
அன்புள்ள நண்பரே,
நினைத்துப் பார்க்கிறபோது நகைச் சுவையாகத்தான் இருக்கிறது. விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்போல் இருக்கிறது. அதேசமயம், அழவேண்டும் போலவும் இருக்கிறது. சில நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் கட்டாயம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் எழுத முடியவில்லை. எழுதாமலும் இருக்க முடியவில்லை. இரண்டு வித எண்ணங்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு ஊசலாடிக் கொண்டிருக்கிறேன் நான்.
மரணத்திறகும் வாழ்வுக்கும் இடையில் இருந்து கொண்டு என்று கூறுவதைவிட மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் மத்தியில் சிக்கிக் கொண்டு நான் இருக்கிறேன் என்று கூறுவதே பொருத்தமானது. ஆனால் அதுகூட உண்மையில்லை. அழிவின் எல்லையில் என்பதே உண்மை. தமாஷான ஒரு விஷயம் சொல்கிறேன். மரணத்தின் நிழலில் இந்த உலகம் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?
உண்மை என்னவென்றால் நீங்களும் நானும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பொருட்களும் எப்போதும் இருப்பது மரணத்தின் நிழலில்தான். இதில் பயப்பட ஒன்றுமே இல்லை, தெரியுமா? வேண்டுமானால் சிரிக்கலாம். இல்லாவிட்டால் கண்ணீர்விட்டு அழலாம். இந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைக்கிறபோது ஒருவேளை நான் இறந்துபோய் கற்பனை செய்ய முடியாத பல கோடி யுகங்களின் நிழலில் கரைந்து சங்கமித்திருக்கலாம். அதனால் மிகவும் கவனமாக இதை வாசிக்கவும். இது ஒரு சாதாரண நகைச்சுவைக் கதைதான். கதை படிப்பது என்பது உங்களுக்கு விருப்பமான ஒன்றுதானே! இதில் கதாபாத்திரங்கள் அப்படி ஒன்றும் அதிகமாகக் கிடையாது. நான் மதிக்கும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், ஒரு திரைப்பட நடிகர், ஒரு நடன மங்கை, ஒரு தொழிலாளர்கள் தலைவன்- இவர்கள் ஒரு சிறிதாவது என்மீது பிரியம் கொண்டவர்கள்.
இவர்கள் தவிர, மீதியுள்ளது பால்காரி குஞ்ஞம்மா. அவளை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறேன். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஒரு விஷயம். இதை என்னால் முழுமையாக முடிக்க முடியுமா தெரியவில்லை. நான் பிறந்த நிமிடத்திலிருந்தே மரணம் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை. எப்போதும்- இப்போதும்கூட. அன்பு நண்பரே, எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. அதோடு துயரமும். இப்போது சிரிக்க வேண்டும் என்ற உணர்வும் உண்டாகிறது. இதை முழுமையாக முடிக்க முடியாமல் போய்விட்டால்.. உங்களுக்கொரு செய்தி சொல்ல விரும்புகிறேன். நல்ல செயல் எதுவாக இருந்தாலும், மற்றவர்களுக்குத் துன்பம் தராத செயல் எதுவாக இருந்தாலும் கட்டாயம் செய்யுங்கள். மரணம் நம் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
நான் இந்த உலகத்தை மிகவும் விரும்புகிறேன் என்பதை உண்மையாகவே நம்புங்கள். இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும், எல்லா பிரபஞ்சங்களையும் நான் சினேகிதத்துடன் பார்க்கிறேன். இப்போது நான் தண்ணீர்மேல் சினேகம் கொள்கிறேன். காரணம் தெரியுமா?
எனக்கு இப்போது ஒரே தாகம். வறண்டுபோன பாலைவனம்போல் இருக்கிறது இதயம். தாங்கமுடியாத தாகம். கட்டாயம் நீர் வேண்டும். "தண்ணீ... தண்ணீ..." என் குரலைக்கேட்க யாருமே இல்லை. தனிமையும் பயங்கரமும் மட்டுமே எங்கும்... நான் மட்டும் தனியே இருக்கிறேன். தனிமை... வந்ததும் போவதும் எல்லாம் அங்குலம் அங்குலமாக... ஓ... என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நான் மதிக்கும் அந்த மனிதர்... அவர் இப்போது இங்கு வந்தால்... இல்லாவிட்டால் அந்த குஞ்ஞம்மா. இல்லை. நேரம் ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை. நான்கு மணியாக இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது?
சிறிது பொறுமையோடு கேளுங்கள்.
அது- அல்லது- இது- ஒரு நகைச்சுவை கதை என்று கூறினேன் அல்லவா? நினைத்துப் பார்க்கிறபோது சிரிப்புதான் வருகிறது. அழக்கூடத்தான் தோன்றுகிறது. ஆனால் அதைக் கேட்க இங்கு யார் இருக்கிறார்கள்? இது வெறும் கேள்வி மட்டும்தான். பதிலே இல்லாத கேள்விகள் இருக்கின்றன அல்லவா? வெறும் கேள்விகள் மட்டும்... அதாவது, என்னால் தனியாக அமர்ந்து அழவும் சிரிக்கவும் முடியும். பயங்கரமான முடிவற்ற வெளிப்பரப்பில் தூக்கி எறியப்பட்ட ஒரு குழந்தை நான் என்று கருதிக் கொள்ளுங்கள். இதுவரை நான் எப்படி உயிர் வாழ்ந்தேன்? சாப்பிட உணவு வேண்டாமா? உறங்க இடம் வேண்டாமா? இரவும் பகலும் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா? இருந்தாலும் எதுவுமே பாதுகாப்பாக இல்லை என்பதே உண்மை. கவனமாக என்னை மட்டும் நினைத்துப் பார்த்தேன். "தெய்வமே" என்று அழைத்துப் பார்த்தேன். வேண்டாம்... எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். நான் அந்த மாதிரி வளர்ந்த ஆளில்லை.
ஆனால் பதினெட்டாவது வயதில் கையில் ஒரு பேனாவை வைத்துக் கொண்டு பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறினேன் என்பது மட்டும் உண்மை. அப்படி எங்கு கிளம்பினேன்? எனக்கு கொஞ்சம்கூட அதற்கு முன்பு அறிமுகமே இல்லாத, விந்தையான, அழகான, பயங்கரமான இந்த பெரிய உலகத்தை நோக்கித்தான். அப்படி என்றால் இப்போது எனக்கு எத்தனை வயது ஆகிவிட்டது என்கிறீர்களா? தெரியாது... குஞ்ஞம்மாவிடம் நான் கூறுவதுண்டு, எனக்கு ஐம்பத்திரண்டு வயதாகிவிட்டது என்று. அவளுக்கு எட்டே வயதுதான் ஆகிறது. அவளை நான் திருமணம் செய்து கொள்வது குறித்து அவளுக்கு மிகவும் விருப்பம். அதாவது... என்மீது அவளுக்கு அதிகமாகவே இஷ்டம். இருந்தாலும் அங்கும் ஒரு குழப்பம் இருக்கவே செய்தது. தந்தையும், தாயும் இதற்குச் சம்மதிக்க வேண்டுமே! இது குறித்து அவளுக்கு வேதனையும், ஏக்கமும் நிறையவே உண்டு. அவள் கேட்டாள்.
"நீங்க வந்து சொல்லலாம்ல..."
நான் கூறினேன்:
"சொல்லலாம்டி... இந்தப் போர் முடியட்டும்."
"முடியவே இல்லைன்னா...?"
அவள் கேட்டது சரிதான். போர்தான் இப்போது சர்வ சாதாரண ஒன்றாகிவிட்டதே! அதனால் நான் பதிலொன்றும் கூறவில்லை. நான் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பரவாயில்லை.
இப்போது வெயில் "சுள்"ளென்று காய்ந்து கொண்டிருக்கிறது. நெருப்புக்கு அருகில் இருப்பது மாதிரி சூடான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. கொழுந்துவிட்டு எரிகின்ற பெரும் நகரங்களில் இருந்து வீசுகின்ற சூடான காற்றா அது? அதோடு சேர்ந்து குளிர்ந்த மென்காற்றும். வராந்தாவுக்குப் பக்கத்தில் வளர்ந்திருக்கும் என் ரோஜாவிலிருந்தும் முல்லையிலிருந்தும் வீசிய காற்றே அது. இளம் சிவப்பாகவும் தூய வெள்ளையாகவும் மலர்ந்து அழகு செய்யும் மலர்கள்! இந்த மலர்கள் எங்கிருந்து வந்தன என்பது எனக்குத் தெரியாது. இதில்தான் எத்தனை எத்தனை மலர்கள் பூத்தன! இலையோ கூர்மையான முனையோ இல்லாத வெறும் நான்கு குச்சிகளே அவை.
இரண்டு ரோஜாவும் இரண்டு முல்லையும். பல வருடங்களுக்கு முன்பு அவற்றை நான் சட்டிகளில் நட்டு, மண் போட்டு, நீர் ஊற்றினேன். பூக்கள் நிச்சயம் வராது என்று பலரும் கூறினார்கள். நிச்சயம் முல்லை பூக்கவே பூக்காது என்றார்கள். ஒரு சவால் என்றுதான் கூறவேண்டும்- முதலில் பூத்ததென்னவோ முல்லைதான். அதற்குப் பிறகு ரோஜா. முதன்முதலாகக் குஞ்ஞம்மா வந்தபோது அவள் செடிகளின் இலைகளைக் கிள்ளினாள். திட்டம்போட்டு ஒன்றும் அவள் அதைச் செய்யவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே இலையைக் கொஞ்சம் கிள்ளுவது என்பது ஒரு சுகமான விஷயம்தான். அப்படிச் செய்கிறபோது நான் வேண்டாமென்று விலக்குவேன்.
ஆனால் அவள் அதை மறந்துவிடுவாள். ஒருநாள் நான் ஒரு இரும்புக் கடப்பாரையை எடுத்தேன். செடிகளின் அடிப்பாகத்தைக் கிளறப் பயன்படக்கூடிய இரும்பால் ஆன கருவி அது. இப்போதும் அது... அதோ மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை எடுத்து குஞ்ஞம்மாவின் இளம் சுண்டு விரலைப்பிடித்து, படியில் வைத்து, மெதுவாக அதன்மேல் இரும்புக் கடப்பாரையால் தட்டினேன். அவளுக்கு அது வேதனையைத் தந்திருக்க வேண்டும். நான் இரும்புக் கடப்பாரையால் தட்டி முடித்த பிறகும், அவள் அதே இடத்தில் விரலை வைத்தவாறு அமர்ந்திருந்தாள். நான் பார்த்தபோது அவள் அழுது கொண்டிருந்தாள். அதாவது... அவளின் விழிகளில் ஒரே கண்ணீர் மயம். ஈரவிழிகளில் என்னைப் பார்த்தவாறு விரலை எடுக்காமலேயே விக்கிய குரலில் என்னிடம் கேட்டாள்.
"இனி அடிச்சே கொன்னுருவீங்களா?"
அன்று நான் சொன்னேன்:
"உன்னை வேணும்னா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்."
"ஏன், அடிச்சுக் கொல்றதுக்கா?"
நான் கொஞ்சம் பூக்களைப் பறித்து அவளின் தலைமுடியில் வைத்தேன். என்ன இருந்தாலும் இன்று செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவில்லை. லேசாக அவை வாடி இருந்தன. அவள் இப்போது வந்தால்... பாலைச்செடிகளுக்கு ஊற்றிவிட்டு ஒரு பாத்திரம் நிறைய நீரை எடுத்து ஆசை தீர நான் குடிக்கலாம். அவள் வர இனியும் எவ்வளவு நேரம் ஆகும்?
அவள் நேற்று வந்துபோனவுடனே என்னை மதிக்கும் அந்த ரசிகர் வந்தார். ஆமாம்...
நேற்று என் ரசிகரின் மனைவி விதவை ஆகியிருக்கலாம். குழந்தைகளுக்குத் தகப்பனில்லாத நிலை உண்டாகி இருக்கலாம். மரணத்தின் நிழலில் அந்த மனிதர்... அது போகட்டும். குஞ்ஞம்மா வருகிறபோது நான் இந்தச் சாய்வுநாற்காலியில் கையில் பேனாவை வைத்துக் கொண்டு, மடிமேல் எழுதுபலகையையும் பேப்பரையும் தாங்கிக் கொண்டு, எதையுமே பார்க்காத விழிகளோடு, எதையும் கேட்காத காதுகளோடு, எந்தவித அசைவும் இல்லாமல் விக்கித்துப் போய் நான் சிலை என உட்கார்ந்திருந்தால்... பாவம்! குஞ்ஞம்மா பயந்துபோய் விடுவாள். அவளைப் பயப்படச்செய்ய வேண்டும் என்ற தீர்மானமெல்லாம் எனக்கு இல்லை என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நான் சொல்ல வருவது என்னவென்றால் இந்தக் கட்டிடத்தில் நான் மட்டுமே தனியாக இருக்கிறேன் என்பதைத்தான். பெரிய ஒரு கட்டிடம் இது. ஏகப்பட்ட அறைகள் உள்ள இந்தக் கட்டித்தில் இருப்பதிலேயே சிறிய ஒரு அறையில் நான் இருக்கிறேன். மற்ற அறைகளில் ஆட்களே இல்லை. உயர்ந்த சுவர்கள் அமைக்கப்பட்ட பெரிய பரப்பளவு கொண்ட ஒரு காம்பவுண்டில் தனியே இருக்கும் ஒரு கட்டிடத்தில் சிறிய அறையில் வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு சாய்வுநாற்காலியில் குறுகிப்போய் நான் உட்கார்ந்திருக்கிறேன். பக்கத்து வீடுகளில் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடிப்போய்க் கிடக்கின்றன.
என் நண்பரே! இங்குதான் என்ன ஆர்ப்பாட்டம் முன்பு இருந்தது! சிரிப்பும் கேலியும் பாட்டும் கூக்குரல்களும் அட்டகாசமும்... இப்போது ஒரே அமைதி. அனைவரும் இந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். பெரும்பாலான வீடுகளில் பூந்தோட்டங்கள் காய்ந்துபோய்க் கிடக்கின்றன. சில வீடுகளில் செடிகள் வாடிப்போய் விட்டன. எல்லாவற்றையும் துறந்துவிட்டு, ஆட்கள் பயந்துபோய் எங்கோ தப்பித்து ஓடிவிட்டார்கள். எனக்கு மட்டும் போக இடமில்லை. அதாவது... இந்த உலகை விட்டு பயந்து அப்படி எங்குதான் போவது?
சரிதான். இந்த நகரம் ஒரு மரணமடைந்த வீடுபோல ஆகிவிட்டது. அதாவது... இன்னொரு வார்த்தையில் கூற வேண்டுமானால், மரணத்தை ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற வீடு. நிரந்தரமாக இருப்பவர்களில் அதிகம் பேர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்தாம். மீதி இருப்பவர்கள் விலை மாதர்கள், ரிக்ஷா வண்டி ஓட்டுபவர்கள், போலீஸ்காரர்கள். இதோடு பஸ்கள் உண்டு. புகைவண்டி உண்டு. ஆகாய விமானங்களும். சுருக்கமாகச் சொன்னால் இங்கு மக்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இங்கு நிலவும் இரவைப் பற்றி நினைத்துப் பாருங்கள். எல்லா இதயங்களிலும் அச்சம் புகுந்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஏன் அவர்கள் பயப்பட வேண்டும்? முன்பு யாரோ சொன்னது மாதிரி இழப்பதற்கு என்ன இருக்கிறது? ஆனால்... ஸைரன் என்று அழைக்கப்படுகிற அந்த அபாய முன்னறிவிப்புக் கருவியின் பயங்கரமான அந்த நீண்ட ஒலி! அது கேட்டுக் கேட்டு காதுகள்கூட அடைத்துப் போய்விட்டன. இருந்தாலும், ஒவ்வொரு முறை அந்த ஒலியைக் கேட்கிறபோதும் நடுக்கம் உண்டாகத்தான் செய்கிறது. இதோ... இந்த நகரத்தைக் குண்டு வீசித் தகர்க்கப் போகிறார்கள். எதிரிகளின் குண்டு வீசும் விமானங்கள் வந்துவிட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறபோது மனம் பாதிக்காமல் இருக்குமா? ஒன்றும் நடக்கவில்லை. இப்படி ஒவ்வொரு இரவும் பகலும் கழிந்து கொண்டிருக்க என்னுள் நடந்தது என்ன என்கிறீர்களா?
என்னால் அசையக்கூட முடியவில்லை. இல்லாவிட்டால் நான் எழுந்து சென்று குழாயைத் திருகி நீர் அருந்தி, வாசலை அடைத்து இழுத்துப் பூட்டியிருப்பேன். குஞ்ஞம்மாவைப் பயப்பட வைக்கக் கூடாது அல்லவா? ஆனால் எழுந்து நின்றால் வயிறு நான்காகப் பிளந்துவிடும். அதனால் இதே மாதிரி இருக்க வேண்டியதுதான். துண்டு துண்டாகி ரத்தம் கொட்ட துடித்துக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பு வேண்டாம். அப்படி ஒன்றும் நிச்சயம் நடக்கவில்லை. அப்படி என்றால் நடந்தது என்ன? நடக்கும் நிகழ்ச்சியில் சரியாகக் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. மூச்சு அடைக்கிறது. தமாஷாக வேறு ஏதாவது கூறுகிறேன். அழ வேண்டிய விஷயம்தான். உங்களுக்கும் எனக்கும் இது நன்றாகவே தெரியும். நமது உலகம் என்று கருதப்படும் இந்த வீட்டின் ஒரு பக்கம் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது... அதாவது இன்னொரு வகையில் கூறுவது என்றால்... மானிட சமுதாயம் என்ற உடலின் ஒரு பக்கம் அழுகிப்போய் நாறிக் கொண்டிருக்கிறது... இதுதானே போர் என்பது! சத்தியமாக எனக்கு அதில் சிறிதுகூட பங்கில்லை. உங்களுக்கு இருக்கிறதா? அங்கு நகரங்கள் பயங்கர ஓசையுடன் வெடித்துச் சிதறி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. ஆமாம்... எரியட்டும்! இந்தப் போர் உங்களை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது!
குஞ்ஞம்மாவையும் என் ரசிகரையும் பாதித்தது எப்படி என்கிறீர்களா? போரின் நினைவுச் சின்னம்போல, என் ரசிகரின் முன் பற்கள் இரண்டு தங்கத்தால் முலாம் பூசப்பட்டிருக்கின்றன, அழகுக்காக. சிரிக்காமலே இருந்தாலும், அவர் சிரிப்பது மாதிரியே எப்போதும் இருக்கிறது. அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். பாதுகாப்பான இடத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள். போர் மூலம் அவர் நான்கு லட்சம் வரை சம்பாதித்து விட்டார். இருந்தாலும் போர் நல்லது என்ற எண்ணம் அவருக்குக் கிடையாது. அவர் ஒரு நல்ல கலாரசிகர். சினிமாமீது ஆர்வமுண்டு. குஞ்ஞம்மாவை எடுத்துக் கொண்டால் அவளுடைய பிரச்சினை புல்லைப் பற்றியது. புல்லை நம்பி இருக்கிறது அவளின் வாழ்க்கை. தந்தை உண்டு. தாய் உண்டு. அண்ணன் உண்டு. தம்பி உண்டு. இவர்கள் தவிர இருபத்திரெண்டு கோழி, ஒன்பது பூனை, ஒரு பசு- எல்லாருமே புல்லை நம்பி வாழ்கிறார்கள். புல் வேண்டியது பசுவிற்கு. பசுவின் பாலை விற்றுத்தான் அவர்கள் சாப்பிட முடியும். ஒரு விதத்தில் எனக்கும் புல்லோடு தொடர்புண்டு.
அரை பாட்டில் பால் தொடர்ச்சியாக நான்... ஆனால், மனமொன்றி இல்லை. என்ன செய்யச் சொல்கிறீர்கள்? இப்போது குஞ்ஞம்மாவுக்கு நான் ஐந்து ரூபாய் தர வேண்டி இருக்கிறது. நான் சொன்னேன் அல்லவா, அவளின் பிரச்சினை புல்லைப் பற்றியது என்று.
