலித்தது. நான் பயந்து போய் நான்கு பக்கங்களிலும் பார்த்தேன்.

வ்ரஜலால் உள்ளே நுழைந்து வந்தார். தாங்கிக் கொள்ள முடியாத வெறுப்புடன் நான் அந்தக் காதல் கொலைகாரனையே வெறித்துப் பார்த்தேன்.

"அன்பே, இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வெளியே நல்ல நிலவு வெளிச்சம் இருக்கிறதே! சற்று நடப்பதற்கு வருகிறாயா?''

என்னை மயக்குவதற்கு அந்த வார்த்தைகள் முடிவடைந்தவுடன், ஒரு புன்னகையும் வெளிப்பட்டது.

புகைப்படத்தை மடியில் மறைத்து வைத்துக்கொண்டு அவரைச் சுட்டிக் காட்டியவாறு நான் சொன்னேன்: "மிஸ்டர் வ்ரஜலால்... என்னைத் தொந்தரவு செய்வதற்கு இனிமேல் இங்கு நுழைந்து வராதீர்கள். நான் இங்கு அமைதியாக உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.''

அவர் இடி விழுந்ததைப்போல அங்கேயே நின்றுவிட்டார். "என்ன ரமா?''

"பேசக்கூடாது...'' நான் கர்ஜித்தேன்: "இனி நான் ஒரு வார்த்தையைக் கூட கேட்க விரும்பவில்லை. அறையை விட்டு வெளியேறுங்கள்.''

ஒரு கொடூர மிருகத்தைப்போல அவர் என்மீது பாய்ந்து விழுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், எதையும் புரிந்து கொள்ள முடியாத ஒரு முட்டாளைப்போல அவர் என்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். சற்று நேரம் கடந்ததும் மெதுவாக தலையைக் குனிந்து கொண்டே அவர் வெளியேறினார். நான் எழுந்து கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, தொடர்ந்து வாசிப்பதற்காகப் போய் உட்கார்ந்தேன். ஆனால், புத்தகத்தில் இருந்த எழுத்துக்களை என்னால் வாசிக்க முடியவில்லை. என் கண்களில் ஒரு புகை வந்து நிறைந்தது. எனக்கு என்ன நடக்கப் போகிறது என்பது எனக்கே தெரியவில்லை. வ்ரஜலாலிடம் அப்படி நடந்து கொள்வதற்கு எப்படி தைரியம் வந்தது என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தற்போதைக்கு எல்லா விஷயங்களிலும் தேவையான அளவிற்கு நடித்திருக்கிறோம் என்ற ஒரு திருப்தி மட்டும் எனக்குள் இருந்தது.

அன்று இரவு எனக்கு சிறிதுகூட தூக்கம் வரவில்லை. வ்ரஜலால், திரும்பி வந்து கதவைத் தட்டி அழைப்பார் என்று பல நேரங்களிலும் நினைத்தேன். அந்தக் காலடிச் சத்தத்தை எதிர்பார்த்துக் கொண்டே நான் படுத்திருந்தேன்.

ஆனால், வெளியே பேரமைதி மட்டுமே நிலவிக் கொண்டிருந்தது. அது என்னிடம் கோபத்தையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது.

நான் மீண்டும் உமாவின் புகைப்படத்தை எடுத்து மடியில் வைத்தேன். என் செயல்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? தூரத்தின் அகலம் எங்களை நிரந்தரமாகப் பிரித்துவிட்டது. எங்களை இனிமேல் காலத்தால் இணைத்து வைக்க முடியாதா? இல்லாவிட்டால்.. மலரில் மணம் இருப்பதைப் போல் வெற்றிடத்தில் மறைந்து கொண்டு அவள் எனக்குள்ளேயே சுற்றி நின்று கொண்டிருக்கிறாளோ?

உமாவின் புகைப்படத்தை அழகான ஒரு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைத்து, அதை நான் என்னுடைய கட்டிலின் கால் பகுதியில் இருந்த பீடத்தின்மீது கொண்டு போய் வைத்தேன்.

