Logo

ஊஞ்சல்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6840
oonjal

நான் ஐம்பத்தெட்டாவது வயதில் வேலையை உதறி எறிந்துவிட்டு, ஒரு நடுத்தரமான நகரத்தில் போய்த் தங்கியபோது என்னுடைய பழைய நண்பர்கள் எனக்கு கவலை நிறைந்த கடிதங்களை எழுதினார்கள். நான் எந்த வழியில் நேரத்தை நகர்த்துவேன் என்று கேட்டார்கள். முடிந்தவரையில் சீக்கிரம் ஒரு டென்னிஸ் க்ளப்பில்சேர்ந்து, பல வருடங்களுக்கு முன்னால் விளையாடத் தெரிந்திருந்த அந்த விளையாட்டில் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஈடுபடும்படி அவர்களில் சிலர் எனக்கு அறிவுரை கூறியிருந்தார்கள். நகரத்தில் இருந்த பிரிட்டிஷ்கவுன் சில் நூலகத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும்...

தொழில் நிறுவனங்களில் ஒன்றின் இயக்குனராக இருக்க சம்மதம் என்று உயர்ந்த வட்டாரத்தில் இருப்பவர்களிடம் அறிவிக்க வேண்டும். இவை எதற்கும் தயாராக இல்லையென்றால், வயதான - கன்னிப் பெண்ணான ஒரு டாக்டரையோ பேராசிரியரையோ சீக்கிரமாகத்  திருமணம் செய்து கொள்ள வேண்டும்...

நான்அந்தக் கடிதங்களுக்கு பதில் எழுதவே இல்லை. எனக்குத் தனிமையில் இருப்பதுதான் பிடித்திருந்தது. வாழ்க்கையில் அன்று வரை கிடைக்காததும், இனிமையானதுமான தனிமை.... தனிமை என்ற லட்சியத்தை மனதில் வைத்திருந்ததுதான் காரணமாக இருக்க வேண்டும் - நான் திருமண ஆலோசனைகள் ஒவ்வொன்றையும் வேண்டாம் என்று மறுத்தேன். ராஜ்யலட்சுமி என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்திருந்தால், நான் தனிமை என்ற நிரந்தரக் கனவை எப்போதோ விட்டெறிந்திருப்பேன். காரணம்- பதினெட்டு வயதிலிருந்து இருபத்து மூன்று வயது வரை நான் அந்த இளம்பெண்ணின் காந்த வளையத்தில் கட்டப்பட்டிருந்தேன்.சுயமாகச் சிந்திக்கவும் முடிவு எடுக்கவும் முற்றிலும் முடியாத அடிமையாக மட்டுமே நான் இருந்தேன். ராஜ்யலட்சுமி என்னை அல்லாமல் வேறொரு ஆணைக் கணவனாகத் தேர்வு செய்வாள் என்று நான் அப்போது எப்படி எதிர்பார்ப்பேன்? சென்னையில் லயோலா கல்லூரியில் சேர்வதற்காகச் சென்றபோது, என் கையில் இருந்த பச்சை நிற இரும்புப் பெட்டியில் இரண்டு சட்டைகளும் இரண்டு பேண்ட்டுகளும் இருந்தன. துணிகளுக்கு அடியில் என் தந்தை தந்த இருநூறு ரூபாய்களும், ஒரு நண்பருக்கு எழுதிய கடிதமும் மட்டுமே இருந்தன.  என் தந்தையின் நண்பர் ஒரு டாக்டர். அவர் சென்னையில் நான் தங்குவதற்குத் தன் வீட்டில் ஒரு அறையை ஏற்பாடு செய்து கொடுப்பார் என்று என் தந்தை என்னிடம் கூறியிருந்தார்.ஹாஸ்டலுக்குத் தர வேண்டிய தொகையாவது அந்த வகையில் மிச்சப்படுத்தலாமே...ஆனால், டாக்டர் பணிக்கர் கடிதத்தை வாசித்த உடனே மிடுக்கான குரலில்என்னிடம் சொன்னார்:

“சிவசங்கரா, நீ நேராகப் போய் ஹாஸ்டலில் சேர்வதுதான் நல்லது. உன் கூட இருந்து படிப்பதற்கு சம வயதைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அப்படிப் படித்தால் மட்டுமே நல்ல ரேங்க் வாங்கித் தேர்ச்சி பெற முடியும்.

டாக்டர் தன்னுடைய விசாலமான வீட்டில் என்னைச் சிறிது காலத்திற்காவது தங்கச் செய்வார் என்று என் தந்தை எதிர்பார்த்திருந்தார். அந்த வருடத்தின் நெல் விவசாயம் பெரிய அளவில் மழை பெய்ததால், மூழ்கி நாசமாகிவிட்டது. அதனால் நெல் விற்று கிடைக்கக்கூடிய தொகை என் தந்தைக்குக் கிடைக்கவில்லை. என் தந்தையும் பணிக்கரும் ஒரு காலத்தில் என் அப்பாவுடைய தந்தையின் வீட்டில் தங்கித்தான் உயர்நிலைப்பள்ளிக் கல்வியையே நிறைவு செய்திருக்கிறார்கள். அப்போது தங்களுக்கிடையே உண்டாகிவிட்டிருந்த மனரீதியான நெருக்கம் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் நிலைத்து நிற்கும் என்று விவசாயியாக இருந்த என் தந்தை நினைத்தார். பணிக்கர் நாகரீகப் போக்கு கொண்டவராகவும், அந்தப் பகுதியில் வாழும் நடுத்தர மனிதர்களிலேயே மிகவும் வசதி படைத்த மனிதராகவும் இருந்தார். நீல சில்க் ட்ரெஸ்ஸிங் கவுன் அணிந்து, ஒரு புகையிலை பைப்பை எரிய வைத்து தன் உதடுகளுக்கு இடையில் வைத்துக் கொண்டு, வாசலில் உட்கார்ந்திருந்த அவரைக் கண்டவுடன் என் உள்ளங்கைகள் பதைபதைப்பாலும் பயத்தாலும் திடீரென்று வியர்த்தன. நான் மரியாதையுடன் கைகளைக் கூப்பினேன். உட்காருமாறு அவர் சைகை செய்த பிறகும், நான் தூணில் சாய்ந்து கொண்டு நின்றேனே தவிர, உட்காரவில்லை.

“சிவசங்கரா, தூணில் சாய்ந்து நின்றால், உன்னுடைய தலையில் இருக்கும் எண்ணெய் முழுவதும் அந்தத் தூணில் ஒட்டிக் கொள்ளும்'' - பணிக்கர் சொன்னார். அவர் விளையாட்டாக ஏதோ கூறுகிறார் என்று தவறாக எண்ணிக்கொண்டு நான் உரத்த குரலில் சிரித்தேன். பிறகு அவருடைய முக வெளிப்பாட்டைப் பார்த்த பிறகுதான், நான்அவர் விளையாட்டாக எதையாவது கூறி மற்றவர்களைச் சிரிக்கச் செய்பவர்களில் ஒரு ஆள் அல்ல என்பதே புரிந்தது. என்னுடைய உள்ளங்கைகள் மேலும் வியர்த்தன.என் முழங்கால்கள் ஒன்றோடொன்று உரசுவதைப் போலவும், என் கணுக்கால்களில் வியர்வைத் துளிகள் வழிந்து கொண்டிருப்பதைப் போலவும் நான் உணர்ந்தேன். நான் தலையைக் குனிந்து கொண்டு ஒரு பீடத்தின் மீது உட்கார்ந்தேன்.

“அது தேநீர் கொண்டு வந்து வைக்கப்படும் "டீப்பாய்". நீ அதில் உட்கார்ந்தால், அதன் கால்கள் உடைந்துவிடும்'' – பணிக்கர் மிடுக்கான குரலில் சொன்னார்.ஒவ்வொரு வார்த்தையையும் கூறி முடித்தவுடன், பணிக்கர் தன்னுடைய பைப்பை மீண்டும் ஒருமுறை கடித்து, அதில் இருக்கும் நெருப்புப் பொறிகளைப் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நாகரீக உலகத்தின் முன்மாதிரியாக நான் அந்த நடுத்தர வயது மனிதரை அன்று பார்த்தேன்.

“அப்பாவைப் பற்றி சிறப்புச் செய்திகள் என்ன? நலமாக இருக்கிறாரா? வயலும் நிலமும் எவ்வளவு இருக்கு? சுமார் முப்பது ஏக்கர் இருக்குமா?'' – பணிக்கர் என்னிடம் கேட்டார்.  என்னிடம் அந்தக் கேள்விகளைக் கேட்கும் வேளையில் நிழலில் விழுந்து கிடந்த அந்தக் கண்கள் என் முகத்தில் பயணிக்கவே இல்லை. அவை அந்த வீட்டின் முன் பக்கத்திலிருந்த தோட்டத்திலும் வலது பக்கத்திலிருந்த டென்னிஸ் மைதானத்திலும் அலட்சியமாகத் தாவி விளையாடிக் கொண்டிருந்தன.

“அப்பா நலமாக இருக்கிறார். கொஞ்சம் நெல் விவசாயம் இருக்கு. ஐந்து ஏக்கர் பூமியும்... பிறகு கொஞ்சம் வாழை மரங்களும் இருக்கு. அப்பாவே இரண்டுநேரங்களில் கிணற்றில் இருந்து நீர் எடுத்து எல்லாவற்றுக்கும் பாய்ச்சுவார்.''

நான்உற்சாகத்துடன் கூறிக் கொண்டிருந்த தகவல்கள் எதையும் டாக்டர் பணிக்கர் கவனிக்கவே இல்லை என்று எப்படியோ எனக்கு அந்த நிமிடத்தில் புரிந்தது.அவருடைய கண்கள் தூக்கத்தில் இருப்பதைப் போல மூடியிருந்தன. அப்போது பைப், கையில் இருந்து எடுக்கப்பட்டு மேஜை மீது இடம் பிடித்திருந்தது. என்னுடைய பரபரப்பைக் கண்டதால் இருக்க வேண்டும் – அதுவரையில் என்னுடைய கவனத்தில்படாமல் ஒரு பூச்சட்டிக்குப் பின்னால் கட்டித் தொங்க விடப்பட்டிருந்த ஊஞ்சலில், பாதி கால்களைக் காட்டியவாறு கவிழ்ந்து படுத்திருந்த ஒரு இளம்பெண் திடீரென்று என்னைப் பார்த்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.


“அப்பா உறங்கிவிட்டார். உன் பேச்சைக் கேட்டு அப்பா உறங்கி விட்டார்'' – அவள் சொன்னாள். அவள் ஒரு வெள்ளை நிற ஃப்ராக் அணிந்திருந்தாள். அவளுடைய கைகளும் கால்களும் மெலிந்தவையாக இருந்தாலும், கவிழ்ந்து படுத்திருந்தபோது ப்ளவ்ஸூக்கு மேலே இருந்த ஓரங்கள் வெளிக்காட்டிய மார்பகங்கள் முழுமையானவளர்ச்சி அடைந்தவை என்பதை ஒரு அதிர்ச்சியுடன் நான் தெரிந்து கொண்டேன்.எனக்கு உடனடியாக அந்த வீட்டை விட்டுக் கிளம்பி, வேறு எங்கேயாவது போக வேண்டும் போல இருந்தது. கிராமத்தில் நான் அதுவரையில் பார்த்துப் பழகியிருந்த ஆட்களுடன் எந்தவொரு ஒற்றுமையையும் டாக்டரிடமோ அவருடைய வளர்ந்திருக்கும் மகளிடமோ இருப்பதாக என்னால் காணமுடியவில்லை. என்னுடன் என் தந்தை சென்னைக்கு வராததைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது, எனக்கு சமாதானமும் சந்தோஷமும் உண்டாயின. அன்று ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தது.சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அங்கேயே தங்கிவிட்டு, திங்கட்கிழமை லயோலா கல்லூரிக்குச் சென்று இன்டர்மீடியட்டில் மாணவனாகச் சேரலாம் என்றுபணிக்கர் சொன்னார். “நான் உன்கூட வரணுமா?'' – அவர் கேட்டார்.  கேள்விகேட்ட குரலின் கனமும் கம்பீரமும் என்னை பரபரப்பு அடையச் செய்தன.

“வேண்டாம்... நான் தனியாகப் போய்க் கொள்கிறேன்'' - நான் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.

அப்போது அந்த இளம்பெண் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

“நான் உன்கூட வரலைன்னா, உனக்கு அட்மிஷன் கிடைக்காது சிவசங்கரா'' – பணிக்கர் சொன்னார்.