"புல்லோட வெலை ஏன் கூடிடுச்சு?"
நான் சொல்வேன்:
"போர்தான் காரணம்."
அவள் அதை நம்பவில்லை. இருந்தாலும், கூறுவது நானாயிற்றே! அவள் கேட்டாள்:
"போருக்கும் புல்லுக்கும் என்ன சம்பந்தம்? "
குஞ்ஞம்மாவுக்கு அரசியலைப்பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. என் ரசிகருக்கு அரசியலை நன்றாகவே தெரியும். அவர் ஏற்கெனவே ஒரு பெரிய அரசியல் கட்சியில் இருப்பவர்தாம். அந்தக் கட்சிக்கு இந்த மனிதர் பணத்தை அள்ளி அள்ளி நன்கொடையாகத் தரவும் செய்கிறார். மற்ற கட்சிகளைப் பற்றி அவருக்கு நல்ல கருத்து கிடையாது. அந்தக் கட்சியின் தலைவர்களெல்லாம் சந்தர்ப்பவாதிகள். மக்களிடம் பொய்களை இஷ்டப்படி அள்ளி வீசிவிடுவார்கள். மக்கள் குருட்டுத்தனமாக அவர்கள் பின்னால் அணி வகுத்து நிற்பது சரியான செயல்தானா?
எத்தனைப் பொய்களைத் தினமும் அவர்கள் மேடையில் பேசுகின்றனர்! என் நண்பரே! உங்களுக்கு இதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இவர்கள் மேடையில் பேசுவதைக் கேட்க நேர்கிற சமயங்களில் நான் நினைப்பேன், காதுகள் இரண்டிலும் ஏதாவது அடைப்பான் வைத்து அடைத்துக் கொள்ள முடியாதா என்று.
நான் கேட்டேன்:
"இது எதுக்குத் தெரியுமா?"
"தெரியலியே!"
"அரசியல்வாதிகள் மனம் அறிய பச்சைப் பொய்களை அவிழ்த்து விடுவதைக் கேக்காம இருக்கத்தான்."
அவர் என்னையே பார்த்தார். அவர் பற்கள் ஜொலித்தன. கண்களில் கூட ஒரு பிரகாசம். அவர் சிரிக்கவில்லை. சாதாரண பொதுமக்கள் அதைச் சிரிப்பு என்று எண்ணுவார்கள். அதனால் நானும் அதைச் சிரிப்பு என்றே ஏற்றுக் கொண்டேன். நான் விழுந்து விழுந்து சிரித்தேன் அப்போது. இப்போது அப்படிச் சிரிக்க என்னால் முடியவில்லை. வேதனையுடன் புன்னகை செய்யலாம். அவர் என்னைப் பார்க்க வந்த வியாபாரத்தில் இறுதியாக மிஞ்சியது இது. எனக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று பார்க்கிறீர்கள் அல்லவா?
அவரை என்னிடம் அனுப்பி வைத்தது என்னுடைய மூன்று நண்பர்கள்தாம். அவர்கள் இந்த மரணத்தைத் தழுவும் நகரத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இங்கிருந்து தொண்ணூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு நகரத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் ஒரு தொழிலாளிகளின் தலைவர். மற்றொருவர் ஒரு திரைப்பட நடிகர். இந்த இரண்டிலுமே வில்லன் வேஷம்தான். அவற்றை ஏற்று நடிக்க அந்த ஆளுக்கு விருப்பமே இல்லை. வில்லனாக இல்லாத கதாபாத்திரங்கள் செய்யத்தான் அவருக்கு விருப்பம்.
"இங்க பாருங்க..." அந்த ஆள் கூறினார்:
"உங்க கதைகள் சினிமாவா எடுக்கறப்போ என்னைக் கூப்பிடணும். மறந்திடக் கூடாது."
நான் அழைக்காததால், இதோ அவரே அழைத்திருக்கிறார். அவர் எல்லா விஷயங்களிலும் மிகமிகக் கவனமாக இருப்பவர். நான் கூறுவது திரைப்பட நடிகரைப்பற்றி. அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. நடனம் ஆடவும், பாடவும்- அதாவது அவளுக்கு இவை இரண்டிலும் நல்ல பாண்டித்யம் உண்டு. அவள் என் கதையில் நடனம் ஆடவும் பாடவும் செய்யலாம். நடனமும் பாட்டும் என் கதைகளில் கிடையாது. இருந்தாலும் என் கதாபாத்திரம் என்ற முறையில் கதைகளில் அவள் பிரியப்படுகிற இடத்தில் அவள் வேண்டுமானால் நடனம் ஆடிக்கொள்ளட்டும். விருப்பப்படுகிற இடத்தில் பாடிக் கொள்ளவும் செய்யட்டும். அழகுபடுத்தல் என்பதற்காக நான் இதைக் கூறுகிறேன்.
நான் இதற்குச் சம்மதிப்பேனா என்பதுதானே உங்கள் சந்தேகம்! பாடுகிற இடம் வருகிறபோது நான் கூறுவேன்: "பாடு..." நடனம் ஆடவேண்டிய இடம் வருகிறபோது நான் சொல்வேன்: "ஆடு". நான் அவளுக்காக ஒரு கதை எழுதித் தருவதாகக்கூட கூறியிருக்கிறேன். அவளுக்காக அதில் பாடல் இடம் பெறச் செய்கிறேன் என்றுகூட வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அவளுக்காக இப்போது என் மனதில் உதிக்கும் கதை என்ன தெரியுமா?
மரணத்தின் முடிவில்லாத நடனம்!
அன்புள்ள நடன மங்கையே! இதோ நேரமாகி விட்டது. நடனமாடு. உனக்குத் தேவையான கதையின் பெயர் "மரணத்தின் முடிவில்லாத நடனம்!" நம்முடைய இந்த உலகமான வசந்த மண்டபத்தில் நடனமாடு! இதைச் சுற்றிலும் தீ பிடித்திருக்கிறது. நடனமாடு. தாண்டவ நடனம். ஆனந்த நடனமாகவே அது அமைந்தால் நல்லதுதான். கொடுமையான வேதனைக்கு மத்தியிலும், பயங்கர அட்டகாசங்களின் கொடூரச் சிரிப்புக்கு மத்தியிலும் நீ நடனமாடு. உனக்கு விருப்பமான பாட்டைப் பாடு. ஆத்மாவும் இதயமும் உடலும் பற்றி எரிகிறது. அதற்கான பாடலையும் பாடு.
மரணத்தின் முடிவில்லாத நடனம்!
அதை நான் இப்போது காண்கிறேன் என்பது மட்டும் உண்மை. கற்பனையில் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னவென்றால், உலகம் முழுவதும் இப்போது எரிந்து கொண்டிருக்கவில்லை. ஒரு பகுதி மட்டுமே. அங்கு ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நகரங்கள் அல்லவா எரிந்து கொண்டிருப்பது. கப்பல்கள் உடைந்து சிதறுகின்றன. விமானங்கள் துண்டுத் துண்டாகச் சிதறி எரிந்து விழுகின்றன. அங்கு மரணம் ஓங்காரமிடுகிறது. அங்கு மரணம் கை கொட்டிச் சிரிக்கிறது. அங்கு மரணம் தாண்டவ நடனம் புரிகிறது.
இங்கேயோ?
அமைதி. இந்த நகரம் எப்போது வெடிகுண்டின் பாதிப்பிற்கு உள்ளாகப்போகிறது என்பது தெரியவில்லை. குஞ்ஞம்மா சொல்வாள்- அப்படியென்றால் அவளின் தந்தை சொல்வார்: "நம்மைப் படைச்ச கடவுள் கூப்பிடறப்போ, எங்கே இருந்தாலும் அவனைப் போய்ச் சேர வேண்டியதுதான்."
குஞ்ஞம்மாவின் தாய் கூறுவாள்:
"நாம இங்கே இருந்து எங்கேயாவது போகணும்."
குஞ்ஞம்மா கூறுவாள்:
"இங்கு வெடிகுண்டு விழுந்துச்சுன்னா, அதைப் பார்க்கலாமே!"
என் ரசிகர் கூறுவார்:
"வெடிகுண்டு விழுந்து இந்த நகரம் வெடித்துச் சிதறி எரியறப்போ, அதை ஃபிலிமில் படமாக்கினா..."
அந்த ஆள் என் அருகில் வர மூல காரணம் அந்தத் தொழிலாளிகளின் தலைவர்தான். அதாவது என்னை இந்தச் சூழ்நிலையில் கொண்டு வந்துவிட்டது ஒரு விதத்தில் பார்த்தால் அந்தத் தொழிலாளர்களின் தலைவரும்தான். ஆனால், அவர் கெட்டவர் அல்ல. நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம். என்ன இருந்தாலும் எனக்கு அவர் நண்பர் அல்லவா? உண்மையிலேயே அவர் தொழிலாளர்களின் தலைவர் மட்டும்தான். வெறுமனே தலைவர் என்று கூறிக் கொண்டிருக்கவில்லை. தொழில் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர். இயந்திரங்கள் உண்டாக்கும் ஓசைகளும் நெருப்பின் உஷ்ணமும் உருகிய உலோகத்தின் சிவந்த நிறமும்- இவைதாம் அவரின் பின்னணி இசை. உயிர்ப்புடன் எந்த விஷயம் குறித்தும் அவரால் பேச முடியும். தலைவர் என்பதற்காக உலக விஷயங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவன் என்றெல்லாம் அவர் நடிக்கக் கூடியவர் அல்ல. ஆதவனுக்குக் கீழேயும் மேலேயும் தான் அறியாத- அறிந்து கொள்ள முடியாத எத்தனையோ சமாச்சாரங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை அவரும் அறிந்து வைத்திருக்கவே செய்கிறார்.
"உருகிய உலோகத்தின் உஷ்ணத்தைப் பற்றி ஏதாவது தெரியணும்னா என்னைக் கேளுங்க."
ஆனால் இதுவரை நான் இதுபற்றி அவரிடம் கேட்டதில்லை. அவருடனே போய் நேரிலேயே நான் அதிர்ச்சியுடன் அதை அனுபவித்திருக்கிறேன். அப்போது அவர் கூறுவார்: "இரும்பால் உண்டாக்கப்பட்டதல்ல தொழிலாளிகளான ஆண்களின்- பெண்களின் உடல்கள்."
அது உண்மைதானே! உருகிப்போய்க் கடுமையான வெப்பத்துடன்- பளபளப்புடன் வெள்ளி வெள்ளம்போல் ஓடிக் கொண்டிருந்த திரவ இரும்பு அவரின் இடது காலில் விழுந்ததன் விளைவு, டாக்டர் அவரின் பாதத்துக்குமேலே காலையே வெட்டி எறிய வேண்டி நேரிட்டது. அவரும் என் ரசிகரும் இரண்டு வெவ்வேறு கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வாழ்கின்றவர்கள். திரைப்பட நடிகரும்கூட அப்படித்தான். மூன்றாவதாக ஒரு தத்துவத்தை ஏற்றுக் கொண்டு அவர் வாழ்கிறார். நடன மங்கையும் பாட்டுக்காரியுமான அவரின் மனைவிக்குச் சொல்லிக் கொள்கிற மாதிரி கொள்கை ஒன்றும் கிடையாது. நடனமும் பாட்டும் ஏதாவது கொள்கையில் சேருமா என்ன? நிச்சயம் இதுவும் சிந்திக்க வேண்டிய விஷயம்தானோ? இருந்தாலும்...
ஆமாம்... என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? அவருடன் என் ரசிகர் சினிமாவைப் பற்றி பேசியிருக்கிறார். நல்ல கதை வேண்டும் என்றிருக்கிறார். நல்ல கதை வேண்டும் என்கிறபோது என் பெயரை அவள் கூறாமல் இருப்பாளா என்ன? கூறியிருக்கிறாள். ஆனால் நிரந்தரமான முகவரியைக் கொண்ட மனிதன் அல்லவே நான்! என்னை எங்கே பார்ப்பது என்பதே அவளுக்குப் பிரச்சினை. அவள் கணவனைக் கேட்டாள். கணவர் தொழிலாளிகளின் தலைவரைக் கேட்டார். தொழிலாளிகளின் தலைவர் என்னிடம் நேராக அந்த என் ரசிகரை அனுப்பி வைத்தார். அவர் வந்தார். என்னைப் பார்த்தார். போனார். நான் இந்த நிலையில் இப்போது இருக்கிறேன்.
கூனிக்குறுகிப் போய்தான் அமரவேண்டி இருக்கிறது. இப்படி அசையாது உட்கார்ந்திருப்பதில்கூட ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. வலி எங்கு இருக்கிறது என்பதை இனிதான் கண்டுபிடிக்க வேண்டும். தலையில் ஒரே கனம். சொல்லப்போனால் தலையே மரத்துப் போனதுபோல இருக்கிறது. ரத்தம் ஓடுவதே கழுத்துவரைதானோ? தலையில்லாத ஒரு உடல். இதை நினைத்துப் பார்க்கிறபோதே மனதில் அச்சம் உண்டாகிறது. உண்மையில் எனக்குத் தலை இருக்கிறது. ஏதோ ஒரு இனம்புரியாத குழப்பமும் இருக்கிறது. அதுதான் என்ன?
வேண்டுமென்றால் என்னை நான் இந்தக் காகிதத்தில் இறக்கி வைக்கலாம். இல்லாவிட்டால் வேண்டாம். என்னை உங்களாக நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள்! அதாவது, நீங்கள் எனக்குள் நுழையவேண்டும். உண்மையாகவே அல்ல. வெறுமனே தமாஷுக்காகக் கூறுகிறேன். ஆரம்பத்தில் இருந்து நினைத்துப் பாருங்கள். வலி எங்கு இருக்கிறது என்பது தெரியாது. உடலில் யாரோ உப்பையும் மிளகையும் அரைத்துப் புரட்டி வைத்திருக்கிறார்கள். தெளிவற்ற நிலை. அதில் எல்லாமே எனக்கு மறந்து போகிறது. போதை இன்பமா? சுய நினைவு வருகிறபோது நடப்பது என்ன? அறையின் நடுவில் திறந்திருக்கும் வாசலுக்கு நேர் எதிரில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். காற்றில் நல்ல ஒரு நறுமணம் கலந்து வருவதை உணர முடிகிறது. முல்லையும் ரோஜாவும் மணம் பரப்பி நல்ல ஒரு சூழ்நிலையை உண்டாக்குகிறது. இதை உணர்கிறபோது மனதின் அடித்தளத்தில் ஆனந்தம் நடனமாடுகிறது. உடனே ஒரு அதிர்வு! வேதனையை நோக்கித் தனிமை செல்கிறது. வார்த்தையால் அதை விவரிக்க முடியவில்லை. மூச்சை அடைக்கிறது. சொல்லப்போனால் ஒருவித குழப்ப நிலை. அப்போது சுய நினைவு வருகிறது. இதெல்லாம் எப்படி நடக்கிறது?
நேற்றும் நான் தப்பித்துவிட்டேன். ஊரைவிட்டுப் போனவர்களின் ரோஜாச் செடிகளுக்கும் மற்ற செடிகளுக்கும் நீர் ஊற்றினேன். எதற்காக? ஆமாம்... வாழ்க்கையின் இந்த நடனமாடும் பாடும் அழகுக் காட்சிகள் எதற்காக?
எழுந்தபோது, சொல்லிக் கொள்கிற மாதிரி உடலுக்கு சுகக்கேடு ஒன்றுமில்லை. ஆனால் தலையில் மட்டும் சற்று கனம் இருப்பதை உணர முடிந்தது. வாய் சற்று கசந்தது. இவற்றை நானே பெரிதாக எடுக்கவில்லை. இன்னொரு வார்த்தையில்கூற வேண்டும் என்றால், பெரிதாக எடுத்தேன் என்றால் என்ன அர்த்தம்? மலஜலம் கழித்து, பற்கள் தேய்த்து, குளித்து முடித்தேன். என் வாழ்க்கையில் குளியல் போடுவது என்பது மிகமிக முக்கியமான ஒரு செயல். மரணப் படுக்கையிலேயேகூட கிடந்தாலும், கட்டாயம் குளித்தாக வேண்டும். அதுவும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். முன்பு மரங்கள் வளர்ந்திருக்கிற, பனிமூட்டம் ஆட்சி செய்கிற ஒரு ஊரில் வாழ்ந்த காலத்தில்கூட, குளிர்ந்த நீரில்தான் நான் குளித்திருக்கிறேன்.
சுடுநீரில் குளித்தால், குளித்தது மாதிரியே இருக்காது. பிறவியிலேயே என்னிடம் சூடு அதிகமாகவே சேர்ந்திருக்க வேண்டும். நெருப்பிலே பிறந்தது போன்ற நினைவு. அதனால் என் தோலும், சதையும், நரம்புகளும், மூளையும், இதயமும், எலும்புகளும், அதனுள் இருக்கிற மஞ்சைச்சோறும் குளிர்ந்த நீர் பட்டுக் குளிர்வது நானே மிகவும் விருப்பப்படுகின்ற ஒன்று. எல்லாம் முடிந்து, கட்டாயம் ஒரு தேநீர் அருந்த வேண்டும். நல்ல ஒரு அடர்த்தியான, சூடான தேநீர்.
அது இருந்தால் போதும். தேநீர் அருந்தி முடித்துவிட்டால் ஒரு சிகரெட் இல்லை என்றால் ஒரு பீடி. எல்லாம் முடிந்தால், இரண்டு அல்லது மூன்று மணிநேரம் அமர்ந்து எழுதலாம். இடையில் அவ்வப்போது கொஞ்சம் தேநீர், சிகரெட், பீடி இருந்தால் மிகவும் நல்லது. ஆனால் இந்த சுகத்தேவைகள் எங்கு கிடைக்கும்? நான் எழுத்தாளன் ஆன பிறகு... ஓ... இதை ஏன் நான் கூறுகிறேன்?
இன்று காலையில், சரியாகச் சொல்வது என்றால் மதிய நேரத்தில் படுத்திருந்த பாயை விட்டு எழுந்து குளித்து முடித்தேன். முகத்தைச் சவரம் செய்தேன். அதற்குப் பிறகு ஆடைகள் அணிந்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது. சாதாரண ஒரு தேநீர் கிடைக்க ஏதாவது வழியுண்டா என்று பார்ப்பதற்காக நான் வெளியே கிளம்பினேன். அப்போது பூமியே பயங்கரமாகக் குலுங்குவதாகவும் கட்டிடங்கள் அடியோடு இடிந்து என் தலையில் விழுவதாகவும் உணர்ந்தேன். ஆனால், உண்மையில் பூமி குலுங்கவும் இல்லை. கட்டிடங்கள் இடிந்து விழவும் இல்லை. தலைக்குள்ளே ஒரு மின்னல். வயிற்றில் ஏதோ நெருப்பு பிடித்த மாதிரி ஒரு எரிச்சல். நான் கூனிக்குறுகிப் போய்விட்டேன். இந்தக் கோலத்தில்தான் ஆடிக் கொண்டிருக்கும் இந்தச் சாய்வு நாற்காலியில் நான் அமர்ந்திருந்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது? இதயமே வெடித்துவிடுவது போலிருந்தது. கனமான ஏதோ ஒன்று என்னை அழுத்துவதுபோல் இருந்தது. சுற்றிலும் முள் கம்பிகள். முனையில் ஈயத்தால் ஆன ஒரு உருண்டை வேறு. பூமி உருண்டையா? மனதில் தோன்றும் எண்ணங்கள் சரிதான். ஆனால், இந்தக் கடுமையான வேதனை... இது எப்படி நடந்தது?
நினைத்துப் பார்க்கிறபோது சிரிப்புதான் வந்தது. அழ வேண்டிய விஷயம் இது. ஆனால் அழுகையை நிறுத்திக் காலம் அதிகம் ஆகிவிட்டது. எதற்காக அழ வேண்டும்? முதலாவது இந்தப் போர். இரண்டாவது இந்தப் பஞ்சம். இருந்தாலும் அழலாம். ஆனால் கண்ணில் வழியும் நீர் துடைத்து ஆறுதல் வார்த்தைகள் கூற இங்கு யார் இருக்கிறார்கள்? அப்படியானால் சிரிக்கவல்லவா வேண்டும்? என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருப்பதால், கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்த உடனே நான் சிரிக்கத் தொடங்கிவிடுகிறேன். இடையில் துக்கமும் தோன்றாமல் இல்லை. இதை எழுதி முடிப்பதற்கு முன்பே நான் மரணத்தைத் தழுவி விடுவேனோ? அப்படி என்றால் எங்கு நான் செல்கிறேன்.
