Logo

தாரா ஸ்பெஷல்ஸ்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6641
thara special

"தாரா ஸ்பெஷல்ஸ்" என்ற பெயர் அழகான பெயர். பாப்பச்சன் சிந்தித்தான். ஆனால், என்ன வழி? சிகரெட் தயாரிக்கக் கூடிய இயந்திரம் நாற்பது மைல் தூரத்தில் கடலோரப் பகுதியில் இருக்கிறது- பிரேம்ரகுவின் வீட்டில். அங்கிருக்கும் இயந்திரத்தை அடியோடு பெயர்த்து லாரியில் ஏற்றி இங்கு கொண்டு வர வேண்டும். பிரேம்ரகுவிடம் லாரி இருக்கிறதா? பாப்பச்சனுக்குச் சிரிப்பு வந்தது. பிரேம்ரகு! அவன் உண்மையான பெயர் பி.கே. ரகுநாதன். கல்லூரியில் படிக்கிற காலத்தில் அவன் ஒரு கூட்டுக் காதல் நடத்தினான்.

"ஆயிரம் தூண்டில் காதல்" என்று அதை அவன் அழைத்தான். கடலில் பெரிய கயிறு ஒன்றை இழுத்துக் கட்டினான். அதில் இரை கோர்த்த ஆயிரம் தூண்டில்கள். சில தூண்டில்களிலாவது மீன்கள் மாட்டாதா?

அவன் அன்றே பெரிய பணக்காரன். அவன் தந்தை இலங்கையில் கள்ளுக்கடைகளை ஏலத்தில் எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தாகி விட்டது. இப்போதும் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார். இயந்திரம் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டதுதான். பிரேம்ரகு அதை வைத்து என்ன செய்யப் போகிறான்? வியாபாரம் ஏதாவது செய்வானா? அவனிடமிருந்து அந்த இயந்திரத்தைத் தட்டிப்பறிக்க என்ன வழி? பங்குதாரராகச் சேர்ந்தாலும் சரிதான். இயந்திரத்தைக் கொண்டு வந்தால் அதை எங்கு வைப்பது? இடம் வேண்டுமே! பாப்பச்சன் ஆழமாக யோசித்துப் பார்த்தான். சார்மினார் சிகரெட் மூன்றை அடுத்தடுத்து ஊதித் தள்ளினான். மூன்று சிகரெட்டையும் பிடித்து முடிந்தவுடன், லேசாக இருமியவாறு பாப்பச்சன் சிரித்தான். அப்பாடா... ஒரு இடம் இருக்கவே இருக்கிறது.

போளி!

பாப்பச்சன் கட்டிலை விட்டு எழுந்தான். சட்டையை அணிந்து, தலையை வாரினான். விலை குறைந்ததுதான் என்றாலும் வாசனைப் பவுடரைச் சட்டைக்குள் கொஞ்சம் கொட்டிவிட்டு சமையலறை இருக்கும் பக்கம் போனான். அங்கு வயதான தாயும், திருமண வயது கழிந்துவிட்ட இரண்டு சகோதரிகளும் கப்பைக் கிழங்கைத் துண்டு துண்டாக நறுக்கி, தோலை நீக்கிக் கொண்டிருந்தார்கள்.

"ஒண்ணும் ரெடியாகலயா அம்மா?''

"வேக வைக்க வேண்டியதுதான் பாக்கி.''

பாப்பச்சன் ஒரு துண்டு பச்சை கப்பைக் கிழங்கை எடுத்து நறநறவென்று கடித்தான். பானையில் இருந்து சிறிது நீரை எடுத்துக் குடித்துவிட்டு, ஒரு சார்மினார் சிகரெட்டை எடுத்துப் புகைத்தவாறே, "இதோ வந்திர்றேன் அம்மா'' என்று கூறியவாறு முன்பக்கம் இருந்த சாலையில் இறங்கி நடந்தான். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது, அவன் தாய் வந்து வாசல் கதவை அடைத்துக் கொண்டிருந்தாள். ஓலை வேய்ந்த சிறு வீடு. நிச்சயம் அவன் அந்தஸ்துக்கு ஏற்றதல்ல. ம்... எல்லாம் சீக்கிரம் மாற வேண்டும். சிகரெட் தயாரிக்கக் கூடிய இயந்திரம் மட்டும் வரட்டும். பாப்பச்சன் தலை நிமிர்ந்து ஒய்யாரமாக நடந்தான். சாதாரண பாப்பச்சன் இல்லை இது. சிகரெட் ஃபாக்டரி உரிமையாளர் பாப்பச்சன். யூஜித் என். ஆர் பாப்பச்சன். பார்ட்னர்களாக ஸ்ரீமான்கள் பி.கே. ரகுநாதன் அண்ட் சி.பி. போளி பி.ஏ.பி.எல்.

போளியின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும். என்ன இருந்தாலும் அவன் வக்கீலாயிற்றே! பட்டத்தை வாங்கி விட்டாலும் நீதிமன்றம் பக்கமே அவன் தலைவைத்துப் படுப்பதில்லை. எதற்குப் போக வேண்டும்? பணம் ஏராளமாக கையில் இருக்கிறது. ஒரே மகன். அவன் வாங்கிய பட்டம் கட்டாயம் கம்பெனிக்கு வேண்டும். எந்தக் கழுதையாக இருந்தாலும், அதற்கு ஒரு பட்டம் இருந்தால் மிகமிக நல்லதாக இருக்கும். போளி கழுதை அல்ல; புத்திசாலி இளைஞன். அவன் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகப் பாப்பச்சன் கேள்விப்பட்டான். ஒரு கிரிமினல் வக்கீலின் மகளை- பெயர்... ஏலிக்குட்டி. ஏலிக்குட்டி- போளி. பெயர் பரவாயில்லையா?

ஒரு கம்பெனி உருவாகி இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி இதுவரை போளிக்கோ பிரேம்ரகுவிற்கோ தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அவர்கள் என்ன சொல்வார்கள்?

நிச்சயம் எதிர்ப்பாக எதுவும் சொல்ல மாட்டார்கள். மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஒன்று சேர்ந்து இளம் பெண்களை சைட் அடித்தவர்கள். சீட்டு விளையாடியிருக்கிறார்கள். கள்ளும் சாராயமும் குடித்திருக்கிறார்கள். ஒன்று சேர்ந்து பெண்கள் விடுதிமேல் கல்லெறிந்திருக்கிறார்கள்.

பள்ளி இறுதி வகுப்பு வரை ஒன்றாகவே படித்தார்கள். அந்த நேரத்தில் பாப்பச்சனின் தந்தை இறந்து போனார். அவர் ஒரு டாக்ஸி டிரைவர். டிரைவர் அந்தப்பன் என்ற பெயரைக் கேட்டாலே யாரும் ஒரு நிமிடம் நடுங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு பயங்கரமான ஆள் அவர். மது அருந்திவிட்டு கட்டுப்பாடே இல்லாமல் ஒரு லாரியை முந்திச் செல்ல முயற்சி செய்ய, அதன் மூலம் உண்டான விபத்தில் மனிதர் மரணத்தைத் தழுவிவிட்டார். மது அருந்தி காரை ஓட்டி விபத்தில் மரணமடைந்த எல்லா டிரைவர்களின் ஆத்மாக்களுக்கும் நித்தியசாந்தி கிடைக்கட்டும். போளிக்கு இப்போது ஒரு கார் இருக்கிறது. வெளிநாட்டுக் கார். மேட் இன் இங்க்லாண்ட். படிக்கின்ற காலத்திலேயே வெளிநாட்டுப் பொருட்கள்மேல்தான் அவனுக்கு விருப்பம். மேட் இன் இந்தியா என்று கேட்டால் போளி உடனே கூறுவான். "த்தூ...!'' இந்தியாவுக்குச் சுதந்திரம் தந்துவிட்டு பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை விட்டுப் போனது போளி விருப்பப்படாத ஒரு விஷயம். போளியின் அப்பாவுக்கும் இதில் விருப்பமில்லை. கூறும்போது எல்லாவற்றையும் கூற வேண்டும் அல்லவா? வக்கீல் வேலை பார்ப்பது போளிக்குப் பிடிக்காத ஒன்று. அப்பா சொல்கிறார் என்பதற்காகச் சட்டம் படித்து பரீட்சையில் பாஸ் ஆனான்; அவ்வளவுதான். அவன் தந்தை வட்டிக்குப் பணம் கொடுப்பவர். வட்டியை முன்கூட்டியே எடுத்துக் கொண்டுவிடுவார். வட்டி எடுத்து, மீதி இருக்கிற தொகையைத்தான் தருவார். வட்டி எவ்வளவு என்கிறீர்கள்? இருபது சதவிகிதம். பாதி இரவில் ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டால்கூட கொடுப்பார். எண்ணூறு ரூபாய் கொடுப்பார். அய்யாயிரம் ரூபாய்க்கான நகையை அடகு வைத்திருக்கின்ற விவரம் புரோ நோட்டில் இருக்காது. நியாயமான வட்டி என்று மட்டுமே அதில் இருக்கும். சரி என்று சம்மதிக்க வேண்டியது மட்டுமே இங்கு முக்கியம். சாலையோரத்தில் கற்சுவர் கட்டிய நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னந்தோப்பில் பழைய மாடலில் அமைந்த இரண்டு மாடிக் கட்டடம். ரொக்கம் மூன்று லட்சம். கட்டுக்கட்டாகக் கீழே இருக்கும் படுக்கை அறையில் கட்டிலின் அடியிலுள்ள இரும்புப் பெட்டியில் அது இருக்கிறது மிகமிக பத்திரமாக. பூட்டிய பெட்டியின் சாவி எங்கே இருக்கிறது என்று போளிக்கும் தெரியாது; போளியின் தந்தைக்கும் தெரியாது; நாட்டில் இருக்கும் திருடர்களுக்கும் தெரியாது. இதுதான் வெளியே பலருக்கும் தெரிந்தது.


ஆனால் உண்மை என்ன தெரியுமா? பெட்டியின் சாவி எங்கே இருக்கிறது என்பது போளிக்குத் தெரியும். போளியின் தந்தைக்கும் தெரியும். என்ன லாபம்? பாப்பச்சனுக்கும் இது தெரியும். போளியின் தாய் உடுத்தியிருக்கும் ஆடைக்கு உள்ளே இடுப்புப் பகுதியில், கறுத்துப்போய் காணப்படும் வெள்ளிக் கொடியில், ஒரு சிறு வளையத்தில் மாட்டித் தொங்கிக் கொண்டிருக்கிறது அந்தச் சாவி. என்ன செய்வது? இரவு நேரத்தில் ஒரு அல்சேஷன் நாய் பயங்கரமாகக் குரைத்தவாறு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. போளியின் தந்தை படுக்கையறையில் வாசல் கதவு அருகே சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு உறங்காமல் இருக்கிறார். தாய் கட்டிலில் குப்புறப்படுத்து குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறாள். இதுகூட நம்புகிற மாதிரி இருக்காது. எல்லாம் சாராயத்தின் மகிமை. ஒவ்வொரு முறையும் வேறு வேறு மாதிரி எந்த விஷயத்தையும் கூறுவான் போளி. வீட்டில் ஐயாயிரம் ரூபாய்க்குமேல் கிடையவே கிடையாது. எல்லாம் வங்கியில்தான். எந்த வங்கியில்? ம்... அதைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது?

பாப்பச்சனும் பணக்காரன் ஆகப்போகிறான். ஒரு நான்கு பெக் அடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் கையில் காசில்லையே. போளியின் கையில் நிச்சயம் ஏதாவது இருக்கும். படிக்கிற காலத்தில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மது மயம்தான். போளியும் பிரேம்ரகுவும்தான் அதற்கான பணத்தைச் செலவழிப்பார்கள். பாப்பச்சன் எதுவும் செலவு செய்ய மாட்டான்.

