Logo

ஓ.வி. விஜயன் ஓர் அறிமுகம்

Category: வாழ்க்கை வரலாறு
Published Date
Written by சுரா
Hits: 6461
o-v-vijayan-oor-arimugam

சுராவின் முன்னுரை

1978- ஆம் ஆண்டு கேரளத்தில் ‘மலையாள நாடு’ என்ற பெயரில் அருமையான ஒரு வார இதழ் வந்து கொண்டிருந்தது. நான் அந்தப் பத்திரிகையின் நிரந்தர வாசகன். வி.பி.ஸி. நாயர் என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். ஒவ்வொரு வாரமும் ‘மலையாள நாடு’ பத்திரிகையைப் படிப்பதென்றால் அப்படியொரு வெறி எனக்கு. அந்தக் காலகட்டத்தில் எம். முகுந்தன், காக்கநாடன் என்று பலரும் அதில் தொடர் கதைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஓ.வி. விஜயனின் (O.V.Vijayan)  ஒரு தொடர் கதை பிரசுரமாகிக் கொண்டிருந்தது. கதையின் பெயர் : தர்ம புராணம். இந்திரா காந்தியின் அவசர காலச் சட்டம், கேரளத்தின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்று பல விஷயங்களையும் அதில் கடுமையாக அவர் சாடி எழுதியிருந்தார். அரசியல் பின்னணியில் உயிரோட்டத்துடன் - ‘பொலிட்டிக்கல் சட்டயர்’ பாணியில் எழுதப்பட்ட அந்தத் தொடர்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஓ.வி. விஜயனின் பாகுபாடற்ற, தெளிவான அரசியல் பார்வையும், அரசியல்வாதிகளின் போலி முகத்தைக் கிழித்தெறியும் ஆவேசமும், அரசியலில் கலந்திருக்கும் பொய் - பித்தலாட்டங்களையும், முரண்பாடுகளையும் மக்களிடம் கட்டாயம் சொல்ல வேண்டும் என்ற அவரின் உயர்ந்த நோக்கமும் - என்னைக் கவர்ந்த அம்சங்கள்.

‘தர்ம புராணம்’ பிரசுரமான காலத்தில் அதற்கு முன்பு தான் எழுதிய ‘கஸாக்கின்றெ இதிகாசம்’ நாவலுக்காக மிகப்பெரிய அளவில் ஒரு பெயரைச் சம்பாதித்திருந்தார். ஓ.வி. விஜயன். கேரளப் பத்திரிகைகளும் இலக்கிய வாசகர்களும் அவரின் அந்தக் கதையைத் தலையில் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். இலக்கிய வேட்கை கொண்ட மனிதர்களை எங்கு, எப்போது சந்தித்தாலும் பேச்சுக்கு நடுவே ‘கஸாக்’கின் பெயர் கட்டாயம் இடம் பெறும்.

பேராசிரியர் கெ.எம். தரகன் என்பவர் எழுதிய ‘மலையாள இலக்கிய வரலாறை’ப் படித்தேன். அதில் ஓ.வி. விஜயனைப் பற்றி நிறைய அவர் எழுதியிருந்தார். குறிப்பாக ‘கஸாக்கின் இதிகாச’த்தைப் பற்றி பல பக்கங்கள் அதில் எழுதப்பட்டிருந்தன. கேரளத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் யாருடன் பேச நேர்ந்தாலும், ‘ஓ.வி. விஜயனைப் படிச்சிருக்கீங்களா? ‘கஸாக்கின் இதிகாச’த்தைப் படிச்சிருக்கீங்களா ? என்று கேட்பார்கள். இப்படியொரு பெயரைப் பரவலாக எல்லோரிடமும் ஓ.வி. விஜயன் பெற்றிருப்பது உண்மையிலேயே பெருமைப்படத்தக்க ஒரு விஷயம்.

விஜயன் எந்த நேரம் பார்த்தாலும் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நபர் அல்ல. தன் இலக்கிய வாழ்க்கையில் அவர் மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால், அவர் எழுதிய ஒவ்வொன்றும் பேசப்படக்கூடியவை. அதனால்தானோ என்னவோ, கடந்த எத்தனையோ ஆண்டுகளாக அவர் எல்லா இடங்களிலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறார். மலையாளத்தின் மிகச்சிறந்த பத்து புதினங்கள் என்றொரு பட்டியல் போட்டால், அதில் கட்டாயம் ஓ.வி.விஜயனின் ‘கஸாக்கின்றெ இதிகாசம்’ இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

சொல்லப்போனால் - அரசியல் பின்னணியில் கதைகள் எழுதிய எழுத்தாளர் மலையாள இலக்கியத்திலேயே விஜயன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதற்கு ஒரு காரணம் - டெல்லியில் ஆங்கில நாளிதழ்களில் கார்ட்டூனிஸ்ட்டாகவும், காலம்னிஸ்ட்டாகவும் அவர் பணிபுரிந்தபோது சந்தித்த மனிதர்கள், பெற்ற அனுபவங்கள்.

விஜயனுக்கென்று மலையாள இலக்கிய உலகில் தனியான ஒரு மதிப்பு இருக்கிறது - மரியாதை இருக்கிறது. அவர் ஒரு தனிமை விரும்பி. எந்தவிதமான சர்ச்சைகளிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. துறவு மனதுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் விஜயனை எல்லோரும் விரும்புவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ?

ஓ.வி.விஜயனின் தனித்துவமே - அவரின் மொழி நடை. தனக்கென்று ஒரு பிரத்யேக மொழி நடையை அவர் தன் படைப்புகளில் கையாள்கிறார். கஷ்டமான - அதே சமயம், வித்தியாசமான வாக்கியங்களை அவர் சர்வ சாதாரணமாகத் தன்னுடைய படைப்புகளில் பயன்படுத்துவதைப் பார்க்கிறபோது, நமக்கே வியப்பாக இருக்கும். இந்த வார்த்தைகள் எல்லாம் எப்படி இவரின் பேனா முனையில் வந்து விழுகின்றன என்று மூக்கில் விரல் வைக்கத் தோன்றும்.

விஜயனின் இலக்கியப் படைப்புகளைத் தமிழில் அடுத்தடுத்து மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருக்கேன். அதற்கு ஒரு வெள்ளோட்டம்தான் இந்தச் சிறிய நூல். ஓ.வி.விஜயனுக்கு சில வருடங்களுக்கு முன்பு கேரளத்தின் பெரிய இலக்கியப் பரிசான ‘எழுத்தச்சன் விருது’ வழங்கப்பட்டது. இதையொட்டி ‘மாத்ருபூமி’ வார இதழ் ஓ.வி.விஜயனைப் பற்றி பல முக்கிய மனிதர்கள் எழுதியிருந்த கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. அவற்றின் தமிழ் வடிவமே இந்நூல். இந்தக் கட்டுரைகளில் ஒன்று எழுத்தாளர் எம். முகுந்தன் எழுதியது. ஒரு எழுத்தாளர் - தன் சமகால இன்னொரு எழுத்தாளரை மனம் திறந்து பாராட்டி எழுதுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! எம். முகுந்தன் அதைச் செய்திருக்கிறார். அந்த நல்ல மனதிற்காகவே முகுந்தனை நாம் பாராட்டலாம். இதுபற்றி அப்போது புதுடில்லியில் இருந்த எம். முகுந்தனுடன் தொலைபேசியில் நான் பேசினேன். விஜயனைப் பற்றி மனப்பூர்வமாகப் பாராட்டி அவர் எழுதியிருந்ததற்காக நான் கொண்ட மகிழ்ச்சியை அவரிடம் சொன்னேன். நான் சொன்னதற்கு மிகவும் சந்தோஷப்பட்டார் முகுந்தன். ஒரு எழுத்தாளர் ஒரு விருதைப் பெறுகிறார் என்றால், அதை முழுமையாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது பத்திரிகைகளின் கையில்தான் இருக்கிறது. அதை ‘மாத்ருபூமி’ செவ்வனே செய்திருக்கிறது. இதுதான் வாழும் காலத்தில் ஒரு பத்திரிகை ஒரு இலக்கியப் படைப்பாளிக்குக் காட்டுகிற மரியாதை. நம் தமிழ் பத்திரிகைகள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

இந்நூலில் ஓ.வி.விஜயனுடன் நடைபெற்ற ஒரு சிறு உரையாடலும் இடம் பெற்றிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்த ‘மலையாள மனோரமா’வின் மலரொன்றில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் அது.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட மாத்ருபூமி, மலையாள மனோரமா இதழ்களை நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

 ‘ஒ.வி.விஜயன் ஓர் அறிமுகம்’ (O.V. Vijayan – Or Arimugam) என்று நான் மொழி பெயர்த்த இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


தேடி வந்த விருது 

                             - எம். முகுந்தன்

.வி.விஜயனுக்கு எழுத்தச்சன் விருது கிடைத்திருக்கிறது. ஒரு மொழியால், மனிதனைப் போல சந்தோஷப்பட முடியும் என்றால், மலையாள மொழி இந்த நிமிடத்தில் மிகவும் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கும். விஜயனைப் போன்ற ஒரு எழுத்தாளன் கவுரவிக்கப்படுகிற போது, அதனால் பெருமைப்படுவது விஜயனுக்கென்று இருக்கின்ற வாசகர்கள் கூட்டமும் சேர்ந்துதான்.

மலையாள மொழியில் பரிசுகள் கிடைக்கும்போது மட்டும் நாம் நினைத்துப் பார்க்கிற சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெறும் பரிசுகள் மூலம் ‘இதோ நான் இங்குதான் இருக்கிறேன்’ என்று அவர்கள் உரத்த குரலில் கைதூக்கிக் கூறி தாங்கள் இருப்பதை மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்வார்கள். இவ்வாறு அவ்வப்போது பரிசுகளும், விருதுகளும் கிடைப்பதாலும், அவர்கள் உரத்த குரலில் தாங்கள் இருப்பதைச் சொல்லிக் கொள்வதாலும்தான் நம்முடைய எழுத்தாளர்களில் பலரை இன்னும் நாம் மறக்காமல் இருக்கிறோம். தங்களின் படைப்புகளின் மேன்மைத்தனத்தால் அல்ல - மாறாக, விருதுகள் கிடைப்பதாலும், சர்ச்சைகளாலும் மட்டுமே பெரிய எழுத்தாளர்கள் என்ற அங்கியை அணிந்து கொண்டிருக்கும் சிறிய எழுத்தாளர்கள் பலரும் மலையாளத்தில் இருக்கிறார்கள்.