ஆமாம்... நேற்று தேதி என்ன. நான் நேற்று என்று கூறுவது கோடிக்கணக்கான ஆண்டுகள் மறைந்து கிடக்கிற நேற்றை. என்ன செய்வது? இப்படித்தான் தோன்றுகிறது. மே மாதம் பதினேழாம் தேதி என்று வைத்துக் கொள்ளுங்கள். வருடம் ஆயிரத்து தொள்ளாயிரத்து... அல்லது இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து... பதினாறோ அல்லது நாற்பத்து இரண்டோ...? ஒருவேளை ஐம்பத்து இரண்டாக அது இருக்கலாம். குஞ்ஞம்மாவிடம் நான் ஐம்பத்து இரண்டு என்றுதான் கூறியிருந்தேன். அப்படியென்றால்... சரிதான்... என் வயதைப் பற்றிய விஷயமே அது. நேற்று அந்த ஆள் என் வயதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. அந்த தங்கப் பற்கள்! என்ன சொல்வது! அதற்கென்று சொந்தமான ஒரு பிரகாசம் இருக்கவே செய்கிறது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது மாதிரி எனக்குப் படுகிறது. அந்த மனிதரைக் கொன்றுவிட்டு, அந்தப் பற்களை என்ன செய்வது? அந்தப் பற்களுடனே அவரை பூமிக்குள் புதைத்து மூடுவது சரியான செயலா?
இப்போது உடலில் ஒரு சுகம் தெரிகிறது. சுகம் உண்டாகி இருக்கிறது என்று அதற்கு அர்த்தமில்லை. நாட்டு நடப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சுகம் என்று கூறத் தோன்றுகிறது. அதாவது... எனக்கு நானே பச்சையாகப் பொய் பேசுகிறேன் என்பது எனக்கே தெரியும். என்ன செய்வது? இருந்தாலும் கதையைத் தொடர்கிறேன். அதைக் கூறி முடிப்பதற்கு முன்பே ஏதாவது பெரிதாகச் சம்பவித்தால்... ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு கூறவா?
குஞ்ஞம்மாவுக்கு ஏதாவது பிரியமாகக் கொடுக்க வேண்டும் என்று மனதில் ஒரு ஆசை. பூச்சட்டிகள் நான்கை அவளுக்குப் பரிசாகத் தர எண்ணுகிறேன். ஷெல்ஃபில் இருக்கிற புத்தகங்களைக்கூட அவள் எடுத்துக் கொள்ளட்டும். என் பெட்டியையும் படுக்கையையும், பெட்டிக்குள் நான் எழுதி வைத்திருக்கின்ற நாவல்களையும் என்னை அடக்கம் செய்பவர்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடே. இந்தச் சாய்வு நாற்காலியையும் ஸ்டூலையும் இந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரருக்குத் தரலாம் என்றிருக்கிறேன். நான் எழுதப் பயன்படுத்தும் இந்தப் பேனாவை யாருக்கும் கொடுக்க இஷ்டமில்லை. இதை என்னோடு சேர்த்தே புதைக்கவேண்டும். என் உடலை நீரோடு மிதந்துபோக விடுவதோ, பூமிக்குள் புதைப்பதோ, நெருப்பில் எரிப்பதோ... எதை வேண்டுமானாலும் செய்யலாம். இல்லாவிட்டால் பறவைகளுக்கு இரையாக்கலாம். அப்படிச் செய்வதுதான் எனக்கும் விருப்பம். ஃபார்ஸி நண்பரின் நினைவுக்கு... அமைதி கோபுரத்தில்- டவர் ஆஃப் ஸைலன்ஸ்... ஹம்மோ...! என் விழிகள் ஏதோ பயங்கர வெளிச்சத்தை எதிர்நோக்கியதுபோல் உணர்ந்தேன். கால் பெருவிரல்களுக்குள்ளே ஓடும் நரம்புகள் வழியாக இரண்டு தீப்பந்தங்கள் இதயத்தை நோக்கி வேகமாக நகர்வதையும் உணர முடிந்தது. நான் வளைந்து சுருண்டு போகிறேன். என்னால் நிமிர முடியவில்லை. நிமிர்ந்தால் வாடிப்போன செடிபோல நான் ஒடிந்து விழுந்துவிடுவேன் என்பது நிச்சயம். மெல்ல எழுந்து நிற்க முயற்சித்தால் என்ன? மரணமே! அச்சமும் இல்லை. அச்சம் இல்லாமலும் இல்லை. அமைதி. இருந்தாலும் மரணம் என்றால் என்ன?
நான் சோதித்துப் பார்த்தேன். நிச்சயமாக முடியாது. என் எல்லா நரம்புகளும் பொடிப்பொடியாக நொறுங்கிப்போகும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பது முழுமையடையாமலே போய்விடும். என்ன எழுதுகிறேன்? இதைக்கூட இன்னொருவர் கதை என்று என்னால் எழுத முடியும். ஆனால் உண்மை இதுதான். நீண்ட காலம் நான் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். இதுவும் புதிய ஒரு செய்தி அல்ல. முன்பும் நான் பல முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். ஐந்து முறை. நான்கு முறை பல வருடங்களுக்கு முன்பு இருந்திருக்கிறேன்.
முதல் தடவை விரதம் இருந்தபோது எனக்கு பதினெட்டு வயது. நல்ல தைரியமுள்ளவனாகவும் லட்சிய மனம் கொண்ட இளைஞனாகவும் அன்று இருந்தேன். மனிதர்களை நல்லவர்களாக்க முயற்சித்தவர்களில் நானும் ஒருவன். அன்று என்னைப்போன்ற பலரும் இந்த மாதிரி இருந்தார்கள். இளைஞர்களும் இளம் பெண்களும். அன்று எங்களுக்கு பெரிதாக வேலை ஒன்றும் கிடையாது. தலைமை தாங்கியவர்களுக்கு இருந்தது. நல்ல செயல்கள் பலவும்கூட அவற்றில் இருந்தன.
அவற்றில் ஒன்று மது அருந்துவது விஷம் சாப்பிடுவது மாதிரி என்பது. மது தயாரித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய மனிதக்கூட்டமும் இருக்கிறதே! அவர்களின் பிழைப்பைக் கெடுப்பது நல்லதல்லவே! அதனால் மது தயாரிப்பவர்களின் மனதை மாற்ற வேண்டும். நான் அன்று ஒரு செயல்வீரனாக இருந்தேன். எல்லா மதுக்கடைகளுக்கும் இளைஞர்களை அனுப்ப வேண்டும். மத சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியைப்போல மெல்லிய குரலில் குடிகாரர்களிடம் நாங்கள் கூறுவோம்: "சகோதரனே, இது அழிவை உண்டாக்கக் கூடியது. கெட்டது. சுருக்கமாகச் சொன்னால்- விஷம்." இதைக் கூறுவதற்கு இடையிலேயே தலைவர்களுக்கு ஜே கூறுவதும் நடக்கும். இப்படி நானும் ஒரு பெரிய மதுக்கடைக்கு முன்னால் நின்று மறியல் நடத்தினேன். ஒரு குடிகாரன் ருசி பார்த்துவிட்டு கருத்து கூறுவதற்கோ என்னவோ என்னை நோக்கி ஒரு பாட்டிலை எறிந்தான். காலின்மேல் சரியாக பாட்டில் வந்து விழுந்தது. பாட்டில் உடைந்து ஒரு துண்டு காலில் குத்தியது. ஒரே ரத்த ஓட்டம். காயம் ஆற நீண்ட நாட்கள் ஆனது. அதன் தழும்பு இப்போதும் என் வலது காலில் உண்டு. அப்போது நான் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். மக்கள் நடமாடக் கூடிய பொது சாலையில் அந்தக் கடையின் முன்பிலேயே இது நடந்தது. அன்று என்னைப் பார்க்கக் கூடியிருந்த மக்கள் கூட்டம் எவ்வளவு என்கிறீர்கள்! இரண்டாவது தடவை உண்ணாவிரதம் இருந்தது ஒரு போலீஸ்காரரின் மனதை நல்ல திசை நோக்கித் திருப்புவதற்காக. பின்னால்தான் தெரிந்தது போலீஸ்காரர்களின் மனது அப்படி ஒன்றும் கெட்டதில்லை என்று. கெட்ட மனம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? இந்த பூமியில் மனிதர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? பெண்கள், ஆண்கள், அவர்களின் மனங்கள்... எப்படி? போர்கள், கொலைச் செயல்கள், கொழுந்துவிட்டு எரிந்து சுக்குநூறாக நொறுங்கிப்போகும் பெரும் நகரங்கள், பூகம்பங்கள், கொடுங்காற்று, பெரும் மழை, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், குளிர்காற்று, சந்திரோதயம், போலீஸ் லாக்கப்பில்... இரும்புக் கம்பிகளுக்கு இடையில்... சந்திரோதயம். அடிக்கும் போலீஸ்காரர்களும் அடிக்காத போலீஸ்காரர்களும்.. மனம் எப்படிக் கெட்டதாக ஆகிறது?
அன்று நாங்கள் பதினான்கு பேர் ஒன்றாக போலீஸ் காவலில் கிடந்து எட்டரை நாட்கள் எந்தவித உணவும் இல்லாமல் விரதம் இருந்தோம். காரணம்- ஒரு சமூக சேவகி. அவளைத் திருமணம் ஆகாத இளம் போலீஸ்காரன் லாக்-அப்பில் வைத்துக் கற்பழிக்க முயற்சித்திருக்கிறான். பெண்ணை அருகில் பார்க்க நேர்ந்த நிமிடத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த அந்த மனிதனால் முடியவில்லை போலிருக்கிறது. மூன்றாவது உண்ணாவிரதம் சிறையில் நடத்தப்பட்டது. அரசாங்கத்தின் போக்கைக் கண்டித்து நடத்தப்பட்ட உண்ணாவிரதம் அது. அப்போது நாங்கள் அறுநூறு பேர் ஒன்றாகச் சேர்ந்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். எதற்காக? ஒரு பெண் போராளியை அரசாங்கம் தூக்கில் தொங்கவிட்டது! அடுத்தது- நான்காவது!
இதில் ஒரு சுவையான விஷயம் இருக்கிறது. மரணம் வரை இந்த உண்ணாவிரதம்! ஒன்று என்னை விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் என்மீது உள்ள வழக்கு என்ன என்று விசாரிக்க வேண்டும். இரண்டையுமே செய்யாமல் வெறுமனே என்னை போலீஸ் லாக்-அப்பில் வைத்திருந்தால் என்ன அர்த்தம்?
நான் மட்டும் தனியே இருக்கிறேன். தலைவர்களெல்லாம் என்னைக் கைகழுவி விட்டார்கள். காரணம் என்ன? நான் ஒரு இலக்கியகர்த்தாவாக இருந்ததே காரணம். அரசாங்கத்தையும் தலைவர்களையும் தெளிவாக விமர்சித்து- கண்டித்து ஒரு நாடகம் எழுதி நூலாக நான் வெளியிட்டிருக்கிறேன். தலைவர்களும் அரசாங்கமும் இரண்டு வரிசைகளில். அரசாங்கத்தின்மீது எவ்வளவு குற்றங்கள் இருக்கின்றனவோ, அவ்வளவு குறைபாடுகளை நான் தலைவர்கள் மத்தியிலும் காண்கிறேன். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்ற போர்வையில்- அதாவது, மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறிக் கொண்டு மக்களிடம் பெற்ற பணத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டு தலைவர்கள் எல்லாம் சுகமாக வாழ்கிறார்கள்.
அவர்கள் உருப்படியாக ஒன்றுமே செய்வதில்லை. வெறுமனே வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பார்கள். தலைவர்களைப் பற்றி நான் எவ்வளவோ கூற விரும்புகிறேன். எல்லோரைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அதை எல்லாம் சொல்ல இப்போது நேரமில்லை. இப்படி நான் இருந்தால் அரசாங்கம் என்னைச் சும்மா விடுமா? என்னை ஒரேயடியாக நெருக்கியது. பேசாமல் தற்கொலைகூட செய்து கொள்ளலாம் போலிருந்தது. ஏன் இப்படி எல்லாம் தோன்றுகிறது என்றால், அந்த அளவுக்கு இருந்தது போலீஸ் காவலில் நான் இருந்த நிலை! அதற்குப் பின் என்ன நடந்தது தெரியுமா? இடையில் நான் இன்னொரு சுவையான விஷயம் கூறுகிறேன். தாங்க முடியாத வேதனை இருந்தாலும் நிமிர முடியாமல் இருந்தாலும். இதுவரை வாழ்க்கை உங்களுக்குக் கற்றுத் தந்தது என்ன?
இதுவரை... கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்தோடிவிட்டன அல்லவா? வாழ்க்கை எனக்கு என்ன கற்றுத் தந்திருக்கிறது? நான் கூறுவது எதையும் பெரிதாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். சுருக்கமாகச் சொன்னால் என் கண்கள் மூலம் உலகத்தைப் பார்க்க வேண்டாம். எதற்கு இதைக் கூறுகிறேன் என்றால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அல்ல, உங்களின் அனுபவங்கள். இந்த உலகம்தான் எத்தனை பெரியது! இதில் அறுநூறு கோடியைவிட அதிகமாகவோ ஆயிரம் கோடியோ மக்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் ஒரு மனிதன் நான். நிலைமை இப்படி இருக்க, எனக்குச் சில அனுபவங்கள் இருக்கின்றன. மக்களுடன் நான் சிறிதாவது பழகி இருக்கிறேன். நான் மக்களை எப்படித் தரம் பிரிக்கிறேன் தெரியுமா? இந்த பூமியில் மொத்தம் இருப்பதே நூறுபேர் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆண்கள்- பெண்கள் எல்லாம் சேர்த்துத்தான்.
சுத்த முட்டாள்கள் 55
பயங்கர வன்முறையாளர்கள் 20
ஏமாற்றுப் பேர்வழிகள் 15
சோம்பேறிகள் 9
நல்லவர் 1
இந்தப் பட்டியலில் நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்? உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் முட்டாள்தனம் இருக்கிறதா? வன்முறை எண்ணம் இருக்கிறதா? ஏமாற்றும் குணம் இருக்கிறாதா? சோம்பேறித்தனம் இருக்கிறதா? நன்மை செய்யும் குணம் இருக்கிறதா?
ஆனால், உலகத்தில் மொத்தம் இருப்பது நூறுபேர் மட்டும் இல்லையே! இருந்தாலும் நீங்கள் மொத்தம் இதில் ஏதாவது ஒரு பிரிவைச் சேரவே செய்வீர்கள். என்னை இதில் எந்தப் பிரிவில் சேர்ப்பீர்கள்? உண்மையாகச் சொல்லப்போனால், மேலே கூறப்பட்ட எல்லா குணங்களும் என்னிடம் இருக்கின்றன- முட்டாள் தனம், வன்முறை, ஏமாற்றுத்தனம், சோம்பேறித்தனம், நன்மை செய்யும் குணம்- இத்தனையும் இருக்கும் எனக்கு வாழ்க்கை என்ன கற்றுத் தந்திருக்கிறது?
என் ஐந்தாவது உண்ணாவிரத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு இந்தக் கேள்விக்கான விடை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேதனைகளின் குளிர் காற்று. முடிவே இல்லாத ஆகாயம். கோடிக்கணக்கான நட்சத்திரங்களை இனி என்னால் பார்க்க முடியுமா? ஆனந்தத்துடன் கலந்து துக்கம். பரவாயில்லை.
வாழ்க்கை இதுவரை எனக்கு கற்றுத் தந்தது என்ன என்று கேட்டால்... இந்த உலகத்தில் வாழும் ஒரு மனிதன் என்ற நிலையில், ஒரு கலைஞன் என்ற நிலையில் இதுவரை வாழ்க்கை எனக்கு என்ன கற்றுத் தந்திருக்கிறது. என் நூல்களில் இருக்கும் நானும் அதற்கு வெளியே இருக்கிற நானும்.. நான் கூறிவருவது... இல்லாவிட்டால் நான் கூறப்போவது... இந்த மகா பிரபஞ்சங்களும்- நானும்.. இந்த நிலை வரை நான் கூற வேண்டுமே!
எத்தனையோ கோடி வருடங்களாகிவிட்டன இந்த பூமியில் மனிதப்பிறவிகள் தோன்றி என்று வைத்துக் கொள்ளுங்கள். மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பும் இங்கு வாழ்வு இருக்கவே செய்தது. இப்போது மனிதப்பிறவிகள் தவிர, இன்னும் பல உயிரினங்கள் இருக்கத்தானே செய்கின்றன! கண்ணுக்குத் தெரிவதும் தெரியாததும். வாழ்வு என்ற ஒன்றுக்குள் அணுக்களையும் புழுக்களையும் பூச்சிகளையும்கூட சேர்க்கத்தானே வேண்டும்! மிருகங்களையும் பறவைகளையும் பிராணிகளையும் மரங்களையும் நீர்வாழ் உயிரினங்களையும்கூட வாழ்வு என்ற பதத்திற்குள் அடக்கத்தானே வேண்டும்! நீர், காற்று, பூமி- இதில் உள்ள வாழ்க்கை- அதாவது மனிதப்பிறவிகளின் வாழ்வு போக- மீதி இருப்பவைகளின் வாழ்வு என்ற ஒன்றை நாம் எண்ண வேண்டுமா? இல்லாவிட்டால் மறந்துவிட வேண்டுமா? மறக்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் கூட பல விஷயங்கள் இருக்கின்றன. நீங்களும் நானும் மற்ற எல்லாவற்றையும்கூட மறந்துவிட வேண்டியதுதான். எங்கோ அதிவேகத்தில் பறந்து கொண்டிருக்கின்ற பெரும் பெரும் பிரபஞ்சங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒருசிறு துளியான பூமியில் நாம் வாழ்கிறோம் என்பதைக்கூட மறந்துவிட வேண்டியதுதான். சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் பூமியையும் உங்களையும் என்னையும் மற்ற எல்லாவற்றையும் அனைத்தையும் படைத்த ஒரு கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற கருத்தைக் கூட மறந்துவிட வேண்டியதுதான். ஒவ்வொன்றின் படைப்பின் உத்தேசம் அல்லது படைக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று நமக்குத் தெரியாது என்பதையும் நாம் அதை அறிவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறோம் என்பதையும்கூட மறந்துவிடுங்கள். இங்கு இருக்கும் ஒன்றுகூட தான் அழிந்துபோவதை விரும்புவதில்லை என்பதையும், இருந்தாலும் அழிந்து போகாமல் இங்கு எதுவுமே இல்லை என்ற உண்மையையும் மறந்துவிடுங்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்களும், நானும், ஏன்... இந்த பூமி கூட ஒவ்வொரு நிமிடமும் மரணத்தின் நிழலில்தான் என்ற உண்மையைக்கூட மறந்துவிடுங்கள். இருந்தாலும் நாம் தைரியசாலிகள்தான்- வீரர்கள்தாம். நாம் இந்த பூமியை ஒரு வசந்த பூமியாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு இனிமையான பாடல்களைக் கொண்டு ஆனந்த சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பூமியும் நட்சத்திரங்களும்- அனைத்துமே மனிதக்கூட்டத்தின் குடும்பச் சொத்தாகிவிட்டன. சரியா?
நாம் வாழ்க்கை என்று கூறுகிற- வேண்டாம்... நாம் பெரிய பிரிவைச் சேர்ந்தவர்களோ? இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு இல்லாவிட்டால் நினைவில் வைத்துக் கொண்டுதான் கூறுகிறோம். வாழ்க்கை இதுவரை நமக்கு என்ன படிப்பினையைத் தந்திருக்கிறது என்று.