“சிரமமா இருக்காதா?'' - நான் கேட்டேன்.

பணிக்கர் ஒரு கோணலான புன்சிரிப்பை முதல் தடவையாக எனக்குப் பரிசளித்தார்.

“சிரமம் உண்டாகும். சரிதான். என் நோயாளிகள் வந்து மருத்துவமனையில் காத்திருப்பார்கள். ஆனால், உன் தந்தை கடிதம் எழுதினால், அதன்படி நடக்காமல் என்னால் இருக்க முடியாதே! எங்களுக்கிடையே இருக்கும் உறவைப் பற்றி உனக்குத் தெரியும் அல்லவா?''

ஏதோ ஒருசில தகவல்கள் தான் எனக்குத் தெரியும். ஆனால், நான் தலையைக் குலுக்கினேன்.

“உன் அப்பா என் தாயின் முதல் கணவரின் மருமகன்'' – பணிக்கர் சொன்னார். பிறகு தமாஷாகத்தான் ஏதோ கூறிவிட்டதைப்போல நினைத்து, உரத்த குரலில் சிரித்தார்.

“கேள்விப்பட்டிருக்கேன்'' - நான் மெதுவான குரலில் சொன்னேன்.

“உன் வாயில் கட்டிய பல் எதுவும் இருக்குதா சிவசங்கரா? நீ பேசுறது எதுவும் சரியா புரியவே இல்லையே!'' - பணிக்கர் சொன்னார்.

அந்த இளம்பெண் அதற்குப் பிறகும் சிரித்தாள். பணிக்கர் அவள் பக்கம் பார்வையைச் செலுத்தினார்.

“எழுந்துபோய் எதையாவது படி ராஜு உனக்கு நாளைக்கு கணக்குத் தேர்வு இருக்குல்ல?'' -பணிக்கர் சொன்னார். “என்னுடைய மகள். எட்டாம் வகுப்பில் படிக்கிறாள்.கணக்கில் எப்போதும் தோற்று விடுவாள். ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பாள். சிவசங்கரா, இவளுடன் உள்ளே போ. சமையலறையில் தேநீரும் பலகாரமும் வாங்கி சாப்பிடலாம். என்னுடைய மனைவி இறந்துவிட்டாள் என்ற விஷயம் உனக்குத் தெரியுமல்லவா? இங்கு உணவு எடுத்துக்கொண்டு வந்து தருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால், முழுப்பட்டினிதான் கிடக்கணும். பசி எடுக்குறப்போ சமையலறைக்குள் சென்று சமையல்காரனிடம் உணவு வேண்டும் என்றுசொன்னால் போதும்'' - பணிக்கர் சொன்னார்.

சமையலறையை நோக்கி நடக்கும்போது அந்த இளம்பெண் இரண்டு தடவை என் பக்கம் திரும்பிப் புன்சிரிப்பைத் தவழ விட்டாள்.

“நான்தான் ராஜ்யலட்சுமி'' - அவள் சொன்னாள்.

“ராஜலட்சுமி... அப்படித்தானே?'' நான் கேட்டேன். அவள் தலையை ஆட்டினாள் - மறுப்பது மாதிரி.

“இல்லை.... ராஜ்யலட்சுமி. ராஜ்யத்தின் லட்சுமி!''

“குழந்தை வீட்டின் லட்சுமியாக இருந்தால் போதாது. ராஜ்யத்தின் லட்சுமியாக ஆகணும். அப்படித்தானே?'' - நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

டாக்டர் பணிக்கரின் மிகுந்த கம்பீரத்திற்கு மத்தியில் அன்பான ஒரு தந்தை இருக்கிறார் என்பதை நான் படிப்படியாகப் புரிந்து கொண்டேன். தன்னுடைய மகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, பணிக்கரின் கண்கள் மழையில் நனைந்த மலர்களைப் போல ஆவதை நான் பல தடவை பார்த்துவிட்டேன். ராஜு என்று அவளை அழைக்கும்போது, அந்த அழைப்பில் தன்னுடைய வாழ்க்கைமீது கொண்ட ஆசை முழுவதையும் அவர் வெளிப்படுத்தினார்.

கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கிய பிறகு, எல்லா ஞாயிற்றுக்கிழமையும் நான் பணிக்கர் மாமாவைப் பார்ப்பதற்காகச் செல்ல ஆரம்பித்தேன். அவருக்கு சம வயதில் உள்ள விருந்தாளிகள் இருந்ததால், ஒன்றோ இரண்டோ வார்த்தைகள் பேசுவதற்கு மட்டுமே என்னால் முடிந்தது. நோயாளிகளும் மதிய உணவு நேரம் வரை அவரை வந்து பார்த்தார்கள். நான் ராஜுவின் படிப்பு அறையில் இருந்து, அவளுக்கு கணக்கு சொல்லித் தர முயல்வதிலோ அவளுடைய பொய் கதைகளைக் கேட்டு ரசிப்பதிலோ ஈடுபட்டிருந்தேன். தன்னுடைய பிரியத்திற்குரிய வகுப்பு ஆசிரியையின் அழகைப்பற்றியும், ஆடை அணியும் முறையைப் பற்றியும் எவ்வளவு பேசினாலும் அவளுக்குப் போதும் என்றே தோன்றாது. சிறுவயதிலேயே தன்னுடைய தாயை இழந்துவிட்டதாக இருக்கலாம் - அந்த இளம்பெண் எப்போதும் ஒரு தாயைத் தேடிக் கொண்டிருந்தாள்.ஏதாவதொரு நடுத்தர வயதைக் கொண்ட பெண் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துவிட்டால், ராஜு விரலைக் கடித்துக்கொண்டு அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் பார்வைக்கான அர்த்தம் என்ன என்று நான் கேட்டபோது, அவள் சொன்னாள்:

“இப்போ என் தாய் உயிருடன் இருந்திருந்தால், இந்தப் பெண்ணைப் போல பார்ப்பதற்கு இருப்பாங்க இல்லையா? தலை முடி கொஞ்சம் நரைத்திருக்கும். உடல் சற்று தடிமனாக....''

அந்த நிமிடங்களில் ராஜுவை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆழமான ஆசை எனக்குத் தோன்றியது. அவளைக் கட்டிப்பிடித்து, அவளுடைய கன்னங்களை முத்தமிட, அவளை நான் என்றென்றும் காதலிப்பேன் என்று கூற.... ஆனால், ஆணாகப் பிறந்துவிட்டேன் என்ற காரணத்தால் அப்படிப்பட்ட ஆசைகளை மனதிற்குள்ளேயே பூட்டி வைக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். அவள் வளர்ந்து கொண்டிருந்தாள்.நானும்.

ஒரு கோடை காலத்தில் வீட்டிற்குத் திரும்பியபோது என் தாயிடம் பணிக்கர் மாமாவின் மகளைப் பற்றி நான் தேவைக்கும் அதிகமாகவே கூறிவிட்டேன். என் தாய்க்கு என் விருப்பங்களைப் புரிந்து கொள்ள சிரமமாக இல்லை.

“படித்து தேர்ச்சி பெறட்டும். பிறகு நாம் அந்தக் கல்யாணத்தை அங்கேயே நடத்திடுவோம்'' - என் தாய் புன்னகைத்துக்கொண்டே சொன்னாள்.

நான்அதிர்ச்சியடைந்துவிட்டேன். டாக்டர் பணிக்கர் என்ற லட்சாதிபதியின் ஒரே மகளைத் திருமணம் செய்து கொள்ள வறுமையில் உழலும் நான் விருப்பப்படுவதா?எந்தக் காலத்திலும் ஆசைப்படக் கூடாது.

“அம்மா, என்ன பைத்தியக்காரத்தனமா புலம்பிக்கிட்டு இருக்கீங்க? அவங்க யாரென்று உங்களுக்குத் தெரியாதா?


ஐரோப்பிய வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பணக்காரர்கள், பெரிய மனிதர்கள்.... நானோ? ராஜுவைத் திருமணம் செய்து இந்தச் சிறிய கிராமத்திற்கும் இந்த ஓலை வேய்ந்த குடிசைக்கும் அழைத்துக் கொண்டு வர என்னால் முடியுமா?'' – நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

“அவர்களும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாமும் நல்ல குடும்பத்தில் உள்ளவர்கள்தான். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணம் என்றைக்கும் பிணம்தான்.  பணவசதி இல்லையென்றாலும் உனக்கு அறிவு இருக்கு. நல்ல குணம் இருக்கு. நல்ல உடல் நலம் இருக்கு. பிறகு ஏன் அவளுடைய கணவனாக உன்னை நினைக்கக் கூடாது?'' - என் தாய் கேட்டாள்.

டாக்டர் பணிக்கர், அவளுடைய மகள் ஆகியோரின் புகைப்படங் களை நான் என் தாய்க்கு அனுப்பி வைத்தேன். அவற்றில் இரண்டு புகைப்படங்களை எடுத்து மரச்சட்டங்கள் போட்டு எங்களுடைய வீட்டின் முன்னறையில் என் தாய் தொங்கவிட்டாள்.உறவினர்களிடமும் சினேகிதிகளிடமும் அவள் சற்று உரிமை உணர்வுடன் சென்னையில்இருக்கும் பணிக்கரின் குடும்பத்தைப் பற்றி பேசவும் செய்தாள். ராஜுவின் தலையில் கூந்தல் அடர்த்தியாக இல்லை என்று கூறி, தேங்காய் வெந்த- தேங்காய்எண்ணெய்யைத் தயாரித்து அவளிடம் தரும்படி ஒருமுறை என் தாய் கொடுத்தனுப்பினாள். அதைத் தலையில் தேய்த்தாளா என்று ராஜுவிடம் ஒரு நாள் கூட கேட்பதற்கு எனக்கு தைரியம் இல்லை.

ராஜுவிற்கு பதினேழு வயது கடந்திருக்கும். ஒருநாள் அவள் என்னுடைய ஹாஸ்டலுக்குத் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்தாள். மாலை நெருங்கிய நேரம். நான் பரபரப்பு அடைந்துவிட்டேன். ரகசியமாக சந்தோஷப்படவும் செய்தேன். என் நண்பர்கள் மத்தியில் பொறாமை உண்டாகிற மாதிரி ராஜு என்னுடைய வலது கையைப் பிடித்துக்கொண்டு, என்னுடன் நெருக்கமாக நின்று கொண்டு என் காதில் மெதுவான குரலில் சொன்னாள்:

“நீங்க எனக்கு ஒரு விஷயத்தில் உதவணும்.''

லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியபோது அவளைத் தடுத்து நிறுத்தி போலீஸ்காரர்கள் கார்டு கொடுத்திருப்பார்களோ?

“என்ன ஆச்சு?'' - நான் கேட்டேன்.

“இந்த ஹாஸ்டலில் தங்கியிருக்கும் உண்ணித்தானிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கணும். தேவதாஸ் உண்ணித்தான்....'' - அவள் சொன்னாள்.

“ஃபுட்பால் ப்ளேயர் உண்ணித்தானா?''

“ஆமாம்...''

என்னுடைய சர்வ நாடிகளும் அந்த நிமிடத்தில் தளர்வதைப் போல எனக்குத் தோன்றியது.எனக்கு உண்ணித்தானைப் பிடிக்காது. இளம் பெண்களை ஏமாற்றிக் கொண்டும், பிறகு அவர்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டும், மூன்றாம் தரத்தைச் சேர்ந்தவர்களின் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டுமிருந்த - ஒரு வாலிப முறுக்கில் சுற்றிக் கொண்டிருந்த மனிதன்தான் தேவதாஸ் உண்ணித்தான். அவனுடைய குணங்கள் எப்படிப்பட்டவை என்பதைத் தெரிந்த பிறகும், இளம்பெண்கள் அவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் - அவன் வெள்ளை நிறத்தில் இருந்தான். நல்ல உடல் பலத்தைக் கொண்டவனாக இருந்தான். உயர்ந்த நெற்றியும் அழகான மூக்கும் வரிசை தவறாத பற்களும் அவனுக்கு இருந்தன. என் ராஜுவும் அவனுக்கு இரையாகி விடுவாளோ? நான் தயங்கித் தயங்கி சொன்னேன்: “அவன் நல்லவன் இல்லை, ராஜு!''