கையில் இருந்தால்தானே செலவழிப்பதற்கு! போளியும் பிரேம்ரகுவும் கள்ளோ சாராயமோ வாங்கிக் கொடுப்பார்கள். வசதியுள்ளவர்கள் வசதி இல்லாதவனுக்கு வங்கிக் கொடுக்க வேண்டும். அதுதானே உண்மையான சோஷலிஸம்? மதங்கள்கூட அதைத்தானே கூறுகின்றன. அப்படியானால்... மதமும் சோஷலிஸமும் ஒன்று என்று கூறலாமா? யாருக்குத் தெரியும்? போளிக்கு சோஷலிஸத்தில் நம்பிக்கை கிடையாது. அவன் ஒரு இம்பீரியலிஸ்ட் அண்ட் கேப்பிட்டலிஸ்ட். பிரேம் ஒரு சோஷலிஸ்ட்டாக இருந்தான். அவனின் இப்போதைய நிலை எப்படியோ? நேரில் பார்த்து நாட்கள் அதிகம் ஆகிவிட்டன. இண்டர் வகுப்பில் படிக்கிற காலத்தில்தான் அவன் பெயர் பிரேம்ரகு என்றானது. போளி கூறுவான்- அவர்கள் வகுப்பில் மொத்தம் பத்தொன்பது கல்லூரி மாணவிகள் இருந்தார்கள் என்று. உண்மையாக கல்லூரி மாணவிகள் அழகிகளாகத்தானே இருப்பார்கள். பலரும் பல  பெண்களையும் காதலித்தார்கள். ஆனால் பி.கே. ரகுநாதனோ வலைவீசிய மாதிரி பத்தொன்பது பெண்களையும் ஒரே நேரத்தில் காதலித்தான். அவன் ஒரு காதல் கடிதம் எழுதினான். அதையே பத்தொன்பது பிரதி எடுத்தான். பத்தொன்பது பெண்களின் முகவரி எழுதி பத்தொன்பது கவர்களில் அதை அடைத்தான். இரண்டு மூன்று நாட்களில் பன்னிரண்டு மாணவிகளுக்கு அவற்றைக் கொடுத்தான். சாதாரணமாக பெண்கள் தங்களுக்கு வரும் காதல் கடிதங்களைப் பற்றி ஒன்றாக உட்கார்ந்து அலசி ஆராய்வதும், அதன் இலக்கிய அம்சங்களை விமர்சிப்பதும் நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் என்ன கஷ்டம் இங்கு! விவாதத்திற்கு வந்தது ஒரே வாசகங்களைக் கொண்ட பன்னிரண்டு கடிதங்கள். இப்படி ஒரு சூழ்நிலை உண்டானால், யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும். அவர்களுக்கும் வந்தது. கோபத்துடன், தங்களை யாரோ ஒருவன் அவமதித்து விட்டான் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது. இப்படிப்பட்ட ஒரு அயோக்கியன் யாராக இருக்கும்? அவனை என்ன செய்வது? அவர்கள் எல்லாரும் கூட்டமாகச் சென்று பிரின்ஸிபாலைப் பார்த்தார்கள். விஷயத்தைச் சொன்னார்கள். கொடுக்க முடியாமல் போய் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த மீதி ஏழு காதல் கடிதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியால் பிரேம்ரகு என்ற பட்டப் பெயரைப் பெற்ற அவன் புத்தகங்களையும் பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போக நேர்ந்தது. கூறும்போது எல்லாவற்றையும் கூற வேண்டும் அல்லவா? பிரேம்ரகு ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய பட்டைச் சாராயத்தை ஒரே மூச்சில் குடிப்பான். தண்ணீர் வேண்டாம், சோடா வேண்டாம். ஒன்றும் வேண்டாம். இந்த அளவுக்கு மது அருந்த பாப்பச்சனால் முடியாது. போளிக்கும் தெரியாது. பிரேம்ரகு மது அருந்தும் விஷயத்தில் மேல்நிலைப் பட்டம் வாங்கியவன். அவன் ஆத்மாவிற்கு நித்யசாந்தி கிடைக்கட்டும். பிரேம்ரகு நகரத்திற்கு வரும்போதெல்லாம் வீட்டுக்கு வரும்படி அழைப்பான். இரண்டு மூன்று வருடங்களாக அவனைப் பார்ப்பதில்லை. "படுக்கையறை" பத்திரிகையின் ஒரு வருட சந்தா அவன் செலுத்தினான். மூன்று இதழ்கள்தான் மொத்தம் வெளிவந்ததே. மீதிப் பணத்தை அவனுக்குத் திருப்பித் தரவேண்டி இருக்கிறது. பத்திரிகைக்காக போளியும் மூவாயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறான். போளியின் தந்தை "படுக்கையறை'' பத்திரிகையின் மூன்று இதழ்களையும் தோப்புக்கு எடுத்துச் சென்று சருகுகளைச் சேர்த்து நெருப்புக்கு இரையாக்கினார் என்று கூறப்படுவதுண்டு. அவர் கலாரசிகரோ இலக்கிய ஈடுபாடு கொண்டவரோ கிடையாது. மகா கஞ்சத்தனமான மனிதன். ஒரு வேஷ்டியும் துண்டும் வாங்கினால், அது உடலில் கிடந்து கிழிவது வரை இன்னொன்று புதிதாக வாங்குவது இல்லை. நகரத்தின் மையமான இடத்தில் எட்டு புதிய கடைகள் கட்டியிருக்கிறார். எட்டு அல்ல. பதினாறு. மேலேயும் கீழேயும் சேர்த்து. அதில் பதினான்கு கடைகளை வாடகைக்குக் கொடுத்துவிட்டார். மேலேயும் கீழேயும் வாடகை நூற்றைம்பது மட்டுமே. அதனால் ஒன்றும் நஷ்டமில்லை. காரணம்... பகடியாக இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்து வாங்கவும் ஆட்கள் இருக்கவே செய்தார்கள். மேலேயும் கீழேயும் மீதியிருக்கிற அறைகளில்தான் பாப்பச்சனின் இப்போதைய கண்பார்வை! கீழே இருக்கும் அறையில் இருந்து மாடிக்குப் போவதற்கு படிகள் இருக்கின்றன. நல்ல வசதியாகப் போய்விட்டது. கனமான இயந்திரம்! கட்டாயம் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

மாடியில் அலுவலகம். கீழே உள்ள அறையில் ஃபாக்டரி. ஃபாக்டரியின் பெயர்:

"தாரா சிகரெட் ஃபாக்டரி".

நிச்சயமாக வெற்றி பெற முடியும். போட்டிக்கும் வேறு யாரும் கிடையாது. ஆனால் மக்கள் சில நேரங்களில் சிந்தனையே இல்லாமல் கண்டபடி போய்க் கொண்டிருப்பார்கள். ஒரு நபர் ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாம் என்று நினைத்துச் செயல்பட்டால், அதற்கு உதவியாக அவர்கள் இருக்க வேண்டுமே! ஸ்டுப்பிட், ராஸ்க்கல்... போய்த் தொலையட்டும்! சிகரெட்டின் விலையைக் குறைக்க வேண்டியது. காம்பட்டிஷன் என்றால் காம்பட்டிஷன்!

பிரேம்ரகு மாறாமல் இருப்பானா? அவனுக்கு எதற்கு சிகரெட் தயாரிக்கும் இயந்திரம்? அவன் மட்டும் நிச்சயம் தனியாக சிகரெட் தயாரிக்க முடியாது. ஏற்கெனவே பழக்கமான நண்பர்களை பார்ட்னர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கூறும்போது எல்லாவற்றையும் கூற வேண்டும் அல்லவா! பிரேம்ரகுவிற்கு நன்கு பழக்கமானவன் பாப்பச்சன். ஏற்கெனவே பல பிஸினஸ்களில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. மூலதனம் குறைவு என்பது உண்மை.

முதன்முதலாகக் கால் வைத்தது இலக்கியத்தில். இலக்கியத்தில் மட்டுமல்ல; கலை, கலாச்சாரம், அரசியல், சினிமா ஆகியவற்றிலும் பாப்பச்சன் கால் வைத்திருக்கிறான். இப்படித்தான் "படுக்கையறை" ஆரம்பித்தது. அது கலை, கலாச்சாரம், அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட மாத இதழ். எந்த நல்ல காரியத்திற்கும் எதிரிகள் என்ற "ராஸ்கல்ஸ்" இருக்கத்தானே செய்வார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டே திரிவார்கள். "படுக்கையறை"யில் கலை இல்லை, கலாச்சாரம் இல்லை. "படுக்கையறை"யைப் படிக்கக்கூடாது என்று அவர்கள் கூப்பாடு போட்டார்கள். அரசாங்கத்திற்குப் புகார் அனுப்பினார்கள். அரசு "படுக்கையறை"யைப் படித்துப் பார்த்தது. குற்றம் என்று கூற எதுவும் இல்லை. பத்திரிகையில் பெண்களின் பெயர்களில் கேள்விகள் எழுதியது பாப்பச்சன். பதில் எழுதியது போளி. பன்னிரண்டு வயது பெண்ணொருத்தி தேன் வழியும் வார்த்தைகளால் காம உணர்வைத் தூண்டும் வண்ணம் தன் சுயசரிதையை எழுதுவதாக எழுதியது பத்திரிகை முதலாளி பாப்பச்சனே. ஆனால், "லிஸிமோள்" என்ற புனைப் பெயரில். "இது உண்மையா?" என்ற பெயரில் ஒரு புதுமைப்பகுதி. நாட்டில் உள்ள பிரபல பெண்களைப் பற்றி யாரும் இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத உண்மைச் செய்திகளை மிகமிக தைரியமாக "சகஸ்ரநயனன்" என்ற பெயரில் எழுதியது வேறு யார்- சாட்சாத் போளிதான். ஆனால் இது யாருக்கும் தெரியாது. விரோதிகள் இப்போதும் லிஸிமோளையும், சகஸ்ரநயனனையும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ராஸ்கல்ஸ்! அவர்கள் பத்திரிகை முதலாளியைத் தாக்கவில்லை. "படுக்கையறை" இதழை அச்சடித்த அச்சக ஊழியரை அடித்தார்கள். அதை விற்பனை செய்தவர்களை விரட்டி விரட்டி அடித்தார்கள். "படுக்கையறை" இதழ்களை நகரத்தின் நடுவில் மலை எனக் குவித்து மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பிட்டு எரித்தார்கள்.

2

ருத்தமான விஷயம்தான். "படுக்கையறை"யை நிறுத்த வேண்டியதாகி விட்டது. அன்று இரவு ஒரே கொண்டாட்டம்தான். நான்கு பாட்டில் சாராயம் அதிகாலை நான்கு மணி வரை வந்து தீர்ந்தது. போளி பாடினான். பாப்பச்சனும் பாடினான்:

"போனால் போகட்டும். போடா!''

அடுத்த நாள் முதல் புதிய அத்தியாயம் ஆரம்பமானது. அரசியல் களம்!

தலைவர் போளி, செயலாளர் பாப்பச்சன், பொருளாளர் ரிக்ஷா வண்டிக்காரன் பைலோ. ரிக்ஷா வண்டித் தொழிலாளர்கள் யூனியன் -இதுதான் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. ஆளை அமர வைத்து ஆள் இழுக்கிற ரிக்ஷா வண்டிகளை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கு முன்பு நடத்த விஷயம் இது. போராட்டம் தொடங்கியது ஆட்டோ ரிக்ஷாவுக்கும் சைக்கிள் ரிக்ஷாவுக்கும் டாக்ஸிகளுக்கும் எதிராகத்தான். கோரிக்கைகள் நியாயமானவை தான். ரிக்ஷா வண்டித் தொழிலாளர்களுக்கு வருமானம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் சில நாட்களில் அவர்களின் பிழைப்பே கேள்விக்குறி ஆகிவிடும். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டிய நிலை உண்டாகும். இப்படிப்பட்டத் துயரச் சூழ்நிலையில் இருந்து ரிக்ஷாத் தொழிலாளர்களை உடனடியாகக் காப்பாற்றி ஆக வேண்டும். சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி, கார்கள் ஆகியவற்றை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். "போலோ, மகாத்மா காந்திக்கு ஜே! ரிக்ஷா வண்டி- மக்கள் வண்டி!"

உற்சாக கோஷங்கள் எழுப்பிய ஊர்வலங்கள்! கம்பீரமான தீர்மானங்கள்! போளி எத்தனையோ நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினான். பாப்பச்சன் நூற்றுக்கணக்கான கூட்டங்களில் அனல் பறக்கச் சொற்பொழிவு ஆற்றினான். ஆனால் மக்கள் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஏழை ரிக்ஷா தொழிலாளர்கள் படும் துயரத்தைப் பார்த்தும், காணாதது மாதிரி இருந்தார்கள். அவர்களின் புலம்பலைக் கேட்டு கேலியாகச் சிரித்தார்கள். அதோடு நிற்காமல், சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி, கார்கள் போன்ற வாகனங்களுக்கு அமோக ஆதரவு வேறு கொடுத்தார்கள். அரசாங்கமோ புதிய ரிக்ஷா வண்டிகளுக்கு லைசென்ஸ் கொடுக்க மாட்டேன் என்றது.

"உங்களுக்கு நான் பாடம் கற்றுத் தர்றேன்.'' பாப்பச்சன் சொன்னான்: "தாரா சிகரெட் ஃபாக்டரி மட்டும் ஆரம்பமாகட்டும். இந்த பாப்பச்சன் கார் வாங்குவான். அந்தக் காரை உங்கள்மேல் ஏற்றிக் கொல்கிறேன். இது சத்தியம்.''

பாப்பச்சன் வறண்டுபோன தொண்டையுடன் நடந்து போனான். நடந்தே போளியின் வீட்டை அடைந்தான். அப்போது வாசலில் அமர்ந்து வெளியில் எதையோ தீவிரமாக பெருக்கிக் கொண்டிருந்தார் போளியின் தந்தை. பழைய ஒரு வேஷ்டியும் துண்டும்தான் அவர் அணிந்திருந்த ஆடைகள்.

பாப்பச்சன் கேட்டான்:

"வெயில்ல அப்படி என்ன பெருக்குறீங்க?''

"நெல்லு, எறும்பு கொண்டு போறதை...''

"போளி இருக்கானா?''

"அடியே!'' போளியின் தந்தை அழைத்தார். அழைப்பை எதிர்பார்த்திருந்த மாதிரி, குரல் கேட்ட அடுத்த நிமிடமே போளியின் தாய் வாசலுக்கு வந்தாள். போளியின் தந்தை கேட்டார்:

"உன்னோட வக்கீல் மகன் இங்க இருக்கானா?''

"அவன் கேஸ் கட்டு படிச்சுக்கிட்டிருக்கான்!''

போளியின் அம்மா சொன்னாள். இங்கு கட்டாயம் எல்லாரும் சிரித்தே ஆக வேண்டும். இது நல்ல ஹ்யூமரும் கூட. அதனால்தானோ என்னவோ, பாப்பச்சனும் போளியின் தந்தையும் சிரிக்கத் தொடங்கினார்கள். போளியின் தாய் கேட்டாள்: "பாப்பச்சா, உன் பத்திரிகையோட பழைய காப்பி இருக்கா? எல்லா காப்பியும் எனக்கு வேணும். பணம் தர்றேன்!''

இதுவும் ஹ்யூமர்தான். சாதாரணமாக பாப்பச்சனை எப்போது பார்த்தாலும் போளியின் தாய் பேசுவது இதைத்தான். கேட்கிறவர்கள் சிரிக்க வேண்டும். போளியின் தந்தை சிரித்தார். பாப்பச்சன் வராந்தாவைத் தாண்டி படிகள் வழியே ஏறிச் செல்லும்போது, போளி கண்ணாடியைப் பார்த்தவாறு மீசையைக் கத்தரித்து அழகைக் கூட்டிக் கொண்டிருந்தான்.

"டேய் போளி...'' பாப்பச்சன் அழைத்தான். "இனி நான் உன்னைப் பார்க்க வர்றதுன்னா, என் சொந்த கார்லதான் வருவேன்.''

போளி கூறினான்:

"படுக்கையறை"யை ஆரம்பிச்ச காலத்துல நீ இதைத்தான் சொன்னே. அந்த வகையில என் அப்பாவித் தந்தைக்கு நஷ்டம் மூவாயிரம் ரூபாய்.''

"இருந்தாலும் நீ ஒரு இலக்கியவாதி ஆயிட்டியே!''

"நானா?''

"நீதானே சஹஸ்ரநயனன்? திருட்டுப்பயலே...''

இதைக் கேட்டதும் முகம் சுருங்கிப் போனான் போளி. துக்கச் செய்தி ஆயிற்றே! அதனால் அலமாரியைத் திறந்து ஒரு பாட்டில் சாராயத்தையும் இரண்டு கண்ணாடி டம்ளர்களையும் ஒரு வறுத்த கடலைப் பொட்டலத்தையும் எடுத்தான். பாப்பச்சன் எழுந்து போய் ஓரு கூஜாவில் நீர் எடுத்துக் கொண்டு வந்தான். இரண்டு பேரும் சிமெண்ட் தரையில் அமர்ந்தார்கள். போளி இரண்டு டம்ளர்களில், ஒன்றில் முழுவதுமாகவும் இன்னொன்றில் பாதி வரையும் சாராயத்தை ஊற்றினான். முழுவதுமாக சாராயம் இருந்த டம்ளரை வாயில் வைத்து காலி செய்த போளி, இரண்டு கடலைகளை எடுத்து வாயில் போட்டான்.

"தண்ணியடிக்குறதுன்றது பிரேம்ரகுவிற்கு மட்டும் குத்தகை போட்டதல்ல.'' போளி சொன்னான். பாப்பச்சன் கேட்டான்:


"நீ பிரேம்ரகுவை சமீபத்துல எங்கேயாவது பார்த்தியா?''