வாழ்க்கை என்ற அற்புதமான இந்த உயிரோட்டத்தில் எல்லா வாழ்க்கையையும் பொதுவாகப் பார்க்கிறபோது... இதில் உச்ச நிலை முட்டாள்தனம் உண்டு. பயங்கரமான வன்முறை உண்டு. கொடுமையான வஞ்சகம் உண்டு. பெரிய அளவில் சோம்போறித்தனம் உண்டு. அளவற்ற அன்பு உண்டு. போற்றத்தக்க தியாகமும் உயர்ந்த அளவில் கருணையும்.. இவை எல்லாமே வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கின்றன. வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம்தான் என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது. எல்லாம் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்தது என்றும் கூறலாம். வாழ்வே நீங்கள்தான் என்றும் கூறலாம். இல்லாவிட்டால் நான் என்றும் சொல்லலாம். இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம்- வாழ்வு! மொத்தத்தில் வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் எவற்றை எல்லாம் அடக்கியிருக்கிறது என்பதையும் கட்டாயம் நாம் தெரிய வேண்டுமா என்ன? இனியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என் எல்லா நூல்களையும் படியுங்கள்- வேண்டுமானால் அவை எல்லாவற்றையும் பரப்பி வைத்துவிட்டு அனைத்துக்கும் சேர்த்து ஒரு பெயர் வைக்க வேண்டுமென்றால்... என்ன பெயர் வைக்கலாம்? வாழ்வு இதுவரை எனக்கு என்ன கற்றுத் தந்திருக்கிறது? இதை இப்போது தெரிந்து கொண்டு என்ன கிடைக்கப்போகிறது? நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? ஆயிரம் கோடி ஆண்களும்- பெண்களும் கூடத்தான். பெரிய தமாஷான விஷயம்தான். மனித இனத்திற்கு வாழ்வு இதுவரை என்ன கற்றுத் தந்திருக்கிறது?
யார்- எதற்கு நினைக்க வேண்டும்?
நினைத்துப் பார்ப்பதுகூட மகிழ்ச்சியை அல்ல துக்கத்தை, வேதனைகளை. தமாஷான ஒரு விஷயம்தான்!
அப்போது நான் சொல்ல வந்தது... ஆமாம்... ஐந்தாவது உண்ணாவிரதம். அதில் ஒரு சுவையான விஷயம் இருக்கிறது. அது என்னவென்று கூறுவதற்கு முன்பு நான்காம் உண்ணாவிரதத்தைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
நான்காவது உண்ணாவிரதம் பன்னிரண்டு நாட்கள் நடந்தது. அப்போது என் வழக்கை எடுப்பதாகக் கூறி எடுக்கவும் செய்தார்கள். நீண்ட காலத்திற்குக் கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது இன்றைய சிறை அல்ல அன்று. பொதுவாக மனித சமுதாயத்திற்கு என்னவோ ஒரு நோய் பிடித்திருக்கிறது. நான் கூறுவது- போரைப்பற்றி. இதுவரை நடந்த எல்லா போருமே கடைசிப் போர்தான். இதுவும் அதேமாதிரி கடைசிப் போர்தான். இன்று உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்- அதாவது, போரில் மரணம் அடைந்தவர்களும் வேறு விதத்தில் மரணத்தைத் தழுவியவர்களும் போக மீதி இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி குறிப்பிட்ட ஒரு நேரத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் என்று நினைத்தால்.. அதற்கான சரியான நேரம் இப்போதுதான் என்றால்... என் நண்பரே, நான் அதில் சேர மாட்டேன்.
ஏன் தெரியுமா? நான் வாய்விட்டுச் சிரித்தால் பல பிரச்சினைகள் வந்துவிடும். அதனால், மெதுவாக புன்னகைக்க மட்டும் செய்கிறேன். எதற்காக என்றால் என் வயிறு முழுவதும் கூர்மையான கருங்கற்கள் இருப்பதுபோலவும் இதயத்தை முடிச்சுப்போட்டு முறுக்குவது போலவும் தோன்றுகிறது எனக்கு. இந்த நேரத்தில் குஞ்ஞம்மா வந்தால்.. அவள் இந்தக் கதையைத் தெரிந்தால் என்ன கூறுவாளோ? ஏன் அந்த ரசிகர், தொழிலாளிகளின் தலைவர், திரைப்பட நடிகர், நாட்டிய மங்கை.. இவர்கள் எல்லாம் என்ன சொல்வார்கள்? கதை முழுவதையும் படித்து முடிக்கிறபோது நீங்களும் என்ன கூறுவீர்கள்? வாழ்க்கை ஒவ்வொன்றும் ஒரு கதைதானே! துக்கமில்லாத துக்கம்தானே மரணம் என்பது!
நான்தான் கூறினேனே நீண்ட காலமாகவே நான் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன் என்று. மற்ற நான்கு உண்ணாவிரதத்திற்கும் இந்த ஐந்தாவது உண்ணாவிரத்திற்கும் சிறிது வேறுபாடு உண்டு. நான்கு உண்ணாவிரதத்திற்கும் பின்னால் ஒரு குறிக்கோள் இருந்தது. நிச்சயம் உண்ண முடியாது என்ற பிடிவாதமும் இருந்தது. இதற்குப் பின்னால் ஒன்றுமே கிடையாது. உண்ணாவிரதத்திற்காக உண்ணாவிரதம். அதுவும் சரியாக இல்லை. ஒவ்வொரு நாளும் அரை பாட்டில் பால் பருகுவேன்.
பல நேரங்களில் கொஞ்சம் தேநீரும் அருந்துவேன். மொத்தத்தில் பேய் பிடித்தமாதிரி தோன்றும். சாப்பிடுவது குறித்து நான் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாது என்று பிடிவாதம் பிடித்தேன். இருந்தாலும் உணவு குறித்து எண்ணாமல் இல்லை. அப்போது பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கும். என்ன செய்வது? சிறு பூச்சியாகவோ புழுவாகவோ மீனாகவோ மிருகமாகவோ பறவையாகவோ நானிருந்தால்... ஆமாம் ஒரு பறவையாக நானிருந்தால்- ஆனால் நான் மனிதனாகி விட்டேனே! மனிதப்பிறவி என்பது எவ்வளவு பெரிய கொடை என்று நினைக்க வேண்டும் அல்லவா? உயர்ந்த பிறவி அது என்று கருத வேண்டும் அல்லவா? அது கிடக்கட்டும்.
சில நாட்களாக நான் ஒரு பெரிய புதினம் எழுதிக் கொண்டிருந்தேன். எழுதிக் கொண்டிருந்தேன் என்றால் எழுதி முடித்துவிட்டேன் என்று அர்த்தம். நான் அதைச் சிறியதாக ஆக்கிக் கொண்டிருந்தேன். பெரிதாக அல்ல. சிறியதாக ஆக்குவது என்றால்... மீண்டும் அதை எழுதிக் கொண்டிருந்தேன். நான்கு மணி வரை எழுதுவேன். அப்போது குஞ்ஞம்மா அரை பாட்டில் பாலுடன் வருவாள். சாதாரண நிகழ்ச்சி என்றாலும் பெண் சம்பந்தப்பட்டதாயிற்றே! அதற்குப் பிறகு ரசனையான நிமிடங்கள்தாம்.
என்னிடம் பல விஷயங்களை அவள் பேச வேண்டும்- பூனை குட்டி போட்டது, மது அருந்திய பட்டாளக்காரர்கள், பெண்களைப் பட்டப்பகலில் அத்துமீறி ஆக்கிரமித்தது, அதற்குப் பிறகு அரிசி கிடைக்காமல் போனது. எல்லாம் சொல்லி முடித்த பிறகு கேட்பாள், நான் கொடுக்க வேண்டிய பணத்தை ஏன் இன்னும் தரவில்லை என்று. அவள் அப்படிக் கேட்கிறபோது நான் வாயே திறப்பதில்லை. அவள் பறவைக் குஞ்சைப்போல் சிலிர்ப்பாள். எல்லாவற்றையும் மறந்து பிரச்சினை சில நேரங்களில் பெரிதாகிவிடும்.
"காசு தா... காசு தா."
நான் கூறுவேன்:
"ஏண்டி.. உண்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லியிருக்கேன்ல..."
அவள் கேட்பாள்:
"என்னை அடிச்சு கொல்றதுக்கா?"
நான் சொல்வேன்:
"ஆமாம்.. உன் அப்பா உன்னோட அம்மாவை அடிச்சு கொன்னுருக்காரா?"
குஞ்ஞம்மா பதில் கூறுவாள்:
"அப்பா அம்மாவை அடிப்பாரு. அப்போ அம்மா சொல்லுவாங்க. கடவுள் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருப்பாருன்னு."
"அப்போ உங்கப்பா என்ன சொல்லுவாரு?"
"அய்யோ." குஞ்ஞம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "காசு தா. காசு வாங்கிட்டு வரச்சொல்லி அப்பாதான் அனுப்பினாரு."
"சரிடா கண்ணு. நீ இப்போ போ. நாளைக்கு தர்றேன்."
"நாளைக்கு வந்தா இதையேதான் சொல்லுவே நீ. இப்போ போ. நாளைக்குத் தர்றேன்னு."
நான் கூறுவேன்:
"என் சின்னு.. நாளைக்கு கட்டாயம் தருவேன்."
குஞ்ஞம்மாவுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவள் விறைத்துக் கொண்டு கூறுவாள்:
"எம் பேரு குஞ்ஞம்மா... சின்னு இல்லே."
நான் கூறுவேன்:
"மறந்துபோச்சுடா கண்ணு."
"ஒவ்வொரு நாளும் மறந்திடு."
"இனி மறக்கவே மாட்டேன். குஞ்ஞம்மா... குஞ்ஞம்மா... குஞ்ஞம்மா... இனி மறக்க மாட்டேன். போதுமா?"
குஞ்ஞம்மா கேட்டாள்:
"அது என்ன சின்னு?"
ஒரு பழைய சின்னு இடையில் வருவது எப்போதும் நல்லதுதான். குஞ்ஞம்மாவுக்கும் எனக்கும் இடையில் எந்தச் சின்னு வந்து நின்றாலும் குஞ்ஞம்மா அதை விரும்ப மாட்டாள்.
நான் கூறுவேன்:
"நாளைக்குச் சொல்றேன்."
"இன்னைக்கே சொன்னால் என்ன! அவளோட கையில வளையல் கழண்டிருமா என்ன?"
நான் கம்பீரமான குரலில் கூறுவேன்:
"நீ அவள் என்று சின்னுவைக் கூப்பிடுறதே தப்பு."
"பிறகு என்ன மகாராணின்னு கூப்பிடணுமா?"
நான் அசையாமல் இருப்பேன்.
குஞ்ஞம்மா அழுவது மாதிரியான குரலில் கூறுவாள்:
"காசு தா..."
நான் சொல்வேன்:
"உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி இருக்கேன்ல..."
"நாளைக்கு இருந்து நான் பால் கொண்டு வரலைன்னா..."
"ரொம்ப நல்லதாப் போச்சு. பிறகு வேறென்ன விசேஷங்கள்?"
குஞ்ஞம்மா ஒன்றுமே கூறாமல் கோபத்துடன் சென்றாள். நான் சர்க்கரை இடாத பால் குடித்தேன். பிடிக்கவில்லை. சர்க்கரை இல்லாததால் "நாட்டிலே சர்க்கரை எங்கே?" என்று ஒரு முறையோ இரண்டு முறையோ கூக்குரல் இடலாம். இல்லாவிட்டால் குஞ்ஞம்மா கேட்பது மாதிரி "போருக்கு எதற்குச் சர்க்கரை" என்றும் கேட்கலாம். என்ன இருந்தாலும் சர்க்கரை போடாத பாலைக் குடித்துவிட்டு நான் வெளியே கிளம்புவேன். பெரிய வேலை ஒன்றும் இல்லை... வெறுமனே நடக்கத்தான்.
கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆள் நடமாட்டம்கூட அதிகமில்லை. இருப்பவர்களில் அதிகம் பேர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். அதற்குப் பிறகு பிச்சைக்காரர்கள். ஆட்கள் குடியிருக்காத வீடுகளுக்கு முன்பு அவர்கள் தங்கத் தொடங்கி இருக்கிறார்கள். எல்லா வீடுகளிலும் போர்டு தொங்குகிறது- "வாடகைக்குக் கொடுக்கப்படும்." யாருக்கு? நான் ஒவ்வொரு வீட்டின் முன்புறம் நின்று சந்தேகத்தோடு பார்ப்பேன். நகரம் முழுக்க ஒரே மயான அமைதி. பூங்காக்களிலும் இதே நிலைதான். அங்கு எதிர்பார்ப்பு உண்டு. மலர்ந்து கிடக்கிற பெஞ்சுகளும்... பூங்காவில் ஆண்களைவிட பெண்களே அதிகம். மாலை மயங்கிய பிறகும்கூட அவர்கள் பூங்காவை விட்டு நகர்வதில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. பட்டாளக்காரர்கள் மாலை வரும்போது பூங்காவைத் தேடி வருவார்கள். அப்போது வானொலியில் பாடல் ஆரம்பிக்கும். பிறகு பெருமூச்சுகள்.. முனகல்கள்...
ஹோ.. என்னால் முடியாது. நாக்கு வறண்டுபோய் விட்டது. கேட்டீர்களா? உடலில் ஒரு சோர்வு. இருந்தாலும் இதை எழுதி முடித்தே தீருவேன். முடியுமா? மாலை மேலும் கொஞ்சம் மறையத் தொடங்கியதும் நான் மீண்டும் இந்த அறையைத் தேடி வருவேன். மின்விளக்கின் ஸ்விட்சை அழுத்துவேன். ஒளி நிரம்பிய அறையில் பிரகாசம் பரப்புகிற விளக்குகள். கீழே, இந்தச் சாய்வு நாற்காலியில் நான் அமர்வேன். அதற்குப் பிறகு ஒரு பீடியை எடுத்துப் புகைத்துப் புதிய ஒரு கதையை எழுத ஆரம்பிப்பேன். எழுதுவதற்கு முன்பு சிந்திப்பேன். இன்னைக்கு ஒரு நாளாவது சாப்பிட்டா...!
இது இப்போது என் விருப்பம் மட்டுமா? நான் சொன்னேனே! மனிதர்கள் வசிக்காத வீடுகளின் முன்பு, கடைத்திண்ணைகளில், ரெயில்வே ஸ்டேஷனில், பூங்காவின் திறந்தவெளியில்- அங்கெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பசியுடன், வெளிறிப்போய், காய்ந்த சருகாய் ஆதரவே இல்லாமல் ஆண்களும் பெண்களும் கிடக்கிறார்கள்.
நாய்களின் நிலைமையைவிட மானிட சமுதாயத்தின் நிலை படுமோசம் என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறோம் அல்லவா? உண்மையாகச் சொல்லப்போனால் மனிதநேயம் இங்கு இல்லாமலே போய்விட்டது. எல்லாமே அழிந்துவிட்டது. இந்த நிலைமைதான் எங்குமே. உலகத்தில் உள்ள எல்லா நகரங்களிலும் எத்தனை கோடி மனிதர்கள் இந்த நிலையில் இருக்கிறார்கள் தெரியுமா? நான் இங்கு முதலைக் கண்ணீர்விட முயற்சிக்கவில்லை. மனிதநேயம் என்றால் என்ன? அது பேப்பரில் இருந்தால் மட்டும் போதுமா? நீங்கள் இரவு நேரங்களில் இந்தத் தெருவில் நடந்து சென்றால் சுவையான காட்சிகள் பலவற்றைக் காணலாம். தாய்மார்கள் குழந்தைகளை விற்கிறார்கள். கன்னிப் பெண்கள் உடலை விற்கிறார்கள். இவை இரண்டிற்கும் நான் பெரிய மதிப்பு ஒன்றும் தரவில்லை. இருந்தாலும் விற்கிறார்கள். விற்கவும் வாங்கவும் உள்ள சந்தைதான் இந்த உலகம். ஆனால் விற்கவும் வாங்கவும் என்ன இருக்கிறது?
பயங்கரமான காட்சிகள் எல்லாம் தெருவில் நடக்கின்றன. மாலை நேரம் கடந்துவிட்டால் எல்லா காட்சிகளும் ஆரம்பமாகி விடும். பகலில்கூட இது நடப்பதுண்டு.
அப்படி எதைத்தான் கொடுக்கிறார்கள்- வாங்குகிறார்கள்? அந்தக் காட்சிகளை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். ஆனால் இதைக் கேட்டால் நீங்கள் நடுங்கிப் போவீர்கள். உங்களை நடுங்கச் செய்ய வேண்டும் என்பது ஒன்றும் என் எண்ணம் இல்லை. மேலும் இது ஒரு நகைச்சுவைக் கதைதானே! இதற்குத் தேவையே இல்லாத பலதும் இதில் நான் எழுதி இருக்கிறேன். நல்ல ஞாபசக்தியுடன்தான். எதற்குத் தெரியுமா? இது உங்களுக்கு ஒரு கடிதம். மரணத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்வின் இறுதிக் கட்டத்தை நான் நெருங்கி விட்டேன் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
இதற்குக் காரணமான சில என் வயிற்றில் இருக்கிறது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அது என்னவென்று நான் கூறப் போகிறேன். சுருக்கமாகச் சொல்லப்போனால் இது ஒரு நகைச்சுவை கதைதான். என் மற்ற கதைகளைப்போல இந்தக் கதையிலும் பெரிய கதைக் கரு ஒன்றும் இல்லை. உங்கள், என் வாழ்க்கையை அடியொற்றிய கதை இது. இது சரியில்லை.
எனக்குத் தெளிவான சில விஷயங்களைக் கூறத் தோன்றுகிறது. அதற்குத் தேவையான நேரம் இங்கு இல்லை என்பதும் படுகிறது. பொதுவாக நமக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரமே குறைவுதானே! இருந்தாலும் கூற முடியும்வரை கூறுகிறேன். நீங்கள் மானிட கலாச்சாரத்தின் பிரதிநிதி என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கலாச்சாரம் என்பது என்ன? அது என்னவென்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இரவில் நீங்கள்... உங்களின் செயல்கள்... உங்கள் எண்ணங்கள், உங்கள் கனவுகள், உங்கள் விருப்பங்கள்... பகலில் உங்கள்.. உங்கள் செயல்கள், பேச்சுகள்.. இப்படி எல்லாவற்றையும் உண்மையாகவே குறித்து வைத்துவிட்டு ஒரு வாரம் சென்ற பிறகு எடுத்து நீங்களே வாசித்துப் பாருங்கள். உங்களுக்கே நடுக்கம் உண்டாகும். நீங்கள் நீங்கள்தானா என்று உங்களுக்கே சந்தேகம் தோன்றிவிடும். அப்படியுள்ள என் எல்லா செயல்களையும் இங்கு நான் குறிப்பிடவில்லை. சிலவற்றை மட்டுமே இங்கு வெளிப்படுத்துகிறேன். நான் இதுவரை கூறி வந்ததும், இனி கூறப்போவதும்.. உங்களைச் சிரிக்க வைக்கப் போகின்றன.
இருந்தாலும் சோகமும் நகைச்சுவையும் இரண்டறக் கலந்துதான் நான் கூறப்போகிறேன். எப்படி என்கிறீர்களா? இரண்டுமே என்னிடம் இரண்டறக் கலந்து கிடக்கின்றன. வாழ்க்கையே அப்படித்தானே! நான் கூறி வந்தது தெருவில் காணும் காட்சிகளைப் பற்றி அல்லவா? நான் அவற்றை இங்கு விவரிப்பதால் நீங்கள் பயப்படுகிறீர்களா?
ஓ.... என்ன? பயம் இல்லையா?