“தேவதாஸுக்கு ஒரு நடத்தைச் சான்றிதழ் தரும்படி நான் உங்களிடம் கூறவில்லை. இந்தக் கடிதத்தை யாருக்கும் தெரியாமல் அவரிடம் சேர்த்தால் போதும்'' – ராஜு சொன்னாள். அது ஒரு ராஜ குமாரியின் கட்டளையாக இருந்தது. நான் தலையைக் குனிந்து கொண்டேன்.

அன்றிலிருந்து காதலி - காதலனின் தூதுவனாக நான் ஆகிவிட்டேன். வாய் திறக்காத, கவலையுடன் இருந்த தூதுவன். உண்ணித்தான் என்னை அன்னப்பறவை என்று அழைக்க ஆரம்பித்தான்.அதையும் நான் பொறுத்துக் கொண்டேன். கால்பந்து விளையாட்டு நடந்து கொண்டிருக்கும்போது, உண்ணித்தானை உரத்த குரலில் பாராட்ட முன்னால் இருந்த காலரியில் ராஜுவும் வந்து உட்கார்ந்து கொள்வாள். சிறிதும் வெட்கமே இல்லாத அந்தச்

செயல் என்னை கோபம் கொள்ளச் செய்தது. ஆனால், அதைப்பற்றிச் சொன்னபோது, அவள் என்னைத் திட்டினாள்:

“என்னுடைய நடத்தையைப் பற்றி விமர்சிப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?'' - அவள் கேட்டாள்.

அவளைப் பற்றி குரூரமாக, வெறுப்புடன் பேசிக் சிரிக்கும் இளைஞர்களிடம் நான் பல தடவை சண்டைக்குப் போயிருக்கிறேன்.

“ராஜ்யலட்சுமி நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. அவள் கள்ளங்கபடமில்லாதவள்'' – நான் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உரத்த குரலில் அடக்க முடியாமல் சிரித்தார்கள்.

“அன்னப்பறவை சொல்றதைக் கேட்டீங்களா?'' - அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள். “அன்னப்பறவை என்றால் "பிம்ப்” என்று அர்த்தமா?'' – ஒருவன் கேட்டான். அதைக்கேட்டு எல்லாரும் சிரித்தார்கள். திறந்த வாய்கள் மட்டும் என்னுடைய கண்களில் தெரிந்தன. ஏராளமான வாய்கள். கேலி செய்யும் குகைகளின் வாசல்கள். நான் யாரிடம் என்றில்லாமல் என்னுடைய முஷ்டியை மடக்கிக் கொண்டு கத்தினேன்:

“அவளைப் பற்றி இனிமேல் ஒரு வார்த்தை சொன்னாலும் எல்லாரையும் நான் கொன்னுடுவேன். என்னை சிறையில் போட்டாலும், எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை.''

மாணவர்கள் வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்கள். விளையாட்டு நடைபெற்ற மைதானத்துக்குள் நான் மட்டும் தனியாக நின்றிருந்தேன். மறைய இருக்கும் சூரியனும் நானும் என்னுடைய பாழாய்ப் போன காதலும்...

பிறகு ராஜு தேவதாஸ் உண்ணித்தானுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டிற்கு ஓடியபோது, எல்லாராலும் அன்னப்பறவை என்று அழைக்கப்பட்டவனும் அதிர்ஷ்டம் இல்லாதவனுமான என்னை வாய்க்கு வந்தபடி பேசினார்கள். நான்தான் தன் மகள் ஓடியதற்கு மூலக் காரணம் என்று டாக்டர் பணிக்கர் சொன்னார். எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தும் தன்னிடம் ஒரு வார்த்தை கூறாமல் இருந்ததற்கு அவர் என்னைக் கூர்மையான வார்த்தைகளால் குற்றவாளி ஆக்கினார்.

“இனிமேல் நான் உன் முகத்தைப் பார்க்கவே விரும்பல'' - அவர் உரத்த குரலில் சொன்னார்.வெளியே வந்தபோது தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரனும் இரும்பு கேட்டை அடைத்துப் பூட்டிய காவல்காரனும் என்னை யாரென்று தெரியாத ஒருவனைப் பார்ப்பதைப்போல உயிரற்ற பார்வை பார்த்தார்கள். திடீரென்று நான் அவர்களுக்கு ஒரு அறிமுகமில்லாத மனிதனாக மாறிவிட்டேன். எதிரியாகவும்...

என் தாய் என்னுடைய கவலையை மாற்றுவதற்காகப் பல கல்யாண ஆலோசனைகளையும் கொண்டு வந்தாள். எனக்குத் திருமணம் செய்து கொள்ள எந்தவொரு ஆர்வமும் தோன்றவில்லை.என் இதயத்தில் ஒரு காலத்தில் குறும்புத்தனம் நிறைந்த ராஜு இருந்த இடத்தில், ஒரு சாதாரண பெண்ணைக் கொண்டு போய் உட்கார வைக்க எனக்கு மனம் வரவில்லை. நிலவைப் போல அழகான அந்த இளம்பெண் என்னுடைய சிந்தனைகளில் இருந்து எந்தச் சமயத்திலும் விலகிப் போனதே இல்லை.


என் இதயம் ஒரு ஆள் இல்லாத ஊஞ்சலாக ஆனது. முப்பத்தாறு வருடங்கள் ஒரு வங்கி அதிகாரியாக ஒரு மிகப்பெரிய நகரத்தில் வாழ்ந்த நான், அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முக்கியத்துவம் குறைவான ஒரு நகரத்தில் வீடு ஏற்பாடு செய்து வாழ ஆரம்பித்த பிறகுதான் ராஜுவின் முகம் நினைவுகளிலும் மங்கலாக இருக்க ஆரம்பித்தது.

டென்னிஸ் விளையாடுவதற்காக நான் ஒரு க்ளப்பில் உறுப்பினராகச் சேர்ந்தேன். ஆனால், மது அருந்துபவர்கள் மட்டுமே அந்த க்ளப்பிற்கு வருகிறார்கள் என்பதைப் பார்த்தபோது, அதற்குப் பிறகு அங்கு நான் போகவேயில்லை. என்னுடைய ஒரே பொழுதுபோக்கு நடப்பது என்றாகிவிட்டது. காலை நேரத்திலும் சாயங்காலத்திலும் நான் தனியாக நடக்கச் செல்வேன். தெரு நாய்களின் தொந்தரவு இருக்கும் என்று வேலைக்காரர் கள் கூறியதால், ஒரு கொம்பை எடுத்துக் கொண்டு நான் நடப்பதற்காக வெளியே செல்வேன். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கூட்டமாகச் சேர்ந்து ஆறரை மணிக்கு நடப்பார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அதனால் ஆறரைக்கு முன்பே நான் நடையை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். என்னுடைய சிறுவயதிலிருந்தே இருக்கக்கூடிய ஆசையான தனிமைக்கு இடைஞ்சல் உண்டாவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.முதலில் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அனைவரும் என் வீட்டிற்கு வந்து, என்னை உணவிற்கும் தேநீருக்கும் தங்களுடைய வீடுகளுக்கு அழைத்தார்கள். நான் எங்கும் போகாததால், காலப்போக்கில் அவர்கள் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

பனிவிழுந்தால் இருமல் வர ஆரம்பித்துவிடும் என்று நான் பயந்து, அதிகாலைவேளையில் தலையில் ஒரு உரோம மஃப்ளரை அணிந்து கொள்வேன். அதைப் பார்க்கும் சைக்கிளில் பால் கொண்டு செல்பவர்கள் என்னைக் கண்டு சிரிப்பார்கள்.பாதையின் ஓரத்தில் இருக்கும் சிறிய கடைகளில் பீடிக் கட்டுகளுக்கும் சோடா புட்டிகளுக்கும் பழக்குலைகளுக்கும் பின்னால் இருந்தவர்கள் என்னை "துரையே! " என்று அழைத்தார்கள். யாருடனும் நெருங்கிப் பழகாமல், யாருடைய பகையையும் சம்பாதிக்காமல் நான் அந்தப் பகுதியில் வாழ ஆரம்பித்தேன்.என்னுடைய உடல் நலம் நல்ல நிலையில் இருந்தது. தலைமுடியில் இருந்த நரைமட்டுமே, வயது அறுபதை நெருங்கிவிட்டது என்பதை எனக்கு ஞாபகப்படுத்தியது.என் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உறவினர்கள் ஒரு திருமண ஆலோசனையுடன் வந்தார்கள். சொந்தத்தில் நிலம் வைத்திருக்கும் ஒரு ஆசிரியை. வயது நாற்பத்தைந்து. பார்ப்பதற்கு ஒரு இரண்டாம் தர அழகி.... நான் உரத்த குரலில்சிரித்தேன். உறவினர்களுக்கு பழவங்காடி கணபதியையும், ஸ்ரீபத்பநாபனையும், கவடியார் அரண்மனையின் வெளிவாசலையும் சுற்றிக் காட்டிவிட்டு, அவர்களை நான் கிராமத்திற்கே திரும்பவும் அனுப்பி விட்டேன்....

“முன்பு காதலித்த பெண் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தால், அவளைத் திருமணம் செய்து கொள்வாயா சிவா?'' - என் சகோதரியின் கணவர் கேட்டார்.

நான் பதில் கூறவில்லை.

“ராஜ்யலட்சுமியை உண்ணித்தான் என்றைக்கோ உதறிவிட்டான். அவன் வேறு கல்யாணம் பண்ணியாச்சு'' - அவர் தொடர்ந்து சொன்னார்.

“அப்பு அத்தான், இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?'' - நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

“நாங்கள் குருவாயூருக்கு பஜனைக்குப் போயிருந்தோம். மகரத்தில்.... ஆளே மாறிப் போய் இருந்தாள். பாவம்....! உன்னைப் பற்றி விசாரித்தாள். கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டவுடன் அவளுக்கு ஆச்சரியமாயிடுச்சு'' –அப்பு அத்தான் சொன்னார்.

என் இதயம் பலமாக அடிக்கத் தொடங்கியது.

“இப்போ எங்கே இருக்கிறாள்?'' - நான் என்னுடைய குரல் பதறாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியவாறு கேட்டேன்.

“சென்னையில் இருக்க வேண்டும். அங்கு யாரும் இல்லையே! டாக்டர் இறந்து பத்தோ பன்னிரண்டோ வருடங்கள் கடந்து விட்டன'' -அப்பு அத்தான் சொன்னார். சென்னைக்கு செல்லவேண்டுமா என்று நான் என்னிடமே கேட்டுக் கொண்டேன். அவளுக்கு இனிமேல் இன்னொரு மனிதனுடன் திருமண வாழ்க்கை வாழ எதிர்ப்பு இருக்காதா? சந்தோஷமானஒரு திருமண வாழ்க்கையை என்னால் இந்த வயதில் அவளுக்கு அளிக்க முடியுமா? நல்ல உடல் நலமும் இளமையும் என்னிடம் இருந்த காலத்திலேயே என்னால் அவளைக் கவர  முடியவில்லை. மீண்டும் ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்கக்கூடிய அந்தப்பயணம் தேவையற்ற ஒன்று என்று நான் இறுதியில் தீர்மானித்தேன். ஆனால், பல நேரங்களிலும் நான் ராஜுவிற்குக் கடிதங்கள் எழுதினேன். அந்தக் கடிதங்களைஅலமாரியில் வைத்துப் பூட்டி வைத்தேனே தவிர, அவற்றை அஞ்சல் பெட்டியில் போடுவதற்கான தைரியம் எனக்கு இல்லவே இல்லை. ஒருமுறை நான் அவளைப் பார்த்தாலும் பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் குருவாயூருக்கு ஏகாதசிக்கு முந்தின நாள் சென்றேன். பாஞ்சஜன்யம் என்ற பெயரைக் கொண்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான சத்திரத்தில் தான் நான் அறை எடுத்தேன். காலையிலும் மதியநேரத்திலும் சாயங்கால வேளையிலும் நான் குருவாயூர் கோவிலுக்கு வழிபாடு நடத்துவதற்காகச் சென்றேன். என் கண்கள் ராஜுவை மட்டும் தேடின. பகவானின் விக்ரகம் ஒருமுறை கூட என்னுடைய பார்வையில் படவே இல்லை. அவள் எப்படி இருப்பாள்? தடிமனாக இருப்பாளா? அவளுடைய சுருண்ட  தலைமுடி நரைத்திருக்குமா?என்னைச் சுற்றி சென்று கொண்டிருந்த பெண்களை நான் வெட்கமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். யாருக்கும் ராஜுவின் சாயல் இல்லை. ராஜுவின் சாயல் ராஜுவிற்கு மட்டும்தான். அவளுடைய முகத்தின் தனிச்சிறப்புகளை நான் நினைத்துப் பார்த்தேன். வலது பக்கக் கன்னத்தில் சிரிக்கும்போது மட்டும் தெரிகிற ஒரு குழி.... மூக்கிற்கும் மேலுதடுக்கும் நடுவில் ஒரு சிறியமச்சம்... பிறகு வேறு எதுவும் எனக்கு ஞாபகத்தில் வரவில்லை. காலம் ஒருமூடு பனியைப் போல வந்து அவளையும் மூடிவிட்டிருக்கிறது.