"இல்ல...''

நல்ல வேளை. பாப்பச்சன் நிறைய தண்ணீரைச் சேர்த்து டம்ளரைக் காலி செய்து இரண்டு கடலைமணிகளை எடுத்து வாயில் போட்டான். தொடர்ந்து இரண்டு சார்மினார்களைக் கொளுத்தினான். ஒன்றை போளியிடம் கொடுத்துவிட்டு இன்னொன்றைத் தன் உதட்டில் வைத்து இழுத்தான் பாப்பச்சன். ரசனையுடன் ஒரு தடவை உள்நோக்கி இழுத்த பாப்பச்சன் சொன்னான்:

"டேய் போளி, ஒரு அருமையான பிசினஸ்டா.''

"பத்திரிகை நடத்துறதுன்னா நான் வரலப்பா.''

"டேய்... இது வேற... இதுக்குத் தண்ணி தேவை இல்லை. இந்தப் பகுதியில யாரும் நடத்தாத பிசினஸ். உன்னோட அந்த ரெண்டு அறைகளும் நமக்கு வேணும்.''

"அப்பாவுக்கு இருபத்தய்யாயிரம் ரூபாய் பகடி தரணும். இதுபோக, ஒரு மாத வாடகையை முன்பணமா தரணும்.''

"இது இல்லாமலே இடத்தைப் பிடிக்க நீதான் உதவணும். உன் சார்பாக அந்த அறைகள் இரண்டும். அதுபோக, இருபத்தய்யாயிரம் ரூபாய் ரொக்கமா தரணும். அருமையான பிசினஸ்....''

"இந்தக் காலத்துல பணம் போட்டு பண்ற பிசினஸ் சரிப்படாது. பிரிட்டிஷ்காரர்கள் போனபிறகு, இந்த நாடே கெட்டுக் குட்டிச்சுவரா போச்சு. இங்க யாருமே நிம்மதியா இருக்க முடியலே. குறிப்பாகச் சொல்லணும்னா பிசினஸ் பண்றவங்க. இங்கு அரசாங்கம் கிடையாது. கொடி பிடிப்பது, வேலைக்குப் போகாதிருப்பது, சத்தியாகிரகம், போனஸ், சேல்ஸ் டாக்ஸ், இன்கம் டாக்ஸ், சூப்பர் டாக்ஸ், தர்ணா, கெரோ- இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள்! பணம் கையில இருந்தா பேங்க்ல போட்டுட்டு வட்டியை வாங்கி நிம்மதியா சாப்பிட்டுக்கிட்டு இரு!''

"உன்னோட அப்பாவை மாதிரியே நீயும் பேசறடா போளி. சொல்றப்போ எல்லாத்தையும் சொல்லணும். உனக்குப் பட்டம் இருக்கு, வசதி இருக்கு. இது மக்களுக்கு பிரயோஜனமான விஷயம். நம்மால எத்தனை பேருக்கு இத வச்சு வேலை கொடுக்க முடியும் தெரியுமா?''

"நீ எவ்வளவு ரூபா முதலீடு செய்றே?''

"என் கையில காசு ஒண்ணும் கிடையாது.''

"அப்ப நீ மக்கள் பிரச்சினையைப் பத்தி பேச வேண்டியதுதான். நீ ஒரு தலைவன். முதலீடு ஒண்ணுமில்ல. வெறும் வாய்ச்சொல் வீரன்.''

"டேய்... நாடு நல்லாயிருக்கணும்னா...''

"பாப்பச்சா... என் அப்பாவோட பணத்தை வச்சு நீ நாட்டை நல்லா ஆக்க வேண்டாம். அந்த ஆசையைக் குப்பைல தூக்கி ஏறி.''

கூறும்போது எல்லாவற்றையும்கூற வேண்டும் அல்லவா? சிறிது நேரம் சென்ற பிறகு அரை டம்ளர் சாராயம் குடித்த போளி, வாந்தி எடுத்தான். கண்களில் இருந்து நீர் வழிந்தது. இவ்வளவுக்கும் இரண்டு பேரும் தண்ணீர் சேர்த்துதான் சாராயம் குடித்ததே. போளி வாந்தி எடுத்ததை ஓடிச்சென்று பாப்பச்சன் கையில் பிடித்தான். அதைப் பார்த்ததும் போளியின் மனதில் இனம்புரியாத ஒரு வேதனை தோன்றியது. அன்போடு போளி கேட்டான்:

"பாப்பச்சா, என்ன பிசினஸ்?''

"ஒரு சிகரெட் ஃபாக்டரி. நாம ஆரம்பிக்கிறதுதான் இந்த நாட்டிலேயே முதலாவதாக இருக்கும். அதுக்குத்தான் நான் இடம் கேக்குறதே. மாடியில ஆஃபீஸ்.  கீழே ஃபாக்டரி.''

"ஏண்டா... அதுக்கு பேப்பர், புகையிலை, இயந்திரங்கள் எல்லாம் வேணுமே!''

"இயந்திரம் ஒரு இடத்துல இருக்கு.''

"அதுக்கு லட்சக் கணக்குல பணம் கொடுக்க வேண்டியிருக்குமே!''

"பணம் கொடுக்காமலே நான் இயந்திரத்தை இங்கு கொண்டு வருவேன். இயந்திரம் யார் வச்சிருக்கானோ, அந்த ஆளையும் பார்ட்டனராகச் சேர்த்துக்க வேண்டியதுதான். நீயும் நானும் இயந்திரத்தோட சொந்தக்காரனும்- மொத்தம் மூன்று பார்ட்னர்கள். நான் மேனேஜிங் பார்ட்னர்.''

"பணமே போடாமல் நீ மேனேஜிங் பார்ட்னரா? அப்ப உன் முதலீடு என்ன?''

"ஐடியா!'' பாப்பச்சன் சொன்னான்: "சொல்றப்போ எல்லாத்தையும் சொல்லணும்ல. நான் நீ வாந்தி எடுத்ததைக் கையில பிடிச்சவன். கையில பிடிச்சிருக்கேன், இனியும் பிடிப்பேன். வாந்தி எடுத்துத் தரையில கிடந்தா, பெருக்கக்கூடச் செய்வேன். நம்மோட "தாரா சிகரெட் ஃபாக்டரி" நான் இல்லைன்னா, என்னோட ஐடியா இல்லைன்னா நடக்கவே போறதில்ல. என்னோட ஐடியாவுக்கு ஒரு மதிப்பு இருக்குல்ல...?''

ஆளுக்கு இரண்டு டம்ளர் அடித்தார்கள். இரண்டு கடலைகளை எடுத்து வாயில் போட்டனர். ஆளுக்கு ஒரு சார்மினார் சிகரெட்டை எடுத்துப் புகைத்தனர். போளி கேட்டான்:

"அப்போ நீ ஃபாக்டரிக்குப் பேர்கூட வச்சுட்டே... தாரா சிகரெட் ஃபாக்டரி. தாரான்னா ஏதாவது அர்த்தம் இருக்கா?''

"உண்மையைச் சொல்லப்போனால், காதல் கலந்த அர்த்தமுண்டு. சொல்றப்போ எல்லாத்தையும் சொல்லணும்ல. தாரா வேற யாருமில்ல. என்னோட காதலிதான்.''

இதைக் கேட்டதும் போளி இன்னும் இரண்டு டம்ளர் சாராயத்தை உள்ளே புகவிட்டான். இடது கையின் சுட்டுவிரலையும் பெருவிரலையும் இணைத்து மூக்கைப் பொத்திக் கொண்டே அவன் சாராயத்தைக் குடித்தான். கூறும்போது எல்லாவற்றையும்கூற வேண்டுமே! போளி இப்போது வாந்தி எடுக்கவில்லை. கடலையைக்கூட வாயில் போடவில்லை. சார்மினார் ஒன்றை மட்டும் வாயில் வைத்துப் புகைத்தான்.

"நியாயம்தான் நியாயம்தான்.'' போளி சொன்னான்: "ஃபாக்டரியில் ஒரு பைசாகூட முதலீடு என்று இல்லை. ஆனா, அவன்தான் மேனேஜிங் பார்ட்னர். இது போதாதுன்னு, மத்தவங்க கொடுத்த பணத்துல ஆரம்பிச்ச ஃபாக்டரிக்கு அவனோட காதலியோட பேரு... அடடா...''

"போளி, பேசித்தீர்க்க முடியாத விஷயம்னு உலகத்துல ஏதாவது இருக்கா என்ன? ஃபாக்டரிக்கு வேணும்னா, "ஏலிக்குட்டி சிகரெட் ஃபாக்டரி"ன்னு பேர் வச்சிடலாம். சிகரெட்டோட பேரு தாரா ஸ்பெஷல்ஸ். என்ன சொல்றே?''

"இந்த ஏலிக்குட்டி யாரு?''

"உன்னோட காதலி. கிரிமினல் வக்கீலோட மகள். நீ கல்யாணம் பண்ணப் போற பொண்ணு.''

"ஏலிக்குட்டிக்கு நான் முப்பது கடிதங்கள் எழுதியாச்சு. அவள் எனக்கும் முப்பது பதில் கடிதங்கள் எழுதிட்டா. பிரேம்ரகு மாடல் கடிதம் இல்லை. நான் அவளுக்கு மட்டும் எழுதினேன். அவள் எனக்கு மட்டும் எழுதினாள். ஆனால், கல்யாணம் நடக்கப்போற விஷயம் இப்போதும் சந்தேகமாகத்தான் இருக்கு. காரணம்- வரதட்சணை. அவங்க இருபதாயிரம் ரூபா தர்றேன்றாங்க. என்னோட அப்பா முப்பதாயிரம் கேக்குறாரு. காரணம்- நியாயமானதுதான். திருமண நிச்சயதார்த்தம் நடக்கறப்போதான் வரதட்சணை தொகை முடிவானது. அப்போ பணத்தோட மதிப்பு இறங்கல. இப்போ ரூபாவுக்கு எத்தனைப் பைசா மதிப்பு? இதை மனசுல வச்சு வரதட்சணை தரணும்னு அப்பா சொல்றாரு. அவர் சொல்றதுல என்ன தப்பு?''

"அப்போ... காதல்னு சொல்றது...''

"காதல் இருக்குடா. அது ஒரு பெரிய விஷயம்தான். ஆனால், கல்யாணம்ன்றது ஒரு வியாபாரம்டா. எனக்கு, அதாவது என்னோட அப்பாவுக்கு நாலு லட்ச ரூபாய் சொத்து இருக்கு.


அது எனக்குத்தான்னு வச்சுக்கோ. இந்த நாலு லட்சத்தோட வியாபாரத்துல பங்கு சேர்ந்து லாபம் சம்பாதிக்க சாதாரண இருபதாயிரம் ரூபாய் போதுமா? சொல்லப்போனால், வரதட்சணை இரண்டு லட்சமாவது கொடுத்தாதான் சரியா இருக்கும். என்னோட அப்பா இந்த அளவுக்கு கேட்டாரா?''

"இல்ல...''

"இதுதான் பண்பாடுன்றது. தாரான்ற உன்னோட காதலியை நீ கல்யாணம் பண்றப்போ வரதட்சணையா உனக்கு எவ்வளவு கிடைக்கும்?''

"வரதட்சணையா எதுவும் கிடைக்காது. அவள் ஏழையாச்சே!''

"பொண்ணு யாரு?''

"ஒரு ஏழைத் தொழிலாளியோட மகள்.''

"என்ன தொழிலாளி?''

"ரிக்ஷா வண்டிக்காரன் பைலோ...''

"நம்மோட பொருளாளர் பைலோவா?''

"ஆமாம்...''

"அட டாகே!'' போளி பாப்பச்சனை உற்று நோக்கினான். தொடர்ந்து கூறினான்: "இதுனாலதான் நீ ரிக்ஷா தொழிலாளர்கள் போராட்டம் ஆரம்பிச்சதா? இதுனாலதான் பைலோவைப் பொருளாளரா போட்டதா? வர்ற காசு மாமனாரோட கையிலயே இருக்கட்டும்ன்றது உன்னோடு நினைப்பு. அதுக்குத்தானே என்னைத் தலைவரா போட்டது! அடே டாகோட டாகா! இந்த ஹ்யூமருக்கே ஒரு விருந்து தரணும்.''

கூறும்போது எல்லாவற்றையும்கூற வேண்டும் அல்லவா? பாட்டில் காலியாகிவிட்டது. அதற்காகக் கவலைப்பட அவசியமில்லை. போளி அலமாரியைத் திறந்து வேறொரு வண்ணத்தில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து, டம்ளரில் பாதியை நிரப்பினான். வாயில் வைத்துக் குடித்தான். இந்த முறை மூக்கைப் பொத்தவில்லை. கடலையை எடுத்து வாயில் போடவில்லை. சார்மினாரை மட்டும் புகைத்தான். தண்ணீர் சேர்த்து ஒரு டம்ளர் உள்ளே இறக்கிய பாப்பச்சன் சொன்னான்: "தலை லேசா வலிக்கிற மாதிரி இருக்கு. வெறும் வயிறு. ஏதாவது சாப்பிடலாமா போளி?''

"நிச்சயமா...''

"ஒரு இடைவேளை'' என்று மனதில் நினைத்தவாறு அவர்கள் சாப்பிட அமர்ந்தனர். சப்பாத்தி, உருளைக் கிழங்கு கூட்டு, சாதம், மோர்- இத்தனையும் சாப்பிட்ட பிறகு சார்மினாரைப் புகைத்தவாறு அவர்கள் இரண்டு நாற்காலிகளில் அமர்ந்தார்கள். அப்போது போளி சொன்னான்:

"கோதுமை தாராளமா சாப்பிடணும். அரிசியைக் குறைச்சிக்கணும். இதுதான் போளி ஹவுஸின் கொள்கை. நீ இதைப்பற்றி என்ன நினைக்கறே?''

"சரிதான். சொல்றப்போ...''

"மனசுல என்ன தோணுதோ சொல்லு!''

"நாங்க ஏழைங்க. எங்களோட கொள்கை என்ன தெரியுமா? எது கிடைச்சாலும் சாப்பிட வேண்டியதுதான். போளி, கப்பைக் கிழங்கே மிகவும் கஷ்டப்பட்டுதான் எங்களுக்குக் கிடைக்குது. ஒவ்வொரு நாளும் மூணு நாலு கப்பைக் கிழங்கு எங்களுக்குக் கிடைக்குது. ஒவ்வொரு நாளும் துண்டுகளை வேக வைத்துச் சாப்பிட்டு தண்ணி குடிக்கிறோம். இதுதான் ஏழைகளாகிய எங்களோட நிலை. லட்சக்கணக்கான மக்களோட வாழ்க்கையின் உண்மையான நிலை இதுதான்.''