பிரேமாவை எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பதிலும், அவளைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருப்பதிலும் நான் வாழ்க்கையின் சந்தோஷத்தை உணர்ந்தேன். அவளுடைய அந்த கறுத்த, அகலமான கண்களின் வழியாக, எங்கிருந்தோ உமா எட்டிப் பார்ப்பதைப்போல தோன்றும்.

சிறிது நேரத்திற்கு ரமா மிகவும் அமைதியாக இருந்தாள் அந்த நிலவு வெளிச்சத்தில், நதிக்கரையில் இருந்த சிலைகள் ரத்தினங்களைப் போல மின்னிக் கொண்டிருந்தன.


"மார்பிள் ராக்”கை அடைந்து விட்டு திரும்பி வரும் இறுதிப் படகுப் பயணி எங்களுக்குக் கீழே கடந்து சென்று கொண்டிருந்தார்.

ரமா கதையைத் தொடர்ந்தாள்:

"வ்ரஜலால், வங்கிக்கோ அலுவலகத்திற்கோ சிறிதுகூட செல்வது இல்லை என்பதையும் ஒரு நோயாளியைப்போல பகல் நேரம் முழுவதும் தன்னுடைய அறைக்குள் இருக்கும் படுக்கையிலேயே இருக்கிறார் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன்.

ஒரு நாள் மாலை நேரத்தில், நான் அறையில் அமர்ந்து ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தேன்.

"ரமா...''

நான் திரும்பிப் பார்த்தேன். வ்ரஜலால் பின்னால் வந்து நின்றிருந்தார்.

"ரமா, நான் உனக்கு என்ன தவறு செய்துவிட்டேன்? உன்னுடைய இந்தக் கொடூரமான நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்? அன்பே, நான் ஏதாவது செய்திருந்தால், என்னை மன்னித்துவிடு.''

நான் வ்ரஜலாலின் முகத்தையே சற்று நேரம் கூர்ந்து பார்த்தேன். "மன்னிப்பா? மன்னிப்பு கேட்க வேண்டியது என்னிடம் அல்ல. அதோ... அவளிடம்'' நான் உமாவின் புகைப்படத்தைச் சுட்டிக் காட்டினேன்.

"நீங்கள் எவை உங்களுடைய சுயநலத்திற்காகவும் மோசமான நடவடிக்கைகள் மூலமும் புகழை வைத்துக்கொண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றீர்களோ, அவள்தான் உங்களுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும். அவளோ மன்னிப்பு தருவதற்குக்கூட முடியாமல் மரணத்தைத் தழுவி விட்டாள்.''

வ்ரஜலால் அந்தப் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்தார். தொடர்ந்து பரிதாபம் கலந்த ஒரு குரலில் சொன்னார்:

"ஆமாம்... உண்மைதான். நான் அவள்மீது அன்பு செலுத்தவில்லை. அதாவது- அவளுடைய அன்பில் நான் அந்த அளவிற்கு அக்கறை காட்டவில்லை.''

"நீங்கள் என்னிடமும் அப்படியே நடந்து கொண்டால் போதும். இளம் வயதிலேயே உமா, தன்னுடைய இதயத்தில் ஒவ்வொரு காதல் துளியையும் நீங்கள் சுவைக்க வேண்டும் என்பதற்காக சேகரித்து வைத்திருந்தாள். நீங்கள் அதை சர்வ சாதாரணமாக நிராகரித்து விட்டீர்கள். அவள் ஏமாற்றத்தில் வெந்து இறந்துவிட்டாள். என் இதயத்தில் வெறுப்பையும் பழி வாங்கும் உணர்வையும் தவிர வேறு எதுவுமே இல்லை. உமாவின் காதல் பழிவாங்கல் மட்டுமே நான்.''

"பிறகு... நீ எதற்காக என்னைத் திருமணம் செய்தாய்?''

"பிரேமாவின் தாயாக ஆவதற்கு...''