பெரிய விருதுகளுக்குப் பின்னால் இதற்காகச் செய்யப்பட்ட கடுமையான முயற்சிகளும், சில குறுக்கு வழிகளைக் கையாண்டிருக்கும் தகவல்களும் கூட நமக்குச் சில வேளைகளில் தெரியவரும். அத்தகைய எந்தவிதமான முயற்சிகளும் இல்லாமலேயே - மிகவும் அபூர்வமாக என்றுகூடக் கூறலாம்- சில விருதுகள் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கத்தான் செய்கின்றன. விஜயனுக்குக் கிடைத்திருக்கும் விருது அத்தகைய ஒன்றே. ஒரு குழந்தை மெல்ல மெல்ல எட்டு வைத்து நடந்து வருவது மாதிரி எழுத்தச்சன் விருது விஜயனைத் தேடி வந்திருக்கிறது. ஓ.வி.விஜயன் இன்று மலையாளத்தில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா விருதுகளுக்கும் உயரத்தில் நின்று எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் என்று எல்லோரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அப்படி நம்புவதைத்தான் நானும் விரும்புகிறேன்.

சமீப காலமாக விஜயனைப் பற்றி சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருவதையும் நாம் கவனிக்காமல் இல்லை. எழுத்தச்சன் விருது விஜயனுக்குக் கிடைத்திருப்பது குறித்த தேவையில்லாத சர்ச்சைகள் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்று மொழி மீது அக்கறை கொண்டிருக்கும் மனிதர்கள் விரும்புவது நியாயமான ஒன்றே. காரணம் - தானே உண்டாக்கிக் கொண்ட நோய்களாலும், தானே வரவழைத்துக் கொண்ட முதுமையாலும் பீடிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எழுத்தாளனைப் பற்றி இனி எதற்குத் தேவையில்லாத சர்ச்சைகள்?

ஏற்கனவே நிலவி கோலோச்சிக் கொண்டிருந்த அமைப்புகளின் அஸ்திவாரத்தை விஜயன் எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமலும், மவுனமாக இருந்தும் ஆட்டிப்படைத்த ஒரு காலம் இருந்தது. அன்று விஜயனைப் பற்றி எந்தவித சர்ச்சையும் எழுப்பாமல் அமைதியாக இருந்த நாம் இன்று எதற்கு விஜயனை அவரின் தியான நித்திரையில் தொந்தரவு செய்ய வேண்டும்?

எழுத்தச்சன் விருது இது போன்ற சில கேள்விகள் எழுப்ப நம்மைத் தூண்டுவதென்னவோ உண்மை.

சில எழுத்தாளர்களுக்கு நாம் விருதுகள் வழங்குகிறபோது அந்த எழுத்தாளர்களுக்கு அல்ல - அந்த விருதுகளுக்குத்தான் பெருமை வந்து சேர்கிறது. தவறான நபர்களுக்கு விருதுகள் போய் சேர்கிறபோது, அந்த விருதுக்குக் கொஞ்சம் கூடப் பெருமையே இல்லாமல் போகிறது. எல்லா இடங்களிலும் அரசியல் தன் அதிகாரத்தைப் பயன்படுத்த முயலும்போது, எப்படி அந்த அரசியல் பலவீனமாகிப் போகிறதோ, அதேபோன்று அரசியல் முலாம் பூசிக்கொண்டு கொடுக்கப்படும் விருதுகளும் கிட்டத்தட்ட கொஞ்சம் கூட மதிப்பே இல்லாமல் போய்விடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த வருடத்திற்கான எழுத்தச்சன் விருது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ, அவருக்கு முறையாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்கிறேன்.

 சமீப காலமாகப் பலவித சந்தேகங்களுக்கும் இடம் தரும் வகையில் தன்னைத்தானே ஒதுக்கிக்கொண்டு ஒரு இருட்டு உலகத்தைச் சமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜயன். இந்த எழுத்தச்சன் விருது ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் விஜயன்மேல் ஒரு பிரகாசத்தைப் பாய்ச்சி விட்டிருக்கிறது என்பது உண்மை. இந்த விருது மூலம் விஜயனின் இலக்கியப் படைப்புகளை மீண்டும் ஒரு முறை ஆரம்பத்திலிருந்து பார்ப்பதற்கு ஒரு சூழ்நிலை உண்டாகியிருக்கிறது என்று கூட கூறலாம். அதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்தப் பரிசு தந்ததன் மூலம் இயற்கையாகவே உருவாகி இருப்பது குறித்து மகிழ்ச்சியே. பன்முகத்தன்மை கொண்ட விஜயனைப் போன்ற ஒரு எழுத்தாளனை முழுமையாக நாம் பார்க்க வேண்டுமென்றால், முதலில் நம் பார்வையை நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அப்போதுதான் நம்மால் அவரைப் புரிந்து கொள்ள முடியும். ‘கஸாக்கின் இதிகாசம்’ அதன் பிரகாசத்தை மிகப் பெரிய அளவில் நம் கண்கள் மீது பாய்ச்சியதன் விளைவு - நம்மில் பலரும் அதன் தாக்குதல் தாங்க முடியாமல் குருடர்களாகிப் போனோம். அதன் தொடர்ச்சியாக - விஜயனின் படைப்பு உலகத்தின் வெளிச்சம் குறைந்த பாதைகளில் இறங்கிச் செல்வதற்கான தைரியம் நமக்கு இல்லாமல் போனது. விஜயனை ‘கஸாக்கின் இதிகாசம்’ எழுதிய எழுத்தாளர் என்று மட்டுமே பார்த்து அதோடு நிறுத்திக் கொண்டதுதான், நாம் செய்த மிகப்பெரிய தவறு. விஜயனின் இலக்கிய ஆக்கங்களைக் குறித்து பேசப்பட்ட பல விஷயங்களில் பெரும்பாலும் பேசப்பட்டது விஜயனின் மொழி பிரயோகத்தைப் பற்றித்தான். இருந்தாலும், வரும் தலைமுறைகள் விஜயன் என்ற இந்த எழுத்தாளனை நினைக்கும்போது, அவர்கள் மனதில் ஞாபகம் வரப்போவது விஜயன் ஒரு புதிய மொழியை உண்டாக்கியவர் என்பது அல்ல. பலவித எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் வாங்கிக் கொண்டு தன் படைப்புகள் மூலம் விஜயன் வளர்த்துக் கொண்டு வந்த இலட்சியங்கள் - எண்ணங்கள் மொழிக்குள் சிக்கிக்கொண்டு காணாமல் ஒன்றும் போகவில்லை. விஜயனின் மொழிநடை மீது மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவரின் மன எண்ணங்களும், சித்தாந்தங்களும் காலத்தைக் கடந்து நிலைபெற்று நிற்கும் என்பது மட்டும் நிச்சயம்.

 மாறுபட்ட மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இலக்கியப் படைப்பு நவீன இலக்கியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக பொதுவாக உலக அளவில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மலையாளத்திலும் இந்தப் போக்கு நவீன இலக்கிய கால கட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பமாகி படிப்படியாக வளர்ந்தும் வந்தது. அதற்குக் காரணம் - விஜயனும் கஸாக்கும் என்று சொன்னால் கூடத் தப்பில்லை. இதன் விளைவு - மொழி மீது கொண்ட வெறியின் காரணமாக நவீனத்துவத்தின் மையத்திலிருந்து பல்வகைப்பட்ட சர்ச்சைகளும், விவாதங்களும் எழும்ப ஆரம்பித்தன. அதன் காரணமாகத்தான் இருக்க வேண்டும்- இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதன் தொடர்ச்சியாக நடக்கும் ஆராய்ச்சிகள், மலையாளத்தில் மிகவும் குறைவாக இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

 பல மொழிகளிலும், நல்ல எழுத்தாளர்களும், பெரிய சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். இனியும் பலர் இருப்பார்கள். இருந்தாலும், ஒரே நேரத்தில் ஒரு நல்ல எழுத்தாளனாகவும், பெரிய ஒரு சிந்தனாவாதியாகவும் ஒரே ஆள் இருப்பது என்பது அவ்வளவு சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்றல்ல. நம்மிடம் இருக்கும் நல்ல எழுத்தாளர்களில் பெரும்பாலனவர்கள் மோசமான சிந்தனையாளர்கள் என்ற உண்மையை நாம் பொதுவாக ஒத்துக் கொள்ள தயங்குகிறோம். தெளிவான பார்வையும், ஆழமான சிந்தனையும், தீவிரத்தன்மை கொண்ட மொழி மூலம் அதை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலும் கைவரப்பெற்ற ஒரே எழுத்தாளர் விஜயனாகத்தான் இருக்க முடியும். எழுத்தச்சன் விருது விஜயனைத் தேடி வந்திருப்பதால் நாம் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமே இல்லை.

 கடந்த முப்பது வருடகாலமாக இலக்கியங்கள் படிப்போர்கள் மத்தியில் பேசப்பட்டும், சர்ச்சைகள் செய்யப்பட்டும் வந்திருக்கிறார் ஒரு திகம்பரனைப்போல தான் உண்டு தன் உலகம் உண்டு என்றிருக்கும் விஜயன். நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு என் அலுவலகத்தின் கஃபேட்டேரியாவில் அமர்ந்து நானும் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் பணியாற்றும் இ.பி. உண்ணியும் விஜயனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் விஜயனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கும் ஒரு பழைய நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தோம். சென்னையில் விஜயன் சாலையொன்றைக் கடப்பதற்காக பதைபதைப்புடன் நின்று கொண்டிருக்கிறார். தொடர்ந்து வாகனங்கள் படுவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சாலையைக் கடப்பதற்கு, விஜயனுக்கு மிகவும் பயம். நேரம் கடந்து கொண்டே இருந்தது. இருந்தும் விஜயனால் சாலையைக் கடக்க முடியவில்லை. கடைசியில் இந்தப் பிரச்னைக்கு விஜயனே ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு ஆட்டோவை அழைத்து, அதில் உட்கார்ந்து சாலையின் மறுபக்கம் போய்ச் சேர்வது.  இதுதான் விஜயனின் திட்டம். சாலையைக் கடந்து செல்வதற்காக ஒரு ஆட்டோவை வாடகைக்குப் பிடித்த ஒரு மனிதர் உலகத்திலேயே விஜயன் மட்டும்தான் இருக்க முடியும்.