3

சிறிது நேர அமைதிக்குப் பிறகு போளி சொன்னான்:

"தொழிலாளிகள் பிரச்சினை இப்படி இருக்குறப்போ பணத்தை முதலீடு செய்து பண்ற பிசினஸ் அவ்வளவு நல்லதில்லை. நான்தான் சொன்னேனே, இங்கே எல்லாருமே தலைவர்கள்- எல்லாருமே மந்திரியாக நினைக்கிறாங்க. விருப்பப்படி பணத்தை மூட்டை அடிச்சு எப்படியாவது பணக்காரன் ஆயிடணும். உன் விஷயத்தையே எடுத்துக்கோ. கப்பைக் கிழங்கு வாங்கக்கூட உன் கையில காசு கிடையாது. ஆனால், உனக்கோ சிகரெட் ஃபாக்டரியோட மேனேஜிங் பார்ட்னராகணும். உன்னைப்போல கப்பைக் கிழங்கு சாப்பிடுகிற- ஒரு பார்க்கவே சகிக்காத ஏழைப் பெண்ணோட பேரை ஃபாக்டரிக்கு வைக்கணும். டேய் பாப்பச்சா, நீ சொல்லு- உலகம் எப்படிடா உருப்படும்? நாடு எப்படிடா வளரும்?''

இதைக் கேட்தும் பாப்பச்சனுக்கு கோபம் வந்துவிட்டது. பாப்பச்சன் சொன்னான்: "டேய் போளி... உன் கன்னத்துல பளார்னு அறையப்போறேன்.''

போளி கூறினான்:

"நாலு லட்சம் ரூபாய்க்குச் சொத்து. அது போகட்டும். பி.ஏ.பி.எல். பாசாயிட்டேன். அதுவும் போகட்டும். உன்னோட "படுக்கையறை" பத்திரிகைக்கு மூவாயிரம் ரூபாய் செலவழிச்சேன். சரி... அதுவும் போகட்டும். உன்னோட மாமனாரோட போராட்டத்துக்காக ஆதரவு தந்ததோடு நிற்காமல் தலைமை வேறு தாங்கினேன். அதுவும் போகட்டும்- பல தடவை சாப்பாடு...''

"டேய் போளி, நிறுத்து. நீ சொன்னது தப்பு. அவள் பார்க்கவே சகிக்க முடியாத தோற்றத்தைக் கொண்டவள் இல்லை. அழகிதான். அவள் கப்பைக் கிழங்கு மட்டும் சாப்பிடக்கூடியவள் இல்லை. கஞ்சியும் குடிக்கக் கூடியவள்தான். நீ தெய்வத்தை மறந்து இதை எல்லாம் சொன்னதால எனக்கு உண்மையாகவே கோபம் வந்திடுச்சு. கல்யாணம் செய்து கொடுக்க ரெண்டு சகோதரிங்க இருக்காங்க. சிகரெட் ஃபாக்டரி ஆரம்பிக்க எந்தத் தடையும் சொல்லாதே. பள்ளியோட ஃபாதர் தந்த சர்டிபிகேட் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் நம்மோட ஃபாக்டரியில் வேலை தந்தா போதும்.''

"நீ சொன்னது சரிதான். இருந்தாலும் நீ மன்னிப்பு கேக்கணும்.''

"என்னை மன்னிச்சிடுடா போளி.''

"சரி... இப்போ நான் சொல்றதைக் கேட்டுக்கோ. நீ என்கூட உட்கார்ந்து சாப்பிட்டிருக்கே. ஒண்ணா சேர்ந்து குடிச்சிருக்கே. என்கூட காரில் ஒண்ணா பயணம் செய்திருக்கே. இதுவரை உன்னோட குடும்பத்தோட கஷ்டங்களைப் பற்றி என்னைக்காவது என்கிட்ட சொல்லியிருக்கியா? ஏன்? நீ ஒரு சுத்த முட்டாள். நான் ஒரு கேப்பிட்டலிஸ்ட். ப்ளே பாய். உனக்கே இது தெரியும். ஆனால் நான் உன் நண்பன். நீ தகுந்த மாப்பிள்ளைகளைப் பார். உன் சகோதரிகளோட கல்யாணச் செலவை நான் பார்த்துக்கறேன்.''

பாப்பச்சன் இதைக் கேட்டதும் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டான்.

போளி சொன்னான்:

"உன்னை சிகரெட் ஃபாக்டரியோட மேனேஜிங் பார்ட்னராக்குவது ஒரு வகை. உன்னை ஜெனரல் மேனேஜராக நியமிக்கலாம். சூழ்நிலையை அனுசரித்து பத்தோ இருநூறோ சம்பளமாகத் தரலாம். லாபத்தில் உனக்கு ரெண்டு பங்கு. என்ன சொல்ற?

"உன் விருப்பப்படி செய்.''

"சரி... இயந்திரத்தோட சொந்தக்காரன் யார்?''

"பிரேம்ரகு.''

"இயந்திரத்தை நீ பார்த்திருக்கியா?''

"இல்ல... நம்ம டிரான்சிஸ்டர் ரேடியோ, வாட்ச் ஆகியவற்றைக் கள்ளக் கடத்தல் செய்து விக்கிற மீசை ரப்பாயி சேட்டன் சொன்னார்.''

""அப்படின்னா... சிலோன்ல இருந்து வந்ததா இருக்கும். லட்சக்கணக்கான விலை இருக்கும். அவன் தருவானா?''

"அவனை பார்ட்னரா சேர்த்துக்கணும். மேனேஜிங் பார்ட்னர் போளி.''

"நாளைக்கே போயி அவனைப் பார்ப்போம். வீட்டை நாம கண்டுபிடிச்சிடலாம். இயந்திரத்தை வாங்க வேண்டியதுக்கான வழிமுறைகளை நான் பார்த்துக்கறேன்.''

பாப்பச்சனும் போளியும் அடுத்த நாள் காரில் கிளம்பினார்கள். நாற்பது மைல் கார் ஓட்ட வேண்டும். ஒரு கூலிங்கிளாஸ் இருந்தது. சாராய பாட்டில் விழுந்து அது உடைந்துபோனது. போனால் போகட்டும் போடா! போளி மெதுவாக காரை ஓட்டினான். பிரேம் ரகு போகிற நேரத்தில் வீட்டில் இருக்க வேண்டும். வழியில் விபத்து எதுவும் நடந்துவிடக்கூடாது.


எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் இயந்திரம் கையில் கிடைக்க வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் மனத்திற்குள் கூறியவாறு, வழியில் இருந்த பள்ளி வாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் அரை ரூபாய் சில்லரைக் காசுகளைப் போட்டான் போளி.

"பாப்பச்சா, நீ கவனமா கேட்டுக்கோ.'' போளி சொன்னான்: "நீ ஒரு  தலைவனும் இலக்கியவாதியுமாக இருப்பவன். அதனால் உனக்கு உலக அறிவும், தொலைநோக்குப் பார்வையும் குறைவாகவே இருக்கும். பேச வேண்டியதை எல்லாம் நான் பேசிக்கிறேன். இயந்திரத்தைப் பத்தி நீ எதுவும் பேசாதே. நீ பேசினா பிரேம்ரகு ஏதாவது பிகு பண்ணினாலும் பண்ணுவான். இன்னொரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கோ. நாம லட்சக்கணக்கான ரூபாய் விளையாடப்போற பிசினஸ் பண்ணப்போறோம். இனிமே நாம சார்மினார் சிகரெட் பிடிச்சா நல்லா இருக்காது.''

"பிறகு எதைப் பிடிக்கிறது?''

"கோல்ட் ஃப்ளேக். இருபது சிகரெட் இருக்கிற ரெண்டு பாக்கெட். நான் ஏற்கெனவே வாங்கி வச்சுட்டேன். ரெண்டு பாட்டில் ஜானிவாக்கர் விஸ்கியும் வாங்கி வச்சிருக்கேன். மீசை ரப்பாயி சேட்டன்கிட்ட கம்மியான விலையில வாங்கினேன்.''

"அவர்கிட்ட விஸ்கிகூட இருக்கா என்ன? ஆனா போளி, பிரேம்ரகுவும் நீயும் நானும் சேர்ந்து கள்ளு, சாராயம் எல்லாம் அடிச்சிருக்கோம். பீடி, சார்மினார் எல்லாம் பிடிச்சிருக்கோம். பிறகு எதுக்கு இந்த ஜானிவாக்கரும் கோல்ட் ஃபிளேக்கும்?''

"டாகின் டாகே! சும்மா ஆளை கவர் பண்றதுக்குத்தான். நம்பளோட இப்போதைய வாழ்க்கை நிலையைப் பார்த்து பிரேம்ரகு அசர வேண்டாமா?''

கூறும்போது எல்லாவற்றையும் கூறவேண்டும் அல்லவா? போகும் வழியில் அவர்கள் பிடித்தது சார்மினார் சிகரெட்தான். நான்கு பாக்கெட்டுகள் கடனுக்கு வாங்கி பாப்பச்சன் தன்னிடம் வைத்திருந்தான். மதிய நேரம் கழிந்திருக்கும் சுபமுகூர்த்த நேரத்தில், வழியில் அவர்கள் ஒரு அழகான கள்ளுக் கடையைப் பார்த்தார்கள். அவ்வளவுதான்- சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் போளி. கடையில் அவர்கள் ஸ்ரீரகுநாத்தின் வீட்டுக்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என்று கேட்டார்கள். புதுக் கள்ளின் மணமும் பொரித்த மீன் வாசனையும் மூக்கைத் துளைத்தது. ஆஹா...

"என்னடா சொல்றே?''

"நீ என்ன சொல்றே?''

ம்... தியாகம் செய்தார்கள்! தின்னவும் இல்லை. குடிக்கவும் இல்லை. என்ன இருந்தாலும் சரியான பிடிவாதம்தான். ரைட்! காரை மீண்டும் ஓட்டினான் போளி. இதோ நெருங்கிவிட்டது ப்ரேம்ரகுவின் வீடு! தார்ரோட்டை விட்டு விலகிச் செல்லும் மண் ரோடு. இருபுறமும் பச்சைப் பசேல் வயல் பத்து பன்னிரண்டு ஏக்கர் இருக்கும். நடுவில் நான்கு ஏக்கரில் தென்னந்தோப்பு. அதன் நடுவில் பழைய மாடலில் ஒரு பங்களா.

"நிறுத்தடா. கோல்ட் ஃப்ளேக்!''

பேகைத் திறந்து இரண்டு பாக்கெட்டுகளையும் எடுத்தார்கள். இரண்டு பேருமே அவற்றைப் பிரித்தார்கள். இரண்டு பேரும் தனித்தனியே சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்துக் கொளுத்தி, பந்தாவாகப் புகை விட்டார்கள். இரண்டு பேரும் நன்றாகவே இருமினார்கள். எப்போதும் பிடிக்கும் பிராண்டை விட்டு புதிய ரகத்தைப் பிடிக்கிறபோது இருமல் வரத்தான் செய்யும். பரவாயில்லை. வண்டியை மெதுவாக ஊர்ந்துபோகச் செய்தான் போளி. மெதுவாக நகர்ந்த கார் கேட்டை அடைந்தது. இரண்டு மூன்று அல்சேஷன் நாய்கள் ஒன்று சேர்ந்து குரைத்தன. தொடர்ந்து வெளியே வந்தான்- வாயில் பைப் வைத்துப் புகை பிடித்தவாறு, கைகள் இரண்டையும் பான்ட் பாக்கெட்டினுள் நுழைத்த கோலத்தில் உடல் பருத்தவனான பிரேம்ரகு. முடி செம்பட்டை நிறத்தில் இருந்தது. முன்னறைக்கு மேலே செல்லும் படிகள் இங்கிருந்தே தெரிந்தன. பிரேம்ரகுவே வந்து கதவைத் திறந்தான்.

"வெல்கம் டூ ரகு குடில்.''

கார் உள்ளே சென்றது. கதவுகள் அடைக்கப்பட்டன.

காரை நிழலில் நிறுத்திவிட்டு, பேகைக் கையில் எடுத்தவாறு போளியும் பாப்பச்சனும் இறங்கினர்.

பிரேம்ரகு சொன்னான்:

"லிஸி மோளுக்கும் சஹஸ்ரநயனனுக்கும் வணக்கம்.''

பாப்பச்சனும் போளியும் உண்மையிலேயே அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

பிரேம்ரகு தொடர்ந்து சொன்னான்:

"படுக்கையறை" பத்திரிகையைப்  படிக்கிறப்பவே எனக்குத் தெரிஞ்சு போச்சு- லிஸிமோள்ன்ற பேர்ல எழுதுறது பாப்பச்சன், சஹஸ்ரநயனன்ற பேர்ல எழுதறது போளிதான்னு.''

"பிரேம், இதை வேற யார்கிட்டயாவது நீ சொல்லி இருக்கியா?''

"இதுவரை யார்கிட்டயும் சொன்னது இல்ல...''

பாப்பச்சன் கேட்டான்:

"உனக்கு எங்களோட இலக்கியப் படைப்புகளைப் பற்றி என்ன அபிப்ராயம்?''

பிரேம்ரகு கூறினான்:

"நான் அதை மறைச்சு வச்சுத்தான் படிச்சேன். அம்மாவும் சகோதரிகளும் அதை நல்ல வேளை பார்க்கல. வாசிச்சு முடிஞ்ச பிறகு அந்த மூன்று இதழ்களையும் கொண்டு போயி தென்னை மரத்தின் அடியில போட்டு தீ வச்சுப் பொசுக்கிட்டேன். அவ்வளவுதான்- கொஞ்ச நாள்லயே அந்தத் தென்னை மரம் வாடிப்போச்சு. உங்கள் இலக்கியப் படைப்புகளோட சக்தி அப்படி!''

"பண்பாடு தெரியாதவன்.'' பாப்பச்சன் சொன்னான்: "அதை எரிக்காதவங்க யாருமே இல்ல...''

"உங்களை யாரும் அடிக்கலியா?''

"நாங்கதான் அரசியலுக்குள்ள நுழைஞ்சிட்டமே!''

"நானும் கேள்விப்பட்டேன். நீங்க ஏன் ரிக்ஷாத் தொழிலாளிகளோட போராட்டத்திற்குத் தலைமை தாங்கினீங்க?''

போளி பாப்பச்சனைப் பார்த்தான். பாப்பச்சன் "வேண்டாம். சொல்லிடாதே" என்பது மாதிரி கண்களால் ஜாடை காட்டினான். போளி சொன்னான்:

"என்னால முடியாது. நான் சொல்லிடுவேன். பிரேம், நீ கேட்டுக்க. பாப்பச்சன்ற இந்தப் பய ஆரம்பிச்சு வச்சதுதான் அந்தப் போராட்டம். காரணம் என்ன தெரியுமா? ரிக்ஷா வண்டிக்காரன் பைலோவோட மகளை இந்த பாப்பச்சன் காதலிக்கிறான்.''

"பேரு?''

"தாரா.''