அவர் சிறிது நேரம் தலையைக் குனிந்து கொண்டு சிந்தித்தார். பிறகு எதுவும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார்.

என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு ரமா சொன்னாள்: "நண்பரே, மனிதர்களைத் தட்டி எழுப்பி செயல்பட வைப்பது ஏமாற்றம்தான். நினைப்பவை அனைத்தும் கிடைக்கக்கூடிய ஒருவனால் எதையும் செய்ய முடியாது. என்னைத் திருமணம் செய்வதற்கு முன்பு, வ்ரஜலால் அப்படிப்பட்ட ஒரு மனிதராக இருந்தார். தன்னிடமிருக்கும் பணத்தால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனால், அவருடைய இதயத்தைச் சுட்டெரிக்கக் கூடிய நெருப்புக் கட்டை நான் என்பதைத் தெரிந்து கொண்டபோது மட்டும்தான் அவர் அமர்ந்து சிந்திக்க ஆரம்பித்தார். என்னைப் பற்றிய விருப்பம் அவருடைய இதயத்தில் ஒரு பிளவை உண்டாக்கிவிட்டது. அந்தப் புண்ணில் அமிலத்தைத் தடவியதைப் போல என்னுடைய ஒவ்வொரு செயலும் நடவடிக்கையும் இருந்தன.

நான் அறையில் அமர்ந்து "சமேலி”யின் இறுதி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று நான் திரும்பிப் பார்த்தபோது வ்ரஜலால் எனக்குப் பின்னால் வந்து நின்றிருந்தார். அவருடைய அந்த ஏமாற்ற உணர்வையும், கெஞ்சிக் கொண்டிருந்த கண்களையும் நான் ஒரு முறை பார்த்தேன். ஆனால், நான் அவரைப் பார்க்காததைப் போல எழுதிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் சென்றதும், அவர் எதுவும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்.

நான் அதிகமான நேரமும் "சமேலி”யின் வேலையிலேயே மூழ்கியிருந்தேன். ஒரு நாள் சாயங்காலம் நான் அருகிலிருந்த வயல்களில் சற்று நேரம் நடந்துவிட்டு அறைக்குத் திரும்பி வந்தபோது என்னுடைய மேஜைமீது சில விலை மதிப்புள்ள மலர்கள் கிடப்பதைப் பார்த்தேன். அந்தப் பூச்செண்டு வ்ரஜலால் கொண்டு வந்து வைத்தது என்பதை உடனடியாக நான் புரிந்து கொண்டேன். ஒரு பழி வாங்கும் எண்ணத்துடன், அதை சாளரத்தின் வழியாக வெளியே வீசி எறிய வேண்டுமென்று நான் நினைத்தேன். ஆனால் அந்தக் காதல் கொலைகாரனின் பரிசுப் பொருளின் மணம் என்னை மயக்கிவிட்டது. நான் அந்த மலர்க்கொத்தை மேஜையின் அருகில் நகர்த்தி வைத்துவிட்டு எழுதுவதற்காக உட்கார்ந்தேன்.

உமாவின் புகைப்படம் எனக்கு எழுதுவதற்கு உந்து சக்தியைத் தந்து கொண்டிருந்தது. நான் அன்று மேலும் சற்று அதிகமான வரிகளை எழுதினேன்.

அதற்குப் பிறகு எல்லா நாட்களிலும் நான் வெளியே போய்விட்டு திரும்பி வரும்போதும், மேஜைமீது ஒரு புதிய பூச்செண்டு இருப்பதைப் பார்க்கலாம். நான் அதை வீசி எறியவோ, பயன்படுத்தவோ செய்யாமல் அங்கேயே வைத்துவிடுவேன்.