குருவாயூர் கோவிலில் நான் ஒரு பெண்ணின் குரலைக் கேட்டேன்.

“குட்டனை வந்து குப்பையை எடுக்கச் சொல்லு, மாலதி.''

ராஜுவின் குரலுடன் அந்தப் பெண்ணின் குரலுக்கு நெருங்கிய ஒற்றுமை இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. நான் அவளை நோக்கி வேகமாக நடந்தேன். அய்யோ..... அவள் ராஜு அல்ல. அவள் பதைபதைப்புடன் என்னையே உற்றுப் பார்த்தாள். ஒரு பெண் அதிகாரி! நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். "ராஜு..... ராஜு..... என் ராஜு...”- நான் கடவுளின் பெயரைக் கூறுவதைப் போல முணுமுணுத்தேன். பெண்கள் கிண்டலாக என்னையே வெறித்துப் பார்த்தார்கள். ஒரு மாலை நேரத்தில் வானம் தெளிவாக இருந்தபோது நான் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு நடப்பதற்காக வெளியே கிளம்பினேன். நான் ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். மலையின் வழியாக - செந்தூரம் அணிந்த மணப்பெண்ணின் நெற்றியில் இருப்பதைப்போல - ஒரு சிவப்புப் பாதை மேல் நோக்கி ஏறிப்போய்க் கொண்டிருந்தது.


அதன் வழியாக நடக்கும்போது, இரண்டு பக்கங்களிலும் தெருநாய்களின் சிறுநீர் நாற்றம் வரும் இடங்களையும் கொடிகளையும் பூச்செடிகளையும் நான் பார்த்தேன். அடைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளையும். யாரும் உள்ளே வாழவில்லை என்று தோன்றும் பெரிய மாளிகையையும் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்ட சுவர்களையும் நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். திடீரென்று வானம் இருண்டது. பனியைப் போல இருட்டு என்னுடைய பாதையில் பரவியது. தொடர்ந்து கனமான மழை பெய்ய ஆரம்பித்தது. என் சட்டை,ட்ரவுசர் அனைத்தும் நனைந்தன. நான் குளிரில் நடுங்க ஆரம்பித்தேன். அருகில் பார்த்த இரும்பு கேட்டைத் தள்ளி திறந்து நான் காலியாகக் கிடந்த ஒரு கார் ஷெட்டிற்குள் போய் நின்றேன். இடிச் சத்தமும் மின்னல் வெளிச்சமும் என்னை பயமுறுத்தின. மின்சாரக் கம்பிகள் எங்கேயாவது காற்றில் விழுந்து, நடந்து செல்வதற்கு மத்தியில் நான் அதை மிதித்து விடுவேனோ? விபத்து நிகழுமோ? நான்நனைந்த கண்ணாடியைக் கழற்றி என்னுடைய உள்ளங்கைகளால் அதைத் துடைப்பதற்கு ஒருவீணான முயற்சியை நடத்தினேன். என் ஆடைகளும் சட்டையின் பாக்கெட்டிற்குள்ளிருந்த  கைக்குட்டையும் முழுமையாக நனைந்துவிட்டிருந்தன.நனைந்த கண்ணாடியின் வழியாகப் பார்த்த போது, எல்லா ஆடைகளும் தெளிவற்றுத் தெரிந்தன. நான் எப்படி வீட்டை அடைவேன்?

நான் சிந்தனையில் மூழ்கியிருக்கும்போது, குடையுடன் ஒரு வயதான மனிதன் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். ஆடைகள் அணிந்திருந்ததை மட்டும் வைத்துப் பார்த்தால் அவன் ஒரு வீட்டு வேலைக்காரன் என்று யாராலும் புரிந்துகொள்ள முடியும். போதாக் குறைக்கு கை விரல்களில் கரி படிந்திருந்தது. அவன் சிவப்பு நரம்புகள் நிறைந்த கண்களுடன் என்னைப் பார்த்தான். என் முகத்துடன் தன் முகத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டு அந்தக் கிழவன் கேட்டான்: “யாரு?''

“என்பெயர் சிவசங்கரன் நாயர். மலையின் அடிவாரத்தில் புதிதாக வீடு வாடகைக்கு எடுத்து வசிக்கிறேன். பம்பாயில் இருக்கும் ஒரு வங்கியில் இவ்வளவு காலம் வேலை பார்த்தேன்.''

என்னுடைய நீளமான விளக்கம் அந்த ஆளுக்குப் பிடித்திருந்தது. ஒரு அரைப் புன்னகையை உதட்டில் வலிய வரவழைத்துக் கொண்டு அவன் சொன்னான்:

“வாங்க...உள்ளே வந்து உட்காருங்க. மழை நின்ற பிறகு போகலாம். உள்ளே எஜமானி அம்மாவும் எஜமானும் இருக்காங்க. அறிமுகமாகிக் கொள்ளலாம்.''

நான் அதற்குப் பிறகு தயங்கிக் கொண்டு நிற்காமல் அவனுடைய குடைக்குக் கீழே அந்தவீட்டின் வாசலை நோக்கி நடந்தேன். "நாய்கள் இருக்கின்றன. கவனம்" என்று எழுதப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகை கதவுக்கு அருகில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதைப் பார்ப்பதை கவனித்ததால் இருக்க வேண்டும்- வாசலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த இல்லத்தரசி சொன்னாள்:

“பயப்படவேண்டாம். நாய்கள் இல்லை. அது எப்போதோ தொங்க விடப்பட்ட அறிவிப்புப் பலகை.அப்போது எங்களிடம் ஒரு நாய் இருந்தது. ஒரு கறுப்பு நிற அல்சேஷன். அது இறந்து பத்தோ பதினைந்தோ வருடங்கள் கடந்துவிட்டன. அமெரிக்காவில் இருந்து வந்து ஒரு வருடம் ஆனபோது, அந்த நாய் இறந்துவிட்டது.''

என்னை வீட்டில் ஓய்வெடுக்க அனுமதித்ததற்கு நான் நன்றி சொன்னேன்.

“நனைந்த ஆடைகளை மாற்றலாம். நான் என் கணவரின் வேட்டியையும் சட்டையையும் கொண்டு வந்து தர்றேன்'' - அவள் சொன்னாள்.

“வேண்டாம்...''என்று நான் நான்கைந்து தடவை திரும்பத் திரும்பச் சொன்னேன். ஆனால், அவள்நல்ல மனதுடன் வற்புறுத்தியபோது, நான் அவள் தந்த ஆடைகளுடன் குளியலறைக்குள் சென்றேன். அவளுடைய கணவருடன் அறிமுகமாகி, அவருக்கும் நன்றி கூற நான் விரும்பினேன். என்னுடைய நனைந்த துணிகளைப் பிழிந்து சுருட்டி, குளியலறையைவிட்டு நான் வெளியே வந்தபோது, இல்லத்தரசி என்னிடம் சொன்னாள்:

“நனைந்த ஆடைகள் இங்கேயே இருக்கட்டும். துவைத்துக் காய வைத்து வேலுப்பிள்ளை மூலம்நான் வீட்டிற்குக் கொடுத்து அனுப்புறேன். சரியா?'' -அவன் என்னுடைய நிர்வாணமான மார்பைப் பார்ப்பதைப் போல எனக்குத் தோன்றியது.

“அது சிரமமான விஷயமாச்சே? நான் கொண்டு போயிடுறேன்'' -நான் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.

வீட்டின் நாயகி சிரித்தாள். அவளுடைய சிரிப்பு மிகவும் அழகாக இருந்தது. நடுத்தரவயதில் இருப்பவர்கள் அந்த அளவிற்கு இளமை ததும்பும் ஒரு சிரிப்பைச் சிரிக்கமுடியும் என்று, நான் அதைக் கேட்காமல் இருந்திருந்தால் எந்தக் காலத்திலும் நம்பியிருக்க மாட்டேன். முதிர்ச்சி தெரியாத ஒரு சிரிப்பு அது. இளமையான வயதில் இருப்பவர்கள் மட்டுமே சிரிக்கக் கூடிய சிரிப்பு. ஒரு பதினான்கு வயது இளம்பெண்ணின் சிரிப்பு.

“என்ன சிரமம்? இங்கு தேவைப்படுற அளவுக்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். சலவை செய்வதற்கும் தேய்ப்பதற்கும் என்றே ஒருத்தியை வச்சிருக்கோம்'' – அவள் சொன்னாள்.

நாங்கள் இருவரும் சேர்ந்து முன்னறையை நோக்கி நடந்தபோது, நான் சக்கரங்கள் உருளும் சத்தத்தைக் கேட்டேன். வீட்டின் தலைவிக்கு மூன்று சக்கரங்கள் உள்ள சைக்கிளை ஓட்டக்கூடிய சிறு குழந்தைகள் இருக்கிறார்களோ? நான் என்னைச் சுற்றி கண்களை ஓட்டினேன்.

“என் கணவர்...போலியோ பாதித்ததால், கால்கள் தளர்ந்து போய் விட்டன. பத்து இருபது வருடங்களாகவே இதே நிலைதான். நாட்டு மருத்துவம், சித்த வைத்தியம், யுனானி என எல்லாவகை சிகிச்சைகளும் செய்து பார்த்தாகிவிட்டது. எந்தவிதப் பலனும்உண்டாகவில்லை'' - வீட்டின் நாயகி சொன்னாள்.

அந்த நிமிடத்தில் நான் அதிர்ஷ்டமில்லாத அந்த மனிதனைப் பார்த்தேன். உள்ளே செல்லும் ஒரு கதவுக்கு அருகில் தன்னுடைய சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அவன் என்னைத் தன் தலையை இரண்டு முறை தாழ்த்திக் கொண்டு வரவேற்றான்.வேலுப்பிள்ளை தள்ளிவிட, அந்த நாற்காலி முன்னோக்கி நகர்ந்தது. அவன் ஒரு கோணலான சிரிப்பை என்னைப் பார்த்து வெளியிட்டான். நான் கைகளைக் கூப்பினேன்.

“என் பெயர் சிவசங்கரன் நாயர். நான் மலையின் அடிவாரத்தில் இருக்கிறேன். மழையின் காரணமாக இங்கு வந்து சிக்கிக் கொண்டேன்'' -நான் சொன்னேன்.

வீட்டின் தலைவன் எதுவும் சொல்லவில்லை.

“பேசக்கூடிய ஆற்றலும் இல்லாமல் போய்விட்டது'' - இல்லத்தரசி சொன்னாள்.

“பிறகு இங்கு யார் இருக்கிறார்கள்? உதவிக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?'' - நான் கேட்டேன். வீட்டின் நாயகி சிரித்தாள்.

“பிள்ளைகளா? எங்களுடைய திருமணம் முடிந்து ஒன்றரை மாதத்திற்குள் அவர் படுத்த படுக்கையாகிவிட்டார்'' - அவள் சொன்னாள்.

அதற்குப்பிறகு அவளுடைய முகத்தைப் பார்ப்பதற்கே எனக்கு சங்கோஜமாக இருந்தது. என் முகம் சிவப்பதைப் போல எனக்குத் தோன்றியது. என் காதுகளும் கை விரல்களும் கால் விரல்களும் சூடாவதைப் போலவும் எனக்குத் தோன்றியது. நான் அந்த வீட்டைத் தேடி வந்திருக்கக்கூடாது.


பெண்களுக்கே உரிய அழகை வெளிப்படுத்தக்கூடிய அந்தப் பெண்ணின் கண்களில் காமத்தின் மின்னல் பளிச்சிட்டதை நான் பார்த்தேனோ? என் மனதிற்குள் சக்கர நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மனிதன்மீது இரக்கம் உண்டானது. என் இதயம் பலமாக அடித்தது.

“இனி நான் போகட்டுமா? ஆடைகளை சலவை செய்து உலர வைத்து நாளைக்குக் கொண்டு வர்றேன்'' - நான் சொன்னேன்.