"தாராவுக்கும் பாப்பச்சனுக்கும் வாழ்த்துகள். நல்லது நடக்கட்டும். நாம இதைக் கட்டாயம் கொண்டாடியே ஆகணும். நல்ல சம்பா அரிசி சோறு இருக்கு. திருதா மீன் வறுத்து வச்சிருக்கு. மாங்கா ஊறுகாய், தயிர். போதுமா?''

"போதும்.''

"இருந்தாலும்... டேய்!'' பிரேம்ரகு அழைத்தான். தடியாக இருந்த ஒரு வேலைக்காரன் வந்து நின்றான்.

"டேய் செங்கிஸ்கான். அம்மாக்கிட்ட அப்பளம் பொறிக்கச் சொல்லு. பிறகு... ஐஸ் கட்டிகள், பொறிச்ச திருதா மீன், சட்னி... சீக்கிரம் எல்லாத்தையும் கொண்டு வா.''

போளி கேட்டான்:

"செங்கிஸ்கான்...?''

பிரேம்ரகு சிரித்தான்.

"இவன் என்னோட வேலைக்காரன். இவனோட உண்மையான பேரு கொச்சிட்யாதி. இவனுக்குச் சம்பள உயர்வெல்லாம் தேவையில்ல... பிரமோஷன் வேணும். புதிய பேர்கள் வேணும்.  கடந்த ஆறு மாசமா இவனோட பேரு செங்கிஸ்கான். போடா, சிரிச்சுக்கிட்டே நிக்காதே.''

செங்கிஸ்கான் என்ற அந்த அடிமை வேலைக்காரன் ஓடினான்.

"அவன் செங்கிஸ்கானோட கதையைப் படிச்சான். எதிரிகளின் முடியால் உண்டாக்கப்பட்ட அந்த மகானோட கொடி அவனுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதனால இந்தப் பேரை மாற்றவே வேண்டாம்னு சொல்றான். என்ன செய்றது? ஆமா... பேக்ல என்ன வச்சிருக்கீங்க?''


"ஜானிவாக்கர் விஸ்கி.'' பாப்பச்சன் கூறினான்.

பிரேம்ரகு சொன்னான்: "இதை எதுக்கு அங்கேயிருந்து வாங்கிட்டு வந்தீங்க? வாங்க...''

அவர்கள் மாடியை அடைந்தார்கள். நான்கு பக்கமும் பல கிலோ மீட்டர் தூரம் வரை உலகம் தெரிந்தது. ஒரு பக்கம் பரந்து கிடக்கும் கடற்கரை மணல் பரப்பைத் தாண்டி எல்லையற்ற நீலக்கடல். எங்கே இருந்து யார் வந்தாலும், வீட்டில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

4

மாடியில் இரண்டு அறைகள். சுற்றிலும் அரை மதில் அளவுக்கு கம்பிகள் அடிக்கப்பட்ட வராந்தா. அறைகளில் ஒன்று படுக்கையறை. இன்னொன்று அருமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. விலை உயர்ந்த நார்பாய், நாற்காலிகள், மேஜை, பெரிய இரும்பு அலமாரிகள், சீலிங்ஃபேன், ரேடியோகிராம், பூ ஜாடிகள், ஷெல்ஃப் முழுக்கப் புத்தகங்கள்...

போளி ஜானிவாக்கர் பாட்டிலை மேஜைமேல் வைத்தான். கோல்ட் ஃப்ளேக் சிகரெட் பாக்கெட்டை அதற்குப் பக்கத்தில் பந்தாவாக வைத்தான். பாப்பச்சனும் தன் கையில் இருந்த கோல்ட் ஃப்ளேக் சிகரெட் பாக்கெட்டை மேஜையில் வைத்தான். பிரேம்ரகு பைப்பில் இருந்த சாம்பலை ஆஷ்ட்ரேயில் கொட்டிவிட்டு பைப்பை மேஜை ஓரத்தில் வைத்தான். தொடர்ந்து ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்டின் ஒன்றை மேஜைமேல் வைத்தான்.

போளியும் பாப்பச்சனும் மனத்திற்குள் கூறிக் கொண்டார்கள்:

"அட... ம்...!"

பிரேம்ரகு இரும்பு அலமாரியைத் திறந்து மூன்று கண்ணாடி டம்ளர்களை எடுத்தான். அப்போது அலமாரியில் யாரையும் அதிர்ச்சி  அடையச் செய்யும் ஒரு காட்சி. ஜானிவாக்கர், பிளாக் அண்ட் ஒயிட், ஷெயிக், ஒயிட் ஹார்ஸ் ஜின், ஷாம்பெயின் போன்றவை...

புலியைப் பிடிக்கிற புலி... இவன் என்ன சாதாரண ஆளா?

போளியும் பாப்பச்சனும் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள். மனதிற்குள் நினைத்தார்கள். சிகரெட் தயாரிக்கிற இயந்திரத்தை இவன் எங்கே வைத்திருப்பான்? வயல்வெளியிலோ, தோப்பிலோ ஷெட்மாதிரி எதுவும் கண்ணில்படவில்லை. வீட்டை விட்டுச் சற்று தூரத்தில் பெரிய சமையலறை, கிணறு... இயந்திரம் எங்கே இருக்கும்?

ஒரு வேளை... திறக்கப்படாமலே கொண்டு வந்தபடி பிரிக்கப்படாமலே பெட்டிக்குள் இருக்குமோ? உண்மையிலேயே இவன் புலியைப் பிடிக்கிற ஒரு பயங்கரப் புலிதான். இருந்தாலும் அவனே கூறுவான். கொஞ்ச நேரம் போகட்டும். நமக்குத் தெரியாதா?

பிரேம்ரகு இரண்டு பாட்டில்களையும் எடுத்து அடிப்பாகத்தை உற்று நோக்கி ஆராய்ந்தான். ஒரு பாட்டிலின் சீலை உடைத்துத் தலைகீழாக சில நிமிடங்கள் பிடித்துவிட்டு பிறகு நேராக மேஜைமேல் வைத்தான்.

"வெளிநாட்ல இருந்து வர்ற மது பாட்டில்கள்ல சில விளையாட்டுத்தனங்களை நம்ம ஆளுங்க செய்வாங்க. ஒரு ஸ்டீல் கம்பியைப் பழுக்க வச்சு பாட்டிலோட மூடியில லேசா ஓட்டை போட்டுடுவாங்க. பிறகு சிரிஞ்ச் வச்சு உள்ளே இருக்கிற விலை உயர்ந்த மதுவை பாதி அளவுக்கு உறிஞ்சி வேறொரு பாட்டிலுக்குக் கொண்டு வந்துட்டு, அதுக்குப் பதிலா சாராயத்தை ஊத்தி வச்சிடுவாங்க. சிலர் வெறும் ஸ்பிரிட்டை ஊற்றி வச்சிடுவாங்க. அதுக்குப் பிறகு மூடியோட துளையை உருக்கி சரி செஞ்சிடுவாங்க.

அதுக்கும் உபகரணங்கள் இருக்கு. இந்த பாட்டில் அப்படி அல்ல. ஒரிஜினல்தான். எங்கே வாங்கினீங்க இதை?''

போளி சொன்னான்:

"கடத்தல் சரக்குதான். ஒவ்வொரு பாட்டிலும் எழுபத்தஞ்சு ரூபா. லாபம்தான். ஓப்பன் மார்க்கெட்ல இதனோட விலை நூற்றி இருபது ரூபா...''

"யார்கிட்ட வாங்கினீங்க?''

"ரப்பாயி சேட்டன்னு ஒரு ஆளு... அவரு...''

பிரேம்ரகு சிரித்தான்.

"மீசை ரப்பாயி சேட்டனா? நான்தான் அவர்கிட்ட கொடுத்தேன். அம்பத்தஞ்சு ரூபாவுக்குக் கொடுத்தேன். எனக்கு முப்பது ரூபா வரும் அசல்.''

"அப்ப இந்தத் தொண்ணூறு ரூபா யாருக்கு?''

"எண்பது ரூபா அரசாங்கத்துக்கு, பத்து ரூபா விக்கிற வியாபாரிக்கு.''

செங்கிஸ்கான் பெரிய ஒரு ட்ரேயுடன் வந்தான்.

ப்ரேம்ரகு படுக்கையறைக்குள் நுழைந்து ஒரு சில்க் கைலியைக் கட்டினான். கையில் இரண்டு சில்க் கைலிகளை வைத்திருந்தான். பாப்பச்சனும் போளியும் அதை வாங்கினார்கள்.

போளி சொன்னான்:

"நாங்க உடனே போகணும்.''

தொடர்ந்து இரண்டு பேரும் உள்ளே இருந்த அறைக்குள் நுழைந்து கைலிக்கு மாறினார்கள். ட்ரேயில் ஒரு கண்ணாடி குடுவை நிறைய

ஐஸ்கட்டிகள். அதனுடன்  ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன ஒரு கிடுக்கி. தட்டில் பொரித்த திருதா மீன். அருகில் வெங்காயம், தக்காளி நறுக்கப்பட்டு. சிறிய தட்டில் பச்சை சட்னி.

பிரேம்ரகு அலமாரியில் இருந்து இன்னொரு கண்ணாடி டம்ளரை எடுத்தான். நான்கு டம்ளர்களிலும் பாதி வருகிற வரை விஸ்கியை ஊற்றி, மீதி இடத்தில் ஐஸ்கட்டிகளை இட்டான். ஒரு டம்ளரைக் கையில் எடுத்தான். போளியும் பாப்பச்சனும் டம்ளர்களை எடுத்தார்கள். மீதி இருந்த ஒரு டம்ளரை செங்கிஸ்கான் எடுத்தான்.

"தாராவுக்காகவும் பாப்பச்சனுக்காகவும்.''

பிரேம்ரகு சொன்னான். நான்கு பேரும் டம்ளர்களை ஒன்றோடொன்று முட்டச் செய்தார்கள். தொடர்ந்து வாயில் வைத்து விஸ்கியைச் சுவை பார்க்க ஆரம்பித்தனர். பிரேம்ரகுவும்  செங்கிஸ்கானும் ஒரே மூச்சில் குடித்து டம்ளரை காலி செய்தார்கள். டம்ளர்களில் அனாதையாக ஐஸ்கட்டிகள் மட்டும் இருந்தன. போளியும் அதேபோல குடித்து டம்ளரை வைத்தான். இப்போது பாப்பச்சனும் குடித்துத் தீர்த்தான். பாப்பச்சன் ஐஸ்கட்டிகளைக்கூட விட்டு வைக்கவில்லை. அதையும் விழுங்கி விட்டிருந்தான்! பிறகு பச்சை நிறத்தில் இருந்த சட்னியை ஸ்பூனால் எடுத்து வாயில் வைத்து நக்கிய பாப்பச்சன் கேட்டான்:

"என்னடா இது?''

"குடவன் இலையில் உண்டாக்கின சட்னி. இதைச் சாப்பிட்டா ரொம்ப நாள் உயிரோட இருக்கலாமாம்...''

"குடவன்னா என்ன அர்த்தம்?''

பார்த்தபோது செங்கிஸ்கான் இடத்தைவிட்டுப் போயிருந்தான். பிரேம்ரகு எழுந்து சென்று ரேடியோ கிராமைப்போட்டு, பெரிய ஒரு இசைத்தட்டை இசைக்கச் செய்தான். மெல்ல மெல்ல காற்றில் தவழ்ந்து வந்த இசைக் கருவிகளின் இனிய சங்கீதம்... முழுக்க முழுக்க இன்ஸ்ட்ரூமெண்ட் மியூசிக்...

"அரேபியன் நைட்ஸ்.'' க்யாஸ் ஃபில்ட் ரான்ஸனில் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்டைக் கொளுத்திய பிரேம்ரகு சொன்னான். மீண்டும் கண்ணாடி டம்ளர்களில் ஐஸ் கட்டிகள். ஒவ்வொரு டம்ளரிலும் தலா நான்கைந்து ஐஸ் கட்டிகள். விஸ்கி தலா இரண்டு பெக்குகள். இசை வெள்ளத்தில் மூழ்கி இருந்தனர் அனைவரும். அவசரமொன்றும் இல்லை. மெல்ல ரசித்தவாறு விஸ்கியை ருசி பார்த்தனர். நீண்ட ஆயுளுக்காக குடவன் சட்னியை நக்கினர்.

"அப்போ பிரேம்...'' பாப்பச்சன் கேட்டான்:

"நீ பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். மதுவைப் பற்றி உன்னோட கருத்து என்ன?''

"இந்தியர்களான நாம் தொடர்ந்து மது அருந்தினால் மூளை, பல், கண்கள் எல்லாத்துக்கும் பாதிப்பு உண்டாகி சீக்கிரமே முதுமையை அடைஞ்சு செத்துப் போயிடுவோம்.''


போளிக்கு அது புரியவில்லை.

"வெள்ளைக்காரங்க தினமும் தண்ணி அடிக்கிறாங்களே!''

"சூப், முட்டை, பால், மட்டன், மீன், காய்கறிகள், ரொட்டி, வெண்ணெய், பழங்கள், விட்டமின் மாத்திரைகள்- இவற்றையும் அவங்க ரெகுலரா சாப்பிடுறாங்களே! நாம் அப்படியா?''

பாப்பச்சன் சொன்னான்:

"குடல் வெந்து சாகுறதுக்கு இதுக்குமேல என்ன வேணும்?''

பிரேம்ரகு சொன்னான்: "முன்னாடி மாதிரி நான் இப்போ அதிகமா தண்ணி அடிக்கிறது இல்ல. இருந்தாலும் மது பாட்டில்களுக்குப் பஞ்சம் இல்ல... என்னோட ரெண்டு சகோதரிகளோட கணவர்களுக்கும் ரெண்டு நகரங்கள்ல ரெண்டு வெளிநாட்டு சரக்குகள் விக்கிற மதுக்கடைகள் இருக்கு. நான் கள்ளக்கடத்தல் செய்யிற சரக்கு வேற தனியா கிடைக்கும். அதுக்காகத் தொடர்ந்து இதைக் குடிக்கிறது இல்ல. நான் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. தென்னந்தோப்புகளைப் பார்த்துக்கணும். பன்னிரண்டு ஏக்கர் நெல் வயலைக் கவனிக்கணும். இது போக என்னோட சொந்த பிசினஸ் வேற. இதை எல்லாம் பார்த்துக்க நானும் செங்கிஸ்கானும் மட்டும்தான் இருக்கோம்.''

"அலமாரியில் இருக்கிற மதுபாட்டில்கள் எல்லாமே கடத்தல் பொருட்களா?'' போளி கேட்டான்.