அப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ஒரு நாள் சாயங்காலம் திடீரென்று வ்ரஜலால் என்னுடைய அறைக்குள் நுழைந்து வந்தார். அவருடைய செயல்கள் மொத்தத்தில் ஒரு பைத்தியக்காரனின் செயல்களைப் போல இருந்தன. ஒரு வேதனை கலந்த குரலில் அவர் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

"ரமா, என்னைக் காப்பாற்று. என் வாழ்நாளில் நான் இந்த அளவிற்கு கவலையை சந்தித்ததே இல்லை. என் இதயத்தில் இருக்கும் வேதனையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனக்கு நீ வேணும். உன் காதல் வேணும். இனி ஒரு நிமிடம்கூட என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காக என்னிடமிருக்கும் எல்லாவற்றையும் நான் புல்லைப் போல நினைத்து வீசி எறியத் தயாராக இருக்கிறேன். உன்னுடைய ஒரு எளிய தாசனாக என்னை ஏற்றுக்கொள்.''

வ்ரஜலால் என்னுடைய இடையைக் கட்டிப் பிடித்தார். என் உடல் முழுவதும் ஒரு மின்சக்தி பாய்ந்தது- ஒரு ஆணின் முதல் தொடல்.

"ச்சீ... விலகி நில்லுங்க'' -அவருடைய பிடியை விட்டு விலகி நான் இரண்டடிகள் பின்னால் தள்ளி நின்றேன். நான் காலில் இருந்து தலை வரை நடுங்கிக் கொண்டிருந்தேன். "என்னைத் தொடாதீங்க... நான் காதல் அல்ல. காதலின் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் பழிக்குப் பழியின் சின்னம்.''

"ஒரு பெண் கோமாளியிடம் இருக்கக்கூடிய பழிக்குப் பழி வாங்கும் உணர்ச்சியா?''

அவர் காதலில் உண்டான ஏமாற்றமும் கோபமும் கலந்த குரலில் என்னிடம் கேட்டார். "நீ என்னைத் திருமணம் செய்து கொண்டாய். என்னை ஆசைப்பட வைத்தாய்.''

நான் ஒரு கிண்டல் கலந்த குரலில் பதில் சொன்னேன்:

"ஒரு வியாபாரியின் ஆசையின் விளைவை, அதோ... அந்த புகைப்படத்தின் முகத்தில் பார்க்கலாம்.''

"உமாவிடம் என்னை ஈர்க்கிற அளவிற்கு நான் எதையும் பார்க்கவில்லை. அது என்னுடைய குற்றமா?''


அந்த கெஞ்சுகிற கண்களுடன் வ்ரஜலால் தொடர்ந்து என்னை நெருங்கினார். எனக்கு பயம் அதிகமானது.

"தொடாதீங்க... என்னைத் தொட்டால் நான் சத்தம் போட்டுக் கத்துவேன்.'' நான் பயமும் பதைபதைப்பும் கலந்த ஒரு கலக்கத்துடன் கட்டளையிட்டேன்.

வ்ரஜலால் அதே இடத்தில் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றுவிட்டார்.

"நீ என்னைக் கொன்று விடுவாய். நான் இதயம் வெடித்து இறந்து விடுவேன்''. அந்த வார்த்தைகளை ஒரு தாழ்ந்த குரலில் கூறி விட்டு, அமைதியாக ஒரு பிணத்தைப் போல அவர் வெளியேறினார்.

நான் கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, பாதி சுயஉணர்வுடன் படுக்கையில் போய் விழுந்தேன். அன்றைய இரவைப் போன்ற ஒரு பயங்கரமான இரவு என் வாழ்க்கையில் இருந்ததே இல்லை என்றுகூட கூறலாம். என் இதயத்தில் பயங்கரமான ஒரு சூறாவளி அடித்துக் கொண்டிருந்தது. என் சிந்தனைகள் சிதறிப் போய் குத்திக் கொண்டிருந்தன. எதிர்பார்ப்புகள் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தன. கூடுகள் இல்லாமற் போன பறவைகளைப் போல நினைவுகள் சிதறிப் பறந்தன. நினைத்துப் பார்த்திராத பல பயங்கரமான கனவுகளும் என்னுடைய மனதில் நிறைந்திருந்தன. இருள், இருளுக்குள் பலமாக நுழைந்தது. வெளியிலும் இருட்டுத்தான்.