சொல்லப்போனால் விஜயனிடம் இருக்கும் ஒரு நோய் - பயம். வாகனங்களையும், எட்டுக்கால் பூச்சிகளையும் பார்த்தால் விஜயனுக்கு மிகவும் பயம். அதே நேரத்தில் உலக கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டை விமர்சிக்கவும், நெருக்கடி நிலைக் கால கட்டத்தில் இந்திரா காந்தியை விமர்சிக்கவும் அவர் கொஞ்சம்கூட பயந்ததில்லை. எட்டுக்கால் பூச்சியைப் பார்த்துப் பயப்படக்கூடிய விஜயனுக்கு நெருக்கடி நிலையைப் பார்த்துப் பயமில்லை. சாலையில் வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிற பஸ்ஸைப் பார்த்துப் பயப்படக்கூடிய விஜயனுக்கு கேரளத்தில் பலம் பொருந்திய மார்க்சிஸ்ட் இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்துக் கொஞ்சம் கூட பயமில்லை.

மனம் திறந்து கூறக்கூடிய அளவிற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் விஜயன் என்ற எழுத்தாளனிடம் இருக்கின்றன. அதிகார வர்க்கத்தை விட்டு விஜயன் என்றுமே ஒதுங்கியே இருந்தார். பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளின் கார்ட்டூனிஸ்ட் என்ற நிலையிலும், தொடர்ந்து கட்டுரைகள் எழுதுபவர் என்ற நிலையிலும் டெல்லியில் விஜயன் நினைத்திருந்தால், மிகப்பெரிய தொடர்புகளைச் சர்வ சாதாரணமாக ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் கொஞ்சம்கூட கவனமே செலுத்தாமல் சாணக்யபுரியில் இருக்கும் தன்னுடைய பழைய வீட்டில் தான் வளர்க்கும் பூனைக்குட்டியை மடியில் வைத்து அன்புடன் தடவியவாறு தன்னுடைய எண்ணங்களுடனும், பயங்களுடனும் விஜயன் தன் வாழ்க்கையின் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். விஜயன் அரசாங்கத்தின் எந்தக் கமிட்டியிலும் உறுப்பினர் இல்லை. வெளிநாடுகளுக்கு இதுவரை இவர் போனதே இல்லை. டெல்லியில் இருக்கும் எழுத்தாளர்கள் கூட அதிகாரத்தையும் பல அமைப்புகளையும் கைப்பற்றிக் கொண்டு பந்தாவாக உலா வருகிறபோது, ஒரு கதர் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு, சிறிய அளவில் உணவு உண்டு, மகாத்மா காந்தியையும் விட எளிமையான ஒரு வாழ்க்கையை டெல்லியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் விஜயன்...

 சிந்தனையிலும், எழுத்திலும் மட்டும்தான் விஜயன் ஒரு கணக்குப் பார்க்காத தாராள மனம் கொண்ட மனிதர்.

 ஞானபீடத்தையும் தாண்டி விஜயன் மிகவும் முன்னால் போயிருக்கிறார். அதனால் ஞானபீடத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

 தன்னுடைய நோய்களுடனும், பயங்களுடனும் இனியும் நீண்ட நெடுங்காலம் விஜயன் நம்முடன் வாழ வேண்டும். காரணம் - விஜயனின் எண்ணங்களும் மன ஓட்டங்களும் நமக்குக் கிடைத்திருக்கும் கொடைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவை நமக்கு அவசியமும் கூட.


ஜீனியஸ்ஸின் முத்திரை உள்ள மொழி

                                                                  - வி.கெ. என்.

விஜயனை நான் முதல் தடவையாகப் பார்த்தது 1956 - ஆம் ஆண்டு பாலக்காட்டில் உள்ள ஹரிக்காரத் தெருவில் இருந்த ஒரு லாட்ஜில். அப்போதுதான் விஜயனின் ‘மூன்று யுத்தங்கள்’ என்ற நூல் வெளிவந்திருந்தது. அதற்குப்பிறகு பல வருடங்கள் அவர் ஒன்றுமே எழுதவில்லை. அதற்குப்பிறகு 1959-60 கால கட்டத்தில் அவரை கோழிக்கோடு மலபார் கிறிஸ்டியன் கல்லூரியில் பார்க்கிறேன். அப்போது விஜயன் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். அந்தச் சமயத்தில் விஜயனுடன் குன்னிக்கல் நாராயணனும் வேறு சிலரும் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு 63 வாக்கில் டெல்லியில் இருந்தவாறு அவர் தஸராக்கைப் பற்றிச் சிந்திக்கிறார், எழுதுகிறார். அது அவரின் ஒரு மாறுபட்ட படைப்பாக அமைந்தது. எட்டு வருடங்கள் விஜயன் கஸாக்கைப் பற்றிச் சிந்தனையிலேயே மூழ்கிவிட்டார் என்பதே உண்மை. அந்தக் கால கட்டத்தில் விஜயன் கார்ட்டூன், ஆங்கிலக் கட்டுரைகள் என்று மிகவும் பிஸியான ஒரு மனிதராக இருந்தார். ‘கஸாக்கின் இதிகாசம்’ மாத்ருபூமியில் பிரசுரமான பிறகு, தான் நடந்து செல்ல வேண்டிய பாதை எது என்பதை விஜயன் தெரிந்து கொண்டார். கதை எழுதுவதும், நாவல் எழுதுவதும்தான் இனி தன்னுடைய கேன்வாஸ் என்பதை அவர் புரிந்து கொண்டார். அதற்குப் பிறகுதான் குரு சாகரம், மதுரம் காயதி, கடல் தீரத்து, காற்று பறஞ்ஞ கதை ஆகிய நூல்களை விஜயன் எழுதினார்.

அவர் எழுதிய கதைகளில் குறிப்பிடத்தக்கவை ‘கடல் தீரத்’தும் ‘காற்று பறஞ்ஞ கதை’யும். எந்த மொழி கதைகளுடனும் போட்டி போட்டு நிற்கக் கூடிய அளவிற்கு உயர்ந்த தரம் வாய்ந்த கதைகள் அவை.

நெருக்கடி நிலை கால கட்டத்தின் போது விஜயன் ‘தர்ம புராணம்’ நாவலை எழுதுகிறார். இந்த நூல்களை எல்லாம் மலையாளத்தில் எழுதுகிறபோதே, ஆங்கிலத்திலும் அந்தப் படைப்புகளை விஜயன் மொழி பெயர்த்துவிடுவார். ஆங்கிலம், மலையாளம் - இரு மொழிகளும் விஜயனுக்கு சர்வ சாதாரணமாகக் கைவரப்பெற்ற ஒன்றாக இருந்தன. ஒரு ஜீனியஸ்ஸின் முத்திரை விஜயனின் மொழியில் இருந்தது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் இதுவரை தொகுக்கப்படவில்லை. மொழியால் ஒரு மகா உற்சவமே நடத்திக் கொண்டாடினார் விஜயன் என்று சொல்வதே பொருத்தம்.

மலையாளிகள் மிகவும் தாமதமாகத்தான் விஜயனைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். விஜயனின் நூல்கள் எந்த அளவுக்கு வரவேற்புப் பெற வேண்டுமோ, அந்த அளவுக்கு வரவேற்பு பெற்றனவா என்பது சந்தேகமே. ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரையில் விஜயனின் மொழியையோ, நடையையோ, அவரின் எண்ணங்களையோ, சிந்தனைகளையோ, புவியியல்படி பாலக்காடைப் பற்றியோ சரிவர, புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார்கள்.

அதனாலோ என்னவோ விஜயனுக்கு மத்திய அரசாங்கத்தின் சாஹித்ய அகாடெமி பரிசு மிகவும் தாமதமாகவே கிடைத்தது. விஜயன் பரிசுகளுக்காகவும் விருதுகளுக்காகவும் எந்தக் காலத்திலும் ஏங்கியதும் இல்லை.

தன்னுடைய அறுபது வயதுடன், தன்னைத்தானே ஒதுக்கிக் கொண்டு அமைதியான ஒரு மனிதராக மாறிவிட்டார் விஜயன். ஆனால், விஜயனின் எழுத்துக்கள் என்றுமே மக்களிடமிருந்து ஒதுங்கியதில்லை. இவரின் வேதாந்தம் கலந்த புதினங்கள் ஆங்கிலத்தில் இன்றும் பேசப்படுகின்றன - விவாதிக்கப்படுகின்றன.

விஜயன் ‘பத்மாஸனம்’ என்ற புதிய நூலைத் தற்போது எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறார். உடல் ரீதியாகப் பல பிரச்னைகள் இருந்தாலும் விஜயனின் மனம் என்னவோ இன்னும் சுறுசுறுப்பாகவும் நிர்மலமாகவும் தான் இருக்கிறது.

விஜயனின் கதைகளையும் நாவல்களையும் வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துகிற விமர்சகர்களின் நூல்களும் நிறைய வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.

இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் ததும்பி நிற்கிற ஒரு ஜீனியஸ்ஸாக, மலையாள இலக்கிய உலகின் ஒரு உன்னத மனிதராக விஜயன் வளர்ந்து கம்பீரத் தோற்றம் தந்து கொண்டிருக்கிறார்.

விஜயனின் வார்த்தைகளையே பயன்படுத்தி கொஞ்சம் மாற்றிக் கூறுவதாக இருந்தால் ‘அவரோகணம் இல்லாமல் ஆரோகணமாக’ மட்டும் விஜயனின் இலக்கிய ஆக்கங்கள் மலையாள மொழியில் காலம் காலமாக நிலைபெற்று நிற்கும். அப்படி நிற்பதுதான் எல்லோரின் ஆசையும்.