"மது பாட்டில்கள் மட்டுமல்ல... டிரான்சிஸ்டர் ரேடியோ, டேப்ரிக்கார்டுகள், வாட்சுகள், விலை உயர்ந்த பவுண்டன் பேனாக்கள், சிகரெட்கள், லைட்டர்கள், டெலஸ்கோப்புகள், ரிவால்வர்கள், டார்ச் லைட்டுகள், விட்டமின் மாத்திரைகள், செவன் ஸீஸ் காட்லிவர் ஆயில் கேப்சூல்கள், சில்க் லுங்கிகள், ஷேவிங் செட்டுகள்... இப்படிப் பல சாமான்களை நான் வியாபாரம் செய்யறேன். தங்கத்தை மட்டும் நான் கடத்துறது இல்ல... அதை விற்கணும்னா தூரமா போகணும்.''

"எங்கே இருந்து இதை எல்லாம் வாங்குறே?''

"கடவுள் கடலைப் படைச்சிருக்காரு. மனிதன் அதுல கப்பல் ஓட்டிட்டு போறான். கப்பல்கள்ல பல நாடுகளைச் சேர்ந்த பல பொருட்கள் வந்து சேருது. கடற்கரைக்கு ரொம்ப தூரத்துலயே படகுகள் கப்பலை நெருங்குது. பொருட்கள் கை மாறுது. வியாபாரம் நடக்குறது இப்படித்தான்.''

"லாபம் என்ன வருது?''

"மாசத்துக்கு அய்யாயிரம் ரூபா கிடைக்கும்.'' பிரேம்ரகு சொன்னான். "இது ஆரம்பிச்சு மூணு நாலு வருஷமாச்சு. இதில் ஆபத்து நிறைய இருக்கு. இன்னும் ஒரு வருஷத்துல இந்த பிசினஸை ஒரேயடியா இழுத்து மூடிட்டு முழு கவனத்தையும் விவசாயத்துல செலுத்தப் போறேன். உணவு பற்றாக்குறை உள்ள நாடாச்சே இந்தியா!''

"இந்தியா முன்னேறுவதற்கு வழி இருக்கா பிரேம்?'' போளி கேட்டான்.

"இங்கு நடக்குறது முழுவதும் அரசியல் விளையாட்டு. சின்ன புள்ளைங்களோட அரசியல் விளையாட்டு. நல்ல ஒரு பொருளாவது இங்கே கிடைக்குமா? மேட் இன் இந்தியா என்று பார்த்தாலே எனக்கு பயம். ஊசி போடுற மருந்துக்குள்ளே யானை செத்துக் கிடக்கும்.''

"சொல்றப்போ எல்லாத்தையும் சொல்லணும்.'' பாப்பச்சன் சொன்னான்: "செத்துக் கிடக்குறது யானை இல்ல... ஈ...''

"சுதந்திரம் கெடைச்சு கொஞ்ச காலம்தானே ஆகுது, போளி!'' பிரேம்ரகு சொன்னான்: "இந்தியா நிச்சயம் நன்றாக ஆகும். பெரிய ஒரு நாடாக வளரும். அதுக்கு குறைந்தபட்சம் நூறு வருஷங்கள் ஆகும்.''

"நீங்க நூறு வருஷம் உயிரோட இருப்பீங்களா?''

இவ்வளவு நேரத்தில் இரண்டாவது பாட்டில் பாதி காலியானது. வறுத்த வைத்த திருதா மீன் தீர்ந்தது. ஐஸ்கட்டிகள் உருகி நீராகியது. மீதி இருந்த சட்னியைத் தொட்டு எல்லாரும் நக்கினர்.

5

"உனக்கு இப்போ எவ்வளவு சொத்து இருக்கு?'' போளி கேட்டான்.

"அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரெண்டு சகோதரிகளுக்கும் எனக்கும் சேர்த்து ஏழு லட்சம் மதிப்புக்கு சொத்து இருக்குன்னு வச்சுக்கோங்க. எனக்கு மட்டும் தனியா ஒரு அஞ்சு லட்சம் ரூபாய்க்கு சொத்து இருக்கு.''

"உன்னோட ஆயிரம் தூண்டில் காதல் இப்போ எப்படி இருக்கு? ஒரு கடிதத்தோட காப்பி எடுத்து ஏகப்பட்ட பெண்களுக்குக் கொடுத்து...''

"அனுப்புறது இல்ல. அது ஒரு தமாஷான நிகழ்ச்சிதான்.''

"நீ கல்யாணம் செய்யலியா? கல்யாணத்தைப் பற்றி உன்னோட கருத்து என்ன?''

"கல்யாணம்ன்றது ஒரு கூட்டு வியாபாரம். மனைவியோட முக்கிய எண்ணமே புருஷனை அடக்கி ஆளணும்ன்றதுதானே! அஞ்சு லட்சம் ரூபா எனக்கு வரதட்சணையா தர தயாரா இருக்கிற பெண் எங்கே இருக்கா?''

"கேட்டுக்கடா டாகே.'' போளி பாப்பாச்சனிடம் சொன்னான். "சொல்றது என்னன்னு கேளு!''

"அதனால...'' பிரேம்ரகு கூறினான்: "ஒரு ஏழைப் பெண்ணாப் பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கத் தீர்மானிச்சிருக்கேன்!''

"கேளுடா இப்போ.'' போளியைப் பார்த்து கூவினான் பாப்பச்சன்.

போளி உண்மையிலேயே அதிர்ந்துதான் போனான்.

பாப்பச்சன் உற்சாகத்துடன் கேட்டான்:

"பாக்கியவதியோட பேரு என்ன?''

"நளினி...''

பாப்பச்சன் பாட்டிலைத் திறந்து குடித்து, இருமி, கண்களில் நீர் வழியச் சொன்னான்:

"நளினிக்கும் ரகுவிற்கும் வாழ்த்துகள்! நல்லது நடக்கட்டும்.''

தொடர்ந்து பிரேம்ரகுவும் போளியும் பாட்டிலில் இருந்து ஊற்றிக் குடித்தார்கள். கூறும்போது எல்லாவற்றையும்கூற வேண்டும் அல்லவா? அவர்கள் இருமவில்லை. பிரேம்ரகு சொன்னான்:

"பாப்பச்சா... தாராவுக்கும் உனக்கும் நடக்குற கல்யாணத்துக்கு நான் உங்களுக்கு ஒரு தொகையைப் பரிசா தருவேன். ஆயிரத்தொரு  ரூபாய்...''

பாப்பச்சன் இதைக் கேட்டதும், நன்றிப் பெருக்கால் வாய்விட்டு அழுதான்.

"ப்ரேம்... நீ தேவகுமாரன்தான்.'' போளி பக்கம் திரும்பி பாப்பச்சன் சொன்னான்: "போளி, நீயும் தேவகுமாரன்தான்!''

"நான் தேவகுமாரன்... சரி. இந்த போளி எந்த வகையில் தேவகுமாரன்?''

தன் சகோதரிகளின் திருமணச்செலவை போளி ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன விஷயத்தை பிரேம்ரகுவிடம் சொன்னான் பாப்பச்சன்.

"உண்மையாகவே போளி தேவகுமாரன்தான். இருந்தாலும், போளியோட காதல் விஷயங்கள் என்னாச்சு...?''

பாப்பச்சன் ஏலிக்குட்டி விஷயத்தைப் பிரேம்ரகுவிடம் சொன்னான்.

தொடர்ந்து ஏலிக்குட்டியைப் பற்றிய விவாதம் நடந்தது. போளியின் போக்கைப் பற்றி குற்றம் சாட்டினான் பாப்பச்சன்.

"பிரேம் சொன்னால், நான் ஏலிக்குட்டியைக் கல்யாணம் பண்ணிக்கத் தயார்'' போளி சொன்னான்.

"சும்மா கட்டுடா. ஆம்பளை நம்மள விட்டா வேறு யார்டா பெண் பிள்ளைகளைக் கட்டுறது?''

"போளி என்ற நான் ஏலிக்குட்டியைக் கல்யாணம் பண்ணப்போறேன்.''

"பிரேம், இவன் ஒரே மாதிரி எப்பவும் இருக்க மாட்டான். மாற்றி மாற்றிப் பேசுவான். கையெழுத்து போட்டுத் தரச்சொல்லு."

பேப்பரும் பேனாவும் வந்தது. போளி எழுதினான்:

"அன்புள்ள அப்பாவும் அம்மாவும் தெரிந்து கொள்ள வேண்டியது... மகன் போளி எழுதுவது என்னவென்றால்...

நான் ஏலிக்குட்டியைத் திருமணம் செய்வதாகத் தீர்மானித்திருக்கிறேன். தெய்வத்தின்மீது சத்தியமாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இப்படிக்கு உங்கள் மகன் போளி." தேதியும் இடமும் எழுதிக் கையெழுத்து போட்டான்.


கவரும் ஸ்டாம்பும் வந்தன. கடிதத்தைக் கவருக்குள் போட்டு அடைத்து மேலே ஸ்டாம்ப் ஒட்டினான். பிரேம்ரகு அதை மேஜை மேல் வைத்து சொன்னான்:

"இதைக் கொண்டாட ஷாம்பெயின் கட்டாயம் வேணும்.''

அடுத்த நிமிடம் இரண்டு ஷாம்பெயின் பாட்டில்கள் அவர்கள் முன் இருந்தன. ஒரு ஷாம்பெயின் பாட்டிலின் அடைப்பானை "ப்ளுங்க்" என்ற இனிய ஒலியுடன் திறந்தான் பிரேம்ரகு. கூறும்போது எல்லாவற்றையும் கூற வேண்டும். அல்லவா? ஷாம்பெயின் பொங்கி வெளியே வழியவில்லை. மூன்று டம்ளர்களில் ஊற்றியபோது "சாப்பிட நேரமாச்சா?'' என்ற கேள்வியுடன் அவர்கள் முன் வந்து நின்றான் செங்கிஸ்கான். அவனுக்கும் ஒரு டம்ளர் ஷாம்பெயின் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பிரேம்ரகு சொன்னான்:

"சாப்பாட்டுக்கு கொஞ்ச நேரம் ஆகட்டும். அதுக்கு முன்னாடி இந்தக் கடிதத்தை போஸ்ட் செய்யணும். அர்ஜன்ட்.''

கடிதத்தை எடுத்து செங்கிஸ்கான் கையில் கொடுத்துவிட்டு அனைவரும் டம்ளர்களை எடுத்தார்கள்.

"ஏலிக்குட்டியும் போளியும் வாழ்க்கையில் இனிமைகள் பல காணட்டும்.''

நான்கு பேரும் ஒரே மூச்சில் குடித்தார்கள். டம்ளர்கள் காலி. கடிதத்தை எடுத்துக் கொண்டு செங்கிஸ்கான் ஓடினான்.

தொடர்ந்து ஷாம்பெயினில் விஸ்கியைச் சேர்த்து தாரா, நளினி, ஏலிக்குட்டி ஆகிய சௌபாக்கியவதிகளின் உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் குடித்தார்கள். நாட்டிலுள்ள எல்லா பெண்களுக்காகவும் குடித்தார்கள். பெண்களை நினைத்துப் பார்க்காமல் ஆண்கள் வெறுமனே குடிப்பார்களா என்ன? கூறும் போது எல்லாவற்றையும் கூற வேண்டும் அல்லவா? செங்கிஸ்கான் அடுத்த சில நிமிடங்களில் சாப்பாடு கொண்டு வர, எல்லாரும் ஒன்றாக அமர்ந்து உண்ண, கைகள் கழுவி ஒவ்வொருவரும் சாய்வு நாற்காலிகளில் போய் சாயவும், சிகரெட் புகைப்பதற்கு முன்பே எல்லாரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிப்போனதும்... சிறிது நேரத்தில் நடந்த சம்பவங்கள் இவை.

ஐந்து மணியானது. எல்லாரும் உறக்கம் நீங்கி எழுந்தார்கள். கட்டன் காபி குடித்து முடித்து பிரேம்ரகுவின் தலைமையில் கடலில் எல்லாரும் குளித்தார்கள். பின் குளத்தில் குளிர்ந்த நீரில் இன்னொரு முறை குளித்தார்கள். தொடர்ந்து லேசான தலைவலி இருப்பது மாதிரி எல்லாருக்குமே ஒரே நேரத்தில் சந்தேகம் தோன்றவே, பீர் மட்டும் குடித்துப் பார்ப்போம் என்று ஏக மனதுடன் தீர்மானித்தார்கள். மாடிக்கு வந்து பீர் பாட்டிலைத் திறந்து டம்ளர்களில் ஊற்றினார்கள். நுரையுடன் பீரைக் குடிப்பதில்தான் எத்தனை ஆனந்தம்! இந்த நேரத்தில் பீரில் ஒரு சிகரெட் விழுந்தது. பிரேம்ரகு அதை எடுத்து பக்கத்தில் வைத்தான்.

"பாருங்க., முட்டைக்கோஸைத் துண்டு துண்டா நறுக்கிக் காயப் போட்டு எஸன்ஸ் தெளித்து உண்டாக்கியது. கொஞ்சம்கூட புகையிலை கிடையாது.''

பிரேம்ரகு சொல்லிக் கொண்டே வந்தான். போளியும் பாப்பச்சனும் உஷாரானார்கள். இனி சிகரெட் தயாரிக்கிற இயந்திரத்தைப் பற்றி கூறித்தானே ஆக வேண்டும்!

"எனக்கொரு ஐடியா தோணுது.'' பிரேம்ரகு சொன்னான்: "மரச்சீனி கிழங்கு இருக்குல்ல. அதோட வெளுத்த தோல அறுத்து வேக வச்சு நெருப்புல வறுக்கணும். புகையிலையும்கூட சேர்க்கணும். பிறகு அபின் சேர்ந்த நீரை அதுக்குமேல தெளிக்கணும்... மீண்டும் நெருப்புல காட்டி வறுக்கணும். பிறகு அதை சிகரெட் ஆக்கணும். இதை ஒருவன் குடிக்க ஆரம்பிச்சா அதை மட்டுமே குடிப்பான். அபினுக்குப் பதிலா கஞ்சாவை அரைச்சுக் கலக்கி தெளிச்சு நெருப்புல வறுத்தாக்கூட சரிதான்.''

"அபினையும் கஞ்சாவையும் அரசாங்கம் தடை செஞ்சிருக்கே! பொது மார்க்கெட்டில்...?''

"என்னோட... அதாவது நம்மோட இளமைக் காலத்துல அபினும் கஞ்சாவும் கடைகளில் கிடைச்சதே! ஞாபகம் இல்லையா? அபின் தாராளமாக கள்ளக்கடத்தல் மூலம் கிடைக்குது. கஞ்சா இங்கேயே வெளையுது.''

"எக்ஸைஸ்காரர்கள் பார்த்துட்டா, அந்த இடத்துலயே கஞ்சாவைத் தீ வச்சு எரிச்சிடுவாங்க. அப்படி வச்சிருக்கவங்களையும் தண்டிக்காம விடுறதில்ல...''