“மழை முழுவதுமாக நிற்கவில்லை'' -வீட்டின் தலைவி சொன்னாள். வேலுப்பிள்ளை ஒரு கப் தேநீரை என்னிடம் நீட்டினான். நான் திரும்பத் திரும்ப நன்றி கூறிக்கொண்டிருந்தேன்.

“என்ன இவ்வளவு அவசரம்? மழை முழுவதுமாக நின்றபிறகு போகலாம் அல்லவா? மணி ஆறுதான் ஆகியிருக்கு!'' - வீட்டின் தலைவி சொன்னாள். “ரொம்பவும் இருட்டா இருக்கு''- வேலுப்பிள்ளை சொன்னான். நான் வீட்டின் தலைவனைப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வயது இருக்கும் என்று நான் நினைத்தேன். தலை முடியில் நரை விழுந்திருந்தது. அணிந்திருந்த கோடுகள் போட்ட சட்டையின் பொத்தான்கள் விழுந்ததால் இருக்க வேண்டும். நெஞ்சில் இருந்த முடிகளை என்னால் பார்க்க முடிந்தது. சிறு உரோமப் போர்வைக்குள் மூடப்பட்ட கால்களை கவனிக்கவில்லையென்றால், அவன் நல்ல உடல்நலத்துடன் இருக்கக்கூடிய ஒரு மனிதன் என்று யாரும் தவறாக நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. பலம் கொண்ட சதைகள்... அழகான உடலமைப்பு... நீளமான இமைகளைக் கொண்ட கண்கள்... உயர்ந்த நெற்றி... அழகை வெளிப்படுத்தும் மூக்கு.

“என்ன பெயர்?'' - நான் கேட்டேன்.

“அவருடைய பெயர் உண்ணித்தான்... தேவதாஸ் உண்ணித்தான்...''

என்னுடைய நாடிகள் தளர்வதைப்போல் நான் உணர்ந்தேன். இந்த உடல் ஊனமுற்ற மனிதன் என் ராஜுவை தட்டிக்கொண்டு சென்ற உண்ணித்தானா? என் ராஜுவை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட குடிகாரனும் பெண் பித்தனுமான மனிதப் புழு இவன்தானா?

தன்னுடைய உதடுகளை அசைக்க உண்ணித்தான் முயற்சித்தான். ஆள் யார் புரிந்துகொண்டு விட்டதை அறிவிப்பதற்காக ஒரு வீணான முயற்சி.

“எழுத முடியுமா?'' -நான் இல்லத்தரசியிடம் கேட்டேன்.

“அய்யோ...எழுதவெல்லாம் முடியாது. கைவிரல்களுக்கு கொஞ்சம் கூட சக்தி இல்லை. மனதில்இருப்பதை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்கு ஒரு வழியும் இல்லை. ஆனால், எல்லாம் புரிகிறது என்பது மாதிரி தோன்றும். கண்ணின் கருமணிகள் அவ்வப்போது அசைவதைப் பார்க்கலாம். இடையில் அவ்வப்போது அழுவதைப் போல ஒரு சத்தத்தை எழுப்புவார். வேதனை எதுவும் இல்லை என்று டாக்டர் சொன்னார். வெறுமனே ஒரு முனகல்...''

நான் குனிந்துநின்று உண்ணித்தானின் கண்களையே உற்றுப் பார்த்தேன். என் முகத்தின் பரவலான பிரதிபலிப்பை நான் அவற்றில் கண்டேன். என் மனதில் படிப்படியாக வெற்றிக் கொடிகள் உயர்வதையும் பறப்பதையும் நான் பார்த்தேன். கால்பந்து விளையாடும்போது மைதானத்திலிருந்து ஒரு காலத்தில் தொடர் மழையைப் போல உயர்ந்து கேட்ட வெற்றி ஆரவாரத்தை நான் மீண்டும் கேட்பதைப் போல எனக்குத் தோன்றியது. ஆனால், அந்த வெற்றி ஆரவாரமும் பாராட்டும் சந்தோஷமும் உண்ணித்தானுக்காக இல்லை. நான்தான் வெற்றி பெற்றவன். கொடிகள் எனக்காகப்பறந்து கொண்டிருந்தன.

“பல வருடங்களுக்கு முன்னால் அறிமுகமானது. நானும் சென்னையில் லயோலா கல்லூரியில் தான் படித்தேன்'' -நான் சொன்னேன்.

உண்ணித்தானின்தலை இரண்டு முறை குனியவும் நிமிரவும் செய்தது. நான் சொன்னதை அவன் கேட்டானா? கேட்டிருக்கும் பட்சம், அந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பானா?

“எதுவும் புரிகிறது என்று தோன்றவில்லை'' - மனைவி சொன்னாள்.

“நானும் உண்ணித்தானும் ஒன்றாகக் கல்லூரியில் படித்தோம். உண்ணித்தான் ஒரு வருடம் சீனியராக இருந்தார். கால்பந்து சேம்பியனாகவும் இருந்தார்'' – நான் சொன்னேன்.

“சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் அவர் முதல் மனைவியைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அவங்களை உங்களுக்குத்தெரியுமா? ராஜ்யலட்சுமி பணிக்கர்?''

“பார்த்திருக்கேன்'' - நான் சொன்னேன்.

“அமெரிக்காவில் ஒரு நர்ஸ் வேலை எனக்குக் கிடைத்தது- நியூஜெர்ஸியில் இருக்கும் வி.ஏ. மருத்துவமனையில். அங்குதான் நான் அவங்களைப் பார்த்தேன். பிரசவத்திற்காக வந்திருந்தாங்க. குழந்தை பிறக்கும் போதே இறந்து பிறந்தது. அந்தப் பெண் பாவம். இரண்டு நாட்கள் நிறுத்தாமல் அழுதாங்க. மயக்க மருந்து கொடுத்தும் தூக்கம் வரவில்லை'' - வீட்டின் நாயகி சொன்னாள்.

“பிறகு...விவாகரத்து எப்போ நடந்தது?'' -நான் ஆர்வமில்லாததைப் போல காட்டிக்கொண்டு,முக வெளிப்பாட்டில் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் கேட்டேன்.

“அவர்களுக்கிடையே பொருத்தம் இல்லாமல் ஆகிவிட்டது. தெய்வத்தின் செயல். வேறு என்ன சொல்வது? அவர்கள் சண்டை போட்டுக் கொள்ளவில்லை. வழக்கு போடவும் இல்லை. செலவுக்குத் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. இன்னொரு நகரத்தில் போய் வேலை பார்த்து சுகமாக, மன அமைதியுடன் வாழ்ந்தாங்க. என்ன சொன்னாலும்அவங்களுடைய நல்ல மனதைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது'' – திருமதி உண்ணித்தான் சொன்னாள்.

“அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் எப்படி ஆரம்பமாயின? சென்னையில் எல்லாரும் அந்தக்காதல் உறவைப் பற்றி எப்போதும் ஆச்சரியத்துடனும் மதிப்புடனும் பேசுவார்கள்.ரோமியோவையும் ஜூலியட்டையும் போல அவர்கள் இருந்தார்கள்'' - நான் சொன்னேன்.

“அவங்க ஒரு தனிப்பட்ட குணம் கொண்ட பெண்ணாக இருந்தாங்க. விருந்துகளுக்கு இவருடன் செல்ல அவங்க மறுத்தாங்க. மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு பிசினஸ் பண்ணும் மனிதர் வெற்றிபெற முடியாதே! சென்னையில் வளர்ந்தும் அவங்க நடத்தையில் ஒரு கிராமப் பெண்ணைப் போலவே இருந்தாங்க. ஆண்களுடன் சேர்ந்து நடனமாடக்கூட அவங்க தயாராக இல்லை'' - திருமதி உண்ணித்தான் சொன்னாள்.

“இப்போ அவங்க எங்கே இருக்காங்க?'' -நான் கேட்டேன்.

இல்லத்தரசி தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்னாள்: “யாருக்குத் தெரியும்?இறந்திருப்பாங்க. அப்போதே ஒரு சயரோகம் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாங்க.எப்போதும் இருமிக்கொண்டே இருப்பாங்க. உடல் ஒரு எலும்புக் கூட்டைப் போலஇருந்தது.''

“நான் பார்க்குறப்போ ராஜ்யலட்சுமி நல்ல உடல் நலத்துடன் இருந்தாங்க.''

“அவங்களோட தாய் சயரோகம் பாதிக்கப்பட்டுத்தான் இறந்தாங்க. மகளுக்கும் அந்த நோய் வந்துவிட்டது. அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு?''

“ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ராஜ்யலட்சுமியை கல்லூரியின்அழகியாக எல்லாரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள்'' - நான் சொன்னேன்.

 “இதைக் கூறும் ஆளும் அவங்களோட ரசிகனாக இருந்தார் என்று தோன்றுகிறது'' - உரக்க சிரித்துக்கொண்டே திருமதி உண்ணித்தான் சொன்னாள்.

“எல்லாரும்விரும்பக்கூடிய ஒரு பெண்ணாக இருந்தாங்க ராஜ்யலட்சுமி பணிக்கர்!'' – நான் முணுமுணுத்தேன். குரூரமான குழிகளை வெளிப்படுத்தியவாறு அந்தப் பெண்சிரித்தாள். என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்கள் என்னை நிம்மதி இல்லாமல் ஆக்கின.


கண்களைச் சுருக்கிக் கொண்டு அவள் சிரித்தாள். அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- அந்தக் கண்களின் வெளுத்த நிறத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அவை கறுத்து, எண்ணெய் பசையுடன் இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. நான் வேகமாக நடந்து சென்று என்னுடைய நனைந்த செருப்புகளுக்குள் கால்களை மனமில்லா மனதுடன் நுழைத்தேன். வெளியே மழை நின்று விட்டிருந்தது. ஆனால், வெளி வாசலை நோக்கிச் சென்ற நீளமான காங்க்ரீட்பாதையின் இரண்டு பக்கங்களிலும் வளர்ந்து நின்றிருந்த மரக்கிளைகளில்இருந்து நீர்த் துளிகள் ஒரே மாதிரியான தாளத்துடன் தரையில் தெறித்துவிழுந்து கொண்டிருந்தன. தலை குனிந்து நின்றிருந்த அசோகா மரமும், வேப்பமரமும், பலா மரமும், மாமரமும் கண்ணீர் சிந்தும் பெண்களை நினைவுக்குக் கொண்டு வந்தன. அழகானவளாக இருந்தாலும், சிந்தனையில் பழமையானவள் என்று தோன்றவைத்த வீட்டின் நாயகியின் காந்த வளையத்திற்குள்ளிருந்து முடிந்த வரையில் வேகமாக ஓடித் தப்பிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

ஒரு நீண்ட காலம் முழுவதும் ஒரு பெண்ணைக் காதலித்து, அந்தப் பெண்ணைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு தூங்குவதற்காக படுத்த ஒரு ஆளுக்கு, திடீரென்று ஒரு நாள் அந்தக் காதலியை மீண்டும் பார்க்கக்கூடிய சூழ்நிலை வந்தால், அவன்அனுபவிக்க நேரும் மனப்போராட்டங்களுக்கு இணையான ஒரு மன நிலைதான் நீண்டகாலஎதிரியைப் பார்க்கும் போதும் உண்டாகிறது. உண்ணித்தானை மீண்டும் பார்த்தபோது, என்னுடைய உடல் மனப் போராட்டத்தால் வியர்த்தது. என்னுடைய நெஞ்சின் துடிப்பு அதிகமானது. உடல் ஊனமுற்ற மனிதனாக ஆன பிறகும், தன்னுடைய சந்தோஷ வாழ்க்கையை கிட்டத்தட்ட தொடர்ந்து கொண்டிருந்த அந்த மனிதனைப் பார்த்து நின்றபோது, வெறுப்பு கலந்த கசப்பான நீர் என் வாயில் ஊறியது.அவனுடைய கழுத்தை நெறித்து, பிணத்தை நிலத்தில் எறிந்து அதன் மீது மிதிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது. பழிவாங்குவது மிகவும் இனிமையானஅனுபவமாக இருக்கும் என்பதை நான் அந்த நிமிடத்தில் சிந்தித்தேன்.

என் தாய் ஒரு முறை சொன்னாள்: “என் மகன் அப்பாவி. ஒரு எறும்புக்குக்கூட அவன் வேதனையை உண்டாக்க மாட்டான்.''