பெரிய எழுத்தாளர்

                                   - கமலாதாஸ்

டெல்லியில் வைத்துத்தான் நான் முதன்முதலாக விஜயனைப் பார்த்தேன். அப்போது எனக்கு இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது வயது இருக்கும். விஜயன் மெலிந்து காணப்படும் ஒரு இளைஞராக இருந்தார். பார்ப்பதற்கு ஒரு எலும்புக் கூட்டைப்போல இருப்பார். அப்போது நான் ஆங்கிலத்தில் நிறைய கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். விஜயன் என்னை மலையாளத்தில் எழுதும்படி வற்புறுத்துவார். ஆனால், எனக்கு மலையாள மொழி அவ்வளவாகத் தெரியாது. நான் ஆரம்பப் பாடசாலையில் வகுப்பில் மலையாளம் கற்றிருக்கிறேன். 1984- இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நான் நின்றேன். அந்தச் சமயத்தில் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு மலையாளப் பாடல் கேசட்டை விஜயன் எனக்கு அனுப்பியிருந்தார். ‘யார் இந்த சாரல்ஸ்? ஓட்டுப் போடுங்கள் கமலாவுக்கு...’ இப்படிப் போகும் அந்தப் பாட்டு. அதைப் பாடியது விஜயன்தான் என்று பலரும் சொன்னார்கள்.

விஜயன் நான் மனம் வருந்தும்படி ஒரு போதும் நடந்ததில்லை. நான் மதம் மாறியபோது, பலரும் அதற்காக என்னைக் கண்டித்தார்கள். அப்போது கூட மிகவும் அன்புடன் என்னிடம் நடந்து கொண்டார்கள் ஓ.வி.விஜயனும், அவரின் சகோதரி ஓ.வி.உஷாவும். அவரின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே இப்போதும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள்தாம். அவ்வப்போது என்னை அழைப்பதுண்டு. என்னைப் பார்க்க வேண்டும் என்று கூப்பிடுகிறபோது நான் அங்கு ஓடிச்செல்வேன். விஜயனைக் கட்டிப்பிடிப்பேன். அந்த ஆட்டுத் தாடியைப் பிடித்து இழுப்பேன்.

இப்போது விஜயனால் பேச முடியவில்லை. இருந்தாலும் என்னுடைய விஷயங்கள் எதுவாக இருந்தாலும் விஜயனிடம் மனம் திறந்து கூறுவேன். அதைக் கேட்பதில் விஜயனுக்கும் விருப்பம் அதிகம். நான் விஜயனிடம் எல்லா விஷயங்களையும் பேசுவேன்.

என் சொந்த விஷயங்களைக் கூறுவதற்கு எனக்கு ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிற போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த எண்ணமே ஒரு விதத்தில் எனக்கு பலத்தைத் தருகிறது. பாலனும் (பாலசந்திரன் சுள்ளிக்காடு) விஜயலட்சுமியும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் மதம் மாறிய பிறகு இலக்கிய உலகில் எனக்கிருந்த நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனது. யாரும் முன்னைப் போல என்னை அழைப்பதில்லை. என்னை வந்து பார்ப்பதும் இல்லை. ‘கேரளப் பிறவி’யைத் தொடர்ந்து இங்கு நிறைய நிகழ்ச்சிகள் இருந்தன. என்னை முதலில் யாரும் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. நான் இலக்கியத்தில் எந்த அளவிற்குப் பங்களிப்பு செய்திருக்கிறேன்! அதையெல்லாம் யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? நான் முஸ்லீமாக மாறிய பிறகு, யாரும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. ஆரம்பத்தில் அவர்களின் இந்தச் செயல் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இப்போது அது குறித்து நான் கொஞ்சம்கூட கவலைப்படுவதில்லை. அவர்களின் கபட வேடங்கள் இப்போது எனக்குத் தெரியவருகிறது. இப்போதுதான் அன்று அவர்கள் காட்டிய நெருக்கமும் அன்பும் போலித்தனமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

 ஓ.வி.விஜயன் இரண்டு நாட்களுக்கு முன்னால் என் வீட்டிற்கு வந்தார். எர்ணாகுளத்தில் உள்ள ‘சாஹித்ய பரிஷத்’ஏற்பாடு செய்த ‘கேரளப் பிறவி’யை யொட்டி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக அவர் வந்திருந்தார். என் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போனார்.

விஜயன் ஒரு அறிவு ஜீவி. நான் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவள். நாங்கள் இருவரும் பயன்படுத்தும் மை மாறுபட்ட தன்மை கொண்டவை. விஜயனின் வார்த்தைகள் அறிவில் இருந்து வந்து விழுபவை. என்னுடைய எழுத்துக்களில் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும். இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. என்னால் முடியாத உயர்ந்த தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன விஜயனின் சிந்தனை, எழுத்து எல்லாம்.

விஜயனைப் பற்றி நல்ல விஷயங்களைத் தவிர, வேறு எதுவும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. நல்ல குணம், நல்ல எழுத்து, நல்ல பழகும் முறை. விஜயனால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் கிடையாது. பிரச்னைகளே இல்லாத ஒரு எழுத்தாளர். சொல்லப்போனால் அவர் மிகவும் அப்பாவி. அதனால்தான் சொல்கிறேன் - விஜயனுக்கு எந்த விருது கிடைத்தாலும், அது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அண்ணன் மீது ஓ.வி. உஷாவுக்கு அப்படியொரு பிளீயம்.

விஜயன் என்னுடைய நல்ல நண்பர்- எனக்கு நல்ல பலமாக இருப்பவர். விஜயனுடன் சேர்ந்து நான் நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். அவருடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், பேசிக்கொண்டிருப்பதில் எனக்கு மிகவும் விருப்பமே.


எழுத்துக்கள் மூலம் ஒரு தீர்த்த யாத்திரை

                                                                       - எம். தாமஸ் மாத்யு

கேரளத்தில் ஒரு எழுத்தாளனின் சராசரி ஆயுள் காலம் பத்து வருடங்கள்தாம். சில நேரங்களில் அதிகபட்சம் பதினைந்து வருடங்கள் வரை அது நீளலாம். அவர்களின் இலக்கிய வாழ்க்கை இந்தக் கால அளவிற்குள் முடிந்து போனால் கூட, அவர்களின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். வாழ்க்கை முடிந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள்? கர்மமே கண் என வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஏதாவது பேசுவார்கள். சிலர் உரத்த குரலில் பேசுவார்கள். வேறு சிலர் இதையே அடக்கி வாசிப்பார்கள். இப்படிப்பட்ட வசைகளுக்கு ஆளானவர்கள் கேரளத்தில் நிறையவே இருக்கிறார்கள். பத்து வருடங்களிலோ, பதினைந்து வருடங்களிலோ இலக்கிய வாழ்க்கையிலிருந்து அஸ்தமனம் ஆனவர்கள், அதையும் தாண்டி ஒளி வீசிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துப் பல விதத்திலும் பேசுவார்கள். இத்தகைய  வசைபாடலுக்கு ஆளானவர்களில் ஒருவர்தான் ஓ.வி.விஜயன்.

 குமாரனாசானுக்குப் பிறகு இந்த அளவுக்கு சர்ச்சைகளுக்கு ஆளான வேறொரு எழுத்தாளர் இருப்பாரா என்பது சந்தேகமே. ‘கஸாக்கின் இதிகாசம்’ நூலைப் பற்றி எவ்வளவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன! எத்தனை நூல்கள் அதைப் பற்றிப் பிரசுரமாயின!

 இது எதனால் நடந்தது? மலையாளிகளின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த நாவல் ‘கஸாக்கின் இதிகாசம்’. அந்த நூல் எழுப்பிவிட்ட - வார்த்தையால் சொல்ல முடியாத உணர்வு அலைகள் எவ்வளவோ! உலகில் மாறி வரும் புதிய மாற்றங்களைத் தொட கொஞ்சம் கூட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தும் ஒரு குக்கிராமத்தை நம் கண்முன் கொண்டு வந்து காட்டி, அதைத் தான் சமைத்திருக்கும் பிரபஞ்சத்திற்குள் கொண்டு சென்ற ஒரு படைப்பாளியின் நிறைவைத்தான் நாம் ‘கஸாக்கின் இதிகாச’த்தில் தரிசித்தோம். நாம் அங்கு அகத்தில் காணும் உண்மைகளைத் தனித்தனியாகப் பிரித்து வைத்து அடுக்கி பார்த்தால் ஆயாசம்தான் நமக்குத் தோன்றும். ஒருபோதும் வாழ்க்கை ஓட்டத்தின் நிகழ்ச்சிகளில் தன்னைச் சங்கமித்துக் கொள்ள விரும்பாத அப்புக்கிளி இந்த இதிகாச உலகத்தின் ஒரு தூண் என்று கூட கூறலாம். நம்பிக்கையின்மைக்குக் கீழே பட்டுப் போகாமல் கிடக்கும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும், ஏமாற்றங்களையும், சோகங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சமூக அமைப்பும், அதிகார அமைப்புகளும்... எல்லாமே ‘கஸாக்கின் இதிகாச’த்தில் உயிரோட்டத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றன. ‘இருந்தாலும் நீ என்னை மறந்திட்டியே, தங்கச்சி!’ என்று அழுகையினூடே உகாதியில் வழிபிரிந்து போனவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பின் பரிணாமத்தில் மெய்மறந்து நிற்கிறபோது... ‘கஸாக்’கின் கதை மாந்தர்களின் துக்கத்தையும், சந்தோஷத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுடன் நம்மையும் இணைத்துக் கொள்ளும் அற்புத நிகழ்ச்சி நம்மையும் அறியாமலே நிலவவும் செய்கிறது. கூமன்காவில் ரவியோடு சேர்ந்து நாமும் பஸ்ஸை விட்டு இறங்குகிறபோது, விஜயன் மந்திரங்களை உச்சரிப்பது போல, பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ‘கஸாக்கின் இதிகாச’த்தை ஒரு காவியத்தின் உயரத்திற்கு இழுத்துச் சென்று சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கிறது. கலையின் மந்திர சக்தியை நாம் காணும் புதிய உலகத்தில் உணர்கிறோம்.