எதுவுமே புதுமையில்லை. கண்டும் கேட்டும் பழகியதுதான். தெருவில் மக்கள் கூட்டம். பயங்கரமான நோய்களின், மோசமான எல்லா நாற்றத்தின், மொத்த அழிவின் அடையாளம் அது. அவர்களை மக்கள் என்று கூறலாமா? நான் சொன்னேனே மனிதத் தன்மை அவர்களிடமிருந்து- எதற்கு அவர்களிடமிருந்து....! நம்மிடம் மனிதத்தன்மை இருக்கிறதா? உங்களிடமும் மனிதத்தன்மை இருக்கிறதா? உங்களிடமும் என்னிடமும்? உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பட்டினி கிடப்பது தெரிந்த பிறகும், வயிறு புடைக்க நீங்கள் உணவு உண்ணவில்லையா? இது சரியா தவறா என்று நான் இங்கு கூற வரவில்லை. இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு கேள்விகள் உங்களை உங்களின் சரியான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தும். நீங்கள் கூறுவீர்கள்: "என்னிடம் கொஞ்சம் அதிகமாகவே தன்மானம் இருக்கு. மன்னிக்கணும்." இப்படிக் கெஞ்சும் குரலில் மன்னிப்பு கேட்காதவர்கள் இந்த உலகத்தில் யாராவது இருக்கிறார்களா? நான் கூறினேனே- மனதில் ஒருமுக நிலை கிடைக்கவே மாட்டேன் என்கிறது. மரத்தின் வேர்களைப்போல சிந்தனை பல திசைகளையும் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை. போர் நடந்து கொண்டிருக்கிறது. உள்ளேயும் வெளியிலும். உள்ளே நடக்கும் போர்தான் என்னை அதிகமாக பாதிக்கிறது. நினைவுக்கும் நினைவற்ற தன்மைக்குமிடையே போர். நான் நினைவுத் தன்மையில் ஒருமுக நிலை காண முயல்கிறேன்.
அந்தத் தெருவில், ஒரு விளக்கு மரத்தின் அடியில் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். ஒரு குழந்தை அந்தப் பிரேதத்தின் முலையை வாயில் வைத்துச் சப்பிக் கொண்டிருக்கிறது.
அந்தப் பெண் உங்களின் தாய் என நினைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், என் தாய். அந்தக் குழந்தை நான் என்றே நினைத்துக் கொள்கிறேன். இல்லாவிட்டால் நீங்கள்.
செத்துக்கிடக்கும் அந்தப் பெண்ணின் இடுப்புப்பகுதி ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக இருக்கிறது.
இது எப்படி நடந்தது. அவள் இறந்தவுடன் நீங்களோ, நானோ- இல்லாவிட்டால் நாமோ யாரென்று அறியாத நம்முடைய யாரோ ஒரு சகோதரனோ- சகோதரியோ- அந்தப் பெண்ணின் உடலில் இருந்த ஆடையை அவிழ்த்திருக்க வேண்டும். நாணத்தை மறைப்பதற்காக இருக்கும். அது என்ன நாணம்? ஆமாம்... இந்த மகா பிரபஞ்சத்தில்- நாணம் என்றால்தான் என்ன?
முடிவே இல்லாததன் முன் நிர்வாணமாக நிற்பதற்கு யார், எதற்காக நாணப்பட வேண்டும்? ஆனால்.. தந்தையே மகளை விற்கிறான்- சில நிமிடங்களுக்கு- ஒரு சிஃபிலிஸ் நோய் படைத்தவனுக்கு. ஓ... தந்தையும் மகளும் பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் முதியவர்களும்! குழந்தைகள் தாய்மார்களின் முலைகளைக் கடித்து துன்பப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தாய்மார்களின் முலைகளில் பால் இல்லை. தாய்மார்களின் ரத்தத்தைதான் குழந்தைகள் சப்பிக் குடிக்கிறார்கள். வெள்ளை நிற ரத்தம்தானே பால்! ஓ... என் தொண்டை வறண்டு விட்டது. வாயில் நீரில்லை. உதட்டைக் கடித்து கொஞ்சம் ரத்தத்தைக் குடித்தால் என்ன?
ஓ... நீங்கள் நினைக்கலாம். இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கிற போது எதற்காக எழுத வேண்டுமென்று. சும்மா இருக்கக் கூடாதா? சும்மா இருக்கலாம். அதற்காக? இந்தத் துன்பத்திலேயே சிக்கிக் கொண்டு கிடக்க வேண்டுமா? நிச்சயமாக முடியாது. நான் இந்தத் துன்பங்களை மறக்க விரும்புகிறேன். அதற்காகவே நான் எழுதுகிறேன். என் நண்பரே! நான் ஒரு எழுத்துத் தொழிலாளி. எழுத்து விவசாயி. எழுத்துப் பட்டாளத்துக்காரன். மொத்தத்தில் நான் ஒரு கலைஞன். நீங்கள் ஒத்துக் கொள்ளாமல் போனால்கூட என்னைப் பற்றிய என் கருத்து இதுதான். எனக்கென்று இருக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டே இறப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! நான் சொல்ல வந்தது... கொஞ்ச நாட்களாகவே நான் சோறு சாப்பிடுவதில்லை. வெறுமனே தண்ணீரை மட்டும் குடிப்பதுண்டு. கனமான உணவு ஏதாவது உள்ளே சென்றால் அதை ஜீரணிப்பதற்கான வழி என்ன என்பதை என் வயிறு மறந்துபோய் விட்டது என்று எண்ணிக் கொள்ளுங்கள். இருந்தாலும் விருப்பம் இல்லாமல் இருக்குமா?
நான் மட்டும் தனியே இருக்கிறேன். தன்னந்தனியே. இதயம் அழைக்கிறது. கேட்க யாருமே இல்லை. ஒரே நிசப்தம். ஏகாந்த சூழ்நிலை!
ஆமாம்... ஐந்தாவது உண்ணாவிரதம் இப்படித்தான் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்போதுதான் குறிப்பிடத்தக்க அந்த நிகழ்ச்சி நடக்கிறது. அது மட்டும் நடக்காதிருந்தால்... இப்போதைய இந்த நிலை... போகட்டும். நேற்றைக்கு முன்பு இருந்த எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருந்தன. என் நண்பரே! இப்போது நான் சில விஷயங்கள் கூறப்போகிறேன். உங்களுக்கு ஆர்வம் உண்டாக வேண்டும் என்பதற்காக அல்ல. உங்களின் மன அமைதிக்காகவும் அல்ல. உங்களின் ஒன்றுக்காகவும் அல்ல. நான் இப்படி ஆணவமாகப் பேசுவதற்கு மன்னிக்கவும். மன்னிக்காவிட்டாலும் பரவாயில்லை. இருந்தாலும் மன்னியுங்கள். கடந்த நாட்களில் என் உடல்நிலை நன்றாகவே இருந்தது. உடல்நிலை பாதிக்கப்பட்டதன் ஆரம்பம், ஒருநாள் தலைக்கு உள்ளே பின்பக்கம் தீ இருப்பது போன்று ஒரு எண்ணம். இருந்தாலும் பரவாயில்லை. நடக்கிறபோது லேசாக மயக்கம் வருவது மாதிரி இருக்கும். காதுகள் கேட்காதது மாதிரி இருக்கும். இருந்தாலும்... நான் நடக்கவே செய்வேன். ஞாபகம் வருகிறபோது நினைத்துப் பார்ப்பேன். "நான் இப்போது எங்கு போய்க் கொண்டிருக்கிறேன்?"
இப்படி குஞ்ஞம்மா நினைப்பாளோ என்னவோ? என் ரசிகர், தொழிலாளிகளின் தலைவன், திரைப்பட நடிகர், அவரின் மனைவியான நாட்டிய மங்கை, நீங்கள்... இப்படி நான் நினைப்பது மாதிரி பிறரும் நினைத்துப் பார்ப்பார்களா என்ன? நான் இப்போது எங்கு போய்க் கொண்டிருக்கிறேன்?- இப்படிச் சிந்தித்தவாறு சிறிதுநேரம் நான் சாலையில் நின்று விடுவேன். மேலே விமானத்தின் இரைச்சல். சுற்றிலும் மனிதர்களின் மெதுவான பேச்சு சப்தம். மது அருந்திய பட்டாளக்காரர்களின் பேய்க் கத்தல்கள், வாடிக்கையாளர்களின் ஒலி, பிச்சைக்காரர்களின் அழுகை. நான் மெல்ல நடந்து செல்வேன். அப்போதும் அந்தப் பிரச்சினை தலையை நீட்டும். மனித சமுதாயம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது என்பதல்ல- நான் இப்போது எங்கு போய்க் கொண்டிருக்கிறேன்? உடனே எங்கேயும் இல்லை. அப்போது நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். அதைக் கேட்கிறபோது நானே அதிர்ந்து போவேன். ஏனென்றால், அந்தச் சிரிப்பு எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
அறிமுகமே இல்லாத யாரோ ஒருவர் சிரிப்பது மாதிரி உணர்வேன். எல்லாம் என்னைச் சுற்றிலுமே நடப்பது மாதிரி தெரியும். இப்படி ஒரு சந்தேகம். நான் நடப்பேன். எங்கு? வெறுமனே நடப்பேன். இரவு சிறிது கழியும் நேரத்தில் நடந்து வியர்த்துக் களைப்பாகிற போது நான் திரும்பவும் இந்த அறைக்கு வருவேன். அறைக்கதவைத் திறந்து விளக்கைப் போட்டுப் பார்க்கிறபோது பல கடிதங்களும் பத்திரிகைகளும் அறையில் கிடக்கும். கடிதங்களை எடுத்துப் படித்துப் பார்ப்பேன்.
எல்லாக் கடிதங்களுக்கும் பதில் எழுத வேண்டும். ஆனால்.. ஸ்டாம்புக்குப் பணம் வேண்டுமே! நாட்டில் இருந்த பணம் எல்லாம் எங்கே? போருக்கு எதற்குப் பணம்? குஞ்ஞம்மாவை நினைத்துப் பார்ப்பேன். நான் அப்படியே உட்கார்ந்து விடுவேன். எழுதி முடித்த நாவலை எடுத்து இன்னொரு முறை படித்துப் பார்ப்பேன். ஆங்காங்கே புதிதாக சில திருத்தங்கள் செய்வேன். அது முடிந்தால் சாவகாசமாக முற்றத்திற்கு இறங்கி இருளோடு கலந்து நிற்பேன். ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பேன். நட்சத்திரங்கள்! அதைப் பார்க்கிறபோது ஒரு பழைய பிரச்சினை மீண்டும் தலையை உயர்த்தும். என்ன அது? நீண்ட நேரம் காதுகளைத் தீட்டி நிற்பேன். வெறுமனே ஒரு நிற்றல். அவ்வளவுதான். உலகத்தில் எங்கே இருந்தாவது குறிப்பிடத்தக்க சப்தம் ஏதாவது கேட்கிறதா? உடனே எனக்குத் தோன்றும்- நான் எதற்கு இப்படி நிற்க வேண்டும்? ஓ... சும்மாதான். பிறகு நானே சிரிப்பேன். மீண்டும் அறைக்குள் வந்து நாற்காலியில் அமர்வேன். முழுமையடையாத புதிய கதையை எடுத்துப் படித்துப் பார்ப்பேன். அதை முழுமையாக்க முயற்சிப்பேன்.
இதெல்லாம் பழைய கதை. என் நண்பரே! என்னால் இப்போது அசையவே முடியவில்லை. என் உள்ளே ஈய உருண்டையும் முள் கம்பியும்... கீழேயும் மேலேயும் தாழ்த்துவதும் உயர்த்துவதுமாய்... தாழ்த்துவதும் உயர்த்துவதுமாய்.. தலை வியர்க்கிறது. வயிற்றில் என்ன மணல் மூட்டையா இருக்கிறது? இல்லை- வெடிகுண்டுகள் என்று ஒரு நினைப்பு. எங்கேயோ நெருப்பு பிடித்திருக்கிறது. நான் லட்சக்கணக்கான துண்டுகளாகச் சிதறிப்போவேன். அதற்கு முன்பு கதையை வேக வேகமாக எழுதி முடிக்க வேண்டும். ஒரு முக்கிய செய்தி. கடந்த இரவு இரண்டரை மணி வரை நான் இந்த அறையில் இல்லை. புதுமையான செய்திதான் இது. நான் எங்கே இருந்தேன் தெரியுமா? சொல்கிறேன். கடந்த இரவு நான் இங்கு தனியே வந்தேனா இல்லாவிட்டால் யாராவது கொண்டு வந்து சேர்த்தார்களா?
ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.
நான் தனியேதான் வந்தேன். ஆமாம்... நானே வந்தேன். வழி தவறாமல் வந்தேன். அறையைத் திறக்க அரை மணி நேரம் பிடித்தது. சாவித் துவாரத்தைக் கண்டுபிடிக்க பல நிமிடங்கள் கஷ்டப்பட வேண்டியதிருந்தது. அதற்குப் பிறகு விளக்கு ஸ்விட்சைக் கண்டு பிடிக்கவும் பல நிமிடங்கள் ஆனது. சுவரைத் தடவியவாறே மெல்ல அறைக்குள் ஊர்ந்தேன். இரண்டு மூன்று முறை கீழே விழவும் செய்தேன். அதற்கிடையில் பால் பாட்டில் கையில் பட்டது. குளிர்ந்த பாலைக் குடித்தபோது, ஓருவித சுகம் தோன்றியது. அதையும் கையில் வைத்துக் கொண்டே உறங்கியிருக்கிறேன். ஏனென்றால் இன்று பகலில் உறக்கம் நீங்கி எழுந்தபோது வெற்றுத் திண்ணையில் மல்லாக்கப் படுத்துக் கிடந்தேன். பால் பாட்டில் நெஞ்சின்மேல் இருந்தது.
அறைக்கதவு திறந்தே கிடந்தது. வராந்தாவில் செடிகள் நான்கும் சிவப்பும், வெள்ளையுமான மலர்களால் அழகு செய்து கொண்டிருந்தன. நான் நினைத்துப் பார்த்தேன். கடந்த இரவில் நான் ஏன் கதவையே அடைக்கவில்லை? வெற்றுத் திண்ணையில் படுத்துக் கிடக்க காரணம்? எல்லாவற்றையும் நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். நினைவுகளுக்குள் ஒரு சூறாவளி வீசுகிறது. வீசட்டும்! ஆரம்பம் எப்படி என்றா?
ஆமாம்... ஆரம்பம் எப்படி?
ஆமாம்... ஆரம்பம் எங்கே இருந்து என்பது தெரியாது. ஒருவேளை அந்த நடனப் பெண்ணில் இருந்து இருக்கலாம். அப்படித்தானே இருக்க வேண்டும்! பெண்ணில் இருந்துதான் ஆரம்பமே. இல்லாவிட்டால் ஆணில் இருந்தா? எதுவாக இருந்தாலும் ஒன்று மட்டும் உண்மை. அந்த நடன மங்கையிடம் தமாஷாக ஒரு தடவை நான் சொன்னேன்:
"இந்த வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் சுகமாக இருக்கணும்னா சொந்தமான கருத்து எதுவும் இருக்கக்கூடாது. உங்களைச் சுற்றிலும் "0" வட்டத்திலுள்ள இடம் மட்டுமே பூமியில் இருக்குன்னு நாம நெனைச்சிக்கணும். வெட்டியோ, பிளந்தோ, நட்டோ, நனைச்சோ அதை வைத்து வாழவும் முயற்சிக்கணும்."
அவள் சிரித்தாள். அவள் சொன்னாள்: "எனக்குப் பாடணும். ஆடணும். இதுக்கு என்ன செய்றது?"
நான் சொன்னேன்:
"பாடிக்கோ. ஆடிக்கோ. வாழ்க்கை நடனம். யார் வேண்டாம்னு சொன்னது?"
அவள் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கேட்டாள்:
"என்ன ஒண்ணுமே பேசாம இருக்கிறீங்க?"
அந்தத் திரைப்பட நடிகர் சிரித்தார்.
நான் அந்தப் பெண்ணிடம் கேட்டேன்:
"என்ன வேணும்?"
"என்ன?"
குஞ்ஞம்மாவைப்போலத்தான். தவிப்பும் கோபமும் கலந்த பாவனை. அவளுக்கு என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் தெரியாதது மாதிரி நடிக்கிறேன். நான் அந்தப் பெண்ணிடம் சொன்னேன்.
"அப்படின்னா நடனம் ஆடு- பூமியில் "0" வட்டத்தில்."
"0" வட்டத்திலா?
"அடி பெண்ணே..." திரைப்பட நடிகர் கூறினார்:
"பூமி பெரிய உருண்டையடி."
"எனக்குத் தெரியும். நான் அதை மறக்கவில்லை." அவள் சொன்னாள்.
நான் கேட்டேன்:
"என்ன?"
அவள் தயங்கினாள். வெட்கம் அவளிடம் தெரிந்தது. அவள் சொன்னாள்:
"இப்போ இங்கே ஒரு கிணறு தோண்டினா... அதைத் தோண்டித் தோண்டி... வருடக்கணக்கா... தோண்டி... தோண்டி.. இப்படியே போனா..."
நான் சொன்னேன்:
"சரிதான். பூமியின் மத்தியில் ஒரு ஓட்டை உண்டாகும்."
அவள் சொன்னாள்:
"அப்போ அடுத்த பக்கம் தெரியும்ல. இப்போ பகல்னா அடுத்த பக்கம் ராத்திரி. அப்போ நட்சத்திரங்களையும் பார்க்கலாம்."
நான் சொன்னேன்:
"பார்க்கலாம். நட்சத்திர பிரபஞ்சங்கள்!"
இந்த உரையாடல் நடந்தது இந்த அறையில்தான். என் இந்த நிலையின் ஆரம்பம் அதுவாக இருக்காது. மகிழ்ச்சியும் துக்கமும்தான் ஆரம்பம் என்று தோன்றுகிறது. ஆமாம். என் ரசிகரான திரைப்படத் தயாரிப்பாளர்தான் அதைக் கூறினார் என்று நினைக்கிறேன். அவர் நேற்று சொன்னார்:
"என் ஆர்வம் முழுவதும் சினிமாவில்தான். எனக்கு நல்ல திரைப்படங்கள் எடுக்கணும்னு ஆசை. அதற்குத் தேவையான, அழகான இடங்கள் நம்ம நாட்டுல இருக்கு. நதிகள், குளங்கள், காடுகள், அருவிகள், மலைகள், நெல் வயல்கள், தென்னந்தோப்புகள்- எல்லாமே நம்ம நாட்டுல இருக்கு. நடிகர்- நடிகைகளுக்கும் பஞ்சம் இல்ல. கட்டாயம் தேவையானது நல்ல கதைகள்."
நான் கதைகளைப் பற்றியும் கதாசிரியர்களைப் பற்றியும் கூற ஆரம்பித்தபோது இடையில் புகுந்து அந்த ஆள் கேட்டார்:
"நீங்க எழுதி வச்சிருக்கிற நாவல் டிராஜிடியா, காமெடியா?"
நான் சொன்னேன்:
"டிராஜிடி"
அவர் கேட்டார்:
"ஒரு காமெடி எழுதலாம்ல? சிரிக்கிற மாதிரி கதைதான் நல்லது. அதுல நடனம் இருக்கணும். பாட்டு இருக்கணும்."
நடனமும் இசையும் இல்லாத கதை திரைப்படத்திற்குத் தேவையற்ற ஒன்று. நடனத்துடனும் இசையுடனும் எனக்கொன்றும் விரோதம் கிடையாது. இருந்தாலும் எல்லாத் திரைப்படங்களிலும் அவை கட்டாயம் இருக்க வேண்டும் என்று வைத்திருப்பது... வசனம், நடனம், இசை, ஓவியம், சிற்பம்... இப்படி எட்டாயிரம் வருடங்கள் பின்னால் நாம் போனோம். அங்கே இருந்து கலைஞர்களுடன், அவர்களின் கலைப் படைப்புகளுடன், கலையில் வந்த ஒவ்வொரு பிரிவுகளுடன்- பாடியும் நடனமாடியும் கதை சொல்லியும் நாம் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அவர் சொன்னார்:
"கலைக்கு ஏதாவது லட்சியம் இருக்கிறதா?"
நான் கேட்டேன்:
"வாழ்க்கைக்கு ஏதாவது லட்சியம் இருக்கிறதா?"
பிறகு ஒரே நிசப்தம்.
சிறிது நேரம் சென்ற பிறகு நான் கேட்டேன்:
"க...லை என்று நீங்கள் நினைப்பது சிற்பத்தையா? ஓவியம், நாட்டியம், இசை, கதைகள், நாடகங்கள், கட்டிடக்கலை, நெசவு, சமையல் இவற்றையுமா?"
அவர் சொன்னார்:
"எல்லாவற்றையும் சேர்த்துத்தான்."