அந்த அடர்த்தியான இருட்டிற்குள் ஊளை இட்டவாறு எங்காவது போய் மறைந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு வெறி உண்டானது.

நான் நின்று கொண்டிருந்த கரையை ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி அரித்துத் தின்பதைப் போல எனக்குத் தோன்றியது. எங்கே வழுக்கி விழப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை.

இனியொரு முறை வ்ரஜலாலிற்கு முன்னால் உறுதியான மனதுடன் நிற்பது என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயம் என்று எனக்குத் தோன்றியது.

ஒரு பெண்ணின் இதயத்தை எந்தவொரு மனோதத்துவ நிபுணராலும் புரிந்து கொள்ள முடியாது. அடுத்த நிமிடத்தில் நடக்கப் போவது என்ன என்பது அந்த இதயத்தின் உரிமையாளருக்குக் கூட தெரியாது.

பயம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த உண்மையை என்னிடமிருந்து என்னால் மறைத்து வைக்க முடியவில்லை. வ்ரஜலாலை என் இதயத்தின் அடி நீரோட்டம் என்னை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை- என்னையே அறியாமல் வ்ரஜலாலை நான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பதை- அந்தக் "காதல் கொலைகாரன்” என்னை எப்படியோ வசீகரித்திருக்கிறார் என்பதை! ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது இருக்கும் காதலில் எழுபத்தைந்து சதவிகிதம் இரக்கமோ பரிதாப உணர்ச்சியோ கலந்ததாக இருக்கும். இன்னொரு உண்மையையும் கூறுகிறேன். ஒரு ஆண் காதலிப்பது பெண்ணின் அழகையோ அல்லது அவளுடைய ஆழமான தனித்துவத்தையோ இருக்கலாம். ஆனால், ஒரு பெண் காதலிப்பது ஆணை அல்ல- அவனுடைய காதலை. வ்ரஜலாலின் பரிதாபம் நிறைந்த பார்வைகளும் அமைதியான கெஞ்சல்களும் என் இதயத்தைக் குத்திக் கீறிவிட்டன. என் நினைவுகளை காயப்படுத்தின.

என்னுடைய உறுதியின் ஆபத்தான வளர்ச்சியை நினைத்து நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாளேன். தப்பிப்பதற்கு வழி இல்லாமல் நான் அந்த வலைக்குள் அகப்பட்டுக் கொண்டேன்.

அதற்கேற்றாற் போல என்னுடைய சிந்தனைகளும் மாறத் தொடங்கின. வ்ரஜலால் என்னிடம் எந்தவொரு தவறையும் செய்ததில்லை. பிறகு... நான் எதற்கு அவரை வெறுக்கிறேன்? "உமாவிடம் என்னை ஈர்க்கிற அளவிற்கு நான் எதையும் பார்க்க வில்லை. அது என்னுடைய குற்றமா?” என்ற அவருடைய வார்த்தைகள்... அந்தக் கேள்விகூட நியாயமானதே. அப்படியென்றால் என்னிடம் அவரை ஈர்க்கிற மாதிரி என்னவோ இருக்கிறது. அந்த உணர்வு எனக்கு மிகுந்த ஒரு ஆனந்தத்தை அளித்தது.

வ்ரஜால் இப்படி திடீரென்று எனக்கு அடிமையாக ஆவார் என்று நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. அவருடைய முன்கோபமும் ஆணவமும் சேர்ந்து என்னிடம் பயங்கரமான ஒரு போராட்டத்திற்கு அவரைத் தூண்டிவிடுவதாக நான் நினைத்தேன். ஆனால், நடந்ததோ நேர் எதிராக இருந்தது. அந்த வீழ்ச்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை.

அன்று இரவு எனக்கு சிறிதுகூட தூக்கம் வரவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்தவுடன் என் பெற்றோரின் இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.

பொழுது விடிந்தது. எனக்கு அங்கிருந்து செல்வதற்கு மனம் வரவில்லை. ஏதோ ஒரு சக்தி என்னை அங்கேயே தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.