என் தாய் உயிருடன் இருந்திருந்தால், நான் அவளைப் போய் பார்த்துக் கூறியிருப்பேன்: “அம்மா, உங்களுக்கு மகனைப் பற்றித் தெரியவில்லை. கொலை செய்வதற்குக்கூட  தயங்காதவன்தான், உங்களின் சிவன்குட்டி.''

முதல் சந்திப்பிற்குப் பிறகு நான் உண்ணித்தானின் வீட்டிற்கு ஒரு வாரம் கழித்துச் சென்றேன். காலையில் நடை முடிந்து திரும்பி வரும் வழியில், நான் இரும்பு கேட்டைத் தள்ளித் திறந்து அவர்களுடைய தோட்டத்திற்குள் நுழைந்தேன். மண்ணில் கிடந்த நாளிதழை எடுத்துக்கொண்டு நான் காங்க்ரீட் பாதையின் வழியாக அதிகம் சத்தம் உண்டாக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியவாறு நடந்தேன். முன் பக்கத்திலிருக்கும் பெரிய ஜன்னல்களின் கதவுகள் திறந்து கிடந்தன. நான் மணி அடிக்காமல், கதவைத் தட்டவும் முயற்சிக்காமல், ஒரு ஜன்னலுக்குக் கீழே போய் நின்றேன். முன்னறையின் மேஜைமீது அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த உலோகத்தால் ஆன சிலைகளை ஒரு துணியைக் கொண்டு அழுத்தித்துடைத்து, அவற்றின் பிரகாசத்தைக் கூட்டிக் கொண்டிருந்தாள் திருமதி உண்ணித்தான். அவள் இளம் நீல நிறத்தைக் கொண்ட - அதிகமான மடிப்புகள் இல்லாதஒரு கவுனை அணிந்திருந்தாள்.

அவளுடைய தலைமுடி சற்று மேலேயே இறுகக் கட்டப்பட்டிருந்தது. அவள் அந்தத்தோற்றத்திலும் அழகாகவே இருந்தாள். பழிக்குப் பழி (?) வாங்க வேண்டும் என்ற ஆசை திடீரென்று எனக்குள் எழுந்து நின்றது. என்னுடைய தொண்டை வறண்டு போனது.அவளை அழைத்துக் கதவைத் திறக்கும்படி கூறுவதற்குக்கூட சக்தி இல்லாதவனாகநான் ஆனேன். என் கண்கள் தன் முகத்தில் காயம் உண்டாக்கிவிட்டது என்பதைப்போல திடீரென்று அவள் அதிர்ச்சியடைவதை நான் பார்த்தேன். அவளுடைய முகம்உயர்ந்தது. அந்தக் கண்கள் என்னுடைய முகத்தில் பதிந்து நின்றன.

“மிஸ்டர் சிவசங்கரன் நாயர்! இவ்வளவு சீக்கிரமாகவா? வாங்க... வாங்க... நான் கதவைத் திறக்கிறேன்'' என்று கூறியவாறு கதவைப் பாதியாக திறந்து என்னை உள்ளேவருவதற்கு அனுமதித்த பிறகு, அவள் தன்னுடைய ஆடை அணிந்திருப்பதைப் பற்றிமன்னிப்பு கேட்கிற தொனியில் சொன்னாள்.

“யாரும் இவ்வளவு சீக்கிரமா வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை. இல்லாவிட்டால்இப்படிப்பட்ட தோற்றத்தில் நான் கதவைத் திறந்திருக்க மாட்டேன்'' – அவள் சொன்னாள்.

“என் தவறு.நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த பொருத்தமில்லாத நேரத்தில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் உள்ளே வந்திருக்கக் கூடாது. சலவை செய்துகொண்டு வந்த சட்டையையும் வேட்டியையும் இங்கு வேலுப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய நோக்கமாகஇருந்தது. உங்களையோ உண்ணித்தானையோ இவ்வளவு அதிகாலையில் வந்து எழுப்பவேண்டும் என்று நான் நினைக்கவேயில்லை'' - நான் சொன்னேன்.

“அவர் நல்ல உறக்கத்தில் இருக்கிறார். எட்டு மணி வரை உறங்குவார். நான் சரியாக ஐந்தரை மணிக்கு எழுந்து விடுவேன். பிறகு காப்பி உண்டாக்கி விட்டு, வீட்டில் இருக்கும் தூசிகளைப் பெருக்குவது, தோட்ட வேலை என்று போகும். எட்டு மணி வரைநான் முழுமையான சுதந்திரத்தில் இருப்பேன்'' - அவள் சொன்னாள்.

நான் கதவை நோக்கித் திரும்பியபோது, அவள் என்னைத் திரும்பவும் அழைத்தாள்.

“தேநீரோ காப்பியோ குடித்துவிட்டுப் போகலாம். நடந்துவிட்டு வந்ததன் களைப்பு இருக்கும்'' - அவள் சொன்னாள்.

நான் ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன்.

“வேலுப்பிள்ளை எழவில்லையா?'' - நான் கேட்டேன். என்னுடைய குரல் ஒரு அறிமுகமில்லாத மனிதனின் கரடுமுரடான குரலைப் போல இருந்தது. எனக்கு தொண்டை வலி உண்டானதோ? எனக்கு ஞாபகத்தில் இல்லை. அந்தப் பெண் என்னுடைய மடியில் வந்துவிழுந்ததும், நான் அவளை வாரி எடுத்து முத்தமிட்டதும் வெறும் ஒரு கனவா? திரும்பி வரும்போது நான் என்னிடமே கூறிக்கொண்டேன்.

"கனவாகத்தான் இருக்க வேண்டும். வெறும் கற்பனை. நான் அப்படிப்பட்டவன் இல்லை. நான் இன்னொரு ஆளின் மனைவியை முத்தமிட மாட்டேன். "

வீட்டைஅடைந்த பிறகும், என்னுடைய நாசித் துவாரங்களில் ஒரு பெண்ணின் வாசனை இருந்து கொண்டே இருந்தது. என்னுடைய ஈரமான பனியனிலும் கை விரல்களிலும் புழுவின் வாசனை பற்றிக் கொண்டிருப்பதை நான் கண்டுபிடித்தேன். என்னுடைய உதடுகளில் அவளுடைய பற்கள் பட்டு ரத்தம் வெளியே வந்த கறுத்த அடையாளங்கள் இருந்தன. என் கழுத்தின் இடது பக்கத்தில் ஒரு செந்தூரப் பொட்டைப் போல ஒரு சிவப்பு அடையாளம் இருப்பதை நான் கண்ணாடியில் பார்த்தேன்.


 அது ஒரு காதல் உறவின் ஆரம்பமாக இருந்ததோ? ஒரு பழிக்குப் பழி வாங்கும் செயலின் தொடக்கமாகத்தான் நான் அதைப் பார்த்தேன். "ஓமனா..” என்று அழைக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டும், நான் அந்த பெண் சொன்னபடி நடக்கவில்லை. ஓமனா என்ற பெயரை அவளுக்கு சிறு வயதில் வைத்த அவளுடைய தாய், தந்தையையும் நான் வெறுத்தேன். வெறுப்பில் இருந்து பிறந்ததால் இருக்க வேண்டும் – என்னுடைய காமம் அந்த அளவிற்கு குரூரமாக இருந்தது. ஒரு போர்க்களத்தில் எதிரியுடன் சண்டை போடுவதைப் போல படுக்கையறையில் நடைபெற்ற என்னுடைய ஒவ்வொரு ஆக்கிரமிப்பும் இருந்தது.

“முதலில் பார்த்தபோது நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று எனக்குத் தோன்றியது'' - அவள் சொன்னாள்.

“நல்ல மனிதர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாரே!'' -நான் சொன்னேன்.

அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“எனக்குள் பாவ உணர்வை நீங்கள் குத்திச் செலுத்துகிறீர்கள்'' -அவள் குறை சொன்னாள்.

அவள்தேம்பி அழுதபோது, அவளை சமாதானப்படுத்த நான் ஒருமுறைகூட முயற்சிக்கவில்லை.என்னால் கட்டுப்படுத்த முடிந்த- வெறும் ஒரு குழந்தை பொம்மையாக ஆன அந்தப் பாவப்பட்ட பெண்...

ஆரம்பத்தில்இருந்த தயக்கத்தை நான் முழுமையாக உதறி எறிந்துவிட்டு, உண்ணித்தான் கண்விழித்திருக்கும்போதும், கதவைத் தள்ளித் திறந்து, அவனுடைய மனைவியின்அறைக்குள் செல்ல எனக்கு சிரமம் தோன்றவில்லை. வேலுப்பிள்ளையும் நான் வருவதையும் போவதையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நல்ல உடல் நலத்துடன் இருக்கும், அழகும் சதைப்பிடிப்பும் கொண்ட வீட்டின் நாயகியைநான் முழுமையாக வசீகரித்துவிட்டேன் என்ற விஷயம் அந்தக் கிழவனுக்கும் புரிந்துவிட்டது. பல நேரங்களில் நான் உண்ணித்தான் என்ற உயிருள்ள பிணத்தின் முன்னால் போய் நின்று, அவனுடைய கண்களையே வெறித்துப் பார்த்தவாறு புன்னகைத்தேன். அவனுடைய கண்களில் கோபத்தால் உண்டான கலக்கத்தைக் காண நான் விரும்பினேன். பாதி செயல்படாமல் இருந்தாலும், அந்த மூளையில் மீதமிருக்கும் சக்தி என்னுடைய பழி வாங்கும் கதையை அவனுக்குக் கூறும் என்று நான் நினைத்தேன். ஒரு நாள் அவனுடைய மனைவியின் படுக்கையறைக்குள் இருந்து பாதிஉடலை மட்டும் மறைத்துக்கொண்டு நான் வெளியே வந்தபோது, கதவிற்கு அருகில் தன்னுடைய சக்கர நாற்காலியில் உண்ணித்தான் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு கேடு உண்டான இயந்திர மனிதனைப் போல சிறிது சாய்ந்தும் குழைந்தும்அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். அவன் இறந்து விட்டானோ? இதயத் துடிப்புகளைத் தேடி நான் அவனுடைய நெஞ்சில் என் வலது காதை வைத்தேன். இதயம் பலமாகத் துடிப்பதை நான் கேட்டேன். உண்ணித்தான் என்னுடைய தொடுகை காரணமாக திடுக்கிட்டான் என்று எனக்குத் தோன்றியது. கண்களை என்னுடைய முகத்தில்பதித்தவாறு எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த அந்த மனிதனை, சில நொடிகளுக்குள் மூச்சைவிட முடியாமல் செய்து கொல்ல வேண்டும் போல எனக்கு இருந்தது.

எனக்கு எதிராக சாட்சி சொல்ல ஓமனா எந்தச் சமயத்திலும் தயாராக இருக்க மாட்டாள். ஆனால், அந்தக் கொலையால் எனக்கு என்ன லாபம்? அரண்மனையைப் போன்ற ஒரு வீடும், சதைப்பிடிப்பான ஒரு மனைவியும். அவள் ரகசியமாகக் கூறியது உண்மையாக இருந்தால் இரும்பு அலமாரிக்குள் பாதுகாத்து வைத்திருக்கும் எட்டு லட்சம் ரூபாய்களும் எனக்குச் சொந்தமாக ஆகும். ஆனால், அதனால் நான் தேடிக்கொண்டிருந்த ஆனந்தம் எனக்கு இல்லாமற்போகும். ராஜுவுடன் சேர்ந்து வாழக்கூடிய குடும்ப வாழ்க்கைதான் என்னுடைய லட்சியம். கவலையில் இருக்கும் ராஜுவை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு நான் வரவேற்கும் அந்தக்காட்சியை எத்தனையோ தடவை உணர்ச்சிவசப்பட்டு நான் கற்பனை பண்ணிப் பார்த்துவிட்டேன்.