பலவித விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடம் தந்து, வெளிவந்த கால  கட்டத்தில் பரவலாக எல்லோராலும் பேசப்பட்ட நாவல் ஓ.வி.விஜயனின் ‘தர்மபுராணம்’. ஆபாசங்களின் மொத்த உருவமாக மாறி மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் அதிகார பீடத்தையும், அதில் நாம் பங்கு சேர்கிறபோது, நாம் சந்திக்க நேரிடுகிற பிரச்னைகளையும் கேளிக்கைக்கு இடமாகும் பல விஷயங்களையும் ‘தர்ம புராண’த்தில் உயிரோட்டத்துடன் விளக்கியிருந்தார் விஜயன். இப்புதினத்தில் விஜயன் காட்டியிருந்த வேகத்தையும், உண்மையின் பறைசாற்றலையும் பார்த்து - சொல்லப் போனால் - விமர்சகர்களே அஞ்சினார்கள். வைக்கம் முஹம்மது பஷீரின் ‘சப்தங்கள்’எந்த அளவுக்கு நடுக்கத்தை விமர்சகர்கள் மத்தியில் உண்டாக்கியதோ அதைவிட நூறு மடங்கு அதிக நடுக்கத்தையும், ஆச்சரியத்தையும் ‘தர்ம புராணம்’ உண்டாக்கியது என்பது சத்தியமான உண்மை. இத்தகைய கலைப்படைப்புகள் இந்தியாவைப் பொறுத்தவரை சாதாரணமாக நாம் காணக்கூடியது அல்ல. நமக்கு அதிகம் பழக்கமில்லாத ஒன்றே இது. கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் மட்டும் இந்த அரசியல் பின்னணிக் கதையை விஜயன் கொண்டு செல்லாமல், அங்கத நடையில் இதை முழுக்க முழுக்க எழுதியிருந்தார். இதுதான் ‘தர்மபுராண’த்தின் தனித்துவம். இருட்டுக்கு நடுவில் மறைந்து கிடக்கும் உண்மைகளை நம்மால் பார்க்க முடியாமல் இருந்தால் ‘இந்தா பார்த்துக்கொள்’ என்று சொல்லி, நம்மை தெளிவான கண்களால் பார்க்க வைத்தார் விஜயன் என்று கூடச் சொல்லலாம்.

நாட்டில் உள்ள அவலங்களையும், அழுக்குகளையும், ஆபாசங்களையும், பொய் - பித்தலாட்டங்களையும் கொஞ்சம் அதிகமாகவே எழுதி விட்டதாலோ என்னவோ, தன் பேனாவிற்கு ஒரு கங்கா ஸ்நானம் வேண்டும் என்று விஜயனே நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதன் விளைவு - அவரின் ‘மதுரம் காயதி’. தன்னில் நிறைந்து ததும்பும் ஆத்மீக அனுபவத்தை - ஒரு சங்கீதம் இழையோடும் இனிய மொழியில் விஜயன் இந்நாவலில் வெளிப்படுத்தும் அழகு இருக்கிறதே! அப்பப்பா... அதை வார்த்தைகளால் எப்படிப் பாராட்டுவது! பிரபஞ்சத்தையே ஒரே ஒரு சங்கீத சிற்பமாகக் கொண்டு வர விழையும் அவரின் உள்  மன எண்ணத்தை நம்மால் உணர முடிகிறது.

தலைமுறை தலைமுறையாக சாபம் அனுபவித்துக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தின் பின்னணியில் - அந்தக் குடும்பத்தில் நேரும் படிப்படியான மாற்றங்களை - வரலாற்றுப் பார்வையுடன் நாவலில் சித்தரிக்கும் அதே வேளையில் உலகம் எங்கே இவ்வளவு வேகத்தில் பாய்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதையும் விஜயன் நமக்குக் காட்டாமல் இல்லை. எவ்வளவு பெரிய வெற்றிக்கு அடியிலும் மறைந்திருக்கும் ஒரு உண்மையை மனிதனால் பகுத்தறிய முடிகிறதா? அவன் அதை உணர்கிறானா? எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, தான் ஒன்றுமே இல்லாத, ஒரு கண்ணுக்குத் தெரியாத துகள் என்பதை உணர்ந்து மனிதன் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் தருணம் இருக்கிறதா? இவ்வாறு ஓ.வி.விஜயன் அளவுக்கு தன் படைப்பில் கனமான விஷயங்களை வேறொரு மலையாள எழுத்தாளர் கையாண்டிருக்கிறாரா? இல்லை என்பதுதான் பதில்.

இதுதான் ஓ.வி.விஜயன் தான் வாழும் உலகமும் காலமும் எப்படி இங்கு இந்த நிமிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறது என்பதைக் கூர்மையான வரலாற்றுப் பார்வையுடன் அறிந்து அதை தன் எழுத்தின் மூலம் நமக்கு அவர் தெளிவாகக் காட்டுகிறார். அந்த எழுத்துக்களில் கேலி இருக்கிறது, கிண்டல் இருக்கிறது, மென்மையான மனித அன்பின் குளுமை இருக்கிறது, காலம் காலமாகப் பரிணமித்து வரும் அறிவின் விசாலமுண்டு. இவற்றையும் தாண்டி, எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விடவில்லை என்ற நம்பிக்கையும், பிரகாசமும் அதில் இருக்கிறது.


ஓ.வி.விஜயனின் அரசியல் பார்வை

                                                                  - பி.கெ. ராஜசேகரன்

லையாள இலக்கியத்திற்கும் அதை நாளும் வளர்த்துக் கொண்டிருக்கும் மலையாள மக்களுக்கும் காலத்திற்கேற்ற ஒரு சிகிச்சை என்றுதான் ஓ.வி.விஜயனின் படைப்புகளின் பங்களிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். 1960- க்குப் பிறகுள்ள கேரள கலை வரலாற்றை விட்டு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ கூட விஜயன் என்ற நபரை ஒதுக்கி வைத்துவிட்டு நம்மால் பார்க்கவே முடியாது. நாவலிலும், சிறுகதையிலும் விஜயன் கொண்டு வந்த புதிய மொழியும், அழகுணர்வும், அவற்றின் தாக்கமும் இப்போது கேரள இலக்கியத்தைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும். முன்பு மலையாள இலக்கியத்தில் விளங்கிக்கொண்டிருந்த போக்கிற்கு எதிராக விஜயன் எழுத்தில் காட்டிய புதுமையும், துணிச்சலும் இன்று இலக்கியத்தை எந்த அளவுக்கு உயர்த்திக் கொண்டு போயிருக்கிறது என்பதையும் நாம் காணத் தவறக்கூடாது. விஜயனின் படைப்புகள் மீது ஏறி நின்றுகொண்டுதான் எல்லா மலையாள இலக்கிய அமைப்புகளும் பல புதுமைகளுக்கும் இங்கு பச்சைக்கொடி காட்டிக் கொண்டிருக்கின்றன. என்றாலும், தன்னுடைய பன்முக ஆற்றலால் விஜயன் உயர்த்திப் பிடித்த பதாகை இலக்கிய ஆராய்ச்சியுடனோ, நிறுவனங்களின் விருப்பு வெறுப்புக்களுடனோ எல்லை கட்டி நின்றுவிடவில்லை. விஜயன் தன் படைப்புகள் மூலம் செய்ய நினைத்த புதுமைப் போக்குகளை இங்குள்ள அமைப்புகள் முழுமையாக ஏற்றுக்கொண்டன என்று கூறுவதற்கில்லை. ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டன என்று சொல்வதே பொருத்தமானது. தன்னுடைய ஆழமான படைப்பு வாழ்க்கையில் எழுதிய நாவல்களிலும், சிறுகதைகளிலும் ஓரளவுக்கு விஜயன் தான் நினைத்ததைச் செயல் வடிவில் காட்ட முடிந்தது.

அரசியல் சிந்தனையாளர், ஆங்கில நாளிதழ்களில் அரசியல் செய்திகளை எழுதக்கூடிய மனிதர் என்ற முறையில் விஜயன் சந்திக்க நேர்ந்த விஷயங்கள்தான் இவரின் நாவல்களிலும் சிறுகதைகளிலும் இவரின் கார்ட்டூன்களிலும் வெளிப்பட்டன. புதிய அரசியல் கண்ணோட்டத்துடன் இவர் இலக்கியத்தில் பதித்த முத்திரைதான் விஜயனின் இலக்கிய வாழ்க்கையிலேயே இவரின் பெயர் இன்றுவரை நிலைத்து நிற்பதற்கான காரணம். விஜயனுக்கு ஏற்பட்ட அனுபவங்களையொத்த அனுபவம் மலையாளத்தில் மிகக் குறைந்த எழுத்தாளர்களுக்கே கிடைத்திருக்கிறது. அதுவரை மலையாள இலக்கியத்தில் நிலவிக்கொண்டிருந்த அரசியல் சிந்தனைகளும், அதைத் தொடர்ந்து நம்பப்பட்டுக் கொண்டிருந்த கருத்துக்களும் விஜயன் எழுத ஆரம்பித்த பிறகு வெகுவாக மாற்றம் பெற்றன எனலாம். தார்மீக இலட்சியங்கள் இல்லாத நிலையையும், அதைப் பொருட்படுத்தாமல் மார்தட்டிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் மேம்போக்குத் தனத்தையும், சமூகத்தின் போலித்தனத்தையும் தன்னுடைய படைப்புகளில் தோலுரித்துக் காட்டினார் விஜயன். விஜயனின் இந்த அரசியல் பார்வையையும், சமூகத்தின் பால் கொண்ட அக்கறையையும் இவரின் நாவல், சிறுகதை, கார்ட்டூன் - எல்லாவற்றிலும் நம்மால் காண முடியும். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், அரசியல் அங்கத எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட், அரசியல் சிந்தனையாளர், அரசியல் விமர்சகர் - என்ற நிலையில் விஜயன் வெளிப்படுத்தும் எண்ணங்களும் சிந்தனைகளும் கடந்தகால - நிகழ்கால இந்திய, கேரள சமூகத்தோடு முழுமையான தொடர்பு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தார்மீகக் கண்ணோட்டத்துடன் தன் படைப்புகளில் விஜயன் எழுப்பும் அரசியல் சார்ந்த கேள்விகள் சிந்தனையைத் தூண்டக்கூடியன. விஜயன் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு இலக்கியமும், சமூகமும் எந்த அளவுக்கு ஒத்திசைவோடு இருந்திருக்கின்றன என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம். சந்தை வியாபாரத்தால் படு வேகமாக அமைப்பு ரீதியாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற கேரள மணண்ன் இலக்கியமும், சமூகமும் இந்தப் பிரச்சனையை எப்படி நேர்கொள்கின்றன என்பதுதான் கேள்வி. எந்தக் காலத்திலும் சமூகத்தின் பால் அதிகாரம் செலுத்துவதிலும் அதே நேரத்தில் முக்கிய இழையாக ஓடிக் கொண்டிருப்பதிலும் பிரதான பங்கு வகிக்கும் இந்த அமைப்புகள் தமக்கென்று ஒரு பாதையைப் போட்டுக் கொண்டு சுதந்திரமான சிந்தனைகளையும் எண்ணங்களையும் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்திருக்கின்றன. விஜயனின் அரசியல் பார்வையும், இலக்கிய வாழ்க்கையும் கூட இந்த அமைப்புகளின் கேள்விகளுக்குத் தகுந்த பதில் சொல்லத் தயாராகவே இருக்கின்றன.