நான் சொன்னேன்:
"சில நிமிடங்களில் பேசி முடித்துவிடுகிற ஒரு விஷயமில்ல இது. கலை என்றால் என்னவென்று விவரிக்க பழைய காலம் முதலே பலரும் முயற்சித்திருக்கிறார்கள். பலரும் பலவித கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள். அறிய முயற்சிப்பவர்களும் அறிவில்லாதவர்களும் ஏற்கெனவே அறிந்தவர்களும் எழுதியிருக்கிறார்கள். சிற்பக் கலைஞர்கள், ஓவியர்கள், கதாசிரியர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள், சன்னியாசிகள், அரசியல்வாதிகள்- ஏன்- இவர்கள்- பால்குடி மறந்த பச்சைக் குழந்தைகள்கூட எழுதியிருக்கிறார்கள். இனியும் எழுதுவார்கள். நான் சொன்னேனே- நான் மிகவும் படித்திருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். சிற்பக் கலை, ஓவியம், கட்டிடக் கலை, வசனம்- இவை மட்டுமல்ல - கலையின் பிரிவைச் சேர்ந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் லேசான ஒரு அறிவு உண்டு. சொந்தமாகக் கொஞ்சம் அதிகமாகச் சிந்திக்கவும் செய்திருக்கிறேன்..."
நான் இடையில் நிறுத்தினேன். அரை ரூபாய் எனக்குத் தர முடியுமா? நான் பட்டினி கிடக்கிறேன். என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கொண்டுபோய் ஏதாவது வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும். இப்படிச் சிந்தித்தவாறு நான் அந்த மனிதரின் முகத்தையே உற்றுப் பார்த்தேன். என் எண்ணங்கள் அவரின் மனதிற்குள் நுழையட்டும்.
அவர் கேட்டார்:
"சரி... அப்போ கலைன்னா என்னன்னு நீங்க சொல்றீங்க?"
நான் சொன்னேன்:
"நான் ஒண்ணும் சொல்லல... க... லை என்ற இரண்டு எழுத்துகளுக்கிடையில் பூமியையும் சூரிய- சந்திரனையும் நட்சத்திரங்களையும் எல்லா பிரபஞ்சங்களையும் நான் காணுகிறேன்னு இப்போதைக்கு வச்சுக்கோங்க."
மீண்டும் ஒரே நிசப்தம்.
சிறிது நேரம் சென்றபிறகு அவர் கேட்டார்:
"உங்களோட கதைகளின் லட்சியம் என்னன்னு சரியா புரியல. அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?"
நான் தோற்று விட்டேன். இரும்புக் கம்பியில் அந்த ஆளை அடித்துக் கொல்லாமல் விட்டது என் மடத்தனம். ஆமாம்... இப்போதுதான் ஞாபகத்தில் வருகிறது.
இதன் ஆரம்பம் நான் இப்போது கூறிய மாதிரி இல்லை. சரியாக ஆரம்பிப்பதற்கு முன்பே கதைகளின் லட்சியத்தைப் பற்றி மட்டுமல்ல பேசியது. என் சில கதைகள் பிடித்தன. சில பிடிக்கவில்லை. சில கதைகள் நகைச்சுவை ததும்பியவை. சில கதைகள் பயங்கரமானவை. சில கதைகள் சாகசத் தன்மை கொண்டவை. இவற்றுடன் எனக்கு எதற்கு உடன்பாடு?
நான் சொன்னேன்:
"அதுக்கு முன்னாடி ஒரு தமாஷ். உங்களுக்கு கடவுள்மீது நம்பிக்கையுண்டா?"
அந்த மனிதரின் முகத்தில் சிரிப்பு மறைந்துவிட்டது. அவர் சொன்னார்:
"சத்தியமாக எனக்கு கடவுள்மீது நம்பிக்கை உண்டு. உங்களுக்கு...?"
"என் விஷயம் இருக்கட்டும். உங்களுக்கு இருக்கு இல்லையா?"
"இருக்கு."
"நல்லது. கடவுளை நீங்கள் எப்படிப் பார்த்தீங்க?"
ஒரு பழைய சமாச்சாரத்தைக் கிளறுகிற வகையில் அவர் சொன்னார்:
"படைப்புகளின் வழியே.. எல்லாவற்றுக்கும் பின்னால் நான் ஒரு சக்தியைப் பார்க்கிறேன்."
நான் சொன்னேன்:
"அதோ இருக்குற அழகான ரோஜாப்பூவைப் படைத்த கடவுளை நீங்கள் வழிபடுறீங்கன்னு அர்த்தம். இதுதானே..."
"ஆமாம்..."
"அப்படின்னா விஷப்பாம்பைப் படைச்ச தெய்வத்தை என்ன என்பது?"
அவர் அசையாது நின்றிருந்தார்.
நான் கேட்டேன்:
"சிங்கம், யானை, திமிங்கலம், பூச்சி, பறவைகள், அட்டை, எறும்பு, ஆமை, குஷ்டம் மற்றும் சிஃபிலிஸ் சம்பந்தப்பட்டஅணுக்கள், மாம்பழம், அழகான பெண்கள், ஆழமான விரிந்த கடல்கள், உயர்ந்த மலைச்சிகரங்கள், நீங்கள், நான், நீங்கள் விரும்புவதும் விரும்பாததும், நீங்கள் வெறுப்பவையும் பயப்படுபவையும்- இப்படி கடவுளின் படைப்புகளில் பல இருக்கின்றன. இவற்றைப் படைத்த கடவுளை நீங்கள் வழிபடுகிறீர்களா?"
அவர் அசையவில்லை.
நான் சொன்னேன்:
"முதலாவதும் கடைசியாகவும் உள்ள கலைஞன்தான் கடவுள். அப்படிப்பட்ட கடவுளின் கலைப்படைப்புகளின் லட்சியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?"
அவர் அசையாமல் இருந்தார். பதில் எதுவும் கூறவில்லை.
நான் தொடர்ந்தேன்:
"அப்படிப்பட்ட கலைஞனான கடவுளின் எண்ணிக்கையில் அடங்காத கலைப் படைப்புகளில் ஒன்றான... தன்னையும் கலைஞன் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அப்பாவியான ஒரு சிறு மனிதப் பிறவியே நான் என்று கருதிக் கொள்ளுங்கள். என் படைப்புகள் எல்லாவற்றுக்கும் மகத்தான லட்சியங்கள் நிச்சயம் இருக்கவே செய்கின்றன."
நான் சிரித்தேன்- தொடர்ந்தேன்.
"எனக்கு கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் சொன்னதெல்லாம் தமாஷுக்காக என்று கருதிக் கொள்ளுங்கள்."
"அதெப்படி?"
"ஆமாம்... எல்லாமே தமாஷ்தான். வாழ்க்கையே ஒரு பெரிய தமாஷ்தானே! நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படி வைத்துக் கொள்ளுங்கள். எப்படி வேண்டுமென்றாலும் கருத்து கூறுங்கள்."
அவர் கேட்டார்:
"நீங்கள் ஒரு "மிஸ்டிக்" மாதிரி தெரிகிறதே!"
நான் சொன்னேன்:
"நான் ஒரு காய்கறி இல்லை".
"அப்படின்னா?"
"நான் ஒரு வெண்டைக்காய் இல்லை. மனிதன்தான்."
விரும்பியோ விரும்பாமலோ அல்ல நான் இப்படிக் கூறியது. அப்படியாவது உரையாடல் ஒரு முடிவுக்கு வரட்டும். ஆனால்... முடிந்ததால்தான் இந்த வேதனை. தமாஷ் நிறைந்த அந்தக் கதையைக் கேட்க வேண்டுமா?
சுவையான நிகழ்ச்சிதான். கவனமாகக் கேளுங்கள். வழக்கம்போல் நேற்று பால் வர நான்கு மணி ஆகியிருந்தது. வழக்கம்போல நான் தளர்ந்து போய்க் கிடந்தேன். எப்போதும்போல அப்போதும் குஞ்ஞம்மா பாலுடன் வந்தாள். நான் தமாஷுக்காகச் சொன்னேன்.
"அய்யோ சின்னு... பாலு வேண்டாம்."
குஞ்ஞம்மா ஒன்றும் பேசவில்லை. இருந்தாலும் அவளுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவள் பால் பாட்டிலுடன் உள்ளே வந்தாள். அந்த பாட்டிலைப் பெரிய சப்தத்துடன் ஒரு மூலையில் வைத்தாள்.
நான் சொன்னேன்:
"என்மேல இருக்கிற கோபத்தாலதானே நீ அந்த பாட்டிலை தரையில் அப்படி வச்சே!"
"ஆமா..."
நான் கூறினேன்:
"இதுக்கு நான் பதிலா என்ன செய்யறேன் பாரு- உன்னைக் கல்யாணம் பண்ணின பிறகு?"
அவள் கேட்டாள்:
"என்ன செய்வீங்க?"
நான் சொன்னேன்:
"உன்னைக் கல்யாணம் பண்ணின உடனே பன்னிரெண்டு சின்ன பிரம்பு கொண்டு வருவேன். என் பெரு விரல் அளவு உள்ளது."
"அதை வச்சு..."
"அதை வச்சா....? உன்னை ஜன்னல் கம்பியில் வச்சு கட்டுவேன்."
"பிரம்பை வச்சா?"
நான் சொன்னேன்:
"மக்குக் கழுதைக்கு அறிவே இல்லை."
அவள் சொன்னாள்:
"கழுதைன்னு சின்னுவைக் கூப்பிடு."
நான் சொன்னேன்:
"சரி... அதுக்குப் பிறகு உன் தொடையில சந்தோஷத்தோட மெல்ல சில அடிகள் கொடுப்பேன். இப்படி எல்லா நாட்களிலும்."
அவள் ஆர்வத்துடன் வினவினாள்:
"அதுக்குப் பிறகு?"
நானும் புன்னகையுடன் சொன்னேன்:
"அதுக்குப் பிறகு ஒண்ணுமில்லை. அமைதியாக வாழ்வோம்."
குஞ்ஞம்மா கூறினாள்:
"நான் தலையை அடிச்சே பொளந்திடுவேன்."
"உன் தலையையா என் தலையையா?"
குஞ்ஞம்மா கூறினாள்:
"சரிதான்."
நான் சொன்னேன்:
"இனி நீ போகலாம்."
குஞ்ஞம்மா கூறினாள்:
"காசு தா, காசு தா."
நான் அந்தக் காசு விஷயத்தை மறக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகக் கேட்டேன்.
"இன்னைக்கு நீ எத்தனை பட்டாளக்காரர்களைப் பார்த்தாய்?"
குஞ்ஞம்மா ஒன்றுமே பதில் பேசவில்லை.
நான் கேட்டேன்:
"என்ன சின்னு... பூனை எத்தனைக் குட்டிகள் போட்டது?"
குஞ்ஞம்மா ஒன்றுமே பதில் பேசவில்லை. நான் ஒன்றும் கேட்கவுமில்லை. அப்படி இருக்கிறபோது குஞ்ஞம்மா ஒரு விஷயத்தைக் கிளப்பினாள். என்ன தெரியுமா? அவள் சொல்கிறாள்:
"எங்களோட ஒரு பூனைக்கு நான் சின்னு என்று பேர் வச்சிருக்கேன். அதை எப்பவும் அடிப்பேன்- உதைப்பேன்."
நான் சொன்னேன்:
"ரொம்ப மகிழ்ச்சி. வேற விசேஷம் ஒன்றுமில்லை. சுகம். அங்கேயும் சுகம்தான் என்று நம்புகிறேன்."
குஞ்ஞம்மா ஆர்வத்துடன், அதே சமயம் அதைப் பற்றி அக்கறை இல்லாத மாதிரி மெல்ல கேட்டாள். "சின்னுன்னா.."
சின்னு ஒரு பழைய கறுத்த பசு. பயங்கரமான இரண்டு கொம்புகள் உண்டு. அதற்கு என்னை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் குறைந்த பட்சம் இருபது தடவைகளாவது என்னை அது கீழே முட்டித் தள்ளிவிட்டிருக்கிறது. அந்த ஞாபகங்களுடன் நான் குஞ்ஞம்மாவிடம் சொன்னேன்.
"அவள் ஒரு கருப்பி..."
குஞ்ஞம்மா அதை ரசித்தாள். காரணம்- அவள் வெளுத்த தேகத்தைக் கொண்டவள். குஞ்ஞம்மா சிரிக்கவும் செய்தாள். அவள் கேட்டாள்.
"சின்னுவோட வீடு எங்கே இருக்கு?"
நான் சொன்னேன்:
"இங்கே இருந்து ரொம்ப தூரத்துல. கிராமத்துல இருக்கிறதா சொல்லப்படுகிற என் வீட்டுல."
குஞ்ஞம்மா சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. லேசான வருத்தம் தோய்ந்த குரலில் அவள் கேட்டாள்.
"அவள் உங்க பொண்டாட்டிதானே?"
நான் பதில் பேசவில்லை.
குஞ்ஞம்மாவே தொடர்ந்தாள்:
"பிறகு ஏன் இங்கே அவளைக் கொண்டு வந்து உங்க கூடவே வச்சிக்கிடல...?"
நான் அசையவில்லை. மீண்டும் அவளே கேட்டாள்:
"கழுத்துலயும் கையிலயும் நெறைய நகை போட்டிருப்பாளா?"
நான் பதில் பேசவில்லை.
குஞ்ஞம்மா கூறினாள்:
"நான் போறேன். வீட்ல நெறைய வேலை இருக்கு."
நான் சொன்னேன்:
"சரி போ..."
குஞ்ஞம்மா கூறினாள்:
"காசு தா..."
நான் மீண்டும் அவளின் அந்த காசு விஷயத்தை மாற்றுவதற்காகக் கூறினேன்:
"குஞ்ஞம்மா... இனிமேல் காசு கேக்காமல் இருந்தா நான் சின்னுவைப் பற்றிச் சொல்லுவேன்."
குஞ்ஞம்மா கூறினாள்:
"வேண்டாம். எனக்கு அந்தச் சனியனைப் பற்றி ஒண்ணும் தெரியவேண்டாம்."
நான் சொன்னேன்:
"நீ சின்னுவைச் சனியன் அது இதுன்னு பேசுறது சரியா? சின்னுக்கு மட்டும் இது தெரிஞ்சா...?"
"ஏன்... என்னை முழுங்கிடுவாளா?"
நான் பதில் பேசவில்லை.
குஞ்ஞம்மா கேட்டாள்:
"சின்னுக்கு முடி அதிகம் இருக்கா?"
நான் சொன்னேன்:
"முடியே இல்ல..."
குஞ்ஞம்மாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. காரணம்- இவள் தலையில் ஏராளமான முடி. குஞ்ஞம்மா கேட்டாள்:
"சின்னு போடுறது புடவையும், ஜாக்கெட்டுமா? இல்லாட்டி... வேஷ்டியா?"
நான் சொன்னேன்:
"சின்னு புடவை அணியறது இல்லை. ஜாக்கெட்டும் போடுறது இல்லை. எப்போதும் பிறந்த கோலம்தான்."
"அய்யய்யோ...!" குஞ்ஞம்மாவுக்கு வெட்கம் வந்து விட்டது.
அவள் கேட்டாள்:
"சின்னு வீட்டை விட்டு வெளியே நடந்து போகணும்ல? அப்போ..."
நான் சொன்னேன்:
"தொழுவத்துலதான் சின்னு வசிக்கிறதே."
"ஓஹோ..." குஞ்ஞம்மா சிரித்தாள். "அப்படின்னா அது பசுவா?"
நான் கூறினேன்:
"நீ ஒரு சரியான முட்டாள். பசுன்னு சொல்லக்கூடாது. "பஷூ"ன்னு சொல்லணும்."
குஞ்ஞம்மா பேசவில்லை.
"குஞ்ஞம்மா, நீ இன்னைக்கு அந்த சின்னு பூனையை அடிப்பியா?"
"ஊஹும்..." அவள் சொன்னாள்."வீட்ல எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு."
நான் கேட்டேன்:
"உன்னை யாராவது வேலையை விட்டு நிக்கச் சொன்னாங்களா?"
"காசு தா... இன்னைக்கு என் அப்பா உன் கிட்ட காசு கட்டாயம் வாங்கிட்டு வரச்சொல்லி இருக்காரு."
காசு வாங்காமல் போக மாட்டாள்போல தெரிந்தது.
நான் சொன்னேன்:
"குஞ்ஞம்மா, நீ காசு கேக்குறதையே வேறு வார்த்தைகளைப் போட்டு கேளு." எனக்கே நீ சொல்லறதைக் கேட்டுக் கேட்டு வெறுப்பாயிடுச்சு. "காசு தா காசு தா. இன்னைக்கு என் அப்பா உன் கிட்ட காசு கட்டாயம் வாங்கிட்டு வரச்சொல்லி இருக்காரு. இதையே எத்தனை தடவை கேக்குறது!"
குஞ்ஞம்மா சொன்னாள்:
"அப்படின்னா நான் அப்பாக்கிட்டே என்ன சொல்றது? காசு இல்லைன்னா புல் கெடைக்குமா?"
நான் சொன்னேன்:
"இதுவும் வழக்கமா நீ பாடுற பல்லவிதான். எல்லா கதையும் எனக்குத் தெரியும். அப்பா இருக்காரு. அம்மா இருக்காங்க. ரெண்டு அண்ணன் இருக்காங்க. பன்னிரெண்டு கோழி...."
"பன்னிரெண்டா? இருபத்திரெண்டு கோழி..."
"ஆமா... இருபத்திரெண்டு கோழி, ஒன்பது பூனை..."
குஞ்ஞம்மா சொன்னாள்:
"இப்போ பூனை பதினஞ்சாயிடுச்சு."
"சின்னுப் பூனை குட்டியா என்ன?"
"ஆமா..."
நான் அழைத்தேன்:
"குஞ்ஞம்மா..."
"என்ன?"
"அடியே... அந்தக் கோழி பிரசவமாகலையா?"
குஞ்ஞம்மா சொன்னாள்:
"என்ன பேசுறீங்க? கோழி முட்டைதான் போடும்."
நான் கேட்டேன்:
"அடியே... ஒவ்வொரு நாள் பால்கொண்டு வர்றப்பவும் ஆறு முட்டைகளை அவிச்சு கொண்டு வரலாம்ல...?"
"விருப்பமில்ல..."
"அப்படின்னா வேண்டாம்."
சிறிதுநேரம் கழித்து குஞ்ஞம்மா சொன்னாள்:
"முட்டையை எடுத்தா அம்மா அடிக்கும்."
நான் ஒன்றுமே பேசவில்லை.
குஞ்ஞம்மா கேட்டாள்:
"ரெண்டு முட்டை போதுமா?"
நான் சொன்னேன்:
"நீ போகலாம். உனக்கு வீட்ல ஏகப்பட்ட வேலைகள் இருக்கு."
குஞ்ஞம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது.
"அப்படின்னா நான் முட்டையும் கொண்டு வரமாட்டேன். ஒண்ணும் கொண்டு வரமாட்டேன்."
மத சம்பந்தமான ஏதோ சடங்கு என்பது மாதிரி சிறிது நேர சிந்தனைக்குப்பின் நான் கூறினேன்:
"குஞ்ஞம்மா, நீ இன்னைக்கு அப்பாகிட்டே சொல்லு, ஒவ்வொரு நாளும் பால்கூட ரெண்டு முட்டையும் கொடுத்து விடணும்னு."
அவள் சொன்னாள்:
"விருப்பமில்லை... விருப்பமில்லை..."
நான் அழைத்தேன்:
"அடியே சின்னு..."
அவள் ஒன்றும் பேசாமல் ஓடத் தொடங்கினாள். நான் நினைத்தேன். நாளைக்கு அவள் நிச்சயம் முட்டை கொண்டு வருவாள். அதைப்பற்றி அவளோட அப்பாக்கிட்ட அவள் சொல்லுவாளா? இல்லாட்டி யாருக்குமே தெரியாம எனக்குன்னு திருட்டுத்தனமா கொண்டு வருவா. இது தப்பான ஒரு காரியமா இருக்கலாம். அதனால முட்டைக்கு ருசி இல்லாமப் போயிடுமா என்ன?
இப்படிச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறபோது என் ரசிகர் என்னைப் பார்க்க வருகிறார்.