“அன்றைக்கு நீங்கள் சொன்னது உண்மைதான். தேவதாஸ் ஏமாற்றுப் பேர்வழியும், கெட்ட நடத்தைகள் கொண்டவனாகவும் இருந்தான். அவன் என்னை நாசமாக்கிட்டான்'' - ராஜுஎன் கால்களில் விழுந்து தொண்டை அடைக்க கூறப்போகும் வார்த்தைகள்... அவை அமிர்த ஓட்டத்தைப் போல என்னுடைய காதுகளில் வந்து விழும். நான் அவளை முதல் தடவையாக இறுக அணைத்துக்கொள்வேன். தொடர்ந்து நாங்கள் இருவரும் அந்த வீட்டின் வாசலில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு பாடுவோம். உண்ணித்தான் ஒரு காலத்தில் பாடக்கூடிய ஹிந்துஸ்தானி காதல் பாடல்களை நானும் ஆச்சரியப்படும் விதத்தில் பாடுவேன். க்ளப்பிலும் விருந்துகளிலும் சாலை சந்திப்புக்களிலும் எனக்கும் ஓமனாவுக்குமிடையே உள்ள காம உறவு பேச்சுக்கான விஷயமாக ஆகிவிட்ட பிறகும்,நான் கோபப்படவில்லை. என்னுடைய நண்பர்களும் என் நலனில் அக்கறை கொண்டவர்களும் என்று நடிக்கக்கூடிய சில முக்கிய மனிதர்கள் எனக்கு அறிவுரைகூற முயற்சித்தார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அந்த இடத்திலேயே நல்ல உடல் நலத்துடன் இருக்கும், வயதான திருமணமாகாத பெண்ணின் ஜாதகத்தையும் புகைப்படத்தையும் சிலர் என்னுடைய வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தார்கள். “சொந்தத்தில் வீடு இருக்கும் பார்ட்டி. முப்பத்தைந்து சென்ட் நிலம் இருக்கு. சென்டிற்கு முப்பதுவைத்துப் பார்த்தால், கிட்டத்தட்ட பத்து லட்சம் விலை வரக்கூடிய பூமி. வீடுடெரஸ். தரை மொசைக்...''

பெண்ணின் அழகைப் பற்றிய தகவல்களுக்கு பதிலாக அவர்கள் அந்த பூமி, வீடு ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றி திரும்பத் திரும்ப கூறி என்னை வெறுப்படையச் செய்தார்கள். என்னை ஒரு வயதான மணமகனாக ஆக்க நினைக்கும் அவர்களுடைய முயற்சிகளை நான் உற்சாகப்படுத்தவேயில்லை. சென்னையில் தியாகியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ராஜ்யலட்சுமிக்கு மட்டுமே என்னுடைய மனைவியாக ஆவதற்கான உரிமை இருக்கிறது என்று அவர்களிடம் கூறுவதற்கு மட்டும், என்னிடம் தைரியம்இல்லை.

என்னுடைய கெட்டநடவடிக்கைகள் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்டு உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டம் கிராமத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு அதிகாலையில் வரும் கண்ணூர் எக்ஸ்பிரஸில் வந்து சேர்ந்தார்கள். எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கு முதிர்ச்சியான குணமும், உயர்ந்த நிலையிலும் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை சோற்றானிக்கரை கோவிலுக்கு அழைத்துக் கொண்டுபோய், ஓமனா எனக்குத் தந்திருக்கக்கூடிய கை விஷத்தை வாந்தி எடுக்க வைக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். சோற்றானிக்கரையில் பஜனம் பலிக்கவில்லையென்றால், எல்லாரும் சேர்ந்து மூகாம்பிகையிடம் அபயம் அடைவது என்று முடிவு செய்தார்கள். எனக்கு கடுமையான கோபம் வந்தது. நான் ஒரு "கூறுகெட்டவன்” என்று கருதப்பட்டு, என்னுடைய சொந்த வாழ்க்கைக்குள் தலையிடுவதற்கு அவர்கள் யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உரத்த குரலில்நான் சொன்னேன். நல்ல ஒரு திருமணமான பெண் என்றல்ல -ஒரு விலை மாதுவைக்கூட காதலியாக எற்றுக்கொள்ள எனக்கு சுதந்திரம் இருக்கிறது என்று நான் சொன்னேன்.


“எனக்கு உங்கள் யாருடனும் எந்தவொரு பிணைப்பும் இல்லை. என் விஷயங்களில் தேவையில்லாமல் யாரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை'' - நான் சொன்னேன்.

தலையை உயர்த்தி வைத்துக்கொண்டே நான் சாயங்காலம் உண்ணித்தானின் வீட்டிற்குச் சென்றேன். வழியில் கூட்டமாக நின்றிருந்த இளைஞர்கள் என்னை என் காதில் விழுகிற மாதிரி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். ”கண்மூடித்தனமாக அடித்துதான் இவனுடைய விளையாட்டை நிறுத்த முடியும்'' - ஒரு இளைஞன் சத்தம் போட்டுச் சொன்னான். நான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் உண்ணித்தானின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேன். என்னைத் தாக்குவதற்காக பண்பாட்டைப் பாதுகாப்பவன் என்று தங்களுக்குத் தாங்களே கூறிக்கொண்டு செயல்படும் சிலர் ஆயத்தம் பண்ணிக்கொண்டு இருக்கின்றனர் என்ற தகவலை என்னுடைய பக்கத்து வீட்டுக்காரரான ஒரு காவல் துறை அதிகாரி என்னிடம் கூறினார். காவல்துறையின் பாதுகாப்பை எனக்காக ஏற்பாடு செய்து தர தனக்கு சிரமம் இல்லாமல் முடியும் என்றும் அவர் சொன்னார்.

முன்பு எப்போதும் வந்திராத ஒரு தைரியம் எனக்கு வந்து சேர்ந்திருப்பதை நான் உணர்ந்தேன்.

“எனக்கு காவல்துறை பாதுகாப்பு எதுவும் தேவையில்லை. அவர்கள் என்னைத் தாக்கட்டும்.நானும் ஒரு கை பார்க்காமல் இருப்பேனா?'' -நான் கேட்டேன். ஓமனாவிடம் எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுரை சொன்னேன். எதிரிகள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் என்றைக்கு அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து கோபத்தைத் தணிப்பதற்காக நகைகளையும் பணத்தையும் திருடிச் செல்வார்கள் என்பதை யாராலும் கூற முடியாது.

“என் நகைகளையும் பணத்தையும் உங்களுடைய வீட்டிற்குக் கொண்டு செல்லுங்கள்.அதற்குப் பிறகாவது நான் மன நிம்மதியுடன் இரவு வேளையில் உறங்கலாம் அல்லவா?'' - அவள் சொன்னாள்.

“அது வேண்டாம்'' - நான் சொன்னேன்.

“நான் உங்களுக்குச் சொந்தமானவளாக ஆன நிலையில், என்னுடைய அனைத்து சொத்துக்களும் உங்களிடமே இருக்கட்டும். இனி என்னைப் பாதுகாத்துக் காப்பாற்ற வேண்டியபொறுப்பு உங்களுக்குத்தான்'' -அவள் என் கரங்கக்குள் இருந்து கொண்டு சொன்னாள்.

அன்று நான், அவளுடைய கணவன் சட்ட விரோதமாகச் சம்பாதித்து வைத்திருந்த எட்டு லட்சம் ரூபாய்களையும், முந்நூறு பவுன் நகைகளையும் என்னுடைய வீட்டிற்கு மிகவும் பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டேன். திரும்பி வரும்போது அவள் சொன்னாள்:

“அதிகம் தாமதம் ஆகாமல் நீங்கள் என்னையும் வீட்டிற்குக் கொண்டு போகணும்.''

நான் அவளுடைய கண்களையே பார்த்தேன். உள்ளுக்குள் காதல் இருப்பதைப் போல நடித்துக்கொண்டு நான் சொன்னேன்:

“ஓமனா...இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாகக் காத்திரு. நோயாளியான ஒரு ஆளை வேதனைப்படுத்தி, நாம் நம்முடைய ஆனந்த மாளிகையைக் கட்டுவது நல்லதல்ல.''

அவளுடைய கண்கள் நிறைவதை நான் ஆனந்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய கையில் தொங்கிக் கொண்டிருந்த தோல் பையின் கனம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதைப்போல எனக்குத் தோன்றியது.

“சாயங்காலம் வர்றேன்'' -நான் உரத்த குரலில் சொன்னேன்.

அதற்குப்பிறகு நான் அந்த சாபம் பிடித்த வீட்டிற்குள் நுழையவே இல்லை. வேலுப்பிள்ளை மூலம் அவள் கொடுத்தனுப்பிய கடிதங்களை வாசிக்காமலேயே நான் கிழித்தெறிந்தேன். இறுதியில் பொறுமையை இழந்த நான் அந்தக் கிழவனிடம்சொன்னேன்:

“எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. இனி நான் அங்கே வருவது அந்த அளவுக்கு நல்லது இல்லை என்று எஜமானி அம்மாவிடம் சொல்லு.'' அவளை எங்கே சந்தித்து விடப்  போகிறேனோ என்று பயந்து, நான் என்னுடைய நடையைக் கூட நிறுத்திவிட்டேன். என்னுடைய வேலைக்காரர்களுக்கு  சந்தேகம் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் தன்வந்தரம் தைலம் வாங்கி, அதை நான் கால்களில் தேய்த்துத் தடவினேன். ஒரு முழங்காலில் துணியால் ஒரு கட்டையும் நான் கட்டிவிட்டேன்.

“முழங்காலில் தாங்க முடியாத வேதனை. சிறிதுகூட நடக்க முடியாது'' - நான் என்னைப் பார்க்கவந்தவர்களிடம் கவலையுடன் கூறினேன். நெருங்குவதற்குத் தயங்கிக் கொண்டிருந்த பல குடும்பத் தலைவர்களும் குடும்பத்துடன் என்னைப் பார்ப்பதற்கு வர ஆரம்பித்தார்கள். சிறிய அரிசி, மரவள்ளிக்கிழங்கு, பழம், ஊறுகாய் போன்ற பரிசுப் பொருட்கள் என்னுடைய வீட்டில் வந்து நிறைந்தன. என்னைப் பற்றித் தாறுமாறாக செய்திகளைப் பரப்பிவிட்ட பெண்கள் உண்மையிலேயே அப்போது தான் பரிதாபம் கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த அளவிற்கு அப்பாவியாக இருக்கும் ஒரு திருமணம் ஆகாத மனிதனைப் பற்றி மோசமாக நாம் பேசி விட்டோமே என்று நினைத்ததால் இருக்க வேண்டும் - அவர்கள் ஒவ்வொருவரும் எதுவும் பேசாமல்இருந்தார்கள். என்னை கவனமாகப் பார்த்துக்கொள்வது என்பது அவர்களுடைய அன்றாடச் செயல்களில் முக்கியமான ஒரு விஷயமாக மாறியது.

உண்ணித்தானின் வீட்டிலிருந்து ஒரு சூறாவளி வேகமாகப் புறப்பட்டு வருமோ என்ற பயத்துடன் இருந்த எனக்கு அங்கேயிருந்து அச்சப்படும் விஷயங்கள் எதுவும் வராது என்பது காலப்போக்கில் புரிந்தது. தன்னுடைய நகைகளைப் பற்றியோ வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தைப் பற்றியோ ஓமனா யாரிடமும் கூறவில்லை. அந்த குடும்பத்தின் பொருளாதார நிலை படிப்படியாகக் குறைந்துகொண்டு வந்தது.அவ்வளவுதான். அந்த தம்பதிகளைப் பற்றி மிகுந்த கூச்சத்துடன் பேச மட்டுமே பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஒரு நாள் சந்தைக்குச் சென்று விலை குறைவான மீனை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த ஓமனாவை என்னுடைய வேலைக்காரன் பார்த்ததாகக் கூறினான்.

“இப்போது வேலைக்கு யாரும் இல்லை. சம்பளம் கொடுப்பதில்லை. பிறகு யார் வேலைபார்ப்பார்கள்?'' என்னுடைய வேலைக்காரன் யாரிடம் என்றில்லாமல் கேட்டான்.

“அவர்களிடம் வேண்டிய அளவிற்குப் பணம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கேனே!'' - நான் கேட்டேன்.

“அந்தப் பெண் மோசமான வழிகளில் சம்பாதித்த பணம். இப்போது யாரும் அந்த அம்மாவைத் தேடிப் போவதில்லை. பிறகு எப்படி இரண்டு நேரமும் சோறு வைக்க முடியும்?''

நான் பரிதாபத்தை வெளிப்படுத்தியவாறு தலையைக் குலுக்கினேன்.

என் மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் சமூகம் சுமத்தவில்லை. திருமணமாகாத ஒரு நல்ல மனம் கொண்ட மனிதனை சிறிது காலம் வசீகரித்து, தான் கூறியபடி நடக்கச் செய்ததற்கும் பாவச் செயல்களைச் செய்யும்படி தூண்டியதற்கும் சமூகம் ஓமனா உண்ணித்தானை தண்டிக்கத் தீர்மானித்தது. அவளைச் சந்திக்கும்போது பார்க்கவில்லை என்று நடித்து முகத்தைத் திருப்பிக் கொள்ளும்படியும், அவளை எந்தவொரு விருந்திற்கும் திருமண நிகழ்ச்சிக்கும் அழைக்காமல் இருக்கவேண்டும் என்றும் சமுதாயத் தலைவர்கள் தங்களுடைய பெண்களுக்கு உத்தரவு போட்டார்கள். கவலை நெருப்பில் வெந்து வெந்து அவள் சாகட்டும். ஆனால், அந்த கவலை நெருப்பு மெதுவாக மட்டும் எரியட்டும்...


கிட்டத்தட்டஒரு வருடம் கடந்திருக்கும். நான் சென்னைக்கு புதிய சூட்கேஸ், புதியஆடைகள், புதிய கைக்கடிகாரம், புதிய ஆசைகள் என்று புறப்பட்டபோது விமானநிலையத்தில் ஏற்கெனவே அறிமுகமான முகங்களிலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, ஒரு நாளிதழால் முகத்தை மறைத்துக் கொண்டு, வாசிப்பில் மூழ்கியிருப்பதைப் போல காட்டிக்கொண்டு நான் அமர்ந்திருந்தேன். என்னுடைய குற்ற உணர்வை என் முகம் வெளிப்படுத்திவிடுமோ என்று நான் பயந்தேன். இறுதியில் சென்னையை அடைந்து அங்கு சோழா ஹோட்டலில் அறை எடுத்து, நான் இரண்டாவது தடவையாகக் குளித்தேன். என்னுடைய உடலின் வியர்வைக்கு பாவத்தின் கெட்ட நாற்றம் இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். என்னுடைய பாவத்தைப் புனிதமானவளும் கள்ளங்கபடமற்றவளுமான ராஜு வாசனை பிடித்துத்தெரிந்துகொள்வாளோ? வாசனை பிடித்து தெரிந்து கொள்ளும்போது, அவள் என்னிடமிருந்து இரண்டாவது தடவையாக ஓடி மறைவாளோ? அல்லது என்னுடைய முற்பிறவி புண்ணியத்தின் காரணமாக அவள் என்ற புனித தீர்த்தத்தில் நீராடி நான் களங்கமில்லாதவனாகத் தோன்றுவேனா?

நான் அந்த வீட்டை அடைந்தபோது, நேரம் கிட்டத்தட்ட ஆறரை ஆகியிருந்தது. வீட்டின் தென்மேற்கு திசையில் வானத்தின் சாம்பல் நிறத்தில் ஒரே ஒரு நட்சத்திரம் வெளியே வந்துவிட்டிருந்தது. ராஜு எப்போதும் வணங்கக்கூடிய வியாழநட்சத்திரம். நான் பக்தியுடன் அதை வணங்கினேன். ராஜு முன்பு சொல்லித் தந்த சுலோகத்தை எத்தனை முறை ஞாபகப்படுத்திப் பார்த்தும் எனக்கு அதன் மூன்றுசொற்களைத் தவிர, வேறு எதுவும் ஞாபகத்தில் வரவில்லை.

“ரத்னாஷ்டாபதவக்த்ரராசி-'' -அந்தச் சொற்களை மட்டும் திரும்ப திரும்பஉச்சரித்துக்கொண்டே நான் முன் வாசலை நோக்கிச் சென்றேன். சாதாரணமாக தோட்டத்திலும் வாசலிலும் வேலை செய்தவாறு காட்சியளிக்கும் வேலைக்காரர்களை நான் பார்க்கவில்லை. பூச்சட்டியில் இருந்த பெரிய இலைகள் வழியாக நான்அவளைப் பார்த்தேன். பித்தளைக் கண்ணிகளைக் கொண்டு உத்திரத்தில் கட்டப்பட்டஅந்த ஊஞ்சலின் சத்தத்தையும் நான் கேட்டேன். ராஜுவிடம் எந்தவொரு மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை. அவளுடைய அழகிற்கு காலத்தாலும் அனுபவங்களாலும் மட்டுமே சம்பாதித்துத் தர முடியக்கூடிய ஒரு தனிப் பக்குவம் வந்து சேர்ந்துவிட்டிருப்பதை நான் பார்த்தேன். அலமாரியின் ஒரு பெட்டிக்குள், இருட்டில் பல வருடங்களாகப் பாதுகாத்து வைக்கப்பட்ட ஒரு பட்டாடையின் மங்கலான ஒளியை அவளுடைய தோல் அடைந்துவிட்டிருந்தது. அவள் தன்னுடைய வலது காலின் பெருவிரலை நிலத்தில் ஊன்றியவாறு ஆடிக்கொண்டிருந்தாள்- உணர்ச்சியற்ற முகத்துடன்.

“ராஜு...'' -நான் அழைத்தேன். அந்த அழைப்பில் என் தொண்டை தடுமாறியது. பாலைவனத்தில் கால்களால் நடந்து பயணித்துக் கொண்டிருக்கும் பயணியைப் போல கால்கள்குழைந்து, தொண்டை வறண்டு, நான் அவளுடைய கால்களில், அந்த சிவந்த தரைவிரிப்பில் தளர்ந்து விழுந்தேன். இரண்டு தடவை ஊஞ்சலின் ஓரங்கள் என்னுடைய தோள்களில் தட்டின.

“அய்யோ! இங்கே என்ன நடக்குது?'' - ராஜு கேட்டாள். அவள் ஊஞ்சலின் ஆட்டத்தை கட்டுப்படுத்தி நிறுத்தினாள்.

“நீங்களா?'' -அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். தன்னுடைய மெலிந்து போன கைகளால் அவள் என்னைப் பிடித்து எழ வைத்தாள்.

“நீங்க குடிச்சிருக்கீங்களா? இப்படி விழுந்ததுக்கு அர்த்தம் என்ன?'' -அவள் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டே கேட்டாள். அவளுடைய விரிந்த கண்களுக்கு முன்னால் நான் பயத்துடன் நின்றிருந்தேன். என்னுடைய சதைகள் தளர்வதைப் போல எனக்கு தோன்றியது.

“நான் எந்தச் சமயத்திலும் குடித்தது இல்லை, ராஜு'' –நான் முணுமுணுத்தேன்.

“நீங்க பார்க்குறதுக்கு எவ்வளவோ மாறிட்டீங்க. தெருவிலோ பொது இடத்திலோ வைத்து பார்த்திருந்தால், ஒருவேளை எனக்கு நீங்க யாருன்னு அடையாளமே தெரிஞ்சிருக்காது'' - அவள் சொன்னாள்.

“ராஜு, நீ தோற்றத்தில் மாறவே இல்லை'' - நான் சொன்னேன்.

காதுகளுக்குமேலே இரண்டு, நான்கு தலை முடி நரைத்து விட்டிருக்கின்றன என்பதைத் தவிர,வேறு என்ன மாற்றத்தைக் காலம் ராஜுவிடம் உண்டாக்கி இருக்கிறது? எதுவும் இல்லை.

“வெளியிலும் உள்ளேயும் எந்தவொரு மாறுதலும் இல்லை. மாற முடியாமல் இருப்பதும் ஒரு பலவீனம்தான்'' - அவள் சொன்னாள்.

“அது எப்படி?'' - நான் கேட்டேன்.

“மாறிக் கொண்டிருக்கும் காலத்துடன் சேர்ந்து மாற முடியாதவர்களுக்கு, இணைந்து போக முடியாது'' - அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

ஒரு வீட்டுத் தலைவியின் கடமைகள் ஞாபகத்தில் வந்ததைப் போல அவள் வேகமாகத் திரும்பி நடந்தாள். நான் முன்னறையில் இருந்த ஒரு சோபாவில் அமர்ந்தேன்.என்னுடைய இதயம் அடித்துக் கொண்டிருந்த பெரும் பறையில் வேறு எந்த சத்தத்தையும் என்னால் கேட்க முடியவில்லை. அழகான அவள் ஒரு கப் தேநீரை என்னை நோக்கி நீட்டும் நிமிடம் வரை நான் கண் விழித்திருந்தேனா அல்லது தூங்கிக்கொண்டிருந்தேனா என்பதுகூட எனக்குத் தெரியாது. உண்மையும் கற்பனையும் அந்த அளவிற்கு ஒன்றோடொன்று சேர்ந்திருந்திருந்தன. என் சிந்தனைகளில், என் அன்றாட கனவுகளில் எத்தனையோ தடவை நான் முத்தமிட்ட அந்த முகம், என்னுடைய கண்களுக்குமுன்னால் ஒரு முழு நிலவைப் போல் உதயமாவதை நான் பார்த்தேன்.

“என் ராஜு...'' - நான் காதல் பரவசத்துடன் அழைத்தேன். அதிர்ச்சியடைந்த அவள் அமைதியாக இருந்தபோது, உற்சாகம் கிடைத்ததைப் போல நான் அவளிடம் கெஞ்சினேன்:

“இனி ஒரே ஒரு நிமிடம் கூட என்னால் நீ இல்லாமல் வாழ முடியாது. என்னைத் திருமணம் செய்து கொள். என்னுடன் சேர்ந்து வாழ்.''

அவள் தேநீர் கப்பை மேஜைமீது வைத்துவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள்.

“உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு!'' - அவள் சொன்னாள். அவளுக்கும் எனக்கும் நடுவில் பெஞ்ச் போல நீளமான ஒரு காப்பி மேஜை இருந்தது. அதன் மீது பஞ்சலோகத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு நடராஜர் விக்ரகம் இருந்தது. ஒரு அடி உயரத்தில் இருந்த சிலை. எதையும் தொடவில்லை என்றாலும், அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லையென்றாலும், அந்தச் சிலையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி என்னைக் கொல்வதற்கு அவள் முடிவு செய்திருக்கிறாள் என்று என்னுடைய உள்மனது எனக்கு எச்சரிக்கை தந்தது.

“நான் உன்னை வழிபாடு செய்ய ஆரம்பித்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது ராஜு? உன்னை ஏமாற்றிய தேவதாஸை நான் பழிக்குப் பழி வாங்கிவிட்டு வந்திருக்கிறேன். இனி என்னை ஏற்றுக்கொள்'' - நான் சொன்னேன்.

“நீங்கள் தேவதாஸை என்ன செய்தீர்கள்?'' - ராஜு கேட்டாள்.

“அது ஒரு நீண்ட கதை. நம்முடைய தேனிலவின் போது நான் அந்த கதையை உன்னிடம் கூறுகிறேன்'' - நான் சொன்னேன். நான் மேஜையைச் சுற்றி நடந்து ராஜுவைத் தொடுவதற்காகக் கையை நீட்டினேன்.

“தொடாதீங்க...'' - அவள் உத்தரவிட்டாள்.

“தொட்டால்?''

“கண்ணன் உங்களைக் கொல்லுவான்.''

“கண்ணனா? நீ மீண்டும் திருமணம் செய்துகொண்டாயா?''

“கண்ணன் என்னுடைய டாபர்மென் நாய். அவனை நான் வாசலில் அவிழ்த்து விட்டிருக்கிறேன்.சத்தம் போட்டு அழைத்தால் அவன் ஓடி வருவான். உங்களுடைய தொண்டையை அவன் பாய்ந்து கடிப்பான்'' - ராஜு சொன்னாள்.

“நான் செய்தவை அனைத்தும் வீணாகிவிட்டனவா? உனக்காக உண்ணித்தானைப் பழிக்குப் பழி வாங்கியதும், பாவச் செயல்களில் பங்கெடுத்ததும் வீணா? நீ எந்தக்காலத்திலும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாயா?''

“இல்லை''-அவள் சொன்னாள். நான் தோட்டத்தைக் கடந்து, பின் பக்கம் பார்க்காமல் நடந்து வெளிவாசலை அடைந்தேன். வெளிக்கதவை நானே அடைத்தேன். அந்த நிமிடத்தில் முற்றத்தில் இருந்தோ வேறு இடத்தில் இருந்தோ நாய் ஒன்று குரைக்க ஆரம்பித்தது. அவன் குரைப்பதை நிறுத்தியபோது, நான் ஊஞ்சலின் அழுகையைக்கேட்டேன். அவள் அமைதியாக ஊஞ்சலின் அமர்ந்து ஆடிக்கொண்டிருக்கலாம். பித்தளைக்

கண்ணிகளின் அந்த அழுகைச் சத்தத்தை ஒரு விடைபெறும் வார்த்தைகளாக நான் எடுத்துக்கொண்டேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.