மதம், ஆன்மீகம் - இவற்றோடு சம்பந்தம் கொண்டு விஜயன் எழுதும் படைப்புகளின் பரிணாமத் தன்மையைப் பார்த்து நிலவி வரும் ‘இந்துத்துவ’ வாதத்துடன் இவரின் படைப்புகளைச் சேர்த்துப் பார்ப்பதால் உண்டாகும் எதிர்ப்புகளை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். விஜயன் என்ன சொல்கிறாரோ அதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், அவர் கூறுவதில் ஒரு பகுதியை மட்டும் பிரித்து எடுத்து கையில் வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. இந்தப் போக்கிற்கு மறுபக்கத்தில்தான் விஜயனின் நூல்கள் தத்துவார்த்தமான பல கேள்விகளையும் எழுப்புகின்றன. ஒரு வளர்ந்த சமூகம் என்ற நிலையில் உள்ளே நுழைந்து பார்க்கவும், உள்ளே இருக்கும் மறைபொருள்களைத் தெரிந்து கொள்ளவும், தார்மீக நரகங்களை நேருக்கு நேராகச் சந்திக்கவும் நம்மை விஜயனின் நூல்கள் தூண்டுகின்றன எனலாம். அதற்காக தன் படைப்புகளில் விஜயன் தான் கண்டறிந்த முடிவுகளை படிப்போர்கள் மீது திணிப்பதில்லை. மாறாக, தான் எழுதும் விஷயங்கள் மீது உண்டாகும் சந்தேகங்களையும், தொடர்ச்சியாக வரப்போகிற சாத்தியங்களையும் விஜயன் வெறுமனே கோடிட்டுக் காட்டுவார். அவ்வளவுதான். மதம், ஆன்மீகம், வர்க்கம், பாலுணர்வு, கம்யூனிசம், அதிகாரம், அரசியல், முதலாளித்துவம், போர், மனித வாழ்க்கை - இப்படிப் பல விஷயங்களைப் பற்றியும் தன் படைப்புகளில் கேள்வி எழுப்புகிறார் விஜயன். அதனால் தானோ என்னவோ நமது காலகட்டத்தின் தீவிர தியானம் கொண்ட சிந்தனையாளராக விஜயன் மாறி வலம் வருகிறார்.

 நம்முடைய காலத்தில் எந்த பிரச்னையாக இருந்தாலும், அது அதிகார வர்க்கத்துடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. அமைப்பு என்ற குடையின் கீழ் வந்த மதம், அரசியல், முதலாளித்துவம் - எல்லாவற்றிற்கும் பின்னால் அதிகாரம் என்ற ஒன்று மறைந்திருக்கவே செய்கிறது. விஜயன் இந்த உண்மையைத் தன் எழுத்துக்களின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இவர் எழுதிய அரசியல் கட்டுரைகளிலும் சரி... விஜயன் இந்த விஷயங்களை மிகவும் தெளிவாக அலசி ஆராய்ந்து உண்மை நிலவரம் என்னவென்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ‘தர்மபுராணம்’ உட்பட்ட நாவல்களிலும், ‘அரிம்பாற’, ‘எண்ணெய்’ போன்ற கதைகளிலும் விஜயன் ஒரு ஆழமான ஆராய்ச்சியே நடத்துகிறார் என்றுதான் கூறவேண்டும். மதத்தையும், ஆன்மீகத்தையும், அரசியலையும் அலசிப் பார்த்து, அவற்றுக்கிடையே இருக்கும் நுண்ணிய பிணைப்பைக் கண்டுபிடித்து ‘கஸாக்கின் இதிகாசம்’, ‘குருசாகரம்’, ‘பிரவாசகனின் வழி’ போன்ற கதைகளில் விஜயன் எழுதியிருப்பதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

அரசியல் சிந்தனைக்கு புதிய ஒரு மொழியை விஜயன் தந்தார் என்பது உண்மை. சாதாரணமாக அரசியல் கட்டுரையைப் பத்திரிகையில் எழுதும் ஒரு ‘காலம்னிஸ்ட்’ என்ற நிலையில் இருந்து பல மடங்கு முன்னால் போய் அதில் இடம் பெறும் செய்தியையே சுதந்திரமான வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த முயற்சிக்கும் விஜயனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பத்திரிகையாளரின் கூர்மையான பார்வையும், அரசியல் சிந்தனையாளரின் நீதி உணர்வும், தத்துவவாதியின் சுதந்திரமான நிலைப்பாடும் விஜயனின் படைப்புக்களில் நாம் தரிசிக்கலாம். அதிகார வர்க்கத்துடன் தொடர்புபடுத்தி தன் காலகட்டத்தின் அரசியல் விவகாரங்களை பார்க்கும் போக்கை ஆரம்ப காலத்திலிருந்து விஜயன் எழுதிய அரசியல் கட்டுரைகள் எல்லாவற்றிலும் நம்மால் தெளிவாகக் காண முடியும். அரசியல் பற்றிய ஒரு தெளிவான பார்வைக்கு விஜயனின் கட்டுரைகள் பாதை வகுத்துக் கொடுப்பதை மறுப்பதற்கில்லை. தான் சந்திக்க நேரும் பல நிகழ்ச்சிகளை உள்ளே நுழைந்து பார்த்து பின்னர் நமக்குப் புரியக்கூடிய ஒரு தெளிவான வடிவத்துடன் தன்னுடைய கட்டுரைகள், கதைகள் பலவற்றிலும் விஜயன் கூறவே செய்திருக்கிறார். ‘கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு தன்னுடைய பயத்தைப் பற்றி மட்டுமே சொல்லத் தெரியும்’ என்று விஜயன் எழுதுகிறார் (அந்தனும் அகலங்கள் காண்பவனும், 2001), மதமும் கம்யூனிசமும் முதலாளித்துவமும் உள்ளிட்ட எல்லா அதிகார அமைப்புகளையும், படர்ந்து எரியும் நெருப்புக்கு முன்னால் நின்று பார்க்கும் குழந்தையின் அரசியல் பார்வையை ‘இந்திரப்ரஸ்தம் (1985)’, சந்தேகியுடெ சம்வாதம் (1988)’, ‘கோஷ யாத்திரையில் தனியெ (1987)’, ‘ஒரு சிந்தூரப்பொட்டின்றெ ஓர்ம்ம (1987)’, ‘குறிப்புகள் (1988)’, ‘வர்க்க சமரம் ஸ்வத்வம் (1988)’ ‘ஹைந்தவனும் அதி ஹைந்தவனும் (1988)’, ‘அந்தனும் அகலங்கள் காண்பவனும் (2001)’ போன்ற தன்னுடைய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களில் மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜயன்.

மதத்தையும், கம்யூனிசத்தைப் பற்றியும் விஜயன் எழுதிய கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும் தான் இவருக்கு நிறைய விரோதிகள் உண்டானார்கள். இந்து மதத்தைப் பற்றி விஜயன் எழுத, தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ‘இந்துத்துவம்’என்ற வாதத்துடன் அதை ஒப்பிட்டு பலரும் நோக்க... இதனால் எத்தனையோ பிரச்னைகள்! தன்னுடைய நாவல்களில் பிற்காலத்தில் விஜயன் வெளிப்படுத்திய ஆன்மீக தரிசனத்தைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு எழுந்த விமர்சனங்களை அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.  1980-இல் ஆர்.எஸ்.எஸ். ஸைப் பற்றி இவர் எழுதிய கட்டுரையில் விஜயன் சொல்கிறார்: ‘‘நாம் கொஞ்சம் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்து மதத்தின் புராதன அம்சத்தைப் பற்றிப் பேசுபவர்கள் நவீன கால கட்டத்திற்கேற்ற பார்வையுடனும் இந்த விஷயத்தை அணுக வேண்டும். அதுவே நல்ல ஒரு அம்சமும் கூட. கிறிஸ்தவ நம்பிக்கைகள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குக் கீழடங்கி அமைப்பை அதன் போக்கில் செயல்பட விட்டதன் விளைவு - கிறிஸ்தவ மதமும், மேற்கத்திய நாடுகளும் நவீன கால கட்டத்திற்குள் சர்வ சாதாரணமாக நுழைந்து நடை போட முடிந்தது. அந்த மாதிரி சுதந்திரமாக நாம் விடாததன் விளைவு - இன்று நாம் ஈரானிலும் பாகிஸ்தானிலும் காணும் சோக நாடகங்கள். நாடகத்தின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பைப் பார்த்து திருப்திப்படுவதாக இருந்தால், பாலாசாஹிப் தேவரஸ்ஸைப் பின்பற்றினால் போதும். இந்தியா ஆர்யாவர்த்தமல்ல. ஏகப்பட்ட பரிணாமத் தளங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் இது. இந்து மதம் ஒரு மதமும் அல்ல. சைவ வைஷ்ணவ பிரிவுகளைக் கொண்ட ஒரு நாகரீகத்தின் அடையாளம் அது. அத்துடன், அதற்குள் பல கோத்திரங்கள்… இன்னும் பல இத்தியாதிகள். அதனால் கொமேனி பாணியில் இந்து ஃபண்டமென்டலிஸம் உண்டாக்க முயற்சி பண்ணுவது பெரிய விபத்துக்களுக்கு பாதை வகுத்துக் கொடுத்த மாதிரி இருக்கும்.’’ 1992-ல் விஜயன் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் தெளிவாகக் கூறுகிறார் : ‘‘இந்திரப்ரஸ்தத்தில் காவி உடை தரித்த சன்னியாசிகளைப் பார்க்க நான் பிரியப்படுகிறேன். அதே நேரத்தில் நம்முடைய அரசியல் கொடி மரத்தில் காவிக் கொடி பறந்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அது நடக்கிற பாரதம் நான் பிறந்த நாடுமல்ல!’’ விஜயனின் கட்டுரைகள் எல்லாவற்றிலும் பொதுவாக நிலவும் விவேகத்தை மனப்பூர்வமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு, அவரைப் பரவலாக விமர்சிக்கத் தொடங்குவார்கள். இதுவரை அதுதான் நடந்திருக்கிறது. இதே கதைதான் இந்திய இடதுசாரி விஷயத்திலும் கம்யூனிசம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் நடந்தது. இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிற ஜனநாயகத்தையும், மனிதத் தன்மையையும் அதிகரித்து வருகிற ஸ்டாலினிஸ்ட் மனோபாவத்தையும் மிகவும் அதிகமாக எழுதிய அரசியல் சிந்தனையாளர் விஜயன்தான். அவர் மீது எதிர்ப்புகள் உண்டாக இதைவிட வேறு என்ன பெரிய காரணம் வேண்டும்?