"முட்டாள்தனமான சட்டம்! தெய்வம் உண்டாக்கியதுதானே அது! அது தானா முளைச்சு வளருது. அதுக்கு மனிதர்களை ஏன் தண்டிக்கணும்? அபினும் கஞ்சாவும் தேவைப்படுறவங்களுக்கு எல்லா இடங்களிலேயும் கிடைக்கும். நான் சொன்ன மாதிரி நல்ல போதை தரக்கூடிய சிகரெட் பார்க்கலாம்.''

இதோ வந்துவிட்டது சிகரெட் தயாரிக்கிற இயந்திரம்! தொடர்ந்து ஃபாக்டரி விஷயம்தான். பி.கே. ரகுநாதன் அண்ட் சி.பி. போளி பி.ஏ.பி.எல். பார்ட்னர்ஸ். ஜெனரல் மேனேஜர், என்.ஆர். பாப்பச்சன். அருமையான பிஸினஸ்தான்!

"டேய், ப்ரேம்!'' போளி சொன்னான்: "நாங்க ஏதாவது  பிஸினஸ் ஆரம்பிக்கலாம்னு பார்க்கிறோம்.''

"தவளையோட கால்களுக்கு அமெரிக்காவிலும் ஃபிரான்ஸிலும் நல்ல மார்க்கெட் இருக்கு.'' பிரேம்ரகு கூறினான்: "பெரிய அளவில் முதலீடே இல்லாமல் நடத்தக்கூடிய பிஸினஸ்.''

"தவளையைக் கொல்றதுன்றது பாவம் இல்லையா?'' போளி சொன்னான்: "பணம்கூட போடலாம். நகரத்துல மத்திய இடத்துல ரெண்டு அறைகள் இருக்கு. ஏதாவது இயந்திரம் உபயோகப்படுத்தி பிஸினஸ் செய்யலாம்.''

"ஒரு பிரஸ் நடத்தினால் என்ன?''

"நான் பிரஸ் தொடங்கினால், பாப்பச்சன் "படுக்கையறை" பத்திரிகை தொடங்குவான். ஆட்கள் என்னை விரட்டி விரட்டி அடிப்பாங்க. உடலுக்குத் தீங்கு வராத ஏதாவது பிசினஸ்...''

அப்போது வெறும் பீரில் போதை எதுவும் வராததால், பிஸ்கட்  பிராந்தியை அதில் கலக்கலாம் என்ற தீர்மானத்திற்கு வந்தான் பிரேம்  ரகு. போளியும் பாப்பச்சனும் "அருமையான தீர்மானம்'' என்று அதைப் பாராட்டினார்கள். பிரேம்ரகு ஒரு பட்டனை அழுத்த, அடுத்த நிமிடம் செங்கிஸ்கான் வந்து நின்றான். பிரேம்ரகு ஏதோ மெல்லிய குரலில் சொன்னான். செங்கிஸ்கான் வேகமாகப் படிகளில் இறங்கி ஓடினான். சிறிது நேரம் சென்றிருக்கும். பிரான்ஸில் தயாரான இரண்டு பிஸ்கட் பிராந்தி பாட்டில்களுடன் செங்கிஸ்கான் வந்தான். சரியான வேலைக்காரன்தான். பாட்டிலில் ஒட்டியிருந்த பச்சை மணலைத் துடைத்து எறித்துவிட்டு பாதி பீரில் பிராந்தியை ஊற்றினான் பிரேம்ரகு. செங்கிஸ்கான் என்ற அடிமை வேலைக்காரன் பிராந்தியை ஒரு பிடி பிடிக்கிறான்! "போளியின் தந்தைக்கு எழுதிய கடிதத்தை போஸ்ட் பண்ணியாகி விட்டதா" என்ற பிரேம்ரகுவின் கேள்விக்கு செங்கிஸ்கான் பதில் சொன்னான்.

"போஸ்ட் பண்ணியாச்சு. அது இப்ப பாதி வழி போயிருக்கும்.''

"போளி, உங்கப்பா தண்ணி அடிப்பாரா?''

"கள்ளு.''

"அம்மா எப்படி?''

"கொஞ்சம் சாப்பிடுவாங்க. பணப் பெட்டியோட சாவி அம்மாவோட கையில இருக்கு.''

"கையில்?'' பாப்பச்சன் சிரித்தான்: "உண்மையிலேயே தமாஷ்தான்.''

"சரி... பொரிச்ச கோழி, ப்ரட் பட்டர், ஆம்லெட் கடைசில சொன்னதை முதல்ல கொண்டு வா. ஓடு.''

செங்கிஸ்கான் ஓடினான்.

உண்மையிலேயே சரியான போதை! பீர் என்ற தொட்டிலில் பிராந்திக் குழந்தை படுத்தவாறு சிரித்துக் கொண்டிருந்தது. நினைத்துப் பார்த்து எல்லாரும் சிரித்தார்கள்.

போளி ஞாபகப்படுத்தினான்.


"ஏதாவது இயந்திரத்தை உபயோகப்படுத்தி பிஸினஸ். பிரஸ் வேண்டாம்.''

6

பிரேம்ரகு கூறினான்:

"சோப்பு கம்பெனி ஆரம்பிக்கலாம். இந்திய சோப்புகளுக்கு அரேபியா, குவைத், எகிப்து, லெபனான், மொராக்கோ ஆகிய இடங்கள்ல நல்ல வரவேற்பு இருக்கு.''

போளி சொன்னான்:

"சோப்பை விளம்பரப்படுத்தி பாப்புலராக்குறது மிக மிகக் கஷ்டமான விஷயம்.''

"சோப்புக்கு எதற்குப் பிரச்சாரம்?'' பிரேம்ரகு கேட்டான். சிறிது நேரம் அமைதியாக இருந்த பிறகு அவனே தொடர்ந்தான். "இப்போ நீயும் பாப்பச்சனும் சேர்ந்து தயாரிச்ச சோப்பு ஐம்பதாயிரத்தை, நல்லா பேக் செய்து, குவைத்துக்கு அனுப்பி இருக்கீங்கன்னு வச்சுக்கோ. ரெண்டு மாசம் கழிச்சு குவைத்திலிருக்கும் உங்களோட ஏஜன்ட் உங்களுக்குத் தந்தி அடிக்கிறாரு. "பேக்கிங் ரொம்பவும் மோசமாக இருந்ததுனால சும்மா கொடுத்தால்கூட சோப்புகள் வாங்க ஆளில்லாததால் பதினைஞ்சாயிரம் சோப்புகளைத் திருப்பி அனுப்பியிருக்கிறேன். அதை வாங்கிக்கோங்க" அப்படின்னு. நீங்க மெல்ல கஸ்டம்ஸுக்கு ஒரு ஆளை அனுப்பி பதினைஞ்சாயிரம் சோப்புகளையும் எடுத்துட்டு வரச்சொல்ல வேண்டியதுதான். பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்கள் எல்லாம் வீட்டுக்குப் போயிருப்பாங்க. இரவு ஆயிடுச்சு. நீங்க ஜன்னல்களையும் கதவுகளையும் அடச்சிட்டு, விளக்குகளை அணைச்சிட்டு, சோப் ஒவ்வொன்றையும் எடுத்து ஒடிக்கிறீங்க. என்ன ஆச்சரியம்! சில சோப்புகளில் ரெண்டு அங்குல நீளத்தில் கனம் குறைந்த தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் ஒடிந்து முடிக்கிறபோது பத்தாயிரம் தங்கக் கட்டிகள் கிடைக்குது. கழுவி சாக்குல கட்டி கோயமுத்தூர், மதராஸ், பாம்பே, டெல்லி, கல்கத்தா ஆகிய இடங்களுக்குக் கொண்டு போய் விற்று வெகு சீக்கிரமே கோடீஸ்வரனா ஆக வேண்டியதுதான்.''

"கஸ்டம்ஸ் பிடிச்சா கேஸ் ஆயிடாதா?''

"பிடிபட்டா ஜெயில்ல கம்பி எண்ண வேண்டியதுதான். வேற வழி?''

"அதெல்லாம் நமக்கு வேண்டாம். நேர்மையான ஏதாவது பிசினஸ்...''

அப்போது ஆம்லெட் வந்தது. எல்லாரும் ஒரே மூச்சில் பிராந்தியைக் குடித்தார்கள். அற்புதம்தான்! சுவர்கள் இளம் நீல வண்ணத்தில் தெரிந்தது. ஒரு வேளை விளக்கொளியே இளம் நீல நிறத்தில் இருக்கிறதோ!

"ஆஜ், மைனே பியா, ஹோட்டோம் கா ப்யாலா.''

ரேடியோகிராமில் இனிமையான பாடல் வரிகள் காற்றில் கரைந்து ஒலித்தது. இசைத்தட்டு தன் பாட்டுக்குச் சுற்றிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே பார்த்தால் இருண்டு கிடக்கும் உலகம். ஊடுருவிப் பார்த்தால் மின்விளக்குகளை முத்து மணிகளாக அணிந்திருக்கும் இருண்ட கப்பல்கள். கப்பல்களே... செல்லுங்கள்! செல்லுங்கள்! உங்கள் பயணம் தொடரட்டும்! இந்த இரவு இப்படியே நீளட்டும்... முடிவே இல்லாமல் செல்லட்டும்! என்றென்றும் இந்த இன்ப உணர்வுகள் நிலை பெற்று நிற்கட்டும்... மயக்க நிலை நீடிக்கட்டும்... இளம் நீல நிறத்தில் ஆடி அசைந்துவரும் இனிய சங்கீதமே! நீதான் இந்த வாழ்க்கையெனும் கடலின் பயணத்தில்... தடியனான செங்கிஸ்கான் எங்கே? ஏ... உலகத்தின் தலைவனே! எங்களின் தலைமுடியைப் பிடுங்கி வெற்றி பெற்ற உன் கொடியின் உச்சியில் செருகிக் கொள்.

பாப்பச்சன் கண்களைத் திறந்தான். ஆச்சரியம்! பகல் மணி என்ன இருக்கும்! தலையைப் பின் பக்கம் திருப்பினான். பாப்பச்சன் சிரித்தான். நிறுத்தாமல் சிரித்துக் கொண்டே இருந்தான்.

போளி விழிகளைத் திறந்தான். பாப்பச்சனைப் பார்த்துச் சிரித்தான். விழுந்து விழுந்து சிரித்தான்.

"நீ ஏன்டா சிரிக்கிறே?''

"நீ ஏன்டா சிரிக்கிறே?''

போளி எப்படிப் படுத்துக் கிடக்கிறான் என்பது பாப்பச்சனுக்கு நன்றாகவே தெரியும். பாப்பச்சன் எப்படிப் படுத்துக் கிடக்கிறான் என்பது போளிக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும் இரண்டு பேருமே ஒரே மாதிரிதான் படுத்துக் கிடக்கிறார்கள் என்பது இருவருக்குமே தெரியாது. இரண்டு பேரும் பிறந்த மேனியுடன் சிமெண்ட் தரையில் கிடக்கிறார்கள். போளி கட்டிலுக்குக் கீழே கிடக்கிறான். பாப்பச்சன் சற்று தூரத்தில் படுத்துக் கிடக்கிறான். இரண்டு பேரும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை இரண்டு பேரும் தெரிந்து கொண்டபோது இருவருக்குமே வெட்கம் வந்துவிட்டது. இருவரும் கைலியைத் தேடிப் பிடித்துக் கட்டிக் கொண்டு மரியாதைக்குரிய மனிதர்கள் ஆகிவிட்டார்கள். பார்த்த போது மேஜையில் தெர்மாஃப்ளாஸ்கில் காபி தயாராக இருந்தது. கறுப்புக் காபி. இரண்டு பேரும் தலா ஒரு டம்ளர் காபியைக் குடித்து விட்டுத் தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டார்கள். காலி பாட்டில்கள் எங்கே? எத்தனை பாட்டில்கள் உள்ளே தள்ளினோம்? ஒன்றுமே ஞாபகத்தில் இல்லை. ஆனந்தமயமாக இருந்த நேற்றைய நல்ல நிமிடங்களை இப்போது ஏன் எண்ணிப்பார்க்க வேண்டும்?

"போளி, நான் ஒரு சார்மினார் பிடிக்கட்டுமா?''

"கூடாது!''

வேறு வழியில்லாமல் பாப்பச்சன் ஒரு கோல்ட் ஃப்ளேக்கை எடுத்து வாயில் வைத்தான்.

"பிரேம் எங்கே போனான்?''

"ரகு சேட்டன் வயல்பக்கம் போயிருக்கார். உங்க வேலைகளை நீங்க ஆரம்பிக்கலாம். எல்லாம் ரெடியா இருக்கு.'' செங்கிஸ்கான் சொன்னான்.

"இந்தத் தடியன் ஒரு பிசாசைப்போல பின்னாடி நின்னுக்கிட்டிருக்கான்'' என்று ஆங்கிலத்தில் போளி, பாப்பச்சனிடம் கூறத் தொடங்கியபோது செங்கிஸ்கான் இடை மறித்தான்:

"வேண்டாம் சார்... இங்கிலீஷ்ல முணுமுணுக்க வேண்டாம்.''

"ஏன், சொன்னா என்ன?''

செங்கிஸ்கான் சொன்னான்:

"சொன்னா நான் புரிஞ்சுக்குவேனே!''

"இங்கிலீஷ் படிச்சிருக்கியா என்ன?''

"இங்கிலிஷ் படிச்சு பி.ஏ. பாசாயிருக்கேன்.''

இதைக் கேட்டு அவர்கள் அதிச்சி அடையாமல் என்ன செய்வார்கள்? கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற ஒரு அடிமை! பேச்சிலர் ஆஃப் ஆர்ட்ஸ்! பரவாயில்லையே! ஒன்றுமே பேசாமல் போளியும் பாப்பச்சனும் காலைக்கடன்கள் ஒவ்வொன்றையும் முறைப்படி செய்தார்கள். முகத்துக்கு பவுடர் இட்டார்கள். ஆடைகள் அணிந்தார்கள். தலை வாரினார்கள். நாற்காலியில் அமர்ந்து தலா ஒரு சிகரெட் பிடித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிகளுக்கிடையில் செங்கிஸ்கான் என்ற அடிமை வேலைக்காரன் சில நாவல்களை அவர்களிடம் கூறினான். பிரேம்ரகுவின் தந்தையுடன்தான் இருந்தார் செங்கிஸ்கானின் தந்தை. இலங்கையில் சிங்களர்களுடன் உண்டான ஒரு கலகத்தில் பிரேம்ரகுவின் தந்தைக்கு இடது கை போய்விட்டது. அவரைக் காப்பாற்றப் போன செங்கிஸ்கானின் தந்தைக்குத் தலை போய்விட்டது.  நிகழ்ச்சி முழுவதும் நடந்து முடிந்தபிறகு போலீஸ்காரர்கள் வந்தார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை உண்டானபோது, காப்பாற்றியது பிரேம்ரகுவின் தாயார்தான். செங்கிஸ்கான் தன் படிப்பைத் தொடர்ந்து முடித்தது பிரேம்ரகுவின் உதவியால்தான். அவன் சகோதரியைப் படிக்க வைப்பதும் பிரேம்ரகுதான். அவன் தாய்க்கும் சகோதரிக்கும் தேவையான எல்லா செலவுகளையும் இங்கிருந்துதான் செய்கிறார்கள். சகோதரி இந்த வருடம் பி.ஏ. முடிக்கிறாள்.