"சமேலி”யின் கையெழுத்துப் பிரதியை முன்னால் எடுத்து வைத்துக்கொண்டு, எழுதுவதற்கு முயற்சித்தேன். ஆனால், புதிதாக ஒரு வரிகூட தோன்றவில்லை.

மதியம் உணவு சாப்பிட்டு முடித்து நான் சிறிது நேரம் தூங்குவதற்காகப் படுத்தேன்.

ஏதோ தெளிவற்ற ஒரு கனவைக் கண்டு நான் கண் விழித்து விட்டேன். வ்ரஜலால் எனக்கு அருகில் மெத்தைமீது வந்து உட்கார்ந்திருந்தார்.

"ரமா... ரமா... என் தேவி, என்னை மன்னிக்க மாட்டாயா?''

அவர் என்னை இறுக அணைத்துக் கொண்டார். என்னால் ஒரு வார்த்தைகூட கூற முடியவில்லை. வெறும் ஒரு பழைய துணிக் கட்டைப் போல அந்தக் கைகளின் அணைப்பிற்குள் நான் சிக்கிக் கிடந்தேன்.

எங்களுடைய அந்த தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றி அதிகமாக எதுவும் கூறப் போவதில்லை. வ்ரஜலால் என்னை ஒரு தேவதையைப் போல வழிபட்டார். அலுவலகத்திற்குச் செல்லாமல், எப்போதும் என்னுடனே இருப்பதற்கு அவர் ஆசைப்பட்டார். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைக்கு பதிலாக, என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அவரிடம் இருந்தது.

அந்த தாம்பத்திய வாழ்க்கையின் போதையில் நானும் மாற ஆரம்பித்தேன். ஒரு கவிதை எழுதும் பெண்ணின் கனவுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. ஒரு இல்லத்தரசியின் உண்மைத்தன்மைக்குள் நான் கால்களைப் பதித்தேன். என்னை வழிபடும் ஒரு கணவர், சுதந்திரம், பணம்- இவற்றுக்கு மேலே என்ன சுகம் வேண்டும்? எனினும், எனக்கு சந்தோஷம் உண்டாகவில்லை

என்பதை நான் கூறுவதற்குக் காரணம்- உண்மையைக் கூற வேண்டும் என்பதற்காகத்தான்.

அப்படியே மூன்று வருடங்கள் கடந்தோடின. உமாவின் புகைப்படத்தை கட்டிலுக்கு மேலே இருந்த பீடத்திலிருந்து அகற்றி பெட்டிக்குள் வைத்துப் பூட்டினேன். அந்த முகத்தைப் பார்க்கும்போது என்னுடைய மனதில் அசாதாரணமான ஒரு பயம் தோன்றிக் கொண்டிருந்தது. "சமேலி”யை நான் முழுமை செய்யவில்லை. ஒரே நேரத்தில், ஒரு இல்லத்தரசியாகவும் கவிதாயினியாகவும் இருப்பது என்பது இயலாத விஷயம். உமாவைதான் முற்றிலுமாக மறந்து விட்டேன். பிரேமாவை நான் வெறுக்கவில்லை. ஆனால், ஒரு தாயின் பாசத்தை அவளிடம் செலுத்த என்னால் முடியவில்லை. அவள் எனக்குப் பிறந்தவள் அல்ல என்ற ஒரு சிந்தனை என்னை அலட்டிக் கொண்டிருந்தது.


எனக்குச் சொந்தமான ஒரு குழந்தையைக் கொஞ்ச வேண்டும் என்ற ஒரு ஆசை என்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. எனக்குப் பிறக்கும் குழந்தைக்கு முத்தம் தர, அதைத் தாலாட்ட, அதன் அழுகையைக் கேட்க... ஹா! நான் தினந்தோறும் மனதிற்குள் வேண்டிக் கொண்டேன். ஆனால், என்னுடைய விருப்பம் நிறைவேறவில்லை. உமாவால் செய்ய முடியாததை என்னால் செய்ய முடிந்தது. ஆனால், அவளுடைய தாய்மை எனக்குக் கிடைக்கவில்லை. சுயநலம் நிறைந்த, குழந்தை வேண்டும் என்ற ஆசை என்னை ஒரு மோசமானவளாக ஆக்கியது. நான் பிரேமாவைக் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்தேன்.