தன்னுடைய அரசியல் சிந்தனையில் விஜயன் உயர்த்திப் பிடித்த விஷயங்கள் எவ்வளவோ. விஜயனின் இந்தச் சிந்தனையின் வெளிப்பாடு மக்கள் மத்தியில் ஒருவித வெளிச்சத்தை உண்டாக்கியது. கம்யூனிசமும் மதம் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் தங்களுக்குள் வெளியே தெரியாமல் வைத்துக் கொண்டிருக்கும் முரண்பாடுகளையும், இடதுசாரி - வலதுசாரி கட்சிகளுக்குள் இருக்கும் மக்கள் விரோத போக்குகள், பதவி வெறி போன்றவற்றையும், மூன்றாம் உலக நாடுகளின் உண்மைத் தன்மையையும் தெளிவாக படிப்பவர்களுக்கு வரைந்து காட்டும் விஜயனின் அரசியல் சிந்தனை உண்டாக்கிய தாக்கம், கேரளத்தின் வளர்ந்து வரும் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அது ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானதல்ல. இந்த சுதந்திரச் சிந்தனையின் விளைவாக பலரின் வெறுப்புக்கும், எதிர்ப்புக்கும் தான் ஆளானது குறித்து விஜயன் கொஞ்சமும் கவலைப்படவில்லை. நம்முடைய மக்களுக்கு இத்தகைய அரசியல் சிந்தனை அவசியம் கூட என்பதை பல தடவைகள் விஜயன் வலியுறுத்திக் கூறுகிறார். இலக்கியத்தை ஆக்கபூர்வமான - நல்ல அம்சங்கள் மூலம் செழிப்படையச் செய்திருக்கும் இந்த அணுகுமுறையால்தான் நாவலாசிரியர், கதாசிரியர், கார்ட்டூனிஸ்ட், அரசியல் சிந்தனையாளர் என்று பல விஜயன்களை ஒரே தளத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.


என் அண்ணன் ஓ.வி.விஜயன்

                                                            - ஓ.வி. உஷா

ரு எழுத்தாளராக இருப்பது என்பது எவ்வளவு இக்கட்டான ஒன்று என்பதை எப்போதாவது என் அண்ணன் ஓ.வி.விஜயனைப் பற்றி எழுத வேண்டும் என்ற சூழ்நிலை உண்டாகிறபோது நான் உணர்கிறேன். அந்த மாதிரியான நேரங்களில் எனக்கே மிகவும் தர்மசங்கடமாக இருக்கும். குடும்பம் என்று வருகிறபோது விஜயன் என்னுடைய அண்ணனாக இருக்கலாம். ஆனால், அவரின் எழுத்துக்களைப் படிக்கிற வாசகி என்று வருகிறபோது, என்னைவிட நூறு பேர்க்காவது என் சகோதரருடன் நெருங்கிய உறவு இருக்கும். ‘கஸாக்கின் இதிகாச’த்தைப் பல தடவை திரும்பத் திரும்ப படித்தவர்களையும், அந்நாவலின் பல பகுதிகளை மனப்பாடம் மாதிரி ஒப்பிக்கக் கூடியவர்களையும் நானே பார்த்திருக்கிறேன். இலக்கியத்தின் மீது தீவிர காதல் கொண்டவளும், இலக்கிய மாணவியுமாக நான் இருந்தாலும், எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் பட்டியலில் முன் வரிசையில் என்னுடைய அண்ணன் பெயர் இருந்தாலும் எனக்கு அவரின் படைப்புகள் மனைப்பாடமாகவெல்லாம் தெரியாது. என் சகோதரரின் கார்ட்டூன்கள் ஒவ்வொன்றையும் கொஞ்சம் கூட மறக்காமல் பசுமையாக ஞாபகத்தில் வைத்திருக்கிற பலரையும் நான் பார்த்திருக்கிறேன். என் அண்ணனின் திறமையைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. அரசியல் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது என் சகோதரர் கார்ட்டூன் வரைவதை நிறுத்தி நீண்ட காலத்திற்குப் பிறகுதான். அதாவது - மிக சமீபத்தில். அதனால்தான் சொல்கிறேன் என் அண்ணனின் அரசியல் கட்டுரைகளைப் பற்றிக் கருத்து கூறும் அளவிற்கு எனக்குத் திறமை போதாது என்று. இருந்தாலும், அண்ணனைப் பற்றி எழுதுகிற போது, அண்ணனுக்கும் அவரின் வாசகர்களுக்கும் நியாயமானவளாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நான் ஞாபகத்தில் கொண்டிருக்கிறேன்.

இருந்தாலும் சொல்கிறேன்- அண்ணனுக்கு எழுத்தச்சன் விருது தேடி வந்திருப்பது கொஞ்சம் கூட எதிர்பாத்திராத ஒரு சூழ்நிலையில்தான் என்பதை இங்கு ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த விருது கிடைத்ததற்காக அண்ணன் மிகவும் சந்தோஷம் கொண்டார். என்றாலும், இந்தச் செய்தியை அறிந்தபோது அவர் இலேசாகச் சிரித்தார். அவ்வளவுதான். வீடுதேடி வந்து கூடிய பத்திரிகை நண்பர்களைப் பார்த்து ‘ஐ ஆம் வெரி ஹேப்பி’ என்று சொன்னார். அமைச்சரிடம் ‘நான் இதற்குத் தகுதியானவன்தானா?’ என்று எழுதிக் காண்பித்தார். (வாய் திறந்து பேசுவதில் அண்ணனுக்கு பிரச்னை இருக்கிறது.)

 ஒரு எழுத்தாளன் என்ற முறையில் தன்னுடைய இடம் எது என்பதை அண்ணன் மனதில் அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ‘இந்த விருதுக்கு நான் தகுதி உள்ளவன்தானா?’ என்று தன்னைக் குறித்து அவருக்கு சந்தேகம் வந்திருக்குமா? இப்படியொரு கேள்வியை அவரைக் கேட்க வைத்த உணர்வுதான் எது? எது எப்படியோ, இந்த விருது கிடைத்ததில் அண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சியே.

விருதுகள் பொதுவாக மிகவும் தாமதமாகத்தான் அண்ணனைத் தேடி வந்திருக்கின்றனவா? சிலர் அப்படி ஒரு அபிப்ராயம் சொல்லி, நான் கேட்டிருக்கிறேன். ஒருவேளை அது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், வாழும் காலத்தில் நூல்கள் பிரசுரம் செய்யப்படாமலும் யாருக்கும் தெரியாமலே கூட பலரும் இறந்து போயிருக்கிறார்கள். இப்படி மண்ணுக்குள் மறைந்துபோன எத்தனையோ பெரிய எழுத்தாளர்கள் இலக்கிய வரலாற்றில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறபோது, அண்ணன் ஒரு பாக்யவான் என்றுதான் சொல்லவேண்டும். ‘கஸாக்கின் இதிகாசம்’ இருபத்தெட்டாவது பதிப்பை எட்டியிருக்கிறது. அண்ணனின் மற்ற நூல்களும் புதிய பதிப்பில் இறங்கி இருக்கின்றன. விருதுகள் வந்து சேர்வதற்கு முன்பே, இலக்கிய அபிமானிகளும், வாசகர்களும் அண்ணனை இதயபூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தன் மேல் அளவற்ற அன்பும், மதிப்பும் வைத்திருக்கிற பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருப்பதை விட ஒரு எழுத்தாளனுக்குப் பெரிதாக என்ன வேண்டும்?

விருதுகளைப் பற்றிய சிந்தனை அண்ணனை ஒருபோதும் தீண்டியதை நான் பார்த்ததில்லை. இப்போது திரும்பிப் பார்த்தால், எத்தனையோ பெரிய விருதுகள் அவருக்குக் கிடைக்கவே செய்திருக்கின்றன. முதன்முதலாகக் கிடைத்த விருது பல வருடங்களுக்கு முன்பே அண்ணனைத் தேடி வந்தது. அது டில்லியில் இருந்தபோது அண்ணனுக்குக் கிடைத்தது. சக்கரியா, எம். முகுந்தன் உள்ளிட்ட டில்லியில் இருந்த மலையாள எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து அண்ணனுக்கு வெள்ளி முலாம் பூசிய ஒரு சிங்கத்தின் உருவத்தைப் பரிசாகத் தந்தார்கள். அதை வாங்குகிறபோது அண்ணனுடன் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அப்போது இல்லை. ‘கஸாக்கின் இதிகாச’த்திற்காகக் கிடைத்த அந்தப் பரிசை அண்ணன் மட்டும்தான் தனியே வீட்டிற்குக் கொண்டு வந்தார். அடுத்து அவருக்குக் கிடைத்தது ‘ஓடக்குழல்’ விருது. அதுவும் ‘கஸாக்கின் இதிகாச’த்திற்குத்தான். விருதினைப் பெறுவதற்காக அண்ணன் டில்லியில் இருந்து கேரளத்திற்கு வந்திருந்தார். அப்போதும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அவருடன் இல்லை.