"சாரை ஒரு சார் கூப்பிடறாரு." இப்படி வியர்வை வழிந்த கோலத்துடன் மூச்சிறைக்க என் அறை வாசலில் வந்து கூறினான் எனக்கு நன்கு தெரிந்த ஒரு ரிக்ஷா வண்டிக்காரன்.
"எந்த சார்?" லேசான கோபத்துடன் நான் கேட்டேன். ரிக்ஷாக்காரனிடம் எனக்குக் கோபம் இல்லை. எங்கேயோ உட்கார்ந்து கொண்டு என்னை அழைக்கிற அந்த சார் மீதுதான் எனக்கு கோபம். அவ்வளவு பெரிய ஆள் என்னைப் பார்க்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. இருந்தாலும் நான் கேட்டேன்:
"யார்டா அது? எங்கே இருக்காரு?"
"எனக்குத் தெரியாது. அந்த சார் என்னோட வண்டியில உட்கார்ந்திருக்காரு."
நான் சொன்னேன்:
"நீ போய் அந்த சாரை இங்க வரச்சொல்லு."
எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் இங்கு வரட்டும். அவன் ஓடினான். நான் நினைத்தேன்- நல்ல காரியம் ஏதாவது நடக்குமோ என்று. இன்றைக்காவது ஏதாவது சாப்பிட முடியுமா? வருகிற ஆள் ஒரு எட்டணா (50 பைசா) எனக்குத் தந்தால்... என் வாயில் எச்சில் ஊறியது. மனதில் சூடு பறக்கிற சோறும் கறியும் வலம் வந்தது. என் நண்பரே, என்னைப் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிகிறதா? (அய்யோ அம்மா... எனக்கு சிறிது நிமிர்ந்து உட்கார வேண்டும்போல் இருக்கிறது. ஆனால், வயிற்றின் மடிப்புகள் பிளந்துவிடப்போகின்றன!) ஆமாம்... நான் நினைத்துப் பார்த்தேன். வருகிற ஆள் யாராக இருக்கும்?
வந்தார்.
இதற்கு முன்பு நான் பார்த்திராத ஒரு மனிதர். அழகான தோற்றத்தைக் கொண்டவர். உடலில் நல்ல ஆரோக்கியம் தெரிந்தது. தரமான ஆடைகள் அணிந்திருந்தார். முடியைப் பின்னோக்கி வாரி விட்டிருந்தார். கண்களில் பிரகாசம் தெரிந்தது. ருசியான உணவு வகைகளைத் தினந்தோறும் சாப்பிடக்கூடிய மனிதர் என்பதைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது.
முகத்தில் சிறிதுகூட கவலையின் ரேகைகள் தெரியவில்லை. கையில் விலைமதிப்புள்ள கோல்ட்ஃப்ளேக் சிகரெட் டின். கையின் மணிக்கட்டில் பொன்நிற கைக்கடிகாரம். குட்டிக்குரோ பவுடரும் அதற்கு ஒப்பான சுகந்த திரவியமும் உடலில் புரட்டி இருந்ததால் ஒரு வித இனிய நறுமணம் நாலா பக்கங்களிலும் பரவி மூக்கைத் துளைத்தது... அந்த மனிதர் புன்னகைத்தவாறே என் அறையை நோக்கி வந்தார். அதே புன்னகை மாறாமல் கேட்டார் ஆங்கிலத்தில். அதாவது, நான்தானா இவர் தேடுகிற ஆள்! அப்போதுதான் அந்தப் பற்களைப் பார்த்தேன். முன்பக்கம் இருந்த நான்கு பற்களும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கின்றன. அவர் கேட்ட கேள்விகளுக்கு நானும் ஆங்கிலத்திலேயே பதில் கூறினேன்.
பிறகு மெல்ல நான் இந்தச் சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தேன். இது என் சிம்மாசனம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் மெல்ல எழுந்தேன். ஏன் தெரியுமா? அந்த ஆள் பெரிய பணக்காரர் என்று மனதில் பட்டது. எதை வைத்து நான் இந்த முடிவுக்கு வந்தேன் தெரியுமா? கோல்ட்ஃப்ளேக் சிகரெட் டின், தங்க முலாம் பூசப்பட்ட பற்கள்- பணக்காரர்களின் இலக்கணத்திற்கு இவை போதாது? பணக்காரர்களுக்கு மதிப்பு தர வேண்டியது நம் கடமை அல்லவா? அது மட்டும் காரணம் அல்ல. அது போகட்டும். நான் அவரிடம் சொன்னேன்- எல்லாம் ஆங்கிலத்திலேயே!
"உக்காருங்க."
அவர் சொன்னார்:
"வேண்டாம்... வேண்டாம்... நீங்க உக்காருங்க."
நான் சொன்னேன்:
"ரொம்ப நேரமா நான் உக்கார்ந்திருக்கிறேன். நீங்க உக்காருங்க. உக்கார வேற இடமில்ல."
அவர் அன்புடன் வினவினார்:
"நீங்க எங்கே உக்காருவீங்க?"
நான் சொன்னேன்:
"நான் தரையில உக்கார்ந்துக்கறேன். யாராவது வந்தால் நான் இப்படித்தான் உக்காருவேன்."
அந்த மனிதர் சிரித்தவாறு இந்தச் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். இதில் இதற்கு முன்பு எத்தனையோ ஆயிரம் பேர் அமர்ந்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும். இதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவர் புன்னகை தவழ என்னை ஆழப் பார்த்தார். அதாவது என்னையே வைத்த கண் எடுக்காது பார்த்தார். மேலே இருந்து கீழே வரை அவர் பார்வை போனது. எனக்கே அதைப் பார்த்து ஒருவித நடுக்கம் உண்டாகிவிட்டது. நானொன்றும் திடகாத்திரமான உடம்பைக் கொண்ட மனிதனாக இல்லையே! எனக்கு இது நன்றாகவே தெரியும். நான் வாடித் தளர்ந்து போயிருந்தேன். தொடர்ந்து பட்டினி... பட்டினி என்று எத்தனை நாட்கள்! உடலுக்குள் உணவு போய் எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. கண்களில் பிரகாசம் இல்லை! என் உதடுகள் வறண்டுபோய் இருக்கின்றன. என் நண்பரே, நான் துயரங்களின் ஒரு பட்டியல் இங்கு போட விரும்பவில்லை. ஒரு கதை எழுதுகிறேன். எதற்கு? சும்மா... சும்மா... ஒரு கதை... சும்மா... இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு கடிதம். அவ்வளவுதான். அவர் வந்த பிறகு என்ன நடந்தது- அதுதானே!
ஆமாம்... அவர் என்னிடம் கேட்டார்:
"நான் தொந்தரவு ஒண்ணும் தரலியே!"
"இல்ல..."
அவர் சொன்னார்:
"நான் சில விஷயங்கள் உங்களோடு பேச விரும்புகிறேன். வண்டிக்காரனைப் போகச் சொல்லிடலாமே!"
நான் சொன்னேன்:
"சரி..."
அவர் கேட்டார்:
"கூலி எவ்வளவு கொடுக்கணும்?"
நான் வண்டிக்காரனிடம் கேட்டேன்:
"எங்கேயிருந்து வர்றே?"
வண்டிக்காரன் ஹோட்டலின் பெயரை பந்தாவாகக் கூறினான்.
ஓ.... அது பெரிய ஹோட்டலாயிற்றே! பெரிய அதிகாரிகள், பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள், பெரிய பணக்காரர்கள்- இப்படி பெரிய மனிதர்கள் இந்த நகரத்திற்கு யார் வந்தாலும் அவர்கள் தங்குவது இந்த ஹோட்டலில்தான். இங்கே இருந்து ஒன்றரை ஃபர்லாங் தூரத்தில் அந்த ஹோட்டல் இருக்கிறது. ஒரு இரண்டனா கொடுத்தால் தாராளமாகப் போதும். நான் சொன்னேன்:
"நாலணா (25 பைசா) கொடுங்க."
அப்படிச் சொன்னதற்குக் காரணம்- அவன் சாதாரண ஒரு தொழிலாளி என்பதற்காக மட்டுமல்ல- என்னைப் பற்றி அவனுக்கு பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டாக வேண்டும் என்பதற்காகவும்தான். இனிமேல் என்னைப் பார்க்கிறபோது அதிகமான மரியாதையோடு சலாம் வைப்பான் அல்லவா!
ஆனால் வண்டிக்காரனுக்குக் கொடுக்க அவரிடம் சில்லரை இல்லை. சில்லரை கையில் வைத்திருப்பது தகுதிக்குறைவான ஒரு காரியம் ஆயிற்றே இத்தகைய மனிதர்களுக்கு!
அவர் சொன்னார்:
"சில்லரை என்கிட்ட இல்லையே!"
தொடர்ந்து பெரிதாக வீங்கிய ஒரு கவரை பாக்கெட்டில் இருந்து எடுத்தார். அதில் நூறு, பத்து, ஐந்து என்று பல ரூபாய் நோட்டுகள். இப்படி ஒரு சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? நாலணா எடுத்து வண்டிக்காரனுக்கு நான் கொடுக்க வேண்டும். இதுதான் நாட்டு நடப்பு. ஆனால் என் கையில காசு என்று எதுவும் கிடையாது என்ற சத்தியமான உண்மையை அவர் தெரிந்து கொண்டால் என் கவுரவம் என்ன ஆவது!
அவர் பால்பாட்டிலைக் கையில் எடுத்தார்: "இது ரொம்ப சூடா இருக்கே!"
நான் சொன்னேன்:
"இப்போதான் கொண்டு வந்தது. வேணும்னா குடிங்க."
"ஓ..." அவர் புன்னகைத்தார். பிறகு சொன்னார்: "நான் பால் குடிப்பதில்லை."
"தேநீர் கொண்டு வரச்சொல்லட்டா?" பரபரப்பில் கொஞ்சம் யோசிக்காமல் நான் கேட்டு விட்டேன். அதோடு தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவும் செய்தேன். என் நண்பரே, நான் கடவுளிடம் ஏதாவது பேசி எவ்வளவோ நாட்களாகி விட்டன! சொல்ல என்ன இருக்கிறது! கடவுளுக்குத்தான் எல்லா கதையும் தெரியுமே! இருந்தாலும் நான் இதயத்தில் விரக்தி குடிகொள்ள பிரார்த்தித்தேன்: "கடவுளே! அவர் தேநீர் வேண்டாம்னு சொல்லணும்."
அவர் சொன்னார்:
"தேநீர் வேண்டாம்..."
நான் கேட்டேன்:
"காப்பி...?"
கடவுளே ஏமாற்றி விடாதே!
"வேண்டாம்"
நான் கேட்டேன்:
"கூல் டிரிங்க்ஸ் ஏதாவது?"
சர்வ சக்தி படைத்த தெய்வமே! இதிலும் என்னைக் காப்பாற்றிவிடு!
அவர் சொன்னார்:
"வேண்டாம்..."
அப்பா... நான் பெரிய மனிதனாகி விட்டேன். இனி அந்த மனிதரின் முகத்தைப் பார்த்து நான் தாராளமாகப் பேசலாம்.
ரிக்ஷா வண்டிக்காரன் கேட்டான்:
"சார்..."
நான் சொன்னேன்:
"என்கிட்டயும் சில்லரை இல்ல..."
பத்து, ஐந்து, நூறு ரூபாய் கட்டுகள் மட்டுமே என்னிடம் இருக்கின்றன என்ற கணக்கில் நான் பதில் கூறினேன். அதோடு நிற்காமல் என் மனதிற்குள் சுவையான சிந்தனையும் தோன்றி வலம் வந்தது. செடிகளின் அடிப்பக்கம் கிளறப் பயன்படும் இரும்புக் கடப்பாரை மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தபோதுதான் எனக்கு இப்படியொரு சிந்தனை எழுந்தது. நான் நினைத்தேன்.
எழுந்து சென்று வண்டிக்காரனிடம் ரகசியமாகக் கூறிவிட்டு மீண்டும் அறைக்குள் வந்து இரும்புக் கடப்பாரையால் இந்த மனிதரின் தலையை ஓங்கி அடித்துப் பிளந்து கொல்ல வேண்டும். இது யாருக்குத் தெரியப் போகிறது! அந்த நோட்டுக் கட்டுகள் ஒன்று விடாமல் எடுக்கலாம். ரிக்ஷா வண்டிக்காரரின் உதவியுடன் இரவு வந்ததும் வயலில் குழி வெட்டி இந்த ஆளின் உடலைப் புதைத்து மூடிவிடலாம். நான் நினைத்தேன். அந்தப் பற்களில் பூசப்பட்டிருக்கும் தங்கத்தை எடுப்பதா எடுக்காமலே விட்டுவிடுவதா?
நண்பரே... இந்தக் கடிதத்தை நான் முடிக்கப் போகிறேன். என்னால் முடியவில்லை. பல விஷயங்களையும் கூற வேண்டும் என்றும் நினைத்தேன். முடியவில்லை. உடலில் படுதளர்ச்சி. என் வயிற்றில் கிடக்கிற ஈய உருண்டையும் முள்கம்பியும் என்ன என்றும், அவை எப்படி அங்கு வந்தன என்றும் அறிய வேண்டுமா? என் ரசிகரின் அன்பு... அன்புப் பரிசு அது!
அவரை நான் கொலை செய்யவில்லை. நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். தொழிலாளிகளின் தலைவர், திரைப்பட நடிகர், நாட்டிய மங்கை- இவர்களைப் பற்றி நான் சொன்னதை மறந்து விடுகிறேன்.
நான் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். என் ரசிகரிடம் கால் ரூபாயோ அரை ரூபாயோ கடனாக... இல்லை... நான் கேட்கவில்லை.
அவர் இருபத்தி ஏழோ, எழுபத்தி இரண்டோ, ஐநூற்று எழுபத்தி இரண்டோ ரூபாய் எனக்காகச் செலவு செய்தார். அதன் விளைவே இந்த ஈய உருண்டையும் மற்றதும். உங்களுக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் விளக்கமாக எல்லா விஷயங்களையும் நான் கூறுகிறேன்.
ஒரு திரைப்படக்கதை நான் எழுதித் தரவேண்டும் என்று அவர் கேட்டார். நிகழ்ச்சிகள் அத்தனையும் இரவில் நடப்பதாக இருக்க வேண்டும். பிக்பாக்கெட் அடிப்பதும், கற்பழிப்பும், கொலை செய்யும் காட்சியும் கட்டாயம் இருக்கவேண்டும். ஓரினச் சேர்க்கை காட்சிகளும் இருக்க வேண்டும். "நடு இரவில்"- இதுதான் கதைக்குப் பெயர்.
அவர் என்னைப் படம் பார்க்க அழைத்தார். நான் ஏற்கெனவே பார்த்த கதைதான். அதுவும் பழைய கதை. தரையில் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். இன்றைய ஒரு இலக்கியவாதி தரை டிக்கெட் வாங்கிப் படம் பார்ப்பது என்பது... போகட்டும். கதை தொடர்கிறேன். நான் போனேன். ஒரு வயிறு சோற்றுக்காக என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
சினிமா தியேட்டருக்கு நடந்து போகவில்லை. இரண்டு ரிக்ஷா வண்டிகளில். கோல்ட் ஃப்ளேக் சிகரெட் கூடப் பிடித்தேன். பந்தாவாக அவர் சொன்னார்:
"பரவாயில்லையே!... இந்த ஊர் இப்போ விபச்சாரிகளின், பிச்சைக்காரர்களின், போலீஸ்காரர்களின் ஊராக மாறிடுச்சு!"
நான் சொன்னேன்:
"கொலைகாரர்களின்... அதாவது... பட்டாளக்காரர்களின் பட்டணம் இது."
அவர் கேட்டார்:
"இப்போ எங்கேயாவது வெடிகுண்டு செய்கிறார்களா?"
வெடிகுண்டு செய்தால் என்ன.... செய்யாவிட்டால் என்ன... மரணம் எப்போதும்... எப்போதும் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறதே!
நான் நினைத்துப் பார்த்தேன். என் இந்த நிலைமையை குஞ்ஞம்மா பார்த்திருந்தால்... எனக்கு நன்கு பழக்கமானவர்கள் யாராவது பார்த்திருந்தால்... என் நடத்தையைப் பார்த்து அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அவர்களால் நம்பக்கூட முடியாது. என்றாலும் பழக்கப்பட்ட யாரும் கண்ணில் படவில்லை. நாங்கள் பந்தாவாக சினிமா தியேட்டர் முன் போய் இறங்கினோம். தரை டிக்கெட்டு வாங்க மக்கள் கூட்டமாக அலைமோதிக் கொண்டிருந்தார்கள். பிச்சைக்காரகள் கூட்டத்துக்கு மத்தியில் நுழைந்து கை நீட்டிக் கொண்டிருந்தார்கள். பிக்பாக்கெட் காரர்களும் இருக்கவே செய்தார்கள். ரிக்ஷா வண்டிக்காரர்களுக்கு எதிர்பார்த்ததற்கும் மேலாகப் பணம் தரப்பட்டது. நன்றிப் பெருக்குடன் அவர்களில் ஒருவன் எனக்கு சலாம் வைத்தான். என் ரசிகர் சென்று இரண்டு டிக்கெட் வாங்கி வந்தார். தரை டிக்கெட் அல்ல. பெஞ்சும் இல்லை. நாற்காலியும் இல்லை. அசல் பால்கனி டிக்கெட்டுகள். நாங்கள் இரண்டு பேரும் மாடி ஏறினோம். பால்கனியில் இரண்டு சோஃபாக்களில் அமர்ந்தோம். உண்மையாகச் சொல்லட்டுமா... எனக்கு தரை டிக்கெட் பகுதியையோ பெஞ்சு டிக்கெட் பகுதியையோ பார்க்க வெட்கமாக இருந்தது. எனக்குப் பழக்கப்பட்டவர்கள் யாராவது பார்த்தால்... அவர்களால் நிச்சயம் நம்பவே முடியாது. எப்படி இந்த மனிதன் பால்கனியில் போய் அமரலாம் என்று மனதிற்குள் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். என்ன இருந்தாலும் இவன் ஒரு இலக்கியவாதி ஆயிற்றே! அப்படிச் சந்தேகப்படுவதோடு நின்றால் பரவாயில்லை. போலீஸில் என்னைப் பற்றி ஏதாவது தகவல் கொடுத்துவிட்டால்... நினைக்கவே பயமாகத்தான் இருந்தது. திடீரென்று ஒரே விசில் சத்தம்.
என்னைப் பார்த்து அவர்கள் விசிலடிக்கவில்லை. படம் பார்க்க தியேட்டரில் அமர்ந்திருக்கும் மக்களின் விசில் சத்தம்தான். தரை டிக்கெட்காரர்களிடமிருந்துதான் அதிக விசில் சத்தம். பெஞ்சில் இருந்தவர்களும் நாற்காலியில் இருந்தவர்களும்கூட விசில் அடித்திருப்பார்கள். எனக்கும் விசில் அடிக்க வேண்டும்- "ஹ்ஹு" என்று ஊளையிட வேண்டும்போல் இருந்தது. தரையில் உட்கார்ந்து படம் பார்த்த காலங்களில் நான் இதைச் செய்திருக்கிறேன். மக்கள் விசிலடிக்கிறபோதும் கூக்குரல் எழுப்புகிறபோதும் நானும் அவர்களுடன் சேர்ந்து விசிலடித்திருக்கிறேன்- கூக்குரல் இட்டிருக்கிறேன். இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சியாக இருந்திருக்கும்- பால்கனியில் உட்கார்ந்திருக்கும் ஒருவன் விசில் அடிப்பது... ஊளையிடுவது... அப்படி எழுந்த ஆசையை நான் அடக்கிக் கொண்டேன். சிகரெட்டைப் புகைத்தவாறே உட்கார்ந்திருந்தேன். மணி ஆறரை ஆனது.