அன்று மாதத்தின் இறுதி நாள். நான் அறையில் அவருடைய சட்டைக்கு "இஸ்திரி” போட்டுக் கொண்டிருந்தேன். அவருடைய எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதில் நான் ஒரு தனிப்பட்ட சந்தோஷத்தை உணர்ந்தேன். அவருடைய சட்டையின் மார்புப்

பகுதியில் இஸ்திரிப் பெட்டியை வைத்தபோதுகூட இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை நான் அனுபவித்தேன்.

மூன்று மணி அடித்தது.

அறிமுகமில்லாத ஒரு மனிதர் உள்ளே ஓடிவந்து என்னிடம் கேட்டார்: "நீங்கள்தான் மிஸ்டர் வ்ரஜலாவின் மனைவியா?''

இஸ்திரிப் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, பதைபதைப்புடன் நான் கேட்டேன்: "என்ன வேணும்?''

"உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும். மிஸ்டர் வ்ரஜலால் ஒரு கார் விபத்தில் சிக்கி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் படுத்திருக்கிறார்.''

பாதி சுய உணர்வுடன், ஆடைகளைக்கூட மாற்றாமல், காரில் ஏறி நான் மருத்துவமனைக்கு வேகமாகச் சென்றேன்.

என்னிடம் இறுதியாக ஒரு வார்த்தைகூட கூற இயலாமல், அந்த உணர்வற்ற நிலையிலேயே அவர் இந்த உலகத்தை விட்டு நீங்கினார்.

அன்று இரவு, அந்தப் படுக்கையறையின் கட்டிலின்மீது அமைதியாக நான் உட்கார்ந்திருந்தேன். உடனே பிரேமா குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டே வந்து என்னை இறுக அணைத்துக் கொண்டு என் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தாள். அவளுடைய கண்களில் நான் இரண்டு முகங்களைப் பார்த்தேன். பிரேமாவை நான் இறுக அணைத்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் ஒரே நிலையில் இருக்கிறோம் என்பதை நான் புரிந்து கொண்டேன். என் உமாவையும் கணவரையும் சொந்தக் குழந்தையையும் நான் பிரேமாவிடம் பார்த்தேன். இந்த பூமியில் எனக்கு எஞ்சியிருந்த காதல்தான் அந்த சிறுமி என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மிகுந்த பாசத்துடன் நான் அவளை மீண்டும் இறுக அணைத்துக் கொண்டேன்.

பிரேமா அப்படியே என்னுடைய மடியில் படுத்துத் தூங்கினாள். அவளைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, நான் அங்கிருந்து எழுந்தேன். ஒரு மிகப் பெரிய பொக்கிஷத்தைப் போல நடுங்கும் கைகளுடன் பெட்டியிலிருந்து நான் உமாவின் புகைப்படத்தை வெளியே எடுத்தேன். தாங்க முடியாத இதய வேதனையுடன், இரக்கத்துடன் அந்த முகத்தை நான் சிறிது நேரம் பார்த்தேன்.

"மன்னிச்சிடு...''

அந்த வார்த்தைகளை உச்சரித்து முடிப்பதற்கு முன்பே நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்.

அந்தப் புகைப்படத்தை நான் மீண்டும் கட்டிலுக்கு மேலே இருந்த பீடத்தின்மீது வைத்தேன். அந்த அமைதியான சூழ்நிலையில், சாளரத்தின் வழியாக நான் வெளியே பார்த்தேன். "அந்த வெறுமை நிறைந்த நீல நிறத்திற்கும் அப்பால் ஒரு உலகம் இருக்குமோ?”

கேள்விச் சினனங்களைப் போல பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.