 ‘ஓடக்குழல்’ விருதிற்குப் பிறகு, பதினேழு வருடங்கள் கழித்து, அண்ணனுக்கு இன்னொரு விருது கிடைத்தது. ‘குரு சாகரம்’ என்ற நாவலுக்காகக் கிடைத்த விருது அது. 1990-இல் மத்திய - மாநில சாஹித்ய அகாடெமி விருதுகளும் 1991-இல் வயலார் விருதும் ‘குரு சாகரம்’ நாவலுக்குக் கிடைத்தன. மத்திய அரசாங்கத்தின் விருது கிடைத்தபோது, அண்ணன் டில்லியில் இருந்தார். மாநில விருதை அண்ணன் சார்பில் திருச்சூர் சாஹித்ய அகாடெமி ஹாலில் வைத்து நான்தான் வாங்கினேன். 1992-இல் ‘கஸாக்கின் இதிகாச’த்திற்கு ‘முட்டத்து வர்க்கி விருது’ கிடைத்தது. சங்ஙனாசேரி எஸ். பி. கல்லூரியில் அதற்கான விழா நடந்தது. 1990-ல் எம்.பி. போள் விருது, ‘தலைமுறைகள்’ நூலுக்குக் கிடைத்தது. அதற்கான விழா கோட்டயத்தில் நடைபெற்றது. 2000-இல் சமஸ்த கேரள சாஹித்ய பரிஷத் விருது அண்ணனைத் தேடி வந்தது. இந்த வருடம் சாஹித்ய அகாடெமி ஃபெல்லோஷிப், டோம்யாஸ் விருது போன்றவை. தொடர்ந்து இப்போது எழுத்தச்சன் விருது அண்ணனைத் தேடி வந்திருக்கிறது. சமூகத்தின் அங்கீகாரங்கள் என்ற முறையில் எல்லா விருதுகளும் கிடைத்திருப்பது குறித்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இருந்தாலும் எழுத்தச்சனின் பெயரில் விருது கிடைத்திருப்பது இன்னும் ஒரு படி அதிக சந்தோஷத்தை எங்களுக்குத் தந்திருக்கிறது. ஓ.வி.விஜயன் என்ற இந்த எழுத்தாளரை கேரளம் தன்னுடன் பிணைத்துக் கொண்டுவிட்டது என்றுதான் இதற்கு அர்த்தம். அதற்கு அடையாளம்தான் தொடர்ந்து அண்ணனுக்குக் கிடைத்து வந்திருக்கும் இந்தப் பரிசுகளும், விருதுகளும்.


ஓ.வி. விஜயனுடன் ஒரு சந்திப்பு

‘இதிகாச’த்தில் வரும் பாத்திரப் படைப்புகளைப் பார்க்கிறபோது ரவியின் பாத்திரப் படைப்பு ஒரு விதத்தில் இருக்க, நாயகிகளாக ஐந்து அல்லது ஆறு பேர் வருகிறார்கள். ரவியை அந்த மாதிரி படைத்ததற்காக உங்களுக்குக் குற்ற உணர்வு உண்டாகிறதா?

 இது என்ன கேள்வி? எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது. எல்லாம் கடவுள் கையில் இருக்கிறது. கடவுளுக்கு முன்னால் எழுத்தாளன் ஒரு சாதாரண பிராணி. அவ்வளவுதான்.

 உங்களுக்கு இருக்கும் இன்றைய மனநிலையில் ‘இதிகாசம்’ எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த சுதந்திரத்தை அனுமதிப்பீர்களா ?

 நிச்சயமாக இல்லை.

 எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?

 நான் மாறியிருக்கிறேன்.

 ரவியின் வாழ்க்கைப் பயணத்தில் கவரப்பட்ட ஒரு தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 இட் ஈஸ் ஆல் லீலை. லீலை மட்டுமே.

 நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் ரவியைப் பின்பற்றிய அந்தத் தலைமுறைக்கு இந்தப் பதில் போதுமானதாக இருக்குமா?

 நான் அவர்களை அன்புடன் அழைக்கிறேன். என்னுடைய உணர்வுகளில் அவர்களையும் பங்கு சேரக் கூப்பிடுகிறேன்.

 ஒரே நேர்கோட்டில் போகிற ஒரு கதை இதிகாசத்தில் இல்லை என்று பொதுவாகக் கூறுவார்கள். இதற்கு உங்களின் பதில்?

 அவர்கள் சொல்வது சரிதான். ‘இதிகாச’த்தின் முக்கிய விஷயமே அதில் வரும் துணைக் கதைகள்தாம். சிறிய மனிதர்கள், சிறிய உயிர்கள், சிறிய இடங்கள். இந்த துணைக்கதைகள்தாம் கஸாக்கிற்கு சிறப்பு சேர்க்கின்றன.

 இந்த துணை கதைகள் ‘இதிகாச’த்தை ஒரு கார்ட்டூன் நாவலாக மாற்றி விடுகிறது என்று சொல்லலாமா?

 ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக ‘இதிகாச’த்தைப் படிக்கிறபோது, அதன் அடிநாதமாக இருக்கும் உயிரோட்டத்தைத்தான் பார்க்க வேண்டும். ஆனால், ஒரு விஷயம். கஸாக்கின் ‘ட்ராமட்டீஸ் பெர்சனே’யில் கிராமப்புறங்களில் நாம் சாதாரணமாகக் காணும் கேலி, கிண்டல், திருவிழா, கொண்டாட்டங்கள், சந்தோஷப் பெருவெள்ளம் போன்ற எல்லாவற்றையும் பார்க்கலாம். வாழ்க்கையை நாம் ரசித்து எப்படி வாழ வேண்டுமோ, அதே மாதிரி ஒரு கதையை மிகவும் ஈடுபாட்டுடன் ரசித்துப் படிப்பதற்குக் கூட ஒரு பயிற்சி வேண்டும். இல்லையென்றால் ஒரு கதை யாருக்காக எழுதப்படுகிறது, எதற்காக எழுதப்படுகிறது என்ற தேவையில்லாத சர்ச்சைகளில் நாம் போய் சிக்கிக் கொள்வோம். எந்தக் கதையாக இருந்தாலும், அதை நம் அறிவின் அளவு கொண்டே அளக்கிறோம். உதாரணத்திற்கு ஒரு கதையைச் சொல்கிறேன். அது ஒரு மீனைப் பற்றியது. மீன் ஒன்று ஒரு சிறிய தங்க வளையத்தை விழுங்கி விடுகிறது. அதற்குப் பிறகு உண்டாகும் போராட்டங்களும், சம்பவங்களும்தான் கதை. கதையின் பெயர் - சாகுந்தலம்!

‘கஸாக்கின் இதிகாச’த்தில் முழுமையான ஒரு காதல் கதை இல்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் காதலைவிட ரவிக்கும் மாதவன் நாயருக்குமிடையே இருக்கும் நட்பு மிகவும் ஆழமானது. ‘இதிகாசம்’ எழுதப்பட்ட காலத்தை மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறேன். கஸாக்கின் பூமியில் பெண் பாத்திரங்களின் நிலை என்ன?

என்னைப் பொறுத்தவரை பெண்மைத்தனத்தின் ஒரு முழுமையான அடையாளம்தான் மைமூனா. அவள் மற்ற சாதாரண கதாபாத்திரத்துடன் கலந்து பேசுவதைக் கூட நான் பொதுவாக விரும்புவதில்லை. மைமூனாவை ஒரு ஃபெமினிஸ்ட்’டாக நினைக்க முடியாது. அப்போது அவள் யார்? குஞ்ஞாமினாவின் இளம் பருவத்துக் காதலிலும், பத்மாவின் நிராசையிலும் இந்தக் கேள்விக்கு நமக்கு விடை கிடைக்கிறது.

ரவியின் ஒரு பெரிய சாயல் ‘குருசாகர’த்தில் வரும் குஞ்ஞுண்ணியில் இருக்கிறது என்று சொல்லலாமா?

சரிதான். இருவருமே தேடலில் இருப்பவர்கள்தாம். குஞ்ஞுண்ணி குருவைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். பதில்களையும்தான். ஆனால், ரவியைப் பொறுத்தவரை - அவனைச் சுற்றிலும் இருப்பது வெறும் கேள்விகளே!

 ஆனால், ரவி போய்ச் சேர்வது ஆத்மாவே இல்லாத ஒரு நகரத்தை அல்ல. உயிரோட்டம் நிறைந்த ஒரு கிராமத்தை. ரவிக்கு இயற்கையால் கூட பதில் தர முடியவில்லையா என்ன?

 நாம் அந்த அளவிற்கு இயந்திரத்தனமாகப் போக வேண்டியதில்லை.

மொழி என்பது பலமான ஒரு ஆயுதம். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும் பட்சம்...?

 நான் யாருக்கும் உபதேசம் கூற விரும்பவில்லை. ஆனால், நான் ஒரு சிறிய விஷயத்தைக் கூற விரும்புகிறேன். அதுவும் - என்னுடைய இலக்கியச் சகோதரர்களின் அனுமதியுடன், வெறும் வார்த்தைகளை மறந்து விடுங்கள். வாசகர்களின் மனதில் மகிழ்ச்சி உண்டாக்கக் கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். ஈகோ - அதாவது ஆணவம் கட்டாயம் அடக்கப்பட வேண்டிய ஒரு எதிரி என்பதை உணருங்கள்.

 எழுத்தாளனுக்குக் கட்டாயம் ஒரு குரு தேவையா?

 பாரதத்தின் இதிகாசப் படைப்புகளில் எல்லா காலங்களுக்கும் காரணமாக இருக்கும் ஒரு குரு இருக்கவே செய்கிறான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.