"சகோதரியோட பேரு?''

"நளினி.''

சிறிது நேர அமைதிக்குப் பிறகு செங்கிஸ்கான் கேட்டான்:

"காபி கொண்டு வரவா?''

"சாப்பிடறதுக்கு ஒண்ணும் வேணாம்.''


கூறும்போது எல்லாவற்றையும் கூற வேண்டும் அல்லவா. நேற்று முழுவதும் குடிப்பதும் தின்பதுமாகவே இருந்ததால், பசியே உண்டாகவில்லை.

"ஸ்ட்ராங் காபி போதும்.''

செங்கிஸ்கான் இடத்தை விட்டு நகர்ந்தான்.

"சிகரெட் தயாரிக்கிற இயந்திரம் இங்க இருக்குன்னு சொன்னது பொய்.''

"மீசை ரப்பாயி சேட்டன் பொய் சொல்ல மாட்டார்.''

"அப்படின்னா இயந்திரம் எங்கே போச்சு?''

"பிரேம்ரகு வரட்டும்.''

"இந்தா வந்தாச்சு.'' பிரேம்ரகுவும் செங்கிஸ்கானும் வந்தார்கள். ஸ்ட்ராங்க் காபியை எல்லாரும் குடித்தார்கள். பிரேம்ரகு சொன்னான்:

"போளி, நீ ஏலிக்குட்டியைக் கல்யாணம் பண்ற நாளன்று என் சார்புல ஆயிரத்தொரு ரூபா பரிசா நான் தருவேன்.''

"தாங்க்ஸ்.'' போளி சொன்னான்: "பிரேம், நாங்கள் போகட்டா?''

"மத்தியானம் சாப்பிட்டுட்டுக் கொஞ்ச நேரம் தூங்கி நாலு மணிக்கு காபி சாப்பிட்ட பிறகு போனா போதுமே! கொஞ்ச நேரம் வேணும்னா ரம்மி விளையாடலாம்.''

"இல்ல பிரேம்... இப்ப கிளம்பினாத்தான் சரியா இருக்கும்.''

"சரி...'' பிரேம்ரகு எழுந்துபோய் சில பரிசுப் பொருட்களுடன் திரும்பி வந்தான்.

இரண்டு பாட்டில் ஹெய்க் விஸ்கி, இரண்டு புதிய சில்க் லுங்கிகள், விலை உயர்ந்த இரண்டு ஷேவிங் செட்டுகள், இரண்டு சோப்- மேட் இன் இங்க்லேண்ட். இது போக போளிக்குப் பிரத்யேகமாக ஒரு ரேபான் கண்ணாடி! பாப்பச்சனுக்குத் தனியாக வளைந்த சோப்பு பெட்டி மாதிரி அழகான சிறிய ஒரு தகரப் பெட்டி- இடுப்பு பாக்கெட்டில் வைக்கக்கூடிய அளவில் உள்ளது.

பிரேம்ரகு சொன்னான்:

"ஷேவ் செய்த பிறகு பிளேடைக் கழுவி மடித்து வைக்க வேண்டாம். நீர்ல முக்கிட்டு ரேஸர்லயே வச்சிக்கிற வேண்டியதுதான். ஸ்டெயின்லஸ் ஸ்டீல்ஸ்ல தயாரிச்சது. நூறு தடவையாது நிச்சயம் ஷேவ் பண்ணலாம். புகையிலை தீர்ந்த பிறகு நான் அனுப்பி வைக்கறேன். இதுபோல பிளேடுகளையும்.''

போளி கண்ணாடியை எடுத்து கண்களில் மாட்டினான். கறுப்போ, நீலமோ, பச்சையோ என்று சொல்ல முடியாத அளவிற்கு எல்லாம் கலந்த இருண்ட பெரிய கண்ணாடிகள். ரோல்ட் கோல்ட் ஃப்ரேம். போளி கண்ணாடி அணிந்த கோலத்தில் ஸ்டைலாக இருந்தான். பாப்பச்சன் தன் சோப்புப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அகலமான கனமே இல்லாத ஒரு ரப்பர் பேண்ட். பிறகு புகையிலை, அதனுடன் சிகரெட் பேப்பரும்.

"இதென்ன பிரேம்?''

"சிகரெட் தயாரிக்கிற இயந்திரம்.''

பாப்பச்சனும் போளியும் மயங்கிக் கீழே விழாதது ஒன்றுதான் பாக்கி. ஆகாயமே இடிந்து கீழே விழுந்தது மாதிரி இருந்தது அவர்களுக்கு. அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமலே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்... மனதில் எப்படி எல்லாம் கனவுக் கோட்டைகள் கட்டி வைத்திருந்தார்கள்! எல்லாம் பொசுக்கென்று ஆகிவிட்டது. சிகரெட் பாக்டரி... பிரேம்ரகு கண் இமைக்கும் நேரத்தில் நான்கு சிகரெட்டுகளை உண்டாக்கிக் காண்பித்தான். பிரேம்ரகு, பாப்பச்சன், போளி, செங்கிஸ்கான்- நான்கு பேரும் சிகரெட்டைக் கொளுத்தி ஊதினார்கள். ஒரு சிகரெட்டை பாப்பச்சனே தயாரித்தான்.

"டேய், இதோட விலை என்ன?''

"ஒரு பத்து ரூபா வரும்.''

போளிக்கு ஒரே வெறுப்பாகிப்போனது. யானை வேட்டைக்குப் போய் கிடைத்தது முட்டை என்றால்...

"வாடா போகலாம்.''

பாப்பச்சனைக் கொல்ல வேண்டும்போல் இருந்தது.

இயந்திரத்தைப் பாப்பச்சன் பாக்கெட்டில் பக்தியுடன் பத்திரமாக வைத்தான். மீதியிருந்த சாமான்களை பேகில் வைத்தான். செங்கிஸ்கான் பேகைத் தூக்கினான். எல்லாரும் வெளியே வந்தார்கள். அல்சேஷன் நாய்கள் பலமாகக் குரைத்தன. கார் கிளம்பியது; பேக்கை மடியில் வைத்தவாறு பாப்பச்சன் போளியின் அருகில் அமர்ந்தான்.

"குட் பை பிரேம். குட் பை செங்கிஸ்கான்.''

"குட் பை. கம் அகெய்ன். கடவுள் காப்பாற்றட்டும்.''

கார் கிளம்பிற்று. கேட்டைக் கடந்து மண்ரோட்டில் சென்று மெல்ல தார்போட்ட சாலையில் வண்டி செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் காரின் வேகம் அதிகரித்தது. கள்ளுக் கடையைத் தாண்டி கார் சென்றது. அப்போது பாப்பச்சனுக்கு புதிய ஒரு ஐடியா தோன்றியது. நினைத்துப் பார்த்தபோது வாழ்க்கைக்கு ஒரு உத்திரவாதம் கிடைத்ததுபோல் இருந்தது. மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி தோன்றியது. இனி வீட்டில் யாரும் கப்பைக் கிழங்கின் தோலை வெறுமனே தூக்கி வீசி எறிவதில்லை. போளியிடம் எப்படியாவது கேட்டு ஒரு ஐந்நூறு ரூபாய் வாங்க வேண்டும். வேண்டாம். பிரேம்ரகுவிடம் வாங்கலாம். நகரில் ஒரு வெற்றிலைப் பாக்கு கடை! பழம், மிட்டாய், சாக்லெட், சிகரெட்கள், பீடி, வெற்றிலை ஆகியவற்றை அங்கு விற்க வேண்டும். கடையின் பெயர் தாரா சிகரெட் ஃபாக்டரி. கப்பைக் கிழங்கின் தோலைத் துண்டு துண்டாக நறுக்கி, வேகவைத்து, கழுவி, நெருப்பில் வறுத்து, புகையிலை சேர்த்து, அபினோ, கஞ்சாவோ கலக்கிய நீரைத் தெளித்து நெருப்பில் மீண்டும் வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். "தாரா ஸ்பெஷல்ஸ்" இங்கு கிடைக்கும். விலை... பன்னிரண்டு பைசா. அதிக பட்சம் இருபத்தைந்து பைசா வரை விற்கலாம். நாளொன்றுக்கு நூறு சிகரெட்டாவது விற்பனை செய்ய வேண்டும். அப்படி விற்பனை செய்தால் சில்லரைச் செலவு போக நிகர லாபம் இருபது ரூபாய்.

அருமையான திட்டம்!

"நிஃப்டின்னு சொல்லலாம்.'' வாய்விட்டுச் சொன்னான் பாப்பச்சன். இதைக் கேட்டதும் போளி காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

"என்னடா டாகே உன்னோட நிஃப்டி?''

"ஒண்ணுமில்ல...'' கோல்ட் ஃப்ளேக்கை எடுத்து உதட்டில் வைத்து ஸ்டைலாகப் புகை விட்டவாறு பாப்பச்சன் கேட்டான்:

"சடன் பிரேக் போட வேண்டிய அவசியம்?''

"நாம ஒண்ணு ரெண்டு தப்புகள் செஞ்சிட்டோம். தப்புன்னு சொல்றதைவிட பண்பாடு இல்லாமைன்னு சொல்றதுதான் சரி.''

"விளக்கமா சொல்லு!''

"நாம கிளம்புறப்போ பிரேம்ரகுவோட அம்மாக்கிட்டயும், அவனோட சகோதரிகிட்டயும் போய்வர்றோம்னு சொல்லல. பிறகு... பிரேம்ரகு நளினியைக் கல்யாணம் கட்டுறப்போ என்ன பரிசு தரப்போறோம்னு சொல்லவே இல்ல...''

கூறும்போது எல்லாவற்றையும் கூற வேண்டும் அல்லவா? நடந்தது தவறுதான்.

"உண்மையாகவே வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்!''

"அதுக்கு என்ன செய்யலாம்?''

"ஆளுக்கு ஒரு பெக் ஷெய்க் அடிச்சா என்ன?''

"இந்த வருத்தம் ஒரு பெக்ல எப்படி நிக்கும்? பிறகு... தண்ணி அடிச்சிட்டு கார் ஓட்டுறதுல ஆபத்து வேற இருக்கு! என்னோட அப்பா எப்படி இறந்தார்னு போளி வக்கீலுக்கு ஞாபகத்துல இருக்கா?''

"நல்ல ஒரு காரியத்திற்காகக் கொஞ்சம் தண்ணியடிக்க நினைச்சா... இவனோட ஒரு மேடைப் பிரசங்கம்! நீ என்ன சிகரெட்டுடா பிடிக்கிற பாப்பச்சா?''

பாப்பச்சன் உண்மையைச் சொன்னான்:

"கோல்ட் ஃப்ளேக்.''


"அந்தப் பாக்கெட்டை இங்கே எடு. நீயும் உன் கோல்ட் ஃப்ளேக்கும். டாகே, நீ எல்லாம் சார்மினார் குடிச்சா போதாதா? வாய் என்ன வெந்தா போகும்?''

பாப்பச்சன் மீதியிருந்த கோல்ட் ஃப்ளேக் சிகரெட்டுகளை பாக்கெட்டோடு எடுத்து போளியின் கையில் கொடுத்தான். அதை வாங்கிய போளி தன் பாக்கெட்டில் வைத்தான். பிறகு... பாப்பச்சனின் உதட்டில் புகைந்து கொண்டிருந்த கோல்ட் ஃப்ளேக் சிகரெட்டைத் தட்டிப்பறித்து தூர எறிந்தான் போளி.

பாப்பச்சன் சார்மினார் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துக் கொளுத்தி நிம்மதியாகப் புகை விட்டான்.

"டேய் டாகே, எடுடா அந்த சிகரெட் தயாரிக்கிற இயந்திரத்தை.''

பாப்பச்சன் அதை எடுத்து போளியின் கையில் தந்தான்.

"உரல்ல போட்டுக் குத்திப் பொடியாக்கி நெருப்பை வச்சு எரிக்கப் போறேன். நீ இனி இதைப் பார்க்கவே முடியாது. டாகின் டாக் ஜெனரல் மேனேஜர்! இயந்திரத்தோட சொந்தக்காரன்!''

பாப்பச்சனின் ஆகாயக் கோட்டைகள் தகர ஆரம்பித்தன. இதோ விழுந்து கிடக்கிறது தாரா சிகரெட் ஃபாக்டரி. ஒரு பிளடி இம்பீரியலிஸ்ட் அண்ட் கேப்பிட்டலிஸ்ட். போளி, உனக்கு ஏழைகளான எங்களோட ஆன்மாதானே வேண்டும்- அதுக்குமேலே ஏறி நின்னு ருத்ரதாண்டவம் ஆடுறதுக்கு! கஷ்டப்பட்டு வாழ்க்கையில் எப்படியாவது உயரலாம்னு நெனைச்சா ஏழைகளை உன்னைப் போல கண்ணுல ரத்தம் இல்லாத பணக்காரங்க விடுறது இல்ல. வாழ்க்கையே ஒரு தமாஷா இருக்கு! எல்லா வசதிகளையும் கடவுள் உனக்குத் தந்திருக்காரு. என்னோட வாழ்க்கையை நசுக்கி எறிஞ்சிட்டா நீ சந்தோஷப்படணும்? தெய்வமே...! பாப்பச்சனின் இதயம் அழுதது. இரண்டு துளி நீர் பாப்பச்சனின் விழிகளில் இருந்து புறப்பட்டுக் கன்னத்தின் வழியே வழிந்தது. போளி என்ற பணக்காரன் அவனையே உற்றுப் பார்த்தவாறு அரக்கனைப்போல வேகமாக காரைச் செலுத்தினான் காற்றைப்போல.

கார் கிளம்புவதற்கு முன்பு போளி சிரித்தான். பிறகு இயந்திரத்தை எடுத்து பாப்பச்சனின் கையில் திருப்பிக் கொடுத்தான். "வெற்றி பெறுடா டாகே! உனக்கு நான் ஆயிரத்தொரு ரூபாய் தருவேன். நீ உன்னோட வாழ்க்கையை தைரியமா தொடங்கு...''

பாப்பச்சனுக்கு மகிழ்ச்சி உண்டானது. பாப்பச்சன் சிரித்தான். கார் காற்றெனப் பறந்தது. போளி பலமாகச் சிரித்து உரத்த குரலில் சொன்னான்:

"அவனோட ஒரு காதலி! அவனோட... ஒரு சிகரெட் ஃபாக்டரி... ஒரு... தாரா ஸ்பெஷல்ஸ்...!''

மங்களம்.

சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.