விளக்குகள் அணைக்கப்பட்டன. தியேட்டரில் இருள் நிறைந்தது. திரை வெள்ளைவெளேர் என்று தெரிந்தது. அதில் "அமைதி" என்ற வசனம் தெரிந்தது. அப்போது மக்களின் ஊளைச் சத்தம் காதைத் துளைத்தது. தொடர்ந்து விளம்பரங்கள். எல்லா விளம்பரங்களிலும் பெண்கள் உருவம். பாங்க், ப்ராந்தி, கருவாடு, ஆடைகள், குஸ்தி, சோப், மருந்துகள், பவுண்டன் பேனா, அரிவாள்- இப்படி அடுத்தடுத்து விளம்பரங்கள். பெண்களின் உருவம் இல்லை என்றால் விளம்பரத்திற்கு என்ன மதிப்பு இருக்கிறது! அரிவாளை யார் வாங்குவார்கள்?
சீக்கிரம் படம் தொடங்கியது. நான் கண்களை மூடிக் கொண்டேன். போரைப் பற்றி எண்ணினேன். பஞ்சத்தைப் பற்றி நினைத்தேன். மக்கள் பட்டினி கிடந்து நித்தமும் மரணத்தைத் தழுவிக் கொண்டிருப்பதை நினைத்தேன். வெறுமனே மதம் சம்பந்தப்பட்ட ஒரு சடங்கு மாதிரி நினைத்துப் பார்த்தேன். அதோடு சரி. போர்களும் மரணங்களும் எனக்குப் புல்லைப்போல. ஆனால் படம் பார்த்துக் கொண்டிருந்த மக்களின் கையொலி தியேட்டரை அதிரச் செய்து கொண்டிருந்தது.
"இந்த மக்கள் ஏன் இப்படி முட்டாள்களாக இருக்காங்க? அங்க பார்... அறிவே இல்லை... கைத்தட்டுறான்."
நான் கேட்டேன்:
"என்ன உங்களுக்குள்ளேயே பேசிக்கிறீங்க?"
என் ரசிகர் சொன்னார்:
"மக்கள் எப்படி ரசிக்கிறாங்க! பார்த்தீங்களா?"
நான் கேட்டேன்:
"படம் எப்படி?"
"ஒளிப்பதிவு பரவாயில்லை. நடிப்பு மோசமில்லை. கதை பழையது. நீங்கள் நல்ல கதை எழுதித்தரணும்."
"பாக்ஸ் ஆஃபீஸ் சக்ஸஸ்" என்று மனதிற்குள் கூறினேன்.
நாங்கள் படம் முடிந்து வெளியே வந்தோம். "குட்நைட். இன்னொரு நாள் சந்திப்போம்" என்று அந்த ஆள் போய்விடுவாரோ என்று நான் பயப்பட்டேன். அப்படி அவர் போயிருந்தால்- இப்போதிருக்கும் இந்த நிலை எனக்கு வந்திருக்கவே வந்திருக்காது. என்னதான் நடந்தது?
அவர் தங்கியிருந்த அந்தப் பெரிய ஹோட்டல் முன் நாங்கள் போய்ச்சேர்ந்தோம். நகரத்தில் வெளிச்சம் இருக்கக்கூடாது அல்லவா? இருந்தாலும் நல்ல நிலா வெளிச்சம். நான் நினைத்தேன்- எட்டணா கேட்போமா? வேண்டாம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும். நான் சொன்னேன்:
"குட்நைட். இன்னொரு நாள் பார்க்கலாம். தாங்க்ஸ் ஃபார் தி சினிமா."
அவர் சொன்னார்:
"நோ நோ... ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம்."
நான் சொன்னேன்:
"ஒண்ணும் வேண்டாம்..." கருணையே வடிவான தெய்வமே!
அவர் கூறினார்:
"பேசாம வாங்க... ஏதாவது லேசா சாப்பிட்டுட்டுப் போகலாம்!"
நான் நினைத்தேன். இனி வேண்டாம் என்று கூறினால் அவர் சரி என்று தலை ஆட்டிவிட்டால்... நான் மவுனமாக இருந்தேன். நாங்கள் அந்தப் பெரிய ஹோட்டல் படி ஏறினோம். எனக்கு அது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில் ஒரு விஷயத்தை நான் இங்கு சொல்லியாக வேண்டும். அதாவது... அந்த கேட் கீப்பர் என்னையே உற்று உற்றுப் பார்த்தான். பெரிய மனிதர்கள் தங்குகிற இடத்தில் இவனுக்கென்ன வேலை என்ற எண்ணம் அவன் பார்வையில் தெரிந்தது. எனக்கு அந்த ஆள் சலாம் வைக்கவில்லை. நான் இதைப் பிரத்யேகமாக கவனிக்கக் காரணம்... என் ரசிகருக்கு அவன் சலாம் அடித்ததே! எனக்கும் சலாம் வைத்தால் அவனுக்கென்ன நஷ்டம் உண்டாகி விடப்போகிறது! கழுதைப் பயல்!
ரசிகருடன் நான் ஹோட்டலுக்குள் நுழைந்தேன். அதற்குள் இரண்டு உலகங்கள். ஹாலில் மக்கள் அமர்ந்து சாதாரண காய்கறி உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி நாங்கள் போனோம். மற்றொரு கதவு. அங்கு சில ரகசிய முணுமுணுப்புகளும் குசுகுசு சத்தங்களும் கேட்டன. பெரிய மனிதர்கள் உணவு உண்டு கொண்டும் மது அருந்திக் கொண்டும் அங்கு இருந்தார்கள். கத்திகள், முட்கள், குப்பிகள், மாமிசம், ரொட்டி... அவற்றின் முன் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் உண்டு. யாரும் சுய நினைவில் இல்லை என்று எனக்குத் தோன்றியது. போதையை நோக்கி நாங்கள் போவது எனக்குப் புரிந்தது. என் ரசிகர் பொன்னால் ஆன பற்களைக் காட்டிச் சிரித்தார். சிலரை நோக்கிப் புன்னகைத்தார்.
அவர் என்னிடம் கேட்டார்:
"ஹாட்டா கோல்டா?"
சூடாக வேண்டுமா, குளிர்ச்சியாக வேண்டுமா என்று கேட்டால் என்ன அர்த்தம். நான் சொன்னேன்:
"எது வேணும்னாலும்."
நாங்கள் ஒரு சிறு மேஜையில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் இரு நாற்காலிகளில் அமர்ந்தோம். தலைப்பாகை அணிந்த ஒரு பட்லர் வணக்கம் கூறிய நிலையில் எங்கள் அருகில் நின்று கொண்டிருந்தான். அவர் பட்லரிடம் கூறினார்.
"ஒரு ஸ்க்ரீன் கொண்டு வா".
"சரி சார்..." பட்லர் சென்றான்.
ஸ்க்ரீன் என்று சொன்னால் திரை அல்லது தட்டி என்று அர்த்தம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் அது ஏதோ தின்னக்கூடிய பொருளின் பெயராகத்தான் இருக்கும் என்று என் மனதில் பட்டது. அவ்வளவுதான்- என் வாயெல்லாம் எச்சில் ஊறிவிட்டது. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? பட்லர் ஒரு பெரிய ஸ்க்ரீனைத் தூக்கிக் கொண்டு வந்து போட்டு மற்றவர்களிடமிருந்து எங்களைத் தனிமைப் படுத்தினான். அவர் அந்தப் பட்லரை அருகில் அழைத்து மெதுவான குரலில் என்னவோ முணுமுணுத்தார். பட்லர் போனான். ஆர்வம் குடிகொள்ள நான் உட்கார்ந்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும். கத்திகள், முட்கள் சகிதமாக சூடு பறக்கும் இரண்டு கோழிகளைக் கொண்டு வந்து எங்கள் முன் வைத்தான் பட்லர். பொறித்த கோழி. பிறகு ரொட்டிகள். உருளைக்கிழங்கை பெரிய பெரிய தூண்டுகளாக நறுக்கி வைத்திருந்தான்.
நான் ஒரு புலியைப்போல பாய்ந்து அதைத் தின்னவில்லை. பட்டினி கிடந்த சிங்கத்தைப்போல கர்ஜனை செய்யவில்லை. தின்னும் பொருட்களைக் கண்டவுடன் வாயில் எச்சில் ஊறியது. பண்பாடு கருதி அசையாமல் உட்கார்ந்திருந்தேன். என் ரசிகரும் எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். இனியும் ஏதாவது வர வேண்டும்போல் இருக்கிறது! என்னவாக இருக்கும்? இதோ வந்து விட்டது. இரண்டு பெரிய கண்ணாடி டம்ளர்களில் மஞ்சள் நிறத் திரவம்! நமது பழைய கால சுக்குக் கஷாயம்போல இருந்தது. ஆனால் மேலே நுரை தெரிந்தது. நாங்கள் தின்னத் தொடங்கினோம். என் ஆவலையும் பரபரப்பையும் நீங்களே கற்பனை பண்ணிக் கொள்ளலாம். நான் மென்றும் சரியாக மெல்லாமலும் "லபக் லபக்" கென்று எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஏதாவது குடிக்க வேண்டும்போல் இருந்தது. கண்ணாடி டம்ளரில் இருப்பவன் யார் என்று கேட்கவில்லை. கேட்காமலே, டம்ளரைக் கையில் எடுக்கத் தொடங்கினேன்.
என் ரசிகர் தன் டம்ளரை எடுத்து என் கண்ணாடி டம்ளரோடு சேர்த்து க்லும் என்று ஒற்றினார். அவர் சிரித்தார். நானும் சிரித்தேன். நான் டம்ளரைக் கையில் எடுத்தேன். அதன் குளிர்ச்சி என் எலும்புகளையும் தாண்டி அதற்குள் இருக்கும் சோறு வரை போய்ச்சேர்ந்தது. நான் நினைத்தேன்- குளிர்ச்சி உள்ளவனாக இருக்கிறான். எலுமிச்சம் பழ ஜூஸாக இருக்கும். தலைப்பாகை போல எலுமிச்சை ஜூஸிற்கு மேல் பகுதியில் நுரை இருக்காதே! இருந்தாலும் நிச்சயம் இனிப்பாக இருக்கும். தெய்வமே என்று மனதில் நினைத்தவாறு ஒரு மடக்கு தூக்கிக் குடித்தேன். என்ன சொல்வது? பயங்கர எரிச்சல்... புளிப்பு... இல்லை... கசப்பு! இதென்னடா! இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது ஒரு தமாஷான எண்ணம்... என்னை மிகவும் விரும்பக்கூடிய ஒரு சைத்தான் அதாவது ஒரு பிசாசு... பெண்ணா- ஆணா சரியாகத் தெரியவில்லை... எனக்குள் நுழைந்ததுபோல் ஒரு உணர்வு. உணர்வுடன் உணர்வின் நிழலும். எனக்கு சிரிக்க வேண்டும்போல் இருந்தது. நான் சிரித்தேன். நான் கேட்டேன்.
"இது என்ன?"
என் ரசிகர் சிரித்தார். அவர் சொன்னார்:
"நீங்கள் இதெல்லாம் சாப்பிடுகிற ஆள்னு நான் கேள்விப் பட்டிருக்கேனே!"
நான் கூறினேன்:
"இந்த அளவுக்கு உயர்ந்த சரக்கு நான் சாப்பிட்டதில்லை."
"உண்மையாகவா?"
நான் சொன்னேன்:
"உண்மையாகத்தான்."
"அப்படின்னா அது..." அவர் சரக்கின் பெயரைக் கூறினார்.
"...."
"நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தெய்வமே!"
"ஆமா... உடல் ஆரோக்கியத்திற்கு இது ரொம்பவும் நல்லது!"
நான் முன்பு மதுக்கடை முன்பு மறியல் செய்த கதையை நினைத்துப் பார்த்தேன். என் காலில் வந்து விழுந்து உடைந்த பாட்டிலின்.... நான் வினவினேன்:
"இது அந்த இனத்தில்..."
"அந்த இனத்தில் பாவப்பட்டவன் இவன்."
நான் கோழியின் தொடையை ஒரு கடி கடித்தவாறு ஒரே மடக்கில் டம்ளரைக் காலி செய்தேன். மீண்டும் டம்ளர் நிரம்பியது. அதையும் நான் காலி செய்தேன். இப்படித் தின்னுவதும் குடிப்பதுமாய் நான் இருக்கிறபோது மீண்டும் சரக்கு வந்தது. நுரையில்லை. நிறத்தில் சிறிது வித்தியாசம். நான் ஒரு மடக்கு குடித்தேன். ஆயிரம் ஊசி முனைகள் ஒரே நேரத்தில் குத்துவதுபோல உணர்ந்தேன். நான் கேட்டேன்.
"இவன் இன்னொருத்தன்போல இருக்கே!"
அவர் பெயரைச் சொன்னார்:
"இவன்..."
"பாவப்பட்டவன் இல்லை?"
"இல்லை... இவன் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவன். தலைவன்."
இந்த விஷயத்தில் தலைவனான அந்த சைத்தானும் எனக்குள்ளே போனான். மணிகள் கடந்தன. எனக்கு மிகமிக உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் வீங்கிப் போய்விட்டதைப்போல் உணர்ந்தேன். தலைவர்களான பல பிசாசுகளும் பிசாசினிகளும் டம்ளர் வழியே எனக்குள்ளே நுழைந்தார்கள். நான் சொன்னேன்- சொல்லியபோது வார்த்தைகள் கட்டுப்பாட்டை மீறித் தடுமாறின.
நான் சொன்னேன்:
"மஸி..."
அவர் சொன்னார்:
"சாய்... இப்போதான் ஆரம்பமே... பாய்...!"
"எஸ் ஸார்."
"எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய், உப்பு..."
"எஸ் ஸார்."
சிறிது நேரத்தில் அவை மூன்றும் வந்தன. பச்சை மிளகாயில் உப்பு போட்டு அதன்மேல் எலுமிச்சம் பழச்சாறைப் பிழிந்து ஊற்றினார். இரண்டு தட்டுகளில் ஒரு தட்டை எடுத்து என் முன் வைத்தார்.
"தொட்டு நாக்குல வச்சு பாருங்க. என் மாஸ்டர் பீஸ் இதுதான்."
நான் தொட்டு நக்கிப் பார்த்தேன். பேஷ்... அடடா! அந்த எரிச்சலும் புளிப்பும் உப்பும், தாகம்...
அதற்குப் பிறகும் வந்தன பேய்கள். ஒற்றை முலைச்சிகள், காலமாடன்மார்கள், காலமாடிகள்... அழகர்கள், அழகிகள்... ஆட்டு மாமிசம், ரொட்டி... நான் கணக்கே இல்லாமல் குடித்தேன். கணக்கே இல்லாமல் தின்றேன். (என் நண்பரே, என்னை மன்னியுங்கள். ஒன்றுமே ஜீரணமாகவில்லை. மணல் மூட்டைபோல ஈய உருண்டையில் சுற்றிய முள்கம்பிபோல கருங்கல் துண்டுகள்போல... எல்லாமே உள்ளே கிடக்கின்றன. நான் காய்ந்து சருகாய்ப் போய்விடுவேன்போல் இருந்தது. மன்னிக்க வேண்டும். முழுவதையும் கூறுகிறேன்) தின்றும், குடித்தும், தொட்டு நக்கியும்- இப்படி இருக்கிறபோது நான் உமர்கய்யாமை நினைத்துப் பார்த்தேன். என் தூரத்துச் சொந்தம் அவன். அவன் ஒயினைப் பற்றிப் பாடியிருக்கிறான். சந்தடிசாக்கில் ஒயினையும் குடித்துவிடுவது என்று தீர்மானித்தேன். நான் கேட்டேன்:
"இங்க உமர்கய்யாம் இருக்கானா?"
என் ரசிகர் கூறினார்:
"நீங்க நல்லா பூஸ்ட் ஆயிட்டீங்க!"
எனக்குச் சிரிப்பு வந்தது. அந்த மனிதரின் முகம் சிவந்தும் கண்கள் சின்னதாகவும் இருந்தன. நான் சொன்னேன்:
"உங்க கண்கள் ரொம்ப சின்னதாக இருக்கு."
அவர் சிரித்தார்.
"உங்க கண்ணும்தான்."
நான் சொன்னேன்:
"நான் போகட்டா?"
அவர் கேட்டார்:
"நீங்கள் யாரைக் கேட்டீங்க?"
"ஒயின்."
"பாய்..."
"எஸ் ஸார்"
"ஒயின்."
ஒயினும் வந்தது. ரத்தச் சிவப்பு. அழகான பெண்ணைப்போல இனிப்பும் உண்டு. குத்தலும் உண்டு. அவர் என்னவோ பேசிக் கொண்டிருந்தார். நான் ஒன்றுமே பேசாமல் வெறுமனே இருந்தேன். கடைசியில் வெண்மையான ஒயின் வந்தது. ஒயின் அல்ல. ஒயினி, பெண்.... அழகி...
"நான் போறேன்."
அவர் பில் கொண்டு வரச் சொன்னார். பட்லர் ஒரு தட்டில் பில்லை வைத்துக் கொண்டு வந்தான். இருபத்தி ஏழோ, எழுபத்தி ரெண்டோ... ஐநூத்தி எழுபத்தி ரெண்டோ... ஒரு தொகை தெரிந்தது. என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. அது சுற்றுவதுபோல் எனக்குத் தோன்றியது. நாங்கள் எழுந்தோம். அவர் சொன்னார்.
"நகைச்சுவைக் கதை எழுதணும். நடு இரவில். காமெடி. நான் காலையில போறேன். சரியா..."
"சரி.... காமெடி.... தலைக்கு பாட்டு. இன் தி மிட் நைட்... குட் நைட்."
நான் இப்படியும் அப்படியும் தள்ளாடியவாறு நடந்தேன். வந்த வாசல் வழி அல்ல, நாங்கள் சென்றது.
அவர் வெளிவாசல் கதவு வரை என்னுடன் வந்தார். அவர் கேட்டார்:
"தனியாப் போயிடுவீங்களா?"
"தனியாப் போயிடுவேன். உலகத்தில் தனியாகவே... குட் நைட்..."
"நகைச்சுவைக் கதை எழுதணும். பணம் ஏதாவது வேணுமா?"
"வேண்டாம். குட் நைட்"
"குட் நைட். காமெடி!"
"காமெடி... குட் நைட்! மிட் நைட்"
நாங்கள் பிரிந்தோம். எனக்கு என்னவோபோல் இருந்தது. ஆடையை உடலில் இருந்து எடுத்து தலையில் கட்டத் தோன்றவில்லை. பாட்டு பாடத்தோன்றவில்லை. தோன்றியது லேசான குற்ற உணர்வு. மது தீண்டத் தகாதது. அருந்தக் கூடாதது. மிக அதிகமாகவே குடித்திருக்கிறேன். மிக அதிகமாகவே தின்றிருக்கிறேன். போதை என்று சொன்னால் அதிகமாகவே போதை ஏறியிருக்கிறது எனக்கு. போதை தெளியுமா? வழியில் எங்காவது விழுந்து விட்டால்...? நான் இப்போது எங்கு போகிறேன்? வீடு எங்கே? விழுந்துவிடக் கூடாது... நான் விறைப்பாக பட்டாளக்காரர்கள் நடப்பது மாதிரி நடந்தேன். உலகக் குடிகாரர்களே! வாருங்கள்... வாருங்கள்... எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து முடிவே இல்லாததை நோக்கி நடப்போம். போதையின்... போதையின் எல்லையற்ற சக்தியில் நான் மூழ்கிப் போவேனோ? திடமான மனிதன் நான். நடுநிலை தவறி விழமாட்டேன். துக்கத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஆனந்தம். எங்கும் ஒரே நிசப்தம். நல்ல நிலா வெளிச்சம். குளிர்காற்று. சந்திரன் ஒளி வீசுகின்ற அழகான இரவே! சந்தோஷமாக இல்லாவிட்டால் துக்கமா? சந்தோஷம்தான். சந்தோஷம் மட்டுமே. நான் பூர்ணசந்திரனில் தலையைக் குத்தி நின்றிருக்கிறேன். ஆனந்த நடனம். எல்லாம் என்னை விட்டுப் போகின்றனவா? பூமி எங்கே போகிறது? நானும் பிரபஞ்சங்களும்... எல்லாம் சேர்ந்து... எல்லாம் சேர்ந்து முடிவே இல்லாததை நோக்கிப் பாய்ந்து... பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறோமோ? முடிவே இல்லாதது என்றால் என்ன?
மங்களம்
சுபம்.